Showing posts with label தோப்பில் முஹம்மது மீரான். Show all posts
Showing posts with label தோப்பில் முஹம்மது மீரான். Show all posts

Jul 4, 2013

அனந்தசயனம் காலனி -தோப்பில் முஹம்மது மீரான்

இரைந்து வரும் பாயும் பஸ்ஸில் ஓரமாக உட்கார்ந்திருந்த போது துரிதமாக ஓடுவது ரோட்டோரத்து மக்களா பேருந்தா என்ற சந்தேகம் மனசில் கடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. என்னைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களையும் மரங்களையும் மிருகங்களையும் முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். நெல் கதிர்மணிகளைச் சூடி நிற்கும் வயல்களும் குலை தள்ளி நிற்கும் வாழைத் தோட்டங்களும் ஒரு சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தன. ரோட்டோரத்துthoppil மரங்களின் தலையிறீருந்து உதிர்ந்த காற்றில் கரத்தில் ஒரு செய்தித்தாள் துண்டு தத்தியது. அப்போதுதான் நான் தேடிச்செல்லும் பேராசிரியர் சீனிவாசன். அவருடைய முகவரி எழுதி தந்திருந்த காகிதத் துண்டு நினைவுப் பிசகின் கூளத்தில் வீழ்ந்து விட்டதை உணர்ந்து திடுக்கிட்டேன். ‘பிளஸ் டூ’ தேறிய மகனை நினைத்தபோது. முனை கூர்மையான ஒரு குற்ற உணர்வு மனத்தைக் கீச்சியது.

புரொபசர் சீனிவாசனின் வீடு ஏதுன்னு கேட்டா “பச்சக் குழந்தை கூட சொல்-த் தருவாங்க சார்” – பேராசிரிய நண்பர் அன்று பேச்சுவாக்கில் சொன்ன இந்தத் திடீர் நினைவின் துளிர்ப்பு.

ஓர் ஆலமர நிழல் அப்போது விரித்தது. புகழ் பெற்ற பேராசிரியர் ஆனதால் கதவு எண்ணும். தெருப் பெயரும் தேவை இல்லை என்ற ஆறுதல் மனசைக் குளிர வைத்தது. பச்சைக் குழந்தைகள் கூட
தெரிந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு பேராசிரியரின் நண்பன் நாம் என்ற அபிமான உணர்வு என்னை மயிர்சிறீர்ப்பால் போர்த்தியது.

கம்ப்யூட்டர் சயன்ஸ் என்பது இப்போது கவர்ச்சிகரமான பாடம். ப்ளஸ் டூ தேறிய என் மகனையும் அதன் கவர்ச்சி பீடித்து விட்டது என்பதை அவனுடைய அடம்பிடிப்பதிலிருந்து ஊகித்துக்
கொண்டேன். கம்ப்யூட்டர் துறை உள்ள கல்லூரியையும் அதன் துறைத் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் என்னுடைய ஒரு பழைய நண்பர் என்பதையும். அவன் எப்படி புலனாய்வு செய்து
தெரிந்துகொண்டான் என்று எனக்கு இப்பவும் ஒரு புதிர்.

பல மைல்கற்கள் தொலைவில் என்னோடு வசிக்கின்ற என் மகன்கூட பேராசிரியர் சீனிவாசனின் வீடு “அனந்தசயனம் காலனியில்” என்பதைத் தெரிந்துகொண்ட நிலையில், கல்விமான்களும் உயர் அரசு அதிகாரிகளும் டாக்டர்களும் இன்ஜினீயர்களும் போன்ற மேல் மக்கள் தங்கிவரும் அந்தக் காலனியில்ó உள்ள தாய் தந்தையர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் கண்டிப்பாகப் பேராசிரியரைத் தெரியாமலிருக்க முடியாது. இவர்களில் பெரும்பான்மையினர் தங்கள் பிள்ளைகளின் அட்மிஷனுக்காகப் பேராசிரியரை ஆண்டோடாண்டு அணுகியிருக்க வேண்டும்; அல்லது அணுக வேண்டிவரும் என்ற தொலைநோக்கில் முன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்வதற்காக வழியில் பார்க்கும் போதெல்லாம் அவருக்கு ஆங்கில பாணியில் வணக்கமாவது
சொல்லாமலிருக்க மாட்டார்கள்.

பிரபலமான பேராசிரியர் நண்பரின் வீட்டை முகவரி இல்லாமலேயே கண்டுபிடிக்க வீண் அலைச்சல் வேண்டி வராது என்ற மனநிறைவில் பஸ்ஸின் இருக்கையில் குறுக்கைச் சாய்த்தேன்.
விழிப்பிற்கும் மயக்கத்திற்கும் இடையிலான ஊடு வழியில். ஒற்றைக் காறீல் பிடிவாதமாக நிற்கும் மகனின் முகம் தெரிந்தது. அவனுடைய தயனீயமான முகம். ஆசை ஒளிரும் கண்கள்! வீட்டை விட்டு இறங்óகுகையில் அவன் உதட்டிலிருந்து விழுந்த எச்சரிக்கை – “நாளை செலக்ஷன்” அதன் ஓசை என்னை அவ்வப்போது நடுங்கி விழிக்க வைத்தது. முந்தைய இரவு விழித்திருந்த களைப்பை. இந்த நெடுந்தூரப் பயணத்தில் சற்று உறங்கித் தீர்க்கவிடாமல் இடைஞ்சல் பண்ணிக்கொண்டிருந்தது அது.

பஸ் இறங்கிய இடத்தில். உச்சி வெயிலில் தார் உருகும் ரோட்டில் இறங்கி நின்றபோது பிந்தி விட்டோமோ என்று அச்சம் மனத்தை உறுத்தியது. அவர் யார் யாருக்கெல்லாம் வாக்களித்து
இடத்தை நிரப்பியிருப்பாரோ?

பல முடிச்சுகளுக்குள்ளே மனம் சிக்கிக் குழம்பிக் கொண்டிருக்கும் போது குடை பிடித்துக் கொண்டு அங்கு வந்த ஒருவரிடம் கேட்டேன்.

“ஐயா. அனந்தசயனம் காலனிக்குப் போவும் பஸ் எது?”

“ஓடிப்போவும். அந்த டிரைவர் ஏறி இருக்கிற 39பி தான். அத உட்டா இனி ரண்டு மணிக்கூர் களிஞ்சுதான் பஸ்.” உருண்டு கொண்டிருந்த பஸ்ஸில் ஒரு மாணவனுடைய சுறுசுறுப்போடு
தொங்கி ஏறிவிட்டேன். பள்ளங்களில் விழுந்து எழும்பிய பஸ். நகரத்தின் நெஞ்சிலிருந்து. கால் முட்டிலிருந்து விரல் முனையிலிருந்து என்னைப் பெயர்த்துக் கொண்டு போனது. ஏதோ ஜின்னு-ஆவி. என் கண்களைக் கட்டி ஏழாம் கடலுக்கு அக்கரை கொண்டு செல்வது போன்ற பிரமை. மனித நடமாட்டம் இல்லாத ஒரு சாலை ஓரத்தில் என் கண்களிறீருந்து கட்டை அது அவிழ்த்து விட்டது.

டவுன் பஸ்ஸிலிருந்து இறங்கிய இடத்தில் எதிர் திசையில் அனந்தசயனம் காலனி என்ற பெயர்ப் பலகை அதை ஒட்டி ஒரு டீக்கடை. டீக்கடையைத் தாங்கியிருந்த நான்கு தூண்களில் ஒன்று பஸ் நிறுத்தப் பலகை மாட்டப்பட்டிருந்த தூண். அந்தத் தடயம் டீக்கடைக்கும் அனந்தசயனம் காலனிக்கும் இடையிலான நெருக்கத்தைச் சுட்டியது. காலனி மக்களை. குறிப்பாக. பிரபலமான
பேராசிரியர் சீனிவாசனை டீக்கடை உரிமையாளர் தெரியாம-ருக்க முடியாது.

“அண்ணே. புரொபசர் சீனிவாசன் ஊடு எந்தப் பக்கம்?”

“புரொபசர் சீனிவாசன்?” கடை உரிமையாளர் சற்று ஆலோசனை செய்துவிட்டு. பேராசிரியரின் உருவ அமைப்பைச் சொற்களால் வரைந்தார். மீசை வச்ச ஆள்.

“ஆமா”

“கண்ணிலே கண்ணாடி. கொஞ்சம் கஷண்டி தலை. கறுப்பு. உயரமான ஆள்.”

“ஆமாண்ணே. அவரேதான்.” இறங்கிய இடத்திலேயே வீட்டைக் கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சி நெஞ்சிற்குள் மத்தாப்பூக் கொளுத்தியது.

“ஆள பாத்திருக்கேன். ஊடு காலனியிலேதான். ஆனா எங்கே தங்கியிருக்காருன்னு தெரியாது.”

சோர்வு மனத்தைக் கசக்கியது.

காலனிக்கு உள்ளே நுழைந்தபோது. கண்கள் ஒத்திய ஒரு விளம்பரப் பலகை என்னை அச்சுறுத்தியது – தெருக்களை அசுத்தம் செய்யாதீர்கள். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த
அச்சுறுத்தலுக்கு எனக்குள்ளே ஒரு பரிகாரமிருந்தது. இன்னும் சில வினாடிகளில் பேராசிரியர் சீனிவாசனின் வீட்டுக்குச் செல்லவிருப்பதால். வசதியாக அங்கேயே சிறுநீர் கழிக்கலாமே.

அங்கு நின்றிருந்த போது பார்வை பரவிச் சுழன்றது. பின்னல் நிறைந்த தெருக்கள். மாடி கட்டிடங்கள். தெருக்கள் துவங்குமிடத்தில் மஞ்சள்நிற சிமெண்டுப் பலகையில். கறுப்பு எழுத்துக்களுக்கு நேராக எண்கள்-ஏ 1-100. பி – 20-60. இப்படி எந்தத் தெருவில் முதலில் நுழைவது என்ற குழப்பம்.

ஐயப்பாடுகள் மனத்தைக் கிளறின. வெறிச்சோடி கிடக்கும் தெருக்கள்; மயான அமைதி. யாரிடம் போய் விசாரிப்பது?

விடுமுறை நாட்களில் என் மகனும் அவனுடைய நண்பர்களும் எங்கள் தெரு மணலில் கிரிக்கெட் மட்டையால் அடித்துத் தூள் கிளப்பிக் கூப்பாடு போடுவதை நினைத்தேன்

ஏனையோர்களையும் கண்டிப்பதுண்டு. “ஏண்டா தெருவிலே கிடந்து கத்தூதியோ“ ஊட்டுக்குள்ளே போய் படிங்களே…” இதை அவர்கள் காதில் வாங்கி கொள்வதே இல்லை. எரிச்சலாகவே இருக்கும்.
அவர்கள் மீது.

அப்போது. அனந்தசயனம் காலனியில் ஏதேனும் தெருவில் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுகிறார்களா என்று கூர்ந்து நோக்க தோன்றியது. ஆள் அசைவுகள் அற்றுக் காணப்பட்ட தெருக்களைக் கண்டபோது. அங்குள்ள கட்டிடங்களில் மனித வாசம் இல்லையோ என்று தோன்றியது.

அகர வரிசையில் முதலில் ஏ-யை நோக்கி கால்கள் நகர்ந்தன. வீட்டு வாசல்களில் கண்ணை ஓட்டி நடந்தேன். பெயர்ப் பலகைகள் உள்ள வீடுகள். இல்லாத வீடுகள். எந்தத் தலையும் வெளியே
தெரியவில்லை. நடந்துகொண்டே இருக்கும்போது அந்தத் தெரு; அதன் மத்தியில் இரண்டு கிளைகள் விட்டிருந்தன- பி. சி. சற்று தயக்கத்திற்கு பின். பி- க்குள்ளே

“யம்மா…” ஓடி வாசல் பக்கம் சென்றேன். தலை வாசலில் உள்பக்கம் பெரியதொரு பூட்டு தொங்கி கொண்டிருந்தது.

“புரொபசர் சீனிவாசனின் வீடு…? ”

“தெரியாது.” அவள் வெடுக்கென்று உள்ளே ஏறிச்சென்று கதவைச் சாத்திவிட்டாள்.

“போறா அவ”. பி-வழியாகவே நடந்தேன் இரண்டு கால் எட்டிப்போட்டதும். பி-யிலிருந்து மீண்டும் இரு கிளைகள் – சி.டி.

ஒரே குழப்பம். எங்கு நுழைவது? சி -க்குள்ளே நுழைந்தேன்.

தெருவின் இருமருங்கிலும் கண்ட பெயர்ப் பலகைகள் அனைத்தையும் வாசித்துக்கொண்டே நடந்தேன். மூடப்பட்ட வாசல்களில் நாய்களின் படங்கள்.

மேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாத நிலை. காலனிக்கு உள்ளே நுழையும்போது கண்ட எச்சரிக்கைப் பலகை கண்ணை உறுத்தியது. பேராசிரியரின் வீட்டைக் கண்டுபிடிக்கும் வரை சிரமங்களை அடக்கிக்கொள்ளாமல் வேறு மார்க்கமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். கால்கள் முன் நோக்கி நகர்ந்தன. சற்றுத் தொலைவில் ஒருவர் இரும்பு வாசலைத் திறந்து ஹீரோ ஹோண்டாவை வெளியே உருட்டி இறக்கினார். அதைக் கண்டதும். மூச்சு வந்தது. அவரை
வெளியே விட்டு ஓர் அழகி வாசலை உள்ளே பூட்டால் பூட்டினாள்.

காலை பின்பக்கமாக எடுத்துப்போட்டு வண்டியில் உட்கார்ந்து அவர் வண்டியை ஸ்டார்ட் செய்யும் வினாடிகளுக்குள் ஓடி அவர் பக்கம் சென்றேன்.

“ஸார். புரொபசர் சீனிவாசன் வீடு?”

“தெரியாது.” என் முகத்தைக்கூட பார்க்கவில்லை.

சொன்னதைக் கேட்டாரோ? தெரியவில்லை. கரிப்புகையை என் மூக்கிற்குள் திணித்துக் கொண்டு பாய்ந்துவிட்டார். அந்தக் கரிப்புகையை சுவாசிக்க வேண்டியதாயிற்று. சுவாச நாளத்தில் மண்டிய அந்தப் புகையைச் சீந்தி சீந்தி வெளியேற்றிக் கொண்டு நடந்தேன். தெரு ஓரத்தில் மரம் முளைக்காத ஓர் இடத்தில் வைத்து என் தலை இரண்டாகப் பிளந்தது. டி.சி. இந்தப் பிளவு. என் பொறுமையின் தெளிநீரில் கல்லைப் போட்டு குளம் கலக்கியது.

டியுடைய நெஞ்செலும்பில் காலோங்கி மிதித்து நடக்கும் போது ஏதோ ஒன்றின் நெஞ்சை மிதிப்பதாகத் தோன்றியது. எனக்கு முன்னால் மல்லாந்து கிடப்பது எது? புரியவில்லை. எல்லா
நரம்புகளி–ருந்தும் ஊறி இறங்கிய சினம் திரண்ட காலால் ஓங்கி. ஓங்கி. மிதித்துக்கொண்டு அதன்மீது நடந்து கொண்டிருந்தேன். ஒரு பாலைவனப் பயணியின் களைப்பு கால்களில் உண்டானது. மூச்சிரைப்பும்.

இரு மாடிக் கட்டிடத்தின் நிழல் விழுந்த தெரு ஓரத்தில் அதன் சுவரில் சாய்ந்துநின்று காலாற்றினேன். கண்ணெதிரில் தெரிந்த வீட்டு எண்ணை வாசித்தேன். டி-89 காம்பவுண்டிற்குள் நின்றிருந்த வேப்ப மரம் தரையில் பரப்பிய குளிர்ச்சியில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து ஒருவர் ஆங்கிலப் பத்திரிகையின் சிறப்பு மலர் வாசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவர் மடி மீது
உட்கார்ந்துகொண்டிருந்த ஒரு ஜடை நாய்க்கு தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். காம்பவுண்டுச் சுவரில் உள்ள இரும்பு வாசலில் உட்பக்கம் பெரிய பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

இவரையே கேட்டுப் பார்ப்போம். மெல்ல வாசலை அடைந்தேன். அவிழ்த்து விட்டுருந்த மூன்று நாய்கள் உள்ளே பல திசைகளிறீருந்து குதித்து வந்தன. அவர் மடியில் உட்கார்ந்து கொண்டிருந்த நாயும் கால்களை தூக்கி வாசல் கம்பியில் வைத்துக் கொண்டு செவி வெடித்துப் பிளக்கும்படி குரைத்தன. என்னை கடித்துக் குதறுவதற்கு தடையாக இருந்தது. என் அளவு உயரமான இரும்பு கிரில் கேட்.

“சார்”. என் குரலைக் கேட்டு வெடுக்கென்று முகத்தை வாசலுக்கு நேராக அவர் திருப்பினார்.

“புரொபசர் சீனிவாசன் வீடு …?”

“தெரியாது”. முகத்தை மறுபடியும் சிறப்பு மலரின் வண்ணப்பக்கங்களுக்குள் புதைத்தார். வாசித்துவிட்ட வரி விட்டுப்போன எரிச்சலோடு என்னவோ. தலையைச் சொறிந்தார். அல்லது வேற்று முகம் கண்ணில் பட்டுவிட்ட வெறுப்போ? தெரியவில்லை. வாசலைத் திறந்து நாய்களை ஏவிவிட்டு என்னைக் கடிக்க வைக்கவில்லை. அவர் செய்த அந்த ஒரு நன்மைக்காக அவருக்கு நன்றி சொல்லத் தவறிவிட்டேன். விட்டில் காலில் கட்டிவிடப்பட்ட நேரத்தின் பின்னால் நான் நடந்துகொண்டிருந்தது.

டி-வழியாக. திக்குத் தெரியாமலும் முகங்கள் தெரியாமலும். தெரிந்த ஒரே முகம். ஆசைஒளிரும் என் மகனுடைய விடலை முகம்.

டி – யின் விலாவிலிருந்து இரு எலும்புகள் சுழன்று மீண்டும் தெருக்களாகப் பரிணமித்த திகைப்பில். அந்தச் சந்திப்பில் நின்று விட்டேன்; பி.ஏ .நாசம்! இந்த அனந்தசயனம் காலனிக்கு முடிவே இல்லையா? தெருக்கள் பின்னி கிடக்கும் இந்த காலனி. போய் போய் அலறும் கடல் திரைகள் நுரைகள் கக்கும் விளிம்பைத் தொட்டுவிடுமோ?

பச்சைக் குழந்தை கூட சொல்லித் தருவாங்கொ!! கண்ணில் எந்தக் குழந்தையும் வராத ஏக்கங்களைக் கொப்பளித்துக் கொண்டிருந்தது மனம்.

டி-யிலிருந்து பி-யை நோக்கி திரும்பும்போது தொண்டையில் தங்கியிருந்த கடைசித் துளி ஈரமும் வறண்டுவிட்டது. இப்போதைய தேவை பேராசிரியரின் வீடு அல்ல; வறண்டு சுருங்கும் தொண்டையை நனைத்து. குரலை உருவி எடுக்க ஒரு கோப்பை தண்ணீர். சட்டை வியர்வையில் பொதுமியிருந்தது. உச்சியிலிருந்த வடிந்த நீர். முகத்தில் சால்கள் கீறின. வேட்டி முந்தானையைத் தூக்கி முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.

நின்றிருந்த இடத்தில் காலில் குளிர்ச்சி அனுபவப்பட்டது. எதிர் வீட்டின் வெளி மடையிலிருந்து தண்ணீர் வடிந்து தெருவுக்கு வந்து கொண்டிருந்தது. அந்த வீட்டின் சுவரில் ஒட்டியிருந்த பெயர்ப்
பலகையைக் கண்கள் தடவின. எஸ்.கே. சங்கர் ஐ.ஏ.எஸ் (ரிடையர்டு) அரசை மக்களோடும். மக்களை அரசோடும் தொடர்புபடுத்தித் தேய்ந்துபோன கண்ணி. அந்த ஈரம் அந்த நெஞ்சிலுமிருக்குமென்ற நம்பிக்கை அந்த வாசல் அருகில் என்னை இழுத்தது. முற்றத்துத் தண்ணீர்க் குழாயில் பழுதடைந்த நல்லியி-ருந்து தண்ணீர் பீச்சி அடித்துக் கொண்டிருந்தது.

“சார்…”

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த அவருடைய தலை வழுக்கையைச் சுற்றி நாலைந்து வெள்ளைப் பூனைகளின் பாதுகாப்பு .

“யாரது. என்ன வேணும்” ஓர் உயர் அதிகாரியின் கவுரவப் பார்வை. கேள்வியில் கடுமை. அந்தக் கூரிய பார்வையின் முனையில் நான் ஒரு திருடனாக விழுந்து தொங்கி நின்றேன்.

“குடிக்கக் கொஞ்சம் தண்ணி..”

“வேற எங்கயாவது கேட்டுப்பாரும்”

“சரி சார் புரொபசர்…”

தொண்டைச் சுளுக்கிலிருந்து உருவிய என் குரல் காதில் விழாமலிருக்க. நாற்காலியிலிருந்து எழும்பி அவர் உள்ளே போய் விட்டார். நான் திரும்பி நடந்து கொண்டிருந்தது பேய்வீடுகளை இருமருங்கிலும் தாங்கி நிóற்கும் ஒரு பாழ் பூமியில் நடக்கையில் வானத்தைப் பார்த்தேன். நேரம் தெரிந்து கொள்ள. சூரியனை வானத்தில் காணவில்லை. அது என் கண்களுக்குள்ளிருந்து எரிந்தது.
அனல் துப்பிய என் கண்ணெதிரில் அப்போது அங்கு வந்து கொண்டிருந்த கிழவரின் தோளில் இருந்தது ஒரு செவ்வாழைக் குலை. கிழவரின் கால் முட்டளவு புழுதி அப்பியிருந்தது.

செவ்வாழைக் குலை என் வயிற்றிற்குள் ஒரு பு-யைக் கட்ட விழ்த்து விட்டது.

“பாட்டா” என் பார்வை செவ்வாழைக் குலையைத் நக்கி எச்சில் வடித்தது.

“அம்மா” ஓர் ஆறுதலுடன் கிழவர் குலையைத் தோளிலிருந்து இறக்கி வைத்தார்.

“விய்க்கவா?”

“இல்லை.” கிழவரின் முகம் வாடி சோர்ந்து காணப்பட்டது. அவர் இரங்கிக் கேட்டார். புள்ளேய். கலக்டராபீசிலே வேலை பாக்குத பார்வதிக்க ஊடு எங்கே? சொல்லிதா மக்களெ. விடிஞ்சதிலிருந்து நாயா அலையுதேன். கம்ப்யூட்டர் சயன்ஸ் வகுப்பில் சேருவதற்காக விடியும் வரை விழித்திருந்து பாடம் படித்துத் தேறிய என் மகனுடைய முகம் என் மனசில் ஒரு உணர்ச்சிக் கொத்தளிப்பை உண்டு பண்ணியது.

மகனுக்காகப் பேராசிரியர் வீட்டை மேலும் அலைந்து கண்டுபிடிப்பதா அல்லது கிழவர் தேடி வந்த வீட்டைக் கண்டுபிடிக்க அவருக்கு ஒத்தாசை செய்வதா??

“ஏன் பேசல்லெ?”

“தெரியாது”.

ஆரட்ட கேட்டாலுமு தெரியாது தெரியாது. அவொ என் மாவொ புள்ளெ பேத்தி மேல் விலாசம் எழுதி தான்னு கேட்டபோ. வேண்டாம் பாட்டா. கேட்டா பச்சக்குழந்தைகூட சொல்லி தருமென்னு சொன்னா.

“என் தலை எழுத்தும் இதேதான்.”

“இங்க எங்கயாவது கொஞ்சம் தண்ணி குடிக்க கெடக்குமா பாட்டா?”

“இந்தப் பாலை வனத்திலே நீரூற்று ஏது பாட்டா”

“மவொ புள்ளெ பேத்தி குழந்தெ உண்டாயிருக்காணு அவளெ பாக்க இந்த குலையும் சொமந்துட்டே வந்த இந்த அவஸ்தெ”.

“பாட்டா”

“ஒனக்கு பைக்குதா?”

“என் பார்வையின் வாசகத்தைப் பார்வை மங்கிய கண்கள் வாசித்தன.”

“பசிக்குது”

“இன்னா இணிஞ்சு தின்னு”

“பேத்திக்கு….”

“அவொ கிடப்பா அங்கெ என்னெ நாயா அலைய வச்சுபோட்டா இல்லையா? “

மீதி பழத்தைத் தூக்கி தோளில் வைத்துக்கொண்டு கிழவர் நடந்தார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். பின் தொடர்ந்து கொண்டிருந்த என் தலை குனிந்தது. ஒரு துக்கத்தின் நிழல் என்னை பின் தொடர்வது போல ஏதோ இறந்து கிடக்கும் துக்க மவுனம். அனந்தசயனம் காலனியைச் சூழ்ந்து கொண்டிருந்தது. என் மகனுக்கு என்ன பதில் சொல்வது!

“ஏய் பழக்காரா. பழம் என்ன விலை?”

குரல் கேட்டதும் கிழவர் நின்று விட்டார் நானும் கூட. கிழவர் அவள் நின்று கொண்டிருந்த மாடியைப் பார்த்தார்.

“பழமா? அம்பது பைசா?”

“பத்து பழம் குடும்.”

“அவள் இறங்கி வந்தாள். அவளது தோரணையை ஏற இறங்கப் பார்த்தார். கிழவர்.

“எவ்வளவு பணம் வச்சிருக்கா?”

“அஞ்சு ரூபா.”

“அஞ்சு ரூபாய்க்கு ஒரு பழம்தான் தருவேன். மனுசன் மாருக்குத்தான் அம்பது பைசாவுக்குக் குடுப்பேன். அம்பது பைசாயும் கொண்டு பழம் நொட்டவந்தியாக்கும். நாங்கொ ஏதாவது தெரியாத இடம் கேட்டா சொல்லுக்க உனக்கு நாக்கு எளவாது. அஞ்சு ரூபா பழத்தை அம்பது பைசாவுக்கு நொட்டிட்டு போவ ஒனக்கெல்லாம் நாக்க எளவும்”

“பாட்டா ஒண்ணும் பேசாதெங்கொ அரசு அதிகாரிகளும் மேல் மக்களும் வாழக்கூடிய இடம்”. நான் வேண்டினேன். “நாயை அவிழ்த்து விட்டுவிடுவார்களோ என்ற பயம் எனக்கு”.

“எவனானா எனக்கு என்னடா?” கிழவரின் முக பாவனை மாறிவிட்டது. முகத்தில் ரத்தச் சிவப்பு கண்களில் கோப முழக்கம் “நா அலஞ்ச அலச்சல் எனக்குதான் பிலே தெரியும்” கிழவர் என்னைக் கோபமாக முறைத்துக் கொண்டு விறுவிறுவென்று நடந்தார்.

“பாட்டா”

“சோலியெ பாருடா” – அலறல் கேட்டுத் திடுக்கிட்டேன்.

நெஞ்சு நிறைய பளுவை ஏற்றிக் கொண்டு டீக்கடைக்கு வந்தேன். டவுன் பஸ் வரும் திசையை நோக்கி ரோட்டோரத்தில் குந்தி உட்கார்ந்து கொண்டிருந்த கிழவரின் கையில் பழக்குலை இல்லை.

“பாட்டா பழம்?”

“இதிலே போன குழந்தெ புள்ளியளுக்குப் பிச்சுக் கொடுத்தேன்.”

டவுன் பஸ்ஸில் அருகருகே உட்கார்ந்து கொண்டிருக்கும்போது கிழவர் குளிர்ந்த குரலில் நிதானமாகச் சொன்னார்.

“மக்கா எங்கெ ஊருக்கு ரோடு இல்லை கேட்டியோ. ஒரு பாலம் போட்டாதான் ரோடு வரும். வள்ளத்திலெ ஏறி அக்கரை போய் ஒரு மைல் நடந்துதான்டேய் கார் ஏறணும். எங்களுக்குப் படிப்புமில்லை கேட்டியோ. இருந்தாலும் அந்தச் சுற்று வட்டாரத்திலெ ஆரு. எவரு. எங்கெ எங்கெ தங்கியிருக்காங்கென்னு நாங்கொ எதுக்கு தெரிஞ்சு வச்சிருக்கோமென்னு இப்பம் உனக்கு மனசிலாச்சா டேய்?”

டவுன் பஸ் இறங்கிய இடத்தில் இருவரும் இருதிசைகளாகப் பிரிந்தோம்.

“பாயின்ட் டூ பாயின்ட்” பஸ்ஸின் கருப்பைக்குள் நான் சுருண்டேன். பஸ் வந்த வழியே இரைந்து பாய்ந்து அவிழ்க்க. நான் கிழவரின் பின்னால் ஓடிக்கொண்டு இருந்தேன்.

இரவு வீட்டில் எல்லோரும் தூங்கும் நேரத்தில் விழித்துக் கொண்டிருந்த மகன் ஓடி வந்து ஆவலோடு கேட்டான்.

“வாப்பா புரொபசரை பாத்துச் சொன்னீளா?”

அவன் முகத்திலிருந்து என் முகத்தை திருப்பிக் கொண்டேன். நான் என் அறையை நோக்கி நடக்கும்போது. பதிலுக்காக அவன் என்னைப் பின் தொடாந்து வந்தான்.

“சொன்னேன்” சொல்லியபோது ஒரு காரை முள்முனை என் இதயத்தில் துளைத்து ஏறியது. மகிழ்ச்சியால் ஒரு பாட்டை முனகிக் கொண்டு என் மகன் படுக்கையில் விழுந்தான்.

மேஜை வலிப்பைத் திறந்தேன். பேராசிரியர் சீனிவாசன் அவருடைய முகவரி எழுதித் தந்த காகித துண்டைத் தேடி எடுத்தேன்.

“டி-90 அனந்தசயனம் காலனி.”

மூன்று நாய்களை அவிழ்த்து விட்டிருந்த அறிவுஜீவியின் வீட்டை ஒட்டிய இருமாடிக் கட்டிடம் அது.

***

நன்றி: சிறுகதைகள்.காம்

Aug 16, 2010

சில புத்தகங்களை படிப்பது பெரிய தண்டனை - தோப்பில் நேர்காணல்

தோப்பில் முகம்மது மீரான் நேர்காணல்
சந்திப்பு: சங்கர ராம சுப்ரமணியன், தளவாய் சுந்தரம்

 

தமிழ் நாவல் இலக்கியத்தில் 70களில் நிகழ்ந்த தோப்பில் முகம்மது மீரானின் வரவு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சமூகம் தன் இருட்பிரதேசங்களில் மறைத்து வைத்திருந்த நூற்றாண்டு சோகங்கள், ஆதங்கங்கள், கதறல்கள், இளைப்பாறுதல்கthoppilள் தோப்பில் முகம்மது மீரான் மூலம் வெளிச்சம் பெற்றது.தன் அனுபவங்களின் ஊடான பயணம் அவருக்கு இலகுவாய் இருக்கிறது. நாவல்களைப்போலவே தோப்பிலின் பேச்சிலும் மலையாளம் கலந்திருக்கிறது. ஊரிலிருந்து வெளியேறி 20 ஆண்டுகள் மேலாகியும் தோப்பில் இன்னும் தேங்காய்பட்டின மனிதராகவே இருக்கிறார்.

  தோப்பில் முகம்மது மீரானுக்கு சாகித்ய அகாடமி பரிசு 1997 ஆம் ஆண்டு 'சாய்வு நாற்காலி' நாவலுக்காக வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் ஒரு காலை நேரத்தில் அவர் வீட்டு முன்னறையில் இப்பேட்டி பதிவு செய்யப்பட்டது. அறையில் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை காண்பித்து மீரான் சிரித்துக்கொண்டே சொன்னார். ``நான் பெரும்பாலும் புத்தகங்களை படிப்பதில்லை. தமிழ்வாசிப்பது சிரமம். ஆனாலும் நண்பர்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டேயிருப்பதால் குவிந்துவிட்டது


.   கே: உங்கள் இளமைக் காலத்தில் நிகழ்ந்த என்ன மாதிரியான விஷயங்கள் உங்களை எழுத்தாளராக மாற்றியதுன்னு நினைக்கிறீங்க?

  தோப்பில் முகம்மது மீரான்: என் அப்பா கடந்த கால விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். என் அப்பாவுக்கும், மற்ற குடும்பங்களுக்கும் பணக்கார மேல்தட்டுவர்க்க மக்களால் ஏற்பட்ட சிரமங்கள் பற்றி சொல்வார். எங்களுக்கு எப்போதும் உயர் வர்க்கத்தினரால் துன்பம் ஏற்பட்டது. தற்பாதுகாப்புக்காக போராட வேண்டிய சூழ்நிலையில் மூன்று தலைமுறை எங்களுக்குள்ளே இருந்துகொண்டே இருக்குது. இதற்குள் இருந்து ஒரு கலகக்காரன் உருவாகத்தான் செய்வான். நான் ரொம்ப அடிமட்டத்துல இல்லைன்னாலும் அடிமட்ட மக்களின் அனுபவம் எனக்கு கிடைச்சுப்போச்சு. எனக்குள் ஒரு கலக மனோபாவம் இருந்தது. அநீதிக்கு எதிரா போராடனும்னு ஒரு சுயமே உருவாச்சிது. எப்பவுமே ஒரு சமூகத்தை, இன்னொரு சமூகம் ஒடுக்கனும்னு நினைக்கும்போது, ஒடுங்கின சமூகத்தில் ஒரு கலக உணர்ச்சி உண்டாகும். இந்த கலக உணர்ச்சி கலையா வெளிப்படலாம். சமூகப் புரட்சியாளர்கள் உருவாகலாம். சிலர் கலைஞராகவும் வரலாம். நான் இந்த துறைக்கு வர அதுதான் காரணம், முதலாளி வர்க்க மனோபாவத்தோடதான் நம்ம எதிர்ப்பு. ஒரு தனிப்பட்ட முதலாளியோட எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

  கே: உங்க நாவல்கள் பெரும்பாலும் தேங்காய் பட்டனத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை. அங்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?

  மீ: அங்க, எங்களைப் பெரும்பாலும் திருமணத்துக்குக் கூப்பிடமாட்டாங்க. நாங்க வாழ்ந்த பகுதியில், உயர்நிலை மக்கள் இருந்தாங்க. புராதனமான பள்ளிவாசல் ஒன்று இருக்கும். பொருளாதார அளவில் உயர்ந்திருந்த சிலர், தாங்கதான் அரேபியால இருந்து வந்தவங்க, குடும்பப் பாரம்பரியம் உள்ளவங்க என்கிற எண்ணத்தில், பள்ளிவாசலைச் சுற்றி வாழ்ந்துக்கொண்டு இருந்தாங்க. ஊருல ஒரு சுடுகாடு இருக்கு. அதை ஒட்டிதான் எங்க மூதாதையர் குடியிருக்காங்க. அந்த இடத்துக்குப் பேர்தான் தோப்பு. எங்க வீட்டு மதிலுக்குப் பின் பக்கம்தான் சுடுகாடு. தோப்பு என்கிற அந்த இடம் ஊரிலேயே பிற்படுத்தப்பட்டு ரொம்ப மோசமான இடமா கருதப்பட்ட காரணத்தினாலதான் புரட்சியா தோப்பில் முகம்மது மீரான்னு பேர் வைச்சுகிட்டேன்.

  கே: ஒரு புத்தகத்தின் சமர்ப்பணத்தில் 'என்னை மகனாக வளர்த்த இன்னொரு அம்மாவுக்கு'ன்னு சொல்லி இருக்கீங்க.

  மீ: அந்த அம்மாதான் என்னை வளர்த்தது. அப்பாவோட முதல் மனைவி. எங்க அப்பா முதல்ல ஒரு கல்யாணம் பண்ணிச்சு, குழந்தைகள் இல்லை. பிறகு ரெண்டாவது திருமணம். அதுதான் என் அம்மா. அதில் 13 குழந்தைகள். 9 பேர் இருக்கோம். நாலு பேர் இறந்திட்டாங்க. அந்த அம்மாவை பற்றிய விவரம் நான் 'உம்மா' என்ற ஒரு சிறு கதையில சொல்லியிருக்கேன். கிட்டத்தட்ட 12 வயது வரைக்கும் அவங்கதான் என் அம்மான்னு நினைச்சுட்டு இருந்தேன்.

  கே: உங்கள் அப்பா, அம்மா சொன்ன கதைகள் உங்கள் எழுத்தை, பாதிதித்திருக்கிறதா?

  மீ: கடலோரக் கிராமத்தின் கதைகளை முழுசா சொல்லித்தந்தது என் அப்பா. அவர் சொல்லும் போதே ஒரு படம் மனசுல கிடைக்கும். ஒரு அப்பாவும் பிள்ளைக்கும் உள்ள உறவைவிட அவரு ஒரு கதை சொல்பவராகவும் நாங்க அதை கேட்பவருமாகவும் இருந்து தினமும் கதை கேட்போம். கடலோரக் கிராமங்களை பத்தி, அப்பு சொன்னது, அவங்க குதிரைல போனது எல்லாம் என் மனசுல பதிஞ்சது. படத்தைப் பார்த்து வரைஞ்ச மாதிரி 'கடலோரக் கிராமத்தின் கதை' எழுதினேன். அப்பா சொன்ன கதையை அப்படியே உருவாக்கினதாலதான் அது வெற்றிகரமாய் அமைந்தது.

  கே: உங்களது ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு தொடர்ச்சி இருக்கும். கதாபாத்திரங்கள், அவங்களோட படிப்பின்மை, படிக்காததுனால ஏற்படும் மூட பழக்கங்கள். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் உங்களை பாதிச்சுதா.

  மீ: முதல்ல பள்ளிக்கூடத்துக்கு போனதும், படிச்சதும் எங்கள் தலைமுறைதான். எங்க அப்பா, அம்மால்லாம் படிக்காதவங்க. நான் ஒரு கதை எழுதினா அதை திருத்தி தர ஆள் கிடையாது. சொன்னா கேக்குறதுக்கு ஆள் கிடையாது. ஏன்னா இன்னும் அந்த உணர்வு அங்க போய்ச் சேரலை. இந்த படிப்பு நமக்கு தேவையில்லை. இது உலகக் கல்வி. நம்ம மறுமைகுல கல்விதான் படிக்கனுன்னு சொல்லி அரேபி படிக்க தெரியுமா. ஆண்டவனே என் வாயால, மலையாளம் பேச வைக்காதே. அரபிதான் நாம பேசனும். இப்ப, பிராமணன் சமஸ்கிருதம் பேசறாங்கனு சொல்லறோம் பாத்தீங்களா. இதே போல அன்னிக்கு முஸ்லீம்கள் எங்க வாயால அரபிதான் பேசுவோம்னாங்க. அந்த தலைமுறைக்கு கடைசி கன்னி நான்.

  அது என்னை பாதிச்சது. என்னை பள்ளிக்கூடத்துக்கு போகவிடாம, புத்தகம் வாங்கி கொடுக்காம, சிலேட் வாங்கி தராம பள்ளிக்கூடத்துக்கு கட்டணம் தராம என பல சங்கடங்கள். யாருக்குமே அதில் விருப்பமில்லை. கல்வி பற்றிய சிந்தனையே என் தந்தைக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி கிடையாது. இந்த சூழலில் இருந்துதான் நாங்க படிச்சோம். எங்க ஊருல அப்ப யாருமே எஸ்.எஸ்.எல்.சி. பாசானது கிடையாது. நான் கூட எஸ்.எஸ்.எல்.சி. நாலு தடவை பெயில் ஆனேன். நான் எதிலே படிச்சேன்னு கூட என் அப்பாவுக்கு தெரியாது. அவர் பள்ளிக்கு கல்லூரிக்கு வந்தது கிடையாது. நாங்களே சுய முயற்சியிலேயே போய் சேர்ந்தோம். அப்ப, ரெண்டு ரூபா ஒரு ரூபான்னு கட்டணம் உண்டு. அபராதத்தோடதான் எப்பவும் பீஸ் கட்டறது. காசு தரவே மாட்டார் அப்பா. நீ படிக்கவேண்டா நா பணம் தரமாட்டேன்னு சொல்வார். பின்ன நான், மண்ணு சுமந்து தாரேன் கல்லு சுமந்து தாரேன் அப்படினு வேலை செய்து கொடுக்கும் போது பிப்ரவரி மாச பணத்தை ஜூன் மாசம் தருவாரு. அதுகூட படிக்கனும்கிற வெறித்தாக்கத்தினால படிக்கலை. எனக்கு உள்ளே இருந்து ஒன்று படிக்கச் சொல்லி தூண்டிச்சு. நாங்க படிச்ச நேரத்தில ஆசிரியர்கள் எங்களை ரொம்பவும் கவர்ந்தாங்க. பாடங்கள் கவிதைகள் எல்லாம் சொல்ற நேரத்துல, அவங்க பாடக்கூடிய இனிமையில சொக்கி போயிருவேன். அவங்க சிலநேரம் கதைகள், நாவல்கள் பற்றி கதையா சொல்வாங்க. நமக்கு தோணும் தகழி சிவ சங்கர பிள்ளை போல ஆகனும்னு.

  இதுக்குப் பின் நான் கல்லூரிக்குப் போறேன். பி.ஏ. மலையாள இலக்கியம் படிச்சேன். அப்ப நான் கல்லூரிக்கு போனது வாசிக்கத்தான். கல்லூரியில் இருந்த எல்லா மலையாள புஸ்தகங்களையும் படிச்சேன். என்னை லைப்ரரி உள்ளே விட்டுடுவாங்க. மத்த மாணவர்களை உள்ளேவிட மாட்டாங்க.

  ஒரு ஆசிரியருக்கு என்ன சலுகை இருந்ததோ அத்தனையும் எனக்கு இருந்தது. நான் விரும்பின புஸ்தகத்தை எடுத்துட்டு வரலாம். இது என்னோட வாசிப்புக்கு ரொம்ப உதவியா இருந்தது.

  கே: கல்வி என்கிற விஷயம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்னு நினைக்கிறீங்களா?

  மீ: கல்வி இருப்பதினால, நிறைய விஷயங்களை நாம் ஒப்பிட்டு பார்க்கிறோம். நம்ம ஊருல ஒரு விஷயம் நடக்குது. கிழவெண்மணியில், கையூரில என்ன நடந்தது என சுட்டிக்காட்ட முடியுது. பீகாரில 75 பேரை சுட்டுக் கொன்னாங்க. பத்திரிகையும் கல்வியும் இருக்கிறதுதான் அந்த விஷயத்த தெரிஞ்சுக்க முடியுது. அதோட நம்ம சமூகத்தில என்ன நடக்குன்னு ஒப்பிட்டு பாக்க முடியுதில்ல.

  கே: போன தலைமுறையில இருந்த வாசிப்பு பழக்கம் இந்த தலைமுறைக்கு இல்ல. தொலைகாட்சி, இன்டர்நெட் மற்றும் பிற பொழுதுபோக்கு சாதனங்களால வாசிப்பு பழக்கம் குறைஞ்சிட்டு போறதா கருதப்படுகிறது. நீங்களே புத்தக வெளியீட்டாகவும் இருக்கீங்க. இது பற்றி என்ன நினைக்கிறீங்க?

  மீ: புஸ்தகம் வாங்குவது குறைஞ்சிடுச்சி என்கிறதில எனக்கு உடன்பாடு இல்லே. வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை ஏமாத்தறதுக்கு டி.வி.யை முன்னிறுத்துறாங்க. டி.வி. யாரை பாதிக்குதுன்னா சாதாரண வாசகர்களைத்தான். நமக்கெல்லாம் பெண் ரசிகைகள் கம்மி. சுந்தர ராமசாமியின் நாவல்களை பாதிக்காது. நீல பத்மநாபனோட பள்ளிகொண்ட புரத்தையோ, தலைமுறைகளையோ பாதிக்காது. அசோகமித்ரனோட `தண்ணீர்'ஐ பாதிக்காது. ஜெயமோகனோட `ரப்பர்'ஐ பாதிக்காது. பாலகுமாரனோட நாவல்களை பாதிக்கும். சிவசங்கரியை பாதிக்கும். ஒரு நல்ல வாசகனுக்கு, படிப்பதில் கிடைக்கும் இன்பம் டி.வி.யிலே கிடைக்காது. டால்ஸ்டாய் நாவலை படிக்கிற இன்பம் டி.வி.யிலே கிடைக்குமா?

  கே: ஆனால் ஒரு சிறந்த வாசகன் உருவாகும் சூழலை இது பாதிக்கலைன்னு நினைக்கிறீங்களா?

  மீ: மூணு பிரிவு இருக்கு. ஒன்னு வந்து வாசகன். ரெண்டு ரசிகன். மூணு சக்ருதையன். சக்ருதையன் ஒரு சமஸ்கிருத சொல். படைப்பாளிக்கு ஒத்த மனமுடையவர்களை சக்ருதையன்னு சொல்லலாம். ஒரே பாதையிலே ரெண்டு பேரும் போறாங்க. படைப்பிலே முதலில் மௌனங்கள் இருக்கு. இடைவெளிகள் இருக்கு. தேடல் இருக்கு. இந்த மௌனங்களை சப்தமாக்கிறான் சக்ருதையன். இந்த இடைவெளியை நிரப்பறான். தேடல் அவன் மனசில் உருவாகுது. சக்ருதையன் அவனா உருவாகிறான், அவன் பிறப்பால் கலைஞன். சக்ருதையன் என்ற கலைஞனும்ம படைப்பாளி என்ற கலைஞனும் எங்க சங்கமிக்கிறாங்களோ அங்கதான் படைப்பு நிறைவு பெறுது. அதுவரை ஒரு படைப்பு முழுமை அடையாது. மனசுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே பாலத்தை இவன்தான் கட்டறான். ஒரு படைப்புக்கு தேவை சகருதையன். வாசகனும், ரசிகனும் விற்பனைக்குத்தான் தேவை. இந்த சகருதையனை டி.வி. மற்றும் எந்த ஊடகத்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது.

  கே: உங்களை பாதிச்ச, எழுத தூண்டிய எழுத்துகள்னு யாரை சொல்ல விரும்புறீங்க?

  மீ: பஷீரின் படைப்புகளை படிச்சேன். அவரைபோல எழுதணும்னு அவரோட மொழி என்னை ஊக்கப்படுத்தியது. இப்ப உள்ள மலையாள இலக்கிய சூழலை பார்க்கும்போது தமிழ் சூழல் சிறப்பா இருப்பதாக எனக்குத் தோணுது. அங்க சிறுகதைகள் ரொம்ப மட்டமாகதான் இருக்கு. ஒரு சில நல்ல கதைகள் அப்பப்ப வருது. `வானப் பிரஸ்தம்' ஒரு உதாரணம். என்னைப் பொருத்தவரை ஜெயமோகன் ஒரு சிறந்த சிறுகதை எழுதுபவர். அவரை தென் இந்தியாவிலேயே சிறந்த எழுத்தாளர் என சொல்லுவேன். வண்ணதாசன் எழுத்து ரொம்ப நல்லா இருக்கு. சுந்தர ராமசாமியோட கதைகள் ஒரு சில நல்லா இருக்கு. நல்லா நகைச்சுவையா போகுது. `காலச்சுவடு'ல வெளிவந்த `இருக்கைகள்' ஒரு உதாரணம். நல்ல நாவல்னு சொல்லனும்னா சுந்தரராமசாமியோட `புளியமரத்தின் கதை' பிடிக்கும். `பள்ளிகொண்டபுரம்' எனக்குப் பிடிச்சது. ஜானகிராமனோட `அம்மா வந்தாள்'கிற கதை படிச்சேன். நல்லா இருக்கு. அப்புறம் பாவண்ணனோட `பாய்மரக்கப்பல்' ரொம்ப பிடிச்சது. இளைய தலைமுறை எழுத்தாளர்களைப் பத்தி சொல்லனும்னா இமயம் கதை படிச்சேன். ஒரு அஞ்சு ஆறு அத்தியாயம் படிச்சேன். வெறும் முற்போக்காத்தான் எனக்குப் படுது. சாவடியை பத்தி 18, 20 பக்கத்துல சொல்கிறார். தகவல் என்றும் கலையாகாது. இளைஞர்களில், தலித் இலக்கியத்தை எடுத்துக்கிட்டமின்னா, எடுத்த உடனே இது ஒப்பேறாத கேஸ்னு முத்திரை குத்தி மூடி வைக்க வேண்டியதுதான். இதனால் எல்லார் புத்தகங்களையும் வாசிக்க முடிவதில்லை. சில புஸ்தகங்களை வாசிப்பது பெரிய தண்டனை.

  கே: தமிழ் இலக்கிய Êசூழலில் நடைபெற்றுவரும் அரசியல் பற்றி...

  மீ:  மலையாள மக்கள் அளவுக்கு இங்கு மனங்கள் பக்குவபட்லை. படிப்பாளிகள் இருவர் மேடையிரே ஒருநாள் ஏசி பேசுவாங்க. மறுநாளே இருண்டுபேருமே ஒரு வீட்டிலே இருப்பாங்க. இது கேரளாவிலே. சுந்தர ராசாமியோட எனக்கு கருத்துவேறுபாடு இருக்கலாம். ஆனால் உறவுன்னு ஒன்னு இருக்கு. கருத்துக்கள் ஏன் உறவை பாதிக்குது. சிலர் சொல்வாங்க. நான் நாகர்கோவிலுக்கே வரமாட்டேன்னு. ஏன்னா அங்கே சுந்தர ராமசாமி இருக்கறார். இந்த மனோபாவம் மாறனும். நாம இவரை இன்னும் அங்கீகரிக்க காரணம் அவர் நம்ம மூத்த தலைமுறை. நான் முதல்ல படித்த இரண்டு புத்தகத்திலே அவர் புத்தகம் ஒன்று. எனக்கு பழைய காலத்து இலக்கியம் ஒன்னும் தெரியாது. புதுமைபித்தனோடத இன்னும் படிக்கவில்லை. பாரதியாரோடது கேட்டதோட சரி.

  கே: உங்களுடைய நாவல்கள் உங்கள் இளம் வயதிலேயே எழுதி வைக்கப்பட்டதுதான் என்று சொல்லப்படுகிறது?

  மீ: என்னுடைய மூன்று நாவல்கள் முன்னமே எழுதிவைச்சதுதான். `சாய்வு நாற்காலி'தான் கடைசியா வந்தது. `கூனன் தோப்பு' 1967-=-68-ல எழுதினது. 93-ல் தான் வெளியிட்டேன். இடையில் நான் எழுதாமலேயே இருந்தேன். எங்க அப்பா இறந்த பிறகு, ஊரிலே நிறைய பிரச்சனைகள் வந்தது. எங்க அப்பா சொன்ன அதே பிரச்சனைகள் திரும்ப வந்தது. அண்ணன் குடும்பத்தில் ஊர் விலக்கு போட்டாங்க. அப்ப கடலோர கிராமத்தின் கதை-ல வர விஷயங்கள் அதே தோரணையில் நடந்தது. எங்க அப்பா முன்பு நடந்ததாக சொன்ன பிரச்சனைகள் திரும்ப வரத்தானே செய்யுது என்று சொல்லிக்கிட்டு, எனக்கு டக்குனு ஸ்ட்ரைக் ஆகி `கடலோர கிராமத்தின் கதை' எழுதினேன். நம்ம நண்பர் ஒருத்தர் முஸ்லீம் முரசு பத்திரிகையிலே பொறுப்பேற்றார். அவர்கிட்ட அப்படியே போடனும்னு கன்டிசனோட கொடுத்தேன். ஆனா அதுவும் பத்து வருசம் வரை வெளியாகாமலேயே இருந்தது. அப்ப என் கண் முன்னே முஸ்லிம் வாசகர்கள் தான் இருந்தாங்க. மற்றவர்களை எனக்கு தெரியாது. எந்த படைப்பாளியையும் தெரியாது. தமிழ் எழுதுவதற்கு ஓடாது. நான் சொல்ல சொல்ல இன்னொரு ஆள் எழுதுவாரு. எழுதினத திருப்பி படிக்கலை. `கடலோர கிராமத்தின் கதை'-ல பிழைகள் வந்தது.

  இப்படியா `கடலோர கிராமத்தின் கதை' தொடரா வெளிவந்து பத்து வருசத்துக்கு பிறகு வெளியிட்டேன். முதல்ல யார் வெளியீடுவது வாங்குவது என்பது பற்றியல்லாம் நான் நினைச்சு பார்க்கல. அப்ப நான் ஒரு விளம்பரம் கொடுத்தேன். இப்படி `கடலோர கிராமத்தின் கதை'-னு ஒரு புத்தகம் வருது. யார்கெல்லாம் புத்தகம் வேணும்னு மட்டும் எழுதினா போதும். காசை புத்தகம் வாங்கி விட்டு கொடுத்தால் போதும். நாலே நாலு லட்டர்தான் புத்தகம் வேணும்னு வந்துச்சு. இந்த நாலு பேரை நம்பி புத்தகம் போடைரயானு சொல்லி போடாமலே விட்டுட்டேன். அப்புறம், 87=-88ல, 5,000 ரூபாய்க்கு புத்தகம் போட்டேன். அப்ப தொழில் நல்லா பண்ணிக்கிட்டு இருந்த ஒருத்தர் உதவி பண்ணுறேனு சொன்னார். அதனால அத நானே வெளியிட்டேன். ஆனால் வெளியிடுறதுக்கான சம்பிரதாயங்கள் எனக்குத் தெரியாது. அப்பத்தான் சுந்தர ராமசாமியை எனக்கு தெரிஞ்சுது. ஒரு ஜவுளிக் கடைக்காரர் தகழியோட புத்தகத்தை தமிழில் கொண்டு வந்திருக்கார்னு அறிஞ்சேன். என்னையும் அவருக்கு அறிமுகம் படுத்தி வைத்தாங்க. நானும் வெளியீட்டு விழாவுக்கு கூப்பிட்டேன். அவர் நம்மளை கண்டுக்கிடாம புத்தகம் கொடுத்தவுடனே அதுக்கான பைசாவை மட்டும் கொடுத்தார். ஏதோ சூழ்நிலையினாலே வரமுடியாதுன்னு சொன்னார். நானும் அதை கண்டுக்கிடலை. ஏனா எனக்கு அவரைப்பற்றி அதிகம் தெரியாது. நீலபத்மநாபனை வெளியீட்டுவிழாவுக்கு அழைத்தேன். அவரையும் அப்பதான் தெரியும். அந்த வெளியீட்டு விழா மேடையிலே 70 புத்தகம் வித்துச்சி. அதுக்கப்புறம் ஒரு புத்தகமும் விற்கலை. மேடையிலே தேங்காய் பட்டணத்தோட வரலாறைப் பற்றி யாரோ பேசினாதால, வரலாறுன்னு நினைச்சி நிறைய பேர் வாங்கினாங்க. மறுநாள் போட்டானுங்க சண்டை. தங்கள் புரோகிதர் வர்க்கத்தை ரொம்ப புனிதமா நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. அத நான் தோலுரிச்சி காண்பிச்சிட்டேன். ஊருக்குள்ள பயங்கர எதிர்ப்பு. புத்தகத்தை எரிக்கனும்னு சுடனும்னு அங்க பயங்கர கிளர்ச்சி. அப்ப அங்க இரு அரேபிய மதம் சார்ந்த புத்தக கடையில் அந்த புத்தகம் கொஞ்சம் விக்கறதுக்காக வைச்சிருந்தான். ஊருமக்கள் திரண்டுபோய் புத்தகத்தை விற்கவிடலை. புத்தகமெல்லாம் கட்டுக்கட்டாய் இருந்திச்சி. என்னசெய்யனும்னே எனக்கு தெரியல. உண்மையிலே தீ வைச்சி சுடனும்னுதான் நினைச்சேன். யாரோ ஒரு முஸ்லீம் பையன் ஒரு கேளரா பல்கலைக்கழகத்திலே கொண்டுபோய் இருக்கான். அதை அங்கே இருந்த யாரோ படிச்ச உடனே நல்லாயிருக்கேன்னு சொல்லி அதை பாடப்புத்தகமா ஆக்கிட்டான். பாடபுத்தகம் ஆக்கினது எனக்கு தெரியாது. அப்போ ஒரு ஆள், புத்தகம் வித்து தந்தாரே அந்த கல்லூரி பேராசிரியர் சொன்னாரு ``மீரான், நீங்க முஸ்லீம் யாருக்கும் கொடுக்க கூடாது''ன்னாரு. எப்படியும் புத்தகத்தை காலிபண்ணணும்னு சொல்லி எப்போதும் யாரை பார்த்தாலும் சும்மாவே தூக்கிகொடுக்கிறது. என் பெஞ்சாதியோட சொந்தகாரங்களுக்கு ஒன்னு ஒன்னு. சனியன் காலியாகட்டும்னு நினைச்சேன். அவர் சொன்னாரு இந்த புத்தகங்களை பூராம் முஸ்லீம் அல்லாதோருக்கு கொடுக்கனும்னு. கொஞ்சம் விலாசம் வாங்கி எல்லாருக்கும் இலவசமாய் 400 புத்தகங்களை அனுப்பினேன். வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி யாரையும் எனக்கு தெரியாது. ஆனால் அவங்களுக்கெல்லாம் இலவசமாய் அனுப்பினேன். அது போய் உடனே `கிளிக்' ஆகிடுச்சி. `கலை இலக்கியப் பெருமன்றம்' அவார்டு கொடுத்தாங்க. அப்பதான் உணர்ந்தேன். என் புத்தகத்துக்குள்ளே ஏதோ விஷயம் இருக்குன்னு. கேரள பல்கலைக்கழகத்திற்கும், பாரதி பல்கலைக்கழகத்திற்கும் 16, 16 என 32 புத்தகத்தை அனுப்பிவிட்டேன்.

  அப்ப சிலர் என்ன பிரச்சாரம் செய்தாங்கன்னா `தங்களை' பற்றி எழுதினதாலதான் மத்தவங்க இதை தூக்கினாங்க. ``எனக்கு கடவுள் பக்தி உண்டு. ஆனால் அதை நிறுவனமா ஏத்துக்கமாட்டேன். ஒரு நாளைக்கு ஐந்துமுறை தொழுகை பண்ணுவேன். குரான்ல சொன்னதையும் நபிகள் சொன்னதையும் நான் எதிர்க்கமாட்டேன். மாற்றும் சொல்லமாட்டேன். சமுதாயத்தை மட்டும் விமர்சனம் பண்ணுவேன். இஸ்லாம் ஒரு நிறுவனம் அல்ல. மார்க்ஸிசம்கிற கோட்பாடு எப்படி நிறுவனம் ஆச்சுதோ அப்படியே இஸ்லாமும் புரோகிதர்களால நிறுவனமாகி சிரழிஞ்சிடுச்சி.

  கே: நீங்கள் முறையாக பயின்றது மலையாளம்தான். வாசிப்பதும் தொடர்ந்து மலையாளம்தான். பின் ஏன் தமிழை எழுதுவதற்கு தேர்ந்து எடுத்தீங்க.

  மீ: நான் படிச்சது மலையாளம். தாய்மொழி தமிழ். வீட்டில் தமிழ்தான் பேசினேன். மலையாளம், முறையாக படித்தாலும் அது ஒரு அந்நிய மொழிதான். ஆனாலும் எல்லா நாவலும் முதலில் எழுதியது மலையாளத்தில்தான். மலையாளத்தில் எழுதிய பிறகு மலையாள நாவல்களாகவும் அது இல்லை. தமிழ் நாவலாகவும் இல்லை. நான் மலையாளத்தை இலக்கணத்தோட முறையாக படிச்சதுனால அது என்னை கட்டுப்படுத்திச்சி. அதை மீற என்னால முடியல. அதனால சில மக்களோட உணர்ச்சிகளை சொல்லாக மாற்ற மலையாளம் இடம் தரலை. பஷீருக்கு முடியும். தகழிக்கு முடியும். இல்ல வேற ஒருத்தருக்கும் முடியும். அது அவங்களோட தாய்மொழி. நான் சொல்லக்கூடிய விஷயம் முழுவதும் தமிழ் கலாச்சாரத்தோடதான் இருக்கு. ஆனால் தமிழனுக்கு அது மலையாள கலாச்சாரமாக தோணலாம், மலையாளிக்கு அது தமிழ் கலாச்சாரமாக தோணலாம். அதுரெண்டுங்கட்டான் கலாச்சாரம்.

  மலையாளத்தில் நான் என் மனசில என்ன நினைச்சிகிறேனோ அதை கொண்டுவர முடியலை. அப்பதான் தமிழ் நல்லா பேச தொடங்கினேன். எழுதுவதற்கு மூணு நாலுபேர் கிடைச்சாங்க எழுதிக்கிட்டிருக்கப்ப மக்களோட சொல்லை போடும் போதுதான், ஒரிஜினலான எபக்ட் கிடைச்சது. இது என்னோட தாய்மொழி. அந்த மக்கள் பயன்படுத்தக்கூடிய சொற்கள் எனக்கு மனப்பாடமா தெரியும். அதனால நமக்கு தமிழ் மொழிதான்னு முடிவு பண்ணினேன். நம்ம தாய்மொழியில் எழுதினால்தான் மொழி நம்ம பின்னால் வரும். மலையாளத்தில் எழுதினால் மொழிக்கு பின்னால நாம ஓட வேண்டியிருக்கு. படைப்பாளி எப்போதுமே மொழிக்கு பின்னாடியே ஓடக்கூடாது. இவன் பின்னால மொழி வரனும். அது எந்த சட்டதிட்டத்திற்கும் உட்பட்ட மொழியாக இருந்தால் பல தடங்கல் ஏற்படும். அதனால இவனுக்கே உரிய மொழியில எழுதனும். நான் மொழியை கடந்து நிற்க காரணம் தமிழோட சட்ட திட்டங்கள் தெரியாது. தெரியாததுனால என்னால மீற முடியும்.

  கி. இராஜநாராயனனோட ஒரு ப்ளஸ் பாயிண்ட் கலைத் தன்மையை விட அவரோட சொற்கள். எப்பவுமே எந்த சொற்கள் மக்களிடையே உணர்ச்சிளை வெளிப்படுத்துமோ அந்த சொற்களை அதேபடி இலக்கியத்தில் கொண்டு வருவோமேயானால் மனசில பல அதிர்வுகளை ஏற்படுத்த இயலும். எந்தசொற்கள், அதிர்வுகளை ஏற்படுத்தலையோ அது கரையேறாது. உதாரணத்திற்கு, தினமும் நம்ம காகத்தை பார்க்கிறோம். அது ஒரு அழகான பொருள் பார்க்கிறோம். அது ஒரு அழகான பொருள் அல்ல. அது ஒரு அருவருப்பான பொருள் இல்ல. யாராவது காக்கையை அப்படியே பார்த்துகிட்டேவா இருப்போம். இல்லை. இந்த காக்கை, ஒரு கலைஞன் வரைவானேயானால் கொஞ்ச நேரம் பார்க்கலாம். என்னன்னா ஏதோ ஒரு இது நம்ம மனசுல வீணை கம்பியை தட்டுது. நான் ஹைதராபாத் மீயூசியம் போனேன். அங்கே ஆர்ட் மீயூசியம் ஹேலரியில ஒரு படம் இருக்கு. `மெர்சென்ட் ஆப் வெனிஸ்'ல வர வெனிஸ் நகர தெருவை வரைஞ்சி வச்சிருக்காங்க. உண்மையில நான் அப்படியே நின்னுட்டேன். என்னை பிறகு இழுத்துதான் கொண்டு வந்தான் அந்த கைடு பிரமிச்சு போனேன். நான் ஏதோ ஒரு வெனிஸ் நகரத்து தெருவிலே நிற்கிறது போல உணர்ந்தேன். இது எப்படி ஏற்பட்டது. காரணம் என்னன்னா கண்ணுக்கு புலப்படாத, மனசுக்கு சிந்தனைக்கு எட்டாத ஏதோ ஒரு தன்மை நம்மை அதோட இழைக்குது. அது வந்து ஓவியம் மூலம், இசை மூலம், சொற்கள் மூலம். இயற்கையில் பலப்பல வண்ணங்கள் இணைந்து இருப்பது போல, சொற்களால் கோர்வைன்னு ஒன்று இருக்கு. இது தானாக விழனும். விலங்கிடாத மொழியா இருக்கனும். எல்லார்கிட்டேயும் என்ன சொல்வேனா, மீரானுக்கு மொழினா அதை விட்டுறனும். அதுல இலக்கணம் பார்க்காதீங்க. மரபு பார்க்காதீங்க. சொல் பாக்காதீங்க. தமிழானு பாக்காதீங்க. இது மீரானோட மொழி. இது இப்படித்தான் இருக்கும்னு நெனச்சிட்டு படிங்க அதான் நல்லது.

கே: எழுதுவதற்கான மனநிலை உங்களுக்கு எப்படி உருவாகுது?

  மீ: எனக்கு எப்ப எழுதனும்னு தோணுதோ அப்ப எழுதுவேன். எனக்கு ஒரு கட்டாயம் ஏற்படும். அதற்கப்புறம்தான் எழுதனும்னு தோணும். எனக்கு எழுதுவதற்காக திட்டம் இருக்கு. ஆனா அதை எப்ப எழுதனும் எப்படி எழுதனும் என்பது நேரத்திற்கு ஏற்ப மாறும். நான் ஒரு புதிய முறையில் எழுதலாம்னு திட்டமிட்டிருக்கேன். ஆனா அதுல எப்படி வெற்றி பெறப்போறேன் தெரியலை. இதுவரை சொல்லாத பாணியில ஒரு கதையை சொல்லனும். என் வாழ்க்கையோட முதல் பகுதியை மையமா வைச்சு எழுதலாம்னு இருக்கேன். சுயசரிதமாக அல்ல. நம் சுயசரிதை கதையாகாது என் சுயசரிதையை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒருத்தருடைய வாழ்க்கை கதையாகாது. சமூகத்தோட சில விஷயங்களை உள்வாங்கனும். அதை நம்மளா மாத்தனும். அதோட நம்ம அனுபவங்களையும் கலக்கனும். திரும்ப அதை வெளிப்படுத்தும்போது, அது வேற ஒண்ணா வெளி வருது. அந்த வேற ஒண்ணுதான் கதை. நான் கக்கூஸ் போறது, ஒண்ணுக்கு அடிக்கிறது நான் சோறு திங்காததில்ல கதையே இல்லை. இதிலே தேர்வுனு ஒன்று இருக்கு. எனக்கு வாழ்க்கைல நீண்ட அனுபவம் இருக்கு. அதையெல்லாம் கலையா ஆக்க முடியுமா. உங்களை பார்த்து நான் எழுதுவது, என்னை பார்த்து நீங்க எழுதுறது, உங்களைப் பார்த்து அவர் எழுதுறது. இவங்களையெல்லாம் படைப்பாளின்னு எப்படி சொல்ல முடியும்.

  கே: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நீங்க. அதன் செயல்பாடுகள் பத்தி என்ன சொல்ல விரும்புறீங்க.

  மீ: சாகித்ய அகாடமி, விருது தேர்வில் வெளியீட்டாளர்கள் தலையீடு ஜாஸ்தி. சிலர் சபலங்களுக்கு உட்பட்டு போறாங்க. அதுக்கு கூட படைப்பாளிகள் காரணம் அல்ல. வெளியீட்டாளரோட வணிக நோக்கம், அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைச்சதுனா, என்ன இவனுக்கு 2000 புஸ்தகம் அதிகமா விக்கும். அந்த ஒரே நோக்கத்துக்காக படைப்பாளியும் பல நேரங்களில் பல செயல்களிலும் உட்படறாங்க. இதனால் வெளியீட்டாளர்கள் தலையீட்டை தடுக்கனும். ஏன்னா நல்ல படைப்புக்கு அங்கீகாரம் கிடக்க இவன் தடையா இருக்கான்.

  கேரள, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் மாநில சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுது. தமிழ்நாட்டுல கேட்டா தமிழ் வளர்ச்சி கழகம் இருக்கும்பாங்க. இப்பொழுது தமிழ் சாகித்ய அகாதமின்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க. அங்க என்னடானா பழம் தமிழன்மார், புழுத்து, பழுத்து கிடக்காங்க. தமிழுக்கு சம்மந்தமில்லாத மி.கி.ஷி. அதிகாரியை கொண்டு போயி உட்கார வைச்சிருக்கான். நல்ல படைப்புகள் வெளி வரலை. நல்ல பல படைப்புகள் அச்சில இருக்கு. அச்சுக்குள்ளேயே இருக்கு. நிறைய எண்ணம் விற்பனை ஆகாம இருக்கு. புரபஸரை மாதிரி பழைய பாட்டம் பாடிக்கிட்டு நிறைய பேர் இருக்காங்க. நவீன இலக்கியம் பத்தி கண்ணை திறந்து கூட பார்க்கறதில்லை. போ வருஷம் யாருக்கு சாகித்ய அகாடமி கிடைச்சதுனா அவனுக்கு தெரியாது. இந்தாளை எப்படி நாம சாகித்ய அகாடமி தலைவரா ஆக்க முடியும். சாகித்ய அகாடமி தலைவர் ஆகனும்னா பல தகுதிகளை எதிர் பார்க்கிறாங்க. அது இங்க நிறைய பேருக்கு இல்லவே இல்லை.

நன்றி: தீராநதி.

Apr 30, 2010

தோப்பில் முகம்மது மீரான்-வெங்கட் சாமினாதன்

 

வெங்கட் சாமினாதன்

தமிழ் நாட்டின் தென் கோடியில் ஒன்றுக்கொன்று அதிக தூரத்தில் இல்லாத இரண்டு சிறிய கிராமங்களில் இரண்டு சம்பவங்கள் நிகழ்கின்றன. இவ்வளவு நாட்களின் தூரத்தில் நின்று பார்க்கும் போது அவற்றின் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று சமீபத்து நிகழ்வுகள் என்று தான் சொல்லவேண்டும். இரண்டும் முரண்பட்டவை. இரண்டு வேறுபட்ட முகங்களைக் காட்டும் நிகழ்வுகள். இவ்விரண்டையும் ஒன்றாக்கிப் பார்க்கச் thoppil செய்வது இந்த முரண் நகை தான். ஒன்று, மீனாக்ஷ¢புரம் என்ற கிராமத்தின்  பிற்படுத்தப்பட்ட, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட அந்த கிராம மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த மாக முஸ்லீம் மதத்திற்கு மாறியது. ஹிந்து மதத்தில் அவர்களுக்கு தரப்படாத சமூக நீதி, இழைக்கப்பட்ட தீண்டாமை இவற்றிலிருந்து இஸ்லாம் விடுதலை அளிக்கும், இங்கு அவர்கள் எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று சொல்லி மதம் மாற்றப்பட்ட நிகழ்வு. இந்த நிகழ்வு தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் பத்திரிகைகளிலும் மற்ற மேடைகளிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இப்போது எத்தனையோ வருடங்கள், கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக் காலம் கடந்து விட்டது. அவர்களுக்கு வாக்குறுதி தரப்பட்ட சமத்துவமும், சமநீதியும் அந்த ஏழை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கபட்ட மக்களுக்கு கிடைத்துள்ளதா, மற்ற முஸ்லீம்களுடன் அவர்கள் சமமாக கருதப்படுகிறார்களா, வாழ்கிறார்களா என்பது தெரியாது. விசாரித்து அறியப்பட வேண்டிய விஷயம் இது.

இதை ஒட்டி நடந்த இன்னொரு சம்பவம், ஒரு விதத்தில் இதுவும் மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் சம்பவம், ஒரு இலக்கிய நிகழ்ச்சி. ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை என்னும் தலைப்பில் வந்த தோப்பில் முகம்மது மீரானின் நாவல். அந்த கடலோரத்து கிராமத்தின் பெயர் தேங்காய்ப் பட்டினம். மீனாட்சிபுரத்திலிருந்து அப்படி ஒன்றும் அதிக தூரத்தில் இல்லை அது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்களே பெரும்பான்மையாக வாழும் கிராமம். இந்த நாவல் வெளிவந்தது 1988-ம் வருடம். அதன் பிறகு தேங்காய்ப்பட்டினம் என்ற தான் பிறந்த சொந்த கிராமத்தை இன்றைய தமிழ் இலக்கியத்தில் தேங்காய்ப்பட்டினம் மிகவும் அறியப்பட்ட, புகழ்பெற்ற கிராமமாக ஆக்கிவிட்டார் தோப்பில் முகம்மது மீரான். ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளினைப் போல, கா·ப்காவின் ப்ராக் போல, ஏன் இன்னும் அருகே ஆர்.கே நாராயணின் மால்குடி போல, தேங்காய்ப் பட்டினம் தமிழ் இலக்கியத்தில் தானும் இடம் பெற்றுவிட்டது இந்த கிராமம். கிட்டத்தட்ட ஒரு மூன்று தலைமுறைக்கு அந்த கிராமத்தில் வாழ்ந்த மனிதர்கள் பலரை, அந்த கிராமத்தின் சந்து பொந்துகள், மசூதி, இன்னும் பல் முக்கிய இடங்கள் எல்லாம் தமிழ் வாசகர்களுக்குத் தெரியும்.

இந்த கிராமத்தில் வாழும் முஸ்லீம் மக்கள் தாங்கள் அசலான அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக்கும் என்பதில் பெருமை கொள்பவர்கள். "ஏன் பெருமைப்படமட்டோம்?. நாங்கள் என்ன மற்றவர்கள் போல ஹிந்துவாக இருந்த மதம் மாறியவர்கvenkat_swaminathanளா என்ன? எங்கள் முன்னோர்கள் சௌதி அரேபியாவிலிருந்து வந்து இங்கு குடியேறிவர்கள் அல்லவா? அது இன்று நேற்று நடந்த விஷயமா என்ன? அதற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் சரித்திரமும் உண்டு, அது 9- நூற்றாண்டிலிருந்து தொடங்கும் சரித்திரமாக்கும்" இன்றும் அந்த பிரக்ஞையுடன் தான் வாழ்கிறார்கள். அவர்கள் ஒரு மாதிரியான மலையாளமும் தமிழும் கலந்த, நிறைய அரபுச் சொற்கள் தூவிய மொழி பேசுகிறார்கள். இது தான் மீரானின் நாவல்கள் பேசும் மொழியுமாகும். மீரானின் முதல் நாவல் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில் வாழ்ந்த தன் கிராமத்து மக்களின் வாழ்க்கையைச் சொல்கிறது. இந்த வாழ்க்கையும் மனிதர்களும், மீரான் தன் பெற்றோர்கள், குடும்பத்து முதியோர்களிடமிருந்து கேட்டறிந்தது. அந்த வாழ்க்கை, வெளிஉலகை ஒதுக்கிய, தமக்குள் சுருண்டு கொண்ட வாழ்க்கை. தங்கள் கிராமத்து, அல்லது அந்த பக்கத்து முஸ்லீம் மத குருமார்கள் சொல்படி தான் அனேகமாக வாழ்க்கை முழுதையும் அமைத்துக் கொண்டவர்கள். அரபு மொழி தவிர வேறு மொழி கற்பதோ, மதரஸாவை விட்டு வேறு எந்த கல்வியையும் கற்பதோ, பத்திரிகைகள் படிப்பதோ, வகுப்பின் கரும்பலகையில் அரபு மொழியும் குரானும் தவிர வேறு மலையாளம் அல்லது தமிழ் மொழிகளில் எழுதுவதோ கற்பதோ, தலையை மொட்டை அடித்துக் கொள்ளாதிருப்பதோ, இப்படி யான கூடும் கூடாதுகளின் பட்டியல் மிக நீண்டு செல்லும் - இந்த எல்லா 'கூடாது' களும் ஹராம் தான். அதாவது முஸ்லீம் மதத்தில் பகிஷ்கரிக்கப்பட்டவை. அங்கு வாழும் முஸ்லீம் மக்களின் அடி மனதிலேயே இந்த 'கூடாது' கள் எல்லாம் கல்லில் செதுக்கப்பட்டது போல பொறிக்கப்பட்டுள்ளவை. ஜின்னா என்று ஒருவர் பெயரை அவர்கள் அறிவார்கள். ஆனால் அவர் ஒரு 'கா·பிர்' தான். ஏனெனில் அவர் அணிவது மேல்நாட்டு உடைகளை அல்லவா? பேசுவது ஆங்கிலம் அல்லவா? தலையில் கிராப் அல்லவா வைத்துக்கொண்டிருக்கிறார்? அவர் மசூதிக்கு தொழுகைக்கும் போவதில்லை, நமாஸ¥ம் படிப்பதில்லை என்பதை அவர்கள் அறிவார்களா இல்லையா என்பதை மீரான் சொல்லவில்லை.

மீரானின் துறைமுகம் என்னும் இரண்டாவது நாவல் 1940களில் அம்மக்களது வாழ்க்கையைச் சொல்கிறது. இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு. இதில் ஏழை மீனவமக்கள் தூத்துக்குடி நகரத்திலிருக்கும் இடைத் தரகர்களின் பிடியில் வதைபடும் வாழ்க்கையச் சுற்றி எழுதியிருக்கிறார் மீரான். தூத்துக்குடி இடைத்தரகர்களுக்கும் மேலே இலங்கையிலிருக்கும் மொத்த வியாபாரிகள் எஜமானர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் முஸ்லீம்கள் தான். அந்த மொத்த வியாபாரிகள் இதே கிராமத்திலிருந்து சென்றவர்கள் தான். வியாபாரம் எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் வாய் வார்த்தைகளில்தான் நடைபெறுகிறது. . இலங்கையில் இருக்கும் பண முதலைகள் கிராமத்து மக்களின் மதிப்பையும் மரியாதையையும் மிகப் பெற்றவர்கள். காரணம் அந்த கிராமத்து மசூதிக்கு அவர்கள் நிறைய பணம் உதவி செய்கிறர்கள். அவர்கள் ஹஜ் யாத்திரை முடித்து கிராமத்துக்கு திரும்பும் போது பெரிய ஆரவாரத்தோடு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. கிராமத்து இளம் வாலிபர்கள் மகாத்மா காந்தியால் கவரப்பட்டு அவரது ஆதர்சத்தில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம் முஸ்லீம் மதத்திற்கு எதிரானதென கண்டனம் செய்யப்பட்டு, அதன் ஆசிரியர் கிராமத்திலிருந்தே விரட்டப்பட்டுவிடுகிறார். ஒரு நாயர் பள்ளிக்கூடத்தில் படிக்கச் செல்லும் மாணவனின் குடும்பம் ஜாதி பிரஷ்டம் செய்யப்படுகிறது. அந்தப் பையனின் பெற்றோரோ, கா·பிராகிவிட்ட தங்கள் பையன் காரணமாக தமக்கு நேர்ந்த சாபம் தான் இந்த ஜாதி பிரஷ்டம் என்று கருதுகிறது.

அந்த கிரமத்து ஹாஜி (முஸ்லீம் மத குரு) இப்போது ஜின்னாவை ஒரளவுக்கு ஒத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளார். முழுமையாக அல்ல முஸ்லீமகளின் தரப்பை வாதிட ஒருவர் வேண்டுமே. காந்திதான் ஹிந்துக்களின் தலைவராகிவிட்டார். அவருக்கு எதிராக முஸ்லீம்கள் ஒருவரை நிறுத்த வேண்டாமா? மத குருக்களும், பெருந்தனக்காரர்களும் ஒன்றும் அறியாத கபடமற்ற எளிய மக்களை தம் இஷ்டத்திற்கு பணிய வைத்துக் கொடுமைப்படுத்துவதில் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். அந்த எளிய மக்கள் மதத்தின் பேரால் சொல்லப்படும் எந்த கட்டளைக்கும் சுணங்காது, கேள்வி எழுப்பாது அடி பணியப் பழக்கப் படுத்தப் பட்டவர்கள். கிராமத்து மசூதியின் காப்பாளரான அஹ்மது கன்னு பெரும் பணக்காரர். அந்த கிராமத்துக்கு வருகை தந்துள்ள, தன்னை கடவுளின் தூதனாக கற்பிதம் செய்துகொள்ளும், ஒரு போலி மதகுருவை தன் வீட்டில் தங்க வைத்து உபசரணைகள் செய்கிறார். அவர் அந்த கிராமத்துக்குத் தப்பி ஓடி வந்துள்ள ஒரு பிசாசை பிடித்து ஒடு போத்தலுக்குள் அடைக்கவேண்டும் என்ற திட்டத்தோடு வந்துள்ளதாக செய்தி பரவவிட்டுள்ளார். கிராமத்து மக்களின் எந்த நோய் நொடியையும், துக்கத்தையும் போக்கிவிடுவார். அவர் தங்கியிருக்கும் இடம் சென்று கையில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரோடு சென்று வரிசையாக அவர் வருகைக்காக காத்திருப்பார்கள் ஜனங்கள். அவர் அந்தக் கிண்ணத்தில் துப்புவதே அவர் அவர்களை ஆசீர்வத்தித்ததாகும். அவர் துப்பிய நீரை அருந்தினால் அவர்கள் குறைகள் தீரும். அவர் அந்த கிராமத்தில் தங்கி இருக்கும் வரை கிராமத்து மக்கள் தம் குடும்பத்து இளம் பெண் ஒருத்தியை அவருடைய சுகத்திற்கு அனுப்பி வைத்தாலே தாங்கள் பெரும் பாக்கியம் செய்துள்ளதாக அம்மக்கள் நம்புகிறார்கள். அஹ்மது கன்னுவின் வீட்டுப் பெண் ஒருத்தியையே அனுப்பி வைக்கச் சொன்ன போது தான் அஹ்மது கன்னுவுக்கு கண்திறக்கிறது, இந்த ஆள் செய்து வந்துள்ளது ஒரு பெரும் மோசடி என்று.

கூனன் தோப்பு என்னும் நாவல் இரண்டு கிராமங்களிடையே நடந்த மதக்கலவரத்தைப் பற்றியது. ஒரு நதியின் எதிரும் புதிருமான கரைகளில் இரண்டு கிராமங்கள். இரண்டு கிராமங்களிலும் இரு வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். இரண்டு கிராமங்களிலும் அவரவருக்கு உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள். மதம் எதுவாக இருந்தாலும் சரி, எங்கும் காணப்படும், திருடர்கள், சண்டியர்கள், தம்மை ரோமியோக்களாக நினைத்துக் கொண்டு திரியும் வாலிபர்கள், நதியில் குளிக்கும் பெண்களைப் பார்த்துக் கண்ணடிக்கவே தாமும் குளிக்க வரும் காதலர்கள் கிட்டத்தட்ட ஒரே விகிதாசாரத்தில் இரண்டு கிராமங்களிலும் உண்டு. அத்தோடு கோழி திருடுபவர்களும் உண்டு. எல்லா கிராமங்களிலும் நடக்கும் இந்த கோழித்திருட்டுதான் இந்த இரண்டு கிராமங்களிடையே மதக்கலவரம் வெடிக்கவும் காரணமாகிறது. கோழி திருடியவன் ஒரு கிராமத்து முஸ்லீம். கோழி இன்னொரு கிராமத்து கிறிஸ்தவப் பெண் ஒருத்திக்குச் சொந்தமானது. அந்த கிறிஸ்தவப் பெண்ணுக்கு காதலன் ஒரு சண்டியர். அவன் தன் வீரத்தைக் காதலிக்குக் காட்டும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா? திருடிய எதிர் கிராமத்து முஸ்லீமை நன்றாக விளாசிவிட்டு வருகிறான். இது சாதாரண ஒரு கோழித்திருட்டை மிகச் சிக்கலான மதமோதலாக்கி விடுகிறது. பின் என்ன! இதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க முடியுமா? முஸ்லீம் சமூக கௌரவம் என்ன ஆவது? ஒருவருக்கொருவர் பதிலடி கொடுக்க சிக்கல் அதிகமாகிறது. காயம் பட்ட மத கௌரவம், தனி மனித குரோதம், பழி வாங்கல், நாங்கள் என்ன உங்களுக்கு சளைத்தவர்களா என்ற ஆவேச கொந்தளிப்புகள் எல்லாம் பூதாகாரமான மதக்கலவரமாகிறது. ஒரு ஹாஜி அவமானப்படுத்தப்பட்டால் சும்மா இருக்கமுடியுமா என்ன? அது மதத்திற்கே, கிராமத்திற்கே, அந்த சமூகத்திற்கே கேவலம் இல்லையா? இரண்டு கிராமங்களிலும் முடிவுறாது நீண்டு செல்லும் பகைமை, ரத்தம் சிந்த, வீடுகள் நாசமாக, ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதில் முனைப்பு கொள்கின்றனர்.

மீரானது நான்காவதும், இப்போதைக்கு கடைசியுமான நாவல் சாய்வு நாற்காலி ஒரு முஸ்லீம் குடும்பத்து இரண்டு நூற்றாண்டுக்கு நீளும் சரித்திரத்தை முன் வைக்கிறது. பாவுரீன் பிள்ளை என்னும் ஒரு முஸ்லீம் சிப்பாயின் வீர தீரச் செயல்களோடு தொடங்குகிறது. திருவாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவின் உயிரையும் அவரது ராஜ்யத்தையும் டச்சுக்காரகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய வீரச் செயலுக்கு மகாராஜ மகிழ்ச்சியடைந்து ஒரு கிராமம், ஒரு வாள் பின் அரண்மனை போன்ற ஒரு பெரிய வீடு, இத்தனையும் பரிசாக அளிக்கிறார். அந்த சிப்பாயின் சந்ததியார்களின் கதையைச் சொல்லி வரும் நாவல் கடைசியில் முஸ்தபா கன்னுவைச் சுற்றிய் நிகழ்வுகளை அதிகம் விஸ்தரிக்கிறது. முஸ்தபா கன்னு, அதிகம் முதல் நாவலின் அஹ்மது கன்னுவைப் போன்ற மனிதன். எல்லா விஷயங்களிலும். பண்டைக்கால பெருமை, கடந்து விட்ட பழங்காலத்திலேயே இன்னும் வாழ்வதான நினைப்புகள். குருட்டு நம்பிக்கைகள், இறுகி கெட்டித்துப் போன மதப் பிடிப்பு, தன் சுற்றியுள்ள சீரழியும் பண்டைச் சின்னங்களில் கர்வம் - எல்லாம். இந்த மாதிரியான பண்டைப் பெருமைகளில் வாழும், நிகழ்காலத்தைப் பற்றிய நினைப்பே இல்லாத மனிதர்களை, அந்த அவலத்தை சத்யஜித் ரேயின் ஜல்ஸாகர், ஆடூர் கோபாலகிருஷ்ணனின் எலிப்பத்தாயம் படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் சாதுக்கள். அப்பாவிகள். முஸ்தபா கண்ணு கொடுமை மிக்க முரடன். தன்னைச் சுற்றியிருக்கும் உறவினர்களையும் மற்றோரையும் அவன் படுத்தும் பாடு கொடூரம் நிறைந்தது. அவனைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை, சமூகம், காலத்தின் ஒரு புள்ளியில் உறைந்து போனது. நாறி அழுகி வருவது. தன்னுள் சுருங்கி, மூட மதப் பழக்கங்களில் இறுகிப் போனது. தன் குடும்பம், கிராமம், மத சமுதாயம் இதற்கு வெளியே உள்ள உலகைக் காண மறுப்பது.

மீரானின் எல்லா எழுத்துக்களிலும் பதிவாகியிருப்பது இருண்டு போன முஸ்லீம் மத அதிகாரத்தின் காலடியில் வதைபடும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை. பதிவாகியுள்ள காலம் மூன்று அல்லது அதற்கு மேற்கொண்ட தலைமுறைகள் வாழ்ந்த காலம். பழமையாகிப்போன மத அதிகாரம் மாறாதிருப்பதில் சுய நலம் காண்பது. அதே சமயம் மீரானின் நாவல்கள் அவர் அறிந்த மனிதர்களின் நினைவில் பதிந்து விட்ட முஸ்லீம் சமுதாயத்தின் வரலாற்றையும் கதையாக நமக்குச் சொல்கின்றன. தான் எந்த கட்டத்திலும் சம்பவங்களையோ மனிதர்களையோ கற்பனையாகச் சித்தரித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரவில்லை என்கிறார். தான் அறிந்த, கேட்ட வரலாற்றையும், சம்பவங்களையும் மனிதர்களையும் தான் தன் நாவல்களில் உலவவிட்டுள்ளதாகச் சொல்கிறார். இது மிகவும் வரவேற்கத்தக்க சுய விமர்சனமாகும். அவர் எதையும் மறைக்கவில்லை. பூசி மெழுகவில்லை. ஒரு சுயவிமர்சனமாக அவர் எழுத்து கூர்மையானது. மன்னிப்புகளும் சமாதானங்களும் இல்லாதது. ஒன்றைச் சொல்ல வேண்டும். இத்தகைய, பக்ஷபாதமற்ற சுயமதிப்பீடு, சுய விமர்சனம், இன்றைய தமிழ் எழுத்தில் காணப்படாத்து. இன்றைய தமிழ் ஹிந்து சமூகத்தில் காணும் ஆயிரம் ஆயிரம் சாதிப் பிரிவினைகளும், அது விளைவிக்கும் சாதிப் பூசல்களும், சுய சாதிப் பெருமைகளும், சாதி வெறியும், தன் சாதி அடையாளங்களைப் பாதுகாக்கும் உற்சாகமும், அதே சமயம் மற்ற சாதியினருடன் எந்த சமத்துவத்தையும் விரும்பாத சகிப்பின்மையும், சுய விமர்சனத்திற்கும் சுய மதிப்பீடுகளுக்கும் ஒரு வளம் நிறைந்த களமாகும். ஆனால், சமூக நீதி பேசும் தலைமைகள், சாதி ஒழிப்பு பற்றி பேசும் தலைமைகள் சுய விமர்சனத்தைப்பற்றியே சிந்திக்காதவை.

இன்றைய தமிழ் நாட்டின் ஹிந்து சமுதாயத்தின் சாதிகள் தம்மிடையேயிருந்து ஒரு மீரான் போன்ற எழுத்தாளர், தம் சமூக, சாதி சித்திரத்தை பக்ஷபாதமின்றி பதிவு செய்யும் ஒரு எழுத்தாளர் எழுவதை சற்றேனும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படி ஒரு சமூக விமர்சனம் பிராமணர்களைச் சாடுவதற்கு எல்லோருக்கும் நிறைந்த சுதந்திரமும் வரவேற்பும் உண்டு. ஆனால் யாரும் மற்ற சாதியனரைப் பற்றி ஏதும் சொல்லிவிட முடியாது. சொல்லித் தப்பிவிடவும் முடியாது. சாதி ஒழிப்பும், அந்த கோஷத்தில் சாதி விமர்சனமும் ஒரே ஒரு சாதிக்கு எதிராகத் தான், பிராமணர்களுக்கு எதிராகத்தான் எழுத அனுமதி உண்டு. தப்பித் தவறி ஒரு சின்ன குறிப்பு வெளிவந்துவிட்டால், அந்த எழுத்தாளன் அத்தோடு தொலைந்தான். பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் குமுதம் பத்திரிகையில் சுஜாதா எழுதி வந்த சரித்திரத் தொடர்கதையில் தேவரோ நாயக்கரோ ஒரு பாத்திரத்தின் குணசித்திரம் அந்த ஜாதியினருக்கு விரும்பும் வகையில் இல்லை. அந்த ஜாதியில் எல்லோரும் என்ன சொக்கத் தங்கங்களா? ஒரே புனித வார்ப்பா? எல்லா குணச்சித்திரங்களும் எல்லா சாதி மனிதர்களிலும் இருக்கத் தானே செய்யும். ஒரு சரித்திரக் கதையில் அந்த சாதிக்காரன் கொஞ்சம் மாற்றுக் குறைந்து விடக்கூடாது. குமுதம் பத்திரிகை இதழ்கள் ஆங்காங்கே குவித்து எரிக்கப்பட்டன. குமுதம் பத்திரிகை அலுவலகம் சூறையாடப்பட்டது. கலவரங்கள், கண்டன ஊர்வலங்கள் இத்யாதி, இத்யாதி. கடைசியில் குமுதம் நிர்வாகிகள் மன்னிப்புக் கேட்டனர். அந்த தொடரும் உடன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சுஜாதா தன் பாடத்தைக் கற்றுக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பின் அவர் மிக நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பதில் முனைப்பாயிருக்கிறார். இது போன்ற எந்த வம்புக்கும் போவதில்லை.

ஆனால், எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் வெளிவரத்தொடங்கிய தலித் எழுத்துக்களில் தான் தலித் சமூகம் தன் சமூகத்தில் உள்ள பிளவுகளையும் தன் தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்குள்ளேயே கூட நிலவும் சாதிப்பிரிவுகளையும் வீண் சாதி வெறியையும் வெளிப்படையாக முன் வைக்கப்படுவதைக் காண்கிறோம். இந்த சுய எள்ளல்கள், விமர்சனங்கள் பிரசுரமாகின்றன. தலித் சமூகத்தினர் எவரும் இதற்குக் கண்டனக் குரல் எழுப்பவில்லை. வீட்டுக்குள் இருக்கும் அழுக்கை ஏன் வெளியில் மற்றோர் பார்க்கக் கொட்டுகிறாய் என்று எந்த தலித்தும் சீறவில்லை. ஆனால் தலித் இலக்கியம் எப்படி எழுதப்படவேண்டும், என்று சித்தாந்தக் கட்டுமானம் தரும் சித்தாந்திகள் தான் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள். அவர்கள் கட்டமைத்துள்ள சித்தாந்த விதி, தலித்துகளை வெறி கொண்டு தாக்குவது நாயக்கர்களும், தேவர்களுமானாலும், தலித் இலக்கியம் பிராமணர்களைத் தான் தம் எதிர்ப்புக்கு இலக்காக்க வேண்டும். தம்மையே சுய விமர்சனம் செய்து கொள்வது தம்மக்களையே காட்டிக் கொடுப்பதாகும் என்று சித்தாந்திகள் சொல்கின்றனர்.

இத்தகைய பின்னணியில் சில உண்மை விவரங்களைச் சொல்லலாம். மீரானின் முதல் நாவல், ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை தொடராக பிரசுரமானது, அவர் வட்டாரத்து முஸ்லீம் சமுதாயத்து பத்திரிகயான முஸ்லீம் முரசுவில். அப்போது அதை யாரும் வெளியில் கவனித்ததாகத் தெரியவில்லை. 1988-ல் அது புத்தகமாக வெளிவந்த பிறகு தான் அது ஒரு வணிக வெற்றியாயிற்று. அதுவும் பெரும் அளவில். அத்தோடு இலக்கிய அங்கீகாரமும் அதற்குக் கிடைத்தது. சாகித்ய அகாடமி பரிசு, நேஷனல் புக் டிரஸ்டின் எல்லா இந்திய் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் ஆதான் பிரதான் திட்டத்தில் அவரது இன்னொரு நாவல் சேர்க்கப்பட்டது. வணிக வெற்றியும் சரி, இலக்கிய அங்கீகாரமும் சரி, மீரானை அவர் சமூகத்தில் ஒரு புகழ் பெற்ற நபராக்கியுள்ளது. இவையெல்லாம் மீரானுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்துள்ளன. இவ்வளவு வணிக வெற்றியும் இலக்கிய புகழும் முன்னுதாரணமற்றவை.

சல்மான் ரஷ்டிக்கும், தஸ்லீமா நஸ்ரீனுக்கும், தில்லி ஜாமியா மிலியாவில் ஒரு முஸ்லீம் சரித்திரப் பேராசிரியருக்கும், சீக்கிய வரலாறு பற்றி எழுதிய ஆராய்ச்சிக்காக ஒரு சீக்கிய பேராசிரியருக்கும் என்ன கொடுமைகள், கண்டனங்கள், இழைக்கப்பட்டன என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ளலாம். ஒரு மிரட்டலில் நம்மூர் சுஜாதா பணிந்து விட்டார். நம்மூர் சமூக நீதிக்காரர்களின், சாதி ஒழிப்பாளரின் இரட்டை நாக்கும், இரட்டை நீதியும் இன்றும் செல்லுபடியாகின்றன, கவர்ச்சிகரமான கோஷங்களில்.

அதே சமயம் சையத் ஷாஹ்புதீன்களும், ஒவைசிகளும், அப்துல்லா புகாரிகளும், பனத் வாலாக்களும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மீரான் நாவல்களைப் படிக்கக்கூடுமானால்.... என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. அதே சமயம் நம் மீரானே கூட வரலாற்றில் உறைந்து விட்ட சமாச்சாரங்களைத் தாண்டி, சம காலத்துக்கு வரலாம். அப்போது அவருக்கு நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பழைய சமாசாரங்களுக்கு பொறுமை காட்டி அவரைக் கீர்த்திமானாக்கிய சமுதாயம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். அவர் இப்போது எழுதுவதையே நிறுத்தி விட்டாற்போல் தோன்றுகிறது. ஆபத்துக்கள் பயமுறுத்துகின்றனவோ என்னவோ. ஹெச் ஜி. ரசூலுக்கு நடந்தது அவரை எச்சரிக்கையோடு இருக்கச் செய்திருக்கலாம். அதே சமயம் நாம் என்ன வாழ்ந்தோம் என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. வரலாற்று நிகழ்வுகளை மூடி மறைக்காது எழுதிய மீரான் சௌக்கியமாக திருநெல்வேலியில் வாழ்கிறார். முஸ்லீம் மக்களிடையே ஒரு கௌரவம் மிக்க பிரதிநிதியாக. அதே காரியத்தை மிகச் சின்ன அளவில் ஒரு வரலாற்றுத் தொடர்கதையின் ஒரு பாத்திரத்தின் சித்தரிப்பைக் கூட நம்மால் சகித்துக் கொள்ளமுடியவில்லையே. எந்த முஸ்லீம் கலவரக் கூட்டம் முஸ்லீம் முரசை சுற்றி வளைத்துக் கொண்டு அதன் அலுவலகத்தை சூறையாடியது?

11.4.07

Mar 1, 2010

காலத்தின் ஆவர்த்தனம் -தோப்பில்

தோப்பில் முகமது மீரான்

வீட்டிற்குள் ஒரு வாரமாக மவுனம் உறைந்து கொண்டிருந்தது. யார் முகத்திலும் களிப்பு இல்லை. நஜீபுக்கு இறுதி ஆண்டு பரீட்சைக்கு பணம் கட்டுவது எப்படி என்று கேள்வி தொங்கிய முகங்கள். 725 ரூபாய் கட்ட வேண்டுமென்று நஜீப் கல்லூரி விட்டு வந்து சொன்ன மாலையிலே மனம் இடிந்து உள்ளே விழுந்தது.

எப்படி திரட்டுவேன் இந்த பெரும் துகையை?

பணம் திரட்டும் முயற்சியில் தோல்வி கண்டு, ஒரு வாரமாக இரவுத் தூக்கமில்லேthoppil . காலையில் இறங்கிப் போய் எங்கெல்லாமோ பணம் கேட்டு அலைந்துவிட்டு வந்து உட்கார்ந்ததுதானுண்டு. வந்தேறிய கால் களாறக்கூட அவகாசம் கிடைக்கவில்லை. மனைவியின் பஞ்சரிப்பு. பஞ்சரிப்பு தாங்காமல் வீட்டிலிருந்து இறங்கி எப்போதும் சென்று கொண்டிருந்தேன். தலைக்குள் இழந்தவற்றைப் பற்றியத் துயரச் சிந்தனைகள் எப்போதும் போல.

மனைவியின் தொல்லை தாங்கி சற்று உட்கார முடியவில்லையே என்ற கவலை வேறு. நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். மீன் வாங்கிவர, மீன் பட்டுச் சொரியுதாம். ரொம்பவும் மலிவாம். மீன் தொட்டு கூட்டி ரொம்ப நாளாச்சாம். ரூபாய்க்கு இருபது சாளை மீனாம்!

இளம் உச்சி நேரம். வழக்கம் போல் எடுத்துக் கொள்ளும் குடையை எடுக்க வில்லை. வேண்டுமென்றே எடுக்காதது அல்ல. நச்சரிப்புத் தாங்காமல் பலதும் மறந்த கூட்டத்தில் குடையும் மறந்துவிட்டது. தப்பினால் போதுமென்று இறங்கிச் செல்லல்.

கடற்கரைக்குச் செல்லும் முடுக்கு திரும்பு கையில் பொது பொதுவென்று வாசனை அங்கு பொங்கியது. நின்று முகராமல் நகர மனம் விடவில்லை. எங்கு திரும்பினாலும் வெளிநாட்டு நறுமணத்தால் மூச்சு திணறிப் போகும் போலிருக்கிறது. இப்போதெல்லாம் இந்த மூச்சுத்திணறல் இப்பம் கொஞ்ச காலமாகத்தான், ஊரில் வேலை வாய்ப்பில்லா தவர்கள் கடல் கடந்த பிறகு. மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு வெளிநாட்டு சோப்பாவது, செண்டாவது யாராவது தரமாட்டார்களா என்ற ஏக்கத் திற்குப் பின் விலை கொடுத்து வாங்க முடியாத வறுமைச் சிந்தனை அவர்களுக்கு இல்லாமலில்லை.

''ஒரு போசியா சோப்பு தேச்சு குளிக்க ஆசையா இரிக்கி.''

மனைவி வேண்டும்போதெல்லாம் மவுனம் பதில்.

நச்சரிப்பில் மவுனம் உடைந்து உதிரும் சொற்கள் அவளை ஆறுதல் படுத்துவதற்கு போதுமானதல்ல.

''பொறு நம்மொ சொந்தக்கார புள்ளைய ஊருக்கு வந்தா தருவாங்கொ''

''உங்கெ மருமோனுக்கு ஒரு காயிதம் போடுங்கோ. ஆறு கட்டி சோப்புக்கும் கால் டஜன் ஸ்ப்ரேக்கும்.''

''வேறே''

''எனக்கு ஒரு ஹேர் டையும்.''

''ஆருக்கும் எதுவும் கேட்டு கடிதம் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை; பொறு மருமொவன் வந்தா தருவான்.''

என்னிடம் இருக்கும் எதையோ கேட்டு, நான் கொடுக்காதது போல முகத்தை வெட்டித் திருப்பிவிட்டாள். எதற்கும் மசிய மாட்டேன் என்று புரிந்து இப்போது கடிதம் எழுதச் சொல்லிப் பின்னி எடுக்காதது எனக்கு ஆறுதலாகவேயிருந்தது.

எவளாவது கண் சிமிட்ட வைக்கும் சேலை அணிந்து கொண்டாலோ, அவளுடைய ஆடையிலிருந்து வாசனை புறப்படுவதை முகர்ந்தாலோ, உதட்டுச் சாயத்தையோ, அய்ஷாடோவையோ கண்டாலோ, அந்தக் கணம் அவளுடைய தொண்டை கரகரக்கும்.

''எனக்கு ஒரு கூடப்பிறப்பு வெளிநாட்டிலெ இருந்தா...''

அவளுக்கு ஒரு உடன்பிறப்பு இல்லாத குறையை ஒவ்வொரு அசைவிலும் சொல்லிக் கேட்டு, கேட்டுக் காதே செவிடாகிவிட்டது.

இதையெல்லாம் செவியுறவும், செவியுறும் போதெல்லாம் மனசில் வியாபிக்கும் வேதனைகளை தாங்கி ஓர் ஊமைப் பிறவி யாக நடக்கவும் என்னை ஆட்கொள்ளச் செய்த பொருளாதார தகர்ச்சையை மறக்க முயன்றாலும் முடிவதில்லை. இந்த முடியாமை, வறுமையில் வாடுவோருக்கு ஓர் அதிகப் படியான தண்டனையல்லவா என்று தோன்றுவதுண்டு.

சென்று கொண்டிருந்த முடுக்கை ஒட்டிய வீடு, உறவினருடையது. அந்த வீட்டுக்காரர் குவைத்திலோ பஹ்ரைனிலோ? அந்த வீட்டுக்க பின்புறம் கிணறு. கிணற்று நீர் ஓடிச் செல்ல இடம் இல்லை. வீட்டு மதில் சுவரின் அடியில் கல் சூழன்று போன துளைவழியாக குளிக்கும் தண்ணீர் முடுக்கில் மலைப்பாம்பு போல் ஓடிக் கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரிலும் வாசமிருந்தது. அதை மிதித்துத் தான் நடக்க வேண்டும்.

தண்ணிரில் மிதிக்காமல் எப்படி போவது என்று யோசனையில் நிற்கும் போது, மதில் சுவரைத் தாண்டி தோளில் வந்து விழுந்தது, வெளிநாட்டு கெமி சோப்பின் பளபளப்பான மேலுறை ஒன்று. தண்ணீரில் விழவில்லை. எடுத்த உறையை ஆசை தாளாமல் முகரத் தோன்றியது.

மனைவி மக்கள் ஆசைப்பட்டதில் அர்த்த மில்லாமலில்லை. ஆசைகளையே நினைக்கக் கூட மறுக்கப்பட்டவன் என்ற உள்ளுணர் வுடன் நாளைய வயிற்றுக்கு வழி தேடும் தன்னையே இந்த வாசம் ஈர்க்குமென்றால்!

அந்தரங்க அறை இருட்டிலிருந்து ஒரு ஈர விரல் சுட்டித் தூண்டியதால் அந்த உறையை பெருங்காயப் பைக்குள் போட்டுக் கொண் டதும் அங்கு நிற்கவில்லை. மலைப்பாம்பின் மீது மிதித்து விடாமலிருக்க கால்விரல் ஊன்றி எப்படியோ நடந்து ஒரு வழியாக முடுக்கைக் கடக்க முடிந்தது. கடற்கரைக்கு செல்லும் வழியில் வைத்து உறையை மடியில் கட்டியதை நினைக்கும் போது, அது ஒரு தரக்குறைவான செயலாகியிருந்ததென்று இப்போது தோன்றுகிறது.

மனைவியின் கணிப்பு தவறவில்லை. எக்கச்சக்கமான மீன்கள் பட்டுச் சொரிந்தன. விசாரித்தவர்களிடமிருந்தெல்லாம் வந்த ஒரே பதில் - மலிவுதான், ரூவாக்கு இருவது சாளை.

இந்த மலிவு நேரத்திலாவது மீன் கூட்டி உண்பதற்கு நாக்கு குறுகுறுத்தது.

சுளகில் கூட்டி வைத்திருந்த மீன்களைப் பார்த்து விலை கேட்டேன்.

விலை சொல்லுமுன் மீன்காரி என்னை ஏறிட்டுப் பார்த்தாள். அவளுடைய மூக்குத் துவாரம் அகலப்படுவதைக் கவனித்தேன்.

விலை சொன்னாள்-'' ஒரு ரூவாவுக்கு ஒரு சாளை''

நடுங்கிவிட்டேன்.

மலிஞ்சு மண்ணேறிக் கிடப்பதாக எல்லோரும் சொன்னார்கள். இவளேன் இந்த கொள்ளை விலை சொல்கிறாள்?

''ஏன் ரோசிக்கீரம். பஞ்சம் குத்தாரெ வாங்கிட்டுப் போய் பொரிச்சு தின்னுமே..''

அவளுடைய மூக்குத் துவாரங்கள் அகலப்பட்டதின் பொருள் என்னவென்று யோசித்து நிற்கையில் அவள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.

''இப்போ பேச்சியாக்காரங்கொ மீனுக்கு வெல கேக்காட்டாங்கொ'' மடியிலிருந்து மணம் பரப்பிய உறை, என்னை அவள் கண்களுக்கு உயர்வாகக் காட்டியது. அவள் முன் நான் எனக்குள் குறுகி நின்றேன். அவள் சொல்லும் தீ விலை கொடுத்து வாங்கும் சக்தியல்லாத தவிப்பு எனக்கு என்றும் போல் இன்றும் ரசமும் துவையலும் தான். திரும்பி நடக்காமல் வேறு வழியில்லை. நேற்று வரை பார்த்தாலும் பாராமல் நடந்தவர்களெல்லாம், ஆசை குன்றிப் போய் திரும்பிப் சென்று கொண்டிருந்த என்னை கடந்து சென்ற கணம் அவர்களாகவே கைத்தட்டிக் கூப்பிட்டு, மகன் போசியாவிலா என்று நலம் விசாரித்தனர். அதன் அகப் பொருள் முதலில் எனக்குப் பிடிபட வில்லை. எதோ ஒரு புரியாமை எனக்குச் சுற்றும் வலை பின்னி சிக்க வைத்தது. வெறும் பையும் வீசிய கையுமாக படி ஏறிய போது மனைவி சேலை முனையை இடுப்பில் சொருவினாள். அது படைவாளை உருவி எடுப்பதாகும். அவளுடைய அடிப் பாவாடை விளிம்பு அவள் கால் மூட்டை தொட்டிருந்தது.

''என்ன வெறும் கையோடெ வாறியோ?'' கேள்வியே அதட்டலாகவும் எட்டி மிதிப்ப தாகவும் இருந்தது. சீறி வந்த அவளுடைய முகத்திலிருந்து சீற்றம் விலகியதும் உடன் அவள் புன்னகைத்ததும் ஒரு நொடி இடையில் அவளிடத்தில் கண்ட இந்த அற்புத மாற்றம் புதிராகவே இருந்தது முதலில்.

''கொண்டாருங்கோ'' கை நீட்டினாள்.

''மீன் வாண்டல்ல. கொள்ள வெல.''

''பரவாயில்லெ. பேர்சியா சோப்பை கொண்டாருங்கொ''

''சோப்பா?''

மடியிலிருந்த உறை நினைவுக்கு வந்தது. என்ன சொல்வதென்று தெரியாத குழப்பமாக வேயிருந்தது. வெற்று உறையை எடுத்த போது அவள் முகத்தில் கரடி ஓடித் திரிந்தது.

வெறித்துப் பார்த்தாள் என்னை.

அந்தப் பார்வை அனலில் தோல் கொப் புளங்களை உண்டாக்கின.

பெண் முகத்திற்கு இவ்வளவு கவர்ச்சி அழகையும், இவ்வளவு நடுங்கச் செய்யும் சீற்றத்தையும் கொடுத்த படைப்பாளியின் படைப்புத் திறனைப் பாராட்டமாலிருக்க முடியவில்லை.

''இண்ணைய்க்கும் வெறும் சோறு தின்னு வாங்கொ.''

சொருகியிருந்த சேலை முனையை எடுத்து விட்டுக் கொண்டு போன போக்கு! உலகையே வெறுத்துவிட்டுப் போவதாக வேயிருந்தது. ஏதேனும் கிணற்றிலோ ஆற்றிலோ குதிக்கப் போவதாயிருந்தது. இப்படியான எதிர்வினைகளையெல்லாம் கண்டபோதும் உறையை வெளியே வீச மனம் ஒப்பவில்லை. கூட்டிலுள்ள நெளிவு சுளிவு களை எடுத்து சோப்பு வடிவத்தில் கூட்டை சரி செய்து காட்சிப் பொருள்கள் இல்லாத, கண்ணாடி உடைந்து போன ஷோக்கேசில் பத்திரப்படுத்தினேன். வெளிநாட்டு சோப்பின் உடலில் ஒட்டியிருந்த உறையையாவது முகர்ந்து கொண்டிருக்கலாம் என்ற சின்ன ஆசை. சகோதரி பையன் பஹ்ரைனுக்கு செல்ல யாத்திரை கேட்க வருகையில் நிறைய விதவிதமான நாற்காலிகளும் கண்ணாடி டீப்பாய்களும் அலங்காரமாய்க் கிடந்தன. முந்தைய பெரிய வீட்டு முகப்பில். இப்போது இந்த சின்னஞ்சிறிய வாடகை வீட்டில் பழைய ஒரு நார் கட்டில் மட்டும் வருவோருக்கு உட்கார. அதில் உட்காரும் போதெல்லாம் இழந்து விட்ட செழுமைகளையும் அவை வீட்டை விட்டு வெளியேறிய சால்களையும் தற்போதைய வறுமையில் ஒரு நாளை நகர்த்திவிடுவதையும், நஜீபை படிக்க வைக்கப்படும் சிரமங்களையும் பற்றிய நினைப்பு பகலை இரவிலும், இரவை பகலிலும் கொண்டு விடுகிறது. நார் கட்டிலில் முட்டுகட்டி உட்கார்ந்து கொண்டிருந்த போது, ஜன்னல் கம்பி வழியாக வீட்டின் முன்பக்கமுள்ள தென்னம் தோப்பு பார்வையில் பட்டது. தன்னிடமிருந்து அன்னியப்பட்டுப் போன அந்த தென்னம் தோப்பில் குலைத்து நிற்கும் தெங்கின் மண்டையில் பார்வை ஊன்றிக் கொண்டிருக் கும் போது நஜீப் முன்வந்து நின்றான்.

''நாளை கடைசி நாள். பணம் கட்டல் லேண்ணா பரீட்சை எழுத முடியாது.''

நஜிபுடைய பார்வையில் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் முயங்கியிருந்தன.

தென்னம் மண்டையிலிருந்து பார்வையை பிடுங்கித் திரும்பியதும் என் ஏமாந்த பார்வை அவனை தளர்த்திவிட்டது போலிருந்தது எனக்கு. அப்படி ரொம்ப நேரம் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதபடி அவன் முகம் வாடி வெளிறிப் போயிருந்தது.

'கெடக்கல்லியா?''

இல்லலெயன்று சொல்ல நா எழவில்லை. தலை அசைப்பில் தோல்வியை சாடை சொன்ன போது அவன்அப்படியே சிலையாய் நின்று கொண்டிருந்தது என் ஈரக் குலையை பிழிந்துவிட்டது.

''கேக்காத இடமில்லை. இனி ஆருட்டெப் போய் கேட்டுப் பாக்க...?''

பார்வையை அவன் முகத்திலிருந்து விலக்கி, பழையபடி தென்னம் மண்டையிலேயே ஊன்றிக் கொண்டிருந்தேன்.

அங்கு நிலவிய நிசப்தத்தை அவனே உடைத்தான்.

''ரஷீத் மச்சான் வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு வாரமாச்சாம்..''

''வந்திருக்கானா?''

சந்தோஷமாகவேயிருந்தது. நாயாய் அலைந் தற்கு ஆண்டவானாகவே ஒரு வழியைக் காட்டிவிட்டான் போல் தெரிகிறது.

''மச்சானுட்டெ கேட்டுப் பாருங்கொ, நாளை கடைசி நாள்.''

நஜீப் துடிப்பதைக் கண்ட போது அப்படியே இருந்துவிட மனம் வரவில்லை.''

''அவளிட்டையும் கேட்டுப் பாக்கல்லேன்னு வேண்டாம்ப்பா. போய் கேட்டுக் பாக்கேன்.''

புறப்படும்போது மனைவி கஞ்சி குடிக்கச் சொன்னாள். சீக்கிரம் புறப்பட்டுப் போனால் இரவு எட்டரைக்குள்ள பஸ்ஸிற்கு திரும்பி விடலாமென்ற நினைப்பு இருந்ததால் கஞ்சியை நாடி சுணங்கவில்லை.

குடை எடுத்துக் கொண்டு இறங்கும்போது மனைவி நினைவூட்டினாள்.

''சோப்பும், சாரியும், ஸ்ப்ரேயும் கேட்டு வாங்குங்கோ.. நம்மொ புள்ளதானே.''

அவள் சொன்னதைக கேட்டது பாதி, கேட்காதது பாதி என்று என்று குடையை விரித்துக் கொண்டு ஒண்ணே காலுக்குள் பஸ்ஸை எட்டிப் பிடிக்க நடையை துரிதப்படுத்தனேன். எப்பாடுபட்டாவது இந்த ஆண்டு பரிட்சை எழுதிவிட்டால் நஜீபுக்கு எங்காவது ஒரு வேலையை வாங்கிவிடலாம். அவனுடைய வருவாய் ஒரு சிறு தாங்கலாயிருக்கும். சாலையோர மரங்களும் விடுகளும் என்னுடைய எதிர்திசையில் ஓடும்போது மருமகனுக்கு கல்லூரி படிப்புக்கு அவ்வப் போது பணம் கொடுத்தது, ஒவ்வொரு பெருநாளுக்கும் புத்தாடை வாங்கி கொடுத்தது. வேலையில்லாமல் அலைந்த போது உதவி புரிந்தது. பஹரைன் செல்ல அவனுக்கு என்.ஜி.ஓ. ஏற்பாடு செய்து கொடுத்தது எல்லாம் நினைவில் குழுமின. வெளிநாடு சென்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தடவையோக ஊர் வந்திருக்கிறார்கள். அவனிடத்தில் இப்போது பல மாற்றம் காணலாம். திருமணத்திற்கான ஆதத்தோடு வந்திருக்கக்கூடும். விமானம் ஏறிய பின் பல தபால்கள் மாமனாருக்கு மாட்டுவதற்கும், ஒரு ஏர்கண்டிஷன் மேஷின் அனுப்புவதாக, மாமிக்கு ·பிரிட்ஜும், வாஷிங்மெஷினும் அனுப்புவதாக எழுதிய கடைசித் தபாலில் வரும் போதெல்லாம் கையில் கொண்டு வருவதாகயிருந்தது. என்னுடைய பொருளாதார உன்னத நிலைக்கு ஏற்றவாறு பல ஆடம்பர நாகரிகப் பொருட்கள் அனுப்புவதாக எழுதும் ஒவ்வொரு கடிதமும் மேலும் பல வாக்குறுதிகளால நிரம்பியிருந்தன.

ஒவ்வொரு கடிதம் வரும் போதும் பதில் போடாமல் இருப்பதில்லை. சரிந்து கொண்டிருந்த பொருளாதார நிலையை பதிலில் குறிப்பிடாதது, தன் வறுமை தன்னிடமே இருக்கட்டும் என்றுதான். வாடகை வீட்டில் கோழிக்கூட்டில் மாமனாரும் மாமியாரும் பிள்ளைகளும் கால் நீட்ட இடமில்லாமல் சுருண்டு கொண்டிருக் கையில் ·பிரிட்ஜும், வாஷிங்மெஷினும் வைக்க இடம்? மருமகன் விமானத்தில் பறந்த பிறகு, பிறந்த சின்னஞ்சிறு கிராமத்தை விட்டுத் தாய் தந்தையரை பரபரபப்பாக நகர மத்தியில் ஈரடுக்கு மாடிக் கட்டிடத்தில் பெயர்த்துக் குடி இருத்திய அவனுடைய செழுமையில் பொறாமை கொள்ளவே இல்லை. அவனுக்கு அள்ளிக் கொடு ஆண்டவனே என்று வேண்டத்தான் கைகள் உயர்ந்தன. ஆறு ஆண்டுகளுக்குப் பின் முதல் தடவை யாக ஊருக்கு வந்திருக்கிறானாம். வந்து ஒரு வாரமாகி விட்டதாம். பஸ் இறங்கிய இடத்திலிருந்து வீடு தொலைவில் பெருநகர் பேருந்துகள் நுழையாத நெடுநீளமான ஒரு சந்தின் கடைசியில் ஆட்டோ பிடித்தால் திரும்பி வர எதுவும் மிஞ்சாத ஜேப்பு இருப்பு. சூரியனின் திமிர்ப்பு தணிந்திருந்தாலும், வீசிக் கொண்டிருந்த காற்றில் குளுமை இருந்தாலும் நடக்க இதமாகத்தானிருந்தது. செழுமை நாளில் அடிக்கடி சென்று வந்த நகரமான தால் ரோடுகளும் சந்துகளும் பரிச்சயமானவை யாக இருந்தன. முகவரி காட்டி வழிகேட்டுத் தடுமாற வேண்டிய நிலை ஏற்படவில்லை.

புன்னகையுடன் வரவேற்ற தங்கையின் உபசரிப்பில், மனம் குளிர்ந்தது என்று சொல்வதற் கில்லை. அந்த நேரம் அந்த சாக்கடைத் தண்ணி - சாயாவும் ஒரு துண்டுக் கேக்கும், காய்ந்திருந்த கும்பியை சற்று ஈரப்படுத்தித் தேற்றியது ஆசுவாசமாகவே இருந்தது. வீட்டிலிருந்த துபாய் அலங்காரங்களில் பார்வை திரும்பிவிடாத அளவிற்கு சிந்தனை யில் சூடேறியிருந்தது. குஷன் நாற்காலிகளும் கண்ணாடி டீப்பாய் களும் வரவேற்பறையை அடைத்துக் கொண்டிருந்தன. அதில் உட்கார்ந்து கொள்ளும் தகுதியை நான் இழந்துவிட்டதை உணர்ந்து, தங்கை ஒரு மர ஸ்டூலின் மீது சாயாவும் கேக்கும் வைத்துவிட்டு எனக்கு உட்கார இன்னொரு மர ஸ்டூலை வீட்டுக் குள்ளிருந்து எடுத்து வந்து போட்ட போது தான் என்கண் முன் நஜீப் நின்று கொண்டிருந்தான். குடும்பத்தின் எதிர்காலம் அவனேதான். அவனை எப்பாடுபட்டாவது கரையேற்றியாக வேண்டும். முள் படுக்கை யிலானாலும் படுக்க தயக்கமில்லாத இக்கட்டு. தன் தகுதியின்மையை உணராமல் குஷன் நாற்காலியில் தவறுதலாக இருந்துவிட்ட குற்ற உணர்வோடு, எழும்பி மர ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டேன். அதில் இருந்த ஆணி ஒன்று பிட்டத்தில் குத்தியபோது வேட்டி கிழிந்து விடாமல் மெல்ல எடுத்து விட்டேன். கால்மூட்டும் கையும் ஊன்றி நடக்கும் குதிரையாயிருந்தேன் ஒரு நேரம். அந்த குதிரை மேல் குசாலாக சவாரி செய்து அன்று விளையாடிய சகோதரியின் பார்வையில் அந்நியப்பட்டுப் போன உணர்வின் நிழலாட்டம் இருப்பதாக உணர்ந்தேன். என் உணர்வு பொய்ப்பித்துப் போக நெஞ்சார ஆண்டவனோடு நெருங்கினேன்.
நஜீபுக்கு ஓர் ஆண்டு வீணாகி விடுமே! என்ற பதற்றம் நெஞ்சிற்குள்.

நகரத்தில் கூடு கட்டிய பிறகு முதல் முறையாக சென்றதால் தங்கை சுக விபரங்கள் கேட்டாள். நஜீபுடைய, மற்ற பிள்ளைகளுடைய படிப்பையும் பற்றிக் கேட்டாள். பருவமடைந் திருக்கும் மகளுக்கு மாப்பிளைத்தரம் பார்ப்பதைப் பற்றிக் கேட்டாள். வியாபாரத் தைப் பற்றி கேட்டாள்.

பரவாயில்லை என்றிருந்தது பதில்.

பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது, மருமகன் ஜகஜோதியாக காரில் வந்திறங்கியது ஏதோ அமைச்சர் வந்திறங்கின தோரணையில். முதலில் ஆள் அடையாளம் தெரியவில்லை. நடையில், உடையில், உடலில், பாவனையில் அவ்வளவு மாற்றங்கள். நெடிய ஆறு வருடங்களின் கலைக்கைகள் பின்னி உண்டு பண்ணிய நவ மாற்றங்கள்.

''மாமா.. எப்பொ வந்தியோ?''

முகமலர்ச்சியுடன் வரவேற்றான்.

அதே குரல்! நாதக் கம்பியைக் காலம் கழற்றி முறுக்கவில்லை. சிரிக்கும் போது விழும் அதே கன்னக் குழிகள்!

''நல்லா இருக்கியாப்பா?''

''நல்லா இருக்கேன். மாமாயெ பார்க்க வரணுமெண்ணு தான் இருக்கேன்.''

'நீ வந்ததை கேள்விப்பட்டதும் நானே வந்துட்டேனில்லியா'
'
''மாமியும் மச்சினன்மாரும் கொளுந்தியும் நல்லா இருக்காங்களா?''

''இருக்காங்கோ''

''நஜீப் இப்பம் மெடிக்கலா, என்சினியரிங்கா?''

''இல்லப்பா பி.ஏ. கடைசி ஆண்டு.''

''எட்டோ பத்தோ லட்சம் குடுத்து அவனெ மெடிக்கலிலே சேக்கப்படாதா?''

என்னுடைய புன்னகைப்பிற்கு பிறகுள்ள மவுனத்தின் அர்த்தம் அவனுக்கு புரிய வில்லை போலிருந்தது.

''இதெல்லாம் ஒரு பெரிய முதல் முடக்குத் தானே, மாமா? திடீரெணு பணம் புரட்ட முடியல்லேண்ணா எனக்கு எழுதியிருந்தா உடனே அனுப்பித் தருவேன்.''

''அனுப்பியிருப்பா..''

தொழில்நுட்ப கல்லூரிகளில் பேமெண்ட் சீட் கிடைத்ததையும் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயன்ஸ¤க்கு அய்ந்து ஆயிரம் நன்கொடை கேட்டதையும் நினைக்காமலிருக்க முடிய வில்லை. பார்த்தாலே ஏதாவ கேட்டு விடுவானோ என்று பயந்து விலகும் மக்கள் மத்தியில் வாழ்க்கையை ஓட்டும் போது யாரை அணுகுவது என்று புரியாத திணறலில் தவித்த நாட்கள் மனசுக்குள் பாதயோசை எழுப்பி ஓடிக் கொண்டிருந்தது. ''ஒங்களுக்கு ஒரு ஏசியும், ·பிரிட்ஜும் கொண்டு வந்தேன் மாமா. களியல் எஸ்டேட் ஓனர் பீருக்கண்ணு சாகியை சவேரா ஹோட்டல்லே வச்சு பாத்தேன். அவரு ஒரு புதிய ஊடு கட்டி பாலு காச்சூதாட்டு சொன்னாரு.''

''அவரை பழக்கமுண்டா?''

''இல்லை, உங்க மருமோனா என்னு கேட்டாரு. என்ன செய்தாண்ணு கேட்டப்போ பஹ்ரைனிலே நிக்கூதாட்டு சொன்னேன். பாலு காச்சுக்கு கூப்பிட்டாரு. சும்மா போவ முடியுமா மாமா? வலிய எஸ்டேட் ஓனரில் லையா? அவருக்கெ நிலைக்கு தகுந்தபடி ஏதாவது இருக்க வேண்டாமா? அந்த ஏசியையும், ·பிட்ஜையும் அவர் ஊட்டு பாலு காச்சுக்கு அன்பளிப்பா குடுத்துட்டு, இந்தா இப்பம்தான் வாறென்.''

''செய்ய வேண்டியதுதான்''

''போன உடனே மாமாவுக்கு அனுப்பித் தாறேன். நஜீப்புக்கு ஒரு வாச்சு அனுப்புறேன்.''

பல ஆயிரங்கள் பெறுமதியுள்ள பொருட்களை அனுப்பி வைப்பதாக சொல்லுபவனிடம் சிறு உதவி நாடி வந்ததை எப்படிச் சொல்வது என்று மனக்குழப்பம் எனக்குள் என் மவுனத்தைக் கண்டதும் அவன் அங்கலாய்த்தான்.

''ஏன் மாமா மவுனமா இருக்கிதியோ. ஒங்களெ பாக்க வராத கோபமா?''

''இல்லப்பா. கோபமானா நான் உன்னைப் பார்க்க வருவேனா?''

''வியாபாரம் எப்படியிருக்கு? எக்ஸ்போர்ட் ஏதாவது செய்யீளா?''

அவன் முகத்தைப் பார்த்ததும் சொல்ல பதில் கிடைக்காததால் பார்வையை திருப்பிவிட்டேன்.

''ஏன் ஒண்ணும் பேசல்லெ?''

''இப்பம் வியாபாரம் இல்லப்பா. பெரும் நஷ்டமாப் போச்சு. கடன் அடைக்க வீட்டையும் கடையையும் விற்றுப் போட்டேன். ஒரு வருமானமும் இல்லாமல் சும்மா தான் இருக்கேன்.''

''அவ்வளவு நஷ்டமா?''

''நிமிர முடியாத நஷ்டம்''

மருமகனுடைய முகத்திலிருந்த களிப் பெல்லாம் மறைவதை கவனிக்காதபடி பார்வையை தரைக்கு திருப்பினேன்.

''திவாலாயிப் போனீளா?''

கேள்வி ஏளனப்படுத்துவது போலிருந்தாலும், பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

''நொடிஞ்சே போனேன்.''

நடையில் தங்கை நின்று கொண்டிருந்தாள். யாரும் எதுவும் பேசவில்லை. அவரவர் களுடைய உள்ளங்களில் எவையெல்லாமோ நுரைத்து பதைத்துக் கொண்டிருப்பது போலிருந்தன அந்த சூழல்.

''மாமா வந்தது?'' குரலில் முன்னிருந்த நளினம் வரண்டு போய்விட்டதாகத் தோன்றியது.

வருகையின் நிஜ நோக்கத்தை மறைத்து சும்மா வந்தாகச் சொல்லத்தான் நாக்கு யர்ந்தது. மனசில் தேங்கி நின்றிருந்த வார்த்தை நாக்கில் சறுக்கி விழுந்துவிட்டது.

''ஒரு சிறு உதவி நாடி''

''என்ன உதவி...? '' இப்போது குரலில் சொர சொரப்பிருந்தது அப்பட்டாகத் தெரிய முடிந்தது.

''நஜீபுக்கு நாளை பணம் கட்டினாத்தான் பரிட்சை எழுத முடியும். கடைசி ஆண்டு பணம் கட்ல்லேண்ணா அவன் படிப்பு பாழாய் போவும். அவன் படிச்சு ஏதாவது ஒரு வேலைக்கு சேர்ந்தா தான்''

''படிச்சு என்ன செய்ய? அவனை ஏதாவது கடையிலெ வேலைக்கு உடலாமே?''

என்ன சொல்வதென்றறியாத திகைப்பில் அப்படியே தலைகுனிந்துவிட்டது. அவனை படிக்க வைத்த குற்றத்திற்காக கூண்டில் விசாரணை கைதியாக தலை குனிந்து நின்று கொண்டிருந்தேன்.

''என்ன உதவி செய்யணும்?'' ஒரு போலீஸ் அதிகாரியின் அதட்டல் குரலாகவேயிருந்தது.

''ஒரு 725 ரூபா கெடச்சா...''

மருமகன் மறுமொழி பேசாமல் பேச முடியாமலோ என்னவோ குஷன் சோபாவில் உட்கார்ந்த படி பூட்ஸ் காலைத் தூக்கி கண்ணாடி டீப்பாய் மேல் வைத்துக் கொண்டு, நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான். தாய் மாமனாருடைய எதிர்பாராத வீழ்ச்சியை செவியுற்ற அதிர்ச்சியில் மனம் நொந்து போய் உட்கார்ந்திருப்பதாகத் தோன்றியது. ''வருத்தப்படாதப்பா. வாழ்வு தாழ்வு கொடுப்பது ஆண்டவன். தந்தவன் எடுத்துட் டான் வருத்தப்பட என்ன இருக்கு...?'' அவனை ஆறுதல் படுத்த முயன்றேன்.

''மாமா...''

''என்னப்பா..?'' தலையை நிமிர்த்தினேன்.

அவனுயைட தாயாரின் கண்கள் அவனோடு பேசியதை கவனிக்காதது போல் இருந்து விட்டேன். இன்று அந்த கண்கள் இப்படி யெல்லாம் பேசுவதற்காகத்தான் முன்பு அவள் கண்களில் விழுந்த தூசிகளையு மணல் களையும் ஊதி எடுத்துக் கொடுத்தேன். ''பழைய மாதிரியல்ல இப்பம் அரபு நாடு. வெயில்லெ கெடந்து நாயா ஒளச்சாத்தான் ஊட்டுக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது அனுப்ப முடியும். முன்ன மாதிரி சம்பளமுமில்லை. சம்பளங்களை வெட்டி கொறச்சுப் போட்டான் அரபி.'' மகன் அவனுடைய உழைப்புத் துயரத்தைச் சொல்லி முடித்ததும், தங்கை வாசல் திரையை இழுத்து விட்டுக் கொண்டே வீட்டுக்குள்ளே போய்விட்டாள். என் மனசிற்குள் பரந்திருந்த இருட்டு, வெளியேயும் பரந்துவிட்டதை பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

''ஏதாவது சாப்பிட்டீளா?''

''ஒனக்கெ உம்மா சாயாவும் கேக்கும் தந்தா. அதிலெ அடங்கிப் போச்சு.''

''8.30க்கு கடைசி பஸ்''

''வரும் பஸ் நேரம் கேட்டுத் தெரிஞ்சுட்டு தான் வந்தேனப்பா.''

பஸ் இறங்கி இருட்டைக் கீறினேன். வீட்டு ஜன்னல் கம்பி வழியாக, முனகி எரிந்து கொண்டிருந்த ராந்தல் ஒளி, முற்றத்தில் விழுந்து புற்காடுகள் மூடிக் கொண்டிருந்த நரம்பு தடத்தைக் காட்டியது.

கால் சொடக்கு சத்தம் கேட்டதும் நஜீபே வந்து கதவைத் திறந்தான். அவன் பின்னால் மனைவி ஆவலோடு வந்து கேட்டாள் - ''புள்ள என்னவெல்லாம் தந்தான்?''

''மச்சான் ரூபா தந்துதா?''

கேள்விகள் சரங்களாக இதயத்தை தாக்கிக் கொண்டிருந்தன. கையில் எடுத்துச் சென்ற குடை மட்டுமே இருப்பதைக் கண்டு மனைவி சோர்ந்து நின்றாள்.

''வாப்பா!'' அதல பாதாளத்தில் கிடந்து கைநீட்டி காப்பாற்றக் கூப்பிடும் அவலக் குரலாக இருந்தது நஜீபின் கூப்பிடல்.

''முன்னெ கடைசி பரிட்சைக்கு கட்ட 60 ரூபா தருவாரில்லாமெ உன் வாப்பாவின் கல்லூரி படிப்பு நிண்ணு போனது ஒனக்குத் தெரியாது. எனக்கெ அதே அனுபவம் இப்ப உனக்கும். நாளை உன் மகனுக்கெ படிப்பும் இதுபோல நிப்பாட்ட வேண்டிய சந்தர்ப்பம் வந்தாலும் நீ சோர்ந்து போகாதப்பா. இதெல்லாம் காலத்துக்கெ ஆவர்த்தனம்.'' மகனும் மனைவியும் உறங்கினார்களா, அல்லது ஏமாற்றங்களின் பாறை அழுத்தத்தால் உறங்காமல் கிடக்கின்றனவா என்று கவனிக்க ஒவ்வாத மனநிலை. எப்படியும் அவர்களுடைய காலை விடியட்டும். உறங்காத என் கண்கள் கண்ணாடி உடைந்த ஷோகேஷில் சென்றன. அங்கு என் எதிரியின் கையிலிருந்து கொண்டிருந்த கூரிய வாள் பளபளத்துக் கொண்டிருந்தது.

************

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்