வண்ணதாசன்
கிருஷ்ணன் வைத்த வீடு, தனுஷ்கோடி அழகருக்கு எப்படி ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அவன் ஒரே ஒரு முறைதான் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். அதுவும் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு.
அவன் ஹாஸ்டலில் இருந்தான். நான் வீட்டிலிருந்து மூன்றாம் நம்பர் பஸ் பிடித்துக் காலேஜ்உக்குப் போய்க் கொண்டிருந்தேன்.
பாப்புலர் டாக்கீஸில் 'தாமரை நெஞ்சம் ' படம் பார்த்துவிட்டு வெளி வருகிற கூட்டத்தில், என் தோளை வந்து அவன்தான் பிடித்தான். சிகரெட் குடித்து, மிட்டாய் சாப்பிட்டிருந்த வாசனையுடன் சிரிப்பு இருந்தது.
'நீ எங்கேடாஇருக்கே ? ' என்றான்.
'எங்கள் வீடு இந்தப் பக்கம்தானே ' என்று சொல்லி அவனை வீட்டுக்கு வந்துவிட்டுப் போகுமாறு அழைத்தேன்.
தனுஷ்கோடி அழகர், தியேட்டர் முன்பு தரையில் பரப்பி வைத்துப் பாட்டுப் புத்தகம் விற்கிற மனிதரைப் பார்த்தான். வளைந்து திரும்புகிற வாய்க்காலில் தண்ணீரே தெரியாமல் பூத்துக்கிடந்த நீலநிறப்பூக்களைப் பார்த்தான். விறகுக் கடையில் விழுந்து கொண்டிருந்த சம்மட்டி அடியிலிருந்தும் ஈரவிறகு வாசனையில் இருந்தும் என்னுடைய அழைப்புக் குறித்த முடிவை எடுத்தது போல் 'சரி, போவோம் ' என்றான். பத்தடி முன்னால் போய்க்கொண்டிருந்த விடுதி நண்பர்களிடம், தான் அப்புறம் வருவதாகக் கையைக் காட்டினான்.
பெருமாள் கோயில் தெருப்பக்கம் நின்ற தேரை நிதானமாகப் பார்த்து, அது எந்தத் திருவிழாவுக்கு ஓடும் என்று விசாரித்தான். 'எல்லா ஊர் சலூன்களுக்கும் ஒரே மாதிரிக் கதவுகள்தான் இருக்கின்றன ' என்று சொல்லிக்கொண்டே சந்திப்பிள்ளையார் முக்குவரை நடந்தான். வாடகைக்கு நிற்கிற ஒற்றை மாட்டு வண்டிகளைப் பார்த்து ஆச்சரியம் அவனுக்கு.
பக்கத்தில் நிற்கிற காந்தி சிலையைப் பற்றி, முக்கியமாக காந்தியின் கால்களைப் பற்றி சிலாகித்தான். என்னைப் போலவே அவனுக்கும் காந்திசிலைக்குப் பக்கத்தில் பழக்கடை போட்டிருப்பவர் எப்போதும் ஊதாச்சட்டைதான் போடுவாரா என்கிற சந்தேகம் வந்தது. அவன் அந்தச் சந்தேகத்தைக் கேட்டதும் தனுஷ்கோடி அழகருக்கும் எனக்கும் ரொம்ப நெருக்கம் உண்டாகிவிட்டது போலத் தோன்றியது.
இந்த நேரத்தில் அப்பா வீட்டில் இருப்பாரா என்று சந்தேகம் உண்டாயிற்று. அம்மா மட்டும் இருந்தால் கூட நல்லது. தின்பதற்கு ஏதேனும் கொடுத்துக் காபியையும் தனுஷ்கோடி அழகருக்குத் தரமுடியும் எனில் நன்றாக இருக்கும். ஒன்றுமே கொடுக்காவிட்டால் கூட எல்லாவற்றையும் கொடுத்துவிட்டது போல அம்மாவால் உபசரித்துவிடமுடியும்.
அம்மா முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்தான் கொண்டுவந்து கொடுப்பாள். கொடுப்பதற்கு முன் டம்ளரின் வெளிப்புறத்தில் வழிகிற சொட்டுக்களை லேசாக விரல்களால் துடைத்துவிடுவாள். அந்தத் துடைப்பிலேயே எல்லா மாயமும் நிகழ்ந்துவிடும். அம்மாவிடமிருந்து தண்ணீரை வாங்கிக் குடித்த யாரும் அம்மாவை மறந்திருக்க முடியுமா.. தெரியவில்லை.
ஆனால், தனுஷ்கோடி அழகர் அம்மாவை மறந்துவிட்டது போலத்தான் இருந்தது. இத்தனை வருடங்களுக்கு அப்புறம் என்னைப் பார்க்கிறவன் அம்மாவைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.
'அந்த கிருஷ்ணன் வெச்ச வீடு இப்ப இருக்கா ? ' என்று கேட்டான்.
'கிருஷ்ணன் வைத்த வீடா ? அதை நீ எப்போ பார்த்தே ? ' என்று கேட்ட என்னுடைய குரலின் ஆச்சரியம் எனக்கே விநோதமாக இருந்தது. யாருக்கும் தெரியாது என்றும் தெரியக்கூடாது என்றும் நான் என்னுடைய ரகசிய அறையில் ஒளித்து வைத்திருந்த ஒரு விஷயத்தை எடுத்த எடுப்பில் அவன் தொட்டுவிட்டது எப்படி என்று தெரியவில்லை.
எங்கள் தெருவில் கிருஷ்ணன் வைத்த வீட்டுக்குத் தனியான அடையாளமும் மரியாதையும் கூட இருந்தது.
ஒரு சுடலை மாடசாமி பீடத்தை ஆரம்பமாக வைத்து, நூல் பிடித்த மாதிரி சிறியதும் பெரியதுமாக ஐம்பது நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட காரை வீடுகளுக்கும் மட்டப்பா போட்ட வீடுகளுக்கும் மத்தியில் 'கிருஷ்ணன் வைத்த வீடு ' துண்டாகத்தான் தெரியும்.
மற்ற எல்லா வீடுகளும் தரையோடு தரையாக, தெருவும் சாக்கடையுமாக இருக்கிற முன்வாசல் நடையுடன் துவங்குகிறபோது கிருஷ்ணன் வைத்த வீடு நான்கு ஐந்து படிகளுடன், ஆற்றங்கரையில் வெள்ளம் வந்தால் பாதிக்கக் கூடாது என்பது போல கட்டப்பட்டிருக்கும். பத்தடிக்குக் கீழ் தெரு பள்ளத்தில் இருப்பதுபோல வீட்டின் கட்டுமானம் துவங்கும்.
நெடுநெடு என்று வரிசைக்கு இரண்டு பாக்குமரம், இரண்டு தென்னைமரம், முன் வாசலில், நட்டநடுவில், புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணர் பொம்மை. பொம்மையின் முதுகுக்கு அண்டை கொடுத்தது மாதிரியான குழாயின் உச்சியில் நீலமான ஒரு ரசகுண்டு. ராத்திரியில் உள்ளுக்குள் பல்பு எரியும். தெருவில் போகிறவர் வருகிறவர்கள் தற்செயலாக ஏறிட்டுப் பார்த்தால், கிருஷ்ணன் நேரடியாக நிலா வெளிச்சத்தில் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு அந்த வீட்டின் முன்னால் நிற்கிறது மாதிரி இருக்கும்.
அதற்கப்புறம் வீடு ஆரம்பிக்கும். தார்சா, பட்டாசல், இரண்டாம் கட்டு, அரங்குவீடு, அடுக்களை என்ற அமைப்பு இல்லாமல் வேறு தினுசில் இருக்கும். செங்கோட்டை என்கிறதும், திருவனந்தபுரத்தில் கரமனை என்கிறதும், இல்லையில்லை இங்கே முனைஞ்சிப்பட்டி மூலைக்கரைப்பட்டி என்கிறதுமாக அந்த வீட்டு ஆட்களின் ஊரைப் பற்றி வெவ்வேறு பேச்சும் அனுமானமும் இருந்தது.
நாகர்கோவிலில், நாகர்கோவிலைத்தாண்டி இரண்டு மூன்று இடங்களில் பெரிய பெரிய ஓட்டல்கள் வைத்திருக்கிறாதாகவும் பெண்ணினுடைய படிப்பையும் பையனுடைய படிப்பையும் உத்தேசித்து இங்கே இருப்பதாகவும் தான் சொன்னார்கள்.
இங்கே கார் நிறுத்துவதற்கு இடமில்லை என்பதால், அடுத்த முடுக்கில் ஒரு காடினாவை வாடகைக்குப் பிடித்திருப்பதும், வீட்டு வாசலில் வந்து ஏற்றிக்கொண்டுபோய், மறுபடி வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கிவிடுவதும், தவிர, அந்த வீட்டுக்காரர்கள் நடந்துபோய் எங்கள் தெருவில் யாரும் பார்த்ததில்லை என்பதும் வாஸ்தவம்தான்.
பையனுக்கு படிப்பு வரவில்லை. எட்டாவது வகுப்பிலேயே இரண்டு தடவை உட்கார்ந்துவிட்டான் என்றும், ஆனால், அவனுடைய அக்கா மகா கெட்டிக்காரி என்றும் சொன்னார்கள்.
வழக்கமாக காலேஜ் தினத்தில் பரதநாட்டியம் ஆடுகிற டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் மகளைப் போன இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது கிருஷ்ணன் வைத்த வீட்டுப் பெண்ணினுடைய நடனம் என்று குனிந்த தலை நிமிராமல் ஐந்தாம் நம்பர் பஸ் ஏறி கல்லூரிக்குப் போய்விட்டு வருகிற காந்திமதி அக்கா சொல்கிறாள்.
கிருஷ்ணன் வைத்த வீட்டுப் பெண்களைப் பார்த்தது என்பது ரொம்பத் தற்செயலாகவும் அவ்வளவு சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியாத ஒரு நேரத்திலும் எனக்கு வாய்த்தது.
பிச்சம்மாள் ஆச்சி செத்துப் போயிருந்தாள். ஆயுள் பூராவும் வீடு வீடாகத் தோசைக்கு அரைத்துக் கொண்டும் முறுக்கு சுற்றிக் கொடுத்துக் கொண்டும் இது எல்லாம் போதாமல் எப்போதும் இரண்டு மூன்று பூனைக்குட்டிகள் வளர்த்துக் கொண்டும் ஒருத்தி இருக்க முடியும் என்றால், அது பிச்சம்மா அக்கா என்கிற பிச்சம்மா ஆட்சிதான். தெருவில் இருக்கிற எல்லோருமாகச் சேர்ந்துதான் அவளைத் 'தூக்கிப் போடவேண்டிய ' நிலைமை. பாடைக்குக் கிடுகு பின்னுவதற்குத் தென்னை ஓலலித் தேவைப்படும் இல்லை... அதற்காகத்தான் நான் கிருஷ்ணன் வைத்த வீட்டுப் படியேறிப் போனேன்.
எனக்கும் தென்னங்கிடுகுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்தாலும் இதன் பொருட்டுஎன்னை இங்கே அனுப்பின குரல் எது என்று இப்போது ஞாபகமில்லை. வழக்கம் போல இது போன்ற நல்லது -- கெட்டதுகளில் முன்னால் நின்று உத்தரவு இடுகிற மீசைப் பெரியப்பா குரலோ, ராமையாப்பிள்ளை குரலோ அல்ல அது. அசரீரி மாதிரி அது எங்கிருந்தோ கேட்க, எங்கிருந்தோ நானும் வந்திருக்க வேண்டும் என்று படுகிறது.
நான் சத்தம் கொடுத்து ரொம்ப நேரம் கழித்து, 'சசி... வாசலில் யாருன்னு பாரு ' என்று குரல் கேட்டது. கதவுகள் திறந்து மூடுகிற நுட்பமான நேரம். கனகாம்பர கலரில் ஒரு தாவணியும் கையில் புத்தகமுமாக அந்தப் பெண் வந்தது. நான் விவரம் சொல்லி, தென்னங்கீற்று வெட்டிக் கொள்ள அனுமதி கேட்டேன்.
'யாரு சசி ? ' மறுபடியும் உள்ளிருந்து குரல் வந்தது.
'வர்றேம்மா ' என்று உள்ளே நகர்ந்த பிறகும் அந்த இடத்தில் கனகாம்பர கலர் இருந்தது. சசி என்ற பெயரின் உச்சரிப்புக் காற்றில் அலைந்தது.
சசியும் சசியுடைய அம்மாவும் வந்தார்கள்.
சசியின் கையில் அரிவாள் இருந்தது. இந்தப் பக்கத்து அரிவாள் மாதிரி இல்லை. அது கூட வேறு மாதிரி இருந்தது.
'வெட்டிக்கொள் ' ' என்று இரண்டு பேருமே சொல்லவில்லை. சசி அரிவாளைத் தரையில் குனிந்து வைக்கும்போது ஜடை முன்னால் விழுந்து, கிட்டத்தட்ட தரையைத் தொட்டது. மஞ்சள் ரிப்பன் பட்டுப் பூச்சி மாதிரி பறந்தது.
நான் பக்கத்து வீட்டு காம்பெளண்ட் சுவரில் ஏறி, வேப்பமரக் கிளையில் உட்கார்ந்து கைக்கு எட்டின தென்னங்கீற்றை இழுத்துப் பிடித்து வெட்டினேன். குறுக்கே போன மின்சார ஒயரில் சற்றுத் தொங்கி ஆடி, தென்னங்கீற்று 'சலார் ' என்று கீழே விழுந்தது.
சசியும் சசியின் அம்மாவும் வாசலிலேயே நின்றார்கள்.
தூரத்திலிருந்து அவர்களை பார்க்கமுடிந்தது போல, பக்கத்தில் போனதும் பார்க்க முடியவில்லை. அரிவாளைக் கீழே வைத்தேன். 'தாங்க்ஸ் ' என்று சொன்னது யார் காதிலும் விழுந்திருக்க முடியாது.
வெளியே கேட்காமல் சொன்ன அந்தச் சொல், பனிக்கட்டி போல உருகி ஓடி சசியின் கால் பெருவிரலைத் தொடுமுன் ஆவியாகிக் கொண்டிருந்தது.
வெளியே நடையிறங்கும்போதுதான், கிருஷ்ணன் வைத்த வீட்டின் கிருஷ்ணன் பொம்மையை இவ்வளவு நேரமும் சரியாகக் கூட பார்க்கவே இல்லை என்று புரிந்தது. இத்தனைக்கும் அது வாசல் நடுவில்தான் இருந்தது. அதைச் சுற்றித்தான் நான் போனது, கேட்டது, வந்தது.. எல்லாம்.
மறுபடியும் தனுஷ்கோடி அழகர் கேட்டான்.
'நான் பார்த்தது இருக்கட்டும். கிருஷ்ணன் வெச்ச வீடு இப்போ இருக்கா ? அதைச் சொல்லு. '
எனக்கு ஒரு கேள்வி - பதில் போல அவ்வளவு திட்டவட்டமாக அதைச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. வாசல் முழுவதும் புல் பூண்டுகள் மண்டி, ஒரு மழைக்காலத்துக்கு பிந்திய வெயில் நாளில், தட்டான் பூச்சிகள் பறக்கிற கோலத்தில், வாசிக்கின்ற புல்லாங்குழல் முற்றிலும் உடைபட்டு, மூக்கு நுனி மூளியாகி, வலது முழங்கைப் பக்கம் துருபிடித்த கம்பி தெரிய கிருஷ்ணன் அந்த வீட்டில் கால்மாற்றி நிற்பதைப் பற்றி தனுஷ்கோடி அழகரிடம் சொல்ல வேண்டுமா என்ற தயக்கம் வந்தது. உண்மையின் கரிக்கோடுகளால், முப்பது வருஷத்துக்கு முந்திய ஞாபகத்தின் சுவர்களில், தனுஷ்கோடி அழகர் வரைந்து வைத்திருக்கிற, கிருஷ்ணன் வைத்த வீடு பற்றிய சித்திரங்களை நான் கோரப்படுத்த வேண்டுமா ?
நான் இரண்டாவது முறை அந்த வீட்டைப் பார்த்த கோரத்தை விடவா பெரிய கோரம் இருக்கப் போகிறது. நான் மட்டுமா பார்த்தேன் ? தெருவே அல்லவா கூடிப் பார்த்தது. இந்த வீட்டில், பக்கத்து வீட்டில், வேப்பமரக்கிளையில், நகைக்கடைச் செட்டியார் வீட்டுச் சுவரில் என்று எங்கேயெல்லாம் ஆட்கள் இருந்தார்கள். மோர் விற்பதற்கு வருகிற சுப்பையா கோனாருடைய வீட்டுக்காரிகூட பிரப்பங்கூடையும் கறுத்த மோர்ப்பானையும் தலையில் இருக்க, பச்சைக் குத்தின கையால் சேலையை வாயில் வைத்துப் புதைத்துக் கொண்டு நின்றாள். ஓர் இடத்தில் ஐந்து நிமிடம் நிற்கிறவளே இல்லை அவள் '
போலீஸ்காரர்கள் 'தள்ளிப்போ, தள்ளிப்போ ' என்று மச்சுப்படியில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டே இறங்குகிறார்கள். முனிசிபல் ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிக் கொண்டு வரப்பட்டவர்கள் தலைப்பாகையை அவிழ்த்து மூக்கை மறைத்து கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஜமுக்காளத்தின் நான்கு மூலைகளையும் நான்கு பேர்களாகப் பிடித்தபடி ஒவ்வொரு உடம்பாகக் கீழே கொண்டுவந்து வாசலில் வைக்கிறார்கள்.
முதலில் அந்த வீட்டுப் பையன் உடம்பு. அடுத்து அநேகம் பேர் பார்த்தே இராத அந்த வீட்டுக்காரர் உடம்பு.
தூக்கிக்கொண்டு வந்த தோட்டிகளில் ஒருத்தர், 'இப்படிப் பண்ணிட்டாங்களே முதலாளி ' என்று கீழே உட்கார்ந்து அழுதார். தோள்பட்டையில் கையைக் கொடுத்துத் தூக்கி ஒரு போலீஸ்காரர் அவரை விரட்டினார்.
மறுபடியும் மேலே ஏறினார்கள்.
அந்த அம்மாவைக் கொண்டுவரும்போது நிறையச் சிரமம் இருந்தது. பிடித்துக்கொண்டு வந்த போர்வை, கனம் தாங்காமல் சரிந்துவிடுவது போலவும், படிகளில் தாங்கித் தாங்கி இறங்கித் திசைமாற்றிக் கொண்டு வருவதில் தள்ளாட்டமும் இருந்தது. அதிகம் நாற்றம் அடித்தது என்று கூடச் சொல்லவேண்டும்.
ஏற்கனவே நிறையப் பேர் அழ ஆரம்பித்திருந்தார்கள்.
கடைசியாக சசியை இறக்கும்போது எல்லோரும் வாய்விட்டுச் சத்தம் போட்டு அழுதார்கள். இன்னது என்று சொல்லமுடியாத வகையில் புலம்பல் இருந்தது.
'அட, பாதகத்தி ' ' என்ற குரல் சுழன்று சுழன்று வருகிற ஒரு கூர்மையான கத்தி போல கிருஷ்ணன் வைத்த வீட்டின் மேல் விழுந்து இதுவரை மூடிக்கொண்டிருந்த எல்லாத்திரைகளையும் கிழித்து எறிந்துவிட்டு அப்புறம் போனது.
பழைய சேலைகளாலும், அழுக்கு வேட்டிகளாலும் மூடப்பட்டு வரிசையாகக் கிடத்தப்பட்டிருந்த நான்கு உடல்களிலும், கிருஷ்ணன் சிலைக்கு மிக நெருக்கமாக சசியின் உடல் இருந்தது. கொலுசும் பாதமும் தெரிந்த இடது காலை, காக்கிச் சட்டையுடன் இருந்த முனிசிபல் ஆஸ்பத்திரி சிப்பந்தி மூடிவிட்டார்.
எங்கிருந்து வந்தது என்று தெரியாமல், வேப்பமரத்தின் அடர்த்திக்குள் ஒளிந்திருந்த பளீர் என்ற வெயில் வாசல் முழுவதையும் கொஞ்சம் நேரம் பொசுக்கிற்று. பாக்கு மரத்திலிருந்து பொத்தென்று விழுந்த அணில், பரபரவென்று குறுக்காக ஓடியது. சசியின் உடம்பின் மேல் குதித்து ஓடியதா, தாண்டிப் போனதா என்று அனுமானிக்க முடியவில்லை.
முதுகில் விழுந்திருந்த பழுப்புக் கோடுகளில் சசியைச் சிறகுகளாகச் செருகிக் கொண்டு எந்தப் பக்கம் பறந்தது அது என்று தெரியாமல் போனபோது, வெயில் முற்றிலும் மங்கி, வேப்பமரம் பந்து பந்தாக நிழல்களை எறிந்தது.
வேம்பின் மஞ்சள் இலைகள் பறந்து உதிர்ந்து, கிருஷ்ணன் பொம்மையில் அப்பி, மறுபடி பறக்கும்போது, கிருஷ்ணனின் தலை உச்சியில் இருந்த மயில்பீலிகளையும் பிய்த்துக் கொண்டு போயிற்று.
மேலும் சில பழுத்த இலைகள் ஓலைப் பாய்களைப் போலச் சுருண்டு விரிந்து, அந்த நான்கு பேரையும் அள்ளித் தெருவில் நிற்கிற சக்கடா வண்டியில் ஏற்றப்போவது போல ஆவேசத்துடன் தரையில் நகர்ந்தன.
நான் எங்கே நின்றேன் என்று சொல்ல முடியவில்லை. எல்லா இடங்களிலும், எல்லோருடனும் நின்றிருக்க வேண்டும்.
'ஒண்ணு போலப் போயிரலாம். ஒண்ணு போல வரமுடியுமா உனக்கு ? ' -- ஐஸ் விற்கிற முருகனுடைய அப்பா என்னிடம் கேட்டார். இதைக் கேட்கும்போதும் மூச்சுமுட்டுகிற அளவு அவர் குடித்திருந்தார்.
என்னிடம் மட்டும் இதையெல்லாம் ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. 'வரமுடியாது ' என்ற பதிலையே 'வர முடியுமா ? ' என்ற கேள்வியாகக் கேட்டால் என்ன சொல்ல முடியும்.
நிறைய பேர் பதில் சொல்வதைத்தான் கேள்வியாகக் கேட்பார்கள் போலிருக்கிறது.
'கிருஷ்ணன் வெச்ச வீடு இப்போ இருக்கா ? ' என்று தனுஷ்கோடி அழகர் என்னிடம் கேட்டதுகூட அப்படித்தான் இருக்க வேண்டும்.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
1 கருத்துகள்:
எப்போதோ சிறு வயதில் படித்தது. கதையின் பெயரும், அதில் வரும் கிருஷ்ணர் சிலையும் மட்டுமே ஞாபகத்தில் இருந்தன. எதிர்பாராமல் மீண்டும் படிக்கமுடிந்தது. நன்றி.
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.