Showing posts with label தேவதேவன். Show all posts
Showing posts with label தேவதேவன். Show all posts

May 14, 2013

தேவதேவன் - நேர்காணல்

'சிற்பி இலக்கிய விருது' பெற்றுள்ள தேவதேவனின் இயற்பெயர் பிச்சுமணி கைவல்யம்.வயது 51.ஆசிரியராக பணிபுரிகின்றார்.அம்ருதா , அரவிந்தன் என்று இரண்டு குழந்தைகள். பள்ளியிறுதிவரை படித்தபின் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார்.வேலை கிடைக்காத்தினால் தன் வீட்டின் ஒரு பகுதியிலே அச்சகம் வைத்து நடத்தினார்.அதிகமான அறிமுகம் இல்லாத நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் வீட்டை பிணையாக்கினார். கடன் வாங்கிய நண்பர் ஒடிப்போனபின் வங்கி அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு , நீதி மன்றத்திற்கு அலைந்து இறுதியாக பெருந்தொகை கொடுத்து தன் வீட்டை பிணையிலிருந்து மீட்டார். இது போன்ற சம்பவ அடுக்குகளால் பின்னப்பட்டது தேவதேவனின் வாழ்க்கை.

கலை, இலக்கியம் , சமூகம் , வாழ்க்கை என்று பேசும்போது தன்னை ஒரு பெரும் கலாச்சாIMG_4443ர சக்தியாக , அசாதாரண மனிதனாக உணர்பவராகவும் , உணர்த்துபவராகவும் காணப்படும் தேவதேவன் , தன் இளமைக் காலத்தில் அரசியல் மற்றும் புரட்சி பேசும் தன்னையொத்த இளைஞர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுவரும் , ஆகர்ஸிக்கப்படுபவருமான ஆளுமையை உடையவர். 70களில் தூத்துக்குடியில் உள்ள சில ஆர்வமுள்ள இளைஞர்களால் நிறுவப்பட்ட 'தர்சனா' திரைப்படக் கழகத்தின் பிதாமகர்.மிகப் பிரம்மாண்டமான அளவில் நடந்த புத்தகத் திருவிழா நிகழ்வின் மிக முக்கிய சக்தியாக இருந்தவர்.கலாச்சாரம் குறித்த பல கனவுகளை உடைய இவர் ஒரு கவிஞனாக எஞ்சியது ஒர் இயற்கை நிகழ்வு என்றுதான் கூறவேண்டும்.

இன்று கவிதையை மூச்சுக்காற்றாய் கொண்டிருக்கும் தேவதேவன் இதுவரை பத்து கவிதை தொகுதிகள் வெளியிட்டிருக்கின்றார்.

1.குளித்துக்கரையேறாத கோபியர்கள்(1976)

2.மின்ன்ற்பொழுதே தூரம் (1981)
3.மாற்றப்படாத வீடு (1984)
4.பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)
5.நுழைவாயிலிலே நின்றுவிட்ட கோலம் (1991)
6.சின்னஞ்சிறிய சோகம் (1992)
7.நக்ஷ்த்திர மீன் (1994)
8.அந்தரத்திலே ஒர் இருக்கை (1995)
9.நார்சிசஸ் வனம் (1996)
10.புல்வெளியின் ஒரு கல் (1998)

'கவிதை பற்றி' என்னும் (உரையாடல்) தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்.

கவிதைகள் தவிர சிறுகதைகள் , நாடகம் , திறனாய்வு கட்டுரைகள் , மற்றும் மொழிபெயர்களும் செய்திருக்கிறார்.

கவிதைகள் மீது கொண்ட தாகத்திற்கு சற்றும் தணியாத தாகத்துடன் தன் வீட்டைச் சுற்றிலும் , பள்ளி வளாகம் முழுவதிலும் மரம் வளர்த்து வருகிறார்.

உணவு மற்றும் உடை விஷயங்களில் எளிமையாகவே வாழ்கிறார்.ஆர்வத்துடன் உரையாடலில் ஈடுபடுகிறார். தன் கருத்துகளை வற்புறுத்திச் சொல்லி தயங்கிவதில்லை.மழுப்பலற்ற நேரடியான பதில்களையே தருகிறார்.

வேர்கள் சார்பாக தேவதேவனை பேட்டி கண்டவர் எழுத்தாளர் மோகனன். அப்பேட்டியினை ஒட்டி சில துணைக்கேள்விகள் : பா. சத்தியமோகன்.

'கவிஞனாக' உருவெடுத்த இளமைக் காலம் பற்றி....

வறுமையும் அறியாமையும் நிறைந்த ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய இளமைக்காலம் ரொம்பத் துக்கம் நிறைஞ்சதா இருந்தது. பிறந்த்திலிருந்தே நான் அப்படித்தான் இருந்திருக்கேன். காரணம் புரியாத ஒரு துக்கம். பிறகு பொருளாதார ரீதியில் உள்ள கஷ்டங்கள். படிப்பைத் தொடரமுடியாத நிலை.இந்த நிலைமையிலேயே கலைகள் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வமும் மோக பங்கமும்... இதுதான் சுருக்கமான எனது இளமைக்காலம்.

'காரணம் புரியாத துக்கம்' என்கீறிர்கள், உங்கள் பெரும்பாலான கவிதைகளில் அதை உணர முடியாது.அந்த இனம் புரியாத துக்கத்தின் தொடர்பாகவோ, வேறு வடிவமாகவோ உங்கள் கவிதைப் படைப்புகளைக் கருத இடம் இருக்கிறதா?

எனது துக்கத்தை அவதானிக்கும் விதமாகவும் அதிலிருந்து விடுதலை பெறுமவிதமாகவும் அந்தக் கவிதைகள் உருவாகியுள்ளன. விடுதலையடைந்த மனிதனின் உற்சாகமும் பரவசமும் என்னுடைய கவிதைகளில் உண்டு . வில்லியம் பிளேக் தன்னுடைய கவிதைகளை வகைப்படுத்தும் போது கண்டைந்த ஆனந்தமும் துக்கமும்("Songs of Innocence & Songs of Experience) என்னுடைய கவிதைகளில் உள்ளன.

தமிழின் நீண்ட கவிதை மரபு, சங்கக் கவிதை, மரபுக் கவிதை பற்றி...

தமிழுக்கு நீண்டதும் தனித்துவமானதுமான ஒரு கவிதை மரபு இருக்கிறது. இயற்கையோடு நெருங்கி வாழ்ந்த காலத்தைக் காட்டுகின்ற சங்க காலப் பாடல்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களுக்கு அவர்கள் இயற்கையப் பயன்படுத்திய விதம் இன்றைய நவீன , பின் நவீனத்துவக் காலத்திலும் மறுக்க முடியாத சில கூறுகளைக் கொண்டுதான் இருக்கிறது. திருக்குறள் தோன்றுகிற சமயத்தில் உலகத்தின் எந்த மூலையிலும் இவ்வளவு உயர்வான - கவிதைச் செறிவிலும் கூட - இவ்வளவு உயர்வான ஒரு நீதி நூல் தோன்றியதில்லை என்று அறிகிறோம். கவித்துவ உத்தேசமில்லாமலேயே எழுதப்பட்ட நீதிநூலில் கவிதையின் முக்கிய கூறான மனவெழுச்சி எவ்வளவு தூரம் வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் நாம் வியந்து கவனிக்க வேண்டிய விஷயம். நீதியுணர்வுக்கு அடிப்படையானது இந்த மனவெழுச்சி என்பதுதான் காரணம் என்று தோன்றுகிறது . அடிப்படைகளைத் தொட்டுள்ள படைப்பு திருக்குறள்.

தானாடுகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்தம் மாலும் என்நெஞ்சு....

இது மாதிரி நிறைய குறள்களில் காணப்படுகிற உணர்வெழுச்சிகளை "ரொமாண்டிக்" தனமானது என்று தள்ளிவிடக் கூடியது நவீனக் கவிதைக் கோட்பாடு. ஆனால் அது வள்ளுவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிஞ்சது அவரது ஆர்வமும் மனவெழுச்சியும் மட்டுத்தானே. இன்றைக்கு இதுபோன்ற ஒரு "ரொமான்டிக்" கான மனவெழுச்சியில்தான் மிக உயர்ந்த ஒரு யதார்த்த நிலையை நாம் அறியமுடியும் என்று நான் என்னுடைய உரையாடல்களிலும் , கவிதைகளிலும் எழுதி உணர்த்தி உள்ளேன். இன்றைக்கு பின் நவீனத்துவம் கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும், இருக்கமுடியும் என்கிறது. மறைந்த "குரு" நித்ய சைதன்ய யதி போன்றோர்கள் பேட்டி (காலச்சுவடு) மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது . ஜெயமோகன் தனது ஆழ்ந்த படிப்பு மற்றும் அவதானங்கள் மூலமாக இதை ஒரு நூலாக எழுதியுள்ளதையும் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது முக்கியமான ஒரு பாய்ச்சல்.

உணர்ச்சி மிகையைத் தவிர்க்க வேண்டும் என்பது நவீனத்துவக் கோட்பாடு. அதை (உணர்ச்சியை) அறிவுத்தளத்தில் நாம் யோசிக்கவேண்டும் அல்லவா?

எழுத்தில் உணர்ச்சி மிகையைத் தவிர்க்க வேண்டும்தான். நாம் தர்க்கத்திற்கு அடிப்படையாய் உள்ள "உணர்ச்சி மிகை" யை இப்பொழுது வற்புறுத்துகிறோம். சொற்களிலும் அது ஒரு இசையாக வெளிப்பட்டால் நல்லது என நினைக்கிறோம்.

ஒரு நுண்பொருள் உருவத்தை உருப்பெருக்கிக் காட்டுற மைக்ராஸ் கோப்பாலத்தான் காணுதல் , புரிதல் சாத்தியமாகிறது மாதிரி .காவிய இலட்சனங்கள்ல ஒன்றுதானே அதீதக் கற்பனை. அதற்கு எத்தகைய மனவெழுச்சி வேனும்னு நாம் யோசித்துப் பார்க்கணும்.நாம கவிதை மூலமா கவிஞன் மூலமா அடைய வேண்டியது அந்த மனவெழுச்சிதான்.அதை வடிகட்டி நாம கண்டமைகிற அறிவு எல்லாம் கவிதையில் இரண்டாவது விஷயம்தான் .அந்த அறிவிலும் அழகும் அற்புதமும் உண்டுங்கிறதையும் மறுக்க முடியாது .

இன்றைய கவிஞன் பிரஞ்சு மற்றும் ஐரோப்பியக் கவிதை மரபுகளை அறிந்தவன். நமது சங்க இலக்கியம் , பக்தி இலக்கியம் , காவியங்களை அறியும் போது ஆச்சிரியப்பட பல விஷயங்கள் இருக்கின்றன, என்றாலும் கவிதையில் உலக இலக்கிய வாரிசாகத்தான் அவன் வெளிப்பட வேண்டும்.அப்படி வெளிப்படும் போதுதான் அவன் இன்றைய கவிஞனாக இருக்க முடியும். இதையும் மீறி அவன் கவிதையில் ஒரு கலாச்சாரம் , மரபு , இனத் தனிமை , தவிர்க்கப்பட முடியாமல் இடம்பெற்றிருக்குமானால் - அப்போதுதான் அதை யாரும் குறை சொல்ல முடியாது.

கவிதையில் உலக இலக்கியத்தின் வாரிசாகத்தான் இன்றைய கவிஞன் வெளிப்பட வேண்டுமென நீங்கள் கூறுவது எதன் பொருட்டு? பரந்துபட்ட வாசிப்பு மற்றும் உள்வாங்குதல் , உணர்தலின் அடிப்படையிலா?

கவிதை அத்தகைய ஒரு கலை என்று நான் கருதுவதால்.

புதுக்கவிதைக்கு , 60 களில் இருந்த உத்வேகம் இப்போதும் உள்ளதா?

பாரதியும் , பாரதிதாசனும் இலகுவான யாப்புகளைப் பயன்படுத்தினார்களே ஒழிய யாப்பைத் துறக்கவில்லை. புதிய விஷயங்களுக்கு வந்தாங்க.ஆனாலும் முற்றிலும் புதிய விஷயங்களை யாப்பிலே சொல்ல முடியுமாங்கிற சந்தேகம் இருந்தது. இவர்களால நவீனக்காலக் கவிஞர்களா ஆக முடியாம இருந்தது. இந்தச் சமயத்துல நவீனக் கவிதையை ஒரு இயக்கமா சி.சு.செல்லப்பா ஆரம்பிக்கவும் தமிழ்க் கவிதையுலகில ஒரு எழுச்சி , சுறுசுறுப்பு பிறந்தது. எல்லா எழுத்தாளர்களும் ஒரு திருவிழாக் கொண்டாட்டம் மாதிரி புதுக்கவிதைகள் எழுத ஆரம்பிச்சாங்க, அதேதான் இன்னைக்கும் தொடருது. அதில எந்த மாற்றமுமில்ல.60கள்ல இருந்த அதே மாதிரி உத்வேகம் இன்னமும் இருக்கவே செய்யுது.

ஒரு கவிதை உங்களுக்குள் எவ்வாறு உருவெடுக்கிறது?

ஒளி வீசுகிற ஒரு காட்சி என்னை வசீகரிச்சு ஒரு படிமமா எழுதத் தூண்டியிருக்கு.

நெஞ்சு கனத்து கண்ணீரை வர வைக்கிற தனிமையில் அப்போ காணுற காட்சி, என்னை மொழி பெயர்க்க உதவுற படிமமா உதிவியிருக்கு.

துக்கம் நிறைந்துவிட்ட மனநிலையோட அந்த் வேதனையின் துக்க காரணத்தை ஆராய்கிற விதமா நான் உட்கார்ந்திருவேன்

அப்போ ஒரு தாளம் இசையோடு கூடிய ஒரு வாக்கியம் , எனக்கு நானே பேசிக்கொள்ள உதவுவது போல வரும். அந்தச் சொல்லே அதற்கான அடுத்த அடுத்த சொல், படிமம் எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு வந்து , எப்படி எழுதி முடித்தேன் என்று பின்னால் வியக்கும்படியான , என்னை மீறிய ஒன்றாக அது எழுதப்பட்டிருக்கும்.

என் மனதில் திரும்பத் திரும்ப வந்து மோதும் தீவிரமான படிமங்களை நான் தியானித்துக் கோர்த்தும் எழுதுவதுண்டு.நெடுங்கவிதை முயற்சிகளுக்கு இந்த்த் தியானம் அவசியம்.

உங்களது கவிதை அனுபவம் மிகவும் சிகரத்தில் இருக்கிறதா தோணுது. அதாவது எழுத உட்காருதல் என்கிற ஒரு புறச்செயலைத் தவிர , துக்கம் நிறைந்த அந்த மனோவேளை vergalஉங்களை எழுத வைப்பது உன்னதம்தான். அப்படியெனில் அந்தப் பொழுதிற்காகக் காத்திருப்பதும் நிகழ்கிறதா? நீங்கள் விரும்பி எழுத முற்படுவது என்ற நிலையை நீங்கள் மறுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? இந்தக் கேள்வியைக் கவிதை மனோபாவ ஆளுமை குறித்த கேள்வியாகக் கூடக் கருதலாம்.

'அந்த இடத்தை' - அதுதான் எனது 'மூட்' , எனது 'யதாஸ்தானம்' என்று கருதுகிறேன். எல்லா வேலைகளையும் மளமளவென்று முடித்துவிட்டு அந்த இடத்திற்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் போய் இருக்கவே விரும்புகிறேன். மற்றப் பொழுதுகளில் குழந்தைகளுடனும் , நண்பர்களுடனும் , ஆர்வத்துடன் ஈடுபடமுடிகிற பிற தொழில்களிலும் இருக்க விரும்புகிறேன். நான் காத்திருக்கலை. ஆனா நான் எப்போதும் என்னுடைய இருப்பிடத்திற்கும் போக விரும்புகிறேன். அங்கிருந்துதான் நான் கவிதை எழுதறேன். அங்கிருப்பது தண்ணீரில் இருப்பது மாதிரி.கவிதை எழுதுவது நீர்ப்பூவைப் பறிப்பது மாதிரி.

நீங்கள் எழுத ஒன்றுமில்லாத வெறுமையை உணரும் போது என்ன செய்கிறீர்கள்?

பெரும் படைப்புகளைத் திட்டமிட்டிருப்பவர்களிடம் நீங்கள் இக்கேள்வியைக் கேட்க முடியாது. நான் கவிஞன் என்பதால் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். எழுத ஒன்றுமில்லாமல் இருக்கும் வெறுமையை நான் துக்கமாக ஆக்கிக் கொள்வதில்லை."கதே" யைப் போல , வாசிப்பிலும் , மானுடப் பிரச்சனைகளை அன்றாட நிகழ்வுகளில் சிந்திப்பதிலும் செலவிடுவேன்.

பாரதி பாரதிதாசனுக்குப் பின் அவர்கள் அளவுக்குச் சொல்லக்கூடிய கவிஞர்கள் உருவாகாதது ஏன்?

இருவருமே தங்களது தார்மீக ஆவேசத்தை சமகாலத்தோடு பிணையும்படி விட்டார்கள்.இன்றைய கவிஞர்களுக்கு அத்தகைய ஆவேசமோ சமர்ப்பணமோ இல்லை. ஆனாலும் ஒன்று சொல்வேன்: முதல்ல கவிதையோட தளம் என்ன? எல்லாக் கலைகளோட உச்சத்தைத்தான் கவிதைன்னு சொல்றோம்கையில கவிதைங்கிற கலை தன்னியல்பாகவே எதற்காகத் தோன்றியிருக்குன்னு நாம யோசிக்கணும். பாரதி, பாரதிதாசன் இரண்டுபேருமே தங்களுடைய தார்மீக ஆவேசத்தை முறையே தேசீயத்திலும் , தமிழ்த் தேசியம் மற்றும் சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றிலும் பெரும்பாலும் செலவிட்டார்கள்.பாரதிதாசன் அழகின் ரகசியம் , குடும்பம் என்று நுணுகிச் சென்றது போலவே , பாரதியும் ஆன்மிகத்திற்குள் நுழைந்தார் , அவை நமது வேதங்கள் , உபநிஷத்துக்கள் ஆகியவற்றின் எதிரொலியாக அமைந்ததே அன்றி, ஜீரணித்தமையால் ஏற்பட்ட வாழ்வனுபவங்களாக வரவில்லை. தாகூருக்கு அவரது ஆளுமையின் வெளிப்பாடாகவே அவை வெளிவந்தன. பாரதி , பாரதிதாசன் இருவருமே குறிப்படத்தக்க நம் கவிஞர்கள் என்பதோடு அவர்களது தார்மீக ஆவேசத்தை நாம் சந்தேகப்படுவதன் மூலமே , அதாவது துருவுவதன் மூலமே நம்மிலும் வளர்ச்சி சாத்தியமாகும் . இன்று பின் நவீனத்துக் கவிதை பிரமளில் தொடக்கம் கொள்கிறது என ஜெயமோகன் நிறுவுகிறார் . பிரமளின் மொத்தப் படைப்புகளையும் கொண்டு பார்த்தால் தமிழுக்குக் கிடைத்த அடுத்த கவிஞர் அவர் என்று நாம் காண முடியும் முந்தைய கவிஞர்களை நாம் சந்தேகப்படுவது- துருவுவது போலவே நாம் பிரமிளையும் ஆராய வேண்டும். புறங்காரணங்களான அரசியல் மற்றும் பண்பாட்டு நெருக்கடிகள் ஒருவனை வெகுதூரம் வழி நடத்துவதில்லை.மழைக்காக அண்ணாந்தவன் எல்லையற்ற வானத்தைக் கண்டடைவதற்கு அவனுக்குள் ஏற்கனவே தார்மீக எழுச்சி பதுங்கியிருந்திருக்க வேண்டும் அதுவும் போதிய வீரியத்துடன்.

கவிதைகளில் நீங்கள் குறிப்பிடும் தார்மீக எழுச்சி ஒரு கவிஞனுக்கு இயற்கையிலேயே இருக்க வேண்டுமென்கிறீர்கள்?அதை ஒரு முக்கியமான கூறுபாடாகக் கருதுகீறிர்களா?

ஆமாம்.இல்லாவிட்டால் அவன் யார்? அவன் எதற்காக எழுதனும்? அவன் தன் கட்சிக்காகவும் , சாதிக்காகவும் கூச்சலிடுவது எழுத்தாகிவிடுமா?

கவிதை என்பதற்கு அடிப்படையான அழகியல் , உள்ளடக்கக் கோட்பாடு வடிவம், உத்தி பற்றி.

அழகியல் அடிப்படை.ஏதாவது ஒரு உணர்வுதான் உள்ளடக்கம். அந்த அழகும் உணர்வும் ஒவ்வொரு கவிதையிலும் தனக்கே ஆன ஒரு முழுமையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.அதுதான் அந்தக் கவிதையோட வடிவமாயிடுது.ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். உணர்வு என்பதே தன்னளவில் மிகத் தீவிரமான ஒன்றுதான்.அந்தத் தீவிரத்தின் மூலமே எதையாவது ஒன்னை வெளிபடுத்துகிறோம். அல்லது கண்டடைகிறோம்.அதைக் கவிதை என்கிறோம். கவிஞனோட போதமும் தீவிரமும் தாங்கள் வெளிப்படத் தோதான உத்திகளைத் தாங்களே தேடி எடுத்துக் கொள்கின்றன.


உங்களது 'நக்ஷ்த்ரமீன்' தொகுப்பில் 'உள்ளும் புறமுமாய்ச் சில படிமங்கள்' கவிதையில்

நிலா ஒளிபோல அகண்டது என் இதயச்சதை

சின்னஞ் சிறு இடையூறுக்கும் சிலந்தி வலைப்போல அது துடிக்கிறது.

சின்னஞ் சிறு தூண்டலுக்கும் நிலாவினைப் போல் அது பாடுகிறது

எப்போதும் எனக்கு ஒரே வேலை

இந்த இதயத்தை பழுதுபார்க்கும் வேலை

என்கிறீர்கள். கவிதையில் நீங்கள் குறிக்கும் 'நான்' 'எனது' அனுபவங்கள் வாசிக்கும் போது வாசகனுக்காகிறது. சமூகத்தைச் சென்றடைய உங்களது உத்திமுறையாக இதுபோன்ற கவிதைகளை எடுத்துக்கலாம்னு நினைக்கிறேன்.

ஏனேனில் அறியப்பட வேண்டிய கவிஞர்கள் மத்தியில் நீங்கள் உணரப்பட வேண்டிய கவிஞரா இருக்கிறதால இப்படி கேட்கிறேன்?

அது உத்திமுறை என்பதல்ல. நான்தான் நீ என்பது ஒரு உண்மை.ஆகவே நாம் நாம அனுபவத்தைச் துணிந்து சொல்லலாம்.அது ஆழமான அனுபவமாக இருப்பின் எல்லோரது அனுபவமாகவும் விரிவுகொள்வது இயற்கை.

தமிழ்க் கவிதையின் எதிர்காலம் பற்றி...

நான் யோசிக்கலை. நடந்துகிட்டிருக்கிறது பற்றி யோசிச்சிருக்கேன்.

கவிஞனோட சக்தி காலத்தை அழிச்சு புதுப்பிக்குது சொற்கள்ல புதுப்படிமங்களை உருவாக்குது. நம்ம கவிஞர்கள் தங்கள் கவிதை மீதே நம்பிக்கையில்லாதவர்கள் தாங்கள் கவிஞர்கள் என்பதன் மீதும் நம்பிக்கை கிடையாது. திராணி இல்லாதவர்கள் "கவிதை என்பது காகிதத்தில் எழுதப்படும் எழுத்துக்களே " என்று ஒரு அமைப்பியல்வாதி சொல்லிவிட்டால் உதறலெடுக்கக் கூடியவர்கள்.

சுற்றுச் சுழல் அக்கறை பற்றிய உங்கள் பின்ணணி என்ன?

சுற்றுச் சூழல் அக்கறைங்கிற மாதிரியான எந்த ஒரு பிரக்ஞையோடயும் நான் எதையும் எழுதியதில்லை. மனம் பெரியதாய் வேதனை கொண்ட ஒரு நிலையில், கையறுநிலை போன்ற ஒரு நிலையில் நெஞ்சப் பொருமலாய் வெளிவந்த ஒரு வரிதான் "ஒரு மரத்தை கூடக் காணமுடியவில்லை" என்ற வரி.அதைத் தலைப்பாக வைத்து அந்த மனநிலையோட நான் எழுதிமுடித்த அந்தக் கவிதையில இருக்கிறது, என் மனசோட ஒரு நிலச்சித்திரம்தான்.அதே மாதிரிதான் "அகழி" நெடுங்கவிதையும்."அகழி" யோட படிமங்கள் என் மனதில் உதித்திருந்த போது உலகில் ஓசோன் பிரச்சனை எழுந்திருக்கவில்லை.மேலும் இயற்கையின் முன்பு என் மனம் கொள்கிற பரவசத்திலிருந்து என்னோட பல கவிதைகள் பிறந்திருக்கு."அகழி" ஒரு துஷ்டலோகம்(Dystopia)

திராவட இயக்கம் இடதுசாரி இயக்கம் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சியில் போதுமான தாக்கம் செலுத்தி உள்ளதா?

நாம பரிசீலித்தாக வேண்டிய நிலையில மறைமுகமான அதனோட தாக்கம் தமிழ் நவீன இலக்கியத்தை நன்றாக பாதிச்சிருக்கவே செய்யுது. அழகியலோடு முற்போக்கான அம்சம் மற்றும் அறச் சீற்றத்திற்கு முதன்மை கொடுத்து ஒரு தேர்வுடன் இலக்கியம் அதாவது முற்போக்கு இலக்கியம் தன் பங்கை அளித்திருக்கவே செய்யுது. அதே போலதான் திராவிட இயக்கத்தின் உள்ளார்ந்த பலத்தை அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாலும் கூடச் சீரழிக்க முடியாததற்கு அதன் அறம் தான் காரணம்.

ஓரளவுக்கு படிக்கும் போக்குடைய வாசகர்களைத் தன்வயப்படுத்தி இதற்குமேல் போகாதே என அணைகட்டுவது போல் சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் "போக்குகள்" பற்றி...

காலத்தை யாராலும் அணைபோட முடியாது. உள்ளேயிருந்து கொண்டே அவர்களைக் கேள்வி கேட்கிற இளைஞர்கள் அங்கேயும் தோன்றுவார்கள். ஒரு அமைப்பில் இருந்து கொண்டு , 'தலைவர்கள்' பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிற இளைஞர்கள் மிகவும் பலவீனமானவர்கள்தான். ஒருவன் பொதுவான ஒரு சமூகச் செயல்பாட்டுக்காகவே ஒரு குழுவை நாட வேண்டும்.கருத்துலக மனப் பாதுக்காப்புக்காக நாடுவது பெரிய அவலம். அத்தகைய சுகந்திரமற்ற இளைஞர்கள் சுயவாசிப்பு மூலம் நல்ல இலக்கியங்களை அடையாளங்காணமுடியாத ஊனத்தை அடைந்துவிடுகிறார்கள்.அவர்கள் விடுதலை பெற வேண்டும். அதற்கு படைப்புகள் பற்றிய ஆழ்ந்த விரிவான விமிர்சனங்களும், ஆய்வுகளும் நமக்குத் தேவை.

திராவிட இயக்கப் போக்கினால்தான் தமிழின் நவீன இலக்கியத்திற்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை`என்பது பற்றி...

அப்படியா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அமைப்பியல் , பின் அமைப்பியல் நோக்கிலான விமர்சனங்கள் பற்றி.

அது எழுப்பிய பரபரப்பு இப்போது ஓய்ந்துவிட்டதென நினைக்கிறேன். உண்மையைக் கண்டடைவதற்கான வழிகளை வித்தியாசப்படுத்தவது அந்த்த் தத்துவங்களோடு உள்ள கலைச் கலைச் சொற்கள்தான்.இந்தக் கலைச் சொற்களை ஒருவன் ஜீரணித்த பிறகு உண்மையைக் கண்டடையும் முறையில் ஒரு சுலபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.அந்தக் கலைச் சொற்களை உபயோகிக்காமலேயே வேகமாகத் தன் தொழிலில் இறங்க வேண்டும்.முடிவைத் தவறின்றிக் காண முடிய வேண்டும். தவறுகள் நேர வாய்ப்புகள் வைத்திருக்க கூடாது அந்தத் தத்துவம். ஆனால் பின் அமைப்பியல் இன்றும் வளர்ந்து கொண்டு வருவது தெரிகிறது.

அமைப்பியல் , பின் அமைப்பியல் பூர்வமா உங்களது ஒரு நல்ல கவிதை தீவிரமா விமர்சிக்கப்பட்டு நிராகரிக்கப்படும்போது உங்களது எதிர்வினை என்னவாக இருக்கும்?

சிரிப்பேன்.

எழுத்தாளன் பணி எழுதுவதோடு நின்றுவிடுகிறதா? உங்கள் எழுத்து மூலம் நீங்க தெரிவிக்க விரும்புவது?

எழுத்தாளன் , அவன் எழுதும் எழுத்தோடு தொடர்புடையதாகத்தான் அவன் செயல்பாடும் இருக்கும். பெரிய போராட்டங்களிலோ, தீவிரமான ஒரு இயக்கத்திலோ அவன் இல்லாம இருக்கலாம். " பாவனை" தான் பொல்லாதது. Fancy ஆக ஒன்றைச் செய்யாமலிருப்பது நல்லது.என் எழுத்து இன்றைக்கு வாழ்ற ஒரு மனுஷனோட ஜீவனை வெளிப்படுத்துற நோக்கங் கொண்டதாக நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியச் சூழல் அதன் குழு மனோபாவம் பற்றி...

"கெட்டதைப் பார்க்காதே, கெட்டதைப் பேசாதே , கெட்டதைக் கேளாதே " ங்கிற அறிவுரைக்குச் செவிசாய்த்தவர்கள் மாதிரி இருக்கிறோம்.தமிழ் இலக்கியச் சூழல்ல குழு மனோபாவம் இருக்கிறதுங்கிறதுக்கான சான்றாக உங்க கேள்வியை எடுத்துக்கிடறேன். அடுத்தது நீங்க இந்தச் குழு மனோபாவத்தை ஒரு எதிர்மறை அம்சமா அதாவது ஒரு அவலமாக் கண்டுதான் கேக்கிறீங்க இல்லையா? சரி . அப்புறம் இந்த குழு மனோபாவம் எங்ககிட்ட இருக்குங்கிறதை யாராவது ஒத்துக்கிடாறாங்களா? இல்லை. அப்படின்னா நீங்க நெனைக்கிற குழுமனோபாவம் உங்கள் மனப் பிராந்தி தானா? இல்லை. அப்படீன்னா அந்தக் குழு மனப்பான்மையினால நிலவுற தீமைகள் என்னன்னும் உங்களுக்குத் தெரியும் . அதனாலதான் கேக்கறீங்க ? இந்தக் குழுமனப்பான்மைக்கு யார் காரணம்? எது காரணம் ? எத்தனை மனிதர்களுக்கு இது பற்றி அக்கறை இருக்கு? எந்த , யாருடைய சவுகரியத்தின் பொருட்டு இந்தக் குழுமனோபாவம்? இந்தக் கேள்விகளுக்குப் பின்னணியில் இருப்பது மிகவும் அருவருப்பான மனிதர்களாலான ஒரு சூழலின்றி வேறு என்ன? ஆனால் இதைப் பற்றிப் "பேசக் கூடாது, கேட்கக் கூடாது, பார்க்கக் கூடாது" ஆகவே திருட்டுத் தனமாக அவைகள் பேசப்படுகின்றன.அறியாத மனிதர்கள் ஒருத்தரும் இல்லை.

மலையாளத்தில் , கன்னடத்தில் உள்ளது போல தமிழில் வெகு ஜன இதழ்கள் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் போனது ஏன்?

நம்ம வெகுஜன இதழ்கள் தரத்தில் பின் தங்கியிருப்பதுதானே காரணம்.நம்முடைய கலாச்சாரச் சக்திகள் சிதறுண்டு கிடக்கு. அவற்றை ஒன்று சேர்க்கிறது பற்றியும் வாசகத்தரத்தை உயர்த்துகிறது பற்றியும் நாம் சிந்திக்கணும்.

நல்ல படைப்புகள் கண்டுகொள்ளப் படாமல்போவது , தமிழில் இலக்கிய உணர்வு போதிய அளவு இல்லாமல் போனது குறித்து...

திரும்பவும் நம்ம சூழல் குறித்தே கவலை தெரிவிக்கிறீங்க. நானும் உங்களோட இந்தக் கவலையைக் பகிர்ந்துகிடறேன்.

கவிஞனாக இருப்பதற்காக வருத்தப்பட்டது உண்டா?

இல்லை. இது மகத்தான பேறு. கலைஞர்களிலேயே பெரிதும் கவுரவிக்கப்படத் தகுந்தவன் கவிஞனே என்னும் பெருமிதமும் உண்டு.

குடும்பச் சூழல் எழுதுவதற்கு ஊக்கம் அளிக்கிறதா?

"குடும்பச் சூழல் தவிர்க்க முடியாதது. நான் எழுதுவதும் தவிர்க்க முடியாதது" என்ற நிலை மாறி இன்று எனது நண்பர்களும் குடும்பமும் மிகவும் ஊக்கமளிப்பதான சூழல் நிலவுகிறது. நான் தான் எழுதிக் குவிக்கவில்லை.

படைப்பாளியே பதிப்பாளராகவும் இருந்ததால் ஏற்பட்ட நன்மைகள் - பாதங்கள்.

என்னைப் பற்றிதானே கேட்கிறீங்க. என்னோட இரண்டு புத்தகங்கள் தவிர மற்ற ஒன்பதையும் நானே வெளியிட்டிருக்கிறேன். காரணம் பதிப்பாளர் கிடைக்காததாலதான்.

உரிய நேரத்தில் புத்தகம் வெளிவருகிறதுங்கறதுதான் நன்மை.ரொம்ப நட்டத்திற்குப் பிறகாவது இன்றைக்கு எனக்கு நல்ல விற்பனையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்தத் தொழில் எனக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கு.

நிதிச் சுமையை மீறி இத்தனை தொகுப்புகள் வெளியாக உதவியது லெளகீக நெருக்கடியைப் புறக்கணிப்பதில் வெற்றிபெற்றதாலா? அதாவது.... நிதிச்சுமைக்கு எதிர்த்தட்டுல இருக்கிற குடும்பம் இரண்டையும் சமமா பிடிக்கிற தராசு மனோநிலை பற்றி.......

எனது முதல் இரண்டு தொகுப்புகளும் எனது குடும்பம் ஆரம்பிப்பதற்கு முன்னே வெளிவந்துவிட்டன. அவை வெளிவர ஒரு நண்பரின் உதவி இருந்தது. அந்த முதலீட்டைத் தொடர்ந்து வருகிறோம். ஒவ்வொரு புத்தக வெளியீட்டின் போதும் கணிசமான தொகை போட்டுத் தொடர வேண்டியுள்ள அவலமே இன்னும் உள்ளது.புத்தக வெளியீடு - குடும்பம் இரண்டும் ஒன்றையொன்று எந்தவிதத்திலும் பாதிக்காத ஓர் ஒழுங்கை நான் கடைப்பிடித்துவருவதுதான் நான் செய்யும் மிகப்பெரிய ஒரு தீரச் செயல்.

சமகால எழுத்தாளர்களில் நம்பிக்கையூட்டுபவர்கள் யார் யார்?

பெரிய சாதனைகளை நிகழ்த்தக்கூடியவராக இப்போதைக்கு ஜெயமோகன் தெரிகிறார்.மற்றவர்கள் இவ்வளவு திடமாகக் கூறமுடியாததால் பெயர்களைத் தவிர்க்கிறேன். "விஷ்ணுபுரம்" நாவலைப் பற்றி பேர் பெற்ற எழுத்தாளர்கள் பலர் கூறிய அபிப்பிராயங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழ்ப் படைப்பாளிகளின் வாசிப்புத்தரம் மிக மட்டமாக உள்ளது என்பதைத்தான் அறிய முடிந்தது. இப்படி இருக்கையில் சிறந்த இலக்கிய படைப்புகள் இவர்களிடமிருந்து வருவதும் இவர்களால் தமிழர்களின் வாசிப்புத்தரம் உயர்வதும் எவ்வாறு ஆகும்? திடீரென்று இந்த விஷயம் இப்போதுதான் உறைப்பது போல் இருக்கிறது. தமிழில் பிரஞ்கையுள்ள படைப்பாளிகள் ரொம்பக் குறைவாகவே இருக்கிறார்கள். தங்கள் 'சுய அனுபவத்திலிருந்து திராணியான கலையைப் படைத்தலை' சு.ராவும் கூட தவறவிட்டுள்ளார்.தன்னோட புதிய நாவலில் Text ஐ மட்டும் முன்வைத்தல் போதும் என்கிற நவநாகரிக மோஸ்தர் வலையில் சிக்கி, Text ஒரு மெட்டபெர் அல்லது படிமம் ஆகையில்தான் கலையாகிறது என்பதையே தவறவிட்டிருக்கிறார். அது பத்தாம்பசலித்தனமான கருத்தாகிவிட்டிருக்கிறது அவருக்கு. நமது படைப்பாளிகளிடம் அவர்களையும் மீறி சிறந்த படைப்புகள் தானாக வந்தால்தான் உண்டு என்கிற நிலைதான் உள்ளது. சிறுகதைகளில் , கவிதைகளில் கூட அது சாத்தியமாகலாமேயன்றி நாவல், காவியம் போன்ற செவ்வியல்கலைகளில் இதுவரை சாத்தியப்படவில்லை. கலைபற்றிய ஞானமும் பிரஞ்கையும் ரொம்ப அவசியம் .இன்று நம்ம நிலைமையைப் பார்த்தால், இது கோட்பாடுகளின் காலம்னு சொல்லும்படியா இருக்கு. கோட்பாடுகளோட ஆதிக்கத்திற்கு அகப்படாத வீர்யத்துடன் ஒருவனுக்குச் சிந்திக்க தெரியணும்.

உங்களது கவனத்தில் சிறப்பாக எழுதும் தமிழ்க் கவிஞர்கள் எவரும் இல்லையா?

பெயர் உதிர்ப்பைத் தவிர்க்க விரும்புகிறேன். காரணம் நம்முடைய தமிழ்ச் சுழல். கவிஞனாக இருப்பவனின் மனவெழுச்சியும் ஊக்கமும் விசேஷமானது. அவனுக்கே அது தெரியும். நல்ல படைப்புகளின் மூலம் அவன் தனக்குத் தானே உத்வேக மூட்டிக் கொள்ள வல்லவன். அவனுக்குத்தான் காத்துக்கொள்ள வேண்டிய உணர்வுகள் எவை என்பதும் தெரியும்.

தமிழனின் வாழ்வும் பண்பாடும் தமிழ்ப் புதுக் கவிதையில் போதுமான அளவு பதிவாகி உள்ளதா?

நான் இப்படிச் சிந்திக்கிறதே இல்லை.தமிழனின் தனிவாழ்வு , தனிப் பண்பாடு குறித்து எனக்கு அக்கறையே இல்லைன்னுதான்படுது. மனித வாழ்வு மனிதப் பண்பாட்டுக்கான துடிப்பு , தவிப்பு நமது கவிதைகள்ல பதிவாகியிருக்கான்னுதான் நாம பார்க்கணும். அந்த மாதிரி இனவரைவுகளுக்கு முக்கியம் கொடுத்து எழுதற கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒரு கோட்பாடு அளிக்கிற சலுகை அவங்களுக்கு கிடைக்குது. சாதி, மதம், இனம், நாடு ஆகியவற்றால் பிளவுண்ட ஒரு மனம் கூட அத்தகைய கவிதைகளை எழுதிவிட முடியும்.

மனித வாழ்வு , மனிதப் பண்பாடுன்னு கவிதையைப் பொதுமைப் படுத்துவது பரந்த மனோபாவம். இருந்தாலும் இயற்கைச் சூழலையும் , பண்பாடு வாழ்வியல் முறைகள் இவற்றிலிருந்து விடுபட்டுப் படைக்கப்படுகிற தமிழ்க் கவிதைகள் - எதிர்கால தமிழ்ச் சமூகம் வாசிக்கிறபோது - எந்த அடையாளத்தை அந்தக் கவிதையில் தேடி அடைய முடியும்? அப்படி ஒரு சிக்கல் இருக்கே? இப்போ புறநானூற்றுக் காலச் சூழல் எப்பேர்ப்பட்ட தொன்மையை நாம் பெற்றிருந்தோம்னு சொல்லுதோ........அதுபோல.........

நம்மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளங்களை உதறுவது தான் முக்கியமானது . அடையாளங்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறோம்? அடையாளங்கள் - இயற்கையானவை - இருக்கவே செய்யும், மனிதன் புற அடையாளம் கூட அழிந்து அமானுஷ்யத்தைக் தரிசிக்கிற வேளை கூட உண்டல்லவா? தாம் அடையாளங்களைக் குறித்து சிந்திக்கிறது ஏன்?..... இப்படி நாம் சிந்திக்கிறது அடையாள அழிப்பு, கலாச்சார அழிவு ஆகியவற்றை ஆதிரிக்கிறதும் , கண்டுகொள்ளாமலிருக்கிறதுமான செயலாப்படுது போலிருக்கு, அழிய வேண்டியவைகளை அழிப்பதும் , காக்க வேண்டியவைகளை காப்பதுமாய் நடக்கிற ஒரு சுதந்திர இயக்கத் தோடதான் கவிஞன் இருக்கிறான். சுதந்திரப் போர் அது. 'நாம்' கிறதை மையமாகக் கொண்டது அது.

பள்ளி ஆசிரியப்பணி நிறைவு தருகிறதா?

எழுத்தாளனுக்கு இதைவிட உகந்த வசதியான தொழில் வேறு என்ன இருக்க முடியும்?

சிறுபத்திரிக்கைச் சூழல் , செயல்பாடுகள் பற்றி.......

நிறைய புத்தகங்கள் வருகின்றன. பத்திரிக்கைகள் வருகின்றன. வாசகர்கள்தான் யாருன்னு தெரியல.ஒரு வேளை எத்தனை எழுத்தாளர்களோ அத்தனை பேருந்தான் வாசகர்களோன்னு தோனுது. எழுத்தாளனல்லாத சில வாசகர்களைப் பார்க்க முடிஞ்சபோது அவங்கமட்டும்தான் ஆரோக்கியமான வாசகர்களாக இருக்கிறதும் தெரியுது. அவங்களைக் கண்டு பிடிச்சு பரிசு கொடுத்து கவுரவிக்கலாம்.

இனிவரும் கணிணி யுகத்தில் இலக்கியத்தின் தேவை கரைந்து போய்விடுமா?

இலக்கியத்தின் தேவை அதிகரிக்கும். குறிப்பாக கவிதையின் தேவை.மானுடச் செயல்பாடுகளை வேகப்படுத்துவதுதானே கணிணி.

எதன் முன்னும் சளைக்காத மூளை, கவிதையின் முன் மட்டும் வியந்து நிற்கும். புத்துணர்வு கொள்ளும். கணிணிகளால் மூளையைக் களைப்படையச் செய்யவே முடியும்.

கணினியுகம் வந்தால்கூட கவிதைச் சிகரம் எட்டப்பட முடியாமலே இருக்கும்னு அழகாச் சொன்னீங்க. கவிதையின் முழுப்பொருளும் பரிமாறப்பட்ட ஒரு வாசனையேனும் இப்போதெல்லாம் காணமுடிகிறதா? இந்த இடைவெளிபற்றி உங்கள் கருத்து என்னவாக இருக்கிறது.

நிச்சயமாக நல்லகவிதைகள் அதன் வாசகர்களைச் சென்றடையவே செய்யும். செய்கிறது. இடைவெளிகளைப் பற்றி நாம் கவலைகொள்ளாமல் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் புரிந்து கொண்டு கொண்டாட வேண்டும் என்ற எண்ணமும் , கவலையும் வெகுஜனப் புகழ் மீது கொண்ட ஆர்வமாக இருப்பின் அது சரியாகதல்லவா? அதே சமயம் சமூகத்தில் கவிதா உணர்வு இல்லாமையை உணர்கிற துக்கம் - தனிமை - கவிஞனுக்கு உண்டு என்பது வேறு விஷயம். நம்முடைய கஷ்டம் எந்த மாதிரியானது என்பதை நாமேதான் அறிந்து கொள்ள வேண்டும்.

காட்சி ஊடகம் அச்சு ஊடகத்தை வெற்றி கொள்ளுமா?

காட்சி ஊடகம் அச்சு ஊடகத்திலுள்ள வெறுங் காட்சிகளை அகற்றும். வெறும் நிகழ்வுகளை அகற்றும். தத்ரூபமாகக் காட்சிப்படுத்த முயலும் வெறும் விவரணை வர்ண்ணை வரிகளை அகற்றும். மொழியால் மட்டுமே இயலக்கூடியவற்றில் சிந்தனையைச் செலுத்தி உயரிய இலக்கியத்தை மட்டுமே ஊக்குவிக்கும்.

"தேவதேவன்" - பெயர்க்காரணம் ஏதும் உண்டா?

எனது புனைப் பெயரே நான் எழுதிய எனது முதல் கவிதை என்று சொல்லலாம். வேறு காரணம் ஏதுமில்லை.

இசை மற்றும் பிற துறைகளில் ஈடுபாடு உண்டா?

இசை , நடனம் இரண்டும் என்னை ரொம்பக் கவர்ந்திருக்கு. என்னோட இளமைக் காலம் முழுக்க அதிலேயே தோய்ந்துதுன்னு கூடச் சொல்லலாம். அதுக்கான சூழல் இருந்தது. ஆனால் நான் ஒவியனாகனும்னுதான் ரொம்ப ஆசைப்பட்டேன். அது நிறைவேறல்ல.

கி.ரா. வை நான் முதல்ல அவரோட இடைசெவல்ல வைத்து சந்திக்கிறேன். அவருக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு தெரியும்.கர்னாடக இசையின் ராகங்களை எப்படி

சுலபமாகக் கண்டுபிடிக்கிறதுன்னு சொல்லிக்கிட்டிருந்தார். எங்களோட பேச்சு நெருக்கமான முறையில் போய்க்கிட்டிருந்தது. அப்போ, "இசை ஒரு போகப் பொருள் மாதிரி தெரியுது" ன்னு நான் சொல்லிட்டேன்."அடடா , இசையில மனிதன் தன் ஆத்மாவே அப்படியே கரைஞ்சு போயிடறதைத்தான் பார்க்கிறான். நீங்க எப்படி இப்படி சொல்லப் போச்சு. யாருமே இப்படி சொல்றதில்ல " ன்னார்.தியானம் என்னை ரொம்பக் கவர்ந்தது. அதுக்கும் பிறகு இசையை எப்பவாவது ஒரு சமயத்தில மாத்திரமே கேட்க விரும்பினேன். சிலர் தங்களோட அன்றாட வாழ்க்கையில இசையை ஒரு பின்னணி மாதிரி கொள்றது எனக்குச் சம்பதமில்லாதது மாதிரி தோணுது.

பின்னால கர்நாடக இசையை விட இந்துஸ்தானி இசை என்னை ரொம்பக் கவர்ந்தது; இந்திய இசைகள்ல கர்நாடக இசைதான் சுத்தமானது. இந்திய இசையும் பெர்சியனும் கலந்த இந்துஸ்தானியில கர்நாடக இசையைக் காட்டிலும் ஸ்பிரிட்சுவலான தொனி கூடுதலாக இருக்கிற மாதிரிபட்டது.

குழந்தைகளை வைத்தும் இதைப் பரிசீலித்தேன். அவங்களுக்கும் கூட சுபாவமா இந்துஸ்தானி இசை ரொம்பப் பிடிக்குது.

நண்பர் ராஜ சுந்தர ராஜன் , திருமறைப்பணிநிலையம் சவுண்ட் என்ஜினியர் பங்காரு , டேவிட் சந்திரசேகர் , பிரமிள் போன்றவர்கள் தொடர்பினால் எனக்கு மேற்கத்திய இசையில் ஏற்பட்ட அபிரிமிதமான அனுபவம் முக்கியமானது. பிரமிள் நம்முடைய இசையைவிட மேலை இசை எவ்வளவு தூரம் உயர்ந்த தரத்தில் உள்ளதுங்கிறதுக்கு எடுத்துச் சொன்ன முறையும் உதாரணமும் , ஒரு உரையாடலின் போது குரு நித்ய சைதன்ய யதி சொன்னதும் ஒன்றாக இருந்ததைப் பார்க்கும் போது உலகளாவிய இசை விமர்சன உலகில் பரவலாக நிறுவப்பட்ட ஒரு கருத்தாகத்தான் இது இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றியது. இதையெல்லாம் நான் இப்போ ஞாபகம் கொள்றதுக்கு ஒரு உள்நோக்கமும் இருக்கலாம். நம்ம கலைஞர்களுக்கு , எழுத்தாளர்களுக்கு இது மாதிரி உண்மைகள் அதிர்ச்சி தர்றதா இருக்கும். "நாம்" , "நமது" ன்னே நாம வளர்ந்திட்டோம்...திறந்த மனதுக்கான ஒரு கலாச்சாரச் சூழலுக்குத்தான் நாம இனி உழைக்கணும்.

பிற மொழிகளிலிருந்து ஆங்கிலம்வழி தமிழுக்கு நிறையக் கவிதைகள் வந்துள்ளன. தமிழ்க் கவிதைகள் எவ்வளவு தூரம் பிறமொழிக்குச் சென்றிருக்கு ? இதுபற்றி என்ன நீனைக்கிறீர்கள்?

தமிழ்க் கவிதைகள் இந்திய , ஆங்கில மொழிப் பத்திரிக்கைகளில் மொழிபெயர்ப்புகளில் வந்துள்ளதைப் பார்த்திருக்கிறேன். "இண்டியன் லிட்டரேச்சர்" மற்றும் "கல்கத்தா எழுத்தாளர் பட்டறை" தமிழுக்கெனவே தனித் தொகுப்புகள் போட்டிருக்கின்றன . மலையாளத்தில் "சமகாலின கவிதை" இதழ் தமிழ்க் கவிதைகளை நன்கு புரிந்து கொள்ளப்படும் அளவுக்கு முக்கியமான எல்லோருடைய கவிதைகளையும் நிறைய மொழிபெயர்த்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பிற இந்திய மொழிகள் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் சச்சிதானந்தன் கவிதைகள் ஆங்கிலத்திலும் அநேக இந்திய மொழிகளிலும் தொகுப்பாக மொழிபெயர்க்கப்பட்டது மாதிரி எந்தத் தமிழ்க் கவிஞனுக்கும் வாய்க்கவில்லை. அத்தகைய ஒரு கவிஞன் தமிழில் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

ஒரு படைப்பாளியோட இயக்கம் அவன் புழங்குகிற மொழியுடன் நின்றுவிடுகிறதா? சமூகத்துடன் கலக்காத தன்மை தமிழ்ப் படைப்பாளிகளிடம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே. கன்னடத்தில் சிவராமகரந்த் மாதிரியோ, அல்லது நர்மதா அணைத்திட்டம் பிரச்சனையில் ஈடுபடுகிற அருந்ததிராய் போன்றவர்கள் மாதிரியோ இங்கே யாரும் இல்லையா. ஏன் இந்த ஒதுங்கும் தன்மை?

உள்ளூரமிக்க ஆளுமை உள்ள எந்தக் கலைஞனுமே தன்னை ஒரு பெரிய கலாச்சார சக்தியாகத்தான் உணர்கிறான். சூழல் , சந்தர்ப்பமின்மைகள்தான் காரணம். தமிழ்நாட்டில் ஊழல் மிகுந்து அரசியல்வாதிகளும் , மூன்றாந்தரப் படைப்பாளிகளும் சினிமாகாரர்களும்தான் மக்களின் நாயகர்கள். அதுதான் காரணம் என நினைக்கிறேன்.

தங்களது படைப்புகளில் உச்சநிலையை அடைந்தபிறகே டால்ஸ்டாய் போன்ற படைப்பாளிகள் குழந்தைகளுக்காக எழுத ஆரம்பித்தாக சொல்லப்படுது. அதுபோல உங்களுக்கான அடுத்த கட்டம்பற்றிய திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா? உங்களது முழுக்கவனமும் பாசமும் கவிதைச் செயல்பாட்டில் மட்டுமே அமைதி பெறுகிறதா? அது போதுமானதா இருக்கா? வேறு வேறு வடிவம் பற்றி யோசிக்கதுண்டா? உதாரணத்துக்கு 'உள்முகம்' இதழில் உங்கள் கட்டுரை மிகச் சிறப்பாய் இருந்தது.

குழந்தைகளுக்கு எழுத வேண்டுமென்ற ஆசை இருந்தது. இப்போது அதுபற்றி யோசிக்கவில்லை. என்னால் சிறப்பாக எழுதி முடிக்கக்கூடிய காவியங்கள் , நாடகங்கள் மீது கவனத்தைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். வேறு தீர்மானங்கள் ஏதுமில்லை. நான் செய்வதெல்லாம் திடீர் திடீரென்று தோன்றி எழுதிமுடிக்கப் படக்கூடியதாகவே இருக்கும். இப்போது ஒரு நாடகம் முடிந்து வெளிவரும் நிலையில் உள்ளது. இதன் பிறகு இனி எழுத்தையே துறந்துவிடலாமென்று நினைத்தேன். என்னிடம் திட்டங்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கவிதை ததும்பும் ஒர் மனோநிலையில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பதே இஷ்டமானதாக இருக்கிறது.

கவிதையின் வெளிப்பாட்டுச் சாத்தியத்தில் அடுத்த தலைமுறை எந்தவிதமாக இயங்குமெனக் கருதுவீர்கள்?

வெளிப்பாட்டுச் சாத்தியம். அவனது வாழ்க்கை , சமூகச் செயல்பாடு, அவனது அனுபவ உலகம் சார்ந்து உருவம் கொள்ளும்.இன்று வெளிப்பாட்டுச் சாதனங்கள் மலிந்து கிடக்கிற சூழலில் இனி கவிதை அந்தஸ்தை அடைந்த ஒன்றே இலக்கிய அந்தஸ்தைப் பெறும். மற்றவைகள் மிக எளிதில் தயாரிக்கப்பட்டுவிடக்கூடிய நவீன உலகில் இருக்கிறோம். சற்று தேர்ந்துவிடக் கூடிய ஒரு தொழில் நுட்பத்தை தாண்டிய ஒன்றுக்காக நாம் அவாவிக் கொண்டிருப்போம்.

புதிதாக எழுதத் தொடங்கும் இளம் கவிஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இளம் கவிஞர்களுக்கு...இந்த உலகில் உங்கள் பிரச்சனை என்ன?

குழப்பம், தேடல் மற்றும் நீங்கள் வெளிப்படுத்த என உங்களுக்குள் ஏதேதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அப்படித்தானா? அது ஒருநாளும் அடங்கிவிடக் கூடியதில்லையா? அப்படியென்றால் மட்டுமே நீங்கள் கவிஞர்களாக வாழ்வைத் தொடங்குகிறீர்கள்.

இளம் கவிஞன் தன்னை ஒரு மாணவனாகக் கருதியபடி தமிழ் , இந்திய ஆங்கில மற்றும் உலகின் பல மரபு இலக்கியங்களையும் படிக்க வேண்டும். எல்லா மொழிகளிலுமுள்ள பெருங் கவி ஆளுமைகளை ரசித்துப் படித்து தன் கவி ஆளுமையைக் கண்டடைய வேண்டும். சம காலத்தில் பேர்பேற்ற கவிஞர்களின் கவிதைகளையும் அதே கண்ணோட்டத்தில் படித்துப் பார்த்துக் கொண்டால் தன்னோட இடம் ஒன்று அவனுக்குள் உருவாகலாம்.ஒரு சுயமான குரல் அதுவே உண்மையான ஒரு குரல். நீங்கள் குறிப்பாகச் சில புத்தகங்கள் , சில கவிஞர்கள் , சில இயக்கங்கள் என்று தேடாதீர்கள். அது குறுக்கு வழியைத் தேடுவதற்குச் சமமாகும். அது சுயமான குரலை ஒலிப்பவர்களாக இன்றி எதிரொலிப்பவர்களாக உங்களை ஆக்கிவிடவும் கூடும். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு இயக்கத்திடமிருந்தும் நாம் கிரகித்துக் கொண்டவை எவை எவை என்பதுதான் முக்கியம். வெளிப்படுதலுக்கான போதம் உள்ளவனுக்கு மேலான பிற படைப்புகள் வெளிப்படுத்தலுக்குத் தேவையான எழுச்சியையும் வழிமுறைகளையும் அளிக்கும். அப்படைப்புகள் இன்னவை என்று கூறமுடியாது. தொன்மங்கள் கண்டிப்பாய் அறிந்திருப்பது அவசியம்.வாய்மொழி இலக்கியம் அவன் அகத்திற்குச் செழுமை சேர்க்கும். இதெல்லாமே மரபை அறிதல் என்பதில் அடக்கம் என்பதால் விரித்துச் சொல்லவேண்டியதுமில்லைதான்.

இந்தப் பேட்டியை நிறைவுசெய்யுமுன் உங்கள் நெஞ்சை ஒரு கணமும் விடாமல் வதைக்கும் ஒரு கவிதையைக் கூறுவீர்களா? படித்த்தாகவோ அல்லது நீங்களே எழுதியதாகவே இருக்கலாம்.

எங்கும் நிறைந்துள்ள ஒளியை

அள்ளி வழங்க நீண்ட கைகள்

கவினிப்பாரற்ற தனிமையில் முழ்கியும்

தன் புறங்கைகள் வழியால் வழங்கிக் கொண்டிருக்கிறது

எல்லோரும் விரும்பும் நிழலை.

(புல்வெளியில் ஒரு கல்- தொகுப்பிலிருந்து)

*********

நன்றி: வேர்கள் சிற்றிதழ் 1999 , தட்டச்சு: சர்வோத்தமன்

Dec 8, 2012

தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது 2012

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது. 22- 12-2012 அன்று மாலை கோவையில் விழா நிகழ்கிறது.

இது விஷ்ணுபுரம் அமைப்பின் மூன்றாவது விருது. முதல் விருது 2010-இல் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது விருது 2011-இல் எழுத்தாளர் பூமணிக்கு வழங்கப்பட்டது.

ஒரு சிறு குருவி

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?

அங்கிருந்தும்devdevan3
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி

சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்

நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை

ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்
----------------------------------------------------------------

விழா அழைப்பிதழ்

Vishnupuram-Ilakiya-Vattam-A5-size_Invitation_FB-1024x782

Jan 13, 2012

தேவதச்சனுக்கு விளக்கு விருது

நவீனத் தமிழ்க் கவிதையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான தேவதச்சனுக்கு 2010ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது வழங்கப்படுகிறது. நாற்பதாயிரம் ரூபாய்devathatchan34 பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கிய விருது இது. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான ‘விளக்கு’ புதுமைப்பித்தன் நினைவாக வழங்கும் இந்த விருதை இதுவரை தமிழின்  முக்கியமான இலக்கியவாதிகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா  ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார் ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.

எழுபதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய தேவதச்சன் நவீனக் கவிதையின் புதிய வடிவமைப்பைக் கட்டமைத்தவர்களில் ஒருவர். இவரது கவிதைகள் அன்றாட வாழ்வின் எளிய சொற்களில், நழுவும் கணங்களை நுட்பமாகச் சித்தரிக்கின்றன. ஆனந்துடன் இணைந்து அவரவர் கைமணல் என்னும் முதல் தொகுதியை தேவதச்சன் வெளியிட்டார். அத்துவான வேளை, கடைசி டைனோசார், யாருமற்ற நிழல், ஹேம்ஸ் என்னும் காற்று, இரண்டு சூரியன் ஆகியவை பிற கவிதைத் தொகுதிகள். கவிஞர் தேவதச்சனுக்குக் அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி: காலச்சுவடு

Oct 10, 2010

விண்ணோக்கிச் செல்வதும்-தேவதேவன்

விண்ணோக்கிச் செல்வதும்

விண்ணோக்கிச் செல்வதும்
விண்ணை உணர்வதும்
மண் நோக்கியே பொழிவதும்
மழை நீர்த்தேக்கங்கள் என devdevan3
நின்று நிதானித்து
மண்ணைக் குளிர்வித்தபடியே
விண்ணையே நெஞ்சில் நிறைத்து
விண்ணோக்கியே கிடப்பதும்
அனைத்து உயிர்களையும்
காதலின்பத்தாற்
களிகொள்ளச் செய்வதுமேயன்றோ
நம்மை வாழ்விக்கும்
நம்முடைய ஒரே செயல்!


சிறுவர் உலகம்

கல்லெறிபட்டும்
(ஒரு சின்னக்கலசல் பதற்றம், வலி அவ்வளவே)
கலங்காது
தேனையே சொரிகிறது
தேன்கூடு


கொடுவனம்

தன்னந்தனியே
ஒரு காட்டிடையே
நிற்க நேர்ந்துவிட்டதா என்ன?
நன்பகல் வேளையிலும்
இரவின் ஒலியுடன்
இருண்டு கிடப்பதேன் இவ்வுலகம்?
உயிரைப் பிடித்துக்கொண்டு
பதுங்கி வாழ் முயல்களுக்குமப்பால்
நிலவவே முடியாது
மடிந்தும் தோன்றாமலுமே போன,
யாரும் கண்டிராத
மென்னுயிரினங்களின்
மரண வாசனையோ
மரண பயமோ, இப்போது உன்
இதயத்தைப் பிசைந்துகொண்டிருப்பது?
கண்டுகொண்டனையோ,
இம்மரணத்தின் சன்னிதியில்
முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட வேண்டிய
கொடுவனத்தை?
அழிக்கப்படுமுன்
இவ்வேதனையிலேயே
விரைவாய் உன் மரணமும்
நிகழ்ந்துவிடுமென்றா
அவசர அவசரமாய் அதை எழுதி
மரணத்தை வென்றுவிடப் பார்க்கிறாய்?

ஒன்று

உணர்ச்சிப் பெருக்காய்
விரிந்துகிடக்கும் சேலைகள்தாம் எத்தனை!
நம் ஒற்றை உடன் நாடுவதோ
ஒன்றே ஒன்று.
எதை எடுத்துக்கொள்வதெனத் திகைத்து
ஒவ்வொன்றின்மீதும் படர்ந்து பிரிந்து
தேர்ந்தெடுத்த ஒன்றின் மேலே
தன் அத்தனைக் காதலையும்
கொட்டிக் குவித்தவாறே
முத்தமிட்டு அணைத்துத்
தன் மெய்மறந்தவாறே
ஒன்றி
உடுத்துத்
தன் அறையினின்றும் வெளிவரும்
அவள் உதடுகளில் முகிழ்த்திருந்த
புன்னகை சொல்லிற்று
காத்திருந்த அவனிடம்
அவள் காதல் கதைகளின் இரகசியம்.

Jul 23, 2010

புலியின் தனிமை-தேவதேவன்

1] விரும்பினேன் என் தந்தையே


பேயோ தெய்வமோ
எந்த ஓர் அச்சம்
ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே
நீ படித்தது போதும்
எல்லாரும் மேற்படிப்பு படித்தேகிவிட்டால்
இருக்கும் பிற வேலைகள் எல்லாம் devadevan2
யார் செய்வார் என்றறைந்தீர்.
கடும் உழைப்பை அஞ்சினேனா ?
கூட்டாகப் புரியும் பணிகளிலே
இருக்க வேண்டிய தாளம்
இல்லாமை கண்டு அஞ்சினேனா ?
விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்து புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதி கொண்டு முடிவின்றி இப்புவியை
பார்த்துக்கொண்டு இருப்பதற்கும்
காலமெல்லாம் திருவிழாவும்
மழலைகளின் கொண்டாட்டமுமாய்
என் வாழ்வை இயற்றிடலாம் என்று எண்ணி
ஊர் ஊராய் சுற்றிவரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்
மொய்க்கும் குழந்தைகளின் நிர்மால்யம் தேடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்து காத்துக் கிடப்பதற்கும்
விரும்பினேன் நான் என் தந்தையே
வியர்வை வழிந்தோட வீதியிலும் வெயிலிலும்
உழைப்ப்போர் நடுவே
அடுப்பு கனலுகிற சுக்கு வெந்நீர் காரனாகிநடமாடவும்
சாதி மதம் இனம் கடந்து அலைகிற
யாத்ரிகப் புன்னகைகள் அருந்தி என் உள்ளம் குளிர
வழிகாட்டி வேடம் தரிக்கவும்
விரும்பினேன் என் தந்தையே
அன்பர் குழுக்கள் நடுவே வாத்தியமிசைக்கவும்
பாடவும் நடமிடவும்
விரும்பினேன்
இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்
இன்று நினைத்துப் பார்க்கிறேன் உம்மை என் தந்தையே
நம்மை ஆட்டிப் படைத்த மறைபொருளின் நோக்கையும்.

2] புலியின் தனிமை

[அ]
மனிதரற்ற வீதியில் நடந்து
வனத்துக்கு திரும்பியது
ஒருமனிதனையும் காணாத
பசி வேதனையால வாடிய புலி
மீண்டும் பெருத்த தினவுடன் ஒரு நாள்
ஒரு நகரத்துக்குள் நுழைந்துவிட
அலறியடித்துக் கொண்டு ஓடி
தம் ஓட்டுக்குள் சுருண்டுகொண்ட மனிதர்
துப்பாக்கி தூக்கி பாய்ந்து வந்த ராணுவம்
கூண்டுக்குள் பிடிக்கத்துடித்த சர்க்கஸ் மனிதர்
பத்திரமாய் பிடித்து காட்டுக்குள் அனுப்ப
தீர்மானம் கொண்ட 'கருணையாளர்கள் '
யாவரையும் எண்ணி எண்ணி
தாளாத துக்கம் கனல
தகித்துக்கொண்டிருந்தது கானகத்தில்
[ஆ]
ஓ கடவுளே!
எத்தனை ஆபத்தானது இந்த அறியாமை!
அதி உக்கிரமான ஓர் அழகையும்
முடிவற்ற விண்ணாழத்தால்
பற்றவைக்கப்பட்ட பார்வையையும்
அதிராது சுமந்து செல்லும் பெரு நடையையும்
இங்கு அறிந்தவர் எவருமில்லையோ
தன்னை அறியாது
உறுமிக்கொண்டிருக்கும் இந்த வலிமை
மிருகச்சிறை
எவ்வளவு ஆபத்தானது!
[இ]
தன்னை அறிகையில் புலி
அறியாத வேளையில் விலங்கு.

[3] பேசாத சொற்கள்


மாடிக்கூளங்களை காற்று பெருக்கிவிடும்
கவலை கொள் வதற்கு இன்று அவசியமில்லை
மரங்களின் அழுக்கினை மழை கழுவிவிடும்
கவலை கொள்வதற்கு இன்று அவசியமில்லை
இந்த மைனாக்களின் குரல்களில்
வேப்பம் பழத்தின் இனிமை
இந்த மெளனத்தின் இதழ்களில்
சொற்கத்தின் இனிமை
எனினும் இங்கேதும் நிரந்தரமல்ல
அமைதியும் அழிந்து அக்கினி வறுக்கும்
காவ் காவ் என்று கரைகின்றன இன்று
கறுப்பு பறவை அலைகள் எங்கும்
நானா எப்படி என்றென் திகைப்பு
அறிந்தது போலும் தோன்றும்
அப்போது
தெய்வத்தின் குரல் போல
உதிக்கும் சில சொற்கள்
' ' நீ பேசும் சொற்களை எவனும் பேசிடுவான்
நீ பேசாத சொற்களைப் பேசு ' '
***
[நன்றி .சொல் புதிது 6]   தேவதேவனின் கவிதைகள் தேர்வு ஜெயமோகன்

Apr 16, 2010

ஓடும் இரயில்வேகம் தொற்றி-தேவதேவன்

தேவதேவன்

ஓடும் இரயில்வேகம் தொற்றி

ஓடும் இரயில் வேகம் தொற்றி
அதிர்ந்தன சப்தநாடிகளும் devathevan
அதன் வழியில் அவன் இனி குறுக்கிட முடியாது?
புவி முழுமையையுமாய்
அடக்கி நெரித்தபடி
விரைந்து நெருங்கிக்கொண்டிருக்கும் ஆபத்தை
நேர்நின்று பார்த்தவனாய்
அதிர்ந்தன அவன் சப்தநாடிகளும்.
உடைந்த ஆற்றுப்பாலம் கண்டு
மூச்சிரைக்க ஓடிவந்து நின்று
ஆபத்துக்கு ஆபத்துரைக்கும்
அறியாச் சிறுவர்கள்போலும்
வாழ்ந்து முடிவதில் என்ன பயன்?
இதயத்திலிருந்து பாய்ந்து விரிந்து நின்ற
கைகளும் கால்களும் தலையுயாய்
குறுக்கிட்டு மடிவதன்றி என்ன வழி?
வாள்போலும்
ஆற்றைக் குறுக்கறுத்தோடும் இரயில்வண்டியும்
திரும்பி ஓர்நாள்
ஆற்றோடு கைகோர்த்துச் சிரித்துக்கொண்டோடாதா?

****

என் அறைச் சுவரை அலங்கரிக்கும்
நிலக் காட்சி ஓவியம் ஒன்று ...

அட, அற்பனே!
யாருக்குச் சொந்தமானது அது?
ஏழைகளுக்கு எட்டாத
சற்று விலையுயர்ந்த அந்த ஓவியத்தை
வாங்கி மேடைபோட்டு முழங்கி வழங்கி
தன் மேலாண்மையை நிறுவிவிட்டதாய் எண்ணும்
மடையனுக்குச் சொந்தமாகுமோ அது?
தனது அரிசிபருப்புக்காய் அதை விற்றுவிட்டதால்
அந்த ஓவியனுக்கு இனி சொந்தமாகாதோ அது?
இன்னும் அதன்கீழ் தன் கையப்பம் காணும்
அவன் கர்வத்தையும் அடக்குமாறு
அது தீட்டப்பெற்றிருக்கும் பலகைக்கு
அவ்வோவியத்தில் கனலும்
வானம், ஒளி, தாவரங்கள்
பேரமைதி கொண்டனவாய்
தன் நிழலிலேயே நின்றபடி
தாழ்ந்து குனிந்து
புல் மேய்ந்துகொண்டிருக்கும் கால்நடைகள்
இவர்களுக்குச் சொந்தமானதில்லையா அது?
அனைத்திற்கும் மேலாய் நாம் கண்டுகொள்ள வேண்டிய
அறநியதிகளுக்குச் சொந்தமானதில்லையா அது?

****

நன்றி : காலச்சுவடு

Dec 14, 2009

பறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்

தேவதேவன்

1 ] பனைகள்

பனைகளின் தலைகளெங்கும்
பறவைகளின் சிறகுகள்
பச்சைப்பனைகளின் நடுவே
ஒரு மொட்டைப் பனை
மொட்டைப்பனை உச்சியிலே
ஓர் பச்சைக்கிளி
அடங்கிவிட்டது
'மரணத்தை வெல்வோம் ' என்ற கூச்சல்
மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது
இனி இங்கே நான்
செய்யவேண்டியதுதான் என்ன ?
'நானே தடைகல் 'ஆகும்வழியறிந்து
வழிவிடுவதை தவிர ?
பனைகளின் தலைகளெங்கும்
படபடக்கும் சிறகுகள்
பாவம் அவை பூமியில்
மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

18tree-600
2] ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே
ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்

3] பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா ?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்
ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய் காய்த்து
இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது
ஒரு நண்பனைப் போல
சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ
மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்

4] தனிமரம்

ஒரு யாத்ரீக வீரன்
சற்றே இளைப்பறும் இடம்
அவனது தர்சனம்
அதைச்சுற்றிவிரிந்திருக்கிறது
ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்
கால் பொசுக்கும் மணல்
தன் இனத்தைவிட்டு
தூரவிலகி நிற்கிறது அது
தன்னியல்பின்
தடையற்ற வளர்ச்சிக்காக
காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்
புழுபூச்சிகளும் உள்ளவரை
தனிமை அதற்கில்லை
அது ஏழையல்ல
அது தனக்குள் வைத்திருக்கிறது
ஒரு சோலைவனக்காட்டை
அதுவே தருகிறது
வற்றாத நீர்பெருக்கை
அது நிற்குமிடம்
இல்லை அது இளைப்பறும் இடம்
தனதே தனதான நிழல்
அதன் தர்சனம்

5] பனை

விடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ
எதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் ?
அனைத்தையும் ஊருருவிய பின்னே
ஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்
அதை சிரமேற்கொண்டு கனிந்தனையோ ?
ஒற்றைகாலில் நின்றபடி
உன் தவத்தின் வைரத்தை
என் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் ?
அன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்
வீற்றிருந்தது அது
பின்பு
இரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து
வெளியேறியது அது
கோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்
எதிர்ப்பேதும் காட்டாது விழுந்து
நீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்
நின்றிருந்தது அது .

6] நச்சுமரக்காடு

ஒரு மரம்
அதன் ஆணிவேர் நான்
அதன் பக்கவேர்கள்
என் மதம் என் ஜாதி என் இனம்
என் நாடு என் கொள்கை என் மரபு
இன்னும் நூறு நூறு சிம்புவேர்களை
நான் சொல்ல வேண்டுமா ?
அச்சம்தரும் வலிமையுடன்
அடிமரம்.
ஆயிரமாயிரமாண்டு எனினும்
மனித குலம் அளவுக்கு இளமை
அதன் இருப்பிற்கும் எதிர்காலத்துக்குமான
உத்த்ரவாதப் பசுமை தழைக்கும்
அதன் கிளைகள்
எந்த புகைப்படத்திலும்
எந்த வரைபடத்திலும்
அடங்க ஆயாசம் கொள்ளும் பின்னல்
எங்கும் காய்த்து குலுங்குகின்றன
தோட்டாக்கள் வெடிகுண்டுகள் அணுஆயுதங்கள்

7] பூக்கும் மரங்களின் ரகசியம்

நீரை நாடும் தேடலே
வேர்கள்
சூழலை எதிர்கொள்ளும் மெளனமே
அடிமரம்
ஒளியை நாடும் விழைவே
கிளைகள்
உதிரும் இலைகளின் பிரிவே
மரணம்
பிறப்பின் புதுமை பசுமையே
தளிர்கள்
அறிந்தேன்: பூக்கும் மரங்களின்
ரகசியம்.

8] புயலில்

புயலில் சரிந்த ஒரு மரத்தை
நிமிர்த்தி நிற்க வைத்துவிட்டேன்
ஒரு நூறு குழந்தைக் கைகளின் உதவியுடன்.
நான் சொன்னேன் குழந்தைகளிடம்
' 'இவ்வாறே நாம் இந்த உலகை காப்பாற்றப்போகிறோம் '
எல்லாம் வெகு சுலபம்
புயலில்
தன் வாழ்வுக்காய் அன்றி
தன் உயிருக்க்கு மேலாய் நேசித்த ஒன்றை
வெகு தீவிரத்துடன் சொல்ல முயன்றுகொண்டிருந்தது மரம்
சொல்ல முடியாத வேதனையே அதன் சலனம் .
மாசு இல்லா பாதம் போன்ற வேர்கள் தெரிய
வீழ்ந்து கிடந்தது மரம்
தான் நேசித்ததும் சொல்ல விரும்பியதுமான
ஓரு பேருண்மை முன்
வீழ்ந்து வணங்கியபடி அமைதியாகிவிட்டதா அது ?
பரபரப்பான சாலை ஒன்றின் குறுகே விழுந்து
அது குறிப்பால் உணர்த்தும் பொருள் என்ன ?
சுறுசுறுப்பு மிக்க நம் மக்கள் ஆகா
சற்றும் தாமதிக்காமல் இரவோடு இரவாக
இடைஞ்சலில்லாத போக்குவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள்
அகோரமாய் கைகால்கள் வெட்டப்பட்டு
சாலையோரமாய் இழுத்து இழுத்துவீசப்பட்டிருந்தது.
அணைக்கட்டுகளை உடைத்து மதகுகளை உடைத்து
கரைகளை உடைத்து
படைப்பின் ஆற்றையும் விழுங்கிவிட்டது
பேராசையின் வெள்ளம்
இயந்திர உலகின் நுரையீரல்களில் இருந்து கிளம்பியது புயல்
விருட்சங்களும் ஒளிக்கம்பங்களும் சரிந்து விழுந்து
இருண்ட ராத்திரி .
முழு மரத்திலிருந்து
முறிந்து விழுந்த கிளையினைப்போல
நானும் என் குழந்தையும்

9] இலையசைவு
விருப்பமோ தீர்மானமோ இன்றி
இலையில் தங்கியிருந்த நீர்
சொட்டு சொட்டாக விழுந்துகொண்டிருந்தது
ஆனால் முடிந்தவுடன் ஒரு விடுதலை
'அப்பாடா ' என மேலெழுந்தது இலை
அது தன்னில் ஒரு புன்னகை ஒளிரத்
தேவையான ஈரத்தை மட்டும் வைத்துக் கொண்டு
ஆமோதிப்போ மறுதலிப்போ அல்லாத
ஒரு தலையசைப்பை மட்டும் செய்வதாய்
அசைந்து கொண்டிருந்தது இங்கும் அங்குமாக
ஒரு நீண்டகிளையின் சிறு உறுப்பு
தான் என ஒரு கணமும்
முழுமுதல் என மறு கணமும்
இங்கும் அங்குமாய் அல்லாது
வேறெங்கும் செல்லாத ஒரு பயணியாய்
என்றும் இருக்கிறதை மட்டும் அறிந்திருந்தது அது.

Dec 13, 2009

குருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்

தேவதேவன்

1] மழை பெய்து

அப்போதுதான் முடிந்திருந்தது
அனைத்தும் முழுமுற்றாய் தூய்மைசெய்யப்பட்டு
பளாரென்று நீண்டிருந்தது ஒரு கிளை
நித்யத்திலிருந்து குதித்த ஒரு பாய்ச்சலுடன்
அப்போதுதான் உறையிலிருந்து வெளிப்பட்ட வாள்போல
வானளாவிய சூனிய வெளியெங்கும்
என் பார்வையை இழுத்தபடியே
பறந்துகொண்டிருந்த பறவை அதில் அமர்ந்திருந்தது
அதன் கூரிய கூச்சமுள்ள கால்விரல்களில் காலம்
ஒரு செத்த எலி

six-in-waiting-break-of-day-jennifer-lommers

2. குருவியுடன் சற்று நேரம்
நான் அதைப்பார்த்து புன்னகைத்தவுடன்
அது கேட்டது
'என்ன செய்துகொண்டிருக்கிறாய் ? '
'ஒரு கவிதையை எழுதப்பார்க்கிறேன் '
'புரியும்படியாக சொல் '
'உன்பார்வையில் சொல்ல வேண்டுமானால் பறத்தல்
படிப்பவர்களை கொஞ்சம் பறக்கும்படி செய்கிற
சில வரிகள் எழுத முயன்றுகொண்டிருக்கிறேன் '
'உனக்கு பறக்கத் தெரியுமா ? '
'பறக்கத்தெரிந்தவந்தானே எழுத முடியும் ? ' '
'அப்படியா ரொம்ப சந்தோஷம்
அதுதான் உன்னைப்பார்த்த உடனேயே
எனக்கு உன்மேல் ஒரு பிரியம்
ஏற்பட்டது போலிருக்கிறது
சரி இப்போது என்னோடு வருகிறாயா
ஒரு ரவுண்டு போய்வருவோம் '
இருவரும் பறக்கதொடங்கினோம்
'எங்கே போயிருந்தீர்கள் இத்தனைநேரம் ?
எத்தனை முறை கூப்பிட்டேன் தெரியுமா ? '
மாடிப்படி ஏறிவந்து எரிச்சலுற்றாள் மனைவி
எழுதுவதிலேயே மூழ்கி இருந்திருக்கிறேன் என்றேன்
வெற்றுக்காகிதத்தை சுட்டிக்காட்டி
விடாது அவள் துரத்த
உண்மை வெளியே வந்துவிட்டது


3. வண்ணத்துப்பூச்சி

அன்று மண்ணின் நிறம் என்னை உருக்கிற்று
வீழ்ந்த உடம்புகள் கழன்று உறைந்த ரத்தங்கள்
இன்னும் மறக்கமுடியாத கொடூரங்களின் எச்சங்கள்
அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிட்டதா இம்மண்ணில் ?
மண்ணின் வளமும் பெருமையும் மின்ன
மேலெழும்பி பிரகாசித்து நின்றன பூக்கள்
எத்தனை வண்ணங்களில் !
ஆனால்
தேன் தேன் தேன் என பரவச பதைப்புடன்
சிறகுகள் பரபரக்க
அங்கே ஒரு வண்னத்துப் பூச்சி வந்தபோது
என்னை அறுத்தது அழகா அருவருப்பா
எனப் பிரித்தறியமுடியா ஓர் உணர்ச்சி
உறிஞ்சும் வேகத்தில்
கைகூப்பி இறைஞ்சுவதுபோல
மேல்நோக்கி குவிந்த சிறகுகள் நீங்கலான
உடல் முழுக்க விர்ரென்று
நிரம்பிக் கொண்டிருந்தது தேன்
சிறகுகளின் மெலிதானதுடிப்பில்
ஆழமானதோர் நடுக்கம்
எந்தமொரு வைராக்கியத்தை
மூச்சை பிடித்துகாக்கிறது அது ?
அதேவேளை அதே வேகத்துடனும் துடிப்புடனும்
கீழ்நோக்கி சுருண்டு உன்னியது
கரு தாங்கும் அதன் கீழ்பகுதி
தேன் நிரம்பி கனத்து
பூமி நோக்கி தள்ளும்
சின்னஞ்சிறு பாரத்தை
வெகு எளிதாக
தேன்தொடா சிறகுகள் தூக்கிச் செல்கின்றன
மரணமற்ற ஆனந்த பெருவெளியில்!


4 . நிசி

இரை பொறுக்கவும்
முட்டை இடவும் மாத்திரமே
பூமிக்கு வந்தமரும்
வானவெளிப்பறவை ஒன்று
இட்ட ஒரு பகல் முட்டையின்
உட்கரு நிசியுள்
பகல் வெளியிப் பாதிப்பு கூறுகளால்
உறங்காது துடிக்கும் நான்
என் அவஸ்தைகள்
கர்வுவில் நடைபெறும் வளர்ச்சியா
பரிணாம கதியில்மனிதனை புதுக்கி
ஓர் உன்னதம் சேர்க்கும் கிரியையா
பகலின் நினைவுகள் கொட்டி கொட்டி
இரவெல்லாம் தெறிக்கும்
என் சிந்தனைகள் வேதனைகள்
ஏன் இவ்வேதனை ?
எதற்கு இச்சிந்தனைகள் ?
நானே அறியாது
என்னில் கலக்கும் ஜீன்கள்
கருவே அறியாது
கருவில் கலக்கும் தாதுக்கள் எவை ?
இனி நான் எவ்வாறாய் பிறப்பேன்
என் கனவில் எழுந்த அந்த மனிதனாய்
நான் என்று பிறப்பேன் ?
அல்ல மீண்டும் மீண்டும்
முட்டை இடவும் இரை ப்றுக்கவும்
இரைக்காய் சக ஜீவிகளுடன்
போராடவும் மாத்திரமே
பூமிக்கு வந்தமரும்
அதே வானவெளிபறவையாக

5. துள்ளல்

நீரின் மேற்பரப்பில் ஒருமீன்
துள்ளி விழுகையில் கண்டது
சுடும்பாறை
மீண்டும் துள்ளியதில்
பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில்
மரணம்
மரித்த அக்கணமே பறவை


6. சொற்களாய் நிறைந்து ததும்பும் வெளிமண்டலத்தில்...

ஒரு பறவை நீந்துகிறது
சொற்களை வாரி இறைத்தபடி
சொற்களை வாரி இறைப்பதனாலேயே
அது நீந்துகிறது
காற்றின் துணையும் உண்டு
நீ இக்கவிதைஅயி வாசிக்கையில்
அமைதியான ஏரியில்
துடுப்பு வலிக்கும் ஒலி மட்டுமே கேட்கும்
படகுப்பயணம் போல
கேட்கிறதா உனக்கு
அப்பறவையிந் சிறகசைவு தவிர
வேறு ஒலிகளற்ற பேரமைதி ?
சொற்பெருவெளியில்
சொல்லின் சொல்லாய் அப்பறவை
தன் பொருளை தேடுவதாய்
சொற்களை விலக்கி விலக்கி
முடிவற்று முன் செல்கிறது
அப்போது
உன் உயிரில் முகிழ்க்கும் உணர்ச்சி என்ன ?
பரவசமா ?
ஏகாந்தமா ?
குற்றவுணர்ச்சியின் கூசலா ?
தனிமையா ?
தாங்கொணாத துக்கமா ?
இவற்றில் ஏதாவது ஒன்றை என் கவிதை
உன்னில் உண்டாக்கி விடலாம்
ஆனால் எந்தபொறுப்பையும்
அறிந்திராதது அது .

7 . சிறகுகள்

வானம் விழுந்து நீர்
சிறகுதிர்ந்து மீனாகிவிட்டது பறவை
நீரில் எழுந்தது வானம்
சிறகு முளைத்துவிட்டது மீனுக்கு
சிறகினுள் எரியும் சூரியத்தகிப்பே
சிறகடிப்பின் ரகசியம் ஆகவேதான்
சுய ஒளியற்ற வெறும் பொருளை
சிறகுகள் விரும்புவதில்லை
பூமி போன்ற கிரகங்களை
அது நோக்குவதேயில்லை
[சிறகடிக்கையில்
வெட்கி ஒடுங்கிக் கொள்கின்றன
பறவையின் கூர்நகக் கால்கள்]
சூர்யனுக்குள் புகுந்து வெறுமே
சுற்றிசுற்றி வருகின்றன சிறகுகள்
சிறகின் இயல்பெல்லைக்குள்
நிற்குமிடமென ஏதுமில்லை
வெளியில் அலையும் சிறகுகளுக்கு
இரவுபகல் ஏதுமில்லை

8. அமைதி என்பது

பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத்தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால் அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்குமுறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது
அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ ?
எழுந்துசென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?

தேவதேவனின் பிரக்ஞை உலகம்

காலப்ரதீப் சுப்ரமணியன்

தேவதேவன் கவிதைகளில் மொழிரூபம் கொள்வது உணர்ச்சி மயமான அனுபவங்களின் படைப்புலகம். இங்கு உணர்ச்சிகளின் உத்வேகமே அறிவுத்தளத்துடன் முரண்படுபவற்றைக்கூட சமனப்படுத்துகிறது , அனுபவங்களின் மூலங்களைக் கொண்டு சிருஷ்டிக்கப்படும் புதிய பொருளின் படைப்பும் உருவாகிறது . கூறப்படும் விஷயத்தில் செவ்வியல் பண்பும் , சொல்லப்படும் விதத்தில் நவீன புனைவின் குணமும் இணைந்துகொள்கின்றன.

devadevan மேலோட்டமாக பார்த்தால் அன்றாட வாழ்வின் சாதாரண அனுபவங்களை மேலேற்றி 'பிரபஞ்ச போதத்துக்கு ' -- அல்லது அதீத தத்துவ தரிசனத்துக்கு--- குறியீடக்கைக் காட்ட்வதாக தேவதேவனின் கவித்துவம் விளங்கினாலும் இதற்கு எதிர்மறையாக பிரபஞ்ச போதத்தை அன்றாட அனுபவங்களுக்குள் தேடும் நிலையில் பிறக்கும் பின்னல் கோலங்களே கவிதையாவதைக் காணலாம். கவிதை பற்றி தேவதேவன் சொல்லியுள்ள பிரமிப்பு மயமான சொற்களும் இதற்கு வலுச்சேர்க்கின்றன.

தேவதேவனின் தனித்துவத்திற்கு சொல்லாமல் சொல்லும் இடைவெளி நிறைந்த தன்மையும் பலபரிணாமங்களில் விரியும் குறியீட்ட்டுத் தன்மையும் காரணமாகும். குறியீடுகளின் பன்முகத்துக்கு அவருடைய வீடு மரம் பற்றிய கவிதைகளை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

தேவதேவனின் கவிதைகளில் தொடர்ந்து படர்வது மரங்களைப்பற்றிய பிரக்ஞையோட்டம். இது ஆரம்பத்திலிருந்தே இடைவிடாமல் நிழலிடுகிறது .அதுவும் சமீப கால கவிதைகளில் அதிகமாகவே அடர்ந்து கிளைபரப்பியுள்ளது . ஆனால் ஒரு விஷயத்தை பலகோணங்களில் நின்று புதிது புதிதாய் காண்பதும் வார்த்தைசெறிவும் இதை தெவிட்டல் நிலைக்கு செல்லாமல் தவிர்க்கின்றன.

சுற்றுச்சூழல் பற்றிய நிதரிசனமும் அதீத பிரச்சாரமும் கலந்துள்ல இன்று மரங்களைப்பற்றி கவிதை எழுதுவது இன்றைய மோஸ்தர்களுள் ஒன்று. ஆனால் தேவதேவனிடம் காணப்படுவது இவற்றிலிருந்து மாறுபட்ட ஒரு ஆழ்ந்த தொனி. எதாத்த வாழ்க்கையில் தேவதேவனுக்கு மரங்களுடன் உள்ள ஆழ்ந்த ஈடுபாடு இங்கு கவனிக்கத்தக்கது . பீதி நிறைந்த குழந்தைப்பருவத்தின் மனமுறிவு வெளிப்பாடுகளோ, உணர்ச்சி கரமான மனப்போராட்டங்களோ ,வாழ்க்கையில் நிராதரவாய் நின்ற நிலைகளோ தற்காலிகமான கொள்கைகவர்ச்சிகளோ அவரது இதுப்போன்ற ஈடுபாடுகளை அசைக்கமுடியவில்லை என்பதும் , இவை ஆழ்ந்த மதிப்பீடுகளாக அவரது அகத்தில் மாற்றம் பெற்றுள்ளமையும்தான்

[நன்றி முன்னுரை 'பூமியை உதறி எழுந்தமேகங்கள் ' ]

Dec 8, 2009

தேவதேவன் கவிதைகள் : வீடு

தேவதேவன்

1. வீடும் வீடும்

பாதுகாப்பற்ற ஒரு மலரின் கதகதப்பிற்குள்
பாதுகாப்புடன் இருக்கிறேன்
என்னை ஆசுவாசப்படுத்த முயலும் இந்த வீடு
ஒருகாலத்தில்
என்னை ஓய்வு கொள்ள விடாது
வாட்டி எடுத்த ஓட்டைக் குடிசையிலும்
குளிருக்குப் பற்றாத
அம்மாவின் நைந்தநூல்சேலையிலும்
உருக் கொண்டது
எப்போதும் நம் லட்சியமாக இருக்கும்
இவ்வுலகம் பற்றிய கனவு
நம்மில் ஒருக்காலும் இதுபோல
கருக்கொண்டதில்லை என்பதை நான் அறிவேன்
மலரோடு தன் வேலை முடிந்ததும்
விலகி வெளி உலாவும் கருவண்டைப்போல
நாம் ஒருக்காலும்
இருந்ததில்லை என்பதையும் .
----------------------------------------------------------------
131oldhousekerala2

2. வீடுகள்

வீதிவலைக் கண்ணிகளோ
இந்த வீடுகள் ?
கல்முகங்கள் சில வீடுகளுக்கு
சினேகத்தை பின் ஒதுக்கி
நாய்க்குரலில் வரவேற்கின்றன அவை
வீதியில் நடந்து செல்லும் மனிதனை
சந்தேகத்தோடும் அச்சத்தோடும்
நோக்குபவை
வீதியில் நடந்து செல்லும்
ஒவ்வொரு முகத்திலும் தன் அன்பனைத் தேடும்
எளிய வீடுகளும் உண்டு
யாத்ரீகனோ தன் வீட்டை
எப்போதும் தன் தோள்மேலே வைத்திருக்கிறான்
மலயுச்சி மீதிருக்கையிலோ
பறவைப்பார்வையில் பிடிக்கப்பட்ட
புகைப்படமொன்றிலோ
இந்த வீடுகள் எல்லாம் கல்லறைகளாய்த்
தோன்றுகின்றன
சிலவேளை எதை நோக்கியும் பயணம் செய்யாததும்
தம் குறிக்கோளை அடைந்ததுமான
சாஸ்வதப் பேரமைதியில் மிதக்கும்
படகுகள் போலவும் தோன்றுகின்றன
----------------------------------------------------------------

3. இரண்டுவீடுகள்

மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது
ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக்கொள்ளவேண்டும்.
மற்றொன்றை
சிட்டுக்குருவியிடமிருந்து.
----------------------------------------------------------------
4. அந்த இசை

மூலைகளில் படிந்த ஒட்டடைகளை நீக்கினேன்
ஒவ்வொரு பொருளையும் தொட்டு
அதனதன் இடத்தில் வைத்தேன்
தூரெடுக்கப்பட்ட கிணறு போலாயிற்று அறை
புனித நீரில் குளித்து
வியர்வை நாற்றமில்லா ஆடை அணிந்து
மாலை உலா கிளம்பியபோது
கேட்கத்தொடங்கிய அந்த இசை
நீடிக்கவில்லை
வழிப்பறிக்கு ஆளானவன் போல திரும்பினேன்
விடியும்வரை
இரவின் மடியில் முகம் புதைத்து அழுதேன்
----------------------------------------------------------------
5. மொட்டைமாடிக்களம்

நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்குத்தானே கட்டிக் கொண்டது
வானம் வந்து இறங்க விரித்த
தன் மொட்டைமாடிக்களத்தை
----------------------------------------------------------------6.குருவிக்கூடு

நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டைமாடியை தந்தது வீடு
இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி
----------------------------------------------------------------
7. மரத்தின் வடிவம்

சிவந்த பூக்களுடன்
ஜன்னலை உரசும் மரக்கிளை
உன் முத்தம்
கூரைமீதுகுனிந்து
உச்சிமுகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம்
வாயிலை நோக்கி தாழ்ந்த
கிளை அசைவு உன் அழைப்பு
இமையாத விழிப்புடன்
இடம் பெயராஅத இருப்புநிலையில்
காணுகிறது உன் நித்தியத்துவம்
உன் ஒருபகுதியை வெட்டி வீழ்த்தியே
அக்கூரைமீது
ஒரு மாடிக்கட்டிடத்தை எழுப்பி
முன்னேறினேன்
வெட்டப்பட்டு
இரத்தம் கொட்டும்
உன் மொட்டைவிரல்
மாடிக்கட்டிடத்தை சுட்டியபடி
திடுக்கிட்டு
இனி நான் என்ன செய்வது
என துடித்துக் மொண்டிருக்கையில்
அம்மொட்டை விரலை சுற்றிலும்
வீரிட்டு முளைத்திருந்தன
புதுத்தளிர்கள் .

----------------------------------------------------------------
8. உனது வீடு

நீ இளைப்பாற தேர்ந்தெடுத்த
மரத்தடியா,
ஓயாத வேதனையில் அரற்றும் ஜீவன்
ஓய்வு கொள்ள விரித்த படுக்கையா,
பல்லிகளும் பாச்சான்களும் பாம்புகளும் அண்டும்
பாழ்மண்டபமா,
எது உன்வீடு ?
இவை எல்லாமுமேவா ?
உனது வீட்டில்
உனது பிணத்தை நாடியே
உன்னோடு குடியேறியதுதான்
அந்தபிசாசு என நீ அறிவாயா ?
உனது வீட்டின் இருளை துடைப்பது
சூரியன் இல்லையா ?
சந்திரனும் நட்சத்திர கோடிகளூம் இல்லையா ?
உன் வீட்டை கடந்துசெல்லும்
மேகங்களின் நிழல் உன்னை தீண்டியதில்லையா ?
நீ எப்போது உன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாய் ?
சூரியன் வந்து உன் தலையை தீண்டும்போதா ?
பறவைகள் குரல்கொடுக்க துவங்கும்போதா ?
புறப்பட்டுவிட்டாயா
உனது மக்களை விட்டுவிட்டா ?
அவர்கள் விழிக்கும் முன்
ஒருபுதிய பொக்கிஷத்துடன்
வந்து சேர்ந்துவிடும் எண்ணத்துடனா
அல்லது இந்த துறவேதானா
அந்த அரிய பொக்கிஷம் ?
போய்க் கொண்டிருக்கிறாயா ?
சரி
ஆனால்
எச்சரிக்கையாக இரு
நீ சோர்வுறும் இடமும்
வீழும் இடமுமே
வீடுகள் தோன்றும் இடம்
வீடுகள் வீதிகள் நகரங்கள்
நாடுகள் மற்றும் பூமி
----------------------------------------------------------------
9. ஒரு சிறு குருவி

என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டெனப் பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
இப்பவும் விருட்டென்று தாவுகிறது அது
மரத்திற்கு
மரக்கிளையினை
நீச்சல்குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்விப்பாய்கிறது
மரணமற்ற பெருவெளிக்கடலை நோக்கி
சுரேலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின்
ஆனந்த பெருமிதத்துடன்
நீந்தியபடியே திரும்பிப் பார்த்தது தன் வீட்டை
ஓட்டுகூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
உள் அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்
----------------------------------------------------------------

Nov 20, 2009

தேவதேவனின் கவிதையுலகம்-ஜெயமோகன்

ஜெயமோகன்

தமிழ் கவிதையுலகில் தேவதேவனின் இடம் அனேகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று . முற்றிலும் ஆரவாரமற்ற , எப்போதும் விசித்திரமான தனிமை சூழ்ந்த , இந்த மனிதர் கdevadevan2டந்த 20 வருடங்களாக எழுதி வருகிறார்.ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சகஜமாக பேசவோ , மற்றவர்களிடம் உரையாடவோ முடியாத ஒரு விசித்திரமான அந்தரங்கத் தன்மை உடையவர் . குறிப்பாகச் சொல்லப்போனால் அவர் தன் கவிதைகளை சம்பந்தப்படுத்தாமல் எதையுமே பேசுவது இல்லை. இலக்கிய விஷயங்கள் மட்டுமல்ல ,சாதரண அன்றாட விஷயங்கள் கூட கவிதையுடன் தொடர்பு படுத்தப்பட்டே அவர் மனதில் எழும்.இலக்கிய வம்புகள் ,கோபதாபங்கள் ,அரசியல்த் தரப்புகள் ,சித்தாந்த விவாதங்கள் ஆகியவற்ரில் இருந்து மூற்றிலும் அப்பாற்பட்டது அவரது உலகம். கரிய சிறிய உடலும் , பளிச்சிடும் கண்களும் கொண்ட இந்த சிறு மனிதர் ஒரு கோணத்தில் அவரது சகமனிதர்களால் [ சரியாகவே] பித்தர் என்று கணிக்கப் படுகிறார்.

தேவதேவன் இளம் வாசகராக சுந்தர ராமசாமியின் நண்பர்வட்டச் சந்திப்பு நிகழ்ச்சியான ' ' காகங்கள் ' ' கூட்டத்துக்குச் சென்று இலக்கிய அறிமுகம் பெற்றவர் .தன் முதல் கவிதைத் தொகுப்பான ' ' குளித்துக் கரையேறாத கோபியர்கள் ' ' க்கு அவர் சுந்தர ராமசாமியிடம் முன்னுரை கேட்டார் , சுந்தர ராமசாமிக்கு இவர் ஒரு கவிஞர் என்றே தோன்றவில்லை. அத்தொகுப்பு பிறகு ' பிரமிள் ' ளால் அறிமுகம் செய்யப்பட்டது. அதீதமான கற்பனாவாதப்[ரொமான்றிக்] பண்பு உள்ள தொகுப்பு அது. கச்சிதமான மின்னணுப்பொறி போல கவிதையை ஆக்க முயன்று வந்த க நா சுப்பிரமணியத்தின் யுகத்தில் , அப்போக்கின் மிகச்சிறந்த உதாரணமான சுந்தர ராமசாமியால் தேவதேவன்jm4 நிராகரிக்கப்பட்டதும் , க நா சு வால் அங்கீகரிக்கப் படாத பிரமிளால் அவர் ஏற்கப்பட்டதும் முக்கியமான விஷயங்கள் .

தேவதேவனை அறிமுகம் செய்யும் பிரமிள் அவரது கவிதையின் ஊற்றை சரியாகவே அடையாளம் கண்டு முன்வைத்தார்.

பக்தி யுகத்து கவிதைகள் போல ஒரு ஆழமான உணர்ச்சி நிலையை , பரவச நிலையை , அடையாளம் காட்டுபவை அவரது கவிதைகள் என்றார் பிரமிள் . நவீனத்துவ [மாடர்னிஸ்ட் ] கவிதையின் சமநிலையும் , இறுக்கமும் , தருக்கத் தன்மையும் கொண்ட கவிதைகளில் இருந்து முற்றும் மாறுபட்டவை இவை. அக்கால வாசகர்களாலும் , சககவிஞர்களாலும் , விமரிசகர்களாலும் இவை ஏற்கப்படவில்லை. தன் இயல்பின் படி தேவதேவன் இவை குறித்து கவலை கொள்ளவுமில்லை. அவர் கவிதையே வாழ்க்கையென்றானவர். அதன் பித்து -பரவச நிலையில் வாழ்பவர் . அவரது கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன. அவரை அடையாளம் கண்டு கொண்ட சில வாசகர்களும் இருக்கவே நூல்வடிவம் பெற்றன.

ஒரு தலைமுறைக்கு பிறகு நவீனத்துவத்தின் கொடி தாழ்ந்த பின்பு தேவதேவன் கவனிக்கப்பட்டார். கவிதையும் கலைகளும் அவற்றின் ஆதி உத்வேகத்தினாலேயே ஆக்கப்படுகின்றனவே ஒழிய , சமநிலையினால் அல்ல என்று பின் நவீனத்துவ அழகியல் சொல்ல ஆரம்பித்தபோது தேவதேவனின் இடம் உறுதிப்பட ஆரம்பித்தது.1998 ல் நான் தேவதேவனை பற்றி ஒரு விமரிசன நூலை எழுதி வெளியிட்டேன். [ ' 'நவீனத்துவத்துக்குப் பின் தமிழ்க் கவிதை -தேவ தேவனை முன்வைத்து ' ' கவிதா பதிப்பகம் ,சென்னை வெளியீடு]

தேவதேவனின் கவிதைகளின் சிறப்பம்சங்கள் என்ன ? அவரது கவிதைகள் எப்போதும் நான் நான் என்று பேசினாலும் அவரது நான் நவீனத்துவ யுகத்து தத்துவ தரிசனங்களால் தொகுக்கப் பட்டதும் சமூகம் , மானுடம் போன்றவற்றில் இருந்து அன்னியப்படுத்திக் கொள்வதனூடாக மட்டுமே தன்னை அறியமுடிவதுமான நான் அல்ல . தமிழ் நவீனக்கவிதையில் நாம் கண்டு பழகி , மெல்ல அலுத்துப்போன அந்த 'நான் ' இன் அந்தரங்க டைரிக்குறிப்புகளுக்கு நேர் மாறாக தேவதேவனின் நான் மிக மர்மமான ,அதே சயம் கவிதைகளில் மிக எளிமையான அழகுடன் வெளிப்படுகிற ஒரு ' நான் ' ஆகும் . அது நம் மரபில் இருந்து முளைத்ததும் ,சமகால அல்லல்களையும் துயரங்களையும் உள்வாங்கிக்கொண்டதுமான ஒரு சுயப் பிரக்ஞை. அதை நாம் பக்தியுகக் கவிதைகளில் காணலாம்

இந்த ' நான் ' ஒரு பார்வையில் இன்றில் வேரூன்றியவன் , இன்னொரு கோணத்தில் காலாதீதமானவன். [ ஒரு உரையாடலில் தேவதேவன் அதீதமான சுயநம்பிக்கையுடன் விழிகள் பளிச்சிட ' ' நான் தான் யேசு 1 ' ' என்ற போது அவை நெளிந்தது] தன் முழுமையினை குறித்த அவனது பிரக்ஞை ,அவனுடைய முடிவற்ற தேடல் ,அவன் தோல்விகள் எல்லாமே இந்த இரு தளங்களிலும் அடையாளப்படுத்தப்பட வேண்டியவை.
தேவதேவன் கவிதைகள் குறித்து நவீனத்துவ யுகத்து புகார் ஒன்று உண்டு. அவரது கவிதைகளில் அவ்வப்போது உபதேசம் செய்யும் ,அறைகூவும் ,அழுது புலம்பும் அதீத சுயத்தோரணை வந்து விடுகிறது என்பது தான் அது . கவிஞனை மற்ற மனிதர்களின் சகஜ மனநிலையில் மட்டும் வைத்துப் பார்த்து , அவர்களின் கச்சிதமான பிரதிநிதியாக உருவகித்துக் கொள்ளும் பார்வையின் விளைவு இப்புகார்.

ஒரு மனிதனாகக் கவிஞன் சாதாரணமானவனாக இருக்கலாம். ஆனால் கவிதை ஒரு போதும் சாதாரணமல்ல. அதை எழுதும் போது அம்மனநிலையில் அக்கவிஞனும் சாதாரணமானவனல்ல. அந்நிலையில் ' 'கேளடா மானுடா! ' ' என்று அவன் குரல் எழுவது முற்றிலும் இயல்பே .வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் ,ஒரு பழங்குடி சமூகத்துக்கு சாமியாடி எப்படியோ அப்படியே நமக்கு கவிஞன். அவனில் நம் மூதாதையரை ஆவேசித்திருந்த தெய்வங்கள் நம்மிடம் உரையாடும் பொருட்டு குடியேறுகின்றன. அவன் நம் ஆழ்மனம் வரை தோண்டப்பட்ட ஆழ்துளைக்கிணறு .

தேவதேவனின் கவிதைகளில் அவரது கவிதை சுயத்தின் குறியீடாக ' வீடு ' என்ற படிமம் வந்தபடியே உள்ளது . ' ' கவனி ,நீ இளைப்பாறு கணமே வீடுகள் தோன்றுமிடம் ' ' என்று ஒரு கவிதையில் சொன்னாலும் கூட அவரது கவிதையில் வீடு என்ற படிமம் பலவாறாக வளர்ந்து கொண்டே உள்ளது .

நான் கட்டினேன் ஒரு வீட்டை
வீடு தனக்காக கட்டிக் கொண்டது
வானம் இறங்க விரித்த
தன் மொட்டை மாடிக்களத்தை.
என்று ஒரு கவிதை கண்டடைகிறது.
இரண்டு வீடுகளை
மனிதன் கட்டியாகவேண்டியுள்ளது
ஒன்றை பட்டுப்பூச்சியிடமிருந்து
அவன் கற்றுக் கொள்ள வேண்டும்
மற்றொன்றை சிட்டுக்குருவியிடமிருந்து

என்று பிறிதொரு கவிதை . தேவதேவனின் வீடு தானில்லாத பெருவெளியின் முடிவின்மையில் இருந்து தனக்கென செதுக்கி எடுத்துக் கொண்ட ஒரு சிறு இடம் ,ஒரு சதுர சுயம். அதை ஒரு கணம் மார்புடன் அணைத்தும் , மறுகணம் வானோக்கி ஏங்கியும் அவரது கவிதை
மானுடத்தின் முடிவற்ற நாடகத்தை நடத்திக்கட்டுகிறது .

தேவதேவனின் கவிதைகளில் அவரை சுற்றி பரந்து ,அவரை அணைத்து தன் அனைத்து இருப்பாலும் அவருடன் உரையாடும் பேரிருப்பான இயற்கையின் குறியீடாக ' மரம் ' வருகிறது . ஒவ்வொரு கவிதையிலும் வளர்ந்து மாற்றமடையும் ஒரு உயிர்ப்புள்ள படிமம் இது . அதன் ' பொருள் ' ஒருபோதும் முழுமையடைவது இல்லை. தன் கருணை , அக்கருணையை புறக்கணித்தும் சுரண்டியும் வாழ நேரும் வாழ்வு தரும் கசப்பு , என பல தளங்களில் மரம் விரிவடைகிறது.
சிவந்த பூக்களுடன்
சன்னலை உரசும் மரக்கிளை
உன் முத்தம்
கூரையின் மீது குனிந்து
உச்சி முகர்கிறது உன் அன்பு ஸ்பரிசம் ...
வீட்டுக்கு எப்போதுமே ஒரு மன்னிப்புகோரும் பாவனை உள்ளது .பொருந்தாத இடத்துக்கு வந்து விட்டதுபோலவே அது எந்த
மண்ணிலும் தன்னை உணர்கிறது. சில சமயம் அந்தச் சிறுமையை வெல்ல தருக்கி நிமிரும் பாவனையைகூட அது மேற் கொள்ளக்கூடும்
ஆனால் ஒரு மரத்தின் அடியில் அது அமைதிகொள்கிறது, தாய் அருகே மகவு போல!
குருவிக்கூடு
=========
நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக
மொட்டை மாடியை தந்தது வீடு
இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து
தன் அன்பை விரித்திருந்தது மரம்
அந்த மரக்கிளையோடு அசையும்
ஒரு குருவிக்கூடாய்
அசைந்தது நான் அமர்ந்திருந்த
அந்த மொட்டைமாடி!
தேவதேவன் கவிதைகளில் மூன்றாவது முக்கிய படிமம் ' பறவை ' .விண்ணின் ஒளியுடனும் மகத்துவத்துடனும் மண்ணுக்கு வருவது அது.மரம் மண்ணில் இருந்து விண்ணுக்கு ஏற முயல்வதற்கு விண் அளிக்கும் பதில் போல. பிசிராந்தையார் கண்ட தென் குமரியாடி வடமலை செல்லும் அந்த எல்லைகள் இல்லாத பறவை தான் இது. ஆழ்வார் ' ' பொ ன்னுலகாளீரோ புவன முழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்! ' ' என்று முகுந்தனுக்கு தூது விட்ட பறவை .

ஒரு சிறு குருவி
===========
என் வீட்டுக்குள் வந்து
தன் கூட்டை கட்டியது ஏன் ?
அங்கிருந்தும்
விருட்டென்று பாய்ந்தது ஏன் ஜன்னலுக்கு ?
பார் ஜன்னல் கம்பிகளை உதைத்து
விருட்டென்று தாவுகிறது அது
மரத்துக்கு
மரக்கிளையினை
நீச்சல் குளத்தின் துள்ளுபலகையாக மதித்து
அங்கிருந்தும் தவ்வி பாய்கிறது
மரணமற்ற பெருவெலளிக்கடலை நோக்கி
சுரீலென தொட்டது அக்கடலை என்னை
ஒரு பெரும் பளீருடன்
நீந்தியது அங்கே உயிரின் ஆனந்த பெருமிதத்துடன்
நீந்திய படியே திரும்பிப்பார்த்தது வீட்டை
ஓட்டுக் கூரையெங்கும்
ஒளியும் நிழலும் உதிர் சருகுகளும்
வீட்டு அறைகளெங்கும்
சிரிப்பும் அழுகையும் மரணங்களும்.
தேவதேவனின் கவிதையின் இயக்கத்தை குறுக்கி சூத்திரப்படுத்தும் முயற்சியல்ல இது.அவரது கவிதைகள் இத்தகைய முதல் கட்ட புரிதலையும் வகைப்படுத்துதலையும் எப்போதுமே தாண்டிச்செல்வபவையாகவே உள்ளன. பெரும்பாலான முக்கிய கவிஞர்களுக்கு இப்படி அடிப்படை படிமங்கள் சில இருக்கும். இவை அவர்களு டைய தனிமொழியில் உள்ள சொற்கள் .இவற்றை கோர்த்து தான் அவர்கள் பேசுகிறார்கள் .அவர்களை புரிந்துகொள்ள மிக முக்கியமான வாசல்கள் இப்படிமங்கள் .

எந்த முதல்தரக் கவிஞனையும் போலவே தேவதேவனின் கவிதையும் எந்த புறவய தத்துவ நிலைபாட்டையும் கொண்டதல்ல . எதையும் முன்வைப்பதல்ல. அதன் அழகே அதன் செய்தி. அதன் அழகே அதன் நிலைபாடு. பிரமிள் ஒருமுறை தன் கவிதைகள் வைரங்கள் என்று சொன்னார் என்பதை தேவதேவன் ஒரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறார். வைரங்கள் ' உபயோகமற்றவை ' 'ஒரு பார்வையில் அவை ஆடம்பரங்கள் கூட! ஆனால் இந்த உபயோகமற்ற பொருளுக்கு எந்த உபயோகமுள்ள பொருளையும் விட அதிக மதிப்பு தந்திருக்கிறான் மனிதன். காரணம் அது ஒரு அடையாளம் என்பதே .அந்த அடையாளம் அவனுக்கு எந்த நுகர்வையும் விட முக்கியமானது என்பதே. நுகர்வே ஒரே இன்பமாக ஆன வாழ்வை நோக்கி வெறும் அடையாளம் மட்டுமான வைரம் விடுக்கும் செய்தி என்ன ? -என்கிறார் தேவதேவன் அந்தப் பேட்டியில்.[ 'கவிதை பற்றி ... ' தேவதேவனின் உரையாடல் .]

தீவிர அனுபவத்தின் நேரடியான பரவசம் நிரம்பிய மொழியால் அடையாளப்படுத்தப்பட்டவை தேவதேவனின் கவிதைகள்.அப்பரவசத்தை மொழியினூடாக தொட்டுணரும் கூரிய வாசகருக்கு மட்டும் உரியவை. மொழியின் நுட்பமான சாத்தியங்களிலேயே எப்போதும் தன் வெளிப்பட்டை கண்டடைபவை. வசன நடையில் நீண்டு , தருணம் வரும்போது மட்டும் இயல்பான உத்வேகமிக்க இசைத்தன்மையை அடைபவை.

யார் உண்டாக்கிக் கொண்டிருப்பது
நூறு நூறு மின்னல்களினால் அறியப்படும்
இவ்வாளின் சுழற்சியை ?
எவருடைய சிந்தனைகள் இவை ?

போன்ற வரிகளில் உரைநடையின் கற்பனை வீச்சே அழகையும் உத்வேகத்தையும் உருவாக்கிவிடுகிறது.

மலை உருகி பெருக்கெடுத்த நதி
மடியுமோ நிரந்தரமாய் ?
அவ்வளவு பெரிய கனலை
வெளிப்படுத்த வல்லதோ
ஒரு சிறு சொல் ?

போன்ற வரிகளில் உள்ளடங்கி ஒலிக்கும் இசையழகே அதன் உத்வேகத்தை தொடர்பு படுத்துகிறது. அபூர்வமாக இவ்விரு தளங்களும் அழகாக முயங்கிய கவிதை சாத்தியமாகிறது.

அமைதி என்பது...
============ =
பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
உன்னருகே வருகிறேன்
அமைதி என்பது மரணத் தறுவாயோ ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.
அமைதி என்பது வாழ்வின் தலைவாசலோ ?
எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?
தேவதேவனின் கவிதை வந்தமர்ந்த பறவைக்கும் எழுந்துசென்ற பறவைக்கும் நடுவில் முடிவின்றி ஆடும் ஒரு மரக்கிளை .


தேவதேவனின் நூல்கள்


1] குளித்து கரையேறாத கோபியர்கள்
2]மின்னற் பொழுதே தூரம்
3] மாற்றப்படாத வீடு
4] பூமியை உதறி எழுந்த மேகங்கள்
5]நட்சத்திர மீன்
6]நுழை வாயிலிலேயே நின்று விட்ட கோலம்
7]அந்தரத்திலே ஒரு இருக்கை
8]புல்வெளியில் ஒரு கல்
9]சின்னஞ்சிறிய சோகம்


கிடைக்குமிடம் , கவிஞர் விலாசம்


தேவதேவன்
4 --5 மணி நகர்
தூத்துக்குடி
சிதம்பரனார் மாவட்டம்
தமிழ் நாடு
இந்தியா
போன் 0462 338240


[நன்றி .சொல் புதிது 6]
**
குறிப்பு: கவிதைகள் பக்கத்தில் தேவதேவனின் கவிதைகள் தேர்வு ஜெயமோகன

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்