May 31, 2010

கற்பக விருட்சம்-கு.அழகிரிசாமி

 

மாலை ஐந்து மணி அடிப்பதற்கு முன்பே சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து உட்கார்ந்து விட்டான் ஸ்ரீனிவாசன். கையில் ஒரு காசுகூடக் கிடையாது. ku azhakirisamiஇருந்ததெல்லாம் ஒரு மலிவு விலைப் பவுண்டன்பேனா, ஒரு வேஷ்டி, ஒரு சட்டை, சட்டையில் இரண்டு பிளாஷ்டிக் பித்தான்கள், அன்று மாலைப் பதிப்பாக வெளிவந்த  ஒரு தமிழ்த் தினசரி, சந்தேகத் தெளிவுக்காக வாங்கிய ஓர் ஆங்கில தினசரிப் பத்திரிக்கை--இவ்வளவுதான். பிளாட்பாரத்தின் கோடியில் கிடந்த ஒரு பெஞ்சில் தனியாளாக ஒரு மணி நேரத்துக்கு மேலேயே உட்கார்ந்துகொண்டிருந்து விட்டான். இவனுக்கு முன்னும் பின்னும் இரண்டொரு பிரயாணிகளும், ஏகதேசமாக ஒரு ரயில்வே ஊழியரும், ஒரே ஒரு தடவை மட்டும் முதுகுக்குப் பின்புறமாக ஒரு போலீஸ்காரரும் நடந்து சென்றார்கள். அடிக்கடி குறித்த காலத்தில் மின்சார வண்டிகள் வருவதும் புறப்படுவதுமாக இருந்தன.

ஸ்ரீனிவாசன் பெஞ்சில் சாய்ந்துகொண்டு யாரையும் எதையும் பார்க்காமல், வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். விதிவிலக்காக மின்சார வண்டிகளை மட்டும் இரண்டொரு தடவைகள் பார்த்துவிட்டு முகத்தை மேல் நோக்கித் திருப்பிக்கொண்டான். வானத்துக்கும் இவனுக்கும் இடையே வெகுநேரம் வரைக்கும் ஒரு துளி கண்ணீர் திரை போட்டு மறைத்துக் கொண்டிருந்தது. கண்ணுக்குத் தெரியும் வானக் காட்சி மனசைப் போலவே கலங்கிப் போயிருந்தது. துயரத்தின் போது, வெளியிலும் தெளிவில்லை; உள்ளேயும் தெளிவில்லை. தெளிந்து, தீர்மானத்துடன், துணிவுடன் வந்த ஸ்ரீனிவாசனைத் துயரம் திடார் திடார் என்று பொங்கி எழுந்து கலக்கி அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

பயப்பட வேண்டியதற்கே பயப்படாமல் வந்தாகிவிட்டது. அப்புறம் வேறு எதற்குப் பயப்படுவதிலும் அர்த்தமில்லை. இதனால்தான் டிக்கெட் இல்லாமலும் காசு இல்லாமலும் ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்கு உள்ளே வேகமாக வந்துவிட்டான். வீட்டுக்கு வெளியே உட்காருவதற்கு அது ஒன்றுதான் அவனுக்கு இடமாகப் பட்டது. வந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பெஞ்சில் அமர்ந்தான். முன்பின் தெரியாத பிரயாணிகளைத் தவிர வேறு யாரும் இல்லை. இது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

மாலை ஐந்து மணி அடித்தது. இருட்டுவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் ஆகும். அது வரை அங்கேயே உட்கார்ந்திருப்பது என்ற முடிவு; உட்கார்ந்து கொண்டிருந்தான்.

வேகமாக ரயில் வண்டிகள் வந்து போயின. ஓட்டமும் நடையுமாக வந்து வண்டிகளில் தொற்றிக்கொண்டிருந்தார்கள் பிரயாணிகள். சூழ்நிலை முழுதுமே ஓட்டமும் பரபரப்புமாக இருந்தது. ஆனால் ஓட்டமின்றி சாவதானமாக வேலை செய்துகொண்டிருந்தது கடிகாரம் ஒன்றுதான். அரை மணி கழிந்திருக்கும் என்று ஏறிட்டுப் பார்த்தால், ஐந்து நிமிஷம்கூட ஆகியிராது. இது அவனுடைய துன்பத்தைப் பெரிதாக்கிக் கொண்டிருந்தது. எத்தனைப் பேரைப் பற்றிய நினைவுகள், எத்தனை வருஷத்துச் செய்திகள், எத்தனைவித அனுபவங்கள்-- எல்லாவற்றையும் மாறி மாறி ஒன்றுக்குப் பல தடவையாக நினைத்துப் பார்த்து, பெருமூச்சு விட்டு, சில சமயங்களில் தன்னுணர்வையும் இழந்து, கடைசியில் திரும்பிப் பார்த்தாலும், கடிகாரம் ஒரு சில நிமிஷங்களுக்கு மேல் தாண்டியிராது.

ஒரு விஷயத்தில் தவறு செய்து விட்டோம் என்றே ஸ்ரீனிவாசனுக்குத் தோன்றியது. தெருக்களில் சுற்றி அலைந்திருந்தால், நேரம் வேகமாகக் கழிந்திருக்கும். ஒரு மணி நேரம் கால் போன போக்கில் திரிந்துவிட்டு அப்புறம் ஸ்டேஷனுக்கு வந்திருக்கலாம். எடுத்த எடுப்பிலேயே இங்கே வந்து உட்கார்ந்து, காலத்தை ஓட்ட முடியாமல் அவதிப்படுவதற்குத் தன்னுடைய முட்டாள்தனமே காரணம் என்று நினைத்து வருந்தினான். இனி என்ன செய்வது ? என்ன செய்ய முடியும் ? டிக்கெட் இல்லாமல் ஸ்டேஷனை விட்டு வெளியே போகமுடியாது. எனவே, தானே புகுந்த சிறைக் கூடத்தில், இருக்கவேண்டிய காலத்தை இருந்தே தீர்ப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.

இப்படிச் சிரமப்பட்டுத் திக்குமுக்காடிக் கொண்டிருந்த ஸ்ரீனிவாசனைத் திடாரென்று ஒருவன் தன் வாய்ச்சொல்லால் தட்டி எழுப்பினான். அவன் ஸ்டேஷனைச் சேர்ந்த ஒரு சிப்பந்தி. அவன் கவனித்த வரையில், மூன்று வண்டிகள் வந்து போயும்கூட ஸ்ரீனிவாசன் ஒரு வண்டியிலும் ஏறாமல் உட்கார்ந்திருந்ததால் அருகில் வந்தான். 'யாரப்பா ? ஏன் இங்கே உட்கார்ந்திருக்கிறாய் ? ' என்று கேட்டான். உடனே, 'எங்கே போகவேண்டும் ? ' என்றும் கேட்டான்.

ஸ்ரீனிவாசனுக்கு உலகப் பிரக்ஞை வந்தது. ஒரு பதிலும் சொல்லாமல் எழுந்து நின்றான்.

'எங்கே போகவேண்டும் ? '-- திரும்பவும் கேட்டான் ரயில்வே சிப்பந்தி.

ஸ்ரீனிவாசன் தன்னைச் சமாளித்துக் கொண்டு, 'எழும்பூருக்கு ' என்றான்.

'சரியாய்ப் போச்சு, போ ' எழும்பூருக்கு அந்தப் பக்கமாகப் போய் நில். இங்கே தாம்பரம் வண்டிதான் நிற்கும் ' என்று சொல்லி ஸ்ரீனிவாசனை அவன் கிளப்பி விட்டான்.

'நல்ல வேளை ' என்று ஸ்ரீனிவாசன் எழுந்து எதிர்ப்பக்கப் பிளாட்பாரத்தை நோக்கி நடந்தான். சிப்பந்தி தன் வேலையைக் க்வனிக்க போய்விடவே, இவன் அந்தப் பிளாட்பாரத்தில் ஒரு மூலையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தான். அப்பொழுதிலிருந்துதான் அவனுக்குப் பய உணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. அந்த அளவுக்குத் துயர நினைவுகள் குறையலாயின. சில சமயங்களில் பயம் தாழ்ந்து, துயரம் பொங்கும். இந்த இரண்டும் இரண்டு அலைகளாக அவன் மனத்தில் எழுவதும் விழுவதுமாக இருந்தன.

ஒவ்வோர் ஆளைப் பார்க்கும்போதும் ஒரு சந்தேகம், ஒரு பயம் --- அவன் ரயில்வே சிப்பந்தியாக இருக்கலாமோ என்று. அவன் பார்த்துவிட்டால், இவனை முழுக்க முழுக்கச் சந்தேகித்து, 'டிக்கெட் இருக்கிறதா ? ' என்று கேட்பான். 'இல்லை ' என்று பதில் சொன்னால் மறுகணமே ஸ்டேஷன் மாஸ்டர் முன்னிலையில் போய் நிற்கவேண்டி வரும். அப்புறம், தன் மீது குற்றம் சாட்டப்படும். அதைத் தொடர்ந்து வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு.... அதன்பின் என்ன நடந்தால் என்ன ? வீட்டுக்குத் திரும்பி விட்டால் அப்பாவைப் பார்க்கவேண்டும்; அம்மாவைப் பார்க்கவேண்டும்; தங்கையைப் பார்க்க வேண்டும்; மூவருடைய கண்ணீரையும், கசப்பையும், சிதைந்த கனவையும் பார்க்க வேண்டும். ஒரு மனிதனுக்கு இத்தனையுமே அதிகம். ஆனால் ஸ்ரீனிவாசனோ இவற்றையும் தாண்டி, சுகன்யாவையும் வேறு பார்க்கவேண்டியிருந்தது. அவளைப் பார்ப்பது என்றால் தன் அவமானத்தையே கண்ணெதிரே பார்ப்பது என்றுதான் அர்த்தம். 'உனக்கு இனி உய்வில்லை, வாழ்க்கையில்லை ' என்று சொல்லாமல் சொல்லும் ஒரு கொடிய விதியைக் கண்ணெதிரே காண்பதற்கும் அதற்கும் வித்தியாசம் இல்லை. இவற்றைப் பார்ப்பதைவிட, மரணத்தைப் பார்ப்பது எவ்வளவு சுலபம் ' எவ்வளவு இதமானது '--- இப்படித் தோன்றிவிட்டது அவனுக்கு. இந்த யோசனையுடனேயே ஸ்டேஷனை நோக்கிப் பத்திரிக்கையும் கையுமாக வந்தான். பத்திரிகையில் அன்று மாலை எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன. தமிழ் பத்திரிக்கையிலும் அவனுடைய நம்பர் இல்லை; ஆங்கிலப் பத்திரிக்கையிலும் இல்லை.

* * * *

கிருஷ்ணசாமி ஐயங்கார் தம் மகனுடைய எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை ஒரு கற்பக விருட்சமாகவே கருதியிருந்தார். அவன் படித்துப் பாஸ் பண்ணிவிட்டால், கற்பக விருட்சம் விரும்பியதையெல்லாம் கொடுக்காவிட்டாலும் ஓய்ந்து உட்காருவதற்கு நிழலாவது கொடுக்கும் என்பது அவர் நம்பிக்கை. வாழ்நாளெல்லாம் பட்ட துன்பங்களுக்கு ஒரு முடிவும் உண்டு, தமக்கு ஒரு விடிவுகாலமும் உண்டு என்று அவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, நிகழ்காலத்தைத் தள்ளிக்கொண்டு வந்தார்.

அவருடைய குடும்பம் அப்படி ஒன்றும் பெரியதல்ல. மனைவி, மகன், மகள், அப்புறம் அவர்--இந்த நான்கு பேர்தான். ஏகாங்கியேயானாலும் போதிய வருமானமில்லாவிட்டால், தரித்திரத்திலிருந்து தப்புவது எப்படி ? அவருக்குத் தொழில், பெருமாள் கோவில் பூஜை செய்வது. கோவிலோ அவரைப் போன்றே ஏழ்மை நிலையில் இருந்தது. அந்தப் பகுதியில் வசித்து வந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியாருக்கு அந்தப் பெருமாள், குலதெய்வம். பூஜித்துக் கொண்டாடவேண்டியவர்களில் பெரும்பாலோர் வசதியான நிலையில் இல்லாததால் தெய்வத்துக்குச் சிற்ப்பும் பூசனையும் இல்லாது போய்விட்டது. பெரும்பாலும் இரண்டொரு பணக்கார வியாபாரிகளின் தயவில்தான் கோவிலும், கோவிலை நம்பிய கிருஷ்ணசாமி ஐய்யங்கார் குடும்பமும் நிலைபெற்று வந்தன. மாதம் ஐம்பது அறுபதுக்குள்ளாகவே வருமானம். இதில் வாடகை, பள்ளிச் செலவு போக மீதி முப்பது முப்பத்தைந்தை வைத்துத்தான் உண்ணவும் உடுத்தவும் வேண்டும். இப்படி வருஷக் கணக்கில் ஜீவனம். பையன் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்து விட்டு வரட்டும், ஏதாவது ஒரு வழி செய்யலாம் என்று கோவில் பக்தர்களில் ஒருவரான பணக்கார வியாபாரி ஒருவர் ஐய்யங்காரிடம் உறுதியளித்திருந்தார் மிஞ்சிப் போனால் தம் கடையிலேயே தற்காலிகமாக வேலைக்கு வைத்துக்கொண்டு, அவன் டைப்பும் சுருக்கெழுத்தும் படித்தபின் வேறு நல்ல வேலையில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாக அவர் சொல்லியிருந்தார். எனவே, முழு நம்பிக்கையோடு காத்திருந்தார் ஐய்யங்கார். மகனுடைய படிப்பின் மீது தம் எதிர்காலச் சுமையைத் தூக்கி வைத்துவிடலாம் என்றே அவர் கோட்டை கட்டினார்.

ஸ்ரீனிவாசனின் தாயார் தன் பங்குக்கும் சுமை ஏற்றத் தவறவில்லை. மகனுடைய படிப்பை அஸ்திவாரமாக கொண்டு அவள் கட்டிய மனக்கோட்டைகள் பல. அவன் உத்தியோகம் பார்த்துச் சம்பாதிப்பதைச் சேர்த்து வைத்து மகளுக்குக் கல்யாணம் பண்ணிவிடவேண்டும்; அப்புறம், இரண்டு அறைகள் உள்ள ஒரு வீட்டைப் பார்த்து வாடகைக்குப் பிடிக்க வேண்டும்; மகனுக்கும் கல்யாணம் ஆகவேண்டும்; பேரன் பேத்தி எடுத்துப் பார்க்கவேண்டும்.....

இப்படிப் பெற்றோர் இருவருமே அந்தக் கற்பக விருட்சத்தின் அடியில் போய்ப் புகலிடம் தேடக் காத்திருந்தனர். இது ஸ்ரீனிவாசனுக்குத் தெரியும். தன்னுள்ளே தான் வளர்க்கும் கற்பகக் கன்று வாடிவிடக் கூடாது என்று அதற்கு அல்லும் பகலும் உரமிட்டு வளர்க்கும் முறையில், அரும்பாடுபட்டுப் படித்தான். செடியை தண்ணீர் விட்டோ, கண்ணீர் விட்டோ, ரத்தத்தைச் சிந்தியோகூட வளர்த்துவிடலாம். ஆனால் செடி முளை விடுவதற்கு ஒரு சாண் அகலக் கொல்லையாவது வேண்டாமா ?

ஸ்ரீனிவாசனுக்கு நிம்மதியாக இருந்து படிக்க வீட்டில் இடமில்லை. ஒட்டுக் குடித்தனமாக இருக்கும் ஒரே அறைதான் வீடு. இதனால் புத்தகமும் கையுமாகப் பெருமாள் கோவிலுக்கே போய்விடுவான். பள்ளிக்கூடம் போகும் வரை படிப்பான். அப்புறம் பள்ளி முடிந்து வந்து இருட்டும் வரையில் அங்கே உட்கார்ந்து படிப்பான். விடுமுறை நாட்களில் பகல் முழுதும் அங்கேதான். கோவிலில் சில சமயங்களில் வழிப்போக்கர்கள் சிலர் தூங்குவார்கள்; பிச்சைக்காரர்கள் குறட்டை விடுவார்கள்; குழந்தைகள் ஓடி விளையாடுவார்கள்; வீண் பேச்சுப் பேசிக்கொண்டிருப்பார்கள் சில ஆசாமிகள்......இந்தச் சூழ்நிலையில் ஸ்ரீனிவாசன் கற்பகக் கன்றை வளர்த்து வந்தான்.

ஆனால் ரத்தத்தை விட்டு வளர்த்த செடியும் பரிதாபகரமாகக் கருகிவிட்டது. இதற்கு யாரை நொந்துகொள்வது ? உலகத்தில் காரணம் தெரியாத துன்பங்களுக்குப் பஞ்சமா என்ன ? தேனினும் இனிய குரல் படைத்திருந்த எவனோ ஒரு பாடகனுக்குத் தொண்டையில் புற்றுநோய் வந்ததாமே, அதற்கு என்ன காரணம் ?

பரீட்சையில் தேறவில்லை என்பது தெரிந்ததும் ஸ்ரீனிவாசனுக்கு இந்த உலகமே காலடியிலிருந்து நழுவிவிட்டது. கடையில் பத்திரிக்கையை வாங்கிப் படித்தவன், ஆவலோடு காத்திருக்கும் பெற்றோர்களை நோக்கி வராமல் ஸ்டேஷனைப் பார்த்து வெறி கொண்டவன் போல் நடந்தான். அப்பொழுது பெற்றோரின் நினைவும், கல்யாணத்துக்குக் காத்திருக்கும் தங்கையின் நினைவும் வந்திருந்தால் வெறும் வேதனையாக மட்டும் இருந்திருக்கும். ஆனால் சுகன்யாவின் முகம் மனக்கண்முன் வந்து நின்று விடவே, வேதனையோடு அவமானமும் கலந்தது. தன்னைத் தானே வெறுத்தான்.

தன்னை ஒரு மனிதப் பிறவி என்று மதிக்கவே அவனால் முடியவில்லை. தான் இந்த உலகத்துக்கு ஒரு களங்கமாக, அசிங்கமாக இருப்பது போலவே அவனுக்குத் தோன்றியது. இந்தக் களங்கத்தைப் போக்கினால்தான் தன் அருவருப்பு உணர்ச்சி நீங்கும். சேற்றிலே நிற்பது போல் அவன் உடம்பில் உயிர் நின்று தத்தளித்தது. சீக்கிரத்தில் இந்தச் சாக்கடையை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று வேகமாக ஸ்டேஷனை நோக்கி வந்தான்.

இருட்டும் வரையில் அங்கே உட்கார்ந்திருக்க வேண்டும்; இருட்டிய பிறகு எழுந்து சிறிது தூரம் நடக்க வேண்டும்; அப்புறம் ஓடும் ரயில் முன்னால் விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ள வேண்டும். இதுதான் அவன் செய்திருந்த முடிவு.

* * * * * * * * * * *

நேரம் ஆக ஆக ஸ்ரீனிவாசன் பெற்றோரையும், அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும், பரிட்சை தேறாமல் போனதையும்கூட மறந்துவிட்டான். அந்த நினைவுகளுடன் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளெல்லாம் கோரக்கூத்தாடிவிட்டு ஓய்ந்து விட்டன். மிஞ்சி நின்ற நினைவு, அனைத்தையும்விடச் சக்தி வாய்ந்ததாக இருந்த நினைவு சுகன்யாவைப் பற்றிய நினைவுதான்.

சுகன்யா பரிட்சையில் தேறிவிட்டாள். அவளுடைய நம்பர் பத்திரிக்கையில் இருக்கிறது; இரண்டு பத்திரிக்கைகளிலுமே இருக்கிறது. இதை நினைக்கும்போது அவனுக்கு அவமானமாக இருந்த நிலைமாறி, அவள்மேல் கோபம் கொள்ளும் ஒரு விசித்திரமான நிலையும் ஏற்பட்டது. எதற்காகக் கோபம் ? எதற்காகவுமே கோபம்தான். அவள் ஏன் பரிட்சையில் தேறினாள் ? ஏன் ஒரு பெண்ணாகப் பிறந்தாள் ? எதற்காக எதிர்வீட்டுக்கு அப்பா அம்மாவோடு குடியிருக்க வந்தாள் ? பரிட்சை நெருங்கும் சமயத்தில் ஏன் அடிக்கடி தன்னிடம் வந்து, தெரியாததையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டாள் ? அவள் செய்த காரியங்கள் அனைத்துமே அவனுடைய கோபத்துக்குக் காரணங்களாகிவிட்டன.

சுகன்யா மீது இப்படிக் கோபமும் ஆத்திரமும் பிறக்கும் ஒரு கட்டம் வரும் என்று அவன் எதிர்பார்த்ததே இல்லை. அதனால் இப்போது கோபம் வருவதைக் கண்டு, தனக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டுவிட்டதோ என்றுகூட ஒரு கணம் பயந்தான். உள்ளமும் உடம்பும் கொதித்தன. தன் நெருப்பு தன்னையே சுட்டது. வெப்புத் தாங்கமுடியாமல், 'சுகன்யா ' ' என்று வாய்விட்டே சொல்லி அனல் வீசும் சுவாசத்தை வெளியே விட்டான். 'சுகன்யா ' எதற்காக நீ எதிர்வீட்டுக்கு வந்தாய் ? ஏன் என்னிடம் வந்து பாடம் படித்தாய் ? எதற்காக நீ பரிட்சையில் பாஸ் பண்ணினாய் ? '

* * *

ஸ்ரீனிவாசன் குடியிருந்த வீட்டுக்கு எதிர்வீடு ஒரு வருஷத்துக்கு முன் காலியாயிற்று. யாரோ ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் மனைவியோடும் மகளோடும் அங்கே குடிவந்தார். மகள் பள்ளிக்கூடம் போகிறவளாக இருந்தாள். எந்தப் பள்ளிக்கூடம், என்ன வகுப்பு என்பவற்றையெல்லாம் சிரத்தை எடுத்துக் கண்டு பிடித்துவிட்டான் ஸ்ரீனிவாசன். தன்னைப் போலவே எஸ்.எஸ்.எல்.சி. படிப்பவள். வயதிலும்கூடத் தனக்குச் சமதையாக இருக்கக்கூடும் என்று நினைத்தான். முதலில் அவனுக்கு இது ஆச்சரியமாகக்கூட இருந்தது. ஏனென்றால் அவன் படிக்கும் வகுப்பில் அவன்தான் அசாதாரணமாக மூத்தவன். இருபது வயதுப் பையன். தனக்கு அடுத்த வயது மாணவன், நான்கு வயது குறைந்தவனாகவே இருந்தான். இடையிடையே பணக்கஷ்டம் வந்து, அந்தந்த வருஷத்துப் படிப்பைப் பாழடித்தது. ஒரு தடவை நோய்வாய்ப்பட்டு மாதக்கணக்கில் கிடந்தான். இத்தனை தடங்கல்களையும் தாண்டவேண்டிய நிர்பந்தத்தினால், இந்த வயதில் இந்த வகுப்புப் படிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் சுகன்யாவுக்கு என்ன தடங்கல்கள் ஏற்பட்டிருக்கமுடியும் ? வசதியான குடும்பத்தில் பிறந்து ஏகபுத்திரியாக இருக்கும் அவள், இப்போது கல்லூரியில் அல்லவா படிக்கவேண்டும் ? இந்தத் திகைப்பு அவனுக்குப் பல மாதங்கள் வரை நீங்கவில்லை.

சுகன்யா அழகாக இருந்தாள். நிமிர்ந்து பார்த்தாலும் யாரையும் பார்க்காத ஒரு பார்வை. முகத்தில் சிரிப்புக் களையை ஒருநாள்கூட அவன் பார்த்தவனல்ல. எதிர்ப்பட்ட சமயங்களிலெல்லாம் பார்க்காதவள்போல் தன்னைக் கடந்து செல்லுவாள். மிகவும் கர்வம் பிடித்தவளாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். இது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவள் அழகு பிடித்திருந்தது; அவள் எதிர்வீட்டில் குடியிருந்தது பிடித்திருந்தது; ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அவளைப் பார்ப்பதும் அவனுக்கு பிடித்திருந்தது.

பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் சுகன்யா வீட்டுக்கு ஒரு டியூஷன் வாத்தியார் வர ஆரம்பித்தார். எந்நேரமும் அவள் புத்தகமும் கையுமாக இருந்தபடியால் முன்போல் தினந்தவறாமல் அவளுடைய தரிசனம் கிடைக்கவில்லை. கண்ணாரக் கண்டால், அதைப் பற்றி எண்ணி இன்ப உணர்ச்சி பெறுவது சிறிது நேரமே நீடிக்கும்; காணாத தினத்திலோ. ஏமாற்ற உணர்ச்சி நாளெல்லாம் நீடித்திருக்கும். இதற்காக அவன் படிப்பில் அசிரத்தையாக இருந்துவிடவில்லை. பெருமாள் கோவிலில் உட்கார்ந்து மனப்பாடமாக இருந்த பாடங்களையும்கூடத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டுதான் இருந்தான்.

ஒருநாள் மாலையில் நன்றாக இருட்டியதும் புத்தகக் கட்டுடன் வீட்டுக்குத் திரும்பினான் ஸ்ரீனிவாசன். நல்ல பசி. காலையில் சாப்பிட்டது. மத்தியானம் வெறும் காபிதான். வீட்டுக்கு வந்து பார்த்தால் சாப்பாடு இன்னும் தயாராகவில்லை. சோர்ந்து துவண்டு ஒரு மூலையில் படுத்துவிட்டான். சிறிது நேரத்துக்கெல்லாம் எதிர்பாராவிதமாக வீட்டுக்குள்ளே வந்தாள் சுகன்யா.

ஸ்ரீனிவாசனின் தாயார் புரியாமல் விழித்துப் பார்த்தாள். அவனுக்கோ ஒன்றுமே விளங்கவில்லை. சுகன்யா தனது வீட்டுக்கு வருவதா ?

வீட்டுக்குமட்டும் அவள் வரவில்லை; அவன் அருகிலும் வந்தாள். அவள் கையில் ஆங்கிலப் புத்தகம் இருந்தது. அவன் எழுந்தான். குறிப்பிட்ட ஒரு பக்கத்தை திறந்து அவனிடம் காட்டிச் சில சந்தேகங்களைக் கேட்டாள். அவை மிகமிக எளிமையான பகுதிகள், அவனைப் பொறுத்த வரையிலும். சந்தேகங்களைப் போக்கினான்--- நின்றுக்கொண்டேதான். அப்பொழுது அவள் கேட்ட இரண்டொரு கேள்விகள், அவளுடைய கல்வித் தரத்தை எடுத்துக்காட்டுவனபோல் இருந்தன. ஆனால், அதைப்பற்றி அவன் அப்போது நினைக்கவில்லை. அவள் வந்ததும், நின்றதும் சில வார்த்தைகள் பேசிவிட்டுப் போனதும்தான் அவன் மனசில் பதிந்திருந்தன. அவள் தன்னைத் தேடி வந்துவிட்டாள்; தன்னிடம் உதவி கோரி வந்துவிட்டாள். தனக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இந்தக் காரணங்களெல்லாம் சேர்ந்து, சிறிது நேரத்துக்கு அவன் பசியைக்கூட மறக்கடித்துவிட்டன். தாங்கமுடியாத சந்தோஷம்.

இரவு சாப்பிட்டுப் படுத்த பிறகு, அவள் தனக்கு 'நன்றி ' சொல்லாமலே போனது ஞாபகம் வந்தது. சர்வ சாதாரணமான எளிய பகுதிகளைக்கூடப் புரிந்துகொள்ளாத மோசமான கல்வித்தரம் நினைவுக்கு வந்தது. நிச்சயம், பல வகுப்புக்களில் பெயிலாகியிருப்பாள் என்று நினைத்தான். அவள் தனக்குச் சமமான பிராயத்தில் இந்த வகுப்புப் படிப்பதன் காரணம் இப்போது புலனாகிவிட்டது. அவனுக்கு.

அழகாக இருந்தாலும் புத்திக்கூர்மை இல்லை. அத்துடன் நன்றி உணர்ச்சியும் இல்லை. எது இல்லாமல் போனால்தான் என்ன ? அழகு இருந்தது; தன்னைத் தேடி வருவதில் இன்பானுபவம் இருந்தது. அப்புறம், இல்லாத எதைப்பற்றித்தான் கவலை ?

ஸ்ரீனிவாசன் விழுந்து விழுந்து படிப்பதற்குக் குடும்பத்தின் எதிர்கால ஷேமம் மட்டும் காரணமல்ல; சுகன்யாவின் கண்முன் தான் ஓர் அறிவாளியாக, வீரனாக விளங்க வேண்டுமென்ற வேட்கையும் உண்டாகிவிட்டது.

அந்தப் பெண் இரண்டு வாரங்களுக்குப்பின் மற்றொரு முறையும் வந்தாள். பரீட்சை தொடங்குவதற்கு முன் மேலும் இரண்டு தடவைகள் அவள் வந்துவிட்டாள்.

ஒரு சந்தர்ப்பத்தில்கூட அவள் உட்காரவில்லை. தன் சந்தேகங்களைக் கேட்பதைத் தவிர வேறு எதைப்பற்றியும் பேசவில்லை. 'தாங்க்ஸ் '---அதை உச்சரிக்கக்கூட இல்லை.

ஒருநாள் தெருவில் கண்ணுக்கு எதிரே அவளைப் பார்த்தபோது, பழகிய பெண் என்பதால் ஸ்ரீனிவாசன் இலேசாகப் புன்னகை செய்தான். அவள் பதிலுக்குச் சிரிக்கவுமில்லை; அவனைப் பார்க்கவுமில்லை. கவனியாமலே போய்விட்டாள்.

உரிய நாளில் அவர்கள் இருவரும் பரீட்சை எழுதினார்கள்.

அவள் தேறிவிட்டாள்.

அவன் தேறவில்லை.

* * * *

நன்றாக இருட்டிவிட்டது. ஸ்டேஷனில் ஒன்றுபாக்கியில்லாமல் எல்லா விளக்குகளும் ஏற்றப்பட்டுவிட்டன. தான் குறித்திருந்த நேரமும் வந்துவிட்டது. இனியும் அங்கே உட்கார்ந்திருப்பதில் அர்த்தமில்லை. இவ்வளவு நேரமும், ஸ்டேஷன் சிப்பந்திகளிடம் அகப்படாமல் இருக்கவேண்டுமே என்ற பயத்துடன் இருந்தாகிவிட்டது எப்படியோ தப்பிவிட்டோம். கடைசி நேரத்தில் அகப்பட்டுவிடக்கூடாதே என்று ஸ்ரீனிவாசன் நெரிசல் மிகுந்த ஒரு சமயத்தில் ஸ்டேஷனை விட்டு வெற்றிகரமாக நழுவி வெளியே வந்துவிட்டான்.

வெளிப்புறமாகத் தண்டவாளத்தை ஒட்டிச் செல்லும் நடைபாதையை நோக்கி நடந்தான். சற்று முன்பு கண்ணீர்த் திவலையினால் பரந்த வானம் மங்கியதைப்போல், ரயில்வே சிப்பந்தியிடம் கொண்ட பயத்தினால் மங்கி மறைந்திருந்த மரண பயம் இப்போது முழுமையாக, தெளிவாக எதிரே வந்துவிட்டது.

'சும்மா நடந்து போகவில்லை; சாவதற்காக நடந்து போகிறோம். '

----இதை நினைத்துப் பார்த்தான் ஸ்ரீனிவாசன். நடை நிற்காவிட்டாலும் மனம் ஸ்தம்பித்துவிட்டது. முன்புறம் மரணம்; பின்புறம் வாழ்க்கை. இரண்டுமே நினைக்கமுடியாத பயங்கரங்களாக இருந்தன. எதை ஏற்பது ? எதை உதறுவது ?--- அவனால் முடிவுகட்ட முடியவில்லை. நடந்து செல்லும் கால்களே முடிவுகட்டட்டும் என்று விட்டுவிட்டவனைப்போல் போய்க்கொண்டிருந்தான். அவனுடைய உயிர் அந்தக் கால்களிலேயே தஞ்சம் புகுந்துவிட்டது. அவை விட்டவழி விடட்டும்.....

மாம்பலம் ஸ்டேஷனை நோக்கி நடக்கும்போது, ஒரு நிமிஷம் மரணத்தைப்பற்றிய சிந்தனை; மறுநிமிஷம் வீட்டைப்பற்றிய நினைவு.

ஒரு கட்டத்தில் சாவைப்பற்றி எண்ணாமல், 'சாவுக்குப் பின் என்ன ? ' என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டான். அந்த சிந்தனை வளர்ந்து கொண்டே போயிற்று.

செத்தபிறகு, தாயும் தந்தையும் தங்கையும் கதறித் துடிப்பார்கள். மூவரில் ஒருவருக்காவது பைத்தியம் பிடிக்கும்; ஒருவருக்குத் தன்னைப்போலவே தற்கொலை எண்ணம் பிறக்கும்; மற்றொருவர், இரண்டையும்விட பயங்கரமான ஒரு நிலையில் அகப்பட்டுக்கொண்டு தத்தளிப்பது நிச்சயம். தான் உயிரோடு இருந்தால், இத்தனையும் நிகழாமல் தடுத்துவிடலாம். வேறு கஷ்டங்கள் ஏற்பட்டால் சமாளிக்கமுடியும். இந்த மாதிரியான எண்ணம் பிறந்த பிறகும்கூட அவன் திரும்பிவிடவில்லை. நடந்து கொண்டுதான் இருந்தான். தான் நினைத்த காரியத்தை ஒரு சில நிமிஷங்களுக்குள் முடித்துவிடும் உறுதியோடும் இருந்தான்.

'வீட்டாரின் தத்தளிப்பையும் பொருட்படுத்தாமல் சாவை அரவணைக்கத் தன்னைத் தூண்டுவது, அவமான உணர்ச்சிதான் என்பதில் என்ன சந்தேகம் ? அந்த உணர்ச்சிக்குக் காரணம், சுகன்யா ' பாஸ் பண்ணிய சுகன்யா ' அந்த சுகன்யாவுக்காகத்தான் சாகப்போகிறோம். '

ஸ்ரீனிவாசன் அப்படியே பிரமை பிடித்தவன்போல் நின்றுவிட்டான்.

அவளுக்காகத்தான் சாவு என்றால், அந்த மரணத்துக்கு என்ன மதிப்பு ? சாகிறவனுக்குத்தான் என்ன மதிப்பு ? அவள் தன்னைக் காதலிக்கவில்லை; தானும் அவளைக் காதலிக்கவில்லை.

அவள் எதில் சிறந்தவள் ?---படிப்பிலா ? நன்றி உணர்ச்சியிலா ? அரிய குணங்களிலா ? அவளைப் போன்ற கர்வியை, மக்குத்தனமானவளை, நன்றி உணர்ச்சியற்றவளை இதுவரை பார்த்ததுகூட இல்லை. அவளிடம் இருப்பதெல்லாம் அழகு ஒன்றுதான். அதை விட்டால், பாஸ் பண்ணிவிட்டாள் என்ற ஒரு பெருமிதம் இருக்கிறது. இந்த இரண்டுக்காகவும் சாவதென்றால், ஊரில் இருக்கிற ஒவ்வொரு அழகிக்காகவும், ஒவ்வொரு பாஸ் பண்ணிய பெண்ணுக்காகவும் சாகவேண்டும்.

அர்த்தமில்லாமல் முட்டாள்தனமாக இந்த முடிவு எடுத்து வந்துவிட்டோம் என்று கருதினான். தன் பிணத்தைப் பார்த்து அவள் அழுவது ஒருபுறம் இருக்கட்டும்; அருவருப்பில்லாமலாவது பிணத்தைப் பார்ப்பாளா ?

தன் முட்டாள்தனத்துக்கு, தன் தலையிலேயே கல்லை எடுத்து ரத்தம் வரும் வரையில் இடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது.

மிகுந்த ஆவேசத்துடன் கையிலிருந்த பத்திரிக்கைகளைத் துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்தான் ஸ்ரீனிவாசன். வந்த வழியே அவன் திரும்பிவிட்டான்.

* * * *

கிருஷ்ணசாமி ஐயங்காரும் தெரிந்த கடை ஒன்றில் பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தார். பையனுடைய நம்பர் வரவில்லை என்று கண்டதும் ரத்த ஓட்டம் நின்று விட்டது. வெகு சிரமப்பட்டு மனத்தைக் கட்டுபடுத்தினார். பல்லைக் கடித்துக்கொண்டு நிதானமாக வீட்டை நோக்கி நடந்து வந்தார். அப்புறம் அரைமணி நேரம் வீடு முழுதுமே மெளனம் நிலவியது. ஆகாயக்கோட்டை கட்டிய ஒவ்வொருவருக்கும் மற்றவருடைய முகத்தைப் பார்க்கவும், பார்த்துப் பேசவும் வெட்கமாக இருந்தது. இடிந்துபோய் ஆளுக்கு ஒரு பக்கம் ஒதுங்கினார்கள்.

அரைமணி நேர மெளனத்துக்குப் பிறகு, வீடு அல்லோகல்லோலப்பட்டது. ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு வராமல் இருப்பது ஏன் ? எங்கே போயிருப்பான் ? எங்கே போனான் ?

ஐயங்கார் திகிலோடு எழுந்து போய் மகனைத் தேடினார். கோவில், பள்ளிக்கூடம், வாசகசாலை, சிநேகிதர்களின் வீடுகள்....அரைமணி நேரம் சுற்றிப் பார்ப்பது; பிறகு வீட்டுக்கு வந்து, 'வந்துவிட்டானா ? ' என்று பார்த்து விட்டு, பழையபடியும் வெளியே போவது; ஆறு தடவை வந்து பார்த்துவிட்டார். ஆறு தடவைகளிலும் வீட்டில் ஆறு இடிகள் விழுந்தன.

இந்தக் கலவரங்கள் எதிர்வீட்டுக்கு எட்டியதும் சுகன்யா வந்தாள். ஸ்ரீனிவாசனின் தாயாரும் தங்கையும் அவளைப் பார்த்து, 'கோ 'வென்று அழுதார்கள். அவளுக்கும் கண்ணீர் வந்துவிட்டது. 'ஒரு வேளை, நம்பர் விட்டுப் போயிருக்கும். நாளை பேப்பரையும் பார்க்கவேண்டும் ' என்று சொல்லி ஆறுதல் அளிக்க முயன்றாள் சுகன்யா.

அப்போது வீட்டில் யாருக்குமே நம்பர்களைப்பற்றிய கவலை இல்லை. நம்பர்கள் நாளை வந்தாலும் வரட்டும், அல்லது வராமலே போகட்டும், ஸ்ரீனிவாசன் வந்தால் போதும் என்ற நிலையில் இருந்தார்கள்.

இதற்கு அந்தப் பெண் என்ன ஆறுதல் அளிக்கமுடியும் ? ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டுத் தன் வீட்டுக்குத் திரும்பிவிட்டாள்.

ஏழாவது தடவையாக அலைந்துவிட்டு வந்த கிருஷ்ணசாமி ஐயங்கார், யாரிடமும் எதுவும் பேசாமல் ஓர் ஓரமாகச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார். மனைவியும் மகளும் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.

அப்புறம் அந்த வீட்டுக்குச் சுகன்யாவின் அம்மா வந்தாள். தன் மகள் சாப்பிடாமல் அழுதுகொண்டு படுத்திருக்கிறாள் என்ற செய்தியையும் சொல்லிவிட்டு ஸ்ரீனிவாசனைப் பற்றி விசாரித்தாள்.

மனமில்லாமலும் தெம்பில்லாமலும் கண்ணீரும் கம்பலையுமாக ஐயங்காரின் மனைவி பதில் சொல்லிக்கொண்டிருக்கும் சமயம்.....

ஸ்ரீனிவாசன் வந்துவிட்டான் '

'சீனு ' ' என்று ஒரு பெரிய கூப்பாடு போட்டுவிட்டு, அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள் தாய். தங்கையும் வந்து, 'எங்கே போனே சீனு ? ' என்று கேட்டுவிட்டுக் கேவி கேவி அழுதாள். ஐயங்கார் நிமிர்ந்து உட்கார்ந்தார். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு வெறித்த பார்வையோடு மகனையும் மற்றவர்களையும் பார்த்தார்.

அவன் வந்துவிட்ட செய்தியறிந்த சுகன்யா ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஓடிவந்தாள். வந்து அவனுடைய குனிந்த தலையை, வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

'சீனு ' ' என்று சுகன்யா அவனை அழைத்தாள். பெயர் சொல்லி அழைத்தாள்.

ஸ்ரீனிவாசன் முகத்தைத் தூக்கிச் சுகன்யாவின் கண்களைப் பார்த்தான்.

அந்த இரு கண்களிலும் கண்ணீர் ததும்பியிருந்தது. கண்ணீரையும் பார்த்தான். அப்போது.... அந்தக் கண்ணீரில் வேறொரு கற்பகக் கன்று தளிர்த்தது.

அவனுடைய கண்ணீருக்கும் ரத்தத்துக்கும் வளராமல் கருகிய கற்பகத்துக்குப் பதில் மற்றொரு கற்பகத்துக்குக் கண்களால் நீர் வார்க்கும் தரும தேவதையைப் பார்ப்பது போலவே சுகன்யாவைப் பார்த்தான் ஸ்ரீனிவாசன்.

* * * *

'சுகன்யா ' உன்னை வெறுத்ததால் நான் சாகாமல் வாழ நினைத்தேன்; இப்போது உன்னுடைய அன்பால் (உன்னிடம் கொண்ட அன்பால் என்று நினைக்கச் சங்கோஜமாக இருந்தது) சாகாமல் வாழ நினைக்கிறேன் ' நீ எப்போதுமே என்னைச் சாகவிடமாட்டாய் ' அப்படித்தானே ? ' ----ஆனந்தக் கண்ணீரைத் தலையணையில் ஒற்றிக் கொண்டான் ஸ்ரீனிவாசன்.

******

ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்

 

கைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார்.

aathavan தாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப் பருகி, அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அறையின் மறு பக்கத்தை நோக்கி ஒரு கணம் - ஒரே கணம் - பார்வையை ஓட விட்டார். அகர்வால் மேஜை மீது குனிந்து ஏதோ ஃபைலை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். கைலாசம் தம்ளரை மறுபடி மேஜை மேல் வைத்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். நீலவானம், ஓரிரு மேகங்கள், மரங்களின் உச்சிகள், அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உச்சிகள்.... திடீரென்று இவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது பற்றிய தன்னுணர்வினால் அவர் பீடிக்கப்பட்டார். அகர்வால் இந்தப் பார்வையைக் கவனித்து, ‘என்ன, அடுத்த கதையைப் பற்றி யோசனையா?’ என்றோ, ‘என்ஜாயிங் தி சீனரி, கைலாஷ் சாப்?’ என்றோ பேசத் தொடங்கப் போகிறான் என்ற பயம்..

அவர் அவசரமாக ஒரு ஃபைலை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டார். அது அவர்
ஏற்கனவே பார்த்து முடித்து, பியூன் எடுத்துச் செல்வதற்காக டிரேயில் வைத்திருந்த
ஃபைல், இருந்தாலும் அதை மறுபடி எடுத்துப் பிரித்து வைத்துக்கொண்டு, பேனாவைத்
திறந்து வலது கையில் பிடித்துக்கொண்டு, சற்று முன் தான் எழுதிய நோட்டை
அணுஅணுவாகச் சரிபார்த்தார். தெளிவில்லாதனவாகத் தோன்றிய i-க்கள் மேலுள்ள
புள்ளிகள், t-க்களின் மேல் குறுக்காகக் கிழிக்கப்படும் கோடுகள், ஃபுல்
ஸ்டாப்புகள், கமாக்கள், எல்லாவற்றிலும் பேனாவை மறுபடி பிரயோகித்து
ஸ்பஷ்டமாக்கினார். ஆங்காங்கே சில புதிய கமாக்களைச் சேர்த்தார். ஒரு o, a போல
இருந்தது. அதையும் சரிபார்க்கத் தொடங்கினார். அப்போதுதான் திடுமென அகர்வாலின்
குரல் ஒலித்தது.

‘ரொம்ப பிசியா?’

அவர் எதிர்பார்த்திருந்த, பயந்திருந்த, தாக்குதல்! நல்லவேலை, இப்போது மட்டும்
அவர் வெளியே பார்த்துக் கொண்டிருந்தால்!

’ம்ம்’ என்றவாறு அவர் வேறு ஏதாவது 'a' 'o' போலவோ அல்லது 'o' 'a' போலவோ, 'u' 'v'
போலவே, 'n' 'r' போலவோ, எழுதப்பட்டிருக்கிறதா என்றுத் தேடத்தொடங்கினார்.

அகர்வாலின் நாற்காலி கிரீச்சென்று பின்புறம் நகரும் ஓசையும் இழுப்பறை
மூடப்படும் ஓசையும் கேட்டன. ‘ஃபைவ் மினிட்ஸில் வருகிறேன்’ என்று அவரிடம் சொல்லி விட்டு, அவன் அறைக்கு வெளியே சென்றான்.

கைலாசம் ஓர் ஆறுதல் பெருமூச்சுடன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார். மிக
இயல்பாகவும் சுதந்தரமாகவும் உணர்ந்தவராக, ஜன்னல் வழியே வானத்தைப் பார்க்கத்
தொடங்கினார். ஒரு கிளிக்கூட்டம் பறந்து சென்றது. அக்காட்சி திடீரென்று மனத்தைப்
பல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது. கிராமத்தில், ஆற்றங்கரை மணலில்
உட்கார்ந்திருந்த மாலைகள். பக்கத்தில் நண்பன் ராஜூ. பேசாமலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்ட அன்னியோன்யம்.

ஆனால் இப்போது அவர் கிராமத்தில் இல்லை. தில்லியில், மத்திய சர்க்கார் அலுவலகம் ஒன்றின் பிரம்மாண்டமானதொரு சிறை போன்ற கட்டடத்தின் ஓர் அறையில் அமர்ந்திருக்கிறார். அருகில் இருப்பது ராஜூ இல்லை, அகர்வால். இவன் அவரைப் பேசாமல் புரிந்து கொள்கிறவன் இல்லை, பேசினாலும் புரிந்து கொள்கிறவன் இல்லை.

மணி பன்னிரண்டு பத்து. அகர்வால் இதோ வந்துவிடுவான். கைலாசம் சீக்கிரமாக அவனிடம் கூறுவதற்கேற்ற ஒரு காரணத்தை சிருஷ்டி செய்தாக வேண்டும். அவனுடன் தான் ஏன் டிபன் சாப்பிட வரமுடியாது என்பதற்கான காரணம். பேங்குக்குப் போவதாகவோ, இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டப் போவதாகவோ, கடிகார ரிப்பேர் கடைக்குப் போவதாகவோ ஆஸ்பத்திரியில் இருக்கும் ஷட்டகரைப் பார்க்கப் போவதாகவோ (அவருக்கு அப்படி ஒரு ஷட்டகர் இல்லவே இல்லை) இன்று கூற முடியாது. இந்தக் காரணங்களைச் சென்ற சில தினங்களில் அவர்
பயன்படுத்தியாயிற்று. வயிற்று வலியாயிருக்கிறதென்று சொன்னாலோ, அவனுடைய
அனுதாபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். அதையும் வெறுத்தார். லைப்ரரிக்குப்
போவதாகச் சொல்லலாமா?

சொல்லலாம். ஆனால் அதில் ஓர் அபாயம் இருக்கிறது. அகர்வால் தானும் வருகிறேனென்று கிளம்பி விடலாம்.

ஈசுவரா! என்னைக் காப்பாற்று.

கைலாசம் தன்னையுமறியாமல் கண்களை மூடிக்கொண்டு விட்டிருக்க வேண்டும். சில
விநாடிகளுக்குப் பிறகு மறுபடி கண்களைத் திறந்தபோது, எதிரே அவருடைய நண்பன் ராமு புன்னகையுடன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘ஹலோ! நீ எப்படா வந்தே?’
என்றா ஆச்சரியத்துடன். ராமு பம்பாயில் வேலையிருந்தான்.

‘ரூமுக்குள்ளே வந்ததைக் கேக்கறியா, இல்லை தில்லிக்கு வந்ததையா?’ என்றான் ராமு.

‘ரூமுக்குள்ளே இப்பத்தான் வந்தே, தெரியும்..’

‘ஷ்யூர்? யூ மீன், நீ இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சியா?’

’நான் தூங்கிண்டு இருக்கலை...’

‘பரவாயில்லையடா, தூங்கிண்டிருந்தாலும்தான் என்ன? தட்ஸ் யுவர் ஜாப், இல்லையா?
அரசாங்கத்திலே இனிஷியேட்டிவ் எடுத்துக் கொள்பவன் அல்ல, எடுத்துக்
கொள்ளாதவன்தான் விரும்பப்படுகிறான்...’

கைலாசம் கரகோஷம் செய்வது போலக் கேலியாகக் கை தட்டினார். அவருக்கு ராமுவைப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருந்தது.

அறைக் கதவு திறந்தது, அகர்வால் உள்ளே வந்தான்.

‘அகர்வால்ஜி! மீட் மை ஃபிரண்ட்.. மிஸ்டர் ராமச்சந்திரன் ஆஃப் கமானீஸ்...”

ராமுவும் அகர்வாலும் கைகுலுக்கிக் கொண்டார்கள். ‘ஆஸஃப் அலி ரோடிலேயோ எங்கேயோ இருக்கிறதல்லவா, உங்கள் அலுவலகம்?’ என்றான் அகர்வால்.

‘ஓ, நோ! ஹீ இஸ் இன் பாம்பே’ என்ற கைலாசம், தொடர்ந்து அவசரமாக, ‘அச்சா அகர்வால், இவருக்கு ரிசர்வ் பேங்கில் இருக்கிற என்னுடைய ஒரு நண்பரைப் பார்க்கணுமாம்.... சோ இவரை அங்கே அழைத்துப் போகிறேன்... எக்ஸ்க்யூஸ் மீ ஃபார் லஞ்ச்’ என்றார்.

அகர்வாலில் முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது. ‘அச்சா...’ என்றான்.

ராமுவும் கைலாசமும் வெளியே வந்தார்கள்.

‘இது என்னடாது, ரிசர்வ் பேங்க், அது இதுன்னு?’ என்றான் ராமு.

‘வேடிக்கையிருக்கு, இல்லையா?’ என்று கைலாசம் சிரித்தார். ‘என்ன பண்றது...
இவன்கிட்டே மாட்டிண்டு அவஸ்தைப் படறேன் நான். சொன்னால்கூடப் புரியுமோ என்னவோ..’

‘போரா?’

‘ஆமாம்’ என்றார் கைலாசம். அவர் முகத்தில் குதூகலமும் நன்றியுணர்வும் ஏற்பட்டது.
எவ்வளவு கரெக்டாக இவன் புரிந்து கொண்டு விட்டானென்று. ராமுவின் அண்மையினால் தனக்கு ஏற்பட்ட மனநிறைவும் மகிழ்ச்சியும் அவருக்கு இதமாக இருந்தன.

அகர்வாலுடன் அதிருப்தியும் சலிப்பும் கொள்ளும்போது, ஒருவேளை தன்னை ஓர்
எழுத்தாளனாக இவன் புரிந்து கொள்ளாததுதான் தன் அதிருப்திக்குக் காரணமோ, ஒரு வேளை நட்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனென்ற என் அகந்தையைத் திருப்தி செய்து கொள்ளும் சாதனம்தானோ என்று ஏதேதோ விபரீத சந்தேகங்கள் அவருக்கு ஏற்படத் தொடங்கியிருந்தன. இந்த அகந்தைக்காகத் தான் பெறும் ஒரு நியாயமான தண்டனையாக அகர்வால் ஏற்படுத்தும் சலிப்பைக் கருதி அதைக் கூடிய வரை சகித்துக் கொள்ளவும் அவர் முயன்று வந்தார். தன்னை நன்னெறிப்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சியாக அதைக் கண்டார்.

இப்போது ராமு அவருக்குத் தன் மீதே ஏற்பட்டு வந்த சந்தேகங்களை அறவே போக்கினான். ராமுவுக்கு அவர் கதைகள் எழுதுவது தெரியும். ஆனால் அவன் அவற்றை வாசிப்பது கிடையாது. அவர் கதைகளே எழுதாதவராக இருந்தாலும்கூட அவனைப் பொறுத்தவரையில் எந்த வித்தியாசமும் ஏற்பட்டிருக்க முடியாது, பார்க்கப் போனால் ‘கதையெழுதும் வீண் வேலையெல்லாம் எதற்கு வைத்துக் கொள்கிறாய், அது ஒரு கால விரயம்’ என்கிற ரீதியில்தான் அவன் பேசுவான். ‘நீயெல்லாம் என்னத்தை எழுதுகிறாய், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலஸ் இவங்களெல்லாம் எவ்வளவு ஜோராக எழுதுகிறான்கள், அப்படியல்லவா எழுத வேண்டும்’ என்பான். அவருடைய எழுத்து முயற்சிகள் பற்றிய அவனுடைய இந்த அலட்சிய பாவத்துக்கு அப்பாற்பட்டும் அவர்களிடையே அரியதொரு நட்பு நிலவியது. தம் சின்னஞ்சிறு அங்க அசைவுகளையும் முகச் சுளிப்புகளையும்கூட அவர்கள் பரஸ்பரம் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு இன்பமயமானதொரு அன்னியோன்யத்தில் திளைத்தார்கள். இல்லை, அவருடைய எழுத்துக்கும் இந்த நட்புக்கும் சம்பந்தமே இல்லை. கைலாசத்துக்கு ராமுவை அப்படியே இறுகத் தழுவிக் கொள்ளலாம் போலிருந்தது.

‘எனக்கு ஒரே பசி’ என்றான் ராமு.

‘டிபன் சாப்பிடத்தான் போகிறோம்.’

‘போன தடவை வந்திருந்தபோது ஒரு இடத்துக்குப் போனோமே யூ.என்.ஐ.யா அதற்குப் பேரு? - அங்கேயே போகலாம்.’

‘இல்லை, அங்கே இப்பக் கூட்டமாக இருக்கும்’ என்றார் கைலாசம், உண்மையில் அங்கே அகர்வால் வந்துவிடப் போகிறானேயென்று அவருக்குப் பயமாக இருந்தது.

அந்த வட்டாரத்திலிருந்த இன்னொரு காரியாலயத்துக்குள் நுழைந்த அவர்கள்,
அங்கிருந்த கேண்டீனில் போய் உட்கார்ந்தார்கள்.

‘ஆமாம், போன தடவை நான் வந்தபோது நீ மட்டும் தானே ரூமிலே தனியா இருந்தே?’
என்றான் ராமு.

‘அதையேன் கேக்கிறே, எங்க மினிஸ்ட்ரியிலே ஆபீசர்கள் எண்ணிக்கை ஒரேயடியாகப்
பெருகிப் போச்சு. ஸோ டெபுடி செக்ரெட்டரி ராங்குக்கு உள்ளவர்களுக்கும் அதற்கு
மேற்பட்டவர்களுக்கும்தான் தனி ரூம்னு சொல்லிட்டான். நான் ஒரு ராங்க் கீழே
இருக்கிறவன் ஆனதினாலே, இந்த அகர்வாலோட ஒரு ரூமை ஷேர் பண்ணிக்கும்படி
ஆயிடுத்து.’

‘அகர்வாலா?’

‘ஆமாம் யு.பி.க்காரன்...’

‘என்ன பண்றான்? எப்பவும் தொண தொணங்கிறானா>’

‘தொண தொணன்னா.. என்ன சொல்றது? இதெல்லாம் சப்ஜெக்டிவ்தான் இல்லையா? எனக்கு
அவனுடைய கம்பெனி ரசமாக இல்லை. அவ்வளவுதான்.’

‘புரிகிறது.’

‘இவன் அவன் வேறே பாஷைக்காரன்கிறதினாலேயோ, இலக்கிய அறிவு அதிகம்
படைத்தவனாயில்லாததினாலோயோ, வேறு விதமான சாப்பாடும் பழக்கங்களும்
உள்ளவன்கிறதினாலேயோ ஏற்படுகிற முரண்பாடு இல்லை. இன்ஃபாக்ட், இதே யு.பி.யைச் சேர்ந்த இன்னொருத்தனுடன் நான் மிகவும் சிநேகமாக இருக்கக் கூடும்...’

’உம்ம்...’ ராமு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

‘இது அவாவா இயல்பைப் பொறுத்த விஷயம், இல்லையா? மனப்பக்குவத்தைப் பொறுத்த விஷயம்.. இரண்டு மனிதர்கள் ஒத்துப் போகிறார்கள். வேறு இரண்டு மனிதர்கள் ஒத்துப் போவதில்லை. இதை தர்க்க ரீதியாக விளக்குவது ரொம்பக் கஷ்டம்...’

ஆனாலும்கூட உன் மனம் இதைப் பற்றி மிகவும் தர்க்கம் செய்தவாறே இருக்கிறது
போலிருக்கிறதே!’

‘ஐ ஆம் சாரி.... நான் உன்னை போர் அடிக்கிறேன், ரொம்ப.’

’நோ நோ - ப்ளீஸ் ப்ரொஸீட், இட்ஸ் வெரி இன்ட்ரஸ்டிங்.’

‘யார் மனசையும் புண்படுத்தக்கூடாது, எல்லாரிடமும் அன்பாக நடந்து கொள்ளணும்,
கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளணும் என்று நம்புகிறவன் நான்... ஆனால் அதை
ஒரு மூட நம்பிக்கையாக இவன் நிரூபித்து விட்டான். இவனுடனிருக்கும்போது என்னை நான் இயல்பாக வெளிப்படுத்திக் கொள்ளவே முடிவதில்லை. எவ்வளவு வார்த்தைகளை செலவழித்தாலும் இவன் என்னைப் புரிந்து கொள்வதில்லை. அதை விட மோசம், புரிந்து கொண்டு விட்டதாக நினைக்கிறான். ஆனால் அவன் புரிந்து கொள்ளவில்லை என்பதை நான் அதிர்ச்சியுடன் உணருகிறேன்.’

‘அவ்வாறு நேர்வதுண்டு’ என்று ராமு அனுதாபப் புன்னகையுடன் தலையை ஆட்டினான்.

‘இவ்வளவுக்கும் அவன் என்னிடம் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறான், தெரியுமா?
ஆனால் மதிப்பு நேசத்தின் ஆதரவாகிவிட முடிகிறதில்லை.... சில சமயங்களிலே காலை நேரத்தில் அவன் என்னைப் பார்த்து முதல் புன்னகை செய்யும்போது, குட் மார்னிங் சொல்லும்போது, அவற்றை அங்கீகரிக்கவும் எதிரொலிக்கவும் கூட எனக்குத் தயக்கமாக இருக்கும். இவன் புன்னகை செய்வதும் வணக்கம் தெரிவிப்பதும் அவன் மனத்தில் என்னைப் பற்றிக் கொண்டுள்ள ஒரு தவறான உருவத்தை நோக்கி, அவற்றை அங்கீகரிப்பது இந்த மோசடிக்கு உடந்தையாயிருப்பது போல் ஆகும். எனவே அவனுடைய சிநேக பாவத்தை ஊக்குவிக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பேன். ஆனால் நாள் முழுவதும் நம்முடன் ஒரே அறையில் உட்கார்ந்திருப்பவனுடன் இவ்வாறிருப்பது எப்படிச் சாத்தியமாகும்?
நானும் புன்னகை செய்கிறேன். நாங்கள் பேசத் தொடங்குகிறோம். எங்களுடைய பரஸ்பர மோசடி தொடங்குகிறது. இந்த ரீதியில் போனால் நான் விரைவில் அவன் மனத்தில் உருவாகியுள்ள அவனுடைய தோற்றப் பிரகாரமே மாறிவிடப் போகிறேனோவென்று எனக்குப் பயமாயிருக்கிறது.’

ராமு சிரித்தான்.

’இது சிரிக்கும் விஷயமல்ல’ என்று கைலாசம் ஒரு கணம் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்துவிட்டு, பிறகு தானும் சிரித்தார்.

டிபன் வந்தது. இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள்.

‘உனக்கு இந்த மாதிரியான அனுபவம் ஒன்றும் ஏற்பட்டதில்லையா?’ என்றார் கைலாசம்’

ராமு தோள்களைக் குலுக்கியவாறு, ‘நாமெல்லாம் ரொம்பச் சாதாரணமான ஆசாமி’ என்றான். ‘நீ ஒரு கிரேட் ரைட்டர்... எனவே பலதரப்பட்டவர்கள் உன்பால்
ஈர்க்கப்படுகிறார்கள்’

கைலாசம் ராமுவைக் குத்தப் போவது போலப் பாசாங்கு செய்தார்.

‘எனவே, எனக்கு மனித சகோதரத்துவத்தைப் பற்றிய இல்யூஷன்கள் எதுவும் கிடையாது. ஸோ எனக்கு எப்போதும் ஏமாற்றம் உண்டாவதில்லை’ என்றான் ராமு தொடர்ந்து.

‘இல்யூஷன்கள் எனக்கும்தான் இல்லை. ஆனால்..’ என்று கைலாசம் கூறி நிறுத்தினார்.
தன் மனத்தில் குமிழிட்ட உணர்வுகளுக்கு எவ்வாறு சரியாக வடிவம் கொடுப்பதென்று
யோசித்தவராக, அவர் மனத்தில் அகர்வாலின் உருவம் தோன்றியது. அவன் தனக்கு
நகைச்சுவையாகப்படும் ஏதாவது ஒன்றைக் கூறி சிரிப்பை  யாசித்தவாறு அவர் பக்கம்
பார்ப்பது. குதுப் மினார், இந்தியா கேட் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டும்
பாணியில் ‘ கைலாசம் - கிரேட் டாமில் ரைட்டர்’ என்று தன் நண்பர்களுக்கு அவரை
அறிமுகப்படுத்துதல், ஏதாவது ஒரு வார்த்தையையோ சொற்றொடரையோ சொல்லி அதற்குத் தமிழில் என்னவென்று கேட்பது, தமிழ்நாட்டு அரசியல் நிலை, அங்கு நடைபெறும் ஏதாவது நிகழ்ச்சி அல்லது அதிகமாக அடிபடும் பிரபலமான பெயர் பற்றி அவரை விசாரிப்பது. அவனுடைய இத்தகைய சிரத்தைப் பிரதியாகத் தானும் அவனுடைய மாநிலத்தின் அரசியல், பிரமுகர்கள், மொழி ஆகியவற்றில் சிரத்தை கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது, தன் குடும்ப சமாசாரங்களை அனாவசியமாக அவரிடம் சொல்வது, அவருக்கு அந்தக் காரியாலயத்தில் நெருக்கமாக இருந்த வேறு சிலர் பற்றி அனாவசியக் கேள்விகளைக் கேட்பது, அபிப்ராயங்கள் சொல்வது (ஒரு பொறாமைமிக்க மனைவி போல).... பலவிதமான நிலைகளிலும் காட்சிகளிலும் அவர் அவனைக் கண்டார். வழக்கமான சோர்வும் குழப்பமும்தான் உண்டாயிற்று. எத்தகைய தெளிவும் ஏற்படவில்லை.

உன்னிடம் என்ன சிரமமென்றால், நீ ஒரு வழவழா கொழகொழா’ என்றான் ராமு. சர்வர்
கொண்டு வந்து வைத்த காப்பியை ஒரு வாய் உறிஞ்சியவாறு, ‘வெட்டு ஒன்று துண்டு
இரண்டு என்று நீ இருப்பதில்லை.’

‘வாஸ்தவம்.’

‘ஒருத்தனுடன் ஒத்துப்போக முடியவில்லையென்றால் நிர்த்தாட்சண்யமாக அவனை
ஒதுக்கிவிட வேண்டியதுதான். இட்ஸ் வெரி சிம்பிள். அவன் உன்னுடைய நட்புக்காக
ஏங்குவதாக உனக்குத் தோன்றியது. நீ அவனுடைய முயற்சிகளுக்கு வளைந்து கொடுத்தாய், ஓ.கே. ஆனால் சீக்கிரமே அத்தகைய ஒரு நட்பு ஏற்படுவதற்குத் தேவையான அடிப்படைகள் இல்லையென்று தெரிந்து போயிற்று. ஸோ, அப்படித் தெரிந்த உடனேயே அவனை அவாய்ட் பண்ண வேண்டியதுதானே, இதிலே என்ன பிரச்னைன்னு எனக்குப் புரியலை.’

‘அப்படி அவனை நான் அவாய்ட் பண்ணிண்ண்டுதான் இருக்கேன். ஆனால் இது ஒரு குற்ற உணர்ச்சியைத் தருகிறது...’

‘குற்ற உணர்ச்சி எதற்காக?’

‘என் முடிவுகள் தவறாயிருக்குமோன்னு எனக்கே என் மேலே எப்பவும் ஒரு சந்தேகம். ஒரு வேளை என்னிடமிருந்த ஏதோ குறைபாடுகள் காரணமாகவும் எங்கள் நட்பு
தோல்வியடைந்திருக்கலாமோ, அப்படியானால் அந்தக் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டாமா என்று ஓர் ஆர்வம்..”

ராமு, தான் சற்றுமுன் சொன்னது நிரூபணமாகி விட்டது என்பதுபோலத் தலையில்
அடித்துக்கொண்டான்.

‘நான் ஓர் எழுத்தாளன் என்கிற கவர்ச்சியினாலே அவன் என்பால்
ஈர்க்கப்பட்டிருக்கலாம்னு சொன்னே... ஆனால், உண்மையில், நான் ஒரு எழுத்தாளனாக
இல்லாமல் சாதாரண மனிதனாக இருந்திருக்கக் கூடாதா என்று அவன் ஏங்குவதாக எனக்குப் படுகிறது.’

ரமு ஓர் அடம்பிடிக்கும் குழந்தையைப் பார்ப்பது போல அவரை ஆயாசத்துடன்
பார்த்தான்.

‘நீ ஒரு  தமிழனாக இல்லாமல் வடக்கத்தியானாக இருந்திருக்கக் கூடாதா என்று
ஏங்குவது போலப் படவில்லையா?’

‘ஆமாம், அப்படியும்தான் தோன்றுகிறது’ என்றார் கைலாசம் ஆச்சரியத்துடன்.

‘நீ இந்தியில் ஏதாவது பேச முயன்றால் அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இந்திப்படம் ஏதாவதொன்றைப் பார்த்து அதைப் பற்றி அவனிடம் சர்ச்சை செய்தாலோ,
சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயன்றாலோ, அவன் ஜன்ம சாபல்யமடைந்தது போலப் பரவசமடைந்து போகிறான்’

’ஆமாம், ஆமாம்.’

’இந்திப் புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் உனக்கு சப்ளை பண்ணவும், உன்னுடைய
இந்தி அறிவை விருத்தி செய்யத் தன்னாலான உதவிகளைச் செய்யவும் கூடத் தயாராக இருப்பானே’

கைலாசம் சந்தேகத்துடன் ராமுவை உற்றுப் பார்த்தார். ‘ஏண்டா, கேலி பண்றயோ?’
என்றார்.

‘கேலியோ, நிஜமோ, எனக்கு இந்த மாதிரி ஆளெல்லாம் ரொம்பப் பரிச்சயமானவர்கள்,
அப்படின்னு சொல்ல வந்தேன்.’

‘சொல்லு, சொல்லு.’

‘நான் மாசத்திலே இருபது நாள் இந்தியா முழுவதிலும் சுற்றியபடி இருக்கிறவன்.
எனக்கு இங்குள்ள எல்லாவிதமான டைப்பும் அத்துப்படி.’

‘விஷயத்துக்கு வா’

‘இதுவெல்லாம் ரொம்ப அடிப்படையான எலிமெண்டரி டைப். கொச்சையான மாயைகளிலே தஞ்சமடைகிற ரகம். தனக்கென்று ஒரு ஹோதாவில்லாததினாலே, ஒரு தனித்த ஐடென்டிடி இல்லாததினாலோ, எதன் மீதாவது சாய்ந்து கொள்வதன் மூலமாகத்தான் அவன் தன்னை உணர முடிகிறது. நிரூபித்துக் கொள்ள முடிகிறது. பலம் வாய்ந்த, மகத்துவம் வாந்த ஏதாவது ஒன்றுடன் தன்னை ஐடென்டிஃபை பண்ணிக் கொள்வதன் மூலம், அதன் ஒரு பகுதியாக ஆவதன் மூலம்.’

’யூ மீன்...’

‘’ஆமாம், நீ அவன் போன்றவர்கள் இகழ்ச்சியாகக் கருதும் ஒரு சராசரி மதராஸி இல்லை. நல்ல அறிவும் பண்பும் உடையவனாயிருக்கிறாய். கதை வேறு எழுதுகிறாய். சப்பாத்தியோ சமோசாவோ சாப்பிடுவதில் உனக்கு ஆட்சேபணையில்லை. இதெல்லாம் அவனை மிகவும் பாதுகாப்பற்றவனாக உணரச் செய்திறது போலும். மதராஸிகளை ரசனையற்ற மூடர்களாக, பணிவற்ற காட்டுமிராண்டிகளாக, குறுகிய நோக்கும் அசட்டுக் கர்வமும் உள்ளவர்களாக, சண்டைக்காரர்களாக - எப்படி எல்லாமோ அவன் கற்பனை செய்து கொண்டிருக்கலாம், உன்னைச் சந்திப்பதற்கு முன்பு. அவன் ஒரு உயர்ந்த இனத்தவனென்ற மாயையின் பகுதி இதெல்லாம். ஆலாம் நீ இந்த மாயையைச் சிதைத்து விட்டாய். அவனைச் சிறுமைப்படுத்தும் உத்தேசம் இல்லாமலிருந்தும்கூட நீ அவனை தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்து விடுகிறாய். சரி, எப்படி யிருந்தால் என்ன? என் மொழிதான் ஆட்சிமொழி, என் சகோதரர்களே ஆட்சி புரிபவர்கள் என்பன போன்ற எண்ணங்களில் தஞ்சமடைந்து அவன் ஆசுவாசம் பெற வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் இந்த எண்ணங்கள் அவனைக் குற்ற உணர்ச்சி கொள்ள வைக்கின்றன. இவரும் என்னைப் போன்ற ஒரு யு.பி.வாலாவாக அல்லது குறைந்தபட்சம் ஒரு வடக்கத்தியானாக இருந்தால் தேவலையே என்று அவனுக்குத் தோன்றுகிறது...’

‘பலே, பேஷ்.’

‘என்ன, நான் சொன்னது சரியில்லையா?’

‘நூற்றுக்கு நூறு சரி. ஐ திங்க். இனிமேல் கதையெழுத வேண்டியது நானில்லை,
நீதான்.’

‘போதும், போதும். நீ கதையெழுதிவிட்டுப் படுகிற அவஸ்தை போதாதா?’

இருவரும் சிரித்தவாறே மைஜையை விட்டு எழுந்தனர்.

கேண்டீனுக்கு வெளியே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை இருந்தது. ஆளுக்கொரு பீடா வாங்கி வாயில் போட்டுக் கொண்டு, சற்று நேரம் சுற்றுப்புற உலகை வேடிக்கை பார்த்த அமைதி. அகர்வாலுடன் இப்படி ஒரு நிமிஷமாவது அமைதியாக உணர்ந்திருக்கிறாரா? சதா அனாவசியச் சர்ச்சைகள், தனக்காக அவன் அணியும் வேஷங்களை உணராதது போன்ற பாசாங்கு, அவனுக்காகத் தானும் வேஷமணிய வேண்டிய பரிதாபம். அவர்களிடையே இல்லாத பொதுவான இழைகளுக்காக வீண் தேடல்... இந்த ராமு ஒரு யு.பி.வாலாவாக இருந்திருக்கக் கூடாதா? அப்போது அவர் அவன்பால் எழும் நேச உணர்வுகள் குறித்து இந்த அளவு குற்ற உணர்ச்சி
கொள்ள வேண்டியதில்லை.

உடல் வனப்பு நன்கு தெரியும்படியாக உடையணிந்த மூன்று நடுத்தர வயதுப் பெண்மணிகள் அவர்களைக கடந்து நடந்து சென்றார்கள். ‘தில்லிப் பொம்மனாட்டிகள் பம்பாயிலே இருக்கிறவாளையும் தூக்கியடிச்சுடுவா போலிருக்கே வரவர!’ என்றான் ராமு.

‘ம், ம்’ என்று கைலாசம் தலையைப் பலமாக ஆட்டி ஆமோதித்தார். வாய்க்குள் வெற்றிலை எச்சில் ஊறத் தொடங்கியிருந்ததால் பேச முடியவில்லை.

எதிர்ச்சாரியில் ஒருத்தி விசுக் விசுக்கென்று நடந்து சென்றாள். ராமுவின் கவனம்
அங்கே சென்றது. கைலாசம் வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்தார். ராமுவின் முதுகில் தட்டிக் கொடுத்தார். ‘ ஸோ - போன விசிட்டுக்கு இப்ப இங்கே சீனரி இம்ப்ரூவ்
ஆகியிருக்கா?’ என்றார்.

‘டெரிஃபிக் இம்ப்ரூவ்மெண்ட்!’ என்று ராமு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
புகையை ஊதினான். ‘ஒரு சந்தேகம்’ என்றான்.

‘என்ன?’

‘அகர்வாலுடன் பெண்களைப் பற்றியும் பேசுவியா?’

கைலாசம் அசந்து போனார். ‘நீ நான் நினைத்ததை விடவும் ஆழமானவன்’ என்றார்.

‘இது சாதாரணப் பொது அறிவு’ என்றான் ராமு. ‘பெரும்பாலும் இந்த டாபிக்கைப் பற்றி
ஃப்ரீயாகப் பேச முடியாத ஒரு நிர்ப்பந்தமே உறவுகளை இறுக்கமானதாகச் செய்கிறது.
ஏன், ஒரு அப்பாவுக்கும் பிள்ளைக்குமிடையே கூட...’

’நாங்கள் பெண்களைப் பற்றியும் பேசாமலில்லை. ‘ கைலாசம். உதட்டைப் பிதுக்கினார்.
‘ ஒரு பயனுமில்லை.’

‘வேடிக்கைதான்.’

‘வேடிக்கையென்ன இதிலே? செக்ஸ் எல்லோருக்கும் பொதுவான, அடிப்படையான விஷயம். எனவே எந்த இரு மனிதர்களும் இதைப் பற்றிப் பேசுவதன் மூலம் நெருக்கமாக உணரலாம் என்று நினைக்கிறாயா? இல்லை. அது அப்படியல்ல. நெருக்கம் முதலில் வருகிறது. இந்தப் பேச்செல்லாம் பின்பு வருகிறது. அந்த நெருக்கம் எப்படி உண்டாகிறதென்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அது சிலருக்கிடையில் ஏற்படுகிறது. சிலருக்கிடையில் ஏற்படுவதில்லை. அவ்வளவுதான்.’

‘எத்தகைய ஒரு வீழ்ச்சி! உன் போன்ற ஒரு பகுத்தறிவுவாதி, சமத்துவவாதி...!’

“எல்லா மனிதர்களும் சமமானவர்களாயிருக்கலாம், சகோதரர்களாயிருக்கலாம். ஆனால்
எல்லா மனிதர்களுடனும் ஓர் அறையைப் பகிர்ந்து கொள்ளவோ, சேர்ந்து அமர்ந்து டிபன் சாப்பிடவோ என்னால் முடியாது’ என்று கூறிய கைலாசம், ஒரு கணம் யோசித்து, ‘சமத்துவத்தையும் தனி மனித உரிமைகளையும் குழப்பாதே’ என்றார்.

‘நீதான் குழப்புகிறாய்.’

‘இருக்கலாம். நான் குழம்பித்தான் இருக்கிறேன்.’

‘சரி, நீங்கள் செக்ஸைப் பற்றிப் பேச முயன்றால் என்ன ஆகிறது?’

‘என்னத்தைச் சொல்ல, நானாக அவனிடம் இந்த டாபிக்கை எடுத்தாலும் அவன்
சந்தேகப்படுகிறான். இத்தகைய டாபிக்குகளைப் பேசத்தான் லாயக்கானவென்ற ஒரு
மூன்றாம் தரப் பிரஜை உரிமையை அவனுக்கு என் உலகத்தில் வழங்குகிறானோ, என்று. அதே சமயத்தில் அவன் இதைப் பற்றிப் பேச்செடுக்கும்போது அவனுடைய ருசிகளுக்கும் அலைவரிசைக்கும் தக்கபடி என்னால் ரெஸ்பாண்ட் பண்ணவும் முடியவில்லை. நான் ஒரு பியூரிடனோ என்று அவனைச் சந்தேகப்படச் செய்வதில் தான் நான் வெற்றியடைகிறேன். இது கடைசியில் டேஸ்டைப் பொறுத்த விஷயம்தானோ, என்னவோ.’

‘டேஸ்ட், பொதுவான குடும்பச் சூழ்நிலை, கலாசாரச் சூழ்நிலை...’

‘ஐ நோ, ஐ நோ, இதெல்லாம் நட்புக்கு ஆதாரனமானவையென்று நம்பப்படுகின்றன. ஆனால் எனக்கு எப்போதும் நான் ஒரு வித்தியாசமானவென்ற உணர்வு இருந்தது. யார்கூட வேண்டுமானாலும் ஒத்துப்போக முடியுமென்ற கர்வம் - ஆமாம், கர்வம் இருந்தது. கடைசியில் இப்போது நானும் எல்லோரையும் போல ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின், குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தின் வரம்புகளுக்கு உட்பட்டவன், என் நட்பு எல்லோரையுமே அரவணைக்கக் கூடியத்ல்ல என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நான் என்னுடைய சில ஆழ்ந்த நம்பிக்கைகள் வெறும் லட்சியக் கனவுகளாக நிரூபணமாகி, ஒரு முட்டாளைப் போல உணருகிறேன்.’

ராமு கைலாசத்தின் முதுகில் தட்டிக் கொடுத்து, ‘இவ்வளவு சீரியசாக எடுத்துக்
கொள்ளாதே’ என்றான்.

‘இது சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ராமு. சில மனிதர்கள் என்னதான் முயன்றாலும் ஒருவரோடொருவர் ஒத்துப்போக முடியாதென்ற உண்மையைத் திடீரென்று ஒரு ஞானோதயம் போல நான் உணர்ந்திருக்கிறேன். இது எவ்வளவு துர்ப்பாக்கியமான விஷயம், இந்த அகர்வால், பாவம், எங்களிடையே தோழமை உருவாக வேண்டும், அது பலப்பட வேண்டும் என்று எவ்வளவு முயலுகிறான். பொதுவான இழைகளைத் தேடியவாறு இருக்கிறான். தனக்கு
சாம்பார் ரொம்பப் பிடிக்குமென்கிறான். தன் வீட்டிலும் ரொட்டியைவிடச் சாதம்தான்
அதிகம் சாப்பிடுவார்களென்கிறான். திருவள்ளுவரிலிருந்து ராஜாஜி வரையில் பல
தென்னிந்திய அறிஞர்கள் தன்னைக் கவர்ந்திருப்பதாகச் சொல்கிறான். பிறகு இந்தி
ஆசிரியர்கள், அறிஞர்கள் சிலரின் கருத்துக்களை எனக்குக் கூறி, என்னிடம் பதில்
மரியாதையை எதிர்பார்க்கிறான். ஏதோ பள்ளிக்கூடத்தில் இருப்பது போலவோ, தேசிய
ஒருமைப்பாட்டுக்கான பரிசு பெற முயன்று கொண்டிருக்கும் ஒரு படத்தில் நடிப்பது
போலவோ ஒரு சங்கடமான உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நான் பார்த்திருந்த சில பழைய இந்திப் படங்களை ஒரு நாள் தெரியாத்தனமாக அவனிடம் புகழ்ந்து பேசிவிட்டேன். அதிலிருந்து இந்திப் படங்களைப் பற்றிய தன் அறிவையெல்லாம் வலுக்கட்டாயமாக என் மேல் திணிக்கத் தொடங்கியிருக்கிறான். அவனுடைய தேடல் என்ன, அவன் என்ன யாசிக்கிறான் என்பதொன்றும் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை அடிப்படையாக அவன் ஒரு ஹிந்தி ஃபனாடிக்காக இருக்கலாம். அதைத் தனக்குத்தானே தவறென்று நிரூபித்துக் கொள்வதற்காக ஓர் ஆவேசத்துடன் என்னுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான் போலும்.... அதே சமயத்தில் தன் மனத்தின் கொச்சையான தஞ்சங்களை முழுவதும் திரஸ்கரிக்கவும் அவனால் முடியவில்லை போலும்... எப்படியிருந்தாலும், இதுவே அவனுடைய முயற்சியாயிருக்கும் பட்சத்தில், அவனுடன் நான் ஒத்துழைப்பதுதான்
பொறுப்பான செயலாகும். இல்லையா? ஆனால் இந்தப் பளுவை என்னால் தாங்க முடியவில்லை.

எனக்கு ஒரு கட்டத்துக்குப் பிறகு, ‘டு ஹெல் வித் அகர்வால், டு ஹெல் வித்
எவ்ரிதிங்க்’ என்று தோன்றுகிறது.’

ராமு ஒரு கணம் பேசாமலிருந்தான். பிறகு ‘உனக்கு உன்னைப் பத்தி என்னென்னவோ
இல்யூஷன், தட்ஸ் தி டிரபிள்’ என்றான். ‘யூ ஆல்வேஸ் வான்ட் டு பிளே ஸம் கிரேட்
ரோல்.... ஒரு கம்யூனிடியின் அம்பாசிடராக.. ஓ காட்! நீ நீயாகவே ஏன் இருக்க
மாட்டேங்கிறே?’

‘நான் நானாகவேதாம்பா இருக்கப் பார்க்கிறேன்.... அதுக்கு இவன்
விடமாட்டேனென்கிறான்னுதான் சொல்ல வரேன்..’

‘விடலைன்னா விட்டுடு...’

‘நீ சுலபமா சொல்லிடறே... ஹவ் இஸ் இட் பாஸிபிள்? என்கூடப் பேசாதேன்னு சொல்ல
முடியுமா?’

‘வானிலையும் விலைவாசியையும் மட்டும் பேசு.’

‘அதுவும்... இல்லை, உனக்கு இந்தப் பிரச்னை புரியவில்லை. சில சமயங்களில் நான்
அவனிடம் பேசாமலே இருப்பதுண்டு. அப்போது அவன் மூஞ்சி பரிதாபமாக இருக்கும்.
எனக்கு அவன் மேல் ஏதோ கோபமென்றோ, அவன் என் மனத்தைப் புண்படுத்தி விட்டானென்றோ அவன் உணர்வது போலத் தோன்றும். எனக்கு அவன் மீது அனுதாபம் ஏற்படத் தொடங்கிவிடும். நான் பேசத் தொடங்கி விடுவேன்....’

ராமு ஏதோ சொல்லத் தொடங்கினான். கைலாசம் அவனைக் கையமர்த்தி விட்டுத் தொடர்ந்து பேசினார்:

‘ஆனா, பேசாமல் இருக்கிறது ஸ்ட்ரெயினாக இருப்பது போலவே பேசுவது
ஸ்ட்ரெயினாகத்தான் இருக்கிறது. அழும் குழந்தையை சிரிக்க வைப்பதற்காக அதற்கு
உற்சாகமூட்டும் சேட்டைகள் காட்டுவது போல, அவனுடன் பேசும்போது என்னையுமறியாமல் நான் ஏதேதோ வேஷமணிய நேருகிறது. எழுத்தை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளனாக, என் இனத்தைப் பற்றிய பிறருடைய சிரிப்பில் கலந்து கொள்ளும் மனவிடுதலை பெற்ற மதராஸியாக, பிற மாநிலத்தவருடைய இயல்புகள், பழக்கங்கள் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவனாக, என் மொழியின் தொன்மையையும் வளத்தையும் பற்றிய அவனுடைய புகழுரைகளை ஏற்றுக்கொண்டு, அதே சமயத்தில் மொழி வெறியர்களைக் கண்டிப்பவனாக.. இப்படிப் பல மேலோட்டமான வேஷங்கள், இவற்றின் எதிரொலியாக அவன் அணியும் இணையான வேஷங்கள். அவன் எப்போதும் என் ஆழங்களைத் தொடுவதில்லை. அவனுக்கோ எனக்குத் தெரிந்த வரையில், ஆழங்களே இல்லை. இந்த நிலைமையை, வேஷங்களின் மூலமே ஒருவரையொருவர் தொட முடிவதை, அவனும் உணராமலில்லை. எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நாள் நெருங்கிப் பேச முயல்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதற்கடுத்த நாள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவே சங்கடப்படுகிறோம்.’

‘அவன் தன் பிராந்தியத்தின் ஒரு மனவளர்ச்சி பெறாத டைப்பாகவே இருப்பதால், அதன் எதிரொலியாக உன்னை எப்போதும் ஒரு மதராஸியாக அவன் உணரச் செய்வதுதான் பிரச்னையென்று எனக்குத் தோன்றுகிறது. இதை உன்னால் எப்படித் தவிர்க்க முடியும்? இந்த மாதிரியானவர்களை எல்லாம் ரொம்ப நெருங்க விடாமல் முதலிலிருந்தே ஒரு டிஸ்டன்ஸ்லே வச்சிருக்கணும். நீ மற்றவர்களை ஏன் இவ்வளவு சுலபமாக உன்னிடம் உரிமைகள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கணும்னு எனக்குப் புரியலை.’

‘என்ன பண்றது, என்னுடைய இயல்பே அப்படி. ஐ டோன்ட் வான்ட் டு பி அனப்ரோச்சபிள். பிறரை ஆசுவாசம் கொள்ளச் செய்வதற்காக, எனக்கு அவர்கள் மேல் விரோதமில்லை. நான் கர்வமுள்ளவன் இல்லை என்றெல்லாம் உணர்த்துவதற்காக, மெனக்கெட்டு அவர்களுக்கு இணக்கமான ஒரு வேஷத்தை அணிவது என் வழக்கம். கடைசியில் இதுவே ஆபத்தில் கொண்டு விடுகிறது. அவர்கள் இந்த வேஷத்தில் என்னை ஸ்திரப்படுத்த முயலுவது நான் இதை எதிர்த்துத் திணறுவதாக பெரிய தலை வேதனையாகி விடுகிறது. இப்போது ஞாபகம் வருகிறது, அகர்வால் முதல் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது நான் மிகவும் சந்தோஷமான நிலையிலிருந்தேன். ஏனென்று தெரியாமலேயே இடுப்பை வளைத்து முகலாய பாணியில் சலாம் செய்து, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று இந்தியில் கூறினேன். சுத்த அனாவசியம், நான் இயல்பாகவே இருந்திருக்கலாம். இப்போது அந்த உற்சாகத்தையும் நடிப்பையும் எப்போதுமே அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அதெப்படிச் சாத்தியமாகும்? நான் உற்சாகமாக உணர்வது அவன் போன்றவர்களுடனல்ல. சே! நான் ஒரு முட்டாள்.’

‘வடிகட்டின முட்டாள்’ என்று கடிகாரத்தைப் பார்த்த ராமு, ‘மை காட்! மணி
ரண்டாகிவிட்டதே!’ என்று கூவினான். ‘உன் ராமாயணத்தைக் கேட்டு நேரம் போனதே
தெரியவில்லை. உத்தியோகபவன்லே ஒரு ஆளைப் பார்க்கணும் எனக்கு’ என்று சாலையில் வந்த ஓர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்தினான்.

‘சரி,  அப்புறம் எப்ப வீட்டுக்கு வரே? சொல்லு!’

‘நாளைக்கு ராத்திரி சாப்பிட வந்திடு.’

‘ஒரு கண்டிஷன்.’

‘என்ன?’

‘நாளைக்கும் அகர்வாலைப் பற்றியே பேசி போர் அடிக்கக் கூடாது.’

‘மாட்டேன், ஐ பிராமிஸ்.’

ராமு ஆட்டோவில் ஏறிக்கொள்ளப் போனவன், சட்டென்று நின்றான். ‘இன்னொன்று’ என்றான்.

‘என்ன?’

‘அகர்வால் உன் வீட்டுக்கு வந்ததுண்டா?’

‘அதையேன் கேட்கிறே, அந்தக் களேபரமும் ஆயாச்சு. வீட்டுத்தோசை சாப்பிடணும்,
வீட்டுத் தோசை சாப்பிடணும்னு ரொம்ப நாளாய்ச் சொல்லிண்டிருந்தான். ஸோ ஒரு நாள் கூட்டிக்கொண்டு போனேன். வீட்டுக்கு வந்து தோசையைத் தின்னு ஒரேயடியாக என் வைஃபை ஸ்தோத்திரம் பண்ணித் தள்ளிப்பிட்டான். மதராஸிப் பொண்களே அலாதியானவர்கள், அது இதுன்னு ஒரேயடியாக அசடு வழிஞ்சுண்டு, என் வைஃபை சிரிக்க வைக்கறதுக்கக என்னென்னவோ ஜோக்ஸ் அடிச்சுண்டு... இட் ஆல்மோஸ்ட் லுக்ட் ஆஸ் இஃப் ஹீ வாஸ் இன்ஃபாச்சுவேட்டட் வித் ஹெர்!”

ராமு கடகடவென்று சிரித்தான். ‘யூ டிஸர்வ் இட்! அப்புறம், நீ அவன் வீட்டுக்குப்
போகலையா?’

“போகணும்... என்ன செய்றதுன்னு தெரியலை... நாளைக்கு, நாளைக்குன்னு
டபாய்ச்சுண்டிருக்கேன். என் வைஃப், நானும் அவன் வீட்டுக்கு வரப்போவதில்லை.
நீங்களும் போக வேண்டாம்னு என்னைக் கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறாள்,
வேறே.’

‘பெண்கள் இவ்விஷயங்களில் எப்போதுமே புத்திசாலித்தனம் அதிகமுள்ளவர்கள்’ என்ற
ராமு, ‘ஓ.கே.’ என்று ஆட்டோவில் ஏறிக்கொண்டான்.

கைலாசம் தன் தலைவிதியை நொந்தவாறு மறுபடி ஆபிசுக்குள் நுழைந்தார். தன் அறைக்குச் செல்வதற்கு முன்பாக ‘கேர்டேக்கர்’ அறையினுள் எட்டிப் பார்த்தார். ‘கம் இன், கம் இன்’ என்ற கோஷ் அவரை வரவேற்றாப்,

கைலாசம் அவனெதிரில் போய் உட்கார்ந்தார்.

‘சொல்லுங்கள். உங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?’ என்றான் கோஷ்.

‘நானும் அகர்வாலும் உட்காரும் அறையில் நடுவே ஒரு பார்ட்டிஷன் போடுவதாகச்
சொல்லிக் கொண்டிருந்தீர்களே, என்ன ஆயிற்று?’

‘என்ன இது தாதா. நீங்கள்தானே சொன்னீர்கள், அதெல்லாம் வேண்டாம், உங்களைப்
பொறுத்தவரையில் இன்னொருவனுடன் அறையைப் பகிர்ந்து கொள்வதில் எந்த விதமான அசௌகரியமும் இல்லை, என்றெல்லாம்?’

’சொன்னேன், ஆனால்...’

‘இன்ஃபாக்ட், அகர்வாலுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போவது உங்களைப் போன்ற
ஒருவருக்குச் சிரமமாயிருக்குமென்று நான்கூட எச்சரித்தேன். ஆனால் நீங்கள்,
இல்லையில்லை, நான் யாருடன் வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும் என்கிறீர்கள்.’

‘ஐ ஆம் சாரி. நான் என் வார்த்தைகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.’

கோஷ் கடகடவென்று சிரித்தான். ‘நான் சொன்னபோது நீங்கள் நம்பவில்லையல்லவா?’ என்று மறுபடி சிரித்தான். ‘நான் உங்களைக் குற்றம் சொல்ல மாட்டேன், தாதா. இந்த
யு.பி.வாலாக்கள் இருக்கிறார்களே.... அப்பப்பா!’ என்று தலையை ஒரு அனுபவபூர்வமான சலிப்புடன் இப்படியும் அப்படியுமாக ஆட்டினான். ‘யூ நோ, தாதா...’ என்று அந்தப் பிராந்தியத்தினரைப் பற்றிய தன் அறிவை அவருடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினான்.

கைலாசம் மௌனமாகக் கேட்டுக்கொண்டு உட்காந்திருந்தார். அவருக்குத் தன் மீதே
வெறுப்பும் கோபமும் ஏற்பட்டன

.*******

May 30, 2010

திலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெ.சா

வெங்கட் சாமினாதன்

இன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரியவந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலிப் குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் எழுத்துக்கள் மைல்கற்கள், க்ளாஸிக்ஸ் என்று சொல்லத்தக்கவை. இது இன்றைய விசேஷம் அல்ல. தமிழ் இலக்கியத்தின் தொன்று தொட்டே, வரலாற்றின் தொடக்கம் தொட்டே காணப்படும் அம்சமாகும்.

சங்க காலப் புலவர்கள் பலரின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இல்லை. (உதாரணமாக, dileep-kumar தாமோதரனார், கேசவனார், உருத்திரனார், ப்ரஹ்மசாரி, கண்ணனார், நாகனார், தேவனார்...) அப்பெயர்கள், காதா சப்த சதி தரும் பெயர்களைப் போலவே இருக்கின்றன. மேலும், பாடு பொருள், பாடல்கள் இயற்றப்பட்டுள்ள விதி முறைகள், பெயர் தரப்படாது, அவன் அவள், தோழி என்றே குறிக்கப்பட்டு வரும் மூன்றே பாத்திரங்கள், அவர்களது காதல் ஏக்கங்கள், காத்திருத்தல்கள், தூது எல்லாம் பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதியிலும், சங்க கால அகப் பாடல்களிலும் காணப்படும் பொது அம்சங்களாயிருப்பது நமக்கு இன்னும் திகைப்பூட்டுகிறது. ஒரு வேளை இரண்டிலும் பொதுவாகக் காணப்படும் புலவர் பெயர்கள் ஒருவரையே குறிக்குமோ. ஆனால் இந்த இழையைப் பற்றிக்கொண்டு மேற்செல்வது சங்கடமான காரியம் .

நிகழ் காலத்தில் கூட தமிழ் நாட்டில் இருக்கும் கன்னடம், தெலுங்கு பேசும் எழுத்தாளர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கணிசமாக பங்களித்துள்ளனர். இவற்றில் சில மிக முக்கியமான சிறப்பான படைப்புகளாகவும் விளங்குகின்றன. சௌராஷ்டிரர்களும் தான். ஆனால் அவர்கள் விஜயநகர அரசர்கள் காலத்தில், பின் நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் தெற்கு நோக்கி வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள். அது பல நூற்றாண்டுகளுக்கும் முன்னராதலால், அவர்களுக்கு தாம் எங்கிருந்து வந்தோம், என்ற நினைப்போ, தாம் இப்போது எழுதிக்கொண்டிருப்பது ஒரு அந்நிய மொழியில் என்ற நினைப்போ அறவே அற்றவர்கள். அவர்கள் வீடுகளில் தம் தாய் மொழியில் தான் பேசுகிறார்கள் என்ற போதிலும் அது மிகவாக சிதைந்த ஒன்று தான். தமிழ் மொழி பேசுகிறவர்களான போதிலும், டி.பி. கைலாசமும், மஸ்தி வெங்கடேச ஐயங்காரும் கர்னாடகத்தில் வாழ்ந்ததால் கன்னடத்திலும், கேரளாவில் வாழ்ந்ததால் உள்ளூர் பரமேஸ்வர ஐயர் மலயாளத்திலும் எழுதுவது போலத்தான் இவர்கள் தமிழில் எழுதுவதும் இயல்பு.

கடந்த பல நூற்றாண்டுகளாக, தென்னிந்திய மாநிலங்களிடையே இம்மாதிரியான இடம் பெயர்தலும் கொடுக்கல் வாங்கலும் தொடர்ந்த வருவதனால், இது ஏதும் விசேஷமாக, புதுமையான ஒன்றாக கருதப்படுவதில்லை. வாழ்க்கையின் கதியில் மாற்றங்களில் இது இயல்பான நிகழ்வாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வேடிக்கையாக இன்றைய நிகழ்வைச் சொல்லவேண்டும். இன்று தமிழில் வார்த்தைகளை அடுக்கி கவிதை எழுதுவதான பிரமையில் இருக்கும் செய்யுட்காரர்களில் பெரும்பாலோர், இன்றைய மலையாள கவிதைகளில் புழங்கும் சொற்களை தம் செய்யுட்களில் இடையிடையே கோர்த்து கேட்போரை தம் வார்த்தை ஜாலங்களால் மயக்கும் வித்தைகளில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில், ஒரு மலையாளம் பேசும் கவிஞர், சுகுமாரன், அந்த மலையாளக் கவிதைகளில் காணும் சொற்கூட்டங்களை பிரக்ஞை பூர்வமாகவே ஒதுக்கிவிடுகிறார். அவரது சாதாரண தமிழ். அந்த சாதாரண தமிழ், ஏதோ செயற்கையான அலங்காரங்களில் உயிர்ப்பின்றி மயங்கிக் கிடக்கும் சமூகத்தின் கூட்டு மனவியாதிக்கு ஒரு மாற்றாக வந்து சேர்கிறது. இது போன்ற ஒரு விசேஷமாகத்தான் திலீப் குமாரின் பெயரை குறிப்பிட்டுச் சொன்னேன்.

திலீப் குமார் தமிழில் பேசி எழுதும் ஒரு குஜராத்தி என்று சொல்வது அவருடைய எழுத்துக்களைப் பற்றியோ அவரது தனித்த ஆளுமை பற்றியோ எல்லவற்றையும் சொல்லிவிடுவதாகாது. அவருடைய ஆளுமையிலும், உணர்வுகளிலும், தமிழ் நாட்டின் பொதுஜன கலாச்சாரத்திலிருந்து அவரை அந்நியப்படுத்தும் கூறுகளும் உண்டு. அதே சமயம் அவர் பிறந்து வளர்ந்த ஏழை சமுதாயத்தோடு அவர் தன்னை இனங்காட்டிக் கொள்ளும் கூறுகளும் உண்டு. அவர் எழுத்துக்கள் விவரிக்கும் அடித்தள மத்திய தள ஏழை மக்களையே எடுத்துக் கொள்ளலாம். இந்த கூட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழும் பொறுக்கி வர்க்கமும் அடங்கும். இவர்களைப் பற்றிய திலீப் குமாரின் எழுத்துக்கள், இதே மக்கள் கூட்டத்தைப் பற்றி எழுதும் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களின், மற்ற வெகு ஜன பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மாறுபட்டது.

venkat_swaminathan (1)முற்போக்குகள் ஏழை மக்களைப் பற்றி எழுதுவது, தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தத்தின் பிரசாரத்திற்காகத் தான். அவர்கள் அந்த சித்தாந்தத்ததைத் தழுவியதும் கூட, ஒரு சௌகரியத்திற்காகவே அல்லாது, அதை அவர்கள் உறுதியோடு நம்புவதன் காரணத்தால் அல்ல. அவர்கள் எழுத்துக்களைப் பார்த்தால், அந்த ஏழை மக்களின் ஏழ்மை தொடர்வதில் தான் அவர்கள் எழுத்து வாழ்க்கையின் ஜீவிதம் அடங்கியிருப்பது போலும், மக்களது ஏழ்மை நீங்கத் தொடங்கினால், பின் எதை எழுதுவது என்ற சங்கடத்தில் ஆழ்ந்து விடுவார்கள் என்றும் தோன்றும். வேறு எவருக்காக இவர்கள் தம் கண்ணீரை உகுப்பார்கள், எந்த பொருளாதார அரசியல் அமைப்பை இந்த ஏழ்மைக்கு காரணமாக கண்டனம் செய்ய முடியும்? அவர்கள் ஏழ்மையில் தொடர்வதே இவர்கள் எழுத்து வாழ்க்கைக்கு சோறு போடும்.

முற்போக்குகள் அல்லாத வெகுஜன பிராபல்ய எழுத்தாளர்களுக்கோ, இது அவர்களது கதைகளுக்கு வெறும் காட்சி மாற்றம். ஏதோ ஒரு பின்னணி வேண்டும் அவர்களது காதல் கதைகளுக்கு. ராஜ் கபூர் 'அவாரா' வாகி காதல் பண்ணுவது போல. இதில் வெகு சுவாரஸ்யமான விஷயம், இந்த இரண்டு வகை எழுத்தாளர்களுக்கும், அவர்கள் எந்த மக்களைப் பற்றி எழுதுகிறார்களோ அவர்களைப் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதுதான். ஆனால், திலீப் குமார் அவர் எழுதும் மக்களிடையே பிறந்தவர், அவர்களை தம் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தவர். அவர்கள் ஏழைகளாகவும், சமூகத்தில் பின் தங்கியவர்களாகவும் இருப்பது தற்செயலான விஷயம் தான். வேடிக்கையாக, குஜராத்தி என்றால் தமிழர்கள் மனதில் எழும் பிம்பம் கொள்ளைப் பணக்காரனான வியாபாரி ஆகும். அதுவும் உண்மை தான்.

ஆனால், திலீப் குமார் சிறு பையனாக வாழ்ந்த வாழ்க்கை, எந்த ஏழைத் தமிழனதும் போலத்தான். அவர் பள்ளி சென்று படித்தது, மத்திய தர பள்ளிக் கல்வி வரை தான். அதற்குள் அவர் தந்தை காலமாகிவிட்டார். விதவையாகி விட்ட அவரது இளம் வயதுத் தாய், பரம்பரை குடும்ப ஆசாரத்தில் தோய்ந்தவர். சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயத்தில் எல்லா வெளி உலக சம்பந்தங்களையும் துண்டித்துக் கொண்டவர். அவ்வளவையும் மீறி தன் மகனை வளர்த்து ஆளாக்கினார். அந்த சிறு வயதிலேயே திலீப் என்னென்னவோ எடுபிடி வேளைகள் எல்லாம் செய்து தானும் சம்பாதிக்க ஆரம்பித்து, சுயமாக தன்னைப் படிப்பித்துக் கொண்டார். இம்மாதிரியான நிலையில் வளரும் பையன், சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பாமரத்தனமும் கூச்சலும் நிறைந்த தரமற்ற வெகுஜன கலாச்சாரத்துக்கு இரையாகாமல் தன் நுண்ணிய உணர்வுகளை காத்துக்கொண்டது எப்படி என்பது ஆச்சரியப்படவேண்டிய அதிசய விந்தை தான். ஸ்டாலினின் அவ்வளவு நீண்ட கால யதேச்சாதிகாரத்தையும் மீறி போரிஸ் பாஸ்டர்னக் போன்ற கவிஞர்களும், பீட்டர் கபீட்ஸா போன்ற பௌதீக விஞ்ஞானிகளும் எப்படி உயிர் வாழ்ந்தார்கள், தம்மைக் காத்துக் கொண்டார்கள்! தமிழ் வெகுஜனகலாச்சாரத்தின் அசுர பாமரத்தனம் அப்படி ஒன்றும் குறைந்த யதேச்சாதிகாரம் இல்லை.

திலீப் குமாரும் எழுதுகிறார். எப்போதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதே, அதனால் எழுதுகிறார். தான் எழுத்தாளராகவேண்டும் என்ற தூண்டுதலால் அல்ல. அவர் எழுதத்தொடங்கிய இது வரையான 15 வருடங்களில் அவர் எழுதிய சிறுகதைகள் அவ்வளவு தான் இருக்கும். அதுவும் அவர் எழுத்துக்கள் வெகு சிலரையே சேரும் சிறுபத்திரிகைகளில் தான் பிரசுரமாயின. அவர் தான் அறிந்த பழகிய மக்களைப்பற்றி, அன்றாடும் வாழ்க்கையில் உறவாடும் மனிதர்களைப் பற்றி - மத்திய தர, அல்லது ஏழை தமிழ், குஜராத்தி மக்கள் - எழுதுகிறார். சரி, ஆனால், அவர் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு, அவர் வெளிப்படுத்தும் உலகம் அவரதே. அவர்களை, அசட்டு உணர்வுகளின்றி, சித்தாந்தப் பூச்சுக்களின்றி, அவர்களது ஏழ்மை, இயலாத்தன்மையை கவர்ச்சிகரமாக்காமல், பழகிய மனிதர்களாகவே தான் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த தந்திரங்கள் ஏதும் செய்திருந்தால், அதைத் திரும்பத் திரும்பச் செய்திருந்தால், அவர் பிரபலமாகியிருப்பார். வெற்றியடைந்த எழுதாளராகியிருப்பார். அவர் அப்படி ஏதும் செய்யவில்லை.

'மூங்கில் குருத்து' என்ற தலைப்பை கொண்ட அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில், அத் தலைப்புக் கதையில் ஒர் கடைச் சிப்பந்தியின் ஒரு நாள் அவஸ்தையைச் சொல்கிறது. அவன் இறந்த தந்தையின் சிராத்த தினம் மறுநாள். அவனது தந்தைக்கு மிகவும் பிரியமானது மூங்கில் குருத்து. அது என்னவோ வெளியூரிலிருக்கும் கல்யாணமான அக்கா தந்தது வீட்டில் இருக்கிறது சிரார்த்தத்திற்கு என்று. ஆனால் சிராத்தத்திற்கு வேண்டிய அரிசி இன்னும் மற்ற பொருட்கள் எல்லாமே இனித்தான் வாங்கியாக வேண்டும். அதற்கு கடை முதலாளியிடம் ஒரு ரூபாய் அட்வான்ஸாகக் கேட்க, அவர் முதல் நாள் இரவு கடையை மூடுவதற்கு முன் வாடிக்கைக்காரர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கியை வசூல் செய்து அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டார். அந்த நாள் முழுதும் அந்த பாக்கியை வசூல் செய்ய அலைவதிலேயே கழிகிறது. அலைந்தது தான் மிச்சமே ஒழிய ஒரு பைசாகூட வசூல் ஆகவில்லை. வெறுங் கையோடு வீடு திரும்பியவனுக்கு அம்மாவிடம் திட்டு கிடைக்கிறது. ஆக, மறுநாள் அந்த வருட சிரார்த்தம் நடக்கப் போவதில்லை. அந்த வீட்டில் மூங்கில்குருத்து வருஷத்தில் ஒரு நாள் தான் சமைத்தாகிறது. அதுவும் அப்பாவுக்குப் பிடிக்கும் என்பதால் அவர் நினைவில் அவர் சிரார்த்த தினத்தன்று தான் சமைக்கப்படும். அது இருந்தும் பயனில்லாது போய்விட்டது. அதை இனி தூக்கி எறியத்தான் வேண்டும்.

இன்னொரு கதை. ஒரு முற்போக்கு எழுத்தாளர். அவரது கதைகளில் காணும் மனிதாபிமானம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது அனுதாபம், முற்போக்கு கருத்துக்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுபவர். அவருக்கும் கஷ்டகாலம். என்னென்னவோ நிறைய கெட்ட பழக்கங்கள். கையில் பணமிருப்பதில்லை. ஆகையால் அடிக்கடி தன் பணத்தேவைக்காக அறிந்தவர் அறியாதவர் எல்லோரிடமும் கையேந்திக் கடன் வாங்குவார். அவருடைய கதைகளைப் படித்து ரசிக்கும் ஒரு புதிய வாசகரின் பரிச்சயம் கிடைக்கவே அவரிடமும் தன் அப்போதைய கஞ்சா தேவைக்காகக் கடன் கேட்கிறார். ரசிகர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி வசமாகத் திட்டு வாங்கிக் கட்டிக்கொள்கிறார், மனிதாபிமான கதைகள் எழுதும் தன் அபிமான கதாசிரியரிடம்.

திலீப் குமார் யாரைம் குற்றம் சாட்டுவதில்லை. யாரையும் ஐயோ பாவம்! என்று இரக்கத்திற்கு உரியவராக்குவதில்லை. தீய வழிகளில் செல்கிறவர்களைக்கூட கீழ்நோக்கிப் பார்ப்பதில்லை. அப்படி ஏதும் சொல்வது அவர்கள் மனம் நோகச் செய்யும் என்று பயப்படுவதாகத் தோன்றுகிறது. அதைத் தான் பார்க்காதது போல இருந்து விடுகிறார். ஓவ்வொருவருக்கும் அவரவர் குறை பாடுகள், பலவீனங்கள் உண்டு. அவை வறுமையின் காரணமாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இந்த குறைபாடுகள் எப்போதும் இருக்கப்போவதில்லை. அவை பின்னால் நீங்கிவிடக்கூடும். ஆகவே அதை வைத்துக்கொண்டு கூச்சல் போடவேண்டாம், கோஷங்கள் இடவேண்டாம், அதை வைத்துக்கொண்டு தன் பிழைப்பை நடத்தவேண்டாம். எல்லாவற்றிலும் மோசமாக அவற்றைக் கதைபண்ணி கவர்ச்சியாக்க வேண்டாம். அவற்றோடு தான் வாழவேண்டும். கடைசியில் அடிப்படையான சக மனித உணர்வுகள் மேலெழும். கண்ணாடி என்ற கதையில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கின்றனர். ரகளை நடக்கிறது. கடைசியில் சமாதானம் ஆகி பிரிய தம்பதிகளாகவும் ஆகின்றனர். இந்த சங்கிலித் தொடர் மாறுவதில்லை.

திலீப் குமார் போன்ற எழுத்தாளர்கள் அபூர்வ ஜீவன்கள். தமிழ் எழுத்தைப் பொறுத்த மட்டிலாவது. தற்கால தமிழ் இலக்கியத்திற்கு இவர்கள் வளம் சேர்ப்பவர்கள்.


(ஆங்கிலம்) 'Crossing the Language Barriers'- Patriot, New Delhi, ஆகஸ்ட், 13, 1989

நன்றி : http://vesaamusings.blogspot.com/

*******

May 29, 2010

அன்பின் எழுத்துகள்-தேவதச்சன்

குருட்டு ஈ

ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப் devathachan3
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை
**


பரிசு

என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்
**


அன்பின் எழுத்துகள்

எங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை
யாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று
வேண்டும் எனக்கு. சின்ன
குருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு
உன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்
எங்கு இருக்கிறது அது
எங்கும் இல்லை
என் நினைவுகளில் அது வளரட்டும் என்று
கடந்து செல்லும் அந்திக் காற்றில்
விட்டுவிடச் செல்கிறேன்
என் உடலிலிருந்து நீண்டு செல்கிறது
உன் நிழல்
வெளியே வெளியே தெரிந்தாலும்
நிழல்கள்
ஒளிந்திருப்பதற்கு
உடலைத் தவிர வேறு இடம்
ஏது
**

தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை.
*****

குனிந்து
எடுத்தேன்
வேப்பம்பூ என்னும்
பிரம்மாண்டமான கோட்டையை
வேறு எந்த
நெடியும்
உள்ளே புகமுடியாத
வீடு
அது.
வாசனை என்னும்
சுரங்கத்தின்
வெளிவழி நோக்கி
ராட்சசக் கழுகொன்று, என்னை
கவ்விக் கொண்டு பறக்கிறது.
கோட்டைக்குள்
பார்க்கவென்று
எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன
காதலின்
நடமாட்டம் ஒன்றைத் தவிர.

*****

May 28, 2010

தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலிங்கம்

 

தீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்

நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் niram azintha
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்
ஒரு அடி கொடுப்போம்
வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்
தீட்டுக்கறை படிந்த
பூ அழிந்த சேலைகள்
பழைய துணிச்சந்தையில்
சகாயமாகக் கிடைக்கிறது
இச்சையைத் தணிக்க
இரவில் எப்படியும் இருட்டு வருகிறது
கால்நீட்டி தலைசாய்க்க
தார்விரித்த பிளாட்பாரம் இருக்கிறது
திறந்தவெளிக் காற்று
யாருக்குக் கிடைக்கும்
எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது
எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகிவிடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.

*

சரிசெய்

நீ கவனிக்கறதே இல்லை
உன்னுடைய சாட்டையில்
வார் இல்லை
முள் இல்லை
சரி செய் பிரயோகம் பண்ணு
அப்போது தான்
வசத்துக்கு வரும்
அதுகள்
உன் வசத்துக்கு வரும்.

சுய வேலைவாய்ப்பு

காலையில் எழும்ப வேண்டியது suyambu
ஒரு கோணியோடு
ஒரு தெருவு நடந்தால் போதும்
கோணி நிறைந்து விடும்
காகிதங்கள் ஏராளம் செலவாகின்றன
தலை நிமிர்ந்து வாழலாம்.

பஞ்சனை

எதுக்கு
நாக்கத் துருத்திக்கிட்டு வாரிய.......
அடிக்கிற சோலியெல்லாம
வச்சிக்கிடாதிங்க......... 
ஏங்கிட்ட
என்ன குத்தம் கண்டுட்டிய.......
ஒங்களுக்கு
நான் என்ன பணிவிட செய்யல
சொல்லுங்க.........
நீங்க தேடுன சம்பாத்யத்த
தின்னு அழிச்சிட்டனா..........
ஒங்களுக்கு தெரியாம்
எவனையும் கூட்டி வச்சிக்கிட்டு
வீட்டுக்குள்ள ஒறங்குதனா.........
ஒங்களுக்கு வாக்கப்பட்டு
ரொம்பத்தான்
நான் சொகத்த கண்டுட்டேன்...........
பஞ்சனைல
உக்கார வெச்சித்தான
எனக்கு நீங்க
சோறு போடுதிய.........
எஞ்சதுரத்த
சாறாப் பிழிஞ்சிதான
ஒரு வா தண்ணி குடிக்கறேன்...........
ஒங்க மருவாதிய
நீங்களாக் கெடுத்துக்கிடாதீக..........
எடுங்க கைய
மயித்த விடுதியளா என்ன......
அவள் வார்த்தைகளில்
ஆவேசம் பொங்கி
கரை புரண்டு வந்தது
அவள் வார்த்தைகளில்
நேர்மையும் சத்தியமும் இருந்தது
அவன் பிடி தளர்ந்தது
திருணைல கெடக்கான் அவன்
குடிச்சது
தின்னது
எல்லாத்தையும் கக்கிக்கிடடுக் கெடக்கான்
அவா
புருசனக் கழுவி
வீட்டக் கழுவி
எல்லாத்தையும்
சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்

முந்தித்தவம்

நீ ஒரு ஆம்பள
உனக்கு ஒரு பொண்டாட்டி......
புள்ளைகளுக்கு
கலைக்டர் வேல வேண்டாம்.......
ஒரு எடுபிடி வேல
வாங்கிக் கொடுக்க முடியாது
உன்னால.......
வீடு வித்து
வாயில போட்டாச்சி.......
தாலிநூல் வித்துத் தின்னாச்சி......
கம்மல் இருக்கா.....
மூக்குத்தி இருக்கா.....
வீட்டு வாடகைக்கு
பொம்பள ஜவாப் சொல்லணும்
விடிஞ்சாப் போற
அடஞ்சா வாற
மண்ணெண்ண அடுப்பில் சமச்சி
வீடு பூராவும் கரி
ஒரு பாவாடைக்கு
மாத்துப் பாவாட கெடையாது
முகத்துக்குப் பூச
செத்தியங்காணு
மஞ்சத்துண்டு இல்ல
நல்லாப் பொழைக்கறவா
சிரிக்கறா
ஒனக்கு
ஆக்கி அவிச்சி
ருசியா கொட்டணும்
கால் பெருவிரலை நீட்டி
ஒத்தச் செருப்பை
மெள்ள இழுத்தேன்
பாழாய்ப் போன ரப்பர்
வார் அறுந்திருக்கிறது
அவள் பின்கழுத்தில்
என் கண்கள்
செல்லமாய் விழுந்தன
அந்த மஞ்சக்கயிற்றில்
ஒரு ஊக்கு இருக்கு
கேக்கலாம்
கேளாமலேகூட
தென்னி எடுக்கலாம்
அவள் அழுவதைப் பார்க்க
இஷ்டம் இல்லை
செருப்பை விட்டுவிட்டு
நடக்கிறேன்.

தளபதி

என் பேரன் பேத்திகளுக்கு நான் தாத்தா
எங்க வூர் இளைஞர்களுக்கு நான் தான் தளபதி

மக்கள் கடல்

தூண்டில் போட்டும் கொல்கிறார்கள்
வலை போட்டும் பிடிக்கிறார்கள்


நன்றி : உயிர்மை (”நிறம் அழிந்த வண்ணத்துப்பூச்சிகள்” தொகுப்பிலிருந்து}

******

May 27, 2010

சருகுத் தோட்டம்-விக்ரமாதித்யன்

முன்னொருகாலத்தில் அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் அரண்மனையில் ஒரு பெரிய தோட்டம் போட்டிருந்தான். தோட்டக்காரர்களை அமர்த்திப் பூஞ்செடிகள், மலர்க்கொடிகளெல்லாம் நட்டு வளர்த்திருந்தான். பழமரங்கள் நிறைய வைத்திருந்தான். தனது தோட்டத்தைப்பற்றி அவன் மிகவும் பெருமை கொண்டிருந்தான்.

vikramathithyan-2 அரண்மனைக்கு யார்வந்தாலும் முதலில் அவர்கலைத் தோட்டத்துக்குத்தான் கூட்டிக்கொண்டு போய்க் காண்பிப்பான். அது அவனுக்கு சந்தோஷமான காரியம்.

ஒரு நாள் சாது ஒருவர் அரண்மனைக்கு வந்திருந்தார். அரசன் அவரை அன்புடன் வரவேற்று உபசாரம் செய்தான். தோட்டத்தை வந்து பார்க்கும்படி அழைத்தான்.

அந்த சாது தோட்டத்தைப் பார்த்துக்கொண்டே வந்தார். முகம் இறுக்கமானதுபோல இருந்தது. ஒன்றும் சொல்லவில்லை. விறுவிறுவென்று வெளியேறிப் போய்க் கொண்டிருந்த்தார். அரசன் அவர் பின்னாலேயே வந்து கேட்டான்.

'தோட்டம் எப்படியிருக்கிறது சுவாமிகளே ? '.

சாது மெளனமாக இருந்தார்.

'சொல்லுங்கள் சுவாமி ? '.

மறுபடியும் விசாரித்தான் மன்னன்.

அவர் சொன்னார்:

'நன்றாகத்தான் இருக்கிறது உன் தோட்டம். இப்படி ஒரு தோட்டத்தை என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை போ. இது என்ன தோட்டம். இலைகளும் சருகுகளும் குப்பையும் செத்தையும் இல்லாத தோட்டம் ? தோட்டமென்றால் இவை இல்லாமலா ? நீ பாட்டுக்கு வேலையாள்களுக்கு உத்தரவிட்டுக் கூட்டிப் பெருக்கித் துப்புரவாக வைத்திருக்கிறாய். அரங்கு போல அல்லவா இருக்கிறது. தோடாம் மாதிரியே இல்லையே. தோட்டத்தைத் தோட்டமாக வைத்திரு. முதலில் அதைத் தெரிந்துகொள். '

வேகமாக நடந்து வெளியே போயே போய்விட்டார்.

ஒரு வாரம் பத்து நாள் கழிந்தது. அரசன் தோட்டத்தை வந்து பார்த்தான். சாதுவைத் தேடிப்பிடித்துத் தாங்கித் தடுக்கி அழைத்துக்கொண்டு வந்து காட்டினான்.

'நல்லது .... நல்லது. சந்தோஷம். இதுதான் தோட்டம். இப்போதுதான் தோட்டமாக இருக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும். தோட்டமென்ன அரண்மனையா, இல்லை தர்பார் மண்டபமா ? சாதாரணமாக இருக்க வேண்டாம் ? '

'தோட்டமென்றால் அணில்பிள்ளைகள் லாந்தவேண்டும். குயில்கள் பாடிகொண்டிருக்கவேண்டும். நாகணவாய்ப்புள்கள் கத்திக் கொண்டிருக்க வேண்டும். தேனீக்கள் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கவேண்டும். மரங்கொத்திகள் டக்குடக்கென்ற சத்தம் கேட்டுகொண்டிருக்கவேண்டும். சிள்வண்டுகளின் ஓசை இருந்து கொண்டிருக்கவேண்டும். எஙேயாவது ஒரு மூலையில் பாம்புகூட கண்ணில்பட வேண்டும். இவ்வளவுமிருந்தால்தான் தோட்டம். இலைகளும் சருகுகளும் குப்பைகளும் செத்தைகளும் இல்லாது போனால் ஜீவராசிகள் எப்படி வந்து அண்டும் ? இயற்கையாக இருப்பதுதான் தோட்டம். படைகளின் ஒழுங்கும் கச்சிதமும் தோட்டத்துக்கு வேண்டாம். உன் தோட்டம் என்றென்றும் இயற்கையாக இருப்பதாக. இயற்கையோடு இருப்பதாக. இயற்கை வளம் கொழிப்பதாக. உனக்கு என் நல்லாசிகள்.. வருகிறேன் '

மகிழ்ச்சி பொங்க திரும்பிப் போனார் சாது.

**************

நமது தமிழ்க்கவிதை இரண்டாயிரம் ஆண்டு நீண்ட நெடிய மரபு உடையது. இதில் சங்க இலக்கியம்தான் பெரிய சிகரம். அடுத்து காவியங்கள். பிறகு தேவார திருவாசகமும் பாசுரங்களும். அப்புறம் சிற்றிலக்கியம். இவற்றின் தொடர்ச்சியாகத் தனிப்பாடல்கள், பாரதி.

உணர்வுத் தெறிப்புகளும் அனுபவவீச்சுகளுமாகச் சங்கக் கவிதைகள். கதையும் கருத்துமாக காவியங்கள். பண்ணோடு இசைந்த பாடல்களாக பக்தி இலக்கியம். பரணி, தூது, பள்ளு, குறவஞ்சி, உலா, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் என்றெல்லாம் பிரபந்தங்கள். வாழ்வின் சகல விஷ்யங்களையும் எழுதலாம் என்று நம்பிக்கைதரும் தனிப்பாடல்கள். இந்த மரபின் செழுமையை உள்வாங்கிக் கொண்ட பாரதியின் எளிய ஆனால் தனிச்சிறப்பு வாய்ந்த இசைப்பாடல்கள். மொழி தோன்றி ஒரு புலவன் எழுத வந்த இத்தனைகாலத்தில் இவ்வளவும். தமிழனின் எழுத்துவடுவப் பண்பாட்டுக் கொடை.

எனில் தமிழ்க்கவிதை தத்துவம் பேசுவதில்லை. வேதாந்தவிசாரம் செய்வதில்லை. காலம் வெளியென்றெல்லாம் கருத்துக் கொள்வதில்லை. கருத்தாக்கங்கள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. வாழ்வையே பேசுகிறது. வாழ்வின் சாரம்சத்திலேயே திளைக்கிறது. அனுபவங்களையே முன் வைக்கிறது. உணர்வுகளையே வெளிபடுத்துகிறது.

கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் மட்டுமே விதி விலக்காக தத்துவப்பாங்கு கொண்டிருக்கிறது. சைவசித்தாந்தத்தை விளக்கும் திருமந்திரம் அடிப்படையில் அறிவுவழிப்பட்டதாக இருப்பதனாலேயே அத்தகைய இயல்பு கொண்டிருக்கிறது. சித்தர் பாடல்களின் அடிநாதம் சைவசித்தாந்தம் என்பதோடு, அவற்றிலுள்ள வேகமிக்க வரிகள் மிகுந்த உணர்வுச் செறிவுள்ளவை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். திருவாசகத்தில் பெரிதும் அறிவுப்பாங்கான வரிகளோடு பக்திப்பரவசமான கவிதைகளும் உண்டு. திருக்குறள் அறநூல். அது அறிவுவழிப்பட்டது போல் அமைந்திருப்பது இயல்பேயாகும். இவைதவிர, தமிழ்க்கவிதை முற்றமுழுக்க உணர்வு நிலைப்பட்டதே.

முதல் தமிழ்க்கவிஞனிலிருந்து பாரதி வரை கவிதை மனசு சம்பந்தப்பட்டதென்றே எண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அனுபவங்களும் உணர்வுகளும் மட்டுமே கவிதையாகும் என்று ஓர்மை கொண்டிருந்திருக்கிறார்கள். கவிதையென்ற நுட்பமான ஊடகத்தில் வாழ்வைத்தான் சொல்ல முடியும் என்று கண்டுகொண்டிருக்கிறார்கள். வாழ்வைத்தான் சொல்லவேண்டும் என்று மனம் கொண்டிருந்தார்கள். வாழ்வு எனுபவங்களாலானது,உணர்வுகள் நிரம்பியது, கவிதையும் அப்படித்தான் என்று முடிவு கொண்டது தமிழ்மனம், தமிழ்மரபு, தமிழ்மண்.

சங்கப்பாடல்களை விடவா வடிவமேன்மை. யோசிக்கவே முடியாது. திருமந்திரத்தை விடவா கட்டமைப்பு. கிட்டவே போகமுடியாது. சித்தர் பாடல்களை விடவா விசாரம். நினைத்துப் பார்க்கவே முடியாது. பாடுபொருள் நல்ல வடிவத்தில் இசைந்திருப்பதே சங்கக்கவிதையின் உயர்வு, அதன் புற வடிவம் அல்ல. திரு மந்திரத்தின் கட்டமைப்புக்கு அதன் உள்ளீடு ஒரு முக்கிய காரணம்.

....

வேண்டாத அளவுக்கு நெருங்கமுடியாதபடிக்கு தமிழ்க்கவிதை எந்தகாலத்திலும் இறுக்கம் பண்ணிக்கொண்டதேயில்லை. அப்படி இறுக்கம் கொண்டிருக்குமெனில் அது எப்போதோ அழிந்துபட்டிருக்கும். சங்கக்கவிதைகளில் சிலபலவற்றில் தோன்றும் இறுக்கமும் உண்மையான இறுக்கம் அல்ல. கவிதை நுட்பம் அறிந்த மனம் செய்த மாயம் அது.

நன்றி: திண்ணை ( 1999 December 3)

******

May 26, 2010

ஞானப்பால் - ந. பிச்சமூர்த்தி

 

லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது.

அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை
நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் என்ற நினைப்பு
அவன் நெஞ்சில் தடித்தே இருந்தது. ‘அ’னா ‘ஆ’வன்னா தெரியாத கரிக்கட்டைக்குப்
பதினைந்து ரூபாய் சம்பளமும், சாப்பாடும், தினம் ஆறுபேருக்குச் சாப்பாடு
போட்டுச் சமாளிக்கும் அதிகாரமும் எல்லாருக்கும் இலேசில் கிடைத்துவிடுமா
என்ன? பிள்ளை குட்டி இருந்திருந்தாலாவது துரதிர்ஷ்டத்தைப் பற்றி நினைக்க
வேண்டி இருக்கும்; சத்திரத்து முதலியாரை வையவேண்டி இருக்கும்.

N.Pidchamoorthy தவசிப்பிள்ளையின் அதிருஷ்டம், அவன் ஒண்டிக்கட்டை முதலெடுப்பிலேயே முதலியாரை வாழ்த்திடும் வாய்ப்பாகவே அந்த வேலை அமைந்துவிட்டது. அதைத்
தவிர, வாழ்த்துவதற்கு அதில் இன்னும் பல வாய்ப்புகள் இருந்தன. போகப்போகத்தான் தெரிந்தது. சத்திரத்துக்கு வேண்டிய கறிகாய் சாமான்கள் வாங்குகிற பொறுப்பு அவனைச் சேர்ந்ததுதானே? அவன் முதலில்
யோக்கியனாகத்தான் இருந்தான். இருந்தாலும் கைக்கு உறையைப் போட்டுக் கொண்டு தேன் எடுக்க முடியுமா? கையில் ஒட்டிக்கொள்வதை நக்காமல்தான் இருக்க
முடியுமா? அவனுக்குத் தெரியாவிட்டாலும் சொல்லிக் கொடுக்க வதங்கிய கத்திரிக்காயும் , தேசல் படிக்கல்லும், தக்கைப் போட்ட எண்ணெய்ச் செம்பும், கறிகாய் கடைக்காரியும், மளிகை மாணிக்கம் செட்டியாரும் இருக்கும்பொழுது அவனால் என்ன செய்துவிட முடியும்? முதலாளியை வாழ்த்துவதற்கான ஆதாரங்கள் இதில் எல்லாம் ஏராளமாக இருந்தன.

சத்திரத்துக்குத் தவசிப்பிள்ளைதான் சர்வாதிகாரி. ஆகையால் சட்டமும் இல்லை,
நெறிகளும் இலலை. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்ப்பார்களா?
அங்கே வேலை செய்துக் கொண்டிருந்த ஆளுக்குத் தவசிப்பிள்ளை ஒருநாள் சீட்டைக்
கிழித்துவிட்டான். ஆனால் பாவம்! தவசிப்பிள்ளை பேரில் மட்டும் குற்றம்
சொல்லக்கூடாது. அதிருஷ்டம் வந்து பிடரியில் குந்திக்கொண்டு
கட்டளையிட்டால் நிறைவேற்ற வேண்டியதுதானே!.

ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு லிங்கங் கட்டி அங்கு வந்து சேர்ந்தான்.
வந்தவனைத் தவசிப் பிள்ளை ஒன்றும் கேட்கவில்லை. சத்திரத்துக்கு வந்த பிறகு
பெற்ற அனுபவத்தால் தவசிப்பிள்ளைக்கு ‘எக்ஸ்ரே” பார்வை அந்துவிட்டது. ஆனால்
அதன் உதவி இல்லாமலேயே தவசிப் பிள்ளையால் லிங்கங்கட்டியை எடை போட்டுவிட முடிந்துவிட்டது.

மழுக்கிய தலை, கழுத்திலே வெள்ளிப்பெட்டி மூடிய லிங்கம், இடுப்பில்
பழுப்பேறீய வேஷ்டி- நாலுமுழ நீளம், இருபத்தி நாளு அங்குல அகலம்.

லிங்கங்கட்டி தலையைத் தடவிக்கொண்டு நின்றானேயொழிய எதுவும் பேசவில்லை.
ஆனால் தவசிப்பிள்ளை பதில் சொல்லிவிட்டான்.

“சமையல் ஆன பிறகு சாப்பிடலாம். இப்போது எங்கே இருந்து எங்கே போறீங்க?”

”பண்டாரத்துக்கு ஊரேது, பேரேது, போக்கிடமேது? சோறு கண்டால் சொர்க்கம்.
ஒரு கவளம் சோறு இங்கே நெதம் கிடைச்சா இது தான் போக்கிடம். அதை இதைச்
செஞ்சிக்கிட்டுக் கிடந்துடுவேன்”

தவசிப் பிள்ளைக்கு ஒரே யோசனை. ஆளைப்பார்த்தால் சுமை தாங்கி மாதிரி
இருக்கிறான். எந்த வேலை வைத்தாலும் தாங்குவான்! சமையல் பாத்திரம்
விளக்குகிற காத்தானோடு தினம் போராட முடிகிறதா? அஞ்சு ரூபாய் சம்பளமும்,
மிச்சம் மீதம் தினம் சோறு கிடைக்கிறதே - அது போதாதாம்! தினம்
அடித்துக்கொள்கிறான்! சோறு கொடுத்தால் குழம்பில்லையா என்கிறான்: குழம்பு
கொடுத்தால் கறியில்லையா என்கிறான்: சோறு குழம்பு கறி கொடுத்தால்,
இவ்வள்வு தானோ என்கிறான்! இவன் வம்பே இல்லாமல் ஒழித்துவிட்டால்?
சுமைதாங்கிதான் வந்திருக்கிறான்! ஒரு கவளம் சோறு செலவு! ஐந்து ரூபாய்
மிச்சம்!

மறுநாள் காத்தான் சீட்டு முன்னறிவிப்பின்றிக் கிழிக்கப்பட்டது. லிங்கங்
கட்டிக்கு அந்தப் பதவி அளிக்கப்பட்டதென்ற விசயம் தெரியவே தெரியாது.
சோற்றுக்காக தினம் ஊர் ஊராய் அலையவேண்டாம்! ஒரு மணி நேரம் பாத்திரம்
தேய்த்துப் பண்டம் கழுவிக் கொடுத்தால் புண்ணியம்! நாவுக்கரசர் உழவாரப்படை
வைத்திருக்கவில்லையா? பெரிய அதிருஷ்டம் அடித்துவிட்டதாக
லிங்கங்கட்டிக்கு அதிக மகிழ்ச்சி. தவசிப்பிள்ளையும்  தனக்கு அதிருஷ்டம்
அடித்ததென்று நினைத்துக்கொண்டான்.

வந்த புதிதில் எல்லாமே நன்றாக இருந்தன. ஒரு கவளம் கேட்ட ஆளுக்கு இரண்டு
வேளையும் மூன்று கவளமும் கிடைத்துவிட்டால் மனம் துள்ளாதா? பாத்திரங்கள்
கரி போகத்தேய்க்கப்பெற்றுப் பளபளப்பாக இருந்தன. முனகாத நல்ல ஆள் கிடைப்பது
ஒரு வாய்ப்புத்தான். “சத்திரத்து வேலைக்குத்தான் புணையாம்! காத்தான் சாமான் தூக்க்கும் கூலிக்காரனல்லவாம்!” என்ன லூட்டி அடித்துக் கொண்டிருந்தான்! அப்பாடா என்றிருந்த தவசிப்பிள்ளைக்கு தினம் சாப்பிட்டுவிட்டுச் சத்திரத்துத் திண்ணையில் லிங்கங்கட்டி படுத்துக் கொண்டபோது , ஆயாடீ என்று சொல்லிக் கொண்டே ஆறுதலாகப் படுத்துக்கொண்டான் தவசிப்பிள்ளை.

அதோடு விசயம் போய்விடவில்லை சத்திரத்தில் வந்து போகிறவர்கள் லிங்கங்
கட்டியைப் பாராட்டாமல் போவதில்லை.

”நல்ல ஆளு! பக்திமான்! நாள் தவறாமல், மணி பிசகாமல் திருக்குளத்தில்
பல்லைத் தேய்த்துத் துணி துவைத்துக் குளித்துவிட்டு பட்டையாய்த்
திருநீறிட்டுக் கொண்டு கிழக்கே சூரியனைப் பார்த்துத் தவறாமல் செய்கிறாரே, அது ஒண்ணே போதும்! இந்த மாதிரி ஆளைப் பார்க்கறதே அபூர்வமாயிடுத்தே!” என்று வியப்படைவார்கள்.

ஆமாம்! இந்தக் கிரியைகளை லிங்கங் கட்டி அலட்சியப்படுத்துவதில்லை. அதற்கு
மேல் படிப்பு கிடிப்பு என்று லிங்கங்க் கட்டி தொந்தரவெதுவும் பட்டுக்கொள்வதில்லை “ஒருகால் சிவசிதம்பரம் என்று சொன்னால் இருக்காது
ஊழ்வினையே” என்று மட்டும், பேச்சு நடுவில் புகுத்துவான. அதை நம்பினானா
இல்லையா என்று கேட்டால் அவனுக்கே சொல்லத்தெரியாது. லிங்கங் கட்டி வெள்ளை
வேட்டிப் பண்டாரமானபோது சமய அறிவு ஒன்றையும் சம்பாதித்துக் கொள்ளவில்லை.
லிங்கத்தைக் கயிற்றில் கட்டிக் கழுத்தில் மாட்டிக்கொண்டு செய்யவேண்டிய
காரியங்களை எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட்டு, பசுபதியும் பரந்த உலகமும்
இருக்குமட்டும் கவலையில்லை, கிழக்கே போ என்றார்கள்.அன்று முதல் சொன்னபடி
செய்து கொண்டு வந்தானே ஒழிய, தன் கிரியைகளையும் மனத்தையும்
பிணைக்கவேண்டுமென்று அவனுக்கு தோன்றியதில்லை இரண்டும் ஒன்றிய செயல்நெறி காணவேண்டும் என்று துடித்ததில்லை.

எனவே சத்திரத்துக்கு வந்து போகிறவர்களில் யாராவது இரண்டணா நாலணா
கொடுத்தால், அதை மறுப்பதில்லை. மறுக்க வேண்டும் என்று தோன்றியதில்லை.
அதற்கு மாறாகக் காசு தேவையாக இருந்தால் கொஞ்சம் புதுக் காசாகக் கொடுங்கள்
என்று வாங்கிக்கொண்டு கெட்டியாக்  இடுப்பில் சொருகிக்கொள்வான்.

வந்த எட்டு ஒன்பது மாதங்களுக்குள் புது விளக்குமாறு தேய ஆரம்பித்துவிட்டது. லிங்கங்கட்டியின் பேரில் எவ்வித வஞ்சனையுமில்லை. தவசிப்பிள்ளையோ பெரிய பேர்வழி! நாளாக ஆக லிங்கங்கட்டியின் உணவில் ஒரு கவளம் இரண்டு கவளம் குறைய ஆரம்பித்தது. சிலநாள், கறியோ குழம்போ கூட இருக்காது. சத்திரத்துக்கு வந்தவர்கள் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டார்கள் போல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

அவனுக்கு ஆட்சேபனை இல்லை என்றாலும் அவன் வயிறு புகார் செய்தது. இரண்டொரு நாள் பல்லைக் கடித்துக்கொண்டிருந்தான். புண்யவான் தருமம்
பண்ணியிருக்கிறான்! ஒரு கவளம் குறைந்து போனால் என்ன பிரமாதம் என்று ஒரு
நாள் இரண்டு நாள் நினைத்துக் கொண்டான் முடியவில்லை. மூன்றாவது தினம்
முதல் சத்திரத்துச் சாப்பாட்டுக்கு பிறகு கருமாதி, கல்யாணம், மகேசுவர
பூஜை என்று கேள்விப்பட்டால், தவறாமல் அங்கும் போய்ச் சாப்பிடுவதென்று
வழக்கப்படுத்திக்கொண்டான். கொள்ளுத் தண்ணி ஊத்துவதாகக் கேள்விப்பட்டால்
கூட அங்கு போய் வாசனையாவது பார்த்துவிட்டு வந்தான்! அங்கெல்லாம் கூட
இரண்டணா ஓரணா கிடைத்தது.

லிங்கங் கட்டிக்குக் காசு கிடைக்கிறது என்று தெரிந்தவுடன்தான்
தவசிப்பிள்ளை தேய்பிறை மரபை உணவில் புகுத்த ஆரம்பித்தான். சத்திரத்தில்
பண்டாரத்துக்கு விருந்தா வைப்பார்கள்? எதோ புண்ணிய காரியத்தில் அப்படி
இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும்பொழுது லிங்கங் கட்டிக்கூட சகஜம்
தான் என்று ஒத்து ஊதிவிடுவான். ”வேண்டுமானால் ஏதாவது ஓட்டலில் வாங்கிச்
சாப்பிடு சாமியாரே!” என்று உபதேசம் செய்வான் தவசிப்பிள்ளை.

லிங்கங் கட்டிக்குக் காசு சேர்ந்துபோய்விட்ட்தென்று எப்படியோ தவசிப்பிள்ளை கணக்குப் பண்ணிவிட்டான். அதை எப்படியாவது கரைத்துவிட வேண்டுமென்ற விஷம எண்ணம் அவனுக்கு வந்து விட்டது.

தவசிப்பிள்ளையிடனிடத்தில் பணத்தை வைத்திரு என்று லிங்கங் கட்டி
கொடுத்திருந்தால் இந்த் விசம எண்ணம் தோன்றியிருக்குமா என்பது ரசமான
கேள்வி. ஆனால் விடை எளிது. நிச்சயமாக தோன்றியே இருக்காது. இதில் வந்த
கஷ்டமென்னவென்றால் பாலுக்குப் பூனையைக் காவல் வைக்கமுடியாது என்பதுதான்.
லிங்கங் கட்டி எதோ குருட்டுச் சாமர்த்தியத்துடன் சில்லறை அடகு பிடித்து
வந்த கிழவியிடம் இந்த பணத்தைக் கொடுத்து வைத்திருந்தான். கடவுள்
பொய்யாகப் போனால் கூட அந்தக் கிழவி பொய்யாக போகமாட்டாள் என்று அந்த
வட்டாரத்திலே அவளூக்கு நல்ல பேர்!.

ஆனால் இந்த இரகசியம் தவசிபிள்ளைக்குத் தெரியாது. திருட்டுப் பயல் என்று
கறுவிக்கொண்டே எப்போதும் போல் அரை வயிற்றுச் சோறு போட்டு முழு வேலையையும் வாங்கிக் கொண்டிருந்தான்.

தவசிப்பிள்ளைக்கு ஒரு யோசனை தோன்றிற்று.

“என்ன லிங்கங் கட்டி! உனக்குத்தான் பெண்டாட்டி இல்லியே!”

”பண்டாரமாச்சே!”

”அப்படின்னா, தொடுப்புக்கூட?”

“அதென்னங்க, நாக்கு அழுகிப்போயிடாது”

“கோவிச்சுக்காதே. ஒம் பணத்தைப் பின்னே என்ன செய்யறே?”

“பத்திரமா இருக்குங்க”

“நீ நின்னா நெடுஞ்சுவரு, விழுந்தா குட்டிச்சுவர். பெண்ணா பிள்ளையா பெண்டாட்டியா ? ஒண்ணும்தான் இல்லை. காலணாவுக்கு காராபூந்தி கூட வாங்கிச்
சாப்பிடமாட்டே. பணத்தைப் பத்திரமா வைச்சுட்டு என்ன பண்ணுவே?”

உள்ளபடியே லிங்கங்க் கட்டிக்குத் திகைப்பாய் போய்விட்டது. ஆமாம், பணத்தை
வைத்துக்கொண்டு என்ன பண்ணுகிறது?

“பின்னே எறிஞ்சிடலாமா?’

”அதுக்குச் சொல்லவில்லை. ஒரு நல்ல காரியம் சொல்றேன், யோசிச்சுப்பாரு”.

”ஓ!”

“கழுத்து லிங்கம் இருக்கில்லே?”

“ஆமாம்”

“இதைக் கவுத்தாலே கட்டிப் போட்டுக்கிட்டுக் கிடக்கிறியே! இருக்கிற பணத்துக்குப் பவுனைக் கிவுனை வாங்கிச் செயின் பண்ணி லிங்கத்தை அதில் கோத்துப்பிடேன். கழுத்துக்கும் அழகாயிருக்கும். லிங்கமும் பார்வையாயிருக்கும். திருக்குளத்திலே திருநீறும் தங்கச் செயின் லிங்கமுமாகக் கிழக்கே சூரியனைப் பார்த்துக்கொண்டு நிக்கறதைப் பார்த்தால் அசல் சிவப்பழம்பாங்க . நல்லா இருக்குமே?”

”என் கழுத்துக்கு என்னாத்துக்குங்க?”

“ஒன் கழுத்துக்கா செயின்? இல்லை இல்லை லிங்கத்துக்குச் செயின் செய்யச்
சொல்றேன். செயின் போட்ட லிங்கத்தை மடியிலே கட்டிக்கிறியா?

”இல்லை , இல்லே”.

”அப்படின்னா கழுத்திலேதானே போட்டுக்கணும்?”

”செஞ்சால் பாத்துக்குவாம்”என்று லிங்கங் கட்டி சொல்லிப் பேச்சை வெட்டி
விட்டுவிட்டான். தவசிப்பிள்ளையும் அதோடு போய்விட்டான்.

தென்னம் நெற்று சீக்கிரமாக முளைத்துவிடாது. கொஞ்சம் காலம் பிடிக்கும்.
அதுமாதிரி லிங்கங் கட்டி மனத்திலே போட்ட தென்னம் நெற்றும் மெதுவாக
முளைக்க ஆரம்பித்தது. கிழவி நல்லவள்தான் . ஆனால் வயசாயிடுச்சே! ஒரு
சமயத்தைப் போல ஒரு சமயம் இருக்குமா? ஆள் யாரும் தெரியவில்லையே!
தவசிப்பிள்ளை சொல்றது நல்ல யோசனைதான். லிங்கத்துக்கு செயின் பண்ணினால்
நல்லாத்தான் இருக்கும் என்றெல்லாம் யோசனை செய்துகொண்டே இருந்தான்.

இதற்குள் வயது ஒரு வருஷம் கூடிவிட்டது. புகையிலையைப் போலக் காய்ந்து வந்த
லிங்கங் கட்டி வெள்ளரிப்பழம் மாதிரி ஆகிவிட்டான்.

ஒருநாள் திடீரென்று ஆசாரியிடம் போய்த் தனக்குச் செயின் செய்ய எவ்வ்ளவு
பவுன் வேண்டுமென்று கேட்டான். ஆசாரிக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. “இந்த
வயதிலா கலியாணம் செய்துகொள்ளப்போகிறா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“இல்லை ,இந்த லிங்கத்துக்கு” என்று காட்டினதும் வியாபார ரீதியில் ஆசாரி
பேசத் தொடங்கிவிட்டான்.

“முக்கால்பவுனிலேருந்து செய்யலாம்.”

“அதுக்குக் குறைஞ்சி?”

“கூலி?”

”உனக்காகப் பதினைஞ்சு ரூபாய்.”

“என்னய்யா, முக்கால் பவுனுக்கு...”

“அதானய்யா - சின்னச் செயினுக்குப் பெரிய கூலி, பெரிய செயினுக்கு சின்னக்கூலி.
பெரிய செயினாவே லிங்கத்துக்குப் பண்ணிக் கட்டிக்கியேன்?”

”ஏதோப் பாத்துக் கூலி வாங்கிக்கோ அய்யா, பவுன் வாங்கியாறேன்” என்று
திரும்பி விட்டான்.

பதினைந்து நாள் கழித்துத் திருக்குளத்தில் நீராடிவிட்டுத் திறுநீரணிந்து
தங்க்ச் செயினும் லிங்கமும்  துலங்க, லிங்கக்கட்டி சத்திரத்துக்குத்
திரும்பி வந்தான்.

தவசிப்பில்ளை  திண்ணையில் ஏதோ சில்லறை வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தான். லிங்கங் கட்டியைப் பார்த்ததும் புதுமையாக இருந்தது. இன்னதென்று ஒரு நிமிசம் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது. “சபாஷ்! சபாஷ்! ரகசியமா
செஞ்சிட்டியே!” என்றான் சந்தோஷம் பொங்க .

“என்ன பிரமாத காரியம்! ஏதோ ஆண்டவனுக்கு உவப்பாயிருக்கேன்னு ..”

“நல்ல காரியம், நல்ல காரியம்” என்றான் தவசிப்பிள்ளை. கண்ணிலே படாத காசாக
வைத்துக்கொள்வதை விட்டுத் திருட்டுப் பயலை வருத்தி அழைப்பது போன்ற
காரியத்தைச் செய்துவிட்டானே இந்த ஆள் என்று நினைத்துக்கொண்டான். ஏன் இந்த
யோசனை சொன்னோமென்ற கழிவிரக்கத்தின் சாயல் கூடப் படர்ந்துவிடது.

செயின் போட்ட லிங்கங்கட்டி ஆகிவிட்டதற்காக அவன் ஒன்றும் மாறிவிடவில்லை.
வழக்கம் போல சத்திரத்துக் காரியங்களைப் பார்த்துக் கொண்டான். கழிவிரக்கம்
காட்டிய தவசிப் பிள்ளையும் மாறவில்லை. பண்டாரத்துக்குக் கொடுக்கிற
கவளத்தில் ஏற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.

இதற்குப் பிறகு நான்கு மாதம் இருக்கலாம். லிங்கங்கட்டிக்குத் திடீரென்று
ஒரு நினைப்பு வந்தது. “தம்பி! திருமுலைப்பால் உத்சவத்துக்குப்
போகனுமின்னு தோணுது. போயிட்டு ஒரு வாரத்திலே வந்திடறேன்” என்றான்
தவசிப்பிள்ளையிடம்.

“குடுத்து வச்சிருக்கணும். போயிட்டுவா “.

“பாத்திரம் எல்லாம் விளக்கணுமே?”

“யாரையாவது வச்சுப் பார்த்துக்கிடறேன்.”

மறுநாள் சீர்காழிக்கு லிங்கங்கட்டி புறப்பட்டு விட்டான். ஒரு வாரம் லிங்கங் கட்டியில்லாமல் பொழுதை ஓட்ட வேண்டுமே என்ற கவலைகொண்ட தவசிப்
பிள்ளை படுக்க போகுமுன் ஒரு நாளாச்சு என்ற கணக்கிட்டுக் கொண்டு
படுத்தான். ஒவ்வொரு தினமும் ரப்பர் மிட்டாய் மாதிரி நீண்டது.

நான்காம் நாள் காலை தவசிப் பிள்ளை காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தான்.
முற்றிலும் எதிர்பாராமல் லிங்கங் கட்டி எதிரே வந்து நின்றான்.
தவசிப்பிள்ளைக்குக் கனவா என்று கூடத்தோன்றி விட்டது.

“என்ன, லிங்கங் கட்டியா?”

“பின்னே?”

”அதுக்குள்ளார வந்துட்டியே?” என்று கேட்டுக் கொண்டே லிங்கங் கட்டியை
மேலும் கீழும் பார்த்தான். கைம்பெண் கழுத்துப் போலிருந்தது.

“என்ன பண்டாரம் , லிங்கம் சங்கிலி ஒண்ணையும் காணோமே?”

”ஆமாம்”

“எங்கே?”

“ஏமாந்து போயிட்டேன்”

”எப்படிப் போச்சு?”

”அதாங்க ஞானப்பால்”

“விளக்கமாகச் சொன்னா அல்ல தெரியும்?”

“திருவிழா பாத்தூட்டு முந்தா நாள் ராத்திரி சத்திரத்து வாசல்லே குந்திக்கிட்டு இருந்தேன். வேறு யாராரோ திண்ணையிலே வாழைத் தோலைச் சீவிப்போட்டாமாதிரி தலைமாடு கால்மாடா விழுந்து கிடந்தாங்க. “திண்ணையிலே யாரோ ரெண்டு ஆள் என்னவோ பதி பசு பாசம் இன்னு சத்தம் போட்டுப் பேசிக்கிட்டு இருந்தாங்க. நடுவிலே அதிலே ஒரு ஆள் பாடினாரு. கொஞ்சநேரத்துக்கெலாம்  பேச்சு அடங்கிப்போய், பாட்டாப் பாட ஆரம்பிச்சுட்டாரு. ரொம்ப நல்லாக் குயில் கணக்காப் பாடினாரு. அப்படியே
சாஞ்சுக்கிட்டிருந்தவன் அதிலே சொக்கிப் போயிட்டேன்..

      “ மாங்காய்ப் பாலுண்டு
         மலைமேலிருப்போர்க்குத்
         தேங்காய்ப்ப்பால் ஏதுக்கடீ- குதம்பாய்”

இன்னு ஒரு பாட்டு பாடினாரு . அப்படியே மெய்மறந்தே போயிட்டேன். பொறவு,
பாட்டே காதில் விழல்லை.

“அப்புறம் நெனைப்பு வந்தப்பொ கண்ணைத் துறந்து பார்த்தேன். கிழக்கு வெளுத்துக் கிட்டிருந்தது. திருவிழா அலுப்பும் அந்தப்பாட்டும்  என்னை அப்படி அமட்டிவிட்டது. நல்ல தூக்கம்ன்னு நினைத்துக் கிட்டபோது ஒரு திகில்  பிறந்தது. கழுத்தென்னவோ லேசாக இருந்தது. தொட்டுத் தடவிப் பார்த்தேன். லிங்கமா செயினா ஒண்ணையும் காணோம். யாரோ தூங்கிக்கொண்டிருந்தபொழுது அடிச்சிக்கிட்டுப் பொயிட்டார்கள்!
சத்திரத்துத் திண்ணையில் இருந்தவர்களை ஒவ்வொருவராகப் பார்த்தேன். திருடி
இருப்பார்கள் என்று அவர்களைப் பார்த்தால்  தோணவில்லை.

“என்ன பாக்குறீங்க பண்டாரம்” என்று  திண்ணையில் இருந்தவர்கள் விசாரித்தார்கள்.

நான் நடந்ததைச் சொன்னேன். அவர்கள் சிரித்தார்கள்”

“சாமி எடுத்துக்கிட்டுப் போயிருக்கும் ஞானப்பால் குடுக்க வேணாம்?” என்றார்கள்.

“எனக்குச் சுருக்கென்று பட்டது. ‘லிங்கத்துக்குப் போய் மட்டி மாதிரி தங்கச் சங்கிலி செஞ்சேனே? பைத்தியக்காரத்தனம்! என்று நினைத்துக்கொண்டே ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.”

“ஞானப்பால் கிடைச்சுப் போச்சு”

”அப்புறம்?”

“நான் போறேன்”

“எங்கே?”

“இப்படியே நீளமா”

“பின்னே ஏன் வந்தே?”

“சம்பளங் கொடுத்து வேறு ஆள் பாத்து வச்சுக்குங்கன்னு சொல்ல வந்தேன்”:

“அடப்பாவி! நெசமாகவே ஞானப்பால் கிடைச்சிட்டுதா?”

லிங்கங் கட்டி பதில் சொல்லவில்லை. மழுங்கிய தலையைத் தடவி கொண்டே தெருவில் இறங்கிவிட்டான்.

******

May 25, 2010

புகை நடுவில்- எஸ்.ராமகிருஷ்ணன்

 

கோணங்கி

பின்னிரவில் பெய்யும் மழையை படுக்கையில் இருந்தபடியே கேட்டுக்கொண்டிருக்க மட்டும்தான் முடியும். வெளியில் எழுந்து போய்க் காண முடியாது. எப்போதாவது உறக்கத்திலிருந்து எழுந்து பால்கனியில் வந்து நின்றால், இருளைக் கரைத்துக்கொண்டு யாருமற்ற தெருவில் மழை தனியே நடந்துபோய்க்கொண்டு இருக்கும் அபூர்வ காட்சியைக் காண முடியும்.

பால்யத்தின் பொழுதுகளும் பின்னிரவு மழைக் காட்சிகள்தான்.

konangi2 திடீரென, எப்போதோ உடன்படித்த சிறுவர்களின் முகம் கனவில் ததும்பத் துவங்குகிறது. பெயர்கூட மறந்துபோன வகுப்புத் தோழன், காக்கி டிராயரும் வெள்ளைச் சட்டையும் திருநீறு பூசிய முகமுமாய் கனவின் படிகளில் வந்து அமர்ந்திருக்கிறான். என்ன சொல்வ தற்காக அவன் கனவில் பிரவேசிக்கிறான் என்று தெரியாது. ஆனால், அடுத்த நாள் முழுவதும் மனம் பிரிவின் துக்கத்தில் ஊறிக்கொண்டே இருக்கும். ஏதேதோ நகரங்களில் சுற்றியலையும்போது, இது போன்று வெவ்வேறு வயதில் நடந்தவை கனவுகளாக வந்திருக்கின்றன.

கடந்த ஆண்டின் மழைக்காலத்தில் மதிய பொழுதில் எனக்கொரு போன் வந்தது. போனில் பேசிய பெண் மிகவும் தயக்கமான குரலில், நான் எஸ்.ராமகிருஷ்ணன் தானா என்று நாலைந்து முறை கேட்டு ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள்.அவள் பெயர் சித்ரா என்றும், என்னோடு பள்ளியில் படித்தவள் என்றும் அவள் நினைவுகூர்ந்தபோதும் அவளது முகத்தை என்னால் நினைவு படுத்திப் பார்க்க முடியவில்லை.

அவள் திருத்தணியில் வசிப்பதாகவும் என்னைச் சந்திக்க வேண்டும் என்றும் சொன்னாள். எப்போது வேண்டு மானாலும் வரலாம் என்று சொல்லிய பிறகு, ‘எனக்கு ஒரு உதவி செய்யணும். உன்னால முடிஞ்சா நீ செய்வாயா?’ என்று மிக உரிமையுடன் கேட்டாள். ‘கட்டாயம் செய்கிறேன்’ என்று அவளை வீட்டுக்கு வருமாறு அழைத்தேன்.

அன்று மாலையில், அவள் தன் இருபது வயது மகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நேரில் பார்த்தபோதும், மனதில் அதற்கு முன்பு அவளை பார்த்திருந்த நினைவின் அடையாளங்களே இல்லை. அவளின் தலை பாதி நரைத்துப் போயிருந்தது. முகத்துக்குப் பொருந்தாத கண்ணாடி அணிந்திருந்தாள். ஏதோ நேற்றுதான் பள்ளியிலிருந்து பிரிந்து சென்றதைப் போல, கடகடவென ஏதோ கேட்கத் தொடங்கினாள்.

அவள் எந்த வகுப்பில் எப்போது படித்திருப்பாள் என்று நானாக நினைவில் தேடிக் கொண்டேயிருந்தேன். சில நேரம் அவள் பரிச்சயமானவள் போல் தோன்றினாள். சில வேளை யோசிக்கையில் முற்றிலும் அறியாதவளாக இருந்தாள். அவளின் மகன், விருப்பமில்லாத ஒரு இடத்துக்குத் தன்னை அழைத்துக் கொண்டு வந்திருப்பதைப் போல தலைகவிழ்ந்தபடியே உட்கார்ந்திருந்தான்.

அவளது கையில் சிறிய மஞ்சள் பை இருந்தது. அவள், தான் காதிகிராஃப்டில் வேலை செய்வதாகவும், தனக்கு மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள், இவன் ஒருவன் மட்டும்தான் பையன் என்றும், அவளின் கணவன் அம்பத்தூரில் வெல்டராக வேலை பார்ப்பதாக வும் சொன்னாள். இரண்டு நிமிஷங் களுக்கு ஒரு முறை, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத புகை மூட்டம் உருவானது.

பிறகு, அவள் தன் பையில் இருந்து திருமண அழைப்பிதழ் ஒன்றை எடுத்து கையோடு கொண்டு வந்திருந்த சிறிய தட்டில் வைத்து, தன் மகளுக்குத் திருமணம் என்று சொல்லி நீட்டினாள்.

நான் திருமணப் பத்திரிகையை வாங்கிப் பிரித்துக்கொண்டு இருந்த போது அவள் தயக்கத்தோடு திரும்பவும் கேட்டாள்… ‘‘உன்கிட்டே ஒரு உதவி கேட்கணும்னு சொன்னேனில்லே… கேட்கக் கூச்சமா இருக்கு’’ என்றாள். ‘‘பரவாயில்லை, சொல்லு!’’ என்றதும், வார்த்தைகளை மென்று விழுங்கிய படியே சொன்னாள்… ÔÔஎன் பொண்ணு கல்யாணத்துக்கு நாலு பேர்கிட்டே தானம் கேட்டு பணம் வாங்கி தாலி செய்றேன்னு கோயில்ல வேண்டிட்டு இருக்கேன். அவளுக்குக் கல்யாண தோஷம். அதுக்குத்தான் இந்த வேண்டு தல். ஆறாயிரம் ரூபாய் வேணும். சொந்தக்காரங்க யார்கிட்டேயும் கேட்டு வாங்கக் கூடாது. எனக்கு ஃப்ரெண்ட்ஸ்னு யாரு இருக்கா… அப்போதான் உன் நினைப்பு வந்துச்சு. சரி, கேட்டுப் பார்க்க லாமேனு உன் போன் நம்பரை பத்திரிகை ஆபீஸ்ல கேட்டு வாங்கினேன்!ÕÕ

‘‘அதனால என்ன… நான் தருகிறேன்’’ என்று சொன்னதும் அவள் முகத்தில் லேசான வெட்க மும், சந்தோஷமும் துளிர்த்தது. என்னுடைய அறையில் இருந்த புத்தகங்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், ‘‘எப்பவும் புத்தகம் படிச்சுட்டே இருப்பியா?’’ என்று கேட்டாள். நான் இல்லை என்று தலையாட்டினேன். பிறகு, அவளுக்கும் என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் அற்றுப் போனதைப் போல மௌனமாக என்னைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினாள். அந்த சிரிப்பின் நுனியில் சொல்ல முடியாத வேதனை படிந்திருப்பதைக் காண முடிந்தது.

பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் தந்தபோது அவள் கைகள் லேசாக நடுங்குவதைக் கவனித்தேன். நான் கட்டாயம் திருமணத்துக்கு வர வேண்டும் என்று நாலைந்து முறை கேட்டுக் கொண்டாள். பிறகு அவள் பையில் இருந்து பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினாள்.

அது 1979&ல் திருப்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த போட்டோவில் இரண்டாவது வரிசையில் நிற்கும் சிறுவனைக் காட்டி, ‘‘நீ எப்படி இருந் திருக்கே, பாரு’’ என்றாள். நான் மௌனமாகச் சிரித் துக்கொண்டேன். ‘‘இந்த போட்டோ வில் நான் எங்கே இருக்கேன் என்று உன்னால் சொல்ல முடிகிறதா?’’ என்று கேட்டாள்.

நான் தயக்கத் துடன் சொன்னேன்… ‘‘திருப்பத்தூரில் நான் படித்ததே இல்லை. இந்த போட்டோவில் இருப்பது நான் இல்லை.’’ அவள் முகம் சட்டென மாறியது. பதற்றம் அடைந்தவள் போல சொன்னாள்… ‘‘இல்லை, எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. திருப்பத்தூர்ல கோயில் பக்கம் உங்க வீடு இருந்தது. உங்க அக்கா பேருகூட சுந்தரிதானே?’’

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எனக்கு அக்காவே கிடையாது; வேறு யாரையோ நினைத் துக்கொண்டு பேசு வதாகச் சொன்னேன். அவள் என்ன செய்வதெனத் தெரியாமல், ‘‘பேருகூட ராமகிருஷ்ணன்னு போட்டிருக்கு’’ என்றாள். ‘‘அது நானில்லை’’ என்று உறுதியாகச் சொன்னதும், அவள் சேலை நுனியால் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டவளாக,

‘‘அப்போ அது வேறு யாரோவா? ஸாரி சார்! என்கூடப் படிச்சவர்னு நினைச்சுத் தப்புப் பண்ணிட்டேன்!’’ என்றபடி மஞ்சள் பைக்குள் போட்டிருந்த பணத்தை அவசரமாக எடுத்து என்னிடமே திரும்பக் கொடுத்தாள்.

‘‘பரவாயில்லை, வெச்சுக்கோங்க’’ என்றபோதும் கேட்க வில்லை. ‘‘இல்லை சார்! உங்க போட்டோவைப் பார்த்தப்ப தெரிஞ்ச முகம் மாதிரி இருந்துச்சு. நான் ஏமாத்தணும்னு செய்யலை. என்னை மன்னிச்சிருங்க’’ என்றாள்.

நான் பணத்தை வாங்க மறுத்தவனாக, ‘‘அதனால் என்ன, இப்போயிருந்து நாம ஃப்ரெண்டாக ஆகிக்கொள்ளலாம் தானே?’’ என்றேன். அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தரையை வெறித்துப் பார்த்தபடி இருந்தவள், பணத்தை எனது மேஜையில் வைத்துவிட்டு, அதன் மேல் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்தாள்.

‘‘உங்களோட படிக்காம போனதுக்காக நான் உண்மையில் இப்போதான் வருத்தப்படுறேன்’’ என்றேன். கைகளைப் பிசைந்துகொண்டே இருந்தவள், பிறகு அந்தப் பள்ளிக்கூட புகைப்படத்தை வாங்கிக்கொண்டு, தான் புறப்படுவதாகக் கிளம்பினாள். எப்படி அவளைச் சமாதானம் செய்வது என்று தெரிய வில்லை. வாசல் வரை போனவள் திரும்பவும் உள்ளே வந்து, ‘‘என்னை மன்னிச்சிடுங்க சார்! உங்களைச் சிரமப் படுத்திட்டேன். நீங்க கல்யாணத்துக்கு அவசியம் வரணும்’’ என்று சொல்லியபடி விடுவிடுவென நடந்து போனாள். அவளோடு படிக்கவில்லை என்ற உண்மையை எதற்காகச் சொன்னேன் என்று என் மீதே கோபமாக இருந்தது.

பால்யத்தின் புகைமூட்டத்தில் நாம காண்பது எல்லாம் அழிந்த சித்திரங்கள் தானா? அந்தப் பெண்ணின் திருமணப் பத்திரிகையைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்ச்சி மேலோங்கிக் கொண்டே இருந்தது. உலகில் மிகக் குறைவான நிமிடங்களில் தோன்றி மறைந்த நட்பு இதுவாகத்தான் இருக்கக் கூடுமோ? என்ன உறவு இது!

பால்யத்தின் அழியாத சித்திரங்களை தனது கதைகள் எங்கும் படரவிட்ட தமிழின் அரிய கதைசொல்லி ‘கோணங்கி’. அவரது கோப்பம்மாள் என்ற கதை மிக நுட்பமாகவும் கவித்துவமாகவும் எழுதப்பட்ட அரிய கதையாகும். நவீன தமிழ் இலக்கிய உலகில் மிகவும் முக்கியமான சிறுகதையாசிரியரான கோணங்கி, தனக்கென தனியான புனைவுலகை உருவாக்கியவர்.

கோப்பம்மாள் என்ற சலவைத் தொழிலாளி வீட்டுச் சிறுமியின் வாழ்வை விவரிக்கிறது இக்கதை. கோப்பம்மாளுக்குப் பள்ளிப் படிப்பைவிடவும் வீட்டு வேலைகள் அதிகம் இருந்தன. வீடு வீடாகப் போய் ஊர்க்கஞ்சி எடுக்க வேண்டும். தெருவில் திரியும் கழுதைகளை வீடு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். பள்ளிக்குப் போகும்போது கூடவே தம்பியைத் தூக்கிக்கொண்டு போக வேண்டும். அவனோ பள்ளியில் ஆய் இருந்து வைத்துவிடுவான். அதற்காகத் தினமும் வாத்தியாரிடமும் கோப்பம்மாள் அடிபட நேரிடும். இப்படியிருந்த அவளது வாழ்வில், அவளோடு படிக்கும் மாரியப்பன் என்ற சிறுவன் மட்டுமே மிக நட்பாக இருந்தான்.

அவனையும் கோப்பம்மாளையும் ஒரு நாள் சீருடை அணிந்து வராததற்காக ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேற்றி விடுகிறார். தன்னிடம் ஊதாச் சட்டைகளைத் தவிர வேறு சட்டைகளே இல்லை, அந்தச் சட்டைகளும்கூட, இறந்துபோன தனது அய்யாவின் சட்டையை வெட்டித் தைத்தவைதான் என்கிறான் மாரியப்பன். அதிலிருந்து இருவருக்குள்ளும் பெயர் தெரியாத சிநேகம் ஒன்று ஏற்பட்டுவிடுகிறது.

அவள் வீடு வீடாகப்போய் ஊர்க்கஞ்சி வாங்கி வரும்போது, அதில் ஒரு கவளம் அள்ளி உண்பான் மாரியப்பன். அதை ரசித்தபடியே கோப்பம்மாளே இன்னொரு கவளம் அள்ளித் தருவாள். இப்படியிருந்த அவள், ஒரு நாள் ருதுவாகிறாள். அது முதல் அவள் வெளியே வருவது இல்லை.

மாரியப்பனும் படிப்பைத் துறந்து ஆடு மேய்க்கப் போய்விடுகிறான். அதன்பிறகு கோப்பம்மாளுக்குப் பதில் அவளது அம்மா கஞ்சி எடுக்க வருகிறாள். கோப்பம்மாளைப் பார்ப்பதே அரிதாகிவிடுகிறது. பின்னொரு நாள் அவளைப் பெண் கேட்டு தெற்கிலிருந்து ஆள் வருகிறார்கள். ஊரைவிட்டுப் போவதற்குள் ஒரு தடவையாவது மாரி யப்பனைப் பார்க்க வேண்டும் என்று கோப்பம்மாள் ஆசைப்படுகிறாள். ஆனால், பார்க்க முடியவேயில்லை.

என்றோ துவைப்பதற்காக எடுத்து வைத்திருந்த மாரியப்பனின் பழைய ஊதா சட்டை மட்டும் கந்தல் கந்தலாகி அழுக்கு மூடடையில் கிடக்கிறது. உப்பரித்துப்போன அந்தச் சட்டையை மார்போடு அணைத்துக்கொண்டு யாரும் கேட்டுவிடாமல் கேவிக் கேவி அழுகிறாள் கோப்பமாள். பிறகு திருமணம் முடிந்து போகும்போது, கொண்டு போகவேண்டிய மஞ்சள் பையில், அந்த ஊதா சட்டையையும் எடுத்து வைத்துக்கொள்கிறாள். அதை இருள்பூச்சிகள் பார்த்தபடி சத்தமிட்டுக் கொண்டிருப்பதோடு கதை முடிகிறது.

பிராயத்தின் நினைவுகள் மழை விட்டும் மரக்கிளைகளில் இருந்து சொட்டிக்கொண்டு இருக்கும் மழை நீரைப்போல உதிர்ந்துகொண்டுதான் இருக்கும்போலும்! என்னோடு படிக் காமலே எனக்கு மிகவும் நெருக்க மாகிப்போன சித்ராவின் நட்புக்காக இப்போதும் மனதில் மெல்லிய ஏக்கம் படர்ந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன உறவில் அவளோடு நான் பேசுவது என்றுதான் தெரியவில்லை.

தமிழ் நவீன கதையுலகின் தனித்துவமான குரல் கோணங்கி யுடையது. கவிதைக்கு மிக நெருக்க மாக உள்ள உரைநடையும், அரூபங்களைமொழியில் சாத்திய மாக்கிக் காட்டும் விந்தையும் கொண்டது இவரது கதையுலகம். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர்.

மதினிமார்களின் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

இவரது பாழி, பிதுரா என்ற இரண்டு நாவல்களும் தமிழ் நாவலுக்கென்ற மரபான தளங்களை தவிர்த்து, புதிய கதை சொல்லும் முறையில் எழுதப்பட்டு மிகுந்த கவனம் பெற்றவை.

47 வயதாகும் முழுநேர எழுத்தாளரான கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிக்கிறார். சுதந்திர போரட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மதுரகவி பாஸ்கரதாசின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

******

நன்றி: கதாவிலாசம்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்