Showing posts with label ஆதவன். Show all posts
Showing posts with label ஆதவன். Show all posts

Oct 20, 2012

ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு முன்னுரை-இ.பா

    ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு"  - இந்திரா பார்த்தசாரதி

முன்னுரை

'கணங்களை ரசிக்க ஓர் அமைதி தேவை. தனிமை தேவை. வாழ்வியக்கத்தின் இரைச்சலுக்கும், வேகத்துக்குமிடையே நுட்பமான, ஆழ்ந்த பரிமாற்றங்கள் சாத்தியமில்லை. எனவே இந்தக் கூடாரங்கள். இவற்றில் நாம் கொஞ்சம் ஆசுவாசமாக, அமைதியான கதியில், வாழ்வின் கூறுகளை அசை போடலாம். வாழ்க்கையின் சந்தோஷங்களையும், சோர்வுகளையும், ஆரோகண அவரோகங்களாக்கி அவற்றின் சேர்க்கையில் ஓர் இசையைக் கேட்க முயலலாம்.'

'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில், ஆதவன் தம்முடைய சிறுகதைகளைப் பற்றி இவ்வாறு விமர்சிக்கிறார். அவர் 'கூடாரங்கள்' என்று குறிப்பிடுவது aathavan அவருடைய சிறுகதைகளை. இந்தப் புத்தகந் தான் ('முதலில் இரவு வரும்') அவருக்குச் சாகித்திய அகெதமி விருதை வாங்கித் தந்தது.

இலக்கியத்தைப் பற்றி ஆதவன் கொண்டிருக்கும் கொள்கையையும், மேற்காணும் கூற்று நிறுவுகிறது. ஆரவார மற்ற அமைதியான சூழ்நிலையில், தனிமையின் சொர்க்கத் தில், தன்னுருவ வேட்டையில் இறங்கி, தன் அடையாளத்தைக் காணும் முயற்சியே இலக்கியம்.

இவ்வடையாளம், சூன்யத்தில் பிரசன்னமாவதில்லை 'நான் - நீ' உறவில்தான் அர்த்தமாகிறது. இலக்கியம் தனி மொழியன்று. உரையாடல். உரையாடல் என்பதால் இது நடையைப் பொருத்த விஷயம். நடை என்பது எண்ணத்தின் நிழல். வாசகன் மீது நம்பிக்கை வைக்காமல் தனக்குத்தானே உரக்கச் சிந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்து இலக்கியமாகாது.

ஆதவன் தன் கதைகள் முழுவதிலும் 'உரக்கச் சிந்திக்கிறார்' என்பது உண்மை. ஆனால் வாசகனுடன் உரையாடுகின்றோம் என்பதை அவர் மறக்கவில்லை என்பது தான் அவர் எழுத்தின் வெற்றி.

அவர் தன் எழுத்தின் மூலம், சமூகத்துடனிருக்கும் தம் உறவை, அடையாளத்தை, மிக நளினமாக, கலை நேர்த்தியுடன் உறுதிப்படுத்திக் கொள்ள முயலுகிறார்.

தில்லியில் சிறுவயதிலிருந்தே இருந்து வந்த இவர், தமிழில் எழுதுவதென்று துணிந்ததே, தம் வேரைத் துண்டித்துக் கொள்ள முயலவில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அதே சமயத்தில், தமிழ் நாட்டின் தற்காலத்திய கலாச்சாரச் சூழ்நிலையிலிருந்து ஒதுங்கி, ஒரு பார்வையாளராக இச் சமூகத்துக்குள் தம் முகத்தைத் தேடுவதையே ஓர் இலக்கிய விளையாட்டாகக் கொண்டிருப்பதுதான் இவர் எழுத்தின் பலம்.

இவர் தம்முடைய நூல்களுக்கு எழுதிய பல முன்னுரைகளில், தாம் எழுதுவதை, ஒரு 'விளையாட்டு' என்றே குறிப்பிடுகிறார். 'விளையாட்டு' என்றால் வெறும் பொழுதுபோக்கு என்று கொள்ளக் கூடாது. தத்துவக் கண்ணோடு பார்க்கும்போது, எல்லாமே, பாவனைதான். 'அலகிலா விளையாட்டுடையார்' என்று முத்தொழில் செய்யும் இறைவனையே குறிப்பிடுகிறான் கம்பன். இலக்கியமும் முத்தொழில் ஆற்றுகின்றது. எழுத்தாளனை இவ்வகையில் இறைவன் என்று கூறுவதில் எந்தத் தடையுமிருக்க முடியாது.

'விளையாட்டு' என்று கொள்ளும் சிந்தனையில்தான், எழுத்தாளனால் தன்னைச் சமூகத்தோடு ஆரோக்கியமான உறவு கொண்ட நிலையில், தத்துவார்த்தமாக 'அந்நியப் படுத்தி'க்கொள்ளவும் முடியும். இதுதான் அவனுக்குப் 'பார்வையாளன்' என்ற தகுதியைத் தருகிறது. 'பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன், உலகத்தினர் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையோ அல்லது சமரஸம் செய்து கொள்வதையோ, ஒதுங்கிய நிலையில் தன் கை விரல் நகத்தைச் சீவியவாறு பார்த்துக் கொண்டிருக்கிறான்' என்று ஜேம்ஸ் ஜாய்ஸ் கூறுவது போல், எழுத்தாளனும் இறைவன் நிலையிலிருந்து, பார்வையாளனாக இருக்கும் போதுதான் அவன் படைக்கும் இலக்கியம் கலைப் பரிமாணத்தைப் பெறுகின்றது.

ஆதவன் கூறுகிறார்: 'சொற்களைக் கட்டி மேய்ப்பது எனக்குச் சின்ன வயதிலிருந்தே பிடித்தமான காரியம். அவற்றின் இனிய ஓசைகளும், நயமான வேறுபாடுகளும், அவற்றின் பரஸ்பர உறவுகளும், இந்த உறவுகளின் நீந்துகிற அர்த்தங்களும், எல்லாமே எனக்குப் பிடிக்கும். மனிதர்களையும் எனக்குப் பிடிக்கும். மனிதர்களுடன் உறவு கொள்வது பிடிக்கும்.'

சொல், தனி மனிதன் சமூகத்தோடு கொள்கின்ற உறவை நிச்சயப்படுத்தும் ஒரு கருவி. சமூகரீதியாக உணர்ச்சிப் பரிமாற்றங்களைத் தெரிவிப்பது சொல். சமுதாயத்தில் மனிதச் சந்திப்பினாலோ அல்லது மோதலினாலோ ஏற்படும், அல்லது ஏற்பட வேண்டிய மாறுதல்களை அறிவிப்பது சொல் விஞ்ஞானத்தின் பரிபாஷை கலைச்சொற்கள். (Technical language) இலக்கியத்தின் பரிபாஷை அழகுணர்ச்சி (aesthetics). சமுதாய ஒப்பந்தமான சொல், இலக்கியமாகப் பரிமாணமமுறும்போது, அது அச்சொல்லை ஆளுகின்றவனின் உள் தோற்றமாக (Personality) அவதாரம் எடுக்கின்றது. இதுதான் அவனது சமூகத்தில் அவனுக்கேற்படும் அடையாளம். சொல்தான் சமுதாய உணர்ச்சியைத் தெரிவிக்கும் கருவி. சமுதாய ஒப்பந்தத்தின் செலாவணி.

ஆதவன் தம் உருவ வேட்டையில் தம்மை இழந்து விடவில்லை. 'இயற்கையைப் பற்றிப் பாடிய இருவர்களில் ஷெல்லி இயற்கையில் தம்மை இழந்தார். வேர்ட்ஸ்வொர்த் தம்மைக் கண்டு தெளிந்தார்' என்று விமர்சகர்கள் கூறுவார்கள். ஆதவன் தன்னை, 'சொற்களை மேய்த்து' 'விளையாடி'க் கண்டு கொள்ளும் முயற்சிகளாகத்தாம் அவர் எழுத்து அமைகின்றது.

இவருடைய 'அடையாளம்' என்ன? அவரே எழுதுகிறார். என்னுடைய 'நானை' இனம் கண்டு கொள்வதற்காக நான் எழுதுவதுண்டு. என்னுடைய 'நானி'லிருந்து விலகி இளைப்பாறவும் எழுதுவதுண்டு. எல்லா 'நான்'களுமே நியாயமானவையாகவும், முக்கியமானவையாகவும் படும். ஆகவே, என்னுடைய 'நான்' என்று ஒன்றை முன் நிறுத்திக் கொள்வதும், பிறருடைய 'நான்'களுடன் போட்டியிடுவதும் குழந்தைத் தனமாகவும் தோன்றும். ஆமாம். நான் ஓர் 'இரண்டு கட்சி ஆசாமி'

இரண்டு கட்சி ஆசாமி எனும்போது அவர் தம்மை ஒரு Paranoid Schizo Phrenic ஆகச் சித்திரித்துக் கொள்ளவில்லை. உளவியல் தர்க்கத்தின்படித் தம்மை வாதியாகவும் பிரதி வாதியாகவும் பார்க்கும் தெளிவைத்தான் குறிப்பிடுகிறார். இதனால், தனிமனிதனுக்கும், சமுதாயத்துக்குமிடையே உள்ள உறவில் காணும் முரண்பாடுகளை அவரால் புரிந்துகொள்ள முடிகின்றது. புரிந்து கொள்கின்றாரேயன்றித் தீர்ப்பு வழங்க முன் வருவதில்லை. இது தம்முடைய பொறுப்பில்லை என்று ஒதுங்கி விடுகிறார்.

இதனால்தான் இவருக்கு இலக்கியம் பற்றிய கொள்கைத் தீவிரம் எதுவுமில்லை என்ற ஓர் அபிப்பிராயம் இவரைப் பற்றி சில இலக்கிய விமர்சகர்களிடையே உண்டு.

இதைப் பற்றியும் அவரே கூறுகிறார்: 'திட்டவட்டமான சில எதிர்பார்ப்புகளைத் திசை காட்டியாகக் கொண்டு இலக்கியத்தில் ஏதோ சில இலக்குகளைக் கணக்குப் பிசகாமல் துரத்துகிற கெட்டிக்காரர்கள் மீது எனக்குப் பொறாமை உண்டு. திசைகாட்டி ஏதுமின்றி, பரந்த இலக்கியக் கடலில் தன் கலனில் காற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட விரும்பும் சோம்பேறி நான். இலக்குகளிலும், முடிவுகளிலும் அல்ல, வெறும் தேடலிலேயே இன்பங் காணும் அனைவரையும் இனிய தோழர்களாக என் கலன் அன்புடன் வரவேற்கிறது!'

எழுத்தாளன் ஒருவனுக்குக் 'கொள்கைத் தீவிரம்' தேவையா என்ற கேள்வி எழுகின்றது. பட்டயத்தைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு, அப்பட்டயத்தை நியாயப்படுத்துவதற்காக எழுதுவதுதான் 'கொள்கைத்தீவிரமா' என்றும் கேட்கலாம்.

படைப்பாளி படைக்கிறான். விமர்சனப் பாதிரி நாம கரணம் சூட்டுகிறான். இதுவே பட்டயமும் ஆ கிவிடுகின்றது. பல சமயங்களில், இப்பட்டயத்தையே ஓர் சிலுவையாக எழுத்தாளன் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்போது தான், அவன் படைப்பாற்றல் ஒரு வரையறைக்குள் குறுகி, அவன் எழுத்து, சலிப்பைத் தரும் ஓர் 'எதிர்பார்க்கக் கூடிய' (Predictable) விஷயமாக ஆகிவிடுகின்றது.

கலையின் சிரஞ்சீவித் தன்மை, அது தருகின்ற 'ஆச்சர்யத்தில்' தான் இருக்கிறது. ஒரே ராகத்தை ஒரு சங்கீத மேதை பல்வேறு சமயங்களில், பல்வேறு விதமாகப் பாடுவது போல. ind_paaஆதவன் எழுத்தில் இந்த 'ஆச்சர்யத்தை' என்னால் காண முடிகின்றது. 'ஒரு பழைய கிழவர், ஒரு புதிய உலகம்' எழுதிய ஆதவன் தான், மிக நளினமான காதற் கதைகளும் எழுதியிருக்கிறார்.

ஆனால் எல்லாக் கதைகளிலும், அடிப்படையாக ஒரு விரக்தியை நம்மால் உணர முடிகின்றது. அவர் கதை 'இன்டர்வியூ'வில் வரும் சுவாமிநாதன் கூறுவது. ஆசிரியருடைய மன நிலையையும் பிரதிபலிக்கின்றது. 'முதலாவதாக இருப்பதற்கும் கூச்சம், கடைசியாக இருப்பதற்கும் வெறுப்பு' 'முதலில் இரவு வரும்' என்ற தலைப்பே, இவர் மன இயல்பை வெளிப்படுத்துகின்றது. 'குளிர் காலம் வந்தால், இதற்குப் பிறகு வசந்தம் நிச்சயம் வந்துதானே ஆகவேண்டும்?' என்று ஷெல்லி கூறுகிறான். ஆதவனும் வரவேற்பது 'முதலில் இரவு'; அக்கதையில் ராஜாராமன் சொல்லுகிறான்: 'ராத்திரி, ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடியும் சூரியன் வரும். வெளிச்சமா ஆயிடும். அதுதான் நாளைக்கு'.

நிகழ்காலம் நரகம், வருங்காலம் சொர்க்கம், நிகழ்கால விரக்தியைத் தவிர்க்க முடியாது. ஆனால் 'நாளைக்கு' என்பதும், 'இன்றைக்கு' என்று ஆகிவிட்டால், அப்பொழுதும் சொர்க்கம் நரகமாகிவிடும். அது, நிச்சயமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய 'நாளை'யாக இருப்பதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புதான் வாழ்க்கையின் கால அட்டவணை.

'ஒரு பழைய கிழவர், ஒரு புதிய உலகம்' என்ற கதையில் ஆதவன் (இக்கதையை எழுதும்போது இவர் வயது 31) ஒரு கிழவரின் அகத்தில் புகுந்து கொண்டு சிந்தனை ஓட்டமாகக் கதையில் சொல்லுகிறார். புற நிகழ்ச்சி ஒவ்வொன்றும் அவருடைய சிந்தனை, விளக்கை ஒளி வீசச் செய்வதற்காகப் பயன்படும் மின்சார 'ஸ்விட்ச்'. மனைவியை இழந்த கிழவர் மகன் வீட்டிலிருக்கிறார். தம் உலகை இழந்து விட்ட தவிப்பில் அவர் புதிய உலகைக் கண்டு மருள்கிறார். அவருக்குப் பிடித்தமான நாவிதன் கடைக்கு முடி வெட்டிக் கொள்ளச் செல்லும்போது, தமக்குத் தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும், இக்கால இளைஞர்களைக் கண்டு, புதிய உலகம் இப்படி 'உருப்படியான தீவிரப் பிடிப்பில்லாமலும், நம்பிக்கை இல்லாமலும் ஆழமான எதனுடனும் தம்மைச் சம்பந்தப் படுத்திக் கொள்ளாமலும் இருக்க வேண்டுமா என்று மனம் வருந்துகிறார். தம் உலகத்திய வாழ்க்கை மதிப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்கிறார். தம் மண வாழ்க்கையையும், தம் மகனின் மண வாழ்க்கையையும் பற்றி எண்ணிப் பார்க்கும் போது, இத்தகைய அந்தரங்க உறவுகளில் கூட இக்காலத்தில் போலித் தனம் மேலோங்கி இருக்க வேண்டுமா என்பதுதான் அவர் வேதனை. அவர் மகனும், மகளும் கல்லூரி ஆசிரியர்கள்.

அன்று மாலை பல்கலைக் கழகப் பேராசிரியாகிய மோத்வானியும், அவர் மனைவியும் பேச வருகிறார்கள். மோத்வானி இக்கால அறிவு உலகின் பிரதிநிதி. போலி அறிவு ஜீவி. இடம், வலம், நடு ஆகிய எல்லா அரசியல் கட்சிகளையும் சார்ந்தவர். அதாவது, வாழ்க்கையில் வெற்றி அடைவது எப்படி என்று அறிந்தவர். விஸ்கி குடித்துக் கொண்டே, வறுமையற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முயலுவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த 'ட்ராயிங் ரூம்' சோஷலிஸ்டுகளின் உரையாடலில் பங்கு கொள்ளாமல் கிழவர் ஒதுங்குகிறார். அவருக்கு அன்று காலை மயிர் வெட்டிவிட்ட நாவிதனை போலித் தனமான மனக் கிளர்ச்சியின் வெளியீடாக ஓர் இளைஞன் கத்தியால் குத்தி விட்ட விபரீத செய்தியைக் கெட்கிறார். கள்ளங் கபடமற்ற தன் பேத்தியை இறுகத் தழுவிக் கொள்வதுடன் கதை முடிகிறது.

இளைஞனின் 'அந்நியமாதல்' கதைகளைப் படித்த நமக்கு ஒரு கிழவரின் 'அந்நியமாதல்' கதை ஒரு வேறு வகையான அனுபவம். இக்கிழவர் உலகை வெறுக்கவில்லை. நாவிதனின் ஸ்பரிஸம், முடி வெட்டிக் கொண்டு வெந்நீரில் குளித்தல், நல்ல காப்பி ஆகிய வாழ்க்கையில் சின்ன சின்ன சலுகைகள் கூட அவருக்குச் சொர்க்கமாக இருக்கின்றன. வாழ்க்கையை வெறுத்துப் போலிப் பரவசங்களில் ஆழ்ந்து நிலை கொள்ளாமல் தவிக்கும் இக்கால இளைஞர்கள் மீது தான் இவருக்குக் கோபம்.

வர்க்கப் பேதங்களுடைய சமூகத்தில், தொழில் வளர்ச்சிகளின் காரணமாகச் சமூகச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. பொருளாதாரக் காரணங்களினால் குடும்ப வாழ்க்கை நிலை குலைகின்றது. அடிப்படையில், பிரபுத்துவ சமூக அமைப்பை உடைய ஒரு சமுதாயத்தின் மீது, தொழில் யுக வாழ்க்கைக்குரிய மதிப்புக்கள் சுமத்தப்படும்போது, முரண் பாடுகள் மேலோங்குகின்றன. வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டு வதிலும், போலிப் பரவசங்களிலும், விளையாட்டுக்காகச் செய்யும் வன்முறைகளிலுந்தான் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியுமென்று இளைஞர்கள் கருதுகிறார்கள். அவர்களுக்கு நிறையக் கோபம் இருக்கிறது. யார் மீது என்றுதான் அவர்களுக்குப் புரியவில்லை; 'இன்று', 'இன்றாக' இருப்பதற்குக் காரணம் 'இன்று', 'நேற்றைய தினத்தின்' தொடர்ச்சிதான் என்று 'நேற்றைய தினத்தை' அடியோடு வெறுக்கும் மனப்பான்மையில், 'நாளை'யைப் பற்றிய நினைவே இல்லாமலிருக்கிறார்கள். பழைமையை அடியோடு அழிக்கும் ஆவேசந்தான் இக்கதையில், அந்த முள்ளங்கி இளைஞனைப் பழமையின் சின்னமாக இருக்கும் நாவிதனைக் கொல்லத் தூண்டுகிறது. ஆனால் கிழவருக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை போய்விடவில்லை.

அந்தச் சிறிய குழந்தையை அக்கிழவர் தழுவிக் கொள்வதாகக் காட்டும் குறியீடு மூலம், ஆதவன், இதை அழகாக விளக்குகிறார். கிழவருக்குப் பழமையின்பாலிருக்கும் பிடிப்பு, போலித் தனமான, வெறுக்கத்தக்க ஈடுபாடன்றி, சமூக உறவுகளில் ஒருவன் தன் 'சுதந்தரத்தை' உணர முடியுமென்று புரிந்து கொள்ளும் கேண்மையுணர்வு. 'சமூக உறவுகள்' என்றால், கிழவரின் மகனுக்கும், மோத்வானிக்குமிடையே இருக்கின்ற போலித் தனமான உறவு அன்று; அவர்களுக்கும், நாவிதர் களுக்குமிடையே உள்ள உறவு, கிழவர் புதிய உலகுக்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளத் தயாராகவிருப்பது ஒரு முக்கியமான விஷயம்.

'பழமை நேர்மையும் ஆழமும் கொண்டிருந்தால், ஒருவனால் தன்னை நியாயமான, சரித்திர நிர்ப்பந்தங் களினால் ஏற்படுகின்ற புதிய மாறுதல்களுக்கேற்ப மாற்றிக் கொள்ள முடியும். அத்தகைய உள் வலு அதற்கு உண்டு' என்று ஜார்ஜி மார்க்காவ் கூறுகிறார்:

ஆதவனின் ஒவ்வொரு கதையும் உள் நோக்கிச் செல்லும் பயணம். அப்பயணத்தின் விளைவாகப் புலப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையில், புற நிகழ்ச்சிகள் பரிசீலனைக் குள்ளாகின்றன.

ஆனால் ஆதவன் தீர்ப்பு வழங்குவதில்லை. மென்மையும், நளினமும், நாசூக்கும் கலந்த நடையின் மூலம், சொல்ல விரும்பும் கருத்தை, எழுத்தின் வடிவத்தின் வழியாக உணர்த்துகின்றார்.

இதுவே அவர் கலையின் வெற்றி.

***

Mar 20, 2012

முதலில் இரவு வரும்-ஆதவன்

பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது…

அவன் இன்னும் இளைஞனாக இதே பூங்காவில் தான் அன்றொரு நாள் அமர்ந்து கோதையிடம் aathavan தன் குடும்ப பிரச்சினைகளைச் சொல்லி அழுதான். “எங்கள் அப்பா-அவர் தான் பெரிய பிரச்சினை. வீட்டில் அமைதியைக் குலைக்கும் ராட்சஸன்” என்றான்.

கோதை சிரித்தாள். கன்னத்தில் குழி விழ, நேர்த்தியான பல் வரிசை பளிச்சிட, சிரித்தாள். இந்த நேர்த்தி அவளுடைய டிரேட் மார்க். நேர்த்தி கச்சிதம். அவனுடைய அம்மாவைப் போல அவள் ‘வழ வழா கொழ கொழா’வாக இல்லாமலிருந்ததே அவனை அவள்பால் ஈர்த்திருக்கலாம்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்றான்.

“ரவி, ராமு, பாஸ்கர், யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்கிறார்கள். அவரவர் வீட்டில் அவரவர் அப்பாக்கள்தான் பிரச்சினைகளென்று.”

கொழுப்பு! இவள் இவ்வளவு பையன்களுடன் சிநேகிதமாக இருப்பதாக அவன் மிரள வேண்டுமாம். சீண்டல் தளுக்கு. ஆனால் இந்தச் சீண்டல்தான் அவனுக்கு இப்போதெல்லாம் வேண்டியிருந்தது.

“அவர்களுடைய அப்பாக்கள் குடியர்களா?” என்று கேட்டான்.

“இந்தக் காலத்தில் குடிக்காதவர்கள் யார்?”

“அவர்களுடைய அப்பாக்கள் அவர்களுடைய அம்மாக்களை அடிப்பார்களாமா?”

“லுக், அவர்களும் என் நண்பர்கள். அவர்கள் என்னுடன் சகஜமாக உணர்ந்த வேளைகளில் என்னிடம் கொட்டியதை யெல்லாம் எல்லாரிடமும் நான் திருப்பிச் சொல்லுவது நாகரிகம் இல்லை”.

“சகஜமாக உணர்ந்த வேளைகளில் என்றால் புரியவில்லையே?”

“சந்தேகப் பிராணி!” என்று அவள் அவன் கை மீது பட்டென்று ஒரு அடி கொடுத்தாள்.
“எல்லாருடனுமே சில சமயங்களிலாவது நாம் சகஜமாக உணருகிறோமல்லவா-நம் அப்பாக்களுடன் கூட?”

அப்பா! குப்பென்று அவனுக்குள் கோபம் பொங்கியது.

“என் அப்பாவுடன் நான் எப்போதுமே சகஜமாக உணர்ந்ததில்லை” என்றான். “அதை அவர் ஊக்குவிப்பதுமில்லை… தன்னை யாராவது நேசிப்பதோ அல்லது தன்னிடம் நேசத்தை எதிர்பார்ப்பதோ அதிகப்பிரசிங்கத்தனம் என்று அவர் நினைப்பது போல் தோன்றுகிறது, அதாவது நேசம் வீழ்ச்சி போல… எனக்கு எப்படி விளக்குவதென்று தெரிய வில்லை”.

“அவ்வகை மனிதர்கள் சிலருடன் எனக்கும் பரிச்சயமுண்டு” என்று அவள் அனுதாபத்துடன் தலையை ஆட்டினாள்.

“அப்படியா? எனக்கென்னவோ என் அப்பா மாதிரி ஒரு மிருகம் வேறு எங்குமே இருக்க முடியாதென்றுதான் தோன்றும்…மிருகம்! மிருகம்! ஓ, எப்படி என் அம்மாவை அடித்து நொறுக்குவார் தெரியுமா? ஆனால்… ஃபன்னி… அம்மா அவருடைய வசவுகளையும், முரட்டுப் பாணியையும் உள்ளூர ரசிக்கத்தான் செய்கிறாளோ என்றும் எனக்குச் சில சமயங்களில் தோன்றும்…”.

“அப்படி ரசிக்கிற சில பெண்கள் உண்டுதான்”

“உனக்கு இந்தப் பதினெட்டு வயதில் நிறையவே தெரிந்திருக்கிறது”.

“ஒன்று மட்டும் தெரியாது”.

“என்ன?”

“உன்னைப் பற்றி” என்று அவள் மறுபடி தன் கன்னங்களில் அவனுக்காகக் குழி பறித்தாள்.

“ஸாரி-உங்களைப் பற்றி என்று சொல்ல வேண்டும், இல்லை?”

“சீச்சீ!வேண்டவே வேண்டாம்…நீங்கள், உங்கள், இதெல்லாம் மறுபடியும் என் அப்பாவின் கனிவில்லாத தன்மையையும், என் அம்மாவின் சலிப்பூட்டும் பொறுமையை யும் நினைவூட்டுகிறது…நீ நான் என்றே நமக்குள் பேசிக் கொள்ளலாம். அதுதான் நம்மிடையே நெருக்கத்தைப் பலப் படுத்தும்”.

“நீ நீ நீ நீ நீ” என்று அவள் அவனுடைய ஒவ்வொரு விரலாகப் பிடித்து நசுக்கினாள். அவன் விளையாட்டாக அலறினான்…

ஆம். நேற்றைக்கு நடந்தது போல அந்த மாலை நேரம். அந்தப் பூங்கா, அவள் முகத்தில் குமிழியிட்ட உல்லாச வெறி எல்லாம் பசுமையாக நினைவு வருகின்றன. கூடவே ஒரு வெறுமையுணர்வு. “ஆடும்கூத்தை நாடச் செய்தாயென்னை” என்று முணுமுணுக்கிறான்.

“கையைக் கொஞ்சித் தொடுவாய்
ஆனந்தக் கூத்திடுவாய்
அன்னை அன்னை
ஆடுங்கூத்தை நாடச் செய்தாயென்னை…”
கூத்து, இயக்கம்.
வாழ்வென்னும் இயக்கம்.
அவனைச் சீராக இயங்கச் செய்யும் – முழுமையை நோக்கி அழைத்துச் செல்லும் -ஒரு அழகிய உந்து சக்தியாக அவளை அன்று கண்டான். அவன் யாசித்த புத்தம் புதிய ஒரு ஆண் பிம்பத்துக்கு உரைகல்லாக. ஆனால் அவள் மூலம் அவன் பெற்றது புதுமையின் விளக்கமல்ல, பழமையின் விளக்கம் தான்.

அதாவது அன்பின் விளக்கமல்ல, வெறுப்பின் விளக்கம். அன்புதான் வெறுப்பைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

வேடிக்கைதான்.

“காப்பி இந்தா” என்று அம்மா காப்பி டம்ளரை நீட்ட, அவன் கை நீட்டி வாங்கிக்கொண்டான். திடீரென்று நூறு அல்லது நூற்றைம்பது வருடங்கள் பின்னோக்கிச் சென்று விட்டது போலிருந்தது. அவனுடைய தாத்தா அல்லது கொள்ளுத் தாத்தா கூடத்தில் ஈஸிச் சேரில் அமர்ந்திருக்க, அவர்களுக்காக காப்பி எடுத்து வரும் பாட்டி அல்லது கொள்ளுப்பாட்டி; பித்தளை டம்ளரில்தான் எடுத்து வந்திருப்பார்கள். அப்போது எவர்சில்வர் கிடையாது. பித்தளைப் பாத்திரங்களுக்கு-தம்ளர்-கூஜா-குடம்-ஒரு பிரத்தியேக வாசனை உண்டு; கண்ணாடி டம்ளருக்கு வாசனை கிடையாது. அதிக விஸ்கியை ஊற்றுகிற வரையில் அப்பாவும் ஒரு கண்ணாடி டம்ளர் போலத்தான். “அப்பா வாசனை, அப்பா வாசனை என்று சின்ன வயதில் கூறிக்கொண்டிருப்பான். அதாவது அப்பா அவனை முத்தமிடும்போது அடிக்கும் வாசனை. ரொம்ப நாள் கழித்துத்தான் அது விஸ்கி வாசனை என்று புரிந்தது.

அந்த வாசனையை அம்மாவால் சுமுகமாக ஏற்றுக் கொள்ள முடியாததே அவர்களிடையே விரிசல் ஏற்படக் காரணமாயிருந்திருக்கலாம். அல்லது அம்மாவின் வாசனை அப்பாவுக்குச் சலிப்புத் தட்டத் தொடங்கியதுதான் பிரச்சினையா?

மல்லிகை பூ வாசனை.

அந்த வாசனையை அணியும் உரிமையை அம்மா இழந்து ஐந்து வருடங்களாகின்றன. அந்த வாசனைக்கு இன்னமும் உரிமை பெற்றவளான கோதைக்கோ அதில் சிரத்தையில்லை.
அவளுக்கு அந்த வாசனை ஒத்து கொள்ளாது என்பதும் ஒரு காரணம்: அலெர்ஜி.

கோதை என்ற பெயருள்ளவளுக்கு பூ மணம் அலர்ஜியாக இருப்பது நல்ல வேடிக்கைதான்.

“அப்பாஜி!” என்று உ ஷா ஓடி வந்து அவன் காலைக் கட்டிக் கொண்டாள்.

“அப்பா! இன்னிக்கு எனக்கு இங்கிலீஷ் டிக்டே ஷன் எல்லாமே ரைட்டுப்பா!”

“அப்படியா? எங்கே காட்டு?”

உ ஷா தனது அன்றைய ஸ்கூல் சாதனைகளை ஒவ்வொன்றாக அரங்கேற்ற, ராஜாராமன் வெரிகுட், வெரிகுட் என்று ஒவ்வொன்றையும் பாராட்டினான். அவளை அணைத்துக் கொஞ்சினாள். அப்பா நல்ல மூடில் இருக்கிறார். இப்போது எது கேட்டாலும் கிடைத்துவிடுமென்று அவளுக்குப் புரிந்தது.

“அப்பா, எனக்கு ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து ரொம்ப நாளாச்சுப்பா” என்றாள்.

“நிஜமாவா?” “இத்தனை நாளாச்சு” என்று உ ஷா இரு கரங்களையும் பெரிதாக விரித்துக் காட்டினாள்.

“அடேயப்பா! அவ்வளவு நாளாச்சா? சரி, வா”.

“பாட்டி, நீயும் ஐஸ் கிரீம் தின்ன வரயா பாட்டி?” “எனக்கு வேண்டாண்டி கண்ணு. நீ போய் சாப்பிடு”.

“ஐஸ் கிரீம் ரொம்ப ஜோராயிருக்கும் பாட்டி”.

அம்மா சிரிக்க முயன்றாள். ஆனால் புதிதாக குதிரையேற முயன்றது போலிருந்தது. படுதோல்வி. “நீ போய்ச் சாபிட்டுக்கோ. நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி” என்றாள்.

ராஜாராமன் சோர்வுடன் தன அம்மாவைப் பார்த்தான். குழந்தை ஆசையாகக் கூப்பிடுகிறது. பாவம் இவள் வந்தாலென்ன? ஐஸ் கிரீம் சாப்பிட்டாலென்ன?

ஆனால் மாட்டாள். வாழ்கை முழுவதும் வேண்டாம் வேண்டாமென்று சொல்லியே பழகி விட்டது. விலகி விலகி, தனக்குள் சுருங்கிச் சுருங்கியே பழகி விட்டது. பூஜை, மடி, விரதம். அப்பா அம்மாவை மூர்க்கமாக அடித்த அந்த இரவுகள்… அன்பையும் கொடூரத்தையும் பிரிக்கும் கோடு எத்தனை மெலிதானது! அவருடைய அன்புக்கு அதே அலைவரிசையில் அவளிடம் எதிரொலி கிடைக்காமல் போனதே அவர்களிடையே பிரச்சினையாக இருந்திருக்கலாம். அப்பா ‘வேண்டும். வேண்டும்’ என்ற போது அம்மா ‘வேண்டாம், வேண்டாம் என்றிருப்பாள்.

“ஆடும் கூத்தை நாடச் செய்தாயென்னை…”

ஐஸ்கிரீம் பார்லரில் டிஸ்கோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. உ ஷா தன்னிச்சையாக, அவளையுமறியாமல், அந்த இசைக்கேற்ப குதிக்கத் தொடங்கினாள். குழந்தைகளின் பரிசுத்தம், அந்தந்த நேரத்து ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிற எளிய லாவகம்.

பெரியவர்களான பிறகு நம்முடைய ஆசைகளைப் புரிந்து கொள்வதே கடினமாகி விடுகிறது.

சுற்றிலும் சோபாக்கள் போடப்பட்டிருந்தன. ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு உஷாவுடன் சோபாவில் அமர்ந்தான். பக்கத்து சோபாவில் இரு இளம் ஜோடி ஒரே டம்ளரில் இருந்து இருவரும் மில்க் ஷேக் உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். பாவம், அப்பா! அம்மாவுடன் இப்படி ஒரே தம்ளரிலிருந்து உறிஞ்ச வேண்டுமென்று அவர் ரொம்ப ஆசைப்பட்டிருக்கலாம். இத்தகைய சின்ன சின்ன ஆசைகள் மறுக்கப்பட்டதே அவருடைய உள்ளத்தைக் கடைந்து கடைந்து வெறுப்பு வெண்ணெயைத் திரளச் செய்திருக்கலாம்.

சீப்பிக் குடிக்காத அம்மா.

கடித்துத் தின்னாத அம்மா.

தனக்குத் தானே எப்போதும் பூட்டுப் பூட்டிக் கொள்கிறவள். நெருக்கத்துக்கு அஞ்சுகிறவள்.

அன்பு செலுத்தப் பயம்.

அன்பின் குழந்தைதான் வெறுப்பு.

விஸ்கியும் ரம்மும் அப்பாவுடைய அவமதிக்கப்பட்ட அன்பின் தற்காப்பு நடவடிக்கைகள். “சரிதான் போ சனியனே. உன் தூய்மை எனக்கு வேண்டியதில்லை. நான் என்னை மேலும் மேலும் அழுக்காக்கிக் கொள்கிறேன் என்னிடம் வரவே வராதே” என்று சண்டி செய்வது போல.

அப்பா அழுக்கான, கசங்கின சட்டைகளுடன் ஆபீஸ் போன நாட்கள் உண்டு. மடிப்புக் கலையாத சட்டை, பாண்டுடன் படுத்துத் தூங்கின நாட்கள் உண்டு.

எதிர்ப்பு, எதிர்ப்பு, எதிர்ப்பு.

அம்மாவின் தூய்மைப் பித்துக்கு எதிர்ப்பு.

ஐஸ்கிரீம் பார்லரிலிருந்து வெளிப்பட்டபோது வெளியே இருட்டி விட்டது. “அப்பா, நாளைக்கு ஆயிடுத்தா?” என்று உஷா கேட்டாள். ஐந்து வயது. ஒன்றாம் வகுப்பு. நேற்று, இன்று, நாளை எல்லாம் அவளுக்கு இன்னமும் குழப்பம்தான்.

“இப்ப நாளைக்கு இல்லை… இப்ப ராத்திரி… ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடி சூரியன் வரும். வெளிச்சமா ஆயிடும் – அது தான் நாளைக்கு”

“அப்போ அம்மா வந்துடுவா”

“ஆமாம்”

“அப்பா, அம்மா இப்படி சும்மாச் சும்மா என்னை விட்டுட்டு ஊருக்குப் போனா, எனக்கு பிடிக்கவேயில்லைப்பா”.

ஆஃபீஸ் வேலை, என்று அவன் குழந்தைக்குப் புரிய வைக்க முயன்றான். கோதையின் ஆஃபீஸ் முதியோர் கல்வி இலாகா. கருத்தரங்குகள், கிராமங்களில் தகவல் சேகரிப்பு, என்று அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வருகிறது.

வீட்டுக்குத் திரும்பினால் குழந்தைக்கு அம்மாவின் நினைவு மேலும் அதிகமாகுமென்று தோன்றியதால், குழந்தையின் கையைப் பிடித்தவாறு சற்று நேரம் கடைத் தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். குழந்தையின் முகத்தில் – ஆர்வம் மின்னும் கண்களில் தன் சிறு வயது தோற்றம் தெரிவது போலிருந்தது. சின்னப் பையனாக அவன் அம்மாவுடன் கடைத் தெருவுக்குச் சென்ற அந்த மாலை நேரங்கள்-

அப்பா எப்போதும் லேட்டாகத்தான் வருவார். அம்மாதான் கடைகண்ணிக்குச் சென்று வரவேண்டும். இவன் தான் அவளுக்குத் துணை. அவனுக்குப் பெருமையாக இருக்கும். “அம்மாவின் முகத்தில் ஒரு நாள் சிரிப்பை வரவழைப்பேன்” என்று அவன் அப்போது நினைத்துக் கொள்வான். ஒரு குழந்தையின் அசட்டு நம்பிக்கை ஆர்வம்.

ஆனால் அம்மா இன்னமும் சிரிக்கத் தொடங்கவில்லை. முதியோர்களுக்குக் கல்வி கற்பிக்க முடிகிறது. ஆனால் யார், எப்படி, அவர்களுக்குச் சிரிக்கக் கற்றுக் கொடுப்பது? துன்பங்களின் சுமைக்கடியில் நசுங்கிப் போனவர்களின் நசுங்கல்களை நேராக்குவது எப்படி?

திடீரென்று கோதையின் கடுகடுத்துக் கொள்ளும் முகம் அவன் நினைவில் எழுந்தது. அவனுடைய அம்மாவின் அசட்டு ஆதாரங்கள், நம்பிக்கைகள், ஆகியவற்றின் உரசலினால் கோதையின் முகத்தில் ஏறும் வெறுப்பின் கோடுகள்… மாலையில் பஸ்ஸில் திரும்புகையில் அவன் பார்த்த கோதையின் சிரித்த முகம் இப்போது மறந்து போயிற்று.

கோதையின் முகமும் அம்மாவின் முகம் போல ‘வேண்டாம். வேண்டாம்’ என்று சொல்லுகிற முகமாகிவிடாதே?

இந்த ‘வேண்டாம்’ இந்த வீட்டின் சுவர்களுக்கிடையில் இறுக்கத்தின் தாயாக, இன்பத்தின் எதிரியாக, என்றென்றும் உலவியவாறிருக்கிறது-

இரவுச் சாப்பாடு, உஷா, ராஜாராமன், அவன் அம்மா.

இன்று கடைசித் தடவையாக மூன்று குழந்தைகள் உட்கார்ந்து சாப்பிடுவதாய் ராஜாராமன் நினைத்துக் கொண்டான். உஷா நிஜக் குழந்தை; அவன் தன் அம்மாவின் குழந்தை; அவனுடைய அம்மா தாவணி அணிவதற்கு முன்பே தாலியில் சிறையான குழந்தை. அந்தக் குழந்தையைப் பெரியவளாக்க அப்பா முயல்வதும், அந்த முயற்சியை அம்மா எதிர்ப்பதுமாகவே அவர்களுடைய வாழ்நாள் கழிந்துவிட்டது.

இப்போது தாலி இல்லை. சிறை இல்லை. விடுதலை! கிழவியின் முகம். ஆனால் மனத்தளவில் வெறும் குழந்தை.

ராஜாராமனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க மனதில் இரக்கம் சுரந்தது. பூங்கா, ஐஸ்கிரீம் பார்லர், இந்தக் கிழவி.

நாளைக்கும் தன் மனதில் இந்த இரக்கம் நிலைத்திருக்குமென்று சொல்வதற்கில்லை. நாளைக்குக் கோதை வந்துவிடுவாள்.

உஷா தூங்குவது வரையில் ராஜாராமன் காத்திருந்தான். பிறகு அம்மாவிடம் சென்றான். “அம்மா!” என்று கூப்பிட்டான்.

சமையலறைக்குள்ளிருந்த அம்மா அவனைத் திரும்பிப் பார்த்தாள். கண்களில் அதே சோகம். அந்தச் சோகம் பரிசுத்தமானதாகத் தோன்றியது. உலகம் தொடங்கிய நாள் முதல் நிலவி வந்துள்ளதும் என்றென்றும் நிலைத்திருக்கப் போவதுமான ஒரு சோகமாகத் தோன்றியது.

“அம்மா!” என்று தேம்பியவாறு ராஜாராமன் அம்மாவை அணைத்துக் கொண்டான். அவனுடைய அம்மா எந்த வித எதிர்ப்புமின்றி அவனுடைய அணைப்பினுள் புதைந்து கிடந்தாள். அப்பா, நீயும் அழுதிருக்க வேண்டும். இளகியிருக்க வேண்டும். குழந்தையாக மாறியிருக்க வேண்டும்.

ஒரு நாளாவது.

“இப்போது ராத்திரி” என்று குழந்தைக்குச் சொல்லுவது போல ராஜாராமன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். “ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடி சூரியன் வரும் வெளிச்சமா ஆயிடும் அதுதான் நாளைக்கு…”

******

Mar 8, 2012

ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்-ஆதவன்

டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை உமிழ்ந்தவாறு அவரை அடித்துத் தள்ளிவிடும் போல சின்னா பின்னமாக்கிவிடும்போல தோன்றியது.

ஒரே கணம்தான்; அதோ, அவனும் அவனுடைய‌ வாகனமும் தூரத்தில் சென்று மறைந்துவிட்டன.

அவருக்குப் படபடப்பு அடங்குவதற்கு சில விநாடிகள் பிடித்தன. அவர் மனaathavanதில் அந்த  இளைஞன்பால் மீண்டும் வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. அவன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்கிறானென்பதை இந்தக் கணம் மறுபடி ருசுப் படுத்தியிருந்தது. அவர் வீட்டை விட்டு வெளியே இறங்க‌ வேண்டியதுதான் தாமதம், உடனே அவனுடைய மோட்டார் சைக்கிள் எங்கிருந்தோ அவரைத் துரத்திக் கொண்டு வந்து விடுகிறது. அவரைப் பதட்டமடையச் செய்வதில் அவனுக்கு ஒரு குரூரமான மகிழ்ச்சி கிடைப்பதாகப் தோண்றியது. உருப்படியான எதிலும் தீவிரப் பிடிவில்லாமல், ஆழமான‌ எதனுடனும் தம்மை முழுமையாகச் சம்பந்தப்படுத்திக் கொண்டு அதன் விளைவுகளைச் சந்திக்கத் துணிவில்லாமல், தாமே உருவாக்கிக் கொண்ட ஒரு நிரந்தரமான சலிப்பில் உழலும் இக்கால இளைஞர்களுக்கு இதுபோன்ற பொறுக்கித்தனமான முறைகளில்தான் மனக் கிளர்ச்சியையும் பரவசத்தையும் உருவாக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. தம்மை நிரூபித்துக்கொள்ளத்தெரிகிறது. அவருடைய பதட்டம் அவனுக்கு ஒரு எல்.எஸ்.டி. அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவர் ஒரு ஊறுகாய்.

இல்லை, இது அவ்வளவு சரியான உருவகமில்லை. அவன் ஒரு பஞ்சாபி இளைஞன். உப்புமா அவருக்கு இருப்பதைப் போல அவனுக்குச் சலிப்பின் சின்னமில்லை; வேறெந்த விதமான சின்னமும் கூட இல்லை. ரொட்டி என்று வேண்டுமானால் சொல்லலாம். அல்லது பூரி அல்லது ஸமோஸா.

அவர் ஸலூனை அடைந்தபோது வாசலிலிருந்து நாற்காலியின் ஒய்யாரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த ஒரு பையன் முள்ளங்கியைப் பேனாக் கத்தியால் சிறுசிறு துண்டங்களாக நறுக்கி வாயில் போட்டு மென்று கொண்டிருந்தான். அவர் உள்ளே நுழையும்போது அவரை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தான். வம்புக்கிழுக்கும் பார்வை. ‘அல்லது முள்ளங்கி’ என்று தன் முந்தைய நினைவின் தொடர்ச்சியாக அவனைப் பார்த்து அவர் சேர்த்துக் கொண்டார். முள்ளங்கியை நேரடியாகப் பல்லால் கடித்துத் தின்று அவனுக்கு அலுத்திருக்க வேண்டும். எனவே கத்தியால நறுக்கித் தின்னுகிறான். சலூனில் அந்த முள்ளங்கிப் பையனைத் தவிர இன்னும் நாலைந்து பேர் காத்திருந்தார்கள். இருவர் நடுத்தரப் பிராயத்தினர். வேறு இருவர் அவரைப் போல அறுபதின் வாசலில் இருப்பவர்கள். இவர்களை அங்கே பார்த்ததில் அவருக்கு ஆச்சரியமுண்டாக வில்லை. ஆனால் முள்ளங்கிப் பையனையும், புகை பிடித்தவாறு ஃபிலிம்ஃபேரைப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த இன்னொருவரையும் (இவனுக்கு முள்ளங்கியை விட இரண்டு மூன்று வயது அதிகமிருக்கும்) பார்த்துத்தான் ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் ஸலூனுக்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருந்ததைத் தலை மயிரின் அடர்த்தி மூலம் பறைசாற்றிக் கொண்டு, அந்தப் பிராயத்து இளைஞர்களிடமிருந்து வேறெந்த விதத்திலும் கூட மாறுபட்டவர்களாக இல்லாமலிருந்தார்கள். இன்று திடீரென்று அவர்கள் ஏன் சலூனுக்கு வரவேண்டுமென்று அவர் யோசித்தார். ஒரு வேளை யாருடனாவது தலைமயிரைப் பணயமாக வைத்துப் பந்தயம் கட்டி அவர்கள் தோற்றிருக்கலாம். அல்லது இந்தப் பேட்டையில் விருதாவாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ரவுடிப் பையன்கள் கும்பலைச் சேர்ந்தவர்களாக இவர்களும் இருக்கலாம்-அந்த மோட்டார் சைக்கிள் இளைஞனைப் போல. காலையிலிருந்து இரவு வரையில் இவர்கள் பஸ் ஸ்டாண்ட் வெற்றிலை பாக்குக் கடை, டீக்கடை, ஸலூன் என்று ஒவ்வொரு இடமாகப் போய் உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரை வம்புக்கிழுத்துக் கொண்டிருப்பார்கள். சம்பந்தப்பட்ட கடைக்காரர்களும் இவர்களை எதுவும் சொல்வதில்லை. இதெல்லாம் தினசரி வாழ்க்கையின் ஒரு சாதாரணப் பகுதியாகிவிட்டது. ரோஷமிருந்தவர்களுக்கும் ரோஷம் மரத்துப் போய் விட்டது. எந்த வீட்டுப் பிள்ளையோ, யாருடைய பிள்ளையோ? அவனுடைய அப்பா செல்வாக்குள்ள இடங்களில் தொடர்புடையவராக இருக்கமாம். எதற்கு வீண் பொல்லாப்பு?

ஆம். ரவுடித்தனமே ஒரு பண்பாக வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியதாக ஆகிவிட்டது.

ஃபிலிம்ஃபேர் பையனுக்கருகில், பெஞ்சில், அன்றையத் தினசரி கிடந்தது. அது அவர்கள் வீட்டில் வாங்குகிற தினசரி இல்லை. ஆனால் உண்மையில், அதுதான் அவருக்குப் பிரியமான தினசரி. அவர் அதைக் கையிலெடுத்துக் கொண்டு, பெஞ்சில் அமர்ந்தவாறே அதைப் பார்வையிடத் தொடங்கினார்.

டில்லிக்கு வந்து இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக தினசரி காலையில் அவர் படித்து வந்தது அந்த தினசரியைத்தான். அதாவது அவர் உத்தியோகத்திலிருந்த வரை. ஆனால் இப்போது ரிட்டையராகி மகனுடன் அவனுடைய வீட்டில் தங்கியிருக்கும்போது, அவன் விரும்பித் தருவிக்கும் தினசரியைத்தான் அவரும் படிக்க வேண்டியிருக்கிறது. அவருக்கு விருப்பமான தினசரியையும் வேண்டுமானால் தருவிக்க அவன் தயாராகவே இருந்தான். ஆனால் ‘எதற்கு இரண்டு பேப்பர்!’ என்று அவர் தடுத்துவிட்டார். பலனாக, இப்போதெல்லாம் அவருக்கு தினசரி படித்த மாதிரியே இருப்பதில்லை.

இப்போது அவர் தன் பழைய தினசரியை வெகு நாட்களுக்குப் பிறகு ஆசை தீரப் படித்துத் தீர்த்தார். மனதில் ஒரு அலாதியான நிறைவு ஏற்பட்டது. இந்தத் தினசரியில் தலைப்புகளின் தன்மை, செய்திகளை வெளியிடும் முறை எல்லவற்றிலும் அவர்கள் இப்போது வாங்கி வந்த‌ திணசரியில் இல்லாத ஒரு அடக்கமும் அமைதியும் இருந்தது. அவருடைய மகனுக்கோ அந்த இன்னொரு தினசரியில் வரும் பளீரென்ற தலைப்புகள், காரசாரமான தலையங்கங்கள் இவைதான் பிடிக்கின்றன. எப்படி அவனுடைய மனைவியின் காரமான சமையல் பிடிக்கிறதோ, அப்படி எல்லாம் சுவையைப் பொறுத்த விஷயம்தான்.

அவ‌ருக்குத் த‌ன் மாட்டுப் பெண்ணின் ச‌மைய‌ல் பிடிப்ப‌தேயில்லை. ஆனால் என்ன‌ செய்ய‌ முடியும்? பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இனி அவ‌ர் அதைத்தான் சாப்பிட்டாக‌ வேண்டும். க‌ல்யாணி இப்ப‌டி அவ‌ரை விட்டுவிட்டுப் போய் விட்டாளே! அவ‌ள் குண‌ம் மாதிரியேதான் அவ‌ள் ச‌ம‌ைய‌லும். சாத்வீக‌மாக‌ இருக்கும். ஆனால் ச‌ப்பென்று இருக்காது. அவ‌ள் இருந்த‌ வ‌ரையில் அவ‌ர் முடி வெட்டிக் கொள்ள‌ப் போகும் தின‌ங்க‌ளை ஒரு வைபவ‌மாக‌வே கொண்டாடுவாள்; ஸ்பெஷ‌லாக‌ ஏதாவ‌து ப‌ல‌கார‌ம் செய்து விடுவாள். அவ‌ர் ஸலூனுக்குப் போய்த் திரும்பி வ‌ந்த‌ பிற‌கு இர‌ண்டாவ‌து டோஸ் காப்பி, எண்ணெய், வெந்நீர் எல்லாம் த‌யாராக‌ இருக்கும். பாவ‌ம், அந்த‌க் கால‌த்து ம‌னுஷி. ‘பெண்க‌ள் விடுத‌லை இய‌க்க‌த்தினால் பாதிக்க‌ப்ப‌டாத‌வ‌ள். க‌ண‌வ‌னுக்கு பணி விடை செய்வ‌திலேயே நிறைவு பெறுப‌வ‌ள்.’ அவ‌ருக்குத் திடீரென்று அவ‌ள் மீது கோப‌ம் கூட‌ ஏற்ப‌ட்ட‌து. அவ‌ள் இருந்த‌ வ‌ரையில் அவ‌ரை அள‌வு மீறிச் சீராட்டிய‌த‌ன் கார‌ண‌மாக‌த்தானே, இன்று அவ‌ர் மிக‌ அதிக‌மாக‌த் துன்ப‌ப்ப‌ட‌ வேண்டியிருக்கிற‌து! ‘பாவ்லாவ்’வின் நாய் போல‌, முடி வெட்டிக் கொள்ளும் தின‌ம் வ‌ந்த‌வுட‌னேயே அவ‌ருடைய‌ நாக்கு ருசியான‌ சிற்றுண்டிக்கு ஏங்க‌த் தொட‌ங்குகிற‌து.

காலையிலிருந்தே அவ‌ருக்கு ந‌ல்ல‌ ப‌சி. ஆனால் வீட்டில் ‘பிரெட்’ கூட‌ இல்லை. பிரெட் தொழிற்சாலைக‌ளில் ஒரு வாரமாக ஏதோ ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கிறது. அவருடைய மாட்டுப் பெண் அவளுடைய ’ஸ்பெஷாலிடி’யான உப்புமா கிண்டினாள். அவருக்கென்று இல்லை. எல்லோருக்குமாகத்தான். மாணவர் ரகளையொன்றைத் தொடர்ந்து யுனிவர்ஸிடி சென்ற இரண்டு வாரங்களாக மூடப் பட்டுக் கிடக்கிறது. அவருடைய மகன், மாட்டுப்பெண் இருவரும் யுனிவர்ஸிடியில் லெக்சரர்கள். இப்போது போனஸ் விடுமுறை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்போது சில நாட்களாகவே தினசரி காலையில் பலகாரம், பிறகு தாமதமாகச் சாப்பாடு. பலகாரம் என்பது பெரும்பாலும் பிரெட், அல்லது உப்புமா.

உப்புமாவைக் கூட ஒருவர் மோசமாகப் பண்ண முடியுமென்பது அவள் மூலமாக அதைப் பண்ணிச் சாப்பிடுவது வரையில் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. வழக்கம் போல எப்படியோ அதை விழுங்கிவிட்டு, ஹார்லிக்ஸ் கரைத்துக் கொடுத்தாள்.அதைக் குடித்துவிட்டு, ஸலூனுக்கு வந்து சேர்ந்திருந்தார்.

முள்ளங்கிப் பையன் முள்ளங்கியை முடித்துவிட்டு கொய்யாப் பழம் தின்னத் தொடங்கியிருந்தான். அவர் ஒரு கணம் பொறாமையுடன் அவனைப் பார்த்தார். கொய்யாப் பழத்தையும் அவன் அந்தக் கத்தியால்,நறுக்கித்தான் தின்றான். தின்னுவதை விடவும் அதிகமாக அந்தக் கத்தியைப் பயன்படுத்துவதில்தான் அவனுக்கு இன்பம் கிடைத்தது போலிருந்தது.

ஆரம்பத்தில் முடி வெட்டிக் கொள்ள உட்கார்ந்தவர்களில் இருவர் எழுந்து போனார்கள். காத்திருந்தவர்களில் இருவர் எழுந்து அந்த இடங்களில் போய் உட்கார்ந்தார்கள். அவருடைய முறை வருவதற்கு இன்னமும் நேரமாகும். அவர் நாவிதர்களின் கைவரிசையைச் சற்று நேரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஃபிலிம்ஃபேர் பையன் இன்னமும் அந்தப் பத்திரிகையைக் கீழே வைக்கவில்லை. அங்கே வேறு பத்திரிகைகளும் இல்லை. அவருக்கு அந்தப் பையன் மீது அனுதாபமேற்பட்டது. அவ்வளவு ஒரு இடத்தில் அமர்ந்து எதயோ படித்துக் கொண்டிருப்பது அதுஃபிலிம்ஃபேராகவே இருந்தால் கூட-அவனுக்கு மிகவும் இயல்பற்ற ஒரு செயலாக அவருக்குப் பட்டது. என்ன துரதிர்ஷ்டம்! இந்த ஃபிலிம்ஃபேரை மட்டுமாவது அவன் படித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் நாளை யாராவது ராஜேஷ் கன்னா சம்பந்தப்பட்ட புதிய வம்பை அவனிடம் பேச வரும்போது அவன் பேந்தப் பேந்த விழிக்க வேண்டி வரும். பாவம்! இந்தப் படிப்பைக் கூட அவன் தவிர்க்க முடிந்தால்!

எல்லோருக்குமே ஆசையாகத்தான் இருக்கிறது, படிப்பைத் தவிர்ப்பதற்கு. படிக்காமலேயே புத்திசாலியாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள். அதாவது புத்தகப் படிப்புமட்டுமல்ல, வாழ்க்கைப் படிப்பும் கூடத்தான்.எம்.ஏ. படித்த தன் மாட்டுப் பெண்ணுக்கு கல்யாணியின் புத்திசாலித் தனத்தில் கால் பங்கு கூட கிடையாதென்று அவருக்குத் தோன்றுகிறது. இதை அவர் வாய் விட்டுச் சொல்ல முடியுமா? ரிடையராகிற சமயத்தில் அவருக்குத் துணையாக இருந்த ஒரு மகானுபாவன்,ஃபைல்களை ஆதியோடந்தம் படிப்பதையே கௌரவக் குறைச்சலா நினைத்துக்கொண்டு ஏதோ நுனிப்புல் மேய்ந்து தப்பும் தவறுமாக எதையோ எழுதி ஒப்பேற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு சமீபத்தில் பிரமோஷன் கிடைத்திருப்பதாகச் சொன்னார்கள். அவருடைய மகன் பளீரென்ற தலப்புகளும், சாதாரணமான தலையங்கங்களும் உள்ள தினசரியைக் காலையில் கரைத்துக் குடித்துவிட்டு, நாளின் எஞ்சிய பகுதியில் வருகிறவர் போகிறவர்களிடம் அந்தக் கருத்துக்களைத் தன் கருத்துக்களைப் போலச் சொல்லிக் கொள்ளுகிறான். ஆனால், உண்மையில் அவனுக்கென்று எந்த விஷயத்திலும் எந்தவிதமான திடமான அபிப்பிராயமும் கிடையாது என்பதை அவர் வெகு நாள் முன்பே அறிந்திருந்தார். இல்லாவிட்டால் இவளுடைய சமையலை மறு பேச்சில்லாமல் இவ்வளவு நாள் சாப்பிட்டுக் கொண்டிருப்பானா, அறிவில்லாதவன். இப்படிப்பட்டவர்கள் மாணவர்களுக்கு என்ன போதிக்க முடியும், என்ன திடமான வழியை அவர்களுக்குக் காட்ட முடியும்?

கடைசியில் அவருடைய முறையும் வந்தது. அவர் நாற்காலியில் போய் உட்கார்ந்தார். நாவிதன் அவரைக் கழுத்துக்குக் கீழே வெள்ளைத் துணியால் போர்த்தினான். அவருக்குத் திடீரென்று அமைதியும் ஆசுவாசமும் ஏற்பட்டது. மீண்டும் சிறு பையனாகிவிட்டது போல; பொறுப்புகள் இல்லாதவராய், சீராட்டலுக்குரியவராய். இப்போது அவர் எதுவும் செய்ய வேண்டியதில்லை, எல்லாம் நாவிதன் பார்த்துக் கொள்வான். ஒரு நல்ல தந்தையைப் போல, தாயைப் போல மனைவியைப் போல. எல்லா நாவிதர்களிடமும் அவர் இப்படி ஆசுவாசமாக உணர முடிந்ததில்லை. ஒரு வருடம் முன்பு இவனைக் கண்டுபிடிக்கும் வரையில் அவர் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருந்தது!

பல வருடங்களாக கனாட் பிளேஸில் ஒரு குறிப்பிட்ட ஸலூனிலிருந்து ஒரு குறிப்பிட்ட கிழவனிடம்தான் அவர் முடி வெட்டிக் கொண்டார்; ஆனால் திடீரென்று ஒரு நாள் அந்தக் கிழவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அன்று இன்னொருவன் அவருக்கு முடிவெட்டி விட்டான். அவன் அவர் தலையைத் தொட்டுத் திருப்பிய விதம், தலைமயிரை வாரிய விதம், சிரைத்த விதம், காதுகளின் மேல் புறத்தில் மழித்த விதம், எல்லாமே அவருக்கு அருவருப்பூட்டின. அவர் அதன் பிறகு அந்த ஸ்லூன் பக்கமே போகவில்லை. நாவிதனுடன் நாம் கொள்ளும் உறவு வெறும் வார்த்தை உறவல்ல. ஸ்பரிச உறவு- மனைவியுடன் கொள்ளும் உறவைப் போல -சிலரால்தான் நாம் கவரப்படுகிறோம். சிலர் தீண்டுவதுதான் நமக்கு இதமளிக்கிறது. நம்மைக் கவராதவர்கள் பேச்சைப் பொறுத்துக் கொள்ளலாம். ஸ்பரிசத்தைப் பொறுக்க முடியாது. அவனை அவருக்குப் பிடிக்காமல் போனது அவனுடைய குறையென்றுகூடச் சொல்ல முடியாது. அவருடைய துரதிர்ஷ்டமென்றுதான் சொல்ல வேண்டும். இந்த துரதிர்ஷ்டம் பல நாட்கள் நீடித்தது. எத்தனை சலூன்களுக்குச் சென்றிருப்பார், எத்தனை நாவிதர்களிடம் பண்ணிக் கொண்டிருப்பார்! யாருமே அவருக்குத் திருப்தியளிக்க முடியவில்லை. கடைசியில் ஒரு வருடத்துக்கு முன்பு அவர் வீட்டருகிலேயே இந்த சலூன் திறந்தது. அதனுடைய முதலாளியாகிய இந்த நடுத்தர வயது நாவிதனிடம் தான் ஸலூன் நாற்காலிகளில் பெற விரும்பிய ஆசுவாசத்தை அவர் மீண்டும்-வெகு நாட்களுக்குப் பிறகு -பெற முடிந்தது. அவனுக்கு வயதென்னவோ முப்பத்தைந்துக்குள்தான் இருக்கும். ஆனாலும் அவருடைய பழைய கிழட்டு நாவிதரிடம் இருந்த அதே பக்குவமும் இங்கிதமும் மென்மையானதொரு கர்வமும் அவனுடைய ஒவ்வொரு அடைவிலும் ஸ்பரிசத்திலும் இருந்தது. அவன் ஒரு கலைஞன். தான் செய்கிற தொழில் குறித்து அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. இந்தத் தாழ்வு மனப்பான்மை விளைவிக்கும் முரட்டுத்தனமோ அல்லது போலியான பணிவோ அவனிடம் இல்லை.

கல்யாணியிடம் அவரைக் கவர்ந்ததும் இவ்வகைக் குணங்கள்தாம். அவளுக்கு அவர்பால் போலியான மரியாதை கிடையாது. தன்னம்பிக்கையின்மையும் பலவீனமும் ஏற்படுத்தும் காழ்ப்புணர்ச்சிகளும் போர்க் கோலங்களும் கிடையாது. தன் சூழ்நிலை, தன் வேலை,தன் உறவுகள் ஆகியவைபால் அவளுக்கு ஒரு நிச்சயமும் நம்பிக்கையும் இருந்தது. அன்பும் ஈடுபாடும் இருந்தது. ஷரத்துகளில்லாத ஈடுபாடு. அவளுடைய இந்த நிச்சயம் அவருக்கு அவர் வேண்டிய திண்மையையும் பாதுகாப்பையும் அளித்தது. அவளுடைய உலகம் குழப்பமில்லாத உலகம்; மிக எளிமையான உலகம். அந்த எளிமை வெகுளித்தனமானதல்ல, விவேகம் நிரம்பியது. முதிர்ச்சியை உள்ளடக்கியிருப்பது. இந்த நாவிதனின் எளிமையைப்போல. அவனுடைய மௌனத்தைப் போல.

இவனுடைய தொழிலின் தன்மை காரணமாகவே இவனுக்கு ஒரு முதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த நாவிதனுக்கு முடி திருத்திக் கொள்வதற்காக வருகிற பலர் இப்படி வெட்ட வேண்டும் அப்படி வெட்ட வேண்டும்’ என்று உத்தரவிடும்போதெல்லாம், மனிதர்களின் சுய முக்கியத் துவத்தையும் அகந்தையையும் அவன் நெருக்கத்தில் தருசித்து இந்தத் தரிசனங்களின் பின்னணியில் தன்னுடைய சுய அபிமானம், சுய வெளிப்பாடு ஆகியவற்றையும் தவிர்க்க முடியாமல் பரிசீலனைக்கு உள்ளாக்க நேர்ந்தது. மற்றவர்களை உறுத்தாத விதத்தில் இவற்றை மொண்ணையாக்கிக் கொள்வதற்குப் பயின்றிருக்க வேண்டும். சில புடவை அல்லது நகை வியாபாரிகளிடமும், தையல்காரர்களிடமும் இதே விதமான முதிர்ச்சியை அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் கல்யாணியின் முதிர்ச்சியை உருவாக்கிய உலைக்களம் எது என்றுதான் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னுடைய ஆதி நாட்களின் முன்கோபமா? குடித்துக் குடித்துக் குட்டிச்சுவராய்ப் போன அவளுடைய அப்பாவின் பொறுப்பின்மையா? அவளுடைய நாத்தனாரின் தன் தமக்கையின் மௌடிகத்தை வித்தாகக் கொண்ட குரோதமும் பொறாமையுமா?

‘ஹேர் கட்’ முடிந்துவிட்டது. அவரைச் சுற்றியிருந்த வெள்ளைப் போர்வையை அவன் அவிழ்த்து உதறினான். டவலால் அவர் முகம், கழுத்து யாவற்றையும் அழுத்தித் துடைத்து, அவர் சட்டை மேலெல்லாம் தட்டினான். இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதேயென்று அவருக்கு ஏக்கமாக இருந்தது. அவர் நாற்காலியிலிருந்து இறங்கி, ஐந்து ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுத்தார். அவன் காத்திருந்த அடுத்த ஆசாமியை ‘வந்து உட்காரலாம்’ என்று சைகை செய்துவிட்டு, அங்கே அறை மூலையிலிருந்த மேஜையின் இழுப்பறையைத் திறந்து- அதுதான் அவனுடைய பணப்பெட்டி -அவருக்குச் சில்லறை எடுத்துக் கொடுத்தான். அவர் அதை எண்ணிக்கூடப் பார்க்காமல் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, வந்தனம் தெரிவிக்கும் முறையில் அவனைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டுக் கிளம்பினார். அந்தப் பணப் பரிவர்த்தனை அவர்களிருவரையும் எப்போதுமே சங்கடத்திலாழ்த்துவதாகத் தோன்றியது. அது அவர்களுடைய சம்பந்தம் பிரயோஜன ரீதியானது என்பதை உணர்த்தியது. அதுதான் உண்மையுமா? அப்படியல்லவென்று அவர் நினைப்பது – தன் சொந்த மகன் கூடத் தன்னிடம் காட்டாத ஒரு அக்கறையை
இந்த நாவிதன் காட்டுவதாக நினைப்பது ஒரு பிரமைதானா?

அவர் சலூன் வாசலையடைந்த அதே சமயம் அந்த முள்ளங்கிப் பையன் பக்கத்து டீக்கடை ரேடியோவிலிருந்து ஒலித்த சினிமாப் பாடலினால் கவரப்பட்டு சற்று முன்னர் அங்கிருந்து எழுந்து சென்றிருந்தவன் – மீண்டும் சலூனுக்குள் பிரவேசித்தான். “நீ என்னப்பா, எனக்கு அப்புறமாக வந்தவர்களுக்கெல்லாம் பண்ணிவிட்டாய்; நான் இரண்டு மணி நேரமாகக் காத்திருக்கிறேன்! நீ என்ன, கிழடுகளுக்காக மட்டும்தான் கடை திறந்திருக்கிறாயா?” என்று திடீரென்று உரத்த குரலில் சத்தமிட்டான். நாகராஜனுக்குச் சுருக்கென்றது. அவர் சலூன் வாசலில் நின்றார். நாவிதன் சாந்தமாக ஏதோ பதில் கூற முயன்றான். அதற்குள் ஃபிலிம்ஃபேர் இளைஞன், “இந்த நாவிதனும் கிழடுமாதிரி தாண்டா -ஸாலா!” என்றான். இருவருமாக உரக்கச் சிரித்தார்கள். தொடர்ந்து அவனுடைய ஆண்மையைப் பற்றிச் சந்தேகம் தெரிவித்து இரு பொருள்பட அவர்கள் பேசிக் கொண்டு போனார்கள். அவனைச் சீண்டுகிற முறையில், ஃபிலிம்ஃபேர் பையன் ஒரு ஆபாச மான சினிமாப் பாட்டைப் பாடியவாறு அந்த நாவிதனைத் தழுவிக்கொள்ள முயன்றான். முதலாளி நாவிதனைத் தவிர அந்தக் கடையிலிருந்து வேறு இரண்டு நாவிதர்கள் எதுவுமே நடக்காதது போலத் தங்கள் வேலையில் ஆழ்ந்திருந்தார்கள். அவனும் பதட்டமில்லாமல், “தயவு செய்து இங்கே சத்தம் போடாதீர்கள்” என்று மட்டும் சொன்னான். கடைசியில் காத்திருந்த மற்றவர்கள் அந்தப் பையன்களின் நடத்தையில் அதிருப்தியுற்றவர்களாக, ஆனால் அந்த அதிருப்தியை வெளிப்படுத்தவும் தயங்கியவர்களாக அமர்ந்திருந்தார்கள்.

நாகராஜனுக்குப் பொறுக்கவில்லை. அந்த நாவிதனுக்கு ஆதரவாக ஏதாவது சொல்ல வேண்டும்போல இருந்தது. ஆனால் அவருடைய உதவி உண்மையிலேயே அவனுக்குச் சாதகமானதாக இருக்குமாவென்றும் அவருக்குச் சந்தேக மாயிருந்தது. என்ன இருந்தாலும் அவர் இந்த ஊர்க்கார ரில்லை. அவருடைய இந்தி உச்சரிப்பு அந்தப் பையன்களுடைய கொண்டாட்டத்தை அதிகப்படுத்தி, அவரை அவர்களுடைய கிண்டலிலிருந்து காப்பாற்றும் அதிகப் படியான பொறுப்பை வேறு அந்த நாவிதன் மேல் சுமத்தக்கூடும். அவருக்கு புஜபலமில்லை; வேறு பலங்களுமில்லை. அவர் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். இதற்காகத் தன்னையே வெறுத்துக் கொண்டார். தான் செய்யத் தவறியவற்றுக்குச் சுலபமாகச் சமாதானங்கள் கற்பித்துக் கொள்ள அவரால் முடிகிறது. ஆனால் இந்தத் தர்க்கம் ஒரு இறுதியான விடையாகாது. அவருடைய கோழைத் தனத்துக்கு மன்னிப்பாகாது. ஆம், இதுவும் ஒரு கோழைத்தனம். அவன் முடிதிருத்தும் அழகை மனதாரப் பாராட்ட வேண்டும், அவனுக்கு ஏதாவது ‘டிப்’ கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைத்து, பிறகு அதை செயலாக்காமல் விடுகிறாரே, அதுவும் கோழைத்தனம்தான். கல்யாணியின் வேலைத் திறனை ஒரு முறைகூட வாய் நிறையப் புகழாமலிருந்ததும், அவளுடைய நாத்தனாரின் குரோத ஜ்வாலையில் அவள் வெந்த நாட்களில் வெளிப்படையாகத் தன்னை மனைவியின் பக்கம்தானென்று காண்பித்துக் கொள்ளாமலிருந்ததும் கூடக் கோழைத்தனம் தான். ‘என் மனசு அவளுக்குத் தெரியும்’ என்று அப்போதெல்லாம் அவர் தருணங்களை மீண்டும் அசைபோட நேருகையில், அந்தச் சமாதானம் அவருக்குத் திருப்தியளிப்பதாக இல்லை…

அவர் சாலையைக் கடப்பதற்காகக் காலையெடுத்து வைத்த சமயத்தில், சொல்லி வைத்தாற்போல அந்த மோட்டார் சைக்கிள் இளைஞன் பேய் வேகத்தில் நடைபாதைக்கு வெகு சமீபமாகச் சாலையில் தன் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு வந்தான். அவர் அவசரமாக முன் வைத்த காலைப் பின்னுக்கிழுத்துக் கொண்டார். மீண்டும் அவருக்குக் கோபம் வெடித்துக் கொண்டு கிளம்பியது. அந்த மோட்டார் சைக்கிள் இளைஞன் மேலெழுந்த கோபம் ஸலூனில் சற்று முன் பார்த்த பக்கம் திசை மாறியது. மறுபடி ஸலூனுக்குத் திரும்பலாமாவென்று நினைத்தார். சென்றிருப்பார்; ஆனால் அப்போது திடீரென்று “தாத்தா! தாத்தா!” என்று அவருடைய பேத்தியின் குரல் கேட்டது. அவர் எதிர்ச்சாரியைப் பார்த்தார். அங்கே அனு தன் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் – அவருடைய பிள்ளை – வாயில் பீடாவைக் குதப்பிக் கொண்டிருந்தான். பீடா போட்டுக் கொள்வதற்காக அவன் வெளியே வந்திருக்க வேண்டும். அவர் ஸ்லூனுக்குத் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டு, சாலையைக் கடந்து அவர்களருகில் வந்தார். “என்ன காட்டுமிராண்டித்தனமா விட்டுண்டு போறான்கள்!” என்று மோட்டார் சைக்கிள் இளைஞன் பற்றிய தன் மனத்தாங்கலை மகனுடன் பகிர்ந்து கொண்டார்.

மகன் ஒரு கணம் பேசவில்லை. பிறகு வெற்றிலைச் சாறை ‘புளிச்’சென்று துப்பிவிட்டு (அனு வியப்புடன் அப்பாவின் வெற்றிலைச் சாறு தரையில் விழுந்த இடத்தை ஒரு கணம் நின்று பார்த்தாள்) “பொழுது போகலை இவாளுக்கெல்லாம்!” என்றான். அவன் அந்த இளைஞனுக்கு அனுதாபம் தெரிவிக்கிறானா அல்லது அவனைக் கண்டிக்கிறானா என்று தெரியாமலிருந்தது. அவர் மேலும் கடுமையாக ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் அனு அவரருகில் ஓடிவந்து அவர் சட்டையைப் பிடித்து இழுத்து, “தாத்தா, நீயும் ஸ்பிட் பண்ணு தாத்தா!” என்றாள்.

அவள் என்ன சொல்கிறாளென்று புரிந்து கொள்ள அவருக்குச் சில விநாடிகள் பிடித்தன. “நான் வெற்றிலை போட்டுக்கலையே!” என்றார்.

“நீயும் போட்டுக்கோயேன்”.

“இப்ப இல்லை; சாப்பிட்டப்புறம்”.

“அப்பா சாப்பிடறதுக்கு முந்தியே போட்டுண்டிருக்கா, பாரு!”

“நீ கொஞ்சம் தொணப்பாமல் வரமாட்டியா?” என்று மாதவன் – அவருடைய மகன் அவளைக் கடிந்து கொண்டான். அவள் அப்பாவைச் சற்றே முன்னே போக விட்டு விட்டு, பின்னாலிருந்து அவனுக்கு வலிப்புக் காட்டினாள்; தாத்தா மட்டும் பார்க்கும் படியாக, ‘உஷ்!’ என்று நாகராஜன் அவளுக்குச் சைகை காட்டினார். அப்பா எங்கேயாவது பார்த்துவிடப் போகிறார் என்பதைப் போல. தாத்தாவும் பேத்தியும் இப்படி நிறைய ரகசியமான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு. அவள் அப்பாவின் கையை விட்டு தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். “தாத்தா!”

“உம்?”

அவள் அவரைக் கீழே குனியுமாறு சைகை செய்தாள். அவள் ஏதோ ரகசியம் சொல்ல வேண்டுமாம்; அவர் குனிந்தார். அவள் அவர் காதில் கிசுகிசுத்தாள். “நீ சாப்பிட்டப்புறம் வெத்தலை போட்டுண்டு ஸ்பீட் பண்றயா?”

அவர் பதிலுக்கு அவள் காதில் கிசுகிசுத்தார். “சரி”.

அனு மட்டும் அந்த வீட்டில் இல்லாமலிருந்தால், இறுக்கமான மௌனங்களிலும் அபிப்பிராய மோதல்களிலும் அவர்கள் எப்போதும் உழன்று கொண்டிருப்பார்கள்; அவள் இருப்பதால் ஒருவருக்கு மற்றவர் சலித்துவிடும்போது, அல்லது பரஸ்பரம் உடன்பாடு ஏற்படாமல் போகும்போது, சட்டென்று அவளுடன் பேசத் தொடங்கிவிட முடிகிறது. பாவம், பெரியவர்கள் தன்னை எப்படிச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களென்று அந்தக் குழந்தைக்குத் தெரியவில்லை. வீடு நெருங்கியதுமே முன்பாக ஓடிச் சென்று காலிங் பெல் விசையை அழுத்தினாள். அவளுடைய அம்மா வந்து கதவைத் திறந்தாள்.

அவர் வீட்டினுள் வந்ததும் உடைகளைக் களைந்துவிட்டு உடனடியாக குளிக்கப் போகாமல் சற்று நேரம் மின் விசிறிக்கடியில் வியர்வை உலர்வதற்காக உட்கார்ந்திருந்தார். ரேடியோ ஒலி சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது; அவளுடைய மாட்டுப்பெண் தயா ரேடியோவுடன் சேர்ந்து, அதில் கேட்ட டியூனை முனகிக் கொண்டிருந்தாள். மாதவன் வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருக்க அனு அவனுக்குப் பழிப்புக் காட்டுவது போல ஒரு பென்ஸிலை சிகரெட் போல வாயில் வைத்துக் கொண்டு ஃபூஃபூ என்று ஊதிக் கொண்டிருந்தாள். சாப்பாட்டு மேஜை மேல் சாப்பிடுவதற்கான சாமக்கிரியைகள் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. அமைதியான குடும்பச் சூழ்நிலை; நாகராஜனின் உடல் இலேசாக நடுங்கியது. வியர்வையின் ஈரம் படிந்திருந்த சருமத்தில் காற்றுப் பட்டதனால் இருக்கலாம். ஸலூனில் நடந்த நிகழ்ச்சியை அவர் நினைத்துக் கொண்டார். அந்த அறையின் அமைதியும் இதமும் திடீரென்று அவரை உறுத்தத் தொடங்கின. அது ஒரு மாயையாகத் தோன்றியது. வெளியே போக்கிரிகள் உலகைச் சின்னபின்னமாக்கிக் கொண்டிருக்கிறாரகள்.

குளித்துச் சாப்பிட்டு விட்டு அவர் தன் பேத்தியுடன் சற்று நேரம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்படியே கண்ணயர்ந்து விட்டார். காலையில் வெளியே சென்ற அசதி மீண்டும் விழித்துக் கொண்ட போது மணி நாலாகிவிட்டிருந்தது. காப்பி வாசனை அடித்தது. குழாயிலிருந்து ஜலம் விழும் ஓசை கேட்டது. இரை கொண்ட மலைப் பாம்பு போல நடுப்பகல் நேரத்தில் ஸ்தம்பித்துக் கிடந்த உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது. அவர் முகத்தை அலம்பிக் கொண்டு வந்தபோது மேஜை மீது காப்பி தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஒரு வாய் அருந்தினார்; இன்று அவ்வளவு மோசமாக இல்லை. காலைக் காப்பியைப் பொறுத்த வரையில், அவர்தான் எல்லாரையும் விடச் சீக்கிரமாக எழுந்திருப்பாராகையால், அவரே கலந்து விடுவார். ஆனால் மாலையில், மாட்டுப் பெண் தயாரிப்பதைத்தான் குடிக்கவேண்டியிருந்தது.

முன் அறையிலிருந்து உரத்த பேச்சுக் குரல்கள் கேட்டன. பிற்பகல் நேரம்தான் பெரும்பாலும் அந்த வீட்டில் பேச்சு நேரம். அவர்கள் ‘சமூக மிருகங்களாக’ ஆகும் நேரம். மனிதன் தான் வெறும் மிருகமில்லை என்று தனக்கும் மற்றவர்களுக்கும் நிரூபித்துக் கொள்ள ஏன் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொள்கிறான்? வெளியிலிருந்து யாரும் வராவிட்டால்கூட, அவர்கள் மூவரும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் இன்று யாரோ வந்திருந்தார்கள் போலிருக்கிறது. அவருடைய பிள்ளையின் குரலையும் மாட்டுப் பெண்ணின் குரலையும் தவிர, இன்னொரு ஆண் குரலும் ஒரு பெண் குரலும் கேட்டன. அவையும் அவருக்குப் பரிச்சயமானவையாகவே தோன்றின. அந்தச் சிரிப்பு! ருஷ்யாவுக்குப் போய்விட்டு வந்திருந்த புரொபசர் மோட்வானி மாதிரியல்லவா இருக்கிறது! ஆமாம், அவர்தான் மனைவியுடன் வந்திருக்கிறார்… மோட்வானி அதே பேட்டையில் இன்னொரு ப்ளாக்கில் இருந்தார். தற்போதுள்ள துணை வேந்தருக்கு அடுத்த படியாக இவர் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சர்வகலாசாலை வட்டங்களில் பேசிக் கொள்ளப்பட்டது. சரியான இடங்களில் சரியான நபர்களை அவருக்குத் தெரிந்திருந்தது. சந்தர்ப்ப வசத்தால் ஏற்பட்ட அவருடைய இந்த அண்மையை மகனும் மாட்டுப் பெண்ணும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்வதில் முனைந்திருந்தார்கள். மாட்டுப் பெண்ணின் பங்குதான் இதில் அதிகமிருக்கும். அவள் அவளுடைய அப்பாவின் பெண்தானே?

அவளுடைய குரல்தான் எல்லாருடையதும் விட அதிகமாகக் கேட்டுக் கொண்டிருந்தது; சிரிப்பும் கூட. இரண்டாவது ஸ்தானம் பெறும் குரல் யாருடையதென்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காப்பியிலிருந்து அவருடைய கவனத்தைத் திருப்ப இது பயன்பட்டது. அவருடைய‌ பிள்ளையின் குரல் அபூர்வமாகத்தான் எப்போதாவது ஒலித்தது. அவனை முத‌லிலேயே அவர் தள்ளுபடி செய்ய‌ வேண்டியதாயிற்று.

அவள் மாட்டுப்பெண் அவர்கள் எல்லாரையும் விட‌ அதிகமாக டிராயிங் ரூம் கலாச்சாரத்தில் ஊறியவளா யிருந்தாள். எல்லாம் பயிற்சியைப் பொறுத்த விஷயம்தான். அவளுடைய அப்பா அளித்த பயிற்சி. தீவிரச் சார்புகள் உள்ளவர்கள்போல் காட்டிக் கொள்ள வேண்டும். ஆவேசமாக எதையும் ஆமோதித்தோ அல்லது மறுத்தோ பேச வேண்டும். தன்னிடமோ பிறரிடமோ எதையும் புனிதமாகக் கருதாமல் ஒவ்வொன்றையும் ரஞ்சகப்படுத்த‌ வேண்டும். நாடகமாக்க வேண்டும். டிராயிங் ரூம் ஆடியன்ஸுக்காக. அவளுடைய அப்பாவுக்கு நாகராஜுக்கு இருந்த அளவுகூடத் தீவிரச் சார்புகள் கிடையாது. ஆனால் அவர் அப்படியிருப்பது போல நடிக்கத் தெரிந்தவர். பேசிப் பேசியே முன்னுக்கு வந்துவிட்டார். அவருடைய மகளும் இந்தத் திறமைகளுக்கு வாரிசாகியிருக்கிறாள்.

அவருக்கு இது போன்ற தருணங்களில் தன் மகன் மீது ஏற்படும் அனுதாபம் இப்போதும் ஏற்பட்டது. மகனே, இவர்கள் உன்னை ஏமாற்றிவிட்டார்கள். தாயின் தாத்தா காலத்திலிருந்து இவர்கள் டில்லியில் இருந்து வருகிறார்கள். நீயும் நானும் நேற்றைக்குத்தான் இங்கு வந்தோம். அவர்கள் வீட்டு டிராயிங் ரூம் சூழ்நிலை தேர்ச்சியான அந்த‌ நடிப்பு உன்னை மயக்கிவிட்டது. உன் அப்பவைப் போல‌ அன்றி அவர் உன்னுடன் அமர்ந்து சிகரெட் குடித்தார். அவருடைய பெண்ணும் மனைவியும் உனக்கு மது ஊற்றிக் கொடுத்து இனிய வார்த்தைகள் பேசி புதிய உலகங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். அது உண்மையிலேயே புதிதுதானென்று நீ நினைத்தாய். அவருடைய மகளுடன் நீ சுதந்திரமாகப் பேசவும் பழகவும் அனுமதித்து, தன் மதிப்பீடுகள் எவ்வளவு நவீனமானவையென அதன் மூலம் காட்டி உன்னைக் கவர்ந்தார். அதே சமயம், தன் மகளுடன் அந்த அளவு பழகிய பிறகு அவளைத் திரஸ்கரிக்க உன் மதிப்பீடுகள் இடந்தராதென்பதை உணர்ந்து அதன் மூலமே உன்னைச் சிறைப்படுத்தி விட்டார். மதிப்பீடுகளின் குழப்பம் உன் சுதந்திரத்தைப் பறித்து விட்டது. உனக்குப் பயிற்சியேயில்லாத ஆயுதங்களை உன் மேல் பிரயோகித்து உன்னை இவர் கட்டிப் போட்டுவிட்டார். எவ்வளவு நேர்மையற்ற, விதிகளை மீறிய விளையாட்டு!

ஆனால் இவருடைய விளையாட்டுகள் எல்லாமே விதிகளை மீறியவைதாம். அவருடைய வீட்டில் டெலிவிஷன் இருந்தது. பல விலையுயர்நத விளையாட்டுப் பொருள்கள் இருந்தன. அவற்றை வைத்து ஆசை காட்டி அவர் அனுவைத் தன்னுடன் இரண்டு நாள், மூன்று நாள் இருப்பதற்காக அழைத்துப் போவார். இதில் என்ன சாமர்த்தியமிருக்கிறது? நேர்மையுள்ளவனாக இருந்தால் அவனும் என்னைப் போல அனுவுக்குக் கதை சொல்லட்டும். அவளுடைய பாஷையில், அவளுடைய மட்டத்தில், அவளுடன் பேசட்டும். கொனஷ்டைகள் காட்டிச் சிரிக்க வைக்கட்டும். பிறகு பார்க்கலாம், அனு யாரிடம் வருகிறாளென்று. ஜப்பானிலும், ஜெர்மனியிலும் செய்த ரஞ்சகப் பொருள்களைச் சாட்சிக்குக் கூப்பிடுவானேன்!

நேற்றுக் கூட அவர் வந்திருந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் போனார். தவிர்க்க முடியாமல் சர்வகலாசாலை மூடப்பட்டிருந்தது பற்றியும், மாணவர் ரகளையைப் பற்றியும் – மாணவர்களுடைய போக்கைக் கண்டித்துப் பேசினார். இளைஞர்களிடையே ரவுடித்தனமே வாழ்க்கை முறையாகி வருகிறது, என்றார். இவன் பெரிய யோக்கியன் மாதிரி!

நாகராஜன், அவருடைய கட்சிக்கு எதிர்க்கட்சி எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே நேற்று அவரிடம் மாணவர்களை ஆதரித்துப் பேசினார். பெரியவர்கள் இளைஞர்களிடம் அக்கறை எடுத்துக் கொண்டு அவர்களைப் புரிந்துகொள்ள முயலுவதில்லை, என்றார். இளைஞர்கள் பாவம், தாரதம்மியங்களை ஆராயாமல் உணர்ச்சி வேகத்தில் அலைக்கழிக்கப் படுபவர்கள். பெரியவர்கள்தான் அவர்களைப் பக்குவமாக சரியான திசையில் திருப்பிவிட வேண்டும்…

இப்போது, தன்னுடைய நேற்றைய பேச்சை நினைத்து அவருக்குச் சிரிப்பாக இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. சே! நம்முடைய வெளிப்பாடுகள் பல சமயங்களில் எத்தகைய தவறான உந்துதல்களின் அடிப்படையில், தவறான நோக்கங்களுடன் உருவாகின்றன! சம்பந்திக்குப் பதிலாக வேறு யாராவது இருந்திருந்தால் நாகராஜனின் பேச்சும் வேறு விதமாக இருந்திருக்கும்.

அவர் காப்பியைக் குடித்து முடித்துவிட்டு அங்கேயே உட்கார்ந்திருந்தார். அடுத்த அறைக்குச் சென்று அங்கு நடந்த சம்பாஷணையில் கலந்து கொள்ள அவருக்குப் பயமாக இருந்தது. தம்முடைய வெளிப்பாடுகள் மறுபடி கட்டுக்கடங்காமல் தறிகெட்டுப் பாயத் தொடங்குமோவென்று கவலையாக இருந்தது…

அப்படியானால் அவருக்குத் தன் உந்துதல்களைப் பற்றிய நிச்சயமில்லையா?

கடைசியில், அங்கு உட்கார்ந்தும் அவருக்கு அலுத்துப் போயிற்று. அவர்களுடைய சம்பபாஷணையை வெறும் கிளர்ச்சியூட்டும் சாதனமாகப் பயன்படுத்தி, தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே இருந்து விடலாம் என்று நினைத்தவராய் அவர் முன் அறைக்குச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிள் இளைஞனைப் போல, அவருக்கும் கிளர்ச்சி வேண்டித்தான் இருக்கிறதோ?

இன்றும், யுனிவர்ஸிடி மூடியிருப்பதைப் பற்றித்தான் இவர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது, தவறு யார் பக்கம் என்பதையெல்லாம் அலசிக் கொண்டிருந்தார்கள். நாகராஜன் அங்கே சென்றதும் “நமஸ்தேஜி!” என்று மோட்வானியும் மிஸஸ் மோட்வானியும் அவருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். நாகராஜன் பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தார்.

“தூங்கிக் கொண்டிருந்தீர்களாக்கும்!” என்றார் மோட்வானி.

“ஆமாம்”.

“இந்த வெதரில் வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை”.

“அதுதான் யுனிவர்ஸிடியும் தூங்குகிறது போலிருக்கிறது!” என்றார் நாகராஜன். எல்லோரும் சிரித்தார்கள். ஒரு மரியாதைக்காக அவர்கள் சிரித்தது போலிருந்தது. நாகராஜனின் பிரச்னையே, இப்போதெல்லாம், அவரை யாரும் ஸீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ளாததுதான். வயது காரணமாக அவர் பலமுறை தன் இயலபை மீறிய உரத்த குரலில் பேசவும், எதிராளியை உசுப்புகிற விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தவும் நேருகிறது.

“என்ன, யுனிவர்ஸிடியை எப்போது திறக்கப் போகிறீர்கள்?” என்று நாகராஜனே மறுபடி பேசினார், வேறு யாரும் பேசாததால்.

“என்னைக் கேட்டீர்களானால்? நான் வைசஸ்சான்ஸலர் அல்லவே!” என்றார் மோட்வானி.

“அட்லீஸ்ட், இதுவரையில் இல்லை” என்றாள் தயா, ஆண்களுடைய ஈகோவுக்குத் தீனி போடுவதில் பெண்களுக்கே உரிய சாமர்த்தியத்துடன். மோட்வானி அமுத்தலாகப் புன்னகை புரிந்தார். அவ்வளவுதான்; நாகராஜனுக்கு திடீரென்று அவருடைய ஈகோவைக் காயப்படுத்த வேண்டுமென்ற ஆசை பிறந்துவிட்டது.

“எனக்கு மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் பயங்கரமாக இருக்கிறது” என்றார் அவர். அது பொதுவாகச் சொல்லப்பட்டதா அல்லது குறிப்பாகச் சொல்லப்பட்டதா என்று தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. அவருடைய மகனின் முகத்தில் பதட்டம் ஏற்பட்டது. “அரசியல்வாதிகளின் விளையாட்டுக்குச் சர்வகலாசாலையும் ஒரு நிலைக்களனாகி விட்டதே!” என்றார் அவர் தொடர்ந்து. இதுவும் பொடி வைத்த வாக்கியம்தான். மோட்வானி ஒரு வலதுசாரி அரசியல் கட்சியுடன் சம்பந்தம் கொண்டிருந்தாரென்பது சிதம்பர ரகசியம்.

மோட்வானிக்கு ஏதாவது சொல்லாமல் இருக்க முடியவில்லை. கடவுளரின் ஓவியங்களில் தென்படுவது போன்ற ஒரு கருணை நிரம்பிய – தவறுகளை மன்னிக்கும் – புன்னகை அவர் முகத்தில் தோன்றியது. “இது ஒரு பரிச்சயமான ஆர்குமென்ட்” என்றார். “ஆனால் நான் உங்களை ஒன்று கேட்கிறேன் – சர்வகலாசாலையில் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்களா? வாலிபப் பருவத்தையடைந்துவிட்ட ஒரு ஜனநாயகத்தில், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் – சர்வகலாசாலை உட்பட அரசியல் பிரக்ஞையும், வெவ்வேறு அபிப்பிராயக் குழுக்களும் ஏற்படுவது இயல்புதானே? மாணவர்களை அவர்களைச் சுற்றியுள்ள சமூகத்தின் காற்றே படாத வண்ணம் ‘இன்சுலேட்’ செய்யும் கல்விமுறை எமக்கு உடன்பாடு இல்லை. அத்தகையதொரு அமைப்பில் உருவாகும் மாணவர்கள், பிற்பாடு நடைமுறைச் சமூகத்துடன் தம்மைப் பொருத்திக் கொள்ள முடியாமல் திணறக்கூடும். மிருகக் காட்சிச் சாலையில் வெகுநாள் இருந்த பிறகு காட்டில் கொண்டு விடப்பட்ட மிருகங்களைப் போல”

“உயர்ந்த நோக்கம்தான்… இதை நேரடியாகவே அமுலாக்கலாமே!”

“எனக்குப் புரியவில்லை”.

“ஸ்டிரைக், வன்முறை, லஞ்சம், குழுச் சண்டை ஆகியவற்றில் வகுப்புகள் நடத்தலாம்; கட்சித் தலைவர்களின் பேச்சுத் தொகுப்பைக் கட்டாயப் பாடமாக வைக்கலாம்”.

“நான் சொன்னதை நீங்கள் மிக குறுகிய பிரமாணத்தில் புரிந்து கொள்கிறீர்கள்!”

“இருக்கலாம். நீங்கள்தான் எனக்கு தயவு செய்து தெளிவு ஏற்படுத்த வேண்டும்!”
மோட்வானி மறுபடி ஜாக்கிரதையாகப் பொறுக்கி யெடுத்துத் தொடுத்த சொற்றொடர்கள் மூலம், தான் நம்பிக்கை வைத்திருக்கும் அல்லது அவர் நம்பிக்கை வைத்திருப்பதாகப் பிறர் அவரைப் பற்றி நினைக்க விரும்பும் – கருத்துகளுக்கு உருவகம் கொடுத்தார். நாகராஜன் மறுபடி இவற்றையெல்லாம் மோட்வானி தம்முடைய சுயலாபத்துக்குச் சாதகமான முறையில் தான் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தர்க்கம் புரிந்தார்.

“நீங்கள் என்னைப் புரிந்து கொள்ள விரும்பவில்லை” என்றார் மோட்வானி, சோர்வுடன். (அவ்வளவும் நடிப்பு!)

“நம்மிடையேயுள்ள வயது வித்தியாசம் காரணமாயிருக்க லாம் – ‘ஜெனரேஷன் கேப்’ – இல்லையா?” என்று நாகராஜன் மிஸஸ் மோட்வானியைப் பார்த்தார். அவள் அவர் பார்வையைத் தவிர்த்தாள். பிரபல இடதுசாரிப் பத்திரிகையொன்றின் சமீபத்திய இதழில், சர்வகலா சாலைகளில் அமைதியின்மை ஏற்படுவதற்கு முதல் காரணமாக அவள் தலைமுறை இடைவெளியை அடையாளம் கண்டுகொண்டு விளாசித் தள்ளியிருந்தாள். நமக்குத் தேவை மேலும் மேலும், மாணவர்களுடைய அலைவரிசையில் சிந்திக்கத் தெரிந்த இளம் லெச்சசரர்கள், என்று அறைகூவியிருந்தாள். அவளுடைய கவர்ச்சியில் கால் பங்குகூட இல்லாத மிஸ்டர் மோட்வானியைப் பார்க்கும் போது இளம் லெச்சரர்கள் சர்வகலாசாலையில் வேண்டுமென்ற அவளுடைய தாகம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அந்த இடதுசாரிப் பத்திரிகையில் வழக்கமாக எழுதுவதோடு இல்லாமல், அதன் ஆசிரியர் குழுவிலும் மிஸஸ் மோட்வானி சம்மந்தப்பட்டிருந்தாள். இந்தச் சம்பவம் பல வி.ஐ.பி.- களுடைய அறிமுகத்தை அவளுக்குச் சம்பாதித்துக் கொடுத்திருந்தது. ருஷ்யா சென்று வந்த சர்வகலாசாலைப் பிரதிநிதிகள் குழுவில் மோட்வானி இடம் பெற்றதற்கு அவள்தான் முக்கியக் காரணமென்று பேசிக் கொண்டார்கள். அவளுடைய அரசியல் சார்பு மட்டுமல்ல, நாற்பதிலும் கட்டுக் குலையாத அவளுடைய உடலும் அவளுக்குச் சாதகமாக இருந்தது. மொத்தத்தில், வலது, இடது, நடுப்புறம் முதலிய எந்தத் திசையிலிருந்தும் பார்த்தாலும் மோட்வானியின் எதிர்காலம் பிரகாசம் நிறைந்த ஒன்றாக இருந்தது.

“ஸார், இதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள முயல வேண்டும்” என்று மோட்வானி மறுபடி பேசத் தொடங்கினார். அவருடைய குரலின் சுருதியும் தோரணையும் இப்போது கணிசமான அளவு மட்டுப்பட்டிருப்பதை நாகராஜன் திருப்தியுடன் கவனித்தார். “நான் ஒரு லட்சியத்தை,அடிப்படைக் கொள்கையை, மனதில் கொண்டு பேசுகிறேன். நடைமுறையில் நம் அரசியலும் சரி, சர்வகலாசாலையும் சரி, இந்த ல்டசியத்துக்குப் பல மைல் தூரம் தங்கியிருப்பதை நான் உணராமலீல்லை.”

“இதை நாம் உணர்ந்தால் போதும்” என்றார் நாகராஜன். (அயோக்கியன்! என்ன சப்பைக் கட்டு கட்டுகிறான்!”

“அதே சமயத்தில், நடைமுறையிலுள்ள சில குறைபாடுகள், ஆரோக்கியமான ஜனநாயகப் போக்குகளுக்கெதிராக நம்மை “ப்ரஜுடிஸ்” செய்துவிடக்கூடாது.

“உதாரணமாக, உங்கள் பேச்சுப் பிடிக்கவில்லை யென்பதற்காக எல்லாக் கிழவர்களிடமும் நாங்கள் பேசாமலிருந்தோமென்று வைத்துக் கொள்ளுங்கள்” என்று மிஸஸ் மோட்வானி மாதவனைப் பார்த்தாள். அவன் முகத்தில் பளிச்சென்று- அவளுக்காக வேண்டி- ஒரு அங்கீகாரப் புன்னகை மலர்ந்தது. அவன் இன்னும் சில நாட்களில் தன்னுடைய தீஸிஸைச் சமர்ப்பிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில், மோட்வானி வீட்டு நாயைக்கூட அவன் விரோதித்துக் கொள்ளத் தயாரில்லை. நாகராஜனை அந்தப் புன்னகை உசுப்பிவிட்டது. “கிழவர்களை உங்களுக்குப் பிடிக்காதுதான். மிஸஸ் மோட்வானி!” என்றாரோ, மிஸ்டர் மோட்வானியின் முகத்தில் சவக்களை ஏற்பட்டது. தயா அவசரமாக ‘இதோ வருகிறேன்’ என்று எழுந்து சென்றாள். மாதவன், சின்னா பின்னமாகத் தொடங்கியிருந்த அந்த மாலை நேரத்தை மிகத் தாமதமாகி விடுமுன் காப்பாற்றும் அவசரத்துடன், “இதென்ன, நாமெல்லாம் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமோ?” என்றான். மோட்வானி அந்தத் துரும்பை நன்றியுடன் பற்றிக்கொண்டு “உங்கள் அப்பாதான் தொடங்கினார்” என்றார். “அவர் எங்கள் மேல் மிகக் கோபமாயிருக்கிறார் போலிருக்கிறது” என்றாள் மிஸஸ் மோட்வானி.(பிச்!)

“நோ, நோ” என்றார் நாகராஜன். “நான் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினேன். அவ்வளவுதான். மிஸ்டர் மோட்வானி-நான் தவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னியுங்கள்.”

“சே, சே! தவறென்ன இதில்! இது ஒரு சிநேகமான சர்ச்சை” என்றார் மோட்வானி.

இப்படியாக, அவர்களுடைய விவாதம் டயர் ‘பங்சர்’, ஆன மோட்டாரைப் போலத் திடீரென்று பாதி வழியில் நின்று போயிற்று. அதற்கு ‘செயற்கைச் சுவாசம்’ அளிப்பது போல டிரிங்க்ஸ் ஊற்றிய கண்ணாடித் தம்ளர்களுடன் வந்தாள்.+ நாகராஜனைத் தவிர மற்றவர்கள் ஆளுக்கொரு தம்ளர் எடுத்துக் கொண்டார்கள். “சீர்ஸ்!”

இப்போது நாகராஜன் வெற்றிகரமாகத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார். அந்த அறையில் பரவிய ஜின்னின் மணம் அவரைப் பார்த்துக் கொக்கரிப்பது போலிருந்தது. அவருடைய மாட்டுப்பெண் அவரை ‘செக்மேட்’ செய்து விட்டாள். குடிக்காத அவர் அவருடைய கருத்துக்களுடன் சேர்ந்து சட்டை செய்ய லாயக்கற்றவராகி விட்டார். புதிய உலகத்தின் துடிப்பையும் அசைவுகளையும் பற்றிஅவர் என்ன கண்டார்?

தயா தற்போது சர்வகலாசாலையின் துணை வேந்தராயிருந்த ஒரு வயதான மராத்திக்காரரின் பேசும் தோரணையைக் கேலியாக அபிநயம் பிடித்துக் காட்டினாள். அவர்கள் எல்லாரும் கண்களில் நீர் தளும்ப விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்தத் துணை வேந்தர் நாகராஜன் மிகவும் மதித்த ஒரு அறிஞர், பண்பாளர். நாகராஜனுக்கு இருந்த இந்த மதிப்பை அவருடைய* மாட்டுப்பெண்ணும் அறிவாள். அவரைச் சீற்றம் கொள்ளச் செய்வதற்காகவே இப்படிச் செய்தாள் போலும். அவர் சற்று நேரம் பொம்மை போல அசையாமல் உட்கார்ந்திருந்தார். பிறகு,”ஓகே, யூ காரி ஆன்!” என்று அவர்களிடம் சமத்காரமாகச் சொல்லிவிட்டு எழுந்து வந்து விட்டார். காலையில் ஸலூனிலிருந்து வெளியேறியபோது உணர்ந்ததைப் போலவே இப்போதும் அவர் உணர்ந்தார்.

அந்த வீட்டுக்கு, நல்ல வேளையாக, ஒரு மொட்டை மாடி இருந்தது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதுதான் அவருக்கு ஆசிரமமளித்தது. அவர் மொட்டை மாடிக்குச் சென்று கைபிடிச் சுவர் மேல் சாய்ந்தாற்போல நின்று கொண்டு கீழே தென்பட்ட காட்சிகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார். முன் தோட்டத்தில், கீழ் வீட்டுச் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த அனு, நிமிர்ந்து அவரைப் பார்த்து கையை ஆட்டினாள். அவர் பதிலுக்கு அவரைப் பார்த்து கையை ஆட்டினார். கீழே வீட்டுச் சொந்தக்காரன் தன் குடும்பத்துடன் இருந்தான்; இவர்கள் இருப்பது முதல் மாடியில்.
அவர் மொட்டை மாடியில் இங்குமங்குமாக உலவத் தொடங்கினார். தன் வெளிப்பாடுகளை ஆராயத் தொடங்கினார். தான் உண்மையிலேயே மிக அதிகமாகப் பேசிவிட்டோமோ? ஸலூனில் தன்னைக் காலையில் வெளிப்படுத்திக் கொள்ளாதது அவரை உறுத்திக் கொண்டே இருந்திருக்க வேண்டும். அது இப்படி அவரை வெடிக்கச் செய்திருக்க வேண்டும். அல்லது அவருடைய மகன், மாட்டுப் பெண் ஆகியோருடைய வாழ்க்கை முறை, மதிப்பீடுகள் ஆகியவற்றுக்கெதிராக அவர் போற்றி வரும் வெறுப்புணர்ச்சிதான் இத்தகைய சம்பாஷணைகளின்போது தளும்பி விடுகிறதோ? அல்லது அவர் காலத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை தான் படித்திருந்தாரென்ற ஒரு தாழ்வு மனப்பான்மை காரணமாக, அவருடைய மகனைப் போல மேல் படிப்பு படித்தவர்கள் கூட்டம் எவ்வளவு மேலோட்டமானதென்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்ள அவர் விரும்புகிறார் போலும்.

தனக்குள் பதுங்கியிருந்த துவேஷங்களும் குரோதங்களும் அவரை எப்போதும் போல அன்றும் வெட்கமடையச் செய்தன. ‘நான் என்னைச் சற்று முன் வெளிப்படுத்திக் கொண்ட முறை மிக ஆபாசமானது’ என்று அவர் நினைத்தார். இல்லை. வெளிப்படுத்திக் கொண்ட முறைகூட ஆபாசமானதில்லை; உள்நோக்கம் ஆபாசமானது. முந்தின நாள் மாலை சினிமாத் தியேட்டரில் நடந்த நிகழ்ச்சியை அவர் நினைத்துக் கொண்டார். சாதாரணமாக அவர் அவர்கள் சினிமாவுக்குப் போகும்போது தான் வரவில்லையென்று வீட்டிலிருந்து விடுவாரென்றாலும் நேற்று என்னவோ அபூர்வமாக அவரும் அவர்களுடன் சென்றிருந்தார். ஒரு அசட்டுப் பிசட்டென்ற இந்திப்படம். அவருக்குத் தலையை வலிக்கத் தொடங்கிவிட்து. இன்டர்வெல்லுக்குச் சற்று முன்பாக வெளியே வந்து காப்பி ஸ்டாலில் காப்பி ஆர்டர் செய்தார். ஒரு வாய் அருந்தினார். கண்றாவியாக இருந்தது. இந்தக் காப்பிக்கு எழுபத்தைந்து பைசாவா? என்ன கயவாளித்தனம்! வேறு சிலரும் அந்தக் காப்பியை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் எந்தவிதமான பாவமும் இல்லை. உலகமே ரோஷமற்றுப் போய்விட்டதாக அவருக்குத் தோன்றியது. இது போன்ற படங்களைப் பார்க்கிறார்கள்; இது போன்ற காப்பியைக் குடிக்கிறார்கள்.

அவர் ‘டங்க்’கென்று ஓசையுடன் காப்பிக் கோப்பையைக் கௌண்டரில் வைத்தார்.
“இந்தாப்பா!” என்று காப்பி கொடுத்துக் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டார். அவன் அவரருகில் வந்தான். “இதென்ன காப்பியா?”

“ஆமாம், ஸாப்”.

“இல்லை; இது காப்பியே இல்லை”.

அவன் பேசாமல் நின்றான்.
“இது காப்பியில்லை” என்றார் அவர் மீண்டும். சுற்றியிருந்தவர்கள் அந்தப் பக்கம் பார்க்கத் தொடங்கினார்கள்.

“காப்ப்பிதான் ஸாப்”

“இல்லை”.

“இவ்வளவு பேர் குடித்தார்கள்; யாரும் எதுவும் சொல்லவில்லை. நீங்கள்தான்”

“அவர்களுக்குச் சுரணையில்லை. உனக்கு வெட்கமில்லை. எதையே ஒன்றைக் காப்பியென்று ஏமாற்றி இவ்வளவு பணம் வேறு பறிக்கிறாயே அயோக்கிய ராஸ்கல்!”

“கொஞ்சம் மரியாதையாகப் பேசுங்கள்”.

“உனக்கு மரியாதை வேறா திருட்டு ராஸ்கல்!”

அவ்வளவுதான்; அவன் அவர் சட்டையைப் பிடித்துவிட்டான். இதற்குள் இன்டர்வெல் விட்டு அங்கு நிறையக் கூட்டம் கூடிவிட்டது. பலர் அவர்களிடையில் குறுக்கிட்டு அடிதடி நேராமல் விலக்கி விட்டார்கள். அதே சமயம் அவருடைய மகனும் வெளியே சென்ற அப்பாவை இன்னும் காணோமே என்று அங்கே தேடிக் கொண்டு வ‌ந்து விட்டான்.

அந்த‌ வெளிப்பாட்டை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அவ‌ருக்குப் பெருமையாக‌ இருந்த‌து. துக்க‌மாக‌வும் இருந்த‌து. ச‌ண்டையைப் பிரித்து விட்டார்க‌ளே த‌விர‌ காப்பியின் த‌ர‌த்துக்கு எதிராக‌ அவ‌ர் உய‌ர்த்திய‌ குர‌லுக்குப் ப‌ல‌ம் சேர்க்க‌ யாரும் முன்வ‌ர‌வில்லை. அவ‌ர்க்குத்தான் ருசி கெட்டுப் போய்விட்ட‌தா? ருசியின் அடிப்ப‌டைக‌ளே மாறிவிட்ட‌ன‌வா?

எப்ப‌டியிருந்தாலும், அந்த‌ வெளிப்பாடு தூய்மையான‌து. இன்றைய வெளிப்பாடுகளைப் போல மோட்வானி போன்றவர்கள்பால் வெறுப்பு, மாட்டுப் பெண்ணின் பால் அதிருப்தி போன்ற உணர்வு கறை படியாதது. அவர் தன்னை இன்னமும் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் தன் வெளிப்பாடுகளைச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கும், இள வயதில் விதவையாக்கப்பட்டு அவருடனேயே தங்கி அவருடைய தாம்பத்திய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை நரகமாக்கிய அவருடைய தமக்கைக்கும் என்ன வித்தியாசம்? அவளுக்குக் கல்யாணியிடம் தவறு கண்டுபிடிப்பதன் மூலமாகத்தான் தன் முக்கியத்துவத்தை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கும் அது போல ?

சே. சே.

இது அந்தக் காலமில்லை. அவருடைய மனைவி தன் நாத்தனாரைச் சகித்துக் கொண்டதைப் போல, அவருடைய மாட்டுப் பெண் அவரைச் சகித்துக் கொள்ள மாட்டாள். அவள் அப்படி இருக்க வேண்டுமென்று அவர் எதிர் பார்ப்பதும் நியாயமாகாது. இந்த அளவாவது அவள் அவரைச் சகித்துக் கொள்கிறாளேயென்று, வேளா வேளைக்குச் சோறு போடுகிறாளேயென்று – அவர் நன்றியுடன் இருக்க வேண்டும்.

அவர்களின்றி அவரால் இருக்க முடியாது. அனுவைப் பிரிந்து நிச்சயமாக இருக்க முடியாது. தனிமையைப் போக்கிக் கொள்ள அவர் அவர்களையே நம்பியிருப்பவர்.

தனிமை அவருக்குப் பிரியமானதில்லை. நேற்று சினிமாத் தியேட்டரில் ஒரு கணத்துக்கு அந்தப் பெருங்கூட்டத்திடையே தன் தனிமையை அவர் உணர்ந்தார். நேற்று அங்கே அவருடைய எதிர்ப்புக்குத் துணை கிடைக்காததுதான் இன்று சலூனில் அவரைத் தயங்கச் செய்திருக்க வேண்டும். தனிமையைப் பற்றிய பயம்தான், இறுதியில் மனிதனுடைய பாய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது, அவனைச் சமரசங்களில் சிக்க வைக்கிறது.

அவருடைய மகனும் மாட்டுப்பெண்ணும் மட்டும் தம் வர்க்கத்தினரிடமிருந்து வேறுபடுகிறவர்களாயிருக்க வேண்டுமென்றும், தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர் எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்?

ஒருவேளை, அதன் மூலம்தான் அவர்களுடன் சேர்ந்து வசிப்பதை அவர் நியாயப்படுத்திக் கொள்ள விரும்புகிறார் போலும்.

அட, சுயநலக்காரக் கிழவா!

அவர் மீண்டும் கைப்பிடிச்சுவரருகில் சென்று சாலையைப் பார்த்தார். அவருடைய மகன், மாட்டுப்பெண், மோட்வானி தம்பதியர் நால்வரும் அப்போதுதான் வீட்டிலிருந்து வெளிப்பட்டு சாலையில் நடந்து கொண்டிருந்தார்கள். மோட்வானி எதற்கோ உரக்கச் சிரித்தார். அவருடைய மாட்டுப்பெண் தான் மறுபடி நகைச்சுவை மிளிர எதையாவது சொல்லியிருக்க வேண்டும்.

அவள் அவருடைய மகனைக் கவர்ந்த, அவனுடைய எதிர்ப் பண்பினள். அப்படியானால், அவள் கல்யாணியின் மறுபுறமா?

கல்யாணியின் சுயநலமின்மை, நேர்மையான வெளிப்பாடுகள்; தீவிர நம்பிக்கைகளும் அவற்றுக்காகப் போராடும் துணிச்சலும்.

கீழே அனு இன்னமும் அந்தச் சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரன் ஒரு ஈஸிசேரில் சாய்ந்தவாறு வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். நாகராஜன் நிற்பதைக் கவனித்து ‘கீழே வாருங்களேன்’ என்று சைகை செய்தான்.

நாகராஜன் படிகளில் இறங்கிக் கீழே சென்றார். அவனருகில் இருந்த காலி நாற்காலியில் உட்கார்ந்தார். “உங்களுக்குத் தெரியுமா ஒரு விஷயம்- இந்த ஸலூனில் இருந்த நாவிதனை யாரோ இன்று கத்தியால் குத்தி விட்டார்களாம்” என்றான் வீட்டுக்காரன்.

நாகராஜனுக்கு படிகளில் இறங்கி வந்ததால் ஏற்பட்ட இதயப் படபடப்பு இப்போது மேலும் அதிகமாவது போலிருந்தது. “யார்”- என்று பதட்டத்துடன் தனக்கு வழக்கமாகப் பண்ணிவிடும் நாவிதனை விவரித்தார். அவன்தான், என்று வீட்டுக்காரன் ஊர்ஜிதப்படுத்தினவுடன், இதை நான் எதிர்பார்த்திருந்தேனா என்ன, என்று தன் விசாரணைக்காக அவர் வெட்கினார்.

பிறகு ஒரு இலேசான நம்பிக்கையுடன், ஒரு இலேசான பயத்துடன் கேட்டார். “உயிருக்கு ஆபத்தில்லையே?”

வீட்டுக்காரன் உதட்டைப் பிதுக்கினான். “ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாம்.குத்தினது யார் தெரியுமா? ஒரு பதினெட்டு வயதுப் பையன்”.

adhavansirukadhaigalஆம். முள்ளங்கியும் கொய்யாப்பழமும் நறுக்கிக் கொண்டிருந்த அந்தப் பையனாகத்தான் இருக்கும். அவர் மேலே பேசவில்லை. ஒரு வேளை, தன்னால் இது நடக்காமல் தவிர்க்க முடிந்திருக்கலாம். தன் கைகளிலும் அந்த நாவிதனின் ரத்தக்கறை படிந்திருப்பது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது.

வெளியே திடீரென்று அவருக்குப் பரிச்சயமான அந்த மோட்டார் சைக்கிள் ஓசை தூரத்தில் மெல்லியதாகக் கிளம்பி, கிடுகிடுவென்று வேகமாக உயர்ந்தவாறே அருகில் நெருங்கி உச்ச கட்டத்தை அடைந்து அவர்கள் செவிகளை அதிரச் செய்துவிட்டு, மறுபடி தூரத்தில் தேய்ந்து மறைந்தது.

“தாத்தா! ஆத்துக்குப் போகலாமா?” என்றாள் அனு. அவரருகில் வந்து.

அவர் அந்தக் குழந்தையின் பரிசுத்தமான ஸ்பரிசத்தினால் தன்னைக் கழுவிக் கொள்ளவிரும்பியவரைப் போல, அவளை அவசரமாக தன்னுடன் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார்.

*****

நன்றி: ஆதவன் சிறுகதைகள் – கிழக்கு பதிப்பகம்

புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும்

Feb 26, 2011

புகைச்சல்கள் - ஆதவன்

கல்யாணமாகிய முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே கடும்பூசல்கள் எதுவும் ஏற்படவில்லையானால் அந்தக்கட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் முழுவதும் அந்நியர்களாக இருந்தார்களென்பதுதான் காரணம்.  அந்நியர்களிடையே அவரவருடைய குறை நிறைகள் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையோ உறுத்தல்களோ இருக்காது; அவை சார்ந்த திட்டவட்டமான விமர்சனங்களோ தீர்ப்புகளோ இருக்காது; ஒருவரையொருவர் கண்டிக்க வேண்டும்; திருத்த வேண்டும் என்ற aathavan முனைப்பு இருக்காது. இதெல்லாம் நெருக்கத்தில் விளைபவை. உடைமையுணர்வு அல்லது ஆதிக்க உணர்வை எருவாகக் கொண்டு செழிப்பவை, நமக்குச் சொந்தமான வீட்டில் இடித்துத் திருத்தி மாற்றங்களும் சௌகரியங்களும் செய்து கொள்வது போல, நமக்குச் சொந்தமென நாம் நினைக்கும் மனிதரையும் இடித்துச் செப்பனிட முயற்சி செய்தல், சுருக்கங்களை நீவி நேராக்கி விட முயலுதல்....

அந்த முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே ஏற்பட்ட சில சில்லறைப் பூசல்கள், உரசல்கள் உடல் சார்புள்ளவை, பால் பேதத்தின் சூட்சுமத்தையும், அந்தச் சூட்சுமத்தில் பொதிந்திருந்த இன்பத்தையும் உணரும் துடிப்பு. முதல் தடவையின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், கூடவே ஏமாற்றங்கள், எரிச்சல்கள், லட்சிய ஆண்மை, லட்சிய பெண்மை என்ற ரூபமற்ற கனவுச்சிதறல்களின் குவிமையம் கடைசியில் புராதனத்திலும் புராதனமான ஒரு பௌதிக நியதிதானா என்ற வியப்பு அதிர்ச்சி. இதுவும் பயிலவேண்டிய ஒரு வித்தை, என்ற உணர்வு ஏற்படுத்திய உற்சாகம். கூடவே ஆதாரமான இளமையின் புனிதமான படிமங்களின் பின்னணியில் ஒரு சோர்வு. உடல் ரீதியாக அவர்களிடையே சகஜ பாவமும் சீரான லய உறவும் ஸ்தாபிதமான பிறகு, இவ்வாறு தத்தம் உடல்கள் ஆள்வதிலும் ஆளப்படுவதிலும் அவர்கள் கர்வம் கொண்டவர்களாகி, இவனுடைய ஆளுமை முழுவதும் தனக்குச் சொந்தமென்று அவளும் அவளது ஆளுமை முழுவதும் தனக்குச் சொந்தமென்று அவனும் நினைக்க ஆரம்பித்தார்கள். பழக்கங்கள், பாணிகள் உள்பட எல்லாமே சொந்தமென்று. ஆறுமாதச் சொந்தம்; ஆறுமாத உரிமை.

இந்த உரிமையின் போதை முதலில் பிதற்றச் செய்தது அவளைத்தான். அவனுடைய பழக்கங்களைச் சீண்டத் தொடங்கினாள். முதலில் வேடிக்கையாக பிறகு சீரியஸாக. அவனுடைய ஊதாரித்தனத்தை, அவனுடைய சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை.

முதலிலெல்லாம் சட்டையில் உட்காரும் பூச்சியைத் தட்டிவிடுவது போல அவன் அவளுடைய ஆட்சேபங்களை ஒரு புன்சிரிப்பால் அலட்சியமாகத் தட்டி உதறிவிட்டுத் தன் பாட்டில் இருந்தான். இது அவளுடைய அகந்தையைச் சீண்டியது. தன் அதிருப்தியை அவன் அங்கீகரிக்கும்படி செய்ய வேண்டும். அது அவனைக் காயப்படுத்தவேண்டும் என்பது அவளுக்கு ஒரு தீவிர தாகமாகவும் வெறியாகவும் ஆகி தன் ஆட்சேபணைகளின் காரத்தை ஏற்றிக் கொண்டே போனாள்.

நிகழ்ந்து கொண்டிருபது வெறும் காதல் சீண்டல் அல்ல, தீவிரமான பலப்பரீட்சை; எறியப்படுபவை பூப்பந்துகள் அல்ல பாணங்கள் - என அவன் உணரச் சிலகாலம் பிடித்தது. உணர்ந்ததும் அவன் எச்சரிக்கை அடைந்தான். தன் அந்தரங்க உலகின் எல்லைக் கற்களைச் சோதித்து, பாராவைப் பலப்படுத்தினான். அவனுடைய ராஜ்யத்தில் அவள் பிரஜா உரிமை பெற்றவளாக இருக்கலாம். ஆனால், ஆட்சி அவனுடையதுதான் என உறுதியாகவும் அவளுக்கு உறைக்கும் படியும் பிரகடனப்படுத்தலானான். இது ஒரு விதத்தில் அவனுக்குத் தோல்விதான். இத்தகைய சுய பிரகடனங்களை அவன் விரும்பியவனேயல்ல, தான் அரசன் அல்லது தான் அடிமை என்று. அவள் அடிமை என்ற சட்டையை அவனுக்கு அணிவிக்க முயன்றதால் அம்முயற்சியை எதிர்க்கும் தீவிரத்திலும் பரபரப்பிலும் அவன் அரசன் என்ற சட்டை அணிய நேர்ந்தது. இதனால் அவனுடைய சகஜ நிலை - பொதுவாக அவன் அப்பியசிக்க விரும்பிய தோரணைகள் அற்ற எளிய தன்மை - பங்கப்பட்டது. ராஜா சட்டையில் தான் ஒரு சோளக்கொல்லை பொம்மையாகத் தோன்றுவதாக, தன் மீதே சிரிப்பு வருகிறது. அதே சமயத்தில் அந்தச் சட்டையைக் கழற்றினால்தான் பாதுகாப்பற்றவனாகி, தன் ராஜ்யம் சூறையாடப்பட்டு விடுமென்ற பயம் அவனைச் சட்டையைக் கழற்றவிடாமல் தடுக்கிறது.

சங்கடமான நிலை; அவனுடைய உலகில் இதுகாறும் நிலவி வந்த அமைதி, அறியாமை விளைவித்த அமைதிதானா, கடைசியில்? வெகுளித்தனமான, பக்குவம் பெறாத அமைதி. அந்த அமைதியைக் கடந்து அவனுடைய பலவீனங்களென்னும் வெண்ணெயைத் திரட்டி வழித்து ருசிப்பதுதான் அவள் நோக்கமென்றால் அதில் அவள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டாள். அவனுடைய பதற்றமான வெளிப்பாடுகளின் போது அவள் முகத்தில் ஒரு கணத்துக்குப் பளிச்சிட்டு மறையும் புன்னகை - ஆம் அது ஒரு வெற்றிப்புன்னகை!

’என் பலவீனங்களே உனக்கு ஒரு வெற்றி மமதையை அளிக்கின்றன’ என்று அந்தப் புன்னகையைப் பார்த்துவிட்டு ஒரு நாள் அவன் சொன்னான். ‘எனவே ஒரு விதத்தில் இந்தப் பலவீனங்களை நீ விரும்புகிறாய் என்று கூடச் சொல்வேன்... இப்போது நீ சுட்டிக் காட்டுகிற பலவீனங்களை நான் களைந்தேனானால் ஏமாற்றந்தான் உண்டாகும். அவசரமாக என்னிடம் வேறு பலவீனங்களைத் தேடிக் கண்டுபிடித்து உன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ள முயலுவாய்.’

‘அதாவது நான் வேண்டுமென்றே உங்களிடம் குறைகளை கண்டுபிடிக்கறவள், வாக்குவாதத்துக்காக சால்ஜாப்புகள் தேடி அலைகிறவள் அப்படித்தானே?’

‘ஹூம்!’ என்று அவன் பெருமூச்செறிந்தான். ‘இதோ பார், நான் சொல்ல விரும்புவதெல்லாம் அற்ப விஷயங்களை ஏன் பெரிதாக்குகிறாய், என்றுதான்... வாழ்க்கையில் துக்கத்துக்கான காரணங்களையே தேடி சதா துக்கத்தில் ஆழ்ந்திருப்பதும் சாத்தியந்தான். சந்தோஷத்துக்கான காரணங்கள் தேடி எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் சாத்தியந்தான். நாம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவோமே! உனக்காக நான் ஒரு செயற்கையான வேஷமணிந்தால்தான் உனக்குத் திருப்தியா? நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிற நேர்மையை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேனென்கிறாய், பாராட்டமாட்டேன்னென்கிறாய்?’

‘ஹோ!’ என்று அவள் நொடித்தாள். ‘நல்ல நேர்மை... நான் ஒன்று கேட்கட்டுமா?’

‘ஒன்றென்ன, ஒன்பது கேள்’

‘நான் சிகரெட் குடித்தால் நீங்கள் பேசாமலிருப்பீர்களா?’

‘ஐ டோன்ட் மைன்ட் அட் ஆல்’

‘குடிக்க மாட்டேனென்ற தைரியம் - வேறென்ன?’

‘அதுதான் சொன்னேனே இது ரொம்பச் சின்ன விஷயம். நீ குடித்தாலும் சரி குடிக்காவிட்டாலும் சரி, நம்முடைய உறவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.’

‘பொய்! சுத்தமான வடிகட்டின பொய்!’ என்றாள் அவள், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவாறு. ‘ஓர் ஆண் என்ற முறையில் சிகரெட் பிடிப்பது உங்கள் பிரிவிலேஜ், குடிக்கிறீர்கள்... நான், என் பெற்றோர் எல்லோரும் இதை நவீன வாழ்க்கையின் ஒரு சாதாரண அம்சமாக, சுமுகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்... ஆனால் நான் சிகரெட் குடித்தால் நீங்கள் ஏற்றுக் கொண்டால் கூட பெற்றோர், சமூகத்தினர் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயம், அது ஒரு சின்ன விஷயமாக இருக்காது - உண்டா, இல்லையா?’

‘ஸோ உனக்கு அனுமதிக்கப்படாத ஒன்று எனக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதுதான் உன் ஆட்சேபணையா?’

‘நேர்மையைப் பற்றிச் சொன்னீர்கள், உங்கள் மனைவி செய்தால் உங்களை அதிருப்தி கொள்ளச் செய்யும் ஒன்றை நீங்களும் செய்யாமலிருப்பதுதான் நேர்மை என்று சொல்ல வந்தேன்...’

‘நான்தான் நீயும் குடி, என்று சொல்கிறேனே....’

‘வேண்டாம்’ என்று அவள் பிணங்குவது போலப் பாசாங்கு செய்து, சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த முயன்றாள். ‘வேண்டாம்.. இரண்டு பேரும் ஒன்றையே குடித்தால், போராடிக்கும்... நான் வேண்டுமானால் விஸ்கி குடிக்கிறேன்.’

‘ஷ்யூர்!’

‘அல்லது ரம் குடிக்கட்டுமா? ஆரம்பக் குடிகாரர்களுக்கு ஏற்றது?’

‘இரண்டையும் கலந்து குடி.’

பக்கென்று சிரித்தாள் அவள். ‘ஓ.கே... நாளை ஆபிசிலிருந்து வரும்போது நினைவாக வாங்கி வாருங்கள், என்ன? நாளைக்கே தொடங்கப் போகிறேன்...’

அவன் சற்று நேரம் மௌனமாக இருந்தான்... ஏதோ ராகத்தின் நயங்களை அனுபவிப்பவன் போல கண்களை மூடிக்கொண்டு தலையை மெல்ல இங்குமங்குமாக ஆட்டினான். பிறகு சொன்னான்.

‘உன்னுடைய எண்ணக் குதிரையின் ஓட்டம் இருக்கே... அப்பா! வெரி இன்ட்ரஸ்டிங். சிகரெட்டைப் பார்த்தவுடனே உனகு சினிமா வில்லன்தான் நினைக்கு வரான் - அசோகன், சத்ருகன் சின்ஹா. சிகரெட்டின் தொடர்ச்சியாக மது நினைவு வருது, அப்புறம் வுமனைஸிங் என்கிற பிம்பமும் நினைவு வருமோ என்னவோ, யார் கண்டது! இதோ பாரு. சிகரெட் பாபகரமான விஷயம்கிற ரீதியிலே சிந்திச்சி இதை நீ ஏன் ஒரு ஒழுக்கப் பிரச்னையாக்கிற? இது வெறும் ஹெல்த் பிராப்ளம்னு ஏன் புரிஞ்சுக்கமாட்டேங்கிற!’

‘டியர், ஹெல்த் பிராப்ளமோ இல்லையோ, இது ஒரு சேவிங்ஸ் பிராப்ளம்னு நீங்க புரிஞ்சுக்கணும்னுதான் என் ஆசை.’

‘சேவ் பண்ணினா உனக்கு இன்னமும் இரண்டு ஸாரி வாங்கலாம், இல்லையா?’

‘உடனே இப்படிப் பேசுவீங்க. தினம் பொழுது விடிஞ்சா இங்கே நான் ஸாரி வாங்கணும்னு அடம் பிடிக்கிற மாதிரி.’

‘ஓ.கே., ஸாரி... ஐ மீன், மன்னிப்புக் கேட்டுக்கிற ஸாரி...’

இரண்டு பேரும் சிரித்து விட்டார்கள். அந்தச் சிரிப்பின் தொடர்பாக அவன் எழுந்து சுவரில் ஆணியில் தொங்கிய தன் சட்டையின் பையிலிருந்து சிகரெட் ஒன்றை உருவி எடுத்து வாயில் பொருத்திக் கொண்டான். இயந்திரம் போல இவ்வளவும் செய்தவன், சட்டென்று அவள் தன்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்தான். வாயில் பொருத்திக் கொண்ட சிகரெட்டை மறுபடி கையிலெடுத்து வைத்துக் கொண்டான்.

‘பரவாயில்லை, பிடியுங்கள்’ என்றாள் அவள்.

ஆனால் அவன் அதை வாயில் வெறுமனே விரலிடுக்கில் செருகிக் கொண்டு மறுபடி கட்டிலில் வந்து உட்கார்ந்தான். ‘நான் கூட இதை விட்டுடணும், குறைச்சுக்கணும், என்றெல்லாம் அடிக்கடி யோசிக்கறதுண்டு... தண்டச் செலவுதான், எனக்குத் தெரியாமல் இல்லை’ என்றான் தனக்குத்தானே பேசிக் கொள்பவன் போல.

அவள் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.

‘ஆனால் இதுதான் என்னுடைய ஒரே லக்சரி, என்னுடைய கனவு பலூன்... இதுவும் கூட இல்லைன்னா வாழ்க்கை ரொம்ப டல்லாப் போயிடும் - அப்படி வாழ்ந்தும் என்ன பிரயோஜனம்?’

‘இது இல்லேன்னா டல்லா ஏன் போகணும், வாழ்க்கை? எனக்குப் புரியலே...’

‘வாழ்க்கையிலே பொதுவாகவே ஒரு அலுப்பூட்டுகிற தன்மை இருக்கு இல்லையா? அதைச் சொல்ல வரேன்... ஒரே மாதிரியான நம்முடைய தினசரி அலுவல்கள், கடமைகள்... இன்றைக்குச் செய்ததையே செய், இந்த ரூட்டிலிருந்து ஒரு எஸ்கேப் தேவையாயிருக்கு’

‘அதுக்கு சிகரெட் உதவுகிறதாக்கும்?’

அவன் ‘ஆமாம்’ என்பது போலத் தலையை ஆட்டினான். தொடர்ந்து பேசினான்.

‘அப்புறம் சில சமயங்களிலே பிரச்னைகள் ரொம்பக் கடுமையான இடுக்கியாலே பிடிக்கிற மாதிரி மென்னிய வந்து பிடிக்கின்றன... ஒரே டென்ஷன்.. அந்த மாதிரி சமயங்களிலே சிகரெட் பிடிச்சால் ஒரு ரிலீஃப் கிடைக்குது...’

‘இதெல்லாம் நீங்களாகவே மனசிலே நினைச்சிக்கிறதுதானே! சிகரெட் பிடிக்கறதினாலே நிலைமைகள் ஏதாவது மாறிடப் போவுதா?’

‘இல்லை... ரொம்ப கரெக்ட். ஆனால் அப்படி அவை மாறிடறாப்லே, என்னை அவை பாதிக்க முடியாது என்பது போல, ஒரு இல்யூஷனை சிகரெட் கொடுக்கிறது... இந்த இல்யூஷன் எனக்கு ரொம்பத் தேவையாயிருக்கு.’

‘சரி, ஆனா ஒண்ணு கேக்கிறேன் பதில் சொல்லுங்க, இப்ப இந்த கணத்திலே உங்களுக்கு என்ன டென்ஷன் அல்லது அலுப்பு? இப்ப எதுக்காக அவசரமா சிகரெட்டை உருவியெடுத்தீங்க? என் பேச்சு உங்களுக்கு அலுப்பாகவும் டென்ஷனாகவும் இருக்குன்னு அர்த்தமா? சொல்லுங்க’

இதைக் கேட்டு அவன் பெரிதாகக் கடகடவென்று சிரித்தான். ‘நல்லா மடக்கிட்டே, போ’ என்றான். பிறகு சற்றே யோசித்துச் சொன்னான்: ‘ரொம்ப மகிழ்ச்சியான தருணங்களிலும், அந்த மகிழ்ச்சியை செலிபிரேட் பண்ண நான் பிடிக்கிறது வழக்கம்.’

அவள் அலட்சியமாக ஒரு நொடிப்பு நொடித்தாள்: ‘போதும் நிறுத்திக்குங்க. உங்க விளக்கங்கள் ஒண்ணாவது நம்புகிறமாதிரி இல்லை.’

இது ஒரு விடுமுறை நாளில் இருவருமே ஆசுவாசமாக உணர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களிடையே நடந்த சம்பாஷணையின் சாம்பிள். இத்தகைய சந்தர்ப்பங்கள் அபூர்வமாகத்தான் நிகழ்கின்றன. ஆனால் இந்தச் சந்தர்ப்பங்கள் மிக முக்கியமானவை. அவை நெஞ்சில் பதிக்கும் - பிற்பாடு தடவுகையில் இனிய நெருடல்களை ஏற்படுத்தும் - சுவடுகள் மிக முக்கியமானவை. அவர்களிடையேயுள்ள உறவின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்துவது என அவள் உணரத் தொடங்கியிருந்தாள்.

சில நாள்களில் ஆபீசிலிருந்து திரும்புகையில் ஒரே அலுப்பும் சிடுசிடுப்புமாக இருப்பான். அத்தகைய சந்தர்ப்பங்களில் இப்படியெல்லாம் உரிமையெடுத்துக் கொண்டு அவனிடம் பேச முயன்றால் பலன் விபரீதமாகிவிடும். இது ஒரு ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போல ஆகி விட்டிருந்தது. சரியான அசைவுகள், ஓசைகள் மூலம் காளையை மெல்ல, மெல்ல வசப்படுத்தி அதன் முதுகில் ஏறி உட்கார வேண்டும். எங்கேயாவது கொஞ்சம் பிசகினால் போச்சு,  காளை மிரண்டு விடும். முட்டித் தள்ளிவிட்டு ஓடிவிடும்.

கடவுள் நம்பிக்கைக்கும் வாழ்க்கையை அவரவர் அணுகும் முறைக்குமிடையே உள்ள தொடர்பு பற்றி அவர்களிடையே நடந்த சர்ச்சையும் சுவையானது.

இந்தச் சர்ச்சையும் ஒரு முறை விடுமுறை நாளன்று, சேவிங்ஸ் பிராப்ளத்தை வித்தாகக் கொண்டுதான் தொடங்கியது. அன்று கந்தர் சஷ்டி. சௌகரியமான விடுமுறை நாளன்று வாய்த்திருந்தது. கோயிலுக்குப் போய் அன்றைய விசேஷ ஏற்பாடுகளையெல்லாம் பார்த்து வர வேண்டுமென்று அவள் பத்து நாள்கள் முன்பே கேட்டுக் கொண்டு அவனும் அதரு இணங்கியிருந்தான். ஆனால் கடைசியில் அன்றைக்குக் கோயிலுக்குப் போக முடியாமல் போயிற்று. காரணம், அங்கே போய்விட்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவுக்குக் கூட கையில் காசு இல்லை. மாதக் கடைசி! அவன் என்னவோ ரொம்பச் சுலபமான ஒரு மாற்று வழியைச் சிபாரிசு செய்தான். அந்த வழியைக் கடைப்பிடித்திருந்தால், அவர்கள் கோயிலுக்குப் போய் வந்திருக்கலாம். ஆனால் அவள் அந்த வழியை ஏற்கவில்லை. பக்கத்து வீட்டு மாமியிடமவள் பத்து ரூபாய் கடன் வாங்கி வர வேண்டும் என்பதுதான் அவன் சொன்ன யோசனை. எப்படியிருக்கிறது கதை?

அவளுக்கு இருந்த அளவு தெய்வபக்தி அவனுக்கும் உண்டு.  ஆனால் அவளுக்குக் கொஞ்சம் வெவ்வேறு கோயில்களுக்குப் போக வேண்டும்.. உற்சவம், பஜனை ஆகியவற்றில் பங்கு பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை உண்டு. அவனுக்கு இவ்வித ஆசைகள் கிடையாது. வெறுமனே வீட்டில் காலையும் மாலையும் நெற்றியும் விபூதி இட்டுக்கொண்டு சாமி படத்தின் முன்பு கும்பிடு போடுவதோடு சரி. வெளியே கிளம்புவதற்கு முன் அதை ஞாபகமாக அழித்து விடுவான். ‘இது என்னுடைய பர்சனல் விஷயம். டமாரம் அடிக்க விரும்பவில்லை’ என்பான். அவள் ஏதோ தன்னுடைய நம்பிக்கைகளை டமாரம் அடிக்கிற மாதிரி; அவள் கோயிலுக்குப் போவது அனாவசிய வெளிப்பகட்டு மாதிரி.

எனவே இந்தப் பகட்டுக்கு அவள்தான் பண ஏற்பாடு செய்து கொள்ளவேண்டுமாம் பக்கத்து வீட்டு மாமி மூலம்.  ஹூம். அவளுக்கொன்றும் இத்தகைய இரவல் சுவாமி தரிசனமெல்லாம் வேண்டாம். அவளுடைய விருப்பம் எதனுடனாவது அவனுக்கு உடன்பாடு இல்லாமலிருக்கலாம். இருந்தாலும் அதை கௌரவிப்பதுதானே அன்பின் அடையாளம். இந்த அன்பு இருந்திருந்தால், அவன் நிச்சயம் அன்றைய பணத்துக்காக முன்னேற்பாடுடன் இருந்திருப்பான். இக்கருத்தை அவள் சூசகமாகத் தெரிவித்தவுடன் அவன் வெடித்தான், ‘இதை நீ வீணே ஒரு கௌரவப் பிரச்னையாக்குகிறாய்.’

‘ஒரு திட்டமில்லாமல் வாழ்க்கை நடத்துவதை நான் ஆதரிக்க முடியாது’ என்றாள் அவள். ‘பத்து ரூபாய்தானே, பக்கத்து வீட்டில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் திடீரென்று நூறு ரூபாயோ அல்லது ஆயிரம் ரூபாயோ கூட நமக்குத் தேவைப்படுகிற  சந்தர்ப்பம் இன்றோ நாளையோ நேரலாம். அதையும் கூட பக்கத்து வீட்டில் வாங்கிக் கொள்வீர்களா என்ன?’

‘நீ வெறுமனே ஆர்க்யூ பண்ணணுமென்பதற்காகவே ஆர்க்யூ பண்ணுகிறாய்.’

‘நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள்.’

’நூறோ ஆயிரமோ தேவைப்பட்டால் அது கிடைப்பதற்கும் கடவுளே ஒரு வழி பண்ணுவார். தேவையை உருவாக்குகிறதும் அவர்தான். தீர்த்து வைக்கிறதும் அவர்தான்.’

இப்படி அவன் கூறினானோ இல்லையோ, உடனே காரசாரமான ஒரு சொற்போர் அவர்களிடையே தொடங்கியது. கடவுள் என்ற கருத்தை அவன் கொச்சைப்படுத்துகிறானென்றும், பொறுப்பின்மை, திட்டமின்மை இதற்கெல்லாம் கடவுள் ஒரு சால்ஜாப்பாகிவிடக்கூடாதென்றும் அவள் கூறினாள். அவள்தான் அவ்வாறு கொச்சைப்படுத்துகிறாளென்றும், கடவுளின் அருளில் முழு நம்பிக்கை கொண்டவர்கள் நாளையச் சோறு பற்றிய கவலை கூட அண்டாத தூய மட்டங்களில் சஞ்சரித்தலே தமக்கும் கடவுளுக்கும் செய்துகொள்ளும் நியாயமென்றும் அவன் கூறினான். அவன் குதர்க்கம் செய்வதாக அவள் சொன்னாள். இல்லை, அவள்தான் குதர்க்கம் செய்கிறாளென்று அவன் சொன்னான்.

இதையடுத்துச் சிறிது நேரம் மௌனம்; அவள் சமையலறை வேலைகளில் ஈடுபட்டாள். அவன் தன் சட்டைகளைத் துவைக்கத் தொடங்கினான். அவன் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் உலர்த்தத் தொடங்கும்போது, அவளும் அங்கே வந்தாள், அங்கிருந்த அம்மியைப் பயன்படுத்துவதற்கு. உடனே அவன் மறுபடி தொடங்கிவிட்டான்: ‘அன்றைய சாம்பாருக்கு வேண்டியதை நீ அன்றன்றைக்குத்தானே அரைத்துக் கொள்கிறாய்? ஒரு வாரத்துக்கு முன்பே அரைத்து வைத்துக் கொள்வதில்லையே! அதே போல, அன்றன்றுக்கு எழும் பிரச்னைகளை அன்றன்றைக்குத் தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கலாமே என்றுதான் நான் சொல்கிறேன்.’

இதைக் கேட்டு அவள் சட்டென்று அரைப்பதை நிறுத்தினாள். முகத்தில் ஒரு விஷமத்தனமான புன்னகை. ‘ஒன்று சொல்கிறேன் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?’ என்றாள்.

ஒரு வாரத்துக்கு அரைத்து வைத்துக் கொள்வது சாத்தியந்தான். ஆனால் அதற்கு வீட்டில் ஃப்ரிஜ் இருக்க வேண்டும். மறுபடி சேமிக்கிற விருப்பத்தையும் திறனையும் பொறுத்த விஷயம்.’

அவன் பேசாமலிருந்தான்.

‘இன்னொன்று சொல்கிறேன். அன்றன்றைய வாழ்வு என்று தத்துவம் பேசுகிறவர்கள் மாதச் சம்பளத்துக்கு ஒரு வேலை ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. கல்யாணம் செய்துகொண்டு இருக்கக்கூடாது. ஒரு சிலவற்றில் தொலைதூர நோக்கும் நிரந்தர ஏற்பாடுகளும் வேண்டும். வேறு சிலவற்றில் அந்த நோக்கு வேண்டாம் என்பது முரண்பாடாக இருக்கிறது.’

பலமாகவே பதிலடி அடித்துவிட்டாள். ஆனால் அவன் சிறிதும் நிதானமிழக்கவில்லை. இழந்தால் அது அவளுக்கு வெற்றியாகிவிடுமே! அமைதியாகச் சொன்னான். ‘என்னில் முரண்பாடு இல்லையென்று நான் எப்போது சொன்னேன்? நான் தேவபுருஷனல்ல, ஒரு சராசரி மனிதன், என்னில் சில முரண்பாடுகளுக்கும் குறைகளுக்கும் அனுமதி தா, என்றுதான் நான் சதா வேண்டுகிறேன்.’

‘அப்படியானால் எனக்கும் உங்கள் முரண்பாடுகளை ஏற்காமல் முரண்பட அனுமதி தாருங்கள்.’

ஒருவேளை ஏதோ ஒரு விஷயத்தை வைத்து - அது எந்த விஷயமானாலும் சரி வாக்கு வாதம் செய்வதில் அவர்களுக்கு ஓர் இன்பம் ஏற்படத் தொடங்கியிருந்ததோ?

அப்படியும் இருக்கலாம்.

அவன் ஒரு எஸ்கேப்பிஸ்ட் என்று அவள் அலுத்துக்கொள்வாள். ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன், என்ற உண்மையை அவன் சந்திக்கத் தயாரில்லை, அதுதான் பிரச்னை உண்மையில், சிகரெட்டை ஊதித்தள்ளி, ஏதோ அரச குமாரனாகத் தன்னை எண்ணிக் கொண்டு.....

ஆமாம், நான் ஓர் எஸ்கேப்பிஸ்ட்தான், என்பான் அவன். ரசனையற்ற மூடர்கள்தான் உண்மையை ஒவ்வொரு கணமும் நினைவுபடுத்திக் கொண்டவாறிருப்பார்கள். கற்பனை மூலமும் கனவுகள் மூலமும் வாழ்க்கையை ரம்மியப்படுத்திக் கொண்டு வாழ்தலே அவனுக்குப் பிரியமான....

பொறுப்பில்லாதவன். எவ்வித வருங்காலத் திட்டமும் இல்லாதவன், என்று அவள் அவனைச் சாடுவாள். நிகழ்காலத்தை அனுபவிக்கத் தெரியாதவள் என்று அவன் அவளைக் கிண்டல் செய்வான்.

அவள் வேண்டும் என்றால் அவன் வேண்டாம் என்பான். அவள் வேண்டாம் என்றால் அவன் வேண்டும் என்பான்.

ஆனால் திடீரென்று ஒரு நாள் அவளுடைய வேண்டாம் அவனுடைய வேண்டாமாகவும் ஆகியது. திடீரென்று அவன் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டான். காரணம், அவர்களிடையே நடந்த எந்த வாக்குவாதமும் இல்லை, அவள் அவனிடம் சொன்ன ஒரு செய்தி: ‘நான் உண்டாகியிருக்கிறேன்.’

அவளுடைய இந்த அறிவிப்பு கிடைத்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டதாக அவன் அறிவித்தான். ‘உனக்காக இல்லை, குழந்தைக்காக’ என்றான். ‘சிகரெட் நாற்றம் அதற்கு ஒத்துக் கொள்ளாது...’ மேலும், பெரிய பணக்கார வீட்டுக் குழந்தை போல் மிக சொகுசாக அதை வளர்க்க வேண்டும். எவ்விதமான குறையும் அதற்கு இருக்கக் கூடாது; அதற்குப் பணம் சேர்க்கத் தொடங்க வேண்டாமா?’

அவளுக்கு, தனக்குக் கிடைத்தது வெற்றியா அல்லது தோல்வியா என்று புரியவில்லை. குழந்தையின் பாலுள்ள கரிசனமும் அக்கறையும் அவனுக்குத் தன்னிடம் ஏனோ இல்லை.  குழந்தை அவனுடையதென்றால் தானும் தானே அவனுடையவள்? தான் காண்பித்த உடைமையுணர்வினால் அவனுடைய (அவள் பாற்பட்ட) உடைமையுணர்வு பிணங்கிக் கொண்டதா?

‘மேலும்....’ என்று அவன் தொடர்ந்தான். ‘மேலும் அப்பா ஏதோ தப்புக் காரியம் பண்ணுகிறார் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்பட வேண்டாம்... குழந்தையின் அப்பா பற்றிய ஓர் லட்சிய உருவம் உன்னுடையதிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டாம்... அப்பாவை பற்றி அது பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும். நீ உன் அப்பாவைப் பற்றிச் சொல்லிக் கொள்வது போலவே.’

இந்த சம்பாஷணை நடந்தது விடுமுறை இல்லாத ஒரு தினத்தன்று காலையில், அவன் ஆபிசுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது. சொல்லி விட்டு அவன் ஆபிஸ் போய் விட்டான். அன்று பகலெல்லாம் அந்தச் சொற்கள், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள் - அவள் மனத்தில் ரீங்காரமிட்டபடி இருந்தன. அவள் தன் அப்பாவின் மேல் வைத்திருக்கும் மதிப்பை அவன் மீது... வைகக்வில்லையென்று அவன் சொல்ல விரும்புகிறானோ? இந்த மனப்பாங்கு குழந்தைக்கும் தொற்றிக் கொள்ளும் என்று பயப்படுகிறானோ? கடவுளே, இதென்ன வீண் தப்பபிப்பிராயங்களும் குழப்பங்களும்....

அன்றிரவு அவள் அவனிடம் சொன்னாள்: ‘இதோ பாருங்கள், உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.கௌரவிக்கிறேன்... உங்கள் பழக்கங்களைப் பற்றி நான் பேசியதெல்லாம் ஒரு அன்பினால்தான். நீங்கள் இப்படித் தவறாகப் புரிந்து கொள்வதாக இருந்தால்.... நல்லது, உங்களுடைய எந்தப் பழக்கத்தைப் பற்றியும் நான் இனி எதுவும் சொல்லவில்லை. சிகரெட் பிடிப்பது உள்பட.’

அவன் பூடகமாக ஒரு புன்னகை புரிந்தான். ஆனால் அதன் பிறகு அவன் சிகரெட் குடிக்கவே இல்லை. அவளும் இத்தகைய விஷயங்களைப் பற்றிக் குறிப்பிடுவதையே கவனமாகத் தவிர்க்கத் தொடங்கினாள்.

அவர்களுடைய சிந்தனை, எதிர்பார்ப்பு எல்லாம் இப்போது குழந்தையை பற்றியதாகத்தான் இருந்தது.

இருவரும் தத்தம் சுய மதிப்புக்குச் சிறிதும் குந்தகம் விளைவிக்காமலேயே தம் தனித்தனியான அன்பின் வடிகாலாகவும் பரவசமூட்டும் ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கப் போவதாகவும் வரப்போகும் குழந்தையை உருவகம் செய்து கொண்டு அதன் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

புகையில்லாத ஒரு நெருப்புக்காக அவர்கள் காத்திருப்பது போலத் தோன்றுகிறது.

--

Feb 13, 2011

புதுமைப்பித்தனின் துரோகம் - ஆதவன்

‘ஜூஸ்?’ என்றான்  ராம், மெனுகார்டிலிருந்து தலையைத் தூக்கியவாறு.

’வேண்டாம்’ என்றான் வேணு

‘என்னப்பா. எல்லாத்துக்கும் வேண்டாம், வேண்டாம்கிறே!’ என்று ராம் செல்லமாகக் கடிந்து aathavan கொண்டான். ‘இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வேணுவின் சம்மதத்துக்குக் காத்திராமல் அவனாகவே ஆர்டர் செய்தான்.

‘இரண்டு பிளேட் இட்டிலி, ஒரு ஊத்தப்பம், ஒரு பூரி, இரண்டு கிரேப் ஜூஸ்’ என்று வெயிட்டர் அதுவரை சொல்லப்பட்டவற்றையெல்லாம் ஒரு முறை திருப்பிச் சொன்னான்.

‘கரெக்ட். ஜூஸ் முதலில்.’

’பிற்பாடு’ என்றான் வேணு.

ராம் தான் மட்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். தீர்க்கமாக இரண்டு இழுப்பு இழுத்துப் புகையை ஊதினான். ‘யார் வேண்டுமானாலும் ஸ்மோக் பண்ணலாம். ஆனால் எல்லோரும் கதையெழுத முடியாது; இல்லை?’ என்றான்.

வேணு; வெறுமனே புன்னகை.

‘இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?’

’ஒரு குறு நாவல்’

‘அபௌட் வாட்?’

‘ஒரு எழுத்தாளனுக்கும் அவனுடைய மச்சினிக்குமிடையே இருக்கிற அஃபேர் பத்தி...’

‘ஹோப் இட் இஸ் நாட் ஆட்டோபயாகிராஃபிகல்.’

‘எனக்கு மச்சினியே கிடையாது.’

‘ஓ! a wish fulfilment story, then.'

’தேவலையே! நீயும் இலக்கிய பரிபாஷையெல்லாம் நிறைய பிக் அப் பண்ணிண்டு வரயே!’

ராம் கடகடவென்று சிரித்தான். ‘யா, யு நோ... தில்லியிலே நான் மூவ் பண்ற சர்க்கிள் அப்படி; லிட்டரேச்சர்லே இண்டரஸ்ட் உள்ளவங்க - அதுவும் மாடர்ன் டமில் ரைட்டிங்க்ஸை குளோஸா ஃபாலோ பண்ற கேரக்டர்ஸ் - அங்கே நிறைய இருக்காங்க... ஒவ்வொருத்தவனும் கதைகளையும் ஆத்தர்ஸையும் எப்படிப் புட்டுப் புட்டு வைக்கிறான்கறே! Those guys are fantastic, I tell you! உன் பெயரைக் கூட அவர்கள் மென்ஷன் பண்ணிக் கேட்கிறேன் அடிக்கடி.’

‘அப்படியா?’

‘ஆமாங்கிறேன். நான் உன் கிளாஸ்மேட், குளோஸ் ஃபிரண்ட்னு சொன்னேனோ இல்லையா, என் மதிப்பு அப்படியே உசந்து போச்சு. ஐ பிகேம் எ கிரேட் ஹீரோ. உன் அப்பியரன்ஸ் பத்தி,ம் ஃபேமிலி பத்தி, வொர்க்கிங் ஹாபிட்ஸ் பத்தியெல்லாம் தூண்டித் துருவி என்னென்னெல்லாம் கேள்விகள்! அதுவும்... (கண் சிமிட்டல்) லேடீசுக்கு உன் கதைகள் ரொம்பப் பிடிச்சிருக்கப்பா. மிஸ் ஷோபான்னு ஜே. என். யு.விலே அமெரிக்கன் ஹிஸ்டரி படிக்கிற பெண் ஒருத்தி... அவ அப்படியே உன் கதைகளிலிருந்து வரிக்கு வரி கோட் பண்ணினா, ஏன் அவர் இப்பல்லாம் நிறைய எழுதறதில்லே? அவரை நிறைய எழுதச் சொல்லுங்க சார், அப்படின்னா. உன் எழுத்துன்னா அவளுக்குப் பைத்தியமாம்.’

வேணு சிரித்தான்.

‘என்னடா, பிளஃப் அடிக்கிறேன்னு நினைக்கிறியா?’

‘சேச்சே! சந்தோஷத்தினாலே சிரிச்சேன்.’

’நிஜமாகவே நீ சந்தோஷமாக இருக்கலாம். நிறையப் பேர் ஆங்காங்கே உன் கதைகளை ஃபாலோ பண்ணிக் கொண்டுதானிருக்கிறார்கள். ரசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். சற்று முந்தி உன் ஆபிசிலிருந்து நாம் கிளம்புகிற சமயத்தில் நீ அதைரியப்பட்டியே, எழுதி என்ன பயன், எதற்காக எழுதிண்டே போகணும், என்றெல்லாம் அலுத்துண்டியே, அதெல்லாம் அவாவசியம்  வேணு!  உனக்கு தெரியலை.. வீணே மனசைத் தளரவிடாதே!’

வேணு உலர்ந்த புன்னகை செய்தான். ‘நீ அந்த ஜே.என்.யு. கேர்ளுடைய போட்டோவையாவது கொண்டு வந்திருக்கக் கூடாதா... அதைப் பார்த்து எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் வந்திருக்கும்..’

ராம் சிரித்தான். ‘ஐ நோ... நான் சொல்வதை நீ நம்பவில்லை, அல்லவா! அந்தப் பெண் என் கற்பனை என்று நினைக்கிறாய்’ சிகரெட்டை ஆஷ் டிரேயில் நசுக்கி அணைத்து, மடக்மடக்கென்று தண்ணீர் டம்ளரைக் காலி செய்தான்.

வெயிட்டர் ஜூஸ் தம்ளர்களுடன் வந்தான். அவன் தம்ளர்களை வைத்துவிட்டுச் செல்லும் வரை ராம் பேசாமலிருந்தான். பிறகு சொன்னான்: ‘புதுமைப்பித்தன் எழுதிய கடிதம் என்ற சிறுகதையைப் படித்திருக்கிறாயா?’

வேணுவின் முகத்தில் ஆச்சரியம். (இவன் புதுமைப்பித்தன் வேறு படிக்கத் தொடங்கிவிட்டானா?) ‘ஞாபகமில்லை’ என்றான். “என்ன கதை, சொல்லு? சொன்னால் நினைவு வந்துடும்.... படித்து நாளாச்சே! அந்தக் காலத்திலே ஒரு வரி விடாமல் படிச்சிருக்கேன்...”

‘உன்னை மாதிரிதான் அதிலே ஓர் எழுத்தாளன். என் கதைகளை யார் புரிந்து கொள்கிறார்கள். எழுதி என்னதான் பயன், என்றெல்லாம் தன் நண்பனிடம் அலுத்துக் கொள்கிறான். சில நாள் கழித்து ஏதோ முன்பின் தெரியாத ஒருவன் மன மகிழ்ந்து எழுதிய ஒரு பாராட்டுக் கடிதம் எழுத்தாளனுக்கு வருகிறது... எழுத்தாளனுக்கு ஒரே பூரிப்பாகவும் நிறைவாகவும் இருக்கிறது... ஆனால் கையெழுத்தைக் கூர்ந்து பார்த்தால் தெரிந்த கையெழுத்தாக இருக்கிறது. சே! தன் சோர்வை அகற்ற நண்பன்தான் இப்படி வேறு பெயரில் எழுதியிருக்கிறான் என்று தெரிந்து கோபமும் மறுபடி ஆயாசமும் ஏற்படுகிறது.’

‘தெரியும், தெரியும், ஞாபகம் வந்து விட்டது... கடைசியில் எழுத்தாளன், இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தன் கதைகளைப் புரிந்துகொள்கிற ஒருத்தன் வருவான்; அப்போது தானில்லாவிட்டாலென்ன, தன் கதைகளிருந்தால் போதும், என்று தன்னைத் தேற்றிக் கொள்கிறான்... இல்லையா?’

‘ஆமாம்’

‘சுவையான சிச்சுவேஷன்....’ என்று வேணு அக்கதையை நினைவு கூறுவது போலச் சிறிது நேரம் பேசாமலிருந்தான். ‘புதுமைப்பித்தன் பெரிய ஆள்...’ என்றான்.

‘ஹீ இஸ் எ ஜீனியஸ்.’

இட்டிலி வந்துவிட்டது. வேணுவின் பசிக்கு வேண்டியிருந்தது இட்டிலிதான். புதுமைப்பித்தன் அல்ல. ஆனால் வெறுமனே பரக்கப் பரக்க இட்டிலியைத் தின்ன முற்படுவது தன்னை ஒரு பிச்சைக்காரனாகக் காட்டும், என வேணு நினைத்தான்.  ராம் தன்னிடம் எதிர்பார்ப்பது இலக்கியக் கருத்துகள் அல்லது குறைந்த பட்சம் இலக்கிய வம்பு, நான் ஆர்ட்டிஸ்ட், அவன் ஸ்பான்சர், impresario, என் ஏஜெண்ட், என் புகழின் ரட்சகன், என் விசிறிகளின் பக்தியைக் குடம் குடமாக, குடலை குடலையாக, என் காலடியில் சமர்பிக்கும் பூசாரி; இந்த இட்டிலி, ஊத்தப்பம், ஜூஸ் எல்லாம் அவன் அடிக்கும் உடுக்கு. டகடும், டகடும், டகடும்! நான் இப்போது ஆடவேண்டும். அவனுக்குப் பிரத்தியட்சம் ஆக வேண்டும்.

அல்லது இது ஒரு சவாலாகவும் இருக்கலாம். எனக்கு மட்டுமே சொந்தமென்று நான் நினைப்பதாக அவன் நினைக்கிற இலக்கிய உலகம் தனக்கும்தான் சொந்தமென்று முழங்கி என் பிரத்தியேகத் தன்மையைச் சீண்டுதல், என் காலை வாருதல், என் அகந்தையை ஆழம் பார்த்தல்...

வேணு இட்டிலித் துண்டைச் சட்டினியுடன் சேர்த்துத் தின்றான். பேஷ்! பிரமாதமாயிருந்தது. இன்னொரு துண்டைச் சாம்பாருடன் சேர்த்து. அதுவும் ஃபஸ்ட் கிளாஸ். திருநெல்வேலி, தென்காசி முதலிய பிரதேசங்களிலெல்லாம் இட்டிலி இன்னமும் கூட நன்றாயிருக்கும். புதுமைப்பித்தன் ஏன் இதைப்பற்றி எந்தக் கதையிலும் எழுதவில்லை? ஆசாமிக்கு ஸ்வீட்தான் பிடிக்கும் போலிருக்கிறது. ‘அல்வா எனச் சொல்லி அங்கோடி விட்டாலும்....’

’வெறும் சூத்திரங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையை வென்று விட முடியாது... ஓர் எழுத்தாளனாலும் கூட’ என்றான் வேணு.

‘புரியவில்லை’

‘நீ அந்தக் கதையைக் குறிப்பிட்டாயே, அதற்காகச் சொன்னேன். ‘எதிர்காலத்தில் வரப்போகும் ரசிகன்’ என்ற நம்பிக்கை மட்டுமே ஓர் எழுத்தாளனுக்கு போஷாக்குத் தரமுடியுமா? இஸ் இட் பிராக்டிகல்? புதுமைப்பித்தன் தேவையேற்பட்டபோது சினிமாவுக்காக எழுதித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி வந்தது, என்பதுதானே உண்மை? எழுத்தாளன் என்பது ஓர் உருவகம் மாத்திரம் அல்ல, வயிறும் வாயும் உள்ள ஒரு பிண்டமும் கூட. இந்தப் பிண்டம் ரசிகனுக்கு எதற்காக, அவனுக்குக் கதைதானே வேண்டும், என்கிற நயமான விரக்தியே அக்கதையில் வெளிப்படுகிறது. ‘சிற்பியின் நரகம்’ பிரச்னையின் ஒரு பக்கம் என்றால் இங்கே பார்ப்பது பிரசினையின் மறுபக்கத்தை. பாராட்டு கிடைத்தாலும் மனம் மகிழ்வதில்லை. அந்தப் பாராட்டின் பரிசுத்தத்தைப் பரிசீலிக்க முயல்கிறது. தோழமையைத் தேடுகிறது, அதே சமயத்தில் தோழமையைக் கண்டு மருளவும் செய்கிறது.’

‘ஃபன்டாஸ்டிக்!’ என்றான் ராம் - அவன் முகம் ஆர்வத்தில் ஜொலித்தது. என் ‘ஆட்டம்’ இவனுக்குப் போதையேற்றத் தொடங்கி விட்டது என்று வேணு நினைத்தான். தொடர்ந்து பேசினான். ‘புகழும் பணமும் இருந்தும் ஹெமிங்வே தற்கொலை செய்து கொண்டானே! அதைப் பற்றியும் நினைத்துப் பார். அவனுகென்ன, ரசிகர்களுக்குப் பஞ்சமா!’

‘அதைப் பற்றி நான் யோசித்ததுண்டு’ என்று ராம் மறுபடி வேணுவை ஆச்சரியப்படுத்தினான். ஹெமிங்வே ஓர் அமெரிக்கர், here, how என்ற சித்தாந்தத்தை தொழுதவர். தன் ‘நம்பர் ஒன் எழுத்தாளர்’ என்ற பிம்பத்தைத் தொழுதவர். தன் நம்பர் ஒன் ஸ்தானம் சாஸ்வதமல்ல, யாரும் எக்கணமும் அதைப் பறித்து விடக்கூடும், என்ற இன்செக்யூரிட்டியை அவரால் தாள முடியவில்லை. அதுவே அவரைத் தற்கொலைக்கு விரட்டியது. புதுமைப்பித்தன் விஷயம் வேறே. அவர் ஒரு துறவி, அதாவது தோல்வி சார்ந்த துறவு அல்ல, ஞானத்துறவு. He was a mystic.'

'ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’, ‘கிலிமஞ்சாரோ பனிச்சிகரங்கள்’ ஆகிய படைப்புகளில் mystic சாயைகள் இல்லையா, என்ன?’

‘தனிமை பற்றிய ஒரு தவிப்பு, ஒரு மருட்சி... ஆனால் ‘தான்’ சரணாகதியடைவதில்லையே! Surrender of the ego... you know what I mean?'

’புதுமைப்பித்தன் mystic தான். அதைப் பற்றிச் சந்தேகமில்லை’ வேணு இப்போது தானும் புதுமைப்பித்தனைப் படித்திருப்பதாகச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் சிக்கிக்கொண்டான். -

‘அப்பா! சாமியாராகப் போற கேரக்டர்ஸுக்குப் பஞ்சமேயில்லை... அன்று இரவு, உபதேசம், அவதாரம், சித்தி, .... கந்தசாமிப் பிள்லை என்னடான்னா, கடவுளை பிராட்வே பக்கத்தில் சந்திக்கிறாராம், காஷுவலா அவரைக் காப்பி ஹோட்டலுக்குக் கூட்டிப் போறாராம். தன் பத்திரிக்கைக்குச் சந்தா கேட்கிறாராம்... என்ன நையாண்டி, என்ன அனாயாசமான தத்துவவீச்சு! எமகாதகப் பேர்வழியப்பா, அந்த மனுஷன்...’

‘கயிற்றரவு...’

‘கிளாசிக்!’

‘அப்புறம் அமானுஷியக் கதைகள்... காஞ்சனை மாதிரி... புராண நிகழ்ச்சிகள்... சாப விமோசனம் மாதிரி...’

‘தனித்தனிக் கட்டுரைதான் எழுதணும்’ என்று வேணு இட்லியை முடித்துத் தண்ணீர் குடித்தான். ‘ரியலிசம் அல்ல, ஃபேன்டஸியும் மிதாலஜியும்தான்  புஷ்டியான இலக்கிய ஊற்றுகள்னு ஜான் பார்த் ஒரு இண்டர்வியூவிலே சொல்லி இருக்கிறான், படித்தேன். புதுமைப்பித்தன் அன்றைக்கே இதை ஆன்டிசிபேட் பண்ணிட்டானே! அதை நினைச்சால் ஆச்சரியமாயிருக்கு.’

ஊத்தப்பமும் பூரியும் வந்துவிட்டன. ராமுவுக்குப் பூரி, வேணுவுக்கு ஊத்தப்பம். ஊத்தப்பமும் மிக ருசியாயிருந்தது. ராமின் தயவில் இன்று இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டிபன். ஒரு நாள் மனைவியை கூட்டிக் கொண்டு இங்கே வரவேண்டும். முடியுமோ என்னவோ? கணவனும் மனைவியும் பீச்சுகுப் போய் உட்கார்ந்திருப்பது பற்றிய ஒரு புதுமைப்பித்தன் கதை.... என்ன தலைப்பு அது, ஞாபகமில்லை... கணவன் வறட்டு அறிவுஜீவி, மனைவியுடன் எதையும் பகிர்ந்துகொள்ளாமல் ஒரு தனி உலகத்தில் வாழ்கிறவன்... நானும் அந்தக் கணவனைப் போலத்தான் ஆகிக்கொண்டு வருகிறேனோ?

ராம் ஒரு வேளை அந்தக் கதையைப் படிக்காமலிருக்கலாம். அவ்வளவு பிரபலமான கதை இல்லை. எப்படியோ மனத்தில் தங்கிவிட்டிருக்கிறது... வேணு ராமிடம் அக் கதையைப் பற்றி பிரஸ்தாபித்தான்.

‘தெரியும். படிச்சிருக்கேன்’ என்றான் ராம். வேணுவுக்கு ஏமாற்றமாக இருந்தது. கோபமாகக்கூட இருந்தது. இவனையெல்லாம் யார் புதுமைப்பித்தனைப் படிக்கச் சொல்கிறார்கள்? பிசினஸ்மேனாக லட்சணமாக ஸ்பேர்டைமில் விஸ்கியடித்துக் கொண்டு, பார்ட்டிகளுக்கும் டின்னர்களுக்கும் போய்க் கொண்டு இருக்க வேண்டியது தானே!

’ ‘இரண்டு உலகங்கள்’ என்பது தலைப்பு நீ சொல்ற கதைக்கு...’ என்றாம் ராம். ‘இதே தீமை, ‘நினைவுப் பாதை’ என்கிற கதையிலே இன்னமும் பவர்ஃபுல்லா டீல் பண்ணியிருக்கார்... மனைவியுடைய பாடை கிளம்பிண்டிருக்கு... கணவனுக்கு அதைப் பார்த்து மணப்பெண்ணாக அவள் நின்ற கோலம் நினைவுக்கு வர... தான் அவளை அறிந்து கொள்ளவேயில்லை என்று அப்பத்தான் உறைக்கிறது... அப்பா! மனத்தை உலுக்கும் ஒரு சிச்சுவேஷன்!’

இப்போது, இதைக் கேட்டதும் வேணுவுக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் நீங்கிவிட்டது. ஆமாம் இவன் ஷோ ஆஃப்தான் செய்கிறான். இலக்கியமும் இலக்கிய ரசனையும் உனக்கு மட்டும் சொந்தமல்ல, என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். என்னுடைய ஒரே உடுப்பான இலக்கிய உடுப்பையும் தான் பறித்துக்கொண்டு என்னை அம்மணமாக்க முயலும் குரூர விளையாட்டு.

‘ஆமா, உன்னைப் போன்றவர்களுக்கு அது உலுக்கும் சிச்சுவேஷன்தான்’ என்றான் வேணு. இப்போது அவனுக்கும் ராமைப் பதிலுக்குக் காயப்படுத்த வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. ‘அதாவது உன் மென்மையும், பெண்ணென்ற கவிதையைப் புரிந்து கொண்டுள்ள சூட்சுமமும் உலுக்கப்பட்டதாக நீ சொல்ல வருகிறாய்... இது உன் வர்க்கத்தைத்தான் காட்டுகிறது. மென்மை, ரசனை, இதெல்லாம் கூட ஒரு மட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் லக்ஸூரி, அப்பா! கணவன் வீட்டுக்கு வெளியிலும், மனைவி வீட்டுக்குள்ளேயும் ஒரே நுகத்தடியில் கட்டப்பட்ட இரு மாடுகளாக உழை உழையென்று உழைத்துக் கொண்டு, ஒருவர் முகத்தை இன்னொருவர் சரியாகப் பார்க்கக்கூட முடியாமல் போகிற மிடில் கிளாஸ் அவலத்தையே அக்கதை சித்தரிக்கிறது. கம்பேடிபிலிடி, அறிந்து கொள்ளுதல், இதெல்லாம் பணக்காரர்களுக்குத்தான்.’

ராமின் முகம் சிவந்தது. கோபமல்ல, வியப்புத்தான் அதில் அதிகம் தெரிந்தது. ‘இருக்கலாம்...’ என்றான். ‘நீ சொல்வது போல இருக்கலாம்... நீ ஏன் இப்படிப் பதற்றப்படுகிறாய்?’

‘பதற்றமில்லை ஓர் உண்மையைச் சொன்னேன்.’

ராம் பூரியை முடித்தான். வேணு ஊத்தப்பத்தை முடித்தான்.

‘காப்பி?’ என்றான் வெயிட்டர்.

ராம் வேணுவைப் பார்த்தான். வேணு தலையசைத்து ஆமோதித்தான். உடனே இரண்டு கப்கள் காப்பி என்று சொல்லிவிட்டு ராம் கண் சிமிட்டினான். ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்று சிரித்தான்.

வேணுவும் வேறு வழியின்றிச் சிரித்து வைத்தான்.

‘புதுமைப்பித்தனுடைய கதைகளையெல்லாம் நானும் என் வைஃபுமாக ஒரு மாசமாகப் படித்துக் கொண்டு வருகிறோம்.... அதனாலே மனசிலே புதுமைப்பித்தனே ஓடிண்டிருக்கார்... தப்பா நினைச்சுக்காதே.’

‘படி, படி, நிறையப் படி.’

‘நான் இன்னொன்று சொல்கிறேன் - தயவு செய்து, இதுவும் என் கிளாஸ் மென்டாலிட்டியைக் காட்டுவதாக நினைக்காதே. வெறுமனே ஒரு எண்ணம்...’

‘சொல்லு’

‘புதுமைப்பித்தனுடைய தத்துவ விசாரத்தின் ஊற்று, ஒருவேளை நிறைவற்ற திருமண உறவாக இருக்குமோ, என்று தோன்றியது...’

’அப்ஸர்ட்’

’அவருடைய தம்பதியரைப் பற்றின கதைகள் எதிலேயும் மனைவி ஃபிகருக்கு முக்கியத்துவமே தரப்படுவதில்லை, கவனிச்சியோ?’

“ஸோ?’

‘ஆனால், குழந்தை பாத்திரமாக வருகிற கதைகளிலெல்லாம் ஒரு பெண்குழந்தை - புதுமைப்பித்தனுக்கும் பெண்தானே! - தவிர்க்க முடியாமல் இடம் பெறுகிறது. கதையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. ‘சிற்றன்னை’, ‘மகாமசானம்’, ‘ஒரு நாள் கழிந்தது’, ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’,  ‘சாமியாரும் குழந்தையும் சீடையும்’... எனவே குழந்தை அவருடைய சப்கான்ஷியஸ்ஸை ஆக்கிரமித்துக் கொண்ட அளவு, மனைவி ஆக்கிரமித்துக் கொள்ளவில்லை என்றுதானே ஆகிறது.’

‘இதெல்லாம் ஸ்டுப்பிட் அனாலிசிஸ். ஒரு முடிவை மனத்தில் இருத்திக்கொண்டு, பிறகு அதற்கான சாட்சியங்களை நிறுவும் காரியம்...’

காப்பி வந்துவிட்டது.

‘இருக்கலாம்’ என்றான் ராம். ‘அதுதான் சொன்னேனே... ஐ ஆம் ஜஸ்ட் ஸ்பெகுலேடிங்.’

காப்பியில் சீனியைக் கலக்கும்போது சட்டென்று வேணுவுக்கு இரண்டு கதைகள்... மிகவும் பிரபலமான கதைகள்... நினைவுக்கு வந்தன. ‘வாட் அபௌட் காஞ்சனை?’ என்றான். ‘வாட் அபௌட் செல்லம்மாள்?’ - இக்கதைகளில் மனைவி ஃபிகர் நன்றாக அமைந்திருக்கிறதே!’

‘அக்ரீட். ஆனால் இக்கதைகளில் என்ன நடக்கிறது, அதை யோசித்துப் பார், காஞ்சனையில் பிசாசு மனைவியின் கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்க்கிறது.. செல்லம்மாளிலோ, மனைவி ஒரு சீக்காளியாக்கப்பட்டு, சாகடிக்கப்படுகிறாள்....’

‘ஸோ?’

‘மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற எழுத்தாளனின் சப்கான்ஷியஸ் வேட்கையைத்தானே இது புலப்படுத்துகிறது?’

'How far fetched! உனக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது.’

‘இருக்கலாம்’ என்று ராம் காப்பியை ஒரு வாய் உறிஞ்சினான். ‘ஆனால் கே. என். எஸ். அவருக்குமா பைத்தியம்?’

‘கே. என் . எஸ். ஸா!’ வேணு மலைத்துத்தான் போனான். ‘கே.என்.எஸ்ஸைப் பார்த்தியா?’

’எப்பவாவது மாசத்திலே ஒரு நாள், இரண்டு நாள் போவேன் அவர் வீட்டுப்பக்கம்’ என்றான் ராம் அலட்சியமாக. ‘பக்கத்திலேதானே! நான் இருப்பது டிஃபன்ஸ் காலனி, அவர் சவுத் எக்ஸ்டென்ஷன்.’

கே. என். எஸ்! வேண்வுக்குப் பேச்சே எழவில்லை. போன மாதம் கூடச் சென்னைக்கு வந்து இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார். வேணுவுக்கு அவரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ஆனால் கூடவே ஒரு கூச்சம், தன்னம்பிக்கையின்மை. அவருடைய இலக்கிய ஹோதா தன்னை அரவணைக்குமா, புறக்கணிக்குமா என்று புரியாமல், போகாமலே இருந்து விட்டான். ராம் அதிர்ஷ்டசாலி, அவன் எழுத்தாளன் இல்லை.

‘அவர் புதுமைப்பித்தனுடன் குளோஸா மூவ் பண்ணினவர் ஆச்சே! அவர் என்ன சொன்னார் தெரியுமா? There may be something in what you say, அப்படின்னார்.’ ராமின் முகத்தில் என்ன ஒரு கொக்கரிப்பு, வெற்றிப் பெருமிதம்!

வேணு இப்போது உண்மையிலேயே அம்மணமாகிப் போனான். ‘படவா!’ என்று  பல்லைக் கடித்துக் கொண்டான். காஞ்சனையில் வருகின்ற மோகினிப் பிசாசு இப்போது சட்டென்று இங்கே தோன்றி ராமின் கழுத்தை நெறித்துக் கொன்றால் எவ்வளவு நன்றாயிருக்கும்! அல்லது, ’செவ்வாய் தோஷ’த்தில் வருகிற ரத்தக் காட்டேரி...

மனத்தில் ஒரு பிளாக் அவுட். ரெஸ்டாரென்டிலிருந்து வெளியில் வரும்போதும் டாக்ஸியில் செல்லும் போதும் ராம் பேசிக் கொண்டு வந்த எதுவும் மனதில் பதியவில்லை. ஒரே சுயவெறுப்பு, சுய அனுதாபம் - சே! நான் ஒரு முட்டாள். நானும் இவனைப் போல பிசினஸ்மேனாகப் போயிருக்க வேண்டும். பணம்தான் முக்கியம். அது இருந்தால் பிற ஹோதாக்களும் படங்களும் தானாக ஏற்பட்டு விடும். இலக்கிய ரசிகன், எழுத்தாளன்...

ஆமாம், ராம் இனி கதைகளெழுதவும் கூடும். என் சாம்ராஜ்ஜியமென்று, அவனைப் போன்ற ஒட்டகங்கள் நுழைய முடியாத ‘ஊசித் துவாரமென்று’, நான் இருமாந்திருந்த இடத்தினுள்ளும்  அவன் நுழைந்துவிடப் போகிறான். எனக்கென்று இனி எந்தக் கிரீடமும் மிச்சமில்லை.

வேணு வீட்டருகே மெயின் ரோடில் அவனை இறக்கிவிட்டு வைஃபை மிக விசாரித்ததாகச் சொல்லச் சொல்லிவிட்டு, ‘பை’ சொல்லிவிட்டு, ராம் சென்றான். வேணு அந்த இருளடர்ந்த திருவல்லிக்கேணிச் சந்தினுள் மாடுகளின் மீது தடுக்கி விழாமல் ஜாக்கிரதையாக நடந்து சென்று, தன் இரண்டு ரூம் அரண்மனைக்குள் நுழைந்தான். பிற்பகலில் பார்த்த ராமின் விசாலமான ஹோட்டல் அறை நினைவு வந்தது. எரிச்சலாக இருந்தது. அந்த அறையிலுள்ள அழகிய மஞ்சத்தில் படுத்தபடி, ராம் புதுமைப்பித்தனைப் படிப்பான். அவனுடைய வீட்டிலும் அத்தகைய படுக்கை இருக்கும். அவன், அவன் மனைவி, இருவருமே படுத்துக்கொண்டு புதுமைப்பித்தனைப் படிப்பார்கள்.

‘காப்பி வேணுமா?’ என்ற மனைவியின் விசாரணை எரிச்சலை அதிகமாக்கியது. ‘ப்ச்’ என்று சூள் கொட்டினான். அதற்கு என்ன அர்த்தமென்று புரியாமல் அவள் நின்று கொண்டே இருந்தாள். அவன் பேண்ட்டை அவிழ்த்துவிட்டு வேட்டியைத் தேடினான்... பட்டென்று மனத்தில் குமைந்து கொண்டிருந்த எரிச்சலெல்லாம் குப்பென்று வெடித்தது: ‘என் வேட்டியை எங்கே கொண்டு வச்சே?’

அவள் அமைதியாக அவன் அதுவரை தேடிக்கொண்டிருந்த இடத்திலிருந்தே வேட்டியை எடுத்துக் கொடுத்தாள். ‘காப்பி கலக்கட்டுமா?’ என்று மறுபடி விசாரித்தாள்.

‘வேண்டாம், வேண்டாம், வேண்டாம்!’ என்று அவன் மறுபடி வெடித்தான். இந்த இரண்டாவது வெடிப்புடன் கோபம் சட்டென்று வடிந்து போயிற்று. தன் மேலேயே வெட்கம் ஏற்பட்டது. தான் ஒரு டிபிகல் மிடில் கிளாஸ் கணவனாக நடந்து கொள்வதாகப்பட்டது. தன் மன உளைச்சல்கள், ஏமாற்றங்களுக்குப் பரிகாரமாக மனைவியை அடித்து நொறுக்கும் கணவனின் பிம்பம்...

குழாயடியில் கால் அலம்புகையில் சட்டென்று புதுமைப்பித்தனின் இன்னொரு சிறுகதை நினைவு வந்தது... ஆபீஸில் எளிய குமாஸ்தாவாகவும் வீட்டில் சர்வாதிகாரியாகவுமிருக்கிற கணவனைப் பற்றிய கதை.... ‘மண்ணாங்கட்டி’ என்று அவன் முணுமுணுத்துக் கொண்டான். பெரிதாக மிடில் கிளாஸ் ஹஸ்பண்டை வைத்து என்ன சடையர் வேண்டிக் கிடக்கிறது? ராம் போன்றவர்களின் மனோரஞ்சகத்துக்காக, தன் வர்க்கத்தினரைக் கோமாளிகளாக்குதல்... துரோகி! உனக்கு வேண்டியதுதான். சொஃபிஸ்டிகேடட் வாசகரின் அங்கீகாரத்தை வேண்டித்தானே இப்படியெல்லாம் எழுதினாய்? நன்றாக இப்போது இவர்களிடம் மாட்டிக்கொண்டு திண்டாடு, இவர்களுடைய வாயில் புரண்டு எச்சில் படு! உன் செக்ஸ் லைஃபைக் கூட இவர்கள் விட்டு வைக்கப்போவதில்லை.

வேணு மனத்தில் இப்போது ஒரு சாந்தம். அதைப் பகிர்ந்து கொள்ள அவன் மனைவியைத் தேடிச் சென்றான்.

****

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்