Jun 29, 2010

ஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்

அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை. கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடலில்தான் ஒரு விறைப்பு. அவனைக் கழுத்துக்குக் கீழே, இழுத்துக் கட்டிப்போட்ட மாதிரி சற்று வலிந்து உடல் திரும்ப முயன்றபோது, இரண்டு முழங்கால்களும் பொருவின ‘அப்பா!’ என்று சொல்லி வலியைத் தணித்துக் கொள்வதுபோல.
gn' உடல் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தது. இருபது ஆண்டுகளாவது புழுதியிலும் பாறையிலும், இரண்டு கைகளுக்கு ஆதரவாக மனிதனின் மிகப் பூர்வகாலக் கருவிகளின்றி வேறெதையும் கொள்ளாமல் இயற்கையோடு முட்டி மோதி, வேறெந்தப் பலனையும் காணாமல் ஒரு வைரத்தின் உறுதியைப் பெற்றுவிட்ட உடல். கறுத்து மென்மையை இழந்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு பாதுகாப்பான முரட்டுத் தோலை வாழ்க்கைப் போரில் கிடைத்த மற்றொரு சிறு வித்தாகக் கொண்டுவிட்ட உடல். அவ்வுடலில் இயற்கைக்கு மாறாக, ஆங்காங்கு கைகளிலும், புயத்திலும், விலாப்பக்கங்களிலும் தடிப்புகள். மாணிக்கம்போல் உறைந்துவிட்ட கீற்றுகள். ஆங்காங்கே கறுப்பு வரிக்கோடுகள் சில இடங்களில், குறிப்பாக மார்பில் நாலு ஐந்து சென்டிமீட்டர் அகலத்தில் தடயங்கள் இடுப்புக்குக் கீழே அழுக்கடைந்த வேட்டி. உங்களுக்குச் சற்றுக் கூரிய பார்வை இருந்தால், உடலின் முழங்கால்கள் சற்றுப் பருத்து இருப்பதுபோல் வேட்டிக்கு மேலேயும் தெரியும். மேலும் அவை சிறிதும் அசையாமலேயே கிடக்கின்றன.
சூரிய ஒளி ஒரு ரூபாய் அளவுக்கு வட்ட வடிவில் உடலின் கையை எட்டியது. அதன் இயக்கத்தில் ஒரு விளையாட்டுத் தன்மை இருந்தாலும், அதன் முகத்தில் செம்மை, தாமிரத் தகடுபோல் தகித்தது. உடல் கழுத்தை அசைத்தது; கண்களை விழித்தது. ஒரு பெருமூச்சு உடலைக் குலுக்கிற்று. நா வறண்டது. ‘தண்ணீர்!’ உடல் கத்திவிட்டது. உடல் அவனாயிற்று.
”உம்...ண்ணி” அவன் செவிகளுக்குள் ஒலி புகுந்தது. திரும்பிப் பார்த்தான். லாக்கப்பின் கம்பிகளுக்கு அப்பால் ஒரு போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார்.
”அய்யா, கொஞ்சம் தண்ணீ” - உடல் முறையிட்டது.
போலீஸ் ஸ்டேஷனில் இருந்த டெலிபோன் மணி அடிக்கடும் போலீஸ்காரர் ஃபோனுக்கு ஓடினார். சிறிது நேரம் ஏதோ பேச்சு. பிறகு போலீஸ்காரர் ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு நாற்காலியில்.  “அய்யா, கொஞ்சம் தண்ணி தாங்கைய்யா. தவிச்சு சாகணும்னு நெனைச்சிருக்கீங்களா?”
”த...யெழி” தடியைச் சுழற்றிக்கொண்டு போலீஸ்காரர், பீடியைத் தூக்கி எறிந்துவிட்டு, நாற்காலியிலிருந்து குதித்து எழுந்தார்.
”மூணு பேர் சீட்டுக் கிளிஞ்சிருக்குமே இன்னிக்கு. அரைமணி நேரம் போயிருந்தா உன்னை எவன் போய் எப்படிக் கண்டுபிடிச்சிருப்பான்? சந்தை நாள் வேறே....! நீ என்ன மாமூல்வாதியா பிடிச்சிக்கலாம்னு விட்டுட?”
மனிதனுக்கு சுருக்கென்றது. அவன் ஒரு கைதி. தப்பி ஓட முயன்ற கைதி. சட்ட ஒழுங்கு சக்திகளோடு அவன் மோதினான். போதுமான சுதந்திரம் இல்லாமல் அதன் விளைவு இது. நா வறட்சி மறந்துவிட்டது. நினைவு வேலை செய்தது. காலை ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் நடந்த விபரீதம். இரவிலேயே அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்று, டாக்டர் சர்ட்டிபிகேட் எடுத்து லாக்கப்புக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். காலை எட்டு எட்டரைக்குத்தான் எழுந்திருப்பான். சுமார் பத்துப் பன்னிரெண்டு கைதிகளோடு அவனும் ஒருவனாய் போலீஸ் ஸ்டேஷனின் பின்புறத்தில் ஒரு தாழ்வாரத்தில் இருந்ததை உணர்ந்தான். அவர்கள் எல்லாரும் ஏற்கனவே விழித்துக்கொண்டு விட்டவர்கள். ஸ்டேஷனுக்குள் ஏழெட்டு போலீஸ்காரர்கள் நடமாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களில் இருப்பவர் வெளியே போவதும், வெளியிலிருந்து புதுப் போலீஸ்காரர்கள் வருவதும், உடைகள் மாற்றிக்கொள்வதும், பீடி சிகரெட் பிடிப்பதும், சமயங்களில் கலகலப்பாகவும், சமயங்களில் ஏதாவது ஒன்றைக் கடிந்தும், பொதுவாக உரக்கப் பேசியவர்களாகவும் சிரித்தவர்களாகவும் இருந்தனர். அவன் தன்னைச் சுற்றியிருந்த கைதிகளைப் பார்த்தபோது அவர்கள் அனைவருமே தமக்குள்ளோ, வெளியிலிருந்து வந்தவர்களோடோ, போலீஸ் அதிகாரிகளோடோ பேசியவண்ணமும் சமயங்களில் தர்க்கித்தவண்ணமும் இருந்தனர். தாழ்வாரத்தில் இருந்த பெரிய தொட்டி நிறைய தண்ணீர் இருந்ததாலும், அதில் தொடர்ந்து தண்ணீர் பைப்புகளின் வழியே கொட்டிக்கொண்டிருந்தாலும், கைதிகளும் போலீஸ்காரரும் சற்றுச் சிறுக விலகி நின்று பல் விளக்குவதும், கழுவுவதும், பலகாரங்கள் உண்டுவிட்டு வாய் கழுவிக்கொள்வதுமாய் இருந்தனர். அவனுக்கு அவர்கள் மீது சற்றுப் பொறாமை ஏற்பட்டது. ஆனால் அது இன்னும் தணியாத போதையின் விளைவு. இயற்கையில் அவனுக்குப் பொறுமை கிடையாது. தரித்திருத்தலுக்கு, அவனைப் பொறுத்தமட்டில் அது ஒரு அவசியப் பண்பு அல்ல.
தாழ்வாரத்தில் ஒரு வேயப்பட்டிருந்த பகுதியில் ஒரு சுவரோரம் சுருண்டு கிடந்த அவன் எழுந்து உட்கார்ந்ததும் விருட்டென்று எழுந்து தாழ்வாரத்தையும், போலீஸ் ஸ்டேஷனையும் பிரிக்கும் நிலைக்கு வந்து நின்றான். வெளியே கலகலப்பான நகரம், கலகலப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் நிலையைக் கடந்து ஸ்டேஷனுக்குள் காலெடுத்து வைத்தான். காலி கிளாஸ் டம்ளர்களைக் கொண்ட தேநீர் ஏந்தலோடு ஒரு சிறுவன் அவனை இடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனைக் கடந்து வெளியே சென்றான். சிறுவனுடைய கால்களையே அவனுடைய கால்களும் பின்பற்றிச் சென்றன. அவனையோ சிறுவனையோ யாரும் தடுக்கவில்லை. B-4 காவல் நிலையத்தை விட்டு அவன் தப்பி விட்டான். சிறுவயதில் கள்ளத்தனமாகக் கருதைக் கசக்கி மடியில் போட்டுக்கொண்டு, ஏதாவது சிறு ஓசை கேட்டாலும், அந்தப்புறம் இந்தப்புறம் திரும்பாது காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அம்பு போல ஓட்டம் என்று சொல்ல முடியாதபடி வேகமாக நடப்பானே அப்படியே நடந்தான். பிறகு...? ஒரு கை அவன் தோளைப் பற்றியது, அவன் ஓடியது, ஒரு லாரியில் முட்டிக்கொண்டது, பிடிபட்டது, உதைபட்டது, கட்டுப்பட்டது, ஸ்டேஷனுக்கு இழுத்து வரப்பட்டது, லத்தியால், பெல்ட்டால், பூட்ஸ் காலால் நையப் புடைக்கப்பட்டது. இறுதியில் அவன் பிடிபட்டிருக்காவிட்டால் வேலை இழந்திருக்கக்கூடிய இரண்டு போலீஸ்காரர்கள் மல்லாந்து கிடந்த அவனை முழங்கால்களில் லத்திகளால் தாக்கியது. அத்தனையும் அவனது நினைவு எல்லைக்கு வெளியேயே நின்றுகொண்டு உள்ளே வர இடம் இல்லாததுபோல் தவித்தது.
அவனுக்குப் பேச வேண்டும்போல் மட்டும் இருந்தது.
“அய்யா, தண்ணி தாங்கய்யா” என்று மீண்டும் தனது கோரிக்கையை வலியுறுத்தினான்.
“தண்ணியா... தர்றேன்” என்று சொல்லிக்கொண்டு அப்போது டியூட்டியில் இருந்த ஒரே அதிகாரியான அவர் சிறிதும் சிரமத்தைப் பொருட்படுத்தாது மிகவும் சுறுசுறுப்பாக தாழ்வாரத்துக்குச் சென்று ஒரு வாளி தண்ணீரைக் கொண்டுவந்து அவன் முகத்திலும் உடலிலும் வாரியிறைத்தார். ஒரு சில இடங்களில் சற்று எரிந்தாலும், தண்ணீர் வரவேற்கத் தக்கதாகவே இருந்தது அவனுக்கு.
“என்ன ஏட்டையா, யாருக்குக் குளியல்?” என்று கேட்டுக்கொண்டே ஒரு வாலிப போலீஸ்காரன் வந்தான்.
“காலேலே எஸ்கேப் ஆனாரு இல்லே. அவருக்குத்தான்.”
“இந்தத் தா... தானா?” வாலிப போலீஸ்காரன் லாக்கப்புக்குள் இருந்த கைதியை உற்றுப் பார்த்தபடி பெல்ட்டை அவிழ்த்தான். “ஏட்டையா கொஞ்சம், லாக்கப்பை தெறந்து விடுங்க” இளைஞன் உத்தரவிடுவதுபோல பேசினான்.
“நீ ஒண்ணு சந்தானம். பயலெ நல்லா நெறுக்கிப் போட்டாங்க. சாவக் கெடக்கறான். தண்ணி தண்ணீனு அலர்றான்.”
”தா.. மூணு குடும்பத்தோரை நடுத்தெருவிலே நிறுத்தி இருப்பான். நீங்க கதவெத் தெறங்க ஏட்டையா”
ஏட்டையா சாவியைக் கொடுத்தார். கைதி அப்படி இப்படி அசையாமல் இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். முகம் மட்டும் திறந்த கதவின் பக்கம் திரும்பியது. அவ்வளவுதான், கண்ணைச் சேர்த்து தோல்பெல்ட்டால் ஒரு சவுக்கடி. கைதிக்கு ஜாக்கிரதை உணர்வு மேலோங்கியது. கண்களை மூடிக்கொண்டு, இலேசாகப் பற்களை நெறித்தவண்ணம் அசைவற்றுக் கிடந்தான். அப்பப்பா, முழங்கால்களில் அப்படி ஒரு திடீர் வலி. இரண்டு கைகளையும் தூக்கவோ திருப்பவோ முடியவில்லை. அடி பெறாத மணிக்கட்டு இருந்த இடது கையை வேண்டுமானால் சிறிது அசைக்கலாம். முகத்திலும், கழுத்திலும், தோள்பட்டைகளிலும் மாறி மாறி அடிகள் விழுந்தன. முகத்தில் எச்சில் விழுந்தது. எதற்கும் அவன் அசையவில்லை. இறுதியில் முழங்கால்களில் ஒரு முரட்டுத்தனமான அடி. “அய்யோ, அய்யோ” என்று அலறினான். மூடிய கண்களைப் பொத்துக்கொண்டு கண்ணீர் வந்தது. கைதியை கதற வைத்துவிட்ட திருப்தியோடு போலீஸ் இளைஞன் பெல்ட்டை இடுப்பில் கட்டிக் கொண்டான்.
இன்னும் ஒருவன் வர வேண்டியிருந்தது கைதிக்குத் தெரியாது. வேலை இழந்திருக்கக்கூடிய மூவரில் இருவர்தான் அவனைப் பார்த்துவிட்டுப் போயிருக்கின்றனர். மூன்றாமவன் நாற்பது வயதாகியிருந்த ’டூ நாட் சிக்ஸ்’ அதிகம் வம்பு தும்புகளுக்குச் செல்லமாட்டார். அவரிடம் ஒரு எலக்ட்ரிஷன் சர்ட்டிபிகேட் ஏ கிரேடோ, பி கிரேடோ தெரியாது. இருந்தததால் மேல் வரும்படியை  நியாயமான முறையிலேயே சம்பாதித்தார். லஞ்சம் கையூட்டு இவற்றை எல்லாம் அவரைப் பொறுத்தமட்டில் அனுமதிக்க மாட்டார். இத்தியாதி தர்மங்களை பின்பற்றுபவரை இகழவும் மாட்டார். காட்டியும் கொடுக்கமாட்டார். அநேகமாகப் பிறரைப் பற்றி வாயைத் திறக்கமாட்டார். ஒரு பிளாக் மார்க் இல்லாது இருபது வருஷ போலீஸ் சர்வீசை முடித்துவிட்டார். இன்றுதான் இந்தச் சோதனை.
அடி, உதை, அவமானம். இன்னும் குறையாத போதை. இத்தனைக்கும் கீழே ஒரு வகையான விகாரமற்ற அமைதி. இத்தனையையும் பொறுத்துக் கொண்டு விட்டோமே என்ற உள்ளார்ந்த எக்களிப்பு. இவற்றின் விளைவால் உறங்கிக்கொண்டிருந்தான் கைதி. லாக்கப்பில் கதவு திறந்து கிடந்ததோ, அதனுள் ’டூ நாட் சிக்ஸ்’ நுழைந்ததோ, அவனை ஏற இறங்கப் பார்த்ததோ, இலேசாகக் காலால் உதைத்ததையோ அவன் உணரவில்லை. அசையாது கிடந்த உடலை உற்று நோக்கிவிட்டு அவன் முகவாயை உற்றுக் குனிந்து இரண்டு கைகளாலும் பற்றி இழுத்தார் ‘டூ நாட் சிக்ஸ்’. உடல் பக்கவாட்டில் சலனமின்றி நேராக நகர்ந்தது. ‘டூ நாட் சிக்ஸ்” அந்த உடல் கிடக்கும் நிலையும், திசையும் ஏதோ முக்கியத்துவம் பெற்றிருப்பதுபோல பார்த்தார். அமைதியாக அவர், உடலை ஒருமுறை சுற்றி வந்தவண்ணமே தன்னுடைய கூர்மையான பார்வையால் அதன் பல பாகங்களையும் உற்று நோக்கினார். பிறகு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
கைதியின் உடல், நீண்டநேரம் தன்னைத்தானே உணர்வுகளின் சீண்டல்களிலிருந்தும், வெறித்தாக்குதல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை. விரைவில், உடல் வெருண்டு இறுகியது. அது தனித்தனிப் பகுதிகளாகத் துடித்தது. உடலின் ஒவ்வொரு மூலையிடுக்கிலும் அப்படி ஒரு தாக்குதல்; நரம்புகளைச் சுண்டி இழுத்து தன் இச்சைப்படி செயல்படாதவாறு முடக்கிவிடும். சொடுக்கு சதைகளைக் கவ்விக்கொள்ளும். நட்டுவாய்க்காலியின் பிடி இருதயத்தைப் பந்துபோல் துள்ள வைக்கும் திகைப்பு. காதுகளிலே ஒரு அடைப்பு. கண்களை திறக்கவொட்டாது தடுக்கும் சதை இழுப்பு. தொண்டையின் ஆழத்திலிருந்து “தண்ணி, தண்ணி” என்பதுபோல் உறுமல், வாயில் நுரையைத் தள்ளிக்கொண்டு பீறிட்டு வந்தது. ‘டூ நாட் சிக்ஸ்’ அதையெல்லாம் முகம் திரும்பிப் பார்க்கவில்லை. சுவிட்ச்சை மட்டும் ஆஃப் செய்தார். தனக்கு போலீஸ் டியூட்டி இல்லாத நேரங்களில் மிகவும் கௌரவமான முறையில் மேல் வருமானம் வாங்கிக் கொடுத்த அவருடைய எலக்ட்ரிக் ஞானம், அவ்வப்போது போலீஸ் ஸ்டேஷன்களில் மின்சாரச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை உடனே கவனிக்கும் ஆற்றலால் அவருக்கு ஸ்டேஷனில் மரியாதையும் மதிப்பும் வாங்கிக் கொடுத்த அதே மின்னறிவு, இன்று தப்பியோட முயன்று தன்னை அவமானத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய கைதியைப் பழி தீர்த்துக்கொள்வதிலும் அவருக்கு உதவியதில் நம்பர் டூ நாட் சிக்ஸுக்கு உண்மையிலேயே மிகவும் உள்ளடங்கிய மகிழ்ச்சி.
*********
தட்டச்சு : சென்ஷி
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

1 கருத்துகள்:

Guru.Radhakrishnan on July 10, 2010 at 5:11 PM said...

Perasiriar Amarar G,Nagarajaninkathaikal ellame oru salanaththai nammuil kilappividu thanmai kondathu.Maranam avarai thaluvikkondapothum maruthuva manaiyillum bothai porul upayokiththavar.Naan avarai munpe arinthavan.avarathu natpu enakku kidaiththathu naan petra peraakum.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்