Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Feb 2, 2023

தபால்கார அப்துல்காதர் - எம். எஸ். கல்யாணசுந்தரம்

சென்ற வருஷம் பெர்னாட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது, “இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன?” என்று விசாரித்தார்.

“நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடி நாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி நீர் ஊற்று, தபால்கார அப்துல் காதர்” என்றேன்.

போஸ்ட்மன் அப்துல் காதர் என்ற சொற்கள் கேட்டதும் அவரது முகம் மலர்ந்து கண்களிலிருந்து அவருடைய உலகப் பிரசித்தியான ஹாஸ்ய ஒளி வீசிற்று.

“கடைசியாகச் சொன்னீரே, அதென்ன வேடிக்கை?” என்று வினவினார் அவர்.

“பார்த்தால்தான் தெரியும்” என்றேன்.

“சரி, உடனே காட்டும் - நான் எந்த ஊருக்குப் போனாலும் ஒரே ஒரு முக்கியமான வஸ்துவைத்தான்



பார்ப்பது வழக்கம். ஆக்ராவில் தாஜ்மஹால், கல்கத்தாவில் ஸிப்-புரியிலிருக்கும் ஆலமரம்; டில்லியில் துருப்பிடியாத எஃகால் செய்த பிருத்விராஜ் கீர்த்திஸ்தம்பம்; சென்னையில் கடற்கரை; அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம்; பம்பாயில் மலபார் குன்று; மதுரையில் திருமலை நாயக்கர் மஹாலிலுள்ள 'டோம்'; இவ்வூரில் தபால்கார அப்துல்காதர், போறும்” என்றார் ஷா.

“அப்படியே ஆகட்டும்” என்றேன்.

ஆனால் அவனுடைய வீட்டில் போய் விசாரித்ததில் அப்துல் காதர் அன்றுதான் மெடிகல் சர்டிபிகேட் கொடுத்துவிட்டு இரண்டு மாத ரஜாவில் தன் கிராமத்திற்குப் போய்விட்டான் என்று தெரிந்தது. அது எனக்கு மிக வருத்தத்தைக் கொடுத்தது. ஷாவின் வருத்தத்திற்கோ அளவேயில்லை. அவர் மறு ரயிலிலேயே வேறு ஊருக்குப் புறப்பட்டுவிட்டார்.

இந்த அப்துல் காதரைப்பற்றி எழுதுவதில் ஒரு விசேஷ சிரமம் இருக்கிறது; நேரில் பழகித்தான் அறியவேண்டுமே தவிர, சொல்லக் கேட்டோ அல்லது புஸ்தகத்தில் படித்தோ அறிய முடியாது. வர்ணனையிலிருந்து மட்டுமே ரோஜாவின் அழகையும் வாசனையையும் நாம் அறிய முடியுமோ? பால் என்னும் பொருள் கொக்கைப்போல நீண்டு கோணலானது என்று பிறவிக்குருடனான கிழவன் அனுமானித்தது போலாகும்.

அப்துல் காதர் வெகுநாளாக இவ்வூரில் தபால்காரனாக இருந்துவருகிறான். அவனை எத்தனையோ அதிகாரிகள் இடம் மாற்ற முயன்றும் முடியவில்லை. அவன் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அனேகருக்குத் தபால்பைதான் கண்முன் வரும். தபால்காரன் என்றால் அப்துல் காதரின் நீண்ட மாம்பிஞ்சுகள் போன்ற மீசையும், படிப்படியான நீர்வீழ்ச்சி போன்ற தாடியும், சிரித்த பற்களும், அன்பு ததும்பும் கண்களும், நீல நிறச் சட்டையும், காக்கி தலைப்பாகையும் மனத்தின் முன் நிற்கும். மற்ற தபால்காரர்களெல்லாம் 'பொய்க்கு தபால்காரர்' போலத் தோன்றுவார்கள். சொல்லப்போனால், தபால்காரன் என்பதைத்தவிர வேறு ஹோதாவிலோ அல்லது 'பூர்வாச்ரம' நிலைகளிலோ அவனைக் கற்பனை செய்து பார்ப்பதுகூடக் கஷ்டமாக இருக்கிறது. அவன் தபால்கார அப்துல் காதராகவே பிறந்து, எப்போதும் 35 வயதானவனாகவே இருப்பான் போலும்!

மாலை ஆறு அல்லது ஆறரை மணிக்கு அவன் தபால் எடுத்து வருவான். அவன் தெருக்கோடி திரும்பியதுமே மற்றொரு சூரியன் உதித்துவிட்டது போல ஜனங்களுக்குத் தோன்றும். அவர்களுள் சிலபேரைச் சந்தித்து அவர்களுடன் அப்துல் பேசுவதைக் கேட்போம்.

“என்ன அப்துல்காதர்?” என்பார் தாலுகா ஆபீஸ் சுப்பய்யர், பல்லிளித்தவாறு.

தபாலாபீசிலிருந்து புறப்படும் போதே யாராருக்குக் கடிதம் இருக்கிறது என்று அவன் மனப்பாடம் செய்திருப்பான். சுப்பய்யருக்கு ஒன்றுமில்லை என்பதை அவன் நன்கறிவான். இருந்தாலும் தேடிப் பார்க்கும் பாவனை செய்துவிட்டு, “இன்னிக்கு ஒன்றுமில்லை போலிருக்கே!... நாளைக்கு அதிருஷ்டம் எப்படியிருக்கிறது, பார்ப்போமா?” என்பான்.

ராமா ஜோசியர்:- என்ன சாய்பு! தபால் ஏதாவது...?

அப்துல்:- (புரட்டிப் பார்த்துக்கொண்டே) நீங்கதான் ஜோசியம் பாத்துச் சொல்லுங்களேன்!

ராமா:- நான் பணமில்லாமே யாருக்குமே ஜோசியம் பார்க்கிறதில்லையே!

இது தினசரிப் பாடம்; ஆனால் நாளது வரை இப்படிப் பேசிக்கொள்வதில் இருவருக்கும் சலிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மேலும் பேசிக்கொண்டே போவார்கள்.

அப்துல்:- ஒண்ணையுங்காணமே.

ராமா:- நல்ல வேளை புறப்பட்றபோது அபசகுனமாச்சு. என்னடா இழவு, தபால்லே கெட்ட செய்தி ஏதாவது வந்திடுமோன்னு பயந்தேன்.

அப்துல்:- அப்பொ, நல்ல வேளையாப் போச்சுன்னு சொல்லுங்க!

உபாத்தியாயர்:- என்ன அப்துல் என்னாலே உனக்கு சிரமம் இருக்காதே!


அப்துல்:- அதென்ன அப்படிச் சொல்றீங்க? மூணு லெட்டர் இருக்குதே... இது யாரு எழுத்துங்க? உங்க துரைசாமி பிள்ளை எழுத்துன்னு நினைச்சேன்; ஆனால் S அவர் இப்படி எழுதமாட்டாருங்க.

உபா:- ஆமாம். புது எழுத்தாகத்தான் இருக்கு. உடைச்சுப் பார்த்தால்தான் தெரியும்.

கோபால்ராவ்:- என்ன அப்துல், தயவில்லையே!

அப்துல்:- என்ன ஒரே வார்த்தையிலே அப்படிச் சொல்லிட்டீங்க!

கோபால்:- ஒரு லெட்டரா, கிட்டரா ஒண்ணையுங் காணமே.

அப்துல்:- பாத்தீங்களா, பாத்தீங்களா, என்னமோ சொல்லப் போறீங்கன்னு நினைச்சா!... என்னவிருந்தாலும் பாருங்க, தபால்காரப்பயன்னா வேறொண்ணு கேக்கத் தோண்றதில்லை. அவனும் மனுஷந்தானே, அவன் பிள்ளைகுட்டியைப் பத்தி விசாரிப்போம்...

கோபால்:- அடடே, அதெப்போ? ரொம்ப நாளா ஒண்ணும் பிறக்காதிருந்ததே. ஆணா, பெண்ணா?...

அப்துல்:- இப்பொ ஒண்ணும் இல்லீங்க. உங்க ஆசிர்வாதத்திலே பிறக்காமலா போகுது! ஒரு வார்த்தைக்கி சொன்னேன்.

டாக்டர் மேனன்:- ஹல்லோ போஸ்ட்மன், நமக்கு ரெஜிஸ்டர் லெட்டர் ஒன்று வரணும்; இன்னும் வரவில்லையே.

அப்துல்:- இப்ப வேண்டாமுங்க. ஒரு பத்து நாள் போகட்டுங்க.

மேனன்:- (கோபத்தோடு) என்ன அப்படிச் சொல்கிறாய்?

அப்துல்:- (அலட்சியமாக) இப்ப வர்ற ரெஜிஸ்டர் லெட்டரெல்லாம் இன்கம்டாக்ஸ் டிமாண்டு நோட்டீஸ் தானுங்க.

மேனன்:- (சிரித்துக்கொண்டு) டாம் ஸ்மார்ட் ஃபெலோ, ஐஸே (ரொம்ப கெட்டிக்காரப் பயல்).

விசுவநாத குருக்கள்:- ஏண்டாப்பா சாயபு, வடக்கத்தித் தபால் வந்துடுத்தோ?

அப்துல்:- வடக்கத்தி, தெற்கத்தி, பேனாக்கத்தி, தொண்டை கிழியக் கத்தி – எல்லாத் தபாலும் வந்துடுத்து, உங்களுக்கொண்ணும் இல்லை.

விசுவ:- ஏண்டாப்பா, வைக்கத்திலேருந்து எழுத்து இவ்விடத்துக்கு வர எத்தனை திவசம் பிடிக்கும்?

அப்துல்:- (தாழ்த்திய குரலில்) என்ன சாமி, விளக்கு வக்கிற நேரத்திலே, ‘எழுத்து’ ‘திவசம்’ எங்கிறீங்க?

விசுவ:- என் காது சூக்ஷ்மக் குறைவு. கொஞ்சம் உரக்கச் சொல்லு.

அப்துல்:- நீங்க ரிப்ளை கார்டு போடுங்கொ, அவங்க சுறுசுறுப்பா இருந்தா மூணே நாளிலே டான்னு பதில் வந்துடும்.

ஷாப்கடை பாச்சாமியா:- க்யா, அப்துல்? கத் ஹோனா?

அப்துல்:- நை, மகராஜ். 

பாச்சா:- க்யா, ரோஜ் ரோஜ் நை போல்தா?

அப்துல்:- க்யா கர்த்தா மகராஜ். அவங்க நை டால்தா, நம்ப எங்கேருந்து தேதா, சொல்லுங்க.

ஒருநாள் நாங்கள் சிலபேர் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நான் ஒருபுறத்தில் தலைகுனிந்தவாறு ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். அப்துல் காதர் ஆடி அசைந்துகொண்டு வந்து, புன்சிரிப்புடன் இரண்டாவது படியில் உட்கார்ந்து வெற்றிலைப் பாக்குப் பெட்டி பக்கமாகக் கையை நீட்டினான். மேலே வந்து உட்காரும்படி நாங்கள் சொன்னோம். “அதுக்கில்லே சார்; இங்கே குந்தியிருந்தா யாராவது வந்ததும் எட்டிக் கடிதத்தைக் கொடுத்திடுவேன். பேச்சும் நடக்கும்; வேலையும் நிக்காது” என்றான்.

அவன் சாதாரணமாக எங்களைப் போன்ற கூட்டங்களோடு பேசிக்கொண்டே தன் பாதி பாரத்தைக் குறைத்துக்கொள்வான். அன்றைய தினமும் அவன் அதையும் இதையும் பற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு ரத்தின முதலியாரைப் பார்த்து, “என்னாங்க சார், கலியாணம் இன்னம் ரெண்டு நாள்தானிருக்கு; உங்க ரங்கவேலு முதலியார் வரவில்லையே” என்று விசாரித்தான். ரங்கவேலு முதலியார் ஒருமணிநேரத்திற்கு முன்புதான் வந்திருந்தார். இந்த சம்பாஷணை நடக்கும்போது அவர் தூண் மறைவில் உட்கார்ந்துகொண்டிருந்தார். நாங்கள் வாய் திறக்குமுன் அவர் ஜாடை செய்து தான் வந்திருப்பதை வெளியிட வேண்டாமென்று கேட்டுக்கொண்டார். அதற்குள் அப்துல், “அவர் இருந்தா நல்லா இருக்கும். எப்பவும் சிரிச்ச முகம்; தமாஷாப் பேசுவார். என்ன ஒத்தாசை கேட்டாலும் செய்வார்” என்று அவரைச் சிலாகித்துப் பேசினான். அதற்குள் எங்கள் நடத்தையிலிருந்து அவனுக்குச் சற்று சந்தேகம் தோன்றவே அவன் தூண் பக்கமாக எட்டிப் பார்த்தான். நாங்கள் கொல்-லென்று சிரித்தோம். “பாத்தீங்களா, இங்கே உக்காந்துகிட்டே, கோட்டானைப் போல! என்ன சார், இந்தப் பய நம்மை ஏதாவது திட்டிப் பேசறானான்னு சோதிச்சீங்களா? நான் ஏன் சார் திட்டறேன், அதுவும் உங்களை... (பிறகு என் பக்கம் திரும்பி) அவரைப் பாருங்க, தலைகுனிஞ்சிக்கிட்டே மனசுக்குள்ளே சிரிச்சிக்கிட்டு இருக்காரு. இந்தத் தபால்காரப் பயலுக்கு இந்த வம்பெல்லாம் எதுக்குன்னு இதையெல்லாம் சேத்து வச்சிக் கதை எழுதினாலும் எழுதிடுவாரு!... சரி, போய்ட்டு வறேன், சார்!” என்று சொல்லிக்கொண்டு எழுந்தான். எனக்குச் சற்று ஆச்சரியமாகவே இருந்தது. அந்தச் சமயத்தில் அவன் ஊகித்தவாறே நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். அனுபவ ஞானத்தால் அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டான்.

‘இதெல்லாம் சரிதான். ஆனால் கதை யெங்கே?’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். வாஸ்தவந்தான், இன்னும் ஆலாபனத்திலேயே சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் உமக்குத் தெரியாதா? சிறுகதைக் கலையில் இதுதான் நவநாகரிக முறை. இனி கதை கேளுங்கள்.

ஒரு சமயம் அப்துல் காதர் ஒரு மாதம் லீவ் வாங்கிக்கொண்டான். அவனுக்குப் பதிலாக வேலுசாமிப் பிள்ளை என்றொருவனை நியமித்தார்கள். அவன் வேலை ஒப்புக்கொண்ட முதல் நாள் 5-15க்குக் கடிதங்களைக் கொண்டுவந்தான். “இதென்ன இவ்வளவு சீக்கிரம்?” என்றேன். தாமதமாய் வந்ததை நான் கிண்டலாகக் குறிப்பிடுகிறேன் என்று நினைத்த அவன், “இல்லை சார், ‘பீட்’ எனக்குப் புதிது; இரண்டு நாளில் சரியாய் போய்விடும்” என்று சமாதானம் கூறினான்.

ஐந்து மணிக்குக் கொடுக்கக்கூடிய கடிதத்தை ஆறரை மணிக்குக் கொடுத்துவந்ததற்காக அப்துல் காதர் மேல் எனக்கு உண்மையாகவே கோபம் பொங்கிற்று. இத்தனை வருஷங்களாக இதைக் கவனியாமல் விட்டதற்காக என் பேரிலும் எனக்குக் கோபம் உண்டாகிக் கடைசியில் அதுவும் அவன் பேரில் திரும்பிற்று. இரண்டோரிடங்களில் விசாரித்ததில் அவன் செய்துவந்தது வீண் தாமதம் என்றும், ஜனங்கள் அசிரத்தையாலும் அவன் மேலிருந்த அபிமானத்தினாலும் சும்மாயிருந்துவந்தார்களென்றும் தெரியவந்தது. எனக்கு எப்போதுமே சமூகக் கடமை என்ற உணர்ச்சி அதிகம். என் தெருவில் ஒரு எலி செத்துக் கிடந்தால் நான் முனிசிபல் ஆபீசுக்கு எழுதும் தோரணையில் சுகாதார அதிகாரியும் நகரத் தலைவரும் பயந்து வெட்கி தாமே நேரில் வந்து ஆவன செய்வித்து மற்ற தெருக்களையும் பார்வையிட்டு வருவார்கள். அப்பேர்பட்டவனா அப்துல் காதரைத் திருத்தாமல் விடுவேன்? என் எச்சரிக்கையால் அவன் திருந்தாவிட்டால் பின்னர் அதிகாரிகளுக்கு எழுதத் தீர்மானித்தேன். சூடு தணியுமுன்னே ஒரு புகார் மனுவும் எழுதி வைத்துவிட்டேன்.

லீவ் முடிவடைந்ததும் அவன் வேலைக்குத் திரும்பினான். வாசற்படியில் வந்து நின்றேன். மணி ஐந்தடித்தது. தபால்காரனைக் காணோம். 5-30, 6, 6-10. அப்போதுதான் அவன் பத்து வீடுகளுக்கப்பால் தென்பட்டான். அவன் தாடியைக் கண்டதுமே என் மனம் இளக ஆரம்பித்தது. ஆனால் இங்கிலீஷில் இரண்டு கோப வார்த்தைகளை ஸ்மரித்துக்கொண்டு மனதைக் கல்லாக்கிக்கொண்டேன். நின்று நின்று அவன் என்னண்டை வரும்போது மணி 6-30. கட்டில் தேடிப் பார்ப்பதாக பாவனை செய்துவிட்டு உடன்பிறந்த புன்சிரிப்புடன், “இல்லை போலிருக்கே” என்றான் அவன்.

“ஏன் இவ்வளவு தாமதம்?” என்றேன் சுளித்த புருவத்தோடு.

“எப்போதும் போலத்தானே வந்திருக்கிறேன்” என்றான் அவன்.

மத்தியில் சற்று இளகிய என் நெஞ்சு இந்த விடையைக் கேட்டு மறுபடியும் உறைய ஆரம்பித்தது. “உமக்கு இது வழக்கமான நேரந்தான். ஆனால் மற்றவர்கள் இதற்குள் தம் வேலையை முடித்துக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்திருப்பார்கள்... ஒரு மாதமாக எனக்கு ஐந்து மணிக்கெல்லாம் கடிதம் கிடைத்துவந்தது” என்றேன் நான்.

“ஆம். அவர்கள் அப்படித்தான், ‘விரு, விரு’ என்று கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்கள். லாயத்திற்குத் திரும்பும் ஜட்காக் குதிரை போல” என்று அவன் அலட்சியமாக அவர்கள் மேல் குற்றம் சாட்டுபவன் போல் சொன்னான்.

“நீரும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது?” என்று நான் தோரணையுடன் கேட்டேன்.

“செய்யலாம்; ஆனால் எனக்கு அதெல்லாம் ஒத்துவராது. எப்படிங்க...” என்று சிரத்தையற்ற புன்சிரிப்புடன் அவன் இழுத்தான்.

எனக்குக் கோபம் ஒருபுறம், அன்பு ஒருபுறம். இருந்தாலும், “எப்படி என்றால்? கஷ்டப்பட்டுச் செய்யவேண்டியதுதான். இல்லாவிடில் இவ்விஷயத்தைப் பற்றி ரிபோர்ட்டு செய்யவேண்டிவரும்” என்று பாடம் ஒப்புவிப்பவன் போல நான் சொன்னேன். சொல்லும்போதே என் மனம் கனத்தது. இரண்டு வினாடி கழித்து மனதைத் திடப்படுத்திக்கொண்டு, “நாலுபேர் எழுதிப்போட்டால் வேறு ஊருக்கு மாற்றிவிடுவார்கள்” என்று பயமுறுத்தியும் வியாக்கியானம் செய்தேன்.

அதற்கவன் தலையைச் சொறிந்தவாறே, “அதுவும் ஒரு நன்மைதான். பிறந்து வளர்ந்து பழகிப்போன ஊர். ஜனங்கள் என்னை அதென்ன அப்துல்? இதென்ன அப்துல்?” என்று கேட்டுக்கொண்டுதானிருப்பார்கள். அவர்கள் வார்த்தையைத் தட்டிக்கொண்டு போகமுடியுமா? (இந்தாங்கோ பாட்டியம்மா சீயாழியிலேருந்து உங்க மூத்த பிள்ளை எழுதியிருக்காரு), வேடிக்கையாத்தான் இருக்கு. மத்த மூணு பேரை யாரும் நிறுத்தி வச்சுப் பேசறதில்லை. (செட்டியாரே, லெட்டர். இந்த எழுத்தை எப்படித்தான் வாசிக்கப் போறீங்களோ.) இப்படி ஜனங்கள் இழுத்து வைத்துப் பேசினால் நான்தான் என்ன செய்வது?... நீங்கள் இவ்வளவு நேரம் இத்தனை தகவல்கள் விசாரித்தீர்கள். நின்று பதில் சொல்லிவிட்டுப் போவதுதானே மரியாதை. கடுதாசிக்கு என்ன அவசரம்? ஜஸ்க்ரீமா, மல்லிகைப்பூவா, இளகிப்போகும் வாடிப்போகும்னு பயப்பட?... முந்தாநாள் உங்க அண்ணாச்சியை மதுரையிலே பார்த்தேன். ரொம்ப நேரம் எல்லாம் விசாரிச்சாரு. ரெண்டு மூணு மாசமா உங்ககிட்டேருந்து லெட்டரே வரல்லையாம். முன்னைக்கிப்பொ ஒரு சுத்து பருத்திருக்காரு. காதுகிட்ட நரையும் தட்டியிருக்குது... நான் போய் வரட்டுமா?...” என்று சொல்லிக்கொண்டே கவலையும் கல்மிஷமும் இல்லாத தன் புன்சிரிப்புடன் எதிர் சரகில் வக்கீல் கோபாலய்யர், வீட்டை நோக்கிச் சென்றான் - கடிதம் இல்லை என்று கையை ஆட்டிச் சொல்வதற்காக.

அவன்மீது நான் கொண்டிருந்த கோபமெல்லாம் பறந்து போய்விட்டது. நான் எழுதி வைத்திருந்த மனுவைத் துண்டு துண்டாகக் கிழத்துச் சாக்கடையில் போட்டேன். “என் கடிதங்கள் மறுநாள் காலை வந்துசேர்ந்தாலும் பாதகமில்லை; அப்துல் காதர்தான் கொண்டுவர வேண்டும்” என்று தீர்மானித்தேன். “உமது கட்டுரைகள் எமக்குத் தேவையில்லை” என்று பத்திராதிபர்கள் அனுப்பும் அறிவிப்புகள் இன்று சாயங்காலம் வந்தாலென்ன, நாளைக் காலைதான் வந்தாலென்ன?

***

முதல் வெளியீடு: ‘ஆனந்த விகடன்’, 1934

மறுவெளியீடு: ‘எழுத்து’ இதழ் 23, நவம்பர் 1960


நன்றி: அழிசி ஸ்ரீநிவாச கோபாலன்

May 31, 2020

மாபெருங் காவியம் - மௌனி

  கிட்டுவின்  காரியம் முடிவடைந்துவிட்டது. அவன் எழுத ஆரம்பித்த  அந்த  “மாபெருங் கவியம்” பூர்த்தியாகி விட்டது. இதற்குப் பிறகு அவனிடம், அவனுடைய  இரண்டொரு சிநேகிதர்கள் , ஒரு பெரிய மாறுதலைக் கண்டனர். அதைப்பற்றி அவர்கள்  எப்போதாவது இவனிடம் குறிப்பிடும்போது கிட்டு சிறிது சிரித்துக்கொண்டே  “ என் வாழ்க்கை ஒரு உன்னத நிழல் ஆட்டம் . ஒளி  குன்றியது . என்னுடைய நிழலும்  பார்வையினின்றும் மங்கி விட்டது . விலகி நின்று உலகநாடகத்தைப் பார்ப்பதுதான் இப்போது நான் செய்வது ...”


 கிட்டுவின் கண்களையும்  முகத் தோற்றத்தையும் தவிர்த்து , அவன் சாதாரணமாகத் தெரிபவன்தான் . அவன் கண்கள் இரு ஞானவொளிச் சுடர்போன்று தோன்றும் . அவைகளின்  பார்வை  ஒரு உன்னத காவியம் . அவன் இழுத்து இழுத்துப் பேசுவதே ஒரு இனிய கீதம்.

  வறுமையில் உழன்ற அவன் வாழ்க்கைக்கு ஆறுதலாக அவன் மனைவி குஞ்சுவும், ஆறு வயதுடைய ஒரு  பையனும் இருந்தனர் . தன்னுடைய வாழ்க்கையை ஒரு இனிய கனவில் கழிப்பதாகவே கருதி அந்த எண்ணத்தில்தான்  அவன் வாழ்ந்து இருக்க முடியும். ஏதோ நடுவில் விதி குறுக்கிட்டு அவனை ஒரு காவிய கர்த்தனாக்கி விட்டது. ஒருக்கால் சிருஷ்டியிலும் வெளி விளக்கத்திலும் அடையும் ஒருகண சாசுவதாம்ச ஆனந்தத்தைக் கொள்ள அவன்  மனது விரும்பியதால்தான் இந்தப் புத்தகத்தை அவன் எழுதினான் போலும் .

   பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடியின்றித் தெரியும் பறவை போன்ற ஞான உணர்வைப் பிடித்துக் கூட்டிலடைத்ததுதான் அக்காவியம். சாசுவதானந்தத்தை  வாக்கியத்தில் புதைத்துக் கண்ட களிப்பதில் , கலைஞர்கள் கடவுளுடைய சிருஷ்டி ஆனந்தத்திற்கு ஒப்பானதை உணர்கிறார்கள் போலும். எவ்வகை சிருஷ்டியும் அழிவிற்கு விரைந்து செல்வதாயினும் , அழிவின்றித்தான் அவர்கள் மனதில் அக்கண ஆனந்தம் பதிகிறது.

   வாழ்க்கையின் வறுமை அவனை வெறித்து நோக்குகிறது. தான் புத்தகம்  எழுதுமளவும் ,ஒன்றும் அவனைத் துன்புறுத்தா வகையில் தூரத்தில் கண்ட வெளியிலேயே  அவன் மனம் சஞ்சரித்தது . அது முடிந்தவுடன் பழையபடி  உலக வாழ்க்கை  அவனைத் தன்னிடம் இழுத்தது . சிற்சில சமயம் அவன் மனது துக்கம் அடையும் . “ கனவிலா  உன் வசீகரத்தைக் கண்டேன் . இப்போது விழிப்பின் இருளில் உன் அழகு மறைகிறதோ ? ” எனச் சஞ்சலமடைவான். அப்போது  இரவில் தடுமாறித் தடவும் அசாரீயைப் போன்று அவன் எண்ணங்கள்  தடுமாற்றம் கொள்ளும் ஆயினும் , என்றுமறியாத ஒரு அமைதியை அவன் மனது கண்டது. அதற்கு ஆதாரம்  கொடுப்பது எது என்பதை அவன் ஆராய ஆசை கொள்ளவில்லை . மற்றவைகளைப் போலவே அவன் மன ஆறுதலும் , ஒரு மாயையை அஸ்தி வாரமாகக் கொண்டதாக ஏன் இருக்கக் கூடாது என்ற ஒரு எண்ணம் மட்டும் நிச்சயம் கொள்ளாது அவன் அடிமனத்தில் அமுங்கிக் கிடந்தது போலும் .....

       கிட்டுவின் குழந்தை ராமு நான்கைந்து நாளாகக் கடுமையான சுரத்தில் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தான்.......... கிட்டு , ஒரு கடையில் குமாஸ்தாவாக இருபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் இருந்தான் . சம்பளம் வாங்கியதும் , தன் மனைவி கையில் அதைக் கொடுக்கும்போது ஏதோ ஒரு கேவலச் சந்தோஷத்தில் ஆரவாரிப்பதைப் போல அந்த ரூபாய்கள் கலகலவெனச் சப்திக்கும். அவன் மனைவி கண்களில்  காலதேவனாலும் கொன்றுவிட முடியாத ஒரு புன்னகையின் வசீகரம் காணும் . இவனுக்கோவெனில் வெறும் வருத்தந்தான் . ஏன் தனது மனது மட்டும் சமாதானம்  கொள்ளமுடியவில்லை என்பது ஒரு உருக்கொண்ட பிரச்சனையாகிவிட, அதை அறிய முடியாது திகைப்படைவான் . தன் தலையில் எழுதின வகை......தலை விதியாக்கினவனே போன்று .... ஒரு லேசான சமாதனம் கொள்ளுவான்  . இதெல்லாம் இவன் புத்தகம் எழுதுவதற்கு முன்பு . புத்தக வேலை முடிந்தது; குருட்டுத்தனமாக விதி இவனை எவ்வகை உயர்  காரியத்தைச் சாதிக்கத் தள்ளியது என்று எண்ணுவது உண்டு. ஆனால், அதினின்று அடைந்த உணர்வு மட்டும் விதிக்கு விலக்கியே, தன் உள்ளக் கிளர்ச்சியின் ஒரு ஆனந்தமெனக் கருதினான் . இதற்காகத்தான் ,ஒருக்கால் கடவுள் , விதிவசப்படாது நிற்க எப்போதும் , சிருஷ்டித்து, அந்த ஆனந்தத்தை அடைகிறான் போலும் !

   சாசுவதமற்ற உலக வெளி வெறிப்பும் , அதில் கொண்ட அவன் வெறுப்பும்  மழுங்கிக் கொண்டே அநேகமாக மறைந்துவிட்டது. ஆனந்தத்தைக் கொடுக்கத்தான் குழந்தை இராமுவின்  இரு விழிகள் இருந்தன. மனச்சங்கடத்தின் எல்லையில்  பொருந்தின  இரு சுடர் விளக்காகத் தான் அவ்விழிகள் இவனுக்குத் தோற்றம் . கிட்டிய பக்கத்தை கவலைக் கடலாகக் காட்டினாலும் , மறு பக்கத்தை அச்சுடர்கள் கொஞ்சம் காட்டும்போது எல்லைக் கடந்த ஆறுதலின் இன்பசாகர வெளியை, கிட்டுவால் பார்க்க முடிந்தது.

    குழந்தை சுரத்தில் சங்கடப்படுவதைப் பார்க்க அவனால் சகிக்க முடியவில்லை. சுரவேகத்தில் ஒளிகொண்ட குழந்தையின் கண்கள் , இவனைப் பயம் கொள்ளும்படி செய்தன. அச்சுறுத்தும்படி . ஆள்காட்டிவிரல் போல அவன் போகும் இடத்தைக் காட்டுவதா அக்கண்களின் பார்வை ? அவனால் அவன் குழந்தையீன் முகத்தைப் பார்க்க முடியவில்லை ........

  அன்று இரவு குழந்தைக்குத் தாங்க முடியாத சுரம் . கண்ணயராமல்  கிட்டுவும்   குஞ்சுவும் அறையில் குழந்தையின் அருகில் உட்கார்ந்து இருந்தனர் . நடுநிசிக்கு அப்பால்  குழந்தை கொஞ்சம் கண்களைத் திறந்து  ‘ அம்மா  ’ என்றான். விழித்துக் கொண்டதும், அவனுக்கு மருந்து கொடுப்பதற்காக குஞ்சு மருந்தைக் கொணரச் சென்றாள். கிட்டு எழுந்து மேஜை அருகில் உள்ள நாற்காலிக்குப் போய் விட்டான். மருந்து கொடுத்ததும் வாய்க் கசப்பை மாற்ற  மேஜை மீது இருந்த திராக்ஷைப் பழப் பொட்டலத்திலிருந்து கொஞ்சம் எடுத்து அவனுக்குக் கொடுத்துக் குழந்தையைத் தூங்கச் செய்தாள் . மேஜையருகில் கிட்டுவிற்கு எதிர்ப்புறமாக வந்து நின்றாள். ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்த கிட்டு அவள் வருகையினாலும் திரும்பவில்லை. வெளியே வெகு எட்டிய வெளியே அவன் நோக்கு சென்று கொண்டிருத்தது. ஊர்  ஆரவம் நன்றாக அடங்கி  நிசப்தமாக இருந்தது. பிறைச் சந்திரன் மேற்கு அடிவானத்தருகில்  தேங்குவதைக் கண்டு கொண்டு இருந்தான். ஒரு மங்கிய நிலவில் வீதிகளும் ,வீடுகளும் ,எட்டிய மரங்களும் தெரிந்தன. ஒன்றையும் கவனியாது இயற்கையின் சக்கரம் காலத்தில் சுழன்று கொண்டு இருந்தது. உலகத்தில் மாந்தர்கள் கொள்ளும் மனச் சாயையைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது இப்பிரபஞ்சம் துயின்று கொண்டு இருப்பது கிட்டுவிற்குப் புரியவில்லை. வாழ்க்கையின் இன்ப துன்பம் தன்னுடைய மனத்தில் தான் தோன்றுகிறாதா என்ற ஒரு எண்ணம் கொண்டபோது, ஆறுதலுக்கும்த் தன்னைத்தவிர வேறிடம் தேடுவது மதியீனம் என்பதாக நினைத்தான். உள்ளே அறைப்பக்கம் தலையைத் திருப்பினான். சுவரில் ஆடிய நிழல்கள் இவன் மனதேபோலச் சலித்தன. சிறிய ஒளியில் எதைப் பார்ப்பது என்பதை அறியாதனப்போன்று கண்கள் தாமாகவே குஞ்சுவின் முகத்தை நோக்கின.

மேஜையின்மீது இரு கைகளை ஊன்றி நின்று இருந்தாள் குஞ்சு. அவள்  மனது , எண்ணங்கள் சூனியப் பொருளைக் கொண்டதாக இருந்தது. ஒன்றும்  தெரியாது விழிப்பதுபோன்று பார்ப்பவளுடைய முகம் சாயை யற்றுத் தோன்றியது. இவன் தன்னைப் பார்ப்பதை அறிந்த குஞ்சு தலையைக் குனிந்துக் கொண்டாள். ஒருக்கால்  உருக்கொண்ட உலகத் துக்கம் அவள் கண்களினின்றும் வந்த கண்ணீர் மேஜையின் மீது சொட்டியது.

 கிட்டுவால் நிதானமாக ஒன்றையும் செய்ய முடியவில்லை . தன் மனைவியின் எல்லையற்ற வருத்தம் இவனைத் தடுமாறச் செய்தது.

   யதேச்சையாக மேஜையைப் பார்த்தபோது திராக்ஷைப் பழப் பொட்டணம் பிரித்தப்படியே இருந்தது. அதை மடித்து வைக்கக் கையில் எடுத்தான். அந்தப் பொட்டணக் காகிதத்ததில் ஏதோ எழுதியிருந்தது. தனக்குத் தெரிந்த  எழுத்தாகத் தோன்றியது. யோசிக்க ஒன்றுமில்லாது மனது மிகச் சஞ்சலம் கொள்ளும்போது எவ்வகை அல்பவிஷயத்திலும் புத்தி ஈடுபடுகிறது . கிட்டு நன்றாக அதை  உற்றுப் பார்த்தான் . ஆம் அவனுக்கு நன்றாகத் தெரிந்த எழுத்துத்தான் அது. ஒரு கணத்தில்  அது தன்னுடைய கையெழுத்தென்பதைத் தெரிந்து கொண்டான். பொட்டணத்திலிருப்பதைக் கீழே மேஜையில் வைத்துவிட்டு அந்தக் காகிதத்தை எடுத்து வந்து தரையில் உட்கார்ந்து படித்தான். இதற்குள் குழந்தை ஏதோ சுரவேகத்தில் உளர அதன் அருகில் குஞ்சு போய்விட்டாள்.

  கிட்டு அப்போது அடைந்த மன அதிர்ச்சியில் ஒன்றுமே புரியாதவனானான். தன்னுடைய உன்னதப் புத்தகத்தின் ஏடுகளில் அந்தக் காகிதத் துண்டு ஒன்றென அவன் அறிந்தபோது அவன் உள்ளமே வெடித்தது போன்றாகியது. அக்கணத்திலேயே, தான் அக்காவியம் செய்து முடித்தவுடன் தோன்றிய அந்த ஆனந்தம் அவன் மனத்தில் குடி கொண்டது.
 
  நடந்ததைச் சிறிது நேரத்திலேயே ஊகித்துக் கொண்டான் . தான் எழுதி  வைத்திருந்த காகிதங்களைத் தன் குழந்தை கடையில் போட்டு ஏதோ வாங்கிக் கொண்டான் என்பதாகக் கண்டு கொண்டான்.

  இதற்குள் குழந்தையின் பக்கத்தில் இருந்த தன்னுடைய மனைவியின் கூப்பிடும் சப்தம் கேட்டு அங்கு சென்றான்.  கனவில்  காண்பதைவிட வெகு விநோதமாகவே தன்னெதிரில்  நடப்பவைகள் தெரிந்தன. அவனால் சமாளிக்க முடியாத அதிர்ச்சியை அவன்  மூளை அடைந்ததினால் உலகத்தையே தலைகீழாகப் பார்த்தான் என்பது சரியே போலும் .

     தன்னுடைய குழந்தை ராமு ஜன்னி வேகத்தில் ஏதோ பிதற்றிக் கொண்டிருநத்தான். இரண்டொரு வார்த்தைகள் புரியும்படியாக , ‘ பம்பரம்  ’  ‘அப்பா ’ என்பது போன்று இருந்தது.

    காலை ஒளியில் கடைசி நக்ஷத்திரம் மறையும் முன்பே குழந்தை ராமு இறந்துவிட்டான். மற்றுமொரு குருவி கூண்டைவிட்டுப் பறந்தோடிவிட்டது. ஆகாயத்தில் இன்னும் நக்ஷத்திரங்கள் தெரிந்து கொண்டிருந்தன. குழந்தையைப் பார்க்கத் தாயார் வெற்றுத் தொட்டிலை குனிந்து நோக்குவது போன்று, சவமான ராமுவை, குஞ்சு பார்த்து நின்றாள் . அவள் துக்கம் வாயைவிட்டு வரவில்லை. கல்லாகச் சமைந்து , பார்க்கும் பார்வையிலேயே இறந்தவள் போன்று நின்று இருந்தாள், அருகில் கிட்டு வந்தான் . அவனால் அவள் கண்களில் நீர் பெருகுவதைத் தடுக்கமுடியவில்லை. தாங்காத வருத்தத்துடன் தன் மனையானை அணைத்துக் கொண்டான்.

அந்தப் பிரியாத அணைப்பிலே அந்நிலையிலே தாங்கள் தனிச் சரீரம் பெற்றதான உணர்ச்சியைக் கொண்டார்கள் .............

    கிட்டுவின் மனத்திலே தன்னுடைய இரு சிருஸஷ்டிகளை ஒருமிக்கப் பறிகொடுத்ததான எண்ணம் பரிகாசமாகவேபட்டது . எவ்வகை அல்ப மகிழ்ச்சி,  இந்த  சிருஷ்டியில் கொள்ளும் ஆனந்தம் . உயிர் கொடுக்கப்பட்டவுடனே அவை யாவும் உடனே   அழிவிற்குத் தாமே எல்லாம் விரைந்து செல்லுகின்றன. சாசுவதமாகக்க கொள்ள வேண்டின் உணர்வுகளுக்கு விளக்கம் கொள்ளுவது ஏன் ?

      தன்னுடைய காவியம் அழிந்ததில்  அவன் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. மலரினின்றும் பிரிந்து வதங்கிய  இதழைவிட்டுச் சென்ற மணத்தை எங்கும் உணர்ந்தான். எதற்காக மலரையும் மணத்தையும்  ‘ அவன் ’ ஒன்று சேர்த்தான். கேவலம் இது தொழில் செய்வதில் கொள்ளும் ஒரு ஆனந்தத்திற்காகவா ? ..........

 இப்போது கிட்டுவின் முகத்தில் ஒரு அமைதி குடி கொண்டுவிட்டது . எதிர்பாராத உள்நோக்கு அவன் கண்களில் கண்டது. அவன் பேசும்போது வெளிவராத வார்த்தைகளை வலுக்கட்டாயப் படுத்தி இழுத்துப் பேசுவதுபோல் இருக்கும். தன் மனைவி குஞ்சுவை அவன் கனிந்து பார்க்கும்போது அந்தப் பார்வையையே சாசுவதத் தான் எண்ண முடியும்.

 மின்னலைக் கணம் கண்டு குருடானவனாயினும் பிறவிக் குருடானவனாயினும் பிறவிக் குருடனுக்கும் அவனுக்கும் மேலெழுந்தவாரியாக வித்தியாசம் காணக்கூடாத வகையில்தான் தன் வாழ்க்கையை நடத்துகிறான் .

         ஆனால், அவன் மளிகைக் கடையில் உட்கார்ந்து  கொண்டு , பொட்டணம் மடிக்கத் துண்டுக் காகிதங்களை, ஆட்களுக்கு எடுத்துக் கொடுக்கும்போது, ஏன் அத்துண்டுகளை கண்ணெதிரே வைத்து சிறிது நேரம் உற்று நோக்குகிறான்...... ஆமாம் , அக்காகிதத்திணூடே, அதற்கு வெகு அப்பாலே ஜீவியக் காவியத்தை அவன் கண்கள் பார்க்கின்றன. என்றுமில்லாத ஜோதி அவன் கண்களில் காணுகிறது . சிறிது சென்று ஒரு அசட்டுச் சிரிப்பும் அவன் முகத்தில் படருகிறது. சிருஷ்டியில் கொள்ளும் ஆனந்தம் எத்தகையது என்பது அவனுக்கு அப்போது தெரியும்.

தினமணி  மலர் 1937

தட்டச்சு - தீட்சண்யா. ரா

Apr 14, 2017

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா

அப்பா அவன் துன்பம் தீர்ந்தது என்று ஒருசமயம் தோன்றுகிறது.

ஐயோ தெரிந்தே அவளை சாவுக்கிரையாக விட்டு விட்டு வந்தேனே என்று ஒருசமயம் நெஞ்சம் துடிக்கிறது.

நான் என்ன செய்ய முடிந்தது. அவள் இடமே கொடுக்கவில்லையே

அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு எவ்வளவோ தடவைகள் அங்கே போயும் அவளைப் பார்க்க முடியவில்லை.

நேற்று போனேன் அவள் மாரடைப்பால் இறந்துபோய் விட்டாளாம்!

மாரடைப்பா

அந்த மார்பில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் மூண்டு அதை
அடைத்து விட்டனவோ?

அன்றிரவு சிலவற்றைத்தான் வெளியேற்றினாள் போல் இருக்கிறது.
போதும், சிறிது வெளிச்சம் போதும்; இனிமேல் திறந்து சொல்ல முடியாது' என்றாள் கடைசியாக.

திறந்து சொன்னதே என் உள்ளத்தில் விழுந்துவிடாத வேதனையாகி விட்டது.

அது தெரிந்துதான் அவள் நிறுத்திக் கொண்டாள். ஆமாம்!

இனிமேல் என்ன சொல்லுகிறேனே; அவள் இட்ட தடை அவளுடன் நீங்கிவிட்டது

நான் சென்னையில் சென்ற வருஷம், ஒரு வீட்டு ரேழி உள்ளில் குடியிருந்தேன். உள்ளே ஒரே ஒரு குடித்தனம். புருஷன் பெண்சாதி, உலகத்தில் சொல்லிக்கொள்ளுகிறபடி புருஷனுக்கு எங்கோ ஒரு பாங்கில் வேலை. பகல் முழுவதும் வீட்டிலிருக்க மாட்டான்: இரவில் வீட்டில் இருப்பதாகப் பெயர். சாப்பிட்டுவிட்டு வெளியே போவான்; இரவு இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டுவான்.

அந்த வீட்டில் நான் தனியாக இருப்பது எனக்கே சங்கடமாக இருந்தது. நான் எழுத்தாளன் இரவும் பகலும் வீட்டிலேயே இருப்பவன்.

காலையிலும் மாலையிலும்தான் சிறிது நேரம் வெளியே போவேன்.

அந்த மனிதன் முந்திக் கொண்டு விட்டான்.

'ஸார், நீங்கள் இங்கே தனியே இருக்கிறோமே என்று சங்கோசப்பட வேண்டாம். நான் சந்தேகப்படும் பேர்வழியல்ல; நீங்களும் உங்கள் ஜோலியோ நீங்களோ என்று இருக்கிறீர்கள். மனுஷ்யாள் தன்மையை அறிய எவ்வளவு நேரமாகும்? உங்களைப் போன்ற ஆசாமி வீட்டில் இருப்பது, நான் சதா வெளியே போவதற்குச் செளகரியமாக இருக்கிறது.

'உங்களைப் போல என்று சொல்ல என்னிடம் என்னத்தைக் கண்டான்?

அவள்-சாவித்திரி-என் கண்களில் படுவதே இல்லை. நானும் சாதாரணமாகப் பெண்கள் முகத்தை தைரியமாகக் கண்ணெடுத்துப் பார்க்கும் தன்மை இல்லாதவன். எனவே எனக்கு அவள் குரல் மட்டும் தான் சிறிது காலம் பரிச்சயமாகி இருந்தது.

அவன்-அவன் பெயர் கோபாலய்யர்-ஆபீஸுக்குப் போகுமுன்பே நான் முற்றத்திலிருந்த குழாயை உபயோகித்துக் கொண்டு விடுவேன். பிறகு, அந்தப் பக்கமே போகமாட்டேன். அவன் வெளியே போனதும் அவள் ரேழிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு விடுவாள். சாவித்திரி யாருடனும் வம்பு பேசுவதில்லை; வெளியே வருவதே இல்லை.

இப்படி ஒரு வாரமாயிற்று. இரவு இரண்டு மணிக்கு அவன் வந்து கதவைத் தட்டுவதும், சாவித்திரி எழுந்து போய்க் கதவைத் திறப்பதும், பிறகு கதவைத் தாளிட்டுக் கொண்டு அவள் அவனுடன் உள்ளே போவதும் எனக்கு அரைத் தூக்கத்தில் கேட்கும். ஒரு நாள் அவன் வந்து கதவைத் தட்டியபோது அவள் அயர்ந்து தூங்கிப் போய் விட்டாள் போல் இருக்கிறது. நாலைந்து தடவை கதவைத் தட்டிவிட்டான். நான் எழுந்து போய்க் கதவைத் திறந்தேன்.

'ஒ! நீங்களா திறந்தீர்கள்? மன்னிக்க வேண்டும்! என்று என்னிடம் சொல்லிவிட்டு அவன் உள்ளே போனான். நான் என் அறையில் போய் படுத்து கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.

உள்ளே போனவன் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை என்ன செய்தானோ தெரியவில்லை. பிறகு தெரிந்தது; உதைத்தான் காலால் அவள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, ரொம்ப நாழி தட்டினர்களா? மத்தியானமெல்லாம் தலைவலி, உடம்பு... தெரியாமல்...' என்று அவள் மெதுவாக பயந்து சொன்னது என் காதில் பட்டது.

'உடம்பு தெரியுமா உனக்கு உடம்பு தெரியச் சொல்கிறேன்! என்று சொல்லிக் கொண்டு அடித்தான் அவளை அடித்தது என் காதில் விழுந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. புருஷன் பெண்சாதி கலகத்தில் பிற மனிதன் தலையிடக் கூடாது என்று கடைசியாகச் சும்மா இருந்துவிட்டேன்.

பிறகு இரவு முழுவதும் மூச்சுப் பேச்சு இல்லை. ஆனால் அவள் தூங்கவே இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் நானும் தூங்கவில்லை.

மறுநாள் இரவு கதவை அவள் விழித்திருந்து திறந்தாள். ஆனால், அன்றும் அவளுக்கு அடி விழுந்தது. முதல் நாள் போல அவள் பேசாமல் இருக்கவில்லை.

"என்னை ஏன் இப்படி அடித்துக் கொல்லுகிறீர்கள்? நீங்கள் செய்வது எதையாவது நான் வேண்டாமென்கிறேனா?

'ஒஹோ, இப்பொழுது உனக்கு வாய் வேறா? '

எவ்வளவு நாள்தான் நானும்...'

'சீ, வாயைத் திறந்தால் பல்லை உதிர்த்து விடுவேன்?

'உதிர்த்து விடுங்கள்!"

பளாரென்று கன்னத்தில் அரை விழுந்த சத்தம் கேட்டது. என்னை யறியாமல் நான் எழுந்து ரேழிக் கதவண்டை போய், ஸார், கதவைத் திறவுங்கள் என்றேன்.

அதற்குமுன் என்னோடு பல்லிளித்துக் கொண்டு பேசி வந்த மனிதன் உள்ளே இருந்து மிருகம் போலச் சீறினான்.

"எதற்காக?"

'திறவுங்கள், சொல்லுகிறேன்!

'முடியாது, ஸார்!

" திறக்காவிட்டால் கதவை உடைப்பேன்!"

அவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே ரேழிக்கு வந்து மறுபடியும் கதவை மூடிக்கொண்டு என்ன ஸார்?' என்றான்.

'உங்கள் மனைவியை நீங்கள் அடித்தது போல் காதில் பட்டது?

இருக்கலாம், அதைப் பற்றி உங்களுக்கென்ன?

'நீங்கள் அந்த மாதிரிச் செய்யும்படி நான் விடமுடியாது!"

"என்ன செய்வீர்கள்?"

போலீஸுக்குத் தகவல் கொடுப்பேன், முதலில் நானே பலாத்காரமாக உங்களைத் தடுப்பேன்."

அவன் முகத்தில் சோகமும் திகிலும் தென்பட்டன. திருதிருவென்று சற்று விழித்தான். என்னுடைய திடமான பேச்சைக்கண்டு அவன் கலங்கிப் போனான் என்று தெரிந்தது. அவன் கோழை என்று உடனே கண்டேன்; இல்லாவிட்டால் ஒருவன் பெண் பிள்ளையை அடிப்பானா?

'நீங்கள் சாது, ஒரு வழிக்கும் வரமாட்டீர்கள் என்று உங்களை ரேழியில் குடிவைத்தேன். நீங்கள் அனாவசியமாக என் விஷயத்தில் தலையிடுவதாக இருந்தால் காலையிலேயே காலி செய்து விடவேண்டும்.

'நான் காலி செய்வதைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளுவோம். இனிமேல் நீங்கள் விடிகிற வரையில் உள்ளே போகக்கூடாது.

'நீர் யாரையா, இந்த மாதிரியெல்லாம் உத்தரவு செய்ய?

"யாராயிரிருந்தால் என்ன? இப்பொழுது நீர் நான் சொன்னபடி செய்ய வேண்டியதுதான்; மீறினீரானால் உமக்கு நல்லதல்ல.

'பயமுறுத்துகிறீர்களோ?

பயமுறுத்துவது மட்டுமல்ல-செயலிலே காட்டி விடுவேன். வாரும், என் அறையில் படுத்துக் கொள்ளலாம். அம்மா, கதவை உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளுங்கள் என்றேன் அவள் பக்கம் திரும்பி.

போட்டு விடுவாளோ அவள்?"

'நான் இங்கே இருக்கிறவரையில் நீர் இனிமேல் அந்த அம்மாள் மேல் விரல் வைக்க முடியாது."

அப்பொழுது சாவித்திரி கதவைத் திறந்துகொண்டு வந்தாள். என்னுடன் அவள் பேசினதே இல்லை.

தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம் என்று என்னிடம் சொல்லிவிட்டுப் புருஷனைப் பார்த்து, வாருங்கள் உள்ளே! என்றாள்.

'நீ போடி உள்ளே! உன்னை யார் இங்கே வரச் சொன்னா என்று அவன் அவள்மேல் சீறி விழுந்தான்.

'அம்மா, விஷயம் உங்கள் கையிலும் இல்லை. என் கையிலும் இல்லை. நான் தலையிடாமல் இருக்க முடியாது. போலீஸுக்குத் தகவல் கொடுத்தால் அனாவசியமாக உங்களுக்கு சங்கடமே என்றுதான் நானே தலையிடுகிறேன் என்றேன் அவளைப் பார்த்து.

'நீங்கள் இதையெல்லாம் காதில் போட்டுக்கொண்டு தலையிடுவது தான் எனக்குச் சங்கடம் என்று அவள் சொன்னாள்.

சரி, கதவு திறந்திருக்கட்டும். நீங்கள் உள்ளே படுத்துக் கொள்ளுங்கள். வாசற்கதவைத் தாளிட்டு வருகிறேன். இவரும் நானும் என் அறையில் படுத்துக் கொள்ளுகிறோம் என்றேன்.

நான் இங்கே படுத்துக்கொள்ள முடியாது. எனக்க வெளியே போக வேண்டும். ஜோலி இருக்கிறது என்று அந்த மனிதன் வெளியே போக ஆயத்தமானான்.

என்ன மனிதன் அவன் அவன் போக்க எனக்கு அர்த்தமே ஆகவில்லை.

சாவித்திரி உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அவன் வெளியே போனான். நான் வாசற்கதவை மூடிக்கொண்டு என் அறையில் போய்ப் படுத்துக்கொண்டேன்.

தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என் முன் நின்றது. நல்ல யெளவனத்தின் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேகநீர் பாய்ந்தது போலத் தென்பட்டது. பதினெட்டு வயதுதான் இருக்கும். சிவப்பு என்று சொல்லுகிறோமே, அந்த மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. மிகவும் அபூர்வம் இதழ்கள் மாந்தளிர்கள் போல இருந்தன. அப்பொழுதுதான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் கண்டேன். கண்களுக்குப் பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒரு ஒளி அவள் தேகத்திலிருந்து வீசிற்று.

அவளையா இந்த மனிதன் இந்த மாதிரி...!

தாழ்ப்பாள் எடுபடும் சத்தம் கேட்டது.

நான் படுக்கையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்தேன். அவள் என் அறை வாசலில் வந்து நின்றாள் போலத் தோன்றிற்று. உடனே எழுந்து மின்சார விளக்கைப் போட்டேன்.

வேண்டாம், விளக்கு வேண்டாம், அணைத்து விடுங்கள் என்றாள் அவள்.

உடனே அதை அணைத்துவிட்டு, படுக்கையிலேயே உட்கார்ந்து விட்டேன். அவள் என் காலடியில் வந்து உட்கார்ந்து கொண்டாள். 'புருஷன் ஒரு விதம், மனைவி ஒரு விதமா என்று எனக்கு ஆச்சரியம்.

'உங்களுடன் தனியாக இப்படி இருட்டில் பேசத் துணிந்தேனே என்று நீங்கள் யோசனை செய்ய வேண்டாம். நீங்கள் இதற்காக என்னை வெறுக்க மாட்டீர்கள் என்று எனக்கு எதனாலோ தோன்றிற்று... வந்தேன்.

'அம்மா...'

'என் பெயர் சாவித்திரி.

“எதற்காக இந்த மனிதனிடம் இங்கே இருக்கிறீர்கள்? பிறந்தகம் போகக் கூடாதா? இந்த புருஷனிடம் வாழாவிட்டால் என்ன கெட்டுப் போய் விட்டது

'இருக்க வேண்டிய காலம் என்று ஊர் ஏற்படுத்தியிருக்கிறதே. அதற்குமேல் பிறந்த வீட்டில் இடமேது ?"

ஆனால் அங்கே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்களா? '

வாயைத் திறந்து சொல்ல வேண்டுமா?"

'பெற்றோர்களாவது, புருஷனாவது, எல்லாம் சுத்த அபத்தம். காக்கை குருவி போலத்தான் மனிதர்களும். இறகு முளைத்த குஞ்சைக் கூட்டில் நுழைய விடுகிறதா பட்சி?

'புருஷன்...'

'என்னடா இந்தப் பெண் இப்படிப் பேசுகிறாள் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்கு ஒன்றுதான். புருஷனா புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...'

'நீங்கள் அப்படி...'

'நீங்கள் என்று ஏன் சொல்லுகிறீர்கள், நீங்கள் தானே பெரியவர்கள். என் நெஞ்சு புண்ணாகி, அதன் ஆழத்திலிருக்கும், எரியும் உண்மையைச் சொல்லுகிறேன். உங்களுக்குக் கலியாணம் ஆகிவிட்டதா?’

'இல்லை."

ஆகி, மனைவி வந்து சில மாதங்கள் ஆகியிருந்தால், நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகும்.'

வாசற்புறம் கேட்காதபடி சற்று மெல்லிய குரலில்தான் பேசினாள். ஆனால், அந்தப் பேச்சில் இருந்த துடிப்பும் வேதனையும் தாங்க முடியாதவையாக இருந்தன.

'அம்மா... சாவித்திரி, உன் புருஷன் வந்துவிடப் போகிறான். ஏதாவது தப்பாக நினைத்துக்கொண்டு...'

’இனிமேல் என்னை என்ன செய்துவிடப்போகிறான். கொலைதானே செய்யலாம்? அதற்குமேல்?’

'நீ இப்படிப் பேசலாமா? இன்னும் உன் புருஷனுக்கு புத்தி வரலாம். நீயே நல்ல வார்த்தை சொல்லிப் பார்க்கலாம்.

'நல்ல வார்த்தையா? புத்தியா? இந்த மூன்று வருஷங்களில் இல்லாததா?

பின் என்ன செய்யப் போகிறீர்கள்?"

‘என்ன செய்கிறது? தற்கொலை செய்துகொள்ளப் பார்த்தேன், முடியவில்லை - அதாவது என்னால் முடியவில்லை. என்னால் பொய் சொல்ல முடியாது. உயிர் இருக்கிற வரை அடிபட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.'

அடடா, இப்படியேயா!'

வேறு வழி என்ன இருக்கிறது?

என்னால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

'என்ன பதில் இல்லை? என்று அவள் சிரித்தாள்.

'நான் என்ன சொல்வது... அதாவது நான் ஒன்று கேட்கட்டுமா?" என்று திடீரென்று கேட்டேன்.

கேட்கிறது தெரியும். உங்களுடன் ஓடிவந்துவிடச் சொல்லுகிறீர்கள். நீங்களும் இதே மாதிரிதானே சில மாதங்களுக்குப் பிறகு.? '

என்ன சாவித்திரி..."

அதாவது, ஒருவேளை நீங்கள் அடித்துக் கொல்லாமல் இருப்பீர்கள். மிருக இச்சை மிகைப்படும்போது என்னிடம் கொஞ்சுவீர்கள். இச்சை ஒய்ந்ததும் முகம் திருப்பிக் கொள்ளுவீர்கள். புது முகத்தைப் பார்ப்பீர்கள்."

'நீ இவ்வளவு பட்டவர்த்தனமாகப் பேசும்பொழுது, நானும் பேசலாமா?

'தாராளமாக!'

'என்னைக் கவர்ந்து வைத்துக்கொள்ளும் சக்தி உன்னிடமல்லவா இருக்கிறது!"

அதெல்லாம் சுத்தக் கதை. அதை இங்கே இப்பொழுது புகவிடாதீர்கள். வெட்கமற்று உண்மையை நான் கொட்டுகிறேன். நீங்கள் எதையோ சொல்லுகிறீர்களே? எந்த அழகும் நீடித்து மனிதனுக்கு திருப்தி கொடுக்காது...'

'நீ எப்படி அந்தமாதிரிப் பொதுப்படையாகத் தீர்மானிக்கலாம்?"

‘எப்படியா? என் புருஷனைப்போல் என்னிடம் பல்லைக்காட்டின மனிதன் இருக்கமாட்டான். நான் குரூபியல்ல, கிழவியல்ல, நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்லுகிறேன். மிருக இச்சைக்கு பதில் சொல்லாதவளுமல்ல. போதுமா?"

'சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்றதை ருசி பார்த்திருக்கிறாயா?

“எது சுகம்? நகைகள் போட்டுக்கொள்வதா? நான் போடாத நகை கிடையாது. என் தகப்பனார் நாகப்பட்டணத்தில் பெரிய வக்கீல், பணக்காரர்; புடவை, ரவிக்கை-நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி. சரீர சுகம்; நான் ஒருநாளும் அடையவில்லை இதுவரையில்.

'அதாவது...'

'என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை."

பின் எதைத்தான் சுகம் என்கிறாய்? '

நான் உள்ளத்தைத் திறந்து பேசுவதற்கும் கூட ஒரு எல்லை இல்லையா? இதற்கும் மேலுமா என்னைச் சொல்லச் சொல்லுகிறீர்கள்?"

'உன் புருஷன் ஏன்...?"

'என் புருஷனுக்கு என் சரீரம் சலித்துப்போய் விட்டது. வேறு பெண்ணைத் தேடிக் கொண்டுவிட்டான், விலை கொடுத்து.

'சாவித்திரி தைரியமாக ஒன்று செய்யலாமே!

'நான் எதையும் செய்வேன். ஆனால், உபயோகமில்லை. சிறிது காலம் உங்களைத் திருப்தி செய்யலாம் அவ்வளவுதான்.

'உன்னைத் திருப்தி செய்ய நான் முயற்சி செய்து பார்க்கிறேனே!"

'வீணாக உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். என் ரூபத்தைக் கண்டு நீங்கள் மயங்கிவிட்டீர்கள். உங்கள் இச்சை பூர்த்தியாவதற்காக, என்னை திருப்தி செய்வதாகச் சொல்லுகிறீர்கள்.

“எது சொன்னாலும்...'

'ஒன்றுமே சொல்லவேண்டாம், இனிமேல் விளக்கைப் போடுங்கள்.

நான் எழுந்து விளக்கைப் போட்டேன்.

'நான் போய்ப் படுத்துக்கொள்ளட்டுமா?"

தூக்கம் வருகிறதா?”

தூக்கமா? இப்பொழுது இல்லை

பின் சற்று தான் இரேன்.

'உங்கள் தூக்கமும் கெடவா?

'சாவித்திரி..."

'ஒன்றும் சொல்லாதீர்கள்!"

நீ சொல்வதெல்லாம் சரி என்றுதான் எனக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது

. நிஜம்மா என்று எழுந்து என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

'பொய் சொன்னால்தான் நீ உடனே...

அப்பா, இந்தக் கட்டைக்கு கொஞ்சம் ஆறுதல்'

'சாவித்திரி, உன்னால் இன்று என் அபிப்பிராயங்களே மாறுதல் அடைந்துவிட்டன.

அதெல்லாம் இருக்கட்டும். இந்த அந்தரங்கம் நம்முடன் இருக் கட்டும். என் கட்டை சாய்ந்தபிறகு வேண்டுமானால் யாரிடமாவது சொல்லுங்கள்.

'ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? '

இல்லை, இனிமேல் இந்த சரீரம் என் சோகத்தைத் தாங்காது. ஆனால், எதனாலோ இப்பொழுது எனக்கேதோ ஒரு திருப்தி ஏற்படுகிறது.

நான் சொல்லவில்லையா? என்று நான் என்னையும் அறியாமல், துவண்டு விழுபவள்போல் இருந்த அவளிடம் நெருங்கி, என்மேல் சாய்த்துக்கொண்டேன்.

அவள் ஒன்றும் பேசாமல் செய்யாமல் கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தாள்.

இவ்வளவு மாதங்கள் கழித்து, நிதான புத்தியுடன் இதை எழுதும் போதுகூட, நான் செய்ததை பூசி மெழுகிச் சொல்ல மனம் வரவில்லை எனக்கு. இப்படி மனம் விட்டு ஒரு பெண் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சங்கூட மழுப்பாமல் எழுதின பிறகு கடைசியில் ஒரு பொய்யைச் சேர்க்க முடியவில்லை.

மெள்ள அவளைப் படுக்கையில் படுக்கவைத்தேன்... என் படுக்கையில் அப்பொழுதும் அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவ்வளவு ரகஸ்யங்களை ஒரேயடியாக வெளியே கொட்டின இதழ்கள் ஒய்ந்து போனது போலப் பிரித்த படியே கிடந்தன.

திடீரென்று, ‘அம்மா! போதுமடி!’ என்று கண்களை மூடிய வண்ணமே முனகினாள்.

'சாவித்திரி, என்னம்மா? என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக்கொண்டேன்."

போதும்!"

'சாவித்திரி, விளக்கு...'

அவள் திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.

‘ஆமாம், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்றுநேரம் இருந்த வெளிச்சம் போதும்!’ என்று எழுந்து நின்றாள்.

'நீ சொல்வது அர்த்தமாகவில்லை, சாவித்திரி!’

'இனிமேல் திறந்து சொல்ல முடியாது. நான் போகிறேன். நாளைக்கு வேறு ஜாகை பார்த்துக்கொள்ளுங்கள்!"

'ஏன், ஏன் நான் என்ன தப்பு செய்துவிட்டேன்?’

'ஒரு தப்பும் இல்லை. இனிமேல் நாம் இந்த வீட்டில் சேர்ந்து இருக்கக் கூடாது, ஆபத்து என்று சொல்லி என்னைப் பார்த்துவிட்டு, சாவித்திரி தானே விளக்கை அணைத்துவிட்டுச் சிறிதும் தயங்காமல் உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக்கொண்டாள்.

சட்டென்று என் உள்ளத்திலும் சற்று எரிந்த விளக்கு அணைந்தது.

போதும்!

எது போதும் என்றாள்? தன் வாழ்க்கையா, துக்கமா, தன் அழகா,என் ஆறுதலா, அல்லது அந்தச் சிறிது வெளிச்சத்தில்...?

******
கலாமோகினி, ஜனவரி-1943

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்