Oct 12, 2010

எஸ்தர் - வண்ண நிலவன்

முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இடத்துக்கெல்லாம் கூட்டிச் செல்ல முடியுமா?

vn2வீட்டில் பல நாட்களாக இதுதான் பேச்சு. எல்லாரும் தனித்தனியே திண்ணையில், குதிருக்குப் பக்கத்தில், மேல ஜன்னலுக்கு அருகே அந்த பழைய ஸ்டூலைப் போட்டுக் கொண்டு, பின்புறத்தில்,    புறவாசல் நடையில் என்று இருந்துகொண்டு 'அவரவர்' யோசித்ததையெல்லாம் சாப்பாட்டு வேளைகளில் கூடுகிறபோது பேசினார்கள். முன்னெல்லாம் சாப்பாட்டு நேரம் அந்த வீட்டில் எவ்வளவோ ஆனந்தமாக இருந்தது. இப்போது நெல் அரிசிச் சோறு கிடைக்கவில்லை கம்பும், கேப்பையும் கொண்டுதான் வீட்டுப் பெண்கள் சமையல் செய்கின்றனர். நெல்லோடு ஆனந்த வாழ்வும் போயிற்றா?

அப்படிச் சொல்லவுங்கூடாது. இன்னமும் சமையலின் பிரதான பங்கு எஸ்தர் சித்தியிடமே இருக்கிறது. சக்கை போன்ற இந்தக் கம்பையும் கேப்பையையும்தான் சித்தி எஸ்தர் என்னமாய் பரிமளிக்கப் பண்ணுகிறாள்? ஒரு விதத்தில் இத்தனை மோசமான நிலையிலும் சித்தி எஸ்தர் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்னவாயிருக்கும்? யோசித்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது. மூன்று பெண்களுக்கும் ஒரு பையனுக்கும் தந்தையான அகஸ்டின் கூட மாட்டுத் தொழுவத்தில் பனங்கட்டை உத்திரத்தில் இடுப்பு வேட்டியை அவிழ்த்து முடிச்சுப் போட்டு நாண்டு கொண்டு நின்று செத்துப் போயிருப்பான்.

மூன்று பேருக்குமே கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளுடன்தான் இருக்கிறார்கள். அகஸ்டின் தான் மூத்தவன், எதிலும் இவனை நம்பி எதுவும் செய்ய முடியாது. அமைதியானவன் போல எப்போதும் திண்ணையையே காத்துக் கிடப்பான். ஆனால் உள்ளூர அப்படியல்ல அவன். சதா சஞ்சலப்பட்டவன். இரண்டாவது தான் டேவிட். இவன் மனைவி பெயரும் அகஸ்டினுடைய மனைவி பெயரும் ஒரே பெயரை வாய்த்து விட்டது. பெரியவன் மனைவியை பெரிய அமலம் என்றும், சின்னவன் மனைவியை சின்ன அமலம் என்றும் கூப்பிட்டு வந்தார்கள். சின்னவனுக்கு இரண்டு பேருமே ஆண்பிள்ளைகள். இது தவிர இவர்களின் தகப்பனார் மரியதாஸுடைய ஒன்று விட்ட தங்கச்சி தான் எஸ்தர். மரியதாஸ் சாகிறதுக்குப் பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பே எஸ்தர் சித்தி இந்த வீட்டுக்கு வந்து விட்டாள். புருஷனுடன் வாழப் பிடிக்காமல் தான் வந்தாள் என்று எஸ்தரை கொஞ்ச காலம் ஊரெல்லாம் நைச்சியமாகப் பேசியது, இப்போது பழைய கதையாகி விட்டது. எஸ்தர் சித்தி எல்லாருக்கும் என்ன தந்தாள் என்று சொல்ல முடியாது. அகஸ்டினுக்கும், டேவிட்டுக்கும் அழகிய மனைவியர்கள் இருந்தும் கூட எஸ்தர் சித்தியிடம் காட்டின பாசத்தை அந்த பேதைப் பெண்களிடம் காட்டினார்களா என்பது சந்தேகமே.

எஸ்தர் சித்தி குட்டையானவள். நீண்ட காலமாகப் புருஷ சுகத்தைத் தேடாமல் இருந்ததாலோ என்னவோ உடம்பெல்லாம் பார்க்கிறவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிற விதமாய் இறுகி கெட்டித்துப் போயிருந்தது. இதற்கு அவள் செய்கிற காட்டு வேலைகளும் ஒரு காரணம் என்று சொல்லலாம். நல்லா கருப்பானதும், இடையிடையே இப்போது தான் நரைக்க ஆரம்பித்திருந்த நரை முடிகள் சிலவுமாக சுருட்டை முடிகள். உள்பாடி அணிகிற வழக்கமில்லை. அதுவே மார்பகத்தை இன்னும் அழகானதாகப் பண்ணியது.

சித்திக்கு எப்போதும் ஓயாத வேலை. சேலை முந்தானை கரண்டைக் கால்களுக்கு மேல் பூனை முடிகள் தெரிய எப்போதும் ஏற்றிச் செருகப்பட்டே இருக்கும். சித்திக்குத் தந்திர உபாயங்களோ நிர்வாகத்துக்குத் தேவையான முரட்டு குணங்களோ கொஞ்சங்கூடக் தெரியாது. இருப்பினும் சித்தி பேச்சுக்கு மறு பேச்சு இல்லை. அவ்வளவு பெரிய குடும்பத்தை மரியதாசுக்குப்பின் நிர்வகித்து வருகிறதென்றால் எத்தனை பெரிய காரியம். இத்தனை ஏக்கர் நிலத்துக்கு இவ்வளவு தானியம் விதைக்க வேண்டும் என்கிற கணக்கெல்லாம் பிள்ளைகளே போடுகிற கணக்கு. ஆனால் வீட்டு வேலைகளானாலும், காட்டு வேலைகளானாலும் சுணக்கமில்லாமல் செய்ய வேண்டுமே. வேலை பார்க்கிறவர்களை உருட்டி மிரட்டி வேலை வாங்கிக் காரியம் செய்வதெப்படி? சித்தி உருட்டல் மிரட்டல் எல்லாம் என்னவென்றே அறியாத பெண்.

விதைக்கின்ற சமையமாகட்டும் தண்ணீர் பாய்ச்சுகின்ற நேரமாகட்டும் காலையிலோ, மதியமோ அல்லது சாயந்திரமோ ஒரே ஒரு பொழுது வீட்டுக் காரியங்கள் போக ஒழிந்த நேரத்தில் காட்டுக்குப் போய் வருவாள். அதுவும் ஒரு பேருக்குப் போய்விட்டு வருகிறது போலத்தான் இருக்கும். ஆனால் வேலைகள் எல்லாம் தானே மந்திரத்தால் கட்டுண்டது போல் நடைபெற்று விடும். சாயங்காலம் காட்டுக்குப் போனாள் என்றால் இவள் வருகிறதுக்காக பயபக்தியுடன் எல்லாவற்றையும் குற்றம் சொல்ல முடியாதபடி செய்து வைப்பார்கள். வீடே சித்திக்காக இயங்கியது. வேலைக்காரர்களும், அந்த ஊருமே சித்திக்குக் கட்டுப்பட்டு இயங்கினது.

அந்த இரண்டு பெண்களுமே அபூர்வமான பிறவிகள். மூத்தவள் ஒரு பெரிய குடும்பத்தில் முதல் பெண்ணாகப் பிறந்தவள். அவள் தான் பள்ளிநாட்களிலும் சரி, ஐந்தாவது வகுப்பை தான் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் முடிக்கும் முன்பே ருதுவாகி வீட்டில் இருந்த ஆறேழு வருஷமும் சரி, இப்போது இந்த வீட்டின் மூத்த அகஸ்டினுக்கு வந்து மனைவியாக வாய்த்து அவனுக்கு மூன்று பெண்களும், ஒரு ஆண் மாகவும் பெற்றுக் கொடுத்த பின்பும் கூட அவள் பேசின வார்த்தைகளை கூடவே இருந்து கணக்கிட்டிருந்தால் சொல்லிவிடலாம். ஒரு சில நூறு வார்த்தைகளாவது தன்னுடைய இருபத்தியெட்டு பிராயத்துக்குள் பேசியிருப்பாளா என்பது சந்தேகம். மிகவும் அப்பிராணி பெரிய அமலம். சித்தி அவளுக்கொரு விதத்தில் அத்தை முறையும், இன்னொரு சுற்று உறவின் வழியில் அக்கா முறையும் கூட வேண்டும். எஸ்தர் சொன்ன சிறு சிறு வேலைகளை மனங்கோணமல் செய்வதும், கணவன், குழந்தைகளுடைய துணிமணிகளை வாய்க்காலுக்கு எடுத்துச் சென்று சோப்புப் போட்டும் வெயிலில் காயப் போட்டு உலர்த்தியும் எடுத்து, நான்கு மடித்து வைப்பதுமே இவள் வாழ்க்கையின் முக்கியமான அலுவல்கள் எனலாம். தனக்கென எதையும் ஸ்தாபித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையும் யாரிடமாவது கேட்டு வாங்கிப் பெற வேண்டுமென்ற நியாயத்தையும் அறவே அறியாதவள்.

சின்ன அமலம் எதிரிடையான குணமுடைய ஸ்த்ரீ. உள் பாவாடைக்கு லேஸ் பின்னலும், பாடீஸ்களை விதவிதமான எம்ப்ராய்டரி பின்னல்களாலும் அலங்கரித்துக் கொள்ள ஆசைப்பட்ட பெண். பெரியவளைவிட வசதிக் குறைவான இடத்திலிருந்தே வந்திருந்தாள் எனினும் இங்கே வந்தபின் தன் தேவைகளையும் புற அலங்காரங்களையும் அதிகம் பெருக்கிக் கொண்டவள், எல்லோரும் கீழேயே படுப்பார்கள். மச்சு இருக்கிறது. ஓலைப்பரை வீட்டுக்கு ஏற்ற தாழ்வான மச்சு அது வெறும் மண் தரை தான் என்றாலும் குழந்தைகளையெல்லாம் கீழே படுத்து உறங்கப் பண்ணிவிட்டு மூங்கில் மரத்தாலான ஏணிப்படிகள் கீச்சிட ஏறிப்போய் புருஷனோடு மச்சில் படுத்து உறங்கவே ஆசைப்படுவாள், பாட்டிக்கு சரியான கண் பார்வையும் நடமாட்டமும் இருந்த போது சின்னவளை வேசி என்று திட்டுவாள், தன் புருஷன் தவிர அந்நிய புருஷனிடம் சம்பாஷிப்பதி ல் கொஞ்சம் விருப்பமுடைய பெண்தான், ஆனால் எவ்விதத்திலும் நடத்தை தவறாதவள்.

இனிமேல் இந்த ஊரில் என்ன இருக்கிறது? சாத்தாங்கோயில் விளையிலும், திட்டிவிளையிலும் மாட்டைவிட்டு அழித்த பிற்பாடும் இங்கே என்ன இருக்கிறது?

பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய் விட்டார்கள். மேலத் தெருவில் ஆளே கிடையாது என்று நேற்று ஈசாக்கு வந்து அவர்களுக்குச் சொன்னான். ஊர் சிறிய ஊர் தானென்றாலும் இரண்டு கடைகள் இருந்தன. வியாபாரமே அற்றுப்போய்க் கடைகள் இரண்டையும் மூடியாகிவிட்டது. வீட்டில் இருக்கிற நெருப்புப் பெட்டி ஒன்றே ஒன்றுதான். கேப்பை கொஞ்சம் இருக்கிறது. சில நாட்களுக்கு வரும். கம்பும் கூட இருக்கிறது. ஆனால் நெருப்பு பெட்டி ஒன்றே ஒன்று இருந்தால் எத்தனை நாளைக்குக் காப்பாற்ற முடியும்.

அநியாயமாகப் பீடி குடிக்கிறதுக்காகவென்று எஸ்தர் சித்திக்குத் தெரியாமல் டேவிட் நேற்று ஒரு குச்சியைக் கிழிக்கிற சத்தத்தை எப்படி ஒளிக்க முடியும். இத்தனைக்கும் அவன் சத்தம் கேட்கக் கூடாதென்று மெதுவாகத்தான் பெட்டியில் குச்சியை உரசினான். எஸ்தர் சித்தி மாட்டுத் தொழுவத்தில் நின்றிருந்தாள். வழக்கத்தைவிட அதிக முன் ஜாக்கிரதையாக நெருப்புக் குச்சியை உரசியதால் சத்தமும் குறைவாகவே கேட்டது. இருந்தும் எஸ்தர் சித்தியின் காதில் விழுந்து விட்டது. மாட்டுக்குத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தவள் அப்படியே ஓடி வந்து விட்டாள். பதற்றத்துடன் வந்தாள். அடுப்படியில் நெருப்பு ஜ்வாலை முகமெங்கும் விழுந்து கொண்டிருக்க பீடியை பற்ற வைத்துக் கொண்டிருந்தான் டெவிட்.

சித்தி அவனைக் கேட்டிருந்தால், ஏதாகிலும் பேசியிருந்தால் மனசுக்குச் சமாதானமாகப் போயிருக்கும். இவனுக்கும் ஒன்றும் பேசத் தோணவில்லை. வெறுமனே ஒருவர் முகத்தை ஒருவர் ஒரு சிறிது பார்த்துக் கொண்டிருந்ததோடு சரி. வெறுமனே ஒன்றும் பேசாமல் தான் பார்த்துக் கொண்டார்கள். அது பேச்சை விடக் கொடுமையானதாக இருந்தது. முக்கியமாக டேவிட்டை மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கிற்று. எஸ்தர் சித்தியிடம் இருந்த தயையும், அன்பும் அப்போது எங்கே போயின? இத்தனை காலமும் சித்தியின் நன்மதிப்பிற்கும் அன்பிற்கும் பாத்திரமான அவன் இந்த ஒரு காரியத்தின் காரணமாக எவ்வளவு தாழ்ந்து இறங்கிப் போய்விட்டான். அந்த பீடியை முழுவதுமாகக் குடிக்க முடியவில்லை அவனால். ஜன்னலுக்கு வெளியே தூர எறிந்து விட்டான்.

அன்றைக்கு ராத்திரி கூழ் தான் தயாராகிக் இருந்தது. அந்தக் கூழுக்கும் மேலும் வீட்டுச் செலவுகளுக்கும் வர வரத் தண்ணீர் கிடைத்து வருவது அருகி விட்டது. ரயில் போகிற நேரம் பார்த்து எந்த வேலை இருந்தாலும் சித்தியும் ஈசாக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக வேண்டி வந்தது. அந்த என்ஜின் டிரைவரிடம் தான் தண்ணீருக்காக எவ்வளவு கெஞ்ச வேண்டியிருக்கிறது? எஸ்தர் சித்தியிடம் பேசுகிற சாக்கில் டிரைவர்கள் கொஞ்ச நேரம் வாயாடிவிட்டுக் கடைசியில் தண்ணீர் திறந்து விடுகிறார்கள். ஊரில் ஜனங்கள் இருந்தபோது இதற்கு போட்டியெ இருந்தது.ஊரை விட்டு எல்லோரும் போனதில் இதுவொரு லாபம். நான்கைந்து பேரைத் தவிர வேறு போட்டிக்கு ஆள் கிடையாது..

அன்று இரவு எல்லோரும் அரைகுறையாகச் சாப்பிட்டுப் படுத்து விட்டார்கள். சின்ன அமலம் எப்போதோ மச்சில் போய் படுத்துக் கொண்டாள். டேவிட் வெகுநேரம் வரை திண்ணையில் இருந்து கொண்டிருந்தான். எஸ்தர் சித்தி அவனை எவ்வளவோ தடவை சாப்பிடக் கூப்பிட்டாள். எல்லோரையும் சாப்பாடு பண்ணி அனுப்பிவிட்டு அவனிடத்தில் வந்து முடிகளடர்ந்த அவன் கையைப் பிடித்துத் தூக்கி அவனை எழுந்திருக்க வைத்தாள். அவனை, பின்னால் அடுப்படிக்குக் கூட்டிக் கொண்டு போய் தட்டுக்கு முன்னால் உட்கார வைத்தாள். தலையக் குனிந்தவாறே சாப்பிட மனமில்லாதவனாயிருந்தான், சித்தி டேவிட்டுடைய நாடியைத் தொட்டு தூக்கி நிறுத்தி, “ஏய் சாப்பிடுடே. ஒங் கோவமெல்லாம் எனக்குத் தெரியும்” என்று சொன்னாள். அப்படியே டேவிட், சித்தியின் ஸ்தனங்கள் அழுந்த அவளுடைய பரந்த தோளில் சாய்ந்து முகத்தைப் புதைத்துக் கொண்டான். சித்தி அவன் முதுகைச் சுற்றியணத்து அவனைத் தேற்றினாள். டேவிட் லேசாக அழுதான். சித்தியும் அவனைத் பார்த்து விசும்பினாள். இருவருமே அந்த நிலையையும், அழுகையையும் விரும்பினார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு இதுவரை இல்லாத அபூர்வமான கருணையும், பிரேமையும் சுரந்தது. டேவிட் அழுத்தில் நியாயமிருந்தது, ஆனால் சித்தியும் அழுதாளே! அவள், தான் டேவிட்டிடம் தான் கடுமையாக நடந்து கொண்டதுக்காக வருத்தப்பட்டுதான் இவ்விதம் அழுகிறாளா? ஆனால் விஷயத்தைச் சொல்ல வேண்டும். எஸ்தருக்கு அவள் புருஷன் லாரன்ஸுடைய ஞாபகம் வந்தது. லாரன்ஸும், அவனைப் பற்றிய ஞாபகங்களும் இப்போது எல்லோருக்கும் மிகப் பழைய விஷயம். யாருக்கும் இப்போது லாரன்ஸின் முகம் கூட நினைவில் இல்லை. அவ்வளவாய் அவன் காரியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. இரண்டு பேருக்குமே அப்போது அதை விடவும் உயர்வான காரியம் ஒன்றுமில்லை அந்நேரத்தில்.

அன்று இரவு டேவிட் மச்சில் படுத்து நன்றாக நிம்மதியுடன் உறங்கினான். ஆனால் எஸ்தர் சித்தி உறங்கவில்லை. டேவிட் சாப்பிட்ட வெண்கலத் தாலத்தைக் கூட கழுவியெடுத்து வைக்கவில்லை. வெகுநேரம்வரை தனியே உட்கார்ந்து பல பழைய நாட்களைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தாள். பின்னர் எப்போதோ படுத்துறங்கினாள்.

ரயில் தண்டவாளத்தில் என்ன இருக்கிறது? அவள் இந்த வீட்டின் மூத்த மருமகளாய் வலம் வந்த காலம் முதல் அவளுக்குக் கிடைக்கிற ஓய்வான நேரங்களிலெல்லாம் புறவாசலில் இருந்து கொண்டு இந்தத் தண்டவாளத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் தண்டவாளம் போடப்பட்டிருந்த இடத்திலேயே அப்படியேதானிருக்கிறது. அந்த தண்டவாளம் அவளுக்குப் புதுசாக எந்தவிதமான செய்தியையும் அறிவித்துவிடவில்லை. சில சமயங்களில் அந்த தண்டவாளத்தின் மீதேறி ஆடுகள் மந்தையாகக் கடந்து போகும். அதிலும் குள்ளமான செம்மறியாடுகள் தண்டவாளத்தைக் கடக்கிறதைவிட வெள்ளாடுகள் போகிறதையே அவளுக்குப் பிடித்திருக்கிறது. இரண்டுமே ஆட்டினம் தான். அவளுடைய வீட்டில் வெள்ளாட்டு மந்தை ஒன்று இருந்தது. இதற்காகத்தான் அவள் வெள்ளாடுகளை விரும்பினவளாக இருக்கும். இப்போது அது போல் ஒரு வெள்ளாட்டு மந்தை அந்தத் தண்டவாளத்தைக் கடந்து மறுபுறம் போகாதா என்று இருந்தது. இப்போது ஊரில் மந்தை தான் ஏது? மந்தை இருந்த வீடுகள் எல்லாமே காலியாகக் கிடக்கின்றன.

சும்மா கிடக்கிற தண்டவாள்த்தைப் பார்க்கப் பார்க்கத் தாங்க முடியாத கஷ்டத்தில் மனது தவித்தது, இப்படிக் கஷ்டப்படுவதைவிட அவள் உள்ளே போய் இருக்கலாம். பள்ளிக்கூடத்தை மூடி விட்டபடியால் குழந்தைகள் எல்லாம் திண்ணையில் பாட்டியின் பக்கத்தில் கூடியிருந்து விளையாடிக்கொண்டிருக்கின்றன. அங்கு போய் கொஞ்ச நேரம் இருக்கலாம். ஆனால் அதில் அவளுக்கு இஷ்டமில்லை. ஒரு விததில் இவ்விதமான அளவற்ற கஷ்டத்தை அனுபவிப்பதை அவள் உள்ளூர விரும்பினாள் என்றே சொல்ல வேண்டும். இவ்விதம் மன்சைக் கஷ்டப்பட வைப்பது ஏதொவொரு வினோதமான சந்தோஷத்தை தந்தது.

முன்னாலுள்ள மாட்டுத்தொழுவத்தில் மாடுகள் இல்லை. இவ்வளவு கஷ்டதிலும் மாடுகளைக் காப்பாற்ற வேண்டிய துரதிருஷ்டம். இத்தனை நாளும் உழைத்த அந்த வாயில்லா ஜீவன்களையும் எங்கேயென்று விரட்டி விட முடியும்? ஈசாக்குதான் தண்ணீர் கூடக் கிடையாத சாத்தாங் கோயில் விளைக்கு காய்ந்து போன புல்லையும் பயிர்களையும் மேய்கிறதுக்குக் கொண்டு போயிருக்கிறான். ஈசாக்கு மட்டும் இல்லையென்றால் மாடுகள் என்ன கதியை அடைந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

அத்தையையும் ஈசாக்கையும் ஊரில் விட்டுவிட்டுப் போக வேண்டுமாமே? இது எப்படி?

இவள் அத்தை இவளிடம் அதிகம் பேசினதே கிடையாது. இதற்கு, இவள் பெரிய அமலமும் ஒரு காரணமாக இருக்ககும். யாரிடம்தான் அதிகம் பேசினாள்? அத்தையிடம் ஆழமான பணிவு உண்டு. இதைக் கற்றுத்தந்தது அம்மா என்றுதான் சொல்ல வேண்டும். அம்மா, அப்பாவுடைய அம்மாவும் இவளுக்கு ஆச்சியுமான ஆலிஸ் ஆச்சியிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டதை சிறுவயது முதலே பார்த்திருக்கிறாள். எவ்வளவோ விஷயங்கள். ஆச்சிக்கும் அம்மாவுக்கும் இடையெ நடந்த எதிர்ப்போ, சிணுங்கலோ இல்லாத அமைதியும், அன்பும் நிரம்பிய சந்தோஷமான பேச்சுக்களை இவள் நேரில் அறிவாள். எல்லாம் நேற்றோ முன்தினமோ நடந்தது போல் மனசில் இருக்கிறது.

ஆச்சிக்கு வியாதி என்று வந்து படுத்துவிட்டால் அம்மாவின் குடும்ப ஜெபத்தின் பெரும் பகுதியும் ஆச்சிக்கு வியாதி சொஸ்தப்படவேண்டும் என்றே வேண்டுதல்கள் இருக்கும், அம்மா படிக்காத பெண். அம்மாவின் ஜெபம் நினைக்க நினைக்க எல்லோருக்கும் அமைதியைத் தருவது. அந்த ஜெபத்தை அம்மாவுக்கு யார் சொல்லித் தந்தார்கள் என்று தெரியவில்லை. அம்மாவே யோசித்து கற்றுக்கொண்டது அந்த ஜெபம். சின்னஞ்சிறிய வார்த்தைகள். பெரும்பாலும் வீட்டில் அன்றாடம் புழங்குகிற வார்த்தைகள். தினந்தோறும் அம்மா ஜெபம் செய்யமாட்டாள். ஜெபம் செய்கிற நேரம் எப்போது வரும் என்று இருக்கும். படிக்காத பெண்ணின் ஜெபம் அதனால் தான் பொய்யாகப் பண்ணத் தெரியவில்லை என்று மாமா அடிக்கடி சொல்லுவார்.

அம்மா தன் அத்தையை கனம் பண்ணினாள். பெரிய அமலதிற்கும் இது அம்மாவின் வழியாகக் கிடைத்தது. அம்மாவைப் போலவே குடும்பத்தில் எல்லோரிடமும் பிரியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உள்ளூரப் பேராசை வைத்திருந்த பெண் அமலம்.

அமலம் என்று நேசிக்கிற ஒரே ஓர் உயரமான ஆள் அவளூரில் இருக்கிறான். அவளூருக்கு கீழ்மேலாய் ஓடுகிற வாய்க்கால் உண்டு. வாய்க்காலிலிருந்து தான் ஊர் ஆரம்பமாகிறது, வாய்க்காலுக்கு அப்பாலும் கார் போகிற ரோடு வரை வெறும் தரையாக முட்செடிகள் அடர்ந்து கிடக்கிறது. வாய்க்காலுக்கு அப்பால் ஏன் ஊர் வளரக் கூடாது என்று தெரியவில்லை. வாய்க்காலுக்கு அப்பால் ரோடு வரை ஊர் வளர யாருக்கும் விருப்பமில்லை. வாய்க்காலிலிருந்தே ஒவ்வொரு தெருக்களும் ஆரம்பமாகி முடிகின்றன. அமலத்துடைய வீடு இருக்கின்ற தெருவுக்குப் பெயர் கோயில் தெருவு. வெறும் சொரி மணல் உள்ள தெருவு அது. அமலத்து வீட்டுக்கு வடக்கு வீடு நீலமான வீடு. இளநீல வர்ணத்தில் வீட்டின் சுவர்கள் இருக்கும். இந்த வீட்டில் தான் அமலமும் நேசித்து, பேசிச் சிரிக்கிறவன் இருந்தான். அவனை அமலமும் விரும்பினது வெறும் பேச்சிக்காக மட்டும் இல்லை. அவன் இங்கேயும் எப்போதாவது வருவான். ஏன் வந்தான் என்று சொல்ல முடியாது. வந்தவன் ஒரு தடவை கூட உட்காரக் கூட இல்லை. ஏன் வந்துவிட்டு ஓடுகிறானென்று யாரும் காரணம் சொல்ல முடியாது. அமலமாவது அறிவாளா? இவ்வளவு தூரத்திலிருந்து வருகிறவன் உட்காரக் கூட விருப்பமின்றி திரும்பிப் போகிறானே? இதெல்லாம் யார் அறியக் கூடும்? அமலத்துக்குத் தெரியாமல் இருக்குமா?

இவ்வளவு மிருதுவான பெண்ணுக்கு எல்லாம் இருக்கிற வீட்டில் என்ன கஷ்டம் வந்தது? வீட்டில் யாரோடும் இணையாமல் தனியே இருந்து என்ன தேடுகிறாள்? யாரிடமும் சொல்லாத அவள் விருப்பமும், அவள் துக்கமும் தான் எவ்வளவு வினோதமானது? அமலத்தின் மனசை அவள் புருஷனும் இவளுக்குக் கொழுந்தனுமான டேவிட்டும் கூட அறியவில்லை.

ஈசாக் காட்டிலிருந்து திரும்புகிற நேரமாகி விட்டது ஈசாக்குக்கு இப்போது காட்டில் எந்த வேலையும் இல்லை. அவனுடைய உலகம் காடு என்பதை எஸ்தர் சித்தி மட்டும் எப்படியோ தெரிந்து வைத்திருந்து வெயிலும், வறட்சியும் நிரம்பிய காட்டுக்குள் அனுப்பி வந்தாள். காட்டைப் பார்க்காமல் இருந்தால் ஈசாக் செத்தே போவான் போல அவன் காட்டைப் பற்றிப் பேசாத நேரமே இல்லை, காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும், இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சலங்கைச் சத்தமும் கண் முன்னாலேயெ கொஞ்ச காலமாய் மறைந்து விட்டன.

ஊரில் எல்லோருக்கும் தேவையாக இருந்த காட்டுக்குள் இப்போது ஒன்றுமே இல்லை. ஒரு வெள்ளை வெயில் விளைகளுக்குள் அடிக்கிறதென்று ஈசாக்கு சொல்கிறான். வெயிலின் நிறங்களை ஈசாக்கு நன்றாக அறிவான். “மஞ்சள் வெயில் அடித்தால் நாளை மழை வரும்” என்று அவன் சொன்னால் மழை வரும். கோடை காலத்து வெயிலின் நிறமும், மழைகாலத்து வெயிலின் நிறமும் பற்றி ஈசாக்குத் தெரியாத விஷயமில்லை. ஈசாக்க்கு விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும், ஆடுமாடுகளுக்காகவும் மட்டுமே உலகத்தில் வாழ்ந்து வந்தான். ஆனாலும் ஈசாக்குப் பிரியமான விளைகள் எல்லாம் மறைந்து கொண்டிருந்தன. கடைசியாக திட்டி விளையில் மாட்டைவிட்டு அழிக்கப்போனபோது ஈசாக்கு கஞ்சியே சாப்பிடாமல் தானே போனான். எவ்வளவு அழுதான் அன்றைக்கு? இத்தனைக்கும் அவன் பேரில் தப்பு ஒன்றுமில்லை. தண்ணீரே இல்லாமல் தானே வெயிலில் காய்ந்து போன பயிர்களை அழிக்கத்தானே அவனைப் போகச்சொன்னாள் எஸ்தர் சித்தி. காய்ந்து போன பயிர்களை அழிக்கிறதென்றால் அவனுக்கு என்ன நஷ்டம்? ஆனாலும் கூட ஈசாக்கு எவ்வளவாய் அழுதான். அவன் நிலம் கூட இல்லை தான் அது.

இவ்வளவு அக்கினியை மேலேயிருந்து கொட்டுகிறது யார்? தண்ணீரும் இல்லாமல், சாப்பிடத் தேவையான உணவு பொருட்களும் கூட இல்லாத நாட்களில் பகல் நேரத்தை இரவு ஏழு மணி வரை அதிகப்படுத்தினது யார்? காற்று கூட ஒளிந்து கொள்ள இடம் தேடிக் கொண்டது. பகலில் அளவில்லாத வெளிச்சமும் இரவில் பார்த்தாலோ மூச்சைத் திணற வைக்கிற இருட்டும் கூடியிருந்தது.

எஸ்தர் சித்தி ஒருநாள் இரவு, ஹரிக்கேன் லைட்டின் முன்னால் எல்லோரும் உட்கார்ந்திருந்த போது சொன்னாள் “இந்த மாதிரி மையிருட்டு இருக்கவே கூடாது, இது ஏன் இம்புட்டு இருட்டாப் போகுதுன்னே தெரியல இது கெடுதிக்குத்தான்”. நல்லவேளையாக இந்த விஷயத்தை சித்தி சொன்ன போது குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாகப் படுத்து உறங்கியிருந்தனர். சின்ன அமலத்துடைய கைக்குழந்தை மட்டும் பால் குடிக்கிறதுக்காக விழித்திருந்தது. சித்தி கூறிய விஷயத்தை உணர முடியாத அந்தக் குழந்தைகள் அதிருஷ்டசாலிகள். இது நடந்து கூட பல மாதங்கள் ஆகி விட்டது.

இப்போது இந்த இராவிருட்டு மேலும் பெருகி விட்டது. நிலாக்காலத்தில் கூட இந்த மோசமான இருட்டு அழியவில்லை. ஊரில் ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் போய்விட்டது, இருட்டை மேலும் அதிகமாக்கிவிட்டது. வீடுகளில் ஆட்கள் இருந்தால், வீடுகள் அடைத்துக் கிடந்தாலும் திற்ந்து கிடந்தாலும் வெளிச்சம் தெருவில் வந்து கசிந்து கிடக்காமல் போகாது. எவ்வளவு அமாவாசை இருட்டாக இருந்தாலும் வீடுகளிலிருந்து கேட்கிற பேச்சு சத்தங்களும், நடமாட்டமும் இருட்டை அழித்து விடும். இருட்டை அழிப்பது இது போல ஒரு சிறிய விஷயமே. இருட்டை போக்கினது பஞ்சாயத்து போர்டில் நிறுத்தியிருந்த விளக்குத் தூண்களோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை வீசுகிற நிலா வெளிச்சமோ இல்லை. இருட்டை அழித்தது வீடுகளிலிருந்து கேட்ட பேச்சுக்குரல்களும் நடமாட்டங்களுமே. எல்லா வீடுகளிலிலும் வெளிச்சமே இல்லாமல், விளக்குகளை எல்லாம் பறித்துக் கொண்டிருத்தாலும் கூட வீடுகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்கிற சிறு விஷயமே இருட்டை விரட்டப் போதுமானதாக இருந்தது. இருட்டு எப்போதும் எஸ்தர் குடும்பத்துக்கு துயரம் தருவதாகவே இருந்தது இல்லை. இப்போது இருட்டு தருகிற துக்கத்தை வெயிலின் கொடுமையைப் போல் தாங்க முடியவில்லை.

வெயில், புழுக்கமும் எரிச்சலும் அளித்தது. வெயில் பகலின் துயரங்களை அதிகப்படுத்தியது. இருட்டோ வெயிலைப் போல எரிச்சலைத் தராமல் போனாலும் இன்னொரு காரியத்தைச் செய்தது. அதுதான் பயம். வெறும் இருட்டைக் கண்டு குழந்தைகள் பயப்படுகிறது போலப் பயமில்லை. யாரும் ஊரில் இல்லை என்பதை, உறங்கக் கூட விடாமல் நடைவாசலுக்கு வெளியே நின்று பயமுறுத்திக் கொண்டிருந்தது இருட்டு.

இருட்டு கரிய பொருள், உயிரில்லாதது போல் தான் இத்தனை வருஷமும் இருந்தது. இந்தத் தடவை உயிர் பெற்றுவிட்டது வினோதம் தான். எஸ்தர் சித்தி வீட்டுக்கு வெளியே நின்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அது என்ன சொல்லுகிறது? இவ்வளவு கருப்பாக, முகமே இல்லாதது எவ்விதம் பயமுறுத்துகிறது? ஆனால் உண்மையாகவே இவ்விதமே இருட்டு நடந்து கொண்டது. தெளிவாகப் பேசமுடியாமல் இருக்கலாம். ஆனால் முணுமுணுக்கிறது என்னவென்று வீட்டிலுள்ள பெரியவர்களுக்குக் கேட்கிறது. முக்கியமாக விவேகமும், அதிகாரமும் நிரம்பிய எஸ்தர் சித்திக்கு அது முணுமுணுப்பது கேட்கிறது. இருட்டு சொன்னதைக் கேட்டு தைரியம் நிரம்பிய எஸ்தர் சித்தியே பயந்தாள். இனி மீள முடியாதென்பது உறுதியாகிவிட்டது. இருட்டின் வாசகங்கள் என்ன? மேலே ஓலைகளினால் கூரை வேயப்பட்டிருந்த வீடுதான் அது என்றாலும் பக்கத்துச் சுவர்கள் சுட்ட செங்கற்களினால் கட்டப்பட்டவை. சுவர்களுக்குச் சுண்ணாம்பினால் பூசியிருந்தார்கள். நல்ல உறுதியான சுவர்கள் தான். இருட்டு பிளக்க முடியாத சுவர்கள். நம்பிக்கைக்குறிய இந்தச் சுவர்களை கூடப் பிளந்து விடுமா? எஸ்தர் சித்தி பயந்தாள். இருட்டு சொன்னது கொடுமையானது.

நீயும் உனக்குப் பிரியமானவர்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறு வழியென்ன? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீர்களா? இதுதான் எஸ்தர் சித்திக்கு இருட்டு சொன்னது. அது தினந்தோறும் இடைவிடாமல் முணுமுணுத்தது. பிடிவாதமும் உறுதியும் கூடிய முணுமுணுப்பு.

கண்களில் இமைகளைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருந்தது பாட்டிக்கு. எஸ்தர் சித்தி வீட்டில் எல்லோரும் தூங்கியான பிறகு அடிக்கடி கைவிளக்கைத் தூண்டிக் கொண்டு வந்து பார்ப்பாள். அந்த வெளிச்சத்தில் அவள் கண்களின் ஈரத்திற்குப் பின்னே அழிக்க முடியாத நம்பிக்கை இருக்கும். எவ்வளவோ வருஷங்களாகப் பார்த்துக்கொண்டே இருக்கிற கண்களுக்குள் இந்த நம்பிக்கை இருப்பது ஆச்சரியமே. கண்களுக்கு முதுமையே வராதா? இவ்வளவு தீவிரமாக நம்பிக்கை கொண்டு உறக்கமின்றி கூரையைப் பார்த்துக் கொண்டு கிடக்கிறவளை விட்டுவிட்டுப் போவது தவிர வழியென்ன? ஈசாக்கு துணையாக இருப்பானா? அவனுக்குத் தருவதற்க்குக் கூட ஒன்றும் கிடையாது. எதையும் எதிர்பாராமல் உழைத்தான் என்றாலும் வீட்டை நிர்வகித்து வருபவர்களுக்கு இதுவும் ஒரு கௌரவப் பிரச்சனைதான்.

கூரையில் பார்க்க என்னதான் இருக்கிறது? பயிர்களின் வளர்ச்சியைக் கூடவே இருந்து ஈசாக்கு அறிகிறது போல, கூரை ஓலைகளை வெயிலும், மழையும், காற்றும் முதுமையடையச் செய்து, இற்றுக் கொண்டிருப்பதை பாட்டி அறியாமலா இருப்பாள்? கூரையின் எந்தெந்த இடத்தில் ஓலைகள் எப்போது வெளுக்க ஆரம்பித்தன என்பது பாட்டிக்குத் தெரியும்.

அன்றைக்கு ராத்திரி மறுபடியும் எல்லோரும் கூடினார்கள். இருந்தது கொஞ்சம் போல கேப்பை மாவு மட்டிலுமே. காய்ந்து போன சில கறிவேப்பிலை இலைகளும் கொஞ்சம் எண்ணெயும் கூட வீட்டில் இருந்தது பெரும் ஆச்சரியமான விஷயம். கேப்பை மாவிலிருந்து எஸ்தர் களி போலவொரு பண்டம் கிளறியிருந்தாள்.

நெருப்புக்காக கஷ்டப்பட வேண்டியது வரவில்லை. காய்ந்த சுள்ளிகளை இதற்காகவே ஈசாக்கு தயார் செய்து கொண்டுவந்து போட்டிருந்தான். கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைத்த நாள் முதலாய் நெருப்பை அணையாமல் காத்து வருகிறார்கள். ஈசாக்கு மட்டும் காட்டிலிருந்து லேசான சுள்ளி விறகுகளைக் கொண்டு வந்து போடாமல் போயிருந்தால் இதுபோல நெருப்பைப் பாதுகாத்து வைத்திருக்க முடியாது. நெருப்பு இல்லாவிட்டால் என்ன காரியம் நடக்கும்?

இவ்வளவு விசுவாசமான ஊழியனை எவ்விதம் விட்டுவிட்டுப் போகமுடியும்? பயிர்களைப் பாதுகாத்து வந்தான். கால்நடைகளைப் போஷித்தான்.மழையிலும், புழுக்கத்திலும் புறவாசல் கயிற்றுக்கட்டிலே பொதுமென்று இருந்தான். பாட்டிக்காக ஈசாக்கை சாக விட முடியுமா? இவளே சோறு போட்டு வளர்த்து விட்டாள், இவளே மார்பில் முடிகள் படருகிறதையும், மீசை முடிகள் முளைக்கிறதையும் பார்த்து வளர்த்தாள். இரவில் எத்தனை நாள் கயிற்றுக் கட்டிலுக்குப் பக்கத்தில் வந்து ஓசைப்படாமல் நின்று கொண்டு, ஈசாக்கு கிடந்து உறங்குகிறதைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள்? ஈசாக்கிடம் என்ன இருக்கிறது? காட்டு வெயிலில் அலைந்து கறுத்த முரட்டுத் தோலினால் மூடப்பட்ட உடம்பு தவிர வேறே என்ன வைத்திருக்கிறான் ஈசாக்கு? புறவாசலில் மாட்டுத்தொழுவில் நின்று தன்னுடைய மோசமான வியர்வை நாற்றமடிக்கிற காக்கி டிரவுசரை மாற்றுகிறபோது எத்தனையோ தடவை சிறுவயது முதல் இன்றுவரையிலும் முழு அம்மணமாய் ஈசாக்கைப் பார்த்திருக்கிறாள்? இது தவிர அந்த முரடனிடம் ஈரப்பசையே இல்லாத கண்களில் ஒரு வேடிக்கையான பாவனை ஒளிந்து கொண்டிருக்கிறது. அது ஆடுகளையும், மாடுகளையும் பார்க்கிறபோது தெரிகிற பாவனையில்லை, நன்றாக முற்றி வளர்ந்த பயிர்களினூடே நடந்து போகிறபோது கண்களில் மினுமினுக்கிற ஒளியும் இல்லை. எல்லா விதங்களிலும் வேறென ஒரு ஒளியை எஸ்தரைப் பார்க்கிறபோது அவனுடைய கண்கள் வெளியிடுகின்றன.

யாருக்கும் பற்றாத சாப்பாட்டை தட்டுக்களில் பறிமாறினாள் எஸ்தர் சித்தி. சிறு குழந்தைகளுக்கும் கூடப் போதாத சாப்பாடு. சின்ன அமலம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். அது அவள் இயல்புதான்.

”நீங்க ரெண்டு பேரும் ஒங்க வீடுகளுக்குப் போயி இரிங்க. புள்ளயளயுங் கூட்டிக்கிட்டுப் போங்க”, என்று பெரிய அமலத்தையும், சின்ன அமலத்தையும் பார்த்துக் கேட்டாள். இரண்டு பேரும் அதற்குப் பதிலே சொல்லக் கூடாது என்கிறது போல எஸ்தர் சித்தியின் குரல் இருந்தது. அவர்களும் பதிலே பேசவில்லை.

“நீங்க ரெண்டு பேரும் எங்கூட வாங்க, மதுரையில போய் கொத்த வேல பாப்போம், மழை பெய்யந்தன்னியும் எங்ஙனயாவது காலத்தே ஓட்ட வேண்டியது தானே? ஈசாக்கும் வரட்டும்”

இதற்கும் அகஸ்டினும், டேவிட்டும் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கழித்து டேவிட் மட்டும் பேசினான். கைவிரல்களில் கேப்பைக்களி பிசுபிசுத்திருந்ததை ஒவ்வொரு விரலாக வாய்க்குள் விட்டுச் சப்பினபடியே பேசினான்,

“பாட்டி இருக்காளா?”

எஸ்தர் சித்தி அவனைத் தீர்மானமாக பார்த்தாள். பிறகு பார்வையை புறவாசல் பக்கமாய் திருப்பிக் கொண்டாள். டேவிட் கேட்டதற்கு எஸ்தர் அப்புறம் பதிலே சொல்லவில்லை. படுக்கப் போகும்போது கூட பதிலே சொல்லவில்லை. ஆனால் அன்றைக்கு ராத்திரியில் சுமார் ஒரு மணிக்கும் மேலே வறட்சியான காற்று வீச ஆரம்பித்தது. அப்போது நடுவீட்டில் குழந்தைகளின் பக்கத்தில் படுத்திருந்த எஸ்தர் சித்தி எழுந்து போய் பாட்டியின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

அதிகாலையிலும் அந்த வறட்சியான காற்று வீசிக் கொண்டிருந்தது. அது குளிர்ந்தால் மழை வரும். அது குளிராது. குளிர்ந்து போக அக்காற்றுக்கு விருப்பம் இல்லை. மெலிந்து போயிருந்த இரண்டு காளை மாடுகளும் அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தன.

அதை அரைகுறையான தூக்கத்தில் புரண்டு கொண்டிருந்தவர்கள் எல்லோரும் நன்றாகக் கேட்டிருக்க முடியும். அந்த மாடுகளின் பெருமூச்சை அதிக நேரம் கேட்க முடியாது. தாங்க முடியாத சோகத்தை எப்படியோ அந்தப் பெருமூச்சில் கலந்து அந்த மாடுகள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. அந்தக் காற்றாவது கொஞ்சம் மெதுவாக வீசியிருக்கலாம். புழுக்கத்தை வீசுகிற காற்றுக்கு இவ்வளவு வேகம் வேண்டாம். காய்ந்து கிடக்கிற மேல்காட்டிலிருந்து அந்தக் காற்று புறப்பட்டிருக்க வேண்டும். காற்றில் காட்டில் விழுந்து கிடக்கிற காய்ந்த மாட்டுச் சாணம், ஆட்டுப் பிழுக்கை இவைகளின் மணம் கலந்திருந்தது. மேல் காட்டில்தான் கடைசியாக இந்த வருஷம் அதிகம் மந்தை சேர்ந்திருந்தது.

பாட்டியை கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிறதுக்கு பக்கத்து ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப்பெட்டியை மிகவும் சொல்பமான விலைக்கு ஈசாக்கே தலைச்சுமையாக வாங்கிக்கொண்டு வந்தான். அதற்குள் சாயந்திரமாகி விட்டிருந்தது. பாதிரியார் ஊரில் இல்லையென்று கோயில் குட்டியார் தான் பாளையஞ்செட்டி குளத்திலிருந்து வந்திருந்தார். ஊரை விட்டு கிளம்புகிறதுக்காகவென்று எஸ்தர் சேமித்து வைத்திருந்த பணத்தில் பாட்டியின் சாவுச் செலவிற்கும் கொஞ்சம் போய்விட்டது.

யாரும் அழவேயில்லை மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய கலவரமான முகங்கள் காட்டின. கல்லறைத் தோட்டம் ஒன்றும் தொலைவில் இல்லை. பக்கத்தில் தான் இருந்தது. கோவில் தெருவிலும், நாடாக்கமார் தெருவிலும் இருந்த இரண்டே வீட்டுக்காரர்கள் கொஞ்ச நேரம் வந்து இருந்து விட்டுப் போய்விட்டர்கள். துக்க வீட்டுக்குப் போய் துக்கம் விசாரிக்கிற பொறுப்பை அவ்வளவு லேசாகத் தட்டிக் கழித்து விட முடியும் தானா?

எஸ்தர் சித்திக்கு மட்டும், பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலை குத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. வெகு காலம் வரை அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள்.

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

21 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on October 12, 2010 at 9:30 AM said...

தமிழின் மிக முக்கிய படைப்பை எல்லாருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற உங்களின் பெரிய எண்ணத்திற்கு கோடி நன்றிகள்.
ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள், ஆரய்ச்சியாளர்கள், புலவர்கள் செய்யாத ஒரு மகத்தான பணியை செய்து வருகிறீர்கள்.
தமிழ் சமூகம் என்றென்றும் கடமை பட்டு உள்ளோம்.

Unknown on October 13, 2010 at 11:52 PM said...

எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. எத்தனை முறை படித்தாலும் மேலும் படிக்கத் தோன்றும். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Unknown on November 21, 2010 at 8:35 AM said...

வண்ணநிலவனின் எல்லாப் புத்தகங்களையும் நான் வாசிக்கவில்லை என்றாலும் வாசித்த எல்லாமே மிக மிகப் பிடித்திருந்தன,

அவரது கடல்புரம் எனக்கு மிக மிகப் பிடித்திருந்தது, அது பற்றி எழுதிய பதிவொன்று
http://solvathellamunmai.blogspot.com/2009/04/blog-post_30.html

ஜெயந்த் கிருஷ்ணா on November 21, 2010 at 10:22 AM said...

மிகவும் பிடித்த சிறுகதை,,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

'பரிவை' சே.குமார் on November 21, 2010 at 12:21 PM said...

மிகவும் பிடித்த சிறுகதை,,
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

இரவிசங்கர் பாண்டியன் on December 3, 2010 at 10:07 PM said...
This comment has been removed by the author.
இரவிசங்கர் பாண்டியன் on December 3, 2010 at 10:08 PM said...

அருமை! நல்லா இருக்கு!
பதிந்ததற்கு நன்றிகள்!!!

Unknown on July 17, 2011 at 1:03 PM said...

தமிழின் மிக முக்கிய படைப்பை எல்லாருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்ற உங்களின் பெரிய எண்ணத்திற்கு கோடி நன்றிகள்.
ஆயிரம் தமிழ் ஆசிரியர்கள், ஆரய்ச்சியாளர்கள், புலவர்கள் செய்யாத ஒரு மகத்தான பணியை செய்து வருகிறீர்கள்.
தமிழ் சமூகம் என்றென்றும் கடமை பட்டு உள்ளோம்.

செல்வா on August 12, 2011 at 3:35 PM said...
This comment has been removed by the author.
thamizkkuudam on November 23, 2011 at 4:18 AM said...

இந்தக் கதையை காரைக்கால் பொதுநூலகத்தில் பைண்ட்செய்யப்பட்ட புத்தகத்தில் வாசித்ததாக ஒரு மங்கிய நினைவு.பல ஆண்டுகளுக்குப்பின்,இப்போது வாசிக்கும்போது மனசை என்னமோ செய்கிறது. எத்தனை உயிரோட்டமான மனிதர்கள்.எண்ணக் கொந்தளிப்புகள்.தீராத வாழ்க்கைப்பாடுகள்.இந்தக் கதையை முன்னிறுத்தி,அப்படியே நிகழ்கால் இலக்கியத்துக்குள் வந்தால்,வற்றிப்போன நதிவெளி போல்தான் இருக்கிறது.அது ஒரு வகையான காலமாற்றம் என ஆறுதல் கொள்ளவேண்டியதுதான். வேறு வழியில்லை!அன்றிருந்த வளமான நதி,அப்படியேவா இருக்கிறது? எங்கோ போகிறது வாழ்க்கை.எங்கெங்கோ அலைகிறார்கள் மனிதர்கள்...கிட்டத்தட்ட இலக்கியமும் இப்படிதான் இருக்கிறது! நேசமிகு எஸ்.ராஜகுமாரன்

MARUTHU PANDIAN on January 12, 2012 at 9:36 AM said...

I came to know about this story through S.Ramakrishnan's interview in Ananda Vikatan. I wanted to read this story from then and i couldn't get a hard copy of it in the stores available in my home town. Accidentally i came to this page when i was browsing through Writer Jeyamohan's page. Thank You So Much. Now i will read Tamil Stories whenever i find time.

"Esther" reminded me of "One Hundred Years of Solitude". It has so many things in similar. Drought Stricken backdrop. One woman taking care of the household affairs.Deserted town. Useless males. The list is endless. I couldn't help comparing Esther with Amaranta and the old women in the house with Ursula.

வித்யாசாகரன் (Vidyasakaran) on February 7, 2012 at 3:38 PM said...

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எங்கள் ஊரில் முப்பத்துச்சில ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் நடந்திருக்குமேன்று எண்ண வைக்கிறது. :(

Jerji on July 20, 2012 at 10:28 PM said...

Esther; Makes me believe classics happen. Not created or made. Read it long long ago. Have read most of his stories. Kadalpurathil, Rainees Iyer theru; one more SS collection; Dont remember the name.
But all of them beautiful stories. They linger on and on and on. Unforgettable. Thanks for the blog.

திண்டுக்கல் தனபாலன் on August 7, 2012 at 8:59 AM said...

உங்களின் இந்தப் பதிவும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/3.html) சென்று பார்க்கவும். நன்றி !

KRG on May 14, 2013 at 8:04 PM said...

வெகு நாளாக நான் தேடிய இலக்கியம் இது.
அமரர் சுஜாதா ஒரு கட்டுரையில் பெருமைப்படுத்தி எழுதியதிலிருந்து இந்த இலக்கியத்தை தேடுகிறேன்.

இன்று நீர்ப்பறவை ' திரைப்படத்தில் நாயகியின் பெயர் எஸ்தர் என இருந்ததால், திரு. ஜெயமோகன் அவர்களுடைய பங்களிப்பு அந்த திரைப்படத்தில் இருப்பதால், இந்த இலக்கியத்தை மீண்டும் தேடினேன்.

இங்கே பதிப்பித்ததற்கு மிக்க நன்றி.


இது இந்த வலைதளத்தை தொடரும் நன்மக்களுக்கு கிடைத்த வெற்றி.
பணி தொடர வாழ்த்துக்கள்.

வாசகர்களாகிய எமது தரப்பிலிருந்து மேலும் செய்ய வேண்டியது ஏதும் இருந்தால் தெரியப் படுத்துங்கள்


'அழியாச் சுடர்கள்' வலைதளத்திற்கு மிக்க நன்றி.

Ramprasath on May 14, 2013 at 9:56 PM said...

//வாசகர்களாகிய எமது தரப்பிலிருந்து மேலும் செய்ய வேண்டியது ஏதும் இருந்தால் தெரியப் படுத்துங்கள் //
வேறன்ன கேட்கப்போறேன். நிறைய கதைகள் PDF-ஆ இருக்கு தட்டச்சனும். ஆர்வமும் நேரமும் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள். நீங்கள் இந்த கதைப்படித்து நெகிழ்ந்ததுபோல், பலரை உங்கள் புண்ணியத்தில் மகிழ்விக்கலாம். விருப்பமிருக்கும் வாசகர்கள் யாவரும் தொடர்புக்கொள்ளலாம். நன்றி

Unknown on September 7, 2013 at 2:49 PM said...

படிப்பதற்கு நன்றாக இருந்தது

senthilkumar on December 15, 2014 at 5:52 PM said...

காவியத் தலைவி எஸ்தரில் கரைந்து போனென். இந்த ஒரு கதையே போதும் பலர் வரலாறுகளை யூகிக்க முடிகிறது காய்ந்து போன நெல்லைப்புரத்து பகுதிகள்,குடும்பத்தை இயங்க வைக்கும் வாழாவெட்டிகள்,இலக்கில்லா உழைக்கும் ஈசாக்குகள், ஓய்வில்லாமல் உழைத்து ஓசையில்லாமல் அடங்கும் பாட்டி எஸ்தர்கள்.

சக்திவேல் விரு on December 16, 2016 at 9:23 PM said...

அழியாசுடர் குழுமத்தின் பணி மிகவும் முக்கியமானது .....மிக்க நன்றி ..

Flora on March 31, 2020 at 1:37 PM said...

Manamaarntha nanrigal

avanevan on January 19, 2023 at 10:11 PM said...

Heart wrenching story. Beautifully narrated with the elements of pathos tugging your heart so much the readers may have to struggle hard to get over the desperation caused. Thanks for sharing. A big salute to Vanna Nilavan.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்