Showing posts with label ஜி. நாகராஜன். Show all posts
Showing posts with label ஜி. நாகராஜன். Show all posts

Feb 9, 2011

நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி

நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லைgnagarajan . புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்!’ என்று சொல்லிவிட்டார்களாம்!

அவர் மீது இந்த உலகம் காட்டிய அக்கறை ஒருபுறமிருக்கட்டும்.

தன்னுடைய அனுபவ உலகத்தின்பால் நாகராஜனுக்கு ஏற்பட்ட தீவிர அக்கறையின் விளைவுகள் இக்கதைகள்.

கதைகள் என்றால் அவை எத்தனையோ விதங்களில் இல்லையா?

உய்விக்க வந்த கதைகள், கிழித்துக் காட்டப் பீறிட்ட கதைகள், சுத்திகரிக்கப் பிறந்த கதைகள். இன்னும் பண்பாடுகளைக் காக்க, தர்மங்களை நிலைநிறுத்த, சிதிலமடைந்த கற்புகளைப் புனருத்தாரணம் செய்ய...

இப்படி ஏதாவது கொஞ்சம் ’பெரிசாய்’ இவர் கதைகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?

மன்னிக்கனும் ஸார். இவை கதைகள்தாம்.

கதைகள் மட்டும்தாமா?

மட்டும்தான்.

நோக்கம் என்னவாம்?

தெரியவில்லை. அக்கறையாக இருக்கலாம். அனுபவங்களைப் பற்றிய அக்கறையாக இருக்கலாம்.

இட்டுச் செல்ல வேண்டாம். வழிகாட்ட வேண்டாம். கோடியாவது காட்ட வேண்டாமா?

இட்டுச் செல்லலாம். தலைமை தாங்கி நடத்திச் செல்லலாம். செய்து காட்டியிருக்கிறார்கள் மகான்கள். செய்துகாட்டிவருகிறார்கள் பெரியவர்கள். இவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. கதைகள்தாம் எழுதியிருக்கிறார். ஆனால்...

என்ன ஆனால்?

ரொம்பவும் அருமையாக எழுதியிருப்பது மாதிரிப் படுகிறது. மகான்களுக்கு இன்னும் கிடைக்காத தரிசனங்கள் எல்லாம் இவருக்குக் கொஞ்சம் கிடைத்துவிட்டது மாதிரிப் படுகிறது.

ஓஹோ!

2

நாகராஜனை நான் சந்தித்தது பதினைந்து வருடங்களுக்கும் முன்னால். 1956இல். வஸ்தாதுகளின் உடலமைப்பில் எனக்கு ஒருவித ஆசையும் சலிப்பும் உண்டு. இதனால் நாகராஜனின் உடலமைப்பு என்னைக் கவர்ந்து, நெருங்கிப் பழகவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. ஸ்டாலின் மீசை வேறு, முரட்டு ஆத்மா என்று என்னுடைய கற்பனை கலந்த பயம் வேறு.

நாகராஜனின் கலையோ பேதைமையும் ஜாலமும் நளினமும் கொண்டது. எதிர்வீட்டு ஜன்னலில் தோன்றி சில கணங்கள் முகச்சேட்டைகள் காட்டி, நாம் மயங்கி நெகிழும்போது மறைந்து வெற்று ஜன்னலில் நம் பார்வையைப் பதியவைத்துத் தவிக்க வைக்கும் குழந்தை போன்றது.

நாம் மதிக்கத்தக்க இளம் கலைஞர்களுக்கும் மேடைகள் இல்லை. சீர் கெட்டுப்போன ரசனையின் புறக்கணிப்பில் அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தம் முகங்களைக் காட்டிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் எழுத்தில் எப்போதும் என்னைக் கவனப்படுத்தி வந்திருப்பவர் என் நண்பர் கிருஷ்ணன் நம்பி. நாகராஜனிடம் என் பார்வையைப் பதிய வைத்தவரும் அவர்தான். குப்பைகளை மேயாமல், தெரிந்து கொள்ள வேண்டியவர்களைத் தெரிந்து கொள்ளாத நஷ்டத்திற்கு ஆளாகாமலிருக்கும் சௌகரியத்தை நான் இவரால் அனுபவித்து வருகிறேன்.

இந்த எழுத்தாளர்கள் வரிசையில் நாகராஜன் மிகவும் முக்கியமானவர்.

3

இலக்கிய வித்தைகளை யார் கற்றுத்தர இயலும்? அதன் நயங்கள் சொல்லப்படுகையில் பாழ்பட்டுப்போகின்றன. பின்பற்றப்படுகையில் காலைவாரி விடுகின்றன. தன்னுடைய சுனைகளைத் தானே தேடும் முயற்சி அது. நாகராஜனின் கதைகள், இக்கதைகள் பிறப்பதற்கு முன்னரும் பிறந்த காலங்களிலும் அவர் மேற்கொண்டிருக்க வேண்டிய தவத்தையும் ஏக்கத்தையும் கட்டுப்பாட்டையும் உந்துதலையும் நமக்குக் காட்டுகின்றன. கலையின் நியதியை மதிக்கத் தெரிந்த எந்த ஆத்மாவுக்கும் இதை உணர முடியாமற் போகாது.

இவர் உலகம் வாழ்க்கையின் பின்கட்டு. முன்கட்டுக்கு என்ன என்று கேட்கலாம். திண்ணையில் பண்பாடு க்லு வீற்றிருக்கிறதே! நாம் பிறருக்குக் காட்ட ஜோடித்து வைத்திருக்கும் வேஷங்களில் கலைஞனுக்கு என்ன அக்கறை? அங்கே மடிப்புக் கலையாத அங்கவஸ்திரங்கள், புன்முறுவல்கள், தாம்பூலத்தட்டுகள், ஆண்சாமி படங்கள், பெண் சாமி படங்கள், வாங்கோ, வாங்கோக்கள்....

கதைகளைச் சொல்லிச் சொல்லிக் கொல்ல வந்தவர் அல்ல இவர். விளக்கங்களும் உரைகளும் விரவிவரும் உபந்நியாசம் இலக்கியக் கலை ஆகாது என்பது இவருக்குத் தெரியும். பின்கட்டின் சாளரம் ஒன்றைத் திறந்துவிட்டு கம்மென்று வாயை மூடிக்கொண்டு நம்முடன் நின்றபடி உள்ளே எட்டிப் பார்க்கிறார் - இந்தத் தருணத்தில் சாளரத்தைத் திறந்ததுதான் தான் செய்த ஒரே காரியம் என்ற பாவத்துடன். கெட்டிச் சாயங்கள் என்று நாம் நம்பிவரும் சில உருப்படிகள் சலவைக்கு ஆளாகின்றன.

சோமுப் பிள்ளை கட்டிலில் விழுந்துவிட்டார்  (தீராக் குறை). ஒரு பெருங்கூட்டம் சுய கணக்குகளைப் புரட்டுகிறது. சொத்துச் சுகம், உரிமை, அன்பு, முக்கியத்துவம், சுதந்திரம், செல்லம் இவற்றின் பங்கீடு சரிசமமாகக் கணக்கில் வரவுவைக்கப்பட்டுள்ளதா? சாயங்கள் கரைகின்றன. யதார்த்த சொரூபங்கள் சருமங்களைக் கிழித்துக்கொண்டு வெளியே துருத்துகின்றன. தாய், தந்தை, மூன்று பிள்ளைகள், மூன்று புதல்விகள், பேரன், பேத்தி - பெரிய ஆலவிருட்சம் இது. உபந்நியாச எழுத்தாளருக்கு இத்தனை நபர்களையும் அறிமுகம் செய்துவைக்கவே பேனாவில் இருமுறை மை நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கும். ஆசிரியரின் தேர்ந்த கேமரா மனசு, திரை விலகியதுமே தன் கோணத்திலிருந்து பதிவு செய்து வர, பாத்திரங்கள் தங்கள் இயக்கங்களிலேயே தங்கள் முகங்களையும் தங்கள் மனங்களையும் உறவுகளையும் காட்டிக் கொண்டு வருகிறார்கள்.

நாடகம் நிகழ்ந்து முடிந்துவிட்டது. சாளரத்தை மூடுகிறார் ஆசிரியர். முகத்தைப் பார்க்கிறோம். ‘மனைவிதான் களங்கமற்ற துணையா?’ இத்தனை பேர்களிலும் வாயைத் திறக்காத அந்தப் பூச்சிதான் நம் மனத்தை நெகிழ வைக்கிறது. ‘எனக்கு என்ன தெரியும்? இந்த இடத்தில் அப்படித்தான் தோன்றுகிறதோ?’ என்று சந்தேகப்பட்டுக்கொள்கிறார் ஆசிரியர்.

முத்தாய்பு வைத்து முடிவு சொல்ல ஆசிரியர் காட்டும் தயக்கம் - அல்லது பரிபூர்ண விலகம் - கலைப்பூர்வமானது. வாழ்க்கையின் பரப்பையும் விசித்திரங்களையும் சிக்கல்களையும் அனுபவப்பூர்வமாக மனத்தில் ஏற்றுக்கொண்டுவிட்ட கலைஞனின் பொறுப்புணர்ச்சி அது. கதை ‘பண்ணு’கிறவர்களோ முடிவுகளையும் தீர்மானங்களையும் பாராவுக்குப் பாரா செங்கல் வண்டிகளாய்ச் சரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கதை படுத்தும் பாட்டை இவர் எழுத்தில் தெரிந்துகொள்வது சுலபம். சதைக்கும் இளமை முறுக்குக்கும் ஏய்ப்புக் காட்டும் காதல், எலும்பு துருத்திய தோலுக்கும் வயோதிகத்துக்கும் மத்தியில் கொஞ்சி விளையாடும் (அங்கும் இங்கும்) உண்மையும் இவருக்குத் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்ளும் பொறுப்புணர்ச்சியும் நமக்கு இருக்க வேண்டும். முரட்டுத்தனமான உலகம் இவரைக் கவருவதைப் போலவே (அப்படி ஒரு காலம்! அப்படி ஒரு பிறவி!) ஒரு குழந்தையின் மென்மையான உலகமும் (பச்சக் குதிரை) இவரைக் கவரத்தான் செய்கிறது. அந்த அந்த உலகங்களுக்கு உரித்தான விசுவாசத்தைச் செலுத்தி, அந்த அந்த உலகங்களுக்கு உரித்தான நாதங்களை எழுப்பி, இந்த இரு உலகுகளையும் நாம் அனுபவித்து ரசிக்கும்படியாக எழுதி விடுவது எல்லாவற்றிற்கும் மேலாக இவர் கலைஞர் என்பதால்தான் என்பதையும் நாம் உணர வேண்டும்.

மிகுந்த சொற்சிக்கனத்தோடு எழுதும்போதும் சித்திரங்களும் பாத்திரங்களும் எத்தனை முழுமையாக உருப்பெறுகின்றன! ஒரு சம்பாஷணையில், ஒரு சில வாக்கியங்களில், ரங்கநாயகியின் முகமும் அகமும் எத்தனை தெளிவாய் மலர்கின்றன (மிஸ் பாக்கியம்)! லsura 12க்ஷ்மி அம்மாளுடன், அவள் பெண் அரவிந்தா (எங்கள் ஊர்) பேசும் நிமிஷங்கள் மிகச் சொற்பமே. ஒரு குடும்பத்தின் சோக வரலாறே விவரணங்களோடு அதில் துலங்கி வெளிப்படுகிறது.

எங்கள் ஊர் என்ற கதை மிகவும் அழகாக உருவாகியிருக்கிறது. ஒரு நவீன கவிதை போல், நாம் மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கும்படி அமைந்துவிட்ட கதை அது. கோள் மூட்டும் ஜாலக்காரி பொதுப்படையாகப் பேசுவதுபோல் பாவனை காட்டி ‘குண்டுணி’யை இடையே செருகுவது போல், ஊர் வனப்பின் லயிப்பினூடே சோகத்தை மீட்டுகிறார் ஆசிரியர்.

யாரோ முட்டாள் சொன்ன கதையை அவர் நிகழ்த்திக் கொண்டு போகும் முறையும் ரசிக்கும்படியாக இருக்கிறது, நிகழ்காலத்தில் இரண்டு கீற்று, நிகழ்ந்து முடிந்தவை இரண்டு கீற்று - இப்படி முடைகிறார் ஆசிரியர். மேற்பரப்பில் இது சாதாரணமாகத் தெரியலாம். எளிது என்றுகூடப் படலாம். கைவந்த வித்தைகளில் - பானை வனைவதிலிருந்து பல்லாங்குழி ஆடுவது வரையிலும் - அவற்றின் நேர்த்தி அவற்றைச் சாதாரணம் போல் காட்டுகிறது.

இந்தக் கலைஞரின் உலகத்திற்குள் உங்களை மகிழ்ச்சியுடனும் மிகுந்த நம்பிக்கையுடனும் அழைக்கிறேன்.

ஜி. நாகராஜனின் ‘கண்டதும் கேட்டதும்’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரை, ஏப்ரல் 1971.

Jan 17, 2011

பச்சக் குதிரை - ஜி. நாகராஜன்

ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது; சாகலாம் போலிருந்தது.

'பெரிய சண்டியரு! இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம், மாட்ட!'

ராஜுவுக்கு கோபமெல்லாம் செல்லத்துரை மீது. gnagaran

'எருமைமாடு மாதிரி இருந்துக்கிட்டு இவன் எதுக்கு நாலாம் கிளாசிலே இருக்கணும்? அன்னைக்கு  மாணிக்கம் வாத்தியார்கூட, 'டே தடியா! அய்யாகிட்டச் சொல்லி, ஏதாச்சும் கடைலே கிடைலே வைக்கச் சொல்லு' என்கலே! இந்த மாணிக்கம் வாத்தியான்! அவன் ஒரு மண்டைக் கனம், மாணிக்கம், கீணிக்கம், சாணிக்கம், பூணிக்கம்...'

மாணிக்கம் வாத்தியார் திருகிய காதை ராஜு இலேசாகத் தொட்டுக் கொண்டான். இட்லியைத் தொட்ட மாதிரி இருந்தது. 'இன்னைக்கு தின்ன என்னவோ?... இருட்டிடுச்சு... ஒருமிக்க சோத்தைத் தின்னுட்டு படுத்துர வேண்டியதுதான். ஐயோ, காதெ யாரும் பாக்காம இருக்கணுமே; ராஜு மீண்டும் காதைத் தொட்டுக் கொண்டான். துக்கம் நெஞ்சை அடைத்தது. 'அம்மா பாத்தா 'ஓ'ன்னு அலறிடுவா. ஊர்லே இல்லே, நல்லவேளை. அப்பா வரதுக்குள்ளே தூங்கிடணும்... போடா, ராஜு போ, உனக்குத் தூக்கம் வேறயா கெட்டிருக்கு.. காலையிலேயே போலீசுகாரன் வரும்போதல்ல தெரியும்'

இந்த வீட்டிலே ராஜு என்கிற செட்டிமார் பையன் ஒருத்தன் இருக்கானா? அய்யய்யோ, போலீசுக்காரன் வந்திட்டானே! மூஞ்சியைப் பாரு, குரங்குமாதிரி. ஆமாம் இந்த வீடுதான். என்ன விஷயம் என்று கேட்டுக்கொண்டு வாசலில் நிற்கிறார் அப்பா. ராஜு கதவருகே ஒளிந்து கொண்டு நிற்கிறான். 'அந்தப் பையனே டேஷனுக்கு கூட்டிப் போகணும். யாரோ ஒரு பையன் கையை ஒடிச்சிட்டான்' என்கிறான் போலீஸ்காரன். 'எங்க வீட்டு ராஜுவா? அவன் அப்படியெல்லாம் கையை ஒடிக்க மாட்டானே! பாவம், ரொம்ப சாது' என்கிறார் அப்பா. போலீஸ்காரன் விட்டால் தானே! 'ஒடிக்கமாட்டானா? அவுங்க மாணிக்கம் வாத்தியாரே பார்த்தாராம். இவன்தான் ஒடிச்சானாம். பச்சக்குதிரை விளையாடுறப்போ, குனிஞ்சிருந்த உங்க ராஜுதான் அந்த சோமுவைக் காலை வாரிவிட்டுக் கையை ஒடிசிருக்கான். செல்லத்துரைங்கிற பையன் கூடச் சொன்னான்.

'பொய்யப் பாரு பொய்யை! நான் ஒன்ணும் காலை வாரிவிடலேப்பா... அந்தச் செல்லத் துரைக்கு பென்சில் தரலையாம், பொய் சொல்றான். மாணிக்கம் வாத்தியாரும் கூடச் சேர்ந்துக்கிட்டாரு' என்று கத்திக்கொண்டு ராஜு அப்பாவின் முன் வருகிறான். 'திருட்டுப்பயலே, நீதானா?' என்று கூறிக்கொண்டு போலீஸ்காரன் ராஜுவை எட்டிப் பிடிக்கிறான். ராஜு ஓடுகிறான். போலீஸ்காரன் விரட்டுகிறான். அப்பா போலீஸ்காரனைக் தடுக்கப் பார்க்கிறார். அப்பா கைமீது போலீஸ்காரன் ஒரு போடு போடுகிறான். ராஜுவைத் தரதரவென்று இழுக்கிறான். அப்பா பின்னால் ஓடிவருகிறார். 'பத்து வயசுக் குழந்தை அய்யா, அவனை விட்டிடுங்க. நான் வேணா அந்தக் கையொடிஞ்ச பையனுக்கு நிறையப் பணம் தரேன். அவனை விட்டிடுங்க அய்யா!' என்று கெஞ்சுகிறார் அப்பா. போலீஸ்காரனுக்கு நெஞ்சு கல். 'கையை ஒடிச்சிருக்கான். பத்து வயசுக் குழந்தையாம்' என்று இரைகிறான். பல்லைக் கடித்துக் கொண்டு ராஜுவை இழுத்துச் செல்கிறான். 'இந்த ஒரு தரம் விட்டிடுங்கையா, இனிமே ஒடிக்கமாட்டேன். யார் கையையும் ஒடிக்கமாட்டேன்'' என்று அழுகிறான் ராஜு...

ராஜுவின் கண்களிலிருந்து பொலபொல வென்று கண்ணீர் வடிந்தது. வாய் உலர்ந்தது, வாயைத் திறக்க முடியவில்லை. நாக்கு வாயோடு ஒட்டிக்கொண்டது. தொண்டையில் ஏதோ உருண்டை மாதிரி நின்றது. 'நான் காலை வாரிவிடலேப்பா. எல்லாம் இந்த செல்லத் துரையாலே, எத்தனை பொய் சொல்றான்! அவன் சொல்றதை வச்சிக்கிட்டு இந்த மாணிக்கம் வாத்தியார் போலீசிலே பிடிச்சுத் தருவாராம், அப்பா.'

பாவம் அந்தச் சோமு! அவன் கையொடிஞ்சு போச்சு. 'கையொடிஞ்சிருச்சே! வீட்டிலே கொன்னுப்புடுவாங்களே'ன்னு கத்தினான். 'சோமு, சோமு எம்மேலே கோவப்படாதே. நான் ஒண்ணும் உன்னைக் காலை வரிவிடலே, நீ கையை வச்சு முதுகிலே அழுத்தினபோது இலேசாகக் குனிஞ்சேன், சோமு.' சோமுவை பியூன் ஹென்றி தூக்கினபோதுதான் எப்படி அலறினான் அவன்! அய்யோ பாவம், 'நான் வேணும்னு ஒண்ணும் செய்யலே சோமு, என்னை மட்டும் சும்மா விட்டாங்களா? இங்கே யாரு. இங்கே பார். தலைலே மங்கு மங்குன்னு குட்டினாரு. என் கன்னத்தைப் பாரு. பளீர் பளீர்ன்னு அடிச்சிருக்காரு. எல்லோரும் எம்மேலே விழுந்து என்னைக் கீழே தள்ளி மிதிச்சாங்க சோமு. என்னைப் போலீசிலே வேறே பிடிச்சித் தரப்போறாங்களாம் சோமு. அந்தச் செல்லத்துரை சொல்றான்.

'சோமுவைத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிட்டாங்களே! பாவம், இனிமே என்ன செய்வான்? பள்ளிக்கூடத்துக்கு வரமுடியாது. கையொடிஞ்சவனைக் கடையிலே வச்சிக்க மாட்டாங்க. பாவம் சோமு நொண்டிப் பிச்சைக்காரனா ஆக வேண்டியதுதான். 'அய்யா சாமி! கொஞ்சம் தர்மம் போடுங்களேன். அந்த செட்டிப்பய ராஜு என் கையை ஒடிச்சிட்டானே' இந்த அப்பா ஒண்ணு. அவனுக்கு ஏதாச்சியும் தாங்களேன்னா, 'அவன் கையொடிஞ்சா நாம் என்ன செய்யறது?'ன்னுடுவார். 'இல்லேப்பா நான்தான் பாவம் அவன் கையை ஒடிச்சேன். 'நீதான் ஒடிச்சயா! போ, அவனோடே நீயும் போ..'
ராஜு நந்தவனத்துக்கு வந்தான். தொட்டியிலிருந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவினான். அங்கு சீப்பு, கண்ணாடி வைத்திருந்தார்கள். தலையைச் சீவிக் கொண்டான். சட்டையையும், டிராயரையும் சரிப்படுத்திக் கொண்டான். கழுவிய முகத்தில் கண்ணீர் மீண்டும் முத்துப் போல் உருண்டு விழுந்தது. துடைத்துக்கொண்டான். வீடு சேர்ந்ததும் யாருடனும் பேசவில்லை. வேலைக்காரி சோறு போட்டாள். சாப்பிட்டான். நேராகக் கட்டிலுக்குச் சென்று குப்புற விழுந்தான். அலைக்கழிந்த மனம் அமைதியை நாடியது.

இரண்டு மணி வெயில் மண்டையைப் பிளந்தது. ராஜுவும் அவர்களும் வேலாங்குளம் கண்மாயை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களில் வேலுச்சாமி ஒருவன். தர்மராஜன் ஒருவன். மூன்றாவது யாரோ.. ராஜுவுக்கே தெரியாது. நிழலுக்காக, ரோட்டிலே நடக்காது ரோட்டோரமாக இருந்த மேட்டிலே நடந்து சென்றனர். ஒவ்வொருவராக சட்டையைக் கழற்றி முண்டாசாகக் கட்டிக்கொண்டனர். சற்று தூரத்தில் இருந்த தண்டவாளத்தின் மீது புகைவண்டி ஒன்று சென்றது. வண்டியைக் கண்டதும் அவர்கள் நின்று அதைப் பார்த்து கூச்சலிட ஆரம்பித்தனர். கண்டபடித் திட்டினர். ரெயிலில் போகிறவர்களை, வேலுச்சாமி மடித்துக் கட்டியிருந்த வேட்டியைத் தூக்கி வண்டியைப் பார்த்து கூத்தாடினான். ராஜுவுக்கு கூச்சலிடவும் கூத்தாடவும் மனமில்லை. 'இதெல்லாம் என்ன?' என்று உள்ளூர அலுத்துக் கொண்டான்.

கண்மாயில் ஏக கலாட்டா. நாலு பேரும் தண்ணீரிலே குதியாட்டம் போட்டனர். வேலுச்சாமி மட்டும் ஒரு கோவணம் கட்டியிருந்தான். மற்றவர்கள் பிறந்த மேனியில் இருந்தனர். நாலு பேர்களுக்கும் கையும் காலும் வெளிறிப்போய் கனத்துவிட்டது. கண்கள் சிவந்து நீரைக் கக்கின. தலையில் கல்லைக் கட்டி அழுத்துவது போலிருந்தது. போதாதற்கு வயிறு நிறைய தண்ணீர். ஒவ்வொருவராக வேலுச்சாமியைத் தவிர மற்ற மூவரும் கரைக்கு வந்து சேர்ந்தனர். அரைகுறை நீச்சலடித்து சுற்றி வந்தான் வேலுசாமி. அவ்வப்போது கால்களையோ கைகளையோ தரையில் ஊன்றிக் கொண்டான. சுற்றிச் சுற்றி வந்தவன் சற்று விலகிச் சென்றுவிட்டான். கால்கள் தரையை எட்டவில்லை. ஆழத்துக்குப் போய்விட்டான். தத்தளித்துத் தத்தளித்துத் தலையை மேலே தூக்கினான். உரக்கச் சத்தமிட முயன்றான். தண்ணீர் அலை அலையாக வாய்க்குள் புகுந்தது. ஒரே உளறல் மட்டும் கேட்டது. தரையிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு 'திக்'கென்றது. தர்மராஜன் நிலைகுலையாது நின்றான். ஒருவன் 'அய்யோ அப்பா' என்று கத்திக் கொண்டு ஓட்டமெடுத்தான். ராஜு மட்டும் சரசரவென்று தண்ணீருக்குள் நடந்தான். வேலுச்சாமியை எட்டிப் பிடித்தான். இருவரும் தண்ணீரில் மல்லுக்கட்டினர். அவன் இவனை இழுத்தான். இவன் அவனை இழுத்தான். ராஜுவுக்கு மூச்சு முட்டியது.

பாவம் ராஜு செத்துவிட்டான். ராஜுவின் வீட்டு முன்பு கூட்டம். மாணிக்கம் வாத்தியார்கூட வந்திருந்தார். 'நல்ல பையன், ரொம்ப சாது' என்று அனுதாபப்பட்டார். 'அந்த வேலுச்சாமிக்காகத் தான் ராஜு செத்துப் போனானாம்' என்றார் யாரோ ஒருவர். எல்லாரும் ஆமோதிக்கும் பாவனையில் தலையை அசைத்துவிட்டு ராஜுவின் சாவுக்காக வருந்தினர். அந்தக் கூட்டத்திலே நின்று கொண்டிருந்த ராஜுவும் வருத்தத்தோடு தலையை அசைத்தான்.

'தம்பி எழுந்திரு. உங்க பெரியய்யா, மகன் வந்திருக்காரு' என்று வேலைக்காரி கூறியதும் ராஜு எழுந்து உட்கார்ந்தான். 'செத்ததெல்லாம் கனவுதான்! உம் அந்த சோமுக்கு கையொடிஞ்சதும் கனவாயிருக்கக்கூடாதா?'' ராஜு வெளியே நடந்து வந்தான். பெரியப்பா மகன் நடராசன் இரண்டு சகாக்களோடு நின்று கொண்டிருந்தான். 'என்ன தம்பி, செல்லத்துரை நேத்து சேட்டை பண்ணினானாமே? உடனே எங்கிட்டே ஏன் சொல்லலே? பெரிய சண்டியருன்னு நினைச்சிட்டிருக்காம்போலே, இன்னைக்கில்லே அவனுக்கு தெரியப் போவுது!'' என்று நடராஜன் ஆரம்பித்தான். 'இல்லே, அண்ணே, நான் சோமு கையை ஒடிச்சிட்டேங்கிறாங்க' என்று ராஜு இழுத்தான். ''கையொடியரவரு ஏன் விளையாட வந்தாராம்'' என்று கேட்டுவிட்டு, நடராஜன், ''தம்பி, நீ தின்னுட்டு வா... இன்னைக்குப் பள்ளிக்கூடத்திலே வச்சு சாத்தற சாத்திலே, அவரு சண்டியத்தனமெல்லாம் பறக்கணும், ஆமா' என்று கூறிக்கொண்டே ராஜுவிடம் விடை பெற்றுக்கொண்டு, சகாக்களின் தோள்களில் கைகளை வைத்தவாறே நகர்ந்தான் நடராஜன். ராஜு துள்ளிக் குதித்து வீட்டுக்குள் ஓடினான்.

"கையொடியரவரு ஏன் பச்சக்குதிரை தாண்டணுமாம்?" என்று சொல்லிக்கொண்டே பல்லை விளக்கினான். உடனே நேராக அடுப்பங்கரைக்குள் நுழைந்தான். ''தம்பி வெந்நீர் ஊத்திவச்சிருக்கேன். குளிச்சிட்டு வந்திரு. இல்லாட்டி ஐயா கோவிப்பாரு'' என்றாள் வேலைக்காரி. ''குளிக்கவும் மாட்டேன்; ஒண்ணும் மாட்டேன், நான் ஒடனே போகணும். இப்ப இட்லியை வைக்கிறயா, இல்லையா?'' என்று அதட்டினான் ராஜு.

''உன் அதட்டலும் மிரட்டலும் இங்கே வச்சுக்காதே; மருவாதையாய் போய்க் குளி'' என்று கண்டிப்புடன் பேசினாள் வேலைக்காரி.

''என்னை யாருன்னு நினைச்சே! இங்கே பார், நான் இன்ஸ்பெக்டராக்கும்'' என்று சொல்லிக்கொண்டே கையிலிருந்த தோல் பெல்ட்டால் வேலைக்காரிக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்தான் ராஜு.

********
சரஸ்வதி (மலர் 6 இதழ் 6)  25-5-1959

Oct 26, 2010

ஜி. நாகராஜன் – கடைசி தினம்!-சி.மோகன்

* ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது. பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

அனைவருக்கும் வணக்கம்.

என் நெடுநாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறியிருக்கும் நாள் இது.

எஸ் சம்பத்தின் ‘இடைவெளி”, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ஜி. நாகராஜனின் ”நாளை gnagarajan மற்றுமொரு நாளே’ ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்குமென்ற என் நம்பிக்கையை எழுத்திலும் உரையாடல்களிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.

இன்று ஜி.நாகராஜனின் பிரதான படைப்பான ‘நாளை மற்றுமொரு நாளே’, அபிசிப்ராமனின் மொழிபெயர்ப்பில் பெங்குவின் வெளியீடாக வந்திருப்பது ஒரு விசேஷமான நிகழ்வு. மொழி மற்றும் கலை இலக்கிய கலாச்சர தளங்களில் தீவிரப் பற்றுதலோடு ஆழ்ந்த அறிவோடும் தீரா தாகத்தோடும் செயலாற்றிவரும் கல்மனும் க்ரியா ராமகிருஷ்ணனும் இணைந்து  இம்மொழிபெயர்ப்பை ‘எடிட்’ செய்து இந்நூல் வெளிவந்திருப்பது நம்முடைய பெருமிதங்களில் ஒன்றாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

க்ரியா ராமகிருஷ்ணனின் கைமந்திரம் இதில் சேர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகிறது. ஒருசெயல் அதன் நிகழ்த்தும் மாயம் ஓர் அபூர்வவிந்தை. நவீனதமிழ் இலக்கிய முகத்தில் பொலிவு கூடியிருக்கும் இந்நாளில் அதை சாத்தியமாக்கிய அபிக்கும், டேவிட்கல்மனுக்கும், ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்கும், பெங்குவின் நிறுவனத்தாருக்கும் நம் அனைவர் சார்பாகவும்  என்  நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி. நாகராஜனைப் பற்றிப் பேசுவதும் அவருடைய எழுத்தைப் பற்றிப் பேசுவதும் வேறு வேறானவை அல்ல. நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித் தவர் ஜி. நாகராஜன். அதுவரையான தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும்  தங்கள் வாழ்வுக்கும்  இருப்புக்குமான  சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது.

தனிமனித இயல்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் வாழ்வின் அழகு பூரணமாக விரிவடைவதைக் கொண்டாடும்  முதல் தீர்க்கமான குரல் ஜி. நாகராஜனுடையது. சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிராதய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கின்றன. இந்நிலையில், வாழ்வின் மீதான சகல பூச்சுகளையும் வழித்துக் துடைத்து,  வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி  அதன் இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக அறங்களைப் படைத்திருக்கும் கலை மனம் ஜி. நாகராஜனுடையது.

பூக்களில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தில் உயிர்ப்பின் அழகையும் கண்ட படைப்பு மனம் இவருடையது. விளிம்புநிலை மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகை அற்புதமாகப் படைப்பித்ததும்தான் ஜி. நாகராஜனின் தனித்துவம். இதன் அம்சமாகவே விலைப்பெண்கள்,  அத்தான்கள், உதிரிகள் இவருடைய படைப்புலகை  வடிவமைத்தனர்.

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஜி. நாகராஜனின் வருகை துணிச்சலான எழுத்து என்பதிலேயே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துணிச்சல் மனிதன் குறித்தும் சமூகம் குறித்தும் காலம் குறித்துமான அவருடைய அவதானங்களிலிருந்தும் பார்வையிலிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. அதிர்ச்சிக்காகவோ கிளர்ச்சிக்காகவோ பரபரப்புக்காகவோ எழுத்தில்காட்டிய துணிச்சல் இல்லை இது. வாழ்வையும் எழுத்தையும் வெகு சுபாவமாக, மனத்தடைகளோ, இறுக்கங்களோ, ஒழுக்க நியதிகள் சார்ந்த பதற்றங்களோ இன்றி  அணுகியிருப்பதில் விளைந்திருக்கும் கலைத் துணிச்சல்.

ஒவ்வொரு காலமும் வாழும் நெறிகளை விதிகளாக வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. அதேசமயம் மீறல்களும் முரண்டுகளும் போராட்டங்களும் அவ்விதிகளுக்கெதிராக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மோதல்களின் தொடர்ச்சியாகத்தான் பழையதை மேவிப் புதிய காலமும் புதிய விதிகளும் உருக்கொள்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தி திரைக்காவியமான ‘மொஹல் ஏ ஆஸம்’ படத்திலிருந்து ஒரு காட்சி:

அனார்கலி மீது கொண்ட எல்லையற்ற காதலுக்காக அவளை மீட்கும் பொருட்டும் அடையும் பொருட்டும் அரச பதவியை உதறிவிட்டு, தன் தந்தை அக்பருக்கு எதிராக யுத்தம் மேற்கொள்கிறான் சலீம். அக்பரின் தூதுவராக சலீமிடம் வருகிறார் ஓர் அமைச்சர். அவர் சலீமிடம் ‘அரச பதவியைத் துறந்துவிட்டு எனக்கும் நாட்டுக்கும் எதிராக யுத்தம் தொடங்குமளவுக்கு சலீமை ஆட்டுவிக்கும் அனார்கலி அப்படியொன்றும் அழகாகவும் இல்லையே’ என்று அக்பர் வருத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அதற்கு சலீம் சொல்கிறான்; ‘சலீமின் கண்களால் பார்க்கச் சொல்.’

ஜி.நாகராஜனின் அருமையை உணர சமூக மதிப்பீடுகளின் கண்கள் கொஞ்சமும் உதவாது. அவை சமூக நெறிகளைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரத்தின் கண்கள். அதாவது, அக்பரின் கண்கள். இயல்புணர்ச்சிகளை நேசிக்கும் கண்களுக்கு மட்டுமே ஜி. நாகராஜனுடைய வாழ்வும் எழுத்தும், வசீகரமும் அழகும் கொண்டதாக வெளிப்படும்.

cmohan ன் 17ஆவது வயதில் ஜி. நாகராஜனை ஓர் லட்சிய ஆண்மகன் தோற்றத்தில் நான் அறிந்திருக்கிறேன். உடற்கட்டும் வனப்பும் மிடுக்கும் கூடிய பேரழகன். அப்போது நான் மாணவன். அவர் கணித ஆசிரியர். தூய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நடுவிரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட், சில வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அவருடைய கடைசி சில ஆண்டுகளில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. உடல் நலிந்து, கசங்கிய அழுக்கு வேட்டி ஜிப்பாவோடும், கடைசி நாட்களில் கைகளில் சொறியோடும் அவர் அலைந்து திரிந்த காலம் பொழுதை கஞ்சா போதையில் கடத்திய காலம். இக்காலத்தில் அவரை ஓர் எழுத்தாளராக அறிந்து அவர்மீது மதிப்பு கொண்டிருந்தத நானும் எழுதத் தொடங்கியிருந்தேன். அவருடைய வாழ்வின் கடைசி நாள் பற்றி மட்டும் சில விஷயங்களைக் குறிப்பிட்டு இப்பேச்சை முடிக்கிறேன்.

ஒருமுறை ‘சாவும், அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்’ என்றார் ஜி. நாகராஜன். சாவை எதிர்கொள்ள அவர், தன்னைத் தயார்படுத்திக் கொண்ட தருணமும் வந்தது. எவ்வளவோ முறை மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய போதெல்லாம் மறுத்த அவர், மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு, அவராகவே முன்வந்து தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

1981 பிப்ரவரி-18ம் தேதி காலை அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்லா பரிசோதனைகளும் முடித்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணிபோல் பிரிந்தபோது, ‘கஞ்சா ஏதும் உபயோகிக்க வேண்டாம். வெளியில் கறுப்புப்படியும்படி ஆகிவிடக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும் டாய்லெட்டில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். ‘சாயந்தரம் வரும்போது போட்டுக்கொண்டு வந்து தருகிறேன் இரவு டாய்லெட்டில் உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்றதும் என்னிடம் அதைக் கொடுத்துவிட்டார்.

மீண்டும் சாயந்தரம் 5 மணி போல் நண்பர் சிவராமகிருஷ்ணனும் நாணும் அவரைப் போய்ப் பார்த்தோம். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக்கொண்டு போயிருக்கவில்லை. ‘போடத் தெரியவில்லை’ என்று சிகரெட் பாக்கெட்டையும் கஞ்சா பொட்டலத்தையும் அவரிடம் கொடுத்தேன். பேசிக் கொண்டேயிருந்தார். மனித இனம் போரில் மாண்டுகொண்டிருப்பது பற்றிப் பெரும் துக்கத்துடன் பேசினார். இடையில் டாய்லெட் போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். டாய்லெட்டில் அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாளமுடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, ‘கடவுளே, என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்’ என்று வாய் விட்டுக் கதறி அழுதார். திரும்ப வந்து படுக்கையில் படுத்துக் கொண்டதும் குளிர் அவரை மிகவும் உலுக்கியது. “குளிருது, ரொம்பக் குளிருது” என்றவர் “சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்” என்றார்.

மறுநாள் காலை , பிளாஸ்கில் காப்பியோடு போனபோது அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். ஆனால் அவர் இறந்து விட்டிருந்தார். அவர் ஜிப்பா பாக்கெட்டில் சிகரெட் பாக்கெட்டும் சிறு பொட்டலமும் உபயோகிக்கப்படாமல் அப்படியே இருந்தன. என் குற்றவுணர்வுகளில் ஒன்றாக அந்தப் பொட்டலம் இன்னமும் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது.

***

நன்றி: குமுதம் தீராநதி

Jun 29, 2010

ஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்

அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை. கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒரு விறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக் கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்ப முயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின ‘அப்பா!’ என்று சொல்லி வலியைத் தணித்துக் கொள்வதுபோல.
gn' உடல் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தது. இருபது ஆண்டுகளாவது புழுதியிலும் பாறையிலும், இரண்டு கைகளுக்கு ஆதரவாக மனிதனின் மிகப் பூர்வகாலக் கருவிகளின்றி வேறெதையும் கொள்ளாமல் இயற்கையோடு முட்டி மோதி, வேறெந்தப் பலனையும் காணாமல் ஒரு வைரத்தின் உறுதியைப் பெற்றுவிட்ட உடல். கறுத்து மென்மையை இழந்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு பாதுகாப்பான முரட்டுத் தோலை வாழ்க்கைப் போரில் கிடைத்த மற்றொரு சிறு வித்தாகக் கொண்டுவிட்ட உடல். அவ்வுடலில் இயற்கைக்கு மாறாக, ஆங்காங்கு கைகளிலும், புயத்திலும், விலாப்பக்கங்களிலும் தடிப்புகள். மாணிக்கம்போல் உறைந்துவிட்ட கீற்றுகள். ஆங்காங்கே கறுப்பு வரிக்கோடுகள் சில இடங்களில், குறிப்பாக மார்பில் நாலு ஐந்து சென்டிமீட்டர் அகலத்தில் தடயங்கள் இடுப்புக்குக் கீழே அழுக்கடைந்த வேட்டி. உங்களுக்குச் சற்றுக் கூரிய பார்வை இருந்தால், உடலின் முழங்கால்கள் சற்றுப் பருத்து இருப்பதுபோல் வேட்டிக்கு மேலேயும் தெரியும். மேலும் அவை சிறிதும் அசையாமலேயே கிடக்கின்றன.
சூரிய ஒளி ஒரு ரூபாய் அளவுக்கு வட்ட வடிவில் உடலின் கையை எட்டியது. அதன் இயக்கத்தில் ஒரு விளையாட்டுத் தன்மை இருந்தாலும், அதன் முகத்தில் செம்மை, தாமிரத் தகடுபோல் தகித்தது. உடல் கழுத்தை அசைத்தது; கண்களை விழித்தது. ஒரு பெருமூச்சு உடலைக் குலுக்கிற்று. நா வறண்டது. ‘தண்ணீர்!’ உடல் கத்திவிட்டது. உடல் அவனாயிற்று.
”உம்...ண்ணி” அவன் செவிகளுக்குள் ஒலி புகுந்தது. திரும்பிப் பார்த்தான். லாக்கப்பின் கம்பிகளுக்கு அப்பால் ஒரு போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார்.
”அய்யா, கொஞ்சம் தண்ணீ” - உடல் முறையிட்டது.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்த டெலிபோன் மணி அடிக்கடும் போலீஸ்காரர் ஃபோனுக்கு ஓடினார். சிறிது நேரம் ஏதோ பேச்சு. பிறகு போலீஸ்காரர் ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு நாற்காலியில்.  “அய்யா, கொஞ்சம் தண்ணி தாங்கைய்யா. தவிச்சு சாகணும்னு நெனைச்சிருக்கீங்களா?”
”த...யெழி” தடியைச் சுழற்றிக்கொண்டு போலீஸ்காரர், பீடியைத் தூக்கி எறிந்துவிட்டு, நாற்காலியிலிருந்து குதித்து எழுந்தார்.
”மூணு பேர் சீட்டுக் கிளிஞ்சிருக்குமே இன்னிக்கு. அரைமணி நேரம் போயிருந்தா உன்னை எவன் போய் எப்படிக் கண்டுபிடிச்சிருப்பான்? சந்தை நாள் வேறே....! நீ என்ன மாமூல்வாதியா பிடிச்சிக்கலாம்னு விட்டுட?”
மனிதனுக்கு சுருக்கென்றது. அவன் ஒரு கைதி. தப்பி ஓட முயன்ற கைதி. சட்ட ஒழுங்கு சக்திகளோடு அவன் மோதினான். போதுமான சுதந்திரம் இல்லாமல் அதன் விளைவு இது. நா வறட்சி மறந்துவிட்டது. நினைவு வேலை செய்தது. காலை ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் நடந்த விபரீதம். இரவிலேயே அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்று, டாக்டர் சர்ட்டிபிகேட் எடுத்து லாக்கப்புக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். காலை எட்டு எட்டரைக்குத்தான் எழுந்திருப்பான். சுமார் பத்துப் பன்னிரெண்டு கைதிகளோடு அவனும் ஒருவனாய் போலீஸ் ஸ்டேஷனின் பின்புறத்தில் ஒரு தாழ்வாரத்தில் இருந்ததை உணர்ந்தான். அவர்கள் எல்லாரும் ஏற்கனவே விழித்துக்கொண்டு விட்டவர்கள். ஸ்டேஷனுக்குள் ஏழெட்டு போலீஸ்காரர்கள் நடமாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களில் இருப்பவர் வெளியே போவதும், வெளியிலிருந்து புதுப் போலீஸ்காரர்கள் வருவதும், உடைகள் மாற்றிக்கொள்வதும், பீடி சிகரெட் பிடிப்பதும், சமயங்களில் கலகலப்பாகவும், சமயங்களில் ஏதாவது ஒன்றைக் கடிந்தும், பொதுவாக உரக்கப் பேசியவர்களாகவும் சிரித்தவர்களாகவும் இருந்தனர். அவன் தன்னைச் சுற்றியிருந்த கைதிகளைப் பார்த்தபோது அவர்கள் அனைவருமே தமக்குள்ளோ, வெளியிலிருந்து வந்தவர்களோடோ, போலீஸ் அதிகாரிகளோடோ பேசியவண்ணமும் சமயங்களில் தர்க்கித்தவண்ணமும் இருந்தனர். தாழ்வாரத்தில் இருந்த பெரிய தொட்டி நிறைய தண்ணீர் இருந்ததாலும், அதில் தொடர்ந்து தண்ணீர் பைப்புகளின் வழியே கொட்டிக்கொண்டிருந்தாலும், கைதிகளும் போலீஸ்காரரும் சற்றுச் சிறுக விலகி நின்று பல் விளக்குவதும், கழுவுவதும், பலகாரங்கள் உண்டுவிட்டு வாய் கழுவிக்கொள்வதுமாய் இருந்தனர். அவனுக்கு அவர்கள் மீது சற்றுப் பொறாமை ஏற்பட்டது. ஆனால் அது இன்னும் தணியாத போதையின் விளைவு. இயற்கையில் அவனுக்குப் பொறுமை கிடையாது. தரித்திருத்தலுக்கு, அவனைப் பொறுத்தமட்டில் அது ஒரு அவசியப் பண்பு அல்ல.
தாழ்வாரத்தில் ஒரு வேயப்பட்டிருந்த பகுதியில் ஒரு சுவரோரம் சுருண்டு கிடந்த அவன் எழுந்து உட்கார்ந்ததும் விருட்டென்று எழுந்து தாழ்வாரத்தையும், போலீஸ் ஸ்டேஷனையும் பிரிக்கும் நிலைக்கு வந்து நின்றான். வெளியே கலகலப்பான நகரம், கலகலப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் நிலையைக் கடந்து ஸ்டேஷனுக்குள் காலெடுத்து வைத்தான். காலி கிளாஸ் டம்ளர்களைக் கொண்ட தேநீர் ஏந்தலோடு ஒரு சிறுவன் அவனை இடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனைக் கடந்து வெளியே சென்றான். சிறுவனுடைய கால்களையே அவனுடைய கால்களும் பின்பற்றிச் சென்றன. அவனையோ சிறுவனையோ யாரும் தடுக்கவில்லை. B-4 காவல் நிலையத்தை விட்டு அவன் தப்பி விட்டான். சிறுவயதில் கள்ளத்தனமாகக் கருதைக் கசக்கி மடியில் போட்டுக்கொண்டு, ஏதாவது சிறு ஓசை கேட்டாலும், அந்தப்புறம் இந்தப்புறம் திரும்பாது காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அம்பு போல ஓட்டம் என்று சொல்ல முடியாதபடி வேகமாக நடப்பானே அப்படியே நடந்தான். பிறகு...? ஒரு கை அவன் தோளைப் பற்றியது, அவன் ஓடியது, ஒரு லாரியில் முட்டிக்கொண்டது, பிடிபட்டது, உதைபட்டது, கட்டுப்பட்டது, ஸ்டேஷனுக்கு இழுத்து வரப்பட்டது, லத்தியால், பெல்ட்டால், பூட்ஸ் காலால் நையப் புடைக்கப்பட்டது. இறுதியில் அவன் பிடிபட்டிருக்காவிட்டால் வேலை இழந்திருக்கக்கூடிய இரண்டு போலீஸ்காரர்கள் மல்லாந்து கிடந்த அவனை முழங்கால்களில் லத்திகளால் தாக்கியது. அத்தனையும் அவனது நினைவு எல்லைக்கு வெளியேயே நின்றுகொண்டு உள்ளே வர இடம் இல்லாததுபோல் தவித்தது.
அவனுக்குப் பேச வேண்டும்போல் மட்டும் இருந்தது.
“அய்யா, தண்ணி தாங்கய்யா” என்று மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தினான்.
“தண்ணியா... தர்றேன்” என்று சொல்லிக்கொண்டு அப்போது டியூட்டியில் இருந்த ஒரே அதிகாரியான அவர் சிறிதும் சிரமத்தைப் பொருட்படுத்தாது மிகவும் சுறுசுறுப்பாக தாழ்வாரத்துக்குச் சென்று ஒரு வாளி தண்ணீரைக் கொண்டுவந்து அவன் முகத்திலும் உடலிலும் வாரியிறைத்தார். ஒரு சில இடங்களில் சற்று எரிந்தாலும், தண்ணீர் வரவேற்கத் தக்கதாகவே இருந்தது அவனுக்கு.
“என்ன ஏட்டையா, யாருக்குக் குளியல்?” என்று கேட்டுக்கொண்டே ஒரு வாலிப போலீஸ்காரன் வந்தான்.
“காலேலே எஸ்கேப் ஆனாரு இல்லே. அவருக்குத்தான்.”
“இந்தத் தா... தானா?” வாலிப போலீஸ்காரன் லாக்கப்புக்குள் இருந்த கைதியை உற்றுப் பார்த்தபடி பெல்ட்டை அவிழ்த்தான். “ஏட்டையா கொஞ்சம், லாக்கப்பை தெறந்து விடுங்க” இளைஞன் உத்தரவிடுவதுபோல பேசினான்.
“நீ ஒண்ணு சந்தானம். பயலெ நல்லா நெறுக்கிப் போட்டாங்க. சாவக் கெடக்கறான். தண்ணி தண்ணீனு அலர்றான்.”
”தா.. மூணு குடும்பத்தோரை நடுத்தெருவிலே நிறுத்தி இருப்பான். நீங்க கதவெத் தெறங்க ஏட்டையா”
ஏட்டையா சாவியைக் கொடுத்தார். கைதி அப்படி இப்படி அசையாமல் இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். முகம் மட்டும் திறந்த கதவின் பக்கம் திரும்பியது. அவ்வளவுதான், கண்ணைச் சேர்த்து தோல்பெல்ட்டால் ஒரு சவுக்கடி. கைதிக்கு ஜாக்கிரதை உணர்வு மேலோங்கியது. கண்களை மூடிக்கொண்டு, இலேசாகப் பற்களை நெறித்தவண்ணம் அசைவற்றுக் கிடந்தான். அப்பப்பா, முழங்கால்களில் அப்படி ஒரு திடீர் வலி. இரண்டு கைகளையும் தூக்கவோ திருப்பவோ முடியவில்லை. அடி பெறாத மணிக்கட்டு இருந்த இடது கையை வேண்டுமானால் சிறிது அசைக்கலாம். முகத்திலும், கழுத்திலும், தோள்பட்டைகளிலும் மாறி மாறி அடிகள் விழுந்தன. முகத்தில் எச்சில் விழுந்தது. எதற்கும் அவன் அசையவில்லை. இறுதியில் முழங்கால்களில் ஒரு முரட்டுத்தனமான அடி. “அய்யோ, அய்யோ” என்று அலறினான். மூடிய கண்களைப் பொத்துக்கொண்டு கண்ணீர் வந்தது. கைதியை கதற வைத்துவிட்ட திருப்தியோடு போலீஸ் இளைஞன் பெல்ட்டை இடுப்பில் கட்டிக் கொண்டான்.
இன்னும் ஒருவன் வர வேண்டியிருந்தது கைதிக்குத் தெரியாது. வேலை இழந்திருக்கக்கூடிய மூவரில் இருவர்தான் அவனைப் பார்த்துவிட்டுப் போயிருக்கின்றனர். மூன்றாமவன் நாற்பது வயதாகியிருந்த ’டூ நாட் சிக்ஸ்’ அதிகம் வம்பு தும்புகளுக்குச் செல்லமாட்டார். அவரிடம் ஒரு எலக்ட்ரிஷன் சர்ட்டிபிகேட் ஏ கிரேடோ, பி கிரேடோ தெரியாது. இருந்தததால் மேல் வரும்படியை  நியாயமான முறையிலேயே சம்பாதித்தார். லஞ்சம் கையூட்டு இவற்றை எல்லாம் அவரைப் பொறுத்தமட்டில் அனுமதிக்க மாட்டார். இத்தியாதி தர்மங்களை பின்பற்றுபவரை இகழவும் மாட்டார். காட்டியும் கொடுக்கமாட்டார். அநேகமாகப் பிறரைப் பற்றி வாயைத் திறக்கமாட்டார். ஒரு பிளாக் மார்க் இல்லாது இருபது வருஷ போலீஸ் சர்வீசை முடித்துவிட்டார். இன்றுதான் இந்தச் சோதனை.
அடி, உதை, அவமானம். இன்னும் குறையாத போதை. இத்தனைக்கும் கீழே ஒரு வகையான விகாரமற்ற அமைதி. இத்தனையையும் பொறுத்துக் கொண்டு விட்டோமே என்ற உள்ளார்ந்த எக்களிப்பு. இவற்றின் விளைவால் உறங்கிக்கொண்டிருந்தான் கைதி. லாக்கப்பில் கதவு திறந்து கிடந்ததோ, அதனுள் ’டூ நாட் சிக்ஸ்’ நுழைந்ததோ, அவனை ஏற இறங்கப் பார்த்ததோ, இலேசாகக் காலால் உதைத்ததையோ அவன் உணரவில்லை. அசையாது கிடந்த உடலை உற்று நோக்கிவிட்டு அவன் முகவாயை உற்றுக் குனிந்து இரண்டு கைகளாலும் பற்றி இழுத்தார் ‘டூ நாட் சிக்ஸ்’. உடல் பக்கவாட்டில் சலனமின்றி நேராக நகர்ந்தது. ‘டூ நாட் சிக்ஸ்” அந்த உடல் கிடக்கும் நிலையும், திசையும் ஏதோ முக்கியத்துவம் பெற்றிருப்பதுபோல பார்த்தார். அமைதியாக அவர், உடலை ஒருமுறை சுற்றி வந்தவண்ணமே தன்னுடைய கூர்மையான பார்வையால் அதன் பல பாகங்களையும் உற்று நோக்கினார். பிறகு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
கைதியின் உடல், நீண்டநேரம் தன்னைத்தானே உணர்வுகளின் சீண்டல்களிலிருந்தும், வெறித்தாக்குதல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. விரைவில், உடல் வெருண்டு இறுகியது. அது தனித்தனிப் பகுதிகளாகத் துடித்தது. உடலின் ஒவ்வொரு மூலையிடுக்கிலும் அப்படி ஒரு தாக்குதல்; நரம்புகளைச் சுண்டி இழுத்து தன் இச்சைப்படி செயல்படாதவாறு முடக்கிவிடும். சொடுக்கு சதைகளைக் கவ்விக்கொள்ளும். நட்டுவாய்க்காலியின் பிடி இருதயத்தைப் பந்துபோல் துள்ள வைக்கும் திகைப்பு. காதுகளிலே ஒரு அடைப்பு. கண்களை திறக்கவொட்டாது தடுக்கும் சதை இழுப்பு. தொண்டையின் ஆழத்திலிருந்து “தண்ணி, தண்ணி” என்பதுபோல் உறுமல், வாயில் நுரையைத் தள்ளிக்கொண்டு பீறிட்டு வந்தது. ‘டூ நாட் சிக்ஸ்’ அதையெல்லாம் முகம் திரும்பிப் பார்க்கவில்லை. சுவிட்ச்சை மட்டும் ஆஃப் செய்தார். தனக்கு போலீஸ் டியூட்டி இல்லாத நேரங்களில் மிகவும் கௌரவமான முறையில் மேல் வருமானம் வாங்கிக் கொடுத்த அவருடைய எலக்ட்ரிக் ஞானம், அவ்வப்போது போலீஸ் ஸ்டேஷன்களில் மின்சாரச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை உடனே கவனிக்கும் ஆற்றலால் அவருக்கு ஸ்டேஷனில் மரியாதையும் மதிப்பும் வாங்கிக் கொடுத்த அதே மின்னறிவு, இன்று தப்பியோட முயன்று தன்னை அவமானத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய கைதியைப் பழி தீர்த்துக்கொள்வதிலும் அவருக்கு உதவியதில் நம்பர் டூ நாட் சிக்ஸுக்கு உண்மையிலேயே மிகவும் உள்ளடங்கிய மகிழ்ச்சி.
*********
தட்டச்சு : சென்ஷி

Apr 3, 2010

நாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன்

நாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி..

கோவிலில் நின்றுகொண்டிருந்தான் அவன். அவன் பார்த்துக் கொண்டிருந்த சிலையின் முகத்தில் அம்மாவின் களை தட்டிற்று. முகம் அவனைப் பார்த்து ஒரு விதமாகச் சிரித்தது; கண்களில் துளிர்த்த நீரைப் பார்த்தால் அழுவது போலவும் இருந்தது. சிலையின் மார்பிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வழிந்து தரையில் பொத்தென்று விழுந்தது. ஆனால் மறுகணம் அதே ஒலி ஒரு ‘கேப்’ துப்பாக்கிபோல் அவன் காதுகளில் வெடித்தது. மூடிய கண்களுக்குள் ஒரு பிரகாசம். கந்தன் புரண்டு படுத்தான். மீனாவைgnagarajan அணைக்க வலது கையை இடதுபுறம் திருப்பினான். மீனா இல்லை. நினைவு வந்துவிட்டது. இலேசாகக் கண்களைத் திறந்து படுத்தபடியே நகர்ந்து திறந்திருந்த கதவைக் காலால் உதைத்தான். குடிசையினுள் இருந்த வெளிச்சம் குறைந்தது. பேச்சி வீட்டுக்குத்தான் மீனா போயிருக்கும். இந்தப் பேச்சி என்ன பொம்பளே ? மாரிப்பய போயி மூணு வருஷத்துக்கும் மேலே ஆவுது. இட்டிலி சுட்டு வித்திட்டிருக்கு. அதிலே என்ன கெடைக்கும் ? ஆமாம், பேச்சி இட்டிலி சுட்டு விற்றாள்; மீனா அவனோடு இருந்தாள்.

மீண்டும் தூக்கம் வருவதாக இல்லை. படுத்தபடியே பிரயாசைப் பட்டு அரையளவுக்கு மூடி இருந்த கதவைக் காலாலே திறந்தான் கந்தன். குடிசையை ஒட்டி ஓடிய சாக்கடை ஓரம் முனிசிபல் தோட்டி தெருவைக் கூட்டிக்கொண்டிருந்தான். மணி ஏளுதான் இருக்கும். இன்னும் ரெண்டு மணி போகணும். ஒரு கையைத் தரையில் ஊன்றிக் கால்களை நீட்டியவாறே எழுந்து உட்கார முயன்றான் கந்தன். முதுகை வளைக்க முடியவில்லை; அப்படி வலி. “அம்மா” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே, முதுகை ஒரு மாதிரி நெளித்து எழுந்து உட்கார்ந்தான். கால்கள் நீட்டிக் கிடந்தன; இரண்டு கைகளும் பின்புறமாகத் தரையில் ஊன்றியிருந் தன. நேத்து அந்த வெறும் பயலுக்கு ஊத்தின முன்னூறு மில்லியை யாவது வச்சிட்டிருந்திருக்கலாம்; முளிச்ச நேரத்துலே போட்டா கொஞ்சம் தெம்பா இருக்கும். ஆமா, இது குடிக்கிறதுனாலே வர்ற வியாதியில்லே; குடியாததனாலே வர்ற வியாதி. வெறகுக் கடைக்குப் போகலாம்; ஜிஞ்சராவது கெடைக்கும். கஷ்டப்பட்டு ஒரு கையால் தலையணையைத் தூக்கிப் பார்த்தான். கை சொன்னபடி கேட்க வில்லை; தலையணையை இலேசாகத் தள்ளிவிட்டுத் தந்தி அடிக்க ஆரம்பித்தது. மீண்டும் கையைத் தரையில் ஊன்றிக்கொண்டான். தேவைப்படாத ஒரு ஏப்பம். அதைத் தொடர்ந்து குமட்டல். குமட்ட லோடு இருமல். விலா எலும்புகள் முறிவதுபோல் இருந்தது. வாயி லிருந்து ஐம்பது மில்லி கோழை வழிந்து பனியனை நனைத்த பிறகு சிறிது நிம்மதி. சிறிது தெம்புங்கூட. வீராப்போடு ஒரு கையால் தலையணையைப் புரட்டினான். அதன் கீழ் ஒரு அழுக்கு இரண்டு ரூபாய்த்தாள் கிடந்தது. இன்னும் கா ரூபா வேணுமே! எங்காச்சும் வச்சிருக்கும். மீண்டும் அதே வீராப்போடு எழுந்து நின்றான். வேட்டி நழுவவும், அதைச் சரிப்படுத்த முயலுகையில் தடுமாறி, இடது கைக்குப் பட்ட சுவரின் மீது தாங்கிக்கொள்ள முயன்றான். பிடி நிலைக்காது கீழே சரிந்தான். “அடத். . .” என்று வைதுகொண்டே, மீண்டும் சக்தி வரும் என்ற நம்பிக்கையோடு கண்களை மூடினான்.

“சாருக்கு எங்கே தங்கல் ?”

“ஸ்ரீ வள்ளி லாட்ஜ்.”

“ரூம் நம்பர் ?”

“பனிரெண்டு.”

எங்கிட்டோ பறந்துட்டு, எங்கிட்டோ நின்ன மாதிரி இருக்கு. கேப் துப்பாக்கி கணக்கா காதுலே வெடிக்குது. கண் கூசுது. கந்தன் கண்களைத் திறந்து பார்த்தான். காற்றில் நெளி நெளியாக உருவங்கள் அசைகின்றன. அலையலையாகச் சுழிக்கின்றன. இப்போதெல்லாம் அவற்றைக் கண்டு அவன் பயப்பட்டுக் கண்களை மூடாமல் மட்டும் இருந்தால் அவை தாமாகக் கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடும்.

உதறிக்கொண்டு சுவரோரமாக எழுந்து உட்கார்ந்தான். மீண்டும் ஒரு கணத்துக்குக் கம்பி கம்பியாகச் சுழலும் அதே வடிவங்கள். எழுந்து நின்று, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுத் தன்னிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டான். இனி கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று அவனுக்குப் பட்டது. கால்கள்தான் கொஞ்சம் நடுங்கின, கடுத்தன. மெதுவாக நடந்து, மீனா சில்லரைக் காசுகள் வைக்கும் பிறையைத் துளாவினான். ஓரிரு எலிப் புழுக்கைகள் கைக்குப் பட்டன. எரிச்சலோடு கீழே உட்கார்ந்து, மீனாவின் துருப்பிடித்த துணி வைக்கும் பெட்டியைத் திறந்தான். அழுக்குத் துணிகளையும், தோய்த்து உலர்த்திய துணிகளையும் உதறி உதறி வெளியே எறிந்தான். அவ்வாறு எறியும்போது பெட்டியின் அடியிலிருந்து கரமுரவென்று ஒலி வெளிப்பட்டது. ஆவலோடு துணிகளைக் காலி செய்தான். பெட்டியின் அடியில் பெரிசும் சிறிசுமாக ஐந்தாறு காலிக் கண் ணாடிப் புட்டிகள் கிடந்தன. திடாரென்று அறை இருண்டது. பதறிப் போய் வாசற்பக்கம் திரும்பினான் கந்தன். பெட்டியின் மூடி ‘கிரீச்’சென்று கத்திக்கொண்டே அவன் கைகள் மீது விழுந்தது. “என்ன மச்சான், இப்படி பயந்துட்டாங்க ?” என்றாள் குடிசை வாயில் நிலையை இரண்டு கைகளாலும் பற்றி நின்றுகொண்டிருந்த மூக்கனின் மனைவி.

“இல்லே, மீனா பெட்டியே கள்ளத்தனமாத் துளாவிட்டிருக்கேன். அதுதான் வந்திரிச்சோன்னு பயம்.” கந்தன் சாவதானமாக உட்கார்ந்து கொண்டான். அவன் முகத்தில் இப்போது கொஞ்சம் மலர்ச்சி. “ஏன் அங்கேயே நிக்கறே ?” என்று மூக்கனின் மனைவியை உபசரித்தான்.

தலையில் பூவோடு, சற்றுப் புதிது என்று சொல்லக்கூடிய சேலை ரவிக்கையோடு, காலில் மெட்டி ஒலிக்க, மூக்கனின் மனைவி தனது முப்பத்தெட்டு ஆண்டுகளையும் பதினெட்டாக மாற்றிக்கொண்டு உள்ளே நடந்து வந்தாள். சட்டென்று குனிந்து, பாயிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக் கைக்குள் மறைத்து, இரண்டு கைகளையும் லாவண்யமாக இடுப்பில் அழுத்தி வலது காலை நொண்டுவதுபோல் வைத்து நின்றபடியே கொல்லென்று கந்தனைப் பார்த்துச் சிரித்தாள் அவள். கந்தன் அவளை ஆவலோடு பார்த்தபடியே “ரொம்ப அளகாச் சிரிக்கறயே ?” என்றான். “என் அளகுச் சிரிப்புக்குத்தானே இந்த அம்பளிப்பு இல்லையா ?” என்று கூறிக்கொண்டே, கையில் இருந்த ஒரு அழுக்கு இரண்டு ரூபாய்த் தாளை அவள் காட்டினாள்.

“அய்யோ, எம்பணம். இன்னைக்கு காலைக்கு அதுதான்” என்று கதறிக்கொண்டு கந்தன் அவளிடமிருந்த பணத்தைப் பிடுங்க எழுந் தான். அவள் சிரித்துக்கொண்டே அவன் மீது பணத்தை வீசியெறிய வும், அது சரியாக அவன் கைகளில் விழுந்தது.

“சரி உக்காரு, பேசுவோம்” என்றான் கந்தன்.

“ஏம் மச்சான், இப்படிக் கால் நடுங்குது ?” என்று கேட்டுக் கொண்டே அவள் உட்கார்ந்தாள்.

“அது அப்படித்தான் செல சமயம். மூக்கன் என்ன சவாரிக்குப் போயிருக்கா ?”

“ஆமாம், பொழுது சாஞ்சுதான் வரும்.”

“இல்லே, ஒன்னு தோணிச்சு. நேத்து ஒரு கிராக்கி, கொஞ்சம் வயசு கூடவானாலும் பரவாயில்லே, உம்னு இல்லாம சிரிச்சுப் பிடிச்சி விளையாடற பிள்ளையா இருந்தா வேணூம்னான். எனக்கு ஒன் நெனைப்புத்தான் வந்திச்சு.”

“போங்க மச்சான், என்னமோ காரியமா பேசுறீங்க, எனக்குத் தெரியாதா ?” என்று கூறிவிட்டு, பிறகு ஏதோ நினைவுக்கு வந்துவிட் டது போல் சிரிக்கத் தொடங்கினாள். “மச்சானோடே எப்பவும் ஒரே கூத்துத்தான்” என்பதையும் சேர்த்துக்கொண்டு, சிரித்தவண் ணமே, ஒரு கையால் தலைப்பூவைச் சரி செய்துகொள்ளப் பார்த்தாள். அவள் சிரித்த சிரிப்பில் பூவும் கலைந்து அவளது காதின் பின்னே ஏதோ வால் மாதிரி தொங்கிக்கொண்டிருந்தது.

“நீயும் அளகாத்தான் இருக்கே. இல்லாட்டி மூக்கன் கட்டியிருப் பானா ?” என்றான் கந்தன்.

“அதான் அண்ணைக்கு, நீ கொரங்கு மாதிரி இருக்கே, ஒங்கிட்ட எவன் வருவான்னு சொன்னேயாக்கும் ?”

“வெறிச்சிலே சொல்லியிருப்பேன்.”

“இப்ப ?”

“குடிக்கலேயே.”

“குடிச்சா ஆம்புளேங்களுக்கு கெளவிகூடக் கொமரி மாதிரி தெரியூம்னு சொல்வாங்க.”

“ஆமா.”

“அப்ப என்னெ மட்டும் குடிலே நீ ஏன் கொரங்குமாதிரி இருக்கேன்னே ?”

“அதுவா ? உண்மை என்ன தெரியுமா ? மூக்கனுக்கும் எனக்கும் பத்து வருசப் பளக்கம். நான் அவனுக்குத் துரோகம் பண்ணலாமா ?”

“மீனா மட்டும் என்னவாம் ? அதுக்கும் கண்ணாலமாயித்தானே இருக்கு ?”

“ஆமாம். ஆனா நா சம்மதிக்கிறேன், அது போகுது. மூக்கன் சம்மதிப்பானா ?’

கந்தனை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே இலேசான புன்னகை யோடு, “தெரியாமத்தானே செய்யப்போறோம்” என்றாள் அவள். இதற்கும் உடனேயே கந்தன் ஏதாவது சமாளிப்புச் சொல்லி விடுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் கொஞ்சம் யோசனையில் இருந்துவிட்டு கந்தன், “உம், நீ சொல்றதும் சரிதான். ஒனக்கும் ஆசை இருக்காதா ?” என்றான்.

“ஏதோ சிரிச்சுப் பேசி விளையாடற பிள்ளையா வேணூம்னுட்டு ஒரு கிராக்கி சொல்லிச்சீன்னியே” என்று தனது வெற்றிக்கு முத் தாய்ப்புத் தேட முனைந்தாள் மூக்கனின் மனைவி.

“அந்தக் கிராக்கி எங்கேயும் ஓடிடாது. காலேலே எட்டு, ஒம்பது மணிக்கு அந்த அய்யர் சந்தக் கடைக்கிக் கறிகாய் வாங்க வருவாரு. அவரே நாளைக்கே பார்த்திடலாம். . . சரி மோகனா, நான் இப்ப வெளியே போகணும். ஒரு மூணு அவுன்ஸ் ஜிஞ்சர் அடிச்சாத்தான் எதுவும் செய்ய முடியும். கைலே ரெண்டு ரூபாதான் இருக்கு. ஒரு அரை ரூபா தா, பெறகு அட்ஜஸ்டு பண்ணிக்கலாம்.”

“அது யாரு மோகனா, மச்சான் ?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் மூக்கனின் மனைவி.

“நீதான் மோகனா. மூக்கனுக்கு மட்டுந்தான் நீ இனிமே ராக்காயி; மத்தவங்களுக்கெல்லாம் நீ மோகனாதான்” என்றான் கந்தன்.

“மோகனா” என்று இழுத்துக் கூறிவிட்டு, இரண்டு கைகளாலும் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, ஏதோ மறந்தது நினைவுக்கு வந்து விட்டதுபோல் சிரிக்க ஆரம்பித்தாள் மோகனா என்ற ராக்காயி.

“ஆமா, நான் கேட்டது என்ன ?” என்றான் கந்தன். சரியாக உட்கார்ந்து கொண்டு இடுப்பு முடிச்சை அவிழ்த்து, அதிலிருந்து எதையோ எடுத்து அதைக் கந்தன் கைக்குள் பெருமையோடு திணித்துவிட்டு, “என் கையிருப்பே இவ்வளவுதான்” என்றாள் ராக்காயி. கையில் திணிக்கப்பட்டது கேவலம் ஐந்து காசே என்றதைக் கண்டதும் கந்தனுக்கு அவளை அப்படியே கழுத்தை நெறித்துக் கொன்றுவிடலாமா என்றிருந்தது. அடுத்த நிமிடம் சட்டென்று திரும்பி மீனாவின் பெட்டியிலிருந்த காலிபாட்டில்களை எடுத்து மோகனா வின் முன் வைத்தான்.

“இந்தா மோகனா, இதெயெல்லாம் இந்த முக்கு ராவுத்தர் கடேலே போட்டுட்டு வா” என்றான்.

“நல்ல ஐடியாதான். மச்சானுக்கும் மூளே வேலை செய்யத்தான் செய்யுது” என்று சொல்லிக்கொண்டு, தனது கையால் கந்தனின் கன்னத்தில் செல்லமாகக் குத்திவிட்டு, சப்தம் செய்யாமல் சிரித்துக் கொண்டே, குனிந்து பாட்டில்களை முந்தானையில் சுற்றிக்கொண்டு, “இப்ப வந்திடறேன்” என்று சொல்லிக்கொண்டே நடந்தாள் ராக்காயி.

குடிசையையும் ரோட்டையும் பிரிக்கும் சாக்கடையைக் கடக்க வைக்கப்பட்டிருந்த பலகையின் மீது அவள் நடந்து செல்வதைப் பார்த்ததும் கந்தனது தொடைகள் பலமாக உதறத் தொடங்கின.

“ராக்காயி, ராக்காயி” என்று உரக்கக் கூவினான் கந்தன். அவளும் சட்டென்று ஓடிவந்து, அவனை அடிப்பவள் போலக் கையை ஓங்கி, “மோகனான்னு கூப்பிடு” என்றாள்.

“ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். அந்த சின்ன பாட்டிலே போட வேண்டாம். இந்த ரெண்டு ரூபாவை வச்சிக்க. மத்த பாட் டில்களே கடேலே போட்டிட்டு, அந்த பாட்டில்லே மூணு அவுன்சு ஜிஞ்சர் வாங்கிட்டு வந்திரு.”

“அடியாத்தா! ஜிஞ்சர் கடைக்கெல்லாம் நான் போவமாட்டேன்.”

“நீ ஜிஞ்சர் கடைக்கெல்லாம் ஒண்ணும் போவ வேண்டாம். இந்த மொகணேலே ஒரு வெறகுக் கடை இருக்கில்லே ? அங்கே போய்க் கேளு, தருவாங்க.”

“யாரெக் கேக்க ?”

“மணீன்னு ஒரு பொடியன் இருப்பான், அவனக் கேளு.”

“அவன் இல்லாட்டி ?”

“எல்லாம் இருப்பான். சீக்கிரம் போ” என்றான் கந்தன். ராக்காயி நகர்ந்தாள்.

ராக்காயி திரும்பி வரப் பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று. இதற்கிடை யில் கந்தன் படுப்பதும் எழுந்து உட்காருவதுமாக இருந்தான். தாகமாக இருப்பதுபோல் இருந்தது. ஒரு குவளை தண்ணீர் எடுத்துக் குடிக்குமுன் தலையும் கைகளும் நடுங்கி அவனைப் படாதபாடு படுத்திவிட்டன. இடது கைப்புறத்தில் இருந்த குடிசையில் ஆளரவம் கேட்கத் தொடங்கியது. வலது கைப்புறத்தில் இருந்த குடிசையிலிருந்து இன்னும் சில நாட்களுக்கு ஆளரவமே வராது என்று கந்தனுக்குத் தெரியும். . . பத்து நாட்களுக்கு முன்பு அங்கு குடியிருந்தது நாவித இளைஞன் பரமேஸ்வரனும் அவனது விதவைத் தாயார் லட்சுமியும். பரமேஸ்வரன் அக்கிரகாரம் ஒன்றின் முனையில் இருந்த ஒரு சலூனில் வேலை பார்த்து வந்தான். அந்த அக்கிரகாரத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. நகரிலே இருந்த மிகப் பெரிய இறைச்சிக் கடை அக்கிரகாரத்தில்தான் இருந்தது. கடை முதலாளி பசுபதி சிறுவனாக இருந்தபோது - எல்லாம் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் -அக்கிரகாரத்தின் வழியே ஒரு கூடையில் மீனை வைத்துக் கொண்டு கூவிச் சென்றானாம். அதற்காக அக்கிரகார வாசிகள் அவனைக் கட்டிவைத்து உதைத்தார்கள். ‘இதே அக்கிரகாரத்தில் ஒரு இறைச்சிக் கடையே வைப்பேன்’ என்று பையன் சூளுரைத்து, தன் சூளுரையைப் பத்து வருடங்களுக்கு முன்பாக நிறைவேற்றியும் விட்டான். இப்போது அக்கிரகாரத்தில் உள்ள மிகப் பெரிய வீடு அவனுடையதுதான். பசுபதிக்கு இரண்டு தாரங்கள். முதல் தாரத்துக்கு குழந்தைகள் இல்லை; இரண்டாவது தாரத்துக்கு மூன்று குழந்தைகள். மூத்தது பெண். சற்று அழகானவள் என்று கேள்வி. அந்தப் பெண்ணுக்கு அக்கிரகாரத்தின் கோடியில் ராணி சலூனை நடத்தி வந்த முதலாளி தான் ரோம நாசினி வாங்கித் தருவானாம். அதன் மூலம் சலூனில் வேலை பார்த்த பரமேஸ்வரனுக்கும் அவளுக்கும் தொடர்பு ஏற்பட் டது. பரமேஸ்வரன் ஓரிரண்டு ஆண்டு காலம் விஷயத்தை ரகசியமாக வைத்திருந்தான். சில சமயம் கந்தனிடம் மட்டும் அதைப் பற்றிப் பேசுவான். ‘அம்பு மீக்க கதலா’ என்று தொடங்கும் அவள் எழுதிய காதல் கடிதங்களைக் கந்தனிடம் வாசித்துக் காட்டுவான். சினிமாக் கதைகளில் வருவது போலவே, பசுபதி, மகளின் காதல் விவகாரத்தை உணராது, அவளுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தார். அவளோ பரமேஸ்வரனோடு கள்ளத்தனமாக ஓடிவிடத் திட்டமிட் டாள். அவ்வளவு புத்திசாலிப் பெண் இல்லை. பிடிபட்டுக் கொண் டாள். பரமேஸ்வரனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று ஒருநாள் பூராவும் அடித்து நொறுக்கினார்கள். அந்த ‘அம்பட்டப் பயலை’க் கட்டிப்போடச் சொல்லிவிட்டு, கசாப்புக் கடைக்காரர் பசுபதி தம் கையாலேயே ஒரு சுத்தியலைக் கொண்டு பரமேஸ்வர னின் இரண்டு பற்களை முழுமையாகவும், மற்றுமொன்றைப் பாதி யளவுக்கும் உடைத்தார். இரவில் பரமேஸ்வரனை அவனது குடிசை யில் கொண்டுவந்து போட்டார்கள். அவன் அம்மா பயந்து எங் கேயோ ஓடிவிட்டாள். மறுநாள் காலையில் பரமேஸ்வரன் குடிசை யின் குறுக்கே ஓடிய வலுவான மூங்கில் உத்திரத்தில் பிணைக்கப் பட்டிருந்த கயிற்றில் தொங்கினான். அவன் ஒன்றும் எழுதி வைத்திருக் காததால், பிரேத விசாரணையின்போது ‘வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை’ என்ற முடிவுக்கு வர கந்தன்தான் சாட்சியம் தரவேண்டி இருந்தது.

ராக்காயி வருவது கந்தனுக்குத் தெரிந்தது. சாக்கடையைக் கடக்க உதவிய ‘மரப்பாலத்’தின் மீது நடந்து வந்துகொண்டிருந்தாள். அடுத்த குடிசையிலிருந்து ஒரு குழந்தையின் முனகலும், வேலாயி வீட்டைத் துப்புரவாக்கும் ஒலியும் கேட்டது. ராக்காயி வந்துவிட்டாள். அவளைப் பார்த்ததும் கந்தனுக்கு ஒரு கணம் பகீரென்றது. அவள் கைகளில் ஒன்றுமில்லை - பாட்டில் ? அவள் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, அவன் முன்பு நின்று சிரிக்க முயன் றாள். ஆனால் அவனது முகம் அவளது சிரிப்பை அடக்கியது. “என்ன வெறுங்கையோடு வர்றே ?” என்று அவன் பதறினான். அவள் சிரித்துக் கொண்டே மடியில் மறைத்து வைத்திருந்த ஒரு காகித கார்க்குப் பூட்டிய பாட்டிலை எடுத்து அவன் முன்பு நீட்டினாள்.

“அதெக் கீழே வச்சிட்டு, அந்தக் கிளாசிலே கொஞ்சம் தண்ணி யெடு” என்றான் கந்தன்.

அவள் நகர்ந்து சுவரோரமாக இருந்த ஒரு கிளாசை எடுத்து, பானையைச் சுரண்டி, கொஞ்சம் தண்ணீர் எடுத்துவைத்தாள்.

“சரி போ.”

“மச்சான் குடிக்கறதே நா பாக்கணும்.”

அவள் உட்காரப் போனாள்.

“உம் உம், நீ இங்கே இருக்கக்கூடாது” என்று அவன் கத்தினான்.

“ஏனாம் ?”

“கூடாதுன்னா கூடாது” என்று கந்தன் பல்லை நெறித்தான். அவ னது உடல் படபடத்து நடுங்கிற்று.

ராக்காயி பயந்துவிட்டாள்.

“என்ன இப்படி வெறி ? நான் பெறவுக்கு வர்றேன்” என்று கூறிக் கொண்டே குடிசையை விட்டகன்றாள்.

நடுங்கிய கையோடு கந்தன் பாட்டிலை கிளாசில் காலி செய்தான். இலேசாக மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த திரவத்தைப் பார்க்கும் போது, அவனுக்கு ஒருபுறம் குமட்டல்; மறுபுறம் ஆசை, ஆவல். திரவத்தை எடுத்துக் குடிக்க கிளாசை வலது கையால் எடுக்க முயன் றான். கை உதறிற்று. இரண்டு கைகளாலும் எடுத்தான். கிளாசை உயர்த்தியபோது, இரண்டு கைகளும் உதற ஆரம்பித்தன. நடுங்கும் கிளாசிலிருந்து திரவம் தளும்பிக் கொட்டிவிடுமோ என்ற பயம் வேறு. அதை ஒரு நிலையில் நிறுத்தி, தன் தலையைக் குனிந்து, கிளா சின் விளிம்பை வாயின் இரு ஓரங்களிலும் வைத்தழுத்தி, ஒரு வெறியோடு ஒரே மடக்காகத் திரவத்தைக் காலி செய்தான். திரவத்தை விழுங்கியதும், அவன் வாயிலிருந்தும் வயிற்றிலிருந்தும் ஒரு ஏப்பம் வெடித்தது. வாயை இறுக மூடி, வாயிலிருந்த உமிழ்நீரைக் கூட்டி விழுங்கிக்கொண்டான்.

தொடர்ந்து இரண்டு சிகரெட்டுகள் புகைத்து முடித்தான் கந்தன். வேலாயி வீட்டுக் குழந்தை அழ ஆரம்பித்தது.

“அக்கா, குழந்தை என்ன அழுகுது, வயித்து வலியா என்ன ?” என்று உரக்கக் கூவினான்.

“வயித்து வலி ஒண்ணுமில்லே, எல்லாம் வாய் வலிதான்” என்றாள் அடுத்த குடிசை வேலாயி.

“மச்சான் வேலைக்குப் போயிரிச்சா ?”

“இல்லே, சங்கத்துக்குப் போயிருக்காரு.”

“ஆமா அக்கா, முன்னெல்லாம் ராமு மச்சான் சங்கத்துக்குப் போனா சண்டை போடுவீங்களே, இப்பல்லாம் சண்டை போடற தில்லையா ?”

அடுத்த குடிசையிலிருந்து பதில் இல்லை.

“என்ன அக்கா, பதில் பேச மாட்டேங்கறீங்க ? சங்கம் கிங்கம் இருந்தாத்தான் சரீனு படுது.”

அடுத்த குடிசையிலிருந்து மீண்டும் பதில் இல்லை. வேலாயி வீட்டு வேலையில் மும்முரமாக இருந்ததாகப் பட்டது கந்தனுக்கு. எழுந்து நின்று, கைகளை முறித்துவிட்டு இன்னும் இரண்டு அவுன்சு வேண் டும் என்று நினைத்துக்கொண்டான்.

கொஞ்சம் தயக்கத்தோடே, “வேலாயி அக்கா” என்று கூவினான்.

“என்ன தம்பீ” என்று பதில் வந்தது.

“ஜீவாவை இங்கே கொஞ்சம் அனுப்பி வைங்க.”

“இந்தா சீவா, சீவா எழுந்திரு. அடுத்த வீட்டுக் கந்தன் கூப்பிடுது. என்னன்னு கேட்டுட்டு வா.”

சிறிது நேரத்தில் அரைகுறைத் தூக்கத்தோடு, பாவாடையும் சட்டையும் அணிந்த பத்து வயதுச் சிறுமி ஒருத்தி கந்தன் முன் வந்து நின்றாள்.

“இட்லிக்காரப் பேச்சி வீட்டு வாசல்லே மீனா அக்கா இருக்கும். நான் சொன்னேன்னுட்டுக் கூட்டியா” என்றான் கந்தன். ஜீவா இலேசாகச் சிரித்துக்கொண்டே, ராக்காயி தரையில் வைத்துவிட்டுச் சென்றிருந்த பதினைந்து காசுச் சில்லரையைப் பார்த்துக்கொண்டு நின்றது. கந்தன் ஒரு ஐந்து காசை எடுத்து அவள் கையில் திணித்தான். ஒன்றும் சொல்லாது காசை வாங்கிக்கொண்டு அசமந்தமாகக் குடிசையை விட்டகன்றது குழந்தை.

ஜீவாவுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்து ஏற்பட்டது. தெருவிலே விறகுக் கடை அருகே ஒரு லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்தாள். லாரி இலேசாகப் பின்னே நகர்ந்து அவளை இடித்துத் தள்ளியது. ஜீவாவுக்கு வெளியே ஒரு காயமும் ஏற்பட வில்லை. ஆனால் மயக்கமுற்றுக் கிடந்தாள். வீட்டுக்குத் தூக்கி வந்தார்கள். ஹோமியோபதி சர்ட்டிபிகேட்டோடு அலோபதி வைத்தி யம் செய்யும் டாக்டர் வந்து ஊசி போட்டார். அரைமணி நேரம் வாயை இலேசாகப் பிளந்து பெருமூச்சு விட்டவாறே அசைவற்றுக் கிடந்தாள். பிறகு அசைய ஆரம்பித்தாள். கண்களைத் திறப்பதற்கு முன்னால், உதடுகளை வேகமாகத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள். அவள் ஏதோ பேசுவது போல் சிறிது நேரத்தில் ஒலியும் கேட்டது. என்ன சொல்லுகிறாள் என்று எல்லோரும் உற்றுக் கேட்டனர். அவள் வாயிலிருந்து உருப்படியான வார்த்தைகள் எதுவும் வரவில்லை. மாறாக, ‘கபே, கபே’ என்ற ஒலிகள் மட்டும் மாறிமாறி வந்துகொண்டி ருந்தன. வேலாயியும் ராமுவும் அவளை உலுப்பினர். அவள் கண் களைத் திறந்தாள். ஆனாலும் தொடர்ந்து ‘கபே, கபே’ என்று உளறிக்கொண்டிருந்தாள். அவளை எழுப்பி உட்கார வைத்தனர். அவளைச் சுற்றியிருந்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘கபே, கபே’ என்று சொல்லிக்கொண்டே, கைகளை அசைத்து அவர்களிடம் பேசுவதாகப் பாவனை செய்தாள். ஒவ்வொருவரிடத்தும் இவ்வளவு நேரம்தான் பேசவேண்டும் என்ற நியதிக்குக் கட்டுப்பட்டவள்போல் சுற்றியிருந்த ஒவ்வொருவருக்கும் ‘கபே, கபே’யை அளந்து கொட்டி னாள். இடையிடையே சிரித்துக்கொண்டாள்.

“அடி மாரியாத்தா” என்று கத்திவிட்டு, தலையில் அடித்துக் கொண்டு வேலாயி அழுதாள். ராமு மகளை மடியில் வைத்துக் கொண்டு வலது கையால் அவளது வாயை மூடப்பார்த்தான். ‘கபே, கபே’ தொடர்ந்தது. ராமு சற்று பலத்தோடு அவளது வாயை மூட முயலவும், மூச்சு முட்டித் திணறுவதுபோல், தன் கையால் அவன் கையை வெறியோடு பிடுங்கி எறிந்துவிட்டு, அவனைத் திட்டுவது போல் கோபத்தோடு அவனிடத்தும் ‘கபே, கபே’யை அவள் உமிழ்ந் தாள். வேலாயி, ராமு இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு எல்லாம் சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர். சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாதவர்கள், ‘முட்டிக் கொண்டு வரும்போது’ ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஓடுவதுபோல், பல்லைக் கடித்துக்கொண்டோ, கையால் வாயை மூடிக்கொண்டோ, குடிசையை விட்டுப் பாய்ந்து வெளியே ஓடினர்.

ஜீவாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இருக்கிறதா என்று பார்த்தார்கள். இருந்தது. எழுத்திருக்கச் சொன்னால் எழுந்திருந்தாள். ஒரு இடத் துக்குப் போகச் சொன்னால் போனாள். ஆனால் ‘கபே, கபே’ மட்டும் நிற்கவில்லை. எழுந்தாலும் நடந்தாலும் ஓடினாலும் குனிந்தா லும் நிமிர்ந்தாலும் ‘கபே, கபே’ தொடர்ந்தது. யாரைப் பார்த்தாலும் அவர் முன்பு நின்று ‘கபே, கபே’ கச்சேரியை நடத்தினாள். சமயத்தில் அவள் மிக வேகமாக ஏதோ பேசிக்கொண்டிருப்பது மாதிரிதான் தெரியும்; உற்றுக் கவனித்தால் தான் உளறுவது விளங்கும். குடிசையில் தனியாக அவளை அடைத்துப் போட்டுப் பார்த்தார்கள். சுவரின் முன்னால், ஜன்னலின் முன்னால், சட்டி பானைகள் முன்னால் எல்லாம் நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ ‘கபே, கபே’ என்ற அவளது மந்திரத்தை ஓதினாள். அவள் சாப்பிடுவதைப் பார்ப்பதே வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு பிடிச் சோற்றையும், ஒன்று அல்லது இரண்டு ‘கபே, கபே’ சொல்லாது வாய்க்குள் அனுப்பி விட மாட்டாள். சோறு தொண்டைக்குள் இறங்கும் ஒரு கணப் போதில் மட்டும்தான் ‘கபே, கபே’ கேட்காது. ஏதாவது குடிக்கும் போதும் அப்படித்தான். இரவில் படுக்கையில் படுத்தாலும் ‘கபே, கபே’ தொடர்ந்து ஒலித்தது. தூக்கம் வர வர, ஒலி குறைந்துகொண்டே சென்று, நன்றாகத் தூக்கம் வந்த பிறகு மட்டும் ஒலி நின்றுவிடும். ஆனால் உறக்கத்திலும் அவளது உதடுகள் அசைந்துகொண்டே இருந்தன. அவளைப் பார்த்தால், லட்சியவெறி பிடித்த ஒரு அரசியல் வாதி, வாழ்நாள் குறைவு என்பதை உணர்ந்து, விழித்திருக்கும் நேரமெல்லாம் மக்களிடத்துத் தனது லட்சியத்தைப் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும் என்று தூண்டப் பட்டு, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பது போல் இருந்தது.

கந்தன்தான் ஜீவாவைத் தனது வாடிக்கைக்காரர்களில் ஒருவரான ஒரு கிழட்டு டாக்டரிடம் கூட்டிச் சென்றான். டாக்டர் குழந்தையைப் பார்த்துவிட்டு, அவளது வியாதியை மூளை ஆபரேஷன் மூலம்தான் குணப்படுத்த முடியும் என்றார். சென்னையில் அவருக்குத் தெரிந்த ஒரு பெரிய டாக்டருக்கு அறிமுகக் கடிதமும் கொடுத்தார். கடிதத் தோடு ராமு, வேலாயி, ஜீவா மூவரும் சென்னைக்குச் சென்றனர். ஆபரேஷன் முடிந்து பனிரெண்டு நாட்களில் வீடு திரும்பினர். இப்போதெல்லாம் ஜீவா, ‘கபே, கபே’ என்று உளறுவதில்லை. அது மட்டுமல்ல, நம்மைப் போலவோ, நமது வானொலிப் பெட்டி களைப் போலவோ எதையுமே உளறுவதில்லை.

*****

நாளை மற்றுமொரு நாளே . . . ஆசிரியர் : ஜி. நாகராஜன்

வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்,669 கே.பி.சாலை,நாகர்கோவில் 629 001, மின்னஞ்சல் : kalachuvadu@vsnl.com

*****

Feb 21, 2010

அதுவுமொரு பசிதான் ! - அ.ராமசாமி

அ.ராமசாமி

 

ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா

மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் எவை எனக் கேட்டால் உணவு, உடை, இருப்பிடம் எனப் பாடத்திட்ட அறிவைக் கொண்டு பதில் சொல்கிறோம். ஆனால் வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வயிற்றுப் பசியைத் தாண்டி இன்னொரு பசி உடம்புக்குள் ஆறாத பெரு நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது எனக் கல்வியின் உயர்நிலையான உளவியல் கூறுகிறது. காமம் என்னும் அப்பெருநெருப்பு பற்றிக் கொள்ளும் நேரம், இடம், எதிர்கொள்ள வேண்டிய பின் விளைவுகள் பற்றியெல்லாம் எல்லா நேரமும் சிந்திந்துக் கொண்டிருப் பதில்லை என்பது உடல் இச்சைகளை விளக்கும் உளவியலின் பகுதிகள்.

காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலின் கர்ப்பக்கிருகத்தில் ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் உடல்களை இணைத்து இறுக்கிக் கொண்டிருந்த காட்சியைப்படமாக அந்தப் பத்திரிகையில் பார்த்த a.ramasamyபோது நினைவுக்கு வந்தது இந்தப்பாடங்கள்தான். பெண்ணுடலும் ஆணுடலும் இணையும் அந்தக் கணத்தில் அவர்கள் இருவரும் தங்களை மறக்கவே செய்திருப்பார்கள். அந்த ஆண் தான் புனைந்திருந்த குருக்கள் அல்லது அர்ச்சகன் என்ற பாத்திரத்தையும், அந்தப் பெண் பக்தை என்ற பாத்திரத்தையும் மறந்து அல்லது இழந்து போகாதிருப்பின் இந்தக் காட்சியை நாம் காண முடியாது. தன் விருப்பமின்றிச் சமூகம் தன் மீது சுமத்திய பாத்திரத்தை எப்போதும் விட்டு விட ஒவ்வொரு மனமும் விரும்பிக் கொண்டே இருக்கிறது. குறைந்தபட்சம் சில கணங்களாவது விட்டு விலகி விடவே விரும்புகிறது. அதற்கு இடம் பொருள் ஏவல் எல்லாம் பார்ப்பதில்லை.

ஒட்டு மொத்த இச்சையை உடலின் இச்சை எனப் பிரித்துப் பேசுவதன் மூலம், மனம் புனிதமானது; உடல் தீட்டானது; அது குற்றங்களைச் செய்யத் தூண்டிக் கொண்டேயிருப்பது;ஆனால் மனமோ அதைத் தடுத்து நிறுத்தி ஆற்றுப் படுத்துவது எனச் சமயம் விளக்குகிறது.சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் காரணமான மனம் கடவுளின் இருப்பிடம் எனவும், உடல் அழுக்கடையக் கூடியது; ஆசைகளின் இருப்பிடம்; சாத்தானின் வாசஸ்தலம் அல்லது அரக்கனின் கோட்டை; எனவே அது தீட்டானது எனவும் சமயங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. அதிலும்கூட ஆண் உடலைவிடப் பெண் உடலே தீட்டை அனுபவித்துக் கொண்டே இருப்பது என நம்ப வைத்துள்ளன நம்பிக்கைகள்.

கடவுளை நினைக்கும் பக்தன் அந்த நேரத்தில் தன் இருப்பையே மறந்து தன்னை இழப்பதையே பக்த மனத்தின் உச்சநிலை எனச் சொல்வதற்கீடாக தனிமனிதன் காம விருப்பில் தன்னை இழந்து அதை அடையும் ஆவலோடு இருப்பதை எல்லோரும் பல கணங்களில் உணரவே செய்கிறார்கள். ஆனால் சமூக ஒழுங்கு கருதி அதை வெளியில் சொல்வதில்லை. வயிற்றின் பசியைத் தீர்க்க ஒரு தனிமனிதன் சமூகத்தின் விதிகளையெல்லாம் தள்ளி வைத்துவிட்டுக் காரியங்களில் இறங்கும் நிலையில் அவனைக் குற்றவாளி எனச் சொல்லும் சமூக ஒழுங்குகள் தான் உடலின் பசிக்கான முயற்சிகளையும் குற்றம் எனவும், கள்ள உறவு எனவும் சொல்லிக் காட்டித் தண்டனை வழங்கவும், தள்ளி வைக்கவும் முயல்கிறது.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற கருத்தைச் சொன்ன அறிஞனின் கூற்றை ஒவ்வொரு மனிதர்களும் விருப்பம் இல்லாமலேயே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்புக் கிடைத்தால் சமூகத்தின் நிர்ப்பந்தம், சூழல், கட்டுப்பாடுகள் என்பனவற்றை முழுமையாகப் புறக்கணித்து விட்டுத் தன்னுடைய வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்வதையே எப்போதும் மனித மனம் விரும்புகிறது. ஆனால் சமூகமும் அதன் நிறுவனங்களும் உண்டாக்கி வைத்துள்ள கட்டுப்பாடுகளும், அதனால் கிடைக்கும் பாதுகாப்பும் இன்னொரு பக்கம் இழுத்துக் கொண்டிருப்பதில் நிலைகுலையாமல் மனித வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

மனிதனை உடல் என்றும் மனம் என்றும் பிரித்துப் பேசுவது சமய அறிவின் முறையியல் எனச் சொல்லும் உளவியல், உடல் இச்சை என்று சொல்வது கட்டியெழுப்பும் ஒரு புனைவு என விளக்குகிறது. உடலுக்குத்தான் இந்தப் பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை எல்லாம் என்று சொல்வதை மறுத்து, உடல் பருண்மையாக- தூலமாக- தெரிவதைப் போல மனத்தின் இடம் எது எனச் சொல்ல முடியுமா? எனக் கேட்கிறது. மனம் என ஒன்று தனியாக இல்லை.உடலும் மனமும் ஒன்றுதான் எனப் பேசும் உளவியலைத் தங்கள் படைப்புகளின் ஆதாரக் கோட்பாடாகக் கொண்டு தமிழில் பல எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை எழுதியுள்ளார்கள்.இதற்கு முழுமையான உதாரணமாக ஒரு படைப்பாளியைக் காட்ட வேண்டும் என்று கேட்டால், நான் ஜி.நாகராஜனையே முன் மொழிவேன்.

ஜி.நாகராஜன் இந்த உலகில் வாழ்ந்த காலம் வெறும் ஐம்பத்திரண்டே ஆண்டுகள்தான் (1929-1981). இதற்குள் அவரது படைப்புலக வாழ்க்கை என்பது 24 வருடங்கள் கொண்டது. இந்த 24வருடங்களுக்குள் எத்தகைய இலக்கிய வரலாற்றிலும் இடம் பெறத்தக்க புனைகதைகளை எழுதி விட்டுச் சென்றுள்ளவர் ஜி.நாகராஜன். தொடக்கத்தில் இடதுசாரி இயக்கங்களில் இணைந்து செயல்பட்டார். அவர் பின்னாளில் அவ்வியக்கங்களுக்கும், அவை பின்பற்றிய இறுக்கமான கோட்பாடுகளுக்கும் எதிராகத்GN தன்னை நிறுத்திக் கொண்டவர். அவரது நாளை மற்றும் ஒரு நாளே என்ற நாவலுக்கும் குறத்தி முடுக்கு என்ற குறுநாவலுக்கும் அவற்றின் கதைக்களம் மற்றும் முன்நிறுத்தும் பாத்திரங்கள் சார்ந்து முன் மாதிரிகள் கிடையாது.எப்போதும் வெளிசார்ந்து மட்டும் அல்லாமல் சமூக நிலை, அதன் மதிப்பீடுகள், விதிகள்,நிறுவனங்கள் , அவை வலியுறுத்தும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல் என அனைத்துத் தளத்திலும் விளிம்பில் இருக்கும் மனிதர்களை எழுதிக் காட்டியவர் ஜி.நாகராஜன்.,கதைசொல்லும் லாவகம், கதைக்களம், மைய நீரோட்ட வாசிப்பு மட்டுமே கொண்டவர்களைத் திக்குமுக்காடச் செய்யும் கேள்விகள் எனப் புதுமை காட்டும் அவரது மொத்தப் படைப்புகளும் ஜி.நாகராஜன் படைப்புகள் எனக் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றுள்ளன. முதலில் தமிழ்ப் படைப்புகளை மட்டுமே வெளியிட்ட பதிப்பகத்தார், இப்போது வந்துள்ள புதிய பதிப்பில் அவர் எழுதிய ஆங்கிலப் பனுவல்களையும் இணைத்துள்ளனர். அவர் எழுதியதாக அச்சிடப் பெற்றுள்ள 34 சிறுகதைகளில் ஒன்று கல்லூரி முதல்வர் நிர்மலா என்பது.

கல்லூரி முதல்வர் நிர்மலா கதையை ஜி.நாகராஜன் எழுதியுள்ள விதம் திரும்பத் திரும்பப் படித்துப் படைப்பாளிகள் பின்பற்றத் தக்கதாக இருக்கிறது. மனிதர்களுக்குள் உறையும் காமத்தின் இயல்புக்கு முன்னால் வயது, பதவி, கட்டிக்காத்த பிம்பம் என எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்பதை வாசகர்களுக்கு உணர்த்தும் விதம் அற்புதமானது. கல்லூரி முதல்வரின் அலுவலக அறையைக் கதை நிகழும் இடமாகக் கொண்டிருந்தாலும், கதையின் ஒவ்வொரு நிகழ்வும் நினைவுகளிலும், கடித வரிகளின் விரிவாகவும் தரப்பட்டுள்ள லாவகம் சிறப்பான ஒன்று. எழுதப் போகும் விசயத்தின் கூர்மையைக் கவனத்தில் கொண்டு இந்த உத்திகளைப் பின்பற்றியுள்ள ஜி.நாகராஜன் தமிழ்ச் சிறுகதையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் என்பதற்கு இந்த ஒரு கதையே போதும்.

" எனக்கு முதலில் பயமாக இருந்தது,ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும்‘ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத்தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும் போது, ‘ பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான்.காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை;பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம்,காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச்சொல்லும் போது சமயங்களில் அவன் கை என் மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்"

இப்படித் தொடங்கும் கதையின் தொடக்கம் உண்மையில் ஒரு கடிதத்தின் தொடக்கம். இதைப் படிப்பவள் அந்தக் கல்லூரியின் முதல்வர் மிஸ் நிர்மலா. அவள் வாசித்த அந்தக் கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். அவள் கவனக் குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்தச் சஞ்சிகையை எடுத்த அவள் அண்ணன் மூலம் தகப்பனார் சந்திரசேகரன் கைக்குப் போய் வாட்ச்மேன் காதர் மேல் எடுக்க வேண்டிய நடவடிக்கைக்காக மிஸ் நிர்மலாவின் மேஜைக்கு வந்துள்ளது.

நிர்மலா மணியை அழுத்திக் காதரை உள்ளே வரச் சொல்லி அவனிடம், "ஹாஸ்டலுக்கு வேற வாட்ச்மேன் போட்டிருக்கேன்" என்றவளிடம், ‘சரிங்க’ என்று சொல்லி ஏற்கிறான். தொடர்ந்து அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு " உனக்குத் தோட்ட வேலை தெரியுமா?" எனக் கேட்க, "தோட்ட வேலைக்குத் தானே நம்மெ காலேசுக்கு வந்தேன்" என்கிறான். அவள், " அப்படியா..எனக்குத் தெரியாதே! இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க.. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்" என உத்தரவு போடுகிறாள்.

காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்து கொள்வது போல், இல்லை மார்பகத்தைத் தடவிக் கொள்வது போல,சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று. அவ்வளவுதான்.

இந்த உத்தரவு காதருக்குத் தரப்பட்ட தண்டனையா? அல்லது ஒருவிதமான பரிசா? என்று கேள்வியை எழுப்பும் விதமாகக் கதையை முடிக்கும் ஜி. நாகராஜன் அதற்கான பதிலை வாசகர்களுக்குத் தரும் விதமாக நிர்மலாவின் கடந்த காலம் பற்றிய நினைவொன்றை ஒருபத்தியில் எழுதிக் காட்டியுள்ளார். அந்தப் பத்தியை நினைத்துக் கொண்டால், நிர்மலா காதருக்கு அளித்தது தண்டனை அல்ல; இது காமத்தை இயல்பான ஒன்றாக நினைத்துக் கொண்ட நிர்மலாவின் சரியான முடிவு என்பது புரியும். அந்தப் பத்தியின் வரிகள் இதோ:

வருஷம் பூராவும் இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு? என்னத்தை சாதித்து விட்டேன்? அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா? அதுவுமில்லியே! ஒரு வகையில் நிர்ப்பந்தம்தானே? ஒன்றையும் காணவில்லையே! ஒரு தெய்வமும் தட்டுப் படவில்லையே!ஒரு உண்மையும் பிடிபடவில்லையே! இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகள் இல்லையே? சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்துவிட்டான். இப்ப இருவரும் சேர்ந்து ‘ அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’என்கிறார்கள்.

ஜி.நாகராஜன் எழுதிக் காட்டும் இந்த வரிகள் கல்லூரி முதல்வர் நிர்மலாவின் நினைவுகளாக வருபவை. இந்த நினைவுதான் காதரைத் தன் தோட்டக்காரனாக ஆக்கிக் கொண்டது என வாசித்துக் கொள்ளத் தூண்டுகிறது.

நன்றி: உயிரோசை

Dec 6, 2009

பொய் சிரிப்பு-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் -கதாவிலாசம்
ஜி.நாகராஜன்


நேற்று பிற்பகலில் ஓர் இளம்பெண் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்து பார்த்தபோது, gnagaranஅவளுக்கு இருபது வயது இருக்கும். புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஒரு ஐஸ்கிரீமை விற்பதற்காக கூல்பாக்ஸ் நிறைய கொண்டு வந்திருந்தாள். வெயிலில் வெகுதூரம் அலைந்து வந்திருக்கக்கூடும். அவளால் கோவையாகப் பேசக்கூட முடியவில்லை. நா வறட்சியுடன், கலைந்த தனது தலையைச் சரிசெய்தபடி, பழக்கப்படுத்தப்பட்ட கிளி பேசுவதுபோல விவரங்களை கடகடவென ஒப்பித்தாள். நான் சிரித்துக்கொண்டே,‘தண்ணீர் குடிக்கிறீர்களா?’ என்று கேட்டேன். அவள் தலையசைத்தாள்.

ஜில்லென்று குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கடகடவெனக் குடித்தாள். தண்ணீர் அவளது கழுத்திலிருந்து வழிந்தோடியது. இப்போது முகத்தில் சிரிப்பு துளிர்க்கத் துவங்கியது. விற்பனைப் பெண்களுக்கு என்றே ஒரு சிரிப்பு இருக்கிறது. அல்லது, அவர்கள் அப்படி சிரிக்கப் பழக்கப் படுத்தப்படுகிறார்கள். அந்தச் சிரிப்பு ஒரு காகிதத்தில் வரையப்பட்ட சித்திரம் போல அளவாகவும், சரியாகத் தோன்றி சரியாக நிறுத்தப்படு வதாகவும் இருக்கும். அதைப் பார்க்கும்போது, எவ்வளவு மில்லி மீட்டர் வாயைத் திறந்து எப்படிச் சிரிக்க வேண்டும் என்றுகூட பழக்கிவிடுகிறார் களோ என்று சற்று ஆத்திரமாக வும் இருக்கும்.

ஆனால், என் முன் நிற்பவள் முகத்தில் சிரிப்பு, பாலில் ஆடை மிதந்துகொண்டு இருப்பது போல உதட்டோடு ஒட்டி இருந் தது. வீட்டில் யாருமில்லையோ என்பதைக் கண்டுகொண்டவள் போல, ‘ஊருக்குப் போயிருக் காங்களா சார்?’ என்று கேட்டாள். தலையாட்டினேன். அவள் பார்வையில் நாற்காலி யில் கிடந்த புத்தகம் கண்ணில் பட்டிருக்க வேண்டும். தலை யைக் கோதியபடியே, ‘அந்த புக்கை பார்க்கலாமா?’ என்று கேட்டாள்.

நான் அந்தப் புத்தகத்தை எடுத்து அவளிடம் கொடுத் தேன். அது ஆதவனின் காகித மலர்கள். அவள் மிக ஆசையுடன் அதைப் புரட்டிப் பார்த்தபடி, ‘எனக்கு தி.ஜானகிராமன் எழுத்து ரொம்பப் பிடிக்கும் சார். படிச்சிருக்கேன்’ என்றபடி, அடுத்து எங்கே போவது என்று யோசித்தாள். ஆச்சர்ய மாக இருந்தது. தி.ஜானகிராமன் படித்த விற்பனைப் பிரதிநிதி ஒருத்தியை முதல்முறையாகச் சந்திக்கிறேன். அவ ளிடம் ஏனோ பேச வேண்டும் போல இருந்தது. ‘உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்குமா?’ என்று கேட்டேன்.

இதை எதிர்பாராத அவள், குடத்து தண்ணீர் விளிம்புக்கு உள்ளாகவே ததும்பிக் கொள்வது போன்று உதட்டுக்குள்ளாகவே ஒரு சிரிப்பு சிரித்த படியே, ‘இது தொழில் சார்! எனக்கு டீ குடிக்கத்தான் பிடிக்கும்’ என்றாள். ‘ஆமாம், இந்த வெயிலில் டீ குடிப்பது இதமாகத்தான் இருக்கும்’ என்று நான் சொன்னதும், உதட்டில் கரை தட்டி நின்ற சிரிப்பு வெளிப்பட்டு விட்டது. Ôஇப்போ இல்லை சார்! சாயங்காலம் குடிப் பேன். ஆனா, வழியில எங்கா வது டீக்கடையில நின்னு டீ குடிக்கலாம்னா ஒரே தொல்லையா இருக்கு. பொம்பளை ரோட்ல நின்னு டீ குடிக்கக் கூடாதாம். ஓட்டல்ல போயி காபி சாப்பிடச் சொல்றாங்க. இவங்க அசிங்கமா ரோட்ல நின்னு ஒண்ணுக்குப் போறது தப்பில்லையாம். நாங்க டீ குடிச்சா தப்பாம்!Õ என்றாள்.
அந்தக் கோபம் உண்மையாக இருந்தது. உண்மை தானே! கண்ணுக்குத் தெரியாத ஒரு மின்சார வேலி பெண்களை நுழையவிடா மல் எத்தனையோ இடங் களில் தடுத்துக்கொண்டு தானே இருக்கிறது! விற்ப னைப் பெண் தயங்கித் தயங்கிக் கேட்டாள்... Ôஉங்க டாய்லெட்டை நான்கொஞ் சம் யூஸ் பண்ணிக்கலாமா?Õ
‘தாராளமாக!’ என்றேன்.

ஐஸ்கிரீம் பேக்கை ஓர மாக வைத்துவிட்டு, உள்ளே சென்றாள். விளக்கிச் சொல்ல முடியாத ஆயிரம் பிரச்னைகளை சுமந்துகொண்டுதான் விற்பனைப் பிரதிநிதிகள் தெருக்களில் அலை கிறார்கள். நினைக்கை யில் மாநகர் மீது ஆத்திர மாக வந்தது. சுகாதாரமான கழிப்பறைகளைக்கூட உருவாக்கித் தர முடியாத இந்த நகருக்கு எதற்காக இத்தனை பேர் தினமும் வந்து குவிகிறார்கள்?
விற்பனை பிரதிநிதியின் முகத்தில் ஈரம் வழிந்தது. ‘ரொம்ப தேங்க்ஸ் சார்!’ என்றவள், Ôரெண்டு வருஷமா இந்த வேலை பாக்குறேன். வீடு வீடா நடந்து கால் தேய்ஞ்சு போச்சு சார்! அது கூடப் பரவாயில்லை... தனியா வர்ற பொண்ணு தானேனு பல்லை இளிக்கிறாங்க பாருங்க, அதைத்தான் சகிக்க முடியலை. அப்படியே பல்லைத் தட்டி உடைக்கலாமானு வருது. ஒரு நாள் வேலை செஞ்சா ஐம்பது ரூபா கிடைக்கும். அதுக்குத் தெரு நாய் போல அலையுறோம். இருபது வயசு ஆனாலும் சரி, அறுபது வயசு ஆனாலும் சரி... ஆம்பிளைப் புத்தி ஒண்ணுதான் சார். பொம்பளைன்னா வாயிலே தானா எச்சில் ஒழுகுது பாருங்க. சகிக்க முடியலைÕ என்றபடி தனது சுமைகளைத் தூக்கிக் கொண்டாள். ஏதோ நினைத்துக் கொண்டவள் போல, ‘தப்பா ஏதாவது பேசியிருந்தா மன்னிச்சிருங்க. மனசிலே தோணுச்சு... பேசிட்டேன்!’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென வெயிலில் இறங்கிப் போய்விட்டாள்.
அவள் போன நெடுநேரத்துக்கு அந்த உக்கிரம் அறையில் வழிந்தோடிக் கொண்டு இருந்தது. காமம்தான் இப்படி அலைக்கழிக்கிறதா... இல்லை, காம உணர்ச்சிகளின் போர்வையில் நமது மன வக்கிரங்கள் வெளிப் படுகின்றனவா?

மேற்கு மலைத் தொடரில் உள்ள ஆதிவாசிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கு ஆண்களும் பெண்களும் சமமாகவே நடத்தப்படுகிறார்கள். பெண்களைக் கேலி செய்வதோ, அசிங்கமாக நடந்துகொள்வதோ கிடையாது. ஆண்களைவிடவும் பெண்கள் கடுமையான உடல் உழைப்பாளிகள். கர்ப்பிணிப் பெண் தலையில் ஒரு சுமையும், இடுப்பில் ஒரு சுமையுமாக சர்வ சாதாரணமாகப் பாறையில் ஏறி, நடந்து வந்துகொண்டு இருப்பாள். உண்மையில் காலத்தில் பின்தங்கிப் போனது நாமா, அவர்களா?

சரித்திரம் முழுவதும் பெண்களின் உடல்மீது படிந்த ரத்தக் கறையைத்தான் காண முடிகிறது. இந்தியப் பிரிவினை யின்போது கொல்லப்பட்ட வர்களை விடவும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள்தான் அதிகம். இதைவிடவும் மிகக் கொடுமையானது, அப்படி வன்கொடுமையால் பாலியல் உறவு கொள்ளப்பட்ட பெண்கள் கர்ப்பமாகி, அந்தக் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசே முகாம்களை நடத்தியது. ஒரே நாளில் இருபதாயிரம் பெண்கள் கர்ப்பத்தைக் கலைத்துக்கொண்டார்கள். சூறையாடப்பட்ட நகரங்களைவிட சிதைக்கப்பட்ட பெண் உடல்கள் அதிகம். வன்முறையின் இலக்கு எப்போதுமே பெண் உடல்தான்!
எத்தனையோ இரவுகளில் காரில் பயணம் செய்யும்போது நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் புளிய மரங்களின் அடியில் நின்றபடி லாரி களின் முகப்பு வெளிச்சத்துக்கு கண் கூசி நிற்கும் பெண்களைக் கண்டிருக்கிறேன். வாழ்வின் எந்த நெருக்கடியிலும் இந்த அளவு தன்னை விற்று வாழும் நிலையை ஆண் அடைந்ததே இல்லை. அவனுக்குப் பெண்ணின் துயரம் புரியவே புரியாது.
தான் வாழ வேண்டும் என்பதற்காக எவரையும் ஏமாற்றி, திருடி வாழத் தயங்காதவன் ஆண். தன் உடலில் ஒரு சிறிய வேனல் கொப்பளம் வந்தால்கூடக் கூச்சல் போடுகின்றவன். உடல் அவனுக்கு கேளிக்கையின் சாதனம். புல்தரையைக் கண்ட பசு மேய்வது போல, அவனுக்குப் பெண்கள் வெறும் இச்சையை தீர்க்கும் பொருள் மட்டும்தான்!
வளர்ந்த சமூகமாக இருந்தாலும் சரி, பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் சரி, பெண்களை நடத்தும் விதத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவே இல்லை. பெண்கள் மீதான ஒடுக்குமுறை யும் வன்முறையும் இல்லாத சமூகம் இருக்கிறதா என்ன? குறிப்பாக, குடும்பம் என்ற அமைப்பு பெண்கள் மீது செலுத்தி வரும் வன்முறை குறித்து இன்று இலக்கியத்தில் தீவிர கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்தக் கேள்விகளை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுப்பியவர் ஜி.நாகராஜன். இவர் தமிழின் விதிவிலக்கான எழுத்தாளர். மரபான கதை உலகை விட்டு விலகிய கலகக்குரல் இவருடையது. இவரது கதையுலகம் முழுவதும் பெண்களால் நிரம்பியது. இந்தப் பெண்களில் பெரும்பான்மையோர் பாலியல் தொழிலாளர்கள். ஒடுக்கப்பட்ட இந்தப் பெண்களின் வாழ்வை, அக நெருக்கடிகளை, மூச்சுத் திணறலை தனது எழுத்தில் நுட்பமாகப் பதிவு செய்தவர் ஜி.நாகராஜன். இவரது ஆண்மை என்ற கதை மிகச் சிறப்பானது.

பாலியல் தொழில் புரியும் ஒரு பெண்ணைப் பற்றியது இக்கதை. அவள் தன் அப்பா மற்றும் தம்பியோடு பேருந்து நிலையத்தில் வந்து நின்றுகொண்டு ஆள் பிடிக்கிறாள். அவளிடம் காசு கொடுத்து இன்பம் பெறுவதற்காக வந்து சேர்கிறான் ஓர் இளைஞன். படுக்கை அறையில் அந்தப் பெண்ணிடம், எதற்காக அவள் அப்பாவும் தம்பியும் இது போன்ற வேலைக்கு துணை செய்வதற்கு நிற்கிறார்கள் என்று மனச் சங்கடத்துடன் கேட்கிறான்.

தன் அப்பா பிசினஸ் செய்து அதில் தோற்றுப் போய்விட்டதாகவும். அப்பாவின் நிலையை நினைத்து நினைத்து அம்மாவுக்குப் புத்தி பேதலித்துப் போனதாகவும், அன்றிலிருந்து அம்மாவைக் குணப்படுத்துவதற்காக அவர் எதையும் செய்யத் துணிந்துவிட்டார் என்றும், ‘வீட்டை மாமாதான் பராமரிக்கிறார். அவருக்கு நான் இப்படியரு தொழில் செய்வது தெரிந்தால் விஷம் கொடுத்துக் கொன்றுவிடுவார்’ என்றும் சொல்கிறாள்.

குடும்பச் சுமையின் காரணமாக பெத்த பெண்ணைத் தகப்பனே கூட்டிக்கொடுப்பதை இளைஞனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்குப் பணம் கொடுத்துவிட்டு வெளியேறுகிறான். ஏன் அவளோடு உறவுகொள்ளவில்லை என்று அவள் கேட்டதற்கு, தான் ஒரு பேடி, ஆண்மையற்றவன் என்று சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறி விடுகிறான் என்பதோடு கதை முடிகிறது.
கதையை வாசித்து முடிக்கும்போது ஒரு கத்தி ஆழமாக உடலில் இறங்குவது போல வலியும் துக்கமும் ஏற்படுகின்றன. அதிநவீன கணிப்பொறியும், அணு ஆயுதங்களுமாக உலகம் தனது வெற்றியின் களிப்பை ஒருபக்கம் கூச்சலிட்டுக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு பக்கம் துடைத்துப் போட்ட காகிதங்களைப் போல பெண்களைச் சர்வ அலட்சியமாக நடத்தும் சூழலும் இருந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள ஆறுகளுக்கெல் லாம் பெண் பெயரிட்டது ஆற்றைப் போலவே பெண்களும் எவரும் கவனிக்கப்படாமலும், ஆக்ரமிப்புக்கும் அத்துமீறலுக்கும் உள்ளதாவதால்தானோ என்று சில சமயம் எனக்குத் தோன்றுகிறது. என்ன செய்வது..! நாடே கொண்டாடும் சத்தியவான் அரிச்சந்திரன்கூட தன் மனைவியை ஏலம் போட்டு விற்றவன் தானே? ஜி.நாகராஜன் மதுரையைச் சேர்ந்தவர். தமிழ்ச் சிறுகதையுலகில் இவருக்கென்று தனியான இடம் உண்டு. பாலியல் ஒடுக்குமுறை குறித்து தீவிர விவாதங்களை உருவாக்கும் எழுத்து நாகராஜனுடையது.

கல்லூரிப் பேராசிரியராக வாழ்வைத் துவக்கிய நாகராஜன், போதையின் பிடியில் சிக்குண்டு நாற்பது வயதுக்குள்ளாகவே சுய அழிவைத் தேர்வு செய்துகொண்டவரானார். இவரது கதைகள் வாழ்வின் போலித்தனத்தை, இழிவை விமர்சனம் செய்கின்றன. நிழல் உலகமாக இருந்து வரும்பாலியல் தொழிலாளர்களின் வாழ்வு இவரது படைப்புகள் எங்கும் உக்கிரமாக வெளிப்படுகின்றன.
குறத்தி முடுக்கு, நாளை மற்றும் ஒரு நாளே போன்றவை இவரது முக்கிய படைப்புகள்!

Aug 2, 2009

துக்க விசாரணை-ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன்  -சதங்கை, மே 1973

துக்க விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். உலகத்தில் அன்றாடம் சிறிது சிறிதாக மானத்தை விற்று எத்தனையோ பேர் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலத்தானே ரோகிணியும். அவளுக்கு மட்டும் துக்க விசாரணை என்ற சம்பிரதாயம் வேண்டாமா ?

நான் கடற்கரைக் கட்டில் ஒன்றில் உட்கார்ந்திருந்தேன். கடலின் இரைச்சல் காதுகளுக்கு இதமாக இருந்தது. அந்த இரைச்சலில் எத்தனையோ சுகதுக்கங்களை மறந்துவிடுகிறோம். கடலின் கண்ணுக்கடங்காத பரப்பு வேறு! அந்தப் பரப்பில்தான் எப்படி 'நான் ' என்ற உணர்வே கரைந்துவிடும் நிலையை எட்டி விடுகிறது! கடலின் அலைகள் கரையைத் தொடுவதும் தொடாததுமாக விளையாடிக்கொண்டிருந்தன. கீழ்வானத்தில் சில நிமிடங்கள் நிலைத்த சிவப்பொளி அவசர அவச்ரமாகக் கருமையைத் தொட ஆரம்பித்தது ஏதோ காணதததைக் கண்டுவிட்டது போல ஒருி ஈ மிகுந்த தன்னம்பிக்கையோடு என் மூக்கு நுனியில் வந்து உட்கார்ந்து கொண்டது, ஒரு கையால் அதனை விரட்டியத்தேன், என்மீது என்னவோ அதற்கு திடார் பாசம் ஏற்பட்டது போல 'ஈ ' என்று ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு என் காதில் மீண்டும் உட்கார்ந்து கொண்டது. தலையை அசைத்தேன். அது காதிலிருந்து தலைக்குத் தாவியது. தலையைச் சொறிந்தேன். அது மீண்டும் என் முன் 'ஈ ' என்று வட்டமிட்டது. செகண்டுக்கு தன் இறகுகளை ஆயிரந் தடவைகள் அடித்துக் கொள்ளும் அந்த ஈ! செகண்டுக்கு ஒரு முறை அடித்துக் கொள்ளும் மனித இதயம்.! ஈயின் இதயம் செகண்டுக்கு எத்தனை தடவைகள் அடித்துக் கொள்ளும் என்று நினைத்துக் கொண்டேன். இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டிவிடும்; துக்க விசாரணைக்குச் செல்லவேண்டும்.

இடையே ஊதி அணைத்துவிட்ட மெழுகுவர்த்தியைப் போல ரோகிணி இறந்துவிட்டாள். ஒரு போதும் குரலை உயர்த்திப் பேசமாட்டாள். ஒரு முறை யாரோ ஒருவனோடு இருந்தாள். நான் வந்ததை அறிந்ததும் வந்து சமாதானம் கூறிச் சென்றாள். 'இது என் தலை எழுத்துங்க ' என்று சொல்லிச் சிரித்துவிட்டுச் சென்றாள். நான் காத்திருப்பேன் என்று எதிர்பார்த்தாள். இரண்டு நாட்களுக்குப் பின் தான் நான் அவளிடத்துக்குச் சென்றேன். அப்போது, 'அக்கா கடனையெல்லாம் தீர்த்திட்டு கன்னியாஸ்திரி ஆகிவிடுவேன் ' என்றாள். 'இல்லாட்டி தற்கொலை பண்ணிப்பேன் ' என்று பிறகு சேர்த்துக் கொண்டாள். 'தற்கொலையில் அர்த்தமில்லை ' என்றேன். 'பின்னே எதில் ? ' என்று கேட்டுக்கொண்டே என் கன்னங்களில் முத்தினாள். அந்தப் பத்துப் பதினைந்தைக் கொடுப்பதைத் தவிர நான் ரோகிணிக்கு எதுவும் செய்தது கிடையாது. ஆனால் அவளுக்குத் தெரியுமோ என்னமோ, அவளைப் பற்றிப் பல தடவைகள் நான் நினைத்ததுண்டு. நினைப்பு என்ன அவ்வளவு பெரிசா ? பின் இல்லையா ? இறந்து போனவர்களைப் பற்றியோ உயிரோடிருப்பவர்களைப்பற்றியோ அவ்வப்போது நினைத்துக் கொள்வது பெரிசில்லையா ? ரோகிணியைச் சந்தித்த முதல்நாள், 'நாளை உன்னை எங்கே பார்க்கலாம் ? ' என்றேன். 'எட்டு மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் அக்கா வருகிறாள். அவளைச் சந்திக்க ஸ்டேஷனுக்குச் செல்வேன் ' என்றாள். காலை ஏழே முக்காலுக்கே ரயில் நிலையத்துக்குச் சென்று விட்டேன். ரயில் இருபது நிமிஷங்கள் தாமதமாக வந்தது. ரயில் முழுவதும், பிளாட்ஃபாரம் முழுவதும் தேடினேன். ரோகிணியையும் காணோம். அக்கா ஜெயத்தையும் காணோம். பிறகுதான் ஒரு முறை ஜெயத்தைப் பார்த்தேன். பிராண்டி குடித்துவிட்டு வெற்றிலைப் பாக்கு போட்டிருந்தாள். தடித்த வெண்மையான சரீரம்; ரோகிணியின் மென்மை இல்லை. சிலவகை ஆண்களைக் கவரும் முரட்டுத்தனம் அவளிடம் காணப்பட்டது.

ரோகிணி இறந்து இருபது நாட்களுக்கு மேலாகிறது. பத்திரிக்கையில் விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். அவள் வீட்டுக்குச் சென்றபோது., 'மூணுவாரமா ஊரில் இல்லை ' என்று சால்ஜாப்பு சொன்னேன். வழக்கம்போல் வீடு அடைத்துக் கிடந்தது. நான் கதவைத் தட்டவும், பக்கத்து ஜன்னல் அரைகுறையாய்த் திறந்தது. 'நீங்களா ? ' என்றுவிட்டு கதவைத் திறந்தாள் ஜெயம். உள்ளே நான் நுழையவும் அவள் கதவையும் ஜன்னலையும் மூடினாள். 'ஒரு மாதமா ஊரிலே இல்லே. நேத்துத்தான் கேள்விப்பட்டேன் ' என்று ஆரம்பித்தேன்.

'உட்காருங்க ' என்றுவிட்டு, 'அது என் தலையெழுத்து ' என்றாள் ஜெயம்.

'டாக்டர்கிட்டே காட்டலயா ? ' என்றேன்.

'மொதல்லே மூணு நாலு நாளைக்கு வெள்ளை வெள்ளையாப் போச்சுனது. ஆச்சி சொன்னாங்களேன்னுட்டு சந்தனத் தைலம் வாங்கிப் போட்டேன். கேக்கலே. முள்ளங்கிச் சாறு, வெங்காயச் சாறு, சீரகம் வெல்லம் எல்லாம் கலந்து மூணுநாள் சாப்பிட்டாப் போதும்னிச்சு தங்கமணி. எல்லாத்தையும்தான் செஞ்சு பார்த்தோம் '

'இதுக்கெல்லாம் இப்போ இங்கிலீஷ் மருந்து இருக்கே. பென்சிலின்ஜி எம்பாங்க. அதை ஊசி போட்டாப் போதுமே ' என்றேன் நான்.

'அதுதான் டாக்டர்கிட்டே வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சுதே! ரெண்டு மாதஹ்த்திலே எல்லாம் கொணமாயிட்ட மாதிரிதான் தெரிஞ்சிச்சு. ஆனா அப்பப்ப வயித்துவலி, வயித்துவலின்னு கத்திச்சு. நாமக்கட்டியை அரைச்சுப் போட்டோம். வலி கொஞ்சம் நின்னமாதிரி தெரிஞ்சது. நானும் அன்னைக்குச் சினிமாக்குப் போயிட்டேன். அத்தான் வளக்கம் போல சீட்டாடப் போயிட்டாரு. ஏதோ ஒரு தடியன் வந்து, 'ஏண்டி, எனக்கு சீக்கா வாங்கி கொடுத்தேன்னு ' கேட்டுக்கிட்டு, செருப்பைக் களத்தி அடிச்சிருக்கான். அவன் போகவும் ரயிலடிக்குப் போனவதான்... ' ஜெயம் மேற்கொண்டு பேசவில்லை.

'இந்த சீட்டாட்டம்தானே அத்தானைக் கெடுத்திரிச்சு ' என்றேன் நான், யோசனையோடு.

கனோரியாவைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். என் மாமா ஒருவர் அதனாலேயே கண்பார்வையை இழந்தார். சிறந்த டாக்டர்; இருந்தும் ஒன்றும் அந்தக் காலத்தில் செய்து கொள்ள முடியவில்லை. பிராண்டி குடித்தால் நோயின் கடுமையை மட்டுப் படுத்திக் கொள்ள முடியும் என்று எண்ணி அதிகம் குடிக்க ஆரம்பித்தார். அவரது அட்டகாசம் அதிகமாகவே, மூத்த மகன் அவரை ஒருநாள், 'வீட்டை விட்டு வெளியே போங்க ' என்று உத்தரவிட்டான். மறுநாள் அவர் காலி. அவர்தான் ஒருமுறை சொன்னார். ஆயிரம் கனோரியாக் கிருமிகளை ஒன்றாக வைத்தால் ஒரு குண்டூசியின் தலையளவுக்குத்தான் வரும் என்று. ஆனால் இந்தக் கிருமிகள் ரொம்பவும் சொகுசாக வாழக்கூடியவை. மனித உடல்தான் இவற்றுக்கு லட்சிய இருப்பிடம். வேறு மிருகங்களின் உடல்களில் இவை உயிர் தரிப்பதில்லை. சுற்றுப் புறக் காற்று சற்று உலர்ந்து விட்டாலோ அல்லது உஷ்ணம் அடைந்தாலோ கூட இவற்றால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவற்றுக்கு அப்படி ஒரு தலைவிதி; இல்லை, மனிதனுக்கு அப்படி ஒரு தலையெழுத்து.

'அந்தத் தடியன் அப்படி அடிச்சதுதான் ரோகிணி மனசைப் புண்படுத்தி இருக்கு. அவன் போனப்புறம் ரயிலடிக்குப் போனவதான்... ' என்று மீண்டும் ஆரம்பித்து அரைகுறையாய் நிறுத்தினாள் ஜெயம். ஆனால் ஜெயத்தின் மேலாடை சற்று அலங்கோலமாக இருப்பதைக் கண்டதும் எனக்கு விஷயம் புரிந்தது. பையினுள் கையை விட்டுப் பத்து ரூபாய்த்தாள் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினேன். அப்பொதுதான் ஜெயத்தின் புன்சிரிப்பில் ரோகிணியின் சாயலைக் கண்டதாக நினைத்துக் கொண்டேன். மூடிய கதவைத் தாளிட்டுவிட்டு, சன்னலையும் அடைத்துவிட்டு, ரூபாயை வாங்கிக் கொண்டே, 'மேலே போகலாமா ? மெத்தை இருக்கு ' என்றாள் ஜெயம்.

நிமிஷக்கதைகள்-ஜி. நாகராஜன்

ஜி. நாகராஜன்

painting4-modern-art-work

1

'குத்தத்தை ஒத்துக்கிறயா ? ' என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.

'ஆமாங்க ' என்றான் கைதி.

'இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ' என்றார் மாஜிஸ்ட்ரேட்.

'அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ' என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, 'யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் ' என்றார்.

மாஜிஸ்ட்ரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.

ஜெயித்தது யார் ? அந்த ஏழைக்கைதிதான்.

 

2.

மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

'சாமியார் சமாதியாகிவிட்டார். ' 'இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் ' என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும் 'சாமியார் சமாதியாகிவிட்டார் ' என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக் கொண்டுவரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடாரென்று, 'டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு ' என்று கத்திக் கொண்டே கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், 'மடத்துச் சாமியாரு செத்துப் போயிட்டாரு ' என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.

3.

அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.

'பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன ? ' என்று எழுத்தாளன் கேட்டான்.

'என்ன ? ... கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம் ' என்றாள் விபச்சாரி.

'இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது! ' என்றான் எழுத்தாளன்.

'கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு... இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே ' என்றாள் விபச்சாரி.

'கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை ? '

'யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு '

'மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா ? '

'அப்படியா ? '

'பின்பு ? '

'சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா ? '

'ஊம், இருக்கு '

'நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே ? .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க '

கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

4.

அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். தடாகத்துக்குச் சென்றான். அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. 'வா, வா ' என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் காலெடுத்து வைத்தான்.

'யாரது ? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திக்கிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து ' என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.

தாமரையைப் பார்த்து விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செறிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அங்கே அவனும் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான். எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்து கொண்டு விட்டான்!

- சரஸ்வதி, ஏப்ரல், 1961

பொன் மொழிகள்-ஜி. நாகராஜன்

-ஜி. நாகராஜன். -ஞானரதம், மே 1972

modernart-hydra1 சில எழுத்தாளர்கள் தங்கள் 'பொன்மொழிகளை ' தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் 'பொன் மொழிகளே ' இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில 'பொன் மொழிகளை ' உதிர்க்கிறேன்.

1. உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்.

2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்.

3. தன்மான உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் அளவுக்குத்தான் தேசபக்தியை பொறுத்துக்கொள்ளமுடிகிறது.

4. தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்.

5. மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்துகிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன.

6. எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறுகூட்டம் இருந்தேதீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்.

7. 'மனிதாபிமான ' உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத்துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தை படைக்க வல்லது. இல்லையெனில் 'மேக்பெத் ' என்ற நாடகமோ 'கலிவரின் யாத்திரை ' என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது.

8. இயற்கையிலேயே பீறிட்டு வெடிக்கும் சமுதாயப் புரட்சியை வரவேற்க வேண்டிய நாம், கன தனவான்கள் பதவியில் இருந்துகொண்டு 'புரட்சி ' பேசுவதைச் சகித்துக்கொண்டிருக்கிறோம்.

9. தனது கலைப்படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினக்கும் கலைஞனுக்கு, பனம் பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச்சொல்லுங்கள்.

10. மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் 'மனிதன் மகத்தான சல்லிப்பயல் ' என்றுதான் சொல்வேன்.

இன்னும் தேங்காய் துவையல், பெண்ணின் கற்பு, உலக அமைதி, எள்ளுருண்டை, 'காலி சிந்த் ' புடவை, பல்லாங்குழி ஆட்டம், பொய்ப்பல், இத்யாதி இத்யாதி பற்றியும் 'பொன் மொழிகள் ' தர முடியும்.

- ஜி-நாகராஜன் படைப்புகள் பக்கம் 347, காலச்சுவடு பதிப்பகம்,

Jul 19, 2009

ஜி. நாகராஜனின் படைப்புலகம்-மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

(1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

தமிழின் நவீன இலக்கிய வெளியில் மத்தியதர வாழ்வின் ஆசாபாசங்களும் பெருமூச்சுகளும் மதிப்பீடுகளும் நம்மை மிகவும் ஆயாசமடைய வைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தமிழ் வாழ்க்கையின் பரப்பு சின்னஞ்சிறியது; சில உயர் இடைநிலை சாதிகளின் _ வர்க்கங்களின் அனுபவத்திலிருந்தும், கண்ணோட்டத்திலிருந்தும் உருவாக்கப்பட்டது. மத்தியதர வாழ்வின் அறவியல் அழகியல் பிரச்சனைகள் தமிழ் இலக்கியத்தின் பிரச்சனைகளாக இருந்து வந்துள்ளன. வரலாற்றின் ஏற்றத்தாழ்வுகள் வழியே கலை இலக்கியத்தை அவற்றின் நவீன வடிவங்களிலும் ஊடகங்களிலும் கையாளும் வாய்ப்பைப் பெற்றவர்கள் தம்முடைய வாழ்வின் நியதிகளையும் தர்மங்களையும் ஒட்டு மொத்த வாழ்விற்கான நியதிகளாக சித்தரித்தனர். இந்த நியதிகளுக்கு வெளியே இருந்த சமூக அடுக்குகளில் வாழ்வு எண்ணற்ற முரண்களோடு தனக்கான மொழியையும் குரலையும் தேடி காலத்தின் மௌனங்களுக்குள் விம்மிக் கொண்டிருந்தது.

இந்த நூற்றாண்டில் நமது அரசியல் பண்பாட்டு நீரோட்டத்தை ஒழுங்குபடுத்திய இரண்டு சக்திகள் காந்தீயமும் மார்க்ஸீயமும் ஆகும். மதங்கள், சாதிகள், வர்க்கங்கள், சமூக உறவுகள், மதீப்பீடுகள், ஒழுங்குகள் தர்க்கங்கள் என சகல பண்பாட்டுக் கூறுகளுக்கும் மறுவிளக்கங்கள் அளித்து ஒரு பொதுவான வாழ்க்கைக் கண்ணோட்டத்தை உருவாக்க முயன்றன. இந்த இரண்டு தத்துவங்களும் சமூகத்தை, வாழ்க்கையை, மனித உறவுகளை அவர்களது உடலை அவர்களது ஹிருதயத்தைப் பற்றித் திட்டவட்டமான முடிவுகளையும் இலட்சியங்களையும் கொண்டிருந்தன. அவை அதிகாரத்திற்கான வேட்கையோடு இணைந்திருந்ததால் புரிந்து கொள்வதைவிட மாற்றியமைப்பதில் தீவிரங்காட்டின. மனித இயல்புகள் அவற்றின் மேல் செலுத்தப்படும் வரையறைகள் பற்றி காந்தீயமும் மார்க்ஸீயமும் கொண்டிருந்த தவறான கற்பிதங்களால் அவை நம் கண்ணெதிரேயே சிதறிவிட்டன.

பெரும்பாலான தமிழ்ப்படைப்பாளிகள் காந்தீயத்தாலும் மார்க்ஸீயத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள். அவற்றின் நம்பிக்கைகளையும் வரையறைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்றுக் கொண்டவர்கள். இதன் மூலம் உருவான இலக்கியவாதக் கண்ணோட்டத்துடன் வாழ்வின் முரண்களை எதிர்கொண்டனர். இந்த இலட்சியவாதக் கண்ணோட்டம் கூர்மையாக அம்முரண்களை வெளிப்படுத்துவதற்குப் பதில் மழுங்கடித்தது. அசௌகரியமான உண்மைகளை மூடிமறைத்தது. பொய்யான சமாதானங்களை வழங்கியது. இந்தப் பின்னணியைச் சேர்ந்த படைப்பாளிகள் தம்முடைய சாதீய வர்க்க இருப்பிற்கு வெளியே இருந்த விவசாயிகள், தொழிலாளர்கள், இழிந்த சாதிகள், வேசிகள், பொறுக்கிகள் பற்றி எழுதவே செய்தனர். ஆனால் நமது காலத்தில் மிகவும் அருவருக்கத்தக்க ஓன்றாகிவிட்ட மனிதநேயம் அல்லது சமூக அக்கறை என்ற மேலிருந்த குற்றவுணர்வுப் பார்வையிலிருந்து கடைப்பட்டோர் பற்றிய சித்திரங்கள் உருவாக்கப்பட்டதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பொதுக்கருத்தியலுக்குள் அவர்களுக்கான அசலான இருப்பை இழந்திருந்த கடைப்பட்டோர் தமக்கான வாழ்வியலையும் அறவியலையும் வெளிப்படுத்தும்போது அவை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன, ஜி. நாகராஜனின் படைப்புலகம் ஒரு மத்தியதர வாசகனுக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி இத்தகையதுதான். அவனது எல்லா அடிப்படை தார்மீக நியதிகளையும் அது நிராகரித்து விடுகிறது.

ஜி. நாகராஜனின் உலகம் முழுக்க முழுக்க பாலுணர்ச்சியும் குற்றமும் சம்பந்தப்பட்டது. ஆனால் அது பாலுணர்வு மற்றும் குற்றம் சார்ந்த நடவடிக்கைகளை விவரிக்கும் ஒரு புனைவு அளிக்கக்கூடிய எந்தக் கிளுகிளுப்பையும் சுவாரசியத்தையும் தருவதில்லை. பாலுணர்ச்சியிலும் குற்றத்திலும் படிந்திருக்கும் கனவையும் சாகசத்தையும் நாகராஜன் இரக்கமில்லாமல் அழித்து விடுகிறார். சில சமயம் குரூரமான, சிலசமயம் வேடிக்கையான சில சமயம் அர்த்தமற்ற, சிலசமயம் நெகிழ்ச்சி மிகுந்த ரூபங்களைக் கொல்லும் பாலுணர்ச்சியும் குற்றமும் வாழ்வின் விசித்திரங்களை கண்டடைவதற்கான ஒரு பாதையே தவிர அவையே இலக்குகள் அல்ல பாலுணர்ச்சியும் வன்முறையும் முழுமையாக கட்டவிழும் நாகராஜனின் படைப்புக்களனில் மனிதன் அடையக்கூடிய அவமானங்கள் இம்சைகள், நம்பிக்கைக்கும் மீட்சிக்குமான தத்தளிப்புகள் மீட்சியற்றுப் போகையில் வாழ்வதற்கான சமாதானங்கள் என எண்ணற்ற தளங்கள் விரிகின்றன. நாகராஜனுக்கு மனிதனைப் பற்றியோ வாழ்க்கையைப் பற்றியோ கற்பிதங்கள் இல்லாததால் நிகழ்வுகளை அதன் ரத்தமும் தசையுமான வடிவில் மீட்டெடுக்கிறார். நடைமுறைத் தேவைகளும் வாழ்வதற்கான போராட்டமும் மனிதனின் இரகசிய ஆசைகளுமே வாழ்வின் திசைவழியை; தீர்மானிக்கின்றன; இலட்சியங்களும் மதிப்பீடுகளும் அல்ல என்பதை நாகராஜனின் குரூரமான யதார்தத் தளம் வெளிப்படுத்துகிறது.

ஜி. நாகராஜனையும் அவரது படைப்புகளையும் எப்படி வகைப்படுத்துவது? குறத்தி முடுக்கில் இவ்வாறு எழுதுகிறார்: `தங்களது கொள்கையாலும் நடத்தையாலும் சமூதாயத்திலிருந்து தங்களைத் தாங்களே பகீஷ்கரித்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன்’. இந்த சுயபகிஷ்காரத்தால் சமூகத்தின் ஒழுங்குகளை ஏற்றுக்கொண்டவர்களும் அந்த ஒழுங்குகள் குலைந்து விடாமல் அவற்றை இரகசியமாக மீறுகிறவர்களும் அடைகிற அடிப்படை பாதுகாப்பை இழந்தவர்கள் ஜி. நாகராஜனும் அவரது கதாபாத்திரங்களும். பொதுப் பண்பாட்டினால் குற்ற உலகினர் எனக் கருதப்படும் நாகராஜனின் பாத்திரங்கள் எளிமையும் பரிதவிப்பும் கனவுகளும் கழிவிரக்கமும் குற்ற உணர்ச்சியும் கொண்டவர்கள். `நாளை மற்றொரு நாளே’ யில் மிரட்டிப் பணம் பறிக்கும் கந்தன்தான் தன் குழந்தை இறந்து போனதற்கு அதன் பலூனை சிகரெட்டால் சுட்டு உடைத்ததுதான் காரணம் என நினைத்து மருகுகிறான்; மீனா புணர்ச்சி இன்பத்தின் முடிவில் காணாமல் போன மகளை நினைத்து அழுகிறாள். கந்தன் மீனாவை தன் வாழ்வின் நிச்சயமின்மை காரணமாக ஒரு நல்ல இடத்தில் சேர்ப்பித்துவிட வேண்டுமென்று நினைக்கிறான். ஒரு தந்தை அல்லது தாய், ஒரு சகோதரன் அல்லது பாதுகாவலன் வகிக்கக்கூடிய இடத்தை ஒரு விபச்சாரியின் காதலன் எவ்வாறு மேற்கொள்கிறான், அவர்களுக்கிடையிலான உறவின் இழைகளை எவை தீர்மானிக்கின்றன என்பதை பொதுவான மதிப்பீடுகளின் வழியே அறிய முடியாது. மனிதர்கள் தமக்கிடையே சுயமாக ஏற்படுத்திக் கொள்கிற உறவுகளின் அழங்காண முடியாத பந்தங்களிலிருந்து இத்தகைய தார்மீகப் பொறுப்புகள் எழுகின்றன. குறத்தி முடுக்கில் தங்கம் அவளை நேசிக்கிறவனுக்குப் பதில் அவளைக் கூட்டிக் கொடுத்த கணவனைத் தேடிப் போகிறாள். திருமணம் என்ற உறவிற்கான எல்லா நியமங்களும் அழிந்துவிட்ட ஒரு சூழலுக்குள் வந்த பிறகும் அவளது திருமண உறவிற்கும் பாலியல் தொழில் சார்ந்த பிற உறவுகளுக்கும் நடுவே ஒரு தீர்க்கமான இடைவெளி இருக்கிறது. (இந்த இடைவெளி தங்கத்திற்கும் அவளது உடலுக்குமான இடைவெளியா அல்லது பொதுப் பண்பாட்டிற்கும் அதிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்குமான இடைவெளியா அல்லது அறுபடாத உறவா எனும் கேள்விகள் எழுகின்றன.) `துக்க விசாரணை’ எனும் கதையில் ஒருவன் ரோகிணி என்ற விபச்சாரியின் மரணத்திற்குத் துக்கம் கேட்கப் போகிறான். பால்வினை நோயைக் கொடுத்ததற்காக ஒரு வாடிக்கையாளனிடம் செருப்படி வாங்கியதன் அவமானத்தால் ரோகிணி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அறிகிறான். ரோகிணியின் சாயல் கொண்ட துக்கம் விசாரித்தவளிடமே உறவு கொள்கிறான். இதுபோன்ற எளிதில் புரிந்து கொள்ள முடியாத விளக்கமளிக்க இயலாத ஏராளமான சம்பவங்கள் ஜி.நாகராஜனின் படைப்புகள் முழுவதும் நிறைந்திருக்கின்றன. ஜி. நாகராஜனின் மனிதர்கள் பாதுகாப்பின்மைக்குள் ஒரு பாதுகாப்பையும் உறவின்மைக்குள் ஒரு உறவையும் அவமானத்திற்குள் ஒரு தன்மானத்தையும் நெறியின்மைக்குள் ஒரு நெறியையும் உருவாக்கிக் கொள்ள எப்போதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜி. நாகராஜனின் படைப்புகள் மையமான பாத்திரங்களைக் கொண்டவையல்ல. ஒரு சூழலின் குறுக்கும் நெடுக்கமான எண்ணற்ற கோடுகளால் அவரது பாத்திரங்கள் அமைந்துள்ளன. அவை விசேஷமான இயல்புகள் மேல் கட்டப்படுவதில்லை. கந்தன், மீனா, தங்கம் போன்ற பாத்திரங்கள் கூட அவை தம் சூழலோடு கொள்ளும் உறவின் கூர்மை காரணமாக அழுத்தம் பெறுகின்றனவேயன்றி அவற்றின் தனித்துவங்களால் அல்ல. ‘நாளை மற்றொரு நாளே’, ‘குறத்தி முடுக்கு’ அவரது சிறுகதைகள் எல்லாவற்றிலும் அநேக பாத்திரங்கள் ஒரு மின்னலைப் போல கடந்து சென்று கொண்டேயிருக்கின்றன. அதே சமயம் அவை எதுவும் மங்கலானவை அல்ல. நாகராஜன் எதையும் விவரிப்பதோ அழுத்தம் கொடுப்பதோ இல்லை. அவரது பார்வையில் எதுவும் அவ்வளவு முக்கியமானதும் அல்ல. வாழ்வும் எழுத்தும் என்ற கதையில் கேட் அடைக்கப்பட்டுள்ள ரயில்வே கிராஸிங்கில் காத்துக் கிடக்கும் நாகராஜனின் சித்திரம் இது.

நாகராஜனைப் பொறுத்தவரை அடைக்கப்பட்டுள்ள கேட்டுகள் முன் திறப்பிற்காக பொறுமையிழந்து காத்திருப்பதுதான் வாழ்க்கை. திறப்பிற்கான அந்த முட்டி மோதல்களுக்கு மேல் அதற்கு எந்த அர்த்தமோ அழகோ இல்லை.

வாழ்வதற்கான போராட்டத்தில் சிதிலமடைந்துபோன அரசியல், அறிவியல், ஒழுக்கவியல் கற்பிதங்களை எதிர்கொண்ட நாகராஜனின் மொழி மனவறட்சியின் கூர்மையான அங்கத்துடன் உருவெடுக்கிறது. அரசியல் இயக்கங்கள் மனித நடத்தைகள் ஆசைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் இடையிலான நாடகங்கள் மேல் நாகராஜனின் எள்ளல் தீவிரமாக வெளிப்படுகிறது. புதுமைப் பித்தனுக்குப் பிறகு இவ்வளவு விமர்சன பூர்வமான மூர்க்கம் கொண்ட எள்ளலை நாகராஜனிடம் காணமுடிகிறது.

ஜி. நாகராஜனின் கதைகளில் காணப்படும் யதார்த்தவாத சித்திரிப்பு ஒரு தோற்றம் மட்டுமே. ஒரு அப்பாவி வாசகனை எளிதில் ஏமாற்றிவிடக்கூடிய தோற்றம் இது. பௌதீக உலகிற்கும் அக உலகிற்கும் இடையே அவரது மொழி மாறி மாறி இயங்கிக் கொண்டிருக்கிறது. இறந்தகாலமும் நிகழ்காலமும் நிஜமும் கனவும் பல இடங்களில் ஒன்றொடொன்று குழம்பி விழுகின்றன. வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்ட சம்பவங்களால் ஆனதல்ல நாகராஜனின் படைப்பு மொழி. உதாரணமாக டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் எனும் சிறுகதை அதன் உத்தியாலும் மொழியாலும் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் மிக அபூர்வமான ஒரு படைப்பாக இருக்கிறது. ஜி. நாகராஜனின் படைப்புகளில் மிகச் சிறப்பான இயல்பு, அவர் உரையாடல்களை அமைக்கும் விதம். இரண்டு மனிதர்கள் கதையை நகர்த்துவதற்காக ஒரு செய்தியை பரிமாறிக்கொள்வது என்ற நோக்கில் அந்த உரையாடல்கள் அமைந்திருப்பதில்லை. அந்தக் கதைகளுக்கு வெளியேயும் ஒரு வாழ்க்கை முறையின் குரலாக அவை அமைந்திருக்கின்றன. இந்த உரையாடல்களில் மனிதர்களுக்கிடையேயான பேரங்களும் ஏமாற்றுகளும் பாசாங்குகளும் அவலத்தின் முடிவற்ற வெறுமையும் மிகச் சூட்சுமான குறியீடுகளுடன் அமைந்துள்ளன. அபாயமும், நிச்சயமின்மையும் சூழ்ச்சியும் நிறைந்த ஒரு விளையாட்டுக்களனில் சாதுர்யத்துடன் காய்களை நகர்த்துகிற விதமாக இந்த உரையாடல்கள் நிகழ்கின்றன. இந்தப் பேச்சுகளுக்கு விரிந்து கிடக்கும் இடைவெளிகளும் மௌனங்களும் நாகராஜன் தேர்ந்தெடுக்கிற இயல்பான துல்லியமான சொற்களின் மூலம் நம் மனங்களை அதிர்வடையச் செய்கின்றன.

ஜி. நாகராஜனின் படைப்புகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை ஆழமாக அறியவும் மதிப்பீடு செய்யவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ள நாகராஜனின் தீவிர வாசகன் என்ற வகையில் இரண்டு கேள்விகள் என்னை அலைக்கழிக்கின்றன.

1. ஜி. நாகராஜனின் பிம்பத்திற்கும் அவரது வாசகனுக்குமான உறவு.

2. படைப்புச் சுதந்தரம் பற்றிய பிரச்சனைகள்.

ஜி. நாகராஜன் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைமுறை தொடர்ந்து விவாதத்திற்குள்ளாயிருக்கிறது. அதை ஒழுங்கீனத்தின் அராஜகத்தின் சீரழிவின் வெளிப்பாடாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். தனி மனிதன் மேல் சமூகமும் பண்பாடும் சுமத்துகிற ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு கலகமாக விடுதலைக்கான யத்தனிப்பாகப் பார்த்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த இரண்டு பார்வைகளுமே நமது ஒழுக்கவியல் எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தாம். ஆனால், நாகராஜன் மனிதர்கள் மேல் இத்தகைய விமர்சனத்தையோ புனைவையோ சுமத்துவதில்லை. அவரைப் பொறுத்தவரை அவர் வாழ்ந்த அவர் எழுதிய சூழல் ஒரு வாழ்க்கை முறை. மற்ற வாழ்க்கை முறைகளைப் போலவே அங்கும் சில சந்தோஷங்களும் துயரங்களும் உள்ளன. அதற்கென சில நியாயங்களும் அநியாயங்களும் இருக்கின்றன. அதனளவில் அது நல்லதோ கெட்டதோ அல்ல. எதற்கும் அது மாற்றோ, முன்னுதாரணமோ இல்லை. அங்கு விடுதலையும் ஒடுக்குமுறையும் வேறு அர்த்தங்களில் நிலவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒரு இளம் படைப்பாளியைப் பற்றி எனக்குக் கடிதம் எழுதிய நண்பர் ஒருவர் அவர் ஜி. நாகராஜனைப் போல வாழ்ந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த இளைஞரின் வாழ்விற்குப் மரணத்திற்கும் அளிக்கப்பட்டிருந்த இந்த நற்சான்றிதழில் ஒட்டியிருந்த பெருமிதம் சங்கடம் தருவதாக இருந்தது. பாதுகாப்பிற்கும் உத்திரவாதத்திற்குமான சமூகத்தின் எல்லா வழிமுறைகளையும் தந்திரங்களையும் பின் பற்றுகிறவர்கள். அந்தப் பாதுகாப்புகள் இல்லாமல் போனவர்களை ஒன்று இலட்சிய புருஷர்களாக்குகிறார்கள் அல்லது தமது அழுகிப் போன நெறிமுறைகளின் பேரால் சீரழிந்தவர்களாக சித்தரிக்கின்றார்கள். இவையெல்லாம் மத்தியதர வர்க்கத்தினது இயலாமையின் வெளிப்பாடுகள். ஜி. நாகராஜனின் வாழ்வுப் படைப்பும் இந்த இயலாமைக்கு அப்பால் இருக்கின்றன. நாகராஜனின் படைப்புகளை அவரைப் பற்றிய பிம்பங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது.

இரண்டாவதாக ஜி. நாகராஜனின் படைப்புகளை அணுகக்கூடிய எந்த ஒரு வாசகனுக்கும் முதலில் தோன்றக்கூடிய மனப்பதிவு அவர் ஒரு துணிச்சலானக் கலைஞன் என்பதே. இந்த துணிச்சலுக்கு நாகராஜன் கொடுக்க வேண்டியிருந்த விலை சமூகத்திலிருந்து கொள்கையாலும் நடத்தையாலும் சுயபகீஷ்காரம் செய்து கொண்டதுதான். இருந்தும் குறத்திமுடுக்கின் முன்னுரையாக எழுதிய குறிப்பில் இவ்வாறு சொல்கிறார்.

தலைப்பு : என் வருத்தம். படைப்பாளிக்கு ஏன் சொல்லமுடியாத குறை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது? சொல்வதையே தொழிலாகக் கொண்டவனுக்கு சொல்ல முடியாததன் துக்கம் இயற்கையானதுதான். அவனைப் பொறுத்தவரை படைப்புச் சுதந்தரம் என்ற கோஷமே அர்த்தமற்றது படைப்பியக்கத்தின் உள்ளார்ந்த செயல்பாட்டை உணரும் கலைஞன் படைப்புச் சுதந்தரம் என்ற கோஷத்தை முழங்க கூசிப் போவான். ஏனெனில் அவனது வெளிப்பாடு அவனது படைப்புத்திறனால் ; அவனது படைப்புத்திறன் அவனது மொழியால் ; அவனது மொழி அவனது மன இயக்கத்தால் ; அவனது மன இயக்கம் அவனது அனுபவங்களால் ; அவனது அனுபவம் அவனது சூழலால்; அவனது சூழல் அவனது சமுத்திரத்தால் கட்டுண்டு கிடக்கிறது.

படைப்பியக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு நேர் வரிசையில் நிகழாமல் இருக்கலாம். நான் சொல்ல விழும்புவது என்னவென்றால் படைப்பியக்கம் சுதந்தரம் பற்றிய பிரக்ஞையை அல்ல சுதந்தரமின்மை பற்றிய பிரக்ஞையே கொண்டு வருகிறது என்பதுதான். படைப்பாளியின் உள்ளார்ந்த வெளி எப்போதும் அவனுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது என்றால் அவனது புறவெளி வேறு வகையான நிர்ப்பந்தங்களை உண்டாக்குகிறது. கலையையோ இலக்கியத்தையோ அதற்குரிய தர்க்க நியாயங்களுடன் உணர்ந்து கொள்ளப் பக்குவப் பெறாத இந்தப் புறவெளி படைப்பாளியின் குரல் வளையில் நேரடியாக கத்தியை வைக்கிறது. உதாரணமாக வேசிகளைப் பற்றி கதை எழுதுகிற ஒருவனிடம், வேசிகளிடம் போய் விட்டு வந்த ஒருவனிடம் என்ன மொழியில் உரையாட முடியுமோ அதே மொழியில்தான் நமது சூழல் பேசுகிறது. அத்தகைய கதை ஓன்றை எழுதிய என் நண்பன் ஒருவனிடம் தமிழின் மிக முக்கியமான படைப்பாளி ஒருவர் `பி.மி.க்ஷி. பரிசோதனை செய்து கொண்டீர்களா’ என்று கேட்டார். ஒருவன் தன்னுடைய மனஇயக்கம் மற்றும் அனுபவங்களுக்கும் அவனது படைப்புகளுக்குமாக இடைவெளியை எந்த அளவிற்கு குறைக்கிறானோ அல்லது வரையறுக்கப்பட்ட அனுபவ எல்லைகளை எந்த அளவு மீறிச்செல்கிறானோ அந்த அளவு அவனது இருத்தல் அபாயங்களுக்குள்ளாகிறது. தமிழ் இலக்கியவாதிகள் பலர் இந்த அபாயத்தை எதிர்கொள்ள முடியாமல் தம் ஆமையோடுகளுக்குள் வசித்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இந்தப் புறநெருக்கடியினை எதிர்கொள்ள திறன் மிகுந்த கலைஞன் தன் அனுபவங்களை வெவ்வேறு தளமாற்றங்களுக்குக் கொண்டு செல்கிறான். புதிய படைப்பு மொழியையும் வடிவத்தையும் உருவாக்குகிறான்.

வாழ்வின் அறியப்படாத பிரதேசங்களை நோக்கி பயணம் செய்ய விரும்பும் ஒரு இளம் படைப்பாளிக்கு ஜி. நாகராஜனின் படைப்புகள் அளிக்கும் திறப்பும் உத்வேகவும் அளப்பரியவை. வாழ்வை நிழலும் புகையுமில்லாமல் எதிர்கொள்வதற்கு ஜி. நாகராஜனின் எழுத்துக்கள் வெளிச்சம் தருகின்றன. வெளிப்பாட்டிற்கான அகவெளியையும் புறவெளியையும் எப்படி விஸ்தரிப்பது என்ற பிரச்சனையை எதிர்கொள்ளும் விதத்தில் எனக்குப் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்