Sep 30, 2010
விடியுமா? - கு.ப.ரா.
Sep 29, 2010
''இன்றைய கவிதையை விளக்க இன்னொருவர் தேவை''-நீல. பத்மநாபன்
எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1938-ம் ஆண்டு பிறந்தவர். கேரள மாநில மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவரது படைப்புகளில் மண்ணின் தன்மையும், மக்களின் யதார்த்த வாழ்வையும் காணலாம். ''உதயதாரகை'' இவர் எழுதிய முதல் நாவல். ஆனால் இவர் பேசப்பட்டது இவரின் நான்காவது நாவலான 'தலைமுறைகள்' மூலம்தான். அடுத்தது 'தேரோடும் வீதி'. இது அவரின் சுயசரிதை என பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர் இதனை மறுத்து வருகிறார். அண்மையில் தி.ஜானகிராமனின் இலக்கியப் படைப்புகள் பற்றிய விவாதத்திற்காக சென்னை வந்திருந்தபோது, அம்பலம் வாசகர்களுக்காக அவர் அளித்த விசேஷ பேட்டியிலிருந்து...
இலக்கியம் எப்படி உங்களை வரித்துக் கொண்டது?
என் சின்ன வயதிலேயே பாட்டி, அப்பா, அம்மா இவர்களிடமிருந்த வாசிப்பு அனுபவம் என்னையும் தொடர்ந்தது. அதிலிருந்து கையெழுத்துப் பிரதியாக இலக்கியங்களை உருவாக்கினேன். அப்போது எங்கள் வீட்டுப் பக்கத்தில் டி.ஆர்.ராஜமாணிக்கம் கம்பெனி நாடகம் நடந்து வந்தது. அதில் வரும் பாட்டின் ராகங்களுக்கு ஏற்ப நான் பாட்டு எழுதுவேன். இப்படியே என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. என் 10, 12 வயதிலேயே நிறையப் படித்தேன். பின்னர் college magazine-ல் நிறைய எழுதினேன். இவையெல்லாம்தான் என்னை நிறைய எழுத வைத்தது. இதைத் தொடர்ந்து நான் நேரடியாக எழுத்துத் துறைக்கு வந்துவிட்டேன்.
உங்கள் நாவலில் இன்றும் பேசப்படுகிற, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 'தலைமுறை' நாவல் குறித்து...?
நீங்கள் நேரடியாக தலைமுறைக்கு வந்ததினால் அதற்கு முன்னால் நான் எழுதிய நாவல்கள் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. தலைமுறை எனது நாலாவது நாவல். முதலில் 'உதய தாரகை' என்ற நாவல், வாஞ்சிநாடு இதழில் வந்தது. 'தலைமுறை' நாவலின் உண்ணாமலை ஆச்சி, கூனாங்காணி பாட்டா போன்றவர்கள் என் சமூகத்தைச் சார்ந்தவர்கள். என் செட்டியார் சமூகத்தில் பின்பற்றப்பட்ட ஆசார அனுஷ்டானங்கள், என் பக்கத்து வீட்டில் திருமணமாகிச் சென்ற பெண்ணை திரும்பப் கொண்டு வந்துவிட்டது. இவையெல்லாம் என்னை பாதித்ததால்தான் 'தலைமுறைகள்' பிறந்தது. நீங்கள் சொல்வதுபோல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் நாவல் இதுதான் என்பதில் சந்தோஷமடைகிறேன்.
'யாத்திரை' என்ற கதை மரணத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்த கதை வந்த காலம் romantic கதைகள் பிரபலமாக இருந்தது. எப்படி இந்த ஐடியா வந்தது?
திருவனந்தபுரத்தில் எனக்கு திருமணமாகி மனைவியுடன் மாடி வீட்டில் தனியாக இருந்தோம். அந்த வீட்டிலிருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் மாடியில் இருந்ததினால் கீழே நடப்பவைகள் காட்சிகளாகத்தான் தெரியும். அப்படித்தான் ஒரு பிணத்தை எடுத்துச் சென்றார்கள். அது என்னுள் கேள்வி கேட்கச் செய்தது. அதுதான் 'யாத்திரை'. இறந்தவனைப் பற்றி... தூக்கிச் செல்லும் நாலு பேரும் நினைத்துக் கொள்வதுதான் கதை. அதை எழுதி முடித்தபோது எனக்கும் வித்தியாசமாகத் தோன்றியது.
'தலைமுறை' நாவலிலிருந்து முற்றிலும் மாறானது 'பள்ளி கொண்டபுரம்'. திருவனந்தபுரம் பற்றிய புரிதல் இல்லாமலும்-நாயர் சமுதாயம் பற்றி தெளிவு இல்லாமல் அந்த நாவல் படைக்க முடியாது. அதைப் பற்றி...?
ஏற்கெனவே சொன்னதுபோல் என் சமூகம் எதுவென்று சொல்லிவிட்டேன். இப்போது திருவனந்தபுரம் என்று சொல்லப்படும் இடம் திருவாங்கூர் என்று சொல்லப்பட்ட காலத்தில் கன்னியாகுமரி, நாகர்கோயில், பத்மநாபபுரம், இவையெல்லாம் அதனுள் வந்தவைதான். ஆனால், நீங்கள் சொன்ன மாதிரி 'பள்ளி கொண்டபுரம்' நாவலை நகரம் சார்ந்து எழுதுவதாகத்தான் தீர்மானித்தேன். அதுவும் நாயர் சமூகத்தில் உள்ள சிக்கல் நானறிந்தது. அதை தமிழர் பார்வையில் பதிவு செய்வதை மட்டுமே நான் செய்தேன். இன்னொன்று நாவலில் கதாபாத்திரங்கள் எதார்த்தமாக இருப்பதை வைத்து எழுத்தாளரை மதிப்பிடக்கூடாது. நான் காட்டியது நகரத்தின் ஒரு பகுதியை மட்டுமே.
எழுத்தாளனுக்கு சமூகப் பற்று அவசியமா?
நான் கலந்துகொண்ட தி.ஜானகிராமனின் எழுத்துத் தொடர்பான கூட்டத்தில் அவர் அறியாமலே அவரின் படைப்புகளில் சமூக அக்கறை வந்ததாக சொல்கிறார்கள். அப்படி இல்லை. சமூக அக்கறை இல்லாமல் எந்த எழுத்தாளனும் இலக்கியம் பண்ண முடியாது. ஆனால் அந்த வழி ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். அதனால் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வழியில் கலகக்காரனாக இருக்கிறான். ஏனென்றால் அந்த எழுத்தாளனும் சமூகத்திலிருந்துதானே வந்தவன். ஆகவே எல்லா எழுத்தாளர்களும் சமூக உணர்வுள்ள கலகக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதே நிஜமானதும், உண்மையானதும்.
ஒரு மனிதனுக்கு அறிவுசார்ந்த செயல்பாட்டைவிட உணர்ச்சி செறிவுதான் கலைப்படைப்பிற்கு முக்கியமானது என்கிறீர்கள், படைப்பை அறிவு ரீதியாக அணுகுவது தப்பு என்கிறீர்களா?
எல்லா செயல்பாட்டையும் அறிவுரீதியாகப் பார்த்தால் அது முடிந்த முடிவாகும். அதன் தாக்கமோ, எதிர்ப்போ நமக்கு தெரியாமல் போகும். அறிவு ரீதியாகப் பார்க்கும் பார்வைக்கு அடுநிலை என்று எதுவும் இல்லை. உணர்ச்சி ரீதியாகப் பார்க்கும்போது அதன் அடுத்த கட்டம் நமக்கு கிடைக்கிறது. நடந்த செயற்பாட்டிற்கு புதுவகையான முடிவும் கிடைக்கிறது. அது கற்பனைகளுக்கும், தளங்களை விரிவுபடுத்தவும் ரொம்ப உதவியாக இருக்கிறது. அதன்பின்னர் கலைப்படைப்புக்கு ஏற்றவாறும், கலைத்தன்மையுடனும் உருமாற்றம் பெறும். அதற்கு உணர்ச்சி இருந்தால்தான் அங்கு கலைத்தன்மை வரும். இல்லையென்றால் போட்டோ போல் இருக்கும்.
எஸ்.குப்தன் நாயர் எழுதிய விமர்சனத்தில் ''நீலபத்மநாபனின் கதைகளில் கதை அம்சம் மிகுதியாக இல்லை என்கிறாரே'' இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
கதை அம்சம் என்பது, நவீனத்துவச் சிந்தனையில் வந்ததுதான். நிகழ்ச்சிக்கு முக்கியமில்லாத விஷயத்தை கதையாகச் சொல்லி நிரூபிப்பதுதான் எழுத்தாளனின் வேலை என்று நினைக்கிறேன். ஆனால் கதை சொல்வது என்பது சங்க காலம் தொட்டே மாறிவரும் சமாச்சாரமாகும். இப்போது பல இஸங்களும், பல பாணிகளும் வந்தபின்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கதை சொல்கிறார்கள். எதை சொன்னாலும் அங்கு சொல்லப்படும் நிகழ்ச்சிதான் முக்கியம். நவீன கதையில் கதை இல்லாத கதையை சொல்வதுதான் வடிவமாகும். குப்தன் நாயர் அப்படிச் சொன்னதில் எனக்கு சந்தோஷம்தான்.
சிறு பத்திரிகைகள்-வணிகப் பத்திரிகைகள் இரண்டிலும் எழுதுகிறீர்களே! இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
தமிழில் சிறு பத்திரிகைகள் ஒரு கௌரமான விஷயமாக இருக்கிறது. சோதனைப்படைப்புகள் முதலில் சிறுவட்டத்தில்தான் வரும். நானே அறிமுகமானது சிறுபத்திரிகை மூலம்தான். ''சாந்தி'', ''இலக்கிய வட்டம்'' போன்ற பத்திரிகைகள்தான் என்னைத் தெரியப்படுத்தியது. நாங்கள் சிறுபத்திரிகை மூலமாக பல இலக்கியம் தொடர்பான விஷயங்களை செய்துவருகிறோம். வணிகப் பத்திரிகைகளும் அவ்வப்போது நல்ல படைப்புகளை வெளியிடுகிறார்கள். நாங்கள் விழா நடத்தி புத்தகம் வெளியிட்டபோது அந்த விழாவில் நடந்த ஒரு நல்ல விஷயம் ''குருஷேத்திரம்'' புத்தகம் வெளியானதுதான் என்று சொன்னவர்கள், இன்று தமிழ் இனி விழா நடத்தியிருக்கிறார்கள். இது சிறு பத்திரிகைகள் ஆரோக்கியமானதாக இருந்ததினால் நடந்ததுதான்.
உங்கள் நாவல்கள் யதார்த்த வகையைச் சார்ந்தது என்று சொல்லலாமா?
என் நாவல்களைப் பற்றி நான் சொல்லக் கூடாது. ஆனால் பலர் என் நாவல்களை யதார்த்த வகை என்று சொல்லுகிறார்கள். நானும் பல எழுத்தாளர்களின் படைப்புகள் படித்துவருகிறேன். எனக்கு எழுத்துக்கு வைக்கும் பெயர்கள், இஸங்கள் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் மனதில் தோன்றுவதைதான் நான் எழுதுகிறேன், அதை கற்பனையுடன் இணைத்து எழுதுகிறேன். இது யதார்த்தம் என்றால் இது என் பாணி. அதை விட்டு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையாக பிரிக்கக் கூடாது. சில இடங்களில் யதார்த்தத்தை மீறவும் நான் முயற்சி செய்ததுபோல் தெரியும். ஆனால் அப்படியல்ல. அவையும் யதார்த்த வகை நாவல்கள்தான்.
உங்கள் கவிதைகள் பாட்டுப் போல் இருக்கும்-இப்போதைய கவிதைகள் குறித்து?
நீங்கள் என் கவிதையைப் பாட்டுப் போல் என்கிறீர்கள். என் கவிதைகளை அதாவது, பாடல்களை நான் நாடகக் கொட்டகையிலிருந்துதான் எழுதக் கற்றுக் கொண்டேன், அதனால் இருக்கலாம். என் 16 வயதில் எழுதிய கவிதைகளை பிற்பாடு வெளியிடும்போது அவைகள் பாடல்கள் போல் இருக்கின்றன. இப்போது வரும் கவிதைகளை நான் படித்து வருகிறேன். சிலதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கவிதை என்பது மனசில தைக்கிற மாதிரியும், தீயை உண்டாக்குவதாகவும் இருக்கவேண்டும். தமிழில் அப்படி கவிதைகள் இப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்தக் கவிதைகளை விளக்கிச் சொல்வதற்கு இன்னொருவர் தேவைப்படுகிறார்.
உங்கள் சிறுகதைகளிலிருந்து நாவல் மிகவும் வேறான ஒன்றாக இருக்கிறதே?
நீங்கள் சொல்லும் சிறுகதை, நாவல் இரண்டும் இருவேறு ஊடகங்கள். அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சிலர் சொல்வதைப்போல் சிறுகதையின் நீட்சியல்ல நாவல். கதாசிரியன் என்பவன் விரிவான விளக்கம் தர வேண்டியவன். சிறுகதை, கவிதை எல்லாம் தளத்திற்குள்ளேயே நின்று கதை சொல்லவேண்டும். அதனால் என் கதைகளும் அதுபோலவேதான். நான் முதல் சொன்னதுபோல் சம்பவங்களின் தொகுப்புத்தானே நாவல். எனக்கு மட்டுமல்ல, எந்த எழுத்தாளர்களுக்கும் வேறு வேறாகத்தான் இருக்கும்.
உங்கள் எழுத்துகளில் தத்துவார்த்த தேடல்கள் அதிகமாக இருக்கிறதே?
தத்துவம் என்பது சாமியார்களுக்கு மட்டுமே கை வருவதல்ல. நல்ல முறையில் குடும்பம் அமைந்துள்ளவர்களுக்கும் கைவருவதுதான். வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொண்டால், அதுவே நம் ஆன்மாவை நாம் உணர்வதற்கான வழிகாட்டியாக இருக்கும். நான் யார் என்பதை எனக்கு உணர்த்துவதற்கும் என்னை 'நான்' யார் என்று கேள்வி கேட்கவும் ஆரம்பித்தபோது உருவான நாவல்தான் 'கூண்டினுள் பட்சி' நாவல்.
இன்னொரு நாவலான 1215 பக்கங்கள் கொண்ட 'தேரோடும் வீதி'யில் சொல்ல வந்தது என்ன? அது உங்கள் சுயசரிதையா?
'தேரோடும் வீதி' என் சுயசரிதை என்றால் 'பைல்கள்', 'தலைமுறை', இவையெல்லாம் எந்த வகையில் வரும். எழுத்தாளன் எழுதினால் அதை மட்டுமே பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு சுயசரிதையா என்பதெல்லாம் அபத்தமானது. அந்த நாவலில் எழுத்தாளன் சிவ கதிரேசன் முன்னுக்கு வரத்துடிக்கும் ஆர்வம்தான் கதையாகும். அறிவியல்வாதி தற்கொலை பண்ணிக் கொள்வதில்லை. அடுத்த கட்டம் தன்னை நிலைநாட்டுவதற்குத்தான். எந்த எழுத்தாளனையும் குறிவைத்து அதை எழுதவில்லை. அது எழுத்தாளனைப் பற்றிய கதை அவ்வளவே!
விமர்சகர் எம்.ஏ. நுஃமான் 'தேரோடும் வீதி' நாவலில் வரும் சிவ.கதிரேசனின் தோல்வி எழுத்தாளர் நீல.பத்மநாபனின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ளாரே?
நுஃமான் அவர் சார்ந்திருக்கும் குழுவை சந்தோஷப்படுத்தச் சொன்ன விமர்சனம் அது. அப்படிப் பார்த்தால் ஜே.ஜே. சில குறிப்புகள் எழுதிய சுந்தர ராமசாமியைச் சொல்லவேண்டும். திரவியத்தை எப்படி எடுத்துக் கொண்டார். இதுதான் தமிழர்களிடம் உள்ள குழுச்சண்டை மனப்பான்மை. எழுதுவதற்கு ஒரு பத்திரிகை அனுமதிப்பதால் வேண்டாதவர்களையெல்லாம் திட்டிக்கொண்டேயிருப்பார். இது ஆரோக்கியமான இலக்கியத்தின் வளர்ச்சியாக இருக்க முடியாது.
கடைசியாக நீங்கள் படித்த எழுத்தாளர்கள் யார்?
இளம் வயதிலேயே கையில் கிடைத்த எல்லாப் புத்தகங்களையும் படித்து வந்துள்ளேன். புதுமைப்பித்தன் கதைகள், க.நா.சு.வின் 'பொய்த்தேவு' போன்றவைகளும், ஷேக்ஸ்பியரின் படைப்புகள், நகுலன், டால்ஸ்டாய், தாஸ்தவ்யேஸ்க்கி, மலையாளத்தில் என்.வி.கிருஷ்ணவாரியாரின் படைப்புகள் என நான் தேடிப்பிடித்த படைப்புகள் அதிகம். இன்றுவரை வாசகனாக இருக்கிறேன்.
நன்றி: அம்பலம் இணைய இதழ்
Sep 27, 2010
பாற்கடல் - லா.ச. ராமாமிர்தம்
Sep 25, 2010
தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்-ரமேஷ்-பிரேம்
பின் - நவீனத்துவ தத்துவங்கள், விமர்சனக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் அறிவுலக விமர்சனப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ரமேஷ் - பிரேம். பின் நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். இலக்கிய இரட்டையர்களாகவும் அறியப்படும் இவர்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என்று நிறைய எழுதியுள்ளனர். இதுவரை 15 புத்தகங்களும் 4 மொழி பெயர்ப்பு நூல்களும் வெளியாகியுள்ளன. பாண்டிச்சேரி அரசின். "கம்பன் புகழ் விருது" இரண்டு முறை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ரமேஷ், முழு நேர எழுத்தாளராக பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். பிரேம், டெல்லி பல்கலைக்கழகத்தில் "Indian languages and Literary Studies" துறையில் விரிவுரையாளராக உள்ளார். இந்நேர்காணல் பாண்டிச்சேரியில் உள்ள ரமேஷ் - பிரேம் இல்லத்தில் எடுக்கப்பட்டது. இதன் மொழிபெயர்ப்பு "மாத்தியமம்" மலையாளப் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.
எழுத்து என்பது தனி மனித மனம் சார்ந்த படைப்புக் கலையென நம்பப்படுகிறது. இந்நிலையில் ரமேஷ் - பிரேம் எவ்வாறு இணைந்து சிந்திக்கவும் எழுதவும் சாத்தியப்படுகிறது?
நாங்கள் கலையை மட்டுமல்ல. எந்த ஒரு படைப்புச் செயலையுமே தனி மனித மனம் சார்ந்த, தனித்த உணர்வு சார்ந்த செயலாக எண்ணுவதில்லை. தனித்தனியே எழுதிக்கொண்டிருந்த நாங்கள். கவிதையை மனம் சார்ந்த ஊடாட்டங்களின் விளைவாகவும், மொழியைப் பரந்துப்பட்ட கூட்டு நினைவு மற்றும் கனவின் களமாகவும் புரிந்துகொண்டபின், இணைந்து எழுதத் தொடங்கினோம். இன்றைய சூழலில் கலைத்துவமான மனமும், அறிவும் மிகவும் தனிமைப்பட்டும் விலகியும் இருக்கின்றன. பிற மொழிச் சூழல்களைப் போலவே, தமிழிலும் கலைத்துவமான, கவித்துவமான நட்பும் புரிதலும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் எங்களுக்குள் தொடர் உரையாடலும், பேச்சும், முரண்பட்ட எதிரெதிர் வாதங்களும் நிகழ்வதென்பது எங்களுடைய எழுத்துக்கு மட்டுமல்ல, சிந்தித்தல், வாழ்தல் என்பவற்றிற்குக்கூட அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளன. மையம் உடைய, சுயத்தை நிறுவும் பல எழுத்துக்கள்கூட தனி மனித, தனிமனம் சார்ந்த படைப்புகள் அல்ல. எங்களுடையதோ இவற்றிலிருந்து விலகியது. நாங்கள் இணைந்து சிந்திப்பதும், எழுதுவதும் இயல்பானதும் அறிவியல் அடிப்படையில் சரியானதுமாகவே உள்ளது. தமிழ் மரபின் மிகத் தொன்மையான திணைக் கவிதைகள்கூட கூட்டு மனதின், கூட்டுக் கவித்துவத்தின் படைப்புகளே. தனியே எழுதுகிறவர்கள் தாங்கள் கற்றது, பிறரிடமிருந்து பெற்றது, பிற உணர்வுகளுடன் ஊடாடுவது என்பதை ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு மறைப்புக்கு உட்படுத்தி, தமது "பெயரை" மட்டும் முன்னிலைப்படுத்தி உறுதி செய்து விடுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இணைந்து எழுதுதல், "சுயம்" மற்றும் "தனித்த நிலையென்ற" ஒரு பிளவு நிலையை, சிறிய அளவில் கடந்து செல்வதற்கான ஏற்பாடு. இது சாத்தியப்படுவது என்பது பண்பாடு, அரசியல், அறம் என்பவற்றில் ஏற்படும் சிதைவு, வலி, துயரம் என்பவற்றை முழுமையாக எதிர்கொண்ட படைப்பாளிகளுக்கு இன்று தேவையும் நிர்ப்பந்தமும் கூட.
சிந்தித்தலிலும், எழுதுதலிலுமான இந்த இணைப்பு எப்போது தொடங்கியது?
எங்களின் பதின் பருவத்தில் தொடங்கியது. நாங்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி காலங்களில், ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தவர்கள், மேலும் ஒரே வகை சமூகச் சூழல், ஒரே வகை வர்க்கப்பின்னணி, இவற்றோடு எங்கள் இருவருடைய குடும்பங்களின் பாடுகளும் வலிகளும்கூட ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. எங்களுக்குப் பிடித்தமான கவிஞர்களும், எழுத்தாளர்களும், திரைக்கலைஞர்களும் கலகக்காரர்களும், மகான்களும் கூட எனது ஒத்த சிந்தனை முறைக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
யாருடன் உங்கள் கனவுகளையும் வலிகளையும் மிக உயர்ந்த அறங்களையும் மிகக் கீழான மனச்சிக்கல்களையும் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறீர்களோ, அவருடன் உங்களை முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குருவும், ஒரு வழித்துணையும், மனநோய் மருத்துவரும் தேவைப்படுகிறார். நீங்கள் எதைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளுகிறீர்கள். நீங்கள் எவருக்காக கண்ணீர் சிந்துகிறீர்கள். எதைக் கண்டு பயப்படுகிறீர்கள், நீங்கள் எவற்றைக் கண்டு வெறுப்பு கொள்கிறீர்கள் என்பவற்றையெல்லாம் பொறுத்ததுதான் சிந்தித்தலும் எழுதுதலும். உங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் குழந்தையுடனோ, ஒரு நாய்க்குட்டியுடனோ நீங்களும் குட்டிக்கரணம் போடுகிறீர்கள். உங்கள் அரசியலும், அறமும் இவைப்பற்றிய கேள்விகளும் குழப்பங்களும் ஒன்றாக உள்ளன. பிறகு இணைந்து எழுதலாம். ஏனெனில் முடிவுகளை நோக்கியோ சாராம்சத்தை நோக்கியோ நீங்கள் செல்லவில்லை. செயல் மற்றும் சிந்தனை மட்டுமே நிகழ்கிறது. ஒருவர் எழுதிய இசைக்குறிப்பை மற்றவர் தனது கருவியில் இசைக்கிறார். நூறு பேர் இணைந்து ஒரே இசையை உருவாக்குகிறார்கள். கலையின் பல வடிவங்கள் கூட்டாகவே உருவாக்கப்படுகின்றன. மார்க்ஸ் - எங்கெல்ஸ். ழீல் தெலஸ் - பெலிக்ஸ் குத்தாரி போன்றவர்கள் சிலவற்றை இணைந்து எழுதியிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து எழுதுவது பற்றியே சிந்திக்கிறோம், உரையாடுகிறோம், எழுத்துக்காக மௌனமாகவும் இருக்கிறோம். யார் முதலில் தொடங்கினாலும், முடியும்போது இருவருடைய சொற்களாலும் அவை நிரம்பிவிடுகின்றன.
உங்கள் அரசியல் என்ன? உங்கள் எழுத்தின் அரசியல் என்ன?
எங்கள் அரசியல் மிகச் சுருக்கமான வடிவில் வன்முறையை மறுப்பது, ஒடுக்குமுறையை எதிர்ப்பது, விடுதலையை ஏற்பது. எங்கள் எழுத்துக்களுக்கோ பலவித அரசியல்கள் உண்டு. பன்மையை நிறுவுதல், பலவித அணுகுமுறைகளை உணர்த்துதல், உடல் மனம் என்பவற்றின் அதிசயத்தை வியந்து கூறுதல், சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தல், மையப்படுத்தப்பட்ட உண்மைகளைக் கலைத்து, பலவித நிஜங்களின் சாத்தியப்பாடுகளை எடுத்துரைத்தல், முரண்படும் உரிமையை முன்வைத்தல், மாற்று அழகியல்களுக்குக் களம் அமைத்தல். இப்படி எத்தனையோ கூறலாம். என்றாலும், எழுதுவதே எங்களுக்கு ஒரு அரசியல் செயல்பாடாகத்தான் தோன்றுகிறது; அதன் பலவித அர்த்தங்களில், அறமும், அழகியலும் தீவிரமடையும் பொழுது நாம் அரசியல் வயப்படுகிறோம்தானே. எங்கள் எழுத்துக்கள் சில சமயங்களில் நாங்கள் இப்படி அரசியல் வயப்படுவதையும்கூட விமர்சிக்கக்கூடிய ஒரு ஆய்வுக்களமாக இயங்குகிறது. அரசியல் இல்லாமல் இருக்கமுடியாதா என்றும்கூட கேட்கிறது.
ஒரு சமூகத்தில் எழுத்தாளருக்கும் எழுத்துக்குமான பங்கு என்ன என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
எழுத்து ஒரு சமூகத்தின் மனச்செயல்பாடு. அது மொழியை இயக்கத்தில் வைக்கும் தளம். இலக்கியம் என்பதும், எழுத்து என்பதும் உண்மை என்று சொல்லப்படுபவற்றிற்குள் உள்ள புனைவுகள் பற்றியும், அழகு என்பதற்குள் உள்ள அச்சமுறுத்தும் தன்மைகள் பற்றியும் தொடர்ந்து பேசுவது. அர்த்தமுடையவை என்பவற்றுக்குள் உள்ள அபத்தங்களையும் அர்த்தமற்றவை என்று ஒதுக்கப்பட்டவற்றிற்குள் உள்ள அதிசயத் தன்மைகளையும் தேடிக் கண்டடைவது. உலகைப் புரிந்துகொள்ள ஒற்றைவழி மட்டும் இல்லை என்றும், மனிதர்கள் என்பதும் வாழ்வு என்பதும் ஏதோ ஒரு வகையும், வடிவமும் கொண்டு முடிந்து போவதில்லை என்பதையும் ஓயாமல் கூறிக்கொண்டிருப்பது. உண்மைகளால் ஒரு சமூகம் மூடப்படும் பொழுது கற்பனைகள், கனவுகள், புனைவுகளின் சாத்தியங்களைத் திறந்துவிடுவதாக உள்ள எழுத்து புனைவுகளால் மூடப்படுபவற்றில் உள்ள உண்மைகளை வெளிக்காட்டுவதாக மாறிவிடுகிறது. மறதிகளால் சூழப்பட்ட ஒரு சமூகத்தில் நினைவுகளை மீட்டுத் தருவதாக உள்ள எழுத்து, அதிக நினைவுகளால் பீடிக்கப்பட்ட சமூகத்திற்கு சில தேவைப்படும் மறதிகளைத் தரக்கூடியதாகவும் மாறுகிறது. மையங்களில் உள்ள முடிவுகளை ஓயாமல் சந்தேகப்படுவதன் மூலம், விளிம்புகளில் மறைந்துபோன மற்றவற்றின் இருத்தலை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமூகத்தில் ஏதோ ஒரு புலன் மட்டும் மையப்பட்டு, மற்றவை பொருளற்றவைகளாக மாற்றப்படும் பொழுது, மறுக்கப்பட்ட புலன்களைச் செயல்பட வைக்கக்கூடியதாக எழுத்து உள்ளது. ஒரு வகையில் எழுத்து தனிப்பட்ட நோக்கத்திற்குள் அடங்குவதும்கூட இல்லை. அது பன்முகத் தன்மையை நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டியது. மனித இருப்பில் இத்தனைச் சாத்தியப்பாடுகளா? என்ற வியப்பைத் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருப்பதன் மூலம், வேறுபட்ட தன்மைகளுக்கான நியாயத்தை வழங்கும் எழுத்துதான், சில சமயங்களில் எத்தனை முரண்பட்டாலும் வேறுபட முடியாத தன்மையையும் கூறிக்காட்டுகிறது.
பன்மைத் தன்மை உடைய ஒரு சமூகத்தில் ஒன்றிணைந்த சிந்தனையும் எழுத்தும் அரசியலடிப்படையில் சாத்தியமா?
எங்களைப் பொருத்தவரை "ஒன்றிணைந்த சிந்தனை". "ஒன்று கலந்த சிந்தனை முறை" என்பவற்றை நாங்கள் ஏற்கவில்லை. பன்மைத்தன்மையும் பல வகை வடிவமும் ஏற்கப்பட வேண்டும்; வேறுபாடுகளுக்கான நியாயமும் அவற்றிற்கான இடமும் ஏற்கப்படவேண்டும். இந்த ஏற்பில், புரிதலில் உருவாகும் ஒருங்கிணைப்பே அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை. மையப்படுத்தப்பட்ட அறமோ, சிந்தனை முறையோ, மதிப்பீடோ எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் வன்முறையானதாகவே இருக்கும். நிலவியல், பண்பாட்டியல், வரலாறு, வட்டாரத்தன்மை, சூழலியல் என வேறுபாடுகள் விரியும்போது அறிவியலிலும் உலகு பற்றிய பார்வையிலும் அழகியல், அறம் என்பவற்றிலும் பன்மையும் வேறுபாடுகளும் இருக்கும். நவீனத்துவம் இந்த வேறுபாடுகளை மறுத்து ஒற்றைத் தன்மையுடைய உலகையும், கனவையும், அறிவையும், அறத்தையும் முன்வைத்து தனது செயலை நியாயப்படுத்தியது. அதன் அழிவுத் தன்மைதான் இன்று நம்மைச் சூழ்ந்துள்ளது. பரவலையும் வேறுபாட்டையும் மாறுபடும் உரிமையையும் விலகிச் செல்லும் விடுதலையையும் இன்று புரிந்துகொள்ளத் தொடங்கவேண்டும். இன்றைய எழுத்து இவற்றைப் புரிய வைக்கவேண்டும்.
மேற்குலக அறிவு இன்று அடைந்துள்ள இடம் பற்றி எப்படி விளக்குவீர்கள்?
உலகில் எத்தனை இனக்குழு சமூகங்களும் எத்தனை மொழியினச் சமூகங்களும் இருந்தனவோ அத்தனைவித பண்பாடுகளும் அறிவுமுறைகளும் அரசியல் நாகரிகங்களும் இருந்திருக்கின்றன. ஆனால். இன்று இதைச் சொல்வதே முரண்பட்ட ஒரு பயங்கரம் என்று அர்த்தம் ஆகிவிடக்கூடும் என்ற அளவுக்கு அவை அழிவுக்குள்ளாகி இருக்கின்றன. நாகரிகமடைந்த - நாகரிகமடையாத என்ற எதிரிடைகளும், அறிவியல் அடிப்படையிலான சமூகங்கள் - அறிவியல் அடிப்படை அற்ற சமூகங்கள் என்ற எதிரிடைகளும்கூட இன்று உருவாக்கப்பட்டுவிட்டன. இன்று அறிவு, சிந்தனை, தொழில்நுட்பம் என்பதே மேற்குலகின் அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விளக்கப்படுகின்றன. இது மிகப்பெரிய வன்முறை கொண்ட புனைவு. இன்றுள்ள உலகமயமாதல் என்ற வன்முறைக்கு இதுவே அடிப்படை. பலம் குறைந்த நாடுகளை, தமது பயங்கரவாதச் செயல்களால் அடிமை கொண்டு, பல இன மக்களை அழித்தொழித்த, பல நாடுகளின் இயற்கை வளங்களை நாசம் செய்த மேற்குலக பேரதிகாரத்தின் அழிவுக்கூறுகள் மாறுவேடமிட்டபடி இன்று உலக அறிவியலாக, அழகியலாக, கலை இலக்கியங்களாக, தொழில் நுட்பங்களாக பெரும் தாக்குதலைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நிலமும், பண்பாடும் இதில் தனது இடத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய தருணமிது. இந்திய நிலப்பரப்பில் உள்ள மொழிச் சமூகங்கள் கட்டாயம் இந்தச் சிக்கலைப் புரிந்துகொண்டு தமக்கான அறிவை, சிந்தனை முறையை எதிர்காலத்திற்காக கட்டமைக்க வேண்டியது உடனடியாகத் தேவையாக உள்ளது. உலக அறிவைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், உங்கள் நிலத்திற்கானதை உருவாக்கவேண்டும்.
உலகமயமாதலின் பயங்கரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
உலகமயமாதல் என்பது மிகத் தொன்மையான அளவில் ஆக்கிரமிப்புப் போர்களின் மூலம் தொடங்கப்பட்டு, மத்திகால காலனியாதிக்க வன்முறையினால் விரிவுபடுத்தப்பட்டு, நவீனத்துவத்தால் உலக அளவில் உறுதி செய்யப்பட்டு, தற்போது முழுமையான மனித இனங்களை, நிலங்களைப் பற்றிப் பிடித்திருக்கிறது. இது அரசியல், பொருளாதாரம், உற்பத்திமுறை, போர் அச்சுறுத்தல் என்ற கண்ணுக்குப் புலப்படும் முறைகளிலும்; பண்பாட்டு அழிப்புகள், இனக்குழு அழிப்புகள், பன்மைத்துவ அழிப்புகள், சிந்தனை முறைகளை மையப்படுத்துதல் என்ற கண்ணுக்குப் புலப்படாத முறைகளிலும் மனிதக் குழுக்களுக்கு எதிரான பயங்கரத்தைச் செய்து வருகிறது. மனிதகுல முன்னேற்றம், உலகளாவிய பரிமாற்றம் என்ற பொய்யான உறுதி மொழிகளுடன் இந்த உலகமயமாதல் எல்லாத்துறைகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது. இதன் வன்முறை பயங்கரமானது. ஏகாதிபத்திய பாசிசம் இதன்மூலம் உருவாகக்கூடியது. பலகோடி மனிதர்களைப் பயனற்றவர்கள் என்று கொன்றழிப்பதை நியாயப்படுத்தக்கூடியது இந்த உலகமயமாதல். உயர் தொழில்நுட்பவெறி, போராதிக்க அச்சுறுத்தல், ஒற்றைத்தள அறிவு, உலக மேலாண்மை, உலகமயமாதல் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று உறவுடையவை. விடுதலையை, மனித நுண்ணுணர்வுகளை, பிற மனித இருப்பை நேசிக்கும். மரியாதை தரும் யாரும் உலகமயமாதலை ஏற்கவோ, சரியென்று கூறவோ முடியாது. உலகமயமாதலையும் அமெரிக்க, ஐரோப்பிய மேலாண்மையையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் வரும் வன்முறைப் போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி ஆயுதங்கள் அனைத்தும் உலகமயமாதலை ஏதோ ஒருவகையில் விரிவுபடுத்தி மக்களையே அழிக்கும். உலக ஆயுத வியாபாரிகள் பல நாடுகளில் உள்நாட்டுப் போர்களையும், மோதல்களையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகமயமாதலின் பிரச்சினை பயங்கரம் பற்றிப் பேசும்போது உலகளாவிய சிந்தனை, உலகளாவிய அறிவுமுறை என்பவற்றை எப்படி விளக்குவீர்கள்?
நவீனத்துவம் கூறிய உலகளாவிய, மனித குலம் சார்ந்த என்ற உறுதிமொழிகள் பொய்யானவை என்பது தற்போது புலப்பட்டுவிட்டது. ஒவ்வொரு நிலத்திற்கும், இனத்திற்கும், இனக்குழுவுக்கும் தனித்தனியே அறிவும், பண்பாடும், அணுகுமுறையும், மொழியும், அழகியலும், அறமும், அறிவியல் தொழிநுட்பங்களும் இருக்கும். இவற்றையெல்லாம் பொருளற்றவை என்றும், பயனற்றவையென்றும், தவறானவை என்றும் கூறி ஒதுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எந்த இனமும் மற்றொரு இனத்தைவிட உயர்ந்ததோ, மேலாண்மை செய்யும் உரிமை உடையதோ அல்ல. அழித்தொழிப்பு, போர்த்தாக்குதல், கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் மூலம்தான் ஒரு அறிவின்மீது மற்றொரு அறிவு மேலாண்மை கொள்கிறது. இன்றுள்ள உலகமயத் தன்மைக்குப் பின்னே உள்ள படுபாதகக் கொலைகள் எத்தனை கோடி. போர்கள் எத்தனை ஆயிரம். இன அழிப்பு எத்தனை பயங்கரமானது. இவற்றை சற்றே நினைவுப்படுத்திக் கொண்டால் உலகமயமான, மேற்கு மயமான சிந்தனை முறைகள் அறிவுமுறைகள் என்பவற்றை நாம் மௌனமாக ஏற்றுக்கொண்டு இருக்கமுடியாது. மேற்குலகின் சில மாற்றுச் சிந்தனையாளர்கள் வெள்ளை மையவாதத்தையும் இன ஒழிப்பு அரசியலையும் எதிர்த்து ஏகாதிபத்திய வன்முறையைத் தொடர்ந்து புலப்படுத்தி வருகின்றனர்.
வரலாற்றின் முடிவு (End of History) என்பது பற்றி கம்யூனிச நாடுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு எண்பதுகள் தொடங்கி பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்டுள்ள தத்துவார்த்தச் சிக்கல் பற்றி நீங்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்?
கம்யூனிசம் என்பதை ஒரு தத்துவம் என்பதைவிட, ஒரு கூட்டுக்கனவு என்று கூறலாம். மனிதர்களை நேசிப்பவர்கள் யாருக்கும் இந்தக் கனவு தோன்றலாம். இந்தியாவில் பௌத்தம் இதை வேறு வகையில் முவைத்தது. அம்பேத்கரும், காந்தியும் இதனை வேறு வேறு வார்த்தைகளில் விளக்க முயற்சித்தார்கள். இந்தியாவில் பல மகான்களும் ஞானிகளும் உண்மையான துறவிகளும் இந்தக் கனவைக் கொண்டிருந்தனர். ஆனால், அது ஒரு அரசியல் வடிவமாக, செயல் திட்டமாக மாறும்போது வேறு வடிவம் கொள்கிறது. விடுதலையை நோக்கிய கனவில் மார்க்ஸூம், ஏங்கெல்ஸூம் முன்வைத்த சோசலிசம் என்பது அற அடிப்படையில் கவித்துவமான ஒன்று. ஆனால் வழிமுறை என்பது, அவ்வளவு தெளிவானதோ, எளிதானதோ அல்ல. சோஷலிச அரசுகள் இருந்த நாடுகளில், கட்சிகளின் ஆட்சி இருந்த அளவுக்கு, சோஷலிச அறங்களும் சோஷலிச பண்பாடுகளும் இருந்தனவா என்பது மிக முக்கியமான கேள்வி. அதே சமயம் சோஷலிச கோட்பாடுகள் இன்று அய்ரோப்பா முழுக்க உள்ளீடான பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.
சோஷலிச நாடுகளின் சிதைவுகளுக்குக் காரணம் என்று எதை நினைக்கிறீர்கள்?
முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளின் வன்முறைகளும், மூன்றாம் உலக நாடுகளின் துயரங்களும் நிரம்பிய இருபதாம் நூற்றாண்டில், சில நாடுகளில் சோஷலிச அரசுகள் உருவானது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அவை தேசிய அரசுகளே தவிர வேறு இல்லை. இரண்டாம் உலகப் போரினால் உருவான தேசிய அரசுகள், சோவியத் யூனியனில் ராணுவ கண்காணிப்பின் கீழ் ஒருவித சமூகம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் பண்பாடு, அணுகுமுறைகள், சமூக உளவியல், மதிப்பீடுகள் என்பவற்றில் என்ன வகை மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றி இன்றுவரை சரியான பதிவுகள் இல்லை. இந்நிலையில் அந்நாட்டு மக்களே நமது அரசுகளை மாற்றிக்கொண்டார்கள். இது அந்த வகை நாடுகளில் முடிந்திருக்கிறது. ஆனால், மற்ற ஏகாதிபத்திய நாடுகளில் முடியக்கூடியதா என்ன? அந்நாடுகளில் ஏற்பட்டது மாற்றங்கள்தாம். சிதைவுகள் அல்ல. இதனை முன்வைத்து, உலக அரசியல் - சமூகப் பார்வையிலிருந்தே - விடுதலை மற்றும் சமநீதி, சம உரிமை, மக்கள் நல இலட்சியங்களை, கோட்பாடுகளை நீக்கிவிட வேண்டும் என்று மனித அழிப்பு, ஆதிக்கக் கருத்தியலாளர்களும் முதலாளித்துவ ஜந்துக்களும் கூறுவது விஷமத்தனமானது. அறிவியல் அடிப்படையற்றது.
இதற்கு மாற்றுக்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?
மேற்கத்திய அய்ரோப்பிய உதாரணங்களை விட்டுவிட்டு இந்தியச் சூழலை, இந்திய வரலாற்றை, இந்தியாவின் எண்ணற்ற மரபுகளைக் கற்று, இந்திய மரபுகளிலிருந்தே சிலவித விடுதலைக் கோட்பாடுகளைக் கண்டறிய வேண்டும். பண்பாட்டு அரசியல், தனி மனித உளவியல், நுண்ணரசியல், சாதியத்தின் கொடூரம், மதவெறி பாசிசத்தின் வேகம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு மாற்றுகளை உருவாக்க வேண்டும். இந்தியச் சமூகங்களின் அடிப்படை மனக்கட்டமைப்புகளை நிதானமாக ஆய்ந்தறிய வேண்டும். ஏதோ ஒரு கோட்பாடு எல்லாவற்றையும் தீர்த்துவிடும் என்று முரட்டுவாதம் செய்து கருத்தியல் அதிகாரத்தை நிறுவுவதை விட்டுவிட்டு, எல்லா மனிதநேயக் கருத்துக்களிலிருந்தும், அணுகு முறைகளிலிருந்தும் நமக்கான கூறுகளைக் கண்டெடுத்து இணைத்து ஆக்கபூர்வமான அரசியல் அறங்களை, மக்கள் மயமான செயல் திட்டங்களை வடிவமைக்க வேண்டும். அம்பேத்கரையும், காந்தியையும், பெரியாரையும் இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு பல அடிப்படைக் கூறுகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது. ஆன்மீகம், அறம், சிறு மரபுகளின் ஆக்கபூர்வமான கூறுகள் ஆகியவற்றைப் புரிந்து புதியவகை சேர்க்கைகளை உருவாக்க வேண்டும். இந்திய - தமிழ் - பின் நவீனத்துவப் புரிதல்கள் எங்களுக்கு இதுபோல் சிலவற்றைக் காட்டித் தந்திருக்கின்றன. என்றாலும், இவைப் பற்றிய நீண்ட ஆய்வுகளும், விவாதங்களும் தேவை. அதுவரை ஜனநாயகத்தையும் தேசியத்தையும் அவற்றின் உண்மையான அர்த்தத்தில் வளர்ந்து பாதுகாப்பதற்கே மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது.
இன்றைய சூழலில் நீங்கள் கூறும் பௌத்தத்தின் முக்கியத்துவம் என்ன?
இதுகுறித்து அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்து கூறியிருக்கிறார். காந்தியின் செயல்பாடுகளில் பௌத்தத்தின் முக்கியமான பல கூறுகள் உள்ளன. இந்திய மண்ணிலிருந்தே தோன்றிய மிகப் பெரும் அறச்சிந்தனையான பௌத்தம் தமிழகத்திலும், இந்தியாவிலும் பல நூற்றாண்டுகள் வாழ்வியலில் பிணைந்து இருந்திருக்கிறது. இன்றைய அரசியல் சிதைவுகள், சமூக நோய்கள், மதவெறி வன்முறைகள், உலகமயத்தாக்குதல்கள் என்பவற்றிற்கு மாற்றான புதிய வாழ்வு என்ற கோட்பாட்டை, பௌத்தத்தின் அறமும் தத்துவமும் அமைத்துத்தர முடியும். நமது மக்கள் மறந்துபோன தமது பூர்வீக சமயமான பௌத்தத்தை நினைவூட்டி, மறுஉயிர்ப்பு செய்வதன் மூலம், ஒரு மாற்று அரசியல் சமூக அறத்தையும், பண்பாட்டையும் கட்ட முடியும். மக்கள் இயக்கங்கள் பௌத்தத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, அதனை சிந்தனை மற்றும் பண்பாட்டுத்தளத்தில் கொண்டு செல்லும்போது பாசிசம் விரிவடைவதைத் தடுக்கமுடியும். நாங்கள் கூறும் தமிழ் பௌத்தம் இன்னும் பல விரிவான பொருளை உடையது.
உங்கள் பார்வையில் தற்கால தமிழ் அறிவு ஜீவிகளின் நிலைப்பாடு அல்லது நிலை என்னவாக உள்ளது?
தமிழகத்தில் காலம்காலமாக ஒரு எதிர்மரபு இருந்து வந்துள்ளது. அறத்தையும் உண்மையையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மை சிந்தனையாளர் குழு இருந்து வந்துள்ளது. மக்களுக்கானவற்றைப் பேசவும், அதிகாரத்திற்கும் அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரானவற்றை வளர்க்கவும், இந்த வகை அறிவு மரபு தொடர்ந்து முயன்று வந்திருக்கிறது. காலனிய, நவீன காலச் சிக்கல்களிலிருந்து உருவான வைகுண்டசாமி, இராமலிங்க அடிகள் தொடங்கிய அயோத்திதாசர், பெரியார், ஈ.வே.ரா. வழியாக சிந்தனை மரபுகள் தமிழில் விரிவடைந்திருக்கின்றன. ஆனால், இவை மக்களிடத்தில் முழுமையாகச் சென்றடையவில்லை.
தற்போது அறிவு ஜீவிகள் என்பவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் குழப்பத்தை மறைக்க பல முடிவுகளைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் சிக்கலும், அவலமும் பன்முகப்பட்டது. இவற்றைக் கண்டறிந்து பேசவும் ஆய்வு செய்யவுமான அறிவுத்தளம் மிகச் சிறியதாக உள்ளது. மார்க்சிய, பெரியாரிய, காந்திய, அம்பேத்கரிய சிந்தனைகள் ஏதோ கட்சி மற்றும் அமைப்பு கட்டும் செயல் திட்டங்களாகக் குறுக்கப்பட்டுவிட்டன. அய்யோத்திதாசரை முன்வைத்து உருவான பௌத்த சிந்தனை அய்ரோப்பிய தொண்டு நிறுவனமாகிவிட்டது. விவாதங்கள் விரிவாக்கப்படுவதில்லை. மார்க்சியம் பேசுபவர்களுக்கு கிராமிய, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய அக்கறை இருப்பதில்லை. பெரியாரியம் பேசுபவர்களுக்கு சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் பற்றியும் தமிழ்ப் பண்பாட்டு உள்ளீடுகள் பற்றியும் சமூக மனவியல் பற்றியும் புரிதல் இருப்பதில்லை. காந்தியம் என்பது செயலற்ற, தனி மனிதப் பேச்சாகவும், வசதியான கௌரவ வேடமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. அம்பேத்கரியம் என்பது கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சட்டசபையில் இடம் பிடிப்பதன் தேவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு குறுக்கப்பட்டுவிட்டது.
தமிழில் அறிவு - சிந்தனை என்பதன் விரிவான அக்கறைகள் மறதிக்குள்ளாகியிருப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் நிறுவனங்கள், அமைப்புகள் இவற்றைத் தமது கருவிகளாக்கிக் கொண்டது முதல் காரணம். மக்கள் குழு என்பது கும்பல் அரசியல், திரைப்பட அரசியல், மத அமைப்பு அரசியல் என்பவற்றைத் தவிர எதையும் அரசியலாகப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளது. அறிவுஜீவிகள், சமூகச் சிந்தனையாளர்கள் என்பவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட உலகமயமான சிக்கல்கள் பற்றியும் இந்தியச் சமூகம், தமிழ் சமூகம் அடைந்துள்ள சிதைவுகள் பற்றியும் மிகக் குறைவான புரிதல் மட்டுமே கொண்டவர்களாக இருப்பதுடன் தத்தமது சிந்தனைகளை முடிவுகளிலிருந்து தொடங்குபவர்களாகவும் உள்ளனர். இவை பற்றிய ஓரளவு புரிதல் உள்ளவர்கள் சிதறிப்போய் தனிமைப்பட்டு கண்ணில் காணமுடியாத சிறுபான்மையினராகவே இருக்க வேண்டியிருக்கிறது. தமிழக பத்திரிகைகளையும், தொலைக்காட்சிகளையும் மேடைகளையும் பார்த்து வரும் ஒருவருக்கு எதிர்காலம் பற்றிய எந்த நம்பிக்கையும் ஏற்பட வழியில்லை. கல்பாக்கம், கூடங்குளம் என இரு அணு உலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட தமிழ்நாடு பெரும் ஆபத்தை எப்போதும் தனக்குள் கொண்டுள்ளது. இது பற்றிய எந்தவொரு சொரணையும் தமிழரிடத்தில் இல்லை. பச்சையற்ற மண்ணாக மாறிவரும் தமிழகத்தில் 90 சதவீதம் பேச்சுக்கள் திரைப்படங்கள், திரைப்பட நடிக, நடிகைகள், கிரிக்கெட் பற்றி மட்டுமே இருப்பதை எந்தப் பின்னணியில் புரிந்து கொள்வது. விவசாயம் அழிந்துபோன நிலங்கள் பற்றிய பேச்சும் அழிந்துகொண்டிருக்கும் காடுகள், மலைகள், நீர்நிலைகள் பற்றிய பேச்சும் கூட சிறுபான்மை பேச்சுகளாகவே இருக்கும் இந்தச் சூழலில் அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் என்பவர்களின் இடம் என்ன? காலம் இன்னும் தேவை என்றுதான் தோன்றுகிறது. தமிழில் அறிவுத்துறையும், சமூக அரசியல் சிந்தனையும் மன அமைப்புடன் ஒன்றிய தொடர் நிகழ்வாக மாற இன்னும் காலம் எடுக்கும். அமைப்புகள் தமது எல்லைக்குள் இயங்குவது தவிர்க்கமுடியாதது. ஆனால், சிந்தனையாளர்கள் அவை கடந்த கேள்விகளைத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டியவர்கள்.
தமிழிலக்கியத்தின் எதிர்காலப் போக்குகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்?
தமிழின நவீன இலக்கியம் தொடங்கிய காலத்திலிருந்து மிக முக்கியமான பிரச்சினைகளும் கேள்விகளும் ஆராயப்பட்டு வருகின்றன. தமிழின் நவீன மனம், நவீன வாழ்வு, நவீன அடையாளம், நவீன மதிப்பீடுகள் அதன் மரபான அமைப்புகளுடன் மோதும்போது ஏற்படும் சிக்கல்களும், மாற்றங்களும் ஏற்பதில் நேரும் குழப்பங்களும் பேசப்பட்டுள்ளன. ஆனால் எதார்த்த எழுத்து, எதார்த்தவியல் பார்வை என்பது முக்கியம் பெற்று உறுதியான வடிவமாகிப் போனதனால், தமிழ்ச் சமூகங்களின் பலவித கதை மரபுகள், கதை கூறும் முறைகள் மறுதலிக்கப்பட்டு, எழுத்துக்கான ஒரு உள்ளார்ந்த தணிக்கையும் ஒடுக்குதலும் ஏற்பட்டுவிட்டது. தற்போது புதிய வகை எழுத்து கதை கூறுதல், கதை அமைத்தல், முரண்பார்வைகள், பலகுரல் தன்மை என்பவற்றின் வகைமைகள் மூலம் புதிய வடிவங்களை நோக்கிச் செல்ல முனைந்திருக்கிறது. ஆனால் தமிழில் பலவகைத்தன்மை, சிறு மரபுகள், கதை கூறலின் பன்மைச் சாத்தியப்பாடுகள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்ட செவ்வியல் தன்மை உடைய எழுத்துகள் இனி தேவைப்படுகிறது. எதிர்கால எழுத்துக்கள் அதை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. எழுத்து என்பது நுண்மையான ஒரு கலைத்தொழில் என்பதுடன் பன்முக அறிவும் பல்துறைப்பயிற்சியும் தேவைப்படும் நிகழ்கலை வடிவம் என்ற பிரக்ஞையுடன் எழுதப்படும் எழுத்துக்கள் தேவைப்படுகின்றன. எப்போதும் போல் வெறும் பேச்சுக் கதைகள், பெருங்கலாச்சாரக் கதைகள் அதிகம் பெருகி நுண்ணுணர்வுகளை, நுண்ணறங்களை, நுண்ணழகியல்களை நசிவுபடுத்தும் என்பது மட்டும் தற்போது தெளிவாகத் தெரிகிறது. அவற்றை எதிர்த்து நிற்கும் வலிமையுடன் சிறுபான்மை நுண்ணிலக்கியவாதிகள் செயல்படுகிறார்களா என்பதை இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தே நாம் அறிந்துகொள்ள முடியும். எந்த ஒன்றையும் நுகர்பொருளாக்கி ஆற்றல் அழித்துவிடும் சக்தி தற்போதைய ஊடகங்களுக்கு உண்டு. அவற்றின் வன்முறையை மீறி தமிழிலக்கிய வகைமைகள் வளருவதற்கு கடின உழைப்பும் போராட்டமும் நிறைந்த வாழ்வும் எழுத்தாளர்களுக்குத் தேவைப்படுகிறது.
நன்றி: தீராநதி 21 SEPTEMBER, 2005
Sep 24, 2010
இ.பா……. எண்பது!-பாரதி மணி
என் ஐம்பதுவருட நண்பர் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு எண்பது வயதாகிறது. சென்ற ஜூலை மாதம் 9-ம் தேதி உயிர்மை பதிப்பகமும் மணற்கேணியும் இணைந்து நடத்திய கருத்தரங்கிலும், அடுத்தநாள் TAG Centre-ல் இ.பா. குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடிய விழாவிலும், தன் நீண்ட, பயனுள்ள வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும், இளமைத்துடிப்புடனும் தன் நியதிப்படி வாழ்ந்த ஒரு நல்ல மனிதரைப்பார்க்க முடிந்தது. இ.பா. நண்பர்களிடம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பழகுவார். அவருக்கு யாரும் விரோதிகளில்லை. ‘இலக்கிய அரசியல்’ இல்லாதவர். எதற்கும் விட்டுக்கொடுக்காதவர். தமிழக அரசின் கலைமாமணி விருதை வேண்டாமென்று மறுத்தவர். தனது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி தயங்காமல் சொல்பவர். அமெரிக்காவில் வசிக்கும் தன் மகன் முகுந்த் சிரமப்பட்டு வாங்கிக்கொடுத்த ‘பச்சை அட்டையை (American Green Card) அங்கு வசிக்க தனக்குப்பிடிக்கவில்லையென்று அங்கேயே வீசி எறிந்துவிட்டு, ஆற்காட்டாரின் மின்வெட்டுகளை சந்திக்க நிரந்தரமாக சென்னை வந்தவர். நான் சென்னை வந்தபிறகு, மீண்டும் எங்கள் நட்பு நெருக்கமானது. வாரத்துக்கொருமுறையாவது, அவரை நானோ, என்னை அவரோ தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தால், பேசிக்கொண்டேயிருப்போம். என் வீட்டிலேயோ, அவர் வீட்டிலேயோ யாராவது வந்து அழைப்புமணி அடிப்பதுவரை அது தொடரும். ‘யாரோ வாசல்லே வந்திருக்கா. அப்புறமா பேசுவோம்’ என்பது தான் எங்கள் கடைசி வாக்கியமாக இருக்கும்! பேசின செல் போனில் Call Duration 48 minutes 22 seconds என்று காட்டும்! எங்களுக்கும் பொழுது போகவேண்டாமா?
சி ல வருடங்களுக்குமுன் தன் மனைவி இந்திராவை இழந்த பார்த்தசாரதி, தன் எண்பதாவது வயதில் சதாபிஷேகத்தை மனைவியில்லாமல் கொண்டாட விரும்பவில்லை. மனைவியின் மறைவு, இவரை பெரிய அளவில் பாதித்தது. திருமதி இந்திரா இ.பா.வை ஒரு குழந்தையைப்போல் சீராட்டி குடும்ப பாரத்திலிருந்து இவருக்கு விடுதலையளித்து முற்றிலும் இலக்கியப்பணிக்காக இவரை தமிழுலகத்துக்கு தந்தார். அவர் இருந்ததுவரை, எல்லா குடும்பக்கவலைகளையும் அவரே சுமந்தார். மாதச்சம்பளத்தை இந்திராவிடம் கொடுத்துவிட்டு இவர் கவலையே இல்லாமல் இருப்பார். இ.பாவிடம் ‘இப்போ முகுந்த் எத்தனாவது படிக்கிறான்?’ என்று கேட்டால், கொஞ்சம் யோசித்துத்தான் பதில் சொல்வார்! பார்த்தசாரதி கொடுத்துவைத்தவர். எல்லோருக்கும் இம்மாதிரி மனைவிகள் அமைவதில்லை. இப்போதும் அவருக்கு அரிசி என்ன விலை, LPG சிலிண்டர் என்ன விலையென்று கேட்டால் தெரியாது! தன் அக்கா மகளையே மணந்தார். இந்திரா தன் கணவரின் காரியம் யாவினும் கைகொடுத்த அதிசயப்பெண்மணி. குழந்தைகள் பிறந்து சம்சாரம் ஆனபின்பும் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து Master of Music பட்டம் பெற்றவர். புதுச்சேரியில் இருந்தபோது நாடகப்பள்ளி போட்ட ஒரு நாடகத்துக்கு இசையமைத்திருந்தார். இந்திராவை நான் கடைசியாகப்பார்த்தது சென்னையில் அவர் காலில் அடிபட்டு பிளாஸ்டரோடு படுக்கையில் இருந்தபோது. மூன்று மணிநேரம் சுவாரஸ்யமாக பழங்கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். அவரது அபார சங்கீத ஞானம் தான் பேத்தி அபூர்வாவிடம் இப்போது பரிமளிக்கிறது. தன் மனைவி இந்திராவின் இழப்பிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. இ.பா.வும் சங்கீதத்தை விரும்பிக்கேட்பார். அவரால் எல்லா முக்கிய ராகங்களையும் அடையாளம் காணமுடியும். நான் சிலகாலம் செயலராக இருந்த தில்லி கர்நாடக சங்கீத சபாவின் எல்லா கச்சேரிகளிலும் இ.பா.வை பார்க்கலாம்.
ஆர். பார்த்தசாரதி, எழுத்தாளர் ஆனபோது தன் மனைவியின் பெயரையும் சேர்த்துக்கொண்டார். அப்போது அது புது ட்ரென்டை உருவாக்கியது. இவருக்குப்பின்னால் வந்த எழுத்தாளர்கள் பலர் தன் மனைவியின் பெயரையும் ஒட்டிக்கொண்டார்கள், சுஜாதா உட்பட. அப்போது சென்னை வந்தால், பல நண்பர்கள் ‘ஓ, இந்திரா பார்த்தசாரதி பொம்மனாட்டி இல்லையா?’என்று வியந்திருக்கிறார்கள். பிற மாநிலங்களிலிருந்து இவருக்கு Mrs. Indira Parthasarathy என்று பல அழைப்புகள் வந்திருக்கின்றன! இவர் சகோதரர் ஆர். வெங்கடாச்சாரி தன் மகனுடன் இப்போது பெங்களூரில் வசிக்கிறார். இவரும் தில்லியில் Times of India Group வெளியிடும் The Economic Times பத்திரிகையில் Chief News Editor ஆக பணிபுரிந்து ரிட்டயரானவர். எனக்கு பலவிதத்திலும் உதவி செய்திருக்கிறார். தில்லி வரும் என் வெளிநாட்டு வியாபார நண்பர்களைக்குறித்து நானே எழுதிக்கொடுக்கும் நேர்காணல்களையும் புகைப்படங்களையும் தானே பேட்டி கண்டதாக அடுத்தநாள் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் எகனாமிக் டைம்ஸிலும் பெரிய புகைப்படங்களுடன் மூன்றாம் பக்கத்தில் வெளியிடுவார். தங்கள் புகைப்படங்களையும் கட்டுரைகளையும் பத்திரிகையில் பார்க்கும் ஜெர்மானிய நண்பர்கள் இந்தியாவில் அன்று அதுதான் முக்கியச்செய்தி என்று நினைத்து சந்தோஷப்படுவார்கள். என் ஆபீசில் என் புகழ் ராக்கெட் வேகத்தில் உயரே பறக்கும். இப்போதும் பெங்களூர் போனால் அவரை சந்திப்பதுண்டு.
இந்திரா பார்த்தசாரதியும் நானும் தில்லிக்குப்பொனது ஒரே வருடம். 1955. அவர் தில்லி Madrasi Education Association (MEA) – பிற்காலத்தில் தில்லிவாசிகள் அதை Money Eating Association என்று கேலி செய்வோம் --– நடத்திவந்த லோதிரோடு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகச்சேர்ந்தார். லோதி ரோடில் ஒரு அறையில் பிரும்மச்சாரியாக வாசம். சிதம்பரம் மெஸ்ஸில் இருவேளைச்சாப்பாடு. அங்கே ஓரிருமுறை பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. பார்த்தசாரதி பார்ப்பதற்கு இப்போதிருப்பதைவிட இன்னும் அழகாக இருப்பார்! (புகைப்படத்தில் நீங்களே பார்க்கலாம்). அவருக்கு அந்தப்பள்ளியில் சக ஆசிரியர் லக்ஷ்மணன். இந்த ‘ராமருக்கும்’ அவர் லட்சுமணனாகவே எப்போதும் இவருடனேயே இருப்பார். ’அந்த’ லட்சுமணனைப்போலவே, அவருக்கு ‘இந்த’ ராமரிடம் ஒரு பக்தி. எந்த வேலை சொன்னாலும், இன்முகத்தோடே செய்வார். இ.பா.வின் வீட்டில் ஒரு அங்கமாகவே மாறியிருந்தார். இவர் மனைவி இந்திராவுக்கு ஒரு தம்பி. குழந்தைகள் முகுந்த், பத்மா, மாதவிக்கு நல்ல மாமா. இவருடன் எப்போதுமே இருந்தாலும், இலக்கியத்துக்கும் அவருக்கும் ஸ்நானப்ராப்தி கூடக்கிடையாது! நல்ல ஆத்மா….இப்போது எங்கிருக்கிறாரோ? இந்தவருட ஆரம்பத்தில் இந்தப்பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கம் தில்லியில் ஒரு பெரிய விழாவை ஏற்பாடு செய்து, அதற்கு தலைமை தாங்க தன்னை நேரில் வந்து அழைத்ததாகவும், கால்வலி, முதுமை காரணமாக தன் இயலாமையைத்தெரிவித்ததாகவும் சாரதி என்னிடம் சொன்னார். ‘என்ன சிரமம் இருந்தாலும் போயுட்டு வாருமைய்யா! உம்மிடம் படித்த பழைய மாணவர்களை ஒருசேரப்பார்ப்பதும், அவர்கள் ஒவ்வொருவராக உங்கள் காலைத்தொட்டு வணங்கி, ‘சார்! நான் இன்ன வருடம் ஒங்ககிட்டெ படிச்ச மாணவன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதும் எல்லோருக்கும் கிட்டாத பாக்யம் ஐயா! எழுத்தறிவித்தவன் இறைவனல்லவா?’ என்று அவருக்கு நான் ‘உபதேசம்’ செய்தேன்!
1956-ல் எங்கள் தட்சிணபாரத நாடக சபா தொடங்கியவுடன், மாலை வேளைகளில் நாடக ஒத்திகைக்காக லோதிரோடு தமிழ்ப்பள்ளிக்குப்போவோம். பள்ளி நிர்வாகம் எங்கள் நாடக ஒத்திகைக்கு ஓரிரு வகுப்பு அறைகளை இலவசமாக தந்துதவியது. அப்போது பள்ளி வேலைகளை முடித்துவிட்டு, ராம லட்சுமணர்களாக இ.பா.வும் லக்ஷ்மணனும் வீட்டுக்குப்போகும் நேரம். ‘எப்போது நாடகம்? எங்கே மேடையேற்றம்?’ போன்ற விசாரணைகள். நான் ஆனந்தவிகடன், கல்கியில் அவரது முத்திரைக்கதைகளைப் படித்துவிட்டு, அவரை சந்திக்கும்போது பாராட்டுவேன். அதன்பிறகு தான் அவரது ‘தந்திர பூமி’ கணையாழியில் வெளிவந்தது என ஞாபகம். எங்கள் மனதில் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப்பெற்றுவிட்டிருந்தார். அவரிடம் பேசும்போது நாங்கள் காட்டும் மரியாதை அதிகமாயிற்று.
எங்களைப்போன்ற தில்லிவாசிகளுக்கு அவர் கதை, நாவல்களில் தமிழ்நாட்டு வாசகர்களை விட ஆர்வம் அதிகமாக இருந்தது. காரணம் அப்போதிருந்த பல தில்லிப்பிரமுகர்கள் அவர் நாவல்களில் கதைமாந்தராக உலா வருவார்கள். அவர் கதைகளில் முக்கிய விஞ்ஞானியும் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான டாக்டர் கே.எஸ். கிருஷ்ணன், பூதலிங்கம் ICS, அவர் ம்னைவி ‘கிருத்திகா’, சக்ரவர்த்தி ஐயங்கார், சி.எஸ். ராமச்சந்திரன் ICS, கர்நாடக சங்கீதசபா தலைவர் ஏ.வி. வெங்கடசுப்பன் (சிலர் அவரை ‘ஆளை விடு வெங்கடசுப்பன் என்று கேலி செய்வார்கள்), National Cultural Organisation (NCO) தலைவர் என்.பி. சேஷாத்ரி –-- இவரைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியே தீரவேண்டும் -- இவர்களெல்லாம் இவரது படைப்புகளில் தங்கள் குண இயல்புகளுடன் வந்துபோவது தில்லியில் வாழ்ந்த எங்களுக்கு ஒரு போனஸ் மகிழ்ச்சி. ஒரு கதையில், ஒரு ICS அதிகாரியின் மனைவி, வெளிநாடு போகும் சின்ன அதிகாரிகளிடம் தங்களுக்குத்தேவையான, ஆனால் இந்தியாவில் அப்போது கிடைக்காத Bras, Sanitary Napkins போன்றவைகளின் அளவு கொடுத்து வாங்கி வரச்சொல்வார். அவர் யாரென்பது தில்லிவாசிகளுக்குத்தான் தெரியும். இன்னொரு நாவலில் – வேஷங்கள் என்று நினைக்கிறேன் -- ஒரு சபாவின் தலைவர் எல்லா சங்கீத வித்வான்களையும், அகால வேளையில் வீட்டுக்கு கூட்டிவந்து, ராக்கூத்தடித்து, கட்டிய மனைவியை ஒரு புழு போல் நினைத்து வேலைவாங்கும் படலம் விவரிக்கப்படும். அந்த முகம் யாருடையதென்று எங்களுக்குத்தான் தெரியும். வெளியூர் வாசகர்களுக்கு அவர் ஒரு பாத்திரம் மட்டுமே. இதைப்பற்றி இ.பா.விடம் கேட்டால், சிரித்துக்கொண்டே, ‘நல்லகாலம், அவர்களுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் வெகுதூரம். என் கதைகளை அவர்கள் படிப்பதே இல்லை!’ என்று சொல்வார்! அப்படியும் இவர் தன்னைப்பற்றி எழுதியதை படித்து கோபம் கொண்ட ஒரு சபா தலைவர் இவரை பழிக்குப்பழி வாங்க நினைத்து, எமெர்ஜென்ஸி காலத்தில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் இந்திரா காந்தியைப்பற்றி அவதூறாக எழுதியதாக போலீசில் புகார் கொடுத்தார். எமெர்ஜென்ஸியல்லவா? இ.பா. டிபன்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷனுக்கு போக நேர்ந்தது. நல்ல காலமாக இவரிடம் படித்த ஒரு IAS அதிகாரி சரியான சமயத்தில் தலையிட்டு, கொடுத்த புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லையென்று நிரூபித்ததால் வழக்கு தள்ளுபடியாயிற்று! இ.பா. கொஞ்சமும் கவலைப்படாமல், ‘நான் ஜெயிலுக்குப்போனதேயில்லை. கொஞ்சநாள் செளக்யமா இருந்துட்டு வரலாம்னு பாத்தா, அதுமட்டும் நடக்கலே! எமெர்ஜென்ஸிலே உள்ளே போனா இன்னும் விசேஷம்!’ என்று சிரிக்காமல் சொன்னார்.
இதற்கு நேர்மாறான இன்னொரு நிகழ்ச்சி. இ.பா. கல்கியில் ‘ஹெலிகாப்டர்கள் இறங்கிவிட்டன’ என்ற ஒரு தொடர்நாவல் எழுதிவந்தார். அதில் வரும் கதாநாயகன் மணமாகி இரு குழந்தைகளுக்குத்தந்தை. தில்லி அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பவர். அவருக்கு ஒரு நாடக நடிகையுடன் இருந்த தொடர்பு, அதன் விளைவாக தீக்குளிக்கும் மனைவி, அவர் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள்…. இப்படிப்போகும். ஆரம்பமான இதழிலேயே இது யாரைப்பற்றிய கதை என்று எங்களுக்கு தெரிந்துவிட்டது. இந்தக்கதையின் உண்மை ‘நாயகன்’ கோபப்படுவதற்குப்பதிலாக, வாராவாரம் கல்கிப்பத்திரிகைக்காக காத்திருக்கத்தொடங்கினார். இவர் இ.பா.வுக்கும் எனக்கும் நெருங்கிய நண்பர். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் கரோல்பாக் போய், பத்திரிகைக்கட்டு வந்து பிரித்ததும், முதல் பிரதியை வாங்கி அங்கேயே படித்துவிட்டு, எங்கெங்கே உண்மையிலிருந்து கதை மாறுபடுகிறது என்பதைப்பற்றி என்னிடம் சுவாரஸ்யத்துடன் விவாதிப்பார். தன் கதையை பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தொடராக எழுதுவதில் அவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி! இ.பா. ஒருதடவை என்னிடம், ‘மணி! எனது ‘தந்திர பூமி’யில் வரும் கதாநாயகன் உங்களை மாதிரித்தான். நீங்கள் தான் இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லியிருக்கிறார். But I don’t think he really meant it!
தமிழ்ப்பள்ளிக்குப்பிறகு இ.பா. தில்லி தயாள் சிங் கல்லூரியில் தமிழாசிரியராகப்பணியாற்றினார். பிறகு சிலவருடங்கள் தில்லிப்பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவில் ப்ரொபஸராக ஆனார். தமிழ் படிக்க வருட ஆரம்பத்தில் பத்து மாணவர்கள்…….பரீட்சை எழுதும்போது நாலுபேர் கூட தேறமாட்டார்கள். ஒரு முறை ஆர்வமாக தமிழ் படிக்க வந்த பஞ்சாபி மாணவனிடம் இ.பா. சந்தோஷமாக, ‘உன் தமிழ்ப்பற்று எனக்குப்பிடித்திருக்கிறது. உன்னை தமிழ் படிக்க தூண்டியது எது?’ என்று கேட்டதற்கு அந்த பஞ்சாபி, ‘ஸார், நான் ஒரு தமிழ்ப்பெண்ணை காதலிக்கிறேன்!’ என்று பதிலளித்தானாம். தமிழ்ப்பிரிவின் தலைவர் டாக்டர் ஆறுமுகம். சரியான அக்மார்க் முனைவர். நச்சினார்க்கினியாருக்குப்பிறகு தமிழில் கவிகளே இல்லையென்று சத்தியம் செய்வார். இ.பா.வின் ஒரு கதையைக்கூட அவர் படித்ததில்லை. ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். பிறகு வந்த முனைவர் சாலை இளந்திரையன் இவருக்கு சில நெருக்கடிகளை உருவாக்கியவர். அதன்பிறகு ஐந்தாண்டுகள் வார்ஸா வாசம். தில்லி திரும்பியவுடன் புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நாடகப்பள்ளியில் இயக்குநர் பதவி. இ.பா. கதைகள்/நாவல்களில் உரையாடல்கள் முக்கியப்பங்கு வகிக்கும். கதைகளின் போக்கை விவரங்களை விட வசனங்களே மேலே எடுத்துச்செல்லும். உரையாடல்களில் அவருக்கே உரித்தான பகடியும் Black Humour கலந்த நகைச்சுவையும் அடிநாதமாக இருக்கும். நாடகத்துக்கு இவையெல்லாம் இன்றியமையாதவை. இவர் கதைகளையும், நாவல்களையும் படித்த எனக்கு ’இவர் ஒரு நல்ல நாடகத்தை உருவாக்கித்தரமுடியும்’ என்ற நம்பிக்கையிருந்தது. அதனால் அவரைப்பார்க்கும்போதெல்லாம், ‘சாரதி சார், எங்களுக்கு ஒரு நாடகம் எழுதித்தாங்களேன்!’ என்று கெஞ்ச ஆரம்பித்தேன். பிறகு தொடர்ந்த என் நச்சரிப்புகள் அவருக்கு ஒரு தலைவலியாக மாறியிருக்கக்கூடும். சில இடங்களில் அவர் என்னை தவிர்ப்பதாக உணர ஆரம்பித்தேன். பிறகு அவரை அதிகம் படுத்துவதில்லை!
1969-ல் ஒரு நாள். இ.பா. போனில் தொடர்பு கொண்டு, ‘நீங்க கேட்டமாதிரி, ஒரு நாடகம் எழுதியிருகேன். படிச்சுப்பாத்து, பிடிச்சுதுன்னா போடுங்க. இல்லெ திருப்பியனுப்பிடுங்க’ என்று சொன்னார். ஆபீசை கட் பண்ணிவிட்டு உடனே டிபன்ஸ் காலனியில் இருந்த அவர் வீட்டுக்குப் போனேன். ‘மழை’ என்ற தலைப்பிட்ட ஒரு நாடகப்பிரதியைக் கொடுத்தார். அதை முதல் தடவையாகப்படிக்கும்போது, தமிழ்நாடகங்களில் அதுவரை கிடைக்காத, வங்காள, மராட்டிய நாடகங்களில் மட்டுமே பார்க்கக்கிடைக்கும் மூன்றாம்நிலை உன்னதப்பரிமாணத்தை உணர்ந்தேன். தமிழில் இப்படி ஒரு நாடகமா? என்று வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தட்சிண பாரத நாடக சபாவின் மற்ற அங்கத்தினர்களிடம் கலந்தாலோசிக்காமலே, உடனே மறுபடியும் அவர் வீட்டுக்குப்போய், நாடகத்தை வெகுவாகப்பாராட்டி, எங்கள் அடுத்த நாடகம் இதுவாகத்தான் இருக்கும் என்று உறுதியளித்துவிட்டு வந்தேன். நாலே பாத்திரங்களும் மூன்றே காட்சிகளும் கொண்ட மழை நாடகத்தில் வரும் முக்கிய பாத்திரம் நிர்மலா தற்காலப் பெண்ணியத்தில் ஊறியவள். நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையுடன் அவள், தன் தந்தையைப்பார்க்கவரும் ஜேம்ஸ் என்ற டாக்டரிடம், ‘Doctor! Are all the Saints impotent?’……என்றும், இன்னொரு இடத்தில், ” டாக்டர்! I need a man……அது நீங்களாகவே இருக்கலாம்!’ போன்ற வசனங்களை அனாயாசமாக உதிர்ப்பாள். தில்லியில் நாடகங்களில் நடிக்க தொழில்முறை நடிகைகள் கிடையாது. அரசாங்க அலுவலகங்களில் உயர் அதிகாரிகளாகப்பணியாற்றும் IAS ஆபீசர்களின் மனைவி, மகள் போன்றவர்களுக்கு நாடகத்தில் நடிக்க விருப்பமும் திறனும் இருந்தால் அவர்களைத்தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுப்போம். மழை நாடகத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையின் தந்தை என்னை போனில் கூப்பிட்டு, ‘மணி! இந்த நாடகத்தில வர சில டயலாக் ரொம்ப ஷார்ப்பா இருக்கு. என் டாட்டர் அதை மேடையில் பேச கூச்சப்படறா. அதை குறைக்க அல்லது எடுத்துவிட முடியுமா?’ என்று கேட்டார். அதற்கு நான் ‘ஸார், அந்த வசனங்களை எடுத்துவிட்டால் இது நாடகமே இல்லை. இந்த நாடகத்தின் உயிரே அதன் வசனங்கள் தான்!’ என்று சொல்லி போனை வைத்தேன். பிறகு இ.பா.விடம், ‘சார், உங்க நாடகத்தைப்போட எங்களுக்கு சம்மதம். ஆனால் ஒரு கண்டிஷன். நாடகத்துக்கு ஹீரோயினையும் நீங்க தான் தேடித்தரணும்’ என்று வேண்டிக்கொண்டேன்.
இருநாட்களுக்குப்பிறகு, ‘மணி! எழுத்தாளர் க.நா.சு. டிபன்ஸ் காலனிலே என்வீட்டுக்குப்பக்கத்திலெ இருக்கார். அவர் மகள் ஜமுனா Interior Designing படித்துக்கொண்டிருக்கும் மாணவி. அவளிடம் கேட்டேன். நடிக்க ஒத்துக்கொண்டாள். நீங்க போய்ப்பாருங்க’ என்று சொன்னார். 1970-ல் ஜமுனா நிர்மலாவாகவும், நான் ரகுவாகவும் இ.பா.வின் மழை நாடகத்தில் நடித்ததும், அந்த நாடகம் அனைத்திந்திய அனைத்துமொழி நாடகப்போட்டியில், நான்கு வங்காள, மூன்று மராட்டிய நாடகங்களுக்கிடையே ஒரே தமிழ் நாடகமாக போட்டியிட்டு அதில் மழை மிகச்சிறந்த நாடகமாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் பழைய கதை. மழை நாடகத்தில் நடிக்கும்போது எங்களுக்கிடையே காதல் அரும்பி, துளிர்த்து, மலராகி, நாங்கள் திருமணம் செய்துகொண்டது உங்களில் சிலருக்கு தெரியாத கதை! எங்கள் திருமணத்துக்கு இந்திராவும், சாரதியும் தான் முக்கிய காரணிகள்.
இ.பா. ஆஸ்திரேலியா போயிருந்தபோது, அங்கே ஈழத்தமிழ் எழுத்தாளர் எஸ்.பொ.வுடன் ஒரு நேர்காணல். அதில் இ.பா. ‘நான் மழை நாடகம் எழுத முக்கிய காரணம் எஸ்.கே.எஸ். மணி. ஆனால் மணியின் திருமணத்துக்கு நான் மட்டுமே காரணம். தமிழ்நாட்டில் ‘பலஸ்ருதி’யென்று சொல்வார்கள். ஒரு ஸ்லோகத்தைச்சொன்னால், அதற்கு இன்ன பலன் என்று உண்டு. தமிழ்நாட்டில் கல்யாணமாகாத பெண்களுக்கு நான் மழை நாடகத்தை பரிந்துரைக்கிறேன். 1970-ல் தில்லியில் முதன்முறையாக இந்த நாடகத்தில் நடித்த மணிக்கும் ஜமுனாவுக்கும் உடனே திருமணம் நடந்தது. சில வருடங்களுக்குப்பிறகு, லண்டனில் மழை நாடகத்தில் நடித்த பாலேந்திரனுக்கும், நிர்மலாவாக நடித்த பெண்ணுக்கும் திருமணமாயிற்று. அமெரிக்காவிலும் இதே நாடகத்தில் நடித்த இருவரும் தம்பதிகளாயினர். இதனால் அறியப்படுவது யாதெனில் கல்யாணமாகாத பெண்கள் ஒரு தடவை மழை நாடகத்தில் நடித்தால், அவர்களுக்கு விவாகப்ராப்தி உடனே சித்திக்கும்! என்று சொல்லியிருந்தார்.
இந்தியாவில் சாகித்ய அகாடெமி விருதும், சங்கீத நாடக அகாடெமி விருதும் பெற்ற ஒரே எழுத்தாளர் இ.பா. தான். அவர் கையெழுத்து கோழி கிண்டினது போல் படிக்க சிரமாக இருக்கும். சில சமயங்களில், ‘மணி! என்ன எழுதியிருக்கேன், படிச்சு சொல்லுங்க’ என்று என்னிடம் காட்டுவார். அப்போது நான், ‘சார், நீங்க எழுதியிருப்பது ஏதோ மார்ன் ஆர்ட் மாதிரி இருக்கு. இதை லலித் கலா அகாடெமிக்கு அனுப்பினால், இந்த வருஷம் விருது உங்களுக்குத்தான்! இந்தியாவிலேயே மூன்று அகாடெமி விருதுகளும் பெற்றவர் இ.பா. என்ற பெருமை எங்களுக்கெல்லாம் கிடைக்கும்!’ என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். இ.பா. எழுதிய ‘ராமானுஜர்’ நாடகத்துக்கு கே.கே. பிர்லா ட்ரஸ்ட் உருவாக்கிய ‘சரஸ்வதி ஸ்ம்மான்’ விருது கிடைத்தது. இவ்வருடம் அவருக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதைப்பற்றி யாராவது குறிப்பிட்டால், கூச்சத்துடன் நெளிவார்! உங்களில் பலருக்கு இ.பா.வின் ‘உச்சி வெயில்’ நாவலைத்தான் இயக்குநர் சேது மாதவன் ‘மறுபக்கம்’ என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்தாரென்பது தெரிந்திருக்கும். இவரது ‘ராமானுஜர்’ நாடகத்தை பொதிகையில் சீரியலாக உங்களில் பலர் பார்த்திருக்கக்கூடும்.
இ.பா.விடம் என்னை ஈர்த்த இன்னொரு விஷயம் அவருக்கு ஆங்கில இலக்கியத்தில் இருக்கும் ஆளுமை. அவர் ஆங்கிலத்தில் பேசினால், மிகச்சரியான வார்த்தைகள் அங்கங்கே வந்து விழும். பலர் பேசுவது போல ‘I cannot be able to…….’ ரகமாக இருக்காது. இப்போதிருக்கும் தமிழ் எழுத்தாளர்களில் ஆங்கிலத்தை சரியாகக் கையாளும் புலமை அவருக்குண்டு. சுஜாதாவுக்கும் அது இருந்தது. எழுத்தாளர்களில் எத்தனை பேர் இன்று British Council-க்கும், American Library-க்கும் போய் தங்களைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள்? சென்னைக்கு வந்த புதிதில் இவர் பேச்சு ஆங்கிலத்தில் நினைத்து தமிழில் பேசுவதைப்போல இருந்ததுண்டு, க.நா.சு.வைப்போல. ஓரிரு வருடங்களில், இவருக்கு தமிழ் மேடைப்பேச்சு கைவசமாகி விட்டது. அவர் நல்ல மூடில் பேச ஆரம்பித்து முடிக்கும்போது, கைதட்டல்கள் ஒரு சடங்காக இல்லாமல், அவர் இருக்கையில் சென்று அமரும் வரை தொடரும்!
அதே போல, இ.பா.வின் ஆழ்வார்களைப்பற்றிய புரிதலும், நாலாயிர திவ்யப்பிரபந்தம் குறித்த அறிதலும் ஒருசில கட்டுரைகள் வாயிலாகவே வெளிவந்துள்ளன. அவருக்கு டாக்டர் பட்டம் வாங்கிக்கொடுத்ததே ஆழ்வார்களும் பிரபந்தமும் தான்! என்னைக் கேட்டால், நாரத கான சபா செயலர் கிருஷ்ணசுவாமி ஆண்டுதோறும் இ.பா.வை வைத்து தன் அரங்கில் ‘ஆழ்வார்களின் தமிழ் இலக்கியச்சுவை’ என்று பத்துநாள் இலக்கியப்பிரசங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். “ஸ்ரீயப்பதியான எம்பெருமான் சாட்சாத் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும்…….” என்று தொடங்கும் உபன்யாசங்களுக்குப்பதிலாக, ஆழ்வார்களையும், திவ்யப்பிரபந்தத்தையும், தமிழ் இலக்கிய நோக்கில் நமக்கு அறிமுகப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அது அமையும்!
தில்லியில் இ.பா.வும் கணையாழி கஸ்தூரி ரங்கனும் நெருங்கிய நண்பர்கள். இ.பா.வின் டிபன்ஸ் காலனி விலாசம் தான் சிலகாலம் கணையாழியின் முகவரியாக இருந்தது. இணையாசிரியராக இருந்த இ.பா.வுக்கும் சென்னையில் இருந்த அசோகமித்திரனுக்கும் அவ்வப்போது ஊடல்கள் உரசல்கள் ஏற்பட்டதுண்டு. இப்போது இருவரும் நெருங்கிய நண்பர்கள். இலக்கியச்சிந்தனை ப. லட்சுமணனும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரமும் இ.பா.வின் நெடுநாள் நண்பர்கள்.
’உயிர்மை’ பதிப்பகம் என் முதலும் கடைசியுமான பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தை வெளியிட்டபோது, இ.பா.விடம் ஒரு முன்னுரை எழுதித்தர கேட்டுக்கொண்டேன். அதில் பொய்யான புகழாரங்களாகச்சொரிந்து என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார். அதிலிருந்து சில வரிகள்: ……….. ‘ஆனால் இது மட்டும் என்னால் சொல்லமுடியும். மழை அப்போது மணி மூலம் மேடையேறாதிருந்தால், நான் தொடர்ந்து நாடகம் எழுதியிருப்பேனா என்பது சந்தேகந்தான். அது மேடையேறுவதற்கு முழுக்காரணமாக இருந்தவர் மணி தான்’………..’மணி தேர்ந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல், இலக்கியத்திலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்ததுதான் என்னை மிகவும் கவர்ந்தது’……….’தில்லிக்கு வரும் சென்னை இசைக் கலைஞர்களில், மிகவும் பிரபலமானவர்களை மணி வீட்டில் தான் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் மணியின் குடும்பத்துடன் ஓர் ஆத்மார்த்த உறவு இருந்ததையும் என்னால் உணர முடிந்தது.’……….’மணியினால் செய்து முடிக்கமுடியாத காரியம் எதுவுமில்லை என்பது போன்ற ஓர் அபிப்பிராயம் அவருடைய நண்பர் வட்டாரத்துக்கு எப்பொழுதுமே உண்டு. ‘மணியா? அவரிடம் சொன்னால் ஒரு வெள்ளை யானையையே உங்கள் வீட்டு வாசலில் கொண்டு வந்து கட்டிவிடுவார்' என்று சொல்வார்கள். தில்லியில் அவரால் பயன் அடையாத தென்னிந்தியக் கலாசாரக் குழு எதுவுமில்லை……….“ ‘முடியாது' என்பது என் அகராதியில் கிடையாது” என்று நெப்போலியன் சொல்வாராம். இது நண்பர் மணியைப் பொறுத்த வரையில் மிகவும் பொருந்தும்’………. முன்னுரையை இப்படி முடித்திருந்தார்: ‘அவருடைய எழுத்தாற்றல் சமீபத்தில் தா ன் எனக்குத்தெரிய வந்தது. ஆனால் நான் ஆச்சரியப்படவில்லை. இதுவரையில் அவர் ஏன் எழுதாமலிருந்தார் என்பது தான் என் ஆச்சரியம்!’
எவ்வளவு பெரிய வார்த்தைகள்? உண்மையிலேயே நெகிழ்ந்துபோனேன். யார் தயவும் இல்லாமலே இ.பா நாடகாசிரியர் ஆகியிருப்பார். அவரால் எங்கள் DBNS குழுவுக்கும் எனக்கும் நவீன தமிழ் நாடக இயக்கங்களின் முன்னோடி என்ற சிறப்பு 1970-லேயே கிடைத்தது. அது அவர் எனக்கு அளித்த பெருமை. எழுபதுகளின் தொடக்கத்தில் அவரை சந்திக்கும்போதெல்லாம் நச்சரித்து நச்சரித்து எழுதச்சொன்ன முதல் நாடகம் மழை, பிறகு போர்வை போர்த்திய உடல்கள், ஒளரங்கசீப் போன்ற நாடகங்களை அப்போதே தில்லியில் பலதடவைகள் வெற்றிகரமாக மேடையேற்றி, அவைகளில் நடித்த பெருமை எனக்குண்டு.
இ.பா. நாடகங்களில் ‘காலயந்திரங்கள்’ நாடகத்தை நான் போட்டதில்லை. அதில் வரும் மஹாதேவன் பாத்திரம் எனக்குப்பிடித்தது. அழகாக, மிகைப்படுத்தாமல், Subtle-ஆக செய்யவேண்டிய கதாபாத்திரம். சென்னையிலோ, மற்ற நகரங்களிலோ யாராவது இந்த நாடகத்தைப்போட முன்வந்தால், கைச்செலவு செய்துகொண்டு போய், காலணா வாங்காமல் மஹாதேவன் பாத்திரத்தை நடித்துவிட்டு வர நான் தயார்! இ.பா.வே சொல்லியிருக்கிறார்: “என் நாடகங்களில் அவர் எந்தப் பாத்திரமாக நடித்தாரோ, அந்தப் பாத்திரத்தைப் பற்றி நான் எப்பொழுதெல்லாம் நினைக்கின்றேனோ அப்பொழுதெல்லாம் மணிதான் என் கண் முன் வந்து நிற்பார். வேறு பலர் அந்த நாடகப் பாத்திரத்தில் பிறகு நடித்திருந்தாலும், மணிதான் என் கண்முன் வந்து நிற்கிறார்.” மஹாதேவனாகவும் நடித்து இ.பா.வை பயமுறுத்தலாமே! சரி, கட்டுரை நீண்டுகொண்டே போகிறது…….. இவரைப்பற்றி சொல்வதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
எனக்கு ஓர் ஆசை: இ.பா…..நூறு! விழாவிலும் அவரை மேடையில் இதே துடிப்புடன் பார்க்கவேண்டும்!
***** **** **** *****
bharatimani90@gmail.com உயிர்மை ஆகஸ்ட், 2010 இதழில் வெளிவந்தது
நன்றி..
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்