Oct 31, 2010

காஞ்சனை - புதுமைப்பித்தன்

1

     அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிpudu5ரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும்  பொய்; அதாவது - கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக 'மெஜாரிட்டி'யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால், தன்னுடைய ஜீரண சக்தியைப் பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது? "அட சட்!" என்று சொல்லிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

     உட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன். வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும்! தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள். அவள் மூன்று மாசக் கர்ப்பிணி. நமக்குத்தான் தூக்கம் பிடிக்கவில்லை என்றால், அவளையும் ஏன் எழுப்பி உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்?

     உடனே விளக்கை அணைத்தேன். எனக்கு எப்போதும் இருட்டில் உட்கார்ந்துகொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. இருட்டோ டு இருட்டாய், நாமும் இருட்டும் ஐக்கியமாய், பிறர் பார்வையில் விழாமல் இருந்து விடலாம் அல்லவா? நாமும் நம் இருட்டுக் கோட்டைக்குள் இருந்து கொண்டு நம் இஷ்டம்போல் மனசு என்ற கட்டை வண்டியை ஓட்டிக் கொண்டு போகலாம் அல்லவா? சாதாரணமாக எல்லோரும் மனசை நினைத்த இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் போகும் ரதம் என்று சொல்லுவார்கள். மனித வித்து அநாதி காலந்தொட்டு இன்று வரையில் நினைத்து நினைத்துத் தேய்ந்து தடமாகிவிட்ட பாதையில் தான் இந்தக் கட்டை வண்டி செல்லுகிறது. சக்கரம் உருண்டு உருண்டு பள்ளமாக்கிய பொடிமண் பாதையும் நடுமத்தியில் கால்கள் அவ்வளவாகப் பாவாத திரடுந்தான் உண்டு; ஒவ்வொரு சமயங்களில் சக்கரங்கள் தடம்புரண்டு திரடு ஏறி 'டொடக்' என்று உள்ளே இருக்கிறவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறதும் உண்டு; மற்றப்படி சாதுவான, ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதை. நினைவுச் சுகத்தில் இருட்டில் சிறிது அதிகமாகச் சுண்ணாம்பு தடவிவிட்டேன் போலும்! நாக்கு, சுருக்கென்று பொத்துக்கொண்டது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. இருட்டில் வெற்றிலை போடுவது என்றால், அதிலும் மனசை, கயிற்றை முதுகில் போட்டு விட்டுத்தானே போகும்படி விட்டுவிடுவது என்றால், இந்த விபத்துக்களையெல்லாம் பொருட்படுத்தலாமா? உள்ளங்கையில் கொட்டி வைத்திருந்த புகையிலையைப் பவித்தரமாக வாயில் போட்டுக் கொண்டேன்.

     சீ! என்ன நாற்றம்! ஒரேயடியாகப் பிணவாடை அல்லவா அடிக்கிறது? குமட்டல் எடுக்க, புகையிலையின் கோளாறோ என்று ஜன்னல் பக்கமாகச் சென்று அப்படியே உமிழ்ந்து, வாயை உரசிக் கொப்புளித்துவிட்டு வந்து படுக்கையின் மீது உட்கார்ந்தேன்.

     துர்நாற்றம் தாங்க முடியவில்லை, உடல் அழுகி, நாற்றம் எடுத்துப் போன பிணம் போல; என்னால் சகிக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை. ஜன்னல் வழியாக நாற்றம் வருகிறதோ? ஊசிக் காற்றுக் கூட இழையவில்லையே! கட்டிலை விட்டு எழுந்திருந்து ஜன்னலில் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்து வைக்கவில்லை; நாற்றம் அடியோடு மறைந்துவிட்டன. என்ன அதிசயம்! திரும்பவும் கட்டிலுக்கு வந்தேன். மறுபடியும் நாற்றம். அதே துர்க்கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக் கிடக்கிறதோ? விளக்கை ஏற்றினேன். கட்டிலடியில் தூசிதான் தும்மலை வருவித்தது. எழுந்து உடம்பைத் தட்டிக் கொண்டு நின்றேன்.

     தும்மல் என் மனைவியை எழுப்பிவிட்டது. "என்ன, இன்னுமா உங்களுக்கு உறக்கம் வரவில்லை? மணி என்ன?" என்று கொட்டாவி விட்டாள்.

     மணி சரியாகப் பன்னிரண்டு அடித்து ஒரு நிமிஷம் ஆயிற்று.

     என்ன அதிசயம்! நாற்றம் இப்பொழுது ஒருவித வாசனையாக மாறியது. ஊதுவத்தி வாசனை; அதுவும் மிகவும் மட்டமான ஊதுவத்தி; பிணத்துக்குப் பக்கத்தில் ஏற்றி வைப்பது.

     "உனக்கு இங்கே ஒரு மாதிரி வாசனை தெரியுதா?" என்று கேட்டேன்.

     "ஒண்ணும் இல்லியே" என்றாள்.

     சற்று நேரம் மோந்து பார்த்துவிட்டு, "ஏதோ லேசா ஊதுவத்தி மாதிரி வாசனை வருது; எங்காவது ஏற்றி வைத்திருப்பார்கள்; எனக்கு உறக்கம் வருது; விளக்கை அணைத்துவிட்டுப் படுங்கள்" என்றாள்.

     விளக்கை அணைத்தேன். லேசாக வாசனை இருந்துகொண்டுதான் இருந்தது. ஜன்னலருகில் சென்று எட்டிப் பார்த்தேன். நட்சத்திர வெளிச்சந்தான்.

     லேசாக வீட்டிலிருந்த ஜன்னல், வாசல், கதவுகள் எல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டன. ஒரு வினாடிதான். அப்புறம் நிச்சப்தம். பூகம்பமோ? நட்சத்திர வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் ஒன்று தன் அகன்ற தோல் சிறகுகளை விரித்துக் கொண்டு பறந்து சென்று எதிரில் உள்ள சோலைகளுக்கு அப்பால் மறைந்தது.

     துர்நாற்றமும் வாசனையும் அடியோடு மறைந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன்.

2


     நான் மறுநாள் விடியற்காலம் தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்போது காலை முற்பகலாகிவிட்டது. ஜன்னல் வழியாக விழுந்து கிடந்த தினசரிப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிமுற்றத்துக்கு வந்து பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தேன். கிரீச்சிட்டு ஆட்சேபித்துவிட்டு அது என்னைச் சுமந்தது.

     "ராத்திரி பூராவும் தூங்காமே இவ்வளவு நேரம் கழித்து எழுந்ததும் அல்லாமல் இப்படி வந்து உட்கார்ந்து கொண்டால் காப்பி என்னத்துக்கு ஆகும்?" என்று என் சகதர்மிணி பின்பக்கமாக வந்து நின்று உருக்கினாள். 'ஐக்கிய நாடுகளின் ஜரூர் மிகுந்த எதிர் தாக்குதல்கள் தங்குதடையில்லாமல் முன்னேறி வருவதில்' அகப்பட்டுக் கொண்ட ஜனநாயகத்திலும் உலக சமாதானத்திலும் உறுதி பிறழாத நம்பிக்கை கொண்ட எனக்குச் சற்றுச் சிரமமாகத்தான் இருந்தது.

     "அது உன் சமையல் விமரிசையால் வந்த வினை" என்று ஒரு பாரிசத் தாக்குதல் நடத்திவிட்டு எழுந்தேன்.

     "உங்களுக்குப் பொழுதுபோகாமே என் மேலே குத்தம் கண்டு பிடிக்கணும்னு தோணிட்டா, வேறே என்னத்தைப் பேசப் போறிய? எல்லாம் நீங்கள் எளுதுகிற கதையை விடக் குறைச்சல் இல்லை!" என்று சொல்லிக் கொண்டே அடுப்பங்கரைக்குள் புகுந்தாள்.

     நானும் குடும்ப நியதிகளுக்குக் கட்டுப்பட்டு, பல்லைத் துலக்கிவிட்டு, கொதிக்கும் காப்பித் தம்ளரைத் துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன்.

     அப்போது ஒரு பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி, "அம்மா, தாயே!" என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள்.

     நான் ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்.

     "உனக்கு என்ன உடம்பிலே தெம்பா இல்லை? நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன?" என்று அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி.

     "வேலை கெடச்சாச் செய்யமாட்டேனா? கும்பி கொதிக்குது தாயே! இந்தத் தெருவிலே இது வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை; மானத்தை மறைக்க முழத்துணி குடம்மா" என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்.

     "நான் வேலை தாரேன்; வீட்டோ டவே இருக்கியா? வயத்துக்குச் சோறு போடுவேன்; மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே!" என்றாள்.

     "அது போதாதா அம்மா? இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா?" என்று சொல்லிக்கொண்டே என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள்.

     "என்ன, நான் இவளை வீட்டோ டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா? எனக்குந்தான் அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே" என்றாள் என் மனைவி.

     "சீ! உனக்கு என்ன பைத்தியமா? எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த வேண்டும் என்கிறாயே! பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா?" என்றேன்.

     வெளியில் நின்ற பிச்சைக்காரி 'களுக்' என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல் இருந்தது.

     "முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா? நீ இப்படி உள்ளே வாம்மா" என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

     உள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப் பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன! நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா? மறுபடியும் பார்க்கும் போது, பிச்சைக்காரி என்னைப் புன்சிரிப்புடன் திரும்பிப் பார்த்தாள். ஐயோ, அது புன்சிரிப்பா! எலும்பின் செங்குருத்துக்குள் ஐஸ் ஈட்டியைச் செருகியதுமாதிரி என்னைக் கொன்று புரட்டியது அது!

     என் மனைவியைக் கூப்பிட்டேன். அவள் வீட்டுக்குள் வருவது நல்லதற்கல்ல என்று சொன்னேன். இந்த அபூர்வத்தை வேலைக்காரியாக வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று ஒரேயடியாகப் பிடிவாதம் செய்தாள். மசக்கை விபரீதங்களுக்கு ஓர் எல்லை இல்லையா? என்னவோ படுஆபத்து என்றுதான் என் மனசு படக்குப் படக்கு என்று அடித்துக்கொண்டது. மறுபடியும் எட்டி அவள் பாதங்களைப் பார்த்தேன். எல்லோரையும் போல் அவள் கால்களும் தரையில்தான் பாவி நடமாடின. இது என்ன மாயப்பிரமை!

     தென்னாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முடியாது என்பதை நிரூபித்தான். ஆனால் என் மனைவி பிச்சைக்காரிகளையும் நம்மைப் போன்ற மனிதர்களாக்க முடியும் என்பதை நிரூபித்தாள். குளித்து முழுகி, பழசானாலும் சுத்தமான ஆடையை உடுத்துக் கொண்டால் யாரானாலும் அருகில் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருக்க முடியும் என்பது தெரிந்தது. வந்திருந்த பிச்சைக்காரி சிரிப்பு மூட்டும்படிப் பேசுவதில் கெட்டிக்காரி போலும்! அடிக்கடி 'களுக்' 'களுக்' என்ற சப்தம் கேட்டது. என் மனைவிக்கு அவள் விழுந்து விழுந்து பணிவிடை செய்வதைக் கண்டு நானே பிரமித்து விட்டேன். என்னையே கேலிசெய்து கொள்ளும்படியாக இருந்தது, சற்றுமுன் எனக்குத் தோன்றிய பயம்.

     சாயந்தரம் இருக்கும்; கருக்கல் நேரம். என் மனைவியும் அந்த வேலைக்காரியும் உட்கார்ந்து சிரித்துப் பேசியபடி கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் முன்கூடத்தில் விளக்கேற்றிவிட்டு ஒரு புஸ்தகத்தை வியாஜமாகக் கொண்டு அவளைக் கவனித்தவண்ணம் இருந்தேன். நான் இருந்த ஹாலுக்கும் அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையில் நடுக்கட்டு ஒன்று உண்டு. அதிலே நான் ஒரு நிலைக் கண்ணாடியைத் தொங்கவிட்டு வைத்திருந்தேன். அவர்களுடைய பிம்பங்கள் அதிலே நன்றாகத் தெரிந்தன.

     "நீ எங்கெல்லாமோ சுத்தி அலஞ்சு வந்திருக்கியே; ஒரு கதை சொல்லு" என்றாள் என் மனைவி.

     "ஆமாம். நான் காசி அரித்துவாரம் எல்லா எடத்துக்கும் போயிருக்கிறேன். அங்கே, காசியில் ஒரு கதையைக் கேட்டேன்; உனக்குச் சொல்லட்டா?" என்றாள்.

     "சொல்லேன்; என்ன கதை?" என்று கேட்டாள் என் மனைவி.

     "அஞ்சுநூறு வருச மாச்சாம். காசியிலே ஒரு ராசாவுக்கு ஒத்தைக் கொரு மக இருந்தா. பூலோகத்திலே அவளெப்போல அளகு தேடிப் புடிச்சாலும் கெடெக்காதாம். அவளெ ராசாவும் எல்லாப் படிப்பும் படிப்பிச்சாரு. அவளுக்குக் குருவா வந்தவன் மகாப் பெரிய சூனியக்காரன். எந்திரம், தந்திரம், மந்திரம் எல்லாம் தெரியும். அவனுக்கு இவமேலே ஒரு கண்ணு. ஆனா இந்தப் பொண்ணுக்கு மந்திரி மவனெக் கட்டிக்கிடணும்னு ஆசை.

     "இது அவனுக்குத் தெரிஞ்சுப்போச்சு; யாருக்குத் தெரிஞ்சுபோச்சு? அந்தக் குருவுக்கு..."

     என்ன அதிசயம்! நான் அவள் சொல்லிக்கொண்டிருக்கும் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா அல்லது கையில் உள்ள புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேனா? கையிலிருப்பது 'சரித்திர சாசனங்கள்' என்ற இங்கிலீஷ் புஸ்தகம். அதிலே வாராணசி மகாராஜன் மகளின் கதை என் கண்ணுக்கெதிரே அச்செழுத்துக்களில் விறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கையில் விரித்துவைத்த பக்கத்தில் கடைசி வாக்கியம், 'அந்த மந்திரவாதிக்கு அது தெரிந்துவிட்டது' என்ற சொற்றொடரின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு. மூளை சுழன்றது. நெற்றியில் வியர்வை அரும்பியது. என்ன, எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா! பிரித்துப் பிடித்து வைத்திருந்த பக்கத்திலேயே கண்களைச் செருகியிருந்தேன். எழுத்துக்கள் மங்க ஆரம்பித்தன.

     திடீரென்று ஒரு பேய்ச் சிரிப்பு! வெடிபடும் அதிர்ச்சியோடு என் மனசை அப்படியே கவ்வி உறிஞ்சியது. அதிர்ச்சியில் தலையை நிமிர்த்தினேன். எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது. எத்தனையோ மாதிரியான கோர உருவங்களைக் கனவிலும், சிற்பிகளின் செதுக்கிவைத்த கற்பனைகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு கோரத்தைக் கண்டதே இல்லை. குரூபமெல்லாம் பற்களிலும் கண்களிலுமே தெறித்தது. முகத்தில் மட்டும் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி. கண்களிலே ரத்தப் பசி! பற்களிலே சதையைப் பிய்த்துத் தின்னும் ஆவல். இந்த மங்கலான பிம்பத்துக்குப் பின்னால் அடுப்பு நெருப்பின் தீ நாக்குகள். வசமிழந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தோற்றம் கணத்தில் மறைந்தது; அடுத்த நிமிஷம் அந்தப் பிச்சைக்காரியின் முகமே தெரிந்தது.

     "உன் பெயர் என்ன என்று கேட்க மறந்தே போயிட்டுதே" என்று மனைவி கேட்பது எனது செவிப்புலனுக்கு எட்டியது.

     "காஞ்சனைன்னுதான் கூப்பிடுங்களேன். கதேலெ வர்ற காஞ்சனை மாதிரி. எப்படிக் கூப்பிட்டா என்ன! ஏதோ ஒரு பேரு" என்றாள் பிச்சைக்காரி.

     என் மனைவியைத் தனியாக அங்கு விட்டிருக்க மனம் ஒப்பவில்லை. என்ன நேரக்கூடுமோ? பயம் மனசைக் கவ்விக்கொண்டால் வெடவெடப்புக்கு வரம்பு உண்டா?

     நான் உள்ளே போனேன். இருவரும் குசாலாகவே பேசிக் கொண்டிருந்தனர்.

     வலுக்கட்டாயத்தின் பேரில் சிரிப்பை வருவித்துக் கொண்டு நுழைந்த என்னை, "பொம்பளைகள் வேலை செய்கிற எடத்தில் என்ன உங்களுக்காம்?" என்ற பாணம் எதிரேற்றது.

     காஞ்சனை என்று சொல்லிக் கொண்டவள் குனிந்து எதையோ நறுக்கிக் கொண்டிருந்தாள். விஷமம் தளும்பும் சிரிப்பு அவளது உதட்டின் கோணத்தில் துள்ளலாடியது. நான் வேறு ஒன்றும் சொல்ல முடியாமல் புஸ்தக வேலியின் மறைவில் நிற்கும் பாராக்காரன் ஆனேன். மனைவியோ கர்ப்பிணி. அவள் மனசிலேயா பயத்தைக் குடியேற்றுவது? அவளை எப்படிக் காப்பாற்றுவது?

     சாப்பிட்டோ ம். தூங்கச் சென்றோம். நாங்கள் இருவரும் மாடியில் படுத்துக் கொண்டோ ம். காஞ்சனை என்பவள் கீழே முன்கூடத்தில் படுத்துக் கொண்டாள்.

     நான் படுக்கையில் படுத்துத்தான் கிடந்தேன். இமை மூட முடியவில்லை. எப்படி முடியும்? எவ்வளவு நேரம் இப்படிக் கிடந்தேனோ? இன்று மறுபடியும் அந்த வாசனை வரப்போகிறதா என்று மனம் படக்கு படக்கென்று எதிர்பார்த்தது.

     எங்கோ ஒரு கடிகாரம் பன்னிரண்டு மணி அடிக்கும் வேலையை ஆரம்பித்தது.

     பதினோராவது ரீங்காரம் ஓயவில்லை.

     எங்கோ கதவு கிரீச்சிட்டது.

     திடீரென்று எனது கைமேல் கூரிய நகங்கள் விழுந்து பிறாண்டிக் கொண்டு நழுவின.

     நான் உதறியடித்துக்கொண்டு எழுந்தேன். நல்ல காலம்; வாய் உளறவில்லை.

     என் மனைவியின் கைதான் அசப்பில் விழுந்து கிடந்தது.

     அவளுடையதுதானா?

     எழுந்து குனிந்து கவனித்தேன். நிதானமாகச் சுவாசம் விட்டுக் கொண்டு தூங்கினாள்.

     கீழே சென்று பார்க்க ஆவல்; ஆனால் பயம்!

     போனேன். மெதுவாகக் கால் ஓசைப்படாமல் இறங்கினேன்.

     ஒரு யுகம் கழிந்த மாதிரி இருந்தது.

     மெதுவாக முன் கூடத்தை எட்டிப் பார்த்தேன். வெளிவாசல் சார்த்திக் கிடந்தது. அருகிலிருந்த ஜன்னல் வழியாக விழுந்த நிலா வெளிச்சம் காலியாகக் கிடக்கும் பாயையும் தலையணையையும் சுட்டிக் காட்டியது.

     கால்கள் எனக்குத் தரிக்கவில்லை. வெடவெடவென்று நடுங்கின.

     திரும்பாமலே பின்னுக்குக் காலடி வைத்து நடந்து மாடிப்படியருகில் வந்தேன். உயரச் சென்றுவிட்டாளோ?

     விடுவிடு என்று மாடிக்குச் சென்றேன்.

     அங்கே அமைதி.

     பழைய அமைதி.

     மனம் தெளியவில்லை.

     மாடி ஜன்னலருகில் நின்று நிலா வெளிச்சத்தை நோக்கினேன்.

     மனித நடமாட்டம் இல்லை.

     எங்கோ ஒரு நாய் மட்டும் அழுது பிலாக்கணம் தொடுத்து ஓங்கியது.

     பிரம்மாண்டமான வௌவால் ஒன்று வானத்தின் எதிர் கோணத்திலிருந்து எங்கள் வீடு நோக்கிப் பறந்து வந்தது.

     வெளியே பார்க்கப் பார்க்கப் பயம் தெளிய ஆரம்பித்தது. என்னுடைய மனப்பிரமை அது என்று நிதானத்துக்கு வந்தேன்.

     ஆனால் கீழே!

     மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.

     கீழே இறங்கினேன்.

     தைரியமாகச் செல்ல முடியவில்லை.

     அதோ! காஞ்சனை பாயில் உட்கார்ந்துதான் இருக்கிறாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். விஷச் சிரிப்பு. உள்ளமே உறைந்தது. நிதானமாக இருப்பதைப் போலப் பாசாங்கு செய்து கொண்டு, "என்ன, தூக்கம் வரவில்லையா?" என்று முணுமுணுத்துக்கொண்டே மாடிப் படிகளில் ஏறினேன்.

     அப்பொழுது சாம்பிராணி வாசனை வந்ததா? வந்தது போலத் தான் ஞாபகம்.

     நான் எழுந்திருக்கும்போது நெடுநேரமாகிவிட்டது.

     "என்ன, வரவரத்தான், இப்படித் தூங்கித் தொலைக்கிறக; காப்பி ஆறுது!" என்று என் மனைவி எழுப்பினாள்.

     இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத்தான் தோன்றுகிறது. ஆனால், மனசின் ஆழத்திலே அந்தப் பயம் வேரூன்றிவிட்டது. இந்த ஆபத்தை எப்படிப் போக்குவது?

     தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை, தன்னைத் தேற்றிக் கொள்வதற்காக வேறு யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியுமா? அதே மாதிரிதான் இதுவும், என்னைப் போன்ற ஒருவன், ஜன சமுதாயத்துக்காக இலக்கிய சேவை செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் ஒருவன், "ஸார், எங்கள் வீட்டில் புதுசாக ஒரு பேய் குடிவந்துவிட்டது. அது என் மனைவியை என்ன செய்யுமோ என்று பயமாக இருக்கிறது; ஆபத்தைப் போக்க உங்களுக்கு ஏதாவது வழி தெரியுமா?" என்று கேட்டால், நான் நையாண்டி செய்கிறேனா அல்லது எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்றுதான் சந்தேகிப்பான். யாரிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வழி தேடுவது? எத்தனை நாட்கள் நான் பாராக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும்?

     இது எந்த விபரீதத்தில் கொண்டு போய் விடுமோ? சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். என் மனைவிக்கு அந்தப் புதிய வேலைக்காரி என்ன சொக்குப்பொடி போட்டுவிட்டாளோ? அவர்கள் இருவரும் மனசில் துளிக்கூடப் பாரமில்லாமல் கழித்துவிட்டார்கள்.

     இன்றைப் பார்த்துப் பகலும் இராத்திரியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. இவ்வளவு வேகமாகப் பொழுது கழிந்ததை நான் ஒரு நாளும் அநுபவித்ததில்லை.

     இரவு படுக்கப் போகும்போது என் மனைவி, "காஞ்சனை, இன்றைக்கு மாடியிலேயே நமக்கு அடுத்த அறையில் படுத்துக் கொள்ளப் போகிறாள்" என்று கூறிவிட்டாள். எனக்கு மடியில் நெருப்பைக் கட்டியது போல ஆயிற்று.

     இது என்ன சூழ்ச்சி!

     இன்று தூங்குவதே இல்லை. இரவு முழுவதும் உட்கார்ந்தே கழிப்பது என்று தீர்மானித்தேன்.

     "என்ன படுக்கலியா?" என்றாள் என் மனைவி.

     "எனக்கு உறக்கம் வரவில்லை" என்றேன். மனசுக்குள் வல் ஈட்டிகளாகப் பயம் குத்தித் தைத்து வாங்கியது.

     "உங்கள் இஷ்டம்" என்று திரும்பிப் படுத்தாள். அவ்வளவுதான். நல்ல தூக்கம்; அது வெறும் உறக்கமா?

     நானும் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போனேன்.

     சற்றுப் படுக்கலாம் என்று உடம்பைச் சாய்த்தேன்.

     பன்னிரண்டு மணி அடிக்க ஆரம்பித்தது.

     இதென்ன வாசனை!

     பக்கத்தில் படுத்திருந்தவள் அமானுஷ்யக் குரலில் வீரிட்டுக் கத்தினாள். வார்த்தைகள் ரூபத்தில் வரும் உருவற்ற குரல்களுக்கு இடையே காஞ்சனை என்ற வார்த்தை ஒன்றுதான் புரிந்தது.

     சட்டென்று விளக்கைப் போட்டுவிட்டு அவளை எழுப்பி உருட்டினேன்.

     பிரக்ஞை வரவே, தள்ளாடிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். "ஏதோ ஒன்று என் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சின மாதிரி இருந்தது" என்றாள் கண்களைத் துடைத்துக் கொண்டு.

     கழுத்தைக் கவனித்தேன். குரல்வளையில் குண்டூசி நுனி மாதிரி ரத்தத்துளி இருந்தது. அவள் உடம்பெல்லாம் நடுங்கியது.

     "பயப்படாதே; எதையாவது நினைத்துக் கொண்டு படுத்திருப்பாய்" என்று மனமறிந்து பொய் சொன்னேன்.

     அவள் உடம்பு நடுநடுங்கிக் கொண்டிருந்தது. மயங்கிப் படுக்கையில் சரிந்தாள்.      அதே சமயத்தில் வெளியில் சேமக்கலச் சபதம் கேட்டது.

     கர்ணகடூரமான குரலில் ஏதோ ஒரு பாட்டு.

     அதிகாரத் தோரணையிலே, "காஞ்சனை! காஞ்சனை!" என்ற குரல்.

     என் வீடே கிடுகிடாய்த்துப் போகும்படியான ஓர் அலறல்! கதவுகள் படபடவென்று அடித்துக் கொண்டன.

     அப்புறம் ஓர் அமைதி. ஒரு சுடுகாட்டு அமைதி.

     நான் எழுந்து வெளிவாசலின் பக்கம் எட்டிப் பார்த்தேன்.

     நடுத்தெருவில் ஒருவன் நின்றிருந்தான். அவனுக்கு என்ன மிடுக்கு!

     "இங்கே வா" என்று சமிக்ஞை செய்தான்.

     நான் செயலற்ற பாவை போலக் கீழே இறங்கிச் சென்றேன்.

     போகும்போது காஞ்சனை இருந்த அறையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. நான் எதிர்பார்த்தபடியேதான் இருந்தது. அவள் இல்லை.

     தெருவிற்குப் போனேன்.

     "அம்மா நெத்தியிலே இதைப் பூசு. காஞ்சனை இனிமேல் வர மாட்டாள். போய் உடனே பூசு. அம்மாவை எளுப்பாதே" என்றான்.

     விபூதி சுட்டது.

     நான் அதைக் கொண்டுவந்து பூசினேன், அவள் நெற்றியில். அது வெறும் விபூதிதானா! எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. அவன் கையில் சேமக்கலம் இல்லை என்பதும் ஞாபகம் இருக்கிறதே!

     மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.

     காலையில் காப்பி கொடுக்கும்போது, "இந்த ஆம்பிளைகளே இப்படித்தான்!" என்றாள் என் மனைவி. இதற்கு என்ன பதில் சொல்ல?

கலைமகள், ஜனவரி 1943

Oct 30, 2010

வண்ணநிலவனின் 'எஸ்தர் ' இலக்கிய அனுபவம் -விக்ரமாதித்யன்

தமிழில் நிறையவே சிறுகதைகள் வருகின்றன. இப்படிச்சொல்வது பத்திரிக்கைக் கதைகளை மனதில் கொண்டு இல்லை. இலக்கிய சிறுகதைகளையே குறிப்பிடுவதாம்.

vikraman1இவ்வளவு காலத்துக்குப் பிறகு, நமது இலக்கிய சஞ்சிகைகளில் சம்பவக் கதைகள், நடைச் சித்திரக் கதைகள், இந்த இடத்தில் தொடங்கி இந்த இடத்தில் முடிகிற கதைகள், ஓ ஹென்றி முடிவுக் கதைகள், வட்டார இலக்கிய பம்மாத்துக் கதைகள், ஐரோப்பிய இலக்கியப் பாதிப்புக் கதைகள்,  (இப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கப் பாதிப்புக் கதைகளுக்குத் தான் மவுசு) உள்ளூர் பாதிப்புக் கதைகள், போலி முற்போக்குக் கதைகள், ஆண்-பெண் சினேகக் கதைகள், வேலையில்லாத் திண்டாட்டக் கதைகள், வரதட்சிணைக் கொடுமைக் கதைகள், பெண்ணிணக் கதைகள், குடும்பக்கதைகள், கோபம் கொண்ட இளைஞர்களின் அபத்தக் கதைகள், நேர்கோட்டில் இல்லாதக் கதைகள் இப்படி இரண்டாயிரம் வருஷத்துக்கும் போதுமான சிறுகதைகள் தமிழில் வந்து குவிந்து விட்டன.

இவ்வளவு சிறுகதைகளுக்கும் மத்தியில் சுயம்புவான, கலாபூர்வமான ஆழமும் வீச்சும் கொண்ட படைப்புக்களை புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி, சம்பத், நகுலன், அசோகமித்திரன், சார்வாகன், சுந்தர ராமசாமி, ஆர்.ராஜேந்திர சோழன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, பிரபஞ்சன், கோணங்கி, ஜெயமோகன், வண்ணநிலவன் முதலானோர் எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன. இலக்கிய உன்னதம், மொழி வளர்ச்சியெல்லாம் இத்தகைய எழுத்துக்கலைஞர்களையே சார்ந்திருக்கிறது. இவர்களே உண்மையில் படைப்பிலக்கிய வாதிகளாகவும் புதிது செய்து சாதிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.

புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும். எதார்த்தச் சிறுகதையில் தொடக்கம் பெற்று, வாழ்வின் நுட்பமான அம்சங்களைக் காண்பிக்கிறதாக ஆகி, சோதனை ரீதியான எழுத்து என்று தொடர்ந்த வளர்ச்சி கொண்டவை இவர் கதைகள். எஸ்தர் தொகுப்புக்கும் பாம்பும் பிடாரனும் தொகுப்புக்குமிடையே தெரியும் வித்தியாசம் நல்ல படைப்பாளியின் இயல்பான மாற்றம்.

எழுதுவது பெரிதில்லை. அது சிறுகதைக்கு வளம் சேர்ப்பதாக அமைவது முக்கியம். அதைச் சாதித்தவர்களில் முக்கியமான ஒருவர் வண்ணநிலவன். எஸ்தர், அழைக்கிறவர்கள், துக்கம், தருமம், அரெபியா, பிணத்துக்காரர்கள், பாம்பும் பிடாரனும் முதலான இவர் கதைகள் தமிழ்ச்சிறுகதையில் ஒரு தனி இடம் வகிப்பவை. இதுவரையுள்ள கதைபோல இல்லாதிருப்பதே ஒரு கதையின் விசேஷத் தகுதி, உயர்வு. இந்தக் கதையை இன்னொருவர் எழுதியிருக்க முடியாது என்று, நினைக்க வைக்கிற தனித்தன்மையே ஒரு படைப்பாளிக்குப் பெருமை. வண்ணநிலவன் கதைகள் அத்தகையவை.

வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதை தமிழ்ச்சிறுகதை இலக்கியத்திலேயே மிக முக்கியமான ஒன்று. கிறித்துவ வாழ்க்கைப் பின்புலத்தில் இலக்கியமாகி நிற்கிற எழுத்து.

'முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று '

-கதையின் முதல்வாக்கியம்

'வெகுகாலம் அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள் ' -கடைசி வாசகம்.

இதற்கு நடுவே கதை. தென்கோடிக் கிராமம் ஒன்றில் மழை பொய்த்துப் போய் வறட்சியுண்டாகும் போது, ஒரு எளிய கிறித்தவக் குடும்பம் எதிர் கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சினையே கதையின் மையம்.

குறுநாவலாகத் தெரிகிற இதன் கதை வெளிப்படையானது. முடிவு தவிர்த்து. பாத்திரங்களைத் தன் போக்கில் காண்பித்துக் கொண்டு போவதும், அவர்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை விஸ்தாரமாக விவரிப்பதும், காட்சிகளை அடுத்தடுத்து சித்தரிப்பதுமாக வளர்கிறது கதை.

அந்தக் குடும்பம் இனிமேலும் ஊரில் இருக்க முடியாது என்கிற நிலைக்குள்ளாvannanilavanகும்போது, பஞ்சம்  பிழைக்க வெளியேறிப் போக வேண்டியிருக்கிறது. நடமாட முடியாத, காது கேளாத, கண் சரியாகத் தெரியாத பாட்டியை என்ன செய்வது ? இதுதான் பிரச்சினை.

அகஸ்டின், டேவிட், பெரிய அமலம், சின்ன அமலம், ஈசாக், பாட்டி, எஸ்தர் - இவர்கள்தாம் கதை மாந்தர்.

அகஸ்டின் மூத்தவன். எதிலும் இவனை நம்பி எதுவும் செய்யமுடியாது. அமைதியானவன்போல எப்போதும் திண்ணையையே காத்துக் கிடப்பான். ஆனால் உள்ளூர அப்படியல்ல. சதா சஞ்சலப்பட்டவன்.

அடுத்து டேவிட்.

பெரிய அமலம் ஒரு பெரிய குடிம்பத்தின் முதல் பெண்ணாகப் பிறந்தவள். மிகவும் அப்பிராணி. அதிகம் பேசாதவள். தனக்கென எதையும் ஸ்தாபித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையில்லாதவள்.

சின்ன அமலம் இதற்கு எதிரிடையான குணமுடைய பெண்.

ஈசாக் விசுவாசமான ஊழியன். அவனுடைய உலகம் காடு. விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும் ஆடு, மாடுகளுக்காகவுமே உலகத்தில் வாழ்கின்றவன்.

எஸ்தர் இவ்வளவு பெரிய குடும்பத்தை நிர்வகித்து வருகிறவள்.

பாட்டி ஒரு காலத்தில் எல்லோரையும் சீராட்டினவள். இப்போது உபயோகம் இல்லாதவள். பிழைக்கப்போகிற இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போக முடியாது இருப்பவள்.

முன்னெல்லாம் சாப்பாட்டு நேரம் அந்த வீட்டில் ஆனந்தமாக இருந்தது. இப்போது நெல் அரிசிச் சோறு கிடைக்கவில்லை. கம்பையும் கேப்பையும் கொண்டுதான் சமையல்.

பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள். மேலத்தெருவில் ஆளே கிடையாது. இனிமேல் இந்த ஊரில் என்ன இருக்கிறது ? சாத்தாங்கோயில்விளையிலும் திட்டி விளையிலும் மாட்டைவிட்டு அழித்தாயிற்று. கூழ் காய்ச்சவும் வீட்டுச் செலவுக்கும் வரவரத் தண்ணீர் கிடைப்பது அருகிவிட்டது.

காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும் இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சதங்கை சத்தமும் கண் முன்னாலேயே கொஞ்சகாலமாய் மறைந்துவிட்டன.

'நீயும் உனக்குப் பிரியமானவர்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறே வழியென்ன ? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீர்களா ? '-எஸ்தர் சித்திக்கு இருட்டு சொன்னது.

யாருக்குமே பற்றாத சாப்பாட்டைத் தட்டுகளில் பறிமாறினாள் எஸ்தர் சித்தி. குழந்தைகளுக்கும் கூடப் போதாத சாப்பாடு.

'நீங்க ரெண்டுபேரும் ஒங்க வீடுகளுக்குப் போய்க்கிங்க. புள்ளையளயுங் கூட்டிட்டுப் போங்க ' - பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் பார்த்துச் சொல்கிறாள் எஸ்தர் சித்தி.

'நீங்க ரெண்டுபேரும் எங்கூட வாங்க. மதுரையில போய்க் கொத்தவேல பார்ப்போம். மழை பெய்யுந்தன்னியும் எங்ஙனயாவது காலத்த ஓட்ட வேண்டியதுதானே! ஈசாக்கும் வரட்டும். '

'பாட்டி இருக்காள ? '

- டேவிட் கேட்கிறான்.

பதிலே சொல்லவில்லை எஸ்தர்.

அன்றைக்கு ராத்திரியில் சுமார் ஒரு மணிக்கும் மேல் வறட்சியான காற்று வீச ஆரம்பித்தது. அப்போது நடுசீட்டில் குழந்தைகளிடத்தில் படுத்திருந்த எஸ்தர் சித்தி எழுந்து போய்ப் பாட்டியின் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்....

***

பாட்டியைக் கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிறதுக்கு, பக்கத்து ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப்பெட்டியை மிகவும் சொல்பமான விலைக்கு, ஈசாக்கே தலைச்சுமையாக வாங்கிக் கொண்டு வந்தான்...

யாரும் அழவே இல்லை. மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய கலவரமான முகங்கள் காட்டின...

எஸ்தர் சித்திக்கு மட்டும், பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலைகுத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது..

***

கண்களில் இமைகளைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருந்தது பாட்டிக்கு. எஸ்தர் சித்தி வீட்டில் எல்லோரும் தூங்கியானபிறகு அடிக்கடி கைவிளக்கைத் தூண்டிக் கொண்டுவந்து பார்ப்பாள். அந்த வெளிச்சத்தில், அவள் கண்களின் ஈரத்துக்குப் பின்னே அழியாத நம்பிக்கை இருக்கும்...

இவ்வளவு தீவிரமாக நம்பிக்கைகொண்டு உறக்கமின்றிக் கூரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறவளை விட்டுவிட்டுப் போவதைத் தவிர வழி என்ன ? ஈசாக் துணையாக இருப்பானா ?

***

பாட்டியை என்ன செய்வதென்ற பிரச்சனையை எஸ்தர் சித்திதான் எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது. எதிர் கொள்கிறாள். தீர்த்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. தீர்த்து வைக்கிறாள். பாட்டியின் இருப்பு இவர்கள் பஞ்சம் பிழைக்கப் போகிறதற்கு முன் கேள்வியாகிறது. அதற்கு ஒரு விடை காண வேண்டியதிருக்கிறது. அந்தக் குடும்பத்தில் எஸ்தர் சித்தி ஒருத்திதான் இதை எதிர் கொண்டு சமாளிக்கத் திராணி கொண்டவளாக இருக்கிறாள். கடினச் சித்தம் கொண்டு பாட்டியின் இருப்பை முடித்து வைக்கும்படி ஆகிறது அவளுக்கு.

காலில் காயம்பட்டு ஓட முடியாத பந்தயக்குதிரை சுட்டுக் கொல்லப்படுகிறது. அதன் இருத்தல் அர்த்தமற்றதாகப் போகையில் இப்படி முடிவு நேர்கிறது. குணப்படுத்தமுடியாத நோயின் கொடுமைக்கு ஆளாகிற உயிர், போரில் குண்டடிபட்டு பிழைப்பது கஷ்டம் என்கிற அலவுக்குள்ளாகும் சிப்பாய் இவர்களுக்கெல்லாம் Mercy Killing இருக்கிறது. இதே போல பாட்டிக்கும்.

வண்ணநிலவன் அதிகமான அன்பை பிரசாரம் செய்பவர், பொதுவில். இங்கே இப்படியாக இருக்க நேரும் 'அன்பு '. பாட்டியை என்ன செய்வது ? விட்டுவிட்டுப் போகவும் முடியாது. பிறகு என்ன செய்யலாம். 'கருணைக் கொலை 'தான் செய்யத் தோன்றுகிறது எஸ்தர் சித்திக்கு. வேறே வழியில்லை. அவள் பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் அவர்கள் பிறந்த வீட்டுக்குப் போகச் சொல்லிவிடுகிறாள். அகஸ்டினையும் டேவிட்டையும் ஈசாக்கையும் பஞ்சம் பிழைக்கக் கூட்டிக்கொண்டு போக முடிவு செய்கிறாள். பாட்டியை என்ன செய்வாள் ?

பாட்டியின் முடிவு சூசகமாகத்தான் காண்பிக்கப் படுகிறது. சிலவற்றை பூடகமாகத்தான் பேச வேண்டியிருக்கிறது. அந்த உயிரின் 'விடுதலை ' அப்படியானது.

படிக்காத பெண்ணின் ஜெபம், வாய்க்காலுக்கு அப்பால் வளராத ஊர், இளநீல வர்ணச் சுவர்கள், ஒரு வெள்ளை வெயில், உயிர் பெற்றுவிட்ட இருட்டு, ஆட்டுபிழுக்கை மணம் கலந்த காற்று, ரயில்வே ஸ்டெஷனில் தண்ணீர் பிடிப்பது, தண்டவாளத்தின் மீதேறி மந்தையாக கடந்து போகும் ஆடுகள் - காட்சிச் சித்தரிப்புகளெல்லாமே கதையம்சத்தில் கலந்திருப்பவை.

வழக்கமான கதையைக் காட்டிலும் இதில் விவரணங்கள், தகவல்கள் அதிகப்பங்கு வகிக்கின்றன. இவை கதையை தீவிர கதிக்கு இட்டுச் செல்வதாகவே அமைந்திருக்கின்றன.

நிறைய பாத்திரங்களும் அநேக விஷயங்களும் உள்ள இக்கதையின் உருவொழுங்கு சிதையாது, உருவ அமைதி கெடாது இருப்பது உண்டுபண்ணிக் கொண்டதாக இருக்க முடியாது. தன்னியல்பில் கூடிவந்ததாகவே இருக்கவேண்டும்.

இந்தக் கதையின் நடை 'கடல்புரத்தில் ' போல பைபிள் நடையில்லை யெனினும் பெரிதும் அதன் சாயலினான அமைதியும் எளிமையும் உள்ளது. அவனூர், அண்டை வீட்டார் கதைகளைவிடவும் பைபிள் சாயல் குரைவு.

இல்லாமையில் நேர்கிற நொம்பலங்கள், வறுமை, தரித்திர நிலையில் இருக்கும்படியான வாழ்வு, இவற்றைச் சரியாகச் சொல்கிற படைப்புகள், தமிழில் மிகமிகச் சொற்பம். இவை கலை இலக்கியமாவது கஷ்டம் என்பதோடு, சரியாக எழுதுபர்கள் இல்லை என்பதும் இன்னொரு உண்மை. எஸ்தர் இலக்கியமாகியிருக்கிறது என்றால், இதன் பின்னணியில் இந்தக் கலைஞனுக்கு இருக்கும் இது போன்ற வாழ்பனுபவமே காரணம். அனுபவ வறுமை யுள்ளவன் ஒருநாளும் கலைஞனாக மாட்டான். நிறையச் செய்யலாம். செய்து ?

இலக்கியம் செய்வது இல்லை. படைப்பது. எஸ்தர் - படைப்பு. படைப்பாளிகளாக விரும்பும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டிய படைப்பு.

***

பிரான்ஸிலிருந்து வெளிவரும் மெளனம்- கலை இலக்கிய இதழிலிருந்து. 1994

***

Oct 29, 2010

மூன்று பெர்னார்கள் - பிரேம் - ரமேஷ்

1988ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் பிற்பகல் இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில், புதுச்சேரி கடற்கரையோர மதுபான விடுதியான கடற்காகத்தில் மேல்மாடியில் பருகி முடிக்கப்படாத இறுதி மிடறு மேசை மீதிருக்க, கூடை வடிவ பிரம்பு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ழான் பெர்னாரின் உயிர் பிரிந்திருந்தது.
குழியில் பலகை மீது விழுந்த ஈர மண்ணின் முதல் பிடி ஒலியைத் தொடர்ந்து வெவ்வேறு ramesh-prem கைப்பிடி அளவுகளில் ஓசைகள் எழுந்தன. இடையே மண் குவியலில் மண்வெட்டி உரசும் சப்தம். இடம் மாறும் காலடிகளின் ஓசை, கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே வாகனங்கள் எழுப்பும் இரைச்சல்களும் அடங்கிவிட, சற்றுமுன் மணியோசையில் அதிர்ந்து கோபுரத்தை விட்டுப் பறந்த புறாக்கள் மீண்டும் வந்தடையும் சிறகோசை. எல்லாம் முடிந்துவிட்டது. ஆம் அவரைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. அறுபது ஆண்டுகள் ஆறு மாதங்கள் பதினேழு நாட்கள் வாழ்ந்து முடித்தாகிவிட்டது. நீர் கலக்காத இறுதி மிடறு மது மெல்ல மெல்ல ஆவியாகிக் கொண்டிருந்தபோது ழான் பெர்னாரும் உடன் ஆவியாகி அற்றுப் போயிருந்தார்.
கொட்டும் மழையில் ஆளரவமற்ற புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நனைந்தபடி மெல்ல நடந்து செல்வது போன்ற சுகம் போகத்தில்கூட இல்லை எனச் சொல்லும் பெர்னாரை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் நனைந்தபடி நடந்துகொண்டிருக்கும்போது முதன்முதலாக எதிர்கொண்டு ஒருவருக்கொருவர் அறிமுகமானோம்.
நெடிய உருவம். தமிழனா ஐரோப்பியனா என அறுதியிட இயலாதத் தோற்றம். கட்டுத் தளராத குரல். பிரெஞ்சு மொழி பேசிப் பழகிய வாய்க்கே உரித்தான கரகரப்போடு வெளிப்படும் தமிழ். எந்தவொரு அசைவிலும் அவசரங்காட்டாத ஒரே சீரான தாள கதி. பெர்னாரை இத்தனை சீக்கிரத்தில் இழந்துவிடுவேன் என நான் நினைத்ததில்லை.
கப்பித்தேன் மரியூஸ் ஸவியே தெருவில் வெளித்தோற்றத்தில் காரை பெயர்ந்து இடிந்து கிடக்கும் சுவர்களைக் கொண்ட அவருடைய வீட்டின் உள்தோற்றம் அத்தனை மோசமில்லை. வரவேற்பறைச் சுவரில் வெள்ளைக்காரத் தந்தையுடன் கம்மல் மூக்குத்தி அணிந்து குங்குமமிட்ட நெற்றியுடன் தமிழ்க் கிறித்துவ அன்னை. கருப்பு வெள்ளைப் புகைப்படம் தேக்குச் சட்டமிடப்பட்டு பெரிய அளவில் தொங்கிக் கொண்டிருக்க, எதிர் மூலையின் வலப்பக்கத்தில் இலைகளைக் கழித்துவிட்டு நட்ட சிறு மரம்போல தொப்பிகளை மாட்டிவைக்கப் பயன்படும் மரத்தாலான ஒரு பொருள். பெர்னார் குடும்பத்தினரின் பல்வேறு வடிவங்கள் கொண்ட தொப்பிகள். பல தொப்பிகள் தங்களுக்கானத் தலைகளை என்றோ இழந்துவிட்டதன் சோகத்தை என்னைக் கண்டதும் மீண்டும் பொருத்திக்கொண்டு அசைந்தன. உள்கட்டுக்குள் நுழைந்ததும் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் மிகப் பெரிய வண்ண ஓவியம். தரையிலிருந்து சுவரில் சாய்ந்த நிலையில் நின்ற வெள்ளாடையுருவத்தின் காலடியில் பணிப்பெண் வைத்துவிட்டுச் செல்லும் நான்கைந்து செம்பருத்திகள். அதற்கடுத்து சிறு நடையைத் தாண்டி வலப்பக்கமும் இடப்பக்கமும் இரண்டு அறைகள். இடப்பக்கம் படுக்கையறை. வலப்பக்கம் அவருடைய பூசையறை என்று சொன்னார். கதவிற்கும் நிலைச் சட்டத்திற்குமான ஒட்டடைகள் அடர்ந்திருந்த நிலையில், புழக்கமற்ற அந்த அறையை பூசையறை என்கிறாரே என அப்பொழுது நினைத்துக்கொண்டேன். ஒரு முறை பகலில் நான் அங்கிருந்தபோது பணிப்பெண்ணை அழைத்து வலப்பக்க அறைக் கதவைச் சுத்தம் செய்யச் சொன்னேன். அதற்கு அவள், ‘மெர்ஸ்யே திட்டுவாரு’ எனச் சொல்லிவிட்டுச் சென்றது எனக்கு விநோதமாக இருந்தது.
பெர்னாரின் வினோதமான பழக்கவழக்கங்களையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் கேட்டு ரசிப்பதில் என் மனைவிக்கு அலாதியான விருப்பம் இருந்தது.
ஒருமுறை என் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த பெர்னார் ஒயினில் தனது சுருட்டுச் சாம்பலையிட்டுக் கலக்கி அருந்தியதைக் கண்ட நாங்கள் எல்லோருமே திடுக்கிட்டோம். மேலும் அவர் புகையிலை ஊறிய ஒயினை அருந்துவதற்கு ஈடான ருசியும் போதையும் வேறெவற்றிலும் இல்லை எனவும் சொல்வார்.
பெர்னாரை நான் அடிக்கடி சந்திப்பது போய் தினமும் ஒவ்வொரு மாலையும் அவருடன் கழிவதையும், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதையும் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்த என் மனைவிக்கு அவரின் மேல் சிறு கோபமும் வெறுப்பும் மெல்ல வளரத் தொடங்கியது.
பிரான்சிலிருக்கும் தன் வெள்ளைக்கார மனைவி குறித்தும் தன்னுடைய மகனைக் குறித்தும் பெர்னார் அடிக்கடி குறிப்பிடுவார். விவாகரத்து செய்துகொள்ளாமலேயே மிக இளம் வயதிலிருந்தே தாங்கள் பிரிந்து வாழ்வதாகவும் சொன்னார். மகன் ஆண்டுக்கு ஒரு முறை வந்துத் தன்னைப் பார்த்துவிட்டுச் செல்லும் பழக்கமும் நாளடைவில் குறைந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
எனக்கு எப்பொழுதுமே பிறருடைய வாழ்க்கை பற்றிய செய்திகளில் ஈடுபாடு இருந்ததில்லை. பெர்னாருடைய வாழ்க்கைக் கதையில் எனக்குத் தேவைப்படுவது எதுவுமே இல்லை என்றபோதும், என் மனைவிக்கு உதவுமே என அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வேன்.
அப்படித்தான் ஒருமுறை அவர் சொன்னார்: தனது வெள்ளைக்காரத் தகப்பனான ஃப்ரான்சுவா பெர்னாருக்கும் வடலூர் வள்ளலாருக்கும் இடையே ஆழமான பக்திப் பிணைப்பு இருந்தது என்று. வள்ளலார் என்னுடைய சாதியைச் சார்ந்த மாபெரும் யோகி என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. பெர்னாரின் அன்னையும் என் சாதியைச் சார்ந்த கிறித்துவர் என அறிய வந்தபோது, எங்களுக்குள் சாதிய நெருக்கமும் வளர்ந்துவிட்டதை தவிர்க்க முடியவில்லை.
வள்ளலாரைப் பற்றிய ஒரு பேச்சின்போது பெர்னார் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. வள்ளலார் தான் நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிர் வாழப் போவதாகச் சொன்னபடி அந்த நீண்ட ஆயுளை வாழ்ந்து முடித்தவர் எனச் சொன்னார். கிழம் போதையேறி உளறுகிறது என அசிரத்தையோடு கேட்டுக் கொண்டிருந்தேன். தனக்குப் பத்து வயது ஆகும்போதுதான் அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டில்தான் அந்தச் சுடர் அணைந்தது என அவர் சொன்னதை என் மனைவியிடம் சொல்ல; தயவு செய்து இனி குடித்துவிட்டு மகான்களைப் பற்றி பேசவேண்டாம் என கடுமையோடு முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.
ஒருமுறை பெர்னாரிடம் நான் கேட்டேன், “உங்களுடைய வீட்டின் எல்லா இடத்திலும் நான் புழங்கி வருகிறேன். உங்களுடைய பூசையறையை மட்டும் இதுவரை எனக்குத் திறந்து காட்டவில்லையே” என்று. அதற்கு அவர் நெடுநேரம் மௌனமாக இருந்தார். பிறகு நிதானமாக, “வாழ்க்கையில் வினோதமும் யதார்த்தமற்ற போக்கும் மிக அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமான புனைவு எப்படி அவசியமோ அதுபோலவே நிச்சயமற்ற புனைவும் அவசியம்” என்று பிரெஞ்சு மொழியில் சொன்னார். பிறகு அதையே தமிழிலும் சொல்ல எத்தனித்து சரியான சொற்கள் வந்து சேராமல் குழறினார்.
அவர் வீட்டில் குழல் விளக்குகளை பயன்படுத்துபவர் அல்லர். எல்லாயிடங்களிலும் குண்டு விளக்குகளையே பொருத்தியிருந்தார். வீட்டின் பழமையும் குண்டு விளக்கின் ஒளியும் நல்ல போதையில் ஒருவித மாயப் புதிரென மனசெல்லாம் படியும். அப்படித்தான் அன்றும் இருந்தது. மஞ்சள் மின்னொளியில் வள்ளலாரின் ஓவியம் உயிரும் சதையுமாக நிற்பதைப் போலவே இருந்தது. நான் பெர்னாரிடம் சொன்னேன், “வள்ளலார் இறக்கவில்லை. அவர் மறைந்துவிட்டார். சித்தர்கள் என்றைக்குமே அழிவற்றவர்கள். நம்மோடு என்றைக்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள்.”
பெர்னார் கடகடவென சிரித்து “போதையில் உனது பிரெஞ்சு மொழி அப்படியொன்றும் மோசமில்லை” என பகடி செய்தபடி என் பேச்சை மாற்ற அவர் எத்தனிப்பதாகத் தெரிந்தது.
நான் கடுப்பாகிப் போனேன். “வள்ளலாரை உமது குடும்பச் சொத்துப்போல பேசுகிறீரே உமது பொய்யுக்கும் ஒரு அளவு வேண்டாமோ” எனக் கத்திவிட்டேன்.
கிழவர் ஆடிப்போய்விட்டார். தன்னிலைக் குலைந்த அவர் விருட்டென எழுந்துசென்று ஒரு பெரிய சாவியை எடுத்துவந்து பூசையறையைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு வந்து என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பூசையறைக்குள் சென்றார். பிறகு நடந்தவைகளெல்லாம் எனக்கு நிச்சயமற்றுத் தெரிகின்றன. என் மனைவியிடன் நான் அதைச் சொல்ல அவள் கலவரத்தோடு என் மனோநிலையைச் சோதித்தாள். அந்தக் கிழவரோடுச் சேர்ந்து நீங்களும் பயித்தியமாகிவிட்டீர்கள் எனக் கத்தினாள். இனி நான் அவரைச் சந்திக்கக்கூடாது என என் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். அதற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து கிழவர் இறந்த செய்தியைக் கேட்டுத்தான் நான் அவர் வீட்டுக்குப் போனேன். ஒருவாரம் அவர் உடல் ஜிப்மர் சவக்கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. மகன் பிரான்சிலிருந்து வந்த பிறகு ஈமக்கிரியையை முடித்தனர். பெர்னாரின் மனைவி வரவில்லை.
ழாக் பெர்னார் இளவயது கிழவரைப் போலவே இருந்தான். என்னை விட இரண்டு வயது இளையவன். என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசினான். தான் இந்த வீட்டை இடித்துவிட்டு பெரிய அடுக்குமாடி கட்ட இருப்பதாகவும் நான்தான்  அவனுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டான். நான் கலவரப்படலானேன்.
“கடைசி காலத்தில் அப்பாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறீர்கள். அவருடைய பூசையறையின் மர்மம் பற்றியும் அறிந்திருப்பீர்கள்தானே” என ஒருவிதக் கிண்டல் தொனிக்கும்படி கேட்டான்.
நான் மௌனமாக இருந்தேன்.
“சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒரு சாமியாரின் பிணத்தை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார். இதனால்தான் என் அம்மா இவரைப் பிரிந்து என்னை அழைத்துக் கொண்டு பிரான்சுக்கே போய்விட்டார். என் தாத்தா காலத்துப் பிணம். இன்னும் சவப்பெட்டிக்குள் கிடக்கிறது. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்.”
நான் கண்களை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தேன். பதப்படுத்தப்பட்ட அந்த உடலை பெட்டியோடு எடுத்துவந்து நாம் வைத்துக்கொள்ளலாமா என என் மனைவியிடம் கண்கள் கலங்கக் கேட்டேன்.
அவள் என்னைப் பச்சாதாபத்தோடுதான் பார்த்தாள் என்றாலும் அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியாமல் தவித்தேன்.
“நான் உங்களுடன் வாழ்வதா வேண்டாமா?” என அமைதியாகக் கேட்டுவிட்டு விருட்டென எழுந்து சென்று படுக்கையறைக் கதவை அடைத்துக்கொண்டாள்.
மறுநாள் ழாக் பெர்னாரைச் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் “என்ன முடிவு செய்தீர்கள்” எனப் பதறினான்.
”அரசிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை. அரசாங்கமும் பத்திரிகை மீடியாவும் நம்மை கேள்விகேட்டுத் தொலைத்துவிடும். அந்த உடம்பின் ரகசியத்தை வெளிப்படுத்தினால் அது சமயப் பிரச்சினையாகி அது என் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்தப் பிணம் ஒரு சாமியார் மட்டுமல்ல, இந்திய ஆன்மீகத்தின் ஒரு சிகரம். பிரெஞ்சுக்காரனான உனக்கு இதன் வெகுமானமோ, அற்புதமோ இதன் மூலம் உருவாகப்போகும் ஆபத்துக்களோ என்னவென்று தெரியாது” என நிதானமாகச் சொன்னேன். எனது நிதானம் அவனைக் கலவரப்படுத்தியது.
நீண்டநேரம் அமைதியாக ஒயினைப் பருகியபடி இருந்தோம். பிறகு எனது திட்டத்தை அவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியில் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டான்.
விடிந்தால் போகி. விடிய விடிய குடித்தபடி இருந்தோம். என் மனைவியோ தொலைபேசியில் பதறியபடியே இருந்தாள். அதிகாலை மூன்று மணிக்கு பூசையறைக்குள் சென்றோம். சவப்பெட்டி ஒரு காவித்துணியால் போர்த்தப்பட்டிருந்தது. துணியை விலக்கிவிட்டு ஆணியறையப்படாத பெட்டியைத் திறக்க முற்பட்டேன். ழாக் தடுத்தான். நான் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு மூடியைத் திறந்து பார்த்தேன். காவித்துணியால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலம். பெட்டியோடு தூக்கி வந்து வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினோம். சடசடவென தீ எழுந்தது.
ஆங்காங்கே வீட்டு வாசல்களில் எதையெதையோ போட்டுக் கொளுத்தத் தொடங்கிவிட்டனர். அரைமணி நேரத்ஹ்டில் வாசலில் சாம்பல் புகைந்தது. சாம்பலில் ஒரு கை அள்ளி எனது கைக்குட்டையில் கட்டிக்கொண்டேன். வீட்டுக்குள் சென்று வள்ளலாரின் படத்தை எடுத்து வந்து எனது காரின் பின் இருக்கையில் வைத்துவிட்டு ழாக்கிடம் கை குலுக்கி விடைபெற்றேன். வழி நெடுகிலும் வாசல்கள்தோறும் பெருந்தீ வளர்ந்துகொண்டிருந்தது.
*****
தட்டச்சு : சென்ஷி

Oct 28, 2010

நகுலன் : நினைவின் குற்றவாளி - ஷங்கர்ராமசுப்ரமணியன்

தமிழ் நாவல் கதைப் பரப்பானது, கட்டுறுதிமிக்க புறநிலை யதார்த்தத்தால் சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, பகுத்தறிவின் தீவிர விழிப்பால் கட்டப்பட்டது. லோகாதாயம், மதம் மற்றும் அரசு போன்ற அமைப்புகள் காலம்தோறும் மனிதனை வடிவமைக்கவும்,கட்டுப்படுத்தவும், வரையறை செய்யவும் முயன்றுகொண்டே இருக்கின்றன. ஆனால்,இவ்வமைப்புகள் தங்கள் நோக்கத்திற்கேற்ப வரையும் மனிதச்சித்திரம் மட்டுமல்ல அவன். தமிழ் நாவல் பரப்பில் பெரும்பாலும் மனிதர்கள் பேசப்பட்டிருப்பது மேற்குறிப்பிட்ட வரையறையின் மீறாத நிலைமைகளில்தான். ஸ்தூலமான நிகழ்வுகள்,வெளிப்பாடுகள், முடிவுகளைக் கொண்டு ஒரு தன்னிலையை, அதன் செயலை வரையறுக்கும் பழக்கத்தை பொதுப்புத்தி உருவாக்கி வைத்துள்ளது.nagulan-by-viswamithran-1 இதிலிருந்து மாறுபட்டு பொருள்கள் மற்றும் உயிர்கள், அவை தொடர்பு கொண்டிருக்கும் சூழலின் மறைதன்மையை சுட்டிப் புலப்படுத்துவதாய், அதன் அகமுகத்தை வரைவதாய், ஒரு பார்வைக் கோணம் நகுலனின் புனைவுகளில், ஒரு விசித்திர அனுபவத்தைச் சாத்தியப்படுத்துகிறது. நகுலன் இவ்வனுபவத்தை திண்ணமான கதை உருவோ,கதாபாத்திரங்களோ இன்றி சாத்தியப்படுத்துகிறார். அவரது எழுத்துகளில் தொடர்ச்சியாய் இடம்பெறும் பூனை போலவே, பிரத்யட்ச நிலைக்கும் அரூப வெளிக்கும் இடையே நினைவு, நடப்பின் அலைக்கழிவில் தொடர்ந்து பயணம் செய்பவனாய் மனிதன் இருக்கிறான். அவன் ஒரே சமயத்தில் பல உலகங்களில் சஞ்சரிக்கிறான். நகுலன் நம்மில் நிகழ்த்தும் விழிப்பு இதுதான். நகுலன், தான் புழங்கிய இலக்கிய வடிவங்கள் கவிதை சிறுகதை நாவல், கட்டுரை எல்லாவற்றிலும் நகுலன் தன்மை ஒன்றை நீக்கமற உருவாக்கியுள்ளார். அவர் புனைவில் திரும்பத் திரும்ப வரும் பிராணிகள் மற்றும் சொற்றொடர்களையும் நகுலனின் பிரஜைகள் என்று சொல்லுமளவுக்கு, அவற்றின் அடையாளங்களுக்குள் தன் சாயலை ஏற்றியுள்ளார்.

'நினைவுப்பாதை' நாவலில் வரும் வாக்கியம் இது: 'நான் தனி ஆள்; ஆன வயதிற்கோ அளவில்லை.' நவீனன் (அல்லது) நகுலன் சொல்லும் இவ்வாக்கியம் பிறப்பு, இறப்பு,குறுகிய வாழ்வு என்ற வரையறைக்குட்பட்ட ஒரு பௌதீக உடல் சொல்ல இயலக்கூடிய வாக்கியமா? சாத்தியமில்லை. இக்கூற்றில் பல்லாயிரக்கணக்கான ஆண்டின் நினைவழுத்தம் அல்லவா வெளிப்படுகிறது. அப்படியெனில் இக்கூற்றைச் சொல்லும் நவீனனுக்கு எத்தனை வயதாகின்றது? மனிதனின் முக்கிய அடிப்படைப் பிரச்சினைகளில் ஒன்று நினைவு. செயலாற்ற விரும்பும் மனிதனின் காரியத்தை வெற்றி கொள்ளும் மனம், நினைவை ஓரளவு கட்டுக்குள் வைத்து அனுசரிக்கும் இயல்பைப் பெற்றுள்ளது. அவன் அனுசரித்துப் பராமரிக்கும் தற்காலிக நினைவென்பதாலேயே அது பொருள்களை, மனிதர்களை உடைமை கொள்ள முடிகிறது.நினைவுகளைக் கட்டுப்பாட்டில்லாமல் பெருகவிடுபவன், வரலாற்றின் சாம்பல் தன்மை படர்ந்த உடலுடன் தோல்வியின் பைத்திய, குற்ற நெடியடிக்கும் பிரதேசத்துக்குள் நுழைந்து விடுகிறான். அவ்வகையில் நகுலனை நாம் நினைவின் குற்றவாளி எனலாம்.

ஆசை - நிராசை, உறவு - பிரிவு, இருப்பு - இன்மை என்ற இருமைகளில் ஆடிக்கொண்டிருக்கும் மனித மனதிற்கு தோல்வியின் மீது ஒரு அடங்காத வசீகரம் உண்டு. அது இடுபாடுகள் மீதான வசீகரம். நினைவுகளிலேயே சதா திளைத்துக் கொண்டிருக்கும் பொய்கைதான் தோல்வி. நகுலனின் ஒட்டுமொத்த புனைவிலும் தோல்விதான் முக்கிய அனுபவம்.

இங்கு சொல்லப்படும் தோல்வி என்பது இலக்கிய தோல்வியோ, நகுலனின் அந்தரங்கத் தோல்வியோ அல்ல. தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட அமைப்புகளிலிருந்து, தன் உடல்வரை பொறிகளாய் உணரும் தீவிரமான விழிப்பு நிலையில், மனிதன் உணரும் செயலின்மையிலிருந்து பெருகும் தோல்வி.

நகுலன், கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் விசாரம் அல்லது தன் விசாரம் மூலம் மொழி, வரலாறு, யதார்த்தம், கற்றறிவு, பட்டறிவு சார்ந்த எல்லா நினைவுகளையும் பேச்சாய், ரூபமற்ற சப்த அலைகளாய் பெருக வைக்கிறார். இதன்மூலம் பொதுப் பேச்சு,அமைப்பு மற்றும் உறவுகளின் வாழ்வே சடங்காகி விட்டதை உச்சபட்சமாய் பகடி செய்தபடி வாசகனின் நினைவுச் சரடையும் அதிர வைக்கிறார். சிலசமயம் வெட்டி,சம்பந்தமற்ற சரடோடு இணைக்கிறார். வாசகன் போதைமை கொள்ளும், பைத்திய உவகை பொங்கும் தருணங்கள் அவை. 'நினைவுப்பாதை', 'நாய்கள்', 'சில அத்தியாயங்கள்', 'நவீனன் டைரி', 'அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி', 'வாக்குமூலம்' என எல்லா நகுலனின் நாவல்களிலும் நிகழும் உரையாடல் மற்றும் தன் விசாரத்தில் கிடைக்கும் அபத்த அனுபவத்தை எப்படியோ அவர் தன் மொழியின் இசைமை வழியாய் உருவாக்குகிறார்.

மனிதன் சலித்துக் கொண்டிருக்கிறான். பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் உடல் சலிப்படைவதைத்nagulan-by-viswamithran-5 தவிர வேறொன்றும் விசேஷ நிகழ்வுகள் இல்லை. நவீனனின் பாஷையில் சொன்னால், 'எறும்புப் புற்றுக்கு உணவிடுவதுதான் லௌகீகம்'. எறும்புக்கு உணவிட்டுக் கொண்டே அது கடிக்கிறது என்று ஏன் புகார் சொல்ல வேண்டும். இதுதான் லௌகீக வாழ்க்கை குறித்த நவீனனின் விமரிசனம். ராமநாதன், சச்சிதானந்தம் பிள்ளை,சாரதி, கேசவமாதவன் எல்லோருமே எறும்புக்கு உணவிடுபவர்கள்; சலிக்கிறவர்கள்.இவர்களெல்லாம் ஒரே நபரின் சாயல்கள்தான். "நவீனன் என்கிறேன். நகுலன் என்கிறேன்.ஆனால் நான் யார்? யாரைச் சந்திக்கிறேனோ, நான் அவர், அவர் ஆகிறேன்...அதனால்தான் இலக்கணம் பச்சைப்புழு, மறுகணம் சிறகடிக்கிற வண்ணத்துப்பூச்சி."

நகுலனின் புனைவுகளில் பெண்கள் ஸ்தூலமாய் வருகிறார்கள். சுசீலா, அம்மா மற்றும் சுலோசனா. சுசீலா காதலி. மானசீகமான ஒரே முன்னிலை மற்றும் வாசகி. நகுலன் (அ)நவீனனுக்கு தனிமையைக் கற்றுக் கொடுத்துப் பிரிந்த ஆசிரியை. சுசீலாவின் பிரிவும்,சுசீலாவை இடைவிடாமல் ஜபிப்பதும், மனவெறியில் சுசீலாவுடன் உரையாடுவதும்,சுசீலாவை எழுதுவதும் நகுலனுக்கு தனிமையை விலக்கும் செயலாக, தனிமையைப் பெருக்கும் செயலாக இருக்கிறது. அம்மா நவீனனை (அ) நகுலனை நிறை குறைகளோடு ஏற்றுக்கொண்டவள். அங்கீகரித்தவள். அவளும் நவீனனைத் தனியே உலகில் விட்டு மறைந்து விடுபவள். 'இவர்கள்' நாவலை அம்மா என்னும் புராதனப் பிரக்ஞைக்கும்,அதன் நிழலிலிருந்து தற்கால நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நவீன மனதுக்கும் இடையே உள்ள உரையாடல் என சொல்லலாம். இந்தியா போன்ற கீழைத் தேசங்களில் தாய் என்பவள் தந்தைக்குப் பணிவான, படிந்து போகக்கூடிய ஆளுமையாய் தோற்றம் கொடுத்தாலும் வலிமை கொண்ட மனமாய் அவளே இருக்கிறாள். நினைவைக் காப்பாற்றுபவளாய், ஒருவகையில் நினைவின் எஞ்சிய ஒரே படிமமாகவும் இருக்கிறாள்.தாயின் நினைவின் நிழல் படர்ந்திருப்பவன், நிகழ்கணம் கோரும் செயலில் ஈடுபட இயலாமல் இருப்பவன். 'இவர்கள்' நாவலில் அம்மா 'பழைய காலத்தின் உள்ளுணர்வுள்ள பிரதிநிதியாகவும்' சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

நகுலன் தன் புனைவின் மூலம் தீய சகுனங்களை கவித்துவமாய் சொல்பவராய் இருக்கிறார். குடும்பம் என்கிற அமைப்பு மனிதனை குரூரமாய் சிதைப்பது. 'நிழல்கள்'நாவலிலிருந்து நவீனனை, சிவனை, ஹரிஹர சுப்ரமணியனை, சாரதியை சிதைப்பது தொடர்கிறது. இவர்களின் வீடுகளில் கழிப்பறையில், உள்ளறைகளில் கரும்பாம்பும்,சாரைப் பாம்பும் சுருண்டு கிடக்கின்றன. நகுலன் ஒரு சூழலை விவரிக்கும் போதும், ஒரு பறவையின் சப்த துணுக்கைச் சொல்லும் போதும் பிராணிகளைப் பற்றிப் பேசும்போதும், அவற்றை சூழலின் விகாசத்துடன் நம் மனதின் உணர்வு நிலைகளாய் மாற்றி விடுகிறார். திருச்சூர் மிருகக்காட்சி சாலையில் உள்ள பாம்பைப் பற்றி விவரிக்கும்போது, அது சட்டென உருப்பெற்று நகுலனின் புத்தகத்துக்குள் சுரீரென உலவுகிறது. நகுலன் எழுத்தும் நம் மனவெளிக்குள் கருத்த, பயங்கர அழகுள்ள பாம்பு ஒன்று புழக்கடை வழியாய் வீட்டின் பிளவுக்குள் புகுவதைப் போல்தான்.

நகுலனுக்கு எழுத்து உடலை அறிதலாகவும் உடலைக் கடத்தலாகவும் இருக்கிறது.எழுத்தும் உடலும் ஒரு தன்மை கொள்ளும் சந்தர்ப்பமும் நேர்கிறது. எழுத்துக்கள் மயங்கும் நேரம். உருவம் தெரியாமல் மறையும் தருணம். உருவத்திலிருந்து தப்புவதற்கு உருவமில்லாத ஒரு உருவத்தைச் சிருஷ்டிக்கிற முயற்சியாகவும் இருக்கிறது. சுசீலாவின் பிரதிபலிப்பையும் நவீனனின் பிரதிபலிப்பையும் எல்லா உயிர் உருவங்களிலும் பார்ப்பதைப்போல கருங்குருவி, பச்சைக்கிளி, மரங்கொத்தி,சாரைப்பாம்பு, மஞ்சள் நிறப்பூனை எல்லாமே பிரஜைகளாகவும் பிரக்ஞைகளாகவும் மாறும் போதே திருமந்திரம், திருக்குறள், பத்திரகிரியார், பாதலேர் என நகுலனின் புனைவில் நினைவுகளாய் தோதான இடங்களில் பிரதிபலிக்கின்றன.

ஆதிசங்கரரின் வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை சொல்வது நகுலனின் புனைவை, ஒருவகையில் நகுலனைப் புரிந்துகொள்வதற்குத் துணையாய் இருக்கக்கூடும். ('கடைசியாக எந்த மண்ணில் ஆதிசங்கரர் கால்வைத்து நடந்தாரோ அங்கு வந்துவிட்டேன்' -நினைவுப்பாதை) ஆதிசங்கரர் துறவியான பிறகு அவருடைய அம்மா இறந்துபோகிறார். செய்தி அறிந்த உடன் அம்மாவுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்ய ஆயத்தமாகிறார் ஆதிசங்கரர். ஆனால் துறவியாகிவிட்டதால் இறுதிக்கடன்களை அவர் தன் தாய்க்குச் செய்வதற்கு தடை சொல்கின்றனர். ஆதிசங்கரர் அத்தடையை மீறி அம்மாவுக்கு இறுதிக் கடன்களை செய்து முடித்த பிறகே தன் துறவுப் பயணத்தைத் தொடர்கிறார். நகுலனின் ஒட்டுமொத்த எழுத்துக்களை இறந்த அம்மாவுக்கும், பிரிந்து சென்ற சுசீலாவுக்கும் நகுலன் செய்யும் கிரியைகள் எனலாமா?

நகுலனின் மற்ற நாவல்களை விட செயலின் முழுமை நோக்கிப் பயணிக்கும் நாவல் வாக்குமூலம். காஃப்காவின் சாயல் கொண்டது. முட்டாள்கள் தினமான ஏப்ரல் ஒன்றாம் தேதி அரசு ஓர் அறிவிப்பை வெளியிடுகிறது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களில் தொடர்ந்து வாழ்வதற்கு விரும்பாதவர்களை அரசே பொறுப்பேற்று வலியின்றி கொல்வதற்கு கொண்டுவரும் தேச  முன்னேற்றச் சட்டம் அது. கதையின் நாயகன் ராஜசேகரன் அச்சட்டத்தை பயன்படுத்திக் கொள்ள sankarமுயன்று அதற்கான விண்ணப்பக் கேள்விகளுக்குப் பதில் எழுதும் முகாந்திரமாக எழுதப்படுவதே வாக்குமூலம். நாவலின் கருப்பொருள் தீவிர அபத்த நிலையில் இருந்தாலும், கதை நிகழும் சூழலும் யதார்த்தமும் வலுவாக வாக்குமூலம் நாவலில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மர்ம நாவலுக்கான மூட்டத்துடன், தொடர்ந்து அறிமுகமாகப் போகும் நபர்கள், நிகழ்வுகள் குறித்த எதிர்பார்ப்புமாக வாசிக்க இயலக்கூடிய நாவல் இது. தற்கொலையைப் பாவம் என நம்பும் ஒரு இந்திய மனம் தற்கொலையை விடுத்து, அரசே பரிந்துரைக்கும் கொலையை விரும்பி ஏற்க முன்வருகிறது. ஆனால், அரசு, கடைசியில் ராஜசேகரன் மற்றும் சிலர் விண்ணப்பித்திருந்த இறப்புக்கான கோரிக்கையை நிராகரிக்கிறது.கடைசியில் மரணத்துக்கான பாதையும் கெஸட்டியர் பிரதிகளாக, ஷரத்துகளாக, பக்க எண்களால் நிரம்பி மூடிவிடுகிறது. ராஜசேகரன் வாழ்க்கையில் இதிலும் ஒரு தோல்வி.ஆனாலும் இலவச இணைப்பாய் ஒரு வெற்றியும் நிகழ்கிறது. தேச முன்னேற்றச் சட்டத்தை இராஜசேகரன் பயன்படுத்துவதற்குக் கேட்கப்பட்ட வாக்குமூலம் பரிந்துரைக் குழுவால் பாராட்டப்பட்டு பிரசுரத்துக்குரியதாய் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதுவே நகுலன் நாம் வாழும் அமைப்பின் மீது வெளிப்படுத்தும் அபத்த நகைச்சுவையும் முரண் நகையுமாகும்.

நகுலனின் கதைகளுக்குப் பின் இயங்கும் அடிப்படைதான் என்ன? புறநிலை யதார்த்தம்,அனுபவம் மற்றும் உறவுகள் என்பதெல்லாம் மனிதன் கற்பிதங்கள் அல்லது மாயை என்றெண்ணும் அத்வைதப் பிரக்ஞைக்கும், தீவிர புறமெய்மை உணர்ச்சிக்கும் இடைப்பட்ட முரண் அல்லது விசாரம் எனலாம். ஒரு புனைவில் அல்லது நாவலில் ஒரு தத்துவம் அடிப்படையாய் இருக்கலாம். ஆனால் அதுவே புனைவு கொள்ளும் மொத்த சாத்தியங்களை வரையறுத்து விடுவதாய் இருக்க முடியாது. மையக்கருத்து அல்லது ஆசிரியரின் முடிவுக்கு அப்பாற்பட்டு புனைவின் போக்கில் சேரும் உபபொருள்கள் தான் புனைவை வேறுரு கொள்ளச் செய்கின்றன. அவ்வகையில் நகுலனின் நாவல்கள் பல குரல் தன்மை கொண்டவை. கதாபாத்திரங்களின் மனஓட்டம்,இயல்பு ஆகியவற்றின் பல குரல் தன்மை அல்ல; நகுலன் நாவல்களில் நாம் உணர்வது மொழி நினைவு, சமூக நினைவு, மரபு, வரலாற்று நினைவுகளுடனான பலகுரல் தன்மை ஆகியவைதான்.

Oct 27, 2010

காக்காய் பார்லிமெண்ட்-மகாகவி பாரதியார்

நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். “உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். “நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார். “நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். “உமக்கு ஜந்துக்களின் பாஷையைக் கற்பிக்கும் பொருட்டாக வந்தேன். என்னை உடுப்பியிலிருக்கும் உழக்குப் பிள்ளையார் அனுப்பினார்” என்று சொன்னார். “சரி, கற்றுக் கொடும்” என்றேன். அப்படியே கற்றுக் கொடுத்தார்.

காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம்.

‘கா’ என்றால் ‘சோறு வேண்டும்’ என்றர்த்தம். ‘கக்கா’ என்றால் ‘என்னுடைய சோbharathi5ற்றில் நீ பங்குக்கு வராதே’ என்றர்த்தம். ‘காக்கா’ என்றால் ‘எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே’ என்றர்த்தம். இது ஆண்  காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. ‘காஹகா’ என்றால் ‘சண்டை போடுவோம்’ என்றர்த்தம். ‘ஹாகா’ என்றால் ‘உதைப்பேன்’ என்றர்த்தம். இந்தப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதி முழுதும் காக்கை பாஷையிலே, க, ஹா, க்ஹ-முதலிய ஏழெட்டு அக்ஷரங்களைப் பல வேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுதும் மற்றவர்களுக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை. பிறருக்குச் சொல்லவும் கூடாது. அந்த நாராயண பரம ஹம்ஸருக்குத் தமிழ் தெரியாது. ஆகையால் அவர் பத்திரிகைகளை வாசிக்க மாட்டார். இல்லாவிட்டால் நான் மேற்படி நாலைந்து வார்த்தைகள் திருஷ்டாந்தத்துக்காக எழுதினதினாலேயே அவருக்கு மிகுந்த கோபமுண்டாய் விடும். ஒரு வார்த்தை கூட மற்றவர்களுக்குச் சொல்லக் கூடாதென்று என்னிடம் வற்புறுத்திச் சொன்னார். “போனால் போகட்டும். ஐயோ, பாவம்” என்று நாலு வார்த்தை காட்டி வைத்தேன்.

இன்று சாயங்காலம் அந்த பாஷையை பரீக்ஷை செய்து பார்க்கும் பொருட்டாக, மேல் மாடத்து முற்ற வெளியிலே போய் உட்கார்ந்து பார்த்தேன். பக்கத்து வீட்டு மெத்தைச் சுவரின் மேல் நாற்பது காக்கை உட்கார்ந்திருக்கிறது. “நாற்பது காக்கைகள் உட்கார்ந்திருக்கின்றன என்று பன்மை சொல்ல வேண்டாமோ?” என்று எண்ணிச் சில இலக்கணக்காரர்கள் சண்டைக்கு வரக்கூடும், அது பிரயோஜனமில்லை. நான் சொல்வதுதான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன். அதைப்பற்றி இப்போது பேச்சில்லை. இப்போது காக்காய்ப் பார்லிமெண்டைக் குறித்துப் பேச்சு. அந்த நாற்பதில் ஒரு கிழக் காக்கை ராஜா. அந்த ராஜா சொல்லுகிறது: “மனிதருக்குள் ராஜாக்களுக்கு உயர்ந்த சம்பளங்கள் கொடுக்கிறார்கள். கோடி ஏழைகளுக்கு அதாவது சாதாரணக் குடிகளுக்குள்ள சொத்தை விட ராஜாவுக்கு அதிக சொத்து. போன மாசம் நான் பட்டணத்துக்குப் போயிருந்தேன். அங்கே ருஷியா தேசத்துக் கொக்கு ஒன்று வந்திருந்தது. அங்கே சண்டை துமால்படுகிறதாம். ஜார் சக்கரவர்த்தி கக்ஷி ஒன்று. அவர் யோக்கியர். அவரைத் தள்ளிவிட வேண்டுமென்பது இரண்டாவது கக்ஷி. இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்களாதலால் இரண்டையும் தொலைத்துவிட வேண்டுமென்று மூன்றாவது கக்ஷி. மேற்படி மூன்று கக்ஷியாரும் திருடரென்று நாலாவது கக்ஷி. இந்த நாலு கக்ஷியாரையும் பொங்கலிட்டு விட்டுப் பிறகுதான் யேசுகிறிஸ்து நாதரைத் தொழ வேண்டுமென்று ஐந்தாவது கக்ஷி. இப்படியே நூற்றிருபது கக்ஷிகள் அந்த தேசத்தில் இருக்கின்றனவாம்.

“இந்த 120 கக்ஷியார் பரஸ்பரம் செய்யும் ஹிம்ஸை பொறுக்காமல் `இந்தியாவுக்குப் போவோம். அங்கேதான் சண்டையில்லாத இடம், இமயமலைப் பொந்தில் வசிப்போம்’’ என்று வந்ததாம். அது சும்மா பட்டணத்துக்கு வந்து அனிபெஸன்ட் அம்மாளுடைய தியஸாபிகல் சங்கத்துத் தோட்டத்தில் சில காலம் வசிக்க வந்தது. அந்தத் தோட்டக் காற்று சமாதானமும், வேதாந்த வாசனையுமுடையதாதலால் அங்கே போய்ச் சிலகாலம் வசித்தால், ருஷியாவில் மனுஷ்யர் பரஸ்பரம் கொலை பண்ணும் பாவத்தைப் பார்த்த தோஷம் நீங்கிவிடுமென்று மேற்படி கொக்கு இமயமலையிலே கேள்விப்பட்டதாம்.

“கேட்டீர்களா, காகங்களே, அந்த ருக்ஷியா தேசத்து ஜார் சக்கரவர்த்தியை இப்போது அடித்துத் துரத்தி விட்டார்களாம். அந்த ஜார் ஒருவனுக்கு மாத்திரம் கோடானு கோடியான சம்பளமாம். இப்போது நம்முடைய தேசத்திலேகூடத் திருவாங்கூர் மகாராஜா, மைசூர் ராஜா முதலிய ராஜாக்களுக்குக் கூட எல்லா ஜனங்களும் சேர்ந்து பெரிய பெரிய ஆஸ்தி வைத்திருக்கிறார்கள்.

“நானோ உங்களை வீணாக ஆளுகிறேன். ஏதாவது சண்டைகள் நேரிட்டால் என்னிடம் மத்தியஸ்தம் தீர்க்க வருகிறீர்கள். நான் தொண்டைத் தண்ணீரை வற்றடித்து உங்களுக்குள்ளே மத்தியஸ்தம் பண்ணுகிறேன். ஏதேனும் ஆபத்து நேரிட்டால், அதை நீக்குவதற்கு என்னிடம் உபாயம் கேட்க வருகிறீர்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டு உபாயம் கண்டுபிடித்துச் சொல்லுகிறேன். இதற்கெல்லாம் சம்பளமா? சாடிக்கையா? ஒரு இழவும் கிடையாது. தண்டத்துக்கு உழைக்கிறேன். எல்லாரையும் போலே நானும் வயிற்றுக்காக நாள் முழுவதும் ஓடி உழன்று பாடுபட்டுத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. அடே காகங்கள், கேளீர்:

“ஒவ்வொரு காக்கைக்கும் நாள்தோறும் கிடைக்கிற ஆகாரத்தில் ஆறிலே ஒரு பங்கு எனக்குக் கொடுத்துவிட வேண்டும். அதை வைத்துக் கொண்டு நானும் என் பெண்டாட்டியும், என் குழந்தைகளும், என் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், என் வைப்பாட்டியார் ஏழு பேர், அவர்களுடைய குடும்பத்தார் இத்தனை பேரும் அரை வயிறு ஆகாரம் கஷ்டமில்லாமல் நடத்துவோம். இப்போது என் குடும்பத்துக் காக்கைகளுக்கும் மற்றக் காகங்களுக்கும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை. ஏழெட்டு நாளுக்கு முந்தி ஒரு வீட்டுக் கொல்லையிலே கிடந்தது. அது சோறில்லை; கறியில்லை; எலும்பில்லை; ஒன்றுமில்லை; அசுத்த வஸ்து கிடந்தது. அதைத் தின்னப் போனேன். அங்கே ஒரு கிழவன் வந்து கல்லை எறிந்தான். என் மேலே இந்த வலச்சிறகிலே காயம். இது சரிப்படாது. இனிமேல் எனக்குப் பிரஜைகள் ஆறில் ஒரு பங்கு கொடுத்துவிட வேண்டும்” என்று சொல்லிற்று.

இதைக் கேட்டவுடனே ஒரு கிழக் காகம் சொல்லுகிறது:

“மகாராஜா, தாங்கள் இதுவரையில்லாத புதிய வழக்கம் ஏற்படுத்துவது நியாயமில்லை. இருந்தாலும் அவசரத்தை முன்னிட்டுச் சொல்லுகிறீர்கள்! அதற்கு நாங்கள் எதிர்த்துப் பேசுவது நியாயமில்லை. ஆனால் தங்களுக்குள்ள அவசரத்தைப் போலவே என் போன்ற மந்திரிமாருக்கும் அவசரமுண்டென்பதைத் தாங்கள் மறந்துவிட்டதை நினைக்க எனக்கு மிகுந்த ஆச்சரியமுண்டாகிறது. தங்களுக்கு ஒவ்வொரு காக்கையும் தன் வரும்படியில் பன்னிரண்டில் ஒரு பகுதி கட்ட வேண்டுமென்றும், அதில் மூன்றில் ஒரு பாகம் தாங்கள் மந்திரிமார் செலவுக்குக் கொடுக்கவேண்டுமென்றும், ஏற்படுத்துதல் நியாயமென்று என் புத்தியில் படுகிறது” என்று சொல்லிற்று.

அப்பொழுது ஒரு அண்டங் காக்கை எழுந்து: “கக்கஹா, கக்கஹா, நீங்கள் இரண்டு கக்ஷியாரும் அயோக்கியர்கள். உங்களை உதைப்பேன்” என்றது. வேறொரு காகம் எழுந்து சமாதானப்படுத்திற்று. இதற்குள் மற்றொரு காகம் என்னைச் சுட்டிக்காட்டி: “அதோ அந்த மனுஷ்யனுக்கு நாம் பேசுகிற விஷயம் அர்த்தமாகிறது. ஆதலால் நாம் இங்கே பேசக்கூடாது. வேறிடத்துக்குப் போவோம்” என்றது. உடனே எல்லாக் காகங்களும் எழுந்து பறந்து போய்விட்டன.

இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை.

Oct 26, 2010

ஜி. நாகராஜன் – கடைசி தினம்!-சி.மோகன்

* ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது. பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

அனைவருக்கும் வணக்கம்.

என் நெடுநாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறியிருக்கும் நாள் இது.

எஸ் சம்பத்தின் ‘இடைவெளி”, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ஜி. நாகராஜனின் ”நாளை gnagarajan மற்றுமொரு நாளே’ ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்குமென்ற என் நம்பிக்கையை எழுத்திலும் உரையாடல்களிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.

இன்று ஜி.நாகராஜனின் பிரதான படைப்பான ‘நாளை மற்றுமொரு நாளே’, அபிசிப்ராமனின் மொழிபெயர்ப்பில் பெங்குவின் வெளியீடாக வந்திருப்பது ஒரு விசேஷமான நிகழ்வு. மொழி மற்றும் கலை இலக்கிய கலாச்சர தளங்களில் தீவிரப் பற்றுதலோடு ஆழ்ந்த அறிவோடும் தீரா தாகத்தோடும் செயலாற்றிவரும் கல்மனும் க்ரியா ராமகிருஷ்ணனும் இணைந்து  இம்மொழிபெயர்ப்பை ‘எடிட்’ செய்து இந்நூல் வெளிவந்திருப்பது நம்முடைய பெருமிதங்களில் ஒன்றாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

க்ரியா ராமகிருஷ்ணனின் கைமந்திரம் இதில் சேர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகிறது. ஒருசெயல் அதன் நிகழ்த்தும் மாயம் ஓர் அபூர்வவிந்தை. நவீனதமிழ் இலக்கிய முகத்தில் பொலிவு கூடியிருக்கும் இந்நாளில் அதை சாத்தியமாக்கிய அபிக்கும், டேவிட்கல்மனுக்கும், ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்கும், பெங்குவின் நிறுவனத்தாருக்கும் நம் அனைவர் சார்பாகவும்  என்  நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி. நாகராஜனைப் பற்றிப் பேசுவதும் அவருடைய எழுத்தைப் பற்றிப் பேசுவதும் வேறு வேறானவை அல்ல. நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித் தவர் ஜி. நாகராஜன். அதுவரையான தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும்  தங்கள் வாழ்வுக்கும்  இருப்புக்குமான  சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது.

தனிமனித இயல்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் வாழ்வின் அழகு பூரணமாக விரிவடைவதைக் கொண்டாடும்  முதல் தீர்க்கமான குரல் ஜி. நாகராஜனுடையது. சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிராதய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கின்றன. இந்நிலையில், வாழ்வின் மீதான சகல பூச்சுகளையும் வழித்துக் துடைத்து,  வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி  அதன் இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக அறங்களைப் படைத்திருக்கும் கலை மனம் ஜி. நாகராஜனுடையது.

பூக்களில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தில் உயிர்ப்பின் அழகையும் கண்ட படைப்பு மனம் இவருடையது. விளிம்புநிலை மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகை அற்புதமாகப் படைப்பித்ததும்தான் ஜி. நாகராஜனின் தனித்துவம். இதன் அம்சமாகவே விலைப்பெண்கள்,  அத்தான்கள், உதிரிகள் இவருடைய படைப்புலகை  வடிவமைத்தனர்.

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஜி. நாகராஜனின் வருகை துணிச்சலான எழுத்து என்பதிலேயே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துணிச்சல் மனிதன் குறித்தும் சமூகம் குறித்தும் காலம் குறித்துமான அவருடைய அவதானங்களிலிருந்தும் பார்வையிலிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. அதிர்ச்சிக்காகவோ கிளர்ச்சிக்காகவோ பரபரப்புக்காகவோ எழுத்தில்காட்டிய துணிச்சல் இல்லை இது. வாழ்வையும் எழுத்தையும் வெகு சுபாவமாக, மனத்தடைகளோ, இறுக்கங்களோ, ஒழுக்க நியதிகள் சார்ந்த பதற்றங்களோ இன்றி  அணுகியிருப்பதில் விளைந்திருக்கும் கலைத் துணிச்சல்.

ஒவ்வொரு காலமும் வாழும் நெறிகளை விதிகளாக வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. அதேசமயம் மீறல்களும் முரண்டுகளும் போராட்டங்களும் அவ்விதிகளுக்கெதிராக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மோதல்களின் தொடர்ச்சியாகத்தான் பழையதை மேவிப் புதிய காலமும் புதிய விதிகளும் உருக்கொள்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தி திரைக்காவியமான ‘மொஹல் ஏ ஆஸம்’ படத்திலிருந்து ஒரு காட்சி:

அனார்கலி மீது கொண்ட எல்லையற்ற காதலுக்காக அவளை மீட்கும் பொருட்டும் அடையும் பொருட்டும் அரச பதவியை உதறிவிட்டு, தன் தந்தை அக்பருக்கு எதிராக யுத்தம் மேற்கொள்கிறான் சலீம். அக்பரின் தூதுவராக சலீமிடம் வருகிறார் ஓர் அமைச்சர். அவர் சலீமிடம் ‘அரச பதவியைத் துறந்துவிட்டு எனக்கும் நாட்டுக்கும் எதிராக யுத்தம் தொடங்குமளவுக்கு சலீமை ஆட்டுவிக்கும் அனார்கலி அப்படியொன்றும் அழகாகவும் இல்லையே’ என்று அக்பர் வருத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அதற்கு சலீம் சொல்கிறான்; ‘சலீமின் கண்களால் பார்க்கச் சொல்.’

ஜி.நாகராஜனின் அருமையை உணர சமூக மதிப்பீடுகளின் கண்கள் கொஞ்சமும் உதவாது. அவை சமூக நெறிகளைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரத்தின் கண்கள். அதாவது, அக்பரின் கண்கள். இயல்புணர்ச்சிகளை நேசிக்கும் கண்களுக்கு மட்டுமே ஜி. நாகராஜனுடைய வாழ்வும் எழுத்தும், வசீகரமும் அழகும் கொண்டதாக வெளிப்படும்.

cmohan ன் 17ஆவது வயதில் ஜி. நாகராஜனை ஓர் லட்சிய ஆண்மகன் தோற்றத்தில் நான் அறிந்திருக்கிறேன். உடற்கட்டும் வனப்பும் மிடுக்கும் கூடிய பேரழகன். அப்போது நான் மாணவன். அவர் கணித ஆசிரியர். தூய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நடுவிரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட், சில வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அவருடைய கடைசி சில ஆண்டுகளில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. உடல் நலிந்து, கசங்கிய அழுக்கு வேட்டி ஜிப்பாவோடும், கடைசி நாட்களில் கைகளில் சொறியோடும் அவர் அலைந்து திரிந்த காலம் பொழுதை கஞ்சா போதையில் கடத்திய காலம். இக்காலத்தில் அவரை ஓர் எழுத்தாளராக அறிந்து அவர்மீது மதிப்பு கொண்டிருந்தத நானும் எழுதத் தொடங்கியிருந்தேன். அவருடைய வாழ்வின் கடைசி நாள் பற்றி மட்டும் சில விஷயங்களைக் குறிப்பிட்டு இப்பேச்சை முடிக்கிறேன்.

ஒருமுறை ‘சாவும், அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்’ என்றார் ஜி. நாகராஜன். சாவை எதிர்கொள்ள அவர், தன்னைத் தயார்படுத்திக் கொண்ட தருணமும் வந்தது. எவ்வளவோ முறை மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய போதெல்லாம் மறுத்த அவர், மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு, அவராகவே முன்வந்து தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

1981 பிப்ரவரி-18ம் தேதி காலை அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்லா பரிசோதனைகளும் முடித்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணிபோல் பிரிந்தபோது, ‘கஞ்சா ஏதும் உபயோகிக்க வேண்டாம். வெளியில் கறுப்புப்படியும்படி ஆகிவிடக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும் டாய்லெட்டில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். ‘சாயந்தரம் வரும்போது போட்டுக்கொண்டு வந்து தருகிறேன் இரவு டாய்லெட்டில் உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்றதும் என்னிடம் அதைக் கொடுத்துவிட்டார்.

மீண்டும் சாயந்தரம் 5 மணி போல் நண்பர் சிவராமகிருஷ்ணனும் நாணும் அவரைப் போய்ப் பார்த்தோம். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக்கொண்டு போயிருக்கவில்லை. ‘போடத் தெரியவில்லை’ என்று சிகரெட் பாக்கெட்டையும் கஞ்சா பொட்டலத்தையும் அவரிடம் கொடுத்தேன். பேசிக் கொண்டேயிருந்தார். மனித இனம் போரில் மாண்டுகொண்டிருப்பது பற்றிப் பெரும் துக்கத்துடன் பேசினார். இடையில் டாய்லெட் போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். டாய்லெட்டில் அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாளமுடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, ‘கடவுளே, என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்’ என்று வாய் விட்டுக் கதறி அழுதார். திரும்ப வந்து படுக்கையில் படுத்துக் கொண்டதும் குளிர் அவரை மிகவும் உலுக்கியது. “குளிருது, ரொம்பக் குளிருது” என்றவர் “சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்” என்றார்.

மறுநாள் காலை , பிளாஸ்கில் காப்பியோடு போனபோது அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். ஆனால் அவர் இறந்து விட்டிருந்தார். அவர் ஜிப்பா பாக்கெட்டில் சிகரெட் பாக்கெட்டும் சிறு பொட்டலமும் உபயோகிக்கப்படாமல் அப்படியே இருந்தன. என் குற்றவுணர்வுகளில் ஒன்றாக அந்தப் பொட்டலம் இன்னமும் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது.

***

நன்றி: குமுதம் தீராநதி

Oct 25, 2010

வேட்டை- யூமா வாசுகி

வாசல் வரை வந்து நின்று தயங்கித் திரும்பினார் உஸ்மானி. தளர்ந்த உடலை நாற்காலியில் கிடத்திக்கொண்டு விறகுச்  சாம்பல் கிடக்கும் கணப்படுப்பிற்குள் கண்களைச் செலுத்தியிருந்தவனை அவரது அழைப்புக்குரல் சலனப்படுத்தவில்லை.
“பொனாச்சா....”
“-------------”
“மகனே பொனாச்சா”
“----------------”
“சீக்கிரம் வந்துவிடுவேன். வீட்டிலேயே இரு. குடிக்கறதானா கொஞ்சம் சாப்பிட்ட பிறகு குடி, உடம்பு yumavasuki4தாங்காது.” கெட்டுச் சீரழிந்து கொண்டிருக்கிற மகனது உடல் நிலைக்காக வெளிப்பட்ட பெருமூச்சுடன் உஸ்மானி படியிறங்கினார். கொழுத்த புலி மாதிரி திமிராய் அலைந்து கொண்டிருப்பான் பொனாச்சா. சேர்ந்தாற் போல ஒரு மணி நேரம் வீட்டில் நிலைக்குமா அவன்  கால்கள். ரத்தம் உறைந்து போகிற இரவுக் குளிரில், அகால நேரங்களில் உறங்குவதற்கு வீடு திரும்புகிறவன். ஒரு நண்பனின் பின்னால் அமர்ந்து பைக்கிலோ, தனித்த நடையிலோ வரும் மகனை எதிர்பார்த்து, உஸ்மானி ஜன்னலைப் பிடித்தபடி நின்றிருப்பார். மகன் தோட்டத்திலிருக்கும்போது சில தடவைகள் அவரும் செல்வதுண்டு. கூலிப் பெண்களுடன் சிரிப்பு அரட்டையுமாயிருப்பான் பொனாச்சா. அப்பாவைக் கண்டதும், கடுகடுப்பாய் வேலை வாங்குபவன் போல அவர்களை அதட்டுவான். சில நிமிடங்கள் நின்றிருந்து புன்னகை மனதுடன் உஸ்மானி புறப்படுவார். சரிவில் இறங்கி அருவிப்பாலத்தைக் கடப்பதற்கு முன்பாகவே பின்னாலிருந்து வரும் பொனாச்சாவின் பாட்டு. அதிரடியான பேச்சையும் சிரிப்பையும் போன இடம் தெரியாமலாக்கி வீட்டோட முடக்கிவிட்டாயே ராசய்யா, சரிதானா இதெல்லாம். உரித்த ஆட்டுத் தோலாய்த் துவண்டு கிடக்கிறான் என் மகன்.
சூரியன் மேகத்துள் சோம்பியிருந்தான். காலையின் மங்கலான வெளிச்சத்தோடு மலைச் சரிவுகளின் செழுமையை இன்னும் போர்த்தியிருந்தது பனி. கணுக்கால்வரை தொளதொளப்பாய் நடையில் அசைந்தது கருப்பு கூர்க் உடை. விழா நாட்களில் மட்டுமே அணிப் படுவதால் படிந்து போன பீரோ வாசனை. தோளிலிருந்து குறுக்கே தொடங்கிய சங்கிலியின் இடுப்பு முடிச்சில் இணைக்கப்பட்டிருந்த குறுவாளின் கைப்பிடி சற்று துருவேறியிருந்தது. நினைவாய் எடுத்து வைத்திருந்த ரப்பர் பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். வந்து உரசி முதுமையைச் சீண்டிப் பார்க்கும் குளிருக்கு மார்போடு கைகளை அணைத்து மெதுவாக நடந்துக் கொண்டிருந்தார். வழியின் இருபுறமும் மண்டிக்கிடந்த ஊதா மலர்கள் நடையைத் தட்டுபடுத்திற்று. நேற்றிருந்ததை விட இன்று அதிகம். அடுத்த நாட்களில் இலைகளே தெரியாமல் பெருகும் போலிருக்கிறது. இதுதானே பருவம். பொனாச்சாவின் அம்மா இருந்தால் இவைகள் காவேரியம்மனுக்கு மாலையாகும். குளிருக்கெல்லாம் பயப்படாமல் பூப்பறிக்கவென்றே வெயில் வருமுன் எழுந்துவிடுவாள். இரவு யாருக்கும் தெரியாமல் மலர்ந்த பூக்களை விடியலில் பார்க்கிற சந்தோஷத்தை அனுபவிக்கத் தெரிந்திருந்தது. பொனாச்சா சிறுவனாக இருந்தபோது இந்தப் பூக்களை அவனுக்குச் சூட்டி, சிறுமிகளின் உடையை இரவல் பெற்று அணிவித்து - ஒரு பெண் குழந்தையைப் போன்ற ஒப்பனையில் போட்டோ எடுத்து வைத்திருந்தாள்.
தூரத்திலிருந்தே மண்டபத்தின் முகப்பிலுள்ள ‘அப்பர் கோடவா சமாஜ்’ எனும் வார்த்தைகள் வெளிறியும் சில எழுத்துக்கள் அழிந்தும் தெரிந்தன. யாரு கண்டுகொள்கிறார்கள் இதையெல்லாம். கூர்க் ஆச்சாரப்படி நடப்பவன் எவனைப் பார்க்க முடிகிறது. சண்டை சச்சரவின் போது ஒருத்தருக்கொருத்தர் வெட்டிக் கொள்ளும்போதுதான் மூதாதைகளின் வேட்டைப் புத்தி தெரிகிறது. மற்றபடி நிஜ கூர்க் என்று எவனுமில்லை. கல்யாணம் கருமாதின்னு வரும்போது செய்கிற சடங்குகளெல்லாம் கூட கொஞ்ச நாளைக்குத்தான். பிள்ளைகளை வெளிநாடு, வெளி மாநிலம்னு படிக்க அனுப்பிவிடுகிறார்கள். அதுகள் படிக்கப் போனபோது கத்துக்கிட்ட பழக்கத்தையெல்லாம் இங்கேயும் நடத்த ஆரம்பிச்சாச்சு. எதுவானாலும் ராசையா, இந்த மடிக்கேரி மண்ணில் கூர்க்க பொறந்த ஒருவர் எந்த நிலையிலேயும் வாக்குத் தவறக்கூடாது.
வெளியே பறையடிப்பவர்களைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்தது சிறு கூட்டம். அவ்வப்போது துந்துபியொத்த இசைக்கருவியிலிருந்து பிளிறிய ஓசை மேலும் அவர்களை உற்சாகப்படுத்தியது. புதுப்புது மனிதர்களாய் பலர் வாசலருகே நின்று ஆடுபவர்களைப் பார்த்திருந்தார்கள். வெளியாட்கள். மாப்பிள்ளை உறவுகளாயிருக்கலாம். உஸ்மானி நுழைவுத் தோணத்தைத் தாண்டும்போது ஓட்டமும் நடையுமாக வந்து எதிர்கொண்டார் ராசையா.
குனிந்து உஸ்மானியின் பாதங்களை மூன்று முறை தொட்டு நெஞ்சில் ஒற்றிக்கொள்ள, தன் இடதுகையை மார்பில் வைத்து மேலே முகமுயர்த்தி ராசையாவின் சிரத்திற்குமேல் நீண்ட வலக்கரத்தால் ஆசிர்வதித்தார் உஸ்மானி. பவ்யமாக உள்ளே அழைத்துச் செல்லப்படுகையில் ராசையாவின் கருப்பு அங்கியை உரிமையுடன், சரிப்படுத்திவிட்டு “எல்லாம் முறைப்படிதானே ராசையா” என்றார் லேசான அதிகாரத் தோரணையில்.
“ஆமாம். ஷகீலாவிற்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நான்தான் சொல்லிப் புரியவச்சேன். சிறுசுகள் சொல்லுதேன்னு வம்ச பழக்கத்தையெல்லாம் விட முடியுமா...”
“விடக்கூடாது ராசையா. கூடாது. ரொம்ப காலம் வெளியே போய் படிச்சவள்ளே, மாறிப்போய்ட்டாள். எவனையோ இழுத்துக்கிட்டு வராம ஒரு ‘கூர்க்’கா பாத்து காதலிச்சாளே - அதுவரைக்கும் சந்தோஷம்.”
விஸ்தாரமான ஹாலில் வரிசையில் அமைந்திருந்த இருக்கைகளில் ஒன்றில் உஸ்மானி அமர்ந்தார். அருகில் உட்காந்திருந்தவர்களை நோட்டமிட்டு - மெலிதான புன்னகையில் இதழ்கள் விரிய நரைபுருவத்தை நீவி விட்டுக் கொண்டார்.
கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. திடீரென்று எழும் உரத்த சிரிப்புகளும் பரபரப்பாய் வேலை ஏவும் சப்தமும் கூடமெங்கும். வண்ணக் காகித ஜோடனை நேர்த்தியை குழந்தைகள் ரகசியமாகப் பிய்த்துப் பார்த்து சிதைத்தார்கள். வெளியிலிருந்து வந்த தாளகதிக்கு உள்ளேயும் சிலர் சேர்ந்து ஆடத்தொடங்கினார்கள். இருவர் இணைசேர்ந்து ஆடும் போட்டி ஆட்டத்தில் ஒருவர் சட்டென்று நடன அசைவை மாற்றினால் சேர்ந்து ஆடுபவரும் நொடியும் தாமதமின்றி ஆட்டத்தை அதேபோல் மாற்றியாக வேண்டும். ஆணும் பெண்ணுமாய் ஆடும்போது தோற்றுப்போய் அசடுவழிபவர்கள் அனேகமாக ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். தோற்ற ஆண்மகன் வெட்கி அந்த இடத்தைவிட்டு நகரும்படிக்கு கிண்டலால் துரத்துபவர்கள் பெண்கள். பிறழ்ந்தும் முறை தவறியும் ஆடப்படும் நடனத்தை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்த உஸ்மானிக்கு அருகே பினு வந்து நின்று மண்டியிட்டாள். எழுந்து நின்று ஆசி வழங்கி பக்கத்து இருக்கையைக் காட்டினார். மறுத்து தரையிலேயே காலருகில் உட்கார்ந்த தங்கையின் சிரத்தை பரிவுடன் தொட்டன விரல்கள்.
”ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து... ம், சௌக்கியம்தானே. நீயும் கிழவியாயிட்டு வரே போலிருக்கு. தலையில் பாதி நரைச்சாச்சு. ராசையாவிற்கு அக்கா மாதிரியிருக்கே” அண்ணனுக்கு மட்டும் கேட்கும் மெதுவான குரலில், “நீங்க கல்யாணத்துக்கு வர மாட்டீங்கன்னு நெனச்சேன்” என்றாள். உஸ்மானி சற்றுக் குனிந்து செவிமடுத்துக் கொண்டார்.
“அப்படியெல்லாம் ஏன் நினைக்கிற பினு. யார் வராவிட்டாலும் நான் வராமல் இருக்க முடியுமா? நாம் எதிர்பார்க்கிறபடியா எல்லாம் நடக்குது. யாரைக் குத்தம் சொல்றது இதுக்கெல்லாம்... சரிதான்னு ஏத்துக்க வேண்டியதுதான்.” பினுவின் கண்களிலிருந்து நீர் உதிர்வதைக் கண்டு பதட்டமாய் “அழாதே! அழாதே பினு. பொண்ணுக்கு அம்மா நீ. யாரும் பாத்துடப் போறாங்க, நீ என்ன செய்வே பாவம். உம்மேலே எனக்கொண்ணும் வருத்தமில்லே. வருத்தப்பட்டிருந்தா இங்கே வந்து உட்கார்ந்திருப்பேனா. ஷகிலாக்குட்டிக்கு இது சந்தோஷம்னா எனக்கும் தான்” கனிந்து குழைந்தது குரல்தொனி. தலை மூடிய துணியை இழுத்து பினு கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.
“பொனாச்சா எப்படியிருக்கான்.”
“கொஞ்சம் நாளானா எல்லாம் சரியாகும்.”
”சின்ன வயசிலேர்ந்து சொல்லிச்சொல்லி வளர்த்துவிட்டு இப்போது இப்படி முடியுதுன்னா எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான். காதலிச்சவனை கல்யாணம் பண்ணலேன்னா செத்துப்போவேன்னு மிரட்டுகிறாள் அண்ணா இவள். திமிர். ரொம்பப் படிக்க வச்சிட்டோம் பாருங்க அந்தத் திமிருதான்.”
“அவளைத் திட்டாதே. அப்போதெல்லாம் ராசையா கூடத்தான் ஷகிலாவை பொனாச்சாவிற்காகத்தான் பெத்திருக்கேன்னு அடிக்கடி சொல்லிட்டிருப்பான். அவனே சம்மதப்பட்டு செய்யும்போது நீ என்ன பண்ண முடியும்... சரி போகட்டும். மாப்பிள்ளைப் பையன் யாருன்னு தெரியலையே. இன்னும் மண்டபத்துக்கு அழைத்து வரவில்லையா....”
வெளியே ஆட்டக்காரர் மத்தியில் மதுப்புட்டியுடன் தள்ளாடுபவனை பார்வையில் சுட்டினாள்.
“பெரிய வசதிக்காரனோ...”
“அவங்கப்பா துணிமில் வச்சிருக்காருண்ணா.”
”சரிதான்! நான் வீட்லேர்ந்து இவ்வளவு தூரம் நடந்தே வரேன். என் வீட்டுக்கு வந்தா என் மருமகளும் இப்படித்தான் இருக்கணும்.... பணக்காரனாக் கெடச்சது ஷகிலாவுக்குப் பாக்கியம்.”
மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க, “என்னை மன்னிச்சுடுங்கண்ணா” என்றாள் பினு. “மன்னிக்கறதாவது! எங்கேர்ந்து கத்துக்கிட்ட இப்படியெல்லாம் பேச, சரி எழுந்துபோ. போய் ஆகவேண்டியதைப் பாரு. நான் இருந்து நெறயக் குடிச்சிட்டு தின்னுட்டுதான் போவேன். பை கொண்டு வந்திருக்கேன் பாத்துக்க....” எடுத்து வைத்திருந்த ரப்பர் பிளாடரை வெளியே உருவிக் காண்பித்ததும் அமைதியாகச் சிரித்து பினு அகன்றாள்.
உஸ்மானி எழுந்து மறைவாக கழிப்பறைப் பக்கம் சென்று ரப்பர் பிளாடரை தொடையிடுக்கில் சரியாகப் பொருத்திக்கொண்டு வந்தார். அழகான பெரிய டிரேக்களில் விஸ்கி நிரம்பிய கண்ணாடிக் குவளைகளைச் சுமந்து வரிசையாக விநியோகித்து வந்தார்கள். ததும்பி தரை விரிப்பில் தெறித்தது மது. சிறுக சிறுக சுவைத்துப் பருகினார் உஸ்மான். பெண்களிடமும் சிறு பிள்ளைகளிடத்தும் விநியோகம் கொஞ்சம் தாராளமாகவே. தேவைப்பட்டுக் கேட்பவர்களுக்கு மட்டும் சிகரெட். கல்யாணத்திற்காக நாற்பதாயிரம் ரூபாய்க்கு மதுவகைகளை பெங்களூரில் இருந்து ராசையா வாங்கி வந்திருப்பதாக பக்கத்திலிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். வியப்பு மேலீட்டால் உஸ்மானி மேலும் இரண்டு குவளைகள் பெற்றுப் பருகினார். சிறிது நேரத்தில் சிறுநீருக்காக பொருத்தப்பட்ட பை லேசாக மேடிட்டிருந்தது உடைக்குள்.
பிடித்து வைத்திருந்த காவேரியம்மனுக்கு சில பெரிய உயர்ரக மதுப்புட்டிகளை வைத்து வணங்கி வாளை உயர்த்தி சில சம்பிரதாய வார்த்தைகளை உச்சரித்து முடிந்ததும் - மணமக்களை எதிரெதிரே இருந்த இரண்டு தனியறைகளுக்கு அலங்கரிப்பதற்காக அழைத்துச் சென்றனர். கூட மத்தியில் ஒரு பீப்பாயை வைத்து அனைத்துவகை மதுவையும் கலந்து காக்டெயில் தயாரிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. குடியில் மயங்கி விழுந்த தம் சிறார்களை அம்மாக்கள் தூக்கிச் சென்று யாருக்கும் இடையூறு இல்லாதபடி சுவரோரங்களில் கிடத்தினர். போதை உந்த அனாயாசமாய் நடனமாடும் தங்கள் பிள்ளைகளை வாத்ஸல்யத்துடன் மகிழ்ந்து பார்த்தனர் சிலர்.
வெளியே இசைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் பையில் ஐந்து ரூபாய் தாளொன்றைத் திணித்து - அவருக்கு இஷ்டமான இசைலயத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் அதை வாசிப்பது கேட்டு உஸ்மானியும் நடனமாடினார். தவறாக ஆடியவர்களிடம் சொன்னார். “பார்த்துக் கொள்ளுங்கள்! இதுதான் கூர்க் நடனம், இப்படித்தான் ஆட வேண்டும்.” உடை வியர்வையில் நனைய ஆட்ட முனைப்பிலிருந்தவரை பெண் பிள்ளைக்கு மருதாணியிட வேண்டுமென்று ராசையா உள்ளே அழைத்துப் போனார்.
அலங்காரம் பூர்த்தியாகி மாப்பிள்ளையும் பெண்ணும் அருகருகே அமர்த்தப்பட்டிருந்தார்கள். எதிரே வெள்ளித்தட்டில் குழைந்த மருதாணி. கூடவே நிறைய ஒடித்த ஈர்க்குச்சிகளும். ஒவ்வொருத்தராக குச்சியில் மருதாணியைத் தொட்டெடுத்து மணமக்களின் உள்ளங்கைகளில் வாழ்த்துக்களோடு பதித்தார்கள். ஷகிலாவின் தோழி குச்சியின் ஒரு முனையை பல்லில் கடித்து கூராக்கிக்கொண்டு மருதாணியைத் தொட்டு மணமகனின் கையில் கொஞ்சம் பலமாக அழுத்தினாள். சுருக்கென்ற வலியில் புன்னகையுடம் பார்த்தான் அவன். “இது போதாது, சஷீவ் கிட்டே ஹேர்பின் கொடுத்து மருதாணியை வைக்கச் சொல்லவா....” காதலன் காதில் சன்னமாகக் கிசுகிசுத்தாள் ஷகிலா. இருவருக்கும் மருதாணியிடுகையில் “ஒரு கூர்க் தம்பதிகளா வாழணும் மக்களே....” என வாழ்த்தி வந்து மீண்டும் உஸ்மானி மதுவைத் தொடர்ந்தார். கையை விரித்து மணமகன் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு கணம் பொனாச்சா இருந்து மறைந்தான்.
தரையில் ஓங்கி வீசப்பட்ட பாட்டில் உடைந்து சிதறி கூடமெங்கும் சிதறல்களாய்க் கீழிறங்கின. உறக்கத்திலிருந்த உஸ்மானி பதறியெழுந்து பார்த்தார். வியர்த்து மூச்சிரைக்க தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான் பொனாச்சா. கண்ணாடிச் சில்லுகளின்மீது கால்பட்டுவிடாமல் அணைத்து மகனை நாற்காலிக்குள் அழுத்தினார். “கொஞ்சம் சாந்தமாயிரு பொனாச்சா! வளர்ந்த பையனில்லே... அமைதியாயிரு. இப்படியெல்லாம் செய்யலாமா நீ” தரையில் கிடந்த பாதி உடைந்த பாட்டிலை எடுத்து ஆவேசங்கொண்டவனாய் எரிந்து கொண்டிருந்த கணப்படுப்பிற்க்குள் எறிந்தான். உஸ்மானி இறுக்கமாய் அணைத்துக் கொண்டு ஆதரவாய்ப் பேசினார். பேச்சிடையில் குரல் கம்மியது. “இப்படிச் செய்வதையெல்லாம் நிறுத்திவிடு மகனே. சித்ரவதையாயிருக்கு எனக்கு. அவள் மட்டும்தானா பெண். அவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி. இவ்வளவுதான் விஷயம். உன்னை சிதைத்துக்கொள்வதால் என்ன நடந்துவிடப்போகிறது. நான் இன்னும் சாகவில்லையடா பொனாச்சா, அவளைவிடவும் அற்புதமான பெண்ணொருத்தியை உனக்குக் கொண்டு வருவேன். மனசை அலட்டிக் கொள்ளாமல் அவளை மறக்கத்தான் வேணும் நீ.” அலமாரியிலிருந்து ஒரு புதிய பாட்டிலை எடுத்துத் திறந்து டம்ளரின் விளிம்பு வரை ஊற்றி பொனாச்சாவின் அதரத்தில் பதித்தார்.
மாப்பிள்ளை பெண்ணுக்கு கருகமணி கட்டியாயிற்று. இருவரையும் ஒன்றாய் உட்காரவைத்து கழுத்திலிருந்து முழங்கால்களை மறைக்கும் விதமாக பட்டுத்துணியைக் கட்டினார்கள். அருகிலேயே பெரிய பாத்திரத்தில் அரிசி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே வரிசையமைந்தது. வரிசையில் வருபவர்கள் பாத்திரத்திலிருந்து எடுத்த கொஞ்சம் அரிசியை மணமக்களின் பட்டு விரிப்பிலிட்ட பிறகு அன்பளிப்புகளைக் கொடுத்துச் சென்றனர். உஸ்மானியின் முறை வரும்போது தன் மோதிரத்தைக் கழற்றி மணமகனுக்கு அணிவித்தார். தன் விரலுக்குப் பொருந்தாமல் பெரிதாயிருந்த தங்க மோதிரம் கழன்று விழாமலிருக்க மணமகன் கையை மூடிக்கொண்டான்.
விருந்தில் பன்றியிறைச்சியும் காக்டெயில் மதுவும் பரிமாறப்பட்டன. கூடுதலாக பருப்பு நீரும் கோதுமை ரொட்டியும். எதிர்வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷகிலாவிடம்  - மணமகனுக்கு இறைச்சி ஊட்டிவிடச் சொல்லி ஜாடை செய்து உஸ்மானி பலமாகச் சிரித்தார். சிரிப்பின் வேகத்தில் வாயிலிருந்து இறைச்சித் துணுக்குகள் வெளிவந்து விழுந்தன. பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை உடைக்குள் உப்பிப் பருத்திருந்த தன் சிறுநீர்ப்பையை தொட்டுப் பார்க்கச் சொல்லி ஆனந்தப்பட்டுக்கொண்டார். குடித்தவர்கள் போதையிறங்கி சாப்பிட வேண்டுமென்பதற்காக கொண்டுவந்து வைக்கப்பட்ட டிகாக்‌ஷன் டீயிலும் ஒரு குவளை குடித்துவைத்தார் உஸ்மானி.
தகப்பனிடமிருந்து டம்ளரைப் பெற்று ஒரே மூச்சில் காலி செய்து டம்ளரைக் கீழே வைப்பதற்குக் குனிந்தவன் - அப்படியே முழங்கால்களிடையில் முகத்தை மறைத்துக்கொண்டு குலுங்கியழுதான். செய்வதறியாது திகைத்துப் போனார் உஸ்மானி. அவரும் கண்கலங்கி வார்த்தைகளற்று பொனாச்சாவின் அதிரும் முதுகைத் தடவியபடியிருந்தார். இரவுகளில் இதைப்போல ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கிறது - ஷகிலாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து. ”அவள் உன்னைக் காதலிக்கவில்லையே, நீதானே அவளை விரும்பிக் கொண்டிருந்தாய். நீ அழுகின்ற பாவம் அவளைத் தொட வேண்டாம். போகட்டும் விடு. போகிற இடத்தில் நல்லா இருக்கட்டும்....” ஒரு பாம்பைப்போல சட்டென்று தலை நிமிர்த்திப் பார்த்தான் பொனாச்சா. “இருக்கட்டும். சந்தோஷமா இருக்கட்டும். நான் இதே ஊர்லே இருக்க முடியாது. இருக்கறதை வித்துட்டு நாம எங்கேயாவது போயிடலாம்...” ஒரு துணியைச் சுருட்டி கையில் வைத்துக்கொண்டு தரையில் கிடந்த பாட்டில் சிதறல்களை உஸ்மானி ஒன்று சேர்த்தார்.
“கொஞ்சம்  யோசித்துப் பேசுகிறாயா நீ. ஆறு ஏழு தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தைவிட்டு ஒரு பெண்ணுக்காகப் போய்விடமுடியும... என்னைப் போல இல்லாவிட்டாலும் நீ ஒரு கோழையாக மாறாமல் இருக்கணும்.”
“இங்கே யார் இருக்கா உங்களுக்கு. யாருக்கும் நாம தேவைப்படலே. எல்லோருக்கும் பணம் இருந்தா போதும். எம்மேலே நம்பிக்கையிருந்த என்னோட புறப்பட்டு வாங்க. இனிமேலும் நான் இங்கே இருந்தால் பைத்தியம் பிடிச்சிதான் சாக வேண்டியிருக்கும்.”
நொடியில் சினம் கவ்விக்கொள்ள நின்றபடி உஸ்மானி முறைத்தார். சிவப்பேறின விழிகள். “இது உன் பேச்சுதானா பொனாச்சா! பொத்திப் பொத்தி வளர்த்து உன்னை ஒரு பெண் பிள்ளையாக்கிட்டனோன்னு சந்தேகமா இருக்கு. தேவைக்கதிகமா கவலைப்படுறே ஒன்றுமில்லாத காரியத்துக்கெல்லாம். வம்ச கௌரவத்தையும் பொருட்படுத்தாம ஒருத்திக்காக ஓடிப்போயிடலாம்னு சொல்றவன் ‘கூர்க்’கா இருக்க முடியாது. உனக்கு விருப்பமிருந்தா சொல்லு. இந்த இரவே செத்துப் போறேன். நான் செத்தபிறகு நீ எங்கே வேண்டுமானாலும் போ...” பக்கத்திலமர்ந்து மகன் தோளைப் பற்றி மடியில் சாய்த்துக் கொண்டார்.
“இன்னும் குழந்தையாகவே இருக்கிறாயே மகனே. உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்கணும், ஏன் சாகணும். உனக்காகத்தானே என்னைக் காப்பாத்திட்டு இருக்கேன். மனம் பொறுக்கலைடா எனக்கு, சாகற அளவுக்கா துணிஞ்சிருக்கே. போயிடலாம். எங்கே போகலாம்னு நெனக்கறயோ அங்கே போயிடலாம். உன்னைவிட முக்கியமானது எனக்கு என்ன இருக்கு. போயிட வேண்டியதுதான்... தூங்கு அமைதியா. தூங்கிடு பொனாச்சா. எல்லாம் நல்லபடியாகும்.” ஆஜானுபாகுவான தன் மகனை வெகுநேரம் தட்டிக்கொண்டிருந்துவிட்டு விளக்கை அணைத்தார். ஜன்னலைத் திறந்ததும் குப்பென்று முகத்திலறைந்தது குளிர். தூரத்து மலைமுகடுகளின் விளிம்புகள் லேசாகத் தெரிந்தன. ரேடியோ நிலைய கோபுரத்தின் உச்ச விளக்கு பனியில் மறைந்து மங்கலான செம்புள்ளியாயிருந்தது.
பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட விளக்குகளின் பிரகாசத்திற்கு இருள் சற்றுத் தொலைவே ஒதுங்கிக் கொண்டது. மதுமகிமையில் குளிர் உறைக்கவில்லை யாருக்கும். இடைவிடாத ஆட்டத்தில் போதை விலகியவர்கள் உள்ளே சென்று ஊற்றிக்கொண்டு வந்தார்கள். இதற்காக உள்ளே செல்வது அசௌகரியமாகப் பட்டதால் வெளியே கொண்டு வரப்பட்டது பீப்பாய். விளக்கிலிருந்து தவறி விழுந்த வெட்டுக்கிளியொன்று மதுவிற்குள் தத்தளித்தது. ஐம்பது அடி தொலைவில் மண்டபத்தைப் பார்த்தபடி ஷகிலா நிறுத்தி வைக்கப்பட்டாள். பாதி நிரம்பிய பன்னீர்ப் பானையை தலையில் வைத்துப் பிடித்திருந்தாள். பானைக்குள் ரோஜா இதழ்கள் மிதந்தன.
அவள் பின்னால் தோழி சஷீவ். ஷகிலாவிற்கு எதிர்ப்புறமாய் மூன்றடி தூரத்தில் மணமகனின் தம்பி ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தான். அருகிலேயே அவன் அம்மா, மகனுக்கு ஆட்டக் கிளர்ச்சி குன்றிவிடாதிருக்க சரியான விகிதத்தில் மது கலந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். வேகம் விஞ்சிப்போய் இரண்டொருதரம் ஷகிலாவின் மேல் விழத்தெரியவே ஷகிலாவிற்கு முன்னால் சஷீவ் நின்றுகொண்டாள். மாப்பிள்ளைத் தம்பியின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ”விடாதே சுகிர்த்! ஒரு அடிகூட விட்டுக்கொடுக்காதே. அவள் உள்ளே நுழைந்துவிட்டால் உன்னையும் உன் அண்ணனையும் பிரித்துவிடுவாள். விடாதே” உரக்கச் சத்தமிட்டார் உஸ்மானி. நேரம் கடந்துகொண்டிருந்தது. ஒரே இடத்தில்  - உச்ச வெறியில் களைப்படையாமல் ஆடிக் கொண்டிருந்தான். சில தடவைகள் சஷீவின் மேலே விழுந்தான். மேலே விழுந்தவனை நகைப்புடன் விலக்கி நிற்க வைத்தாள் சஷீவ். சுகிர்த் சீக்கிரம் வீழ்ந்து ஷகிலா உள்ளே போவதற்காக காட்டமான மதுவை பெண் வீட்டார் கொண்டு வந்து கொடுத்தார்கள். சுகிர்த் அதை தட்டிவிட்டு பக்கத்திலிருந்தவனைப் பிடித்து அவனிடத்தில் நிற்க வைத்தான். “இங்கேயே நின்று ஆடிக்கொண்டிரு. வந்துவிடுகிறேன்” என்று சொல்லி அவனுக்குத் தேவையானதை தேவையான கலவையில் பருகி வந்து - இடத்தைப் பெற்றுக்கொண்டு ஆடினான். தலையில் பானைச் சுமையில் நெளிந்தாள் ஷகிலா. சஷீவிடம் கேட்டான் சுகிர்த். “ஒரு முத்தம் தருகிறாயா, இரண்டடி வழிவிடுகிறேன்.”
“இரண்டடி வேண்டாம். பத்தடி விட்டுக் கொடுக்கிறாயா?” சஷீவிடமிருந்து கன்னத்தில் ஒரு முத்தம் பெற்றுக்கொண்டு பின்னால் சென்று ஆடினான். பெண்ணும் தோழியும் பத்தடி முன்னேறினார்கள். கிண்டலும் சிரிப்புமாய் உஸ்மானி இரைந்தார். “அடே சுகிர்த் மடையா ஒரு முத்தத்துக்குப் பத்தடி தூரமா. இது அநியாயம்...”
“என்னையும் அண்ணனையும் பிரித்து விடுவாயா நீ? மாட்டேன் என்று சொல், ஐந்தடி வழிவிடுகிறேன்....” ஷகிலா பத்தடி வேண்டுமென்றாள்.
சுகிர்த் ஆட்டத்திலேயே தலையாட்டி மறுத்தான்.
“முடியாது ஐந்தடிதான்.”
“சரி பிரித்துவிடமாட்டேன் உங்களை” என்று ஷகிலா ஒத்துக் கொள்ளவும், சுகிர்த் ஐந்தடி பின்னகர்ந்தான். சஷீவ், அவள் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க அனுமதித்ததற்காகவும் - அவன் அழகைப் புகழ்ந்ததற்காகவும் மேலும் சில அடிகள் சலுகை கொடுத்தான்.
மண்டபத்திற்குச் சுமார் இருபதடி தூரம் நெருங்கிய பிறகு எந்த சமரசத்திற்கும் கட்டுப்படாமல் ஆட்டத்தில் தீவிரமானான். அவனாக மனமிரங்கி வழிகொடுத்தால்தான் ஆயிற்று என்ற நிலையில் - அசைவு புலப்படாமல் காற்பெருவிரலால் ஷகிலா ரகஸியமாக முன்வந்து கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளி கரகோஷங்கள் நடுவில் ஆடிக் கொண்டிருந்த மாப்பிள்ளை அங்கிருந்தபடியே கூச்சலிட்டான். “நகர்கிறாள் பார் சுகிர்த்! அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடாதே!” பறையோசையால் அவன் சொல்வது சரியாகக் கேட்காமல், அண்ணன் விட்டுக் கொடுக்கச் சொல்கிறான் எனக்கருதிய சுகிர்த் “முடியாது!” என்றலறினான். சுகிர்த்தை விரைவில் படுக்க வைக்க பெண்வீட்டாரும் - இன்னும் நீண்ட நேரம் பெண்ணைத் தடுத்து வைப்பதற்காக மாப்பிள்ளை வீட்டாரும் அவரவர் வழிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
சாக்கடையில் விழுந்துவிட்ட மாப்பிள்ளையின் நண்பன் ஒருவனுக்கு போதை தெளிவதற்கான சிச்ருஷைகளைச் செய்துவிட்டு சிறுநீர்ப்பை அசைய நடந்துவந்த உஸ்மானி “போகட்டும் விடு. எவ்வளவு நேரம்தான் தலையில் பானையுடன் நிற்பாள் பாவம்” என்றார். மேலும் சக்தியேற ஆடிக்கொண்டிருப்பவனின் காதுகளில் அவர் சொன்னது விழவில்லை. அவன் அம்மாவிடம் அவனுக்கு மிகப் பிடித்த மதுவின் பெயரைச் சொல்லி அதைக் கொண்டு வரும்படி ஏவினான். சென்று கொண்டிருக்கும் அவளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக அவனறியாமல் பக்கவாட்டில் ஓரடி விலகி “கிளாஸில் ஊற்ற வேண்டாம் - பாட்டிலைத் திறந்து அப்படியே எடுத்து வா” என்று சொல்லி முடிப்பதற்குள் பெண்ணும் தோழியும் அவனைக் கடந்து பாய்ச்சலாய் உள்ளே ஓடினார்கள்.
அமர்ந்தபடியே பொனாச்சா வெளிக்கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்த தந்தையை வெறித்துப் பார்த்தான். ஸ்வெட்டர் கைகளிலிருந்து கையை எடுத்து நெஞ்சோடு சேர்த்திருந்தான். தோளின் இருபுறமும் ஸ்வெட்டரின் நீள் கைகள் கூடாய்த் தொங்கி அசைந்தன.
“நீங்கள் போகத்தான் வேண்டுமா?” அந்தப் பலகீனமான கேள்வி பதில் கொண்டு வரவில்லை. ஸ்வெட்டருக்குள் கைகளைத் திணித்துக் கொண்டு உள்ளங்கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டான். விழி சிவந்து வெளுத்திருந்தது முகம். உதட்டில் தோல் வெடிப்புகளை நாவால் தடவிக் கொண்டான்.
“அந்தக் கல்யாணத்திற்கு நீங்கள் போக வேண்டாம். அது உங்கள் மகனுக்கு நடக்க வேண்டிய கல்யாணம்” மரபான கருப்பு உடை அணிந்து தோற்சங்கிலியைப் பொருத்திக் கொண்டிருந்தார் உஸ்மானி.
“உங்களுக்கு நான் வேண்டுமென்றால் போக வேண்டாம். உங்கள் தங்கை மகள் திருமணம்தான் முக்கியமென்றால் தாராளமாகப் போய்க் கொள்ளலாம்” உஸ்மானி அந்த தீர்க்கமான எச்சரிக்கைக்காகப் புன்னகைத்தார். கண்ணாடிமுன் நின்று ஏதாவது விட்டுப் போயிருக்கிறதாவென சரிபார்த்துக் கொண்டார். நீட்டிய சுட்டுவிரல் கோபத்தில் நடுங்க கண்ணாடிக்குள்ளிருந்து மகன் பேசினான், “நீங்கள் திரும்பி வரும்போது நான் இங்கே இருக்கமாட்டேன்...” கடைசியாக தன் ரப்பர் பையைத் தேடுவதில் முனைந்தார். விழாக்காலங்களில் அதிகம் குடிக்க நேரும்போது அது இல்லாமல் முடிவதில்லை. மேசை இழுப்பறையிலிருந்ததை உடைக்குள் வைத்துக்கொண்டு - முதுகின் பின்னே துளைக்கும் பார்வைக்கு எதிர்வினை எதுவும் காட்டாமல் வாசலை நோக்கி நடந்தார். கம்பீரமாயிருந்தது நடை.
உஸ்மானி, முடிந்தவரையில் குடித்தும் - நடனமாடியும் அயர்ந்து நின்றிருந்தார். தள்ளாட்டத்தை மறைப்பது சிரமமாயிருந்தது. இளவட்டங்களெல்லாம் இன்னும் ஆடிக்கொண்டுதானிருந்தனர். எப்படி மிதமாகப் பருகி போதையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் பெண்கள் தேர்ந்திருந்தனர். சரிந்த ஆண்களைச் சுட்டிக்காட்டி பெண்கள் பேசிச் சிரித்தபோது - விழுந்தவர்களின் மனைவிகள் வெட்கினார்கள்.
தலைவெட்டப்பட்ட வாழைமரங்கள் போதுமான இடைவெளியில் வரிசையாக ஊன்றப்பட்டிருந்தன. அன்றுதான் வெட்டப்பட்ட செழுமையான மரங்கள். அதன் வட்டமான மேற்தளத்தில் குச்சி செருகி சுற்றப்பட்டிருந்தது பூச்சரம். மரங்களைச் சுற்றிலும் நீர் தெளித்து தரை துப்புரவாக்கப்பட்டிருந்தது. மரங்களைச் சூழ்ந்தது கூட்டம். மாப்பிள்ளையின் தாய்மாமன் முறைக்கு ஒருவர் வந்தார். நீளமான வாளொன்று கொடுக்கப்படவும் - வாளின் முனையால் தாம் வெட்டுவதற்குரிய மரங்களின் உச்சியிலுள்ள பூச்சரத்தை அகற்றிப்போட்டார். விளிம்பின் கூர்மையில் ஒளிமிளிரும் வாள் மந்திர உச்சாடனங்களுடன் பின்னோக்கி உயர்ந்தது. பிறகு அரைவட்டமாய்ச் சுழன்று மரத்தைத் துண்டித்தது. பறையோசையும் உணர்ச்சிக் கூவலும் கீழே - பள்ளத்தாக்கின் வீடுகளையும் தொட்டெழுப்பின. ஒவ்வொரு மரமும் வெட்டப்படும்போது மேல்ஸ்தாயிக்குத் தாவியது பேரோசை. மரங்களின் அருகிலேயே நின்று - தடையில்லாமல் வெட்டுண்டு விழ வேண்டுமென மணமகன் பார்த்திருந்தான். மாப்பிள்ளை தரப்பு மரங்கள் வெட்டுப்பட்டு முடிவதற்குக் காத்திருந்து வாளௌ உஸ்மானி பெற்றுக் கொண்டார் பெண்ணுக்குத் தாய்மாமனாய்.
இரண்டு கைகளாலும் வாளை உயர்த்தி மந்திரம் சொல்வதற்கு அதிக நேரமானது. உச்சிப்பூச்சரத்தை நீக்கிய பிறகு அவரது வாள்வீச்சில் துண்டாகி விழுந்தது மரம். அவரது வேக அசைவில் அதிர்ந்தாடும் சிறுநீர்ப்பந்து எங்கும் சிரிப்பைத் தூவியது. அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆண்களும் பெண்அளும் சிரித்தார்கள். உடைத்துக்கொண்டு பீறிட்ட சிரிப்பால் பறையடிப்பவர்களாலும் இசைக்க முடியவில்லை. குழலூதுபவன் குழலைத் தரையில் ஊன்றி அதன்மேல் நெற்றியை முட்டுக்கொடுத்து மறைவாகச் சிரித்தான். பினு தர்மசங்கடமாக அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தாள். உஸ்மானியும் சிரித்துக்கொண்டுதான் மரம் வெட்டினார். ஒவ்வொரு மரத்தையும் வெட்டி நிமிரும்போது மணமகன் நிற்கும் இடத்தை கவனித்துக் கொண்டார். இன்னும் ஒரே ஒரு மரம். இதோடு திருமணம் முடிந்தது. மணமகன் நிற்கும் பக்கத்தில் வாகாக தள்ளி நின்றுகொண்டார். முகத்தில் சிரிப்பில்லை. போதையின் அலைக்கழிப்பில்லை. சர்வ கவனமாய் கூர்ந்த விழிகளில் வேட்டைக்களை. வாளை பக்கவாட்டில் ஓங்கினார் உஸ்மானி. சுவாசம் திணறியது. கடைசி மரமும் சாய்ந்தவுடன் தீவிர இசை முழக்கத்திற்கு சமிக்ஞை கொடுப்பதற்காக ஒரு கையை உயரே தூக்கியிருந்தான் மணமகன். இறுதி முறையாக வீசப்பட்ட வாள் மின்னல் தெறிப்பாய் வந்து மணமகனின் அடிவயிற்றில் ஆழப்பதிந்து நின்றதை, புலன் குவியப் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.
****
தட்டச்சு : சென்ஷி

Oct 23, 2010

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி

பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் - எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகumamaheswariரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே  என்ன? பனங்கிழங்குக் கட்டு? பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். 'ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.' அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. 'ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி' என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.
மரச் செப்புகள், சிறு அடுப்பு, பானை, சட்டி, சருவம், குடம், கரண்டி என்று எதிர்காலச் சமையல் அறையின் மாதிரி அவள் சிறு கைகளில் பரவிச் சமைந்து அவளைக் களைப்புறச் செய்தது. வட்டத் தண்டவாளத்தில் ஓடும் குட்டி ரயிலின் கூவல் சோகத்தின் நிழலை நெஞ்சுள் பூசுகிறது. கிளி, மைனா, புறா என்று பறவை பொம்மைகளின் மொழியோ சதா மேகங்களைத் துழாவிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் யுவதிகள் அவள் கற்பனையின் கனம் தாளமாட்டாத மெலிவோடு இருக்கிறார்கள்.
அம்மா சமையல், கழுவுதல், துவைத்தல், துடைத்தல் என எந்த நேரமும் வேலைகளோடிருக்கிறாள். பிறகு தங்கச்சிப் பாப்பாவின் குஞ்சுக் கை, கால்களுக்கு எண்ணெயிட்டு நீவி, காலில் குப்புறப் போட்டுக் குளிக்கவைக்கிறாள். துவட்டிச் சாம்பிராணிப் புகை காட்டி, நெஞ்சோடு அணைத்துச் சேலையால் மூடி மூலையில் உட்கார்ந்திருக்கிறாள் நெடுநேரம்.
'அம்மா நான் உன் மடியில் படுத்துக்கட்டுமா?'
'இன்னும் சின்னக் குழந்தையா நீ?' நெஞ்சு வரை மேடேறிய கர்ப்ப வயிற்றோடு அம்மாவுக்குப் பேசினாலே மூச்சிரைக்கிறது. அவள் பகிர்ந்து தரும் அன்பின் போதாமை அனுவை அழுத்துகிறது.
அப்பா மெத்தையில் சாய்ந்து மடக்கி உயர்த்திய கால்களில் தங்கச்சிப் பாப்பாவைக் கிடத்தி தூரியாட்டுகிறார். கிலுகிலுப்பையை ஆட்டி பாப்பாவிற்கு விளையாட்டுக் காட்டுகிறார். 'ங்கு, அக்கு' என்று பாப்பாவோடு பேசுகிறார்.
'அப்ப, இந்தக் கதையில அந்த ராஜா...' என்ரு அனு எதையாவது கேட்டால்., 'பெரிய மனுசிபோல் என்ன கேள்வி நை நைனு, சும்மா இரு' என்று அதட்டுகிறார்.
'நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல்' அனு கேட்கையில் மரப்பாச்சி மௌனமாய் விழிக்கும்.
'எனக்கு யாரிருக்கா? நான் தனி.' அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும். சுடுகாயைத் தரையில் உரசி அதன் கன்னத்தில் வைத்தால் 'ஆ, பொசுக்குதே' என்று முகத்தைக் கோணும். கொடுக்காப்புளிப் பழத்தின் கொட்டையில், உட்பழுப்புத் தோல் சேதம் அடையாமல் மேல் கறுப்புத் தோலை உரித்து நிலை மேல் வைத்தால் பகல் கனவும் பலிக்கும் என்கிற அனுவின் நம்பிக்கைகளுக்கு 'ஆமாஞ்சாமி' போடும். அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சில நேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.
மரப்பாச்சி புதிய கதைகளை அவளுக்குச் சொல்லும்போது, அதன் கண்களில் நீல ஒளி படரும். மரப்பாச்சி மரத்தின்  இதயமாயிருந்தபோது அறிந்த கதைகள், மரம் வானை முத்தமிட்ட பரவசக் கதைகள், மழைத்துளிக்குள் விரிந்த வானவிற் கதைகள்... அவள் எல்லா நாளும் ஏதாவது ஒரு கதையின் மடியில் உறங்கினாள்.
வருடங்கள் அவளை உருகிப் புதிதாக வார்த்தன. நீண்டு, மினுமினுக்கிற கைகள்; திரண்ட தோள்கள்; குழைந்து, வளைந்த இடுப்பு, குளியல் அறையில் தன் மார்பின் அரும்புகளில் முதன் முறையாக விரல் பட்டபோது பயந்து, பதறி மரப்பாச்சியிடம் ஓடி வந்து சொன்னாள். அது தனது சிறிய கூம்பு வடிவ முலைகளை அவளுக்குக் காட்டியது.
அவள் குளியல் அறைக் கதவுகளை மூடித் தன்னைத் தனிப்படுத்திக் கொள்வதில் அம்மாவிற்குக் ஆதங்கம். 'நான் தலை தேய்து விடறேனே' என்கிறாள்.
'ஒண்ணும் வேணாம்' என்று அனு விலகுகிறாள். அம்மா தனக்கும் அவளுக்கும் இடையே தள்ளத் தள்ள முளைத்தாடும் திரைகளை விலக்க முயன்று, தாண்டி முன்னேறுகையில் புதிது புதிதாய் திரைகள் பெருகக் கண்டு மிரண்டாள். நிரந்தரமான மெல்லிய திரைக்குப் பின்புறம் தெரியும் மகளின் வடிவக்கோடுகளை வருடத் தவித்தாள்.
எல்லோரும் தூங்கும் இரவுகளில் அனுவின்  படுக்கையோரம் அம்மா உட்கார்ந்திருப்பாள். அனுவின் உறக்கத்தில் ஊடுருவி நெருடும் அம்மாவின் விழிப்பு. உள்ளங்கை அனுவின் உடல் மீது ஒற்றி ஒற்றி எதையோ எதையோ தேடும். 'என்னம்மா?' பாதி விழிப்பில் அனு கேட்டால் பதற்றமாகக் கையை இழுத்துக்கொண்டு, 'ஒண்ணுமில்லை' என முனகி, முதுகு காட்டிப் படுத்துக் கொள்வாள். அம்மாவின் முதுகிலிருந்து விழிகளும் வினாக்களும் தன் மீது பொழிவதை அனுவால் அறிய முடியும்.
பள்ளிக்குக் கிளம்பும் நேரம் இப்போதெல்லாம் மேலாடையைச் சரியாகப் போடுவது அம்மாதான், சாயங்காலம் அவள் வர பத்து நிமிடம் தாமதித்தால் , வாசலில் அம்மா பதறித் தவித்து நிற்கிறாள். எங்கே போனாலும் அம்மாவின் கண்களின் கதகதப்பும் மிருதும் அடைகாக்கிறது.
தன் அயர்விலும் ஆனந்தத்திலும் மரப்பாச்சி மங்குவதையும் ஒளிர்வதையும் கண்டு அனு வியக்கிறாள். தன்னை அச்சுறுத்தவும் கிளர்த்தவும் செய்கிற ததும்பல்களை மரப்பாச்சியிடமும் காண்கிறாள். கட்புலனாகாத கதிர்களால் தான் மரப்பாச்சியோடு ஒன்றுவதை உணர்கிறாள்.
மரப்பாச்சியின் திறந்த உடல், கோடுகள் தாண்டி மிளிரும் விழிகள், இடுப்பும் மடங்கிய கையும் உருவாக்கும் இடைவெளி அனைத்தையும் உறிஞ்சத் திறந்த உதடுபோல் விரியும். அனுவின் உலகம் அதற்குள் வழுக்கி, நகர்ந்து, சுருங்கும்.
சிறுமிகள் அனுவை விளையாடக் கூப்பிட்டு உதடு பிதுக்கித் திரும்புகிறார்கள். கூடத்துத் தரையில் முடிவுற்று ஆடும் தொலைக் காட்சியின் ஒளி நெளிவுகள், இரவில் ஊறும் இருள், ஜன்னல் கதவுகள் காற்றில் அலைக்கழிய, அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள். மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகள் உதிர்ந்து மார்பெங்கும் திடீரென மயிர் அடர்ந்திருக்கிறது. வளைந்து இடுப்பு நேராகி , உடல் திடம் அடைந்து, வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து அனுவை அருந்தியது. பிறகு அது மெத்தை முழுவதும் தனது கரிய நரம்புகளை விரித்ததும் அவை புதிய புதிய உருவங்களை வரைந்தன.; துண்டு துண்டாக. அம்புலிமாமா கதைகளில் அரசிளங்குமரிகளை வளைத்துக் குதிரையில் ஏற்றுகிற இளவரசனின் கைகள். சினிமாக்களில் காதலியைத் துரத்தி ஓடுகிற காதலனின் கால்கள். தொலைக்காட்சியில் கண் மயங்கிய பெண்ணின் கன்னங்களில் முத்தமிடுகிற உதடுகள். தெருவோரங்களில், கூட்டங்களில் அவள் மீது தெறித்து , உணர்வைச் சொடுக்கிச் சிமிட்டுகிற கண்கள். இன்னும் அம்மாவின் இதமான சாயல்கள், அப்பாவின் உக்கிரக் கவர்ச்சியோடான அசைவுகள், அத்தனையும் சிந்திய நிழற்துண்டங்கள், அபூர்வமான லயங்களில் குழைந்து கூடி உருவாகிறான் ஒருவன். அவள் ஒருபோதும் கண்டிராத, ஆனால் எப்போதும் அவளுள் அசைந்தபடியிருந்த அவன், அந்த ஊடுருவல் தனக்கு நேர்வதைத் தானேயற்று கவனம் கொள்ள முடிவது என்ன அதிசயம்? தனக்கு மட்டுமேயாகவிருந்த அந்தரங்கத்தின் திசைகளில் அவன் சுவாதீனம் கொள்வது குளிர்ந்த பரபரப்பாகப் பூக்கிறது. அந்த இரவு, காலையின் அவசரத்திலும் உடைபடாது நீண்டது. அனு வேறெப்போதும் போலன்றி தன் உடலை மிகவும் நேசித்தாள். கனவின் ரகசியத்தைப் பதுக்கிய மிதப்பில் பகல்களிருந்தன. பள்ளி முடிந்ததும் தாவி வந்து அவளை அள்ளுகிற மரப்பாச்சி; 'ஏன் லேட்?' என்று 'உம்'மென்றாகிற அதன் முகம்; நீள்கிற ரகசியக் கொஞ்சல்கள்; அம்மா இல்லாத நேரம் இடும் முத்தங்கள்; அவள் படுக்கையில் அவளுக்கு முன்பாகவே ஆக்கிரமித்திருக்கிற அவன். போர்வைக்குள் அனுவின் கைப்பிடியில் இருக்கிற மரப்பாச்சியை அம்மா பிடுங்க முயற்சித்தால், தூக்கத்திலும் இறுகப் பற்றிக் கொள்கிறாள். அதன் விரிந்த கைகளுக்குள் தன்னைப் பொதிந்தும், மார்பு முடிகளைச் சுருட்டி விளையாடியும் மீசை நுனியை இழுத்துச் சிரித்தும் தோள்களில் நறுக்கென்று செல்லமாய்க் கிள்ளியும் அவள் நேரங்கள் கிளுகிளுக்கும். தாபங்களின் படிகளில் சுழன்றிறங்குகிறாள் அவள். அகலவும் மனமின்றி அமிழவும் துணிவின்றி வேட்கையின் விளிம்பலைகளில் நுனிப் பாதம் அளைகிறாள்.
கிருஸ்துமஸ் லீவ் சமயம் அத்தை வந்தபோது அனு கவுனை கால்களுக்கிடையில் சேகரித்து, குனிந்து, கோல நடுச்சாணி உருண்டையில் பூசணிப் பூவைச் செருகிக்கொண்டிருந்தாள். 'அனு எப்படி வளர்ந்துட்டே!' அத்தை ஆச்சரியத்திற்குள் அவளை அள்ளிக் கொண்டாள். உணவு மேஜையில் விசேஷமான பண்டங்கள், பார்த்துப் பார்த்துப் பரிமாறும் அம்மா. அத்தை அனுவை லீவிற்குத் தன்னோடு அனுப்பும்படி கேட்டதும் அம்மாவின் முகத்தில் திகிற் புள்ளிகள் இறைபட்டன. 'அய்யோ மதினி, இவளை நாங்க கடிச்சா முழுங்கிடுவோம்? அப்படியே இவள் ஆளாகிற முகூர்த்தம் எங்க வீட்டில் நேர்ந்தால் என்ன குத்தம்? எனக்கும் பிள்ளையா குட்டியா? ஒரு தரம் என்னோட வரட்டுமே' அத்தை அவளைத் தன்னருகில் வாஞ்சையாக இழுத்துக் கொண்டாள்.
ஒரு உறுப்பையே தன்னிலிருந்து வெட்டியெடுப்பது போன்ற அம்மாவின் வேதனை கண்டு அனு மருண்டாள். துணிகளை அடுக்கிய பெட்டியில் மரப்பாச்சியை வைக்கப் போனபோது அத்தை, 'அங்கே நிறைய பொம்மை இருக்கு' என்று பிடுங்கிப் போட்டதுதான் அனுவுக்கு வருத்தம்.
அந்தப் பயணம் அவளுக்குப் பிடித்திருந்தது. நகர்கிற மரங்கள்; காற்றின் உல்லாசம்; மலைகளின் நீலச்சாய்வு. எல்லாமும் புத்தம் புதிது.
அம்மா வற்புறுத்தி உடுத்திவிட்ட கரும்பச்சைப் பாவாடையில் அனுவின் வளர்த்தியை மாமாவும் வியந்தார். பார்த்த கணத்திலிருந்தே மாமாவிடம் இருந்து தன்பால் எதுவோ பாய்வதை உணர்ந்து அவள் கூசினாள். 'எந்த கிளாஸ் நீ? எய்த்தா, நைன்த்தா?' என்று கேட்டுவிட்டு பதிலைக் காதில் வாங்காமல் கழுத்துக் கீழே தேங்கிய மாமாவின் பார்வையில் அது நெளிந்தது. ' எப்படி மாறிட்டே? மூக்கொழுகிக்கிட்டு, சின்ன கவுன் போட்டிருந்த குட்டிப் பொண்ணா நீ?' என்று அவள் இடுப்பைத் திமிறத் திமிற இழுத்துக் கொஞ்சியபோது மூச்சின் அனலில் அது ஊர்ந்தது. 'சட்டை இந்த இடத்தில் இறுக்குதா?' கேட்டு தொட்டுத் தொட்டு மேலும் கீழும் அழுத்தித் தேடிய உள்ளங்கையில் இருந்து அது நசநசவென்று பரவியது. மாமாவின் கைகளில் இருந்து தன்னை உருவிக்கொண்டு ஓடினாள் அனு.
அத்தை பிரியமாயிருந்தாள். திகட்டத் திகட்ட கருப்பட்டி ஆப்பாம், ரவை பணியாரம், சீனிப்பாலில் ஊறிய சிறு உருண்டையான உளுந்து வடைகள் என்று கேட்டுக்கேட்டு ஊட்டாத குறைதான்.
'உன் அடர்த்தியான சுருள்முடியில் இன்னிக்கு ஆயிரங்கால் சடை பின்னலாமா? பின்னி முடித்து, கொல்லையில் பூத்த பிச்சி மொட்டுகளை ஊசியில் கோர்த்து வாங்கி , ஜடையில் தைத்து, பெரிய கண்ணாடி முன் திருப்பி நிறுத்தி, சின்னக் கண்ணாடியைக் கையில் தந்தாள். 'நல்லாயிருக்கா பார் அனு!'
அம்மா ஒளிந்துவைத்த அன்பின் பக்கங்கள் அத்தையிடம் திறந்து புரண்டன. அனு எந்நேரமும் அத்தையை ஒட்டி, இரவில் சுவர் மூலையில் ஒண்டிப் படுத்து, அத்தையின் சேலை நுனியைப் பார்த்தபடியே தூங்க முனைவாள். அவ்வளவு தூரத்தையும் ஒரு விரல் சொடுக்கில் அழித்துவிட்டு , மரப்பாச்சிக்குள்ளிருந்து கிளம்பி வருகிறான் அவன். அத்தைக்கும் அனுவிற்கும் நடுவே இருந்த சிறிய இடைவெளியில் தன்னை லாவகமாகச் செலுத்திப் பொருத்திப் படுக்கிறான். உறக்கத்தோடு அனுவின் தசைகளிலும் நரம்புகளிலும் கிளர்ந்து கலக்கிறான். அவனும் அவளும் இடையறாத மயக்கத்தில் இருக்கையில் ஒரு அன்னியப் பார்வையின் திடீர் நுழைவில் அத்தனையும் அறுபடுகிறது. அனு உலுக்கி விழிக்கிறாள். மிகவும் அவசரமாக கழிப்பறைக்கு போகவேண்டும் போலிருக்கிறது. கொல்லைக் கதவு திறந்து  தென்னைகள், பவழமல்லி, மருதாணி எல்லாம் கடந்து, இந்த இருட்டில் குளிரில்...அய்யோ, பயமா இருக்கே. அத்தையை எழுப்பலாமா? ச்சே, அத்தை பாவம். அலுத்துக் களைத்து அயர்ந்த தூக்கம். ஏறி இறங்கும் மூச்சில் மூக்குத்தி மினுக்கும். காதோர முடிப் பிசிறில், கன்னத்து வியர்வைத் துளிர்ப்பில் அத்தைக்குள் புதைந்த குழந்தை வெளித் தெரிகிறது. எப்படியாவது தூங்கிவிடலாம். இல்லை, தாங்க முடியவில்லை. அடிவயிற்றில் முட்டும் சிறுநீர் குத்தலெடுக்கிறது. மெல்ல எழுந்து அத்தைக்கும் முழிப்புக் காட்டாமல் , கொலுசு இரையாமல் பூனைபோல நடந்து, சாப்பாட்டு மேஜையில் இடித்துச் சமாளித்து, இருட்டில் தடவி சுவிட்சைப் போடுகிறாள். கதவில் சாவியைத் திருகும் சிற்றொலி நிசப்தத்தின் மென்மைக்குள் பெரிதாக வெடிக்கிறது. அத்தை புரள்வது கேட்கிறது. 'ரொம்ப இருட்டாயிருக்குமோ?' பயந்து, நடுங்கி, அடித்தாழை ஓசையிட நீக்கி, கதவைத் திறந்தால் பளீரென்று நட்சத்திரங்களின் கலகலத்த சிரிப்பு. மின்விளக்கின் மஞ்சளௌளி தரையில் சிறுசிறு நாகங்களாக நெளிகிறது; மிக அழகாக,அச்சமேற்படுத்தாததாக. தன் பயங்களை நினைத்து இப்போது சிரிப்பு வருகிறது. காற்றில் அலையும் பாவாடை. பிச்சிப்பூ மணம். செடிகளின் பச்சை வாசனை. மருதாணிப் பூக்களின் சுகந்த போதை, தாழ்ந்தாடுகிற நட்சத்திரச் சரங்கள். நிலவின் மழலையொளி. கழிவறைக் கதவின் கிறீச்சிடல்கூட இனிமையாக. சிறுநீர் பிரிந்ததும் உடலின் லகுத்தன்மை. இந்த மருதாணிப் புதர்கிட்டே உட்கார ஆசையாயிருக்கே. அய்யோ அத்தை தேடுவாங்க. திரும்பி வருகையில் அனு தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள். உடல் மீது நூறு விழிகள் மொய்த்து உறுத்தின. அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள் அவளை இருக்கின, காலையில் உணர்ந்த அதே சுடு மூச்சு. 'ச்சீ, இல்லை; என்னை பேய் பிடிச்சிடிச்சோ?' கரிய, நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம் நெருக்கப்படுகிறது. கொட்டும் முத்தங்கள் - கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல், மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டப்போது அவள் கதறிவிட்டாள். வார்த்தைகளற்ற அந்த அலறலில் அத்தைக்கு விழிப்புத் தட்டியது. காய்ந்த கீற்றுப் படுக்கைமீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது  அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள். கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின்  உடல். அத்தை ஓடிவரவும் மாமா அவசரமாக விலகினார். அத்தையின் உலுக்கல்; 'அனு, என்ன அனு!' அவளிடம் பேச்சு மூச்சில்லை. 'பாத்ரூம் போக வந்தப்ப விழுந்துட்டா போல.' மாமாவின் சமாளிப்பு. அத்தை மௌனமாக அவளை அணைத்துத் தூக்கிப் படுக்கையில் கிடத்துகிறாள்.
அரை மயக்க அலைகளில் புரளும் பிரக்ஞை. 'இதுவா? இதுவா அது? இப்படியா, இல்லை, முகமும் முகமும் பக்கத்தில் வரும்; உடனே ஒரு பூவும் பூவும் நெருங்கி ஆடும்; வானில் புதிய பறவைகள் சிறகடிக்கும். நீலமேகமும் பசும் புல்வெளியும் ஒட்டி உறவாடும்; திசைகளெங்கும் குழலிசை இனிமையாகப் பெருகும்; அப்படித்தானே அந்த பாட்டில் வரும்? ஓஹோ, அப்படியிருந்தால் இது பிடித்திருக்குமா? நீ விரும்புவது அணுகுமுறையின் மாறுதலையா? இல்லை. ச்சே, இந்த மாமாவா? காதோர நரை. வாயில் சிகரெட் நெடி. தளர்ந்த தோள்களின் வலுவான இறுக்கத்தில் இருந்த கிழட்டுக் காமத்தின் புகைச்சல். நெஞ்சைக் கமறுகிறது. உடல் காந்துகிறது. மார்பு வலியில் எரிகிறது. கண்கள் தீய்கின்றன.
'அய்யோ அனு, மேல் சுடுதே. இந்த மாத்திரையாவது போட்டுக்கோ' அத்தை வாயைப் புடவையால் போர்த்திக்கொண்டு விம்முகிறாள். மாமாவின் அறைக்கு ஓடி என்னவோ கோபமாய்க் கத்துகிறாள்.
'நான் இனி நானாயிருக்க முடியாதா? மாமாவின் தொடல் என் அப்பாவுடையது போலில்லை. அப்பா என்னைத் தொட்டே ஆயிரம் வருடம் இருக்குமே! என் முதல் ஆண் இவனா! என் மேல் மோதி நசுக்கிய உடலால் என்னவெல்லாம் அழிந்தது? பலவந்தப் பிழம்புகளில் கருகி உதிர்ந்த பிம்பங்கள் இனி மீளுமா? மாமா என்னிலிருந்து கசக்கி எறிந்தது எதை? எனக்கு என்னவோ ஆயிடிச்சே. நான் இழந்தது எதை? தூக்கம் ஒரு நனைந்த சாக்குப்போல் இமைமீது விழுந்தது.
காலையில் தேய்ந்த ஒலிகள். அடுப்படியில் லைட்டரை அழுத்தும் சத்தம், பால் குக்கரின் விசில், டம்ளரில் ஆற்றும் ஓசை. விழித்தபடி படுத்திருந்த அனுவிடம், 'இந்தா காப்பியைக் குடி அனு' என்கிறாள் அத்தை.
'வேணாம், எனக்கு இப்பவே அம்மாகிட்டே போகணும்'
அத்தையின் கெஞ்சல்களை அனு பொருட்படுத்தவில்லை. மாமா பேப்பரை மடித்துவிட்டு பக்கத்தில் வருகிறார். மறைக்க முடியாத குற்ற உணர்வு அவர் முகத்தில் படலமிட்டிருக்கிறது அசிங்கமாக.
'உனக்கு மாமா ஒரு புது ஃப்ராக் வாங்கித் தரட்டுமா?'. தோளில் பட்ட கையை அனு உடனடியாக உதறித் தள்ளுகிறாள். மாமா அத்தையின் முறைப்பில் நகர்ந்து விலகுகிறார்.
பயணம் எவ்வளவு நீண்டதாக நகர்கிறது? எத்தனை மெதுவாகச் சுழலும் சக்கரங்கள்? அத்தையின் மௌனம் நெஞ்சில் ஒற்றுவதாகப் படிகிறது. அத்தை அம்மாவின் நைந்த பிரதியெனத் தோற்றம் கொள்கிறாள். 'அம்மா, அம்மா! நான் உன்னிடம் என்ன சொல்வேன்? என்னால் இதை எப்படிச் சொல்ல முடியும்?'
'என்னாச்சு? உடனே திரும்பிட்டீங்க? அம்மா இடுப்புக் குழந்தையோடு ஓடி வருகிறாள். அனுவைப் பாய்ந்து தழுவும் அவள் பார்வை. அத்தை வரவழைத்துக்கொண்ட புன்னகையோடும் கலங்கி வருகிற கண்ணோடும்.
'ஒரு நாள் உங்களைப் பிரிஞ்சதுங்கே உங்க பொண்ணுக்குக்க் காய்ச்சல் வந்துடுச்சு' எனவும் அம்மாவின் விழிகள் நம்பாமல் அனு மீது நகர்ந்து தடவுகின்றன - கை தவறி விழுந்தும் உடையாமல் இருக்கிற பீங்கான் சாமானைப் பதறி எடுத்துக் கீறவில்லையே என்று சரி பார்ப்பதுபோல.
அனு ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடுகிறாள். வீட்டின் நாற்புறமும் தேங்கிய துயரம். அமானுஷ்யமான அமைதி அங்கே பொருக்குக் கட்டியுள்ளது. 'என் மரப்பாச்சி எங்கே?' அனு தேடுகிறாள். கூடத்தில் தொலைகாட்சிப் பெட்டிமீது, அடுக்களையில் பொம்மைகளிடையே, பாப்பாவின் தொட்டிலில், எங்கும் அது இல்லை. 'அது கீறி உடைந்திருக்கும். நூறு துண்டாக நொறுங்கிப் போயிருக்கும். அம்மா அதைப் பெருக்கி வாரியள்ளித் தூர எறிந்திருப்பாள். அனுவின் கண்களில் நீர் கோர்த்தது. அழுகையோடு படுக்கையில் சரிந்தபோது மரப்பாச்சி சன்னலில் நின்றது. ஆனால் அது அனுவைப் பார்க்கவேயில்லை. அவளையன்றி எங்கேயோ, எல்லாவற்றிலுமோ அதன் பார்வை சிதறிக் கிடந்தது. அனுவின் தொடுகையைத் தவிர்க்க அது மூலையில் ஒண்டியிருந்தது. அதனோடான நெருக்கத்தை இனி ஒருபோதும் மீட்க முடியாதென்று அவள் மனம் கேவியது. உற்றுப் பார்த்தபோது மரப்பாச்சியின் இடை வளைந்து, உடல் மறுபடியும் பெண் தன்மையுற்றிருந்தது. மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் முலைகளை அனு வெறுப்போடு பார்த்தாள்.
*
நன்றி : தமிழினி பதிப்பகம்

தட்டச்சு: ஆபிதீன்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்