அவன் ஓர் அதிசயப் பிறவி. பிறந்து பத்து வருஷங்கள் வரை ஊமையாகவே இருந்தான். மனமத ரூபமாக இருந்து என்ன பயன்? வாயிலிருந்து எச்சில் அருவிபோல வழிந்த வண்ணமாக இருக்கும். ஆளை விழுங்கும் கருவிழிகள்தான்; ஆனால், உயிரின் சலனம் இருக்காது. பிரகாசம் இருக்காது. வெருகு விழித்த மாதிரி, அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் கண்கள்.
மதுரைச் சீமையில், குறுமலைக்கு அடுத்த சிற்றூரின் தலைமைக்காரத் தேவர் மகன். சொத்தையும் செல்வாக்கையும் ஆளவந்த ஏகபுத்திரன். காசி, ராமேசுவர யாத்திரைப் பயன் என்பது அவன் தகப்பனார் எண்ணம்.
குழந்தை பிறந்ததும் தகப்பனாருக்கு மனம் இடிந்துவிட்டது. பத்திரகாளியையும் கூசாது எதிர்த்துப் பார்க்கும் அவர் கண்கள் தரையை நோக்கின. ஆகக்கூடி, உள்ளூர் ஜோசியனும், வைத்தியனும் இந்த அற்புதமான சிசுவைப் பற்றிச் சொன்னவை கூடப் பொய்த்துவிட்டன.
பிறந்தவுடனேயே தாயார் இந்த உலகத்தில் குழந்தைக்குத் தன் இடத்தைக் காலிசெய்து கொடுத்ததினால், அவளைப் பொறுத்தவரை அந்தக் கவலை நீங்கிற்று என்றே சொல்லலாம். தலைமைக்காரத் தேவர் பொறுப்பின் பளு தாங்க முடியாதது. மறவக் குறிச்சிப் பெண்ணைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டிருந்தார். அந்த அம்மையாருக்கு ஜாதகப்படி குழந்தை கிடையாது என்பதைத் தேவருடன் கூடிய ஐந்தாறு வருஷ வாழ்க்கை நிரூபித்தது. அதில் ஏற்பட்ட பொறாமை இந்த அசட்டுக் குழந்தையின் மீது பாய்ந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை.
தேவரவர்களுக்கு இந்தக் குழந்தை என்றால் உயிர், கண்ணுக்கு கண். பலசாலிகள் தங்கள் ஆசைகளை எல்லாம் பலவீனர்களின் மீது சுமத்துவது - தங்கள் வெறுப்பைச் சுமத்துவதுபோலவே - இயற்கை. அந்த இயற்கை, விதியையும் கடக்க வேண்டியதாயிற்று.
பத்து வருஷங்களாகத் தலைமைக்காரத் தேவரின் பூஜைகளும், நோன்புகளும் குழந்தைக்கு 'அப்பா' 'அம்மா' என்ற இரண்டு வார்த்தைகளைச் சொல்லும் படிதான் செய்ய முடிந்தன. ஓட்டை வாளியை வைத்துத் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறவனுக்கு, பானையில் ஒரு சிரங்கை தண்ணீர் ஊற்ற முடிந்துவிட்டால் ஏற்படும் நம்பிக்கைக்கும் குதூகலத்திற்கும் எல்லையே இராது. தேவரவர்களுக்கு, தமது ஊமைப் பிள்ளையும் சகலகலா பண்டிதனாகி, நாட்டாண்மையைக் கம்பீரமாக வகிப்பான் என்ற அசட்டு நம்பிக்கையும் பிறந்தது.
குழந்தை 'அப்பா' 'அம்மா' என்று சொல்லும் சமயத்தில்தான் அதன் கண்களில் அறிவின் சுடர் சிறிது பிரகாசிக்கும். ஊர்க்காரர்களுக்குக் கூட அசட்டுத்தனம் என்று படும்படி தகப்பனார் நடந்து கொண்டார். அவருடைய அசட்டுத்தனத்தின் சிகரம் என்னவென்றால், பிள்ளையை உள்ளூர்த் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதுதான். "ஒத்தைக்கொரு பிள்ளை என்றால் புத்திக்கூடக் கட்டையாப் போகுமா?" என்று ஊர்க்காரர்கள் கூடச் சிரித்தார்கள்.
பள்ளிக்கூட வாத்தியாருக்கு அதிகமாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அவர் படிப்பு, ஊர்க்காரர்களைப் பிரமிக்க வைப்பதற்குப் போதுமானது. மேலும், அநுபவம் நிறைந்தவர். பையனுக்குப் படிப்பு வராது என்று சொல்லவில்லை. நளினமாக சமஸ்கிருதக் கதை ஒன்றைச் சொல்லி, மாடு மேய்தல் அறிவு விருத்தியாவதற்கு முதற்படி என்று சொல்லி வைத்தார்.
தலைமைக்காரத்தேவர் மகனுக்கா மாட்டுக்காரப் பிள்ளையின் துணை கிடைக்காமற் போகும்? ஜாம் ஜாம் என்று எருமைச் சவாரி செய்து கொண்டு அவன் குறுமலைப் பிரதேசத்தைச் சுற்றி வர ஆரம்பித்தான். உபாத்தியாயர் சொன்னபடி உள்ளுணர்வு வளர்ந்ததோ என்னவோ, ஈசனுக்குத்தான் வெளிச்சம். ஆனால், ஆந்தையையும், கோட்டானையும், சில் வண்டுகளையும் தேடியலையும் முயற்சியில் எப்படியோ அவன் ஈடுபட ஆரம்பித்தான். அதில் மனத்தைப் பறிகொடுத்தான் என்றே சொல்ல வேண்டும். அவனுக்கு வீட்டுக்கு வருவதென்றாலே வேப்பங்காயாகி விட்டது.
தேவருக்குப் பிரச்னை மேல் பிரச்னையைக் கொடுத்துப் பரிசோதிக்க வேண்டும் என்று, அவர் பிள்ளைக்காக வழிபட்ட கடவுளுக்கு ஆசையிருந்தது போலும்! பையனை வீட்டுக்குத் திருப்புவது எப்படி என்றாகிவிட்டது.
நீண்ட யோசனையின் பேரில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன அசடனானாலும் பையன் ஒரு மனிதப் பிராணிதானே! அவனுக்குக் கலியாணத்தைச் செய்து வைத்தால் வீட்டுப் பற்று ஏற்படக்கூடும் என்று நினைத்தார்.
தேவருடைய வட்டாரத்திற்குள் பெண்ணா கிடைக்காமற் போய்விடும்? மருதையாத் தேவன் ஏழைதான். அதனால், அவன் மகள் அழகாக இருக்கக் கூடாதா? கருப்பாயி பேருக்கு ஏற்ற கருப்பாக இருந்தாலும் நல்ல அழகி. அவள் தேவரின் கட்டளையின் பேரில் அவன் முன்பு தென்பட ஆரம்பித்ததிலிருந்து, தேவருடைய மகன் முகத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. கருப்பாயியைக் கண்டவுடன் அவன் முகம் அறிவுக் களையுடன் பிரகாசிக்கும். கருப்பாயிக்கும், தனக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று அந்த இருண்ட சித்தத்தில் மின்வெட்டுக்கள் போல் தோன்றலாயிற்று.
அச்சமயத்தில் அவனுக்கு வயது பதினைந்து. 'அப்பா' 'அம்மா' என்ற இரண்டு சொற்களுடன் இப்பொழுது 'கருப்பாயி' என்ற வார்த்தையும் தெரியும். குறுமலைக்குன்றின் காடுகளும் அவனுக்குத் தெரியும்.
2
குறுமலைச் சாரலில் பிரம்மாண்டமான விருட்சங்களும் கண்ணுக்கு ரம்மியமாகச் செழித்து நெருங்கிய புல் பூண்டுகளும் கிடையா. பெரிய நாய்க்குடைகள் ரூபத்தில் வளர்ந்த உடை மரம், கள்ளி, முட்புதர்களான குத்துச் செடிகள், இடையிடையே விழுது விட்ட ஆல், அதைச் சுற்றி வளரும் பனை, கண்ணாடிக் கொம்மட்டிக் கொடிகள் - இவைதான் குறுமலைக் காடு. முயலும், நரியும், கோட்டானும், ஆந்தையுந்தான் அங்குள்ள பயங்கரப் பிராணிகள். கல்லும் கள்ளி முள்ளும் நிறைந்து இடையிடையே குத்திப் பாறைகளைச் சுற்றிச் சுற்றிப் போகும் ஒற்றையடித் தடங்களில் மேய்ச்சலுக்குப் போகும் வழிகள் குறுமலைப் பிரதேசத்து மாடுகளுக்கும் மாட்டுக்காரப் பிள்ளைகளுக்குந்தான் தெரியும்.
இந்தக் காட்டில் சித்தர்களும், ஔஷத மூலிகைகளும் உண்டு என்பது ஐதீகம். மாட்டுக்காரப் பையன்கள் கொண்டுவரும் கதைகள் பிரத்யட்சப் பிரமாணமாகக் கொள்ளப்பட்டு வந்தன. இடையிடையே ஜடாமுனிக் கதைகளும் ஊரார் பேச்சின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி வந்தன.
அன்று தலைமைக்காரத் தேவரின் மகனுக்குத் தாகம் அதிகரித்ததற்குக் காரணம், என்றுமில்லாதபடி சுட்டுப் பொசுக்கும் வெய்யிலின் கொடுமைதான். உச்சி வெய்யிலில் மாடுகள் கூட நிழலில் படுத்துவிட்டன. மலைச்சாரலில் நின்று சமவெளியையும் தூரத்தில் தெரியும் சிற்றூர்களையும் பார்த்தாலே, பூமி ஓர் அக்கினி லோகம்போல் தகதகவென்று கானலில் பிரகாசித்தது.
உயர வானத்தின் இரண்டொரு மூலைகளிலிருந்த பஞ்சு மேகங்களும் பார்க்கமுடியாதபடி கண் கூசும்.
குறுமலையில் ஒரே சுனைதான் உண்டு. இருண்ட ஊற்று என்றே அதற்குப் பெயர். உச்சி நேரங்களின் நாவரட்சியினால் செத்தாலும், மாட்டுக்காரப் பையன்கள் அந்தத் திக்கிற்குச் செல்லவே மாட்டார்கள்.
இந்த அசட்டுப் பிள்ளைக்குத் தாகம் அதிகரித்தது. அறிவு, சுடர் விளக்காகவும், பயத்தை விரட்டும் கருவியாகவும் இருக்கலாம். ஆனால், அறிவு, சலனம் இல்லாது இருண்டு விட்டால், பயம் என்பதே ஏன் தோன்றப் போகிறது?
பையன் இருண்ட குகைக்குள் சென்று இரண்டு சிரங்கை ஜலம் வாரிக் குடித்தான். என்ன தோன்றிற்றோ அந்த இருண்ட அறிவிற்கு? தண்ணீரில் குதித்து நீந்த ஆரம்பித்தான். அரைமணி நேரம் கழிந்தது. ஜில்லென்ற நீர் உடலை நடுக்க ஆரம்பித்தது. கரையில் வந்து, ஒரு பாறை மீது வெய்யில் படும் படியான இடத்தில், மரத்துக் கிளைகளைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான்.
எவ்வளவு நேரம் சென்றதோ!
இருண்ட குகைக்குள்ளிருந்து திடீரென்று ஒரு வெளிச்சம் தோன்றியது. அது மெல்லப் மெல்லப் பரந்து, இருண்ட குகையிலும், அதனடியில் சிறிது அலையிட்டுக்கொண்டிருக்கும் ஜலத்திலும் மின்னியது. அதன் பின் திவ்வியமான வாசனை குகை முழுவதும் பரவியது.
இந்த அசட்டுப் பிள்ளைக்கு அது அற்புதமாகத் தோன்றியதோ என்னமோ - அது வேடிக்கையாக இருந்தது என்பதில் தடையில்லை. வெளிச்சத்தை நோக்கிச் சிரித்துக்கொண்டே இருந்தான்.
வெளிச்சம் அதிகமாகப் பரவியது. ஆளை மயக்கும்படி அதிகரித்தது. அச்சமயத்தில் குகையின் உள் மூலையிலிருந்து ஓர் உருவம் நடந்து வர ஆரம்பித்தது. உருவம் மிகவும் குள்ளமாக இருந்தாலும், வயதை மதிக்க முடியாதபடி இருந்தது. குழந்தையின் முகம் அதில் பொன்னிறமான தாடி, இடையில் ஒரு லங்கோடு. கண்கள் கருத்து குகையின் நீர் போல் புரண்டு பிரகாசித்தன. அந்த உருவம் இயற்கை விதிகளுக்குப் புறம்பானது போல் ஜலத்தின் மேல் நடந்து வர ஆரம்பித்தது. அப்பொழுதும், இந்த ஊமைப் பிள்ளைக்குப் பயம் தோன்றவில்லை.
அந்தத் தவ உருவம் குகையின் வாசலை நெருங்கியதும், இந்த அசட்டுக் குழந்தை பேசாமல் அவர் பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தது.
அந்தத் தவ உருவத்தின் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. கண்களில் ஒரு கணம் சிந்தனை தேங்கியது. அசட்டுக் குழந்தையின் கண்களையே அது கூர்ந்து கவனித்தது.
ஸ்பரிசத்திலே புளகாங்கிதமடைந்த குழந்தையின் சிரிப்பு, படிப்படியாக மறைந்தது. கண்களில் அறிவுச் சுடர் ததும்பியது.
"என்னுடன் வா!" என்று குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வந்த வழியே திரும்பியது உருவம். குகையில் படிப்படியாக இருள் கவிய ஆரம்பித்தது. அமைதி குடிகொண்டது.
பழைய இருள், பழைய அமைதி.
3
தவ உருவமும் பையனும் நெடுந்தூரம் நடந்து சென்றார்கள்.
சுனையைத் தாண்டியதும் மணல். எவ்வளவு தூரம் சென்றார்களோ! குகை விரிந்து இரண்டு பிரமாண்டமான பாறைச் சுவர்களாயிற்று. எங்கோ உயரப் பறவைகள் எட்டிப்பிடிக்கும் தூரத்தில், வானத்தின் துண்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்களைக் காண்பித்து வழி காட்டியது.
முனி உருவம் கத்திபோல் கதிக்கச் சென்றது. அசட்டுக்குழந்தை பாறையையும் வானத்தையும் பார்த்துச் சிரித்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தது.
இருவரும் மணல் வழியின் கடைசியை அடைந்தார்கள். அங்கும் பாறைச் சுவர் வழியை மூடியிருந்தது.
அந்த மூலையில் ஒரு சுனை. அதன் பக்கத்தில் ஒரு பாறை.
பாறையின் மீது இருவரும் உட்கார்ந்தனர். முனிவர் குழந்தையைக் தன் முகமாக உட்கார வைத்து, அதன் கண்களில் நோக்கி மந்திரத்தை உச்சரித்தார். குழந்தையைச் சுற்றிலும் ஒரு தேஜஸ் ஒளிவிட ஆரம்பித்தது. அதற்குப் புதிய விஷயங்கள் தென்படலாயின. எங்கு பார்த்தாலும், செங்குத்தாகவும் குறுக்கும் நெடுக்குமாகவும் கிடக்கும் மணிகள், பாறைகள்! அதில் தங்கங்களும் வெள்ளியும் கொடிபோலப் படர்ந்து மூடிக்கிடக்கின்றன.
பவழத்தாலும், தங்கத்தாலும் கிளைகள் கொண்டு, வைரங்களாக மலரும் ஓர் அற்புதப் பூங்காவனம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு லோகம். அதன் மலர் அல்லது கனி பல வர்ணங்களில் பிரகாசிக்கும் வைர வைடூரியங்கள். கிளைகளிலிருந்து சுருண்டு தொங்கும் நாகசர்ப்பங்கள், கண்ணாடிகள் போல் பிரகாசிக்கும் மேல் தோலையுடைய பிரமாண்டமான விரியன்கள், விஷப்புகையைக் கக்கிக்கொண்டு திமிர்பிடித்தவை போல் சாவதானமாக நெளிகின்றன. பல பல வகையில் ஒளிவிட்டுக் கண்களைப் பறிக்கும் மணலில் அங்கங்கே உலகத்து ஜீவராசிகளின் எலும்புக் கூடுகள் பாதி புதையுண்டு கிடக்கின்றன.
குழந்தையை அழைத்து வந்த சித்தரின் பிரதிபிம்பங்கள் போல் அச்சு அசல் மாறாத உருவங்கள் ஒவ்வொரு மரத்தடியிலும் நிஷ்டையில் ஆழ்ந்து சலனமற்றிருக்கின்றன. அந்த இயற்கைக்கு விரோதமான உலகத்திலே, சுவையையும் பரிமளத்தையும் பெற்ற காற்று, உணவாகத் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
"தேவியைப் பார்" என்று இடி முழக்கமான குரல் ஒன்று கேட்டது.
உடனே, அந்தப் புதிய உலகம் மறைந்தது. பழைய இருட்டில், அந்தப் பாறைச் சுவரின் முகட்டில், ஒரு கன்னக் கனிந்த இருள் உருவம்.
அந்த இருளுக்கே ஒரு பிரகாசம் உண்டு போலும்! அவள் தான் தேவி!
பிறந்த கோலத்திலே வாலைக் கனிவு குன்றாத கன்னி உருவம்! உயர இருந்தாலும், குழந்தைக்கு ஒவ்வொரு அங்கமும் நன்றாகத் தெரிந்தது. அசைவற்று நிற்கும் உருவத்தின் முகத்தில் ஒரு புன்னகை! கொடூரமான, உயிரைக் கொல்லக்கூடிய - ஆனால், உடலில் உணர்ச்சி வேட்கையைப் பெருக்கக் கூடிய புன்னகை! குழந்தை அவளையே நோக்கிக் கொண்டிருந்தது. வைத்த கண் எடுக்காமல் நோக்கிக் கொண்டிருந்தது. மெதுவாகக் 'கருப்பாயி' என்ற வார்த்தை அதன் வாயிலிருந்து வெளிப்பட்டது. சப்த உலகங்களும் மோதுவனபோல் ஒரு பேரிடி. உருவம் இரு கூறாகப் பிளந்து மறைந்தது. பாறைச் சுவர்கள் கவிழ்ந்து விழுந்தன. ஆயிரம் மின்னல்கள் குழந்தையின் நெஞ்சில் பாய்ந்தன. ஒரே இருட்டு. தலைமைக்காரத் தேவரின் குழந்தை கருகிக் கரிக்கட்டையாகச் சுனையில் மிதப்பதை மாட்டுக்காரப் பையன்கள் கண்டு, ஊராருக்குத் தெரிவித்தார்கள்.
மணிக்கொடி, 14-04-1935
Aug 19, 2013
ஞானக் குகை - புதுமைப்பித்தன்
Aug 16, 2013
”காஞ்சனா” தொகுப்பு பற்றி–க,நா.சு
"உண்டு" என்று சொல்லிவிட்டுச் சிறிது தயங்கினேன் நான். பிறகு சொன்
கதையை மனசில் வாங்கித் தெரிந்து கொள்ள அந்நிய நாட்டு இலக்கியாசிரியருக்குச் சிறிது நேரம் பிடித்தது. பிறகு அவர் சொன்னார் ; "இந்தப் பிரச்சினையை மஹா கவி வால்மீகியே நியாயப்படித் தீர்த்துவைத்திருக்க வேண்டும். தன்மனைவிக்கு ஒரு நீதி, பிறன் பெண்டுக்கு ஒரு நீதி என்று லக்ஷிய புருஷனாகிய ராமனே நினைத்ததாக முடிவு ஏற்படும்படி அவர் விட்டது தவறுதான்." பிறகு கேட்டார் ; "அந்தக் கதையின் ஆசிரியர் பெயர் என்ன?" என்று.
"புதுமைப்பித்தன் என்று புனைப்பெயர் வைத்துக் கொண்ட ஒருவர். அவர் இயற்பெயர் விருத்தாச்சலம்," என்றேன் நான். தொடர்ந்து சொன்னேன் ; "இவ்வளவு தெளிவாக உங்களுக்குத் தெரிந்துவிட்ட விஷயம் எங்கள் பெரியவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் விளங்கி விடுவதில்லை. ஆதி கவி அப்படி எழுதவில்லை ; இந்த புதுமைப்பித்தன் யார் சுண்டைக்காய் என்று சண்டைக்கே வந்து விடுவார்கள். ஆனால், அது என்னவானாலும் இன்றுள்ள சிருஷ்டிகர்த்தாக்கள் பழமைபற்றிக் கொண்டுள்ள நோக்கம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்றே எண்ணுகிறேன்."
புதுமைப்பித்தனின் கதைத் தொகுதிகளில் ஒன்றான காஞ்சனை என்கிற தொகுதியில் உள்ள கதைகளில் ஒன்று மேலே கூறிய "சாப விமோசனம்", அற்புதமான கதை ; அற்புதமான உருவத்தில் விழுந்திருக்கிறது. இந்தத் தலைமுறையின் சிறந்த சிறு கதைகளில் அது ஒன்று என்பது என் அபிப்பிராயம். அது வெளிவந்ததிலிருந்து இன்று வரை அந்தக் கதையை மட்டும் நான் இருபது தடவையாவது படித்திருப்பேன். படிக்குந்தோறும் படிக்குந்தோறும் புதிது புதிதாக இன்பம் தரும் கதை அது. இப்படித் திரும்பத் திரும்பப் படிக்கக்கூடிய கதைகளும் நூல்களுமே நல்ல கதைகளும் நூல்களுமாகும் என்று சொல்வதில் தவறு என்ன?
புதுமைப்பித்தன் தமிழில் இருநூறுக்கும் அதிகமாகவே கதைகள் எழுதியிருக்கிறார். எல்லாக் கதைகளுமே ஒரே தரத்தவை என்று சொல்லமுடியாது எனினும் ஒரு முப்பதுக்குமேல் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் ஒரு பத்தாவது காலத்தால் சாகாது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
காஞ்சனை என்கிற இந்தத் தொகுதியிலேயே இன்னொரு கதையைப் பார்க்கலாம். இது வேறு ஒரு தினுசான கதை.
"வீரபாண்டியன் பட்டணத்துச் சுப்பையா பிள்ளை, ஜீவனோபாயத்துக்காகச் சென்னையை முற்றுகையிட்ட போது சென்னைக்கு மின்சார ரயிலோ, அல்லது மீனம்பாக்கம் விமான நிலையமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற செமண்டு கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம்" என்று தொடங்குகிறது கதை. "பவள்க்காரத் தெருவில், திருநெல்வேலிவாசிகளின் சுயஜாதி அபிமானத்தைக் கொண்டு வளர்ந்த தனலட்சுமி புரோவிஷன் ஸ்டோர்ஸ், பிற்காலத்தில் தனலட்சுமி ஸ்டோர்ஸ் ஜவுளிக் கடையாக மாறியது. தேசவிழிப்பின் முதல் அலையான ஒத்துழையாமை இயக்கமும், பின்னர் அதன் பேரலையான உப்பு சத்தியாக்கிரஹமும், சுப்பையாப் பிள்ளையின் வாழ்க்கையிலோ மனப் போக்கிலோ மாறுதல் எதுவும் ஏற்படுத்தவில்லை. வீரபாண்டியன் பட்டணத்தின் ஒரு சிறு பகுதியாகவே அவர் சென்னையில் நடமாடினார். ஜீவனோபாயம், பிறகு சௌகரியப்பட்டால் பிறருக்கு உதவி, சமூகத் தொடர்புகளுக்குப் பயந்து பணிதல் எல்லாம் சேர்ந்த உருவம் சுப்பையா பிள்ளை. மின்சார ரயில் அவர் வாழ்வில் ஒரு மாறுதலை ஏற்படுத்தியது. அவர் தாம்பரத்தில் குடியேறினார். தினம் மின்சார ரயில் பயணம் அவசியமாயிற்று.....விடியற்காலம் கிணற்றுத் தண்ணீர் ஸ்நானம், பழையது, கையில் பழையது மூட்டை, பாஸ் வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லரைýý இவற்றுடன் பவளக்காரத் தெருவுக்குக் கிளம்புவார். "இரவு கடைசி வண்டியில் காலித்தூக்டகுச் சட்டி, பாஸ், வெள்ளி விபூதிச் சம்புடத்தில் உள்ள இரண்டனாச் சில்லரை, பசி, கவலை-இவற்றுடன் தாம்பரத்துக்குத் திரும்புவார்."
சுப்பையா பிள்ளையின் நிறைந்த இந்த வாழ்வில் இன்னொரு நிறைவு அனுபவமும் புகக் காத்திருந்தது. மாம்பலம் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு மின்சார ரயிலில் ஏறினாள் ஒரு பெண்மணி. சுப்பையா பிள்ளை உட்கார்ந்திருந்த ஆஸனத்துக்கு எதிர் ஆஸனத்தில் உட்கார்ந்து கொண்டாள். மாணவி வைத்தியத்துக்குப் படிப்பவள். கழுத்தில் லாங் செயினுடன் ஒரு
இது üசுப்பையா பிள்ளையின் காதல்கள் என்னும் கதை.
கட்டு எதற்கும் அடங்காத கதாசிரியர் புதுமைப்பித்தன். இதுதான் முடியும், இது முடியாது என்பதில்லை அவருக்கு, எதையும் முயற்சி செய்து லாவகமாக உருவாக்கி விடுவதில் சமர்த்தர். சித்த வைத்திய தீபிகையின் ஆசிரியரான கந்தசாமிப் பிள்ளையைத் தேடிக்கொண்டு கடவுளே வந்துவிட்டார். அவர் கதைகளில் ஒன்று; பிராட்வே முனையில் ஹோட்டல் சுகாதாரம் பேசிக் கொண்டே காபி சாப்பிட்டுவிட்டு, நர வாகனத்தில் (ரிக்ஷாவில்தான்) வீடு போய்ச் சேருகிறார்கள் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். கடவுளிடமே தன் பத்திரிகைக்கு ஜீவிய சந்தா வசூல் செய்துவிடப் பார்க்கிறார் கந்தசாமிப்பிள்ளை. "யார் ஜீவியம் ..." என்று கேட்கிறார் கடவுள். வீட்டிலே கந்தசாமிப் பிள்ளையின் பெண்குழந்தை அவர்களை வரவேற்கிறது. "எனக்கு என்னகொண்டாந்தே?" என்று கேட்டாள் குழந்தை. "என்னைக் கொண்டாந்தன்" என்றார் பிள்ளை. "என்னப்பா தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப் படாது" என்று சிணுங்கியது குழந்தை. "பொரி கடலை உம்புக்காகாது. இதோபார் உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டுவந்திருக்கிறேன்" என்று தன் பெண்ணுக்குக் கடவுளை அறிமுகப்படுத்திவைத்தார். குழந்தையின்பேரில் வைத்த கண்களை மாத்த கடவுளால் முடியவில்லை. கந்தசாமிப் பிள்ளைக்குச் சிறுதொண்டர் கதை ஞாபகம் வந்துவிட்டது. "சற்றுத் தயங்கினார் ; 'இப்பவெல்லாம் நான் சுத்த சைவன். மண்பானைச் சமையல் தான் பிடிக்கும். பால் தயிர்கூடச் சேர்த்துக் கொள்வதில்லை' என்று சிரித்தார் கடவுள். ஆசைக்கு என்று காலந் தப்பிப் பிறந்த கருவேப்பிலைக் கொழுந்து என்றார் கந்தசாமிப் பிள்ளை....'வாடியம்மா கருவேப்பிலைக் கொளுந்தே...' என்று கைகளை நீட்டினார் கடவுள். ஒரே குதியில் அவர் மடியில் ஏறிக்கொண்டது குழந்தை. 'எம்பேரு கருகப்பிலைக் கொழுந்தில்லை ; வள்ளி. அம்மா மாத்திரம் என்னைக் கறுப்பி, கறுப்பின்னு கூப்பிடுதா....நான் என்ன அப்படியா?' என்று கேட்டது. அது பதிலை எதிர் பார்க்கவில்லை" புதுமைப்பித்தனின் கதைகளில் வருகிற குழந்தைகள் அற்புதமான சிருஷ்டிகள். இன்றைய தமிழ் எழுத்திலே அந்தக் குழந்தைகளைப் போன்ற பூரணமான பாத்திரங்கள் வேறு இல்லை என்பது என் அபிப்பிராயம். அவை மறக்க முடியாத சிருஷ்டிகள்.
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்கிற கதை பூராவையுமே சொல்லிவிட வேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவ்வளவு நல்ல இடங்கள் பல இருக்கின்றன அதில். 'கடவுளிடமும் ஜீவிய சந்தா வாங்கிக்கொண்டு தான் அவரை விட்டார் கந்தசாமிப் பிள்ளை.....' என்று சொல்லி ஒருவாறாக முடித்துவிடுகிறேன்.
காஞ்சனைத் தொகுதியிலே முதல் கதையான காஞ்சனையே வெகு நுட்பமான ஒரு விஷயத்தை அழகிய உருவத்தில் சொல்கிறது, பழைய பெரிய எழுத்து விக்கிரமாதித்தின் கதைப் பாணியில் செல்லுகிற ஒரு மூட்டைப் பூச்சி கதை இருக்கிறது இத்தொகுதியில் - கட்டிலைவிட்டிறங்காக் கதை என்று பெயர் அதற்கு. 'மசாமசானம்' என்று ஒரு கதை. அதில் தெரு ஒரத்திலே பிச்சைக்காரன் செத்துக்கொண்டு கிடக்கிறான். ஒரு குழந்தை மாம்பழத்தை மூக்கில் வைத்துத் தேய்த்துக் கொள்கிறது. 'செல்லம்மாள்' என்ற கதையில் செல்லம்மாள் இருபது பக்கங்களிலும் செத்துக் கிடக்கிறாள்-அவள் புருஷன் கடைசிக் கிரியைகளைச் செய்யத் தன்னைத் தயார் செய்து கொள்கிறான்.
இந்தத் தொகுதியில் இல்லாத வேறு பல கதைகளையும் பற்றிக் இங்கு சொல்லவேண்டும் போல இருக்கிறது எனக்கு. சிற்பியின் நரகம், மனக்குகை ஓவியங்கள், ஞானக்குகை, கபாடபுரம்....இன்னும் பல ; விதவிதமான கதைகளை விதவிதமான உத்திகளைக் கையாண்டு எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன். அவர் கதைகளிலே இரண்டு விசேஷ அம்சங்கள் சொல்லலாம். (ஒன்று) அவர் அவசியம் என்று தேர்ந்தெடுத்துச் சொல்லும் விஷயங்கள்; அவர் கையாண்ட விஷயங்கள் எல்லாமே புரட்சிகரமானவை என்று பொதுவாகச் சொல்லலாம். (இரண்டு) அதைச் சொல்ல அவர் கையாண்ட நடை. சிலசமயம் அவர் நடை தடுமாறி விஷயத்தை எட்டாது போனதும் உண்டு. ஆனால் அவருடைய சிறந்த கதைகளில், சொல்லும் சிந்தனையும் சேர்ந்து அமைந்தன. திருநெல்வேலி பேச்சுத் தமிழை அவர் பல இடங்களில் கவிதையாகவே கையாண்டிருக்கிறார்.
வருகிற நூற்றாண்டில் தமிழ்ச் சிறு கதைச் செல்வத்துக்கு நமக்குப் பலமான அஸ்திவாரம் போட்டுத் தந்து விட்டவர் புதுமைப்பித்தன் என்று சொல்ல வேண்டும்.
நன்றி: நவீன விருட்சம்
Dec 9, 2012
கோபாலய்யங்காரின் மனைவி-புதுமைப்பித்தன்
1
(பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு 'கண்டதும் காதல்' என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் - ஏன் பிரமை என்றும் கூறலாம் - முடிவடைகிறது. முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், 'காதல் பெண்ணின் கடைக்கண் பணியிலே' அனலை விழுங்கலாம், புளித்த குழம்பையும் குழைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை)
டெப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் தமது மனைவி மீனாட்சியை யழைத்துக் கொண்டு தஞ்சைக்கு வந்து ஒரு மாத காலமாகிறது. ஊரில் எல்லாம் பரபரப்பு, ஒரே பேச்சு, கோபாலய்ய
ங்கார் இடைச்சியைக் கலியாணம் செய்து கொண்டார் என்பதுதான். எல்லாம் கிசுகிசு என்ற பேச்சு. எதிரில் பேச முடியுமா? அதுவும் அந்தக் காலத்தில்; அதுவும் தஞ்சாவூரில். சிலர் போயும் போயும் இடைச்சிதானா அகப்பட்டாள் என்று பேசிக் கொண்டார்கள். படியாதவர்கள், யாரோ இடைச்சியை இழுத்து வந்து வைப்பாக வைத்திருக்கிறார் என்று அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமான் செய்தி என்பதால் வேறு வழியின்றி நம்பிக் கொண்டார்கள். பியூன்களுக்கு அய்யங்கார் என்றால் சிறிது இளக்காரம்; அவர் முதுகுப்புறம் சிரிப்பார்கள்.
இவ்வளவும் கோபாலய்யங்காருக்குத் தெரியாது. அதாவது தெரிய சந்தர்ப்பம் வைத்துக் கொள்ளவில்லை. வீட்டிலே மீனாட்சிக்குப் படிப்புச் சொல்லிக்கொடுக்க ஒரு கிறிஸ்துவ உபாத்தினி. முன்பிருந்த பிராமணப் பரிசாரகன் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டான். ஒரு நாள் மீனாட்சி சமைத்தாள். அதாவது அவள் குலாசாரப்படி சமைத்தாள். லவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் இத்தியாதி பொருள்களுடன் தன் கைப்பாகமாக மிகுந்த ஜாக்கிரதையுடன் வைத்திருந்தாள்.
கோபாலய்யங்கார் குடிகாரர் தான்; ஆனால் மாமிச பட்சணியல்ல. மீனாளின் கண்களைப் பார்த்துக் கொண்டு இரண்டு கவளம் வாயில் போட்டார். அவ்வளவுதான். குடலைப் பிடுங்கியது போல் ஓங்கரித்து வாந்தி எடுத்தார். மாமிச உணவின் பாகம் என்ற நினைப்பில் ஏற்பட்டது. மீனாள் பதறித் தன் கணவன் தலையைத் தாங்கினாள். கோபாலய்யங்கார் போஜனப் பிரியர். பசி காதலை வென்றது. அவளை உதறித் தள்ளிவிட்டு வெளியே சென்று சேவகனைக் கூப்பிட்டு, பிராமண குமாஸ்தாவசம் ஹோட்டலில் இருந்து சாப்பாடு தருவித்தார்.
போஜனமான பிறகுதான் கோபாலய்யங்காருக்குத் தமது காதல் திரும்பியும் வந்தது.
"மீனா" என்று கூப்பிட்டுக்கொண்டு உள்ளே வந்தார்.
"சாமீ" என்று எழுந்தாள் மூலையில் உட்கார்ந்திருந்த காதலி. அவள் கண்களில் இரண்டு துளிகள் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அகழியை எடுத்துக் காண்பித்தது.
மீனாட்சி பணிப்பெண்; அதிலும் பயந்த பெண். மருண்ட பார்வை. கணவன் என்ற ஸ்தானத்தில் அவரை வைக்கவில்லை. தனது தெய்வம் என்ற ஸ்தானத்தில், அதாவது தனக்கு எட்டாத ஒரு ஸ்தானத்தில் இருக்கும் ஒரு இலட்சியம் என்று கருதியவள். எட்டாதது என்ற நினைப்பில் பிறந்த பயம் கணவன் இஷ்டப்படி நடக்கத் தூண்டியதேயல்லாது அவரிடம் தன்னை மறந்த பாசம், லயம் பிறப்பித்ததே கிடையாது.
"என்ன மீனா! உனக்கு எத்தனை தரம் அப்படிக் கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். கண்ணா! இப்படி வா! என்ன இப்படி கறிக்குழம்பு வைத்தாய்?" என்றார்.
"இல்லிங்களே, இப்படித்தான் எங்க வீட்டிலே பருப்புக் கொளம்பு வைப்பாங்க" என்றாள்.
"அதை அப்பொழுதே சொல்லி இருக்கக் கூடாதா? ஹோட்டலில் சாப்பாடு எடுத்து வரச் சொன்னால் போகிறது. அது கிடக்கட்டும். இப்படி வா!"
அவளை ஆரத்தழுவி தமது மடிமீதிருத்தி முத்தங்களைச் சொரிந்தார். மீனாள் செயலற்ற பாவைபோல் இடங்கொடுத்தாள். கணவன், கலெக்டர் என்ற பயம். அவர் இஷ்டம் போல் இருக்க வேண்டும் என்பதில் ஏற்பட்ட பயம்.
"என்ன மீனா! நீ ஒரு முத்தமிடு."
மீனாள் தயங்கினாள். ஒரு பயந்த முத்தம் கோபாலய்யங்காரின் கன்னத்தை ஸ்பரிசித்தது.
"என்ன மீனா, இன்னும் பயமா? உன் பயத்தைப் போக்குகிறேன் பார், உனக்கு இரத்தமே இல்லையே. இந்த மருந்தை குடி" என்று ஒரு கிளாசில் ஒயினை ஊற்றிக் கொடுத்தார். குடித்தாள். சிறிது இனிப்பும் காரமும் தான் தெரிந்தது. மறு நிமிஷம் உடல் பூராவாகவும் ஏதோ ஒன்று பரவுவது போல் பட்டது.
"என்னமாக இருக்கிறது?"
"கொஞ்சம் இனிச்சுக்கிட்டு காரமா இருந்துச்சு. என்னமோ மாதிரியா இருக்குதே?"
"என்னமாக இருக்கிறது?"
"நல்லாத்தான் இருக்குது" என்றாள்.
அவளும் வாலிபப் பெண்தானே. அதுவும் ஒயின் உதவியும் கூட இருக்கும்பொழுது அன்று சிறிது பயத்தை மறந்தாள். அன்று அவளுக்குக் கோபாலய்யங்காரின் மீது ஏற்பட்ட பாசம், வாலிபத்தின் கூறு. கோபாலய்யங்கார் மீனா தன்னைக் காதலிப்பதாக எண்ணி மகிழ்ந்தார்.
2
கோபாலய்யங்கார் சிறிது கஷ்டப்பட்டு ஒரு பிராமணப் பரிசாரகனை நியமித்தார். சம்பளம் இருபத்தைந்து ரூபாய் என்ற ஆசையும், கலெக்டர் அய்யங்கார் என்ற பயமும் இருந்தால் ஒரு ஏழைப் பிராமணன் அகப்படாமலா போகிறான்?
ஆனால் கலெக்டருக்கும் பரிசாரகனுக்கும் ஒரு சமரச ஒப்பந்தம். கோபாலய்யங்கார் தஞ்சை ஜில்லாவிற்குப் பூராவாகவும் எதேச்சாதிகாரியாக இருப்பது என்றும், சமயலறையைப் பொறுத்தமட்டில் பரிசாரகன் சுப்புவய்யர் தான் எதேச்சாதிகாரி என்றும், சமயலறைப் பக்கம் கலெக்டர் அய்யங்காரோ கலெக்டர் அம்மாளோ வரக்கூடாது, பாத்திரங்களைத் தொடக்கூடாது, இருவருக்கும் பரிமாறுவதும் சமையல் செய்வதும் சுப்புவைய்யரின் வேலை என்றும் திட்டமாயிற்று.
சாப்பாட்டுப் பிரச்சனை ஒருவாறு முடிந்ததும், கோபாலய்யங்கார் தமது கலெக்டர் தொழிலையும் காதல் கனவையும் அனுபவிக்க முயன்றார். கலெக்டர் வேலை பரிச்சயமானது. ஆனால் காதல்...
மீனாளுக்குப் பயமும், கோபாலய்யங்காரின் மீது மோகமும் தான் இருந்து வந்தன. அதிலும், அவர் பயிற்சி செய்வித்த மருந்தில் கொஞ்சம் பிரேமையும் விழுந்திருந்தது.
ஒருநாள் சாயங்காலம்.
கோபாலய்யங்கார் ஆபீஸிலிருந்து வந்து, தமது ஆங்கில வேஷத்தைக் களைந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது மீனாள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அய்யங்கார் 'டிரஸ்' செய்வதைப் பார்ப்பதில் அவளுக்கு ஒரு பிரேமை. ஆச்சரியம்.
கோபாலய்யங்கார் ஒரு முத்தத்தை எதிர்பார்த்தார். ஆசை இருந்தாலல்லவோ, பாசம் இருந்தால் அல்லவோ?
கோபாலய்யங்காருக்குச் சிறிது ஏமாற்றமாகவிருந்தது.
"மீனா! என் பேரில் உனக்குக் காதல் இருக்கிறதா?" என்றார்.
மீனாவுக்கு அர்த்தமாகவில்லை. சிறிது தயங்கினாள்.
"அப்படிண்ணா?"
கோபாலய்யங்காருடைய ஏமாற்றம் சிறிது கோபமாக மாறியது.
"என் பேரில் பிரியமில்லை போலிருக்கிறது!" என்றார்.
"என்ன சா... என்னாங்க அப்புடிச் சொல்லுறிய? உங்க மேலே புரியமில்லாமலா?" என்று சிரித்தாள் மீனாள்.
"வந்து இவ்வளவு நேரமாக ஒரு முத்தமாவது நீயாகத் தரவில்லையே?"
"எங்க ஜாதியிலே அது ஒண்ணும் கெடையாது இப்போ?" என்றாள்.
கோபாலய்யங்காருக்குச் சுறுக்கென்று தைத்தது. நல்ல காலமாக சுப்புவைய்யர் காப்பியைக் கொண்டு வந்து கொடுக்க உள்ளே நுழைந்தார். கோபம் அவர் மேல் பாய்ந்தது.
"தடியா! காப்பியை வைத்துவிட்டுப் போ!" என்று இரைந்தார்.
அய்யங்காருக்கு கொஞ்சம் 'டோஸ்' ஜாஸ்தி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு போய்விட்டார் பரிசாரகர்.
நாட்களும் வெகுவாக ஓடின. கோபாலய்யங்கார் ஒரு பொம்மைக்குக் காதலுயிர் எழுப்ப பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார். இதில் தோல்வி இயற்கையாகையால் மது என்ற மோகனாங்கியின் காதல் அதிகமாக வளர ஆரம்பித்தது.
மீனாளுக்கு இந்தச் சாப்பாட்டுத் திட்டம் வெகு நாட்களாகப் பிடிக்கவில்லை. தான் பணிப்பெண்ணாக இருக்கும்பொழுது வேளா வேளைகளில் கிடைக்கும் பிராமண உணவு இப்போது வெறுப்பைத் தருவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. தகப்பனார் வீட்டில் நடக்கும் சமையலைப் பற்றி ஏங்கவாரம்பித்தாள். தனக்குத் தானே சமைத்துக் கொள்ள அனுமதி கேட்கப் பயம். ஆபீஸ் பியூன் கோபாலக்கோனார் கலெக்டர் வீட்டு வேலைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்ட கிழவன். அவன் வேளாவேளைகளில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் சாப்பிடும்பொழுது அவளுக்கு நாவில் ஜலம் ஊறும்.
வீட்டினுள் இருந்து கண்ணீர் விடுவாள். அவளுக்குக் குழந்தையுள்ளம்; கேட்கவும் பயம்.
கோபாலக் கோனார் அனுபவம் உள்ள கிழவன். இதை எப்படியோ குறிப்பால் உணர்ந்து கொண்டான். ஒருநாள் ரகஸியமாக மாமிச உணவு தயாரித்து வந்து, அவளுக்குக் கொடுத்தான். அவளுக்கு அவன் மீது ஒரு மகளின் அன்பு ஏற்பட்டது. கோபாலக் கோனாருக்கு ஒரு குழந்தையின் மீது ஏற்படும் வாத்ஸல்யம் ஏற்பட்டது.
ரகஸியமாகக் கொஞ்ச நாள் கொடுத்து வந்தான். ரகஸியம் பரமகேட்டை விளைவிக்கும் என்று உணர்ந்து மீனாளுக்கு ஒரு தந்திரம் கற்பித்தான். அய்யங்கார் போதையிலிருக்கும் பொழுது மாமிச உணவைப் பழக்கப்படுத்த வழி சொல்லிக் கொடுத்தான்.
மீனாள் பிராமணப் பெண் ஆவது போய், கோபாலய்யங்கார் இடையனானார்.
3
கோபாலய்யங்கார் மாமிசப்பட்சணியான பிறகு சுப்புவைய்யரின் எதேச்சாதிகாரம் தொலைந்தது. மீனாள் உண்மையில் கிரகலட்சுமியானாள்.
இரண்டு வருஷ காலம் அவர்களுக்கு சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக்கருவியாக கோபாலய்யங்காரின் மேல்நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன.
தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரீரியானாள். கோபாலய்யங்கார் தலை நரைத்து வழுக்கை விழுந்து கிழப்பருவம் எய்தினார்.
இதை மறப்பதற்குக் குடி.
ஆபீஸிற்கு போகுமுன் தைரியம் கொடுக்கக் குடி.
வந்ததும் மீனாளின் சௌந்தரியத்தை மறக்கக் குடி.
இப்பொழுது அவர்கள் தென்னாற்காட்டு ஜில்லாவில் இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியிலே.
இரவு பத்து மணிக்கு அப்பக்கம் யாராவது போனால் கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம்.
"ஏ! பாப்பான்!" என்று மீனாள் கொஞ்சுவாள்.
"என்னடி எடச்சிறுக்கி!" என்று கோபாலய்யங்கார் காதலுரை பகருவார்.
இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள்.
மீனாளின் 'டிரியோ, டிரியோ' பாட்டில் கோபாலய்யங்காருக்கு - அந்த ஸ்தாயிகளில் - பிரியமதிகம்.
Nov 9, 2012
'காஞ்சனை'..முன்னுரை -புதுமைப்பித்தன்
காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு கும்மாளி போட்டு வரும் நண்பர்களுக்கு, முதல் முதலிலேயே எச்சரிக்கை செய்து விடுகிறேன். இவை யாவும் கலை உத்தாரணத்துக்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ,கலைக்கு எருவிட்டு செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக்கோவைகள்தாம் இவை.
பொதுவாக நான் கதை எழுதுவதன் நோக்கம் கலைவளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் நினைப்பில் பிறந்ததல்ல. அதனால்தான் என்னுடைய கதைகளில் இந்தக் கலை வியவகாரத்தை எதிர் பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
என்கதைகள் எதுவானாலும் அதில் அழகு காணுகிற நண்பர் ஒருவர் இந்தக் காஞ்சனை கதையைப் படித்துவிட்டு என்னிடம் வந்து.''உங்களுக்குப் பேய் பிசாசுகளில் நம்பிக்கை உண்டா?ஏன் கதையை அப்படி எழுதினீர்கள்?'' என்று கேட்டார். நான்,''பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால் பயமாக இருக்கிறதே'' என்றேன். ''நீங்கள் சும்மா விளையாட வேண்டாம். அந்தக் கதைக்கு அர்த்தமென்ன?'' என்று கேட்டார். ''சத்தியமாக எனக்குத் தெரியாது'' என்றேன். அவருக்கு இது திருப்தி இல்லை என்று தெரிந்து கொண்ட பிற்பாடு அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டு, இலக்கியப் பக்குவம் மிகுந்த என் நண்பர் ஒருவரிடம் போனேன். அவர் அட்டகாசமாக வரவேற்றார். ஜேம்ஸ் ஜாய்ஸ் மாதிரி கதை எழுதி இருப்பதாகவும் 'கயிற்றரவு' என்று சொல்லுவார்களே ஒரு மயக்க நிலை, அதை அழகாக வார்த்திருப்பதாகவும் சொன்னார். இங்கிலீஷ் இலக்கியத்திலே கடைசிக்கொழுந்து என்று கருதப் படுகிறவர் ஜேம்ஸ் ஜாய்ஸ். அப்படிச் சொன்னால் யாருக்குத்தான் தலை சுற்றி ஆடாது? அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன். வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களைப் பயம் காட்டுவது ரொம்ப லேசு என்பதைக் கண்டுகொண்டேன்.
நான் கதை எழுதுகிறவன். கதையிலே கல் உயிர் பெற்று மனிதத்தன்மை அடைந்துவிடும். மூட்டைப் பூச்சிகள் அபிவாதையே சொல்லும். அதற்கு நான் என்ன செய்யட்டும்?க தையுலகத்தின் நியதி அது. நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில், மனிதன் 'கல்லுப் பிள்ளையார்' மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே! தவிரவும் பழைய கதைகளை எடுத்துத்கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று கொண்டு பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு.
கடைசிக் கதை, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும். திருப்பணியில் ஈடுபாடுடைய பக்தர்கள் பலருக்கு அவர்கள் ஆர்வத்துடன் செதுக்கி அடுக்கும் கல்லுக்குவியலுக்கு இடையில் அகப்பட்டு நசுங்கிப் போகாமல் அவர்களுடைய இஷ்டதெய்வத்தை நான் மெதுவாகப் பட்டணத்துக்குக் கூட்டிக்கொண்டு விட்டதில் பரம கோபம். நான் அகப்பட்டால் கழுவேற்றிப் புண்ணியம் சம்பாதித்துகொள்ள விரும்புவார்கள். என்னுடைய கந்தசாமிப் பிள்ளையுடன்,ஊர்சுற்றுவதற்குத்தான் கடவுள் சம்மதிக்கிறார். இதற்கு நானா பழி?
பொதுவாக என்னுடைய கதைகள் உலகுக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணிவைக்கும் இன்ஷியூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும், பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள்; இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான் அவர்களை இன்னும் கோபிக்கவைத்து முகம் சிவப்பதைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் கோபிப்பவர்கள் கூட்டம் குறையக் குறையத்தான் எனக்குக் கவலை அதிகமாகி வருகிறது.
இவர் இன்ன மாதிரிதான் எழுதுவது வழக்கம், அதைப் பாராட்டுவது குறிப்பிட்ட மனப்பக்குவம் தமக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் கௌரவம் என்றாகி, என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட்டிப் பூப்போட்டு மூடிவிடுவதுதான் என் காலை இடறி விடுவதற்குச் சிறந்த வழி. அந்த விளையாட்டெல்லாம் என்னிடம் பலிக்காது. மனப்போக்கிலும் பக்குவத்திலும் வெவ்வேறு உலகில் சஞ்சரிப்பதாக நினைத்துக்கொண்டு நான் வெகு காலம் ஒதுங்க முயன்ற கலைமகள் பத்திரிகை என் போக்குக்கெல்லாம் இடம் போட்டுக் கொடுத்து வந்ததுதான் நான் பரம திருப்தியுடன் உங்களுக்குப் பரிச்சயம் செய்து வைக்கும் காஞ்சனை. நீங்கள இவைகளைக் கொள்ளாவிட்டாலும் நான் கவலைப்படவில்லை. வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவனோ ஒருவனுக்கு நான் எழுதிக் கொண்டிருப்பதாகவே மதிக்கிறேன்.
விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகஎ கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக் கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.
22-12-43 புதுமைப்பித்தன்
நன்றி: வே.சபாநாயகம் தளம்
Sep 14, 2012
வழி – புதுமைப்பித்தன்
அன்று அலமிக்குத் தூக்கம் வரவில்லை. நினைவுகள் குவிந்தன. சொல்லமுடியாத சோகம் நெஞ்சையடைத்தது. மனக்குரங்கு கட்டுக்கடங்காமல் ஓடியது.
தன்னருகில் இருந்த ஒற்றை விளக்கைச் சற்று தூண்டினாள். உடல் வியர்க்கிறது. தேகம், என்னமோ ஒருமாதிரியாக, சொல்ல முடியாதபடி தவித்தது.
அவள் விதவை.
நினைவு ஐந்து வருஷங்களுக்கு முன்பு ஓடியது. ஒரு வருஷம் சென்றது தெரியாதபடி வாழ்க்கை இன்பத்தின் முன்னொளி போலத் துரிதமாகச் சென்றது. பிறகு அந்த நான்கு வருஷங்களும் பிணிவாய்ப்பட்ட கணவனின் சிச்ருஷை என்ற தியாகத்தில், வாழ்க்கையின் முன்னொளி செவ்வானமாக மாறி, வைதவ்யம் என்ற வாழ்க்கை – அந்தகாரத்தைக் கொண்டு வந்தது.
அன்று முதல் இன்றுவரை வாழ்க்கை என்பது நாள் – சங்கிலி. கணவன் தேகவியோகச் சடங்குகள், சம்பிரதாயங்கள் துக்கத்தைத் தந்தாலும் பொழுதையாவது போக்கின. அப்படிச் சென்றது ஒரு வருஷம்.
அன்று அவர் இறந்தபின் பதினாறு நாட்களும் இவளைப் பிணம் போல் அழும் யந்திரமாகக் கிடத்தி, சுற்றியிருந்து அழுதார்கள். அவள் உயிர்ப்பிணம் என்ற கருத்தை உணர்த்தவோ, என்னவோ!
அலமி பணக்காரப் பெண்தான். பாங்கியில் ரொக்கமாக 20000 ரூ. இருக்கிறது. என்ன இருந்தாலும் இல்வாழ்க்கை அந்தகாரந்தானே? அவள் நிலை உணவு இருந்தும் உண்ண முடியாது இருப்பவள் நிலை.
அவளுக்குத் தாயார் கிடையாது. தகப்பனார் இருந்தார். அவர் ஒரு புஸ்தகப் புழு. உலகம் தெரியாது அவருக்கு. வாழ்க்கை இன்பங்கள் புஸ்தகமும் பிரசங்கமும். சில சமயம் அலமியையும் கூட அழைத்துச் சென்றிருக்கிறார்.
மரண தண்டனையனுபவிக்கும் ஒருவன் சார்லி சாப்ளின் சினிமாப்படத்தை அநுபவிக்க முடியுமா? வைதவ்ய விலங்குகளைப் பூட்டிவிட்டு சுவாரஸ்யமான பிரசங்கத்தைக் கேள் என்றால் அர்த்தமற்ற வார்த்தையல்லவா அது?
அன்று அவளுக்குத் தூக்கம் வரவில்லை. துக்கம் நெஞ்சையடைத்தது. தொண்டையிலே ஏதோ ஒரு கட்டி அடைத்திருப்பது மாதிரி உணர்ச்சி. உதடுகள் அழவேண்டுமென்று துடித்தன.
உறக்கம் வரவில்லை.
எழுந்து முந்தானையால் முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வெளியிலிருந்த நிலா முற்றத்திற்கு வருகிறாள்.
வானமாத்யந்தமும் கவ்விய இருட்டு. உயர இலட்சியங்களை அசட்டுத்தனமாக வாரி இறைத்தது மாதிரி கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். அவளுக்கு அவை சிரிப்பன போல், தன்னைப் பார்த்துச் சிரிப்பன போல் குத்தின. மணி பன்னிரண்டாவது இருக்கும். இந்த இருட்டைப் போல் உள்ளமற்றிருந்தால், தேகமற்றிருந்தால் என்ன சுகமாக இருக்கும்!
இந்த வெள்ளைக்காரன் ஒரு முட்டாள். ‘சதி’யை நிறுத்திவிட்டதாகப் பெருமையடித்துக்கொள்கிறான். அதை இந்த முட்டாள் ஜனங்கள் படித்துவிட்டுப் பேத்துகிறார்கள். முதலில் கொஞ்சம் துடிக்க வேண்டியிருக்கும். பிறகு… ஆனால், வெள்ளைக்காரன் புண்ணியத்தால் வாழ்க்கை முழுவதும் சதியை, நெருப்பின் தகிப்பை அநுபவிக்க வேண்டியிருக்கிறதே! வைதவ்யம் என்றால் என்ன என்று அவனுக்குத் தெரியுமா? ஒவ்வொரு நிமிஷமும் நெருப்பாகத் தகிக்கும் சதியல்லவா வைதவ்யம்?…
அவர் இருந்திருந்தால்…
அதை நினைத்தவுடன் மனம் ஐந்தாறு வருஷங்களைத் தாண்டிச் சென்றுவிட்டது. பழைய நினைவுகள், எட்டாத கனவுகள் அதில் முளைக்க ஆரம்பித்தன.
அவள் உடல் படபடத்தது. நெஞ்சில் சண்டமாருதமாக, பேய்க்கூத்தாக எண்ணங்கள் ஒன்றோடொன்று மோதின.
எதிரே விலாசத்தின் வீடு. இன்னும் தூங்கவில்லையா? அவளுக்கென்ன, மகராஜி கொடுத்து வைத்தவள்!
அப்பொழுது…
‘கட்டிக் கரும்பே தேனே…’ என்ற பாட்டு. கிராமபோனின் ஓலம். பாட்டு கீழ்த்தரமான சுவையுடைய பாட்டுத்தான்.
அன்று அவளுக்கு மூண்டெழுந்த தீயிலே எண்ணெய் வார்த்ததுபோல் இருந்தது. அவளுக்குப் பாட்டு இனிமையாக இருந்தது. கேட்பதற்கு நாணமாக இருந்தது. இருட்டில் அவள் முகம் சிவந்தது. இனி இப்படி யாராவது அவளையழைக்க முடியுமா?
இவ்வளவுக்கும் காரணம் இயற்கையின் தேவை.
இதிலே ஒரு முரட்டுத் தைரியம் பிறந்தது. ஏன், அந்தக் கோடித்தெருச் சீர்திருத்தக்காரர் திரு. குகன் சொல்லிய மாதிரி செய்தால் என்ன? அப்பாவிடம் சொல்ல முடியுமா? அவர் அந்நியர். மேலும்… நான் விதவை என்று தெரியும். போனால் அவருக்குத் தெரியாதா?
திரு.குகன் செய்த பிரசங்கத்தின் வித்து வேகமாகத் தழைத்து ஆட்சி செய்ய ஆரம்பித்தது. ஊரிலுள்ளவர்கள் தூற்றுவார்கள்! அவர்களுக்கு வேறு என்ன தெரியும்.
நினைத்தபடி நடக்க ஹிந்துப் பெண்களுக்குத் தெரியாது. ‘இயற்கையின் தேவை’ என்ற ஈட்டி முனையில் அவள் என்னதான் செய்ய முடியாது? மேலும் தாயார் இருந்தால் ஓர் ஆறுதல், கண்காணிப்பு இருந்திருக்கும். இதுவரை தனக்கு வேண்டியதை அவளே செய்து கொண்டவள். அவளுக்குக் கேட்டுச் செய்ய ஆள் கிடையாது. மனம் சீர்திருத்தவாதியை அணுகிவிட்டால் உலகமே மோட்ச சாம்ராஜ்யமாகிவிடும் என்று சொல்லுகிறது. சீ! போயும் போயும், மூளையில்லாமல், ஆண்பிள்ளையிடம் போய் என்ன! கத்தரிக்காய்க் கடையா வியாபாரம் பண்ண? அவளுக்குச் சீர்திருத்தவாதி உள்பட இந்த உலகமெல்லாவற்றையும் கொன்று துடிப்பதைப் பார்க்க வேண்டுமென்று படுகிறது. சீ, பாவம்! உலகமாவது மண்ணாங்கட்டியாவது! நெருப்பில் போட்டுப் பொசுக்கட்டுமே! மார்பு வெடித்துவிடுவது போலத் துடிக்கிறது. இருளில் கண்ட சுகம், அந்தச் சங்கீத ஓலத்தில் போய்விட்டது. அவளுக்கு விசாலத்தின் மீது ஒரு காரணமற்ற வெறுப்பு. அவளையும், அவள் புருஷன், கிராமபோன் எல்லாவற்றையும் நாசம் செய்யவேண்டுமென்று படுகிறது. காதைப் பொத்திக்கொண்டு உள்ளே வந்து படுக்கையில் பொத்தென்று விழுகிறாள்.
அசட்டுத்தனமாகத் தலையணைக்கடியில் வைத்திருந்த கொத்துச் சாவியில் இருந்த முள்வாங்கி முனை விர்ரென்று மார்பில் நுழைந்துவிட்டது.
அம்மாடி!
உடனே பிடுங்கிவிடுகிறாள். இரத்தம் சிற்றோடைபோல் பீரிட்டுக்கொண்டு வருகிறது. முதலில் பயம். அலமி இரத்தத்தைப் பார்த்ததில்லை. அதனால் பயம். ஆனால், இத்தனை நேரம் நெஞ்சின் மீது வைக்கப்பட்டிருந்த பாரங்கள் எடுக்கப்பட்ட மாதிரி ஒரு சுகம். இரத்தம் வெளிவருவதிலே பரம ஆனந்தம்; சொல்ல முடியாத, அன்றிருந்த மாதிரி ஆனந்தம். அதையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இரத்தம் பிரவாகமாகப் பொங்கி மேலுடையை நனைக்கிறது. இரத்தத்தின் பிசிபிசுப்பு தொந்தரவாக இருந்ததினால் மேலுடையை எடுத்துவிட்டாள். இரத்தம் வெளிப்படுவதில் என்ன சுகம்! நேரமாக, நேரமாக பலம் குன்றுகிறது. ‘அவரிடம் போவதற்கு என் உயிருக்கு ஒரு சின்னத் துவாரம் செய்து வைத்திருக்கிறேன்! இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடும்! ஏன் போகாது? போனால் இந்த உடல் தொந்தரவு இருக்காது…’
அலமியின் தகப்பனார் புஸ்தகப் புழு. அன்று வெகு நேரமாயிற்று கையிலிருந்த புஸ்தகத்தை முடிக்க. முடித்துப் போட்டுவிட்டு வராந்தாவிற்கு வந்தார். அலமியின் அறையில் வெளிச்சம் தெரிகிறது. “இன்னும் தூங்கவில்லையா?” என்று உள்ளே சென்றார்.
என்ன?
அலமி மார்பில் இரத்தமா? அவள் ஏன் இம்மாதிரி அதைச் சிரித்தவண்ணம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்?
“அலமி, நெஞ்சில் என்னடி?” என்று கத்திக்கொண்டு நெருங்கினார்.
“நெஞ்சின் பாரம் போவதற்குச் சின்ன வாசல்!” என்றாள் ஈனஸ்வரத்தில். குரல் தாழ்ந்திருந்தாலும் அதில் கலக்கமில்லை. வலியினால் ஏற்படும் துன்பத்தின் தொனி இல்லை.
“இரத்தத்தை நிறுத்துகிறேன்!” என்று நெஞ்சில் கையை வைக்கப் போனார் தகப்பனார்.
“மூச்சுவிடும் வழியை அடைக்க வேண்டாம்!” என்று கையைத் தள்ளிவிட்டாள் அலமி.
“பைத்தியமா? இரத்தம் வருகிறதேடி!” என்று கதறினார்.
“இந்த இரத்தத்தை அந்தப் பிரம்மாவின் மூஞ்சியில் பூசிடுங்கோ! வழியையடைக்காதீர்கள்!” என்றாள்.
தலை கீழே விழுந்துவிட்டது.
மணிக்கொடி, 06-01-1935
Aug 22, 2012
'பூசனிக்காய்' அம்பி-புதுமைப்பித்தன்
எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை. அது நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு அறிந்திருந்த சிறு பையனின் பட்டப்பெயர் என்றுதான் எனக்குத் தெரியும். அவனைப் 'பூசனிக்காய் அம்பி' என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். அவனுக்கு வேறு பெயர் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.
இந்தப் பெயர் எப்படி வந்திருக்கலாம் என்று எங்களூர் ஆராய்ச்சியாளர்கள் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். அம்பியின் தலை வழுக்கை. அதன் மேல் பொன்னிறமான பூனை மயிர். பூசனிக்காயின் வர்ணத்தைப் பெற்றிருப்பதிலிருந்து அந்தப் பெயரை அவனுக்குக்
கொடுத்திருப்பார்கள் என்று ஒரு கட்சியினர் வாதாடினார்கள். இதற்கு நேர்மாறாக அம்பிக்குப் பூசனிக்காயின் மீது இருந்த அபாரப் பிரேமையினால் அப்பெயர் வந்திருக்கலாம் என்று உறுதிபடக் கூறியது மற்றொரு கட்சி. இதற்கு இடையில் கொஞ்சம் கவிதைக் கிறுக்குப் பிடித்த ஒரு கோஷ்டி, அவன், பூசனி காய்க்கும் காலத்தில் பிறந்ததினால் அப்பெயர் இடப்பட்டிருக்கலாம் என்று அறைந்தார்கள். இம் முக்கட்சிகளின் வாதப்பிரதிவாதங்கள் ஒரு முடிவிற்கும் வந்து சேராததினால் அதில் நாமும் சிக்கிக்கொள்ளாமல் ஊர்ப்பிள்ளைகள் மாதிரி அவனைப் 'பூசனிக்காய்' அம்பி என்று மட்டும் கூறி மகிழ்வோம்.
அம்பியின் ராஜ்யம் என் வீட்டுப் பக்கத்திலுள்ள ஒரு வளைவு. திருநெல்வேலிப் பக்கத்தில் வளைவு என்பது பத்துப் பதினைந்து வீடுகள் சூழ்ந்த ஒரு வானவெளி. இப்படிப் பல வளைவுகள் சேர்ந்ததுதான் ஒரு தெரு, அல்லது ஒரு சந்து. மாவடியா பிள்ளை வளைவு என்றால் அழுக்கு, இடிந்த வீடு, குசேல வம்சம் என்பவற்றின் உபமானம். அந்த வளைவில்தான் எனது 'பூசனிக்காய்' அம்பி தனியரசு செலுத்தி வந்தான். மாவடியா பிள்ளை வளைவு கட்டிட வேலைக்குப் பெயர் போனதல்ல. 'பூசனிக்காய்' அம்பியைத் தவிர அந்த வளைவில் ஒரு அபூர்வமும் கிடையாது. வருங்காலத்தில் அதிக நம்பிக்கை வைக்கும் சூதாடிக்குக் கூட அம்பியை விட வேறு ஒன்றைப் புதிதாகப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை வராது. அந்த வளைவின் நடு மத்தியில் ஒரு கிணறு. அங்கு பகலில் வண்ணானைக் கூடத் தோற்கடிக்கும் வெளுப்பு வேலை நடக்கும். அவற்றையெல்லாம் காயப்போடும் ஒரு கம்பிக்கொடி. இந்தக் கம்பிக்கொடி அம்பியின் முக்கியமான துணைக்கருவியாகையால் அதைப்பற்றி அவசியம் கூற வேண்டியதாகிவிட்டது.
எனது வீட்டுச் சன்னல் அந்த வளைவை நோக்கியிருந்தது. எனது படிப்பு, படுப்பு, அம்பியின் திருவிளையாடல்களைப் பார்த்தல் எல்லாம் அச்சன்னலின் வழியாகத்தான்.
அம்பிக்கு ஏழு வயதிருக்கும். ஆனால் முகத்தைப் பார்த்தால் 10 அல்லது 12 வயதிற்கு மதிக்கலாம். அவன் உயரம் இன்னதுதான் என்று திட்டமாகக் கூற முடியாது. ஏனென்றால் அவன்மீது பெரிய மனிதனது கிழிந்த ஷர்ட் ஒன்று அலங்கரித்து நிற்கும். அதற்குள் சிறு துண்டு ஒன்று கட்டியிருப்பான் என்பது பலருடைய உத்தேசம். இம்மாதிரியான 'சாமியார்' அங்கி போன்ற சட்டைக்குள் இருந்து கொண்டே அவன் தனது திருவிளையாடல்களை நடத்திவிடுவான். 'அந்தர்' அடிப்பது முதலிய சிறு வேலைகள் எல்லாவற்றிலும் அவனுக்குத்தான் வெற்றி. அவனது சட்டை எப்பொழுதாவது அவனைத் தடுக்கிவிட்டிருக்கிறதா என்றால் அது சரித்திரத்திற்குத் தெரியாத விஷயம். பகலில் எந்தச் சமயத்திலும் கம்பியில் 'பூசனிக்காய்' தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பது சாதாரணமான காட்சி. அவன் ஏறாத கூரை கிடையாது. அவன் தாண்டாத சுவர் கிடையாது. பூசனிக்காய் அம்பிக்கு பக்கத்திலுள்ள சுவர்களின் உயரம், தொத்தி ஏறும் வசதி முதலிய விஷயங்களில் தண்ணீர் பட்ட பாடு. அந்தச் சந்தில் இருக்கும் முனிசிபல் தகரத்தை அடித்து 'லொடபட' வென்று உருட்டிச் செல்வதுதான் அவனது அமைதியான விளையாட்டு.
'பூசனிக்காய்' அம்பிக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையா. சில சமயம் அவனது 'சினேகிதர்கள்' அவனைப் பேட்டி காண வருவார்கள். அவர்கள் வரும்பொழுதெல்லாம் கல்லும் மண்ணாங்கட்டியும் ஆகாயமார்க்கமாகப் பறப்பதுதான் அவர்களது 'சினேக' பாவத்தை எடுத்துக் காட்டும். கடைசியாக, பெருத்த கூக்குரலுடன் அவர்கள் வளைவைவிட்டு ஓடுவதுதான் 'பூசனிக்காய்' அம்பியின் வெற்றி. இது எப்பொழுதும் தவறாது நடக்கும் இயற்கை.
பாரதியார், 'தனிமை கண்டதுண்டு அதிலே சாரமிருக்குதம்மா' என்று பாடிவிட்டுப்போனார். 'பூசனிக்காய்' அம்பியும் அந்தச் சாரத்தை மிகவும் அனுபவித்திருப்பான் போல் தெரிகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷந்தானாமே. அம்பிக்குத் தனிமைச் சாரமும் ஒரு தடவை புளித்துப் போய்விட்டது. அவன் குருட்டுப்பிச்சைக்காரனை வளைவிற்கு உள்ளே இழுத்து வந்துவிட்டான். குருடனும் ஏதோ நீண்ட தெருவில் போவதாக நினைத்து சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். இவ்வளவையும் ஒரு குட்டிச்சுவரின்மீது அமர்ந்து திருப்திகரமாக நோக்கிக் கொண்டிருந்தான் அம்பி. பக்கத்துப் 'பெரியதனக்காரர்' வீடுகளில் எல்லாம் அம்பி 'பொல்லாத' பயல் என்று பெயர் வாங்கிவிட்டான். இதனால் பெரிய வீட்டுக் குழந்தைகளுக்கு எல்லாம் 'பூசனிக்காய்' அம்பி என்றால் அபாரப் பிரேமை. குழந்தை விரல்கள் பலகாரத்தைப் பகிர்ந்து தின்ன அவனை அழைக்கும். 'அப்பா', 'அம்மா' என்ற தொந்தரவுகள் எல்லாம் இல்லாத பெரிய மனிதன் என்பது குழந்தை உலகத்துப் பேச்சு.
ஒருநாள் மாவடியா பிள்ளை வளைவில் பெருத்த கூச்சல். நான் எட்டிப் பார்த்தபொழுது, 'பூசனிக்காய்' அம்பி வளைவின் கூரையொன்றின் மேல் இருந்துகொண்டு பக்கத்துப் பெரிய வீட்டுக்காரர் குழந்தையொன்றைக் கயிற்றின் உதவியால் உயர இழுத்துக் கொண்டிருந்தான். கீழே கூடியிருந்த கூட்டம் பையனை இறக்கிவிடும்படிக் கெஞ்சின. ஆனால் 'பூசனிக்காய்' அவசர அவசரமாகக் குழந்தையைக் கூரைக்கே கொண்டு போய்விட்டான். குழந்தைப் பயல் உயரச் சென்ற பின் தான் அவனும் 'பூசனிக்காயின்' சதியாலோசனையில் சேர்ந்திருந்தான் என்று தெரியவந்தது. பயலும் தாயாரைப் பார்த்து அழகுக்காட்டிச் சிரித்தானாம். அவன் உதவிக்கு ஏணி வந்து சேர்வதற்குள் அம்பியின் பலத்த நண்பனாகி, அவனுடைய தூண்டுதலில் பெற்றோரையே கேலி செய்ய ஆரம்பித்து விட்டான். ஏணி வந்து குழந்தையைப் பிடிக்குமுன் 'பூசனிக்காய்' கம்பி நீட்டி விட்டான். அதில் இருந்து, இருவருடைய நட்பும், 'ஏ! பூசனிக்காய்', 'ஹி! பட்டு' என்ற சம்பாஷணையுடன் நின்றது.
இச்சந்தர்ப்பத்தில் நான் அம்பியிடம் அதிகமாகப் பழக நேர்ந்தது. அக்காலத்தில், தமிழ்நாட்டில் இலக்கியத்தின் காலியான பாகங்களை நிரப்புவதற்காக உழைத்துக்கொண்டிருந்தேன். இலக்கியத்தில் இருக்கும் காலி கொஞ்சம் பெரியது என்றும், தமிழ்நாடு அதனால் கண்ணுறங்காமல் வாடிக்கொண்டிருக்கிறது என்றும் கேள்விப்பட்ட நான், ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தில் இந்தக் காலியை நிரப்பும் வேலைக்குத் தத்தம் செய்திருந்தேன். வேலை பெரிய வேலையல்லவா? ரஷ்யர்கள் போடுகிற ஐந்து வருஷ திட்டங்களைப் பற்றி எல்லாம் படித்த நானும் ஒரு திட்டம் போடாமலா இருப்பேன். அந்தத் திட்டத்தின்படி ஆபீஸிலிருந்து நான் வந்தபிறகு, உலகத்தை வெறுத்து, சன்யாசி மாதிரி எனது அறைக்குள் சென்று பூட்டிக்கொள்ளுவேன். முந்திய நாள் என்ன எழுதினேன் என்பதை வாசிப்பேன். இதில் சிறு மாறுதல்கள் செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றும். உடனே அதைத் திரும்ப எழுத ஆரம்பிப்பேன். அப்பொழுது மேற்கோளுக்காக தமிழ்நாட்டில் மேற்கோள் இல்லாத ஆராய்ச்சிப் புஸ்தகமும் பருப்பில்லாத கலியாணமும் உண்டா? என்று புஸ்தகத்தை எடுப்பேன். எப்பொழுதும் அம்மாதிரிப் புஸ்தகங்கள் எழுதுவதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அது வேறொரு நல்ல வழியில் இக்காலியை நிரப்புவதற்கு வழி கூறும். இந்தப் புதிய திட்டத்தைப் பற்றி ஆலோசிக்க ஆலோசிக்க, இதுவரை எழுதிய முறையைத் தள்ளிவிட வேண்டியதுதான் என்று திட்டமாகப்படும். இச்சமயத்தில்தான் மூளைக்குக் களைப்பு ஏற்பட்டு ஒருதடவை வெற்றிலை - வெற்றிலை என்றால் என் அகராதியில் வெற்றிலை + புகையிலை என்று அர்த்தம் - போட வேண்டி வந்துவிடும். வெற்றிலை போடும்பொழுது நிம்மதியாக ஆலோசிப்பது நல்லது என்று தோன்றும். உடனே ஜன்னலின் பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டு வெளியே பார்ப்பேன். அப்பொழுது மிஸ்டர் 'பூசனிக்காய்' அம்பி தென்படுவான். 'ஸார்' என்பான். 'என்னடா பூசனிக்காய்' என்பேன். இதற்கு மேல் எங்கள் சம்பாஷணை வளர்ந்ததில்லை. ஆனால் இருவர் உள்ளத்திலும் இருக்கும் 'நாடோ டி'த் தன்மை இருவரையும் பிணித்தது. இவ்விதமான ஆத்மீகப் பிணிப்பு 'பூசணிக்காய்கள்' சர்க்கஸ் வேலைகளுக்கிடையே நடந்தேறும். இதற்குள் நேரமாகிவிடுமாகையால் வேறு ஒரு பக்கத்தில் இருக்கும் 'காலி' ஸ்தானத்தை நோக்கிச் சென்றுவிடுவேன்.
இப்படி இருக்கையில் எனது நண்பர் ஒருவர் ஒரு குலைச் செவ்வாழைப் பழங்களை எனக்கு அனுப்பியிருந்தார். பழங்கள் கொஞ்சம் காய்வாட்டாக இருந்தன. நான் ஆபீஸிற்குப் போகும்முன் அதை ஜன்னலின் பக்கம் தொங்கவிட்டுச் சென்றேன். பழமும் பழுக்கவாரம்பித்தது. அறை முழுவதும் அதன் வாசனை பரிமளித்தது.
மறுநாள் சாயுங்காலம் ஆபீஸில் இருந்து திரும்பி வரும்பொழுது ஒரு சிறுவன் செவ்வாழைப்பழம் ஒன்று தின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். கொஞ்ச தூரம் சென்றதும் இன்னும் ஒரு சிறு பையனும் ஒரு செவ்வாழைப் பழம் தின்று கொண்டிருந்தான். இதிலிருந்து என்ன நடந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு துப்பறியும் கோவிந்தனும் வேண்டாம். வாசகர்களே இதற்குள் அந்த மகத்தான தொழிலைச் செய்து முடித்திருப்பார்கள். எனது அறைக்குச் சென்று பார்த்தேன். பழக்குலை மாயமாக மறைந்துவிட்டது என்று கண்டுகொண்டேன். 'பூசனிக்காய்' வேலைதான். அவனைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் என் மனம் கொதித்தது. அவனைப் பார்த்தவுடன் துப்பறியும் நாவலில் கடைசி அத்தியாயத்தில் நடக்கிறபடி 'அடே, பூசனிக்காய், வாழைப்பழக்குலைத் திருட்டிற்காக உன்னைக் கைது செய்கிறேன்' என்று அவன் தோள்மீது கையை வைத்துச் சொல்ல வேண்டும் என்று ஆசையாகிவிட்டது.
கொலைகாரனும் திருடனும் தாம் குற்றம் செய்த இடத்தைப் பார்க்க வருவது இயற்கையாம். அதுதான் 'பூசனிக்காயை' என் சன்னலின் பக்கம் வரும்படித் தூண்டியிருக்க வேண்டும்.
அவன் ஜன்னல் முன்பாக இரண்டு மூன்று தரம் நடந்தான். நான் கவனிக்காததுபோல் இருந்தேன்.
பிறகு பக்கத்திலிருக்கும் குட்டிச்சுவரில் ஏறிக்கொண்டு, "இங்கே சர்கேசு வந்திருக்குதே, அதிலே ஒருத்தன் ஆறு குருதெயிலே சவாரி பண்ணுரான்" என்றான்.
குதிரயைல் சர்க்கஸ் என்னை இளக்கவில்லை. நான் பேசாமல் இருந்தேன்.
"சேஷனைத் தெரியுமா?" என்றான்.
அவனைப் பற்றிச் சிறிது ஞாபகம் வந்தது. 'பூசனிக்காயின்' நண்பன்.
"துச்சனக்காரப் பயல். போலீஸ்காரனைக்கூடக் கொன்னுட்டான். மடியிலே கத்திகூட வச்சிருக்கான். இன்னிக்கு அவனை சன்னலுக்கிட்டெப் பார்த்தேன்" என்றான்.
ஒரு சின்னப் பயல் காது குத்துவது என்றால் யாருக்குத்தான் கோபம் வராது.
"ஏண்டா பூசனிக்காய் பொய் சொல்லுகிறாய். சேஷனைப் பற்றி உனக்கென்ன? நீதான் பழத்தை எடுத்தாய். அதற்குத் திருட்டு என்று பெயர். உன்னை ஜெயிலுக்குப் பிடித்துப் போகப் போகிறேன்" என்றேன்.
சொல்லி முடிப்பதற்கு முன் ஆசாமி கம்பி நீட்டிவிட்டான். அப்படிச் செய்வான் என்று எனக்குத் தெரியும். இப்பொழுது இந்தப் பக்கமே வருவதில்லை. யாருக்காவது அவன் இருக்குமிடம் தெரிந்தால், அவனிடம் விளையாட்டிற்குச் சொன்னேன் என்று சொல்லுங்கள். இப்பொழுது அவன் இல்லாது மாவடியா பிள்ளை வளைவு வெறிச்சென்று கிடக்கிறது.
ஊழியன், 01-02-1935 (புனைப்பெயர்: நந்தன்)
Mar 10, 2012
இரண்டு உலகங்கள்-புதுமைப்பித்தன்
1
ராமசாமி பிள்ளை வெறும் அறிவியல்வாதி. உலகம் தர்க்கத்தின் கட்டுக்கோப்பிற்கு ஒத்தபடிதான் வளருகிறது என்ற நம்பிக்கையில் வளருகிறவர். தர்க்கத்திற்குக் கட்டுப்படாத விஷயமோ பொருளோ உலகத்தில் இருக்க முடியாது, அது இருந்தால், தர்க்கத்தின் மயக்கம் போல சமூகப்பிரமையாகத்தான் இருக்க முடியும், இருக்க வேண்டும் என்பது அவருடைய மதம். அதை அசைக்க யத்தனித்தவர்கள் பாடு திண்டாட்டம். குறைந்தது இரண்டு மணி சாவகாசமாவது கையில் வைத்துக் கொண்ட பிறகுதான் அவரை நெருங்கலாம்.
அவர் காலேஜில் ஒரு ஸயன்ஸ் பண்டிதர். வாழ்க்கையின் வசதிகள், முக்கியமாக புஸ்தகங்கள், எல்லாம் கிடைக்கக்கூடிய நிலைமை, கவலையற்ற வாழ்க்கை.
அவர் மனைவி ராஜத்திற்கு ஏகதேசக் கல்வி. அதாவது, ஒரு முழத் தாளில் தனது பெயரை, குறைந்தது இரண்டு தவறுகளுடன் ஒரு வரி பூராவாக எழுதக்கூடிய கல்வி. ராமசாமி பிள்ளைக்கு எப்பொழுதுமே அவருடைய மனைவியின் கடிதத்தைப் படிப்பதென்றால் குறுக்கெழுத் து, நேரெழுத்து என்று வந்துகொண்டிருக்கும் வார்த்தைப் போட்டிகளுக்குச் சரியான விடை கண்டு பிடிப்பது மாதிரி. அவளுக்குத் தன் புருஷன் என்றால் அடங்காத பெருமை, ஆசை. இன்னும் என்னென்னவோ அவள் மனதில் எழுந்து அவள் உடல் முழுவதும் பரவசப்படுத்தும். அவர்களுடைய குழந்தை, ஒன்றரை வயதுக் குழந்தை, அதுதான் தனது கணவன் கொடுத்த செல்வங்களைக் காட்டிலும் மகத்தான பொக்கிஷம் என்று நினைத்துக்கொண்டிருப்பவள்.
அன்று ஒருநாள் அவருக்கு ரஸல் எழுதிய புஸ்தகம் கிடைத்தது. அது அவருடைய மனதில் இருந்துகொண்டிருந்த பெரிய குழப்பமான சிக்கல்களுக்கு எல்லாம் ஒரு தீர்ப்பு, அறிவுக்கு ஒத்த தீர்ப்புக் கொடுத்து விட்டது. அன்று சாயங்காலம்வரை அதை உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தார். நேரம் சென்றதுகூடத் தெரியவில்லை.
அப்பொழுது ராஜம் குழந்தை மீனுவை இடையில் எடுத்துக்கொண்டு, கையில் காப்பி பலகாரங்களுடன் ராமசாமி பிள்ளையின் அறையில் நுழைந்தாள். ராமசாமி பிள்ளையின் கவனம் முழுவதும் அந்தப் புஸ்தகத்தில் அழுந்திக் கிடந்தது.
அவரைத் தொந்திரவு செய்யக் கூடாது என்று பக்ஷணங்களை மெதுவாக மேஜைமீது வைத்துவிட்டு, குழந்தையுடன் சற்றுத் தள்ளி தரையில் உட்கார்ந்தாள்.
குழந்தை என்ன தர்க்கத்தைக் கண்டதா அல்லது அறிவைக்கண்டதா? "அப்பா!" என்று சிரித்தது. ராஜம் மெதுவாகக் குழந்தையின் வாயைப் பொத்தினாள். அது என்ன கேட்கிறதா? அதற்குப் போக்குக் காட்டுவதற்காகக் குழந்தையை மடியில் எடுத்து, பால் கொடுக்க ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் குழந்தை அதில் ஈடுபட்டது.
ராஜம் கவனியாத சமயத்தில் குழந்தை திடீரென்று எழுந்து 'அப்பா' என்று கத்திக்கொண்டு, தள்ளாடி ஒடி அவர் காலை கட்டிக் கொண்டது.
அப்பொழுதுதான் பிள்ளையவர்கள் தம்முடைய அறிவியல் போதையிலிருந்து விழித்தார். ராஜம் எழுந்துசென்று மெதுவாக அவர் கழுத்தைச் சுற்றித் தன் கரங்களை வளைத்து அவரது உதடுகளில் முத்தமிட்டவண்ணம் "காப்பி கொண்டுவந்திருக்கிறேன்" என்றாள்.
ராமசாமி பிள்ளை தமது உதடுகளைப் புறங்கையால் துடைத்துவிட்டு, "என்ன ராஜம், உனக்கு எத்தனை நாள் சொல்வது? உதட்டில் முத்தமிட்டால் கிருமிகள் பரவிவிடும் என்று. அதிலிருந்து தானே பல வியாதிகள் வருகிறது என்று முந்தாநாள்கூடச் சொன்னேனே. காப்பி எங்கே? இந்தப் புஸ்தகத்திலே என்ன மாதிரி உண்மையைச் சொல்லியிருக்கிறான் தெரியுமா?" என்றார்.
ராஜம் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். மெதுவாக ஒரு பெருமூச்சு வந்தது. அவள் கடைக்கண்ணில் சற்று ஒளிவிட்டுப் பிரகாசித்ததே, அவள் முந்தானையால் துடைக்குமுன்....
"ராஜம், மனிதனுக்கு மூன்று குணங்கள்தான் இயற்கை. முதலில் பசி. இரண்டாவது தன் குடும்பத்தை விருத்தி செய்வது. பிறகு மூன்றாவது பக்கத்திலிருப்பதை அழிப்பது. இது மூன்றிற்கும் அடிப்படையான குணம், எல்லாவற்றையும் தனக்கென்று ஆக்கிக்கொள்ளும் ஆசை. மற்றதெல்லாம் வீண் பித்தலாட்டங்கள்...."
ராஜம் அவரை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள்.
"இந்தக் கற்பு, காதல் என்று பேத்திக்கொண்டு இருக்கிறார்களே, அதெல்லாம் சுத்த ஹம்பக்...."
"அப்படீன்னா...."
"சுத்தப் பொய். மனிதனுக்கு எல்லாவற்றையும் தனது என்று ஆக்கிக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறானே, அதில் பிறந்தவை. தன் சொத்து, தான் சம்பாதித்தது, கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது தனக்கே இருக்க வேண்டும் என்ற ஆசை. மனிதன்தான் செத்துப் போகிறானே. தனக்கில்லாவிட்டால் தனது என்று தெரிந்த, தனது ரத்தத்தில் உதித்த குழந்தைகளுக்குக் கொடுக்க ஆசைப்படுகிறான். பெண்கள் தங்கள் இஷ்டப்படி இருந்தால் அது எப்படி முடியும்? அதற்குத்தான் கலியாணம் என்று ஒன்றை வைத்தான். பிறகு தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்துவிடக்கூடாது என்பதற்குக் கற்பு என்பது பெருமை என்ற பொய் சொல்லி வேலி கட்டினான். பிறகும் பார்த்தான். காதல் என்ற தந்திரம் பண்ணினான். ஒருவருக்கொருவர் இந்த மாதிரி இஷ்டப்பட்டால் வாழ்க்கை பூராவாகவும் இஷ்டப்படுவார்களாம்.... இதெல்லாம் சுத்த ஹம்பக்...."
"எனக்கு ஒண்ணும் தெரியலியே!"
தமது உற்சாகமான பிரசங்கம் சுவரில்தான் பிரதிபலித்தது என்பதில் பிள்ளையவர்களுக்கு ஏமாற்றம். ராஜம் ஒன்றும் பேசாமல் குழந்தையை எடுத்துத் தனது மார்பில் இறுக அணைத்துக்கொண்டாள்.
"என்ன தெரியவில்லை? இது வெகு சுலபமாச்சே... சொல்லுகிறேன் கேள்..." என்று ஆரம்பித்தார்.
"எனக்குத் தெரிய வேண்டாம். வாருங்களேன் பீச்சுக்குப் போகலாம்" என்றாள். தன்னையறியாமல் அவள் கைகள் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டன.
ராமசாமி பிள்ளைக்கு இதைக் கவனிக்க நேரமில்லை. தமது சுகாதாரத்திற்கு, தமது குடும்ப சுகாதாரத்திற்கு அவசியமான கடற்காற்று வாங்க அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டார்.
"என்ன ராஜம், புறப்படலியா?" என்பதற்கு முன் "இதோ வந்தேன்" என்று குழந்தைக்கு ஒரு மாற்றுச் சட்டையணிந்து, அதை இடையில் எடுத்துக்கொண்டு தயாரானாள்.
குழந்தை, "அப்பா!" என்று அவரை நோக்கித் தாவியது.
புன்சிரிப்புடன் குழந்தையை எடுத்துக்கொண்டார். அப்பொழுது இருவர் கரங்களும் சந்தித்தன. ராஜத்திற்கு உள்ளத்தில் குதூஹலம் கலந்த ஒரு ஏமாற்றம் தோன்றியது.
2
கடற்கரையில் இருவரும் உட்கார்ந்திருந்தனர். குழந்தை மீனுவிற்கு மணலை வாரியிறைக்கும் தொழிலில் வெகு உற்சாகம். தலை எல்லாம் மணல், ராஜத்தின் மடி எல்லாம் மணல்.
குழந்தையுடன் விளையாடுவதில் ராஜத்திற்கு எல்லாம் மறந்து விட்டது. மீனுவின் அட்டகாசத்தில் தன்னை மறந்துவிட்டாள்.
கடலை பட்டாணி விற்பவன் ஒருவன் அவர்களை நெருங்கினான்.
"அம்மா! கடலை பட்டாணி" என்றான்.
"வேண்டாம் போ!"
குழந்தை அவனைப் பார்த்துவிட்டது. அது வேண்டும் என்று அவனை நோக்கிக் கைகளைக் காண்பித்தது. பிறகு அழுகை. கடலையையாவது தின்னத் தெரியுமா? வேண்டுமென்றால் மறுபேச்சேது?
"கடலைக்காரனா அது. உடம்பிற்காகாதே" என்று அழுகையைக் கேட்டுப் புஸ்தகத்தை மூடிக்கொண்டு திரும்பிய பிள்ளையவர்கள் கேட்டார்.
"காலணாவிற்குக் கடலை, உப்புக் கடலை, கொடு. என்னாப்பா உனக்கு எந்த ஊர்?" என்றார் பிள்ளை.
"தஞ்சாவூர் ஜில்லா சாமி!"
"என்ன! மன்னார்குடியா?"
"ஆமாஞ்சாமி!" என்று சிரித்தான்.
"உனக்கு அங்கே, பெரிய கடைத்தெரு சாமி நாயக்கர் தெரியுமா?"
"போன வருசம் அவுக கிட்டத்தான் வேலை பார்த்தேன் சாமி. கால தோசம்...என்னை இங்கே கொண்டாந்து தள்ளிட்டுது" என்று பிள்ளையவர்களின் கைக்குட்டையில் கடலையை அளந்து போட்டு விட்டு ஒரு கூழைக் கும்பிடு போட்டவண்ணம், "கடலை பட்டாணி!" என்று கத்திக் கொண்டு சென்று விட்டான்.
"ராஜம்! இதைப் பார்த்தியா? சமுத்திரக் கரையிலே எந்தக் கடலை பட்டாணி விக்கிறவன் கிட்டக் கேட்டாலும் இந்தப் பதில்தான். இது எது மாதிரி என்றால் அன்றைக்கு ஒரு ஜோரான ரஷ்யக் கதை படித்தேன். அதிலே விபசாரி வீட்டுக்குப் போகிறவனைப் பற்றி எழுதுகிறான். அங்கே போகும்பொழுது ஒவ்வொருவரும் முதல்லெ 'உன் பேரென்ன?' என்று கேட்பானாம். 'இதில் வந்து, அதாவது, நீ தவறி எவ்வளவு காலமாச்சு?' என்று கேப்பானாம். அவளும் ஏதாவது ஒரு பொய், சமீபத்தில்தான் சமூகக் கொடுமையால் வந்துவிட்டதாகக் கூறுவாளாம். அதை அவள் ஆயிரத்தெட்டாவது தடவை பாடம் ஒப்பிக்கிற மாதிரி சொல்லியிருப்பாள். இவனும் வாத்தியார் மாதிரிக் கேட்டுக் கொள்ளுவான். பிறகு இருவருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை - இதில் என்னவென்றால், மனிதனுக்கு விபசாரியானாலும் தனக்குக் கிடைப்பது நல்ல பொருளாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இருக்கிறான். சாயங்காலம் சொன்னேனே ஒன்று, அதுதான் அந்தத் தனக்கு வேண்டுமென்ற ஆசை, அதிலிருந்துதான்..."
"அதற்கென்ன இப்பொழுது?"
"இல்லை! உனக்குத் தெரியவில்லை என்றாயே அதற்குச் சொன்னேன்."
"எனக்குத் தெரிய வேண்டாம்."
அப்பொழுது நன்றாக இருட்டிவிட்டது. எங்கிருந்தோ, பக்கத்தில் தான், யாரோ பாரதி பாட்டு ஒன்றைப் பாடினார்கள்.
'பிள்ளைக் கனியமுதே' என்ற இன்பக் கனவில் ராஜத்தின் மனம் லயித்துவிட்டது.
பாட்டு முடிந்தது.
மௌனம்.
"பாட்டு எவ்வளவு நல்லா இருக்கு! மீனுவிற்குப் பாடினாப்பிலே இருக்கே!" என்றாள் ராஜம்.
"அதில் என்ன இருக்கிறது. விஷயம் தெரியாமல் பாடுகிறான். வெறும் அசட்டுப் பாட்டு!" என்றார்.
மீனு அதற்குள் கடலை பூராவும் வாரி இறைத்துவிட்டு, வேறு 'ஸப்ளை' வேண்டுமென்று அழ ஆரம்பித்தாள்.
இருட்டில் மீனுவை எடுத்து இறுக அணைத்துக் கொண்டாள்.
ராமசாமி பிள்ளை, "நேரமாகிவிட்டது!" என்று எழுந்தார்.
ராஜத்தின் மனத்தில் ஒரு ஏமாற்றம் இருந்தது.
ஊழியன், 12-10-1934
நன்றி..
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்