Sep 28, 2013

பண்ணைச் செங்கான் - கு ப ரா

"இதோ இந்த மாமரம் ஒங்க பாட்டன், மவராசன், வச்ச மரம். பனம் கல்கண்டு கணக்கா சுவையா இருக்கும் ! இந்தத் தென்ன மரம் அவரு கையாலே போட்ட நெத்து. இப்படித் தடத்தோடேயே வாங்க. வரப்புல நடந்து பளக்கமில்லே. பட்டண வாசத்துப் புள்ளே!" என்று வேகமாக விடாமல் பேசினான் செங்கான்.

நானும் அவனும் என் நிலத்தின் ஒரு புறத்து வரப்பின் மேல் நடந்து போய்க் kupara கொண்டிருந்தோம்.

"இதை எப்போப்பா அறுக்கலாம்?" என்றேன்.

நிலத்தில் நின்ற பயிரைக் காட்டிக் கொண்டு செங்கான், " இன்னும் கொஞ்ச நாள் போவானுங்க. தொண்டேக் கதிர இருக்குது. கொஞ்சம் மேப்பக்கம் பூரா கதிரு வாங்கி நிக்குது.. இந்த மாமரத்து நெளலிலேயே குந்துங்க. ஏ, கங்காணி மவனே ! சின்னசாமிக்கு ரெண்டு எளனி புடுங்கியா!" என்றான்.

எனக்கு இளநீர் குடிக்கத் தெரியவில்லை. மேலேஎல்லாம் கொட்டிக் கொண்டு விட்டேன்.

"அந்த ஒலெய அளுத்திப் புடிச்சிக்கிட்டு, சட்டுன்னு சாச்சுக்கணும்" என்று செங்கான் சிரித்துகொண்டே கையால் செய்து காட்டினான்.

‘பறச்செங்கான்’ என் பாட்டனார் காலம் முதல் எங்கள் நிலத்தைச் சாகுபடி செய்கிறவன். சொக்கனூர் கிராமத்திலேயே அவன்தான் வயது முதிர்ந்த கிழவன். எண்பது வயது என்று பேச்சு. ஆனால் பார்த்தால் அறுபதிற்கு மேல் சொல்ல முடியாது. கையில் அவன் உயரமுள்ள மூங்கில் தடி. தடி எடுத்தவன் தோட்டி என்பார்கள்.ஆனால் செங்கான் தோட்டியல்ல. பழுப்பு நிலத்தில் பயிரேற்றிப் பிழைத்தான். தளதளவென்று செழித்திருந்த மார்பளவு பயிரின் நடுவில் சதா ஏதாவது வரப்பைக் கிண்டிக் கொண்டே இருப்பான்.

நிலத்தை விட்டு வெளியே வந்தாலும் அந்த தடி, இடுப்புக் கோவணந்தான்.  கறுப்பு கம்பளி ஒன்றைத் தலையிருந்து கால் வரை, மழைக்காலத்தில் சாக்கை மடித்துப் போட்டுக் கொள்வது போலப் போட்டுக் கொண்டிருப்பான். காலில்  செருப்பு, கறுத்த உடல் நரைத்த மீசையும் உச்சிக் குடுமியும்.

“அம்மா சொகமாயிருக்கா ? நம்ம கொளந்தே நல்லா இருக்கா? ஏன், ஒரு வாட்டி அம்மாளைக் கூட்டியாந்தா என்ன?”

செங்கான் சற்றுத் தொலைவில் உட்கார்ந்து கொண்டு கால் செருப்பின் வாரை இறுக்கிக் கொண்டிருந்தான்.

2

காலாவதி காலத்தில் நான் வருசா வருசம் என் கிராமத்திற்குப் போயி விட்டு வருவது வழக்கம். நான் போகாவிட்டால் செங்கான் விட மாட்டான். அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டு வருவேன். பாதிப் பணம் போய் வருவதில் செலவாகிவிடும். அவன் கொடுக்கும் குத்தகை என் பாட்டனார் காலத்தில் ஏற்பட்டது. பக்கத்துக்கு நிலங்களுக்கெல்லாம் குத்தகை இரடித்துவிட்டது. அந்த தடவை நான் கிராமத்திற்குப் போயிருந்த பொது எல்லோரும் என்னை பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்கள். சிலர் அருகில் நெருங்கி யோசனை கூறினார்கள்.

“பாவம்! ஆண்டுக்கு ஒரு முறை வருகிறீர்கள். உங்களுக்கு இந்த ஊர் நிலைமை எப்படித் தெரியும்? கிழவன் ஏதவாது குத்தகை தருகிறானா இல்லையா? ஊரெல்லாம் குத்தகை  ஏறிப்போச்சு. உங்களை மட்டும் அவன் ஏமாற்றுகிறான்” என்று சொல்லிக்கொண்டு ஒருவர் முன் வந்து தாம் ஓர் ஆளை இரண்டு பங்கு குத்தகைக்குப் பேசி விடுவதாகச் சொன்னார்.

“இல்லை இதனால் என்ன பிரமாதம்? ஏதோ ரொம்ப நாளாய் இருக்கிறான். இருந்து விட்டுப் போகட்டும்” என்று நான் வழவழவென்று பேசினதை கேட்டதும் அந்த மனிதருக்கு தைரியம் வந்து விட்டது.

“நீங்கள் சும்மா இருங்கள் ஸார்! நீங்கள் தாக்‌ஷிண்ணியப்படுகிறீர்கள், நான் எல்லாம் ஏற்பாடு செய்து விடுகிறேன். மேலும் பாருங்கள். ஊரோடு ஒத்து வாழ வேண்டும். ஊரில் ஏற்பட்ட குத்தகை வர வேண்டாமோ?” நீங்கள் இப்படிவிட்டால் குடிப்பிரியம் கெட்டுப்போகும்.

“இல்லை இல்லை அவனை நீக்க எனக்கு மனம் வரவில்லை. அவன் தான் சாப்பிடட்டுமே. இதையே நான் நம்பி இருக்கவில்லை” என்றேன்.

“ என்ன ஸார் நீங்கள் பேசுகிறது? ரொம்ப அழகு! பின் அவனுக்குதான் நிலத்தைச் சாஸனம் எழுதிக் கொடுத்து விட்டுப் போய் விடுங்களேன். இந்த போக்கு வரத்துச் செலவு வேண்டாமே” என்று என்னைக் கொஞ்சம் பரிகாசம் செய்து ஆரம்பித்தார் அந்த மனிதர்.

நான் எப்போதும் தாக்‌ஷிண்யப் பிரகிருதி. புது மனிதன் கூட ஒரே கணத்தில் என் தலை மேல் ஏறிவிடுவான். நான் மெல்ல ஞேஞ்ஞ மிஞ்ஞவென்று சொன்னதை அந்த மனிதர் காதிலேயே போட்டுக் கொள்ள வில்லை. வேற ஆளைப் பேசி என் பேருக்கு குத்தகைச் சீட்டு எழுதி வாங்கிக் கொண்டு வந்து என் கையில் கொடுத்து விட்டார் ! இதை எப்படி செங்கானிடம் சொல்வது? அவனை எப்படி அப்புறப்படுத்துவது!” என்பவையே எனக்குப் பெரியபிரச்சனைகளாகி விட்டன.

3

அவன் அதிகமாக பேசி என்னை மடக்கித் தன வசமாக்கிக் கொள்ளாமல் இருக்கும் பொழுது அவனிடம் கண்டிப்பாக விசயத்தைச் சொல்லி விட வேண்டுமென்று, மறு நாள் வயலுக்குப் போன போது,நான் இரண்டு மூன்று தடவை வாயெடுத்தேன். ஒவ்வொரு தடவையும் வாய்வார்த்தை வெளியில் வராமல் நெஞ்சில் சிக்கிக் கொண்டது.

“பொளச்சுக்கெடந்தா வர வருசம் கிணத்தைக் கட்டி தொலெ வைக்கணும். சாமி! எனக்கு ஒரு சோடி மாடு வாங்கிக் குடுங்க;இந்த நெலத்துலே பொன் வெளயச் செய்யறேன்!” என்றான் செங்கான்.

“செங்கான் உனக்குத்தான் வயசாகிவிட்டதே; இனிமேல் உன்னால் உழுது பயிரிட முடியுமா?” என்று மெள்ள நான் ஆரம்பித்தேன்..

“நல்ல சொன்னீங்க. என்னைப்போலே இந்தவூரிலே யாரு காலத்துலே பயிரேத்துறான்? ஏரி மொதத் தண்ணி நமக்கு”

“ஒனக்கு ஒத்தாசைக்கு ஒருவரும் இல்லையே?”

“என் மவன் பொந்திலியன் இருந்தா இந்த ஊரையே சாகுபடி பண்ணிட மாட்டேனா? மூணாம் வருஷம் மகமாயி ஆத்தா-!” என்று சொல்லி செங்கான் பெருமூச்சு விட்டான்.

“அவன் மவன் ஒரு பய இருக்கான். அவன் செய்வானே ஒரு பெரிய ஆள் வேல!” என்றான் சற்று நேரம் கழித்து.

செங்கான் மறுபடியும் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான்.விஷயத்தை அந்த சமயத்தில் அவனிடம் சொல்ல எனக்கு மனமே வரவில்லை. செங்கான் மாமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு பொந்திலியனை மாரியாத்தா கொண்டு போன வகையைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தான் போலும்! திடீரென்று தலை தூக்கி என் முகத்தைப் பார்த்தான்.

“ஏஞ்சாமி, நான் பயிரிட முடியாம போட்டுடுவேன்னு ரோசனே பண்றீங்களா? அது இந்த உசிரிலே இல்ல! நெலத்துலே ஈரமில்லே; சக்கையாப் போச்சு மண்ணு, ஏளேட்டுக் கடே கட்டினா நல்லாயிருக்கும் கட்டலாங்களா ?”

பொழுது விழுந்துவிட்டது. தூரத்தில் நரிகள் ஊளையிட்டன.

“வாங்க நேரத்திலே வூட்டுக்குப் போவோம் சாமி! ஒங்களுக்கு இருட்டிலே நடந்து பளக்கமிருக்காது” என்று முன்னே வழிகாட்டிக் கொண்டு செங்கான் வேகமாக வீட்டை நோக்கிப் புறப்பட்டான். அவனைப் பின்பற்றிச் செல்வது கூட எனக்குச் கொஞ்சம் சிரமமாகப் போய்விட்டது.

“ஏஞ்சாமி என்னெ விட்டு நெலத்தெ மாத்தணும்னு ரோசனெயா ? என் உசிரிலே இன்னொருத்தன் அதுல ஏரு பிடிக்கவா? முடியுமா எங்கணாச்சியும்? என் நெலத்துலே எவன் நொளைவான் ..? பாக்கறேன். அந்த மண்ணுத்தான் அவனுக்கு வெளைவாளா?”

கொஞ்ச நேரம் மெளனமாக நடந்தான். நான் ஒரு வரப்பில் கால் தடுமாறி, வயலில் தண்ணீர் கட்டியிருந்த சேற்றில் காலை வைத்துவிட்டேன்.

“கெடக்குங்க வாய்க்கால்லே கால களுவிக்கலாம்.. நாப்பது வருசமா என் கையாலே வரப்புப் பிடிச்சி வாய்க்கா பிடிச்சி... பெரிய அய்யா இருந்தா என்னே வுட்டு மாத்தணும்னு நெனைப்பாங்களா ? மண்ணே கண்ணாக் காப்பாத்தி “ என்று சொல்லி வந்தவன் திடீரென்று “நான் வுடமாட்டேஞ்சாமி !” என்றான்.

“நான் மாற்றுகிறேன் என்று உன்னிடம் சொல்லவில்லையே!” என்றேன்.

“அது தானே கேட்டேன்! ஒரு கலம் அரைக்கலம் நீங்க சாப்பிடறது நான் சாப்பிட்டா என்ன  இந்த வயக்காட்டிலே நான் பட்ட பாட்டுக்கு? நெத்தி வேர்வ நெலத்துல விள எம்பாங்க. அது எனக்கல்ல தகும்!  ராப்பவலா எவன் என்னைப் போல காட்டுலே கெடப்பான்? ரவைக்கு ரவெ தாவத்துக்குத் தண்ணி கொடுக்குறாப் போல எவன் தண்ணி கட்டுவான்? – நேரமறிஞ்சு? நம்ம காட்டு லெச்சுமி என்னோடே பேசுவாளே! ஒரு வருஷம் சூறை உண்டா, சாவி உண்டா, தரிசு உண்டா? மூணாம் வருஷம் மழை இல்லாதப்பக்கூட பயிரேத்திப்பிட்டேனே ! இந்த வயக்காட்டுலே ஒளச்சேதான் நான் சாவனும் சாமி! இதெ வுட்டா நான் செத்துப் போவேன்!”

4

காலை ஐந்து மணிக்குப் பல் துலக்க நிலத்துப் பக்கம் போனேன். செங்கான் கணீரென்ற குரலில் ஏற்றப் பாட்டு பாடிக்கொண்டே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தான்.

மூங்கிலிலை மேலே - தூங்கு பனி நீரே

தூங்கு பனி நீரை  - வாங்கு கதிரோனே!”

என்ற பாட்டின் ஒரு அடி என் காதில் விழுந்தது. வேலை மும்முரத்தில் அவன் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

“என்ன ஸார் செங்கான்கிட்ட சொல்லி விட்டீர்களா, இந்தப் பயிரை அறுத்து கொண்டு நிலத்தை விட்டு விட வேண்டுமென்று?” என்று என் நண்பர் கேட்டார்.

“இல்லை சொல்லப் போவதில்லை. செங்கான் கொடுக்கும் நெல் போதும் எனக்கு!” என்றேன், தலை நிமிர்ந்து.

*****

மணிக்கொடி 23.09.1934

தட்டச்சு: V. மணிகண்டன்

Sep 3, 2013

குள்ளச் சித்தன் சரித்திரம்-(ஒரு பகுதி)– யுவன் சந்திரசேகர்

குள்ளச் சித்தன் சரித்திரம் –  புதினத்திலிருந்து ஒரு பகுதி.

அரங்கதினுள்ளே விசித்திரமான மணம் நிரம்பியிருந்தது. நிறுத்தி வைக்கப்பட்ட தூண்களின் உச்சியிலிருந்த கிண்ணக் குழிவுகளில், கனன்ற கங்குகள் மீது ஒரு விதமான மணப்பொடி தூவப்பட்டு, அவற்றிலிருந்து கிளம்பிய புகையில் நறுமணம் நிரம்பியிருந்தது. கூடத்தை நிறைத்தவர்கள் அரசாங்க உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், பிரபுக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்.

பெரும் நிசப்தம் நிலவிய அரங்கத்தின் பக்கவாட்டில், இரு ஓரங்களிலும் அலிகள் சிலர் நின்று yuvan_chandrasekarமயிற்பீலியால் ஆன மகத்தான விசிறிகளைப் பதமாக அசைத்துக் கொண்டிருந்தனர். அவையை பாதியாய்ப் பிரித்துப் போடப்பட்ட திரைக்கு பின்னால், வளையல்களின் ஓசையும், குறுஞ்சிரிப்புகளின் மென் சப்தமும்,கிசுகிசுப்பான பேச்சுகளும் கேட்டவாறு இருந்தன. அரங்கத்தின் மேடை, பச்சை திரைச்சீலையால் மூடப்பட்டிருந்தது.

இங்கிலாந்திலிருந்து வந்திருக்கும் வணிகர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி துவங்குவதற்காக காத்திருக்கிறது சபை.

திரை மெல்ல உயர்கிறது. மேடையில் நடுநாயகமாக அவன் உட்கார்திருக்கிறான். அவையின் வலது வரிசையில் முன் ஓரத்தில் அரியாசனம் போன்ற இருக்கையில் வீற்றிருக்கும் பாதுஷாவை நோக்கித் தலை தாழ்த்துகிறான், தன் வலது கையை மார்பில் பதித்தவாறு.

இவனுடைய குரு மிகப்பெரிய இசை மேதையாம். தன் சங்கீதத்தால் மேகங்களைப் பொழிய வைக்கவும், தீபத் திரியில் நெருப்பு ஏற்றும் வல்லவராம். இவனைப் பற்றியும் விசேஷமாக சொன்னார்கள். தன் சித்தம் போன விதமாக நாடோடியாக அலைகிறவனாம் . இந்தத் தலைமுறைப் பாடகர்களில் முதன்மையானவன் என்கிறார்கள்.

கன்றின மிளகாய்ப் பழம் சிவந்திருக்கின்றன அவன் கண்கள். பிடரியில் அலைஅலையாய்ப் புரள்கிறது ஒழுங்குபடுத்தப்படாத கேசம். சித்த சுவாதீனம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். குதப்பிய வெற்றிலைச் சாறு குருதிக் கோடாகக் கடைவாயோரம் வழிகிறது. தனக்கு இடது புறம் இருக்கும், வாயகன்ற பித்தளைப் படிக்கத்தில் உமிழ்கிறான்.

அவனுக்கு பின்னால் இரு புறமும் தூண்கள் போல நின்றிருக்கும் தந்தி வாத்தியங்களில் இருந்து கனத்த ரீங்காரம் எழுகிறது. அவையில் அமைதி படர்கிறது. வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று இசைவாகுவதற்கு வெகு நேரம் பிடிக்கிறது. பாடகன் தன் மடியில் கிடத்தியிருக்கும் சிறு வாத்தியத்தில் தன் விரல்களை அலையவிட்டுக் கொண்டிருக்கிறான். இதுவும் தந்தி வாத்தியம் தான். சீரான இடைவெளியில் இழுத்துக் கட்டப்பட்ட கம்பிகளுடன் அகலமான சட்டகம் போல இருக்கிறது.

மூன்று கருவிகளும் பொருந்திய தருணத்தில், அவற்றுடன் இழைந்து மிருதுவாக எழுகிறது அவனுடைய குரல்.

மிக மெதுவாக மிக மிக மெதுவாக அரற்ற ஆரம்பிக்கிறது. சுழன்று சுழன்று வேகமெடுக்கிறது. சன்னமான தூறலாகத் தொடங்கி சிறு தாரைகளாகக் கூடி, கனத்த மழைக் கம்பிகள் போல வர்ஷிக்கிறான். அவனது வேகத்துடன் இணையாக சஞ்சரிக்கிறது என் மனம்.

இது நாள் வரை நான் கேட்டறியாத என் ரகசிய உட்குரலை நான் கேட்க உதவும் வண்ணமாக அவன் பாடிக் கொண்டிருக்கிறான். தன் குரலை அல்ல, குரலுக்கு பின்னாலுள்ள எதையோ உணர்த்தும் பொருட்டு தான் அவன் பாடுகிறான் என்று தோன்றுகிறது. அவன் முன்னிறுத்தும் அந்தப் பின்புலத்தில் தொற்றிக் கொள்ள என் மனம் மிகவும் சிரமப்படுகிறது. சுனையாக ஊரும் வேட்கையுடன் சுவாசம் ஒடுங்கி ஆழ்கிறேன். மந்தை வசியத்துக்கு ஆளான மதக்கூட்டம் போல அவையோர் கிறங்குகிறார்கள்.

கச்சேரியின் இரண்டாம் பகுதி தொடங்குவதற்கு முன்னான இடைவெளியில் என் மனம் ஒப்பீட்டில் இறங்குகிறது. என்னுடைய தேசத்தின் சாஸ்திரிய சங்கீதத்துக்கும் இவன் பாடும் சங்கீதத்துக்கும் உள்ள வேறுபாடு புலனாகிறது. எங்களுடைய சங்கீதத்தில் நிசப்தம் என்பது, ஒரு ஒலித் துணுக்குகும் மற்றதுக்கும் உள்ள இடைவெளி. இவனுடைய சங்கீதத்தில், ஓசையின் பின்னுள்ள திரையாக செயல்படுகிறது நிசப்தம். மனதில் அலையாடும் எண்ணக் குவியலைக் புறக்கணிக்கும் பொருட்டே இவர்கள் சங்கீதத்தில் ஆழ்கிறார்கள் என்று படுகிறது.

தாள வாத்தியம் உடன் சேர்கிறது. அவன் இசையின் வேகம் அபரிமிதமாக கூடியிருக்கிறது. முன்னோக்கி நீட்டிய கைகளால் காற்றில் சித்திரம் வரைகிறான்.தன் மனதின் ரகசிய தாழ்வாரங்களில் ஊறும் ஒலித்தாதுக்களின் வரி வடிவத்தை எழுதிக் காட்ட முனைபவன் போல. மானசீக மரம் ஒன்றை இரு கைகளாலும் பற்றி குலுக்கி உலுப்புகிறான். ஒலிச்சிதறல்கள் போல ஒலிப்புள்ளிகள் இறைந்து பரவுகின்றன.

குழைவான அவன் குரலிருந்து அபூர்வமான தனிமை ஒன்று பீய்ச்சியடிக்க ஆரம்பிக்கிறது. அது கரும் மேகக் கூடம் போல அரங்க விதானத்தின் கீழ் தொங்குகிறது.அரங்கத்தில் தனிமையின் இருள் சூழ்கிறது. அவனும் நானும் மட்டுமே பகிர்ந்து கொள்ள மீந்த தனிமை வெளியில் இருவருக்குமான பொதுத் தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஒலித் தொகுப்பு ஸ்தாபிதமாகி இருக்கிறது. தடமற்ற ஒலிச்சாலையில் அந்தகன் போல் அவன் குரல் பற்றி தொடர்கிறேன்.

அவன் சொல்லி நான் புரிந்து கொள்வது என்றில்லாமல், அவன் சொல்லும் முன்பே எனக்குள் ஒலிக்கும் தனிமையின் காத்திரத்தை வலுவாக உணர்கிறேன்.

அவனுடைய வேகம் நாலாவது ஐந்தாவது ஆறாவது கதியில் பாய்கிறது. எனக்குள் சிந்தனை அடங்கிய நிசப்தவெளி உருவாகிறது. மனம் அசைய மறுக்கிறது. அவன் பாடும் வேகத்தில் என்னுள் அசைந்து கொண்டிருந்த தாளம் நின்று போகிறது. அடி வயிற்றிலிருந்து ஒரு ஏக்கம் பீறிட்டுக் கிளம்புவதை உணர்கிறேன்.

மூச்சுத் திணறத் திணற நிசப்தத்தின் இருட்ச்சிறைச் சுவர்களுக்குள் ஒடுங்குகிறேன். நண்பனே ... என் அருமந்த நண்பனே. இசைஞனே.. என்னை மீட்க வந்த இறையே...

கூடம் வாஹ் ... வாஹ் ... என்று ஆர்ப்பரிக்கிறது பெரும் தேஜஸூடன் மிளிர்ந்த அவன் முகம், ஓசை ஓய்ந்த தருணத்தில் விகாரமாக வெளிறி இருக்கிறது. கரகோஷம் உரத்து எழும்பொது, தன் அந்தரங்கத்தைப் பிறர் அறியத் தந்ததில் அவமானமுற்றவன் போலக் கூசுகிறது அவன் முகம்.

நன்றி: குள்ளச் சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர் - கிழக்கு பதிப்பகம்

தேர்வும் தட்டச்சும்: V மணிகண்டன்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்