Jun 30, 2010

பிரிவு- சம்பத்

சரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் 'ராஜதானி' எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. 'இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை விட்டுவிட்டு கன வேகத்தில் 'ஹவ்ரா' பக்கம் போய்க்கொண்டிருப்பாள்,' என்று நினைத்தார் தினகரன். தன்னில் ஏதோ செத்துக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. பத்மாவைப் பற்றி இவ்வளவு தீவிரமாக எப்போதாவது நினைத்திருப்போமா? என்று பட்டது. "தீவிரங்களெல்லாம் சொல்லிக்கொண்டா வருகிறது?' என்று சொல்லி எதையெல்லாமோ சபித்தார்.

sambath அவரும் நினைத்து நினைத்துப் பார்த்தார். 'எது என்னை கல்பனாவிடம் இவ்வளவு தீவிரமடையச் செய்தது?' அவள் முதன் முதலில் எல்லோருக்கும் நடுவே உட்கார்ந்து, நாலுமணி மாலை இருக்கும், பாட ஆரம்பித்தாள். அவள் உட்கார்ந்த விதம், அவளுடைய சிரிப்பு, அவளுடைய நாசியும், கண்களில் மிளிர்ந்த அகலமும்! இதுதான் அவரை முதன்முதலில் அவளிடம் ஈர்ப்பித்தது. இருந்தும் இதெல்லாம் தப்பு என்று அவர் அவள் பக்கம் கூட போகாமல் தலைதெறிக்க எதிர்புறமாக ஓடத்தான் செய்தார் - மானசீகமாகத்தான் - அவள் யாரோ நான் யாரோ என்று பல தடவைகள் சொல்லிக்கொண்டார் - இருந்தும் பாழும் மனமும் உடம்பும் பரிதவிக்கத்தான் செய்தது.

ஒருநாள் கிட்டத்தட்ட லன்ச் டயத்தில் அவர் லைப்ரரியில், கோதாவரி டெல்டாவில் புகையிலை வளர்ப்பைப் பற்றி விபரம் சேமிக்கச் சென்றபோது அவளைத் தவிர லைப்ரரியில் வேறு யாரும் இல்லை. பொதுவாகவே அவள் ஆண்களைக் கண்டால் பயப்படுவதுபோல் காணப்படுவாள். ஒரு அஸிஸ்டென்ட் லைப்ரேரியனாகவிருந்தும், அவளுக்கு அந்த பொருளாதார புத்தகப் பட்டியல் விபரம் இன்னமும் அத்துப்படி ஆகியிருக்கவில்லை.

"மிஸ் கல்பனா!"

"எஸ். மிஸ்டர் தினகரன்!"

"வேர் கன் ஐ ஃபைன்ட் தீஸ் ஜெர்னல்ஸ்?"

"விச் ஜர்னல்ஸ் ப்ளீஸ்?"

அவர் பட்டியலை எடுத்துக்கொண்டு அவள் பக்கமாக நெருங்கியபோது, அவளுடைய உடம்பின் வாசனையை அவர் நுகர்ந்தார். ஏதோ யுகம் யுகமாகப் பழக்கப்பட்டதுபோல் அவள் அவரைப் பார்த்தாள்.

அவளிடம் அதிகமாக லக்கேஜ் இல்லை. பின் ஏன் இவ்வளவு நேரம்? ஒருக்கால் டாலியை பார்க்கப் போயிருக்கிறாளோ என்னவோ? டாலியும் தான் பாடுகிறாள்; லதா மங்கேஷ்கரும்தான்; கீதா டட்டும்தான்; பர்வீன் சுல்தானாவும் கூடத்தான்! இவ்வளவு பேர்களையும் பாடக் கேட்ட பின்னும் என் பாட்டுத்தான் உனக்குப் பிடித்திருக்கிறது என்றால், "யூ ஆர் எய்தர் ப்ளஃபிங் ஆர் யூ ஆர் இர்ரவோக்கபிலி மாட்," அவளுடைய சிரிப்பு !!!

"கல்பனா, ப்ளீஸ்..."

"அக்ஹான் ....அக்ஹான்..அக்ஹான்.."

"வொய்? யூ லாஃப் லைக் எ கோஸ்ட்..." என்பார் அவர்.

அவருடைய கழுத்தை வளைத்துக்கொண்டு அவரும், அவளும் ஈடுபடுமுன், ஊஞ்சலாடிய விகிதத்தில் அவளுடைய அறையே நிழலாகி மடிக்கப்படுவதுபோல் அவர் உணர்வார்! ஏதோ இனம் புரியாத சோகமும், இதுவும் ஓய்ந்து விடுமோ என்கிற பயமும், பீதியும் அவரைத் தொற்றும். புத்தரைப்போன்று அவரும் வால்யூஸ் டெவலப் செய்யப் பார்த்தவர்தான். புத்தருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இவருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இரண்டுமில்லை. எந்தக் கோணத்திலிருந்து அணுகினாலும் வாழ்க்கை சோகமயமானது என்பதை இருவருமே துல்லியமாக உணர்ந்தனர். ஆனாலும் அவள், அவளுடைய இனத்துக்குரிய விகிதத்தில், சோகத்தை அடித்துப் போட்டு சந்தோஷமாகவேயிருந்தாள். அவரால்தான் முடியவில்லை.

அவர்கள் இருவரும் சினிமா போகவில்லை. பார்க்குகளுக்குப் போகவில்லை. அவர் அவளை மோட்டார் சைக்கிளில் பின்னால் வைத்து, கனவேகமாக ஓட்டிச் சென்று தன்னை பெரிய ஆம்பிள்ளை என்று பறைசாற்றிக்கொள்ளவில்லை. அவளும் அதை விரும்பவில்லை. இருவருமே அந்த நிலைகளை எல்லாம் எப்போதோ கடந்து விட்டிருந்தனர். இருந்தும் ஒரு பத்து வருடம் அதையெல்லாம் பின்தள்ளி போட்டிருந்தாலும் அவர்கள் அப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

கல்பனாவின் உடம்பை பிரித்துப் பிரித்து அறிய முடியாது என்பதை அவர் கூடிய சீக்கிரமே இனம் கண்டார். இருந்தும் அவளுடைய மார்பகத்திலிருந்து யோனி வரையிலான பாகத்தில் விரவியிருந்த நல்ல ஹெல்த்தை அவர் கூடிய சீக்கிரமே இனங் கண்டார். அங்கு அவருடைய விரல்கள் விளையாடிய விதத்தில் அவள் டிரான்ஸ÷க்கு உட்படுவாள். 'மை மை திஸ் டிரான்ஸ் நோபடி குட் கிவ் மி..கம் கம்," என்பாள். இருந்தும் இரண்டே மாதங்களில் வைகறை போன்ற அதிலும், அந்த துல்லியம் ஏற்படுமோ என்கிற நிலையிலும், எதிர்பார்ப்பிலும் விரிசல் விழுந்தது. அதை அவர் விரிசல் என்று கணிக்காமலே, கணிக்கக்கூடாது என்று இருந்த விகிதத்தில் இன்னமும் நான்குமாதம் ஓடியது. அதுவும் இப்போது ஸ்டேஷனில் வந்து நிற்கிறது.

அவருடைய லவ் வருவதைப் பார்த்து ஓடிச் சென்று அவளிடமிருந்து ஸூட்கேஸையும், ஃப்ளாஸ்கையும் வாங்கிக் கொண்டார்அவர் உள்ளம் துள்ளியது.

ரிபப்ளிக் டேக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன.

"டிக்கட் கிடைத்ததா?" என்றாள் கல்பனா.

இவர் பதில் சொல்லாமல், அவளுடைய பச்சைப்புடவையிலும், அவர் வாங்கிக்கொடுத்திருந்த பச்சை ஸ்வெட்டரிலும் ஆழ்ந்தே போனார். அவளுடைய தலையில் ஒரு சிவப்பு ரோஜா ரொம்பவும் அழகாக இருந்தது.

"இது ஸ்டேஷன்," என்றாள் கல்பனா.

அவர் விழித்துக்கொண்டார். அவளை நேரே அவளுடைய ஸீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்து, அவளுடைய ஸூட்கேஸை கொடுக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்தார். உள்ளே கதகதப்பாக நன்றாக இருந்தது. "இந்த ரயில் நாம் இருவருமே செத்து விழும் அளவுக்கு போய்க்கொண்டேயிருந்தால் என்ன," என்று நினைத்தார். ஆனால் சொல்லவில்லை.

"கிவ் மி எ லிட்டில் வாட்டர்," என்றாள் கல்பனா.

தொங்கிக்கொண்டிருந்த வாட்டர் பாட்டிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுத்தார். குடித்துவிட்டுப் பிளாஸ்டிக் டம்பளரை கொடுத்துவிட்டு அவள் தன்னிடத்திலிருந்து எழுந்தபோது அவளுடைய வயிறு இடத்தில் பெரிய குழியை தரிசித்து அந்தத் திண்மையில் ஆழ்ந்து ஆழ்ந்துவென இருக்க, மீண்டும் விரவியிருக்க விழைந்தார்.

அவர்கள் இருவருமே கூட்டத்தைக் கொஞ்சம் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்கள். தினகரன் இறங்கி அவளுக்குகைலாகு கொடுத்தார். எண்ணற்ற டைம்கள் படுக்கையிலிருந்து அவளுக்கு எழ கை கொடுத்தது ஞாபகம் வந்தது. அவர் அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு இப்போதும் குதித்த விகிதத்தில் அவர் அவளை ஒரு கணத்திற்கு நிர்வாணமாகக் கண்டார்! சொரேல்னு அவரில் ஒரு வெட்கம் எழும்பியது. அவளைக் காப்பாற்றுவது போன்று அணைத்துக்கொண்டே நடந்தார்.

அவளுடைய இரண்டு லெட்டர்கள் போஸ்ட் செய்ய வேண்டியிருந்தது. வாங்கிக்கொண்டு போய் ஸ்டாம்ப் ஒட்டிப்போட்டு விட்டு ஒரு ஆறு ஆப்பிள், அவளுக்குப் பிடித்த கொட்டை எடுத்த பேரிச்சம்பழம் மூன்று பாக்கெட், எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது அவர் கண்களில் கண்ணீர் துளித்தது. அவளிடம் போனபோது 'டிட் யூ வீப்,' என்றாள் அவள். "நோ நாட் எக்ஸ்ôட்லி," என்றார் அவர்.

தயங்கியவாறே, "எப்போது திரும்பி வருவே," என்றார்.

"ஒரு மாதம் லீவு கேட்டிருக்கிறேன்," என்றாள் அவள்.

"எனக்குத் தெரியும்," என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

"எக்ஸ்டென்ஷன் பண்றதாய் இல்லை,"என்றாள் அவள்.

கொஞ்சநேரம் கழித்து, 'டூ யூ ஃபீல் ஸôட்?" என்றாள் அவள்.

அவர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அடி வயிற்றில் ஒரு gap ஏற்படுவதுபோன்று உணர்ந்தார். பீதியை தாங்க முடியாது போலிருந்தது.

பையிலிருந்து அவர் ஒரு ஸிகாட்டை எடுத்ததும், அவள் எம்பி, அவர் கழுத்தை வளைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். திடீரென்று ஒரு சலனமும் அற்று அதை அவர் ஏற்றுக்கொண்டார். கணங்கள் ஒழுகிப்போவதை கேவலம் தினகரனாலா நிறுத்த முடியப்போகிறது?

ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது பிரபஞ்ச ரீதியில் தன்னை ஏதோ ஒரு தனிமை சூழ்வதை அவர் உணர்ந்தார். பிளாசா வரையிலும் போகும், அவ்வளவு மரங்களையும் ரயில்வே க்வார்டர்ûஸயும் பட்படிகளையும் எல்லாவற்றையுமே, கடைசிப் பட்சமாக ஓர் தனிமை, நிராதரவாக்கிவிடுவதைப் பார்த்தார். எங்கேயாவது தனியாகப் போய் ஒரு காப்பி சாப்பிட்டால் தேவலை போலிருந்தது. வயது முப்பத்தி இரண்டு. விஷயம் இவ்வளவுதான்.பத்மாவிடம் அவருக்கு ஒரு முழுமை ஏற்படவில்லை. இங்கு இதிலும் கிட்டாது என்கிற பயங்கரத்தை ஜெரிக்க மீண்டும் காஃபியை தனிமையில் நாட வேண்டியிருக்கிறது. அட ஹவ்ரா என்ன ஹவ்ரா!அவள் மூனுக்குத்தான் போகட்டுமே! அவர்களிடையே ஊர்ஜிதமாகின ஒரு உறவு உண்டு என்ற பின்பு எதுதான் முக்கியம்! எது முக்கியமாக இருந்தாலும் இந்த இடைக்கால பிரிவு நிச்சயமாக முக்கியமாக இருந்தது. அதைப் பெரிது படுத்தவும் வேண்டியதில்லை. ஆனால் அந்த உறவுதான் எங்கே சம்பவிக்கிறது? எது எப்படிப் போனாலும் கடைசிப் பட்சமாக இதில் கிட்டும் ஒரு இன்பம், சந்தோஷத்திற்கு, உலக அளவில் ஈடேது?

ரொம்பவும் ஜாக்கிரதையாக ஒரு வாரம் கழித்து அவளுக்கு லெட்டர் எழுதினார். (லெட்டர் என்றாலே அவளுக்குப் பிடிக்காது. லெட்டர் போஸ்ட் பண்ண பிடிக்காது. நிர்பந்தம் ஏற்பட்டால் கூட ஸ்டாம்பு வாங்க மாட்டாள். அதுவும் வாங்கினால், அவளுடைய போஸ்ட்மேன் தான் அவர் இருக்கவே இருக்கிறாரே!)
'மை லவ்'

வெண்ணை திரண்டு வர தாழி உடைந்தது கணக்காக திடீர்னு ஏன் இப்படி ஒதுங்குகிறாய்? உன்னால் என் மீது அன்பு செலுத்த முடியவில்லை. மணமானவன். இரண்டு குழந்தைகள் வேறு; இவனோடு நமக்கென்ன என்றெல்லாம் சாதாரணத்தில் நீ நினைக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இட்ஸ் ஸம்திங் எல்ஸ்! ஆனால் என்னால் கணிக்க முடியவில்லை. என்னவாக இருக்க முடியும்? ரயில் கிளம்பிய பிறகு நீ நிஜமாகவே என்னை மறந்து விட்டாயா? ஜென்மம் பூராவும் உன்னுடைய அந்த நல்ல ஹெல்த்தில் விழுந்து புரண்டால்கூட நான் இன்னமும் உன்னிடம் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அப்படியிருக்க உன்னால் எப்படி என்னை விட்டு ஹவுரா போய்விட முடிகிறது? தஃபாக்ட் ஆஃப் த மாட்டார் இஸ் யூ டோன்ட் லவ் மி. எங்கோ, வைகறை, போன்று, போனால் போகட்டும், எதுதான் சாசுவதம், போன்ற தத்வங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். ஆனால் எனக்குத் தெரியாதா? இதெல்லாம், 'அன் அடல்டரேடட் பக்வாஸ்,' என்று. ஷேவ் செய்துகொள்ளும்போது அறுபட்ட துளிகளுக்காக லோஷனை எடுக்க உள்ளே செல்லும்போது, எப்போதும்போல் தேடும்போது ஓரிருதரமே உபயோகித்த உன்னுடைய ஸôக்ஸ் அகப்படுகிறது. அதை வைத்துக்கொண்டு, உன்னுடைய உடம்பின் அவ்வளவு வாசனைகளை யும் என் நாசி எதிரே, என்னுடையவயிற்றில், என்னுடைய உதடுகளில் என்னுடைய காதுகளில் கூட - உன் இழை சங்கீதமாக சம்பவிக்க வைக்க முடிகிறது. டோன்ட்யூ நோ இட் டியர்? இன் யுவர் ஹார்ட், இன் யுவர் ஆர்ம்பிட், இன் யுவர் ஸ்டமக், தட் யூ ஆர் டியூபிங் யுவர் ùஸல்ஃப் பை திஸ் ட்ரிப்..?'

மூன்று வாரம் கழித்து அவருக்கு கல்பனாவிடமிருந்து பதில் லெட்டர் வந்தது.

'மை லவ்,

உன்னை கொஞ்ச நாட்கள் பிரிந்து இருந்தால் தேவலை என்று பட்டது. அது உனக்கும் எனக்கும் நன்மை பயக்கும் என்று நம்பியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். பட் இப்போதுதான் எனக்குத் திட்டவட்டமாகப் புரிகிறது. நானும் உன்னை நேசிக்கவில்லை. நீயும் என்னை நேசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நீ என் உடம்புள் திடும் திடும்மென்று பிரவேசிப்பது என் மேல் அன்பு செலுத்த என்று என்னால் நம்ப முடியவில்லை. உன்னுடைய தனிமையை விரட்ட பிரபஞ்ச அளவில் உன்னுடைய தேடலின் (அது எதைப் பற்றியோ நான் அறியேன்). தனிமையை மறக்க நீ என்னை ஒரு சாதனை கருவி ஆக்கியிருக்கிறாய். பத்மாவிடமும் நீ இப்படித்தான் நடந்து கொண்டிருக்க வேண்டும். நான் உன்னை இப்படி சொல்லும்போது நீ மிருகம் அது இது என்று திட்ட வரவில்லை. எந்தப் பெண்தான் உள்ளத்துக் கோடியில் ஆண் மிருகத்தை வெறுக்கிறாள்! உன்னுடைய தேடல் மிக்க, என் வயிற்றுள் விரவிய, இடிபாடுகளை நான் நேசிக்கிறேன். எப்போதாவது தூங்கி விழிக்கும்போது, 'அனுபவப்பட்ட அந்த இடங்கள் தனித்து நின்று, என்னை, உனக்காக, கொஞ்சுவதை நான் உணர்கிறேன். இது என் வரையில் மறக்க முடியாத அனுபவங்களே. அதற்காக உனக்கு ரொம்ப தாங்ஸ்..ஆனால் உன்னால் ஓரிரு கதிகளில் நிலைத்து நிற்க முடியுமா? இந்த யோசனையே பிணைப்பில் பிரிவையும் விரிசலையும் தோன்ற வைத்துவிட்டதே?
லவ் கல்பனாô..'

('ஏப்ரல் 1974' - சதங்கை இதழில் வெளிவந்தது)

**********

Jun 29, 2010

ஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்

அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை. கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒரு விறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக் கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்ப முயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின ‘அப்பா!’ என்று சொல்லி வலியைத் தணித்துக் கொள்வதுபோல.
gn' உடல் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தது. இருபது ஆண்டுகளாவது புழுதியிலும் பாறையிலும், இரண்டு கைகளுக்கு ஆதரவாக மனிதனின் மிகப் பூர்வகாலக் கருவிகளின்றி வேறெதையும் கொள்ளாமல் இயற்கையோடு முட்டி மோதி, வேறெந்தப் பலனையும் காணாமல் ஒரு வைரத்தின் உறுதியைப் பெற்றுவிட்ட உடல். கறுத்து மென்மையை இழந்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு பாதுகாப்பான முரட்டுத் தோலை வாழ்க்கைப் போரில் கிடைத்த மற்றொரு சிறு வித்தாகக் கொண்டுவிட்ட உடல். அவ்வுடலில் இயற்கைக்கு மாறாக, ஆங்காங்கு கைகளிலும், புயத்திலும், விலாப்பக்கங்களிலும் தடிப்புகள். மாணிக்கம்போல் உறைந்துவிட்ட கீற்றுகள். ஆங்காங்கே கறுப்பு வரிக்கோடுகள் சில இடங்களில், குறிப்பாக மார்பில் நாலு ஐந்து சென்டிமீட்டர் அகலத்தில் தடயங்கள் இடுப்புக்குக் கீழே அழுக்கடைந்த வேட்டி. உங்களுக்குச் சற்றுக் கூரிய பார்வை இருந்தால், உடலின் முழங்கால்கள் சற்றுப் பருத்து இருப்பதுபோல் வேட்டிக்கு மேலேயும் தெரியும். மேலும் அவை சிறிதும் அசையாமலேயே கிடக்கின்றன.
சூரிய ஒளி ஒரு ரூபாய் அளவுக்கு வட்ட வடிவில் உடலின் கையை எட்டியது. அதன் இயக்கத்தில் ஒரு விளையாட்டுத் தன்மை இருந்தாலும், அதன் முகத்தில் செம்மை, தாமிரத் தகடுபோல் தகித்தது. உடல் கழுத்தை அசைத்தது; கண்களை விழித்தது. ஒரு பெருமூச்சு உடலைக் குலுக்கிற்று. நா வறண்டது. ‘தண்ணீர்!’ உடல் கத்திவிட்டது. உடல் அவனாயிற்று.
”உம்...ண்ணி” அவன் செவிகளுக்குள் ஒலி புகுந்தது. திரும்பிப் பார்த்தான். லாக்கப்பின் கம்பிகளுக்கு அப்பால் ஒரு போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார்.
”அய்யா, கொஞ்சம் தண்ணீ” - உடல் முறையிட்டது.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்த டெலிபோன் மணி அடிக்கடும் போலீஸ்காரர் ஃபோனுக்கு ஓடினார். சிறிது நேரம் ஏதோ பேச்சு. பிறகு போலீஸ்காரர் ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு நாற்காலியில்.  “அய்யா, கொஞ்சம் தண்ணி தாங்கைய்யா. தவிச்சு சாகணும்னு நெனைச்சிருக்கீங்களா?”
”த...யெழி” தடியைச் சுழற்றிக்கொண்டு போலீஸ்காரர், பீடியைத் தூக்கி எறிந்துவிட்டு, நாற்காலியிலிருந்து குதித்து எழுந்தார்.
”மூணு பேர் சீட்டுக் கிளிஞ்சிருக்குமே இன்னிக்கு. அரைமணி நேரம் போயிருந்தா உன்னை எவன் போய் எப்படிக் கண்டுபிடிச்சிருப்பான்? சந்தை நாள் வேறே....! நீ என்ன மாமூல்வாதியா பிடிச்சிக்கலாம்னு விட்டுட?”
மனிதனுக்கு சுருக்கென்றது. அவன் ஒரு கைதி. தப்பி ஓட முயன்ற கைதி. சட்ட ஒழுங்கு சக்திகளோடு அவன் மோதினான். போதுமான சுதந்திரம் இல்லாமல் அதன் விளைவு இது. நா வறட்சி மறந்துவிட்டது. நினைவு வேலை செய்தது. காலை ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் நடந்த விபரீதம். இரவிலேயே அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்று, டாக்டர் சர்ட்டிபிகேட் எடுத்து லாக்கப்புக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். காலை எட்டு எட்டரைக்குத்தான் எழுந்திருப்பான். சுமார் பத்துப் பன்னிரெண்டு கைதிகளோடு அவனும் ஒருவனாய் போலீஸ் ஸ்டேஷனின் பின்புறத்தில் ஒரு தாழ்வாரத்தில் இருந்ததை உணர்ந்தான். அவர்கள் எல்லாரும் ஏற்கனவே விழித்துக்கொண்டு விட்டவர்கள். ஸ்டேஷனுக்குள் ஏழெட்டு போலீஸ்காரர்கள் நடமாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களில் இருப்பவர் வெளியே போவதும், வெளியிலிருந்து புதுப் போலீஸ்காரர்கள் வருவதும், உடைகள் மாற்றிக்கொள்வதும், பீடி சிகரெட் பிடிப்பதும், சமயங்களில் கலகலப்பாகவும், சமயங்களில் ஏதாவது ஒன்றைக் கடிந்தும், பொதுவாக உரக்கப் பேசியவர்களாகவும் சிரித்தவர்களாகவும் இருந்தனர். அவன் தன்னைச் சுற்றியிருந்த கைதிகளைப் பார்த்தபோது அவர்கள் அனைவருமே தமக்குள்ளோ, வெளியிலிருந்து வந்தவர்களோடோ, போலீஸ் அதிகாரிகளோடோ பேசியவண்ணமும் சமயங்களில் தர்க்கித்தவண்ணமும் இருந்தனர். தாழ்வாரத்தில் இருந்த பெரிய தொட்டி நிறைய தண்ணீர் இருந்ததாலும், அதில் தொடர்ந்து தண்ணீர் பைப்புகளின் வழியே கொட்டிக்கொண்டிருந்தாலும், கைதிகளும் போலீஸ்காரரும் சற்றுச் சிறுக விலகி நின்று பல் விளக்குவதும், கழுவுவதும், பலகாரங்கள் உண்டுவிட்டு வாய் கழுவிக்கொள்வதுமாய் இருந்தனர். அவனுக்கு அவர்கள் மீது சற்றுப் பொறாமை ஏற்பட்டது. ஆனால் அது இன்னும் தணியாத போதையின் விளைவு. இயற்கையில் அவனுக்குப் பொறுமை கிடையாது. தரித்திருத்தலுக்கு, அவனைப் பொறுத்தமட்டில் அது ஒரு அவசியப் பண்பு அல்ல.
தாழ்வாரத்தில் ஒரு வேயப்பட்டிருந்த பகுதியில் ஒரு சுவரோரம் சுருண்டு கிடந்த அவன் எழுந்து உட்கார்ந்ததும் விருட்டென்று எழுந்து தாழ்வாரத்தையும், போலீஸ் ஸ்டேஷனையும் பிரிக்கும் நிலைக்கு வந்து நின்றான். வெளியே கலகலப்பான நகரம், கலகலப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் நிலையைக் கடந்து ஸ்டேஷனுக்குள் காலெடுத்து வைத்தான். காலி கிளாஸ் டம்ளர்களைக் கொண்ட தேநீர் ஏந்தலோடு ஒரு சிறுவன் அவனை இடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனைக் கடந்து வெளியே சென்றான். சிறுவனுடைய கால்களையே அவனுடைய கால்களும் பின்பற்றிச் சென்றன. அவனையோ சிறுவனையோ யாரும் தடுக்கவில்லை. B-4 காவல் நிலையத்தை விட்டு அவன் தப்பி விட்டான். சிறுவயதில் கள்ளத்தனமாகக் கருதைக் கசக்கி மடியில் போட்டுக்கொண்டு, ஏதாவது சிறு ஓசை கேட்டாலும், அந்தப்புறம் இந்தப்புறம் திரும்பாது காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அம்பு போல ஓட்டம் என்று சொல்ல முடியாதபடி வேகமாக நடப்பானே அப்படியே நடந்தான். பிறகு...? ஒரு கை அவன் தோளைப் பற்றியது, அவன் ஓடியது, ஒரு லாரியில் முட்டிக்கொண்டது, பிடிபட்டது, உதைபட்டது, கட்டுப்பட்டது, ஸ்டேஷனுக்கு இழுத்து வரப்பட்டது, லத்தியால், பெல்ட்டால், பூட்ஸ் காலால் நையப் புடைக்கப்பட்டது. இறுதியில் அவன் பிடிபட்டிருக்காவிட்டால் வேலை இழந்திருக்கக்கூடிய இரண்டு போலீஸ்காரர்கள் மல்லாந்து கிடந்த அவனை முழங்கால்களில் லத்திகளால் தாக்கியது. அத்தனையும் அவனது நினைவு எல்லைக்கு வெளியேயே நின்றுகொண்டு உள்ளே வர இடம் இல்லாததுபோல் தவித்தது.
அவனுக்குப் பேச வேண்டும்போல் மட்டும் இருந்தது.
“அய்யா, தண்ணி தாங்கய்யா” என்று மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தினான்.
“தண்ணியா... தர்றேன்” என்று சொல்லிக்கொண்டு அப்போது டியூட்டியில் இருந்த ஒரே அதிகாரியான அவர் சிறிதும் சிரமத்தைப் பொருட்படுத்தாது மிகவும் சுறுசுறுப்பாக தாழ்வாரத்துக்குச் சென்று ஒரு வாளி தண்ணீரைக் கொண்டுவந்து அவன் முகத்திலும் உடலிலும் வாரியிறைத்தார். ஒரு சில இடங்களில் சற்று எரிந்தாலும், தண்ணீர் வரவேற்கத் தக்கதாகவே இருந்தது அவனுக்கு.
“என்ன ஏட்டையா, யாருக்குக் குளியல்?” என்று கேட்டுக்கொண்டே ஒரு வாலிப போலீஸ்காரன் வந்தான்.
“காலேலே எஸ்கேப் ஆனாரு இல்லே. அவருக்குத்தான்.”
“இந்தத் தா... தானா?” வாலிப போலீஸ்காரன் லாக்கப்புக்குள் இருந்த கைதியை உற்றுப் பார்த்தபடி பெல்ட்டை அவிழ்த்தான். “ஏட்டையா கொஞ்சம், லாக்கப்பை தெறந்து விடுங்க” இளைஞன் உத்தரவிடுவதுபோல பேசினான்.
“நீ ஒண்ணு சந்தானம். பயலெ நல்லா நெறுக்கிப் போட்டாங்க. சாவக் கெடக்கறான். தண்ணி தண்ணீனு அலர்றான்.”
”தா.. மூணு குடும்பத்தோரை நடுத்தெருவிலே நிறுத்தி இருப்பான். நீங்க கதவெத் தெறங்க ஏட்டையா”
ஏட்டையா சாவியைக் கொடுத்தார். கைதி அப்படி இப்படி அசையாமல் இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். முகம் மட்டும் திறந்த கதவின் பக்கம் திரும்பியது. அவ்வளவுதான், கண்ணைச் சேர்த்து தோல்பெல்ட்டால் ஒரு சவுக்கடி. கைதிக்கு ஜாக்கிரதை உணர்வு மேலோங்கியது. கண்களை மூடிக்கொண்டு, இலேசாகப் பற்களை நெறித்தவண்ணம் அசைவற்றுக் கிடந்தான். அப்பப்பா, முழங்கால்களில் அப்படி ஒரு திடீர் வலி. இரண்டு கைகளையும் தூக்கவோ திருப்பவோ முடியவில்லை. அடி பெறாத மணிக்கட்டு இருந்த இடது கையை வேண்டுமானால் சிறிது அசைக்கலாம். முகத்திலும், கழுத்திலும், தோள்பட்டைகளிலும் மாறி மாறி அடிகள் விழுந்தன. முகத்தில் எச்சில் விழுந்தது. எதற்கும் அவன் அசையவில்லை. இறுதியில் முழங்கால்களில் ஒரு முரட்டுத்தனமான அடி. “அய்யோ, அய்யோ” என்று அலறினான். மூடிய கண்களைப் பொத்துக்கொண்டு கண்ணீர் வந்தது. கைதியை கதற வைத்துவிட்ட திருப்தியோடு போலீஸ் இளைஞன் பெல்ட்டை இடுப்பில் கட்டிக் கொண்டான்.
இன்னும் ஒருவன் வர வேண்டியிருந்தது கைதிக்குத் தெரியாது. வேலை இழந்திருக்கக்கூடிய மூவரில் இருவர்தான் அவனைப் பார்த்துவிட்டுப் போயிருக்கின்றனர். மூன்றாமவன் நாற்பது வயதாகியிருந்த ’டூ நாட் சிக்ஸ்’ அதிகம் வம்பு தும்புகளுக்குச் செல்லமாட்டார். அவரிடம் ஒரு எலக்ட்ரிஷன் சர்ட்டிபிகேட் ஏ கிரேடோ, பி கிரேடோ தெரியாது. இருந்தததால் மேல் வரும்படியை  நியாயமான முறையிலேயே சம்பாதித்தார். லஞ்சம் கையூட்டு இவற்றை எல்லாம் அவரைப் பொறுத்தமட்டில் அனுமதிக்க மாட்டார். இத்தியாதி தர்மங்களை பின்பற்றுபவரை இகழவும் மாட்டார். காட்டியும் கொடுக்கமாட்டார். அநேகமாகப் பிறரைப் பற்றி வாயைத் திறக்கமாட்டார். ஒரு பிளாக் மார்க் இல்லாது இருபது வருஷ போலீஸ் சர்வீசை முடித்துவிட்டார். இன்றுதான் இந்தச் சோதனை.
அடி, உதை, அவமானம். இன்னும் குறையாத போதை. இத்தனைக்கும் கீழே ஒரு வகையான விகாரமற்ற அமைதி. இத்தனையையும் பொறுத்துக் கொண்டு விட்டோமே என்ற உள்ளார்ந்த எக்களிப்பு. இவற்றின் விளைவால் உறங்கிக்கொண்டிருந்தான் கைதி. லாக்கப்பில் கதவு திறந்து கிடந்ததோ, அதனுள் ’டூ நாட் சிக்ஸ்’ நுழைந்ததோ, அவனை ஏற இறங்கப் பார்த்ததோ, இலேசாகக் காலால் உதைத்ததையோ அவன் உணரவில்லை. அசையாது கிடந்த உடலை உற்று நோக்கிவிட்டு அவன் முகவாயை உற்றுக் குனிந்து இரண்டு கைகளாலும் பற்றி இழுத்தார் ‘டூ நாட் சிக்ஸ்’. உடல் பக்கவாட்டில் சலனமின்றி நேராக நகர்ந்தது. ‘டூ நாட் சிக்ஸ்” அந்த உடல் கிடக்கும் நிலையும், திசையும் ஏதோ முக்கியத்துவம் பெற்றிருப்பதுபோல பார்த்தார். அமைதியாக அவர், உடலை ஒருமுறை சுற்றி வந்தவண்ணமே தன்னுடைய கூர்மையான பார்வையால் அதன் பல பாகங்களையும் உற்று நோக்கினார். பிறகு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
கைதியின் உடல், நீண்டநேரம் தன்னைத்தானே உணர்வுகளின் சீண்டல்களிலிருந்தும், வெறித்தாக்குதல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. விரைவில், உடல் வெருண்டு இறுகியது. அது தனித்தனிப் பகுதிகளாகத் துடித்தது. உடலின் ஒவ்வொரு மூலையிடுக்கிலும் அப்படி ஒரு தாக்குதல்; நரம்புகளைச் சுண்டி இழுத்து தன் இச்சைப்படி செயல்படாதவாறு முடக்கிவிடும். சொடுக்கு சதைகளைக் கவ்விக்கொள்ளும். நட்டுவாய்க்காலியின் பிடி இருதயத்தைப் பந்துபோல் துள்ள வைக்கும் திகைப்பு. காதுகளிலே ஒரு அடைப்பு. கண்களை திறக்கவொட்டாது தடுக்கும் சதை இழுப்பு. தொண்டையின் ஆழத்திலிருந்து “தண்ணி, தண்ணி” என்பதுபோல் உறுமல், வாயில் நுரையைத் தள்ளிக்கொண்டு பீறிட்டு வந்தது. ‘டூ நாட் சிக்ஸ்’ அதையெல்லாம் முகம் திரும்பிப் பார்க்கவில்லை. சுவிட்ச்சை மட்டும் ஆஃப் செய்தார். தனக்கு போலீஸ் டியூட்டி இல்லாத நேரங்களில் மிகவும் கௌரவமான முறையில் மேல் வருமானம் வாங்கிக் கொடுத்த அவருடைய எலக்ட்ரிக் ஞானம், அவ்வப்போது போலீஸ் ஸ்டேஷன்களில் மின்சாரச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை உடனே கவனிக்கும் ஆற்றலால் அவருக்கு ஸ்டேஷனில் மரியாதையும் மதிப்பும் வாங்கிக் கொடுத்த அதே மின்னறிவு, இன்று தப்பியோட முயன்று தன்னை அவமானத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய கைதியைப் பழி தீர்த்துக்கொள்வதிலும் அவருக்கு உதவியதில் நம்பர் டூ நாட் சிக்ஸுக்கு உண்மையிலேயே மிகவும் உள்ளடங்கிய மகிழ்ச்சி.
*********
தட்டச்சு : சென்ஷி

Jun 28, 2010

நிழல் குதிரை-எஸ்.ராமகிருஷ்ணன்

சா.கந்தசாமி

நமண சமுத்திரம். புதுக்கோட்டை அருகில் உள்ள சிற்றூர்.இங்கே நடைபெறும் குதிரை எடுப்புத் திருவிழாவைக் காண்பதற்காகச் சென்றிருந் தேன். அய்யனார் கோயிலுக்கு நேர்சை செய்து, காணிக்கையாக மண் குதிரைகள் செய்து வந்து செலுத்துவது பிரார்த்தனை!

saa.ka மரங்கள் அடர்ந்த சோலையின் நடுவில் நூற்றுக்கணக்கில் மண் குதிரைகள் நிற்பதைக் காணும்போது, போர்க்களக் காட்சி போலத் தோணும். குதிரைகளின் கம்பீரமும், அவை கால் தூக்கி நிற்கும் அழகும் வியப்பளிக்கும். குறிப்பாக, குதிரையின் மிரட்டும் கண்கள், அதன் வேகம் சொல்லும். மண் குதிரைகள் என்று நம்புவதற்கு இயலாதபடி அதன் வார்ப்பு, காலம் கடந்தும் அங்கே புத்துரு கலையாமல் இருக்கின்றன.

அந்தக் கூட்டத்தில் ஒரு பெரியவரைக் கண்டேன். அறுபதைக் கடந்திருக்கும். செம்புழுதியேறிய வேஷ்டி. தலை, எண்ணெய் காணாமல் சிக்குப்படிந்திருந்தது. பீடிக் கம்பெனியின் விளம்பர பனியனை அணிந்திருந்தார். கோயிலின் இருபுறமும் அடுக்கிவைக்கப்பட்டு, மழையாலும் காற்றாலும், தலையும் கால்களும் வீசி எறியப்பட்ட குதிரைகளின் முன் நின்றபடி, தானாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.

சாமிக்குச் செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டு வெளிர் மஞ்சளும் நீலமும் பூசப்பட்ட புதுக் குதிரைகள் ஓரிடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. வயசாளி மெதுவாக நடந்து, அந்தக் குதிரைகளை தன் விரலால் சுண்டிப் பார்த்தார். முகத்துக்கு நேராகத் தன் கைகளை நீட்டிப் பார்த்தார். பிறகு எரிச்சல் அடைந்தவரைப் போல, ‘‘குதிரையா இது..? கோவேறுக் கழுதை மாதிரியில்ல இருக்கு’’ என்று திட்டினார். அவரை யாரும் சட்டைசெய்யவேயில்லை.

பகல் முழுவதும் அவரைக் கவனித்தபடியே இருந்தேன். அவருக்கு அந்தத் திருவிழாவோ, அதன் மேளதாளங்களோ, சந்தோஷமோ, எதுவுமே பிடிக்கவில்லை. மேளம் அடிப்பவர் முன் போய் நின்றபடி, ‘‘என்னய்யா சாணி மிதிக்கிற மாதிரி அடிக்கிறீங்க..?’’ என்று சத்தம் போட்டார். சாமி கும்பிட வந்த பெண்களைப் பார்த்து, ‘‘சாமி கும்புட வந்தவுளுக மாதிரி தெரியலை… சர்க்கஸ்காரிக மாதிரி மினுக்குறாளுக…’’ என்று ஏசினார்.

திருவிழாவின் சந்தோஷம் அவரைத் தீண்டவே இல்லை. நீண்ட நேரத்துக்குப் பிறகு, அவராக நடந்து போய், வெளிறியிருந்த ஒரு மண் குதிரையின் முன் உட்கார்ந்து, அதை ஆசையாகத் தடவி விட்டபடி இருந்தார். அவர் அருகில் போய் அமர்ந்தேன். என் காதுபடச் சொன்னார்… ‘‘மண் குதிரைதானேன்னு நினைச்சுக்கிட்டாங்க. இதுக்கும் உசிரு இருக்குய்யா! கையை நீட்டிப் பாரு… அது மூச்சு விடுறது உன் புறங்கையில தெரியும். இங்கே நிக்கிற குதிரைங்க எல்லாம் ராத்திரி எல்லோரும் போன பிறகு ஒண்ணுக் கொண்ணு பேசிக்கிட்டு இருக்கும் தெரியுமா… இப்போ செலுத்துற குதிரைங்க எல்லாமே ஊமைக் குதிரைங்க!’’.

நான் ஆமோதித்துத் தலையசைத் தேன். அவர் தொலைவில் உள்ள ஒரு குதிரையைக் காட்டி, ‘‘அது காது அழகைப் பாரேன், செஞ்சுவெச்சு அம்பது வருசமாச்சு… புதுப் பெண்டாட்டி மாதிரி எம்புட்டு அழகா இருக்குது!’’

அவர் காட்டிய திசையில் இருந்த குதிரையைத் திரும்பிப் பார்த்தபோது, அவர் சொன்னது உண்மையாகவே இருந்தது. ‘‘கண்ணுட்டுப் பார்த்தா போதாது… கையால தொட்டுப் பார்த்துட்டு வா!’’

எழுந்து அந்தக் குதிரையைத் தொட் டுப் பார்த்தேன். என்ன அருமையான வார்ப்பு! ‘‘எப்படி இருக்கு?’’ என்று கேட்டார் பெரியவர். நன்றாயிருப் பதாகச் சொன்னேன்.

‘‘மண் குதிரையைத் தொடுறப்போ அதைச் செஞ்சவன் கையைத் தொடுற மாதிரி உணர்ச்சி வரணும். அதெல்லாம் யாருக்கு இருக்கு? பானை, சட்டி, பொம்மைன்னு மண்ல எத்தனையோ செய்றாங்க. அதுல சோறாக்குறோம், கொழம்பு வெக்கிறோம், ஆனா, அதைச் செஞ்சவன் விரல் ரேகையும் அதில் படிஞ்சிருக்குன்னு நாம பாக்குறதே இல்லை!’’ | பெருமூச்சிட்டபடி அவரிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டதும், யாரோ என் முகத்தில் அறைந்தது போல இருந்தது.

நான் அவரின் கைகளை அப்போதுதான் பார்த்தேன். அகலமான கைகள். ‘‘நீங்கள் குயவரா?’’ என்று கேட்டேன். அவர் வேண்டாவெறுப்பாக, ‘‘இங்க இருக்க பாதிக் குதிரைக நான் செஞ்சதுதான்!’’ என்றார். கோபத்துக்கும் எரிச்சலுக்குமான காரணம் அப்போது தான் புரிந்தது.

இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந் தோம். அவர் கையைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஒரு சிறுவனைப் போல ஆசையை அடக்க முடியாமல் கேட்டேன்… ‘‘உங்க கையைத் தொட்டுப் பார்க்கலாமா..?’’

அவர் லேசாகச் சிரித்தபடி, ‘‘கையில் என்னய்யா இருக்கு? மனசுல இருக்கு… அதுதான் மண்ணை வனையுது. மண் லேசுப்பட்டது இல்ல. அதுக்கும் குணம் இருக்கு, வாசம் இருக்கு. கட்டுன பெண்டாட்டியாவது நம்ம சொல் பேச்சுக் கேட்பா… மண்ணு லேசில் படியாது!’’ என்றார்.

அன்று முழுவதும் அவரோடு இருந்தேன். சிதிலமடைந்துபோன குதிரைகளின் தலைகளை, கால்களை அவர் ஓரமாக அடுக்கிவைத்தபடி இருந்தார். திருவிழாவில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் குதிரைகளின் கண்கள் கூச்சம்கொண்டு அசைவது போலவே தெரிந்தன.

நீண்ட உரையாடலுக்குப் பின்பு அவரிடம், ‘‘எதற்காக உங்களுக்கு எதையுமே பிடிக்கவில்லை?’’ என்று கேட்டேன். அவர் ஆத்திரமடைந்தவர் போல, ‘‘நமக்கு என்ன மதிப்பிருக்கு சொல்லுங்க? எல்லாப் பயலுகளும் குடிக்கிறதுக்கும், ஆடுறதுக்கும்தான் வர்றாங்க. மூளி மூளியா மண்ல செஞ்சு கொண்டு வந்து வெச்சா, சாமி எப்படி தரிசனம் கொடுக்கும்? எல்லாம் ஏமாத்தாப் போச்சு! மண்ணோட உள்ள உறவு தாய்ப்பால் மாதிரி. நாம தான் சப்பிச் சப்பிக் குடிக்கத் தெரிஞ்சுக்கணும். அது வத்தாம பாலைக் குடுத்துக்கிட்டுத்தான் இருக்கும்ÕÕ என்றார்.

தனது கலை அழிந்து வருகிறது என்ற கோபத்தின் கீழே வேறு ஏதோ காரணம் இருப்பது போலத் தெரிந்தது. இருட்டில் இருந்து நடந்து சாலையின் விளிம்புக்கு வந்தபோது கேட்டேன், ‘‘உங்ககூட யாரு வந்திருக்கா..?’’

அவர் உடைந்து போன குரலில் சொன்னார், ‘‘இந்த மண் குதிரைகளைத் தவிர, எனக்கு வேற யாருமே இல்லைய்யா! பெத்த பிள்ளைக எல்லாம் பிழைப்பு தேடி மெட்ராசு, பாம்பேனு போயிட்டானுக. ஒருத் தனுக்கும் இந்தத் தொழில் பிடிக்கலை. எனக்கு இதைவிட்டா வேறு தொழில் தெரியாதுய்யா! பரம்பரையா குசவங்க நாங்க. இன்னிக்கு இருக்கனா, செத்தனான்னு பார்க்கக்கூட எனக்கு யாரும் இல்லை. பெரியவங்களை விடுங்க… ஆறு பேரப் பிள்ளைக இருக்குதுங்க. ஒருத்தருக்கும் என்னை வந்து பார்க்கத் தோணலை. என்கிட்ட என்ன இருக்கு? என்னால முடிஞ்சது மண்ணுல ரெண்டு பொம்மை செஞ்சு தருவேன். பேரன், பேத்தி எல்லாம் டவுன்ல இங்கிலீஷ் படிக்கிறவங்க. இதெல்லாம் பிடிக்குமா? ஏழையாப் போயிட்டா, சொந்தத் தாத்தானுகூட பார்க்காம உறவு அத்துப்போயிரும்னு ஆகிப் போச்சுய்யா. நானும் குதிரை செய்றதையெல்லாம் விட்டுட்டேன். மிச்சமிருக்கிறது தலை போன இந்தக் குதிரைகதான். அதுககூட பேசிக்கிட்டுக் கெடக்கிறேன்!’’

என்ன பேசுவது என்று தெரியாத அமைதி என்னைக் கவ்விக்கொண்டது. அங்கிருந்த மண் குதிரைகளைத் திரும்பிப் பார்க்க குற்ற உணர்வு ஏற்பட்டது. அவர் ஆத்திரம் அடங்கா தவர் போலச் சொன்னார்… ‘‘பத்து வருசத்துக்கும் மேலாச்சு… திருவிழாவுக்குக்கூட ஊருக்கு வர மாட்டாங்க. நானும் எந்தப் பிள்ளை வீட்டுக்கும் போறது இல்லை. எவன் கிட்டயும் கையேந்த மாட்டேன். இந்த மண்ணு இருக்கிற வரைக்கும் பொழச்சுக் கிடப்பேன். இல்லேன்னா மண்ணுக்குள்ளேயே அடங்கிருவேன். நானெல்லாம் மண்புழு மாதிரிதேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் மண் ருசி மட்டும்தான்! என்ன… வயசு ஆக ஆக மனசு கேட்க மாட்டேங்குது. பேரன் பேத்திகளைத் தேடுது. வீட்ல நிறைய விளையாட்டுச் சாமான் செஞ்சு போட்டிருக்கேன். என்னிக்காவது என்னைத் தேடி வந்தா விளையாடட்டும். இல்லேன்னா நான் செத்ததும் குழியில அந்தப் பொம்மைகளையும் சேத்துப் பொதைச்சிர வேண்டியதுதான்!’’

பேச்சு அடங்கி நாவு ஒடுங்கிவிட்டது. அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். அது நடுங்கிக்கொண்டே இருந்தது. மண் குதிரைகளில் இவரும் ஒருவர் போலாகிவிட்ட நிலை புரிந்தது.

ரத்த உறவுகள் துண்டிக்கப்பட்டு, பேரன், பேத்தியைப் பார்க்கக்கூட முடியாத நிலை என்பது எத்தனை துக்ககரமானது. அப்படி வாழ்வது மண் குதிரைக்குச் சமமானதுதானோ?

திருவிழா முடிந்து அந்த மைதானமே காலியாகி இருந்த போதும், அதை விட்டு வெளியேறிப் போக மனதற்றுப் போய்விட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத வலி காற்றில் சுற்றிக்கொண்டு இருந்தது. திரும்பி வரும் வழியில் எனக்கு சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதை நினைவுக்கு வந்தது.

ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவைப் பற்றிய கதை. இருவரும் மீன் பிடிக்கப் போகிறார்கள். ஒரு மீன் அவர்களது தூண்டிலில் சிக்காமல் அலைக்கழிக்கிறது. அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தாத்தா முயற்சிக்கிறார். அவரால் முடியவில்லை. பேரன் அதை தான் பிடித்துவிடுவதாக சவால்விட்டு, தூண்டிலோடு போய் மீனைப் பிடித்துவிடுகிறான். பேரனின் வெற்றி தாத்தாவின் சுயபெருமையின் மீது விழுந்த அடிபோல் ஆகிவிடுகிறது. தன்னால் பிடிக்க முடியாத மீனை, பேரன் பிடித்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேரனைத் திட்டுகிறார். ஆனால், அன்றிரவு அவர் மனது பேரனின் சாகசத்தை நினைத்துப் பெருமைப்படுகிறது.

வெளிப்படாத அன்பு என்பது கல்லுக்குள் தேரை இருப்பது போல, தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமலே வாழ்வது போன்றது. தாத்தாவின் அன்பு யாரும் திறக்காத சிப்பிக்குள் உள்ள முத்தைப் போன்றது. அதைத் தீண்டுவதும் கைவசமாக்குவதும் என்றோ அபூர்வமாகவே நடந்தேறுகிறது.

எல்லா வீடுகளிலும் வெளிப் படுத்த முடியாத அன்போடு யாராவது ஒருவர் இருக்கிறார் கள். நம் நிழல் கூடவே வந்தாலும், அது எதையும் பேசுவது இல்லை. அதுபோல இவர்களின் அன்பும்!

அருவியாகச் சப்தமிடும் போதுதான் தண்ணீரை வியந்து பார்க்கிறோம். குளத்தில் அடங்கியுள்ள நீரின் மௌனம் ஒருபோதும் புரிந்துகொள்ளப்படுவதே இல்லைதானோ?

 

சாகித்திய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி, தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர். இவரது ‘சாயாவனம்’ நாவல் தமிழில் குறிப்பிடத்தக்கது. ஓவியம், நுண்கலைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட சா.கந்தசாமி, குறும்படம் மற்றும் ஆவணப் படங்களைத் தயாரித்து வருகிறார். சா.கந்தசாமி தொகுத்த ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள்’ தொகுப்பு, மிகக் கவனமாகவும் நுட்பமாகவும் தொகுக்கப்பட்டது. இவருடைய கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘சா.கந்தசாமி கதைகள்’ என்ற பெயரில் இவரது சிறுகதைகள் மொத்தமாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

நன்றி: கதாவிலாசம் , ஆனந்தவிகடன் பிரசுரம்.

*********

Jun 27, 2010

அழிவின் தத்துவம்-மு.சுயம்புலிங்கம்,

அழிவின் தத்துவம்.

ஆட்டுக் கிடை
வீட்டுக்குப்பை
கொளூஞ்சி ஆவரைsuyambu
நாட்டு உரங்களில் வேர்விட்டு விளைந்த
நெல்லுக்குருசி இருந்தது
ஆரோக்கியம் இருந்தது
இயந்திர உரம்ருசியைக் கெடுத்தது
ஆரோக்கியத்தைக் கெடுத்தது
பூமியை தன்னீரைகெடுத்தே விட்டதுரசாயணம்.

என்னைப் பாதித்தவர்கள்

பங்களா வாசலில்தூக்கம் மெனக்கெட்டுநினைவுகள்
சவைத்துக்கொண்டிருக்கும்கொர்க்காக்கள்.
பிதுங்கிக்கொப்பளிக்கும் ஜலதாரைக்குள்தன்
தன் முழு உடம்பைத் தள்ள
இரும்புபிளேட்டைத்தூக்கும்
தோட்டிகள்

 

நாளைக்கு இந்தியா வல்லரசாகப் போகிறது


எல்லா தேசத்து அதிபர்களுக்கும்
சொல்லப் படுவது
என்னவென்றால்
எங்கள் மண்ணில்
குப்பை கொட்டுவதை
நிறுத்துங்கள்.
இந்த உத்தரவு
இந்த நிமிசம் முதல்
அமல் படுத்தப்படும்.
........
வாக்கரிசி(ரேசன் அரிசி)


நுகர்வோர்
கூட்டுறவுக் கடையில்
கொள்ளை மலிவு
அரிசி.
மூன்று வேளையும்
நாங்கள்
நெல்லுச் சோறு தின்கிறோம்.
எங்கள் வயிறெல்லாம்
அழகான தொப்பை.
நெல்லுச் சோறும்
வடி தண்ணியும்
கொட்டிக் கிடக்கு கால்வாய்களில்
பெருச்சாளிகள்
ஆனந்தமாய் நீச்சலடிக்கின்றன.
தாம்பாளம்
சிந்தச் சிந்த
வாக்கரிசி கொண்டுபோகிறார்கள்
பெண்கள்
எளவு வீட்டுக்கு.
..........
மணல்


எதை
உற்பத்தி செய்தோம்
நாம்.
ஆறுகளில்
மணல் இருக்கிறது..
விவசாயிகளிடம்
நிலம் இருக்கிறது.
மணலையும்
நிலத்தையும்
விற்காமல்
எதை விற்பது..!

நன்றி : suyambulimgam.blogspot.com

*************

Jun 26, 2010

பெயர் தெரியாமல் ஒரு பறவை-வண்ணதாசன்

இந்த நடையிலிருந்து மலையைப் பார்ப்பது போல உட்கார்ந்திருந்தாலும் நான் மலையைப் பார்க்கவில்லை. சிலசமயம் எரிகிற தீயும் மலையில் இன்று எரியவில்லை. மழைக்குத் தயாராகவே பகலின் அடையாளங்கள் முழுவதுமிருந்தது. அதை உத்தேசித்தே தீயை ஒத்திப் போட்டிருக்கலாம். தீ எரிவதைப் பார்க்காமலே புரிந்து கொள்கிற அளவுக்கு இந்த ஒன்றரை மாதத்திற்குள் புலன்கள் படிந்து விட்டிருந்தன. வாடகைக்கு வீடு கிடைத்துக் குடும்பமும் குழந்தைகளும் வந்தபின் அடுப்புத் தவிர வேறெதுவும் தெரியும் என்று தோன்றவில்லை.

1aஇன்று குழப்பமெல்லாம் குப்புறக் கிடந்த அந்தப் பறவையைப் பற்றித்தான்.

சாப்பாட்டையும் ஒரேயடியாக வெளியே முடித்துக் கொண்டு அதிகம் வெளிச்சமற்ற, இந்த வீட்டுக்கான லேசான சரிவில் இறங்கி அருகில் வந்த போதே, வீட்டின் மரக்கதவை வக்கீல் வீட்டுக் கறுப்புநாய் முட்டிக்கொண்டே இருந்தது. மாமிச உறுமலுடன் கீழே முட்டி முட்டி அது ஏற்படுத்துகிற சிறு விம்பல், மேலே இடப்பட்டிருக்கிற கொக்கியின் ஆதாரத்தில் எதிர்ப்படைந்து மறுபடி பொருந்திக்கொள்ள, இந்தத் தொடர்ந்த முயற்சியில் மரமும் இரும்பும் கலந்த சப்தம் விட்டுவிட்டுக் கேட்டது.

இன்றைக்கு அந்தச் செய்கையைச் சிநேகமாக எடுத்துக் கொள்ள முடியாது போயிற்று. இன்றைக்கும் நாளைக்கும் முழுவதுமாக, மற்ற நான்கு அறைவாசிகளும் திங்கட்கிழமை வரும்வரை (ஒருவர் நாளை நிசிக்குமேல் வந்து வெளியில் கிடக்கிற கம்பிக் கட்டிலில் படுத்திருப்பது மறுநாட்காலை தெரியும்) தனியாகத்தான் அடைந்து கிடக்க வேண்டும் எனினும் இந்த நாயின் துணை, தனிமையை அதிகப்படுத்தும் என்றே தோன்றிற்று. மேலும் எனக்கு முன்பு முன்னுரிமை எடுத்துக்கொண்டு, இந்த இருட்டில் அது கதவைத் திறக்கப் பிரயாசைப் படுவதையும் அனுமதிக்க முடியவில்லை. 'ச்சூவ் ' என்ற சப்தம் விசையான கல்போல என்னிடமிருந்து எறியப்பட்டு, அது சற்றே பின் வாங்கிய சமயத்தில் , நான் சாதுரியமாகக் கதவைத் திறந்து நுழைந்து மூடியும் விட்டிருந்தேன்.

நுழைந்த உடனேயே சப்போட்டாப் பழமரத்து வெளவால்கள் வாசனை அடித்தது. இதுவும் இந்த ஊர் காட்டின புது விஷயம். வீட்டின் இரண்டு பக்கமும் சப்போட்டாப் பழமரங்களுடன் இந்த வாசனையும் பிரிக்கமுடியாதபடி அடர்ந்து கிடந்தது இந்த ஊரில்தான்.

எனக்குத் தெரிந்தது வேப்பமரமும் முருங்கை மரமுமே தவிர வேறில்லை. வளவு சேர்ந்த வீட்டில் அம்மைக்கட்டுக்குப் பற்றுப்போட கொழுந்து பறிக்கும் போது வேப்பமரத்தில் மட்டும் ஏறியிருக்கிறேன். முருங்கை மரம் நான்கு வீட்டுக்காரர்களாலும் சதா கண்காணிக்கப்படுகிற ஒன்றாகையால் அதில் ஏறி விளையாட வாய்ப்பில்லை. ஓட்டாஞ்சல்லியில் ஒட்டிச் சிப்ளாக்கட்டை தட்டுவதற்காகப் பிசின் எடுக்கக்கூட அனுமதியில்லாத முருங்கைமரம் யாருக்கு வேண்டும் ? அடை அடையாகக் கம்பளிப் பூச்சி அப்பி, ஓலையைப் போட்டுக் கீழே எரிக்கச் சுருண்டு சுருண்டு தீயின் மீதே விழுந்து சடசடவென்று உயிரின் வெடிப்புடன் எல்லாம் பொசுங்கின ஞாபகம் மட்டுமே இருக்கிறது அதுபற்றி.

சப்போட்டா பார்க்க வசீகரமான ஒரு மரமில்லை என்றாலும் அது பிடித்துப் போயிற்று. கனி தருவதால் மட்டும் என்று தோன்றவில்லை. வந்த இரண்டொரு தினத்தில், தூக்கம் வராது படுத்துக் கிடந்த இருட்டில், மற்றவர் அனைவரும் உறங்க, சன்னமான ஒரு படபடப்பு மாறி மாறிக் கேட்டுக் கொண்டே இருந்தது. அது பழம் தின்னி வெளவால்களுடையது என்று மறுநாள் தெரிந்தது. அந்த வெளவால்களை நான் இதுவரை பார்க்கா விட்டால் கூட அன்றைக்கு இரவில் கேட்ட அந்தச் சன்னமான இறகடிப்புக்கு மாறி மாறிக் கிளைகளில் இடம்தந்த ரகசியமே என்னை இந்த மரத்திடம் சேர்க்கப் போதுமான காரணமாக இருந்தது.

இன்னும் ஒரு அடி, இப்படி சப்போட்டா மரத்தை நினைத்துக் கொண்டே மேலும் வைத்திருந்தால், அந்தப் பறவையைச் சதக்கென்று மிதித்து இருப்பேன்.

உள்ளே நுழைந்ததும் கதவுக்குக் கொண்டி போடுவது, பாதி நடந்ததும் இன்னும் பாதி நடந்தாலே வரப்போகிற கதவின் பூட்டுக்கான குளிர்ந்த துருச்சாவியை இப்போதே எடுத்துக் கொள்வது என்று அனிச்சையாகவே நடந்து பழகியபடி இன்னும் சாவியை எடுத்தபோதுதான் அது தலைக்குப்புறச் சிறகு பறத்திக் கிடந்தது.

திறந்த பூட்டும் சாவியுமாகப் படியிலேயே வைத்துவிட்டு வெளிச்சத்தைப் பொருந்திய நேரத்துக்குள் என்னவெல்லாமோ தோன்றிற்று.

குழந்தைகளை மனிதர்களையெல்லாம் அடித்து இரவோடிரவாக இப்படி வாசல்களில் நிர்த்தாட்சண்யமின்றி எறிந்துபோகிற சமீபத்திய இனக்கலவரங்களின் ஞாபகம் வந்தது. வயலில் அகோரமாய்ச் செத்துக் கிடக்கிற கிழவி, வரிசை வரிசையாக் வயிறூதிக் கிடத்தப்பட்டிருக்கிற சிசுக்களின் வரிசையை அதிகப்படுத்த ஒருத்தன் கைகளில் ஏந்திவருகிற இன்னொரு மல்லாந்த குழந்தையின் ஊதின வயிற்றுத் தொப்பூழ், இறந்து கிடக்கிற தன் குழந்தையின் உடல்கண்டு. அதனருகே உட்கார்ந்து அழுகிற தகப்பனின் கிழிந்த முகம் அப்படிக் கிழிந்த நிலையில் ஒரு கைத்துப்போன சிரிப்புப் போலப் புகைப் படலத்தில் பதிவாகியிருப்பது எல்லாம் கலந்து இந்த ஒற்றைப் பறவையாகக் குப்புறக் கிடந்தது.

மரங்களைப் போலவே பறவைகளை அதிகம் அறிந்தவனுமில்லை. ஒரு நகரம் உனக்குப் போதும் என்று காட்டுகிறவைகளை மட்டுமே பார்த்திருக்கிறவன்தானே நானும். பார்த்திருப்பது எல்லாமே தெரிந்தவை ஆகிவிடாது அல்லவா.

மார்க்கெட்டுக்குப் பக்கத்தில் பலூன் விற்கிறவன் போல நரிக்குறவர்கள் மூங்கில் தட்டியில் ஒருதடவை நிறையத் தேவாங்குகளையும், ஒரு கம்பிக் கூண்டில் காடை கவுதாரி என்று கூவி விற்றுக் கொண்டிருந்தவை தவிர, காக்கையும், அப்புறம் கோழியும்தான் அறிந்த பறவைகள். சுடலைமாடன் கோவில் தெரு சின்னக் கோபால் 'புறாக் காட்டுகிறேன் ' என்று அவனுடைய சொந்தக்காரர் வீடான சாவடிப் பிள்ளை வீட்டுச் சவுக்கைக்குக் கூப்பிட்டுக் கொண்டுபோய்க் கூட்டம் கூட்டமாகப் புறாப் பார்த்தது ஏன் ஞாபகமிருக்கிறது என்றால்,அன்றைக்குப் பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு வராமல், ஊர் சுற்றிவிட்டு வருவதற்காக விளார் விளாராக அடிபட்டதுதான் காரணம். வாய்ப்பாடு ஒப்பிப்பதில் இருந்து புறாப் பார்க்கிற காரியம் நம்மை உருப்படாமல் போகச் செய்யும் என்பது அப்பாவின் தீர்மானம்.

இது என்ன பறவையென்று சத்தியமாகத் தெரியவில்லை. குனிந்து கையில் எடுக்கும்போது முதற்பார்வைக்கு மைனா மாதிரித்தான் இருந்தது. இந்த வீட்டை ஒட்டிய சாலைப் புளியமரத்தில் அடைகிற மைனாக்களில் ஒன்றோ என்றுதான் நினைத்தேன் இதுவரை மைனாக்களைக் கையில் எடுக்கவில்லை என்றாலும் 'இது மைனா இல்லை ' எனும்படியாக மைனாக்களைப் பற்றிய என் அறிவிருந்தது. அந்தப் பறவையும் உறுதி செய்தது அதை.

உடம்பின் அடிப்பாகத்தில் எந்த வெதுவெதுப்புமில்லை. எடுக்கும்போதே கீச்சுகிற அளவுக்குக் கூராக இருந்த நகங்களின் தீவிரக் கூர்மை விரைப்பேறி விட்டிருந்தது, குச்சிபோன்று இருந்த கால்கள், இந்தப் பறவை தரையின் அமர்கையில் தரையை விட்டுப் பறவையை உயர்த்திக் காட்டும் சாத்தியத்துடன் நீண்டிருந்தன. கால்களில் மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு என்று வேற்று நிறம் எதுவுமில்லை. மொத்தப் பறவையுமே சாம்பல் கருப்பின் வெவ்வேறு அடர்த்தியில் வர்ணிக்கப்படும்படியிருந்தது. உயரங்களுடனும் காற்றுடனும் சம்பந்தப்படுத்தியிருந்த தன் ரகசியங்கள் அனைத்தையும் என் முன் விசிறிக் கொள்வது போல, சிறிதுசிறிதாகக் கோர்க்கப்பட்ட இறகுகள், நான் விரித்துப் பார்த்த விரலை எடுத்ததும் அசைந்தசைந்து நுணுக்கமாகச் சுருங்கி நின்றது மறுபடியும். சற்றே செருகின கண்கள். கருத்த சிறிய காட்டுப்பழம் போலத் திரண்டிருந்தது. பறவைகளுக்கும் சாகிற நேரத்தின் துயரம் இருக்கக் கூடும்தான். ஆனால் கருப்பின் திரட்சி அந்தக் கண்களில் அதற்கு முந்தின வினாடியின் சந்தோஷத்தை மிச்சம் வைத்திருந்ததுபோல உணரும் அளவுக்கு அதைக் கையில் ஏந்தியிருந்த நேரத்தில் எனக்குத் தோன்றிவிட்டது.

'சந்தோஷமாக இருந்த ஒரு உயிர் ' என்று நான் அதன் உச்சியைத் தொட, அது கழுத்தைச் சுருக்கிக் கண்களை ஜவ்வாக மூடி ஏற்றுக் கொண்டால் ஆகாதா என்ன ? யோசித்தபடியே வெளியே கிடந்த கம்பிக் கட்டிலில் உட்கார்ந்தேன்.

இந்தப் பிரதேசத்து ஜனங்கள் என்னவோ, சந்தைக்குச் சந்தை இப்படிக் கம்பிக் கட்டில்களைப் புதையல் கிடைத்த மாதிரிச் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு போகிறார்கள். உட்காரக்கூட வசதிப்படாத இதில், ஒரு விரிப்பும் விரிக்காமல், பகலில்கூடத் தூங்குகிற அந்த நண்பர்--அதுதான் நாளைக்கு நடுராத்திரிக்கு வந்து பையைத் தலைக்கு வைத்துப் படுத்திருப்பாரே--இப்போது இருந்தால் என்ன பறவை என்று ஒருவேளை சொல்லக்கூடும்.

அவரிடம்தான் இந்தப் பக்கத்து மனிதரின் தன்மைகளும் குணங்களும் இருந்தன. நல்ல அலுவலகம், கை நிறையச் சம்பளம் எல்லாம் கூட அவரை அவருடைய பிரதேச எளிமையிலிருந்து அப்புறப்படுத்திவிட முடியவில்லை. தன்னுடைய ஜாதிக் கட்டுகளுக்கு அடங்கிய ஒரு கட்டப்பஞ்சாயத்தில் தனக்குக் கட்டிவைத்த பையனை விட்டுவிட்டு, தனக்குப் பிடித்த பையன் ஒருவனுடன் வாழ்வதற்குத் தீர்மானித்த ஒரு சின்னப் பெண்ணின் பதில்களை ஒருநாள் இரவு சொல்லிய, நிகழ்த்திய என்றே சொல்லவேண்டும், விதம் எனக்குப் பிடித்துப் போயிற்று.

அவர் இருந்தால் இந்தப் பறவையின் பெயரைச் சொல்வார். பெயருடன் மட்டும் நிறுத்தாமல் அந்தப் பறவை அதன் வசிப்பிடங்கள், இரை, இரையெடுக்கிற விதம், அதன் முட்டை நிறம், அடைக்காலம், அந்தப் பறவையைத் தாக்குகிற பறவையினம் எது என்று வெவ்வேறு விஷயங்களையும் சொல்லிப் போவார். தன்னுடன் எல்லோரையும் தான் நடக்கிற இடங்களுக்கு நடத்திச் செல்கிறதும், அப்படிக் கிறங்கி மறுபேச்சு இல்லாமல் தன்னுடன் நடந்து வருகிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடப்பதுபோலக் கேட்டு கொண்டிருக்கிற எங்களின் முகங்களை ஒரு தடவை பார்த்துச் சிரித்துக் கொள்வதுமாக அவர் இருக்கவேண்டிய கட்டிலில் நான் இப்படி உட்கார்ந்திருக்கும்படி ஆயிற்று.

உட்கார்ந்திருக்கும்போதே ஈரமான வாடை திரண்டு அப்பியது எதிரே விளிம்பு காட்டுகிற மலைகளில் மேகநிழல் நகர்வதை இங்கு காணமுடிவது போல, பாத்தி பாத்தியாக மழை நகர்ந்து நகர்ந்து வருவதையும் எத்தனையோ தடவை காணமுடிந்துவிட்டது இந்த ஊரை இணைக்கிற ரயில்வே ஸ்டேஷன் பக்கம் பஸ் நிற்கும்போது ஒரு சொட்டு மழை இருக்காது. ஆனால் பஸ்ஸிலிருந்து இறங்கினால் டாக்கடைக்குள் ஓடும்படி பெய்யும். இன்றைக்கு மட்டுமிது புதிதில்லை.

கையிலிருந்த பறவையை அப்படியே போடவும் இல்லை. வீட்டின் நடையிலிருந்து, இடதுபக்க முதல் அறை பிதுங்கி வெளியே நிற்கிற மூலையில் வைத்துவிட்டு வராந்தாவில் நாற்காலியை இழுத்துப் போட்டேன்.

கழற்றிப் போட்ட காலணிகளும் அதைச் சார்ந்த அழுக்கான உறைகளும் செய்தித் தாட்களும் ஊருக்குப் போகிற அவசரத்தில் கழுவாமல் விட்டுப் போயிருக்கிற ரேசர் செட்டுமாக இருக்கிற இந்த முன் தாழ்வாரத்தில் நாற்காலியில் இருக்கிறோம் என்பதிலிருந்து நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக உருவி வெளியில் எறிந்துவிடும் படியாக மழை கனத்துப் பெய்தது. அது பெய்கிற கனத்துக்கு ஏற்பச் சிறுசிறு மாறுதல்களுடன் மழையின் சப்தமும் மாறிக் கொண்டே இருந்தது.

மழையைப் பார்ப்பது போல ஏமாற்றி அழைத்து, மழையைத் தவிர்த்த வேறெங்கேயோ நம்மை அனுப்பி விட்டு மழைமாத்திரம் தனித்துப் பெய்கிற வழக்கமான காரியம்தான் நடந்தது. எந்தச் சூழலிலும் மழை தன்னுடைய தன்னிச்சையைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாகவும், பார்வையாளனாக நாம் இருந்து செய்கிற இடையூறுகளைக்கூட மிகச் சுலபமாக அப்புறப்படுத்தி விடுவதாகவும் மட்டுமே தோன்றுகிறது மறுபடியும், தொலைந்து போனதிலிருந்து நம்மை மீட்டுக்கொண்டு வரும்போது மழை அநேகமாகச் சிரித்துக்கொண்டே நின்று விட்டிருப்பதுதான் தெரியும்.

எப்போது சிகரெட்டைப் பற்றவைத்தோம், ஒன்று இரண்டு என இந்தச் சிவப்பு அவாய்ச் சாம்பல் கிண்ணத்தை அடுத்தடுத்து நிரம்ப வைத்தபோது எதை யோசித்திருந்தோம் என்பதெல்லாம் கூட நினைவில்லை.

தடால் என்ற விரியலுடன் திறந்த மரக்கதவோடு 'ஸார் ' என்று ஒரு சப்தமும், சப்தத்துடன் ஒரு சைக்கிளைத் தள்ளியபடி ஒரு உருவமும் உள்ளே வந்தது. பிரம்பு நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிச் சட்டென்று எழுந்திருப்பதற்கு முன்னால் மறுபடியும் 'ஸார் இல்லையா ' என்று கேட்டது. பதிலுக்கு காத்திராமல், மழைத்தாள் சுற்றிக் கட்டப்பட்டிருந்த அட்டைப் பெட்டியை சைக்கிளின் பின்பக்கத்திலிருந்து அகற்றி உள்ளே கொண்டு வந்து 'என்னைப் பெத்த அம்மா ' என்ற முனகலுடன் வைக்கும் போதுதான் அந்த மனிதரின் உருவமே சரியாகத் தெரிந்தது.

முழுக்க முழுக்க நனைந்துவிட்டிருந்த அவரின் முகம், தாடி, தோள்வரை தொங்கியமுடி, எல்லாவற்றிலும் சொட்டு சொட்டாக இறங்க ஆரம்பித்தது. பனியனுக்கும் அரைக்கால் சட்டைக்கும் கீழே தொடையும் ஆடுசதையும் அளவற்ற உறுதியுடன் ஆனால் சற்றுச் சூம்பியது போன்ற வடிவத்துடன் நீண்டிருந்தன.

சிரித்துக்கொண்டே, 'ரெண்டு நூஸ் பேப்பர் எடுத்துக்கிடுதேன் ஐயா ' என்று பழகின இடம்போல எட்டி எடுத்துக் கொண்டார். அப்படி எட்டும்போது நான் சற்று ஒதுங்கி நின்று அவருக்கு இயங்க இடமளித்ததற்கு நன்றி சொல்லுவது போல 'நீங்க இருங்க சாமி ' என்று சொல்லிக் கீழே உட்கார்ந்தார். செய்தித் தாட்களை இரண்டிரண்டாக விரித்தார். நீவி விட்டார், அட்டைப் பெட்டியின் காது போன்ற மூடியை இரண்டு பக்கமாக மடக்கிவிட்டு, உள்ளிருப்பதை எடுக்க ஆரம்பித்தார்.

புளித்த வாடையுடன் மெதுமெதுவென்று ரொட்டிக் கருகலுக்கே உரிய, மேற்பக்க நிறத்துடன் அவை இருந்தன.

'அடிச்ச மழையில எல்லாம் நனைஞ்சு பொதுமிப்போச்சு ', 'மழையின்னா மழையா ' ' 'இது இப்ப காயலையோ ரெண்டு நாளில் வம்பாப் போகும் ' விளக்கம் போல அவ்வப்போது சொல்லிக்கொண்டு. முதல் வரிசையில் அதிகம் நனைந்து இருந்ததை ஒரு பக்கமாகவும், பெட்டியின் ஆழத்திற் கேற்பக் கூடுதல் குறைவாய் பாதிக்கப்படாது இருப்பதை மிகக் கவனத்துடன் இன்னொரு பக்கமாகவும் வைத்துக் கொண்டே வந்தார். இன்னும் உடம்பு எங்கெங்கே மடங்குகிறதோ அங்கெல்லாம் தண்ணீர் உதிர்ந்துகொண்டே இருந்தது. காற்சட்டையின் ஈரம் அமுக்கப்பட்டுப் பாதத்தைச் சுற்றிப் பெருகியிருந்தது. தலையிலுள்ள ஈரம் தாடி மயிர்க்கற்றைகளில் இறங்கி, அது இறங்கிய இடம் தவிர்த்து வேறெங்கேயோ ஒரு துளியாக முளைத்துத் திரண்டு வடிந்தது. மிகக் கூர்மையாக இருந்த மூக்கு நுனியிலும் தண்ணீர் வழியாமல் இல்லை.

ஒரு பிளாட்டிங் பேப்பரால் ஒற்றுவதுபோல அவர் ரொட்டிகளைப் பட்டும் படாமல் ஒற்றிக் கொண்டிருந்தார். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாத நிலையில் அவர் ரொட்டிகளுடன் மட்டும் கவனம் கொண்டு இருப்பதைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.

'மழைக்கு முந்தி ஆஸ்பத்திரியிலே சேர்த்துப்பிடலாம்னுல்லா நினைச்சேன் '

அவர் பேசியது அனைத்தும் ஒரு வகையில் அந்த ரொட்டிகளுடன் மட்டும் என்றிருந்தது வேறு சொல்ல முடியாத துன்பம் கொடுத்தது. உள்ளே போய்க் கொடியில் கிடந்த துண்டை உருவி எடுத்து அவர் மேல் போட்டேன். கனமான அந்தத் துண்டு தோளில் விழவும் 'அக் ' என்ற சத்தத்துடன் ஏறிட்டுப்பார்த்தார். 'மொதல்லே, எழுந்திரிச்சுத் தலையை துவட்டும்யா '. 'அக் ' மறுபடியும் லேசாகத் திடுக்கிடுவது போன்ற அந்த சப்தத்துடன், மேலே விழுந்த துண்டைப் பற்றிக் கொண்டே எழுந்தார். லேசாகக் கண் கலங்கினது மாதிரி இருந்தது. நடைப்பக்கம் போய் 'அய்யா, துவட்டுகிறதுக்குப் பழைய துணி எதுவும் இல்லையா ' என்றார். 'சும்மா துவட்டும் ' என்ற குரலுக்குக் கீழ்ப்படிவதுபோல மடமடவென்று துவட்டிக் கொண்டார்.

'தீப்பெட்டி இருக்காய்யா ? ' என்று என்னிடம் வாங்கிப் பீடி பற்றவைத்துக் கொண்டே, குத்தவைத்துக் கீழே உட்காரப் போனவர்தான், வெளியே பார்த்துக் கொண்டே--- 'நாயி உள்ள வந்து எதையோ கவ்விக்கிட்டுப் போதே ' என்று சொன்னார்.

எனக்குப் புரிந்துவிட்டது.

'ரொட்டியை இல்லை ' என்று மட்டுமே அவரிடம் சொல்ல முடிந்தது.

***********

Jun 25, 2010

பிரயாணம் - அசோகமித்திரன்

 asoka     மீண்டும் முனகல் ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் குருதேவரின்
கண்கள் பொறுக்க முடியாத வலியினால் இடுங்கியிருந்தன. அவரைப் படுக்க வைத்து நான் இழுத்து வந்த நீளப் பலகை நனைந்திருந்தது. ஒரே எட்டில் அவரிடம் சென்றேன்.
“இனிமேலும் முடியாது” என்றார். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வெள்ளைக் கீறல் கூட இல்லை. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை
பரந்துகிடந்த மலைச்சாரலைச் சிறுசிறு மேகங்கள் அணைத்தபடி இருந்தன. நாங்கள் நடந்து வந்த மலை விளிம்பு அந்த இடத்தில் செங்குத்தாகப் பல நூறு அடிகள் இறங்கி,
அடியில் ஒரு ஓடையைத் தொட்டது. தண்ணீர் தேங்கும் குட்டைபோல அந்த இடத்தில் ஓடை இருந்தாலும் சற்றே தள்ளி, அதுவே ஆவேசத்துடன் பாறைகள் மீது மோதிப் பள்ளத்தில் பாய்ந்து கொண்டிருந்தது. இந்தப் பக்கத்தில் மலை உயர்ந்து கொண்டிருந்தது. நாங்கள் வந்த விளிம்பு ஓரமாக இன்னும் பத்துப் பன்னிரண்டு மைல் போனால் ஒரு
கணவாய் வரும். அதற்குப்பிறகு சிறு புதர்களால் நிறைந்த ஒரு சமவெளிப் பிரதேசம்.
அது ஒரு காட்டை எட்டிக் கரைந்து விடும். அந்தக் காட்டைத் தாண்டியவுடன் ஒரு
சிற்றாறு. அதன் அக்கரையில்தான் முதன் முதலாக மனித வாடை வீசும் ஒரு கிராமம் -
ஹரிராம்புகூர். ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரிராம்புகூரைத் தாண்டி நானும்
குருதேவரும் நடைப் பயணமாக எங்கள் ஆசிரமத்திற்கு வந்து சேர இரண்டு பகல்
பொழுதுகள் தான் தேவைப்பட்டன. இப்போது மலையிலிருந்து பாதி இறங்குவதற்குள் ஒரு
பகல் போய்விட்டது. அரை மணி நேரத்தில் இருட்டிவிடும்.

    நான் என் சாக்கைப் பிரித்துப் பெரியதாக ஒரு துப்பட்டியையும், முரட்டுக்
கம்பளியினால் தைக்கப்பட்ட நீளப் பையொன்றையும் எடுத்தேன். என் குருதேவரைப்
போர்த்தியிருந்த கம்பளத்தையும், துணிகளையும் அகற்றிய பிறகு துப்பட்டியால்
அவரைச் சுற்றிவிட்டு அவர் மெதுவாக அந்தக் கம்பளப் பையில் நுழைந்துகொள்வதற்கு
உதவினேன். பை அவரது தலையையும் மூடிக்கொள்ள வசதியிருந்தாலும் முகத்தை மட்டும்
திறந்து வைத்தேன். கம்பளி மஃப்ளர் ஒன்று இருந்தது; அதை அவர் காது முழுவதும்
மூடியிருக்குமாறு தலையைச் சுற்றிக் கட்டிவைத்தேன். ‘சிறிது கஞ்சி தரட்டுமா?”
என்று கேட்டேன். அவர் கண்களால் “கொடு”  என்றார். சாக்கிலிருந்து மூடியிடப்பட்ட
சிறு தகரப் பெட்டி, இரண்டாம் உலக யுத்தத்தில் சிப்பாய்களுக்குக் கொடுத்த
வட்டமான ஒரு தகரப் பாத்திரம், ஒரு ராணுவத் தண்ணீர் ‘பாட்டில்’ இவை மூன்றையும்
எடுத்தேன். வட்டப் பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டுக்கொண்டு தகரப்
பெட்டியின் மூடியைத் திறந்தேன். அதில் பாதியளவு உறையவைத்த மண்ணெண்ணெய்
இருந்தது. நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து அதன் அருகே கொண்டு போனேன்.
மண்ணெண்ணெய் குப்பென்று பிடித்துக்கொண்டு ஒரே சீராக எரிந்தது. பாத்திரத்தின்
மடக்குப் பிடியை நீட்டிக்கொண்டு ஜூவாலையில் தண்ணீரைச் சுட வைத்தேன். ஒரு கொதி
வந்ததும் என் முதுகுப் பையில் சிறு மூட்டையாகக் கட்டிப் போட்டிருந்த கிழங்கு
மாவில் ஒரு பிடி எடுத்துப் போட்டேன். ஒரு குச்சி கொண்டு கிளறிக்கொண்டே
மாவுத்தண்ணீரைக் காய்ச்சினேன். அது கூழாகிவிடக் கூடாதென்று இன்னும் சிறிது
தண்ணீர் சேர்த்தேன். கஞ்சி தயாராயிற்று. எரிந்துகொண்டிருந்த தகரப் பெட்டியை
அதன் மூடி கொண்டு மூடினேன். நெருப்பு அணைந்து சிறிது மட்டும் வந்தது. கஞ்சியைப்
பாத்திரத்தில் கலக்கியே ஆற வைத்தேன். பொறுத்துக்கொள்ளக்கூடிய சூடு என்று
தோன்றியபோது என் குருதேவரின் தலையை மெதுவாக என் மடிமேல் ஏற்றி வைத்துக்கொண்டு,
கஞ்சியை அவருக்குப் புகட்டலானேன். இரண்டு வாய் குடித்ததும் அவர் ‘போதும்’
என்றார். அவருக்குச் சிறிது தெம்பு வந்திருந்த மாதிரி இருந்தது. மிச்சமிருந்த
கஞ்சியை நான் குடித்தேன். பாத்திரத்தைக் கழுவாமல் ஒரு துணி கொண்டு துடைத்து
வைத்தேன். தண்ணீர் ‘பாட்டி’லில் சிறிதுதான் தண்ணீர் இருந்தது. நான் கீழே இறங்கி
ஓடையில் தண்ணீர் பிடித்துவர அடுத்த நாள் காலையில்தான் முடியும்.

    என் குருதேவர் வாயைத் திறந்தபடி படுத்திருந்தார். அவரிடம் ஒரு வருடம் யோகம்
பயின்ற நான் வாயை எக்காரணம் கொண்டும் மூச்சு விடுவதற்குப் பயன்படுத்தாமல்
இருக்கக் கற்றுக்கொண்டு விட்டேன். ஐம்பது, அறுபது வருட காலம் முதிர்ந்து
யோகியாகவே வாழ்க்கை நடத்திய என் குருதேவர், அந்நேரத்தில் வாயைத் திறந்து
வைத்துக் கொண்டும்கூட மூச்சு விடுவதற்குப் பெரும் உபாதைப்பட்டுக்
கொண்டிருந்தார். பதினைந்து நாட்களுக்கு முன்பு திடீரென்று வயிற்றை அழுத்திப்
பிடித்துக்கொண்டு ”அம்மா” என்று அவர் கீழே விழும்வரையில், அவர் சுவாசம் விடுவதே
மிகவும் கூர்ந்து கவனித்தாலன்றித் தெரியாது. அப்படிப் புலனானால், ஒரு
மூச்சுக்கு இன்னொன்று மிக நீண்ட சீரான இடைவெளிவிட்டு வருவதை உணர முடியும்.
இப்போது அவர் வாயால் மூச்சு விடுவதற்குத் திணறிக் கொண்டிருந்தார்.

    சூரியன் மலைகளின் பின்னால் விழுந்து, மலைகளே மலைகள் மீது பூதாகரமான
நிழல்களைப் படர விட்டுக் கொண்டிருந்தன. இரவும் அந்த நிழல்களும் ஒன்றறக் கலக்கச்
சில நிமிடங்களே இருந்தன. அதற்குள் அங்கே குச்சி குச்சியாக வளர்ந்த பரந்து
கிடந்த செடிகளில் உலர்ந்துபோன சிலவற்றைச் சேகரிக்க நான் முனைந்தேன். எனக்குக்
குளிரவில்லை. மேலங்கியே போட்டறியாத என் குருதேவர் இரு வாரங்களாகக் கம்பளத்தைச்
சுற்றிக்கொண்டு கம்பளப் பையிலும் நுழைந்து கிடக்க வேண்டியிருந்தது. அவருக்குக்
கணப்பு வேண்டும். அர்த்த ராத்திரி அளவில் பனி இறங்க ஆரம்பித்து விடும். ஆவி
போலல்லாமல் பஞ்சுப் பொதிகளாகவும் இறங்கும். என் குருதேவருக்குக் கணப்பு
வேண்டும். இன்னொரு காரணத்திற்காகவும் கணப்பு வேண்டும். பகலில் சில
அடிச்சுவடுகள்தான் காணப்படும். இரவு வேளையில் அந்த அடிச்சுவடுக்குரியவை
வந்துவிடும்.

    உலர்ந்த செடிகளை நான் வேரோடு பிடுங்கிக்கொண்டு வந்தேன். என் கைகளால்
மார்போடு அணைத்துக்கொண்டு வரக்கூடிய அளவு இருமுறை கொண்டு வந்து சேர்ப்பதற்குள்
எல்லாவற்றையும் கண்ணை இடுக்கிக்கொண்டு பார்க்க வேண்டியிருந்தது. என்
குருதேவரைப் படுக்கவைத்து நான் இழுத்து வந்த பலகையுடன் ஒரு விறகுக் கட்டும்
கட்டிவைத்திருந்தேன். அந்த விறகுத் துண்டுகள் இலகுவில் பற்றிக் கொண்டுவிடாது.
பற்றி கொண்டாலும் ஓர் இரவு நேரத்திற்கு மேல் வராது. எங்கள் ஆசிரமத்திலிருந்து
வருடத்திற்கு இரண்டு மூன்று முறை அத்யாவசியத் தேவைகளுக்காக ஹரிராம்புகூருக்கு
நாங்கள் வந்து போகும் போதெல்லாம் பிரயாணத்திற்கு அந்த அளவு கட்டைக்குமேல்
எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இம்முறை அது போதவே போதாது என்று எனக்குத்
தெரிந்துவிட்டது.

    நான் பிடுங்கி வந்த குச்சிகளில் ஒரு கைப்பிடியில் அடங்குபவையை எடுத்து ஒரு
சிறு கூடாரம் மாதிரித் தரையில் பொருத்தி வைத்தேன். என் குருதேவரின் கால்
பக்கமாகத்தான் வைத்தேன். அந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிகவும்
லேசாக வீசிக்கொண்டிருந்தாலும் மலைச்சாரலில் மோதிப் பிரதிபலிக்க
வேண்டியிருந்ததால் ‘கும்’மென்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பல நூறு
அடிகள் கீழே, குறைந்தது அரை மைலுக்கப்பால் பிரவாகமாக மாறும் ஓடை, தொடர்ந்து
இரைச்சல் எழுப்பிக்கொண்டிருந்தது. இந்தச் சப்தங்களும், என் குருதேவரின்
மூச்சுத் திணறலும் தவிர வேறு எதுவும் என் காது கேட்க அங்கிருக்கவில்லை.

    பட்டாசுத் திரி போல் உலர்ந்த குச்சிகள் பற்றிக்கொண்டு எரிந்தன. அந்த
ஜூவாலையில் நுனி மட்டும் படும்படியாக ஐந்தாறு விறகுத் துண்டுகளை ஒரு
சக்கரத்தின் ஆரைக்கம்புகள் போல் வைத்தேன். நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாகத்
தெரிய ஆரம்பித்துவிட்டன.

    ஒரு விறகு பற்றிக்கொண்டு எரிந்தது. நான் பாய்ந்து சென்று அதைக் கையில்
எடுத்து மூன்று, நான்கு வீச்சுகளில் ஜூவாலை விட்டு எரிவதை அணைத்து அது வெறும்
தணலாக எரியும்படி செய்தேன். ஒரு விறகு மட்டும் அதிகமாகப் புகைந்து
கொண்டிருந்தது. அதைத் தரையில் ஒருமுறை தட்டிவிட்டுப் புரட்டி வைத்தேன். புகை
சிறிது கரைந்தது. நான் என் குருதேவரின் பக்கத்தில் போய் உட்கார்ந்துகொண்டேன்.
பின்னர் எழுந்து எங்களிடமிருந்த நீண்ட மூங்கில் கழியை என் பக்கத்தில் எடுத்து
வைத்துக்கொண்டு அமர்ந்தேன். எல்லாப் பக்கத்திலும் உறைந்துபோன பேரலைகள்போல்
மலைச் சிகரங்கள் அந்த இருளிலும் கரும் நிழல்களாகக் கண்ணுக்குத் தெரிந்தன.
பொழுது விடிய இருக்கும் இன்னும் பல மணி நேரத்துக்கு அவற்றைத்தான் நான்
பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். அமைதியாக உட்கார்ந்துகொண்டே இருந்ததில் நான்
எனக்குள்ளே விரிந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. ஆசிரமக்
குடிசைக்குள் என் குருதேவர் எந்த வித உடல் இடர்ப்பாடும் இல்லாமல் படுத்திருக்கும் வேளைகளில் நான் ஒவ்வொரு நாளும் வெட்ட வெளியில் உட்கார்ந்து, இந்த விசால உணர்வைக் காத்திருந்து வரவழைத்துக்கொள்வேன். இப்போது என்னிச்சையின்றி அந்த விசால உணர்வு வர ஆரம்பித்ததும் அதை அகற்றிவிட வேண்டுமே என்ற கவலை வந்தது. அந்நேரம் தூரத்தில் இரு மலைச் சிகரங்கள் அசைந்து என் திசையில் குவிந்து வருவதுபோல் இருந்தது. என் அடிவயிற்றில் திடீரென்று பயம் எழுந்தது. உடனே மன லயம் கலைந்துபோயிற்று. மலைச் சிகரங்களைப் பார்ப்பதை விட்டு ஆகாயத்தைப் பார்த்தேன். தாறுமாறாகச் சிதறிக் கிடப்பதுப்போல் இருந்த
நட்சத்திரங்கள் சீக்கிரத்தில் தனித்தனிக் கூட்டங்களாக் கண்ணுக்குத் தெரிய
ஆரம்பித்தன. முதலில் அந்த உருவங்களுக்கு என் மனம் கற்பிக்கும்படியான தோற்றம்
ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அது மாறி ஒவ்வொரு நட்சத்திரக் குவியலும் வெவ்வேறு
விதமான கை கால்களை நீட்டிக் கொண்டு வெறியுடன் பறந்து செல்லும் உருவங்களாகக் காண
ஆரம்பித்தன. கண்களை மூடிக்கொண்டு மூச்சு விடுவதுகூட ஒரு தாள லயத்துடன்தான்
வந்து கொண்டிருந்தது. அதன் மீது மனத்தைச் செலுத்தியபோதும் என் நினைவுப் பிரக்ஞை
அமிழ்ந்து என்னை உறக்கத்துக்குக் கொண்டு செல்வதை உணர்ந்தேன். அதைத் தடுத்துக்
கண்களைத் திறந்துகொண்டு நட்சத்திரங்களைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் வெவ்வேறு
கூட்டமாகப் பிரிந்து உருவங்களாக மாறும் தருணத்தில் மலைச் சிகரங்களை நோக்கினேன்.
என்னை அறியாமல் என் கவனம் என் குருதேவரின் சுவாச ஒலியில் மீண்டும் லயிக்க
ஆரம்பித்த போது எழுந்திருந்து உட்கார்ந்தேன். நான் எக்காரணம் கொண்டும் அன்றிரவு
என் நினைவை இழக்கக் கூடாது. மலையைத் தாண்டி, சமவெளியைத் தாண்டி, வனத்தைத்
தாண்டி, ஆற்றைத் தாண்டி, ஹரிராம்புகூரை அடைந்தே தீரவேண்டும். என் குருதேவருக்கு
வைத்திய உதவி கிட்டும்படி செய்ய வேண்டும். பனி இறங்க ஆரம்பித்தது. நான்
எங்களிடம் மிகுதியிருந்த ஒரே பழந்துண்டைத் தலையோடு போர்த்திக் கொண்டு ஒரு
தொடையை இன்னொரு தொடை மீது இறக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.

    மலைச் சிகரங்களிடையே புகுந்து வீசிக்கொண்டு செல்லும் காற்றின் ஒலி
எனக்குள்ளேயே கேட்டது. ஓடைச் சப்தமும் கேட்டது. நான் விரிந்து கொண்டிருந்தேன்.
எல்லாத் திசைகளிலுமாக விரிந்து கொண்டிருந்தேன். கணத்துக்குக் கணம் நான்
இலேசாகிக்கொண்டே வந்து எனக்கு எடை, உருவமே இல்லை என்கிற அளவுக்கு விரிந்து,
இன்னமும் விரிந்து கொண்டிருந்தேன். எல்லா ஒலிகளையும் கேட்க முடிந்த எனக்கு
அவையெல்லாம் எங்கோ ஓர் அடித்தளத்தில் மட்டும் இயங்கிக்கொண்டிருந்ததாகத்தான்
தோன்றியது. அப்போது தனியாக ஒரு ஒலி, அவையெல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று,
கேட்டது. அந்த நிலையில், அந்தத் தருணத்தில் அது பொருந்திப் போகவில்லை.
மறுபடியும் அந்த சீறல் வந்தது. நான் நொடிப் பொழுதில் என்னைக்
குறுக்கிக்கொண்டேன். ஒரு வருடப் பயிற்சியில் மன லயத்தில் நான் அடைந்திருந்த
தேர்ச்சி எனக்கு அப்போது வேண்டாததாக இருந்தது. அந்தச் சீறல் மீண்டும் கேட்டது.
என் பக்கத்தில் இருந்த தடியைப் பற்றிய வண்ணம் சீறல் வந்த திசையில் பார்த்தேன்.
இரண்டு மின்மினிப் பூச்சிகள் பளிச்சிட்டன. என் கழியை வீசினேன். முதல் வீச்சில்
அந்த இரட்டை ஒளிப்பொறிகள் சிறிது அசைந்து மட்டும் கொடுத்தன. நான் என் கையை
எட்டி மீண்டும் கழியை வீசினேன். அது எதன் மீதோ தாக்கிற்று. மயிர்
குத்திடக்கூடிய ஊளையொலி கேட்டது. மறுகணம் அந்த ஓநாய் பின் வாங்கி ஓடிச்
சென்றுவிட்டது.

    என் குருதேவரின் பக்கம் பார்த்தேன். நான் வைத்திருந்த விறகுகள் அநேகமாக
எல்லாம் எரிந்து அணையும் தறுவாயில் இருந்தன. நடு ராத்திரியைக்
கடந்திருக்கக்கூடும். நான் தூங்கிப்போயிருந்திருக்கிறேன். தணலாக இருந்த
விறகுகள் கூட முக்காலுக்கு மேல் சாம்பலாகிப்போயிருந்தன. அதன் பிறகுதான் ஒரு
ஓநாய் வந்திருக்கிறது. ஒரு சாண் அளவுக்கு மிஞ்சியிருந்த ஒரு கட்டைத் துண்டை ஊதி
ஊதி ஜூவாலை எழச் செய்தேன். அதைக் கொண்டு என் குருதேவரைத் தலையிலிருந்து கால்வரை
பார்த்தேன். அவர் படுத்திருந்த பையில் கால் பக்கத்தில் சிறிது கிழிந்திருந்தது.
நான் ஓரிரு நிமிஷங்கள் தாமதித்திருந்தால்கூட அந்த ஓநாய் கம்பளப் பையை இன்னமும்
கிழித்து என் குருதேவரின் காலைக் கவ்வியிருக்கும்.

    அந்தக் கட்டை அணைந்து புகைய மட்டும் செய்தது. நான் உறைந்த மண்ணெண்ணெயை ஒரு
விரலில் எடுத்துத் தணல் மீது வைத்தேன். கட்டை பற்றிக்கொண்டு எரிந்தது. அதை என்
குருதேவர் முகத்தருகே கொண்டுசென்று, ”ஐயா” என்று கூப்பிட்டேன். அவர் காதில் அது
விழவில்லை. முன்பு வாயைத் திறந்து படுத்துக்கொண்டிருந்தவர் இப்போது வாயை
மூடிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். நான் தூங்கிக்கொண்டிருந்த வேளையில்
அவருக்குத் தாகம் எடுத்திருக்கக் கூடும்; பசித்திருக்கக்கூடும். நான் “ஐயா”
என்று சொல்லி அவரைச் சிறிது அசைத்து எழுப்பினேன். அவர் அப்படியே இருந்தார்.
அவர் மூக்கருகே என் புறங்கையை வைத்துப் பார்த்தே. அடுத்தபடி என் காதை அப்படியே
அவர் மார்பு மீது அழுத்திக்கொண்டு கேட்டேன். அங்கு காது கேட்பதற்கு
ஒன்றுமில்லை.

    குருதேவரின் சாவு அதிர்ச்சியைத் தரவில்லை. அப்பழுக்கில்லாத தேக நிலை உடைய
அவர் எப்போது நீர் விலகிக் கொண்டிருக்கும்போது கூடத் தன்னை நகர்த்திக்கொள்ள
இயலாத அசக்தி அடைந்திருந்தாரோ அப்போதே நான் எதற்கும் என் மனத்தைத் தயார்
செய்துகொண்டிருந்தேன். என் யோக சாதனை விடுபட்டுவிடும். அவரைத் தேடிக்
கண்டுபிடித்து, அவர் என்னை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மூன்றாண்டு காலத்திற்கும்
மேலாயிற்று. இனி இன்னொரு தகுதி வாய்ந்த குருவை அடைய எவ்வளவு ஆண்டுகள்
பிடிக்குமோ தெரியாது. வேறு குரு கிடைப்பாரா என்பதே சந்தேகம். எனக்கு நிர்ணயம்
செய்யப்பட்டதற்கிணங்கத்தான் எனக்கு வாய்க்கும். ஹரிராம்புகூரை அடைவதற்குள் என்
குருதேவருக்கு ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாது என்பதே அப்போது என் பிரார்த்தனை.
கடைசிச் சுவாசம் என்று தோன்றும்போது சிறிது பசும்பாலை வாயில் ஊற்ற வேண்டும் -
இதை வெகு நாட்கள் முன்பே என் குருதேவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அன்று
அந்தப் பேச்சே பொருத்தமில்லாததாக இருந்தது. ‘என் போன்றவர்களை ஆறடி குழி
தோண்டிப் புதைக்க வேண்டும்’ என்று அவர் சொன்னதும் அபத்தமாகப்பட்டது. அன்று நான்
பசும்பால் விடத் தவறிவிட்டேன். ஆறடி குழி தோண்டியாவது புதைக்க வேண்டும். அதற்கு
எப்படியும் இந்த மலைப்பாறையிடத்திலிருந்து சமவெளியருகில் இறங்கியாக வேண்டும்.
ஆறடி தோண்டி, வெறும் மண்ணை மட்டும் போட்டு மூடினால் போதாது. பெரிய பெரிய
கற்களையும் போட வேண்டும். ஒரு ஓநாய் அவரை முகர்ந்துவிட்டது. அடுத்து, ஒரு
ஓநாய்ப்படை வருவதற்கு அதிக நேரம் பிடிக்காது.

    அப்போது அரைகுறைச் சந்திரன் வந்துவிட்டான். நான் என் குருதேவரைப்
போர்த்திருயிருந்த துணிகள், கம்பளப்பை முதலியவற்றை மெதுவாக உருவி எடுத்தேன்.
என் குருதேவரின் முகம் அற்புதமான அமைதியுடன் காணப்பட்டது. சுவாசத்திற்கும்,
இதயத் துடிப்பிற்கும் நான் தேடியிராவிட்டால் அவர் தூங்கிக்கொண்டுதான்
இருக்கிறார் என்று நினைக்கும்படியான தோற்றம். ஒரு பழந்துணியைக் கிழித்து
அவருடைய கால் கட்டை விரல்களைச் சேர்த்துக் கட்டினேன். அதே போல் கைகள்
இரண்டையும் பிணைத்தேன். ஒற்றை வேஷ்டி கொண்டே அவரைத் தலை முதல் கால்வரை சுற்றி,
கம்பளப் பைக்குள் நுழைத்து, பையின் வாயை இழுத்துக் கட்டினேன். மெதுவாகத் தணல்
எரியும்படி செய்துகொண்டு பொழுது விடிவதற்காகக் காத்திருந்தேன்.
முழங்கால்களுக்கிடையில் தலையைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். கிழக்கு
வானத்தில் வெளிர்ச்சாயம் தோன்றுவதற்குள் என்னைச் சுற்றி இரண்டங்குல
உயரத்திற்குப் பனி உதிர்ந்திருந்தது. அந்த அரை வெளிச்சத்தில் நான் மீண்டும் என்
குருதேவர் கிடந்த பலகையை இழுத்து நடக்க ஆரம்பித்தபோது பின்னால் ஒரு முறை
பார்த்ததில் தூரத்தில் ஒரு உருவம் அசைவதை உணர முடிந்தது. நான் இரண்டாம் முறை
திரும்பிப் பார்த்தபோதும் அது அதே தூரத்தில் வந்துகொண்டிருந்தது. இம்முறை அந்த
ஓநாய் முனகிற்று.

    இறந்தவர்கள் எப்படி எடை கூடக்கூடும் என்று தெரியவில்லை. என் குருதேவரை,
அவர் சுவாசம் இயங்கிக்கொண்டிருந்தபோதைவிட இப்போது இழுத்துப் போவது கடினமாகிக்
கொண்டிருந்தது. காலையில் சற்று நேரத்திற்குத் தலையில் பனியிருந்தபோது பலகை என்
பின்னால் வழுக்கிக்கொண்டு வந்தது. ஆனால், உச்சி வேலை நெருங்குவதற்குள் அங்கு
பனியும் பெய்திருக்குமா என்று தோன்றுமளவுக்கு எல்லாம் உலர்ந்துவிட்டது. இப்போது
நான் இறங்குமுகமாக இருந்தேன். பல சமயங்களில் பலகையை இழுத்து வருவதற்குப் பதில்
பின்னாலிருந்து தள்ளி நகர்த்தி வந்தேன். கனம் அதிகரித்துக்கொண்டே வந்த அந்தச்
சுமை பள்ளத்தில் சரிந்து விழுந்துவிடாமல் பாதுகாத்துக்கொண்டு போவது மிகவும்
சிரமமாக இருந்தது. முன்னிரவு என் குருதேவர் குடித்து மிஞ்சியிருந்த கஞ்சியைச்
சாப்பிட்ட பிறகு நான் எதுவும் உண்ணாமலிருந்தபோதும் எனக்கு பசி எழவில்லை.
இடுப்பும், தோளும் மட்டுமே வலித்தன. நான் எங்கும் நிற்கவில்லை. மறுபடியும் இரவு
வருவதற்குள் மலைப் பிரதேசத்தைக் கடந்து சமவெளியை அடைந்துவிட வேண்டும் என்ற ஒரே
நோக்கமாக இருந்தேன். என் மனத்திடத்திற்கு உடல்திடம் முடிந்தவரையில்
ஈடுகொடுத்தது. ஆனால் அது போதவில்லை. நான் அடிமேல் அடி எடுத்து வைத்துத்தான்
செல்ல முடிந்தது. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மலை நிழல் நீண்டுகொண்டு
போவதை உணர முடிந்தது. இன்னும் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் வெளிச்சம்
இருந்தால் எனக்குப் போதும் ஆனால், எனக்கு அது கிடைக்கத் தவறவிட்டு மீண்டும்
கள்ளிகளுக்காக அலைந்து திரட்டி வைப்பதும் அறிவற்றது. சற்றும் எதிர்பார்க்க
முடியா வண்ணம் பல இடங்களில் பாறை வெடித்துப் பல நூறு அடிகளுக்குச் செங்குத்தாக
இறங்கியது. அந்தப் பிளவுகளின் அடியிலும் செடி கொடிகள் வளர்ந்து படர்ந்திருந்தன.
அந்த ஒரு பகல் நேரப் பிரயாணத்திலேயே நான் அந்தப் பள்ளங்களில் தவறிப்போய்
விழுந்த பல மிருகங்களின் சின்னங்கள் - அழுகி, உலர்ந்து, பூச்சி அரித்து,
காற்றில் சிதறிப்போன சடலங்கள் - கிடப்பதைக் கண்டேன்.

    அதிகரித்துவரும் உடல் சோர்வைக் குறைந்துவரும் வெளிச்சம் சரிக்கட்டி வந்தது.
வெளிச்சம் இம்மியளவு குறைவதையும் என் உடல் முழுதாலும் என்னால் உணர முடிந்தது.
என் உடல் யத்தனம் அதிகரித்தபோதிலும் என் பிரயாணத்தின் வேகம் வெகுவாக
அதிகரிக்கவில்லை. நடப்பதென்றில்லாமல் நகர்வதற்கே மிகுந்த பிரயாசை
எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. என் கண் முன்னால் ஆயிரக்கணக்கான பூச்சிகள்
பறப்பதுபோலத் தெரிய ஆரம்பித்துவிட்டது. இன்னமும் இரண்டு மணி நேரப் பிரயாணம்
இருந்தது. நிமிஷங்கள் செல்லச் செல்ல வெளிச்சம் மறைவதற்குள் நான் மலைப்
பிரதேசத்தைக் கடந்துவிடுவேன் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது. இன்னொரு
இரவு பனி விழும் மலைகளுக்கிடையில் நான் தங்க வேண்டும். பகலில் என் கண்களுக்கு
ஒன்றும் படவில்லை. ஆனால் அந்த உணர்வு என்னுடன் இருந்துகொண்டேயிருந்தது. அந்த
ஓநாய் என்னுடைய ஒவ்வொரு அசைவையும் அறியும். அது வரும்போது தனியாக வராது.

    கண்ணுக்கெட்டும் தூரத்தில் சமவெளி தெரிந்தது. ஆனால் அதை நம்பி நான்
பிரயாணத்தைத் தொடர முடியாது. என் குருதேவரின் சடலம் கிடந்த பலகையை அப்படியே
தழைத்துக் கீழே வைத்துவிட்டு மீண்டும் கள்ளிகலுக்காக அலைந்தேன். நேற்று கிடைத்த
அளவு கிடைகக்வில்லை. நேற்றைவிட இன்று நான் ஒரு நாள் வயது கூடுதலானவன்; உடல்
களைப்பும் பலஹீனமும் அதிகரித்தவன். கிடைத்ததை வைத்து நெருப்புப் பற்றவைத்தேன்.
நான்கே விறகுக் கட்டைகள் பாக்கியிருந்தன. ஒவ்வொன்றாகப் பற்ற வைத்துக்கொண்டு,
தணலாக எரியும் விறகுடன் என் குருதேவரின் சடலத்தைச் சுற்றிச் சுற்றி
வந்துகொண்டிருந்தேன். இன்றும் நான் தங்கிய இடத்திற்குப் பக்கத்திலேயே
செங்குத்தாகப் பள்ளம் இறங்கியது. அங்கு ஓடையில்லை - அது எங்கோ வேறு திசையில்
சென்றுவிட்டது. இந்தப் பள்ளத்தின் அடியில் புதர்தான் மண்டியிருந்தது. நேற்றுப்
பிரயாணத்தை நிறுத்தியபோது எனக்குப் பீதி எழவில்லை. என் குருதேவர் நேற்றும்
உடலால் எனக்கு எவ்வித உதவியும் செய்ய இயலாதவர். அந்த விதத்தில் நேற்றும் நான்
தனியன்தான். ஆனால் நேற்று இல்லாத பீதி இன்று என் அறிவைச்
சுருக்கிக்கொண்டிருந்தது. என் வாழ்க்கையின் சாதனைகள், லட்சியங்கள், சிந்தனை
அடிப்படைகள், ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாம் ஆவியாகப் பறந்துபோய், என்
குருதேவரின் சடலத்தை முழுமையாகச் சமவெளியில் அடக்கம் செய்துவிட வேண்டும்
என்பதைத் தவிர வேறு இலக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தேன். இன்னொரு இரவுப் பனி
உயிரற்ற சடலத்தை ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் என் பற்களிலும்,
எலும்புகளிலும்கூட இழையோடும் பீதியுடன் இருந்தேன். என் உடலெல்லாம் காதாகக்
கேட்டுக்கொண்டிருந்தேன். நன்றாக இருட்டிய பின் காற்றோசையோடு வேறொன்றும் கேட்க
நான் அதிக நேரம் காத்திருக்க நேரவில்லை. மெல்லிய சீறலுடன் பல ஜதை மின்மினிப்
பூச்சிகள் என்னை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.

    நான் ஒரு கையில் கொள்ளிக்கட்டையையும், இன்னொன்றில் மூங்கில் கழியும்
எடுத்துக் காத்திருந்தேன். அந்த இருட்டிலும் என் கண்கள் ஓரளவு பார்க்கத்
தொடங்கிவிட்டன. ஓநாய்கள் கூட்டமாக வந்தாலும் பதினைந்து இருபது அடி
தூரமிருக்கையில் பிரிந்து எங்களைச் சுற்றிவர ஆரம்பித்தன. ஒவ்வொன்றும் உறும
ஆரம்பித்து, சிறிது நடந்து, பின்வாங்கி, ஒருமுறை சீறி, முன்னேறி, பின்வாங்கி,
எங்களைச் சுற்றியவண்ணம் இருந்தது. நிமிஷங்கள் யுகமாக நகர்ந்தன. ஓநாய்கள்
எங்களைச் சுற்றும் வட்டத்தின் விட்டம் அங்குல அங்குலமாகக் குறைய ஆரம்பித்தது.
ஐந்தாறு ஓநாய்கள் முழு வளர்ச்சி பெற்றவை. அவையெல்லாம் வாலைப்
பின்னங்கால்களுக்கிடையில் பொருத்தி வைத்துக்கொண்டு எங்களைச் சுற்றின. நான் என்
குருதேவரின் தலைப் பக்கமாக நின்று கொண்டு, நாற்புறமும் மாறி மாறி என்
கொள்ளிக்கட்டையை ஆட்டியவண்ணம் இருந்தேன். பகலெல்லாம் ஓநாய்களைக் கண்ணெதிரே
பாராமல், ஆனால் அவை எங்களைத் தாக்க எங்கோ தூரத்தில் பின்தொடர்ந்து வருகின்றன
என்ற உணர்வே என்னைப் பெரும் பீதியில் விறைப்பாக இருக்கச் செய்தது. இப்போது
அவற்றை நேரே கண்டவுடன் என் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டது. அந்நேரத்தில் எனக்குச்
சிந்தனைகளே அவ்வப்போது எழாமல் போவதையும் உணர்ந்தேன்.

    நான் மிகவும் நிதானமாக என் கைகளை அசைத்துக்கொண்டிருந்தேன். ஓநாய்கள் எங்களை
இன்னமும் சுற்றிச் சுற்றி வந்தவண்ணமிருந்தன. நான் முதலில் தாக்க வேண்டும் என்று
அவை காத்திருந்ததுபோலத் தோன்றிற்று. எனக்கும் அந்த ஓநாய்க் கூட்டத்துக்குமிடையே
எழுந்திருக்க ஒரு இக்கட்டு நிலையை இருவரும் தீவிரப்படுத்தாமல் இருந்தால் இரவின்
எஞ்சிய நேரம் அப்படியே கழிந்துவிடும் என்றுகூடத் தோன்றிற்று. பகல் என்று
ஏற்பட்டவுடன் ஓநாய்கள் பின்வாங்கிவிடக்கூடும்.

    நான் நிச்சயமாக இருந்தேன். அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல்கூட அப்போது
அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது. தாமாகவே
தங்களுக்குள்ளாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு நியதிக்கு அவை தம்மைக்
கட்டுப்படுத்திக்கொண்டு அதிலிருந்து இம்மியளவு  பிறழத் தயாராக
இல்லாதிருப்பதுபோல எங்களை வலம் வந்துகொண்டிருந்தன. எனக்கு அந்த ஓநாய்கள் மீது
பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு
உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி
வருவதுபோலத் தோன்றிற்று. அப்போது என் கையிலிருந்த கொள்ளிக் கட்டை சட்டென்று
அணைந்துவிட்டது. ஜூவாலை எழுப்ப அதை நான் வேகமாக வீசினேன். அப்போது, அந்த மலைப்
பிரதேசமே மூச்சு விடுவதை அப்படியே நிறுத்திக்கொண்டு ஸ்தம்பித்துக்
கிடப்பதுபோலத் தோன்றிற்று. என் கைக்கட்டை முழுவதும் அணைந்துவிட்டது. அதைப்
போட்டு விட்டுக் கீழே தணல் நுனிகளுடன் கிடந்த கட்டைகளில் ஒன்றைப் பொறுக்கி
எடுக்க நான் தீயின் பக்கம் குனிந்தேன். ஒரு அரைக் கணம் ஓநாய்கள் உறுமுவதுகூட
நின்றுவிட்டது. அடுத்துப் பேரிரைச்சலுடன் பெரிய ஓநாயாக ஒன்று என் மேல்
பாய்ந்தது. என் முகத்திற்கு நேரே பயங்கரமாக விரிந்துவந்த ஓநாயின் வாயில் என் கை
விறகுக் கட்டையைத் திணித்தேன். அது ஊளையிட்டுக் கொண்டு பின் வாங்கிற்று. அந்த
நேரம் வேறு சில ஓநாய்கள் என் குருதேவரின் உடலைப் போர்த்தியிருந்த கம்பளப்
பையைக் கடித்துக் கிழிக்க ஆரம்பித்தன.

    அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில்
சிதறுண்டுபோயின. என்னை ஒவ்வொரு ஓநாயாகத்தான் தாக்கின. ஆனால் உயிரற்றுக் கிடந்த
என் குருதேவரின் சடலத்தின் மீதே கூட்டமாகப் பாய்ந்தன. நான் என் மூங்கில்
கழியைச் சக்கரமாகச் சுற்றினேன். ஒவ்வொரு முறை என் கழி எதையாவது தாக்கும்போது
என் தோள் பட்டை விண்டுவிடுவது போல நான் எதிரடி உணர முடிந்தது.

    இப்போது ஓநாய்கள் என் மீதும் இரண்டு மூன்றாகத் தாக்கின. அந்த நேரத்தில்
எங்களுக்குள் இருளே நிலவாதது போல் இருந்தது. என் ரத்தமும் ஓநாய்களின் ரத்தமும்
தீப்பற்றி வெடித்த வாணம் போல் எங்கள் மேலேயே சிதறி, சுற்றுப்புறமெல்லாம் சிதறி
விழுந்தன.

    ஓநாய்கள் உறுமிக்கொண்டு பாய்ந்து வந்து, பிடுங்கி, அடிபட்டு, பின்வாங்கி,
மீண்டும் பாய்ந்த வண்ணமிருந்தன. அப்போது இன்னொன்றையும் உணர்ந்தேன். என்
சுயநினைவில் கற்பனை செய்தும் பார்க்க முடியாத ஒலிகளை, உரத்த ஒலிகளை, நான்
எழுப்பிக்கொண்டிருந்தேன். அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக
மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை
பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்.

    ஆனால் அது நீடிக்க முடியவில்லை. ஓநாய்ப் படையின் பெரும்பகுதி அடிபட்டு,
ஊனமுற்று ஓடிப்போய்விட்டது. மூன்றுதான் எஞ்சியிருந்தன. என் மேலங்கி பல
இடங்களில் கிழிந்து ரத்தக் கறையோடு தொங்கிக் கொண்டிருந்தது. என் குருதேவரின்
சடலம் வைக்கப்பட்ட கம்பளப் பை எப்போதோ துண்டு துண்டுகளாக்கப்பட்டு விலகிக்
கிடந்தது.

    ஒரு ஓநாய் என் கழியின் வீச்சில் படாமல் என்னைப் பல திசைகளிலிருந்து
தாக்கிக்கொண்டிருந்தது. நான் தழைய வீசினால் அது எகிறிக் குதித்தது. நான் மேலாக
வீசினால் அது தலையைத் தரைமட்டத்துக்குத் தாழ்த்திக் கொண்டது. அதை ஒழித்துவிட
என் வெறியெல்லாம் சேமித்து நான் போரிட்டுக்கொண்டிருந்தேன். அது என்னுடைய
ஒவ்வொரு அசைவையும் உணர்ந்ததாக இருந்தது. ஒரு இரட்டைச் சகோதரனிடம் ஏற்படும்
அன்புடனும், குரோதத்துடனும் நான் அதைத் தாக்கினேன். நான் இருந்த இடம், என்
குருதேவரின் சடலம், மற்ற ஓநாய்கள் ஆகிய எல்லாவற்றையும் மறந்து அந்த ஒரு ஓநாயைத்
துரத்தி ஓடினேன். அது பெரியதாக ஊளையிட்டுக்கொண்டே இருட்டில் ஓடி மறைந்தது. அது
ஊளையிடுவதாகக் கேட்கவில்லை. ஏதோ வெற்றி முரசு முழக்குவதுபோலச் சீறிவிட்டுத்தான்
சென்றிருந்தது. மற்ற இரு ஓநாய்கள் என் குருதேவரின் சடலத்தைக் கவ்வி
இழுத்துக்கொண்டிருந்தன. “ஐயோ” என்று நான் அலறிக்கொண்டு அவைமீது பாய்ந்தேன்.
அதற்குள் என் குருதேவரின் சடலத்துடன் அவை பள்ளத்தில் விழுந்துவிட்டன. அதுவரை
என் கண்ணுக்கு எல்லாமே வெட்ட வெளியாகத் தெரிந்தது தடைப்பட்டுவிட்டது. “ஐயோ,
ஐயையோ!” என்று அலறிக்கொண்டு நான் பாய்ந்தேன். காலில் ஏதோ தடுக்கிற்று - என்
குருதேவரை நான் கிடத்தி இழுத்து வந்த பலகையாகத் தான் இருக்க வேண்டும். நான்
விழுந்தேன். நான் தரையை அணுகுவதற்குள் என் நினைவு நீங்கிவிட்டது.

    நான் மீண்டும் விழித்துக்கொண்டபோது என் மீது லேசான பனிப்போர்வை இருந்தது.
காலைச் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாக என் கண்களைத் தாக்கின. அப்படியே
படுத்திருந்தவன் ஒரு குலுக்கலுடன் எழுந்தேன். பஞ்சுபோலப் பனி சிதறிற்று. நான்
கிடந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த பள்ளத்தில் எட்டிப் பார்த்தேன்.
விளிம்பு ஓரமாக இறங்கி, ஓட்டமும் நடையுமாகப் பள்ளத்தின் அடியை அடைந்தேன்.
ஓநாய்கள் என் குருதேவரின் வயிற்றுப் பாகத்தைக் குதறித் தள்ளியிருந்தன. தலையையே
காணோம். உடலெல்லாம் இரத்தம் வெளிப்பட்டு உறைந்திருந்ததுபோல இருந்தது. கைக்
கட்டை விரல்களைக் கட்டியிருந்த துணி அறுபட்டுக் கிடந்தது. ஒரு ஓநாயின் கால்
அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்டு, என் குருதேவரின் வலது கைப்பிடியில் இருந்தது.

(1969)

*******

Jun 24, 2010

பிரசாதம் - சுந்தர ராமசாமி


எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான். அன்றிரவுக்குள் அவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும். அப்பொழுதுதான் தலைநிமிர்ந்து முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியும். அவள் சிரிப்பதைப் பார்க்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட முடியும். sura-colour-page
ஜங்ஷனுக்கு வந்தான். ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு வளைய வளையச் சுற்றிவிட்டு வந்தான். அதே ஜங்ஷன்தான்.
மெயின் ரஸ்தா ஓரத்தில் ஒரு புருஷனும் மனைவியும் ரஸ்தாவைத் தாண்டுவதற்குப் பத்து நிமிஷமாக இரண்டு பக்கமும் மாறிமாறிப் பார்த்துகொண்டு நின்றார்கள். அவள் ஒக்கலில் ஒரு குழந்தை. கோயிலுக்குப் போய்விட்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது.
’இப்படித்தான் நானும் அவளும் நாளை கோயிலுக்குப் போய் வரவேண்டுமென்று நினைக்கிறாள் அவள்’ என்று எண்ணினான் அவன். குழந்தையின் பிறந்தநாளை எவ்வளவு கோலாகலமாகக் கொண்டாட ஆசைப்படுகிறாள் அவள்! அன்று மாலை பொன்னம்மை சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவன் ஞாபகத்திற்கு வந்தது. அவளுடைய ஆசையே விசித்திரமானதுதான். தெருவழியாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்து போகிற காட்சியை அவள் வியாக்கியானம் செய்ததை அவன் எண்ணிப் பார்த்துக்கொண்டான்.
‘நாளை விடியக் கருக்கலில் எழுந்திருக்க வேண்டும். சுடு தண்ணீரில் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். பட்டுச்சட்டை போட்டு, கலர்நூல் வைத்துப் பின்ன வேண்டும். அந்தப் பின்னலில் ஒரு ரோஜா - ஒன்றே ஒன்று - அதற்குத் தனி அழகு. நாம் இருவரும் குழந்தையைக் கோயிலுக்கு எடுத்துச் செல்கிறபொழுது தெருவில் சாணி தெளிக்கும் பெண்கள், கோலம் இழைக்கும் பெண்கள் எல்லோரும் தலைதூக்கித் தலைதூக்கிப் பார்க்க வேண்டும். அவர்கள் தலைதூக்கிப் பார்ப்பதை நான் பார்க்க வேண்டும். நான் பார்த்து, உங்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் எல்லோரும் பார்ப்பதைப் பார்க்கவேண்டும். பார்த்துவிட்டு என்னைப் பார்க்க வேண்டும்.’
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு ஒரு நிமிஷம் தான் நிற்கும் இடத்தை மறந்து சிரித்தான். சட்டென்று வாயை மூடிக்கொண்டான். தம்பதிகள் ரஸ்தாவைத் தாண்டிப் போய்விட்டார்கள்.
ஆனால் பொன்னம்மை போட்ட திட்டமெல்லாம் நிறைவேறுவதற்கு இன்னும் ஐந்து ரூபாய் வேண்டும். ஐம்பது ரூபாய் செலவாகும்.  ஆனால் பொன்னம்மை அவனிடம் ஐந்து ரூபாய்தான் கேட்டாள். துணிமணி கடனாக வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள். அதை இரவோடு இரவாகத் தைக்கவும் கொடுத்து விட்டாள். சீட்டுப் பணம் பிடித்து குழந்தைக்கு மாலை வாங்கி விட்டாள். பால் விற்று அதையும் அடைத்து விடுவாள். பிறந்தநாளை ஒட்டிய சில்லறைச் செலவுக்காகத்தான் அவள் பணம் கேட்டாள். ஐந்து ரூபாய்க் காசு. வீட்டில் காலணா கிடையாது. காலணா என்றால் காலணா கிடையாது. அன்று தேதி இருபத்தைந்து.
கைத்தடியை பூட்சில் தட்டிக்கொண்டே நின்றான் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு. அவனைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஒரு தடவை பார்த்தவர்கள் அவன் முகத்தை மறக்க முடியாது. முகத்தில் ஆறாத அம்மைத் தழும்பு. அடர்த்தியான புருவம். மண்டி வளர்ந்து இரு புருவமும் ஒன்றாக இணைந்து விட்டது. காது விளிம்பில் ரோமம். மூக்கிற்குக் கீழ் கருவண்டு உட்கார்ந்திருப்பதைபோல் பொடி மீசை.
அவன் பார்வை தாழ்ந்து பறக்கும் பருந்தின் நிழல் மாதிரி ஓடிற்று. நீளமாக ஓடிற்று. வட்டம் போட்டது. குறுக்கும் மறுக்கும் பாய்ந்தது.
‘ஒன்றும்’ அகப்படவில்லை.
கழுத்தில் வேர்வை வழிந்தது. முகத்தில் சோர்வு. அங்கமெல்லாம் அசதி.
சர்வீஸில் புகுந்த பின்பு இன்றுபோல ஒருநாளும் விடிந்ததில்லை. யார் முகத்தில் விழித்தோமென்று யோசித்தான். கண் விழித்ததும் எதிரே சுவர்க் கண்ணாடியில் தன் முகம் தெரிந்தது ஞாபகத்திற்கு வந்தது. சிரித்துக்கொண்டான்.
பகற்காட்சி சினிமா முடிந்து மனித வெள்ளம் தெருவெங்கும் வழிந்தது. நெரிசலிலிருந்து விலகி நின்றுகொண்டான். கூட்டம் குறைந்ததும் மீண்டும் நடந்தான்.
நாலு மணிக்கு ஆரம்பித்த அலைச்சல். மணி ஏழு அடித்துவிட்டது. இன்னும் சில நிமிஷங்களில் எட்டு அடித்துவிடும்.
பொழுது போய்க்கொண்டே இருந்தது. ‘ஒன்றும்’ அகப்படாமலேயே பொழுது போய்க்கொண்டிருந்தது.
அன்று சைக்கிளில் விளக்கில்லாமல் போவாரில்லை. சிறு நீர் கழிப்பதற்குப் பிரசித்தமான சந்துகள் ஒன்று பாக்கியில்லாமல் தாண்டி வந்தாகிவிட்டது. சந்துக்குள் நுழைபவர்களின் கண்களுக்குத் தென்படாமல், நின்று நின்று பார்த்தாகிவிட்டது. கால்வலி எடுத்ததுதான் மிச்சம். ஒரு குழந்தைகூட ஒன்றுக்குப் போகவில்லை.
முன்பெல்லாம் நம்மவர்கள் சாதாரண மனிதர்களாக இருந்தார்கள். இப்பொழுது பிரஜைகளாகி விட்டார்கள். பொறுப்பு உணர்ச்சி கொண்ட பிரஜைகள் நீடுழி வாழ்க!
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு முகத்தைச் சுளித்துக் கொண்டான்.
மீண்டும் ஜங்ஷனிலிருந்து கிளம்பி, வடதிசை நோக்கி நடந்தான். நின்று நின்று நடந்தான். சிறிது நடந்துவிட்டு நின்றான். நடந்தான். நின்றான்.
கோபம் கோபமாக வந்தது.
எதிரே வந்த டாக்சி கார்களை எல்லாம் பட்பட்டென்று கை காட்டி நிறுத்தினான். எல்லோரும் ஒழுங்காக லைசன்ஸ் வைத்திருக்கிறார்கள். ஐந்து பேர் போக வேண்டிய வண்டியில் மூன்றுபேர் போகிறார்கள். நாலுபேர் போகவண்டிய வண்டியில் டிரைவர் மட்டும் போகிறான்.
பேஷ்! இனிமேல் இந்த தேசத்தில் போலீஸ்காரர்கள் தேவையில்லை.
கூலிகள் யாரையாவது அதட்டிப் பார்க்கலாம். ஒருவரையும் காணோம். புது சினிமா ஆரம்பமாகிற நாள். ஒருவரையும் காணோம்.
எல்லாக் கழுதைகளும் சினிமாவில் காசைக் கரியாக்குகிறார்கள்.
அந்தி மயங்குகிற சமயம் ‘கூல்டிரிங்’ கடையில் ‘ஸ்பிரிட்’ வியாபாரம் ஆரம்பமாகும். மதுவிலக்கு அமுலிலிருக்கும் பிராந்தியம் இது. கடையின் வாசலில் போய் நின்றுவிட்டால் போதும். மாதாந்திரப்படி கையில் விழுந்துவிடும். பிறந்தநாளை ஜமாய்த்து விடலாம்.
ஆனால் கடை பூட்டியிருக்கிறது.
அவன் பாட்டிக்குக் குழந்தை பிறந்திருக்கும்! வியாபாரத்தைக் கண்ணுக்குக் கண்ணாகக் கவனிக்க வேண்டாமோ?
சந்திலிருந்து ஒரு குதிரை வண்டி திரும்பி மெயின் ரஸ்தாவில் ஏறிற்று. சாரதி சிறுபயல். மீசை முளைக்காத பயல். அவனும் விளக்கேற்றி வைத்திருக்கிறான்!
வண்டி அருகே வந்தது.
“லேய், நிறுத்து.”
குதிரை நின்றது.
“ஒங்கப்பன் எங்கலே?”
“வரலே.”
“ஏனாம்?”
”படுத்திருக்காரு/”
“என்ன கொள்ளே?”
‘வவுத்தெ வலி.”
“எட்டணா எடு.”
“என்னாது?”
“எட்டணா எடுலே.”
“ஒம்மாண இல்லை.”
“ஒங்கம்மெ தாலி. எடுலே எட்டணா.”
“இன்னா பாரும்” என்று சொல்லிக்கொண்டே பயல் நுகக்காலில் நின்றுகொண்டு வேஷ்டியை நன்றாக உதறிக் கட்டிக்கொண்டான்.
“மோறையைப் பாரு. ஓடுலெ ஓடு. குதிரை வண்டி வச்சிருக்கான் குதிரை வண்டி. மனுசனாப் பொறந்தவன் இதிலே ஏறுவானாலே.”
குதிரை நகர்ந்தது.
தபால் ஆபிஸ் பக்கம் வந்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. எதிர்சாரி வெற்றிலைப் பாக்குக் கடை பெஞ்சில் அமர்ந்தான். தொப்பியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான். தலையைத் தடவிவிட்டுக் கொண்டான். கையெல்லாம் ஈரமாகி விட்டது. எரிச்சல் தாங்க முடியவில்லை. தொடை நோவும்படி நிக்கரில் பிசைந்து பிசைந்து துடைத்துக் கொண்டான். மேற்கும் கிழக்கும் பார்த்தான்.
அப்பொழுது தபால் நிலையத்தை நோக்கி ஒரு கனமான உருவம் வருவது தெரிந்தது. எங்கோ பார்த்த முகம் போலிருந்தது. கிருஷ்ணன் கோயில் அர்ச்சகரோ?
கிருஷ்ணன் கோயில் அர்ச்சர் தபால் ஆபிசில் நுழைந்தார். கூர்ந்து கவனித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
அர்ச்சகர் கையில் ஒரு நீள உறை. எழுந்து பின்னால் சென்றான். அர்ச்சகர் தபால் பெட்டியருகே சென்று விட்டார்.
“வேய்?”
சட்டென்று திரும்பினார்.
“இங்கே வாரும்.”
“இதெ போட்டுட்டு வந்துடறேன்.”
”போடாமெ வாரும்.”
அர்ச்சகர் ஸ்தம்பித்து நின்றார்.
“வாரும் இங்கே.” - ஒரு அதட்டல்.
அர்ச்சகர் தயங்கித் தயங்கி வந்தார்.
நல்ல கனமான சரீரம். மொழுமொழுவென்று உடம்பு. உடம்பு பூராவும் எண்ணெய் தடவியதுபோல் மினுமினுப்பு. வளைகாப்புக்குக் காணும்படி வயிறு.
அர்ச்சகர் முன்னால் வந்து நின்றார்.
“அதென்னது கையிலே?”
“கவர்.”
“என்ன கவரு?”
“ஒண்ணுமில்லை. சாதாக் கவர்தான். தபால்லே சேர்க்கப் போறேன்.”
“கொண்டாரும் பாப்பம்.”
வாங்கிப் பார்த்தான். உறையோடு ஒரு கார்டுமிருந்தது. கார்டு, யாரோ யாருக்கோ எழுதியது. நீள உறை உள்ளூர் டி. எஸ். பி. அலுவலகத்திற்குப் போகவேண்டியது.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகர் முகத்தை வெறிக்கப் பார்த்தான்.
அர்ச்சகர் முகம் சிவந்தது.
இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அர்ச்சகர் முகம் மேலும் சிவந்தது.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு ஒரே சந்தேகம். ஒரே சந்தோஷம்.
அவனுடைய மகள் அதிருஷ்டசாலிதான்!
“இந்தக் கவர் உம்ம கையிலே எப்படி சிக்கிச்சு?”
குரலில் அதிகார மிடுக்கேறி விட்டது.
அர்ச்சகர் உதட்டைப் பூட்டிக்கொண்டு நின்றார். முகம் தொங்கிப் போய்விட்டது.
“வாயிலே கொளுக்கட்டையோ?”
அதற்கும் பதிலில்லை.
“மயிலே மயிலே எறகு போடுன்னா போடாது. நடவும் ஸ்டேஷனுக்கு.”
‘ஸ்டேஷனுக்கு’ என்ற வார்த்தை காதில் விழுந்ததும் உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது அர்ச்சகருக்கு.
அர்ச்சகர்  முதுகைப்பிடித்து இலேசாகத் தள்ளினான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
அர்ச்சகர் தட்டுத்தடுமாறிப் பேச ஆரம்பித்தார்.
“நான் சொல்றதெ கொஞ்சம் பெரிய மனஸு பண்ணி தயவாக் கேக்கணும். எனக்குப் போராத காலம். இல்லைன்னா...”
“இழுக்காமெ விசயத்துக்கு வாரும்.”
“எனக்குப் போராத காலம். இல்லென்னா இந்த ஸந்தி வேளையிலே, நட்ட நடுக்க ஏதோ திருடன் மாதிரி, ஏதோ கொள்ளைக்காரன்  மாதிரி, ரவுடி மாதிரி, ஜேப்படிக்காரன் மாதிரி...”
”அட சட்! விசயத்தை கக்கித் தொலையுமே. இளு இளுன்னு இளுக்கான் மனிசன்.”
“இதோ இந்த கார்டெ சேக்கப்போனேன். கோவிலுக்குப் பக்கத்திலெ தபால் பெட்டி தொங்கறது. தொங்கற தபால் பெட்டியிலே இந்தக் கார்டெ சேக்கப்போனேன்.”
“போற வளியில இந்தக் கவர் ரோட்டிலே படுத்துக்கிட்டு, அர்ச்சகரே வாரும் வாரும்னு கூவி அளச்சதாக்கும்!”
“நான் சொல்றத கொஞ்சம் பெரிய மனஸு பண்ணி தயவாக் கேக்கணும். தொங்கற தபால் பெட்டியிலே இந்தக் கார்டெ போடப் போனேன். போட முடியலெ.”
“கை சுளிக்கிடிச்சோவ்?”
“இல்லெ. இந்த நீளக்கவர் தொங்கற தபால் பெட்டியிலெ வாயெ மறிச்சுண்டிருந்தது.”
”ஆமாய்யா! அப்படி கொண்டாரும் கதெய.”
“கதை இல்லை. நெஜத்தெ அப்படியே சொல்றேன். தொங்கற தபால் பெட்டியிலே இந்த நீளக்கவர் வாயெ மறிச்சுண்டு வளஞ்சு கெடந்தது.”
“அட...டா...டா!”
“இந்தக் கார்டெ ஆனமட்டும் உள்ளே தள்ளிப் பார்த்தேன். தள்ளித் தள்ளிப் பார்த்தேன். உள்ளே போகமாட்டேன்னு சொல்லிடுத்து.”
“சொல்லும் சொல்லும்”
“தொங்கற தபால் பெட்டி வாய் நுனியிலே அப்படியே ரெண்டு விரலெ மட்டும் உள்ளே விட்டு நீளக்கவரெ வெளியிலே எடுத்தேன்.”
“அபார மூளெ!”
“சொல்றதெ கொஞ்சம் கேளுங்களேன். நான் ஒரு தப்பும் பண்ணலெ. தப்புத் தண்டாவுக்குப் போறவனில்லே நான். ஊருக்குள்ளெ வந்து விசாரிச்சா தெரியும். நாலு தலமொறயா நதீக்கிருஷ்ணன் கோவில் பூசை எங்களுக்கு. இன்னித் தேதி வரையிலும்....”
“அட விசயத்தை சுருக்கச் சொல்லித் தொலையுமெ அய்யா. செக்குமாடு கணக்கா சுத்திச் சுத்தி வாரான் மனுசன்.”
”தொங்கற தபால் பெட்டி வாயிலெ ரெண்டு விரல் மட்டும் விட்டுக் கவரை வெளியிலெ எடுத்து, கார்டையும் கவரையும் சேத்துப் போடப் பாத்தேன். முடியலெ.”
“முடியாது முடியாது.”
“தள்ளித் தள்ளிப் பார்த்தேன். கவர் மடிஞ்சு மடிஞ்சு வாயெ அடச்சது. என்ன சேறதுனு தெரியலெ. திருதிருன்னு விழிக்கறேன். மேலையும் கீழையும் பாக்கறேன். முன்னும் பின்னும் போகலெ எனக்கு. என்னடா சேறதுன்னு யோசிச்சேன். சரி, அந்த நதீக்கிருஷ்ணன் விட்ட வழின்னு மனசெ தேத்திண்டு, பெரிய தபாலாபீஸிலெ கொண்டு வந்து சேத்துப்புடறதுன்னு தீர்மானம் பண்ணிண்டு வறேன்.”
“அவ்வளவும் கப்ஸா, அண்டப் புளுகு!” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“ஒரே அடியா அப்படிச் சொல்லிடப்படாது. நான் சொன்னதெல்லாம் நெஜம். கூட்டிக் கொறச்சுச் சொல்லத் தெரியாது எனக்கு. மந்திரம் சொல்ற நாக்கு இது. பொய் வராது.”
“சரி சரி. ஸ்டேசனுக்குப் போவோம்.”
அர்ச்சகர் எழுபத்திமூன்று நாற்பத்தியேழின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். அவர் அடைந்த கலவரம் பேச்சில் தெரிந்தது. ஸ்பரிசத்தில் தெரிந்தது. முகத்தில் பிரேதக்களை தட்டிவிட்டது.
”நான் பொய் சொல்லலெ; நான் ஒரு தப்பும் பண்ணலெ. நான் சொல்றது சத்தியம். நதீக்கிருஷ்ணன் கோவில் மூலவிக்கிரகம் சாட்சியாச் சொல்றேன். நான் சொல்றது பொய்யானா, சுவாமி சும்மாவிடாது. கண்ணெப் புடுங்கிப்புடும். கையெயும் காலையும் முடக்கிப்புடும்.”
“உடம்பெ அலட்டிக்கிடாதெயும். ஸ்டேஷனுக்கு வாரும்.”
அர்ச்சகர் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் அவன்.
அர்ச்சகர் மெதுவாகக் கையை இழுத்துக்கொண்டு பின் தொடர்ந்தார். அவருக்கு உடம்பெல்லாம் கூசியது. அவமானத்தால் உள்வாங்கி நடந்தார். அவருக்குத் தெரிந்த ஆயிரமாயிரம் பேர்கள் சுற்றிச் சூழ நின்றுகொண்டு வேடிக்கைப் பார்ப்பது போலிருந்தது. எல்லோரும் அதிசயத்தோடு பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
பஜாரைத் தாண்டித்தான் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். எல்லா வியாபாரிகளையும் அவருக்குத் தெரியும். வியாபாரிகளின் ஜென்ம நக்ஷத்திரன்று கோயிலில் பூசை செய்து பிரசாதம் கொண்டுபோய் கொடுப்பார். எல்லோருக்கும் அவரிடத்தில் மதிப்பு. அவர்கள் முன்னால் நடந்துபோக வேண்டும். எல்லோரும் கடை வாசலில் நின்று பார்ப்பார்கள்.
அர்ச்சகருக்குத் தான் ஜெயில் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நிற்பது மாதிரித் தோன்றிற்று. மனைவியும் குழந்தைகளும் முன்னால் நின்று நெஞ்சிலடித்துக்கொண்டு அழுகிறார்கள். போலீஸ் சேவகன் வந்து தடியால் அவர்களை வெளியே தள்ளுகிறான்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து விடுவோமா என்று எண்ணினார் அர்ச்சகர். குய்யோ முறையோ என்று கத்தி கூட்டத்தைக் கூட்டுவோமா என்றும் எண்ணினார். நூறுபேர் கூடத்தானே செய்வார்கள். நூறுபேர் கூடினால் தெரிந்தவர்கள் பத்துபேர் இருக்கத்தானே செய்வார்கள். ‘இது என்ன அநியாயம்’ என்று முன்வந்து சொல்ல மாட்டார்களா?
ஆனால் வாயைத் திறந்தாலே முதுகில் அறை விழுமோ என்று பயந்தார். மேலும் அவருக்குத் தொண்டையை அடைத்தது. நிமிஷத்திற்கு நிமிஷம் வயிற்றிலிருந்து கனமான ஏதோ ஒன்று மேலெழும்பி நெஞ்சைக் கடைந்தது. துக்கத்தை விழுங்கி விழுங்கிப் பார்த்தார். ரோட்டிலேயே அழுதுவிடுவோமோவென்று பயந்தார்.
மெயின் ரஸ்தா இன்னும் வரவில்லை. இருமருங்கிலும் ஓங்கி வளர்ந்திருந்த வேப்பமரங்கள் இருளைப் பெய்துகொண்டிருந்தன. அர்ச்சகர் துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார்.
சிறிதுதூரம் சென்றதும் நின்றார் அர்ச்சகர். தெரு விளக்கின் ஒளி அவர் முகத்தில் விழுந்தது. எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அவர் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தன. அர்ச்சகர் துண்டால் மூக்கைத் துடைத்துக்கொண்டு சொன்னார்:
”நான் ஒரு தப்பும் பண்ணலெ. ஒரு தப்பும் பண்ணலெ.” இதைச் சொல்லும்போது அழுதுவிட்டார் அவர்.
“நான் என்ன வேய் செய்ய முடியும்? நான் என் டியூட்டியெ கரெக்டா பாக்கிற மனுஷன்.”
“நான் சொல்றது நம்பிக்கையில்லையா?”
“நம்பிக்கையெப் பொறுத்த விஷயமில்லே வேய் இது. ஸ்டேஷனுக்கு வாரும். இன்ஸ்பெக்டருக்கிட்டே விஷயத்தைச் சொல்லும். இன்ஸ்பெக்டரு விட்டா நானா பிடிச்சுக் கட்டப் போறேன்?”
“இன்ஸ்பெக்டர் விட்டுடுவாரோ?”
“எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்?”
“இன்ஸ்பெக்டர் வெறொண்ணும் செய்யமாட்டாரே?”
”என்னது?”
“இல்லே.... வந்து.... அடிகிடி இந்த மாதிரி...” அதைச் சொல்வதற்கே வெட்கமாயிருந்தது அவருக்கு.
இத்தனை பெரிய சரீரத்தில் அதைவிடவும் பெரிய கோழைத்தனம் குடிபுகுந்திருப்பதை எண்ணி மனதுள் சிரித்துக்கொண்டான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“அடிகிடியெல்லாம் கேஸைப் பொறுத்தது. அடிக்கப்படாதுன்னு சட்டமா? சந்தேகம் வந்திடிச்சின்னா எலும்பெ உருவி எடுத்துடுவாங்க. அதிலேயும் இப்ப வந்திருக்கிற இன்ஸ்பெக்டரு எமகாதகன். நச்சுப்புடுவான் நச்சு.”
”ஐயோ, எனக்கு என்ன செய்யணும் தெரியலையே” என்று அர்ச்சகர் பிரலாபித்தார். அந்தக் குரல் எழுபத்திமூன்று நாற்பத்தியேழின் மனதைத் தாக்கிற்று.
“உம்மைப் பார்த்தா எனக்கு எரக்கமாகத்தான் இருக்குது.”
“அப்படீன்னா என்னெ விட்டுடுமே. உமக்கு கோடிப்புண்ணியம் உண்டு.”
”அது முடியுமா? கேஸிலே புடிச்சா விடமுடியுமா? வெளெயாட்டுக் காரியமா? உத்தியோகம் பணயமாயுடுமே.”
அர்ச்சகர் சிலைபோல் நின்றார்.
மீண்டும் எழுபத்திமூன்று நாற்பத்தியேழுதான் பேச்சை ஆரம்பித்தான்.
“ஒண்ணு வேணாச் செய்யலாம்; அதும் பாவமேணு பாத்துச் செய்யணும்.”
“என்னது?”
“எச்.ஸீ. ட்டெச் சொல்லிக் கேஸை ஒரு மாதிரியா வெளிக்கித் தெரியாமெ ஓச்சுடலாம்.”
“அதாரு எச். ஸி?”
“ஹெட் கான்ஸ்டபிள்.”
“அப்படின்னாச் சொல்லும். நீர் நன்னா இருப்பேள். நதீக்கிருஷ்ணன் ஒம்மைக் கண் திறந்து பாப்பன்.”
”எஸ். ஸி. முன்னாலெ போய் இளிக்கணும். அதிலேயும் பெரிய சீண்ட்றம் புடிச்ச மனிசன் அவன். உடனே கொம்புலெ ஏறிடுவான். கால் மேலே காலெப் போட்டுக்கிடுவான்.”
“நீர் எனக்காகச் சொல்லணும். இல்லைன்னா நான் அவமானப்பட்டு அழிஞ்சி போயுடுவேன். இது பணத்தாலெ காசாலெ நடத்தற ஜீவனமில்லெ. கேஸுகீஸுன்னு வந்துடுத்தா உத்தியோகம் போயுடும். நான் சம்சாரி. அன்னத்துக்கு லாட்டரியடிக்கும்படி ஆயுடும். ஒரு மனுஷன் முகத்திலே முழிக்க முடியாது. நீர் எச். ஸிட்டெ சொல்லும். இந்த ஆயுஸு பூராவும் நதீக்கிருஷ்ணனோட சேத்து உம்மையும் நெனைச்சுப்பேன்.”
“அது சரிதான் வேய். உம்ம வயித்திலே மண்ணடிக்கணுங்கற ஐடியா கெடயாது எனக்கு. எச். ஸி. ஒரு மாதிரி ஆளு. ஈவு இரக்கம் அவன் போன வளியிலே கிடையாது. மேலும் பெரிய துட்டுப்பிடுங்கி.”
”என்னது?”
“துட்டுப்பிடுங்கி. காணிக்கை வச்சாத்தான் சாமி வரம் தரும். இந்த எளவுக்காகச் சுட்டித்தான் அந்த மனுசங்கிட்டே வள்ளிசா சிபாரிசுக்கு போறதில்லை நான்.”
“என்ன கொடுக்கணும்?”
“அஞ்சு பத்து கேப்பான்.”
“அஞ்சா? பத்தா?”
“பத்து ரூபாய்க் காசில்லாமெ ஒரு கேஸெ ஓய்ப்பானா?”
“பத்து ரூபாயா!”
“ஏன் வேய்?”
“பத்து ரூபாய்க்கு இப்போ நான் எங்கே போறது?”
”வேணும்னா செய்யும். இல்லைன்னா வருது போலே பாத்துக்கிடணும்.”
அர்ச்சகர் வாய் திறவாமல் நடந்தார். மீண்டும் எழுபத்திமூன்று நாற்பத்தியேழுதான் பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன? என்ன சொல்லுதீரு?”
“ஊஹூம். நான் எங்கே போவேன் பத்து ரூபாய்க்கு?” கணீரென்ற குரலில் சொன்னார் அர்ச்சகர். எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு கோபம்தான் வந்தது.
“இப்போ யாரு வேய் தரணும்னு களுத்தெப்புடிக்கா? யாரோ லஞ்சம் புடுங்குதாப்லெ படுதீரே. துரிசமா நடவும். இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போகுதுக்கு முன்னாடி போயுடணும். கொஞ்சம் கஷாயம் குடிச்சாத்தான் உடம்புக்கு சரிப்பட்டு வரும் உமக்கு.”
”ஒடனெ கத்தரிச்சுப் பேசறேரே.”
“கத்தரியுமில்லெ இடுக்கியுமில்லெ. வாய் பேசாமெ நடவும்.”
சிறிது நேரம் சென்றதும் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“இப்பம்தான் ஞாபகம் வருது. அன்னைக்கு டி.எஸ்.பி. ஆபிஸிலேருந்து ஒரு கடிதாசி வந்துச்சு. டி.எஸ்.பி. ஆபிஸிலேருந்து காயிதமெல்லாம் மாயமா மறஞ்சு போகுதாம். காக்கிச் சட்டைக்காரங்க நாந்துக்கிட்டு சாகப்படாதாங்கற தோரணையிலே எழுதியிருந்தாங்க. இப்பம்தாலா விஷயம் தெரியுது?”
”என்ன தெரியுது?”
“சட், வாயெ மூடிட்டு வாரும். வாயைத் தொறந்தீர்னா பொடதிலே வச்சிடுவேன். ஸ்டேஷனுக்கு உள்ளே ஏத்தினம் பெறவுல்லா இருக்கு.”
“பகவான் விட்டது வழி.”
இருவரும் ஸ்டேஷன் பக்கம் வந்துவிட்டார்கள். எழுபத்திமூன்று நாற்பத்தியேழுதான் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான்.
“நல்ல மனுசங்களுக்கு இது காலமில்லே. எத்துவாளி பயகளுக்குத்தான் காலம். ஈவு இரக்கம் இருக்கப்படாது.”
“ஏனாம்?”
“பாருமே, மலைமாதிரி குத்தம் பண்ணிப்புட்டு நிக்கேரு. நீரு உடற கதெயெல்லாம் ஒரு பயவுளும் நம்பப்போவதில்லை. கோயில் குளிக்கற மனுசன் தெரியாத்தனமா ஆம்பிட்டுக்கிட்டு முளிக்காரு. அடியும் உதையும் பட்டு, அவமானமும் பட்டு அலக்களிஞ்சிப் போகப் போறார்னு ஐடியா சொன்னா, காதிலெ ஏறமாட்டேங்குது. உம்ம கூட்டாளிக்கெல்லாம் பட்டாத்தான் தெரியும். உம்மெச் சொல்லிக் குத்தமில்லெ, காலம் அப்படி.”
அர்ச்சகருக்குச் சிரிப்பு வந்தது.
”உம்மெ நைஸா கை தூக்கிவிட்டுப் போடணும்னு நெனச்சேன் பாரும். அந்தப் புத்தியெ செருப்பாலே அடிக்கணும்” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“நீர் சொல்றது சரி. என்னெக் காப்பாத்தணுங்கற நெனப்பு ரொம்ப இருக்கு உமக்கு. அந்த எச்.ஸி.தான் பெரிய பேராசைக்காரனா இருக்கான். அவன் பேராசைக்காரனா இருக்கட்டும். நான் அஷ்டதரித்திரமா இருக்கணுமோ?”
“ஆசாமியெ ஸ்டேஷனுக்கு உள்ளே விட்டுப் பூட்டாத் திருகித்திருகி எடுத்தால்ல தெரியும் அஷ்டதரித்திரம் படறபாடு.”
“பகவான் விட்டது வழி. பதனஞ்சு வருஷமா தினம் தினம் அவனெக் குளுப்பாட்டறேன். விதவிதமா அலங்காரம் பண்ணிப் பாக்கறேன். சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிப்பண்ணி நெத்தியிலே தழும்பு விழுந்துடுத்து. அந்த நன்னிகெட்ட பயல் அடி வாங்கித் தறதுன்னா தரட்டும். கம்பி எண்ண வச்சான்னா வைக்கட்டும்.”
அர்ச்சகர் அமைதியாகப் பேசினார்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகர் முகத்தைத் திரும்பிப் பார்த்தான். அவர் முகத்தில் பயத்தின் சாயலே இல்லை. அவர் இப்பொழுது வேகமாக நடந்தார். கைகளை ஆட்டிக்கொண்டு நடந்தார்.
“அப்பம் ஒரு காரியம் செய்வமா?” என்று கேட்டான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“என்ன?”
“நீரும் அப்படியொண்ணும் டாட்டாவுமில்லே பிர்லாவுமில்லே. ஏதோ ஒரு மாதிரியா காலத்தைத் தள்ளிட்டிருக்கீரு. உமக்காகச்சுட்டி  ஒண்ணு வேணாச் செய்யலாம்.”
“விஷயத்தைத் தெளிவாச் சொல்லலாமே. ஏன் சுத்திச்சுத்தி வளைக்கணும்?” என்று கேட்டார் அர்ச்சகர்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு பிடரியெத் தாக்கிற்று. “எச்.ஸீட்டெ ஒம்ம நெலமெயெ எடுத்துச் சொல்லி சுளுவா முடிக்கப் பாக்கறேன். அஞ்சு ரூபா எடும். சட்னு எடும். எனக்கு வேற வேல இருக்கு.”
அர்ச்சகர் முன்பின் யோசிக்கவிடாமல் பணத்தை வாங்கி விட எண்ணினான் அவன்.
அர்ச்சகர் முன்னைவிடவும் அமைதியாகச் சொன்னார்:
“இதென்ன பேச்சு இது! அஞ்சு ரூபாய் தரலாம்னா பத்தாத் தந்துடப்படாதா? அம்புட்டுக்கெல்லாம் இருந்தா நான் ஏன் நதீக்கிருஷ்ணனெ குளுப்பாட்டப் போறேன். மேலும் இப்போ நான் என்ன திருடினேனா, கொள்ளையடிச்சேனா, இல்லெ ரோட்டிலெ போறவ கையைப் புடிச்சு இழுத்தேனா - என்ன தப்புப் பண்ணிப்பிட்டேன்னு சொல்லட்டுமே, உம்ம எச்.ஸி. தலையெ சீவறதுன்னா சீவட்டுமே.”
எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு அந்த இடத்திலேயே அர்ச்சகரைக் கண்டதுண்டமாக வெட்டிப்போட்டுவிடலாம் போலிருந்தது.
”மகா பிசுநாறி ஆசாமியா இருக்கீரே!” என்றான்.
“என்ன சேறது? அப்படித்தான் என்னெ வச்சிருக்கான் அவன்.”
“அவன் யாரு அவன்?”
“மேலே இருக்கான் பாரும், அவன்.”
இருவரும் ஸ்டேஷன் முன்னால் வந்துவிட்டார்கள். ஸ்டேஷனுக்கு முன்னாலிருந்த வெற்றிலைப் பாக்குக் கடையில், கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தவரை, ‘அண்ணாச்சி’ என்று கூப்பிட்டுக் கொண்டே அவரிடம் வலியப் பேச ஆரம்பித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
அர்ச்சகர் பின்னால் நின்றுகொண்டிருந்தார். அண்ணாச்சியிடம் சளசளவென்று பேச்சை வளர்த்திக்கொண்டிருதான் அவன். அர்ச்சகர் நின்றுகொண்டிருந்த இடத்தை அவன் அசைப்பிலும் திரும்பிப் பார்க்கவில்லை. அவர் போவதானால் போகட்டும் என்ற தோரணையில் நிற்பது போலிருந்தது. ஆனால் அவர் கற்சிலை மாதிரி அங்கேயே நின்றார்.
அண்ணாச்சிக்குப் பேச்சு சலித்துவிட்டது.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகர் பக்கம் திரும்பி, “சாமி, நீங்க போறதுன்னாப் போங்க, பின்னலே பாத்துக்கிடலாம்” என்றான்.
“கையோட காரியத்தை முடிச்சுடலாமே” என்றார் அர்ச்சகர்.
“அட போங்க சாமி, நான்தான் சொல்லுதேனே பின்னாலெ பாத்துக்கிடலாம்னு, உடாமெ பிடிக்கீரே.”
“என்னப்பா விஷயம்?” என்று கேட்டார் அண்ணாச்சி.
“ஒண்ணுமில்லெ. என் கொளந்தெக்குப் பொறந்த நாளு நாளைக்கு. பூசை கீசை பண்ணி கொண்டாடணும்னு சொல்லுது அது. அதுதான் இவரிட்டே கேட்டுக்கிட்டே வாறேன். சாமான் கீமான் வாங்கணுங்காரு. ஆனா பணத்துக்கு எங்கே போகுது?”
‘அடி சக்கே’ என்று மனதில் சொல்லிக்கொண்டார் அர்ச்சகர்.
பணம் சம்பந்தமான பேச்சு வந்ததாலோ என்னமோ அண்ணாச்சி சட்டென்று விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழும் அர்ச்சகர் நின்ற திசைக்கு நேர் எதிர்திசை நோக்கி மடமடவென்று நடக்க ஆரம்பித்தான்.
அர்ச்சகர் பின்னால் ஓடிஓடிச் சென்றார்.
“இந்தாரும் ஓய், கொஞ்சம் நில்லும். என்ன இது? நடுரோட்டிலெ நிக்கவச்சுட்டு நீர் பாட்டுக்குக் கம்பியெ நீட்டறேரே?”
“அட சரிதான், போமய்யா.”
”என்னய்யா இது, எனக்கு ஒண்ணும் புரியலையே.”
“வீட்டெப் பாத்துப் போமய்யா. போட்டு பிராணனெ வாங்குதீரே.”
“என்னன்னமோ சொன்னேர். ஆ ஊ ஆனை அறுபத்திரெண்டுன்னு சொன்னீர். இப்போ போ போன்னு விரட்டறேரே.”
எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு அசாத்தியக் கோபம் வந்துவிட்டது. கண்கள் சிவந்தன. நெற்றிப் பொட்டில் நரம்புகள் புடைத்தன. அர்ச்சகர் முகத்தையே இமைக்காமல் பார்த்தான். அர்ச்சகரும் இமைக்காமல் பார்த்தார். அவருக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் அடக்க முடியாத சிரிப்பும் வந்தது. இலேசான புன்னகை உதட்டில் நெளிந்தது. அர்ச்சகர் சிரிப்பை அடக்குவதையும் அவர் உதட்டில் சிரிப்பு பீறிட்டு வழிவதையும் கவனித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு கடகடவென்று சிரித்தான். சப்தம் போட்டு சிரித்தான். வாய்விட்டுச் சிரித்தான். குழந்தைபோல் சிரித்தான்.
அர்ச்சகரும் அவனுடன் சேர்ந்து அட்டகாசமாகச் சிரித்தார்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகரிடம் மிக நெருங்கி நின்றுகொண்டு, அவர் முகத்தைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான்:
“வீட்டுக்குப் போம். நானும் வீட்டுக்குத்தான் போறேன்.” குரல் மிக அமைதியாக இருந்தது. அர்ச்சகர் அவன் முகத்தைப் பார்த்தார். சற்று முன்னால், அவர் முன் நின்ற ஆள் மாதிரியே இல்லை.
“நானும் அந்தப் பக்கம்தானே போகணும். சேர்ந்தே போறது” என்று கூட நடந்தார் அர்ச்சகர்.
“ஆமாம், அந்த ஆசாமீட்டே ஏதோ ஜென்ம நக்ஷத்திரம்னு சொன்னீரே. வாஸ்தவம் தானா? இல்லெ எங்கிட்டெக் காட்டின டிராமாவுக்கு மிச்சமோ?” என்று கேட்டார் அர்ச்சகர்.
“உண்மைதான் வேய், நாளைக்குப் பொறந்த நாள்.”
“என்ன கொழந்தே?”
“பொம்புளெப் புள்ளே.”
“தலைச்சனா?”
“ஆமா, கலியாணம் முடிஞ்சு பதினொண்ணு வருசமாவுது.”
“ஓஹோ, பேரென்ன?”
”கண்ணம்மா.”
“நம்ம ஸ்வாமிக்கு ரொம்ப வேண்டிய பெயர்” என்றார் அர்ச்சகர்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சிரித்துக் கொண்டான்.
“ஆமாம், அதுக்கு என்ன பண்ணப்போறீர்?”
“வீட்டுக்காரி எதை எதையோ செய்யணும்னு சொல்லுதா. நான்தான் இளுத்துக்கிட்டிருக்கேன்.”
”ஏன் இளுக்கணும்? தலைச்சன் கொழந்தே. ரொம்ப நாளைக்கப்பறம் ஸ்வாமி கண் திறந்து கையிலெ தந்திருக்கார். அதுக்கு ஒரு குறைவும் வைக்கப்படாது; வைக்க உமக்கு அதிகாரம் கிடையாது” என்று அடித்துப் பேசினார் அர்ச்சகர்.
“அது சரிதாய்யா. யாரு இல்லைன்னு சொல்லுதா? ஆனா கைச்செலவுக்கில்லா திண்டாட்டம் போடுது.”
“போயும் போயும் ராப்பட்னிக்காரன், ஸ்வாமி குளுப்பாட்டறவனைப் பிடிச்சா என்ன கெடைக்கும்? பிரசாதம் தருவன். கொழச்சுக் கொழச்சு நெத்தியிலே இட்டுக்கலாம். ஜரிகைத் துப்பட்டா, மயில்கண் வேஷ்டி, தங்கச்செயின் இந்த மாதிரி வகையாப் பிடிச்சா போட் போட்னு போடலாம். என்ன ஆளய்யா நீர், இதுகூட  தெரிஞ்சுக்காமெ இருக்கேரே” என்றார் அர்ச்சகர்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு வாய்விட்டுச் சிரித்தான். “ஒரு பயலும் கையிலெ சிக்கலெ. நாயா அலஞ்சு பார்த்தேன். பிறந்தநாள் அயிட்டம் வேறே மனசிலே உறுத்திட்டு இருந்தது. அர்ச்சகரானா அர்ச்சகர்னு பாத்தேன். கையெ விரிச்சுட்டீரே! பொல்லாத கட்டைதாய்யா நீரு.”
“நானும் விடிஞ்சு அஸ்தமிச்சா பத்து மனுஷாளிடம் பழகுறவன்தானே? எழுபத்திமூன்று நாற்பத்தியேழு என்ன துள்ளுத்தான் துள்ளிருவான்னு தெரியாதாக்கும்.”
“அடி சக்கையின்னானாம்! கொஞ்ச முன்னாலே யாரோ அழுதாளே, அது யாரு? யாருக்கோ பல்லு தந்தி அடிச்சுதே, யாருக்கு? யாருக்குக் கையும் காலும் கிடுகிடான்னு வெறச்சுதாம்?”
“மொதல்ல கொஞ்சம் பயந்துதான் போனேன். ஏன் பொய் சொல்லணும். இருந்தாலும் என்ன உருட்டு உருட்டிப் புட்டீர்!”
“என்ன செய்யுது சாமீ? இந்த சாண் வயத்துக்காகத் தானே இந்த எளவெல்லாம். இல்லாட்டி மூக்கெப் பிடிச்சுக்கிட்டு உக்காந்திரலாமே.”
“சந்தேகமா? நான் என்ன பாடுபடறேன் கோவில்லே? கோவிலுக்குள்ளே ஏறி வந்தாலே புண்ணியாசனம் பண்ணனும். ஸ்வாமி எழுந்திருந்து பின்புறம் வழியா ஓடியே போயுடுவா. அந்தமாதிரி பக்த சிகாமணிகள்ளாம் வருவா. அவாளிடம் போய் ஈ ஈன்னு இளிச்சுட்டு நிக்கறேன். உங்களெ விட்டா உண்டா என்கிறேன். ஆழ்வார் நாயன்மார்கள் கெட்டது கேடு என்கிறேன். கடைசியா, போறத்தே ரெண்டணா வைக்கிறானா, நாலணா வைக்கிறானான்னும் கவனிச்சுக்கறேன். அணாவெ தீர்த்தத்தில அலம்பி இடுப்பிலெ சொருகிக்கறேன்” என்றார் அர்ச்சகர்.
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
இரண்டு பேரும் நடந்து நடந்து போஸ்டாபீஸ் ஜங்ஷனுக்கு வந்துவிட்டார்கள்.
”இந்த லெட்டரே போட்டுட்டு வந்துடறேன்” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“பாத்துப் போடும். யாராவது காக்கிச் சட்டைக்காரன் வந்து புடிச்சுக்கப் போறான். யார் வீட்டிலெ நோவு எடுத்திருக்கோ?” என்றார் அர்ச்சகர்.
கடிதங்களைத் தபாலில் சேர்த்துவிட்டு எதிர் சாரியிலிருந்த வெற்றிலை பாக்குக் கடைக்கு வந்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. மட்டிப்பழக் குலையிலிருந்து நாலைந்து பழங்களைப் பிய்த்தான். “இந்தாரும், சாப்பிடும்” என்று அர்ச்சகரை நோக்கி நீட்டினான்.
அர்ச்சகர் இரண்டு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார். இரண்டு பேரும் வெற்றிலை போட்டுக்கொண்டார்கள்.
“கணக்கிலே எளுதிக்கிடுங்க” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு, கடைக்காரரை நோக்கி.
“எழுதிக்கிட்டே இருக்கேன்” என்றார் கடைக்காரர்.
“சும்மா எழுதுங்க. ரெண்டுநாள் களியட்டும். செக்கு கிளிச்சுத் தாறேன்.”
நடந்து, இரண்டு பேர்களும் பரஸ்பரம் பிரியவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டார்கள்.
”சாமி, அப்பொ எனக்கு விடைகொடுங்க. ஒண்ணும் மனசிலே வச்சுக்கிடாதீங்க” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“என்ன நெனக்கிறது. காக்கி ஜாதியே இப்படித்தான்” என்றார் அர்ச்சகர்.
“எல்லாம் ஒரே ஜாதிதான்” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“அதுசரி, நாளைக்கு என்ன செய்யப்போறேர்?”
“என்ன செய்யுதுனு விளங்கெலெ. அதுக்கு முகத்திலே போய் முளிக்கவே வெக்கமாயிருக்கு. ஆயிரம் நெனப்பு நெனச்சுக்கிட்டு இருக்கும். சரி, நான் வாறேன்” என்று சொல்லிவிட்டு நடந்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு.
“ஓய், இங்கே வாரும்” என்றார் அர்ச்சகர்.
வந்தான்.
அர்ச்சகர் அரை வேஷ்டியை இலேசாக அவிழ்த்துவிட்டுக் கொண்டார். இப்பொழுது வயிற்றில் ஒரு துணி பெல்ட் தெரிந்தது. துணி பெல்ட்டில் ஒவ்வொரு இடமாகத் தடவிக் கொண்டே முதுகுப்புறம் வந்ததும் சட்டென்று கையை வெளியில் எடுத்தார்.
ஐந்து ரூபாய் நோட்டு!
“இந்தாரும், கையெ நீட்டும்” என்றார் அர்ச்சகர். எழுபத்திமூன்று நாற்பத்தியேழு ஒரு நிமிஷம் தயங்கிவிட்டு கையை நீட்டி வாங்கிக் கொண்டான்.
”கொழந்தை பிறந்தநாளுக்கு குறை ஏற்படாதுன்னு தறேன்” என்றார் அர்ச்சகர்.
“சாமி, ரொம்ப உபகாரம், ரொம்ப உபகாரம்” என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. அவன் குரல் தழதழத்தது.
“ஆனந்த பாஷ்பம் ஒண்ணும் வடிக்க வேண்டாம். ஒண்ணாம் தேதி சம்பளம் வாங்கினதும் திருப்பித் தந்துடணும்” என்றார் அர்ச்சகர்.
“நிச்சயமா தந்துடுதேன்.”
“கண்டிப்பாத் தந்துடணும்.”
“தந்துடுதேன்.”
“தரலையோ, எச். ஸிட்டெச் சொல்லுவேன்.”
இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.
“நாளைக்கு நம்ம கோயிலுக்கு கூட்டிண்டு வாரும் கொழந்தெயெ. கண்ணம்மா வந்தா ரொம்ப சந்தோஷப்படுவன் நதீக்கிருஷ்ணன். நானே கூடயிருந்து ஜமாய்ச்சுப்புடறேன்.”
“சரி, அப்படியே கூட்டிட்டு வாறேன்.”
“அப்பொ நான் வறேன். முதல் தேதி ஞாபகமிருக்கட்டும்” என்று சொல்லிக்கொண்டே இருட்டில் நடந்தார் அர்ச்சகர்.
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அவர் மறைவதைப் பார்த்துக்கொண்டே நின்றான்.
நன்றி: சரஸ்வதி, 1958
*******
தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்