Showing posts with label ந.பிச்சமூர்த்தி. Show all posts
Showing posts with label ந.பிச்சமூர்த்தி. Show all posts

Apr 21, 2012

ந. பிச்சமூர்த்தி – 'எழுத்து' நேர்காணல்

ந. பிச்சமூர்த்தி 1900 ஆகஸ்ட் பதினைந்து அன்று தஞ்சை ஜில்லா கும்பகோணத்தில் பிறந்தவர். ஹரி கதை காலட்சேபம், நாடகத்துறை, ஆயுர்வேத வைத்யம், தாந்தீரிக உபாசனையில் ஈடுபாடு, நான்கு மொழிகளில் சாகித்யம் இயற்றல் இவைகளில் வல்லுநரும், சகலகலா வல்லவருமான அவரது தந்தை நடேச தீட்சதர் காலம்சென்றபோது அவருக்கு வயது ஏழு.

தாயின் பராமரிப்பில் வளர்ந்த பிச்சமூர்த்தி கும்பகோணம் டவுன் உயர்தரப் பாடசாலையில் படித்து, கும்பகோணம் நேடிவ் கலாசாலையில் படித்து பிலாசபி எடுத்துக்கொண்டு பி.ஏ பட்டம் பெற்று பின்na_pitchamurthy சட்டப்படிப்பு படித்து, பிளீடரானார். 1924 முதல் 1938 வரையில் கும்பகோணத்தில் வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். வக்கீல் தொழில் தனக்கு பொருந்தவில்லை என்று கருதி அதை விட்டுவிட்டார்.

வக்கீல் தொழில் செய்யும்போதே அரசியலில் காங்கிரஸ் சார்பான ஈடுபாடு உண்டு. கலாசாலையில் இண்டர்மீடியட் படிக்கும் போதே கலாசாலைப் பத்திரிகையில் கவிதைகள், வர்ணனைக் கட்டுரைகள், சிந்தனைக் கட்டுரைகள் எழுதினார்.

1933-ல் 'கலைமகள்' நடத்திய சிறுகதைப் போட்டியில் பதினைந்து ரூபாய் பரிசுப்பெற்ற'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதை மூலம் எழுத்துலகத்துக்கு அறிமுகமான ந.பி. அதற்கு முன் 'சயன்ஸூக்கு பலி' என்ற கதையை 'கலைமகள்' லேயே எழுதி இருக்கிறார். அதுதான் அவர் எழுதிய முதல் கதையாகும். 1923 லேயே இங்கிலீஷில் 'மோஹனி' யையும் 'ஆராய்ச்சி' யையும் எழுதியிருக்கிறார். 1938 பிற்பகுதியில் ஹனுமான் பத்திரிகையில் உதவியாசிரியராகச் சேர்ந்து சுமார் ஏழுமாத காலத்திற்குப் பின் அதனின்று விலகி, அறநிலையப் பாதுகாப்பு இலாகா நிர்வாக அதிகாரியாக உத்யோகம் பெற்று பல கோயில்களில் 1956 வரை வேலை பார்த்து ரிட்யராகி சில வருடங்களாக சென்னையில் 'நவ இந்தியா' தினசரிப் பத்திரிகையில் உதவியாசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

'கலைமகள்'ல் பரிசு பெற்றாலும் பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர் ஆனார். கு ப ராவுடன் சேர்ந்து இரட்டையராக, 'கலைமகள்'க்கும் இன்றுவரை அபிமானத்தொடர்பு இருந்து வருகிறது. பிச்சமூர்த்தி புதுக் கவிதைகள், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள் எழுதியிருக்கிறார். கோர்டில் பலர் முன்னிலையில் வாதாடி பழக்கம் உள்ள பிச்சமூர்த்திக்கு மேடை ஏறிப் பிரசங்கம் செய்வது அவ்வளவாக பிடிப்பதில்லை. குறிபிட்ட கூட்டங்களில் தவிர அவர் அதிகமாக கலந்து கொள்வதும் இல்லை. பேசுவதும் இல்லை. பேசினாலும் ரத்னச் சுருக்கமாகத்தான். பிச்சமூர்த்தி நடுத்தர உயரமும் பாங்கான உடல் அமைப்பும் வாய்ந்தவர். நல்ல சிவப்பு நிறம். நரைத்த தலைமயிரும், தலைமயிரை விட வெளுப்பான தாடியும் உள்ளவர். கண்களுக்கு மேல் சற்று அதிகமாக தொங்குவது போன்ற புருவங்கள். சற்று சிவப்பேறிய ஒரு உக்ரத்தோற்றக் கண்கள். ஆளைச் சுடுவதுபோன்ற தீர்க்கமான பார்வை. கணீரென்ற குரல். பேச்சில் கொச்சையின் செல்வாக்கு.

அவரை நாங்கள் பேட்டி காணச் சென்றபோது அவர் வெளியே போயிருந்தார். அவரது அறையைச் சுற்றி நோட்டம் விட்டோம். சுற்றி புஸ்தகம். காகித மயம். ஒழுங்கில்லாமல் அடுக்கப்பட்டவை. அங்கங்கே தெரியும் காகிதங்கள் அவர் எழுதி வைத்திருக்கும், எழுதிக் கொண்டிருக்கும் படைப்புகளைக் காட்டின. பல மேல்நாட்டு பிரபல எழுத்தாளர்களைப் பற்றி நாங்கள் அறிந்திருப்பதைக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தபோது, பிச்சமூர்த்தி இந்த இடத்திலிருந்து கதை எழுதுகிறார், கவிதையும் எழுதுகிறர் என்று பட்டது.

முன்கூட்டியே பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பிச்சமூர்த்தி வெளியே இருந்து வந்ததும் வராததுமாக காரியத்தில் முனைந்துவிட்டோம். இந்த மாதிரி பேட்டி எங்களுக்கு புதிசு. தமிழில் முதல் வரிசையைச் சேர்ந்த முதிர்ந்த ஒரு எழுத்தாளரை பேட்டி காண்கிறோம். இலக்கியத் தரமாக பேட்டி இருக்க வேண்டும் என்ற ஆசை, கவலை, எப்படி அது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால் பேட்டி ஆரம்பித்ததுமே ஒரு சில கேள்விகளுக்குப் பிறகு எங்களுக்கு ஒரு தன்னம்பிக்கை ஏறிவிட்டது. அதற்குக் காரணம் பிச்சமூர்த்தியேதான்.

எங்கள் கேள்விகளுக்கு அவர் பதில் சுருக்கமாக, அழுத்தமாக, விவகாரமாகச் சொல்லி வந்தது மட்டுமல்ல, அடுத்த கேள்வி நாங்கள் கேட்பதற்கு தூண்டக்கூடிய வகையில், நாங்கள் என்னெல்லாம் உத்தேசித்திருந்தோமோ, அதை பொருத்தமான இடத்தில் கேட்கச் செய்ய ஏதுவாக எங்களுக்கு வழிகாட்டி இழுத்த மாதிரி இருந்தது அவரது பதில்கள். அவர் அதிகம் பொதுப்படையாக இலக்கிய விஷயங்களை விவாதிப்பதில் கவனமாக இருந்தார். குறித்த ஒன்றிரு விஷயங்களுக்கு அவர் பதிலைப் பெற முடியவில்லை. பேட்டி சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்றது. பிச்சமூர்த்தியின் பதில்கள் திட்டவட்டமாக முன்கூட்டியே அலோசித்து வைக்கப்பட்டு இருந்ததுபோல் தக்க வார்த்தைகளில் வந்து கொண்டிருந்ததால் அவைகளைத் தொடர்ந்து குறித்துக் கொள்வதும் எளிதாக இருந்தது. அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக பிச்சமூர்த்தியிடமிருந்து பெற்றுக்கொண்டு போகிற உணர்ச்சியுடன் திரும்பினோம்.

சி சு செல்லப்பா - சு சங்கரசுப்ரமண்யன்

(வாழ்க்கைக் குறிப்புகள் சம்பந்தமான விசராணைக்குப் பிறகு பேட்டி ஆரம்பமாகியது.)

பேட்டியாளர் : நீங்கள் பி.ஏ யில் பிலாசிபி எடுத்துக்கொண்டதாக சொன்னீர்களே, அதனால்தான் உங்கள் எழுத்திலும் அதன் சாயை அதிகம் காணப்படுகிறதோ?

ந.பிச்சமூர்த்தி : அது காரணமில்லை. எங்கள் குடும்பத்தில் பரம்பரையாகவே இந்தப் போக்கு இருந்து வந்திருக்கிறது. தலைமுறைக்கு ஒருவர் சந்நியாசியாக இருந்திருக்கிறார்.

பேட்டியாளர் : நீங்கள் தாடி வைத்துக் கொண்டதற்கு இதுதான் காரணமா?

ந.:(கொஞ்சம் நீண்ட மௌனம்) : 1933þல் உள் நெறியை மேற்கொண்டேன். அதன் சின்னமாக ஏற்பட்டதுதான் தாடி. உள்நெறிதான் எந்த மனிதர்க்கும் இயற்கையான வாழ்வு என்றே நினைக்கிறேன்.

பேட்டியாளர் : ஆமாம், வக்கீல் தொழில் பொருந்தாததால் தொழிலை மாற்றிக் கொண்டேன் என்றீர்களே. அப்படியானால் எழுத்தாளராக ஆனது இந்த மாற்றத்துக்கு தூண்டுதலாக இருந்ததா?

ந.பிச்சமூர்த்தி : எழுத்தினால் அதை விட்டுவிட்டேன் என்பது காரணமல்ல. எழுத்து நினைப்பு என்னைப் பற்றிய மட்டில் பால்ய முதலே இருந்தது. காலேஜில் இருக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். எழுத்து ஆர்வம் என்னிடம் இருக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். எழுத்து ஆர்வம் என்னிடம் இருந்ததுக்கு என் பரம்பரை காரணமாக இருக்கலாம். பரம்பரை என்ற உயிரியல் தத்துவம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை ஆட்கொண்டு தீரும். இந்த நியதியை தப்பமுடியாது.

என் தந்தை சகலகலா வல்லவர். ஒரு மேதை. அவருக்குள்ள மற்ற திறமைகளுடன் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மகாராஷ்டிரம் ஆகிய பாஷைகளில் சாகித்யம் இயற்ற வல்லவர். எனக்கு ஏழு வயதிலேயே இறந்துவிட்டார். எனக்கு அவரை நன்றாகத் தெரியாது. துரதிருஷ்டவசமாக அவர் வித்தை எதுவும் எனக்கு வரவில்லை.

பேட்டியாளர் : ஞானிகளுடன் உங்களுக்கு ஏதேனும் பரிச்சயம் ஏற்பட்டதா?

ந.பிச்சமூர்த்தி : இன்றும் கோவிலுக்குப் போவதைவிட பெரியோர்களை அண்டுவதே மேல் என்று நான் நினைக்கிறேன். இளம் வயதிலிருந்தே துறவிகள், பைத்தியம், குழந்தைகள் என்றால் எனக்கு மிக விருப்பம். சொல்லப்போனால் என்னையும் மீறியே அவர்களுடன் கலந்து விடுவேன்.

பேட்டியாளர் : இதனால்தான் அவர்கள் சம்பந்தப்பட்டதாக உங்கள் கதைகள் அதிகம் இருக்கின்றனவோ?

ந.பிச்சமூர்த்தி : இருக்கலாம். அதுவே காரணமாக இருக்கலாம். இத் தொடர்புகளால் உள்ளொளியையும் நல்ல பயனையும் அடைந்திருக்கிறேன் என்று உறுதியாகச் சொல்லுவேன். அவர்கள் தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால் ஆற்றில் செல்லும் கிளை போல குறிப்பின்றி புரண்டு போய்க்கொண்டே இருந்திருப்பேன்.

பேட்டியாளர் : இந்தக் குறிப்பு வாழ்க்கையில் ஏற்பட்டதுபோலவேதான் உங்கள் இலக்கியப் படைப்புகளிலும் பிரதிபலிக்கிறதா?

ந.பிச்சமூர்த்தி : இலக்கியம் வாழ்வின் ஒரு துறையிலான இயக்கம் ஆனபடியால் இலக்கியம் பாதிக்கப்பட்டேதான் தீர வேண்டும். வாழ்வுக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் பேசுவதை நான் ஏற்கமாட்டேன். வாழும் வகை காணும் முயற்சியைவிட இலக்கிய முயற்சி சிறந்தது என்று ஒப்ப மாட்டேன். சொல் ஓய்ந்து மௌனம் வருமானால் மகிழ்ச்சியுடன் ஏற்பேன். உருவத்தில் நின்று உருவமற்றதை காண்பதே இன்பம். மேதை இருந்து அந்த இன்பத்தை உலகுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமானால் அதுவும் நல்லதுதான், முடியாவிட்டாலும் அதற்காக வருந்த வேண்டியதில்லை.

பேட்டியாளர் : நீங்கள் சொல்கிறதைப் பார்த்தால் கலை இன்பம் என்று தனியாக பிரிப்பதாகத் தெரிகிறது. வாழ்க்கை இன்பம் வேறு...

ந.பிச்சமூர்த்தி : இந்து நாகரீகம் இலக்கியத்துக்கு இரண்டாவது ஸ்தானம் தான் கொடுத்திருக்கிறது. முதல் ஸ்தானம் ஆன்ம வேட்கைக்கு. நான் ஒரு இந்து. இந்த அடிப்படை நோக்கில் ஏற்படுகிற விளைவுகள் எல்லாம் ஏற்படத்தான் செய்யும்.

பேட்டியாளர் : ஆனாலும் தங்கள் படைப்புகளில் 'கலை இன்பம்' எடுப்பாக கிடைக்கிறதே.

ந.பிச்சமூர்த்தி : உள்ளபடியே நான் கருதும் கலை இன்பத்திற்கும் ஆன்ம இன்பத்திற்கும் தரத்தில் வித்தியாசம் இராது.

பேட்டியாளர் : (குறுக்கிட்டு) நானும் புலனின்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை.

ந.பிச்சமூர்த்தி : அது சரி...சொல்லை மந்திரம் என்பார்கள். சொல்லைக் கொண்டே சொல்லற்ற நிலையைக் காட்ட முயலுவதுதான் இலக்கியம். அந்த இடத்தில் உலகின் சிகரமும் ஆன்ம உலகின் சிகரமும் இணைகின்றன.

பேட்டியாளர் : அப்படியானால் மேல் நாட்டு இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் இந்த இணைப்பு இல்லையா?

ந.பிச்சமூர்த்தி : மேல்நாட்டு இலக்கியத்தில் இந்த நோக்கு இல்லை என்று சொல்லமாட்டேன்.

பேட்டியாளர் : அறிவு நிலை அளவுக்குத்தான் உண்டு. ஆன்மிக நிலையளவுக்குக் கிடையாது என்று கூறப்படுகிறதே.

ந.பிச்சமூர்த்தி : மேல் நாட்டில் ஒரு பகுதி இலக்கியம்தான் உலகியல் இன்ப துன்பங்களே முடிவானது என்று கருதி இயங்குகிறது. டால்ஸ்டாய், மாரிஸ் மெடர்லிங், பிளேக், ஷெல்லி, யீட்ஸ், ஏ.ஈ.இ எமர்ஸன், விட்மன், எட்வர்ட் கார்ப்பெண்டர் ஆகியோர் போல், சொல்லப்போல், காஃப்கா தாமஸ் மான் போன்றவர்கள்கூட இதே ஆன்ம வேட்கையைத்தான் இலக்கிய முறையில் அமைத்திருக்கிறார்கள்.

பேட்டியாளர் : 'அன்னா கரீனினா' எழுதிய டால்ஸ்டாயையும் சேர்த்தா சொல்லுகிறீர்கள் . முழுக்க முழுக்க நடப்பியல் சம்பந்தப்பட்டதல்லவா அன்னா கரீனினா?

ந.பிச்சமூர்த்தி : ஒரு ஆசிரியரின் ஒரு படைப்பில் இந்த தொனி இல்லாமல் போனதைக் கொண்டு அடிப்படைத் தன்மையே தகர்ந்து விட்டது என்று கருதக்கூடாது. டால்ஸ்டாயைப் பற்றிய வரையில் மேல் நாட்டு முறையில் இலக்கியத்தை அணுகுவது தவறு என்று அவர் மனமாற்றம் பெற்ற பிறகு உணர்ந்தார் என்பது தெரிந்த விஷயம்.

பேட்டியாளர் : ஆகவே மேல் நாட்டு முறையில் இலக்கியம் படைப்பது சம்பந்தமாக நாமும் அதேமாதிரி முடிவுக்குத்தான் வரவேண்டுமா?

ந.பிச்சமூர்த்தி : இலக்கியம் சம்பந்தப்பட்ட மட்டில் தர்க்க பூர்வமான விவாதங்கள் செய்வதால் புத்தகங்கள் பெருகலாமே தவிர அதிக உண்மைகள் தெரிந்து விடுவதில்லை. ஏனென்றால் இலக்கியமும் வாழ்வைப்போல நம்மை யறியாமலே, ஒரு வேளை - நம்மையும் மீறி உந்தித் தள்ளும் ஒரு சக்தி...அல்லது எதுவோ...

பேட்டியாளர் : இதுவரை பொதுப்படையாக பேசிவிட்டோம். தமிழ் இலக்கியத்துக்கு வருமுன் ஒரு கேள்வி. தாகூருக்கும், உங்களுக்கும் ஒப்பிடுதல் செய்கிறார்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : தாகூருக்கு எனக்கும் எந்தவிதத்தில் சம்பந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. தாடியைத் தவிர. எல்லோரும் படித்த அளவுக்கோ படிக்காதஅளவுக்கோதான் நானும் தாகூரைப் படித்திருக்கிறேன் ஆங்கிலத்தில்தான். ஆனால் காளிதாசனுக்குப் பிறகு நம் நாட்டில் தோன்றிய மகாகவி தாகூர் ஒருவரே என்று சொல்வேன்.

பேட்டியாளர் : தாகூர் சிறுகதைக்கு இந்திய உருவம் கொடுத்திருப்பது போல் நீங்களும் கொடுத்திருப்பதாக விமர்சகர் க நா சுப்ரமணியம் கூறியிருக்கிறார். இந்திய உருவம் என்று தனியாகக் கூறுவதற்கு இருக்கிறதா? நமது உருவ முயற்சி பற்றியும் கொஞ்சம் விளக்கம் கொடுத்தால்....

ந.பிச்சமூர்த்தி : நாமரூபங்களுக்கு இந்துக்கள் பெருமை தரக்கூடாது. உடம்பைப் போற்றுதல் உயர்ந்த பண்பாகாது. 'ஊனுடம்பு ஆலயம். உள்ளம் திருக்கோவில்' என்றார் திருமூலர். உருவத்திற்கு உள்ள பெருமை எல்லாம் உயிருக்குள்ள சக்தி தான். உருவத்திற்கு அழகு ஏற்படுவதே உயிரின் இயக்கத்தினால்தான். நோய்ப்பட்ட உயிரில் உருவ அழகைக் காண முயல்வது குதிரைக் கொம்புக்காக புறப்படும் வேட்டையாகும். ஆகவே உருவம் என்று இலக்கியத்தில் எந்தத் துறையில் விவாதத்தை எழுப்பினாலும் பேசினாலும் அதை நான் பெரிதாகக் கருதுவதில்லை. இந்திய நோக்கு என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதற்குத் தகுந்த இலக்கிய அமைப்புதான் ஏற்படும். தமிழ் இலக்கியத்துக்கும் இந்தக் கருத்து பொருந்தும்.

பேட்டியாளர் : இன்றையத் தமிழ் இலக்கியத்தில் உள்ள உருவங்கள் மேல் நாட்டு முறையைப் பின்பற்றியதா? நம் மரபு உருவங்கள் எந்த அளவுக்கு இருந்திருக்கின்றன? சோதனை என்று பேசப்படுவது எந்த அளவுக்குச் சரி?

ந.பிச்சமூர்த்தி : உயிரானது தன்னைத்தானே தின்று வாழ முடியாது. தனக்குப் புறம்பாக உள்ள பொருள்களை தனதாக்கிக் கொள்வதன் மூலம்தான் அது வளர முடியும். அதாவது பழயதில் புதுமை கலப்பதுதான் உயிரியக்கம். பழந்தமிழ் மரபுகள் வளரும்போது அல்லது வளர விரும்பும்போது இந்த இயற்கை நியதிகளுக்கு ஒப்ப பிறநாட்டு இலக்கிய மரபுகளையும் ஜீரணம் செய்து கொள்ளப் பார்க்கிறது. தமிழ் நாட்டு சிறுகதை உருவம் என்று சொல்ல எதுவும் இல்லை. அமெரிக்க உருவம், இங்கிலீஷ் உருவம், என்றெல்லாம் சொல்வது பயனில்லாத பாகுபாடுகள். தெளிந்த ரசனையைக் காட்டினால் உருவம் நன்றாக இருக்கிறது என்று நினைக்க வேண்டும். குழம்பிய ஜலத்தில் முகம் தெரியாது. அப்போது இலக்கியம் கண்ணாடி ஆகாது.

பேட்டியாளர் : இலக்கியம் வாழ்க்கையை பிரதிபலிக்கிற கண்ணாடி என்று கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

ந.பிச்சமூர்த்தி : உங்கள் கேள்வியிலேயே தவறு இருக்கிறது. நீங்கள் சொல்லுவதிலே ஒரு முக்கிய விஷயம் இருப்பதை உணர்ந்தீர்களோ கண்ணாடி மனிதனை அப்படியே காட்டக் காணோம். இடது புறமாக இருப்பது கண்ணாடியில் வலதுபுறமாகவும், வலது புறமாக இருப்பது இடது புறமாகவும் தெரியும். ஆகவே கண்ணாடிகூட மாற்றத்தான் செய்கிறது. இலக்கியம் கண்ணாடியை விட அதிக மாற்றத்தைத் தருகிறது. இன்னொரு விஷயத்தைக்கூட இந்தச் சந்தர்ப்பத்தில் நினைத்துக்கொள்ளலாம். கருப்பையிலிருந்து பிறக்கும் குழந்தை தலைகீழாகத்தான் பிறக்கிறது. பூமியில் வந்தவுடன் நிமிர்கிறது. இலக்கியத்தில் ஆசிரியர் கருப்போல குறுகி அணுவாகி வியாபித்து விடுகிறான் ஆசிரியன் அகண்டாகாரம் அடையும் சாதனையில் எந்த இலக்கியமும் ஒரு அறிகுறி அல்லது ஒரு மைல்கல்.

பேட்டியாளர் : சமீபத்தில் உங்கள் மணிவிழா பாராட்டுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது பாம்பு அடிக்கடி சட்டை உரித்துக் கொள்வதுபோல் எழுத்தாளன் தன்னை புதுசுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றீர்களே.. தமிழ் எழுத்து உலகில் அந்தச் சட்டை உரிப்பு எந்த அளவுக்கு இன்று நடைபெறுகிறது? பாரதி, ராமையா மணிக்கொடி காலத்தில் நடந்த சட்டை உரிப்பு மாதிரி? இன்று பொதுவாக இன்றைய தமிழ் இலக்கியத்தில்...

ந.பிச்சமூர்த்தி : தமிழ் நாட்டில் இலக்கிய முயற்சிகள் எல்லாவற்றையுமே நான் வரவேற்கிறேன். சைக்கிள் சவாரி செய்பவன் பயிற்சி காலத்தில் தவறி விழுந்தால் அவனை ஏளனம் செய்வது தவறு. அவனுக்கு ஊக்கம் ஊட்டத்தான் வேண்டும். அவன் சொல்லும்வழி தவறாக இருந்தால், அதை எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமை. எத்தனையோ லட்சக் கணக்கான முயற்சிக்குப் பிறகுதான் இயற்கை, மனிதன் என்ற ஒன்றை சாதித்தது. புதிய தமிழ் இலக்கியத்தில் ஒரு நூற்றாண்டு ஆகட்டுமே. எல்லோரும் சரியான நோக்கோடு முயலுட்டுமே. அவற்றின் தரத்தைப் பற்றி முன்கூட்டி முடிவுகட்ட வேலை யாருடையதும் அல்ல. அதை அனுபவிக்கும் சந்ததியார் அந்த விஷயத்தை கவனித்துக் கொள்வார்கள். எப்பேற்பட்ட விமர்சனமும் ஒருவருடைய அபிப்பிராயம்தான் - அதாவது அடிப்படையான கொள்கையுடன் பிணைக்கப்படாத வரையில். உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேனா?

பேட்டியாளர் : நாங்கள் பின்னர் கேட்க இருந்த கேள்விக்கு பதில் இப்போதே கிடைத்து விட்டது. அதாவது விமர்சனம் பற்றி. தமிழ் எழுத்துலகில் படைப்பாளி சம்பந்தப்பட்ட மட்டில் சட்டை உரிப்பு.

ந.பிச்சமூர்த்தி : என்னைப் பற்றியே பேசலாம் என்று நினைக்கிறேன். காத்தாலும் அழித்தாலும் இலக்கியமே சரணம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். பல காரணங்களால் நான் இக் காரியத்தை செய்யாமல் இருந்து விட்டேன். இலக்கிய ஆசிரியன் எவனும் தன்னை இலக்கியத்துக்கு என்று ஒதுக்கி வைப்பானானால் அவ்வப்போது தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய வழியை அவன் காண்பான். சட்டை அப்போது தானாகவே உரியும். இந்த சமர்ப்பணம் என்பது ஆன்மத்துறையில் எவ்வளவு அவசியமோ அதைவிட இன்னும் அத்யாவச்யம் இலக்கியத்திலும். எழுதிப் பிழைப்பது என்பதைப் பற்றி நான் பேசவே இல்லை. மதத்திற்கு என்ன பெருமை கொடுப்பார்களோ அதற்குக் குறையாதபெருமை உண்மையான இலக்கியத்துக்கும் உண்டு.

பேட்டியாளர் : மணிக்கொடி கோஷ்டியினர் இந்த சட்டை உரிப்பு செய்து வந்திருக்கிறார்களா?

ந.பிச்சமூர்த்தி : கோஷ்டிகளைப் பற்றிப் பேசுவது என் உடன்பாடு அல்ல. சட்டை உரிப்பது என்றால் புதிய முயற்சிகள் என்றுதான் பொருள். லட்சியத்தைக் குறைத்துக் கொண்டால் பிழைப்பு நிலைக்கு இறங்கி விடுகிறோம். பிழைப்பு நிலைக்கான சாதனம் இலக்கியம் என்று நினைப்பு ஓரளவு தமிழ்நாட்டில் இன்று பரவி இருக்கிறது. எதை நம்பி வாழ்கிறோமோ அது சோறு போட வேண்டும் என்பது நியாயம்தான். சோறு போடவில்லை என்பதற்காக விட்டுச் செல்ல முடியாது. அதற்காக தரத்தையும் இறக்கிவிடக் கூடாது.

பேட்டியாளர் : குழுக்களாக இருந்து இலக்கியம் சாதிக்க முடியுமா? வட்டத்தொட்டி, வெள்ளி வட்டம்....

ந.பிச்சமூர்த்தி : நான் அதை நம்பவில்லை. உலகத்தைப் பார்ப்பது என்றால் என் சொந்தக் கண் பார்த்தாலொழிய எனக்குத் தெரிவதில்லை. நான் உண்ட உணவை பிறர் ஜீரணம் செய்ய முடியாது. இலக்கியம் கலை, உருவம் பெறும் வரையில் அது தனி மனிதனின் வேதனையோ ஆவேசமோ அல்லது இன்பமோ ஆகும். அதற்குப் பிறகு இலக்கியாசிரியனுக்கும் அந்தப் படைப்புக்கும் சம்பந்தம் இல்லை.

பேட்டியாளர் : மணிக்கொடி கோஷ்டி என்று ஒன்று...

ந.பிச்சமூர்த்தி : கிடையாது.

பேட்டியாளர் : பின் ஏன் அப் பெயரை அடிக்கடி பிரஸ்தாபிக்கிறார்கள்?

ந.பிச்சமூர்த்தி : பொதுவான போக்கு இருந்ததைக் கொண்டு ஏதோ கோஷ்டியாக இருந்தது போல தவறுதலாய் பேசி வருகிறார்கள். புதுமைப்பித்தனுக்கும் கு ப ரா வுக்கும், எனக்கும் எந்தவிதத்தில் ஒற்றுமை இருக்கிறது.

பேட்டியாளர் : கு.ப.ரா பெயரை பிரஸ்தாபித்தீர்கள். உங்களை 'இரட்டையர்' என்கிறார்களே எப்படி?

ந.பிச்சமூர்த்தி :கும்பகோணத்தில் 3, பிள்ளையார் கோயில் தெரு, எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் ராஜகோபாலன். நான் காற்றாடி கட்டிவிட்ட நாள் முதல், அவன் தவளைக் குஞ்சுகளை நெருப்புப் பெட்டியில் போட்டு விளையாடின நாட்கள் முதல் இணைபிரியாத தோழர்கள்.

பேட்டியாளர் : (குறுக்கிட்டு) அதுதான் கு.ப.ராவின் 'பாட்டியின் ஆதங்கம்' என்ற கதையில் அந்தக் குழந்தைகள் தவளை விளையாட்டு பிரஸ்தாபம் இருக்கிறதோ?

ந.பிச்சமூர்த்தி :(சிரித்து) அப்படியா? இருக்கா? அதற்குப் பின் படிப்புக்காக வெளியூர் போனபோதிலும் திரும்ப விடுமுறைக்கு வரும் நாட்களில் என்னுடனேயேதான் காணப்படுவான். அவன் உத்யோகம் பார்த்த காலத்திலும்கூட கும்பகோணம் வரும்போது எப்போதும் எங்கள் இருவரையும் சேர்ந்துதான் பார்க்க முடியும். இருவரும் சேர்ந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் எழுத ஆரம்பித்தோம். வ.ரா.தான் எங்களை இரட்டையர் என்றார்.

பேட்டியாளர் : பாரதிக்குப் பின் வ ரா ஒரு இலக்கிய சக்தியாக விளங்கினாரே. அதைப்பற்றி அதிகம் இப்போது பிரஸ்தாபிக்கப்படுவதில்லையே. வ ராவின் இலக்கிய சாதனை பற்றி உங்கள் கருத்து?

ந.பிச்சமூர்த்தி : வ ரா சில புதிய துறைகளைக் கையாண்டார். வாழ்வில் பாமர மக்கள் என்று கூறப்படுவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் இடம் சம்பாதித்துத் தர முயன்றவர்களில் முதல்வர் என்றே அவரைப் பற்றிச் சொல்லலாம். அவருடைய நடைச் சித்திரத் தொகுப்பு இதற்கு சிறந்த சான்று. இங்கிலிஷ் ஆசிரியர் ஏ ஜி ஜி செய்த காரியத்தை வ ரா தமிழ் இலக்கியத்திற்குச் செய்திருக்கிறார். ஒரு விதத்தில் அவர் ஜான்சனைப் போன்றவர். அவருடைய எழுத்து எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மேற்பட்ட சக்தி வாய்ந்தது வரா, என்னும் ஜீவன். அந்தச் சக்தியின் கவர்ச்சி முழுவதும் அவருடைய இலக்கியத்தில் காணப்படுவதாகச் சொல்லமுடியாது. ஒரு விதத்தில் வசனத்திற்கு புதிய நியதிகளை உண்டாக்க வேண்டும் என்று விரும்பியவர் என்றே சொல்லலாம். தனித்துச் சுருங்குவதைவிட விரிந்து பரவுவதே அவரது எல்லாவிதத்திற்குமான கொள்கை.

பேட்டியாளர் : பாரதி, வ.ரா வுக்குப் பிறகு அத்தகைய சக்தி இன்று தமிழ் நாட்டில் இல்லாதது இன்றைய மந்தத்திற்கு காரணமா? சாதனைக் குறைவுக்குக் காரணமா?

ந.பிச்சமூர்த்தி : தனி ஜீவன் அரசியலில் எதையும் சாதிக்கலாம். ஆனால் இலக்கயத்தில் எந்த ஜீவனின் புது முயற்சியைப் பார்த்தாலும் அந்த முயற்சிக்கு இட்டுச் செல்லும்பாதை அதற்கு முந்திய இலக்கியத்தில் இருப்பது காணப்படும். ஏற்கனவே இலக்கியம் தனி ஜீவனின் முயற்சி என்று சொல்லி இருக்கிறேன். பாரதி புதிய தமிழ் இலக்கியத்தை உண்டாக்கினார் என்று சொல்வதைவிட புத்துயிர் பெற்ற தமிழ் நெஞ்சம் பாரதியாக குரல் கொடுத்தது என்று கூற வேண்டும். அதேபோலத்தான் வ.ராவும்.

பேட்டியாளர் : இப்போது அந்த மாதிரி தொனிக்கும் குரல்?

ந.பிச்சமூர்த்தி : இல்லை என்று சொல்லமுடியாது. தமிழ் நாட்டுக் கருத்துக் குழப்பங்கள் காரணமாக விரிந்து உயர்ந்து தலமை தாங்க வேண்டியவர்கள் சுருங்கி நின்று விடுகிறார்கள்.

பேட்டியாளர் : இதனால் இலக்கிய வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதை....?

ந.பிச்சமூர்த்தி : அதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழன்னை ஓயாத இளமை பெற்றவள். அவள் பொலிவை பல விதத்தில் காண்கிறோம். எல்லாவிதப் பொலிவையும் ஒருவர் அநுபவித்துத்தான் ஆகவேண்டும் என்று சொல்ல இயலாது. அவரவர் போக்குப்படி தமிழன்னையை வணங்குவதை யாராலும் தடுக்க முடியாது.

பேட்டியாளர் : கு.ப.ரா வைப்பற்றி ஒரு கேள்வி. அவர் ஒரு மாதிரியான 'செக்ஸ்' கதைகள் மாப்பஸன் மாதிரி எழுதினதாக அபிப்பிராயம் கூறப்படுகிறதே. இந்த 'செக்ஸ்' விஷயத்தை ஒரு இலக்கிய பிரச்னையாக அவர் கையாண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : எனக்குத் தெரிந்தவரையில் ராஜகோபாலன் மாப்பஸன் அதிகம் படித்திருந்தான் என்று சொல்வதிற்கில்லை. அவன் கதைகள் பச்சையாக இருக்கின்றன என்று கூறுவதுபற்றி நான் ஒன்று சொல்வேன். வாழ்வு பச்சையாக இருந்தால் இலக்கிய ஆசிரியன் என்ன செய்வான்? அவைகளை ஒதுக்கிவிட்டு வேறு விஷயங்களைக் கையாளக் கூடாதா என்று கேட்டால் அது அந்தந்த ஆசிரியரைப் பொறுத்த விஷயம். வேதனையைத் தாங்கும் சக்தி ராஜகோபாலனுக்கு கிடையாது. அவன் உடம்பு மிகவும் நோஞ்சல். பெண்கள் படும் வேதனை அவனால் தாங்க முடியாது. ஆகவே பெண்ணின் வேதனையே அவனுடைய இலக்கிய விஷயமாயிற்று.

பேட்டியாளர் : உங்கள் கதைகளுக்கு எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் ஆதாரமா?

ந.பிச்சமூர்த்தி :எல்லாக் கதைகளுக்கும் சொல்லமுடியாது. சில கதைகளுக்கு இருக்கலாம். ஆனால் வாழ்வு இலக்கியத்தில் வரும்பொழுது திரிந்து வேறு உரு கொண்டுவிடுகிறது.

பேட்டியாளர் :ஏதாவது உதாரணங்கள் ?

ந.பிச்சமூர்த்தி : கும்பகோணம் கடைத் தெருவில் கையில் பச்சை குத்திக் கொண்டிருந்த ஒரு பையன் இருந்தான். அவனைப் பார்த்தால் அரைப் பைத்தியம் போலதான் இருக்கும். அவன் அனாதை. அவன் என் மனதில் விட்ட வடுத்தான் 'அரைப் பைத்தியம்' என்ற கதையாக உருவெடுத்தது. 'மோஹினி' என்ற என் கதைக்கு ரவிவர்மாவின் படம் தூண்டுகோல்.

பேட்டியாளர் : கேட்கப்போகிற கேள்வி பற்றி வித்தியாசமாக நினைத்துவிடாதீர்கள். 'பதினெட்டாம் பெருக்கு'க்கு எதாவது அம்மாதிரி அநுபவம்.....?

ந.பிச்சமூர்த்தி : கிடையவே கிடையாது.

பேட்டியாளர் : நீங்கள் கதை எப்படி எழுதுகிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : எனக்கே தெரியாத விஷயம். ஒரு காரணம் சொல்கிறேன். சாலிவாஹனன் 'கலாமோஹினி' பத்திரிகை நடத்தியபோது நெருக்கி கதை கேட்டார். முடியாது என்று சொல்லிவிட்டு திருச்சி சிந்தாமணி பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றுவிட்டேன். பஸ்க்காக ஒரு திண்ணையில் உட்கார்ந்து இருந்தேன். ஏதோ ஒரு லயிப்பில் ஒரு புதுக்கவிதை எழுதினேன். முடித்துவிட்டுப் பார்க்கும்போது பஸ் போய்விட்டது. சாலிவாஹனன் வீட்டுக்குத் திரும்பி கவிதையைக் கொடுத்தேன். அதற்குப் பெயர் 'காட்டு ராஜா'. அடுத்த இரண்டொரு தினங்களில் 'கவி' என்ற கதை எழுதினேன். அதை 'கலைமகள்' பத்திரிகைக்கு அனுப்பினேன். ஆகையால் எப்படி எழுதுகிறேன், எப்பொழுது எழுதுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.

பேட்டியாளர் :புதுக்கவிதை முயற்சி நீங்களும், கு.ப ராவும் ஆரம்பித்தீர்களே, இன்று அதற்குள்ள இடம் என்ன என்று நிதானிக்க முடிகிறதா?

ந.பிச்சமூர்த்தி : புதுக்கவிதை முயற்சி பற்றியவரை அதற்கு இன்று போதிய வரவேற்பு இருக்கிறதென்று சொல்லமாட்டேன். இந்த புதுக்கவிதை முயற்சி வலுத்தால் யாப்புக்கு இணங்கிய கவிதை முயற்சியிலே புதிய வலிமையும் ரசனையும் தோன்றும் என்று நினைக்கிறேன்.

பேட்டியாளர் : புதுக்கவிதை, வசன கவிதை என்ற பெயர்கள் பற்றி உங்கள் கருத்து?

ந.பிச்சமூர்த்தி : பெயரைப்பற்றி எனக்கு ஆட்சேபணை கிடையாது. ஒரு குழந்தைக்கு இரண்டு மூன்று பெயர்கள் இருப்பதை உலக அநுபவத்தில் பார்க்கிறீர்களே.

பேட்டியாளர் : உங்கள் கவிதைகளில் கலீல் கிப்ரான் பாதிப்பு (இன்ஃப்ளுயன்ஸ்) இருப்பதாகச் சொல்லலாமா?

ந.பிச்சமூர்த்தி : கலீல் கிப்ரான் என்ற ஒருவர் இருந்ததே எனக்கு இரண்டு வருஷங்களாகத்தான் தெரியும். தவிரவும் கிப்ரான் புதுக்கவிதைப் பேர்வழியும் அல்லவே. அராபியில் அவர் எழுதியுள்ளது எல்லாம் யாப்புக்கு இணங்கியவையே.

பேட்டியாளர் : நாவல் எழுதும் முயற்சி நீங்கள் செய்யவில்லையா?

ந.பிச்சமூர்த்தி :இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்.

பேட்டியாளர் : சிறுகதைகள் எழுதிப் பழகிய கைக்கு நாவல் எழுதுவது எப்படிப் படுகிறது?

ந.பிச்சமூர்த்தி : நாவல் எழுதுவது சிறுகதை எழுதுவதைப்போல் அல்ல என்று தோன்றிகிறது.

பேட்டியாளர் : உங்கள் எழுத்தில் ஆரம்ப காலத்தில் ரொமாண்டிக், பிற்காலத்தில் 'பிலசாபிக்' என்று காலகட்டம் பிரித்துச் சொல்வது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ந.பிச்சமூர்த்தி : அப்படிச் சொல்வது தவறு என்று நினைக்கிறேன். என் கதைகளை ஒரு லேபிளுக்குள் வகைப்படுத்த விரும்புகிறவர்கள் தோல்விதான் அடைவார்கள். இந்தச் சொற்றோடர்களுக்கே பொருள் கிடையாது என்னைப் பொறுத்தவரை.

பேட்டியாளர் :'காஷ÷வல் மானர்'ல பல நல்ல கதைகள் எழுதி இருப்பதாக க.நா சுப்பிரமண்யம் உங்கள் சமீபத்திய கதைத் தொகுதி மதிப்புரையில் கூறி இருக்கிறாரே. அப்படி என்றால் என்ன?

ந.பிச்சமூர்த்தி : விமர்சகர் என்ன கருத்தில் சொல்லி இருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. பார்க்கப் போனால் 'பதினெட்டாம் பெருக்கு' கதைகளில் காணும் சிந்தனை வேகத்தைவிட கடுமையாகவே அதில் காணப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன்.

பேட்டியாளர் : உங்கள் எழுத்து சம்பந்தமாக இடையில் ஏற்பட்ட பதினெட்டு ஆண்டு இடைநிறுத்தம் இதைப் பாதிக்கிறதா?

ந.பிச்சமூர்த்தி : ஒருவேளை என்னுடைய வளர்ச்சியை இது காட்டுவதாக இருக்கலாம்.

பேட்டியாளர் :தற்போதைய பத்திரிகை உத்தியோகம் உங்கள் படைப்புச் செயலை பாதிக்கிறதா?

ந.பிச்சமூர்த்தி : ஒன்றும் பாதிக்கப்படவேயில்லை

பேட்டியாளர் : இப்போதெல்லாம் நீங்கள் ஓரங்க நாடகம் எழுதுகிறதே இல்லையே.

ந.பிச்சமூர்த்தி : இப்போதுகூட ஒன்று எழுத முயன்று கொண்டிருக்கிறேன். எழுதாதற்கு காரணம் எதுவும் இல்லை. நடுவில் பதினெட்டு வருஷ காலம் நான் எதுவுமே எழுதவே இல்லையே. எழுதுவதை மறந்தே விட்டேனே.

பேட்டியாளர் : வேண்டுமென்றேயா?

ந.பிச்சமூர்த்தி : இல்லை. கவனம் எல்லாம் உத்தியோக விஷயத்தில் சென்றதால் படைப்புக்கான மனநிலை ஏற்பட்டதே கிடையாது.

பேட்டியாளர் : அதேபோல பத்திரிகை வேலையும் மன நிலையை பாதிக்காதா?

ந.பிச்சமூர்த்தி : பாதிக்காது. அன்று வேலை அன்றோடு நின்று விடுகிறது. சட்டையை கழற்றி வைப்பதைப் போல. மறுநாள் காலை வரையில் மனத்திற்கு சுதந்திரம் தானே?

பேட்டியாளர் : கோயிலைவிட பெரியோர்களை அண்டுவதையே விரும்பிய நீங்கள் பதினெட்டு வருஷம் கோவிலுக்குள்ளேயே இருக்க ஏற்பட்டதேங?

ந.பிச்சமூர்த்தி : அதுதான் அதில் உள்ள விசேஷம். கோயிலில் கூட அதனுடைய நிர்வாகத்தை கவனிப்பதுதான் என் கடமையாக இருந்திருக்கிறது. கோயிலில் எனக்கு வெறுப்பு என்று எண்ணிவிட வேண்டாம். தமிழ்நாட்டு கலாசாரம் முழுவதும் இன்றும் கோயிலில்தான் காணப்படுகிறது. கடவுளை விட குருவையே மேலானவர்களாக பாவிப்பது நம்முடைய வழக்கம்.

பேட்டியாளர் : கவியாகவும் இருந்து, பதினெட்டு வருஷம் கோயிலுக்குள்ளேயே இருந்த நீங்கள் மாணிக்க வாசகர், தாயுமானவர் போல் ஆகிவிடாமல் தப்பிப் பிழைத்து இலக்கியத்துக்குத்திரும்பினீர்களே நல்லவேளை (பிச்சமூர்த்தி வாய்விட்டுச் சிரித்து விட்டார்)

பேட்டியாளர் :உங்கள் 'முள்ளும் ரோஜாவும்' போட்டியில்பரிசு பெற்றதே. போட்டி பற்றி உங்கள் அபிப்பிராயம்என்ன?

ந.பிச்சமூர்த்தி : போட்டிகள் தவறு என்று நான் சொல்ல மாட்டேன்.

பேட்டியாளர் :பிரதேச இலக்கியம் மேல் நாட்டில் வளர்ந்திருக்கிறதே. அம்மாதிரி தமிழ் நாட்டில்?

ந.பிச்சமூர்த்தி :ஏன், புதுமைப்பித்தன் தமிழ் வசனத்தில் திருநெல்வேலி வாசனையும், ஆர் ஷண்முகசுந்தரம் நாவல்களில் கோவை மண் மணமும் வீசுகிறதே.

பேட்டியாளர் : அம்மாதிரி இலக்கிய வளர்ச்சி அதிகம் இருப்பது விரும்பத்தக்கது இல்லையா?

ந.பிச்சமூர்த்தி : நவநாகரீகச் சூழ்நிலையில் தமிழ் வசனம் இன்ன உருவத்தை அடையும் என்று கூறமுடியாது. சம்பாஷணை என்று இலக்கியத்தில் வரும்போதெல்லாம் பிரதேச வாசனை வீசாவிட்டால் அதில் இலக்கிய ரசனை, உண்மை இருக்காது.

பேட்டியாளர் :'பிக்ஷ÷' என்ற புனை பெயரை வைத்துக் கொள்ள காரணம்?

ந.பிச்சமூர்த்தி :கவிதைகள் அந்தப் பெயரில் ஆரம்பத்தில் எழுதினேன்.

பேட்டியாளர் : மனநிழல் கூட எழுதி இருக்கிறீர்களே.

ந.பிச்சமூர்த்தி : ஆமாம். ஒரு காலத்தில் துறவில் எனக்கு மோகம் இருந்தது உண்மை. அந்த மோகம் விடுபட்ட பிறகு அந்த மாதிரியான தொனியுள்ள பெயரையாவது வைத்துக்கொள்ளலாம் என்று வைத்துக் கொண்டேன். என் பெயரின் சரியான உருவம் பிக்ஷôடனமூர்த்திதானே.

பேட்டியாளர் : முடிவாக ஒரு வேண்டுகோள். அறுபது ஆண்டுகள் நிறைந்த முதிர்ச்சியில், முதிர்ந்த எழுத்தாளர் என்ற நிலையில் இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பயன் படுகிற வகையில் நீங்கள் அளிக்கும் செய்தி?

ந.பிச்சமூர்த்தி : சொந்த வாழ்வை ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு என்று சமர்ப்பணம் செய்து வாழ வேண்டியதுதான் எந்த தமிழனுடைய கடமையும் ஆகும் என்று நினைக்கிறேன். எதற்கேனும் சமர்ப்பணம் செய்யப்படாத வாழ்வு உப்பில்லாத ஊறுகாய். குறிப்பாக இன்றைய இலக்கிய ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் இன்றியமையாதது.

(எழுத்து ஏடு 21 - செப்டம்பர் 1960)

நன்றி : நவீன விருட்சம்

Jul 9, 2011

சாகுருவி - ந.பிச்சமூர்த்தி

கொக்கு

படிகக் குளத்தோரம்na_pitchamurthy
கொக்கு.
செங்கால் நெடுக்கு
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு.
உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்குக்
கட்டாயக் கட்டணம்.
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும்...
வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலழகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு-
தெரிவதே போதாதா?

சாகுருவி

இருள் பழுத்த இரவினில்
விண்ணின் மீன்கள் உதிர்ந்தன.
உயிர் முடிந்த சருகுகள்
ஊசலாடி விழுந்தன.
நிழலும் நீரும் முடிய மாந்தர்
மாரகனடி சேர்ந்தனர்
பூவும் பிஞ்சும் காயும் கிழமும்
சாய்ந்தது நெஞ்சில் காய்ந்தது...
காலை விழித்த கிராமத்தார்கள்
கண்கலங்கி வெதும்பினர்.
கருத்தைச் செலுத்தி உன்னிப் பார்த்தும்
காணவில்லை காரணம்
கோவில் கோபுரத்தில் வாழ்ந்த
சாகுருவி தெரிந்தது.
இரவு முழுதும் அவச்சொல் ஓசை
கேட்டது காதில் மூண்டது
காரணத்தைக் கண்டது போல்
களிப்புடன் கைசொடுக்கினர்.
“சாகுருவி சபித்துச் சபித்து
ஊர்முழுதும் நாச மாச்சு.
சாகுருவி மாள வேண்டும்
கிராமம் மீளத் தழைக்க வேண்டும்“
துடுக்குப் பிள்ளை இரண்டு மூன்று
போபுரத்தில் தாவினர்
சாகுருவி பிடித்து வந்து
ஊர் முழுதும் காட்டினர்
அரிசி காசு தண்டி வந்து
எமனின் தோல்வி முழக்கினர்.
பின்னும் பாசம் விழுந்தது.
பின்னும் மனிதர் இறந்தனர்.
சாகுருவி செத்துப் போயும்
சாவு நித்தியம் வாழ்ந்தது.

Aug 19, 2010

வெள்ளி விழா - ந.பிச்சமூர்த்தி

வெள்ளி விழா

சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு
மெரினாவில்
காந்தி சிலைமுதல் na_pitchamurthy
விவேகானந்தர் சிலைவரை
சவுக்கு முளை அடித்து
குறுக்குக் கழிகட்டி
வேடிக்கை பார்க்கவரும் வெள்ளம்
அணிவகுப்பை அழிக்காமல் 
வெற்றிக்கு வித்திட்ட கண்டிராக்டர்
மறுநாள் கணக்குப் பார்த்தார்
நல்ல ஆதாயம்.
மக்கள் கணக்குப் பார்த்தார்.
விழாதான் ஆதாயம்
காலைக் கருக்கிருட்டில்
சுள்ளி பொருக்க வந்த கிழவிக்கு
சவுக்கைப் பட்டைகளை
உரித்தெடுத்துக் கொண்டபோது
ஆளரவம் கேட்டதனால்
ஆதாயம் குறைப் பிரசவம்

கொக்கு

படிகக் குளத்தோரம்
கொக்கு.
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
முடியில் நீரை நோக்கும்
மஞ்சள் கட்டாரி மூக்கு.

உண்டுண்டு
அழகுக் கண்காட்சிக்
கட்டாயக் கட்டணம்
சிலவேளை மீனும்
பலவேளை நிழலும்...

வாழ்வும் குளம்
செயலும் கலை
நாமும் கொக்கு.
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலகா?
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு _
தெரிவதே போதாதா?

லீலை

மண்ணில் பிறந்தால்
வானேற ஆசை,
காலோடிருந்தால்
பறப்பதற்காசை,
வானாயிருந்தால்,
பூமிக்கு வேட்கை,
கொண்டலாயிருந்தால்
மழையாகும் ஆசை.
மின்னாயிருந்தால்
எருக்குழிக்காசை.
எருக்குழியானால்
மலராகும் பித்து
இரும்பாயிருந்தால்
காந்தத்திற்காசை
துரும்பாயிருந்தால்
நெருப்புக்காசை
தனியாயிருந்தால்
வீட்டுக்கு ஆசை.
வீட்டோடிருந்தால்
கைவல்யத்திற்காசை
நானாயிருந்தால் நீயாகும் ஆசை.
உனக்கோ?
உலகாகும் ஆசை.

விஞ்ஞானி

கடவுளால் என்ன முடியும்?
புல்லைச் செய்வார்.
மேயவென்று மாட்டைச் செய்வார்
பொங்கும் நுரைப்
பாலைச் செய்வார்.
ஊட்டவென்று கன்றைச் செய்வார்.
மண்ணென்ற ஒன்றைத் தருவார்.
வளர்ந்திடும் ஏக்கம் தருவார்.
வானத்தினிடையே வீணில்
ஒளியினைக் கொட்டும் கோள்கள்
மந்தையை ஓட்டிச் செல்வார்.
கோடையெனும் பெரிய அன்பின்
மடைகளைப் பிடுங்கி வைப்பார்...
நாமன்றி கடவுளேது?
நாமவர்க் கிளைப்பதேது?
புல்லுக்குப் போட்டியாக
மண்டும் கிருமி குண்டைச் செய்வோம்
மாட்டுக்குக் கன்றைக் காட்டி
பாலினைச் சுரக்கச் செய்யும்
மடமையை,
கலையின் குறைவை
காட்டுவதற்காக வென்றே
வைக்கோலும் தோலும் ஆன
தந்திரம் ஒன்றைச் செய்வோம்,
பாலை யாம் வரவழைப்போம்;
உழைப்புக்கு ஓய்வை அளிக்கும்
உணவு சத்துக்கள் செய்வோம்.
ஆண் பெண்ணின் கல்வியின்றி
உயிரை உற்பத்தி செய்யும்
உயிரியல் மர்மம் தேடி
உழைக்கின்றோம்.
வெற்றி காண்போம்.
நோக்கின்றி சாட்டையின்றி
தானாக விரையும் கிரகமாம்
சந்திரன், செவ்வாய், சுக்ரன்
மீதினில் குதிரை ஏறி
தளங்களை அமைத்துவிடுவோம்.
அருளெனும் ஜாலவித்தை
செலாவணி ஆகாதய்யா.
மடமையால் உலகைச் செய்தால்,
அறிவினால் களைதல் தவறா?

May 26, 2010

ஞானப்பால் - ந. பிச்சமூர்த்தி

 

லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது.

அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை
நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் என்ற நினைப்பு
அவன் நெஞ்சில் தடித்தே இருந்தது. ‘அ’னா ‘ஆ’வன்னா தெரியாத கரிக்கட்டைக்குப்
பதினைந்து ரூபாய் சம்பளமும், சாப்பாடும், தினம் ஆறுபேருக்குச் சாப்பாடு
போட்டுச் சமாளிக்கும் அதிகாரமும் எல்லாருக்கும் இலேசில் கிடைத்துவிடுமா
என்ன? பிள்ளை குட்டி இருந்திருந்தாலாவது துரதிர்ஷ்டத்தைப் பற்றி நினைக்க
வேண்டி இருக்கும்; சத்திரத்து முதலியாரை வையவேண்டி இருக்கும்.

N.Pidchamoorthy தவசிப்பிள்ளையின் அதிருஷ்டம், அவன் ஒண்டிக்கட்டை முதலெடுப்பிலேயே முதலியாரை வாழ்த்திடும் வாய்ப்பாகவே அந்த வேலை அமைந்துவிட்டது. அதைத்
தவிர, வாழ்த்துவதற்கு அதில் இன்னும் பல வாய்ப்புகள் இருந்தன. போகப்போகத்தான் தெரிந்தது. சத்திரத்துக்கு வேண்டிய கறிகாய் சாமான்கள் வாங்குகிற பொறுப்பு அவனைச் சேர்ந்ததுதானே? அவன் முதலில்
யோக்கியனாகத்தான் இருந்தான். இருந்தாலும் கைக்கு உறையைப் போட்டுக் கொண்டு தேன் எடுக்க முடியுமா? கையில் ஒட்டிக்கொள்வதை நக்காமல்தான் இருக்க
முடியுமா? அவனுக்குத் தெரியாவிட்டாலும் சொல்லிக் கொடுக்க வதங்கிய கத்திரிக்காயும் , தேசல் படிக்கல்லும், தக்கைப் போட்ட எண்ணெய்ச் செம்பும், கறிகாய் கடைக்காரியும், மளிகை மாணிக்கம் செட்டியாரும் இருக்கும்பொழுது அவனால் என்ன செய்துவிட முடியும்? முதலாளியை வாழ்த்துவதற்கான ஆதாரங்கள் இதில் எல்லாம் ஏராளமாக இருந்தன.

சத்திரத்துக்குத் தவசிப்பிள்ளைதான் சர்வாதிகாரி. ஆகையால் சட்டமும் இல்லை,
நெறிகளும் இலலை. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்ப்பார்களா?
அங்கே வேலை செய்துக் கொண்டிருந்த ஆளுக்குத் தவசிப்பிள்ளை ஒருநாள் சீட்டைக்
கிழித்துவிட்டான். ஆனால் பாவம்! தவசிப்பிள்ளை பேரில் மட்டும் குற்றம்
சொல்லக்கூடாது. அதிருஷ்டம் வந்து பிடரியில் குந்திக்கொண்டு
கட்டளையிட்டால் நிறைவேற்ற வேண்டியதுதானே!.

ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு லிங்கங் கட்டி அங்கு வந்து சேர்ந்தான்.
வந்தவனைத் தவசிப் பிள்ளை ஒன்றும் கேட்கவில்லை. சத்திரத்துக்கு வந்த பிறகு
பெற்ற அனுபவத்தால் தவசிப்பிள்ளைக்கு ‘எக்ஸ்ரே” பார்வை அந்துவிட்டது. ஆனால்
அதன் உதவி இல்லாமலேயே தவசிப் பிள்ளையால் லிங்கங்கட்டியை எடை போட்டுவிட முடிந்துவிட்டது.

மழுக்கிய தலை, கழுத்திலே வெள்ளிப்பெட்டி மூடிய லிங்கம், இடுப்பில்
பழுப்பேறீய வேஷ்டி- நாலுமுழ நீளம், இருபத்தி நாளு அங்குல அகலம்.

லிங்கங்கட்டி தலையைத் தடவிக்கொண்டு நின்றானேயொழிய எதுவும் பேசவில்லை.
ஆனால் தவசிப்பிள்ளை பதில் சொல்லிவிட்டான்.

“சமையல் ஆன பிறகு சாப்பிடலாம். இப்போது எங்கே இருந்து எங்கே போறீங்க?”

”பண்டாரத்துக்கு ஊரேது, பேரேது, போக்கிடமேது? சோறு கண்டால் சொர்க்கம்.
ஒரு கவளம் சோறு இங்கே நெதம் கிடைச்சா இது தான் போக்கிடம். அதை இதைச்
செஞ்சிக்கிட்டுக் கிடந்துடுவேன்”

தவசிப் பிள்ளைக்கு ஒரே யோசனை. ஆளைப்பார்த்தால் சுமை தாங்கி மாதிரி
இருக்கிறான். எந்த வேலை வைத்தாலும் தாங்குவான்! சமையல் பாத்திரம்
விளக்குகிற காத்தானோடு தினம் போராட முடிகிறதா? அஞ்சு ரூபாய் சம்பளமும்,
மிச்சம் மீதம் தினம் சோறு கிடைக்கிறதே - அது போதாதாம்! தினம்
அடித்துக்கொள்கிறான்! சோறு கொடுத்தால் குழம்பில்லையா என்கிறான்: குழம்பு
கொடுத்தால் கறியில்லையா என்கிறான்: சோறு குழம்பு கறி கொடுத்தால்,
இவ்வள்வு தானோ என்கிறான்! இவன் வம்பே இல்லாமல் ஒழித்துவிட்டால்?
சுமைதாங்கிதான் வந்திருக்கிறான்! ஒரு கவளம் சோறு செலவு! ஐந்து ரூபாய்
மிச்சம்!

மறுநாள் காத்தான் சீட்டு முன்னறிவிப்பின்றிக் கிழிக்கப்பட்டது. லிங்கங்
கட்டிக்கு அந்தப் பதவி அளிக்கப்பட்டதென்ற விசயம் தெரியவே தெரியாது.
சோற்றுக்காக தினம் ஊர் ஊராய் அலையவேண்டாம்! ஒரு மணி நேரம் பாத்திரம்
தேய்த்துப் பண்டம் கழுவிக் கொடுத்தால் புண்ணியம்! நாவுக்கரசர் உழவாரப்படை
வைத்திருக்கவில்லையா? பெரிய அதிருஷ்டம் அடித்துவிட்டதாக
லிங்கங்கட்டிக்கு அதிக மகிழ்ச்சி. தவசிப்பிள்ளையும்  தனக்கு அதிருஷ்டம்
அடித்ததென்று நினைத்துக்கொண்டான்.

வந்த புதிதில் எல்லாமே நன்றாக இருந்தன. ஒரு கவளம் கேட்ட ஆளுக்கு இரண்டு
வேளையும் மூன்று கவளமும் கிடைத்துவிட்டால் மனம் துள்ளாதா? பாத்திரங்கள்
கரி போகத்தேய்க்கப்பெற்றுப் பளபளப்பாக இருந்தன. முனகாத நல்ல ஆள் கிடைப்பது
ஒரு வாய்ப்புத்தான். “சத்திரத்து வேலைக்குத்தான் புணையாம்! காத்தான் சாமான் தூக்க்கும் கூலிக்காரனல்லவாம்!” என்ன லூட்டி அடித்துக் கொண்டிருந்தான்! அப்பாடா என்றிருந்த தவசிப்பிள்ளைக்கு தினம் சாப்பிட்டுவிட்டுச் சத்திரத்துத் திண்ணையில் லிங்கங்கட்டி படுத்துக் கொண்டபோது , ஆயாடீ என்று சொல்லிக் கொண்டே ஆறுதலாகப் படுத்துக்கொண்டான் தவசிப்பிள்ளை.

அதோடு விசயம் போய்விடவில்லை சத்திரத்தில் வந்து போகிறவர்கள் லிங்கங்
கட்டியைப் பாராட்டாமல் போவதில்லை.

”நல்ல ஆளு! பக்திமான்! நாள் தவறாமல், மணி பிசகாமல் திருக்குளத்தில்
பல்லைத் தேய்த்துத் துணி துவைத்துக் குளித்துவிட்டு பட்டையாய்த்
திருநீறிட்டுக் கொண்டு கிழக்கே சூரியனைப் பார்த்துத் தவறாமல் செய்கிறாரே, அது ஒண்ணே போதும்! இந்த மாதிரி ஆளைப் பார்க்கறதே அபூர்வமாயிடுத்தே!” என்று வியப்படைவார்கள்.

ஆமாம்! இந்தக் கிரியைகளை லிங்கங் கட்டி அலட்சியப்படுத்துவதில்லை. அதற்கு
மேல் படிப்பு கிடிப்பு என்று லிங்கங்க் கட்டி தொந்தரவெதுவும் பட்டுக்கொள்வதில்லை “ஒருகால் சிவசிதம்பரம் என்று சொன்னால் இருக்காது
ஊழ்வினையே” என்று மட்டும், பேச்சு நடுவில் புகுத்துவான. அதை நம்பினானா
இல்லையா என்று கேட்டால் அவனுக்கே சொல்லத்தெரியாது. லிங்கங் கட்டி வெள்ளை
வேட்டிப் பண்டாரமானபோது சமய அறிவு ஒன்றையும் சம்பாதித்துக் கொள்ளவில்லை.
லிங்கத்தைக் கயிற்றில் கட்டிக் கழுத்தில் மாட்டிக்கொண்டு செய்யவேண்டிய
காரியங்களை எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட்டு, பசுபதியும் பரந்த உலகமும்
இருக்குமட்டும் கவலையில்லை, கிழக்கே போ என்றார்கள்.அன்று முதல் சொன்னபடி
செய்து கொண்டு வந்தானே ஒழிய, தன் கிரியைகளையும் மனத்தையும்
பிணைக்கவேண்டுமென்று அவனுக்கு தோன்றியதில்லை இரண்டும் ஒன்றிய செயல்நெறி காணவேண்டும் என்று துடித்ததில்லை.

எனவே சத்திரத்துக்கு வந்து போகிறவர்களில் யாராவது இரண்டணா நாலணா
கொடுத்தால், அதை மறுப்பதில்லை. மறுக்க வேண்டும் என்று தோன்றியதில்லை.
அதற்கு மாறாகக் காசு தேவையாக இருந்தால் கொஞ்சம் புதுக் காசாகக் கொடுங்கள்
என்று வாங்கிக்கொண்டு கெட்டியாக்  இடுப்பில் சொருகிக்கொள்வான்.

வந்த எட்டு ஒன்பது மாதங்களுக்குள் புது விளக்குமாறு தேய ஆரம்பித்துவிட்டது. லிங்கங்கட்டியின் பேரில் எவ்வித வஞ்சனையுமில்லை. தவசிப்பிள்ளையோ பெரிய பேர்வழி! நாளாக ஆக லிங்கங்கட்டியின் உணவில் ஒரு கவளம் இரண்டு கவளம் குறைய ஆரம்பித்தது. சிலநாள், கறியோ குழம்போ கூட இருக்காது. சத்திரத்துக்கு வந்தவர்கள் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டார்கள் போல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.

அவனுக்கு ஆட்சேபனை இல்லை என்றாலும் அவன் வயிறு புகார் செய்தது. இரண்டொரு நாள் பல்லைக் கடித்துக்கொண்டிருந்தான். புண்யவான் தருமம்
பண்ணியிருக்கிறான்! ஒரு கவளம் குறைந்து போனால் என்ன பிரமாதம் என்று ஒரு
நாள் இரண்டு நாள் நினைத்துக் கொண்டான் முடியவில்லை. மூன்றாவது தினம்
முதல் சத்திரத்துச் சாப்பாட்டுக்கு பிறகு கருமாதி, கல்யாணம், மகேசுவர
பூஜை என்று கேள்விப்பட்டால், தவறாமல் அங்கும் போய்ச் சாப்பிடுவதென்று
வழக்கப்படுத்திக்கொண்டான். கொள்ளுத் தண்ணி ஊத்துவதாகக் கேள்விப்பட்டால்
கூட அங்கு போய் வாசனையாவது பார்த்துவிட்டு வந்தான்! அங்கெல்லாம் கூட
இரண்டணா ஓரணா கிடைத்தது.

லிங்கங் கட்டிக்குக் காசு கிடைக்கிறது என்று தெரிந்தவுடன்தான்
தவசிப்பிள்ளை தேய்பிறை மரபை உணவில் புகுத்த ஆரம்பித்தான். சத்திரத்தில்
பண்டாரத்துக்கு விருந்தா வைப்பார்கள்? எதோ புண்ணிய காரியத்தில் அப்படி
இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும்பொழுது லிங்கங் கட்டிக்கூட சகஜம்
தான் என்று ஒத்து ஊதிவிடுவான். ”வேண்டுமானால் ஏதாவது ஓட்டலில் வாங்கிச்
சாப்பிடு சாமியாரே!” என்று உபதேசம் செய்வான் தவசிப்பிள்ளை.

லிங்கங் கட்டிக்குக் காசு சேர்ந்துபோய்விட்ட்தென்று எப்படியோ தவசிப்பிள்ளை கணக்குப் பண்ணிவிட்டான். அதை எப்படியாவது கரைத்துவிட வேண்டுமென்ற விஷம எண்ணம் அவனுக்கு வந்து விட்டது.

தவசிப்பிள்ளையிடனிடத்தில் பணத்தை வைத்திரு என்று லிங்கங் கட்டி
கொடுத்திருந்தால் இந்த் விசம எண்ணம் தோன்றியிருக்குமா என்பது ரசமான
கேள்வி. ஆனால் விடை எளிது. நிச்சயமாக தோன்றியே இருக்காது. இதில் வந்த
கஷ்டமென்னவென்றால் பாலுக்குப் பூனையைக் காவல் வைக்கமுடியாது என்பதுதான்.
லிங்கங் கட்டி எதோ குருட்டுச் சாமர்த்தியத்துடன் சில்லறை அடகு பிடித்து
வந்த கிழவியிடம் இந்த பணத்தைக் கொடுத்து வைத்திருந்தான். கடவுள்
பொய்யாகப் போனால் கூட அந்தக் கிழவி பொய்யாக போகமாட்டாள் என்று அந்த
வட்டாரத்திலே அவளூக்கு நல்ல பேர்!.

ஆனால் இந்த இரகசியம் தவசிபிள்ளைக்குத் தெரியாது. திருட்டுப் பயல் என்று
கறுவிக்கொண்டே எப்போதும் போல் அரை வயிற்றுச் சோறு போட்டு முழு வேலையையும் வாங்கிக் கொண்டிருந்தான்.

தவசிப்பிள்ளைக்கு ஒரு யோசனை தோன்றிற்று.

“என்ன லிங்கங் கட்டி! உனக்குத்தான் பெண்டாட்டி இல்லியே!”

”பண்டாரமாச்சே!”

”அப்படின்னா, தொடுப்புக்கூட?”

“அதென்னங்க, நாக்கு அழுகிப்போயிடாது”

“கோவிச்சுக்காதே. ஒம் பணத்தைப் பின்னே என்ன செய்யறே?”

“பத்திரமா இருக்குங்க”

“நீ நின்னா நெடுஞ்சுவரு, விழுந்தா குட்டிச்சுவர். பெண்ணா பிள்ளையா பெண்டாட்டியா ? ஒண்ணும்தான் இல்லை. காலணாவுக்கு காராபூந்தி கூட வாங்கிச்
சாப்பிடமாட்டே. பணத்தைப் பத்திரமா வைச்சுட்டு என்ன பண்ணுவே?”

உள்ளபடியே லிங்கங்க் கட்டிக்குத் திகைப்பாய் போய்விட்டது. ஆமாம், பணத்தை
வைத்துக்கொண்டு என்ன பண்ணுகிறது?

“பின்னே எறிஞ்சிடலாமா?’

”அதுக்குச் சொல்லவில்லை. ஒரு நல்ல காரியம் சொல்றேன், யோசிச்சுப்பாரு”.

”ஓ!”

“கழுத்து லிங்கம் இருக்கில்லே?”

“ஆமாம்”

“இதைக் கவுத்தாலே கட்டிப் போட்டுக்கிட்டுக் கிடக்கிறியே! இருக்கிற பணத்துக்குப் பவுனைக் கிவுனை வாங்கிச் செயின் பண்ணி லிங்கத்தை அதில் கோத்துப்பிடேன். கழுத்துக்கும் அழகாயிருக்கும். லிங்கமும் பார்வையாயிருக்கும். திருக்குளத்திலே திருநீறும் தங்கச் செயின் லிங்கமுமாகக் கிழக்கே சூரியனைப் பார்த்துக்கொண்டு நிக்கறதைப் பார்த்தால் அசல் சிவப்பழம்பாங்க . நல்லா இருக்குமே?”

”என் கழுத்துக்கு என்னாத்துக்குங்க?”

“ஒன் கழுத்துக்கா செயின்? இல்லை இல்லை லிங்கத்துக்குச் செயின் செய்யச்
சொல்றேன். செயின் போட்ட லிங்கத்தை மடியிலே கட்டிக்கிறியா?

”இல்லை , இல்லே”.

”அப்படின்னா கழுத்திலேதானே போட்டுக்கணும்?”

”செஞ்சால் பாத்துக்குவாம்”என்று லிங்கங் கட்டி சொல்லிப் பேச்சை வெட்டி
விட்டுவிட்டான். தவசிப்பிள்ளையும் அதோடு போய்விட்டான்.

தென்னம் நெற்று சீக்கிரமாக முளைத்துவிடாது. கொஞ்சம் காலம் பிடிக்கும்.
அதுமாதிரி லிங்கங் கட்டி மனத்திலே போட்ட தென்னம் நெற்றும் மெதுவாக
முளைக்க ஆரம்பித்தது. கிழவி நல்லவள்தான் . ஆனால் வயசாயிடுச்சே! ஒரு
சமயத்தைப் போல ஒரு சமயம் இருக்குமா? ஆள் யாரும் தெரியவில்லையே!
தவசிப்பிள்ளை சொல்றது நல்ல யோசனைதான். லிங்கத்துக்கு செயின் பண்ணினால்
நல்லாத்தான் இருக்கும் என்றெல்லாம் யோசனை செய்துகொண்டே இருந்தான்.

இதற்குள் வயது ஒரு வருஷம் கூடிவிட்டது. புகையிலையைப் போலக் காய்ந்து வந்த
லிங்கங் கட்டி வெள்ளரிப்பழம் மாதிரி ஆகிவிட்டான்.

ஒருநாள் திடீரென்று ஆசாரியிடம் போய்த் தனக்குச் செயின் செய்ய எவ்வ்ளவு
பவுன் வேண்டுமென்று கேட்டான். ஆசாரிக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. “இந்த
வயதிலா கலியாணம் செய்துகொள்ளப்போகிறா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“இல்லை ,இந்த லிங்கத்துக்கு” என்று காட்டினதும் வியாபார ரீதியில் ஆசாரி
பேசத் தொடங்கிவிட்டான்.

“முக்கால்பவுனிலேருந்து செய்யலாம்.”

“அதுக்குக் குறைஞ்சி?”

“கூலி?”

”உனக்காகப் பதினைஞ்சு ரூபாய்.”

“என்னய்யா, முக்கால் பவுனுக்கு...”

“அதானய்யா - சின்னச் செயினுக்குப் பெரிய கூலி, பெரிய செயினுக்கு சின்னக்கூலி.
பெரிய செயினாவே லிங்கத்துக்குப் பண்ணிக் கட்டிக்கியேன்?”

”ஏதோப் பாத்துக் கூலி வாங்கிக்கோ அய்யா, பவுன் வாங்கியாறேன்” என்று
திரும்பி விட்டான்.

பதினைந்து நாள் கழித்துத் திருக்குளத்தில் நீராடிவிட்டுத் திறுநீரணிந்து
தங்க்ச் செயினும் லிங்கமும்  துலங்க, லிங்கக்கட்டி சத்திரத்துக்குத்
திரும்பி வந்தான்.

தவசிப்பில்ளை  திண்ணையில் ஏதோ சில்லறை வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தான். லிங்கங் கட்டியைப் பார்த்ததும் புதுமையாக இருந்தது. இன்னதென்று ஒரு நிமிசம் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது. “சபாஷ்! சபாஷ்! ரகசியமா
செஞ்சிட்டியே!” என்றான் சந்தோஷம் பொங்க .

“என்ன பிரமாத காரியம்! ஏதோ ஆண்டவனுக்கு உவப்பாயிருக்கேன்னு ..”

“நல்ல காரியம், நல்ல காரியம்” என்றான் தவசிப்பிள்ளை. கண்ணிலே படாத காசாக
வைத்துக்கொள்வதை விட்டுத் திருட்டுப் பயலை வருத்தி அழைப்பது போன்ற
காரியத்தைச் செய்துவிட்டானே இந்த ஆள் என்று நினைத்துக்கொண்டான். ஏன் இந்த
யோசனை சொன்னோமென்ற கழிவிரக்கத்தின் சாயல் கூடப் படர்ந்துவிடது.

செயின் போட்ட லிங்கங்கட்டி ஆகிவிட்டதற்காக அவன் ஒன்றும் மாறிவிடவில்லை.
வழக்கம் போல சத்திரத்துக் காரியங்களைப் பார்த்துக் கொண்டான். கழிவிரக்கம்
காட்டிய தவசிப் பிள்ளையும் மாறவில்லை. பண்டாரத்துக்குக் கொடுக்கிற
கவளத்தில் ஏற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.

இதற்குப் பிறகு நான்கு மாதம் இருக்கலாம். லிங்கங்கட்டிக்குத் திடீரென்று
ஒரு நினைப்பு வந்தது. “தம்பி! திருமுலைப்பால் உத்சவத்துக்குப்
போகனுமின்னு தோணுது. போயிட்டு ஒரு வாரத்திலே வந்திடறேன்” என்றான்
தவசிப்பிள்ளையிடம்.

“குடுத்து வச்சிருக்கணும். போயிட்டுவா “.

“பாத்திரம் எல்லாம் விளக்கணுமே?”

“யாரையாவது வச்சுப் பார்த்துக்கிடறேன்.”

மறுநாள் சீர்காழிக்கு லிங்கங்கட்டி புறப்பட்டு விட்டான். ஒரு வாரம் லிங்கங் கட்டியில்லாமல் பொழுதை ஓட்ட வேண்டுமே என்ற கவலைகொண்ட தவசிப்
பிள்ளை படுக்க போகுமுன் ஒரு நாளாச்சு என்ற கணக்கிட்டுக் கொண்டு
படுத்தான். ஒவ்வொரு தினமும் ரப்பர் மிட்டாய் மாதிரி நீண்டது.

நான்காம் நாள் காலை தவசிப் பிள்ளை காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தான்.
முற்றிலும் எதிர்பாராமல் லிங்கங் கட்டி எதிரே வந்து நின்றான்.
தவசிப்பிள்ளைக்குக் கனவா என்று கூடத்தோன்றி விட்டது.

“என்ன, லிங்கங் கட்டியா?”

“பின்னே?”

”அதுக்குள்ளார வந்துட்டியே?” என்று கேட்டுக் கொண்டே லிங்கங் கட்டியை
மேலும் கீழும் பார்த்தான். கைம்பெண் கழுத்துப் போலிருந்தது.

“என்ன பண்டாரம் , லிங்கம் சங்கிலி ஒண்ணையும் காணோமே?”

”ஆமாம்”

“எங்கே?”

“ஏமாந்து போயிட்டேன்”

”எப்படிப் போச்சு?”

”அதாங்க ஞானப்பால்”

“விளக்கமாகச் சொன்னா அல்ல தெரியும்?”

“திருவிழா பாத்தூட்டு முந்தா நாள் ராத்திரி சத்திரத்து வாசல்லே குந்திக்கிட்டு இருந்தேன். வேறு யாராரோ திண்ணையிலே வாழைத் தோலைச் சீவிப்போட்டாமாதிரி தலைமாடு கால்மாடா விழுந்து கிடந்தாங்க. “திண்ணையிலே யாரோ ரெண்டு ஆள் என்னவோ பதி பசு பாசம் இன்னு சத்தம் போட்டுப் பேசிக்கிட்டு இருந்தாங்க. நடுவிலே அதிலே ஒரு ஆள் பாடினாரு. கொஞ்சநேரத்துக்கெலாம்  பேச்சு அடங்கிப்போய், பாட்டாப் பாட ஆரம்பிச்சுட்டாரு. ரொம்ப நல்லாக் குயில் கணக்காப் பாடினாரு. அப்படியே
சாஞ்சுக்கிட்டிருந்தவன் அதிலே சொக்கிப் போயிட்டேன்..

      “ மாங்காய்ப் பாலுண்டு
         மலைமேலிருப்போர்க்குத்
         தேங்காய்ப்ப்பால் ஏதுக்கடீ- குதம்பாய்”

இன்னு ஒரு பாட்டு பாடினாரு . அப்படியே மெய்மறந்தே போயிட்டேன். பொறவு,
பாட்டே காதில் விழல்லை.

“அப்புறம் நெனைப்பு வந்தப்பொ கண்ணைத் துறந்து பார்த்தேன். கிழக்கு வெளுத்துக் கிட்டிருந்தது. திருவிழா அலுப்பும் அந்தப்பாட்டும்  என்னை அப்படி அமட்டிவிட்டது. நல்ல தூக்கம்ன்னு நினைத்துக் கிட்டபோது ஒரு திகில்  பிறந்தது. கழுத்தென்னவோ லேசாக இருந்தது. தொட்டுத் தடவிப் பார்த்தேன். லிங்கமா செயினா ஒண்ணையும் காணோம். யாரோ தூங்கிக்கொண்டிருந்தபொழுது அடிச்சிக்கிட்டுப் பொயிட்டார்கள்!
சத்திரத்துத் திண்ணையில் இருந்தவர்களை ஒவ்வொருவராகப் பார்த்தேன். திருடி
இருப்பார்கள் என்று அவர்களைப் பார்த்தால்  தோணவில்லை.

“என்ன பாக்குறீங்க பண்டாரம்” என்று  திண்ணையில் இருந்தவர்கள் விசாரித்தார்கள்.

நான் நடந்ததைச் சொன்னேன். அவர்கள் சிரித்தார்கள்”

“சாமி எடுத்துக்கிட்டுப் போயிருக்கும் ஞானப்பால் குடுக்க வேணாம்?” என்றார்கள்.

“எனக்குச் சுருக்கென்று பட்டது. ‘லிங்கத்துக்குப் போய் மட்டி மாதிரி தங்கச் சங்கிலி செஞ்சேனே? பைத்தியக்காரத்தனம்! என்று நினைத்துக்கொண்டே ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.”

“ஞானப்பால் கிடைச்சுப் போச்சு”

”அப்புறம்?”

“நான் போறேன்”

“எங்கே?”

“இப்படியே நீளமா”

“பின்னே ஏன் வந்தே?”

“சம்பளங் கொடுத்து வேறு ஆள் பாத்து வச்சுக்குங்கன்னு சொல்ல வந்தேன்”:

“அடப்பாவி! நெசமாகவே ஞானப்பால் கிடைச்சிட்டுதா?”

லிங்கங் கட்டி பதில் சொல்லவில்லை. மழுங்கிய தலையைத் தடவி கொண்டே தெருவில் இறங்கிவிட்டான்.

******

Mar 27, 2010

தரிசனம் - ந. பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி

தரிசனம்

     நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். புஸ்தகம் முடிந்துவிட்டது. வாணி தரிசனம் முடிந்ததும் பிருகிருதி தேவியைக் காண வெளியே சென்றேன். ஆகாயம் ஓர் எல்லையற்ற மைக் கூண்டு. விளையாட்டுத்தனமாய் ஏதோ தெய்வீகக் குழந்தை அதைக் கவிழ்த்து விட்டது போலும்! ஒரே இருள் வெள்ளம்.

pichchamurthy2மரங்களெல்லாம் விண்ணைத் தாங்கும் கறுப்புத் தூண்கள். மின்னும் பொழுதெல்லாம் வானம் மூடிமூடித் திறந்தது. கண் சிமிட்டிற்று. நான் கண்ணாமூச்சி விளையாடினேனோ அல்லது மின்னலா?

      திரும்பி வீட்டிற்குள் வந்து பாயைப் போட்டேன். துயில் திரை கண்களின் மேல் படர்ந்தது, ஆமைக் கால்களைப் போல், என் புலன்கள் சுருங்கி உறங்க ஆரம்பித்தன. மனத்தின் சுடர்விழி மட்டும் முழுதும் மூடவில்லை. வௌவால் முகத்தினருகில் அடித்தது. கண் திறந்தேன். எதிரில் ஆகாயமளாவி நின்றாள் சிவசக்தி. தலைமயிர் வெற்றிக் கொடிபோல் பறந்தது. கண்ணினின்று கொஞ்சும் அழகு. கையில் கொடி மின்னலைப் பழிக்கும் வைரவாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கலகலவென்ற சிரிப்பு உலகெங்கும் பரவியது. உடல் மயிர்க் கூச்செறிந்தது.

     சிறிது நேரம் கழிந்தது. அலையோய்ந்த கடல்போல் சற்று நெஞ்சம் ஆறுதலடைந்தது. போர்வையை எடுத்தேன்; பளீரென்று ஒரு மின்னல் உலகை ஒளிரச் செய்தது. அவ்வொளிர் "சொக்கப்பனையில்" எதிரே கண்ணில் பட்டது. ஒரு மரம் - ஒரு வெறும் நெட்டைத் தென்னை! "என்ன ஆச்சர்யமென நினைத்தேன்.

***

 மழைத் தெய்வம்

     மறுபடியும் இன்றைய தினம் கொடும்பாவி கட்டி இழுத்தார்கள். ஆமாம், கொடும்பாவி என்று என்ன பெயர்? இருக்கட்டும். குடியானவர்கள் ஒரு கையில் ஒரு பிடி நெற்பயிரை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கொடும்பாவியைத் தெருவழியே இழுத்துச் சென்று, கடைக்குக் கடை நின்று, கொடும்பாவியின் புருஷன் சூரியனைத் திட்டி, மாரில் அடித்துக் கொண்டு வைத்த ஒப்பாரியைக் கேட்டபொழுது (நடிப்பு ஒப்பாரியாக இருந்த பொழுதும் கூட) என் உள்ளம் உருகிப் போய்விட்டது. பாவம்! மண்மீது மழையில்லை என்றால், வயிற்றில் மண்தானே! எனவே "மானம் பார்த்த" சீமையென்று சில இடங்களை ஏளனம் செய்தது தப்பல்லவா? ஆறு, குளங்கள் உள்ள ஊர்க்காரர்களுக்குக் கூடத்தான் பார்க்க வேண்டும். இரண்டு மானத்தையும் தான் - ஒரு 'மான'த்தை வயிற்றுக்காகவும் மற்றொன்றை ஜீவனுடைய தீராத பசியாகிய கௌரவத்திற்காகவும்...

     மழைக்குக் கொடும்பாவி இடத்தில் ஏன் அவ்வளவு பயம்? ஆனால் பயமென்று எப்படிச் சொல்லலாம்? அனுதாபமாயிருக்கலாம்; அல்லது குடியானவர்கள் சொல்வதுபோல் சூரியனுடைய காதல் கட்டழகியாகிய கொடும்பாவியின் மீதுள்ள போட்டிப் பிரேமையாயிருக்கலாம்.

     எப்படி இருந்தாலென்ன? இதோ மழை வந்துவிட்டது. ஜில்லென்று தாமரைத் தண்டுகள் தொடுவதுபோல் மேலே காற்று வீசுகிறது. வானம் மைக்காரியாகி விட்டது. நக்ஷத்திரங்களெல்லாம் வழி தெரியாமல் விழுந்து விட்டன. அடடா! வானில் என்ன கத்தி விளையாட்டு! என்ன இடி முழக்கம்! கொல்லைப் புறத்திலிருந்து தவளைகள் தங்கள் தெய்வத்தை வரவேற்பதற்காக முறை வைத்துப் பாட ஆரம்பித்து விட்டன. எவ்வளவு தினிசுகள்! - வேத பாராயணம், துடுக்குப் பேச்சு, எந்திரம் அறைத்தல், கிஞ்சிரா, மிருதங்கத்தின் ஒலி, ஒற்றைக் குரல், அதிகாரக் குரல், அடடா! வர்ணிக்க வார்த்தை எனக்குத் தெரிந்தாலல்லவா!...

*******

புலியின் வரிகள்

     ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன. புலிக்கு வரிகள் இல்லை. பழம் போன்ற வர்ணம் மட்டும் உடலில் பரவி இருந்தது.

     காட்டு வழியே வரிக்கோடுகள் நடந்து வந்து கொண்டிருந்தன. ஆதி முதற்கொண்டு வரிகள் தனித்து ஓரியாக இருந்தன. தனிமையின் தன்மையில் தம்மையே உணர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. பொருள்கள் மோதினால்தானே, இணைந்தால்தானே உணர்வு பிறக்கும், பொறி பறக்கும்? குகையை விட்டு வரும் அரிமாவைப் போல நான் என்னும் நினைப்பு, பிடரி மயிரைச் சிலிர்த்துப் பெருமிதம் அடைய முடியும்? ஆனால் வரிகள் ஒன்றியாகப் பயனற்றிருந்தன. தவிப்பை முறித்தெறியப் பாதை வழியே அவை நடந்து வந்து கொண்டிருந்தன.

     'என்ன அழகிய மூங்கில் கொத்து! என்ன அழகிய புலி!' என்று, ஒரு நிமிஷம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே விர்ரென்று விஷ அம்பு ஒன்று புலி மேல் பாய்ந்தது. காடு நடுங்க உறுமிக் கொண்டே புலி இறந்தது. புலிதான் போய்விட்டதே என்ற தைரியத்தில், கோடாலிக்காரன் விரைந்து வந்து மூங்கில்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து வீடுகட்ட எடுத்துப் போய்விட்டான். மிஞ்சி இருந்த இரண்டு மூங்கில்கள் உராய்ந்து கொண்டே துயரத்தால் ஓலமிட்டன. புலிக்கு நாம் துணை, நமக்குப் புலி துணை என்று நினைத்தோமே, ஏமாந்து விட்டோ மே என்று புலம்பின.

     பயந்து போய் வரிக்கோடுகள் மேலே நடந்து சென்றன. "ஓரியாக இருந்தால் இன்பம் இல்லை" என்றது ஒரு கோடு.

     "இரண்டாக இருந்தால் மூன்றாவது எதிரி வருகிறான்" என்றது மற்றொரு வரி.

     "பின் என்ன செய்யலாம்?"

     "ஒன்றியாக இல்லாமல் இரண்டாகவும் இல்லாமல் ஒன்றிவிட்டால் இன்பம் உண்டு. பலவாக இருப்பது ஒன்றிவிட்டாலும் பகை தெரியாது. பெருமிதம் மிஞ்சும்."

     "அதுதான் சரி" என்று வரிகள் முடிவு செய்தன.

     கொஞ்ச தூரத்துக்கும் அப்பால் மற்றொரு மூங்கில் புதரும் புலியும் தெரிந்தன. புலியைப் பார்த்த உடனேயே வரிகள் புலியின் தோலுடன் தனித்தனியாக ஒன்றி, கறுப்புப் பட்டுப்போல் மின்னி மகிழ்ந்தன. வெயிலும் நிழலும் கலந்த மூங்கில் கொத்தும் வரிப்புலியும் எல்லாம் ஒன்றாகிவிட்டன. எது எதுவென்றே தெரியவில்லை. 

     கோடாலிக்காரன் வரும் வாசனையை உணர்ந்த புலி பயங்கரமாக உறுமிற்று. உறுமல் அலையலையாகப் பரவி வேடனை எச்சரித்தது. எழுந்து பார்த்தான். புலி இருக்கும் இடம் தெரியவில்லை. வெயிலும் மூங்கில்களின் நிழல்களும் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. 'உருவத்தைப் பார்த்தால் இலக்கு வைக்கலாம். குரலைக் குறித்து எப்படி இலக்கு வைக்க முடியும்?' என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே போனான். கோடாலிக்காரன் புலி உறுமுகிறதென்று போய்விட்டான்.

     கோடாலிக்காரனும் வேடனும் திரும்பிச் சென்றதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மூங்கில்களுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. தங்களுடைய உடல் புலியைப் போன்ற வண்ணம் கொண்டதைக் காண வியப்பாக இருந்தது.

     வரி வேங்கை ஆனந்தமாய்த் தூங்கக் கொட்டாவி விட்டது. என்ன பயங்கரமான குகைவாய், கோரப் பற்கள்!

கலைமகள் - ஜூன் 1960

*****

Mar 14, 2010

பலூன் பைத்தியம் -ந.பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி

பலூன் பைத்தியம்

     இன்றைய தினம் குழந்தைகள் பலூன் வாங்கினார்கள். அவர்களுக்கும் அவர்கள் தாயாருக்கும் சண்டை. காசு தரமாட்டேன் என்ற தாயார் கட்சி. குழந்தைகள் அழுகை எதிர்க்கட்சி.

     pichamoorthyபலூன் வாங்கும் சமயம் ஒவ்வொன்றிலும் இந்தத் தகராறுதான். இதுதான் கடைசி தடவை என்ற எச்சரிக்கையுடன் காசும் கிடைத்துவிடும். குழந்தைகள் கைக்குப் பலூனும் வந்துவிடும். இந்தத் தகராறு விஷயம் பலூனுக்கு எப்படித் தெரியும்! சில  நிமிஷங்களுக்குள் பட்டென்று வெடித்துவிடும். ஒரு வேளை தெரிந்துதான் குழந்தைகளைப் போல ரோஸமில்லாமல் இருக்கிறதோ என்னமோ! இந்த மாதிரி எத்தனை கடைசித் தடவையாக பலூன் வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா? இன்றும் கடைசித் தடவையாகத் தான் பலூன் வாங்கியிருக்கிறார்கள். குழந்தைகள் திரும்பத் திரும்ப பலூன் வாங்க ஆசைப்படுவது எனக்கு பெரிய வியப்பாய் இருக்கிறது. பலூன் இரண்டு நிமிஷத்திற்குள் வெடித்து விடும் என்று குழந்தைகளுக்கு நன்றாய்த் தெரியும். தாயார் மறு பலூன் வாங்க காசு தர மறுப்பாள் என்றும் தெரியும்; பின் ஏன் கடைசி தடவையாகத் தினம் பலூன் வாங்குவதில் அவ்வளவு மோகம் கொள்கிறார்கள்...

     பலூனுடைய வர்ணம் ஒரு வேளை அவர்களைக் கவர்வதாய் இருக்குமோ? இருக்க முடியாது. ஏனென்றால் கண்ட இடங்களிலெல்லாம் புஷ்பங்கள் காணாத வண்ணக் கவர்ச்சியா பலூன்களில் காண்கிறது? அவை வேண்டாம். மேகங்களும் அந்தி, சந்தியில் காணும் வானமும் இல்லையா? - வண்ணக் களஞ்சியமாக? ஆனால் மேகத்தையோ அந்த வானத்தையோ அங்கையில் அடக்கிவிட முடியாது. புஷ்பத்தைக் கையில் எடுக்கலாம். எனில் வாடிவிடும். கசங்கிவிடும். வண்ணத்தை திரும்பி ஏற்றிவிட முடியுமோ? முடியாது.

     ஆம்! இதில்தான் பலூன் மோகத்தின் மர்மம் இருக்க வேண்டும். வித்தில்லாக் கத்திரிக்காயைப் போல் வாடி வதங்கிய பலூன் சிவப்புச் சந்திரனும் பச்சைச் சூரியனுமாக மாறிவிடுகிறதல்லவா - குழந்தைகள் கையில் ஏறியவுடன்? சிருஷ்டி சக்தி என்று ஒன்றிருக்கிறது. அதுவும் தங்களுக்குள் இருக்கிறது என்ற அறிவை இந்த விந்தை குழந்தைகளுக்குப் புகட்டுகிறது. நமக்கிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவதில்தான் இன்பம் உண்டாகிறது. இந்த இன்பத்தை நீடிக்கச் செய்ய வேண்டுமென்ற வெறிதான் பலூன் உடைந்துவிடுவதைக்கூட லஷ்யம் செய்வதில்லை! கடைசித் தடவை என்று தாயார் சொல்வதைக் கூட லட்சியம் செய்வதில்லை.
     பலூன் உடைந்தால்தான் என்ன? துண்டுகளைக் கொண்டு குழந்தைகள் "மூட்டை" செய்துவிடுவார்கள், சுண்டைக்காய் அளவுக்கு சூரியனையும், சந்திரனையும் போல் செய்து நெற்றியில் சொடுக்கி இன்புறுவார்கள்.

     இந்த சிருஷ்டி சக்தியே விசித்திரமானது; உலகப் போக்குக்கே ஒத்து வராதது. உடமை என்ற நினைப்பையும் ஆசாரம் என்ற கோட்பாட்டையும் சண்டைக்கிழுப்பதே இதன் தன்மை! அதன் காரணமாகத்தான் காசு செலவழிகிறதே என்று தாயார் நொந்து கொள்கிறாள். குழந்தைகள் எச்சில் செய்கிறதே என்று அடுத்த வீட்டுக்காரர் ஏசுகிறார்.

     இன்னொரு உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். தரையில் நடந்தாலும் பறக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாக முளைத்து விடுகிறது. நம்மால் முடியாததை நமக்கு அடங்கிய பொருளைக் கொண்டு செய்து விட்டால் அந்தப் பெருமை நம்மைத்தானே சாரவேண்டும். நம்மால் பறக்க முடியாது. ஆனால் நம்மால் எதையாவது பறக்கவிட முடியும் பொழுது எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது. காற்றாடி, தாத்தாபூச்சி, பலூன் - இவை குழந்தைகளின் சாதனம். பெரியவர்களுக்குப் பறக்கும் சாதனம்-

     விண்வெளி விமானமில்லையா?

****

டென்னிஸ்

     மழைக் காலம் ஆரம்பித்து விட்டது. மக்களின் மனம் கொஞ்சம் குளிர ஆரம்பித்திருக்கிறது. வறட்சையால் தவித்த செடி, கொடி, பயிரினங்கள் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றன. வருமோ என்று ஏங்கிய ஜனங்களும் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றனர். பச்சைப் பசேலென்று வயல்கள் சிரித்துச் சிரித்து ஆடுகின்றன. குடியானவர்கள் மழைத் தெய்வத்தைக் கும்பிடுகிறார்கள். நமக்கும் வெகு ரம்மியமாகத்தானிருக்கிறது.

     ஆனால் - இந்த எழவு ஆனாலைச் சொல்லு! எந்த நல்ல விஷயத்திலும் ஒரு நொடிக்குள் விஷத்தை திணித்து விடுகிறதே... உம்! அதற்கு நாமென்ன செய்யலாம். 

     மழையினால் நன்மையென்றேனல்லவா? அதனாலேயே பலருக்குத் துன்பம் விளைகிறது தெரியவில்லையா? எவ்வளவு தான் வெயில் கொளுத்தி, கால்களில் 'பொடி' ஒட்டிக் கொண்ட போதிலும் "நல்லா வெயில் கொளுத்துது" என்று மட்டும் சொல்வார்கள். ஒருக்கால் சற்று இளைப்பாறுவார்கள். ஆனால் சேர்ந்தாற் போல் இரண்டு மூன்று நாள் மழை மட்டும் பொழிந்து விட்டால் உலகம் தவிப்பாய் தவிக்கிறது. கூரை வீடுகளுக்கும் மண் சுவர்களுக்கும் காலம் பெருங்கி விடுகிறது. ஏழைகள் வீடெல்லாம் ஒரே ஒழுக்கு. வீட்டிலிருக்கும் குடியானவனோ, வண்டிக்காரனோ, கொசுவோடும், மாடுகளோடும், சாணியோடும், மழை ஜலத்தோடும், குழந்தைகளோடும் திரும்ப இடமில்லாமல் வீட்டில் தத்தளிப்பது பார்க்க சகிக்காத காட்சி. இதற்குக் கதி மோட்சமேது?

     ஏழைகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டம். பணக்காரர்களுக்கும் இது பெரிய கஷ்டந்தானாம். "என்ன சார்! டென்னிஸ்தான் இல்லை. ஹாலுக்குப் போய் ஒரு ஆட்டம் 'பிரிட்ஜ்' போடுவோமென்றால், போக முடியாது போலிருக்கிறதே. தரித்திர மழை!" என்கிறார் ஒரு பணக்காரர்.

****

குளவிக் கூடு

     மதுரையான் கோவிலுக்குப் பக்கத்தில் அரசமரத்தின் நிழலில் பிள்ளையார் உட்கார்ந்திருக்கிறார். பயங்கர விஷத்திற்கு மனிதர் முடி தாழ்த்தி வணங்குவதைக் குறிப்பிடும் நாகங்கள் ஆலம் விழுதைப் போல் கல்லிலே நெளிகின்றன. பக்கத்தில்தான் ஒரு புதர் இருக்கிறது - இருள சாதிப் பெண்ணின் தலைமயிரைப் போல். நான் மேடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். நான் மாடென்னவோ அல்ல. இருந்தாலும் சைவ சித்தாந்திகள் சொல்வதுபோல் பசுதானே? அதிலும் ஆரறிவுள்ள பசுவானதால் நுனிப்புல்லை மேய்வதில் என்ன உபயோகம்?

     ஒரு குளவி பிள்ளையாரண்டை வந்து உட்கார்ந்தது. என்னை நினைத்துக் கொண்டதோ என்னவோ - பிள்ளையார் பீடத்தை முன் மீசையால் தொட்டுத் தடவிவிட்டு, எப்படி வலம் வருவது - இடமாகவோ, வலமாகவோ - என்று மாறி மாறி சோதித்துக் கொண்டிருந்தது.

     நான் குளவியின் பக்தியைவிட அதன் உடலின் மேல் அதிக நாட்டம் கொண்டேன். என்ன அற்புதமான ஆகாய விமான உடல்! எவ்வளவு லேசான இடுப்பு! நூல் போன்ற இடை! அந்தி நேரத்துச் செங்காவி போன்ற என்ன இறகுகள். அமாவாசை போன்ற என்ன பளிங்கிருள் உடல்! நட்சத்திரம் போன்ற என்ன கண்கள்!

     என் நாட்டத்தைக் கலைத்தது ஒரு நாதம். ஆகாய விமானம் எட்டத்தில் மிதந்து வருவது போன்ற ஆழ்ந்த குமுறல். கண்ணுக்கருகில் பறக்கும் ஈ வான் முகட்டில் பறக்கும் கருடனோ என்ற பிரமையைச் சில சமயம் உண்டாக்குக்கிறதல்லவா? அதே போன்று ஒரு ஓசை. கிட்டத்திலிருக்கும் குளவியின் ரீங்காரம் எனத் தெரிய ஒரு வினாடி பிடித்தது. ஐந்து நிமிஷம் புதரில் மறைந்திருந்து விட்டுத் திரும்பவும் பிள்ளையாரண்டை வந்தது. பிள்ளையாரண்டை வந்து செய்த காரியம் ஒன்றும் இல்லை. பைத்தியத்தைப் போல் குறிப்பில்லாமல் வருவதும் போவதுமாயிருந்தது.

     புதரைப் போய் பார்ப்போம் என்று போய் அங்கே ஊன்றிக் கவனித்தேன். குளவியின் கூடு தென்பட்டது. லக்ஷ்மணர் சீதையின் பர்ணசாலையைச் சுற்றி வந்து, சுற்றி வந்து பாதுகாத்தாராமே, கண்களை இமை காத்து வருகிற மாதிரி. அதைப் போல் குளவி கூட்டின் மேல் உட்காருவதும் பறப்பதும் வருவதுமாய்க் கூட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது.

     எனக்கு விஷம புத்தி வந்து விட்டது. கூட்டைக் காக்கக் கூடிய திறமையை அளவிட்டு விட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஒரு சிறியகல்லை எடுத்தெறிந்தேன். அது கூட்டின் பக்கத்தில் விழுந்தது. ஆகாசவாணத்தைப் போல் உஸ் என்று சீறிக்கொண்டு இரண்டு அடி உயரம் குளவி பறந்து உட்கார்ந்தது. ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமானால் போகப் போகக் கடுமையான சோதனையைக் கையாள வேண்டும் என்கிறார்கள். எட்டிக் கொட்டையைத் தின்ன வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று பிறகு அளவை உயர்த்திக் கொண்டே போனால், ஒரு மண்டலத்திற்குப் பிறகு மண்டலமிட்டு வரும் கருநாகம் கடித்தால் கூடப் பாம்புதான் சாகுமாம்.

     பிறகு ஒரு குச்சியை எடுத்துக் கூட்டைத் தொட்டிழுத்தேன். வேட்டைக்காரனுடைய துப்பாக்கிப் புகைவழியே வேங்கை பாய்வதுபோல் என் குச்சி திரும்பிய வழியே குளவி சீறியது. ஒரு பக்கத்தில் நகர்ந்தேன். குளவி எதிரியைக் காணாமையால் கூட்டுக்கே திரும்பி விட்டது.

     குளவி சீறி வந்ததால் மனிதனை இந்த அற்பப் பொருள் எதிர்ப்பதா என்ற அகங்காரம் எழுந்தது. அப்படியா சேதி என்று கூட்டை ஒரு மூலையில் இடித்தேன், கோபத்துடன் குளவி வந்தடித்தது. நான் மறைந்தேன். கூட்டுக்குக் குளவி திரும்பிவிட்டது. தாய், தற்காப்பு என்ற நினைப்புகளைத் தவிர குளவிக்கு கூடு மூளியாகி இருந்தது தெரியவில்லை.

     நான் விளையாட நினைத்தவனாகையால், கூட்டை அப்படியே கீழே தள்ளிவிட்டேன். குளவியின் நிலையைப் பார்க்க வேண்டுமே! கோபங் கொண்ட தாயைக் காணேம். பிள்ளைகளை இழந்தபேதை, பரிதவித்துப் புலம்புவதுபோல் கூடு இருந்த இடத்தில் சுற்றிச் சுற்றி வந்ததே ஒழிய என் பக்கம் பாயவில்லை. கூட்டின் முக்காலே மூணு வீசம் பங்கு எவ்வித சேதமுமாகாமல் கீழே கிடந்தும் அது குளவியின் கண்ணுக்குப் படவில்லை. தான் கூடு கட்டிய இடம் காலியானதே அதற்கு சாவின் குறி. அப்படி இப்படி மயங்கி மயங்கி, துயரத்துடன் புலம்புவது போன்ற ஓசை கொஞ்ச நேரம் கேட்டது. குழந்தை இறந்ததென்று உறுதியானதும் தாயுள்ளம் செத்துவிட்டது போல புது ஓசையுடன் கிளம்பி விட்டது.

     அதுதான் நாயகனைத் தேடும் ஓசையா?

*****

Feb 25, 2010

முதல் பிடில் - ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி

     நடு நிசி, ஒரு சின்னக்குரல் - குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் - சமாதானம் சொல்லுவது போல, சின்னக் குரல் பழுத்து வேதனை அடைந்தது. எதிர் குரல் ஏங்கிக் கனிந்து ஓலமாயிற்று. தெருவாசிகளின் தூக்கம் கலைந்தது. ஒவ்வொருவராக எழுந்து மாடியிலிருந்து இருளில் கூர்ந்து பார்த்தனர். முதலில் ஒருவர் கண்ணிலும் ஒன்றும் படவில்லை. அதனால் திகிலை விளைவிக்கும் அந்த ஓலம் மட்டும் நிதானமாய் போகப் போக உயர்ந்து கொண்டு போயிற்று. கடைசியில் அந்த குற்றவாளிகள் தட்டப்பட்டார்கள். இரு காதலர்கள்! ஒரு வீட்டின் கூரையின்மேல் உட்கார்ந்து காதலியைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தது ஆண் பூனை. நாலு அடி தூரத்தில் ஒரு ஜன்னலின் உட்புறத்திலிருந்து பெண் பூனை ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. அந்தக் காதலர்களுக்கு இனிப்பான அந்த சல்லாபம், தெருவாசிகளுக்கு கர்ண கொடூரமாய் இருந்தது.

   pichamoorthy  "சூ... சூ" என்று ஒருவர் மாத்தி ஒருவராக கத்தினார்கள். காதலுக்கு கண் மட்டுமல்ல, காது கூட கிடையாது போல் இருக்கிறது. பூனைகள் இருந்த இடத்தை விட்டு நகரவுமில்லை, காதல் தீ மூளப் பாடுவதை நிறுத்தவுமில்லை.

     நிமிஷத்திற்கு நிமிஷம் பாட்டு ஓங்கி, இரவின் நிசப்தத்தில் பயங்கரத்தின் பிரத்யக்ஷ  உருவாயிற்று. வந்த ஆத்திரத்தில் தெருவாசி ஒருவர், எதையோ எடுத்து பூனையைப் பார்த்து விட்டெறிந்தார். அதற்குப் பிறகு எழுந்த குரல் ஒரு நீண்ட ஓலம் மாதிரியிருந்தது. அவ்வளவு தான், அப்புறம் ஆண்பூனையின் குரல் கேட்கவில்லை. மீளவும் நடுநிசியின் மோனம்... மறுநாள் காலை மாடியில் ஒரு ஆண் பூனை செத்துக் கிடந்தது. வீட்டுக்காரர் அதை தூக்கிக் கொல்லை மைதானத்தில் எறியச் சொன்னார்.
     பூனையின் சவம் மெத்தென்ற பொருள்மீது வந்து விழுந்தது.

     "என்ன மேலே வந்து விழுகிறாய்" என்றது அந்த மெத்தென்ற பொருள்.

     "கோபித்துக் கொள்ளாதே நான் வேண்டுமென்று செய்யவில்லை. பிசகு அந்த வீட்டு மனுஷன் மேலே" என்று சமாதானம் சொல்லிவிட்டு, பூனையின் உடல், மேலே கேட்டது. "அது போகட்டும், என்னைப் போல நீயும் ஏதாவது செய்துவிட்டு இந்த மாதிரி தண்டனை அடைந்திருக்கிறாயா என்ன - மைதானத்திலே ஈ மொய்த்துக் கிடக்கிறாயே?"

     அங்கே கிடந்தது செத்துப்போன பந்தயக் குதிரை ஒன்று.

     "என் எஜமான் ஒரு இந்தியன், பந்தயப் பித்து. எனக்கு முந்தி எத்தனையோ குதிரையை வாங்கி வளர்த்து, பந்தயம் ஓட்டியிருக்கிறான். ஆனால் அவனைப் பிடித்த துரதிருஷ்டம் ஒரு தடவை கூட ஜயிக்கவில்லை. ஜயம் தான் கிட்டவில்லையே, இந்த விஷயத்தை அடியோடு மறந்துவிடக் கூடாதா? அதுதான் இல்லை. கடைசித் தடவை என்று சபதம் கூறிக் கொண்டு தன் சொத்து முழுவதையும் விற்று என்னை வாங்கினான். எனக்காக அவ்வளவு கஷ்ட நஷ்டப்பட்ட மனிதனுக்கு நான் துரோகம் செய்யவில்லை. பந்தயத்தில் முதலாவதாகவே வந்து கொண்டிருந்தேன். ஜனங்களுடைய உற்சாகத்தையும் என் எஜமானருடைய கர்வத்தையும் வர்ணிக்கத்தரமல்ல. பந்தயம் முடியும் இடம் வந்தது. என்ன காரணத்தாலோ என் கால் தடுமாறி, கீழே விழுந்துவிட்டேன். முன்னங்கால் இரண்டும் என்னாயிற்றோ. எழுந்திருக்க முடியவில்லை. நான் கீழே விழுந்ததும் இரண்டாவதாக வந்து கொண்டிருந்த இரும்பு வர்ணக் குதிரை ஜயித்து வெற்றி மாலை சூடிற்று. என் எஜமானன் பந்தய வெறியன் அல்லவா? என் மீது பிறந்த வெறுப்பில் கைத்துப்பாக்கியால் அந்த இடத்திலேயே சுட்டுப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான். அதுமுதல் அவனுக்குப் பித்துபிடித்து விட்டதாம். இந்த மைதானத்தில் என்னைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒரு வாரமாக இங்கே கிடக்கிறேன் கேட்பாரற்று. இப்பொழுது நீ வந்து சேர்ந்திருக்கிறாய் தோழனாக" என்று சொல்லி நிறுத்திற்று குதிரையின் சவம்.

"அப்பொழுது சரிதான். என்னைக் கொன்றவன் மீது பழிவாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். நீ சொல்வதைப் பார்த்தால் மனித ஜாதியையே பழிவாங்க வேண்டுமென்று தோன்றுகிறது - எப்படிப் பழிவாங்குவோம் சொல்லு" என்றது பூனை.

     "நான் பழிவாங்க யோசிக்க வேண்டாம். தானாக நடக்கும் பார்! மனிதன் மண் மீது இருக்குமட்டும் நம்மை மறக்க முடியாமல் ஆகிவிடும் பாரேன்."

     "எனக்கென்னவோ இதில் நம்பிக்கை இல்லை. வசவுக்கு வசவு, பிறாண்டலுக்கு பிறாண்டல், கொலைக்கு கொலை இது தான் நான் அறிந்த சட்டம்."

     "பின்னொரு சட்டமும் உண்டு. மரத்தை வெட்டுகிறார்களே, அதற்காக, கோடாலிக்காரனுக்கு நிழல் தர மாட்டேன் என்கிறதா?"

     "இதெல்லாம் மனிதன் சொல்லுகிற கட்டுக்கதை. எனக்குப் புரியாது. என் கருத்தை அப்பொழுதே சொல்லிவிட்டேன். பிறகு உன்னிஷ்டம். ஆனால் ஒன்று. நான் மாத்திரம் தனித்து நின்றால் என்ன செய்யமுடியும்? நீ சொல்கிறபடி கேட்கிறேன்."

     "வா வழிக்கு. நாம் இருவரும் மனம் ஒத்து சும்மா கிடந்தால் அதுவே பழி வாங்குவதற்கு மேல் பலனளிக்கும் பாரேன்..."

     இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு அந்த மைதானத்தின் வழியாக வந்தான் ஒரு பித்துக்குளி இந்தியன். வாய் ஓயாமல் குதிரைகளைப் பற்றி பாடிக்கொண்டிருந்தான். மைதானத்து ஓடத்தில் ஒரு பெரிய மரம் வளர்ந்திருந்தது. அதன் அடிபாகத்தில் போய் நின்று கொண்டு, குதிரைகளைப் பற்றி ஒரு ஆவர்த்தம் வைதுவிட்டு, ஒரு பத்து கஜம் விழுந்தடித்து ஓடினான்.

     குதிரையின் சிதைந்த உடல் கண்ணில் தட்டுப்பட்டது. அதன் அடர்ந்த வெள்ளைவால் மயிர் அவன் கவனத்தை இழுத்தது. ஒரு பிடிமயிரை உருவி எடுத்துக்கொண்டு ஓடினான் பூனையண்டை. கம்பிகள் போல் இறைந்து கிடந்த நரம்புகள் தடுக்கிவிட்டன. அவற்றில் நாலைந்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டான். நடு வழியிலே, பொன்வர்ணத்தில் ஒரு பிரம்பு கிடைத்தது. அதை எடுத்து குதிரை வால் மயிரால் நடுவில் கட்டினான். நான்கு கஜத்திற்கப்பால் ஒரு காய்ந்த மரமொன்றிருந்தது. அதனடிப்பாகத்தில் ஒரு பொந்து. அங்கு போய் உட்கார்ந்தான். கை விஷமம் செய்ய ஆரம்பித்தது. கையிலிருந்த நரம்பை எடுத்து பொந்தின் வாயில் நெடுக்காகக் கட்டினான். வில்லை எடுத்துக் குறுக்காக இரண்டு தரம் இழுத்தான். சுத்தமான ஸ்வரங்கள் எழுந்தன. அனாயாசமாக பிறந்தது ஒரு புதிய சங்கீத வாத்யம். அது தான் முதல் பிடில்!

*****************

Jan 24, 2010

நெருப்புக் கோழி - ந.பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி

நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப்பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள்தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன்.

Untitled

வாலிபத்தில் ஒரு ஆற்றங்கரை வழியாகப் போவது வழக்கம். லயன் கரையின் புருவத்தில் கொய்யா மரங்கள் நெடுக இருந்தன. 'கனி வர்க்கத்தில் கொய்யா அப்படி ஒன்றும் சிறந்ததல்ல' என்று இப்பொழுதுதானே தெரிகிறது? நாட்டு வைத்தியருடன் கறி, பழவகைகளின் குண தத்துவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வது நடுவயதிற்கப்பால் தானே!
பால்யத்தில் கொய்யா என்றால், அலாதி மோகம். கொய்யா மரத்தின் வழவழப்பான உடலே இந்தக் கவர்ச்சிக்குக் காரணமாய் இருக்கலாம்; அல்லது கிட்டுப்புள்ளுக்குக் கொய்யாக் கழியை விடச் சிறந்ததொன்றில்லை என்ற நினைப்பாய் இருக்கலாம். தவிர, கை எட்டக் கூடிய தூரத்தில் கொய்யா தொங்கிக் கொண்டிருந்தால், நாளைக்கு வரும் பலாக்காயை விட இன்றைக்குக் கிடைக்கும் கிளாக்காய் மேல் என்று தோன்றாதா? கருவேப்பிலைப் பழத்தைக் கூட ருசித்துச் சாப்பிடக்கூடிய வயதாயிற்றே!

ஆனால், எவ்வளவு ஆசைப்பட்டாலும் மரத்து நிழலைக் கூட மிதிக்க முடியாது. ஏனென்றால், தோட்டக் காவல்காரன் லயன் கரையின் மேல் நந்தியைப் போல் எப்பொழுதுமே உட்கார்ந்து கொண்டிருப்பான். ஆகையால்,தினம் கொய்யா மரத்தின் தரிசனத்துடன் திருப்தி அடைந்தேன்.

நரி முகத்தில் விழிப்பது என்பது மெய்யாகக் கூட இருக்கலாம். இல்லாவிட்டால் நானும், என் நண்பர்களும் லயன் கரைப் பக்கம் போன பொழுது தோட்டக்காரன் இல்லாமல் இருப்பானேன்? எங்கள் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது! வேகமாகச் சென்று, ஆளுக்கொரு பக்கம் கொய்யாவைக் கொய்து கொண்டிருந்தோம்.'மளக்'கென்று ஏதோ குச்சி ஒடியும் சத்தம் கேட்டது. மரத்தின் மேலிருந்த நான், உஷாரடைந்து இறங்கத் துவங்கினேன். மறுபடி இலைகளில் நடப்பது போன்ற சலசலப்பின் ஓசை காதில் விழுந்தது. தொடர்ந்து புதரை விலக்கிக் கொண்டு ஒரு கையும், முண்டாசும் தெரிந்தது. தோட்டக்காரன்! அவ்வளவுதான்; என் நண்பர்கள் சிட்டாய்ப் பறந்து விட்டனர்; நான் பாதி மரத்திலிருந்து குதித்தேன். அதற்குள் தோட்டக்காரன் என்னண்டை வந்துவிட்டான். நான் அலங்கமலங்க விழித்தேன்.

"ஏம்பா கொய்யாக்காய் பறித்தாய்?"

நான் மௌனம் சாதித்தேன். வெறும் துண்டை மட்டும் நான் போட்டுக் கொண்டிருந்ததால், அவன் வெடுக்கென்று சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதுதான் சாக்கென்று நான் நடந்து செல்ல ஆரம்பித்தேன்.

"என்ன தம்பி, கொய்யாக்காயைத் திருடிவிட்டு, டம்பமாய் கம்பி நீட்டுகிறாயே?"

"திருட்டென்னப்பா? வேணுமென்றால் கொய்யாக்காய்க்குக் காசு வாங்கிக்கொண்டு போயேன். சின்னப் பையன் என்றுதானே சவுக்கத்தைப் பிடுங்கிக் கொண்டாய். அதை எடுத்துக்கோ" என்று சொல்லிக்கொண்டே முறைப்பாய் நின்றேன். மனதிற்குள் உதைப்புதான்.

"சவுக்கத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லுகிறாயோ... போ... போ" என்று அவன் கருவினான்.

na_pitchamurthy இதுதான் சாக்கென்று நான் நடையைக் கட்டினேன்.
இந்த சம்பவம் நடந்தபொழுது என் மனம் பட்ட பாட்டைப்பற்றிப் பின்னர் எண்ணும் போது வெற்றி உணர்ச்சிதான் தலைதூக்கி நின்றது. என் வாக்கின் திறமையல்லவா வெற்றி கொண்டது. அதை மனத்திற்குள் பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. இல்லாவிட்டால் கன்னம் பழுத்திருக்காதா? இதைப் போலவேதான் மற்றொரு நிகழ்ச்சியும். எங்கள் வீட்டில் நான்கு குடும்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் நிறையக் குழந்தைகள்! தினந்தோறும் வீட்டில் ஒரு தமாஷ்! குழந்தைகள் எல்லாம் பள்ளிக்கூடத்தை விட்டு வரும். எதுவோ வயிற்றுப் பாட்டைப் பார்த்துக் கொண்டு, பிறகு எல்லாமாகக் கொல்லைக்கட்டு திண்ணையில் வந்து கூடிவிடும். 1-ம் நம்பர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு திண்ணையில் உட்காரும். 2, 3, 4 குடும்பத்துக் குழந்தைகள் எதிர்த்தாற்போல் வந்து நிற்கும்.

"உட்கார். வாய்மேல் கை வை" என்றதும், குழந்தைகள் உட்காரும்.

"பிரார்த்தனை கீதம்", "அருள் புரிவாய் கருணைக் கடலே" என்று குழந்தைகள் ஆளுக்கொரு ஸ்தாயில் கத்தும்.காமாட்சி வந்து கை நீட்டியதும், அதில் இரண்டடி விழும். வாங்கிக்கொண்டு, தன் இடத்திற்குத் திரும்பி விடுவாள். இதற்கிடையில் வாத்தியார் பிள்ளைகளை அடித்தால், கசமுசவென்று பேசுவார்களே, அதே மாதிரி இந்தக் குழந்தைகள் பேசிக் கொண்டிருக்கும்.
"பேசாதே, அடிச்சூடுவேன்."

கப்சிப் என்ற மௌனம். இம்மாதிரி மாலைக் காட்சி ஒன்று தினம் வீட்டில் நடைபெறுகிறது. வாத்தியார் அடித்து விட்டார் என்று பள்ளிக்கூடம் போன உடனே திரும்பும் குழந்தைகளும், வாத்தியார் அடிப்பார் என்று பள்ளிக்கூடம் போக முரண்டு செய்யும் குழந்தைகளும் சேர்ந்து இந்த மாலைப் பள்ளிக்கூடத்தை நடத்துவது வியப்பல்லவா? எந்த அடியைப் பள்ளிக்கூடத்தில் வாங்க இஷ்டப்படவில்லையோ, அந்த அடியை இங்கே வாங்குவதில் அவர்கள் இன்பம் காணுகிறார்கள்! எந்தக் கட்டுப்பாடு பள்ளிக்கூடத்தில் வேம்பாக இருக்கிறதோ,அதற்கு இங்கே அளவு கடந்த மதிப்பு!

இவை எல்லாவற்றையும் விடச் சிறந்த துறை ஒன்றிருக்கிறது. நாடகங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.வாழ்க்கையில் காணும் வெற்றி தோல்விகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்திக் காட்டுவதுதானே நாடகம்?வாழ்க்கையில் தாங்க முடியாத இன்பம் ஒன்று மனத்தில் பிறக்கிறதே, அது ஏன்?
இவைகளை எல்லாம் நினைக்கும் பொழுது ஒரு இயற்கை நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது. சூரியன் தினம் நம்மைப் பொசுக்குகிறான். சூரியனிடமிருந்து சக்தியைக் கடன் வாங்கும் சந்திரன், நமக்கு ஒளியையும்,குளுமையையும் தான் தருகிறான். சூரியனின் வெப்பத்தைச் சந்திரன் என்ன செய்தான்?

இந்த அதிசயத்தின் ரகசியம் தான் என்ன? இப்படி இருக்கலாமோ? உண்மை என்று ஒன்றிருக்கிறது. காலம் என்று மற்றொன்றிருக்கிறது. உண்மைக்கும் நமக்கும் இடையே காலம் குறுக்கிடுகிறது. காலம் ஒரு மந்திரவாதி. நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும் பொழுதே, அவைகளுக்குப் புதிய வர்ணத்தைக் காலம் பூசிக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாகத்தான் செத்தவன் கண்போல் மனத்தில் காட்சி அளிக்கிறான்.அடிபட்ட பள்ளிப் பிள்ளைகள் போலிப் பள்ளிக்கூடம் நடத்தி இன்பம் அடைகிறார்கள். ஒரு வேளைச் சோற்றுக்குத் தாளம் போடுகிறவன் நாடகத்தில் ராஜாவாக நடைபோடுகிறான். சூரியனின் கிரணம் சந்திரனை வந்து அடையும்பொழுது, காலம் கடந்துவிடவில்லையா? வெப்பத்தை மாற்றிக் குளுமை அளிப்பது காலத்தின் மாயஜாலமா?

அல்லது,

சூரிய வெப்பத்தை விழுங்கிவிட்டு அமுத ஒளி பொழியும் மாயவித்தை ஏதேனும் சந்திரனிடத்தில் இருக்குமோ?சந்திரனிலிருந்து மனம் உண்டாகிறதென்று உபநிஷதம் கூறுகிறது. ஜோதிடத்திலும் சந்திரனைக் கொண்டு மனத்தின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள். ஆகையால், சந்திரனுக்குள்ள மாய சக்தி மனத்திற்கும் இருக்கலாம் அல்லவா? இரும்பாணியையும், மண்ணையும் தின்னும் நெருப்புக் கோழி மென்மையான அழகிய சிறகுகளைப் போர்த்திக் கொள்கிறதல்லவா? இந்த மாதிரி அற்புத சக்தி மனத்திற்கும் இருக்குமோ? இந்த சக்தியிலிருந்து பிறப்பதுதான் கலையோ? அல்லது வினையை விளையாட்டாக்குவதுதான் கலையோ?

****

Dec 25, 2009

வெறும் செருப்பு - ந. பிச்சமூர்த்தி

  ந. பிச்சமூர்த்தி

அதுவரையில் தீர்மானத்துடன் வராதிருந்த மனது அன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. முதலையின் பிளந்த வாயைப்போன்ற செருப்புடன் எத்தனை மணிகள்தான், எத்தனை நாட்கள்தான் ஓட்டமுடியும்? நடக்கும் போதெல்லாம் செருப்பின் கீழ் அட்டை மடித்துக் கொள்ளும். அப்பொழுது ஒட்டகையின் முதுகின்மேல் நடப்பது போன்ற வேதனையும் கஷ்டத்தையும் அடைந்தேன். நல்லவேளை அன்று மனதே உத்தரவு கொடுத்துவிட்டது.

100_7089_PS01
விர்ரென்று கடைத்தெருவுக்குச் சென்று நவீன செருப்புக் கடைக்குள் நுழைந்தேன். கடைக்காரப் பையன் விதவிதமான செருப்பு, பூட்ஸ¤ தினுசுகளை என் முன் கொணர்ந்து பரப்பினான். அதையும் இதையும் புரட்டிப் பார்த்து தோல் வந்த கப்பல், கப்பல் கிளம்பிய நாடு, நாட்டின் கால்நடை வளம் இவ்வளவையும்பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டு முடிவாக ஒரு ஜோடி ஸ்லிப்பர் ஆறரை ரூபாய்க்கு வாங்கினேன்.

சிவப்பு ஸ்லிப்பர், மஞ்சள்நூல் தையல், மேல்புறத்தில் தாமரைப்பூ - இவ்வளவு லட்சணங்களுமுள்ள ஸ்லிப்பர் என் சொத்தான உடனே அதை அனுபவிக்காமல் இருக்க முடியுமா?

காலில் மாட்டிக் கொண்டே வீட்டை நோக்கி திரும்பினேன். பட்டென்று ஸ்லிப்பர் கால் அடிபாகத்தில் படுவதினால் பின் பராக் யாரோ சொல்லிக் கொண்டு வருவது போலிருந்தது. அரசர்களுக்கு முன்னால் பராக் சொல்லிக் கொண்டு வருவார்களாமே, எனக்குப் பின்னால் சொன்னால் போதாதா? ஒவ்வொரு ஒசையைக் கேட்டதும் என் மனது கம்பீரமாய் விரிந்தது. புதுச்செருப்பு வாங்கினால் புது மனிதனல்லவா? வானத்தைத் தொட்டுவிடக்கூடிய உன்னதமும் தெம்பும் நெஞ்சில் குமிழியிட்டன. முன்புறம் மார்பைத் தள்ளி தெருவெல்லாம் நடந்து வந்தேன்.

வீட்டை அடைந்ததும் ஸ்லிப்பரைத் துடைத்து சுவரில் மாட்டினேனோ இல்லையோ? ஒரு நினைப்பு வந்தது. பழைய செருப்பு இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். இனி அதை எடுத்து எறிந்து விடலாமா என்று யோசித்தேன்.

இவ்வளவையும் என் மனைவி கவனித்து வந்தாள் என்பது அவள் கேட்ட கேள்வியிலிருந்து தான் விளங்கிற்று.

''நான் கிழவியாகி விட்டால் என்னையும் தள்ளித்தான் விடுவார்கள், இல்லையா? கேள்வி சுருக்கென்று மனதில் தைத்தது. காலுடன் காலாய் எவ்வளவு கஷ்ட சுகங்களில் அது என்னை தாங்கி வந்திருக்கிறது. அவ்வளவு ஈரமில்லாமல் எடுத்தெறியப் போகலாமா? என் மனதில் இரக்கமில்லை என்று நினைக்க நான் விரும்பவில்லை. ஆகையால் என் யோசனையை கைவிட்டுவிட்டு, என் ஜோலியைப் பார்க்கப் போனேன். புலனெல்லாம் ஒடுங்கித் திண்ணை மூலையில் குந்தியிருக்கும் கிழவியைப் போல் செருப்பு மூலையிலே கிடந்தது. இளைய தாரத்துடன் உலாவப்போகும் எழுச்சியுடன் புது ஸ்லிப்பர் மாட்டிக்கொண்டு ஆபீசுக்குப் போய் திரும்பினேன்.

வீட்டிற்கு வந்து உட்கார்ந்த ஐந்து நிமிஷத்திற்குள்ளாகவே, ஒரு தந்திக் கிடைத்தது. உயிருக்குயிரான நண்பன் காலமாகி விட்டதாக அதில் கண்டிருந்தது. என்னால் செய்தியை நம்ப முடியவில்லை. நானும் தந்தியில் குறிப்பிட்டிருந்த நண்பனும் ஒரு வாரத்திற்கு முந்தி தான் ஒரு கல்யாணத்திற்கு சேர்ந்து போயிருந்தோம். சேர்ந்து சாப்பிட்டோம். பகலொளியும் இரவு நிலாவும் படுக்கப் போகும் வரையில் பேசித் தீர்த்தோம். சேர்ந்தே தூங்கினோpichchamurthy2ம். நண்பன் உடம்பிலோ மனத்திலோ எவ்விதமான நோயும் தென்படவில்லை. பின் செய்தியை எப்படி நம்பமுடியும்? ஆனால் பொய்த் தந்தி கொடுக்கக்கூடிய விஷமிகள் யாரும் எனக்கோ என் நண்பனுக்கோ இல்லை. பின் செய்தியை எப்படி நம்பாமலிருப்பது? குழப்பம். மனது தெளியவில்லை. மறுநாள் மற்றொரு கடிதம் வந்தது. வேறொரு நண்பன் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு சந்தேகத்திற்கே இடத்தைக் காணோம்.

கிராமபோன் தட்டு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே சாவி குறைவினால் பிறக்கும் அவ ஒலியைப்போல் என் நெஞ்சின் துயர் எழுந்தது. தாங்கமாட்டாமல் விம்மி விம்மி அழுதேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று யார் கண்டது?

எதிர்வீட்டுப் பையனொருவன் கோவில் மணி கணீரென்று அடிப்பதுபோல்,

''ஆண்டாண்டுதோறும் அழுதுபுரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தில்''

என்று பாடினான்.

என் அழுகை தானே நின்றுவிட்டது. இனிச் செய்ய வேண்டியதைப் பற்றிய நினைப்பு எழுந்தது. சாயங்கால ரயிலில் நண்பன் ஊருக்குப் போய், அவன் வீட்டிலுள்ளவர்களுக்காவது தேறுதல் சொல்லிவர வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்.

மாலை ஐந்து மணி ரயிலுக்கு ஒரு பாடியையும் ஜிப்பாவையும் மாட்டிக் கொண்டு கிளம்பி வீட்டு ரேழிக்கு வந்தேன். சுவரில் புது ஸ்லிப்பர் அசட்டுப் பெண்ணைப் போல் இளித்துக் கொண்டிருந்தது. ஸ்லிப்பரை எடுத்துக் காலில் மாட்டப் போனேன்.

''கல்யாணத்துக்குப் போகிறாயா குஷாலாக?'' என்று மூலையில் இந்த பழஞ் செருப்பு முனகுவது போல் தோன்றிற்று. கொஞ்சம் தயங்கினேன். காலையில் புது ஸ்லிப்பர் வந்தது. மாலையில் செய்தி வந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை என்று அறிவு சொன்ன போதிலும் நெஞ்சு கேட்கவில்லை.

அதற்குள் என் ஆபீஸ் நண்பன் ஒருவன் வந்தான். ''என்ன யோசித்துக் கொண்டு ரேழியில் நிற்கிறாய்?''

''ஒன்றுமில்லை''

''நான் இதோ ரயிலுக்குப் போகிறேன். மத்தியான்னம் இடி போன்ற அந்தச் செய்தி வந்தது. கடவுள் என்கிறார்களே அது எனக்கு விளங்கவில்லை. சரகு உதிர்வதில் வண்டு வருந்துவதில்லை. தளிரும் பூவும் உதிர்ந்து தரையில் கிடக்கும்பொழுது எவ்வளவு வண்டுகளும் தேனீக்களும் அவைகளை மொய்த்துக் கொண்டு புலம்புகின்றன!''

''எனக்கும் செய்தி வந்தது. என் நெஞ்சே சூன்யமாகி விட்டது. இதோ நானும் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.''

''பின்னே கிளம்பு''

கிளம்பு என்று சொன்னபிறகு கூட நான் கொஞ்சம் தயங்கினேன்.

''என்ன யோசனை?''

மனதை வேரோடு பிடுங்கினது போல் நிலைகுலையச் செய்யும் துயரம் மூண்டிருக்கும் வேளையில் ஸ்லிப்பர் போட்டுக் கொள்ளலாமா கூடாதா என்று யோசிக்கலாமா என்ற நினைப்பு வரவும் மூலையில் கிடந்த பழஞ்செருப்பு அடக்கத்துடன் கண் காட்டிற்று. அதைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன்.

ரயில்வே ஸ்டேஷன் போகும் வரையில் ஒரே யோசனை. புது ஸ்லிப்பர் வந்தது நன்மைக்கன்று. ஒருநாளைக்குள் ஒரு உயிரைக் கொண்டு போய்விட்டதே; அதை மாதக்கணக்கில் வைத்துக் கொண்டால் என்னவெல்லாம் நேரிடும் அல்லது என்னதான் செய்யக்கூடாது? இதே யோசனையில் மெளனமாக இருந்தேன்.

ரயில்வே ஸ்டேஷன் மாடிப்படி ஏறும்பொழுது ஒருதரம் செருப்பின் அடி அட்டை பின்புறமாக மடித்துக் கொண்டது.

''என்ன தடுமாறுகிறாயே?'' என்றான் நண்பன்.
''ஒன்றுமில்லை. செருப்பு அடி அட்டை கிழிந்துபோய் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றும் போயின. அட்டை மடித்துக் கொண்டு இடறிவிட்டது. நல்லவேளை விழாமல் தப்பித்தேன்.''

பிறகு நாங்கள் பேசவில்லை. என் மனது மறுபடியும் ஓடத் துவங்கி விட்டது - கிழிந்த செருப்புகளைப் பற்றிய ஞாபகங்கள்.

ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து உட்கார்ந்தோம். ரயில் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. நண்பன் பிளாட்பாரத்தில் நிலவின் கீழ் வேஷ்டியை விரித்துப் படுத்துக் கொண்டான். எனக்குப் படுக்கத் தோன்றவில்லை. உம்மென்று... உட்கார்ந்திருந்தேன்.. சிறிது நேரத்திற்கெல்லாம் திடீரென்று யோசனை ஒன்று முளைத்தது.

''உன்னிடத்தில் ஒரு ஹூக் இருக்கிறதா?'' என்றேன்.

''எதற்கு?''

''இந்த இரண்டு அட்டைகளையும் சேர்த்து ஹூக் போட்டுவிட்டால் இந்த மாதிரி அட்டை மடியாது.''

''இதென்ன, செருப்பையே கடவுளாக்கித் தியானம் செய்கிறாயே - தூக்கி எறிந்தாலும் போச்சு, தைக்கச் சொன்னாலும் போச்சு.''

பேச்சு நியாயமாகத்தான் பட்டது சரிதான் என்றேன். ஆனால் மனதில் பல மட்டங்கள் இருக்கின்றன என்பதும், மேல் மட்டம் பேசினால் அடிமட்டம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது இல்லை என்றும் பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.

கால் மணிநேரத்திற்குப் பிறகு என் கை என்னை அறியாமலேயே ஒரு செருப்பை எடுத்துவிட்டது. என் கண்கள் இருள் குகை ஒன்றைக் காணும் ஆச்சரியத்துடன் அச்செருப்பின் பிளந்த அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. மன உலகத்தில் ஒரு பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. மனத்தின் நடுமட்டம்...'' அதெல்லாம் சரிதான்.. நீ போகும் காரியமென்ன? நாளைப்போய் மெனக்கட்டு செருப்பைத் தைத்துவிடுவாயா? முடியுமா?'' மனத்தின் மேல் மட்டம்; ''அதற்கென்ன, வேண்டாமே. செருப்பையே எறிந்துவிட்டால் போகிறது. சொத்தே போய்விடுமா? நஷ்டம் தாங்காதா?''

நடுமட்டம் ''அதுவா போச்சு! வீணடிக்கவே கூடாது அப்படியாவது பணம் பெருத்த ஆளா? சாதாரணமாக தோட்டத்திற்குப் போவதற்கும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கும் உபயோகப்படுமே, மூத்தாளும் முட்டுக்கு உதவுவாள் என்று பாட்டி சொல்லவில்லையா?''

படுத்திருந்த நண்பன் எழுந்து கண்கொட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டே, ''நீ என்ன யோகியா, கருமியா, தெரியவில்லையே! யோகியைப் போல ஒரே எண்ணத்தில் லயித்திருக்கிறாயே... ஆனால் லயித்திருக்கும் விஷயமோ சிறியது. கருமியைப் போல் கிழிந்த செருப்பைக்கூட தடவிப் பார்க்கிறாயே'' என்றான்.

புண்ணில் நெருஞ்சி முள் குத்தியது போலிருந்தது. சிவனே என்று மன ஓட்டத்தை அடக்கி, மல்லாந்து படுத்துக் கொண்டேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ரயில் வந்தது. நானும் நண்பனும் ஏறிக் கண்ணயர்ந்தோம்.

காலைக் கரிச்சான் குரல் துயிலைக் கலைத்தது. கண் விழித்து வெளியே தலை நீட்டிப் பார்த்தேன். வானத்தின் கிழக்கு மைதானத்தில் செம்மறி ஆட்டு மந்தைப்போல் மேகத் துணுக்குகள் விரைந்து கொண்டிருந்தன. இருளில் வினோதமான தேத்தாங் கொட்டையைப் போட்டது போல் ஒளி தெளிந்து மேலே தோன்றிற்று. அடுத்த ஸ்டேஷன் நாங்கள் இறங்க வேண்டிய இடம். நண்பன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தான்.

மனதில் இரண்டு நிலைகள்தான் இருப்பதாக நினைத்த நான் மூன்றாவது நிலை ஒன்றிருப்பதை அப்பொழுது உணர்ந்தேன். பரந்தவெளி உலகின் காலை அமைதியில் உள்ளுலகினின்று ஒரு மெல்லிய குரல் கேட்டது.

''நீ வரும் வேலை நினைவிருக்கிறதா? உடம்பு உயிர் என்றெல்லாம் சொத்துரிமை கொண் டாடுகிறாயே அது சரியா? யோசித்துப் பார், நேற்றிருந்தான், இன்றிறந்தான். பழுத்தும் உதிரலாம். பழுக்காதும் விழலாம். பழுக்காது விழுந்த வேதனை - உயிரின் விசித்திர விபரீதப் போக்கல்லவா உன்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது. வெறும் செருப்பு ஒரு பொருளா? அதைப்பற்றி யோசிக்க அவ்வளவு பிராணனை செலவழிப்பது நியாயமா?''

இக்குரல் பேசியபொழுது உள்ளத்திலே பெரிய அமைதி நிலவியிருந்தது. மாறுபட்ட மன அலைகளே காணோம். ஏறிவரும் ஒளியையே நோக்கிக் கொண்டிருந்தேன். மனத்தில் அசைவே இல்லை. அதற்கு ஏற்றாற்போல, அசைந்து கொண்டிருந்த ரயிலும் ஸ்டேஷனை அடைந்து நின்றுவிட்டது.

நண்பனை எழுப்பி வண்டியை விட்டு இறங்கி மாட்டுவண்டியில் ஏறி நண்பன் வீடு சென்றோம். பச்சைக் குழந்தைகள் - சூதுவாதற்ற மனைவி - இவர்களை கொழுக் கொம்பற்றுத் துடிக்கும் கொடி போல பரிதவிக்கவிட்டுச் சென்ற ஒரு குடும்பத் தலைவன் - வயது அதிகம் ஆகாதவன் - எதிர்பாராமல் திடீரென்று காலகதி அடைந்தவன் - அவன் மறைந்துவிட்ட பிறகு எவ்விதமான ஆறுதல்தான் சொல்ல முடியும்? வாய் திறந்து வார்த்தைகளைக் கொட்டாமல் பகல் முழுதும் கழித்தோம்.

மத்தியானம் மணி மூன்றிருக்கும். ஊருக்குத் திரும்புவதற்காக வண்டி நிற்கும் இடத்திற்குக் கிளம்பினோம்.

சரியான வெயில். மூன்று என்றாலும் தலைவெடிக்கிறது. பொடி ஒட்டுகிறது. நான் காலை மாற்றி மாற்றி நொண்டி போல் தத்தித்தத்தி நடந்தேன்.

அப்பொழுதுதான் என்னுடன் கூடவந்த நண்பன் என் காலைக் கவனித்தான்.

''செருப்பெங்கே? இந்த வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தாயா?'' என்றான்.

''அதெல்லாம் மறக்கவில்லை.''

''அப்படி என்றால் வேண்டுமென்றே வைத்துவிட்டு வந்தாயா?''

''அதுவுமில்லை''

''பின்?''

'' ஒரு நிமிஷம் தயங்கினேன்.

''பின் செருப்பெங்கே?''

''ரயிலிலேயே வைத்துவிட்டேன்.''

''மறந்துவிட்டாயா?''

''இல்லை. நினைப்புடனேயே விட்டுவிட்டேன்.''

இரவில் நான் செருப்பு மயமாய் இருந்ததையும் இப்பொழுது செருப்பையே விட்டு விட்டதையும் பற்றியோ என்னமோ நினைத்துக்கொண்டு ஆச்சரியத்தால் வாய் திறந்து ஒருவினாடி நின்றான். பிறகு என்னவென்று கேட்டான்.

“கிழியாத செருப்பைக்கூட அவன் திடீரென்று விட்டுச் சென்றுவிடவில்லையா? ஒரு ஒட்டைச் செருப்பைப்பற்றி பெரிய துயரத்தின் முன்னிலையிலே என் மனது அவ்வளவு குழப்பலாமா என்ற எண்ணம் உதித்தது.”

''எப்பொழுது?''

''இந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்ததும்!''

''பிறகு?''

''ரயிலை விட்டு இறங்கியபொழுது செருப்பை மாட்டிக் கொள்ளாமல் இறங்கிவிட்டேன்.
அவ்வளவுதான்.''

நண்பன் பேசவில்லை. ஒரு வினாடி கழிந்தது.

''ஆமாம். இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் வழிப்போக்கன் எப்பொழுதும் எந்த நிலையிலும் இதைக் கழட்டி எரியலாம். யாரால் தடுக்க முடியும்?'' என்றான்.

Jul 19, 2009

வானம்பாடி-ந. பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி

எதிரே நின்றான் அந்த முஸல்மான் பக்கிரி. தலையில் பச்சை கிர்க்கி முண்டாசு. உடலில் கறுப்பு அங்கி. இடுப்பில் கைலி. இடது கையில் ஒரு யாழ்ப்பாணத்து கப்பறை. வலது கையில் ஒரு துணி மூடிய கூண்டு. அதன்மீது அநேக கண்ணாடி மணிகள் போடப்பட்டிருந்தன. பக்கிரியின் மை தீட்டிய அழகிய கண்கள் அவன் தோற்றத்திற்கு அமைதியையும் அஞ்சா உறுதியையும் தந்துகொண்டிருந்தன.

ஜமீந்தார் சோபாவில் உட்கார்ந்ததும் மீசையைத் திருக ஆரம்பித்துவிட்டார். வேலையாட்கள் விசிறியைப் பிடித்தனர்.

''அல்லா ஹூ அக்பர்'' என்று வணங்கினான் பக்கிரி.

''என்ன வேண்டும்?''

''என் இஸ்ராபேலின் பாட்டை கொஞ்சம் கேட்டருள வேண்டும்.''

''எங்கே?''

பக்கிரி, ''இஸ்ராபேல்!'' என்றொருமுறை அழைத்தான். அவ்வளவுதான். ஒருகணம் ஆற்றங்கரையோரத்தில், நக்ஷத்திரமும் நள்ளிரவும் சூழ்ந்த நேரத்தில், ஆகாயத்தை முத்தமிடும் மணிக்கூட்டினின்று சிதாருடன் இரண்டறக் கலந்து உருகும் கோஷா ஸ்திரீயின் கனிந்த குரல் காதல் தீ மூளப் பாடுவதுபோல் இஸ்ராபேலின் இன்னிசை எழுந்தது. மறுகணம் அம்மணிக்கூண்டினடியில், பெண்ணின் குரலோசைகொண்டு கற்பனைத் தூரியத்தால் பெண்ணையே ஊகித்து உருவாக்கும் பித்தர்களின் கட்சிப் பிரதிகட்சி ஒலித்தது, ஒரு கணம் வெண்ணிலவில், பாசி சேர்ந்து பாழடைந்த பழம் மண்டபங்களினின்று கிளம்பும் நரிகளின் ஊளை போன்று, ஆசை மண்ணான கதை பாட்டில் மிதந்தது. மறுகணம், கண்கள் தீப்பறக்க, கத்தியும் கேடயமும் மோத, குளிர் நிலாக் கதிர் கத்தியின்மீது விழுந்து துண்டாக, காதலிக்காக போர்புரியும் வீரர்களின் முழக்கம் பொங்கிற்று.

''இஸ்ராபேல்!'' என்று குறுக்கிட்டான் பக்கிரி. ஒரு நிமிஷம் நிசப்தம். மறு நிமிஷம் இசைக் சித்திரம் மாறிவிட்டது. கருக்கலின் கனக ஒளியில், மோனக் கடல் மீது இன்னிசைத் தோணி ஒன்று மனிதரை நோக்கி மிதந்துவந்து, மக்கி மண்ணாகும் யாத்ரீகனைத் தட்டில் ஏற்றி அமரனாக்கும் பரிவும் போதமும் பூர்ணமாய் தொனித்தது.

''இஸ்ராபேல்! என் குருவே!'' என்றான் பக்கிரி. இன்னிசையின் தெய்வ உலகு மறைந்துவிட்டது. ஜமீன்தாருக்கு தன் நினைவுவர இரண்டு வினாடி சென்றது.

''பக்கிரி! இன்னும் கொஞ்சம்'' என்றுவிட்டு, தன் வேலையாளியிடம் எதோ சொல்லி உள்ளே அனுப்பினார் ஜமீன்தார்.

''நல்லது... இஸ்ராபேல்!'' என்றான் பக்கிரி.

சுருதி மாறிவிட்டது. இருபுறமும் செழித்தோங்கி வளரும் மரங்கள் நிறைந்த ரஸ்தாவில், செக்கச் செவேலென்ற உடலும், கலங்கிய கண்களும், கபந்தனைப் போல் விரிந்த கைகளும் கொண்ட ஒருவன் உட்கார்ந்து, எல்லாப் பொருள்களையும் எனதாக்குவேன் என்று பேரவாக்கொண்டு கொட்டாவிவிட்டு ஏங்கும் சப்தம் தொனித்தது.

''பக்கிரி! சபாஷ்! என் ஜன்மத்திலேயே இந்த மாதிரி அனுபவம் கிட்டியதில்லை.''

ஆண்டவன் அருள்... இஸ்ராபேல்! என்குருவே என்று வணங்கினான் பக்கிரி. ''பக்கிரி! இந்த வானம்பாடி ஏது?''

''இதை குஞ்சு முதல் வளர்த்துவருகிறேன். ரொம்ப தொல்லைப்பட்டேன் இதைப்பிடிக்க.''

''எனக்கு வேண்டுமே இது.''

''அதற்கென்ன மஹராஜ்? ஆனால் வானம்பாடிகள் இங்கே கிடைப்பதில்லை. வடக்கே இருந்து இந்தப்புறமாக சிற்சில காலங்களில்தான் வரும்.''

ஐந்து வருஷத்திற்கு முந்தி வைகாசி மாதம். அறுவடை முடிந்துவிட்டது. வயல்களில் அவுரியும், பயறும் தழைத்திருந்தன. எங்கும் வசந்தத்தின் இனிமை.

ஒரு நாள் அதிகாலையில் எங்கள் கிராமத்து மசூதியில் உட்கார்ந்து தொழுதுகொண்டிருந்தேன். வானவெளியென்னும் மசூதியிலிருந்து தெய்வக்குரல்கொண்ட வானம்பாடிகள் மெளல்விகளைப் போல் பாடிக்கொண்டிருந்தன. என் காலைத் தொழுகையை சற்று விரைவுபடுத்தி முடித்தேன். வானம்பாடிப் பைத்தியம் தலைக்கேறியது. தினம் அதுகள் பாடும். ஆனால் அவைகள் வசிக்கும் இடம் மட்டும் தெரியவில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு அவைகள் இருப்பிடம் தெரிந்தது. அவைகள் குஞ்சு பொரித்திருந்ததும் தெரிந்தது.

என் சந்தோஷத்தைக் கேட்பானேன்? நானும் பின்னொரு பக்கிரியுமாக அந்த மாந்தோப்புக்கு ஒரு நாள் சென்றோம். அரை மணி வரையில் எங்கள் ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்தோம். ஏனெனில் போனவுடன் எங்கள் கண்ணில் அவைகள் படவில்லை. பின்பு ஒரு ஜோடி தென்பட்டபொழுது, அவைகள் நகர்ந்தும், பறந்தும் வெட்டுக் கிளிகளைப் பிடித்துக்கொண்டிருந்தன. எவ்வளவு சிறிய உருவத்திற்குள் எவ்வளவு பெரிய தெய்வக்குரல் ஒளிந்திருக்கிறது! ஒரு வானம்பாடி மட்டும் அடிக்கடி எழுந்து அவுரிப் பயிர் நடுவில் இறங்கி, இரண்டொரு நிமிஷமிருந்துவிட்டு, திரும்பியும் வெட்டுக்கிளி பிடிக்கவருவதே வேலையாயிருந்தது. எனவே அவுரிப்பயிர் நடுவில்தான் எங்கேயோ குஞ்சுகளிருக்கின்றன என்று ஊகித்தேன். இப்படியிருக்கும்பொழுதே வானம்பாடிகள் எங்களைப் பார்த்துவிட்டன போலும்! உடனே ஒரு குருவி எங்கோ பறந்துவிட்டது. மற்றொன்றுமட்டும் பறந்துபோகவும் இல்லை, அவுரி நடுவில் வந்து இறங்கவுமில்லை. ஆனால் சில நிமிஷங்கள் கண்ணில் படும். பிறகு மாயாவித்தனமாய் மறைந்துபோகும்.

இப்படியே கொஞ்சநேரம் கழிந்த பிறகுதான், அதனுடைய தந்திரம் எங்களுக்குத் தெரியவந்தது. மிருகங்களும், பக்ஷிகளும் குஞ்சு குழந்தைகளைக் காப்பதுபோல், நாம் காப்பதில்லை. அவைகளுக்குத்தான் எவ்வளவு அற்புதமான தந்திரமும், முன்னுணர்ச்சியும் ஆண்டவன் அமைத்திருக்கிறான்! முன்போல அவுரிப்பயிர் மேலே வந்து இறங்கினால், அக்குஞ்சுகளிருக்கும் இடம் எங்களுக்குத் தெரிந்துவிடுமாம். நுழைந்து, குஞ்சுகளுக்கு தத்துக்கிளியைக் கொடுத்துவிட்டு, வந்த வழியாகவே திரும்பிப்போனால் நாங்கள் அறியமாட்டோமாம்! என்ன அறிவு!

அப்பால் அவுரிப் பயிர்களை விலக்கிக் கொண்டு, வயலில் நுழைந்து கொஞ்சம் தேடிய பிறகு, நெருங்கி வளர்ந்திருந்த அவுரித் தண்டுகளுக்கிடையில் ஒரு வட்டில் ஐந்தாறு குஞ்சுகள் இருந்தன. அதில் ஒன்றை எடுத்துவந்தேன். அதுதான் இஸ்ராபேல்.

''வானம்பாடியை எப்படி வளர்ப்பது?'' என்றார் ஜமீன்தார்.

''கொஞ்சம் சிரமப்பட்டால்தான் வளரும். காலையும் மாலையும் வானம்பாடியைக் கூண்டுடன், நஞ்சை அல்லது நந்தவனமுள்ள இடத்திற்கு எடுத்துச் சென்று நல்ல காற்று குருவியின் மீது படச் செய்யவேண்டும். அங்கேயே கூண்டை சுத்தம் செய்துவிட வேண்டும். பிறகு வீட்டிற்குத் திரும்பி ஒரு குடுவையில் கம்பும், ஒரு குடுவையில் கொஞ்சம் தத்துக்  கிளியும், ஒரு கிண்ணியில் ஜலமும் வைத்துவிட்டு, கூட்டைச் சுற்றி துணியால் மூடிக் கட்டிவிட வேண்டியதுதான். நடுவில் நடுவில் மேலே சொன்ன ஆகாரம் கொஞ்சம் வைக்கலாம், குருவிகளை வளர்ப்பதில் ரொம்ப கவனம் செலுத்தவேண்டும், இல்லாவிட்டால் பிரயோஜனப்படாது.''

''ஆமாம் பக்கிரி, எனக்கு இது வேண்டுமே.''

''கூட்டைத் துணியால் மூடிய கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, குருவிகள் மஜா கிளம்பிவிடும். அதற்கப்புறம் உங்கள் நாரதர் பாட்டுக்கூட இதற்கெதிரில் நில்லாது. வானம்பாடி அல்லாவின் அதிசய சிருஷ்டி! மகாப் பிரபு!... நான் உயிர் வாழ்வது சாப்பாட்டினாலல்ல, தூக்கத்தினாலல்ல. வாக்கில் ஆண்டவன் திருநாமமும், காதில வானம்பாடியின் தேன்மடை திறந்த பாட்டும், என் உணவும் உறக்கமுமாகிவிட்டன...''

''பக்கிரி! நான் கேட்டது காதில் விழவில்லையா?''

''வானம்பாடிகளுக்கு பதினெட்டு பாஷை தெரியும். எனக்கு இன்னும் ஒரு ஆசை இருக்கிறது.''

பக்கிரிமீது இந்த மாதிரி சமயத்தில் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். தன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவன் தன் போக்கிலேயே பேசுவதின் நோக்கமாவது, பொருத்தமாவது ஜமீன்தாருக்கு மட்டும் எப்படித்தெரியும்?

''பக்கிரி'' என்று வெறுப்புடன் அழைத்தார் ஜமீன்தார்.

''மஹாராஜ், அதற்குத்தான் ஜவாப் சொல்லிவருகிறேன். இன்னும் ஒரு ஆசை பாக்கி, அதாவது இஸ்ராபேல் இப்படிப் பாடுவது எனக்கு போதாது. வானம்பாடிக் கூண்டின்மீது வருஷத்திற்கு ஒரு திரை வீதம், ஏழு மெழுகு சீலைத் திரைவரை அதிகப்படுத்தி, கூண்டினடியில் கல்லைக்கட்டி, கிணற்று ஜலத்தடியில் இறக்கிவிட்டு நாம் குரல் கொடுக்கவேண்டும். அப்பொழுது அது பாடுவதைக் கேட்கவேண்டும்மென்று ஒரு பேராசை. அந்த எல்லையளவுக்கு நான் இன்னும் இதை பழக்கவில்லை.

''ரொம்பப் பெரிய யோசனையாயிருக்கிறதே.''

''நீங்கள் இந்த ஜாதி குருவியைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டதில்லை போலிருக்கிறது. என் ஜோடிதாரி ஒரு வானம்பாடி வளர்த்தான். தெக்கால் உத்ஸவங்களுக்கும், கந்தூரிக்கும் நாங்கள் போவதுண்டல்லவா? அப்பொழுது அவனுடைய வானம்பாடி தவுல், மேளம் இதுகளைக் கேட்டவுடனேயே தலைக்கு பித்தேறி பாட ஆரம்பித்துவிடும். கேட்டவுடனேயே தலைக்கு பித்தேறி பாட ஆரம்பித்துவிடும். அடாடா! கட்டிலடங்காத சுகத்தை ஆண்டவன் எப்படித்தான் ஒரு எலுமிச்சங்காய் அளவு குருவிக்குள்  அடைத்தாரோ? இப்பொழுதுகூட நாகூர் கந்தூரிக் கூட்டமும், சந்தனக்கூடும், மேளக்கச்சேரியும், எல்லாவற்றிற்கும் மேல் அந்தக் குருவியின் பாட்டும் என் மனத்தில் தோணுது. வானம்பாடிகள் அல்லாவின் அருள்!''

அப்பொழுதுதான் உள்ளே இருந்து திரும்பிவந்த சேவகன், ஜமீன்தாரண்டை ஒரு சிறிய பெட்டியை வைத்தான். ஜமீன்தார் பெட்டியைத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை பக்கிரியிடம் நீட்டினார்.

''ஆண்டவன் சுகமளிப்பார்'' என்று அதை வாங்கிக் கொண்டு வாழ்த்திவிட்டுத் திரும்பினான் பக்கிரி.

ஜமீன்தார் திகைப்படைந்தார். ''ஏன் பக்கிரி! பணத்தையும் கூட்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போனால்?''

இஸ்ராபேலின் பாட்டுக்காக சன்மானம் கொடுக்கப்பட்டதென்று நினைத்த பக்கிரியின் மனம் திடுக்கிட்டது. பக்கிரி திரும்பினான்.

''என்ன, இனாம் என்ற எண்ணமோ?'' என்று நையாண்டி செய்தார் ஜமீன்தார்.

பக்கிரியின் உள்ளம் நடுநிலைமை அடைந்தது. மறுவார்த்தை சொல்லாமல் நோட்டை சோபாவின்மீது வைத்தான்.

''ரொம்ப முடுக்காய் இருக்கிறீரே பக்கிரி, இந்தக் குருவி எனக்கு வேண்டும்.''

''இதை விற்பதில்லை, வேண்டுமென்றால் வேறு கொண்டுவந்து தருகிறேன்.''

''எனக்கு இதுதான் தேவை. இந்தா...'' என்று ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினார்.

''எனக்கு பணம் தேவையில்லை. இதைக் கொடுக்கும் எண்ணமும் இல்லை.''

''விலை குறைவு என்ற தயக்கம்போல் இருக்கிறது.''

''ரூபாய் நூறு என்றாலும் சரி, மஹாராஜா! என் இஸ்ராபேல் வராது.''

பணத்திற்கும், முரட்டுத்தனத்திற்கும் அதிகாரத்திற்கும் பணிபவர்களோடேயே ஜமீன்தார் பழகியவரல்லவா? ஐந்து பச்சை நோட்டை எடுத்து வைத்துப் பார்த்தார்.

''ஐந்நூறு ரூபாய்''

''மஹாராஜா'' அல்லாவின் அடிமைக்கு யாழ்ப்பாணத்து கப்பரையும், இஸ்ராபேலும், ஆண்டவன் நாமமுமே போதும்'' என்று வெகு அடக்கமாய் சொன்னது ஜமீன்தாரின் கோபத்திற்கு அங்குசமாயிற்று.

''ஆயிரம்ரூபாய்''

''அல்லா ஹூ அக்பர்'' என்றான் பக்கிரி.

ஜமீன்தார் வெறிகொண்டு ஸேபாவிலிருந்து பாய்ந்தார். பக்கிரியின் கூட்டைப் பிடுங்கி வீசி எறிந்தார். பக்கிரி விழி திருப்பவில்லை. மூச்சுவிடவில்லை. நொறுங்கிய கூட்டை வெறித்துப் பார்த்தான். நல்லவேளை! இஸ்ராபேலுக்கு யாதொரு ஆபத்துமில்லை. பாழடைந்த வீட்டின் நடுவே முளைத்து, வெளியே தலைநீட்டப் பார்க்கும் செடிபோல், குருவி பாழ்பட்ட கூட்டிலிருந்து திருதிருவென விழித்துக்கொண்டிருந்தது.

பக்கிரியின் முகத்தில் ஓர் அமைதி தவழ்ந்தது. ''இஸ்ராபேல்! ஆண்டவனே அரசன். கிஸ்மத்தே செங்கோல்'' என்று வானைப் பார்த்து வாழ்த்திக்கொண்டிருந்தபோதே, 'சிவ்'வென்று இஸ்ராபேல் இறகு விரித்தது.

தெளிவாய்க்கேட்டது அதன் பாட்டு. இருபுறமும் செழித்தோங்கி வளரும் மரங்கள் நிறைந்த ரஸ்தாவில் செக்கச்செவேலென்ற உடலும் கலங்கிய கண்களும், கபந்தனைப்போல் விரித்த கைகளும் கொண்ட ஒருவன் உட்கார்ந்து எல்லாப் பொருள்களையும் எனதாக்குவேன் என்று பேரவாக்கொண்டு கொட்டாவிவிட்டு, ஏங்கும் சப்தம் தொனித்தது. முதலில் ஆட்டிடையர்கள் சோலைகளில் பாடுவதைப்போல் கணீரென்று தொடர்ச்சியாயும், போகப் போக மலர்களின் வாடைபோல் விட்டுவிட்டும், தேய்ந்தும் கடைசியாய் நீரில் பாயும் ஈட்டிபோல் குமிழியற்றும்,  சுவடற்றும் மாய்ந்தது அப்பாட்டு. எங்கும் அமைதி, அமைதி, அமைதி.

பக்கிரிக்கு தன் நினைப்பு வந்தது. ''இஸ்ராபேல்! என் உயிர்க்கூட்டின் இனிமைக் குருவியே!'' என்று ஏங்கித் திரும்பினான் ஜமீன்தார் பக்கம்.

''இஸ்ராபேலை இழந்தேன். இதை நானே தருகிறேன்'' என்று அவன் பிதற்றிக்கொண்டிருந்தபொழுதே விர்ரென்று யாழ்ப்பாணத்து கப்பறை வந்து ஜமீன்தார் முகத்தில் விழுந்தது.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்