Showing posts with label கரிச்சான் குஞ்சு. Show all posts
Showing posts with label கரிச்சான் குஞ்சு. Show all posts

Mar 6, 2017

ரத்தசுவை - கரிச்சான் குஞ்சு

ராமுவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றார்கள் எல்லோரும். நானும் அவனை கவனித்தேன். அவன் சரியாயில்லை. நான் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ராமுவை அழைத்துவரச் சொல்லிப் பலரை அனுப்பினேன். அவன் வரவில்லை. நான் போய்க்கூப்பிட்டேன். அவன் பேசவில்லை; ஆனால் என்னைப் பார்த்துச் சிரித்தான். 'வீட்டுக்குப் போ வருகிறேன் என்று ஜாடை காண்பித்தான். உடனே திரும்பிக் குரங்கைப் பார்க்கப் போய்விட்டான். ராமு அந்தக் குரங்கினிடம் என்ன கண்டானோ, அதையே கவனித்துக் கொண்டும் அது போகுமிடங்களுக்கெல்லாம் தானும் போய்க் கொண்டும் இருந்தான். வீட்டுக்கு வந்தேன். என் வீட்டாரிடமும் ராமு வீட்டாரிடமும் விசாரித்தேன்.

அவனுடைய குடும்பம் நொடித்துவிட்டது. ஒரு கல்யாணத்துக்கு வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காமலேயே பல வருவடிங்க
ள் கழிந்துவிட்டன. கடன் கொடுத்திருந்த கோபாலய்யர் வியாஜ்யம் நடத்தி ராமுவின் சொத்து முழுவதையும் கட்டிக்கொண்டு விட்டார். வீடு உள்படப் போய்விட்டது. ஆறு மாதத்தில் வீட்டைக் காலி செய்து தரவேண்டும் என்று கோர்ட்டில் தீர்ப்பு ஆகியிருந்தது. அந்த கெடுவில் இன்னும் இரண்டே மாதங்கள் பாக்கி. மனுஷன் என்ன பண்ணுவான் ? கலங்கிப்போய் விட்டான். பேச்சிலோ செய்கையிலோ வேறு ஒரு விபரீதமும் கிடையாதாம். பிரமை பிடித்ததுபோல் அந்தக் குரங்கைச் சுற்றிக்கொண்டு அலைகிறானாம் அதுவோ இவனைப் பாய்ந்து கடிக்க வருகிறதாம்.

குரங்கோ ஒற்றைக் குரங்கு. நானும் பார்த்தேன். அதன் பரிமாணம், நீளமும் சரி. பருமனும் சரி அசாதாரணமானதுதான். கொழுத்து விறாந்து கிடந்தது அது. ஊரில் அதன் ரகளை இல்லாத நாளே கிடையாதாம். எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கி எதையும் எடுத்துத் தின்று கொண்டு திமிர்பிடித்து அலைந்து கொண்ருக்கிறது. அது. எல்லோரும் அதைக்கண்டு பயப்பட்டார்களே தவிர அது யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயப்படவில்லையாம். நாய்களையெல்லாம் அது பலபடித் துன்புறுத்திற்று. நாய்க்குட்டிகளைக் கொன்று போடுகிறதாம். 'ஒற்றைக் குரங்கு ஊரை அழிக்கும் என்பது ஹனுமானைப் பற்றிய பழமொழியாம். அவர் லங்கையை அப்படி அழித்ததால்தான், நம்முடைய தெய்வமானார். ஆனால் இந்த குரங்கு எங்கள் ஊரில் இப்படி அட்டுழியம் செய்து வருகிறது. ஊரில் எல்லோரும் புராதனக் குடிகள். உலகத்தின் அணுவணுவிலும் தெய்வத்தைக் கண்டு போற்றும் புராதனக் கொள்கைகளை உடையவர்களின் வம்சபரம்பரை. ஆகவேதான் அந்தக் குரங்கைப் பிடிக்கவோ, அடிக்கவோ, அன்றிச் சுடவோ அவர்கள் அனுமதிப்பதே இல்லை. "நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமே ஒழிய ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபசாரம் செய்யலாமோ என்கிறார்கள். இப்படியெல்லாம் விவரங்கள் தெரிந்தன.

ராமு கடன்பட்டுப் புண்பட்டதற்கும் இந்த வானர லீலைக்கும் என்ன சம்பந்தம்? இது யாரும் சொல்லவில்லை. எனக்கும் புரியவில்லை.
‘ராமு சில சமயமாவது நல்ல படி ஒழுங்காய்த் தொடர்ச்சியாய் பேசுகிறான் அல்லவா?” என்றேன். -

“அதெல்லாம் ஒன்றும் குறைவில்லை. குரங்கைக் கண்டுவிட்டால் இந்தப் பிரமை வந்து விடுகிறது. அதிசயம்தான் இது...” என்றனர்.
'பாவம். ராமு. அவனை எப்படியாவது என்னுடன் வடக்கே அழைத்துக்கொண்டு போய் ஒரு உத்தியோகம் தேடிக் கொடுத்து விட வேண்டும். அப்புறம் இந்த ஊரையே மறந்துவிடட்டுமே அவன் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

நானே போய் ராமுவை அழைத்து வந்தேன். பார்வையில் பைத்தியத்தின் கோணல் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். சற்றும் இல்லை. நடை, உடை, தோற்றம் எதிலும் கோளாறு இல்லை; ஆனால், அவன் மனதில் ஒரே விதமான போக்கு, ஒன்றை பற்றியே ஒரே எண்ணம் தொடர்ந்து இருப்பதுபோல் இருந்தது அவன் பாவனை. இதை யூகித்தேன். அதாவது அவன் மனம் அதிர்ச்சியில் அயர்ந்து குறிப்பிட்ட ஒரே துடிப்பை மட்டும் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கவேண்டும் என்ற தோன்றிற்று. . -
அவன் போக்கிலேயே ஆரம்பித்தேன் பேச்சை;

 “ஏண்டா ராமு, இப்ப எப்படி இருக்கு குரங்கு? ஆமாம். பிராணி விஞ்ஞானத்தில் எப்போதிருந்து உனக்கு இவ்வளவு ஈடுபாடு?” - - -

"அந்த ஒரு விஞ்ஞானம் மட்டும் அல்ல; இன்னும் பல விஞ்ஞானங்களும் இதில் தெரிகின்றன.” -

"எதில்? ஊரில் தனியரசு செலுத்தும் இந்த ஒற்றைக் குரங்கினிடமா...?”

"இந்தக் குரங்கு மட்டுமா? நம்மூரில் இதேமாதிரி தனியரசு செலுத்தி அட்டுழியம் செய்யும் பல பிராணிகள் இருக்கின்றன. நான் இந்தக் குரங்கைப் புரிந்து கொண்டு விட்டதால் எனக்கு இந் ஊர்ப் புண்யவான்களை விபூதி ருத்ராகூடிப் பிராணிகள் எல்லோரையும் பற்றிப் புலப்பட்டு வருகிறது. நானா, இவனுகள் எல்லோரும் இப்டியே இருந்தால் இன்னும் இரண்டொரு தலைமுறையில் இந்த ஊரில் பாழ்மனைகள் பலவும், மூணோ நாலோ மாடிவிடும் தான் இருக்கும்...”

- "ராமு, அந்த கோபால்ய்யர்...”

"அவன்மேலே குற்றமில்லை. இருக்கிற சம்பிரதாயம், சட்டத்திட்டம்...” * -

“கோபாலய்யர் உனக்கு ரொம்ப வேண்டியவர். நெருங்கிய உறவினர்கூட... இல்லையா?” -

"அதனால் தான் என்னை இப்படி உறிஞ்சிக் கொன்றார்.”

 "கடைசியில் அவருக்குக் கொடுக்க வேண்டிய கடன் போக என்ன மிச்சம் உனக்கு? - -

"பச்சை காய்ந்து வரட்சி குத்தும் இந்த மனமும், வாழ்ந்த ஊரில் ஒட எடுக்க ஆன இந்த தினதசையும் தான் மிச்சம்.”

"வட்டியையாவது வருஷா வருஷம் கட்டியிருக்கலாம் நீ”

- "அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறாய்? முதலிலேயே ஒரு பகுதியை அடைத்திருப்பேனே? இவர்பண்ணின யுக்தியால்...”

“என்ன யுக்தி...?” - "வட்டி அதிகமாய் எழுதுவதற்கென்றே தன் தங்கையின் பெயரால் பந்தகம் எழுதினார். அவள் எங்கேயோ பம்பாயில் இருக்கிறாள் பெண்ணோடு; வரவு வைக்க வழியே இல்லை. பத்திரம் அவளிடம் இருக்கிறதென்று தள்ளிக் கொண்டே வந்துவிட்டார் அவர் நம்ம செய்திதான் தெரியுமே உனக்கு, மூணு முழமும் ஒரு சுற்று. முப்பது முழமும் ஒரு சுற்று.”

"உண்மையில் பணம் யாருடையது? "இவரதுதான்” "பின்னே ஏன்?”

"அதுதான் அதிக வட்டிக்கும், ஆளை ஒழித்து அஸ்தியை அப்படியே கட்டிவைக்கவும் யுக்தி. இது இந்த ஊரான்களுடைய வெகு நாளைய சம்பிரதாயம்.” - . . . . . . "

"சரிதான், பஞ்சாபிகள் எல்லாம் தவணைக்கடை..." "அதாவது நேரடியாகத் தெரியும். கத்தியைப் பார்த்துக் கொண்டே கழுத்தை நீட்டுகிறார்கள். இங்கே, அப்படியே வெளியிலே குளுமைப் பேச்சைப் பூசிப்பூசி உபசாரம் பண்ணியே பணத்தைக் கொடுத்துவிட்டு நோகாமல் கழுத்தை அறுத்துவிடுவானுக. பின்னே ஏது இந்த சொத்தெல்லாம்? கலெக்டர், திவான் உத்தியோகம் பார்த்தானுகளா, இல் லே பெரிய வியாபாரம் பண்ணினானுகளா? தொன்றுதொட்டு இது தானே அவர்களுடைய குல தர்மம்.”

"கோபாலய்யர் ஏதோ உத்தியோகம் பார்த்து ‘ரிடையர் ஆனவர்தானே?” - -

"அது தான் சொல்லனும், வந்த புதிதில் அவர் வட்டி வாங்காமல் ஏழைகளுக்குக், கைம்மாறு கொடுத்துக் கொண்டிருந்தார். வரவர, இந்த ஊர் ராட்சஸனுகளைவிட ரொம்ப மேலே போய்விட்டார். என்னோடு சேர்த்து மொத்தம் ஐந்து குடும்பங்களை நிர்மூலமாக்கியிருக்கிறார் இதுவரை. இன்னும் அவரிடம் கடன்பட்டு வரவே வைக்காத இரண்டு ஜீவன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. சூழ்நிலையும் சுற்று வாடையும் அவரை...” -

“கோபாலய்யரா? அவர் ரொம்ப நல்லவர். ஆசார அனுஷ்டானம் தவறாதவர். நல்ல வம்சத்தில் பிறந்தவர்...”

'வம்சமும் இனமும் என்னப்பா செய்யும்? நான் குரங்கோடு சுற்றுகிறேன். ஏன் தெரியுமா? எல்லோரும்...”

- "எல்லோரும் உன்னைப் பைத்தியம் என்று சொல்லத்தான்.”
"அதை நான் லகூடியமே பண்ணவில்லை. இதை கேள், குரங்கு இனம் சாக பr” -

"யார் இல்லையென்றது? ஈச்வர சிருட்டியே அப்படி,” "அதுதான் தப்பு; சிருட்டியில் குணம் கிடையாது. குரங்கும் மாம்ஸி பr ஆய்விடும். சூழ்நிலை, திரும்பத் திரும்பச் செய்தல், வெறி இவை போன்ற காரணங்களால்...”

“இது தான் நீ பைத்தியம் பட்டம் வாங்கிக்கொள்ள நடத்திய ஆராய்ச்சியோ?”

'இது ஸத்யம் நாணு, ஊராரைக் கேள், சொல்லுவார்கள்...” - - -

“...இந்தக் குரங்கு எத்தனை நாய்க்குட்டிகளைத் தூக்கிச்சென்று கொன்றிருக்கிறது தெரியுமா? ஆரம்பத்திலே தாய் நாய்கள் குரைத்துத் துரத்தியதால் இதற்கு ஏற்பட்ட கோபவெறியில் குட்டிகளைத் தூக்கிச் சென்றது; கொன்றது; இவ்வளவுதான் ஊராருக்குத் தெரியும். எனக்கு அதுக்கு மேலே தெரியும். குட்டிகளின் கழுத்தை நெறித்துக் கிழித்துக் கையால் குதறி எறியும். கையெல்லாம் ரத்தமாய் விடும். துடைக்கத் தெரியாமல் நக்கும். ரத்தம் நாக்கில் படும். தணிந்த வெறிக்கும் இந்தச் சுவைக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு இது அடிக்கடி ஏற்படுவதால் நினைவில் அழுந்தும். பிறகு அதே செய்கைக்குத் தூண்டும். வெறி வந்தவுடன் நாக்குச் சுவையும் நினைவுக்கு வரும். வெறியும் தணியும். சுவையும் கிடைக்கும். இப்படியே வழக்கமாகி இன்று இந்தக் குரங்கு ரத்த வெறி மிகுந்து கிடக்கிறது. நேற்று ஒரு ஆட்டைக் கிழித்துக் காய்ப்படுத்திவிட்டது. கதையெல்லாம் எதற்கு? இன்று இந்தக் குரங்கு பரிபூர்ண ரத்தவெறி பிடித்து பக்கா மாம்ஸ் பகூழியாய் மாறிவிட்டிருக்கிறது. அந்தக் குரங்கை அப்படியே செய்ய அனுமதிப்பதைத் தான் தர்மமென்று கூறுகிறது. சமூகம். இதேதான் கோபாலய்யர் கதையும். ஆரம்பத்தில் வட்டி இல்லாமல் உபகார நோக்கத்தோடு, உதாரச் சிந்தையோடு ஏழைகளுக்குக் கடன் கொடுக்க ஆரம்பித்தவர், இப்போ குடும்பங் குடும்பமாய் அழித்துத் துடைத்துக் கொண்டு வருகிறார். அதையும் கடமையைப் போல் செய்கிறார். வழக்கமும் சட்டமும் அதை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றன. ஸ்வாமி தரிசனம் செய்வது அவ்வளவு அநுஷ்டானப் பொருத்தத்தோடுதான் இதைச் செய்கிறார். சமூகம் தான் நல முற்று வரத் தானே செய்துகொண்ட கடன் கொடுக்கும் ஓர் உதவிமுறை இன்று இப்படிப் பரிணமித்திருக்கிறது. வளர்கிறது. ரத்தவெறி கொண்டு திரியும் குரங்கை ஒடுக்குவது ஆஞ்சனேய ஸ்வாமிக்கு அபசாரமென்று கருதப்படுகிறதே, அந்த மனோபாவத்திற்கும் சமூகப் போக்குக்கும் ஒரு தொடர்பை உணர்கிறேன். வெற்றி அந்தப் போக்கிற்குத்தானா என்று அறிவதில் ஆர்வத்தோடு இருக்கிறேன். நான் போகிறேன் நானா, குரங்கின் கதையில் இன்று விசேட கட்டம்.” -

"என்னடா ராமு, நான் வெகு தூரத்திலிருந்து வெகு நாள் கழித்து வந்திருக்கிறேன்.” -

“எனக்குத் தெரியவில்லையா, இருந்தாலும் உன்னைவிட எனக்கு நானா என் மனம் என் வசத்தில் இல்லை. அதோ ஒடுகிறது. காலையில் நம்மூருக்கு ஒரு குரங்காட்டி வந்தான். அவனுடைய குரங்கை நம்மூர் தடிக்குரங்கு இழுத்துக் கொண்டு ஓடிவிட்டது. பாவம், அந்தப் பிச்சைக்காரனுடைய பிழைப்புக்கு ஆதாரமாயிருந்தது போய்விட்டது. ரொம்ப பாடுபட்டான். ஒன்றும் முடியவில்லை. மகா ஆத்திரம் அவனுக்கு. எப்படியாவது அதைப் பிடித்துவிட வேண்டும் அல்லது தடிக்குரங்கைக் கொன்றுவிட வேண்டும் என்று இருக்கிறான். போய் என்ன ஆகிறதென்று பார்க்க வேண்டும்...?” - -
ராமு கிளம்பினான். இதற்குள் தெருவில் ஒரே சத்தம். பெரியவாள் எல்லோரும் இரைந்து கத்தினார்கள். -
‘பிச்சைக் காரப் பயலைக் கட்டிப் பிடியுங்கடா, பந்தக்காலில் கட்டிப் போடுங்கள் படவாவை. குரங்கைப் பிடிக்கவாவது இவன்...” என்றார் ரொம்பப் பெரியவர் ஒருவர்.

ராமு வேகமாய்ப் போனான். நானும் பின்னே சென்றேன். பிச்சைக்காரன் கையிலிருந்த கயிற்றுச் சுருக்கில் தடிக்குரங்கு மாட்டிக்கொண்டு படாத பாடுபடுத்திற்று. பிச்சைக்காரனைப் பிராண்டிற்று கடித்தது. அவனும் அதை அடித்து இரத்தம் பீறிப் பிய்த்துவிட்டிருந்தான். இதற்குள் ஊர்ப் பெரியவாள் எல்லோரும் பல ஆட்களைக் கூட அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். குரங்கை விடுதலை செய்யப் பிச்சைக்காரன் இசையவில்லை. அடிக்கக் கட்டளையிட்டார்கள் ஊரார்கள்.

அவன் அடிப்பட்டுக் கொண்டே கதறினான், சொன்னான்; "சாமி. அழகான பெண் குரங்குங்க என் குரங்கு; ரொம்ப சாதுங்க. என் குரங்கின் கழுத்தை நெறிச்சுப்போட்டு, இரத்தம் உறிஞ்சிடுச்சங்க இது! அந்த ஜாதியிலே வந்துட்ட ஏதோ பிசாசுங்க இது...” என்று சத்தியத்தைச் சொன்னான்.

சத்தியம் யாருக்கு வேண்டும் அதையும் இந்தப் பிச்சக்காரப் பயலா சொல்வது? -

"சிச்சி நாயே, வாயை மூடு ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபசாரம் பண்ணிவிட்டு பேசறையேடா...” என்றார் ஒருவர்.
"ஏண்டா நிற்கிறீர்கள்? அவனை உதையுங்களடா, கயிற்றை அறுத்துக் குரங்கை விடுவியுங்கள், உம்” என்று ஆட்களுக்கு உத்திரவு பிறந்தது.
‘சாமி சாமி, இந்தக் குரங்கு இருப்பது ஊருக்குக் கெடுதல்.” என்று பிச்சைக்காரன் முடிப்பதற்குள் அவனுக்கு அடி விழுந்தது. ராக்ஷஸக் குரங்கு யதேச்சையாய்த் தன்னரசு செலுத்த ஆரம்பித்தது.
பழையபடியே ஐயமாரும் தன்னரசு செலுத்த ஆரம்பித்தார்கள். -
பிச்சைக்காரனுடைய பிழைப்புக்கு ஆதாரமாய் இருந்தது போய்விட்டதுடன் அவனும் ரத்தம் சிந்தினான் அடிபட்டு. எல்லாம் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபசாரம் செய்ததன் பலன்.
ஸ்வாமியும் தர்மமும்தான் எல்லாம். - பல ராமுக்களுடைய சொத்துக்கள் போயின. இன்னும் பலர் ராமுகள் ஆக இருக்கிறார்கள். -
ஊரில் ஸ்னான, ஸந்தியா, ஜபதப ஹோமங்களுக்குக் குறைவே இல்லை. - ஊரார்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டுக் குரங்கைப் பார்த்துக்கொண்டு இருப்பதை ராமு நிறுத்தவில்லை. ஊரில் இருந்தவரைக்கும் நானும் ராமுவை அதிகம் விட்டுப் பிரியவில்லை. ராமுவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றார்கள் எல்லோரும்.

**********
தஞ்சைச் சிறுகதைகள் சோலை சந்தரபெருமாள் (தொகுப்பு)

இந்தக் கதை பற்றி எஸ்.ரா
நேற்றிருந்த வீடு-எஸ்.ராமகிருஷ்ணன்

Feb 7, 2013

வறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான்குஞ்சு-ரவிசுப்ரமணியன்

தன் படைப்புகளை முன்நிறுத்தாது தன்னை முன்னிறுத்தும் போக்கு மலிந்த தமிழ்ச் சூழலில் தன் படைப்புகளின் மேன்மை வழியே தன்னை அறிந்துகொள்ளவைத்தவர் கரிச்சான் குஞ்சு.

நம் காலத்தில் வாழ்ந்து மறைந்திருந்தாலும் கீழான வகைதொகைகளில் அவர் சிக்கிவிடவில்லை. கலைக்குள் இயங்குவதை ஒரு நோன்பென நோற்று ஆழமான அமைதியோடு படைப்புக்கு உண்மையாய் இருந்து அதற்குச் செழுமை சேர்த்தவர் கரிச்சான் குஞ்சு. அவரது படைப்புகளைத் தேடுபவர்களே கண்டடைய முடியும். அதனால் தான் அவர் போன்ற கலைஞர்களை, அவர்கள் வாழ்ந்த காலங்கடந்தே நாம் முழுமையாகக் கண்டுணரும்படி நேர்ந்துவிடுகிறது.

தன் சிறுகதைகள் குறுநாவல்கள், நாவலில், எந்த ஒரு கருத்துக்காகவும் கொள்கைக்காகவும்karichankunju தனிப்பட்ட குரலில் அவர் மாய்ந்து உருகுவதையோ எதிர்ப்புக் குரல் எழுப்புவதையோ நாம் காண முடியாது. தான் கண்ட, கேட்ட, அனுபவித்த, உணர்ந்த, கற்பனை செய்த விஷயங்களை அலட்டலில்லாமல் தன் படைப்புகளின் வழி முன்வைத்தவர் கரிச்சான் குஞ்சு.

அது ஒரு சமனான நிலை. அந்த நிலை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஏகாந்திகளுக்குச் சித்திக்கும் ஒருவித நிலை. வாழ்வில் தன்னைச் சுற்றி நடப்பவற்றையும் தனக்கே நேர்ந்தவற்றையும்கூட ஒரு பார்வையாளனாகக் கவனித்து அதை முன்வைப்பது. ஒரு சம்பவம், அவமானம், துயரம், சந்தோஷம், பகடி இப்படி ஏதோ ஒன்றை அவர் தன் படைப்பின் வழியே நம் பார்வைக்குக் கொண்டுவருகிறார். முன்னனுமானம், மனச் சாய்வு, தீர்மானங்கள், அபிப்ராயங்கள் போன்றவை இல்லாமல், தன்னிலை என்ற ஒன்றும் இல்லாமல் ஒரு விஷயத்தைப் படைப்பாக்கி நம் பார்வைக்கு வைப்பது போலத்தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் இங்குதான் கரிச்சான்குஞ்சு நுட்பமான உலகில் பிரவேசிக்கிறார். அவர் கண்டுணர்ந்த, அனுபவித்த, ஆயிரம் விஷயங்களில் அவர் நமக்கு எதைச் சொல்ல வந்தார் என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கிறது விஷயம். விமர்சனமோ புகாரோ இன்ன பிறவோ ஏதுமின்றி ஒன்று எப்படி நடந்ததோ அப்படியே அதைச் சொல்கிறேன் என்னும் பாவத்தைக் காட்டி அதில் ஏதோவொன்றை நாம் உணரும்படி வைப்பார். ஆனால் அவர் பாத்திரங்கள் எழுப்புகிற தர்க்கங்கள், படைப்பினை நகர்த்திச் செல்லுகிற பாதை, உள்ளடக்கமாகக் குங்குமப் பூ ரேகையாய் ஓடும்

ஒரு தத்துவார்த்த இழை, இவை மூலம் அவர் எழுப்புகிற த்வனி, இந்த இடங்களில்தான் கண்ணுக்குத் தெரியாத கவிதை உணர்வாய், விண்டு சொல்ல முடியாத அனுபூதியாய், கரிச்சான் குஞ்சுவின் ஆளுமை விரவிக்கிடக்கிறது. ஒரு வகையில் இவைதான் அவர் எழுப்ப விரும்பும் குரலின் தடங்கள். இவற்றின் வழியாகத்தான் அவர் சொல்ல விரும்பும் எல்லாவற்றையும் நமக்குள் லாவகமாகக் கடத்துகிறார்.

சொல்லியும் சொல்லாமல் செல்லும் இந்த விட்டேத்தியான போக்கை அவர் கதையைக் கட்டமைத்த விதத்தின் வழியேகூட நாம் உணரமுடியும். அதீதக் கவனத்துடன் இழுத்துக் கட்டப்பட்டு கிண் என்று நாதம் எழுப்புபவை அல்ல அவரது கதைகள். தளர்வான கதைகள். சில சமயம் சளசளப்பும் தொய்வுமாய் வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து சற்று விலகிச் செல்லும் கதைகள். எல்லோரையும் சட்டென ஈர்க்கும் யத்தனத்தையோ செதுக்கி எடுத்து மினுமினுப்பாய்த் துலக்கிப் பார்வைக்கு வைப்பதையோ பிரகடனங்களையோ அவர் படைப்புகளில் நாம் காணமுடியாது. இதை மீறிச் செறிவான கட்டமைப்புடன் அமைந்த சில படைப்புகளும் அதற்கான யத்தனமின்றி அதனியல்பில் பிறந்தவையே.

ஒரு பரதேசி ஒப்பனைகள் ஏதுமின்றி இடுப்பை மறைக்கமட்டும் உடுத்தியபடி தன் போக்கில் காலாற நடக்கும் ஒருவித மனோ நிலையில் எழுதப்பட்டவை போலத்தான் இந்தக் கதைகள் தோன்றுகின்றன. இதை அவர் அறிந்தோ அறியாமலோ செய்திருக்கக்கூடும்.

இளமையில் வறுமை, பால்யகால உறவுகளின் அனுசரணையற்ற தன்மை, அனாதை போலப் பாட சாலைகளில் கழிந்த பால்யம், அவர் படித்த வேதாந்தத் தத்துவங்கள், எல்லாமுமாகச் சேர்ந்து லௌகீக வாழ்விலும் அவரை ஒட்ட விடாமலேயேதான் வைத்திருந்தன. அவர் வீட்டுக்குள்தான் வாழ்ந்தார். ஓட்டுக்குள் பழுத்துருளும் விளாம் பழம் போல் ஓட்டுக்குள்ளிருந்தும் ஒட்டியும் ஒட்டாமல் விட்டு விடுதலையான வாழ்வைத்தான் வாழ்ந்தபடி இருந்தார்.

பொதுவாக அவருக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கவில்லைதான். ஆனால் அதே சமயம் முற்றமுழுக்க உறவுகளை அறுத்துக்கொண்டார் என்றும் சொல்லிவிட முடியாது. அவரது மகள்களை அவர் பெயர் சொல்லிக்கூட அழைக்கமாட்டார். ‘குழந்தே’, ‘குழந்தே’ - என்றுதான் கூப்பிடுவார். அவர்களைப் படிக்கவைக்க அவர் பட்ட பாட்டையும் திருமணம் செய்து வைக்க அவர் பட்ட அல்லாட்டத்தின் ஒரு பகுதியையும் நான் அறிவேன். அவர் தனது நண்பர் ல.கி.ராமானுஜத்துக்கு மன்னார்குடி 36, கீழ நாலாந் தெருவிலிருந்து 09.08.1977இல் எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“மூத்தவளுக்கு மணம் முடித்தே ஆகவேண்டும். வயது இருபத்தி ஒன்பது முடிந்துவிட்டது. அவமான உணர்ச்சியுடன்தான் நடமாடிக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் விரைவில் ஆகவேண்டும். இறையருள் எப்படியோ. மனசை இம்சிக்கும் தீய கனவுகளை நான் பெரிதுபடுத்திக் கொண்டால் கொஞ்சமாய் மிஞ்சி மங்கிக்கிடக்கும் ஆத்ம விலாசமும் மாய்ந்தே போய்விடும். ஆனால் அப்படித்தான் மனம் குழம்பிச்செத்த நிலை. மனம் மாய்ந்துதான் போய்க்கொண்டிருக்கிறது. உண்மையில் மனம் மாய்ந்துவிட்டால் நான் ஒரு பரமஹம்சன். அமுதத்தாரையைக் குடித்துக்கொண்டு ஆனந்த சாகரத்தில் திளைப்பேன். அந்த மஹா பாக்கியமெல்லாம் இந்த பாவிக்கேது”

பல சிரமங்களுக்குப் பின் அந்தக் கல்யாணத்தை 21.04.1978 அன்று நடத்தி வைத்திருக்கிறார். தன் அம்மாவோடு அவருக்கு வந்த பெரும் கருத்து வேறுபாடே அவரது மகள்களைப் படிக்க வைப்பதில்தான் தொடங்கியது. “என்னத்துக்குடா பொண் குழந்தைகளைப் படிக்க வைச்சுண்டுருக்க? நான் சொல்றேன் கேளு. இவாள்ளாம் படிச்சுட்டு இப்ப என்ன பண்ணப் போறா? அவள்களுக்கு கல்யாணத்த பண்ணி வைச்சிப்புடு” என்று அவர்கள் சொல்ல, “எப்பாடு பட்டாவது நான் அவாளைப் படிக்க வச்சுடுவேன்” என்று இவர் பிடிவாதமாய் சொல்ல, “அப்படின்னா நீ என் முஞ்சிலயே முழிக்காத. நான் செத்துட்டா தலைகாணிக்கு அடில பணம் வைச்சிருக்கேண்டா. அத எடுத்து நீ எனக்கு காரியம் பண்ணிடு” என்று சொல்லிவிட்டார். அந்தப் பாட்டியோடு பேத்திகள் சீராடிக் கொண்டிருந்தாலும் கரிச்சான்குஞ்சுக்கு இந்தச் சண்டையால் தனது அம்மாவை அவரது கடைசி காலம் வரை பார்க்க முடியவில்லை.

இன்னொரு பக்கம் அவர் சீட்டாடினார். ரேசுக்குப் போனார். எது பற்றியும் கவலை கொள்ளாமல் இருந்தார். வேலை பார்த்த சில இடங்களில் தவறு நடக்கையில் சகித்துக்கொண்டிராமல் சமரசம் கொள்ளாமல் சண்டைபோட்டு விலகிவந்தார். கோபக்காரர். சாப்பாட்டுப் பிரியர். தாம்பூலக் காதலன். கிடைத்த பணத்தை உடனே செலவிட்டுவிடுபவர். அறச்சினம் கொண்டவர். துன்பங்களை அலட்சியப்படுத்தியவர். கோபத்தில் கெட்ட வார்த்தை பேசுபவர். வேதம் படித்தவர். கம்யூனிசத்தில் சற்று மோகம். இசை ரசிகர். விச்ராந்தி மனோநிலையில் இருப்பவர். இப்படி கரிச்சான் குஞ்சுவின் விசித்திரக் குணாம்சங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். கொஞ்சம் கொஞ்சம் பிடிமானம் இருந்தாலும் சராசரி வாழ்வில் ஒட்டாத மேலும் கீழுமான இந்த ஏற்ற இறக்கமான நிலைதானே ஒரு அசல் கலைஞனின் சாமுத்ரிகா லட்சணம். அவன் மன நிலையில் அவன் அப்படித்தானே வாழமுடியும்.

ஆனால் இது போன்ற விசித்திரப் பிறவியை வீடு சகித்துக்கொள்ளுமா? அது வரவு செலவு கணக்குகளால் ஆனது. அதைப் புரிந்து சகித்துக்கொள்ள வேறோரு கலைமனம் தேவைப்படுகிறது. திருமதி கரிச்சான் குஞ்சுவான சாரதா அம்மாளும் அவருடைய மகள்களும் பல சமயம் அவரைக் கடிந்துகொண்டதை அவரோடு சண்டையிடுவதை நான் நேரில் கண்டதுண்டு. ஆனால் அது அவர்கள் தவறல்ல. அவர்களின் கருத்துலகம் வழியே, அவர்களின் புரிதல்கள் வழியே, அவர்களின் அன்றாடச் சிரமங்கள் வழியே அவரைப் பார்த்த பார்வை அது. இது கரிச்சான் குஞ்சுக்கு மட்டுமல்ல பெரும்பாலும் தேர்ந்த கலைஞர்களெல்லாம் எதிர்கொள்கிற லௌகீகச் சிக்கல்தான். சம்பாத்தியமில்லாத, செல்வாக்கில்லாத புருஷனை வீடு சகித்துக்கொள்ளாது. சகித்துக் கொள்ளவும் முடியாதுதான். இப்படி ஆதார இருப்பிடத்திலிருந்தும் வீசிக் கலங்கடிக்கிற காற்றுக்கும் மத்தியில்தான் ஒரு கலைஞன் தன் படைப்பின் சுடரை அணையாமல் காத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆனால், காலம் கடந்து கரிச்சான் குஞ்சுவின் மகள்கள் அவரைக் கொண்டாடத்தான் செய்தார்கள். வாடகை வீடுகளில் அவர் குடியிருந்த காலங்களில் வீட்டுக்காரன் ஒருவன் “வாடகை குடுக்க வக்கில்ல. உனக்கு ஹிண்டு பேப்பர் ஒரு கேடா” என ஒருமுறை கேட்டிருக்கிறான். அதனால் விஜயா அவருக்காகவே சொந்த வீடு கட்டும் முயற்சி எடுத்துப்பெரும் சிரமத்திற்கிடையில் அதைக் கட்டி முடித்தது. பிரபாவின் ப்ரியங்கள் சொல்லில் அடங்காதது. கரிச்சான்குஞ்சு ஈஸிச்சேரில் அமர்ந்து விஸ்தாரமாக பாவ அபிநயங்களோடு நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்க அவரது மேன்மை அறிந்த காலத்தில் அவர் காலடியில் அமர்ந்தவாறே பிரபா அதை வியந்து கேட்டுக்கொண்டிருக்கும். அவர் மறைந்து இவ்வளவு காலத்துக்குப் பின்னும் அதற்கு இவ்வளவு வயதாகியும்கூட எப்போது அவரைப் பற்றி பேசினாலும் நெகிழ்ந்து அழுதுவிடுகிறது பிரபா.

ஒருமுறை கரிச்சான்குஞ்சுவுக்குக் கடுமையாக உடல்நிலை பாதித்தபோது அவர் மகள் விஜயாவும் நானும் கும்பகோணம் செட்டி மண்டபம் அருகே உள்ள விமல் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தோம். அந்த முதல் நாள் முழுக்கத் தவிப்பும் வலியும் சஞ்சலமுமாக இருந்தார். பிறகு தூக்கத்துக்கான மருந்துகள் தரப்பட்டு ஊசிகள் போடப்பட்டுக் காலையில் கண்விழித்தார். “என்ன சார் எப்படி இருக்கீங்க. இப்ப வலி ஏதும் இல்லியே” என்று கேட்டேன். “ஆத்மாவுக்கு வலி உண்டா என்ன?” என்றார்.

09.08.1983இல் பாண்டிச்சேரியிலிருந்து ஞானாலயா கிருஷ்ண மூர்த்திக்கு எழுதிய கடிதத்திலும் ஆத்மாவைக் குறிப்பிட்டுள்ளார். “வறுமையும் வேதனையும் எனக்குப் பிடித்த தோழர்கள். ஆனால் அது என் ஆத்மாவைப் பாதிக்கவில்லை என்றே நினைத்துக்கொள்கிறேன். அது எவ்வளவு தூரம் சரியோ எனக்குத் தெரியாது”

ஆத்மா என்று அவர் எதைச் சொல்கிறாரென எனக்குப் புரியவில்லை. த்வன்யா லோகா மொழிபெயர்ப்பான தொனி விளக்கில், தொனியின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்தைத் தனியே அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆத்மா பற்றி அவர் குறிப்பிடுவதை அதிலும் கவனித்தேன். அதைப் படித்தபின் அதன் உட்பொருள் எனக்கு விளங்கிற்று.

”சொல்லும் பொருளும் காவியத்திற்கு உடல். ரஸம் முதலியவை உயிர், தொனி, ஆத்மா. உயிர் உடலில் இருந்து விலகுமெனில் ஆத்மா என்பது அவ்வியக்கம் மாத்திரம் இல்லை. உணர்வுகளே ஆத்மா ஆகும். உயிரும் ஆத்மாவும் கூடித் தான் சரீரமென்பது நேரும். அவை இல்லையெனில் வெறும் சரீரம் உயிரும் உணர்வும் அற்றது ஆகும் என்பதை நினைவில் கொள்க” என்று குறிப்பிடுகிறார்.

பார்வைக் குறைபாடுகள் இருந்தும் உடல் நலிவு இருந்தும் எழுத வேண்டுமென்ற ஆவல் அவரிடம் சதா இருந்துகொண்டே இருந்தது. அது போலவே அவர் எழுதிப் பாதியில் நிறுத்தியவை சில. தனது சுயசரிதைத் தொடர் ஒன்றைத் திருச்சியில் இருந்து வந்த மனிதம் இதழில் தொடங்கி அது நான்கு இதழோடு நின்றதும் நிறுத்திவிட்டார். மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் பற்றிய ஒரு நாவல் எழுத எண்ணி அவர் பற்றிய ஏராளமான வரலாற்றுத் தகவல்களைப் பல நூல்நிலையங்கள் சென்று குறிப்பெடுத்துச் சேகரித்து வைத்திருந்தார். கடைசிவரை அதை அவரால் எழுத இயலவில்லை.

02. 05. 1978இல் மன்னார்குடியிலிருந்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராமானுஜம் இருவரையும் சேர்த்து விளித்து எழுதிய ஒரு கடிதத்தில் எழுதுகிறார்.

“1937 முதல் 1947 வரையிலான சமகால வரலாற்றுப் பின்னணியில் நாவல் எழுத முடிவாகிவிட்டது. இது வெறும் வரலாறாகிவிடுமோ என்று பயப்படுகிறீர்களா? இருக்காது. கதையம்சமே நிறைய இருக்கும். பிராமணசமூகத்தின் ஸனாதனிகள், ஆஷாடபூதிகள், போலி ஆச்சாரங்கள், முதலியவை தோலுரிக்கப்பட வேண்டும். இவ்வளவும் எழுத முற்றிலும் எனது குடும்பச் சூழ் நிலையிலிருந்து விலகி தத்துவம், சிந்தனை, தவம், தனிமை என்று இருந்தால் முடிந்துவிடும். காதல் கதைகள்தான் நிறைய வருகின்றனவே. உண்மையான நாவலை எழுதிப் படைக்கப் பார்க்கிறேனே நான்”

இது தொடர்பான இன்னொரு கடிதம் 27. 11. 1981இல் பாண்டிச்சேரி 123 செட்டித்தெருவில் இருந்து கிருஷ்ணமூர்த்திக்கு எழுதியது. முன் நான் குறிப்பிட்ட கடிதம் 78. இது 81. இந்தக் கடிதத்தில் இப்படிச் சொல்கிறார்.

“இங்கே எனக்கு நேரமே கிடையாது. ஓய்வு மிகக்குறைவு. இரவுகளில் எழுதலாம் என்றால் கண் ஒத்துழைக்க மறுக்கிறது. முன்பெல்லாம் இரவுகளில் தூங்குவது முட்டாள்தனம் என்று திமிரடியாய் இருந்ததற்கு இப்போது தண்டனை. இருந்தாலும் ஏதாவது செய்யத் தீர்மானித்துவிட்டேன். அடுத்த வருஷம் பிறந்த பிறகாவது மெல்ல மற்றொரு நாவலை அரசியல் மற்றும் ஆன்மீகப் பின்னணியில் ஜாதி, சமய சர்ச்சைகளோடு எழுதப்போகிறேன். ஆமாம் எழுதத்தான் போகிறேன். தினந்தோறும் சிறிது சிறிதாக எழுத உத்தேசம். ஏற்கனவே திட்டம் போட்டு நிறையச் சிந்தனை  செய்த கரு அது. ஆகவே சில மாதங்களில் முடித்துவிடலாம். ஒருவேளை பக்கம் குறைந்தாலும் நாவல் தரமுடையதாய் அமையும். வரலாற்று விவரங்கள் 1939 முதல் 1948வரை அடிபடும். முறையற்ற பிராமணர்கள் சவுக்கடிபடுவார்கள். சீர்திருத்தக்காரர்களும் செல்லாக் காசாய் இளிப்பது காட்டப்படும். பெரியாரின் தொண்டும் அதன் பயனும் உரிய பாராட்டைப் பெறும். அதேவேளை அவர் செய்த நாத்திகப் பிரச்சாரத்தின் போலித்தன்மையும் ஆத்திகத்தின் போலித்தன்மைக்கு அப்பால் உள்ள நிஜமான ஆத்திகமும் விளக்கப்படும். அந்தக் கதையில் நானே ஒரு பாத்திரமாக அமைவேன். (இது உண்மையும் கூட) ஆகவே தயவு செய்து கலைஞரின் நெஞ்சுக்கு நீதி எனக்கு வேண்டும். திருப்பிக் கொடுக்கப்படும் வகையில் எனக்கு கிடைக்குமாறு செ ய்தல் வேண்டும். இதை எழுதும் போது இரவு 10:30 பாரதி படித்துக்கொண்டிருக்கிறேன். அடடா, படிக்கப் படிக்க புதுமை”

எழுதுவதில் திட்டங்களும் ஆசைகளும் இருந்தது போலவே தான் உயிரோடு இருக்கும்போதே தனது புத்தகங்களின் மறுபதிப்புகள் வந்துவிட வேண்டுமென்றும் கரிச்சான் குஞ்சுக்குத் தணியாத ஆசை இருந்தது. அதை ஓரளவே அப்போது எங்களால் நிறைவேற்ற முடிந்தது. ஏற்கனவே வெளிவந்திருந்த அவரது ஏழு கதைத் தொகுதிகளில் இருந்து தொகுத்து நர்மதா பதிப்பகம். அன்றிரவே தொகுப்பை எண்பதுகளில் வெளியிட்டது. அதன் பின் பேராசிரியர். மது. ச. விமலானந்தம் அவர்கள் முயற்சியால் கீர்த்தி வாசன் என்ற தொழிலதிபரால் அவரது கழுகு என்ற நாடகத்தொகுதி வெளிவந்தது.

சிம்மம் என்றும் ஞானபண்டிதர் என்றும் பிரியமாக அழைத்ததோடு மட்டுமல்லாமல் தனது கதைகளில் கரிச்சான் குஞ்சைச் சிறுசிறு பாத்திரங்களாகவும் உலவவிட்டவர் ஜெயகாந்தன். பொதுவாய்த் தனது சபையில், தான் அமரும் நாற்காலியில் யாரையும் அமர அனுமதிக்காத ஜெயகாந்தன் அவரை அதில் அமர வைத்துப் பேசச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்பார். அந்த ஜே.கேயின் முயற்சியால் 197Ravi Aathi 1A 8இல் மீனாட்சி புத்தகநிலையம் பசித்த மானிடம் புத்தகத்தை வெளியிட்டது.

“அதன் மறுபதிப்பு இனி எப்போ வருமோ தெரியலை” என வெகு காலமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார் கரிச்சான் குஞ்சு. 1990இல் என்னிடமும் அது குறித்துப் பேசியுள்ளார். 09.04.1982இல் பாண்டிச்சேரியிலிருந்து அவர் தனது நண்பர் ஞானாலாயா கிருஷ்ண மூர்த்திக்கு எழுதிய கடிதத்தில் சலிப்போடு இப்படிச் சொல்கிறார். “பசித்த மானிடம் மறுபதிப்பு வர வேண்டுமென்பது என் ஆசை. அது நிறைவேறப் போவதில்லை. போகட்டும்”

அந்த நாவலை 1978க்குப் பிறகான நீண்ட இடைவெளிக்குப் பின் 2005இல் காலச்சுவடு வழியாகக் கொண்டுவந்தேன். கண்ணன் இதற்கு முன்பணமாகப் புத்தகம் வெளிவரும் பலமாதங்களுக்கு முன்பே 2004இல் ஒரு தொகையை என்னிடம் தந்தார். சாரதா அம்மாளிடம் நான் அதை வடபழனி தங்கவேல் காலனியில் சென்று தந்தபோது, “அவர் இருந்தபோதுகூட புஸ்தகம் வருமின்ன எழுத்துக்கான பணத்த நான் பாக்கல சுப்ரமண்யம். அவர் இப்ப இல்லாமயும் குடுக்கறார். அத அப்படியே சுவாமி படத்துக்கு மின்ன வச்சுரு” என்று தழுதழுத்தார்.

சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் எனப் படைப்பிலக்கியத் தளத்தில் பல காலம் அவர் இயங்கி வந்திருந்தாலும் பசித்த மானிடம் என்ற ஒரு நாவலின் வீச்சு, அவரை இலக்கியத்தின் பல தளங்களிலும் இயங்குபவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்த நாவல் இப்போது நான்காம் பதிப்பைத் தாண்டிச் செல்கிறது. மூன்று பதிப்புகளின் ராயல்டி தொகையாக மட்டும் இதுவரை முப்பத்து ஐய்யாயிரம் வந்துள்ளது. காலச்சுவடின் வழியாகவே அவரது சிறுகதைகளும் இந்த ஆண்டு வெளிவரும் என்பது என் நம்பிக்கை.ஞானத்தால் பெற்ற பயமின்மையும் மார்க்ஸியச் சிந்தனைப் போக்கில் இருந்த சன்னமான ஈடுபாடும் சேர்ந்து, அவர் எந்தச் சபையிலும் எந்த விஷயத்தையும் துணிச்சலாகப் பேசுபவராகவே இருந்தார். காஞ்சிப் பெரியவர் சந்திர சேகரேந்திர சுவாமிகளுடனான சதஸில் அத்வைதம் குறித்த விவாதங்களில் ஈடுபடும்போது த்வைதம் என்றால் ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டு. அத்வைதம் என்றால் இரண்டுமல்லாத ஒன்று என்கிறபோது கடவுளும் இல்லை. அப்போ அதுவும் நாத்திகம்தானே என்று அவர் காஞ்சிப் பெரியவரிடம் விவாதித்ததை நண்பர் தேனுகாவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் கரிச்சான்குஞ்சு.

1986இல் இலங்கை எழுத்தாளர் மார்க்ஸியச் சிந்தனையாளர் டேனியல் இறப்புக்கு

பொ.வேலுச்சாமியின் கோழி முட்டை ஏற்றும் வண்டியில் அமர்ந்து அவரது இறுதிச்சடங்குக்குச் சென்றதும் கம்யூனிச ஊர்வலங்களில் கலந்துகொண்டு கோஷமிட்டு சென்றதும் இதனால்தான். அதே பார்வை கொண்ட, சிக்கல் சிடுக்கான நிரடான மொழியில் அமைந்த தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய ஆங்கிலப் புத்தகமான வாட் ஈஸ் லிவ்விங் அன்ட் வாட் ஈஸ் டெட் இன் இண்டியன் பிலாசஃபி என்ற புத்தகத்தை எளிமையாக அவர் தமிழில் மொழிபெயர்த்ததும் அதனால்தான்.

பொ.வேலுச்சாமியும் பொதியவெற்பனும் அந்தப் புத்தக மொழிபெயர்ப்புக்குக் காரணமாக இருந்தாலும் அது மொழிபெயர்க்கப்பட்டதும் அதன் அதிக பக்கங்களால் பதிப்பாளர்கள் அதை வெளியிட முன் வரவில்லை. (அது வெளிவந்தபோது அதன் பக்கங்கள் எழுநூற்றி ஐம்பத்தி ஐந்து) அதை வெளியிட யார் யாரிடமோ அணுகி கடைசியில் தேனுகா அவரது நண்பர் சவுத் விஷன் பாலாஜி வழியாக அந்தப் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பான இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் புத்தகத்தைக் கொண்டுவந்தார் பாலாஜி. அந்தப் புத்தகத்துக்காக ஐயாயிரம் ரூபாயைக் கரிச்சான்குஞ்சுக்கு தந்தார் அவர். அது அப்போது அவருக்குப் பெரிய தொகையாக இருந்தது.

காஷ்மீரத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆனந்தவர்த்தனரின் த்வன்ய லோகவைத் தொனி விளக்கு என்ற பெயரில் அவர் மொழிபெயர்த்த புத்தகமும் தமிழுக்கான பிற மொழி வரவுகளில் முக்கியமானது. க்ரியாவுக்காக மொழி பெயர்க்கப்பட்ட த்வன்ய லோகம் க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் அவருக்குமான சிறு கருத்து முரண்பாடால் வெளிவராமல் போனது. அதன் பின் அதனை நான் மீராவின் அன்னம் பதிப்பகம் வழியே கொண்டுவர முயற்சி எடுத்து அவரிடம் கொண்டுபோய்ச் சேர்த்தேன். அவரும் ஏனோ சில வருஷங்கள் அதனை வெளியிடாமலே இருந்தார். கரிச்சான் குஞ்சுவின் மறைவுக்குப் பின் அதை அவர் இருக்கும்போது வெளியிடாததற்கு வருத்தப்பட்டுப் பின் அதை அச்சாக்கமும் செய்துவிட்டார். அப்போது திடீரென அதன் கடைசி அத்தியாயம் காணவில்லை என்று மீரா சொல்ல எனக்கு என்னசெய்வதெனப் புரியவில்லை. அப்போது கரிச்சான் குஞ்சுவும் இல்லை. மறுபடி எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. இதற்கிடையில் மீராவும் உடல் நலமின்றி இருந்து மறைந்துவிட்டார். கடைசியில் மீராவின் மகன் கதிரிடமிருந்து அதை வாங்கி வந்தேன். நண்பர் கி. அ. சச்சிதானந்தன் அதில் விடுபட்ட பகுதிகளை சமஸ்கிருத அறிஞர்களின் உதவியோடு ஒழுங்கு செய்ய முதலில் முயன்றார். பின்பு அவரே “கரிச்சான் குஞ்சு உயிரோடு இல்லாததால, இன்னாத்துக்குப்பா அதுல போயி திருத்தம் பண்ணி, இல்லாத இன்னோர்த்தனை வச்சி எழுதிச் சேத்துகினு. வேண்டாப்பா. வுடுப்பா அப்படியே போட்றலாம்” என்று சச்சி முடிவு செய்யவே அதை அவ்விதமே வெளியிட நண்பர் சந்தியா நட்ராஜன் சம்மதித்து 2004இல் அதை வெளியிட்டார்.

1992இல் அவர் மறைந்த பிறகு நானும் தேனுகாவும் கரிச்சான் குஞ்சு பற்றிய கருத்தரங்கமொன்றை நடத்தத் திட்டமிட்டோம். பிறகு முத்துவையும் பொதியவெற்பனையும் அதில் சேர்த்துக்கொண்டோம். கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலில் கருத்தரங்கம் நடந்தது. அதில் கரிச்சான் குஞ்சுவின் படத்தைத் திறந்துவைத்து அவர் பற்றியும் எம்.வி.வி நடத்திய தேனி இதழில் இணைந்து அவர் துணை ஆசிரியராகப் பணியாற்றியது பற்றியும் அவரது பன்முக ஆற்றல் பற்றியும் எம்.வி.வி. பேசினார். அந்த விழாவில் அவரது சிறு நாடகப்பிரதியான காலத்தின் குரலை நானும் தேனுகாவும் எங்கள் சொந்தச் செலவில் புதிய நம்பிக்கை இதழ் ஆசிரியர் பொன் விஜயன் வழியாகக் கொண்டு வந்தோம்.

அதே கும்பகோணம் ஜனரஞ்சனி ஹாலிலும் காந்திபார்க்கிலும் கோபால்ராவ் நூலகத்திலும் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் என் கல்லூரி காலங்களில் அவர் மீது எனக்குப் பெரும் மதிப்பு உருவாகி இருந்தது. சில வேளைகளில் எம். வி. வியும் அவர்கூட இருப்பார். வெங்கட்ரமணா ஓட்டலில் காபி சாப்பிட்ட பின் முத்து பீடாக் கடையின் தாம்பூலம் துலங்கப் பேச்சு போய்க்கொண்டிருக்கும். அதன் பின் அவரை வீட்டுக்குச் சென்று பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. நானும் இன்று திரைப்பட வசன கர்த்தாவாக இருக்கும் பிருந்தாசாரதியும் இப்போது கோவையில் தமிழாசிரியராப் பணிபுரியும் செந்தில் வேலுவும் வெற்றிலைச் சீவல் வாங்கிக்கொண்டு அவரைப் பார்க்க மாசம் ஒரு தடவையாவது சென்றுவிடுவோம். கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் எழுதிய கவிதைகளை வாங்கி அவர் ஆர்வமாய்ப் படிப்பார். அப்போது கம்பராமாயணப் பாடல்களை அனுபவித்து ரசனையோடு பாடம் எடுப்பது போலச் சொல்வார். அவருக்குப் புதுக்கவிதைகள்மீது அத்தனை ஈடுபாடில்லை. மரபின் செழுமையை உண்டுகளித்துத் திளைத்த மனத்திற்கு அப்படி ஒரு விலகல் இருந்ததில் எங்களுக்கு ஆச்சர்யமும் இல்லை.

கவிதை பற்றி ஏராளமான விஷயங்களைச் சொல்வார். தொல் காப்பியம் யாப்பெருங்கலக்காரிகை பற்றியெல்லாம் பேசுவதோடு உசிதமல்லாததை விலக்கி உசிதமானதை மட்டும் வைத்தால் கவிதை ஆகும் என்று சொல்லும் ஷேமேந் திரரின் ஔசித்திய விசாரம், நேர்கோட்டில் போனால் உரை நடை அதைச் சற்று வளைத்து நெளித்து போட்டால் கவிதை என்று சொல்லும் குந்தகாவின் வக்ரோத்தி ஜீவிதம், கவிதைக்குள் எழுப்பும் த்வனி பற்றிய ஆனந்தவர்தனரின் த்வன்ய லோகா போன்ற கவிதை இயல் சார்ந்த புத்தகங்கள் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்வார். வயசு வித்யாசமின்றி எதைப் பற்றியும் அவரிடம் பேச முடியும். அருவி போல விஷயங்கள் கொட்டும். அவரைவிட்டு விலக மனம் வராது. எத்தனை நூலகம் போய்ப் படித்தாலும் அவ்வளவு விஷயங்கள் கிடைக்காது. பேச்சின் போது அமர்ந்தபடியே குதிப்பார், சப்தமிடுவார். சத்தமாகச் சிரிப்பார். கைதட்டுவார். சில சமயம் மூக்கு கண்ணாடி கீழே விழும். தனது கைத்தடியை எடுத்துத் தரையில் தட்டுவார். வெற்றிலை எச்சில் தெறிக்கும். கோபத்தில் சில சமயம் தாயோளி என்றும் வள்ளார ஓளி முண்டைகளா, வக்காள ஓழிகளா என்றும் கெட்டவார்த்தைகள் சிதறும். எதைப் பேசினாலும் அதை உல்லாசமாய் அனுபவித்துப் பேசுவார். அது வெறும் பேச்சாக இராது. ஒரு நிகழ்வு போலவே இருக்கும். கண் உபாதைக்கும் இதய நோய்க்கும் ஆட்பட்டபின் இந்த வேகம் கொஞ்சம் குறைந்தது.

கரிச்சான்குஞ்சு வடமொழி விற்பன்னராக இருந்தாலும் ஹிந்தி, ஆங்கிலம் அறிந்திருந்தாலும் தமிழ் மொழியின் மீது அவர் கொண்டிருந்த மாளாத அன்பு அவரது செயல்களில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னதற்கேற்ப கும்பகோணம் சங்கர மடத்தில் உரை நிகழ்த்தி இருக்கிறார். அதற்குத் தேனுகா அவரை அழைத்துப் போவார். சமஸ்கிருதத்தில் உரை அமைய வேண்டுமென்று சொல்லப்பட்டாலும் அதன் கடைசிப் பகுதிகளில் அவர் தமிழில் பேசித்தான் முடிப்பார். அது போலவே அவர் பள்ளிகளில் கம்பராமாயணம் நடத்தும்போது வால்மீகி ராமாயணத்தையும் சேர்த்துச் சொல்லி நடத்தியிருப்பதை அவரிடம் படித்த மாணவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

உயர்சாதியில் பிறந்திருந்தாலும் அவர் கரிசனங்கள் மிகச் சாதாரணர்கள்மீதும் எளியவர்கள் மீதுமே இருந்தது. அவர் சார்ந்த சமூகத்தின் சில மடமைகளின் மீது அவருக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அவர் எழுதிய நாவலில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு குஷ்டரோகியின் கதையையே எடுத்துக்கொள்கிறார். ஓரினப்புணர்ச்சி பற்றிய விஷயங்களைத் தமிழில் முதன்முதலாக எழுதியவர் அவர். ரகசியமாய் நடக்கும் ஒரு விஷயத்தைப் பொது வெளிக்குக் கொண்டுவருகிறார். சமூகம் அது குறித்த பார்வையையும் விவாதத்தையும் முன்னெடுக்கத் தன் படைப்பின் வழியே ஒரு ஒரு சாளரத்தைத் திறந்துவைக்கிறார். இந்தத் தொனியை அவரின் பல படைப்புகளில் நாம் காணமுடியும்.

சமூகம் பேசக் கூசுகிற விஷயத்தை எழுதும் இது போன்ற துணிச்சல் அவருக்கு புதிதல்ல. அவரது பால்ய காலத்தில் 1937 ஜூன் முதல் 1941 மே வரை மதுரையில் உள்ள ராமேஸ்வரம் தேவஸ்தானப் பாடசாலையில் வடமொழியும் தமிழும் பயிலும்போது அவர் சில நாடகங்களில் நடித்துள்ளார். அதில் பட்ட நாராயணரின் “வேணீ சம்ஹாரம்” என்ற பாரதக் கதையை ஆதாரமாகக் கொண்ட நாடகத்தில் நடித்தபோது கர்ணனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் கடும் வாக்குவாதம் நடக்கும் காட்சி. இதில் அஸ்வத்தாமனாகக் கரிச்சான் குஞ்சு நடித்தார். “இங்கே பார் கர்ணா நான் எதற்கும் தயங்கமாட்டேன் என் பூணூலைக்கூட அறுத்தெறிவேன்’’ என்று பேசி சவால்விட வேண்டிய கட்டத்தில் அவர் உண்மையாகவே பூணூலை அறுத்தெறிந்துவிட்டார் என்கிறார் அவருடன் அந்தப் பாடசாலையில் உடன் பயின்ற பி.எச்.சிவசுப்ர மணியன். பூணூலை அறுப்ப தென்பது அபச்சாரம். அதுவும் வேதபாடசாலையில் பயிலும் ஒரு மாணவன் அறுப்பது என்பது பெரும் அதிர்ச்சியான விஷயம். அன்று முதல் அவருக்கு அங்கு அஸ்வத்தாமா என்ற பட்ட பெயர் நிலைத்திருக்கிறது.

வேதாந்த நோக்கில் அவர் பாரதியின் ஆத்ம பக்குவத்தைப் பற்றி எழுதிய பாரதி தேடியதும் கண்டதும் நூலும் கு.ப.ரா. பற்றி விரிவாக அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பும் அவரது தமிழ் இலக்கியப் பங்களிப்பில் பிரதானமானவை.

பாரதி நூற்றாண்டின் போது பாரதி பற்றியும் அவர் படைப்புகள் பற்றியும் நூற்றுக்கணக்கான புத்தங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் எல்லாம் சேதாரம். மிகையில்லாமல் பரவசமில்லாமல் அவரை வெளிப்படுத்திய புத்தகங்கள் கனகலிங்கத்தின் என் குருநாதர், கரிச்சான் குஞ்சுவின் பாரதி தேடியதும் கண்டதும், யதுகிரியம்மாள் எழுதிய பாரதி சில நினைவுகள் போன்ற வெகுசிலவே தேறுகின்றன’’ என்று அவரது பசித்த மானுடத்தை மிகச்சிறந்த நாவலாக குறிப்பிட்டு கா.நா.சு பேசியுள்ளார். தாய் வார இதழிலும் எழுதினார்.

பாரதி போலவே கரிச்சான் குஞ்சும் வேதங்களில் தோய்ந்தவர்தான். இன்னும் கூடுதலாக சுக்ல யஜீர் வேதத்தின் பகுதியான பிருஹ தாரன்ய உபநிஷத்தைச் சுரத்தோடு அத்யயனம் செய்தவர். அப்படிக் கனம் முறையில் கடினமான வேதப் பகுதிகளைப் பயின்ற கனபாடிகளுக்கு இணையானவர் அவர். பாரதியின் படைப்புகளில் வேதங்களின் தாக்கங்கள் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

பாரதி “ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா, ஜெயபேரிகை கொட்டடா. பயமெனும் பேய்தனை அடித்தோம், பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம். வியனுலகனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைபிடித்தோம். ஜெயபேரிகை கொட்டடா கொட்டடா. ஜெயபேரிகை கொட்டடா’’ என்று பாடுகிறார். ஆனால் வேதங்களைத் தங்கள் அளவில் ஆழமாக உள் வாங்கிக்கொண்ட இருவருமே வேத வாழ்வைக் கைப்பிடிக்கவில்லை, அசல் கலைஞனின் வாழ்க்கையையே வாழ்ந்தனர்.

மனித மனத்தின் அடியில் படிந்து போயிருக்கும் தன்முனைப்பு, காமம், பொருந்தாக்காமம், செல்வம் சேர்ப்பதில் உள்ள வேட்கை, அதன் பொருட்டு நடக்கும் கேவலங்கள், பக்தியின் பெயரால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் போலித்தனங்கள் என்று எல்லாவற்றையும் மறைக்காமல் ஒளிக்காமல் தன் படைப்புகள் மூலம் நம் முன்வைக்கிறார் கரிச்சான் குஞ்சு. எதையும் எதிர் பார்க்காமால் எதன் மீதும் மறைந்தோ சாய்ந்தோ ஒளிந்தோ கொள்ளாமல் நேரிடையாகக் கணீரென்ற குரலில் தளுக்கின்றி அவர் சத்தியத்தைப் பேசுவது அவர் படைப்புகளின் வழியே இன்னமும் கேட்கிறது.

ஒன்றித் திளைத்து வெளிப்படும் அவரது சுவாரஸ்யமான சம்பாஷனை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடிகிற ஒன்றல்ல. கடும் வாசிப்பும் வாசித்ததைக் கேட்பவன் கிறங்குமாறு சொல்வதிலும் சமர்த்தர். ருசியான உணவும் பேச்சும் தாம்பூலமும் சிரிப்பும் குதூகலமுமாய் அவர் வாழ்வைக் கொண்டாடிக் கொண்டு தானிருந்தார். எல்லாவிதத் துயரங்களோடும் அவர் சுகவாசியாகச் சந்தோஷமாக நிம்மதியாக இருந்ததைத்தான் நான் எப்போதும் கண்டிருக்கிறேன். ஒரு வகையில் எனக்கு அப்போது ஆச்சரியமாக இருந்தது. தரித்திரத்தை எக்காளம் செய்து அவர் சிரித்து விளையாடிய விளையாட்டு அது என்று இப்போது புரிகிறது.

***

தமிழ் பல்கலைக்கழகமும் சாகித்ய அக்காதெமியும் இணைந்து தஞ்சையில் 10.08.2012இல் நடத்திய கரிச்சான்குஞ்சு கருத்தரங்கில் கரிச்சான் குஞ்சு குறித்தும் அவர் படைப்புகள் குறித்தும் ரவிசுப்பிர மணியன் வாசித்த கட்டுரை

நன்றி: காலச்சுவடு

May 15, 2010

கரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள்-வெங்கட் சாமினாதன்

கரிச்சான் குஞ்சுவை எண்பதுகளின் ஆரம்பத்தில் முதன் முதலாகப் பார்த்த போது அவருக்கு அறுபத்து ஐந்து வயதுக்கு மேலிருக்கும். முரண்களின் உருவமாக இருந்தார் அவர். நல்ல கருத்த பருமனான தேகம். நரைத்த சிறிய உச்சிக்குடுமி. மார்பின் குறுக்கே பூணூல். சமஸ்கிருதத்திலும், தமிழிலும் காவியங்களை ஆழ்ந்து படித்தறிந்திருந்த பாண்டித்யம். அன்றைய தமிழ்ச் சூழலில் தன்னை வெகுவாக அன்னியப்படுத்திக் கொள்ளும் தோற்றமும் ஆளுமையும். அன்றென்ன!. இன்றும் தான்.

karichankunju அப்போது அவர் தங்கியிருந்த கும்பகோணத்தில் அவரைச் சுற்றிச் சூழ்ந்த மிகச் சிறிய ரசிகர் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்களை விட்டால் தமிழ் நாட்டில் அவரை அறிந்தவர்கள், நினைவு கொள்கிறவர்கள் யாரும் கிடையாது. அது பரவாயில்லை. ஆனால் அவரைச் சூழ்ந்திருந்த ரசிகர் கூட்டம், இளம் வயதினர்களைக் கொண்டது. பொறி பறக்கும் இடது சாரிக் கொள்கையாளர்கள் அவர்கள். அவர்கள் எல்லோரும் அவரைத் தம் தந்தையாகப் பாவித்து மரியாதை செலுத்துகிறவர்கள். கனல் பறக்கப் பேசும் அந்தச் சூடுண்ட தலைகளை, குரல் எழுப்பிப் பேசியறியாத இந்த மனிதர் எப்படிக் கவர்ந்தாரோ தெரியாது. தன் கிட்டத் தட்ட நாற்பது வருட கால எழுத்து வாழ்க்கையில் அவர் ஒரு வரிகூட, மார்க்ஸீய வாதிகள் ஒப்புக்கொள்ளும் வரி ஒன்று கூட, எழுதியவரில்லை. அவர் கடைசியாக தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் What is True and Relevant in Indian Philosophy" புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தது ஒரு காரணமாக இருக்கலாமோ என்னவோ.

தற்கால தமிழ் இலக்கியத்தில் கரிச்சான் குஞ்சு முற்றிலுமாக அலட்சியப்படுத்தி ஒதுக்கப்படுவது போல வேறு ஒரு தமிழ் எழுத்தாளர் உண்டா என்பது சந்தேகம் தான். அவருடைய எழுத்துக்களோ, அவருடைய இலக்கிய ஆளுமையோ, அல்லது அவர் கொண்டுள்ள வாழ்க்கை தர்மங்களோ எதுவுமே இன்றைய தமிழ் சமூகத்தின் ஒரு சிறு பகுதியினரால் கூட, போற்றி மதிக்கப்படுவது ஒரு புறம் இருக்கட்டும்அந்தப் பேச்சுக்கே இடமில்லை, ஒப்புதலான ஒரு தலையாட்டல் கூட பெறவில்லை.

கரிச்சான் குஞ்சு தன்னையே அழித்துக்கொள்ளும் அடக்கம் மிகுந்தவர். அந்த அடக்கம் அவர் புனைபெயரிலும், அவர் எழுத்துக்களிலும் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்து வருவது. எழுதத் தொடங்கியதும் அவருக்கு ஆதரிசமாக இருந்தவர் முப்பதுகளின் மணிக்கொடிக்கால முன்னோடியான கு.ப.ராஜகோபாலன். கு.ப.ரா 'கரிச்சான்' என்ற புனைபெயரிலும் எழுதுவார். அவரைத் தன் இலக்கிய குருவாகவும் தந்தையாகவும் பாவித்தவர் தன்னை அந்தக் கரிச்சானின் குஞ்சாக வரித்துப்புனைபெயரிட்டுக்கொண்டார். தான் ஒரு நிழலே, தான் பெற்றதெல்லாம் தன் குருவிடமிருந்து பெற்றதே என்ற பிரகடனம் தான் இது.

அவ்வப்போதே வெகு அரிதாக எழுதினாலும், நாற்பது வருட கால நீட்சியில் குவிந்துள்ள எழுத்துக்கள் இப்போது கணிசமாகத் தோன்றினாலும், அவரது எழுத்துக்கள் அப்படி ஏதும் பெரும் கவனிப்பு பெற்றதாகச் சொல்ல முடியாது. அவரது எழுத்துக்கள், பிராபல்ய ரசனை பெற்றவையோ, அவ்வக்கால ·பாஷனை பிரதிபலிப்பவையாகவோ இருந்ததில்லை. விமர்சகர்களைக் கவரும் வகையிலும் அவர் எழுத்துக்கள் வடிவிலும் கருவிலும் இருந்ததில்லை. கரிச்சான் குஞ்சுவின் எழுத்துக்கள் வெகு ஜனங்களைக் கவராது போனதைப் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை. ஆனால் விமரிசகர்களின் பார்வையில் கரிச்சான் குஞ்சு பெற்ற அலட்சியம்தான் கேள்விக்குரியது.

கரிச்சான் குஞ்சுவின் படைப்பு முழுமையையும் பார்க்கும் போது அது நமக்கு, நம்மை விட்டுப் பின் தங்கி விலகிச் சொல்லும் உலகைச் சொல்கிறது. இருள் நிறைந்த பாதை ஒன்றை நமக்கு தம் ஒளி வீசிக் காட்டும் மின்மினிப் பூச்சிகள் போன்றவைதான் அவர் எழுத்துக்கள் என்று சொல்லத் தோன்றுகிறதுஅவை மொத்தமும் எழுப்பும் ஸ்ஸ்ஸ் என்று தொடரும் ஒலிப்பெருக்கு ஒரு வித புதிரும் மாயமுமான உணர்வைத் தரும். அவை ஏதும் ஒரு பூச்சியின் மின்மினுப்புமோ ஸ்ஸ்ஸ்ஸ¥மோ ஏதும் நமக்கு பெரிதாகத் தராமல் போகலாம். ஒவ்வொரு கதையும் ஒரு துணுக்குக் காட்சி ஒரு உணர்வு சட்டெனத் தோன்றி மறையும் துணுக்கு, ஒரு நாடகக் காட்சி, ஒரு சம்பவம், ஒரு கட்டத்தைப் பிரதிபலிக்கும் பாத்திரத்தின் ஒரு சலனம், இவையெல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நாம் பார்க்கும்போது, அவை கடந்த காலத்தின், வாழ்க்கையின் அடி நாதத்தை, தர்மத்தை, பார்வையை நமக்கு ஒரு இழப்புணர்வின் சோகத்தோடு சொல்லும். பிரச்சினை என்னவென்றால் இன்றைய தமிழ் சமூகத்தின் பெரும்பான்மைக்கு தாம் இழந்த மதிப்புகள், மதிப்புகளாகவே தோன்றுவதில்லை. அவற்றின் இழப்பும் சோக உணர்வைத் தருவதில்லை.

தன் எழுத்து வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில், கரிச்சான் குஞ்சு பசித்த மானுடம் என்ற ஒரு நீண்ட நாவலை தரத் துணிகிறார். அது தான் அவரது படைப்பின் சிகரம் என்று தோன்றுகிறது. உண்மையில் இதில் அவர் இன்னுமொரு முரணை நம் முன் வைத்துவிடுகிறார். பசித்த மானுடம் என்னும் 400 பக்க நாவலின் பெரும்பகுதி இரண்டு பாத்திரங்களின் வாழ்க்கையில் - நாற்பது வருட கால நீட்சியில் - வெகு வேகமாக நிகழ்ந்து விட்ட சம்பவங்களைச் சொல்கிறது. இந்த நாவலில் நாம் காணும் கரிச்சான் குஞ்சுவின் எழுத்து, அவர் சிறுகதைகளில் காணப்பட்ட எழுத்தின் குணத்திற்கு மாறானது.

நாவலின் பிரதான பாத்திரங்கள் இருவரில், ஒருவன் அனாதை, கிராமத்து ஆசிரியர் ஒருவரால் வளர்க்கப்படுபவன். இன்னொருவன் ஒரு ஏழை குடும்பத்தவன். கண்டிப்பின்றி தத்தாரியாக வளர்பவன். அனாதைப் பையன் மிகவும் புத்திசாலி, venkat_swaminathan கிராமத்தில் உள்ள எல்லோருக்கும் பிரியமானவன். ஆனால் வாழ்க்கையில் இலக்கின்றி அலைந்து கொண்டிருப்பவன். ஒரு கட்டத்தில் அவன் வளர்ச்சியில் சில பணக்காரர்களின் வேண்டாத நட்புறவில் சிக்கிக் கொள்கிறான். விரும்பித்தான் அவர்களின் பாலியல் இச்சைக்கு இரையாகிறான். அத்தோடு பல பெண்களுக்கும் அவனிடம் மோகம் மிகுந்து அவனைச் சக்கையாக்கித்தான் விடுகிறார்கள். கடைசியில் வாழ்க்கையே பாழாகிவிடுகிறது. குஷ்டநோய் பீடித்து. ஏதும் சம்பாதிக்கும் வழியற்று வறுமையில் வீழ்ந்தவன் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகிறான். தன் வாழ்க்கையில் இவ்வளவு சோதனைகளுக்கு ஆளானவன், எதிர்கொண்ட இன்னல்களே அவனைப் புடம் போட்டது போல, இப்போது அவன் எல்லோருக்கும் உதவுகிறவனாக, மரியாதைக்குரியவனாக ஆக்கிவிடுகின்றன.

தத்தாரியாக வளர்ந்தவனோ கிராமத்தில் எல்லோருடைய வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டு விட்ட காரணத்தால், முதலில் கிராமத்தை விட்டே வெளியேறி நல்லபடியாக வாழ்ந்து தன்னை வெறுத்தவர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்று நினைக்கிறான். வெகு ஜாக்கிரதையாக தன் ஒவ்வொரு அடிவைப்பையும் திட்டமிட்டுச் செய்யவே அவனுக்கு விதியும் உதவுகிறது. ஒரு கட்டத்தில் மிகப் பெரிய செல்வந்தனாகிறான். வரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளவும், தன்னை நாடி வந்தவர்களைக் கவர்ந்து தன் விருப்பத்திற்கு அவர்களை வளைத்துப் போடவும் தெரிகிறது. வியாபாரத்தில் குவித்த செல்வம் வாழ்க்கையில் அவன் ஆசைப்பட்டதையெல்லாம், அதிகாரம், பெண்கள், அந்தஸ்து என எல்லாம் பெற்றுத்தருகிறது. அவனை உதவாக்கரை என்று வெறுத்து ஒதுக்கியவர்கள் எல்லாம் இப்போது அவனிடம் பயத்துடன் நடந்து கொள்கிறார்கள். இருப்பினும், தான் வாழ்க்கையை வெற்றி கொண்டு அதன் சிகரத்தில் அமர்ந்துள்ளதாக எண்ணும் அதேசமயம் தான் வாழ்க்கையில் தோற்றுவிட்டதாக ஒரு எண்ணம் அவன் மனத்தைக் குடைகிறது. கடைசியில் தன் கிராமத்துக்கு ஒரு மகான் வந்து எழுந்தருளியுள்ளதாக, மக்கள் அவரைத் தரிசித்து ஆசிகள் பெறுவதாகக் கேட்டதும் தானும் அம்மகானைச் சரணடைவது என்று நிச்சயித்து அந்த மகானிடம் செல்கிறான். அந்த மகான் தன் சிறு பிராயத்தில் தன் கிராமத்திலேயே வளர்ந்த தன்னில் பொறாமையை வளர்த்த அந்த அனாதைப் பையனே தான்.

இவ்வளவும் அந்த நாவலைப் பற்றிச் சொன்னபிறகு, இது அதிகமும் கற்பனையான சம்பவங்களை இஷ்டத்துக்கு உருவாக்கிக் கோர்த்த, மிகை உணர்ச்சியாகக் கொட்டி நிரப்பிய தமிழ் சினிமாக்கதை போன்றிருப்பதாக எண்ணத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. நாவலின் 'உண்மையும்" அது விரிக்கும் வாழ்க்கையும் முற்றிலும் வேறு குணத்தவை. இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் எல்லாம், காவேரி நதி தீரத்தின் கிராமங்களில் காணும் மனிதர்கள் தான். வாழ்க்கைதான். அந்த கலாச்சாரம் தந்தது தான். நாவல் விரிக்கும் காலம் 1920-களிலிருந்து 1950-கள் வரைய கால கட்டத்தைச் சேர்ந்தது. கரிச்சான் குஞ்சு தன் நாவலை இரண்டு பிரதான பாத்திரங்களை மாத்திரமே எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரை மாத்திரமே மையமாகக் கொண்டு எழுதியிருப்பதான தோற்றம் தந்தாலும், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் நாற்பது வருட கால கட்டத்தின் பண்பாட்டையே, வாழ்க்கையின் கதியையே நம் முன் வைத்துள்ளதான ஒரு உணர்வை நமக்குத் தந்துவிடுகிறார்.

சிறு வயதில் கிராமத்தில் தத்தாரியாக இருந்த பையன் பின் தன் வழி கண்டு பல லக்ஷங்கள் கோடிகள் புரளும் வியாபார வெற்றி அடைவதும் மனிதர்களை தன் இஷ்டத்திற்கு வளைத்து ஆள்வது என்பதெல்லாம் நம்பத்தகுந்த விஷயங்கள் தான். நம் முன்னேயே நாம் வாழும் காலத்திலேயே இப்படிப் பல மாதிரிகள் தமிழ் வாழ்க்கையிலேயே உலவக் காண்கிறோம். அதே சமயம் கிராமத்து நல்ல பையன் பெற்ற வளர்ச்சியைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. அவன் வாழ்க்கையில் எல்லா பாலியல் உறவுகளையும் அனுபவித்துக் கடந்து குஷ்டரோகியாகி, பின்னர் மனம் திருந்தி ஞானியாகிறான் அவன். அவன் வாழ்க்கை யில் கண்ட மேடு பள்ளங்களோ, அவன் மனம் பெற்ற கோணல்கள் நிறைந்த வளர்ச்சியோ, பின்னர் அவன் சமூகத்தின் வழிபடற்குரிய ஞானியாக மாறுவதோ, இந்த வாழ்க்கையின் அடியோட்டமாக, சொல்லாது குறிப்பிடப்படும் தத்துவ நோக்கோ, எல்லாம் அசாதாரணமான ஒரு சங்கிலித் தொடரில் தோன்றினாலும், இவை வலிந்து புகுத்தப்பட்ட கற்பனையல்ல. இவையெல்லாம் தமிழ் கலாச்சார சரித்திரத்தில், அதன் இலக்கிய, தத்துவார்த்த மரபில் வேர்கொண்டவை தான்.

17- 18- 19-ம் நூற்றாண்டுகளில் தலை சிறந்த கவிஞர்களாகவும் இசைவல்லுனர்களாகவும், பாடகர்களாகவும் இருந்த ஞானிகள் பலரை தமிழ் நாடு கண்டுள்ளது. பட்டினத்தார், அருணகிரிநாதர், சதாசிவ பிரம்மேந்திரர் போன்றோர் வாழ்க்கை இம்மாதிரியான வளர்ச்சிப் போக்கையும் சம்பவங்களையும் கண்டது தான். இம்மகான்களின் போலி மாதிரிகள் உண்டு தான். இம்மகான்களின் வாழ்க்கையை போலி செய்யும் திருகல்களையும் நாம் காண்போம் தான். அவைதான் இன்றைய தமிழ் வாழ்க்கையை நிரப்புகின்றன. இத்திருகல்களே கூட அவற்றின் உயரிய மரபின் சத்தியத்தை வலுயுறுத்துவனதான்.

அறிவார்த்தம் மறுத்த அகங்காரம் மிகுந்த நாஸ்திகத்தையும் போலியான உள்ளீடற்ற ஆஸ்திகத்தையும் கடந்த ஒரு தத்துவார்த்த நிலை நாவலின் அடிநாதமாகப் படர்ந்திருப்பது. ஒரு வேளை அது தான் இந்த குடுமியும் பூணூலுமாகத் தோற்றமளிக்கும் இந்த வயோதிகரை, கனல் கக்கும் இளம் வயது இடது சாரிக் கொள்கையாளரும் மதித்து மரியாதை செய்யும் மனிதராக்கியுள்ளதோ என்னவோ. இருக்கலாம், ஓரளவுக்கு, ஒரு வேளை.

1.3.07

******

Dec 18, 2009

நூறுகள் -கரிச்சான்குஞ்சு

கரிச்சான்குஞ்சு

அந்தத் தெருவுக்குள் புகுந்து, அந்த வீட்டை நெருங்கிப் பந்தலையும் வாழை மரத்தையும், டியூப் லைட்டையும் பார்த்த பிறகுதான் எனக்கு ஞாபகம் வந்தது. ''அடாடா, ராமய்யர் வீட்டுக் கல்யாணம் அல்லவா இன்று. காலையில் முகூர்த்தத் துக்குத்தான் போகவில்லை. சாயங்காலம் போய் கல்யாணமாவது விசாரித்துவிட்டு வந்திருக்கலாம். மறந்தே போய்விட்டது. இன்று காலையிலிருந்து வேறு நினைவே இல்லாமல் பணம் தேடிக் கொண்டிருக்கிறேன். என் இரண்டாவது பெண்ணைக் கோயம் புத்தூருக்கு அனுப்பியாக வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு நாளைக்குக் கடைசி நாள். நாளைக்காவது புறப்படா விட்டால் மிகவும் பாடுபட்டுக் கிடைத்த இடம் பறிபோய்விடும். வீட்டில் ஒரே

SWScan00211

துக்கம். வைக்காததை வைத்து, விற்கக்கூடாததை விற்று இரு நூறு ரூபாய்கள் தேற்றிவிட்டோம். காலேஜுக்கே அறுநூறு ரூபாய் கட்ட வேண்டும். பிரயாணச் செலவும் கைச் செலவுக்கு எல்லாம் சேர்த்து இன்னும் ஐந்து நூறுகள் தோது செய்ய வேண்டும். காலையிலும் மாலையிலும் எங்கெல்லாமோ போய்ச் சுற்றிவிட்டு, அலுத்துச் சலித்துக் காரியம் ஆகாமல் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஏதோ ஞாபகத்தில் இந்தத் தெருவில் புகுந்தேன். கல்யாண வீட்டைப் பார்த்ததும் ஞாபகம் வருகிறது. இரவு மணி பத்து, பத்தரை இருக்குமே; இப்போது போய் என்ன செய்வது; ஆனால் அப்பொழுதுதான் சாப்பாடு முடிந்திருக்க வேண்டும். இலை கொண்டு வந்து போட்ட இடத்திலிருந்து மனிதர் கையை நக்கிக் கொண்டே நகர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் விரட்டிய நாய்கள் வந்து ஒன்றை மற்றொன்று விரட்டிக் கொண்டிருந்தன. பந்தலுக்குள் எட்டிப் பார்த்தேன். சீட்டாட்டம் நடந்து கொண்டி ருந்தது. நாலு சீட்டு, களத்தில் நிறையப் பணம் கிடந்தது, புரண்டது. பந்தலுக்குள்ளும் போய்விட்டேன். ராமய்யர் எதிர்பட்டார்.

''என்னய்யா இது'' என்றார்.

''மன்னிச்ரணும், ரொம்ப அவசரமான காரியம். எங்கெல்லமோ போய் அலைந்து விட்டு இப்போதுதான்.''

''உள்ளே வாரும், சாப்பிடலாம்.''

''மன்னிச்சரணும். எனக்குச் சாப்பாடெல் லாம் ஆகிவிட்டது.''

''சந்தனம் சர்க்கரை கொண்டு வருகிறேன் இரும்...''

''ஏழு கைதான் ஆடிக்கொண்டிருக்கு. ஒரு இடம் இருக்கிறது!'' கடைக் கையிலே போடலாமோன்னோ...'' என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ஆடுகிறவர் அந்த இடத்தில சீட்டையும் போட்டுவிட்டார். 'நூறு ரூபாய் ஷோ... என்றான் ஒருவன். அதாவது நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அவ்வளவு இருந்தால்தான் உட்கார்ந்து ஆட அனுமதிப்பார்களாம். ஐந்தும் பத்தும் வைத்துக் கொண்டு உட்கார்ந்து சிக்கனமாக ஆடிச் சூதாட்டத்தில் விறுவிறுப்பைக் குறைத்துவிடக் கூடாதாம். நான் என் சடடைப் பையைத் தடவினேன். இருநூறு ரூபாய் இருப்பது நெருடிற்று. எப்படியும் நாளைக்குப் புறப்பட முடியாது. ஒரு சான்ஸ் பாப்போமே. அந்தப் பாக்கி நூறுகள் கிடைச்சுட்டுமே இல்லையென்றால் இருக்கும் நுறுகள் தொலையட்டுமே. இது எத்தனையோ தடவை சத்தியம் செய்திருக்கிறோம். சீட்டைத் தொடுவதில்லை என்று. நாளைக்கு நூறாவது தடவையாகச் சத்தியம் செய்துவிட்டால் போகிறது. உட்கார்ந்தேன். ஒரு நூறு ரூபாய்த் தாளை எடுத்துக் காட்டினேன்; அதிகமாக இருப்பதையும் அவர்களே பார்த்துக் கொண்டார்கள்.

நல்ல முரட்டுக் கைகள்; மும்முரமான ஆட்டம். நாலைந்து கலவைகள் வந்தாலே போதும், நமக்கு வேண்டிய நூறுகள் கிடைத்துவிடும்.

ஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாயிருந்தது. பீட்டை நிறையப் போட்டு ஆடினேன். பெரிய சீட்டுகள் அடிவாங்கின. ஒரு நூறு போய்விட்டது. அடுத்ததை எடுத்தேன். சற்று நிதானமாக ஆடியதில், கரைந்து கொ¡ண்டிருந்தது மெல்ல. இரவு இரண்டு மணியென்று யாரோ சொன்னது காதில் விழுந்தது. முதல் முழுகிப் போய்விட்டது. ஒருக்கால் எப்போதும் போல என்றைக்கும் ஆவது போல் இன்னும் யாவற்றையும் தோற்றுவிட்டு மிக விரைவி லேயே நூறாவது தடவையாக சத்தியம் பண்ணும் படி நேர்ந்துவிடுமோ என்ற ஓர் எண்ணம் வந்தது. வீட்டு நினைவும், என் பெண்ணின் நினைவும், அவள் காலையிலும் சாயங்காலமும் பட்ட வேதனையின் நினைவும் வந்தது.

ஆடிக்கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாய் இருந்தது. கண்ணும் கையும் சீட்டைப் பார்த்தன. நோட்டையும் சில்லறை நாணயங்களையும் நெருடின. வீசி எறிந்தன. அள்ளிச் சேர்த்து இழுத்தன. அள்ளாமல் தோற்று ஓய்ந்தன. தொடர்நது நடந்தது இது.

சிறிது நேரத்தில் சீட்டாட்டக் களத்திலிருந்து கவனத்துடன் ஒன்றியிருந்த உள்ளத்தில் மற்றொரு களம் விரிந்தது. அருகே தனியே கண்களும் காதுகளும் தனியே செயல்படத் தொடங்கியிருந்தன. அதனால் ஆட்டத்தில் சிறிதும் இடையூறு இல்லை.

சுற்றியலைந்து சலித்துப் போய் வீட்டில் நுழைந்து தொப்பென்று உட்கார்ந்தேன். சாய்வு நாற்காலியில் சிறிது நேரம் கழித்து காப்பி கொண்டு வந்து கொடுத்தாள் என் பெண். அவள் கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்த்தவள், மெல்லச் சமாளித்துக் கொண்டு, ''அப்பா, உன்னை இப்படிக் கஷ்டப்படுத்துவதற்கென்றே நாங்கள் பிறந்திருக்கிறோமா? உங்கள் முக வாட்டமும், உடம்பின் ஓய்ச்சலும், உங்கள் நடையின் தளர்ச்சியும் எங்கள் பிறப்பையே அவமானப் படுத்துகின்றன வேண்டாம் அப்பா, வேண்டவே வேண்டாம். பெரிய உடம்பைச் சிறியதாக்கிக் கொண்டு முகத்தின் தேஜஸ்ஸை மங்கச் செய்து கொண்டு யாரிடமும் போய் கடன் கேட்க வேண்டாம். அக்காவும் பி.ஏ. படித்துவிட்டு வேலை யில்லாமல் இருக்கிறாளே, நானும் பி.எஸ்.ஸி முடித்துவிட்டு இரண்டு வருஷமாய் தண்டச் சோறு தின்கிறேனே. டிரெயினிங் போய்விட்டு வந்தாலாவது வேலை கிடைக்காதா, உங்கள் சிரமம் குறையாதா என்று பார்த்தேன். வேறு காலேஜ்களில் ஆயிரம் இரண்டாயிரம் கேட்கிறார்களே. அந்தக் காலேஜிகளில் நல்ல வேளையாக இடம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டேன்; ஆனால், இங்கும் அறுநூறு ரூபாயுடன் வர வேண்டுமென்று எழுதியிருப்பதைப் படித்தவுடனேயே எனக்குப் பகீர் என்றது. அப்போதே தீர்மானித்து விட்டேன். இது நடக்காதென்று; ஆரம்பத்திற்கே இப்படி இருந்தால், இன்னும் பத்து மாதம், ஹாஸ்டல் பீசும் மற்ற செலவுகளும் ஆகுமே. எனக்கு அடுத்தவள் காலேஜில் படிப்பதை நிறுத்தினால்கூட உங்களால் எனக்கு மாதா மாதம் அனுப்ப முடியாது. வேண்டாம் விட்டுவிடுங்கள். இனிமேலும் உங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது நான்...'' என்று முடித்துவிட்டாள் கதையை.

சாயங்காலம் வெளிய கிளம்பினேன். மேற்கே போய் ரங்கனைப் பார்த்து ஏதாவது உதவி கேட்போமென்று போனேன். அவன் நல்ல பணக்காரன். ஊருக்கே பெரிய மனிதர் குடும்பத்தில் பிறந்தவன். நாற்பதைத் தாண்டிவிட்டதால் இன்னும் பாப புண்ணியங்களைப் பற்றி நினைப்பு வரவில்லை அவனுக்கு. தானதர்மங்களின் வழியே தெரியாது. அவனுக்கு என்று அவனுடைய அந்தரங்க நண்பர்களே கூறுவார்கள். ஆனால் என்னுடைய இந்தச் சந்தர்ப்பம் அவனைச் சிந்திக்கத் தூண்டாதா என்ற சபலத்தில் போனேன். அவன் வீட்டில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் முப்பது நாற்பது பேர் கூடி ஒரே கும்மாளமாயிருத்து.

''வாய்யா, விணாப்போன கிராக்கி, வாய்யா...'' என்ற வரவேற்புடன் நுழைந்தேன்.''பாவிகளா, உங்களாலேதான் நான் வீணாப்போனேன்'' என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனோ சொல்ல வரவில்லை எனக்கு. ஸ்வீட், காரம், காப்பி வந்தது. சாப்பிட்டேன். ''இன்னும் சிறிது நேரமிருந்தால் ஸோமபானம் உண்டு'' என்றான் ரங்கன்.

''இதெல்லாம் என்ன இன்னிக்கு'' என்றேன். எல்லோரும் சிரித்தார்கள். ஒருவன் என் காதோடு, “ரங்கன் நேற்று செஞ்சுரி போட்டான், அதற்காகத்தான் பார்ட்டி'' என்றான்.

''அப்படியென்றால்...'' என்றேன் புரியாமல்.

''ரங்கன் நேற்றிரவு தன் நூறாவது தோழியை...'' என்றான் ஒருவன்.

தன் வாழ்வின் லட்சியமே நிறைவேறி விட்டது போல் வெறியுடன் சிரித்தான் ரங்கன். அப்பொழுதே அங்கிருந்து விடைபெற்றுப் போயிருக்கலாம். இருந்தாலும் சிறுமை விடவில்லை. ரங்கனைத் தனியே அழைத்து, விவரமாகச் சொன்னேன். கடனாகக் கேட்டேன்.

''ஏகச் செலவு காலம், தாக்குப்பிடிக்க முடியவில்லை, என்னை மன்னித்து விடுங்கள்...'' என்றான்.

அவன் வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தெருவில் நடந்தேன். அடுத்த இரண்டு வீடுகளும் அவனுடையதுதான். அநேகமாக அந்தத் தெரு முழுவதுமே அந்தக் குடும்பத்திற்கே சொந்தம். அவர்களுடைய தகப்பனார் அப்படி வாங்கிச் சேர்த்துவிட்டுப் போயிருக்கிறார். இரண்டு வீடுகள் தள்ளி சீமா வீடு. அவன் ரங்கனுக்குத் தம்பி. ரைஸ்மில் வைத்திருக்கிறான். அரிசி வியாபாரமும், நெல் வியாபாரமும் செய்கிறான். காசில் கிண்டன். கடவுள் பக்தி உள்ளவன். ஆசார அனுஷ்டானங்களுடன் இருப்பவன். உபகாரி, கடன் கொடுப்பான், வட்டி அதிகம். ஆறு மாத வட்டியை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் கொடுப்பான். ஆறு மாதத் தவணை. மாதா மாதம் உள்ள தவணையைக் கழுத்தில் கத்தி வைத்தாவது கறந்துவிடுவான். நான் பல முறை அவனிடம் கடன் வாங்கியது உண்டு. தகராறு இல்லாமல் தீர்ந்ததும் உண்டு. தெருவோடு போன என்னைச் சீமாவே கூப்பிட்டான். தெருக்கோடியில் இருக்கும் கடையில் வெற்றிலை சீவல் போட்டுக் கொண்டு திரும்பி வந்து அவனைப் பார்ப்பதாக இருந்தேன். அவனே கூப்பிட்டதும், காரியம் பழமென்று சற்று நிம்மதியாகவே உள்ளே போனேன்; உட்கார்ந்தேன்.

சீமா, உள்ளே பார்த்துக் கொண்டு “ஏய் ராமாஞ்சு, இலை போடு, பிரசாதமெல்லாம் சாதி'' என்று உத்தரவு போட்டுவிட்டு ''பார்ட்டிக்குப் போய் வருகிறீரோ ஹ¤ம் கஷ்டம், நல்ல குடும்பத்தில் பிறந்து, இப்படி நாயாய் அலைய வேண்டாம். உம்; ஸ்நேகிதர் வெட்கமில்லாமல் பார்ட்டி வேற கொடுக்கி றாரே, மஹா பாபம்...” என்றான்.

''அதற்கென்று வரவில்லை. வேறு காரியம். அவனைப் பார்க்கலாமென்று வந்தேன். பிறகுதான் கேள்விப்பட்டேன். பாபம்தான் இது!''

''சரி, வாரும், கொஞ்சம் பெருமான் பிரசாதம் சாப்பிடும்; கையை, காலை அலம்பணுமா? தண்ணீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?''

''என்ன விசேஷம்...?''

''ஒண்ணுமில்லை; இன்னிக்கு சுந்தர காண்டம் நூறாவது பாராயணம் முடித்தேன்.

பெருமாளுக்கும் திருவடிக்கும் (ஆஞ்சேனயர்) அர்ச்சனை.''

பிரசாதம் சாப்பிட்டேன். சீமா என் குடும்ப யோக§க்ஷமங்களை விசாரித்தான். காலம் போகிற போக்கில் என் போன்ற சம்சாரி களின் குடும்பதிற்குள்ள கஷ்டங்களைத் தானே சொல்லி அனுதாபப்பட்டான். நான் தயக்கத்துடன் என் பணமுடையைச் சொன்னேன். அவனுக்குப் புரியுமே என்று வித்யா தர்மம், புண்ணியம் என்றெல்லாம் வேறு சொல்லி என்னையே அசிங்கப் படுத்திக் கொண்டேன்.''

''ஐயோ... பாவம்'' என்றான் சீமா.

சரி. காரியம் பலித்துவிட்டதென்று நினைத்துக் கொண்டேன். சிரித்தேன்.

சீமா, தன் கஷ்டங்களைச் சொல்கிறான். ''ஐநூறாவது, ஆறுநூறாவது, இப்போ ஒண்ணும் மூச்சு விட முடியாது. ஏராளமாய் ஸ்டாக் பண்ணிவிட்டேன் நெல்லை. நானே எல்லா பாங்கிலும் ஓவர்டிராப்ட் உளுந்து, பயறு வேறே நிறைய வாங்கிப் போட்டிருக் கிறேன். கவர்ன்மெண்ட் அடிக்கிற கூத்தில் ஒன்றுமே புரியவில்லை. ஆடி ஆவணியில் ஏதாவது விலை ஏறினால் வெளியே எடுக்கப் போகிறேன். மேட்டூரில் ஜலமே இல்லையாம். குறுவை என்ன ஆகப்போகிறதோ, எது எப்படிப் போனாலும் பல்லைக் கடித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறேன். பெருமாள் கைவிட மாட்டரென்று பூரண நம்பிக்கை எனக்கு. ஐநூறாவது அறநூறாவது நூறு இரு நூறுக்குக்கூட வழி இல்லை. உமக்குக் கொடுப்பதற்கு என்னய்யா தயக்கம்? ரொம்ப நம்பிக்கையான புள்ளி நீர்; அதுவும் தவிர படிப்புக்குன்னு கேட்கிறீர், ஐயோ பாவம். ஆனால் நம்மகிட்ட வழியே இல்லை. வேறு எங்காவது புரட்டிப் பாரும்'' சீமா முடிக்கிறான்.

சிரித்தேன்; வாய்விட்டுச் சிரித்து விட்டேனோ! உள்ளும் புறமும் இணைந்து விட்டனவோ! உள்ளே நிகழ்ந்து கொண்டிருந்த களம் மறைந்து, வெளியே, கண் எதிரே இருந்த சீட்டாட்டக் களம் மட்டுமே தெரிந்தது.

''ஐயோ பாவம். சிரிக்க மாட்டீரா, என் கையை முறிக்க வேண்டுமென்றே, சின்ன சீட்டுக்கு இவ்வளவு ரவுண்ட் வந்து, களத்தை அள்ளி வாரிவிட்டீர்; சிரித்து வேறு என் வயிற்றிரிச்சலைக் கொட்டிக்கிறீரே; ஐயகாலம். சீட்டு நன்னாப் பேசறதே உமக்கு என்று பயந்துண்டு விட்டுத் தொலைத்தேன் பெரிய சீட்டை; தொலையட்டும். ஒரு களக்காயாவது கட்டும்'' என்றான் ஒருவன்.

சீட்டுக்களைச் சேர்த்து கொசுவி, புறாவிட்டுக் கலைத்துப் போட்டேன். ஆடிக் கொண்டிருந்தேன். வருவதும் போவதுமாக இருந்தது.

''புரட்ட வேண்டியதுதான்'' என்று சீமாவுக் குப் பதில் சொல்கிறேன். இங்கே ஆட்டத்தில் எதிரே பந்தயம் போட்டுக் கொண்டிருந்தவன் தன் சீட்டைப் புரட்டி விட்டான். 'புரட்டச் சொல்லவில்லையே'' என்றேன்.

''ப்போ சொன்னீரே...''

''ஒகோ, சொன்னேனோ? இன்னும் இரண்டு பந்தயமாவது போட்டிருப்பாய்...'' என்று பேசிக் கொண்டே குறையோடு சீட்டை கலைத்தேன்.

''தூக்கக் கலக்கமோ...'' என்றான் ஒருவன்.

''ஆமாம். மத்தியானம் முழுக்க ஒரே அலைச்சல், தூக்கம் கண்ணச் சுற்றுகிறது.''

''சுற்றுமைய்யா, சுற்றும். நூறு நூறாகச் சுற்றிச் சுருட்டிவீட்டீர் அநேகமாக எல்லாக் கைகளும் குளோஸ். தூக்கம் கட்டாயம் கண்களைச் சுற்றுமே...'' என்றான் ஒருவன்.

சட்டைப் பை கனத்திருந்தது; வெளியே துருத்திக் கொண்டிருந்தது. அவன் சொன்னது உண்மை, நிறையவே ஜெயித் திருந்தேன். ஏதோ ஞாபகத்தில், ''மணி என்ன?'' என்று கேட்டுவிட்டேன்.

''பதினொன்றரைதான் ஆகிறது'' என்று கிண்டல் பண்ணினான் ஒருவன்.

ராமய்யர் வந்து என்னை அவசரமாகக் கூப்பிட்டார் ''ரொம்ப அவசரம்'' என்றார்.

சிதறிக் கிடந்த ஐந்து ரூபாய் பத்து ரூபாய் நோட்டுக்களைப் பையில் திணித்துக் கொண்டு, ஒரு ரூபாய் நோட்டுக்களையும் சில்லறை நாணயங்களையும் அடுக்கி வைத்துவிட்டு எழுந்து சென்றேன். ''ஓய்... உம்முடைய ஜன்மாவிலேயே இன்னிக்குத் தான் நீர் ஜெயித்திருக்கிறீர். மணி நாலு ஆகப் போகிறது. போய் உட்கார்ந்து ஒரு நாலு ஆட்டம், சும்மா பேருக்குப் பார்த்துவிட்டு புறப்படும் வீட்டிற்கு'' என்றார்.

அதேபோலச் செய்துவிட்டுக் கிளம்பினேன். ஒரே இருட்டு எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வீட்டின் வாசற் கதவு திறந்திருந்தது. வெளிச்சமும் தெரிந்தது. கையில் இருந்ததை ஓரமாக எறிந்துவிட்டு, ''எங்கேந்து வந்தாகிறது? விடிந்ததும் கிளம்ப வேண்டுமே குழந்தை? கூடப் போகிற உத்தேசம் உண்டோன்னோ?” என்றாள் மனைவி.

''விடிந்தும் விட்டது. புறப்பட வேண்டியது தான்'' என்று சட்டையைக் கழற்றினேன். நோட்டும் நாணயமும் சட்டைப் பையிலிருந்து சிதறின. ஏழெட்டு நூறுகள் இருக்கும்.

Dec 17, 2009

நேற்றிருந்த வீடு-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் - - கதாவிலாசம்


கரிச்சான குஞ்சு

3800613078_e69eb7e59d_m


வங்கியில் பணிபுரியும் என் நண்பர் சரவணன், கிழக்குத் தாம்பரத்தின் உள்ளே ஓர் இடம் வாங்கி, புதிதாக வீடு கட்டியிருந்தார். வழக்கமாக புதிய வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்பவர்கள் காலையில்தான் விழா நடத்துவார்கள். ஆனால், சரவணன் யாவரையும் மாலையில் தனது வீட்டுக்கு அழைத்திருந்தார். நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு. வீட்டின் வெளியே, சிறிய தோட்டம் அமைப்பதற்காக இடம் விட்டிருந்தார்கள். விருந்தினர்களுக்காக இரவு உணவு, ஒரு பக்கம் தயாராகிக்கொண்டு இருந்தது.

வீட்டைச் சுற்றிக் காட்டும்போதே, இருட்டத் தொடங்கியிருந்தது. வீட்டில் ஒவ்வொரு அறையிலும் விதவிதமான விளக்குகள். ஒரு அறையில் பெரிய லாந்தர் விளக்கு தொங்கிக்கொண்டு இருந்தது. சுவர்களில் நவீன டியூப்லைட்கள். போதாததற்கு சிறியதான மெர்க்குரி விளக்குகள். வெளிச்சம் ஒரு நீருற்று போல வீடெங்கும் பொங்கிக்கொண்டு இருந்தது. வீட்டின் வெளியிலும் நான்கு மூலைகளிலும் டியூப் லைட்டுகள். ஏன் இத்தனை விளக்குகள் என்று எண்ணும்படி அவை அமைக்கப் பட்டு இருந்தன.

சரவணன் அதைக் கவனித்தவர் போலச் சொன்னார்... ‘Ôவீட்ல மொத்தம் நாற்பத்தெட்டு லைட் போட்டிருக்கேன் சார். ராத்திரியானா மொத்த லைட்டையும் எரியவிட்றணும். விடிய விடிய எரியட்டும். வீடு எப்பவும் வெளிச்சமா இருக்கணும்...’’
நான் வேடிக்கையாகக் கேட்டேன்... ‘Ôதூங்கும்போதுகூட விளக்கை அணைக்கமாட்டீர்களா?’Õ
அவர் தலையசைத்தபடியே சொன்னார்... ‘Ôபத்து வருஷமா நான் தூங்கும்போதுகூட லைட் எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். இல்லைன்னா பயமா இருக்குது.’’
ஒரு குழந்தையைப் போல பேசுகிறாரே என்று தோன்றியது. வீட்டைப் பார்க்க வந்தவர்கள், வீட்டிலிருந்த விளக்குகளைப் பற்றி வியந்து பாராட்டிவிட்டுப் போனார்கள். அருமையான உணவுக்குப் பிறகு, நட்சத்திரங்கள் சிதறிக்கிடந்த வானத்தின் அடியில், நாங்கள் நாற்காலி போட்டு உட்கார்ந்துகொண்டோம். சரவணன், தான் கட்டிய வீட்டைத் தானே பார்த்துக் கொண்டு இருந்தார்.

ÔÔஇந்த வீடு கட்ட ஆரம்பிச்ச அன்னியிலேர்ந்து தினம் இங்கே வந்து இதே இடத்தில் உட்கார்ந்து பார்த்துட்டேயிருப்பேன். பாதி கட்டி முடிஞ்சபோது சிமென்ட் பூசாத சுவரை தடவிக் கொடுப்பேன். சில நேரம் அந்த ஈர வாசனையை நுகர்ந்து கிட்டிருப்பேன். வீடு கட்டுறது ஒரு தனி யான அனுபவம். எத்தனையோ பிரச்னை, சிக்கல்னு வந்தாலும் கண்ணு முன்னாடி வீடு கொஞ்சம் கொஞ்சமா வளர்றதைப் பாக்குறது தனி சுகம்!

கதவில்லா வீட்டைப் பாக்கும்போது அது நம்ம தோள் மேல கை போட்டு நின்னு பேசிட்டிருக்கிற மாதிரி ஒரு நெருக்கம் வந்திடும். ஒவ்வொரு புது வீடு கட்றதுக்கு பின்னாடியும் கண்ணுக் குத் தெரியாத எத்தனையோ அவமான மும் ரணமும் இருக்கத்தான் செய்யுது.
வீடு கட்டி முடிச்சு, கதவு ஜன்னல் எல்லாம் பொருத்தி வெச்ச அன்னிக்கு கை நடுங்குது. கரகரனு கண்ணுல தண்ணி கொட்டிருச்சு. நிஜமா அழுதுட் டேன். வீடு வெறும் இடம் இல்லை. ‘நான் தோத்துப்போகலை. நல்லாதான் வாழறேன்’னு காட்ற சாட்சி அது.

மதுரைல நாங்க வாழ்ந்த வீட்டை, கடன் வாங்குறதுக்காக அப்பா அடமானம் வெச்சுட்டாரு. வட்டி கட்ட முடியலைனு வீட்டு கரன்ட்டை கட் பண்ணிட்டாங்க. எல்லாரும் பள்ளிக்கூடத்தில் படிக்கிற வயசு. வீட்ல பகல்லயே குண்டு பல்பு எரிஞ்சா தான் வெளிச்சம் வரும். கரன்ட் போனதில் இருந்து, வீட்ல எப்பவும் இருட்டுதான். எங்கம்மா ஆத்திரத்தில், கெரசின் விளக்குகூட வைக்கக் கூடாதுனு பிடிவாதமா இருந்தாள். இருட்டுலியேதான் சாப்பிடுவோம். இருட்டுலியேதான் படுத்துக்குவோம். தினம் ராத்திரில யாராவது அழுகிற சத்தம் கேட்கும்.. அக்காவா, அண்ணனா, அண்ணியா, அம்மாவானு முகம் தெரியாது. இருட்டு எங்களைக் கொஞ்சம் கொஞ்சமா தின்னுகிட்டே இருந்துச்சு.
கடன் தொல்லை தாங்க முடியாம அப்பா வீட்டைவிட்டு ஓடிப் போயிட் டாரு. வீட்டை வித்துட்டுப் புறப்பட லாம்னு நினைச்சாக்கூட கடன்ல இருந்து தப்ப முடியாதுனு தெரிஞ்சுபோச்சு. வேற வழியில்லாம ராத்திரியோட ராத்திரியா யாருக்கும் தெரியாம, கொஞ்சம் துணியை மட்டும் எடுத்துக்கிட்டு வீட்டை அப்படியே சாமான்களோட விட்டுட்டு மெட்ராஸ§க்கு வந்துட் டோம். முப்பது வருஷமாச்சு! ஒரு தடவைகூட எங்க வீடு என்ன ஆச்சுனு பாக்கப் போகவே இல்லை.

நடுவுல ஒரு தடவை எங்க அண்ணன் மட்டும் போய்ப் பாத்துட்டு வந்தான். ‘வீட்டை இடிச்சு அந்த இடத்தில் பெரிய செருப்பு கடை வந்திருச்சு’ன்னு சொன்னான். வீட்டை இடிக்கிறப்போ எங்க சாமான்களை எல்லாம் அள்ளி தெருவில் போட்டாங்களாம். அந்த நாற்காலியை ஆயிரம் ரூபாய் கொடுத்து அண்ணன் வாங்கிட்டு வந்தான். அதைப் பாக்கப் பாக்க ரெண்டு நாளைக்கு யாருக்கும் சாப்பாடு இறங்கலை.

எங்க எல்லோரோட உடம்புலயும் இருட்டு ஒட்டிக்கிட்டே இருக்கிற மாதிரிதான் இருக்கு. எப்படியோ வேலை செஞ்சு மேலே வந்துட்டோம். இப்போ அண்ணன் பெங்களூர்ல வீடு கட்டியிருக்கான். அக்கா காஞ்சிபுரத்துல இருக்கா. அவளும் பெருசா வீடு கட்டிட்டா. நான்தான் பாக்கி. நானும் இப்போ வீடு கட்டிட்டேன். சொல்லுங்க சார், இருட்டுலியே சாப்பிட்டு இருட்டுலியே முகம் கழுவி வாழ்ந்ததை மறக்க முடியுமா?’’
வானில் இருந்த நட்சத் திரங்கள் ஒடுங்கியிருந்தன. சரவணன் வீட்டின் பிரகாச மான வெளிச்சத்தைக் காணும் போது விளக்கிச் சொல்ல முடியாத வேதனை என் உடலைக் கவ்வுவதாக இருந்தது.

வர்ணம் பூசப்பட்டு ஒளிரும் வீடுகளுக்குப் பின்னால் கறுப்பும் வெளுப்புமான கதைகள் ஒளிந்திருப்பதுதான் வாழ்வு சொல்லும் நிஜம் போலும்! கூடாரத்தைத் தூக்கிக் கொண்டு ஆட்டு இடையர்கள் ஊர் ஊராகப் போவது போல நகர வாழ்வில் வீடு மாற்றி வீடு என்று அலைபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்.

வீட்டை உருவாக்கிக்கொள்வது எளிதானதில்லை. அது நீண்ட கனவு. சிலருக்குச் சில வருடத்தில் அது சாத்தியமாகிறது. பலருக்கு அது எட்டாக்கனவாகவே எஞ்சி விடுகிறது. மகாகவி பாரதிகூட காணி நிலத்தில் அழகிய தூண்கள் கொண்ட வீடு கட்டி வாழ்வதற்கு தானே ஆசைப்பட்டிருக்கிறான்!

வீடு பறிபோவதுதான் வாழ்வு நசிவதற்கான முதல் அடையாளம். எத்தனை கடன்கள் இருந்தாலும் வீடு இருக்கும் வரை யாவும் திரும்ப கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வீட்டை இழந்த பிறகு வாழ்வில் மிஞ்சுவதெல்லாம் போக்கிடமற்ற தனிமையும் அவமானமும்தான்.

இத்தகைய அவமானத்திலிருந்து மீள முடியாத மனிதன் மூர்க்கமாகி விடுகிறான்; அல்லது, புத்தி பேதலித்து விடுகிறான். இந்த நிகழ்வுக்கு சாட்சி சொல்வது போலிருக்கிறது ‘கரிச்சான குஞ்சு’வின் ரத்த சுவை என்கிற கதை. சம்ஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட கரிச்சான் குஞ்சு, மிகக் குறை வாகவே தமிழில் எழுதியுள்ளார்.
ராமு என்பவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கேள்விப்பட்டு அவனைக் காண்பதற்காகச் செல்லும் அவனது நண்பரின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. ஊரில் சுற்றித் திரியும் மூர்க்கமான குரங்கு ஒன்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு குரங்கு போகும் இடங்களுக்கெல்லாம் தானும் கூடவே அலைகிறான் ராமு.

அவன் குடும்பம், கடன் தொல்லை யால் வீட்டை இழந்து நொடித்துவிட்டது. வீட்டை காலி செய்வதற்கு கோர்ட் இரண்டு மாத காலம் அவகாசம் தந்திருக்கிறது. அந்த நிலையில்தான் ராமுவுக்கு புத்தி பேதலித்துவிட்டது.
ராமுவின் வீட்டைக் கடனுக்காக எழுதி வாங்கியவர் கோபாலய்யர். அவர் வேண்டும் என்றே வட்டியை அதிகமாக வாங்குவதற்காக பம்பாயில் இருக்கிற தன் தங்கையின் பெயரால் கடன் பத்திரம் எழுதித் தருகிறார். அதனால் ஒவ்வொரு முறை கடனை முடிக்கப் போகும்போதும் பத்திரம் தங்கையிடம் இருப்பதாகச் சொல்லி வட்டியை மட்டும் வசூல் செய்கிறார்.

சில வருடங்களில் வட்டி அதிகமாகி, கடனைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. அதனால் வீடு கடனில் மூழ்கிப் போய்விடுகிறது. அன்றிலிருந்து ராமு சித்தம் கலங்கிவிட்டது என்கிறார்கள் ஊர்க்காரர்கள். ராமுவைச் சந்தித்துப் பேசுகிறான் ஒரு நண்பன். ராமு தனக்கு உண்மையில் சித்தம் கலங்கிவிடவில்லை என்றும், ஒரு நாள் தான் ஒரு முரட்டுக் குரங்கைப் பார்த்தாகவும், அது ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிச் சென்று அதன் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டதாகவும், அப்போது குரங்கு தன் கையில் வழியும் நாயின் ரத்தத்தைச் சுவைத்துப் பார்க்கவே அந்த ரத்த ருசி அதற்குப் பிடித்துவிட, அன்றிலிருந்து அது மாமிச பட்சிணியாக மாறி விட்டதாகவும் சொல்கிறான். அதைக் கேட்ட நண்பன், ‘‘குரங்கு அப்படியானதில் உனக்கு என்ன பிரச்னை?’’ என்று கேட்க, ‘‘தாவர பட்சிணியான குரங்குகூட ரத்த சுவைக்குப் பழகி, மாமிசபட்சிணியாக மாறிவிடு வதைப் போன்றதுதான் கோபாலய்யர் வேலையும். அவர் கடன் கொடுக்கத் தொடங்கி அதுவே பின்பு வட்டித் தொழிலாகி இன்று ரத்தம் குடிக்கப் பழகிவிட்டார். நான் கோபாலய்யரின் பின்னால் அலைவது போல நினைத்துக்கொண்டுதான் குரங்கின் பின்னால் அலைகி றேன். அது என்ன செய்யும் என்று எனக்குப் புரியவே இல்லை’’ என்கிறான் ராமு.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த முரட்டுக் குரங்கு இன்னொரு குரங்காட்டி கொண்டு வந்திருந்த பெண் குரங்கு ஒன்றைத் தூக்கிக் கொண்டு போய் அதையும் கொன்று விடுகிறது. குரங் காட்டி முரட்டுக் குரங்கை சுருக்குப் போட்டுப் பிடித்துவிடு கிறான். ஆனால், ஊர்க்காரர்கள் அது தெய்வாம் சம் கொண்டது என்று விட்டு விடச் சொல் கிறார்கள்.

குரங்காட்டி விட மறுக்கவே அவனை அடித் துப் போட்டு விட்டு குரங்கை அவிழ்த்து விடுகிறார்கள். கோபாலய்யரும் குரங்கும் ஒன்று தான் என்று தெரிந்ததால் தானோ என்னவோ ராமு குரங்கைப் பார்த் துக்கொண்டே இருக்கிறான். ஊர்க்காரர்கள் அவனைப் பைத்தியம் என்று சொல்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது.
ருஷ்ய விவசாயி கள், புதுமனை புகுவிழா நாளில், வீடு ஒரு விருட்சத் தைப் போல நன்றாக வேர்விட்டு மண்ணை இறுக்க மாகப் பற்றிக் கொள்ளட்டும் என்று வாழ்த்து வார்களாம். காற்றையும் வெளிச்சத்தையும் தனக்குள்ளாக வாங்கிக்கொண்டு வீடும் சதா எதையோ பாடிக் கொண்டுதான் இருக்கிறது. ஏனோ வீட்டின் பாடல், நம் செவிகளுக்குக் கேட்பதே இல்லை.

‘பசித்த மானுடம்’ என்ற அரிய நாவலை எழுதி, தமிழ் நாவல் உலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் கரிச்சான் குஞ்சு. தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள சேதின்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் நாராயணசாமி. இவரது நெருங்கிய நண்பர் எழுத்தாளர் கு.ப.ராஜ கோபாலன் ‘கரிச்சான்’ என்ற புனைபெயரில் எழுதியதன் நினைவாக, தன் பெயரை ‘கரிச்சான் குஞ்சு’ என்று மாற்றிக் கொண்டவர். இசையில் ஆழ்ந்த புலமை படைத் தவர். கும்பகோணத்தில் வாழ்ந்து மறைந்த இவர், இந்தியத் தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

Sep 28, 2008

கு.ப. ரா கலையின் தனித்துவம்-கரிச்சான் குஞ்சு

கரிச்சான் குஞ்சு

(1990_ல் வானதி பதிப்பகம் வெளியிட்ட `கு.ப.ரா.’ புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கு.ப.ரா. சிறுகதைகள் பற்றிய நீளமான கட்டுரையின் சுருக்கம்)

எளிய சொற்கள், அழகிய நுண்ணுணர்வு மிக்க பதச் சேர்க்கைகள், தேர்ந்தெடுத்த சொற்பிணைப்பினால் உருவாக்கப்பட்ட, அர்த்த பேதங்கள் நிறைந்த, புதுமையான படைப்புகள் கு.ப.ரா. சிறுகதைகள். அவற்றை ரசனைத் திறத்தின் அளவு கோல்களாகவே குறிப்பிடலாம். அவரது கதைகளின் எளிமை ஆச்சரியமானது. மூடு மந்திரங்களோ, புரியாத சொற்றொடர்களோ, கஷ்டமான பதச்சேர்க்கைகளோ, சிரமமான வாக்கியங்களோ, நீண்டு புரியாது குழப்பும் சொற்றோடர்களோ காண முடியாது. மென்மையான குழந்தை உள்ளமும், பெண்மையின் பிடிவாதமும், அழகும் கொண்ட அற்புதமான நடையுடன் அவரது ஒவ்வொரு கதையும் தனித்தனி உலகங்களாக இப்பொழுதும் சுழல்கின்றன. வாழ்வில் காணும் உண்மையை ஊடுருவிப் பார்ப்பதே கு.ப. ரா கலையின் தனித்துவம்.

வாழ்க்கையின் ஆழங்களுக்கு, அனாயசமான பல தளங்களுக்கு மிகச் சாதாரணமாக தனது வாசகனை அழைத்துச் சென்று வாழ்வின் மூலாதாரங்களை அதன் முழு வேகத்துடன் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் கு.ப.ரா. சிக்கல்கள் நேரும்போது முடிச்சுகளை அவிழ்க்க அவனுக்கு வழி சொல்லித் தந்ததில்லை, புதியதோர் வாழ்க்கையைக் கனவு காண வைக்கவில்லை, கோஷங்களை எழுப்பவில்லை. ஆனால், வாழ்வின் சாதாரணங்களை எளிமையை, சிறிய சம்பவங்களின் மூலமாக நுட்பமான இலக்கிய சாதனைகள் மூலமாக மிக உயர்ந்த தளங்களுக்கு வாசகனை உயர்த்தினார். எனவேதான் அவரது கதைகள் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இப்பொழுதும் புத்தம் புதியதாய், அழகாய், இளமையாய், துடிப்பும் உணர்வும் நிறைந்து ததும்பும் புதுமைகளாய் இருக்கின்றன.

ஒடுக்கப்பட்டு, ஒடுங்கி வீட்டின் மூலையில் நிறுத்தப்பட்ட விக்கிரகங்களாக, மாலையிட்டு, கட்டிலில் கிடத்தப்பட்ட அடிமைகளாக சமையலறையின் மூலையில் புகையும் எண்ணெயில் வேகும் பெண்களை, கு.ப.ரா. சித்தரித்த விதம் எளிமை, பின்பு யாருக்கும் கைவராதது. ஏறத்தாழ நூறு அல்லது நூற்றி இருபத்தி ஐந்து கதைகளை அவர் எழுதியிருக்கலாம். வாழ்வில் கண்ட நிதர்சன உண்மைகளை, எதார்த்தத்தை மீறாத அதே கணத்தில் ரசக்குறைவான எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல், சிக்கனமான வார்த்தைகளை உபயோகித்து எந்த விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ள அவரால் முடிந்தது.

தமிழில் எழுதிவரும் பல எழுத்தாளர்கள் இன்றும் சிறுகதை என்பதை ஏதோ ஒரு சிறு சம்பவம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சம்பவம் ஒரு செய்தியாகலாம் ஒரு சிறுகதை ஆக முடியாது. ஆனால், அன்றே சிறுகதை உருவ பிரக்ஞை கு.ப.ரா. கதைகளில் நிலைபெற்றிருக்கும் விதம் ஆச்சரியமும் அபூர்வமும் கூடியது. இந்த உருவப் பிரக்ஞையை கடைசிவரை அவர் காப்பாற்றி வந்தார்.

ஆணைக்கண்டு பெண் அஞ்சுவதும், பெண்ணைக் கண்டு ஆண் வெறிப்பதும், முறைப்பதும், இச்சை-யில்லாத இடங்களில் உற்றுப் பார்ப்பதும் இருபாலாரிடமும் காணப்படும் மனோபாவம். இந்த மனோபாவத்தை மனித மனங்களின் ரகசியங்களைத் தேடித் துருவி எழுதிக் காட்டிய கதை கனகாம்பரம். கட்டுப்பெட்டியான கிராமத்துப் பெண் பேசியது மட்டும் அல்ல, வாருங்கள் என்று அழைத்தது மட்டும் அல்ல, சிரித்தபடியே சந்தோஷத்துடன் அவனை உள்ளே வாருங்கள் என்று அழைத்தது மட்டும் அல்ல, சிரித்தபடியே சந்தோஷத்துடன் அவனை உள்ளே வாருங்கள் என்று அழைத்து விட்டாள். வந்தவனுக்கு திகைப்பு, ஆச்சர்யம்; ஏதோ ஒரு ரசக்குறைவு; நடக்கக் கூடாது நடந்துவிட்ட பதைபதைப்பு. கணவன் இல்லாத வீடு, நாகரிகமே என்றாலும் தனி பெண்; வந்தவன் நிலைகுலைந்து விட்டான். வெளிச்சம் கண்கூச வைத்துவிட்டது. அவள் இருக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவசரமாக பாய்ந்து வெளியேறினான் அவன். அவளுக்குத் திகைப்பு. உட்காரச் சொன்னது தவறா? அவன் ஏன் ஓடவேண்டும். தடால் என்று கதவு திறக்கும் சத்தம். கணவனுக்கு நிகழ்ந்தது கேள்விப்பட்டு ஆத்திரம் பொங்கியது. “உள்ளே வந்து உட்காரச் சொன்னாயா-?’’ என்று அழுத்தி கேட்கிறான். ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. “நீ என்ன சொன்னே சினேகிதங்கிட்ட’’

“ஒண்ணும் சொல்லலியே, இப்ப வந்துடுவார் என்று சொன்னேன்’’

“அதற்காக உள்ளே வந்து உட்காரச் சொல்லணுமா?’’

1940களில் இந்தச் சம்பவம் ஒரு பெரிய விசயமாகவும், இன்றைக்கு அப்படியொன்றும் முக்கியத்துவமான விசயம் அல்ல என்றும் மேம்போக்காக பார்ப்பவர்களுக்கு தெரியலாம். ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் என்றென்-றைக்குமாக நிகழும் இந்த மனோ விசித்திரங்கள், சமுத்திர புயல் என்றைக்கும் சாதாரணமானது அல்ல. மிகச் சிறிய சம்பவம் ஒன்றை அதிகம் பேசாமல், குரல் உயர்த்தாமல், தன் கட்சியை வலியுறுத்தாமல், எதிர்கட்சியைத் தாக்காமல், உலக இயல்பு மாறாமல் இந்தக் கதையை கு.ப.ரா. உருவப் பிரக்ஞையுடன் சாதித்து இருக்கிறார். அவர் சொல்வதற்கு மேலும் இந்தக் கதையை ஒரு வார்த்தைக்கூட நகர்த்த முடியாது. இந்த இடத்தில் இப்படித்தான் முடியும், முடியவேண்டும் என்ற உருவ அமைப்பு இந்தக் கதையில் மட்டும் அல்ல கு.ப.ராவின் அனைத்துக் கதைகளிலும் காணப்படும் அதிசயமாகும்.

பெண்களைப் பற்றி, கு.ப.ரா. கதைகளில் காணப்படும் நுட்பமான இந்த இலக்கிய விளைவுகளைத் தமிழில் வேறு எந்த இலக்கிய ஆசிரியர்களும் சாதித்தது கிடையாது. பெண்களின் குறிப்பாக தமிழ்ப் பெண்களின் மனப்பூட்டுகளைத் திறப்பதற்குரிய சாவிகளைத் தமது கதைகளில் பெரும்பாலும் சாதுர்யமாக வைத்துவிட்டுப் போயிருக்கிறார் அவர். ஆணும் மற்றொரு ஆணும் சினேகமாக இருப்பதுபோல் இன்றும், ஒரு பெண்ணும் ஆணும் சினேகமாக இருக்க முடியாதா-? என்ற கேள்வியை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இந்தக் கதை எதிரொலி செய்துகொண்டே இருக்கும்.

இந்தக் கதை மட்டுமல்ல கு.ப.ராவின் ஏனைய மற்றக் கதைகளும் குறிப்பாக நூருண்ணிசா, ஆற்றாமை, விடியுமா, பண்ணை செங்கான், பாலம், சிறிது வெளிச்சம்_ அவர் ஒரு மிகச் சிறந்த தொடக்கம் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

சிறிது வெளிச்சம் கதையில் சாவித்திரி வாழ்வு இருண்டு கிடக்கிறது. புருஷன் பகல் முழுவதும் வீட்டில் இருக்கமாட்டான். இரவில் இருப்பதாக பெயர் பண்ணுவான். பெரும்பாலும் ராத்திரி 2 மணிக்கு வந்து கதவைத் தட்டுவான். பக்கத்து வீட்டில் கதை சொல்லும் எழுத்தாளன் குடியிருக்கிறான். தினமும் சாவித்திரியை அவன் கணவன் போட்டு அடிக்கிறான், உதைக்கிறான். ஒருநாள் இதுபோல் சாவித்திரியை அடித்துவிட்டு புருஷன் பின் வருமாறு சொல்லிவிட்டு வெளியே போகிறான். சாவித்திரி கதை சொல்லும் எழுத்தாளன் வீட்டிற்குள் வருகிறாள். இனி கதையிலிருந்து...

“நான் இங்கே படுத்துக் கொள்ள முடியாது. சோலி இருக்கிறது’’, என்று அந்த மனிதன் வெடுக்கென்று புறப்பட்டான். என்ன மனிதனவன், அவன் போக்கு எனக்கு அர்த்தமே ஆகவில்லை. சாவித்திரி உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற் கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என்முன் நின்றது. நல்ல யௌவனத்தில் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேநீர் பார்த்ததுபோல் தென்பட்டது. 18 வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்கிறோமே அது மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. இதழ்கள் மாந்துளிர்கள் போல் இருந்தன. அப்பொழுது தான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளை நன்றாகப் பார்த்தேன். கண்களுக்கு இதமான மெல்லிய பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒளி அவள் தேகத்தில் இருந்து வீசிற்று. தாழ்ப்பாள் விடுபடும் சத்தம் கேட்டது. நான் படுக்கையில் இருந்து சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போல் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.

“வேண்டாம் விளக்கு வேண்டாம் அணைத்து விடுங்கள் அதை’’ என்றாள் அவள்.

உடனே அதை அணைத்துவிட்டுப் படுக்கையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். புருஷன் ஒருவிதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சர்யம்.

“உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேன் என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று... வந்தேன்.’’

“அம்மா...’’

“என் பெயர் சாவித்திரி.’’

“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப்போய் விட்டது?’’

“இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே, அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது? பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை, குருவி போலத்தான் மனிதர்களும்... இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?’’

“புருஷன்....’’

“என்னடா இந்தப் பெண் இப்படி பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா! புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண்கள் புதிதாக இருக்கிறாள்... பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...’’

“நீங்கள் அப்படி...’’

“நீங்கள் என்று ஏன் சொல்கிறீர்கள், நீங்கள்தானே பெரியவர். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும் எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்கு கலியாணம் ஆகிவிட்டதா?’’

“இல்லை.’’

“ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.’’

வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில் தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்து துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவனாக இருந்தன.

“அம்மா... சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக் கொண்டு...’’

“இனிமேல் என்னை என்ன செய்துவிடப் போகிறான். கொலைதானே செய்யலாம்?- அதற்குமேல்?-’’

“நீ இப்படி பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்குப் புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்...’’

“நல்ல வார்த்தையா-? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?’’

“பின் என்ன செய்யப் போகிறீர்கள்?’’

“என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை_ அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிறவரை அடிபட்டுக் கொண்டே இருக்கவேண்டியதுதான்.’’

“அடடா, இப்படியேயா!’’

“வேறு வழி என்ன இருக்கிறது?’’

என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியவில்லை.

“என்ன? பதில் இல்லை?’’ என்று அவள் சிரித்தாள்.

“நான் என்ன சொல்வது... அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?’’ என்று திடீரென்று கேட்டேன்.

“கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே, சில மாதங்களுக்குப் பிறகு...?’’

“என்ன சாவித்திரி...’’

“அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும் போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஓய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புதுமுகத்தைப் பார்ப்பீர்கள்...’’

“நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்போது நானும் பேசலாமா?’’

“தாராளமாக’’

“என்னைக் கவர்ந்து வைத்துக் கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது.’’

“அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்ற உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு அழகு கொடுக்காது...’’

“நீ எப்படி அந்த மாதிரி பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?’’

“எப்படியா? என் புருஷனைப் போல என்னிடம் பல்லைக் காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல; கிழவியல்ல; நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்கிறேன்... மிருக இச்சைக்குப் பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?’’

“சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?’’

“எது சுகம்? நகை போட்டுக் கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப் பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர். புடவை, ரவிக்கை_ நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி, சரீர சுகம்; நான் ஒரு நாளும் அடையவில்லை இதுவரையில்.’’

“அதாவது...’’

“என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக் கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை.’’

“பின் எதைத்தான் சுகம் என்கிறாய்?’’

“நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும்கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலும் என்னை என்ன சொல்லச் சொல்லுகிறீர்கள்?’’

“உன் புருஷன் ஏன்...?’’

“என் புருஷனுக்கு என் சரீரம் சலித்து போய்விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.’’

“சாவித்திரி! தைரியமாக ஒன்று செய்யலாமே.’’

“நான் எதையும் செய்வேன்; ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம், அவ்வளவுதான்.’’

உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்துப் பார்க்கிறேன்.

“வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கி விட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்கு என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.’’

“எது சொன்னாலும்...’’

“ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.’’

நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.

“நான் போய் படுத்துக் கொள்ளட்டுமா.’’

“தூக்கம் வருகிறதா?’’

“தூக்கமா? இப்பொழுது இல்லை.’’

“பின் சற்றுதான் இரேன்.’’

“உங்கள் தூக்கமும் கெடவா?’’

“சாவித்திரி...’’

“நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது.”

“நிஜமா!’’ என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

“பொய் சொன்னால்தான் நீ உடனே...’’

“அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்!’’

“சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.’’
“அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக்கட்டும், என் கட்டை சாய்ந்த பிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.’’

“ஏன் அப்படி சொல்லுகிறாய்?’’

“இல்லை, இனிமேல் இந்தச் சரீரம் என் சோகத்தை தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கே ஒரு திருப்தி ஏற்படுகிறது.’’

“நான் சொல்லவில்லையா?-’’ என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக் கொண்டேன். அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக்கொண்டு சிறிதுநேரம் சாய்ந்து கொண்டாள்.

இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததைப் பூசி, மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.

மெல்ல அவளை படுக்கையில் படுக்க வைத்தேன், என் படுக்கையில்! அப்பொழுதும், அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகசியங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின. இதழ்கள் ஓய்ந்து போனது போல பிரித்தபடியே கிடந்தன.

திடீரென்று “அம்மா! போதுமடி!’’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.

“சாவித்திரி, என்னம்மா?’’ என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக் கொண்டேன்.

“போதும்.’’

“சாவித்திரி விளக்கு...’’

அவள் திடீர் என்று எழுந்து உட்கார்ந்தாள்.

“ஆமாம். விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் இந்த வெளிச்சம் போதும்!’’ என்று எழுந்து நின்றாள்.

“நீ சொல்லுவது அர்த்தமாகவில்லை சாவித்திரி.’’

“இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக் கொள்ளுங்கள்.’’

“ஏன்... ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்.’’

“ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக்கூடாது. ஆபத்து’’ என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டு சிறிதும் தயங்காமல் உள்ளே போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.’’

சட்டென்று என் உள்ளத்திலும் எரிந்த விளக்கு அணைந்தது.

`போதும்.’

போதும்__எது போதும் என்றாள். தன் வாழ்க்கையையா? துக்கமா? தன் அழகா, என் ஆறுதலா அல்லது இந்தச் சிறிது வெளிச்சமா?’ என்று முடிகிறது கதை.

இதுதான், இவைதான் கு.ப. ராஜகோபாலன் சிறப்பு.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்