Showing posts with label சோ.தர்மன். Show all posts
Showing posts with label சோ.தர்மன். Show all posts

Dec 2, 2013

சோகவனம் - சோ. தர்மன்

கற்பாறைகளின் இடுக்குகளிலும் கூட தன் வேர் பதித்து நீருறிஞ்சி மண் நீக்கி காற்றைச் சுவாசிக்கும் ஆத்ம வெறியில் தலை நீட்டி சுட்டெரிக்கும் அக்னி ஜ்வாலையின் சூரியத் தகிப்பில் உயிர் பெற்று தன் இனம் பெருக்கும் இனவிருத்தி என்so-darmanனும் மாய வலைக்குள் சிக்கிக் கொண்டுதான் அந்த இரண்டு இளம் கிளிகளும் ஆனந்தித்துச் சுகித்திருந்தன. காற்றசைவிலும் வனங்களின் ஏகாந்த மௌனத்திலும் இலைகள் சலசலக்கும் தாலாட்டிலும் நறுமணம் வீசும் காட்டுப் பூக்களின் சௌந்தர்ய வாசனையில் நாசிகளின்   மென்னுணர் நரம்புகள் புடைக்க கிளைவிட்டுக் கிலை தாவி, காற்றில் உதிரும் பூக்களெனப் பறந்து உல்லாசமாய் ஆனந்தக் கூத்தாடிக் களித்திருந்தன, அந்த இளஞ்சோடிக் கிளிகள். உடற்சூட்டின் கதகதப்பில் திரவம் உறைந்து அணுக்கள் இறுகிக் கெட்டியாகி உயிர் பெற்று அசைந்து, மண் நீக்கி முளைவிடும் விதையெனத் தோடுடைத்து சூரியனின் இயற்கைச் சூட்டைப் பெறும் வேட்கையிலும், தாயின் மூச்சே காற்றென இருந்த கணம் மாறி உள்காற்றை உந்தித் தள்ளி வெளிக்காற்றில் தலை நீட்டும் முதல் ஸ்பரிசத்திற்காய் காலுதைக்கும் குஞ்சுகள் பொரிக்க இடம் தேடிப் புறப்பட்டன ஜோடிக் கிளிகள்.

தன் வம்சத்தின் பாரம்பரிய நியதியை மீற முடியாமல் கிளைகளின் மேல் கூடு கட்டி வாழும் பறவைகளையும், கிளைகளிலிருந்து தொங்கும் கூடு கட்டி வாழும் பறவைகளையும் உதாசீனப்படுத்தி விட்டு மரப்பொந்துகள் தேடி வனங்களின் மூலை முடுக்குகள் எல்லாம் தேடி அலைந்தன. மலைக் குகைகளின் கல் பொந்துகள் மாறித்தான் மரப்பொந்துகள் உண்டாயிற்று போலும். தான் ஜனித்த தாய் வீட்டை நினைத்து காற்றில் அடையாளமிட்டிருந்த திசையில் பறந்து இடந்தேடியடைந்தன. தன் தாய் வீட்டை அந்த இடத்தில் காணாமல் விக்கித்து நின்றன. தன் வீடு இருந்ததற்கான அடையாளத்தையே காணவில்லை. திசைமாறி விட்டோமோ என்று திகைத்து அடையாளங்கள் தேடினால் அடையாளங்களாக நின்ற மரங்களையும் காணவில்லை. “ஆகா... எவ்வளவு பெரிய இலவ மரம் தன் தாய்வீடாயிருந்தது. எவ்வளவு உயரம், எத்தனை பொந்துகள். பக்கத்திலேயே கூடாரமாய் கிளை பரப்பி வெய்யில் முகமே காணாமல் எந்நேரமும் நீருக்குள் இருக்கிற மாதிரியான குளிர்ச்சியில் அசைந்தாடி பறவைகள் எல்லாவற்றையும் ‘வா, வா’ என்று கையசைத்துக் கூப்பிடும் நிலவாகை மரத்தையும் காணவில்லை. சந்தன வாசனை எங்கே போயிற்று? அடர்ந்த மட்டியும் கோங்கும் பிள்ளை மருதும் இருந்த இடம் எது? ஆயிரம் கைகள் விரித்தாற்போல் நின்ற தேக்கு எங்கே போயிற்று. தன் தாய்வீட்டில் வாசற்படிபோல் பொந்தின் அடியில் இருந்த பெரிய கணுவில் நின்றுகொண்டு இரையூட்டிய தன் தாயின் அலகும் தங்களின் அலகும் எவ்வளவு கச்சிதமாய் பொருந்தி மூடும் இரைகளை அலகு மாற்றிய பின் விருட்டெனப் பறந்து காற்றில் கலக்க எத்தனை தோதாயிருந்தது. அம்மரத்தின் கணு முற்றிப் பழுத்து வெடித்த பலாவின் மணத்தை இந்த நாசி உணரவே வழியிலலியே. உயிர்ப்பித்த பூமியா அத்தனை மரங்களையும் உள் வாங்கிக் கொண்டு ஏப்பம் விட்டது? கடுகளவு விதையையும் பெரிய மரமாக்கி வனமாக்கும் மண் நிச்சயமாய் விழுங்கியிருக்காது. மண் விழுங்கும் சருகுகள் கூட உரமாகி உயிர் பெற்று மரமாய்த்தானே வெளிவருகிறாது. அப்படியெனில் இந்த மரங்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன. பெரு நெருப்பில் கருகியிருந்தால் தடயம் எங்கே. சாம்பலையும்கூட உரமாக்கி செடிகளுக்கு அளித்து பூ பிஞ்சு காய் பழம் விதையென சகக்ரச் சுழற்சியின் விதிக்கு மண் தானே ஆதாரம். அப்படியிருக்க மண் நிச்சயமாய் விழுங்கியிருக்க முடியாது.”

கனிந்து காம்பறுந்து தரையில் விழும் விதை சுமந்த பழங்களை கையேந்தி வாங்கிக் கொள்ளும் மண்போல் தன் உடலுக்குள் சூல் கொண்ட பழங்களைப் பத்திரமாய் இறக்கி வைக்க இடம் தேடியலைந்தன கிளிகள். மழை மேகங்களைச் சுமந்துகொண்டு வனமெல்லாம் அலையும் காற்றைப் போல் அலைந்தன கிளிகள். வயசாகி கிழடு தட்டி நரை திரண்டு முடியுதிர்ந்து வழுக்கையாகி சுருக்கங்கள் கண்டு பொந்துகளாகிப் போன மரங்கள் வனமெங்கும் தேடியும் கண்ணில் படவே இல்லை. நாகங்கள் உலா வரும் தரையில் தன் விதையை விதைக்க முடியாது. மென் பழங்களை மட்டுமே கொத்தும் செவ்வலகினால் மரப்பட்டைகளைக் குடைந்து பொந்துகள் உண்டாக்க முடியாது. கிளிகளின் அலகுகளும் பழுத்துத் தொங்கும் பழங்களும் வெவ்வேறல்ல. வாய்விட்டுக் கதறாமல் ஊமையாய்ச் சுற்றி வனங்களை வட்டமிட்டே காலங்கடந்து போனது. இனிமேல் ஒரு நாள் தாமதித்தால் கூட தன் வம்சம் தரையில் விழுந்து மடிந்து போகும். விதையைப் புஷ்பிக்கும் பூகிக்கு முட்டையைப் புஷ்பிக்கும் கலை மறந்து போனது. விதைவேறு, முட்டை வேறா? விதைக்குப் பூமி, முட்டைக்குப் பறவை. அப்படியானால் பூமியும் பறவையும் ஒன்றுதானே.

கனத்த வயிற்றின் சூல் விரட்ட, வனத்தை மறந்த பெண் கிளி சிறகடித்துப் பறந்தது வெகு தூரம். சோகத்தில் முகஞ்சுளித்த ஆண் கிளியின் இயலாமை, மரப்பொந்து கண்ணில் படவேயில்லை. கிழடு தட்டி வைரம் பாய்ந்த பொந்துகள் உள்ள மூத்த மரங்களைக் காணவேயில்லை. மரங்களற்று செடிகளாகிப் போன வனங்கள். பல்வேறு மலர்களின் சௌந்தர்ய நிறங்களும் மணங்களும் அற்ற வனம். பழங்களின் வாசனைகள் இல்லாத வனம். கூட்டங் கூட்டமாய்த் திரியும் காட்டு மிருகங்களற்ற வனம்.

வெகு நேரம் பறந்து இறக்கை ஓய்ந்து வெட்ட வெளியில் ஒற்றையாய் நின்ற மொட்டைப் பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து எட்டிப் பார்த்தன. செத்த பனஞ்சிராய்கள் உள் விழுந்த ஆழப் பொந்து பெண் கிளி உள்ளே போய் முடங்கிக் கொண்டது. மொட்டப் பனையின் உச்சியிலிருந்து ஆண் கிளி கழுத்துருட்டிப் பார்த்தது. கண்ணெட்டும் தூரம்வரை வெட்டவெளி.

மொட்டைப் பனையை ஒட்டிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை. ஓயாமல் கேட்கும் வாகன இரைச்சலும் ஹாரன் சத்தமும். பக்கத்திலேயே சாலையோரக் கேண்டீன், இரவு பகல் எந்நேரமும் ஒளி வெள்ளத்தில் மிதக்க சத்தமாய்க் கூச்சலிடும் ஸ்டீரியோ சினிமாப் பாடல்களும் புகை கக்கும் உயர்ந்த குழாயும், காற்றில் பரவி வரும் விசித்திரமான பிரியாணி வாசனையையும் வாகனங்கள் கக்கிச் செல்லும் டீஸல் பெட்ரோல் புகை நாற்றத்தை சுவாசித்து முகஞ் சுளித்தது ஆண்கிளி. பறந்து வந்த களைப்புத் தீர தாகம் தணிக்கப் பறந்து வெளியில் சென்றது ஆண் கிளி. மலையருவிகள் கொட்ட சிற்றோடைகளில் பாம்பின் நெளிவாய், சுவை கொண்டு பாய்ந்து வரும் கண்ணாடித் தண்ணீர் தேடி அலைந்தது. தூரத்தில் தெரிந்த குளத்தில் தாழப் பறந்து உற்றுப் பார்த்தது. ஒர்க்ஷாப் கழிவுகள் சேர்ந்து எண்ணெய்ப் படலம் மிதக்கும் கருமை நிறத் தண்ணீரின் நாற்றம் பிடிக்காமல் பறந்து போனது. சாலையோரக் கேண்டீனிலிருந்து வெளியேறி கிடங்கில் பெருகிக் கிடந்த மீன் செதில்கள் மிதக்கும் தண்ணீரில் ஒரு கொக்கு தவமிருக்கக் கண்டதும் கிளி பறந்து போனது. தூரத்தில் நடுக்காட்டில் பம்புசெட் கிணற்றின் உப்புத் தண்ணீர் வாய்க்காலில் தொண்டை நனைத்துப் பறந்து வந்தது.

மொட்டைப் பனையின் உச்சியில் உட்கார்ந்து எட்டிப் பார்த்த ஆண் கிளியின் முகத்தில் இளஞ்சூட்டின் வெக்கை படிந்தது. ஆண் கிளி புரிந்து கொண்டது. சாலையோரக் கேண்டீனில் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பஸ்ஸின் ஜன்னல் வழியே எறிந்த பொட்டலங்களில் ஒட்டியிருந்த பிரியாணித் துகள்களையும் புளியோதரைப் பருக்கைகளையும் கொண்டுபோய் இரையாகக் கொடுத்தது. சில நேரம் ஆண் கிளி முட்டைகளுக்குக் காவல் காக்க பெண்கிளி வந்து கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு போனது. ஒருநாள் யாரோ எச்சிலையில் சிவப்பாய் பழங்கள் கிடக்க, கிளி சந்தோஷத்துடன் ஆவலாய் கொத்தித் தின்னப் போனபோதுதான் தெரிந்தது. அந்தப் பழம் வேறெந்த உயிர்ப்பிராணிகளுமே தின்னாத, மனிதர்கள் மட்டுமே தின்கிற தக்காளிப் பழமென்று. ஏமாற்றமடைந்த கிளி ஒரு குழந்தை கோபத்தில் விட்டெறிந்த காய்ந்த ரொட்டித் துண்டைத் தூக்கிக் கொண்டு பறந்தது. ஒருநாள் பாலிதீன் பையின் கொஞ்சம் மீதம் இருந்த தண்ணீரை யாரோ தூக்கி எறிய, தொண்டை நனையக் குடித்து தாகம் தீர்த்தது. ஒரு வேளை அண்ணாந்து குடிக்கும் போதோ அல்லது பிளாஸ்ட்டிக் பையை பல்லால் கடித்துக் கிழிக்கும் போதோ கை தவறி விழுந்திருக்கலாம் இல்லையெனில் எந்தக் குழந்தையாவது கோபத்தில் தன் அப்பா அம்மா மீது எறிந்து குறி தவறிக் கீழே விழுந்திருக்கலாம்.

இரவில் எந்நேரமும் கண்களைக் கூச வைக்கும் வாகனங்களில் வெளிச்சங்களும் இடைவிடாது கேட்கும் இரைச்சல்களும் பேயாய் அலறும் ஹாரன் சத்தங்களும் கேண்டீன்களில் அலறும் ஸ்பீக்கரின் ஓலங்களும் தூக்கத்தை மறக்கடித்தன. காய்ந்த பணஞ் சிராய்களின் உறுத்தல் வேறு. ஆனாலும் ரொம்பவும் பயமுறுத்தியது ஓயாமல் ஒலிக்கும் ஹாரன்களின் சத்தம்தான். வனத்தில் எப்போதாவது யானையோ சிங்கமோ புலியோ அல்லது இடியோ மின்னலோ பெரிய சத்தத்தையும் பயத்தையும் உண்டுபண்ணும். அந்த பயம் சமயத்தில் இரண்டுநாள் கூட மறக்க முடியாமல் அடிவயிற்றைக் கலக்கும். ஆனால் இங்கேயோ ஒரு நிமிஷம் தவறாமல் பயங்கர சத்தம். சத்தமே வாழ்க்கையென்றாகிப் போயிற்று கிளிகளுக்கு. ஒரு நாள் சில வித்தியாசமான சத்தங்கள் கேட்கவும் இரு கிளிகளும் ஆவலாய் பனைமேல் நின்று எட்டிப் பார்த்தன. தூரத்தில் சில மயில்களும் இன்னும் சில குயில்களும் ஒரு புறாக் கூட்டமும் இருக்கக் கண்டு சந்தோஷமாய் பொந்துக்குள் போய் முடங்கிக் கொண்டன. படை படையாய்ச் சென்ற சிட்டுக் குருவிக் கூட்டம் மொட்டைப் பனையை ஒட்டிப் பறந்தது.

ஒவ்வொரு தடவையும் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டும்போது அதன் தாய் பாஷையான கிகீகீ சத்தத்தைக் குஞ்சுகள் கேட்கவிடாமல் வாகனங்களின் ஹாரன் சத்தம் மேலெழும்பி அமுக்கியது. தொண்டை வலிக்கக் கத்தியும் தன் தாய் பாஷையை குஞ்சுகளின் காதுகளில் கேட்கவைக்க முடியாமல் தாய்க்கிளிகள் இரண்டும் தொண்டை வறண்டு ஓய்ந்து போயின. தன் வம்சத்தின் பாரம்பரிய நிறம் மாறி குஞ்சுகள் கிளிப்பச்சை நிறமிழந்து செம்பச்சையாய் வளர்ந்தது கண்டு தாய்க்கிளிகள் இரண்டும் ஒன்றையொன்று ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டன. தன் குஞ்சுகள் எழுப்பும் சத்தம் வாகனங்களின் ஹாரன் சத்தம் மாதிரி ஒலிக்கக் கண்டு இரு கிளிகளும் பதறித் துடித்தன. பஸ்ஸின் ஜன்னல் வழி விட்டெறிந்த அரைக் கொய்யாப் பழத்தை ஆசையாய் கொண்டு வந்து ஊட்டியது தாய்க்கிளி. பழங்களின் வாசனையறியாத ருசியறியாத குஞ்சுக்கிளி தூ.. வென்று துப்பி உமிழ்ந்தபோது தாய்க்கிளிகள் இரண்டும் கண்ணீர் விட்டு அழுதன.

கொஞ்ச நாள் கழித்து வாகனங்களே வராத நிமிஷ நேர இடைவெளியில் மொட்டைப் பனையிலிருந்து ஹாரன் சத்தம் கேட்கவும் சில பேர் பேய் என்றார்கள். சில வருடங்களுக்கு முன் ஒன்றோடொன்று மோதி நொறுங்கிச் செத்த டிரைவர்களின் ஆவி பனையில் குடியேறிவிட்டது என்றார்கள். பேய்கள் வாசஞ் செய்யும் மொட்டைப் பனையை தூரோடு வெட்டிச் சாய்த்து பேய்களின் அழிவிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். அதற்கப்புறம் ஜனங்கள் பயமற்று நடமாடினார்கள். காற்றில் சிறகசைத்துப் பறந்து குஞ்சுக் கிளிகளைக் கூட்டிக் கொண்டு வனம் சேர்ந்தன தாய்க்கிளிகள். மரங்கள் குறைந்து செடிகள் நிறைந்திருந்த வனம் இப்போது செடிகள் குறைந்து கொடிகள் நிறைந்த வனமாய்க் காட்சியளித்தது. கிளிகளின் வித்தியாசமான ஹாரன் அலறலில் வனம் நடுங்கியது. அருகருகே வசிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சிங்கங்களும் புலிகளும் சிலிர்த்துக் கொண்டன. ஒன்றிரெண்டாய் உயிர் வாழும் யானைகள் தும்பிக்கைகள் தூக்கி மிரண்டு நின்றன. வானத்திலிருந்து ஓயாமல் கேட்கும் ஹாரன் சத்தம் வனமெங்கும் எதிரொலித்தது. தன் வம்சத்தின் சாபம் என்றெண்ணிய தாய்க்கிளிகளும் ஓடிப் பதுங்கிக் கொண்டன.

குஞ்சுக்கிளிகள் இரண்டும் வித்தியாசமான மணம், சூழல், இரைகல் கண்டு முகஞ்சுளித்துக் கவலையோடிருந்தன. பழம் கொத்தித் தின்னவும், எதிரியின் கண் முன்னாலேயே மரத்தின் இலையா மாறி தப்பிக்கவும் தெரியாமல் ஓயாமல் ஹாரன் சத்தத்தை ஒலித்துத் திரிந்தன. ஒருநாள் இச்சி மரத்தின் உச்சியில் நின்று இரண்டு கிளிகளும் பலமாய்க் கத்தின. நடுக்காட்டுக்குள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு போவதைப் போல் விடாமல் ஹாரன் சத்தம் கேட்டது. திடீரென்று எதிர்திசையிலிருந்து பக்கத்திலேயே ரயில் வண்டியெழுப்பும் பயங்கரமான ஹாரன் சத்தம் கேட்கவும் கிளிகள் இரண்டும் மௌனியாய் நின்று கவனித்தன. ரயில் வண்டியின் ஹாரன் சத்தம் தங்களை நோக்கி மிக அருகே நெருங்கி வந்தது. மீண்டும் கிளிகள் உற்றுப் பார்த்தன. தங்களை நோக்கி இரண்டு மயில் குஞ்சுகள் கூவிக் கொண்டே வருவதைக் கண்ணுற்றன.

வனமெங்கும் பஸ் ஹாரன் சத்தமும் ரயில் ஹாரன் சத்தமும் விடாமல் கேட்கத் தொடங்கின. சில நாள் கழித்து நடுவனத்தில் ஆலைச் சங்கின் பயங்கரச் சத்தம் கேட்டது. எல்லாப் பிராணிகளும் உற்றுப் பார்த்தன. குயிலொன்று கூவிக் கொண்டு போன சத்தமது. சில நேரம் மிஷின்கள் ஓடும் பாக்டரிச் சத்தங்கூட கேட்கத் தொடங்கியது. பல்வேறு வாகனங்களின் பாக்டரிகளின் விதவிதமான பயங்கரச் சத்தங்கள் வனமெங்கும் ஒலிக்க வனம் சுருங்கிக் கொண்டே வந்தது. வரவர வனத்தின் சௌந்தர்யம் குறைந்து விகாரம் குடி கொண்டது. கடைசியாய் படைபடையாய்ப் பறந்து வந்த சிட்டுக்குருவிகள் ஊசிப் பட்டாசுகளாய் வெடித்துச் சிதறிச் சத்தமெழுப்பி மரக்கிளைகளுக்குள் மறைந்து கொண்டன. தன் செவிப்பறைகள் கிழிந்து ஊமையாகிப் போன வனம் நாளாவட்டத்தில் சுண்ணாம்புக் காளவாசலாய் மாறி அக்னியாய் தகித்தது. வனத்தைத் தேடியலையும் எஞ்சிய பறவைகள் எழுப்பும் பலவிதமான ஹாரன் சத்தங்கள் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன வனங்களையும் கடந்து.

*****
தட்டச்சு : சென்ஷி

Apr 14, 2010

அடமானம் - சோ. தர்மன்

சோ. தர்மன்

சுருக்கமாக 'கோனார் கம்பெனி' என்று சொல்லப்படும் அய்யனேரி ஜெகநாதன் முதலாளியின் 'கிருஷ்ணா மேச் ஒர்க்ஸ்' என்றால் சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு என்றாலும் பிரதான மான காரணம் பெரிய கம்பெனி, சொந்த லைசென்ஸ், சொந்த லேபில், சொந்த லாரிகளில் sotharman ஏற்றி வடமாநிலங்களில் சொந்தமாக விற்பது இவைபோக, தன் கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கு மற்ற கம்பெனிகளைவிட நிறையப் பணம் அட்வான்ஸாகக் கொடுப்பது, கிருஷ்ணா மேச் ஒர்க்ஸில் மருந்து முக்குகிற வேலை என்பது பெரிய ஒசத்தியான வேலை இல்லா விட்டாலும், மோசமான வேலை என்றும் சொல்லிவிட முடியாது. நான்குமுழத் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக் கொண்டு மேலெல்லாம் விளக்கெண்ணெய் தடவியதைப் போல் வியர்வை நசநசப்பில், உருகும் மெழுகடுப்பின் வெக்கையில் நின்று தீப்பெட்டிக் கட்டைகளை மெழுகில் தோய்த்து எடுத்து எதிரே நிற்பவனிடம் லாவகமாக விட்டெறிவது கருப்பசாமிக்கு எட்டு வருடமாகக் கைவந்த கலை. 'புது மாப்பிள... கட்டயக் கொஞ்சம் மெதுவா விட்டெறிங்க. இன்னும் நாலு நாள்தான் இருக்கு. பெறகு ஒங்க வீரத்த எங்க காட்டணுமோ அங்க காட்டுங்க.'

'மாடசாமியண்ணே, இன்னும் பத்து நாளைக்குத்தான் அய்யா சுதாரிப்பு... பெறவு கட்டையத் தூக்கக்கூட சீத்துவம் இருக்காது. நிப்பி நடந்து கிட்டப்போய்த்தான் கட்டையக் கையில வாங்கணும்.'

முனியம்மாளின் பேச்சில் சுற்றிலும் உட்கார்ந்திருந்த அத்தனை பெண்களும் முகத்தை அண்ணாந்து வைத்துக் கொண்டு சிரித்தார்கள். அத்தனைபேர் வாயிலும் பான்பராக். ஃபோர்மேன் வேல்சாமியின் கீழுதடு துருத்திக் கொண்டிருந்தது. கணேஷ் போயிலை வாயை இறுக்கிப் பூட்டி இருக்க... உதட்டைக் கடித்துக்கொண்டு சிரித்தான்.

'பொண்ணு பேரு மாரியம்மாளாம்... தெரிமில்ல... இருக்கங்குடி மாரியாத்தா, அப்படியே வெளையாடி விட்ருவா வெளையாடி... கருப்பசாமியெல்லாம் மாரியத்தாளக் கண்டா காத வழிக்கு ஓடணும்.'

வாசலில் கருப்பசாமியின் அய்யாவும் அம்மாவும் தலை காட்டியவுடன் கட்டை எறிவதை நிறுத்திவிட்டு ஓடினான். இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து மேலெல் லாம் வழிந்த வியர்வையைத் துடைத்தான். முதலாளியின் அறையை எட்டிப் பார்த்து விட்டு அய்யாவை நோக்கிக் கையசைத்தான்.

அய்யாவின் கையில் பெரிய எவர்சில்வர் தட்டில் தாம்பூலமும் பழவகைகளும் நடுவே பத்திரிகையும் இருந்தது.

'வாங்க, வாங்க... இதெல்லாம் எதுக்கு? பத்திரிக மட்டும் கொண்டாந்தாப் போதாதா?'

'ஏதோ எங்களால ஏண்டது.'

'சரி, ரொம்ப சந்தோஷம்! அப்ப நம்ம கம்பெனிக்கு புதுசா ஒரு ஆள் வேலைக்கு வருது.'

'நம்ம கம்பெனிக்குத்தான் மொதலாளி வருவா! நம்ம கம்பெனிய விட்டுட்டு வேற எங்க போவா?'

'பரிசம் போடப் போறன்னைக்கு ராத்திரிக்கு வேன் வேணும்னு கருப்பசாமி சொன்னான். எப்பிடி முடிவு பண்ணியிருக்கீக!'

''ராத்திரி போயி பரிசம் போட்டுட்டு, ராத்திரியே நாங்க திரும்பிருவம், காலைல பொண்ணை அழைச்சிட்டு அவங்க இங்க வந்திருவாங்க.'

'அது அவுக பொறுப்பு மொதலாளி. பொண்ணு வேல பாக்கிற கம்பெனி மொதலாளி வேன் தாரம்னு சொல்லியிருக் காராம்!'

'அப்படியா.. அப்பனாச் சரி'

தீப்பெட்டி கம்பெனிகளுக்குத் தேவையான குச்சி மூட்டைகள், அட்டைக் கட்டுகள், பண்டைல்கள் ஆகியவற்றை ஏற்றிச் செல்லும் சின்ன லாரி--மாடல் வேன். மேலே மட்டும் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்தது. மாப்பிள்ளை யின் அம்மா பரிசப் பெட்டியுடன் வேனின் நடுவில் உட்கார்ந்திருந்தாள். சுற்றிலும் பெண்கள், ஊரில் உள்ள சில முக்கியஸ் தர்கள். மாப்பிள்ளையின் அய்யா, டிரைவரின் பக்கத்தில் உட்கார்ந்து வழிகாட்டிக் கொண்டிருந்தார். கரடுமுரடான பாதையில் வேன் குலுங்கிக் குலுங்கிச் சென்றது. ரோட்டின் இரு பக்கங்களிலும் நீண்டிருந்த வேலிக் கருவேல மரக்கொம்புகள் தார்ப்பாயில் உரசும் போதெல்லாம் பெண்கள் தலையைக் குனிந்து கொண்டார்கள். தூரத்தில் சில தெருவிளக்குகள் எரிவது அரிச்சலாய் தெரிந்து பின்னர் துணிப்பாய்த் தெரிந்தன. வேன் ஊரை நெருங்க நெருங்க ஸ்பீக்கர் அலறும் சத்தம் பெரியதாகிக் கொண்டே வந்தது.

பெண்ணின் வீடு ஊரைவிட்டுத் தனியே உள்ள காலனியில் இருந்தது. முற்றத்தில் நிறையப் பேர் கூடியிருந்தார்கள். ஏழெட்டு டியூப் லைட்டுகள் எரிவது ரொம்ப வெளிச்சமாக இருந்தது. எல்லோருமே இவர்களை எதிர்பார்த்துதான் காத்திருந் தார்கள் போலும். வேனில் வந்தவர்கள் எல்லோரும் கூட்டமாக நடக்க... பரிசப் பெட்டி நடுவீட்டில் இறக்கி வைக்கப்பட்டது. வெளியிலிருந்து ஒரு சத்தம் அதட்டலாகக் கேட்டது.

'என்ன.. இன்னும் உக்காந்துட்டு இருக்கீக? நேரங் காணாதா? வந்தவங்களுக்கு சட்டுப்புட்டுனு சாப்பாட்டப் போடுங்க. வள்ளியம்மா எங்கே போன... ஊரைச் சத்தங்காட்டு, பத்துமணிக்கு கரண்டப் புடுங்குனாலும் புடுங்கியிருவான். பெறவு இருட்டுக்குன்ன கெடத்து சீரழியணும்.'

அந்த அதட்டல் மூலமே தான்தான் இந்த ஊரில் நாட்டாண்மை என்பதை எல்லோருக் கும் காட்டியவர், முற்றத்தில் விரித்திருந்த பாயில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டார்.

'எம் மக மாரியம்மாளுக்குப் பரிசம் போடப் போறம் வாங்க. வாங்க.' என்று வீடு தவறாமல் சொல்லிக்கொண்டு தெருவழியே போனாள் வள்ளியம்மாள். முற்றம் நிறைந்து விட்டது. அநேகமாக சாப்பாடும் முடிந்து விட்டது.

பொண்ணோட தாய்மாமன் எங்கய்யா, இங்கவா... இப்பிடி முன்னால வந்து உட்காரு. அங்க நின்னா எப்பிடி? பொண்ணோட அய்யா, மாப்பிள்ளையோட அய்யா ரெண்டுபேரும் இப்பிடி ஓரத்துல வாங்க. யேய் பொம்பளைகளா, இப்ப பேசாம இருக்கப் போறீகளா என்ன.. சலசலன்னு பேசாதிக!'

நாட்டாண்மையின் சத்தம் கூட்டத்தில் பலமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தது. பரிசப் பெட்டி, பழத்தட்டு, வெற்றிலைக்கட்டு, பரிசச்சேலை எல்லாம் நாட்டாண்மையின் முன்னால் வைக்கப்பட்டன. கூட்டம் வட்டம் சுற்றி நிற்க, வீட்டுக்குள் மணப்பெண்ணும் இன்னும் சில பெண்களும் மட்டுமே இருந்தார்கள். முற்றத்தில் பேசுகின்ற எல்லாப் பேச்சுக்களும் வீட்டுக்குள்ளும் தெளிவாகக் கேட்டன.

'எங்க வள்ளியம்மாளக் காணும்? என்ன வள்ளி.. ஊரு பூராவும் சொல்லிட்டயா? வேற யாரு வீடும் பாக்கியிருக்கா... இப்ப ஆரம்பிக்கலாமா?'

'எல்லா வீடும் சொல்லியாச்சு. இனி நீங்க செய்ற மொறையச் செய்ங்க.'

'எதுக்கும் ஒரு வார்த்த கேட்டுக்கிறணுமில்ல... பெறகு ஏங்கிட்டச் சொல்லல, ஒங்கிட்டச் சொல்லலனு ஆவலாதி வரப்படாதில்ல.'

'அதெல்லாம் சொல்லியாச்சு நீரு ஆரம்பியும்.'

'சரி, பரிசம் எவ்வளவு போடுறீக?'

'பரிசம்.. நாங்க என்ன புதுசாவா போடப் போறம்? ஊரு வழக்கப்படிதான்.'

'ஊரு வழக்கப்படியா! எங்க ஊரு வழக்கம் ஐயாயிரத்து ஒண்ணு'

'எங்க ஊர் வழக்கம் பதினொண்ணு'

'அது ஒங்க ஊர்ல வாங்கிக்கோங்க! பொண்ணு எங்க ஊர் பொண்ணு... எங்க ஊர் வழக்கப்படிதான் நீரு பரிசம் போடணும். எடும் ஐயாயிரத்து ஒண்ணை.. எண்ணி வையும் இப்பிடி..'

'.....'

'என்ன பேச்சுமூச்சுக் காணும்? யார்ட்ட வந்து வண்டிய விடுறீரு? பொண்ண அழைக்க வந்தா, பேசாம சோறு சாப்பிட்டுட்டுப் போவிரா, பரிசம் பதினொண்ணாம்!'

கூட்டம் கெக்கெலி போட்டுச் சிரித்து மகிழ்ந்தது.

மாரியம்மாள் தலைகுனிந்து உட்கார்ந் திருந்தாள். மீண்டும் நாட்டாண்மையின் அதட்டல் பலமாகக் கேட்டது.

'சொல்லுங்கய்யா.. சம்பந்திக ரெண்டு பேரும் இப்பிடி வாய மூடிக்கிட்டு ஒக்காந்திருந்தா எப்பிடி? பரிசம் எவ்வளவுய்யா பேசிக்கிட்டீக!'

'பரிசம் நூத்தியொண்ணு போட்ருவம்'

'நூத்தியொண்ணா.. மாரியம்மா வாரத்துக்கு நானூறு ரூவா சம்பவளம் வாங்குவாயா.. புள்ள வேலைக்காரப் புள்ள... ஒமக்கு யோகம்னு வச்சிக்கோரும்.'

'பொண்ணோட அப்பன் என்னய்யா சொல்றான்?'

'பரிசம் அவுக போடுறதப் போடட்டும்.'

'அப்பச் சரி. பரிசம் நூத்தியொண்ணு'

'ம்..வேற சீருசெனத்தி என்ன பேசிக்கிட்டீக?'

'பொண்ணுக்கு கம்மல்-மூக்குத்தி மட்டும் தான். பவுனு கிவுனு எல்லாங் கெடையாது. இன்னக்கி லேசா சொல்லீறலாம். பெறகு போடணுமில்ல?'

'சரி வேற ரொக்கம் ஏதும் உண்டா?'

'அதெல்லாம் கெடையாது, நாங்க பேசிக்கிறல.'

'சரி, பையனுக்கு தலத்தீபாவளிக்கு என்ன செய்யப் போறீக?'

'தலத்தீபாவளிக்கு வேட்டி துண்டுதான். மோதிரமெல்லாங் கெடையாது. வசதி இருந்தா நாங்களா செய்வம். ஆனா பேச்சுக் கிடையாது!'

'அது ஒங்க பிரியம்!'

'சரி, அப்ப பரிசம் வெளம்பிரலாமா? வேற எதும் கேக்கிறதுனா கேளுங்க.'

எல்லாப் பேச்சுகளையும் கேட்டுக்கொண்டு மாரியம்மாள் பொம்மையாக உட்கார்ந்தி ருந்தாள். பெண்கள் கசமுசவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். நாட்டாண்மை ஒவ்வொரு பொருளாக வெளியே எடுத்து வைத்தார். பரிசச் சேலையை எடுத்து தாம்பூலத்தின் மேல் வைத்தார்.

'இம்புட்டுப் புள்ளையிலிருந்து இன்னக்கு வரைக்கி கருமருந்தத்தின்ன புள்ளைய படுபாவி, கம்மல் - மூக்குத்தியோட அனுப்பறான்.'

'அதுக்கென்ன செய்ய முடியும்? இவ ஒருத்திதான் வேல செய்யிற வயது. மத்ததெல்லாம் நண்டும் நசுங்கலுமா இருக்கு. அவுக அப்பன் என்ன செய்வான்?'

'இந்தக் கம்மல்-மூக்குத்திகூட கம்பெனியில அட்வான்ஸ் வாங்கி அவளாச் செஞ்சது... இல்லன்னா அதுங் கெடையாது!'

'மாரியம்மா வேலைக்காரப்புள்ள! விடிஞ்சு போனா, அடஞ்சுதான் வருவா. மத்த புள்ளக மாதிரி வாய்கூடப் பேசமாட்டா. அப்புராணிப் புள்ள.'

'பொட்டக் கழுதயாப் பெறக்கவே கூடாதுக்கா.. இனி அங்கேயும் போயி கருமருந்தத் தின்னுதான் சீரழியணும்!'

'அட்வான்ஸ் ரூபாகூட இனியும் மூவாயிரம் பாக்கிருக்குனு பேசிக்கிட்டாக.'

'யே, பொம்பளைகளா, இப்ப பேசாம இருக்கப் போறீகளா என்ன? ஓலப்பாயில நாயி மோண்டாப்ல... சலசலன்னு என்னதான் பேசுவீகளோ?'

மீண்டும் நாட்டாண்மையின் கூப்பாட்டில் கூட்டம் அமைதியானது. மாரியம்மாள் மட்டும் பொம்மையாக வீட்டுக்குள் உட்கார்ந் திருந்தாள். 'சரி, அப்ப, பரிசம் வெளம் பிரலாமா, வேற எதும் கேக்கணுமின்னா சம்பந்திக கேட்டுக்கோங்க!'

பெண்ணின் அய்யா வேகமாக எழுந்து மாரியம்மாளிடம் போனார். இவர் ஏதோ கேட்க மாரியம்மாள் தலையாட்டினாள். வேகமாக வந்து உட்கார்ந்து நாட்டாண்மை யிடம் ஏதோ சொன்னார்.

'இதுக்குத்தான் திரும்பத் திரும்பக் கேட்டுகிறது! பொண்ணு வேலைபாத்த கம்பெனியில அட்வான்ஸ் ரூவா மூவாயிரம் பாக்கியிருக்காம். அத மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏத்துக்கிறனும்னு சொல்றாரு.'

'அப்ப பொண்ணுக்கு நாங்க ரொக்கம் குடுக்கணுமிங்காரா?'

'அது ஒங்கபாடு. அவரு சொல்லிட்டாரு. ஒங்களுக்கு முடியுமா முடியாதானு மட்டும் சொல்லுங்க!'


'அப்பிடியெல்லாம் ஏத்துக்கிற முடியாதுய்யா!'

'நீரென்ன கையிலருந்தா எண்ணப் போறீரு? அங்க போயி கம்பெனிக்குத்தானே போகப் போறா.. அந்தக் கம்பெனில வாங்கி அவ குடுப்பா.. பெறவு அவ வேலைசெஞ்சு கழிப்பா..!'

'கிழிப்பா! நல்லாயிருக்கே ஒம்ம பேச்சு.. அவ வாங்கி எங்கிட்டக் கொடுப்பா.. ஒங்க கடன நீங்கதான் தீக்கணும். இன்னக்கு அட்வான்ஸ் வாங்கிக் குடும்பீரு... பெறகு நாளைக்கி சம்பளத்தக் கேப்பீரு.. நாங்க பொண்ணக் கூட்டிட்டுப் போயி சட்டி எடுத்திட்டுப் போகவா?'

'சரி முடியாதுனு சொல்லிட்டிகள்ள, அந்த மானிக்கு அந்தப் பேச்ச விடுங்க.'

கூட்டத்தில் ஒரு சத்தத்தைக் காணோம். அத்தனை பேச்சுகளையும் கேட்டுக் கொண்டு மாரியம்மாள் பொம்மையாக உட்கார்ந் திருந்தாள். நாட்டாண்மை பரிசம் விளம்பினார்.

'ஓகோ ஒறவுமுறையாரே, தோட்லாம்பட்டி கருப்பையா மகன் கருப்பசாமி, திட்டங்குளம் பேச்சிமுத்து மக மாரியம்மாளுக்கு பரிசம் போட வந்திருக்கான்.'

'அப்பிடியா என்னென்ன கொண்டாந் திக்கான்?'

'ஏழு கெட்டு வெத்தல வந்திருக்கு.'

'யே...ம்'

'ஏழாயிரம் பாக்கு வந்திருக்கு.'

'பெறவு?'

'ஏழு வண்டி பழவர்க்கம் வந்திருக்கு.'

'யேம்... ம்'

'மஞ்சளும் குங்குமமும் வந்திருக்கு.'

'பெறவு என்ன வந்திருக்கு.'

'எட்டுக் கூடையில பூ வந்திருக்கு?'

'யே.. ம்.'

'எட்டூரு ஆளும் எட்டு வண்டியும் வந்திருக்கு.'

'யே...ம்... அம்புட்டுத்தானா வேற ஒண்ணும் வரலையா?'

'பத்தாயிரம் ரூவாய்க்குக் காஞ்சிபுரம் பட்டும், பட்டுப் பாவாடையும், பட்டு ரவிக்கையும், பத்தாயிரத்தி ஒண்ணு பரிசப் பணமும் வந்திருக்கப்பா.'

'யே...ம். அதச் சொல்லும்.'

பரிசச் சேலை இருந்த தட்டை எடுத்து பெண்ணின் தாய் மாமனிடம் கொடுத்தார் மாப்பிள்ளையின் அய்யா. கூட்டத்தில் எல்லோரும் தொட்டுக் கும்பீட்டு கடேசியாய் வீட்டுக்குள் போனது. வாசலை மறைத்து இரண்டு மூன்று பெண்கள் நின்று கொண்டார்கள். ஒருத்தி ஓடிப்போய் ஜன்னலைப் பூட்டினாள். கூட்டம் பழைய படியும் கசாமுசா வென்று பேச ஆரம்பித்தது. பேச்சோடு பேச்சாக நாட்டாண்மை கேட்டார்:

'தாலி கட்டுக்கு பெண்ண அழைச்சிட்டுப் போறதுக்கு என்ன ஏற்பாடு?'

'பொண்ணு வேல செய்யிற கம்பெனி மொதலாளி வேன் தாரம்னு சொல்லியிருக் காராம். அதனால மாப்ள வீட்லருந்து வண்டி வர வேண்டாம்னு சொன்னாக.'

'அப்படியா, அப்பனா நல்லதாப் போச்சு! காலைல இங்க இருந்தே கெளம்பி வந்துரலாம். ஒங்கள எதிர்பாக்க வேண்டிய தில்லை!'

'கம்பெனி மொதலாளிக்கு ரொம்ப வருத்தம், புள்ள வேலக்காரப்புள்ள, கைச்சூட்டிகையான புள்ள, ஒரு நாளைக்குக்கூட வீட்ல இருக்க மாட்டா. கம்பெனியிலேயே வேலையில் இவதான் ஃபர்ஸ்ட். போனஸும் இவதான் ரொம்ப வாங்குவா.'

'அங்கயும் கம்பெனி பெரிய கம்பெனி - கப்பல் போல. வேல செய்யத்தான் கெதி வேணும். மொதலாளியும் தங்கமான மனுசரு!'

சில பெண்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்கள். எதற்காகவோ காத்திருப்பது போல் கூட்டம் மெளனமாக இருந்தது. நாட்டாண்மை மீண்டும் அதட்டல் போட்டார்.

'என்ன... பொம்பளகளா இன்னுமா சேல கெட்றா?'

'முடிஞ்சது... முடிஞ்சது ஆரம்பிங்க.'

'ஓகோ ஒறவுமொறையாரே.. தோட்னாம்பட்டி கருப்பையா மகன் கருப்பசாமி, திட்டங்குளம் பேச்சிமுத்து மக மாரியம்மாளுக்கு மஞ்சனை வைக்கான்.. மஞ்சனை வைக்கான்!'

'அப்பிடிச் செய்.. அப்பிடிச் செய்.. அப்பிடிச் செய்'

'கொலவ போடுங்க பொம்பளைகளா.. வேடிக்க பாக்க மட்டும் வந்திருங்க, வாயத் தொறந்துறாதிக.'

'இப்ப உள்ள கொமரிக எவளுக்கு கொலவ போடத் தெரியும்!'

மாரியம்மாள் பரிசச்சேலை கட்டி பொம்மை யாக முற்றத்துக்கு நடந்து வந்தாள். கும்பிட்டு எழுந்தாள். பொம்மையாக வீட்டுக்குள் போய்விட்டாள். வெற்றிலை பாக்கு, பூ, சந்தனம், சாக்லெட் வாங்கக் கூட்டம் முண்டியடித்தது. கூட்டம் போட்ட சத்தத்தில் வேன் கிளம்பிப் போன சத்தம் மெதுவாகக் கேட்டது.

கல்யாணம் முடிந்த மூன்றாம் நாள் மாரியம்மாள் புதுக் கம்பெனிக்குள் புகுந்தாள். தான் ஊரில் வேலை பார்த்த கம்பெனியைவிடப் பெரிய கம்பெனி. நிறையப் பெண்கள் வரிசை வரிசையா, சுவரில் எங்கே திரும்பினாலும் ஸ்பீக்கர். தான் புகுந்தவீடு மிகப் பெரிய வீடு என்று நினைத்துக் கொண்டாள். பலகையில் உட்கார்ந்து முன்னால் தீப்பெட்டிக் கட்டையைப் படுக்க வைத்துக் கிளிப்பைப் கழட்டி இரண்டு சக்கைகளில் குச்சிகளை உருவி பெட்டியில் அடைத்தாள். ஒவ்வொரு சக்கையை உருவும்போதும் தன் கை நிறையப் போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் சிலுக் சிலுக்கென்று சத்தம் எழுப்பியது எரிச்சலாக இருந்தது. கைக்கு இரண்டு வளையல்களை மட்டும் விட்டுவிட்டு மீதியைக் கழட்டிச் சுவரோரம் வைத்தாள். குச்சியை உருவுவதற் காக குனிந்தபொது கழுத்தில் புதிதாக தொங்கிய மஞ்சள் கயிறு உஞ்சலாடியது. அதை எடுத்து முன் ஜாக்கெட்டுக்குள் இறுக்கித் திணித்துவிட்டுத் தலைநிமிர்ந்தாள். எதிரே கணக்கப்பிள்ளை நின்றுக் கொண்டிருந்தார்.

'என்ன.. கருப்பசாமி கல்யாணமாகி மூணு நாளாகுது. இன்னும் ஒம் பொண்டாட்டி கையில வளையல் அப்பிடியே அலுங்காமக் கெடக்கு!' பெண்கள் எல்லோரும் சிரித்தார்கள். மாரியம்மாளால் சிரிக்க முடியவில்லை. திரையிட்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வாசலைப் பார்த்தாள். மாரியம்மாளின் மாமனார் முதலாளியின் ரூமுக்குள் போய்க்கொண்டு இருந்தார். அட்வான்ஸ் பணம் வாங்குவதற்காக!

****

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்