Showing posts with label கோபிகிருஷ்ணன். Show all posts
Showing posts with label கோபிகிருஷ்ணன். Show all posts

Dec 26, 2012

மகான்கள் – கோபி கிருஷ்ணன்

    நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன்     அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை,     குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம்.     மேலோட்டமாக பார்க்க போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம்     அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப்     பயன்படுத்திக் கொள்கிறான். இதில் உறவு என்பது ஏதும் இல்லை. வன்மம்,ஒடுக்குமுறை என்ற     அடிப்படையில் உறவு ஏற்பட எந்தச் சாத்தியமும் இல்லை.

    இந்த மிருகங்களும் பூ பறித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது மனிதர்கள் மீதான தங்கள்     எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.இளம் பிராயத்தில் gopiபாட்டி வீட்டில்     புறா வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் புறாக்களுக்குத் தானியம் வைக்கப் போன     என்னைப் புறா ஒன்று டொக் என விரலில் ரத்தம் வருமளவுக்கு கொட்டி விட்டது. இந்த     அனுபவம் அதிபர் யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர் சமாதானப் புறாக்களைப் பறக்க     விடமாட்டார். ஒரு தடவை அலுவலக ஷெட்’டில் அமைதியாகப் புகைபிடித்துக் கொண்டிருந்த     என்னை ஒரு காகம் விருட்டென்று செவிட்டில் தனது இறக்கையால் அறைந்துவிட்டுச் சென்றது.     சிகரெட் கீழே விழ, காதை அம்மா என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். நான்கு     நாட்கள் இடது காதில் வலி. நான் என் வாழ்நாளில் எந்த ஒரு காகத்துக்கும் தீங்கு     நினைத்தது கிடையாது.

    விஷயம் தெரியாத சில அம்மாக்கள் தங்கள் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்விக்க     சிபாரிசு செய்யும் போது, ‘மூக்கும் முழியுமாகப் பெண் கிளி மாதிரி இருக்கிறாள்’     என இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே கிளி மாதிரி மூக்கும்     முழியுமாக இருந்தால் பெண் எவ்வளவு கோரமாக இருப்பாள் என்பதை இவர்கள் மறந்து     விடுகிறார்கள். அப்புறம், கிளி மாதிரி இருந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு     அலுத்துப் போகும் போது பறந்து சென்றுவிட்டால்…? திருநிறைச் செல்வ மணாளன் பாடு     திண்டாட்டம்தான். இதையெல்லாம் அம்மாக்கள் யோசிக்க வேண்டும். சும்மா பஞ்சவர்ணக் கிளி,     மயில், கவ்தாரி என்றெல்லாம் சொல்லப்படாது.

    மனித, மிருக துர்குணங்களைப் பற்றி சொன்னது போக நல்லிணக்கங்கள் மீது பார்வையைத்     திருப்புவோம்.

    வேலாயுதம் என் நண்பர். ஃபிட்டராக பணிபுரிகிறார். நிறைய நண்பர்கள் அவருக்கு. தன்     சக்திக்கு மீறி நண்பர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். பழகுவதற்கு தங்கமானவர். மீர்     சாகிப் பேட்டைக்கு போயிருந்த போது வேலாயுதம் வீட்டில் எட்டிப் பார்ப்போம் என்று     போனேன். அறையில் சாப்பிடுக் கொண்டிருந்தவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். ” ஒரு     சம்பவத்தைப் பாருங்கள்” என்றார். அவர் காட்டிய கூரையின் மூலையில் குறிப்பாக     ஒன்றுமில்லை. “என்ன” என்றேன். இப்பொழுது பாருங்கள் என்றார் வேலாயுதம். “க்ளுக் க்ளுக்”     என வாயால் சத்தம் எழுப்பினார். அவர் சுட்டிய மூலையிலிருந்து மரநிற பூதாகர     பல்லியொன்று தீர்க்கமாகக் கீழே இறங்கி வந்தது. அதன் நடையில் தயக்கமில்லை,பயமில்லை,ஓர்     உறுதியும் நட்புணர்வும் தெரிந்தது. நேரே வேலாயுதம் அருகே வந்தது. அவர் ஓரிரு     பருக்கைகளைத் தரையில் சிந்தினார். ஒவ்வொரு பருக்கையாக உட்கொண்டது. ஒரு கவள அளவு     உட்கொண்ட பிறகு அது தன் இருப்பிடத்துக்குத் திரும்பியது.

    ” என் ராச் சாப்பட்டுத் தோழன்” என்றார் வேலாயுதன்.

    ” அருவருப்பாக இல்லையா..? ” என்றேன்.

    ” அன்பாயிருங்கள் எப்பொழுதும்” என்றார் வேலாயுதம் கனிவுடன்.

    ஒரு ஞாயிறு இக்பால் வந்தார் வீட்டுக்கு. ஓவிய நண்பர் எட்வர்டைப் பார்க்க போய்க்     கொண்டிருப்பதாகவும் நானும் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அமைதியான இடம்.     ஜிலுஜிலுவென்ற காற்று. இங்கும் அங்கும் நவீன கட்டிடங்கள். எட்வர்டின் அறைக்குச்     சென்றோம். தான் வரைந்த சட்டமிட்ட நவீன ஓவியங்களை எடுத்துக் காட்டினார் எட்வர்ட்.     மலைப்பும் பிரமிப்பும் என்னுள் ஏற்பட்ட பிராதன உணர்வுகள். பிறகு நிறைய நேரம் பேசிக்     கொண்டிருந்தோம்.

    ” டீ சாப்பிடுவோமே” என்றார் எட்வர்ட். கேண்டீனுக்குப் போனோம். கூட்டமே இல்லை. சொறி     பிடித்த நாய் ஒன்று எட்வர்ட் அருகே வாலாட்டிக்கொண்டு வந்தது. அவர் அதை வாஞ்சையுடன்     தடவிக் கொடுத்தார். நான் அவரைப் பார்த்தேன். என் முகபாவம் என் எண்ணத்தை     வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

    ” சுத்தம் பார்த்தால் அன்பு கிடைக்காது” என்றார் எட்வர்ட்.

    வேலாயுதம் வீட்டில் ஏற்பட்ட தெளிவு இப்பொழுது இரட்டிப்பு துல்லியத்துடன் உட்சென்றது.

***

நன்றி : தமிழினி, வாசன்,ஆப்தீன்

Apr 10, 2012

மொழி அதிர்ச்சி - கோபிகிருஷ்ணன்

''பிரச்சனெ பெரிஸ்ஸா ஒண்ணுமில்லீங்க.''

''பரவாயில்லெ, எதுவானாலும் சொல்லுங்க..அவங்களுக்கு என்ன பிரச்சினென்னு முழுஸ்ஸாத் தெரிஞ்சாத்தான் உதவி செய்யிறதுக்கு எங்களுக்குச் சுலபமா இருக்கும்.''

''கொஞ்ச நாளாவே சிடுசிடுங்கறது, எங்கிட்டே எரிஞ்சு விழுறது, கொழந்தைகங்களெப் போட்டு gopikrishnan-1 மொத்தறது இப்பிடியாயிருக்குதுங்க.  சமாதானப்படுத்துனாகூட கோபம் தணியிறதில்லெ..''

''வீட்டுலெ ஏதாச்சும் சிக்கலாச்சா?''

''சிக்கலுன்னு என்னெத்தெங்க சொல்றது?  கொஞ்ச நாளா யாபாரம் அவ்வளவு சொகமில்லீங்க.. ஒருவேளை அதனாலெதான் ரிலேக்ஸேஸனாயி ஒரு மாதிரி ஆயிட்டாளோன்னு நெனெக்கிறேன்.''

''என்ன ஆயிடுச்சின்னு சொன்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு என்ன வெவரம் வேணும்னு சொல்லுங்க..''

''சரி, நல்ல ஆழ்ந்து தூங்குறாங்களா?''

''தூங்குறா.  ஆனாக்க சில வேளெயிலே ரிலேக்ஸேஸனாயி ஒரே முட்டா யோசிக்க ஆரம்பிச்சிருவா..அண்ணிக்குப் படுக்கிறதுக்கு ரவெக்கி ஒரு மணி ரெண்டு மணி ஆயிரும்.''

''என்ன ஆச்சுன்னா தூக்கம் கெடுங்குறீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க.''

''நல்ல ருசிச்சு வேளாவேளெக்கிச் சாப்பிட்றாங்களா?''

''அப்படிச் சொல்றதுக்கில்லீங்க..ஏதோ சாப்பிடும்..ஆனா ரிலேக்ஸேஸனாயிட்டா சாப்பாடு எறங்காது.''

''என்ன ஆயிடுச்சின்னா சாப்பாடு எறங்காதின்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க..நீங்க மேக்கொண்டு கேளுங்க..''

''குளிக்கிறதுலெ ஏதாச்சும் பிரச்சினெயிருக்கா?  தெனமும் நேரத்துக்குக் குளிக்கிறாங்களா?''

''குளிக்குது.  அதுலெ என்னாங்க இருக்கு?  ஆனாக்க சிலவேளே இந்த ரிலேக்ஸேஸன் ஆயிடுங்க.. அப்ப குளிக்காதுங்க..''

''என்ன ஆனா குளிக்கமாட்டாங்கன்னு சொன்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க.. நீங்க மேக்கொண்டு கேளுங்க..''

''இவங்களுக்குத் தலையிலெ எப்பவாச்சும் அடிபட்டிருக்கா?''

''பலமா அடின்னு சொல்றதுக்கு ஒண்ணுமில்லீங்க..ஆனா இவ படுத்துற கூத்து தாங்கமாட்டாமெ எனக்கே ரிலேக்ஸேஸன் ஆயி ஒரு ருல் தடியெ எடுத்து அவ தலையிலே சிறுஸ்ஸா ஒரு போடு போட்டுட்டேங்க. ஒரு நாலு தையல் போட்டிருக்கு.  அவ்வளவுதாங்க..''

''ஒங்களுக்கு என்ன ஆச்சுன்னு சொன்னீங்க?''

''அது ஒண்ணுமில்லீங்க.  நீங்க மேக்கொண்டு கேளுங்க..''

''நா மேக்கொண்டு கேக்குறதுக்கு முன்னாடி ஒங்ககிட்டெ ஒரு உதவி கேக்கணும்..''

''எங்கிட்டெயா, நா ஒங்களுக்கென்ன உதவி செஞ்சிறப் போறேங்க?''

''அப்பிடிச் சொல்றதுக்கில்லே..ஒங்களெப் புரிஞ்சிக்கர்றதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்..''

''...............................''

''நடுநடுவுலெ எனனமோ ஒரு வார்த்தெயெ உபயோகிச்சீங்க..அது என்னான்னு கொஞ்சஞ் சொல்றீங்களா?''

''அட, நீங்க ஒண்ணு..அது ஒண்ணுமில்லீங்க..''

''அப்பிடி நீங்க சொல்லக்கூடாது.  நீங்க அது என்ன வார்த்தைன்னு சொன்னாத்தான் நீங்க சொன்ன முழு வெவரமும் எனக்கு வெளங்கும்.  இல்லேன்னா இவ்வளவு வெவரம் சேகரிச்சும் பிரயோசமில்லாமெப் போயிரும்..''

''நா புரியாத எதெயும் சொல்லலீங்களே.''

''இல்லெ, சொன்னீங்க. இந்த ரிலேக்ஸஸன்னு ஏதோ அடிக்கடிச் சொன்னீங்க. இந்த வார்த்தெய வேறெ ஒரு அர்த்தத்துலெதான் எனக்குத் தெரியும்.. ஆனா நீங்க எந்த அர்த்தத்துலெ அதெச் சொன்னீங்கன்னு சொல்ல முடியுமா?''

''அதுங்களா? அது சும்மாங்க..இந்த பேண்ட் சட்டை போட்டுவிட்டு 'டை' யெல்லாம் கட்டிக்கிட்டு ஒயிலாச் சிகரெட்டுப் பிடிக்கிற மாதிரித்தானுங்க அதுவும்..''

''எனக்குச் சத்தியமாப் புரியல்லெ.''

''ஆமாங்க, இந்த இங்கிலீஷ் வார்த்தைக்கெல்லாம் என்னாங்க பெரிஸ்ஸா அர்த்தம் இருந்திறப் போறது?''

''என்ன ஒரேயடியா அப்படிச் சொல்லீட்டீங்க..''

''பெறகென்னாங்க..இங்கிலீஷ்லெ தஸ்ஸு புஸ்ஸுன்னு நாலு வார்த்தெ விட்றதெல்லாம் ஒரு ஸ்டைலுக்குத்தானுங்களே.  ரிலேக்ஸேஸனும் அதே மாதிரித்தானுங்க..சும்மா ஸ்டைலுக்கு நடுநடுவுலெ அங்கெ அங்கெ விட்டுக்கிர்றதுங்க.. இதுக்கெல்லாம் போயி நீங்க அர்த்தங் கேட்டுக்கிட்டு இருக்கீங்க?''

(அக்டோ பர் - டிசம்பர் 1991ஆம் ஆண்டு நவீன விருட்சம் இதழில் பிரசுரமான கதை)

நன்றி: நவீன விருட்சம்

Jan 3, 2012

உரிமை - கோபி கிருஷ்ணன்


மாநிலக் கல்லூரியில் இளங்கலை உளவியல் பிரிவில் என் முதலாம் ஆண்டு ஆரம்பித்தது. நாங்கள் பத்து மாணவர்கள் ஒன்பது மாணவிகள். மதுரையில் என் பாட்டியின் கண்டிப்பான வளர்ப்பும், வீட்டிலுள்ள கோவிலில் தினப் பூஜையும், அவர் நடத்திய பஜனை மண்டபத்திற்கு வரும் பெண்களை அக்கா, தங்கை, அத்தை, மாமி, பாட்டி என்று அழைக்க வேண்டி வந்த திணிக்கப்பட்ட நிர்ப்பந்தமும், பாலுணர்வு புரிந்தும் புரியாத நிலையில் ஒரு அழகிய இளம் பெண்ணைப்பார்த்து ஒரு ஆணுக்கு ஏற்படும் இயற்கையான அழகுணர்வே பஞ்சமகா பாதகங்களுள் ஒன்று என்ற குற்ற உணர்வை ஏற்படுத்திய மனநிலையும், என்னுள் சற்று தாராளமாகவே சங்கோஜ பாவத்தை gopi வளர்த்திருந்தன. கல்லூரிக்கு வந்த பிறகும் சகமாணவிகளுடன் சாதாரண விஷயங்களைப் பற்றி ஓரிரு வாக்கியங்கள் பேசுவதற்குள் உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. முகம் வியர்த்துக் கொட்டியது.

முதலில் என்னுடன் சகஜமாகப் பேசியது ரோஸி ஜான் தான். என்னமோ என்னுடன் நெடுங்காலம் பழகியதுபோல் எடுத்த எடுப்பிலேயே அவள் என்னுடன் பேசிய முதல் வாக்கியங்கள் : 'என்ன ராஜ், இண்ணெக்கி அட்டகாசமா சட்டை போட்டிருக்கே? யாரையாச்சும் காதலிக்கிறாயா? யார் அந்த அதிர்ஷ்டசாலிப் பெண் ?'  எனக்கு உண்மையிலேயே தூக்கி வாரிப் போட்டது. முகத்தில் வழக்கமாக வழியும் வியர்வையுடன் சற்று அசடும் சேர்ந்து வழிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட, புன்சிரிப்பு என்று நான் நம்பிய ஒன்றை வெளிப்படுத்தினேன். அவளும் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாள். எனக்கு அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. புது மாதிரியான சட்டை நான் போட்டால் ரோஸிக்கு ஏன் அது அட்டகாசமாகப் படவேண்டும்? அட்டகாசமான சட்டை போடவேண்டுமென்றால் ஒரு காதலி ஒருவனுக்கு இருக்கவேண்டுமா? எனக்கு வாழ்க்கைப்படப் போகிறவள் அதிர்ஷ்டசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்று ரோஸி ஏன் நினைத்தாள்? அன்று இரவு தூங்க ஒரு diazepem  தேவைப்பட்டது.

ரோஸி பார்ப்பதற்கு அழகாகவே இருந்தாள். அவளிடம் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று அவள் மூக்கின் நுனி சற்று தூக்கலாக இருந்தது. ஒரு ரோமானிய அம்சம்.

ஓராண்டு கழித்து மறு ஆண்டு வந்து அதுவும் கழித்து மூன்றாம் ஆண்டு இறுதியில் இருந்தோம். ரோஸியும் நானும் இந்நேரம் மிகவும் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்தோம். இப்பொழுதெல்லாம் எனக்கு வியர்த்துக் கொட்டுவதில்லை. மூன்று கலை நிகழ்ச்சிகளுக்கும், அடிக்கடி கல்லூரிச் சிற்றுண்டிச் சாலைக்கும் தோராயமாக ஒரு இருபது ஆங்கிலப் படங்களுக்கும் சேர்ந்தே சென்றாகி விட்டிருந்தோம். என்னை அவளுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டிருந்தது. என்னைப்போல் ஒரு இனிய நண்பன் கிடைக்க அவள் கொடுத்துவைத்தவள். அவள் வாழ்க்கையில் நான் கலந்து விட்டால் வேறு ஏதும் தேவையில்லை. நான் புளகாங்கித்துக் கொண்டிருந்தேன். இரவில் அவள் பளிச்சென்ற புன்னகை பூக்கும் முகமும், முகத்தில் குறிப்பாக அவளது அழகிய மூக்கும் ஏன் கண் முன் தோன்றிக் கொண்டிருந்தன. எனக்கு ஏதேதோ கற்பனைகள். சாதாரணமாக உளவியல் படிப்பவர்கள் ஒரு உறவை.உறவின் அடிப்படையை, உணர்வுகளை சித்திரவதை செய்து காரண அலசலில் மூழ்கி மூர்க்கத்தனமான அர்த்தங்களை அவற்றிற்கு ஏற்படுத்தி, உறவிலுள்ள இனிமையை காரண ரீதியில் காயப்படுத்துவார்கள். நல்லவேளை, எனக்கு எங்கள் உறவை அப்படியெல்லாம் செய்யத் தோன்றவில்லை. எங்கள் உறவில் ஒரு இனிய கவிதை இழைந்தோடிக் கொண்டிருப்பதாகவே பட்டது. எனக்குள் ஒரு குறை. அவளை இதுவரை தொட்டதில்லை. என்னுள்ளிருந்த பாட்டி என்னை விட்டு ஒழியவில்லை. நான் என்ன செய்யட்டும்?

என சகமாணவர்கள் ரோஸியையும்  என்னையும் சேர்த்து கன்னாபின்னா என்று கழிப்பறை சுவர்களில் எழுதியோ, ஆட்டீன் படத்தையும் அம்புக் குறியையும் வரைந்தோ, எங்கள் உறவில் அவர்களுக்குள்ள அக்கறையைப் பிரகடனப் படுத்திக் கொள்ளவில்லை. என்ன இருந்தாலும் உளவியல் மாணவர்கள் கண்ணியமானவர்களே. மூன்று ஆண்டுகள் ஒரு உறவு சுமுகமாக இருந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லத் தோன்றியதோ இல்லையோ, என வகுப்புத் தோழர்களுக்கு நிச்சயமாக மானசீகமாக நன்றி தெரிவித்துக் கொண்டேன்.

இறுதி ஆண்டு பல்கலைக் கழகத் தேர்வுக்கு இன்னும் இரு தினங்களே இருந்தன. மாலை, என் அறையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலைப் பற்றி நான் ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தேன். விடுதியின் பையன், என்னைத் தேடி ஒரு இளம் பெண் வந்திருப்பதாக அறிவித்துவிட்டுப் போனான். எனக்கு குழப்பமாக இருந்தது. மனநலம் குன்றியவர்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், எந்தப் பெண்ணும் என விடுதி தேடி வந்ததுமில்லை. உடனே சட்டை பாண்டை மாட்டிக்கொண்டு தலையை ஒருவாறு சரிசெய்து கொண்டு அவசரமாக வாசலின் அருகே உள்ள பார்வையாளர்கள் அறைக்கு விரைந்தேன்.
எனக்கு ஒரே ஆச்சரியம். அங்கு ரோஸி எனக்காகக் காத்துக் கொண்டிருந்தால். அவளுக்கு படித்துப் படித்து அலுத்து விட்டதாம். ஒரு மாறுதலுக்காக கடற்கரைக்குச் செல்லவேண்டும் என்று தோன்றியதாம். நான் கூட இருந்தால் சந்தோஷமாக இருக்குமாம். அறைக்கு சென்று கதவைப் பூட்டிவிட்டு அவளுடன் கிளம்பினேன். வழி நெடுக இனிமையான அன்னியோன்னியங்களை பேச்சால் பகிர்ந்துகொண்டு மணற்பரப்பில் வெகு தூரத்தைக் கடந்து அலைகள் மணலைத் தொடும் இடத்திற்கு வந்துவிட்டோம். எனக்கு மிகவும் இன்பமான மாலைப் பொழுது. இன்னும் ஓரிரு மாதங்களுள் நாங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம். நாங்கள் ஏற்க்கனவே செய்து கொண்ட முடிவுதான். அந்த எண்ணத்தில் 'நான்' என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒன்றுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு. ஏதேதோ இனிய எண்ணங்கள்.

ரோஸிக்கு என்ன தோன்றியது என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. நாங்கள் அப்பொழுது உட்கார்ந்திருந்தோம். 'ராஜ். கொஞ்சம் என செருப்பைப் பார்த்துக்கோயேன்.நான் அலையிலே நின்னுட்டு வர்ரேன்' என்று இனிமையாகச் சொல்லி, செருப்பை சிரத்தையுடன் அவசரப்படாமல் கழற்றி என முன்னாள் விட்டுவிட்டு அலைகளை  நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள். அவள் பின்னழகையோ நடை எழிலையோ ரசிக்க எனக்கு அப்பொழுது நிச்சயம் தோன்றவில்லை. எனக்கு ஒன்று உடனே நினைவுக்கு வந்தது. நான் மதுரையில் அடிக்கடி சென்று கொண்டிருந்த கோவில் வாசலில் அழுக்குச் சைட்டையும் கிழிந்த அரைக்கால் சட்டையும் போட்டுக்கொண்டிருந்த ஒரு பத்து வயதுச் சிறுவன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பத்து பைசா வாங்கிக்கொண்டு அவர்களது காலணிகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்தான்.

மாநிலக் கல்லூரியை விட்டு நான் வெளியேறி 20 ஆண்டுகள் ஆகின்றன. என மனைவியின் பெயர் ரோஸி இல்லை.

ஒவ்வாத உணர்வுகள் கதைத் தொகுப்பு,  சிட்டாடல் வெளியீடு

தட்டச்சு உதவி: ரமேஷ் கல்யாண்

Nov 10, 2010

பீடி- கோபி கிருஷ்ணன்

பீடி
(மீறல் வகைமையில் ஒரு சிறுகதை)

பீடி ஒரு கலாச்சாரக் குறியீடு... கலாச்சாரப் பாதுகாவலர்கள் மன்னிக்காவிட்டால் பாதகமில்லை.

சூழலியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவும், ஓஸோன் படலத்தில் பொத்தல். மனப்படலத்தில் gopi4 ஏராளமான பொத்தல்கள் . வாயில் சதா நிக்கோட்டினை நாடும் விழைவு.

புகைத்தலின் உதயம் : 16.10.68 இரவு. காரணம் அந்தரங்கமானது. என் மீது நானே அருவருப்பு கொள்ளச் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட களங்கம்.

புகைத்தலின் மறைவு : என் மறைவு நாள். என் பிணத்துக்கு எரியூட்டும் போது ஒரு கட்டு சந்திரிகா பீடியை என்னருகில் வையுங்கள். என் இறுதி ஆசை இது மட்டும்.

1975 தாம்பரத்தில் ஒரு ராத்தங்கலுக்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். படுக்கையில் கிடந்தவண்ணம் புகைத்துக்கொண்டிருந்தேன். யதேச்சையாகக் கூரையைப் பார்த்ததில் 'உங்கள் சாம்பலை எங்கு அனுப்ப?' என்ற ஆங்கில வாசகம் தென்பட்டது. இருப்பினும் அமைதியாக புகைத்தல் தொடர்ந்தது.

பீடி ஒரு குறியீடு. சாதா சிகரெட் நடுத்தர வர்க்க பொதுமைக் குறியீடு. ஃபில்டர் சிகரெட் ஒயிலின் குறியீடு. ஃபில்டர் கிங் சிகரெட் கூடுதல் ஒலியின் குறியீடு. சமூக அந்தஸ்தின் குறியீடு. மேலை நாட்டு சிகரெட் Xenophilia மோகம்.

பீடி கீழ் மத்தியதர வகுப்பினரின் ரகசிய நான்கு சுவர் நுகர்வு; வெளியில் புகைப்பதோ சாதா சிகரெட் பீடி சேரிவாழ் குடிமக்களின் அன்றாட பகிரங்க நுகர்வு.

பீடி : பெரிய நிறுவன மோட்டார் வாகன ஓட்டிகள் பணக்கார முதலாளிகள், நிர்வாகிகள் மீது நிகழ்த்தும் மறுப்புத் தெரிவித்தல் புரட்சி. என் நிறுவன வாகன ஒட்டி எஸ்.கே. நாயருடன் பீடிப் பரிமாற்றம். நிர்வாகி ஒருத்தியின் கோபாவேசப் பார்வை. ஆண்டான்  அடிமை முறையைப் பீடி எஸ்.கே. நாயரின் வெற்றிச் சின்னம். எனது ஸ்தாபிதச் சின்னமும்கூட. அநேகமாக 'மெமோ' வரலாம். வேலை போகலாம். மயிராப் போச்சு இந்த இழவு வேலை.

புகைக்குழாய் வெளிநாடு சென்று திரும்பிய கிறித்துவத் தோழியின் நேசப் பரிசளிப்பு. மனைவி கும்பிடும் சாமிப்படத்தின் அருகே புனிதமே உருவான அக்குழாய் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. புனிதம் சாமியில் இல்லை. புகைக்குழாயில் நிறைய இருக்கிறது. மென் உணர்வில் ருக்கிறது. உண்மையான தோழமையில் இருக்கிறது. ந்தப் புகைக்குழாய் தெய்வீகத்தின் குறியீடு மனிதனின் சின்னம்.

புகைக்குழாயின் பிற அர்த்தங்கள் : அந்தஸ்து, கவனஈர்ப்பு உத்தி. தீமைக்குறைவு.

புகைக்குழாய் மார்க்கெட் ஆராய்ச்சி 'சர்வே'யில் ஒரு பிரபல எழுத்தாளரின் பச்சையான பொய். பொய்யரின் புத்தகங்களைப் பிறகு தொடவேயில்லை.

எழுத்தின் உன்னதம் எழுதுபவரின் ஆளுமையில் பிரதிபலிக்கப்படாதபொழுது அவரது எழுத்தை நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம். இது என் சுய சித்தாந்தம் மட்டும்.சுய கோட்பாடுகளின் என் நசிவைக் காணமுடிகிறது. என் சவக்குழியை நானே தோண்டிக்கொண்டு விட்டேன். உங்களுக்குச் சிரமம் வைப்பதில் விருப்பம் இல்லை. நசிவடைந்த நான் நிம்மதியாகத்தான் சாவேன், என் தனித்துவ நசிவின் புனிதத்தைக் கடைசிவரை காப்பாற்றிக்கொண்டு. நீங்கள் என்னிடமிருந்து வேறுபடுங்கள். உங்கள் மேன்மைபெற்ற விலகலின்மீதும் வேறுபடுதலின் மீதும் என் தோழமை பரவும். என் முகத்தில் எச்சில் துப்பினால் உங்கள் வெளிப்பாட்டுக்கு நன்றி சொல்லத் தவறமாட்டேன். தோழமை மிகமிக அவசியம்.

உங்கள் சிகரெட்டை நீங்களே உருட்டிக் கொள்ளுங்கள் Roll your own cigarette. விமரிசையான சடங்கு. சுத்தமான, பிற நச்சுப்பொருள் எதையும் யாரும் கலக்க முடியாத சுத்தமான புகையிலைத் துகள்கள் அடங்கிய நேர்த்தியான பை. சிறப்புக் காகிதம். பலபொருள் சிறப்புக் காகிதம். பலபொருள் சிறப்பு அங்காடிகளில் மட்டும் கிடைக்கும். சுத்தமான புகையிலைத் துகள்கள்தாம். கலப்பு என்ற சந்தேகம் தீர்ந்தது. சந்தேகம் அடிப்படையில் இருப்பதால் இது paranoid மனச்சிதைவு நோயின் ஒரு பூடகமான குறியீடு. Neuroticism. நீங்கள் பணக்காரர்கள். உங்கள் சிகரெட்டைத் தூய்மையுடன் சுற்றிக் கொள்ள உங்கள் மோதிர விரல் கைகளில் நேரம் ஏராளமாக கனத்துக்கிடக்கிறது. மோதிர விரல் கைகளில் நேரம் ஏராளமாக கனத்துக்கிடக்கிறது. அனுபவியுங்கள் உங்கள் நோய்க்குறியை. குறுக்கே நான் நிச்சயம் இல்லை. திணிக்கப்படும் அலுவலக நெறிமுறைகள்: சடங்குகள், அங்கப்பிரதட்சணம் சடங்கு. மீண்டும் Neuroticism.

பீடி உழைப்பாளிகளின் சின்னம். எழும்பூர் ரயில் நிலைய வெளிப்புறத்தில் ஓர் ஏழை விவசாயி பீடியைப் புகைத்த வண்ணம் கலப்பையைத் தோளில் ஏந்தி நிற்கிறார். விளம்பர உத்திதான். விவசாயியின் கோவணமும் தோலின் சுருக்கங்களும் உண்மையான பாரதச் சின்னங்கள். அவர் நிலைக்கு நானும் காரணம். குற்ற உணர்வு. ஒரு சந்திரிகாவைப் பற்றவைத்துக் கொள்கிறேன். பீடி பட்டாளிகளின் சின்னம்.

.... மடத்தில் பீடி தடுக்கப்பட்டிருக்கிறது. திருட்டுத் 'தம்'முக்குத் தண்டனையாக ஒரு சமையலாள் மடத்தை விட்டு நீக்கம் பெறுகிறார். மடத்துக்கு எதிராக யங்கம் பீடி ஒரு மத மறுப்புச் சின்னம். அங்கு ஓ.பி. நையார் ஆனந்தமாக பகிரங்கமாக பீடி பிடிக்கிறார். இசை வெள்ளத்தில் மிதந்து கொண்டு. தென்னகம் வேறு வடஅகம் வேறு. என் முன்னாள் ஐரிஷ் நண்பரும் பீடி பிடிப்பார். அவரிடம் சர்வகால உற்சாகம். பீடியினாலா ஆளுமையினாலா இதுவரை புரியவில்லை.

வார்தா - சேவாக்கிராமில் சொந்தப் பிரச்சினைகளுக்குத் தற்காலிக விடுமுறையைப் பறைசாற்றிவிட்டு நண்பர் ஒருவரின் அறையில் தஞ்சம். ஒரு மாத நிம்மதியான பீடி பிடிப்பு. வடக்கில் பீடி சர்வசாதாரணம். அப்பொழுது பவுனாரில் வினோபாபாவேவுக்கு ஜலதோஷம். பத்திரிகைச் செய்தி 1974. சாந்தி சாந்தி சாந்தி. ஜலதோஷம் குறையவில்லை. கடவுளும் உச்சாடனங்களும் தீர்வு அல்ல. உண்மையான தீர்வு என்பது ன்னும் குழப்பமாகவே ருந்து வருகிறது. நவீன மருத்துவமும் ஒரு தற்காலிக விடுவிடுப்புதான். நிரந்தரதீர்வு அல்ல. பீடியும் தீர்வு அல்லதான்.

பழங்குடி மக்கள் : அரிசி 'பியர்' சாராயம், சப்பி, ஜிஞ்சர், கலக்கல்: சேரிவாழ் ஆத்துமாக்கள். விஸ்கி, ஜின் பற்றி வேறு டத்தில் பேசுவோம். ஜின்காரப் பணக்காரர்கள் நமக்குத் தேவையில்லை.

1972. லாரி ஓட்டுநர் தணிகாசலத்தின் திருமணத்துக்கு முன்னாள் மருத்துவ நண்பரும் சமூகத்தை ஏய்த்துப் பிழைத்து வந்த முன்னாள் நண்பரும் சென்றிருந்தோம். கிராமத்தில் சாராயக் காய்ச்சலில், உபயோகப்படுத்தப்பட்ட பாட்டரிகளைப் போட்டிருந்தார்கள். ஒரு ராத்தங்கல். அடுத்த நாள் நுங்கு வெட்டித் தந்தார்கள். அபரிமிதமாக முப்பது சாப்பிட்டேன். கிறக்கமாக ருந்தது. ரண்டு தினம் கழித்து விமான ஒட்டி நண்பர் எபிநெஸரின் றப்புச் செய்தி வந்தது. ஒரு கட்டு பீடி துக்கத்தை ஓரளவு தணித்தது. தொண்டையில் வலி. லாஸஞ்ஐஸ் போட்டும் பிரயோசனமில்லை. பொறுத்துக் கொண்டேன். பீடி உணர்வுகளின் சின்னம். ஒரு வடிகால். ஓர் இரங்கல் சின்னம்.

1976 லீலாவிடம் கேட்டேன். பியுஸி படித்திரக்கிறாயே? வேலை செய்யக்கூடாதா? தொழிலை விட்டுவிடேன் என்றேன். மாதம் ரண்டாயிரத்தை ஒரு பியுசி சம்பாதித்துத் தராது. நான் ப்படியே ருக்கிறேன். நீ அழகாகவே உபன்யாசம் செய்கிறாய். பக்கத்துக் கோவில் தர்மகர்த்தா என் வாடிக்கையாளர்தான். உன் உபன்யாசத்துக்கு அந்தக் கோவிலில் ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்டாள். நான் மவுனமாக இருந்தேன். வேண்டுமானால் உன் போன்ற நண்பர்களுக்கு நான் இலவசம்; ஆசையானால் அனுபவித்துக்கொள் என்றாள். தலையை வருட ஆரம்பித்தாள். அப்பொழுது ளவயது. உடல் தொடு உணர்ச்சியைக் கிரகித்துக் கொள்ளுமுன் நேசக்கரம் நீட்டிக் கை குலுக்கி அன்புடன் விடைபெற்றேன். என்மீது எனக்கே பயம் வர ஆரம்பித்தது. நானும் பிறரைப் போல லீலாவிடம்... இல்லை என்னால் முடியாது. லீலா என் உற்றதோழி. தோழமையை இழிவுபடுத்த என்னால் முடியாது. நான் மனிதன். ஒருகால் கோளாறு பிடித்த மனிதன். ஆனால் நிச்சயம் மனிதன். வெளியில் வந்து பீடி ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டேன். பீடி உணர்வின் சின்னம். ஒரு வடிகால். உளைச்சலைத் தணிக்கும் அருமருந்து லீலாவின் வீட்டுக்குப் பிறகு நான் போகவில்லை. என்னைப்பற்றிய பயமும் லீலாவின் எண்ணமும் வந்தபோது கைவசம் பீடி இருந்தது. சென்னையம்பதி பீடி துணை. ஓம் பீடி நமஹ. சமூகக்கோளாறுக்கு லீலாவைச் சொல்லிப்பயனில்லை. Yama, the pit அல்லது yama, the Hell-hole. Kuprin, Alexander.

பீடி நெகிழ்வின் சின்னம். பீடி உடையாமலிருக்க பீடிக்கட்டை முதலில் உள்ளங்கைகளுக்கு நடுவில் வைத்து உருட்ட வேண்டும். நெகிழ்வு நிகழ்ந்த பின்னரே பீடியை உடைக்காமல் உருவ முடியும். பீடி நிச்சயம் நெகிழ்வின் சின்னம். நெகிழ்வு அன்பு. அன்பே தெய்வம். பீடியே அன்பு . பீடியே தெய்வம். பொங்கலோ பொங்கல். பீடியே பீடி... வாழ்க இந்த நெகிழ்வுச் சின்னம்.

பீடி விளம்பரம் ராகினி படம். சிறுவயது மதுரை சிடி சினிமா விளம்பர 'ஸ்லைட்'.

வடக்கத்திய கஞ்சாப் பிரசாதம். ஓம் ந ம ச் சி வா ய.

பீடி
சேரி
விழிப்புணர்வுக் கூட்டம்
சமூகப்பணிச் சடங்கு
கட்டிக்காட்டியதில் மனத்தாங்கல்
வாழத் தெரியாதவன் என்ற முத்திரை
பீடி
புகை
மறத்தல்.

சிகார். மதிய உணவின் பிறகு புகைத்தல். பழைய தோழர்களின் நினைவு. எல்லாம் ஓய்ந்து கீழ் மத்தியதர வாழ்க்கை. சிகார் மறைந்து பீடி. வேறு வழியில்லை.

சுருட்டு
தாத்தா.
பீடி
நெஞ்சுவலி
இதய நோயா?
ல்தய அலைப்படம் சீராக ல்ருந்தது.
Electro-echograph சரியாக ருந்தது.

stress test யந்திரக கோளாறு கீழ்ப்பாக்கம் பொது மருத்துவமனையில். சரி ஆக ஒரு மாத காலம் பிடிக்கும். தயம் சரியாக சரி ஆக இருந்தது. நெஞ்சு வலி உணர்ச்சிகள் உருவாக்கிய மனநோய். தீவிர சுய-ஆலோசனை. நெஞ்சு வலியின் மறைவு மிக சமீபத்திய நிகழ்வு. 1991.

நவீன மருத்துவ வாய்க்கழுவிகள் ஒரு பசப்பல். வாயில் துர்கந்தம் சர்வகாலப் பிரச்சினை. நண்பர்கள் சற்றுத் தூர இருந்தே பேசுகிறார்கள். பீடி மரியாதையான இடைவெளியின் சின்னம்.

சுதந்திரத் தொடர்புடுத்துதல் உத்தி. சிக்மண்ட் ஃப்ராய்ட். தூண்டுதல் வார்த்தை கத்தி. பதில் வார்த்தை கொலை. ஏன் காய்கறி என்ற வார்த்தை வரவில்லை? அகிம்சை ஓர் உண்மையின்மை. வன்முறை இயல்பான ஒரு மனிதத்தன்மை. பண்பாடு வன்முறையை அமுக்கிவிடுகிறது. பீடி அடக்கி ஆளும் அப்பாவுக்கு எதிரான ஒரு புரட்சி வன்செயல். அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஒரு குறியீடு.

பீடி ஒரு சமூகக் குறியீடு... புகையிலையை நியாயப்படுத்தும் ஒரு மூடத்தனம்தான். ஆனாலும் வாழ்க பீடி. குறியீடு ஒழியச் சாத்தியமில்லை.

*****

நன்றி: ஆறாம்திணை

Oct 6, 2010

ஒரு ரூபாய்க்கு ஒரு கதை - கோபி கிருஷ்ணன்

எங்கள் அலுவலகம் அடையாறில் இருந்தது. மோபெட்டில் முக்கால் மணி நேரப் பயணம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு மணி நேரம். நெரிசலின் கனத்தைப் பொறுத்து ஒன்றரை மணிநேரம்; இப்படி...

அந்த அலுவலகத்தில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன. ஓர் ஒரு மாதத்தில் சக gopi ஊழியர்கள் அனைவரும் நன்றாகப் பழகி விட்டார்கள்.  உணவு இடைவேளையில் எல்லாரும் சேர்ந்தே சாப்பிட்டோம். எங்கள் செக்ஷனில் ஏழு பெண்கள், மூன்று ஆண்கள், கடி ஜோக்ஸ், அரட்டை ஆகியவற்றுக்குப் பஞ்சமே இல்லை. என்னை எல்லாரும் 'சின்ன சார்' என்று அழைப்பார்கள். மூன்று ஆண்களில் என்னை விட மூத்தவர் ஒருவர் இருந்தார். அவர் 'பெரிய சார்'. அவர் பிறரோடு கலக்க மாட்டார். இன்னொருவர் இளைஞர். அவரைப் பெயர் சொல்லியே அழைப்போம்.

பிறருடைய வாழ்கையைப் பற்றி நானும் ஏன் வாழ்க்கையைப் பற்றி பிறரும் அறிந்துகொண்டிருந்தோம்.

உடன் பணிபுரியும் மார்கரெட்டின் நிலை மிக மோசமாக இருந்தது. உழைக்கும் மகளிர் விடுதி ஒன்றில் அவள் தங்கியிருந்தாள். விடுதி நுங்கம்பாக்கத்தில் இருந்தது.

இரண்டு கால்களும் ஊனம் மார்கரெட்டுக்கு. இளம்பிள்ளை வாதம். செயற்கை அவயங்கள் அணிந்திருப்பாள். கூடவே இரண்டு தாங்கு கட்டைகளின் உதவிக்கொண்டே அவளால் நகர முடியும்.

முதலில் நான் அவளுடைய உற்றார்களைப் பற்றிக் கேட்டபோது அவள், "நீங்கள் எல்லாரும்தான் ஏன் உறவினர்கள்" என்றால் சோகம் கலந்த ஒரு புன்சிரிப்புடன். பிறரிடமிருந்தும் கேட்டறிந்தேன். அவளுக்குப் பெற்றோர்கள் இல்லை என்றும், ஓர் அனாதை விடுதியில் இருந்தவள் என்றும். என் கண்கள் கலங்கி விட்டன.

மார்கரெட்டைப் பற்றி நிறைய யோசித்தேன். அவளுக்கு எதாவது வகையில் உதவ வேண்டும் என்று உள்ளம் பரபரத்தது. அவளுக்குப் பேருந்தில் வருவது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பது எனக்கு புரிந்தது. தவிர, விடுதியிலிருந்து பேருந்துநிறுத்தம்வரை வர நிறைய தூரம் நடக்க வேண்டும். மார்கரெட் நகர்ந்து நகர்ந்து வருவதை எண்ணிப் பார்க்க எனக்கு மகா இம்சையாக இருந்தது. அப்பா! எவ்வளவு நேரம் பிடிக்கும்!

மார்கரெட்டின் இசைவுடன் அவளை விடுதியிலிருந்து அலுவலகம் அழைத்து வருவதையும் அலுவலகம் முடிந்து விடுதிக்கு அழைத்துச் சென்று விடுவதையும் ஒரு பொறுப்பாக ஏற்றுக்கொண்டேன்.  மோபெட்டின் பின் இருக்கையில் மார்கரெட் அமர்ந்திருக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் வண்டியை ஓட்டுவேன்.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அனைவருடைய வாழ்க்கையும் நலமாகவே கழிந்துகொண்டிருந்தது.

மார்கரெட் பற்றிச் சில வார்த்தைகள்; அவளுக்கு வயது இருபத்து நான்கு. என் மகளைவிட ஆறு வயது அதிகம். எப்பொழுதும் சட்டையும் ஸ்கர்ட்டும் அணிந்திருப்பாள். அவளுடைய உடல் பிரச்சினைக்கு வேறு எந்தவித உடையும் பொருந்தாது.

திடீரென்று ஒரு சிக்கல் ஆரம்பித்தது. நான் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துவிட்டேன். மார்கரெட்டுடன் மொபெட்டில் வரும்போது பெட்ரோல் போட வேண்டியதாகிவிட்டது. பங்க்கில் வண்டியை நிறுத்தினேன். இரண்டு ஆயில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 31.50. பர்சில் சரியாக ஐம்பது ரூபாயும் ஓர் ஐம்பது பைசா நாணயமும் இருந்தன. பங்க்கில் சில்லறை கொடுக்க மாட்டார்கள். ஒரு ருபாய் நிச்சயம் தேவை. மார்கரெட்டிடமிருந்து ஒரு ருபாய் வாங்கிக்கொண்டு பெட்ரோல் நிரப்பிக்கொண்டேன். இது ஒரு சாதாரண விஷயம். நினைவில் பதியவேண்டிய அவசியம் இல்லை. மனத்தை உறுத்தவேண்டிய அவசியமும் இல்லை. அடுத்த நாள் மார்கரெட்டிடம் மகாபிரமாதமாக ஒரு ரூபாயைத் திருப்பிக் கொடுத்தேன். மார்கரெட் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுதிருந்து ஒரு ரூபாய் பூதாகாரமான பிரச்சினையாகப் போய்விட்டது. அடுத்த இரண்டு மாதங்களில் இன்னும் இரண்டு முறை திருப்பிக் கொடுத்தும் மார்கரெட் ஏற்றுக்கொள்ளவில்லை.

மனதில் ஒருவிதச் சுமை ஏற்பட்டது. அப்புறம் ஒரு பெரும் பிரமை என்னை ஆட்கொண்டது. மொபெட்டில் என் உடன் வரும்போது மார்கரெட் தன் நெற்றியில் ஒரு ரூபாய் வில்லை ஒன்றைப் பொட்டாக வைத்துக் கொண்டிருப்பது போன்ற கற்பனை தோன்றிற்று. பகவானால் படைக்கப்பட்ட கழுத்தை முழுமையாகப் பின்பக்கமெல்லாம் திருப்ப இயலாது!

பிறகு மார்கரெட்டைப் பார்க்கும்போதும் அவளிடம் பேசும் போதும் சதா ஒரு ரூபாய் நினைப்பு வந்துகொண்டேயிருந்தது. ஐம்பத்து மூன்று வயதில் இப்படி ஒரு வினோதமான சிக்கலில் மாட்டிக்கொண்டது ஒருவித   எரிச்சலுனர்வை ஏற்படுத்திற்று.

கடைசியில் ஒரு நாள் மார்கரெட்டிடம் என் சிக்கல் முழுவதையும் சொன்னேன். எப்படியும் அவள் அதை வாங்கிக் கொள்ளப் போவதில்லை என்றும், ஒரு தீர்வாக திருச்சபை உண்டியலில் வேண்டுமென்றால் நான் காசைப் போட்டுவிடலாம் என்றும் ஆலோசனை வழங்கினாள்.

இதற்கென்றே ஒரு ஞாயிறு மார்கரெட்டுடன் அவள் உறுப்பினராக இருக்கும் திருச்சபைக்குச்  சென்றேன். பிரார்த்தனைகளின் ஊடே வெள்ளை அங்கி அணிந்திருந்த ஒருவர் ஒரு நீண்ட கழியை ஒவ்வொரு வரிசையிலும் நீட்டிக்கொண்டிருந்தார். எங்கள் வரிசையில் வந்தபோது கழியின் முனையில் ஒரு குழிவான துணி பைபோல் இருந்ததைப் பார்த்தேன். பிறர் அதில் காசு போட அதுதான் உண்டியல் என்று புரிந்துகொண்டு ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை அதில் போட்டேன். "மார்கரெட், உன் ஒரு ரூபாய்" என்றேன். அவள் புன்னகைத்தாள். திருச்சபையை விட்டு வெளியே வந்தோம். மார்கரெட் வாய்விட்டுச் சிரித்தாள். "நீங்களும் உங்கள் பிரச்சினையும்" என்றாள்.

ஒரு மாலை நானும் மார்கரெட்டும் அலுவலகம் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். இருவருக்குமே பசித்தது. ஓர் ஓட்டலில் டிபன், காப்பி சாப்பிட்டோம். பில் ரூபாய் நாற்பத்து ஒன்று. என்னிடம் சரியாக ஓர் ஐம்பது ரூபாய் மட்டும் இருந்தது. கல்லாவில் இருந்தவர் "ஒரு ரூபாய் இருக்குமா?" என்று கேட்டார். "என்னிடம் சில்லறை இருக்கிறது. நான் வேண்டுமானால் ஒரு ரூபாய் தருகிறேன்" என்றாள் மார்கரெட். "ஐயோ மீண்டுமா?" என்று நான் கிட்டத்தட்ட அலறிவிட்டேன். கிழிந்த நோட்டுகளாகப் பார்த்து எனக்கு மீதிக் காசு சிடுசிடுப்புடன் ஓட்டல்காரரிடமிருந்து கிடைத்தது.

அந்த ஒரு ரூபாய்ப் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. திருச்சபைச் சம்பவம் எந்தப் பலனையும் பெற்றுத் தரவில்லை.

ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஞாயிறு மார்கரெட்டை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தால் என்ன? செலவில் மார்கரெட்டுக்குத் தரவேண்டிய ஒரு ரூபாயும் சேருமே என்று நினைத்தேன். நாட்கள் செல்லச் செல்ல அது ஒரு நல்ல உத்தி என்றே தோன்றிற்று.

என் பிரச்சினைக்கு விடிவு காலம் வர அந்த ஞாயிறு வந்தது. பதினொரு மணி வாக்கில் மார்கரெட்டின் விடுதிக்குப் பொய் அவளை வீட்டுக்கு அழைத்து வந்தேன். விருந்து திருப்திகரமாக அமைந்தது. மார்கரெட் சுலபத்தில் என் வீட்டாருடன் கலந்து விட்டாள். என் மகளுடன் பகிர்ந்துகொள்ள மார்கரெட்டுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. மாலை நான்கு மணிபோல மார்கரெட்டை விடுதியில் விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.

பேச்சுவாக்கில், "செலவு எவ்வளவு ஒரு ரூபாய் பிடித்தது?? என்று மனைவியிடம் கேட்டேன். அவள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள். அனிச்சையாக வந்த வார்த்தைகள். கட்டுப்பாடு அறவே இல்லாமல் போயிருந்தது.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. மொபட்டும் மார்கரெட்டும் நானுமாக அலுவலக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன. என் ப்ரொஜெக்டின் காலம் நிறைவுற்றது. மற்றவர்கள் நிரந்தரப் பணியாளர்கள்.

பிரிய வேண்டிய நாளில் நாங்கள் அனைவரும் மிகவும் சங்கடப்பட்டுப் போனோம். ஒரு மாதிரியாக இருந்தது. அந்த உணர்வை எப்படி விவரிக்க!

அந்தக் கடைசி தினத்தன்று வழக்கம்போல் மார்கரெட்டை விடுதி வரை அழைத்துச் சென்றேன். விடைபெறும்போது, "நாளையிலிருந்து எப்படி நீ...? நான் வேண்டுமானால் வரட்டுமா?" என்றேன். வார்த்தைகள் தடுமாறின.

மார்கரெட் அவசரத்துடன் மறுத்தாள். "வேண்டாம் வேண்டாம். நான் சீக்கிரமே கிளம்பி பஸ்சிலேயே போய்க் கொள்கிறேன். நீங்கள் என்ன பெரிய பணக்காரரா, தினமும் எனக்காகவே பெட்ரோல் செலவு செய்ய? என்னை மறக்காமல் இருந்தால் சரி" என்றாள்.

"பாரதத்தில் ஒரு ரூபாய்கள் புழக்கத்தில் இருக்கும்வரை உன்னை என்னால் எப்படி மறக்க முடியும்?" என்றேன் மனதில் சுமையுடன்.

(கவிதாசரண் பத்திரிக்கையில் வெளியாகி பின் தூயோன் சிறுகதை தொகுப்பிலும், இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத்தரகர்களும் நாவலில் இணைப்பு இரண்டாகவும் வெளிவந்துள்ளது.)

Jul 30, 2010

வலி தரும் பரிகாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன்

இலக்கியச் சிந்தனை 1986ம் ஆண்டு சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக கோபி  கிருஷ்ணனைக் கேட்டுக்கொண்டபோது அவர் எனது சிறுகதையான தெருவின் சுபாவத்தைத் தேர்வு செய்திருந்தார். அந்தக் கதையைப் பற்றி தபால் கார்டு ஒன்றில் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எனக்கு எழுதியிருந்தார். அப்படித்தான் கோபி கிருஷ்ணனுக்கும் எனக்குமான உறவு துவங்கியது.

அதன் முன்னதாக கோபியின் கதையொன்றை கணையாழியில் வாசித்திருக்கிறேன். அவரது குறு நாவல் ஒன்றும் என்னுடைய குறுநாவல் ஒன்றோடு தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்வாகியிருந்தது. கோபியின் குறுநாவலை வாசித்தபோது அதன் பரிகாசமான குரலும், அன்றாட வாழ்வை அவர் காணும் விதமும் gopiஎனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் யார் கோபிகிருஷ்ணன், எங்கேயிருக்கிறார் என்று நான் அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

பின்னர் இனி இதழில் புயல் என்றொரு கோபியின் கதை வெளியாகியிருந்தது. அந்தக் கதையைப் பலமுறை படித்திருப்பேன். எதிர்பாராத ஒரு மழை நாளைப் பற்றியது கதை. கதையின் மையமாகபுயல் இருந்தபோதும் கதை மத்தியதர வர்க்கக் குடும்பம் ஒன்றில் நிகழ்கிறது. கதையை கோபி எழுதியுள்ள விதம் அற்புதமானது. குரலை உயர்த்தாமல் கதையின் வேகம் அதிகமாகிக்கொண்டே போகும். கதை முடியும்போது கதையின் மையம் புயல் அல்ல நமது அன்றாட வாழ்வின் நிலைகுலைவு என்பது புரியத்துவங்கும்.

அந்தக் கதையை வாசித்த நாளில் இருந்து கோபி கிருஷ்ணனைச் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். அவர் சென்னையில் வசிக்கிறார் என்ற விபரத்தைத் தவிர வேறு எதையும் அப்போது அறிந்துகொள்ள முடியவில்லை. பிறகு அவரது ஒவ்வாத உணர்வுகள் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதிலிருந்த கதைகளும் எனக்குப் பிடித்திருந்தன.

கோபி கிருஷ்ணனின் கதைகள் நகரவாழ்வின் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மனிதர்களைப் பற்றியவை. குறிப்பாக வாழ்விடத்தில் அவர்கள் கொள்ளும் சிக்கல்கள், பிரச்சினைகள் அதன் ஊடாக வெளிப்படும் அதீத மனவோட்டங்கள் இவை அவரது கதைகளின் அடிநாதம். கோபி கதைகளை மிகச் சிறியதாகவே எழுதக்கூடியவர். நான்கு பக்க அளவிற்குள் பெரும்பான்மைக் கதைகள் முடிந்துவிடுகின்றன. ஆனால் இந்தக் கதைகள் நம்மைச் சுற்றிய சமூகவாழ்வைப் பிரதிபலிக்கக்கூடியவை. சினிமா, அரசியல், அதிகாரம், நகரவாழ்வின் வேகம் என்று பெருநகரின் பிரிக்கமுடியாத அம்சங்கள் அவரது கதைகளில் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுள்ளன.

கோபியின் கதாபாத்திரங்கள் எதிர்பாராத நிலைகுலைவைச் சந்திப்பவர்கள். அல்லது ஏதோவொரு குற்றபோதத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்துக்கொண்டவர்கள். எல்லாப் பிரச்சினைகளுக்குப் பிறகும் உலகின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். மனச்சிதைவு கொண்டவர்கள் என்று அறியப்பட்டு ஒதுக்கப்படுகின்றவர்கள் மீது அவரது பெரும்பான்மை கவனம் குவிகிறது. மனச்சிதைவின் பின்னால் உள்ள காரணங்களும் மனச்சிக்கல்களுக்கு, குடும்பம் என்ற அமைப்பு எவ்வளவு ஆதாரமாக உள்ளது என்பதையும் அவரது கதைகள் விவரிக்கின்றன. 

1990களின் துவக்கத்தில் சென்னையில் சுற்றியலைந்த போது ஒருநாள் மதிய நேரத்தில் தி.நகர்  கிருஷ்ணவேணி திரையரங்கம் அருகில் தற்செயலாக கோபி கிருஷ்ணன் கடந்து போவதைக் கண்டேன். அது கோபி கிருஷ்ணன்தானா என்று நிச்சயமாகத் தெரியாது. ஆனால் அவரது புகைப்படம் ஒன்றைக் கண்டிருக்கிறேன். ஆகவே அது கோபியாகத்தான் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பின்னாடியே சென்றேன். அவர் பேருந்து நிலையத்தின் எதிரிலிருந்த டீக்கடையில் நின்று கொண்டு தேநீர் அருந்தினார்.

அருகில் சென்று நீங்கள் கோபி கிருஷ்ணன்தானே என்று கேட்டேன். ஆமாம் என்று தலையசைத்தார். நான் எஸ். ராமகிருஷ்ணன், கணையாழியில் எனது கதை வெளி வந்திருக்கிறது என்றதும் உடனே என் கைகளைப் பற்றிக் கொண்டு உற்சாகமாக நல்லா எழுதிட்டு வர்றீங்க நான் உங்க சிறுகதையை இலக்கியச் சிந்தனைக்காகத் தேர்ந்தெடுத்தேன். ஞாபகமிருக்கா என்று கேட்டார். பின்னர் இருவருமாகத் தேநீர் குடித்துவிட்டு அங்கேயே பேசிக் கொண்டிருந்தோம். பேருந்தின் இரைச்சல்களை மீறி எங்கள் பேச்சு தொடர்ந்தது.

கோபியின் பார்வை இடையிடையே என் பேச்சைக் கடந்து அருகில் இருந்த கடையின் ஓரமாக உட்கார்ந்திருந்த ஒரு மனிதன் மீது குவிந்து இருந்தது. அந்த மனிதன் கசக்கி எறியப்பட்ட காகிதம் ஒன்றைக் கிழித்து வீசியபடியே உட்கார்ந்திருந்தான். அவன் தலை செம்பட்டை படிந்து பற்கள் காவியேறிப் போயிருந்தன. அழுக்கேறிய பேண்டும் சட்டையும் போட்டிருந்தான். அவனது வலது கையில் பெரிய தழும்பு தெரிந்தது. வயது நாற்பதைக் கடந்திருக்கும். முகத்தில் இறுக்கம் படிந்து போயிருந்தது. தன் கைகளை வேகமாகக் காற்றில் வீசி அவன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

கோபி அவனை கையைக் காட்டி அவன் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறான் பாருங்கள் என்று சொன்னார். இருவருமாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவன் செய்கைகள் ஒருபோதும் ஒன்றாக இருப்பதில்லை, அதில் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒருவிதம் உருவாகிறது. அவன் மிக உற்சாகமாக இருக்கிறான்  என்று சொல்லியபடியே பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் தான் புகை பிடிக்கலாமா என்று என்னிடம் கேட்டார். நடந்து சென்று சிகரெட் வாங்கிக்கொண்டு வந்து பற்றவைத்த படியே திரும்பவும் அந்த மனிதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு என்னிடம் நீங்கள் முன்றிலுக்கு வந்தீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அருகில் ஆத்மன் ஆலோசனை மையம் என்ற ஒன்றை, தானும் நண்பர் சபியும் சேர்ந்து திறந்திருப்பதாகவும் அதற்காகத் தான் மாலை வேளைகளில் அங்கே வந்து போவதாகவும் அந்த மையம் புகை மற்றும் மதுப் பழக்கங்களில் இருந்து மீண்டுவர நினைப்பவர்களுக்கான ஆலோசனையைத் தருகிறது என்றார். நான் தலையசைத்துக்கொண்டேன். பிறகு அவராகவே அந்தப் பழக்கங்கள் என்னிடமே இருக்கிறது. ஆனாலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதை மீறிச் செல்லும்போதுதான் ஆலோசனைகள் தேவை. தன்னால் அதை ஒரு மருத்துவச் சேவையாக  எடுத்துச் சொல்லவும் மாற்றவும் முடியும் என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

கோபி கிருஷ்ணனின் சிரிப்பு மிக அலாதியானது. இயல்பாகவும் அடக்க முடியாததாகவும் சில வேளைகளில் வெளிப்படும். கோபி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடியவர் என்பதை அருகில் இருந்து சில முறைகள் கண்டிருக்கிறேன். முதல் சந்திப்பிலே என்னிடம் கோபி, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். எதற்காகக் கேட்கிறீர்கள் என்று கேட்டேன்.

இல்லை தஸ்தாயெவ்ஸ்கியிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். “My friends, God is necessary to me, because he is the only being that I can love eternally.” என்ற அவரது பதில் குழப்பமாக இருக்கிறது, திடீரென அது நினைவிற்கு வந்தது. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நிறைய நேரங்களில் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது என்றபடியே நீங்கள் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

இருவரும் அந்தத் தேநீர்க்கடையில் இன்னொரு தேநீர் குடித்தபடியே தஸ்தாயெவ்ஸ்கி பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாக  இடியட்  என்னும் நூலைப் பலமுறை வாசித்திருப்பதாகச் சொல்லியபடியே   குற்றமும் தண்டனையும் நாவலில் இடம்பெற்றுள்ளதாக Talking nonsense is man's only privilege that distinguishes him from all other organisms என்ற வரியைச் சொல்லியபடியே இது மிக நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது  என்று அவராகச் சிரித்துக்கொண்டார்.

இருவருமாகப் படியேறி ஆத்மன் ஆலோசனை மையமிருந்த வளாகத்திற்குள் சென்றோம். நான் முன்றில் புத்தகக் கடைக்கும் அவர் ஆலோசனை மையத்திற்குள்ளமாகப் பிரிந்துவிட்டோம். முன்றில் கடையில் இருந்த எழுத்தாளர் மா. அரங்கநாதன் அவர்கள் கோபி உங்க கூட வந்த மாதிரி இருந்தது. இருக்கானா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அவர் தன்னிடம் படிக்கக் கேட்டதாகச் சொல்லி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அது டி.ஹெச்.லாரன்ஸின் யீஷீஜ் என்ற புத்தகம். சில நிமிசங்களுக்குப் பிறகு கோபி வந்து அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றார்.

அரைமணி நேரத்திற்கு ஒருமுறை புகைபிடிப்பதற்காக கோபி முன்றிலைக் கடந்து அருகில் இருந்த வெற்று வெளிக்குச் செல்வார். அப்போது குனிந்த தலையோடு மிக மெதுவாகவே கடந்து செல்வார். தனியே புகைபிடித்துவிட்டு வேகமாகக் கடந்து போய்விடுவார்.

ஆத்மன் ஆலோசனை மையத்திற்கு யார் வருகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நான் ஆவல் கொண்டதில்லை. ஆனால் அங்கே வரும் கோபி கிருஷ்ணனோடு பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன்.

ஒரு முறை அவர் சூளைமேட்டுப் பகுதியில் ஒரு வெள்ளைக்காரருடன் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தப் பக்கமிருந்த பொன்விஜயன் அச்சகத்தில் கல்குதிரை ஓடிக் கொண்டிருந்தது. ஆகவே அதைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது எதிரே வந்தார் கோபி. வெள்ளைக்காரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு மூவருமாகத் தேநீர் அருந்தச் சென்றோம். அவர் பேசிய மிக அழகான ஆங்கிலம் என்னை வியப்பூட்டியது.

அதன் மறுநாள் பேருந்தில் இருவரையும் மறுபடி பார்த்தேன். அந்த வெள்ளைக்காரன் ஒரு அமெரிக்கன் என்று சொல்லி ஆய்வுப் பணிக்காக வந்திருக்கிறான் என்றார். அவருக்கு நிறைய வெளிநாட்டு நண்பர்கள் இருந்தார்கள்.

கோபி அவ்வப்போது சிறுகதைகள் எழுதக்கூடியவர். தனது கதைகளைப் பற்றி அவர் அதிகம் பேசிக் கொண்டதில்லை. கதைகள் நன்றாக உள்ளது என்று பாராட்டும்போது கூட அவர் சிரித்துக்கொள்வார். அதுபோலவே வேறு எந்த எழுத்தாளரையும் பற்றி அவர் கடுமையாகப் பேசியது கிடையாது. கோணங்கியின் ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்’ கதையைப் படித்து விட்டு மிக நன்றாக வந்திருக்கிறது. அதுபோல தானும் ஒரு கதையை எழுதிப் பார்த்ததாகச் சொன்னார். தன்னைப் பற்றியோ தனது மன உளைச்சல்கள் பற்றியோ அவர் அதிகம் சொல்லியதில்லை.

ஒரு முறை அவரைத் தற்செயலாக அம்பத்தூர்ப் பகுதியில் பார்த்தேன். தன் வீடு அருகில்தான் இருக்கிறது என்று சொல்லி அழைத்துச் சென்றார். மிகச் சிறிய குடியிருப்பு. எளிமையான குடும்பம். தன் மனைவியைத் தான் காதலிப்பதாகவும் மனைவியைக் காதலிப்பதில் ஒரு சௌகரியமிருக்கிறது, அதற்கு அதிகம் செலவு செய்யத் தேவையில்லை என்றும் சொல்லிச் சிரித்தார்.

அவரது கதைகளில் அவரது வசிப்பிடமும் அதன் நெருக்கடியும் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன. அப்படிப் பதிவான கதைகளில் ஒன்றில் அண்டை வீட்டுக்காரன் ஒருவனின் காயப்போட்ட ஜட்டி ஒன்று காணாமல் போய்விடுகிறது. உடனே அந்தக் குடித்தனத்தில் இருந்த ஆண்கள் அத்தனை பேரையும் ஜட்டியைக் காட்டச் சொல்லி அந்த நபரின் மனைவி வலம் வருவாள். இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா என்று கோபியிடம் கேட்டேன்.

அவர் சிரித்தபடியே அந்தப் பெண்மணி முரட்டுத்தனமானவள். தன் கணவனின் ஜட்டியை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்காவிட்டால் அப்படி நடந்து கொள்ளப் போவதாக  உரத்துக் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டேன். உள்ளுக்குள் ஒரே நேரத்தில் அப்படி நடந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆவலும், அதே நேரம் அவமதிப்பாகிவிடுமே என்ற உணர்ச்சியும் ஒன்றாகத் தோன்றியது. வீட்டில் இருக்கவே முடியவில்லை. அவளுக்கு பயந்து  வீட்டிற்குப் போகாமல் இரவு வரை வெளியே சுற்றிக் கொண்டிருந்தேன் என்றார்.

கோபி  மதுரையில் பிறந்தவர். தன் பால்ய வயதில் கண்ட மதுரையைப் பற்றிய நினைவுகள் அதிகம் அவருக்குள் இருந்தன. அதை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். கடைசி வரை எழுதவேயில்லை.

உளவியல், சமூக சேவை இரண்டிலும் அவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள பிரபலமான சில உளவியல் மையங்களில் பணிபுரிந்திருக்கிறார். சிகிட்சை மையங்களில் செயல்படும் அதிகாரமும் நோயாளிகளிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறையும் அவரை இணைந்து செயல்படவிடாமல் தடுத்திருக்கிறது.

தான் வேலை செய்த இடம் ஒன்றில் கையூட்டு அதிகம் நடை பெறுகிறது என்று சொல்லி வேலையை விட்டதாகச் சொன்னார். இன்னொரு அலுவலகத்தில் வெளிநாட்டுப் பணத்தை வாங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சொன்னதால் வேலையை விடும்படி ஆனது என்றும் அப்படி  வேலை நீக்க உத்தரவு தந்த போது, தான் அந்த உத்தரவில் நாலைந்து ஆங்கிலச் சொற்கள் தவறாகப் பிரயோகப்படுத்தப்பட்டிருப்பதோடு எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையும் இருப்பதைக் கண்டு பிடித்து உயரதிகாரிக்குத் தெரிவித்தபோது  அவர் மிகுந்த ஆத்திரத்துடன் கோபப்பட்டுத் துரத்தியதாகவும் பரிகாசத்துடன் சொன்னார்.

ஒரு மனிதன் தனக்கு வேலை பறிபோன விஷயத்தைக்கூட இப்படிப் பரிகாசமும் எள்ளலுமாகச் சொல்ல முடியுமா என்று தோணியது. வாழ்க்கை நெருக்கடி அவரை தினசரி படுத்தி எடுத்தபோது அவரிடமிருந்த எள்ளல் மற்றும் இயல்பான நகைச்சுவை உணர்வு குறையவேயில்லை. அவரது மனைவி ஒரு அச்சகத்தில் பணியாற்றுகிறார் என்றும் அங்கே வேலை கடினம் என்றும் அவராகச் சில வேளைகளில் சொல்லியிருக்கிறார். அபூர்வமாகத் தன் மகளைப் பற்றி உணர்ச்சி பூர்வமான நெகிழ்வுடன் பேசுவார்.

கோபியின் கதைகள் மனித அவலங்களை, கீழான செயல்களை, ஒடுக்கப்படும் உணர்வுகளை, மறுக்கப்படும் பாலியலை, அடங்க மறுக்கும் மனச்சிதைவுகளைப் பேசுகின்றவை. அந்த வகையில் அவரது எழுத்திற்கான முன்னோடியாக நகுலனைக் குறிப்பிடலாம். ஆனால் நகுலனிடம் உள்ள தத்துவ சார்பு கோபியிடம் இல்லை. அது போலவே கோபியிடம் உள்ள அன்றாட உலகமும் அதன் மீதான எள்ளலான விமர்சனமும் நகுலனிடம் கிடையாது. இருவருமே தஸ்தாயெவ்ஸ்கியைக் கொண்டாடுபவர்கள்.

தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எந்த வேலையும் செய்வதற்கு அவர் தயராக இருந்தார். சில மாதங்கள் அவர் நக்கீரன் பத்திரிகையில் பிழை திருத்துபவராக வேலை செய்தார். சில மாதங்கள் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் வேலை செய்தார். கொஞ்ச நாட்கள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.

சென்னையில் அம்பலம் என்றொரு அமைப்பின் கலை இலக்கியப் பணிகளை நான் சில மாதங்கள் ஒருங்கிணைப்புச் செய்து கொண்டிருந்தேன். அவர்கள் தங்களது நிகழ்ச்சி குறித்த பதிவுகளைத் தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமாக வெளியிடுவார்கள். இதற்கான மொழிபெயர்ப்பு வேலையை கோபி கிருஷ்ணனிடம் ஒப்படைத்திருந்தேன்.

அடிக்கடி என்னைப் பார்க்க திருவான்மியூர் வருவார். பேருந்தில் பயணம் செய்து வந்து இறங்கி நடந்து சீனிவாசபுரத்திலிருந்த அம்பலம் அலுவலகத்தில் தன் மொழியாக்கத்தைத் தந்துவிட்டு அதற்கான சொற்ப ஊதியத்தை வாங்கிக்கொண்டு போவார். அப்போது சில மணிநேரங்கள் எங்காவது நடந்து சென்று மனதில் பட்டதைப் பேசிக்கொண்டிருப்போம்

திருநெல்வேலியில் உள்ள சேவியர் கல்லூரியில் நடைபெற்ற நாட்டுப்புறவியல் கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்படும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய கோபி கிருஷ்ணன் நெல்லை வந்திருந்தார். அந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அதனால் அவர் அறையும் என்னுடைய அறையும் அருகாமையில் இருந்தன.

ஒரு நாள் இரவு அவர் தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் சில மருந்துகள் தேவைப்படுகின்றன. தன்னோடு பாளையங்கோட்டை வரை வரமுடியுமா என்று கேட்டார். இருவருமாகக் கிளம்பி பாளையங்கோட்டை வரை சென்றோம். அவர் கேட்ட மருந்தை கடைக்காரர் இல்லை என்று சொன்னதால் வேறு ஒரு மருந்தை கோபி கேட்டார்.

மருந்துச் சீட்டு இல்லாமல் அதைத் தன்னால் தர இயலாது என்று கடைக்காரர் சொன்னதும் தனக்கு அந்த மருந்து கிடைக்காவிட்டால் நிச்சயம் உறங்க இயலாது எப்படியாவது கொடுக்கும்படியாகக் கெஞ்சும் குரலில் கேட்டார். கடைக்காரர் மறுத்துவிடவே அங்கிருந்த ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினார். அது தூக்க மாத்திரை என்றும் அதன் அளவு முன்பு தான் சாப்பிடுவதைவிடவும் தற்போது அதிகமாகி உள்ளதாகவும் அதற்கான மருந்துச் சீட்டை, தான் எடுத்துவரவில்லை என்பதால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகத் தடுமாற்றத்துடன் சொன்னார்.

அப்போது நெல்லையில் இருந்த லேனாகுமார் மருத்துவத்துறை தொடர்பானவர் என்பதால் அவரை அழைத்து விபரம் சொன்னதும் அவர் எங்கிருந்தோ அந்த மாத்திரைகளை வாங்கி வந்து தந்து இந்த அளவு தூக்கமாத்திரையா சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டதும், கோபி அது தனக்குப் பழகிப்போய் விட்டது, இதைப் போட்டால் கூட பின்னிரவில் எழுந்துவிடுவேன். பிறகு விடியும் வரை விழித்தபடியே இருக்க வேண்டியதுதான் என்று அதே சிரிப்போடு சொன்னார்.

அப்போது அவரது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அதை மறைக்க அவர் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். பின்னர் அறைக்குத் திரும்பிய சில நிமிசங்களில் அவர் மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு உறக்கம் வரவில்லை பாதித் தூக்கமும் விழிப்புமாக அவர் வராந்தாவில் நடந்து கொண்டிருந்தார். என் அறைக்கு வந்து தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டார். டம்ளரில் தந்தபோது அப்படியே பிளாஸ்டிக் ஜக்கை எடுத்துக் கடகடவெனக் குடித்தார்.

அன்றிரவு அவரால் இயல்பாக உறங்கமுடியவில்லை என்றதும் திரும்பவும் குமாரை அழைத்துச் சொன்னதால் மாற்று மருந்து ஒன்றை வாங்கி வந்து சாப்பிடச் சொன்னார். விடிகாலை வரை இந்த அவஸ்தையில் இருந்த கோபி உறங்கி, காலை ஒன்பது மணி அளவில் கண்விழித்து குளித்துவிட்டு வழக்கம் போலக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தன் மொழியாக்க வேலையைச் செய்யத் துவங்கினார்.

அசதியும் சோர்வும் அவரது முகத்தில் பீடித்திருந்தன. சாப்பாட்டை வெகுவாகக் குறைத்திருந்தார். சிகரெட் மற்றும் தேநீர்தான் அவரது பிரதான உணவாக இருந்தன. அவரது உடல் நலத்திற்கு என்ன பிரச்சினை. ஏன் இப்படி தன்னை வருத்திக்கொண்டு வேலை செய்கிறார் என்று வருத்தமாக இருந்தது. அவர் தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் என்பதும் அப்படியிருந்தும் நோய்மை கட்டுக்குள் அடங்கவில்லை என்பதும் நேரடியாகப் புரிந்தது.

அதன் பிறகு சில மாதங்கள் நான் கோபியைச் சந்திக்கவில்லை. ஒரேயொரு முறை இலக்கியக் கூட்டமொன்றில் சந்தித்துப் பேசிக்கொண்டோம்.  கோபி ரொம்பவும் தளர்ந்து போயிருந்தார். பிறகு அவரது புத்தகம் வெளியான சமயத்தில் தற்செயலாக நண்பர் ராஜன்குறையின் வீட்டில் சந்தித்துக்கொண்டு உரையாடினோம். கோபியின் அன்றாட வாழ்வு மிக நெருக்கடியாக உள்ளது என்று பலமுறை நண்பர் வெளிரங்கராஜன் சொல்லியிருக்கிறார். ஆனால் கோபி இதை எவரிடமும் சொல்லிக்கொண்டது கிடையாது. ஒருமுறை  அவர் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைத்திருந்தார்.

அட்சரம் இதழுக்காக அவரிடமிருந்து பிராய்டு பற்றிய கட்டுரை ஒன்றைக் கேட்டேன். தன்னால் முடிந்தால் எழுதித் தருவதாகச் சொன்னார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதைத் தன்னால் எழுத முடியவில்லை என்பதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வார்.

கோபியின் கதைகள் மனித வலிகளை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றன. குறிப்பாக சகமனித துவேசங்கள் அவமதிப்புகள் அதிகாரத்தின் பெயரால் நடைபெறும் கீழ்மைகள், பாலியல் வேஷங்கள், சமூக வாழ்வில் காணப்படும் இரட்டைத்தன்மை. வெகுமக்களின் ரசனை சார்ந்த வெளிப்பாடுகள் என்று அவர் நகரவாழ்வின் இருண்ட பகுதியைத் தன் படைப்பில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். இன்னொரு பக்கம் மன நலச்சேவைகள். இன்று எந்த அளவு மனிதாபிமானமற்று நடத்தப்படுகின்றன என்பதைப் பற்றியும் கடுமையான எதிர்ப்புக்குரல் கொண்டிருந்தார். இதை வெளிப்படுத்த அவரும் சபியும் இணைந்து சிறிய நூல் ஒன்றை வெளியிட்டார்கள்.

தூயோன், மானுட வாழ்வு தரும் ஆனந்தம் போன்ற அவரது சிறுகதைத் தொகுப்புகளும் உள்ளிருந்து சில குரல்கள் என்ற அவரது நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். டேபிள்டென்னிஸ் என்ற அவரது குறுநாவல் பாலியல் சிக்கல் குறித்த பகடியை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

தன் மகளின் திருமணத்திற்கு கோபி என்னை அழைத்திருந்தார். ஆனால் கலந்து கொள்ளவில்லை. பிறகு தற்செயலாக ரங்கராஜனுடன் சந்தித்தபோது தன் மருமகனைப் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது குடும்பச் சூழல் மிகவும் நெருக்கடியாகிவிட்டிருப்பதை அவரது பேச்சின் ஊடாகப் புரிந்துகொள்ள முடிந்தது. புதிதாகத் தான் எழுத விரும்பும் கதை பற்றிப் பேசிக்கொண்டிருந்தது வியப்பாக இருந்தது.

ஒரு கதையை நிம்மதியாக அமர்ந்து எழுதுமளவுகூட வீட்டின் சூழல் இல்லை என்று அவர் சொன்னவிதம் வலி தருவதாக  இருந்தது. அன்று லதா ராமகிருஷ்ணனைப் பார்க்கச் செல்வதாகச் சொல்லியபடியே நடந்து செல்லத் துவங்கினார்.

2003ல் கோபி மரணமடைந்த நாளில் நான் விருதுநகரில்  இருந்தேன். செய்தி கேள்விப்பட்டவுடன் மனதில் கோபியின் சிரிப்புதான் முதலில் தோன்றியது. கோபியோடு அதிகம் நட்பு கொண்டிருக்கவில்லை என்றபோதும் நான் அறிந்த தமிழ் எழுத்தாளர்களில் கோபி மிகவும் தனித்துவமானவர். அத்தோடு தமிழ்ச் சிறுகதைகளில் அவரது பங்களிப்பு சிறப்பானது. அவரது கதை உலகிற்கு நிகரான பகடியும் ஆழ்ந்த துக்கமும் கொண்ட கதைகள் இன்று வரை வேறு எவராலும் எழுதப்படவில்லை.

தஸ்தாயெவ்ஸ்கியைப் போல வாழ்வின் கருணையற்ற நெருக்கடியை எதிர்கொண்டபடியே திரும்பத் திரும்ப வாழ்வு தரும் ஆனந்தத்தைப் பேசியவர் கோபி கிருஷ்ணன். இன்று வாசிக்கையில் அந்த ஆனந்தமும் பரிகாசமும் தீர்க்க முடியாத வலியை உருவாக்குகிறது என்பதே நிஜம்.

*****

நன்றி: உயிர்மை

Jun 3, 2010

புயல் - கோபி கிருஷ்ணன்


அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம்.
தொழிற்சாலை நேரம் முடிந்து, தள்ளிப்போட முடியாத ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சக ஊழியர் குதரத் உல்லா பாட்சாவுடன் பேச,  அவரது இல்லத்திற்குச் சென்று, பேசி முடித்துவிட்டு, சுமார் ஒன்பது மணியளவில் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான் ஏக்நாத். நைந்துபோன, பித்தான்கள் என்றைக்கோ  தெறித்து, அவை இல்லாத நிலையில், ஸேஃப்டி பின்களைப் போட்டு ஒருவாறாக gkமழைக்கோட்டை அணிந்து கொண்டு, தொப்பி தொலைந்துபோய் வெகு மாதங்கள் ஆகியிருந்தும், அதை வாங்காதிருந்த அசிரத்தையின் தண்டனையான தலைநனைதலை அனுபவித்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தான். தொழிற்சாலையில் ஒரு குப்பைக் கூடை அருகே கிடந்த சிறு துண்டு மழைத்தாள் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தான். வழியில் ஒரு கடையில் புதிதாக சந்தையில் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்த ‘நௌ’ சிகரெட் ஒரு பாக்கெட்டையும் ஒரு வத்திப்பெட்டியையும் வாங்கி மழைத்தாளில் சுற்றி வைத்துக்கொண்டான். இரண்டு மெழுது வர்த்திகளையும் வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். நல்ல நாட்களிலேயே அடிக்கடி தடைப்படும் மின்சாரம் மழையில் சீராக இயங்கும் என்று சொல்வதற்கில்லை. குழந்தைக்கு இரு தினங்களாக வெதுவெதுப்பான ஜூரம். மருந்துக்கடை ஒன்றில் மாத்திரை இரண்டை வாங்கினான்.
ஜூரத்தால் அவதிப்படும் குழந்தையை ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்படுத்தி உற்சாகத்துடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று தோன்றவே, ஒரு கடையில் காட்பரீஸ் மில்க் சாக்கலெட் ஒன்றை வாங்கினான். சிகரெட் ஒன்றைப் பெட்டியிலிருந்து கவனத்துடன் உருவி மழைச் சொட்டுக்களிலிருந்து அதை அரைகுறையாக ஒருவாறு காத்து கைகளைக் குவித்துப் பற்ற வைத்துவிட்டு நடந்து கொண்டிருந்தான். வீட்டை அடைய இன்னும் ஒரு டொக்குச் சந்தையும், ஒரு நீண்ட சந்தையும், இரண்டு சிறு சந்துகளையும் கடக்க வேண்டும்.
வழியில் ஒரு மளிகைக் கடை. வீட்டில் காப்பிப் பொடி. சர்க்கரை காலையில் கொஞ்சம்தான் மீதம் இருந்தது. ப்ரூ ரீஃபில்பேக் காப்பிப் பொட்டலம் ஒன்றையும் 250 கிராம் சர்க்கரையையும் கொடுக்குமாறு கடைப் பையனிடம் சொல்லிவிட்டு சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளித்தள்ளிக் கொண்டிருந்தான். அருகில் ஒரு நடுவயது மாமி. அவள் முகம் கோணினாள். “ஸாரி மாமி” - மன்னிப்புக் கோரி, கால்வாசிதான் புகைத்திருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான்.
வீட்டின் மிக அருகாமையில் வந்ததும் நேற்று நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அவன் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி ஒரு வீட்டின் முன் கிட்டத்தட்டத் தெருவின் முழு அகலத்தையும் அடைத்தபடி ஒரு பெரிய கோலத்தை ஒரு பெண்மணி போட்டுக் கொண்டிருந்தாள் லயித்து. ஏகநாத் கவனமாகக் கோலக்கோடுகள், புள்ளிகள் முதலியவைகளைத் தவிர்த்து, ஏடாகூடமாகக் கால் வைத்ததில் கீழே சாயப்போய், ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, கோலத்தின் மேல் கால் பாவாமல் சிரத்தையுடன் தாண்டி நடந்து கடந்தான்.
மணி தோராயமாக 9.30. “காலைலே வீட்டெ விட்டுக் கெளம்பினா வீட்டு ஞாபகமே இருக்கறதில்லை ஒங்களுக்குக் கொஞ்சங்கூட. நான் ஒருத்தி இருக்கேங்கற நெனெப்பே ஒங்களூக்குச் சுத்தமா மறந்தாச்சுன்னுதான் தோண்றது. நீங்க சீக்கிரம் வரணும்னு நான் வேண்டாத தெய்வங்க இல்லெ” ஸோனா பொரிந்து தள்ளினாள். “ஆனா, இண்ணெக்கி என்ன விசேஷம்? நான் சீக்கிரம் வரணும்னு சாமிங்களை வேண்டிக்கற அளவுக்கு எனக்கு என்ன திடீர் முக்கியத்துவம்?” - இது ஏக்நாத். “ஒண்ணுமில்லெ, சொல்றேன்.” “என்ன வீட்டுக்காரம்மா ஏதாவது கத்தினாளா?” - “இல்லெ.” “மளிகைக்காரன் பாக்கிக்காக வந்து கேட்டுக் கத்தினானா?” “இல்லெ.” “வேறென்ன சொல்லேன்.” ஸோனாவின் முகத்தில் கலவரமும் பரபரப்பும் அவசரமும் குடிகொண்டிருந்ததை ஏகநாத்தால் கண்டுகொள்ள முடிந்தது. கணவனைச்  சந்தோஷத்திலாழ்த்தும் செய்தி போன்ற எதுவுமில்லை என்று அவனால் ஊகிக்க முடிந்தது. சராசரிகளுக்குச் சந்தோஷம் என்பதே ஒரு அரிதான விஷயம். அது அவனுக்கு ஒரு அனுபவபூர்வமான நிஜம். “நீங்க மொதல்லெ கைகால் அலம்பிண்டு வாங்க. வெளியே போக வேணாம். இந்த மழைச் சனியன் வேறெ நின்னு தொலைய மாட்டேங்கறது.” ஸோனா சொன்னபடி சமையற்கட்டின் முன்பகுதியில் முகம், கைகால் அலம்பிக்கொண்டு, தலையைத் துவட்டிக்கொண்டு ஏகநாத் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
ஸோனா ஏகநாத்தின் மனைவி. பெயரைப் போலவே தங்கமானவள். மணமான புதிதில் ஏகநாத் அவள் பெயரை மனதில் அசைபோட்டுப் பார்த்திருந்தான். ஸோனா - தங்கம். இன்னொரு அர்த்தம் உறங்குதல். நம் மனநிலைகளின் அதீதங்களினாலோ பிறத்தியான் பிசகாக நடந்து கொள்வதினாலோ அவன்மீது ஏற்படும் கசப்புணர்வு அறவே மறந்து அடுத்த நாள் அவன் தோள்மீது கைபோட்டு அன்னியோன்னியமாயிருக்க உதவும். தீவிர வெறுப்புகள் தொடராமல் தடைபோடக் கைகொடுக்கும் ஒரு அற்புதமான இயற்கை ஔஷதம். ஸோனாதான் எவ்வளவு ரம்மியமான ஆரோக்கியமான பெயர்!
குழந்தைக்கு ஸிந்தியா என்று பெயரிட்டிருந்தான். ஜனித்தவுடன் முதலில் தன் சிசுவைப் பார்த்ததும் உடனே அவன் நினைவில் நிழலாடியது நீல ஆகாயத்தின் மையத்தில் ஒரு முழு நிலா. சந்திர தேவதையின் பெயரையே அவளுக்கு சூட்டிவிட்டான்.
ஸிந்தியா: “டாடீ, எனக்கு இன்னா கொண்டாந்தே?” “ஒனக்காடா கண்ணா, ஒரு மத்திரெ, ஒனக்கு ஜொரமில்லெ? அப்பறம் ஒரு சாக்கலெட்” “இன்னா டாடீ எனக்கு ஸ்வீட்டு, இன்னெக்கி எனக்கு பெர்த் டேவா?” அவளுக்கு எப்பொழுதாவது அரிதாக இனிப்பு கொண்டு கொடுக்கும் சமயமெல்லாம் அவள் கேட்கும் கேள்வி. சாக்கலெட்டை இரண்டு விள்ளல் கடித்துவிட்டு ஸிந்தியா வாந்தி எடுத்துவிட்டாள். “இப்பொ ஸ்வீட் ஒண்ணு இல்லேன்னு இங்கெ யார் அழுதா?” ஸோனா வெடித்தாள். “என்ன நடந்திச்சு, சொல்லு. காப்பி போடு. சாப்பிட்டிட்டே கேக்கறேன்.” “ஒங்களுக்குக் காப்பிதான் முக்கியம். என்னோட அவஸ்தெயெப் பத்தி ஒங்களுக்கென்ன அக்கறை?” வாந்தியை வாருகாலால் தண்ணீர்விட்டுக் கழுவிக்கொண்டே ஸோனா எரிந்து விழுந்தாள். “சரி, காப்பிகூட அப்புறம் போட்டுக்கலாம். விஷயத்தெச் சொல்லு. தேவதூதன் ஒண்ட்டே வழியிலே சந்திச்சுப் பேசி ஆசியெல்லாம் வழங்கிட்டுப் போனான்ற அற்புத நிகழ்ச்சியெலாம் நீ சொல்லப் போறதில்லெ. அல்ப விஷயம் ஏதாவது சொல்லப் போறே. அதுக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்? சொல்லேன்.”
“என்னெ எதுக்கு வேலைலெ சேத்து விட்டீங்க?”
“புதுஸ்ஸா இதிலெ சொல்றதுக்கு என்னா இருக்கு? சமூகத்தெப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும். நாலு பேரோட நீ பழகணும். அப்பொதான் உலகம்ன்னா என்னான்னு ஒனக்குப் புரியும். ஒன்னோட வாழ்க்கை புருஷன், கொளந்தெ, அடுப்படி, வீட்டுச்சுவர் இதுக்குள்ளேயே முடிஞ்சுவிடக் கூடாதுன்னுதான். இப்பொ ஏன் அதெத் திரும்பக் கேக்கறே?”
“என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க இந்த மாதிரிப் பேச மாட்டீங்க.”
“நானென்ன யேசுநாதரா, பார்க்காமலேயே எல்லாத்தெயும் தெரிஞ்சுக்க? சொன்னாத்தானே தெரியும்?”
“இன்னெக்கி நர்ஸிங் ஹோம்லெ அந்த தியேட்டர் டெக்னீஷிய ராஸ்கல் கோவிந்தன் டியூட்டி ரூம்லெ நர்ஸுப் பொண்ணுகள்ட்டெ அம்மணமா போஸ் கொடுத்துண்டு நிக்கிற வெள்ளெக்காரச்சி ஒருத்தி ஃபோட்டோவைக் காட்னான். அந்த நாலும் சிரிச்சி கொளெஞ்சி நெளியறதுக. வெக்கங்கெட்ட ஜன்மங்க.”
“இதுக்கு ஏன் இவ்வளவு கத்தல்? கோவிந்தன் ஒண்ட்டெ ஒண்ணும் காட்டலியே?”
“ஓ, அந்தக் கண்றாவி வேறெ நடக்கணும்ன்னு ஒங்களுக்கு ஆசையோ?”
“நீ இண்ணெக்கி நல்ல மூட்லெ இல்லே. கொஞ்சம் தண்ணி சாப்பிட்டு அமைதியா இரு.”
“அந்த டாக்டர் கெழம் - பேரம் பேத்தி எடுத்தாச்சு. ஹார்மோன் இன்ஜெக்‌ஷன் போட்டுண்டு ஹெட் ஸ்டாஃப் - அதுக்கு ஊர்லெ ரெண்டு பசங்க படிச்சிண்டிருக்கு - அதோட ராத்திரியிலே குடும்பம் நடத்தறானாம்.”
என்ன பதில் சொல்வதென்று புரியாத நிலையில் ஏகநாத் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.
”ஒங்களுக்கென்ன, ஸ்மோக் பண்ணினா எல்லாம் தீந்து போச்சு. நான் இங்கெ கெடந்து குமுறிண்டிருக்கேன். நர்ஸிங் ஹோம்லேருந்து Creche-க்கு வந்து ஸிந்தியாவெ அழச்சிண்டு மழைலெ நனைஞ்சு வீட்டுக்கு வந்திண்டிருந்தேன். கொட்ற மழைலெ கொடெ இருந்தும் ஒண்ணுதான் இல்லாட்டியும் ஒண்ணுதான். ரோட்லெ ஆள் நடமாட்டம் இல்லெ. ஒரு ஆள் பாண்ட்ஸ், ஷர்ட் போட்டுண்டு கையிலே ஒரு சிகரெட்டோட காரிலே உட்கார்ந்துண்டு ஜன்னக் கதவையெல்லாம் ஏத்தி மூடி வச்சிண்டு சுட்டு வெரலெ வளைச்சி, “மேடம், ஒரு நிமிஷம் இங்கெ வர்றீங்களா?”ன்னு கூப்பிட்டது. யாரெக் கூப்பிட்றான்னு திரும்பிப் பார்த்தா, “மேடம், ஒங்களெத்தான். ஒரு நிமிஷம் கிட்டெதான் வாங்களேன்”ன்னது. ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ சினிமாவில் ஸ்ரீகாந்த் லக்ஷ்மியை காரிலெ லிஃப்ட் கொடுத்து அனுபவிச்சுட்டு எறக்கி விட்டுப் போனது ஞாபகம் வந்தது. பயந்து நடுங்கிண்டு விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வந்தேன்.”
ஸோனா தொடர்ந்தாள். “வந்து அரை மணி நேரமாகல்லெ. ஒரு வாரத்துக்கு முன்னாலெ காலி செஞ்சுண்டு போனாங்களே, அந்த பார்வதி வீட்டுக்காரன் வந்தான். ‘எப்படீம்மா இருக்கே? கொளந்தெ சௌக்கியமா?’ன்னு கேட்டுண்டே உள்ளாரெ வந்து சேர்லெ ஒக்காந்துக் கிட்டான். ‘இங்கே இருக்கறப்போ அந்த மனுஷண்ட்டெ பேசினதுகூட கிடையாது. காபி சாப்பிட்றீங்களான்னு கேட்டேன். சரின்னது. போட்டு டேபிள்ல்லெ வச்சேன். ‘வேணாம். சும்மா தமாஷுக்குத்தான் கேட்டேன்’ அப்படின்னான். என்ட்டெ என்ன தமாஷ்ன்னு நெனெச்சிண்டிருக்கறப்போ ‘வாங்களேன், இளமை சுகம் சினிமாவுக்கு ரெண்டு டிக்கட் வச்சிருக்கேன். சேர்ந்து போகலாம்’ன்னது. எனக்கு ஒதறல் எடுத்துப் போச்சு. ஸிந்தியவெத் தூக்கிண்டு, அந்தப் பக்கத்து போர்ஷன் பொண்ணு குமுதினி இல்லெ, அதான் நைன்த் படிக்கறதே, அதைக் கூப்பிட்டேன். நல்லகாலம் வந்தது. கொஞ்ச நேரம் அந்த ஆள் அப்படியே ஒக்காந்திண்டிருந்தான். ‘நான் அப்பொ போயிட்டு இன்னொரு நாளெக்கி வர்றேன். நான் இப்பொ ஏன் போறேன் தெரியுமா? நான் இப்பொ ஒங்களோட தனியா இருக்கேன். ஒங்க வீட்டுக்காரரு இப்போ வந்தா நம்மளை என்னன்னு நெனைச்சிக்கிருவாரு?’ன்னு சொல்லிட்டே எழுந்தது. குமுதினிப் பொண்ணு கன்னத்தெத் தட்டிக் கொடுத்துட்டே ஏறக்கட்னது. அந்தப் பொண்ணு சொல்றது, அந்த மனுஷன் நல்லவனாம். குடிச்சுட்டு வந்ததுனாலெ இப்படி நடந்துக்கிட்டதாம்.”
ஸோனா இன்னும் முடிக்கவில்லை. “இந்த இழவெல்லாம் முடிஞ்சாவிட்டு கொடெயெ எடுத்துண்டு ஸிந்தியாவெத் தூக்கி இடுப்பிலெ வச்சிண்டு அரைக்கக் கொடுத்த மாவெ வாங்கிவரப் போனேன். ஒரு வீட்டுத் திண்ணைலெ ரெண்டு கேடிப் பசங்க. ‘குட்டி ஷோக்காயிருக்கில்லெ’ அப்படீன்னு கமெண்டு அடிக்குதுங்க.”
ஸோனா கொட்டித் தீர்த்தாள். விசும்பிக்கொண்டே ஸிந்தியாவுக்குச் சோறு ஊட்டிப் படுக்க வைத்தாள். ஸோனாவுக்கு அமைதியின்மை காரணமாகச் சாப்பிடத் தோன்றவில்லை. ஏகநாத்துக்குத் துக்கம் மனம் பூராவும் வியாபித்திருந்த நிலையில் சாப்பாட்டுச் சிந்தனைக்கே இடம் இல்லாமல் போயிற்று. படுக்கையில் கிடந்தார்கள். ஸோனா ஏகநாத்திடமிருந்து ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்தாள். “சமூகம் இண்ணெக்கி ஒன்கிட்டெ அதனோட விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கு, அவ்வளவுதான். தூங்கு. எல்லாம் சரியாப் போகும்” என்றான்.
“உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும் சகிக்கல.”
அவள் கண்களில் கசிந்த நீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல் கிடந்தான் ஏகநாத்.
ஏகநாத் பாவமே செய்யாத புண்ணிய ஆத்மா அல்ல. இருப்பினும், அசிங்கமாகவோ, அநாகரிகமாகவோ, கொச்சையாகவோ, பச்சையாகவோ, விரசமாகவோ நடந்துகொண்டதாக அவனுக்கு நினைவில்லை. அப்பா பண்ணின பாவம் பிள்ளையின் தலைமேல் விடியும் என்று சொல்லக் கேட்டிருக்கிறான். கணவன் செய்த பாவம் மனைவி தலைமேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாகக் கேள்வி இல்லை. மேலும் சமீபத்தில், ஒரு மாமி மனம் கோணாமலும், ஒரு பெண்மணி உளம் நோகாமலும் அவன் அனுசரணையுடன் நடந்து கொண்டிருந்திருக்கிறான். இதற்குச் சன்மானம் கிடைக்கா விட்டாலும், கேடாவது விளையாவது இருந்திருக்கலாம்.
கடைசியில் ஒன்றும் செய்யத் தோன்றாமல், “சாக்கடையில் உழலும் பன்றிகள்” என்று சற்று உரக்கவே கத்தினான். ஏகநாத்தால் இயன்றது அவ்வளவே.
*****
தட்டச்சு : சென்ஷி

Dec 12, 2009

புகையும் வயிறு!-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் – கதாவிலாசம்
கோபி கிருஷ்ணன்


தென் மாவட்டங்களில் பெரும்பான்மை ஊர்களில் பேருந்து நிலையங்கள் ஊருக்கு வெளியே ஏதோ ஓர் இடத்துக்கு இடம் மாற்றப்பட்டுவிட்டன. நள்ளிரவில் பேருந்தை விட்டு இறக்கிவிடப்படும்போது எங்கே இறங்கியிருக்கிறோம் என்று அடையாளமே தெரிவதில்லை. காலங்காலமாக சுவர்பல்லிகளைப் போல பழைய பேருந்து நிலையத்தோடு ஒட்டிக்கிடந்த பேருந்து நிலையவாசிகள் எங்கே போயிருப்பார்கள்?

gopi எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் அத்தனை நடிகர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களுடன், அகலமான நெற்றி நிறைய திருநீறும் கையில் ஒரு பெரிய லென்ஸ§மாக உட்கார்ந்திருக்கும் கைரேகை பார்ப்பவரும், ஒரு கை சூம்பிப்போய் பிச்சையெடுக்கும் நடுத்தர வயதுப் பெண்ணும், தனக்குத்தானே பேசியபடி பேருந்து நிலையத்தைச் சுற்றிச்சுற்றி வரும் சித்த சுவாதீனமற்றவனும், வாயில் பிளேடு துண்டை ஒளித்துக்கொண்டு மடித்துவிட்ட சட்டையும் பழுப்பான வேஷ்டியுமாக நிற்கும் பிக்பாக்கெட்காரனும், மூத்திரச் சந்துக்குள் நின்றபடி கஞ்சா பொட்டலம் விற்பவனும், அசைய முடியாத பருத்த இடுப்புடன் டீக்கடை வாசலில் கால்களை அகட்டி உட்கார்ந்து வெற்றிலை எச்சில் துப்பியபடி கொச்சையாக திட்டிக்கொண்டு இருக்கும் வட்டிக்கு விடும் பெண்ணும், நள்ளிரவில்கூட வெள்ளரிக்காய் விற்கும் அந்த பூப்போட்ட பாவாடை அணிந்த சிறுமியும் எங்கே போயிருப்பார்கள்?
உரித்து எறியப்பட்டுவிட்ட வாழைப்பழத்தின் தோலைப் போல அவர்களும் இனி தேவையற்றவர்களாக வீசி எறியப்பட்டிருப்பார்களா? அவர்களுக்கு வீடு இருக்குமா? எப்போது வீடு திரும்புவார்கள்? குழந்தைகள், குடும்பங்கள் எதுவும் அவர்கள் நினைவிலிருக்காதா? எப்போது முதன் முதலாகப் பேருந்து நிலையத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்திருப்பார்கள்?

மதுரையிலிருந்து சென்னைக்கு வருவ தற்காக ஆம்னி பஸ்ஸில் ஏறியிருந்தேன். இரவு பத்து மணியாகியும் ஏழு மணிக்குப் புறப்பட வேண்டிய பஸ்ஸை எடுக்கவே இல்லை. டிரைவரும் இரண்டு ஏஜென்ட்களும் சுற்றிச் சுற்றி வந்து ஆள் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்படியும் பதினைந்து பேருக்கு மேல் ஏறவில்லை. பஸ் புறப்பட்ட நிலையிலே இரண்டு மணி நேர மாக நின்றுகொண்டு இருந்தது.
பேருந்தில் இருந்த ஒருவர், ஆத்திரத்தில் தான் வேறு பஸ்ஸில் போவதாகச் சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தார். அவரை ஒரு ஏஜென்ட் சமாதானப்படுத்தி உட்கார வைத்தார். பேருந்து நிலையத் தின் இருள் சந்திலிருந்து பைஜாமா ஜிப்பா அணிந்த பருத்த அறுபது வயதைக் கடந்த ஒருவரும், மெலிந்து வெளிறிய ஊதா நிற சல்வார் கமீஸ் உடையணிந்த பெண்மணியும் ஆளுக்கு இரண்டு பெரிய பைகளைத் தூக்கிக்கொண்டு எங்கே செல்வது என்று தெரியாமல் நடந்து வந்தார்கள்.

வட நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது முக ஜாடையிலே தெரிந்தது. ஏஜென்ட்களில் ஒருவன் அவர்களிடம் அரைகுறை இந்தியில் பேசி ஏதோ விசாரித்தான். பிறகு, அவர்களை எங்களது பஸ்ஸில் ஏற்றி ஜன்னலோர மாக உள்ள ஸீட்டில் உட்கார வைத்துவிட்டு, நானூறு ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு கீழே இறங்கினான். பேருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. வயதானவர் சற்று சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, பக்கத்து ஸீட்டில் இருந்தவரைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்தார். பேருந்து புறப்பட்டு சில அடி தூரம் நகர்ந்து திரும்பவும் நின்றது. வயதானவர் அருகில் இருந்த வரிடம், ‘ராமேஸ்வரத்துக்கு அதிகாலை போய்ச் சேர்ந்துவிடுமா?’ என்று கேட்டார். ‘இது ராமேஸ்வரம் போகாது. சென்னை செல்லும் பேருந்து’ என்று சொன்னதும் அவருக்குப் புரியவில்லை. ‘ராமேஸ்வரம் என்று சொல்லித்தானே ஏற்றினார்கள்’ என்று எழுந்து அவசரமாக டிரைவர் அருகே போய் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார் பெரியவர். டிரைவரோ, ‘அதை ஏஜென்ட்டிடம் கேளுங்கள்!’ என்றார். இதற்குள் பஸ் பேருந்து நிலையத்திலிருந்து  வெளியே வந்துவிட்டிருந்தது.

பெரியவர் அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து கீழே குதித்து, பஸ்ஸின் s-ramakrishnanமுன்னால் சாலையில் உட்கார்ந்து கொண்டு விட்டார். அவரது கண்கள் சிவந்திருந்தன. கோபத்திலும் அவர் ஏதோ புலம்பிக்கொண்டு இருந்தார். பேருந்திலிருந்தவர்கள் டிரைவரைத் திட்ட, ‘தனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. எல்லாம் ஏஜென்ட்டின் வேலை!’ என்று அவர் சாதித்துக்கொண்டு இருந்தார். பெரியவரோ ‘ஏஜென்ட் வராமல் இங்கிருந்து எழுந்து வழிவிட மாட்டேன்!’ என்று பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார். இதற்குள் இன்னொரு நபரை சென்னைக்கு ஏற்றிவிட ஆட்டோவில் அழைத்துக்கொண்டு ஆம்னியைத் தேடி வந்து சேர்ந்தான் அதே ஏஜென்ட். பெரியவர் அவனைக் கண்டதும் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டார். அவனும் சளைக்காமல் ‘ராமேஸ்வரம் போவதற்கு இந்த நேரம் பஸ் இல்லை பெரியவரே! அதான் திருச்சிக்கு போய் மாறுவதற்காக இதில் அனுப்பி வைத்தேன். பணம் வாபஸ் கிடையாது!’ என்று சொன்னான். பயணிகளின் சத்தம் அதிக மாகவே ஏஜென்ட் பஸ்ஸில் ஏறி வயதான பெண்மணியையும் அவர்களது பொருட் களையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்படி இழுத்தான். அவள் கம்பி யைப் பிடித்துக்கொண்டு வரமறுத்தாள். யாரும் எதிர்பாராதபடி ஏஜென்ட் அவர்கள் வைத்திருந்த ஒரு பையைப் பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே போட்டான்.

கைதவறி விழுந்த குழந்தையைப் பிடிக்க முயற்சிப்பவள் போல வயதானவள் பெருங் குரலெடுத்து அழுதபடி பேருந்திலிருந்து இறங்கி பையை எடுக்க ஓடினாள். இதற்குள் வயதானவரும் கலக்கத்துடன் இருட்டில் விழுந்துகிடந்த பையிலிருந்து சிதறிய பொருட்களைத் தேடிக் கொண்டு இருந்தார். ஒரு சிறிய மண் கலயம் ஒன்று உடைந்து சாலையெங்கும் சிதறிக்கிடந்தது. வயதானவள் அந்தக் கலயத்தின் துண்டு களையும், தரையில் கொட்டிக் கிடந்த சாம்பலையும் அள்ளிக்கொண்டு, தலையில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள். வயதானவரோ கண்ணில் நீர் தளும்ப Ôசெத்துப்போன என் பையன் அஸ்தி சார். கடல்ல கரைக்கறதுக்காக குவாலியர்ல இருந்து ராமேஸ்வரம் கொண்டுபோயிட்டு இருக்கேன்Õ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். பஸ்ஸில் இருந்த யாவரும் செய்வதறியாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். டிரைவர் தன் ஸீட்டை விட்டு இறங்கி வந்து, இருட்டுக்குள் நின்றிருந்த ஏஜென்ட்டின் முகத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தார். பிறகு, அவனைத் தரதரவென செத்த எலியை இழுத்துக்கொண்டு செல்வதுபோல அந்த அம்மாவின் காலடியில் இழுத்துப்போட்டு, ‘மன்னிப்புக் கேளுடா!’ என்று இந்தியில் சொன் னார். அவன் தயங்கித் தயங்கி ‘வயித்துப்பாட் டுக்காகச் செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சிருங்க அம்மா!’ என்றான். அவள் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ஏஜென்ட் வந்த ஆட்டோ இருளில் நின்றுகொண்டு இருந்தது. பெரியவர் உடைந்துகிடந்த கலயத்தையும் மண்ணில் விழுந்த சாம்பலையும் அள்ளி ஒரு பிளாஸ்டிக் காகிதத்துக்குள் போட்டுக்கொண்டு இருந்தார். டிரைவர் ஆத்திரத்துடன் ஏஜென்ட்டிடம் ‘இவர்கள் இருவரையும் ஒரு டாக்ஸியில் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியது உன் பொறுப்பு!’ என்று சொல்லிவிட்டு, தன் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை அப்படியே எடுத்து பெரியவரிடம் கொடுத்தார். பிறகு பேருந்து புறப் பட்டது. வயதான பெண்ணும் பெரியவரும் ஏஜென்ட்டுடன் ஆட்டோவில் ஏறிக்கொண்டு ,இருந்தார்கள்.
டிரைவர் பஸ் கிளம்பும் முன்பாக பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டபடி, ‘என்ன சார் செய்றது? நாய் பிழைப்பாப் போச்சு... எப்படி யாவது உங்களை காலையில எட்டு மணிக்குள்ளே மெட்ராஸிலே கொண்டுபோய் சேர்த்துடறேன்!’ என்றபடி பேருந்தை இயக்கினார்.

அடித்தட்டு மக்களின் உலகம் விசித்திரமானது. அதன் போராட்ட மும் இயல்பும் நாம் தீர்மானிக்க முடியாதது. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதுவதும் அவர்களின் உலகைப் புரிந்துகொள்வதும் சமகால இலக்கியத்தின் முக்கிய போக்காக உருவாகிக்கொண்டு இருக்கிறது. தமிழில் இது போன்ற எழுத்துக்கு முன்னோடி யாக ஜி.நாகராஜனையும் ஜெயகாந்தனையும் குறிப்பிடலாம். இதன் தொடர்ச்சியாக உருவான நவீன சிறுகதை உலகில் முக்கிய எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்.

பெருநகர வாழ்க்கை எப்படி மனிதர்களைத் தங்களது இயல்பான உணர்ச்சிகளைக்கூட வெளிப்படுத்த முடியாமல் ஒடுக்கிவிடுகிறது என்பதைப் பற்றியே கோபி கிருஷ்ணனின் கதைகள் பேசுகின்றன. வாழ்வின் அபத்த நிலைகளை எதிர்கொள்ளும் நெருக்கடிகளே அவரது கதையுலகம். கோபி கிருஷ்ணனின் மனிதர்கள் ஒண்டிக்குடித்தனங்களில் வாழ்பவர்கள். மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவர்கள்... ஆனால், மனதுக்குள்ளாகத் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக்கொண்டு சமாதானம் அடைகிறவர்கள். இவர்கள் உலகத்தில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. குளிப்பது முதல் புணர்வது வரை யாவும் யாவரும் அறிந்த நிகழ்ச்சிகளே. எருமைமாட்டிலிருந்து கவர்ச்சி நடிகை வரை எல்லாவற்றைப் பற்றியும் இவரது கதை உலகம் ஆதங்கத்துடன் பேசித் தீர்க்கின்றன.

கோபி கிருஷ்ணனின் புயல் என்ற சிறுகதை, மாநகரில் புயல் மழையன்று ஒரு குடும்பத்தின் காட்சியை விவரிக்கிறது. வேலையிலிருந்து கிழிந்துபோன மழைக்கோட்டுடன் வீடு திரும்பும் பொறுப்பான ஒரு குடும்பத் தலைவன், வழியில் குழந்தையின் நினைவு வரவே அதன் காய்ச்சலுக்கு ஒரு மாத்திரையும் சாக்லெட் ஒன்றும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறான். வீட்டில் குழந்தை சாக்லெட்டைக் கண்டதும், ‘என்னப்பா இன்னிக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கே. எனக்குப் பிறந்த நாளா?’ என்று கேட்கிறது. தனது அக்கறை இன்மையை நினைத்து அவனுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. புதிதாக வேலைக்குப் போகத் துவங்கி இருந்த மனைவி புலம்புகிறாள்.

தான் வேலை செய்யும் மருத்துவ மனையில் ஆபாசப்படங்களை வைத்துக் கொண்டு ஓர் ஊழியர் செவிலியரோடு கேலி பேசுவதையும், அங்குள்ள கிழட்டு மருத்துவர் ஒரு செவிலியைச் சேர்த்து வைத்துக்கொண்டு சல்லாபம் செய்வதையும் பற்றி சொல்கிறாள். வேலைதான் இப்படியிருக்கிறது என்றால், வேலை விட்டு வரும் வழியில், மழையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஒருவன் ஆபாசமாக ஜாடைகாட்டி அவளை அழைக்கிறான். பயத்துடன் மகளின் பள்ளிக்கு அவசரமாகப் போய் அவளைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறாள்.

வீட்டிலோ சில மாதங்களுக்கு முன்பு அதே வீட்டில் குடியிருந்த ஒருவன் நன்றாகக் குடித்த நிலையில் உள்ளே நுழைந்து, சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபடி ‘இளமை சுகம்’ படத்துக்கு டிக்கெட் இருக்கிறது போகலாமா என்று கேட் கிறான். அவள் பயத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய் ஒளிந்துகொள்கிறாள்.

இப்படி ஒரு நாள் வாழ்க்கையின் கசடுகளைக் கொட்டுகிறாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்த கணவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை யாருக்கும் எந்த இடையூறும் செய்திராத தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தன்னைத்தானே சலித்துக்கொண்டபடி ‘சாக்கடையில் உழலும் பன்றிகள்!’ என்று அவர்களைத் திட்டுகிறான். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவனால் என்பதோடு கதை முடிகிறது.

நெருக்கடிகளுக்குப் பழகிக்கொள் வதைத் தவிர, அதை எதிர்கொள்வதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை என்பதை கோபி கிருஷ்ணனின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. பரிகாசமும் வலியும் கலந்த இந்தக் கதையை வாசித்து முடிக்கும்போது, நூற்றாண்டுகளாக அறிவுறுத்தப்பட்டு வரும் நீதி நூல்களும் தர்ம விசாரங்களும் வாழ்க்கையின் மீது எந்த எதிர்வினையும் ஏற்படுத்தவில்லை என்பதையே உணர முடிகிறது. உடைந்த கண்ணாடியைப் போல வாழ்வு முகம் காணும் யாவரையும் சிதறடித்துதான் காட்டுகிறது. வாழ்வின் கரங்கள் எப்போது உயர்வைத் தருகிறது, எப்போது கீழ்மையை உருவாக்குகிறது என்பதை எவரும் சொல்ல முடியாது. யாராலும் வெல்ல முடியாத வில்லாளியான அர்ச்சுனனும் கூட சில காலம் அரவாணியாகத்தான் வாழ்ந்திருக்கிறான். இப்படித்தானிருக் கிறது வாழ்வின் ருசி!

நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படும் கோபி கிருஷ்ணன் மதுரையில் பிறந்தவர். உளவியல் & சமூக சேவை இரண்டிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். “ஆத்மன் ஆலோசனை மையம்Õ” என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர். மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். ஒவ்வாத உணர்வுகள், தூயோன், மானிட வாழ்வு தரும் ஆனந்தம், டேபிள் டென்னிஸ் போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள். வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலஹீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003-ஆம் ஆண்டு காலமானார்.

Aug 2, 2009

இழந்த யோகம்-கோபி கிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன்

மாரிச்சாமி அந்தப் பெண் -- மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை.

அவன் கேட்டான், 'இந்த நிக்கோடின் அடிமைத்தனத்தை நிறுத்த மனநல மாத்திரைகள் தருவீர்களா ? ' என்று.

'என்ன ? ஒரு நாளைக்கு எத்தனை ஊதுகிறீர்கள் ? ' என்றாள் மருத்துவர்.

'ஒரு நாற்பது, நாற்பத்தஞ்சு இருக்கும். ஒன்றையடுத்து இன்னொன்று சங்கிலி மாதிரி ' என்று தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டான் மாரிச்சாமி.

'என்ன செயின் ஸ்மோக்கிங்கா ? ' கிண்டலடித்தாள் மருத்துவர்.

மாரிச்சாமிக்குக் கொஞ்சம் கடுப்பாக இருந்தது. இருந்தும் சொன்னான், 'பெரிய சிகரெட் எல்லாம் ஒன்றும் இல்லை. சிறு அளவிலான மினி சிகரெட்தான் ' என்று.

'இந்த மினி ஸ்கர்ட் மாதிரியா ? ' என்றாள் மருத்துவர்.

மாரிச்சாமிக்கு வெறுப்பாக இருந்தது. மருத்துவர் ரொம்பவும் பழைமைவாதி என்றும் நவீனத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவள் என்றும் நினைத்துக்கொண்டான். சற்று ஏறிட்டுப் பார்த்தான். மருத்துவர் புடவை தான் கட்டியிருந்தாள். இன்னும் பெரிய புடவை கட்டிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றிற்று அவனுக்கு.

மருத்துவர் சொல்லிவிட்டாள், 'எல்லாம் சுய கட்டுப்பாட்டில்தான் நிறுத்த வேண்டும். மாத்திரை மருந்தெல்லாம் ஒன்றும் இல்லை ' என்று.

மாரிச்சாமி வீழ்ந்தான். பாதாளத்தில். அதலபாதாளத்தில். எழுந்திருக்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டான். அவ்வளவு தானா ? யாரும் காப்பாற்ற மாட்டார்களா ? நெஞ்சடைத்துச் சாக வேண்டியது தானா ? இவர்கள் விஞ்ஞானம் என்கிறார்கள்.முன்னேற்றம் என்கிறார்கள். சனியன், ஒரு சின்ன, மிக மிகச்சின்ன மினி சிகரெட்டை நிறுத்த மருத்துவம் இல்லையா ? மாரிச்சாமி வீழ்ந்தான். மீண்டும் மீண்டும் திரும்பவும் திரும்பவும் மறுபடியும் மறுபடியும் வீழ்ந்து கொண்டேயிருந்தான். ஆபத்து காலத்தில் கைதூக்கிவிட யாரும் வர மாட்டார்களா இந்தப் பரந்த மாநகரில் ? ஒரு ஜீவன் ' ஓர் உயிர் '

ஒரு வாரம் சென்றது. இரண்டு வாரம் சென்றது. யாருமே தன்னைக் காப்பாற்ற வரவில்லையே என்ற கவலையும் தொற்றிக்கொள்ள நாற்பது நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது ஐம்பைத்தைந்தாக மினி சிகரெட் உயர்ந்தது.

மூன்றாவது வாரம். தற்கொலை செய்துகொள்ளலாமா என்றிருந்தது மாரிச்சாமிக்கு. மினி சிகரெட்டே ஒரு சிறு சிறு அளவிலான சின்னச் சின்ன அளவிலான மெதுமெதுவான குட்டியூண்டு குட்டியூண்டான தற்கொலை நகர்வுகள்தான் என்று தோன்றிற்று. ஆகவே பெரிய அளவில் திட்டமிட்டுத் தற்கொலை செய்துகொள்வது அவ்வளவு சரியானதாகப்படவில்லை. அந்த ஆசையும் நிராசையாகிவிடவே மாரிச்சாமியின் மனம் மிகவும் சோர்ந்துவிட்டது. மினி சிகரெட் ஐம்பத்தேழு எட்டாக உயர்ந்தது மனச்சோர்வுடன் சேர்ந்து.

நான்காவது வாரம். மிகவும் தொய்ந்து போனான் மாரிச்சாமி. அலுவலகத்தில் இருந்தான் கவலையே உருவான முகத்துடன் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவனாகக் காணப்பட்டான். நிறைய இருமினான். கண்ணாடி போத்தல் உடைந்து சிதறியது போல இருந்தது இருமல் சப்தம். நிறையத் தண்ணீர் குடித்தான். நாக்கு வறண்டு வறண்டுப் போய்க்கொண்டிருந்தது. 'ஆட்டம் க்ளோஸ் தான் போல ' என்று நினைத்துக் கொண்டான் மாரிச்சாமி. கொஞ்சம் வேகமாக நடந்தாலே மூச்சிரைத்தது. படியேறுவதைப்பற்றிப் பேச்சே வேண்டாம்.

நாற்காலியில் அமர்ந்திருந்தவனுக்கு நினைவில் டக்கென்று ஒரு பொறி தட்டிற்று. 'பராமரிப்பு ' என்ற ஒரு நிலையம் ஞாபகத்துக்கு வந்தது. அதுதான் மருத்தடிமைத்தனத்திலிருந்தும் குடிப்பழக்கத்திலிருந்தும் பிரச்சினை உள்ள நபர்களை மீட்டுக் கொண்டிருந்தது.

தொலைபேசி எண் புத்தகத்தைப் புரட்டி விலாசத்தையும் எண்ணையும் குறித்துக் கொண்டான். அவசர அவசரமாக எண்களைச் சுழற்றினான். ஒரு பெண் குரல். நிலையத்தின் பணி நேரத்தைத் தெரிந்து கொண்டான். நான்கரை மணிக்கு அனுமதி பெற்றுக் கொண்டு நிலையம் நோக்கி விரைந்தான். நிலையம் அடையாரில் இருந்தது.

'பராமரிப்பு ' கீழ் தளத்தில் இருந்தது. மாரிச்சாமி மோபெட்டை முன்பக்க வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

நடு அளவிலான ஓர் அறை. அது முன் பக்கமிருந்தது. இரண்டு மேசைகளில் கோப்புகள் நிறைந்திருந்தன.

ஒரு வாலிபர் இருந்தார். மாரிச்சாமி தன் பிரச்சினையைச் சொன்னான். உள் அறையிலிருந்து ஒரு பெண்மணி வந்தாள். 'என்ன, புது கேஸா ? ' என்று கேட்டாள். வாலிபர் தலையசைத்தார்.

வாலிபர் தன்னைச் சமூகப்பணியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பெயர் ராமேஸ்வரன் என்றார். மாரிச்சாமி தன் பெயரைச் சொல்லிக் கைகுலுக்கினான்.

சமூகப்பணிக்கென்றே தான் முதுகலைப்பட்டம் படித்திருப்பதாகச் சொன்னார் வாலிபர். மாரிச்சாமி 'இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ? ' என்று கேட்டான் அப்பாவித்தனமாக.

'சமூகப்பணி தான். மருந்தடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்கும் சமூகப்பணி ' என்றார் வாலிபர்.

'அது மீட்புப்பணி இல்லியோ ' ' என்று வியந்தான் மாரிச்சாமி.

'மீட்புப்பணியும் சமூகப்பணியும் ஒன்றுதான். ஆங்கிலத்தில் intervention என்பார்கள் ' என்றார் வாலிபர்.

'ஓ, அப்படியா ' ' என்றான் மாரிச்சாமி.

மாரிச்சாமி மீண்டும் தன் பிரச்சினை குறித்துச் சிறு அளவில் எடுத்துச்சொன்னான்.

'அட, மினி சிகரெட் தானே ? கவலையை விடுங்கள். 'பராமரிப்பு ' காஞ்சா, குடி, எல்.எஸ்.டி., ஹெராயின், பெத்தடின், ப்ரவுன் ஷ்உகர், புகையிலை, சிகரெட், பான்பராக் அனைத்தையும் நிறுத்த உதவிக் கொண்டிருக்கிறது ' என்று சொன்னார் வாலிபர்.

மாரிச்சாமிக்கு மூச்சு வந்தது, மினி சிகரெட் புகை வாசம் கலந்த மூச்சே என்றாலும். மிகவும் ஆறுதலாக உணர்ந்தான்.

மருத்துவர் வர இன்னும் அரை மணி செல்லும் என்றும் காத்திருக்குமாறும் வாலிபர் கேட்டுக் கொண்டார்.

ஆட்கள் வர ஆரம்பித்தார்கள். மாரிச்சாமிக்கு ஒரு மினி சிகரெட் தேவைப்பட்டது. இவர்கள்தான் விடவைப்பதாகச் சொல்லியிருக்கிறார்களே என்று வெளியே வந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான்.

மீண்டும் உள்ளே நுழைந்தபோது மருத்துவர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்த ஆட்களிடையே நிசப்தம் போன்ற எதோ ஒன்று தோன்றியிருந்தது. பேச்சு தணிந்த குரலில் இருந்தது. ஓராள் அடுத்து இன்னொரு ஆளாக உள்ளே போய் வந்து கொண்டிருந்தார்கள்.

'கடைசியாகத்தான் புது கேஸ் பார்ப்பார்கள் ' என்று நோயாளி ஒருவர் சொன்னார். மாரிச்சாமி தலையசைத்தான்.

மாரிச்சாமியின் முறை வந்தது. உள்ளே சென்றான். மருத்துவர் அமர்ந்திருந்தாள். சல்வார் கமீஸில் ஷால் பரத்திக் கொண்டிருக்க ஜாலியாக அமர்ந்திருந்தாள். மாரிச்சாமிக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. அவள் மினி ஸ்கர்ட் பற்றித் தரக்குறைவாகப் பேசாத நவீனப் பெண் - மருத்துவராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டான். மாரிச்சாமிக்கு நவீன உடைகள் பிடிக்கும், குறிப்பாக மினி ஸ்கர்ட் வகையறாக்கள்.

தன் மினி சிகரெட் பிரச்சினை குறித்து மாரிச்சாமி சொன்னான். மருத்துவர் கைவிரித்தாள். ஒன்றும் செய்வதற்கில்லை என்பதை நிறைய வார்த்தைகளில் மிருதுவாகச் சொன்னாள்.

மாரிச்சாமி மீண்டும் வீழ்ந்தான்.

அன்றிரவு முழுக்க மினி சிகரெட்டுகளை ஊதியவண்ணமிருந்தான்.

அடுத்த நாள் அரை நாளுக்கு மேல் அவனால் வேலை செய்ய முடியவில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டான்.

மிகுந்த சிக்கல்களுடன் ஒரு மாதம் கழிந்தது. மாரிச்சாமி மிகவும் மெலிந்திருந்தான். ஒரு சீக்காளிக்களை முகத்தில் குடியேறியிருந்தது.

அந்த ஞாயிறுதான் சிதம்பரம் வந்திருந்தார். பிராந்தியத்திலேயே முதல் நம்பர் மருத்துவரிடம் அவனை அடுத்த நாள் அழைத்துச் செல்வதாக வாக்களித்தார். அவனிடமிருந்த மினி சிகரெட் பெட்டிகளைப் பறித்துச் சென்றார். சிதம்பரம் சென்று பத்து நிமிடம் கழித்து மாரிச்சாமி அறையைப் பூட்டிக்கொண்டு கீழே வந்து பக்கத்திலிருந்த பங்க் கடையில் ஒரு பெட்டி மினி சிகரெட் வாங்கிக்கொண்டான். அன்றிரவு மாரிச்சாமி ஓரளவு ஆசுவாசத்துடன் தூங்கினான்.

திங்கள் மாலை அலுவலகம் விடும் சமயம் சிதம்பரம் வந்தார். ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவனை அழைத்துச்சென்றார். மருத்துவர் ஓர் அம்மையார். முதியவர். சாந்தமே உருவானவர். சிதம்பரம் மாரிச்சாமியின் பிரச்சினையை எடுத்து சொன்னார். அம்மையார் ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதி மாரிச்சாமியிடம் நீட்டினார். அது ஒரு யோக கேந்திரத்தின் விலாசம். அண்ணாநகர் கிழக்கில் மீட்பர் ஆலயம் அருகில். மாரிச்சாமி தங்கியிருந்த விடுதியிலிருந்து சுமார் ஏழுகிலோ மீட்டர் தொலைவு.

அடுத்த நாள் காலை மாரிச்சாமி எழத் தாமதமாகிவிட்டிருந்தது. யோக கேந்திரத்தை அடையும்போது மணி ஒன்பது ஆகிவிட்டது. அது ஒரு பிரம்மாண்டமான மூன்றடுக்கு பங்களா. வெளியே கார் நிறுத்த இடம். பிற வண்டிகள் விட பெரிய வெளி. மாரிச்சாமி தன் வண்டியை நிறுத்து விட்டு உள்ளே நுழைந்தான். அழைப்பு மணி. அழுத்தினான்.

சில கணக் காத்திருப்பின் பின் அவன் முகத்தில் ஓர் இன்பப்புயல் வீசிற்று. புயலில் சிக்கித் தவித்தான் மாரிச்சாமி.

ஓர் அழகான, மிக மிக அழகான ஓர் இளம் பெண் - இருபத்து இரண்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் - வந்து கதவைத் திறந்தாள். சின்ன வெள்ளை குர்தாவும் அதே நிற மினி ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். முகம் கிழக்கத்திய - மேற்கத்தியக் கலவையாக இருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் அழகை வெளிப்படுத்திற்று. இதழின் வலது ஓரத்தில் ஓர் இளம் நெளிவு, நகை, முறுவல், வேறென்ன..

முப்பத்து ஐந்து வயது வரை உடலில் உயிரைப் பாதுகாத்து வைத்திருந்தது பற்றி மாரிச்சாமி முதல் முறையாக சந்தோசப்பட்டான். தன் ஆதர்சப் பெண்ணை, இலட்சியப்பெண்ணை முதல் முதலில் சந்தித்திருந்தான் மாரிச்சாமி. அவன் மிகவும் நேசித்த அழகு, அவன் விரும்பிய முக இனிமை, குறிப்பாக அவன் மிகவும் ஆசைப்பட்ட உடைகள்.

புயலிலிருந்து மீட்டுக்கொள்ளச் சற்று நேரம் ஆயிற்று மாரிச்சாமிக்கு. அம்மையார் கொடுத்த துண்டுக் காகிதத்தை அவளிடம் நீட்டினான்.

பெண் தலையசைத்தாள் உள்ளே அழைத்துச் சென்றாள். அவளது நடை மிகவும் ஒயிலுடன் இருப்பதாகப் பட்டது மாரிச்சாமிக்கு. மீண்டும் புயலில் சிக்கிக்கொள்ளாமலிருக்கக் கடுமையான முயற்சி தேவைப்பட்டது.

பெரிய வரவேற்பு அறை. மூன்று பக்கங்களிலும் விலையுயர்ந்த சோஃபாக்கள். ஒரு பக்கத்தில் பெரிய மேசை ஒன்று. பக்கத்துக்கு ஒன்றாகக் கைவேலைப்பாடுகள் அமைந்த இரண்டு நாற்காலிகள்.

ஒரு நாற்காலியைச் சுட்டினாள் பெண். மாரிச்சாமி மிகவும் கூசி குறுகலுடன் உட்கார்ந்துகொண்டான். தான் இதுநாள் வரை காதலித்து வந்த ஒரு பேரழகின் முன்னால் ஒரு துரும்பாக உணர்ந்தான் மாரிச்சாமி.

'சொல்லுங்கள் ' என்றாள் பெண்.

'மினி சிகரெட் விட யோகாசன முறையில் இங்கு சிகிச்சை கொடுக்கிறார்கள் என்று அம்மையார் சொன்னார் ' என்றான் மிகுந்த தடுமாற்றத்துடன்.

'என்ன சிகரெட் ' ' வியந்தாள் பெண்.

'மினி சிகரெட் ' என்றான் மாரிச்சாமி சாதாரணமாக.

அந்தப் பெண் இப்பொழுது சிரித்தாள். வாய்விட்டுச் சிரித்ததாக மாரிச்சாமிக்குத் தோன்றிற்று. பல் வரிசை நேர்த்தியாக இருந்தது. குறிப்பாக அந்த மேல் வரிசைத் தோசைப் பற்கள் இரண்டும் சரியான அளவில் அமைந்திருந்தன. மாரிச்சாமிக்குச் சந்தோசமாக இருந்தது மீண்டும். ஆனால் ஏன் அவள் சிரிக்கவேண்டும் என்று புரியவில்லை. ஒரு வேளை தன்னைச் சந்தித்ததில் அவளுக்கும் சந்தோசம் பொங்கியிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.

பெண் அவனைச் சற்று காத்திருக்குமாறு சைகை செய்துவிட்டு உள்ளே சென்றாள். பதினைந்து நிமிடக் காத்திருப்பிற்குப் பின் உயரமான, பருமனும் இல்லாமல் ஒல்லியும் இல்லாமல் தாடியும் மீசையுமாகச் சிவந்த நிறத்தில் ஒருவர் அங்கு தோன்றினார். ஐம்பது வயது இருக்கும். தன் பெயர் கிஷன்சந்த் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மாரிச்சாமி கைகுலுக்குவதற்காகக் கை நீட்ட அவர் கை கூப்பினார்.

மாரிச்சாமி தன் மினி சிகரெட் பிரச்சினையைச் சொல்ல கிஷன்சந்த்ஜியும் முறுவலித்தார். மாரிச்சாமிக்குக் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் தான் தன் பிரச்சினையைத் தெளிவாக முன் வைத்துவிட்டதான திருப்தி ஏற்பட்டது.

அடுத்த திங்களிலிருந்து ஓர் ஐந்து நாட்கள் இரவு 8.00மணி முதல் 8.30வரை வர வேண்டும் என்றார். பிறகு காலை வகுப்புகளில் 6.30முதல் 7.30வரை பிற மாணவர்களுடன் கலந்துகொள்ளலாம் என்றார் கிஷன்சந்த்ஜி.

மாரிச்சாமிக்கு நம்பிக்கை வரவில்லை. 'மினி சிகரெட்டை விட்டுவிட முடியும்தானே ? ' என்று மீண்டும் ஒரு முறை திட்டவட்டமாகக் கேட்டான்.

'சேர்ந்த ஒருமாதத்தில் பலன் தெரியும் ' என்றார் குருஜி.

கட்டணம் ரூ.4130/- எட்டுமாதப்பயிற்சி தினமும் காலை ஒரு மணி நேரம் மட்டும்.

மாரிச்சாமி ரூ.130/-ஐ முன்பணமாக நீட்டினான். குருஜி கூடுதலாக ஒரு ரூபாய் கேட்டார். ஏனென்று தெரியாவிட்டாலும் மாரிச்சாமி கொடுத்தான். எவ்வளவு பெரிய சமாச்சாரம் நடக்கப்போகிறது. காசு பணம் பார்த்தால் முடியுமா ' மீதியைக் கூடிய விரைவில் கொடுப்பதாக வாக்களித்து விட்டுக் கிளம்பினான் மாரிச்சாமி. குருஜி கைகூப்பினார்.

மாரிச்சாமி அலுவலகத்தில் பி எஃப் லோன் போட்டான். கிடைக்கச் சில நாட்கள் ஆகும் என்றார்கள்.

மாரிச்சாமிக்கு ஒரு திடார் சந்தேகம் வந்தது. ஆகையால் வியாழன் மாலை யோக கேந்திரத்துக்கு மீண்டும் சென்றான். குருஜியிடம் கேட்டான், 'யோகப் பயிற்சி மதம் சம்பந்தப்பட்டதா ? ' என்று. 'இல்லை ' என்றார் குருஜி. 'ஆனால் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது ' என்றார்.

மாரிச்சாமி காலையில் தினமும் நான்கைந்து க்ளாஸ் டா குடிப்பான். இடையிடையே மினி சிகரெட். ஒரு கட்டத்தில் கக்கூஸ்உக்கு வரும். போய் வருவான். வந்து ஒரு டாயும் சிகரெட்டும் குடிப்பான். அந்தச் சமயத்தில் மிகவும் ஓய்வாகவும் ஆசுவாசமாகவும் உணர்வான். அது மட்டும்தான் தான் உணரும் ஆன்மீக அனுபவம் என்று ஒருமுறை சிதம்பரத்திடம் சொல்லியிருந்தான். சிதம்பரம் ஒரு முற்போக்குவாதி ஆனால் சில சமரசங்களுடன் 'ஒரு முழு நாளில் சில கணங்களேயாயினும் உங்களால் ஆசுவாசமாக உணர முடிவது ஒரு பெரிய விஷயமல்லவோ ? நீங்கள் அதற்கு என்ன பெயர் வைக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல ' என்று சொல்லிவிட்டிருந்தார் சிதம்பரம்.

ஆரம்பத்திலேயே காரசார விவாதங்கள் வேண்டாம் என்று மாரிச்சாமி சும்மா இருந்துவிட்டான். தவிர அந்தப் பெண்ணை பார்க்கவாவது தான் அங்கு போக வேண்டும் என்று நினைத்தான்.

அடுத்த வாரம் திங்கள் முதல் வகுப்பு. எட்டு மணி வகுப்புக்கு ஏழே முக்காலுக்கே சென்றிருந்தான் மாரிச்சாமி. வழியில் மோபெட்டை நிறுத்தி ஒரு மினி சிகரெட் பிடித்திருந்ததில் நாக்கு வறண்டிருந்தது. அவனுக்குத் தண்ணீர் தேவைப்பட்டது. வரவேற்பறையில் அந்தப் பெண்தான் தண்ணீர் தந்தாள் முகத்தில் மென்னகையுடன். வெறும் தண்ணீர் அல்ல. மூலிகை கலந்த தண்ணீர். ஒரு வினோதமான சுவையுடன் இருந்தது அது. இனிப்பு, கசப்பு, புளிப்பு மூன்றும் சேர்ந்த கலவைச் சுவை. நாக்கு வறண்டிராவிட்டாலும் தினமும் அவள் கையால் ஒரு லோட்டா மூலிகைத் தண்ணீர் அருந்த வேண்டும் என்றிருந்தது மாரிச்சாமிக்கு.

வகுப்பில் ஆரம்ப கட்ட மாணவர்கள் பதினைந்து பேர் இருந்தார்கள். பாதி நேரம் விரிவுரை. மீதி எளிய யோகாசனப் பயிற்சிகள். மாரிச்சாமிக்கு மூச்சு வாங்கியது. முழுதாகவெல்லாம் மூச்சை உள்ளிழுத்து வெளிவிட முடியவில்லை. மூச்சுத் திணறல். போகப் போகச் சரியாகிவிடும் என்றார் குருஜி.

கண்களை மூடிக்கொண்டார் குருஜி. மாணவர்களும் கண்களை மூடிக்கொண்டார்கள். குருஜி 'ஓம் ' என்றார் நீளமாக. சற்றுக் கழித்துச் சமஸ்கிருதச் சுலோகம் ஒன்றை உச்சாடனம் செய்தார். சில வினாடிகள்தான்.

பிறகு பூசை நடந்தது. ஒரு மூலையில் மேடை போன்ற அமைப்பு ஒன்றில் இந்துச் சாமி படம் ஒன்றும் ஒரு துறவியின் படமும் இருந்தன. பக்கவாட்டில் ஒரு குத்து விளக்கு சுடர்விட்டுக் கொண்டிருந்தது. குருஜி கற்பூரம் காட்டினார். பழகிய மாணவன் ஒருவன் மணியடித்தான். குருஜி வாக்குத் தவறுகிறார் என்று நினைத்தான் மாரிச்சாமி.

மாரிச்சாமியிடம் கற்பூரத் தட்டு நீட்டப்பட்டது. வேறு வழியில்லாமல் கண்களில் ஒற்றிக் கொண்டான். பாழாய்ப் போயிருந்த மாரிச்சாமியின் நெற்றியில் வாழ்க்கையில் முதல் முறையாக விபூதி ஏறிற்று. சற்றுக் கழித்துக் குங்குமமும். பெரும் பக்திமானாகக் காட்சியளித்தான் மாரிச்சாமி. தட்டில் கற்கண்டுப் படிகங்கள் இருந்தன. அது மாரிச்சாமிக்குப் பிடிக்கும் நிறைய அள்ளி வாயிலும் மீதியைச் சட்டைப்பையிலும் போட்டுக் கொண்டான்.

ஐந்து நாட்கள் முடிந்தன. மினி சிகரெட் ஓரளவு, ஓரளவேனும் குறைந்திருந்தது. குருஜி நிறைய கட்டுப்பாடுகள் விதித்திருந்தார். அதில் பாதியைக் கூட மாரிச்சாமியால் பின்பற்ற முடியவில்லை. ஆனால் இப்போது கொஞ்சம் தெம்பாக இருந்தான். தினமும் அந்தப் பெண்ணை மூலிகைத் தண்ணீரைச் சாக்கிட்டுப் பார்ப்பதைக் கைவிடவில்லை.

அடுத்த நாளிலிருந்து காலை வகுப்புகள். காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குருஜி கொடுத்திருந்த காவிக் கலர் முழுக்கால் சட்டையை அணிந்து கொண்டு தினந்தோறும் தவறாமல் யோகாசன வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தான். மூன்றாம் மாடி தாண்டி மொட்டை மாடியில் பயிற்சி. கீத்துக் கொட்டகை. ஓலைகளால் மூடப்பட்ட பெரிய ஒரு கூடம். சுமார் அறுபது மாணவர்கள். ஐந்து மாணவியர். ஒவ்வொருவருக்கும் ஒரு பாய். நல்லவேளையாகக் காலை வகுப்புகளில் பூசை இல்லை.

அவனுக்குப் பிடித்த யோகாசனப் பயிற்சிகளுள் ஒன்று குழந்தை தவழும் நிலையில் உடலை இருத்திக் கொள்வது. ஒரு பாவமும் அறியாத குழந்தையாக உணர்ந்தான் மாரிச்சாமி அப்பொழுதெல்லாம்.

மாரிச்சாமிக்கு பி.எஃப் லோன் கிடைத்தது. அடுத்த நாள் பத்தாம் நாள். வகுப்பு முடிந்ததும் குருஜியிடம் வள்ளிசாக நாலாயிரம் ரூபாய் கட்டி தன் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டான் மாரிச்சாமி.

நடுவில் மாரிச்சாமி சிதம்பரத்துடன் தொலைபேசி மூலம்பேசினான். தான் யோகாசன வகுப்புகளில் சேர்ந்துவிட்டதாகவும் நிலைமை பரவாயில்லை என்றும். 'நான் தான் சொன்னேனே. எல்லாம் சரியாகிவிடும் ' என்றார் சிதம்பரம்.

காலை வகுப்பு மாணவர்களில் நான்கைந்து பேர் மாரிச்சாமிக்குப் பரிச்சயமானார்கள். தனை ஒத்த வயதுடைய ஒரு மாணவரிடம் மாரிச்சாமி அந்த மூலிகைத் தண்ணீர்ப் பெண் பற்றி விசாரித்தான்.

குருஜியின் பூர்வீகம் வார்தா. அந்தப் பெண் மகாராஷ்டிராவில் சேவாக்கிராமில் காந்தி மருத்துவ நிலையக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு வார்தாவில் தனிப்பயிற்சி மேற்கொள்ளுமுன் ஓய்வாக இருக்கத் தன் தகப்பனரான கிஷன்சந்த்ஜி வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்தாள். பெயர் சாரதா. வந்து மூன்று வாரங்களே ஆகின்றன. இன்னும் ஒரு வாரத்தில் போய்விடுவாள். ஆனால் 'அந்தக் குட்டையான பாவாடைப் பெண்தானே ? ' என்று மாணவர் கேட்டதைத் தான் மாரிச்சாமியால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. 'மினி ஸ்கர்ட் என்று சொல்லவேண்டும் ' என்று மாரிச்சாமி கட்டாயப்படுத்தி அவரைத் திருத்த நிலைமை கொஞ்சம் எக்கச்சக்கமாகிவிட்டது. நவீன உடை ரசிகனான மாரிச்சாமிக்கு உடைகளின் பெயரைச் சரியாகச் சொல்லாவிட்டால் உணர்ச்சி பொங்கியெழுந்துவிடும்.

பணம் சுளையாக. ரூ.4131/- கட்டணமாகவும் தொளதொளக் காவிக் கலர் துறவறக் கால் சட்டைக்காக ரூ.300/-வும் செலவானது குறித்து மாரிச்சாமி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கணிசமான அளவு மினி சிகரெட்டுகளை அவனால் குறைக்க முடிந்திருந்தது.

பணம் கட்டிய இரண்டு தினங்கள் கழித்து மாரிச்சாமி அலுவலகக் களப்பணிக்காகப் பூந்தமல்லி அருகே தன் மொபெட்டில் சென்று கொண்டிருந்தான். பின்னால் வேகமாக வந்த அம்பாஸடர் அவனை முந்த முயன்றுச் சற்றுப் பலமாக அவன் மோபெட்டின் பின் பகுதியில் இடிக்கத் தான் சாலையில் மல்லாக்க விழுந்து கிடப்பதை உணர்ந்தான் மாரிச்சாமி. ஒன்றும் பிரச்சினை பண்ணிக்கொள்ளவில்லை. அம்பாஸடரைப் போகவிட்டான். மோபெட்டை ஓரங்கட்டினான். வலது முழங்காலுக்குக் கீழே கொஞ்சம் அடி, வலது கையில் முட்டியருகில் ஒரு நீண்ட சிராய்ப்பு. பக்கத்திலிருந்த ஓர் 24 மணி நேர மருத்துவமனையில் ஏ.டி.எஸ் ஊசி ஒன்று போட்டுக் கொண்டான். ஒரு பெண் அவனது காயங்களில் டிங்க்சர் போட்டுத் தேய்த்தாள். எரிந்தது, மருத்துவர் மருந்து எழுதித் தந்தார் மூன்று நாட்களுக்கு. வண்டிக்குப் பெரிதாகச் சேதம் ஒன்றுமில்லை. அது பழையபடிக்கு நன்றாகத்தான் ஓடிற்று.

அடுத்த நாள் காலை மறக்காமல் யோக கேந்திராவுக்கு சென்றான் மாரிச்சாமி. குருஜியிடம் விபத்துப் பற்றிச் சொன்னான், காயங்களைப் பற்றியும், 'அப்படியானால் கால் காயம் ஆறின பிறகு வந்தால் போதும் ' என்றார் குருஜி. மிக மிக அதிர்ஷ்டவசமாக வரவேற்பறையில் சாரதா இருந்தாள். 'மூலிகைத் தண்ணீர் வேண்டுமா ? ' என்று கேட்டு மாரிச்சாமியின் நெஞ்சைத் தொட்டாள். மறுக்காமல் சந்தோசமாக நீர் பருகினான் மாரிச்சாமி.

'பெண்ணே மூலிகைத்தண்ணீர் பெண்ணே, உன் இதழோர நெளிவுக்காக இந்த மாரிச்சாமி தன் உயிரையே கொடுப்பான் ' என்றான் அவளிடம் மானசீகமாக. மினி சிகரெட் விட முடியாத இயலாமையில் தற்கொலை செய்துகொள்வதற்கும் சாரதாவின் அழகுக்காக உயிர் விடுவதற்கும் இடையிலான பல்வேறு வித்தியாசங்களை அவன் மனம் அலசிப்பார்த்தது.

செத்த பிறகு நிக்கோடின் அடிமையாக இருந்த பாவத்துக்காகத் தனக்கு நரகம்தான் கிடைக்கும் என்று தன் கடவுள் மறுப்புக் கொள்கையையும் மறந்து, மீறி நினைத்துக்கொண்டான். யார் சாவார்கள் முதலில் என்ற பிரச்சினை எழுந்தது. சந்தேகமென்ன ? மாரிச்சாமிதான். அவனுக்குத்தான் சாரதாவைவிட அதிகவயது.

ஆனால், தான் தான் இப்பொழுது யோகாசனப் பயிற்சி மேற்கொண்டு கூடியவிரைவில் மினி சிகரெட்டை விட்டு விடுவோமே; மனம் திரும்பியவர்களுக்குப் பாவமன்னிப்பு உண்டு; எனவே தனக்குச் சொர்க்கம் ஒரு கால் கிடைக்கலாம் என்று நினைத்துகொண்டான் மாரிச்சாமி. அப்படியானால் முதலில் இறந்த மாரிச்சாமி சொர்க்கத்தில் சாரதாவின் வருகைக்காகக் காத்திருப்பான். அழகான சாரதாவுக்கு நரகம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அவள் வந்த கையோடு அவளிடம் மனம் விட்டுப் பேசுவான் மாரிச்சாமி. பூலோகத்தில் கைகூடா நெருக்கம் நிகழச் சொர்க்கத்தில் நிச்சயம் போதிய வசதிகள் இருக்கும். சாரதா சொர்க்கத்திலும் மினி ஸ்கர்ட் தான் அணிந்திருப்பாள்.

சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து குருஜியிடமிருந்து விடை பெற்றான் மாரிச்சாமி.

அலுவலகத்திலிருந்து பத்து நாட்கள் சிறப்பு விடுப்பில் இருந்தான் மாரிச்சாமி. விபத்து பணியின்போது நிகழ்ந்திருந்ததால் அவனுக்குச் சிறப்பு விடுப்பு கிடைத்திருந்தது.

இப்பொழுது மீண்டும் சிந்தனைவயப்பட்டவனான் மாரிச்சாமி. யோகாசனப் பயிற்சி, குறிப்பாக இந்த மூச்சுப் பயிற்சி மூலம் மினி சிகரெட் பெரும் அளவில் குறைந்திருந்தது..

ஆறேழு நாட்களில் சாரதா வார்தா போய்விடுவாள். இனிப் பார்க்க இயலாது. முப்பதாகக் குறைந்திருந்த மினி சிகரெட் முப்பத்து ஐந்தாக அதிகப்பட்டிருந்ததற்குக் காரணம் இனி சாரதாவைப் பார்க்க இயலாது என்பதால் தான் என்பது மாரிச்சாமிக்கு மட்டுமே தெரியும்.

கடவுளின் கடந்த காலம்-கோபி கிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன்

திடாரென்று பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டு ஒன்று அவரது இடது தொடைமேல் இருந்தது. அவர் துடித்தார். சற்றுக் கழித்து இரும்புத் துண்டு விலகிற்று. அலறியடித்துக் கொண்டு லுங்கியை விலக்கித் தொடையைக் கவனித்தார். சதை வெந்து ரணமாகியிருந்தது. மருத்துவரிடம் சென்று, களிம்பு ஒன்று தடவியதில் சில தினங்களில் குணமாயிற்று. ஆனால், தீ வடு நிலைத்தது. இரண்டு நாட்கள் கழித்து, வலது தொடைமீது எரிந்து கொண்டிருக்கும் பீடி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. சிறிது நேரம் சென்று பீடி அகன்றது. தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

mandala-yab-yum-tibetan-buddhism-drawing-modern-art-work

இப்பொழுது இந்த அனுபவம் அவருக்குப் பழக்கப்பட்டுவிட்டிருந்தது. திடாரென அவரது கைக்கடியார வார் முறுக்கப்பட்டது. மணிக்கட்டில் தாங்க முடியாத இறுக்கம் ஏற்பட்டது. அவர் எச்சரிக்கையானார். இப்படியே விட்டால் இது அவரைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும். அவர் சில முடிவுகளை உடனடியாக எடுக்கத் தொடங்கினார். புதிய முயற்சிகளில் ஈடுபடலானார். இன்னும் மணிக்கட்டில் இறுக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர் விவேகத்துடன் மானசீகமாகக் கைக்கடியாரத்தைக் கழற்றினார். உடனே இறுக்கம், உபாதை வடிந்தது. அவர் தான் கையாண்ட உத்திக்காகத் தன்னைப் பாராட்டிக் கொண்டார். அந்த வினோதமான ஒன்றை வென்ற திருப்தி அவருக்கு மனநிறைவைத் தந்தது. அப்பாடா ' இந்தக் கஷ்டத்திலிருந்து ஒருவாறு விடுபட்டாகிவிட்டது.

ஆனால், அவரது நிம்மதி நெடுமூச்சு அதிககாலம் நிலைக்கவில்லை. தலைமுடிக்குள்ளே ஒருபல்லி ஊர ஆரம்பித்தது. இப்பொழுது அவர் அலறவில்லை. பல்லியை மானசீகமாகக் கை கொண்டு தட்டிவிட்டார். உடனே ஊரல் அகன்றது. மீண்டும் அவர் தன்னைப் பாராட்டிக்கொண்டார். மென்மேலும் நெருப்புத் துண்டுகள் அவரை இம்சித்தபடி இருந்தன. அவர் மனரீதியில் அவற்றை அகற்றி நிவாரணம் தேடிக் கொண்டிருந்தார்.

இப்படியே காலம் நகர்ந்துகொண்டிருந்தது. மானுட சோதனைகளில் நேரம் அதிகம் விரயமாகிக் கொண்டிருந்தது. அவர் சளைக்காமல் அந்த விசித்திரத்துடன் மல்லாடிக் கொண்டிருந்தார். ஒரு கற்பித மதம்பிடித்த யானையுடன் உக்கிரத்துடன் போரிட்டு அடிக்கடி வெற்றிகாணும் உணர்வு அவருக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவருக்கு அதிகாலை வேளையில் ஒரு ரம்மியமான அனுபவம் ஏற்பட்டது. வசீகரமான ஆகாயப் பரப்பு. ஒரு பூதாகரப் பருந்து சுழன்று சுழன்று வந்து கொண்டிருந்தது. பிரபஞ்சம் அனைத்தும் சுழன்று சுழன்று வந்தது. பருந்து அனைத்துக்கும் மேலாக வட்டமடித்துக் கொண்டிருந்தது. பருந்து அழகே உருப்பெற்றதாக இருந்தது. அதன் கழுத்தை வெள்ளை வட்டம் ஒன்று ஆரமாக அலங்கரித்திருந்தது. வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்து அந்தரத்தில் நிலைத்து நின்றது. தன் அலகுகளை அகலத் திறந்தது. அவர் உட்சென்றார்மிகவும் பிரியப்பட்டு. அந்த அழகான உயிரினத்தினுள் அவர் ஒரு கணம் ஐக்கியமானார். நேரம் கழிந்தது. பருந்தின் அலகுகளில் இருந்து அவர் வெளிவந்தார். உதடுகள் அனிச்சையாக முணுமுணுத்தன: 'நான் சக மனிதனை நேசிப்பவன், காதலிப்பவன், இனி இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சகல உயிரினங்களும் என் உற்ற தோழர்கள். ' அவரது உறக்கம் கலைந்தது. கண்ணெதிரே ஓர் ஒளிவட்டம் தென்பட்டது. அதிலிருந்து ஒரு செய்தி வெளிவந்தது: 'அன்பு, எல்லாம் அன்பு மயம் ' ஒளிவட்டம் அகன்றது. ஆனால் செய்தி மனதில் ஆழமாகப் பதிந்தது.

அடுத்த இரவு இன்னொரு அனுபவம்: உறக்கம் கலைந்த நிலையில் எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். எந்தவொரு சிந்தனையும் அவரை ஆட்கொள்ளவில்லை. முற்றாக ஒரு சிந்தனையும் அற்றநிலை. அந்த அனுபவம் நிகழ்ந்து கொண்டிருந்த சமயம் அவர் அதை உணரவில்லை. மனம் ஓர் அனுபவத்தை நுகர்ந்து கொண்டிருக்கும்போது அது எப்படிச் செயல்படுகிறது என்பதை உணர்வது அசாத்தியம். அனுபவம் நிறைவுற்ற பிறகே பின்னோக்கி நகர்ந்து அனுபவத்தின்போது அது செயல்பட்ட விதத்தை ஊகிக்கலாம். எது எப்படியோ அந்தச் சிந்தனையற்ற சூனியம் அவருள் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருபிரம்மாண்டமான சூன்யம். முழுக்கவும் ஒன்றுமில்லாத நிலை. அவரும் இல்லை. எதுவும் இல்லை. அவரது அனுபவம் முடிவுற்றது. அவர் இப்பொழுது ஆழ்ந்த அமைதியைப் பிரக்ஞை பூர்வமாக அனுபவித்தார். எண்ணங்களற்ற வெற்று நிலை; மனதின் அசைவுகளற்ற, சலனமற்ற உயரிய நிலை. முக்தி நிலை. அவருக்கு அது ஏற்பட்டிருந்தது, ஒரு பத்தே நிமிடங்களாக இருந்தாலும். புத்தரின் போதி விருட்சமும் ஆர்க்கிமிடாஸின் தண்ணீர்த் தொட்டியும் நினைவில் தைத்து விடுபெற்றன. தனக்கு ஒரு சாதாரணப்படுக்கை. பரவாயில்லை. எந்த நிலையில் உன்னத அனுபவங்கள் ஏற்பட்டாலும் வரவேற்கத் தக்கனவே. மீண்டும் அந்தச் செய்தி அவரைச் சந்தித்தது: 'அன்பு, எல்லாம் அன்பு மயம். '

அவர் இப்பொழுது அன்பே உருவானவராக விளங்கினார். கனிவு, பரிவு, நேசம் -- அதுதான் அவர். குரலில் தேன் வழிந்தது. அவருக்கு நிறைய நண்பர்கள் ஏற்பட்டார்கள். தோழிகளும். அவர் முதல் முறையாகக் கடவுள் பற்றி மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தார். கடவுள் என்றால் அன்பு என்றார். பரந்துபட்ட நேசத்திலும் பிறரை மன்னிப்பதிலும்தான் கடவுள் இருக்கிறார் என்றார். கடவுள், மனிதன் உருவாக்கிய சம்பிரதாயக் கட்டிடங்களில் இல்லை என்றார். சில மதவாதிகள் அவரைக் கடுமையாகச் சாடினார்கள். அவர் மென்மையுடன் விமரிசனங்களை ஏற்றுக் கொண்டார். விமரிசனம் செய்பவர்களையும் தான் ஆழ்ந்து நேசிப்பதாக சொன்னார். ஒரு நாத்திகவாதியின் நேசம் தங்களுக்குத் தேவையில்லை என்றார்கள் அவர்கள். தன்னை அன்னியப்படுத்த வேண்டாம் என்று அவர் கெஞ்சினார். அதீத மானுடக் கற்பனைகளால் உருப்பெற்ற கடவுள்கள் மனிதர்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்க வேண்டாம் என்றார். ஆனால் அவர்களுக்கு அன்பைவிட ஒரு சிலைக் கடவுள்தான் முக்கியமாகப்பட்டது. அவர் மனவருத்தம் கொள்ளவில்லை. அவரது அன்பு வடியாத ஒன்றாக இருந்தது. 'சாந்தி ' என்ற வார்த்தையை அவரது உதடுகள் அடிக்கடி உச்சரித்தன.

திடாரென ஒரு நாள் அவரது நினைவுகள் ஓராண்டு காலம் பின்னோக்கி நகர்ந்தன. தான் கஞ்சா அடித்ததையும் அப்பொழுது பிரக்ஞை விசாலமாகத் தோன்றியதையும் நினைவு கூர்ந்தார். ஓர் ஒன்பது மாத காலம் ஒரு நிலையில் தொடர்ந்து உட்காரவோ நிற்கவோ முடியாமல் நிலை கொள்ளாமையால் அவஸ்தைப்பட்டதும் அவரது நினைவுக்கு வந்தது. ஏழெட்டுமுறை போதைமாத்திரைகள் உட்கொண்டதையும் நினைவுபடுத்திக் கொண்டார். அப்பொழுதும் அவர் பிரபஞ்சத்தைப் பற்றியும் கடவுளைப்பற்றியும் யோசித்ததுண்டு. ஆனால் அவை மிகமிகக் குழப்பமான நாட்கள். பிறகு தன்மேல் வைக்கப்பட்ட நெருப்புத் துண்டுகள் அவர் நினைவை எரித்தன. கஞ்சாவும் போதை மாத்திரைகளும் அவருக்கு எப்படியெல்லாம் தொல்லை தந்துவிட்டன ' தான் திடமுடன் போராடாமல் விட்டிருந்தால், அந்த இரண்டு விழிப்புணர்வு அனுபவங்களும் ஏற்பட்டிருக்காவிட்டால் ? அவர் மேற்கொண்டு நினைக்க அஞ்சினார்.

மனம் லேசான தொந்தரவுக்குள்ளானதை அவர் உணர்ந்தார். எழுந்து குளியலறைக்குச் சென்றார். முகத்தைக் கழுவிக் கொண்டார். மீண்டும் அவர் தன் தற்பொழுதைய நிலைக்கு வந்துவிட்டிருந்தார். 'அன்பே சிவம் ' என்று உதடுகள் உச்சரிக்க அவர் அன்பில் மீண்டும் அடைக்கலம் புகுந்தார்.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்