Showing posts with label சமயவேல். Show all posts
Showing posts with label சமயவேல். Show all posts

Nov 25, 2010

அரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்

அரைக் கணத்தின் புத்தகம்

ஏய், நில், நில்லு-
சொல்லி முடிப்பதற்குள்
மாடிப்படிகளில் என் குட்டி மகள் SAMAYAVEL
உருண்டுகொண்டிருக்கிறாள்
பார்த்துக்கொண்டு
அந்த அரைக் கணத்தின் துணுக்கில்
அவள் உருள்வதை நான் 
பார்த்துக்கொண்டு மட்டும்.
அவளது சொந்த கணம்
அவளை எறிந்துவிட
அவள் உருண்டுகொண்டிருக்கிறாள்.
என் சகலமும் உறிஞ்சப்பட்டு
ஒன்றுமற்ற உடலமாய் நான்
அந்த அரைக் கணத்தின் முன்
ஓடிக்கொண்டிருக்கிறேன்.
ஒரு வீறலுடன் அக்கணம் உடைய
நெற்றியில் அடியுடன்
அழும் மகளை அள்ளுகிறேன்
- கணங்களின் மீட்சி
என் பிரபஞ்சத்தை சேராத
அந்த அரைக் கணத்தை ஒரு
நோட்டுப் புத்தகத்தில் குறித்துவைத்தேன்.
ஒரு சொடுக்கில், இழுப்பில், புரட்டலில்
முழுச் சித்திரமே மாறிவிடும்
வினோதப் புத்தகம் அது.

எங்களூர்ப் பறவை

எங்களூரில் ஆகாய விமானம்
இப்படி இல்லை
மெல்லிய ரீங்காரம் காதுக்குள் ஊர்ந்தது
குதூகலத்துடன் வெளியே ஓடி வந்து
அண்ணாந்து ஆகாயம் துழாவி கண்டுபிடிப்போம்
மிதக்கும் மேகங்களுள் புகுந்து
வெளிவரும் பொழுது
களிப்பில் கூச்சலிட்டுக் கத்துவோம் நாங்கள்

ஆனால் இங்கே, அப்பா, காதைக் கிழித்து
பீதியூட்டிப் பறக்கும் திமிங்கலங்கள்
யுத்த விமானங்களின் அணிவகுப்பாம்
விதம் விதமாய்ப் பறந்தார்கள்
புகைக் காடாய் மாறி கலங்கியது வானம்
விமானியின்றி தானே பறந்து
அரை நொடியில் இலக்கு தொடும்
சோனிக் அட்டாக் ஏஏ01
கம்பீரமாய் எழும்புகிறது
புல் பூண்டற்று அழிந்து புகையும்
நகரின் கூவல் கேட்டு
சிதறுகின்றன என் உள்மன அறைகள்

எங்களூர் ஏரோப்ளேன் இப்படி இல்லை
அது ஒரு சிறு பறவை
வானில் மிதந்து நீலம் பருகும்
வெள்ளிமீன் பறவை.

விளிம்பின் பாடல்

மணல் குன்றுகளின் தீக் கானல்
நெடுஞ்சாலைகளில் மாய நடனம்
ஈரத் தீயில் எரிகின்றன எல்லாம்

சறுக்குப் பாறைகளின் பெரு மௌனங்களில்
உறைந்து மலைகளாகும் வெளியின் பாடல்
துருவ விளிம்புகளில் கீறி உடைகின்றன
பனிமலைக் கடல்கள்

நூற்றாண்டுகளின் நீண்ட கண்ணிகளில்
ஒரு தற்காலிக ஏற்பாடாய்
மின்னி மறையுதே உன் இப் பிறவி

நதிகள் தூங்கும் ஏரிகளில் படர்ந்த
ஓரிலைத் தாவரம் பெரும் விருட்சங்களாகி
காடாய் விரிய அடியில் நீந்திக் குளித்து
அலைந்து திரியுமே விநோத உயிர்கள்

பொங்கிய சமுத்திரத்தின் மரணத் தடங்கள்
அழித்து எழுதும் புதிய புவியியல்
கத்தும் குழந்தையின் அழுகையில்
உலர்ந்து உலருதே ஊடலும் கூடலும்

தெள்ளத் தெளிவாக முழு முற்றாக
எல்லாம் புரியும் நொடியில்
தலையை அடித்துப் பறக்கிறது கருங்காக்கை

கனிகள் குலுங்கும் பசுங்கொடிகள்
கால்களைப் பின்ன மீண்டும் துளிர்க்கும்
உயிரின் இலைகள்

ஆ, இருப்பதும் இறப்பதும் ஒன்றே அல்லவா?


அவளது மழை

பயனற்ற அவனுடன்
துவண்ட இரவு
தராத தூக்கம்
தினமும் தொலைந்தது

மார்பில் ததும்பும் தீயில்
எந்தப் பண்பாட்டையும்
எரிக்க முடியும்

அழுது விம்மி
கலங்கும் இதயம்
கேட்டு அலைகிறான்
தோழன்

சாட்டை சுழற்றும்
அவர்களின்
கள்ளப் பார்வைகள்
அறிவேன் நான்

பள்ளத் தாக்கில்
புதர்கள் அடியில்
அறியாப் பூக்கள்
பூத்துக் கிடக்கும்
இரகசிய வழிகளில்
நடந்து திரிவேன்

எனது இரவை
நானே புனைந்து
தோழன் கனவில்
நுழைந்து தூங்குவேன்

எனது முற்றத்திலும்
பெய்கிறதே மழை

எப்பொழுதும்

தாம் தீம்
தக்கத் திமிதீம்
ஒருவன்

தூம் தூம்
தும்கிட தும்கிட
தூம் தூம்
மிரு
தங்கம்

தீம் தீம்
திக்கிட திக்கிட
ஒருவன்
மிருதங்கம்

தும் தும்
துமுக் துமுக்
வாசித்துக்

கும் கும்
குமுகுமு குமுகுமு
கொண்டே

இதும் இதும்
இம்தம் இம்தம்
இருக்கிறான்

ஆச்சரியம்

அடிவானத்தின் உயிர்ப்பு மரிப்பதில்லை ஒருபோதும் அங்கே
அந்தப் பொன்நிற வட்டவில் மாய முகம்
கௌவி இழுக்கிறது முழுவதுமாக என்னை
என் விருப்பப்படி எந்த ஆனந்தத்தையும்
அங்கிருந்து அள்ளி எடுக்க முடியும்
நான் பனங்காய் வண்டி உருட்டி விளையாடிய காலம்
அங்கே தான் புதைந்திருக்கிறது ஒரு
கரிபடர்ந்த இருட்டு சமையலறையில் நான்
தழுவி முத்தமிட்ட வேணியின் கன்னம்
அங்கே தான் ஒளிந்திருக்கிறது
என் களி நடனமிடும் அகத்தி மரங்களை
அங்கு தான் நட்டு வைத்திருக்கிறேன்
மஞ்சள் பூக்களோடு பெரிய பெரிய இலைகளோடு
என் பூசணிக்கொடி அங்கே தான் படர்ந்திருக்கிறது
ஆச்சரியம் அது நமது
எல்லோரது அடிவானமுமாக இருப்பதுதான்.

நன்றி: உயிர்மை, காலச்சுவடு

Jun 17, 2010

விடுமுறை வேண்டும் உடல்-சமயவேல்

விடுமுறை வேண்டும் உடல்

எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு
தன்னைப் பற்றியே
பெரும் கவலை கொள்கிற உடல்
முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு
நச்சரிக்கிறது
பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என samyavel6
எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது
சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும்
முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது
வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை
என எப்படியும் இருப்பேன் என்கிறது
விடுமுறை விடுமுறை எனும்
யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது
எதுவும் செய்யாமல் அக்கடா என்று
சும்மா கிடக்கும் ஆனந்தம்
பற்றிய அனேக நிறமிகளை
மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது
மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன்
வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது
எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம்
கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன்.


அழகென்னும் அபாயம்

ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில்
ஊர்தி எந்திரம் நிறுத்தி
சாலையோரம் கொஞ்சம் நடந்து
ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி
சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன்
நுணா மரப் புதரொன்றில்
ஒரு சிறு பறவை
இறகுகள் அடர் சிவப்பு
கழுத்து மயில் நீலம்
உருண்டை வயிறு சாம்பல் நிறம்
கொண்டை மஞ்சள் நிறம்
கண்கள் என்ன நிறம்?
கால்கள் பசுமஞ்சள் நிறம்
விரல்கள் அரக்கு நிறம்
நிற்கிற மரமோ மர நிறம்
அந்த இத்தினியூண்டு பறவை
கொண்டையை ஆட்டி
ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது
என் பெரு நகர ஆத்மாவின் தலை
வெட்டுண்டு உருண்டது
மரணத்தின் விளிம்பை
ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல்
கூவல் முடித்து பறவை
விருட்டென்று பறந்தோடியதும்
உயிர் மீட்டு
ஓர் குழந்தையாக நின்றேன்

இரவென்றால் என்ன ?


என் எல்லாக் காயங்களையும்
இந்த இருட்டா ஆற்றிவிட முடியும் ?
கோர்த்துக் கொள்கிறேன்
உன் விரல்களுக்குள் என்னை.
என் எல்லாத் தாகங்களும்
அடங்கிவிடும் என்று
உன் சிறிய உதடுகளைக்
கவ்விக் கொள்கிறேன்
கால்கள் வயிறு மார்பு என
முழுசுமாய் ஒட்டிக் கொள்ள
உயிர் நாக்கின் தீண்டல்கள்
மூச்சென்பது
ஒன்று, இரண்டு அல்லாது
பூமி தழுவிய
வளி மண்டலம்
*
இரவென்றாலே அடங்கா
இரவு தான்

சாதாரண அதிசயம்


இன்னும் இப்பொழுதும்
அதே ஈரத்துடன் இருக்கின்றன
உதடுகள்
நொடிகளையும் நிகழ்வுகளையும்
புறந்தள்ளிக் கொண்டு
சுற்றிச் சுற்றி வருகிரது
உன் வாசனை
மிருதுவான மிருதுவைத் தொட்ட
விரல்களில் ஆனந்தம்
கசிந்து கொண்டே இருக்கிறது
லட்சக் கணக்கான நொடிகள்
மனம் ஒருமுகப்பட்டு
நடந்த கூடலின் நறுமணம்
இயற்கை நமக்கு வழங்கிய
வெதுவெதுப்பான பரிசு


*************
நன்றி : அட்சரம் ( இதழ் 3)

May 19, 2010

ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் - சமயவேல்

இந்த இரவு

நான் அருந்திக் கொண்டிருப்பது
எனக்குப் பிடித்த ரம் இல்லை
வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும்
இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது
நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள்
நம்மைக் கடந்தன
எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம்
நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை
நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்தsamyavel5
நம் மெளனங்களின் இடைவெளிகளில்
இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது
பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி
சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில்
பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம்
எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம்
எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம்
ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம்
கோமியம் போன்றதோர் அதன் வாசம்
எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை
ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில்
எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம்
நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில்
இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது.
(நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு)


ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல்


ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல்
கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று
நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம்
ஓங்கிய அரிவாளின் கீழே
தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட
மரணம் பற்றிய பிரக்ஞையற்று
குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை;
உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள்
பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள்
எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள்
விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள்
என்று வதைபடும் மனிதர்களை விட
எத்தகு மேன்மையான வாழ்வுடன்
நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம்
என்பதை நினைத்துப் பாருங்கள்
எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள்
கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது
ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று
ஒருவரை யொருவர் கொல்வது பற்றி
உங்களால் மே என்று கூட கத்த முடியாது
எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும்
உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும்
நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட
உங்களால் வரைய முடியாது.
2
இருமைகள் என்பது எதார்த்தம் எனில்
அதில் ஒரு கை அள்ளி
என் கண்களைக் கழுவுவேன்
இரவு பகலோ, இறப்போ பிறப்போ
இருமைகள் றெக்கைகளாக
ஒரு பறவைக் கூட்டமாய்
பழுப்பு வானில் பறந்து திரிவேன்
மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி
அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன்
இதுவும் அதுவும் கவ்வி முயங்கும்
இடமோ பொழுதோ வெளியோ
சிந்தும் இன்மையின் இனிமையை
பருகி மகிழ்வேன்
ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான்
எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற
ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது
அதன் வெண்மணற் பரப்பில்
கோபுரங்களும் மலைகளும் கடல்களும்
நகரங்களும் ஆகாயமும் கூட
சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும்
புதைந்து கிடக்கின்றன
என் புல் வெளியில் மரணம்
ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில்
நான் ஒரு நாகலிங்க மரமாவேன்
என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள்
பூக்களாய் தொங்கும்
எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான்.

இப்பொழுதெல்லாம்

அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது
வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில்
விரும்பித் தங்குகிறேன்.
இசை அரங்குகளை விட
சப்தங்கள் உயிர்ப்புடன் எழும்
பேருந்து நிலையங்களில் வெகு நேரம்
பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன்
சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும்
குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன்
கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து
வாசகர் கடிதம் எழுதுகிறேன்
பூங்காக்களை விட
பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள்
அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன்
வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட
மாய விண்வெளியே
நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம்.


************

நன்றி: அகாலம்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்