Showing posts with label சுரேஷ்குமார இந்திரஜித். Show all posts
Showing posts with label சுரேஷ்குமார இந்திரஜித். Show all posts

Feb 8, 2012

சுரேஷ்குமார இந்திரஜித் - நேர்காணல்

மறைந்து திரியும் கலைஞன்

சந்திப்பு: அரவிந்தன்

அவரது எழுத்தைப் போலவே பேச்சும் இருக்கிறது. சுருக்கமாக, அளந்தெடுத்த வார்த்தைகள் கொண்டதாக, பதற்றம் சிறிதும் இல்லாததாக. மறைந்து திரியும் கிழவன் தொகுப்பின் மூலம் தீவிர எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் தனிக் கவனம் பெற்ற சுரேஷ்குமார இந்திரஜித்தை (53) சந்தித்துப் பேசக் கண்ணன், நெய்தல் கிருஷ்ணன் மற்றும் நான் ஆகியோர் ஆகஸ்ட் மாத நடுவில் மதுரைக்குச் சென்றோம். அப்போது மதுரையில் வசித்த கவிஞர்skindrajit4 தேவேந்திர பூபதியும் எங்களுடன் இணைந்துகொண்டார்.

சுரேஷ்குமார் வீட்டில் 'காபி' சந்திப்பு முடிந்ததும் அனைவரும் கிளம்பி மதுரைக்கு வெளியே ஒரு மாபெரும் தோட்டத்துக்கு நடுவே அமைந்திருந்த தங்குமிடத்திற்குச் சென்றோம். மேற்கூரை மட்டும் அமைத்து நான்கு புறமும் திறந்திருந்த ஒரு கூடத்தில் உட்கார்ந்துகொண்டோ ம்.

மரங்களின் சலசலப்பும் பறவைகளின் குரலும் தந்த உற்சாகத்தோடு பூபதி சுரேஷ்குமாரின் கதை ஒன்றைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அந்தக் கதை பற்றிய தன் எண்ணங்களை சுரேஷ்குமார் பகிர்ந்துகொண்டார். பேச்சு மெல்ல மெல்லப் பேட்டியாக வடிவம் பெற்றது. இடையில் அவசர வேலை காரணமாகப் பூபதி கிளம்ப வேண்டியிருந்தது. மதிய உணவுக்கும் குட்டித் தூக்கத்திற்கும் இடைவெளி எடுத்துக்கொண்டு தங்கும் விடுதியில் கூடி மீண்டும் பேசினோம். நேர்காணலின் சில பகுதிகள் இங்குத் தரப்படுகின்றன.

- அரவிந்தன்

******

உங்கள் நூலின் பின் அட்டையில் 'நவீனத் தமிழ்ச் சிறுகதைகளின் எல்லைகளை விரிவுபடுத்திய' என்கிற வரி இடம்பெற்றிருக்கிறது. இதில் நவீனம் என்பதையும் எல்லைகளை விரிவுபடுத்துதல் என்பதையும் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?

சுரேஷ்குமார இந்திரஜித்: நவீனம் என்பது புதியது. பழையது அல்லாதது. ஏற்கனவே சொல்லப்பட்ட கோணங் களிலிருந்தும் பார்வைகளிலிருந்தும் வடிவங்களிலிருந்தும் விஷயங்களைப் பார்க்காமல் அவை அல்லாத வேறு முறைகளிலிருந்து பார்க்கும்போது நவீனம் பிறக்கிறது. பிராந்தியத்திற்குப் பிராந்தியம், மொழிக்கு மொழி இந்த நவீனம் வேறுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்நவீனம் பழையதாக மாறும்போது அதனைத் துறக்கக்கூடிய சூழல் உருவாகும். எழுத்து, பார்வை, சிந்தனை, கோணம் இவையெல்லாம் புதியதாகும்போது பழையவற்றை அழித்துக்கொண்டு நவீனம் உயிர்க்கிறது.

இந்த நவீனத்தைப் புரிந்துகொள்கிற வகையில் ஒரு காலகட்டம் சார்ந்து அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்கள் சார்ந்து வரையறுக்க முடியுமா?

என்னுடைய அனுபவம் சார்ந்து சொல்வதானால், வண்ணநிலவனின் 'பாம்பும் பிடாரனு'மையும் சுந்தர ராமசாமியின் 'பல்லக்குத் தூக்கிக'ளையும் நவீனத் துவத்தின் கதவுகளைத் திறக்கும் தொகுப்புகளாகக் கொள்ள முடியும். இவற்றோடு சில தனித்தனிக் கதை களையும் கவிதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அதுவரை இருந்த நவீனத்திலிருந்து இது மாறானது என்று பார்க்கிறீர்களா?

இந்தப் படைப்புகள் பழையவற்றை மறுக்கின்றன. பழையவற்றை மறுக்கும் காரியம் சிறிது சிறிதாக வெவ் வேறு ரூபங்களில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. மௌனியுடைய எழுத்துக்களை அந்தக் காலகட்டத்தில் நவீன எழுத்தாக நாம் பார்க்கலாம். புதுமைப் பித்தனுடைய எழுத்தை மொத்தமாக நவீனம் என்று சொல்ல முடியாது. ஆனால் புதுமைப்பித்தனுடைய படைப்புகள் மறுமலர்ச்சியைத் தந்தவை என்பது மறுக்க இயலாதது. முற்போக்கு இடதுசாரிகளிடம் அடையாளம் காணப்பட்ட எழுத்துக்களைப் புதுமைப்பித்தனிடமிருந் தும் அவரது முற்போக்குச் சிந்தனையிலிருந்தும் விமர் சனப் பண்பிலிருந்தும் எடுத்துக்கொள்ளப்பட்டவையாகப் பார்க்க முடியும்.

நவீனத்துவத்தின் இரண்டு துவக்கப் புள்ளிகள் என்று புதுமைப்பித்தனையும் மௌனியையும் எடுத்துக்கொள்ளலாமா?

சிறுகதை வளர்ச்சியின் ஆரம்பக் கட்டம் அவர்களிடம்தான் தொடங்குகிறது. தமிழ்ச் சிறுகதை வரலாறு என்று எடுத்துக்கொண்டால் முதலில் கு.ப.ரா., புதுமைப்பித்தன், மௌனி இவர்களிடமிருந்துதான் தொடங்குகிறது. சிறுகதைப் பரப்பில் இவர்கள்தான் புதுத் தரப்பு. இவர்களுக்கு முன்பு சிறுகதை அதிகம் பழக்கத்தில் இல்லாத வடிவமாகத்தான் இருந்தது.

'பல்லக்குத் தூக்கிகள்', 'பாம்பும் பிடாரனும்' ஆகிய இரண்டிலும் மௌனியின் பாதிப்பு இருக்கிறதல்லவா?

அப்படிச் சொல்ல முடியாது. நாத்திகம் பேசுபவர்கள் எல்லாம் சார்வாகனுடைய வாரிசுகள் என்று எப்படிச் சொல்ல முடியாதோ அதுபோலத்தான் இதுவும். எந்தக் காரணி சார்வாகனை நாத்திகனாக உருவாக்கியதோ அதே காரணி இவர்களையும் உருவாக்கியிருக்கலாம். மௌனியைப் பற்றி அறியாமலே, மௌனியைப் படைப்பாக்கத்திற்குத் தூண்டிய ஆதாரம் எதுவோ அந்த ஆதாரமே மற்றொருவரையும் படைப்பைச் செய்யத் தூண்டியிருக்கலாம். நான் கதை எழுதத் தொடங்கிய நாட்களில் மௌனியைப் படித்திருக்கவில்லை.

மௌனியின் பாதிப்பு இருப்பதற்கு, மௌனியைப் படித்திருக்க வேண்டுமென்று இல்லை. . . மௌனியின் பாதிப்பில் எழுதியவர்களின் படைப்புகளின் மூலமாகவும் அந்த பாதிப்பு வரும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா.

அப்படியொரு பாதிப்பு வரவில்லையே. மௌனி கதையில்லாமல் கதை எழுதியவர்.

நவீனம் என்பதற்கான வரையறையைக் கருத்தியல் தளத்தில் இன்னும் விரிவுபடுத்திக்கொள்ளலாமா?

எதையும் வரையறைக்கு உட்படுத்தினால் அது சரியாக அமையாது. எல்லாவற்றையும் வரையறுத்தலும் சாத்தியமில்லாதது. ஆனால் வரையறைக்கு உட்படுத்தினால் பலவற்றோடு பொருத்திப் பார்த்து இதுதான் நவீனம் என்று சொல்ல முடியும். இப்பொழுது உதாரணங்களைச் சொல்ல முடியுமே தவிர வரையறையைத் தர முடியாது. பண்டிதர்கள் எல்லாவற்றையும் வரையறுப்பார்கள். அழகியல் என்னவென்றும் நவீனத்துவம் என்னவென்றும் வரையறுக்க முடியாது. ஆனால் உணர முடியும்.

புலன்களால் அறியப்படும் புற உலகத்தின் பின்னணியில் அகவயமான உலகத்தை எழுதுதல், பௌதீக உலகத்தையும் அக உலகத்தையும் இணையான இரண்டு கோடுகள்போலக் கொண்டு படைப்புகளைப் புனைதல் என்கிற இந்தத் தளத்தில் நவீனத்துவத்தின் எல்லைகள் உங்கள் கதைகளில் நெகிழ்வதாகக் கொள்ளலாமா?

நான் எழுதும் கதைகள் பெரும்பாலும் அப்படிப்பட்டவைதான். ஒருவருக்காகக் காத்திருக்கும்போது, அவரைப் போலவே இரண்டு பேரைப் பார்ப்பதுபோலத்தான். இங்கே பேசிக்கொண்டிருக்கும்போது வேறொரு அக உலகத்திற்குள் நான் போய்த் திரும்ப முடியும். இது வழக்கமாக எல்லோருக்கும் நடக்கும் விஷயம்தான். என்னுடைய கதைகளில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறேன். இது மனித சுபாவம்தான். மனம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் போய் வருவது இயல்புதான். எனக்கு இந்த மன உலகம் முக்கியமாகப் படுகிறது. அதோடு அதிகம் சொல்லப்படாததாகவும் இருக்கிறது. அதனால் இந்த விஷயம் சொல்லப்பட வேண்டியதாக எனக்குத் தோன்றுகிறது.

உதாரணமாக, 'திரை' கதையில் திரைச் சீலைக்குப் பின் கணவனின் முகம் தோன்றுவது . . .

நான் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கும்போதே என்னுடைய காதலியைப் போய்க் கட்டிப்பிடித்துக்கொள்ளலாம். இது இயல்புதான். நிறையப் பேர் இந்தச் சுபாவத்தோடு இருப்பவர்கள்தான். என்னுடைய கதைகளில் இந்த விஷயம் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. தண்ணியடித்துக்கொண்டிருக்கும்போதே கல்யாணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக் குழந்தையைப் படிக்கவைப்பதுவரை நினைத்துவிட்டு மீண்டும் அடுத்த டம்ளரைக் குடிக்கத் தொடங்கும் கதாபாத்திரம் என் கதையில் இருக்கிறது.

'உலகத் தமிழ்' இணைய இதழுக்காக அய்யனாருக்கு அளித்த பேட்டியில் மேஜிக்கல் ரியலிசம் என்றால் என்னவென்று தெரியாது, அதை வைத்துக் கதைகள் எழுதவில்லையென்று சொல்லியிருக்கிறீர்கள்.

மேஜிக்கல் ரியலிசம் என்னவென்று தெரியாது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. மேஜிக்கல் ரியலிசம் என்னும் வரையறையை வைத்துக்கொண்டு படைப்பைச் செய்ய முடியாது என்பதாகச் சொன்னேன்.

தமிழ்ப் படைப்பாளிகள் பலர் வரையறைகளை வைத்துக்கொண்டு படைப்புகளைச் செய்திருக்கிறார்கள் . . .

வரையறைகளை வைத்துக்கொண்டு படைப்புகளை உருவாக்கினால் செயற்கையாக இருக்கும். எக்சிஸ்டென்ஷியலிசத்தை வைத்துக்கொண்டு தமிழவன் உருவாக்கிய 'ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்க'ளைப் போலத்தான் படைப்பு தோற்றுப்போகும். விமர்சகர் படைப்பாளியாகும்போது நிகழ்வதுதான் இது. எஸ்.வி.ஆர்., அ. மார்க்ஸ் போன்றவர்கள் எழுதினாலும் இப்படித்தான் இருக்கும். இவர்களது தளம் தத்துவங்களை எழுதுவதும் விவாதிப்பதும் முரண்படுவதுமாக இருக்கும்போது படைப்புகளில் இயல்பான தன்மையை எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் வரையறைகளை வைத்துக்கொண்டு படைக்கப்படும் படைப்புகள் இயற்கையான படைப்புகளாக உணரப்படுவதில்லை. படைப்பாளிகளும் சோபிப்பதில்லை.

உங்களுடைய படைப்புகளை வாசிக்கும்போது மேஜிக்கல் ரியலிசம் போன்ற வார்த்தைகள் எதுவும் குறுக்கிடக் கூடாது என்று நினைத்தே படித்தேன். ஆனால் இயல்பாகவே கதைகளுக்குள் அதைப் பார்க்க நேர்கிறது.

படைப்பாளி மேஜிக்கல் ரியலிசம் இதுவென்று புரிந்துகொண்டு படைப்பதில்லை. அவர் எழுதியது அவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். நான் எழுதியவற்றை ஒரு வெளிநாட்டவரிடம் கொடுத்தால் அதிலுள்ள பண்புக்கு அவர் ஒரு பெயர் சொல்லலாம். அதுவே பின்னாளில் ஓர் இசமாக மாறிப் போகலாம். படைப்பாளிக்கு இந்நிகழ்வு பெருமையைக் கூடத் தரலாம்.

உங்கள் கதைகளை படிக்கும்போது சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அதில் இடம்பெறக் கூடிய மிகு யதார்த்தம், மிகு புனைவு என்ற கூறுகள் இயல்பாக இருப்பதாய் உணரச் செய்யும் தன்மைதான் என்று நினைக்கிறேன். இந்தத் தன்மையைப் பிரக்ஞைபூர்வமாகக் கையாள்கிறீர்களா அல்லது உறுத்தக் கூடாது என்பதற்காகச் செய்கிறீர்களா?

அது இயல்பாகத்தான் வருகிறது. வலிந்து செயற்கையாகக் கையாளும்போது இலக்கியம் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். இலக்கியம் இயல்பான வெளிப்பாடாக இருக்கும்போது அங்கு வலிந்த முயற்சிக்கு அவசியமிருக்காது. ஒரு காலகட்டத்தின் நவீனப் போக்குகளைத் தெரிந்துகொண்டு, அதைப் படைப்பில் கொண்டு வர முயன்றால் அது சாத்தியமில்லை. அது பிரச்சினைக்குரியது. அதனால் தான் தத்துவம் தெரிந்த ஆட்கள் இலக்கியத்திற்கு வரும்போது அவர்களால் பளிச்சிட முடிவதில்லை.

உங்கள் கதைகளில் தனி மனிதப் பிரக்ஞை சூழலுக்கு ஆற்றும் எதிர்வினை வலுவாக வெளிப்படுகிறது. அதோடு அரசியல், ராணுவம், போலீஸ், சினிமா, மதவாதிகள் என்று பல்வேறு கூறுகளும் சமூகச் சூழலை எவ்வாறு வெளிக் காட்டுகின்றன என்பதைப் பிரதிபலிக்கின்றன. இந்த வீச்சு எப்படிப்பட்ட பார்வை என்று நினைக்கிறீர்கள்?

ஒரே பாணியில் வந்துகொண்டிருக்கும் திரைப்படங்களைப் பார்க்கத் திரையரங்குகளில் கூட்டம் அலை மோதும். அதே நேரத்தில் இந்திய மக்களின் தலையெழுத்தையே நிர்ணயிக்கக்கூடிய பட்ஜெட் உருவாகிக்கொண்டிருக்கும். இந்த முரண்பாட்டின் இடுக்கிலிருந்து ஒரு கதை வரும். குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு சிறுவன் எடுக்கும் காகிதத்தில் இந்திய பட்ஜெட் இருக்கிறது. இந்தியாவிற்கு உலக நாடுகளிடம் இருக்கும் கடன், அதை உடனடியாக அடைக்க நேர்ந்தால் வரும் சிக்கல், வங்கியில் பணம் போட்டவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் பணத்தைத் திரும்பக் கேட்டால் என்ன ஆகும் என்பதையெல்லாம் சொல்கிறது அந்தக் காகிதம். இப்படி இரண்டிற்கும் இடையிலிருக்கும் முரண்களின் இடுக்கில்தான் கதை பிறக்கிறது.

சில கதைகளில் கற்பனையான பிரதேசங்களைச் சித்தரித்து அங்கிருந்து சில விஷயங்கள் சொல்கிறீர்கள்.

நம் வீடு அலங்கோலமாயிருப்பது இன்னொருவர் வரும்போதுதான் தெரியும். இந்தத் தர்க்கத்தைத்தான் சு.ரா., 'ஜே.ஜே: சில குறிப்புகள்' பற்றிச் சொல்லும்போது 'தமிழ் வாழ்க்கையை விமர்சிக்க வேண்டியிருந்ததால் மலையாளப் பின்னணியை எடுத்துக்கொண்டேன்' என்றார்.

உங்கள் கதைகளில் மதவாதிகள், சாமியார்கள் வருகிறார்கள். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் விமர்சனத்துக்குள்ளாகிறார்கள். உங்களுக்கும் மதம், மதவாதிகளுக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது?

மத மரபுக்கும் எனக்கும் தொடர்பில்லை. அதிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு விஷயமில்லை என்றே நினைக்கிறேன். வியாசனிலிருந்து எடுத்துக்கொள்ள விஷயம் இருக்கிறது. ஏனென்றால் வியாசன் சிருஷ்டிக்கான ஜனன ஸ்தானம். ஒரு சிறு சதுரத்திற்குள்ளிருந்து காவேரி பிறந்ததுபோல. போர்ஹஸை, மார்க்கஸைப் படித்திருக்கலாம்; ஆனால் யாரும் வியாசனை மறுக்க முடியாது. அந்த ஜனன ஸ்தானத்திலிருந்து நான் அதிகம் எடுத்துக் கொள்ள முடியும். மதப் பார்வையில் வியாசனைப் பார்க்க முடியாது. கண்ணனாக இருந்தாலும் சிவபெருமானாக இருந்தாலும் வியாசனின் பார்வையிலிருந்துதான் பார்க்க முடியும்.

வியாசனுடைய பார்வையில் மதம் இல்லை என்கிறீர்களா?

வியாசன் ஒரு சிருஷ்டி கர்த்தா. அவனது படைப்பில் கடவுளான கண்ணனும்கூட வஞ்சகமானவன்தான். சொந்தங்கள் எல்லாம் இறந்துபோன பிறகு எங்கோ போய் அனாதையாக இறந்துபோகிறான். கடவுளே துரோணரைக் கொல்லச் சதி செய்தவன்தான். பீஷ்மரைக் கொல்லச் சிகண்டியை நிறுத்தியவன்தான். கர்ணனிடம் கவச குண்டலத்தைச் சூதாகப் பறித்தவன்தான். கடவுளான கண்ணனும் மனிதனைப் போலத் தவறுகள் செய்பவன்தான் என்பதை நமக்கு உணர்த்தும் ஆதாரங்களை வைக்கிறான் வியாசன். கடவுளைக் கொண்டாடும் ஒருவனால் எப்படிக் கடவுளை விமர்சிக்க முடியும்? எனவேதான் வியாசன் சிருஷ்டியின் ஜனன ஸ்தானம் என்கிறேன்.

மத மரபு என்பது முக்கியமான பிரச்சினை. உதாரணமாக, சுந்தர ராமசாமி பற்றி ஜெயமோகன் எழுதிய 'நினைவின் நதியில்' நூலைப் படிக்கையில் ஜெயமோகனுக்கும் சு.ரா.வுக்கும் இடையிலான பெரிய பிரச்சினை இந்த மத மரபுதான் என்பது தெரிகிறது. மத மரபிலிருந்து துண்டித்துக்கொள்வது ஜெயமோகனுக்குப் பெரிய பிரச்சினை. அதிலிருந்து எடுத்துக்கொள்ளப் பெரிதாக எதுவும் இல்லை என்று சொல்கிற சு.ரா.வுடன் தொடர்ந்து மோதல் நேர்கிறது. அந்தக் கட்டுரை முழுக்க இந்த மோதல்தான் பதற்றங்களைத் தரும் விஷயமாக இருக்கிறது. குறிப்பாக நித்ய சைதன்யரைப் பற்றிய இடங்கள். இவருடைய பார்வையில் அவர் பார்க்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அதில் தெரியும்.

ஜெயமோகன் 'ஜே.ஜே: சில குறிப்புக'ளை பஸ்ஸில் போகும்போது படிப்பார். படித்துவிட்டு ஜே.ஜே.வுக்குக் கீழே மண்கூட இல்லை; சாமியாருக்குக் கீழே பிரபஞ்சம் இருக்கிறது என்று கடிதம் எழுதுவார். இதுதான் இங்கே பிரச்சினை. மரபு என்று எடுத்துக்கொண்டால் எனக்கு வியாசனிலிருந்து வருவதுதான். கடவுளை வணங்குவதொன்றும் புதிய பார்வை கிடையாது. கிருஷ்ணன் கடவுள்தான்; அயோக்கியன்தான்; அனாதைப் பிணமும்தான் என்பது பார்வை.

தற்போதைய மதவாதிகள் பற்றிய உங்கள் பார்வை என்ன? உங்கள் படைப்புகளில் வருகிற கோயில், சாமியார் போன்றவற்றோடு உங்களுக்குள்ள நடைமுறை உறவு என்ன?

மூளையை மழுங்கடிக்கக்கூடிய பல விஷயங்கள் மதத்தில் இருக்கின்றன. கிராமங்கள்தான் இந்தியாவில் சிக்கலான அமைப்பு முறை என்றால் அதற்குள்ளிருக்கும் கோயில்கள், கோயில் சார்ந்த உறவுகள், மேல்-கீழ் என்ற விஷயங்கள் மேலும் சிக்கலானவை. ஒரு சிறிய கோயில் இருக்கும். அதற்கொரு பூசாரி இருப்பார். சில வேலையாட்கள் இருப்பார்கள். சில மரியாதைகள் இருக்கும். இதிலிருந்து பிரச்சினைகள் கிளம்பும். அதனால்தான் பிரச்சினை கொண்டிருக்கும் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டுமென்று அம்பேத்கர் சொன்னார்.

ராணுவம், போலீஸ் போன்றோரை உங்கள் கதைகளில் விமர்சிக்கிறீர்கள் . . .

போலீஸ், ராணுவம் என்ற இரு துறைகளைச் சார்ந்தவர்களும் கட்டளைக்குக் கீழ்ப்படிபவர்கள். சுய விருப்பு வெறுப்பு எதையும் பொருட்படுத்த முடியாதவர்கள். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் இருந்த முக்கால்வாசிப் பேர் இந்தியர்கள். கைதுசெய் என்றால் கைதுசெய்யவும் அடி என்றால் அடிக்கவும் மட்டுமே முடிந்தவர்கள் இவர்கள். எப்பொழுதும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சுயமாகச் செயல்பட இயலாதவர்களால் பிரச்சினைதான். இவர்களது இயல்பு, போக்கு என் கவனத்துக்குரியவையாக இருந்துவருகின்றன.

*****

உங்கள் படைப்புகளில் யாருடைய தாக்கமோ பாதிப்போ இல்லை என்கிறீர்கள். மரபிலிருந்தும் எடுத்துக்கொள்ளப் பெரிதாக ஏதுமில்லை என்கிறீர்கள். அது எப்படிச் சாத்தியம்? நேரடியாக இல்லாவிட்டாலும் மரபிலிருந்து நீங்கள் எடுத்துக்கொண்டது கொஞ்சம்கூட இல்லை என்கிறீர்களா?

யார் யாரிடமிருந்து என் எழுத்துக்கான பாதிப்பு வந்ததென்று சொல்ல முடியாது. வியாசனிலிருந்து போர்ஹஸ் வரை யாருக்கு என்ன பாத்திரம் என்று சொல்ல முடியாது. யாரும் அதைக் கண்டறியவும் இயலாது.

ஒருவர் முழுக்க முழுக்க மரபிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள முடியுமா? பழக்க வழக்கங்களிலோ நடைமுறையிலோ மரபிலிருந்து சில விஷயங்கள் வரத்தானே செய்யும்?

அதில் ஈடுபாடில்லாமல் இருக்கலாமே தவிர முற்றிலுமாகத் தன்னைத் துண்டித்துக்கொள்ள முடியாது. நாளைக்கு என் உறவினர் வீட்டில் 'காது குத்தல்' என்றால் நான் போய்த்தானாக வேண்டும். இதுபோலத்தான் மரபுகளோடு கொண்டிருக்கும் உறவு.

உங்களுடைய கதைகளில் யாருடைய பாதிப்பும் இல்லை என்கிற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு சில கதைகளில் உங்கள் விமர்சனமும் கிண்டலும் புதுமைப்பித்தனை ஞாபகப்படுத்துவதாக இருக்கின்றன. இதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

இல்லை, அப்படி உணர்ந்ததில்லை.

நீங்கள் மிகக் குறைவாக எழுதுவதற்குக் காரணம் என்ன?

பிரக்ஞைதான்.

பிரக்ஞையா?

பிரக்ஞை இல்லாதவர்கள் நிறைய எழுதலாம்.

டால்ஸ்டாய் நிறைய எழுதியிருக்கிறாரே.

பிரக்ஞையில் சலிக்கும்போது நிறைய எழுத முடியாது. பிரக்ஞையோடு நிறைய எழுதுவது ஒரு வரம். இதை எழுதுவதா அல்லது அதை எழுதுவதா என்று பிரக்ஞை பூர்வமாகச் சலிக்கும்போது குறைவாகத்தான் எழுத இயலும். மௌனிக்கு இது போன்ற இயல்புதான். கட்டற்ற வார்த்தைகளை அள்ளிவிடாமல் அதிகமாக எழுதும் டால்ஸ்டாய் போன்றோர்களுக்கு அது வரம்தான்.

எதையும் திட்டமிட்டுச் செய்வதில்லை. தற்பொழுது பத்தி எழுதத் தொடங்கியிருக்கிறேன். சமீபத்தில் இட ஒதுக்கீடு குறித்து எழுதினேன். வழக்கமான பத்திக்குரிய தொனியிலிருந்து இது வித்தியாசமானதாக இருந்தது. இரண்டு மூன்று பத்திகளுக்குப் பின்பு ஆய்வுக் கட்டுரை போன்று ஒன்று எழுதுகிறேன். முன்யோசனைகளோடு எதையும் செய்வதில்லை. நினைப்பது வேறாகவும் எழுதுவது வேறாகவும்தான் இருக்கும்.

குறைவாக எழுதுவதற்குப் பிரக்ஞையைத் தாண்டி விதவிதமான வாழ்க்கை அனுபவங்களின் போதாமையும் காரணமாக இருக்கலாம் இல்லையா?

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழ்க்கை பெரிய கிணற்றுக்குள் இருப்பதுபோலத்தான். ஏனென்றால் ஜரோப்பிய நாடுகள் போன்று உலகத்தையே உலுக்கும், சரித்திரத்தையே மாற்றும் காரியங்கள் எதுவும் இங்குக் கிடையாது. இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடைபெறும் சண்டைகளைத் தவிர அந்நிய நாட்டுப் படையெடுப்போ பெரும் பஞ்சமோ எதுவும் கிடையாது. எதிர்பாராது நிகழும் சுனாமி போன்றவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் பெரிய பிரச்சினையென்று எதுவும் இல்லை. இந்தியா சுதந்திரமடைந்தபோதுகூட இந்திய மக்கள் பெரிய பிரச்சினைகளைத் தாண்டி வரவில்லை. இருந்தாலும் அறிவு சார்ந்த விஷயங்களைக் கிரகித்து எழுத முடியும். அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மேல்நாட்டு எழுத்தாளர்களுடைய எழுத்துக்கு நிகராக எழுதக்கூடிய எழுத்தாளர்களும் இங்கே இருக்கிறார்கள்.

உலகத்தை மாற்றும் அளவுக்கோ சரித்திரத்தைப் புரட்டும் அளவுக்கோ பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் வாழ்க்கை இங்கே நெருக்கடியோடுதானே இருக்கிறது?

இலக்கியம் மனத்தோடு தொடர்புடையது. உறவுகள் சம்பந்தப்பட்டது. யுத்த நெருக்கடியில் இருக்கிறவனின் மனநிலை சாதாரணமாக இருக்கிற ஒரு மனிதனுக்கு இருக்கலாம். ஒருவரைக் கன்னத்தில் அடிப்பதனால்கூட நெருக்கடி நேரலாம். இதை யாரும் தீர்மானிக்க முடியாது. குண்டு வெடித்து மனிதர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது, இதெல்லாம் ஒரு நெருக்கடியா என்று சொல்ல முடியாது. இந்த நெருக்கடிகள் மனத்தின் சிக்கல்கள்தான்.

ஆனால் அந்த நெருக்கடியிலிருந்து இலக்கியம் பிறந்திருக்கிறதா?

நெருக்கடிகளிலிருந்து இலக்கியம் பிறக்கத்தான் செய்திருக்கிறது. கிணற்றுக்குள்ளிருந்து வந்து கடலில் நீந்துபவனுக்கு இணையாக எழுத முடிகிறது. மேல்நாட்டு எழுத்தாளர்களுக்கு வாய்க்கும் வாழ்பனுபவங்கள் வேறு. பிரான்சில் பிறந்தவன் ஜெர்மனியில் படிப்பான். ஹங்கேரியில் வேலை பார்ப்பான். ருமேனியாவில் திருமணம் செய்துகொள்வான். லண்டனில் போய்க் குடியமர்வான். ஆனால் இந்த அனுபவம் தமிழக எழுத்தாளர்களுக்கு நேர்வதில்லை. திருவனந்தபுரம் எல்லையைத் தாண்டுவதே நமக்குப் பெரிய விஷயம். இந்த அனுபவங்களைக் கொண்டே பெரிய கடலில் நீந்துபவனின் சிருஷ்டிக்கு இணையான சிருஷ்டியை இவர்களால் படைக்க முடியும். அதைச் செய்கிறார்கள்.

அது போன்று எழுதிக்கொண்டிருப்பவர்களுடைய நாவல், சிறுகதை எதையாவது சுட்டிக்காட்டலாமா?

சிலரைப் போல எனக்கு எல்லாம் தெரியுமென்று சொல்ல முடியாது. நான் உலகத் தரத்தோடு இந்தப் படைப்புகள் இருக்கின்றன என்று சொன்னால், உலகத் தரத்திலிருக்கிற நாவல்களைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அப்படியில்லாதபோது நான் சொல்ல முடியாது.

****

நவீனத்துவச் சிறுகதைகளில் இறுதியில் வரக்கூடிய திருப்பங்கள்போல உங்கள் கதைகளில் ஏதாவது முயன்றிருக்கிறீர்களா?

அது தானாக அமைவதுதான். சிருஷ்டி எப்படி வந்ததென்று கண்டுபிடிக்க முடியாது. பெரிய மர்மக் குகை அது. இப்பொழுது நான் பேசுகிறேன். திட்டமிட்டுப் பேசுகிறேன் என்று சொல்ல முடியுமா? நீங்கள் ஒரு கடிதம் எழுதுகிறீர்கள். அக்கடிதம் திட்டமிட்டு எழுதப்பட்டது என்று சொல்ல முடியுமா? நீங்கள் ஒரு கருத் தோட்டத்தோடு வருகிறீர்கள். எழுதும்போது அது மாறும். உரையாடல் திட்டமிடப்படுவதில்லை. ஆனால் கருத்தும் கருத்தோட்டமும் இருக்கும்.

'புனைவின் உரையாடல்' என்கிற கதையில் கடைசியில் இதுவும் புனைவுதான் என்பது மொத்தமாகப் புரட்டிப்போடுகிற வார்த்தை. ஜிஹ்ஜீவீநீணீறீ சிறுகதைக்கான விஷயம் அதில் இருக்கிறது. ஆனால் அது இல்லாதபோதும் ஒரு வித உறுதிப்பாட்டுடன் எழுதுகிறீர்கள். சிலர் கதை முடிந்த பின் இரண்டு பக்கங்கள் எழுதுகிறார்கள். இந்த இரண்டு பக்கங்கள் இல்லாமலேயே கதை நன்றாக வருமென்று நமக்கே தெரியும். ஆனால் நீங்கள் அந்த இரண்டு பக்கத்தைப் பிரக்ஞைபூர்வமாக, கலை ரீதியாகத் தேவை என்று எழுதி யிருக்கிறீர்கள்.

ஏனென்றால் அந்தக் கதை அந்த இரண்டு பக்கங்கள் தேவையென்று சொல்கிறது. புனைவுகள் எல்லோரிடமும் ஒரு விதத்தில் வந்துகொண்டிருகின்றன. உதாரணத்துக்குச் சொன்னால் சர்க்கரை நோயாளிக்குக் குண்டூசி அளவு இருக்கும் காயம்கூட விரலை எடுக்குமளவுக்குச் சிக்கலானது. வெளியிலிருக்கும் ஆளுக்கு இந்த ஆபத்து புரியாது. நடக்கும்போது, எனக்கு விரலில் அடிபட்டு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் நான் என்ன செய்கிறேன்? சொந்தக்காரர் ஒருவருக்குக் காலில் முள் குத்திக் காயம் பெரிதாகி விரலையே எடுக்க வேண்டியதாகிவிட்டது; அவரைப் பார்த்துவிட்டு வந்து வண்டியை எடுக்கும்போது, காலில் இடித்துவிட்டது என்று இந்த விஷயத்தை ஒரு புனைவுபோலச் சொல்வேன். இல்லையென்றால் சிறிய காயத்திற்கு இப்படி அலட்டுகிறான் என்று பிறர் நினைக்கக்கூடும். புனைவு, வாழ்க்கையில் ஒரு பகுதியாக எனக்கு மட்டும் இருக்கிறதா எல்லோருக்கும் இருக்கிறதா என்று தெரியாது. பொய்யையும் புனைவையும் பிரித்துப் பார்ப்பது பெரிய சிக்கல். நான் சொன்னதைப் புனைவென்கிறேன்.

'புனைவின் உரையாடல்' கதையில் எது புனைவு என்றே தெரியாது. மொராக்கோ, பிரான்சிலிருந்து வருவார்கள். மதுரை புறாத் தோப்பு, ஸ்டார் ஹோட்டலில் குடிப்பார்கள். இதில் எது பொய் என்று தெரியாது. அதுதான் புனைவின் உரையாடல். 'பீகாரும் ஜாக்குலினும்' கதையும் அப்படித்தான். பிரான்சில் ஹீலியம் வாயுவைப் பற்றி ஒருவன் கட்டுரை வாசிப்பான். பீகாரில் நடக்கும் கலவரமொன்றில் வெள்ளைக்காரன் ஒருவன் இறந்துபோவான் . . . அந்த இடத்தில் புத்தரைக் கண்ட, மௌரியரைக் கண்ட, அசோகரைக் கண்ட, ஷெர்ஷாவைக் கண்ட, வங்காள நவாபுக்குச் சொந்தமாகி அப்புறம் பக்ஸார் போரில் பிரிட்டிஷாருக்குக் கைமாறி, சுதந்திர இந்தியாவுக்குள் உள்ள இந்த பூமியில் கையைத் தூக்கிக் கொண்டு வந்தேன் என்று சொல்வேன். இந்த இடத்தில் creativity இருக்கிறது.

பீகார் இந்தியாவில் பிரச்சினையான மாநிலம். அந்த மாநிலம் அறிவுக் கேந்திரமாக இருந்திருக்கிறது. நாளந்தா பல்கலைக்கழகம் இருந்துள்ளது. அந்த இடத்தில் நடை பெறும் வன்முறையைப் பற்றிச் சொல்வதனால் எழுதுபவருக்கு இந்த விஷயங்கள் நினைவுக்கு வர வேண்டும். இதுதான் வரலாற்றைக் கொண்டாடுதல். வரலாற்றை வேறு மாதிரி எழுதுவதா படைப்பு? வரலாற்று நிகழ்வுகளைச் சூசகமாகக் கொண்டுவருவதுதான் இலக்கியம்.

'மாபெரும் சூதாட்டம்', 'காலத்தின் அலமாரி' போன்ற கதைகள் ஒரு நாவலாக விரிவதற்கான தன்மைகளோடு இருக்கின்றன. ஆனால் அவற்றைச் சிறுகதைகளாகவே நிறுத்திவிட்டீர்கள்.

எனக்கு இயல்பாகவே பெரியதாக எழுதுவதில் சிக்கல். பிரக்ஞை காரணமா என்று தெரியவில்லை. பாலைச் சுண்டக் காய்ச்சியதுபோல இருக்க வேண்டும். எதையும் நீக்க நினைத்தால் அது கஷ்டமான காரியமாக இருக்க வேண்டும். ஒரு வரியை எடுப்பதற்குக்கூட அதிகமாக யோசிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு நாவல் எழுதுவது கஷ்டமானதாக இருக்கும்.

****

எண்பதுகளின் இறுதியிலிருந்து தொண்ணூறுகளின் இறுதிவரை யதார்த்தம் செத்துப்போய்விட்டது என்றும் புது வகை எழுத்துகள் எழுதப்பட வேண்டும் என்றும் உருவான போக்கு உங்களது சமகாலத்தில் நடந்ததில்லையா? இந்தப் போக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

எது யதார்த்தம் என்பதில் பிரச்சினை.

ஒரு பக்கம் நாகார்ஜுனன் போன்றோர்; மறுபுறம் கோணங்கி, ராமகிருஷ்ணன் முதலியோர் முன்வைத்த பிரகடனங்கள். கௌதம சித்தார்த்தனின் புது வகை எழுத்து என்ற பெயரிலான கதைகள். லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள். இந்தப் போக்கை நீங்கள் எப்படிப் பிரதிபலிக்கிறீர்கள்?

இதை ஆர்வத்தோடுதான் பார்க்க முடியும். மார்க்கஸ் யதார்த்தமாக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் (மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்). யதார்த்தம் இல்லையென்று சொல்லும்போது எது யதார்த்தம் என்பது பிரச்சினை. ஒரு முறையில் எழுதிப் பழகி இதுதான் யதார்த்தம் என்று உருவாக்கிவிட்டார்கள். மனம் எப்போதும் 1, 2, 3 என்ற வரிசையிலேயே இயங்கிவிடாது. 5, 7, 3, 2, 8, 9, இப்படியும் இயங்கும். யதார்த்தமென்று நாம் பழகியிருக்கும் விஷயங்கள் வேறு. யதார்த்தம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. யதார்த்தத்தைப் பார்த்துத்தான் எழுதுகிறோம். ஆனால் எழுதுகிற முறை வேறு. ஒரு கட்டத்தில் எழுதப்பட்ட முறையை மறுத்து யதார்த்தத்தை வேறு மாதிரியாக எழுதத் தொடங்கினார்கள். ஏற்கனவே எழுதப்பட்ட எழுத்துக்கு எதிரான குரல் அவசியமற்றது. ஏனென்றால் தானாக ஒரு ஜனனம் நிகழும்போது தானாக மரணமும் நிகழத்தான் செய்யும். அதைக் கத்திவைத்து ஏன் குத்திக் கொலை செய்ய வேண்டும்?

இது போன்ற விவாதங்களால் தமிழுக்குச் சாதகமான பங்களிப்பு கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

விவாதம் நடந்ததுபோல் தெரியவில்லை. ஆனால் எழுத்து முறை மாறியதில் மகிழ்ச்சி. வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காகப் படைப்பே இல்லாதவைகூட நிறைய வரத் தொடங்கின. புதிய கருத்தோட்டங்கள் இங்கு நுழையும்போது, அதைச் செரித்து ஒருவர் எழுதத் தொடங்கும்போது அதே போன்று நிறையப் பேருக்கு எழுதத் தோன்றும். எடுத்துக்காட்டாக, விரக்தியடைந்த மனநிலையைப் பற்றிய படைப்புகள் 'கணையாழி'யில் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததைச் சொல்லலாம். இதுவும் பிரச்சினைதான்.

யதார்த்தம் செத்துவிட்டது என்று சொன்னவர்களும் யதார்த்தக் கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள் . . .

எல்லார் சொல்வதும் யதார்த்தம்தான் என்றாலும் எழுத்து முறையில் ஏற்பட்ட வித்தியாசத்தால் புதிய முறையில் யதார்த்தம் எழுதப்படுகிறது. வித்தியாசமான எழுத்துகள் மகிழ்ச்சியைத் தருகின்றன. அதற்காக முன்பு எழுதப்பட்ட எழுத்துமுறை மோசம் என்று சொல்ல முடியாது. சா. கந்தசாமியின் 'தக்கையின் மீது நான்கு கண்கள்' முக்கியமான கதை. அதேபோல ராசேந்திர சோழனுடைய 'சாவி' எனும் கதை. அசோகமித்திரனின் 'பார்வை' எனும் கதை. இவையெல்லாம் முக்கியமான கதைகள். இந்த எழுத்து சிருஷ்டி சார்ந்து நிற்கும். பழையதை மறுப்பது என்றால் எல்லாவற்றையும் சுட்டுப்போட்டுவிடுவது என்று அர்த்தமல்ல.

மூத்த எழுத்தாளர் ஒருவரிடம் பேசும்போது, மார்க்கஸ், போர்ஹஸ் இவர்களை ஆங்கிலத்தில் படிக்கும்போது அவர்களது எழுத்துக்கள் புரிகின்றன; பிடிக்கிறது. ஆனால் அவர்களைப் போன்று எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு எழுதுவோரின் எழுத்துக்கள் புரிவதில்லை; படிப்பதற்கும் பிடிப்பதில்லையென்று கூறுகிறார்.

போர்ஹஸில் கதையே இருக்காது. கட்டுரை மாதிரி இருக்கும். கதை அதற்குள் எங்கோ ஒளிந்திருக்கும். அவருடைய எழுத்து முறை அது. இப்படித்தான் எழுத வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எழுதப்படும் எழுத்துக்களைப் படிக்க முடியாது. இயல்பாக இருந்தால்தான் மலரும். கார்பைடு போட்டுப் பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களைச் சாப்பிட முடியுமா? சுவைக்குமா? அதுபோலத்தான் இந்த எழுத்துக்களும்.

நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லை என்பது, மத மரபுகளில் பெற்றுக்கொள்ள ஏதுமில்லை என்பது ... இதெல்லாம் பகுத்தறிவுவாதத்தின் வெளிப்பாடுதானே? ஆனால் புலனறிவைப் பிரதானமாகக் கொள்ளும் பகுத்தறிவுவாதத்தின் எல்லைகளை உங்கள் கதைகள் மீறிவிடுகின்றன.

ஆத்திகத்துக்கு எதிரான நாத்திகனென்று என்னைச் சொல்ல முடியாது. எல்லா மதங்களிலும் பகுத்தறிவுவாதிகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய, விரும்பத்தக்க ஆழமான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றைக் கண்களுக்குப் புலப்படாதவாறு, தேடிக் கண்டடையும் சூழலை மதம் சார்ந்த மனிதர்கள் உருவாக்கிவிட்டார்கள். ஆத்திகத்தை எதிர்க்கிறவர்கள் நாத்திகர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மக்கள் வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு மதம் அவர்களோடு பிறப்பிலிருந்து இறப்புவரை பிணைந்து கிடக்கிறது. ஏதோவொரு சடங்கு ரீதியாக இந்த மதம் மனிதர்களோடு தொடர்ந்து உறவு கொள்கிறது. தாய், தந்தை இறந்த பிறகு தர்ப்பணம் செய்வார்கள். மொழி புரியாது, ஆனால் மதத்தை மறந்துவிட்டுப் பார்க்கும்போது அந்தச் சடங்கு மேஜிக்கல் ரியலிசம்போல எனக்குத் தோன்றுகிறது. அதனால் நாத்திகத்தின் முழுப் பார்வையோடு ஆத்திகத்தைப் பார்க்கிற ஆள் அல்ல நான்.

புலன்களைத் தாண்டிய விஷயம் என்று எதுவும் இல்லை. ஓர் ஆளைப் பார்த்தவுடனே அவரைப் பற்றிய ஒரு கணிப்பு உருவாகிறது. அந்தக் கணிப்பு எங்கிருந்தோ வருவதில்லை. நமது அனுபவங்கள் சார்ந்து, நமது அறிவு சார்ந்து, நமது உள்ளுணர்வு தருவதுதான் அந்தக் கணிப்பு.

ஆத்திகனாக இருப்பதிலும் நிறையப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஏனென்றால் எதிரில் வருகிற ஆளிலிருந்து நேரம் வரை எல்லாமே அவனுக்குப் பிரச்சினைதான். ஆனால் மற்றவர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அதை வேடிக்கைக்குரியதாகப் பார்க்க முடியும். நீங்கள் சொல்வதுபோலப் புலன்கள் சாராத ஈடுபாடு என்னுடைய கதைகளில் எப்படி வெளிப்படுகிறது என்று தெரியவில்லை.

புலன்களால் அறியப்படும் உலகத்தையும் அதன் தர்க்கத்தையும் தாண்டி, காரண-காரிய அறிவால் விளங்கிக்கொள்ள இயலாத ஒரு மனோநிலை உங்களுடைய கதைகளில் வெளிப்படுகிறது. திடீரென்று திரைக்குள்ளிருந஢து ஒரு கிழவன் எட்டிப் பார்க்கிறான். பகுத஢தறிவுவாதி இது பிரமை, பொய் என்று சொல்கிறான்.

நாத்திகவாதிக்கு உண்டான வரையறைகளை வைத்துக்கொண்டு பார்த்தால் அப்படித்தான் தோன்றும். படைப்புப் பார்வையோடு பார்த்தால் இப்படித் தோன்றும் மனநிலை வராது. படைப்பென்றால் என்னவென்று தெரியாத, இலக்கியம் என்றால் எதுவென்று புரியாத ஒருவன் இதைப் படித்தால் அவன் ஆத்திகனாக இருந்தாலும் நாத்திகனாக இருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான் தோன்றும். இந்தச் சிக்கல் அவன் ஆத்திகனா நாத்திகனா என்பதில் இல்லை. இலக்கியத்தை எப்படிப் பார்ப்பது என்று தெரியாத நிலையிலிருந்து வருகிறது.

****

வாசகர்களிடம் வரவேற்பும் தகுந்த இடமும் உங்கள் கதைகளுக்குக் கிடைக்கின்றனவா?

பொதுவாக நான் மறைந்து திரியும் ஆள்தான். வெகு நாள்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் முகத்தைக் காட்டும் எண்ணமே வருகிறது. ரசிகர்களோ வாசகர்களோ என்னைத் தேடி வருவதாக இருந்தால் எனது முகவரியை, உத்தியோகத்தை மறைத்துக்கொள்வேன். இன்னும் பத்து வருடங்கள் இருப்போம்; அதற்குள் நான்கு பேரிடம் பேசிப் பழகியபடி இருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

உங்கள் கதைகளுக்குப் போதுமான எதிர்வினைகள் கிடைக்கின்றனவா?

அப்படியெதுவும் இல்லை. அதுவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. யாரும் வாசகர் என்று சொல்லிக்கொண்டு வருவதில்லை. அதிகம் குழைந்தால் வருவார்களோ என்னவோ தெரியவில்லை. வராதது மகிழ்ச்சிதான். இல்லையென்றால் அவர்களிடம் பேசுவதற்கான உத்திகளோடு இருக்க வேண்டியிருக்கும். கதைகளுக்கான response ஏதோவொரு விதத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தக் கதை நல்லாயிருக்கு, முக்கியமான சிறுகதை ஆசிரியர் என்பது போன்ற கருத்துகள், இருட்டில் மின்னும் விளக்கைப் போல் சந்தோஷமானவை. பெரிய எழுத்தாளர்களிடம்கூட இப்படியொரு சந்தோஷத்தைப் பார்த்திருக்கிறேன்.

தொகுப்பைப் படித்துவிட்டு அதைப் பற்றி உரையாடுவதும் விவாதிப்பதும் அதிகமாக நடக்கவில்லையே?

ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவதை வைத்தே அதைத் தீர்மானிக்க முடியாது. எதற்குக் கடிதம் வருகிறதோ அது மட்டுமே முக்கியமான விஷயம் என்று சொல்ல முடியுமா? கடிதம் எழுதுபவருடைய மனநிலையில் அந்த விஷயம் முக்கியமானதாகப் படுகிறது. அங்கீகாரம் இல்லை என்பதால் அது முக்கியமானதல்ல என்று ஆகிவிடாது. சில விஷயங்களுக்குத்தான் respond பண்ண முடியும். எளிதான விஷயங்களில் ஈடுபாடுள்ள ஆட்கள்தான் பெரும்பாலும் கடிதம் எழுதுவார்கள்.

****

ஒரு படைப்பாளிக்கும் அவருடைய அடுத்த தலைமுறைப் படைப்பாளிக்குமான உறவு எப்படியிருக்கிறது? குறிப்பாகச் சொன்னால் இளம் தலைமுறை எழுத்தாளர்களோடு சு.ரா.வுக்கு இருந்த நட்பு. ஏதோவொரு வகையில் ஒரு சிலருக்கு இந்த நட்பு சிக்கலாக மாறுகிறது. எதனால் இப்படி நடக்கிறது?

நண்பர்களாக இல்லாத இலக்கியவாதிகளையும் படைப்பாளிகளையும் சந்திப்பது போன்ற துயரம் வேறு இருக்குமா என்று தெரியவில்லை. இலக்கியம் தெரியாத ஆட்களிடம் படைப்பாளி என்று நம்மை ஒருவர் அறி முகப்படுத்துவதும் படைப்பாளியிடமே நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று அவர் கேட்கும் சூழலும் படைப்பாளிக்குப் பெரிய மனச் சோர்வைத் தரக்கூடிய விஷயங்கள்.

சு.ரா. புதிதாக எழுத வரும் படைப்பாளிகளை ஈர்த்தவர். 'ஜே.ஜே. சில குறிப்புக'ளுக்குப் பின் சு.ரா.வின் இடம் நவீனத்துவத்திலும் இளைய தலைமுறைப் படைப்பாளிகளிடமும் உறுதியானது. இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கு நிகராக சு.ரா., பிரமிள், சாமிநாதன் போன்ற படைப்பாளிகள் இருந்தார்கள். பிரமிளுடைய மனநிலை இவர்களிலிருந்து மாறுபட்டது. சாமிநாதனுடைய படைப்புகள் ஓர் இரைச்சலான குரலில் வெளிப்பட்டன. படைப்புத் தளத்தில் கவிதைகளைவிடச் சிறுகதைகளும் நாவல்களும் எளிதில் வாசகனை அடைபவையாக இருந்தன. இந்தச் சூழல் சு.ரா.வை நவீனத்துவத்தின் குறியீடாக உருவாக்க முக்கியக் காரணமாக இருந்தது. உதாரணமாக, ஜெயமோகனையும் சு.ரா.வையும் எடுத்துக்கொண்டால், ஒருவர் வார்த்தைகளைப் பிரக்ஞையோடு எழுதுகிறார் என்பது மற்றொருவருக்குச் சிக்கலாகிறது. பேசும்போதும் எழுதும்போதும் பிரக்ஞைபூர்வமாகச் செயல்படும்போது கட்டற்ற வார்த்தைகளைத் தவிர்க்க முடியும். மத மரபிலிருந்து எடுத்துக்கொள்ள விஷயங்கள் இருக்கின்றன என்கிற ஜெயமோகனுக்கும் பிரக்ஞை சலித்த கண்காணிப்புக் கோபுரம் மாதிரி இருக்கிற சு.ரா.வுக்கும் அடிப்படையாகச் சில வேறுபாடுகள் இருக்கின்றன. தனிமனிதன் விரக்தியாக இருக்கிறான் என்றால் அந்த விரக்தியான சூழலும் மனநிலையும்கூடப் படைப்புக்கு முக்கியம்தான். அதனால்தான் சு.ரா. நிற்கும் தளமும் ஜெயமோகன் நிற்கும் தளமும் வெவ்வேறானவை என்பதைச் சொல்ல முடிகிறது.

இளைய தலைமுறையைச் சேர்ந்த சிலருக்கு சு.ரா.வுடன் ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன? இந்தச் சூழலைப் புரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்.

ஒரு சிலர் ஒழுங்கற்ற தன்மைமீது ஈர்ப்பு உடையவர்கள். சு.ரா. அக ஒழுங்குக்கும் புற ஒழுங்குக்கும் தொடர்பிருக்கிறது என்று நினைப்பவர். 'ஜே.ஜே.'யில் அரவிந்தாட்ச மேனன் தொடர்பான பாராட்டுதல்கள் எல்லாம் அந்தக் குணத்தோடு தொடர்புடையவைதான். அவர் பேனாவில் மை ஊற்றும்போது சிந்தாது. வேட்டி கட்டிக்கொள்வது அழகாக இருக்கும். இவையெல்லாம் குறியீடுகள்தான். இந்தக் குறியீடுகள் அக ஒழுங்கோடு தொடர்புடையவையாகும்போது இது போன்ற இமேஜ் உருவாகிறது. இந்து பேப்பரைப் படித்துவிட்டு அதே ஒழுங்கோடு மீண்டும் மடித்துவைப்பதை ஒருவர் ஆச்சரியமானதாகச் சொல்கிறார். அப்பொழுது பிரச்சினை வரத்தான் செய்யும். மணிவண்ணனுக்கு ஒழுங்கற்றுக் கலைத்துப்போடுகிற தன்மையில் ஈடுபாடு இருக்கிறது. ஆனால் சு.ரா.வுக்குப் பேனாவில் மை ஊற்றுவதிலும்கூட ஓர் ஒழுங்கு இருக்கிறது. இந்த அடிப்படை முரண்பாடே பிரச்சினை உருவாவதற்குக் காரணமாயிருக்க இயலும்.

கட்டற்று இருப்பது, மரபோடு இருப்பது - இப்படி ஒருவர் இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் படைப்பு இப்படி இருக்க வேண்டும் என்பதில்தான் சிக்கல் இல்லையா?

படைப்பு இப்படித்தான் இருக்க வேண்டுமென்று யாராலும் சொல்ல முடியாது. அதேபோல் படைப்பு யாரிடமிருந்து பிறக்கிறது என்றும் சொல்ல முடியாது. எந்த மண்ணிலும் எந்தப் பாறை இடுக்கிலும் முளைக்கும் பண்புடையதுதான் சிருஷ்டி. அது எப்படி உருவாகிறது என்கிற ரகசியம் தெரிந்தால்தான் யார் வேண்டுமானாலும் படைத்துவிடலாமே!

உற்பத்தியாக இருந்தால் அதற்கான காரணிகளை வைத்துத் தீர்மானிக்கலாம். ஆனால் படைப்பை ஒருபோதும் தீர்மானிக்க முடியாது இல்லையா? ஒழுங்கு, ஒழுங்கற்ற தன்மையென்று எந்த இடத்திலிருந்தும் பிறக்கலாம் படைப்பு.

இந்திய இதிகாசங்களைப் பார்த்தால் அவையெல்லாம் படித்த மனிதர்களிடமிருந்தா உருவாயின? வியாசன் யார்? வால்மீகி யார்? இலக்கியப் பரப்பு முழுக்க இப்படிப்பட்டவர்களை அதிகம் காண முடிகிறது. காளிதாசன் மாடு மேய்த்துக்கொண்டிருந்தவன்தானே!

சிருஷ்டி எல்லா தளங்களிலிருந்தும் உருவாகிறது. ஆடு மேய்ப்பவனிடம், தர்ப்பணம் செய்பவனிடம், கொலை செய்பவனிடம், கொலை செய்யப்படுபவனிடம் என்பதாக யாரிடமிருந்தும் உருவாகலாம் படைப்பு. சிருஷ்டிக்கு மண் வேறுபாடு கிடையாது.

வெவ்வேறு இடங்களிலிருந்து சு.ரா.வை நாடிப்போகிறார்கள். எந்த இடத்தில் முரண்படுகிறார்கள்? வெவ்வேறு இடங்களிலிருந்து இவர்களால் உரையாடல் நிகழ்த்த முடியும் இல்லையா?

சு.ரா. அளவிற்குப் புற ஒழுங்கு எனக்கில்லை என்றாலும் ஓரளவிற்குப் புற ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறேன் என்பதால் எங்களுக்கிடையில் பெரிய முரண்பாடு இருக்க வாய்ப்பு கிடையாது. இருவர் நிற்கும் தளங்கள் வெவ் வேறாக இருக்கும்போது ஒருவர் மற்றொருவருக்குப் பிரச்சினைக்குரியவராகிறார். ஒழுங்கில்லாத ஆளாக இவர் இருந்திருந்தால் இவரோடு யாரும் சண்டையிட மாட்டார்கள். வெளிப்படையாகத் தண்ணியடிப்பவராக, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துபவராக, கூட்டங்களில் கலாட்டா செய்பவராக இருந்தால், இவர் யாருக்கும் பிரச்சினைக்குரியவராக இருக்கமாட்டார். பிரிந்துபோனவர்கள் இவருடனே இருந்திருப்பார்கள்.

ஒழுங்கானவர்களுக்கு எப்பொழுதும் ஒழுங்கற்றவர்கள் பிரச்சினையாய் இருப்பதில்லை. ஒழுங்கற்றவர்களுக்கு ஒழுங்கானவர்களோடு இருத்தல் தொடர்ந்து வலியைத் தரும் விஷயமாகத்தான் இருக்கிறது.

தனியொரு ஆளைத் தாக்கும் இலக்கியவாதிகள், சரியாக நடந்துகொள்வதில் எந்தக் கிளர்ச்சியும் கிடையாது என்பதால் கிளர்ச்சியைத் தானே உருவாக்குகிற உத்திகளில் ஈடுபடுவது தற்போது சகஜமாகியிருக்கிறது.

சுந்தர ராமசாமி ஒழுங்கானவராக இருந்தாலும் பலரையும் தொடர்ந்து அவர் வசீகரித்துக்கொண்டேதானே இருக்கிறார்?

அவர் ஓரு முக்கியமான ஆளுமை. இதுதான் அவருடைய பிரச்சினையே. தன்னை மறந்து அவரிடம் கலக்க இயலாமைக்கு, எந்த நேரத்திலும் தனித்துத் தெரியும் அவரது இயல்பும் ஒரு காரணம்தான். தனித்துத் தெரிகிற unique ஆட்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்குப் பிரச்சினைக்குரியவர்கள்தான்.

அவரிடம் ஈர்ப்புக்கான விஷயமாக எது இருக்கிறதோ அதுதான் பிரச்சினைக்குரிய விஷயமாகவும் இருக்கிறதில்லையா?

அந்த ஈர்ப்பு அவரிடம் மற்றவர்களைக் கொண்டு சேர்க்கும். ஆனால் அவர் ஒரு தனித்துவமான ஆளாக இருக்கிறார் என்பதை உணரும்போது, சூசகமான ஈர்ப்பு உண்டானதுபோல மறைமுகமாக அவர்மீதான எதிர்ப்பும் உண்டாகிக்கொண்டுதான் இருக்கும்.

m m m

உங்களுடைய வேறு பரிமாணங்கள் குறித்துக் கொஞ்சம் பேசலாம். இளம் வயதில் 'சந்திப்பு' என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தியிருக்கிறீர்கள் அல்லவா?

1986இல் சந்திப்புக் கூட்டம் நடத்தினோம் என்று நினைக்கிறேன். எப்பொழுதும் என்னுடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் என் வயதிலிருந்து பத்து வயது குறைந்தவர்களுடைய மனநிலையில்தான் இருந்ததாக உணர்கிறேன். என்னுடைய வயதேயான நண்பர் சிவராமனுக்கு இருக்கிற பக்குவம் ஆச்சரியமாக இருக்கும். ஒரு சிறுவனைப் போல அவர்கூடச் செல்லலாம். டிக்கெட் எடுப்பதிலிருந்து, எங்கே உட்காருவது என்பதுவரை எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்வார். அப்படியொரு பக்குவம் எனக்கு எப்போதும் கிடையாது. என் வயதையொத்தவர்களைவிடக் குறைந்த வயதுடையவர்களோடு பழகுவதுதான் எனக்கு என்றும் பிரியத்திற்குரியதாக இருக்கிறது.

சந்திப்புக் கூட்டம் எப்படித் தொடங்கியது? எவ்வாறு நடந்தது? ஆர்வம் எப்படி இயக்கமாக மாறியது?

ராஜமார்த்தாண்டன் மதுரைக்கு வேலைக்கு வந்திருந்தார். ஆர்வம் இயக்கமாக மாறியதா என்று தெரியவில்லை. ஆனால் முதலில் கூட்டங்களும், பின் அவை சார்ந்து சில காரியங்களும் நடந்தன. முதல் கூட்டத்தில் ராஜமார்த்தாண்டனும் இரண்டாவது கூட்டத்தில் நானும் பேசினோம். இருபது, இருபத்தைந்து பேர் கலந்துகொள்கிற கூட்டமாக இருந்தது. நடைபெற்ற கூட்டங்களிலேயே சு.ரா. கலந஢துகொண்ட கூட்டம்தான் பெரியது. மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நடந்தது. செல்வராஜ் எங்களோடு இருந்தார். Sponsorship வாங்கித் தந்தார். சைக்ளோஸ்டைல் முறையில் கூட்டங்களைப் பற்றியும் பேசுவது குறித்தும் தெரியப்படுத்தினோம்.

ஒரு கட்டத்தில் கூட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தபோது, அதை நடத்துவதில் அர்த்தமில்லையென்று தோன்றியது. நிறுத்திவிட்டோம். நமது இலக்கியக் கூட்டங்களில் விவாதங்களை விடச் சண்டைகள் நடக்கும். ஆனால் இந்தக் கூட்டங்களில் சொல்லும்படியாகச் சண்டைகளோ விவாதங்களோ நடைபெறவில்லை.

சந்திப்புக் கூட்டத்தில் சு.ரா. ஒரு முறை தேசிக விநாயகம் பிள்ளையைப் பற்றிப் பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்தது. கூட்டங்களில் பேசுவதற்கு அவர் தயங்கிய காலகட்டம் அது. கோயம்புத்தூரில் 'ஜே.ஜே: சில குறிப்புக'ளைப் பற்றி நடந்த கூட்டம். அதிலும் சு.ரா. மிகவும் நன்றாகப் பேசினார். 'ஜே.ஜே.'வைப் பற்றி எல்லோரும் பேசி முடித்த பிறகு, அந்நாவலுடைய ஆசிரியராக இல்லாமல், ஜே.ஜே.வின் பிறப்பு, அவன் செயல்பாடு இவை குறித்துப் பேசினார். அந்நாவல் எப்படிப் புனைவோ அதுபோலவே அவர் பேச்சும் புனைவாக, ரசிக்கும்படி இருந்தது. ஜே.ஜே. உயிரோடிருந்தால் எப்படிப் பேசுவாரோ அதே போன்றே பேசினார். பேச்சு முடிந்ததும் எதிர்த்துப் பேசியவர்கள் எல்லாம் ஆர்வத்தோடு அது பற்றிப் பேசினார்கள். அதே போன்று சிவகங்கையில் புதுமைப்பித்தன் பற்றியும் திருக்குறள் பற்றியும் சு.ரா. பேசிய கூட்டமும் எனக்குப் பிடித்த முக்கியமான கூட்டம்.

திருக்குறளைப் பற்றி சு.ரா. என்ன பேசினார்?

கூட்டங்களில் மேற்கோள் காட்டுவதற்கும், நன்னெறி போன்று ஒப்புவிப்பதற்குமே திருக்குறளைக் கையாள்கிறார்கள். சாராம்சம் சார்ந்து அதைப் பற்றி சிந்திப்பதில்லை. பாரதியிலும் பாரதிதாசனிலும் பத்துப் பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டு மேற்கோளாகப் பயன்படுத்துவதுபோலத் திருக்குறளையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது குறித்துச் சிந்திப்பதில்லை என்ற ரீதியில் அந்தப் பேச்சு இருந்தது.

உங்களுக்கும் சு.ரா.வுக்கும் நட்பு எப்படி ஏற்பட்டது?

'ஜே.ஜே: சில குறிப்புகள்' வருவதற்கு முன் (1979-80) நாகர்கோயிலுக்கு ஒரு அலுவலக வேலை விஷயமாகப் போனபோது சு.ரா.வைக் கடையில் வைத்துப் பார்த்துக் கொஞ்ச நேரம் பேசினேன். அது முக்கியமான சந்திப்பு கிடையாது. எங்களுக்கிடையில் நட்பு எப்படி உருவானதென்று ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்தித்தோம். அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியிடுவதற்கான முயற்சி 'வர்ஷா'வில் நடந்துகொண்டிருந்தது. அதற்காக மதுரையில் தங்கினார். ஆனால் 'வர்ஷா', 'குறத்தி முடுக்கு', 'இலத஢தீன் அமெரிக்க சிறுகதைகள்' வெளியிட்டதோடு நின்றுபோனது.

சு.ரா.வைச் சந்திப்பதற்கு நிறையப் பேர் போவார்கள். தங்களது பிரச்சினைகளை (குடும்பம், பிணி, எதுவாக இருந்தாலும்) பற்றிப் பேசுவார்கள். ஒரு பாதிரியாரைப் போல எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருப்பார். தங்களது சுமையை இறக்க எல்லோரும் இவரையே தேர்ந்தெடுக்கிறார்களே என்று ஆச்சரியமாக இருக்கும். எல்லாருடைய சொந்தப் பிரச்சினைகளும் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவருடைய பிரச்சினையென்று எதுவும் யாருக்கும் தெரியாது. ஒருவேளை அவரது பால்ய கால நண்பர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். தனது உளைச்சல்களை அவர் யாரிடமும் காட்டிக்கொண்டதில்லை. இவர்கள் கொண்டுபோய்க் கொட்டும் விஷயங்களை அவர் தாஙகிக்கொள்பவராக இருந்தார். எல்லோருடைய மனங்களையும் படிக்கத் தெரிந்த அறிவாளி அவர்.

தன்னுடன் மட்டும்தான் சு.ரா. இவ்வளவு நட்போடு இருக்கிறார் என்று அவரிடம் பேசும் ஒவ்வொருவரும் நினைத்துக்கொள்ளும்படி சு.ரா. இருந்தார். இலக்கிய ஆளுமை அவருக்கு இருந்தது. அறிவாளியாக இருந்தார். எந்தக் கேள்வி கேட்டாலும் அக்கறையோடு பதில் சொல்வார். இராமானுஜன் என்ற ஒரு நண்பர் இருந்தார். ஆங்கிலத் துறை விரிவுரையாளர். நீச்சல் தெரியுமா என்று தொடங்கிக் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனைத் தெரியுமா என்பதுவரை இடைவெளியில்லாமல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருப்பார். சு.ரா.வும஢ பொறுப்பாக எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்வார். ஜி.ஆர். பாலகிருஷ்ணன், ஐ.சி. பாலசுந்தரம் போன்றோர் 'ஜே.ஜே.' வெளிவந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க வாசகர்களாக இருந்தார்கள். 'ஜே.ஜே.' வெளி வருவதற்கு முன்பு சு.ரா. கையெழுத்துப் பிரதியாகவே வாசித்துக் காண்பித்திருந்தார். ராமகிருஷ்ணன், சிவராமன், சு.ரா. மூவருக்கும் அந்தரங்கமான நட்பு இருந்தது.

சு.ரா.வின் மரணத்திற்குப் பின் வந்த பதிவுகளில் ஜெயமோகன் போன்றவர்களுடைய பதிவுகள் குறித்து. . .

பெரிய பதிவு என்று ஜெயமோகனுடையதுதான் வந்திருக்கிறது. அதில் சு.ரா.வின் இயல்பு, அவருடன் ஏற்பட்ட உரையாடல் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. ஆனால் இருவருக்குமான மோதலில் சில பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிகிறது. பல இடங்களில் ஜெயமோகன் சு.ரா.வை insult செய்கிறார். இவர் சொல்வதை வைத்துப் பார்த்தால்கூட அவர் எந்த இடத்திலும் இவரை அப்படிப் பேசியதாகத் தெரியவில்லை. இவரே பல இடங஢களில் அதை ஒத்துக்கொள்கிறார். அதேபோலக் குறிப்பிட்ட சூழலில் சொல்லப்படுகிற சிறு விஷயத்தை வைத்துக்கொண்டு முழுமையான ஒரு அபிப்ராயத்தை முன்வைக்கிற செயலை அதில் பார்க்க முடிகிறது. உதாரணதத்திற்கு, ஒரு சந்தர்ப்பத்தில் சரிதா நடித்த படத்தில் ஒரு காட்சியைப் பாராட்டினார் என்பதற்காகச் சரிதாதான் அவருக்குப் பிடித்த நடிகை என்று தீர்மானிப்பதுபோல் கணிப்புப் பிழைகள் அதில் நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது.

******

ஒரு எழுத்தாளனாக, ஒரு மனிதனாக இசையோடு எப஢படி உறவுகொள்கிறீர்கள்?

இயற்கையைப் பார்ப்பதுபோல இசையை அனுபவிப்பது ஆனந்தத்தைத் தருகிறது. பாடல்களோ வார்த்தைகளோ மொட஢டையாக இருக்கக் கூடாது. பாடும்போதே தெரியும், இந்த இடம் எப்படிப஢ பிரமாதமாக வந்திருக்கிறது என்று. இந்தோள ராகத்தில் அருணா சாய்ராம் பாடிய பாடலொன்று கேட்டேன். ஸ்வரமே மிகவும் வித்தியாசமாக இருந்தது. பாடுவதில் வெளிப்படும் சிருஷ்டி இதுதான். இசையைப் பொறுத்தவரை எனக்கு மணி அய்யர் மிக முக்கியமானவர். காபி நாராயணி, கௌட மாலா, உமாபரணம் ஆகிய மூன்றில் அமைந்த அவரது பாடல்கள் மிக அருமையானவை. டி.என். கிருஷ்ணன் வயலின், பாலக்காடு மணி அய்யர் மிருதங்கம் - இதில் ஒரு முறை கிருஷ்ணனின் வயலின் பிரதானமாகத் தெரியும். மற்றொரு முறை மணி அய்யரின் மிருதங்கம் பிரதானமாகக் கேட்கும். சில நேரங்களில் மணி அய்யரின் பாடல் ஒருவாறு ஆக்கிரமிப்புச் செய்யும்.

பாடகர் பக்தியில் உருகும்போது நீங்கள் எப்படி எதிர்வினை புரிகிறீர்கள்?

பக்தி பாவத்தோடு சுப்ரபாதத்தைக் கேட்க என்னால் முடியாது. சங்கீதத்தை ரசிப்பவர்களுக்கு எந்தப் பக்தி பாவமும் முக்கியம் இல்லை. இசையை ரசித்தல் பக்தி பாவத்தால் நேர்வதல்ல. அந்தப் பாடல்களுக்குள்ளாக சங்கீதத்தை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதையே கவனிக்கிறேன். கடவுள் பக்தி இல்லாவிட்டாலும் கர் நாடக சங்கீதம் வரும், அருணா சாய்ராம் சொன்னதுபோல. இங்குப் பாரம்பரியச் சங்கீதம் பக்தியில் மாட்டிக்கொண்டது. பக்தியிலிருந்து கர்நாடக சங்கீதம் என்று விடுபடுகிறதோ அன்று பெரிய மறுமலர்ச்சியும் எதிர்காலமும் அதற்கு இருக்கிறது.

வேறு சாகித்யங்கள் எழுதப்படுமா?

மீண்டும் பக்தியோடு தொடர்புபடுத்திச் சாகித்யங்களைத் தேட வேண்டுமென்ற அவசியம் கிடையாது. கர்நாடக சங்கீதம் என்றால் தியாகராசர் கீர்த்தனை பாடுவார்கள். அடுத்ததாகப் பாபநாசம் சிவன் என்று தொடர்வார்கள். மேம்போக்காகக் கேட்கும்போது அது தமிழ்ப் பாடலா என்று யோசிக்குமளவிற்குச் சமஸ்கிருத வார்த்தைகள் இருக்கும். இப்பொழுது பாடிக்கொண்டிருக்கும் சஞ்சய் சுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, அருணா சாய்ராம், சௌம்யா இவர்களெல்லாம் பக்தி சாகித்யங்களைப் பாடுவதில்லை என்று சொல்லிக் கண்ணதாசன் போன்றோர் எழுதிய பாடல்களைப் பாட வேண்டும். அப்படிப் பாடும்போது இது போன்ற பாடல்களை எழுதும் படைப்பாளிகளும் பிறப்பார்கள்.

புறநானூறு, அகநானூறு என்று பக்திக்கு அப்பாற்பட்ட பழைய பாடல்கள் இருக்கத்தானே செய்கின்றன?

அந்தப் பாடல்களில் பெரும்பாலும் நமக்குப் பரிச்சயம் இல்லாத வார்த்தைகளே இருக்கின்றன. சிலப்பதிகாரத்தில்கூடப் பல இடங்களை அகராதியில்லாமல் படிக்க முடியாது. அதனால்தான் நமக்குப் பரிச்சயமான தமிழாக இருக்க வேண்டுமென்று சொல்கிறேன். மொழி தெரியாததால் தெலுங்கில் என்ன சொன்னார்கள் என்பது நமக்குப் பிரச்சினையாயிருக்க முடியாது. வார்த்தைகளை நன்றாக உச்சரிக்கிறார், நன்றாகப் பாடுகிறார், சங்கீதத்தை நன்றாகக் கையாளுகிறார் என்றுதான் பார்க்க முடியும்.

பக்தியை அடுத்து தேசபக்திப் பாடல்களைப் பாடுவதைச் சொல்லலாமில்லையா? பாரதியார் போன்றோரின் பாடல்களையும் பாடுகிறார்கள்தானே?

பாரதியார் பாடல்களிலும் திரும்பத் திரும்பச் சின்னஞ்சிறு கிளியே, தீராத விளையாட்டுப் பிள்ளை, தீர்த்தக் கரைதனிலே, ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே இப்படிப் பாடிய பாடல்களையேதான் பாடுவார்கள். எதைப் பற்றி வேண்டுமானாலும் பாடலாம். கண்ணதாசன் மாதிரியான பாடலாசிரியர்களின் பாடல்களைப் பாடலாம். பாடல் என்பது பக்தியாக மட்டும் ஏன் இருக்க வேண்டும்? ஏன் இயற்கையையோ வேறு எதைப் பற்றியோ இருக்கக் கூடாது? கச்சேரிக்கு வருபவர்கள் பக்தி பாவத்திற்காக வருகிறார்களா, இல்லை பக்தியை மறந்துவிட்டுச் சங்கீதத்தை ரசிக்க வருகிறார்களா என்பது தெரியாது. ஆனால் பக்தியைக் கடந்து வேறு விஷயங்களைப் பரிச்சயமான வார்த்தைகளில் பாடலாக்கி அதில் சங்கீதத்தைக் கையாளும்போது இந்தப் பாரம்பரிய சங்கீதத்தில் பெரிய மறுமலர்ச்சி ஏற்படும்.

திரை இசை உங்களுக்குப் பிடிக்கிறதா?

ஆரம்ப காலத்தில் திரை இசையெல்லாம் கர்நாடக சங்கீதமாகத்தான் இருந்தது. குறிப்பாகத் தியாகராஜ பாகவதர் போன்றோரின் காலகட்டம். இலக்கியத்தில் நவீன இலக்கியம் என்று சொல்வதுபோலத் திரை இசையில் நவீன இசை என்று சொன்னால் அது ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து தொடங்குவதாகச் சொல்வேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இது இருக்கிறதா என்று தெரியவில்லை. திரையிசையில் இளைய ராஜா எனக்குப் பிடித்தமானவர் அல்ல.

தமிழ்த் திரை இசைக்கு இளையராஜாவின் பங்களிப்பு எதுவும் இல்லையென்கிறீர்களா?

பங்களிப்பு இல்லையென்று சொல்ல முடியாது. ஆனால் அவருடைய இசையில் நவீனம் என்றும் மலர்ச்சி என்றும் எதையும் அடையாளப்படுத்த முடியாது. ஆயிரம் பாடல்களுக்கு அவர் இசையமைத்திருந்தால் அதில் பத்துப் பதினைந்து பாடல்களைச் சிறப்பானவை என்று சொல்ல முடியும். ஆனால் முக்கியமானவர் என்று சொல்ல முடியாது.

****

தொடர்ந்து இருபது இருபத்தைந்து வருடங்களாகச் சிற்றிதழ் தளத்தில் வாசகனாகவும் எழுத்தாளனாகவும் உறவு கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய வளர்ச்சியும் போக்கும் எப்படி இருக்கின்றன?

முன்பைவிடச் சிறுபத்திரிகைகளை நிறையப் பேர் வாசிக்கிறார்கள். அவை சார்ந்த மனிதர்கள் பல்வேறு இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் அறிவாளிகளாக இந்தத் தளத்திற்கு வெளியில் இருப்போரால் கருதப்படுவதால் இவர்களை யாரும் பயன்படுத்தாமல் விட்டுவிடுவதில்லை.

'காலச்சுவடு', 'உயிர்மை' தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. வேறு சில பத்திரிகைகள் சில தடங்கல்களோடு வெளிவந்துகொண்டிருக்கின்றன. இன்றைய சூழல் பத்திரிகைகள் தன்னை வளர்த்துக்கொள்ள, நிலைநிறுத்திக்கொள்ள உதவக்கூடிய சூழலாக இருக்கிறது. முந்தைய இலக்கியச் சூழல் இன்று போன்றதல்ல.

பெண் படைப்பாளிகளின் எழுத்துக்கள் குறித்து?

பெண் எழுத்துக்களில் சல்மாவினுடையதை முக்கியமானதாகச் சொல்ல முடியும். ஆனால் பெண் படைப்பாளிகளுடைய எழுத்துக்கள் எல்லாம் ஒரே தரப்பு எழுத்துக்களாக வெளிப்படுவதுதான் சிக்கலானது. சல்மாவைப் போன்றே உமாவும் எழுதினால் சல்மாவை மட்டுமே வாசித்தால் போதுமே. ஒரே மாதிரியாக எல்லோருடைய எழுத்துக்களும் இருந்தால் தனித்தனியாக எந்தப் படைப்பாளியையும் வாசிக்க வேண்டிய அவசியம் இருக்காது. மாலதி மைத்ரியின் கவிதைகள் வேறு மாதிரியானவை. அவருடைய வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் இவற்றைத் தாண்டிக் கற்பனை செய்கிற விஷயம் வேறு. தாய்மையைப் பற்றி உமாவாலும் சல்மாவாலும் சிறப்பாக எழுத முடியாததை மாலதியால் எழுதிவிட முடியும். வாழ்க்கை வேறாகவும் படைப்பு வேறாகவும் வெளிப்படுகிற விஷயம் அசாதாரணமானது. இதுதான் படைப்பின் விசித்திரம். சுகிர்தராணி வலிந்து சில பிம்பங்களை ஏற்றுக்கொண்டு எழுதுவதாலோ என்னவோ, எதிர்பார்த்த அளவிற்கு மிகச் சிறந்த வளர்ச்சியை அடையவில்லை. பெண்ணால் இதுவரை சொல்ல முடியாது என்று கருதப்பட்ட விஷயங்கள் இன்று துணிச்சலாகச் சொல்லப்படுகின்றன.

ஒரு பெண் சொல்ல முடியாத துணிச்சலான விஷயம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

"மயிர்கள் சிரைக்கப்படாத எனது நிர்வாணம் அழிக்கப்படாத காடுகள் போல கம்பீரம் வீசுகிறது" - இந்த மாதிரியான குரல் வருவதற்கான ஆதார மூலம் மிக முக்கியமானது. இந்த மூலத்திலிருந்து, இந்த மண்ணிலிருந்து சொல்லப்படுகிற விஷயம் நிறைய இருக்கும் என்று நினைத்தேன். மனநிலையைத்தான் மண் என்கிறேன். ஆனால் அது வளர்ச்சியடையவில்லை.

பெண்கள் பாலியல் சார்ந்துள்ள விஷயங்களை எழுதுவது குறித்த புகார்கள் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுவது பற்றி . . .

இங்கே கடவுள் சார்ந்து பாலியல் விஷயங்களைப் பயமின்றிப் பேசலாம். கடவுள் இல்லாமல் பாலியல் பற்றிப் பேச முடியாது. ஆண்டாளைப் படித்துப் பார்க்க வேண்டும். சாமியைச் சாட்சியாக வைத்துப் பாலியல் கவிதைகளை நீங்களும் எழுதலாம்.

தீவிர இலக்கியப் பரப்பில் இருப்பவர்கள்கூடப் பாலியல் குறித்துப் பெண்கள் எழுதுவது அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக என்றும் திரும்பத் திரும்ப உடல் பற்றியே எழுதுகிறார்கள் என்றும் விமர்சிக்கிறார்களே.

ஆண்டாள் கடவுளோடு தன் காதலை, வேட்கையை, உடலைப் பற்றிப் பேசினார். கடவுளை விட்டுவிட்டுத் தன் காதலைப் பேசியிருந்தால் என்ன செய்வீர்கள்? அதைத்தான் இன்றைய பெண்கள் செய்கிறார்கள். கடவுளை விட்டுவிட்டு எழுதுகிறார்கள். கடவுள் சாராமல் இருப்பதுதான் இவர்களுக்குப் பிரச்சினை.

இந்தப் பத்தாண்டுகளில் பெண் எழுத்துக்களைப் போல தலித் எழுத்துக்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்த எழுத்துக்களின் வலு, அவற்றின் வெளிப்பாடு எப்படி இருக்கின்றன?

இமையம், சிவகாமி படித்திருக்கிறேன். அவை எல்லாம் தலித் சமூகத்துக்குள் இருக்கின்ற மனநிலையைப் பற்றித்தான் பேசுகின்றன. தலித்துகளுக்கும் பிற சாதியினருக்கும் இருக்கக்கூடிய பிரச்சினைகளை, இவை சார்ந்த மனநிலைகளை தலித் இலக்கியம் கொண்டு வரவில்லை. இந்தச் சூழலில் வாழும் ஒருவன், தன்னை ஒரு தலித்தாக காட்டிக்கொள்வதில் பிரச்சினை உள்ளது. இதுதான் சூழல். தலித்துகளின் உளவியல் ரீதியான சிக்கல்கள் இலக்கியத்தில் பதிவாகவில்லை என்றே தோன்றுகிறது. பொதுச் சூழலில் இருக்கும்போது அண்டை வீட்டார், பணியிடத்திலிருப்போர் என்று எல்லோரோடும் பழக வேண்டியிருக்கிறது. கிராமங்களில் இன்றும் சூழல் மோசமாக இருக்கிறது. இவர்களது உளவியல் ரீதியான சிக்கல் தலித் இலக்கியத்தில் வடிவம் கொள்ளும்போது விசித்திரமான படிமங்களையும் விசித்திரமான பிம்பங்களையும் கொண்டதாக அமையும். இந்த எழுத்துக்கள் தமிழில் மிக முக்கியமான பாய்ச்சலாக இருக்கும். ஆனால் எழுதக்கூடிய எழுத்தாளர் வர வேண்டும்.

எழுத்து, இசை தவிர உங்களுக்கு வேறு எதில் ஆர்வம் இருக்கிறது?

நண்பர்களோடு ஆனந்தமாக இருப்பதுதான். மனிதன் தனியாளாக உணர்ந்தால் துக்கம்தான். எவ்வளவு பெரிய கூட்டத்தோடு இருந்தாலும் மனிதன் தனியாள்தான். தனியே அவரவர்க்கென்று சில துயரங்கள் இருந்துகொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர். போல லட்சம் பேருடன் இருந்தாலும்கூடத் தனிமை இருக்கத்தான் செய்யும். ஆட்களோடு கொண்டாடும்போது தனிமையை மறுத்தல் நிகழ்கிறது. நான் எப்போதும் வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறேன். அது ஒரு மன இயல்பு. வாழ்க்கையைக் கொண்டாடத்தான் வேண்டும்.

உதவி: கண்ணன், நெய்தல் கிருஷ்ணன், தேவேந்திர பூபதி
தொகுப்பு: ந. கவிதா

நன்றி: காலச்சுவடு, டிசம்பர் 2006

Oct 5, 2011

மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்

TCX 6838 என்ற எண்ணுள்ள என் ஸ்கூட்டரில் விருமாண்டியைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் தென்னந்தோப்புகளும், வயல்வெளிகளும் மாறிமாறி வந்து கொண்டிருந்தன. விருமாண்டி என் நண்பன். ஓடும் ஆற்றின் கரைகளில் விருமாண்டித்தேவர் குடும்பத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புகள் இருக்கின்றன. தென்னந்தோப்புக்குள் ஓர் அழகான வீடும் அவர்களுக்கு இருந்தது. அநேகமாக விருமாண்டி மட்டுமே அங்கு இருப்பான். அவன் குடும்பத்தினர் ஊருக்குள் குடியிருந்தனர். தென்னந்தோப்பு வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் skindrajit3 தொலைவில் ஒரு கள்ளுக்கடை அங்கே அயிரை மீன் குழம்பு கிடைக்கும். ஆற்றில் வெகு நேரம் குளித்துவிட்டு விருமாண்டியின் தோப்பு வீட்டில், வாங்கி வைத்திருந்த கள்ளைக் குடித்துவிட்டு அயிரை மீன் குழம்புச் சாப்பாடு முடித்துத் திரும்பி வருவது ஆனந்தமான அனுபவம்.

சாலையில் ஓர் உருவம் வண்டியை நிறுத்தும் சைகையுடன் கைநீட்டி நின்று கொண்டிருந்தது. சற்று அருகில் வந்ததும்தான் நின்றுகொண்டிருக்கும் உருவம் இந்திரஜித் என்று தெரிந்தது. ஸ்கூட்டரை நிறுத்தினேன். விருமாண்டியைப் பார்த்துவிட்டு வரும் வழியில் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பழுதடைந்து நின்று விட்டதாக இந்திரஜித் கூறினான். தற்செயலாக நான் வந்தது நல்லதாகப் போயிற்று என்றும், மெக்கானிக்கை எனது வண்டியில் போய் அழைத்து வருவதாகவும் கூறினான். ‘உன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு நான் காவலா?’ என்று கேட்டேன். ‘அந்த மோட்டார் சைக்கிளை எவனும் எடுத்துச் செல்ல முடியாது. அப்படி ஓர் கோளாறு. நீ இங்கு காத்திருக்க வேண்டாம். அதோ தெரிகிறதே ஓர் இடிந்த வீடு அதுவரை நடந்து சென்றுவிட்டு வா. பொழுது போகும்’ என்று கள் வாசனையடிக்க கூறினான் இந்திரஜித். ‘எதற்கு அங்கே போக வேண்டும்?’ என்று நான் கேட்டதற்கு, ‘போய்ப் பார் தெரியும்’ என்றவாறே என் ஸ்கூட்டரை வாங்கிக் கொண்டான். அவன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் போது ஞாபகம் வந்தது. விருமாண்டி தோப்பு வீட்டில் இருக்கிறானா என்று கேட்டேன். விருமாண்டி, தென்னை மரங்களுக்கு உரம் வைக்கும் வேலையைச் செய்து கொண்டிருப்பதாகக் கூறிவிட்டு இந்திரஜித் கிளம்பினான். வயல் வெளியைப் பார்த்தேன். சற்று தூரத்தில் இடிந்த வீடு தெரிந்தது. அதை ஏன் பார்க்கச் சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. போய்ப் பார்க்கலாம் என்று தோன்றியது. தென்னந்தோப்பையும், கதிர்கள் நிற்கும் வயல்களையும் கடந்து அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பித்தேன். தென்னந்தோப்பைத் தாண்டி வயல்வரப்புகளில் செல்லும் போது எனக்குத் தடுமாற்றமாக இருந்தது. இரண்டு பெரிய புளிய மரங்களும் இடிந்த வீடும் திடல் போன்று காணப்பட்ட அந்த இடத்தில் இருந்தன. ஆள் அரவமற்ற இடம். நான் இடிந்த வீட்டை நோட்டமிட்டுக் கொண்டே உள்ளே ஜாக்கிரதை உணர்வுடன் நுழைந்தேன்.

உடைந்து கிடந்த சுவர்களின் மீது ஏறி நின்று உள் அறையை நோக்கினேன். உத்திரம் ஒன்று குறுக்காக விழுந்து கிடந்திருந்தது. உள் அறையின் ஜன்னலைப் பார்த்ததும் எனக்குத் திகில் ஏற்பட்டது. துருப்பிடித்த ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நிலைத்த பார்வையுடன் ஒரு கிழ உருவம் நின்றுகொண்டிருந்தது. நிலைத்திருந்த கண்கள் அசைந்து என்னை நோக்கின. பைத்தியம் போல எனக்குத் தோன்றியது. உள் அறையின் வாசலில் கிடந்த செங்கற் குவியலின் மீது ஏறி நின்று அந்தக் கிழ உருவம் என்னை நோக்கியது. குளித்துப் பல காலம் ஆகியிருக்கும் போல அப்படி ஓர் அழுக்குத் தோற்றம். அடர்ந்த வெள்ளைத் தாடி, மீசை, தலை முடிகளுக்கிடையே கண்கள் அசைந்து கொண்டிருந்தன.

கிழவன் என்னை நோக்கிக் கேட்டான். ’நீ யார்?’ நான் என் பெயரைச் சொன்னேன். ‘நீ வெள்ளைக்காரன் உளவாளியா? உண்மையைச் சொல், யார் நீ?’ என்றான் கிழவன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எந்த வெள்ளைக்காரன்?’ என்றேன். ‘எந்த வெள்ளைக்காரனா? அன்னியனை ஒப்புக் கொண்ட துரோகியா நீ?’ என்றான் கிழவன். ‘அன்னியன் போனது உங்களுக்குத் தெரியாதா?’ என்றேன். கிழவன் என்னைச் சற்றுநேரம் உற்றுப் பார்த்தான். ‘அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள். ஆனாலும் நம்புவதுதான் சிரமமாக இருக்கிறது. நம்பி வெளியே வந்தால் திரும்பவும் சூடு வைத்து விடுவார்களோ என்றுதான் இப்படித் திரிந்துகொண்டிருக்கிறேன். அன்னியர்களின் சூழ்ச்சியையும், தாட்சண்யமற்ற தன்மையையும் நான் நன்கு அறிந்திருக்கிறேன். அதனால்தான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.’ என்றான் அவன்.

‘நீங்கள் எவ்வளவு காலமாக மறைந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘பல வருடங்கள் ஆனது போன்ற உணர்வை ஏற்படுத்தக் கூடியவை அந்தப் பத்து நாட்களும்!’ என்றான் கிழவன். ‘பத்து நாட்கள் என்பது என்ன கணக்கு?’ என்றேன். ‘பத்து நாட்கள் என்பது ஓர் யுகம்தான். 1942 ஆகஸ்டு 18-ந்தேதி பிடிபட்டு, ஒரு பத்து நாட்களைப் பல வருடங்களாகக் கழித்தேன். பத்து நாட்கள் என்பது பல காலம் ஆன மாதிரி, பல காலம் பத்து நாட்களாக நீண்டு கொண்டே செல்கின்றது. பத்து நாட்களிலும் நான் நரக வேதனையில் இருந்தேன் என்பதை அறிய வேண்டும். என் நண்பர்களைச் சித்திரவதையில் இழந்தேன் - இதோ பார் சூடுபட்ட காயங்களை....’ என்று சட்டையைக் கழட்டி நெஞ்சையும் முதுகையும் காட்டினான். குறுக்கும் நெடுக்குமாகச் சூடுபட்ட வடுக்கள் குரூரமாகக் காட்சி தந்தன.

நான் கிழவனை அமரச் சொன்னேன். ‘நீங்கள் என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் உங்கள் நண்பன். நீங்கள் வெளியே வரலாம். அன்னியன் இங்கு இல்லை என்பதுதான் உண்மை’ என்றேன். ‘அன்னியன் இங்கு இல்லை என்றால் சுபாஷ் சந்திரபோஸ் வந்துவிட்டாரா? 1941 ஜனவரி 26-ந்தேதி வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்த போஸ் வந்து விட்டாரா? அவரிடமிருந்து கடிதம் கொண்டு வந்தால் நான் மறைவிலிருந்து வரலாம். திரிபுரா காஸ்கிரஸ் மாநாட்டில் நான் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். போஸ் அன்று கோபத்திலும் வருத்தத்திலும் இருந்தார். நான் மிகவும் கொந்தளித்துப் போயிருந்தேன். அவர் என்னைச் சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினார்.’ என்றான் கிழவன்.

நான், போஸ் இறந்துவிட்டதாகக் கூறப்படுவதைக் கூறலாமா என்று நினைத்து, பிறகு கூறாமல் பேச்சை மாற்றும் விதமாக, ’நீங்கள் எந்தக் கட்சியில் சேர்ந்திருந்தீர்கள்?’ என்று கேட்டேன். அதற்குக் கிழவன், நான், சங்கரய்யா, பெருமாள் ஆகியோர் நாராயணசாமி தலைமையில் இயங்கும் தலைமறைவு இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாகச் சேர்ந்தோம். நீங்கள் பெயரைக் கேள்விப்பட்டிருக்கலாம்’ என்று சொல்லி ‘யுவபாரத்’ என்ற பெயரை ரகசியமாகச் சொன்னான். நான் அந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருப்பதாக ரகசியத்தைக் கேட்கும் பொறுப்பில் நானும் பாவனை செய்தேன்.

’குதிராம் போஸ் என்னைத் தனிப்பட்ட முறையில் கவர்ந்திருந்தார். அறுபத்து நான்கு நாட்கள் உண்ணாவிரதமிருந்து இறந்த ஜதீன் போஸ், சிட்டகாங் ராணுவத் தளவாடப் பாசறையைச் சூறையாடிய சூர்யா சென் ஆகியோர் எங்கள் அனைவரையும் ஈர்த்திருந்தார்கள். இவற்றையெல்லாம், ஏன் சொல்கிறேன் என்றால் நீண்டகாலமாகிவிட்ட பத்து நாட்களில் இவற்றையெல்லாம் பலர் மறந்திருக்கலாம். பலருக்குத் தெரியாமலேயே இருந்திருக்கலாம். பலருக்கு இட்டிலி தின்று கொண்டேயிருக்க வேண்டும் என்று தோன்றிக்கொண்டேயிருக்கும். வேறு விஷயங்கள் நினைவிலிருக்காது. யுவபாரத் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்றான் கிழவன். ‘தலைமறைவு இயக்கம் என்று நீங்கள் சொல்லும்போது அது பற்றி விபரங்கள் எனக்கு எப்படித் தெரியும். அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதைத்தான் நான் ஏற்கனவே கூறிவிட்டேனே’ என்றேன்.

'சொல்கிறேன். யுவபாரத் நாராயண சாமி தலைமையில் துவங்கியது. பெங்காலைச் சேர்ந்த அஜாய் போஸ் என்பவருக்கும் அவருக்குமிடையே தொடர்பு இருந்தது. நானும், என் நண்பர்கள் சங்கரய்யரும், பெருமாளும் அவரைத் தேவகோட்டையில் ஓரிடத்தில் ரகசியமாகச் சந்தித்தோம். எங்கள் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை தொடர்ந்தது - நான் மிகுந்த துணிச்சல்காரன் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. காட்டுக்குள் போலீஸ் பட்டாளத்திடமிருந்து, சாமோன் ஆர்னால்டிடமிருந்து நான் மட்டும் தப்பித்து வந்தது மட்டுமே என் துணிச்சலைக் காண்பிக்காதா? அதுகூட தப்பு. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நாகனாறு பாலத்தை நாங்கள் வைத்த குண்டுதான் தகர்த்தது. சூப்பிரண்டு பெஞ்சமினைச் சங்கரய்யர்தான் சுட்டுக் கொன்றான். சங்கரய்யர் காங்கிரஸ் கட்சியிலும் இருந்துகொண்டு யுவபாரத்திலும் உறுப்பினராக இருந்தான். நாங்கள் ரகசியமாகக் கூடி ஒரு இடத்தில் மறைந்திருந்தபோது எங்களைப் போலீஸ் சுற்றிக் கொண்டது. பெருமாள் எல்லோரும் இறந்து விடலாமா என்று கேட்டான். பிறகு நாங்கள் கைதாகி நீதிமன்றத்தின் மூலம் சுதந்திர உணர்வை மக்களுக்கு உருவாக்கலாம் என்று நினைத்துக் கைதானோம். அது என்ன சந்தர்ப்பம் என்று தெரியுமல்லவா. காந்தி ஆகஸ்டு 8-ந்தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்திருந்தார். நாங்கள் 18-ந்தேதி கைதானோம். ஆனால், நாங்கள் போலீஸ் ஸ்டேசனுக்கோ நீதிமன்றத்திற்கோ கொண்டு செல்லப்படவில்லை. எங்கள் கண்களையும் கைகளையும் இறுகக் கட்டி அவிழ்த்தனர். காடு போலத் தோன்றியது. பிறகு கால்களில் விலங்கு போட்டனர். போலீஸ் அதிகாரி ஆர்னால்டு எங்கிருந்தோ வந்தான். அவன் வந்ததும், எங்களைத் தனித்தனியே மரத்தில் கட்டினர். அதற்கு முன் எங்கள் ஆடைகளை அவிழ்த்து விட்டனர். கையில் வைத்திருந்த லத்தியினால் முதலில் நாங்கள் பார்க்க, பெருமாளை அடித்தான். வலி பொறுக்க முடியாமல் பெருமாள் அலறியதை நாங்கள் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டுமிருந்தோம். கை ஓய்ந்ததும் சாவகாசமாகத் தண்ணீர் குடித்து ஓய்வெடுத்தான் ஆர்னால்டு. பெருமாளின் முகம், உடம்பெல்லாம் தடியினால் அடிபட்டு வீங்கிச் சிவந்திருந்தது. வலியில் முனகிக் கொண்டிருந்தான். ஓய்வெடுத்த பின் சங்கரய்யரை அடித்தான். என்னை அடிக்கும் முறை வருவதற்குள் நான் இறந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இறக்கவில்லை. சங்கரய்யரை அடித்து ஓய்வெடுத்த பின் என்னருகே வந்து என்னை அடித்தான். அதைப் போன்றதொரு இம்சையை உங்களால் கற்பனை பண்ண முடியாது. வலியை அனுபவிக்காமல் இறந்துவிட வேண்டும் என்று மனம் விரும்பியது. வலியில் உயிர் துடித்தது. அப்படியே எங்களை விட்டுவிட்டு ஆர்னால்டும் அவரது பட்டாளமும் சென்றுவிட்டன. வலியில் எங்களுக்குப் பேசுவது கூட இயலாத காரியமாகிவிட்டது. பசி கொன்று கொண்டிருந்தது. நா வறட்சியில் தொண்டை தவித்துக் கொண்டிருந்தது. இரவு முழுக்கக் குளிர் பயங்கரமாகத் தாக்கியது. ஏதேதோ பூச்சிகள் உடம்பில் ஊர்ந்தன. உயிர் சீக்கிரம் போக வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருந்தது. சூடு வாங்கித்தான் ஆக வேண்டும் என்று இருக்கும் போது என்ன செய்வது? அடுத்த நாள் ஆர்னால்டு பட்டாளத்துடன் வந்தான். சாவகாசமாக சிகரெட் பிடித்துக் கொண்டே நெருப்பை உருவாக்கச் சொன்னான். கையோடு கொண்டு வந்திருந்த இரும்புக் கம்பியை அதில் பழுக்கக் காய்ச்சச் சொன்னான். அவன் காரியம் எல்லாம் பதற்றமின்றி நிதானமாக இருந்தது. ஆத்திரப்பட்டோ, ஆவேசம் கொண்டோ காரியம் செய்யவில்லை. மிகவும் நிதானமாக காய்ச்சிய இரும்புக் கம்பியை எடுத்து வந்து சங்கரய்யரின் உடம்பில் இழுத்தான். கடைசியாக சங்கரய்யரின் வயிற்றில் குத்தினான். ஓர் அலறலில் சங்கரய்யரின் கழுத்து சாய்ந்தது. உயிர் போக வேண்டும் என்று என்னையறியாது அவசரமாகவும் வேகமாகவும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். ஆர்னால்டு கம்பியை நெருப்பில் காய்ச்சக் கொடுத்துவிட்டு,  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான். பிறகு சாவகாசமாக எழுந்து, அதை எடுத்து பெருமாளின் வயிற்றில் மாறி மாறிச் சொருகினான். அதற்குப் பிறகு கம்பியைக் காய்ச்சக் கொடுத்துவிட்டு ஓய்வெடுத்தான். பின் கம்பியை வாங்கிக்கொண்டு என்னை நோக்கி வந்தான். அவன் முகத்தில் அப்படி ஓர் அமைதி தவழ்ந்தது. என் உயிர் எழுந்து அவன் குரல்வளையை நோக்கிப் பாய்ந்தது. பிறகு சூன்யத்திற்குள் உயிர் சுருண்டது. கம்பியின் இழுப்பில் அலறினேன். உடம்பெல்லாம் எரிந்தது. சாவகாசமாகக் கம்பியினால் என் உடலில் கோடுகள் வரைவது போல் இழுத்தான். உயிர் அலறித் துடித்தது. சற்று நேரத்தில் கோடுகள் வரைவது நின்றது. கண்களைத் திறந்தேன். சாவகாசமாக சிகரெட் பிடித்துக்கொண்டு ஆர்னால்டு நின்றிருந்தான். பின் சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டுத் தன் பட்டாளத்துடன் வாகனத்தில் சென்றுவிட்டான். என்னை ஏன் கொல்லாமல் விட்டுச் சென்றான் என்று தெரியவில்லை. நினைவுகள் மங்கிக் கொண்டிருந்தன. உயிர் சாகத் துடித்துக் கொண்டிருந்தது. யாரோ போலீஸ்காரர் வெள்ளையாக இருந்தார். வானத்திலிருந்து வந்த வெள்ளைப் போலீஸா அல்லது இயேசுநாதரா என்று தெரியவில்லை. என் கட்டுகளை அவிழ்த்தார். என் கால் விலங்குகளை உடைத்தார். மடியில் கிடத்தி, வாயில் நீரூற்றினார். மருந்து போட்டார். என் காதருகே பிராயச்சித்தம் என்றார். போர்வையால் போர்த்தினார். வானத்தில் பறந்து மறைந்து சென்றார். பிறகு தோன்றினார். எனக்கு உணவூட்டினார். மறைந்தார். தோன்றினார். ஒரு நாள் மறைந்தே விட்டார். ரணத்தோடு எழுந்தேன். வெகு தூரம் நடந்து, பிச்சை எடுத்து உண்டு, அந்தப் புதிய இடத்தில் ஓர் அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன். என்னை யாருக்கும் தெரியவில்லை. வானத்திலிருந்து வந்த வெள்ளைப் போலீஸ் அல்லது இயேசுநாதர் எனக்கு அப்படி ஓர் பாதுகாப்பை அளித்திருந்தார். அவரை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ‘மறைந்திரு’ என்றார். நானும் மறைந்திருக்கிறேன். இன்னும் மறைந்துகொண்டேயிருக்கிறேன். சுதந்திரத் தாய் வெற்றி கொண்ட பின் வரலாம் என்றிருக்கிறேன்.’ கிழவன் பேச்சை முடித்துவிட்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பிறகு எழுந்து, ‘உன்னிடம் சொன்னதை யாரிடமும் சொல்லாதே. நான் மறையப் போகிறேன். யாரிடமும் சொல்லாதே’ என்று எழுந்து என்னைப் பார்த்து மலங்கலாக விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு  ‘வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வயல்களினூடே ஓடி, பார்வையிலிருந்து மறைந்தான்.

நான் திகைத்து நின்றிருந்தேன். கண்டதெல்லாம் கனவா அல்லது நினைவா என்ற பிரமை ஏற்பட்டது. மனம் துயரமாக இருந்தது. சிந்தனையிலேயே தென்னந்தோப்பையும் வயல்வெளிகளையும் கடந்து சாலைக்கு வந்தேன். சாலையில் என் ஸ்கூட்டர் மட்டும் நின்றிருந்தது. சாவி ஸ்கூட்டரிலேயே இருந்தது. இந்திரஜித் என்னைச் சந்தித்ததும் என் ஸ்கூட்டரை வாங்கிச் சென்றதும் உண்மைதானா என்று சந்தேகம் ஏற்படும் படியாக ஸ்கூட்டர் சாவியுடன் நின்று கொண்டிருந்தது. சாலையில் ஒருவரும் இல்லை.

*******

புதிய பார்வை, 16-30 ஜூன் 1993

தட்டச்சு :  சென்ஷி,      பிரதி  உதவி : அஜய் (சிலிகான் ஷெல்ஃப்)

Mar 24, 2011

சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் -சுரேஷ்குமார இந்திரஜித்

நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் 'சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும், என்ற நாவல் எழுதியிருந்த டோகுடோ ஷோனின் ஞாபகமே எனக்கு வந்தது. அதனால் அவரை விசாரித்து அவர்தான் இவர் என்று அறிந்து கொண்டேன். நான் விசாரித்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருப்பதை அவர் முகம் காட்டியது. 'நீங்கள் இந்தியாவா, ஸ்ரீலங்காவா ? ' என்று அவர் கேட்டார்.SURESHKUMARA INDRAJITH

ராபர்ட் அகஸ்ஸி மொழிபெயர்த்திருந்த அவரின் 'சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும் ' நாவல் என்னை மிகவும் ஈர்த்திருந்தது. ஒரு சிறுமியின் இயற்கையான அறிவுக்கூர்மையும் சிருஷ்டிகரமும் அவரின் பெற்றோர், சுற்றத்தார், பள்ளி ஆசிரியைகள் ஆகியோரினால் நாசமாக்கப்படுகின்றது என்பதை வெவ்வேறு கோணங்களில் அந்நாவலில் அவர் சித்தரித்திருக்கிறார். நாவலில் வரும் சிறுமிக்குப் பெயர் கிடையாது. அவள் மனம் இயற்கையாக கட்டமைக்கப்படுவதைச் சுற்றியுள்ளவர்கள் காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கருத்துக்கள் ஆக்கிரமிப்பதையும், பள்ளிக்கூடங்கள் பயத்தை உருவாக்கி மதத்தைச் சாரும் மனத்தை உருவாக்குவதையும் ஆழமான பார்வையுடன் பார்த்திருந்தார். வீட்டின் பின்புறத்திலுள்ள நந்தவனத்தில் திரியும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சிறுமிக்கும் உள்ள உறவை அவர் சித்தரிக்கும் இடங்களில் இயற்கையான கவித்துவம் வெளிப்பட்டிருந்தது.

நான் டோகுடோ ஷோனிடம் இந்த நாவலை சிலாகித்துப் பேசினேன். தான் எழுதிய நாவல்களில் பிடித்தமான நாவலாக இதைக் கருதுவதாகவும், ஆனால் பெரும்பாலோர் 'சுழலும் காலம் ' என்ற நாவலையெ முக்கியமானதாகச் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் எழுத்துத்துறைக்கு வந்த விதம் பற்றிக் கேட்டேன். அவர் கூறியதின் சுருக்கத்தைக் கூறுகிறேன்.

நான் எழுத்தாளர் யாசுனாரி கவாபாட்டாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். அதன் விளைவாக எழுத முற்பட்ட எனக்கு என் ஆசிரியர் கரஷமாவின் வழிகாட்டல் உதவியாக இருந்தது. அவர் மது அருந்தும் சந்தர்ப்பங்கள் என் விருப்பத்துக்குரியனவாக இருந்தது. அவருக்கும் தெரிந்த எந்த ஒரு விஷயம் பற்றியும் கூர்மையான பார்வையுடன் வித்தியாசமாகப் பேசுவார். நான் எழுதியிருந்த கதையை முதலில் அவரிடம் காட்டியதும், அவர் அதை படித்துவிட்டு 'இந்த கதையைக் கிழித்து உன் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு மலர்ச்செடியின் கீழே புதைத்துவிடு ' என்று கூறினார். சில நாட்கள் கழித்து என்னைக்கூட்டிக்கொண்டு மியூசியம் சென்றார். அங்கு இருந்த சிலைகள் அவர் சுட்டிக்காட்டிய பின்னே அவற்றினுடைய சிருஷ்டிகரம் என்னைத் தாக்கியது. அவர் கூடச் சென்று கொண்டிருக்கும்போது திடாரென்று ஒரு மரத்தையோ, செடியையோ கல்லையோ காட்சியையோ சுட்டிக் காண்பித்துப் பார்க்கச் சொல்லுவார். அவற்றின் அழகு என் மனத்தில் பதியத்தக்கதாக இருக்கும். அவர் கூட ஒரு நாள் சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஒரு வாடகைக்கார் டிரைவர், அவரைப் பார்த்து ஓடிவந்தான். அந்த டிரைவர் தன்னுடைய குடும்ப விவகாரங்களை ஏற்கெனவே இவருக்குத் தெரிவித்திருப்பான் போலிருக்கிறது. மனைவியை இழந்த இரண்டு குழந்தைகளையுடைய அவனை மறுமணத்திற்கு உறவினர்கள் வற்புறுத்திக்கொண்டிருந்த போதிலும் மறுத்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தது. நோயுற்ற மனைவி உயிரோடு இருந்தவரை அவளது நலனுக்காகவும் தற்போது குழந்தைகளின் நலனுக்காகவும் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளவனாகத் தோன்றினான். தியாகியாக பாவித்து இயங்கிக் கொண்டிருப்பது மனத்திற்கு சோர்வைத்தரும் என்றும், உட்புறமாக மறுமணத்தின் விருப்பத்தை மனம் வற்புறுத்திக்கொண்டேயிருப்பதால் வெளிப்புறத்தில் மனம் அதை மறுத்துக்கொண்டேயிருக்கிறது என்றும், மறுமணம் செய்வதின் மூலம் மனம் சோர்விலிருந்து விடுதலையடைந்து உற்சாகமுறும் என்றும் ஆனால் மறுமணத்திற்குப் பின்னாலும் ஏதாவது ஒரு தியாகத்தைத் தேடி மனம் அலைந்தால் அதை அவன் பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கரஷ்மா கூறினார்.

அவருக்கு பல வகையான மனிதர்கள் நண்பர்களாக இருந்தனர். எவ்வாறு இத்தனை வகையான மனிதர்களிடம் இவர் நட்புறவு கொண்டிருக்கிறார் என்று நான் ஆச்சரியமடைவதுண்டு. சமூகத்தின், அந்தஸ்து மிக்க மனிதர்கள், வட்டாரப் போக்கிரிகள், சிறு வியாபாரிகள், கெய்ஷா பெண்கள் என்று அவருடைய உலகம் பெரியதாக இருந்தது. ஒரு நாள் நான் அவரை காணச் சென்றிருந்தபோது வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார். ஒரு கெய்ஷா பெண்ணைப் பார்க்கச் செல்வதாகக் கூறி, நான் மறுத்த போதும், விடாது என்னையும் கூட்டிச் சென்றார். கரஷீமா மீது மிகுந்த மரியாதையுடையவளாக அவள் தோன்றினாள். அவளுக்கு லெளகீகக் காரியங்களில் இவர் பல உதவிகள் செய்திருக்கிறார் என்று என்னால் யூகம் செய்து கொள்ள முடிந்தது. அவர்களுடைய பேச்சு, பிரதானமாக குழந்தைகளுக்கும், பெரியவர்கள், சூழல், சமூகம் ஆகியவற்றிற்கும் இடையேயான உறவைப் பற்றியதாக இருந்தது. ஒரு சுற்றுலா மையத்தில் மரங்கள் சூழ்ந்திருந்த குளக்கரையில் சிறுமியான தன் மகளுடன் அமர்ந்திருந்த போது, பளபளக்கும் நீரைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுமி கையில் இருந்த சிறு தட்டை அக்குளத்தில் மிதக்கும் படியாக வீசி எறிய வேண்டும் போல் இருப்பதாகத் தெரிவித்த சம்பவத்தை அப்பெண் கூறினாள். இதே போல் இன்னொரு நாள் டேபிள் வெயிட்டான கண்ணாடி கோளத்திற்குள்ளே செல்லவேண்டும் போல் இருப்பதாகக் கூறியதாகவும் மற்றொரு நாள் வண்ணத்துப் பூச்சிகளுடன் பறந்து திரியும் கனவு கண்டதாகவும் கூறியதாகவும், இவை எல்லாம் மனத்தின் சிருஷ்டிகர அடையாளங்கள் என்றும், இவற்றை நாசப்படுத்தும் சக்திகளே குழந்தைகளைச் சுற்றிலும் உள்ளதாகவும் அந்தப்பெண் தெரிவித்தாள். அனைத்து விஷயங்களிலும், பெரியவர்களின் கருத்து திணிக்கப்படும் நிலையில், குழந்தைகளின் இயற்கையான கூர்மை அறிவு நிலையில் சிதைக்கப்படுவதாக கரஷ்மா கூறினார். அந்தப்பெண்ணின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. இது நடந்த பலகாலம் ஆகிவிட்டது. கரஷ்மாவும் இறந்து விட்டார். இந்த உரையாடல் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அந்த அறையில் இருந்த சிலபொருட்கள் அவற்றின் வடிவம், நிறம், அவர்கள் உட்கார்ந்திருந்த தோரணை ஆகியவை தற்போதும் அப்படியே நினைவில் உள்ளன. எழுத ஆரம்பித்தபின் இந்த உரையாடல் என்னை தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. கலை வடிவமாக எழுத இயலாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். தொந்திரவை தாள இயலாமல் எப்படியோ எழுத ஆரம்பித்து முடித்துவிட்டேன். அதுதான் நீங்கள் விரும்பும் 'சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும் ' என்ற நாவல்.

- டோகுடோ ஷோனின் கூறியதின் சுருக்கத்தை மேலே கொடுத்திருக்கிறேன். அவரின் தொழில் பற்றி விசாரித்ததற்கு ஒரு எலக்ட்ரானிக் கம்பெனியில் பணிபுரிவதாகக் கூறி அது சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கூறினார். அதில் எனக்குச் சிறிதளவிற்கு மேல் எதுவும் விளங்கவில்லை. தவிர அவை இந்தக் கதைக்கு அவசியமானதுமல்ல.

***

மறைந்து திரியும் கிழவன், சிறுகதைத் தொகுப்பு 1993

***

நன்றி: திண்ணை

Nov 12, 2010

விரித்த கூந்தல்-சுரேஷ்குமார இந்திரஜித்

இவ்வளவு பெண்கள் விரிந்த கூந்தலுடன் இருப்பது அவனுக்குத் திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பெண்கள் விரிந்த கூந்தலுடன் உட்கார்ந்திருந்தார்கள். நின்று கொண்டிருந்தார்கள். நடந்து கொண்டிருந்தார்கள். பலர் நனைந்த ஆடைகளுடன் இருந்தார்கள். அருவி, பிரம்மாண்டமான தோற்றத்துடன் இருந்தது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் நீர்வீழ்ச்சியில், பாறையுடன் தேனடை போல அப்பியிருந்தனர். மிகவும் குறுகிய ஒரு நீர்வீழ்ச்சியில் (SURESHKUMARA INDRAJITHஒரு நபர் மட்டுமே நிற்கலாம்) வரிசையாய்ப் பெண்கள் நின்று தலையையும், உடலையும் நனைத்து வெளியேறிக் கொண்டிருந்தனர். நிற்கும் ஒவ்வொரு பெண்ணின் தலையிலும் நீர் விழுந்து முகத்திலும் உடலிலும்  வழித்து ஓடிக் கொண்டிருந்தது. விழும் நீரினூடே தெரியும் முகங்கள் தூய்மையடைந்து மின்னிக் கொண்டிருந்தன. அவனின் கண்ணெதிரே பிருஷ்டம் வரை மறைந்த நீண்டு விரிந்த கூந்தலுடன் ஒரு பெண் சென்று கொண்டிருந்தாள். இந்த இடத்திற்கு வந்ததிலிருந்து விரிந்த கூந்தல் ஏற்படுத்தும் தொந்தரவுகளை, அவன் தன் நண்பரிடம் அவருக்கு விளங்கியும், விளங்காத வகையிலும் கூறிக்கொண்டு தானிருக்கிறான்.

விரித்த கூந்தலுடன் நான்கு பெண்கள் தங்கள் ஆடவர்களுடன் அவனைக் கடந்து சென்றனர். சாலையோரத்தில் குஷ்டரோகி ஒருவன், காசு விழுந்த தகர டப்பாவை ஆட்டி ஓசையை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். பாறையில் அமர்ந்திருந்த ஒரு குரங்கு எதையோ நக்கிக் கொண்டிருந்தது. அவன், தன் நண்பரிடம் விரித்த கூந்தல் ஒரு குறியீடு போலத் தன்னைத் துரத்திக் கொண்டிருப்பதாகக் கூறினான். ''எல்லாம் நீங்கள் பாவித்துக் கொள்வதுதான்'' என்று நண்பர் கூறினார். ''விரிந்த கூந்தல் கோபத்தையும், பிடிவாதத்தையும் காட்டுகிறது'' என்றான் அவன். இருவரும் நடந்து ஒரு அடர்த்தியான மரநிழலின் கீழ் இருந்த பாறையில் அமர்ந்தனர்.

நண்பர், அவனிடம் அவளை தற்போது அடிக்கடி சந்தித்ததுண்டா என்று கேட்டார். சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என்றும் அபூர்வமாக சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அவன் பதில் கூறினான். அவளின் மண வாழ்க்கையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அது மிகவும் கடினமானது, இந்தப் பாறையைப் போல் தன்னுடைய பிடிவாதத்தால் அவள் தன் மண வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டாள். ''அவளின் பிடிவாதம் அவளின் கணவனைச் சில எல்லைகளுக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. பிடிவாதம் எற்படுத்தும் சினம் அவளிடமிருந்து பல வகைகளில் வெளிப்பட்டு அவரின் பிடிவாதம் மேலும் உறுதியாகிறது என்றே தோன்றுகிறது'' என்றான். தொடர்ந்து இருவரும் மெளனமாய் அமர்ந்திருந்தனர்.

அவளின் கைவிரல்களும், கால்களும், கழுத்தும், முகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் மிகவும் அழகானவை. அவள் மெலிந்திருந்ததைக் கண்டு, அதை அவன் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினான். அந்தச் சந்தர்ப்பத்தின் தொடர்ச்சியான ஒரு நிகழ்வில்தான் அவள் முதன்முதலாக மணவாழ்க்கை பற்றி அறிவதாக கூறியிருந்தாள். அன்று இரவில், இன்றுதான் தனக்கு முதன்முதலாக மணமானதாகக் கூறினாள். அவளுக்கும் அவளின் கணவனுக்கும் இடையே உள்ள தாம்பத்ய உறவு அவளின் பிடிவாதத்தினால் இவ்விதமாகவே இருந்தது.

நண்பர் 'விரித்த கூந்தல் உங்களைத் துரத்துவதாக நினைப்பது ஏன்?'' என்று கேட்டார். அவன் ஒன்றும் கூறவில்லை. நண்பருக்கு அவ்வப்போது அவன் கூறும் விஷயங்களிலிருந்து ஏதோ ஒரு வகையில் கோர்வைப்படுத்த முடிந்தாலும் பல விஷயங்கள் புரிபடாமல் யூக வெளியில் தன்னை வந்து அழைத்துச் செல்வதாக தோன்றியது.

மலைமேல் இருக்கும் ஒரு அருவியைக் காண எண்ணி இருவரும் எழுந்து நடந்தனர். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டனர். சாலைக்குச் சென்று அங்கிருந்து பிரியும் மலைப் பாதையில் செல்ல வேண்டும். ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பாழடைந்த ஒரு தேரின் அருகே தரையில் அலங்கோலமான ஆடைகளுடன் இளவயதுப்பெண் அமர்ந்திருந்தாள். தலையில் கலர் காகிதங்களை பூப் போலச் சொருகியிருந்தாள். அவனுக்கு தன் மனதில் அவள் உருவம் ஓர் இடம்பிடிக்க முயல்வதாகத் தோன்றியது. இவன் உதற, உதற அவள் உருவம் தடுமாற்றமின்றி சகஜமாக நுழைவதாகத் தோன்றியது. நண்பர் அந்தப் பெண்ணை கவனித்திருந்தாரா என்பதும், அவனுக்குத் தெரியவில்லை. அவரிடம் விசாரித்தால் அப்போதுதான் அவர் கவனத்துக்கே வருவதாக இருக்குமோ என்று தோன்றியதால் அவன் மெளனமாகவே நடந்து வந்தான்.
மலைப் பாதையின் இருபுறமும் உயரமான மரங்கள் வினோதமான வடிவங்களில் இருந்தன. சம தளமற்ற பிரதேசங்களில் இஷ்டத்திற்கு அழகாக வளர்ந்திருந்தன.மரங்களினூடே ஒரு பெண் மறைந்திருந்து தோன்றினால் நன்றாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. மற்ற ஆண்களின் வாழ்க்கையும் இவ்விதமாகவே இருக்குமோ என்ற சம்சமயமும் அவனுக்குத் தோன்றியது. பின்னோக்கிப் பார்க்கையில் இரண்டு பெண்கள் வலை விரித்துத் தான் சிக்கிக் கொண்டதை நினைவு கூர்ந்தான். அவள்கூட ஒரு தடவை ''நீங்கள் என்னிடம் சிக்கிவிட்டீர்கள்'' என்ற தன்னிச்சையாக கூறியிருந்தாள். ஆனால் தற்போதுள்ள மனோரீதியான உறவு இதையெல்லாம் பொருட்படுத்த இயலாத வகையில் மிகவும் சீரியசாக வளர்ந்துவிட்டது. பால்ய காலத்தின் தன் மனம் தன்னிச்சையாக நாடிய ஒரு பெண்ணுக்கும், தனக்கும் ஸ்தூலமாய் உறவு ஏதும் நிகழவில்லை என்பதை அவன் இப்போது நினைத்துக் கொண்டான். அப்பெண்ணிடம் தன் மனம் கொண்டிருந்த உறவு களங்கமற்றது என்று தோன்றிய அதே நேரத்தில், தான் அப்போது ஒரு அப்பாவி என்றும் தோன்றியது. மரங்களினூடே அப்பெண்ணின் முகம் தெரியுமானால் சந்தோஷமாக இருக்குமென்று அவன் நினைத்துக் கொண்டான். இந்த எண்ணம் தோன்றியவுடன் தேர் அருகில் பார்த்த பெண்ணின் முகம் மரங்களினூடே தோன்றி மறைந்தது.

எதிரே வந்த ஒரு குடும்பத்தினர் அவர்களைக் கடக்க சென்றபோது 'டி.வி. மகாபாரதம்' என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. ''இது டி.வியில் மகாபாரதம் திரையிடும் நேரமா?'' என்று நண்பரிடம் கேடடான். நண்பர் வாட்சைப் பார்த்துவிட்டு ''ஆமாம்'' என்றார். அதைத் தொடர்ந்து சிந்தனையில் திடீரென்று அவனுக்கு ஒன்று தோன்றியது. அது அவனுக்குப் புதிதாகவும் இந்த இடத்தில் வந்ததிலிருந்து இதுவரை தோன்றாத விஷயமாகவும் தோன்றியது. எப்படி தனக்குத் தோன்றாமல் போனது என்று ஆச்சரியம் அடைந்தான். விரித்த கூந்தல் தொந்தரவு தருவதற்கான காரணம் விளங்கிவிட்டது போலவும் தோன்றியது. திரெளபதியின் விரித்த கூந்தல் நினைவுக்கு வந்ததே, அவன் தெளிவுக்கு காரணம். ஓர் ஆஸ்திரேலியருக்கோ, ஓர் அமெரிக்கருக்கோ விரிந்த கூந்தல் இவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அவனுக்குத் தோன்றியது. இந்திய மரபின் பின்னணியில் தன்னையறியாது நம் மனதில் விரிந்த கூந்தல் தொந்தரவு ஏற்படுத்தியது போலும் என்று அவன் நினத்துக் கொண்டான்.

தற்போது தன் மனம் லேசாகிவிட்டது போல் அவனுக்குத் தோன்றியது. உற்சாகத்துடன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நடந்தான். அவனும் நண்பரும் ஏதேதோ அளவளாவிக் கொண்டு அருவியை அடைந்தனர். சுற்றிலும் உயரமான மரங்கள் அமைந்திருந்த ஒரு பெரிய பாறையின் தலையிலிருந்து நீர் விழுந்து பாறைகளினூடே ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக மூன்று நான்கு குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்தார்கள். பெண்களின் விரிந்த கூந்தலை சாதாரணமாகப் பார்த்துக் கொண்ருந்தான். நண்பர் குளித்து முடித்து ஆடையணிந்த சற்று நேரத்தில் பசி எடுக்கவே இருவரும் கீழே இறங்க ஆரம்பித்தனர்.

வழியில் சென்று கொண்டிருந்த இரண்டு விரிந்த கூந்தலை இருவரும் கடந்து சென்றனர். மலைப் பாதை முடிந்து சாலையை அடைந்தனர். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, தேருக்கு எதிர்ப்புறம் உள்ள திருமண மண்டபத்திலிருந்து நாதஸ்வர இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அவன் தேர்ப் பக்கம் பார்வையைச் செலுத்தினான். தேரின் அருகில் ஏற்கனவே இருந்த இடத்தில் அந்தப் பெண்ணைக் காணோம். நன்றாகப் பார்த்த போது பெரிய சக்கரங்களுக்கு இடையே தேரின் அடியில் அந்தப் பெண் காய்ந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு, ஒரு காலை மடித்து, மறுகாலை குத்துக் காலிட்டு மணமகள் போல் அமர்ந்திருந்ததைக் கண்டான். சாலையில் தென்பட்ட பெண்களின் விரிந்த கூந்தல் அவனுக்கு இப்போது பயத்தை ஏற்படுத்தியது.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்