Apr 30, 2010

தோப்பில் முகம்மது மீரான்-வெங்கட் சாமினாதன்

 

வெங்கட் சாமினாதன்

தமிழ் நாட்டின் தென் கோடியில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்தில் இல்லாத இரண்டு சிறிய கிராமங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவ்வளவு நாட்களின் தூரத்தில் நின்று பார்க்கும் போது அவற்றின் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று சமீபத்து நிகழ்வுகள் என்று தான் சொல்லவேண்டும். இரண்டும் முரண்பட்டவை. இரண்டு வேறுபட்ட முகங்களைக் காட்டும் நிகழ்வுகள். இவ்விரண்டையும் ஒன்றாக்கிப் பார்க்கச் thoppil செய்வது இந்த முரண் நகை தான். ஒன்று, மீனாக்ஷ¢புரம் என்ற கிராமத்தின்  பிற்படுத்தப்பட்ட, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட அந்த கிராம மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த மாக முஸ்லீம் மதத்திற்கு மாறியது. ஹிந்து மதத்தில் அவர்களுக்கு தரப்படாத சமூக நீதி, இழைக்கப்பட்ட தீண்டாமை இவற்றிலிருந்து இஸ்லாம் விடுதலை அளிக்கும், இங்கு அவர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று சொல்லி மதம் மாற்றப்பட்ட நிகழ்வு. இந்த நிகழ்வு தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் பத்திரிகைகளிலும் மற்ற மேடைகளிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இப்போது எத்தனையோ வருடங்கள், கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக் காலம் கடந்து விட்டது. அவர்களுக்கு வாக்குறுதி தரப்பட்ட சமத்துவமும், சமநீதியும் அந்த ஏழை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கபட்ட மக்களுக்கு கிடைத்துள்ளதா, மற்ற முஸ்லீம்களுடன் அவர்கள் சமமாக கருதப்படுகிறார்களா, வாழ்கிறார்களா என்பது தெரியாது. விசாரித்து அறியப்பட வேண்டிய விஷயம் இது.

இதை ஒட்டி நடந்த இன்னொரு சம்பவம், ஒரு விதத்தில் இதுவும் மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் சம்பவம், ஒரு இலக்கிய நிகழ்ச்சி. ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை என்னும் தலைப்பில் வந்த தோப்பில் முகம்மது மீரானின் நாவல். அந்த கடலோரத்து கிராமத்தின் பெயர் தேங்காய்ப் பட்டினம். மீனாட்சிபுரத்திலிருந்து அப்படி ஒன்றும் அதிக தூரத்தில் இல்லை அது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களே பெரும்பான்மையாக வாழும் கிராமம். இந்த நாவல் வெளிவந்தது 1988-ம் வருடம். அதன் பிறகு தேங்காய்ப்பட்டினம் என்ற தான் பிறந்த சொந்த கிராமத்தை இன்றைய தமிழ் இலக்கியத்தில் தேங்காய்ப்பட்டினம் மிகவும் அறியப்பட்ட, புகழ்பெற்ற கிராமமாக ஆக்கிவிட்டார் தோப்பில் முகம்மது மீரான். ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினைப் போல, கா·ப்காவின் ப்ராக் போல, ஏன் இன்னும் அருகே ஆர்.கே நாராயணின் மால்குடி போல, தேங்காய்ப் பட்டினம் தமிழ் இலக்கியத்தில் தானும் இடம் பெற்றுவிட்டது இந்த கிராமம். கிட்டத்தட்ட ஒரு மூன்று தலைமுறைக்கு அந்த கிராமத்தில் வாழ்ந்த மனிதர்கள் பலரை, அந்த கிராமத்தின் சந்து பொந்துகள், மசூதி, இன்னும் பல் முக்கிய இடங்கள் எல்லாம் தமிழ் வாசகர்களுக்குத் தெரியும்.

இந்த கிராமத்தில் வாழும் முஸ்லீம் மக்கள் தாங்கள் அசலான அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக்கும் என்பதில் பெருமை கொள்பவர்கள். "ஏன் பெருமைப்படமட்டோம்?. நாங்கள் என்ன மற்றவர்கள் போல ஹிந்துவாக இருந்த மதம் மாறியவர்கvenkat_swaminathanளா என்ன? எங்கள் முன்னோர்கள் சௌதி அரேபியாவிலிருந்து வந்து இங்கு குடியேறிவர்கள் அல்லவா? அது இன்று நேற்று நடந்த விஷயமா என்ன? அதற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் சரித்திரமும் உண்டு, அது 9- நூற்றாண்டிலிருந்து தொடங்கும் சரித்திரமாக்கும்" இன்றும் அந்த பிரக்ஞையுடன் தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு மாதிரியான மலையாளமும் தமிழும் கலந்த, நிறைய அரபுச் சொற்கள் தூவிய மொழி பேசுகிறார்கள். இது தான் மீரானின் நாவல்கள் பேசும் மொழியுமாகும். மீரானின் முதல் நாவல் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில் வாழ்ந்த தன் கிராமத்து மக்களின் வாழ்க்கையைச் சொல்கிறது. இந்த வாழ்க்கையும் மனிதர்களும், மீரான் தன் பெற்றோர்கள், குடும்பத்து முதியோர்களிடமிருந்து கேட்டறிந்தது. அந்த வாழ்க்கை, வெளிஉலகை ஒதுக்கிய, தமக்குள் சுருண்டு கொண்ட வாழ்க்கை. தங்கள் கிராமத்து, அல்லது அந்த பக்கத்து முஸ்லீம் மத குருமார்கள் சொல்படி தான் அனேகமாக வாழ்க்கை முழுதையும் அமைத்துக் கொண்டவர்கள். அரபு மொழி தவிர வேறு மொழி கற்பதோ, மதரஸாவை விட்டு வேறு எந்த கல்வியையும் கற்பதோ, பத்திரிகைகள் படிப்பதோ, வகுப்பின் கரும்பலகையில் அரபு மொழியும் குரானும் தவிர வேறு மலையாளம் அல்லது தமிழ் மொழிகளில் எழுதுவதோ கற்பதோ, தலையை மொட்டை அடித்துக் கொள்ளாதிருப்பதோ, இப்படி யான கூடும் கூடாதுகளின் பட்டியல் மிக நீண்டு செல்லும் - இந்த எல்லா 'கூடாது' களும் ஹராம் தான். அதாவது முஸ்லீம் மதத்தில் பகிஷ்கரிக்கப்பட்டவை. அங்கு வாழும் முஸ்லீம் மக்களின் அடி மனதிலேயே இந்த 'கூடாது' கள் எல்லாம் கல்லில் செதுக்கப்பட்டது போல பொறிக்கப்பட்டுள்ளவை. ஜின்னா என்று ஒருவர் பெயரை அவர்கள் அறிவார்கள். ஆனால் அவர் ஒரு 'கா·பிர்' தான். ஏனெனில் அவர் அணிவது மேல்நாட்டு உடைகளை அல்லவா? பேசுவது ஆங்கிலம் அல்லவா? தலையில் கிராப் அல்லவா வைத்துக்கொண்டிருக்கிறார்? அவர் மசூதிக்கு தொழுகைக்கும் போவதில்லை, நமாஸ¥ம் படிப்பதில்லை என்பதை அவர்கள் அறிவார்களா இல்லையா என்பதை மீரான் சொல்லவில்லை.

மீரானின் துறைமுகம் என்னும் இரண்டாவது நாவல் 1940களில் அம்மக்களது வாழ்க்கையைச் சொல்கிறது. இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு. இதில் ஏழை மீனவமக்கள் தூத்துக்குடி நகரத்திலிருக்கும் இடைத் தரகர்களின் பிடியில் வதைபடும் வாழ்க்கையச் சுற்றி எழுதியிருக்கிறார் மீரான். தூத்துக்குடி இடைத்தரகர்களுக்கும் மேலே இலங்கையிலிருக்கும் மொத்த வியாபாரிகள் எஜமானர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் முஸ்லீம்கள் தான். அந்த மொத்த வியாபாரிகள் இதே கிராமத்திலிருந்து சென்றவர்கள் தான். வியாபாரம் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் வாய் வார்த்தைகளில்தான் நடைபெறுகிறது. . இலங்கையில் இருக்கும் பண முதலைகள் கிராமத்து மக்களின் மதிப்பையும் மரியாதையையும் மிகப் பெற்றவர்கள். காரணம் அந்த கிராமத்து மசூதிக்கு அவர்கள் நிறைய பணம் உதவி செய்கிறர்கள். அவர்கள் ஹஜ் யாத்திரை முடித்து கிராமத்துக்கு திரும்பும் போது பெரிய ஆரவாரத்தோடு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கிராமத்து இளம் வாலிபர்கள் மகாத்மா காந்தியால் கவரப்பட்டு அவரது ஆதர்சத்தில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம் முஸ்லீம் மதத்திற்கு எதிரானதென கண்டனம் செய்யப்பட்டு, அதன் ஆசிரியர் கிராமத்திலிருந்தே விரட்டப்பட்டுவிடுகிறார். ஒரு நாயர் பள்ளிக்கூடத்தில் படிக்கச் செல்லும் மாணவனின் குடும்பம் ஜாதி பிரஷ்டம் செய்யப்படுகிறது. அந்தப் பையனின் பெற்றோரோ, கா·பிராகிவிட்ட தங்கள் பையன் காரணமாக தமக்கு நேர்ந்த சாபம் தான் இந்த ஜாதி பிரஷ்டம் என்று கருதுகிறது.

அந்த கிரமத்து ஹாஜி (முஸ்லீம் மத குரு) இப்போது ஜின்னாவை ஒரளவுக்கு ஒத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளார். முழுமையாக அல்ல முஸ்லீமகளின் தரப்பை வாதிட ஒருவர் வேண்டுமே. காந்திதான் ஹிந்துக்களின் தலைவராகிவிட்டார். அவருக்கு எதிராக முஸ்லீம்கள் ஒருவரை நிறுத்த வேண்டாமா? மத குருக்களும், பெருந்தனக்காரர்களும் ஒன்றும் அறியாத கபடமற்ற எளிய மக்களை தம் இஷ்டத்திற்கு பணிய வைத்துக் கொடுமைப்படுத்துவதில் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். அந்த எளிய மக்கள் மதத்தின் பேரால் சொல்லப்படும் எந்த கட்டளைக்கும் சுணங்காது, கேள்வி எழுப்பாது அடி பணியப் பழக்கப் படுத்தப் பட்டவர்கள். கிராமத்து மசூதியின் காப்பாளரான அஹ்மது கன்னு பெரும் பணக்காரர். அந்த கிராமத்துக்கு வருகை தந்துள்ள, தன்னை கடவுளின் தூதனாக கற்பிதம் செய்துகொள்ளும், ஒரு போலி மதகுருவை தன் வீட்டில் தங்க வைத்து உபசரணைகள் செய்கிறார். அவர் அந்த கிராமத்துக்குத் தப்பி ஓடி வந்துள்ள ஒரு பிசாசை பிடித்து ஒடு போத்தலுக்குள் அடைக்கவேண்டும் என்ற திட்டத்தோடு வந்துள்ளதாக செய்தி பரவவிட்டுள்ளார். கிராமத்து மக்களின் எந்த நோய் நொடியையும், துக்கத்தையும் போக்கிவிடுவார். அவர் தங்கியிருக்கும் இடம் சென்று கையில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரோடு சென்று வரிசையாக அவர் வருகைக்காக காத்திருப்பார்கள் ஜனங்கள். அவர் அந்தக் கிண்ணத்தில் துப்புவதே அவர் அவர்களை ஆசீர்வத்தித்ததாகும். அவர் துப்பிய நீரை அருந்தினால் அவர்கள் குறைகள் தீரும். அவர் அந்த கிராமத்தில் தங்கி இருக்கும் வரை கிராமத்து மக்கள் தம் குடும்பத்து இளம் பெண் ஒருத்தியை அவருடைய சுகத்திற்கு அனுப்பி வைத்தாலே தாங்கள் பெரும் பாக்கியம் செய்துள்ளதாக அம்மக்கள் நம்புகிறார்கள். அஹ்மது கன்னுவின் வீட்டுப் பெண் ஒருத்தியையே அனுப்பி வைக்கச் சொன்ன போது தான் அஹ்மது கன்னுவுக்கு கண்திறக்கிறது, இந்த ஆள் செய்து வந்துள்ளது ஒரு பெரும் மோசடி என்று.

கூனன் தோப்பு என்னும் நாவல் இரண்டு கிராமங்களிடையே நடந்த மதக்கலவரத்தைப் பற்றியது. ஒரு நதியின் எதிரும் புதிருமான கரைகளில் இரண்டு கிராமங்கள். இரண்டு கிராமங்களிலும் இரு வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். இரண்டு கிராமங்களிலும் அவரவருக்கு உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள். மதம் எதுவாக இருந்தாலும் சரி, எங்கும் காணப்படும், திருடர்கள், சண்டியர்கள், தம்மை ரோமியோக்களாக நினைத்துக் கொண்டு திரியும் வாலிபர்கள், நதியில் குளிக்கும் பெண்களைப் பார்த்துக் கண்ணடிக்கவே தாமும் குளிக்க வரும் காதலர்கள் கிட்டத்தட்ட ஒரே விகிதாசாரத்தில் இரண்டு கிராமங்களிலும் உண்டு. அத்தோடு கோழி திருடுபவர்களும் உண்டு. எல்லா கிராமங்களிலும் நடக்கும் இந்த கோழித்திருட்டுதான் இந்த இரண்டு கிராமங்களிடையே மதக்கலவரம் வெடிக்கவும் காரணமாகிறது. கோழி திருடியவன் ஒரு கிராமத்து முஸ்லீம். கோழி இன்னொரு கிராமத்து கிறிஸ்தவப் பெண் ஒருத்திக்குச் சொந்தமானது. அந்த கிறிஸ்தவப் பெண்ணுக்கு காதலன் ஒரு சண்டியர். அவன் தன் வீரத்தைக் காதலிக்குக் காட்டும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா? திருடிய எதிர் கிராமத்து முஸ்லீமை நன்றாக விளாசிவிட்டு வருகிறான். இது சாதாரண ஒரு கோழித்திருட்டை மிகச் சிக்கலான மதமோதலாக்கி விடுகிறது. பின் என்ன! இதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க முடியுமா? முஸ்லீம் சமூக கௌரவம் என்ன ஆவது? ஒருவருக்கொருவர் பதிலடி கொடுக்க சிக்கல் அதிகமாகிறது. காயம் பட்ட மத கௌரவம், தனி மனித குரோதம், பழி வாங்கல், நாங்கள் என்ன உங்களுக்கு சளைத்தவர்களா என்ற ஆவேச கொந்தளிப்புகள் எல்லாம் பூதாகாரமான மதக்கலவரமாகிறது. ஒரு ஹாஜி அவமானப்படுத்தப்பட்டால் சும்மா இருக்கமுடியுமா என்ன? அது மதத்திற்கே, கிராமத்திற்கே, அந்த சமூகத்திற்கே கேவலம் இல்லையா? இரண்டு கிராமங்களிலும் முடிவுறாது நீண்டு செல்லும் பகைமை, ரத்தம் சிந்த, வீடுகள் நாசமாக, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதில் முனைப்பு கொள்கின்றனர்.

மீரானது நான்காவதும், இப்போதைக்கு கடைசியுமான நாவல் சாய்வு நாற்காலி ஒரு முஸ்லீம் குடும்பத்து இரண்டு நூற்றாண்டுக்கு நீளும் சரித்திரத்தை முன் வைக்கிறது. பாவுரீன் பிள்ளை என்னும் ஒரு முஸ்லீம் சிப்பாயின் வீர தீரச் செயல்களோடு தொடங்குகிறது. திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவின் உயிரையும் அவரது ராஜ்யத்தையும் டச்சுக்காரகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய வீரச் செயலுக்கு மகாராஜ மகிழ்ச்சியடைந்து ஒரு கிராமம், ஒரு வாள் பின் அரண்மனை போன்ற ஒரு பெரிய வீடு, இத்தனையும் பரிசாக அளிக்கிறார். அந்த சிப்பாயின் சந்ததியார்களின் கதையைச் சொல்லி வரும் நாவல் கடைசியில் முஸ்தபா கன்னுவைச் சுற்றிய் நிகழ்வுகளை அதிகம் விஸ்தரிக்கிறது. முஸ்தபா கன்னு, அதிகம் முதல் நாவலின் அஹ்மது கன்னுவைப் போன்ற மனிதன். எல்லா விஷயங்களிலும். பண்டைக்கால பெருமை, கடந்து விட்ட பழங்காலத்திலேயே இன்னும் வாழ்வதான நினைப்புகள். குருட்டு நம்பிக்கைகள், இறுகி கெட்டித்துப் போன மதப் பிடிப்பு, தன் சுற்றியுள்ள சீரழியும் பண்டைச் சின்னங்களில் கர்வம் - எல்லாம். இந்த மாதிரியான பண்டைப் பெருமைகளில் வாழும், நிகழ்காலத்தைப் பற்றிய நினைப்பே இல்லாத மனிதர்களை, அந்த அவலத்தை சத்யஜித் ரேயின் ஜல்ஸாகர், ஆடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் சாதுக்கள். அப்பாவிகள். முஸ்தபா கண்ணு கொடுமை மிக்க முரடன். தன்னைச் சுற்றியிருக்கும் உறவினர்களையும் மற்றோரையும் அவன் படுத்தும் பாடு கொடூரம் நிறைந்தது. அவனைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை, சமூகம், காலத்தின் ஒரு புள்ளியில் உறைந்து போனது. நாறி அழுகி வருவது. தன்னுள் சுருங்கி, மூட மதப் பழக்கங்களில் இறுகிப் போனது. தன் குடும்பம், கிராமம், மத சமுதாயம் இதற்கு வெளியே உள்ள உலகைக் காண மறுப்பது.

மீரானின் எல்லா எழுத்துக்களிலும் பதிவாகியிருப்பது இருண்டு போன முஸ்லீம் மத அதிகாரத்தின் காலடியில் வதைபடும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை. பதிவாகியுள்ள காலம் மூன்று அல்லது அதற்கு மேற்கொண்ட தலைமுறைகள் வாழ்ந்த காலம். பழமையாகிப்போன மத அதிகாரம் மாறாதிருப்பதில் சுய நலம் காண்பது. அதே சமயம் மீரானின் நாவல்கள் அவர் அறிந்த மனிதர்களின் நினைவில் பதிந்து விட்ட முஸ்லீம் சமுதாயத்தின் வரலாற்றையும் கதையாக நமக்குச் சொல்கின்றன. தான் எந்த கட்டத்திலும் சம்பவங்களையோ மனிதர்களையோ கற்பனையாகச் சித்தரித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரவில்லை என்கிறார். தான் அறிந்த, கேட்ட வரலாற்றையும், சம்பவங்களையும் மனிதர்களையும் தான் தன் நாவல்களில் உலவவிட்டுள்ளதாகச் சொல்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்க சுய விமர்சனமாகும். அவர் எதையும் மறைக்கவில்லை. பூசி மெழுகவில்லை. ஒரு சுயவிமர்சனமாக அவர் எழுத்து கூர்மையானது. மன்னிப்புகளும் சமாதானங்களும் இல்லாதது. ஒன்றைச் சொல்ல வேண்டும். இத்தகைய, பக்ஷபாதமற்ற சுயமதிப்பீடு, சுய விமர்சனம், இன்றைய தமிழ் எழுத்தில் காணப்படாத்து. இன்றைய தமிழ் ஹிந்து சமூகத்தில் காணும் ஆயிரம் ஆயிரம் சாதிப் பிரிவினைகளும், அது விளைவிக்கும் சாதிப் பூசல்களும், சுய சாதிப் பெருமைகளும், சாதி வெறியும், தன் சாதி அடையாளங்களைப் பாதுகாக்கும் உற்சாகமும், அதே சமயம் மற்ற சாதியினருடன் எந்த சமத்துவத்தையும் விரும்பாத சகிப்பின்மையும், சுய விமர்சனத்திற்கும் சுய மதிப்பீடுகளுக்கும் ஒரு வளம் நிறைந்த களமாகும். ஆனால், சமூக நீதி பேசும் தலைமைகள், சாதி ஒழிப்பு பற்றி பேசும் தலைமைகள் சுய விமர்சனத்தைப்பற்றியே சிந்திக்காதவை.

இன்றைய தமிழ் நாட்டின் ஹிந்து சமுதாயத்தின் சாதிகள் தம்மிடையேயிருந்து ஒரு மீரான் போன்ற எழுத்தாளர், தம் சமூக, சாதி சித்திரத்தை பக்ஷபாதமின்றி பதிவு செய்யும் ஒரு எழுத்தாளர் எழுவதை சற்றேனும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படி ஒரு சமூக விமர்சனம் பிராமணர்களைச் சாடுவதற்கு எல்லோருக்கும் நிறைந்த சுதந்திரமும் வரவேற்பும் உண்டு. ஆனால் யாரும் மற்ற சாதியனரைப் பற்றி ஏதும் சொல்லிவிட முடியாது. சொல்லித் தப்பிவிடவும் முடியாது. சாதி ஒழிப்பும், அந்த கோஷத்தில் சாதி விமர்சனமும் ஒரே ஒரு சாதிக்கு எதிராகத் தான், பிராமணர்களுக்கு எதிராகத்தான் எழுத அனுமதி உண்டு. தப்பித் தவறி ஒரு சின்ன குறிப்பு வெளிவந்துவிட்டால், அந்த எழுத்தாளன் அத்தோடு தொலைந்தான். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம் பத்திரிகையில் சுஜாதா எழுதி வந்த சரித்திரத் தொடர்கதையில் தேவரோ நாயக்கரோ ஒரு பாத்திரத்தின் குணசித்திரம் அந்த ஜாதியினருக்கு விரும்பும் வகையில் இல்லை. அந்த ஜாதியில் எல்லோரும் என்ன சொக்கத் தங்கங்களா? ஒரே புனித வார்ப்பா? எல்லா குணச்சித்திரங்களும் எல்லா சாதி மனிதர்களிலும் இருக்கத் தானே செய்யும். ஒரு சரித்திரக் கதையில் அந்த சாதிக்காரன் கொஞ்சம் மாற்றுக் குறைந்து விடக்கூடாது. குமுதம் பத்திரிகை இதழ்கள் ஆங்காங்கே குவித்து எரிக்கப்பட்டன. குமுதம் பத்திரிகை அலுவலகம் சூறையாடப்பட்டது. கலவரங்கள், கண்டன ஊர்வலங்கள் இத்யாதி, இத்யாதி. கடைசியில் குமுதம் நிர்வாகிகள் மன்னிப்புக் கேட்டனர். அந்த தொடரும் உடன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சுஜாதா தன் பாடத்தைக் கற்றுக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின் அவர் மிக நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பதில் முனைப்பாயிருக்கிறார். இது போன்ற எந்த வம்புக்கும் போவதில்லை.

ஆனால், எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் வெளிவரத்தொடங்கிய தலித் எழுத்துக்களில் தான் தலித் சமூகம் தன் சமூகத்தில் உள்ள பிளவுகளையும் தன் தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்குள்ளேயே கூட நிலவும் சாதிப்பிரிவுகளையும் வீண் சாதி வெறியையும் வெளிப்படையாக முன் வைக்கப்படுவதைக் காண்கிறோம். இந்த சுய எள்ளல்கள், விமர்சனங்கள் பிரசுரமாகின்றன. தலித் சமூகத்தினர் எவரும் இதற்குக் கண்டனக் குரல் எழுப்பவில்லை. வீட்டுக்குள் இருக்கும் அழுக்கை ஏன் வெளியில் மற்றோர் பார்க்கக் கொட்டுகிறாய் என்று எந்த தலித்தும் சீறவில்லை. ஆனால் தலித் இலக்கியம் எப்படி எழுதப்படவேண்டும், என்று சித்தாந்தக் கட்டுமானம் தரும் சித்தாந்திகள் தான் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள். அவர்கள் கட்டமைத்துள்ள சித்தாந்த விதி, தலித்துகளை வெறி கொண்டு தாக்குவது நாயக்கர்களும், தேவர்களுமானாலும், தலித் இலக்கியம் பிராமணர்களைத் தான் தம் எதிர்ப்புக்கு இலக்காக்க வேண்டும். தம்மையே சுய விமர்சனம் செய்து கொள்வது தம்மக்களையே காட்டிக் கொடுப்பதாகும் என்று சித்தாந்திகள் சொல்கின்றனர்.

இத்தகைய பின்னணியில் சில உண்மை விவரங்களைச் சொல்லலாம். மீரானின் முதல் நாவல், ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை தொடராக பிரசுரமானது, அவர் வட்டாரத்து முஸ்லீம் சமுதாயத்து பத்திரிகயான முஸ்லீம் முரசுவில். அப்போது அதை யாரும் வெளியில் கவனித்ததாகத் தெரியவில்லை. 1988-ல் அது புத்தகமாக வெளிவந்த பிறகு தான் அது ஒரு வணிக வெற்றியாயிற்று. அதுவும் பெரும் அளவில். அத்தோடு இலக்கிய அங்கீகாரமும் அதற்குக் கிடைத்தது. சாகித்ய அகாடமி பரிசு, நேஷனல் புக் டிரஸ்டின் எல்லா இந்திய் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் ஆதான் பிரதான் திட்டத்தில் அவரது இன்னொரு நாவல் சேர்க்கப்பட்டது. வணிக வெற்றியும் சரி, இலக்கிய அங்கீகாரமும் சரி, மீரானை அவர் சமூகத்தில் ஒரு புகழ் பெற்ற நபராக்கியுள்ளது. இவையெல்லாம் மீரானுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்துள்ளன. இவ்வளவு வணிக வெற்றியும் இலக்கிய புகழும் முன்னுதாரணமற்றவை.

சல்மான் ரஷ்டிக்கும், தஸ்லீமா நஸ்ரீனுக்கும், தில்லி ஜாமியா மிலியாவில் ஒரு முஸ்லீம் சரித்திரப் பேராசிரியருக்கும், சீக்கிய வரலாறு பற்றி எழுதிய ஆராய்ச்சிக்காக ஒரு சீக்கிய பேராசிரியருக்கும் என்ன கொடுமைகள், கண்டனங்கள், இழைக்கப்பட்டன என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ளலாம். ஒரு மிரட்டலில் நம்மூர் சுஜாதா பணிந்து விட்டார். நம்மூர் சமூக நீதிக்காரர்களின், சாதி ஒழிப்பாளரின் இரட்டை நாக்கும், இரட்டை நீதியும் இன்றும் செல்லுபடியாகின்றன, கவர்ச்சிகரமான கோஷங்களில்.

அதே சமயம் சையத் ஷாஹ்புதீன்களும், ஒவைசிகளும், அப்துல்லா புகாரிகளும், பனத் வாலாக்களும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மீரான் நாவல்களைப் படிக்கக்கூடுமானால்.... என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. அதே சமயம் நம் மீரானே கூட வரலாற்றில் உறைந்து விட்ட சமாச்சாரங்களைத் தாண்டி, சம காலத்துக்கு வரலாம். அப்போது அவருக்கு நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பழைய சமாசாரங்களுக்கு பொறுமை காட்டி அவரைக் கீர்த்திமானாக்கிய சமுதாயம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். அவர் இப்போது எழுதுவதையே நிறுத்தி விட்டாற்போல் தோன்றுகிறது. ஆபத்துக்கள் பயமுறுத்துகின்றனவோ என்னவோ. ஹெச் ஜி. ரசூலுக்கு நடந்தது அவரை எச்சரிக்கையோடு இருக்கச் செய்திருக்கலாம். அதே சமயம் நாம் என்ன வாழ்ந்தோம் என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. வரலாற்று நிகழ்வுகளை மூடி மறைக்காது எழுதிய மீரான் சௌக்கியமாக திருநெல்வேலியில் வாழ்கிறார். முஸ்லீம் மக்களிடையே ஒரு கௌரவம் மிக்க பிரதிநிதியாக. அதே காரியத்தை மிகச் சின்ன அளவில் ஒரு வரலாற்றுத் தொடர்கதையின் ஒரு பாத்திரத்தின் சித்தரிப்பைக் கூட நம்மால் சகித்துக் கொள்ளமுடியவில்லையே. எந்த முஸ்லீம் கலவரக் கூட்டம் முஸ்லீம் முரசை சுற்றி வளைத்துக் கொண்டு அதன் அலுவலகத்தை சூறையாடியது?

11.4.07

Apr 29, 2010

சங்கிலி - வண்ணதாசன்

வண்ணதாசன்

'புள்ளை கழுத்தில சங்கிலி கிடக்கான்னு பாருங்க ' '-- பஸ்ஸை விட்டு இறங்கியும் இறங்காமலும் சொன்னாள். இறங்குகிற கூட்டத்தின் கடைசி ஆள் தரையில் காலை வைப்பதற்குள்ளாகவே மூன்று நான்குபேர் பஸ்ஸிற்குள் தங்களைத் திணித்துக்கொண்டிருக்க, குழந்தையும் கையுமாக விலகி வந்து வந்து நின்றவன்--

vd3 'இந்தா, நீயே பாத்துக்கோ ' என்று கொஞ்சம் கோபமாகவே அவளிடம் குழந்தையை நீட்டினான். குழந்தை அதன் நான்கைந்து வயது உற்சாகத்துடன், கூட்டத்தை, பஸ்ஸை, இரைச்சலை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கழுத்தில் செயின் கிடக்கிறதையே அறியாத மலர்ந்த விழிகளுடன், அதனுடைய உலகத்தின் வேலியற்ற சந்தோஷத்தில் மிதந்து நின்றது முகம். அதை வாங்கிக் கொண்டே, அவனுடைய கோபத்தை ஏற்றுக்கொள்கிற ஒரு உள் உதட்டுச் சிரிப்புடன் அவள் நடந்துகொண்டு வந்தாள். அவளுடைய கை தன்னையறியாமல் குழந்தையின் கழுத்தில் கிடந்த செயினையும், அதன் சட்டையுடன் ஊக்கால் மாட்டப்பட்டிருக்கிற இடத்தையும் தடவி அதன் பத்திரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது.

அவன் மறுபடியும் கொஞ்சம் அதிகமாகக் கோபப்பட்டான்.

'நான்தான் வீட்டைவிட்டுப் புறப்படும்போதே செயின் எல்லாம் என்னத்துக்குப் போடுதே, நாம என்ன கல்யாண வீட்டுக்கா போறோம்...ஃப்ரண்டு வீட்டுக்குத்தானேன்னேன் கேட்டாத்தானே. '

அவனுடைய கோபத்தை மேலும் குறும்பாகக் கிளறி விடுகிறதுபோலே, இன்னும் கொஞ்சம் அதிகமாகவே சிரித்துக்கொண்டு-- 'கல்யாண வீட்டுக்குன்னாப் போட்டுக் கிடலாமோ. அப்பவும்தான் சொல்வீங்களே தங்கச் சப்பரம் புறப்பட்டாச்சான்னு. '

அவளுடைய சிரிப்பை இதைச் சொல்லும்போது அவள் குரலில் ஏறி இறங்கின நடிப்பை உணர்ந்தபோது அவனுக்கும் சிரிப்பு வந்தது. 'எத்தனை தடவை நீ, நான் அப்படிச் சொன்ன உடனே எல்லாத்தையும் கழட்டி ஒழுக்கறைப் பெட்டியிலே வச்சுட்டுப் போயிட்டே ' அப்படிப் போனதிலே மற்றவங்க உன் வெறுங் கழுத்தைப் பார்த்து வான்னு கேட்காமப் போயிட்டாங்க ' என்று மறுபடியும் கேட்கலாம். ஆனால் மறுபடியும் சிரிக்கத்தான் போகிறாள். எதுக்கு இவ்வளவும் சொல்கிறான் என்று யோசிக்கப்போவதில்லை. கண்டிப்பாக நகையெல்லாம் போடக்கூடாது என்று சொல்லவும் முடியவில்லை. எல்லாம் அவள் கல்யாணத்தோடு போட்டுக்கொண்டு வந்தது இப்போது குழந்தைக்குப் போட்டிருக்கிற வாத்து டாலர் போட்ட செயின்கூட அவள் அம்மா வீட்டிலிருந்து கல்யாணத்தில் போட்டதுதான்.

இவள் கேட்கமாட்டாள். இன்னொருத்தி என்றால் தான் புதிதாக எதுவும் செய்து போடாததை இங்கே குத்தி அங்கே வாங்குகிறது போல 'கல்யாணத்துக்குப் பொறவு நீங்க பண்ணிப் போட்ட மூணு வடம் சங்கிலியையும் ஒட்டியாணத்தையும் வேணும்னா நான் ஒரு இடத்துக்கும் போட்டுக்கிட்டு வரலை ' என்று சொல்லி குரூரமாகத் திருப்திப்படலாம். அப்படியும் இருப்பார்கள். அப்படிச் சொல்லக்கேட்டு அதற்குப் பதில் சொல்லமுடியாது குனிபவர்களும் இருப்பார்கள்.

இவன் இப்படியாக யோசித்துக்கொண்டு வருவதை எப்போதாவது ஒன்றாக வெளியே வருகிற இவன், இதே போன்ற கோபத்துடனேயே இருந்து, இந்தச் சாங்காலத்தையே இதன் மூலம் மகிழ்ச்சிக் குறைவானதாக்கிவிடக்கூடாது என்று உணர்ந்து, அதைத் தவிர்ப்பதுபோல்--

'உங்க ஃப்ரண்ட் வீட்டில இருப்பாரா இப்ப ? ' என்று ஒரு பொதுவான கேள்வியைக் கேட்டாள். குழந்தை அவளுடைய தோள் பக்கம் திரும்பிப் பின்னால் நகர்கின்ற மரங்களை, வாகனங்களை, சைக்கிள் ரிக்ஷாவின் அலாதியான மணியடிப்பை எல்லாம் பார்த்துக்கொண்டு வந்தது.

'இருப்பான். இல்லாமல் எங்கே போகப்போறான். எவ்வளவு நாளாகக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கான். இன்றைக்குத்தான் நமக்கு நாள் வாய்ச்சிருக்கு இதுக்கு ' என்று அந்தப் பிரியமான சிநேகிதனின் ஞாபகமும், அந்த ஞாபகம் கிளம்பின அவனுடைய முகமும் பாவனைகளும், கருநீல ஈறு தெரியச் சிரிக்கிற நிறைந்த சிரிப்பும், ரொம்பப் பல சமயங்களில் அதிகபட்ச மனிதாபிமானத்துடன் அவன் நடந்து கொள்கிற முறைகளும் டா கொண்டுவந்து விநியோகிக்கிற ஒரு கிழிந்த டிராயர்ப் பையனிடம்கூட ஒரு நெருக்கத்தை உடனடியாக அடைந்துவிட முடிகிற அவனுடைய சுபாவமும் எல்லாம் அவனுக்குள் சொல்லமுடியாத ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தது.

காரியம் காரணம் எல்லாம் பார்த்துப் பழகுகிறவர்களே அதிகம் இருக்கிற அலுவலக உலகத்தில், தன்னை இவன் சிநேகிதனாகத் தேர்ந்து எடுத்துக்கொண்டது எவ்விதம் என்று புரியாது. ஆனால் அப்படி நிகழ்ந்ததற்கான நெகிழ்ச்சியுடன் நடந்துகொண்டிருந்தான். அந்தச் சிநேகிதத்தின் ஒட்டு மொத்தமான பரிமாணத்தை, இதோ அவன் வீட்டைச் சமீபிக்கிற இப்போதுதான் உணர்ந்ததுபோலவும், உணர்ந்ததை ஒரு பாடலைப் போலப் பாடி நடக்கவேண்டிய நேரம் இதுவென்றும் அவனுக்குப் பட்டது. குழந்தையை மனைவியிடமிருந்து வாங்கி, மாறி மாறிக் கொஞ்சிக் கீழே விட்டு நடத்திக் கூட்டிக்கொண்டு போனான். கூட ஒருத்தி வாராங்கிறதாவது ஞாபகமிருக்கட்டும் ' என்று சீண்டிக்கொண்டு அவளும் உடன் நடந்தாள்.

மனதின் அலைகளுக்கேற்பச் சுற்றுப்புறமும் வர்ணங்கள் அடைந்ததுபோல எல்லாம் கலகலத்துக் கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றி, ஏப்ரலின் மலர்ச்சியைக் கிளை நுனிகளில் ஏந்திக்கொண்டு கம்மென்று வாகை மரங்கள் வாசனையைப் பெய்து கொண்டிருந்தன. வெகுதூரம் வரை கூடவே வந்து நம் விரட்டலுக்குப் பின் மனமின்றித் திரும்புகிற செல்லமான வீட்டு நாய்க் குட்டியாக வேப்பம்பூவின் வாசனையும் விட்டுவிட்டுக் கூடவே வந்து போய்க்கொண்டிருந்தது.

ஒரு டவுனின் கடைசியில், இப்படி ஒரு கிராமத்தின் அடையாளங்கள் அடங்கிய தெரு இருப்பதே நன்றாக இருந்தது. கட்டிடங்களுக்கு மத்தியில் துண்டு விழுந்தது போல ஒரு மைதானம் இருந்தது. பிந்தின அறுவடைக்குக் களம் போட்டுப் பிணையல் அடித்துக் கொண்டிருந்தார்கள் அதில்.

அந்தத் திருப்பம் தாண்டினால் சிநேகிதனுடைய வீடு தான். சட்டென்று கொரகொரவென்று ஒரே சப்தமாக வந்தது. நூறு நூற்றைம்பது என்று பழுப்பும் வெள்ளையுமாக ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கலைந்து நெருங்கி மறுபடி முன்புகுந்து செருகி என்று தாராக் கோழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துப் பெருகி இவர்கள் பக்கம் வந்து சற்றுப் பள்ளமாக மடிந்து மைதானத்துக்குள் இறங்கியது. குழந்தை தாராக் கோழிக்குப் பின்னால் ஓடியது.

அது கொஞ்சம் ஓடுவது வரை அனுமதித்துவிட்டு, ஒரு பாதுகாப்பற்ற எல்லைக்குள் அது நுழைத்துவிட்டதைத் திடாரென்று கண்டதுபோல் 'ஓடியா, ஓடியா. அங்கே எல்லாம் போகக்கூடாது. பூச்சாண்டி பிடிச்சிக்கிட்டுப் போயிடுவான். யாராவது சங்கிலியை அறுத்துக்கிட்டு இப்படி குறுக்கே மைதானத்தில் விழுந்து ஓடினாக்கூடத் தெரியாது ' என்று தானே அந்த இடம் போய் குழந்தையை அந்த அரூபமான திருட்டுக் கைகளிலிருந்து காப்பாற்றிவிட்ட நிம்மதியுடன் வந்துகொண்டிருந்தாள். குழந்தையின் பார்வை அதன் பிடிமானத்திலிருந்து நழுவி தாராக்கோழிகள் போவதையே துரத்திப் பிடித்தது. 'போவ்...போவ்வ் ' என்று வாத்துக்காரன் சத்தம் போடுவது மைதானத்தின் மத்தியில் கேட்டது.

வீட்டில் சைக்கிள் இருந்தது.

அவனுடைய சிநேகிதன் உபயோகிக்கிற அந்த லேடாஸ் சைக்கிள் இருந்தால் அவன் இருக்கிறதாகத்தான் அர்த்தம். வீட்டு வாசலில் காட்டுக்கொடிகள் போல விறைப்பாக முறுக்கிக்கொண்டு மேலேறிப்போய் படர்ந்து கிடக்கிற ரங்கூன் க்ரீப்பரின் அதிகம் கவர்ச்சியற்ற எளிமையான நீண்ட பூக்கள், இன்னும் இருட்டாத சாயங்கால மங்கல் வெயிலில் தொய்வாக அசைந்து ஆடின. உதிர்ந்ததும் வாடினதுமாக அந்தத் தாழ்வாரப் பகுதியும் மிகுந்த உபயோகத்திற்குள்ளான பிரம்பு நாற்காலிகள் கிடக்கிற இடமும், வாசலும் பூச்சிந்தின கோலத்துடன் இருந்தது.

சின்னப் பிள்ளைகளுக்குப் பூவை விடவும், இலைகளை விடவும், அந்திமந்தாரை விதைகளை விடவும், பசலிப் பழத்தை விடவும் கூடின சிநேகிதம் உண்டா என்ன ? 'வாங்க வாங்க ' என்ற சிநேகிதனும் அவருடைய மனைவியும் வரவேற்று அழைத்தபோதும், எல்லோருமாக உள்ளே சென்ற போதும் எல்லாம் குழந்தை வாசலிலேயே தங்கி, அவற்றைக் கைநிறைய, மடி நிறையச் சேகரிக்க ஆரம்பித்துவிட்டது. தனிமை தெரியாத, பயம் தெரியாத, தனக்குத்தானே பேசிக் கொள்கிற அந்தச் சின்னஞ்சிறு உலகத்தின் சந்தோஷத்துடன் அது தனித்திருந்தபோது உள்ளிருந்தே பதறிக்கொண்டு வந்து, ' நல்ல வேளையாப்போச்சு. இங்கேதானே இருக்கே. கழுத்தில் செயின் வேறே கிடக்கு. எங்கேயும் தெருவாசலுக்குத்தான் போயிட்டயோண்ணு பயந்து போயிட்டேன் ' என்று குழந்தையைப் பார்த்துச் சொல்லி, அதன் இது வரையிலான பிரத்தியேக உலகங்கள் நொறுங்கும்படியாக உள்ளே எடுத்துக்கொண்டு போனாள். படியில், நடையில், அறையில் என்று சிதறிக்கொண்டே போன க்ரீப்பர் பூவுடன் குழந்தையின் அழுகையும் கசங்கிக் கசங்கிக் கேட்டது. 'வேண்டாம் வேண்டாம் ' என்று சொல்லியும் சமாதானம் ஆகிறதாக இல்லை.

முதல் தடவையாகத் தாய்மையடைந்து வயிறு கனத்து அமர்ந்திருக்கிற வெட்கத்துடன் சிநேகிதனின் மனைவி பேசிக் கொண்டிருக்க, சிநேகிதனே சிறுசிறு தின்பண்டங்களை எடுத்துவந்து உபசரித்தான். உயரமான கண்ணாடிப் பூந்தம்ளர்களில் டா கலந்து கொண்டுவந்து கொடுத்தான். போலியற்ற அவனுடைய உலகத்தில் நுழையத் தயங்கத் தனக்கோ, தன் மனைவிக்கோ அவசியமில்லாததுபோல இருந்தது.

சிநேகிதனுக்குச் சுலபமாகக் கிண்டல் பண்ண முடிந்தது. சிரிக்க வைக்கவும் ஒருமையில் கூப்பிட்டு இன்னும் சிறிது கேக் கூடுதலாக எடுத்துக்கொள்ளச் சொல்லவும் முடிந்தது. முதலில் 'ஐயையோ, போதும் ' என்று மறுத்தவளிடம் வெட்கமான புன்னகையைத் தருவித்து அந்தச் சிரிப்புடன் கேக்கின் பிறிதொரு விள்ளலை வாங்க வைக்க முடிந்தது.

எல்லாம் இதமாக இருந்தது. போகவேண்டிய தூரம், டவுன் பஸ் நெரிசல், ஞாயிற்றுக்கிழமை அரசியல் கூட்டத்துக்காகச் சுற்றி வளைத்துப் போய் நிற்கிற பஸ், ஒருவேளை குழந்தை தூங்கிப்போய்விட்டால் அப்படி பஸ் நிற்கிற இடத்திலிருந்து வீட்டிற்குச் சுமந்து செல்லவேண்டிய சிரமம். எல்லாம் இல்லாவிட்டால் ரொம்ப நேரம் இங்கேயே இருந்துவிட்டுப் போகலாம்.

அந்தச் சமயத்தில்தான் தெருவில் மிட்டாய்க்காரன் சத்தம் கேட்டது. 'இவர் இங்கேயும் வருவாரா ' என்று கேட்டுக்கொண்டிருக்கும்போதே குழந்தை எழுந்து தெருவுக்கு ஓடியது. இவனுக்கே இந்தத் தடவை குழந்தை கழுத்தில் சங்கிலி கிடப்பது ஞாபகம் வந்தது. குழந்தையின் பின்னால் புறப்பட்டு அதன் பெயரைச் சொல்லி நிறுத்தினான். அது நடையிலேயே நின்று தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அவரேதான். அதே ஜவ்வு மிட்டாய்க்காரர்தான். இவன் சின்ன வயதாய் இருக்கும்போதே, இவனுக்குக் கையில் வாட்ச் மிட்டாய், தேள் மிட்டாய் எல்லாம் கட்டி, கடைசியில் ஒரு பிசுக்கை உதட்டிலும் ஒட்டிவிடுகிற அதே அம்மன் தழும்புக்காரர். தலைப்பாகை, கோட்டு, மீசை, பூ விழுந்த கண், ஒரு குடையைப்போல மூடப்பட்டிருக்கிற மிட்டாய்த்தடி, அவர் தோளில் தொங்குகிற தகரக் குழாயை உதட்டில் பொருத்தி, 'பாப்பா, ஏ, பாப்பா ' என்று அதன் உலோக விசித்திரம் நிறைந்த குரலிலேயே கூப்பிடுகிற நேர்த்தி--எல்லாம் இன்னும் அப்படியே இருந்தன.

தோளில் பம்பரக் கயிறு கட்டித் தொங்கவிட்டிருந்த மணியை, எல்லாப் பிள்ளைகளும் அடித்துக்கொண்டிருந்தார்கள். சட்டை போடாத, தலை கலைந்த, அறுப்புக் களத்திலிருந்தும் பிணையல் அடிப்பில் இருந்துமெல்லாம் ஓடிவந்து சுற்றிச் சூழ நின்றுகொண்டிருந்த அந்தப் பிள்ளைகள், மாறி மாறி அந்த மணியை விடாமல் அடித்துக்கொண்டு, காசு வாங்காமல் கடைசியில் மிட்டாய்க்காரரே அவர்கள் உதட்டில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தடவிவிடப் போகிற மிட்டாய்த் துண்டை எதிர்ப்பார்த்தபடி அவரைச் சூழ்ந்திருந்தார்கள். அதனதன் உடம்பின் உயரத்திற்கேற்பக் கபடும் பயமும் அற்ற முற்றிலும் குழந்தைத்தனமான அந்த முகங்கள் தாழ்ந்தும் உயர்ந்தும் வாய் பிளந்து கிடந்தன. ஒருவேளை, மிட்டாய்க் கிடைக்காமற்போகிற ஏமாற்றத்திலுங்கூட அந்த முகங்களில் மாறாத இந்தப் பிள்ளைத்தனம் இருக்குமென்று பட்டது.

நடையில் நின்றுகொண்டு, தன் கட்டளையை எதிர் பார்த்திருக்கிற தன் குழந்தை அதன் வயதுக்குரிய தன்னிச்சையை, அடிப்படையான பிள்ளைத்தனத்தை இழந்திருப்பது போலவும் பாதுகாப்பைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்கிற ஒரு பய உணர்வுடன் தயங்கித் தயங்கி இது நிற்பதுபோலவும் கழுத்தில் கட்டியிருக்கிற சங்கிலியே காலில் கட்டின சங்கிலி போல இதை இதன் எல்லையற்ற சுபாவங்களிலிருந்து தடுத்தும் விலக்கியும் போட்டிருப்பது போலவும் பட்டது.

'என்ன, வெளியே எழுந்திரிச்சு வந்து ரொம்ப நேரம் நின்னாச்சு ? ' என்று அவனுடைய சிநேகிதன், சிநேகிதனுடைய மனைவி, அவனுடைய மனைவி எல்லாம் வீட்டிற்குள்ளிருந்து எழுந்து வாசலுக்கு வந்தபோது, அவன் எல்லோருக்கும் ஒரே பதிலாகச் சொல்வதுபோலத் தெருப்பக்கமாய்க் கையைக் காட்டினான்.

தெருவிளக்கின் வெளிச்சத்தில், அந்த மிட்டாய்க்காரின் மணியை அடிக்கிற பிள்ளைகளோடு பிள்ளையாக அவனுடைய குழந்தையும் தன்னை மறந்து நின்றுகொண்டிருந்தது. யானைக்குட்டி தெருவில் வருவதைப் பார்க்கிற, கட்டடம் கட்டுவதற்குத் தட்டின ஆற்று மணலில் விளையாடுகிற, பஞ்சு மிட்டாய் விரும்பித் தின்கிற எல்லாப் பிள்ளைகளின் முகத்தையும் இவன் குழந்தை இப்போது அடைந்துவிட்டது போலிருந்தது. அவனுடைய சந்தோஷத்தையும் மீறி அவனுடைய மனைவி எதையோ கேட்க அவசரப்பட்டு உதடு பிரித்தபோது அவன் அவளை அவசரமாக அமைதிப்படுத்திக் கையை நீட்டினான்.

கழற்றின சங்கிலி கையில் இருந்தது.

*****

Apr 28, 2010

மாடன் மோட்சம்-ஜெயமோகன்

 ஜெயமோகன்

ஆடிமாதம், திதியை, சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சுடலைமாடசாமி விழித்துக் கொண்டது. இனிப் பொறுப்பதில்லை என்று மீசை தடவிக் கொதித்தது. கை வாளைப் பக்கத்துப் படிக்கல்லின்மீது கீய்ஞ் கீய்ஞ்சென்று இருமுறை உரசிப் பதம் வரச் செய்து, பாதக்குறடு ஒலிக்கப் புறப்பட்டது. சேரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. ஒரு பயலுக்காவது இப்படி ஒரு தெய்வம், நடுராத்திரி மையிருட்டில் பசியும் பாடுமாக அல்லாடுவதைப் பற்றிய பிரக்ஞை இல்லை. 'வரட்டும் பாத்துக்கிடுதேன் ' என்று மாடன் கறுவிக்கொண்டது. இந்தக் காலத்தில் சில்லறைத் தொந்தரவுகளாவது தராமல் தேமே என்று இருக்கிற சாமியை எவன் மதிக்கிறான் ? இப்படியே விட்டால் மீசையைக்கூட பீராய்ந்து கொண்டு போய்விடுவான்கள். இளிச்சவாயன் என்ற பட்டமே தன்னை வைத்து ஏற்பட்ட மரபுதானோ என்ற சந்தேகம் மாடனுக்கு வந்தது.jeyamohan

இருண்டதும், சாக்கடை தாறுமாறாக வெட்டி ஓடியதுமான தெருவில், பன்றிகளின் அமறல் ஒலித்தது. ஞைய்ங் என்று ஒரு பன்றிக்குட்டி அன்னையைக் கூப்பிட்டது. மாடனுக்கு நாவில் நீர் ஊறியது. பன்றிக்கறி படைக்கப்பட்டு வருஷம் நாலாகிறது. வந்த உத்வேகத்தில் ஒன்றைப்பிடித்து லவட்டி விடலாமென்றுதான் தோன்றியது. ஆனால் தலைவிதி; சாமியானாலும் சடங்குகளுக்குக் கட்டுப்பட்ட கட்டை, பலியாக மானுடன் தந்தால் மட்டுமே வயிற்றுப்பாடு ஓயும். திடாரென்று ஒரு சவலை நாய் 'ளொள் ? ' என்ற சந்தேகப்பட்டது. தொடர்ந்து நாலா திசைகளிலும் இருட்டுக்குள், 'ளொள், ளொள் ? ' என்று விசாரிப்புகள் எழுந்தன. ஒரு பயந்தாங்குளி அதற்குள் பிலாக்கணமே ஆரம்பித்து விட்டிருந்தது. சவலை நாசியைத் தூக்கி, மூசு மூசு என்று மோப்பம் பிடித்தது. மாடனை உணர்ந்ததும் ஒரே பாய்ச்சலாக வராண்டாவில் ஏறி நின்று, பாட ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து சேரியே ஊளையொலிகளினால் நிறைந்தது. சுடலைமாடசாமி பூசாரி அப்பியின் குடிசைமுன் வந்து நின்றது. பிறகு கதவிடுக்கு வழியாக ஊடுருவி உள்ளே போனது. இருட்டுக்குள் பூசாரி 'தர்ர் தர்ர் ' என்று குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவனைத் தன் பட்டாக்கத்தியால் நெற்றிப் பொட்டில் தொட்டு 'பிளேய், எலெய் அப்பி; பிள்ளேய் . . . ' என்று கூப்பிட்டு எழுப்பியது மாடன் ஒரே உதையால் பயலின் தொப்பையை உடைக்குமளவு வெறி எழாமல் இல்லை. ஆனால் மரபு , என்ன செய்ய ? மேலும் அப்பி பரமபக்தன். 'எலேய் பிள்ளே எளிவில மக்கா ' என்றது மாடன். அப்பி 'ம்ம்ங் . . . ஜங் . . . சப் ஜப் . . . ' என்று சில ஒலிகளை வாயால் எழுப்பிவிட்டு, வரக் வரக் என்று சொறிந்து கொண்டான். நல்ல முங்கல். என்னது மசங்கின பனங்கள்ளா, எரிப்பனேதானா ? மாடன் வாசனை பிடித்தது. பிறகு மீண்டும் எழுப்பியது. ஒரு வழியாகப் பூசாரி எழுந்து அமர்ந்தான். இருட்டில் அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. 'ஆரு ? ' என்றான். 'நாந்தாம்பில ' என்றது மாடன்.

'ஆரு மாயனா ? ஏம்பிலே இந்நேரத்துக்கு ' என்றபடி அப்பி வாயை விரியத் திறந்து, கொட்டாவி விட்டான். 'பிலெய் நாறி; இது நாந்தாம்பில மாடன் ' என்றது மாடன், பொறுமையிழந்து போய்.

அப்பிக்குத் தூக்கம் போய்விட்டது. 'ஓகோ ' என்றபடி எழுந்து அமர்ந்தான். 'வாரும்; இரியும். என்ன காரியமாட்டு வந்தீரு ? ' என்றான்.

'காரியமென்ன குந்தம். பிலெய் அப்பி, நீயிப்பம் எனக்க காவுப் பக்கமாட்டு வந்து எம்பிடு நாளுபில ஆவுது ? '

'என்னவேய் ஒரு மேதிரி பேயறீரு ? மிந்தா நேத்திக்கு வரேல்லியா ? '

'வச்சு காச்சிப்பிடுவேன் பாத்துக்க. பிலேய் அப்பி, நீயாட்டா வந்தே ? கள்ளுவெள்ளமில்ல ஒன்ன கொண்டு வந்தது ? பிலெய் நான் கேக்கியது என்ன, நீ சொல்லுயது என்ன ? '

'நீரே செல்லும் ஹாவ் . . . ' அப்பி சொடக்கு விட்டபடி வெற்றிலைப் பெட்டியைத் துழாவி எடுத்தான். 'இருமே, வந்த காலிலே என்னத்துக்கு நிக்கிது ? '

'பிலேய் அப்பி, ஒண்ணு ரெண்டல்ல ஆயிரம் வரியமாட்டு நின்னுகிட்டு இருக்குத காலாக்கும் இது; பாத்துக்க . . . '

'இருக்கட்டும் வேய், நமக்குள்ள என்னத்துக்கு இதொக்கெ ? இரியுமிண்ணே. '

'செரி, ஒனக்க இஷ்டம் ' என்றபடி மாடன் அமர்ந்தது. 'யெக்கப்போ . . . நடுவு நோவுதுடோய் அப்பி . . . இருந்து கொற காலமாச்சுல்லா. '

'செல்லும் வேய்; என்னவாக்கும் காரியங்க ? ' என்றான் அப்பி.

'என்னாண்ணு சென்னா, இப்பம் வரியம் மூணு ஆவுது கொடயாட்டு வல்லதும் கிட்டி. '

அப்பி திடுக்கிட்டு, 'அடப்பாவி . . . உள்ளதுதேன், நானும் மறந்துல்லா போனேன் ' என்றான்.

'பூசெ வல்லதும் நடத்துத எண்ணம் உண்டுமா ? '

'என்னை என்னெளவுக்குக் கேக்குதீரு ? நான் அங்க வந்து மோங்குயதுக்கு பகரம் நீரு இஞ்ச வந்து கண்ணீரு விடுதீராக்கும் ? இஞ்ச இன்னத்த கோப்பு இருக்க, கொடை நடத்துயதுக்கு ? '

'ஒனக்க கிட்ட ஆரு பிலேய் கேட்டது ? நமம பிரஜைகளுக்குச் செல்லிப்போடு. '

'என்னது பிரஜைகளா ? ஆருக்கு, ஒமக்கா ? எளவுக்க கததேன் ஹெஹெ . . . '

'ஏம்பிலேய் ? ' என்றது மாடன் அதிர்ச்சியடைந்து.

'அடக் கூறுகெட்ட மாடா ' என்று பூசாரி சிரித்தான். புகையிலையை அதக்கியபடி. 'அப்பம் ஒமக்கு காரியங்களுக்க கெடப்பொண்ணும் அறிஞ்சூடாமெண்ணு செல்லும். '

'என்னத்த அறியியேதுக்கு ? '

'இப்பம் சேரியில ஏளெட்டு பறக்குடிய விட்டா, பாக்கியொக்க மத்தசைடு பயவளாக்கும் பாத்துக்கிடும். '

'மத்தவனுவண்ணு சென்னா ? '

'வேதக்காரப் பயவளாக்கும். '

'அவனுவ இஞ்ச எப்படி வந்தானுவ ? '

'இஞ்ச ஆரும் வரேல்ல. ஒம்ம பிரஜைகள்தான் அங்க செண்ணு நாலாம் வேதம் வாங்கி முங்கினானுவ. ரெட்சணிய சேனேன்னு பேரு சவத்தெளவுக்கு. '

'அப்பிடி வரட்டு ' என்றது மாடன் ஏமாற்றமாக.

'அவியளுக்க சாமி உன்ன மாதிரி இல்ல. '

'வலிய வீரனோவ் ? '

'ஒண்ணுமில்ல; தாடி வச்சுக்கிட்டு, பரங்கி மாம்பளம் கணக்கா ஒரு மேதிரிப் பாத்துக்கிட்டு, இருக்குதான். நெஞ்சில ஒரு கலயம் தீபோல எரிஞ்சுக்கிட்டு இருக்குது. '

'ஆயுதம் என்ன வச்சிருக்கானாம் ? '

'நீரிப்பம் சண்டைக்கும் வளக்குக்கும் ஒண்ணும் போவாண்டாம். அவன் ஆளு வேற . வெள்ளக்காரனாக்கும். '

'பரங்கியோ ? ' மாடனின் சுருதி தளர்ந்தது.

'பின்னே ? ராவிப் போடுவான். ஒமக்குக் கட்டாது. பேயாம காவில இருந்துப் போடும். '

'அப்பம் பின்ன கொடைக்கு என்னலேய் வளி ? கும்பி எரியுதே ? '

'இஞ்ச பாரும். நீரு இப்பிடி மீசைல காக்காப்பீயும் வடிச்சு கிட்டு நின்னீருண்ணு சொன்னா ஒரு பய ஒம்ம மதிக்க மாட்டான். '

'பின்னெயிப்பம் என்னலெய் செய்யணும் இங்கியே ? '

'நாலு நீக்கம்பு, குரு எண்ணு எடுத்து வீசுமே. மத்த பயலுவ இப்பம் இஞ்ச வாறதில்ல. டவுணுக்கு செண்ணு கலர் வெள்ளமும் குளிகெயும் திங்கியானுவ. ஒம்ம நீக்கம்பு பரவி நாலு வேதக்காரனுவ தலெ விளணும். ஆத்தா சாமி எண்ணு கரஞ்சிக்கிட்டு தாளி மவனுவ இஞ்ச ஓடிவரணும். மடிசீலயக் கிளிச்சுப் போட மாட்டானா ? அம்ம தாலிய அறுத்துப்போட மாட்டானா ? எரப்பாளிப் பெயவ களிச்சினும். அப்பிக்க கிட்டயாக்கும் களி பாக்குதேன் . . . '

'தீவாளிப் பெகளத்திலயும் ஒனக்கு இட்டிலி யாவாரம் . . . ' என்றது மாடன், இளக்காரமாக.

'பின்னே ? நான் நல்லாயிருந்தாதானே ஒமக்கு ? '

'செரி பாக்குதேன். '

'பாக்கப்பிடாது; செய்யும். வாரி வீசும் நல்லா. மடி நெறய இருக்கே பண்டார வித்து. வரியம் பத்து ஆவுதில்லா. பயவ மறந்துப் போட்டானுவ மாடா. பேடிச்சாத் தான்லே இவிய வளிக்கு வருவினும். '

'செரி, வாறேன். '

'வேய் மாடா நில்லும் ' என்றான் அப்பி. 'எளவ வாரிகிட்டு கால் பளக்கத்தில் இஞ்ச வந்திடாதியும். நாலெட்டு நீங்கி வீசும். '

'செரிலேய் அப்பி. பாக்கிலாம் ' என்றபடி மாடன் புறப்பட்டுச் சென்றது.

'வாளை மறந்து வச்சுக்கிட்டு போவுதீரே ? '

'வயதாச்சில்லியா ? ' என்றபடி மாடன் வந்து எடுத்துக்கொண்டது. 'வரட்டுமாடேய் அப்பி. '

'நீரு தைரியமாட்டு போவும்வேய் மாடா . . . ' என்று அப்பி விடை கொடுத்தான். மீண்டும் புகையிலையை எடுத்தபடி.

இரண்டு

*******

மாடன் போகும் வழியிலேயே தீர்மானித்துவிட்டது. வேறு வழியில்லை. ஒரு ஆட்டம் போட்டுத்தான் தீர வேண்டியிருக்கிறது. அந்தக் காலத்தில் செயலாக இருந்துபோது ரொம்பவும் சாடிக்குதித்த சாமிதான். காலம் இப்போது கலிகாலம். காடு மேடெல்லாம் காணாமல் போய், எங்குப் பார்த்தாலும் வீடும், தார் ரோடும், சாக்கடையும், குழந்தைகளுமாக இருக்கிறது. முழு எருமை காவு வாங்கிய அந்தப் பொன்னாட்களில் இப்பகுதி பெரிய காடு. ஊடே நாலைந்து குடிசைகள். அப்பியின் முப்பாட்டா ஆண்டி மாதாமாதம் கொடை நடத்திப் பலி தந்ததும், அஜீர்ணம் வந்து பட்ட அவஸ்தைகளுக்கெல்லாம் மாடனின் மனசுக்குள் இன்னமும் பசுமையாகத்தான் இருக்கின்றன. என்ன செய்ய ? ஆனானப்பட்ட திருவட்டார் ஆதிகேசவப் பெருமாளுக்கே அந்திப்படிக்கு முட்டு எனும்போது குட்டி சாமிக்கு என்ன கொட்டியா வைத்திருக்கிறது ? ஏதோ இந்த மட்டும் அப்பியாவது விசுவாசமாக இருக்கிறானே!

தன் கூடையின் விதைகளின் வீரியம் பற்றி மாடனுக்குச் சற்று சந்தேகம்தான். முன்பெல்லாம் காடும் வருடம் முழுக்க மழையும் இருந்தது. வீசியது என்றால் ஒன்றுக்குப் பத்தாக முளைக்கும். இப்போது இந்த வெயிலில், தார்ச்சாலையில் எவன் சட்டை செய்யப் போகிறான். எனினும் கடமையைச் செய்துவிடத் தீர்மானித்து, நள்ளிரவில் பாளைத் தாரை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியது. எது வேதக்காரன் வீடு, எது நம்மாள் வீடு என்று எப்படி அறிவது ? குத்து மதிப்பாக வீசி வைத்தது. எதற்கும் ஜாக்ரதையாக அப்பியின் தெருப்பக்கமே போகவில்லை. தப்பித் தவறி ஏதாவது ஆயிற்றென்றால் சஸ்திரம் பண்ணிவிடுவான்.

திரும்பி வந்து சப்பக்கொட்டிக்கொண்டு அமர்ந்தது. இரண்டு நாள் ஒன்றும் ஆகவில்லை. யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. மூன்றாம் நாள் சிகப்பு பட்டாடை கட்டி, சதங்கையும் வாளும் குலுங்க, வாயில் வெற்றிலைச் சாறு தளும்ப, அப்பி அவ்வழியாக அவசரமாகப் போனான்.

'எலேய் அப்பி, தூரமா ? ' என்றான் மாடன்.

அப்பிக்குக் கோபம் வந்தது. 'என்னவேய் இப்பம் ? ஒரு காரியமாட்டு போவும்பம் பெறவீண்ணு விளிச்சலாமா ? சாமியானா சாத்திரம் மாறிப் போவுமோ ? '

'மறந்து போட்டேம்பில ' என்றது மாடன் பரிதாபமாக.

'செரி செல்லும். என்னவாக்கும் அரிப்பு ? '

'என்னலேய் ஆச்சு, நம்ம காரியங்க ? '

'ஒலக்கெ ' என்று அப்பி கையைக் காட்டினான்.

'மொளைக்கியதுக்கு என்ன ? நீக்கம்பு படந்திருக்கிய உள்ளதுதேன். ஆனா பிரயோசனம் இல்லியே. '

'என்னத்த ? ' என்றது மாடன் புரியாமல்.

'அவனுவ வெள்ளைச் சட்டைக்காரனுவளை இஞ்சயே கொண்டாந்துட்டானுவ வேய். நம்ம பயவகூட அங்க செண்ணு கலர் வெள்ளமும் குளிகெயும் வாங்கித் திங்கியானுவ; பெறக்கிப் பய மவனுவ. நீரும் உம்ம வித்தும் . . . '

மாடனுக்கு அய்யே என்று ஆகிவிட்டது. 'நீயிப்பம் எங்க லேய் போறே ? '

'கஞ்சிக்கு வளி காணணுமே. நாலு வீடு செண்ணு மாடன மறந்து போடாதிய எண்ணு செல்லிப் பாக்குதேன். பத்துபேரு சிரிச்சுத் தள்ளினா ஒருத்தன் விள மாட்டானா ? இப்ப ராசப்பன் கெட்டினவ விளிச்சிருக்கா ' என்றான் அப்பி.

'கிடாய்க்கு வளியுண்டாடோய் ? '

'என்னது ? '

மாடன் தணிந்த குரலில், 'கிடா ' என்றது.

'கட்டேல போக! 'அம்பது பைசா கோளிக் குஞ்சு ஒண்ணு போராதோ ' எண்ணுகேக்குதா அறுதலி. உமக்கு இஞ்ச கிடாய் கேக்குதோ ? '

'செரி விடு. எரிப்பனெங்கிலும் கொண்டு வா. அரக்குப்பி போரும். '

'எரியும், நல்லா எரியும். நான் வாறேன். வந்து பேயுதேன் ஒம்மக்கிட்டே. '

மாலையில் களைத்துப் போன அப்பி வந்து சேந்தான். சோனிக் கோழி ஒன்றையும் கால்குப்பி எரிப்பனையும் படைத்தான்.

நாக்கைச் சப்பியபடி மாடன் சொன்னது, 'அமிர்தமாட்டு இருக்குடேய் அப்பி. '

'காலம் போற போக்கப் பாருமே. முளு எருமை முளுங்கின நீரு . . . '

'தின்னுக்கிட்டிருக்கும்பம் மனசக் கலக்குது மேதிரி பேயாதே டேய் அப்பி. கோளி அம்பிடுதேனா ? '

'இல்லை; நான் தின்னுட்டேன். என் குடலைப் பிடுங்கித் திங்கும். '

'கடேசில அதும் வேண்டி வரும் எண்ணுதான் தோணுதுடேய் அப்பி ' மாடன் கடகடவென்று சிரித்தது.

அப்பி பயந்து போனான். எனினும் அதை வெளியே காட்டாமல் 'பயக்கம் பேயுத மூஞ்சியப்பாரு; ஓவியந்தேன் ' என்று நொடித்தான்.

மீசையைக் கோதியபடி மாடன் தலையை ஆட்டிச் சிரித்தது.

'அப்பம் இன்னி என்னவாக்கும் பிளான் ? ' என்றான் அப்பி.

'ஒறங்கணும் ' மாடன் சோம்பல் முறித்தது.

'சீருதேன். அடுத்த கொடைக்கு என்ன செய்யப் போறீரு எண்ணு கேட்டேன். '

'ஆமா, உள்ளதுதேன் ' என்றது மாடன் மந்தமாக.

'என்ன உள்ளது ? மீசயப்பாரு. தேளுவாலு கணக்கா, மண்டைக்குள்ளே என்னவேய் களிமண்ணா ? '

'பிலேய் அப்பி. எனக்க சரீரமே களிமண்ணுதானேல மக்கா. ஹெஹெஹெ . . . '

'அய்யோ அய்யோ ' அப்பி தலையிலடித்துக் கொண்டான்.

'செரி இல்ல; நீ சொல்லு ' என்று மாடன்.

'இன்னியிப்பம் ஒமக்க வித்து எறியுத வேலயெல்லாம் பலிச்சுக்கிடாது. '

'உள்ளதுதேன். '

'வேற வளி வல்லதும் பாக்கணும். '

'வேற வளி பாக்கணும் ' என்றது மாடன் குழந்தை போல.

'அவியக்கிட்ட நம்ம காவையும் பார்த்துக்கிடச் சென்னா என்ன வேய் ? '

'அவியள்லாம் இந்துக்க இல்லியா ? மாடனுக்கு அங்க என்ன டேய் காரியம் ? '

'இவிய வேதத்தில் சேத்துக்கிடுகிடுவானுவ அப்பம் இந்துக்க அங்க சேக்க மாட்டினுமா ? பிலேய் மாடா ஒண்ணி அங்க, இல்லெங்கி இஞ்ச; ரண்டுமில்லாம இன்னி நிக்கப் பளுதில்ல வேய். '

'ஒனக்க விருப்பம் போலச் செய்யி ' என்றது மாடன் நிர்க்கதியாக.

'எனக்க பிளான் என்னாண்ணு கேட்டியானா, ஒன்னய. மறிச்சுப் போட்டுட்டு இஞ்ச ஒரு சிலுவய நாட்டுவேன். அருவத்தில ரெட்சணிய பொரம் எண்ணு ஒரு போர்டும் எளுதி வச்சிடலாம் எண்ணு பாக்குதேன். '

'பாவி மட்டே; என்ன எளவுக்கு டேய் அப்பி இதொக்க ? ' என்றது. பீதியுடன் கேட்டது மாடன். 'இப்பம் இப்படி நின்னுக்கிட்டாவது இருக்குதேன். மறிஞ்சா பின்ன எள ஒக்கும் எண்ணும் தோனேல்ல. '

'நீரு பயராதியும் வேய் மாடா; ஏமான் பெயவ ஒம்ம பொன்னு போல பாத்துக்கிடுவினும். '

'அதுக்கு ஏன் டேய் இதொக்கெ ? '

'வேய் மாடா, இப்பம் ஆதிகேசவன் கோவிலும் அம்மன் கோவிலுமொக்கெ எப்பிடி இருக்கு அறியிலாமா வேய் ? கொலு கொலுண்ணு வேய். வெளக்குக்கு வெளக்கென்ன; மந்திரமென்ன; நாலு சாமத்துக்கு பூசெ . . . கண்டாமணி . . . வரியத்துக்க மூணு திருவிளா. படையல் . . . கோளோட கோளுதான். இப்பம் இஞ்ச மகாதேவருக்கு ஸ்பீக்கரும் வாங்கப் போவினுமாம். நம்ம மகாதேவரு கோவிலிலே எம்பிடு கூட்டம் தெரியுமா ? '

'அது என்ன லேய் ஸ்பீக்கறு ? '

'காலம்பற பாட்டு போடுயதுக்கு. அதுக்க சத்தமிருக்கே, நூறுபறை கொட்டினா வராதுவேய். நம்ம மூலயம் வீட்டு கொச்சேமான் கோபாலன்நாயருதான் அதுக்க பெரசரண்டு. ஒரு கூட்டம் ஏமான் பெயவ காக்கி டவுசரு இண்டோண்டு கசரத் எடுக்கணும். டவுசரு இட்டனுவ ஆறெஸ்ஸு. மத்தவனுவ இந்துமின்னணி. '

'அங்க கோளி உண்டோவ் ? '

'அரிஞ்சுப் போடுவேன் பாத்துக்கிடும். நான் இஞ்ச மினக்கெட்டு யோசனை செய்யுதேன்; நீரு கோளியிலே இருக்குதீராக்கும். '

'இப்பம் என்னலேய் செய்யப் போறே ? ' என்று மாடன் அலுப்புடன் கேட்டது.

'ஏமான் பெயவளுக்கு ஒரு சொரனை வரட்டும் எண்ணுதேன் வேய். அவியளுக்கு வேற என்னத்த செய்தாலும் சகிக்கும், பேர மாத்தினா மட்டும் விடமாட்டானுவ ' என்றான் அப்பி.

'என்னெளவோ, எனக்கொண்ணும் செரியா தோணேல்ல. ஒனக்க இஸ்டம் ' என்றது மாடன்.

'நீரு தைரியமாட்டு இரும்வேய் மாடா. நான் என்னத்துக்கு இருக்குதேன் ? ஒமக்கொண்ணு எண்ணு சென்னா நான் விட்டுருவேனா ? '

'எனக்கு நீயில்லாம ஆரும் இல்லலேய் அப்பி ' மாடன் தழுதழுத்தது.

'நான் உம்ம விட்டுட்டு போவமாட்டேன் வேய் மாடா பயராதியும் ' அப்பி மாடனைத் தோளில் தட்டிச் சமாதானம் செய்தான். 'இப்பம் என்னத்துக்கு மோங்குதீரு ? வேய் இஞ்சபாரும், ஏமான் பெயவ ஒமக்கு நல்ல முளுக் கிடாய வெட்டி பலி போடாம இருப்பினுமா ? என்னது, முளுக்கிடா . . . பாத்தீரா சிரிக்குதீரு. '

மாடன் சோகமான முகத்துடன் சிரித்தது. அப்பியும் உரக்கச் சிரித்தான். புட்டியில் எஞ்சியிருந்த ஓரிரு துளி எரிப்பனையும் அண்ணாந்து நாக்கு நீட்டி அதில் விட்டுக் கொண்டான்.

மூன்று

****

அப்பால் நடந்ததெல்லாம் மாடனுக்குத் சரியாகத் தெரியாது. குட்டி தேவதையாக இருந்தாலும் அதுவும் கடவுள்தானே! தன்னை மீறிய சம்பவங்களின் போது கல்லாகிவிடுதல் என்ற பொது விதியிலிருந்து அது மட்டும் எப்படித் தப்ப முடியும் ? அன்றிரவு அப்பி மாடனைப் புரட்டிப் போட்டு, பீடத்தின்மீது மரச்சிலுவை ஒன்றையும் நட்டுவிட்டுப் போனான். மாடனுக்கு மார்பை அடைத்தது. எத்தனை தலைமுறைகளைக் கண்டது. கடைசியில் பசிக் கொடுமையில் நாடகம் போட வேண்டிய நிலை வந்துவிட்டது. ஏதோ எல்லாம் ஒழுங்காக நடந்தேறி, வருஷா வருஷம் கொடை மட்டும் முறையாக கிடைத்துத் தொலைத்தால் போதும். கும்பி ஆறினால் அது ஏன் வேறு வம்புகளில் தலையிடப் போகிறது ?

மாடன் படுத்தபடியே, வாளைக் கிடையாகப் பிடித்தபடி, உருட்டி விழித்து இளித்தது. மழை பெய்து தொலைக்குமோ என்று பயம் வந்தது. கூரையும் இல்லை . . . ஜலசமாதிதான் கதி.

அப்பி மறுநாள் காலையிலேயே வந்துவிட்டான். குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதான். பழைய பறையர்கள் சிலருக்கு ஞானோதயம் வந்து, மாடனைத் தரிசிக்க ஓடோடி வந்தனர். முத்தம்மா கிழவி உடனே ஒப்பாரி பாடும் நட்சத்திரம்மாவுக்கு தகவல் சொல்ல அவளுகும் பரிவாரங்களும் வந்திறங்கி சுருதி கூட்டி, லய சுத்தமாக குரல் எழுப்ப, கூட்டம் களை கட்டிவிட்டது. அப்பிக்கே பயங்கரமான சோகம் வந்துவிட்டது. மாடனின் காம்பீர்யம் அந்நிலையிலும் ஜ்வலிப்பதாய் சிலர் புல்லரித்தனர். ஒரு சில வேதக்கார ஆசாமிகளும் வந்து எட்டி நின்று பார்த்தனர். என்ன இதெல்லாம் என்று அவர்களுக்குப் புரியவேயில்லை. மாடனின் வீழ்ச்சியில் அவர்களுடைய பரம்பரை மனம் நோகத்தான் செய்தது. எவனோ வம்புக்காரப் பயல் செய்த வினை; மாடனின் பீடத்திலே சிலுவைக்க என்ன வேலை என்று கருதிய எட்வர்டு என்ற முத்தன் அப்பிக்கு ஒரு கை கொடுத்து மாடனைத் தூக்கி நிறுத்த உதவ முன்வந்தான்.

அப்பி ஆக்ரோஷம் கொண்டான். 'ச்சீ மாறி நில்லுலே, மிலேச்சப் பயல. மாடன் சாமியைத் தள்ளிப் போட்ட பாவி. ஒனக்க கொலம் வெளங்குமாவிலே ? '

எட்வர்டு முத்தன் தயங்கினான். 'ஆருலே தள்ளிப் போட்டது ? '

'நீதாம்பிலே. ஒங்க கூட்டம் தாம்பிலே தள்ளிப் போட்டது ' மடேரென்று மார்பில் ஓங்கி அறைந்தபடி அப்பி கூவினான்.

'பிலேய் ஆருவேணுமெங்கிலும் போங்கலேய். பால்ப் பொடியும் கோதம்பும் குடுத்து அப்பிய வளைக்க ஒக்காதுலேய். நான் இருக்க வரைக்கும் ஒரு பயலும் மாடனைத் தொடவிடமாட்டேம்பிலேய் . . . '

வார்த்தை தடித்தது. குட்டிக் கைகலப்பு ஒன்று நடந்தது. இரு தரப்பினரும் விலக்கப்பட்டனர். அப்பி திங்கு திங்கென்று குதித்து, சன்னதம் கொண்டு ஆடினான்.

உபதேசி குரியன் தோமஸ் கூறினான், 'அதொக்கெ செரிதன்னே அப்பி, குரிசில் மாத்திரம் தொடண்டா. அது சுயம்பாணு. '

சேரியே கலகலத்தது. சுயம்பு சிலுவை உதயமான சேதி அண்டை அயலுக்குப் பரவி ஊழியக்காரர்களும் விசுவாசிகளும் குழுமத் தொடங்கினார்கள். கட்டைக் குரலில் குரியன் தோமஸ், 'எந்ததிசயமே தெய்வத்தின் சினேகம் ' என்று பாட, தெருவில் சப்பணமிட்டு அமர்ந்த மீட்கப்பட்ட மந்தைகள் ஜால்ரா தட்டித் தொடர்ந்து பாடின. பரமார்த்த நாடார் அங்கே உடனே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை திறந்தார். ஞானப் பிரகாசத்தின் சுக்குக் காப்பித் தூக்கும் வந்து சேர்ந்தது. வெள்ளைச் சேலையைக் கழுத்து மூடப் போர்த்திய, கணுக்கை மூடிய ஜாக்கெட் தரித்த, வெற்று நெற்றியும் வெளிறிய முகமும் கொண்ட, தேவ ஊழியப் பெண்கள் பக்திப் பரவசத்தில் அழுதார்கள். குழந்தைகள் ஒன்றுக்கிருந்தும், வீரிட்டலறியும் களைகூட்டின. மீதமிருந்த ஆறு அஞ்ஞானிக் குடும்பங்களும் மீட்கப்படுதலுக்கு உள்ளாகி விடலாமா என்று தயங்கிக் கொண்டிருந்தபோது கார் நிறைய ஏமான்கள் வந்திறங்கினர்.

காதிலே அரளிப்பூ செருகி, சந்தனக் குங்குமப் பொட்டு போட்டு, சிவந்த ராக்கி நூலைக் மணிக்கட்டில் கட்டி, காவி வேட்டியும் சட்டையுமாக வந்த கோபாலன் நேராக அப்பியை அணுகினான். அப்பி அப்படியே சரிந்து ஏமானின் கால்களில் விழுந்தான். ரட்சணியபுரம் என்று கிறுக்கப்பட்டிருந்த பலகையையும், சிலுவையையும் கோபாலன் புருவம் சுருங்க உற்றுப் பார்த்தான்.

'ஆரும் ஒண்ணையும் தொடப்பிடாது. எங்க அண்ணாச்சி ? பாத்துக்கிடுங்க. நான் போலீசோட வாறேன். '

பஜனைக் குழுவில் அமைதி கலைந்தது. 'ஓடுலே காவிரியேலு . . . ஓடிச் செண்ணு வலிய பாஸ்டர வரச் செல்லு ' என்றார் டாக்கனார் வேலாண்டி மைக்கேல்.

ரகளை தொடங்கிவிட்டது என்று மாடன் அறிந்தது. கண்ணை மூடியது; அப்பியும் ஜாக்ரதையாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தான். பிறகு அவனை அப்பக்கமாகக் காணவில்லை.

போலீஸ் வந்தது. தொடர்ந்து பெரிய பாஸ்டர் அங்கி பளபளக்க வந்து சேர்ந்தார். சிலுவையைப் போலீஸ் அகற்ற வேண்டும் என்று குங்குமப் பொட்டுக்காரர்களும், அது சுயம்பு எனவே அங்கேயே இருக்கட்டும் என்று பாதிரியாரும் வற்புறுத்தினர். போலீஸ் குழம்பியது. கடைசியில் முரட்டுத்தனமான லத்திச் சார்ஜ் வரை சங்கதிகள் சென்றடைந்தன. டேனியல் குஞ்சனுக்கு மண்டையும், எஸ்தர் சின்னப் பொண்ணுக்கு முழங்காலும் உடைய நேர்ந்தது.தொடர்ந்து மூன்று நாட்கள் மாடனுக்குப் போலீஸ் காவல். சேரியிலும் சந்தையிலும். அடிதடியும் கொலையும் தண்ணீர் பட்டபாடு ஆயின. மொத்தம் ஏழு என்றார்கள். பாக்கி தொண்ணூற்று மூன்றை நதியில் வீசிவிட்டார்கள் என்றது வதந்தி. அப்பியைக் கண்ணிலே காணவில்லை. போலீஸ் துப்பாக்கிச் சூடு, சமாதானப் பேரணி, நூற்றி நாற்பத்து நாலு, ஆர்.டி.ஓ. விசாரணை, நீதி கேட்டு உண்ணாவிரதம், போஸ்டர் யுத்தம், மந்திரி வருகை, சேலை தானம், சர்வ கட்சி சமாதானக் கூட்டம் ,சர்வ மதத் தலைவர்கள் அறிக்கை என்று சரித்திர வழமைப்படி சம்பவங்கள் நடந்தேறின. சமாதானப் பேச்சு வார்த்தையின் முடிவில் ஒப்பந்தம் உடன்பாடானது. தொடர்ந்து ஆள்பிடிக்கும் வேட்டை. 'என்ன இருந்தாலும் அவிய ஏமான்மாருங்க. பறப்பய எண்ணும் பறப்பயதான் ' என்று பாதிரியார் வீடுவீடாகச் சென்று உபதேசம் செய்தார். 'மறந்து போச்சா பளைய கதையொக்கெ ? அங்க வலிய கோவில் பக்கமாட்டு உங்களயொக்கெ போவ விடுவனுமா ? அவிய செத்தா நீங்க மொட்ட போடணும் எண்ணு அடிச்சவனுவதானே ? இப்பம் என்னத்துக்கு வாறானுவ ? '

சேரியில் ஹிந்துமதப் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. சொர்ணமலை தீபானந்தசாமி வந்து அனைவருக்கும் ஆசியளித்து, சாதி ஏதானாலும் ஹிந்து ஹிந்துதான் என்றார். ஒரே போடாக கிறிஸ்தவர்களும் ஹிந்துக்களே என்று அவர் கூறியது சற்று அதிகம் என்று பலர் அபிப்பிராயப்பட்டனர். சனாதன தருமம் என்றுமே அழிவற்றது என்று முழங்கினார். ஆகவே ஹிந்துமதத்தைக் காக்க இளைஞர்கள் முன்வரும்படி கண்ணீர் மல்க வேண்டினார். யாரும் மதம் மாறுதல் கூடாது என்று கெஞ்சினார். அப்பி பட்டு உடுத்தி, வாள் ஏந்தி, கூட்டுப் பஜனைக்கு வந்ததும், அங்கே தாதிங்க தெய் என்று ஆடியதும் பொதுவாக ரசிக்கப்படவில்லை. அவன் எரிப்பனில் முங்கி வந்திருந்தான். வீடு வீடாகச் சென்று விளக்குப் பூஜை செய்வது பற்றிக் கற்பிக்க சகோதரி சாந்தா யோகினி தலைமையில் மாமிகள் முன்வந்தனர். சேரிப் பிள்ளைகளுக்குப் போஜன மந்திரம் கற்பிக்கும் பணி எதிர்பார்த்ததைவிடவும் மூன்று மாதம் அதிகமாக எடுத்துக் கொண்டது. சுற்றுப்புற ஊர்களில் எல்லாம் மாடனின் பெருமை பறைசாற்றப்பட்டு, ஜனங்கள் தரிசனம் செய்ய வந்தனர். புராணகதா சாகரம் அழகிய நம்பியாபிள்ளை வந்து திருவிளையாடல் புராணமும் திருப்புகழும் விரித்துரைத்தார். சுடலைமாடனின் உண்மையான வரலாறு அவரால் வெளிப்படுத்தப்பட்டது. தட்சன் யாகம் செய்தபோது தன்னை முறைப்படி அழைக்காததனாலும், பார்வதியை அவமானப்படுத்தியமையாலும் சினம் கொண்ட சிவபெருமான் நெற்றிக் கண் திறந்து, ஊழி நடனம் ஆடி, யாக சாலையை அழித்தார். அப்போது அவர் பிடுங்கி வீசிய சடைமுடிக் கற்றைகளிலிருந்து பத்ரகாளியும், வீரபத்திரனும் உதித்தனர். உதிரி மயிர்களில் இருந்து உதித்த அனேக கோடி பூதகணங்களில் ஒருவன்தான் மாடன் என்று அவர் அறிவித்தார். 'சிவனின் மகனே போற்றி! சீரெழும் எழிலே போற்றி! சுடலை மாடா போற்றி! போற்றி! ' என்று அவர் நெக்குருகிப் பாடினார். இத்தனை நாள் கவனிப்பாரற்றுக் கிடந்த மாடன் கோவில் இனிமேலும் இப்படியே கிடக்கலாகாது என்று அவர் கூறினார். உடனே முறைப்படி பிரதிஷ்டை செய்து பூஜை புனஸ்காரதிகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நிதி வசூல் தொடங்கியது.

எதிர் முகாமிலும் நிதிவசூல் பரபரப்பாக நடைபெற்றது. சுயம்பு சிலுவையைத் தரிசிக்க வந்தவர்கள் தேங்காய், கோழி, சிலசமயம் ஆடு முதலானவற்றைத் தானம் செய்தனர். அவை அங்கேயே ஏலமிடப்பட்டன. இருசாரரும் சிலசமயம் கைலப்பில் இறங்கினாலும், பெரிதாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. பெரியதோர் தேவாலயம் அங்கு அமைக்கப்படும் என்று சபை அறிவித்தது. அங்கு அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன. நெய்யூரை சார்ந்த ஜெபமணி-எஸ்தர் தம்பதிகளின் குழந்தை சாம்சன் அருமைராசனுக்கு சிறுவயதிலேயே போலியோ வந்து நைந்துபோன கால் இங்கு வந்து கண்ணீருடன் முட்டிப்பாக ஜெபித்தபோது சரியாக ஆயிற்று. இதைப் போலவே திருச்சி அன்புசாமி, பாளையங்கோட்டை நத்தானியேல், வல்லவிளை அக்னீஸ் ஆகியோருக்கு வேலையும், ஞாறாம்விளை பாக்கியமுத்துவிற்கு லாட்டரியில் ஐநூறு ரூபாய் பரிசும், கிறிஸ்துராஜா நகர் ஹெலனா புரூட்டஸுக்கு பரிட்சையில் ஜெயமும் கர்த்தரின் வல்லமையினால் கிடைத்ததாக சாட்சி சொல்லப்பட்டது. ஞானப்பிரகாசம் அன்ட் சன்ஸின் 'சுயம்பு கிறிஸ்துராஜா ஓட்டலும் ' பரமார்த்த நாடாரின் 'மாடசாமித் துணை ஸ்டோர் வியாபாரமும் ' விருத்தி அடைந்தன. கலெக்டர் சம்சாரமே மாடனைக் கம்பிட வந்தாள். மறுநாளே திருநெல்வேலியில் இருந்து மந்திரி சம்சாரம் வந்து முழு இரவு எழுப்புதல் கூட்டத்தில் கலந்து கொண்டாள். பிஷப் வந்த அன்று அறுநூறு பேருக்கு அன்னதானமும், நூறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானமும் அளிக்கப்பட்டது.

மறுவருஷம் நடந்த இருமத சமரசக் கூட்டத்தில் தமிழ் தெரியாத கலெக்டர் உரையாற்றினார். ஆர்.டி.ஓ. தவசி முத்துப் பிள்ளை மேரியும் மாரியும் ஒன்றுதான் என்று பேசியதைப் பிஷப் ரசிக்கவில்லை என்று பிற்பாடு குறிப்பிடப்பட்டது. சர்வமத ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்றும், சுடலை மாடசாமிக் கோவில் தெருவின் கிழக்கு முனையிலும், சுயம்பு கிறிஸ்துராஜா ஆலயம் மேற்கு மூலையிலும் நிறுவப்பட வேண்டும் என்றும்; தர்க்க பூமி சர்க்காருக்கு விடப்படும் என்றும் மத ஒற்றுமை எக்காரணத்தாலும் தகர்க்கப்பட அனுமதிக்கலாகாது என்றும் ஏகமனதாக, ஒரு அபிப்பிராய வித்தியாச ஓட்டுடன், தீர்மானிக்கப்பட்டது. அசைவர்களுக்கு முயல் பிரியாணியும், பிறருக்கு வடை பாயாசத்துடன் சோறும் அரசுச் செலவில் வழங்கப்பட்டது. இரு சாரரும் போட்டோப் புன்னகையுடன் மறுநாளே தந்தி பேப்பரில் மைக்கறையாகத் தெரிய நேர்ந்தது. தருக்க பூமியில் ஒரு காந்தி சிலை நிறுவப்படும் என்ற முடிவை கலெக்டர் மறுவாரம் பலத்த கைதட்டலுக்கு இடையே, சேரியில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார். அந்தச் செலவை மாவட்ட கருவாடு மற்றும் கொப்பரை ஏற்றுமதியாளர் சங்கம் ஏற்கும் என்ற அதன் தலைவர் பச்சைமுத்து நாடார் மேடையில் ஒத்துக் கொண்ட இனிய நிகழ்ச்சியும் நடந்தேறியது.

நான்கு

******

இவ்வளவிற்கும் பிறகுதான் மாடன் கண்விழித்தது. அப்போது அது புது இடத்தில் இருந்தது. எதிரே கோயில் கட்டும் பணி வெகு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சற்றுப் பெரிய கோவில்தான். மாடன் ஆறடி உயரமாயிற்றே. கோபுரம் வேறு. முன்பக்கம் பெரிய மண்டபம். இருபதடி உயர கர்ப்பக் கிருகம். பலிபீடம். மாடனுக்குக் கவலையாக இருந்தது. அப்பியைத் தேடிப் போவதா, பயலே வருவானா என்று இரண்டு நாளாகக் காத்திருந்தது. அப்போது அவனே வந்தான். உடம்பு பளபளவென்று இருந்தது. வாயில் செழிப்பாக வெற்றிலை. குடுமியில் நல்லெண்ணெய். ஷோக்காக இருந்தான்.

'ஏம்பில காணுயதுக்கே இல்லியே ' என்றது மாடன்.

'அனாத்தாதியும் வேய்; நான் எண்ணும் வந்து பாத்துக்கிட்டு தான் போறேன். நீருதான் மண்ணா கெடந்தீரு. '

'பயந்து போட்டேன்டேய் அப்பி ' என்றது மாடன் அசமஞ்சமாக சிரித்தபடி.

'பயருவீரு. ஒக்கெ ஓம்மச்சுட்டித்தான் பாத்துக்கிடும். இப்பம் எப்பிடி இருக்கேரு தெரியுமா ? '

'எப்படி ? '

'அடாடா, ஒரு கண்ணாடி இல்லாமப் போச்சே. சும்மா விஜெயகாந்த் வில்லன் வேசம் கெட்டினதுமாதிரி இருக்கேரு. பட்டணத்திலேந்து வந்தபய. பெயிண்ட் வச்சு கீசியிருக்கான். உம்ம மீசையிருக்கே அடாடா . . . '

'சத்தியமாட்டு ? ' என்று மீசையைத் தொட்டபடி மகிழ்ந்து கொண்டது மாடன்.

'பின்னே என்ன ? இந்தால கோயிலு, எலக்ரிக் லைட். மாவெலத் தோரணம். பித்தளையில் மணி . . . ராஜபோகம்தேன். நம்ம மறந்திராதியும். '

'மறப்பனா ? ' என்றது மாடன் நன்றியுடன்.

அப்பி திடாரென்று அரைச் சிரிப்புடன் குரலைத் தாழ்த்தியவனாகக் குனிந்து 'நீரு செவனுக்க பிள்ளையாமே ? ' என்றான்.

மாடன் அதிர்ந்தது. 'ஆரு சென்னா ? '

'ஆரு செல்லணுமோ அவியதான். புராணம் பிள்ளைதான் சென்னாரு. '

'ஏனக்கு அறிஞ்சு கூடாம்; காட்டில பெறந்தவன் எண்ணு கேட்டிட்டுண்டு. அது காலம் கொற ஆச்சு. '

'இருக்கும்வே ' அப்பி அருகே வந்தான். 'இப்பம் நாமெல்லாம் இருக்கம், காட்டுக் குட்டியவதான ? ஆரு கண்டா. நம்ம அப்பன்மாரு, ஏமான்மாரு இல்லை எண்ணு ? அப்பம் கத அதாக்கும். ஹிஹிஹி . . . '

மாடனும் தர்ம சங்கடமாய்ச் சிரித்தது.

'எதுக்கும் இப்பம் அவியளே செல்லியாச்சு, ஒம்ம அப்பன் செவன்தான் எண்ணு. வலிய கையாக்கும். ஒரு கெவுரவததான ? பேயாம கமுக்கமாட்டு இருந்து போடும். ஒமக்கு என்னவே, இப்பம் நீரு ஏமான்மாருக்கும் சாமியில்லா ? '

'வெளையாடதடேய் அப்பி ' என்றது மாடன், வெட்கிச் சிரித்தபடி.

'உம்மாண. இப்பம் பிள்ளைமாருவ என்ன, செட்டிய என்ன, நாயம்மாரு என்ன, அய்யமாரு என்ன . . . வாற சாதி சனமிருக்கே . . . அடாடா! பயலுவளுக்குப் பந்தாவும் பெகளவும் காணணும். பறப்பயவ வந்தா ஓரமாட்டு நின்னுகிட்டு பெய்யிடணும். இப்பம் பிரதிட்டெ பண்ணேல்ல. இன்னி அதுவும் ஆச்சிண்ணு சென்னா, நீருதான் கைலாசத்துக்கு வாரிசுண்ணு வச்சுக்கிடும். '

'ஹெ . . . ஹெ . . . ஹெ . . . ' என்றது மாடன்.

'இந்தச் சிரிப்ப மட்டும் வெளிய எடுக்காதியும், ஏமான்பயவ கண்டானுவண்ணு சென்னா அப்பமே எறக்கி வெளியில விட்டு போடுவானுவ. தெய்வமிண்ணா ஒரு மாதிரி மந்தஹாசமாட்டு இருக்கணும். இந்தால கையை இப்படிக் காட்டிக்கிட்டு..., வாளை ஓங்கப்பிடாது. மொறைச்சிப் பார்க்கப்பிடாது . . . '

'என்னெளவுக்குடோய் அப்பி இதொக்கெ ? ' மாடன் சங்கடத்துடன் கேட்டது.

'என்ன செய்ய ? காலம் மாறிப் போச்சு. நாமளும் மாறாம இருந்தா களியுமா ? செல்லும் ? கொஞ்சம் அட்ஜெஸ் செய்யும். போவப் போவச் செரியா போவும். அது நிக்கட்டு; இப்பம் நானறியாத்த வல்ல காரியத்திலயும் எறங்குதா மாடன் ? '

'நீ அறியாத்த காரியமா ? புண்ணில குத்தாத டேய் அப்பி. '

'பின்ன இஞ்ச வாற பெண்ணுவளுக்கொக்கெ கெர்ப்பம் உண்டாவுதாமே ? '

மாடன் திடுக்கிட்டது. 'நான் ஒரு பாவமும் அறியல்லடேய்; கண்ணாணை ஒன்னாணை . . . ' என்று பதறியது.

'நாலு ஊருக்கு ஒரே பெரளி. பிள்ளையில்லாத்த மலடியொ இஞ்ச வாறாளுவ, பூஜை நடத்தியதுக்கு. '

'நான் இஞ்ச என்னத்தக் கண்டேன் ? லேய் அப்பி, எனக்கு இதொண்ணும் ஒட்டும் பிடிக்கேல்ல கேட்டியா ? சும்மா இருக்கியவனுக்கு மேல, அதுமிதும் செல்லி பெரளி கெளப்பிவிடுயதுண்ணா சென்னா, ஒரு மாதிரி அக்குறும்பா இல்ல இருக்குவு ? '

'விடும்; விடும் வேய் மாடா. ஒக்கெ அம்மிணிய. ஒரு கெவுரவம் தானேவேய் இதுவும் ? நீரு பேயாம இரும். '

மாடன் சலிப்புடன் 'அதென்னடேய் என்னமோ சென்னியே, பிரதிட்டெ ? அதினி என்னெளவு டேய் வச்சு கெட்டப் போறாவ நம்ம தலைமேல ? '

'மந்திரம் செல்லி யந்திரம் வச்சு அதுக்க மீத்த ஒம்ம தூக்கி வைப்பாவ. '

'என்னத்துக்குடேய் ? ' என்றது மாடன், பீதியுடன்.

'நல்லதுக்குதேன். ஒமக்கு சக்தி வரண்டாமா வேய், அதுக்காச்சுட்டித்தான் எண்ணு வையும். '

'சக்தியா ? '

'சக்திண்ணா பெலன். வலிய நம்பூரி வாறார். '

'பிலெய் அப்பி; இந்தக் காடு போனப்பளே நமக்குப் பெலன் போச்சி. இன்னியிப்பம் என்னலேய் புத்தனாட்டு ஒரு பெலன் ? '

'அதொக்கெ பளைய கதையில்லா ? இப்பமொக்கெ ஏதுவே காட்டுல சாமி ? இப்பம் பட்டணம் சாமிக்குத்தான் வேய் பெலன். பட்டும் நகெயுமாட்டு போடுவாவ. படையல் போடுவாவ. எல்லாப் பெலனும் மேப்படி மந்திரத்தில இருக்குவேய். '

'எனக்கும் போடுவாவளாடேய், நகெ ? ' என்றது மாடன் கூர்ந்து.

'கண்ணெப்பாரு. செம்மெ இருந்தீரு எண்ணு சென்னை போடம இருப்பினுமா ? '

'எலெய் அப்பி, நல்லதாட்டு ஒரு அட்டியெ பண்ணிப் போடச் செல்லுடேய் . . . '

'போற போக்கப் பாத்தா ஏமான்மாரு ஒமக்குப் பூணூலே போட்டுருவானுவ எண்ணுதான் தோணுது. ஏதோ ஏளய மறக்காம இருந்தா போரும். '

'நீ நம்ம ஆளுடேய் ' என்றது மாடன். 'நான் எங்க இருந்தாலும் ஒன்னிய மறக்க மாட்டேன் பாத்துக்க . . . '

ஐந்து

****

உற்சாகமாய்த்தான் இருந்தது. கோவிலுக்கு முன் பெரிய பலிபீடம். அதைப் பார்த்தபோதே மாடனுக்கு ஜொள்ளு ஊறியது. விசாலமாக முற்றம். முற்றம் நிறைய பலி! மீண்டும் பழைய நாட்கள்!

பழைய நாட்கள் புதுப் பொலிவுடன் திரும்புவது போலத்தான் தோன்றியது. கோவில் கட்டி முடிந்து, திறப்புவிழாவும் பிரதிஷ்டை மகா கர்மமும் நிச்சயிக்கப்பட்டது. உற்சாகம் கொண்ட ஜனத்திரள் வந்து குழுமியது. பொருட்காட்சிகள், தெருக்கடைகள், ரங்கராட்டினம், நாலுதலை ஆடு, கம்பி சர்க்கஸ் என்று திருவிழாக் கோலாகலம். குழந்தைகள் முன்புபோலத் தன்மீது ஏறி விளையாட முடியாதது மாடனுககு என்னவோ போல இருந்தது. சுற்றியும் கம்பிவேலி போடப்பட்டிருந்தது. மந்திரியும், மகாதானபுரம் வைபவானந்த சரஸ்வதியும் வந்தனர். பூர்ண கும்ப மரியாதை, தங்கக் கிரீடம் வைத்து வரவேற்பு. சட்டையற்ற மேனியில் வியர்வையும் பூணூலும் நெளிய குடுமிக்காரர்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடினர். வளமுறைப்படி, நாயரும் பிள்ளையும் ஒரே சாதிதானா, இல்லை வேறுவேறா என்ற விவாதம் எழுப்பப்பட்டு, பார்க்கவன் நாயரின் பல், ஆனையப்ப பிள்ளையின் கண், விலக்கப்போன நடேச பிள்ளையின் மூக்கு ஆகியவை சேதமடைந்தன. நம்பூதிரியின் சகல ஜாதியினரையும் அதட்டினர். பிறர் முறைப்படி கீழே உள்ள ஜாதியினரை அதட்டினர். சர்க்கரைப் பொங்கலின் குமட்டும் மணத்தை மாடன் உணர்ந்தது. 'இந்தக் குடுமிப்பயவ இந்த எளவை எப்பிடியேன் திங்கியாவளோ ? சவத்தெளவு, எண்ணை நாத்தமில்லா அடிக்குவு . . . ' என்று மாடன் வியந்து கொண்டது.

பெரிய நம்பூதிரி மைக் வைத்து, டேபிள் ஃபேன் ஓட, தூபம் வளர்த்து, அதில் நெய்யும் பிறவும் அவிஸாக்கி, இருபத்தி நாலு மணி நேர வேத கோஷத்தில் ஈடுபட்டிருந்தார். மணிக்கணக்காகக் கேட்டுக்கொண்டிருந்த அதன் அந்த மாற்றமற்ற ராகம் குஞ்சன் மூப்பனின் பசுமாடு, தெரு முக்குச் சோனி நாய் ஆகியவற்றைப் பாதிப்படையச் செய்து தங்களை அறியாமலேயே அதே ராகத்தில் குரலெழுப்பும்படி அவற்றையும் மாற்றியது. மாடனின் பொறுமை கரைந்து கொண்டிருந்தது. யாரையாவது நாவாரத் திட்ட வேண்டும் போல இருந்தது. சுற்றிலும் கம்பிவேலி. ஜனத்திரள். அப்பியை வேறு காணவில்லை.

யந்திரபூஜை நடந்து கொண்டிருந்தபோது அப்பி வந்தான். மாடன் பிரகாசம் பெற்றது. அப்பியில் அந்த உற்சாகமான வாசனை வந்தது.

'எரிப்பன் பெலமாடோய் அப்பி ? ' என்றது மாடன்.

அப்பி பொல பொலவென்று அழுதுவிட்டான்.

'ஏம்பிலேய் அப்பி ? ' என்று மாடன் பதறியது.

'நல்லாயிரும்; ஏழெயெ மறந்திராதியும். '

'என்னலேய் அப்பி, இப்பம் என்னத்துக்கு டேய் இப்பிடி கரையுதே ? ' என்றது மாடன்.

'உள்ளர விடமாட்டோமிண்ணு செல்லிப் போட்டாவ. '

'மாடன் அதிர்ந்தது. 'ஆரு ? '

'அய்யமாரு '

'ஏம்பிலேய் ? '

'பிராமணங்க மட்டும்தேன் உள்ளே போலாமிண்ணு சென்னாவ. மந்திரம் போட்ட எடமில்லா ? '

'அப்பம் என்னையும் உள்ளார விடமாட்டானுவண்ணு செல்லு. '

'நீரு எங்க ? நீரு தெய்வமில்லா. '

மாடன் ஏதும் கூறவில்லை.

'அப்பம் இனி எண்ணு காணுயது ? ' என்று சற்று கழித்து, பேச்சை மாற்ற, கேட்டது.

'நீரு வாருமே என்னைத்தேடி. '

'பிலேய் அப்பி ' என்றது நெகிழ்ந்துபோன மாடன். 'நான் எங்க இருந்தாலும் ஒனக்க மாடன் தாம்பில. ராத்திரி வாறேன். எரிப்பன் வாங்கி வயி. '

'பைசா ? '

'பிரஜைகள் இவ்வளவுபேரு இருக்காவ ? '

'வயிறெரியப் பேயாதியும் வேய். அந்தாலப் பாத்தீரா உண்டியலு ? அண்டா மேதிரி இருக்கு. அதிலக் கொண்டு செண்ணு இடுதானுவ. மாடன்சாமிக்குத் தாறோம் உனக்கெதுக்கு இங்காவ. '

'என்னலேய் அப்பி, இப்பிடியொக்கெ ஆயிப்போச்சு காரியங்க ? ' என்றது மாடன்.

'ஆருடா அது, மாடன் சாமியைத் தொடுறது ? ' என்றது ஒரு குரல். பொன்னு முத்து நாடான் கம்புடன் ஓடிவந்தான்.

'ஈனச்சாதிப் பயலே. சாமியைத் தொட்டா பேசுதே ? ஏமான் ஏமான் ஓடி வாருங்க . . . '

ஸ்ரீகாரியம் ராமன் நாயரும், தர்மகர்த்தா கள்ளர்பிரான் பிள்ளையும் ஓடி வந்தனர்.

'ஓடு நாயே. குடிச்சுப்புட்டு வந்திருக்கான். ஓடு. இந்தப் பக்கம் தலை காட்டினா கொண்ணு போடுவேன் ' என்றார் பிள்ளை

.

'கேடியாணு, மகாகேடியாணு ' என்று ராமன் நாயர் தர்மகர்த்தா பிள்ளையைச் சுற்றிக் குழையடித்தான்.

அப்பி தள்ளாடியபடி விலகி ஓடினான். இருமுறை விழுந்தான். தூரத்தில் நின்றபடி அவன் அழுவதும், மாடனை நோக்கிக் கையை நீட்டியபடி ஏதோ கூவுவதும் தெரிந்தது.

மாடனுக்கு மார்பை அடைத்தது. ஆயினும், அதன் மனம் விட்டுப் போகவில்லை. இன்னமும் ஒரே நம்பிக்கை பலிதான். எது எப்படியென்றாலும் இனி வருஷாவருஷம் கொடை உண்டு; பலி உண்டு. கும்பி கொதிக்கக் காத்திருக்க வேண்டியது இல்லை. அதுபோதும். அதற்காக எந்தக் கஷ்டத்துக்கு உள்ளாகவும் தயார்தான்.

வெயில் சாய ஆரம்பிக்கும்வரை பூஜையும் மந்திரச் சடங்குகளும் இருந்தன. அதன் தந்திரி நம்பூதிரி முன்னால் வர, ஒரு பெரிய கூட்டம் மாடனைச் சூழ்ந்தது. தூபப் புகையும், பூக்களும் மாடனுக்குத் தலைவலியைத் தந்தபோதும்கூட மரியாதைகள் அதன் நொந்த மனசுக்கு சற்று ஆறுதலாகவே இருந்தன. பிற்பாடு மாடன் பெரிய கிரேன் ஒன்றின் உதவியுடன் தூக்கி உள்ளே கொண்டு செல்லப்பட்டு, யந்திர பீடத்தின்மீது அமர்த்தப்பட்டது.

மாடன் அறையை நோட்டம் விட்டது. நல்ல வசதியான அறைதான். 'எலட்டிக்லைட் ' உண்டு. காற்றோட்டம் உண்டு. முக்கியமாக மழை பெய்தால் ஒழுகாது. திருப்தியுடன் தன் வாயைச் சப்பிக் கொண்டது. என்ன இழவு இது, பூஜைக்கு ஒரு முடிவே இல்லையா ? சட்டு புட்டென்று பலியைக் கொண்டு வந்து படைக்க வேண்டியது தானே ? எத்தனை வருஷமாகக் காத்திருப்பது. ஆக்கப் பொறுத்தாயிற்று, ஆறவும் பொறுத்து விடலாம்.

இரவான பிறகுதான் சகல பூஜைகளும் முடிந்தன. நம்பூதிரி குட்டிப் பட்டரை நோக்கிப் 'பலி கொண்டு வாங்கோ ' என்றார். மாடனின் காதும், தொடர்ந்து சர்வாங்கமும் இனித்தன. அதன் ஆவல் உச்சத்தை அடைந்தது. தந்திரி நம்பூதிரி பலி மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார். 'அவனும், அவனுக்க எளவெடுத்த மந்திரமும் ' என்று சபித்தபடி, பலிவரும் வழியையே பார்த்தது, மந்திரத்தினால் ஒரு மாதிரியாக ஆகிவிட்டிருந்த மாடன்.

நாலு பட்டர்கள் சுமந்து கொண்டு வந்த அண்டாவைப் பார்த்ததும் மாடன் திடுக்கிட்டது. ஒருவேளை இரத்தமாக இருக்கலாம் என்று சிறு நம்பிக்கை ஏற்பட்டது. மறுகணம் அதுவும் போயிற்று. சர்க்கரைப் பொங்கலின் வாடை மாடனைச் சூழ்ந்தது. என்ன இது என அது குழமப, தந்திரி பலி ஏற்கும்படி சைகை காட்டினார். 'ஆருக்கு, எனக்கா ? ' என்று தனக்குள் சொன்னபடி ஒரு கணம் மாடன் சந்தேகப்பட்டது. மறுகணம் அதன் உடம்பு பதற ஆரம்பித்தது. வாளை ஓங்கியபடி, 'அடேய் ' என்று வீரிட்டபடி, அது பாய்ந்து எழ முயன்றது. அசையவே முடியவில்லை. பாவி அய்யன் மந்திரத்தால் தன்னை யந்திர பீடத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டதை மாடன் பயங்கரமான பீதியுடன் உணர்ந்தது.

***

1989 ல் எழுதப்பட்டது .முதல் பிரசுரம் - 1991 புதிய நம்பிக்கை மும்மாத இதழில் . திசைகளின் நடுவே தொகுப்பில் உள்ளது .[ கவிதாபதிப்பகம் மறுபிரசுரம் 2002 .]

Apr 27, 2010

கடல்புரத்தில் - வண்ணநிலவன்

வண்ணநிலவன்

ஊரிலே என்ன நடந்தால் தான் என்ன? அறுப்பின் பண்டிகை வந்துவிட்டது. கோயில் முன்னே இருக்கிற உயரமான கொடிக் கம்பத்தில் சிவப்புப் பட்டுத்துணியில் காக்காப் பொன்னிழைகள் பதிக்கப்பட்ட கொடி பறக்க ஆரம்பித்துவிட்டது. தினமும் காலையிலும் மாலையிலும் ஆராதனைகள் நடந்தன.

vannanilavan அனேகமாக எல்லா வீடுகளிலும் விருந்தினர்கள் நிரம்பியிருந்தார்கள். பக்கத்து ஊர்களில் கல்யாணமாகியிருந்த பெண்கள் தங்கள் கணவன் வீட்டாருடன் வந்து விட்டார்கள். எல்லோரையும் முகம் கோணாமல் உபசரிக்கிறது எப்படியென்று அந்த ஊர்ப் பெண்களுக்குத் தெரியும். போன வருஷம் பண்டியலுக்கு பாவாடை சட்டை அணிந்து வந்திருந்த பிள்ளைகள் திடீரென்று, மாயச் சக்தியினால் வானிலிருந்து இறங்கி வந்த தேவதைகளைப் போல தாவணி அணிய ஆரம்பித்திருந்தார்கள். எல்லாப் பெண்களுமே அந்தப் பருவத்துக்குத் தாண்டுகிற சமயம் வெகு அற்புதமானது. அந்த க்ஷணம் அவர்களுக்கு கிளியந்தட்டோ தாயமோ ஆடிக் கொண்டிருக்கையில் கூட அது நிகழ வாய்ப்பிருக்கிறது. அப்போதே அந்தப் பெண்ணுக்கு இதுவரையிலும் இல்லாத வெட்கம், நளினம் எல்லாம் வந்து சேருகின்றன. இது ரொம்ப வேடிக்கையான விஷயந்தான்.

ரஞ்சியும் வந்து விட்டாள். பிலோமியின் வீட்டுக்குத்தான் யாரும் வரவில்லை. செபஸ்தி தான் கல்யாணம் ஆன பிறகும் அறுப்பின் பண்டியலுக்கு வந்து போய்க் கொண்டிருந்தான். அந்த வருஷம் அவனுக்கும் வரச் செளகரியப் படவில்லையென்று எழுதிவிட்டான். அமலோற்பவ அக்காள் எந்த வருஷமுமே, புருஷன் வீட்டுக்குப் போன பிறகு வந்தவளல்ல. எல்லாருடைய வீடுகளிலும் குதூகலம் பொங்கி வருகிறதை தன் வீட்டுத் தாழ்வான ஓலை வேய்ந்த திண்ணையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பிலோமி. அன்றைக்கு அறுப்பின் பண்டியலின் எட்டாம் திருவிழா. அன்றைக்கு சாயந்தரம் கோயிலில் சப்பரம் புறப்படும். மரியம்மையின் சொரூபத்தை வைத்து பெரிய ஊர்வலமாக வருவார்கள். அன்றைய கட்டளை மீன்தரகமார்களான சாயபுமார்கள் செலவு. இந்தக் கட்டளை ரொம்ப காலமாக அங்கே நடந்து வருகிறது. தரகமார்கள் மிகுந்த பக்தி சிரத்தையுடனே செய்தார்கள். குரூசு வெளியே போயிருந்தான். பிலோமி போன வருஷ பண்டியலில் எட்டாம் திருவிழாவன்று கழிந்த சந்தோஷமான பொழுதுகளை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பழைய நாட்களை மீண்டும் நினைத்துப் பார்க்கிறபோது அதுதான் மனசுக்கு எவ்வளவு பிரியமானதாக இருக்கிறது.

ஊரிலே எல்லாரும் கோயிலின் முன்னே கொடி மரத்தைச் சுற்றி, சப்பரம் புறப்படுகிறதைப் பார்க்கிறதுக்காக பெருங்கூட்டமாகக் கூடியிருந்தார்கள். திருவிழாவுக்காக வந்திருந்த பலகாரக் கடைகள், வளையல் கடகளில் ஜேஜே என்றிருந்தது. எங்கும் சந்தோஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை. கோயிலுக்குப் பின்னாலும், பக்கங்களில் வெளியூர்களிலிருந்து வந்திருந்த மாட்டு வண்டிகள் அவிழ்க்கப்பட்டுக் கிடந்தன. அந்த வண்டிகளின் கீழே ஜமுக்காளத்தை விரித்து குடும்பம் குடும்பமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிலோமியும் சாமிதாஸ¤ம் கூட்டத்தை விட்டு வெகுதூரத்துக்குக்கு விலகி வந்திருந்தார்கள். கடற்கரையோரமாகவே ஊரைத் தாண்டி, மணலில் நடந்து போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டார்கள். அந்த இடம் ஊரக்கு வெளியே கிளித் தோட்டத்துக்கு முன்னாலுள்ள கடற்கரை. தூரத்திலிருந்து ஜனங்களின் ஆராவாரம் கடல் அலைகளையும் மீறி இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்ததது. கோயிலைச் சுற்றிலும் போட்டிருந்த 'டியூப் லைட்'டின் வெளிச்சம் மட்டிலும் ஒரே வெள்ளைப் புகையாய்த் தெரிந்தது. அப்போது பெளணர்மிக்கு இன்னும் இரண்டு நாட்களிலிருந்தன. எதனாலும், 'எங்களைப் பிரிக்க முடியாது' என்பதுபோல இரண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் கட்டிப் பிடித்துக் கொண்டு மணலில் வெகுநேரத்துக்குப் படுத்திருந்தார்கள். காலடியில் அலைகள் மட்டும் வந்து வந்து பார்த்துவிட்டு மறுபமடியும் கடலுக்குள்ளே சென்று கரைந்து போயின. கிளித் தோட்டத்து வண்டிப் பாதையினூடே நேரம் கழித்து திருவிழாவுக்குப் போகிற மாட்டு வண்டிகள் இரண்டொன்று தென்னை மரங்களிடையே தோன்றியும் மறைந்தும் போய்க் கொண்டிருந்தன. அதைத் தவிர வேறே யாருமில்லை.

இரண்டு பேரும் ஒன்றுமே பேசாமல் மூச்சோடு மூச்சு இரைக்கும் நெருக்கத்தில் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்றைக்கு அத்தனை அந்நியோன்யத்திலும் சாமிதாஸ் ஒன்றுமே அத்துமீறிச் செய்துவிடவில்லை. அவளேதான் விரும்பி அவனுடைய கையைத் தன் தோளோடு பின்னிப் போட்டு இறுக்கியிருந்தாள். அவளுக்கு அப்படி இருப்பது ரொம்பவும் தேவையாக இருந்தது. அந்த நிலையிலும் அவனுடைய சுவாதீனமான நேர்மை அவளை மிகவும் கவர்ந்து விட்டது. அந்த க்ஷணமே அவளுக்குள் அவன் மீது எந்தவித நிபந்தனைகளும் இல்லாத தீவிரமான பிரியம் மனசெல்லாம் பொங்கித் ததும்பிற்று. அவனுடைய சட்டைக்குள்ளிருந்து வீசிய வியர்வை நெடியை அவள் ரொம்பவும் ரசித்தாள். அது அவளுக்கு மயக்கத்தைத் தருகிறதாக இருந்தது. ஒரு கோடி மல்லிகை மலர்களின் மணம் போல அதை அவள் உணர்ந்தாள். அது ஏன் அப்படியென்று அவளுக்குத் தெரியாது. அவள் அவனுடைய மீசையைத் தொட்டு தடவினாள். அவனுடைய மார்பு முடிகளில் முகத்தை வைத்து பிரேமையுடன் தேய்த்தாள். உலகமே அவனாகி அவள் கைப்பிடியில் இருக்கிறது போல எண்ணினாள். அப்போது தூரத்திலே தெரிகிற அவளுடைய ஊரில் அவளுக்கென்று ஒரு வீடு இருப்பதாக ஞாபகமே இல்லை.

வெகுநேரத்துக்குப் பிறகு அவளுடைய விருப்பத்தின் பேரிலேயே அவனுடைய வாயில் தன்னுடைய கருத்த உதடகளைப் பதித்து அவனிடமிருந்த ஜீவரசத்தை தாகத்துடன் பருகினாள். அப்போதும் அவனுடைய நேர்மை அவளை வெகுவாக இம்சித்துப் போட்டது. அந்த இரவிலேயே அவள் கடல் அம்மைக்கு அர்பபணமாகிக் கடலில் கரைந்து போக வேணுமென்று ஆசைப்பட்டாள்.

அவனுடைய தோளில் சாய்ந்தபடியே அவளும் அவனுமூ நடந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஊருக்கு மேலே தென்னந்தோப்புகளின் உயரத்தை பொய்யாக்கிக் கொண்டு வாணங்கள் வெடித்து, வர்ணக்கோலப் பொடிகளாகச் சிந்திக் கொண்டிருந்தது. சப்பரம் கோவில் தெருவை விட்டுப் புறப்பட்டதுக்கு அதுதான் அடையாளம்.

அவளால் எதையும் சகித்துக் கொள்ள முடியும். சாமிதாஸை மட்டும் யாருக்கும் கொடுக்கச் சம்மதியாள். அவள் ஆசைப்பட்டதிலே எவ்வளவு காரியங்கள் நடந்ததுண்டு, இதுமட்டிலும் நடந்து விட?

தூணில் சாய்ந்திருந்தபடியே மெளனமாக அழுது கொண்டிருந்தாள் பிலோமி. தெருவில் கோவிலுக்குப் போகிறவர்களின் நடமாட்டம் அதிகமாகி விட்டிருந்தது. அவள் விளக்கை ஏற்றவில்லை. இன்னும் அவளுக்கு அந்த நேரத்தில் அந்த இருட்டில் உட்கார்ந்திருப்பது மிகவும் பிடித்திருந்தது. அப்படியே எல்லாவற்றையும் விழுங்குகிற இருட்டு அவளையும் விழுங்கி விடாதா என்று எண்ணினாள். படலிக் கதவைத் திறந்து கொண்ட யாரோ வருகிறதுபோல இருந்தது. குரூசு தான் கள்ளுக்கடையிலிருந்து திரும்பி வந்திருந்தான். 'வெள்ளியும் மறைஞ்சு போச்சே, கடலில் வீணாய் வல்லம் தவிக்க லாச்சே.....' என்ற பழைய பாட்டைப் பாடிக் கொண்டே அவளைப் பேர் சொல்லிக் கூப்பிட்டான்.

''உர்ல எல்லா வூட்லயும் ஒரே வெளக்கு மயமா இருக்கு. இந்தக்குட்டிக்கி ஒரு வெளக்குப் பொருத்தி வக்யதுக்குத் துப்பில்லாமப் போச்சே... ஏ...பிலோமி....''

இருமிக் கொண்டே முற்றத்துக் கட்டிலில் விழுந்தான். பிலோமி நீல் மல்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

''சேசுவே... எல்லா வேதனையையும் நான்தான் தாங்கணுமா? இந்த வயதில் இம்புட்டுக் கஷ்டங்கள் எதுக்காவக் குடுக்கீரு ஐயா......'' என்று வாய்விட்டுப் புலம்பினான்.

குரூசு இருமிக் கொண்டே வாயில் வந்தபடி பேசிக் கொண்டிருந்தான். ''அந்த தேவடியா மரியா இருந்தவரைக்கியும் வாத்திப் பெய கிட்டப் போயிச் செத்தா. இந்தக் குட்டி இந்த வயசிலேயே புருசனத் தேடிப் போயிட்டா போல இருக்கு. எந்த முண்ட எவங்கூட போனா என்ன? எனக்கு வல்லம் இருக்கு. கடல்ல மீனு இருக்கு....''

பிலோமியால் அவன் மீது கோபப்பட முடியவில்லை. கட்டிலில் புரண்டு கொண்டிருந்த அவனையே பரிதாபத்துடன் பார்த்தாள். எப்படியிருந்த வாழ்க்கை கடைசியில் கண்மூடித் திறக்கறதுக்குள் இந்தக் கதியாகிவிட்டது? ஒரு வருஷத்திற்குள் என்னவெல்லாம் நடந்து விட்டிருக்கிறது? பிலோமிக்கு உடம்பெல்லாம் நடுங்கிற்று. விளக்கைப் பொருத்தாமலேயே நடந்து போய் வீட்டுக்குள்ளிருந்து ஒரு பழைய போர்வைய எடுத்து வந்து அவனைப் போர்த்தினாள்.

எல்லாவற்றையும் ஒரு சிறிதாவது மறக்க வேண்டுமென்று நினைத்து வீட்டைப் பூட்டி, சாவியை வாசல் நிலைப்படியில் வைத்துவிட்டு சேலையைத் தோளில் சுறூறி இழுதூது தலையில் முக்காடு போட்டுக் கொண்டு தெருவுக்குப் போனாள். கிழக்கே தெருத் திருப்பத்தில் நாலைந்து நாய்கள் கூடிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சிறிது நேரம் அவளையறியாமலேயே அவைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். ரஞ்சியைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. நிச்சயம் அவள் திருவிழாவுக்கு வந்திருப்பாளென்று தெரியும். ரஞ்சியின் வீட்டினுள் முன்னுள்ள மாடக்குழியில் ஒரு பெட்ரூம் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தில் ரஞ்சியின் வயசான பாட்டி, வீட்டினுள் அவள் நுழைவது கூடத்தெரியாத நிலையில் கட்டிலில் காலைத் தொடங்கப் போட்டுக் கொண்டு வெற்றிலை மென்று கொண்டிருந்தாள். ரஞ்சியுடைய பாட்டிக்குக் கொஞ்சம் காது மந்தம். பிலோமிக்கு அந்த நிலையிலும் அந்தப் பாட்டியைக் காவலாய் அவர்கள் வைத்து விட்டுப் போயிருந்ததை எண்ணி சிரிப்பு வந்தது. மெதுவாகச் சென்று அவள் காதருகே குனிந்து ''பாட்டி, ரஞ்சியெல்லாம் எங்க?'' என்று கேட்டாள்.

''நீ ஆரு மோள?''

''நாந்தாம் பிலோமி....''

''ஆரு மரியம்மைக்க கடேசி மவளா?''

''ஆமா, ரஞ்சி எங்கே?''

''ஆரத் தேடுதா? ஓஞ் ஸ்நேகிதியத் தேடுதியா? அவ புருஷங்காரனோட கோயிலுக்குப் போயிருக்கா. இங்கேயும் வூட்ல எல்லாரும் போயிருக்காவ. நநாந்தான் சாவமாட்டாத கெளவி தலையை ஆட்டிகிட்டு கெடக்கேன். நீ என்ன இம்புட்டு நேரங்கழிச்சுப் போறா!''

பிலோமி ரொம்பக் கஷ்டப்பட்டு மனசை அடக்கிக் கொண்டு தாழ்ந்த குரலில், அப்ப நா போயிட்டு வாரேன் பாட்டி....'' என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தாள். அவள் கோயிலுக்குப் போகப் பிரியப்படவில்லை. அங்கே போனால் அவளால் பழைய நினைவுகளை மீண்டும் தவிர்க்க முடியாமல் ஆகிவிடும். எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போய்க் கொண்டிருந்தவர்களுடன் கூட நடந்தாள். மனம் மட்டும் அவளிடமில்லை. ஏதோதோ நினைவுகள். அதை அவளால் தவிர்க்க முடியவில்லை. திடீரென்று, ''ஆரு, பிலோமியா?'' என்ற குரலைக் கேட்டு தன் நினைவுகளிலிருந்து மீண்டாள் பிலோமி. அவள் வாத்தியின் வீட்டு முன்னால் நின்றிருந்தாள். அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

''உள்ள வாயேன். எதுக்காவ வாசல்ல நிக்கா? நீ கோயிலுக்குப் போவலையா?''

அவருக்குக் கீழ்ப்படிந்து போவது போல அவர் பின்னே தலைகுனிந்து சென்றாள். ''கோயிலுக்குப் போகல'' என்றாள்.

''நீ எப்படி இவ்வளவு நேரத்துக்கு இங்க வந்தா? அப்பச்சி வூட்ல இல்லயா?''

''இருக்காவ. என்னமோ வரணமின்னு தோணிச்சி; வந்தேன்.''


''ஏன் ஒரு மாதிரியா இருக்கா?''

''ஒண்ணுமில்ல....''

''இல்ல, நீ சந்தோஷமட்டு இல்ல.... என்ன கஷ்டம் வந்திச்சி? மனசில் இருக்யத அடுத்த ஆளுகிட்ட வுட்டுச் சொன்னாதாஞ் சரி.''

அன்றைக்கு இரவு வெகுநேரத்துக்கு பிலோமியும் அவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுக்கு அவருடன் தன் எல்லா அந்தரங்கங்களையும் சொல்ல வேண்டும் போல இருந்தது. அவளுக்கென்று துக்கப்படவும் சந்தோஷப்படவும் கூடிய ஒரு புதிய மனுஷர் கிடைத்திருக்கிறார். இதற்காக அவள் மிகுந்த சந்தோஷப்பட்டாள். அவர் அவளுடைய மனசில் ஏதோ ஒரு இடத்தில், இதுவரையில் எந்தக் காலடியும் விழுந்திராத ஒரு இடத்தில் நடந்து போகிறதை உணர்ந்தாள். அவருடைய வீட்டு அலமாரியில் இருந்த கேக்குகளையும், பழங்களையும் இரண்டு பேரும் சாப்பிட்டார்கள்.

கோயில் சப்பரம் இறங்குகிற நேரத்துக்குப் பிலோமி அங்கிருந்து புறப்பட்டாள். அவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு அவளுடன் புறப்பட்டார். அவர் பூட்டைப் பூட்டும்போது தன்னுடைய சட்டையை அவளிடம் கொடுத்து வைத்திருக்கச் சொன்னார். அது பிலோமிக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. பூட்டி விட்டு சட்டையை வாங்கிப் போட்டுக் கொண்டார். அவருடன் கூட நடக்கிற போது ரொம்ப காலமாகப் பழகின ஒருவருடன் போவது போல இருந்தது பிலோமிக்கு. அவள் வேண்டாமென்று சொல்லியுங்கூட, அவர் அவளோடயே அவள் வீடு வரையிலும் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனார். அவர் போகிறதையே பார்த்திருந்து விடடு உள்ளே போனாள். குரூசு இன்னும் கட்டிலில் தான் சவத்தைப் போலக் கிடந்தான். அது அவளுக்கு ஒரு விதத்தில் ஆறுதலாக இருந்தது.

வீட்டினுள் நுழைந்து கதவைத் திறந்து குதூகலத்துடன் விளக்கைப் பொருத்தினாள். சாயந்தரம் இருந்த மனநிலைக்கும், இப்போதிருக்கிற சந்தோஷத்துக்கும் அவளே நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டாள். எல்லாவற்றையுமே மறந்து போனால் எவ்வளவு அற்புதம் மனசினுள் நிகழ்ந்து விடுகிறது!

அவளுக்கு விசிலடிக்கத் தெரியும். சின்ன வயசில் ரஞ்சியும் பிலோமியும் தனியே எங்காவது போகிற போது விசிலடித்துக் கொண்டே போவார்கள். ரஞ்சி விசிலில் பாட்டெல்லாம் படிப்பாள். ஆனாலும் பிலோமிக்கு நன்றாகவே விசிலடிக்க வரும். மெலிதாய் விசிலடித்துக் கொண்டே பின் வாசலுக்குப் போனாள். கடலுக்குப் போகிற நாலைந்து பேர்கள் வலைகளைச் சுமந்து கொண்டு பேசிக் கொண்டே போனார்கள். குரூசுவால் இனிமேல் அன்றைக்கு கடலுக்குப் போக முடியாது. சிறிது நேரத்தில் விடிந்து விடும். காலையில் இதையெல்லாம் ரஞ்சியிடம் சொல்ல வேண்டும். ரஞ்சி! அடீ ரஞ்சி! காலை வரையில் காத்திருக்க வேண்டுமேடீ......

வானத்தைப் பார்த்தாள். நிலவுத் துண்டு மேகங்களினூடே நடந்து கொண்டிருந்தது. எவ்வளவு துயரத்திலும் நிலவை பார்த்தால் மனம் சாந்தி பெறும். தென்னந்தோப்புகளினூடே கோயில் தெரிகிறது. பண்டியல் கடைகளில் சிலவற்றில் கூட்டம் இருக்கிறது. கடலின் ஆரவாரத்தை ஆசையுடன் கேட்டாள். அவள் வெகுநாட்களுக்கு அப்புறம் அப்படி இருக்கிறாள். இனி எந்த கஷ்டமும் அவளை ஒன்று செய்துவிடாது போல நம்பினாள்.

மறக்காமல் ஜெபம் செய்துவிட்டுப் படுத்தாள். படுக்கும்போது ஒரு கணத்துக்கு அவளுடைய அம்மையின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. அவள் இப்போது இருந்தால் பிலோமி வாத்தியுடனிருந்து விட்டு வந்ததை விரும்புவாளா, நிச்சயம் விரும்புவாள் என்று தான் அவளுக்குத் தோன்றியது.

தூங்குகிற வேளையில் கடலின் ஆரவாரத்தைக் கேட்டுக் கொண்டே படுத்தால் காலையில் ரொம் சந்தோஷமாக இருக்கும் என்று மரியம்மை பல தடவை சொல்லியிருக்கிறாள். அந்தக் கடல் ரஞ்சியைப் போல, தரகனாரைப் போல, வாத்தியைப் போல வெகு அபூர்வமானது. அது தன் எழுச்சி மிக்க அலைகளால் எல்லோருக்கும் தன்னுடைய ஆசிர்வாதத்தைச் சொல்லுகிறது. அந்த ஆராவாரத்தில் மகிழ்ச்சியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பிலோமி கடல் அலைகளின் பெருத்த சத்தத்தைக் கேட்டுக் கொண்டே தூங்கிப் போனாள்.

*****

Apr 25, 2010

அரிசி - நீல. பத்மநாபன்

நீல. பத்மநாபன்

சற்றுத் தொலைவில் நீரில் துடுப்புகள் சலசலக்கும் ஓசை...

காலூன்றி நின்ற வையத்திலும், அண்ணாந்து பார்த்த வானிலும் இருள்தளம் கெட்டி நிற்கையில், விருட்சங்களுக்கு மட்டும் எப்படித் தோற்றம் இருக்க முடியும்?

மண்ணிலும் காற்றிலும் ஈரம் சொட்டுகிறது. அடுத்த மழை எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம்...

மேற்குவான்மூலையில் அடிக்கடி மின்னலின் மின்சார வீச்சு... அதோடு இடியோசையும் சடசடவென்கிறது.

neelapadm நெய்யாற்றில் மழை வெள்ளம் குமுறிக் கொந்தளித்து, ஆர்ப்பரித்து ஓடி, இங்கே பூவாறில் வந்து சேருகையில் சமுத்திரம் போல், பரந்து படர்ந்து அலையெழுப்பி ஓடிக் கொண்டிருக்கிறது...

சற்றுத் தொலைவில் கடல் இரைந்து கொண்டிருந்தது.

பரந்து கிடந்த ஆறே இருள் அரூபியாக இருக்கையில், காதரின் தோணிக்கு மட்டும் ரூபம் எப்படி இருக்க முடியும்...? துடுப்புத் துழையும் சத்தம் மட்டும் காட்டாற்று வெள்ளத்தின் இரைச்சலின் இடையில், மெல்லியதாய்க் கேட்டுக் கொண்டிருந்தது.

கரி பிடித்த லாந்தரின் முணுமுணுக்கும் மங்கிய வெளிச்சம்கூட இல்லாமல், இந்த மழை வெள்ளத்தில் அனாயாசமாக படகைச் செலுத்திக் கொண்டிருக்கும் காதர் காக்காவை நினைத்த போது, இருளுடன் இருளாக கரையில் நின்று கொண்டிருந்த மூக்கனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

கேரள எல்லைக்குள் எந்நேரத்தில் வேண்டு மானாலும் பிரவேசிக்க, பிரத்யேக அனுமதி பெற்று ரோந்து சுற்றிக் கொண்டிருக்கும் தமிழக ஊர்க்காவற்படை எப்போது, எங்கிருந்து, எப்படி, எங்கே தோன்றிவிடுமென்று நிர்ணயிக்க முடியாது... பீடியின் மினுமினுப்புக் கூட ஆபத்தானது...!

பீடியை ஒரு தடவை கூட தீர்க்கமாய் இழுத்துவிட்டு, கீழே எறிந்தான் மூக்கன். ஈரத்தில் புசுபுசுத்து தீமுனை அணைந்தது.

வேறு ஒரு சில பேர்கள் கூட சைக்கிளில் அங்கே வந்திறங்குகிறார்கள்...

''ஆரு மூக்கனா...?''

''ஆமா... ஆரு சைமனா?''

''ஆரு உம்மறா?''

''ஆரு ராமனா?''

அங்கே சப்தங்களுக்கு உருவமும், தோற்ற வேறு பாடுகளும் இருந்தன போலும்! குரலின் வித்தியாசங்களில் இருந்து ஆட்கள் பரஸ்பரம் அறிமுகமாகிறார்கள்; இனம் கண்டு கொள்கிறார்கள்...

எல்லோரும் ஒரு முகமாக - ஒற்றுமையாகக் குளிரைச் சபித்தார்கள்...

ஒருவருக்கும் தரையில் கால் பாகவில்லை... எங்கோ அவர்களுக்கு முற்றிலும் அஞ்ஞானமான மூலைகளில் இருந்து - முனைகளில் இருந்து, அபாயம் அவர்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது; முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எந்த நொடியில் என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் மீது பைசாச வெறியோடு பாய்ந்து பிய்த்துப் பிடுங்கி நசுக்கிவிடும்!

ஒரு பத்த இலை உதிர்ந்து விழும் ஒலிகூட சிறைத் தண்டனையின் அபாய அறிவிப்பாக அவர்களை விழித்துப் பார்த்துப் பயமுறுத்துகிறது.

டெமாக்ளஸின் கட்கம் போல், தலைக்கு மேல் நூலிழையில் அசைந்தாடிக் கொண்டிருந்த அபாயத்திலிருந்து, எந்தக் கணத்திலும் ஓடித் தப்பிக்க தாயரெடுத்தவாறு, நாலாபுறமும் பரக்க பரக்கப் பார்த்தவாறு, இருளில் பிசாசுக்களைப் போல் அந்த ஏ¦ழுட்டுப் பேர்களும் நிற் கிறார்கள்.

அப்பாடா...! இருளில் இழையும் ஒரு ஆமையைப் போல் தோணி கரையை அடைந்தது... காதர் எறிந்த கயிற்றை இழுத்து கரையில் நின்ற மரத்தில் மூக்கன் கட்டியதும், கட்டம் ரொம்ப சுறுசுறுப்பாகி விட்டது...

சைக்கிள் கேரியரில் வைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த மரவள்ளிக் கிழங்கு மூட்டைகள் படகுக்கும், படகில் இருந்த அரிசிச் சாக்குகள் ஒவ்வொருவர் சைக்கிள் கேரியருக் கும் இடம் மாறிக் கொள்ளும் பரபரப்பு.

எல்லோருக்கும் பயம் கலந்த ஒரே துடிதுடிப்பு.

படகு கிடந்து தத்தளிக்கிறது...

''லே... கவனம்... கவனம்... மலைவெள்ளத்துக்க பயங்கர ஒழுக்கு... இங்கணெயானா அசல் கசம்... வெப்பராளப் பட்டூட்டு தண்ணீலே விளுந்துட்டா பொறவு பிணம் கூட கிடைக்காது.... சொல்லிப்போட்டேன்...''

இப்படி அடிக்கடி அடித்தொண்டை கர கரக்கச் சொல்லியவாறு டார்ச்சை மின்ன வைத்து மின்ன வைத்து அணைக்கிறார் காதர். அதற்கிடையில் மடியிலிருந்து டயரியை வெளிய எடுத்து ஒவ்வொருத்தர் கணக்கையும் தனித்தனியாக அதில் எழுதிக் கொள்வதோடு சிலரிடமிருந்து பணம் வாங்குவதும், வேறு சிலருக்கு எண்ணிக் கொடுப்பதுமாகச் சுறுசுறுப்பாக இயங்குகிறான் அவன்.

இத்தனை நேரமாய் குமுறிக்கொண்டிருந்த மழையும், இதுதான் சமயமென்று சடசடவென்று பெய்யத் தொடங்கியது.

''எல்லாரும் கொஞ்சம் கவனியுங்கோ... காருக்க சத்தம் கேக்குல்ல...? என்று சடக்கென்று காதர் சொன்னானோ இல்லயோ, எல்லோருக்கும் வயிறு கலங்கியது.

கைகால்களுக்கு ஏன் இந்த திடீர் சோர்வு?

எல்லாரும் ஸ்தம்பித்துப் போய்விட்டார்கள்.

மழையில் சத்தத்தின் இடையில், இப்போது எல்லாருக்கும் அந்த ஒலியைத் தெளிவாய்க் கேட்டு, இனம் கண்டு கொள்ள முடிகிறது.

''போலீஸ்வேனேதான்...''

''இடி வண்டி...!''

எல்லாருக்கும் பொறி கலங்கியது... ஒரே ஒரு க்ஷணம் தான்! ''உம்... சட்டுணு சட்டுணு... தோணிக்கயத்தை அவுத்துடு... நா அப்படி ஒதுங்கிப் போயிரட்டும்...'' என்று முண்டாசை இறுக்கிவிட்டு, லுங்கியை மடக்கி உடுத்தியவாறு காதர் சொன்னதும், எல்லாரும் பரபரப்போடு சுறுசுறுப்பானார்கள்.

விளாசு விளாசென்ற மழை அடித்து நொறுக்கிப் பெய்கிறது....

படகில் ஏற்ற வேண்டியதும், படகிலிருந்து இறக்க வேண்டியதும் முடிந்துவிட்டிருந்தது.

சிலர் சைக்கிள் கேரியரில் முழுச் சாக்கை வைத்து கட்டிக்கொண்டிருந்தார்கள். வேறு சிலர் சைக்கிளுக்கும் தோணிக்கும் இடையில் மூட்டையுடன் நிற்கிறார்கள்.

கயிறை அவிழ்த்துவிட்டு நீரோட்டத்தோடு ஓட்டமாக, கரையோரமாய் படகைச் செலுத்தியவாறு தண்ணீரில் சரிந்து வெள்ளத்தின் ஓட்டத்தில் சலசலத்தவாறு மூடிக் கிடந்த மரங்களின் ராட்சசக்கிளைகளின் இடையில் சென்று மறைந்தான் காதர்.

சைக்கிளில் வைத்துக் கட்டியது பாதி, கட்டாதது பாதியாக சிலர் பக்கத்துப் புதர்களுக்கு சைக்கிளை உருட்டியவாறு மரணப் பாய்ச்சல் பாய்கிறார்கள்.

இயக்கவேகம் கொண்ட பயங்கர நிமஷங்கள்... அகப்பட்டுக்கொண்டால்...?

போச்சு... எல்லாம் போச்சு...! பிடிப்பவர்கள் உடனடித் தரும் 'கைநீட்டத்'தின்கூட, ஏழோ எட்டோ மாசம் கம்பி எண்ண வேண்டி வந்துவிட்டால்...

வீட்டில் பெண்டாட்டி புள்ளைகள் கதி...? அப்பா அம்மாவின் கதி? மூக்கனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை...

எங்கே ஓடுவது? எப்படிப் பதுங்குவது?

காரின் வெளிச்சம் தெரிகிறது. போலீஸ் வேனா... இல்லை ஜீப்பா?

நினைத்துப் பார்க்கவோ, நிதானிக்கவோ துளிகூட நேரமில்லை; அவகாசமில்லை.

உடனடி முடிவு செய்ய வேண்டும்...!

கூட்டாளிகள் யாவரும் சைக்கிளில் இருக்கும் அரிசி மூட்டையுடன் பத்திரமாய் ஒளிந்து கொண்டு விட்டார்கள.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

கேரியரில் வைத்து பலமாய்க் கட்டியிருந்த ஒரு சாக்கு அரிசியோடு, சைக்கிளை, செடி கொடிகள் உள்ள ஆற்றோரமாய கொஞ்சம் தூரம் உருட்டிக் கொண்டு வெகு வேகமாய் ஓடினாள்... சடக்கென்று சைக்கிளை தண்ணீரில் இறக்கி கரையோடு கரையாய்ச் சேர்த்து அழுத்தி பலமாகப் பிடித்தபடி, அவனும் ஆற்றில் இறங்கினான்.

ஏற்கெனவே மழை வெள்ளத்தாலும், வியர்வை யாலும் தொப்புத்தொப்பென்று நனைந்து போயிருந்த உடம்பில் ஆற்று நீரின் பனிக்கட்டியைப் போன்ற குளிர், உறைக் காமலிருக்கவில்லை.

சைக்கிளில் குறுக்கேச் சட்டத்தின் உள்வழியில் இருகைகளையும் நுழைத்து, தரையின்மீது வந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளை உடும்புப் பிடியாகப் பிடித்தவாறு ஆற்றின் ஆழம் தெரியாத அடிமட்டத்து மண்ணில் போய்ச் சேராத கால்களோடு, அரிசி மூட்டை நீரில் மூழுகி விடாமலிருக்க தன் கை புஜங்களில் தொங்கும் சைக்கிளை தூக்கலான கரை மண்ணோடு மண்ணாகத் தன் முழு உடம்பால் அழுத்தித் தாங்கியவாறு, தண்ணீரில் கழுத்தளவுக்கு முழுகி அந்தரத்தில் நின்றான் அவன். கரையின் மண் விளிம்பு தலைக்கு மேல் நாலைந்து அடி உயரத்தில் இருந்தது.

பிராணபயம்... உயிரைக் காக்கும் வெறி...

அபாயத்தை நேருக்குநேர் சந்திக்கையில் மனிதனுக்கு வந்துவிடும் அபார - அசாதா ரணமான தைரியம்தான் மூக்கனிடமும் முழுமூச்சாய் வேலை செய்தது.

உயிருக்கே ஆபத்தான வினாடிகள்... புஜங்களில் சைக்கிளும் அரிசி மூட்டையும் கீ§ழு அழுத்த, உடம்பை நீரோட்டம் வலுக்கட்டாய மாக பக்கவாட்டில் இழுக்கிறது.

பிராண ரட்சைக்காக மரக்கிளையை வீறோடு பற்றியிருக்கும் கரங்கள் மட்டும் ஓய்ந்து விட்டால்?

அன்போடு அரவணைத்து இறுகத் தழுவித் தன்னில் ஒன்று கலக்கச் செய்ய ரொம்ப நெருங்கி வந்து கொட்டுக் கொட்டென்று அவனையே பார்த்துக் கொண்டு நிற்கிறது மரணம்...

அது எந்த உருவில்...?

நீரில் முழுகி துர்மரணமாகவா?

இது என்ன உயிர் வாழும் சமரா: இல்லை; உணவைக் காத்து உணவைத் தேடி, ஒரு குடும்பத்தின் பட்டினிச் சாவைச் சமாளிக்கும் புண்ணிய வேள்வியா?

தமிழக போலீஸ் வேன் ஆர்ப்பாட்டமாகச் சற்றுத் தொலைவில் வந்து நிற்கிறது.

சடசடவென்ற மழை இன்னும் ஓயவில்லை.

திமுதிமுவென்று வேனிலிருந்து இறங்கி யவர்கள் டார்ச் ஒளியைப் பாய்ச்சி அங்குமிங்கும் பாய்ந்து இரையைத் தேடுகிறார்கள்.

தன் தலைக்கு மேல் கரையில் காலடி யோசை...

குலதெய்வங்களை எல்லாம் பிரார்த்தித்துக் கொண்டு, இமைகளை மூடி ஒருவித மோன தியானத்தில் அவன் மூழ்கினான்.

பார்த்துவிடுவார்களா?

பார்த்துவிட்டால்...?

பாவம்... வேலம்மை தேடித்தேடி இருப்பாள்... அம்மைக்கு சீக்கு எப்படி இருக்கோ? வீட்டிலிருந்து இறங்கும்போது அவளுக்கு நல்ல நினைவுகூட இல்லை...

கோமுவுக்குக் காய்ச்சல் எப்படி இருக்கோ? இந்த நெருக்கடியான நாளில், வீட்டில் தான் மட்டும் இல்லாவிட்டால்...? என்னாண்ணு மூண்டு கேக்க வேறெ ஆரு இருக்கா? ஆறோ ஏழோ மாசம் ஜெயில் விருந்தெல்லாம் கழிஞ்சு, திரும்பிவரும்போது குடிசையில் யார் யார் மிஞ்சுயிருப்பார்களோ என்னவோ!

''ஐயோ...''

யாரது? மேலே யாரோ அகப்பட்டுக்கொண்டு விட்டார்கள் போலிருக்குது.

''லே... இப்படி வாலே... எவ்வளவு நாளாட்டு இந்த வேலை நடக்கூ...? திருட்டு ராஸ்கல்..."

"ஐயோ... பொன்னு யசமானே... இனி மாட்டவே மாட்டேன்..."

"ஐயோ..."

"ஐயோ..."

பாவம்... நொண்டி ராமன்தான்.

செத்தான்!

இனி அடுத்தது யாரோ?

'நான்தானா...?'

காலில் என்னவோ வழுவழுக்கிறது.... நீர்ப்பாம்பா...? எதுவாக இருந்தாலும் என்ன செய்ய முடியும்! கைகள் இரண்டும் மேலே அல்லவா தொங்குகிறது... அதை விட்டு விட்டால்.

பாவம் ராமன்...! இடது காலை கொஞ்சம் இழுத்தது .

திருவனந்தபுரத்துக்கு வந்து கொண்டிருந்த ஒரு கேரளா பஸ், களியிக்காவிளை செக் போஸ்டின் முன் வந்ததும், நிற்கிறது.

திமுதிமுவென்று பஸ்ஸ¤க்குள் நாலைந்து பேர்கள் நுழைகிறார்கள்... துப்பாக்கி தாங்கிய போலீஸ் ஜவான்கள் வெளியில் தயாராக நிற்கிறார்கள்.

பஸ் பிரயாணிகளின் பெட்டி படுக்கைகளை, பைகளை எல்லாம் பிடித்திழுத்துத் திறந்து உள்ளே இருந்தவைகளைத் தலைகீழாக கவிழ்க்கிறார்கள்... ஏழ்மையின் தரித்திர முத்திரையோடு பரிதாபமாகத் தெரிந்தவர் களிடம் முற்றுகை பலமாக இருக்கிறது...

சில பைகளில் அழுக்குத் துணிகள்... சில பைகளிலிருந்து வடசேரிச்சந்தைக் காய்கறிகள் உருண்டோடுகின்றன... சில பைகளில் கன்யாகுமரி கலர் மண்ணு...! சில கிராமத்துப் பெண்களின் பைகளில் இருந்து, கந்தலாகிப் போன கண்டாங்கி, எண்ணைச்சிக்கு வாடை கொண்ட சவரி, இவைகளுடன் கூட கீழே சிதறிய சம்பா அரிசிமணிகளும் கைப்பற்றப் படுகின்றன.

அப்போதான், பார்க்க பிச்சைக்காரன் போலிருந்த ஒரு நொண்டி, "ஐயோ... பொன்னு எசமானே... தர்ம தொரையே... விட்டுரும்... விட்டுரும்... நா வீடுவீடா ஏறி இறங்கி, பிச்சை எடுத்து சம்பாரிச்சது... விட்டுரும்... விட்டுரும்..." என்று கண்ணீர் வடித்துக் கதறியதை ஒன்றும் பொருட்படுத்தாமல், கந்தலாகிப்போன அவன் வேட்டியின் உள்ளிருந்து ஒரு சின்ன அழுக்குத் துணி மூட்டையை முரட்டுத்தனமாய் கைப்பற்றி இழுத்தான், பரிசோதனைச் சிப்பந்தி.

பஸ்ஸில் ஒரே பரபரப்பு...

பிரயாணிகள் இரு கட்சிகளாக பிரிகிறார்கள்... "அடடா...! இப்படியுண்டா அநியாயம்? இவுனிகளுக்கெல்லாம் எவ்வளவு துணிச்சல் இருக்கணும்? சார்... இப்படிப்பட்ட ராஜத் துரோகிகளை எல்லாம் தூக்கிலே ஏத்தணும்... அப்பம்தான் நாடு நல்லாவும்!" என்றார் கோட்டும் ஸ¥ட்டுமாக கம்பீரமாய் காட்சியளித்த ஒருவர், அழகாய் இருந்த தன் தோல் பையை மடியில் பத்திரப்படுத்தியவாறு.

"எனக்கு நாகர்கோவிலில் சொந்த வயலி ருந்தும்கூட, என் குடும்பம் இருக்கும் திருவனந்தபுரத்துக்கு நெல்லுக் கொண்டு போக முடியாமே தட்டளியேன்" என்றார் ஒரு மூக்குக் கண்ணாடி ஆசாமி.

"கேரளா பஸ்ஸல்லவா...! இந்த டிரைவருக்கும், கண்டக்டருக்கும் கூட பங்கு இருக்கும் சார்... இவுனுகளை எல்லாம் டிஸ்மிஸ் செய்யணும்..."

இப்படி ஒருவர் ஆக்ரோஷமாக அலறியதும், பரிசோதனை அதிகாரி, டிரைவரையும் கண்டக்டரையும் பஸ்ஸை விட்டு கீழே இறங்கச் சொல்லி அதிகாரத் தோரணையில், "பிரயாணி களின் பைகளில் அரிசி ஏதாவது இருக்காண்ணு செக் பண்ணாமல் எப்படி ஓய் பஸ்ஸில் ஏற்றலாம்...? உம்.. உம்ம லைஸன்சை எடும்.. பாட்ஜ் எங்கே? பேரைச் சொல்லும்?" என்று சத்தம் போட்டார்.

"சார் நாங்க பாத்துத்தான் ஏத்தினோம்... ஏறும்போது இதையொண்ணும் நாங்க காணவே இல்லை சார்..."

அழமாட்டாக் குறையாக கண்டக்டர் அவரிடம் சொல்கிறான்.


அழுகையும் கதறலையும் ஒன்றும் பாராட்டாமல் அந்தப் பிச்சை அரிசி பறிமுதல் செய்யப்படுகிறது.

வயிற்றுப்பாட்டுக்கான குலத்தொழிலை இழந்து, பிழைப்பைத் தேடி, திருவனந்த புரத்துக்குக் குடும்பத்தோடு யாத்திரை செய்து கொண்டிருந்த மூக்கனுக்கு, இந்த களேபரத்தை கண்ட போது பொறுக்கவில்லை.

''என்னத்துக்கு இந்த பகளம்? பாவம்... கொஞ்சம் அரிசி வீடுவீடாகப் போய் எரந்து வாங்கிக்கொண்டு போறான்... எரந்து திங்கப் பட்டவனைத் தொரந்து வாங்கியா நாடு நல்லாவாப் போவுது? லாரிக் கணக்கில் அரிசியும் சோறும் மொத்தமாகக் கொண்டு போறா... அதைக் கேப்பாரில்லே...!''

அவன் வார்த்தைகள் அங்கே எடுபடுமா? போனது போனதுதான்...?

பிறகு பஸ் விட்டபின், மூக்கைச் சிந்திப் போட்டு அழுதவாறு உலகத்தையே சபித்துக் கொண்டிருந்த ராமனைத் தேற்ற மூக்கன் ஒருவன் மட்டும்தான் அந்த பஸ்ஸில் இருந்தான். ''போட்டும் ஓய்... இந்த சட்டமான சட்ட மெல்லாம் கடேசீலே பாவங்களுக்க வயத்தைத் தான வந்து அடிக்கு ... உம்... ஆருட்டெச் சொல்ல...!''

பட்டம்தாணுபிள்ளை முதல் மந்திரியாக இருந்த காலத்தில் கன்யாகுமரி ஜில்லாவை, தாய்த் தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிய பிரயோகத்தில், தன் இடதுகால் முடமான செய்தியையும் அப்போது தான் ராமன் அவனிடம் வெளியிட்டான்...

இப்படித்தான் நொண்டி ராமனுடன் தனக்குப் பழக்கம் நேர்ந்தது. இதோ அவன் பிடிபட்டு விட்டான்....

இனியாரு...?

'நான் தானா...?''

அப்பப்பா! இந்தக் கைகளுக்குத் தான் என்ன வ... தோளில் இருந்து விடுபட்டுப் போய் விடப் போகிறதோ என்னமோ...! உச்சி முதல் உள்ளங்கால்வரை உடம்பு முழுதும் மரத்துப் போய்விட்டது போலிருந்தது.

எத்தனை யுகங்களாக இந்தக் குளிர்ந்த நீரில் கிடக்கிறோம்...! இன்னும் எத்தனை யுகங்கள்...?

அதற்குள்... தன் ரத்தமும் சதையும் எல்லாம் பனிக்கட்டியாய் உறைந்து போகாதா? கடவுளே...!

மேலே காலடியோசைகள்...

பிடிபட்டுவிட்டால்...?

அவனால் நினைத்துப் பார்க்கவே முடிய வில்லை. மூளையில் தெளிவில்லாத என்ன வெல்லாமோ நினைவுகள்

பாலக்காட்டில் இருந்து கோயம்புத்தூருக்கும், பொள்ளாச்சிக்கும், அரிசியும் மரவள்ளிக் கிழங்குத் தூளும் கடத்திய நாட்களில் இப்படியொரு சித்ரவதைக்கு ஆளாக வில்லை. உம்... இந்த வாதநோய் பிடிச்ச அம்மாவை ஆயுர்வேத தர்ம ஆஸ்பத்திரியில் காட்ட வேண்டி திருவனந்தபுரத்துக்குத் திரும்பிவர நேர்ந்தது ஆபத்தாக முடிந்தது.

இனி என்ன செய்ய...?

இதெல்லாம் இந்த மூணுநாலு வருஷங்களுக் கிடையில் அண்ணைக்கு நான் நாகர்கோவிலில் இருந்து இங்கே வந்தம் பொறவுதானே...!

குலத்தொழிலைச் செய்ய அனுமதிக்கப் பட்டிருந்தால் இப்படி ஏதாவது வந்திருக்குமா? அப்பா குமாரசாமி ஆசாரிதான் எவ்வளவு பெரிய பொன் வேலைக்காரர்...! எனக்கும் பிரமாத மாகத்தான் அவரு வேலை படிப்பிச்சுத் தந்திருந்தாரு... சின்னப் பயலா நா இருக் கையில் நுண்ணிய வேலைப் பாடுகளுக் கிண்ணே நீளமாய், மெல்லியதாய் அமைஞ்சிருக் குண்ணு, அப்பா என் விரல்களை எத்தனை தடவை தடவியவாறு புகழ்ந்திருக்கிறார்...!

உம்... அந்த விரல்கள் இப்போ படும்பாடு...!

கடைசியில்...? அப்பா உயிரோடு இருக்கை யில் இப்படி விபரீதம் ஏதாவது உண்டா? அப்போது எல்லோரும் இதைவி செழிப்பாகத் தான் இருந்தார்கள்.

பிறகுதான், தங்கக்கட்டுப்பாடு சட்டத்தால் குடும்பமே நாசமானது... அப்படி இருந்தும் வயிற்றுப்பாட்டை நடத்த, கள்ளக்களவில் தொழிலைச் செய்து கொண்டுதானிருந்தேன். ஆனால் இரண்டு தடவை உருப்படி(நகை) செய்ய ஆளுகளிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த தங்கத்தோடு போலீஸில் பிடிபட்டு பணமும் மானமம் நாசம் அடைந்த பின், என்னை நம்பி யாரு பொன்னைத் தருவார்கள்...?

அதனால்தான் குடும்பத்தைக் காக்க என்னவெல்லாமோ தொழில் செய்து வேறு வழியில்லாமல் கடைசியில் இந்தத் தொழிலில் வந்து சரணாகதி அடைந்தேன்.

இப்போ... அகப்பட்டுக் கொள்வேனோ...?

கடவுளே... இந்த ஒரே ஒரு தடவை மட்டும் இவர்கள் கையில் சிக்கிவிடாமல்என்னைக் காப்பாற்றி விட்டு விடு... இனி இந்த அபாய விளையாட்டுக்கு நான் வரவில்லை.

இல்லவே இல்லை. இது சத்தியம்.

மேலே இன்னும் ஆள் அரவம் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது.

டார்ச் விளக்கின் ஒளிவட்டம், மேலிருந்து ஆற்றின் வெள்ளத்தில் சரிந்து விழுந்து, அதன் தங்க நிறத்தைக் காட்டிச் சிதறுகிறது.

ஆற்றுநீருடன் மழை நீர்... மழை நீருடன் வியர்வை...!

கடவுளே! அகப்பட்டுக் கொள்ளக்கூடாதே...! நித்ய கண்டம் பூர்ணாயிசான இந்தத் தொழிலை இனிமேல் வேண்டவே வேண் டாம்.... பழவங்ஙாடி பிள்ளையார் கோவிலுக்க இண்ணைக்கே ஒரு தேங்காய் உடைக்கிறேன்.

நிமிஷங்கள் இழைகின்றன...

சைக்கிள் வாடகை, அங்கே இங்கே கமிஷன், வழியில் செலவு இதெல்லாம் போக, திருவனந்தபுரத்தில் வாடிக்கை ஹோட்டலில் கொண்டு போய்க் கொடுத்தால், இந்த ஒரு சாக்கு அரிசியில்இருந்து கூடிப் போனால் பத்து பதினைஞ்சு ரூபாதான் கிடைக்கும்!

அதுவும் என்றும் கிடையாது... இந்தக் கடல் வழியையும் அதிகாரிகள் கண்டு பிடித்து விடுவார்கள்...! போலீஸ் பந்தோபஸ்து தீவிரமாய் இருந்தால், சேர்ந்தாற் போல் ஒரு மாசம் வரை தொழிலே இருக்காது... இதுக்குப்படும் பிராணாவஸ்தை என்னா, சித்ரவதை என்னா...! இப்போதான் பார்க்கவில்லையா, கரணம் தப்பினால் மரணம்தானே...

ஆனால் இந்த வரும்படியும் இல்லாவிட்டால்., தான், அம்மா, பொண்டாட்டி, மூணு குழந்தைகள் எல்லாம் எப்படிக் காலம் கழிப்பது...?

தெரிந்த குலத்தொழிலையே செய்ய முடியாத பரிதாபம்... ஏனையத் தொழில்கள் யாவற்றிலும் போட்டியும் பொறாமையும்....

இந்தத் தொழிலையும் விட்டுவிட்டால், பின் எப்படித்தான் உயிர் வாழ்வது? குடும்பத்தை வாழ்விப்பது? இல்லை பட்டினிபோட்டே அழித்து விடுவதா?

எது எப்படியானாலும் இதுதான் கடேசி... கடைசிமுறை...! இப்போ தப்பித்துக் கொண் டால் இனி இந்த நகர வேதனை அனுபவிக்க முடியவே முடியாது... இது கடவுள் மீது சத்தியம்...!

உடம்பு குளிரில் மரத்துப் போகப்போக, அவனது மானசீக சபதத்தின் தீட்சண்யம் தீவிரமாகிக் கொண்டே இருந்தது.

ஆனா... தப்பித்துக் கொள்வேனா...?

எவ்வளவு யுகங்கள் கழிந்தனவோ தெரிவதற் கில்லை... கிடைத்த இரையைக் கவ்வியவாறு போலீஸ் வேன் போய்விட்டது போலிருந்தது.

அடைமழை தூறலாகி விட்டது.

மேலே சூறாவளி ஓய்ந்த ஒரு அமைதி.

எப்படியோ முக்கி முனங்கி கரையேறி, மண்ணல் படுத்துக்கொண்டு சைக்கிளை அரிசி மூட்டையோடு இழுத்துக் கரையில் ஏற்றினான்.

கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது.

நேரம் விடியும் முன் திருவனந்தபுரம் போய்ச் சேர்ந்தாக வேண்டும்... அதற்கிடையில் இன்னும் எத்தனை எத்தனை தடைகளோ! சாதாரணமாக இந்த நேரத்தில், அரிசியைச் சேர்க்க வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டு, அவன் வீடு போய்ச் சேர்ந்திப்பான்... உம்... இன்று சகுனம் சரி யில்ல... அப்பப்பா... எவ்வளவு பயங்கரமான பிராணாவஸ்தை...!

கைகால்களை உதறி தயார் எடுத்துக் கொண்டான். கேரியரில் இருக்கும் ஒரு சாக்கு அரிசியோடு இன்னும் இருபது, இருபத்தி ஐந்து மைல்களுக்கு மேல், சைக்கிளை விட வேண்டாமா?

வழக்கம்போல், எந்த க்ஷணத்திலும் பிடிபட்டு விடுவோம் என்ற அச்சத்தின் மன அவசரத்தோடு, அசாதாரணமான அன்றைய ராட்சஸ பிரயத்தனத் தால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை விண்விண் என்று வேதனை தெறிக்க சர். சி. பி.யின் காலத்தில் போட்ட முக்கிய கான்கிரீட் ரோட்டைத் தவிர்க்க, பலவித சின்னச்சின்ன ஊடுவழிகள் வழியாக சைக்கிளை விட்டும், உருட்டியும், தூக்கி எடுத்துக் கொண்டு நடந்தும், அவன் திருவனந்தபுரம் போய்ச் சேரும் போதும், சேர்க்க வேண்டிய இடத்தில் பத்திரமாய் அரிசியைக் கொண்டுபோய் சேர்க்கும்போதும், பின் பழவங்காடி பிள்ளையார் கோவிலில் தேங்காய் வாங்கி உடைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் பரமுவின் குடிசையில் நுழைந்து கொஞ்சம்'போட்டு'விட்டு வீட்டில் வந்து படுத்த போதும் - எல்லா நிமிஷங்களிலும், ''இதுதான் கடேசி, இனி இந்தத் தொழிலுக்கு நான் இல்ல... இல்லை...'' என்றெல்லாம் தீர்மானமாய் மனத்தில் தன் சத்தியத்தை ஆத்மார்த்தமாகப் புதுப்பித்துக் கொண்டே இருந்தான் அவன்.

முதல் நாள் களைப்பில், அடித்துப்போட்டது போல் தூங்கிக் கொண்டிருந்த மூக்கன், பழக்க தோஷத்தால் தானோ என்னமோ, இரவு இரண்டு மணிக்கு வழக்கம்போல் பாயிலிருந்து எழுந்து உட்கார்ந்தான்.

வெளியில் என்னவோ ஆள் அரவம்.

அவனுக்கு முன்னாலேயே எழுந்து குடிசை நடையில் நின்றவாறு வெளியே பார்த்துக் கொண்டிருந்த வேலம்மை, அவன் எழுந்து உட்கார்ந்ததைக் கண்டு அவனிடம் ஓடி வந்தாள்.

''அறிஞ்சேளா சங்கதியை...! முந்தா நேற்று தான் ஜெயிலில் இருந்து வெளீலே வந்த பரமுவை கையும் களவுமா போலீஸ் வந்து பிடிச்சிட்டுப் போவுது... அவன் பொண்டாட்டி, புள்ளைய எல்லாருக்கும்கூட கள்ளச்சாராயம் காய்ச்சத் தெரியுமாம்... உம்.''

பெருமூச்சு விட்டுவிட்டு அவளே சொன்னாள்.

''உம் பாவம்... பரமுவைச் சொல்லவும் குத்த மில்லை... ஏளெட்டுப் பேருக்கு வயத்துப்பாடு களியாண்டமா...?''

மூக்கனின் மூளை விழிப்படைந்தது... அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வேறு வந்தது... உட்கார்ந்து கொண்டே சுற்று முற்றும் பார்த்தான்...

முக்கி முனங்கி கொண்டு கிடக்கும் அம்மாவும், போர்க்களத்தில் தாறுமாறாய்ச் சாய்ந்து கிடக்கும் உடல்களைப் போல் அவனைச்சுற்றி பட்டினிக்கோலங்களாய்த் தூங்கிக் கொண்டி ருக்கும் குழந்தைகளும், முன்னால் கந்தலின் பிரத்யட்ச வடிவாய் எழுந்து நிற்கும் பெண்டாட் டியும் அவன் நேற்றுச் செய்த பிரதிக்ஞையை சத்தியத்தைப் பார்த்து வெவ்வெவ்வே காட்டுகிறார்களா?

திக்பிரமை பிடித்தவன்போல் ஒரு நிமிஷம் இருந்த அவன் ஒரு கர்மவீரனைப் போல் சடக்கென்று எழுந்தான்...

சற்றுத் தொலைவிலிருந்து வந்து கொண் டிருந்த நீரில் துடுப்புகள் சலசலக்கும் ஓசை யைக் கேட்டவாறு, நின்று கொண்டிருந் தான் மூக்கன்.

*****

Apr 24, 2010

ஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: குளச்சல் மு. யூசுப்

மகர1 மாதம் 8ஆம் தேதி. இன்று எனது பிறந்த நாள். வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே எழுந்து, குளிப்பது போன்ற காலைக் கடன்களை முடித்தேன். இன்று அணிவதற்காகவென்று ஒதுக்கிவைத்திருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையையும்  வெள்ளைக் கதர் வேட்டியையும் வெள்ளை கேன்வாஸ் ஷ¨வையும் அணிந்து எனது அறையில் சாய்வு நாற்காலியில் கொந்தளிக்கும் மனதுடன் மல்லாந்து படுத்திருந்தேன். என்னை அதிகாலையிலேயே பார்த்தது, பக்கத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பி.ஏ. மாணவனாகிய மாத்யூவுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் புன்சிரிப்புடன் எனக்குக் காலை வணக்கம் தெரிவித்தான்.

"ஹலோ, குட்மார்னிங்."bashher--8

நான் சொன்னேன்:

"எஸ். குட்மார்னிங்."

மாத்யூ கேட்டான்:

"என்னா, இன்னைக்கு என்ன விசேஷம், காலையிலேயே? எங்கியாவது போகப்போறீங்களா?"

"சே . . . அதெல்லாம் ஒண்ணுமில்லெ." நான் சொன்னேன், "இன்னைக்கு என்னோட பிறந்த நாள்."

"யுவர் பர்த் டே?"

"எஸ்."

"ஓ . . . ஐ விஷ் யூ மெனி ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே."

"தாங்க் யூ."

மாத்யூ கையிலிருந்த பிரஷைக் கடித்துப் பிடித்தபடி குளியலறைக்குள் சென்றான். கட்டடத்திற்குள், ஆங்காங்கே கூச்சல்கள், ஆரவாரம், இடையிடையே சிருங்காரப் பாடல்கள். மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான். யாருக்கும் எந்த அல்லல்களுமில்லை. உல்லாசமான வாழ்க்கை. நான் ஒரு சிங்கிள் சாயா குடிக்க என்ன வழியென்று யோசித்துக்கொண்டிருந்தேன். மத்தியானச் சாப்பாட்டுக்கான மார்க்கம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. நேற்று பஜார் வழியாகப் போகும்போது ஹமீது என்னை இன்று சாப்பிட வரச்சொல்லி அழைத்திருந்தான். இந்த ஆள், சிறு தோதுவிலான ஒரு கவிஞரும் பெரிய பணக்காரனுமாவார். இருந்தாலும் மத்தியானம்வரை சாயா குடிக்காமலிருக்க முடியாது. சூடான ஒரு சாயாவுக்கு என்ன வழி? மாத்யூவின் வயதான வேலைக்காரன் சாயா போடும் பணியில் சிரமத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தை நான் என் அறையிலிருந்தே கிரகித்தேன். அதற்கான காரணம், நான் தங்கியிருந்த அறை மாத்யூவின் சமையலறையின் ஸ்டோர் ரூம்தான். மாதம் ஒன்றுக்கு எட்டணா2 வாடகைக்குக் கட்டட உரிமையாளர் எனக்குத் தந்திருந்தார். அந்தக் கட்டடத்தின் மிகவும் மோசமானதும் சின்ன அறையும் இதுதான். இதற்குள், என் சாய்வு நாற்காலி, மேஜை, செல்ஃப், படுக்கை - இவ்வளவையும் வைத்தது போக சுவாசம் விடுவதற்கும் இடமில்லை. பெரிய மதில் கட்டினுள்ளிருக்கும் இந்த மூன்று கட்டடங்களின் மாடியிலும் கீழேயும் உள்ள எல்லா அறைகளிலும் மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான் தங்கியிருந்தார்கள். கட்டடத்தின் உரிமையாளருக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒரேயரு நபர், நான் மட்டும்தான். என்னுடனான இந்த விருப்பமின்மைக்கு ஒரே ஒரு காரணம், நான் சரியான வாடகை கொடுப்பதில்லை, அவ்வளவுதான். என்னைப் பிடிக்காத வேறு இரண்டு பிரிவினரும் இங்கே இருக்கிறார்கள், ஓட்டல்காரனும் அரசாங்கமும். ஓட்டல்காரனுக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்திற்கு அப்படியான பாக்கி எதுவுமில்லை. இருந்தாலும் என்னைப் பிடிக்கவே பிடிக்காது. அப்படி உணவு, உறைவிடம், தேசம் . . . மூன்றிலும் பிரச்சினைகள் இருந்தன. அடுத்த பிரச்சினைகள்: என் உடைகள், ஷ¨, விளக்கு. (விஷயங்களை எல்லாம் எழுதுவதற்கு முன் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த வேண்டியதிருக்கிறது. இப்போது நடுஜாமம் கடந்துவிட்டது. காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து நீண்ட நேரமாக இந்த நகரத்திலேயே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். வேறு விசேஷமான எந்தக் காரணமோ, நோக்கமோ இல்லை. இந்த ஒரு நாளைய நாட்குறிப்பை ஆரம்பம் முதல் இறுதிவரை எழுத வேண்டும். சுமாரான அளவில் ஒரு சிறுகதைக்கான வாய்ப்புகள் இதில் உண்டு. ஆனால், என் அறையிலிருக்கும் விளக்கில் எண்ணெய் இல்லை. நிறைய எழுத வேண்டியதுமிருக்கிறது. ஆகவே தூக்கப் பாயிலிருந்து எழுந்துவந்து இந்த நதியோரத்தின் விளக்குத் தூணில் சாய்ந்தமர்ந்து சம்பவங்களின் சூடு ஆறிப்போவதற்குள் எழுதத் தொடங்கினேன்.) சூல் கொண்ட கார்மேகங்கள் போல், இந்நாளில் சம்பவங்கள் எல்லாம் என் அக மனத்தை வெடிக்கச் செய்துவிடுவதுபோல் நெருக்கியடித்து நிற்கின்றன. பெரிய அளவில் ஒன்றுமில்லைதான். ஆனால், இன்று எனது பிறந்த நாள். நான் சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரத்தில், அன்னிய தேசத்திலிருக்கிறேன். கையில் காசில்லை. கடன் கிடைப்பதற்கான வழிகளுமில்லை. உடுத்திருப்பதும் மற்றுள்ளவைகளுமெல்லாம் நண்பர்களுடையவை. எனக்கானவை என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. இந்த நிலைமையிலான ஒரு பிறந்த நாள் மீண்டும் மீண்டும் வரவேண்டுமென்று மாத்யூ வாழ்த்தியபோது என் மனதிற்குள் ஏதோ ஒரு அகக்குருத்து வலித்தது.

நினைத்துப் பார்த்தேன்.

மணி ஏழு: நான் சாய்வு நாற்காலியில் படுத்தபடியே நினைத்துக்கொண்டேன். இந்த ஒரு நாளையாவது களங்கமேதுமில்லாமல் பாதுகாக்க வேண்டும். யாரிடமிருந்தும் இன்று கடன் வாங்கக் கூடாது. எந்தப் பிரச்சினைக்கும் இன்று இடந்தரக் கூடாது. இன்றைய தினம் மங்களகரமாகவே முடிய வேண்டும். கடந்து போன நாட்களின் கறுப்பும் வெள்ளையுமான சங்கிலித் தொடர் களில் இருக்கும் அந்தப் பல நூறு நான்களாக இருக்கக் கூடாது, இன்றைய தினத்தின் நான். இன்று எனக்கு என்ன வயது? சென்ற வருடத்தைவிட ஒரு வயது அதிகமாகி இருக்கிறது. சென்ற வருடத்தில் . . .? இருபத்தாறு. இல்லை முப்பத்தி இரண்டு, ஒருவேளை நாற்பத்தி ஏழோ?

என் மனதில் தாங்க முடியாத வேதனை. எழுந்து சென்று முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன். மோசமில்லை. சுமாரான, பரவாயில்லாத முகம். நல்ல அகன்ற முழுமையான நெற்றி. அசைவற்ற கண்கள். வளைந்த, வாள் போன்ற மெல்லிய மீசை. மொத்தத்தில் குறை சொல்ல முடியாது - என்றெல்லாம் யோசித்துக்கொண்டே நிற்கும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. மனதில் கடினமான வலியேற்பட்டது. ஒரு நரைமுடி. என் காதின் மேல் பாகத்தில் கறுத்த முடிகளினூடே ஒரு வெளுத்த அடையாளம். நான் மிகுந்த சிரமத்துடன் அதைப் பிடுங்கியெறிந்தேன். பிறகு தலையைத் தடவிக்கொண்டிருந்தேன். பின்புறம் நல்ல பளபளப்பு. கசண்டி4தான். தடவிக்கொண்டிருக்கும்போது தலை வலிப்பதுபோன்ற சிறு உணர்வு ஏற்பட்டது. சூடு சாயா குடிக்காததால் இருக்குமோ?

மணி ஒன்பது: என்னைக் கண்டதுமே ஓட்டல்காரன் முகத்தைக் கறுவிக்கொண்டு உள்ளே போய்விட்டான். சாயா போடும் அந்த அழுக்குப் பிடித்த பையன் பாக்கியைக் கேட்டான்.

நான் சொன்னேன்:

"சரி . . . அதெ நாளைக்குத் தந்திடுறேன்."

அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.

"நேற்றைக்கும் இதத்தானே சொன்னீங்க."

"நான் இன்னைக்குக் கெடெச் சுடும்னு நெனச்சிருந்தேன்."

"பழைய பாக்கியெத் தராம உங்களுக்கு சாயா கொடுக்க வேண்டாம்னு மொதலாளி சொல்லிட்டார்."

"செரி."

மணி பத்து: காய்ந்து சுருங்கிப்போய்விட்டேன். வாயில் உமிழ் நீர் சுரக்கவில்லை. மத்தியான நேரத்தின் கடும் வெப்பம். சோர்வின் பெரும் பாரம் என்மீது கவியத் தொடங்கிவிட்டது. அப்போது புதிய மிதியடி விற்பதற்காக வெளுத்து, மெலிந்த எட்டும் பத்தும் வயதுள்ள இரண்டு கிறிஸ்தவப் பையன்மார் என் அறை வாசலுக்கு வந்தார்கள். நான் இரண்டு மிதியடிகள் வாங்க வேண்டுமாம். ஜோடி ஒன்றுக்கு மூன்று அணாதான் விலையாம். மூன்று அணா.

"வேணாம், குழந்தைகளே."

"சாரைப்போல உள்ளவங்க வாங்கலேன்னா வேற யார் சார் வாங்குவாங்க?"

"எனக்கு வேணாம், குழந்தைகளே . . . எங்கிட்டே காசு இல்லெ."

"செரி." நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய சிறு முகங்கள். எதையும் உட்புகுந்து அறிந்துகொள்ளவியலாத சுத்த இதயங்கள். இந்த வேஷமும் சாய்வு நாற்காலியில் கிடக்கும் இந்தத் தோரணையும். நான் ஒரு சாராம் . . .! சாய்வு நாற்காலியும் சட்டையும் வேட்டியும் ஷ¨வும். எதுவும் என்னுடையதல்ல குழந்தைகளே. எனக்கென்று இந்த உலகத்தில் சொந்தமாக எதுவுமே இல்லை. வெறும் நிர்வாணமான இந்த நான்கூட என்னுடையதுதானா? பாரதத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் எத்தனையெத்தனை ஆண்டு காலங்கள் சுற்றித் திரிந்து ஏதேதோ ஜாதி மக்களுடன் எங்கெங்கெல்லாமோ தங்கியிருக்கிறேன். யாருடைய ஆகாரங்கள் எல்லாம் சேர்ந்தது இந்த நான். எனது இரத்தமும் எனது மாமிசமும் எனது எலும்பும் இந்த பாரதத்திற்குரியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் கராச்சி4 முதல் கல்கத்தா வரையிலும் - அப்படி பாரதத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். பெண்களும் ஆண்களுமான அந்த அத்தனை நண்பர்களையும் நான் இன்று நினைவுகூர்கிறேன். நினைவு . . . ஒவ்வொருவரையும் தழுவியபடியே என் அன்பு அப்படியே வியாபித்துப் பறக்கட்டும். பாரதத்தைக் கடந்தும் . . . உலகைக் கடந்தும் . . . சுகந்தம் வீசும் வெண்நிலவுபோல் . . . அன்பு, என்னையறிந்து அன்பு காட்டுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? அறிதல், எனக்குத் தோன்றுவது . . . ரகசியங்களின். . . அந்தத் திரையை விலக்குவதுதான். குறைகளையும் பலவீனங்களையும் களைந்து பார்த்தால் என்ன மிச்சமிருக்கப் போகிறது? வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும். ஹோ . . . காலந்தான் எத்தனை துரிதமாக இயங்குகிறது. தகப்பனின் சுட்டு விரலை இறுகப் பற்றிக் கொஞ்சி விளையாடித் திரிந்த நான் "உம்மா பசிக்குது" என்று தாயின் உடுமுண்டின் தலைப்பை இழுத்துக் கேட்ட நான், இன்று? ஹோ, காலத்தின் உக்கிரமான பாய்ச்சல். சித்தாந்தங்களின் எத்தனையெத்தனை வெடிகுண்டுகள் என் அகத்தளங்களில் விழுந்து வெடித்துச் சிதறியிருக்கின்றன. பயங்கரமான போர்க்களமாக இருந்தது என் மனது. இன்று நான் யார்? புரட்சிக்காரன், ராஜத் துரோகி, இறை எதிரி, கம்யூனிஸ்ட் - மற்றும் என்னவெல்லாமோ. உண்மையில் இதில் ஏதாவது ஒன்றா நான்? ஹ§ம். என்னென்ன மனச் சஞ்சலங்கள். தெய்வமே? மூளைக்குள் சுள்சுள்ளென்று குத்துகிறது. சாயா குடிக்காததாலிருக்குமோ? தலை நேராக நிற்கவில்லை. போய், சாப்பிட்டுவிட வேண்டியதுதான். இந்தத் தலைவேதனையுடன் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். இருந்தாலும் வயிறு நிறையச் சாப்பிடலாமல்லவா?

மணி பதினொன்று: ஹமீது கடையில் இல்லை. வீட்டிலிருப்பாரோ? என்னையும் அவர் கூடவே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதுதான் முறை. ஒருவேளை, மறந்து போயிருக்கலாம். வீட்டுக்கே போய்விடலாமா? சரி.

மணி பதினொன்றரை: ஹமீதின் மாடி வீட்டின் கீழ் இரும்புக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. நான் அதைத் தட்டினேன்.

"மிஸ்டர் ஹமீது."

பதில் இல்லை.

"மிஸ்டர் ஹமீ. . .து."

மிகுந்த கோபத்துடனிருந்த ஒரு பெண்ணின் உரத்த குரல் மட்டும்.

"இங்கெ இல்லை."

"எங்கே போயிருக்காரு?"

மௌனம். நான் திரும்பவும் கதவைத் தட்டினேன். மனம் மிகுந்த சோர்வடைந்தது. திரும்பி நடக்கப் போகும்போது பக்கத்தில் யாரோ வருவது போன்ற காலடிச் சத்தம். கூடவே வளை கிலுக்கமும். வாசல் கதவு இலேசாகத் திறந்தது - ஒரு இளவயதுப் பெண்.

நான் கேட்டேன்: "ஹமீது எங்கே போயிருக்காரு?"

"அவசரமா ஒரு எடத்துக்கு." மிகுந்த பொறுமையுடன்தான் பதில்.

"எப்போ வருவாரு?"

"சாயுங்காலத்துக்குப் பிறகு ஆயிடும்."

சாயுங்காலத்துப் பிறகு?

"வந்தா நான் வந்து தேடுனதாகச் சொல்லுங்க."

"நீங்க யாரு?"

நான் யார்?

"நான் . . . ஓ . . . யாருமில்லெ. எதுவும் சொல்ல வேண்டாம்."

நான் திரும்பி நடந்தேன். அனல் தகிக்கும், கால் புதையும் வெள்ளை மணல் பரப்பு. அதைத் தாண்டினால் கண்ணாடிச் சில்லுபோல் பளபளக்கும் கால்வாய். கண்களும் மூளையும் இருண்டு போயின. மிகுந்த மன அங்கலாய்ப்பு. எலும்புகள் சூடேறிக்கொண்டிருந்தன. தாகம், பசி, ஆவேசம். உலகத்தையே விழுங்கிவைக்கும் ஆவேசம். கிடைப்பதற்கான வழியில்லையென்பதுதான் ஆவேசம் அதிகரிப்பதற்கான காரணம். கிடைப்பதற்கான உத்தரவாதமேதுமற்ற நிலையில் எண்ணற்ற பகல் இரவுகள் என் முன். நான் தளர்ந்து விழுந்துவிடுவேனா? தளர்ந்து போய்விடக் கூடாது. நடக்க வேண்டும் . . . நடக்க வேண்டும்.

மணி பன்னிரண்டரை: பரிச்சயமானவர்கள் அனைவரும் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளாமல் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். "தோழர்களே, இன்று எனது பிறந்த நாள். எனக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போங்கள்" என்று என் மனம் உச்சரித்தது. நிழல் தடங்கள் என்னைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தன. நண்பர்கள் ஏன் என்னைக் கண்டு பேசாமல் போகிறார்கள்? அது சரி!

என் பின்னால் ஒரு சி.ஐ.டி.

மணி ஒன்று: ஒரு காலத்தில் பத்திரிகை அதிபரும் இப்போது வியாபாரியாகவுமிருக்கும் மி.பியைப் பார்க்கச் சென்றேன். கண்பார்வை தெளிவுடன் இல்லை. பதற்றமாக இருந்தது.

பி, கேட்டார். "புரட்சிகளெல்லாம் எந்த இடம்வரை வந்திருக்கு?"

நான் சொன்னேன்: "பக்கத்துலெ வந்துட்டு."

"ம்ஹ§ம்! எங்கிருந்து வாறீங்க? பார்த்தே கொஞ்ச காலம் ஆயிட்டுதே?"

"ஹா . . ."

"அப்புறம், என்ன விசேஷம்?"

"சே . . . ஒண்ணுமில்லெ. சும்மா."

நான் அவரது பக்கத்திலிருந்த செயரில் அமர்ந்தேன். எனது கட்டுரைகளில் பலவற்றை நான் அவரது பெயரில் எழுதிப் பிரசுரம் செய்திருந்தேன். பண்டைப் பெருமை பேசுவதற்காக அவர் அந்தப் பழைய பத்திரிகைகளை அட்டையிட்டுவைத்திருந்தார். நான் அதையெடுத்துத் தலைச்சுற்றலோடு அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். "எனக்குச் சூடா ஒரு சாயா வேணும். நான் ரொம்பத் தளந்து போயிருக்கேன்" என்று என் மனம் வேகமாகச் சொல்லிக்கொண்டிருந்தது. பி, ஏன் என்னிடம் எதுவுமே கேட்காமலிருக்கிறார்? நான் சோர்ந்து போயிருப்பதை அவர் கவனிக்கவில்லையா? அவர் கல்லாப் பெட்டியின் பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். நான் மௌனமாகத் தெருவைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். துண்டு தோசைக்காக இரண்டு தெருக்குழந்தைகள் சண்டையிடுகிறார்கள். "ஒரு சூடு சாயா." நான் கேட்கவில்லை. என் சர்வ நாடிகளும் இரந்துகொண்டிருந்தன. பி, பெட்டியைத் திறந்து நோட்டுகளின், சில்லறைகளினிடையிலிருந்து ஒரு அணாவை எடுத்து ஒரு பையனிடம் கொடுத்தார்.

"சாயா கொண்டு வாடா."

பையன் ஓடிச் சென்றான். என் மனம் குளிர்ந்தது. எவ்வளவு நல்ல மனிதன் . . . பையன் கொண்டுவந்த சாயாவை பி. வாங்கிவிட்டு என்னைப் பார்த்துத் திரும்பினார்.

"உங்களுக்குச் சாயா வேணுமா?"

நான் சொன்னேன், "வேண்டாம்."

ஷ¨வின் லேசை இறுக்குவது போன்ற பாவனையுடன் குனிந்து கொண்டேன். முகத்தை அவர் பார்த்துவிடக் கூடாது. என் மன விகாரத்தை அது காட்டிக் கொடுத்துவிடக் கூடும்.

பி, வருத்தத்துடன் சொன்னார், "உங்களோட புத்தகங்கள் எதையும் எனக்குத் தரலியே?"

நான் சொன்னேன்: "தர்றேன்."

"அதெப் பற்றியதான பத்திரிகை விமர்சனங்கள் எல்லாத்தையும் நான் வாசிப்பதுண்டு."

நான் சொன்னேன்: "நல்ல விஷயம்."

சொல்லிவிட்டுக் கொஞ்சம் சிரித்துவிட முயற்சி செய்தேன். மனத்தில் பிரகாசம் வற்றிப்போன முகம், எப்படிச் சிரிக்கும்?

நான் விடைபெற்றுத் தெருவிலிறங்கி நடந்தேன்.

என் பின்னால் அந்த சி.ஐ.டி.

மணி இரண்டு: நான் தளர்ந்து, மிகவும் சோர்ந்துபோய் அறையில் நாற்காலியில் சாய்ந்து கிடந்தேன். நல்ல ஆடைகள் உடுத்தி, வாசனைத் திரவியம் பூசிய ஏதோ ஒரு பெண் எனது அறை வாசலில் வந்தாள். எங்கோ தொலைதூரத்திலுள்ளவள். தண்ணீர் பிரளயத்தால் நாடே அழிந்துபோய்விட்டது; ஏதாவது உதவிசெய்ய வேண்டும். மெல்லிய புன்சிரிப்புடன் அவள் என்னைப் பார்த்தாள். மார்பகங்களை வாசல் கதவின் சட்டத்தில் இறுக அமர்த்தியபடியே பார்த்தாள். என் மனதிற்குள்ளிருந்து சூடான விகாரம் எழுந்தது. அது படர்ந்து நாடி நரம்புகளெங்கும் பரவியது. என் இதயம் அடித்துக் கொள்வது எனக்குக் கேட்பதுபோல் தோன்றியது. பயங்கரமும் சிக்கலும் மிகுந்தது அந்த நிமிடம்.

"சகோதரி, எங்கிட்டே எதுவுமே இல்லை. நீங்க வேறெ எங்கயாவது போய்க் கேளுங்க - எங்கிட்டே எதுவுமே இல்லை."

"எதுவுமே இல்லியா?"

"இல்லே."

அதன் பிறகும் அவள் போகாமல் நின்றாள். நான் சத்தமாகச் சொன்னேன்.

"போயிரு, ஒண்ணுமில்லே."

"சரி." அவள் வருத்தத்தோடு குலுங்கி அசைந்து நடந்து போனாள். அப்போதும் அவளிடமிருந்து பரிமள வாசம் வந்துகொண்டிருந்தது.

மணி மூன்று: யாரிடமிருந்தாவது கடன் வாங்கினால் என்ன? பயங்கரமான சோர்வு. மிகவும் இயலாத ஒரு கட்டம். யாரிடம் கேட்பது? பல பெயர்கள் நினைவுக்கு வந்தன. ஆனால், கடன் வாங்குவது நட்பின் அந்தஸ்தைக் குறையச் செய்கிற ஒரு ஏற்பாடு. செத்துவிடலாமா என்று யோசனை செய்தேன். எப்படியான சாவாக இருக்க வேண்டும்?

மணி மூன்றரை: நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சமும் முடியவில்லை. குளிர்ந்த நீரில் அப்படியே மூழ்கிக் கிடந்தால். உடல் முழுவதையும் கொஞ்சம் குளிரவைத்தால். அப்படியே படுத்திருக்கும்போது சில பத்திரிகை அதிபர்களின் கடிதங்கள் வந்தன. கதைகளை உடனே அனுப்பிவைக்க வேண்டும். திருப்பியனுப்பும் வசதியுடன். கடிதங்களை அப்படியே போட்டுவிட்டு நான் இயலாமல் படுத்திருந்தேன். வங்கிக் குமாஸ்தா கிருஷ்ணபிள்ளையின் வேலைக்காரப் பையன் ஒரு தீக்குச்சிக் கேட்டு வந்தான். அவனிடம் சொல்லி ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவரச்செய்து குடித்தேன்.

"சாருக்கு உடம்புக்குச் சொகமில்லையா?" பதினொரு வயதான அந்தப் பையனுக்குச் சோர்வுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் சொன்னேன், "சுகக்கேடு எதுவுமில்லை."

"பெறகு . . .? சார், சாப்பிடலியா?"

"இல்லெ ."

"அய்யோ, ஏன் சாப்பிடலெ?"

அந்தச் சிறுமுகமும் கறுத்த கண்களும் உடுத்திருக்கும் கரிபுரண்ட ஒரு துண்டும்.

அவன் அதிர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்தான்.

நான் கண்களை மூடிக்கொண்டேன்.

அவன் மெதுவாகக் கூப்பிட்டான்.

"சாரே."

"உம்?"

நான் கண்களைத் திறந்தேன்.

அவன் சொன்னான்: "எங்கிட்டே ரெண்டணா இருக்கு."

"செரி?"

"நான் அடுத்த மாசம் வீட்டுக்குப் போவும்போது சார் தந்தாப் போதும்."

என் மனம் வெதும்பியது. அல்லாஹ§ . . .

"கொண்டு வா."

முழுசாக இதைக் காதில் வாங்குவதற்கு முன் அவன் ஓடினான்.

அப்போது, தோழர் கங்காதரன் வந்தார். வெள்ளைக் கதர் வேட்டி, வெள்ளைக் கதர் ஜிப்பா, அதன்மீது நீளச் சால்வை போர்த்தியிருந்தார். . . கறுத்து, நீண்ட முகமும் விஷய பாவமுள்ள பார்வையும்.

சாய்வு நாற்காலியில் நான் மிடுக்காகப் படுத்திருப்பதைக் கண்டதும் அந்தத் தலைவன் கேட்டான்: "நீ ஒரு பெரிய பூர்ஷ§வா ஆயிட்டே போலிருக்கு?"

எனக்குத் தலைச்சுற்றல் இருந்துகொண்டிருந்தாலும் சிரிப்பு வந்தது. தலைவனின் உடைகளின் உரிமையாளர்யாராக இருக்குமென்ற யோசனை என்னுள் உதித்தது. எனக்குப் பரிச்சயமுள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளின் உருவமும் என் கற்பனையில் ஓடியது. இழப்பதற்கு என்ன இருக்கிறது?

கங்காதரன் கேட்டான்: "நீ எதுக்குச் சிரிக்கிறே?"

நான் சொன்னேன்: "ஒண்ணுமில்லை மக்களே, நம்ம இந்த வேஷங்களை நினைச்சதும் சிரிப்பு வந்தது."

"உன் பரிகாசத்தை விட்டுட்டு விஷயத்தைக் கேளு. பெரிய பிரச்சினை நடந்துட்டிருக்கு. லத்தி சார்ஜும் டீயர்கேசும் துப்பாக்கிச் சூடும் நடக்கும் போலிருக்கு. பத்து மூவாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்காங்க. ஒண்ணரை வாரமாக அவங்க பட்டினி கிடக்கிறாங்க. பெரிய கலவரம் ஏற்படலாம். மனுசன் பட்டினி கிடந்தா என்ன நடக்கும்?"

"இந்த விவரங்கள் எதையும் நான் பத்திரிகைகள்லே வாசிக்கலியே?"

"பத்திரிகைகள்லே போடக் கூடாதுன்னு எச்சரிக்கை விடப்பட்டிருக்கு."

"அது செரி. நான் இப்போ என்ன செய்யணும்?"

"அவங்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்காங்க. நான்தான் தலைமை. நான் அங்கே போய்ச் சேர, படகுக் கூலி ஓரணா வேணும். அப்புறம், இன்னைக்கு நான் எதுவும் சாப்பிடவுமில்லை. நீயும் கூட்டத்துக்கு வா."

"மக்களே, எல்லாமே செரிதான். ஆனா, எங்கிட்டெ காசெதுவும் இல்லே. கொஞ்ச நாளாயிட்டுது, நானும் ஏதாவது சாப்பிட்டு. நேரம் வெளுத்த பெறகு இதுவரை நானும் ஒண்ணுமே சாப்பிடல்லை. போதாத குறைக்கு இன்னைக்கு என்னோட பிறந்த நாள் வேறே."

"பிறந்த நாளா? நமக்கெல்லாம் ஏது பிறந்த நாள்?"

"பிரபஞ்சத்திலெ உள்ள எல்லாவற்றுக்குமே பிறந்த நாள்னு ஒண்ணு இருக்கு."

அப்படியாக, பேச்சு பல திசைகளிலும் சென்றது. கங்காதரன் தொழிலாளர்களைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசினான். நான் வாழ்க்கையைப் பற்றியும் பத்திரிகை அதிபர்களைப் பற்றியும் இலக்கியவாதிகளைப் பற்றியும் பேசினேன். அதற்கிடையில் பையன் வந்தான். அவனிடமிருந்து நான் ஒரு அணாவை வாங்கினேன். பாக்கி ஒரு அணாவுக்குச் சாயாவும் பீடியும் தோசையும் கொண்டு வரச் சொன்னேன். சாயா காலணா. தோசை அரையணா. பீடி காலணா.

தோசையை பார்சல் செய்திருந்த அமெரிக்கப் பத்திரிகைக் காகிதத்துண்டில் ஒரு படமிருந்தது. அது என்னை ரொம்பவும் கவர்ந்தது. நானும் கங்காதரனும் தோசை தின்றோம். ஒவ்வொரு தம்ளர் தண்ணீரும் குடித்துவிட்டுக் கூடவே ஆளுக்குக் கொஞ்சம் சாயா. பிறகு ஒரு பீடியைப் பற்றவைத்துப் புகை விட்டபடியே கங்காதரனிடம் ஒரு அணாவைக் கொடுத்தேன். போகும்போது கங்காதரன் விளையாட்டாகக் கேட்டான்: "இன்னைக்கு உன் பிறந்த நாளில்லியா? நீ இந்த உலகத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புறியா?"

நான் சொன்னேன்: "ஆமா, மக்களே. புரட்சி சம்பந்தமான ஒரு செய்தி."

"சொல்லு, கேட்போம்."

"புரட்சியின் அக்னி ஜுவாலைகள் படர்ந்து உலகெங்கும் கொளுந்துவிட்டெரியட்டும். இன்றைய சமூக அமைப்புகள் அனைத்துமே எரிந்து சாம்பலாகி, பூரணமான மகிழ்ச்சியும் அழகும் சமத்துவமும் நிரம்பிய புது உலகம் அமையட்டும்."

"பேஷ். நான் இன்னைக்கு இதைத் தொழிலாளர் கூட்டத்திலெ சொல்லிர்றேன்." என்று சொல்லிவிட்டுக் கங்காதரன் வேகமாக இறங்கிச் சென்றான். நான் ஒவ்வொரு அரசியல்வாதிகளைப் பற்றியும் ஒவ்வொரு எழுத்தாளர்களைப் பற்றியும் எல்லா வகையான ஆண் பெண்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினேன். இவர்களெல்லாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? தோசை பொதிந்துவந்த அந்தக் காகிதத் துண்டைப் படுத்திருந்தபடியே எடுத்தேன். அப்போது வாசலைக் கடந்து, முகத்தை இறுக்கிப் பிடித்து, வீட்டின் உரிமையாளர் வருவதைக் கண்டேன். இவரிடம் இன்று என்ன பதில் சொல்லலாம் என்று நினைத்தவாறே காகிதத்தைப் பார்த்தேன். வானத்தை முத்தமிட்டு நிற்கும் உயர்ந்த மணிக்கூண்டுகள் நிறைந்த பெரு நகரம். அதன் நடுவே, தலை உயர்த்தி நிற்கும் ஒரு மனிதன். இரும்புச் சங்கிலிகளால் அவன் வரிந்து கட்டப்பட்டுப் பூமியோடு பிணைக்கப்பட்டிருந்தான். ஆனாலும், அவனது பார்வை சங்கிலியிலோ பூமியிலோ அல்ல. தொலைவில், பிரபஞ்சங்களுக்குமப்பால், முடிவற்ற நெடுந்தொலைவில், ஒளிக்கதிர் விதைக்கும் மாபெரும் ஒளியான அந்தக் குவிமையத்தில். அவனது கால்களின் அருகில் ஒரு திறந்த புத்தகமிருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலுமாக அந்த மனிதனுடையது மட்டுமல்ல, எல்லா மனிதர்களுடையதுமான வரலாறு. அதாவது: 'விலங்குகளால் மண்ணோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டி ருந்தாலும் அவன் காண்பது, காலங்களைக் கடந்த, அதி மனோகரமான மற்றொரு நாளை.'

"நாளை . . . அது எங்கே இருக்கிறது?"

"என்னா, மிஸ்டர்?" வீட்டுக்காரரின் எகத்தாளமான கேள்வி. "இன்னைக்காவது தந்துருவீங்களா?"

நான் சொன்னேன், "பணமெதுவும் கையிலெ வந்து சேரல்லெ. அடுத்த ஒண்ணுரெண்டு நாள்லெ தந்திடறேன்." ஆனால், இனி அவர் தவணையை ஏற்றுக் கொள்வதுபோல் தெரியவில்லை.

"இப்படியெல்லாம் எதுக்கு வாழணும்?" அவரது கேள்வி. நியாயமான விஷயம். இப்படியெல்லாம் எதுக்கு வாழணும்? நான் இந்தக் கட்டடத்தில் வந்து மூன்று வருடம் ஆகப் போகிறது. மூணு சமையலறைகளை நான்தான் சரியாக்கிக் கொடுத்தேன். அதற்கு இப்போது நல்ல வாடகை கிடைக்கிறது. இந்த நான்காவது ஸ்டோர் ரூமையும் மனிதன் வாழ்வதுபோல் நான் ஆக்கிக் கொடுத்த பிறகு அதிக வாடகைக்கு இதை எடுக்க வேறு ஆள் இருக்கிறதாம். அந்த வாடகையை நானே தந்து விடுகிறேன் என்று ஒத்துக்கொண்டாலும் போதாது - காலிசெய்து கொடுத்துவிட வேண்டுமாம்.

இல்லெ. முடியாது. காலிசெய்ய விருப்பமில்லெ. என்னவேணா செய்துக்கிடுங்க.

மணி நான்கு: எனக்கு இந்த ஊரே அலுத்துப்போய்விட்டது. என்னைக் கவர்வதற்கான எதுவுமே இந்த நகரில் இல்லை. தினமும் சஞ்சரிக்கும் ரோடுகள். நித்தமும் பார்க்கும் கடைகளும் முகங்களும். பார்த்தவைகளையே பார்க்க வேண்டும். கேட்டதையே கேட்க வேண்டும். பயங்கரமான மன அலுப்பு . . . எதுவுமே எழுதவும் தோன்றவில்லை. இல்லையென்றாலும் எழுதுவதற்குத் தான் என்ன இருக்கிறது?

மணி ஆறு: மகிழ்ச்சியான மாலைப் பொழுது. கடல் விழுங்கிக்கொண்டிருக்கும், வட்ட வடிவமாக ஜொலிக்கும், இரத்த நிற அஸ்தமன சூரியன். பொன்னிற மேகங்கள் நிறைந்த மேற்கு அடிவானம். கரை காண முடியாத பெருங்கடல். அருகே, சிற்றலைகளைப் பரப்பும் கால்வாயின் ஓரத்தில் கரைபுரண்டோடியது மகிழ்ச்சி. ஆடையலங்காரங்களுடன் சிகரெட் புகைத்தபடி சஞ்சரிக்கும் இளைஞர்கள். துடிக்கும் கண்களுடன் வண்ணச் சேலைகளைக் காற்றில் அலையவிட்டுப் புன்னகை தூவும் முகங்களுடன் உலாவும் இளம் பெண்கள். காதல் நாடகங்களின் பின்னணிக் காட்சிபோல், மனதைக் குளிர்விக்கும் பூங்காவனத்தில் வானொலிப் பாடல்களும், இடையே மலர்களைத் தழுவி வாசனைகளுடன் கடந்து செல்லும் இளங் காற்றும் . . . ஆனால், நான் தளர்ந்து விழுந்துவிடுவேன் போலிருக்கிறது.

மணி ஏழு: ஒரு போலீஸ்காரர் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து இன்றும் என்னைக் கூட்டிக்கொண்டு போனார். கண்களைக் கூச வைக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கினெதிரில் என்னை உட்காரவைத்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது என் முகத்தில் தென்படும் பாவமாற்றங்களை நுட்பமாகக் கவனித்தவாறே கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு போலீஸ் டெபுடி கமிஷனர் அங்குமிங்குமாக உலாத்திக் கொண்டிருந்தார். அவரது பார்வை, எப்போதுமே என் முகத்தில்தான் படிந்திருந்தது. என்ன ஒரு பாவனை! எவ்வளவு கம்பீரம்! நான் ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டதுபோல். ஒரு மணிநேரக் கேள்விக்கணைகள். என்னுடைய நண்பர்கள் யார், யார்? எங்கிருந்தெல்லாம் எனக்குக் கடிதங்கள் வருகின்றன? அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைக்கும் ரகசிய இயக்கத்தின் உறுப்பினன்தானே நீ? புதிதாக இப்போது என்னென்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்? எல்லாவற்றிற்கும் உண்மையான பதிலைத்தான் சொல்ல வேண்டும். அப்புறம் . . .

"உங்களை இங்கிருந்து நாடு கடத்த என்னாலெ முடியுங்கிறது உங்களுக்குத் தெரியும்தானே?"

"தெரியும். நான் எந்த ஆதரவுமில்லாதவன். ஒரு சாதாரண போலீஸ்காரர் நெனைச்சாகூட என்னெ அரெஸ்ட் செய்து லாக்கப்பிலே போட்டு . . ."

மணி ஏழரை: நான் அறைக்குத் திரும்பிவந்து இருட்டில் அமர்ந்திருந்தேன். நன்றாக வேர்த்தது. இன்று என் பிறந்த நாள். நான் தங்குமிடத்தில் வெளிச்சமில்லை. மண்ணெண்ணெய்க்கு என்ன வழி? பசியடங்க ஏதாவது சாப்பிடவும் வேண்டும். ஆண்டவா, யார் தருவார்கள்? யாரிடமும் கடன் கேட்கவும் மனமில்லை. மாத்யூவிடம் கேட்டுப் பார்ப்போமா? வேண்டாம். அடுத்த கட்டடத்தில் வசிக்கும் கண்ணாடிபோட்ட அந்த மாணவனிடம் ஒரு ரூபாய் கேட்டுப் பார்ப்போம். அவன் ஒரு பெரிய வியாதிக்கு நிறையப் பணத்தை ஊசிக்கும் மருந்துக்குமென்று செலவு செய்துகொண்டிருந்தான். கடைசியில் எனது நாலணா மருந்தில் அது குணமாகிவிட்டது. அதற்கான பிரதிபலனாக என்னை ஒரு தடவை சினிமாப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போனான். அவனிடம் போய் ஒரு ரூபாய் கேட்டால் தராமலிருப்பானா?

மணி எட்டேமுக்கால்: வழியில் மாத்யூ எங்கே என்று விசாரித்தேன். அவன் சினிமா பார்க்கப் போயிருக்கிறானாம். பேச்சுச் சத்தமும் உரத்த சிரிப்பும் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த கட்டடத்தின் மேல்மாடிக்குச் சென்றேன். புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டின் வாசம். மேஜையின் மீது எரியும் சரராந்தலின் ஒளிபட்டுப் பிரகாசிக்கும் பற்கள், ரிஸ்ட் வாட்சுகள், தங்கப் பொத்தான்கள்.

இயலாமையின் பிரதிபிம்பமான நான் செயரில் அமர்ந்தேன். அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். அரசியல் விஷயங்கள், சினிமா, கல்லூரி மாணவிகளின் உடல் வர்ணனைகள், தினமும் இரண்டு முறை சேலை மாற்றும் மாணவிகளின் பெயர்கள் . . . இப்படிப் பல விஷயங்கள் . . . எல்லாவற்றிலும் நான் என் கருத்துகளைச் சொன்னேன். இடையே துண்டுக் காகிதத்தில் ஒரு குறிப்பெழுதினேன். 'ஒரு ரூபாய் வேண்டும். மிக அவசியமான ஒரு தேவை. இரண்டு மூன்று நாளில் திருப்பித் தந்துவிடுகிறேன்.'

அப்போது கண்ணாடிக்காரன் சிரித்தான்.

"என்னா, ஏதாவது சிறுகதைக்கு பிளாட் எழுதுறீங்களா?"

நான் சொன்னேன்.

"இல்லை."

அதைத் தொடர்ந்து விஷயம் சிறுகதை இலக்கியத்திற்கு வந்தது.

அழகாகயிருந்த அரும்பு மீசைக்காரன் குறைபட்டுக் கொண்டான்;

"நம்ம மொழியிலெ நல்ல சிறுகதைகள் ஒண்ணுமே இல்லை."

தாய்மொழியிலும் தாய்நாட்டிலும் நல்லதாக என்ன இருக்கப்போகிறது. நல்ல ஆண்களும் பெண்களும்கூடக் கடலுக்கப்பால்தான்.

நான் கேட்டேன்:

"யாருடைய சிறுகதைகளையெல்லாம் வாசிச்சிருக்கிறீங்க?"

"ரொம்ப ஒண்ணும் வாசிச்சதில்லெ. முதல் விஷயம், தாய்மொழியில் ஏதாவது வாசிக்கிறதுகூட ஒரு அந்தஸ்து குறைஞ்ச விஷயம்தான்."

நான் நமது சில சிறுகதை ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். இவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக்கூட இவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை.

நான் சொன்னேன்:

"ஆங்கிலத்துலெ மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மொழிச் சிறுகதைகளோடும் போட்டிபோடத் தகுந்த சிறுகதைகள் நம்ம மொழியில் இன்னைக்கு உண்டு. நீங்க ஏன் அதையெல்லாம் வாசிக்கிறதில்லெ?"

சிலவற்றை அவர்கள் வாசித்திருக் கிறார்களாம். அதில் பெருமளவும் வறுமையைப் பற்றிய கதைகள் தானாம். எதுக்கு அதையெல்லாம் எழுத வேண்டும்?

நான் எதுவும் பேசவில்லை.

"உங்களோட கதைகளையெல்லாம் வாசிச்சுப் பார்த்தா . . ." தங்கக் கண்ணாடிக்காரன் அறுதியாகச் சொன்னான்: "இந்த உலகத்துலெ என்னமோ ஒரு கோளாறு இருக்குறதெப்போலெ தோணும்."

உலகத்தில் என்ன கோளாறு? அப்பா அம்மாக்கள் கஷ்டப்பட்டு மாதந்தோறும் பணம் அனுப்பிவைக்கிறார்கள். அதைச் செலவுசெய்து கல்வி பயிலுகிறார்கள். சிகரெட், சாயா, காஃபி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்கூரா பவுடர், வாஷ்லின், ஸ்பிரே, விலையுயர்ந்த ஆடைகள், உயர்தர உணவு வகைகள், மது வகைகள், போதை மருந்து, சிபிலிஸ், கொனேரியா - அப்படிப்போகிறது, கோளாறு இல்லாமல். எதிர்கால யோக்கியர்கள், நாட்டை ஆள வேண்டியவர்கள், சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், அறிவுஜீவிகள், பண்பாட்டுக் காவலர்கள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் . . . சித்தாந்தவாதிகள் . . .! உலகத்தில் என்னதான் கோளாறு?

எனக்குப் பயங்கரமாக ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும்போல் தோன்றியது.

"இன்றைய உலகம் . . ." நான் தொடங்கினேன். அப்போது கீழேயிருந்து தளர்ந்து போன ஒரு சிறு குரல்:

"மிதியடி வேணுமா, மிதியடி?"

"கொண்டுவா" சிரித்தவாறே உத்தரவிட்டான், கண்ணாடிக்காரன். அப்படியாக விஷயம் மாறியது. மேலே ஏறிவந்தவர்கள் காலையில் பார்த்த அதே பிஞ்சு முகங்கள் தான். அவர்கள் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்கள். கண்களை வெறித்தபடி, முகங்கள் வாடித்தளர்ந்து, உதடுகள் வறண்டுபோயிருந்தன. அதில் பெரிய பையன் சொன்னான்:

"சார்மார்களுக்கு வேணும்னா ரெண்டரை அணா."

காலையில் மூன்று அணாவாக இருந்த மிதியடி.

"ரெண்டரை அணாவா?" தங்கக் கண்ணாடிக்காரன் மிதியடியைச் சந்தேகத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

"இது, கருஈட்டி இல்லியேடா?"

"கருஈட்டிதான் சார்."

"உங்க வீடு எங்கெ குழந்தைகளே?" என் கேள்விக்குப் பெரியவன் பதில் சொன்னான்.

"இங்கிருந்து மூணு மைல் தூரத்துலே உள்ள ஒரு இடம்."

"ரெண்டணா." தங்கக் கண்ணாடிக்காரன் கேட்டான்.

"ரெண்டே காலணா குடுங்க சார்."

"வேண்டாம்."

"ஓ . . ."

அவர்கள் வருத்தத்துடன் படியிறங்கினார்கள். தங்கக் கண்ணாடிக்காரன் திரும்ப அழைத்தான்.

"கொண்டு வாடா."

அவர்கள் திரும்பவும் வந்தார்கள். நல்லதாகப் பார்த்து ஒரு ஜோடி மிதியடியைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஒரு பத்து ருபாய் நோட்டை நீட்டினான். அந்தக் குழந்தைகளிடம் ஒரு நயா பைசாகூட இல்லை. அவர்கள் இதுவரை எதுவுமே விற்கவில்லை. நேரம் விடிந்தது முதல் அலைந்து திரிகிறார்கள். மூன்று மைல் தொலைவில், ஏதோ ஒரு குடிசையில், அடுப்பில் சூடாறிக் கிடக்கும் தண்ணீருடன் தமது குழந்தைகள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோர்களின் காட்சி என் மனத்தில் ஓடியது.

தங்கக் கண்ணாடிக்காரன் எங்கிருந்தோ தேடியெடுத்து இரண்டணா கொடுத்தான்.

"காலணா, சார்?"

"இவ்வளவுதான் இருக்கு. இல்லேண்ணா இன்னா மிதியடி."

குழந்தைகள் பரஸ்பரம் பார்த்தபின் துட்டை வாங்கிவிட்டுப் பேசாமல் இறங்கிப் போனார்கள். மின்சாரக் கம்பத்தின் கீழ், ரோட்டில் அவர்கள் போவதைப் பார்த்துவிட்டு வந்த தங்கக் கண்ணாடிக்காரன் சிரித்தான்.

"நான் ஒரு வேலை காட்டியிருக்கேன். அதுலெ ஒண்ணு செல்லாத ஒரணாத்துட்டும்."

"ஹ . . . ஹ . . . ஹா . . ." அனைவரும் சிரித்தார்கள். நான் நினைத்துக்கொண்டேன். மாணவர்கள் அல்லவா? சொல்வதற்கு என்ன இருக்கிறது? வறுமையும் கஷ்டங்களும் என்னவென்று இன்னும் அறியவில்லை. நான் எழுதிவைத்திருந்த குறிப்பை மற்றவர்கள் பார்க்காமல் தங்கக் கண்ணாடிக்காரனிடம் கொடுத்தேன். அவன் அதை வாசிக்கும்போது என் கற்பனை ஓட்டலில் பதிந்திருந்தது. ஆவி பறக்கும் சோற்றின் எதிரில் நான் அமர்ந்திருப்பது போன்றெல்லாம். ஆனால், குறிப்பை வாசித்துப் பார்த்துவிட்டுத் தங்கக் கண்ணாடிக்காரன் அனைவரும் கேட்கும்படியாகச் சொன்னான்;

"சாரி, சேஞ்ச் ஒண்ணுமில்லெ."

இதைக் கேட்டதுமே என் உடலிலிருந்து சூடான ஆவி பரந்தது. வேர்வையைத் துடைத்துவிட்டு நான் கீழே இறங்கி அறைக்கு நடந்தேன்.

மணி ஒன்பது: நான் பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். ஆனால், இமைகள் மூட மறுத்தன. தலை, பாரமாக இருந்தது. இருந்தாலும் படுத்தே கிடந்தேன். உலகில் வாழும் கதியற்றவர்களைப் பற்றி நான் நினைத்தேனா. . . எங்கெங்கெல்லாம் எத்தனையெத்தனை கோடி ஆண் பெண்கள் இந்த அழகான பூலோகத்தில் பட்டினி கிடக்கிறார்கள. அதில் நானும் ஒருவன். எனக்கு மட்டும் என்ன விசேஷ அம்சம்? நானும் ஒரு ஏழை அவ்வளவுதான். இப்படி நினைத்துக் கொண்டே படுத்திருக்கும்போது - எனது வாயில் நீரூறியது. மாத்யூவின் சமையலறையில் கடுகு தாளிக்கும் சத்தம் . . . வெந்த சாதத்தின் வாசமும்.

மணி ஒன்பதரை: நான் மெதுவாக வெளியில் வந்தேன். இதயம் வெடித்துவிடுவதுபோல் . . . யாராவது பார்த்துவிட்டால். . . ? எனக்கு வேர்த்துக் கொட்டியது. . . வந்து முற்றத்தில் காத்து நின்றேன். அதிர்ஷ்டம், முதியவர் விளக்கையெடுத்துக்கொண்டு குடத்துடன் வெளியில் வந்து, சமையலறைக் கதவை மெதுவாக அடைத்துவிட்டுக் குழாயடிக்குச் சென்றார். குறைந்தது பத்து நிமிடமாவது பிடிக்கும், திரும்பிவர. சத்தமில்லாமல் படபடக்கும் இதயத்துடன் மெதுவாகக் கதவைத் திறந்து சமையலறைக்குள் நுழைந்தேன்.

மணி பத்து: நிறைந்த வயிறுமாகத் திருப்தியுடன் வேர்த்துக் குளித்து வெளியே வந்தேன். முதியவர் திரும்பியதும் நான் குழாயடிக்குச் சென்று தண்ணீர் குடித்து, கைகால் முகம் அலம்பிவிட்டுத் திரும்ப என் அறைக்குள் வந்து ஒரு பீடியைப் பற்றவைத்து இழுத்தேன். முழுதிருப்தி. சுகமாக இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு மனப்பதற்றம். உடல் சோர்வுமிருந்தது. படுத்துக் கொண்டேன். தூக்கம் வருவதற்கு முன் சிறிது யோசனையிலாழ்ந்தேன். பெரியவருக்குத் தெரிந்திருக்குமோ? அப்படியென்றால் மாத்யூவும் அறிந்துவிடுவான். மற்ற மாணவர்களும் குமாஸ்தாக்களும் அறிந்துகொள்வார்கள். அவமானமாகப் போய்விடும். எதுவானாலும் சரி, வருவது வரட்டும். பிறந்த நாளும் அதுவுமாக, சுகமாகத் தூங்கலாம். எல்லோருடையவும் எல்லாப் பிறந்த நாட்களும். . . மனிதன் . . . பாவப்பட்ட உயிர். நான் அப்படியே தூக்கத்திலாழ்ந்துகொண்டிருந்தேன். . . அப்போது என் அறைக்குப் பக்கத்தில் யாரோ வருகிறார்கள்.

"ஹலோ மிஸ்டர்." மாத்யூவின் குரல். எனக்கு வேர்க்கத் தொடங்கியது. தூக்கம் கடல் கடந்தது. சாப்பிட்டதனைத்தும் ஜீரணமாயின. எனக்குப் புரிந்துவிட்டது. மாத்யூ அறிந்துவிட்டான். பெரியவர் கண்டுபிடித்துவிட்டார் போலிருக்கிறது. நான் கதவைத் திறந்தேன். இருளின் இதயத்திலிருந்து வருவதுபோல் சக்திவாய்ந்த வெளிச்சத்தின் நீள ஈட்டிபோல் ஒரு டார்ச் வெளிச்சம். நான் அதனுள். மாத்யூ என்ன கேட்கப் போகிறான்? பதற்றத்தால் என் இதயம் துண்டு துண்டுகளாக உடைந்து சிதறிவிடும் போலிருந்தது.

மாத்யூ சொன்னான்,

"ஐ ஸே . . சினிமாவுக்குப்போயிருந்தோம். விக்டர் ஹ்யூகோவின் 'பாவங்கள்.' நீங்க பார்க்க வேண்டிய ஒரு ஃபர்ஸ்ட்கிளாஸ் ஃபிலிம்."

"ஓஹோ. . ."

"நீங்க சாப்டீங்களா? எனக்குப் பசிக்கலெ. சோறு வேஸ்டாயிடும். வந்து சாப்பிடுங்களேன். வர்ற வழியிலெ நாங்க 'மாடர்ன் ஹோட்டல்'லெ ஏறினோம்."

"தாங்க்ஸ். நான் சாப்பிட்டாச்சு."

"அப்படியா? சரி தூங்குங்க, குட்நைட்."

"எஸ். குட் நை . . ."

(1945)

******

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்