Oct 25, 2010

வேட்டை- யூமா வாசுகி

வாசல் வரை வந்து நின்று தயங்கித் திரும்பினார் உஸ்மானி. தளர்ந்த உடலை நாற்காலியில் கிடத்திக்கொண்டு விறகுச்  சாம்பல் கிடக்கும் கணப்படுப்பிற்குள் கண்களைச் செலுத்தியிருந்தவனை அவரது அழைப்புக்குரல் சலனப்படுத்தவில்லை.
“பொனாச்சா....”
“-------------”
“மகனே பொனாச்சா”
“----------------”
“சீக்கிரம் வந்துவிடுவேன். வீட்டிலேயே இரு. குடிக்கறதானா கொஞ்சம் சாப்பிட்ட பிறகு குடி, உடம்பு yumavasuki4தாங்காது.” கெட்டுச் சீரழிந்து கொண்டிருக்கிற மகனது உடல் நிலைக்காக வெளிப்பட்ட பெருமூச்சுடன் உஸ்மானி படியிறங்கினார். கொழுத்த புலி மாதிரி திமிராய் அலைந்து கொண்டிருப்பான் பொனாச்சா. சேர்ந்தாற் போல ஒரு மணி நேரம் வீட்டில் நிலைக்குமா அவன்  கால்கள். ரத்தம் உறைந்து போகிற இரவுக் குளிரில், அகால நேரங்களில் உறங்குவதற்கு வீடு திரும்புகிறவன். ஒரு நண்பனின் பின்னால் அமர்ந்து பைக்கிலோ, தனித்த நடையிலோ வரும் மகனை எதிர்பார்த்து, உஸ்மானி ஜன்னலைப் பிடித்தபடி நின்றிருப்பார். மகன் தோட்டத்திலிருக்கும்போது சில தடவைகள் அவரும் செல்வதுண்டு. கூலிப் பெண்களுடன் சிரிப்பு அரட்டையுமாயிருப்பான் பொனாச்சா. அப்பாவைக் கண்டதும், கடுகடுப்பாய் வேலை வாங்குபவன் போல அவர்களை அதட்டுவான். சில நிமிடங்கள் நின்றிருந்து புன்னகை மனதுடன் உஸ்மானி புறப்படுவார். சரிவில் இறங்கி அருவிப்பாலத்தைக் கடப்பதற்கு முன்பாகவே பின்னாலிருந்து வரும் பொனாச்சாவின் பாட்டு. அதிரடியான பேச்சையும் சிரிப்பையும் போன இடம் தெரியாமலாக்கி வீட்டோட முடக்கிவிட்டாயே ராசய்யா, சரிதானா இதெல்லாம். உரித்த ஆட்டுத் தோலாய்த் துவண்டு கிடக்கிறான் என் மகன்.
சூரியன் மேகத்துள் சோம்பியிருந்தான். காலையின் மங்கலான வெளிச்சத்தோடு மலைச் சரிவுகளின் செழுமையை இன்னும் போர்த்தியிருந்தது பனி. கணுக்கால்வரை தொளதொளப்பாய் நடையில் அசைந்தது கருப்பு கூர்க் உடை. விழா நாட்களில் மட்டுமே அணிப் படுவதால் படிந்து போன பீரோ வாசனை. தோளிலிருந்து குறுக்கே தொடங்கிய சங்கிலியின் இடுப்பு முடிச்சில் இணைக்கப்பட்டிருந்த குறுவாளின் கைப்பிடி சற்று துருவேறியிருந்தது. நினைவாய் எடுத்து வைத்திருந்த ரப்பர் பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். வந்து உரசி முதுமையைச் சீண்டிப் பார்க்கும் குளிருக்கு மார்போடு கைகளை அணைத்து மெதுவாக நடந்துக் கொண்டிருந்தார். வழியின் இருபுறமும் மண்டிக்கிடந்த ஊதா மலர்கள் நடையைத் தட்டுபடுத்திற்று. நேற்றிருந்ததை விட இன்று அதிகம். அடுத்த நாட்களில் இலைகளே தெரியாமல் பெருகும் போலிருக்கிறது. இதுதானே பருவம். பொனாச்சாவின் அம்மா இருந்தால் இவைகள் காவேரியம்மனுக்கு மாலையாகும். குளிருக்கெல்லாம் பயப்படாமல் பூப்பறிக்கவென்றே வெயில் வருமுன் எழுந்துவிடுவாள். இரவு யாருக்கும் தெரியாமல் மலர்ந்த பூக்களை விடியலில் பார்க்கிற சந்தோஷத்தை அனுபவிக்கத் தெரிந்திருந்தது. பொனாச்சா சிறுவனாக இருந்தபோது இந்தப் பூக்களை அவனுக்குச் சூட்டி, சிறுமிகளின் உடையை இரவல் பெற்று அணிவித்து - ஒரு பெண் குழந்தையைப் போன்ற ஒப்பனையில் போட்டோ எடுத்து வைத்திருந்தாள்.
தூரத்திலிருந்தே மண்டபத்தின் முகப்பிலுள்ள ‘அப்பர் கோடவா சமாஜ்’ எனும் வார்த்தைகள் வெளிறியும் சில எழுத்துக்கள் அழிந்தும் தெரிந்தன. யாரு கண்டுகொள்கிறார்கள் இதையெல்லாம். கூர்க் ஆச்சாரப்படி நடப்பவன் எவனைப் பார்க்க முடிகிறது. சண்டை சச்சரவின் போது ஒருத்தருக்கொருத்தர் வெட்டிக் கொள்ளும்போதுதான் மூதாதைகளின் வேட்டைப் புத்தி தெரிகிறது. மற்றபடி நிஜ கூர்க் என்று எவனுமில்லை. கல்யாணம் கருமாதின்னு வரும்போது செய்கிற சடங்குகளெல்லாம் கூட கொஞ்ச நாளைக்குத்தான். பிள்ளைகளை வெளிநாடு, வெளி மாநிலம்னு படிக்க அனுப்பிவிடுகிறார்கள். அதுகள் படிக்கப் போனபோது கத்துக்கிட்ட பழக்கத்தையெல்லாம் இங்கேயும் நடத்த ஆரம்பிச்சாச்சு. எதுவானாலும் ராசையா, இந்த மடிக்கேரி மண்ணில் கூர்க்க பொறந்த ஒருவர் எந்த நிலையிலேயும் வாக்குத் தவறக்கூடாது.
வெளியே பறையடிப்பவர்களைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்தது சிறு கூட்டம். அவ்வப்போது துந்துபியொத்த இசைக்கருவியிலிருந்து பிளிறிய ஓசை மேலும் அவர்களை உற்சாகப்படுத்தியது. புதுப்புது மனிதர்களாய் பலர் வாசலருகே நின்று ஆடுபவர்களைப் பார்த்திருந்தார்கள். வெளியாட்கள். மாப்பிள்ளை உறவுகளாயிருக்கலாம். உஸ்மானி நுழைவுத் தோணத்தைத் தாண்டும்போது ஓட்டமும் நடையுமாக வந்து எதிர்கொண்டார் ராசையா.
குனிந்து உஸ்மானியின் பாதங்களை மூன்று முறை தொட்டு நெஞ்சில் ஒற்றிக்கொள்ள, தன் இடதுகையை மார்பில் வைத்து மேலே முகமுயர்த்தி ராசையாவின் சிரத்திற்குமேல் நீண்ட வலக்கரத்தால் ஆசிர்வதித்தார் உஸ்மானி. பவ்யமாக உள்ளே அழைத்துச் செல்லப்படுகையில் ராசையாவின் கருப்பு அங்கியை உரிமையுடன், சரிப்படுத்திவிட்டு “எல்லாம் முறைப்படிதானே ராசையா” என்றார் லேசான அதிகாரத் தோரணையில்.
“ஆமாம். ஷகீலாவிற்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நான்தான் சொல்லிப் புரியவச்சேன். சிறுசுகள் சொல்லுதேன்னு வம்ச பழக்கத்தையெல்லாம் விட முடியுமா...”
“விடக்கூடாது ராசையா. கூடாது. ரொம்ப காலம் வெளியே போய் படிச்சவள்ளே, மாறிப்போய்ட்டாள். எவனையோ இழுத்துக்கிட்டு வராம ஒரு ‘கூர்க்’கா பாத்து காதலிச்சாளே - அதுவரைக்கும் சந்தோஷம்.”
விஸ்தாரமான ஹாலில் வரிசையில் அமைந்திருந்த இருக்கைகளில் ஒன்றில் உஸ்மானி அமர்ந்தார். அருகில் உட்காந்திருந்தவர்களை நோட்டமிட்டு - மெலிதான புன்னகையில் இதழ்கள் விரிய நரைபுருவத்தை நீவி விட்டுக் கொண்டார்.
கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. திடீரென்று எழும் உரத்த சிரிப்புகளும் பரபரப்பாய் வேலை ஏவும் சப்தமும் கூடமெங்கும். வண்ணக் காகித ஜோடனை நேர்த்தியை குழந்தைகள் ரகசியமாகப் பிய்த்துப் பார்த்து சிதைத்தார்கள். வெளியிலிருந்து வந்த தாளகதிக்கு உள்ளேயும் சிலர் சேர்ந்து ஆடத்தொடங்கினார்கள். இருவர் இணைசேர்ந்து ஆடும் போட்டி ஆட்டத்தில் ஒருவர் சட்டென்று நடன அசைவை மாற்றினால் சேர்ந்து ஆடுபவரும் நொடியும் தாமதமின்றி ஆட்டத்தை அதேபோல் மாற்றியாக வேண்டும். ஆணும் பெண்ணுமாய் ஆடும்போது தோற்றுப்போய் அசடுவழிபவர்கள் அனேகமாக ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். தோற்ற ஆண்மகன் வெட்கி அந்த இடத்தைவிட்டு நகரும்படிக்கு கிண்டலால் துரத்துபவர்கள் பெண்கள். பிறழ்ந்தும் முறை தவறியும் ஆடப்படும் நடனத்தை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்த உஸ்மானிக்கு அருகே பினு வந்து நின்று மண்டியிட்டாள். எழுந்து நின்று ஆசி வழங்கி பக்கத்து இருக்கையைக் காட்டினார். மறுத்து தரையிலேயே காலருகில் உட்கார்ந்த தங்கையின் சிரத்தை பரிவுடன் தொட்டன விரல்கள்.
”ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து... ம், சௌக்கியம்தானே. நீயும் கிழவியாயிட்டு வரே போலிருக்கு. தலையில் பாதி நரைச்சாச்சு. ராசையாவிற்கு அக்கா மாதிரியிருக்கே” அண்ணனுக்கு மட்டும் கேட்கும் மெதுவான குரலில், “நீங்க கல்யாணத்துக்கு வர மாட்டீங்கன்னு நெனச்சேன்” என்றாள். உஸ்மானி சற்றுக் குனிந்து செவிமடுத்துக் கொண்டார்.
“அப்படியெல்லாம் ஏன் நினைக்கிற பினு. யார் வராவிட்டாலும் நான் வராமல் இருக்க முடியுமா? நாம் எதிர்பார்க்கிறபடியா எல்லாம் நடக்குது. யாரைக் குத்தம் சொல்றது இதுக்கெல்லாம்... சரிதான்னு ஏத்துக்க வேண்டியதுதான்.” பினுவின் கண்களிலிருந்து நீர் உதிர்வதைக் கண்டு பதட்டமாய் “அழாதே! அழாதே பினு. பொண்ணுக்கு அம்மா நீ. யாரும் பாத்துடப் போறாங்க, நீ என்ன செய்வே பாவம். உம்மேலே எனக்கொண்ணும் வருத்தமில்லே. வருத்தப்பட்டிருந்தா இங்கே வந்து உட்கார்ந்திருப்பேனா. ஷகிலாக்குட்டிக்கு இது சந்தோஷம்னா எனக்கும் தான்” கனிந்து குழைந்தது குரல்தொனி. தலை மூடிய துணியை இழுத்து பினு கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.
“பொனாச்சா எப்படியிருக்கான்.”
“கொஞ்சம் நாளானா எல்லாம் சரியாகும்.”
”சின்ன வயசிலேர்ந்து சொல்லிச்சொல்லி வளர்த்துவிட்டு இப்போது இப்படி முடியுதுன்னா எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான். காதலிச்சவனை கல்யாணம் பண்ணலேன்னா செத்துப்போவேன்னு மிரட்டுகிறாள் அண்ணா இவள். திமிர். ரொம்பப் படிக்க வச்சிட்டோம் பாருங்க அந்தத் திமிருதான்.”
“அவளைத் திட்டாதே. அப்போதெல்லாம் ராசையா கூடத்தான் ஷகிலாவை பொனாச்சாவிற்காகத்தான் பெத்திருக்கேன்னு அடிக்கடி சொல்லிட்டிருப்பான். அவனே சம்மதப்பட்டு செய்யும்போது நீ என்ன பண்ண முடியும்... சரி போகட்டும். மாப்பிள்ளைப் பையன் யாருன்னு தெரியலையே. இன்னும் மண்டபத்துக்கு அழைத்து வரவில்லையா....”
வெளியே ஆட்டக்காரர் மத்தியில் மதுப்புட்டியுடன் தள்ளாடுபவனை பார்வையில் சுட்டினாள்.
“பெரிய வசதிக்காரனோ...”
“அவங்கப்பா துணிமில் வச்சிருக்காருண்ணா.”
”சரிதான்! நான் வீட்லேர்ந்து இவ்வளவு தூரம் நடந்தே வரேன். என் வீட்டுக்கு வந்தா என் மருமகளும் இப்படித்தான் இருக்கணும்.... பணக்காரனாக் கெடச்சது ஷகிலாவுக்குப் பாக்கியம்.”
மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க, “என்னை மன்னிச்சுடுங்கண்ணா” என்றாள் பினு. “மன்னிக்கறதாவது! எங்கேர்ந்து கத்துக்கிட்ட இப்படியெல்லாம் பேச, சரி எழுந்துபோ. போய் ஆகவேண்டியதைப் பாரு. நான் இருந்து நெறயக் குடிச்சிட்டு தின்னுட்டுதான் போவேன். பை கொண்டு வந்திருக்கேன் பாத்துக்க....” எடுத்து வைத்திருந்த ரப்பர் பிளாடரை வெளியே உருவிக் காண்பித்ததும் அமைதியாகச் சிரித்து பினு அகன்றாள்.
உஸ்மானி எழுந்து மறைவாக கழிப்பறைப் பக்கம் சென்று ரப்பர் பிளாடரை தொடையிடுக்கில் சரியாகப் பொருத்திக்கொண்டு வந்தார். அழகான பெரிய டிரேக்களில் விஸ்கி நிரம்பிய கண்ணாடிக் குவளைகளைச் சுமந்து வரிசையாக விநியோகித்து வந்தார்கள். ததும்பி தரை விரிப்பில் தெறித்தது மது. சிறுக சிறுக சுவைத்துப் பருகினார் உஸ்மான். பெண்களிடமும் சிறு பிள்ளைகளிடத்தும் விநியோகம் கொஞ்சம் தாராளமாகவே. தேவைப்பட்டுக் கேட்பவர்களுக்கு மட்டும் சிகரெட். கல்யாணத்திற்காக நாற்பதாயிரம் ரூபாய்க்கு மதுவகைகளை பெங்களூரில் இருந்து ராசையா வாங்கி வந்திருப்பதாக பக்கத்திலிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். வியப்பு மேலீட்டால் உஸ்மானி மேலும் இரண்டு குவளைகள் பெற்றுப் பருகினார். சிறிது நேரத்தில் சிறுநீருக்காக பொருத்தப்பட்ட பை லேசாக மேடிட்டிருந்தது உடைக்குள்.
பிடித்து வைத்திருந்த காவேரியம்மனுக்கு சில பெரிய உயர்ரக மதுப்புட்டிகளை வைத்து வணங்கி வாளை உயர்த்தி சில சம்பிரதாய வார்த்தைகளை உச்சரித்து முடிந்ததும் - மணமக்களை எதிரெதிரே இருந்த இரண்டு தனியறைகளுக்கு அலங்கரிப்பதற்காக அழைத்துச் சென்றனர். கூட மத்தியில் ஒரு பீப்பாயை வைத்து அனைத்துவகை மதுவையும் கலந்து காக்டெயில் தயாரிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. குடியில் மயங்கி விழுந்த தம் சிறார்களை அம்மாக்கள் தூக்கிச் சென்று யாருக்கும் இடையூறு இல்லாதபடி சுவரோரங்களில் கிடத்தினர். போதை உந்த அனாயாசமாய் நடனமாடும் தங்கள் பிள்ளைகளை வாத்ஸல்யத்துடன் மகிழ்ந்து பார்த்தனர் சிலர்.
வெளியே இசைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் பையில் ஐந்து ரூபாய் தாளொன்றைத் திணித்து - அவருக்கு இஷ்டமான இசைலயத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் அதை வாசிப்பது கேட்டு உஸ்மானியும் நடனமாடினார். தவறாக ஆடியவர்களிடம் சொன்னார். “பார்த்துக் கொள்ளுங்கள்! இதுதான் கூர்க் நடனம், இப்படித்தான் ஆட வேண்டும்.” உடை வியர்வையில் நனைய ஆட்ட முனைப்பிலிருந்தவரை பெண் பிள்ளைக்கு மருதாணியிட வேண்டுமென்று ராசையா உள்ளே அழைத்துப் போனார்.
அலங்காரம் பூர்த்தியாகி மாப்பிள்ளையும் பெண்ணும் அருகருகே அமர்த்தப்பட்டிருந்தார்கள். எதிரே வெள்ளித்தட்டில் குழைந்த மருதாணி. கூடவே நிறைய ஒடித்த ஈர்க்குச்சிகளும். ஒவ்வொருத்தராக குச்சியில் மருதாணியைத் தொட்டெடுத்து மணமக்களின் உள்ளங்கைகளில் வாழ்த்துக்களோடு பதித்தார்கள். ஷகிலாவின் தோழி குச்சியின் ஒரு முனையை பல்லில் கடித்து கூராக்கிக்கொண்டு மருதாணியைத் தொட்டு மணமகனின் கையில் கொஞ்சம் பலமாக அழுத்தினாள். சுருக்கென்ற வலியில் புன்னகையுடம் பார்த்தான் அவன். “இது போதாது, சஷீவ் கிட்டே ஹேர்பின் கொடுத்து மருதாணியை வைக்கச் சொல்லவா....” காதலன் காதில் சன்னமாகக் கிசுகிசுத்தாள் ஷகிலா. இருவருக்கும் மருதாணியிடுகையில் “ஒரு கூர்க் தம்பதிகளா வாழணும் மக்களே....” என வாழ்த்தி வந்து மீண்டும் உஸ்மானி மதுவைத் தொடர்ந்தார். கையை விரித்து மணமகன் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு கணம் பொனாச்சா இருந்து மறைந்தான்.
தரையில் ஓங்கி வீசப்பட்ட பாட்டில் உடைந்து சிதறி கூடமெங்கும் சிதறல்களாய்க் கீழிறங்கின. உறக்கத்திலிருந்த உஸ்மானி பதறியெழுந்து பார்த்தார். வியர்த்து மூச்சிரைக்க தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான் பொனாச்சா. கண்ணாடிச் சில்லுகளின்மீது கால்பட்டுவிடாமல் அணைத்து மகனை நாற்காலிக்குள் அழுத்தினார். “கொஞ்சம் சாந்தமாயிரு பொனாச்சா! வளர்ந்த பையனில்லே... அமைதியாயிரு. இப்படியெல்லாம் செய்யலாமா நீ” தரையில் கிடந்த பாதி உடைந்த பாட்டிலை எடுத்து ஆவேசங்கொண்டவனாய் எரிந்து கொண்டிருந்த கணப்படுப்பிற்க்குள் எறிந்தான். உஸ்மானி இறுக்கமாய் அணைத்துக் கொண்டு ஆதரவாய்ப் பேசினார். பேச்சிடையில் குரல் கம்மியது. “இப்படிச் செய்வதையெல்லாம் நிறுத்திவிடு மகனே. சித்ரவதையாயிருக்கு எனக்கு. அவள் மட்டும்தானா பெண். அவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி. இவ்வளவுதான் விஷயம். உன்னை சிதைத்துக்கொள்வதால் என்ன நடந்துவிடப்போகிறது. நான் இன்னும் சாகவில்லையடா பொனாச்சா, அவளைவிடவும் அற்புதமான பெண்ணொருத்தியை உனக்குக் கொண்டு வருவேன். மனசை அலட்டிக் கொள்ளாமல் அவளை மறக்கத்தான் வேணும் நீ.” அலமாரியிலிருந்து ஒரு புதிய பாட்டிலை எடுத்துத் திறந்து டம்ளரின் விளிம்பு வரை ஊற்றி பொனாச்சாவின் அதரத்தில் பதித்தார்.
மாப்பிள்ளை பெண்ணுக்கு கருகமணி கட்டியாயிற்று. இருவரையும் ஒன்றாய் உட்காரவைத்து கழுத்திலிருந்து முழங்கால்களை மறைக்கும் விதமாக பட்டுத்துணியைக் கட்டினார்கள். அருகிலேயே பெரிய பாத்திரத்தில் அரிசி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே வரிசையமைந்தது. வரிசையில் வருபவர்கள் பாத்திரத்திலிருந்து எடுத்த கொஞ்சம் அரிசியை மணமக்களின் பட்டு விரிப்பிலிட்ட பிறகு அன்பளிப்புகளைக் கொடுத்துச் சென்றனர். உஸ்மானியின் முறை வரும்போது தன் மோதிரத்தைக் கழற்றி மணமகனுக்கு அணிவித்தார். தன் விரலுக்குப் பொருந்தாமல் பெரிதாயிருந்த தங்க மோதிரம் கழன்று விழாமலிருக்க மணமகன் கையை மூடிக்கொண்டான்.
விருந்தில் பன்றியிறைச்சியும் காக்டெயில் மதுவும் பரிமாறப்பட்டன. கூடுதலாக பருப்பு நீரும் கோதுமை ரொட்டியும். எதிர்வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷகிலாவிடம்  - மணமகனுக்கு இறைச்சி ஊட்டிவிடச் சொல்லி ஜாடை செய்து உஸ்மானி பலமாகச் சிரித்தார். சிரிப்பின் வேகத்தில் வாயிலிருந்து இறைச்சித் துணுக்குகள் வெளிவந்து விழுந்தன. பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை உடைக்குள் உப்பிப் பருத்திருந்த தன் சிறுநீர்ப்பையை தொட்டுப் பார்க்கச் சொல்லி ஆனந்தப்பட்டுக்கொண்டார். குடித்தவர்கள் போதையிறங்கி சாப்பிட வேண்டுமென்பதற்காக கொண்டுவந்து வைக்கப்பட்ட டிகாக்‌ஷன் டீயிலும் ஒரு குவளை குடித்துவைத்தார் உஸ்மானி.
தகப்பனிடமிருந்து டம்ளரைப் பெற்று ஒரே மூச்சில் காலி செய்து டம்ளரைக் கீழே வைப்பதற்குக் குனிந்தவன் - அப்படியே முழங்கால்களிடையில் முகத்தை மறைத்துக்கொண்டு குலுங்கியழுதான். செய்வதறியாது திகைத்துப் போனார் உஸ்மானி. அவரும் கண்கலங்கி வார்த்தைகளற்று பொனாச்சாவின் அதிரும் முதுகைத் தடவியபடியிருந்தார். இரவுகளில் இதைப்போல ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கிறது - ஷகிலாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து. ”அவள் உன்னைக் காதலிக்கவில்லையே, நீதானே அவளை விரும்பிக் கொண்டிருந்தாய். நீ அழுகின்ற பாவம் அவளைத் தொட வேண்டாம். போகட்டும் விடு. போகிற இடத்தில் நல்லா இருக்கட்டும்....” ஒரு பாம்பைப்போல சட்டென்று தலை நிமிர்த்திப் பார்த்தான் பொனாச்சா. “இருக்கட்டும். சந்தோஷமா இருக்கட்டும். நான் இதே ஊர்லே இருக்க முடியாது. இருக்கறதை வித்துட்டு நாம எங்கேயாவது போயிடலாம்...” ஒரு துணியைச் சுருட்டி கையில் வைத்துக்கொண்டு தரையில் கிடந்த பாட்டில் சிதறல்களை உஸ்மானி ஒன்று சேர்த்தார்.
“கொஞ்சம்  யோசித்துப் பேசுகிறாயா நீ. ஆறு ஏழு தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தைவிட்டு ஒரு பெண்ணுக்காகப் போய்விடமுடியும... என்னைப் போல இல்லாவிட்டாலும் நீ ஒரு கோழையாக மாறாமல் இருக்கணும்.”
“இங்கே யார் இருக்கா உங்களுக்கு. யாருக்கும் நாம தேவைப்படலே. எல்லோருக்கும் பணம் இருந்தா போதும். எம்மேலே நம்பிக்கையிருந்த என்னோட புறப்பட்டு வாங்க. இனிமேலும் நான் இங்கே இருந்தால் பைத்தியம் பிடிச்சிதான் சாக வேண்டியிருக்கும்.”
நொடியில் சினம் கவ்விக்கொள்ள நின்றபடி உஸ்மானி முறைத்தார். சிவப்பேறின விழிகள். “இது உன் பேச்சுதானா பொனாச்சா! பொத்திப் பொத்தி வளர்த்து உன்னை ஒரு பெண் பிள்ளையாக்கிட்டனோன்னு சந்தேகமா இருக்கு. தேவைக்கதிகமா கவலைப்படுறே ஒன்றுமில்லாத காரியத்துக்கெல்லாம். வம்ச கௌரவத்தையும் பொருட்படுத்தாம ஒருத்திக்காக ஓடிப்போயிடலாம்னு சொல்றவன் ‘கூர்க்’கா இருக்க முடியாது. உனக்கு விருப்பமிருந்தா சொல்லு. இந்த இரவே செத்துப் போறேன். நான் செத்தபிறகு நீ எங்கே வேண்டுமானாலும் போ...” பக்கத்திலமர்ந்து மகன் தோளைப் பற்றி மடியில் சாய்த்துக் கொண்டார்.
“இன்னும் குழந்தையாகவே இருக்கிறாயே மகனே. உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்கணும், ஏன் சாகணும். உனக்காகத்தானே என்னைக் காப்பாத்திட்டு இருக்கேன். மனம் பொறுக்கலைடா எனக்கு, சாகற அளவுக்கா துணிஞ்சிருக்கே. போயிடலாம். எங்கே போகலாம்னு நெனக்கறயோ அங்கே போயிடலாம். உன்னைவிட முக்கியமானது எனக்கு என்ன இருக்கு. போயிட வேண்டியதுதான்... தூங்கு அமைதியா. தூங்கிடு பொனாச்சா. எல்லாம் நல்லபடியாகும்.” ஆஜானுபாகுவான தன் மகனை வெகுநேரம் தட்டிக்கொண்டிருந்துவிட்டு விளக்கை அணைத்தார். ஜன்னலைத் திறந்ததும் குப்பென்று முகத்திலறைந்தது குளிர். தூரத்து மலைமுகடுகளின் விளிம்புகள் லேசாகத் தெரிந்தன. ரேடியோ நிலைய கோபுரத்தின் உச்ச விளக்கு பனியில் மறைந்து மங்கலான செம்புள்ளியாயிருந்தது.
பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட விளக்குகளின் பிரகாசத்திற்கு இருள் சற்றுத் தொலைவே ஒதுங்கிக் கொண்டது. மதுமகிமையில் குளிர் உறைக்கவில்லை யாருக்கும். இடைவிடாத ஆட்டத்தில் போதை விலகியவர்கள் உள்ளே சென்று ஊற்றிக்கொண்டு வந்தார்கள். இதற்காக உள்ளே செல்வது அசௌகரியமாகப் பட்டதால் வெளியே கொண்டு வரப்பட்டது பீப்பாய். விளக்கிலிருந்து தவறி விழுந்த வெட்டுக்கிளியொன்று மதுவிற்குள் தத்தளித்தது. ஐம்பது அடி தொலைவில் மண்டபத்தைப் பார்த்தபடி ஷகிலா நிறுத்தி வைக்கப்பட்டாள். பாதி நிரம்பிய பன்னீர்ப் பானையை தலையில் வைத்துப் பிடித்திருந்தாள். பானைக்குள் ரோஜா இதழ்கள் மிதந்தன.
அவள் பின்னால் தோழி சஷீவ். ஷகிலாவிற்கு எதிர்ப்புறமாய் மூன்றடி தூரத்தில் மணமகனின் தம்பி ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தான். அருகிலேயே அவன் அம்மா, மகனுக்கு ஆட்டக் கிளர்ச்சி குன்றிவிடாதிருக்க சரியான விகிதத்தில் மது கலந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். வேகம் விஞ்சிப்போய் இரண்டொருதரம் ஷகிலாவின் மேல் விழத்தெரியவே ஷகிலாவிற்கு முன்னால் சஷீவ் நின்றுகொண்டாள். மாப்பிள்ளைத் தம்பியின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ”விடாதே சுகிர்த்! ஒரு அடிகூட விட்டுக்கொடுக்காதே. அவள் உள்ளே நுழைந்துவிட்டால் உன்னையும் உன் அண்ணனையும் பிரித்துவிடுவாள். விடாதே” உரக்கச் சத்தமிட்டார் உஸ்மானி. நேரம் கடந்துகொண்டிருந்தது. ஒரே இடத்தில்  - உச்ச வெறியில் களைப்படையாமல் ஆடிக் கொண்டிருந்தான். சில தடவைகள் சஷீவின் மேலே விழுந்தான். மேலே விழுந்தவனை நகைப்புடன் விலக்கி நிற்க வைத்தாள் சஷீவ். சுகிர்த் சீக்கிரம் வீழ்ந்து ஷகிலா உள்ளே போவதற்காக காட்டமான மதுவை பெண் வீட்டார் கொண்டு வந்து கொடுத்தார்கள். சுகிர்த் அதை தட்டிவிட்டு பக்கத்திலிருந்தவனைப் பிடித்து அவனிடத்தில் நிற்க வைத்தான். “இங்கேயே நின்று ஆடிக்கொண்டிரு. வந்துவிடுகிறேன்” என்று சொல்லி அவனுக்குத் தேவையானதை தேவையான கலவையில் பருகி வந்து - இடத்தைப் பெற்றுக்கொண்டு ஆடினான். தலையில் பானைச் சுமையில் நெளிந்தாள் ஷகிலா. சஷீவிடம் கேட்டான் சுகிர்த். “ஒரு முத்தம் தருகிறாயா, இரண்டடி வழிவிடுகிறேன்.”
“இரண்டடி வேண்டாம். பத்தடி விட்டுக் கொடுக்கிறாயா?” சஷீவிடமிருந்து கன்னத்தில் ஒரு முத்தம் பெற்றுக்கொண்டு பின்னால் சென்று ஆடினான். பெண்ணும் தோழியும் பத்தடி முன்னேறினார்கள். கிண்டலும் சிரிப்புமாய் உஸ்மானி இரைந்தார். “அடே சுகிர்த் மடையா ஒரு முத்தத்துக்குப் பத்தடி தூரமா. இது அநியாயம்...”
“என்னையும் அண்ணனையும் பிரித்து விடுவாயா நீ? மாட்டேன் என்று சொல், ஐந்தடி வழிவிடுகிறேன்....” ஷகிலா பத்தடி வேண்டுமென்றாள்.
சுகிர்த் ஆட்டத்திலேயே தலையாட்டி மறுத்தான்.
“முடியாது ஐந்தடிதான்.”
“சரி பிரித்துவிடமாட்டேன் உங்களை” என்று ஷகிலா ஒத்துக் கொள்ளவும், சுகிர்த் ஐந்தடி பின்னகர்ந்தான். சஷீவ், அவள் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க அனுமதித்ததற்காகவும் - அவன் அழகைப் புகழ்ந்ததற்காகவும் மேலும் சில அடிகள் சலுகை கொடுத்தான்.
மண்டபத்திற்குச் சுமார் இருபதடி தூரம் நெருங்கிய பிறகு எந்த சமரசத்திற்கும் கட்டுப்படாமல் ஆட்டத்தில் தீவிரமானான். அவனாக மனமிரங்கி வழிகொடுத்தால்தான் ஆயிற்று என்ற நிலையில் - அசைவு புலப்படாமல் காற்பெருவிரலால் ஷகிலா ரகஸியமாக முன்வந்து கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளி கரகோஷங்கள் நடுவில் ஆடிக் கொண்டிருந்த மாப்பிள்ளை அங்கிருந்தபடியே கூச்சலிட்டான். “நகர்கிறாள் பார் சுகிர்த்! அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடாதே!” பறையோசையால் அவன் சொல்வது சரியாகக் கேட்காமல், அண்ணன் விட்டுக் கொடுக்கச் சொல்கிறான் எனக்கருதிய சுகிர்த் “முடியாது!” என்றலறினான். சுகிர்த்தை விரைவில் படுக்க வைக்க பெண்வீட்டாரும் - இன்னும் நீண்ட நேரம் பெண்ணைத் தடுத்து வைப்பதற்காக மாப்பிள்ளை வீட்டாரும் அவரவர் வழிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
சாக்கடையில் விழுந்துவிட்ட மாப்பிள்ளையின் நண்பன் ஒருவனுக்கு போதை தெளிவதற்கான சிச்ருஷைகளைச் செய்துவிட்டு சிறுநீர்ப்பை அசைய நடந்துவந்த உஸ்மானி “போகட்டும் விடு. எவ்வளவு நேரம்தான் தலையில் பானையுடன் நிற்பாள் பாவம்” என்றார். மேலும் சக்தியேற ஆடிக்கொண்டிருப்பவனின் காதுகளில் அவர் சொன்னது விழவில்லை. அவன் அம்மாவிடம் அவனுக்கு மிகப் பிடித்த மதுவின் பெயரைச் சொல்லி அதைக் கொண்டு வரும்படி ஏவினான். சென்று கொண்டிருக்கும் அவளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக அவனறியாமல் பக்கவாட்டில் ஓரடி விலகி “கிளாஸில் ஊற்ற வேண்டாம் - பாட்டிலைத் திறந்து அப்படியே எடுத்து வா” என்று சொல்லி முடிப்பதற்குள் பெண்ணும் தோழியும் அவனைக் கடந்து பாய்ச்சலாய் உள்ளே ஓடினார்கள்.
அமர்ந்தபடியே பொனாச்சா வெளிக்கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்த தந்தையை வெறித்துப் பார்த்தான். ஸ்வெட்டர் கைகளிலிருந்து கையை எடுத்து நெஞ்சோடு சேர்த்திருந்தான். தோளின் இருபுறமும் ஸ்வெட்டரின் நீள் கைகள் கூடாய்த் தொங்கி அசைந்தன.
“நீங்கள் போகத்தான் வேண்டுமா?” அந்தப் பலகீனமான கேள்வி பதில் கொண்டு வரவில்லை. ஸ்வெட்டருக்குள் கைகளைத் திணித்துக் கொண்டு உள்ளங்கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டான். விழி சிவந்து வெளுத்திருந்தது முகம். உதட்டில் தோல் வெடிப்புகளை நாவால் தடவிக் கொண்டான்.
“அந்தக் கல்யாணத்திற்கு நீங்கள் போக வேண்டாம். அது உங்கள் மகனுக்கு நடக்க வேண்டிய கல்யாணம்” மரபான கருப்பு உடை அணிந்து தோற்சங்கிலியைப் பொருத்திக் கொண்டிருந்தார் உஸ்மானி.
“உங்களுக்கு நான் வேண்டுமென்றால் போக வேண்டாம். உங்கள் தங்கை மகள் திருமணம்தான் முக்கியமென்றால் தாராளமாகப் போய்க் கொள்ளலாம்” உஸ்மானி அந்த தீர்க்கமான எச்சரிக்கைக்காகப் புன்னகைத்தார். கண்ணாடிமுன் நின்று ஏதாவது விட்டுப் போயிருக்கிறதாவென சரிபார்த்துக் கொண்டார். நீட்டிய சுட்டுவிரல் கோபத்தில் நடுங்க கண்ணாடிக்குள்ளிருந்து மகன் பேசினான், “நீங்கள் திரும்பி வரும்போது நான் இங்கே இருக்கமாட்டேன்...” கடைசியாக தன் ரப்பர் பையைத் தேடுவதில் முனைந்தார். விழாக்காலங்களில் அதிகம் குடிக்க நேரும்போது அது இல்லாமல் முடிவதில்லை. மேசை இழுப்பறையிலிருந்ததை உடைக்குள் வைத்துக்கொண்டு - முதுகின் பின்னே துளைக்கும் பார்வைக்கு எதிர்வினை எதுவும் காட்டாமல் வாசலை நோக்கி நடந்தார். கம்பீரமாயிருந்தது நடை.
உஸ்மானி, முடிந்தவரையில் குடித்தும் - நடனமாடியும் அயர்ந்து நின்றிருந்தார். தள்ளாட்டத்தை மறைப்பது சிரமமாயிருந்தது. இளவட்டங்களெல்லாம் இன்னும் ஆடிக்கொண்டுதானிருந்தனர். எப்படி மிதமாகப் பருகி போதையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் பெண்கள் தேர்ந்திருந்தனர். சரிந்த ஆண்களைச் சுட்டிக்காட்டி பெண்கள் பேசிச் சிரித்தபோது - விழுந்தவர்களின் மனைவிகள் வெட்கினார்கள்.
தலைவெட்டப்பட்ட வாழைமரங்கள் போதுமான இடைவெளியில் வரிசையாக ஊன்றப்பட்டிருந்தன. அன்றுதான் வெட்டப்பட்ட செழுமையான மரங்கள். அதன் வட்டமான மேற்தளத்தில் குச்சி செருகி சுற்றப்பட்டிருந்தது பூச்சரம். மரங்களைச் சுற்றிலும் நீர் தெளித்து தரை துப்புரவாக்கப்பட்டிருந்தது. மரங்களைச் சூழ்ந்தது கூட்டம். மாப்பிள்ளையின் தாய்மாமன் முறைக்கு ஒருவர் வந்தார். நீளமான வாளொன்று கொடுக்கப்படவும் - வாளின் முனையால் தாம் வெட்டுவதற்குரிய மரங்களின் உச்சியிலுள்ள பூச்சரத்தை அகற்றிப்போட்டார். விளிம்பின் கூர்மையில் ஒளிமிளிரும் வாள் மந்திர உச்சாடனங்களுடன் பின்னோக்கி உயர்ந்தது. பிறகு அரைவட்டமாய்ச் சுழன்று மரத்தைத் துண்டித்தது. பறையோசையும் உணர்ச்சிக் கூவலும் கீழே - பள்ளத்தாக்கின் வீடுகளையும் தொட்டெழுப்பின. ஒவ்வொரு மரமும் வெட்டப்படும்போது மேல்ஸ்தாயிக்குத் தாவியது பேரோசை. மரங்களின் அருகிலேயே நின்று - தடையில்லாமல் வெட்டுண்டு விழ வேண்டுமென மணமகன் பார்த்திருந்தான். மாப்பிள்ளை தரப்பு மரங்கள் வெட்டுப்பட்டு முடிவதற்குக் காத்திருந்து வாளௌ உஸ்மானி பெற்றுக் கொண்டார் பெண்ணுக்குத் தாய்மாமனாய்.
இரண்டு கைகளாலும் வாளை உயர்த்தி மந்திரம் சொல்வதற்கு அதிக நேரமானது. உச்சிப்பூச்சரத்தை நீக்கிய பிறகு அவரது வாள்வீச்சில் துண்டாகி விழுந்தது மரம். அவரது வேக அசைவில் அதிர்ந்தாடும் சிறுநீர்ப்பந்து எங்கும் சிரிப்பைத் தூவியது. அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆண்களும் பெண்அளும் சிரித்தார்கள். உடைத்துக்கொண்டு பீறிட்ட சிரிப்பால் பறையடிப்பவர்களாலும் இசைக்க முடியவில்லை. குழலூதுபவன் குழலைத் தரையில் ஊன்றி அதன்மேல் நெற்றியை முட்டுக்கொடுத்து மறைவாகச் சிரித்தான். பினு தர்மசங்கடமாக அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தாள். உஸ்மானியும் சிரித்துக்கொண்டுதான் மரம் வெட்டினார். ஒவ்வொரு மரத்தையும் வெட்டி நிமிரும்போது மணமகன் நிற்கும் இடத்தை கவனித்துக் கொண்டார். இன்னும் ஒரே ஒரு மரம். இதோடு திருமணம் முடிந்தது. மணமகன் நிற்கும் பக்கத்தில் வாகாக தள்ளி நின்றுகொண்டார். முகத்தில் சிரிப்பில்லை. போதையின் அலைக்கழிப்பில்லை. சர்வ கவனமாய் கூர்ந்த விழிகளில் வேட்டைக்களை. வாளை பக்கவாட்டில் ஓங்கினார் உஸ்மானி. சுவாசம் திணறியது. கடைசி மரமும் சாய்ந்தவுடன் தீவிர இசை முழக்கத்திற்கு சமிக்ஞை கொடுப்பதற்காக ஒரு கையை உயரே தூக்கியிருந்தான் மணமகன். இறுதி முறையாக வீசப்பட்ட வாள் மின்னல் தெறிப்பாய் வந்து மணமகனின் அடிவயிற்றில் ஆழப்பதிந்து நின்றதை, புலன் குவியப் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.
****
தட்டச்சு : சென்ஷி
flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

7 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ on October 25, 2010 at 8:21 AM said...

நன்றிகள் ராம்.
வரும் ஆண்டு சுஜாதா நினைவாக உயிர்மை வழங்க இருக்கும் சிறந்த தமிழ் வலைப்பதிவு விருது அளிக்க உங்களின் பதிவை வழி மொழிகிறேன்
சுஜாதா மட்டும் இப்போது இருந்து இருந்தால் உங்களை நெஞ்சார தழுவி மகிழ்ந்து இருப்பார்.

Ramprasath on October 25, 2010 at 7:05 PM said...

உங்கள் அன்புக்கு நன்றி ராம்ஜி

M.Rishan Shareef on October 25, 2010 at 7:30 PM said...

யூமா வாசுகியின் அருமையான சிறுகதைகளிலொன்று. 'உயிர்த்திருத்தலி'ல் வாசித்திருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி.

Balakumar Vijayaraman on October 26, 2010 at 11:13 AM said...

பகிர்வுக்கு நன்றி.

sakthi on October 28, 2010 at 3:18 PM said...

நல்ல பகிர்வு ராம்

Ramprasath on November 1, 2010 at 9:24 AM said...

எழுத்துக் கலை - மர்மம் - விமலாதித்த மாமல்லன்

http://www.maamallan.com/2010/10/blog-post_25.html

//எழுத்தென்பது, பஞ்சுமிட்டாய்க்கு ஆசைப்பட்டக் குழந்தை போல், விரல் பிடித்து ஓட்டமும் நடையுமாய் ஓடிவரவைக்க வேண்டும் வாசகனை.

இது இவரெழுதிய முதல் கதை எனில் கொண்டாடலாம். இதைவிடவும் சிறந்த கதையை இவர் எழுதி இருக்கக்கூடும், அல்லது இனி எழுதக்கூடும்//

kaliyaperumalveerasamy on August 31, 2023 at 7:43 AM said...

மிகச்சிறப்பான திறப்பில் ஆரம்பித்து தன் இயலாமையால் மனித மனம் எதையும் செய்யும் என்பதை இதை விட அடுமையாக சொல்லவியாலாது அற்புதமான சிறுகதை.

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்