Showing posts with label பி.எஸ்.ராமையா. Show all posts
Showing posts with label பி.எஸ்.ராமையா. Show all posts

Mar 17, 2017

மடித்தாள் பட்டி - பி. எஸ். ராமையா

மதுரையிலிருந்து பழனிக்குப்போகும் சாலையிலிருந்து நாலைந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குப் போய் விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். ஒரு காலத்தில் காட்டோடையாக இருந்த அந்த நொடிப் பாதையில், வண்டி அடிக்கொரு தரம் குலுங்கி விழுந்து ஆடி அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி, "இடது காளைக்கு ஒரு லாடம் விழுந்திருக்குதுங்க மாடு நொண்டுது” என்றான்.

"இந்த நடுக் காட்டிலே என்ன செய்ய முடியும்? மெள்ள வெள்ளைப் பட்டிக்குப் போய்விடுவோம்.அங்கே லாடம் கட்டிக் கொள்ளலாம்” என்றேன்.

"அதுவரை தாங்காதுங்க மாடு வீணாப் போயிடும். கொஞ்சம் இறங்கி அப்படி அந்த ஆலமரத்தடியிலே குந்திக்குங்க ஒரு நொடியிலே மடித்தாள் பட்டிக்குப் போயி லாடம் கட்டிக்கிட்டு வந்துடறேன்" என்றான்வண்டிக்காரன்.

அவன் குரலில் மாட்டின் பரிதாப நிலை பிரதிபலித்தது. சலிப்புடன்
வண்டியிலிருந்து குதித்தேன்.வண்டிக்காரன் மாடுகளை அவிழ்த்து வண்டியை ஒருபுறம் தள்ளி நிறுத்தினான். ஒரு மாட்டை மாத்திரம் அங்கேயே அருகிலிருந்த ஒரு மரத்தின் வேரில் கட்டி விட்டு, இன்னொரு மாட்டைஓட்டிக்கொண்டு புறப்பட்டான்.

பங்குனி மாதத்து வெயில் மூளையுருகும்படி  தாக்கிக்கொண்டிருந்தது. அந்த முரட்டு வழியில் வண்டியின் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து உடலெல்லாம் நோவெடுத்தது. இந்த இடத்தில் லாடம் விழுந்து, மாடு நொண்டும்படி நேர்ந்த அதிருஷ்டத்தைப் பற்றி எரிச்சலுடன் முனு முணுத்துக் கொண்டே வண்டிக்காரன் குறிப்பிட்ட ஆலமரத்தை நோக்கி நடந்தேன். அது வண்டிப்பாதையிலிருந்து கொஞ்சம் உயர்ந்த மட்டத்திலிருந்தது.ஆகையால், நான் இருந்த இடத்திலிருந்து வெறும் மரம் மாத்திரம்தான் தெரிந்தது.

ஆனால் மரத்தடிக்குப்போனவுடன் என்மனத்திலிருந்த எரிச்சலெல்லாம் ஒரே வியப்பாக மாறிவிட்டது. ஆகா! எவ்வளவு கம்பீரமான காட்சி!

அந்த இடத்தைச்சுற்றி மூன்று திசைகளில் அடுக்கடுக்காகப் பல குன்றுகள் அமைந்திருந்தன. ஒன்று வெறும் கருங்கல்லாலேயே அமைந்தது. சாதாரணக் காட்டுக் கள்ளிச் செடிக்குக்கூட இடம் கொடுக்கமறுக்கும் கரடு.

இன்னொன்றின் மேல் அங்கும் இங்குமாக முளைத்திருந்த புதர்ச் செடிகள் மற்றொன்று கொஞ்ச தூரத்தில் நீலப் பச்சை ஆடையணிந்து அந்தவெயிலில் அழகு பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு புறத்தில் இரண்டு குன்றுகளுக்கிடையில் மாரிக் காலத்தில் குளமாக வேஷம் போடும் ஒரு பெரிய பள்ளத்தாக்கு அதில் அடர்த்தியாகக் கருவேலம் செடிகளும், மரங்களும் வளர்ந்து நிறைந்திருந்தன. இந்தக்குளத்தின் மூன்றாவது திசையில்தான் அந்த நீலப்பச்சைமலை நின்றுகொண்டிருந்தது.

ஆலமரத்திற்கு மேற்கே கொஞ்சம்தள்ளி ஒரு பெரிய கிணறு இருந்தது. அதற்குக் கருங்கல்லால் கரை கட்டி உள்ளே இறங்கப் படிகளும் அமைக்கப்பட்டிருந்தன. கிணற்றையடுத்து ஒரு மரத்தடியில் ஒரு சிறிய காட்டுக் கோயில் மண் சாந்து வைத்துக் கருங்கற்களால் கட்டியது.ஒரே ஒர் அறைகொண்டது.கோயிலின் முன்புறச்சுவரின்மேல், இருமூலைகளிலும், ஆணும்பெண்ணுமாக இரண்டு மண் சிலைகள் நிற்க வைக்கப்பட்டிருந்தன. கோயிலை அடுத்திருந்த மரத்திலிருந்து இரும்புச் சங்கிலியில் கட்டிய ஒரு பெரிய வெண்கலமணி தொங்கிக்கொண்டிருந்தது. அந்த மரத்தைச் சுற்றி அங்கங்கே அடுப்பு மூட்டி எரித்த அடையாளமாக மும்மூன்று கரி ஏறிய கற்கள் கிடந்தன.

அந்த இடத்தின் கம்பீரம் நிறைந்த வனப்பில் ஈடுபட்டுச் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டு நின்றவன், “முருகா" என்று யாரோ உரக்கச்சொல்லியதைக் கேட்டுத்திரும்பினேன்.

கிணற்றுக்குள்ளிருந்து ஒரு பண்டாரம் கப்பரையில் ஜலம் நிறைத்துக்கொண்டு ஏறி வந்துகொண்டிருந்தார். அறையில் கோவணம். மேலே உடலை மறைத்துப்போர்த்திய ஒருகாவித்துணி, மழ மழவென்று சிரைத்த தலை, நெற்றியிலும் உடலிலும் பளிச்சென்று பூசிய திருநீறு. கழுத்திலே காவித் துணிக்கு மேல் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் ருத்திராட்ச மாலை. வலது கையில் தண்ணிர்நிறைந்ததிருவோடு இடதுகையில் ஒரு முறுக்குத்திடி.

பண்டாரம் படியேறி வெளியில் வந்து திருவோட்டைச் சூரியனுக்குக் காட்டுவது போலத் தூக்கிப்பிடித்து, முருகா! என்று ஒரு தரம் பலமாக உச்சரித்தார். பிறகு ஒருநிமிஷம் கண்களை மூடித் துதிக்கும் பாவனையில் நின்றார். கண்ணைத் திறந்து இன்னொரு தரம்,“முருகா" என்று சொல்லிவிட்டு, நாலைந்துமிடறு தண்ணீர் குடித்தார். மீதித் தண்ணீரைக் கால்களில் ஊற்றிக்கொண்டு என்னை நோக்கிவந்தார்.

யாரோ சோம்பேறிப் பண்டாரமென்ற அலட்சியத்துடன் நின்றேன். ஆனால் அருகில்வரவர அவர் முகத்திலிருந்த தனிக்களை என் உள்ளத்தைக்கவர்ந்தது. சாமுத்திரிகா லட்சணப்படிபார்த்தால் அதை ஓர் அழகான முகமென்று சொல்லமுடியாது. எங்கள் வண்டி வந்த சாலையைவிடக்கரடுமுரடாகத் தோன்றியது. ஆனால் அந்த முரட்டு அமைப்பிலே ஒரு விசேஷக்கவர்ச்சி இருந்தது.உள்ளத்திலிருந்து பொங்கி வந்து முகத்தில் பரவி ஒளி வீசும் ஓர் அதிசய சக்தியின் கவர்ச்சி. கண்கொட்டாமல் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டுநின்றேன்.

பண்டாரம் என் அருகில் வந்து ஏற இறங்கப்பார்த்துவிட்டு "கோவிலிலே பூசைபோடவந்தீர்களா, ஆண்டவனே."என்றார்.

நான், "இல்லை, செம்பட்டிக்குப்போகிறேன்: திடீரென்று ஒரு மாட்டுக்குலாடம் விழுந்துநொண்டஆரம்பித்துவிட்டது.வண்டிக் காரன் லாடம் கட்ட மடித்தாள் பட்டிக்குப் போயிருக்கிறான். நீங்கள்தான்கோவில்பூசாரியா” என்றேன்.

பண்டாரம் கோவிலை ஒரு தரம் திரும்பிப் பார்த்துவிட்டு, "இல்லை. ஊர் சுற்றும் பரதேசிப் பண்டாரம்" என்று சொல்லி விட்டுமேலே நடக்க ஆரம்பித்தார்.

வண்டிக்காரன் வரும் வரை அவரைப் பேச்சுத் துணைக்காவது நிறுத்திக்கொள்ளலாமே என்ற எண்ணம் எழுந்தது என் மனத்தில், "ஸ்வாமி இது என்னகோவில் தெரியுமா?" என்றேன்.

பண்டாரம் நின்று திரும்பி, "மடித்தாளம்மன் கோவில்; அந்தக்கோவில் கதையைக் கேட்க ஆசையுண்டாஆண்டவனே.” என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தார்.

ஆவலுடன்,"சொல்லுங்கள்"என்றவன்.அவர் கண்குறிப்பை அறிந்து மரத்தடியில் ஒரு புறம் உட்கார்ந்தேன். பண்டாரம் திருவோட்டையும் முறுக்குத் தடியையும் அருகில் வைத்துக் கொண்டு உட்கார்ந்துசொல்ல ஆரம்பித்தார்.

"நீங்கள் அருகில் போய்ப் பார்த்தீர்களா கோவிலை? இல்லையா? உள்ளே இருக்கும் தெய்வத்திற்குப் பெயர் மடித்தாளம் மன். இந்தக்கோவிலினால்தான் பக்கத்துக்கிராமத்திற்கு மடித்தாள் பட்டி என்று பெயர் வந்தது.

"பேய் பிசாசுகளை அடக்குவதில் ரொம்ப சக்தியுள்ள தெய்வம் என்பது கிராம ஜனங்களின் நம்பிக்கை, பேய் பிடித்த பெண்களை இங்கே கொண்டுவந்து ஆடவிட்டுப் பொங்கலிட்டுப் பூசைபோட்டால் பேய் பறந்து போய்விடுமாம். அது போனதற்கு அடையாளமாக அந்த மரத்தில் ஆணி அடிப்பார்கள்.

"ஆண்டவனே! மனிதன் குணத்தில் உயரும்போது அவனிடம் தெய்வீகம் பிறக்கிறது. அவனைத் தெய்வாம்சம் என்று வணங்குவதிலே தவறில்லை. ஆனால் பாருங்கள். ஆண்டவனே காலம் போகப்போக அவனே தெய்வமாகிவிடுகிறான். சிலசமயங்களிலே, நல்லபடியாக மக்களை உயர்த்தும் தெய்வநிலையிலிருந்து விழுந்து, அவர்களைப் பயமுறுத்திப் பலிகேட்கும் காட்டேரியாகவும் மாறிவிடுகிறான். அப்படி மாறிய ஒரு தெய்வத்தின் கோவில்தான் இது.

"வருகிற மன்மத வருஷம் பங்குனிக்குச் சரியாக முன்னூறு வருஷமாகும் இந்தக் கோவில் கட்டி என்ன எண்ணுகிறீர்கள்? நடப்பது பார்த்திப பங்குனி சரியாகப் பத்துவருஷம் இருக்கிறது மன்மத பங்குனிக்கு.

"அப்போது மதுரையிலே திருமலைநாயக்கர்,ஆண்டுகொண் டிருந்தார். அவருடைய கடைசிக் காலத்தில் விஜயநகர ராஜ்யம் சீர்குலைந்து போயிற்று. அதையெல்லாம் படித்திருப்பீர்களே? அந்தச் சமயத்தில் மைசூர் ராஜ்யத்தில் கந்தர்வ ராச உடையார் என்பவர் ஆண்டு கொண்டிருந்தார். மதுரைநாயக்கருக்கும், மைசூர் உடையாருக்கும் விரோதம் ஏற்பட்டுவிட்டது. மைசூர் அரசர் மதுரைமேல் படைகளை அனுப்பிவிட்டார்.

"அந்தப் படை முதலில் சத்திய மங்கலம் பிராந்தியத்தைப் பிடித்துக்கொண்டது. அப்போது திருமலைநாயக்கர் உடல்நலம் குன்றிப்படுத்த படுக்கையாக இருந்தார். அவருடையதம்பிகுமார முத்து நாயக்கன் படைகள் திரட்டுவதாகச் சொல்லிக் கொண்டிருந்ததை நம்பியிருந்து விட்டார். ஆனால் குமாரமுத்து நாயக்கனுக்குத் தீரமும் இல்லை, திறமையும், மைசூர்ப்படைகளை எதிர்க்க ஓர் ஏற்பாடும்செய்யவில்லை.

“சத்திய மங்கலத்தைப் பிடித்தபோது எதிர்ப்பு இல்லாமல் போகவே மைசூர்த் தளபதிக்கு ரொம்ப தைரியம் வந்து விட்டது. படைகளை நடத்திக் கொண்டே மடமடவென்று மதுரைக்கருகிலேயே வந்துவிட்டான் தலை நகருக்கே ஆபத்து வந்து விட்ட தென்பதைக் கண்டவுடன்தான் திருமலை நாயக்கர் விழித்துக் கொண்டார். உடனே மறவச் சீமைக்கு அதிபதியான ரகுநாத சேதுபதிக்கு உதவி கோரி ஆளனுப்பினார். சேதுபதி மந்திரத்தால் வரவழைப்பதுபோல ஒரு பெரும்படையைத் திரட்டிக்கொண்டு வந்துவிட்டார். நாயக்க மன்னரும் அவசரமாக ஒரு படை திரட்டினார்.இரண்டு படைகளும் சேர்ந்து மைசூர்ப்படைகளை எதிர்த்தன. எதிரிகள் பின்வாங்கி ஓட்டமெடுத்தார்கள்.

"சேதுபதி, படைகளுடன் எதிரிகளைத் துரத்திக் கொண்டு போனார். மைசூர்ப் படைகள் பின்வாங்கி அதோ தெரிகிறதே அந்தக் குளம், அங்கே வந்து தங்கினார்கள். அந்த இடம் இயற்கையாக மூன்று புறமும் குன்றுகள் சூழ்ந்துகோட்டைபோல அமைந்திருக்கிறதல்லவா? அதைப் பயன்படுத்திக் கொண்டு, மைசூரிலிருந்து உதவி வரும்வரையில் எதிர்த்துநிற்கவழிசெய்து கொண்டான்.அந்தத்தளபதி துரத்திக்கொண்டுவந்த சேதுபதியின் படைகள் கிழக்கே ஒரு காத துரத்தில் கூடாரமடித்தார்கள்.அவர்கள் துரத்திக் கொண்டு வந்த விறுவிறுப்புடனேயே தாக்கியிருந்தால் எதிரிகளைப் பஞ்சாகப் பறக்கவிட்டிருக்கலாம். ஏனோ அப்படி நடக்கவில்லை. இருதரப்பாருக்கும் கொஞ்சம் களைப்பாறவும், அணிகளைத் திருத்தியமைக்கவும் நேரம் கிடைத்தது.

“சுமார் பத்து நாள்வரை இரண்டு படைகளும் காத தூரத்தி லேயே ஒதுங்கி இருந்தன. பத்தாம் நாள், மைசூரிலிருந்து புதிய படைகள் வந்திருப்பதாகச் சேதுபதிக்குச் செய்தி எட்டியது. எவ்வளவு படைகள் வந்திருக்கின்றன; அவற்றை எப்படி உபயோகிக்கப்போகிறார்கள் அவர்களே தாக்குவார்களா என்பன போன்ற தகவல்களை உளவறிந்து கொண்டுதான் மேலே தம் திட்டத்தை வகுக்கவேண்டுமென்று முடிவு செய்தார்.சேதுபதி.

“உளவறிவதில் நிபுணர்கள் பலர் அவரிடம் இருந்தார்கள். அந்தக்கலையில் சூரர்கள். ஆனால் அவர்களையெல்லாம் அனுப்பாமல், ரகுநாத சேதுபதி, தாமே மாறு வேஷத்தில் புறப்பட்டார். அவர் அப்படிப் புறப்பட்டுப்போனது அவருடைய படையாட்களுக்கே தெரியாது.

"அந்தக்காலத்தில் அதோ இருக்கிறதே. வண்டிப்பாதை அது ஒரு காட்டோடையாக இருந்தது. இந்த மடித்தாள் பட்டி அப்போது நல்ல செழிப்பான கிராமம். பத்துப் பதினைந்து மச்சு வீடுகளும் உண்டு. இந்த எல்லை போர்க்களமாக மாறியவுடன் கிராமத்து மக்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். மைசூர்க்காரர்கள் வந்த பார்த்து யாருமில்லாததால் ஊரை அப்படியே விட்டு விட்டார்கள்.

“ஓடிப்போன கிராம மக்களில் கள்ளிமுத்தன் என்று ஒர் அம்பலகாரன் இருந்தான்.கிராமத்தில் பெரிய பணக்காரன்.அவன் ஊரைவிட்டு ஓடிய அவசரத்தில்தம் சொத்தையெல்லாம் வீட்டின் முற்றத்தில் புதைத்துவைத்துவிட்டுப் போய்விட்டான். பத்துநாளாக இரண்டு படைகளும் கை கலக்காமலிருக்கவே எப்படியாவது புதைத்த பொருளை மீட்டுக் கொண்டு போய்விடுவதென்ற உறுதியுடன்,சேதுபதி மாறுவேஷத்தில் புறப்பட்ட அதே இரவில் அவனும் புறப்பட்டு வந்தான். தானும் கூட வருவேனென்று பிடிவாதம் செய்து, அவன் மனைவி மடிச்சியாச்சியும் அவனுடன் வந்தாள். இருவரும் இருளின் போர்வையில் மறைந்து வந்து வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். இருளிலேயே அவசரமாகத் தங்கள் புதையலைத் தோண்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

"சேதுபதி அந்தப் பக்கம் வந்தபோது அவர்கள் வீட்டிற்குள் தோண்டும் சத்தம் கேட்டது.சந்தேகப்பட்டுச்சுவரேறி முற்றத்தில் இறங்கினார். அம்பலகாரன் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தான். சேதுபதி அவன் பயத்தைத் தெளிவிக்கச் செய்த முயற்சியெல்லாம் பலிக்காமல் போகவே,தான் யாரென்பதைவெளியிடவேண்டியது அவசியமாகிவிட்டது.

அவர் சேதுபதிமகாராஜா என்பதையறிந்தபிறகுதான்.அம்பல காரன் ஒய்ந்தான். புருஷனும் மனைவியும் அவர் காலில் விழுந்து கும்பிட்டார்கள்.அவருடைய வீர வெற்றிகளைப் பற்றிக்கேள்விப் பட்டிருந்த மடிச்சியாச்சி அவரை ஒரு தெய்வீக புருஷனாகவே நினைத்திருந்தாள்.

"சேதுபதி, தாம் மேற்கொண்டு வந்த வேலையை விளக்கி, 'அம்பலகாரனிடம் இந்தப் பிரதேசத்தின் அமைப்பு, எதிரிப் படைகளின் இருப்பு ஆகியவற்றைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். அவர் புறப்படத் தயாரானபோது மடிச்சியாச்சி,  'மகாராஜா இந்த ஏழை சொல்லைக் கேட்க வேண்டும். எதிரிப் படைகளுக்குள்ளே நீங்கள் தனியாகப்போவது சரியில்லையென்று எனக்குப் படுகிறது. உத்தரவு கொடுத்தால் இவரே போய் என்ன விவரம் வேண்டுமானாலும் தெரிந்து கொண்டு வந்துவிடுவார். என்றாள்.

"அம்பலகாரனும் உற்சாகத்துடன்,'ஆம் மகாராஜா' மைசூர்க் காரர்களுக்குக் கள்ளில் ரொம்பப் பற்றுதல், நான் போய் இங்கே கள்ளிருப்பதாகச் சொல்லி எதிரிகளில் ஓரிருவரை அழைத்துக் கொண்டுவருகிறேன். உள்ளே கொண்டுவந்து கட்டிவைத்து நமக்கு வேண்டியதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்றான்.

"இந்தத்திட்டத்துக்குச் சேதுபதி எப்படி இணங்கினார், ஏன் இணங்கினார் என்று யாரால் சொல்ல முடியும் இணங்கிவிட்டார். அம்பலகாரன் புறப்பட்டுப்போனான். மடிச்சியாச்சி மகாராஜாவை வீட்டுக்குள் அழைத்துச்சென்று விளக்கேற்றி உட்கார வைத்தாள்.
"அம்பலகாரன் வீட்டிலிருந்து புறப்பட்டபோது சரியாகத் தானிருந்தான். ஆனால் போகும் வழியில் சூழ்ந்திருந்த இருளில் ஆட்சிபுரிந்தபேய்களின் குணங்கள் அவன் நெஞ்சிலும் ஆட்சிபுரிய ஆரம்பித்து விட்டன. சேதுபதிக்கு உதவி செய்வதில் கிடைக்கும் சன்மானம் எவ்வளவு இருக்கும்? ஆனால் எதிரி தளபதியிடம் சேதுபதியையே பிடித்துக்கொடுப்பதாகச்சொன்னால் ஏராளமான சன்மானம் கிடைக்கக்கூடுமல்லவா? இந்த எண்ணத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள அவனிடம் சக்தி இல்லை. தன்னைக் கண்டு அவன் போட்ட பயக்கூச்சலைக் கொண்டே சேதுபதி இதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால்..!

“எதிரிப்படைகளின் முன் எல்லையை அடைந்தவுடனேயே பல படைவீரர்கள் வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். தன்னை அவர்களுடைய தளபதியிடம் அழைத்துச்செல்லும்படி கேட்டுக்கொண்டான்.

“தளபதியிடம் போனவுடன் தனக்குத் தாராளமாகச் சன்மானம்கொடுத்தால்,சேதுபதியையேபிடித்துக்கொடுப்பதாகச் சொன்னான். அவன் கேட்குமளவு பொன்னாகவே கொடுப்பதாக வாக்களித்தான் தளபதி அவனுடன் பொறுக்கியெடுத்த ஐம்பது வீரர்களை அனுப்பினால் சேதுபதியைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவதாகச் சொன்னான். அம்பலகாரன், மைசூர்க்காரர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை.

"அவர் இருக்குமிடத்தைச் சொல்லிவிட்டு நீ இங்கேயே காவலில் இருக்க வேண்டும் என் ஆட்கள் கொண்டு வந்தவுடன் தான் உன்னைப் போகவிடுவேன்” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

"அவர்கள் சொல்லும் வழியில் போனாலல்லாமல்தான் உயிருடன் கூடத் தப்பமுடியாது என்பது தெளிவாகிவிட்டது அம்பலகாரனுக்கு எப்படியானாலென்ன நமக்கு வேண்டியது உளவுக்கூலி பொன்தானே என்று அவர்கள் நிபந்தனைக்கு உடன்பட்டு காட்டோடைக்குக் கிழக்கேயிருக்கும் கிராமத்தில் தெற்குக் கோடியிலிருந்து இரண்டாவது வீட்டிலிருக்கிறார். தனியாகத்தானிருக்கிறார்” என்று சொல்லிவிட்டான்.

“தளபதி பொறுக்காக நூறு வீரர்களைத் திரட்டி அனுப்பினான். அவர்கள் திரும்பிவரும்வரை கவனித்துக்கொள்ளும்படி, அம்பலகாரனை இரண்டுவீரர்களிடம் ஒப்படைத்தான்.

“மைசூர் வீரர்கள் வந்து கிராமத்தைச் சூழ்ந்து கொண் டார்கள். அம்பலகாரனை எதிர்பார்த்துக் காத்திருந்த சேதுபதிக்குக் குறளிசொல்வதுபோல ஏதோ கோளாறு நேர்ந்திருக்கிறதென்று மனத்திலே பட்டு விட்டது. ஆனால் போனவன் துரோகம் செய்திருக்கக்கூடுமென்று அவர் சந்தேகிக்கவே இல்லை.

"மடிச்சியாச்சியிடம், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறதென்று எனக்குப்படுகிறது. நாம் உடனே இங்கிருந்து போய்விடவேண்டும். உன்னைத் தனியாக விட்டுவிட்டுப் போக முடியாது. என்னுடன் வந்துவிடு, உன்னை மறுபடி உன் கணவனிடம் சேர்க்க வழி செய்கிறேன்.புறப்படு” என்றார்.

"ஆனால் அவர்கள் தப்புவதற்குச் சமயமே இல்லை என்பது அடுத்த கணமே தெளிவாகிவிட்டது. எதிரி வீரர்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அவர்களில் ஒருவன் சிலரைப் பின்புறமாக முற்றத்தில் ஏறிக் குதிக்க உத்தரவிட்டது உள்ளே கேட்டது.

"மடிச்சியாச்சிநடுநடுங்கிப்போய்விட்டாள்.தங்களால்தான் அந்த வீர தெய்வத்துக்கு ஆபத்து வந்துவிட்டது என்ற எண்ணம் மனத்தில் ஓங்கிவிட்டது.

"ஆண்டவனே! இந்த பயம் என்கிற குணம் ரொம்ப அதிசயமானது. அதுவே ஒருவனைப் புழுவிலும் புழுவாக மாற்றிவிடுகிறது: இன்னொருவனை வீராதி வீரனாக்கிவிடுகிறது. மற்றொருவனை அமரனாக்கிவிடுகிறது. பயம்.அழிக்கும் சக்தி அதிலிருந்து கற்பனை செய்தும் காண முடியாத துணிச்சலும், தியாகமும் பிறப்பது எவ்வளவு பெரியஅதிசயம்!

"மடிச்சியாச்சியைப் பிடித்த பயம் ஒரே நொடியில் அவளை தெய்வப் பெண்ணாக மாற்றிவிட்டது. அவளிடம் இயற்கையிலே இருந்த தாய்மைதான் பொங்கி எழுந்திருக்க வேண்டும். சேதுபதியைத் தன் சொந்த மகனாக வரித்துக் கொண்ட அந்தத்தாய், அடுத்த கணம். அன்னை பராசக்தியின் ஒர் அவதாரமாகிவிட்டாள்.
"ஒரே கணத்தில் அந்தக்கூடத்துக்காட்சியை மாற்றி அமைத் தாள்.ஒருபக்கத்தில் கிடந்தபாயைக்கொண்டுவந்து நடுக்கூடத்தில்
விரித்தாள். முற்றத்தில் தோண்டிப் போட்டிருந்த மண்ணில் கொஞ்சம்அள்ளிக்கொண்டுவந்தாள்பானையிலிருந்ததண்ணிரில் மண்ணைக் கலந்து சேதுபதியின் நெற்றியிலும், கன்னங்களிலும், மூக்கின்மேலும்பூசினாள்.பாயின்மேல் உட்கார்ந்துசேதுபதியைத் தன் மார் மேல் சாய்த்துக்கொண்டு மகாராஜா, நீங்கள்தான் என் கணவர். உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று ரகசியமாகச் சொல்லிவிட்டு, உரத்த குரலில், 'என் சாமியில்லே! கொஞ்சம் தூங்குங்க. உடம்பு நெருப்பாக கொதிக்குதே காளியாத்தா என் தாலிக் கவுத்தைக் காப்பாத்திக் குடு தாயே! ஒனக்கு ரெண்டு கடா வாங்கிவெட்டச்சொல்றேன் என்று பிரலாபிக்க ஆரம்பித்தாள்.

“வீரர்கள் முற்றத்துக்குள் ஏறிக்குதித்து உள்ளே வந்தார்கள். ஒருவன் வாசல் கதவைத் திறந்துவிட அங்கிருந்தவர்களும் வந்து கூடத்திலிருந்த இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். சிலர் வீட்டின் மற்றப்பகுதிகளில் புகுந்து தேட ஆரம்பித்தார்கள்.

"சேதுபதிரொம்பத்திறமையுடன் நாடகமாடினார்.அவர் எழ முயலுவதும், ஆச்சி அவரை இழுத்து மார்பின் மேல் சாத்திக் கொண்டு, சும்மா இருங்க என் ராசா என் சாமியில்லே! ஐயா, உங்களுக்கெல்லாம் புண்ணியமுண்டு. என் வீட்டுக்காரருக்கு ஏதாவது மருந்து குடுத்துக் காப்பாத்துங்கையா காளியாத்தா! எனக்குத்தாலிப்பிச்சைபோடுதாயே என்றகூவியதுவந்தவர்களைத் திகைத்து நிற்கச் செய்துவிட்டது.

மைசூர் வீரர்களும் நம்ம ஜனங்கள்தானே? தன் கணவனைத் தவிர வேறு ஒர் ஆண்பிள்ளையை ஒருத்திதன் மார்பின்மேலேயே சாத்திக் கொள்வாளா! அதுவும் காளியாத்தாளிடம் தாலிப்பிச்சை கேட்கிறாள்.ஆகையால், அவர்கள் சேதுபதியையும் ஆச்சியையும் நிஜமான கணவனும் மனைவியும் என்றே நம்பிவிட்டார்கள்.

அந்த வீட்டின் இதரப் பகுதிகளிலும் அக்கம் பக்கத்திலும் தேடிய ஆட்கள் வெறும் கையுடன் திரும்பி வந்தார்கள். அதன் பிறகுதான் அவர்களை நடத்திவந்த வீரன், ஆச்சியிடம்கேட்டான்: "ஏய் உண்மையைச் சொல்லிவிடு; இங்கே சேதுபதி வந்தாராமே, எங்கே அவர்? ஏமாற்ற முயன்றால் இருவரையும் துண்டம் துண்டமாகவெட்டிஎறிந்துவிடுவோம் என்றான்.

"ஆச்சி கண்ணிருடன், அப்படியாவது என் கஷ்டத்தை முடிச்சிடுங்க. பத்து நாளாச்சு நாங்க வெயிலைப் பாத்து. பயந்து கிட்டு எலிங்கமாதிரி இப்படிப் பதுங்கிக்கிட்டுக் கெடக்கிறோம். அஞ்சுநாளாச்சு இவரு சோறு தண்ணிபாத்து. நீங்கசொல்ற ஆளை நான் சொப்பனத்திலே கூடப் பாத்ததில்லே. நீங்க கொளந்தை குட்டிங்களோடே நல்லா இருப்பீங்க. உங்க பொஞ்சாதிங்கதாலி கெட்டியாயிருக்கும். எங்க ரெண்டு பேரையும் ஒரே அடியாக் கொன்னு போட்டுடுங்க என்று படபடவென்று பேசினாள்.

“அவள் பேச்சின் முடிவில் சேதுபதி ஒரு தடவை முனகித் தலையைப் புரட்டினார். ஆச்சி தலையைப் பிடித்துத் தடவி விட்டு, ஐயோ,சும்மாஇருங்களேன் என்று சமாதானப்படுத்தினாள்.

வீரர்களின் தலைவனுக்கு கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் தீர்ந்துவிட்டது. நம்மிடம் உளவு சொல்ல வந்தவன் ஏமாற்றி இருக்கிறான் என்று சொன்னான் ஒருவன். அப்படித்தான் தோன்றுகிறது. மதுரைக்காரர்கள் ஏதோ சூழ்ச்சியாக அவனை அனுப்பி இருக்கிறார்கள். புறப்படுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டுப் புறப்பட்டான் தலைவன். அந்த அபாய காலத்தம்பதிகளைத் திரும்பிக் கூடப்பார்க்காமல் போய்விட்டார்கள்.

அவர்கள் கன்னடத்திலேயே பேசினாலும் சேதுபதி ஓர் அளவுக்கு உண்மையை ஊகித்துக்கொண்டுவிட்டார்.எதிரியாட்கள் கிராமத்தின் எல்லைக்குப் போகும்வரை அவகாசம் கொடுத்து விட்டுக்குதித்து எழுந்தார்.தம் சொந்தத்தாயைவணங்குவது போல ஆச்சியை வணங்கினார். அம்பலகாரனுடைய துரோகத்தைப் பற்றித்தான் அறிந்துகொண்டதைச் சொல்லி, அவளைத்தன்னுடன் வந்துவிடும்படி அழைத்தார்.

மடிச்சியாச்சி அதற்குச் சம்மதிக்கவில்லை. என் கதி என்ன ஆனாலும் சரி, நீங்கள் தப்பிப் போய் ஊரைக் காப்பாத்துங்கள் வேலையை முடிக்காமல் திரும்புவதில்லை என்று மைசூர்ப் பாசறையைநோக்கிப்புறப்பட்டார்.

மைசூர் வீரர்கள் ஏமாற்றத்துடனும், மதுரைக்காரர்கள் செய்யும் புலன்புரியாத சூழ்ச்சியின் பயத்துடனும் திரும்பிச்சென்று தங்கள் தளபதியிடம் நடந்ததைச்சொன்னார்கள். அவர்கள் தளபதி கோபத்தில் அம்பலகாரனை இழுத்து வரச் சொல்லி, முன்பின் யோசிக்காமல் அவன் மூக்கை அறுக்க உத்தரவிட்டான். மூக்கை இழந்து துடித்துக் கொண்டிருந்தவனிடம், அவன் குறிப்பிட்ட வீட்டிலிருந்த தம்பதிகளைப்பற்றிச்சொன்னான் தளபதி.

அம்பலகாரன், ஐயையோ! அவள் என் பெண்சாதிதான். அவள் மார்மேலே படுத்திருந்தவன்தான் சேதுபதி. சண்டாளி: எனக்கே துரோகம் செய்துவிட்டாள்" என்று கூவித் தன் மூக்கை அறுத்த வாளையே பிடுங்கிக்கொண்டு ஓடினான்.

அவன் வீட்டிற்குள் நுழைந்தகோலத்தைக்கண்டமடிச்சியாச் சிக்கு நிலைமை புரிந்துவிட்டது. கொஞ்சமும் கலங்காமல் அந்த வெறியனின் கோரத்தாண்டவத்திற்கு உட்பட்டாள். அம்பலகாரன் அவளைக் கண்டதுண்டமாக வெட்டி எறிந்தான். அப்பொழுதும் அவன் வெறி அடங்கவில்லை. அவள் மூக்கை அறுத்து எடுத்துக் கொண்டு மதுரைத்தளத்தை நோக்கி ஓடினான்.”

பண்டாரம் இந்த இடத்தில் கதையை நிறுத்திவிட்டு மடித்தாள் பட்டி இருந்த திசையில் பார்த்தார். நானும் திரும்பிப் பார்த்துக்கொண்டே"அப்புறம்” என்றேன் ஆத்திரத்துடன்

அப்புறம் என்ன? சேதுபதி தாமே போய் எதிரியைப் பற்றித் தமக்கு வேண்டியதை எல்லாம் தெரிந்துகொண்டார். புதிதாக வந்த படைபலம் தருவதற்கு அவகாசம்கொடாமல், மறுநாளே மதுரைப் படைகள் தாக்கின. அறுபது நாழிகைஇடைவிடாமல் நடந்த புயல் போரில் இரு தரப்பாரிலும் பெருவாரியானசேதம் மதுரைப் படைகள் எதிரிகளை மைசூர் வரையில் துரத்திக் கொண்டு போனார்கள். மடிச்சியாச்சியின் மூக்குக்கு மைசூர் தளபதியின் மூக்கையே பதில் வாங்காமல் விடுவதில்லை என்று சபதம் கூறித் துரத்தினார் சேதுபதி அதில் வெற்றியும் பெற்றார். அதனால்தான் அந்த யுத்தத்துக்கு மூக்கறுத்தான் சண்டை என்று பெயர் வழங்குகிறது.

சேதுபதி திரும்பி வரும்வ ழியில், இங்கே இதே இடத்தில்தான் தண்டடித்துத்  தங்கினார் .மடிச்சியாச்சியை அடக்கம் செய்திருந்த அந்த இடத்தில் கோவிலைக் கட்டுவித்தார். அவளுக்கு மடி கொடுத்ததாய் என்று பெயரும் வைத்தார்.மடிகொடுத்ததாய் மடி கொடுத்த அம்மனாகி இப்போது மடித்தாளம்மனாகிவிட்டாள்.

"ஆண்டவனே! அதோ உங்கள் வண்டிக்காரன் வந்து விட்டான்.உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா” என்று பண்டாரம் கப்பரையையும், தடியையும் எடுத்துக்கொண்டு எழுந்தார்.

நானும் கூடவே எழுந்து, "இது நிஜக் கதையா ஸ்வாமி” என்றேன். பண்டாரம், "அவ்வளவும் கல்லிலே பொறித்து வைத்திருக்கிறது. கல் அந்தக் கிணற்றுக்குள்ளே கிடக்கிறது. உற்சாகமுள்ள வர்கள் தேடி எடுத்தால் பார்க்கலாம்" என்றுபுறப்பட்டார்.

அவர்போவதையே பார்த்துக்கொண்டு, அரை நாழிகைவரை நான் சிலைபோல் நின்றிருந்தேன் என்பது வண்டிக்காரன் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

**********

Mar 2, 2013

வெண்கல குத்துவிளக்கு – பி. எஸ். ராமையா

ஆதிகணபதி செட்டியார் அந்த தடவை சென்னைக்குப் போய் வந்தவுடன், கிராமத்தில் கோயில்கொண்டெழுந்தருளியிருந்த அநுமார் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றிப் பரபரப்புடன் சொன்னார்.

கிராமத்தில் வாங்கிய தங்கத்தைச் சென்னையில் விற்பதற்காகப் போய்கொண்டிருந்தார் செட்டியார்.

மடியிலே கனத்துடன் போகிறோம்;கொஞ்சத்துக்குச் சோம்பி வம்புக்கு இடம் கொடுத்து விடக்கூடாது’ என்று இரட்டைக்கோட்டு (இரண்டாம் வகுப்பு) டிக்கெட் கேட்டு வாங்கினேன். திருச்சியில் யாரோ பெரிய ஆபிஸர் போலிருக்கிறது,குடும்பத்துடன் வந்து ஏறினார். கூட இரண்டு டவாலிச் சேவகர்கள் இருந்தார்கள்.

அந்த வண்டி செங்கல்பட்டுக்குக் கையெழுத்து விளங்காத நேரத்தில் போய்ச் சேருகிறது. அந்த குடும்பம் அங்கேதான் இறங்கியது. சோதனைப் போல தூக்கக் கலக்கம் என்னை சிறிது அசத்திவிட்டது. கூலியாட்கள் அவர்கள் பெட்டிக்குப் பதில் என் பெட்டியை இறக்கி விட்டார்கள். வண்டிக்கு மணி அடித்து விட்டான். திடீரென்று பார்க்கிறேன், என் பெட்டியை காணவில்லை!

அலறிப் புடைத்துக் கொண்டு அந்த பெட்டியுடன் இறங்கினேன். வண்டியும் ஊதியது. அநுமாரே! என் சொத்தைக் காப்பாற்றிக் கொடு, உன் சந்நிதியில் ராமாயணம் வாசிக்க ஆள் உய்ரம் வெண்கலக் குத்துவிளக்குச் செய்து வைக்கிறேன்’ என வேண்டிக் கொண்டே வெளியே ஓடினேன்.

நம்ம அநுமார் கைகண்ட தெய்வமல்லவா?அவர்கள் சாமன்களையெல்லாம் மோட்டாரில் ஏற்றப் போகும் போது, என் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போன ஆள் கால் இடறிப் பெட்டியை போட்டுக் கொண்டு கீழே விழுந்து விட்டான்! நல்ல அடிபட்டிருக்கும்ப் போலிருக்கிறது.  ஆபிஸர் அவனுக்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.

நான் போய் விஷயத்தைச் சொல்லி அவர்கள் பெட்டியை ஒப்புவித்து என் பெட்டியை எடுத்துக் கொண்டு, அடுத்த ரெயிலில் சென்னைக்கு போய்ச் சேர்ந்தேன்என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டுக் கூடியிருந்தவர்கள், உடனே அந்த ஊர் அநுமாரைப் பற்றி அவரவருக்குத் தெரிந்த அற்புதக் கதைகளையெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

மைசூரிலிருந்து ஹைதர் அலி அந்தப் பிராந்தியத்தின் மேல் படையெடுத்து வந்தபோது, பக்கத்திலுள்ள சோலை நத்தம் பாளையக்காரர் அநுமாரிடம் தான் அடைக்கலம் புகுந்து முறையிட்டாராம்.  அன்றிரவு அநுமார் விசுவரூபமெடுத்து ஹைதர் அலி வரும் வழியில் நின்றாராம். ஹைதர் அலி அவரைக் கண்டு கிடுகிடுத்துப் போய் வேறு வழியில் போய்விட்டானாம். அந்தப் பேருதவிக்கு கைமாறாகப் பாளையகாரர் அநுமாருக்குத் தங்கத்தால் கெட்டிக்கவசம் செய்து சாற்றினாராம். ஹைதர் அலியும் அநுமாருக்குச் சில நகைகள் செய்து அனுப்பினானாம்.

இந்தக் கதையை உள்ளூர் கோவிந்தசாமி பாகவதர் அபிநயங்களோடு காலக்ஷேபப் பாணியில் சொன்னார்.

உண்மையில் அனுமாரின் அந்தத் தங்கக் கவசம்தான் ஆதி கணபதிச் செட்டியாரைத் தங்கம் வாங்கி விற்கும் வியாபாரத்தில் இறக்கியது.

அந்த வருஷம் செட்டியாரை அந்த கோயில் தர்மகர்த்தாவாகத் தேர்ந்தெடுத்தார்கள் கிராமவாசிகள். அந்தப் பொறுப்பை ஏற்றபோது செட்டியார், கோயில் சொத்துக்களை இருப்புக் கணக்குடன் ஒப்பிட்டுச் சரி பார்த்தார்.  நகைகளைச் சரிபார்த்த போது அவர் கவசத்தைக் கையில் எடுத்துப் பார்த்தார். சுமார் ஐம்பத்தைந்திலிருந்து அறுபது தோலா எடை இருக்குமென்று சொல்லியது அவருடைய அனுபவப்பட்ட கை. அந்த சமயம் தங்கம் விற்ற விலையில் ஐயாயிரம் ரூபாய் போகுமென்று மனதிற்குள்ளேயே புள்ளி போட்டுக் கொண்டார்.

திடீரென்று தங்கம் விலை ஏறியது. விராகனெடை இருபத்தைந்து,இருபத்தாறு ரூபாயாக இருந்த்து, முப்பது முப்பத்திரண்டாக ஏறி விட்டது. அநுமார் கவசத்தின் ரூபாய் மதிப்பு எவ்வளவு உயர்ந்திருக்குமென்று மனக் கணக்குப் போட்டார் செட்டியார். அந்தக் கணக்கில் அவருக்கு தங்க வியாபாரம் தொடங்க வேண்டுமென்ற  யோசனை பிறந்தது.  

தொடக்கத்தில்,இந்த கிராமந்தரத்தில் எவ்வளவு தங்கம் வந்து விடப் போகிறது, லாபம் புரண்டு விட?என்றார்கள், அவரைச் சுற்றி இருந்தவர்கள்.  செட்டியாரும் அப்படித்தான் நினைத்தார். ஆனால், பத்தே நாட்களில் வியாபாரம் பிடித்துக் கொண்டது.

கிராமங்களில் முடங்கிக் கிடந்த தங்கம் எல்லாம் வெளிச்சம் பார்க்க வெளிப்பட்டது.  பத்தே பத்து ஓலைக்குடிசைகள் கொண்ட பட்டிகளிலிருந்துகூட,ஐந்து குண்டு மணி, பத்து குண்டு மணி எடையாகத் தங்கம் அவர் வீட்டைத் தேடி வந்தது.

நரிக்குட்டைக் கனகசபை ஆசாரி அல்லது அவர் மகன் சுந்தரராசு இருவரில் ஒருவர், காலை ஏழு மணி முதல் இருட்டும் வரை செட்டியார் வீட்டில் ஆஜராக இருக்க வேண்டிய நிலைமைக்கு வியாபாரம் வலுத்தது.

வரும் தங்கத்தை உரைத்து மாற்றுச் சொல்லுவது அவர்கள் பொறுப்பு. எடை போட்டு விலை சொல்லுவார் செட்டியார்.

வியாபாரம் ரொம்ப லாபகரமாகத்தான் இருந்தது.  ஆனால் போதிய ரொக்கப் பணவசதி இல்லாததுதான் பெரிய எடைக் கட்டாக இருந்தது. வாரா வாரம் வாங்கிய தங்கத்தைச் சென்னைக்குக் கொண்டு போய் விற்று விட்டு வந்தாலன்றி மேலே வாங்கப் பணம் இருப்பதில்லை.

அப்படிச் சென்னைக்குப் போய் வரபிடிக்கும் இரண்டொரு பகல்களில் செட்டியாருக்கு ஆதாயமளித்திருக்கக் கூடிய சரக்கு வேறு இடங்களுக்குப் போய்விடும். வாரக் கடைசியில், அவரே ரொக்கத் தட்டுப்பாடு காரணமாக,வரும் தங்கம் அவ்வளவையும் வாங்க முடியாமல் திணறுவார்.

மளிகை வியாபாரம், தங்க வியாபாரம் ரெண்டையும் சேர்த்துச்செய்து கொண்டு, கோயில் தர்மகர்த்தாப் பொறுப்பை சரிவர நிறைவேற்ற நேரம் கிடைப்பதில்லையென்று கிராமத்தாரிடம் சொல்லி,தர்மகர்த்தப் பதவியிலிருந்து விலகிக் கொண்டார் செட்டியார்.

கிராமப் பெரிய தனக்காரன் கூட்டத்தில் அவர்,” “கோயில் பணம் ரொக்கமாக மூவாயிரம் ரூபாய்க்கு மேல் என்னிடம் ஒப்புவிக்கப் பட்டிருக்கிறது. என் வியாபரத்தில் அந்தப் பணத்தை போட்டுப் புரட்டிக் கொள்ளும் ஆசை அடிக்கடி தோன்றுகிறது. அது தெய்வத்தின் சொத்து. அந்த மாதிரி அபசாரத்திற்கு இடம் வந்து விடக்கூடாது என்பதுதான் என் கவலை. என்னைட்டு விடுங்கள் என்றுச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்.

செட்டியாரின் மனச் சுத்தத்தைப் பற்றி ஊரே புகழ்ந்தது. செட்டியாரிடமிருந்து தர்மகர்த்தாப் பொறுப்புத் தலை மாற்றப் பட்டது.

அது நடந்த அடுத்த வாரம் மாவடித்தேவன்,செட்டியாரிடம் விற்பதற்காகச் சில நகைகளைக் கொண்டு வந்தான். ஊரில் அவனைப் பற்றி எப்படி எப்படியோ சொன்னார்கள். அவன் பேர்வழி சுத்தமில்லை,ஆனால் அதற்காகச் செட்டியார் அவனிடம் வியாபாரம் செய்ய மறுக்கவில்லை. அவனிடமிருந்து நகைகளை வாங்குவதில் சில செளகரியங்களும் இருந்தன;அசெளகரியங்களும் இருந்தன. செட்டியார் சொன்ன எடைதான்,விலைதான். பணமும் கொஞ்சம் முன்னே பின்னே கொடுக்கலாம்,இவையெல்லாம் செளகரியங்கள்.

ஆனால் அவனிடமிருந்து வாங்கிய சரக்கை உடனுக்குடல் உருக்கித் தங்கமாக்கி விடவேண்டும். அதற்கேற்றபடி கணக்குத் தயாரிக்க வேண்டும்.  அதற்கெல்லாம் கனகசபை ஆசாரியின் ஒத்துழைப்பு தேவை. அவர் அதில் பங்கு எதிர்பார்த்தார். இவை அசெளகரியங்கள்.

ஆதி கணபதி செட்டியார் கனகசபை ஆசாரியிடம் பேசாமல் பேசி அவருடைய பங்கு விகிதத்தை நிர்ணயித்தார். நதி மூலம்,ரிஷி மூலம்,நகை மூலம் மூன்றையும் விசாரிக்கக் கூடாது என்ற திட்டத்தில் வியாபாரம் அதிக சிரமமில்லாமல் நடந்தது.

முந்திய வாரத்தில் மாவடித்தேவன், என்ன நகையென்று நிச்சயம் செய்ய முடியாதபடி மொத்தையாக ஒரு தங்கக் கட்டியை கொண்டு வந்தான்.  மாற்று உயர்ந்த சரக்கு.  சென்னையிலே அப்போது தோலா நூற்று பத்து ரூபாயில் விற்றுக் கொண்டிருந்தது. செட்டியார் திறமையாக பேரம் செய்து அதை வாங்கினார்.

அதை உருக்கிய போது கனகசபை ஆசாரி, “பார்த்தால் ஏதோ கோயில் நகை மாதிரி இருக்கிறது,செட்டியார்! என்றார்.

செட்டியார்,இதற்குள்ள விலையை நான் கொடுத்து விட்டேன். இதை நாம் வைத்துக் கொண்டு அநுபவிக்கப் போவதில்லை.  தப்பாக இருந்தால் அந்தப் பாவத்தில் அவன் போகிறான்.  இந்த வீண் விசாரமெல்லாம் நமக்கு எதற்கு? என்று சமாதானம் சொன்னார்.  அந்தத் தங்கத்தை விற்கக் கொண்டுபோன வழியில்தான், செங்கல்பட்டில் அநுமார் காப்பாற்றிக் கொடுத்தார்.

குத்துவிளக்குச் செய்ய வேண்டுமென்று செட்டியார் சொன்னவுடன் கனகசபை ஆசாரி, “நம்ம ஊர் பொன்னு ஆசாரி,அவர் மகன் மந்திரம் இவர்களைக் கொண்டே வார்க்கச் சொல்லுவோம்.  தகப்பன்,மகன் இருவருக்கும் வெண்கல வார்ப்பு வேலைகளில் நிறையக் கைப் பழக்கம் உண்டு. என் மருமகன் ரத்தினவேலு வார்ப்புக்குச் சித்திரம் வரைவதிலும்,உமிசுக்கு உருச்செய்வதிலும் கெட்டிக்காரன். அவனை வரவழைப்போம். அவன் சித்திரம் போட்டுச் செப்பில் முழு அளவில் விளக்கைச் செய்து கொடுத்து விடுவான். அதைக் கொண்டு அவர்கள் உமிசு செய்து கொள்ளலாம். விளக்கு ஒரே வார்ப்பாக அமையும்.  இந்தக் காலத்தில் செய்கிறார்களே, பாதம் தனி,தண்டு தனி,முகம் தனியாக;அந்த மாதிரி குத்து விளக்கைக் கண்டாலே எனக்கு பிடிக்காது என்றார்.

செட்டியார் அவர் யோசனையை ஏற்றுக் கொண்டார். ரத்தினவேலு வரவழைக்கப் பட்டான். அவனும் மந்திரமும் விளக்கு வார்க்கும் வேலையில் தீவிரமாக முனைந்தார்கள்.

ஒரே மண்டலத்தில் ரத்தினவேலு உருச் செய்து கொடுத்து விட்டான். விளக்கின் உச்சியில் சஞ்சீவி மலையை ஏந்திக் கொண்டு பாயும் அநுமார் சிலையை அவன் செய்திருந்ததைக் கண்டு எல்லோரும் வியந்தார்கள்.     

மந்திரம் எங்கேயோ போய் உமிசைக்காகத் தனித் தரத்து மண் கொண்டு வந்தான். அந்த வேலையும் பூர்த்தியாகி,உலோகங்களை உருவாக்கி வார்க்க நாளும் பார்த்துக் குறிப்பிட்டார்கள்.

அந்த நேரத்தில் அநுமார் கோயில் கவசம் திருட்டுப் போய் விட்டதென்று கூச்சல் எழுந்தது. போலீஸ் விசாரணை தடபுடல் பட்டது. ஆதி கணபதி செட்டியார் வீட்டுக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வந்தார். செட்டியார் கணக்குகளை எடுத்துக் காட்டினார்.

அவர் வாரா வாரம் வாங்கும் தங்கத்திற்கு, ஐந்து குண்டுமணி எடையாக இருந்தாலும் விற்றவர் பெயர்,விலாசம்,விலை விவரங்களுடன் தனியாக நறுக்கு எழுதிப் போட்டு விடுவது வழக்கம். நறுக்களையெல்லாம்,வாரம் வாரியாக தனித்தனியாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தார்.

ஒரு வாரம் கூட அவர் நாற்பது தோலாவுக்கு மேல் சென்னைக்குத் தங்கம் எடுத்துக் கொண்டு போனதில்லையென்று கணக்குக் காட்டியது. அவர் வீட்டில் தேடிப் பார்த்த போது அந்த வாரத்தில் வாங்கிய கணக்குக்குச் சரியாக இருந்தது இருப்புத் தங்கம்.

செட்டியார் வீட்டில் திருட்டுச் சொத்து இல்லையென்று பதிவு செய்து கொண்டு போனார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.

செட்டியார் மளிகைக் கடையில் உட்கார்ந்து கடைத் தெருவிலிருந்தவர்கள் கேட்க, “மடியில் கனமிருந்தாலல்லவா பயப்பட?” என்று பேசினார்.

மாவடித்தேவனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து விசாரிப்பதாகத் தகவல் வந்தது. செட்டியாருக்கு தம் உள்ளப் பதைப்பை வெளிக்குக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவனை விட்டு விட்டார்கள் என்று கேட்ட பிறகுதான் சரியாக மூச்சு விட்டார்.

அன்று இரவு ஒன்பதரை மணிக்கு வெண்கலக் கலவை உருக்க வேளை குறித்திருந்தது.  பகலிலேயே செட்டியார் அதற்காக வாங்கிய செம்பு, வெள்ளீயம், பித்தளை முதலியவைகளையெல்லாம் கனகசபை ஆசாரியிடம் எடுத்துக் கொடுத்து, ”நீங்களே அது அது விகிதப்படி நிறுத்து எடுத்துக் கொண்டு போய் வீட்டில் வைத்திருந்து, இரவில் கன்னான் வீட்டுக்குக் கொண்டு வந்து விடுங்கள்” என்றார்.

கனகசபை ஆசாரி மூன்றையும்த் தனித்தனியாக நிறுத்துத் தனிப் பெட்டிகளில் போட்டுத் தம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

அன்று செட்டியார் சென்னைக்குப் புறப்படும் முறை. விளக்கு வார்ப்புக்காக அதை ஒரு நாள் ஒத்திப் போட்டார். அந்த வாரம் வழக்கத்திற்கு மேல் அதிகமாகத் தங்கம் வந்தது விற்பனைக்கு. அவ்வளவையும் வாங்கி வைத்திருந்தார்.

மாலை ஏழரை மணிக்கு செட்டியார் தம் மளிகைக் கடையில் இருந்த பெட்ரோமாக்ஸ் விளக்குகள் இரண்டையும் பொன்னு ஆசாரி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினார். வீட்டு வாசலில் காத்திருந்த மாவடித்தேவனைக் கண்டவுடன் அவருக்கு பக்கென்றது.

”ஊரெல்லாம் கசமுசலாக இருக்கிறது, இந்த நேரத்தில் இங்கே ஏன் வந்தாய்?” என்று அவனைக் கடிந்தார்.

மாவடித் தேவன், ”உங்ககிட்டே ஒரு முக்கியமான விசயம் பேசணும். வாங்க உள்ளாறப் போயிடுவோம்” என்றான்.

மறுக்க மாட்டாமல் செட்டியார் அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அவருடைய தங்க வியாபார கமாம்சாகப் புழங்கிய அறைக்குள் முன்னால் போய், இரும்புப் பெட்டி சரியாகப் பூட்டப்பட்டிருக்கிறதா என்று கவனித்துக் கொண்டு தேவனை உள்ளே வரச் சொன்னார்.

மாவடித்தேவன் நேரடியாகத் தான் வந்த காரணத்தைச் சொன்னான்: “செட்டியாரே! திருடறவங்களுக்குள்ளெ ஒரு முறையுண்டு. நீங்க அதிலே தவறீட்டிங்க. நான் கொணாந்த கட்டியை எடை போட்டு நாப்பது பவுனிருக்குது, மாத்தும் மட்டமின்னீங்க. ஊருலே பவுன் எளுபத்தஞ்சு ரூவா வித்துகிட்டுருக்கிறப்போ, நீங்க எனக்கு அறுவது ரூவா விலை போட்டுக் கணக்குச் சொன்னீங்க. அநுமார் கோயில் கவசம் எம்பத்திரண்டு பவுன் எடையாம். சொக்கத் தங்கமாம், இப்படியெல்லாம் சம்பாரிச்சு அந்தப் பணத்தை எங்கே வச்சு வைக்கப் போறீங்க,செட்டியார்?” என்றான்.

செட்டியார் அளவு கடந்த ஆச்சர்யத்தைக் காட்டி, “அடப்பாவி மகனே! அநுமார் கோயில் சொத்தையா கொண்டு வந்தே? அந்தத் தெய்வம் உன்னைச் சும்மா விட்டு விடுமா?” என்றார்.

தேவன், “ஏன் செட்டியாரே சும்மாப் பசப்பறீங்க? உப்புல ஊறின பண்டம் இனிப்பா இருக்கும்னு தின்னேங்கறீங்களே. செயிலுக்குப் போறது எனக்குத் தண்ணி குடிக்கிற மாதிரி. நீங்க அதுக்கு லாயக்கில்லே. அவ்வளவுதான் சொல்லுவேன்! அப்புறம் உங்க இஸ்டம்” என்றான்.

செட்டியார் நைச்சியமாக,”என்ன மாவடி! கன்னா பின்னாவென்று பேசுகிறாயே. நீ பார்த்து ஆயிரம் ஐந்நூறு அதிகம் வேண்டுமென்றால் இல்லையென்றா சொல்லிவிடுவேன்? சரி. நீ இன்னொரு சமயம் வா. இப்போது நீ இங்கே வந்ததே தப்பு.  போய் வா” என்றார்.

தேவன், “நீங்க என்ன ஓடியா போயிருவீங்க? பொறகால வந்து பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்,

இரவு சரியாக ஒன்பது மணிக்குப் பொன்னு ஆசாரி மூசையை உலையின் மேல் ஏற்றினார்.  செட்டியாரும், அவர் அழைத்திருந்த இரண்டு ஊர்ப் பிரமுகர்களும் கனகசபை ஆசாரி வகையராக்களும் வந்திருந்தார்கள்.

உலைக்குப் பக்கத்திலேயே நான்கு அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி,மூசையைத் தூக்கி, உருகிய உலோகத்தை ஊற்ற வசதியாக இருக்கும்படி,விளக்கு உமிசை அந்தப் பள்ளத்தில் இறக்கி வைக்கப் பட்டிருந்தது.

கிழவர் பொன்னு ஆசாரி சொல்லச் சொல்ல மந்திரம் உலோகங்களை எடுத்து மூசையில் கொட்டினான். செம்பு உருகியவுடன் அதைக் கவனித்த பொன்னு ஆசாரி, கனகசபை ஆசாரியிடம், “என்ன அண்ணே! செம்பு எடை சரியாப் பாத்துக் கொண்டு வந்தீங்களோ? நீர் குறைவாகக் காணுதே?” என்றார்.

கனகசபை ஆசாரி, “நானே நிறுத்து எடுத்து வைத்தேன். துல்லியமாக இருக்கும்” என்றார்.

பொன்னு ஆசாரி அதனுடன் திருப்தியடைந்து மற்ற உலோகங்களைப் போடச் சொன்னார். மந்திரத்திடம் உருகிய உலோகங்களை நன்றாகக் கலக்கச் சொல்லிவிட்டுப் பதம் பார்த்து மூசைக்குள் வெண்காரத்தைத் தூவினார். மூன்று தாதுக்களும் கலந்து வந்தவுடன் மந்திரத்தை உச்சரித்தார்.

மூசையை அவனுடன் பிடித்துத் தூக்கி ஊற்ற உதவிக்காக இருவர் தயாராக நின்றனர்.  பொன்னு ஆசாரி, ’உம்’ என்றவுடன் மூவரும் மூசையைத் தூக்கி உருகிய வெண்கலத்தை உமிசத்தில் ஊற்றினார்கள்.

வார்ப்பு இறுகி ஆறுவதற்கு அவகாசம் கொடுத்து,மறுநாள் பகல் மூன்று மணிக்கு அதை உடைக்க தயாரானார் பொன்னு ஆசாரி. செட்டியார் கனகசபை ஆசாரியுடன் வந்து சேர்ந்தார்.

அங்கே கூடியிருந்தவர்களின் பதைப்புப் போல நடுங்கியது சுத்தியலைப் பிடித்த பொன்னு ஆசாரியின் கை. அனுபவத்தின் லாகவத்துடன் அவர் வார்ப்புக் கூட்டைத் தட்டித் தட்டி உடைத்தார்.  விளக்கின் தலைப் பகுதி முதலில் வெளிப்பட்டது.  உச்சியில்,கையில் சஞ்சீவி மலையுடன் பாய்ந்து கொண்டிருந்த அநுமார் சிலையைக் கண்டவுடன் கூடியிருந்த யாவரும், “அஹாஹா!” என்று கூவினார்கள்.

விளக்கின் முழு வடிவத்தையும் கண்ட செட்டியாருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. குழந்தை போலக் கூச்சல் போட்டுச் சிரித்து, “அந்த அநுமார் கிருபைதான் இது இவ்வளவு உயர்வாக மூளி, விரிசல் இல்லாமல் அமைந்தது!” என்றார்.

மேலும் ஒரு மணிநேரத்திற்க்குப் பிறகு சென்னைக்குப் புறப்பட ஆயுத்தம் செய்தார் செட்டியார். உடன் கொண்டு போக வேண்டிய தங்கத்தை எடுப்பதற்காக இரும்புப் பெட்டியைத் திறத்தவர், “ஐயையோ!” என்று அலறிக் கூவிவிட்டார்.  இரும்புப் பெட்டிக்குள் தங்கக் கட்டிகளை வைத்திருந்த கைப் பெட்டியைக் காணவில்லை! ஐம்பத்தாறு தோலா தங்கம் போய் விட்டது.

இரும்புப் பெட்டி பூட்டியபடியே இருக்க,அதற்குள்ளிருந்த கைப்பெட்டியை, தோலிருக்கச் சுளை விழுங்குவது போல மாவடித்தேவன் ஒருவனால்தான் கொண்டு போயிருக்க முடியும். உடனே அவனுக்கு ஆள் அனுப்பினார்.

அவன் ஊரில் இல்லையென்று செய்தி கொண்டு வந்தான் ஆள்.  “நேற்றிரவே அவன் கையில் ஓர் ஆயிரம் ரூபாயைத் தூக்கிக் கொடுக்க எனக்குப் புத்தியில்லாமல் போயிற்றே!” என்று தலையில் அடித்துக் கொண்டார் செட்டியார். பக்கத்திலிருந்த கனகசபை ஆசாரியிடம் கதறியழுது நடந்ததைச் சொன்னார். கனகசபை ஆசாரி இடிந்து ஊமையாக உட்கார்ந்து விட்டார்.

செட்டியார் அன்று சென்னைக்குப் புறப்படவில்லை. விளக்கு வேலையைப் பூர்த்தி செய்து, கோயிலில் சமர்ப்பித்து விட்டுத்தான் போகப்போவதாகச் சொல்லிவிட்டார் கேட்டவர்களிடம்.

ரத்தினவேலு குத்து விளக்கைச் செட்டியார் வீட்டிற்குக் கொண்டு வந்து ராவி, நகாசு வேலைகள் செய்தான்.  ஒரு வாரத்திற்குப் பிறகு விளக்குக்கு மெருகு போட்டவுடன் பார்த்தவர்கள், “இது வெண்கல விளக்கே அல்ல, பொன் விளக்குதான்” என்று சொன்னார்கள்.

அநுமாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, ஆதி கணபதி செட்டியார் விளக்கைச் சந்நிதியில் சமர்ப்பித்தார். அதன் ஐந்து கண்களும் எரிய, அதனடியில் அமர்ந்து, கோவிந்தசாமி பாகவதர் ராமாயண கீர்த்தனைகளைப் பாடிய காட்சி கண்கொள்ளா ஆனந்தக் காட்சியாக இருந்தது.

செட்டியார் விளக்கின் அருகில் நின்று அநுமாரிடம்,“சுவாமி! என்னை இப்படிக் கொள்ளை கொடுக்க விட்டு விட்டாயே! என் பொருளை மீட்டுக் கொடுப்பது உன் பாரம்” என்று முறையிட்டார்.

அன்றிரவு கனகசபை ஆசாரி தம்வீட்டு முற்றத்தில் தோண்டி அங்கே புதைக்கப் பட்டிருந்த கைப்பெட்டியை வீட்டினுள் கொண்டு போய் திறந்து பார்த்தவுடன் அவரும்
“ஐயையோ!” என்று அலறிக் கூவிவிட்டார்.  அதனுள் செட்டியாரின் தங்கத்துக்குப் பதில் செப்புக் கட்டைகள் கிடந்தன! கனகசபை ஆசாரி தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

வெண்கலத்திற்காகச் செம்பு முதலியவற்றை நிறுத்து வைத்த போது, கனகசபை ஆசாரி,அபாரமான திறமையுடன் தங்கம் வைத்திருந்த கைப் பெட்டியையும் தம் வீட்டுக்குக் கடத்தி விட்டார். அதைக் கையோடு வீட்டு முற்றத்தில் புதைத்தும் வைத்தார். ஆனால் எப்படி நேர்ந்தது என்பதே புரியாமல் செம்புப் பெட்டியும்,தங்கப் பெட்டியும் மாறிவிட்டன!

அன்றிரவு உருக்குவதற்காக உலோகங்களை மூசையில் கொட்டிய போது, அந்த வித்தியாசத்தை யாருமே கவனிக்க முடியாமல் போனது எப்படியென்று யோசித்து யோசித்துப் பார்த்தார். பொன்னு ஆசாரி, ”என்ன அண்ணே! செம்பு எடை சரியாப் பார்த்துக் கொண்டு வந்தீங்களா? நீர் குறைவாக்காணுதே” என்று கேட்டது பளிச்சென்று அவர் நினைவுக்கு வந்தது.

ஒரே எடையுள்ள தங்கத்தையும்,செம்பையும் தனித்தனியாக உருக்கினால், தங்கநீர் அளவு குறைவாக இருக்கும் என்பதை அவருடைய தொழில் அநுபவம் எடுத்துக் காட்டியது. சந்தேகமேயில்லை; அவர் செட்டியாரிடமிருந்து தட்டிக் கொண்டு வந்த தங்கம் அவ்வளவும் குத்து விளக்கில் கலந்துவிட்டது.

பி.எஸ்.ராமையா - முத்துக்கள் பத்து தொகுப்பு

தட்டச்சு: ராகின்

Feb 16, 2011

நட்சத்திரக் குழந்தைகள் - பி. எஸ். ராமையா

’அப்பா நட்சத்திரங்களுக்குக் கூட அப்பா  உண்டோ?’

‘உண்டு அம்மா!’

‘அவர் யார் அப்பா?’ psramaiya

‘சுவாமி.’

‘சுவாமியா? அப்பா! அவர் கூட உன்னைப்போலத்தானே இருப்பார்? நட்சத்திரம் ரொம்ப அழகாயிருக்கே. அவர் அப்பா கூட அழகாத்தானே இருப்பார்?’

‘ஆமாம் அம்மா! சுவாமியினுடைய அழகைப் போல வேறு யாருக்கும் அழகு இல்லை.’

’சுவாமி கூட உன்னைப் போல நல்லவர்தானே?’

‘ஆமாம்’

‘ஆமாம். எனக்குக்கூடத் தெரியறது. சுவாமி ரொம்ப.... ரொம்ப நல்லவர். நட்சத்திரமே பளிச்சின்னு அவ்வளவு நன்னாயிருக்கே.  அவா அப்பா எப்படி இருப்பார்!’

‘அவர் ரொம்ப நல்லவர். நம்மையெல்லாம் விடப் பெரியவர்.’

‘அப்பா! நட்சத்திரம் எப்போ பிறக்கும்?’

‘சாயங்காலத்தில்.’

‘எப்படியப்பா அது பிறக்கிறது?’

’நாம் சத்தியத்தையே பேசுவதால்; நாம் ஒவ்வொரு தடவையும் ஓர் உண்மையைச் சொல்லும்பொழுது ஒரு நட்சத்திரம் பிறக்கிறது.’

‘நான் கூட நிஜத்தையே சொன்னால் நட்சத்திரம் பிறக்குமா அப்பா.’

‘ஆமாம் அம்மா! நீ ஒவ்வொரு தடவையும் நிஜம் சொல்லும் பொழுது ஒரு நட்சத்திரம் பிறக்கிறது.’

‘அப்பா!’

‘என்ன அம்மா!’

’நம்ம ஊரிலே அவ்வளவு பேரும் - குழந்தைகள் எல்லாம் - நிஜத்தையே பேசினா எவ்வளவு நட்சத்திரம் பிறக்கும்? நிறைய (இரண்டு கைகளையும் விரித்துக்காட்டி) இவ்வளவு நட்சத்திரம் பிறக்குமோல்லியோ?’

'ஆமாம் அம்மா!’

அதைக் கேட்டவுடன் குழந்தை ரோஹிணி வேறொன்றும் பேசாமல் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவளாய்த் திரும்பிவிட்டாள். அவள் தனது முதிரா உள்ளத்தினுள்ளே சுவாமியைப் பற்றியும், அவருடைய நட்சத்திரக் குழந்தைகளின் அழகைப் பற்றியும் மனிதர்கள்  யாவரும் சத்தியத்தையே பேசுவதைப் பற்றியும் கற்பனை செய்து காண முயன்றுகொண்டே வாசலுக்குச் சென்றாள்.

குழந்தை ரோஹிணிக்கு ஆறு வயதுதான் ஆகிறது. ஆனாலும் அவளுடைய வார்த்தைகள் யாவும் மணி மணியாக இருக்கும். முத்தும் பவளமும் கோத்த ஹாரம் போல இருக்கும் அவளது பேச்சு. அவளுடைய கேள்விகள் எல்லாம் தெய்வ உலகத்துக் கேள்விகள். அவளுடைய இளம் நெஞ்சில் உதிப்பவை சுவர்க்க உலகத்து எண்ணங்கள்.

ஸ்ரீமான் சோமசுந்தரம், பி.ஏ. வரையில் படித்திருக்கிறார். ஆனாலுங்கூடக் குழந்தை ரோஹிணியின் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் ஒவ்வொரு சமயம் திணறிப் போய்விடுவார்; ‘ஐயோ! இந்தக் குழந்தையின் மனத்தைக்கூட என்னால் திருப்தி செய்யக் கூடவில்லையே!’ என்று ஏங்கி நிற்பார். ஆனால் ரோஹிணியைக் கண்டவுடன், ரோஹிணியைப் பற்றி நினைத்தவுடன், அவருடைய உள்ளத்திலெழும் கர்வம் ஒரு சக்கரவர்த்திக்குக்கூட இராது.

பட்டணத்தில் இருக்கும்பொழுது குழந்தை இயந்திர தேவதையின் குழந்தைகளைப் பற்றிப் புதிய புதிய கேள்விகளைக் கேட்பாள். கிராமத்திற்கு வந்தவுடன் அவளுடைய கேள்விகள் அதியாச்சரியமாக மாறிவிடும். இயற்கைத் தேவியின் சிறு விளையாட்டுகளின் இடையே அவளுடைய உள்ளம் சென்று கலந்து கொள்ளும். அவளுடைய  எண்ணங்கள் இயற்கை அன்னையுடன் இறக்கை விரித்துப் பறப்பவையாக இருக்கும்.

சோமசுந்தரம் அப்பொழுது தபால் ஆபிஸுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். தினந்தோறும் தபால்காரன் வருவதற்குள் அங்கேயே நேரில் போய் ஏதாவது கடிதம் உண்டாவென்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் அவசரம் அவசரமாகப் போவார்; கடிதம் எதுவும் வராவிட்டாலும் தினசரிப் பத்திரிகையாவது வருமே என்று போவார். அவ்வாறு அவர் புறப்பட்டுக் கொண்டிருந்த பொழுதுதான் குழந்தை நட்சத்திரங்களைப் பற்றிக் கேட்டாள்.

அதற்கு மேல் ரோஹிணிக்கு அப்பொழுது தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நட்சத்திரங்களினுடைய அப்பாவைப் பற்றிக் கற்பனை செய்து கனவு காண்பதற்குத்தான் அவளுடைய சிறிய மனசில் இடம் இருந்தது.

சோமசுந்தரம் அதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டே தபால் ஆபிஸுக்குச் சென்றார்.

மாலை நேரம் வந்தது. குழந்தை ரோஹிணி அப்பொழுதுதான் குளித்துவிட்டு அம்மா செய்துவிட்ட அலங்காரங்களுடன் வாசலில் வந்தாள்.  அவர்கள் வீட்டு வாசலில் இரண்டு பக்கங்களிலும் இரண்டு  பாதா மரங்கள் உண்டு. அவற்றின் நடுவில் சென்று நின்றாள். சூரியன் அஸ்தமிக்கும் சமயம்; வானவீதியில் வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகை செய்து கொண்டிருந்தன. குழந்தை ரோஹிணி மேற்றிசைக் கோடியில் நடந்து கொண்டிருந்த இந்திர ஜாலத்தைக் கண்டாள். அவளுடைய நிஷ்களங்க நெஞ்சத்தில் பரவசநிலை பிறந்தது.

ஆஹா! என்ன அழகு! அங்கு, அந்த வானவெளியிலே, ‘உமை கவிதை செய்து’ கொண்டிருந்தாள். ரோஹிணியின் முகம் மலர்ந்தது. அங்கு ஒரு புதிய ஒளி தோன்றியது. அது வானவெளியில் தோன்றிய திவ்ய ஒளியின் பிரதி அல்ல. குழந்தையின் இருதய சந்திரனிலிருந்து வெளிப்பட்டு முகத்தில் வீசும் நிலவு! அவளுடைய கண்கள் சுடர் எரியும், இரண்டு மீன்களெனப் பிரகாசித்தன. காலையிலே அதிகாலையில், சூர்யோதய காலத்தில், தாமரையொன்று மலர்வதைக் கண்டிருக்கிறீர்களா? கொஞ்சமாகத் திறந்து அது தனது காதலனைக் கண்டு இளநகையாடுஅதைப் பார்த்ததுண்டா? அந்தத் தாமரையைப் போல மலர்ந்து வியப்பின், சந்தோஷத்தின், இளநகை தவழ்ந்து ஆட ரோஹிணியின் சிறிய அழகிய வாய் சிறிது திறந்திருந்தது.

‘அவள் யார்? வானத்திலே அப்படிப் படம்  எழுதி விளையாடும் அந்த வானுலக ரோஹிணி எப்படி இருப்பாள்?’

குழந்தை ரோஹிணி பலகையில் சித்திரம் எழுதி விளையாடுவதுண்டு. முதலில் ஒரு படம் வரைவாள். ‘சீ! இது நன்றாயில்லை’ என்று அதை அழித்துவிட்டு வேறு ஒன்றும் எழுதுவாள். அதையும் துடைத்துவிட்டுப் புதிய தினுசாக மற்றொன்று வரைவாள்.

வானத்து ரோஹிணியும் அவ்வாறே புதிய புதிய படங்களை எழுதுகிறாள். ஆனால் அவள் அழித்து அழித்து வரையவில்லை. மாற்றுகிறாள். எல்லாம் வர்ணப் படங்கள்! புதிய புதிய வர்ணங்கள். ஒன்றைப்போல் மற்றொன்று இல்லை. கணந்தோறும் நவநவமாய்க் களிப்புத் தோன்றுகிறது. அந்த வானுலக ரோஹிணிக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? குழந்தை ரோஹிணிக்கும் சந்தோஷந்தான் வானுலக ரோஹிணியின் சந்தோஷத்தைப் பற்றி நினைப்பதில். சந்தியா தேவி நாணத்தினால் தலை குனிந்து கீழ்த்திசை அடிவானத்தினின்றும்  மெல்ல அடி வைத்து வானவீதியிலே வந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய வருகை ஓர் இனிய சங்கீதத்தைப் போன்றிருக்கிறது. கல்யாணி ராகத்தின் அவரோகணம் போல. அவளுடைய சௌந்தர்யம் இனிமையானது; உள்ளம் கவர்வது. அது நாணத்தினால் ஆக்கப்பட்டது; நிமிர்ந்து பார்க்காது; ஆனாலும் மகிழ்ச்சி ஊட்டுவது. அவளுடைய நிறம் சப்தவர்ணங்களில் ஒன்றல்ல; அவற்றிற்குப் புறம்பானது; அதன் பெயர் மாலை; ஆதலால் அது மயக்கம் தருவது.

வர்ணப் படங்கள் எழுதுவது நின்று விட்டது. இனி வேறு வகையான சித்திரங்கள், வெள்ளை மேகத்தினால் ஆக்கப்படும் உருவங்கள். ஒளியையும் நிழலையும் கலந்து எழுதப்படும் ஓவியங்கள். அவற்றின் விளிம்புகளில் சுடர் கலந்த வெள்ளி முலாம் பூசப்பட்டிருக்கிறது. அவைகள் ஏன் இப்படி அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருக்கின்றன. ஓரிடத்தில் இருந்தால் என்ன? ஆகாசத்திற்கு இந்த நீல வர்ணம் எப்படி வந்தது? பூமி ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு வர்ணமாக இருக்கிறதே; வானம் மாத்திரம் ஏன் இப்படி ஒரே நீலமாக இருக்கிறது? நேர் மேலே இரண்டு மேக வடிவங்கள் மெதுவாக அசைந்து கொண்டிருக்கின்றன. இரண்டிற்கும் நடுவில் நீலவர்ணம் களங்கமற்றாது; ரோஹிணியின் உள்ளத்தைப் போன்றது. அந்த இடத்திலே, அந்த இரண்டு வெண்மையான மேகக் கூட்டங்களின் இடையிலுள்ள நீலப் பட்டாடையிலே, திடீரென்று ஒரு சுடர் தோன்றுகிறது! அடேயப்பா! அது எவ்வளவு துரிதமாகத் தோன்றி விட்டது! கண் இமைக்கும் நேரத்தைவிடச் சீக்கிரமாக; மின்வெட்டும் நேரத்தில், அது கூட அதிகம், ஒரு கணத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் அந்தச் சுடர்ப்பொறி பிறந்துவிட்டது!

‘அம்மா, சுவாமிக்கு ஒரு நட்சத்திரக் குழந்தை பிறந்துவிட்டது!’  என்று கூவினாள் குழந்தை ரோஹிணி. கைகளைக் கொட்டுகிறாள். அவளது கண்கள் சிரிக்கின்றன. உள்ளம் களிவெறி கொள்கிறது.

அவளுடைய தாய் வீட்டு வாசற்படியின் அருகில் நிற்கிறாள். அவளது கவனம் வீதியில் போவோர் வருவோர்மீது சென்று லயித்திருக்கிறது. அதோ போகும் பெண்ணினுடைய ஆடையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். குழந்தை ரோஹிணியின் வார்த்தைகள் அவளுடைய செவிகளில் படவில்லை. ஆனால் குழந்தையின் சந்தோஷம் மாத்திரம் அவளுடைய மனத்தில் சென்று தாக்கி அதை ரோஹிணியிடம் இழுத்துச் செல்லுகிறது. குழந்தையை அப்படியே விழுங்க விரும்புபவளைப் போலக் கரை புரண்டோடும் ஆசையுடன் அம்மாவின் கண்கள் குழந்தையைப் பார்க்கின்றன.

வானவெளியிலே இருள் பரவுகிறது. இருளும் அழகாகத்தான் இருக்கிறது. அதிலும் இனிமை இருக்கிறது; மாதாவின் சிநேகத்தைப் போன்ற இனிமை. ஒன்றன்பின் ஒன்றாக நட்சத்திரங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன. அப்பா! எத்தனை நட்சத்திரங்கள்! குழந்தை ரோஹிணியால் அவற்றை எண்ண முடியவில்லை. அவை பிறக்கும் வேகந்தான் என்ன! அந்த வேகத்தைக் குழந்தையின் சிறிய மனம் தொடர்ந்து செல்வது சாத்தியமில்லை.

’வா கண்ணே! உள்ளே போகலாம். இருட்டிப் போய்விட்டது’ என்று அம்மா அழைக்கிறாள்.

‘இரு அம்மா போகலாம். மானத்தைப் பாரு. எவ்வளவு அழகாயிருக்கு!’ என்று நிற்கச் சொல்லுகிறாள் குழந்தை.

‘ஆமாம்; அழகாய்த்தான் இருக்கிறது. இருட்டிப் போய்விட்டதே. இனிமேல் இப்படி வாசலில் நிற்கக்கூடாது. வா அம்மா உள்ளே’ என்று மறுபடி அழைக்கிறாள் அம்மா.

‘அம்மா!’

‘உம்.’

‘மானம் இப்போ எதைப்போலே இருக்கு. சொல்லட்டுமா?’

‘சொல்லு.’

‘உன் முகத்தைப்போலே, நீ என்னை முத்தமிடுகிறாயே, அப்போ உன் முகம் இந்த மானத்தைப் போலேயே இருக்கு.’

அம்மாவுக்கு அதன் பொருள் விளங்கவில்லை. அது சரியென்று தோன்றவில்லை. ஆனால் அந்த வார்த்தைகளில் இருக்கும் ஏதோ ஒன்று, ‘அது வாஸ்தவந்தான்’ என்று சொல்லியது அவளுடைய மனத்தில்.

அம்மா சட்டென்று கீழிறங்கிச் சென்று குழந்தையை இழுத்துக் கட்டிலடங்காத காதலுடன் முத்தாடினாள். அம்மாவுக்கு வீட்டில் வேலை இருக்கிறது. மற்றொரு முறை, ‘உள்ளே வாடா குஞ்சு’ என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று விட்டாள்.

குழந்தை ரோஹிணி ‘சீரவிருஞ்சுடர் மீனொரு வானத்துத் திங்களையும் சமைத்தே ஓரடியாக விழுங்கிடும் உள்ளச் செல்வம்’ படைத்து அப்படியே நின்றிருந்தாள்.

வெளியே சென்றிருந்த சோமசுந்தரம் வீட்டிற்குத் திரும்பி வந்தார். வாசலில் தனியாக வானத்தின் அழகில் லயித்து நின்ற ரோஹிணியைக் கண்டார்.

‘ரோஹிணிக் குஞ்சு! என்ன அம்மா பார்க்கிறாய்? உள்ளே போகலாம் வா’ என்று அழைத்தார்.

குழந்தை, ‘இரு அப்பா! அந்த மானம் எவ்வளவு அழகாயிருக்கு! அவ்வளவு குழந்தைகளையுடைய சுவாமிக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும்! அப்பா!’ என்றாள்.

அதற்குள் சோமசுந்தரத்தின் மனத்தில் வேறு ஏதோ சிந்தனை வந்துவிட்டது. குழந்தை சொல்லியது சரியாகக்கூட காதில் விழவில்லை. ‘உம்’ என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்றார்.

அடுத்த வினாடி ஒரு விண்மீன் நிலை தவறிச் சுடர் வீசிக் கொண்டு வானத்தினின்று கீழே விழுந்து மறைந்தது. அதன் பிரயாணம் சில வினாடிகளே கண்ணுக்குத் தெரிந்தது.

குழந்தையின் கண்களில் கண்ணீர் பெருகியது. இரண்டு கண்களினின்றும் இரண்டு நீர் வடிவமான முத்துக்கள் கீழே உதிர்ந்தன. அந்தச் சின்னஞ் சிறு இருதயத்தில் விவரிக்க இயலாத, சுருக்கென்று தைக்கும் ஒரு வேதனை காணுகின்றது. குழந்தை விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அழுகையினிடையில் ‘அப்பா!?’ என்று இரும்பை உருக்கும் குரலில் கூப்பிட்டுக் கொண்டே வீட்டினுள் சென்றாள்.

சோமசுந்தரம் அப்பொழுதுதான் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து அருகிலிருந்த மேஜை மீதிருந்து ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தார். குழந்தையின் குரலைக் கேட்டவுடன் அவருடைய கையினின்றும் புத்தகம் ‘தொப்’பென்று கீழே விழுந்தது. அவருடைய இருதயம் ஆயிரம் சுக்கல்களாகச் சிதறி விழுந்ததுபோல் இருந்தது. உடல் பதைத்தது.

’என்னடா கண்ணே! என் ராசாத்தி அல்லவா! என் ரோஹிணிக்குஞ்சை யார் என்ன செய்தார்கள்?’ என்று படபடப்புடன் கேட்டுக் கொண்டே குழந்தையை வாரித் தூக்கித் தோளின் மேல் சாத்திக் கொண்டார்.

‘அப்பா! எனக்குத் தெரிஞ்சு போச்சு’ என்று விக்கல்களுக்கும் விம்மல்களுக்கும் இடையில் சொன்னாள் குழந்தை.

‘என்னடா கண்ணே, தெரிஞ்சுபோச்சு?’

’அப்பா நம்ப ஊரிலே, யாரோ ஒரு பொய் சொல்லி விட்டார் அப்பா!’

விக்கல்கள், விம்மல்கள், ஹூங்காரத்துடன் ஒரு அழுகை.

‘ஏன் அம்மா அப்படித் தோன்றுகிறது உனக்கு?’

‘நீதானே அப்பா சொன்னே, நாம் ஒரு நிஜம் சொன்னால் ஒரு நட்சத்திரம் பிறக்கிறதுன்னு, அப்போ.... ஒரு நட்சத்திரம்... கீழே விழுந்தா..... யாரோ ஒரு பொய்....  சொல்லிட்டாங்கன்னுதானே........... அர்த்தம்?  சுவாமியினுடைய.......... மனசு........... இப்போ........... எப்படி இருக்கும் அப்பா? ............ எனக்கே........... நிறைய........ அழ வரதே.....’ என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கினாள் அந்தக் கபடமற்ற குழந்தை.

அந்தப் பச்சை உள்ளத்தில் எழுந்த துக்கத்தையும் அதன் துன்பத்தையும் நாவின் மொழிகளால் விவரிப்பது இயலாத காரியம். அது இருதயம் இருதயத்தினொடு தனது சொந்த பாஷையில் உணர்த்த வேண்டிய புனிதமான ஒரு  துக்கம்.

****

Apr 21, 2010

பணம் பிழைத்தது-பி.எஸ். இராமையா

பி.எஸ். இராமையா

நாலைந்து வீடு தள்ளியிருந்த தெருமுனையிலிருந்து ஒரு நாய் ஊளையிட்ட சத்தம் வந்தது. இரவு மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும். அருணாசல முதலியாரைச் சூழ்ந்திருந்த யாவரையும் அந்த ஊளை ஒரு குலுக்குக் குலுக்கியெடுத்தது. அறையில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வாசல் திண்ணையில் இருளில் உட்கார்ந்திருந்தவர்களும், வீட்டினுள் கூடத்தில் கூடி, சிரமத்துடன் மெளனம் பயின்ற பெண்மக்களும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.

psrAMAYYA_thumb1 திண்ணையில் இருந்த ஒருவர் நாயை விரட்ட எழுந்து போனார். அருணாசல முதலியார் படுத்திருந்த அறையில் அவருடைய இளைய மகன் ஜகதீசன் அவசரமாக ஜன்னல் கதவுகளை அடைக்க முயன்றான். முதலியார் சிரமத்துடன் தலையைத் திருப்பிக் கையைக் காட்டினார். மூத்தவன் வைத்தியலிங்கமும், மைத்துனர் கந்தசாமி முதலியாரும் கிழவரிடம் நெருங்கினார்கள். வைத்தியலிங்கம், ''என்னப்பா வேணும்?'' என்றான்.

கிழவர், ''ஜன்னலை ஏன் அடைக்கிறான்?" என்றார். அவர் குரல் மிகமிக நைந்து தணிந்திருந்தது. ஆனாலும் ஜகதீசன் காதுக்கு எட்டியது. "சில்லுனு குளுந்த காத்து வருது'' என்றான். கிழவர் ''பரவாயில்லை அடைக்காதே'' என்றார். மூடிய ஒரு கதவையும் திறந்து வைத்தான் ஜகதீசன்.

நாயின் ஊளைச் சத்தத்தைக் கிழவர் கேட்கக்கூடாதென்பதுதான் ஜகதீசன் கருத்து. ஆனால் அவர் அதைக் கேட்டு விட்டார் என்பது தெளிவாயிற்று. கவலையுடனும் பயத்துடனும் அவரைப் பார்த்தார்கள் எல்லோரும். கிழவர் புதிய அசதியுடன் கண்ணை மூடிக்கொண்டார்.

நாய் இரண்டாம் முறையாக ஊளையிட்டது. மறுகணம் தன்மேல் வந்து தாக்கிய கல்லின் வேதனை தாங்காமல் வாள் வாளென்று கதறிக் கொண்டு ஓடியது.

அருணாசல முதலியாரின் கண்கள் மூடியே இருந்தன. முகத்தில் மரணபயத்தின் வேதனை படர்ந்தது. நாயின் ஊளை அவர் நெஞ்சில் தயக்கத்துடன் தலை காட்டிக் கொண்டிருந்த ஆசையையும் நம்பிக்கையையும் தலையில் இடித்து முடுக்கியது. "காலையில் சென்னையிலிருந்து மிகமிகப் பெரிய டாக்டர் வருகிறார். அவர் நிச்சயமாக என் ஆயுளை நீடித்துக் கொடுத்துவிடுவார்'' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருந்தது மனம். டாக்டர் வருவதற்குள் அவரைத் தொடவரும் காலனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. ''இனி நம்பிக்கைக்கு இடமே இல்லை. இனி நம்பிக்கைக்கு இடமே இல்லை!'' என்ற வார்த்தைகள் நெஞ்சிலே வேகமாகச் சுழன்றன.

முதலியார் சென்னையிலிருந்து கிராமத்துக்கு வந்து ஒரு மாதம் ஆகிறது. சென்னையிலேயே உடல்நிலை சரியாக இல்லை. எல்லையேயற்றது என்று தோன்றிய அவருடைய உழைப்புச் சக்தி தேயும் குறிகள் தென்பட்டன. அடிக்கடி சோர்ந்து உட்கார்ந்தார். மேல்மூச்சு வாங்கத் தொடங்கியது. அவருக்கே இதெல்லாம் புதுமையாக இருந்தன.

''நரையும் திரையும் உடலைச் சேர்ந்தவை, மூப்பு மனத்தைச் சேர்ந்தது. நம்முடைய சிந்தனையின் வேகந்தான் நம் பருவத்தின் அறிகுறி. நெஞ்சிலே இளமை இருக்கும் வரையில் நமக்கு முதுமை கிடையாது..'' என்று அவர் எங்கோ படித்திருந்தார். அதையே தமது வாழ்க்கைத் தத்துவமாகவும் கொண்டு விட்டார். ''உடலின் இயல்பான வளர்ச்சியிலே தோன்றும் மாறுதல்கள் தோன்றித்தான் தீரும். ஆனால் என் நெஞ்சிலே முதுமைக்கு இடம் கிடையாது'' என்று தாமே சொல்லிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.

அப்படிப்பட்டவருடைய சிந்தனையோட்டத் திலே திட்டுக்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் பயந்துவிட்டார். டாக்டரைக் கலந்தார். ''வேறு ஒன்றும் இல்லை. அளவுக்கு மிஞ்சிய உழைப்புத்தான் காரணம். உடல் அயரும் போது உள்ளத்தையும் பாதிக்காமல் விடாது. கொஞ்சநாள் எங்கேயாவது வெளியூரில் போய் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார் டாக்டர்.

அருணாசல முதலியார் டாக்டர் யோசனையை ஏற்றுக் கொண்டார். கொடைக்கானல், குற்றாலம், நீலகிரி என்றார்கள் மக்களும் உறவினர்களும். ஆனால் முதலியார் தம்முடைய சொந்தக் கிராமத்திற்குப் போக முடிவு செய்தார்.

கிராமத்தில் அவருடைய மூதாதையர் தேடி வைத்து, தலைமுறை தலைமுறையாக கைமாறி வந்த நிலபுலங்கள் இருந்தன. அவற்றோடு அவர் சம்பாதித்த ஏராளமான பணத்தின் ஒரு பகுதியையும் நிலங்களாக மாற்றிச் சேர்த்திருந்தார். தாமே நேரில் போய் ஆறு மாதமாவது நிலங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று நெடுநாளாக எண்ணம் இருந்தது. ஆனால் சென்னையிலிருந்த வருமானத் தலையூற்றை விட்டு அப்படி இப்படி நகரவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

இப்போது டாக்டர் சொன்ன யோசனை அந்த நெடுநாளைய எண்ணத்தை நடத்திக் கொள்ள வழிகாட்டியது. ஓய்வெடுத்துக் கொள்ளக் கிராமத்திற்குப் புறப்பட்டார்.

அருணாசல முதலியாரின் வரவு கிராமத்தில் ஒரு விழாவாக நிகழ்ந்தது. அந்த வட்டாரத்திலேயே மிகப் பெரிய மிராசுதார். சென்னையிலே பரந்த வியாபாரம். லட்சக் கணக்கில் கொண்டு கொடுக்கும் சரக்கு களைத்தான் அவருடைய ஸ்தாபனங்கள் கையாண்டன. முதலியார் தொட்டது தங்கமாகிறது என்று நம்பிக்கை கிராம மக்களிடையே, ஏன் நகர மக்களிடையிலுங்கூடப் பரவியிருந்தது.

ஓரளவுக்கு அது உண்மைதான். முதலியாரின் வர்த்தகத் திறமை நன்றாக முற்றிப் பழுத்திருந்தது. வியாபாரத்தில் வரப்போகும் லாப நஷ்ட முடிவைப் பற்றி முன்கூட்டியே உணரும் மனக்குறளி படைத்திருந்தார் அவர். அதன் உதவியால் தங்கமாகும் இனங்களைத்தான் தொடுவார். நஷ்டமாகும் வியாபாரத்தில் அவர் இறங்கியதே இல்லை.

முதலியார் தமது இருபத்தைந்தாவது வயசில் சென்னைக்குச் சென்றார். முப்பது வருஷங்களுக்கு மேலாகின்றன. மேலே மேலே முன்னேறிக் கொண்டே இருந்தார். வருஷந்தோறும் அவருடைய சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டேயிருந்தது. வருஷத்திற்கு ஒரு லட்சம் என்று கணக்குப் போட்டது போல அவர் கிராமத்திற்கு வந்த போது அது முப்பது லட்ச ரூபாய் மதிப்பாக உயர்ந்திருந்தது.

அவர் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவே கிராமத்திற்கு வந்தார். அந்த ஓய்வு நேரத்தைத் தமது நிலச் சொத்துக்களைச் சீர்படுத்துவதில் செலவழிக்க எண்ணினார். ஆனால் வந்து சேர்ந்த இரண்டு மூன்று நாட்களிலேயே உடல்நிலை மிகவும் சீர்கேடடைந்து விட்டது. உடனேயே சென்னைக்குத் திரும்பியிருக்கலாம். இன்னும் கொஞ்சம் பார்க்கலாம் என்று தங்கினார். ஊரைவிட்டு அசையவே கூடாது என்று டாக்டர் சொல்லும் நிலைமை வந்துவிட்டது.

சென்னையிலிருந்தே டாக்டர்கள் வந்தார்கள். முதலியார் ஆசையாக வாங்கிய புது 'ப்யூக்' காரும் வைத்தியலிங்கம் தனியாக வாங்கிய 'ஆர்ம்ஸ்ட்ராங்ஸிட்ஸி' காரும் சென்னைக்கும் கிராமத்துக்கும் அஞ்சல் ஓட்டம் போட்டுக் கொண்டேயிருந்தன. 'இனிமேல் பயம் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் சென்னைக்குப் புறப்பட்டு விடலாம்' என்பார் டாக்டர். அந்த மகிழ்ச்சி இரண்டு நாள் பொங்கிக் கொண்டிருக்கும். மூன்றாம் நாள் அவ்வளவும் வடிந்துவிடும். ''இன்னும் பதினைந்து நாள் வரையில் நீங்கள் பேசக்கூடாது'' என்று உத்தரவிட்டு விடுவார்.

அவர் வந்து சேருவதற்குள் காலன் வந்துவிடுவான் என்பதை அந்த நாய் ஊளையிட்டுச் சொல்லிவிட்டது. முதலியார் மனம் மிகமிக வேகமாகச் சுழன்றது. ''நம்பிக்கைக்கு இடம் இல்லை. இனி நம்பிக்கைக்கு இடம் இல்லை!'' என்ற எண்ணம் திரும்பத் திரும்ப எழுந்தது.

முதலியார் வியாபாரத்தில் ஈடுபட்ட ஆரம்ப காலத்தில் நல்ல தெய்வபக்தர். பின்னாலும் அவர் நாஸ்திகராக மாறிவிடவில்லை. ஆயினும் அவர் நெஞ்சிலே தெய்வம் என்னும் வார்த்தை உணர்ச்சியுடன் ஒட்டவில்லை. எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக அது அவர் உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டுத் தூர ஒதுங்கிவிட்டது. வீட்டிலே நடக்கும் நாள் கிழமை பண்டிகை பூஜைகளில் அவரும் கலந்து கொள்வார். வெளியிலே தம்மை வந்து அணுகும் தானதரும தெய்வ சம்பந்தமான காரியங் களுக்குப் பணம் கொடுப்பார். ஆனால் அதிலெல்லாம் அவருடைய நெஞ்சம் ஒட்டியதேயில்லை.

இந்த நிலைமை அவர் தம் நினைவுடன் சிந்தித்து உண்டாக்கிக் கொண்டதல்ல. அவர் உள்ளத்திலே வந்து நிறைந்து கொண்டிருந்த பணம் என்ற சக்தி கொஞ்சம் கொஞ்சமாக மற்றவற்றையெல்லாம் வெளி யேற்றிவிட்டது. அதை அவர் அறியவேயில்லை.

கிராமத்திற்கு வந்து உடல்நிலை கவலைக் கிடமாக ஆனபோது அவர் மனத்தில் பணத்தை நெட்டித் தள்ளிக் கொண்டு பிற விஷயங்கள் வந்து புக ஆரம்பித்தன. தமக்குப் பின் தம் சொத்துக்களும், வியாபாரமும் என்ன ஆகும் என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். கூடிய வரையில் அதற்குத் தகுந்த வழி வகுத்துவிட வேண்டுமென்று எண்ணினார். தம் குமாரர்களை வரவழைத்து அவர்களிடம் பேசினார். மைத்துனர் கந்தசாமி முதலியார், ''அதைப் பற்றியெல்லாம் இப்பொழுது ஏன் கவலைப்படுகிறீர்கள்? சென்னையிலிருந்து பெரிய டாக்டரையே வரவழைப்போம். இன்னும் ஒரு வாரத்தில் சென்னைக்குப் போய் விடலாம். அதன்பின் வேண்டியதை யோசித்துக் கொள்ளலாம்'' என்று சொல்லி விட்டார். அவர் சொன்னது மிகமிக இதமாக இருந்தது. தமக்குப் பின் சொத்துக்களுக்கு வகை செய்துவிட்டுத் தாம் போகும் வழியைப் பற்றிச் சிந்திக்க விரும்பினார் முதலியார். முதல் விஷயத்திற்கே அவசரம் இல்லை என்று வந்தவுடன் இரண்டாவது அம்சத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பதே நல்லதென்று முடிவு செய்துவிட்டார். ஆனால் அந்தத் தடவை உடல் தேறி எழுந்தவுடன அடுத்த உலகத்தில் தமக்குச் சரியான இடம் பிடித்துக் கொள்வதற்கு வேண்டியதையெல்லாம் செய்வதென்று மாத்திரம் உறுதி செய்து கொண்டார்.


அந்த உறுதியை நிறைவேற்ற அவகாசமே கிடைக்காதென்று சொல்லிவிட்டது நாயின் ஊளை. முதலியார் சிந்தனை குழம்பியது. இந்த ஜன்மத்தில் வேண்டிய அளவு தாம் தெய்வத்தைத் தொழுது ஆராதித்துப் பணிவதற்கு இடம் கொடுக்காமலே தமது ஆயுனை முடிக்க முயல்வது அநியாயம் என்று எண்ணினார். அதைப் பகவானிடம் சொன்னார். ''ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு, ஸ்வாமி!'' என்று கெஞ்சினார்.

''அதற்கு நீ என்ன விலை கேட்டாலும் கொடுக்கிறேன். எல்லாம் நான் தேடிய சொத்து. அதில் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் நீ காட்டும் இடத்தில் கொடுக்கிறேன்'' என்றார்.

பகவானிடத்திலிருந்து பதில் கிடைக்கவில்லை. அவர் மனமே சொல்லிற்று. ''எமன் கிராம எல்லைக்குள் வந்துவிட்டான் என்று நாய் சொல்லுகிறதே. பகவானால்கூட அவனைத் திருப்பி அழைக்க முடியாது'' என்று ஓடியது சிந்தனை.

அங்கிருந்து ஒரே பாய்ச்சலில் மனம் எமன் சந்நிதிக்குத் தாவிற்று. ''ஒரே ஒரு வருஷம் கொடு. அதற்குள் எல்லாவற்றிற்கும் தக்க வழி செய்துவிடுகிறேன். எனக்கும் தெய்வ வழிபாடு செய்ய. அது போதும்'' என்று விண்ணப்பம் செய்தார். அதற்கும் பதில் இல்லை.

''அவன் வந்துவிட்டான். வெறும் கையுடன் திரும்ப மாட்டான். ஐயோ! எனக்குப் பதில் வேறு யாராவது அவனுடன் போகச் சம்மதித்தால்... ஆம்... அவன் வெறுங்கையுடன் போக வேண்டாம். யாராவது அதற்குச் சம்மதித்தால் அவர் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் எழுதி வைத்து விடுகிறேன்'' என்று ஓடியது சிந்தனை.

கண்களை விழித்தார். எதிரில் கந்தசாமி முதலியார், மக்கள், மனைவி எல்லோரும் கவலையுடன் குனிந்து தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கந்தசாமி முதலியார் முகத்தைப் பார்த்து உதட்டை அசைத்தார். குரல் வெளி வரவில்லை. கந்தசாமி முதலியார் குனிந்து காதை முதலியார் உடுகளினருகில் கொண்டு போனார்.

அருணாசல முதலியார் "என் செக் புத்தகம் கொண்டு வரச் சொல்லுங்கள்...'' என்றார். மறுபடி கண்களை மூடிவிட்டார்.

ஐந்து நிமிஷம் கழிந்திருக்கலாம். கிராமத்திலேயே தங்கியிருந்த டாக்டர் வந்து தமது நாடியைச் சோதித்ததை உணர்ந்த முதலியார், டாக்டர் முகத்தில் என்ன குறிகள் தோன்றியிருக்கும்? ஜகதீசன் ஏன் அப்படிப் பதறிய குரலில் ரகசியமாகக் கேட்கிறான்!

டாக்டர் ஊசி குத்தினார். மருந்தின் வேகம் இடது கரத்திலிருந்து தமது இருதயத்தை நோக்கி விரைந்ததை உணர்ந்தார். அதோ, அதோ... இருதயத்தினுள் புகுந்துவிட்டது. வெளியே புறப்படுகிறது. உடல் முழுவதும் பரவப் புறப்பட்டுவிட்டது.

முதலியாருக்குச் சிறிது தெம்பு வந்தது. டாக்டர் மறுபடி நாடியைச் சோதித்தார். பேசுகிறார்: ''ஒரு மணி நேரம் வரைக்கும் இப்படியே இருக்கட்டும். எனக்கு வாசலில் ஒரு ஈஸி சேர் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்கள். மறுபடி ஓர் ஊசி போட வேண்டும்'' என்றார்.

கந்தசாமி முதலியார் செக் புத்தகத்துடன் வந்து, ''டாக்டர்! செக் புத்தகம் கொண்டு வரச் சொன்னாரே'' என்றார்.

டாக்டர், ''அவராகக் கேட்டால் பார்த்துக் கொள்ளலாம். ஊசி குத்தியவுடன் நாடி பலம் அடைந்திருக்கிறது. அவரை அலட்டினால் மறுபடி தளர்ந்து போகும்'' என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார்.

அருணாசல முதலியார் கண்களை மூடியபடியே இவ்வளவையும் கேள்விக் கண்ணால் கண்டார். ''ஊசி குத்தியவுடன் நாடி பலமடைந் திருக்கிறது. எனக்கே தெரிகிறதே... எமன் அருகில் வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. மறுபடி ஓர் ஊசி... இன்னொரு மணி நேரம். இப்படியே காலைவரை... பெரிய டாக்டர் விமானத்தில் வந்துவிடுவார். ஊஹ¤ம்... தவறு, ஊசியை நம்பி இருக்க முடியாது. எமனை எதிர்க்க ஊசிக்கு வலுவுண்டா? இரண்டு லட்ச ரூபாய்... எனக்குப் பதில் அவனுடன் போகச் சம்மதிக்கிறவர் குடும்பத்துக்கு ஒரே செக்... அதில் எழுதுவானேன்? மைத்துனரிடம் சொல்லிவிட்டால் போதும்...''

அருணாசல முதலியார் உதடுகள் அசைந்தன. கண்கள் மூடியபடியே இருந்தன. குரல் கேட்கவில்லை. ஜகதீசன் தந்தையிடன் நெருங்கி குனிந்து கேட்டான். நிமிர்ந்து தணிவான குரலில், ''என்னவோ இரண்டு லட்சம் என்கிறாரே'' என்றான் மாமாவிடம். மறுபடி முதலியாரின் உதடுகள் அசையுமென்று ஆவலுடன் கவனித்தார்கள்; அசையவில்லை.

அருணாசல முதலியாரின் உடல் அவர் வசத்திலிருந்து நழுவி நின்றது. அதை இயக்க முடியவில்லை என்பதை உணர்ந்தார்.

ஒரு மணிக்கு ஒன்றாக மறுபடி இரண்டு ஊசிகள் குத்தப்பட்டதை உணர்ந்தார். ஒவ்வொரு தடவையும் மருந்தின் வேகம் உடல் முழுவதும் பரவுவதையும் உணர்ந்தார். ஆனால் உடல் மாத்திரம் வசப்படவில்லை.

இரண்டாம் முறை மருந்தைச் செலுத்திய பிறகு டாகடர் நாடியைப் பரிசோதித்துவிட்டு, ''நாடி இயல்பு நடைக்கு வந்துவிட்டது. இனிமேல் பயம் இல்லை. இருந்தாலும் நான் வாசலிலேயே இருக்கிறேன்'' என்று சொன்னது தெளிவாகக் கேட்டது.

அதன் பிறகு அந்த அறையில் வேறு சத்தமே இல்லை. ஒன்றிரண்டு தடவை யாரோ மிகவும் நிதானமாக நடந்து சென்ற காலடி யோசை கேட்டது. யாரோ குசுகுசு வென்று சொன்ன, ''நீங்கள் தூங்குங்கள், நான் இருக்கிறேன்'' என்றதும் கேட்டது.

அப்புறம் நிசப்தம். அப்படி எவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ தெரியாது. திடீரென்று இரவின் நிசப்தத்தைக் கலக்கிக் கொண்டு, ''ஐயையோ! வந்துவிட்டானே'' என்ற கூச்சலொன்று வந்தது. அதை அடுத்து வேறு பல கூச்சல்கள் கேட்டன. அதெல்லாம் முதலியார் காதில் படவில்லை.

''வந்துவிட்டான். வேறு யார்? அவன் தான். பதிலுக்கு ஆள் திட்டம் விட்டார்களா? கந்தசாமி முதலியாரிடம் சொன்னேனோ? இரண்டு லட்சம் கொடுத்துவிடலாம். ஆள் அகப்பட்டிருப்பானா? அந்தத் தொகைக்குச் சம்மதிக்காவிட்டால் இன்னும் அதிகம் கேட்டாலும் தயங்க வேண்டாம். கொடுத்து விடுங்கள் என்று சொல்லாமல் போனேனே. அதோ! அது என்ன சத்தம்? காலன் காலடி ஓசையா? வைத்தி, மாமாவைக் கூப்பிடு, ஆள் அகப்பட்டானா? இரண்டு லட்சத்திற்கு ஒரே செக்காகக் கொடுக்கிறேன், என்று சொன்னீர்களா? டாக்டர், நாடி இயல்பு நடையிலேயே இருக்கிறதா? ஒரே ஒரு வருஷம் போதும்; பதில் ஆள் பேசி வைத்திருக்கிறேன். அவன் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கப் போகிறேன்...''

முதலியாரின் உள்ளம் காவிரி வெள்ளத்திலே தோன்றும் சூழல் போலச் சுற்றியது. திரும்பத் திரும்ப இரண்டு லட்சம், பதில் ஆள், ஒரு வருஷம் என்று வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.

தூரத்தில் எங்கிருந்தோ பலமான இரைச்சல் வந்து அந்தச் சூழலைக் கலைத்துவிட்டது. மனம் தனக்குள்ளேயே சுழல்வதை விட்டு வெளியிலிருந்து வந்த சப்தங்களைத் தொடர முயன்றது. வீதியில் பலர் ஓடினார்கள். என்ன என்னவோ கூவினார்கள். தம் வீட்டிலும் பலர் நடமாடினார்கள். தாம் இருந்த அறையிலும் பரபரப்பு நிறைந் திருந்தது. ஆனால் ஒன்றும் தெளிவாக இல்லை. கண்களை திறக்க முயன்றார். ஒன்றும் தெளிவாக இல்லை. உடல் இன்னும் தம் வசத்திற்குள் வரவில்லை என்பதை உணர்ந்தார். தாம் அதைப் பிரிந்து போகுமுன் நேரும் இயற்கையின் ஒரு படியா அது என்று சிந்தித்தார்.

வீதியில் யாரோ பேசிய குரல் கேட்டது. வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலித்தன. முதலியார் மனம் ஆவலுடன் காதின் வழிவந்த குரலைப் பற்றியது.

முனிரத்தினம் நாயுடு வீட்டுக்குள்ளே திருடர்கள் புகுந்து விட்டார்கள். நாயுடு ஊரில் இல்லை. அவர் மனைவியும் குழந்தைகளுந்தான். திருடர்கள் உள்ளே நுழைந்து நகைப்பெட்டியைத் தூக்க முயன்ற போது நாயுடு மனைவி விழித்துக் கொண்டு ''ஐயையோ! திருடன் வந்துவுட்டானே!'' என்று கூவினாள். திருடர்களில் ஒருவன் கத்தியைக் காட்டி அவளைச் சும்மா இருக்க வைத்தான். மற்றவர்கள் பெட்டியுடன் வெளியேறிவிட்டார்கள்.

அவள் போட்ட கூச்சலைக் கேட்டு அக்கம் பக்க வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து ஓடினார்கள். வீட்டுவாசல் கதவு உட்புறம் தாழிட்டிருந்ததால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

தெற்கு வீதியில் சிலரும் அந்தக் கூச்சலைக் கேட்டு ஓடிவந்தார்கள். நாயுடுவின் அக்காள் வீடு அவர் வீட்டுக்கு நேர் பின்புறம் இருக்கிறதல்லவா? நாயுடுவின் அக்காள் மகன் வேங்கடசாமி வீட்டுப்பின்புறமாக ஓடி வந்தான்.

அப்போதுதான் கத்தியைக் காட்டி நின்றவன் சுவரேறிக் குதித்துத் தப்பியோட முயன்றான். வேங்கடசாமி பாய்ந்து அவனைப் பிடித்தான். இருவரும் போராடினார்கள். வேங்கடசாமி போட்ட கூச்சலைக் கேட்டு இன்னும் சிலரும் அந்தப் பக்கம் ஓடி வந்தார்கள். ஆட்கள் வருவதைக் கண்ட வுடன் திருடன் வேங்கடசாமியை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டான். உதவிக்கு வந்தவர்களில் சிலர் திருடனைத் துரத்தினார்கள். ஆனால் அகப்படவில்லை. கத்தி வேங்கடசாமியின் மார்புக் கூட்டின் நடுவில் பாய்ந்து அரையடி மேல் நோக்கிப் போயிருக்கிறது. ரத்தம் வெள்ளமாக வெளியேறி விட்டது. பையன் பிழைப்பது கஷ்டம் என்கிறார்கள்'' என்று முடித்தது வாசல் குரல்.

அதை அடுத்து யாரோ கேட்டான், ''டாக்டர், பையனைப் பார்த்தீர்களா? பிழைத்துக் கொள்வானா?'' என்று.

டாக்டர், ''நான் போவதற்கு முன்பே உயிர் ஓய்ந்துவிட்டது. கத்தி இருதயத்தையே கிழித்துவிட்டது'' என்றார்.

இன்னொருவர், ''இறந்து விட்டானா? அடப் பாவமே! போன மாசந்தான் கல்யாணம் நடந்தது. ரொம்ப நல்ல பையன். கெட்டிக்காரன். தைரியசாலி. போலீஸில் சேர மனுப்போடப் போகிறேன் என்றான். இன்ஸ்பெக்டர் பயிற்சிக்குச் சுலபமாகத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்'' என்றார்.

முதலியார் உடலில் புதுப்பலம் ஊறியதை உணர்ந்தார். சிந்தனை புதுவழியில் கும்மாளம் அடித்துக் கொண்டு ஓடியது. ''அப்பாடா! நாய் ஊளையிட்டது எனக்காகவே அல்ல. எமன் வந்தது உண்மைதான்... ஆனால் எனக்காக வரவே இல்லை. முனிரத்தினம் நாயுடு வீட்டுக் கொல்லை புறத்தில் வந்து நின்றவனைப் பார்த்துத்தான் நாய் ஊளையிட்டிருக்கிறது. அவன் என்னைப் பற்றி எண்ணியிருக்கவே மாட்டான்'' என்றது அவர் மனம்.

கண்களைத் திறக்க முயன்றார். என்ன ஆச்சர்யம்! கண்கள் திறந்தன. கையை அசைக்க முடிந்தது! 'வைத்தீ!' என்று கூப்பிட்டார். குரல் தெளிவாக ஒலித்தது. இரண்டு பிள்ளைகளும், மைத்துனரும் கட்டிலருகில் வந்து நின்றார்கள்.

ஜகதீசன் ''வேர்த்திருக்கிறதே!'' என்று சவுக்கத்தால் தந்தையின் நெற்றியைத் துடைத்தான்.
முதலியார் மைத்துனரிடம், ''செக்கைக் கிழித்துப் போட்டுவிடுங்கள்'' என்றார்.

மைத்துனர், 'இன்னும் எழுதவேயில்லையே! செக் புத்தகத்தை கொண்டுவா என்றீர்கள்...'' என்றார்.

அருணாசல முதலியார் இடைமறித்து, ''எழுதவேயில்லையா? புத்தகத்தைக் கொண்டு போய் வைத்து விடுங்கள்'' என்றார்.

நஷ்டம் வரும் வியாபாரத்தில் அவர் இறங்கியதேயில்லை.

*****

Dec 5, 2009

நிலா பார்த்தல்-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்

பி.எஸ்.ராமையா

முதன் முறையாக என் பையனை சினிமா பார்ப்பதற்காக தியேட்டருக்கு அழைத்துப்போன நாளில் அவன் படம் துவங்கியதும், ‘அப்பா ரிமோட்டைக் குடு... சவுண்டைக் குறைக்கணும்!’ என்று கைகளை நீட்டினான். ரிமோட் கிடையாது என்று விளக்கினால் அவனுக்குப் psramiyahபுரியவில்லை. பிடிவாதமாக, ‘ரிமோட் வேண்டும்!’ என்று கத்தி கூப்பாடுபோட்டு, அரங்கத்தைவிட்டு வெளியே வரும்படி செய்தான். வீடு வந்த பிறகு ஓடிச் சென்று டி.வி&யின் ரிமோட்டை எடுத்துக்கொண்டு, ‘இதை தியேட்டருக்கு எடுத்துப் போயிருந்தால் சத்தத்தைக் குறைந்திருக் கலாமே...’ என்று சிரித்தான்.

குழந்தைகள் ரிமோட் கன்ட்ரோல் உலகுக்குப் பழகி விட்டார்கள். ரிமோட்டின் உதவியால் தொலைக்காட்சி யின் சேனல்கள் மாறுவது போல, ஏன் தெருவும் வீடும் பொருட்களும் மாறுவதில்லை என்று அவர்களுக்குக் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஒரே டெலிவிஷனில் வேறு வேறு காட்சிகள் தோன்றி மறைவது போல, ஒரே புத்தகம் ஏன் வேறு வேறு புத்தகமாக மாறவில்லை என்று ஆத்திரப்படுகிறார்கள். மாபெரும் ரிமோட் ஒன்று இருந்தால்... மொத்த உலகத் தையும் தன் இஷ்டப்படி மாற்றிக்கொள்ள லாம் என்று கனவு காணுகிறார்கள்.

அதை நனவாக்குவது போல விளையாட்டுக் காரில் துவங்கி வீட்டின் குளிர்சாதனம் வரை யாவும் ரிமோட்டுக்குள் அடங்கிவிட்டது. திடீரென உலகம் ஒரு நெல்லிக்காயை விடவும் சிறியதைப் போலச் சுருங்கி விட்டது போன்று தோன்றுகிறது. தொலைவு என்பதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் போய்விட்டது. காரணம், மின்சாரமும் நவீன விஞ்ஞான சாதனங்களின் வளர்ச்சியும், நம் இருப்பிடத்துக்குள் உலகைச் சுருக்கிட்டு இழுத்து வந்துவிட்டன.

தண்ணீரை விடவும் மின்சாரம் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. மின்சாரமில்லாத வாழ்வைப் பற்றி நினைவுகொள்வது கூட அர்த்தமற்றதாகி விட்டது!
ஆனாலும் மின்சாரம் நுழையாத காலத்தின் இரவுகள் தந்த நெருக்கமும், அரிக்கேன் விளக்கொளியிலிருந்து கசிந்து வரும் மஞ்சள் திரவம் போன்ற வெளிச்சமும் மனதின் மூலையில் அப்படியே படிந்து போயிருக்கின்றன. அந்த நாட்களில் சிறுவர்களுக்கு இருந்த ஒரே விளையாட்டு நிலா பார்த்தல்! இரவானதும் நிலா எங்கேயிருக்கிறது, எந்தப் பக்கம் போகிறது என்று அண்ணாந்து பார்த்தபடி, அதைத் தன் கூடவே கூட்டிக்கொண்டு தெருத்தெருவாக அலைவது ஒரு தீராத விளையாட்டு!

தெருவில் இருந்த அத்தனை பையன் களும் தங்களோடு ஒரு நிலவை தன் வீட்டுக்கு கூடவே கூட்டிப்போவதும் வழியில் அது மேகத்தில் மறைந்த போது அங்கே நின்று நிலவை வெளியே வரும்படி கூப்பிட்டுக் கத்தியதும் எல்லா இரவுகளிலும் நடந்தேறியது. அந்த நாட்களில் வானில் ஒரேயரு நிலவுதான் இருந்தது என்று எவராவது சொன்னால், யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நான் என் வீட்டுக்கு கூட்டிவந்த நிலவு என் ஜன்னலுக்கு வெளியில்தான் நின்றிருந்தது. அதுபோல இன்னொரு நண்பன் அவனது நிலவை தன் வீட்டுக்குக் கூட்டிப் போயிருப்பான். இப்படி எத்தனை சிறுவர்கள் கிராமத்தில் இருந்தார்களோ, அத்தனை நிலவுகள் இருந்தன.

நிலா வராத நாட்களில் நட்சத்திரங்களை ஆகாசத்திலிருந்து பறிப்பதற்காகச் கிறுகிறுவென தட்டாமாலை சுற்றுவோம். நிலா முற்றிய நாட்களில் அதன் பால் வெளிச்சம் தெருக்களை, வீடுகளை குளிர்மை செய்யத் துவங்கும். தெருவில் பாயை விரித்து தூங்குபவர்கள் யாரோ தங்களை நெருக்கமாக நின்று பார்த்துக்கொண்டு இருப்பது போல வெட்கமடைவார்கள். அது போன்ற நாட்களில் கல் உரல்களில் தேங்கி நிற்கும் நிலா வெளிச்சத்தை ஆசையோடு நாய்கள் நக்குவதைக் கண்டிருக்கிறேன்.

நிலா பார்த்தல், தாயின் இடுப்பில் அமர்ந்த நாளில் துவங்கி இன்று வரை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. பால்யத்தில் என் வீடு வரை கூட்டிவந்த நிலவு இன்றும் எனது பயணத்தில் எப்போதும் கூடவே வந்துகொண்டு இருந்தது. எந்த ஊருக்குப் போகும்போதும் தெரிந்த நபர் கூட இருப்பது போல ஒரு நெருக்கம் கூடிவிடுகிறது.

கையில் காசில்லாமல் சுற்றியலைந்த நாட்களில் கர்நாடக மாநிலத்தின் பட்டக்கல், பதாமி என்ற இடங்களில் உள்ள புராதனக் கோயிலையும் சௌந்தர்யமிக்க சிற்பங் களையும் பார்த்துவிட்டு, பீஜப்பூரை நோக்கி லாரியில் பயணம் செய்ய நேர்ந்தது. டிசம்பர் மாதத்தின் இரவு என்பதால் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன. மேகம் இருண்டிருந்தது. லாரியில் ஓட்டுநரும் இரண்டு உதவியாளர்களும் முன்னால் இருந்ததால் என்னையும் இன்னொரு வயதான நபரை யும் பின்னால் ஏறிக்கொள்ளச் சொன்னார்கள். அந்த லாரியில் சிமென்ட் மூட்டைகள் ஏற்றப்பட்டிருந் தன. லாரியில் ஏறியதும் தூங்கிவிட வேண்டியதுதான் என்று சுருண்டு படுத்தேன். ஆனால், குளிர்காற்றும் திறந்த ஆகாசமும் தூக்கத்தை நெருங்கவிடாமல் செய்தன. குளிர் தாங்கமுடியாமல் உடல் நடுங்கத் துவங்கியது. உட்கார முடியவில்லை. என் மீதே எனக்குக் கோபமாக வந்தது.
எதற்காக இப்படிக் காரணமில்லாமல் அலைந்துகொண்டு இருக்கிறேன்? எனக்கு என்னதான் வேண்டும்? ஏன் இப்படிக் குளிரில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்? என யோசனை நீண்டு விரிய விரிய... என் மீதான ஆத்திரம் அதிகமாகிக்கொண்டு இருந்தது.

குளிரில் நடுங்கியபடி கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடியே வந்தேன். லாரி ஒரு மலைப்பாதையில் செல்லத் துவங்கியபோது, பள்ளத்தாக்கின் மீது ஒரு பருந்து வட்டமிடுவது போல தனியே மிதந்துகொண்டு இருந்தது நிலா. அது பௌர்ணமியின் மறுநாள் போலும். மரங்களும் பாறைகளும்s.ramakrish ஏன் அந்த மொத்த நிலப்பரப்பே வெண்ணிற வெளிச்சத்தின் சல்லாத்துணியை போர்த்திக்கொண்டு இருப்பது போலிருந்தது. இரவு எத்தனை அழகானது என்பதை அந்த இரவில்தான் தெரிந்து கொண்டேன்.

ஏதோ என் வீட்டின் வாசலில் கயிற்றுக்கட்டிலை போட்டுப் படுத்துக் கொண்டு நிலவைக் காண்பது போல அத்தனை நெருக்கம் கூடியது. அதோடு அது வரை அழுத்திக்கொண்டு இருந்த எண்ணங்கள் கரைந்துபோய் இது போல ஒரு காட்சியைக் காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பம் எத்தனை பேருக்கு கிடைக்கப்போகிறது என்று மனது சந்தோஷத்தில் பொங்கியது.

குழந்தைகள் நிலவைப் பார்த்துப் பாடுவது போல சத்தமாகப் பாட வேண்டும் போலிருந்தது. தானறியாமல் வாய் ஒரு பாடலை முணுமுணுக்கத் துவங்கியது. லாரியில் இருந்தபடி எழுந்து வட்டம் சுற்ற வேண்டும் என்று நினைத்தேன். அருகில் சுருண்டுகிடந்த நபர் வேடிக்கையாக என்னையும் நிலவையும் பார்த்தார். இதே நிலவைத்தானே சிறுவயதிலிருந்து துரத்துகிறேன். இந்தச் சந்திரன்தானே என்வீட்டுக் கிணற்றில் வீழ்ந்துகிடந்தது. கனவுகள் சூழ நான் உறங்கிக் கிடந்தபோது என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தது இதே நிலவுதானே! ஏனோ ஆகாசமும், நட்சத்திரமும், நிலவும் திடீரென கை தொடும் நெருக்கத்துக்கு வந்துவிட்டன போலிருந்தது.

லாரியில் நன்றாகப் படுத்துக்கொண்டேன். என் தலைக்கு மேலாகக் கூடவே வந்து கொண்டு இருந்தது நிலா. புகை போல குளிர் நிரம்பிய பாதைகளில் லாரி கடந்து சென்றுகொண்டு இருந்தது. உலகில் ஒரேயரு மனிதனும் ஒரு நிலவும் மட்டுமே விழித்திருக்கிறோம் என்பது போல நிலாவைக் கூடவே அழைத்துச் சென்றுகொண்டு இருந்தேன்.
விடிகாலையின் மணம் காற்றில் படரத் துவங்கியபோது, திடீரெனத் தோன்றியது... வீட்டிலிருந்து வெளியேறித் துறவியாக அலைந்த நாட்களில் கௌதம புத்தரும் இதே நிலவைத்தானே பார்த்திருப்பார்! என்றால் இந்த நிலவு புத்தரின் தோழன் இல்லையா? சங்க இலக்கியத்தில் வரும் பாணன் தன் காட்டு வழியில் கண்டதும் இதே நிலவுதானே? சிறைச்சாலையின் ஜன்னல் வழியாக பகத்சிங் இதே நிலவைப் பார்த்திருப்பார் அல்லவா? காலத்தின் நிசப்தமான சாட்சியின் பெயர்தான் நிலவா? மனதில் இருந்த கசடுகள், வலிகள் யாவும் கழுவித் துடைக்கப்பட்டுவிட்டன போலானது.

பொழுது புலர்ந்து, முதல் வெளிச்சத்தின் கீற்றுகள் வானில் தோன்றத் துவங்கியபோது நிலா மேற்கில் கரை தட்டி நின்ற படகைப் போல அசைவற்று அப்படியே நின்றிருந்தது. ஓரிடத்தில் லாரி நின்றபோது கீழே இறங்கினேன். சூரியன் உதயமாகியிருந்தபோது, மெதுவாக நிலா மறைந்துகொண்டு இருந்தது. என் கூடவே நிலவு துணைக்கு வரும்வரை எந்த ஊருக்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும் என்று மன தைரியம் உண்டானது. அதன் பிறகு இன்று வரை ரயிலில், பேருந்தில், கார்களில் பயணம் செய்யும்போது, நிசப்தமாக ஒரு மீன் தண்ணீரில் நீந்துவது போல நிலவு தொலைவில் அலைவதைப் பார்த்தபடி நீள்கிறது பயணம்.
தற்செயலாக இரண்டு நாட்களுக்கு முன்னால், ஓர் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு யாவரும் மொட்டைமாடியில் உறங்க வேண்டியதாகியது. நகரத்துக்கு வந்த பிறகு குழந்தைகள் முதன்முறையாக நிலா பார்த்தபடி உறங்கும் முதல் நாள் அது. நட்சத்திரங்களையும், நிலவையும், வழி தெரியாமல் அலையும் பறவைகளையும் பார்த்தபடி படுத்துக் கிடந்தோம்.

ஏதாவது கதை சொல்ல வேண்டும் என்று பையன் கேட்டதும் என் நினைவில் வந்த கதை பி.எஸ்.ராமையாவின் நட்சத்திரக் குழந்தைகள். இக்கதையை எனது கல்லூரி நாட்களில் வாசித்திருக்கிறேன். ஒரு கூழாங்கல் தண்ணீருக்குள் அமிழ்ந்துகிடப்பது போல இன்று வரை ஈரம் உலராமல் அப்படியே மனதில் இருக்கிறது. பி.எஸ்.ராமையா மணிக்கொடி இதழை நடத்தியவர். சிறந்த சிறுகதையாசிரியர். அவரது இக்கதை சிறந்த தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகள் யாவிலும் இடம் பெற்றுள்ளது.

நட்சத்திரக் குழந்தைகள் கதையில் ரோகிணி என்ற ஆறு வயதுச் சிறுமியும் அவளது அப்பாவும் ஒரு நாள் ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நட்சத்திரங்களுக்கு அப்பா இருக்கிறாரா என்று ரோகிணி கேட்கிறாள். சுவாமிதான் நட்சத்திரங்களுக்கு அப்பா என்று பதில் சொல்கிறார். உடனேசிறுமி கேட்கிறாள்...‘சுவாமி உன்னைப் போல அழகாக இருப்பாரா அப்பா?Õ அவரும், Ôசுவாமியைப் போல அழகானவர் உலகத்திலேயே வேறு யாரும் கிடையாது!’ என்கிறார்.

ரோகிணிஅதை ஆமோதிப்பது போல சொல் கிறாள்... Ôஅதனால்தான் நட்சத்திரங்கள் இத்தனை அழகாக ஜொலிக்கின்றன!Õ அப்போது ஒரு நட்சத்திரம் எரிந்து கீழே விழுகிறது. அதைக் கண்ட சிறுமியின் தந்தை, ‘யாராவது பொய் சொல்லிவிட்டால் ஒரு நட்சத்திரம் இப்படி உதிர்ந்து விழுந்துவிடும்!’ என்கிறார். ரோகிணியும் அதை ஏற்றுக் கொள்கிறாள்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு இரவில் வானத்திலிருந்து எரிந்து விழும் நட்சத்திரம் ஒன்றைக் கண்டு வேதனை தாங்க முடியாமல் ரோகிணி அழுகிறாள். அப்பா சமாதானப்படுத்தும்போது, ‘நம் ஊரில் யாரோ பொய் சொல்கிறார்கள் அப்பா. ஒரு நட்சத்திரம் உதிர்ந்து போனால் கடவுள் எவ்வளவு வேதனைப்படுவார். அதை நினைத்துதான் வருத்தப்படுகிறேன்!’ என்கிறாள் குழந்தை.

குழந்தையின் மனதும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத துக்கமும்கொண்ட கதை இது. எப்போதாவது பின்னிரவில் விழித்துக்கொண்டு ஜன்னலைத் திறந்து பார்க்கும்போது சொந்த ஊரை நினைவுபடுத்துகிறது நிலா. குற்றவாளியைப் போல அதை நேர்கொள்ளத் துணிவின்றி கவிழ்ந்துகொள்கிறது தலை!

பொய் சொல்வதால் நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும் என்பது உண்மையாக இருந்தால், இன்று வானில் ஒரு நட்சத்திரம் கூட இருக்காது. ஆனாலும், இக்கதையை வாசிக்கும்போது, கடவுளுக்காக வருத்தப்பட குழந்தைகளைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
பி.எஸ்.ராமையா. மதுரை மாவட்டம் வத்தலக்குண்டில் 1905\ம் ஆண்டு பிறந்தவர். 1933&ல் ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர். கச்சிதமான வடிவத்துடனும், தேர்ந்த மொழி நடையுடனும் சிறுகதைகள் எழுதியவர். சில காலம் திரைப்படத் துறையிலும் பணியாற்றியிருக்கிறார். இவரது தேரோட்டி மகன் நாடகம் மிகவும் பிரசித்தி பெற்றது. மணிக்கொடி என்ற இலக்கிய இதழை நடத்தி, தமிழ்ச் சிறுகதை உலகுக்கு புதிய பாதையை உருவாக்கியவர். புதுமைக் கோவில், பூவும் பொன்னும் போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள்.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்