Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts
Showing posts with label எஸ்.ராமகிருஷ்ணன். Show all posts

Apr 27, 2013

வேனல்தெரு-எஸ்.ராமகிருஷ்ணன்

பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம் கலைவுற்றவர்களாகவும் குடிகாரர்கள் நடந்து கொண்டிருந்தனர். வேனல் தெருவின் இரு பக்கமும் நீண்ட வரிசையாக மதுக்கடைகளே நிறைந்திருந்தன. கண்ணாடிக் குடுவைகளில் தேங்கிய மது தன் நீள் தொடு கொம்புகளால் பார்ப்பவரின் கண்களைச் சுருட்டி அடைத்துக் கொண்டிருந்தது. நகரின் தொல் பழமையான இந்தத் தெருவின் இமைகள் இரவு பகல் பேதமின்றி சிமிட்டிக்கொண்டிருந்தன. வயதை மறந்த குடிகாரர்கள் தங்களை மீறி ஸ்நேகித்துக் கொண்டும், பரஸ்பரம் அன்பில் கட்டுப்பட்டவர்களாய் நேசம் மட்டுமே வழியும் மதுக் குடுவையுடன் விடாது பேசியபடியிருக்க, எரிந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு குண்டு பல்புகளுக்கு ஊடே பெண்களும் கூடி கபடின்றி சிரித்தபடி முக்காடு விலக்கிக் குடித்துப் போகின்றனர். போதை ததும்பியவென் கனவிலோ உருக்கொண்டது போல வியாபித்திருக்கிறது வேனல் தெரு. மனிதர்கள் மதுவுடன் தங்கள் Rkஆகிருதிகளைக் கரைத்துவிட்டு திரவம் போலாகி மதுப்புட்டியினுள் சேகரமாகிவிட முயன்று கொண்டிருந்தனர்.

நீண்ட தாடியும் கருத்த ரம் புட்டியுமாக நிற்கிறாரே… அதோ கட்டத்தின் கடைசியில் – அவரிடம் கேளுங்கள். தனது விநோத கனவுகளில் நூறு நடிகைகளைக் காதலித்துத் தோற்ற கதை அவரிடம் ஒரு சுருள் பூச்சியாய் ஆயிரம் கால்கொண்டு ஊர்ந்துகொண்டிருக்கிறது. என்றோ இறந்துபோய்விட்ட எல்.பி.வனமோகினிக்காகத்தான் அவர் இப்போது மது அருந்திக் கொண்டிருக்கிறார். இருபது வயதிற்குள் எண்ணற்ற நடிகர்களால் காதலிக்கப்பட்டு, எவரையும் வெறுக்கத் தெரியாமல் சுயமரணம் செய்து கொண்ட அந்த நடிகையின் சுருள் கூந்தல் இழையொன்று மதுவின் வழியே தன்மீது படர்வதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். எல்.பி. வனமோகினியை அவர் நேரில் கண்டவரில்லை.

யாரோ தந்த சினிமா புகைப்படத்தாளில் சுழித்த உதடுடன் இருந்த அவள், நரி ஒன்றைத் தன்னோடு அணைத்துக் கொண்டிருந்தாள். நரியே அவளைக் காதலிக்கச் செய்தது. இந்த நூற்றாண்டின் இரண்டாம் பத்தில் இறந்து போனாள் வனமோகினி. என்றாலும் என்ன? அவளை உயிருடன் எழும்பும் மதுப்புட்டிகள் அவரிடம் இருந்தனவே. அவரின் மனதில் அன்பின் சிறு துவாரங்களின் வழியே தீர்க்க முடியாத துக்கம் சுரந்துகொண்டிருக்கிறது. அன்பே துக்கத்தின் துளிதானோ? உலகில் வனமோகினியின் காலம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இருக்கும்? அவரிடமிருந்து தேவைப்படுமாயின் மதுவை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். இன்று அவரிடமிருந்த மதுப்புட்டியைப் பிடுங்கிக்கொண்டு அவரை மிதித்துத் தள்ளியபடி நகர்கிறானே அந்த இளைஞன், அவன் பெயர் என்னவாகயிருக்கும்?

வேனல் தெருவிற்குள் வருபவர்கள் எவராகயிருப்பினும் பெயர் ஒன்றுதானே? இளைஞன் தன்னிடமிருந்த சில்லறைகளைத் தெருவெங்கும் வீசி இறைக்கிறான். எவனோ ஒரு கடைக்காரன் தன்னிடம் சில்லறையில்லை என எந்த ஊரிலோ மறுதலித்ததின் பதிலாக இங்கே சில்லறைகள் வீசுகிறான். புpன்பு மெதுவாகத் தன்னிடமிருந்த நூறு ரூபாய் தாளை சுருட்டி அதன் முனையில் நெருப்பிட்டுப் புகைக்கிறான். அவனைப் பார்த்து யாரோ சிரிக்கிறார்கள். ஏழாம் நம்பர் கடை மூலையில் இருக்கும் இருவர்தானே சிரித்தது. அவர்களில் ஒருவனுக்கு, பணத்தைப் புகைப்பவனிடமிருந்து ஒரேயொரு தம் அடிக்க ஆசை எழ, கால் பின்னிய நிலையில் எழுந்து வந்து அவனிடம் தம் கேட்கிறான். வந்தவன் உதட்டிலும் பணத்தின் நீல நிறம் ஒட்டிக்கொள்கிறது. இருவரும் புகைக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட புதிய நட்பிற்காக இருவரும் ஒரே மதுக்கோப்பையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கோப்பை காலியானதும் இருவருக்குள் விரோதம் துவங்குகிறது. தனது பணத்தைப் பிடுங்கி சுருட்டிப் புகைத்துவிட்டான் என வந்தவனுக்கு எதிராகக் கூச்சலிடுகிறான் இளைஞன்.

ஏழாம் கடையில் இருந்தவனோ தன்னுடன் இருந்த நண்பன் எவன் என அறியாது மற்றொருவன் தோளில் சாய்ந்துகொண்டு உறவை விளித்து மாப்ளே… மாப்ளே.. என செல்லமிடுகிறான். இத்தனை குடிகாரர்களுக்கும் நடுவில் சிதறிய நாணயங்களைக் குனிந்து அவசரமும் ஒடுக்கமுமாக பொறுக்கிக் கொண்டிருக்கிறாளே அந்த செங்கிழவி, அவளை விடவும் திருடக்கூடியவர் இந்த வேனல் தெருவில் எவரும் கிடையாது. நாணயங்களைக் குனிந்து சேகரித்தபடியே அவள் கால் செருப்புகளைத் திருடி ஒளிக்கின்றாள் பாருங்கள். அவள் உடைந்த குப்பிகளுக்குள் நாணயங்களைப் போட்டுக் குலுக்குகிறாள். அவைதான் எத்தனை இனிமையாகச் சப்தமிடுகின்றன. நாணயங்கள் நிரம்பிய மதுப்புட்டியுடன் வேனல் தெருவில் இருந்த இருள் சந்தில் போகிறாள். அங்கும் சிலர் குடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நிலத்தோடு உரையாடிக்கொண்டிருப்பது போல முணுமுணுக்கின்றனர்.

விலை மலிந்த சாராய வீதி அந்த இருள் சந்து. தகரக் குவளைகளில் மஞ்சள் சாராயம் மினுக்கிறது. செங்கிழவி தன் மதுப்புட்டியை ஒரு தகரக் குவளையில் கொட்டுகிறாள். மிச்சமான சாராயத்தில் ஊறுகின்றன நாணயங்கள். தங்கத்தைப் போன்ற வசீகரமான அத்திரவத்தை அவள் உதடு தீண்ட விரிகின்றது. ஒரு வான்கோழியைப் போல சப்தமிட்டபடி அவள் குடித்துவிட்டுத் தகரக் குவளையைத் தருகிறாள். அவளுடைய வயது மெல்லக் கரைந்து மீண்டும் பால்யம் கண்டவள் போல தனது மார்புகளை சாராயக்காரனிடம் காட்டி இச்சை மொழியில் பேசுகிறாள். அவனோ கிழட்டு நாயே என ஏசியபடி மீண்டும் தகரக் குவளையில் சாராயம் தருகிறான். இனி இரவு முழுவதற்கும் வேறு கிடைக்காது என்பது தெரியும். நீண்ட கயிற்றால் காலி மதுப்புட்டியை இடுப்பில் சுற்றி நாணயம் தேடி அலையத் துவங்குவாள். வேனல் தெருவிற்கு எல்லா இரவும் மது வாங்க வரும் பக்கீர் வந்திருக்கக்கூடும்.

அவரது மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஓசையைக் கேட்டதும் கிழவி ஓடுகிறாள். பக்கீர் என்றைக்கும் போலவே இரண்டாம் கடை முன் நிற்கிறார். அவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்கிறார். இளம் பெண்ணைப் போல அவரை உரசிச் சிரிக்கிறாள் செங்கிழவி. அவர் வண்டியில் அமர்ந்தபடி எல்லா நாளையும் போலவே தனது இடது காலால் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஐந்து ரூபாயை எறிந்து புறப்படுகிறார். அதை எடுக்க மனம் அற்றவளாக அவரின் மனைவிகளைப் பற்றியவசைகளைப் பெருக்கியபடி நிற்கிறாள். அந்தப் பணம் இரவெல்லாம் எவராலும் எடுக்கபடாமல் அந்த இடத்தில் கிடக்கும். விடிந்த பின்பு அதை அவளே எடுத்துக்கொள்ளக் கூடும். ஆயினும் இரவில் அவள் அதன்மீது மூத்திரம் பெய்வதையோ, காறி உமிழ்வதையோ எவர் தடுக்க முடியும்? வழியற்ற ஒருவன் அப்பணத்தை எடுத்த நாள் ஒன்றில் கிழவி அவன் உடைகளை அவிழ்த்துவிட்டு ஆடையற்ற அவன் உறுப்பில் புட்டியால் அடித்திருக்கிறாள் என்கிறார்கள். எனினும் புறக்கணிக்கப்பட்ட பணம் வெறும் காகிதமாகஇருளில்வீழ்ந்துகிடக்கும்.

வேனல் தெருவிற்குப் புதிதாக வந்த அந்தப் பையனைப் பாருங்கள். இப்போதே மீசை அரும்பத் துவங்கியிருந்த அவன், எதிர் வீட்டில் குடியிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போன மாணவிக்காகவும் தன் முதல் காதலுக்காகவும் மதுப்புட்டியைத் திறக்கிறான். அவனிடம் சொல்லவொண்ணாத காதல் இருக்கிறது. தோற்றுப்போன தன் முதல் காதல் பற்றி யாரிடமும் பேச முடியாத தவிப்பில் அவன் கடைசியில் தன்னிடமே பேச முயலுகிறான். தன்னிடம் பேசுவதைவிடவும் வேறு எவர் கிடைக்கக்கூடும் நல்துணை. அவனுக்கு குடிக்கத் தெரியாமல் இருக்கக்கூடும். ஒருவேளை மது அவனை வீட்டிற்குத் திரும்பவிடாமல் ஏதோ ஒரு தெரு இருளில் விழச் செய்யக்கூடும். ஆனாலும் அவனுடன் பேசுவதற்குக் கற்றுத் தரக்கூடும். அவன் கறுப்புத் திரவம் ஒன்றை வாங்கியிருக்கிறான்.

அத்திரவம் அவன் உடலில் கண்ணாடி இதழ் போல நீர்தட்டானின் சிறகை விடவும் மெல்லியதாக இரு சிறகுகளைக் கிளைவிடச் செய்யும். இதை நினைத்தபடியே குடிக்கிறான். பனை விசிறியைப் போல வடிவம் கொண்ட அந்தச் சிறகு அருகில் குடித்துக் கொண்டிருப்பவன் கண்ணுக்;குக்கூடத் தெரிகிறது. அவனுள் மிதந்து கொண்டிருந்த திரவம், மாற்றலாகிப் போன பெண்ணின் சுவடுகளைப் பற்றிச் சென்று, தெரியாத ஊரில் உறங்கும் அவள் வெண்பாதங்களை முத்துகின்றன. அவன் இப்போது அந்தப் பெண்ணையே குடித்துக் கொண்டிருக்கிறான். புட்டியில் ஒரு துளி திரவமும் இல்லாமல் தீர்த்துவிட்டான். நீர்மை படர்ந்த கண்களுடன் தன் முதல் காதலைப்பற்றித் தன்னிடமே பேசிக்கொள்கிறான். விசும்பலும் ஏக்கமும் ஊர்கின்றன உடலெங்கும். சக குடிகாரன் ஒருவன் அவனை நோக்கித் தன் கைகளை விரிக்கிறான். கரங்களின் ஊடே நுழைந்த மாணவனை முத்தமிடுகின்றன பெரு உதடுகள். மாறி மாறி முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.

பின் இருவரும் தோளில் கைபோட்டபடி அடுத்த மதுக்கடைக்குப் போகிறார்கள். அவர்களை இடித்துக்கெர்ணடு போகும் நபர் பையனின் நல்லாசிரியராக இருக்கிறார். எனினும் என்ன? இரவின் ரகசிய படிக்கட்டுகளின் வழியே உலவும் குடிகாரர் அவரும்தானே. காலி மதுப்புட்டிகளில் விரல் நுழைத்து துழாவும் குருடன் செபாஸ்டியன் புட்டிகளில் மிஞ்சிய மதுவைத் துளிதுளியாக தன் சிரட்டையில் சேகரிக்கிறான் பாருங்கள். எவனோ குடித்து மீதம் வைத்துப்போன பாதி புட்டி ஒன்றால் சிரட்டையே நிரம்பி விடுகிறது. இனி அவனை விடவும் யோகமும் சந்தோஷமும் கொள்ளக்கூடிய மனிதன் எவனிருக்கிறான். வேனல் தெரு இடிந்த மூத்திரப் பிறையின் படிக்கட்டில் அமர்ந்தபடி அவன் இரவு உணவையும் சிரட்டை மதுவையும் ருசித்துக் குடிக்கிறான். பகல் முழுவதும் கூவிப் பெற்ற நாணயங்களையும் மனிதர்களையும் மறந்துவிட்டு, தான் கண் பார்த்து அறியாத வேனல் தெருவின் வாசனையை முகர்ந்தபடி களிப்புறுகிறான். சந்தோஷம் ஒரு சல்லாத்துணி போல உடல்மீது படர்கிறது.

தன்னிடமிருந்த பீடியைப் புகைக்கத் துவங்கியதும் உலகம் ஏன் இத்தனை சந்தோஷமாகவும், இடைவிடாத களிப்பையும் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டான். ஸ்திரீகளையும் வீட்டையும் மறந்த வேனல் தெரு மதுக்குடியர்களுக்குள் மட்டும் எப்படி வற்றாமல் களிப்பு பீறிடுகிறதோ என புரியவேயில்லை. கசப்பு முளைத்த நாவுடன் அவர்கள் உலகின் மொத்தக் களிப்பையும் திருடி வந்துவிட்டார்களாயென்ன. வேடிக்கையும் உல்லாசமும் நிரம்பிய அத்தெருவிற்குள் குற்றம் என எதைச் சொல்லிக்கொள்ளக் கூடும். திறந்த இரவினுள் குற்றங்கள் நிழலைப்போலசப்தமிடாதபடியேஉலவுகின்றன.

பண்டிகை நாள் தவிர வேறு காலங்களில் ஒப்பனையற்றுப் போன ஸ்திரீபார்ட்காரன் ஒருவன் மட்டும் குடியில் குரல் உயர்த்திப் பாடாமல் இருந்திருந்தால் உல்லாசத்தில் இந்த லயம் இருந்திருக்கக் கூடுமா? அவனுக்குப் பெண்களைவிடவும் அடர்ந்த கூந்தல். ஸ்திரீ முகம் கொண்ட அவன் வேனல் தெருவிற்குக் குடிப்பதற்கு ஒருபோதும் தனியே வருவதேயில்லை. ஒரு ஆட்டுக் குட்டியை மார்போடு அணைத்து எடுத்துக்கொண்டு வருவான். கற்பனையான உபவனத்தில் தோழியோடு அலையும் ராணியைப் போல நடக்கிறான்.

அவனுடைய தோளில் சரசரக்கும் தலைமயிர் குடிப்பவர்களுக்குள் சரசத்தின் மூச்சைக் கிளப்பிச் செல்கிறது. வேஷமிடாத போதும் அவனால் ஸ்திரீபார்டினின்னு தப்பிக்க முடியவில்லையே. பொய் மார்பகமும், உயர் கொண்டையும் அணியவில்லையே தவிர, அவன் முகத்தில் மஞ்சள் திட்டுகளும், கைகளில் வளையும் சப்தமிட வருகிறான். அவனுடைய ஆட்டுக்குட்டி துள்ளி குடிகாரர்களின் ஊடே அலைகிறது. ஆட்டின் கழுத்தில் புரளும் ஒற்றை மணி சப்தம் கேட்ட குடிகாரன் எவனோ தங்களுக்குக் குடிப்பதற்காக வாங்கிய புட்டியுடன் இருளில் மறைகிறான். ஆட்டின் கண்களில் பழகிய போதையின் சுகிப்பு தெரிகிறது. அவனும் ஆடுமாகக் குடிக்கிறார்கள். இருவரும் இரவெல்லாம் குடிக்கக்கூடும். குடித்த ஆடுகள் எப்போதும் இயல்பிலேயே புணர்ச்சிக்கு ஏங்குகின்றன. அவை மனித பேதமறியாது கால் தூக்கி நிற்கின்றன. நள்ளிரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆடு வேனல் தெருவின்று கிளம்பி அவர்கள் மஞ்சள் அழியும் உலர்ந்த வீதிகளில் காகிதத்தை மென்றபடி அலையத் துவங்குகிறது. மூடிய வீடுகளுக்கு வெளியே முரட்டுக் குடிகாரனைப் போல ஆடு மணியசைத்துச் சுழல்கிறது. தடுக்க யார் இருக்கிறார்கள். உல்லாசம் தெருவில் தனியே நடனமிடுகிறது என்பதைத்தவிர.

வேனல் தெரு மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. கடைகளுக்குக் குடிக்க வருபவர்கள் மட்டுமல்ல, கடையில் இருக்கும் விற்பனை செய்யும் நபர்கள் கூட ஒரே முகச் சாயலில் தானிருக்கிறார்கள். அவர்களுள் நான்காம் கடை சிப்பந்தியின் கண்கள், புட்டிகளை வாங்கும் எல்லா மனித முகத்தையும் துளையிட்டு அறிந்துவிடுகின்றன. மதுக்கடைச் சிப்பந்திகள் சில்லறை தராமல் ஏமாற்றும்போதோ, கள் மதுவை விற்கும்போதோ கூட குடியர்கள் ஏன் எதிர்;ப்பதில்லை. வேனல்தெரு இரவு எப்போதும் அரை மயக்கநிலையே இருக்கிறது. பொருள் வழி அலையும் வியாபாரிகளும் பயணிகளும் இதனுள் நுழையாமல் செல்ல முடிவதேயில்லை. தனது குறிப்பேட்டில் யாரோ பயணியின் கைகள் தெருவின் ஞாபகத்தினை எழத் தாக்குகின்றன. பின் அவனும் களைத்துவிடுகிறான். நேற்றாக இருக்கலாம்.

குடிக்க வந்த இருவர், நெடும் காலத்தின் பின் சந்திப்பு கொண்டு நினைவைப் பரிமாறியபடி குடித்தனர். அவர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தவர்கள் எனத் தெரிகிறது. மதுப்புட்டிகள் காலியாகியபடி இருந்தன. பின் இருவரில் மூத்தவன் மதுப்புட்டியை உயர்த்தி அதனுள் பர்மா மூழ்கியிருப்பதாகக் கூறுகிறான். திரவம் மெல்ல படிய பர்மா நகரம் கண்ணாடி மீறி விரிகிறது. இருவரும் யுத்தத்திற்கு முந்திய மரவீடுகளின் சாலையில் நடக்கின்றனர். ஜப்பானிய விமானங்களின் குண்டு நகர் மீது சிதறுகிறது. தெருக்களுக்குள் ஓடுகிறார்கள். துப்பாக்கி ரவை எட்டாத வெளியில் பயணித்து நடந்தபோது ஒருவன் மற்றவனை நோக்கி துப்பாக்கி நீட்ட, தோட்டா பீறிட்டு முதுகில் பாய்கிறது. விழித்துக் கொண்டவனைப் போல குடிப்பவன் கண்ணாடி புட்டியைத் தூக்கி உடைக்கிறான். பர்மா சிதறுகிறது. சுட்டுக்கொண்டது யார் யாரை என்ற புதிர் விலகாமல் சொந்த துயரத்திற்காக மீண்டுமொரு மதுப்புட்டி வாங்க நடக்கின்றனர்.

இரவு நீள நீள மயங்கிச் சரிந்த சாயைகளின் நடமாட்டம் ஓய்ந்த பின்பும் வேனல் தெரு விழித்தபடிதானிக்கிறது. என்றோ இந்த நகரையாண்ட வெள்ளைப் பிரபுவின் குள்ளமான சிலையைப் பாருங்கள். அதன் கண்கள்கூட இந்தத் தெருவைப் பார்த்தபடிதானிருக்கின்றன. பிறந்த தேசம் விட்டு கனவுக் கப்பலில் மிதந்தபடி அந்தத் துரை இந்நகரை நன்றாக அறிந்திருந்தான். அந்தச் சிலையின் கீழே உளறுகிறானே ஒருவன் அவன் எதைத்தான் பேசுகிறான் – காதில் விழுகிறதா? என்றோ மழை வெறித்த நாள் ஒன்றில் சிவப்புக் குடையுடன் வந்த இரண்டு சட்டைக்காரப் பெண்கள் கண்ணீர் மல்க, அந்தச் சிலையின் முன்பாக மௌனித்து விட்டு ரோஜா மலர்களை அங்குவிட்டுச் சென்றனரே அன்றும் அவன் அங்கு குடித்துக்கொண்டிருந்தான்.

ரோஜா மலர்கள் வேனல் தெரு மதுக்குடியர்களைப் பேச்சற்றுப் போகச் செய்தது. மதுக் கடைக்காரர்களுக்கு அந்த ரோஜாக்களைப் போல குற்ற உணர்வை ஏற்படுத்தும் அந்தப் பொருளும் இதுவரை உலகில் இருந்ததாக நினைவில்லை. இருபத்தி எட்டு மதுக்கடை சிப்பந்திகளும் ரோஜாக்களை எவராவது எடுத்துப் போய்விட வேண்டும் என ஆசைப்பட்டார்களே அன்றி எவனும் கீழ் இறங்கி அந்த ரோஜாக்களை எடுத்து எறிய இயலவில்லை. பதினாலாம் கடைச் சிப்பந்தி ஒருவன் தன் ஆறு வயது மகள் ஞாபகம் பெரு மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்து வீட்டின் கதவுகளைத் தட்டி முகம் பார்க்க ஆசையுற்றுப் புலம்பினான்.

அவனாலும் இந்த ரோஜாக்களை எடுத்து விடமுடியவில்லைதானே. மூன்று நாட்கள் வரை அதே இடத்தில் காய்ந்து சருகாகிய நிலையில் ரோஜாக்கள் இருந்தன. பின் காற்று அதைத் தன்னோடு கூட்டிப் போனது. காற்றில் மறைந்து விட்ட ரோஜா ஏற்படுத்திய வெறுமை கடைச் சிப்பந்தி ஒருவனுக்குத் தாளாமல், அவன் வீதியின்று அழித்து ஓடி, நகரையே விட்டுப் புலம்பி ஓடுகிறானே அது எதற்காம்? விசித்திரம்தான் மனிதர்களாக உருக்கொண்டு இங்கு வருகின்றதாயென்ன?

மழிக்கப்படாத மயிர் படர்ந்த முகத்துடன் ஒருவன் எல்லா மதுக்கடைகளிலும் இரஞ்சும் குரலில் பணத்தை வைத்துக்கொண்டு கேட்டும், எவரும் இல்லையெனத் தலையாட்டுகிறார்களே தெரிகிறதா? அவனுக்கான மதுப்புட்டிகள் உலகில் இல்லாமல் தீர்ந்து விட்டனவா? அவன் குடிப்பதற்காக எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. அருகில் வந்து அவன் குரலைக் கேளுங்கள். வேறு எதோ ஒரு பொருளிற்காக மன்றாடுகிறான். படர்ந்த மீசையில் கண்ணீர் துளிர்த்து நிற்க அவன் வேதனையுடன் எதைத்தான் கேட்கிறான்? நேற்றுதானோ இல்லை ஒரு வருடத்தின் முன்பாகவோ எதோ ஒரு மதுக்கடையில் அவன் இறந்துபோன மனைவியின் மணநாள் பட்டுப் புடவையொன்றை விற்றுக் குடித்து போயிருக்கிறான். இன்று புடவையின் ஞாபகம் பீறிட, தேடி மீட்டுக் கொள்ள அலைகிறான். அந்தப் புடவையின் ஒரு முனை தீயில் எரிந்து போயிருக்கும் என்பதும் அதைச் செய்தவன் அவன் என்பதையும் யார் அறிவர்? எல்லா மதுக்கடைக்காரர்களும் அவனையறிவர். புடவை என்றில்லை. கடிகாரங்கள், நிலைக்கண்ணாடி என எத்தனையோ விற்றுக் குடித்துப் போயிருக்கிறான்.

அந்தப் புடவையை அடைந்தவன் எக்கடையின் சிப்பந்தி எனத்தான் தெரியவில்i. அவனது பரிதாபம் தாங்காது சக குடிகாரன் ஒருவன் விடாது பேசுகிறான். ஒரு சிப்பந்தி அவனைக் கூப்பிட்டு குடிகாரர்கள் விற்றுப்போன பொருட்களின் சேகர அறையைத் திறந்து காட்டுவதாகக் கூறுகிறான். அந்த அறையினுள் புடவைகள், மரக்கண்ணாடிகள், கடிகாரங்கள், மணல்குடுவைகள், பழம் துப்பாக்கி, இசைத்தட்டுகள், புகை பிடிக்கும் குழல், கோப்பைகள், தைல ஓவியம் எனக் குவிந்து கிடக்கின்றன. தன் மனைவியின் புடவையைத் தேடிச் சலிக்கிறான். என்றோ அடமானத்தில் வைக்கப்பட்டுப் போன சித்திரக்காரனின் இதயம் ஒன்று மிக மெதுவாகத் துடித்துக்கொண்டிருந்தது அறையில். அந்த அறையை விட்டு அகலாது ஆறு நாட்கள் புடவையைத் தேடிக் கொண்டிருந்தான். பின்னொரு நாள் வெளிறிய முகத்துடன் மனைவியின் புடவையை நெருப்பிட்டு எரித்து சாம்பலாக்கிக் குடித்தவன் நானே எனக்கூறி தெருக் கடந்து சென்றான். கடைச் சிப்பந்திகள் அறிந்திருக்கிறார்கள் – குடிகாரர்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதேயில்லை என்பதை.

வேனல் தெரு என்பதே ஒரு கண்ணாடி கூண்டுதான் போலும். இங்கே வருபவர்கள் மதுவால் மட்டும் போதையாடுகிறார்கள் என எவராலும் தீர்க்கமாகச் சொல்ல முடியாது. விசித்திரம் ஒரு மோதிரமென இவர்கள் விரல் சுற்றிக்கொள்ள, உறக்கமற்று எதைத்தான் அழிந்துவிடக் குடிக்கிறார்கள். வாகனங்கள் ஊர்ந்து அலையும் நகர வீதியில் கூக்குரலிட்டு வெறியுடன் ஒருவன் நீட்டுகிற கத்தியின் பரப்பில் வேனல் தெரு உருக்கொண்டு விடுவதைப் பல கண்களும் அறிந்தே கடக்கின்றன. என்றாலும் நண்பர்களே, மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. மீன்கறிகளையும் மிஞ்சிய மதுவையும் குடித்துப் பெருத்த எலிகளின் கூட்டமொன்று தெருவை கருமி பூமியினுள் இழுத்துச் சென்றுவிட முயல்கின்றன. தன் தலைமயிர் நிலத்தில் வேர்விட நூற்றாண்டுகளாக ஒருவன் இத்தெரு நடுவில் வீழ்ந்து உறங்கிக் கொண்டேயிருக்கிறான். அந்த மனிதன் விடுபட்டுப் போன சீன யாத்ரீகர்களில் ஒருவன் எனச் சொன்னால் நம்புவீர்களா நீங்கள்?

காலச்சுவடு-இதழ்19,1997

Oct 25, 2012

புத்தனாவது சுலபம்-எஸ்.ராமகிருஷ்ணன்

அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை.

பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்.

மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் sra343கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள்.  அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல்  என்ன செய்யப்போகிறான் என்று கேட்டபோது பாக்கலாம் என்று பதில் சொன்னான்.

பாக்கலாம் என்றால் என்ன அர்த்தம் என்று கோபமாகக் கேட்டேன்.

பதில் பேசாமல் வெறித்த கண்களுடன் உதட்டைக் கடித்துக் கொண்டே தன் அறைக்குள் போய்விட்டான்.

என்ன பதில் இது.

பாக்கலாம் என்றால் அதை எப்படி எடுத்துக் கொள்வது.

கடந்த ஐந்து வருசமாகவே அருண் வீட்டில் பேசுவதைக் குறைத்துக் கொண்டே வருவதை நான் அறிந்திருக்கிறேன். சில நாட்கள் ஒருவார்த்தை கூடப் பேசியிருக்க மாட்டான். அப்படி என்ன வீட்டின் மீது வெறுப்பு.

எனக்கு அருண் மீதான கோபத்தை விடவும் அவன் பைக் மீது தான் அதிக கோபமிருக்கிறது. அது தான் அவனது சகல காரியங்களுக்கும் முக்கியத் துணை. பைக் ஒட்டிப்போக வேண்டும் என்பதற்காகத் தானோ என்னவோ, தாம்பரத்தை அடுத்துள்ள பொறியியல் கல்லூரியில் படிக்க சேர்ந்து கொண்டான்.

சிலநாட்கள் என் அலுவலகம் செல்லும் நகரப்பேருந்தில் இருந்தபடியே அருண் பைக்கில் செல்வதைக் கண்டிருக்கிறேன். அப்போது அவன் என் பையனைப் போலவே இருப்பதில்லை.  அவன் அலட்சியமாக பைக்கை ஒட்டும் விதமும். தாடி வளர்த்த அவனது முகமும் காண்கையில் எனக்கு ஆத்திர ஆத்திரமாக இருக்கும்.

அருண் சிகரெட் பிடிக்கிறான். அருண் பியர் குடிக்கிறான். அருண் கடன்வாங்குகிறான். அருண் யாருடனோ சண்டையிட்டிருக்கிறான். அருண் அடுத்தவர் சட்டையைப் போட்டுக் கொண்டிருக்கிறான் . உறவினர் வீட்டு திருமணத்திற்கு அருண் வருவதில்லை. அருண் ஒரு பெண் பின்னால் சுற்றுகிறான்.  அருண் காதில் கடுக்கன் போட்டிருக்கிறான். கையில் பச்சை குத்தியிருக்கிறான். தலைமயிரை நிறம் மாற்றிக் கொண்டுவிட்டான். இப்படி அவனைப் பற்றி புகார் சொல்ல என்னிடம் நூறு விசயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் அவனது ஒரே பதில் மௌனம் மட்டுமே

என் வீட்டில் நான் பார்க்கவே வளர்ந்து, நான் பார்க்காத ஆளாக ஆகிக் கொண்டிருக்கிறான் அருண்.

அது தான் உண்மை.

அவனது பதினாறுவயது வரை அருணிற்கு என்ன பிடிக்கும். என்ன சாப்பிடுவான். எதற்குப் பயப்படுவான் என்று நன்றாகத் தெரியும். ஆனால் பதினேழில் இருந்து இன்றுவரை அவனைப்பற்றி கேள்விப்படும் ஒவ்வொன்றும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. சிலவேளைகளில் பயமாகவும் இருக்கிறது.

நான் அனுமதிக்ககூடாது என்று தடுத்துவைத்திருந்த அத்தனையும் என் மகனுக்குப் புசிக்கத் தந்து உலகம் என்னை பரிகாசபபடுத்துகிறதோ.

சில வேளைகளில் குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்றபடியே நீண்ட நேரம் அருண் எதற்காக வெறித்து தன்னைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தத் தருணங்களில் யாரோ அந்நியன் நம் வீட்டிற்குள் வந்துவிட்டது போல எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா. சாப்பாட்டுத் தட்டின் முன்னால் உட்கார்ந்த வேகத்தில் பாதி இட்லியைப் பிய்த்து விழுங்கிவிட்டு எழுந்து போய்விடும் அவனது அவசரத்தின் பின்னால் என்னதானிருக்கிறது.

ஒருநாள்மாலையில் வீட்டின் முன்னால் உள்ள இரும்புக்கதவைப் பிடித்துக் கொண்டு இரண்டுமணிநேரம் யாருடனோ போனில் பேசிக் கொண்டேயிருப்பதை பார்த்தேன். எதற்காக இப்படி நின்று கொண்டே போனில் பேசுகிறான். இவன் மட்டுமில்லை. இவன் வயது பையன்கள் ஏன் நின்று கொண்டேயிருக்கிறார்கள். உட்கார்ந்து பேசவேண்டும் என்பது கூடவா தோன்றாது.

அருண் போனில் பேசும் சப்தம் மற்றவருக்குக் கேட்காது. வெறும் தலையசைப்பு. முணங்கல். ஒன்றிரண்டு ஆங்கிலச்சொற்கள் அவ்வளவு தான். எதற்காக போனில் ஆங்கிலத்திலே பேசிக் கொள்கிறார்கள். ரகசியம் பேசத் தமிழ் ஏற்ற மொழியில்லையா,

சில நேரம் இவ்வளவு நேரமாக யாருடன் பேசுகிறான் என்று கேட்கத் தோன்றும்.  இன்னொரு பக்கம், யாரோ ஒருவரோடு போனில் இரண்டுமணி நேரம் பேசமுடிகின்ற உன்னால் எங்களோடு ஏன் பத்து வார்த்தைகள் பேசமுடியவில்லை என்று ஆதங்கமாகவும் இருக்கும்,

உண்மையில் இந்த ஆதங்கங்கள், ஏமாற்றங்களை எங்களுக்கு உண்டாக்கிப் பார்த்து அருண் ரசிக்கிறான் என்று கூட நினைக்கிறேன்

பள்ளிவயதில் அருணைப்பற்றி எப்போதுமே அவனது அம்மா கவலைப்பட்டுக் கொண்டேயிருப்பாள். நான் அதிகம் கவலைப்பட்டதேயில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த நாளில் இருந்து நான் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கிறேன். அவனது அம்மா கவலைப்படுவதை நிறுத்திவிட்டாள்.

மிகுந்த ஸ்நேக பாவத்துடன், அவனது தரப்பு நியாயங்களுக்காக என்னோடு சண்டையிடுகின்றவளாக மாறிப்போய்விட்டாள். இது எல்லாம் எப்படி நடக்கிறது, இல்லை இது ஒரு நாடகமா.

ஒருவேளை நான் தான் தவறு செய்கிறேனா என்று எனக்குச் சந்தேகமாகவும் இருக்கிறது.

முந்தைய வருசங்களில் நான் அருணோடு மிகவும் ஸ்நேகமாக இருந்திருக்கிறேன். ஒன்றாக நாங்கள் புட்பால் ஆடியிருக்கிறோம். ஒன்றாகச் சினிமாவிற்குப் போயிருக்கிறோம். ஒன்றாக ஒரே படுக்கையில் கதைபேசி சிரித்து உறங்கியிருக்கிறோம்.

என் உதிரம் தானே அவனது உடல், பிறகு எப்படி இந்த இடைவெளி உருவானது.

வயதால் இரண்டு பேரின் உறவைத் துண்டித்துவிட முடியுமா என்ன?

என்ன காரணமாக இருக்கும் என்று ஏதேதோ யோசித்திருக்கிறேன்.

திடீரென ஒரு நாள் ஒரு உண்மை புரிந்தது.

உலகில் உள்ள எல்லா இருபது வயது பையன்களுக்கும் வரும் வியாதி தான் அருணையும் பிடித்திருக்கிறது. அதை நான் ஒருவன் சரிசெய்துவிட முடியாது .

அதை வியாதி என்று சொல்வது அவர்களுக்குக் கோபமூட்டும்.

அவர்கள் அதை  ஒரு உண்மை. ஒரு விடுதலை.  ஒரு ஆவேசம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஏதோவொரு எழவு அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பிரச்சனையை பற்றி என்னைப்போலவே உடன் வேலை செய்யும் பிற ஊழியர்களும்  கவலைபடுகிறார்கள். சந்தானமூர்த்தி தனது கல்லூரியில் படிக்கும் மகன் கழிப்பறைக்குள் போனால் வெளியே வர இரண்டு மணி நேரமாகிறது. என்ன தான் செய்வான் எனத் தெரியவில்லை என்று புலம்புவதைக் கேட்கையில் எனக்கு உண்மையில் சற்று ஆறுதலாகவே இருக்கிறது,  என்னைப் போலவே பல தகப்பன்களும்  இதே மனக்குறையிலே தானிருக்கிறார்கள்.

நான் மற்றவர்களைப் போல எனது மனக்கவலையை அதிகம் வெளியே காட்டிக் கொள்கின்றவனில்லை. நானும் பிகாம் படித்திருக்கிறேன். கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியில் சிறப்பு பயிற்சி முடித்து பால்வளத்துறையில் வேலை செய்கிறேன்.  பதவி உயர்விற்காக தபாலில் தமிழ் எம்ஏ கூடப் படித்திருக்கிறேன். கடந்தபத்து வருசமாகவே வள்ளலாரின் திருச்சபையில் சேர்ந்து  தானதரும காரியங்களுக்கு உதவி செய்கிறேன். இந்த நற்குணங்களில் ஒன்றைக் கூட ஏன் அருண் கைக்கொள்ளவேயில்லை. ஒருவேளை இவை எல்லாம் அர்த்தமற்றவை தானா. நான் தான் அதைப் புரிந்து கொள்ளாமல் சுமந்து திரிகின்றேனா

நான் படிக்கின்ற காலத்தில் ஒன்றிரண்டு பேர் குடிப்பதும் ஊர்சுற்றுவதும் பெண்களை தேடிப்போவதுமாக இருந்தார்கள் என்பது உண்மை தான். அன்றைக்கு ஊருக்குப் பத்து பேர் அப்படியிருந்தார்கள். இன்று ஊரில் பத்து இளவட்டங்கள் ஒழுக்கமாக இருந்தால் அபூர்வம். இதெல்லாம் எனக்கு தோன்றுகின்றன புகார்களா அல்லது இது தான் உண்மையா,

இது போன்ற விசயங்களைத் தொடர்ச்சியாக யோசிக்க ஆரம்பித்தால் எனக்கு ரத்தக்கொதிப்பு வந்துவிடுகிறது. உண்மையில் இது என்னுடைய பிரச்சனை மட்டுமில்லை. ஆனால் என் பிரச்சனையாகவும் இருக்கிறது.

நான் படித்து முடித்தவுடனே திருமணம் செய்து  கொண்டுவிட்டேன். உண்மையை சொல்வதாக இருந்தால் எனது இருபத்திநாலாவது வயதில் அருண் பிறந்து ஒன்றரை வயதாகி விட்டான். ஆனால் அருண் இன்னமும் வேலைக்கே போகவில்லை.  ஏன் இவ்வளவு தாமதப்படுத்துகிறான்.  ஏன் இவ்வளவு மெதுவாக, வாழ்க்கையின் மீது பற்றே இல்லாமல் நடந்து கொள்கிறான். இது தான் இன்றைய இயல்பா.

ஒருவேளை நான் தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல் வண்டிவண்டியாக புகார்களோடு அலைந்து கொண்டேயிருக்கிறேனா.  அப்படியே இருந்தாலும் என் புகார்களில் உள்ள நியாயம் ஏன் மறுக்கபடுகிறது

இந்த இரவில் கூட படுக்கையில் படுத்தபடியே அருண் எங்கே போயிருக்ககூடும் என்று நானாக எதை எதையோ யூகித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னை உறங்கவிடாமல் செய்கிறது. கற்பனையான பயத்தை உருவாக்குகிறது. அதை ஏன் அருண் புரிந்து கொள்ள மறுக்கிறான்.

இந்த நேரம் அருண் என்ன செய்து கொண்டிருப்பான். நிச்சயம் என்னைப்பற்றிய நினைவே இன்றி எங்காவது உறங்கிக் கொண்டிருப்பான். யாரையும் பற்றி நினைக்காமல் எப்படி ஒரு ஆளால் வாழ முடிகிறது. அதுவும்  ஒரே வீட்டிற்குள் இருந்து கொண்டு மற்றவர்களைப் பற்றி எப்படி கவலைப்படாமல் இருக்க முடிகிறது.

அருண் எங்களோடு தானிருக்கிறான். ஆனால் எங்கள் வீட்டிற்குள் அவனுக்காக ஒரு தனித்தீவு ஒன்று இருப்பதை  போலவே நான் உணர்கிறேன். அங்கே அவனது உடைகள் மட்டுமே காயப்போடப்பட்டிருக்கின்றன. அவனது பைக் நிற்கிறது. அவனது லேப்டாப் ஒடிக் கொண்டிருக்கிறது. அவன் வாங்கி வளர்க்கும் ஒரு மீன்குஞ்சு மட்டுமேயிருக்கிறது. வேறு ஒரு மனிதருக்கு அந்த்த் தீவில் இடம் கிடையாது. டேபிள் வெயிட்டாக உள்ள கண்ணாடிக் கோளத்தினுள் உள்ள மரத்தை, எப்படி நாம் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் கையால் தொட முடியாதோ அப்படியான ஒரு இடைவெளியை, நெருக்கம் கெர்ளளவே முடியாத சாத்தியமின்மையை அருண் உருவாக்கி வைத்திருக்கிறான்.

அப்படி இருப்பது எனக்கு ஏன் பிடிக்கவேயில்லை, நான் அவனை கண்காணிக்க விரும்புகிறேனா,

இது அருண் பற்றிய பிரச்சனை மட்டுமில்லை,

பைக் வைத்துள்ள எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே தானிருக்கிறார்கள்

அருணிற்கு பைக் ஒட்ட யார் கற்றுக் கொடுத்தது.

அவனாகவே கற்றுக் கொண்டான்.

பதினோறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அவன் பைக்கில் போவதைக் கண்டேன். அவன் பின்னால் ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். ஒருகையை காற்றில் அசைத்தபடியே  அவன் மிக வேகமாக பைக் ஒட்டிப்போவதைப் பார்த்தேன். அன்று வீட்டில் பெரிய சண்டையே நடந்தது.

உனக்கு ஏது பைக். யாரு பைக் ஒட்டக் கற்றுக் கொடுத்தது. அது யாருடைய பைக் என்று கத்தினேன். அருண் அதற்குப் பதில் சொல்லவேயில்லை.  அவன் ஒரேயொரு கேள்விமட்டுமே கேட்டான்

பைக் ஒட்டுனா தப்பா

பைக் ஒட்டுவது தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை.

ஆனால் எனது உள்மனது தப்பு என்று சொல்கிறது. காரணம் பைக் என்பது ஒரு வாகனமில்லை. அது ஒரு சுதந்திரம். அது ஒரு சாகசம்.  அப்பாவிற்கும் மகனுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் ஒரு சாதனம். அப்பாவைச் சீண்டி விளையாட மகன் கண்டுபிடித்த ஒரு தந்திரம்.

அந்த வாகனத்தை எனக்குப் பிடிக்கவேயில்லை. ராணுவத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கபட்டது தான் பைக் என்கிறார்கள். ஆனால் அது எப்படியோ பிரபலமாகி இன்று என் வீடு வரை பிரச்சனையாகியிருக்கிறது.

இந்த நகரில் பைக்கில் செல்லும் எல்லா இளைஞர்களும் ஒன்று போலவே நடந்து கொள்கிறார்கள்.  சாலையில் செல்வதை மகத்தான ஒரு சாகசம் என்றே நினைக்கிறார்கள். பலநேரங்களில் எனக்குத் தோன்றுகிறது பைக்கில் சாலையில் செல்லும் இளைஞனுக்கு அவனைத் தவிர வேறு மனிதர்கள், கண்ணில்படவே மாட்டார்கள். எந்த ஒசையும் கேட்காது. மொத்தச் சாலையும் வெறுமையாகி அவன் மட்டுமே செல்வது போன்று தோன்றும் போல.

அதிலும் பைக்கில் செல்லும் போதே செல்போனில் பேசிக் கொண்டு போகும் இளைஞர்களைக் காணும்போது என்னால் ஆத்திரத்தைக் கட்டுபடுத்தவே முடியவேயில்லை. அப்படி என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்று மனம் பதைபதைக்கிறது. ஆனால் அவர்கள் முகத்தில் பதற்றத்தின் ஒரு துளி கூட இருக்காது. திடீரென அவர்களுக்குக் கூடுதலாக இரண்டு கைகள் முளைத்துவிட்டது போலவே நடந்து கொள்கிறார்கள்.

அருண் பைக் ஒட்டவே கூடாது என்று கண்டிப்பாக இருந்தேன்.

அப்படி நான் சொல்வதற்குக் காரணம் விபத்து குறித்த பயம் என்று ஒரு பொய்யை சொல்லி என் மனைவியை நம்ப வைத்தேன்.

உண்மையில் நான் பயந்த காரணம் ஒரு பைக் என்பது என் வீட்டிற்கும் இந்த பரந்த உலகிற்குமான இடைவெளியை குறைத்துவிடும். வீட்டிலிருந்து பையனை முடிவில்லாத உலகின் வசீகரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டுபோய்விடும் என்று பயந்தேன்

ஆனால் அருண் பைக் ஒட்டுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

ஒருவேளை நான் திட்டுவதையும் கண்டிப்பதையும் செய்யாமல் போயிருந்தால் பைக் ஒட்டுவதில் அக்கறை காட்டாமல்  போயிருப்பானோ என்னவோ

.இல்லை ,, இது  சுயசமாதானம் செய்து கொள்கிறேன்.  அது உண்மையில்லை.

பைக் என்பது  ஒரு விஷப்பாம்பு

அது எல்லா இளைஞர்களையும் அவர்களது இருபது வயதைத் தாண்டும் போது கடித்துவிடுகிறது. அதன் விஷம் பத்து ஆண்டுகளுக்காகவாவது உடலில் இருந்து கொண்டேதானிருக்கும். அந்த விஷமேறிய காலத்தில்  பைக் மட்டும் தான் அவர்களின் உலகம். அதைத் துடைப்பதும் கொஞ்சுவதும் பராமரிப்பதும் கோவித்துக் கொள்வதுமாகவே இருப்பார்கள்.

அருணிற்கும் அப்படிதான் நடந்தது.

அவன் பனிரெண்டாம் வகுப்பு முடித்த கோடை விடுமுறையில்  நாமக்கல்லில் உள்ள அவனது மாமா வீட்டிற்கு போய்விட்டு புதுபைக்கிலே சென்னைக்குத் திரும்பியிருந்தான். காலேஜ் போய்வருவதற்காக  மாமா புது பைக் வாங்கி தந்ததாக சொல்லியபடியே பைக்கை துடைத்துக் கொண்டிருந்தான்.

உனக்கு லைசன்ஸ் கிடையாது. நாமக்கல்லில் இருந்து ஏன் பைக்கில் வந்தே. வழியில் லாரியில் அடிபட்டு இருந்தா என்ன செய்வது என்று நான் கத்திக் கொண்டிருந்த போது அவன் மௌனமாக ஒரு குழந்தையின் காதைத் டர்க்கித்துண்டால் பதமாக துவட்டுவது போல மிருதுவாக பைக்கை துடைத்துக் கொண்டேயிருந்தான்.

அதன்பிறகு அவனாக லைசன்ஸ் வாங்கிக் கொண்டான். நாளடைவில் அந்த பைக்கை தனது உடலின் இன்னொரு உறுப்பைப் போல மாற்றிக் கொண்டுவிட்டான்.

சிலநாட்கள் காலை ஆறுமணிக்கு அவசரமாக எழுந்து பைக்கில் வெளியே போய்விடுவான்.

எங்கே போகிறான். யார் இந்த நேரத்தில் அவனை வரவேற்க்க் கூடியவர்கள்.

பைக்கில் சாய்ந்து கொண்டுநின்றபடியே பேசுவதும், பைக்கில் ஏறி உட்கார்ந்து தேநீர் குடிப்பது என்று பைக்கில்லாமல் அவன் இருப்பதேயில்லை. அதற்கு எவ்வளவு பெட்ரோல் போடுகிறான். அதற்கு பணம் எப்படிக் கிடைக்கிறது. எதற்காக இப்படி பைக்கில் வெயிலேறச் சுற்றியலைய வேண்டும், எதற்கும் அவனிடமிருந்து பதில் கிடையாது.

அவனது அம்மாவிற்கு அருண் பைக் ஒட்டுவது பிடித்திருக்கிறது. அவள் பலநேரங்களில் அருண் பின்னால் ஏறி உட்கார்ந்துகொண்டு கோவிலுக்குப் போகிறாள். ஒயர்கூடை பின்னும் பொருள் வாங்கப் போகிறாள். அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே போகிறார்கள். ஆனால் என்னால் அப்படி பைக்கில் போக முடியாது. ஒருநாள் என்னை அலுவலகத்திற்கு பைக்கில் கொண்டுவந்து விட்டபோது கூட அவன் இயல்பாக பைக் ஒட்டவில்லை என்றே பட்டது.

அருண் உடலுக்குள் ஒரு கழுகு இருக்கிறது என்பதை ஒரு நாள் நான் கண்டுபிடித்தேன். அந்த கழுகு அவனுக்குள் மட்டுமில்லை. எல்லா இருபது வயதைக்கடந்த பையன்களுக்குள்ளும் இருக்கவே செய்கிறது. அது வீட்டை விட்டு வெளியேறி மிக உயரமான இடம் ஒன்றுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு, தனியாக உலகை வேடிக்கை பார்க்க விரும்புகிறது. தானும் மற்றவர்களும் ஒன்றில்லை என்று சொல்லத் துடிக்கிறது. தன்னால் மற்றவர்களால் செய்ய முடியாத ஒன்றை அடையமுடியும் என்று காட்ட முயற்சிக்கிறது.

வேட்டையை விடவும் கழுகுகள் உலகை வேடிக்கை பார்க்கத் தான் அதிகம் விரும்புகின்றன. அதிலும் தன் அகன்ற சிறகை அடித்துக் கொண்டு யாரும் தொடவே முடியாத உயரத்தில் ஏறி நின்று உலகைக் காண்பதில் ஆனந்தம் கொள்கின்றன. அதில் ஏதோ ஒரு இன்பமிருக்கிறது. ஏதோ ஒரு அலாதியிருக்கிறது போலும்.

அந்த கழுகின் ரெக்கைகள் அருணிற்குள்ளும் படபடப்பதை நான் அறியத் துவங்கினேன். அதன் சிறகடிப்பு ஒசை என் முகத்தில் படுவதை நன்றாகவே உணர்ந்தேன்.  எனக்குப் பயமாக இருந்தது. இந்தகழுகு அவனை  திசைதவறிக் கூட்டிக் கொண்டு போய் அலைக்கழிக்கும் என்று பயந்தேன். ஆனாலும் தடுக்க வழியில்லாமல் பார்த்துக் கொண்டேதானிருந்தேன்

உண்மையில் அந்தக் கழுகு தான் அவனது பைக்கின் வடிவம் கொண்டுவிட்டிருக்கிறது

சில சமயங்களில் ஒருவார காலம் அருண் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி போய்விடுவான். எங்கே போயிருக்கிறான் என்று கேட்டால் என் மனைவி பிரண்ட்ஸைப் பார்க்கப் போயிருப்பான் என்று சொல்வாள்.

பையன்களுக்காக பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி. பையன்கள் வளர வளர வீட்டில் உள்ள அப்பா அம்மாவைப் பிரிக்கத் துவங்குகிறார்கள்.  அல்லது பிள்ளைகளின் பொருட்டு பெற்றவர்கள் சண்டையிட்டு மனக்கசப்பு கொண்டுவிடுகிறார்கள்.

பெரும்பான்மை நாட்கள் அருண் நள்ளிரவுக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்து வீட்டின் இரும்புக்கதவை தள்ளி திறக்கும் ஒசையை கேட்டிருக்கிறேன். எங்கே போய்விட்டுவருகிறான் கேட்டு சண்டைவந்தது தான்மிச்சம்.

எவ்வளவு முறை கேட்டாலும் பதில் சொல்லவும் மாட்டான். நேராக அவன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டுவிடுவான். வீட்டில் இரவு சாப்பிடுவதும் இல்லை.

நள்ளிரவுக்கு பின்பு வந்தாலும் அவன் பாட்டுக்கேட்க மறப்பதேயில்லை. அதுவும் சப்தமாகவே பாட்டுகேட்கிறான். வீட்டில் நானோ அவனது அம்மாவோ, த்ஙகையோ இருப்பதை முழுமையாக மறந்துவிட்டவனைப்போலவே நடந்து கொள்கிறான்.

அருண் சப்தத்தை குறைச்சிவச்சிக்கோ என்று படுக்கையில் இருந்தபடியே அவன் அம்மா சொல்லுவாள். நான் சொன்னால் அதையும் கேட்கமாட்டான்

ஆனால் அம்மா சொல்வதற்காக சப்தத்தை குறைக்காமல் கதவை மூடிவைத்துக் கொள்ளுவான். அவனால் உரத்த சப்தமில்லாமல் பாடல்களைக் கேட்க முடியாது. அதுவும் அவனது பிரச்சனையில்லை.  எல்லா பதின்வயதுபையன்களும் இந்த விசயத்தில் ஒன்று போலதானிருக்கிறார்கள்.

அவர்கள் கேட்கும்பாடல்களில் ஒருவரி கூட என்னை ஈர்ப்பதில்லை. ஒரே காட்டுக்கத்தல்.

எனக்கு கர்நாடக ச்ங்கீதம் மற்றும் திரையிசைப்பாடல்களில் விருப்பம் உண்டு. படிக்கின்ற காலத்தில் ரிக்காடு பிளேயரில் நிறையக் கேட்டிருக்கிறேன். இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கறுப்பு வெள்ளைப் பாடல்களை விடாமல் கேட்கிறேன். ஆனால் அருண் உலகில் கறுப்பு வெள்ளைக்கு இடமே கிடையாது.

அவன் எட்டாம்வகுப்பு படிக்கையில் ஒருநாள் டிவியில் பாசவலை என்ற பழைய படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. நான் மிக ஆர்வமாகப்  பார்த்துக்கொண்டிருந்தேன். என் அருகில் வந்து எப்படிப்பா இதை எல்லாம் பாக்குறீங்க என்று கேட்டான்.

நல்லா இருக்கும் அருண், கொஞ்ச நேரம் பாரு என்றேன்.

அவன் என்னை முறைத்தபடியே உங்களுக்கு டேஸ்டேயில்லைப்பா  என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு போனவன் இரவு வரை வீடு திரும்பவேயில்லை.

இப்போது அவ்வளவு நேரடியாக என்னிடம் பதில் சொல்வதில்லை. ஆனால்  என்னைப்பற்றி அதே அபிப்ராயத்தில் தானிருக்கிறான்.

அவன் கேட்கும்பாடல்களை விடவும் அந்த தலைவிரிகோலமான பாடகர்களை எனக்குப் பிடிப்பதேயில்லை. கறுப்பன் வெள்ளை என்று பேதமில்லாமல் அசிங்கமாக இருக்கிறார்கள். ஒருவன் கூட ஒழுங்கான உடை அணிந்திருப்பதில்லை. அடர்ந்து வளர்ந்த தலைமயிர். கோரையான தாடி, வெளிறிப்போன உதடுகள். கையில் ஒரு கிதார். அல்லது கீபோர்ட். உடலுக்கு பொருத்தமில்லாத உடைகள்.  போதையில் கிறங்கிப்போன கண்கள் .

ஒருவேளை இப்படி இருப்பதால் தான் அவர்களின் பாடல்களை இந்த பதின்வயது பையன்களுக்கு பிடிக்கிறதா, அதைப் பாடல் என்று சொல்வது கூட தவறு. கூச்சல். கட்டுப்பாடற்ற கூச்சல்.

அந்தக் கூச்சலின் உச்சத்தில் யாரோ யாரையோ கொல்வது போலிருக்கிறது. அல்லது காதலின் துயரத்தை தாங்கிக் கொள்ளவே முடியாதது போல ஒரு பொய்யான பாவனையில் ஒருவனோ ஒருத்தியோ கதறிகதறிப்பாடுகிறாள். அதைக் கையில் ஒரு சிகரெட்டுடன் கேட்டு அருணும் சேர்ந்து கண்ணீர்வடிக்கிறான்.

ஏன் அருண் இப்படியிருக்கிறான்  என்று  எரிச்சலாக இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி பேசினால் எனக்கு ரசனையில்லை என்பான்.

சில வேளைகளில் அவன் சொல்வது உண்மை என்றும் கூட தோன்றியிருக்கிறது. ஒரு நாள் அவன் அறையைக் கடந்து போகையில்  கசிந்துவந்த ஒரு பெண் குரல் பாடலே இல்லாமல் உன்மத்தம் பிடித்தவள் போல ஒரே வார்த்தையை ‘ஹம்பண்ணிக் கொண்டேயிருந்ததை கேட்டேன்

மொத்தமாக ஒரு நிமிசம் தான் கேட்டிருப்பேன். ஆனால் தேள்கொட்டியது போல ஒரு கடுகடுப்பு உருவானது. அடுத்த நிமிசத்தில் கடுமை உருமாறி எல்லையில்லாத ஆனந்தமாகி அந்த ஹம்மிங்கை மனதிற்குள்ளாகவே  வைத்துக் கொண்டேயிருந்தேன்.

பின்பு நாலைந்துநாட்களுக்கு அந்த ஹம்மிங்  என் மண்டைக்குள் ஒடிக்கொண்டேயிருந்தது. அந்த பெண் எதற்காக இவ்வளவு துயரத்தோடு பாடுகிறாள். அவளது அப்பா அம்மா யார். அவர்கள் இவளை எப்படிப் பாட அனுமதிக்கிறார்கள். தாடிவைத்த கஞ்சா புகைக்கும் இந்த இசைக்கலைஞர்களின் அப்பாக்களும் அவர்களுடன் என்னைப் போலவே சண்டை போட்டுக் கொண்டுதானிருப்பார்களா.

இந்த உலகில் காதலை தவிர வேறு எதற்காகவாவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன.  அப்படி என்ன இருக்கிறது காதலில்.

ஒரு பெண்ணின் தேவை என்பது உடற்பசியோடு சம்பந்தபட்ட ஒன்று தானே.

அதற்கு எதற்கு இத்தனை பொய்பூச்சுகள், பாவனைகள்.

இந்த உலகில்காதலைப்பற்றி மித மிஞ்சிய பொய்கள் நிரம்பியிருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் அந்தப் பொய்களை வளர்த்தெடுப்பதில் தனது பெரும்பங்கை அளிக்கிறது. பெண்கள் எல்லாம் ஏதோ வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள் என்பது போல எதற்காக இவ்வளவு வியப்பு.  பிரமிப்பு,

இந்த பயல்களை ஒரு நாள் பிரசவ விடுதிக்குள் கொண்டுபோய்விட்டுவந்தால் இந்த மொத்த மயக்கமும் தெளிந்துபோய்விடும் என்று தோன்றுகிறது.

நான் இப்படி எல்லாம் யோசிப்பதற்கு வயதாகிவிட்டது தான் காரணம் என்று என் மனைவியே  சொல்கிறாள். எனக்கு மட்டும் தான் வயதாகிறதா என்ன. அவளுக்கும் வயதாகிறது.

நான் குடியிருக்கும் இந்த நகருக்கு வயதாகிறது.

நான் பேருந்தில் கடந்து போகிற கடலுக்கு வயதாகிறது.

ஏன் தலைக்கு மேலே இருக்கிற சூரியனுக்கும் நிலாவிற்கும் கூட தான் வயதாகிறது.

வயது அதிகமாக அதிகமாக நம்மைப் பற்றி  முதுக்குப் பின்னால் பலரும் கேலி செய்வது அதிகமாகிக் கொண்டே தான் போகிறது.

உண்மையில் எனக்கு அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை. ஐம்பத்தியொன்று தான் நடக்கிறது. ஒருநாள் பேப்பரில் படித்தேன். இத்தாலியில் ஒரு ஐம்பது வயது  ஆள் திடீரென மலையேறுவதில் ஆர்வம் வந்து ஒவ்வொரு மலையாக ஏறி இறங்கி முடிவில் தனது அறுபத்திரெண்டுவயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிவிட்டான் என்று.

நான் அந்தவகை ஆள்இல்லை. எனக்கு புதிதாக ஆசைகள் உருவாவதேயில்லை. இருக்கின்ற ஆசைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை உண்மையில் சலிப்பாகவே இருக்கிறது. வாழ்ந்து நான் அடைந்த சலிப்பை அருண் ஏன் இருபத்திநாலு வயதில் அடைந்திருக்கிறான். எப்படி ஒருவனால் மௌனமாக லேப்டாப் முன்பாகவே பலமணிநேரங்கள்  இருக்க முடிகிறது. ஏன் அலுக்கவே மறுக்கிறது

எனக்கு அருணை நினைத்தால் பயமாக இருக்கிறது.  ஆனால் அவனது அம்மா அந்த பயத்திலிருந்து எளிதாக விடுபட்டுவிட்டாள்.  பெண்களால் நெருக்கடியை எளிதாக சந்தித்து கடந்து போய்விட முடிகிறது, எப்படி என்ன சூட்சும்ம் அது.

எனக்கு உறக்கம் வரவில்லை. விடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கிறது. உலகின் இன்னொரு பகுதியில் இந்நேரம் விடிந்திருக்கும். யாரோ ஒரு பையன் வீட்டிலிருந்து பைக்கில் கிளம்பியிருப்பான். யாரோ ஒரு தகப்பன் அதைபற்றிய புகாரோடு வெறித்து பார்த்தபடியே நின்று கொண்டிருப்பான், அந்த்த் தகப்பனைப் பற்றி நினைத்தால் எனக்குத் தொண்டையில் வலி உண்டாகிறது.

என்னால் இனிமேல் உறங்க முடியாது.

விடியும் வரை என்ன செய்வது என்றும் தெரியவில்லை. எதற்காக நான் படுக்கையில் கிடக்க வேண்டும்.  இப்போதே எழுந்து சவரம் செய்து கொள்ளப் போகிறேன்

எனக்கு வயதாகிறது என்கிறார்கள். ஆமாம். கண்ணாடி அப்படித்தான் காட்டுகிறது.

முகத்தில் முளைத்துள்ள நரைமயிர்கள் என்னைப் பரிகசிக்கின்றன.

நான் ஒரு உண்மையை உங்களிடமிருந்து மறைக்கிறேன். நானும் இளைஞனாக இருந்த போது இதே குற்றசாட்டுகளை சந்தித்திருக்கிறேன், நானும் பதில் பேசாமல் வீட்டை விட்டு போயிருக்கிறேன், இன்றும் அதை நான் நன்றாகவே உணர்ந்திருக்கிறேன். எனக்குத் தோன்றுகிறது

இருபது வயதில் பையன்கள் இலவம்பஞ்சைப்போல எடையற்று போய்விடுகிறார்கள். காற்றில் மிதந்து திரிவது தான் சுபாவம் என்பது போலிருக்கிறது அவர்களின் செயல்கள்.

யாருக்காவும் எதற்காகவும் இல்லாத பறத்தல் அது.

அப்படி இருப்பது தான் இயல்பு என்பது போல அலைந்து திரிகிறார்கள்.

இலவம்பஞ்சு ஒரு போதும் பள்ளதாக்கைக் கண்டு பயப்படுவதில்லை.  பாறைகளைக் கண்டு ஒதுங்கிக் கொள்வதுமில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டு பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. அது தான் உண்மை. எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு தகப்பனாக அதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தகப்பன் ஆகும் நாளில் இதை உணர்வீர்கள்.

நான் நிறைய குழம்பிபோயிருக்கிறேன்.

எனது பயமும் குழப்பமும் முகமெங்கும் படிந்துபோயிருக்கிறது. தண்ணீரை வைத்துக் கழுவிக் கொள்வதால் பயமும் குழப்பமும் போய்விடாது என்று எனக்குத்தெரியும்

ஆனால் என்னால் இதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதே.

**
கணையாழி ஏப்ரல் 2011

Mar 4, 2012

ந.முத்துசாமி உடல் மொழியின் நாடகம் - எஸ்.ராமகிருஷ்ணன்

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது சாமுவேல் பெக்கட்டின் வெயிட்டிங் பார் கோதோ வாசித்தேன். அதுவரை நவீன நாடகம் என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அந்த நாடகம் வாசிப்பதற்கு மிகுந்த ஆர்வமுடையதாக இருந்தது. அதை எப்படி மேடையேற்றியிருப்பார்கள் என்பதைப் பற்றி எனது பேராசிரியர்களில் ஒரு வரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் லண்டனில் நடந்த நாடகவிழா ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கோதோ நாடகத்தின் வீடியோவைக் காண்பதற்குத் தந்தார்.

நான் வாசித்த பிரதிக்கும் நிகழ்த்தபட்ட நாடகத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி 2006041100010101 இருந்தது. நிகழ்த்தப்படும் வெளி மற்றும் நடிகர்களின் உடல்மொழி மற்றும் காட்சிகளின் பின்புல இசை யாவும் அந்த நாடகத்தை ஒரு கனவு நிலைப்பட்டதாக மாற்றியிருந்தது.  பிரதியை அப்படியே மேடையேற்றுவது அல்ல நாடக இயக்குனரின் வேலை. பிரதியிலிருந்து தனக்கான நாடகமொழியை உருவாக்கிக் கொள்வதுதான் நவீன நாடகத்தின் பிரதான பணி என்று பேராசிரியர் சொன்னபோது எனக்கு அது புரியவில்லை.

அந்நாள்வரை நான் கண்டிருந்த மேடை நாடக வடிவம் முற்றிலும் கலைந்து போய் நடிகர்களின் உடல் மொழியும் நவீன நிகழ்த்து வெளியும் உரையாடும் பாங்கும் தீவிரமாகப் பற்றிக் கொண்டது. என்ன வகை நிகழ்த்துதல் இது. ஏன் தமிழில் இப்படியான நாடகங்கள் நடத்தப்படுவதில்லை. கோதோவை மொழியாக்கம் செய்து இதே போல நிகழ்த்தினால் என்னவென்று அதன் பிந்தைய நாட்களில் தோன்றிக்கொண்டிருந்தது. பத்து நாட்களுக்குள் கோதோவை மொழியாக்கம் செய்துவிட்டேன். ஆனால் அதை எப்படி நிகழ்த்தவது என்பதைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

நான் அறிந்த இலக்கிய நண்பர்கள் எவரும் அன்று நவீன நாடகம் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை. சில மாதங்களுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு பெக் கெட்டை மறந்து வழக்கம் போல  நாவல், அபுனைவுக் கட்டுரைகள் என்று வாசிப்பதை நோக்கி நகர ஆரம்பித்தேன். ஆனால் மனதில் பெக்கெட்டின் வரிகள் மற்றும் நிகழ்காட்சிகள் இருந்து கொண்டேயிருந்தது.

அதன் சில ஆண்டுகளுக்கு பின்பு மதுரையில் தற்செயலாக பேராசிரியர் மு.ராமசாமி ஏற்பாடு செய்திருந்த எட்வர்ட் ஆல்பியின் ஜர் ஸ்டோரி என்ற நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. என் மனதிலிருந்த  பெக்கெட் திரும்பவும் விழித்துக் கொண்டுவிட்டார். அந்த நாட்களில்  மதுரையில் சுதேசிகள் என்ற பெயரில் தமிழ்த் துறையில் பயின்ற சுந்தர்காளி ஒரு குழுவை உருவாக்கியிருந்தார். அவர்களுடன் சேர்ந்து நவீன நாடகம் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் துவங்கினேன்.

விஜய் டெண்டுல்கர், ஹெரால்ட் பைண்டர், ஐயனெஸ்கோ, டென்னஸி வில்லியம்ஸ்,  லூயி பிராண்டலோ,  ஆர்தர் மில்லர், ஒநில், பிரெக்ட், செகாவ், ஜெனே, லோர்க்கா, இப்சன் எட்வர்ட் பாண்ட், வோலே சோயிங்கா என்று நூலகத்தில் கையில் கிடைத்த நாடகப்பிரதிகளை மிகுந்த தீவிரத்தோடு வாசிக்க ஆரம்பித்தேன்.

தமிழில் அப்படி யாருடைய நாடகமாவது இருக்கிறதா என்று தேடியலைந்த போது பழைய ஷேக்ஸ்பியர் பிரதிகள், மற்றும் சங்கரதாஸ் சுவாமிகளின் மரபு நாடகப்பிரதிகள் இருந்தனவேயன்றி நவீன நாடகப்பிரதிகள் எதுவும் காணப்படவில்லை.

அறிந்த நண்பர்களிடம் கேட்டபோது அவர்களும் அப்படி நவீன நாடகப்பிரதி எதுவும் வெளியாகி இருப்பது போல அறியவில்லை என்றார்கள். அந்த நாட்களில்தான் ந. முத்துசாமியின் பெயரைக் கேள்விபட்டேன். நடை இதழில் முத்துசாமியின் காலம் காலமாக வெளி வந்து மிகுந்த கவனத்தைப் பெற்றது என்பதையும் அவரது நாற்காலிக்காரர், சுவரொட்டி நாடகங்களையும் பற்றி நண்பர்கள் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

நீர்மை எழுதிய முத்துசாமியா நவீன நாடங்கங்கள் போடுகின்றவர் என்று வியப்புடன் கேட்டேன். ஆமாம் அவரேதான் என்றபடியே கூத்துப்பட்டறை என்ற நவீன நாடகக் குழுவைச் சென்னையில் உருவாக்கியிருக்கிறார் என்றும் அது தீவிரமாக நவீன நாடக உருவாக்கத்தில் முனைந்திருக்கிறது என்றும் அறிந்து கொண்டேன்.

எனக்கு முத்துசாமியின் சிறுகதைகளைப் பிடிக்கும். நவீனச் சிறுகதைகளில் அவர் தனித்துவமானவர். குறிப்பாக அவர் கதை சொல்லும் முறை வித்யாசமானது. சிறிய சம்பவங்களை நுட்பமாக விவரித்துக் கொண்டே செல்லும் கதைமுறை அவருடையது. ஊர் சார்ந்த நினைவுகள் மற்றும் நவீன வாழ்வின் அபத்தம் இரண்டும் கலந்த குரல் அவர் கதைகளுக்கு உண்டு. கதாபாத்திரங்களின் நிகழ்வுகளைவிடவும் அவர்களின் மனவோட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தரும் எழுத்துமுறை அவருடையது. புஞ்சை என்ற ஊரைப் பற்றிய வெவ்வேறு விதமான பதிவுகள் அவர் கதைகளில் தொடர்ந்து இடம் பெற்றிருந்தன. அத்தோடு கசடதபற இதழ்களில் முத்துசாமி எழுதியதையும் வாசித்திருக்கிறேன்.

நீர்மையின் இன்னொரு சிறப்பு முத்துசாமியின் மகன் ஓவியர் நடேஷ் வரைந்த முகப்பு ஓவியம். மிகச் சிறப்பாக அச்சிடப்பட்டிருந்த புத்தகமது. அதில் முத்துசாமியின் சித்திரம் ஒன்றை மிக நவீனமான முறையில் நடேஷ் வரைந்திருப்பார். அதிலிருந்து ஒரு முத்துசாமியை நாம் கற்பனை செய்து கொள்வது விசித்திரமாக இருக்கும்.

இருபதிற்கும் குறைவான சிறுகதைகளே முத்துசாமி எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்தக் கதைகள் அவருக்கெனத் தனியான வாசக உலகை உருவாக்கியிருந்தன. தொடர்ந்து அவர் சிறுகதையுலகில் செயல்படாமல் போனது பெரிய இழப்பே.

நவீன நாடங்களில் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ள நாடகப்பள்ளிக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கே நாடகவிழா ஒருவார காலம் நடைபெற்றது. அப்போதுதான் நான் வாசித்திருந்த பல நவீன நாடகங்களை ஒரு சேரக்காணக் கிடைத்தது. நாடகப்பள்ளியின் வளாகமும் அதன் கட்டிட அமைப்பும் மிக நவீனமானவை. அதை லேரி பேக்கர் வடிவமைத்திருந்தார்.

நாடகப்பள்ளியில் நடத்தபட்ட நாடங்களைக் காண்பதற்கு அருகாமையில் உள்ள  கிராம மக்கள் வருவதைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது. லோர்க்காவின் நாடகம் ஒன்றை மலையாளத்தில் நிகழ்த்தினார்கள். சமஸ்கிருத நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. அயென்ஸ்கோ நாடகத்தை மாணவர்கள் நிகழ்த்தினார்கள்.  இப்படி ஒரு வார காலம் நடைபெற்றது. அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியபடி நாடகங்களைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தேன்.

இந்த நாடகங்கள் மேடை அமைப்பை விட்டுவிலகி புதிய நாடகவெளியை உருவாக்கியிருந்ததும் சம்பிரதாயமாக வசனங்களைப் பெரிதும் சார்ந்திருந்த நடிப்பை விலக்கி நடிகனின் உடலின் வழியே நிகழும் நாடகமாக வெளிப்படுத்தும் முறையும் குரலை உபயோகிக்கும் முறைகளும் நாடக பாவனைகளும், அவர்கள் உருவாக்கும் படிமங்களும், உருவகங்களும் நவீன நாடகம் என்பதைப் பற்றிய ஆதார பிரக்ஞையை உருவாக்கியது. அந்த நாட்களில் முத்துசாமியைச் சந்திக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொள்ளத் துவங்கினேன்.

ஆனால் ஏதோ தயக்கம் அதைத் தடுத்துக்கொண்டேயிருந்தது. திருச்சூரில் சந்தித்த நாடகத்துறை  நண்பர்களின் வழியே பெங்களூரில் நடைபெறும் நவீன நாடகங்கள் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். இதற்காகவே  பெங்களூர் செல்லும் போதெல்லாம் நவீன நாடகங்களைத் தேடிச்சென்று பார்க்கத் துவங்கினேன். அப்படித்தான் கிரிஷ் கர்நாட்டின் துக்ளக், ஹயவதனா, மற்றும் கம்பாரின் நாடகங்கள் காண நேர்ந்தது.

நவீன நாடகம் என்பது தனியுலகம். அதற்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகர்களும் இயக்குனர்களும் அதற்கான குறைந்தபட்ச பார்வையாளர்களைப் பற்றிய கவலையின்றித் தங்களது முழு ஈடுபாட்டையும் செலுத்தி வருவதைக் கண்ட போது அது என்னை ஈர்க்கத் துவங்கியது.
அந்த நாட்களில் திருச்சியில் பாதல்சர்க்கார் நாடகவிழா நடை பெற்றது. அதைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே கூத்துப்பட்டறையின் நாடகம் ஒன்றைக் கண்டேன். முத்துசாமியைக் காண முடியவில்லை. மற்ற நாடகங்களிலிருந்து கூத்துப்பட்டறை நாடகம் மிகவும் வேறுபட்டிருந்தது.

அந்த நாடகவிழாவின் உந்துதலில் சூரியனின் அறுபட்ட சிறகுகள் என்ற நாடகத்தை எழுதி அதை நாடகவெளி இதழுக்கு அனுப்பி வைத்தேன். ரங்கராஜன் அப்போதுதான் நாடகத்திற்கான சிற்றிதழாக வெளியை அறிமுகம் செய்திருந்தார். அதில் என்னுடைய நாடகம்    வெளியானது.  அதன் தொடர்ச்சியாக சுதேசிகள் நாடகக்குழுவிற்காக 'உருளும் பாறைகள்' என்ற நாடகத்தை எழுதித் தந்தேன். அது சங்கீத நாடக அகாதமியின் தென் மண்டல நாடகவிழாவிற்காகத் தேர்வு செய்யப்பட்டது. அந்த நாடகம் குறித்து முத்துசாமி தனக்குப் பிடித்துள்ளது என்று தெரிவித்ததாக சுந்தர்காளி சொன்னபோது மீண்டும் முத்துசாமியைப் பார்க்கும் ஆசை துளிர்விடத் துவங்கியது.

மதுரை நண்பர்களுக்காக எட்வர்ட் பாண்டின் ஸ்டோன், பிரெக்டின் கலிலியோ, மகேஷ் எல்கஞ்வரின் பிரதிபிம்பம், என்று பரபரப்பாக நாடகங்களை மொழியாக்கம் செய்வதும் எழுதித் தருவதுமாக இருந்த நாட்களில் எனக்கிருந்த ஒரே வாசிப்புத் துணை ந. முத்துசாமியின் நாடகங்கள். அத்தோடு அவர் எழுதிய அன்று பூட்டிய வண்டி என்ற நிகழ்த்து கலைகள் பற்றிய கட்டுரைகள். மரபுக்கலைகள் குறித்த அவரது பார்வையும் விவரிப்பும் அசலானவை. அன்று பூட்டிய வண்டி முத்துசாமியின் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு.

தெருக்கூத்து தென்மாவட்ட மக்களுக்குப் பரிச்சயம் இல்லாத வடிவம். அப்படி ஒரு நிகழ்த்துகலை இருப்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. தென்மாவட்டங்களுக்கு என்று சிறப்பான நிகழ்த்துகலைகள் நிறைய இருந்தன. ஆனால் தெருக்கூத்து அங்கேயில்லை.

முத்துசாமியின் கட்டுரைகள் அளித்த உந்துதல் காரணமாக தெருக்கூத்தைத் தேடிச் சென்று பார்ப்பது என்று சுற்றியலைந்து காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் முதன்முறையாகத் தெருக்கூத்தைப் பார்த்தேன். நடிகர்களின் ஒப்பனையும், நிகழ்த்தும் முறையும் வியப்பாக இருந்தது. அது  முத்துசாமியைச் சந்திக்கும் ஆசையை அதிகப்படுத்தியது.

சென்னையில் வந்து சுற்றியலைந்தபோது சிறுகதைகள் மற்றும் நாடகம் இரண்டிலும் இருந்த என் அக்கறைக்கு முத்துசாமியே காரணமாக இருந்தார். அப்போது அடையாற்றில் தங்கியிருந்த போது அண்ணாமலை அறிமுகமானார். அவர் கூத்துப்பட்டறையில் பயின்ற நடிகர். அவரிடம் முத்துசாமியைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் அதற்கென்ன பார்த்துவிடலாமே என்று சொல்லி மறுநாளே முத்து சாமியைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அலியான்சே பிரான்சேயின் வெளிவாசலில் முத்துசாமி நின்றுகொண்டிருந்தார்.

முத்துசாமியின் தோற்றம் ஒரு நடிகருக்கான கம்பீரம் கொண்டது. குறிப்பாக அவரது மீசையும் முகபாவங்களும் அற்புதமானவை. அவர் பேசும் தோரணையும் கைகளை அவர் உபயோகிக்கும் லாவகமும் எவரையும் ஈர்க்கக் கூடியவை.  ஆனால் அவர் குரலில் இயல்பாகவே எதையோ மறுக்கின்றவரைப் போன்ற எதிர்ப்புணர்வு இருக்கும். உண்மையில் அவர் வேடிக்கையாகப் பேசும்போதுகூட அந்தத்தொனி  அவரிடமிருக்கிறது. அது பலநேரம் முத்துசாமி மிகவும் கோபப்படக்கூடியவர் என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தது.  அது உண்மையில்லை. முத்துசாமியோடு நெருங்கிப் பேசினால் அவரிடம் சொல்லித் தீராத நினைவுகளும்  நாடகம் குறித்த புதிய தேடுதல்களும் மரபுக் கலைகள் குறித்த தனித்துவமான அவதானிப்புகளும் நிரம்பியிருக்கும்.

என் முதல் சந்திப்பில் முத்துசாமி 'ஒங்க நாடகம் ரொம்ப நல்லாயிருந்தது. எழுதுங்க' என்று ஒரேயொரு வரிதான் பேசினார். அதன் பிறகு அலியான்சேயில் பிரான்சிலிருந்து வந்திருந்த தோல்பாவைக் கலைஞருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் முன் வரிசையில் அமர்ந்தபடியே அந்த பிரெஞ்சுக் கலைஞரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் முத்துசாமி. ஏதோ ஓவியம் ஒன்றைப் பார்வையிடுவதைப் போன்றிருந்தது அவரது முகபாவம்.

முடிவில் முத்துசாமி பத்து நிமிடங்கள் பேசினார். "தெருக்கூத்து ரொம்ப ஒசத்தியானது. அதை அப்படியே நாடகமாகப் போட்டுற முடியாது. அதை நாம முதல்ல புரிஞ்சிகிடணும். குரல்வளம் உள்ள நடிகர்கள் நம்மகிட்டே இல்லை. முதல்ல நாம  அதை உருவாக்கணும். அதே போல பார்வையாளர்களுக்கும் நடிகருக்கும் இடையில் உள்ள வெளி ரொம்ப முக்கியமானது. நடிகர்கள்  கதாபாத்திரத்தை சிருஷ்டி பண்றாங்க. அதுல மூழ்கிப் போறதில்லை.

கதாபாத்திரமாக மாறிப்போறது என்பதெல்லாம் தெருக்கூத்துல கிடையாது. நடிகர் கதாபாத்திரம் ரெண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மாயம் நடக்குது. நடிகன் தன் கற்பனையால் அந்தக் கதாபாத்திரத்தை வளர்த்துகிட்டே போறான். அது ஒரு விளையாட்டு. கண்ணுக்குத் தெரியாத விளையாட்டு. நடிகன் ஒரு ஜென் துறவி மாதிரியும் இருக்கணும். அதே நேரம் சாமுராய் மாதிரியும் இருக்கணும். பழைய மேடை நாடக நடிப்பு எல்லாம் இப்போ எடுபடாது" என்று அவர் பேசிய விதமும் சொற்களை அவர் கையாளும் லாவகமும் அதை விளக்கிச் சொல்லும் போது அவரிடம் ஏற்படும் முகமாற்றங்களும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருந்தது.

பேச்சை அவர் திடீரென நிறுத்தி  முடித்துக்கொண்டுவிட்டார். கிட்டத்தட்ட அதுவே ஒரு நிகழ்த்து கலை போலவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து முத்துசாமி வெளியே செல்லும் வரை பார்த்துக்கொண்டேயிருந்தேன். சம்பந்தம் என்ற கூத்துக் கலைஞருடன் அவர் ஒரு டிவிஎஸ் 50யின் பின்னாடி ஏறிக்கொண்டு புறப்பட்டார். அவரது உயரத்திற்கு அந்த வண்டியில் போவது சிரமம் தருவதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அவரிடம் அது தென்படவில்லை.

அலியான்சேயின் வெளியில் இருந்த படிகளில் அமர்ந்தபடியே முத்துசாமி பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நவீன இலக்கியப் பரிச்சயம் கொண்டிருந்த முத்துசாமி நவீன நடனத்திலிருந்தே தனது நாடகத்திற்கான மூலங்களைக் கொண்டிருக்கிறார். ஆகவே அவருக்கு நாடகப்பிரதி என்பது ஒரு வரைபடம் போல நாடகம் போடுவதற்காக ஆதாரம் மட்டுமே. நடிகனின் உடல் மற்றும் குரலில் அவர் செய்யும் மாற்றம் அற்புதமானவை.

கூத்துப்பட்டறையில் நடிப்பிற்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக நடனம், யோகா, மார்சல் ஆர்ட்ஸ், சிலம்பம், தேவராட்டம், களறி, தாய்சி, தியானம், எனப் பல்துறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன் மூலம் நடிகன் தன் உடலை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள முடியும். அது போலவே மரபான நடிப்பு முறையிலிருந்து விலகிய பிரக்ஞை பூர்வமாக நடிப்பைக் கைக்கொள்ள முடியும் என்று கூத்துப்பட்டறையில் பயின்ற நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அது உண்மை என்பதை அதிலிருந்து பயின்று வந்த பல நடிகர்கள் இன்று நிரூபணம் செய்கிறார்கள். சிறந்த இரண்டு உதாரணங்கள் பசுபதி மற்றும் கலைராணி. இவர்கள்  நடிப்பை பிரக்ஞை பூர்வமாகவும் பல்வேறு தளங்களில் விரித்தும் கற்பனை செய்தும் புரிந்து கொண்டவர்கள். இவர்கள் மட்டுமின்றி பிரசாத், அண்ணாமலை, ஜார்ஜ், பாங்ளா , குமாரவேல், சந்திரா, என்று தனித்துவமிக்க நடிகர்கள் பலரை கூத்துப்பட்டறை உருவாக்கியிருக்கிறது.

அதன் பிறகு கூத்துப்பட்டறையின் நாடகங்களை அலியான்சே மேக்ஸ்முல்லர் பவன் மற்றும் தீவுத்திடலில் உள்ள அரங்கில் தொடர்ச்சியாகக் காண நேர்ந்தது. ஒவ்வொரு நிகழ்வின்  போதும் முத்துசாமி தொலைவில் நின்று கொண்டிருப்பார். ஒரு சிரிப்பு மற்றும் எப்படியிருக்கீங்க என்ற வினா இரண்டையும் தவிர அவர் வேறு எதையும் பகிர்ந்து கொண்டது கிடையாது.

ஆனால் ஒரு முறை பிரிட்டீஷ் கவுன்சில் ஆங்கில நாடகம் ஒன்றினையும் அதைத் தொடர்ந்த இரவு விருந்தையும் அளித்தது. சென்னையில் தமிழ் நவீன நாடகங்கள் பார்ப்பதற்கு ஐம்பது பேர்கூட வருவதில்லை. ஆனால் ஆங்கில நாடகம் பார்ப்பதற்கு முந்நூறு பேர்களாவது வருவார்கள். இதில் ஆச்சரியம் ஐநூறு ரூபாய் டிக்கெட் போட்டு நடக்கும் நவீன நாடகங்களுக்குக் கூடப் பல நேரங்களில் டிக்கெட் விற்றுப் போய் நாடகம் பார்க்க முடியாமல் வீடு திரும்ப நேரிடும். அது ஒரு எலைட் இன்ட்ரஸ்ட் என்று முத்துசாமியே ஒரு சமயம் சொன்னார்.

அன்று பிரிட்டீஷ் கவுன்சிலின் வெளியில் நாடகம் முடிந்து வெளியே விருந்து துவங்கியது. பகட்டான ஆங்கிலப் பேச்சுகள், நாடகம் பற்றிய மேல்உதட்டு அபிப்ராயங்கள் தாண்டி தனியே அமர்ந்திருந்தார் முத்துசாமி, அருகில் சென்று அமர்ந்தேன்.  அவராகப் பேசத்துவங்கி பேச்சு அவரது சொந்த ஊரான புஞ்சை  பற்றியும் அங்குள்ள நற்றுணையப்பன் என்ற தெய்வம் குறித்தும் நீண்டது.

பேச்சின் நடுவில் செம்பொனார் கோவிலில் இருந்த நாதஸ்வரக் கலைஞர் ஒருவரைப் பற்றி நினைவுகூறத்துவங்கி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே எழுந்து நின்று அந்த நாதஸ்வரக் கலைஞர் வாசிக்கும் முறையைத் தன் கைகளால் பாவனை செய்தபடியே தனிநடிப்பு போல சொல்லத் துவங்கினார்.

"அப்படியே ஆகாசத்துக்கும் பூமிக்கும் இடையில் அந்த நாதஸ்வரம் சுழன்று சுழன்று வருது.  அந்த மனுசன்  ஆவேசத்துடன் வாசிக்கிறார். வெளியே இருக்கிற மரங்கள் எல்லாம் ஒடுங்கிப் போய் நிக்குது. அருள் வந்த ஆள் போல அவர் வாசிச்சிகிட்டே இருக்கார். ரொம்ப  ஒசத்தியான இசை. இன்னைக்கும் மனசில அப்படியே இருக்கு. இசையைக் கேட்டு நாம கற்பனை பண்ண முடியலை. அது ஒரு உன்னதமான அனுபவம். பார்த்துகிட்டு இருக்கும்போதே எல்லாம் மறைஞ்சி போற மாதிரி இருக்கு.  பாம்பாட்டி முன்னால் நிக்குற பாம்பு மாதிரி இருக்கேன். எதையோ தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருக்கிறது மாதிரி நாதஸ்வரம் மேலேயும் கீழேயும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போய்க்கிட்டே இருக்குது. சாட்டையைச் சுழட்டுற மாதிரி இருக்கு இசை. ஆனா.. சட்னு அப்படியே ஒரு நிமிஷம் அவர் வாசிக்கிறதை நிறுத்திடுறார். நம்மாலே நிறுத்த முடியலை."

அவர் சொல்லச் சொல்ல, காதில் அந்த நாதஸ்வர இசை கேட்பது போலவே இருந்தது. இசையை ஒரு மனிதனால் இவ்வளவு நுட்பமாகக் காட்சிப்படுத்த முடியுமா என்ற வியப்பிலிருந்து என்னால் மீள முடியவேயில்லை. முத்துசாமி சொல்லி முடித்து சிரிப்போடு அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு நெருக்கத்தோடு என் தோளில் தட்டினார். முத்துசாமியிடமிருந்து இதைத்தான் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருந்தேன் என்று அந்த நிமிடத்தில் தோன்றியது.

அதன் பிறகு அவரை ஒன்றிரண்டு முறை தேடிப்போய்ப் பேசுவதும் பார்ப்பதுமாக இருந்தேன். இணக்கமும் அன்புமான பகிர்தல் அவரிடம் எப்போதுமிருந்தது. இதன் இடையில் நடேஷ் நெருக்கமான நண்பராகியிருந்தார். நடேஷ் முத்துசாமி இருவரும் பேசிக்கொள்வதைக் காணும்போது அப்பா பையன் போலவே இருக்காது.

முத்துசாமியின் கவனம்  தமிழ் நவீன நாடகத்திற்கான புதிய மொழியை உருவாக்குவதிலே முதன்மையாகக் குவிந்திருக்கிறது. அது மரபுக்கலைகளிலிருந்து உருவான நவீன உடல்மொழி.  தமிழ்நவீன நாடகப் பிரக்ஞையை முத்துசாமியே உருவாக்கினார்.

பேராசிரியர் ராமானுஜம், மு.ராமசாமி, மங்கை, ஞாநி, பிரளயன், ராஜி, ஆறுமுகம், ராஜேந்திரன், சண்முகராஜா, முருகபூபதி என்று நவீன நாடகப் பரப்பில்  பல்வேறு ஆளுமைகள் தீவிரமாக நாடக உருவாக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்கள் யாவருக்குள்ளும் முத்துசாமியின் ஏதோவொரு நுட்பமான பாதிப்பும், அரூபமான நெருக்கமும் அறிந்தும் அறியாமலும் இருக்கின்றது.

முத்துசாமி உருவாக்கிய நாடக மொழிக்கான அடிப்படைகளை அவர் சிற்பங்கள் ஓவியங்கள், நடனம், மரபுக்கலை, கோவில்கலை, மேலை நாடக மரபுகள் என்று பல்வேறு இழைகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்.

முத்துசாமியின் நாடகம் தந்த உந்துதலால் சந்திரலேகாவின் நாடகங்களைக் காண நேர்ந்தது. அது முற்றிலுமான ஒரு நடனநாடகம் என்றே சொல்வேன். அதில் நடிகன்  பெரிதும் நடனக்கலைஞராகவே இருக்கிறான். அவன் உடலை யோகநிலைகள் போல வெவ்வேறு படிகளில் ஒன்று சேர்ப்பதும் அவிழ்ப்பதுமே நாடகத்தின் முக்கிய போக்காக இருந்தது. அபத்தமோ, முரண்களோ, பகடியோ அதில் இல்லை.

முத்துசாமியின் நாடகங்களை ஒரு சேர வாசிக்கும் போதுதான் அவர் உருவாக்கியுள்ள தமிழ் நவீன நாடகப்பரப்பு எவ்வளவு பெரியது என்று உணர முடிகிறது. காலம் காலமாக எழுதிய போது முத்துசாமி நவீன நாடகம் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. அது நடை இதழில் 1969ஆம் ஆண்டு வெளியாகிறது. எழுத்து இதழில் சி.சு. செல்லப்பா ஓரங்க நாடகங்கள் என்று சில நாடகங்களை வெளியிட்டார். ஆனால் அது நவீன நாடக வகைமை கொண்டதில்லை.

முத்துசாமி சுயமாக தனக்கான நாடகமொழியைக் கண்டுபிடித்திருக்கிறார். அதன்பிறகு தெருக்கூத்தின் பரிச்சயம் அவருக்கு 1975ஆம் ஆண்டுதான் ஏற்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து அவரது பிரதிகள் உருமாற்றம் கொள்ளத் துவங்குகின்றன. உருவகங்கள் குறியீடுகள் கலாச்சார மறுவாசிப்பு புராணக்கதைகளின் மறுவடிவம் என்று அவர் தன் பிரதிக்கான அர்த்த தளங்களை விரிவாக  எடுத்துக்கொண்டு போகிறார். படுகளம் நாடகம் அதன் உச்ச நிலை என்றே சொல்வேன். மகாபாரதமும் சமகால நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று கலப்பதும் அதில் வெளிப்படும் பகடியும் நிகழ்த்து முறையும் நவீன நாடகத்தின் சிறப்பான உயர்நிலை.

நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், உந்திசுழி, கட்டியக்காரன், நற்றுணையப்பன்,  இங்கிலாந்து தெனாலி, பிரகலாத சரிதம், சந்திர ஹரி, படுகளம் என்று முத்துசாமியின் நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தளத்தில் இயங்குகின்றது.

முத்துசாமியின் நாடகங்களை முதன்முதலாகப் பார்க்கும் பார்வையாளன் அடையும் திகைப்பு நடிகர்கள் பேசும் முறை. அவர்கள் வசனங்களை நேரடியாக ஒப்புவிப்பதில்லை. மாறாக அதைச் சிலவேளைகளில் உச்சாடனம் செய்கிறார்கள். சில வேளைகளில் கவிதை போல உயர்நிலைக்குக் கொண்டு போகிறார்கள். சிலவேளைகளில் சொற்களின் ஊடே இடைவெளியை உருவாக்கி அர்த்த மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். இது பார்வையாளன் அடையும் முதல் திகைப்பு.

அடுத்தது அவர்கள் மேடையைப் பயன்படுத்தும் விதம். பொதுவில் திரைச்சீலைகளும் மேஜை நாற்காலிகளும் அரங்க பொருட்களாக அறிமுகமாகயிருந்த பார்வையாளனுக்கு முத்துசாமியின் நாடகத்தில் அவர்கள் தங்கள் பாவனைகளால் பொருட்களை உருவாக்குவதும் அதைப் பயன்படுத்துவதும் வியப்பளிக்கக் கூடியது. மூன்றாவது, நாடகத்தின் பின்புல இசை மற்றும் கூட்டியக்கம். ஒரு இசைக்கோவை போல நாடகம் வேறுவேறு தளங்களுக்கு உயர்ந்து பின்பு உச்சநிலையை அடைகிறது.

இது பார்வையாளர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்திவிடாதா, நாடகம் புரிந்து கொள்ளப்படவில்லை என்ற கேள்வி முத்துசாமியின் ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் கேட்கப்படுகிறது. அவர் மிகப் பொறுமையாக, இதற்குப் பார்வையாளர்கள் பழகிக் கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப எனது நாடகங்களைக் காண்பதுதான் அதைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழி என்று சொல்கிறார். அதுதான் உண்மை. இந்த நாடகங்கள் புரியவில்லை. இதை வெறும் ஏமாற்று என்று புறக்கணிப்பதைவிடவும் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று முயற்சிப்பதே அவசியம்.

முத்துசாமி நவீன நாடகப்பிரதிகளை எழுதியதோடு அதை முழுமையானதொரு நவீன நாடகமாக நடிகர்களைக் கொண்டு பயிற்சி செய்து உருமாற்றிக் காட்டுகிறார்.  குறிப்பாக மேடையின் ஒளியமைப்பில் கூத்துப்பட்டறை செய்த பல முன்முயற்சிகள் இந்திய அளவில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. டாக்டர் ரவீந்திரன், மற்றும் நடேஷ் ஒளியமைப்பு செய்த முறைகள் மிகுந்த பாராட்டுக்கு உரியவை.

அது போலவே பன்சி கௌல், கன்யாலால், அன் மோல் விலானி, கில் ஆலன், ஜான் மார்டின், என்று பல்வேறு நாடக இயக்குனர்களுடன் முத்துசாமி இணைந்து உருவாக்கிய தமிழ்நாடங்கள் நவீனத் தமிழ்நாடகத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இன்று நாடகத்திற்கான சிறப்புப் பயிலரங்கில் ஒன்றாகக் கூத்துப்பட்டறையை யுனெஸ்கோ அங்கீகாரம் செய்து உதவி செய்து வருகிறது.

முத்துசாமியை நீண்ட நேர்காணல் ஒன்று செய்து எனது அட்சரம் இதழில் வெளியிட வேண்டும் என்று அவரை நான்கு முறை தொடர்ச்சியாகச் சந்தித்து உரையாடலைப் பதிவு செய்தேன். பத்து மணி நேரத்திற்கும் அதிகமான பதிவு. முத்துசாமி அந்தப் பதிவில் எங்கும் தன் சாதனைகள் பற்றியோ, தனது ஏமாற்றங்கள் பற்றியோ ஒரு முறைகூடக் குறிப்பிடவேயில்லை. இதழ் நின்று போய்விடவே அந்த ஒலிப்பதிவுகள் அப்படியே கைவிட் டுப் போய்விட்டன.

அலியான்சே மேக்ஸ்முல்லர்பவன் என்று அயல்நாட்டுக் கலாச்சார நிறுவனங்களோடு இணைந்து நாடகம் போடுகின்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட முத்துசாமி சென்னையில் பலவருடம் சேரிப்பகுதி மக்களுடன் இணைந்து வசித்தவர். அடிப்படை வசதிகள்கூட எதுவுமில்லாத மிக எளிமையான அரசுக் குடியிருப்பில் தன் வாழ்க்கையைச் செலவிட்டவர். பொருளாதார நெருக்கடிகளுக்காகத் தன்னை மாற்றிக்கொள்ளாதவர் முத்துசாமி.

இன்று சிறுகதை, கவிதை, நாவல் போன்ற வடிவங்களின் மீது இலக்கியவாதிகள் காட்டும் அக்கறையில் ஒரு பகுதிகூட நாடகத்தின் மீது இல்லை என்பதே உண்மை.

தெருக்கூத்திற்கு இன்றுள்ள அங்கீகாரத்திற்கு அவரே முக்கிய காரணம். நாடகம், கூத்து, கலை என்று தன் முழு நேரத்தையும் ஒப்படைத்துக் கொண்ட முத்துசாமி  சங்கீத நாடக அகாதமி விருது பெற்றபோது அது இலக்கியச் சூழலில் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவேயில்லை. ஆனால் முத்துசாமியின் தொடர் இயக்கம் காரணமாகவே இன்று வெளி மாநிலங்களில் நவீனத் தமிழ்நாடகம் குறித்த அறிமுகம் ஏற்பட்டு உள்ளது.

நாடகத்திற்கான தேவை இப்போதுதான் மிக அதிகமாக உள்ளது. அதிகமான மன அழுத்தம் மற்றும் நெருக்கடியான சூழலில் மனிதர்களுக்கு அகவிடுதலை தரக்கூடிய தனித்தன்மை கொண்டது நாடகம். பன்னாட்டு நிறுவனங்கள் இன்று தங்களது ஊழியர்களுக்கு யோகா மற்றும் நாடகப் பயிலரங்கம் நடத்துகின்றன. நாடகம் ஒருபோதும் புறக்கணிக்கபட்டுவிடாது. அதை நாம் முறையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முத்துசாமி சொல்லியிருந்ததை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாசித்தேன்.

முப்பது ஆண்டுகாலமாக முத்துசாமியின் அக்கறை அப்படியே இருக்கிறது. பிரதான இலக்கியச் சூழல் அவரைக் கண்டுகொள்ளாமல் எப்போதும் போல வீண்வாதங்கள், வம்புகளின் பின்சென்று கொண்டிருக்கிறது. அதை அவர் கண்டுகொள்ளவும் இல்லை கவலைப்படவும் இல்லை. அபத்தம் தான் வாழ்வின் பிரதான சுவை என்று அவர் அறிந்திருக்கக்கூடும்.

நன்றி: உயிர்மை இதழ் - November, 2008

Jan 17, 2012

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது(2011)

2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கsra டந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.

இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், சினிமா என பல இலக்கிய வகைப்பாட்டுகளில் இயங்கினாலும் இவருடைய புனைவு இலக்கியத்தின் போக்கு தமிழுக்கு புதிய வாசலை திறந்தது. மனித மனத்தையும் அதன் விசித்திரத்தையும், வசீகரத்தையும், வக்கிரத்தையும் மகத்தான தரிசனங்களாக வெளிப்படுத்தி உலகப் பிற இலக்கியங்களுக்கு சமனாக தமிழில் படைத்து வரும் இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இவர் ’அட்சரம்’ என்ற இலக்கிய காலாண்டிதழையும் நடத்தி வருகிறார்.

இவர் ஏழு நாவல்கள், மூன்று குழந்தை இலக்கிய நூல்கள், ஒன்பது நாடகங்கள், இருபது கட்டுரை தொகுப்புகள், எட்டு சிறுகதை தொகுப்புகள் என இதுவரை எழுதியிருப்பதுடன் 15 திரைப்படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். இவருடைய படைப்புகள் நாலு கல்லூரிகளிலும், இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவருடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். தமிழக அரசின் விருது (2007), ஞானவாணி விருது (2004), முற்போக்கு எழுத்தாளர் சங்க சிறந்த நாவல் விருது (2001), சிகேகே இலக்கிய விருது (2008), தாகூர் இலக்கிய விருது (2010) ஆகிய விருதுகளை இவர் இதுவரை பெற்றிருக்கிறார்.

’என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும், ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக்கொண்டுபோகும் வெல்லக்கட்டியை போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக்கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துக்கள்’ என்று எஸ். ராமகிருஷ்ணன் சொல்வது உண்மைதான். இன்று உலகம் அவரை திரும்பி பார்க்கிறது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா வழமைபோல எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் நடைபெறவுள்ளது. 

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

தகவல்: அ.முத்துலிங்கம் தளம்

Jun 8, 2011

புலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன்

அவன் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தன. தன்னைச் சுற்றிலும் உள்ள புறவெளியில் பனி இறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். திரட்சி திரட்சியாக வெண்மை படர்ந்து நிரம்புகின்றது. குளிரின் குணத்தால் வீடுகள் கூட உருமாறத் தொடங்குகின்றன. சிவப்பு நாழி ஓட்டு வீடுகள் வளைவுகள் இறங்கும் வெம்பா வீட்டின் செங்கற்களை ஈரமாக்கி வெறிக்கச் செய்கின்றன. மூன்று தெருக்களும் பிரியும் முனையில் இருந்தது அந்த மைதானம். அவனைத் தவிர அந்த மைதானத்தில் இப்போது நின்றுகொண்டிருப்பவை இரண்டு மரங்கள்தான். அவன் கைகள் புங்கை மரத்தில் கட்டப்பட்டிருந்தன. உதடு வெடிக்க அவனையும் குளிர் பற்றிக் கொண்டிருந்தன. உறக்கமற்ற வான்கோழியொன்று கவக்! கவக்! என்றபடி தெருவில் அலைந்து கொண்டிருப்பதைப்  பார்த்துக் கொண்டிருந்தான். வான்கோழியின் அசைவு தெருவையே சலனம்tagore_s.ra_1 கொள்ளச் செய்கிறது.

நீளும் பின்னிரவில்தான் நிலா வெளிப்பட்டிருக்கின்றது. முகத்தில் சரியும் தலைமயிரை நீக்கக்கூட கைகளை அசைக்க முடியாது. வெகு வலுவாகவே கட்டியிருந்தார்கள். புங்கை மரத்தில் காய்கள் சடை சடையாகத் தொங்குகின்றன. பூக்களின் வாடை வேறு. மூன்று தெருவினுள்ளும் தன் போக்கில் அலைகிறது காற்று. எல்லா ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தன. வானம் நீலம் இருண்டு கருத்து வெடித்தபடியே நகர்கிறது. புங்கை மரத்தின் பட்டையைப் போல அவனும் மரத்தோடு சேர்ந்து போயிருந்தான். மரத்தின் இலைகள் விரலை அசைத்தபடியிருந்தன. உடம்பின் அடிபட்ட காயங்களில் ஈரக்காற்று புகுந்து வேதனை கொள்ள வைக்கின்றது. தன் கால்களைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருந்தான். காற்று தூக்கி எறியப்பட்ட ஓலைப்பெட்டியை அறுக்கும் சப்தம் கேட்டபடியே இருந்தது. வயசாளியின் இருமலும், தொடர்ந்த புலம்பலும் கேட்கின்றன. அவன் உடம்பில் இரண்டு எறும்புகள் இறங்கத் தொடங்கி இருந்தன. புங்கை மரத்தின் பூக்களின் அடியில் உறங்கிக்கொண்டிருந்த ஜோடி எறும்புகளாக இருக்கக்கூடும். கறுத்த, கட்டுகட்டான வயிற்றோடு எறும்புகள் அவன் நெற்றியில் வந்து நின்று மரத்தின் உருவம் திடீரென மாறிவிட்டது போலத் திகைப்படைந்து, கீழே இறங்க வழியின்றி அலையத் தொடங்கின. வெகுவேகமாக முகத்தின் பரப்பில் எறும்புகள் ஊர்ந்து காது வழியே தோளில் இறங்கி, திரும்பவும் முகத்துக்கே வந்தன. எறும்பினை ஒருபோதும் இத்தனை அருகில் கண்டதேயில்லை. நுட்ப வசீகரமும், உருண்ட கண்களுமாக அவற்றின் அலைச்சல் தீவிரமாகின்றது. உடல் முழுவதும் எறும்பின் பிடியில் சிக்கி சிலிர்த்தது போலாகியது. அவன் இச்சையின்றியே முகம் சுருங்கி விரிகின்றது. இரண்டு எறும்புகளும் நுண்ணிய கால்களால் முகத்தைப் பற்றிக்கொண்டு நகர்கின்றன. வழியின்றி மீண்டும் மரத்தின் கிளைகளை நோக்கி நகர்ந்தன எறும்புகள்.

இந்த இரவின் சில மணி நேரங்களுக்கு முன்பு அவன் கூட ஈர ஓடுகளைப் பற்றி இப்படித்தான் நகர்ந்துகொண்டிருந்தான். அப்போதே காற்றில் குளிர் இருந்தது. சுவர் சுவராகக் கடந்து மேற்கு வளைசலில் அவன் இரவில் போய்க்கொண்டிருக்கும் போது பூசணிக் கொடிகளில் பூக்கள் இரவில் பூத்துவிடுவதைப் பார்த்தான். பின்பனிக் காலத்தில் கேட்பாரற்ற பூசணிக் காய்களின் மீது இலைகள் படர்ந்து மறைக்கின்றன. நாய்களும் கூட அடங்கி மண்ணில் முகத்தைப் புதைத்து உறங்குகின்றன. அவன் இடுப்பில் இருந்த சூரிக் கத்தியை உருவி சுவரில் படர்ந்த கொடிகளை வெட்டியபடியே நடந்தான். சுவர்கள் பொதுமியிருந்தன. பின்கட்டில் உலர வைத்த தானியங்கள், கொத்த கோழிகள் அற்றுக் காய்கின்றன. நீர்த்தொட்டிகளின் சலனமற்ற நீர், நட்சத்திரங்களைக் காட்டிக்கொண்டிருந்தது. தன் முகத்தையும் அதில் பார்த்துக்கொண்டான். சாக்குப் படுதாக்கள் தொங்கும் தொழுவத்தில் இறங்கும்போது மாடுகள் விழித்துக்கொண்டுதான் இருந்தன. தாங்கு கல் வழியே ஏறி ஓட்டின் மீது உட்கார்ந்து கொண்டான். மெல்ல நகர்ந்து ஏறியதும், மைதானத்தின் புங்கை மரங்களும், வேதக் கோயிலின் மணிக்கூண்டும், கண்ணாடி ஜன்னல்களும் தெரிந்தன. இரண்டடுக்கு ஓட்டுச் சரிவினுள் புறாக்கள் இருக்கின்றதா எனப் பார்த்தான். ஓட்டை மிதித்து நடந்தால் புறாக்கள் விம்மி குரல் எழுப்பிவிடும். மரத்தூசுகள் அடர்ந்த அந்தப் பொந்தில் புறாக்கள் இல்லை. குருவி முட்டை தென்பட்டது. வெகு அலட்சியமாகவும் தைரியமாகவும் ஓட்டின் மீது உட்கார்ந்திருந்தான்.

அவன் ஏறியிருந்த வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தார்கள். அந்த வீட்டில் கொடுக்கல் வாங்கல் ரொக்கம் எப்போதும் உண்டு. ஆண்கள் மாதம் ஒரு நாள் வசூலுக்குப் போய்விடுவார்கள்.  இன்று அது தெரிந்துதான் வந்திருந்தான்.

குனிந்த கண்ணாடி ஓடு வழியாக உள்ளே பார்த்தான். கறுப்பேறிய தரை தெரிந்தது. அறையின் ஒரு மூலையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது போலும்; வெளிச்சம் தரைக்கு வருவதும் போவதுமாக இருந்தது. கிழக்கு ஓடு ஒன்றை எடுத்துவிட்டால் உள்ளே இறங்கிவிடலாம். ஓடு சரியாகச் சொருகப்பட்டிருந்தது. கத்தியைக் கொடுத்து நெம்பினான். ஓடு உடைபட்டது. பாதி ஓட்டைக் கையில் எடுக்கும்போது எதிர் மாடியிலிருந்து பூனை தாவி அடுத்த ஓட்டில் நடந்தது. வாலைச் சுருட்டியபடியே அவனைப் பார்த்தபடியே போனது. உடைபட்ட ஓட்டின் வழியே காற்று குபுகுபுவெனப் புகுந்து வீடெங்கும் நிறைகிறது. விளக்கின் வெளிச்சமில்லை. அவன் ஈர ஓடுகளைப் பற்றி உள்ளே இறங்க வழி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் கை வைத்திர்நுத ஓடு உடைந்தது. எழும் முன்பு வரிசையாக ஓடுகள் உடையும் சப்தத்துடன் உயரத்திலிருந்து வீட்டினுள் விழுந்தான்.

பெண்கள் சப்தத்துடன் எழுந்து கொண்டார்கள். மூத்தவள் கதவைத் திறந்து தெருவில் கத்தியபடி ஓடினாள். தெருவில் அரவம் கேட்கும் முன்பு எழுந்து ஓட முயன்றான். யாரோ அவன் கால்களைக் குறி வைத்து ஊனு கம்பை வீசினார்கள். கால்கள் மடங்கத் தெருவில் விழுந்தான். நாய்களின் தூக்கம் கலைந்த கரைப்பும், குழந்தைகளின் அழுகையொலியும் கேட்கத் தொடங்கின.

அவன் தலைமயிறைப் பற்றியிருந்த கரம் ஒரு வயசாளியினுடையதாக இருந்தது. அரிக்கேன் விளக்குகளுடன் வந்த சிலர் தூரத்தில் வெறித்துக்கொண்டிருந்தார்கள். பெரியவள் ஓடும் போது தள்ளிய கோழிக்கூட்டிலிருந்த குஞ்சுகள் எதையும் அறியாது மேயத் தொடங்கியிருந்தன. முகத்துக்கு எதிராகத் தீக்குச்சியைக் கிழித்துக் காட்டியதும் அவன் கண்களை மூடிக் கொண்டான். ஓங்கி அறை விழுந்தது. ஆள் அடையாளம் சுலபமாகக் கண்டுவிட்டார்கள். பெண்கள் கலையாத உறக்கத்துடன் அவிழ்ந்த சேலைகளைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். பிடரியைப் பிடித்துத் தள்ளியபடி அவனை மைதானத்திலிருக்கும் புங்கை மரத்தில் கட்டி வைக்கக் கூட்டிப் போனபோது, எப்போதுமே உறங்கிக்கொண்டிருக்கும் குருடன் எழுந்து எதையோ விசாரித்தபடி அருகில் வந்துகொண்டிருந்தான். அவன் குரல் இரவுப் பூச்சிகளின் அறுபட்ட சப்தத்தை ஞாபகப்படுத்தின. உறங்கிய நாய்களைத் திட்டியபடியே வந்தான் குருடன்.

நிறைய பணமும், தங்கமு வைத்திருப்பதாக எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்த அந்தக் குருடன், தன் படுக்கையிலேதான் எல்லாவற்றையும் வைத்திருந்தான். எப்போதும் உறங்கியபடிக் கிடக்கும் அவன் குரல் கசப்பும் பிசுபிசுப்பும் கொண்டிருந்தது. அருகில் வந்து அவன் முகத்தில் விரல்களைப் பதித்து அலையும் குருடனின் விரல்கள் மண்புழுவின் நெளிவைப் போல இருந்தன. அசூசையாக இருந்தது. பெருமூச்சு விட்டபடியே திட்டினான் குருடன். தனியே வீட்டுக்குப் போகும்வரை பேசியபடியே நடந்த குருடனுக்குப் பின்னால் அவனைத் தள்ளிக் கொண்டு வந்து புங்கை மரத்தில் கட்டினார்கள்.

அம்மாவின் பின் ஒளிந்து பார்த்துக்கொண்டிருந்த சிறுமிகளில் ஒருத்தியை அவன் பார்த்தபடியே இருந்தான். அவள், அம்மாவிடம் “கள்ளப்பய, என்னயவே பாக்கான்” எனச் சிணுங்கினாள். சிறுமியின் முகத்தை சேலை மறைத்துக் கொண்டது. உறக்கம் கலைந்த இரண்டு சிறுவர்கள் மரத்தின் எதிரேயிருந்த கல்லில் உட்கார்ந்து அவனைப் பார்த்தபடியே இருந்தார்கள். ஒடிசலான, கன்னம் ஒட்டிய உருவத்தை கள்ளன் என அவர்கள் ஒருபோதும் நினைவு கொண்டதில்லை. அவன் தலைமயிர் சரிய குனிந்திருந்தான். காலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனைக் கூட்டிப் போகும்போது உடன் போக வேணுமென சிறுவர்கள் பேசிக் கொண்டார்கள். கூட்டம் கலைந்திருந்தது. அந்தச் சிறுவர்களை வீட்டுக்குள் விரட்டிவிட்டுப் பெரியவர் கல்லில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். வீட்டுப் பெண்கள் அலுத்தபடியே கலைந்து போகும்போது அவன் மனைவியின் சாயல் கொண்ட ஒருத்தி கூட அந்தக் கூட்டத்தில் கலைந்துபோனாள். வீட்டில் விளக்கைப் பெரிதாகத் தூண்டிவிட்டு உறக்கம் வரும்வரை அவர்கள் இனிப் பேசிக்கொண்டிருப்பார்கள் எனத் தோணியது.

சிகரெட் புகை அவன் முகத்தைச் சுற்றியது. நாக்கில் சிகரெட் சுவை தானே ஊறியது. காற்றைக் கிழித்துக்கொண்டான். வீட்டில் இந்நேரம் மனைவி உறங்கியிருப்பாள். அவளுக்குக் குழந்தைகள் மேல் எப்போதும் ஆசைதான். எட்டு வருசமாகியும் குழந்தையில்லை. இப்போதும் சிறு பெண்ணைப் போல யாரு வீட்டிலாவது திருகைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவளுக்கு மிகச் சிறிய கண்கள். அவள் பெட்டியில், உலர்ந்த தாழம்பூ மடல் கிடப்பது கூட ஏனோ ஞாபகம் வருகிறது.

திடீரென ஏற்பட்ட அதிர்வென்று ஊர் அடங்காமலேதான் இருந்தது. அந்த இரண்டு எறும்புகள் அவன் தலைக்கு வருவதும், மேலேறுவதுமாகவே அலைந்தன. பனி கால்களின் அடியில் இறங்குவதை உணர்ந்தான். பறவைகள் எதுவும் அடையாத மரமாக இருந்தது.

கட்டி வைக்கப்பட்ட அவனுக்குக் காவலாக யாராவது ஒருவர் மட்டும் மைதானத்தில் இருக்கலாம் எனப் பேசிக் கொண்டார்கள். எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு பிடிபட்டு கட்டி வைக்கப்பட்ட கள்ளன் ஒருவன் உதடுகள் வெடித்து, குளிர் தாங்காது செத்துக் கிடந்ததை யாரும் இன்னும் மறக்கவே இல்லை. அந்த மரம் இப்போதில்லை. பெண்களின் பயத்தால் வெட்டுப்பட்டுப் போனது.

ஆனால் இறந்துபோன கள்ளன் இரவெல்லாம் கடுமையாக முனங்கினான். திடீரென வெறி வந்தது போலக் கத்துவான். மரத்தையே சாய்த்துக்கொண்டு ஓடுபவன் போல மூர்க்கம் கொள்வான். சமயங்களில் தானே பலருடன் பேசிக்கொண்டது போல பேசிக்கொண்டிருந்தான். அப்போதும் நல்ல பனிக்காலம். நடமாட்டம் அற்ற தெருக்கள். அவன் குளிரை பேயை விரட்டுவது போல இரவெல்லாம் திட்டியபடி இருந்தான்.  அவன் சப்தம் ஓய்ந்து இறந்துபோனபோது ஊரில் வெம்பா அடர்ந்து போயிருந்தது. மூன்று நாள்களுக்கு அவன் உடல் ஊரிலே கிடந்தது. ஆள் அடையாளம் தேடி தெற்குப்பக்கம் போனவர்களும் திரும்பிவிட்டார்கள். அவன் முதுகில் தேளின் உருவத்தைப் பச்சை குத்தியிருந்தான். அந்தக் கள்ளன் யாரென்று தெரியவே இல்லை. அவனை அந்த ஊர்க்காரர்களே சேர்ந்து எரித்து வந்தார்கள். அதற்குப் பிறகு அந்த வருடம் ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் வந்ததையும், ஊரின் பல வீடுகளில் தேள் உதிர்ந்ததையும் கண்டார்கள். அந்த மடங்கிய கால்கள் பெண்களின் ஞாபகத்தினுள் புதையுண்டிருந்தது நெடுங்காலமாய்.

அதன்பிறகு இப்போதுதான் அவர்கள் இன்னொருவனைப் பிடித்திருக்கிறார்கள். காவலுக்காயிருந்து ஓர் இடத்தில் நிற்காமல் நடப்பதும், கைகளை சொடுக்கிக்கொள்வதுமாக இருந்தான். அவன் விரல்களில் பாம்பு மோதிரமிட்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. காவலுக்கு இருந்தவன் சமயங்களில் அவன் அருகில் வந்து தலைமயிரைப் பற்றித் தூக்கி மூச்சு வருகிறதா எனப் பார்த்துக்கொண்டான். பனி அதிகமானதும் காவல்காரனும் போய்விட்ட பின்பு அவன் மட்டும் நின்றிருந்தான்.

விழித்திருக்க இருக்க பசியும் தாகமும் அதிகமாகிக்கொண்டே போனது. அந்தச் சிறுவர்கள் இன்று இரவு உறங்க மாட்டார்கள் என்றே தோணியது.

அவன் சிறுவனாகயிருந்தபோது உறங்குவதை விடவும் ஊர் சுற்றுவதிலேதான் விருப்பப்பட்டான். உறங்குவதாயினும் காட்டுவெளியின் கோயில் படிகளிலோ, வைக்கோல் போரில் புரண்டோ உறங்க விரும்பினான். அய்யாவின் பழக்கமும் அப்படியே இருந்தது. ஊரில் கிடைபோடும் கீதாரிகள் வரும் காலத்தில் அய்யா அவர்களோடு காட்டில்தான் தங்குவார். அவனும் உடன் போவான். கீதாரிகளுடன் காட்டில் உறங்கும்போது அதிசயக்கனவுகளின் ஊற்று கசிந்து பெருகத் தொடங்கும். கீதாரிகள் அய்யாவுக்குப் பயந்தார்கள்.

காட்டில் சாப்பாட்டு ருசி மாறிவிடும். நிலா வெளிச்சத்தில் மணலில் அய்யா பதினெட்டாம் புலி கட்டம் வரைவார். மணல் கோடுகள் கட்டமாகும். கீதாரிகள் அவரோடு விளையாட பயந்தார்கள். சிவக்குளம் கீதாரி அய்யாவோடு விளையாடினான். அய்யாவுக்குப் புலிகள். கீதாரிக்கு ஆடு. புலியாட்டம் தொடங்கியது. அய்யாவின் புலிகளால் ஒரு ஆட்டைக் கூட தொட முடியவில்லை. ஆடுகள் புலியை அடைத்துவிட்டன. ஏழு ஆட்டம் தொடர்ந்து புலிகளே அடைபட்டன. கீதாரி ஜெயித்துக் கொண்டே இருந்தான். எட்டாவது ஆட்டத்தில் கீதாரி தற்செயலாக அய்யாவின் கண்களைப் பார்த்தான். கோபமும் குரோதமும் கொண்ட அந்த கண்கள் புலியை ஞாபகப்படுத்தின எட்டாவது ஆட்டத்தில் வேண்டுமென்றே புலி, ஆடுகளை வெட்ட வழி பண்ணி ஆடினான் கீதாரி. அய்யாவுக்குக் கோபம் அதிகமானது. “விட்டுக் கொடுத்து விளையாட வேண்டியதில்லை” என அதட்டினார். அடைபட்ட ஒரு புலி மட்டுமே மிஞ்சியபோது கீதாரி ஆட்டத்தை நிறுத்திவிட்டு மல்லி காபி போடத் தொடங்கினான்.

தூரத்தில் கிடை ஆடுகள் தரை பார்த்து அசைவற்று நின்றன. அய்யா அடைபட்ட புலிகளைப் பார்த்தபடியே இருந்தார். நெருப்பு கல்லி நின்று வெடித்து செத்தைகளில் தாவியது. பூதாகரமான நிழல்கள் தோன்றி மறைந்தன. மல்லி வாடை கொதித்தது. சூடாக மல்லி காப்பியைக் குடித்துவிட்டும் அய்யா தோற்றுத்தான் போனார்.  கீதாரி ஆடுகளுக்கு நடுவில் உறங்கப் போனான். அவனும் அய்யாவும் புலிக்கட்டத்தின் பக்கமே படுத்துக் கிடந்தார்கள். விளையாட்டில் புலியாக மாறியிருந்த  கற்கள், இப்போது வெறும் கற்களாக இருந்தன. அய்யாவுக்கு உறக்கம் கொள்ளவே இல்லை. புரண்டுகொண்டே இருந்தார்.

கீதாரி ஆடுகளுக்குள் பதுங்கி வரும் உருவத்தைப் பார்த்தபடியே படுத்துக் கிடந்தான். அய்யாதான் கையில் கத்தியோடு ஆடுகளுக்குள் பதுங்கி கீதாரி படுத்துக் கிடந்த இடத்துக்குப் போய்க் கொண்டிருந்தார். ஆடுகள் உடம்பை நெளித்துக் கொண்டன. கோழை ஒழுகும் மூக்கை அய்யா மேல் உரசி நின்றன ஆடுகள். அய்யா அருகில் வந்து எழும்போது, கீதாரி ஆடுகளை விரட்டுவது போல எதிர்ப்பக்கம் சூ! சூ! எனக் குரல் கொடுத்தான். கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு அய்யா, தீப்பெட்டி கேட்டபடியே, இன்னொரு ஆட்டம் போடலாமா எனக் கேட்டார். அவன் அந்த இடத்திலே அய்யா காலில் விழுந்து, “எதும் தப்பா நடந்திருந்தா... மன்னிச்சிருங்க. பிழைக்க வந்தவன்” எனக் கும்பிட்டு எழுந்தான். அய்யா அவனோடு உட்கார்ந்து கொண்டார். விடியும்வரை கீதாரி தன் குடும்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான். அன்றிரவு ஆற்று மணலில் படுத்துக் கிடந்தபோது அடித்த ஆட்டுக் குட்டிகளின் பால் வாடை அவனுக்குப் பிடித்திருந்தது.

சிகரெட் புகையும் அடங்கிவிட்டது. அவன் மரத்தோடு சரிந்து நின்றுகொண்டிருந்தான். வெம்பா படர ஆரம்பித்து, அடுத்திருக்கும் மரம், வீடுகள், வேதக் கோயில், வான்கோழி எதுவும் தெரியவில்லை. எல்லாமும் வெம்பாவினுள் போய் விட்டன. மரத்தின் இலை இலையாக வெம்பா படிகிறது. குளிர்ச்சி கொண்ட மரம் அசைவற்று நின்றது. அவன் எதையும் பார்க்காமலிருக்கக் கண்களை மூடிக்கொண்டான். பட்டை உதிர்ந்த மரத்தில் ஈரம் குபுகுபுவென ஊருகின்றது.

அடைக்காமல் விட்டுப்போன கோழிக் குஞ்சுகள் வெம்பாவில் மாட்டிக்கொண்டு சப்தமடைகின்றன. அவன் தளர்ந்து போயிருந்தான். மெல்ல தான் மரத்தினுள் புகுந்துவிட்டது போலவும், எல்லாக் கிளைகளும் தன்னிடமிருந்தே கிளைக்கின்றன எனவும் உணர்வு கொண்டான். இப்போது மரத்தின் முண்டுகளும், வெடிப்பும், அசைவற்ற தன்மையும் அவனுக்கு துக்கத்தையே தந்தன. தன் கைகள் கட்டப்படாமல் உயரே அசைத்துக்கொண்டிருப்பதாகத் தோணியது.

மரத்தின் வயிறு திறந்து அதனுள் புகுந்துகொண்டது போன்றும், பசுமைச் சாறுகள் தன் உடலெங்கும் ஓடுவதாகவும், வெகு பாதுகாப்பான இடத்தினுள் தான் பதுங்கியுள்ளதாகவும் உணர்ந்தான். உடல் பருமன் அழிந்து மரமெங்கும் நீண்டது. ஊரின் உயரத்துக்கு வியாபகம் கொண்டிருந்தது மரம். அண்ணாந்து பார்த்தபோது ஆயிரக்கணக்கான இலைகளும், காய்களும் விநோதமாகத் தோன்றின. புங்கை இலைகளைச் சொருகிக்கொண்டு வேட்டைக்குப் போனதன் ஞாபகம் திரும்பியது.

வேட்டைக்குச் செல்லும் அய்யாவின் பின்பு உடம்பில், தலையில் இலைகளைக் குத்திக்கொண்டு துணை வேட்டையாடி, தெருச் சுற்றி வரும்போது அறுபட்ட கோழியின் ரத்தம் தெருவெங்கும் திட்டுதிட்டாகப் படியும்.

ஆகாசம் கூட இப்போது கலங்கிய ரத்தத் திட்டைப் போலச் சிதறிக் கொண்டிருந்தது. ஈரம் நிரம்பத் தொடங்க, உடல் துவண்டு உறக்கத்தினுள் இழுத்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு புள்ளியில் பனி சில்லிட அவன் உறக்கம் கொண்டான். எதுவும் அப்போது நினைவில் இல்லை. வெயில் பட்டபோதே நினைவு வந்தது.

அந்தச் சிறுவர்கள் இருவரும் எதிரில் உட்கார்ந்திருந்தனர். சிறுவர்களில் ஒருவனிடம் அவனின் சூரிக் கத்தி இருந்தது. அதைக் காட்டி மற்றவர்களை மிரட்டிக் கொண்டிருந்தான். மைதானம் பிரகாசமாகி, மரம் அவனை வெளியேற்றியது போல் திமிறி நின்றது. ஊரின் அமைப்பே மாறியிருந்தது. அவனைக் கூட்டிப் போக வந்திருந்த ஆட்கள் குளித்து, படியத் தலை வாரியிருந்தார்கள். மரத்தில் சரிந்திருந்த அவன் தலையை நிமிருந்து பார்த்தபடி பேசிக்கொண்டார்கள்.
“கிறங்கிப் போயி கிடக்கான். கஞ்சித் தண்ணி கொடுத்துத்தான் கூட்டிட்டுப்  போகனும்.”
சிறுவர்களில் ஒருவன் வேகமாக ஓடி தண்ணீர் செம்பும், கஞ்சியுமாக வந்தான். எதையும் குடிக்க முடியவில்லை. வயிற்றைப் புரட்டியது. பெண்கள் சிறு குழந்தைகளுக்குக் கள்ளப் பயல் காட்டிக்கொண்டிருந்தார்கள். வெயில் ஏறியிருந்தது. இரவில் பார்த்த முகங்கள் எல்லாம் மாறியிருந்தன. அவனை தெரு வழியாக நடத்திக் கூட்டிப்போகும் போது நாய்கள் குலைத்தபடி பின்தொடர்ந்தன. அவன் தெரு தாண்டும்போது திரும்பி வந்த மைதானத்தைப் பார்த்தான்.

மரம் வெயிலில் நின்றிருந்தது. இரவிலிருந்து கீழே இறங்க வழியற்றுத் திரிந்த இரண்டு எறும்புகள் வேகமாக மரத்தில் இறங்கத் தொடங்கின. அவன் தலை இருந்த இடம் வந்ததும் திகைப்படைந்து நின்று மெல்லக் கால்களை நகர்த்தி ஊர்ந்தன. மரம் தன் உருவில் இருப்பதாக உணர்ந்ததும் வேகமாக இறங்கித் தரையில் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் ஊரைக் கடந்து போயிருந்தார்கள். சூரியன் உச்சிக்கு வந்திருந்தது.

*******

1992

Apr 21, 2011

எஸ். ராமகிருஷ்ணனுக்கு தாகூர் இலக்கிய விருது

sra tagore

 

தாகூர் இலக்கிய விருது

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,

91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,

இதற்கானத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்

2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது,  அவ்வகையில் மிகுந்த பெருமையடைகிறார்.

விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மே மாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

•••

அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

Mar 8, 2011

பிரபஞ்சன்: எப்போதுமிருக்கும் நட்பு - எஸ்.ரா

அலைந்து திரிந்த நாட்களில் எழுத்தாளர்களை வைத்தே சென்னை நகரின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்திருந்தேன். உதாரணத்திற்கு அசோகமித்திரன் என்பது தி.நகர். திருவல்லிக்கேணி என்பது ஸ்ரீரங்கம்கண்ணன், ராஜமார்த்தாண்டன், மயிலாப்பூர் என்பது சி.மோகன், திலீப்குமார், லஸ்கார்னர் என்றால் நாகார்ஜுனன், லாசரா என்பது அம்பத்தூர், நங்கநல்லூர் என்பது வண்ணநிலவன், மற்றும் மா. அரங்கநாதன், மந்தைவெளி என்றால் சுகுமாரன், சாருநிவேதிதா, நந்தனம் என்றால் சா.கந்தசாமி, டிராட்ஸ்கி மருது, கே.கே.நகர் என்றால் வெளி ரங்கராஜன்praban, ஆழ்வார்பேட்டை என்றால் கணையாழி அலுவலகம் மற்றும் இ.பா, நுங்கம்பாக்கம் பிரமீள், கொட்டிவாக்கம் ந.முத்துசாமி, இந்த வரிசையில் ராயப்பேட்டைக்கு பிரபஞ்சன்.

இப்படிப் பகுதி வாரியாகப் பிரித்துக்கொண்டதற்கான முக்கிய காரணம் அந்தப் பகுதிக்குள் பிரவேசித்தவுடன் மேற்கண்ட எழுத்தாளர்களில் எவரையாவது சந்தித்துப் பேசி எப்படியாவது அவர்கள் செலவில் சாப்பாடு காபி என்று ஒரு நாளை ஓட்டிவிடலாம் என்பதுதான். அநேகமாக  எழுத்தாளர்கள் எதிர்பாராத நேரங்களில் அவர்கள் வீட்டை முற்றுகையிட்டு அவர்களது மனவிருப்பம் பற்றிய கவலையின்றிக் கேட்டுவாங்கி காபி சாப்பிட்டு இலக்கிய விவாதம் வம்பு செய்த நாட்கள் அவை.

வந்தேறியாக சென்னை மாநகரில் சுற்றிக்கொண்டிருந்தபோது போக்கிடம் கிடையாது.  இலக்கியம் பேசுவது, இலக்கியவாதிகளைச் சந்திப்பது என்ற இரண்டு விஷயங்களைத் தவிர வேறு நோக்கங்களும் கிடையாது.

அப்படி வெயிலேற நடந்து திரிந்த நாட்களில் தன் அறையின் கதவை எப்போதும் நண்பர்களுக்காகத் திறந்து வைத்திருந்தவர் பிரபஞ்சன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்னை நகரின் வெவ்வேறு மேன்ஷன்களில் பிரபஞ்சன் தங்கியிருந்த நாட்களிலும் சரி அரசுக் குடியிருப்பு கிடைத்து பீட்டர்ஸ் காலனிக்கு மாறிய பிறகும் சரி பிரபஞ்சனின் வீடு எப்போதுமே நண்பர்களுக்கான புகலிடவெளி தான்.

அன்றிலிருந்து இன்று வரை அவர் தனித்திருந்து நான் கண்ட தேயில்லை. எப்போதும் யாராவது  சில நண்பர்கள் அவரோடு இருப்பார்கள். உற்சாகமான பேச்சும் சிரிப்பும் நிரம்பி வழியும் இடம் அவரது வசிப்பிடம்

சென்னையின் முக்கிய மேன்ஷன்கள் அத்தனையும் அறிந்தவர் பிரபஞ்சன் ஒருவரே. அதிலும் திருவல்லிக்கேணி, மேற்குமாம்பலம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, தி.நகர் என்று அவர் வெவ்வேறு பகுதிகளில் இருந்த மேன்ஷன்களில் வாழ்ந்திருக்கிறார். அந்த நாட்களைப் பற்றி அவர் நினைவு கூறும்போது ஆயிரத்தொரு இரவுக் கதைகளை விடவும் அதிகமான கதைகள் பிரபஞ்சனிடம் எழுத இருக்கின்றன என்று தோன்றும்.

பேச்சு, உபசரிப்பு, நண்பர்களின் மீதான இயல்பான அக்கறை என்று  தன்னைச் சுற்றியுள்ளவர்களைத் தொடர்ந்து மகிழ்ச்சி கொள்ளச் செய்ய சிலரால் மட்டுமே முடியும். அப்படி நான் கண்டவர்களில் மிக முக்கியமானவர் பிரபஞ்சன்.

தமிழ் இலக்கியம், சினிமா, பத்திரிகை, தான் சந்தித்த மனிதர்கள் என்று அவர் விவரிக்கும் எதிலும் அடக்க முடியாத சிரிப்பு பீறிடும். குரலை மிக லாவகமாகவும் உயர்த்தாத முகபாவங்களுடனும் அவர் விவரிக்கும் அழகு அற்புதமானது.

சாகித்ய அகாதமி பரிசு, பாஷா பரிஷித் பரிசு உள்ளிட்ட பலமுக்கிய பரிசுகளைப் பெற்றிருந்தபோதும் தன்னைப் பற்றிய மிகைபாவனை எதுவுமின்றி எளிமையாகப் பழகக்கூடியவர். அவரது வீடு நிறைய புத்தகங்களுடன் பெரிய நூலகம் போலிருக்கும். முறையாக இசை பயின்றவர். இசையைப் பற்றி அவரது உரையாடல்களைக் கேட்பதே சங்கீதமாக இருக்கும்.

சென்னையின் மேன்ஷன்களில் அழையாத விருந்தாளியாக ஒளிந்து தங்கி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தேன். அதிலும் நண்பன் ராஜகோபால், ஸ்ரீரங்கம் கண்ணன் போன்றவர்களின் அறையில் இரவில் தங்கிக் கொள்வதும் பகலில் கால்போன சாலையில் சுற்றியலைவதுமே அன்றாடச் செயல்பாடு.

வாரம் ஒரு நாள் நிச்சயம் பிரபஞ்சன் அறைக்கு போய்விடுவேன். சில நாட்கள் காலை எட்டு மணிக்குத் துவங்கி இரவு பன்னிரண்டு, இரண்டு மணி வரை  அவரோடு இருப்பேன். அன்றாடச் செலவிற்குக்கூட என்னிடம் காசு இல்லாதது போலவே அவரிடமும் காசு இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். பிரபஞ்சன் கையில் பணம் வந்து சேர்ந்தால் அடுத்த சில மணி நேரங்களில் பறந்தோடிவிடும்.

எழுத்தாளர்களுக்கு ஆயிரம் பக்க நாவல் எழுதுவதைவிடவும் பெரிய சவால் பதிப்பாளர்களிடமிருந்து மனம்நோகாமல் பேசி ராயல்டி தொகையை வாங்குவது. எளிதில் பணம் கைக்கு வந்து விடாது. இதில் பெரிய எழுத்தாளர் சின்ன எழுத்தாளர் என்ற பேதம் கிடையாது. அப்படியே பெரிய பதிப்பகம் சின்னப் பதிப்பகம் என்ற பேதமும் கிடையாது. அந்த சவாலில் அதிர்ஷ்டவசமாக வென்று கையில்  சிறிய ராயல்டி தொகை வந்தவுடன் பிரபஞ்சனின் கனவுலகம் விழித்துக் கொண்டுவிடும்.

நண்பர்களைத் தேடி அழைத்து உபசரித்து, நல்ல உடை,  விரும்பிய புத்தகங்கள், இசைநாடாக்கள் என்று அவர் கடைசிப் பைசாவரை செலவு செய்துவிட்டு எப்போதும் போலவே எளிமையாக சாலையின் ஓரங்களில் மெதுவாக நடந்தபடியே, சென்னை நகரின் பரபரப்பைத் தனக்குள் ஒரு போதும் நிரப்பிக் கொள்ளாமல் தன்னியல்பாக வீடு திரும்புவதைக் கண்டிருக்கிறேன். காலைச் சுற்றும் பிரச்சினைகள் நிரம்பிய மாநகரில் எப்படி இவரால் எதையும் இயல்பாகச் சந்தித்து பதற்றம் அடையாமல் கடந்து செல்ல முடிகிறது என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருப்பேன்.

பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதுவது. புத்தகங்களுக்கான ராயல்டி தவிர அவருக்கென நிரந்தரமான மாத ஊதியம் கிடையாது.  குடும்பம் பாண்டிச்சேரியிலும் அவர் சென்னையிலுமாகப் பல வருடங்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். சென்னையில் அவர் வசிக்க வேண்டிய ஒரே காரணம் இலக்கியத்தின் மீதான விருப்பமும் நண்பர்களைச் சந்திக்க முடியும் என்ற ஆசையும் மட்டுமே.

பாண்டிச்சேரியில் பிரபஞ்சனைச் சந்தித்தால் முற்றிலும் வேறு மனிதரைச் சந்திப்பது போல இருக்கும். அவர் பிறந்து வளர்ந்த நகரம் என்பதால் கையில் ஓடும் ரேகைகள் போல பாண்டிச்சேரியின் அகம்புறம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும். குறிப்பாக அதன் நூற்றாண்டுகால வரலாறு, இன்றைய நிலை, அங்குள்ள குடியிருப்புகள், வீதிகள், அதன் பின்னால் உள்ள மறக்கமுடியாத நிகழ்வுகள் என்று சொல்வதற்கு நிரம்பிய விஷயங்கள் அவரிடம் உள்ளன. பாண்டிச்சேரியைப் பற்றி அவரது இலக்கியப் பதிவுகள் மிக முக்கியமானவை.

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் சரித்திரச்சான்றுகளாக மட்டும் அறியப்பட்டு வந்ததை, தனது வானம் வசப்படும் நாவலின் வழியே முக்கியமான புனைகதையாக்கி தமிழின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நாவல்களில் ஒன்றாக எழுதிக்காட்டியவர் பிரபஞ்சன்.

இன்றைக்குப் பரவலாக ஆனந்தரங்கம்பிள்ளையின் டயரி பொது வாசகர்களால் வாசிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் பிரபஞ்சன் என்றே சொல்வேன். இந்த நாட் குறிப்புகள் பற்றித் தொடர்ந்து சொல்லியும் எழுதியும் வந்ததோடு இதைப் புதுச்சேரி அரசின் உதவியோடு பதிப்பிக்கும் பணியிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் பிரபஞ்சன். புதுச்சேரியின் வரலாற்றைப் பாட நூலாக எழுதியதிலும் இவரது பங்கு மிக முக்கியமானது.

புனைகதைகள், கட்டுரைகள் என்பதில் மட்டும் சஞ்சாரம் கொள்ளாமல் தன்னைச் சுற்றிய அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், சமகால அரசியல், கடந்த கால சரித்திரத்தின் உண்மையை அறியும் மீள்வாசிப்பு, உலக இலக்கியத்தின் மீதான தொடர்ந்த வாசிப்பு, சமூக மாற்றங்களுக்கான இயக்கங்களோடு சேர்ந்து செயல்படுவது என்று அவரது விருப்பம் பன்முகப்பட்டது.

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு மட்டுமில்லை. தனக்குப் பிடித்த கதை அல்லது நாவல் என்று எதைப் பற்றியும், சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் மிகுந்த பாராட்டுடன் சொல்லக்கூடியவர் பிரபஞ்சன். அதை எழுத்தில் பதிவு செய்வதோடு ஏதாவது ஒரு நிகழ்வில் பேசியும்விடுவார். அப்படி அவரால் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்கள் கவிஞர்கள் நிறைய உண்டு. இதில் சிலர் தங்களது முதல் கதையை மட்டுமே எழுதியவர். சிலரை அவர் சந்தித்ததுகூட இல்லை. ஆனால் படைப்பின் வழியாக அவர் கொள்ளும் ஆனந்தத்தை உடனே மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் அவர் பவா செல்லதுரையின் முதல்சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரை. நவீனச் சிறுகதைகளில் புதிய வரவாக உள்ள பவா செல்லதுரையின் சிறுகதைகளை மதிப்பிட முயன்ற பிரபஞ்சன் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றையே நாலைந்து பக்கங்களில் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

பவாவின் சிறுகதைகளை எவ்வளவு ரசனையோடு வாசித்திருக்கிறார் என்பதற்கு  இந்த வரிகளையே சான்றாகச் சொல்லலாம்.  பவாவின் கதை உலகம், ரசனையோடு வடிவமைக்கப்பட்ட, எளிமையின் பேரழகோடு செய்யப்பட்ட உணவுவிடுதியின் குறைந்த வெளிச்சம் பழக்கப்பட்டுப் பின் இதமும் ஆசுவாசமும் தரும் ஒளிப்பரப்பாவது போலக் கதைகள் ஒவ்வொன்றும் வாசித்து முடிந்த பின் தரும் கலை இதம் வசீகர அனுபவங்கள் நிலைபேறுடைய பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பை இப்படி மனம் நிறைந்து பாராட்ட எத்தனை பேரால் முடியும். அவ்வகையில் பிரபஞ்சன் ஒரு முன்னோடி.

பவாவின் கதைகளை மட்டுமில்லை. தமிழ் நவீனச் சிறுகதையுலகின் முன்னோடிப் படைப்பாளிகளைப் பற்றிய அவரது அவதானிப்பு மிக முக்கியமானதாகும். இதில் ஜானகிராமனைப் பற்றிய அவரது பதிவு திரும்பத் திரும்ப என்னை வாசிக்க வைத்தது. ஜானகி ராமன் எந்த அளவு பிரபஞ்சனின் அகவுலகிற்கு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த வரிகளே சாட்சி.

தமிழ்மொழியில் தனிப்பெரும் வியக்தி தி.ஜானகிராமன், மனித அழகுகள் ஒவ்வொன்றாகப் பொறுக்கிச்சேர்த்து அழகைப் பேரழகாக மாற்றிய பெரும்கலைஞர் தி.ஜா. வார்த்தை அழகு, உச்சரிக்கும் அழகு, நிற்கும் அழகு, நிகுநிகு உடம்பழகு, பாட்டு அழகு, மனப்பரிமள வாசனை அழகு, காமம் விகசித்துச் சூரியனையே போகத்துக்கு அழைக்கும் அழகு, என அனைத்து அழகுகளாலும்  பெண்களைப் படைத்த ஜம்பொன்குயவர் அவர். பெண்களின் விகாசம் தாங்காமல் ஆண்களைத் தற்கொலை செய்ய வைத்த நேசத்துக்குரிய தன்பால் துரோகி அவர், அதனாலே அவரை எனக்குப் பிடிக்கும்.

இது போலவே தனக்குப் பிடிக்காத விஷயத்தை அவர் நேரடியாகப் பிடிக்கவில்லை என்று சொல்லும் மனவுறுதி கொண்டவர். அவரோடு ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். தன்னை எந்த விழாவிற்கு அழைத்தாலும் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து அதன் நுட்பங்களை ஒன்றுக்கு இரண்டுமுறை அவதானித்து அழகாகப் பேசக்கூடியவர்.

அன்று மேடைக்கு வரும்வரை அமைதியாக இருந்தார். புத்தக வெளியீடு நடந்தது. அவரைப் பேசவரும்படியாக அழைத்தார்கள். மேடைக்கு வந்த பிரபஞ்சன் அந்தக் குறிப்பிட்ட புத்தகம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதோடு அதை எழுதியவர் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமான சுயபெருமை செய்துகொண்டிருக்கிறார். புத்தகம் மிகவும் குப்பையானது, அபத்தமும் அர்த்தமற்ற உளறல்களும் நிரம்பியது என்பதால் அதைப் பாராட்டிப் பேச, தன்னால் இயலவில்லை. விரும்பி அழைத்த காரணத்திற்காக வந்திருந்தேன். தொடர்ந்து இதைப் பாராட்டிப் பலர் பேசுவதைக் கேட்க எனக்கு விருப்பமில்லை, கிளம்புகிறேன் என்று மேடையில் அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு சபையை விட்டு வெளியே கிளம்பி நடந்தார். சபை அதிர்ந்து போனது.

சாலையில் அவரோடு நடந்த படியே அந்த எழுத்தாளர் உங்கள் மீது கோபம் கொள்வாரே என்று கேட்டேன். அதற்கு பிரபஞ்சன்  முதலில் எழுத விரும்புகின்றவன் தன்னைப் பற்றிய சுயபெருமைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கையில் பணமிருந்தால் மட்டும் எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது. இப்போது அதை அவர் புரிந்துகொண்டிருப்பார் என்றபடியே எதுவும் நடக்காதவர் போல இயல்பாக எங்காவது காபி சாப்பிடலாமா என்று கேட்டார் பிரபஞ்சன்.

தன் வாசிப்பின் வழியே தான் அடையும் உண்மைகளை அவர் ஒருபோதும் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. அதுபோலவே வாசிக்கக் கிடைக்காத புத்தகங்களுக்காக வெளிப்படையாக ஆதங்கப்படுகின்றவரும்கூட. சில வேளைகளில் அவரைத் தேடிவருகின்றவர்கள் கையில் வைத்துள்ள புத்தகங்களை ஆசையுடன் வாங்கிப் புரட்டிப் பார்த்து இதைப் படிக்காமல் விட்டுவிட்டேனே எங்கே கிடைக்கிறது என்று உடனே பதிப்பக முகவரியைக் குறித்துக்கொள்வதைக் காணும்போது வீடு நிறைய புத்தகங்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தும் எதற்காக இவ்வளவு ஆதங்கப்படுகிறார் என்று தோன்றும்.

தன் உடல் உபாதைகள் பற்றியோ, குடும்பச் சூழல் குறித்தோ அதிகம் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடியவரில்லை. மிக அரிதாக அதைப்பற்றிப் பேசக்கூடியவர். அதுவும் எவ்விதமான எதிர் பார்ப்புகளும் அற்றதாக இருக்கும்

பிரபஞ்சன் நினைத்திருந்தால் அவரது நண்பர்கள் ஆர்வலர்களின் வழியே அதிகாரத்தின் உச்ச நிலைக்கு அடைந்திருக்கக்கூடும். பெரிய பதவிகள் பட்டங்கள் பெற்றிருக்கக் கூடும். ஆனால் அதை முற்றிலும் நிராகரித்தவர். கிடைக்கவில்லையே என்ற குறைகூட இல்லாதவர்.

பிரபஞ்சனின் சிறுகதைகள் தனித்துவமானவை. அன்றாட வாழ்வில் நெருக்கடிகளையும் அந்த நெருக்கடிக்கு உள்ளேயும் மனிதர்களின் மீதமிருக்கின்ற அன்பையும் வெளிப்படுத்தக்கூடியவை. கதா பாத்திரங்களின் மனோநிலையைப் பின்தொடர்ந்து சென்று எழுதக்கூடியது அவரது எழுத்து வகை.

மெல்லிய கேலியும் விமர்சனமும், குரலை உயர்த்தாமல் செல்லும் கதை சொல்லும் முறையும் அவருக்கு உண்டு.  வாழ்க்கை கருணையற்றது என்பது அவரது கதைகளின் சில நிகழ்வுகளின் வழியே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால் இப்படிக் கருணையற்ற வாழ்வின் ஊடாகவும் சிலர் தங்களது சுய அடையாளங்களை இழப்பதில்லை. அவரது ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், மனுஷி பிரும்மம், குமாரசாமியின் பகல்பொழுது, மரி என்கிற ஆட்டுகுட்டி போன்றவை எனக்கு விருப்பமான கதைகள்.

sra343 பிரபஞ்சனுக்கு உருவாகும் பிரச்சினைகள் ஆச்சரியமானவை. ஒருநாள் நானும் நண்பன் ராஜகோபாலும் அவரைச் சந்திப்பதற்காக பீட்டர்ஸ்காலனி வீட்டிற்குச் சென்றிருந்தோம். படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் வரவேற்று மாடி ஏறி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எங்கே இறங்கிச் செல்வதாக இருந்தார் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. ஒரு மணி நேரப் பேச்சிற்குப் பிறகு காபி சாப்பிடப் போகலாமா என்றார்.  சரி என்று கிளம்பிய போது அங்குமிங்குமாகத் தேடிவிட்டுச் சொன்னார்,

"ஒரு மணி நேரம் முன்னாடி என்னை ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசுவதற்கு அழைப்பதற்காக நாலு பேர் வந்திருந்தார்கள். அதில் யாரோ ஒரு ஆள் என்னுடைய புதுச் செருப்பைப் போட்டுவிட்டு சென்றுவிட்டான். இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் ஆசைப்பட்டு புதிதாகச் செருப்பு வாங்கியிருந்தேன்.  செருப்பைப் போட்டுக் கொண்டுபோன ஆள் பழைய செருப்பு எதையாவது விட்டுச் செல்வான் இல்லையா அதையும் தேடிப் பார்த்துவிட்டேன். திருடிக் கொண்டுபோன ஆள் செருப்பே போட்டுவரவில்லை போல. அவனுக்கு என்னுடைய சைஸ் செருப்பு எப்படி சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. சரி திருடுவது என்று முடிவு செய்தபிறகு சைஸ் பார்த்தா திருட முடியும். ஒரு எழுத்தாளன் வீட்டில் திருடுவதற்குச் செருப்பைத் தவிர ஒன்றும் கிடைக்கவில்லை என்பதுதான் நிஜமில்லையா? வெறுங்காலோடு நடக்கப் பழகிக்கொள்ள வேண்டியது. அதை நிச்சயம் இன்னொரு ஆள் திருட முடியாது இல்லையா" என்று சொல்லிச் சிரித்தார்.

நடந்து சென்று சரவணபவனில் காபி சாப்பிட்டோம். அவரை உணவகத்தில் உள்ளவர்கள் அறிந்திருந்தார்கள். அவரது நாவின் சுவைக்கு ஏற்ப காபியைத் தயாரிக்கும் நுட்பம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வரும்வழியில்  சில வருடங்களுக்கு முன்பாகத் தனக்கு நடந்த  சம்பவம் ஒன்றை விவரித்துச் சொல்லத் துவங்கினார்.

"இலக்கியக் கூட்டத்திற்கு அழைப்பதற்கு வருகின்றவன் இப்படியிருக்கிறான் என்றால் அழைத்து போனவன் ஒருவன் கதையிருக்கிறது. அதையும் கேளுங்கள். சாகித்ய அகாதமி விருது கிடைத்தவுடன் கடலூர்  அருகில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்துவதாக அழைத்தது. நானும் கலந்துகொண்டேன்.

விழா நடப்பதாகச் சொன்ன இடத்திற்குப் போனபோதுதான் தெரிந்தது அது ஒரு இரண்டு தெருக்கள் சந்திக்குமிடம் என்று. நான் போனபோதுதான் மேடை அமைத்துக்கொண்டிருந்தார்கள். எப்படியும் மூன்று மணிநேரமாகும் என்றதால் விழா நிர்வாகிகளைத் தேடினேன்.

எனக்காக அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக போனில் சொல்லியிருந்தார்கள். அதனால் அங்கே சென்று காத்திருக்கலாம் என்று தேடியபோது அமைப்பாளர்களில் ஒருவரையும் காணவில்லை. ஒரு வழியாகக் கண்டுபிடித்தபோது அறை கிடைக்கவில்லை என்பதால் டீக்கடை ஒன்றில் காத்திருக்கும் படியாகச் சொன்னார்கள்.

இரவு பத்து மணிக்குக் கூட்டம் ஆரம்பம் ஆனது. சிறுவர்கள் நடன நிகழ்ச்சி, உள்ளூர்ப் பிரமுகர்களின் வாழ்த்து முழக்கங்கள், ஆடல்பாடல் நிகழ்ச்சி என்று நீண்டு கொண்டிருந்ததேயன்றி பாராட்டுவிழா துவங்குவதற்கான அறிகுறியே இல்லை. இதில் வந்தவர்கள் இரவு உணவு தரவில்லை என்பதால் பசிவேறு காதை அடைக்கத் துவங்கியிருந்தது.

முடிவில் நள்ளிரவில் பாராட்டு விழா அரங்கேறத் துவங்கியது. ஆள் உயரப் பாராட்டுப் பத்திரம் ஒன்றை பிரேம் செய்து தந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு நன்றியுரை சொல்லிவிட்டு ஊருக்குப் புறப்படலாம் என்று நினைத்து வழிச்செலவிற்கான தொகைக்காக அழைப்பாளர்களைத் தேடினால் ஒருவரையும் காணவில்லை. கூட்டம் முடிந்த மறுநிமிசம் மாயமாக மறைந்து போய்விட்டார்கள்.

ஆள் உயரப் பாராட்டுப் பத்திரத்தைத் தூக்கிக்கொண்டு எப்படி நடப்பது என்று தெரியவில்லை.  பேருந்தில் இதை வைத்துக்கொண்டு எப்படி ஊருக்குப் பயணம் செய்வது என்று வேறு குழப்பமாக இருந்தது.

இங்கேயே ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டுப் போய்விடலாம் என்றாலும் எங்கே வைப்பது யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள் என்றும் தோன்றியது. வேறுவழியில்லாமல் அந்தப் பாராட்டுப் பத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தேன்.

இத்தனை ஆண்டுகாலம் தமிழில் எழுதி விருது வாங்கியதற்குக் கொடுக்கப்பட்ட தண்டனை இது தானோ என்று நினைத்தபடியே யாரும் அறியாமல் ஒரு விளக்குக்கம்பத்தின் அருகே வைத்துவிட்டு அவசர அவசரமாகப் பேருந்து பிடித்து பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தேன்.

ஆள் உயரப் பாராட்டுப் பத்திரம் செய்ய ஆசையிருந்தவர்களுக்கு அழைத்து வந்த எழுத்தாளருக்கு உணவு வாங்கித் தரவோ, வழியனுப்பி வைக்கவோ விருப்பமில்லை. பாராட்டுப் பத்திரத்தில் உள்ள வாழ்த்துப்பாடலை எழுதிய நபர், பிரேம் போட உதவிய நபர் என்று நாற்பது பெயர்கள் அதில் இருந்தது. அவர்கள் நோக்கம் தங்களைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வது. அதற்கு நான் பலியானதுதான் வேடிக்கை" என்று உரக்கச் சிரித்தார்.

தனது அவமதிப்புகளைக்கூடப் பரிகாசமாக மாற்றிவிட முடியும் மனது அவருக்கு இருந்தது.

பிரபஞ்சன் முறையாகத் தமிழ் படித்தவர், சங்க இலக்கியம் துவங்கி காப்பியங்கள் வரை எதைப் பற்றிக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்லுவார். ருஷ்ய இலக்கியங்களைப் பற்றிப் பேசத் துவங்கினால் வியப்பும் பெருமையாக அவர்கள் படைப்புகளை விவரித்துக் கொண்டிருப்பார். அவரது அப்பா கள்ளுக்கடை வைத்திருந்த நாட்களைப் பற்றியும் சீட்டு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி பகலிரவாக சூதாடிய மனிதர்களைத் தன் பிராயத்தில் கண்டதைப் பற்றியும் அவர் விவரிக்கும் போது இதை எல்லாம் இன்னும் எழுத்தில் முழுமையாக பிரபஞ்சன் கொண்டுவரவில்லையே என்று ஆதங்கமாக இருக்கும்.

நல்ல எழுத்தாளர் என்பது போலவே பிரபஞ்சன் ஆகச்சிறந்த பேச்சாளர். கூட்டத்தைத் தன் பேச்சில் மயக்கும் வித்தை அவரிடம் கைகூடியிருந்தது. பல்கலைக்கழக ஆய்வு அரங்கமாக இருந்தாலும், பொது நிகழ்வாக இருந்தாலும் அவர் பேச்சு எப்போதுமே சுவாரஸ்யமானது. பலமுறை அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்களில் அவர் பேசியிருக்கிறார்.

பிரபஞ்சன் நேர்த்தியான ஆடைகள் அணிவதிலும் தன் தோற்றப் பொலிவிலும் அக்கறை காட்டக் கூடியவர். எழுத்தாளர்களில் அவர் ஒரு அழகன் என்று நண்பர்கள்  சொல்வார்கள். அதை மெய்யாக்கும் விதமாக அவரது தோற்றத்தில் எப்போதுமே தனிவசீகரம் இருக்கும்.

நல்ல காபி, சிறந்த இசை, விருப்பமான புத்தகங்கள், நிறைய நண்பர்கள் இதுதான் பிரபஞ்சனின் உலகம். இன்றைக்கு அவரது அறைக்குச்  சென்றாலும்  யாரோ சில இளம் எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்தித்துப் பேசி விவாதித்து, தங்களைப் பகிர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான முக்கிய காரணம் தன்னைத் தேடி வருகின்றவர்களிடம் அவர் காட்டும் நிஜமான அக்கறையும் தன் விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் இயல்பான தன்மையும், புதிதாக எழுத வருகின்றவர்களை அழைத்துப் பாராட்டி, தொடர்ந்து எழுதச்சொல்லி உற்சாகப்படுத்தும் பாங்குமேயாகும்.

அவ்வகையில் பிரபஞ்சனின் இல்லம் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய பகிர்வு வெளியாகும். அந்த அறை தந்த கதகதப்பும் உபசரிப்பும் எனக்குமட்டுமல்ல நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரது நினைவிலும் எப்போதும் தன் பசுமையோடிருக்கிறது. அவ்வகையில் பிரபஞ்சனின் இருப்பு எழுத்தாளனின் உயரிய தோழமை என்றே சொல்வேன்.

***

நன்றி: வாசகபர்வம் – உயிர்மை வெளியீடு

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்