Oct 5, 2022

நான் என்ன படிக்கிறேன் ஏன்? சி. சு. செல்லப்பா

சென்ற இலக்கிய வட்டம் அரங்கில் எதுக்காக நான் எழுதுகிறேன் என்பதற்கு என்னால் திருப்தியாக விளக்கம் தரமுடியவில்லை என்று கூறி முடித்தேன். ஏனென்றால் எழுதவைக்கதூண்டும் சக்தி அல்லது சக்திகள் எவை என்று திட்டமாக வகுத்துக்காட்ட முடியாது. எழுதுகிற ஒவ்வொருவரும் ஒரு சக்தியை குறிப்பிட்டாலும் பல சக்திகளைச்  சுட்டிச் சொன்னாலும் இத்தனையோடும்கூட ஏதோ ஒன்று (Plus One) இருக்கிறது என்பதுதான் படுகிறது எனக்கு. இந்த எதோ ஒன்று என்பது படைப்பாளியின் பரவச நிலையிலே எழுவது. இந்தப் பரவச நிலை ஒருவனுக்கு ஏற்படாது போனால் அவன் படைப்பாளி ஆகமுடியாது. அருள் என்ற வார்த்தையைக்கூட நாம் உபயோகிக்கலாம். இந்த அருள் நிலையிலே பணமோபுகழோஆத்ம திருப்தியோகொள்கையோ அழிந்துபோய்ஒரு அர்ப்பணப் போக்காகதன்னை வெளிவிளக்கம் செய்துகொள்வதிலேயே - அதுவும் தன்னையறியாமலேயே - ஒரு முனைப்பான வெளியீடு ஏற்படுகிறது. இந்தப் பரவச நிலையில் உருவான படைப்பைப்பற்றி பிறகு ஒரு நிதான நிலையிலே இருந்து அறிவுப் பார்வையில் விளக்கம் பார்க்கிறபோது ஏதேதோ சொல்லிப் பார்த்தாலும் சமாதானம் ஏற்படுகிறதில்லை.

என்னசென்ற வட்டத்து தலைப்பின் தொடரா இது என்று உங்களுக்குத் தோன்றக்கூடும். இப்போது என்னை கேட்டிருப்பது என்ன படிக்கிறேன். ஏன்? என்பது பற்றி. மேலே கூறினதெல்லாம் இந்தக் கேள்வி சம்பந்தமாக தேவை இல்லை என்பதுக்காகத்தான் சொன்னேன். இது சம்பந்தமாக

எனக்கு திட்டமாகச் சொல்ல முடியும். என்ன படிக்கிறேன், ஏன் படிக்கிறேன் என்பதுக்கு பதில் என் அறிவின் சுவாதீனத்துக்கு உள்ளடங்கிய விஷயம்.

முதலில் என் வாசிப்புபற்றி கேட்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கூட வாசிப்பைப்பற்றி இல்லையேஇருந்தாலும் சொல்லிவிடுகிறேன். இந்த தேசியம் மட்டும் என் கலாசாலை நாட்களில் குறுக்கிட்டிராவிட்டால் வெறுப்பு இல்லாமல் இங்கிலீஷை ஒழுங்காகப் படித்துத் தொலைத்துசி. எஸ். செல்லப்பா பி. ஏ. என்று மணிக்கொடிகலைமகள்பத்திரிகைகளில்


ஆசிரியர்கள் போடும் பெருமை கிடைத்திருக்கும் எனக்கு. போகிறது
இங்கிலீஷ் பழிவாங்கினதுக்காக வருத்தம் இல்லை. சாதிப் பெயர் போல பட்டமும் இப்போது இரண்டாம் பட்சமாகத்தானே ஆகிவிட்டது!

நான் என்ன படித்திருக்கிறேன். படிக்கிறேன் என்பதுக்கு இந்த முன் பாரா அவசியம். ஆனதால் சொன்னேன்கலாசாலை நாட்களில் நான் வாசித்ததே கிடையாது - அதாவது தலையெழுத்தாக படிக்கவேண்டியிருந்த குறிப்பிட்ட புஸ்தகங்களைத் தவிர. காலேஜ் லைப்ரரி பக்கம் திரும்பமாட்டேன். இலக்கியம் என்று ஒரு பிரிவு இருப்பதாகவே நான் கருதவில்லை. :கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்பிரை:ட் அண்டு பிரிஜு:டிஸ்டிரையல் ஆஃப் ரிச்சர்ட் ஃபிவரால்எவான் ஹாரிங்டன் - இந்த நாவல்கள் நான்டிடெயில்:ட் நூல்களாக இருந்ததால் படித்துத்தீரவேண்டி இருந்தது. இவைகளை பாடமாகப்படித்தும்கூட டிக்கன்ஸ்ஜேன் ஆஸ்டின்மெர்:டித் இவர்களது இதர நூல்களை படித்துப் பார்ப்போமே என்ற ஆசைகூட ஏற்பட்டதில்லை. ஷெர்லக் ஹோமஸ் கதை ஒன்றை என் ஹைஸ்கூல் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் படித்துக்காட்டினபடியால் ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளை எல்லாம்கலாசாலை லைப்ரரியில் படித்து கானன்:டாயில்லின் இதர நூல்கள் சிலதை விரும்பிப் படித்தேன். அந்த சுவாரஸ்யமும் அதோடு நின்றுவிட்டது.


இலக்கியப் படிப்புப் பயிற்சி எனக்கு இல்லையே தவிரஅரசியல் படிப்புப் பயிற்சி மட்டும் எனக்கு ஏற்பட்டது. காந்திஜியின் 'யங் இந்தியா', 'ஹரிஜன்முதல் பி. ஜி. ஹார்னிமன் பத்திரிகை வரையிலும்சுரேந்திரநாத் பானர்ஜி சொற்பொழிவுகள் முதல் சத்தியமூர்த்தி பேச்சுகள் வரையிலும் ஆஷ் கொலை விவரம் முதல் லாகூர் சதி வழக்கு கேஸ் வரையும், இந்தியா பற்றிய பிரிட்டிஷ் காமன்ஸ் சபை விவாதங்கள் முதல் வித்தல்பாய் படேல் தலைவராகக் கொண்டு நடக்கும் இந்திய அசெம்பிளி விவாதம் வரையிலும்,கோகலேதிலகர் வாழ்க்கை சரிதம் முதல் சாவர்க்கர் சிறைவைப்பு வரையிலும் சம்பந்தமான சகல நூல்களையும் படிப்பேன். என் அரசியல்தேசிய உணர்வுக்குக் காரணமாக இருந்தவர் என் தகப்பனார். அவர் சொல்லும் நூல்களை தேடிப் பிடித்துப் படிப்பேன். ஆகவே கலாசாலை நாட்களிலும் அதற்கு கொஞ்சம் பின்னும் நான் என் தேசிய உணர்ச்சிஅறிவு வளர்ச்சிக்காகவே நான் படித்தேன். அதுக்கு பயன்படும் நூல்களையே படித்தேன். அந்த நூல்களின் பட்டியல் இங்கு தேவையில்லை.


1933-ல் சட்டமறுப்பு இயக்கம் நின்றுவிட்ட பிறகுசட்டசபைக்குள் நுழைந்து சுதந்திரப் போராட்டத்தை நடத்தும் முறை கையாளப்பட்டதும்எனக்கு கொஞ்சங் கொஞ்சமாக அத்தகைய நூல்கள்பத்திரிகைகள் இவைகளை படிப்பதில் உள்ள ஆர்வம் குறைந்தது. தேசிய உணர்ச்சி குறையவில்லை. படிப்பதுதான் குறைந்துபோய்விட்டது. கலாசாலையை விட்டு வெளியேறி நான் வாழ்க்கையில் பிழைப்பில் ஈடுபட இருந்ததும் அதுக்கு உதவியிருக்கக்கூடும்.


இந்த சமயத்தில்நான் 'மாடர்ண் ரிவ்யூபடிக்க ஏற்பட்டது.அரசியல் கட்டுரைகளுக்காகப் படிக்கப்போய் அதில் வந்த ஒன்றிரு கதைகள்தாகூரின் நாவல் இவைகளில் மனது ஈடுபட்டது. கதைகளில் ஒரு ருசி ஏற்படவேராய்ஸ் வீக்கிலி என்ற ஒரு பாத்திரிகையில் வரும் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். கதைகள் எனக்குப் பிடித்தால் திரும்பத் திரும்பப் படிப்பதுண்டு. தற்செயலாக என் கைக்கு 'டெஸ்வந்தது. ஹார்டியின் மற்ற நாவல்களை எல்லாம் தேடி உடனே படிக்க விரும்பினேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதுவரையில்

நாவல்கதை இவைகளில் கவனம் செலுத்தாதவனுக்கு திடீரென ஒரு பித்து மாதிரி ஏற்பட்டது. ஆனால் எதெதைப் படிப்பது என்று எனக்குத் தெரியாது. நல்லது, மட்டமானது தெரியாது. கலாசாலை நாட்களில் கிடைத்த சந்தர்ப்பத்தையும் இழந்துவிட்டுஒரு கிராமத்தில் போய் இருக்க ஏற்படவேநூல்களை - இலக்கியப் புஸ்தகங்களைப் பற்றித் தெரிய எனக்கு வாய்ப்பே இல்லை. அப்படி இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களும் கிடையாது. பி. ஏ. படித்திருந்தாலும் எனக்கு மேலே அவர்கள்கிராமத்தில்திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள ஸ்ரீவைகுண்டம் என்ற ஊரில் இருக்கிறபோதுதான் சுதந்திரச் சங்குஆனந்த விகடன்மணிக்கொடிகலைமகள் ஆகிய பத்திரிகைகளைப் படிக்க ஏற்பட்டது. கதைகளை எல்லாம் படித்தேன். இந்தக் கதைகளைப்படிக்கப் படிக்க எனக்கு கதை படிக்கும் ஆசை வெறியாகிவிட்டது. கொஞ்சம் இருந்த அரசியல் நூல்கள்பத்திரிகைக் கட்டுரைகள் உறவும் போய்விட்டது. ஆனால் நூல்கள் அங்கே கிடைத்தால்தானே.

இதுக்குள்ளே ஒருநாள் திடீரென நான் எழுத்தாளனாகிவிட்டேன், எப்படி ஆனேன் என்பதே தெரியாமல். அந்தக் கதையும் இங்கு தேவையில்லை. ஒன்று மட்டும் சொல்லிவிடுகிறேன். உலகத்திலே சிறந்த சிறுகதாசிரியர்கள் என்று கருதப்படுபவர்களில் ஒருவரது கதைஏன், பெயர்கூட தெரியாமலே நான் ஒரு கதாசிரியனானேன். ஆகவே முன்பு அரசியல் அறிவுக்காகப்படித்தேன் என்று சொல்ல முடிந்ததுபோல் கதாசிரியன் ஆவதுக்காக நான் படித்தேன் என்று சொல்வதுக்கில்லை. அல்லது எனக்குப் படிக்கக் கிடைத்த சில கதைகள்நாவல்களைக் கொண்டு கதைக்காரன் ஆனேன் என்று சொல்வதுக்கும் இல்லை. ஏதோ, அன்றைய தமிழ் பத்திரிகைகளில் வரும் சொந்தக் கதைகள்மொழிபெயர்ப்புகள், அபூர்வமாகக் கிடைக்கும் இங்கிலீஷ் கதைகளைத்தான் நான் படித்துக்கொண்டிருந்தேன். மாதவய்யாவ. வே. சு. அய்யர் சிறுகதை நூல்கள் கைக்கு கிடைத்ததைத் திரும்பத் திரும்பப் படிப்பேன். சிறுகதைகள்தான் படிப்பேன். நாவல் படிக்கும் விருப்பமே கிடையாது.


ஆகவே 1936 வரையில்ஸாஸாவின் பொம்மை புகழ் செல்லப்பாவாகத் தெரியவந்து சென்னைக்கு பத்திரிகைத் துறையில் ஈடுபட வந்தது வரையில், அதாவது எனக்கு இருபத்தி நாலு வயது வரையில்என்ன படிக்கிறேன், ஏன் படிக்கிறேன் என்பதுக்கு சத்தான பதில் சொல்லத்தக்க அளவுக்கு எனக்குப் படிப்பு கிடையாது என்றே சொல்லவேண்டும். சென்னை வந்து கு..ரா., சிதம்பர சுப்ரமண்யன்சிட்டி இவர்களுடன் பழக ரம்பித்த நாட்களில்தான் எனக்கு  இலக்கியம்  என்பதுக்கு அர்த்தம் தெரியவந்தது. 


நாங்கள் எல்லோரும் சிறுகதைத் துறையிலேயே கவனம் செலுத்தினபடியால் செகாவ்மொப்பாஸான்கேதரின் மேன்ஸ்ஃபீல்ட்லாரன்ஸ் முதலியவர்களது பெயர்கள் எனக்குத் தெரியவந்தன. இந்த சிறுகதாசிரியர்களின் கதைகளைப்பற்றி கு.ப.ரா., சிட்டி,நான்; சிதம்பர சுப்ரமண்யம்கு.ப.ரா. நான் கூடி இருக்கும் மூவர் கூட்டங்களில் - கடற்கரையில்தான் பெரும்பாலும் மாலையில் நடக்கும் - அவர்கள் விவாதிப்பதை மவுனமாக நான் கேட்டுக்கொண்டிருப்பேன். எனக்கு ஏதோ கதை எழுதத் தெரியுமே தவிரகதைகளைப்பற்றி விவாதிக்கத் தெரியாது. கதைகளை விமர்சிப்பதில் கு.ப.ரா. நிபுணர். நான் அவர்கள் சொல்வதை மனதில் போட்டுக்கொண்டு அந்த ஆசிரியர்களைஅந்தக் கதைகளைத் தேட ஆரம்பித்தேன். மாதம் இத்தனை ரூபாய்க்கு புஸ்தகங்கள் வாங்கித் தீரவேண்டும் என்பது போல நண்பர் சிதம்பர சுப்ரமண்யன் அமைத்துவந்துகொண்டிருந்த குட்டி லைப்ரரி எனக்கு பயன்பட்டது.


 அப்போதுதான் நான் நாவல்சிறுகதைதுறைகளில் சிறந்து உள்ளவர்களின் பெயர்களையே அறிந்துகொண்டது மட்டுமின்றி அந்தப் புத்தகங்களையே முதல் முதலாகப் பார்த்தேன். என்ன படிக்கவேண்டும் என்று அப்போதுதான் எனக்குத் தெரிய ஆரம்பித்தது. ரஷ்யபிரஞ்சுஇத்தாலியசிறுகதைத் தொகுப்புக்களை முதலில் படித்துவிட்டு பிறகு மாப்பாஸான்லாரன்ஸ்ஓ 'ஹென்ரி,காதரீன் மேன்ஸ்ஃபீல்ட்செகாவ் இவர்களது ராக்ஷஸ வால்யூம்களையும் படித்து சிறுகதையில் பிரமாதமான சோதனைசாதனை காட்டியவர்கள் என்பதையும் உணர்ந்தேன்.


சிறுகதை ஒன்றுதான் இலக்கியத்தில் முக்கியமான துறை என்று எனக்குள் முடிவு செய்துகொண்டு அவைகளையே வேட்டையாடினேன். சிறுகதைகளை நான் ஏன் அவ்வளவு விரும்பிப் படித்தேன் என்பது எனக்கு படிக்கிறபோதே தெரியும். நான் சிறுகதைக்காரனாக ஆகிவிட்டதால் அந்தத்துறையில் என்னவெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறியும் ஆவல் முதன்மையாக. இரண்டாவதாக என் சாதனை ஒப்பிடுதலில் எங்கே நிற்கிறது என்று அறிவதற்காக. மூன்றாவதாக அவர்களைப்போல் நாமும் சோதனை செய்வது எப்படி.


இந்தச் சமயத்தில் ஒன்றை சம்பந்தப்படுத்திச் சொல்லி ஆகவேண்டும். நான் இலக்கியத்தில் உள்ளக்கத்தைவிட உருவத்தைபொருளைவிட அமைப்பைஎன்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைத்தான் அதிகம் அழுத்திச் சொல்வதாக என்னைத் தாக்குபவர்கள் ஒருபக்கம் இருக்கட்டும். என் நெருங்கிய நண்பர்களே குற்றம் சாட்டுகிறார்கள். இந்தவிதமான பார்வை எனக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே விழுந்திருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். நான் சிறுகதைகளை சொக்கனுக்கு சட்டி அளவாகப் படித்தது இல்லை. இப்போதும் படிக்கிறதும் இல்லை. நல்ல சிறுகதை என்று கு.ப.ரா.வோ, சிட்டியோசிதம்பர சுப்ரமண்யனோ கதையைச் சொல்லிவிட்டால் நான் திருப்திப்பட்டுக்கொண்டதில்லை. எப்படி அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று அந்தக் கதையைப்படித்துப் பார்ப்பேன். படிக்கிறபோதே எப்படியெல்லாம் வர்ணனையை, உணர்ச்சி வெளியீட்டைக்காட்டியிருக்கிறான்மொழி எப்படிக்கையாளப்பட்டிருக்கிறது,படிமங்கள் எப்படிப் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன, மோதல்உச்ச நிலைவிறுவிறுப்பு எல்லாம் எப்படி சாதிக்கப்பட்டிருக்கின்றனஎன்று பாராவுக்குப் பாரா மென்றுகொண்டேதான் படிப்பேன். கதையின் சாராம்சம்கருத்துஇவைகளைவிட கதையின் போக்கைத் தொடர்வதிலேயே கதாசிரியன் கற்பனையோடு அசைவதிலேயே எனக்கு அதிக இன்பம் கிடைப்பதாகப்பட்டது. அந்த மாதிரி வசப்பட்டுநான் கதையைத்தொடர்வதை நிறுத்திவிட்டு அந்த இடத்து சாதனையை அளவிட்டுக்கொண்டு இருந்துவிடுவேன்.


அன்று எனக்குத் தெரிந்து செய்ததாக இல்லாமல் instinctive ஆக என்கிறோமே அந்த மாதிரி இயல்பு உணர்ச்சியாகவே ரசிப்பதில் அக்கறை ஏற்பட்டதுதான், இன்று இலக்கியம் பற்றி ரசிக விமர்சனம்தான் இருக்கமுடியும், அது முதன்மையாக அழகியல் அடிப்படையில்தான் இயல முடியும் என்ற பார்வை கொள்ளச் செய்திருக்கிறது என்று நம்புகிறேன்.

ஆக இப்படி நான் கதைகளை அவைகளின் உத்திகளில் முக்கியத்துவம் செலுத்திப் படித்தது என் சிறுகதைப்படைப்பையே பாதித்திருக்கிறது. என் மனதில் கருத்தாக கதை பிறந்து, ஆனால் உருவாக சரியாக அமையாமல் தவித்த பல கதைகளுக்கு அததுக்கு உரிய அமைப்பும் வெளியீடும் கிடைத்தது, நான் அவ்வப்போது படித்த சிறுகதைகளால். எனவே நான் நிறைய கதைகள் படித்தேன். என் சிறுகதைப் படைப்புக்கு பிரயோசனப்படும்படியாக என்று திட்டமாகச் சொல்வேன். இது என் படிப்பு சம்பந்தமாக இரண்டாவது கட்டம்.


அடுத்தபடி நாவல்கள் படிக்க ஆரம்பித்தது மூன்றாவது கட்டம். சிறுகதைத் துறை மாதிரி இல்லை நாவல் துறை. மலையாக முன் இருந்தன. ஃபீல்டிங்ரிச்சர்ட்ஸ்ஸன்னிலிருந்து ஆரம்பித்துடி. எச். லாரன்ஸ் வரை உள்ள பிரபல நாவலாசிரியர்கள் பட்டியலைப் பார்த்துப்பிரமித்துப் போனேன். அத்தனை ஆசிரியர்களையும் அவர்களது பல்லாயிரக்கணக்கான நூல்களையும் இருபத்தெட்டுவயதுக்கு மேல் படிக்க ஆரம்பித்து என்றைக்கு முடிக்கிறது. அதுவும் அசைபோட்டுப் படிக்கிற என் சுபாவத்தை வைத்துக்கொண்டுஇருந்தாலும் கு.ப.ரா.,சிட்டிசிதம்பர சுப்ரமண்யன் ஆகியோர் பேசிக்கொள்வதிலிருந்து அந்தந்த ஆசிரியர்களின் சிறந்த நாவல்களைத் தெரிந்துக்கொண்டேன். அவ்வப்போது கைக்கு எட்டும் அந்த நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். டாஸ்ட்டாவஸ்கியா Crime and Punishment Possessed, Idiotடர்க்கனீவா  Fathers and Sons, தாமஸ் மான்னா பட்டன்புரூக்ஸ்மாஜிக் மவுன்டன் இப்படி பொறுக்கிப்படிக்க ஆரம்பித்தேன். ஹென்ரி ஜேம்ஸ்,வெர்ஜினியா உல்ஃப் ஃபாக்னர்,   ஹெமிங்வே,  ஜாயிஸ்,   காஃப்காப்ரௌவ்ஸ்ட் இவர்கள் எல்லாம் எனக்கு ரொம்ப தள்ளித் தெரியவந்தவர்கள். நான் நாவல் படிப்பதற்கு அவசரப்படுவதே இல்லை.


 கால்ஸ்வொர்த்திபாஸ்டர்வெல்ஸ், சாமர்சட் மாம் இவர்களது புஸ்தகங்களில் மாதிரிக்குப் படித்திருக்கிறேன். எனக்கு ஓர் ஆசிரியரது நாவல் பிடித்துவிட்டால் மேலே அவர்கள் நாவலைத் தேடிப் போவேன். இல்லையானால் பிறகு அந்த நூலாசிரியரைத்தொடவேமாட்டேன். நான் படித்த நாவல்கள் நாவல் சமுத்திரத்தில் கையளவுதான். நான் விமர்சனத் துறையில் ஈடுபட்ட பிறகுஎன்னைப்பற்றி எழுதும்போதுசிலர் மூலநூல்களைப் படிக்காமலே தமிழில் விமர்சனம் செய்ய முற்படுகிறார்கள் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் நண்பர் க.நா.சு.. தமிழில் விமர்சனம் எழுதுவதுக்கும் மேல்நாட்டு மூல நூல்களைப் படிப்பதுக்கும் உள்ள சம்பந்தத்தைப்பற்றிய அவர் கூற்றை நான் மறுத்தாலும் அதிக மூல நூல்களை க.நா.சு. எதிர்பார்க்கும் அளவுக்குஅதிலும் ஒரே இரவில் ஐந்நூறு அறுநூறு பக்க நாவலையும் ஒரே மூச்சில் படித்துவிட்ட சாதனையுடன் மறுநாள் காலை அந்த அறுநூறு பக்கக் கதையை நுட்பமாகஞாபகத்துடன் விமர்சிக்கும் தனித்திறமையுள்ள க.நா.சு. விரும்புகிற அளவுக்கு நான் படித்தவன் இல்லைதான்.


ஆனால் ஏன் படிக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். மாஜிக் மவுண்டன்மிஸ்ஸர்ஸ் டாலோவேபோர்ட்ரெயிட் ஆஃப் தி லேடிரிமெம்பரன்ஸ் ஆஃப் திங்ஸ் பாஸ்ட், யுலிஸஸ்படிக்கிறபோது அவர்களது படைப்புத்திறமையையே நான் தொடர்வேன். The Story as such never interested me. ஆகவே என் தேவைக்குப் போதுமானதைத்தான் படித்தேன். படைப்பாளி தன் வார்த்தைகளைக் கொண்டு மாயம் காட்டி எழுப்பியிருக்கும் ஒரு நிஜம் போல் தோன்றும் கற்பனை உலகில் அவனோடு நானும் உலாவுவதிலேயே நான் இன்பம் அடைவேன். திருப்தி அடைவேன். நான் இலக்கியம் படித்ததுபடிப்பது இதுக்காகத்தான். அது எனக்கு ஒரு டானிக்காக இருக்கும்.


இந்த நாவல்களை நான் படிக்கிறபோதுபடித்தபோதுநான் ஒரு நாவலாசிரியனாக ஆகவேண்டும் என்பதுக்காகப்படிக்கவேயில்லை. இவைகளை எல்லாம் பல படித்த பிறகும் நான் வெகுகாலம் நாவல் எழுதுவதைப்பற்றி சிந்திக்கவே இல்லை. 'வாடிவாசல்'லும்ஜீவனாம்சம்மும் வெகுநாட்கள் காத்துக் கிடந்தன வெளிவர.


இனி நாலாவது கட்டத்துக்கு. இலக்கியத்தில் நாவல்,சிறுகதைகொஞ்சம் கொஞ்சமாக கவிதை இவைகளில் அக்கறை ஏற்பட்டிருந்தும் இலக்கிய விமர்சனத்தில் எனக்கு சிரத்தை ஏற்படவே இல்லை வெகுகாலத்துக்கு. க. நா. சு. இப்போதும் சொல்லிக்காட்டுவதுண்டு சமயம் வாய்க்கிறபோதெல்லாம், நீங்கள் முன்புநாம் எதற்கு இலக்கிய விமர்சனத்தில் இறங்கவேண்டும். பேசாமல் படைத்துக்கொண்டு போகலாமே. வேறு யாராவது செய்துவிட்டுப் போகட்டும் என்று என்னிடம் வாதாடுவீர்களேஎன்று. அப்படிச் சொன்னவன் இப்போது விமர்சனத்துக்காகவே ஒரு பத்திரிகையை நடத்திவருவதைக் கண்டு அவர் சொல்லிக்காட்டுவது நியாயம்தான். 1950-க்குச்சமீபத்தில் அவருடன் ஏற்பட்ட நெருங்கிய பழக்கத்தால் எனக்கு விமர்சனத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. அவர் என்னை அந்தத் துறையில் இறங்க நேரடியாகத் தூண்டவில்லை. மறைமுகமாக அவர் பாதித்தார். ஒரு பதினைந்து வருஷ காலமாக சிறுகதைத் துறையில் நல்ல சாதனை காட்டப்பட்டிருந்தும் அதை வாசக சமூகம் இன்னும் சரியாகத் தெரிந்துகொள்வதாகத் தெரியவில்லையேநல்லது கெட்டது தெரியாமல் இருக்கிறதே என்ற நினைப்பு எனக்குள் ஏற்படக் காரணமாக இருந்தது அவரது வார்த்தைகள்.


அந்த சமயத்தில் சென்னையில் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் நான் அங்கத்தினன் ஆனேன். ஒரு லைப்ரரியில்நான் அங்கத்தினன் ஆனது அதுதான் முதல் தடவை. க.நா.சு.வோடு அந்த லைப்ரரிக்குப்போனேன். க.நா.சு. சில விமர்சகர்கள் பெயர்களை அறிமுகப்படுத்தினார். க.நா.சு., பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) இவர்கள் இருவருக்கும் தெரியாத புஸ்தகங்கள் எதாவது இருக்குமா என்று நான் அப்போதெல்லாம் வியப்பதுண்டு. இந்த நாலு பேர்கள் உறவு எனக்கு ஏற்பட்டிராது போனால் தமிழ் நாட்டில் இன்று உலவும் எத்தனையோ எழுத்தாளர்களைப்போல்என்ன சோதனை என்றுஏதோ ஸ்காண்டிநேவியஜெகோஸ்லேவிய புஸ்தகங்களைப் படித்துவிட்டுகாஃப்காதாமஸ் மான் என்று இன்னும் வாய் உளறும் பெயர்களைச் சொல்லி நம்மை பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நானும் சொல்லிக்கொண்டு வந்திருப்பேன். இப்போதோ நானும் அந்த நாலோடு ஐந்தாகச் சேர்க்கப்பட்டு கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறேன்.


பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியும்யு.எஸ்.ஐ.எஸ். லைப்ரரியும்தான் என்னை விமர்சனத் துறையில் இழுத்துவிட்டன என்று சொல்லவேண்டும். என்ன படிக்கிறேன் என்பதுக்கு தெரிந்த நிச்சயமான பதில் இந்தக்கட்டத்தில்தான் நான் திட்டமாகச் சொல்லமுடியும். நான் படிக்கிறவன் என்று சொல்லிக்கொள்ள கொஞ்சம் தகுதி ஏற்பட்டதே இந்த நாட்களில்தான். என்ன படிக்கவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.  


சிறுகதைநாவல் படிப்பதை அநேகமாக நிறுத்திவிட்டேன். ஹிஸ்டரி ஆஃப் வொர்ல்ட் லிடரேச்சர் என்ற நூல் - ஆசிரியர் பெயர் ஞாபகம் இல்லை. சுமார் ஆயிரம் பக்கம் இருக்கும் - படிக்க ஆரம்பித்தேன். ஸெயின்டஸ்பரியின் ஹிஸ்டரி ஆஃப் கிரிட்டிஸம் படிக்க ஆரம்பித்து ரிச்சர்ட்ஸ்எஃப். ஆர். லிவிஸ்,  எம்ஸ்ன்,  எலியட்,  இப்படி... பிறகு  ஜான் க்ரோ ரான்ஸம் வரையில் வந்தேன். பிரின்சிபிள்ஸ் ஆஃப் ஆர்ட் (காலிவ்வுட்) Philosophical Basis for Critcism (Stephen Pepper), ஹென்ரி ஜேம்ஸ் – ஆர்ட் ஆஃப் :பிக்ஷன்இதெல்லாம் தொடர்ந்து எத்தனை விதமான சித்தாந்தங்களை பொருத்திப் பார்க்கிறார்கள் இலக்கியத்தில் - இலக்கியத்துக்கும் ஸோஷியாலஜிக்கும்,இலக்கியத்துக்கும் மனோதத்துவத்துக்கும்,இலக்கியத்துக்கும் தத்துவத்துக்கும்,  இலக்கியத்துக்கும் மார்க்ஸியத்துக்கும், இலக்கியத்துக்கும் அழகியலுக்கும் உள்ள உறவுகள் என்னநான் படித்திருக்கிறபடித்திராத நாவல்கள்சிறுகதைகள்கவிதைகள் சம்பந்தமான ஒரு குறிப்பிட்ட பார்வை எப்படி செலுத்தப்பட்டுஆய்வு செய்யப்பட்டிருக்கிறது, முதல் மூலப் படைப்பின் நயம், அழகு எந்த அளவுக்கு வெளித்தெரிய சாத்தியமாகி இருக்கிறதுஇதெல்லாம் தூண்டித் துருவிப் பார்க்க முற்பட்டேன். 


புஸ்தகங்கள் மட்டும் இன்றி இந்த இரண்டு லைப்ரரிகளுக்கும் வரும் விமர்சனப் பத்திரிகைகளை எல்லாம் இன்னமும் தவறாமல் படித்துக்கொண்டிருக்கிறேன். ஒன்று நன்றாக இருக்கிறது என்றாலும் சரிஇல்லை என்றாலும் சரிஎதனால் என்று சொல்லி ஆய்ந்து பார்த்துவிட்டு சொல்லித்தான் ஆகவேண்டும் என்பது என் கட்சி. நண்பர் க.நா.சு. அப்படியே ஏற்றுக்கொள்ளமாட்டார் இதை. அவ்வளவு அவசியம் இல்லை என்று நினைக்கிறவர் அவர். உறுத்தும்படி சூடாக,  முடிவுகளைச் சொன்னால் போதும்  என்கிறவர்.  ஆனால் நான் இதுதான் ரசனை பெருக வழி செய்யும் என்று நம்புகிறேன். எனவேஇந்த மேல்நாட்டு விமர்சனப் பார்வைகள் மூலம் ரசனை எந்த அளவுக்குப்பெருகியிருக்கிறது என்பதை முதலில் கண்டறிவதுதான் என் முதல் அக்கறை. அடுத்து அந்தவிதமான பார்வைகள் மூலம் நமது இலக்கியம் பற்றிய ரசனையில் ஈடுபடுவதுபிறகு நமது இலக்கியத்தை அந்த தோரணையில் மதிப்பிடுவது. எனவே இந்த ரசனைக்கும் மதிப்பீடுக்கும் பயன்படக்கூடியதாக இருக்கும் வகையில் நான் என் படிப்பைச் செலுத்தினேன். ஏன் படிக்கிறேன் என்பது எனக்குள் திட்டமாகிவிட்டதால் என்ன படிக்கிறேன் என்பது எனக்குத் தெளிவாக இருந்தது. நான் படித்த புஸ்தகங்களைப்பற்றி மற்றவர்கள் கருத்தை அறிந்துகொண்டேன். படிக்காத புஸ்தகங்களைப்பற்றிய அவர்கள் விமர்சனத்தைப் படித்துவிட்டு சில மூல நூல்களுக்கும் போனேன்.


உண்மையாக நான் இதனால் ரொம்பவும் பயன் அடைந்திருக்கிறேன். இப்போது விமர்சன நூல்கள்தான் படிக்கிறேன். அபூர்வமாக நாவல்சிறுகதைகள். முன்னெல்லாம்விட கவிதைகள் படிக்கிறேன். அதுவும் புதுக்கவிதைகள்தான். தமிழில் புதுக்கவிதை முயற்சிகளை கணிக்கவும்மேல்நாட்டுப் புதுக்கவிதை முயற்சிகளை அறியவும் எனக்கு விருப்பம். அதுக்குத்தகுதிப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். பெறமுடிகிறதா பார்க்கவேண்டும்.


என்னஇவன் இங்கிலீஷில் படித்ததையே சொல்லிக் கொண்டிருக்கிறானே தமிழைப்பற்றிச் சொல்லவே இல்லையே என்று நினைக்கலாம். வ. வெ. சு. அய்யர், மாதவையா சிறுகதைகளிலும்பிரதாப முதலியார்கமலாம்பாள் நாவல்களிலும் ஆரம்பித்துபாரதியின் கவிதைகளிலும் ஆரம்பித்து தமிழ் இலக்கிய நூல்களைப்  படித்துவருகிறேன்.  பத்திரிகையில்  வரும்  சிறுகதைகள் நாவல்களையும் படிக்கிறேன். ஆனால் ஒரு காலத்தில் படிக்கையில் கிடைத்த அந்த திருப்திகூட இப்போது ஏற்படுகிறதில்லை. இன்றைய படைப்புகள் நூற்றுக்குத்தொண்ணூற்று ஐந்து முழு ஏமாற்றத்தைத்தான் தருகின்றன.நான் விரும்புகிற அனுபவத்தைக் கொடுக்கும் சக்தி அவைகளுக்கு இல்லை. எனவேஇவன் இதெல்லாம் படிக்காமல் பழையவர்களையே சொல்லிக்கொண்டிருக்கிறானே என்று சொல்ல ஏற்படாதிருக்கமுன் எச்சரிக்கையாகஅவைகளை படித்துவிட்டுத்தான் என் ரசனையை வெளிக்காட்டுகிறேன் என்று காட்டுவதுக்காகவும் எனக்குள் நிச்சயப்படுத்திக்கொள்ளவும்தான் நான் படிக்கிறேன். அபூர்வமாக வரும் நல்லது எதையாவது இழந்துவிடுவேனோ என்கிற பயமும் உண்டு. தரமான புதிய படைப்புகள் கிடைப்பது அபூர்வமாகிவிட்டபடியால் தமிழ் சிறுகதைகளில் நல்ல சாதனை காட்டியவர்கள் என்று   நான் கருதும் ந.பிச்சமூர்த்தி,  ராமையா,  புதுமைப்பித்தன்,  கு.ப.ரா.  மௌனிக.நா.சு.   ஆகியோர் கதைகளைத் திரும்பப் படிப்பதுண்டு. 


நாவல்களில்   கமலாம்பாள், பொய்த்தேவு இவைகளையும் பாரதி கவிதைகளையும் திரும்பத் திரும்பப் படிப்பதுண்டு. பாரதியை முழுக்க முழுக்க காணப் பார்க்கிறேன்இன்னும் முடியவில்லை. தமிழில் எழுதப்பட்டிருக்கும் இலக்கிய விமர்சன நூல்களைப் படித்துப் பார்த்து ஏமாற்றம் அடைந்தேன். மு.வ.அ. ச. ஞானசம்பந்தம் இவர்களது நூல்கள் திருப்தி தரவில்லை. அவைகளில் போதிய விவகாரம் இல்லை. தக்க பார்வை இல்லை. வெளிவரும் பல பெரும்பாலான கதைகளில் சொல்வழி இல்லை. கலைத்தன்மை இல்லை. நாவல்களில் வாழ்க்கை அனுபவமும்கூட இல்லை. தமிழில் என்ன படிக்கிறேன்ஏன் படிக்கிறேன் என்பதைவிட என்ன படிக்கிறதில்லை. ஏன் படிக்கிறதில்லை என்று சொல்வது எனக்கு எளிதாக இருக்கிறது.


எனக்கு கதா சுவாரஸ்யம் இரண்டாம் பட்சம்தான். Imaginative way of communication தான் முக்கியம். இதைத் தர இயலாத நூல்களை சிறுகதையாக இருந்தால் இரண்டு மூன்று பாராக்கள்நாவலாக இருந்தால் ஒருசில பக்கங்கள் படித்தும் ஒரு கற்பனைத் திறன்வெளியீட்டுத் திறன் காட்டாதவைகளை மூடி வைத்துவிடுவேன். ஆனால் அவை இருக்கும் ஹென்ரி   ஜேம்ஸ்,   புரூஸ்ட்மான்,   உல்ஃப்,ஃபாக்னர்,  ஹெமிங்வே,  ஜாயிஸ்,   காப்கா போன்றவர்களது படைப்புகளை திரும்பத் திரும்பப் படிப்பேன். மேலே குறிப்பிட்ட என் அபிமான படைப்பாளிகளைக் கொண்டு என் வாசிப்பைப்பற்றி நீங்கள் முடிவுசெய்துகொள்ளலாம்.


முடிக்குமுன்நண்பர் க.நா.சு. நண்பர் வல்லிக்கண்ணனிடம் சொன்னாராம், செல்லப்பா நிறைய விமர்சன நூல்களை எல்லாம் படித்துக்கொண்டிருப்பார் என்று. எனக்கு விமர்சன நூல்களைப் படிப்பதில்தான் இன்று ஆசைவெறிமோகம் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். ஆயிரம் பேரைஅல்லது வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பார்கள். அதுபோல நான் படித்திருக்கும்இன்னும் படிக்க இருக்கும் விமர்சன நூல்களால் அரை விமர்சகனாகவாவது ஆவேனோ என்னமோ! நான் விமர்சகன் ஆவதுக்காகவோஅல்லது பிறர் எனக்கு விமர்சகன் என்று பட்டம் கொடுப்பதுக்காகவோ நான் விமர்சனப் படிப்பு படிக்கவில்லை. என் ரசனையைரசிக சக்தியைப்பெருக்கிக்கொள்ளத்தான் நான் படிக்கிறேன். அதை வெளிக்காட்டிக்கொள்ளும்போது சந்தர்ப்பவசத்தால் நான் விமர்சகன் ஆக நேர்ந்தால் நேர்ந்துவிட்டுப் போகிறது. படைப்பாளியாக மறைந்து விமர்சகனாக அவதாரம் இருக்கட்டுமே. நான் என்ன படிக்கிறேன்ஏன்என்பதுக்கு பதில் சொல்லிவிட்டதாக எனக்குத் திருப்தி.

***

1962ல் க.நா.சு.வின் ‘இலக்கிய வட்டம்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கருத்தரங்கத்தில் வாசிக்கப்பட்டகட்டுரைஎழுத்து 46வது இதழில் (அக்டோபர் 1962) வெளியானது.


நன்றி: அழிசி ஸ்ரீநிவாச கோபாலன்




நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்