Showing posts with label மகாகவி பாரதியார். Show all posts
Showing posts with label மகாகவி பாரதியார். Show all posts

Dec 10, 2013

நான் - மகாகவி பாரதியார்

mahakavi

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,

இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.

மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

Dec 27, 2012

ஆறில் ஒரு பங்கு- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

முகவுரை

ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது.

இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும் அமரத்தன்மையும் கொடுக்கும். “நாந்ய பந்தா bharathiar1வர்த்ததே அயநாய” வேறு வழியில்லை.

இந்நூலை, பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

- ஆசிரியன்.

அத்தியாயம் 1

மீனாம்பாள் வீணை வாசிப்பதிலே ஸரஸ்வதிக்கு நிகரானவள். புரசைவாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவள் வரும் சமயங்களிலெல்லாம் மேல மாடத்து அறையை அவளுடைய உபயோகத்துக்காகக் காலி செய்து விட்டு விடுவது வழக்கம். நிலாக் காலங்களில் இரவு எட்டு மணிக்கெல்லாம் போஜனம் முடிந்துவிடும். ஒன்பது மணி முதல் நடுநிசி வரையில், அவள் தனது அறையில் இருந்து வீணை வாசித்துக் கொண்டிருப்பாள். அறைக்கு அடுத்த வெளிப்புறத்திலே பந்தலில், அவளுடைய தகப்பனார் ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடு கட்டிலின்மீது படுத்துக் கொண்டு சிறிது நேரம் வீணையைக் கேட்டுக் கொண்டிருந்து, சீக்கிரத்தில் குறட்டைவிட்டு நித்திரை செய்யத் தொடங்கிவிடுவார். ஆனால், மகாராஜன் குறட்டைச் சத்தத்தால் வீணை சத்தம் கேளாதபடி செய்து விடமாட்டார்; இலேசான குறட்டைதான். வெளிமுற்றத்தின் ஒரு ஓரத்திலே நான் மட்டும் எனது ‘பிரம்மசாரி’ப் படுக்கையைப் போட்டுக் கொண்டு படுத்திருப்பேன். வீணை நாதம் முடிவுறும் வரை, என் கண்ணிமைகளைப் புளியம் பசை போட்டு ஒட்டினாலும் ஒட்ட மாட்டா. மீனாம்பாளுடன் அறையிலே படுத்துக் கொள்ளூம் வழக்கமுடைய எனது தங்கை இரத்தினமும் சீக்கிரம் தூங்கிப் போய்விடுவாள். கீழே எனது தாயார், தமையனார், அவரது மனைவி முதலிய அனைவரும் தூங்கி விடுவார்கள். எனது தமையனார் மனைவி, வயிற்றிலே சோற்றைப் போட்டுக் கைகழுவிக் கொண்டிருக்கும்போதே, குறட்டை விட்டுக் கொண்டிருப்பாள். இடையிடையே குழந்தைகளின் அழுகைச் சத்தம் மட்டிலும் கேட்கும். தமையனாருக்குக் கோட்டையில் ரெவினியூ போர்டு ஆபீஸிலே உத்தியோகம். அவருக்கு நான்கு வருடங்களுக்கொரு முறை ஆபீஸில் பத்து ரூபாயும், வீட்டில் இரண்டு குழந்தைகளும் ‘ப்ரமோஷன்’.

வஸந்த காலம், நிலாப் பொழுது, நள்ளிரவு நேரம், புரசைவாக்கம் முழுதும் நித்திரையிலிருந்தது. இரண்டு ஜீவன்கள்தான் விழித்து இருந்தன. நான் ஒன்று, மற்றொன்று அவள்.

கந்தர்வ ஸ்திரீகள் ‘வீணை’ வாசிப்பதுபோல மீனாம்பாள் வாசிப்பாள். பார்ப்பதற்கும் கந்தர்வ ஸ்திரீயைப் போலவே இருப்பாள். அவளுக்கு வயது பதினாறு இருக்கும். கதையை வளர்த்துக் கொண்டு ஏன் போக வேண்டும்? மன்மதன் தனது அம்பொன்றின் முனையிலே என் பிராணனைக் குத்தி எடுத்துக் கொண்டு போய் அவள் வசம ஒப்புவித்து விட்டான். அடடா! அவளது இசை, எவ்வளவு நேரம் கேட்டபோதிலும் தெவிட்டாது. தினந்தோறும் புதுமை தோன்றும், அவள் முகத்தில். அவளுடைய தந்தையாகிய ராவ்பகதூர் சுந்தரராஜுலு நாயுடு எனது தாயாருக்கு ஒன்றுவிட்ட அண்ணன். தஞ்சாவூர் முதலிய பல ஜில்லாக்களில் நெடுங்காலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்த்து ஸர்க்காருக்கு நன்றாக உழைத்ததினால் ‘ராவ் பகதூர்’ என்ற பட்டம் பெற்றவர். சுதேசியம் தொடங்கும் முன்பாகவே இவர் வேலையிலிருந்து விலகிவிட்டார். இதை எதன் பொருட்டாகச் சொல்லுகிறேன் என்றால் அவருக்குக் கிடைத்த பட்டம் வெறுமே சில சுதேசியத் தலைவர்கள்மீது ‘ரிப்போர்ட்’ எழுதிக் கொடுத்துச் சுலபமாகச் சம்பாதித்த பட்டமன்று. யதார்த்தத்திலேயே திறமையுடன் உழைத்ததினாற் கிடைத்த பட்டம். குழந்தை முதலாகவே மீனாம்பாளை எனக்கு விவாகம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. அந்தக் கருத்து நிறைவேறுவதற்கு நேர்ந்த விக்கினங்கள் பல. அவ்விக்கினங்களில் பெரும்பானமையானவை என்னாலேயே உண்டாயின.

நான் சுமார் பதினாறு பிராயம் வரை சென்னைக் கிறிஸ்தியன் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். “வேத கால முதலாக இன்றுவரை பாரத தேசத்திலுள்ள ரிஷிகள் எல்லாரும் ஒன்றும் தெரியாத மூடர்கள். அர்ஜுனனும், காளிதாஸனும், சக்ராசாரியரும், சிவாஜியும், ராமதாஸரும், கபீர்தாஸரும், அதற்கு முன்னும் பின்னும் நேற்று வரையில் இருந்த பாரத தேசத்தார் அனவைரும் நெஞ்சில் வளர்த்து வந்த பக்திகளெல்லாம் இழிந்த அநாகரிகமான மூடபக்திகள்” என்பது முதலான ஆங்கிலேயே ‘சத்தியங்கள்’ எல்லாம் என் உள்ளத்திலே குடிபுகுந்து விட்டன. ஆனால் கிறிஸ்துவ பாதிரி ஒரு வினோதமான ஜந்து. ஹிந்து மார்க்கத்திலும், ஹிந்து நாகரிகத்திலும் பக்தி செலுத்துவது பேதைமை என்று ருஜுப்படுத்திக் கொண்டு வரும்போதே, அவர் கொண்டாடும் கிறிஸ்து மார்க்கமும் மூடபக்தி என்று வாலிபர் மனதில் படும்படி ஏற்பாடு செய்து விடுகிறார். மத விஷயங்களைப் பற்றி விஸ்தாரமான விஷயங்கள் எழுதி, படிப்பவர்களுக்கு நான் தலைநோவு உண்டாக்கப் போவதில்லை. சுருக்கம் : நான் எனது பூர்வ மதாசாரங்களில் பற்று நீங்கி ‘ஞானஸ்நானம்’ பெறவில்லை. பிரம்மா ஸமாஜத்திலே சேர்ந்து கொண்டேன்.

சிறிது காலத்திற்கு அப்பால், பட்டணத்தில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கல்கத்தாவுக்குப் புறப்பட்டுப் பொய், அங்கே பிரம ஸமாஜத்தாரின் மார்க்க போதனை கற்பிக்கும் பாடசாலையொன்றில் சேர்ந்து சில மாதங்கள் படித்தேன். பிரம ஸமாஜத்தாரின் ‘உபதேசி’களில் ஒருவனாக வெளியேற வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். அப்பால் அங்கிருந்து பஞ்சாப் ஹிந்துஸ்தானம் முதலிய பல பிரதேசங்களில் யாத்திரை செய்து கொண்டு கடைசியாக சென்னப் பட்டணம் வந்து சேர்ந்தேன். நான் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கியதாக எண்ணி, எனது ஜாதியார் என்னைப் பலவிதங்களில் இம்சை செய்தார்கள். இந்த இம்சைகளினால் எனது சித்த உறுதி நாளுக்கு நாள் பலம் அடைந்ததேயல்லாமல், எனக்கு மனச்சோர்வு உண்டாகவில்லை. எனது தகப்பனார் - இவர் பெயர் துபாஷ் ராமச்சந்திர நாயுடு - வெளிவேஷ மாத்திரத்தில் சாதாரண ஜனங்களின் ஆசார விவகாரங்களை வைத்துக் கொண்டிருந்தார்; எனினும், உள்ளத்தில் பிரம்ம ஸமாஜப் பற்று உடையவர். ஆதலால், நான் வாஸ்தவமான பரமாத்ம பக்தியும், ஆத்ம விசுவாஸமும, எப்போதும் உபநிஷத்துக்கள் படிப்பதில் சிரத்தைக் கொண்டிருப்பது கண்டு, அவருக்கு அந்தரங்கத்தில் மிகுந்த உவகையுண்டாயிற்று. வெளி நடப்பில் என் மீது கோபம் பாராட்டுவது போலிருந்தாரேயன்றி, எனது பந்துக்கள் சொற்படி கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தவில்லை. ஸகல ஸௌகரியங்களும் எனக்கு முன்னைக் காட்டிலும் அதிகமாக நடக்கும்படி வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். ஆனால், எனது தமையன் மாத்திரம் என்னிடம் எக்காரணம் பற்றியோ மிகுந்த வெறுப்பு பாராட்டினான். நான் தலையிலே பஞ்சாபிகளைப் போலப் பாகை கட்டிக் கொள்வது வழக்கம். ‘15 ரூபாய்’க் குமாஸ்தாக்களுக்கென்று பிரத்தியேகமாக அழகு, அந்தம், ஆண்மை எதுவுமின்றி ஏற்பட்டிருக்கும் கும்பகோணத்துப் பாகை நான் கட்டிக் கொள்ளுவதில்லை. இது கூடத் தமையனுக்குக் கோபம உண்டாகும். “ராஜ புத்ருடு வீடு, தொங்க விதவா! தலலோ மகா ஆடம்பரமுக பகடி வீடிகி!” என்று ஏதெல்லாமோ சொல்லி ஓயாமல் திட்டிக் கொண்டிருப்பான். இப்படியிருக்க ஒரு நாள் எனது தகப்பனார் திடீரென்று வாயுக் குத்தி இறந்து போய்விட்டார். அவருக்குப் பிரம ஸமாஜ விதிப்படி கிரியைகள் நடத்த வேண்டும் என்று நான் சொன்னேன். எனது தமையன் சாதாரண ஆசாரங்களின்படிதான் நடத்த வேண்டும் என்றான். பிரமாத கலகங்கள் விளைந்து, நானூறு மத்தியஸ்தங்கள் நடந்த பிறகு மசானத்தில் அவன் தனதிஷ்டப்படி கிரியைகள் முடித்த பின்பு நான் எனது கொள்கைப்படி பிரம்மா ஸமாஜ குரு ஒருவரை வைத்துக் கொண்டு கிரியைகள் செய்தேன். இதுவெல்லாம் எனது மாமா ராவ் பகதூர் சுந்தரராஜுலு நாயுடுக்கு என் மீது மிகுந்த கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்து விட்டது. ஆதலால் விவாகம் தடைபட்டுக் கொண்டே வந்தது. ஆனால், இறுதிவரை என்னை எப்படியேனும் சீர்திருத்தி, எனக்கே தனது மகளைப் பாணிக்கிரஹணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவருடைய இச்சை.

வஸந்த காலம், நிலாப்பொழுது, நள்ளிரவு நேரம். புரசைவாக்கம் முழுமையும் நித்திரையிலிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே. ஒன்று நான்; மற்றொன்று அவள். இன்பமான காற்று வீசிக் கொண்டிருந்தது. மேல் மாடத்தில் மீனாம்பாளுடைய அறையிலிருந்து, முறைப்படி வீணைத் தொனி கேட்டது. ஆனால் வழக்கப்படி குறட்டை கேட்கவில்லை. ராவ்பகதூர் குறட்டை மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார். நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன். என் உள்ளத்திலோ, இரண்டு எரிமலைகள் ஒன்றையொன்று சீரியெதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தன. இவற்றுள்ளே, ஒன்று காதல், மற்றோன்று - பின்பு தெரிய வரும். வீணைத்தொனி திடீரென்று நின்றது. சிறிது நேரத்தில், எனது பின்புறத்தில் ஒரு ஆள் வந்து நிற்பது உணர்ந்து, திரும்பிப் பார்த்தேன், மீனாம்பாள்!

இப்பொழுதுதான் நாங்கள் புதிதாகத் தனியிடத்திலே சந்தித்திருக்கிறோமென்றும், அதனால் இங்கு நீண்டதோர் காதல் வர்ணனை எழுதப்படுமேன்ரும் படிப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். இவ்விதமாக நாங்களிருவரும் பலமுறை சந்தித்திருக்கிறோம். மீனாம்பாள் மஞ்சத்தின் மீது உட்கார்ந்தாள்.

“மீனா! இன்று உன்னிடத்திலே ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன்’ என்றேன். ‘எனக்கு அது இன்னதென்று ஏற்கனவே தெரியும்’ என்றாள்.

‘என்னது? சொல்லு.”

‘நீ பிரம்மச்சரிய சங்கற்பம் செய்து கொள்ளப் போகிறாய் என்ற விசேஷம்.’

‘ஏன்? எதற்கு? எப்படி? உனக்கு யார் சொன்னார்கள்?” என்று கேட்டேன்.

‘வந்தே மாதரம்’ என்றாள்.

மீனாம்பாளுடைய அறிவுக் கூர்மை எனக்கு முன்னமே தெரியுமாதலால், அவள் சொல்லியதிலிருந்து அதிக வியப்பு உண்டாகவில்லை.

அதன்பின், நான் அவளிடம் பின்வருமாறு கூறலாயினேன்: “ஆம், பாரத தேசத்தை இப்போது பிரம்மசாரிகளே ரக்ஷிக்க வேண்டும். மிக உயர்ந்திருந்த நாடு மிகவும் இழிந்து போய்விட்டது. இமயமலை இருந்த இடத்தில் முட்செடிகளும் விஷப்பூச்சிகளும் நிறைய ஒரு பாழுங்காடு இருப்பது போலாகிவிட்டது. அர்ஜுனன் வாழ்ந்த மாளிகையில் வௌவால்கள் தொங்குவது போலிருக்கிறது. இதை பிரமச்சாரிகளே காப்பாற்ற வேண்டும். பொப்பிலி ராஜாவின் மகனாகவேனும், ராஜா ஸர் ஸவலை ராமசாமி முதலியார் மகனாகவேனும் பிறவாமல் நம் போன்ற சாதாரண குடும்பங்களிலே பிறந்தவர்கள் விவாகம் செய்து கொண்டால், இந்தப் பஞ்ச நாட்டில் அவர்களுக்கு மூச்சு முட்டிக் போகிறது. குருவியின் தலையிலே பனங்காயை வைப்பது போல, இந்த நரிக் கூட்டத்திலுள்ள ஒரு வாலிபன் தலையிலே ஒரு குடும்ப பாரத்தைச் சுமத்தும்போது, அவனுக்குக் கண் பிதுங்கிப் போய்விடுகிறது. அவனவனுடைய அற்ப காரியங்கள் முடிவு பெறுவதே பகீரத ப்ரயத்தனம் ஆய்விடுகிறது. தேச காரியங்களை இவர்கள் எப்படிக் கருதுவார்கள்? பிரம்மச்சாரிகள் வேண்டும்; ஆத்ம ஞானிகள் வேண்டும்; தம பொருட்டு உலக சுகங்களை விரும்பாத தீரர்கள் வேண்டும். இந்தச் சுதேசியம் கேவலம் ஒரு லௌகீக காரியமன்று. இது ஒரு கர்மம். இதில் பிரவேசிப்பவர்களுக்கு வீர்யம், தேஜஸ், கர்மதியாகித் தன்மை முதலிய அரிய குணங்கள் வேண்டும். நான் பிரம்மசரிய விரதத்தை கைக்கொள்ளலாமென்று நினைத்திருக்கிறேன். ஆனால்”

மீனா: “ஆனால், நான் அதற்கு ஒரு சனியாக வந்து குறுக்கிட்டிருக்கிறேன் என்று சொல்லுகிறாய்!”

‘பார்த்தாயா, பார்த்தாயா! என்ன வார்த்தை பேசுகிறாய்? நான் சொல்ல வந்ததைக் கேள். எனது புதிய சங்கற்பம் ஏற்படு முன்னதாகவே என் உயிரை உனக்கு அர்ப்பணம் செய்து விட்டேன். இப்போது எனது உயிருக்கு வேறொரு கடமை ஏற்பட்டிருக்கிறது. அவ்விஷயத்தில் உனது கட்டளையை எதிர்பார்த்திருக்கிறேன்” என்றேன். அவள் ஏதோ மறுமொழி சொல்லப் போனாள். அதற்குள் வாயிற்புறத்தில் ஒரு வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டது.

‘நாயன்னா வந்து விட்டார். நான் போகிறேன்’ என்று சொல்லி ஒரு முத்தத்துடன் பிரிந்தாள்.

குறட்டை நாயுடு கதவை உடைத்து, உள்ளிருக்கும் குறட்டைகளையெல்லாம் எழுப்பி, மேலே வந்து படுத்து அரை நாழிகைக்கெல்லாம் தமது தொழிலை ஆரம்பித்து விட்டார். இரண்டு ஜீவன்கள் அன்றிரவு முழுதும் விழித்திருந்தன. ஒன்று நான்; மற்றொன்று அவள்.

அத்தியாயம் - 2

மேல் அத்தியாயத்தின் இறுதியில் குறிக்கப்பட்ட செய்தி வந்ததற்கு அப்பால், சில மாதங்கள் கழிந்து போயின. இதற்கிடையே எங்களுடைய விவகாரத்திற் பல மாறுபாடுகள் உண்டாயிருந்தன. ‘வந்தே மாதரம்’ மார்க்கத்தில் நான் பற்றுடையவன் என்பதை அறிந்த ராவ் பகதூர் எனக்குத் தமது கன்னிகையை மணஞ் செய்து கொடுப்பது என்ற சிந்தனையை அறவே ஒழித்துவிட்டார். சில மாதங்களில் அவர் தமது சாஸ்வத வாஸஸ்தானமாகிய தஞ்சாவூரிலிருந்து புரசைவாக்கத்துக்கு வருவதை முழுவதும் நிறுத்தி விட்டார். இதனிடையே மீனாம்பாளுக்கு வேறு வரன்கள் தேடிக் கொண்டிருந்ததாகவும் பிரஸ்தாபம் ஏற்பட்டது. அவளிடமிருந்தும் யாதொரு கடிதமும் வரவில்லை. ஒருவேளை முழுதும் மறந்து போய்விட்டாளோ? பெண்களே வஞ்சனையின் வடிவம் என்று சொல்லுகிறார்களோ, அது மெய்தானா? “பெண்ணெனப்படுவகேண்மோ உள நிறைவுடைய வல்ல, ஓராயிர மனத்தவாகும்” என்று நான் சீவக சிந்தாமணியிலே படித்தபோது, அதை எழுதியவர் மீனாம்பாளைப் போன்ற ஸ்திரீயைக் கண்டு அவளுடைய காதலுக்குப் பாத்திரமாகும் பாக்கியம் பெறவில்லை போலும் என்று நினைத்தேனே. இப்போது, அந்த ஆசிரியருடைய கொள்கைதான் மெய்யாகி விட்டதா? நான் இளமைக்குரிய அறிவின்மையால், அத்தனை பெருமை வாய்ந்த ஆசிரியரது கொள்கையைப் பிழையென்று கருதினேன் போலும்!

‘அடா மூடா! எனக்கு ஏன் இதில் இவ்வளவு வருத்தம்? நீயோ பிரம்மசரிய விரதத்திலே ஆயுளைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாள்தோறும் மேன்மேலும் வளர்த்து வளர்த்து வருகின்றாய். மீனா மற்றொருவனை மணஞ் செய்து கொண்டால் உனக்கு எளிதுதானே? நீயோ வேறொரு பெண் மீது இவ்வாழ்க்கையில் மையல் கொள்ளப் போவதில்லை. இவளொருத்திதான் உனது விரதத்திற்கு இடையூறாக இருந்தாள். இவளும் வேறொருவனை மணஞ் செய்து கொண்டு அவன் மனைவியை விடுவாளாயின் உனது விரதம் நிர்விக்கினமாக நிறைவேறும். ஈசனன்றோ உனக்கு இங்ஙனம் நன்மையைக் கொண்டு விடுகிறான்? இதில் ஏன் வருத்தமடைய வேண்டும்?’ என்று சில சமயங்களில் என்னுள்ளம் தனக்குத்தானே நன்மதி புகட்டும்.

மீண்டும், வேறொரு விதமான சிந்தை தோன்றும்: “அவள் நம்மை மறந்திருக்கவே மாட்டாள். மாமா சொற்படி கேட்டு அவள் வேறொருவனை மணஞ் செய்து கொள்ளவே மாட்டாள். எனது பிராணனோடு ஒன்றுபட்டவளாதலால், எனது நெஞ்சத்திலே ஜ்வலிக்கும் தர்மத்தில் தானும் ஈடுபட்டவளாகி அந்தத் தர்மத்திற்கு இடையூறு உண்டாகும் என்று அஞ்சி எனக்கு ஒன்றும் எழுதாமலிருக்கிறாள். ஆமடி, மீனா! உன்னை நான் அறியேனா? எது வரினும் நீ என்னை மறப்பாயா? அந்தக் கண்கள் ‘உன்னை மறக்கவே மாட்டேன்’ என்று எத்தனை முறை என்னிடம் பிரமாணம் செய்து கொடுத்திருக்கின்றன! அந்தக் கண்கள்! அந்தக் கண்கள்! ஐயோ, இப்பொழுதுகூட என் முன்னே நிற்கின்றனவே! அவை பொய் சொல்லுமா?”

அப்பால் ஒரு உள்ளம்… “அடா! நல்ல துறவடா உன் துறவு! நல்ல பக்தியடா உன் பக்தி! நல்ல தர்மம்! நல்ல சிரத்தை! ஆரிய நாட்டை உத்தாரணம் செய்வதற்கு இப்படியன்றோ பிள்ளைகள் வேண்டும்? பீஷ்மர் வாழ்ந்திருந்த தேசமல்லவா? இப்பொழுது அதற்கு உன்னைப் போன்றவர்கள் இருந்து ஒளி கொடுக்கிறார்கள்! சீச்சீ! நாய் மனமே! அமிருத வெல்லத்தை விட்டு வெறும் எலும்பைத் தேடிப் போகிறாயா? லோகோத்தாரணம் பெரிதா, உனது புலனின்பம் பெரிதா? தர்ம சேவை பெரிதா, ஸ்திரீ சேவை பெரிதா? எதனைக் கைக்கொள்ளப் போகிறாய்? சொல்லடா சொல்!”

பிறகு வேறொரு சிந்தனை: “எப்படியும் அவளிடமிருந்து ஓர் உறுதி கிடைத்தால், அதுவே நமக்குப் பெரியதோர் பலமாயிருக்கும். ‘நீ தர்ம பரிபாலனம் செய். என் பொருட்டாகத் தர்மத்தைக் கைவிடாதே. நான் மரணம் வரை உன்னையே மானஸீகத் தலைவனாகக் கொண்டு நோன்புகள் இழைத்துக் காலம் கழிப்பேன். ஸ்வர்க்கத்திலே நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்’ என்று அவள் உறுதி தருவாளானால், இந்த் ஜன்மத்தில் ஜீவியம் வெகு சுலபமாய் இருக்கும்.”

அப்பால்: “ஒரேயடியாக, இவளுக்கு இன்னொருவனுடன் விவாகம் நடந்து முடிந்துவிட்டது என்ற செய்தி வருமானால், கவலை விட்டிருக்கும். பிறகு, இகத்தொடர் ஒன்றுமேயில்லாமல், தர்ம சேவையே தொழிலாக நின்று விடலாம்.”

பின் மற்றொரு சிந்தை: - “ஆ! அப்படி ஒரு செய்தி வருமானால் பின்பு உயிர் தரித்திருப்பதே அரியதாய்விடும். அவளுடைய அன்பு மாறிவிட்டது என்று தெரிந்தபின் இவ்வுலக வாழ்க்கையுண்டா?”

அப்பால் பிறிதொரு சிந்தை: “அவள் அன்பு! மாதர்களுக்கு அன்பு என்றதோர் நிலையும் உண்டா? வஞ்சனை கோபம் இரண்டையும் திரட்டிப் பிரமன் ஸ்திரீகளைப் படைத்தான்.’

இப்படி ஆயிரவிதமான சிந்தனைகள் மாறி மாறித் தோன்றி எனது அறிவைக் கலக்கின. ஆன்ம உறுதியில்லாதவனுடைய உள்ளம் குழம்பியதோர் கடலுக்கு ஒப்பாகும். இதனைப் படிக்கின்றவர், ஒரு கணம் சாக்ஷி போல் நின்று தமது உள்ளத்தினிடையே நிகழும் புரட்சிகளையும் கலக்கங்களையும் பார்ப்பாராயின், மிகுந்த வியப்பு உண்டாகும். மனித வாழ்க்கையிலே இத்தனை திகைப்புகள் ஏன் உண்டாகின்றன?

“மறப்பும் நினைப்புமாய் நின்ற வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது தோழி”

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திடீரென்று எனது கையில் மீனாம்பாளின் கடிதமொன்று கிடைத்தது. அதனை இங்குத் தருகின்றேன். அஹ்டைப் படித்துப் பார்த்த பொழுது என்னுள்ளம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

ஓம்.

தஞ்சாவூர்
உடையாய்,

இக்கடிதம் எழுதத் தொடங்கும்போதே எனது நெஞ்சு பதறுகிறது. எனக்கு எப்படி எழுதுகிறது என்று தெரியவில்லை. ஐயோ, இது என்னுடைய கடைசிக் கடிதம்! உன் முகத்தை நான் இனி இவ்வுலகத்தில் பார்க்கப் போவதில்லை.

‘நாயன்னா’ வருகிற தை மாதம் என்னை இவ்வூரில் புதிய இன்ஸ்பெக்டராக வந்திருக்கும் மன்னார் என்பவனுக்குப் பலியிட வேண்டுமென்று நிச்சயம் செய்து விட்டார். கலியாணத்துக்கு வேண்டிய சாமக்கிரியைகளெல்லாம் தயாராகின்றன. உனது பெயரைக் கேட்டால் வேட்டை நாய் விழுவதுபோல விழுந்து, காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகள் சொல்லி நிந்திக்கிறார். நான் தப்பியோடி விடுவேன் என்று நினைத்து என்னை வெளியேறாதபடி காவல் செய்து விட்டிருக்கிறார். நீ ஒருவேளை இச்செய்தி கேட்டு இங்கு வருவாய் என்று கருதி, நீ வந்தால் வீட்டுக்கு வர முடியாமல் செய்ய, இவரும் மன்னாரென்பவனும் சேர்ந்து நீசத்தனமான ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார்கள். அவன் ‘நாயன்னா’வின் பணத்தின்மீது கண் வைத்து, இந்த விவாகத்தில் ஆசை மூண்டிருக்கிறான். எனது உள்ளத்திலே அவனிடம் மிகுந்த பகைமையும், அருவருப்பும் உள்ளனவென்றும், இப்படிப்பட்ட பெண்ணைப் பலவந்தமாகத் தாலி கட்டினால் அவனுக்கு வாழ்நாள் முழுதும் துக்கமிருக்குமேயல்லாது சுகமிருக்காது என்றும் சொல்லியனுப்பினேன். அதற்கு அந்த மிருகம், “எனக்கு அவளுடைய உள்ளத்தைப் பற்றி லக்ஷ்யமில்லை. அதைப் பின்னிட்டு சரிப்படுத்திக் கொள்வேன். முதலாவது, பணம் என் கையில் வந்து சேர்ந்தால், பிறகு அவள் ஓடிப்போய் அந்த ஜெயிலுக்குப் போகிற பயலுடன் சேர்ந்து கேட்டுத் திரிந்துவிட்டுப் பிறகு சமுத்திரத்தில் விழுந்து சாகட்டும்” என்று மறுமொழி கொடுத்தனுப்பி விட்டது.

அநேக தினங்களாக எனக்கு இரவில் நித்திரை என்பதே கிடையாது. நேற்றிரவு படுக்கையின்மீது கண் மூடாமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன். அப்போது கனவு போன்ற ஒரு தோற்றமுண்டாயிற்று. தூக்கமில்லாதபோது, கனவு எப்படி வரும்? அஃது காணவுமில்லை, நினைவுமில்லை; ஏதோ ஒரு வகையான காட்சி. அதில் அதிபயங்கரமான ரூபத்துடன், இரத்தம் போன்ற சிவந்த விழிகளும் கரிய மேகம் போன்ற மேனியும், வெட்டுண்ட தலைகளின் மாலையும் கையில் சூலமுமாகக் காளிதேவி வந்து தோன்றினாள். நான் நடுங்கிப் போய், ‘மாதா என்னைக் காத்தருள் செய்ய வேண்டும்’ என்று கூறி வணங்கினேன். உடனே திடீரென்று அவளுடைய உருவம் மிக அழகியதாக மாறுபட்டது. அந்த ஸௌந்தர்யத்தை என்னால் வருணிக்க முடியாது. அவளுடைய திருமுடியைச் சூழ்ந்து கோடி சூரியப் பிரகாசம் போன்ற தேஜோ மண்டலம் காணப்பட்டது. கண்கள் அருள் மழை பொழிந்தன. அப்போது தேவி எனக்கு அபயப்பிரதானம் புரிந்து பின்வருமாறு சொல்லலாயினள்: “குழந்தாய் உனது அத்தான் கோவிந்தராஜனை எனது சேவையின் பொருட்டாக எடுத்துக் கொள்ளப் போகிறேன். உனக்கு இம்மையில் அவனைப் பெற முடியாது. நீ பிறனுக்கு மனைவியாகவும் மாட்டாய். உனக்கு இவ்வுலகத்தில் இனி எவ்வித வாழ்வுமில்லை. உங்கள் வீட்டுக் கொல்லையில், வடமேற்கு மூலையில், தனியாக ஒரு பச்சிலை படர்ந்திருக்கக் காண்பாய். நாளைக் காலை ஸ்நானம் செய்து பூஜை முடிந்தவுடனே அதில் இரண்டு இலைகளை எடுத்துத் தின்றுவிடு. தவறாதே!” மேற்கண்டவாறு கட்டளை கொடுத்துவிட்டுப் பராசக்தி மறைந்து போயினாள்.

காலையில் எழுந்து அந்தப் பச்சிலையைப் பார்க்கப் போனேன். வானத்தில் இருந்து ஒரு காகம் இறங்கிற்று. அது அந்தப் பச்சிலையைக் கொத்தி உடனே தரையில் மாண்டுவிழக் கண்டேன். தேவியின் கருத்தை அறிந்து கொண்டேன். இன்று பகல் பத்து நாழிகைக்கு அந்த இலைகளை நான் தின்று பரலோகம் சென்று விடுவேன். நின் வரவை எதிர்பார்த்து அங்கும் கன்னிகையாகவே இருப்பேன். நீ உனது தர்மங்களை நேரே நிறைவேற்றி மாதாவுக்கு திருப்தி செய்வித்த பிறகு அவள் உன்னை நான் இருக்குமிடம் கொண்டு சேர்ப்பாள். போய் வருகிறேன். ராஜா! ராஜா! என்னை மறக்காதே. வந்தே மாதரம்.”

இக்கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டேன்.

அத்தியாயம் 3

மீனாம்பாளுடைய ‘மரண ஓலை’ கிடைத்ததின் பிறகு இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே எனக்கு நிகழ்ந்த அனுபவங்களையெல்லாம் விஸ்தாரப்படுத்திக் கொண்டு போனால் பெரிய புராணமாக வளரும். சுருக்கமாகச் சொல்லுகிறேன். அந்த ஆற்றாமையால் வெளியேறிய நான் அப்படியே காஷாயம் தரித்துக் கொண்டு துறவியாக வடநாட்டிலே ஸஞ்சாரம் செய்து வந்தேன். ‘வந்தே மாதரம்’ தர்மத்தை மட்டிலும் மறக்கவில்லை. ஆனால் என்னை சர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிலிடும்படியான முயற்சிகளிலே நான் கலங்கவுமில்லை; ஜனங்களுக்குள் ஒற்றுமையும் பலமும் ஏற்படுத்தினால், ஸ்வதந்திரம் தானே சித்தியாகும் என்பது என்னுடைய கொள்கை. காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனங் குவியவில்லை. அங்கங்கே சில சில பிரசாரங்கள் செய்ததுண்டு. இது பற்றிச் சில இடங்களில் என்னைப் போலீஸார் தொடரத் தலைப்பட்டார்கள். இதனால், நான் ஜனங்களிடையே நன்றாகக் கலந்து நன்மைகள் செய்து கொண்டு போக முடியாதபடி பல தடைகள் ஏற்பட்டன. ஆகவே, எனது பிரசங்கங்களிலிருந்து எனது நோக்கத்திற்கு அனுகூலத்திலும் பிரதிகூலமே அதிகமாக விளங்கலாயிற்று. இதையும் தவிர எனது பிரசங்கங்களைக் கேட்டு ஜனங்கள் மிகவும் வியப்படைவதையும் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிக உபசாரங்கள் செய்வதையும் கண்டு உள்ளத்திலே கர்வம் உண்டாகத் தலைப்பட்டது.

“இயற்கையின் குணங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன, மூடன் ‘நான் செய்கின்றேன்’ என்று கருதுகின்றான்” என்ற பகவத்கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனஞ் செய்து கொண்டேன். இந்த வீண் கர்வம், நாளுக்கு நாள் மிகுதியடைந்து என்னை விழுங்கி, யாதொரு காரியத்திற்கும் பயன்படாமற் செய்துவிடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. வெளிக்குத் தெரியாமல் எவருடைய மதிப்பையும் ஸன்மானத்தையும் எதிர்பார்க்காமல் ஸாதாரணத் தொண்டு இழைப்பதற்கு என்னை மாயா வைத்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன்.

எனவே பிரசங்கக் கூட்டங்களில் சேர்வதை நிறுத்திவிட்டேன். சில தினங்களுக்கு அப்பால் எனக்குப் போலீஸ் சேவகர்கள் செய்யும் உபசாரங்களும் நின்று போய் விட்டன. பாதசாரியாகவே பல இடங்களில் சுற்றி விட்டு, பாதசாரியாகவே லாஹூர் நகரத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அங்கே லாலா லஜபதி ராய் போன்ற பலரைப் பார்க்கவேண்டும் என்ற இச்சை ஜனித்தது. அவரைப் போய் கண்டதில், அவர் என்னிடம் நம்பிக்கை கொண்டவராகிக் கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் மக்களுக்குச் சோறு, துணி கொடுக்கவேண்டுமமென்ற கருத்துடன் தான் நிதிகள் சேர்த்து வருவதாகவும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய் பஞ்சமுள்ள ஸ்தலங்களில் இருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு ‘நீரும் போய் இவ்விஷயத்தில் வேலை செய்யக் கூடாத?’ என்று கேட்டார்.

ஆ! ராமச்சந்திரன் அரசு செலுத்திய நாடு! வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு! அங்கு, ஜனங்கள் துணியும் சோறுமில்லாமல்,, பதினாயிரக் கணக்காகத் தவிக்கிறார்கள்! அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்களெல்லோரும் எனக்குத் தெய்வங்களல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால் இந்தச் சதையுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன்? லாலா விடம் அனுமதி பெற்றுக்கொண்டு போய் சிறிது காலம் அந்தக் கடமையைச் செய்துகொண்டு வந்தேன். அங்கு கண்ட காட்சிகளைப் பற்றி எழுதவேண்டுமா? எழுதுகிறேன். கவனி. தேவலோகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி. நரகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி. தேவலோகம் நரகலோகமாக மாறியிருந்தால் எப்படித் தோன்றுமோ, அப்படித் தோன்றியது. பகவான் ராமச்சந்திரன் ஆண்ட பூமி, நான் அங்கிருந்த கோரங்களையெல்லாம் உங்களிடம் விவரித்துச் சொல்ல வேண்டும். புண்ணிய பூமியைப் பற்றி இழிவுகள் சொல்வதினால் ஒருவேளை ஒரு சிறிது பாவம் உண்டாகக் கூடும். அந்தப் பாவத்தைத் தவிர வேறென்ன பயன் கிடைக்கப் போகிறது? உன்னால் எனது தாய் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? எழுந்திருந்து வா, பார்ப்போம், எத்தனை நாள் உறங்கி இப்படி அழியப் போகிறீர்களோ? அட பாப ஜாதியே, பாப ஜாதியே! இது நிற்க. ஓரிரண்டு மாதங்களுக்கு அப்பால், லாலா லஜபதிராய் எங்களுக்குக் கடிதம் எழுதி, இனி அந்த வேலை போதும் என்று கட்டளை பிறப்பித்து விட்டார்.

கோசல நாட்டுப் பிரதேசங்களில் பஞ்சத்தின் சம்பந்தமாக நான் வேலை செய்த சில மாதங்களில், ஏற்கனவே என் மனதில் நெடுங்காலமாய் வேரூன்றியிருந்த ஒரு சிந்தனை பலங்கொண்டு வளரலாயிற்று. தணிந்த வகுப்பினரின், நன்மை தீமைகளிலே, நமது நாட்டில் உயர்ந்த வகுப்பினர் என்று கூறப்படுவோர் எவ்வளவு தூரம் அசிரத்தையும், அன்னியத் தன்மையும் பாராட்டுகிறார்கள் என்பதை நோக்குமிடத்து எனது உள்ளத்திலே மிகுந்த தளர்ச்சி உண்டாயிற்று. தென்னாட்டைப் போலவே வட நாட்டிலும், கடைசி வகுப்பினர் என்பதாகச் சிலர் கருதப்படுகின்றனர். தென்நாட்டைப் போலவே, வட நாட்டிலும், இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழில் உடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்கள் ஆக வேண்டும். ஆனால் இவர்களிலேயே பலர் மாட்டிறைச்சி தின்பது போன்ற அனாசாரங்கள் வைத்துக் கொண்டிருபதால், ஹிந்து ஜாதி இவர்களைத் தாழ்வாகக் கருதுகின்றது. ஹிந்து நாகரிகத்திலே பசுமாடு பிரதானமான வஸ்துக்களிலே ஒன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து நிற்கின்றது. விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால் ஹிந்துக்கள் புராதனகால முதலாகவே கோ மாம்ஸத்தை வர்ஜனம் செய்துவிட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு, ஜாதிபொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகின்றது. இது முற்றிலும் நியாயம். ஆனால் பஞ்சம், நோய் முதலியப் பொதுப்பகைவருக்கு முன்பு, நமது உயர்வு தாழ்வுகளை விரித்துக் கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்தி விட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம். “ஹிருதயமறிந்திடச் செய்திடுங் கர்மங்கள் இகழ்ந்து பிரிந்து போமே!”

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” நாம் பள்ளர் பறையருக்குச் செய்வதையெல்லாம், நமக்கு அந்நிய நாடுகளில் பிறர் செய்கிறார்கள். நமது சிருங்ககிரிச் சங்கராச்சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நெட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். ஸாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை. சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்களென்று பாவித்தோம். இப்போது நம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா ஆட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள். நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விலக்கினோம். இப்போது வேத மார்க்கஸ்தர் மகம்மதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது ஹிந்து ஜாதி முழுதையுமே உலகம் தீண்டாத ஜாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா ஜாதியாரிலும் வகுப்புகள் உண்டு. ஆனால் தீராத பிரிவுகள் ஏற்பட்டு ஜாதியை துர்லபப்படுத்திவிடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அன்னியர்களுக்கு எளிதாகிறது. “ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.”

1200 வருஷங்களுக்கு முன்பு வடநாட்டிலிருந்து மகம்மதியர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது நம்மவர்களின் இம்ஸை பொறுக்க முடியாமல் வருந்திக் கொண்டிருந்த பள்ளர் பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக் கொண்டு போய் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிஹாஸம் சொல்லுகின்றது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது. பஞ்சத்தில் பெரும்பாலும் பள் பறை வகுப்பினரே மடிந்து போகிறார்கள். இதைப் பற்றி மேற்குலத்தார்கள் வேண்டிய அளவு சிரத்தை செலுத்தாமலிருக்கின்றனர். எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து, நூற்றுக்கணக்கான மனிதர்களையும் முக்கியமாக – திக்கற்ற குழந்தைகளையும், கிறிஸ்து மதத்திலே சேர்த்துக் கொள்ளுகிறார்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸன்னிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கொண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள்! ஹிந்து ஜனங்கள்! நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர் – ஹிந்துஸ்தானத்து ஜனங்கள் _ ஏனென்று கேட்பாரில்லாமல் பசிப்பிணியால் மாய்ந்து போகின்றனர்.

கோ மாமிசம் உண்ணாதபடி அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களை நமது ஸமூகத்திலே சேர்த்து அவர்களுக்குக் கல்வியும், தர்மமும், தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூர்ண விரோதிகளாக மாறி விடுகிறார்கள். இந்த விஷயத்திலே எனது சிறிய சக்திக்கு இயன்றவரை முயற்சிகள் செய்யவேண்டும் என்ற அவா எனது உள்ளத்தில் வளரலாயிற்று. வங்க நாட்டில் அசுவினி குமார தத்தர் என்ற தேசபக்தர் ஒருவர் இருப்பதாகவும், அவர் இந்த பிரதேசங்களில் ‘நாம் சூத்திரர்’ (பெயர் மட்டில் சூத்திரர்) என்று கூறப்படும் பள்ளர்களை ஸமூக வரம்பினுள்ளே சேர்த்து உயர்வுபடுத்த முயற்சிகள் செய்வதாகவும் கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்க ஆசை உண்டாயிற்று.

அத்தியாயம் 4

கலகத்தாவுக்கு வந்து சில தினங்கள் இருந்துவிட்டு பாரிஸாலுக்கு போய்ச் ஏர்ந்தேன். அங்குப் போய் வழி விசாரணை செய்துகொண்டு அசுவினி குமார தத்தருடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். வீட்டு வாசலில் ஒரு தக்காளி பாபு நின்று கொண்டிருந்தார். அவரிடம் ‘அசுவினி பாபு இருக்கிறாரா?’ என்று கேட்டேன். “இல்லை, நேற்றுத்தான் புறப்பட்டுக் காசிக்குப் போயிருக்கிறார்” என்றார். ‘அடடா’ என்று சொல்லித் திகைத்து நின்றேன். காஷாய உடைகளைக் கண்ட அந்தப் பாபு உபசார மொழிகள் கூறி உள்ளே அழைத்துப் போய் தாகசாந்தி செய்வித்து விட்டு, ‘யார், எவ்விடம்’ என்பதையெல்லாம் விசாரணை செய்தார்.

நான் எனது விருத்தமெல்லாம் தெரிவித்துவிட்டு என் மனதிலிருந்த நோக்கத்தையும் சொன்னேன். “பாரும் பாபு, நம்மில் ஆரில் ஒரு பங்கு ஜனக்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமேயானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?” என்று என் வாயிலிருந்து வாக்கியம் கேட்டவுடனே அவர் முகத்தில் வருத்தம் புலப்பட்டது. முகத்தைப் பார்த்தால் கண்ணீர் ததும்பிவிடும் போலிருந்தது. தீண்டாத வகுப்பினரின் நிலையைக் கருதித்தான் இவ்வளவு பரிதாபமடைகிறார் போலும் என்று நான் நினைத்து “ஐயா உம்முடைய நெஞ்சு போல் இன்னும் நூறு பேருடைய நெஞ்சு இருக்குமானால் நமது நாடு செம்மைப்பட்டு விடும்” என்றேன்.

“ஸ்வாமி, தாங்கள் நினைக்கிறபடி அத்தனை கருணையுடைய நெஞ்சம் எனக்கு இன்னும் மாதா அருள் புரியவில்லை. ஹீன ஜாதியாரைக் காக்க வேண்டும் என்கிற விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் சிரத்தை உண்டு என்பது மெய்யே., அசுவினி பாபுவுடன் நானும் மேற்படி வகுப்பினருக்கு நன்மை செய்வதில் சிறிது உழைத்திருக்கிறென். ஆயினும், என் முகத்தில் தாங்கள் கவனித்த துக்கக் குறி நம்மில் ஆறிலொரு பங்கு ஜனங்கள் இப்படி அவலமாய் விட்டார்களே என்பதைக் கருதி ஏற்பட்டதன்று. தாங்கள் சொன்ன வாக்கியம் சில தினங்களுக்கு முன் இங்கு வந்திருந்த ஒரு மந்த்ராஜி * அம்மாளின் வாயிலிருந்து அடிக்கடி வெளிவரக் கேட்டிருக்கிறேன். தாம் அது சொன்னவுடனே எனக்கு அந்த அம்மாளின் நிலை ஞாபகம் வந்தது. அவளுடைய தற்கால ஸ்திதியை நினைத்து வருத்தமுண்டாயிற்று. அடடா! என்ன குணம்! என்ன வடிவம்! இவ்வளவு பாலியத்திலே நமது தேசத்தினிடம் என்ன அபரிமிதமான பக்தி!” என்று சொல்லி திடுக்கென்று பேச்சை நிறுத்தி விட்டார். அப்பால் என் முகத்தை ஓரிரண்டு தடவை நன்றாய் உற்று நோக்கினார். அவருடைய பெயர் ஸதீச சந்திர பாபு என்பதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

“ஸதீச பாபு, ஏன் இப்படிப் பார்க்கிறீர்?” என்று கேட்டேன்.

“ஸ்வாமிஜீ, க்ஷமித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஸந்யாசி. எந்த தேசத்தில் பிறந்தவரென்பதைக்கூட நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ஆயினும், உங்கள் முகத்தைப் பார்க்கும்பொழுது, அதில் எனக்கு அந்த யுவதியின் உருவம் கலந்திருப்பது போலத் தோன்றுகிறது.. உங்களிருவருடைய முகமும் ஒன்று போலிருப்பதாக நான் சொல்லவில்லை. உங்கள் முகத்தில் எப்படியோ அவளுடைய சாயல் ஏறியிருப்பது போலத் தோன்றுகிறது” என்றார்.

மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒரு விதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு, அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்தப் பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது கோவிந்தா! வேஷத்தில் என்ன இருக்கிறது?

“மீனாம்பா – அட, போ! மீனாம்பாள் இறந்து போய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே! ஐயோ, எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இருந்தாள்!” என்பதாக மனப்பேய் ஆயிரம் விதமாகக் கூத்தாடியது.

“ஸதீச பாபு! நானும் மதராஸ் பக்கத்திலே ஜனித்தவன்தான். நீர் சொல்லிய யுவதியைப் பற்றிக் கேட்கும்போது, எனக்குத் தெரிந்த மற்றொரு பந்துவைப் பற்றி ஞாபகம் வருகிறது. நீர் சொல்லிய பெண் யார்? அவள் பெயரென்ன? அவள் இப்போது எங்கே இருக்கிறாள்? அவள் இங்கே என்ன நோக்கத்துடன் வந்திருந்தாள்? அவளுடைய தற்கால ஸ்திதியை குறித்து உமக்கு வருத்தமுண்டாவதேன்? அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? எனக்கு எல்லாவற்றையும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும்” என்றேன்.

கதையை விரிக்கத் தொடங்கினார் ஸதீச சந்திர பாபு. ஒவ்வொரு வாக்கியமும் என் உள்ளத்திலே செந்தீக் கனலும் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது. அவர் சொல்லிய கதையினிடையே என்னுள்ளத்தில் நிகழ்ந்தனவற்ரையெல்லாம் இடையீட்டுக் கொண்டு போனால் படிப்பவர்களுக்கு விர்ஸமாயிருக்கும் என்று அஞ்சி, இங்கு அவர் சொல்லிய விஷயங்களை மட்டிலும் குறிப்பிடுகிறேன். என் மனத் ததும்புதல்களைப் படிப்பவர்கள் தாமே ஊகத்தாற் கண்டுகொள்ள வேண்டும், ஸதீச பாபு சொல்லலானார்:

“அந்த யுவதிக்குத் ‘தாஞ்சோர்’. அவள் பெயர் எனக்குத் தெரியாது. நாங்கள் எல்லோரும் அவளைத் ‘தீன மாதா’ என்று பெயர் சொல்லி அழைப்போம். அவளுடைய உண்மைப் பெயர் அசுவினி பாபுவுக்கு மாத்திரந்தான் தெரியும். ஆனால் அந்தத் தேவியின் சரித்திரத்தை எங்களுக்கு அசுவினி பாபு அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவ்ள் ஒரு போளீஸ் பென்ஷன் உத்தியோகஸ்தருடைய குமாரியாம். அவளது அத்தை மகனாகிய ஒரு மந்த்ராஜ் நகரத்து வாலிபனுக்கு அவளை விவாகம் செய்து கொடுக்கவேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டிருந்ததாம். அவ்வாலிபன் ’வந்தே மாதரம்’ கூட்டத்திலே சேர்ந்து விட்டான். அதிலிருந்து அவள் தகப்பன் அவளை வேறொரு போலீஸ் உத்தியோகஸ்தனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தான். கடைசித் தருணத்தில் அவள் கனவில் ஏதோ தெய்வத்தின் கட்டளை பெற்று ஒரு பச்சிலையைத் தின்று விடவே, அவளுக்கு பயங்கரமான ஜ்வர நோய் கண்டு விவாகம் தடைப்பட்டுப் போய்விட்டது. அப்பால் தகப்பனாரும் இறந்து போய்விட்டார். இதனிடையே அவளுடைய காதலனாகிய மந்த்ராஜ் வாலிபன், என்ன காரணத்தாலோ, அவள் இறந்து விட்டதாக எண்ணி, ஸன்யாஸம் வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டானாம்.

“ஏழை மனமே, வெடித்துப் போய் விடாதே. சற்றுப் பொறு ” என்று என்னால் கூடியவரை அடக்கிப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. “ஐயோ, மீனா, மீனா!” என்று கூவினேன். பிறகு ’ஸதீச பாபு, அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? சொல்லும், சொல்லும்’ என்று நெரித்தேன்.

ஸதீச சந்திரனுக்கு உளவு ஒருவாறு துலங்கி விட்டது. “இப்போது ஒன்றுமில்லை. சௌக்கியமாகத்தானிருக்கிறாள்” என்றார்.
“இல்லையில்லை. என்னிடம் நீர் உண்மை பேசத் தயங்குகிறீர். உண்மை தெரிந்தால் நான் மிகத் துன்பப்படுவேன் என்று எண்ணி நீர் மறைக்கிறீர். இதுவே என்னை நரக வேதனைக்கு உட்படுத்துகிறது. சொல்லிவிடும்” என்று வற்புறுத்தினேன்.

மறுபடியும் ஸதீச பாபு ஏதோ பொருளற்ற வார்த்தைகளைப் போட்டுக் குழப்பி எனக்கு ஸமாதான வசனம் சொல்லத் தலைப்பட்டார்.
“பாரத தேவியின் ஹிருதயத்தின் மீதும், பகவத்கீதையின் மீதும் ஆணையிட்டிருக்கிறேன். என்னிடம் உண்மையை ஒளீயாமல் சொல்லும்” என்றேன். இந்த ஸத்தியம் நவீன வங்காளத்தினரை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தும் எனொஅது எனக்குத் தெரியும். இங்ஙனம் நான் ஆணையிட்டதிலிருந்து அவருக்குக் கொஞ்சம் கோபம் உண்டாயிற்று.

“போமையா, மூட ஸந்யாஸி, என்ன வார்த்தை சொல்லி விட்டீர்! இதோ, உண்மை தெரிவிக்கிறேன். கேட்டுக் கொள்ளும். அந்தப் பெண், இங்கு நாம சூத்திரர்களைப் பஞ்சத்திலிருந்து மீட்கப் பாடுபட்டதில், தீராத குளிர் ஜ்வரங் கண்டு, வைத்தியர்கள் சமீபத்தில் இறந்து விடுவாள் என்று சொல்லி விட்டனர். அதற்கு மேல் அவள் காசியில் போய் இறக்க விரும்பியது பற்றி, அசுவினி பாபு அவளைக் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார், உண்மை சொல்லி விட்டேன், போம்” என்றார்.

“காசிக்கா?”
“ஆம்.”
“காசியில் எங்கே?”
“அஸீ கட்டத்தில்.”
“அஸீ கட்டத்தில் எந்த இடம்?”
“அஸீக்குத் தெற்கே ‘நர்வா’ என்ற இடம் இருக்கிறது. அதில் பல தோட்டங்களும் பங்களாக்களும் உண்டு. அதில் தைப்பூர் மஹாராஜா பங்களாவில் அசுவினி பாபு இறங்கியிருக்கிறார்.”
“ரயில் செலவுக்குப் பணம் கொடும்” என்றேன். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து வீசியெறிந்தார். மானத்தைக் கண்டதார், மரியாதையைக் கண்டதார்?அங்கிருந்து அந்த க்ஷணமே வெளியேறிவிட்டேன். வழியெல்லாம் தின்பதற்கு நெஞ்சத்தையும், அருந்துவதற்குக் கண்ணீரையுமே கொண்டவனாய் காசிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அத்தியாயம் – 5

காசியில் ஹனுமந்த கட்டத்திலே எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். எனது நன்பர் ஒருவருடைய பந்துக்கள் அங்கு வாசஞ் செய்கின்றனர். இதைப் படிக்கும் தமிழர்கள் காசிக்குப் போயிருப்பதுண்டானால், நான் சொல்லப் போகிற இடம் அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழர்கள் எல்லோரும் பெரும்பாலும் ஹனுமந்த கட்டத்திற்கே போய் இறங்குவதுண்டு. அங்குக் கீழ்மேற் சந்து ஒன்றிருக்கிறதல்லவா? அங்கு கீழ் மேற்கு மூலையிலிருந்து மூன்றாம் வீடு. அந்த வீட்டிற்கு சிவமடம் என்று பெயர். யாத்திரைக்காரர்கள் போய் இறங்கக்கூடிய வீடுகளைக் காசியிலே மடங்கள் என்கிறார்கள். சிவமடத்தில் போய் இறங்கி ஸ்நானம் செய்துவிட்டு, மடத்தார் கொடுத்த ஆகாரத்தை உண்டபிறகு, அப்பொழுதே அந்த மடத்துப் பிள்ளைகளில் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு நர்வா கட்டத்திற்குப் போனேன். அங்கே தைப்பூர் ராஜா பங்களா எது என்று விசாரித்து, பங்களாவிற்குப் போய்ச் சேரும்போது இரவு ஏழு மணியாகிவிட்டது. வாயிலில் ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. அந்த வண்டி புறப்படுந்தறுவாயில் இருந்தது. வண்டியின் மேல் ஆங்கிலேய உடை தரித்த ஒரு வங்காளி உட்கார்ந்து கோண்டிருந்தார். வண்டிப் பக்கத்திலே ஒரு கிழவரும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தார்கள். அசுவினி குமார தத்தரின் படத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறபடியால், அந்தக் கிழவர்தான் அசுவினி பாபு என்று தெரிந்து கொண்டேன். நான் போனவுடனே அசுவினி பாபு பக்கத்திலிருந்த மனிதரை நோக்கி, “யாரோ ஒரு ஸன்யாஸி வந்திருக்கிறார். அவரைத் தாழ்வாரத்தில் வரச்சொல். நான் இதோ வருகிறேன்” என்றார். தாழ்வாரத்தில் போட்டிருந்த நாற்காலியில் நானும் என்னுடன் வந்திருந்த வாலிபனும் போய் உட்கார்ந்தோம். அசுவினி பாபுவும் வண்டிக்குள் இருந்தவரும் பேசியது என் செவியில் நன்றாக விழுந்தது.

அசுவினி பாபு: “டாக்டர் ஸாஹப்! நேற்றைக் காட்டிலும் இன்று சிறிது குணப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தமது கருத்தென்ன?”
டாக்டர்: ‘மிகவும் துர்ப்பல நிலையிலேதான் இருக்கிறாள். இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருப்பது கஷ்டம். அந்த நேரம் தப்பினால் பிறகு விபத்தில்லை” என்றார்.

காதில் விஷந்தடவிய தீயம்பு போல இந்த வார்த்தை கேட்டது. “மீனா! மீனா! மீனா!” என்று அலறினேன். வண்டி புறப்பட்டுவிட்டது. அதற்குள் நான் என்னை மீறி அலறிய சத்தம் கேட்டு, அசுவினி பாபுவும் அவரைச் சேர்ந்தவர்களும் நான் இருந்த பாரிசமாக விரைந்து வந்தார்கள். அவர் வருதல் கண்டு, நான் மனதை ஒருவாறூ தேற்றிக் கொண்டு எழுந்து நின்று வணங்கினேன். அவர், ஸ்வாமிக்கு எவ்விடம்? இங்கு வந்த கருத்தென்ன? ஏன் சத்தம் போட்டீர்கள்?” என்று ஹிந்துஸ்தானி பாஷையிலே கேட்டார்.
“பாபு, நான் ஸன்யாஸியல்ல. நான் திருடன். மஹா நிர்ப்பாக்கியமுள்ள பாவி. மீனாம்பாள் தம்மிடம் கோவிந்தராஜன் என்ற பெயர் சொல்லியிருப்பாளல்லவா? அந்தப் பாவி நான்தான்” என்றேன்.

உடனே அவர் என்னை மேன்மாடத்திலுள்ள ஒரு அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றார். அங்கு என்னை நோக்கி, “நேற்றெல்லாம் உம்மை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தேன். நீர் இங்கு வரக்கூடும் என்ற சிந்தனை எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது” என்றார்.

பிறகு என்னிடம் ‘கிழக்கு முகமாகத் திரும்பி உட்காரும்’ என்றார். அப்படியே உட்கார்ந்தேன். ‘கண்ணை மூடிக் கொள்ளும்’ என்றார். இரண்டு கண்களையும் மூடிக் கொண்டேன். பிறகு எனது நெற்றியைக் கையாலே தடவி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். எனக்கு உறக்கம் வருவது போல் இருந்தது. ‘அடடா! இன்னும் மீனாம்பாளைப் பார்க்கவில்லை. எனது உயிரினுமினியாள் மரணாவஸ்தையிலிருக்கிறாள். அவளைப் பார்க்கும் முன்பாக உறக்கம் வருகிறதே! இவர் என்னை ஏதோ மாயமந்திரத்துக்கு உட்படுத்துகிறார். எனது பிராண ரத்தினத்தைப் பார்க்காதபடி கெடுத்துவிட முயலுகிறார். இந்த மாயைக்கு உட்படலாகாது. கண் விழித்து எழுந்து நின்றுவிட வேண்டும்’ என்று சங்கற்பம் செய்துகொண்டு, எழுந்து நிற்க முயன்றேன். ‘ஹும்’ என்றொரு சத்தம் கேட்டது. விழித்து விழித்துப் பார்க்கிறேன். கண்ணைத் திறக்க முடியவில்லை. மயக்கம் மேன்மேலும் அதிகப்பட்டது. அப்படியே உறங்கி விழுந்துவிட்டேன்.

விழித்த பிறகு நான் இரண்டு நாள் உறங்கிக் கிடந்ததாகத் தெரிந்தது. பக்கத்திலிருந்த ஒரு சேவகன் சொன்னான். “மீனா எங்கே? மீனா சௌக்கியமாயிருக்கிறளா?” என்று அந்தச் சேவகனிடம் கேட்டேன். ‘எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்று மறுமொழி கூறினான். சாதாரணமாக எப்போதும்போல் இருந்தேனாயின், அந்தச் சேவகனை உதைத்துத் தள்ளி, இடையே வந்தவர்களையெல்லாம் வீழ்த்திவிட்டு மீனா இருக்குமிடம் ஓடிப்போய் பார்த்திருப்பேன். ஆனால் இந்த நேரம் என்னுடலில் மிகுந்த அயர்வும், உள்ளத்தில் மிகுந்த தெளிவும், அமைதியும் ஏற்பட்டிருந்தன. மனதிலிருந்த ஜ்வரமும் நீங்கிப் போயிருந்தது. ‘பாரிஸால் கிழவன்’ செய்த சூது என்று தெரிந்து கொண்டேன். அரை நாழிகைக்கெல்லாம் அசுவினி பாபு, தாமே நானிருந்த அறைக்குள் வந்து, என் எதிரே ஒரு நாற்காலியின் மீது வீற்றிருந்தார். அன்னை அறியாமல், எனது இரண்டு கைகளும் அவருக்கு அஞ்சலி புரிந்தன.

’ஓம்’ என்று கூறி ஆசீர்வாதம் செய்தார். “பால ஸந்நியாசி, கபட ஸந்நியாசி, அர்ஜுன ஸந்நியாசி, உன் பக்கம் சீட்டு விழுந்தது” என்றார். மீனா பிழைத்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டேன்.

“முற்றிலும் சௌக்கியமாய் விட்டதா?” என்று கேட்டேன்.

“பூரணமாக சௌக்கியமாய் விட்டது. இன்னும் ஓரைம்பது வருஷத்திற்குச் சமுத்திரத்திலே தள்ளினாலும் அவளுக்கு எவ்விதமான தீங்கும் வரமாட்டாது” என்றார்.

அப்படியானால் நான் போகிறென். அவள் இறந்து போகப் போகிறாள் என்ற எண்ணத்திலேதான் என் விரதத்தைக்கூட மறந்து, அவளைப் பார்ப்பதற்காகப் பறந்தோடி வந்தேன். இனி, அவளைப் பார்த்து அவளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. நான் போய் வருகிறென்” என்று சொன்னேன்.

அசுவினி பாபு கடகடவென்று சிரித்து விட்டு,பக்கத்திலிருந்த சேவகனை நோக்கி, “இவருக்குக் கொஞ்சம் பால் கொணர்ந்து கொடு” என்று ஏவினார். அவன் முகம் கழுவ நீரும் அருந்துவதற்குப் பாலும் கொணர்ந்து கொடுத்தான். அந்தப் பாலை உட்கொண்டவுடனே, திருக்குற்றாலத்து அருவியில் ஸ்நானம் செய்து முடிந்ததுபோல, எனது உடலிலிருந்து அயர்வெல்லாம் நீங்கிப் போய் மிகுந்த தெளிவும் சௌக்கியமும் அமைந்திருக்கக் கண்டேன்.

“இப்பொழுது என்ன சொல்லுகிறாய்? புறப்பட்டுப் போகிறாயா?” என்று அசுவினி பாபு புன்னகையுடன் கேட்டார்.

“அவளை ஒரு முறை பார்த்துவிட்டு அவளிடம் விடை பெற்றுக் கொண்டு செல்கிறேன்” என்றேன்.

திடீரென்று அசுவினி பாபுவின் முகத்தில் இருந்த புன்னகை மாறி சிரத்தா ரூபம் தோன்றியது. அப்பால் என்னிடம், “மகனே, நீ மீனாம்பாளை மணஞ் செய்து கொள்வாய். நீங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்து, முற்காலத்தில் ரிஷியும் ரிஷிபத்தினியுமாக வேத யக்ஞம் செய்தது போல, உங்கள் வாழ்நாள் முழுதும் மாதாவின் ப்ரீத்யர்த்தமாக ஜீவயக்ஞம் புரியக் கடவீர்கள்” என்றார்.

”காளிதேவியின் கட்டளை என்னாகிறது?” என்று கேட்டேன். இந்த ஜன்மத்தில் நீ கோவிந்தராஜனை மணஞ் செய்து கொள்ளலாகாது என்று காளீ தேவி மீனாளுக்குக் கூறி அவளை விஷம் தின்னும்படியாகக் கட்டளையிட்ட செய்தியை அவருக்கு நினைப்புறுத்தினேன்.

அதற்கு அவர், ‘அந்த செய்தியையெல்லாம் நான் அறிவேன். மஹாஸக்தியின் கட்டளையை மீனாம்பாள் நன்கு தெரிந்து கொள்ளாமல் உனக்குக் கடிதம் எழுதிவிட்டாள். மீனாம்பாளுடைய ஜன்மம் மாறுபட வேண்டுமென்று அம்மை சொல்லியதன் பொருள் வேறு. அவள் பச்சிலை தின்னும்படி கட்டளையிட்டது மீனாம்பாளுக்கு ஜ்வரமுண்டாய் தந்தை எண்ணிய விவாகம் தடைப்படும் பொருட்டாகவே. அதற்கு முன்பு அவளுடைய ஜன்மம் வேறு. மாதா தெளிவாகத்தான் சொல்லினாள். ஆனால், மீனாம்பாள் தனக்கு வேண்டாத ஒருவனுடன் விவாகம் நடக்கப் போகிறது என்ற தாபத்தால் படபடப்புண்டாகி உனக்கு ஏதெல்லாமோ எழுதி விட்டாள். நீயும் அவசரப்பட்டு, காஷாயம் தரித்துக் கொண்டு விட்டாய். உனக்கு ஸன்னியாஸம் குருவினால் கொடுக்கப்படவில்லை. ஆயினும் இதுவெல்லாம் உங்களிருவருடைய நலத்தின் பொருட்டாகவே ஏற்பட்டது. உங்களிருவருக்கும், பரிபூரணமான ஹிருதய சுத்தி உண்டாவதற்கு இப்பிரிவு அவசியமாயிருந்தது. இப்போது நான் போகிறேன்.இன்று மாலை நான்கு மணிக்கு பூஞ்சோலையிலுள்ள லதா மண்டபத்தில் மீனாம்பாள் இருப்பாள். உன் வரவிற்குக் காத்திருப்பாள்” என்று சொல்லிப் போய் விட்டார்.

மாலைப் பொழுதாயிற்று. நான் ஸன்யாசி வேஷத்தை மாற்றி, எனது தகுதிக்கு உரிய ஆடை தரித்துக் கொண்டிருந்தேன். பூஞ்சோலையிலே லதா மண்டபத்தில் தனியாக நானும் எனது உயிர், ஸ்த்ரீ ரூபங் கொண்டு பக்கத்தில் வந்து வீற்றிருப்பது போலத் தோன்றியவளுமாக இருந்தோம். நான்கு இதழ்கள் கூடின. இரண்டு ஜீவன்கள் மாதாவின் ஸேவைக்காக லயப்பட்டன. பிரகிருதி வடிவமாகத் தோன்றிய மாதாவின் முகத்திலே புன்னகை காணப்பட்டது.

வந்தே மாதரம்

*மந்த்ராஜியம்மாள் என்பது மதராஸ் பிரதேசத்து ஸ்த்ரீ என்று பொருள்படும். ’மதராஸ்’ என்பதற்கு வடநாட்டார் ’மந்த்ராஜ்’ என்பார்கள்.

நன்றி: சொல்வனம்

Dec 11, 2012

இரு கடிதங்கள் - மகாகவி பாரதியார்

தம்பி விசுவநாதனுக்கு கடிதம்

புதுச்சேரி, 3 ஆகஸ்டு, 1918

ஸ்ரீமான் விசுவநாதனுக்குப் பராசக்தி துணை செய்க. உன்னுடைய அன்பு மிகுந்த கடிதம் கிடைத்தது. அதைப் படித்து அதினின்றும் உன்னுடைய புத்திப் பயிற்சியின் உயர்வைக் கண்டு சந்தோஷமடைந்தேன். தந்தைக் கப்பால் நீ என்னை முக்கிய சகாயமாகக் கருதுவது முறையே. இதுவரை உன்னை நேரே பரிபாலனம் செய்வதற்குரிய இடம் பொருளேவல் எனக்கு தெய்வ சங்கற்பத்தால் கிடையாமல் போய்விட்டது. அதையெண்ணி இப்போது வருந்துவதிலே பயனில்லை. எனினும் இயன்றவரை விரைவாகவே எனக்கு நற்காலமும் அதனாimages (1)ல் உன் போன்றோருக்குக் கடமைகள் செய்யும் திறமும் நிச்சயமாக வரும். உன் கடிதத்தில் கண்டபடி நீ இங்கே என்னைப்  பார்க்க வரும் காலத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் வா. தங்கை ஸ்ரீ லக்ஷ்மி சில வருஷங்களுக்கு முன் எட்டயபுரத்துக்கு வந்திருந்த காலத்தில் என்னைக் கொஞ்சம் பணம் அனுப்பச் சொல்லியிருந்தாள். அப்போது என் கையில் பணம் இல்லாதபடியால் அனுப்பவில்லை. அது முதல் என் மீது கோபம் கொண்டு எனக்கு ஒரு வார்த்தைகூட எழுதாமலிருக்கிறாள். என்னை மன்னிக்கும்படிக்கும் எனக்கு அடிக்கடி காயிதங்களெழுதும்படிக்கும் நீ அவளை அழுத்தமான பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகிறேன். தம்பியுள்ளோன் படைக்கஞ்சான் என்ற வாக்கியத்தின் உண்மையை உன் விஷயத்தில் நம்பியிருக்கலாமென்றே நம்புகிறேன்.


எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்தபோதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன். கொச்சைத் தமிழ்கூட எழுத முடியாவிட்டால் ஸம்ஸ்கிர்தத்திலே காயிதம் எழுது. திருப்பயணம் வி.ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் 'விநாயகர் ஸ்தோத்திரம்' (தமிழ் நூல்) அச்சிட வாங்கிக்கொண்டு போனார். இன்னும் அச்சிட்டனுப்பவில்லை. மேலும் அவர் 'பாஞ்சாலி சபதம்' அச்சிடும் சம்பந்தமாகப் பணம் சேகரித்துப் பட்டணத்துக் கனுப்புவதாகச் சொன்னார். அங்ஙனம் அனுப்ப முடியுமானால் உடனே புதுச்சேரியில் எனது விலாசத்துக்கனுப்பும்படி ஏற்பாடு செய்.


அது மாத்திரமேயன்றி, 'விநாயர் ஸ்தோத்திரம்' வேலையை விரைவில் முடித்துப் புஸ்தகங்களனுப்பும்படி சொல்லு. உடம்பையெண்ணிப் பயப்படாதே. அடிக்கடி பால் குடி. ஜலத்தை எப்போதும் காய்ச்சிக் குடி. வேறு எந்த விஷயத்துக்கும் கவலைப்படாதே. பொறுமையாலும் பயமின்மையாலும் இவ்வுலகத்தில் மனிதன் தேவத்தன்மை அடைகிறான். அந்நிலைமை உனக்கு மஹாசக்தி அருள் செய்க.


உனதன்புள்ள ஸஹோதரன்,
சி.சுப்பிரமணிய பாரதி

மனைவிக்குக் கடிதம்

ஓம்

ஸ்ரீ காசி
ஹநுமந்த கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ என் காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை. விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன். நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்
சி.சுப்பிரமணிய பாரதி

 

நன்றி:  மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தளம்

Sep 11, 2012

புதுப் பேய்-மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

13 மே 1916                                            நள சித்திரை 21

வேதபுரம் எலிக்குஞ்சு செட்டியார் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது. பெயர் காந்திமதி. பெண் நல்ல அழகு. சிவப்பு நிறம். முகத்தில் ஒரு மாசு மறு இல்லாமல் நிலா வீசும். மென்மையான பூங்கொடியைப் போல் இருப்பாள். இரண்டு மூன்று பாஷைகள் தெரியும்.

நேர்த்தியாகப் பாடுவாள். வீணை வாசிப்பாள். தினந்தோறும் வர்த்தமானப் பத்திரிகைகள் படித்து உலகத்தில் நடைபெறும் செய்திகளை வெகு நுட்பமாகத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வாள். யாரேனும் ஒரு மந்திரி, அல்லது ஒரு பெரிய ராஜ்ய தந்திரி, அல்லது பெரிய ஞானாசார்யர், bharathi1a தனத்தலைவர் ஆகிய இவர்கள் பேசும் வார்த்தைகளுக்குள்ளே தொளைத்துப் பார்த்துக் கால் மைல் தூரம் அர்த்தம் கண்டுபிடிப்பாள். உபந்நியாசம் செய்வோர் சொல்லக் கூடாதென்று மறைத்து வைக்கும் வார்த்தையைக் கூடக் கண்டு பிடித்துச் சொல்லுவாள். பெண் நல்ல புத்திசாலி.

இவளுக்குப் போன மாசம் வரையிலே ஒரு குறையும் கிடையாது. ஸாதாரணமாக இருந்தாள். தீடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை தலை சுற்றி ஆடத் தொடங்கிவிட்டாள்.

‘ஹா’ என்று கத்துவதும், சிரிப்பதும், பிதற்றுவதும் பெரிய அமளியாய் விட்டது. செட்டியார் என்னை வந்து கூப்பிட்டார். நான் பார்க்கப் போனேன். என்னைக் கண்டவுடன் காந்திமதி கடகடவென்று சிரித்தாள். கண்ணைப் பார்த்தால் வெறி பிடித்தவணைப் போலிருந்தது.

“காந்திமதி, உனக்கு என்ன செய்கிறதம்மா?” என்று கேட்டேன். மறுமொழியில்லை. இரண்டு மூன்று தரம் வற்புறுத்திக் கேட்ட பிறகு, “ஹா, காளிதாசனா? வா வா, தூங்குகிறாயா? எழுப்ப வந்தேன், காளிதாசனா? ஓஹோ; கவியெங்கே, என்மேலே பாட்டுப் பாடு நான் புதுப் பேய்… ஆஹா வெனேஜெலோஸ், மடாதிபதி, தென் ஆப்பிரிகா, வீணை, திருச்சினாப்பள்ளி பாட்டுப் பாடு” என்று எதெல்லாமோ சொன்னாள். நான் திகைத்துப் போய்விட்டேன்.

“எப்படியிருந்த புத்தி!” என்று சொல்லி எலிக்குஞ்சு செட்டியார் கண்ணீருதிர்த்தார். “ஏனம்மா? பிதற்றுகிறாயே, உனக்கு உடம்பு என்ன செய்கிறது?” என்று மறுபடியும் கேட்டேன்.

“எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. நான் புதுப்பேய். உங்களுக்கெல்லாம் நோய் பிடித்திருக்கிறது.. நான் அதை நீக்கிவிட வந்தேன். விபூதி கொண்டு வா” என்று காந்திமதி அலறத் தொடங்கினாள். எலிக்குஞ்சு செட்டியார் ஒரு பித்தளைத் தட்டிலே விபூதி கொண்டுவந்து என் கையிலே கொடுத்தார். நான் பெரிய மந்திரவாதி என்று அவருடைய அபிப்பிராயம். ஏதாவது வியாதி சாதாரணமாக நரம்புகளைப் பற்றியதாக இருந்தால் மந்திரம் செய்து நோயாளியின் மனத்தை உறுதியாக்கி வியாதியை விரைவிலே ஒழித்துவிடலாம். பேய்க்கு மந்திரம் செய்யும் வழி எனக்குத் தெரியாது. தவிரவும் எனக்குப் பேய் பிசாசுகளின் நம்பிக்கை கிடையாது.

எதற்கும் ஒரு கை பார்க்கலாமென்று உத்தேசித்து விபூதித் தட்டைக் கையிலே வாங்கிக் கொண்டேன். காந்திமதி படீரென்று பாய்ந்து என் கையிலிருந்த தட்டைப் பிடுங்கிக் கொண்டாள்.

“ஹா, ஹா, ஹா! எனக்கா விபூதி போட வந்தாய்? சும்மா இரு. அப்படியே கண்ணை மூடிக் கொள்ளு. நான் உனக்கு விபூதி போடுகிறேன். எலிக்குஞ்சு, நீயும் வா, அப்படியே உட்காரு, உனக்கும் விபூதி போடுகிறேன். இன்னும் உங்கள் கூட்டத்தையெல்லாம் அழைத்து வா. எல்லாருக்கும் விபூதி போடுகிறேன். தென் அப்பிரிக்கா ரஜூல் முஸ்லிம் சங்கம், மதன்மோஹன் மாளவியா, திருச்சினாப்பள்ளி பண்டார, ‘டாக்டர்’ கிழநரி, சென்னப்பட்டணம், கொண்டுவா, கொண்டுவா. எல்லோருக்கும் நான் விபூதி போடுகிறேன்” என்றாள்.

எலிக்குஞ்சு செட்டியார் விம்மி விம்மி அழத் தொடங்கினார்.

“அழாதே, கோழையே, போ, வெளியே போ” என்றாள் காந்திமதி.

எலிக்குஞ்சு செட்டியார் வெளியே போய்விட்டார். அவராலே துக்கம் பொறுக்க முடியவில்லை.

“பேய், பிசாசுகளே கிடையாது. எல்லாம் பொய்” என்று சொன்னேன். காந்திமதி சிரித்தாள்.

“பேயில்லை” என்று மறுபடி சொன்னேன்.

“புதுப் பேய்” என்றாள்.

யான்: என்ன வேண்டும்?

அவள்: விளக்கு.

யான்: என்ன விளக்கு?

அவள்: நெய் விளக்கு.

யான்: என்ன நெய்?

அவள்: புலி நெய்.

யான்: எங்கே கிடைக்கும்?

அவள்: காட்டிலே.

யான்: எந்தக் காட்டிலே?

அவள்: பொதியமலைக் காட்டிலே.

எனக்குக் கோபம் வந்துவிட்டது.

“காந்திமதி, உனக்குப் புத்தி சரியில்லை. நான் மந்திரத்தால் உன்னைக் குணப்படுத்தப் போகிறேன். கொஞ்ச நேரம் பேசாமலிரு; பேசினால் இந்தப் பிரம்பாலே அடிப்பேன்” என்று பயமுறுத்தினேன். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கி முறித்தெறிந்து விட்டாள்.

பிறகு மறுபடியும் அலறத் தொடங்கினாள்:-

“நெய், நெய், நெய் கொண்டுவா. நட, நட. தூங்காதே, எழுந்திரு. நான் புதுப் பேய். எல்லோரும் நெய் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை மிகவும் கஷ்டப்படுத்துவேன்” என்றாள்.

“காந்திமதி, நீ சொல்லும் வார்த்தை அர்த்தமாகவில்லையே” என்றேன். “அர்த்தமா தெரியவில்லை? காளிதாசன், காளிதாசன்! கதை கதை” என்று சொல்லி எதெல்லாமோ பிதற்றிய பின்பு ‘ஹா’ என்று மற்றொரு முறை அலறி, அப்படியே மூர்ச்சை போட்டு விழுந்தாள். நான் பெருமூச்சுடன் வெளியேறினேன். சுமார் அரை மணி நேரம் கழிந்த பின்பு, செட்டியார் மறுபடி வந்து கூப்பிட்டு, “காந்திமதிக்குத் தெளிந்துவிட்டது” என்றார். பின்பு போய்க் கேட்டபோது, பேயாடிய விஷயம் ஞாபகமில்லையென்று சொல்லுகிறாள். இப்படி இரண்டு மூன்று வெள்ளிக் கிழமையாய் நடந்து வருகிறது.

இதனுடைய ஸூக்ஷ்மம் தெரியவில்லை. எனக்குப் பேய் பிசாசில் நம்பிக்கை கிடையாது.

****

Mar 29, 2012

ஜப்பானியக் கவிதை-மகாகவி பாரதியார்

18 அக்டோபர் 1916  நள ஐப்பசி 5

ஸமீபத்தில் “மார்டன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில்உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒருலிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால்:- இங்கிலாந்து அமெரிக்காஎன்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன?

மேற்குக் கவிதையில் சொல்மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல்சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும்,சோம்bhar56 பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும், பல சொற்களைச் சேர்த்து வெறுமே, பாட்டை அதுபோகிற வழியெல்லாம் வளர்த்துக்கொண்டே போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்அதிகமிருக்கிறது. தம்முடைய மனத்திலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர்கதைகளெழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.

ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பதுகிடையாது. கூடை கூடையாகpப பாட்டெழுதி அச்சிடவேண்டும் என்ற ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக்கொண்டிருப்பவன் புலவனாகமாட்டான். கவி்தை யெழுதுபவன் கவியன்று; கவிதையே வாழ்க்கையாகஉடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று.வானத்து மீன், தனி்மை, மோனம், பலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட்டுப் போய், இயற்கையுடனேஒன்றாகி வாழ்பவனே கவி.

~

ஜப்பானிய பாஷையில் பதினேழசை கொண்ட ‘ஹொக்கு’ என்ற பாட்டு ஒருதனிக் காவியமாக நி்ற்கும். முப்பத்தோரசையுள்ள ‘உத்தா’ (உக்தம்) என்பதும் அங்ஙனமே. அயோநேநோகுச்சி தமது கருத்தை விளக்கும் பொருட்டுச் சில திருஷ்டாந்தங்கள் காட்டியிருக்கிறார். அமெரிக்காவில்மிஸ் ரீஸ் (Miss Lizette Woolworth Reese) என்பதோர் கவிராணி யிருக்கிறார். வேண்டாதவற்றைத்தள்ளிவிடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற பெண் புலவர் பெயர் வாங்கியிருக்கிறார். அநாவசியமான பதச் சேர்க்கை, அநாவசியமான கருத்து –விளக்கம் என்ற இரண்டுமில்லாமல் முத்துப்போலே பதங்கள் கோக்கும் நல்ல தொழிலாகிய, அக்கவிராணிஇங்கிலீ்ஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள் சிலவற்றை நோகுச்சி எடுத்துக் காட்டுகிறார்.

மழை

(மிஸ் ரீஸ் எழுதியதன் மொழிபெயர்ப்பு மாதிரியடிகள்)

ஓ! வெண்மையுடையது; மழை இளையது. கூரை மேலே சொட்டுச் சொட்டென்றுவிழுகிறது; வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் ஓடி வருகின்றன. பூண்டுகளின் மணம். பழமையின்நினைவு. இவை யெல்லாம் புல்லாந்தரையிலே குணந் தெரிகிறது. உடைந்த கண்ணாடித் துண்டு போலே.(1)

சிறிய வெளிக்கதவுகள் புடைக்கிறது பார். அதுவரை செவந்த கொடிப்பூண்டுகள் நேரே ஓடிச் செல்லுகின்றன. (2(

ஓ! வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் வந்து நுழைகின்றன. கற்பூரச்செடியின் மணம். பழைய மகிழ்ச்சி பழைய துன்பம்; இளைய வெண்மழையிலே கிடைத்தன. (3)

மேற்கூரிய பாட்டை எடுத்துக்காட்டிவிட்ட பிறகு நோகுச்சி சொல்லுகிறார்:-

“வெண்மையுடையது; மழை இளையது” என்ற முதலடியில் வியப்பில்லை. அதிஸாமான்யமானவார்த்தை. கடைசி விருத்தம் வயிரமபோலிருக்கிறது. அதை மாத்திரம் தனிக் கவிதையாக வைத்துக்கொண்டுமற்றதையெல்லாம் தள்ளிவிடலாம். ஜப்பானியப் புலவன் அப்படியே செய்திருப்பான். சிறிய பாட்டுப்போதும்.சொற்கள், சொற்கள், சொற்கள் – வெறும் சொற்களைவளர்த்துக் கொண்டு போய் என்ன பயன்?

ஜப்பானிலே பதினெட்டாம் நூற்றாண்டில் “பூஸோன் யோஸாஹோ” என்ற ஜப்பானியக்கவிராயர் ஒரு ‘ஹொக்கு’ (பதினெழசைப்பாட்டு) பாடியிருக்கிறார். அதன் மொழிப்பெயர்ப்பு:-

“பருவமழையின் புழையொலி கேட்பீர், இங்கென் கிழச் செவிகளே.” இந்தஒரு வசனம் ஒரு தனிக் காவியம். பாட்டே இவ்வளவு தான்.

மேற்படி ஹொக்க்ப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்பமனனம் செய்யவேண்டும். படிப்பவனுடைய அனுபவத்திற்கு தக்கபடி அதிலிருந்து நூறு வகையானமறைபொருள் தோன்றும். பல பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்ந கவிதையன்று.கேட்பவனுள்ளத்திலே கவிதை யுணர்வை எழுப்பி விடுவது சிறந்த கவிதை.

~

மற்றுமொரு நேர்த்தியான “ஹொக்குப்” பாட்டு. வாஷோ ம்த்ஸுவோ(Basho Matsuso) என்றொரு ஜப்பானியக் கவியிருந்தார். இவர் வறுமையே விரதமாகப் பூண்டிருந்தாராம்.ஒரு சீடன் இவரிடம் கல்வி கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே இவரிடம் மூன்றுரியே (அதாவது ஏறக்குறைய முப்பது வராகன்) காணிக்கையாகக் கொடுத்தான். இவர் ஒருநாளுமில்லாதபடிபுதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தமக்குத் தொல்லையாதலால் வேண்டியதில்லைஎன்று திரும்பக் கொடுத்துவிட்டாராம்.

இவருக்கு காகா (Kaga) என்ற ஊரில் ஹொகூஷி என்றொரு மாணாக்கர் இருந்தார்.இந்த ஹொகூஷியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது.அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர் தமது குருவாகிய “வாஷோ-மத்ஸுவோ” என்பவருக்குப் பின்வரும்பாட்டில் எழுதியனுப்பினார்.

“தீப்பட்டெரிந்தது: வீழு மலரின் – அமைதியென்னே!”

மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும்போது எத்தனை அமைதியுடனிருக்கிறதோஅத்தனை அமைதியுடன் மனிதனுக்கு வருந்துன்பங்களை நோக்குகிறான். .‘வீடு தீப்பட்டெரிந்தது.ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லை’ என்ற விஷயத்தை ஹொகூஷி இந்தப் பாட்டின் வழியாகத் தெரிவித்தார்.

~

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” ஜப்பானியக் கவிதையின் விஷேசத்தன்மையென்று நோகுச்சிப் புலவர் சொல்வதுடன், ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும்சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்.” கிழக்குத் திசையின் கவிதையிலேயே இவ்வி்தமான ரஸம் அதிகந்தான்.தமிழ் நாட்டிலே முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும், ஒரேயடியாய்கவிதை சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் “ஹொக்குப்”பாட்டன்று. நோகுச்சி சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள்காண்பதறிவு.”

நன்றி: http://bhaarathi.blogspot.in

Dec 11, 2011

"என் கணவர்" - செல்லம்மாள் பாரதி

 

 

மகாகவி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).

bharathi1a

திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.

எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எபோதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார். பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.

images (1)

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...

விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும்

அவர் கவிதை.காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை  எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.

பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

 

வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்வாழிய

பாரத மணித்திரு நாடு

நன்றி: பாரதியார் சரித்திரம்

Sep 11, 2011

வெறுங் காட்சிப் பிழைதானோ?

images (1)

மகாகவி சுப்பிரமணிய பாரதி

(டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).

நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?


வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?


கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?


காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.

bharathiar - Bharathi yaar

Oct 27, 2010

காக்காய் பார்லிமெண்ட்-மகாகவி பாரதியார்

நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார். “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்” என்று சொன்னார். “சரி, கற்றுக் கொடும்” என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார்.

காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.

‘கா’ என்றால் ‘சோறு வேண்டும்’ என்றர்த்தம். ‘கக்கா’ என்றால் ‘என்னுடைய சோbharathi5ற்றில் நீ பங்குக்கு வராதே’ என்றர்த்தம். ‘காக்கா’ என்றால் ‘எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே’ என்றர்த்தம். இது ஆண்  காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. ‘காஹகா’ என்றால் ‘சண்டை போடுவோம்’ என்றர்த்தம். ‘ஹாகா’ என்றால் ‘உதைப்பேன்’ என்றர்த்தம். இந்தப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுதும் காக்கை பாஷையிலே, க, ஹா, க்ஹ-முதலிய ஏழெட்டு அக்ஷரங்களைப் பல வேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுதும் மற்றவர்களுக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை. பிறருக்குச் சொல்லவும் கூடாது. அந்த நாராயண பரம ஹம்ஸருக்குத் தமிழ் தெரியாது. ஆகையால் அவர் பத்திரிகைகளை வாசிக்க மாட்டார். இல்லாவிட்டால் நான் மேற்படி நாலைந்து வார்த்தைகள் திருஷ்டாந்தத்துக்காக எழுதினதினாலேயே அவருக்கு மிகுந்த கோபமுண்டாய் விடும். ஒரு வார்த்தை கூட மற்றவர்களுக்குச் சொல்லக் கூடாதென்று என்னிடம் வற்புறுத்திச் சொன்னார். “போனால் போகட்டும். ஐயோ, பாவம்” என்று நாலு வார்த்தை காட்டி வைத்தேன்.

இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீக்ஷை செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வதுதான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப்பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய்ப் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு. அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது: “மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாவுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால்படுகிறதாம். ஜார் சக்கரவர்த்தி கக்ஷி ஒன்று. அவர் யோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கக்ஷி. இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷி. மேற்படி மூன்று கக்ஷியாரும் திருடரென்று நாலாவது கக்ஷி. இந்த நாலு கக்ஷியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிறிஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கக்ஷி. இப்படியே நூற்றிருபது கக்ஷிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம்.

“இந்த 120 கக்ஷியார் பரஸ்பரம் செய்யும் ஹிம்ஸை பொறுக்காமல் `இந்தியாவுக்குப் போவோம். அங்கேதான் சண்டையில்லாத இடம், இமயமலைப் பொந்தில் வசிப்போம்’’ என்று வந்ததாம். அது சும்மா பட்டணத்துக்கு வந்து அனிபெஸன்ட் அம்மாளுடைய தியஸாபிகல் சங்கத்துத் தோட்டத்தில் சில காலம் வசிக்க வந்தது. அந்தத் தோட்டக் காற்று சமாதானமும், வேதாந்த வாசனையுமுடையதாதலால் அங்கே போய்ச் சிலகாலம் வசித்தால், ருஷியாவில் மனுஷ்யர் பரஸ்பரம் கொலை பண்ணும் பாவத்தைப் பார்த்த தோஷம் நீங்கிவிடுமென்று மேற்படி கொக்கு இமயமலையிலே கேள்விப்பட்டதாம்.

“கேட்டீர்களா, காகங்களே, அந்த ருக்ஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளமாம். இப்போது நம்முடைய தேசத்திலேகூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பெரிய பெரிய ஆஸ்தி வைத்திருக்கிறார்கள்.

“நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீரை வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தியஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கேட்க வருகிறீர்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஒரு இழவும் கிடையாது. தண்டத்துக்கு உழைக்கிறேன். எல்லாரையும் போலே நானும் வயிற்றுக்காக நாள் முழுவதும் ஓடி உழன்று பாடுபட்டுத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. அடே காகங்கள், கேளீர்:

“ஒவ்வொரு காக்கைக்கும் நாள்தோறும் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். அதை வைத்துக் கொண்டு நானும் என் பெண்டாட்டியும், என் குழந்தைகளும், என் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என் வைப்பாட்டியார் ஏழு பேர், அவர்களுடைய குடும்பத்தார் இத்தனை பேரும் அரை வயிறு ஆகாரம் கஷ்டமில்லாமல் நடத்துவோம். இப்போது என் குடும்பத்துக் காக்கைகளுக்கும் மற்றக் காகங்களுக்கும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை. ஏழெட்டு நாளுக்கு முந்தி ஒரு வீட்டுக் கொல்லையிலே கிடந்தது. அது சோறில்லை; கறியில்லை; எலும்பில்லை; ஒன்றுமில்லை; அசுத்த வஸ்து கிடந்தது. அதைத் தின்னப் போனேன். அங்கே ஒரு கிழவன் வந்து கல்லை எறிந்தான். என் மேலே இந்த வலச்சிறகிலே காயம். இது சரிப்படாது. இனிமேல் எனக்குப் பிரஜைகள் ஆறில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும்” என்று சொல்லிற்று.

இதைக் கேட்டவுடனே ஒரு கிழக் காகம் சொல்லுகிறது:

“மகாராஜா, தாங்கள் இதுவரையில்லாத புதிய வழக்கம் ஏற்படுத்துவது நியாயமில்லை. இருந்தாலும் அவசரத்தை முன்னிட்டுச் சொல்லுகிறீர்கள்! அதற்கு நாங்கள் எதிர்த்துப் பேசுவது நியாயமில்லை. ஆனால் தங்களுக்குள்ள அவசரத்தைப் போலவே என் போன்ற மந்திரிமாருக்கும் அவசரமுண்டென்பதைத் தாங்கள் மறந்துவிட்டதை நினைக்க எனக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. தங்களுக்கு ஒவ்வொரு காக்கையும் தன் வரும்படியில் பன்னிரண்டில் ஒரு பகுதி கட்ட வேண்டுமென்றும், அதில் மூன்றில் ஒரு பாகம் தாங்கள் மந்திரிமார் செலவுக்குக் கொடுக்கவேண்டுமென்றும், ஏற்படுத்துதல் நியாயமென்று என் புத்தியில் படுகிறது” என்று சொல்லிற்று.

அப்பொழுது ஒரு அண்டங் காக்கை எழுந்து: “கக்கஹா, கக்கஹா, நீங்கள் இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்கள். உங்களை உதைப்பேன்” என்றது. வேறொரு காகம் எழுந்து சமாதானப்படுத்திற்று. இதற்குள் மற்றொரு காகம் என்னைச் சுட்டிக்காட்டி: “அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம்” என்றது. உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து போய்விட்டன.

இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை.

Sep 11, 2010

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921).

bharathi

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?

Aug 22, 2010

ஒளியும் இருளும்-மகாகவி பாரதியார்

ஒளியும் இருளும்

வான மெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி; barathhiyar_23
தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே
தரையின் மீதுந் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள்மீதும் பரிதியின் சோதி;
மான வன்ற னுளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!
சோதி யென்னுங் கரையற்ற வெள்ளம்,
தோன்றி யெங்குந் திரைகொண்டு பாய,
சோதி யென்னும் பெருங்கடல், சோதிச்
சூறை, மாசறு சோதி யனந்தம்,
சோதி, யென்னு நிறைவிஃ துலகைச்
சூழ்ந்து நிற்ப, ஒருதனி நெஞ்சம்
சோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே
தேம லர்க்கொ ரமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,
காம முற்று நிலத்தோடு நீருங்
காற்று நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கிநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றுந் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சந் தியங்குவ தென்னே!
நீர்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தொழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரங் கற்றுந்
தெவிட்டொ ணாதநல் லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்கும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுத லென்னே!

Apr 1, 2010

பாரதியின் இளம் நண்பர்கள்

அம்ஷன் குமார்

barathiyar ‘சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் அனைவரையும் எளிதில் சென்றடைவதாக இருக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் ந. முருகானந்தமும் நானும் முடிவு செய்தோம். ஒரு மணி நேரப் படமாக அது திட்டமிட்டபொழுது அதற்கான காட்சிகளைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பாரதி பற்றி நூல்கள் எழுதத் தேவையான தரவுகள் நிறைய உள்ளன. அவரது வாழ்வைக் காட்சிப்படுத்தப் போதுமான ஆவணங்கள் இல்லை. ரா. அ. பத்மநாபனின் ‘சித்திர பாரதி’யில் உள்ள புகைப்படங்கள் அவற்றிற்கு ஒரு தோற்றுவாயைத் தந்தன. எனவே இப்படத்தை எடுக்கும்பொழுதே எதிர்காலத்திற்கும் தேவையான காட்சி ஆவணங்களைத் தயாரிப்பது அவசியமென்று உணர்ந்தோம். அதன்படி பாரதியின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வீடுகள், இடங்கள், கல்வி நிலையங்கள், படித்த, பணியாற்றிய பத்திரிகைகள் ஆகியனவெல்லாம் படம்பிடிக்கப்பட்டன. பாரதியை ஏதாவது காரணம் காட்டிக் கைதுசெய்யத் துடித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். தடைசெய்யப்பட்ட ‘காலிக் அமெரிக்கன்’ என்னும் அமெரிக்காவிலிருந்து வெளியான அயர்லாந்து விடுதலை ஆதரவுப் பத்திரிகையின் சந்தாதாரர் என்னும் குற்றச்சாட்டினைச் சுமத்தி அவர்மீது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. படத்தில் இடம்பெற வேண்டி அப்பத்திரிகை அமெரிக்காவிலிருந்து மிகுந்த பிரையாசைக்கிடையில் வரவழைக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டது. பல தடயங்கள் அழிந்துபோயிருந்தன. எஞ்சிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் சேர்க்க வேண்டிப் புதுவை, சென்னை, எட்டயபுரம், கடையம், மதுரை, திருநெல்வேலி, கானாடுகாத்தான், காரைக்குடி, காசி ஆகிய இடங்களிலெல்லாம் படப்பிடிப்பை நடத்தினேன்.

barathi-back-copy அந்த இடங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள வயது முதிர்ந்தவர்களையெல்லாம் பார்த்தபொழுது அவர்கள் யாராவது பாரதியைச் சந்தித்திருக்க மாட்டார்களா அவர்களது அனுபவங்களைச் சொல்ல வைத்துப் படம்பிடிக்கமாட்டோமா என்னும் ஏக்கம் எனக்குள் தலைதூக்கியது. பாரதி இறந்தது 1921இல், நான் 1998இல் படம் பிடிக்கிறேன். பாரதியை நேருக்குநேர் சந்தித்த சமயத்தில் அவர்களுக்குக் குறைந்தது பத்து வயதாவது இருந்திருக்கும் பட்சத்தில் தற்சமயம் அவர்கள் 88 வயதுக்காரர்களாக இருக்க வேண்டும். அத்தகைய அபூர்வ மனிதர்கள் உயிருடன் இருப்பார்களோ இல்லையோ என்ற எண்ணத்துடன் நான் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தேன். ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தால் என்னால் பாரதியுடன் பழகிய நிறையப் பேர்களைச் சந்தித்திருக்க முடியும். இதற்கு முன்னால் தமிழ்நாடு பிலிம்ஸ் டிவிஷன் 16 எம்.எம்.மில் எடுத்திருந்த பாரதி டாக்குமெண்டரி ஒன்றில் அவருடைய இளைய சகோதரர் சி. விசுவ நாதனின் பேட்டியைப் பார்க்க முடிந்தது. அவரைத் தவிர பாரதியுடன் பழகிய வேறு எவருடைய நேர் காணலும் படம் எடுக்கப்படவில்லை. இப்பொழுது அவரும் உயிருடன் இல்லை.

சில இடங்களில் பாரதியுடன் நன்கு பழகியவர்கள் இருப்பதாகஅம்ஷன் குமார் எனக்குத் தகவல்கள் கிடைக்கும். அவர்களைத் தேடிச் சென்று சந்தித்த உடனேயே அவர்கள் பிறந்த ஆண்டைத் தெரிந்துகொள்வேன். எந்தெந்த ஊரில் பாரதி எவ்வளவு காலம் தங்கியிருந்தார் என்பதுடன் அவர்கள் சொல்லும் வருடத்தையும் ஒப்பிட்டு ஒரு  மனக்கணக்குப் போட்டுவிடுவேன். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக அவர்கள் தாங்களாகவே பாரதியைச் சந்தித்தது கிடையாது என்று கூறிவிடுவார்கள். பாரதி பற்றித் தங்களுக்கு அங்கு வாழ்ந்த தங்களைவிட மூத்தவர்கள் கூறிய தகவல்கள் மட்டுமே தெரியும் என்று கூறிவிடுவார்கள். ஓரிருவர் பொய் சொல்லி மாட்டிக்கொண்டதும் உண்டு. அவர்கள் பாரதியை நேரடியாகத் தங்களுக்குத் தெரியும் என்று கூறிச் சுற்று வட்டாரத்தில் அதன் காரணமாகச் செல்வாக்கை அனுபவித்தவர்கள்.

கடையத்தில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு குழுவினருடன் வேனில் செல்ல முற்பட்டபொழுது ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி என்னை அணுகினார். பாரதியை நேரில் அறிந்தவர்கள் அங்கு யாரும் இருக்கிறார்களா என்று நான் விசாரித்துக்கொண்டிருந்ததை அவர் கேட்டதாகவும் தொண்ணூறைக் கடந்த ஒரு முதியவர் இன்னமும் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். அந்த முதியவரின் பெயர் கல்யாணசுந்தரம் என்றும் அவர் தற்சமயம் விக்கிரமசிங்கபுரத்தில் தன் மகள் வீட்டில் இருப்பதாகவும் கூறினார்.

kalyanasundaram எதற்கும் அங்கு சென்று பார்த்துவிடுவோமே என்று எனக்குத் தோன்றியது. மாலையில் விக்கிரமசிங்கபுரத்தை சென்றடைந்தபொழுது லேசாக மழை தூறி நின்றிருந்தது. அவர் தங்கியிருந்த வீட்டைக் கண்டுபிடிப்பது ஒருவர் வழிகாட்டியபின் சுலபமாக இருந்தது. கைவைத்த பனியன் போட்ட சிவந்த நிறமுடைய க. பி. கல்யாணசுந்தரம் ஈஸிசேரில் அமர்ந்து ‘கல்கி’ படித்துக்கொண்டிருந்தார். தலையில் போதுமான நரைமுடி. வயதைக் குறைத்து மதிப்பிடலாம் என்பது போன்ற உடல் தோற்றம். ஒரு பருவத்திற்குமேல் உடலின் மூப்படையும் வேகம் குறைத்துவிடுகிறது. என்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்துகொண்டேன். வெற்றிலை பாக்கைக் குதப்பிக் கொண்டிருந்தவரிடம் ‘உங்களுக்குப் பாரதியைத் தெரியுமா?’ என்று கேட்டவுடன் அவர் முகத்தில் அப்படியொரு மலர்ச்சியைக் காட்டினார். ‘ஓ! தெரியுமே! என்றவர் கடகடவென்று தனது நினைவுகளை வெளிக்கொணர்ந்தார். அவர் பேச ஆரம்பித்த முப்பது விநாடிகளுக்குள் அவர் பாரதியுடன் உண்மையிலேயே பழகியிருக்கிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. கேமராவையும் உபகரணங்களையும் வேனிலிருந்து இறக்குமாறு எனது உதவியாளரிடம் கூறிவிட்டு, அவரிடம் வேறு திசையில் சம்பாஷணையைத் தொடங்கினேன்.

திரைப்படத்திற்காகப் பேட்டி எடுப்பது பத்திரிகைக்காகப் பேட்டி எடுப்பதிலிருந்து வேறுபட்டது. பத்திரிகைப் பேட்டியில் முகபாவங்கள், சைகைகள், குரலிறக்கங்கள் முக்கியமல்ல. வார்த்தைகள் கிடைத்தால் போதும். படத்திற்குத் தரும் பேட்டியில் பேட்டி தருபவரின் உடல்மொழி பதிவுசெய்யப்பட வேண்டும். சிலர் பேட்டி காணச் சென்றவுடன் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு சிரிப்பார்கள், ஆத்திரப்படுவார்கள், அழுவார்கள். அவர்கள் திரும்பவும் கேமராவின் முன் அவற்றைச் சொல்லும்பொழுது அந்த உணர்வுகள் வெளிவராது. பழகிப்போன ஓர் உணர்வுடன் அவற்றைப் பேசுவார்கள். எங்கே என்னிடம் பேசும்பொழுது தனது உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்துவிடுவாரோ எனப் பயந்தேன். படத்திற்காகப் பேசும்பொழுது அவை முதன்முதலாக வெளிவரட்டும் என்பதற்காக அவரிடம் அவர் வாழ்க்கை பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்றிருந்தார். மரபுக் கவிதைகள் எழுதுவதில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. பேட்டி எடுத்தபொழுது அவருக்கு 92 வயது. இடையிடையே பாரதி பற்றி ஞாபகங்கள் கிளர்ந்தெழ அவை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். 1919இல் பாரதியுடன் பழகியிருந்தார்.

கேமரா கொண்டுவரப்பட்டுப் படப்பிடிப்பிற்கு எல்லோரும் தயாராக இருந்தோம். அவர் வீட்டிலுள்ளவர்கள் அவருக்கு வெள்ளை முழுக்கைச் சட்டை அணிவித்து நெற்றியில் குங்குமப் பொட்டை வைத்தனர். என்னுடைய கேள்விகளுக்கு நிதானமாகப் பதில் கூறினர். அவ்வப்போது ஒன்றுக்கு வருகிறது என்று பள்ளிச் சிறுவன்போல் விரலைக்காட்டி அனுமதி கேட்டார்.

நீங்கள் எப்பொழுது பிறந்தீர்கள்? பிறந்ததிலிருந்தே கடையத்தில்தான் வாழ்கிறீர்களா?

நான் 1908 ஜனவரி 16ஆம் தேதி பிறந்தேன். தாயார் வீடு தென்காசி. என் தாத்தா புலியூர் கர்ணம். தைப் பொங்கலிட்ட சமயம் பொங்கல்படி வாங்குவதற்காக மேளதாளம் தப்பட்டைகளுடன் வந்து பொங்கலிட்ட சமயத்தில் நான் பொறந்தேன். நான் பொறந்ததிலிருந்து கடையத்தில்தான் வாழ்கிறேன்.

பாரதியாரைச் சந்திக்கிற சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது? அவருடன் எவ்வாறு பழகினீர்கள்?

எனக்குப் பன்னிரெண்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அப்பொழுதுதான் நான் பாரதியாரைச் சந்திச்சேன். சின்னப்பசங்க எந்தவொரு வேடிக்கையா இருந்தாலும் நாங்க போய்ப் பார்ப்போம். அது மாதிரி பாரதி ஒரு வேடிக்கையான ஆள். அவர் யார்கூடவும் அதிகம் பேசிக்கிட மாட்டாரு. அவர் டிரஸ் பண்ற விதமே தனி. ஒரு க்ளோஸ் கோட்- அல்பகா கோட்- போட்டிருப்பாரு. அதுக்குள்ளே ஷர்ட் போடமாட்டாரு. வேஷ்டியை உள்ளுக்கு வச்சு அதுக்குமேலே கோட்டை மாட்டி ஒரு நீல நிற வேஷ்டியை டர்பன் கட்டித் தொங்கப் போட்டுவிட்டு ஸ்ட்ரெய்ட் ஆ கையை வைச்சுகிட்டு நடுத்தெருவிலே மார்ச் பண்றமாதிரி போவாரு. யாரையும் பாக்கமாட்டாரு . . . முக்கு வந்தா அட் ரைட் ஆங்கிள்- ரைட் லெப்ட் திரும்பற மாதிரி திரும்புவாரு (கையில் சைகை செய்து காண்பிக்கிறார்) ஆக அவரு ஒரு தனிப்பட்ட பிறவி அப்படிங்கற எண்ணத்திலே அவரை நாங்க எல்லாம் வேடிக்கை பார்ப்போம். அப்பறம் கொஞ்சநாள் ஆகவும் இவரோடு ப்ரண்ட்ஷிப் நமக்குக் கிடைச்சா தேவலியே, புது மாதிரி ஆளா இருக்காரேன்னு எண்ணம் வந்தது. அப்ப என்கூடச் சேர்ந்த பையனுங்க இரண்டு மூணுபேர். அவருக்குத் தனியா ஒரு வீடு கொடுத்திருந்தாங்க தங்கியிருக்க. அவர் கடையத்தில் இருக்கும்பொழுது அந்த வீட்டில்தான் தங்கி இருந்தாரு. அவருடைய மனைவி வீடு பக்கத்திலுள்ள பெருமாள் கோவில் தெரு. அதைப் பழைய கிராமம்னு சொல்லுவாங்க. அங்க இருந்து சாப்பாடு இவர் இருக்கிற வீட்டிலே கொண்ணாந்து கொடுப்பாங்க. இவரு சாப்பிட்டுட்டு எழுத்து வேலையைப் பாத்துக்கிட்டு இருப்பார். கவிதை எழுதுவாரு. அவரு என்ன எழுதுவாருங்கிறதைப் பத்தி நாங்க கவலைப்படமாட்டோம். நிறைய தபால் எழுதுவார். கார்டில் எழுதினதைத் தானே கைப்பட போஸ்ட் ஆபீசிலே கொண்டுபோய்ப் போட்டுட்டு வருவாரு. அந்த மாதிரி நாங்க அவரோட பழகிக்கிட்டு இருந்தோம்.

அந்தத் தபால் கார்டுகள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தீங்க...

என்னுடைய தோழன் ஒருவன். அவன் பின்னால் வாத்தியார் வேலை பார்த்தான். அவன் என் க்ளாஸ்மேட். அவன் பாரதி வெச்சிருந்த அந்தக் கார்டுகளில் சிலதைத் தனக்கு உபயோகப்படும்னு எடுத்தானோ என்ன காரணமோ. அவன் கார்டு எழுதக்கூடிய பையனாவும் தெரியலே. எதுக்கோ எடுத்து மடியிலே வைச்சிகிட்டான். பாரதியார் இன்ன இன்னார்க்கு எழுதனும்னு ஒரு திட்டத்தோட நிறையக் கார்டு வாங்கி வச்சிருப்பாரு. அதில நாலு கார்டு காணலேன்னா தேடத்தானே செய்வாரு! ஏழெட்டுக் கார்டை எடுத்து மடிக்குள்ளே வைச்சுக்கிட்டான். அவரு பத்து இருபது கார்டு வாங்கிக்கொண்டு வந்து வச்சிருந்தார்னு நெனைக்கேன். அவர் வந்த உடனே எழுத ஆரம்பிச்சாரு. நாங்க அப்போ வீட்டுத் தோட்டத்துக்கு முன்னாலே பின்னாலே ஓடி விளையாடிகிட்டு இருப்போம். அப்ப இவர் பார்த்து ‘இங்கே வாங்கடா. இதிலே இருந்து போஸ்ட் கார்டை யாராவது எடுத்தீங்களா?’ அப்படின்னு கேட்டாரு. எங்கள் ஒருத்தருக்கும் தெரியாது. நான் பரக்க பரக்க முழிச்சேன். யார் அவர் எழுதற இடத்தில உள்ளதை எடுக்கப்போறா. அங்க நாங்க போகமாட்டோம். அவன் ஒருத்தன் மட்டும் ஒரு மாதிரியா முழிச்சான். ‘யாரும் எடுக்கலியே, ஒண்ணும் எடுக்கலியே’ அப்படின்னான். அவர் கூர்மையா அவன் மடி கனமா இருந்ததைப் பார்த்துக்கிட்டு ‘வேட்டியை அவுருடா’ அப்படின்னு சொன்னார் (சிரிப்பு). அவன் வேட்டியை அவுக்கும்போதே கீழே மடியிலே சொருகி வச்சிருந்த கார்டு பொலுபொலுன்னு விழுந்தது. உடனே அவருக்கு மகாகோபம் வந்து அவனை அடிச்சிட்டாரு. அடிச்சவுடனே ஓன்னு அழுதான். தெரியாம செஞ்சிட்டேன். அப்படி இப்படின்னு.

‘ஏண்டா, மத்த பையனுங்களையும் சேர்த்துத் திருட்டுப் பயலாக்க பாத்தியே நீ! இப்படிச் செய்யலாமா? செய்யறது தப்பு இல்லையா? நீ உணரல்லையா?’ அப்படியெல்லாம் கேட்டாரு. அவர் அவன் அறியக்கூடிய சக்திக்கு மேற்பட்ட அளவிலே கேள்விகள் கேட்டாரு. தெரியாம செஞ்சிட்டேன். தெரியாம செஞ்சிட்டேன்னு’ சொல்லிக்கிட்டிருந்தான்.

‘சரி. அழாதே. இனிமே நான் உன்னை அடிக்க மாட்டேன்’. கொஞ்ச நேரம் கழிச்சு அவனைக் கையெடுத்துக் கும்பிட்டார். ‘இனிமேல் நீ நல்ல பையனா இருக்கணும். நீ பொய் பேசக் கூடாது. அதனாலதான் உன்னை அடிச்சேன். கோழைப்பயல், தைரியம் இல்லாதவன்தான் பொய் பேசுவான். உள்ளதை மறைச்சுப் பேசணும்கிற அவசியம் அவனுக்குத்தான் உண்டு. நீ யாருக்கும் பயப்பட வேண்டாம். பொய் சொல்லப் பயப்படணும். உண்மை சொல்றவன் யாருக்கும் பயப்படத் தேவை கிடையாது’ அப்படின்னு அவனுக்குப் பெரிசா ஒரு உபந்நியாசமே செய்து முடிச் சிட்டாரு. அப்புறம் எங்களோட விளையாட விட்டுட்டாரு. அவன் நாலஞ்சு நாள் வராமல் இருந்தான். பாரதியார் கேட்டாரு ‘ஏண்டா, ராமையா உங்ககூட வரலையா?’ன்னு.

‘என்னமோ வரலை சார்.’ அப்படின்னேன்.

‘அவன் வந்தா வரட்டும். அவன வரவேண்டாம்னு நான் சொல்லலை’ அப்படின்னு சொன்னார். அப்புறம் அவன் கொஞ்சம் கொஞ்சமா எங்களோட வந்தான். தொடர்ந்து பாரதியாரோட ஒத்துப்போகிற ஆள் நான் ஒருத்தன்தான். மத்த பசங்க எல்லாம் விளையாடிட்டுப் போயிடுவாங்க.

நீங்கள் சொல்வதிலிருந்து பாரதியுடன் நீங்களெல்லாம் அதிக நேரத்தைக் கழித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அவர் பாடக் கேட்டிருக்கிறீர்களா?

எங்க ஊர்ல பெரிய மணல் பரப்பு. அதிலே போய் உக்காருவோம். சாயங்கால நேரத்தில் அவர் பாடுவாரு. அவர் கவிதைகளை புனைவதற்குத்தான் பாடுகிறாரா அல்லது புனைந்து வைத்த கவிதைகளைத்தான் பாடுகிறாரான்னு எனக்குத் தெரியாது. கார்வையான தொண்டை. கடுவா மாதிரி இருக்கும். ஆனால் நல்ல இசை நுட்பத்தோடதான் அவர் பாடுவாரு. அவர் பாடிகிட்டு இருக்கிறதை நாங்க கேட்டுக்கிட்டே இருப்போம். முடிஞ்ச உடனே போகலாமான்னு கேட்பாரு. அவருக்குப் பின்னாலே போவோம். எங்க ஊர்ல கல்யாணி அம்மன் கோயில் இருக்கும். அந்தக் கோயிலுக்குப் பின்பக்கம் பொத்தைன்னு சொல்லுவாங்க. சிறு குன்றுகள், நிறைய இருக்கும். அதுமேல போய் உச்சிக்குப் போவாரு. அது ஒரு கிலோ மீட்டர் இருக்கும். நாங்க எல்லாம் அது கிட்டப் போகப் பயப்படுவோம். இவரு போறாரேன்னு கூடவே போவோம். அப்போ இடையிலே சத்தம் போடுவாரு. எதிரொலிச் சத்தம் கேட்கும். அதுல அவருக்கு ஒரு வேடிக்கை. இரண்டு மூணு தடவை சத்தம் போடுவாரு. ‘அங்க ஒருத்தன் பதில் சொல்றான் பாத்தியா’ அப்படின்னு எங்ககிட்ட வேடிக்கை பண்ணிகிட்டே கூட்டிப் போவாரு. மேலே போய் நின்னு பாடுவாரு.

பாரதி மேலே கடையத்து மக்களுக்கு ஒரு பகை உணர்வு இருந்தது இல்லையா? அந்தச் சமயத்தில் அவருடன் நெருங்கிப் பழகின உங்களுக்கெல்லாம் அங்கே உள்ளவங்க என்ன மாதிரி வரவேற்பு கொடுத்தாங்க?

Bharathiyar-1 எங்க வீட்ல பாரதியார் வீட்டுக்குப் போறேன் அவரோட பழகிறேன்னு கேள்விப்பட்டு எனக்கு உதைதான் கிடைக்கும். சண்டை பிடிப்பாங்க. எங்க வீட்ல நான் சொல்லவேமாட்டேன். அவங்க எப்படியோ தெரிஞ்சு ‘ஏண்டா, அந்த ஐயர் வீட்டுக்கு போறே. பாரதி வீட்டுக்குப் போறியாமில்லே. அவன் ஒரு கிறுக்கன்.’ பாரதியாரை ஒரு கிறுக்கன் என்றே வைத்திருந்தார்கள். அவருடைய உடை இவர்கள் உடை மாதிரி இல்லே. அவர் ஒரு மாதிரி பஞ்சகச்சம் வைச்சுக் கட்டியிருப்பாரு. அதுக்கு மேல ஒரு வேஷ்டியைப் போத்தி அதுக்குமேலே அல்பகாக் கோட்டை போடுவாரு. அதுமேல ஒரு டர்பன் கட்டியிருப்பாரு. அப்படியே அகலமா ஜவ்வாது பொட்டுப் போட்டிருப்பாரு. இதுதான் அவரது அலங்காரம். பெரிய ஆளுங்க எல்லாம் உக்கார்ந்து பேசுவாங்க. இவர் போனா ஒருத்தரும் அவர்கிட்டே பேசமாட்டாங்க. இவர் பாட்டுக்கு அதைச் சட்டை பண்ணாமப் போவாரு. இவரோட நோக்கம் என்னவோ அதைப் பாத்துக்கிட்டு வருவாரு.

சிறுவர்களைத் தவிர பாரதியுடன் அங்கு பழகியவர்கள் வேறு யார்?

அப்ப எல்லாம் சிலபேர் கொஞ்சம் பழகிறவங்களும் இருப்பாங்க. சில பழக்கங்கள் உள்ளவர்களிடம் இவர் போய்ப் பழகுவாரு. கொஞ்சம் குடி, மதுபான பழக்கம் இவர்கிட்டே உண்டு. நாராயணசாமி பிள்ளைன்னு ஒருத்தர் இருப்பார். அவர் பாட்டிலில் நிறைய பிராந்தி, விஸ்கி எல்லாம் வைச்சு கிளாஸ்ல ஊத்திக் கொடுப்பார். ‘பாரதி, நீங்கள் என்னவெல்லாம் கவிதை பாடுவீங்க?’ன்னு கேட்பார்.

‘எது எல்லாம் தோணுதோ அதை.’

‘நான் கொடுக்கிற கவிதையை நீங்க புது மாதிரியாப் பாட முடியுமா? கவிதையில அகவல்னு ஒண்ணு இருக்கு. அதைப் பாடுங்க’ன்னாரு.

‘அப்படியா. நீங்க அதைச் சொல்லுங்க. நான் எப்படிப் பாடறேன்னு காட்டறேன்.’

‘நான்முகன் படைத்த நானாவித உலகில்’ அப்படின்னு அவர் பாடிக்காட்டுனாரு.

உடனே பாரதி தடையில்லாமல் நான்முகன் படைத்ததுவாம். இந்த நானாவித உலகில்’ அப்படின்னு தனிச் சீர் வைச்சு இப்படிப் பூராவையும் பாடினார். இது ஒரு நாள் நடந்தது.

பாரதியோட ஒத்திசைந்த சிறுவனா நீங்க இருந்தீங்கன்னு சொன்னீங்க. பாரதிக்கும் உங்களுக்குமிடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் எதுவும் ஞாபகம் இருக்கா?

அநேகமா ஞாபகம் இருக்கு. சில விஷயம் மறந்திருக்கு. அந்தச் சமயத்தில என் வயசில கனமான சம்பாஷணை எதுவும் இருக்காது. விளையாட்டுப் போக்கிலதான் இருக்கும். அதைத்தான் கவனிப்போம். அந்த வயசு அதுதானே? ஒரு தடவை பெருமாள் கோவில்கிட்டே ஒரு பெரிய மைதானம். அங்க அப்பத்தான் போட்ட ஒரு கழுதைக்குட்டி. கழுதைக்குட்டி நல்லாதானே இருக்கும்! (சிரிக்கிறார்.) அக்ரஹாரப் பிராமணர்கள் ரொம்ப ஆர்தடாக்ஸ். ஆத்தங்கரையில குளிச்சிட்டு ரொம்ப மடியா வருவாங்க. இவரு அப்படியே ஓடிப்போய் அந்தக் கழுதைக்குட்டியை எடுத்து முத்தம் கொஞ்சினார். அந்தப் பெரிய கழுதை பேசாமல் நின்னுது. ‘இவனைப் போய் . . . கர்மம் கர்மம்’னு தலையிலே அடிச்சுகிட்டுப் போய்ட்டாங்க. இவங்களுக்கு என்ன கெட்டுப் போச்சுன்னு சொல்லிட்டு இவர் வந்திட்டாரு. அவர் சம்சாரம் செல்லம்மா அப்ப சின்ன வயசுதானே. என்ன இப்படியெல்லாம் பண்றேள்! கிராமத்துல எல்லோரும் மதிப்பா நம்மளைப் பேச வேணாமா? எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு’ம்பாங்க.

‘நீ அவங்க பேசறதை ஏன் கவனிக்கறே? அதைப் பத்தி உனக்கென்ன? நான் எனக்கு இஷ்டப்பட்டதைச் செய்யறேன். அது வேற யாருக்கும் இடையூறா இருக்கா? அவங்க அதைப் பாக்க வேணாம். அவ்வளவுதான்’ அப்படின்னு செல்லிடுவாரு. அதை ரொம்ப சிம்பிளா முடிச்சிடுவாரு.

பாரதியாரோட பழக்கவழக்கங்கள் பற்றி?

Bharathiyar-2 அவருக்குச் சில வீக்னஸும் உண்டு. கஞ்சா குடிக்கறது. வடநாட்டுக்கெல்லாம் போயிருந்திருக்காரு இல்லே. சிறு வயசிலே காசியிலதான் முக்கியமா இருந்திருக்காரு. அங்க கஞ்சா குடிக்கிற பழக்கத்தைப் பாத்திருக்காரு. எங்க ஊர் கடையம் சின்ன கிராமம். அங்கேயும் ஒரு கஞ்சா ஆசாமி. அவன் ஒருத்தன் கிட்டேதான் கிடைக்கும். எங்கேயிருந்தோ அவன் வாங்கிட்டு வந்திடுவான். அவன் பெயர் ஆறுமுகம். கோவில்ல பணி செய்யறான். ஓச்சன்னு சொல்லுவாங்க. அவனைத் தெரிஞ்சு வீட்டுக்கு வரவழைச்சாரு. அவனைக் ‘கஞ்சா கொண்டாறியா’ன்னு கேட்பாரு. அவன் கொண்ணாந்தான். சிலும்பியை (விரல்களை விரிக்கிறார்) அப்ப பார்த்ததுதான். அதுக்கு முன்னாலே அதெல்லாம் தெரியாது. அதை நல்லாக் கசக்கி உள்ளே வைப்பார். அதைப் பத்தவைக்க முக்கியமா தேங்காய் நார் வேணும். அதுக்கு என்ன செய்றது? அவர் வீட்டுக்குப் பின்னாலே ஒரு கிணறு. அந்தக் கிணத்திலே ஒரு ராட்டினம் போட்டிருந்தது. ராட்டினத்தில ஒரு கத்தைக் கயிறு. கிணத்துத் தண்ணீரை இறைக்கிற அளவுக்கு நீளக் கயிறு அது. வர வர அதோட நீளம் குறைஞ்சிருச்சு. அதைக் கட் பண்ணிடுவாரு. இவ்வளவு நீளம் கட் பண்ணினால்தான் கனியும். அப்ப இந்தக் கஞ்சாவை ஊன்னு உறிஞ்சுடுவாரு (சிலும்பியை உறிவதுபோல் பாவனை செய்கிறார்). அப்படி உறியும் போதே பரலோகத்திலே போற மாதிரி கண்ணை மூடிக்குவாரு. அது ஒரு வேடிக்கை. அவரும் இவனும் மாறிமாறிக் குடிப்பாங்க. ஒருநாள் ‘என்ன கிணத்திலே வாளிக் கயிறு எட்டமாட்டேங்குதே’ன்னு செல்லம்மா கேக்கறாங்க ‘அதுக்கு வேற வாங்கிக்கோ. இப்ப அதுக்காக என்ன? கொஞ்சம்தானே எடுத்தேன். இனிமே எடுக்கமாட்டேன்’ அப்படின்னு ஒரு சமாதானம் சொல்லிவிட்டுட்டாரு. இப்படி ஒரு வேடிக்கையான ஆளு அவரு.

எல்லோர் கூடவும் அவர் பழகியிருக்காரு. அவரோட மைத்துனர் அண்ணாத் துரைன்னு ஒருத்தர் சிங்கப்பூர் அங்கே இங்கே எல்லாம் போய்ட்டாரு. அவர் ரொம்ப வேகமாகப் பேசுவாரு. அவருக்கு இவரைப் பத்தி அப்ரிசியேஷன்தான். ஆனா வீட்ல அவரை யாரும் விரும்பமாட்டாங்க. பேச்சே வச்சுக்கமாட்டாங்க. மத்த பிராமணர்களும் அவரோட பழக்கம் வச்சுக்கமாட்டாங்க. ஆக பிராமணர் இல்லாத கூட்டம். அதிலேயும் கொஞ்சம் தன் கூட்டத்திலே சேருகிற மாதிரி ஆட்களைத்தான் வச்சுக்குவாரு. ஆக நாங்களே அவருக்குத் துணைவர்களா ஆயிட்டோம். எங்களுக்கு அது ஒரு பெருமை. நாங்க சின்னப் பையங்க. அவர் ஒரு பெரிய புலவர். வரகவி. நாங்க பள்ளிக்கூடத்துப் பாடத்தையே சரியாப் படிக்கத் தெரியாதவங்க. எங்க தொடர்பு அந்த மாதிரி ஆரம்பிச்சுது. அவர் எங்கமேலே ரொம்பப் பிரியமா இருப்பாரு. கல்யாணசுந்தரம் இன்னைக்கு வரக் காணோமேன்னு சொல்லுவாரு. வராதவனையெல்லாம் நோட் பண்ணிக்கிடுவாரு. அந்த அளவுக்கு எங்ககூடப் பழகினாரு. அந்த அம்மாவுக்கு எப்பவும் கஷ்டம். வறுமைதான். அவங்க எங்கேயோ போயி ரவை உப்புமா கிண்டி டிபன் எடுத்துவந்து அவர் கையில் கொடுப்பாங்க. இவர் அந்த வீட்டுச் சுவர்மீது ஏறி உச்சிக்குப் போயிடுவாரு. அங்கே உக்காந்து அதைத் தூக்கித் தூக்கிப் போடுவாரு. கடன் வாங்கித் தன் புருஷன் பட்டினியா கிடக்கக்கூடாதுன்னு சொல்லி ஆதங்கத்தோட கொண்டு வந்ததையெல்லாம் எடுத்து அநாயாசமா வீசுவாரு. உடனே வரும் காக்கா குருவி எல்லாம். ‘காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ இவரோட நோக்கம் பரந்த நோக்கம். இவரிடம் எவ்வளவு பரந்த இதயம் இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு சுருக்கம் அவங்களுக்கு. இவரை அவங்களாலே புரிஞ்சிக்க முடியாது.

பாரதியோட புதல்வி சகுந்தலா உங்களோட படிச்சவங்கன்னு சொன்னீங்க?

அது ஒரு க்ளாஸ். என்னோட ஜூனியர். ‘ஓடி விளையாடு பாப்பா’ன்னு அதுக்காகத்தான் பாடினார். பாரதி அதைப் பாடச் சொல்லுவார். அது பாடும். எங்களுக்கும் சொல்லித்தருவார். ஒரு ஆர்மோனியம். மிருதங்கம் இருக்கும். மிருதங்கம் படிக்கிறாரு. அந்தத் தாள லயம். ததிதும்நம் அப்படின்னு அந்த விரல். அவருகிட்டேதான் நான் படிச்சேன். அதுதான் மிருங்கத்திற்கு முதல் பாடம். மிருதங்கத்தை எவனோ கொண்டுவந்து போட்டிருந்தான். அநேகமாக அது ஆறுமுகமாத்தான் இருக்கும். அப்புறம் ஒரு ஆர்மோனியம். ஆர்மோனியம் எல்லோர் வீட்டிலேயும் இருக்கும். அதையும் வச்சுப் பாடுவாரு. பாட்டுக்குச் சுரம் வாசிச்சுப் பாத்துக்கிடுவாரு. சுரத்தை எழுதி அந்தச் சந்தத்திலேயே பாட்டுப் பாடுவாரு.

செல்லம்மா பாரதியுடன் உங்களுக்குப் பழக்கம் உண்டா?

Bharathiyar-4 எல்லோரையும் தெரியும். நான் இன்னார் வீட்டுப் பிள்ளைன்னு தெரியும். ஆகையினால எங்க அப்பாமீது கவுரவம் வச்சிருந்தாங்க. என்ன உங்க பையன் பாரதியோட திரியறான்னு அவங்களே சொல்லுவாங்க. எங்க அப்பாகிட்டே போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணி இருக்காங்க. அதைப் பாரதியார் லட்சியப்படுத்த மாட்டார். ‘சொன்னாங்களா, சொல்லிட்டுப் போகட்டும். நீ பயப்படறியா’ன்னு கேட்பாரு. நான் பயப்பட மாட்டேன். அவர் ‘வா போகலாம்’னு இன்னொரு இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாரு. மது பானத்தை அந்தந்த கிளாஸ்லேதான் ஊத்திச் சாப்பிடணும்னு அவர்கிட்டே ஒரு கண்டிப்பு கிடையாது. சாயந்திரம் வயக்காட்டிலே வேலை செஞ்சிட்டு அரிஜனங்கள் போவாங்க. போற வழியிலே அங்கே சேரிப் பக்கம் கள்ளுக்கடை இருக்கும். அவங்க பட்டையைக் குடிச்சிட்டு அலுப்புத் தீர ஆட்டம் பாட்டம் எல்லாம் போடுவாங்க. ஒரு நிமிஷம் இதோ வந்திடறேன்னு எங்ககிட்டே சொல்லிட்டு உள்ளே போயிடுவாரு. அவரு பட்டையை நீட்டமாகப் புடிச்சிக்குவார். ‘ஏ சாமி வந்திருக்கார்’னு அதில ரெண்டு மூணு விடுவான். நல்லா நிறையச் சாப்பிடுவாரு. அவங்க எல்லாம் ஆடுவாங்க. பாடுவாங்க. இவரு நேராக் கிளம்பி வந்திடுவார். அந்த ஸ்மெல் மட்டும் கொஞ்சம் இருக்கும். மற்றபடி எந்தவித நடவடிக்கைகளிலும் வித்தியாசம் இருக்காது.

பாரதி மது அருந்திவிட்டுக் கலாட்டா ஏதாவது பண்ணினார்னு செய்திகள் உண்டா?

பண்ணமாட்டார். ரொம்ப டீஸண்ட் ஆனவர் அவர். ஒழுக்கம் உடையவர். நல்லொழுக்கம் பற்றி எவ்வளவோ பாடியிருக்கிறார். பேசியிருக்கார். அவங்களெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் கவிதை எழுதறேன்னு சொல்லுவார். ஸ்தோத்திர கீதங்கள், தேசிய கீதங்கள், பாப்பா பாட்டு இப்படித் தனித்தனியா புஸ்தகம் ப்ரிண்ட் பண்ணினார். யார் வாங்குவா? எங்ககிட்டேக் கொடுத்து இதையெல்லாம் வித்துக்கொண்டு வாங்கடான்னு சொல்லுவாரு. நாங்க அதை எடுத்துக்கிட்டுச் சுற்றுவோம். சார், ஒண்ணு வாங்கிக்கிறீங்களா’ன்னு மத்தவங்ககிட்டே கேப்போம். ‘பாரதி எழுதின பாட்டுன்னு, என்கிட்டே அந்தக் கதையெல்லாம் விடாதே போ அப்படிம்பாங்க. நாங்க மனம் ஒடிஞ்சு, ஒரு புஸ்தகம்கூட விக்கலேன்னு அவர்கிட்டே சொல்லுவோம். இப்படி ஒருத்தரும் வாங்காமல் இருந்ததுதான் ‘பாரத ரத்னா விருது’ வாங்கக்கூடிய அளவுக்கு மேல் மதிப்பு பெற்றது.

பாரதிக்கு யானையைப் பிடிக்கும்னு சொன்னீங்க!

Bharathiyar-5 யானையை அவருக்குப் பிடிக்கும். கழுதைக் குட்டியை வைத்து முத்தம் கொஞ்சினார்னு சொன்னேனே! அதே மாதிரி எங்க ஊர்க் கோவிலுக்குச் சித்திரை மாத உற்சவத்திற்குச் சங்கரன் கோவிலிலிருந்து ஒரு யானை வரும். அதோடு யானைப்பாகன் வருவான். நாராயணசாமி பிள்ளைன்னு கவிதை அகவல் பத்தி சொன்னேனே அவர்தான் கோவில் ட்ரஸ்டி. இலுப்பைத் தோப்பில் யானையைக் கட்டியிருப்பார்கள். அந்தப் பாகனிடம் போய் ‘யானைகிட்டே நான் விளையாடப் போகணும்’னு சொல்லுவார். ‘சரி கிட்டே போங்க. ஆனா அதை ஒண்ணும் செஞ்சிடாதீங்க. அப்புறம் அது மிதிச்சுப் போட்டுச்சுன்னா என்மேலே பழிவரும்’ என்றான்.

அதோட துதிக்கை அவ்வளவுதான் இருக்கும். அதன் துதிக்கையைக் கட்டி முத்தம் கொஞ்சினார். அதன் தந்தத்திற்குத் தான் அவர் உயரம். தந்தத்தைக் கரகரன்னு கடிச்ச சத்தம் எங்களுக்குக் கேட்டது. ஏது இவரு வம்பு பண்ண ஆரம்பிச்சிட்டாரேன்னு பயந்தோம். அது ஒண்ணும் செய்யலை. பாகனும் கவனிச்சிக்கிட்டிருந்தான். அப்புறம் கொஞ்சநேரம் கழிச்சு யானையிடம் ‘வரோம்’ன்னு விடைபெற்றுக்கொண்டார். திருவல்லிக்கேணி யானைகிட்டே விளையாடக் கேட்டிருக்காரு. ஏதோ எசகுபிசகாப் போய் அவர் மாட்டிக்கிட்டார். தூக்கி வீசி எறிஞ்சிடுச்சி. ஒரு சமட்டுச் சமட்டினால் அங்கேயே க்ளோஸ் ஆயிருப்பாரு. யானை ஒரு மனுசனைத் தூக்கி வீசினா சுவத்திலே பாய்ச்சை மாதிரி அப்பிக்குவான். அவர் பயந்துபோனாரு. அந்த ஷாக்கில் அவரை மெள்ள ஆட்கள் வீட்டுக்குக் கூட்டிப் போனாங்களாம். அதோட படுத்து டிசண்டரி மாதிரி சீக்கு வந்திடுச்சி. அதிலதான் இறந்திருக்கார்னு சொன்னாங்க.

பாரதி இறந்த செய்தி உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?

நாங்க (நானும் எனது நண்பரும்) பாளையங் கோட்டையிலே படிக்கப் போனோம். செயிண்ட் சேவியர் காலேஜ். அப்போது அது ஹைஸ்கூலா இருந்தது. அங்க ஒரு ஹாஸ்டல்லே நாங்க படிச்சுக்கிட்டு இருந்தோம். 21ஆம் வருஷம்னு நினைக்கிறேன். அப்ப ஒருத்தன் வந்து பாரதி செத்துப்போயிட்டாராண்டான்னு சொன்னான். சொன்னவுடன் நான் நம்பலே. யானை தூக்கிப்போட்டு அவரைக் கொன்னுட்டதாம்ன்னு அவன் சொன்னான். உடனே நானும் எனது நண்பனும் அழுதுகிட்டு இருந்தோம். ‘என்னடா, ரொம்ப அழுதுகிட்டு இருக்கீங்க’ன்னு வார்டன் வந்து கேட்டார். ‘எங்க ஊர்ல பாரதின்னு ஒருத்தர் இருந்தார். அவர் எங்களுக்கெல்லாம் ரொம்ப ப்ரண்டு. அவர் வீட்டிலேயே போய் இருப்போம் ‘அவர் எங்களுக்கெல்லாம் ரொம்ப நல்லவரா இருந்தார்’ அப்படின்னோம். அதோட எங்களோட உறவு முடிஞ்சிப்போச்சு. பின்னால அவர் வீட்டு ஆட்களோட எனக்குத் தொடர்பில்லை.

***

படப்பிடிப்பு முடிந்து சென்னைக்குத் திரும்பிய சில நாட்களில் கல்யாணசுந்தரத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் பாரதி பற்றிய ஞாபகங்களைத் தன்னுள் தூண்டிவிட்டதற்காக எனக்கு நன்றி தெரிவித்திருந்தார். டாகுமெண்டரி படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அவர் வீட்டை நோக்கிப் படையெடுத்தார்கள். இணையதளங்களில்கூட அவரது பேட்டிகள் வெளிவந்தன. அவருக்கு டாகுமெண்டரியின் வீடியோ கேசட்டை அனுப்பி வைத்தேன். அதை அவர் பலமுறை பார்த்திருக்கிறார். நள்ளிரவில் இறந்த அவர் அன்று மாலைகூட அப்படத்தைப் போடச்சொல்லிப் பார்த்து மகிழ்ந்தார் என்று அவரது உறவினர் கூறினார். 2003இல் அவர் இறந்தபொழுது அவருக்கு 95 வயது.

***

நா. ராமசாமி ஐயர் என் கண்டுபிடிப்பு அல்ல. அவர் பாரதியை நேரிடையாகப் பார்த்துப் பழகியவராக ஏற்கனவே டி.ஜி.என். ஆன்மிக மையம் வெளியிட்ட ‘பாரதி விழா மலர்’ ஒன்றில் அறிமுகமாகி இருந்தார். அப்போது இந்தியாவின் அடிஷனல் சொலிசிட்டராகப் பணியாற்றிய அவரது மகன் என்.ஆர். சந்திரனுடன் தொடர்புகொண்டு படப்பிடிப்பிற்கான நாள் குறித்தேன். அடையாறிலுள்ள பத்மநாப நகரிலுள்ள அவர் வீட்டிற்கு ஒரு நாள் சென்றபொழுது அவர் ஜிப்பா, உருத்திராட்ச மாலை, பச்சை சால்வை ஆகியன அணிந்து எங்களை வரவேற்கத் தயாராக இருந்தார். உடல் உறுதியாக இருந்தது. கணீரென்று பேசினார். கேட்கும் சக்தியை காது வேகமாக இழந்துகொண்டிருந்தது என்பதைத் தவிர 97 வயதில் மிக ஆரோக்கியமாக இருந்தார். புதுக்கோட்டையில் பலகாலம் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். சில காலம் அமெச்சூர் நாடகங்களில் நடித்ததாகவும் கூறினார். 1901இல் பிறந்தவர். பாரதியுடன் 1920இல் பழகியிருந்தார். கல்யாணசுந்தரம் போலவே இவருக்கும் கேமராக் கூச்சம் அறவே இல்லை. இருவரது பேட்டிகளும் 1998இல் எடுக்கப்பட்டவை.

நீங்க முதன்முதலா பாரதியை எப்பொழுது பார்த்தீர்கள்?

N.-Ramasamy நான் புதுக்கோட்டைவாசி, எனக்கு இப்ப வயசு 97 ஆகிறது. “நான் ஆதியிலே 1919லே புதுக்கோட்டைக் காலேஜிலே எம்.ஏ. படிச்சுகிட்டு இருந்தேன். அப்போ பாரதியோட மருமான் (சகோதரியின் மகன்) டி. சங்கரன்ங்கிறவர் அரசர் கல்லூரியில் வாத்தியாரா இருந்தார். ஸ்கௌட் மாஸ்டர் ஆகவும் இருந்தார். அவரைச் சந்திக்க நேர்ந்தபோதெல்லாம் பாரதியோட பாட்டையெல்லாம் பாடுவார். அவர் பேசும்பொழுது வாய் திக்கினாலும், பாரதியார் பாட்டுப் பாடும்பொழுது வாய் திக்கவே திக்காது. அது எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். பாரதியார் பாட்டிலே எனக்கொரு மோகம் வந்து அவர் பாடிய பாட்டை நெட்டுரு பன்னிப் பாடியிருந்தேன். சங்கரனை எனக்குத் தெரிஞ்சது பெரிய அதிர்ஷ்டம். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்லே பி.ஏ. வாசிக்க வந்தேன். அப்ப என்னோட ஒன்னுவிட்ட மாமா வீட்லே 12, மேட்டுத் தெருவிலே ஒரு போர்ஷன்ல தங்கும்படியா நேர்ந்தது. ஹாஸ்டல்ல சீட் கிடைக்காததால அங்கே ஒரு நாலைஞ்சு மாசம் தங்கியிருந்தேன். மேட்டுத் தெரு ப்ரண்ட் போர்ஷன். தம்புச்செட்டி தெரு. அதன் நம்பர் 209. எண்ட்ரன்ஸ் மேட்டுத்தெருன்னு சொல்லுவா ஆனால் நடுவிலே வாசப்படி தொறப்பு உண்டு. பாரதியார் 209இல் இருந்ததால் பின் போர்ஷனில் இருந்த எனக்கு அவரை அடிக்கடி சந்திக்கிற சான்ஸ் ஏற்பட்டது. ஒரு நாள் அவரை சந்திச்சு நான் புதுக்கோட்டைவாசி, உங்க மருமான்கிட்டே உங்க பாட்டையெல்லாம் கேட்டு நெட்டுரு பண்ணியிருக்கேன்னு அறிமுகமானேன். அவர் என்னை ராமுன்னு தான் கூப்பிடுவார்.

அவருடன் வேறு யார் இருந்தார்கள்? அவர் என்ன செய்தார்னு ஞாபகம் இருக்கா?

அப்ப அவர் சம்சாரம், கூடவே, பத்துப் பன்னிரெண்டு வயசு பொண்ணு ஒண்ணும் இருக்கும். நேரம் இருக்கும்போதெல்லாம் காலை வேளையிலே அவர் வீட்டுக்குப் போவோம். அவர் சம்சாரத்தைப் பார்ப்போம். அவர் ‘சுதேசமித்திர’னில் சப்-எடிட்டர் ஆக இருந்தார். அவருக்கு அப்போ ஐம்பது ரூபாய் சம்பளம். காலம்பரை பத்துமணிக்கு ரிக்ஷாவில் போயிட்டுச் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்திடுவார். அதனாலே அவரோட அடிக்கடி பேசுவோம். அவர் வெட்டிப்பேச்சே பேசமாட்டார். நல்ல ஆழ்ந்த கருத்துள்ள பேச்சைத்தான் பேசுவார். ஒழிஞ்ச வேளையிலே ரூம்லே கதவைச் சாத்திக்கிட்டு எழுதிண்டிருப்பார். இல்லேன்னா ஏதாவது படிச்சிண்டிருப்பார். காலை வேளைலே சாப்பிட்டுச் சரியா டயத்துக்குப் போயிடுவர். ராத்திரி வேளைலே சாப்பிடறதுக்கு அவருக்குச் சாப்பாட்டு நினைவே இருக்காது. அந்தச் சமயங்கள்லே எங்களைப் போல முட்டாள்ங்ககிட்டே அந்த அம்மா வந்து சொன்னாக்கா, நான் அவரை மாமான்னுதான் கூப்பிடுவேன். ‘மாமா, மாமி குழந்தையெல்லாம் சாப்பிடாம காத்திண்டிருக்காளே. நீங்க இப்படிக் கதவை சாத்திண்டிருக்கேளே’. ‘அடடே நாழியாயிடுச்சா’ன்னு சொல்லிச் சிரிச்ச முகமா இருப்பார். கோபமே வராது அவருக்கு. குடும்ப ஞாபகமோ பண ஞாபகமோ லட்சியம் பண்ணமாட்டார். அந்த வகையிலே அவர் ஒரு ஞானி. இந்தக் குடும்ப பாரம் பணத்தைப் பத்திய கவலை அதெல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. அவருக்குத் தங்கமும் ஒண்ணுதான். மண்ணாங்கட்டியும் ஒண்ணுதான். அப்படிப்பட்ட மனுஷன். அவர் அடிக்கடி சகஜமாப் பேசுவார். வாரத்திலே ரெண்டு மூணு நாளு ராத்திரி வேளையிலே தம்புச்செட்டி வீட்டு முகப்பில் உள்ள பெரிய திண்ணையில் ஷேட் விளக்கு வச்சுகிட்டு பஜனை விளக்கம், பேச்சு எல்லாம் நடக்கும். நல்ல ஜனக்கூட்டம். தெருவிலே டிராபிக்கெல்லாம் இடைஞ்சல் ஏற்படற மாதிரி ஜனக் கூட்டம் சேர்ந்துடும். அவர் புதுப்புதுப் பாட்டாப் பாடுவார். விளக்கம் சொல்லுவார். ரசிகா ரொம்ப பேர். தெருவிலே இருக்கிற ஆட்கள் எல்லாம் கூடிடுவா. அது இரண்டு மணிநேரம் இருக்கும்.

பாரதி பார்ப்பதற்கு எப்படி இருப்பார்?

எனக்குத் தெரிஞ்ச பாரதி இந்த போட்டோவிலே இருக்கிற மாதிரி இல்லே. அவர் இந்த மாதிரி ட்விஸ்ட் மீசை வைச்சுக்கலே. மாநிறம். ரொம்ப சாமான்யமா இருப்பார். எப்பவாவது குர்தா போட்டுக்குவார். இல்லேன்னா வெறும் பாடியோடதான் இருப்பார். வெளியிலே போகும்போது கோட் போட்டுக்கிட்டுத் தலைப்பா கட்டிக்குவார். அப்படித்தான் நான் பார்த்திருக்கேன்.

பண விஷயத்திலே பிறத்தியார் கஷ்டப்படுவதை அவர் சகிக்கமாட்டார். ‘சுதேசமித்திரன்’ எடிட்டர் சி.ஆர். சீனிவாசன், அவராலேதான் தம்புச்செட்டி தெரு வீடு கிடைச்சதுன்னு பாரதி சொன்னார். ஒரு விசை பாரதி சம்பளம் வாங்கிட்டு வரும்போது அவரைக் கொண்டுவந்த ரிக்ஷாக்காரன் தான் ரொம்ப கஷ்டப்படறேன்னு சொன்னதுக்காக கோட் பையிலிருந்த அந்த ஐம்பது ரூபாயையும் கொடுத்திட்டார். வீட்டுக்கு வந்து அவர் சம்சாரத்துக்கிட்டே இந்த மாதிரி ரிக்ஷாகாரன் கஷ்டப்பட்டான். கொடுத்திட்டேன்னு சொல்லியிருக்கார். அந்த அம்மாவாலே ஒண்ணும் சொல்ல முடியல்லே. அப்பறமா அந்த அம்மா என்னைக் கூப்பிட்டு ‘இந்த மாதிரி மாமா பண்ணிட்டார். ரிக்ஷாகாரனுக்குப் பணத்தைக் கொடுத்திட்டார். நம்ம குடும்பச் செலவை எப்படிப் பண்றதுன்னு நேக்குப் புரியலை’ன்னு அந்த அம்மா சொன்னா. அந்த ரிக்ஷாக்காரன் வழக்கமா வர்றவன். நானும் என் சிநேகிதனும் அவனைத் தேடிப் புடிச்சி என்னடா, அய்யாகிட்டே பூராப் பணத்தையும் வாங்கிட்டு வந்திட்டே. அவாளுக்கு வேண்டாமான்னு சொன்னப்புறம் அவன் அஞ்சு ரூபாய் செலவழிச்சதுபோகப் பெருந்தன்மையா நாற்பத்தி அஞ்சு ரூபாயையும் கொடுத்துட்டான். அப்புறம் அதை அந்த அம்மாகிட்டே கொடுத்ததிலே அந்த அம்மாவுக்கும் பெரிய திருப்தி.

செல்லம்மா எப்படி இருப்பார்?

எனக்கு அந்த அம்மாகிட்டே ரொம்ப மரியாதை. ஏன்னா நம்ம ஹிந்துப் பெண்கள் எப்படி இருக்கணுமோ கிரஹனி எப்படி இருக்கணுமோ அப்படி இருப்பாங்க. மடிசார்தான் கட்டிக்குவாங்க. மேலாக்கை எடுக்கவே மாட்டாங்க. ராமுன்னுதான் (என்னை) கூப்பிடுவாங்க. குழந்தை மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க. ஏதாவது வீட்ல பண்ணியிருந்தா எனக்குக் கொடுப்பாங்க. அந்த அம்மாவுக்கு ஏதாவது அப்பப்ப எங்களால் ஆன உதவி நாங்க செய்வோம். எதிர்பார்க்கமாட்டாங்க. நாங்க வாலண்டர் பண்ணிக்குவோம். ஏன்னா அவங்க தனியா இருப்பாங்க. வெளிவாசல் போறதே இல்லே. அதை நான் பார்த்ததே இல்லே. எனக்கு இன்னிக்கும் அந்த அம்மாவின் முகம்தான் முன்னால் நிக்கறது. பாரதியாரைவிட. எனக்கு அவங்ககிட்டே பிரமாத பக்தி. ரொம்ப பிரியமா இருப்பாங்க. எனக்கு இந்த நாலு மாசமும் ஏண்டா முடிஞ்சதுன்னு இருந்தது. நான் அதுக்குமேலே ஹாஸ்டலுக்குப் போய்ட்டதனாலே பழக முடியலே. என்னோட வாழ்க்கை பாரதியார் குடும்பத்தோட ஏற்பட்ட தொடர்ச்சியை மறக்கவே முடியலே. எப்பவும் அதை நினைச்சிண்டு இருப்பேன். எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்ததற்கு உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி.

***

சென்னையில் ஜூலை 1999இல் நடைபெற்ற டாகுமெண்டரி வெளியீட்டு விழாவிற்குச் சென்னைவாசி என்பதால் ராமசாமி ஐயர் அழைத்துவரப்பட்டார். ஜெயகாந்தன் வீடியோ கேசட்டை வெளியிட அதன் முதல் பிரதியை அவர் பெற்றுக்கொண்டார். பல மாதங்களுக்குப் பிறகு அன்று அவரை மீண்டும் சந்தித்த பொழுது அவர் சக்தி இழந்தவராகத் தோன்றினார். ‘நீங்க கூப்பிட்டதாலே வந்தேன். என்னாலே முடியல்ல’ என்று கூறிவிட்டு உடனே சென்றுவிட்டார். அவரை அப்படிப் பார்த்தது மனதிற்கு வருத்தமாக இருந்தது. மறுவருடமே அவர் காலமானார். அப்போது அவருக்கு வயது 99.

***

‘சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழர்கள் வாழும் நாடுகள் பலவற்றிலும் திரையிடப்பட்டது. மிக அதிகமான தடவைகள் திரையிடப்பட்ட தமிழ் டாகுமெண்டரி இதுவாகத்தான் இருக்கும். பாரதிமீது மக்கள் கொண்டுள்ள அபிமானம் அத்தகையது. பாரதியின் நண்பர்களின் பேட்டிகள் படத்தில் அதிகம் பாராட்டப்பட்டன. கூடவே விமர்சனங்களும் எழுந்தன.

படத்திற்கான வர்ணனையை இந்திரா பார்த்தசாரதி ஆய்வுநுட்பம் மிக எழுதியிருந்தார். படப்பிடிப்பு முடிந்து எடிட் செய்யும்பொழுது மேலும் தேவையான பகுதிகளுக்கு அவருடன் ஆலோசித்து நான் வர்ணனைகளை எழுதிச் சேர்த்துக்கொண்டேன். ‘குடும்ப வறுமை, நியாயமான எதிர்பார்ப்புகளுக்குக் கிடைத்த தோல்விகள், பலகாலமாகத் தொடர்ந்துவந்த அரசாங்க அச்சுறுத்தல்கள், போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றால் ஏற்கனவே நலிவுற்றிருந்த உடலும் மனமும் மேலும் சீர்கெட்டது’ என்று எழுதி அவரது முடிவுக் காட்சிகள் மீது அதை ஒலிக்கச் செய்திருந்தேன். ‘போதைப் பொருள் பழக்கம்’ என்கிற தொடருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். இளைஞர்கள் அதை அறிந்து கெட்டுப்போய்விடுவார்கள் என்பது அவர்களது வாதம். ‘போதைப் பழக்கம் கொடியது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதேயொழிய அது சிகரெட் விளம்பரம்போல் கவர்ச்சியாக்கப்படவில்லை. பாரதியைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரது வாழ்க்கையை முழுதாக அறிந்துகொள்ள வேண்டும். வ.உ.சி, வ.ரா, யதுகிரி அம்மாள் ஆகியோர் இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளார்கள்’ என்று கூறியதைக் கேட்டுச் சிலர் சமாதானமடைந்தார்கள்.

இங்கே தரப்பட்டுள்ள கல்யாணசுந்தரம், ராமசாமி ஐயர் ஆகியோரின் பேட்டிகளிலிருந்து படத்தின் மைய ஓட்டத்திற்குத் தேவையான சில பகுதிகளைத்தான் படத்தில் இணைத்திருந்தேன். பாரதி சிலும்பியில் கஞ்சா புகைத்தது, பட்டைச் சாராயம் அருந்தியது ஆகியவற்றையெல்லாம் கல்யாணசுந்தரம் சொல்வதைக் காட்டியிருந்தால் எத்தகைய எதிர்ப்புகள் தோன்றியிருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

அவர்களது பேட்டிகள் முழுவதையும் பரந்த நோக்குடன் பார்த்த பாரதி அன்பர்கள் அவற்றின் அரிய ஆவண மதிப்பைச் சுட்டிக்காட்டினார்கள். இதுவரை எங்கும் வெளிப்படாத பாரதியை அவற்றில் பார்க்க முடிவதாகவும் கருத்துத் தெரிவித்தனர்.

கல்யாணசுந்தரம், ராமசாமி ஐயர் ஆகியோரிடம் பாரதியின் வெவ்வேறு நடத்தைகள் பதிவாகியுள்ளன. கடையத்தில் தன்னிடம் வம்பு செய்தவர்களைக் கலவரப்படுத்த வேண்டி அவர் மேற்கொண்ட நடை உடை பாவனைகளைச் சென்னையில் அவரிடம் நாம் காணவில்லை. தான் உண்டு, தன் வேலையுண்டு என்று அவர் செயல்பட்டிருக்கிறார். வெளிப்படையான கொந்தளிப்பை அவரது நடவடிக்கைகளில் பார்க்க முடியவில்லை. பஜனைகள் பாடித் தன்னையும் பிறரையும் மகிழ்வித்திருக்கிறார். தனது படைப்புகள் அனைத்தையும் நாற்பது நூல்களாக வெளியிடத் திட்டமிட்டு அதற்குப் பொருளுதவி கேட்டுப் பலருக்கும் கடிதங்கள் எழுதித் தோல்வி சுமந்த பின்னணியில்தான் தபால் கார்டு சம்பவம் நிகழ்ந்திருப்பது தெரியவரும். பாரதி சிறுவர்களுக்குத் தோழனாகவும் ஆசிரியனாகவும் இருந்திருக்கிறார். குன்றுகளில் அவர்களுடன் சுற்றித் திரிந்ததைக் கேட்கும்பொழுதே கவித்துவமான காட்சிகள் மனத்தில் தோன்றுகின்றன.

‘சுதேசமித்திர’னில் உதவி ஆசியராக வேலைபார்த்த அவருக்கு ஐம்பது ரூபாய்ச் சம்பளம் என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் அது நல்ல தொகை. அந்தச் சம்பளம் அவருக்குத் தரப்பட்டது என்னும் பட்சத்தில் அவரது இறுதி நாட்களில் அவருக்கு வறுமைத்தொல்லை ஏற்படவில்லை என்று கருதலாம். தம்புச் செட்டி தெரு வீட்டில் குடியிருந்த நாட்களில் பாரதியும், செல்லம்மாவும் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் குடும்ப வாழ்க்கை நடத்தியிருப்பதையும் நம்மால் அறிய முடிகிறது

*****

நன்றி : காலச்சுவடு

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்