Nov 30, 2009

வாழ்க்கை-சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா

பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா.

”போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே, பாழாய்ப்போன ஊரிலே, குடி தண்ணிக்கு வழி இல்லை. எடுத்துக்கிட்டு வாடா அரிவாளை, பெட்டியிலே இருந்து” என்ற வார்த்தைகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் வருமாறு:

peter-hudson-painting

பட்டுப் பட்டுப் பழகிப்போன மிராசுதார் மாமாவுக்கே தாங்க முடியாத வெப்பம். அறுப்புக் களம், பட்டுப் படைக்கிற வெயில். நிழலின் சாயை பர்லாங்கு தூரத்துக்கு விழாத ஒரு பொட்டலிலே-சுடுகாட்டிலே என்று கூடச் சொல்லலாம். அறுகங்கட்டை வெளியிலே களம் கூட்டி இருந்தாள் பள்ளி. ஏறிப்போயிருந்த ஒற்றை வண்டி நிழலிலே ஏறும் வெயிலுக்குத் தக்கபடி ஒதுங்கி ஒதுங்கி ஒண்டுவதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை. கண்முன்னே அனல் பூச்சி பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

மாமாவின் வாயிலிருந்து வார்த்தை சீறி விழுந்தது. ”ஏன் புள்ளே, ஏன், அந்தக் கரட்டுமேலே கூட்டிவைக்கிறதுதானே? குத்துக்கல்லு குத்துக்கல்லா இருக்குமே – களத்துலே நெல்லு களமாக் கிடக்கும்.”

”இல்லேப்பா. வகையாக் களம் சிக்கல்லே. வேணுமினா……..”

”அது எப்படிச் சிக்கும்? அறுகங்கட்டையிலே செதுக்கினாத்தானே களம் கூட்டறபோது அறுப்புக்காரன் ‘இதுக்கு மேலே கூட்டவல்லீங்க, நெல்லு நின்னுக்கிது’ன்னு விட்டுட்டுப் போயிடுவான்? அதெல்லாம் கோளாறாகத்தான் செய்வே, உன்பாட்டைப் பாத்துக்கிறதுக்கு?”

”அவருதான் இங்கிட்டுக் கூட்டச் சொன்னாரு.”

”அவன் சொன்னானா? ஏன் சொல்லமாட்டான்? வீடு அந்தா இருக்குது. தலைச்சுமையா வெக்கட்டைக் கொண்டுட்டுப் போயிரலாம். பள்ளக்களத்திலே வச்ச மழை பெய்தால் அவதிப்படறது ஐயன்தானே? அவனவன் பாடுதாண்டா அவனுக்கு. என்னடா, மணி இரண்டாச்சு. பொளுது சாஞ்சுக்கிட்டு வருது. இன்னும் களத்துலே கட்டைக் காணோம். இவனெல்லாம் கொத்துக்காரன்னு வந்து பேசிக்கிட்டான்.”

மிராசுதாரர் மாமாவின் படபடப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அங்கு இருந்த சந்தர்ப்பம் ஒவ்வொன்றும் உதவி செய்ததே தவிர, குளுமைக்கும் சுமுகத்திக்கும் அங்கே ஏது இல்லை.

பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக்காரன்தான் ராஜா. அவன் இஷ்டப்படிதான் அங்கே, இருபது ஆட்கள் நாலைந்து நடை சும்மா கரைமேலே அரை மைலுக்குமேல் சுருட்டி நடந்து கதிரடித்துச் சாற்றுப் பார்த்துப் பொலிவிட்டு அளவு பிடித்துக் குறிபோட்டு நெருஞ்சியும் கள்ளியும் புடைசூழ ஊருக்குத் திரும்பப் பவனி போகவேண்டும்.

இருட்டிலே போகவேண்டிய அந்தப் பாதையைப் பற்றி ஒரு வார்த்தை. புழுதி ஒட்டிக்கொள்ளும் பாதையில் நேரே, ஒரு பக்கம் நெருஞ்சி, மறுபக்கம் கொடிக்கள்ளி, இரண்டோடும் உறவு கொண்டாடாமல் நடந்து போனால்தான் பிழைக்கலாம். வண்டிப்பாதையும் அதுதான். வலத்துக் காளையின் கால்கள் கள்ளிக்கட்டைகளுக்கு இடுக்கிலும், இடத்துக் காளையின் குளம்புகள் நெருஞ்சி படர்ந்து கிடந்த மண் புற்றுக்கள் மீதும் சதக் சதக்கென மிதித்துப் போடும்போது உள்ளுக்குள்ளே உட்கார்ந்து போகிற ஆத்மாவுக்குக் கோயில்கட்டி வைத்துவிடலாம். வண்டிக்காரன் பாடு தீராப்பொறி.

இந்த ரீதியில் பவனி வந்து இறங்கின நிலையில் அறுகங்கட்டைக்களம், பள்ளி தந்திரம், பொட்டலடி, காலிக் களம், அனல் ஓட்டம் இத்தனையும் சேர்ந்தனவே. ”களத்திலேதான் கட்டைக் காணோம்; வயிற்றிலே இரண்டு இளநீரையாவது போட்டு வருவோம்” என்று அரிவாளை எடுத்து வரச் சொன்னார் மிராசுதார் மாமா. குடி தண்ணீருக்கு வசதி இல்லாத ஊரில் நிலம் வாங்கின சலிப்புக் குரலில் கலந்தது.

அதற்குப் பதில் உடனே வந்தது. ”சாமி, சாமி! அப்படிச் சொல்லாதீங்க. தங்கம் பெத்த நிலமில்லெ! மவராசன் கையிலெ தங்கமான்னா சொரியுது? என்ன ஐயா கவுண்டரே! நீ சொல்லு.” இதைச் சொன்ன உருவம் முறுக்கு மீசையும் முண்டாசும் தடிக்கையுமாக வண்டி அணைப்பில் நின்று கொண்டிருந்தது. அந்தப் புரவுக்கு அவன் தலைக்காவல்.

”காளி முத்தண்ணன் சொல்றது சரிதான். ஜமீன்தார் காலத்துலே ஒருதவா இங்கிட்டு வந்திருப்பாருன்னா நினைச்சே? அவனவன் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டுப் போனது போனது, வந்தது வந்ததுதான்” என்பது கவுண்டரின் பதில். பிரஸ்தாப சந்தர்ப்பத்தில் மிராசுதார் மாமாவின் வயலை வாரத்துக்கு ஒப்புக்கொண்ட உழுபடைக்காரன் அவன்.

”ஆமாடா, எல்லாரும் மச்சுவீடு கட்டித்தானே பிழைக்கிறீங்க? பார்க்கிறேனே. ஐயனும் அசந்தா ஒரு கை……”

”ஹ§ம். இந்தா சொல்றீங்களே. துரோகம் நினைச்ச நாய் அந்த பாருங்க: செட்டியாருக்கு அரைமா, ராவுத்தருக்குக் காணி கிரயம்.”

”ஏன்? வீடு நிலைக்கோட்டையானுக்குன்னு ஒத்தி வைத்துப் போட்டுப் பருத்திக் காட்டிலே பழி கிடக்குது, அண்ணாந்து பாத்துக்கிட்டு” என்று சேர்வையும கவுண்டருமாக ஆளுக்குப் பாதி சொல்லி நிறுத்தினார்கள்.

‘ஹ§ம்! நீங்க சொல்றேள். எல்லாத்துக்கும் புத்தி இருந்துச்சுன்னாத்தானே? கால்கஞ்சி அரைவயித்துக்காவது குடிக்கணுங்கிற நினைப்பு வேண்டாம்? சரி, தோப்பைப் பாத்துட்டு வறேன். கவுண்டா, கருதுக்கட்டு வந்தவுடனே குறுக்கிக் கிழக்காலே போடச் சொல்லிப் படப்பை நெட்டுக்குப் போட்டு ரெவ்வெண்டு அடி அடிச்சுப் போடச் சொல்லு.”

”சரி; போய் வாங்க. என்னவோ, எங்கப்பன், பெரிய ஐயா காலத்துலே இருந்து தர்மதுரை காலிலே விழுந்து கிடக்கிறோம். நீங்க பாத்து எதுவும் பண்ணிக்கிட்டாத்தான். உங்க கையை விட்டுமாத்திரம் நிலம் பறந்திச்சு, அப்புறம் இது நிலம்னு ஆகும்னு பாத்தீங்க? ஹ§ம், ஏது?”

”அதெல்லாம் குழையக் குழையத்தான் பேசுவே! சரி. சந்தணக்குடும்பா! நட. காளிமுத்தா, சும்மாத்தானே நிக்கிறே?”

”வாறேன், போங்க.”

மாமா புறப்பட்டவுடன் இரண்டு மூன்று முண்டாசுகள், தடிக்கம்புகள், அரிவாள்கள் எல்லாம் துணை புறப்பட்டன. இத்தனை பேச்சுக்கும் இடையில் மௌனக்குரலாக – ஆனால் எனக்குள்ளே பேசிக்கொண்டிருந்த – என் உருவமும் சேர்ந்து கொண்டது.

நீர் வறட்சி உண்டாக்கும் இந்த வெப்பத்தை எதிர்த்து எவ்வளவு நேரந்தான் சமாளிக்க முடியும். ஹாஸ்டல் அறைகளிலும் கடற்கரை ஓரத்திலும் ஜிலுஜிலுவென்ற காற்றை வாங்கிக் குஷியாகக் காலங் கழித்த உடலுக்கு என்னவோ நப்பாசை, ஒரு களத்துக்குப் போய் அறுவடை பூராவும் தெரிந்துகொண்டு விட வேண்டுமென்று. அப்புறம் நானும் கிராமவாசி. ‘கிராமத்துக்கு போ’ என்று கூவும் கூட்டத்தில் கோவிந்தா போடலாம் அல்லவா?

மேலே சொன்ன ரீதியிலே பேசிப் பேசிக் கிராமங்கள் அலுத்துப் போனதாகத் தெரியவில்லை. அலுப்புச் சலிப்பு இல்லாமல் பரஸ்பரம் முகஸ்துதியையும், ஏச்சையுமே பரிமாறிக்கொண்டு பண்பட்டுப்போன தாக்குகளாக அத்தனையும் பட்டன எனக்கு. அங்கு நடந்து வரும் செய்கைகளுக்கு மேலே பேச்சு அதிகம் என்ற நினைப்பு ஊறியது. கீழே வரும் தொடர் சம்பாஷணைகள் இதை வலியுறுத்துவன.

அந்தரத்தில் கம்பி மேல் நடப்பதற்கும் வரப்பு மேலே நடப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அத்தனை கைவீச்சும் நிதானமும் வேண்டி இருந்தன.

சமாளித்து எட்டு வைப்பதற்கு தார் ரோடிலே எட்டிப் போடும் எட்டு அங்கே செல்லாது. நண்டு வளைகளுக்கும், மடைகளுக்கும், மேலே குத்துக் குத்தாக நின்ற களிமண் கட்டிகளுக்கும் மேலாகத் தாறுமாறாக நிதானமில்லாமல் போட்ட என் கால்களைப் பார்த்துப் பின்னாலே வந்த முண்டாசு, “சின்ன ஐயாவுக்கு நடந்து பழக்கமில்லே போலிருக்கு. பையப் போங்க, சாமி” என்று கூறவும் அதை ரஸித்து அத்தனை பட்டிக்காட்டுச் சிரிப்புகளும் கிளம்பின. ‘பட்டிக்காட்டானா?’ என்று ஓர் இடத்தில் ஏளனமாகப் பேசப்படுகிறது. இங்கேயோ இந்தச் சிரிப்புகள் ‘பட்டினத்தானா?’ என்று ஏளனம் செய்கின்றன.

வரப்பு வரப்பாகக் கடந்து கொண்டிருந்தோம். திடீரென்று, “ஸ்ஸ்…. இருடா. அதென்ன சப்தம்? அழுகைமாதிரி இருக்கே? அதென்னாடா சந்தணம்?” என்று மாமா கேட்டார். என் காதிலும் அப்போது ஓலக்குரல் விழுந்தது.

சந்தணம் விளக்கினான். “ஆமாங்க. நம்ம செங்குளத்து ஐயரு மகன் இறந்து போயிருச்சு, அந்த பொழுது உச்சிக்கு வர நாலு நாழிக்கு முந்தி, சின்னப் பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க இல்லையா?”

“ஆமாடா. பத்து நாளா உடம்பு குணமில்லேன்னு பேசிண்டா. ஒரே பிள்ளை. போயிருச்சா? அடப்பாவமே!”

“அந்தக் கிழட்டு ஐயரு போடற சப்தம் எம்மாந் தூரத்துக்குக் கேக்குது? அடேயப்பா! சகிக்கலீங்க” என்று காளிமுத்தன் தொடர்ந்து சொன்னான்.

“ஹ§ம்; போகுது. அதுக்குத் தலைவிதி முடிஞ்சுது. அல்பாயுசு. அவ்வளவுதான். யாருடா அது அங்கே? வேலுதானே, கொடிக்காலுக்கு அங்கிட்டு?”

‘பார்’ வேலைக்காரன் கைமாதிரி மாமாவின் வாயிலிருந்து சடாரென்று மாறி தொனியில் வார்த்தை கிளம்பினதை நான் க்ஷணத்தில் கிரஹிக்காமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு மரணச் செய்தி காதில் விழவும் சாவின் தன்மையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிற உள்ளத்தில் நினைவு மறைந்து போகுமுன் புது அர்த்தபுஷ்டியான வார்த்தைகளைத் தொடரமுடியவில்லை.

“ஆமாங்க, வேலுதான்-ஏ, தேவாய்யோய்…” என்று கூவினான் சந்தணம்.

“அட, அவனாக வரானா பார்ப்போமே. கெடுத்து விட்டாயே காரியத்தை, அவசரக் குடுக்கை! விட்டுப் பார்க்காமே? ஒளிஞ்சுக்கிட்டுத் திரியறான் அவன்.”

“இல்லீங்க. இங்கிட்டுத்தான் வருவாரு” என்றான் காளிமுத்தன்.

செங்குளத்து ஐயர் மகன் சாவுப் பேச்சிலிருந்து மாறின சம்பாஷணைக்கு அந்தச் சுற்றுப்புறமே ஒத்துக்கொண்டுவிட்டது. தேவனும் காது கேட்கும் தூரத்தில் வரவே மாமா, “சந்தணம், தேவரு இங்கிட்டு எதுக்கு வாராரு? அவருக்கு இப்போ பெரிய இடமா சிக்கிக்கிருச்சு, லக்ஷ¤யமா பண்ணுவார்?” என்று கிண்டல் செய்துகொண்டே நடந்தா‘.

வேலு மேல்துண்டை எடுத்து மரியாதைக்காகப் புஜங்களில் வளைத்துக் கொண்டே, “ஆமா, பண்ணையை விடப் பெரிய பண்ணை இந்தச் செங்கட்டான் பட்டியிலே ரொம்பப் பேரில்ல இருக்காங்க?” என்றான்.

மறுபடியும் பல்லவி ஆரம்பம்.

“ஆமாடா, சக்கரையாப் பேசுவே இல்லே? போன வருசத்துக் குத்தகைப் பணம் பாக்கி கிடக்குது. தீர்க்க வழியில்லே, போகிற இடம் வருகிற இடம்னு.”

“அது இல்லாமே எங்கிட்டுப் போயிருங்க? பருத்தி போட்டிருக்கேங்க. அந்த விளைச்சலை அப்படியே கொண்டிட்டு வந்து கொடுத்திடணும்னுதான் நேத்துக்கூடச் சந்தணம்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேங்க. என்னப்பா, சந்தணம்?”

“வேலிக்கு ஓணான் சரியான சாக்ஷ¤தான்–தோப்புக்குக்கடவு எங்கேடா? மேற்கே இருந்தா?”

“இல்லீங்க. ஆட்டுக்கார பசங்க துட்டு பண்ணுதுங்கன்னு அடைச்சுப்புட்டேங்க. கிழக்காலே வாங்க” என்று சந்தணம் முன் ஓடிக் கடவு பிடுங்கிவிட்டு வழியில் கிடந்த முட்களை ஒதுக்கி எறிந்து தள்ளி நின்றான்.

அழுகைச் சப்தம் பலத்து வந்து விழுந்தது.

“மாமா, அதோ பாருங்க” என்று தோப்பை அடுத்துள்ள ஓடையின் மறுகரையைச் சுட்டிக் காட்டினேன்.

“இதுதான் இந்த ஊருக்கு மசானம்; இப்போ பேசிக்கொண்டிருந்தோமே, அந்தப் பையனைத் தகனம் செய்ய வந்திருக்கிறார்கள். சரி, நாம்ப மேற்கே போவோம். அவர்கள் போன பிறகு இங்கே வருவோம். கண்றாவியைப் பார்க்காமே திரும்பு” என்று கால்களைத் திருப்பிக் கிழக்கு நோக்கிப் போட்டார்.

“அதான் சரீங்க, எதிர்க்க நின்னா மாதிரியாத்தான் இருக்கும். வாங்க சாமி-சின்ன சாமி” என்று என்னை அழைத்த பிறகுதான் நானும் சேர்ந்து அடி எடுத்து வைத்தேன். அந்தத் தோற்றத்தையே அதுவரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டேன்.

முதல் தடவையாக மசானத்தை அப்போதுதான் பார்க்கிறேன். நகரத்துத் தெருக்களில் பாடைகள், அழுகை, சங்கு, தம்பட்ட முழக்கங்களோடு எங்கேயே மூலை திரும்பிப் போவதைத்தான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை ஓய்ந்து போய் அலுப்பு ஆற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்தி இருந்த அந்த இடத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. விவரம் தெரியாத, ஆனால் மிகவும் கோரமான ஒரு கற்பனைதான் எனக்கு யூகம், கேள்வி இரண்டின் மூலமாகவும் பதிந்திருந்தது- அந்தக் கோரமான கற்பனையை நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே நடந்தேன். சில எட்டுக்களுக்கு ஒருதரம் கண்மட்டும் திரும்பித் திரும்பி அலறலும் கூட்டமும் நிறைந்த அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தது.

முதல் பார்வையில் ஓடையின் எதிர்க்கரையில் ஒரு மேட்டின் நடுவே அடுக்கி இருந்த விறகு எருக்களிடையே பளிச்சென்று தெரிந்தது. அந்தச் சின்ன உருவம். அடுத்த கண் வீச்சின்போது மேலே மேலே அதன் மீது எருக்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஐயோ, ஒவ்வோர் எருவும் அந்தச் சிறு உடலை மறைக்கும்போது எத்தனை குரல்கள் அலறித் துடித்தன! ஒவ்வோர் அலறலும் என்னைக் குலுக்கி எடுத்தது. சகிக்க முடியாமல், “என்ன கண்ராவி இது!” என்று எல்லோருக்கும் முன்னால் காலடிகளை எட்டிப்போட்டேன். அழுகைக் குரல்கள் என்பின் குறைந்து தங்கிவிட்டன. ஆனால் அந்தச் சித்திரம் மாத்திரம் என் கண்ணிலே தங்கிவிட்டது.

எத்தனையோ மேட்டுத்துண்டுகள் ஆற்றோரங்களிலும் ஓடையடிகளிலும் படிந்து கிடக்கின்றன. அவைமீது மிதித்துப் போயிருக்கிறேன். குப்பையும் கூளமும் சாம்பலும் அமோகமாகக் கிடக்கும். ஒருவித விசேஷமும் அவைபற்றின நினைவுகளில் சம்பந்தப்பட்டதில்லை. அந்த மேட்டுத் துண்டுகளைப் போலத்தான் இதுவும் ஒன்று. மேடு பள்ளம் நிரம்பின மண் தரை. இதற்கு மட்டும் மசானம் என்ற தனிக்குறிப்பு எதற்கு? ஆமாம். இதோடு சாவு சம்பந்தப்பட்டிருப்பதனால்தான்; மற்ற இடங்களோடோ வாழ்வு இணைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் வித்தியாசம். சந்தர்ப்ப பேதத்திலே அர்த்தம் கொடுக்கும் நாம் இட்ட காரணப் பெயர் அது.

வேறு எந்த விதத்தில் இயற்கையானது மசானத்துக்கும் அடுத்துள்ள இடங்களுக்கும் மாறுபாடு காட்டுகிறது? ஊருக்கு வெளியே தனித்து ஓடிவரும் இதே ஓடை ஊருக்குக்குள்ளும் ஓடிவருகிறது. சாவு குடி இருக்கும் சின்ன மண்மேடு இந்த மசானம். என் வாழ்வு குடி இருக்கும் பெரிய மண்மேடு அந்தக் கிராமம். இயற்கையின் ஆதரவில் எந்த இடத்தையும் மசானமாகச் செய்து விடுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?

“இதுதான் அம்பி, நம்ப பெரிய தோப்பு; ஐயாயிரம் தென்னைக்குக் குறைச்சல் இல்லை” என்று தோப்பைக் காண்பிக்கும் மாமாவின் குரல் காதில் விழவும் மனத்தோடு பேசுவதை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தேன். தென்னந்தூறுகளிடையே வந்துகொண்டிருந்தோம்.

வேலு முன்னோடி இரண்டு தென்னங் கீற்றுக்களை இழுத்து வந்து போட்டான். உட்கார்ந்துகொண்டோம். அண்ணாந்து பார்த்தேன். சிலந்திக் கூடுகள்போல் பசுந் தென்னோலைகள் பின்னி வீசிப் பரந்த மட்டைகளுக்கு அடியில் மரத்தோடு ஒட்டிப் பச்சைப் பசேலெனக் குலை குலையாகச் சிறிதும் பெரிதுமாகக் காய்கள் தொங்கிக் கொண்டிருந்தன. தாக உணர்ச்சி உடனே உண்டாயிற்று. “சீககிரம் இளநீர் போடச் சொல்லுங்க, மாமா” என்று அவசரப்படுத்தினேன்.

“இங்கே தோப்பு இல்லாட்டா?” என்று மாமா சிரித்துக்கொண்டே கேட்டார்.

“அது வேறே கேள்வி” என்றேன்.

“எந்த மரத்துலே போடட்டுங்க?” என்று இடுப்பில் அரிவாளைச் செருகிக்கொண்டே சந்தணம் அண்ணாந்து பார்த்தான்.

தோப்புக்காரன்–உனக்குத் தெரியாதா? போடு வளுக்கைப் பதமா.”

“முத்தினதா இருந்தா அப்புறம் பாத்துக்கோ” என்று நான் சேர்த்தேன்.

சந்தணம் மரத்தில் ஏறி இளநீர்களை வெட்டித்தள்ள, வேலு வெட்டிக் கொடுக்க, மாமாவும் நானும் மாறி மாறி உள்ளே தள்ளிக்கொண்டிருந்தோம். தொண்டை இனித்துக் குடல் குளிர்ந்தது.

திடீரென்று வேலு ஆரம்பித்தான்: “பாவம், செங்குளத்து ஐயரு பாடு இனிமே ரொம்ப அம்பலமாப் போயிருச்சுங்க. அந்த ஒரே மகன் மேலே உசிரை வச்சுக்கிட்டு இருந்தாரு.”

இளநீர் சாப்பிடும் உற்சாகத்தில், அது உடலில் ஏற்றின குளுமையில் கொஞ்சம் மறந்திருந்த அந்தக் காட்சி மறுபடியும் ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

“ஆமாடா. அந்த மருமகன் வீட்டோட வந்து இருந்துவிடலாம்; ஐயருக்கு வேறு வழி இல்லை” என்று மாமா தொடர்ந்தார்.

“நல்லதுக்கா மருமகன் வாச்சு இருக்கிறாரு! அவர் மூணே நாள்ளே எல்லாத்தையும் கொட்டை பாத்திட்டுப் போயிருவாரு. ஊரிலே அவரைப் பற்றி என்னென்ன பேச்சுக் கிளம்புதுங்க!” என்று சந்தணம் கலந்துகொண்டான்.

“இன்னைக்குத்தானா தெரியும்? வேணும் அந்த ஐயருக்கு அன்னைக்கே நாலு சாத்துச் சாத்தி லஜ்ஜைய வாங்கிட்டு இருந்தா வழிக்கு வந்திருக்கும் அதை விட்டுப்போட்டு..” என்று மாமா இழுத்தார்.

“அதைச் சொல்லுங்க. அப்படிச் செய்துட்டு இருந்தா இந்தாத் தொலைக்கு வந்திருக்காதுங்க” என்று பண்ணையின் தீர்ப்புக்கும் நியாய உணர்ச்சிக்கும் பண்ணைக்காரச் சந்தணம் ஒத்து ஊதினான்.

“போகுது; அவன் அவன் தலைவிதிப்படி நடக்கிறது. நமக்கு என்ன? ஆமாம், அந்த முருகங்குளத்துக் காணியை ராவுத்தர் விலைக்குப் பேசிக்கிட்டு இருக்கிறாராமே? அதை இழுத்துப் போட்டிடலாமா? என்ன யோசனை?” என்று பேச்சைச் சடாரென்று மறுபடியும் முறித்து எங்கேயோ திருப்பினார் பண்ணை. திடீர் திடீரென மாறின தோரணை காட்டுவது அவருக்கு எவ்வளவு சுளுவாக இருந்தது என்பதுதான் எனக்குத் திகைப்பை ஊட்டியது. வாஸ்வதம்! செங்குளத்து ஐயரின் பிள்ளை மரணம், அவர் குடும்ப விஷயம். அந்தப் பேச்சுக்கு அவ்வளவு அவகாசந்தான் கொடுக்க முடியும். மீதி நேரம் தம் குடும்பத்தின் சுகம், தம் சம்பந்தமாக அக்கரைகளுக்குத்தான். இது யதார்த்தந்தானே?

என் மனப்போக்கு இப்போதும் தன் வழியே தொடர்ந்தது. ஆனாலும் வெளி வார்த்தைகள் காதிலே வந்து தாக்கிக்கொண்டிருந்தன.

சந்தணம் கொஞ்சம் கிட்ட நெருங்கி மெல்லிய குரலில் இழுத்தான். “என் காதிலேயும் பட்டதுங்க. இணைசேர்ந்த நிலம் ஒரே தாக்கா அமஞ்சு போயிருங்க. புரவிலேயே ஓங்கின கை நம்முதுதான். எப்படியாவது முடிச்சுப்புடுங்க.”

கலகலத்த சிரிப்பு மாமா உதடுகளிலிருந்து வெளிவந்தது. “ஆமாடா, உனக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்கு வகையாச் சேருதில்லே! சிபார்சு செய்யமாட்டே? வேலு! சந்தணம் யோசனையைக் கேட்டியா?”

“சொல்றது சரிதாங்க. வாங்கிருங்க. காலத்துக்கு நான் உழுதுப்படறேன்க” என்று வேலு கண்களைக் சிமிட்டிக்கொண்டே பல்லைக் காட்டிக் கூறினான்.

“பாருடா! அனவன் தன் தன் பாட்டைப் பாத்துக்கப் பேசறான்; திருட்டுப் பயலுக!”

இருவரும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டார்கள். “பண்ணை நிழல்லே நிக்காட்டி எங்களுக்குப் பிழைப்பு ஏது?” என்றான் வேலு.

“அதைச் சொல்லுங்க” என்று ஆமோதித்தான் சந்தணம்.

மாமா குரலை உயர்த்தி, நிலமா! போங்கடா போங்க. கிஸ்திக்குப் பணம் இல்லே. களஞ்சியத்து நெல்லை ஏன்னு கேப்பாரில்லே. மேலைக்குத் தான் அதைப்பத்திப் பேச்சு. நெல்லு ஏறின விலைக்கு இப்போ போகல்லேன்னா..? சரி களத்திலே கட்டு வந்திருக்கும். போகலாம் வா, அம்பி” என்று துண்டை உதறிக்கொண்டு எழுந்தார்; “சந்தணம், அங்கிட்டு எட்டிப் பாரு, அவுங்கப் போயிட்டாங்களான்னு. தோப்பைச் சுத்திப் பாத்துவிட்டு போவோம்” என்றார்.

சந்தணம் போய்வந்து, போய்விட்டதாகச் சொன்னான்.

தோப்பைச் சுற்றிக்கொண்டு மேலைக் கோடிக்குப் போனோம். என் கண்கள் தாமாகத் தோப்புக்கு வெளியே பார்த்தன. சற்று முன் அலறல் நிறைந்து கிடந்த அந்த இடத்தில் அமைதி பதிந்து இருந்தது. அவர்கள் எல்லோரும் தங்களால் முடிந்தமட்டும் அழுதுவிட்டுப் போய்விட்டார்கள். இப்போது அங்கே ஒன்றியாகக் கிடந்த உடலுக்குக் காட்டின மரியாதையும் அவ்வளவுதான்.

விறகும் எருவும் அரைகுறையாக முன்பு அடுக்கி இருந்த இடத்தில் பூரணமாக மேலே ஈரமண் அப்பி மெழுகி இருந்தது. லேசான புகைச் சுருள்கள் அதன் பக்கங்களில் வெளியேறிக்கொண்டிருந்தன. ஒன்றியாகக் கிடந்த உடல் என்று சொன்னேன்; தவறு. இரண்டு உருவங்கள் ஏதோ முனகிக்கொண்டிருந்தன. வார்த்தை தௌ¤வில்லை. செய்கை கண்களில் விழுந்துகொண்டிருந்தது. அந்தப் புது ஈர மண்மேட்டைச் சுற்றிவந்து புகைவரும் இடுக்குகள் வழியே குச்சியை விட்டுக் குத்திக்கொண்டிருந்தன; உள்ளே கனியும் கனலைத் தூண்டிவிடும் முயற்சி அது. பிணத்தின் சாந்தியைக் குலைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றவில்லை. அதைப் பூரணமாக்கும் வேலையில்தான் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் வேலை அது.

இத்தனை பேரும் அலக்ஷ¤யமாய் விட்டுப்போன உடல் அது. மசானத்தில் கொண்டு போட்டதோடுகூட இருந்து பழகின அத்தனை பேருடைய பொறுப்பும் தீர்ந்துவிட்டது. எங்கேயோ சம்பந்தமில்லாத இரண்டு ஜீவன்களிடம், மேற்கொண்டு அந்த உடலோடு உறவு கொண்டாடும பொறுப்பைச் சுமத்திவிட்டுத் தம் தம் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்கள். எரிந்து கிடக்கும் சாம்பலை மிகுந்த அக்கறையோடு பார்க்க நாளை வரப்போகிறார்கள். அதுவரை இந்த மேட்டிலே பழிகிடக்கும் இந்த இரண்டு உருவங்களும் சாம்பலைப் பத்திரமாக அவர்களிடம் ஒப்படைக்கப் போகின்றன. என்ன அக்கறையடா இவர்களுக்கு; விசித்திரம்!

என் நடையிலே மசானம் என்ற அந்த மேடு என் முதுகுக்குப் பின் விழுந்துகொண்டிருந்தது.

பண்ணைப் பார்க்கும் பள்ளிக்குக் களத்துச் ‘சிந்துமணி’யில் கவனம். காளிமுத்தனுக்கும் உழுபடைக் கவுண்டனுக்கும் பண்ணையோடு உறவு கெடா திருப்பத்தில் சிரத்தை. மிராசுதார் மாமாவுக்குக் குத்தகை ஜரூராக வசூலாவதிலும், நிலம் இணைசேர்ப்பதிலும் அக்கரை. சந்தணத்துக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்குச் சேருவதில் ஆத்திரம். வேலுவுக்கு நிலம் உழுவதில் ஆசை. பொசுக்கவந்த கூட்டத்துக்கு வீடு திரும்பும் அவசரம். எனக்கு இளநீர் சாப்பிடுவதில் உற்சாகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்- இப்படி அவனவன் பாடு அவனவனுக்குப் பெரிது. சின்ன ஆத்மா பிரிந்ததில் ஒன்றிற்கும் குந்தகம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டு ஆத்மாக்களுக்கு மட்டும் அதைக் கரையேற்றுவதில் இவ்வளவு அக்கரையா? இவ்வாறெல்லாம் மறுபடியும் நிழலோட்டம். எட்டி நடந்தோம் களம் நோக்கி.

திடீரெனப் பின்னால் ஓர் ஒற்றைக் குரல் வெடித்துக் கிளம்பியது.

“மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை.”

அந்த இடமே எதிரொலித்தது. எங்கிருந்து என்று அறியத் திரும்பப் போனேன்.

“வஞ்சமில் லாதமெய்க் காதல்அல் லாதில்லை”
என்று இரண்டு குரல்கள் ஜதையாக முடித்தன.

பிரமித்துப் போய் நின்றேன். அந்த ஆனந்த கீதம் மண் மேட்டிலே பிணத்தைக் குத்திக்கொண்டிருந்த அந்த இரு உருவங்களின் உச்சரிப்பு. என் பிரமிப்பு அடங்கு முன்னரே அடுத்து எத்தனையோ வரிகள் மளமளவென்று காற்றில் கலந்துவிட்டன.

பிரபஞ்சம் மாயம்: சந்தேகமில்லை. வேதாந்தம் அந்தத் தத்துவத்தை மூளையில் திணித்திருக்கிறது. ஆனால் எது ஆனந்தம்? சாவா? சாவாக இருந்தால் பொருத்தந்தான். ஓய்வில் ஆனந்தந்தானே! இல்லை, இத்தனை பிணங்களையும் குத்திக் குத்திச் சாந்திகொடுக்கும் அந்த ஜீவன்களின் வேலையில் ஆனந்தமா? அதுவும் சரிதான். உணர்ச்சிக்கு இடம்கொடுத்து, வரும் பிணத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க அந்த ஜீவன்களுக்கு அவகாசம் கிடையாது. மரமரத்துப்போன யந்திரவேலை அவர்களுடையது. வேலையில் உற்சாகம் வேண்டும், அலுப்புத் தெரியாதிருக்க. அந்த உற்சாகத்திலே உதட்டிலிருந்து கிளம்புகிறது பாட்டு. அவ்வளவுதான். முதலடி அந்த இடத்திலிருந்து தனித்துவந்து விழுந்திருந்தால் பொருத்தமற்றதாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த இரண்டாவது அடியோடு கலக்கவும் எவ்வளவு அசந்தர்ப்பமாகிவிடுகிறது! சாதல் குடி இருக்கிற இடத்தில் காதலின் ஸ்தானத்தை நிர்ணயிக்கிறது; மசான பூமியினின்று காதலர் சோலையை உண்டாக்கிவிடுகிறது கற்பனை உள்ளத்தில். இந்த நினைப்பில் என் உள்ளம், சிலிர்த்தது. இயற்கையின் பகைப்புலத்தில் என்ன முரணான சித்திரம்!

உழன்றேன்; அதன் மறுபக்கம் நினைவுக்கு வந்தது. வாஸ்தவம்! சாதலுக்கும் காதலுக்கும் இயற்கை ஒருவிதமான பாரபக்ஷமும் காட்டுவதில்லை. அதன் அணைப்பில்தான் காதல் பிறக்கிறது. நிலவும் தென்றலும் மணமும் குளுமையும் காதல் போதையைச் சிருஷ்டிக்கின்றன. சாவுக்கும் இயற்கைதான் தாய். மூச்சு நிற்றலும் காற்றுப்போக்கின் தடையும் சக்தியில் ஓய்வும் காதல் மயக்கத்தைச் சிருஷ்டிக்கின்றன. இந்தத் தென்னந் தோப்பிலே காதல் கூவும் பக்ஷ¤! எதிர்மேட்டிலே சாதல் ஓலமிடும் ஜ்வாலைத் தீ! எல்லாம் இயற்கையின் பகைப்புலத்தில்!

ஆனாலும் சாவின் எதிரில் காதலை நினைக்கவே முடியவில்லை.

இவ்வளவு எல்லாம் முரண்பாட்டை நினைத்து நான் குழம்பினேனே; எதிரே இருந்த குரல்கள் அந்த வரிகளைக் கொஞ்சமாவது சிந்தித்து உச்சரித்திருக்குமா? நிச்சயமாக இருக்கவே இராது. பிரமாதமாக அவர்கள் காட்டும் அக்கரையைச் சிலாகித்துப் பேசினேனே; அது எவ்வளவு தப்பு! அவர்களுக்கும் பொறுப்பில்லை. அவர்கள் செய்வது ஒரு முறைவேலை, ஊதியத் தொழில், பள்ளி, காளிமுத்தன், கவுண்டர், மிராசுதார் மாமா, சந்தணம், வேலு, நான் இவர்களைப் போன்றவர்களே அவர்களும். இதுதான் வாழ்க்கை.

Nov 28, 2009

ஏதாவது செய்-ஆத்மாநாம்

ஆத்மாநாம்

athmanam

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்சவாயர்கள் மீது
எரிந்து விழச் செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்

* Do Something என்ற குந்தர் க்ராஸ் கவிதையை முன்னோடியாகக் கொண்டு எழுதப்பட்டது. க்ராஸின் கவிதை அடிப்படையில் மிகவும் கிண்டலானது. ஆத்மாநாமின் கவிதை தீவிரத்தையே தொனியாகக் கொண்டது.

Nov 27, 2009

மெளனியின் சிறுகதைகள் - மரணமும் மகத்துவமும்-பாவண்ணன்

பாவண்ணன்

தற்செயல் என்கிற விஷயம் மனித வாழ்வில் முக்கியமான ஒரு திருப்பம் ஆகும். அதை ஒரு துாண்டுதல் என்றும் கொள்ளலாம். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் அத்தற்செயலின் விளைவாக 14_mouni2உருவாகின்றன. திரண்டெழும் விடைகள் வழியாகப் பல துணைக்கேள்விகள் உருவாகின்றன. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு கேள்வியை உருவாக்கியபடி நீள்கிறது. மனத்தில் ஒரு முழுக்கேள்விச் சங்கிலியும் அதற்கு இணையான விடைச்சங்கிலியும் பின்னிப் பிணைந்தபடி வளர்ந்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு விடையும் ஒரு புதிய புரிதலைத் தருகிறது. ஒவ்வொரு புதிய புரிதலும் அடுத்து நிகழப் போகும் தற்செயலை மேலும் கூடுதலான வெளிச்சத்தில் வைத்துப் பார்க்கிறது.

மொத்தத்தில் மெளனி 24 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அநேகமாக எல்லாக் கதைகளிலும் பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் தற்செயலாக அறிமுகமாகிறார்கள். தற்செயலாகத்தான் பேசிக் கொள்கிறார்கள். தற்செயலாகப் பெண்களைப் பார்க்கிறார்கள். தற்செயலாக மனத்தைப் பறிகொடுக்கிறார்கள். தற்செயலாக, திடுமென, எதேச்சையாக என்ற சொற்கள் இடம்பெறாத கதையே இல்லை. இந்தத் தற்செயல் என்பது ஒரு வாய்ப்பாக அமைய, பல கதைகளில் , அடுத்தடுத்த சம்பவங்கள் மரணத்தை நோக்கி நகர்கின்றன. வாசலற்ற பெரிய அரண்மனை மரணம். அல்லது எல்லாப் பக்கங்களிலும் வாசல்கள் உள்ள கோட்டை மரணம். அதை நோக்கி அழைத்துச் செல்கிறார் மெளனி. இந்த உலகத்துக்கு மிகவும் பழக்கமான- நித்தமும் காணத்தக்க - மரணத்தின் அருகே அழைத்துச் சென்று, மரணத்தின் விளங்காத பக்கங்களை விளங்கிக் கொள்ள முயற்சி செய்கிறார். அவர் கதைகளில் உருவாக்கும் தற்செயல்கள் எல்லாமே மரணத்தின் முகத்தை உள்வாங்கிக் கொள்ள ஒரு அருமையான வாய்ப்பாகவே காணப்படுகின்றன.

மெளனி தம் பல கதைகளில் மரணத்தை நிகழ்த்திக் காட்டுகிறார். மாபெரும் காவியம் கதையில் தன் குழந்தை ராமுவின் மரணத்தை ஒருவித இயலாமையுடன் பார்க்கிறான் கிட்டு. ஏன் சிறுகதையில் மெல்ல மெல்லத் தன்னை மரணத்தை நோக்கி நகர்த்திக் கொள்கிறான் மாதவன். மரணத்தை முதலில் ஒரு பளுவாகவும் பிறகு லேசாகவும் உணரும் கிருஷ்ணையர் குடும்பத்தேர் சிறுகதையில் வருகிறார். நீ இன்னும் இறக்கவில்லையே, இருக்கிறாயா என்று பார்க்கததான் வந்தேன் என்று உயிருடன் இருக்கிற ஜோன்ஸைப் பார்க்கப் போகிற சுந்தரத்தின் மனப்போக்கைக் குடைநிழல் கதை காட்டுகிறது. மரணத்தைக் காட்டிலும் மனத்தைப் பிளக்கிற இசையைப் பொழகிற நங்கையின் சித்திரத்தைப் பிரபஞ்ச கானம் காட்டுகிறது. மரணமுற்ற மனைவியின் அருகிலேயே இரவு முழுக்கத் தனித்திருக்கிற கணவனைக் காட்டுகிறது மாறுதல் கதை. இந்த மரணம் பல தற்செயல்களின் விளைவாக இறுதி முடிவாகக் காட்டப் படுகிறது. மரணம் என்பதை புறக்காட்சியிலிருந்து தன் மனத்துக்கு மாற்றப் பார்க்கிறார் மெளனி. அதாவது, வெளியே மரணம் என்ற ஒன்றில்லை என்றாலும் கூட, புறத்தே எதைக் கண்டாலும் அதை ஒரு சாக்காகக் கொண்டு மரணக்காட்சியைத் தன் கண் முன்னால் வரவழைத்துக் கொள்ளும் திறமையில் தேர்ந்துவிடும் அளவுக்கு, தன் மனத்துக்குப் பயிற்சி கொடுக்கிறார் அவர். இதை ஒரு எடுத்துக் காட்டு மூலம் சொன்னால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். நான் குற்றாலத்துக்குச் செல்கிறேன். கண்ணாரக் கண்டு சந்தோஷம் கொள்கிறேன். அருவிகளில் குளித்து மகிழ்கிறேன். அடுத்து இமயமலைக்குச் செல்கிறேன். பனிச்சிகரங்களைப் பார்த்துக் களிக்கிறேன். பிறகு எங்கோ ஒரு இடத்தில் உட்கார்ந்து , எதையோ பார்த்தபடி, இமயத்தையும் குற்றாலத்தையும் நினைத்துக் கொள்கிறேன். இரண்டுமே நல்ல அழகிய காட்சிகளாக என் மனத்தில் நிறைந்திருக்கின்றன. நிலவியல் அளவில் குற்றாலமும் இமயமும் பல மைல்கள் தொலைவில் இருப்பவை. ஆனாலும், என் மனத்தளவில்pavannan[1] அருகருகே உள்ள இரு புள்ளிகள் மட்டுமே. மிக நெருக்கமாக இரண்டும் என் மனத்தில் வீற்றிருக்கின்றன. இரண்டுக்கும் அதிக இடைவெளி இல்லை. இரண்டுமே என் பிரக்ஞையின் அனுபவமாக மாறிய பிறகு அடுத்தடுத்து உள்ளவையாகவே மாறி விடுகின்றன. மெளனி இதே போன்ற ஒரு இடத்துக்குத்தான் வருகிறார். சில காட்சிகளைத் தற்செயலாகக் காண்கிறார் அவர். அவற்றின் விளைவாகத் தொடர்ந்து மரணத்தைக் காண்கிறார். எதன் மூலமும் மரணத்தைக் காணமுடியும் என்கிற எண்ணம் அவருக்குள் இருந்திருக்கிறது. எதையும் மரணப்படுத்திப் பார்க்க முடியும் என்கிற எண்ணமும் அவருக்குள் இருந்திருக்கிறது. தன் பிரக்ஞையின் அனுபவமாகவே மரணத்தை மாற்றிக் கொண்ட பிறகு எங்கும் மரணமே அவருக்குத் தெரிகிறது. வாழ்வு என்பது மரணத்தை எதிர்கொள்வதும் மரணம் என்பது வாழ்வை எதிர்கொள்வதும் ஒரு விளையாட்டு போல மாறி விடுகிறது.

மனக்கோட்டை கதையின் இறதிக் காட்சியில் ஒரு வாசகம் வருகிறது. சங்கர் இறக்க முடியும். என் வாழ்க்கையை, என்னை, கனவு காணாது இருக்க முடியாது. அவன் கனவில், நனவென வாழ்க்கை கொள்ளும், நான் இருக்குமளவும் அவன்.. ? என்று வருகிறது அந்த வாசகம். சங்கரின் மரணத்தைக் கனவு காணும் துயிலுக்குச் சமமாக வைத்துப் பார்க்கிறார். அவன் கனவில் இவன் வாழ்க்கை என்றால், இவன் கனவில் யார் வாழ்வு இடம்பெறும் ? அவர் கனவில் எந்த மற்றொருவரின் வாழ்வு இடம்பெறும் ? இப்படியாகத் தொடர்ச்சியாகக் கேள்விகள் கேட்க முடியும். இதில் ஒரு உண்மை தெளிவு பெறுகிறது . அதாவது, மரணம் என்பது உடல் ரீதியான மறைவாக இருக்கலாம். ஆனால் மற்ற எல்லாமே இருக்கிறது. மறைவின் ஊடாக இருப்பைச் சாத்தியப்படுத்துவது புதிராக இருக்கலாம். ஆனால் அப்புதிரின் புள்ளியை நோக்கித்தான் அவர் கதைகள் செல்கின்றன. அதாவது, எல்லாக் கதைகளிலும் ஒரு பருண்மையான இருப்பு நுண்மையான இருப்பாக மாறுகிறது. வடிவமுள்ள ஒன்று தன் வடிவத்தை இழந்து அல்லது பறிகொடுத்து வடிவமற்ற ஒன்றாக மாறுகிறது. அழியாச்சுடர் கதையில் இலையுதிர்த்து நிற்கும் ஒரு மரத்தின் காட்சி இடம் பெறுகிறது. மரணத்தின் மாற்று உருவமாகவே அதைச் சித்தரிக்கிறார் மெளனி. ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடி, கைவிரித்து தேடத் துளாவுவதைப் பார்த்தாயா ? என்றொரு கேள்வி கேட்கப் படுகிறது. தன் விரிக்கப்பட்ட சிப்பிக் கோடுகள் அதன் ஒவ்வொரு ஜீவ அணுவும் வான நிறத்தில் கலப்பது காணாது தெரியவில்லையா ? என்றும் கேட்கப் படுகிறது. பட்டுப் போக இருக்கிற மரம் வெட்டவெளியில் எதைத் தேடும் ? இருப்பு இருப்பின்மையை நோக்கிய விழைவு என்று எடுத்துக் கொள்ளலாம். மரமாகப் பிம்பப் படுத்தப் பட்ட மரணம் வேறொன்றை நோக்கிச் செல்கிறது. ஒரு இருப்பு-மரணம்-மாற்று இருப்பு என்கிற சுழல் பாதையில் கதையைப் பின்னுகிறார் மெளனி. இங்கே மரணம் ஒரு சிறிய இடைவெளி மட்டுமே. நாடகத்தில் வேஷத்தை மாற்றிக் கொள்ள விடப்படுகிற இடைவெளி போல இந்த இடைவெளியை எடுத்துக் கொள்ளலாம். இதனால் இருப்புக்கு எந்தக் குந்தகமும் இல்லை. அது இன்னொன்றாக மாறுகிறது என்பதைத் தவிர.

இக்கதையில்தான் மெளனியின் மிகச்சிறந்த வரியான எவற்றின் நடமாடும் நிழல்கள் என்கிற வாக்கியம் இடம்பெறுகிறது. நிழல் கொடுப்பது, நிழல் என்ற இரண்டுமே வேறு வேறு விஷயங்கள். நிழல் கொடுப்பதற்கும் உருவம் இருக்கிறது. நிழலுக்கும் உருவம் உண்டு. இது உலகியல் உண்மை. ஆனால் எவற்றின் நிழல்கள் நாம் என்று கேட்கப்படும் போது நிழலுக்கு உருவம் தெரிகிறது. அந்த நிழலைக் கொடுப்பவற்றுக்கு உருவம் இல்லை. உருவமற்ற ஒன்றின் அல்லது பலவின் நிழலைப் படைத்துக் காட்டுவது விந்தையாகத் தோன்றும். நான் விதியின் நிழல். என்னிடம் காதலின் முழு வசீகரக்கடுமையை நீ காணப் போகிறாய் என்று அந்தப் பெண் பதில் சொல்வதைக் கவனியுங்கள். இங்கும் விதி என்கிற உருவமற்ற ஒன்றின் நிழலாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறாள் அவள். ஓர் உருவத்துக்கு நிழல் உருவாவதைப் பார்த்திருக்கிறோம். உருவமற்ற ஒன்றுக்கு எப்படி நிழல் உருவாகும் ? இக்கேள்வி தலையைக் குடையும் போதுதான் இருப்பிலிருந்து இன்மைக்கும் இன்மையிலிருந்து மீண்டும் இருப்புக்கும் நகரும் சுழல் பாதையின் ஞாபகம் வருகிறது. இதன் இரண்டாவது பகுதியைக் கவனியுங்கள். இன்மையிலிருந்து இருப்பு உருவாவதை நோக்குங்கள். இதே போலத்தான் உருவமற்ற ஒன்றிலிருந்து நிழலும் உருவாகிறது என்று இணைத்துப் புரிந்து கொள்ளலாம். இப்போது அந்த உருவமற்ற ஒன்று -நிழலைக் கொடுக்கிற ஒன்று- மரணம் என்பதை எளிதாக உள்வாங்கிக் கொள்ளலாம்.

பூட்டப்பட்ட ரகசிய அறையில் என்னென்ன இருக்கும் என்று கற்பனையும் உற்சாகமுமாக எண்ணங்களைச் சிறகடிக்க விடுகிற விளையாட்டுச் சிறுவனைப் போல மரணம் என்னும் மகத்துவமான சந்திப்புப் புள்ளியில் என்னென்ன இருக்கும் என்பதை அறியும் ஆவல் மெளனியை உந்தித் தள்ளுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் கண்டு சொல்வது கொஞ்சம். நம் கற்பனையால்தான் அப்புள்ளியை இன்னும் அழுத்தமாகத் தீட்டிக் கொள்ள வேண்டும். தம் வெப்பத்தால் தண்ணீரைச் சூரியன் ஆவியாக்கியதும் அது மேகமாகி வானில் அலைந்து காற்றுத்தடை ஏற்பட்டதும் மழையாகப் பொழிவதை நினைத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஆனால் மெளியின் அக்கறை மறுபடியும் பொழகிற மழை மீதல்ல. மேகமாக மேலெழுந்த ஆவியின் அலையும் அனுபவத்தைக் குறித்ததாகத் தோன்றுகிறது. அது வானில் தவழும் ஆட்டம், காற்றில் போடும் நீச்சல், மலைகளின் உச்சியில் அதன் ஒய்யார நடையைக் குறித்ததாகத் தோன்றுகிறது. வலசை வரும் பறவைகளைத் தொலைநோக்கியால் மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருக்கும் பலரைப் பற்றி அறிந்திருக்கிறோம். நாடு கடந்து பறந்து வரும் பறவைகளின் சுதந்தரத்துக்கு எந்தக் குந்தகமும் இல்லாமல் -அப்பறவைகளுக்கே கூடத் தெரியாமல்-அவற்றைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் அவர்கள். அவற்றின் நிறமும் இறகுகளும் வானில் நீந்தும் அழகும் நித்தமும் காணும் பறவைகளின் நிறத்தையும் இறகுகளையும் நீச்சலையும் காட்டிலும் புதுசாக இருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்துப் பார்க்கிறார்கள் அவர்கள். பார்த்து என்ன செய்ய என்கிற கேள்விக்கு எந்தப் பதிலும் இல்லை. பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. தம் கற்பனையை விரிவாக்கிக் கொள்ள அந்த அனுபவம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. மரணம் என்னும் சந்திப்புப் புள்ளியின் மீது மெளனியின் கவனம் குவிவது கூட இத்தகு ஒரு அனுபவத்தைத் தேடித்தான் என்று தோன்றுகிறது.

அழியாச் சுடர்கள் ஆல்பம்

si-su-chellappa

ka_na_su

சி.சு.செல்லப்பா

க.நா.சுப்ரமணியம்

ps rAMAYYA சிட்டி' பெ.கோ. சுந்தரராஜன்

பி.எஸ். இராமையா

'சிட்டி' பெ.கோ. சுந்தரராஜன்

pu.pi peramil

புதுமைப்பித்தன்

பிரமிள்

ku.alakirisamy mouni

கு. அழகிரிசாமி

மௌனி

na_pitchamurthy nagulan

ந. பிச்சமூர்த்தி

நகுலன்

kupara la_sa_ra

கு.பா.ரா

லா.ச.ரா

Nov 24, 2009

அயோத்தி-நகுலன்

நகுலன்

ஒரு வெள்ளிக்கிழமை சீனுவும் அவன் தாயார் சரஸ்வதி அம்மாளும் வெளித் திண்ணையில் மிகவும் சநதோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மணி 10-30, நல்ல வெய்யில். தெருவில் சனசஞ்சாரமில்லை. ஆகாயம் நல்ல நீலம். ஒரு வெள்ளை மேகம் கூட இல்லை. சீனுவின் தகப்பனார் சங்கரய்யர் கடைத்தெருவுக்குப் போயிருந்தார். 

nagulan-by-viswamithran-1அதனால்தான்... சீனு தொடர்ந்து சிந்திக்க வில்லை. ஒருவேளை அதிகமாகச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் படிப்பதின் விளைவாக இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. ஆனால் அது அப்படியில்லை என்பதும் அவனுக்குத் தெரியும். உண்மையை விட, வாழ்க்கையை விட, வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. அப்படி ஒன்றும் விலகி நிற்கவில்லையே, சரஸ்வதி அம்மாள் குரல் அவனைத் தட்டி எழுப்பியது. ''என்னடா சீனு கதை ஏதாவது எழுதத் திட்டமிடுறாயா? ஒன்றும் வேண்டாம்'' என்றாள். அவன் ஒன்றும் சொல்லவில்லை. ஒருமுறை அவன் அம்மா சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது.

''சீனு, இது ஒன்றும் வேண்டாம், ஒருவரும் படிக்க மாட்டார்கள். நாலு பேர்கூட வாழ்ந்தால் இதெல்லாம் அப்படித்தான் இருக்கும். உன் அப்பாவைத்தான் பாரேன்..'' என்று சொல்ல வந்தவள் நிறுத்திக் கொண்டாள். அவனும் ''ஏன்?'' என்று கேட்கவில்லை. நாலுபேர் சேர்ந்தால் எந்தத் துறையிலும் என்ன நடக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். என்றாலும் வாழ்க்கை கசக்கிறது என்று வாழ்க்கையை உதறிவிட முடிகிறதா என்ன? அவன், தெருவில் ஒரு நாய் எலும்புத் தோலுமாக நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு ஓடிப் போய்க் கொண்டிருப்பதை அர்த்தமில்லாமல் பார்த்தான். சரஸ்வதி அம்மா ''வா, உனக்குக் காபி என்றால் பிடிக்குமே குடித்துவிட்டு வரலாம்'' என்றாள். காப்பி வழக்கத்தைவிட, நன்றாக இருந்தது. மறுபடியும் வாசலில் வந்து உட்கார்ந்தார்கள்.
romans-3-23pwl-sm
வாசல் கதவை தள்ளிக் கொண்டு ஒரு 'மாமி' வந்தாள். பருமனுமில்லாமல், ஒல்லியாகவு மிராமல் ஒரு தேகவாகு. ஒரு வெள்ளை ரவிக்கை. நாலைந்து இடங்களில் ஒட்டுப் போட்டு தைத்த ஒரு பச்சைப் புடவை. நல்ல சிவப்பு.

வந்தவள் சரஸ்வதி அம்மாவிடம் ''இதுதானே சங்கரய்யர் வீடு'' என்று கேட்டாள்.

''ஆமாம்''

''நிங்கள்தானே சரஸ்வதி அம்மா?''

''நீங்கள்தான் சீனுவோ? நீங்கள் தானே காலேஜில் எம்.ஏக்குப் படிக்கிறீர்கள்?''

''நீங்கள் யார்? தெரியவில்லையே.''

''போன மாதம் திருச்சிக்குச் சிதம்பரய்யர் பிள்ளை கல்யாணத்திற்குப் போயிருந்தேன். அங்கு உங்கள் பெண் ராதாவைப் பார்த்தேன். அவளும் என் மாமா - உண்டியல் வியாபாரம் நடத்துக்கிறாரே வேணுவய்யர் - அவர்பெண் லக்ஷ¢மியும் ஒன்றாகப் படித்தார்கள். உங்க பெண் இப்ப சிலோனிலே இருக்காளாமே அவள் புருஷனக்குக்கூட பெரிய வேலை கவர்ன்மெண்டில் வருமான வரி இலாகாவில் - என்று சொன்னாள். அவள் பையன்கள் ரெண்டு பேரையும் பார்த்தேன். நல்ல புத்திசாலிக் குழந்தைகள். ஐயோ, ஆனா அடிக்கிற லூட்டி! உங்க பொண்ணுக்கு ஆனாலும் பொறுமை ஜாஸ்திதான் மாமி, அவகிட்டக் கூடச் சொன்னேன். உங்களைப் பார்த்தாச் சொல்றேன்னு.''

சீனு இடைமறித்தான்.'' ''ஏன் மாமி, இதெல்லாம் சொல்றதுக்கா இந்த வெயில்லே வந்தேள்.''
சரஸ்வதி அம்மாள் ஒன்றும் பேசவில்லை. தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த மாமி, ''அம்பி, நீ அப்படித்தான் கேட்பாய், உனக்கென்ன தெரியும்?

சீனுவுக்கு அவள் உரிமைப் பேச்சு பிடிக்கவில்லை. ஆனால் தெருவைப் பார்த்துக் கொண்டே இருந்த சரஸ்வதி அம்மாள் அந்த அம்மாவைப் பார்க்காமலேயே ''சொல்லுங்கள், மாமி!'' என்றாள்.

''என்னவோ மாமி, நம்ப பெரியவா சும்மாவா சொன்னா.. பொண்ணாய்ப் பிறப்பதே பாவம். அதுவும் பெண்ணாப் பிறந்து வாழ்க்கைப் பட்டு, வாச்சவன் சரியா அமையாட்டா, போரும் போரும்! கேளுங்கோ, அம்மா! நீங்கள் கேழ்விப்பட்டிருப்பேள் திவான் நாகசாமி ஐயரைப் பத்தி, அவா தம்பிக்குத்தான் வாழ்க்கைப் பட்டேன். இவரும் மூக்கும் முழியுமா நன்னாத்தான் இருந்தார். படிப்புத்தான் வரலை. கார்ப்பரேஷன்லெ வேலையா இருந்தார். சொத்து இருந்தது. ஆனா, மனுஷன் குடிக்கிறதுன்னா மாமி இப்படியா குடிப்பான்! நீங்ககூடப் பார்த்திருப்பேள். ஒரு குளோஸ் கோட்டும் மூக்குப் பொடி கலர்லெ ஒரு குல்லாய்; சில சமயம் நன்னாக் குடிச்சிட்டுக் கார்ப்பரேஷன் லாரிலெ அக்கிரகாரத்லெ வீட்டு வாசல்லெ வந்து இறங்குவார்.

அக்கிரகாரத்திலே இவரைக் கண்டா எல்லாருக்கும் பயம். வைய ஆரம்பிச்சா வாயிலெ என்ன வார்த்தை தாண்ணு இல்லெ. மாமி, இவரோட நான் பட்டது 10, 15 இல்லே 25 வருஷம் அவதிப்பட்டேன். அவர் சாகிறபோது இப்ப இருக்கற வீடுதான் மிச்சம். பின்னெ நான் கஷ்டப்பட்டது. என் பெண்ணை ஒரு நாலு கிளாஸ் படிக்க வைச்ச கஷ்டம், அவர் அண்ணா செத்தப் பிறகு, அந்தக் குடும்பம் பாம்பேக்குப் போயிடுத்து. சொந்தக்காரர் ஒத்தரும் திரும்பிப் பார்க்கலெ. கடைசியா அவளை இந்த ஊரிலெ உள்ள ''கோமள விலாஸ்'' ஹோட்டல் ஹெட்குக்குத்தான் கொடுத்தேன். அவளுக்கு இஷ்டமில்லே. பின்னெ என்ன பண்றது மாமி? வேணுஐயர் கிட்ட சொன்னதும் - அதான் சரின்னார். அவர் கலியாணத்திற்கு வரல்லை. சேஷனும் இந்த வீட்டுக்கு ஆசைப்பட்டுத்தான் என் பெண்ணுக்குத் தாலி கட்டினான். எப்படியும் ஒரு ஆண் துணை வேண்டியிருக்கே, மாமி? இப்பெல்லாம்னா பெண்கள் வேலைக்குப் போறா. அவள் அப்படிப் படிப்பிலும் சுட்டியில்லே. பின்னெ என்ன பண்றது? இப்ப இரண்டு பேருக்கும் என்னைப் பிடிக்க வில்லை.

அவனுக்கு ஒரு அதிகப் பத்தாப் போயிட்டேன்; அவளுக்கு நான் தலைகுனிவு ஏற்படுத்திட்டேண்ணு. இன்னிக்காலமெ ஒரு புடவையை எத்தனை நாள்தான் மாத்தி மாத்திக் கட்டிக்கிறதுன்னு சொன்னதும் அவள் பண்ணின கூத்து; அவர்கூடத் தேவலை. தங்கம் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசலை. அந்த அம்மாள் தன் புடவைத் துண்டால் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். சரஸ்வதி அம்மாள் ஒன்றும் பேசாமல் எழுந்து போய் பூஜை அறையில் கிடந்த நீலப் புடவையைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்துவிட்டு, ''போய் வாருங்கள், மாமி'' என்றாள். அந்த அம்மாள் மீண்டும் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டு புடவையை வாங்கிக் கொண்டு சென்றாள்.

சீனு, ''வெறும் வேஷம்''

''சீனு, இருக்கலாம். ஆனா வேஷம் போடாட்டா நம்ப ஒத்தராலேயும் ஒருநாள்கூட உயிரை வெச்சிண்டு இருக்க முடியாது'' அப்பொழுது கேட்டைத் திறந்து கொண்டு தபால்காரன் ராமசாமி வந்தான். அம்மாவிடம் மணி ஆர்டர் பணத்தை எண்ணிக் கொடுத்துவிட்டு, ''இப்பப் போனாங்களெ அந்த அம்மாவை உங்களுக்கு தெரியுமா?'' என்று சரஸ்வதி அம்மாவிடம் கேட்டான்.

''எங்க தெருவிலேதான் இருக்காங்க. தினம் வீட்டெல வந்து கதை கதையாச் சொல்லி அழுவாங்க. பல வாட்டி வீட்லெ சண்டை பிடிச்சுக்கிட்டு இப்படித்தான் வெளியே போயிடுவாங்க.''

அம்மா ஒப்புப் போட்டுக் கொடுத்த ரசீதையும் வாங்கிக் கொண்டு அவன் போனான். அவன் போனதும் கடைத் தெருவிலிருந்து திரும்பி வந்த சங்கரய்யர் தன் மனைவியிடம், ''பெரியவன் பணம் அனுப்பிவிட்டானா! சரி பீரோவிலெ வை'' என்று பூஜை அறையைத் தாண்டி சமையல் அறையில் இருந்து வந்தவர், பூஜை அறைக் கொடியில் இருந்த பானைத் தண்ணீரில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டுத்திரும்பி ''சரசு! உன் நீலப் புடவை எங்கே?'' என்றார்.

சரஸ்வதி அம்மாள் ஒன்றும் சொல்ல வில்லை.

அப்பொழுதுதான் சீனுவுக்கு அவன் தகப்பனாருக்கு வேலை போய்ச் சரியாகப் பதினைந்து வருஷம் ஆயிற்று என்பது ஞாபகம் வந்தது.

Nov 23, 2009

காசி-பாதசாரி

1 

 
போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்துவிட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர பிளேடால் கழுத்தை ஆழ அறுத்துக் கொண்டான்.உறைந்த ரத்தப் படுக்கைமீது நினைவிழந்து கிடந்தவனை கதவை உடைத்துப் புகுந்து எடுத்து ஜி.எச்.சில் அட்மிட் செய்தார்கள்.
ஊரில் நான்கு பேர் 'மறைலூஸ்' என்று கருதும் காசியைப் பற்றி எனக்கு அப்படி நினைக்க முடியவில்லை. எல்லோரையும் போல, தனக்கும் இந்த நாக்கு பேருக்கும் இடையிலான 'ஷாக்' அப்ஸார்பரை' பழுது பார்த்து சரியாக வைத்துக் கொள்ளாமல், இவர்கள் உறவென்று மெச்சுகிற பாதையின் குண்டு குழிகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 

 
நேற்று காசியிடமிருந்து கடிதம், 'காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம் காசுதான் சுதந்திரம்' என்று ஸ்ரீராமஜெயம் மாதிரி இன்லேண்டு முழுக்க எழுதியிருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் போனபோது ஒரு டீக்கடை வாசலில் காசியை யதேச்சையாக சந்தித்தேன். உணர்ச்சி முண்ட கைகளைப் பற்றிக் கொண்டான். தன்னோடு அதிக நேரம் இருக்க வேண்டுமென்று கெஞ்சினான். என் அப்பாவுக்கு அடுத்த நாள் வருஷாந்திரம். இரவுக்குள் மலைக்கிராமம் என் தோட்டம் போய்ச் சேர வேண்டியிருந்தது. சொன்னேன். வாடினான். சரி என்று பார்க் பக்கம் போனோம்.

David Zimmerman 1

எனக்கு வேலை ஏதும் கிடைக்காமலிருந்த காலத்தில் யாராவது என்னைப் பார்த்து 'இப்ப என்ன பண்றீங்க?' என்று கேட்டால் சங்கடத்தில் கூசிப் போய் சமாளிப்பாக எதையாவது சொல்வேன். அந்த வேதனை தனிரகம். காசியிடம் அதே கேள்வியை பூடகமாக விட்டேன் - ''அப்புறம்...? இப்ப...'' 

 
''ஒரு நண்பனோடு சேர்ந்து, மருந்து மொத்த வியாபாரம் சின்னதாப்பண்றோம். அப்பாகிட்டே இனி வீட்டுப் பத்திரம்தான் பாக்கி. தரேன்னார். அதை வைச்சு பேங்க்லே லோன் முயற்சி. கிடைச்சா இது ஒரு மாதிரியா தொடரும்...''
கேட் பூட்டியிருந்தது. பார்க்கில் சுவரெட்டிக் குதித்து உள்ளே போனோம். மறைவான புல்வெளி தேடி உட்காரும்போது ஞாபகம் தட்டியது. சிகரெட் வாங்கவில்லை. 'இருக்கு' என தன் ஜோல்னாப் பையிலிருந்து சிகரெட், தீப்பெட்டி எடுத்துப் புல்மீது வைத்தான்.

''வியபார உலகம் ரொம்ப கஷ்டப்படுத்துது. நிறைய கேவலமான அனுபவங்கள். மறைமுக-வரி மாதிரி மருந்து வியாபாரத்தில் மறைமுக பங்குதாரங்களா இருக்காங்க டாக்டர்ஸ். எப்படீனா, ஒரு டானிக் பாட்டில் பிரிஸ்கிரிப்ஷன் எழுத வைக்க, ஒரு டாக்டருக்கு மூணுரூபா லஞ்சம் தரணும். நூறு பாட்டில் டானிக் விக்க மாசம் முன்னூறு ரூபா லஞ்சம்...இதில்லாம பெரிய கம்பெனி மருந்துக்குன்னா, கம்பெனியே நேரடியாக அன்பளிப்பு டி.வி., கிரைண்டர், ஃபிரிட்ஜ்னு... குமட்டுதுடா குணா...'' 

 
காசியின் முகத்துமேல் செல்லமாகப் புகை வளையங்களை ஊதிவிட்டேன்.
''இதிலே எவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பேன்னு தெரியலை. பழையபடிதாண்டா இருக்கு குணா. அடுத்த வினாடி மேலே எடுத்த காலூன முடியலே.'' காசி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். அவனது ஜோல்னாப் பைமீது 'சொத்' தென வெள்ளையும் பழுப்பும் கலந்த எச்சம் தெறித்தது. 

 
''ஆனா முன்னமாதிரி என்னப் பிச்சு வீசி வாந்தியிலே புரட்டி ஆபாசப்படுத்திக்றதில்லேடா. கஷ்டப்பட்டு விழுங்கிக்கறேன். அப்பாவுக்காகதான். அவர் போயிட்டா என்ன ஆவேன்னு புரியலை. எதை ஆதாரமாக்கி இந்தப் பேய் மனசை சமாதானமா நடத்தப் போறேன்னே தெரியலடா...'' 

 
காசியின் அப்பா, காசிக்கு ஒரு வயதாகியிருக்கும் போது மனைவியை இழந்தார். காசிக்கு நான்கு வயது மூத்த ஒரு அக்கா உண்டு. வேறு உடன்பிறப்பு இல்லை. காசியின் அப்பா இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இரண்டோடு, காசியின் பெரியப்பா - தன் அண்ணன் - குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டு விட்டார். மில் வேலை. சாந்தமான குணம். 

 
''அப்பா எப்படியிருக்கார் காசி?'' 

 
''அப்பாவும் நானும் ஒரு வீட்லே இருக்கோம். அக்காவுக்கு வீட்லே பாதி பாகம் உயில் எழுதி வைச்சாச்சு. உயிலை கையில் குடுக்கலே. செவரு வெச்சு ரெண்டு பாகமாக்கியாச்சு வீடு வாசலை... மச்சான் அவ்வளவா பிரச்னை இல்லை... அப்பா அக்கா வீட்லேதான் சாப்புட்டுக்கறார். எனக்கு பத்து நாளைக்கொடு ஓட்டல். பத்தே நாளுக்குள்ள எந்த ஓட்டலும் சலிச்சிருது... முன்னூறு, முன்னூத்தம்பது மாசம் கிடைக்கும். ஆத்மாவை, மனசை, வயத்தை, உடம்பை எல்லாத்தையும் அதிலேதாங் கழுவணும்...'' பக்கத்தில் சிமெண்ட் பெஞ்சில் படுத்திருந்த நாய் எழுந்து உடலை உதறி சடசடத்தது. 

 
'' நீ பெண்ணா இருந்திருக்கக் கூடாதான்னு தோணுது. சரியாச் சொன்னா நீ பெண்ணா மாறிடக் கூடாதான்னு... உன்னோட இருந்தா பாதுகாப்பா, தைரியமா இருக்குடா குணா. அறிவோட குத்தலைப் பொருட்படுத்தாம சொன்னாகடவுளோட மடியிலே இருக்கிற மாதிரி... அதுவும் பெண்களவுள். என்னால் ஒரு ஆணை கடவுளா கற்பனை செய்யவே முடியலே.. விளையாட்டு மைதானமா முள்ளுவேலி இல்லாத மனசு உனக்க.'' 

 
''இல்லடாகாசி, என்னோட மனசு உனக்கு அந்த மாதிரி இருக்குது. ஆனா அங்கேயும் சில பேர் கண்ணுக்கு வேலி இருக்கும். இருக்குது, சரி.. இப்பெல்லாம் ஏதாவது எழுதறயா?'' 

 
''இல்லே, டயரி மட்டும்தான். கவிதை, கதைன்னு எழுதினா சுய புலம்பலா இருக்குது.''
எதிரில் நாய் ஒற்றைக் காலைத் தூக்கி பெஞ்ச் கால்மேல் மூத்திரம் அடித்தது. காசியின் வாயில் கால் சிகரெட் சாம்பலாக நின்றிருந்தது. சற்றே மெளனம்.
'' என்னால், இந்த சிகரெட்டை விடவே முடியலே காசி.'' 

 
''நானுந்தான்... கூடவே இந்த மாஸ்ட்ருபேஷனையும்... எவ்வளவு முயற்சி பண்ணியும் இந்த ரெண்டையும் நிறுத்தவே முடியலேடா குணா. சிகரெட்டால் எனக்கு ஒண்ணுமேயில்லே...நிகோடின் நெஞ்சுக்குள்ளே பரவி எதுவும் பண்றதா தெரியலே... பால் வராத மொலக்காம்பை உறிஞ்சற மாதிரிதான் அது எனக்க. மாஸ்ட்ருபேஷன்லேயும் ஒரு விஷயம். பல பேர் மாதிரி கைகொண்டு இல்லே. தலையணையை அணைச்சுட்டு... தாயான முப்பது முப்பத்தஞ்சு வயசுப் பொண்ணுகளத்தான் நினைவிலே அடைச்ச.'' 

 
காசிக்கு இருபத்தொன்பது தான் வயதென்று நினைக்கிறேன். திடீரென வேறெதாவது பொதுவாகப் பேசலாம் என்ற காசி, என்னைப் பற்றிக் கேட்டான். என் அம்மாவை விசாரித்தான். எனக்கும் அவனுக்கும் பழக்கமான ஒரு சாமியாரைப் பற்றிக் கேட்டான். சாமியாரோடு இருந்த அழகான பெண்ணைப் பற்றிக் கேட்டான்.
''சாமியார், ஆர்.எஸ்.எஸ்.லே பூந்துட்டார். கார் எல்லாம் குடுத்திருக்காங்க. அந்த சிஷ்யை 'ரம்பை' இப்ப சத்தியிலே ஒரு துணிக்கடையிலே சேர்ஸ் கேர்ள்.''
காசி சிகரெட்டை வீசி எறிந்தான். புல்லில் லேசாக புகை கசிந்தது. நான் மீண்டும் ஒரு சிகரெட்டுக்குப் பார்த்தேன், இல்லை. எனக்குப் பரபரத்தது. நானும் கூட காசியைப் போல சும்மாத்தான் சிகரெட் குடிக்கிறேன் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் தோட்டத்துப் பக்கம் கும்மிருட்டில் நின்று குடிப்பேன். குடித்த திருப்தியே இருக்காது. புகையை ஊதி கண்ணால் பார்ப்பதில்தான் திருப்திபோல இருக்கிறது. காலிப் பெட்டியை நசுக்கி தூக்கிப் போட்டான் காசி. ஒண்ணு பத்து என்றேன்.போவோமா என்று அரைமனதாகக் கேட்டான் காசி.
நடந்து சென்றபோது காசியைக் கேட்டேன். 

 
''டி.ம். எல்லாம் இப்ப ஒண்ணும் பண்றதில்லையா?'' 

 
''எதையும் தொடர்ந்து செய்ய முடியலே...காபிக் கரண்டியாலே வாழ்க்கையை அளந்து பார்த்ததா எலியட் சொல்லுவான். எதை எடுத்து அளக்கன்னே எனக்கு முடிவுக்கு வர முடியலே...'' 

 
காபியா, டீயா என்று கேட்கும்போது வெடுக்கென்று ஒரு விருப்பத்தைச் சொல்ல முடியாதவன் காசி. ஆனால் சாவை எடுத்து அளந்து பார்த்திருக்கிறான்.
சுவரெட்டிக் குதித்தோம். 

 
''தூங்கின திருப்தியே இருக்கிறதில்லே. ஓயாம கனவுகள். பகல்லே யோசனை யோசனைகள்... எனக்குள்ளே நான் ஓயாம நடமாடிட்டு இருக்கற மாதிரி... சில சமயம் எனக்குள்ளே இருக்கற 'நான்' தான் நிஜம் - இந்த வெளியிலே 'நான்' சூட்சுமம்னு பயமா தோணுதடா...'' 

 
''நியூஸ் பேப்பரெல்லாம் ஒண்ணும் படிக்கறதில்லையா காசி?''
''எப்பவாவது படிப்பேன். செய்தி, படமாகத்தான் எல்லாம் எனக்குள்ள மிச்சமாகுது. பிடிப்பே இல்லை. வெத்து ஒலக்கையும், ஒரலுமா மனசும் புத்தியும் அடிச்சிட்டுக் கெடக்கு...'' 

 
பொது நூலகம் தாண்டி தார்ச் சாலையை நெருங்கினோம். ''குணா, நீ இங்க வந்தா வராமப் போகாதே. வீட்டுக்கு வா. என்னோட கல்யாண மேட்டர்லே இன்னும் நீ கில்டியா ஃபீல் பண்றதா தன்ராஜ் சொன்னான்'' என்று கைகளைப் பிடித்துக் கொண்டான் காசி. 

 
2

 
எனக்குத் தெரிந்த காசி எட்டு வருஷங்களாக அப்படியேதான் இருக்கிறான். கர்ப்பம்விட்டு வெளியேறிய பின் அவனுடைய நினைவுப் பாதையில் முதலடி பற்றி ஒரு முறை காசி சொன்னான். அவன் அம்மா இறந்து ஆறாவது மாதமோ, வெய்யிலில் கற்றாழை அடர்ந்து சூழ்ந்த ஒரு வறட்டு இட்டேறி வழியே பாட்டியின் இடுப்பில் கதறிக் கொண்டு வருகிறான் காசி. அவனது பெரியப்பா வீட்டு வாசலில் கொண்டு வந்து இறக்கிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போகிறாள் ஒரு வெள்ளைச்சீலைக் கிழவி. அது காசியின் அம்மாவைப் பெற்ற அம்மா. மாமன்மாரின் பகல் தூக்கத்தைக் கலைத்து குழந்தை அழுதால் யாரால் சகிக்க முடியும். 

 
காலேஜ் பருவத்தில்தான் காசி எனக்கு நட்பானான். 'ஹிப்பாக்ரசி'யை அம்பலப்படுத்தி மனிதர்களை, எங்களை, பரிகசித்துக்கொண்டு கில்லாடிகளாக உணர்ந்து குதூகலித்துத் திரிந்த எங்கள் நட்பு புத்தகங்கள் மூலம் பலப்பட்டது. வித்தியாசமானவர்களாக மாற்றிமாற்றி மெச்சிக் கொண்டு நடந்தோம். 'ஆதவனை' ரசித்துப் படித்தோம். 'புவியரசு'வை நேரில் சந்தித்தோம். காசிதான் கூட்டிப் போனான். மெல்லமெல்ல ஜானகிராமன், லா.ச.ரா., பிச்சமூர்த்தி, அசோகமித்திரன், சுந்தரராமசாமி என்று ஈடுபாடு கொண்டோம். 'மெளனி' புரியாதபோதும் 'பயங்கரம்' என்ற பாவனை பூண்டு பாராட்டினோம். இடையில் நான் படிப்பதில் ஏனோ தேங்கிப் போனேன். பெண் வேட்கை. பட்ட பின்பு விவேகானந்தர், பித்துக்குளி முருகதாஸ், ரஜனீஷ் என்று கலவையாக ஜல்லி கலக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது ஜே.கே.வை அடிக்கடி படிக்கிறேன். அரசாங்க வேலை கிடைத்து கடலூர் போன பின்தான் காசியின் நெருக்கத்தை இழந்துவிட்டேன். 'ஆவேசமாகப் பாய்ந்து அரைக் கிணறு தாண்டும்' சுபாவம் சிறுவயதிலிருந்தே காசிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அவனுடைய பள்ளி வாழ்க்கையைப் பற்றி அதிகம் அவன் சொன்னதில்லை. நான்காம் வகுப்பு படிக்கும்போது காதலில் தோல்வி என்றும், ஹைஸ்கூலில் பிரேயரின்போது காலையில், கனிகள் அல்லது ஐசக் நியூட்டன் பற்றி கட்டுரை படித்து ஸ்கூலையே அறுப்பான் என்றும் ஏதோ சொல்லியிருக்கிறான். எஸ்.எஸ்.எல்.சியில் மிக அதிக மார்க்குகள் வாங்கினான் என்பது எனக்குத் தெரிந்தது. 

 
76-இல் காலேஜ் விட்டு வெளியே வந்தான். இரண்டு பேப்பர்கள் ஃபெயில். அப்புறம் அதை எழுதவே இல்லை. கொஞ்ச நாட்கள் தபால் மூலம் தமிழ் வழி ஹிந்தி படித்தான். விட்டான். கொஞ்ச நாட்கள் தாய்மொழி அபிமானத்தில் தெலுங்கு. தெலுங்கு வாத்தியார் வீட்டுப் பெண் தினமும் காபியில் கொஞ்சம் காதல் கலக்கிக் கொடுத்தாள். இந்த காலத்தில்தான் வீட்டுப் பக்கமாயிருந்த ஒரு இன்ஜீனியரிங் கம்பெனியில் டைம் கீப்பராக வேலை பார்த்தான். அவன் ஓரிடத்தில் தொடர்ந்து ஒரு வருஷம் பார்த்த வேலை. பூப்பந்து விளையாட்டில் சுமாரான வீரன் காசி. காலேஜ் நாட்களில் அவன் ஈடுபட்டிருந்த இரண்டு விஷயங்கள் கவிதையும், விளையாட்டும்தான். என்.டீ.சி. மில் ஒன்றில் விளையாட்டுத் தகுதியின் பேரில் வேலை கிடைத்தது. இந்த கேலைதான்... இதிலிருந்துதான் 'காசி' புறப்பட்டான். என்.டீ.சி.மில் வேலை ஆறே மாதம்தான். மனக் குமட்டல், மன நலத்திற்கு சிகிச்சை, அப்போது நன் கடலூரில் அரசு ஊழியன். 

 
திருநள்ளாறு போய் மொட்டை அடிக்கிறேன் பேர்வழி என்று அப்பாவிடம் பணம் பறித்துக் கொண்டு வந்தான் காசி. இரண்டு நாட்கள் என்னோடு உற்சாகமாக இருந்தான். நிஜமாகவே 'திருநள்ளாற்றின்'மீது நம்பிக்கை கொண்டிருப்பானோ என்று நினைத்தேன். ஒரு நாள் போய் மொட்டை போட்டுவிட்டு, மத்தியானம் காரைக்கால் வந்து ஒரு லாட்ஜில் பீர் அடித்துவிட்டுத் தூங்கினோம். 

 
சாயங்காலம் காற்றாட வெளியே நடந்தபோது ஒரு திடுக்கிடும் உண்மையைக் கக்கினான் காசி. ''உண்மையிலேயே நான் ஒரு பாவி - கயவன்டா குணா. அன்பான அப்பாவை ஏமாத்திட்டிருக்கேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. டாக்டர்களையே ஏமாத்தி நடிக்கிறேன். எனக்கு வேலைக்குப் போக பயமாயிருக்குடா... 'ஃபியர் ஆஃப் ரெஸ்பான்ஸிபிலிட்டி அண்ட்ஃப்ரீடம்' டா.''
'8எந்த புஸ்தகத்துல படிச்சே இந்த இங்கிலீஷ் வரியை- பொறுப்பு பத்தின பேடித்தனம் சரி.. அதென்னடா சுதந்திரம் பத்தின பயம்? சுதந்திரத்தையே தப்பாப் புரிஞ்சிக்கே நீ... மேதாவிங்கற பிம்பத்தை வளர்த்தி வெச்சுக்கிட்டு, பிம்பத்தோட கர்வத்துக்கு பங்கமா இருக்ககுதோ வேலை செய்யற இடம்? நீ முட்டாள்!''
''இல்லடா குணா... எனக்கு வந்து ஜாப் ஒத்து வரலைடா... எந்த ஜாப்புமே ஒத்து வராது. என்னாலே கடிகார மிரட்டலை சகிக்க முடியலே. தினம் தினம் தினம் ஒரே நேரத்திலே அத அதச் செயயறது, செயற்கையா 'டாண்'ணு ஒரே நேரத்துக்கு எந்திரிக்கறது, செயற்கையா தினமும் ஒரே நேரத்தைப் புடிச்சிட்டு வெளிக்கு உட்கார்றது, 'கன்' டயத்துக்கு குளியல்... கட்டுப்பாடான தினம் தினம் தினம் தினம்கள் எனக்கு சலிக்குதுடா... வெறுத்து, குமட்டி.... இதுக்கு மேலே பொறுப்புன்னா பயம் வேறே... அதிகாரி உருட்டல்... ஓவர் டைம்... அப்பா! 

 
''படுபாவி!'' 

 
''எனக்கு உள்ளூர சத்தியமான ஆசை என்ன தெரியுமா?'' 

 
''சொல்லு'' 

 
''எங்காவது காட்டுக்குள்ளே... மலைப்பக்கம் ஓடிப் போயிணணும்''. 

 
''போயி'' 

 
''ஆதிவாசிகளோட ஆதிவாசியாகணும்'' 

 
''முட்டாள், ஆதிவாசிக் கூட்டத்திலே மட்டும் பொறுப்பு, சுதந்திரம் பத்தின பயம் இருக்காதுங்கிறியா? அங்கேயும் தாளம் இருக்குதுடா... கட்டுப்பாடு இருக்குது...''
காசி பதில் பேசவில்லை. நான் எதிர்பார்க்கவேயில்லை. திடீரென சட்டையைக் கழற்றினான். இடுப்பில் லுங்கியை இழுத்து நழுவவிட்டான். ஜட்டி போட்டிருக்கவில்லை. படுபாவியின் வலது தோள்பட்டை விறைத்துப் பலகை மாதிரி இருந்தது. தள்ளவே முடியவில்லை, கனம். லுங்கியை பலவந்தமாகச் சுற்றி மெல்ல அணைத்தபடி தள்ளிக்கொண்டு போனேன். பெட்டிக் கடையில் சோடா வாங்கி முகத்தில் தெளித்தேன். கொஞ்சம் வாயில் புகட்டி லாட்ஜுக்குக் கூட்டிப் போனேன்.
இரவு பதினோரு மணிக்கு விழித்துக்கொண்டான். இரவு உணவு சாப்பிடவில்லை. நான் கலவரப்பட்டு வருத்தமாக உட்கார்ந்திருந்தவன் அருகே போனேன். மொட்டைத் தலை சொட்டையில்லாமல் வியர்த்திருந்தது. தோளைத் தொட்டு பரிவாக, கட்டிலோரம் உட்கார்ந்தேன். எழுந்து உட்கார்ந்தான். இடுப்பில் லுங்கி இருந்தது, இருக்காமல். முகம் உப்பியிருந்தது. 'பசிக்கிதா' என அவன் கைகளை மெல்லப் பிடித்துவிட்டதுதான் - எதிர்பார்க்கவில்லை. மூக்கும் கோண அப்படியொரு அழுகை, பெருங்குரலெடுத்து முகம் விம்ம. எனக்கு எரிச்சலாகவும் பயமாகவும் துயரமாகவும் ஆகிவிட்டது. பக்கத்து ரூமில் எல்லோரும் எழுந்து வந்தால்... அவன் முகத்தை அப்பி அடக்கப் பார்த்தேன். முடியவில்லை.  ஊ ஊ ஊ என அரைஅணி நேரம் அடங்கவில்லை. மழைவிட்ட விசும்பல் மாதிரி வேறு... நான் லைட்டை அணைத்துவிட்டேன். 

 
''நல்லாத் தூங்கினியா?'' 

 
''தூங்கினேன்'' என்ற காசியின் பதிலில் வாட்டம். காலையில் எட்டு மணிக்கே சாப்பிடப் போனோம். 

 
'' என்ன காசி, சொல்டா...'' 

 
''ராத்திரி ஒரு கனவு... மனசு கஷ்டமாயிருக்குடா.'' 

 
'' என்ன, சொல்லு!'' 

 
''வனாந்தரத்துக்குள்ளே மத்தியான நேரம். மழை பேஞ்சு ஓய்ஞ்சிருக்கு. பிரம்மாண்டமான சிலை ஒண்ணு... மார்லே மொகஞ்சு மொகஞ்சு பாலை குடிச்சிட்டிருக்கேன். திடீர்னு என்னன்னா... புணர்றா மாதிரி... முகம் சரியா தெரியலே. விழித்தபோது அந்தக் கனவு முகம் மனசைக் கஷ்டப்படுத்துச்சு.''
''ஏதாவது சினிமா போலாமா?'' என்று பேச்சை மாற்றினேன். 

 
3 


 
காசிக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்ததற்கு நானும் முக்கிய காரணம். முதற்காரணம். பெண்களுடன் காசியின் அனுபவம் ஒன்றைக்கூட அவன் என்னிடம் ஒளித்ததில்லை. பி.யூ.சி. படிக்கும்போது பக்கத்துத் தெருவில் பெட்டிக் கடைக்காரரின் பெண்ணுடன் காதல். பத்னேழு வயதுப் பெண். காசியின் அன்றைய பாஷையில் தேவதை. உணவாக பெட்டிக் கடை பொரி - வேர்க்கடலையையே அதிக நாட்கள் தின்று வளர்ந்த அந்த தேவதைக்கு திடீரென மஞ்சல் காமாலை. ஒரு நாள் சாம்பல். காசி இந்த தேசதையின் பெயர் சேர்த்து புனைபெயர் வைத்துக் கொண்டு 'கண்ணாமூச்சு' என்றொரு குட்டிக் கவிதை தொகுப்பை பின்னாளில், ஒன்றுவிட்ட அண்ணன் அச்சகத்தில் வேலை பார்த்தபோது வெளியிட்டான். 'வேலை' என்றால் தொகுப்பு அச்சடித்து முடியும்வரை வேலை! 

 
காலேஜ் முதல் வருட நாட்களில் கவிதையுடன் இரண்டு குட்டிக்காதல்கள். ஒரு பெண் மு.வ. ரசிகை. 'கெமிஸ்ட்ரி' படிப்பு. எதிர்வீடு. துணைப் பாடம் 'கணக்கு' சாக்கில் காசி அடிக்கடி மு.வ. ரசிகையிடம் போனான். ஒரு முற்பகல் குளிக்கும்போது சுவரெட்டி விட்டு - விரகதாபத்தில் - பெயர் சொல்லிக் கத்திவிட்டான். முகத்திலேயே விழிக்க வேண்டாமென்று கதவை அடைத்துக் கொண்டுவிட்டது 'அல்லி'. இன்னொரு பெண்வலிய வந்து இவன் நெஞ்சில் சாய்ந்தாள். வேலையில்லாப் பட்டதாரிப் பெண். வேலை கிடைத்து பொள்ளாச்சி போய்விட்டாள். சந்திப்பே இல்லை. கடிதங்களுக்கு பதில் இல்லை. காசி என்.டீ.சி.மில் வேலையைத் தொலைத்துவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில், அப்பா ஜேபியில் பத்து ரூபாய் திருடிக் கொண்டு ஒரு நாள் பொள்ளாச்சிக்கு பஸ் ஏறினான். இரண்டு ரோல்டு கோல்டு காது ரிங்குகளை வாங்கிக் கொண்டு போய், சாயங்காலம் போஸ்ட் ஆபீஸ் வாசலில் அவளைச் சந்தித்தான். அவள் முகம் கொடுக்கவில்லை. ரிங்குகளை நீட்டினான். 'என்னைப் பார்க்க வராதே! எங்கண்ணாவுக்கு லெட்டர் எழுதுவேன். வேறு வேலையில்லை உனக்கு. மென்டல்!' காது அலங்கரிப்புகளை சாக்கடையில் விசிறிவிட்டு எச்சில் விழுங்கியபடி கூசி நடந்தான் காசி.
இன்னொரு காதல் இரண்டு வீட்டிலும் அம்பலமாகிவிட்டது. காசியின் பிடிவாதத்தால் காசியின் அப்பா பெண் கேட்டுப் போனார். வேலை ஏதும் பார்க்கட்டும். யோசிக்கலாம் என்று சொல்லி அனுப்பினார்கள். காசி வேண்டா வெறுப்பாக வேலை தேடினான். கல்யாணத்துக்கு எதுவுமே செலவே வேண்டாம், அந்தப் பணத்தில் ஏதாவது தொழில் செய்கிறேன் என்று கெஞ்சிப் பார்த்தான். காசியைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் அந்தப் பெண் அடம்பிடித்தாள். அவர் வேலைக்குப் போலேன்னா பரவாயில்லே, நாலு எருமை வாங்கிக் கறந்தூத்தி நாங்க பொழுச்சுக்குவோம் என்று சொன்னாளாம் - பொருளாதார முகத்தின் சூதுவாது தெரியாத பெண். ஒரு போலீஸ்காரருக்கு மனைவியாகிப் போனாள்.
அப்புறமும் காசி எங்குமே வேலைக்கு போகவில்லை. 'பிஸினஸ்' என்ற பெயரில் யார் யாருடனோ சேர்ந்து ஊர் சுற்றினான். மெட்ராஸ், பெங்களூரில் வேலைக்கு 'இண்டர்வ்யூ' என்று அப்பாவித் தந்தையை ஏமாற்றி பணம் பிடுங்கிப் போய் செலவழித்துவிட்டுத் திரும்பி வந்தான். ரேடியோ நிலையத்தில் தினம் போய்க் குலாவினான். 'நாளொரு தகவல்', 'உங்கள் கவனத்திற்கு' என்று கண்டதை எழுதிக் காசு வாங்கினான். மாதம் 75,100 என்று வருவதை டீ, சிகரெட், கள்ளென்று செலவழித்துச் சுற்றினான். விஸினஸ் நண்பர்களுக்காக எங்காவது அனுப்பினால் பஸ் ஏறிப் போய் காரியம் செய்வான்.செலவுக்குக் கொடுத்து எங்காவது அனுப்பினால் போதும் குஷி. வீடண்டுவதில்லை. மச்சான் இல்லாத சமயம் சமையல் கட்டில் நுழைந்துவிடுவான்ன. மச்சானுக்கு ஆப்-நைட் (மில்) ஷிப்டென்றால் மூன்று மணிக்கு வீடு வந்தால், இரண்டு தடவை உணவு. அப்பா மில்லைவிட்டு நின்றதால் பெற்ற பணம் பாதிக்கு மேல் கரைந்து விட்டது. மச்சானுக்கு நான்கு குழந்தைகளில் இரண்டு பெண். கூடவே பராமரிப்பாக மூன்று மாடுகள். அவர் கஷ்டம் அவருக்கு. மனிதாவிமானத்தைக் கொஞ்சமேனும் பராமரிக்க அவர் உழைப்பின் ஷிப்டில் நேரம் கிடைக்கவே இல்லை. மச்சானின் நாக்குச் சாட்டை வீச்சு தாங்க முடியாமல் உறைத்தபோது காசி தடுமாறிப் போனான். காசியை அடக்க முடியாத மச்சானின் கோபம், காசியின் அப்பாமீது, இயலாமையின் வடிகாலாக மெல்ல மெல்லத் தொட்டது. அப்பாவுக்கும் 'சுரீர்' விழ, சாட்டையை ஒரு நாள் எகிறிப் பிடித்துப் புரட்டிவிட்டான் காசி, விளைவு- தூரத்தில் இந்த பெரியம்மா வீட்டில் தஞ்சம். 'ஏ மச்சான்னேன்! 

 
கொம்பன்னேன்! குட்றா வீட்டு வாடகையை!' என்று மாதம் நானூறு ரூபாய் வாடகை போட்டுவிட்டார்கள் அப்பனும் மகனும். எல்லாம் காசிக்காகத்தான். உண்மையில் காசியின் அப்பாவுக்கு மனள்மீது அளவு கடந்த பாசம். காசியின் மீது அவன் அக்காவுக்கும்! காசியின் மச்சானும் வேறு யாருமில்லை காசிக் சொந்த அத்தை மகன். 

 
பெரியம்மா வீட்டில் காசிக்கு நிலைமை முற்றிக்கொண்டு வந்தது. மனநோயாளி போல் நடித்துக் திரித்த காசிக்கு மெய்யாகவே லேசாக மனநோய் தாக்கியது என்றுதான் நினைக்கிறேன். 'ஒரு பைத்தியக்காரனுக்கும் எனக்கும் என்ன சின்ன வித்தியாசமென்றால் நான் பைத்தியமில்லை அவ்வளவுதான்' என்று யாரோ ஒரு மேலைப் பெயர் சொன்னதாக சொல்லித் திரிந்த காசியின் சுய எள்ளலையும் கடந்து மெல்லவே மன ஆரோக்கியம் குறைந்தது. ஆனாலும் அங்கே வீட்டிலிருந்த காலத்தில் நிறையப் படித்தான் என்று தெரிகிறது. (எனக்கு) புரியாத கவிதைகள் நிறைய எழுதினான். நான் பதிலே போடவில்லை. 

 
ஒரு வினாடிகூட காலூன்ற முடியாமல் கொந்தளித்தான் காசி. 

தன்னுடம்புக்குள்ளேயே பொறியில் சிக்கிய ஒரு எலியாகிவிட்டது அவன் மனது. ஒரு முட்டாள் மனநல வைத்தியன் நானூறு ரூபாய் காசுக்காக நான்கு தரம் 'ஷாக்' ட்ரீட்மெண்ட் செய்துவிட்டான். கறிவேப்பிலை கருகும் வாசனை தலைக்குள்ளிருந்து வினாடிதோறும் அடிப்பதாக மனப் பிரமையில்(?) பரிதவித்துப் போனானாம் காசி. நிறைய மாத்திரைகள்... மனம் அடங்கவில்லை. ஷணப்பித்தன் - ஷணச்சித்தன் என்றானான் காசி. பத்தடிக்குள் மூன்று திசை. இந்த மலைக்கிராமத்திற்கு வருகிறேன் பேர்வழி என்று நான்கு முறை பஸ் ஏறியவன் ஒரு தரம் 40 கி.மீட்டர் வந்துவிட்டுத் திரும்பி, இரண்டு முறை 100 கிலோ மீட்டருக்கு டிக்கெட் வந்துவிட்டு ஆறாவது கிலோ மீட்டரிலேயே திரும்பிவிட்டானாம். ஒரு ஜின்னிங் பாக்டரியில் பஞ்சு பிரிக்கப் போகும், உறவுக்காரப் பெண்ணை கல்யாணத்திற்குக் கேட்டு அப்பாவை வாதித்தான். பெண் யாருமில்லை. பெரியப்பாவின் பேத்தி. பெரியப்பா இறந்தவுடன் சொத்துப் பிரிப்பில் ஒரே அண்ணனோடு, ஜன்மப் பகை சேர்ந்துவிட்டதான் உறவற்றுப் போன காசிக்கு ஒன்றுவிட்ட அக்காவின் பெண். பெரியம்மாவுக்கு இந்த ஏற்பாட்டில் ரகசிய சம்மதம். காரணங்களில் சொத்தும் ஒன்றாக இருக்கக்கூடும். தெரியவில்லை. அப்பாவும் யாரையோ பார்த்து கேட்டுவிட்டார். 'பெண் கேட்க என்ன தைரியம்' என்று அப்பன் குடிகாரன் தூதுவரை ஏசி அனுப்பினானாம். ''ஏதோ ஒரு பொண்ணுப்பா - கல்யாணம் ஆனா எனக்கு எல்லாஞ் செரியாயிடும். இங்க சொந்தக்காரங்க வீட்டுல எத்தனை நாளுக்கு? எண்ணிப்பாத்தா பயமாயிருக்குதுப்பா...'' என்று பச்சையாகக் கதறியிருக்கிறாள் காசி. தவித்துக் கொண்டே இருந்தவன் ஒரு மாலையில் தேங்காய் பருப்பியைக் கடித்துக் கொண்டே இரண்டு பாட்டில்கள் டிக்-20ஐக் காலி செய்தான். விஷயம் தெரிய, பெரியம்மா அவசர அவசரமாக நாய்ப்பீயைக் கரைத்து வாயில் ஊற்றி விட்டாள். மீண்டும் வேறொரு மனநல டாக்டர். மாத்திரைகள். 

 
திடீரென ஒரு சாயங்காலம் இம்மலைக் கிராமத் தோட்டத்திற்கு வந்தான். உடம்பு ஊதிக் கறுத்து ஆள் பயங்கரமாக இருந்தான். இரண்டாவது நாள் நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். யாராவது பொண்ணு வேண்டும் என்று. ஒரு பொண்ணோட ஒரு நாள் முழுக்க தனியா இருக்கணும். ஏற்பாடு செய் என்று பிடிவாதம். முப்து மைல்கள் பிரயாணம் செய்து அந்த எல்லைப் புற சின்ன டவுனுக்கு சென்றால் எனக்குத் தெரிந்த ஒரு பெண் - அவளும் ஊரில் இல்லை. அந்த சமயத்தில் நானும் வேலையில் இல்லை. அப்பா திடீரென இறந்துவிட்டதால், கடலூர் அரசு வேலையைவிட்டு இங்கே தோட்டம் வந்து இரண்டு வருடங்களாகிவிட்டது. அம்மா, தங்கைகளக்குத் துணையாக விவசாயத்தில் இறங்கியிருந்தேன். கூட எல்.ஐ.சி ஏஜண்ட் வேலை. ஒரு சாமியாருடன் தீவிரப் பழக்கமாயிருந்தது எனக்கு. எங்கள் கிராமப் பக்கம் சின்ன குடிசை ஒன்றில் இருந்தார். சீக்கிரமே தெரிந்தது, கூட அழகான ஒரு சிஷ்யை என்று. நாங்கள் சொந்தக் குடிசையாக ஆசிரமம் கட்ட வசூலித்தோம். 'விவேகானந்தரின் மறு பிறப்பு' என்று சொல்லிக் கொண்ட சாமியாருக்கு நான்தான் பிரதம சிஷ்யன். கீழிறங்கி சாமியார் நகரங்களுக்குப் போனார்.  கீர்த்தி பரவியது. இங்கிலீஷ் சாமியார் அவர். ஃபார்மர் லைப்பில் எம்.பி.ஏ,. ஒரு பழம் பெரும் திரைப்பட அதிபரின் நெருங்கிய உறவுக்காரர். மனைவி படிதாண்டிவிட்டாள். புருஷன் வீட்டையே தாண்டி ஆசிரமம் கட்டிக் கொண்டுவிட்டார். பின்னாளில்தான் எனக்கு எல்லாம் தெரிந்தது. 

 
சாமியிடம் காசியை அழைத்துப் போனேன். எல்லாவற்றையும் சொன்னான். பத்து வயதுப் பையனிடம்கூட மனதைக் கழற்றிக் கையில் தந்துவிட்டு, 'பாத்துட்டு மறக்காம தாடா' என்ற போகிற தன்மையில் காசி இருப்பதை சாமியாரின் மூளை புரிந்து கொண்டுவிட்டது. 

 
'நாலுபேர் மாதிரி லைப்பிலே செட்டில் ஆகணுங்கற ஆசையே அத்துப் போச்சு சாமி இவனுக்கு' 

 
'கடவுள் நம்பிக்கை உண்டா?' 

 
காசியே பதில் சொன்னான். '' இல்லே சாமி... ஆனா 'கடவுள்'னு ஒருத்தர் இருந்துட்டாக்கூட பரவால்லேன்னு படுது சாமி!'' 

 
'நல்லாப் பேசறீங்களே; இதுக்கு முன்னாடி யாராவது சாமியார்கிட்டே போயிருக்கீங்களா?'' 

 
''போயிருக்கேன் சாமி. சகஜ சைதன்யா கிட்டே போனேன். தியானம் கத்துக்கப் போனேன். மந்திரம் தந்தார். மந்திரத்தை வெளியே சொல்லக் கூடாதுன்னார். 'ஐங்'கற அதை வெளியே எல்லாம் சொன்னேன். மறுபடியும் பாத்து அப்படி செஞ்சதை சொன்னேன். பரவால்லே தொடர்ந்து பண்ணுங்கன்னார். கனவுகள் தொந்தரவு பத்தி சொன்னேன். போன பிறவியிலே அடக்கி வெச்ச ஆசைகூட இந்தப் பிறவியிலே கனவா வரும்னார். பயந்து போயிட்டேன் சாமி... அப்புறம் போகவே இல்லை...'' 

 
கடைசியில் சாமியார் ஒரே வரியில் காசிக்கு அருள் வாக்காகத் தீர்வு சொன்னார். எனக்கு அதிர்ச்சி. ''காசி... உனக்கு செக்ஸ்தான் பிரச்னை... யூ ஹாவ் செக்ஸ் வித் ஹர்'' என்று ரம்பையை அழைத்துக் காட்டினார். 

 
காசி இரண்டு நாட்களாக குழம்பி முடிவெடுக்க முடியாமல் இருந்தா.ன முடியாது என்று ஒரு வழியாக முடிவு சொன்னான். தனக்கு தங்கைபோல இருப்பதாகவும், தான் வேண்டுவது தாயான பெண் என்றும் சாமியாரிடமே உளறினான். ''நோ அதர் கோ... லீவ் ஹிம்... இப்படியே மெண்டலா இருக்க வேண்டியதுதான். ட்ரைஃபார் சப்ளிமேஷன் நாட் ஃபார் செண்டிமெண்ட்ஸ் இன் செக்சுவாலிட்டி வித் சாய்ஸ்! நேத்து குருநாதர்கிட்டே உன்னப் பத்திக் கேட்டேன். இன்னும் பத்து வருஷத்துக்கு உனக்கு சோதனைகள் பாக்கின்னார். மொதல்லே உடம்போட நீ இருந்து பழுகணும்'' என்று முகத்துக்கு நேராக காசியிடம் சொன்ன சாமி, அவனை ஆசிரமத்திற்குள் அழைத்து வர வேண்டாமென்று என்னிடம் ரகசியமாகச் சொல்லிவிட்டார். 

 


 
கீழே போன காசியிடமிருந்து ஒரு மாதமாக தகவலே இல்லை. கீழே கோயமுத்தூரில் சாமியார் ஒரு பணக்கார வீட்டில் அடிக்கடி எழுந்தருளுவார். ஒருமுறை நானும் கூடப் போனேன். அந்த வீட்டில் ஒரு இளம் பெண், கணவனை ஒதுக்கிவிட்டு தாய்வீடு வந்துவிட்ட பெண், மூன்று பெண்களில் நடுப்பெண். 'ஆணாக'சுதந்திரம் பெற்று வளர்ந்த பெண். மூன்று பெண்களில் கல்லுமில்லை, புல்லுமில்லை. ஆனால் 'இம்பொட்டண்ட்' என்று தாலியைக் கழற்றி வீசிவிட்டு வந்துவிட்டவள். மூத்த - இறைய இரண்டு சகோதரிகளும் 'வசதி'யாக வாழ்க்கைப் பட்டவர்கள். சாமியாரிடம் மிகுந்த விசனத்தோடு குடும்பம் முறையிட்டது. காசிக்குத் தெரிந்த குடும்பம் என்று தெரிந்தது. நான் காசியின் நண்பன் என்பதையும், காசியைப் பற்றியும் ஏதோ பேச்சு வாக்கில் சாமி, யதேச்சையாக தன்னிடம் வந்த 'கேஸ் ஹிஸ்டரி'களில் ஒன்றாகச் சொல்லி வைத்தார். காசியைப் பார்த்தபோது நானும் யதேச்சையாக அந்தப் பெண்ணின் துயர ஸ்திதியைப் பற்றி சொல்லித் தொலைத்தேன். தயாராக காசிக்குள்ளிருந்த விதி, காசியின் பாஷையில் 'கேரக்டர்' வீறுகொண்டு எழும்பிவிட்டது. 

 
காசி கல்யாணம் முடித்து ஒரு மாதம்கூட கூடி வாழவில்லை. இரண்டாவது மாதம் ஒரு நாள் மாலையில் இந்த மலைக்கிராமத்து தோட்டத்து வாசலில் வந்து நின்றான். அன்றிரவு முழுவதும் ஊருக்குள் நாங்கள் இரண்டு பேர் மட்டுந்தான் தூங்காமல் இருந்திருப்போம். மாப்பிள்ளைக் களை அறவே இல்லை. முகம் எழுமைச் சாணியில் பிடித்து வைத்தது மாதிரி இருந்தது. 

 
''அரைக்கிலோ முந்திரி கேக்குக் உங்க எந்த கவிதையைத் தூக்கிட்டு கடைக்கு போகன்னு கேட்கறாருடா மாமனார். புஸ்தகங்களைக் கட்டி எடைக்ப் போட்டுட்டு, மூளையை பணம் பண்ண யூஸ் பண்ணணுங்கறார். வீட்டு மாப்பிள்ளையா அங்கயே இருக்கணுமாம். நடுத்தரக் குடும்பங்கள் வாழற எங்க லைனுக்கு அவளால் வந்து குடும்பம் பண்ண முடியாதாம். பணக்காரங்களக் கண்டா பொறாமைப்படற லொக்காலிடியாம் எங்களது. அப்பாவையும் 'மாமனார்' வீட்டுலையே வந்து இருக்கறதானா இருக்கலாங்கறார்... மூணு பேருக்கு ரெண்டு வேலைக்காரங்க இப்ப, இன்னும் ரெண்டு பேர் இருந்தா அவங்களுக்கும் வேலை குடுக்க சரியாயிருக்குமாம். தினமும் ஸ்கூட்டர் சவாரி, ஐஸ்கிரீம்பார், நிச்சயம் சினிமா, வராத புதுத்தமிழ்ப்ட பாட்டு, இவ்வளவுதான் அந்தப் பெண்ணுக்கு அன்றாட உலகம். அல்சேஷன் நாய்க்கும் தெரு நாய்க்கும் ஆன வித்தியாசம். என்னால் சகிக்க முடியலே. என்னோட 'தாய்' இமேஜ் எழவெல்லாம் சனியன் வேண்டாம், ஒரு 'பெண்'ணாவாவது இருந்திருக்கலாம். எண்ணிப் பாத்தா ஒரு பத்து பன்னெண்டு தரம் கூடியிருப்போம் - உன்னால நம்ப முடியாதுடா குணா - முத்தம் கொடுக்க அனுமதிச்சதேயில்லை. பிடிக்காமயிருக்கும் சில பேருக்கு. பரவாயில்லே. ஆனா இங்கே 'லிப்ஸ்' அழகு நடிகை மஞ்சுளாவைவிட ஒருபடி இறங்கிடக் கூடாதுங்கற லட்சியம் எச்சரிக்கை. அழகு உதடுகள். ஆனா பொய் உதடுகள். 

 
ஒத்தயா பயம். தனிமை. வினாடிக எல்லாம் சொடக்கு போடுது. என்னால முடியலே. மறுபடியும் பழைய கோளாறு மனசிலே கிளம்பிருச்சுடா குணா. அப்பாகிட்டே வந்துட்டேன். அப்பா மனம் விட்டுப் போச்சு. 'இந்தப் புத்தகமெல்லாம் படிக்காம, இதப் பிரிஞ்சு என்னாலே இருக்க முடியாதுப்பா... என்னாலே அந்த வீட்லே சமாளிக்க முடியாதுப்பா... அவங்க கெளரவத்துக்கு ஈடுகட்டிப் போக முடியாதுப்பா... எனக்கு பயமா இருக்குது... அங்கிருந்தா நான் தற்கொலை பண்ணக்குவேன்பா' ன்னு கதறினேன்டா. 'போகப் போக சரியாப் போகும். நீ எதாச்சம் வேலைக்குப் போ முதல்லே'ன்னு அக்கா அக்றையா சொன்னா...'மூடிட்டுப் போ'ன்னு அக்கா மேலே எரிஞ்சு விழுந்தேன். 'உன்னப் பாத்துட்டு வந்தா கொஞ்சம் மனசு நிம்மதிப்படும்'னு அப்பாகிட்டே சொன்னேன். மொய் வந்த பணத்திலே நூறு ரூபா தந்து அனுப்புனார்டா''. 

 
ஒரு வாரம் இருந்தான். நானும் சாமியாரிடம் போவதை நிறுத்தி விட்டிருந்தேன். கொஞ்ச நாள் நிதானமாக சும்மா இருக்கச் சொல்லி அனுப்பிவிட்டேன். 

செயலுக்கான முடிவாக எதையும் யோசித்துச் சொல்லி முடியவில்லை எனக்கு. குற்றவுணர்வு வேறு மனதின் ஒரு மூலையில். அவனோடு சேர்ந்து பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட் சாம்பலே மிச்சம். 

 
கீழே போன காசியைப் பற்றி இரண்டு மாதங்களுக்குத் தகவலே இல்லை. தன்ராஜ் எழுதித்தான் பின்னாடி விவரம் தெரிந்தது. 

 
காசி பழையபடி ஆரம்பித்துவிட்டிருக்கிறான். கண்ட கண்ட தூக்க மாத்திரைகள். பாதி நடிப்பு, மீதி பைத்தியமென குர்தாவைக் கிழித்திருக்கிறான். ஸ்கூட்டரை வேண்டுமென்றே சுவரில் இடித்தான். மாமனார் பெயரிலுள்ள ஸ்கூட்டர். அவருக்கு கோபம் வராதா? போதை மாத்திரை அடிமை என்று செருப்பால் அடிக்க வந்தார். திடீரென ஒரு நாள்'இனி நல்லபடி இருப்பேன்' என்ற திடீர்கங்கணத்தில் அந்த அழகான உதடுகளுக்கு ஐஸ்கிரீம், புதுப்படம், ஸ்கூட்டர் பவனி, பட்டுச் சேலைக்கு வாக்களிப்பு என்று பூஜை போட்டான். இரவில் கழுத்துக்கு கீழே ஒரு - ஒரு தடவை மட்டுமே - புணர்ச்சி முடித்து, மாத்திரை இல்லாமலேயே நல்ல தூக்கம். விடியும் முன்பு 5 மணிக்கே எழுந்து ஸ்கூட்டரை விரட்டிக் கொண்டு வந்து அப்¡வை எழுப்பினான். இதற்கு 'மொய்' வந்த பணத்தில் நூறு காலி. இப்படி பூஜை நான்கைந்து முறை நடந்தது. பெண் வீட்டிலேயே காசி இரண்டு வாரம் தொடர்ந்து இருந்தான். படிப்பறிவு அதிகமில்லாத அப்பாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. சிறுவன்போல கதறி அழுதார். மீண்டும் தூக்க மாத்திரைகள் விழுங்கிவிட்டான். ஆத்மார்த்தமான தற்கொலை முயற்சி. கடிதம் வேறு எழுதி வைத்துவிட்டு கட்டிலேறினான். கதவைத் தாளிட்டிருந்தான். நம்பிக்கையோடு கண் மூடினான். அடுத்த நாள் காலையில் கண் விழித்துவிட்டது. பயங்கர ஏமாற்றம். ஆத்மார்த்தத்தின் ஏமாற்றம். ஆவேசம் கட்டுப்படாமல் கையில் கவர பிளேடு எடுத்தான். தடுமாறிக் கொண்டே நடந்து போய்... 

 
ஜி.எச்.சில் இரண்டு வாரங்கள் இருந்தான் காசி. அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் முதல் வாரம். கழுத்தில் ஒரு சின்ன ஆபரே'ன். கால்மாட்டில் கேஸ் நோட்டீஸ். Personality disorder, Affection seeking phenomenon, Advised psycho therapy. 

 

 
காசியின் இன்-லேண்ட் மேஜை விரிப்பின்கீழ் சொருகிவிட்டு வெளியே வந்தேன். மேக மூட்டம். கன்னுக்குட்டியை 'பலனு'க்கு பக்கத்துத் தோட்டத்திற்குப் பிடித்துக்கொண்டு போகவேண்டிய வேலை. அம்மாவும், தங்கைகளும் அவரைக்காய் பறித்துக் கொண்டிருக்கிறார்கள். கன்றை அவிழ்த்துப் பிடித்தேன். காசியின் மீதான நினைவுகள், மூட்டம் கலையாமல் நடந்து கொண்டிருந்தது.
இலக்கியமாக எவ்வளவோ நல்ல நல்ல புத்தகங்கள் படித்தும் காசி இவ்வளவு துன்பப்பட்டான் என்பதை நினைத்தபோது காசியின் அந்தப் படிப்புமீதே எனக்கு சந்தேகமும், சற்று எரிச்சலும் உண்டாயிற்று. எதையும் சந்திப்பதற்கு முன்னாலேயே பயப்பட்டுவிடும் சுபாவம் அவனுக்குள் அடிப்டை சுபாவமாக ஓடிக் கொண்டிருந்தபோல - ரத்த ஓட்டத்தினூடே குமிழியிட்டு ஒரு அவநம்பிக்கையாக, தெரியவில்லை. 

 
திடீரென பத்திருபது நாட்கள் இரவுகளில் கண் விழித்து நிறையப் படிப்பான். காசி. அப்போதெல்லாம் நான்கு கடிதங்கள் வாரத்துக்கு எழுதிவிடுவான். கோயமுத்தூரில் ஒரு கட்டத்தில் காசிக்கு வேறொரு நல்ல நண்பனும்கூட இருந்தான். அவன் இளம் வயசு. புல்லாங்குழல், ஓவியம், இரவில் நெடுஞ்சாலையோரம் ஒரு டீக்கடை முன்பு, அரைமணிக்கொரு டீ குடித்துக்கொண்டு, விடியற்காலை நான்கு, ஐந்து மணிவரை பேசிக்கொண்டே இருந்துவிட்டுப் பிரிவார்களாம். தனக்கு கலை - இலக்கிய விஷயங்களில் நிறைய கற்றுத்தந்து, ரசனையை வளர்த்துவிட்டதில் அவனுக்குப் பெரும் பங்குண்டு என்று காசியே அவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். விளைவுகள் பற்றி அஞ்சாத காசியின் ஓட்டை வாய் பலவீனம் பல மென்மையான இதயங்களை சில தருணங்களில் பாயப்படுத்திவிடும். அப்டி காயப்படுத்திய ஒரு கெட்ட தருணத்தில் அந்த இளங்கவியின் நட்பையும் இழந்துவிட்டான். காசி. இவ்வளவு தூரம் காசி சரிந்ததற்கு, தொடராமல் போன அந்த நட்பும்கூட ஒருவகையில், காரணங்களில் ஒன்றாக எனக்கு படுகிறது. 

 
காசி முக்கால் சந்திர கிரகணத்தின்போது பிறந்தவனென்னு ஒரு தரம் சொல்லியிருக்கிறான். சில காலம் ஜோஸ்யத்தில் கூட நம்பிக்கை வைத்துப் பார்த்தான். தன் மன வழக்கப்படி அதையும் விட்டான் இடையில். அவன் வரையில் எதுவும் உறுதியில்லை என்னறே போய்க் கொண்டிருக்கிறான். தஸ்தாவாஸ்கியின் 'The House of the Head' ஐத் தமிழில் படித்துவிட்டு எனக்கு ஒரு கடிதத்தில் எழுதினான். 'ஒவ்வொரு கைதியும் சிறையிலே விருந்தாளியா இந்த இடம் வந்துவிட்டுப் போறோம்'ங்க மனப்பாங்குல தான் இருக்காங்க. அதனாலே ஐம்பது வயசுலேயும் அவன் முப்பத்தஞ்சு வயசுக்காரனாட்டமே நினைச்சுட்டு நடந்துக்கறான்-னு கதைசொல்லி பெட்ரோவிச் எழுதறான்... ஒரு விருந்தாளியா நானும் என்னை நினைச்சட்டு, இங்க காரியம் செஞ்சுட்டுப் போக முடிஞ்சா எவ்வளவு எவ்வளவு நல்லா இருக்கும்?'' 

 
ஆஸ்பத்திரிலிருந்து வந்தவன், மூன்றாவது வாரம் எனக்கொரு கடிதத்தில் எழுதினான்: வில்லியம் கால்லோஸ் வில்லியம்ஸ் படிச்சிட்டிருக்கேன். நிறைய கவிதைகள் எனக்கு பிடிச்சது. இடையிலே ஒரு தமாஷ். ஜி.எச்.சிலே குடுத்த ஒரு குறிப்புச் சீட்டு, பழைய டயரிலே இருந்தது கண்ணிலே பட்டது. 'மறுமுறை பார்க்க... கிழமை மாலை 2 மணிக்கு வரவும். இந்த சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்' னு குறிப்பு அச்சடிச்சிருந்த குட்டி Case notes சீட்டு அது. அதிலே Diagnosis ங்கற இடத்திலே பேனாவிலே பெரிசா எழுதியிருக்கு: CUTTHROAT - Psychiatric-ன்னு cut-throat ன்னா நம்பிக்கை துரோகம் இல்லையே? எவர் இருவர்க்கிடையே யாருக்கு யார் பரிசளிச்சிட்ட நம்பிக்கை துரோகம்டா அது? டாக்டருக்குள்ளே பூந்து மாமனார் எழுதீட்டார் போல... 

 

 
அந்த இன்-லேண்ட் 'ஸ்ரீராமஜெய'த்திற்கு பதிலாக காசிக்கு நான் ஒன்றுமே எழுதவில்லை. அவனிடமிருந்தும் இந்த ஒன்றரை வருடங்களாகத் தகவலே இல்லை. ஆனால் சென்ற வாரம் எனக் இனிய அதிர்ச்சி. எதிர்பாராத விதமாக பெங்களூரில் ஒரு மதுபான 'பாரில்' காசியைச் சந்தித்தேன். சற்றே இளைத்திருந்தான் காசி. நவீன மோஸ்தரில் உடையும் தலைவாரலும். கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் மெல்ல வெளுத்து வருகிறதுபோல. 

 
இருமனமொப்பிய திருமண விலக்கு (Mutual Divorce) கிடைத்து விட்டதாகச் சொன்னான். முதல் முறை விலக்கு பெற்றது போலவேத தனது அதே 'குடும்ப வக்கீல்' மூலமாகத்தான் தன் பெண்ணுக்கு இம்முறையும் அதைச் செய்ய வேண்டும் என மாஜி மாமனார் பிடிவாதம் பிடித்து இழுத்ததில் கொஞ்சம் கால தாமதமாகிக் கிடைத்தது என்றான். அந்தச் செய்தியில் சிறு அதிர்ச்சியோ, முழு சந்தோஷமோ எனக்கில்லை. ரம்மில் ஒரு குவாட்டர் குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தான். வாயில் புகைந்து கொண்டிருந்தது. 

 
ஆச்சரியமான சந்திப்புதானிது என ஆர்வம் பொங்க அவன் முன்னால் உட்கார்ந்திருந்தேன். 'அப்புறம்... என இங்க' என்றதற்கு தன் விசிடிங் கார்டாக மேல் பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்டினான். மார்க்கெட்டிங் டைரக்டர். அடேயப்பா! எனக்கு மிகுந்த சந்தோஷமாகிவிட்டது. பழையபடி இல்லாமல் எப்படியோ ஒரே தொழிலில் ஒட்டிக் கொண்டு, நட்பறுத்துக் கொள்ளாமல் கவனமாக முன்னேறி இருக்கிறான் போல. வெயிட்டரிடம் இன்னொரு டம்ளர் கேட்டான் காசி. ஒரு வேளை அபயக் கட்டையாகப் பற்றினானே 'காசு, காசு' என்று, அந்த ஸ்ரீராமஜெயம் பண்ணுகிற வேலையோ இவ்வளவும்! 

 
'எப்படி - எல்லாம்' என்றேன் உற்சாகமாக. 

 
'அது அது எப்படியோ அப்படித்தான் அது அது' என்றான் வேதாந்தி மாதிரி. மாலையில் தொடங்கியது இரவு பத்தரைவரை பேசிக் கொண்டிருந்தோம். தனது ஒன்றுவிட்ட அண்ணனிடம் வட்டிக்கு கொஞ்சம் பணம் வாங்கி முதலீடு செய்திருப்பதாகச் சொன்னான். கூட இருக்கும் நண்பரும் நல்ல மாதிரி, பொருளாதார விஷயத்தில் நிறைய ஒத்துழைக்கிறார் என்றான். இனி காசி பிழைத்து விடுவான் என்று வாய்விட்டே சொன்னேன். வாய்விட்டுச் சிரித்தான். 'நானெங்கே இங்கே' என்று என்னைக் கேட்டான். ஆயுள் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அலுவலக வேலையாக என்று நீட்டிச் சொன்னேன். சிரித்தான். 'நோ ப்ராப்ளம்' என்றான். 

 
'பாரில்' நிறைய கூட்டமிருந்தும்கூட, ஏ.சி.யானதாலோ என்னவோ அமைதி கூடி இருந்தது. எவர் உரக்கப் பேசினாலும் தாழ்ந்தே கேட்டது. கேட்கவும் சொல்லவும் நிறைய இருந்தும், இருவருக்ம் இடையில் என்னவோ சிறு தயக்கம் நின்றிருந்தது. போதையின் ஒரு முன்னேற்ற கட்டத்தில் தயக்கம் விலகிவிட்டது. ஐஸ் கேட்டான் காசி. என் டம்ளரை சீக்கிரம் காலியாக்கித் தரச் சொன்னான். சிகரெட்டைக் காட்டி எடுக்கவில்லையா என்றான். நிறுத்தியாச்சு! - எப்பாச்சும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் மட்டும் என்று, ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்தினேன். பீறிட்டுச் சிரித்ததில் ரம் பொறையேறிவிட்டது. 

 
நானும் சிரித்துக்கொண்டே கேட்டேன். 

 
''ஏண்டா காசி இப்படி சிரிக்கிறே? 

 
'நோ ப்ராப்ளம்! இல்லடா குணா.. சமீபத்தில் 'Confessions of Zeno' னு ஒரு இத்தாலி நாவல் படிச்சேன். அதில் 20 பக்கத்துக்கு ரெண்டாவது அத்தியாயம். The Last Cigarette ன்னு. சிகரெட் விடறது பத்தி. விட தீர்மானம் போட்டு முடியாம எப்படி எல்லாம் அவஸ்தைங்கறதப் பத்தியே இருபது பக்கமும்...'' 

 
நான் பழைய காசியைப் பார்த்துவிட்டேன். மேலும் சுயசரிதை பாணியில் எழுதப்பட்ட அந்த நாவலைப் பற்றியே நீண்ட நேரம் புல்லரித்துப் பேசிக் கொண்டே போனான். நாவலில் அதன் ஆசிரியர் Italo Sevevo வும் தன்னைப் போலவே 'ஈக்குஞ்சு' பற்றி கவிதை எழுதியிருப்பதையும் விவரித்து பிரம்மாண்டமாக 

சந்தோஷப்பட்டான். ஒரு வாய் அருந்திவிட்டு, நாடு மொழி இன சூழல் விவரங்கள் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அந்த ஏழு அத்தியாய நாவல் ஏகதேசம் தனது சொன்த வாழ்க்கை வரலாறு போலவே இருக்கிறது என்றான். அவசியம் அதை நான் படிக்க வேண்டும் - போய் அனுப்புகிறேன் என்றான். மேலும் விடாமல், நாவலின் அத்தியாய தலைப்புகளைக் கேள் என்று வியந்து சொன்னான்:
Introduction
The Last Cigarette
The Death of my Father
The Story of my Marriage
Wige and Mistress
A Business Partnership
Psychoanalysis 

 
இன்னொரு குட்டி பெக் வாங்கினான் காசி. நான் போதுமென்று விட்டேன். திடீரென, தான் ஒன்றும் முற்றிலும் மாறிவிட்டதாக நான் நினைத்துவிட வேண்டாமென்று சற்றே நெகிழ்ச்சியாக, லேசாக எச்சரிக்கை விடும் தொனியிலும், கண்கள் வழியாகவும் பேசினான் காசி. ஒரு சின்ன உதாரணம் பார் என்று விட்டு சொன்னான். ஆறு மாதங்களுக்கு முன் நடந்ததாம் இது : 

 
ஒய்.டபிள்யூ.சி.ஏ. விடுதியில் தங்கிக் கொண்டு, கிறிஸ்துவ மத நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கம் ஒரு பெண்கள் கல்லூரியில் வேலை பார்த்து வந்த ஒரு இளம் பெளதிகத் துணை பேராசியை, காசிக்கு ஒரு நண்பன் மூலம் இரண்டொரு சந்தர்ப்பங்களில் அறிமுகமானாள். மிக அழகான யுவதியாம். துரதிர்'டம் - ஒரு குழந்தையோடு அவள் விதவையாகி இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியாகவில்லை. தன்னை மணக்க விருப்பம் வேண்டி விடுதி முகவரிக்கு அவளுக்கு கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறான். நான்கு கடிதங்கள். கடைசி இரண்டு கடிதங்கள் ரெஜிஸ்டர்டு தபால். நான்கும் வார்டன் கையால் பிரிக்கப்பட்டது! நண்பன் காசியை தெருவில் மடக்கி ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளால் அறைந்தான்; பெண்ணின் அண்ணனிடம் இழுத்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுப் போனேன். அந்தப் பெண் மூன்று நாட்களாக அழுது கொண்டிருப்பதாக வேறு சொல்லிவிட்டுப் போனான். ஒரு மாதங் கழித்து கல்லூரி வாசலில் அவள் காலில் விழாத குறையாக வருந்தி மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்தானாம் - மன்னிப்புக் கேட்கப் போனதாலும் அந்தப் பெண்ணைப் பயமுறுத்தி நினைவு தன் உடம்புக்குள் இரத்த ஓட்டத்தில் ஒரு உடையாத குமிழியாக ஓடிக் கொண்டே இருப்பதானது காவிய சோகம் என்றான். 

 
நிமிடத்தில் காவிய சோகம் பட்டுவிடும் காசியின் மனநிலை இன்னும் - குறிப்பாக பெண்கள் விஷயத்தில் - மாறவே இல்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்த ரொமாண்டிக் பார்வை ஒரு நோய்க் கூறாகவே இன்னும் படுகிறது. அவனிடம் எனக்கு. ஆனால் வேறு நினைய விஷயங்களில் குணமாகியிருப்பது பேச்சினூடே தெரிந்தது. 'ஆசைப் பட்டதை அடைந்த பின்னாலும் ஒரு பள்ளம் மிச்சமாகி அதில் நலுங்குமே ஒரு சோகம் அதை அனுபவித்தால் தெரியும் ஆசையின் குணம் என்ன என்று' - பின்னால் பேசும்போது எதற்கோ இப்படி சொன்னான். 

 
சமீபத்தில் திருப்பதி போய் வந்தானாம். ஜாலித் துணையாக ஒரு நண்பனோடு போனவன் 'கம்பெனி ஸேக்'குக்கு தானும் மொட்டையடித்துக் கொண்டானாம். கம்பெனி ஸேக் ஆக வேறு கோவில்களுக்கும் அப்படியே போய்விட்டு, திருவண்ணாமலை வந்த போது ராம்சூரத் குமார் என்றொரு யோகியைச் சந்தித்ததாகச் சொன்னான். 'நீ கதவைத் தட்டும் விதம் சகிக்கக் கூடியதாக இல்லை' என்பதையே கோபம் தணிந்த கடைசியிலும் தனக்கான ஒரே ஆசிச் செய்தியாக அவர் வழங்கி அனுப்பியதையும் அதில் பூரண அர்த்தமிருப்பதாகவும் சொன்னான்.
நான் இன்னொரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டேன். அவன் அப்பாவைப் பற்றிக் கேட்டேன். 'நோ ப்ராப்ளம்' என்றான். அடிக்டி 'நோ ப்ராப்ளம்' என்ற வார்த்தையையே, எதற்கும் பதிலாக அவன் சொல்வதைக் கவனித்துக் கொண்டே வந்தேன். கேட்டேன், சிரித்துக் கொண்டே 'நோ ப்ராப்ளம்' என்றான். எனக்கு அந்த பதில் அருவருப்பாகவும், எரிச்சலாகவும் பட்டது. காரியங்களை காரியங்களுக்காக மட்டுமே செய்வதில் ஒரு விடுதலைஉணர்வும், பரபரப்பற்ற பேரார்வமும் இருப்பதைக் கண்டுகொண்டு விட்டதால், எந்தக் காரியமுமே தனக்குப் பேரானந்தமாக இருக்கிறது என்றான். நான் ஒரு நிமிஷம் பேசவில்லை. சொல்லும்போது அவனுக்கு நாக்கு லாவகம் கொஞ்சம் இழந்து, எழும்புவதில் சிரமப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். என் நான்கு தங்கைகளுக்கும் காரியம் செய்து முடிப்பதற்குள் பட்ட கஷ்ட அனுபவங்கள் எனக்குள் ஒற்றை எண்ணமாக, மின்னலின் ஒரு கீற்றாக உருக்கொண்டு அறைந்தது - ஈயைத் துரத்தும் பல்லியாக அது வேகமாக ஓடியதில், பல்லியின் வால் அறுந்து நினைவில் இடறி விழுந்தது. 'என்ன யோசனை' என்றான். 'நோ ப்ராப்ளம்' என்றேன். சிரித்துக் கொண்டே திடீரென்று உரக்க அவன் நூறு கொசுவர்த்திச் சுருள்களைக் கொடுத்து, இரண்டிரண்டாக ஒட்டி இருப்பதை, ஒன்று ஒன்றாக தனித்தனியாகப் பிரித்துவைக்கச் சொன்னால் என்னால் பொறுமையாகச் செய்ய முடியுமா என்று கேட்டான். மறு நிமிஷமும் நான் பேசாதிருந்தேன். முகம் தொட்டு 'என்ன'? என்றான். கூலி எவ்வளவு என்றேன். எழுந்து என் முன் மண்டையிலடித்துச் சிரித்தா. ஓயவில்லை. இருட்டிவிட்டது வெளியே. ஏ.சி.யிலும் நன்றாக வியர்த்துவிட்டது காசிக்கு. 

 
வயதான கிழப் பிச்சைக்காரர்களைத் தெருவில் பார்த்தால், மனதின் ஆழத்தில் அவர்களைத் தன் அப்பாவோடு ஒரு கோணத்தில் ஒப்பிட்டுக் கொண்டு, குற்றவுணர்ச்சி - சுய இரக்கம் - இயலாமை - பயம் எல்லாம் கலக் அவசரக் கருணையாக செயல்பட்ட நாட்கள் மாதிரி இப்போது இல்லை. அவர்களை அவர்களாகவே பார்த்து அவர்களுக்காகப் பார்க்க முடிகிறதென்றும், அவர்களைப் போன்ற இன்னும் பலரின் ஸ்திதியை மாற்றிவிட சமூகதளத்தில் காரியமாற்ற முனைந்திருக்கும் சில நல்ல மனக்ளுடனும் தான் பழகிக் கொண்டிருப்பதாகச் சொன்னான். 'மனமாக' இதை சுருக்கி விடுவதை அவர்களே ஒத்துக கொள்ள மாட்டார்களெனினும் தன் மனதில் பட்டது இவ்வளவுதான் என்று எனக்கு புரியாமல் ஏதோ சொல்லிக் கொண்டு போனான். மேலும் எனக்கு இமைகளில் கனம் சுருட்டி உணர்ந்தேன். வெளியில் போனால் நன்றாக இருக்கும் என்று பட்டது. காசி மேலும் ஒரு சிகரெட்டை, புது பாக்கெட் கிழித்து எடுத்தான். 

 
ஆனாலும், தனக்கு கல்யாண ஆசை இம்சிக்கிறது இன்னும் என்றான் திடீரென்று. தனிமை, துவைத்தல், ஹோட்டல் இவைகளையும் திருமணத்திற்கான சாக்குகளில் ஒன்றாக வைத்து யோசிப்பதில் தவறுண்டா என்று என்னிடம் ஒரு சிறுவன்போல கேட்டான். பைத்தியக்காரன்! பெய்த பெருமழைவிட்ட சில மாலை நேரங்களாக, சில நாட்கள் கழிவதிலிருந்து, தன் வாழ்க்கைக்கு ஊட்டம் சேகரித்துக் கொள்வதாகக் கூறினான். சில சமயம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸில் தொலைதூரம் உட்கார்ந்துகொண்டு போகும்போது, பஸ்ஸின் ரீதி கூட்டும் ஓட்ட வேகத்தின் சங்கீதச் சரடில் இணைந்துவிடும் போது வாழ்க்கையை ஒரு அற்புதப் பரிசாக உணர்வதாகவும் சொன்னான். எனக்கும் கேட்க உற்சாகமாகிவிட்டது. பேச்சை நிறுத்திவிட்டு ஃபிரைடு ரைஸ் சாப்பிடுவோமா என்று ஆர்வமாகக் கேட்டான். எனக்கு அவன் கேட்டவிதம் மிகவும் பிடித்திருந்தது, எனக்கு ஃபிரைடு ரைஸ் பிடிக்காவிட்டாலும். எவ்வளவோ தான் நிதானப் பட்டிருந்தாலும் சில சமயம் எல்லாம் கொட்டிவிடுகிறது என்றான். தனியறையில் பின்னிரவில் மோனத்தில் தனக்கு பிடித்த கவிஞனைப் படித்துக் கொண்டிருக்கும் போது, வாசலில் கட்டிலிலிருந்து அப்பா அவருக்கான ஏதோ ஒரு தொனி சேர்த்து உரத்து கொட்டாவி விட்டால் தாங்க முடியவில்லை. எழுந்து போய் அந்த வாயை அடைத்து அமுக்கிவிடலாம் போலிருக்கிறது. ஒரு கொட்டாவி அந்த மாதிரி வந்தால் போதும், அந்தப் பின்னிரவே தனக்கு பாழ் என்றும் சொன்னபோது சற்றே சோர்வாகிவிட்டான். அப்பா இறந்து விட்ட பின்பும் தான் வாழ்க்கையைத் தொடரலாம் என்பதற்கான நம்பிக்கை மெல்லவே கூடிவருகிறது என்றான். அடிப்படை சுபாவமாகவே 'சுயம் நசித்து' விட்ட நான்கைந்து நண்பர்கள், எழுத்து, படிப்பு இதெல்லாம் மட்டுந்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்றான். என்ன இன்னும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறாய்தானே? என்று கேட்டுவிட்டு கடைசி 'சிப்'பையும் முடித்தான். சிகரெட் பொருத்திக் கொண்டான். 

 
திடீரென தான் சமீபத்தில் கண்ட கனவுகளைப் பற்றி பேச்சை மடை மாற்றிக் கொண்டான். அழகான கண்ணாடிக் கிண்ணத்தில் மிதந்த மிளகாய் நீரை சில்வர் கரண்டியால் கலக்கிக் கொண்டே பேசினான். முன்னைப் போல கனவுகள் வந்தாலும், நோ-ப்ராப்ளம் என்றான். ரமணரின் பரவச முகம் ஒருமுறை வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை பாம்பு கடித்து ரத்தம் வந்ததென்றான். ஒரு தடவை கனவில் கால் பெருவிரலை பாம்பு கடித்து ரத்தம் வந்துவிட்டதாம். பாடையில் வைத்து ஒரு கனவில் தன்னைக் கண்டானாம். தீவிரவாதியாக போலீஸாரால் துரத்தப்பட்டு ஒரு கனவில் ஓடினானாம். ஓரிரவு நெடுஞ்சுவர் தாண்டி, மலைகள் தாண்டி, விண்ணில் பறந்து போவது மாதிரி, கைகளால் பேரானந்தமாகக் கடைந்து கடைந்து பறந்துகொண்டே இருந்தானாம். இந்த ஒரு கனவு மட்டும் மீண்டும் வராதா என்று ஏக்கப்படுவதாகச் சொன்னவன், அடிக்கடி திரும்பத் திரும்ப வரும் எரிச்சலூட்டும் ஒரு கனவென, பரீட்சைக்குப் படிக்காமலேயே போய்விட்டு ஹாலில் திணறுவதைச் சொன்னான்.
கனவுகளை நான்கு நாட்களுக்குக் கவனித்து, விடிந்ததும் ஒரு குயர் ரூல்டு நோட்டில் எழுதி வைக்க ஆரம்பித்தால், ஐந்தாம் நாள் வராதென்றான். தொடர்ந்து கவனித்துக் கொண்டே வந்தால் கனவு புறமுதுகு எடுக்கும் என்றான். மீறி, நிச்சயம் வராதா என்றால் பெருவாழ்வின் பல புதிரிகளுக்கும் போல இதற்கும் நிச்சயமாகச் சொல்ல முடியாதுதானே என்று கேட்டான். 

 
கத்தி, கபடாக்ள், முள் கரண்டி அலங்காரமாக சூடு பறக்க மேஜைக்கு வந்தன ஃபிரைடு ரைஸ் தட்டுகள். அநேகமாக என் பங்கில் பாதிக்கும் மேல் காசிதான் சாப்பிட வேண்டியிருக்கும்.


Nov 21, 2009

மதினிமார்கள் கதை-கோணங்கி

.கோணங்கி  'மதினிமார்கள் கதை' சிறுகதைத் தொகுப்பிலிருந்து

உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா.
சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி.
இவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள். பிரியத்துக்குரியவர்களையெல்லாம் திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்கே அவர்களை?
Konangi அவன் வந்த ரயில் இன்னும் புகை விட்டபடி புறப்படத் தயாராய் - ஜன்னலோரம் போய் நின்று பூக்கொடுக்கிற, நஞ்சி நறுங்கிப் போன ஆவுடத்தங்க மதினியைப் பார்த்தான். கூடை நிறையப் பூப்பந்தங்களோடு வந்திருந்தாள். பூ வாடாமலிருக்க ஈரத்துணியால் சுற்றியிருந்தாள் அதை.
நம்மூரிலிருந்து கொண்டுவந்த சிரிப்பு இன்னும் மாறாமலிருந்தது அவளிடம். ஒவ்வொரு தாய்மாரிடமும் முழம் போட்டு அளந்து கொடுக்கிறாள். கழுத்தில் தொங்கும் தாலிக்கயறும், நெற்றியில் வேர்வையோடு கரைந்து வடியும் கலங்கிய நிலா வட்டப் பொட்டுமாக அவளைப் பார்த்தான். தானே அசைகிற ஈர உதட்டில் இன்னும் உயிர் வாடாமல் நின்றது.
கண்ணுக்கடியில் விளிம்புகளில் தோல் கறுத்து இத்தனைக் காலம் பிரிவை உணர்த்தியது. வருத்தமுற்று ஏங்கிப் பெருமூச்சு விட்டான். அவளை எப்படியாவது கண்டு பேசி விட நினைத்தான். அதற்குள் இவனைத் தள்ளிக் கொண்டுபோன கூட்டத்தோடு வாசல்வரை வந்து; திரும்பவும் எதிர்நீச்சல் போட்டு முண்டித் தள்ளி உள்ளே வருமுன் விடைபெற்றுச் செல்லும் ரயிலுக்குள் இருந்தாள். பெரிய ஊதலோடு போய்க் கொண்டிருந்தது ரயில்.
மூடிக் கிடந்த ஞாபகத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டித் திறந்து விட்ட ஆவுடத்தங்க மதினி மீண்டும் கண்ணெதிரில் நின்றாள். அதே உதடசையாச் சிரிப்புடன், பழையதெல்லாம் ஒவ்வொன்றாய்ப் புது ஒளியுடன் கண்ணெதிரே தோன்றியது. ஆச்சரியத்தால் தோள்பட்டைகளை உலுக்கிக் கொண்டு நடந்தான்.
பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த தகர டப்பா பஸ்ஸைப் பார்த்தான். 'நென்மேனி மேட்டுப்பட்டி' க்கு என்று எழுதியிருந்த போர்டைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டு சந்தோஷப்பட்டான். இப்போது சொந்த ஊருக்கே பஸ் போகும்.
பஸ்ஸில் ஏறிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கையெடுத்து வணக்கம் சொல்லணும் போல இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறியிருக்கிறார்களா என்று கழுத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். தெரிந்த முகமே இல்லாமல் எல்லாமே வேத்து முகங்கள். எல்லாரும் இடைவெளியில் இறங்கி விடக் கூடியவர்களாக இருக்கும்.
பஸ் புறப்பட்டது. ஒரே சீரானச் சத்தத்துடன் குலுங்கா நடையுடன் நகர்ந்து கொண்டிருந்தது பஸ். மதிப்பு மிகுந்தவற்றை எல்லாம் நினைவுப்படுத்திக் கொள்ளும் இசையென சத்தம் வரும். காற்று கூட சொந்தமானதாய் வீசும், சட்டையின் மேல் பட்டன்களை எல்லாம் கழட்டி விடவும் பனியனில்லாத உடம்புக்குள் புகுந்து அணைத்துக்கொண்ட காற்றோடு கிசுகிசுத்தான். ஜன்னலுக்கு வெளியில் பஜாரில் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று முழித்து முழித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். திரும்பவும் ரயில்பாதை வந்தது. வெறுமனே ஆளற்றுக் கிடந்த ஸ்டேஷனில் சிமெண்டு போட்ட ஆசனங்கள் பரிதாபத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தன. ரயில்வே கேட்டைக் கடந்து வண்டி மேற்காகத் திரும்பி சாத்தூரின் கடைசி எல்லையில் நின்றது. அங்கொரு வீட்டில் யாரோ செத்துப் போனதற்காகக் கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் இங்கிருந்து அழுது கொண்டே படியிறங்கிப் போகவும் பஸ் அரண்டு போய் நின்றது.
செத்த வீட்டு மேளக்காரர்கள் மாறி மாறித் தட்டும் ரண்டாங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக் குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது. அந்த இசைஞர்கள் ஒட்டுமொத்த துக்கத்தின் சாரத்தைப் பிழிந்து கொண்டிருப்பதாய் உணர்ந்தான். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் அடிவயிற்றிலிருந்து எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல், போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது.
என்றோ செத்துப்போன பாட்டியின் கடைசி யாத்திரை நாள் நினைவுக்கு வந்தது. மயானக்கரையில் தன் மீசை கிருதாவை இழந்த தோற்றத்தில் மொட்டைத் தலையுடன் இவனது அய்யா வந்து நின்றார்.
இவனைப் பெத்த அம்மாவைப் பிரசவத்துடன் வந்த ஜன்னி கொண்டுபோய் விட்டதும் நாலாவதாகப் பிறந்த பிள்ளை நிலைக்க வேண்டும் என்பதற்காக இவன் மூக்கில் மந்திரித்துப் போடப்பட்டிருந்த செம்புக் கம்பிதான் மூக்கோரத்தில் இருந்துகொண்டு 'எம்மா.... எம்மா.......' என்றது. அம்மா இல்லாவிட்டாலும் தெக்குத் தெரு இருந்தது. மேலெழும்பும் புழுதி கிடந்தது அங்கு. புழுதி மடியில் புரண்டு விளையாட, ஓடிப் பிடிக்க, ஏசிப்பேசி மல்லுக்கு நிற்க, தெக்குத் தெரு இருக்கும். எல்லாத்துக்கும் மேலாக இவன் மேல் உசுரையும் பாசத்தையும் சுரந்து கொண்டிருக்க மதினிமார் இருந்தார்களே. வீட்டுக்கு வீடு வாசல்படியில் நின்றுகொண்டு இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் சமைஞ்ச குமரெல்லாம் 'செம்புகோம்.... செம்புகோம்....' என்று மூச்சுவிட்டுக் கொண்டார்களே!
பல ஜாதிக்காரர்களும் நிறைந்த தெக்குத் தெருவில் அன்னியோன்யமாக இருந்தவர்களை எல்லாம் நினைவு கூர்ந்தான்.
தனிக்கட்டையான தன் அய்யா கிட்ணத்தேவர் திரும்பவும் மீசை முளைத்துக் கிருதாவுடன் இவன் முன் தோன்றினார்.
'அடேய் .... செம்புகோம் ..... ஏலேய்.....' என்று ஊர் வாசலில் நின்று கூப்பிடும்போது இவன் 'ஓய் ... ஓய் ....' என்ற பதில் குரல் கொடுத்தபடி கம்மாய்க்கு அடியில் விளிம்போரம் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தான். தூண்டிலை எடுத்து அலையின் மேல் போடுவான். மீனிருக்கும் இடமறிந்து மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே அத்தம்வரை போவான்.
பண்டார வீட்டு மதினிமார்களெல்லாம் மஞ்ச மசால் அரைத்து வைத்து ரெடியாகக் காத்திருப்பார்கள். 'கொழுந்தன் வருகிறாரா ....' என்று அடிக்கொருதரம் குட்டக்கத்திரிக்கா மதினியைத் தூதனுப்பித் தகவல் கேட்டுக் கொள்வார்கள். தண்ணிக்குள் நீந்தித் திரியும் மீனாக இவன் தெருவெல்லாம் சமைஞ்சு நிற்கும் மதினிமார் பிரியத்தில் நீந்திச் சென்றான். ஒரு மீனைக் கண்டதுபோல எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.
கீகாட்டுக்கறுப்பாய் 'கரேர் ....' ரென்ற கறுப்பு ஒட்டிக் கொள்ள 'அய்யோ ... மயினீ ..... கிட்ட வராதே...... வராதே .....' என்று சுப்பு மதினியை விட்டுத் தப்பி ஓடினான். பனையேறி நாடார் வீட்டு சுப்பு மதினிக்கும், பொஷ்பத்துக்கும் இவன் மேல் கொள்ளைப் பிரியம். 'நாங்க ரெண்டு பேருமே செம்புகத்தையே கட்டிக் கிடப் போறோம் ......' என்று ஒத்தைக் காலில் நின்று முரண்டு பண்ணுவதைப் பார்த்து இவன், நிசத்துக்கே அழுதபடி, 'மாட்டேம்.... மாட்டேம்..... மாட்டம் போ.' என்று தூக்கி எறிந்து பேசினான். உடனே அவர்கள் ஜோடிக் குரலில் 'கலகலகல ....' வெனச் சிரித்து விடவும் ஓட்டமாய் ஓடி மறைவான் செம்பகம்.
குச்சியாய் வளர்ந்திருக்கும் சுப்பு மதினியும், ரெட்டச் சடைப் பொஷ்பமும் ஒவ்வோர் அந்தியிலும் பனங்கிழங்கு, நொங்கு, தவுண், பனம்பழம் என்று பனையிலிருந்து பிறக்கிற பண்டங்களோடு காத்திருப்பார்கள். இவனுக்காக, இவனைக் காணாவிட்டால் கொட்டானில் எடுத்துக் கொண்டு தேட ஆரம்பித்து விடுவாள் ரெட்டச்சடை புஷ்பம்.
பனையேறிச் சேருமுக நாடார் வீட்டுக்குக் கள்ளுக் குடிக்கப் போகும் அய்யாவுக்கும் ரெட்டச்சடைக்கும் ஏழாம்பொருத்தமாய் என்னேரமும் சண்டதான். அவளை மண்டையில் கொட்டவும், சடையைப் பிடித்து இழுக்கவும் "இந்த வயசிலும் கிட்ணத்தேவருக்க நட்டனை போகலே...." என்று சேருமுக நாடார் சிரித்துக் கொள்வார். 'ஓய்.....மருமோனே' என்ற கீகாட்டுப் பேச்சில் 'தாப்பனும் மோனும் பனையேறிமோளை கொண்டு போயிருவீயளோ. சோத்துக்கு எங்க போட்டும் நா ... மடத்துக்கு போயிறவா' என்று கள்ளு நுரை மீசையில் தெறிக்கப் பேசுவார் நாடாரு. இதைக் கேட்ட அய்யாவுக்குக் 'கெக்கெக்கே ...' என்று சிரிப்பு வரும் வெகுளியாய்.
ஊர் ஊருக்குக் கிணறு வெட்டப்போகும் இவன் அய்யாவும், தெக்குத் தெரு எளவட்டங்களும் கோழி கூப்பிடவே மம்பட்டி, சம்பட்டி, கடப்பாறை, ஆப்புகளோடு போய்விடுவார்கள். சுத்துப்பட்டி சம்சாரிமார்கள், கிட்ணத்தேவன் தோண்டிக் கொடுத்த கிணத்துத் தண்ணீரில் பயிர் வளர்த்தார்கள்.
அய்யா கிணத்து வேலைக்குப் போகவும் தெருத் தெருவாய் சட்டிப் பானைகளை உருட்டித் தின்பதற்கு ஊரின் செல்லப் பிள்ளையாய் மதினிமார் இவனைத் தத்தெடுத்திருந்தார்கள். இவனுக்கு 'ஓசிக்கஞ்சீ ....' 'சட்டிப் பானை உருட்டீ....' 'புது மாப்ளே ...' என்ற பட்டங்களுண்டு. ராத்திரி நேரங்களில் எடுக்கிற நடுச்சாமப் பசிக்கு யார் வீட்டிலும் கூசாமல் நுழையும் அடுப்படிப் பூனையாகி விடுவான். இவன் டவுசர், சட்டை, மொளங்கால் முட்டில் அடுப்புக்கரி ஒட்டியிருக்கும்.
தெருமடத்தில் குடியிருக்கும் மாடசாமித் தேவரோடு சரிசமமாய் இருந்து வெத்தலை போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் 'புரிச்சு ... புரிச் ...' என்று துப்பிக் கொண்டே போய்ப் பண்டார வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வான்.
'மாப்ளைச் சோறு போடுங்கத்தா .... தாய்மாருகளா.....' என்றதும் கம்மங் கஞ்சியைக் கரைத்து வைத்து 'சாப்பிட வாங்க மாப்பிளே ....' என்று சுட்ட கருவாட்டுடன் முன் வைப்பார்கள்.
நாளைக்குக் கல்யாணமாகிப் போற காளியம்மா மதினி கூட வளையல் குலுங்க இவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஏச்சங்காட்டுவாள். இந்தக் காளியம்மா மதினிக்குச் சிறுசில் இவனைத் தூக்கி வளர்த்த பெருமைக்காக இவன் குண்டிச் சிரங்கெல்லாம் அவள் இடுப்புக்குப் பரவி அவளும் சிரங்கு பத்தியாய் தண்ணிக்குடம் பிடிக்க முடியாமல் இடுப்பைக் கோணிக்கோணி நடந்து போனாள். இப்போதும் சிரங்குத் தடம் அவள் இடுப்பில் இருக்கும்.
'செம்புகோம்.... செம்புகோம்.. செம்புக மச்சானுக்கு வாக்கப்படப் போறேன் ... பாரேன்.....' என்று முகத்துக்கு நேராக 'பளீ' ரென்ற வெத்தலைக் காவிப் பல் சிரிக்கக் காளியம்மா மதினியின் சின்னையா மகள் குட்டக் கத்திரிக்கா திங்கு திங்கென்று குதித்துக்கொண்டே கூத்துக் காட்டுவாள்.
'அட போட்டீ... குட்டச்சீ' என்று முணுமுணுத்தபடி இவன் மூக்குக்கு மேலே கோபம் வரும். அவள் உடனே அழுது விடுவாள். 'மயினி ..... மயினி..... அழுவாத மயினீ ......' 'உம் ...' மென்று முகங்கோணி நிற்கும் குட்டக்கத்திரிக்காவைச் சமாதானப்படுத்த கடைசியில் இவன் கிச்சனங்காட்டவும்தான் அவள் உதட்டிலிருந்து முத்து உதிரும், சிரிப்பு வரும்.
வாணியச் செட்டியார் வீட்டு அமராவதி மதினி அரச்ச மஞ்சளாய்க் கண்ணுக்குக் குளிர்ச்சியான தோற்றத்துடன் பண்டார வீட்டுத் திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதுமே கூனிக் குறுகி வெட்கப்பட்டுப்போய் குருவு மதினி முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சிரிப்பான் செம்பகம். மேட்டுப்பட்டி நந்தவனத்தில் பூக்கிற ஒவ்வொரு பூவும் அமராவதி மதினி மாதிரி அழகானது.
தாவாரத்தில் இருந்து கொண்டே என்னேரமும் பூக்கட்டும் குருவு மதினி, அமராவதிக்கென்றே தனீப்பின்னல் போட்டு முடிந்து வைத்திருக்கும் பூப்பந்தை விலையில்லாமலே கொடுத்து விடுவாள். குருவு மதினிக்கும், அமராவதி மதினிக்கும் கொழுந்தப் புள்ளை மேல் தீராத அக்கறை.அவன் குளித்தானா சாப்பிட்டானா என்பதிலெல்லாம். ஊத்தைப் பல்லோடு தீவனம் தின்றால் காதைப் பிடித்துத் திருகி விடுவாள் அமராவதி மதினி. கண்டிப்பான இவளது அன்புக்குப் பணிந்த பிள்ளையாய் நடந்துகொண்டான் செம்பகம்.
இவனது எல்லாச் சேட்டைகளையும் மன்னித்து விட குருவு மதினியால்தான் முடியும். எளிய பண்டார மகளின் நேசத்தில் இவன் உயிரையே வைத்திருந்தான். சுத்துப்பட்டிக்கெல்லாம் அவளோடு பூ விக்கப் போனான். காடுகளெங்கும் செல்லங்கொஞ்சிப் பேசிக் கொண்டார்கள் இருவரும். இவன் வெறும் வீட்டு செல்லப் பிள்ளையானான்.
குருவு மதினியின் அய்யாவுக்குக் காசம் வந்து வீட்டுக்குள்ளேயே இருமிக்கொண்டு கிடந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் ஆசாரிப் பள்ளத்தில் சேர்ப்பதற்காக ராப்பகலாய்ப் பூக்கட்டினாள். அவளுக்கு நார் கிழித்துக் கொடுத்து ஒவ்வொரு பூவாய் எடுத்துக் கொடுக்க; அவள் சேர்ப்பதை, விரல்கள் மந்திரமாய்ப் பின்னுவதைப் பார்த்துக் கொண்டே பசிக்கும்வரை காத்திருப்பான். பசித்ததும் மூஞ்சியைக் குராவிக் கொண்டு கொறச்சாலம் போடுவான்.
'இந்தா வந்துட்டன் இந்தா வந்துட்டன்' என்று எழுந்து வந்து பரிமாறுவாள் குருவு மதினி.
சீக்காளி அய்யாவைக் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நாள் வந்ததும் இவனையும் ஆசாரிப் பள்ளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள். 'வரும்போது ரெண்டு பேரும் பொண்ணு மாப்ளையா வாங்க....! ' என்று எல்லாரும் கேலி பண்ணிச் சிரித்து அனுப்பினார்கள். மலையாளத்துக்குக் கிட்டெயே இருக்கும் அந்த ஊரில் நாலு மாசம் மதினியோடு இருந்தான். அப்பவெல்லாம் இவள் காட்டிய நம்பவே முடியாத பாசத்தால் இவன் ஒருச்சாண் வளர்ந்து கூட விட்டான். சுகமாகி வரும்போது அய்யாவுக்கு வேட்டியும் இவனுக்குக் கட்டம் போட்ட சட்டையும், ஊதா டவுசரும் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வந்தாள். குருவு மதினிக்கு எத்தனையோ வயசான பின்னும் கல்யாணம் நடக்கவில்லை. குருவு மதினிக்குக் கல்யாணமானால் ஊரைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கும். 'மயினி .... மயினி .....நீ வாக்கப்பட்டுப் போயிருவியா ..... மயினீ ....' என்பான் .' என் ராசா செம்புகத்தைக் கெட்டிக்கிடத்தான் ஆண்டவன் எழுதியிருக்கான் புள்ளே ....! ' என்றாள்.மெய்யாகவே அவள் சொல்லை மனசில் இருத்தி வைத்துக் கொண்டான் செம்பகம்.
கீ காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ராசாத்தி அத்தையும் அவளது ஆறு பொட்டப் பிள்ளைகளும் எப்போது பார்த்தாலும் பூந்தோட்டத்தில் அக்கறையாய்ப் பூவெடுத்துக் கொண்டு வந்து கொட்டானுக்கு ஆழாக்கு தானியத்தைக் கூலியாக வாங்கிக் கொண்டு போனார்கள். ராசாத்தி அத்தைக்கும், நாடார் வீட்டு மதினிமார்களுக்கும் குருவு மதினியோடு பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது. தங்கள் கீகாட்டு ஊரைப் பற்றியும் அங்கு விட்டு வந்த பனைகளைப் பற்றியும் ஆந்திராவுக்குக் கரண்டு வேலைக்குப் போய்விட்ட ராசாத்தி அத்தைவீட்டு மாமாவைப் பற்றியும் சொல்லச் சொல்ல இவனும் சேர்ந்து 'ஊம்....' கொட்டினான்.
இவன் அய்யாவுக்குக் கலயத்தில் கஞ்சி கொண்டு போன மாணிக்க மதினியின் அழுகுரல் கேட்டு எல்லாரும் ஓடினார்கள்.
கிணத்து வெட்டில் கல் விழுந்து அரைகுறை உயிரோடு கொண்டு வரப்பட்ட அய்யா அலறியது நினைவில் எழவும் திடுக்கிட வைத்தது இவனை.
வெளியில் கிடக்கும் ஆளற்ற வெறுங்கிணறுகள் தூர நகர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு கிணத்து மேட்டிலும் இவன் அய்யா நிற்பதைக் கண்டான். திரும்பவும் எழுந்து நடமாட முடியாமல் நாட்டு வைத்தியத்துக்கும் பச்சிலைக்கும் ஆறாத இடி, இவன் நெஞ்சில் விழ, கடைசி நேரத்தில் சாத்தூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நாளில் அனாதையாகச் செத்துப் போனார் அய்யா. பஸ்ஸில் நீண்டிருந்த ஜன்னல் கம்பியில் கன்னத்தைச் சாய்த்துத் தேய்த்துக் கொண்டு கலங்கினான்.
அன்று சாத்தூரில் ரயிலேறியதுதான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று புறப்படும்போது மதினிமார்கள் கூப்பிடுகிற சத்தம் போடும் ரயில்.
அய்யாவின் நினைவு பின்தொடர சாத்தூர் எல்லையில் கேட்ட உருமியின் ஊமைக்குரல் திரும்பவும் நெஞ்சிலிறங்கி விம்மியது.
சூழ்ந்திருந்த காடுகளும், பனைமரங்களும் உருண்டு செல்ல பஸ்ஸிற்கு முன்னால் கிடக்கும் தார் ரோடு வேகமாய்ப் பின்வாங்கி ஓடியது. ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்தான். ஒரு சொட்டு மேகங்கூட இல்லாத வானம் நீலமாய்ப் பரந்து கிடந்தது. ரோட்டோர மரங்களில் நம்பர் மாறி மாறிச் சுற்றியது. ஆத்துப் பாலத்தின் தூண்கள் வெள்ளையடிக்கப்பட்டு மாட்டுக்காரர்களால் கரிக்கோடுகளும், சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. தண்ணீரில்லாத ஆத்தில் தாகமெடுத்தவர்கள் ஊத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
பாலம் கடந்து மேட்டில் ஏறியதும் ஊர், தெரிந்துவிட்டது. உள்ளே நெஞ்சு 'திக்கு... திக்....' கென்று அடித்துக்கொள்ள ஊரை நெருங்கிக் கொண்டிருந்தான் செம்பகம். தூரத்தில் தெரியும் காளியங்கோயிலும் பள்ளிக்கூடத்துக் கோட்டச்சுவரும் இவனை அழைப்பது போலிருந்தது.
எல்லா மதினிமார்களுக்கும் கண்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறான். மதினிமாரெல்லாம் இருக்கும் தெக்குத் தெருவை நெருங்க இருந்தான் செம்பகம். மனசு பறந்து கொண்டிருந்தது. எல்லாரையும் ஒரே சமயத்தில் பார்த்து ஆச்சரியப்பட இருந்தான். சீக்கிரமே ஊர் வந்து விடப்போகிறது. எல்லா மதினிமார்களையும் தானே கட்டிக்கொண்டு வாழவேண்டும். 'காளியாத்தா அப்படி வரங்குடுதாயே....' என்று முன்பு கேட்ட வரத்தை நினைத்துக்கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸிற்கும் சந்தோஷம் வந்து துள்ளிக் குதித்தது. மனசு விட்டுப் பாடினான். 'ம்... ம்... ம்.... ம் ம் ம்வும்.....' மென்ற ஊமைச்சங்கீதமாய் முனங்கிக் கொண்டு வந்தான் செம்பகம். பருத்திக் காட்டில் சுளை வெடிக்காமல் நிலம் வெடித்துப் பாளம் பாளமாய் விரிசலாகிக் கிடக்கும். வாதலக்கரை சித்தையாத் தேவனுக்கு வாழ்க்கைப் பட்டுப்போன மாணிக்க மதினி இருந்தால் காடே வெடித்திருக்காது. இப்படி ஈயத்தைக் காய்ச்சும் வெயிலும் அடிக்காது. மாணிக்க மதினியோடு எல்லா மதினிமார்களும் பருத்திக் காட்டில் மடிப்பருத்தியுடன் நின்ற கோலமாய் கண்முன் தோன்றும். இருக்கிற ஒரு குறுக்கத்திலும் எத்தனை வகை தானியங்களுக்கு இடம் வைத்திருந்தாள். அவள் மனசே காடாகும் போது தட்டா நெத்துக்கும் பாசிப்பிதம் பயறுக்கும் நாலு கடலைச் செடிக்கும் பத்துச்செடி எள்ளுக்கும் இடமிருந்தது. காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்தது அவளுக்கு. காட்டு வெள்ளாமையும் அவளோடு போயிற்று.
கண்ணெட்டும் தூரம்வரை நிலம் வறண்டு ஈரமற்றுக் கிடக்கும் தரிசு நிலங்களில் வேலிக்கருவை தோண்டிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் மூக்குடன் கூடிய விறகு லாரிகளில் அடையாளம் தெரியாதவர்கள் பாரம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மந்தைத் தோட்டத்தில் கிணத்தை எட்டிப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் கமலைக்கல்லும், தோட்ட நிலமும் நீண்டகால உறக்கத்திலிருந்து மீளாமல் இன்னும் இறுகிக்கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி நின்ற பஸ் இவனை இறக்கிவிட்டுச் சென்றது.
தெக்குத்தெரு வாசலில் படம்போட்ட தோல்பையுடன் நின்றான். குப்புற விழுந்து கிடக்கும் தெக்குமடத்தில் ஒருகல்தூண் மட்டும் தனியாய் நிற்க அதன்மேல் உட்கார்ந்திருந்த காக்கா இவனைப் பார்த்துக் கரைந்துகொண்டு ஊருக்கு மேல் பறந்து சென்றது.
தெருவை வெறிக்கப் பார்த்துக்கொண்டே நடந்தான். தெருப் புழுதியே மாறிப் போய் குண்டும் குழியுமாய் சீரற்று நீண்டு கிடந்தது தெரு. இவன் பண்டார வீடுகளிருந்த இடத்துக்கு வந்து நின்றான். இருண்ட பாகமான வீடுகளாய் இற்று உதிர்ந்து கொண்டு வரும் கூரை முகட்டிலிருந்து மனதை வதைத்தெடுக்கும் ஓலம் கேட்டது. மனதைப் புரட்டிப் புரட்டிக் கொண்டுபோய் படுகுழியைப் பார்த்துத் தள்ளிவிட்டுச் சிரிக்கிற ஓலமாய்க் கூரைகளில் சத்தம் வரும். தெருவே மாறிப்போய் - குறுனையளவுகூட இவன் பார்த்த தெருவாயில்லை. தெருவே காலியாகிவிட்டது. தெருத் தெருவாகத் தேடினான். முன்பு கண்ட அடையாளம் ஏதாவது தட்டுப்படுமா? - என்று பார்த்தான். எவ்வளவோ மூடிவிட்டது. புதிய தராதரங்கள் ஏற்பட்டு, இவனைச் சுற்றி வேடிக்கை பார்க்கவந்த கூட்டத்துக்குள் இவன் இருந்தான். சிறுவர்களும் பெரியவர்களும் இவனைப் பார்த்து சலசலத்துக் கொண்டார்கள். 'என்ன வேணும்' மென்ற சைகையால் இவனை அந்நியமாக்கினார்கள்.
இவன் ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல எல்லாரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். இன்னும் கூட்டம் இவனைச் சுற்றி வட்டமாக நின்றது.
வந்தவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். கூட்டங்கூடி நேரத்தை வீணாக்காமல் பெண்களெல்லாம் தீப்பெட்டி ஒட்டப் போய்விட்டார்கள். குழந்தைகள் 'ஹைய்ய்ய்....' என்ற இரைச்சல் போட்டுக்கொண்டு தீப்பெட்டி ஆபிஸ் பஸ் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு வெட்டிப் பேச்சே பிடிக்காது. காட்டில் வெட்டிப் போட்டிருந்த வேலிக்கருவையைக் கட்டித் தூக்கி வர கயறு தேடப்போனார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான்.
எல்லாம் தலைக்குமேல் ஏறி சுமையாய் அழுத்த குறுக்கொடிந்துபோய், ரொம்ப காலமாய் ஆட்டுப்படாமல் கிடந்த மதினி வீட்டு ஆட்டுரலில் உட்கார்ந்தான். தலையில் கைவைத்தபடி மூஞ்சியில் வேர்த்து வடியத் தரையை வெறிக்கப் பார்த்தான். மூஞ்சியில் வழியும் அசடைப் புறங்கையில் துடைத்துக் கொண்டான்.
'கொழுந்தனாரே.... எய்யா.... கப்பலைக் கவித்திட்டீரா.....கன்னத்தில் கை வைக்காதிரும்.... செல்லக் கொழுந்தனாரே....எய்யா....' என்று எல்லா மதினிமார்களும் கூடிவந்து எக்கண்டம் பேச, அவர்கள் மத்தியில் இருக்க வேண்டியவன், இப்படி மூச்சுத் திணறிப் போய் ஆட்டுரலில் உட்கார்ந்திருக்கும்படி ஆனது.
நாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - பேரிரைச்சலுக்குள் அடையாளந்தெரியாத நபராகி - அவசர அவசரமாய்ப் போய்க்கொண்டிருப்பான் செம்பகம்.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்