Showing posts with label ச.தமிழ்ச்செல்வன். Show all posts
Showing posts with label ச.தமிழ்ச்செல்வன். Show all posts

Oct 15, 2010

கருப்பசாமியின் அய்யா - ச.தமிழ்ச்செல்வன்

பெரிய்ய இவன் கணக்காத்தான் பேசிக்கொண்டு திரிந்தான். கருப்பசாமி இந்த ரெண்டு நாளாக கூலிங் கிளாஸ் கண்ணாடி, சோப்பு, பவுடர் எல்லாம் அவன் கிட்ட இருக்காம். அதான் அப்படி பேசிக்கொண்டு திரியறான். இருக்கட்டுமே, அதுக்காக ரொம்பவுந்தான் பீத்திக்கொண்டு திரிந்தால் யாருக்குப்பிடிக்கும். காளியம்மன் கோயிலுக்குப் பொறத்தாலே கூட்டம் போட்டு இனிமேக்கொண்டு கருப்பசாமியை எந்த ஆட்டையிலும் சேக்கக்கூடாதென்றும் அவனோடு யாரும் பேசவும் கூடாதென்றும் அவனுடைய சேக்காளிகள் முடிவு கட்டிவிட்டார்கள்.

thamizh selvan 1 ஆனால் இதப்பத்தியெல்லாம் கவலைப்படுகிற மாதிரி கருப்பசாமி இல்லை. அவனுக்கு அவனுடைய  அய்யா ஊரிலிருந்து வந்துவிட்டார். அதத்தவிர வேற நினைப்பே அவனுக்கில்லே. அவன் பிறந்த ஒரு வருஷத்திலே இந்த ஊரை விட்டுப்போன அய்யா ஏழு வருசங்கழிச்சு இப்பத்தான் ஊருக்குத் திரும்பி-யிருக்கிறார். சோப்பு, சீப்பு, கண்ணாடி, கூலிங்கிளாஸ், பவுடர் அது இதுன்னு அவனுக்கு ஏகப்பட்ட சாமான்கள் வாங்கிவந்து விட்டார். அதனால் சேக்காளிகளையும் விளையாட்டையும் கூட மறந்துவிட்டு எந்நேரமும் அய்யாவோடவே ஒட்டிக்கொண்டு ரொம்ப செல்லங் கொஞ்சிக்கொண்டு திரிந்தான். அய்யாவும் ரொம்பப் பிரியத்துடன் அவனுடன் சளைக்காமல் பேசிக்-கொண்டிருந்தார். கருப்பசாமியின் ஆத்தாள் காளியம்மாளிடம் கூட அவ்வளவு நேரம் பேசவில்லை. கருப்பசாமியுடன் தான் பேச்சு.

கருப்பசாமியைப் போலவே காளியம்மாளும் ரெண்டு நாளாக சந்தோஷமும் சிரிப்பாணியுமாகத்தான் இருந்தாள். அவளுக்கும் தனியாக பவுடர், ரிப்பன், வாசனைதைலம் எல்லாம் வந்திருந்தது. மூணு நேரத்துக்கும் அரிசிச்சோறே காச்சினாள். குழம்பும் கறியும் தினமும் வைத்தாள். கருப்பசாமிக்கு இதனால் தன் அய்யா மீதுதான் பிரியம் பிரியமாக வந்தது. ஏழுவருசத்துப் பேச்சையும் பேசித்தள்ளினாள். ராத்திரி கருப்பசாமி தூங்கின பிறகுதான் காளியம்மாளின் பக்கமாக நகர முடிந்தது. முதல் ரெண்டு மூணுநாள் ராத்திரி அவன் தூங்கினபிறகு விடிய விடிய ரெண்டு பேரும் கண்டதைக் கடியதைப் பேசிக்கொண்டு கிடந்தார்கள்.

நாலாவது நாள் ராத்திரி காளியம்மா ரொம்ப மெதுவாக கருப்பசாமியின் அய்யாவிடம் கேட்டாள். ‘‘அதல்லாஞ்சரி.... துட்டு எம்புட்டுக் கொண்டாந்-திருக்கீரு’’ உடனே அவன் பாயை விட்டு எழுந்து தன் டிரங்குப் பெட்டியை இறக்கி சிம்னிவிளக்கை அவளைத் தூக்கிப்பிடிக்கச்சொல்லி, பெட்டியைக் குடைந்து எடுத்து ‘‘இந்தா’’ என்று முப்பத்தேழு ரூபா பதினைஞ்சு பைசாவை அவளிடம் கொடுத்தான்.

மறுநாள் காலையிலிருந்து கருப்பசாமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்த ஆத்தாளுக்கு என்ன கேடு வந்துருச்சு என்றும் புரியவில்லை. முக்கைச் சிந்திக் கொண்டும் அழுது கண்ணீர் உகுத்துக்கொண்டும் மூலையில் உட்கார்ந்திருந்தாள். கஞ்சிகூடக் காய்ச்சவில்லை. இதெல்லாங்கூட கருப்பசாமிக்குப் புதுசு இல்லை. திடீர் திடீர் என்று இப்படி ஆத்தா ரெண்டு நாளைக்கு அழுவதும் கஞ்சி காச்சாமல் போட்டு-விடுவதும் வழக்கம்தான். அப்பவெல்லாம் தன் அப்பத்தா வீட்டில் கஞ்சி குடித்துவிட்டு பள்ளிக்கொடம் போய் விடுவான். ஆனால் இப்ப இவ அழுது புலம்பி கஞ்சி காய்ச்சாமல் போட்டதோடு நிக்காமல், தன் பிரியமான அய்யாவை வேற கண்ணிலே காங்க விடாம வைது கொண்டிருந்தாள். அதுதான் கருப்பசாமிக்குத் தாங்க முடியவில்லை. எப்பேர்க் கொண்ட மனுசன் அவனுடைய அய்யா. அவரைப் போயி இவவையிறாளே. அந்த நல்லம்மாப் பாட்டியும் மத்த பொம்பளைகளும் சொன்னது நிசமாத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது கருப்பசாமிக்கு. அவனுக்கு விவரந்தெரிய ஆரம்பிச்ச ரெண்டு மூணு வருசத்திலே அவனுடைய அய்யாவைப்பத்தி எத்தனையோ பேர் கதைகதையா அவன்கிட்டச் சொல்லியிருக்காக. ராத்திரி நேரங்களில் அவனைக் கூப்பிட்டுக் கிட்டத்தில் உட்கார வைத்துக் கொண்டு தங்களுக்குள் பேசுகிற மாதிரி அவனிடம் அய்யாவைப்பத்தி கதையாய்ச் சொல்வார்கள்.

அப்பிடி அவன் கேட்ட கதைகள் அவன் அய்யாவைப் பத்தி ரொம்ப பெருமையா நினைக்க வச்சது. அவன் கண்ணாரக் காணாத அய்யா கனாவிலே வந்து நிறைய வித்தையெல்லாம் செஞ்சு காட்டுவார். அய்யா என்றாலே விளையாட்டும் வித்தையும்தான் நினைப்பிலே வரும். அப்படித்தான் பொம்பிளைகள் அவனிடம் சொல்லி-யிருந்தார்கள்.

எந்தப் பெரிய கல் உரலையும் கூட அந்தாரமாகத் தலைக்கு மேலே தூக்கி எறிஞ்சிருவாராம். பந்தயம் வச்சா சமயத்திலே பெரிய ஆட்டுரலக்கூட தூக்கி எறிஞ்சிருவாராம். சோடா, கலர் பாட்டில் மூடிகளை பல்லாலே கடிச்சே ஒடைச்சுருவார். காடுகளுக்குப் போய் வேலை வெட்டி பாத்து திரும்பி கஞ்சிகளைக் காச்சி குடிச்சிப் போட்டு தெருச்சனங்கள் மடத்து வாசல்ல இல்லாட்டி காவல்காரத் தேவர்வீட்டு முகத்திலே கூடி உக்காந்திருக்கும் போது இசக்கி முத்து அதுதான் கருப்பசாமியோட அய்யா பல விளையாட்டுகளை செய்து காட்டுவான்.

நிறை குடத்தை கையாலே தொடாம பல்லுட்டக் கடிச்சே தூக்கிருவான். கை ரெண்டையும் கீழே ஊன்றி தலை கீழே நடப்பான். பிறகு யாராச்சும் ஒரு திருகையைத் தூக்கிக் கொண்டாந்து போடுவார்கள். அதையும் அடிப்பாகத்து முளைக் குச்சியைப் பல்லாலே கடிச்சே தூக்கி எறிவான். அப்படி வித்தைகளை செய்து காட்டும் போது அவனுடைய மச்சினன்மார் யாராச்சும் வாழைப்பழம், முறுக்கு, கருவாடு எல்லாத்தையும் ஒரு சணல் கயித்திலே மாலை கணக்கா கட்டி அவன் கழுத்திலே போடுவார்கள் கிண்டலாக எதையாச்சும் சொல்லியபடி.

ஆனால் சும்மா யாராச்சும் ஏப்பா இசக்கிமுத்து இந்த உரலைத் தூக்கிரு பாப்பம் என்று சொன்னால் சவால் விட்டாலும் கூட அவன் அசைய மாட்டான். அவனுக்கா தோணனும். அப்பத்தான் இதெல்லாம் செஞ்சு காமிப்பான். கடைக்காரத் தேவரை மாதிரி ஒரு சில பேருக்குத்தான் எப்படி அவனைக் கிளப்பி விடுகிறது. என்பது தெரியும்.

பகல் நேரங்களிலே வெயிலுக்கு ஆத்தாம, மடத்தில் படுத்து கிடப்பாக. இசக்கிமுத்தும் படுத்திருப்பான். அந்நேரம் வாசல்லே நெல் மூட்டைகள் கிடக்கும். அதுகளை ரைஸ்மில்லுக்கு கொண்டுபோக வண்டியும் நிக்கும். மூட்டைகளை வண்டியில் ஏத்த ஆள் தேடிக் கொண்டிருப்பார்கள். மடத்துள்ளேயிருந்து கடைக்காரத் தேவரை மாதிரி யாராச்சும் இந்நேரம் பைய பேச்சைக் கிளப்புவார்கள். ‘‘ம்ம்.... அந்தக் காலத்துலே நாங்க எளவட்டங்களா இருக்கும்போது எத்தனை அம்பாரமா மூடைகள் கிடந்தாலும் ஒத்தையிலே தூக்கித் தூக்கி வண்டியிலே எறிஞ்சிருவோம். இந்தக் காலத்துப் பயலுக்கு நாலு மரக்காநெல்லைத் தூக்கணுமின்னாக் கூட நாலாள் வேண்டியிருக்கு.’’

இவர்கள் பேசறதையெல்லாம் கவனியாதவன் மாதிரி வேற எங்கிட்டோ பார்த்தபடி படுத்துக் கிடப்பான் இசக்கிமுத்து. ஆனால் அதே பாணியில் அவர்களின் பேச்சு போய்க்கொண்டே இருக்கும். திடீரென்று எழுந்து நின்று தார்ப்பாச்சி கட்டிக்கொண்டு வெளியே பாய்ந்து விடுவான் இசக்கிமுத்து. அத்தனை மூட்டைகளையும் முக்கித் திணறி ஒத்தையிலேயே வண்டியில் ஏற்றிவிட்டு வேட்டியை உதறிக்கட்டியபடி ``ம்ஹ்ம்.... இதெல்லாம் ஒரு வேலையாக்கும்’’ என்கிற மாதிரி ஒரு பார்வையுடன் போய் பழையபடி படுத்து விடுவான்.

அவனைக் கிளப்பிவிட்ட கிழடுகள் தங்களுக்குள் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு `ஆனாலும் நம்ம இசக்கி முத்து கணக்கா வேலை பாக்க யாராலும் முடியாதப்பா...’ என்று அவனைத் தூக்கி வச்சுப்பேச ஆரம்பித்து விடுவார்கள். அதையும் காது கேளாதவன் மாதிரி கண்டு கொள்ளாமலிருந்து விடுவான்.

இப்பிடி அவனைக் கிளப்பிவிட்டே ஊரில் கலியாணம் சடங்கு, இழவு வீடுகளில் எல்லா வேலைகளும் வாங்கி விடுவார்கள். ஊடே ஊடே `ஏயப்பா எசக்கிமுத்தைப் போல உண்டுமா’ என்று சொல்லி விடுவார்கள் அவனுக்கு அது போதும்.

இதனால் அவனுக்கும் அவனோட அய்யாவுக்கும் நாளும் தகராறுதான். அன்னாடம் பாடுபட்டுக் கஞ்சி குடிக்கிற குடும்பத்திலே ஆம்பிளைப்பிள்ளை இப்பிடி அத்துவிட்ட கழுதை கணக்கா அலைஞ்சா யாருக்குத்தான் கோவம் வராது. அவன் அய்யா சொல்ற வேலை எதுவும் அவனுக்கு பிடிக்கவில்லை. அதுவுஞ்சரிதான். சும்மா பிடிச்சிக்கிட்டு `கிணத்து வெட்டுக்குப்போ’ தொழி வெட்டப்போ’ `உழவுக்குப் போன்னு’ உசுரை வாங்கினா அவனுக்கு எப்பிடி பிடிக்கும். தினம் சண்டைதான் மிஞ்சும். அவனுடைய அய்யாவுக்கு என்ன அவன் வேலை செய்யாட்டாக்கூட ஒண்ணுமில்லை. அடக்க ஒடுக்கமா நாலு பேரைப் போல நம்ம பய இல்லையேன்னு தான் வேதனைப்பட்டார். நாடகத்து ராஜபோல அவன் நடக்கிற நடையே அவருக்கு வல்லுசாகப் பிடிக்காது. வீட்டு வாசப்படியை மிதிச்சு ஒரு நாளும் அவன் வீட்டுக்குள் போனதுமில்லை, வந்ததுமில்லை. ஒரே தாவுதான், உள்ளிருந்து வெளியே, கடைசியில் சண்டை நின்று ஒரு சமாதானமான முடிவு வந்தது.

பழைய சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கிக் கொடுத்து கையிலும் பத்து ரூபாயைக் குடுத்து அனுப்பினார் அவன் அய்யா. அவன் தூத்துக்குடி போய் அதற்கு மீனோ கருவாடோ வாங்கி சைக்கிள் பின்னால் ஒரு கூடையில் கட்டி கிராமம் கிராமமாகப் போய் விற்று வந்தான். கொஞ்சம் நிம்மதி அடைந்தார். அவனுடைய அய்யா. ஆனால் அதுவும் ரொம்ப நாளைக்கு நிலைக்கவில்லை.

இவன் போகிற ஊர்களில் கருவாடு வித்தானோ இல்லையோ முதல் காரியமாக ஊரில் இள வட்டக்கல் எங்கே கிடக்குதுன்னு தேடிப்பாத்து அதிலே ஏறி உக்காருவான். உடனே அங்கன ரெண்டு பெரியாட்கள் கூடி விடுவார்கள்.

`யோவ் சண்டியரு...எதுலே உக்காந்திருக்கமின்னு தெரிஞ்சுதாம் உக்காந்திருக்கீரா’

``தெரியாம என்ன எல்லாந் தெரிஞ்சுதாம் உக்காந்திருக்காக’’ ``எனவட்டக்கல்லை மிதிச்சா என்னு செய்யனுமின்னு தெரியுமில்லே.’’

``என்னய்யா பெரிய பூடகம் போடுறிக’’_என்றபடி கல்லை விட்டு எழுந்து சடாரென அந்த இளவட்டக் கல்லைத் தலைக்கு மேலே அத்தாசமாகத் தூக்கி எறிந்து விட்டு, ``இம்புட்டுத்தானய்யா’’ என்பான்.

எல்லாரும் அசந்து போவார்கள். ஆளெம்புட்டுக்-காணு நரம்பு கணக்கா இருந்துக்கிட்டு தூக்கிப்-புட்டானே, என்பார்கள். பிறகு பிரியத்துடன் அவனிடம் சிலபேர் கருவாடு வாங்குவார்கள். கேட்ட விலைக்கு கொடுத்து விடுவான். துட்டு இல்லையென்றாலும் பார்க்க பாவமாயிருந்தால் `அதுக்கென்ன சும்மா கொண்டு போங்க’ என்று கொடுத்துவிடுவான். இப்படி சுத்துப்பட்டி பூராவிலும் அவன் பேர் பரவியது.

பழையபடி வீட்டில் நித்தமும் சண்டை நடந்தது. சரி, இந்த வைத்தியமெல்லாம், சரிப்பட்டு வராது என்று அவனுடைய அய்யா நாலு பெரியாட்களிடம் கலந்து பேசி ``காட்டிலிருந்து காளியம்மாளைக் கொண்டு வந்து அவனுக்குக் கட்டி வைத்து அவளிடம் `நீதான் பயலை வசத்துக்குக் கொண்டு வரணும்’’ என்று சொல்லி தனியாக ஒரு வீட்டையும் பாத்துக் கொடுத்து ``இனி ஒங்கு பாடு’’ என்று கையைக் கழுவி விட்டார். அவளும் ஒரு வருசத்துக்கும் மேலே ஒண்ணும் சொல்லாம அவன் போக்குப்படியே தான் விட்டுவைத்தாள். கருப்பசாமி பிறந்தான்.

பிறகுதான் சண்டாளி காளியம்மா இசக்கிமுத்தை ஊரை விட்டே விரட்டிவிட்டாள் என்று நல்லம்மாப்-பாட்டி கருப்பசாமியிடம் சொல்லியிருந்தாள். இப்பிடி ஏழு வருசங்கழிச்சு அய்யா வந்த நாலாம் நாளே இப்பிடிப் போட்டு வையிராளே ஆத்தா என்று கருப்பசாமிக்கு அழுகை அழுகையாகவும் கோவங் கோவமாகவும் வந்தது. பொம்பிளைகள் எல்லாருஞ் சொன்னது சரியாத்தான் இருக்கும்போல, ஆனா எதுக்காக இப்பிடி வச்சு தள்ளுறா என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

அவனுக்கு மட்டுமில்லை, அவனுடைய அய்யா இசக்கி முத்துக்கும் புரியவில்லை. இவ எதுக்காக இப்பிடிப் போட்டு நம்ம வையிறா! என்ன குத்தம் செஞ்சோம். அவளோட வெறுத்த மூஞ்சியைப் பாக்கவும் வசவுகள கேக்கவும் கலியாணமான முதல் வருசத்திலேதான் இப்பவும் இருக்க மாதிரி இருந்தது. முந்தியும் இப்பிடித்தான் வைதாள்.

`ஆம்பிளைன்னா கஷ்டப்பட்டு நாலுகாசு சம்பாரிக்கத் துப்பிருக்கணும். இப்பிடி மேல் வலிக்காம அலைஞ்சா வீடு எப்படி நடக்கும்.’

தினசரி வசவுதான். அவளுடைய கடுகடுத்த வெறுப்பான முகத்தைப் பார்க்கச் சக்தியில்லாமல்தான் ஊரைவிட்டே ஓடிப்போனான். ஓடிப்போனாலும் அவள் ஆசைப்பட்டபடி இந்த ஏழுவருசமும் ராவாப் பகலாய் மேல்வலிக்க கஷ்டப்பட்டுத்தான் உழைத்தான். மதுரை, திண்டுக்கல், சேலம், கரூர் என்று பல ஊர்களில் ஓட்டல்களில் மாவரைத்தான். தண்ணீர் சுமந்தான், மூடை சுமந்தான், மாவரைத்தும் கிணற்றில் தண்ணீர் இறைத்தும் கையெல்லாம் காய்ச்சுப்போயிருந்தது. அதைக்கூட அவளிடம் காட்டினான்.

``இங்கரு நீ சொன்னபடி கஷ்டப்பட்டுத்தானே இத்தனை வருசம் வேலைபார்த்தேன். பிறகும் எதுக்கு வையிறே’’ என்று பரிதாபமாகக் கேட்டான். `பேசாதே’ என்று அவன்மேல் `வள்’ என்று விழுந்தாள். உடனே எதை நினைத்தோ ஏங்கி ஏங்கி அழவும் ஆரம்பித்தாள்.

அவள் முன்னைப்போல அவனை வைய மட்டும் செய்தால் அவன் பழையபடி ஓடிவிடலாம். இப்போது பாவமாக இருந்தது. அழவேறு செய்கிறாளே, ஆனா அழுகையையும் மீறி அவன் மேல் வெறுப்பைக் கக்கினாள். வாயைத் தொறக்கவே விட மாட்டேங்காளே. இந்த ஏழு வருசமும் பல ஊர்களில்தான் கஷ்டப்பட்டதும் மஞ்சக்காமாலையும் டைபாயிட் காய்ச்சலும் வந்து அனாதையாய் அவதிப்பட்டதும்கூட அவனுக்குத் துன்பமாய்யில்லை. இப்போது என்னதான் செய்வது என்று குழம்பினான்.

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து அவளிடமும் சொன்னான். ``இப்படியும் நீ என்ன சொல்றாயோ அது கணக்காவே செய்யிறேன். பொழுதனைக்கும் என்னய வையாதே காளி. இனுமேயும் நீ வஞ்சையின்னா கிணத்துலே விழுந்து செத்தே போவேன்’’

நிசத்துக்கு அவன் அது ஒன்று தான் வழி என்று நினைத்தான். இந்த ஏழு வருஷமும் ஒவ்வொரு முறை அவன் ஊருக்குத் திரும்ப நினைத்த போதெல்லாம் அவளுடைய கோபமான கடுத்த முகமும் சிடுசிடுத்த பேச்சும்தான் நினைவில் வந்து கிளம்பவிடாமல் தடுத்தது. இப்பவும் அதே தொடர்ந்தால் கிணத்துலே விழுவதை தவிர வேறு வழியே கிடையாது.

அவன் இதைச் சொன்ன பிறகும் ஒரு நாள் பூரா அவ அழுதுகொண்டுதான் இருந்தாள். அவன் வீட்டுக்குள் வர முடியாதவனாக ªளியேவே உட்கார்ந்து எந்தக் கிணற்றில் விழுகலாம் என யோசித்து, ஊரிலேயே ஆழமான நம்மையாநாய்க்கர் தோட்டத்துக் கிணற்றிலே தான் விழுகணும் என்றும் தீர்மானித்துக் கொண்டிருந்தான். அய்யாவின் நிலையை காணச் சகியாத கருப்பசாமி அப்பத்தா வீட்டிலே அழுதுக்கிட்டிருந்தான்.

மறுநாள் சாயந்திரம திடீரென்று அவள் அழுகையை நிப்பாட்டினாள். ஒரு முடிவுக்கு வந்த இசக்கிமுத்தைக் கிட்டத்தில் வரச்சொன்னாள். சின்னபிள்ளைகளிடம் கொஞ்சலாக பேசுகிற மாதிரி அவனுடைய முகத்தை அன்போடு கைகளால் பிடித்துக் கொண்டு `நாஞ்சொல்ற படியெல்லாம கேப்பீரா’ என்று கேட்டாள்.

இவ்வளவு கனிவாக அவள் கேட்டதும் இசக்கிமுத்துக்கு `மூஸ்மூசென்று’ இறைத்துக்கொண்டு அழுகையே வந்துவிட்டது. ``நீ என்ன சொன்னாலும் கேப்பன்,’’ என்று உடைந்த குரலில் உறுதியாகச் சொல்ல அவள் தலையில் அடித்து சத்தியம் பண்ணினான்.

கருப்பசாமிக்கு Êஏகக் கொண்டாட்டமாப்போச்சு. அவன் அய்யாவும் ஆத்தாவும் ராசியாப்போனது மட்டுமில்லை. அவக வீட்டிலேயே இட்லிக்கடையும் ஆரம்பிச்சுட்டாக. முதல்லே இட்லியும் காப்பியும் மட்டும் போட்டாக. பிறகு வடையும் மொச்சையும் சேந்துக்கிருச்சி. வடைகளையும் மொச்சையையும் ஒரு கடகப் பொட்டியிலே வச்சு தூக்கிக் கிட்டு காளியம்மா நஞ்சைக்காடு புஞ்சைக்காடெல்லாம் அலைந்தாள். காடுகரையிலே வேலை செய்ற சனங்களுக்கு துட்டுக்கும் பருத்திக்கும் தானியத்துக்குமாக தினசரி வித்துட்டு வந்தாள். தயார் பண்ற வேலையும் வீட்டிலேயே வாரத்தை கவனிக்கிற வேலையும் இசக்கி முத்துக்கு. படிச்சுக்கிழிச்சது போதுமின்னு கருப்பசாமியை கைவேலைக்கு கடையிலேயே இருத்திக்கிட்டாக. அவனுக்கு Êஏகக்கொண்டாட்டம். பள்ளிக்கொடம் போகாமல் அய்யா வடை சுடுறதைப் பார்த்துக்கிட்டிருக்கதுலே அவனுக்கு ரொம்பச் சந்தோஷம், அவக அய்யா எல்லாரையும் போல வட்டமாக வடை சுட மாட்டான். சதுரமாகவும் உருளையாகவும் நீளமாகவும் ஏரோப்பிளேன் மாதிரியும் பல சைஸ்களில் மாவை உருட்டிப் போட்டு விடுவான். பார்க்கப் பாக்க வேடிக்கையா இருக்கும்.

இந்த வடைகளை பார்த்து காடுகரையெல்லாம் சனங்கள் சிரிச்சு உருண்டார்கள். விக்கப் போற காளியம்மாக்கு மானக்கேடாய் இருந்தது. ஒருநாள் வந்து விரட்டு விரட்டுன்னு அவனை விரட்டினாள். `சரி சரி இனிமே இப்பிடிச் செய்ய மாட்டேன்னு’ சொல்லி பிறகு ஒழுங்கா வட்டமா வடை சுட்டான்.

அவன் காப்பி ஆத்துறதே ஒரு தினுசா இருக்கும். இந்தக் கையிலிருந்து உயரே தூக்கி எறிந்து மறு கையிலிருக்கும் `கப்பில் ஒத்தப் பொட்டு கூடச் சிந்தாமல் பிடித்து விடுவான். அதை வேடிக்கை பாக்கதுக்குன்னே சிறுசும் பெருசுமாய் ஒரு கூட்டம் தினசரி வந்தது. பிறகு அதுக்காக ஒருநாள் அவளைப் போட்டு விரட்டினா காளியம்மா. `சரி சரி இனிமே செய்யமாட்டேன்னு’ சொல்லி பிறகு ஒழுங்கா ஆத்தினான்.

அதேமாதிரி துட்டு இல்லாம வந்து நிக்கிற கஷ்டப்பட்டதுகளுக்கு இட்டிலி வடைகளை அவன் சும்மா தூக்கிக் கொடுக்கிறதை கண்டுபிடிச்சு அதுக்காக ஒரு நாள் வசவு உரிச்சுட்டாள் காளியம்மா. சரி சரி இனிமே இப்படி செய்யலேன்னு சத்தியம் பண்ணினான். ஆத்தா வந்து விரட்டுறதும் அய்யா சரிசரின்னு மண்டையை ஆட்டுறதும் கருப்பசாமிக்கு விளையாட்டாயிருந்தாலும் பாதகத்தி பாடாப்படுத்-துறாளேன்னு நல்லம்மாப்பாட்டி சொல்ற மாதிரி தானும் நினைச்சுக்கிருவான்.

காளியம்மா சுடு சொல் ஏதும் சொல்லிறக்கூடாதேன்னு பயந்து பயந்து இசக்கிமுத்து மங்கு மங்குன்னு ராவாப் பகலா வேலை பார்த்தாள். யேவாரமும் மோசமில்லாம நடந்தது. அவளும் அதிகமாக ஒண்ணும் அவனை வையவில்லை அதுக்குப்பிறகு அவுகளுக்கு ரெண்டு பொம்பிளைப் பிள்ளைகளும் ஒரு பையனும் பிறந்தது. அதனால் இசக்கிமுத்துக்கு இடுப்பொடிய வேலை இருந்தது. வேற எதப்பத்தியும் நினைக்க நேரமேயில்லை.

`தன் சேட்டைகளையும் கிறுக்குத்தனங்களையும் விட்டு இத்தனை வருசத்துக்குப் பிறகாச்சும் பய ஒரு வசத்துக்கு வந்தானே’ என்று இசக்கிமுத்துவின் அய்யாவும், தான் பட்ட துயரமெல்லாம் போய் தான் ஆசைப்பட்டபடிக்கே நாலுபேரைப் போல தன் புருசனும் ஏதோ சம்பாத்தியம் பண்ணுகிறானே என்று காளியம்மாவும் ஆசுவாசப்பட்டுக் கொண்டார்கள்.

ஆனாலும் திடீர் திடீரென்று, சமயங்களில் கடைக்கு சாப்பிட வருகிறவர்களிடம் ``தாங்கள் என்ன அருந்துகிறீர்கள்? தாக சாந்திக்கு காப்பி தரட்டுமா’’ என்று அவன் கூத்துக்காரர்களைப்போல பேசுவதையும் ஆளில்லாத சமயங்களில் ஒரு வடையைத் தூக்கிப் போட்டு கருப்பசாமியுடன் பந்து விளையாட்டு விளையாடுவதையும் போல சில சின்னச்சின்ன விஷயங்களை மட்டும் சாகிறவரைக்கும் காளியம்மாவால் திருத்தவே முடியவில்லை.

நன்றி: வெயிலோடு போய்

Apr 10, 2010

வெயிலோடு போய்…ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன்

 

இதுதான் ‘சசி’ இயக்கி தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க யதார்த்த படமாகப் பாராட்டப்படுகிற ‘பூ’ திரைப்படத்தின் கதை. 25 ஆண்டுகளுக்கு முன் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய சிறுகதையை அதன் சாரம் கெடாமல் மெருகேற்றி திரைக்கதையாக்கி உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சசி. வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கிற இக்கதை படிப்பவர் மனதை இன்றும் தைக்கும். ‘இளம் வெயிலும் மிதமான காற்றும் இசைவான கடலலையும் எல்லோருக்கும் வாய்க்க நாம் கதை எழுதுவதுதான் ஒரே வழி’ என்கிற ச.தமிழ்ச்செல்வன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது பத்தமடையில் வாழ்கிறார்.

மாரியம்மாளின் ஆத்தாளுக்கு முதலில் திகைப்பாயிருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படி தவிச்சுப் போயி ஓடியாந்திருக்கு என்று புரியவில்லை.

‘‘ஓம் மாப்பிள்ளை வல்லியாடி’’ என்று கேட்டதுக்கு ‘பொறு பொறு’ங்கிற மாதிரி கையைக் காமிச்சிட்டு விறுவிறுன்னு உள்ள போயி ரெண்டு செம்பு தண்ணியை கடக்குக் கடக்குன்னு குடிச்சிட்டு ‘ஸ்… ஆத்தாடி’ன்னு உட்கார்ந்தாள்.
‘‘ஓம் மாப்பள்ளை வல்லியாடி?’’
‘‘அவரு… ராத்திரி பொங்க வைக்கிற நேரத்துக்கு வருவாராம். இந்நியேரமே வந்தா அவுக யேவாரம் கெட்டுப் போயிருமாம்.’’
‘‘சரி… அப்பன்னா நீ சித்த வெயில் தாழக் கிளம்பி வாறது… தீயாப் பொசுக்குற இந்த வெயில்ல ஓடியாராட்டா என்ன…’’
‘‘ஆமா. அது சரி… பொங்கலுக்கு மச்சான் அவுக வந்திருக்காகளாமில்ல…’’
ஆத்தாளுக்கு இப்ப விளங்கியது.
அவளுடைய மச்சான் – ஆத்தாளின் ஒரே தம்பியின் மகன் தங்கராசு இன்னிக்கி நடக்கிற காளியம்மங்கோயில் பொங்கலுக்காக டவுனிலிருந்து வந்திருக்கான். அது தெரிஞ்சுதான் கழுத இப்படி ஓடியாந்திருக்கு.

‘‘மதியம் கஞ்சி குடிச்சிட்டு கிளம்பினியாட்டி’’ என்று கேட்டதுக்கு கழுத ‘இல்லை’ யென்கவும் ஆத்தா கஞ்சி ஊத்தி முன்னால் வைத்து குடிக்கச் சொன்னாள்.

உடம்பெல்லாம் காய்ஞ்சு போயி காதுல கழுத்தில ஒண்ணுமேயில்லாம கருத்துப் c28c9d06-5554-40ae-91e6-8c71b06cdfea போன அவளைப் பார்க்கப் பார்க்க ஆத்தாளுக்குக் கண்ணீர்தான் மாலை மாலையாக வந்தது. தங்கராசு மச்சானுக்குத்தான் மாரியம்மா என்று சின்னப் பிள்ளையிலேயே எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். கள்ளன் – போலீஸ் விளையாட்டிலிருந்து காட்டிலே கள்ளிப்பழம் பிடுங்கப் போகிற வரைக்கும் ரெண்டு பேரும் எந்நேரமும் ஒண்ணாவேதான் அலைவார்கள். கடைசிக்கி இப்படி ஆகிப்போச்சே என்று ஆத்தாளுக்கு ரொம்ப வருத்தம். எப்படியெல்லாமோ மகளை வச்சிப் பாக்கணுமின்னு ஆசைப்பட்டிருந்தாள்.

பேச்சை மாற்றுவதற்காக ‘‘அண்ணன் எங்கத்தா’’ என்று கேட்டாள். ‘‘நீங்க ரெண்டு பேரும் வருவீக, அரிசிச் சோறு காச்சணும்னிட்டு அரிசி பருப்பு வாங்கியாறம்னு டவுனுக்கு போனான்.’’ கஞ்சியைக் குடித்துவிட்டு சீனியம்மாளைப் பார்க்க விரைந்தாள் மாரி. சீனியம்மள்தான் மச்சான் வந்திருக்கிற சேதியை டவுணுக்கு தீப்பெட்டி ஒட்டப் போன பிள்ளைகள் மூலம் மாரியம்மாளுக்குச் சொல்லிவிட்டது. சேதி கேள்விப்பட்டதிலிருந்தே அவள் ஒரு நிலையில் இல்லை. உடனே ஊருக்குப் போகணுமென்று ஒத்தக்காலில் நின்றாள். ஆனால், அவள் புருஷன் உடனே அனுப்பி விடவில்லை. நாளைக் கழிச்சுப் பொங்கலுக்கு இன்னைக்கே என்ன ஊரு என்று சொல்லிவிட்டான். அவ அடிக்கடி ஊருக்கு ஊருக்குன்னு கிளம்பறது அவனுக்கு வள்ளுசாப் பிடிக்கவில்லை. அவ ஊரு இந்தா மூணு மைலுக்குள்ளே இருக்குங்கிறதுக்காக ஒன்ரவாட்டம் ஊருக்குப் போனா எப்படி? அவ போறதப் பத்திகூட ஒண்ணுமில்ல. போற வட்டமெல்லாம் கடையிலேருந்து பருப்பு, வெல்லம் அது இதுன்னு தூக்கிட்டு வேற போயிர்றா. இந்தச் சின்ன ஊர்லே யேவாரம் ஓடுறதே பெரிய பாடா இருக்கு. இப்ப கோயில் கொடைக்குப் போணுமின்னு நிக்கா என்று வயிறு எரிந்தான். ஆனாலும், ஒரேடியாக அவளிடம் முகத்தை முறிச்சுப் பேச அவனுக்கு முடியாது. அப்பிடி இப்பிடியென்று ரெண்டு புலப்பம் புலம்பி அனுப்பி வைப்பான்.

இதைப் பத்தியெல்லாம் மாரிக்கு கவலை கிடையாது. அவளுக்கு நினைத்தால் ஊருக்குப் போயிறணும். அதுவும் மச்சான் அவுக வந்திருக்கும்போது எப்பிடி இங்க நிற்க முடியும்?

அவ பிறந்து வளர்ந்ததே தங்கராசுக்காத்தான் என்கிற மாதிரி யல்லவா வளர்ந்தாள். அவள் நாலாப்புப் படிக்கிறபோது தங்கராசின் அப்பாவுக்கு புதுக்கோட்டைக்கு மாற்றலாகி குடும்பத்தோடு கிளம்பியபோது அவள் போட்ட கூப்பாட்டை இன்னைக்கும் கூட கிழவிகள் சொல்லிச் சிரிப்பார்கள். நானும் கூட வருவேன் என்று தெருவில் புரண்டு கையைக் காலை உதறி ஒரே கூப்பாடு. அதைச் சொல்லிச் சொல்லி பொம்பிள்ளைகள் அவளிடம், ‘‘என்னட்டி ஒம் புருசங்காரன் என்னைக்கு வாரானாம்’’ என்று கேலி பேசுவார்கள். ஆனால், அவள் அதையெல்லாம் கேலியாக நினைக்கவில்லை. நிசத்துக்குத்தான் கேட்கிறார்கள் என்று நம்புவாள். ஊர்ப் பிள்ளைகளெல்லாம் கம்மாய் தண்ணியில் குதியாளம் போடும்போது இவள் மட்டும் கம்மாய் பக்கமே போக மாட்டாள். சும்மாத் தண்ணியிலே குதிச்சா சொறிபிடித்து மேலெல்லாம் வங்கு வத்தும். டவுன்ல படிக்கிற மச்சானுக்குப் பிடிக்காது. அதேபோல கஞ்சியக் குடிச்சி வகுறு வச்சிப்போயி மச்சான் ‘ஒன்னைக் கட்ட மாட்டேன்’னு சொல்லிட்டா என்னாகுறது? சும்மா மச்சான் மச்சான் என்று சொல்லிக்கொண்டிருந்தவள் பெரிய மனுஷியானதும் மச்சானைப் பத்தி நினைக்கவே வெட்கமும் கூச்சமுமாயிருந்தது. கொஞ்ச நாளைக்கி. வெறும் மச்சானைப் பத்தின நினைப்போடு அப்புறம் கனாக்களும் வந்து மனசைப் படபடக்க வைத்தன. டவுனுக்கு தீப்பெட்டி ஒட்டப் போகையிலும் வரையிலும், ஓட்டும்போதும் மச்சானின் நினைப்பு இருந்துகொண்டே இருக்கும்.

பஞ்சத்திலே பேதி வந்து அவ அய்யா மட்டும் சாகாம இருந்திருந்தா மச்சானுக்குப் பொருத்தமா அவளும் படிச்சிருப்பா. அது ஒரு குறை மட்டும் அவ மனசிலே இருந்து கொண்டிருந்தது. அதுவும் போயிருச்சு மச்சான் ஒரு தடவை அவுக தங்கச்சி கோமதி கலியாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தபோது. எந்த வித்தியாசமும் பாராம ஆத்தாளோடவும் அண்ணனோடவும் ரொம்பப் பிரியமா பேசிக்கிட்டிருந்த மச்சானை கதவு இடுக்கு வழியாப் பாத்துப் பாத்து பூரிச்சுப் போனா மாரியம்மா.
மச்சானைப் பத்தின ஒவ்வொரு சேதியையும் சேர்த்துச் சேர்த்து மனசுக்குள்ளே பூட்டி வச்சிக்கிட்டா. வருஷம் ஓடினாலும் பஞ்சம் வந்தாலும் அய்யா செத்துப் போயி வயித்துப் பாட்டுக்கே கஷ்டம் வந்தாலும் அவனைப் பத்தின நினைப்பு மட்டும் மாறவே இல்லை. அதனாலேதான் தங்கராசு அவளுக்கில்லை என்று ஆன பிறகும்கூட அவளால் அண்ணனையும் ஆத்தாளையும் போலத் துப்புரவாக வெறுத்துவிட முடியவில்லை.

அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கு, மாமனும் அத்தையும் வந்தது. தங்கராசு மச்சான் கலியாணத்துக்கு பரிசம் போடத்தான் மாமனும் அத்தையும் வருவாகன்னு இருந்தபோது, வேற இடத்திலே பொண்ணையும் பாத்து பத்திரிகையும் வச்சிட்டு சும்மாவும் போகாம மாமா அண்ணங்கிட்டே, ‘‘கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னக்கூட்டியே வந்திரணும்பா. கோமதி கலியாணத்தை முடிச்சு வச்ச மாதிரி வேலைகளையும் பொறுப்பா இருந்து நீதான் பாத்துக் கணுமப்பா’’ என்று வேறு சொல்லிவிட்டுப் போனார். அவுக அங்கிட்டுப் போகவும் ஆத்தாளிடம் வந்து அண்ணன் ‘தங்கு தங்’கென்று குதித்தான். ‘‘என்னய என்ன சுத்தக் கேணப்பயனு நெனச்சுட்டாகளா’’ என்று. ‘கோமதி கலியா ணத்துக்கு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு அண்ணன் செய்தான்னு சொன்னா அது நாளக்கி நம்ம தங்கச்சி வந்து வாழப் போற வீடு, நாம வந்து ஒத்தாசை செய்யாட்டா யாரு செய்வா என்று நினைத்து செய்தது. ஆனா, இப்படி நகைநட்டுக்கு ஆசைப்பட்டு மாமா அந்நியத்தில போவாகன்னு யாரு கண்டது. என்ன மாமானும் மச்சானும்.’ என்று வெறுத்துவிட்டது அவனுக்கு.ஆனால், அண்ணன் ஏறிக்கொண்டு பேசியபோது ஆத்தா பதிலுக்கு கூப்பாடுதான் போட்டாள்.

‘‘என்னடா குதிக்கே? படிச்சு உத்தியோகம் பாக்குற மாப் பிள்ளை தீப்பெட்டியாபீசுக்கு போயிட்டு வந்து வீச்ச மெடுத்துப் போயிக் கெடக்கிற கழுதயக் கட்டுவான்னு நீ நெனச்சுக்கிட்டா அவுக என்னடா செய்வாக’’ என்று ஆத்திரமாகப் பேசினாள். அப்படி அப்போதைக்குப் பேசினாலும் அன்னைக்கு ராத்திரி செத்துபோன அய்யாவிடம் முறையீடு செய்து சத்தம் போட்டு ஒப்பாரி வைத்தாள். ‘‘ஏ… என் ராசாவே… என்ன ஆண்டாரே! இப்பிடி விட்டுப் போனீரே… மணவடையிலே வந்து முறைமாப்பிள்ளை நானிருக்க எவன் இவ கழுத்தில தாலி கட்டுவான்னு சொல்லி என்னச் சிறையெடுத்து வந்தீரே… இப்பிடி நிர்க்கதியா நிக்க விடவா சிறையெடுத்தீர் ஐயாவே… தம்பீ தம்பீன்னு பேகொண்டு போயி அலைஞ்சேனே… அவனைத் தூக்கி வளத்தேனே… என் ராசாவே… எனக்குப் பூமியிலே ஆருமில்லாமப் போயிட்டாகளே…’’
பக்கத்துப் பொம்பிளைகளெல்லாம் வைதார்கள், ‘‘என்ன இவளும் பொம்பளதான… அப்பயும் இப்படியா ஒப்பாரி வச்சு அழுவாக’’ என்று.

பிறகு அண்ணன் வந்து, ‘‘இப்பம் நீ சும்மாருக்கியா என்ன வேணுங்கு’’ என்று அரட்டவும்தான் ஒப்பாரியை நிப்பாட்டினாள்.

மறுநாள் அண்ணன், ‘‘தங்கராசு கலியாணத்துக்கு ஒருத்தரும் போகப்புடாது’’ன்னு சொன்னபோது மறுபேச்சுப் பேசாமல் ஆத்தாளும் சரியென்று சொல்லிவிட்டாள்.
‘அவனுக்கும் நமக்கும் இனிமே என்ன இருக்கு’ என்று சொல்லிவிட்டாள்.

ஆனால், மாரியம்மா அப்படியெல்லாம் ஆகவிடவில்லை. பலவாறு அண்ணனிடமும் ஆத்தாளிடமும் சொல்லிப் பார்த்தாள். ஒன்றும் மசியாமல் போக, கடைசியில்…
‘நீங்க யாரும் மச்சான் கலியாணத்துக்குப் போகலைன்னா நான் நாண்டுக்கிட்டுச் செத்துருவேன்’ என்று ஒரு போடு போட்டதும் சரியென்று அண்ணன் மட்டும் கலியாணத்துக்குப் போய்வந்தான். எம்புட்டோ கேட்டுப்பாத்தும் கலியாணச் சேதி எதையும் அவன் மாரியம்மாளுக்கோ ஆத்தாளுக்கோ சொல்லவில்லை.
‘எல்லாம் முடிஞ்சது’ என்பதோடு நிறுத்திக்கொண்டான்.

தன் பிரியமான மச்சானின் கல்யாணம் எப்பிடியெல்லாம் நடந்திருக்கும் என்று மாரியம்மாள் தினமும் பலவாறாக தீப்பெட்டி ஒட்டியபடிக்கே நினைத்து நினைத்துப் பார்ப்பாள்.
‘எங்கிட்டு இருந்தாலும் நல்லாருக்கட்டும்’ என்று கண் நிறைய, மனசு துடிக்க வேண்டிக்கொள்வாள்.

தங்கராசு கலியாணத்துக்குப் போய்விட்டு வந்த அண்ணன் சும்மா இருக்கவில்லை. அலைஞ்சு பெறக்கி இவளுக்கு மாவில்பட்டியிலேயே அய்யா வழியில் சொந்தமான பையனை மாப்பிளை பார்த்துவிட்டான். சின்ன வயசிலே நாகலாபுரத்து நாடார் ஒருத்தர் கடையில் சம்பளத்துக்கு இருக்க மெட்ராசுக்குப் போய் வந்த பையன். மாரியம் மாளோட நாலு பவுன் நகையை வித்து மாவில்பட்டியிலேயே ஒரு கடையையும் வைத்துக் கொடுத்துவிட்டான்.

இத்தனைக்குப் பிறகும், கோவில் கொடைக்கு மச்சான் வந்திருக்காகன்னு தெரிஞ்சதும் உடனே பாக்கணுமின்னு ஓடியாந்துட்டா. அவுக எப்படி இருக்காக? அந்த அக்கா எப்படி இருக்காக? மச்சானும் அந்த அக்காளும் நல்லா பிரியமா இருக்காகளான்னு பாக்கணும் அவளுக்கு.

ஆனா, வந்த உடனேயே மச்சானையும் அந்த அக்கா ளையும் பார்க்கக் கிளம்பிவிடவில்லை. மத்தியான நேரம், சாப்புட்டு சித்த கண்ணசந்திருப்பாக என்று இருந்துவிட்டு சாயந்தி ரமாகப் போனாள்.

கட்டிலில் படுத்தவாக்கில் பாட்டையாவுடன் பேசிக் கொண்டிருந்தான் மச்சான்.

‘‘குடும்புடுறேன் மச்சான்’’

என்று மனசு படபடக்கச் சொல்லிவிட்டு உள்ளே போனாள். தங்கராசின் அப்பத்தாளும் அந்த அக்காளும் அடுப்படியில் வேலையாக இருந்தார்கள். பொன்னாத்தா இவளைப் பிரியத்துடன் வரவேற்றாள். அந்த அக்கா ரொம்ப லட்சணமாக இருந்தார்கள். நகைநட்டு ரொம்ப போட்ருப் பாகன்னு பாத்தா அப்படி ஒண்ணும் காணம். கழட்டி வச்சிருப்பாக என்று நினைத்துக்கொண்டாள். ரொம்ப பிரியம் நிறைந்த பார்வையுடன் அந்த அக்காளுடன் வாஞ்சையோடு பேசினாள் மாரியம்மா.

‘பேசிக்கிட்டிருங்க, இந்தா வாரே’ன்னு பொன்னாத்தா கடைக்கு ஏதோ வாங்கப் போகவும் மாரியம்மா அந்த அக்காளிடம் இன்னும் நெருங்கி கிட்ட உட்கார்ந்து கொண்டு கைகளைப் பாசத்துடன் பற்றிக் கொண்டாள். ரகசியமான, அதே சமயம் ரொம்பப் பிரியம் பொங்கிய குரலில், ‘‘யக்கா… மாசமாயிருக்கிகளா’’ என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

பட்டென்று அந்த அக்கா ஒரு நெடிப்புடன்,
‘‘ஆம, அது ஒண்ணுக்குத்தான் கேடு இப்பம்’’
என்று சொல்லிவிட்டாள். மாரியம்மாளுக்குத் தாங்க முடிய வில்லை. அதைச் சொல்லும்போது லேசான சிரிப்புடன்தான் அந்த அக்கா சொன்னாலும் அந்த வார்த்தைகளில் ஏறியிருந்த வெறுப்பும் சூடும் அவளால் தாங்க முடியாததாக, இதுநாள் வரையிலும் அவள் கண்டிராததாக இருந்தது. ஒரு ஏனத்தைக் கழுவுகிற சாக்கில் வீட்டின் பின்புறம் போய் உடைந்து வருகிற மனசை அடக்கிக் கொண்டாள். உள்ளே மச்சான் அவுக பேச்சுக்குரல் கேட்டது.

‘‘மாரியம்மா போயிட்டாளா’’ என்று உள்ளே வந்த மச்சான் அந்த அக்காளிடம்’’ ‘‘காப்பி குடிச்சிட்டியா ஜானு’’ என்று பிரியமாகக் கேட்டதும் படக்குனு அந்த அக்கா,

‘‘ஆஹாகாகா… ரொம்பவும் அக்கறைப்பட்டுக் குப்புற விழுந்துறாதிக…’’ என்று சொல்லிவிட்டது.
ரொம்ப மெதுவான தொண்டையிலே பேசினாலும் அந்தக் குரல் இறுகிப்போய் வெறுப்பில் வெந்து கொதிக்கிறதாய் இருந்தது.

வெளியே நின்றிருந்த மாரியம்மாளுக்கு தலையை வலிக்கிற மாதிரியும் காய்ச்சல் வர்ற மாதிரியும் படபடன்னு வந்து. கழுவின ஏனத்தை அப்படியே வைத்துவிட்டு பின்புறமாகவே விறுவிறுவென்று வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டாள்.

ஆத்தாளும் அண்ணனும் கேட்டதுக்கு ‘மண்டையடிக்கி’ என்று சொல்லிவிட்டாள்.

சிறு வயசில் கள்ளிப்பழம் பிடுங்கப் போய் நேரங்கழித்து வரும்போது வழியில் தேடி வந்த மாமாவிடம் மாட்டிக் கொண்டு முழித்த தங்கராசின் பாவமான முகம் நினைப்பில் வந்து உறுத்தியது. தண்ணியைத் தண்ணியைக் குடித்தும் அடங்காமல் நெஞ்சு எரிகிற மாதிரியிருந்தது. அந்த அக்காளின் வீட்டில் நகைநட்டு குறையாகப் போட்டதுக்காக தங்கராசின் அம்மா ரொம்ப கொடுமைப்படுத்துகிறாளாம் என்று சீனியம்மா சொன்னதும், அந்த அக்காள் கொடும் வெறுப்பாகப் பேசினதும் நினைப்பில் வந்து இம்சைப் படுத்தியது.

எல்லாத்துக்கும் மேலே அந்த வார்த்தைகளது வெறுப்பின் ஆழம், தாங்க முடியாத வேதனையைத் தந்தது. ராத்திரி ஊரோடு கோயில் வாசலில் பொங்கல் வைக்கப் போயிருந்தபோது இவ மட்டும் படுத்தே கிடந்தாள். ஒவ்வொன்றாக சிறுவயதில் அவனோடு பழகினது… அய்யாவைப் பத்தி… ஆத்தாளைப் பத்தி… அண்ணனைப் பத்தி… எல்லோரும் படுகிற பாட்டைப் பத்தி… அந்த அக்காளைப் பத்தி நினைக்கக்கூட பெருந்துன்பமாயிருந்தது. குமுறிக்கொண்டு வந்தது மனசு.

ராத்திரி நேரங்கழித்து அவ புருஷன் வந்தான். ரெண்டு நாளாய் நல்ல யேவாரம் என்றும் தேங்காய் மட்டுமே முப்பத்திரெண்டு காய் வித்திருக்கு என்றும் பொரிகடலைதான் கடைசியில் கேட்டவுகளுக்கு இல்லையென்று சொல்ல வேண்டியதாப் போச்சு என்றும் உற்சாகமாக ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று இவள் ஏதுமே பேசாமல் ஊமையாக இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்து, ‘‘ஏ நாயி, நாம் பாட்டுக்கு கத்திக்கிட்டிருக்கேன். நீ என்ன கல்லுக்கணக்கா இருக்கே’’
என்று முடியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான்.

உடனே அணை உடைத்துக் கொண்டதுபோல ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவன் பதறிப்போய் தெரியாமல் தலையைப் பிடித்துவிட்டேன் என்று சொல்லி, தப்புத்தான் தப்புத்தான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்தான். அவள் அழுகை நிற்கவில்லை. மேலும் மேலும் ஏக்கமும் பெருமூச்சம் வெடிப்பும் நடுக்கமுமாய் அழுகை பெருகிக் கொண்டு வந்தது.

ஏதோ தான் பேசிவிட்டதற்காகத்தான் அவள் இப்படி அழுகிறாள் என்று நினைத்துக்கொண்டு ரொம்ப நேரத்துக்கு அவளை வீணே தேற்றிக் கொண்டிருந்தான் அவன்.

*****

நன்றி : ஆம்பல்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்