"எதுக்குடா பயலெ அடுப்புக்கட்டிகிட்ட வந்து ஏறிகிட்டு நிக்குறவன்?"
"பாயி கொடு."
"பாயி இல்லெ."
"ஊருல இருக்கிற எல்லாப் பசங்களும் எடுத்துகிட்டுப் போறாங்க இல்லெ."
"போனாப் போறாங்க" என்று சொன்ன கம்சலை அடுப்பில் வெந்துகொண்டிருந்த சோற்றைக் கிண்டிவிட ஆரம்பித்தாள். முருகன் லேசாகச் சிணுங்கி அழ ஆரம்பித்தான்.
சோற்றை இறக்கி வடித்த கம்சலை, குழம்புச் சட்டியைத் தூக்கி அடுப்பில் வைத்தாள். "பாய் தா" என்று சொல்லி முருகன் அடம்பிடிக்க ஆரம்பித்தான். அவனுடைய தொல்லையைத் தாங்க முடியாமல் "இதென்ன வம்பு சனியனா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே போய்க் குதிருக்குப் பக்கத்தில் எதையோ தேடினாள். பாயைத்தான் தேடுகிறாள் என்று நினைத்த முருகன் அழுவதை நிறுத்திவிட்டு, "மூட்டெ மேலெ இருக்கு பாரு" என்று சொன்னான். அதைத் காதில் வாங்கிக்கொள்ளாமல் சாக்கு ஒன்றை எடுத்துக் கொடுத்தாள் கம்சலை. சாக்கை வாங்கி வேகத்தோடு விட்டெறிந்த முருகன் தரையில் விழுந்து புரண்டு அழ ஆரம்பித்தான். சாக்கை எடுத்து அவனுடைய கையில் திணித்துவிட முயன்றாள் கம்சலை. "பாயி கொடு. இல்லாட்டி துப்புட்டி கொடு" என்று சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான். அவனோடு மல்லுக்கட்ட முடியாமல் "சாமி பாக்கப் போன சொந்தக்காரங்க எல்லாம் சோத்துக்கு வர நேரமாயிடிச்சி. இன்னம் சோறாக்கி முடியல. இந்த நேரத்திலெ ஒங்கூட என்னால வம்பாட முடியாது. சாக்கெ எடுத்துகிட்டு கிருவமா போயிச் சேரு. கத்திகிட்டே இருந்தா பூசதான் கெடைக்கும்" என்று சொல்லிச் சாக்கை முருகனுக்குப் பக்கத்தில் போட்டுவிட்டு அடுப்புக்கு முன் போய் உட்கார்ந்தாள். சாக்கைத் தூக்கிக் கம்சலையிடம் போட்ட முருகன் "பாயி கொடு" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.
"ஒதெதான் கெடைக்கும். போன வருசம் கூத்துப் பாக்கப் போனப்ப சாக்குதானெ எடுத்துகிட்டுப் போன?"
"இந்த வருசம் கூத்தில்லெ. வீடியோ படம்."
"வீடியோ படமோ ரேடியோ படமோ. எதா இருந்தாலும் சாக்குதான். ஊட்டுல ஒரு பாயிதான் இருக்கு. அதெ ஒங்கிட்ட கொடுத்துட்டு, சொந்தக்காரங்க கூத்துப் பாக்கப் போவயிலெ நான் எதெக் கொடுக்கிறது? பாயிகூட இல்லாத ஊடுன்னு கேப்பளமா நம்பள பேச மாட்டாங்க?" என்று சொன்ன கம்சலை, அடுப்பில் இரண்டு விறகை எடுத்துச் செருகினாள். "தண்ணீ எடுக்கப் போன குட்டிய இன்னம் காணுமே. கெணறு வெட்டித் தண்ணீ எடுக்குறாளா?" என்று சொன்னவள் முருகன் பக்கம் திரும்பி, "அக்காளப் பாத்தியாடா?" என்று கேட்டாள். "மசுரப் பாத்தன்" என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் அழ ஆரம்பித்தான். அழுதுகொண்டே, மூட்டைமீது இருக்கும் பாயை அவனுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு ஓடி விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான்.
"தண்ணிக்கிப் போன குட்டிய இன்னம் காணுமே. வீடியோ படம் காட்டுற எடத்துக்குப் போயிருப்பாளா? ஊருல இருக்கிற குட்டிவுள கெடுக்கிறதுக்குத்தான் ஊர்க்கார பயலுவோ அதெயும் இதெயும் கொண்டாந்து காட்டுறானுவோ" என்று சொன்ன கம்சலை, வாசலில் வந்து நின்று பார்த்தாள். ராணி வருகிற மாதிரி தெரியவில்லை. முனகிக்கொண்டே வீட்டுக்குள் போனாள். கரண்டியை எடுத்துக் குழம்பைக் கிண்டிவிட ஆரம்பித்தாள்.
தண்ணீர்க் குடத்துடன் வீட்டுக்குள் வந்தாள் ராணி. அவளிடம் "கெணறு வெட்டித் தண்ணி எடுத்தியாடி?" என்று கேட்டாள் கம்சலை. ஏதோ சொல்ல வந்த ராணியைப் பேசவிடாமல், "ஒம் போக்கு சரியில்லெ. அவ்வளவுதான் நான் சொல்லுவேன். ஒரு புள்ளெ பெக்குறமுட்டுதான் கண்ணே பொண்ணேம்பானுவோ" என்று ராணியைத் திட்டிக்கொண்டே அடுப்பில் விறகைச் செருகினாள் கம்சலை. அந்த நேரத்தில் பாயை எடுத்துக்கொண்டு நழுவப்பார்த்த முருகனை இழுத்து முதுகில் இரண்டு அடி கொடுத்து, பாயைப் பிடுங்கிப் பரண்மீது வைத்தாள். அதை பார்த்த முருகனுக்கு அடக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் உண்டாயிற்று.
தண்ணீர் எடுத்துக்கொண்டு வரும்போது பாவாடை தாவணி நனைந்துவிட்டதால் வேறு பாவாடை தாவணி மாற்றிக்கொண்டு வந்த ராணியைப் பார்த்து முறைத்தாள் கம்சலை. அதைப் பொருட்படுத்தாமல் தலை சீவ ஆரம்பித்தாள் ராணி.
கிருஷ்ணன் வீட்டுக்குள் வந்ததும் அழுதுகொண்டிருந்த முருகன் விருட்டென்று எழுந்து உட்கார்ந்தான். சத்தம் காட்டாமல் பவுடர், சீப்பு, கண்ணாடியுடன் வாசலுக்குப் போனாள் ராணி. வந்த வேகத்திலேயே துண்டை விரித்துப் போட்டுப் படுத்தான் கிருஷ்ணன். "நல்ல நாளும் பெருநாளுமா என்னா மொடக்கிக்கிட்டெ? எயிந்திரு, பாயப் போடுறன்" என்று சொல்லிப் பரண்மீது வைத்திருந்த பாயை எடுத்து விரித்துப்போட்டாள் கம்சலை. பாயில் நகர்ந்து படுத்துக்கொண்டான் கிருஷ்ணன். இனி பாய் தனக்குக் கிடைக்காதோ என்று சந்தேகப்பட்டதும் விசும்ப ஆரம்பித்தான் முருகன் அவனைத் திரும்பிப் பார்த்த கிருஷ்ணன், "இந்த பய எதுக்குடி அயிவுறான்?" என்று கேட்டான்.
"திங்கிற திமுறு வாட்டம்தான். வேறென்னா?"
"சும்மா இருடி மயிரான் மவள" என்று சொல்லிக் கம்சலையை முறைத்த கிருஷ்ணன், "யாண்டா அயிவுற?" என்று முருகனிடம் கேட்டான். அவன் வாயைத் திறக்கவில்லை.
"மயிரான் மவ இல்லன்னா தெரியும், ஐயாவோட வண்டவாளம் தண்டவாளத்துல போறது. செம்பிறி ஆடு மேய்க்கிறவனுக்கு எம் பொண்ணெ கொடுக்காதன்னு ஆதிகாலத்திலியே எங்கம்மா எங்கப்பன்காரன்கிட்டெ சொல்லிச்சி. அந்தக் குருட்டுப் பய அதெக் காதுல போட்டுக்கல" என்று சொல்லிக் கொண்டே குழம்பை இறக்கிவைத்தாள் கம்சலை.
"ஆமாம் ஒப்பன் ஏத்திவுட்டெ சீருலதான் என் வண்டி ஓடுது."
"நாலு புள்ளெ பெத்து, அதுல ரெண்ட கட்டிக் கொடுத்து, பேரன் பேத்தின்னு எடுத்தப் பிறவும் எங்கப்பன் வண்டி வண்டியா ஏத்திவுடுவான் இரு."
"செத்தப் பேசாம இருடி வெங்கப்பய மவள."
"என்னாத்தெ பேசாம இருக்கிறது? ஊருல தேரும் திருநாளுமா இருக்கிறப்ப எம் மக்கள காணுமேன்னு எம் மனசு பதறாது?" என்று சொல்லும்போதே கம்சலையின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. மூக்கை உறிஞ்சிக்கொண்டு, "அண்ணன் தம்பிக்குப் பொண்ணு கொடுத்தது மகா பிசகாப் போச்சு. நான் அன்னிக்கே சொன்னேன். நீ கேக்கல. இன்னிக்கி எம்புள்ளிவோ தவிச்சி நிக்குதுவோ. பங்காளி ஊட்டுக் கருமகாரியத்துக்குத் துணி எடுத்து வைக்கலன்னு பொறந்த ஊட்டுக்குப் போவாதன்னு சொல்ற பயலுவோ நல்ல சாதிக்குப் பொறந்தவனுங்களா?" என்று இரண்டு மருமகன்களையும் குறை சொல்லிப் பேச ஆரம்பித்தாள் கம்சலை.
கிருஷ்ணன் ஏன்தான் வந்தானோ என்றிருந்தது முருகனுக்கு. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப்போனான். எதற்காக வளவளவென்று கிருஷ்ணனிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறாள் என்று கம்சலைமீது அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. அவனுடைய கோபத்தை அதிகரிப்பது மாதிரிதான் கம்சலையும் பேசிக்கொண்டிருந்தாள்.
"எட்டு நா ஒருக்க, பத்து நா ஒருக்க எம்மாம் காத்து மயலா இருந்தாலும் ரெண்டு பேரும் ஓடியாந்து மொவத்தக் காட்டிப்புட்டு போவாளுவோ. நாலு மாசமா இந்த இலாக்காவுல அடிவைக்காம பண்ணிப்புட்டானுங்களே கொலகாரனுங்க."
"நானும் வெக்கத்த வுட்டு போயி சொல்லிட்டுத்தான் வந்தன்."
"அவனுவோ அம்மாக்காரி போடுற சுந்துதான் இதெல்லாம்" என்று சொன்ன கம்சலை "ரெண்டு குச்சி எடுத்தாடி" என்று கத்தினாள். ராணி கொஞ்சம் குச்சிகளை அள்ளிக்கொண்டுவந்து போட்டாள். ராணியை ஏற இறங்கப் பார்த்தாள். ராணி ஒரு வார்த்தையும் பேசாமல் வாசலுக்குப் போனாள்.
"தெரண்டு மூணு வருசமா குந்தியிருக்கிற இந்தக் குட்டியப் புடிச்சி ஒருத்தன் கையில கொடுக்க வாணாமா?" என்று சொன்ன கம்சலை "யே ராணி" என்று இரண்டு மூன்று முறை கூப்பிட்டாள். பதிலில்லாததால் "அதுக்குள்ளார எங்கப் போனா நாதேறி" என்று சொன்னவள், பரங்கிக்காயை எடுத்துக் கீண ஆரம்பித்தாள். முருகனிடம், "தம்பி, அத்தவோ எங்க இருந்தாலும் கையோட கூப்புட்டா, சாப்புடுறதுக்கு" என்று சொன்னாள். அவன் நகராததால் திட்ட ஆரம்பித்தாள். கிருஷ்ணன் "போயிட்டு வாடா" என்று சொன்னதும் முருகன் வாயைத் திறக்காமல் எழுந்தான்.
நேரே கோவிலுக்குத்தான் போனான் முருகன். தன்னுடைய அத்தைகளைத் தேடிக்கொண்டு கோவிலைச் சுற்றி இரண்டு முறை வந்தான். ஊர்வலத்திற்குச் சாமியை அலங்கரித்துக்கொண்டிருந்த கூட்டத்திலும் தேடிப் பார்த்துவிட்டான். கோவிலில் இல்லை என்றால் தன்னுடைய சித்தப்பா வீட்டில்தான் இருப்பார்கள் என்று நினைத்த முருகன் அங்கு போவதா வேண்டாமா என்று யோசித்தான். இவனுடைய அம்மாவுக்கும் சித்தப்பா பெண்டாட்டிக்கும் பேச்சுவார்த்தை இல்லை. அப்படி இருக்கும்போது அங்கு எப்படிப் போவது என்று தயங்கினான். போகாமலே போனதாகச் சொல்லிவிடலாமா என்று யோசித்தான். கிருஷ்ணனுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் என்று எண்ணிய முருகன் தயக்கத்துடன் நடக்க ஆரம்பித்தான்.
"அப்பா உங்கள சாப்பிடக் கூட்டியாரச் சொன்னாரு" என்று முருகன் சொன்னதுமே அவனுடைய பெரிய அத்தை, "எம் மவனுக்குப் பொண்ணு கொடுக்காத உங்கம்மாக்காரி எதுக்குச் சாப்புடக் கூப்புடுறா? நாங்க சோத்தயே கண்டதில்லியா?" என்று பேச ஆரம்பித்தாள். முருகன் எதுவும் பேசாமல் தலையைக் கவிழ்த்து நின்றுகொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவனுடைய சின்ன அத்தை, "நீ போடா. நாங்க அப்புறமா வர்றம்" என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய அக்காவிடம், "சின்னப் புள்ளெக்கிட்டெ போயி எதுக்குக் கத்துறவ?" என்று கேட்டு முறைத்தாள். சின்ன அத்தை சொன்னதே போதும் என்று முருகன் விருட்டென்று வெளியே வந்தான். பெரிய அத்தையின் மீது அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. அவளை அழைத்துக்கொண்டுவரச் சொன்ன கம்சலையின் மீதும் எரிச்சல் வந்தது. கோபத்தில் வேகமாக நடந்தான். சின்னசாமியின் வீட்டின் முன் பெரிய கூட்டமாக இருப்பது தெரிந்ததும் கூட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
"ஐய, இப்பத்தான் இது காட்டுறாரு. குடிச்சமா, பேசாமப் போயிப் படுத்தமான்னு இல்லாம. பவுச கெட்டவ பெத்ததுதானெ, பின்னெ எப்பிடி இருக்கும்?" என்று சொல்லி, குடித்துவிட்டு ஆடிக்கொண்டிருந்த சின்னசாமியை வீட்டுக்கு இழுத்துக்கொண்டிருந்தாள் ராசாத்தி. கூட்டம் கூடி வேடிக்கை பார்ப்பதை, ராசத்தி மோசமாகப் பேசுவதை எல்லாம் பொருட்படுத்தாமல், தெருவில் நின்றுகொண்டிருந்த பாவாயிடம், "நீ என்னிக்கி சாவுவ. சொல்லு. நீ சாவுற அன்னிக்கி மோளம் வைக்கணும், தாளம் வைக்கணும், வெடி, ஆட்டம் பாட்டம் எல்லாம் வைக்கணும். சொல்லு. நீ என்னிக்கிச் சாவுவ?" என்று திரும்பத் திரும்பக் கேட்டதையே கேட்டுக்கொண்டிருந்தான். சின்னசாமி சொல்வதைக் கேட்டு பாவாயி சிரித்தாள்.
"த பவுசு கெட்டத. தெருவுல நின்னு இது காட்டுறியா? ஆட்டம் காட்டாம வந்து ஊட்டுல மொடக்கு" என்று சொல்லி ராசாத்தி சின்னசாமியை இழுத்துக்கொண்டிருந்தாள். அவளிடம் "யாண்டி எம்புள்ளெய இயிக்குறவ? நல்ல நாளும் பெருநாளுமா தமாசா இருந்துட்டுப் போறான். தெனமா குடிக்கிறான்?" என்று கேட்டாள் பாவாயி.
"ஒன்னெ மாரிதான் ஒம் புள்ளெயும் இருக்கும், வெக்கம் கெட்டுப்போயி" என்று சொல்லித் தன் மாமியாரை முறைத்த ராசாத்தி "நீ எப்ப சாவுவ சொல்லு" என்று கேட்டுக்கொண்டிருந்த சின்னசாமியை வீட்டுக்கு நெட்டித்தள்ளிக்கொண்டுபோனாள். சின்னசாமி போனதும் கூட்டம் கலைய ஆரம்பித்தது. முருகனும் ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டுக் கிருஷ்ணன் திட்டினாலும் திட்டுவான் என்று எண்ணி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.
முருகன் வீட்டுக்குள் நுழைந்ததுமே "ரெண்டு பேரும் ஒத்துச் சேந்தாப்ல வரலன்னுட்டாளுவளா?" என்று வேகத்துடன் கேட்டாள் கம்சலை. "அப்புறம் வர்றன்னாங்க" என்று சொன்ன முருகன் கிருஷ்ணனைக் காணாததால் பாயைச் சுருட்ட ஆரம்பித்தான். "யாண்டா பாய எடுக்குற? வீம்புக்காரிவோகிட்டெ என்னெப் பேச்சு வாங்கவைக்காதடா" என்று சொல்லிக்கொண்டே வந்து முருகனின் கையிலிருந்த பாயைப் பிடுங்கிப் பரண்மீது வைத்தாள். பிறகு வீட்டைக் கூட்ட ஆரம்பித்தாள். முருகன் கத்தி அழ ஆரம்பித்தான். கம்சலை முருகனின் அழுகையைச் சட்டை செய்யாமல் "இந்தக் குட்டி எங்க போயிருப்பா?" என்று சொல்லி ராணியைத் திட்ட ஆரம்பித்தாள். "இந்த பூபாலன் பயலயும் காணுமே. எவகூட சுத்துறானோ" என்று முணுமுணுத்தாள்.
வாசல் பக்கமிருந்து "ஸ்-ஸ்-ஸ்-ஸ்" என்ற சத்தம் விட்டுவிட்டுக் கேட்டது. முருகன் அழுவதை நிறுத்திவிட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தான். வாசல் படல் ஓரமாக யாரோ நிற்பது மாதிரி தெரிந்ததும் எழுந்து வெளியே வந்தான். பாண்டியன் நின்று கொண்டிருந்தான். ரகசியம்போல "யாண்டா அயிதுகிட்டு இருந்த?" என்று கேட்டான் பாண்டியன். "எங்கம்மா சாக்குத்தான் தர்றெங்குது." என்று சொல்லும்போதே முருகனுக்குக் கண்கள் கலங்கின. அதே நேரத்தில் பாண்டியன் வெறுங்கையாக இருப்பது சற்று ஆறுதலாக இருந்தது. "வீடியோக்காரன அயிச்சியார ஆளுவோ ஐயனாரு கோவிலுக்குப் போறாங்கடா" என்று பாண்டியன் சொன்னதும் முருகனுக்கு வீடியோக்காரனை அழைத்துக்கொண்டு வரப்போகிற ஆட்களோடு தானும் போகலாமா என்று யோசித்தான் மறு நொடியே வீட்டுக்குள் ஓடிப்போய் "அம்மா பாயி" என்று கம்சலையிடம் கேட்டான். "வௌக்கமாறு பிஞ்சிப்போவும்" என்று சொன்னவள் சாக்கைத் தூக்கிக் கொடுத்தாள். அவளை முறைத்துப் பார்த்த முருகன் வேறு வழியில்லாமல் சாக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
முருகனும் பாண்டியனும் கோவிலுக்கு வந்தபோது வீடியோக்காரனை அழைத்துக்கொண்டு வருவதற்கு ஆட்கள் போய்விட்டிருந்தது தெரிந்தது. இருவருக்கும் ஏமாற்றமாகிவிட்டது. ஏக்கத்தை மறைக்க முடியாமல் "ஐயனாரு கோவுலுக்குப் போவலாமாடா?" என்று முருகன் கேட்டான். "அம்மாம் தூரம் எப்பிடி இருட்டுலப் போவ முடியும்?" என்று பாண்டியன் சொன்னதும் முருகனின் முகம் வாடிப்போயிற்று. கோவிலுக்கு முன் விளையாடிக்கொண்டிருந்த பையன்களோடு சேர்ந்து விளையாடலாம் என்று பாண்டியன் சொன்னதற்கு அரைகுறை மனத்துடன் சரி என்று தலையை ஆட்டிய முருகன் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
விளையாடிக்கொண்டிருந்த பையன்கள் விளையாடுவதை விட்டுவிட்டு முருகன் எதற்காகச் சாக்குக் கொண்டுவந்திருக்கிறான் என்று கேட்டனர். "வீடியோப் படம் பாக்க யாராச்சும் சாக்கு எடுத்துகிட்டு வருவாங்களா?" என்று இளக்காரமான தொனியில் குமார் கேட்டான். "நான் எதெ எடுத்தாந்தா ஒனக்கென்னடா?" என்று கேட்டு முருகன் குமாரை முறைத்தான். தொடர்ந்து, சாக்கு வைத்திருப்பதற்காக முருகனைப் பையன்கள் கிண்டலாகப் பேச ஆரம்பித்ததும் அந்த இடத்தில் நிற்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை. எரிச்சலாக இருந்தது. சட்டென்று அந்த இடத்தை விட்டு நடக்க ஆரம்பித்தான். கம்சலைமீது அவனுக்குக் கோபம் வந்தது. வீடியோக்காரனை அழைத்துவரப்போன கூட்டத்தோடு போக முடியாததற்கு, பையன்கள் கிண்டல் கேலி செய்ததற்கு எல்லாவற்றுக்கும் அவள்தான் காரணம். கோபத்தில் சாக்கை விட்டெறிந்துவிடலாமா என்று யோசித்தான். கையில் வைத்திருந்த சாக்கைப் பார்த்தான். அருவருக்கத்தக்க பொருள் ஒன்று தன் கையில் ஒட்டிக்கொண்டு இருப்பதுபோல வெட்கப்பட்டான்.
தெருவில் நின்றுகொண்டிருந்த முருகனையும் பாண்டியனையும் பார்த்த பூபாலன், "இருட்டுல எதுக்குடா நிக்குற? ஊட்டுக்குப் போ" என்று சொல்லிவிட்டுக் கோவில் பக்கமாக நடக்க ஆரம்பித்தான். அவன் வான்மதி வீட்டுக்கு முன் சிறிது நேரம் நின்று விட்டுப் போனதைப் பார்த்த பாண்டியன், "ஒங்கண்ணன் வான்மதிய லவ் பண்ணுதுடா" என்று ரகசியம் மாதிரி சொன்னான். "தெரியும்" என்று அலட்சியமாக சொன்னான் முருகன்.
"சாமி வடக்கால தெரு மொனைக்கு வந்துட்டமாரி தெரியுதுடா" என்று பாண்டியன் சொன்னதும் "வா போவலாம்" என்று சொன்ன முருகன், வடக்குத் தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவனோடு பாண்டியனும் ஓடினான். அவனுக்குத் தன்னை முருகன் சாக்கில் உட்கார விடுவானோ மாட்டானோ என்ற கவலை ஓயாமல் அரித்துக்கொண்டிருந்தது.
சாமி மிரமனையில் கூட்டம் திமுதிமுவென்று போய்க்கொண்டிருந்தது. கூட்டத்தோடு முருகனும் பாண்டியனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர். "ஒஞ் சாக்குல ஒக்கார இடம் தர்றியாடா" என்று கெஞ்சுவது போலப் பாண்டியன் கேட்டான். "சரி" என்றான் முருகன். மறு நொடியே தோள்மீது கையைப் போட்டுக்கொண்டு நடந்தான் பாண்டியன்.
சாமி மிரமனை வடக்குத் தெரு முடிந்து அதற்கு அடுத்த தெருவில் திரும்பும்போது கூட்டத்திலிருந்த யாரோ ஒருத்தன் "வீடியோக்காரன் வந்துட்டான்" என்று சொன்னான். அவன் சொன்ன சிறிது நேரத்தில் மைனர் பையன்கள் மூன்று நான்கு பேர் கூட்டத்திலிருந்து விலகிக் கோவிலை நோக்கி நடந்தனர். அதைப் பார்த்த முருகன், "வாடா, நாம்பளும் போவலாம்" என்று கூப்பிட்டான். அதற்கு, "பொய்டா, சாமியத் தூக்க சொல்வாங்கன்னு அவங்க போறாங்க, சாமி மிரமன முடிஞ்சாத்தான் படம் போடுவான்" என்று பாண்டியன் சொன்னான். அதைக் கேட்ட முருகனுக்குச் சப்பென்றாகிவிட்டது. உற்சாகமின்றிச் சாமி மிரமனையோடு போய்க்கொண்டிருந்தான். அந்தத் தெருவில் பாதி தூரம்தான் சாமி வந்திருக்கும், அடுத்து நான்கு ஐந்து மைனர் பையன்கள் கூட்டத்திலிருந்து நழுவிக் கோவில் பக்கம் நடந்தார்கள். வீடியோக்காரன் வந்திருப்பானோ என்று முருகன் சந்தேகப்பட ஆரம்பித்தான்.
"யோ ஐய்யர, சீக்கிரம் வேலய முடிச்சி அனுப்பிக்கிட்டே இரு" என்று சாமியைத் தூக்கிக்கொண்டிருந்த மைனர் பையன்கள் தேங்காய் உடைத்து, தீபாராதனை காட்டிக்கொண்டிருந்த பண்டாரத்திடம் சத்தம்போட ஆரம்பித்தனர். சாமி தெற்குத் தெருவிற்கு வந்தபோது மைனர் பையன்கள் மட்டுமல்ல; சின்னச் சின்னப் பையன்களின் கூட்டமும் குறைய ஆரம்பித்ததும் முருகனின் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. கோவிலுக்குப் போகலாமா என்று யோசித்தான். கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தால் இவன் சாக்கு வைத்திருப்பது யாருக்கும் தெரியாது. குறைவாக இருந்தால் சட்டென்று தெரிந்துவிடும். பையன்கள் கேலி செய்வார்களே என்ற கவலையில் அவன் சாமி மிரமனையில் போய்க்கொண்டிருந்தான்.
சாமி கிழக்குத் தெருவுக்கு வந்தபோது, சாமி மிரமனையில் கூட்டமே இல்லை. தண்ணீர் குடிக்க, ஒண்ணுக்கு இருக்க என்று கூட்டத்திலிருந்து ஒவ்வொரு ஆளாக நழுவிக்கொண்டிருந்தனர். மிரமனையில் அதிகமாகச் சிறுவர்களும் கிழவர்களும்தான் இருந்தனர். சாமிக்குச் சிறப்புக் கொடுப்பதற்காக ஒவ்வொரு வீட்டின் முன் இருந்தவர்களும்கூடக் கிழவன் கிழவிகளாகவே இருந்தனர். சாமியைத் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் அவர்களையும் சரியாகச் சாமி கும்பிடவிடாமல் "சீக்கிரம் சீக்கிரம்" என்று விரட்டினார்கள். சீக்கிரமாகத் தேங்காயை உடைக்கச் சொல்லிப் பண்டாரத்தை ஓயாமல் நச்சரித்தனர்.
சாமி கிழக்குத் தெருவின் கடைசிக்கு வந்தபோது, சாமியைத் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தனித்தனியாக இருக்கும் வீடுகளுக்கெல்லாம் சாமி வராது என்று சொல்லித் தெரு முனைக்கே சிறப்பை எடுத்துக்கொண்டு வந்துவிடுங்கள் என்று கூறியதுதான் தாமதம், தனித்தனியாக இருந்த வீட்டுக்காரர்கள் எல்லாம் ஒன்று கூடி "நாங்க வரி கொடுக்கலியா? எங்க ஊட்டுக்கும் சாமி வந்துதான் ஆவணும்" என்று சொல்லிச் சத்தம்போட்டனர். வாக்குவாதம் ஆரம்பித்தது. சாமியைத் தூக்கிக் கொண்டிருந்தவர்கள், "அப்படின்னா நீங்களே தூக்கிக்கிட்டுப் போங்க" என்று வீம்பு பிடித்தனர். கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சு தடிக்க ஆரம்பித்தது. சத்தம் அதிகமாக அதிகமாகக் கூட்டம் சேர ஆரம்பித்தது. கூட்டம் சேரச் சேர வாக்குவாதம் பெரிதாக வளர ஆரம்பித்தது.
"என் ஊட்டு வாசக் கடெக்கி வராத சாமி என்னா மசுரு சாமிடா. இந்த எடத்தெவிட்டு சாமி எப்பிடி நவுறுதுன்னு பார்க்கலாம்" என்று ஏழு எட்டுப் பேர் சாமிக்கு முன் நின்று சத்தம்போட்டுக் கத்த ஆரம்பித்ததும் சாமியைத் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் கோபத்தில், "தூக்குனா தூக்குங்க, தூக்காட்டிப் போங்க. எங்களுக்கு மட்டும்தான் வேத்திருக்கா" என்று சொன்ன வேகத்திலேயே சட்டென்று சாமியைக் கீழே இறக்கிவைத்துவிட்டார்கள். முன்பு தனித்தனி வீடுகளுக்கும் சாமி வந்தாக வேண்டும் என்று தகராறு செய்தவர்கள் இப்போது நடுத்தெருவில் எப்படிச் சாமியை இறக்கிவைக்கலாம் என்று கேட்டுச் சண்டைபோட ஆரம்பித்தனர்.
"ஒங்க வளவு ஆளுவோ என்னா பண்றீங்கின்னு நானும் பாக்குறன்" என்று கதிரேசனைப் பார்த்துக் கத்தினான் பெருமாள். "பாக்க முடியாதா? வா, நீயா நானான்னு ஒத்தக்கி ஒத்தெ ஒரு கை பாத்துடலாம்" என்று சொன்ன கதிரேசன் பெருமாளை ஒரு நெட்டு நெட்டினான். பதிலுக்குப் பெருமாளும் நெட்டினான். ஏழு எட்டுப் பேர் கூடிதான் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டனர். ஆனாலும் அவர்கள் இருவரும் ஆத்திரத்தை அடக்க முடியாமல் கோபத்தில் கத்த ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் ஓடிவந்த பெருமாளின் பொண்டாட்டி குமாரி, "நம்பளுக்கு எதுக்கு ஊர் வம்பு?" என்று அவனை இழுத்தாள். குமாரியை "வுடுறி" என்று நெட்டித் தள்ளினான் பெருமாள். குமாரி நிலை தடுமாறிக் கீழே விழுந்ததில் அவளுக்கு வலது கை முட்டியிலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. ரத்தத்தைப் பார்த்துப் பதறிப்போன குமாரி, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, "ஒவ்வொரு வருச திருநாவுலயும் இதே கங்காச்சிதான். வண்ணாத்திச் சாண்டெ குடிச்ச பயலுவுளுக்கு ஒரு கிளாசி சாராயம் உள்ளெ போனா போதும், தலகீயா குதிப்பானுவோ" என்று சொல்லிக் கத்திக்கொண்டே போய்த் தன் புருசனை வீட்டுக்கு இழுக்க ஆரம்பித்தாள். பெருமாள் மீண்டும் அவளை நெட்டித் தள்ளிவிட்டுக் கதிரேசனிடம் ஓடினான்.
எங்கிருந்தோ ஓடிவந்த கதிரேசனின் அம்மா காத்தாயி, "யாண்டா தம்பி ஒனக்கு இந்த வேலெ, நீ எதுக்கு சாமி தூக்கப் போன? எவனாச்சும் சாமியத்தான் தூக்குறான். சாணியத்தான் தூக்குறான். ஒனக்கென்ன? ஊட்டுக்குப் போ. கண்ட பயகிட்டெ அடி தடிக்குப் போயிக்கிட்டு" என்று சொல்லி அவனை இழுக்க ஆரம்பித்தாள். காத்தாயி சொன்னது எதுவும் கதிரேசனின் காதில் விழவில்லை. அவன் பெருமாளிடம் கத்திக்கொண்டிருந்தான். முருகனும் பாண்டியனும் கதிரேசனின் வாயையும் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துகொண்டிருந்தனர்.
சண்டை வலுத்துக்கொண்டேயிருந்தது. என்ன நடக்கப்போகிறதோ என்று முருகனும் பாண்டியனும் கவலைப்பட ஆரம்பித்தனர். கூட்டம் சேர்ந்து கொண்டேயிருந்தது. சண்டை நடந்துகொண்டிருந்த இடத்திற்குப் பாண்டியனின் அம்மா வந்தாள். கூட்டத்தில் அவன் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தும் பதறிப்போய், "யாண்டா கூட்டத்திலெ நிக்குற? போடா ஊட்டுக்கு, சண்ட நடக்கயில் ஏதாச்சும் ஆயிப்பூடும்" என்று சொல்லித் தலையில் கொட்டினாள். அந்த இடத்தில் நின்றால் இன்னும் அடிப்பாள் என்று நினைத்த பாண்டியன் நழுவினான். அவனோடு முருகனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
முருகனும் பாண்டியனும் கோவிலுக்குச் சற்றுத் தள்ளி வந்துகொண்டிருந்தபோது எதிரில் வந்த கிழவன், "டே பசங்களா இன்னிக்கி என்னா படம்ண்டா காட்டப்போறாங்க?" என்று கேட்டான். பையன்கள் இருவரும் உற்சாகமாகி ஓரே நேரத்தில், "எங்க ஊரு மாட்டுக்காரன்" என்று சொன்னார்கள். "மாட்டுகாரனப் பத்தி தெரியாதின்னா மாட்டுக்காரன் படம் காட்டப்போறானுவோ" என்று ஏளனமாகச் சொல்லிக் கொண்ட நடந்த கிழவன்மீது பையன்களுக்குக் கோபம் வந்தாலும் "படம் நல்லா இருக்கும்" என்று சொன்னார்கள். "ஒங்க அக்கா இதுலதான் நல்லாயிருக்கும்" என்று கிழவன் சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான். முருகன் கிழவனைக் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினான்.
சாமி இறக்கிவைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கிச் சிறு கூட்டம் ஓடியது. சாமி இருக்கும் இடத்திற்குப் போகலாம் என்று முருகன் சொன்னதும் "எங்கம்மா இருக்கும்ண்டா" என்று பாண்டியன் சொன்னான். வேறு வழியில்லாமல் அவனோடு முருகன் கோவிலை நோக்கி நடந்தான்.
கோவிலின் முன் சிறு கூட்டம்தான் இருந்தது. வீடியோ படம் காட்டுகிறவன் கணேசன் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான் என்ற செய்தி தெரிந்ததும் முருகனும் பாண்டியனும் உற்சாகமாகிக் கணேசன் வீட்டுக்கு ஓட ஆரம்பித்தனர். கணேசன் வீட்டுக்கு ஏழு எட்டு வீடுகளுக்கு முன் தமிழ்ச்செல்வன் அவனுடைய அம்மாவிடம் அடி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் பையன்கள் இருவரும் அப்படியே நின்றுவிட்டனர். "கம்மனாட்டிக்கிப் பொறந்த கம்மனாட்டி. பாடம் படிக்கறப்பல ஒனக்கு எத்தன வாட்டிடா சொல்லி அனுப்புனன். காசி பத்தரம், காசி பத்தரம்ன்னு ஆயிரம் வாட்டி சொல்"? தேங்கா கற்பூரம் வாங்கியாரக் கொடுத்த அஞ்சி ரூவாயயும் தொலைச்சிப்புட்டு வந்திருக்கியே. அஞ்சி ரூபாயிக்கி நான் எங்க போவன்?" என்று சொல்லி ஆராயி தமிழ்ச்செல்வனின் முகத்திலேயே அடித்தாள். அடியைத் தாங்க முடியாமல் தமிழ்ச் செல்வன் வீறிட்டு அலறிக்கொண்டிருந்தான். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கிழவி ஒருத்தி, "அறியாப்புள்ளெய யாண்டி கடெக்கி அனுப்புன?" என்று கேட்டுச் சத்தம் போட்டு ஆராயியின் பிடியிலிருந்து பையனைப் பிரித்துவிட்டாள்.
"இப்பத்தான் மாருல இருந்து எறக்கிவுட்டன். நாலாவது படிக்கிற பயலுக்கு வெகரம் வேணாம்? பணத்தை எங்கடா போட்ட பயலெ, வாடா தேடிப் பாக்கலாம்" என்று சொல்லித் தமிழ்ச்செல்வனை இழுத்துக்கொண்டு ஆராயி நடந்தாள்.
தமிழ்ச்செல்வன் முருகன், பாண்டியனோடுதான் படித்துக்கொண்டிருந்தான். அவன் அடிவாங்கி அழுதுகொண்டே போனதைப் பார்த்ததும் முருகனுக்கும் பாண்டியனுக்கும் அவன்மீது இரக்கம் உண்டாயிற்று. பணத்தை எங்கே போட்டிருப்பான்? அவனோடு சேர்ந்து போய்த் தேடிப் பார்க்கலாமா என்று யோசித்தார்கள். வீடியோக்காரனைப் பற்றிய நினைவு வந்ததும் வேகமாகக் கணேசன் வீட்டுக்கு நடந்தார்கள்.
கணேசன் வீட்டுக்கு முன் கூட்டமாகக் கொஞ்சம் பேர் நின்றுகொண்டிருந்தனர். வீட்டுக்குள் நுழைந்து எப்படியாவது வீடியோக்காரனைப் பார்த்துவிட வேண்டும் என்று முருகனும் பாண்டியனும் முட்டி மோதிப்பார்த்தனர். வாசல்படியைத் தாண்டி ஒரு அங்குலம்கூட நகர முடியவில்லை. வீடு முழுக்க ஆட்களாகவே இருந்தார்கள். வீட்டுக்குள் நுழைவதற்கு முருகனும் பாண்டியனும் படாதபாடு பட்டும் காரியம் நடந்தபாடில்லை.
சாப்பிட்டுவிட்டு வீடியோக்காரன் வெளியே வந்தான். மறு நொடியே கூட்டம் அவனைச் சூழ்ந்துகொண்டது. ஒரு மந்திரியை அழைத்துக்கொண்டு வருவது மாதிரி அவனைக் கோவிலுக்கு அழைத்து வந்தனர். வீடியோக்காரனுக்குப் பக்கத்தில் போகவும் அவனைத் தொட்டுப் பார்க்கவும் முருகனும் பாண்டியனும் படாத பாடுபட்டனர். ஒன்றும் பலிக்கவில்லை. இவர்களைப் போல ஐந்தாறு பையன்கள் வீடியோக்காரனுக்குப் பக்கத்தில் போவதற்காகக் கூட்டத்தைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
வீடியோக்காரன் கோவிலுக்கு வந்துவிட்டான் என்ற செய்தி பரவிய சற்றைக்கெல்லாம் கோவில் முன் நல்ல கூட்டம் சேரத் தொடங்கியது. வீடியோக்காரன் கூட்டத்தைச் சற்றும் மதிக்கவில்லை. வீட்டு மனைப் பட்டா வழங்க, தண்ணீர்க் குழாய் போட இடத்தைத் தேர்வு செய்கிறவன் மாதிரி, தொலைக்காட்சிப் பெட்டியை வைப்பதற்குத் தோதான இடத்தைத் தேர்வு செய்வதில் மும்முரமாக இருந்தான். அவனுடைய கவனமெல்லாம் மொத்தக் கூட்டத்திற்கும் படம் தெரிய வேண்டும் என்பதில்தான் இருந்தது. பல பேர் பல இடங்களைக் காட்டினார்கள். எந்த இடமும் அவனுக்குப் பிடிக்கவில்லை. இந்த இடம், இந்த இடம் என்று திரும்பத் திரும்பச் சொன்னவர்களை வீடியோக்காரன் முறைத்தான். அதற்காக அவன்மீது ஒரு ஆள்கூடக் கோபப்படவில்லை. அவனுடைய கை, கண் அசைவுக்காக மொத்தக் கூட்டமும் காத்திருந்தது. கொஞ்ச நேரத்திலேயே மந்திரவாதி மாதிரி வீடியோக்காரன் மொத்தக் கூட்டத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்தான். அவன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனாலும் மொத்தக் கூட்டமும் அவனுடய கட்டுப்பாட்டுக்குள் வந்து விழுந்துவிட்டிருந்தது. கணேசனோடுதான் அவன் அதிகமாகப் பேசினான். சிரித்தான். அதனால் கூட்டத்தில் இருந்தவர்களில் சிலருக்குக் கணேசன்மீது எரிச்சல் ஏற்பட்டது. சிலர் "அவன் மட்டும்தான் வீடியோவுக்குப் பணம் தரப்போறானா?" என்று வெளிப்படையாகவே வயிற்றெரிச்சலைக் காட்டினார்கள். முருகன், பாண்டியனுக்கும்கூடக் கணேசன்மீது கோபம் உண்டாயிற்று.
"சிகரெட் இருக்கா?" என்று வீடியோக்காரன் கேட்டதுதான் தாமதம். பட்டென்று இருபது ரூபாய் நோட்டை எடுத்து, நிறைய பையன்கள் அந்த இடத்தில் இருந்தாலும், முருகனிடம் கொடுத்து சிகரெட் வாங்கி வரச் சொன்னான் கணேசன். முருகனின் முகம் மலர்ந்தது. மிக முக்கியமான காரியத்தைச் செய்வதற்கு ஓடுவது மாதிரி அவன் செட்டியார் கடைக்கு ஓடினான். அவனோடு பாண்டியனும் ஓடினான்.
வீடியோக்காரன் பல இடங்களில் நின்றுநின்று பார்த்தான். ஒரு இடமும் அவனுக்குப் பிடித்ததாகத் தெரியவில்லை. கடைசியில், ஊர்வலம் முடிந்து வந்து சாமியை இறக்கிவைக்கிற இடத்தைத் தேர்ந்தெடுத்தான். உடனே கூட்டத்தில் சலசலப்பு உண்டாயிற்று, உடனே "இந்த எடத்திலெ டி.வி.யை வச்சாதான் எல்லாருக்கும் நல்லாத் தெரியும். ஒரு நாளக்கி மட்டும் சாமிய கோவுலுக்குப் பின்னால வையிங்க. சாமி கோவிச்சிக்கவா போவுது?" என்று வீடியோக்காரன் சொன்னதும், "சாமி முக்கியமா படம் முக்கியமா?" என்று முன்பு கேட்டவர்கள்கூட அடங்கிப்போய்விட்டார்கள்.
"எந்த ஊட்டுல இருந்து கரண்டு எடுக்கிறது?" என்று பொதுவாகத்தான் வீடியோக்காரன் கேட்டான். ஒரே நேரத்தில் மூன்று நான்கு பேர் "எங்க ஊட்டுல இருந்து எடுத்துக்கலாம்" என்று சொன்னார்கள். "எல்லா ஊட்டுலிருந்தும் எடுக்க முடியாது. கோவிலுக்குப் பக்கத்திலெ எந்த ஊடு இருக்கோ அங்கிருந்துதான் எடுக்க முடியும்" என்று சொன்ன வீடியோக்காரன், கோவிலுக்குப் பக்கத்தில் மின்சார வசதியுள்ள வீடுகளுக்குப் போய்ப் பார்த்தான். பிறகு தன்னிடமிருந்த ஓயரின் நீளத்தை அளந்துபார்த்தான். மின்சார வசதி உள்ள வீட்டுக்கும் கோவிலுக்கும் இடையிலுள்ள தூரத்தை அளந்துபார்த்தவன் உதடுகளைப் பிதுக்கினான். சலிப்புடன், "பத்து மீட்டர் ஒயர் வேணுமே" என்று சொன்னான். கணேசன் ஒரு பையனிடம், "எங்க இருந்தாலும் ஓயரோட வா" என்று சொல்லித் துரத்திவிட்டான்.
ஒயருக்காகப் போனவன் கொஞ்ச நேரம் கழித்து வெறும் இரண்டு மீட்டர் ஒயரோடு வந்தான். கணேசன் அவனைத் திட்டினான். முருகனும் பாண்டியனும் பத்து மீட்டர் ஒயர் இல்லாத ஊர் ஒரு ஊரா என்று அலுத்துக்கொண்டனர். அவர்களைப் போலவே நிறைய பேர் "இந்த மாரி மட்டமான ஊரப் பார்த்தில்லெ" எனச் சொல்லிச் சலித்துக்கொண்டனர்.
வீடியோக்காரன் கோவிலுக்குப் பக்கத்திலிருந்த மின்சாரக் கம்பத்தைப் பார்த்தான். "கம்பத்திலேருந்து நேர்த் துருவா கொக்கிபோட்டு கரண்டு எடுக்கலாமா?" என்று கேட்டான். "ஒருத்தரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க. பொதுக் காரியத்துக்குத்தான எடுக்கிறம்" என்று ஏழு எட்டுப் பேர் ஒரே நேரத்தில் சொன்னார்கள். வீடியோக்காரன் மின்சாரம் எடுப்பதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான். அவன் போகிற இடத்திற்கெல்லாம் கூட்டமும் நகர்ந்து போய்க் கொண்டேயிருந்தது.
கிழக்குத் தெருவின் கடைசியிலிருந்து 'கோ கொல்லே' என்று பெரிய அளவில் சத்தம் கேட்க ஆரம்பித்ததும், வீடியோக்காரனைச் சுற்றியிருந்தவர்களில் கொஞ்சம் பேர் சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓட ஆரம்பித்தனர். கணேசனும் அவனோடு சேர்ந்து இரண்டு மூன்று பையன்களும் ஓட ஆரம்பித்ததால் முருகனும் பாண்டியனும் அவர்களுக்குப் பின்னால் ஓடினர்.
சாமியை இறக்கிவைத்திருந்த இடத்தில் ஊரே திரண்டுவிட்டிருந்தது. கூட்டத்தைவிடச் சத்தம் பெரிதாக இருந்தது. கூட்டத்தில் யார் என்ன பேசுகிறார்கள் என்பது புரியாத அளவுக்கு இரைச்சலும் கூச்சலுமாக இருந்தது. எந்த நேரத்திலும் வெட்டுக்குத்து விழலாம் என்ற சூழ்நிலை அந்த இடத்தில் இருந்தது. ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். விசயம் என்ன என்று புரியாமலேயே கணேசனும் அவனோடு சேர்ந்த பையன்களும் சத்தத்தைக் குறைக்க முயன்றனர். கத்தி கூச்சல் போட்டுக்கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். கூட்டத்தைக் கலைந்துபோகச் சொல்லிக் கெஞ்சினர். எதுவும் முடியாததால் சாமியைத் தூக்க முயன்றனர். அப்போது கதிரேசனோடு சேர்ந்த ஆட்களும் பெருமாளோடு சேர்ந்த ஆட்களும் வந்து மறித்துக்கொண்டு தகராறுசெய்ய ஆரம்பித்தனர்.
"சாமி மிரமனை முடியட்டும், எதா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம்" என்றான் கணேசன்.
"தனித்தனி ஊட்டுக்கெல்லாம் ஏன் சாமி வராது? அதுக்குப் பதிலு சொல்லு மொதல்ல" என்றான் பெருமாள்.
"இப்பத் தூக்கிக்கிட்டு வர்றம்" என்று சொன்னான் கணேசன்.
"மொதல்ல ஏன் வல்லெ?" என்று கத்தினான் பெருமாள்.
"சாமிய மறிச்சதுக்குக் காரணம் சொல்லாம சாமிய தூக்கவுட மாட்டன்" என்று சொல்லிக் கதிரேசனும் கத்த ஆரம்பித்தான்.
கதிரேசனையும் பெருமாளையும் சமாளிக்க முடியாமல் திணறிப்போனான் கணேசன். அவனுக்குப் பயத்தில் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்து. சாமி மிரமனை முடிந்து கோவிலுக்கு வந்ததால்தான் படம் காட்ட முடியும். நடக்கிற சண்டையைப் பார்த்தால் சாமி கோவிலுக்கு வர வாய்ப்பில்லை. படம் காட்டவில்லை என்றால் வீடியோக்காரனுக்கு யார் பணம் தருவது என்ற கவலை வந்ததும் கணேசனுக்கு அதிகமாக உடம்பு நடுங்கிற்று. பெரிய தவறு செய்துவிட்டோ மோ என்று கவலைப்பட்டவன் கூட்டத்தைப் பார்த்தான். கூட்டம் கட்டுக்கு அடங்காமல் இருந்தது. கூட்டம் அடித்துப் புரண்ட பிறகுதான் ஓயும் என்ற எண்ணம் உணடாயிற்று. சட்டென்று தனக்கு இசைந்த ஏழு எட்டுப் பையன்களை இழுத்துக்கொண்டு ஊர்ப் பஞ்சாயத்தார்களைத் தேடிக்கொண்டு ஓட ஆரம்பித்தான். அந்தக் கூட்டத்தோடு முருகனும் பாண்டியனும் ஓடினார்கள். வீடியோக்காரனுக்கு சிகரெட் வாங்கிவரச் சொன்னதிலிருந்து முருகனும் பாண்டியனும் கணேசனுடைய கையாட்களாக மாறிவிட்டிருந்தனர்.
ஊரில் திருவிழா நடத்துவது குறித்து நடந்த பஞ்சாயத்தில், எந்த ஊர் நாடக செட்டுக்குப் பாக்கு வைப்பது என்ற பேச்சு வந்தபோது "கூத்து வாணாம், இந்த வருசம் வீடியோப் படம் காட்டலாம்" என்று கணேசன்தான் சொன்னான். அவனோடு சேர்ந்த மைனர் பையன்களும் தெருக்கூத்து வேண்டாம் என்று சொல்லித் தகராறு செய்தனர். அதனால் பஞ்சாயத்தார்களின் பேச்சு எடுபடாமல் போயிற்று. இப்போது போய்ச் சொன்னால் என்ன சொல்வார்களோ என்ற கவலையுடன் சாராயக் கடைக்கு நடந்துகொண்டிருந்தான் கணேசன்.
எந்த ஊரில் திருவிழா நடந்தாலும் அந்த ஊரில் மணி சாராயக் கடையைப் போட்டுவிடுவான். ஊர்ப் பொதுவில் பேசி சாமி செலவுக்கு என்று ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்துவிடுவான். ஊர்ப் பொதுவில் சாராயம் விற்க விட்டிருப்பதால் திருவிழா முடியும்வரை ஒரு நாளைக்கு இவ்வளவு என்று மாமூல் வாங்கிக்கொண்டு காவல் துறையினர் அவனை ஒன்றும் செய்யமாட்டார்கள். ஊருக்கு, காவல் நிலையத்துக்குப் பணம் தருவதோடு, ஊர்ப் பஞ்சாயத்தார்களுக்கும் ரகசியமாக இவ்வளவு என்று பணம் கொடுத்துவிட்டுத் தினமும் சாராயமும் கொடுப்பான். பொழுது இறங்கிய பிறகு ஊர்ப் பெரிய மனிதர்கள் சாராயக் கடையில்தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கணேசன் வந்தது சரியாக இருந்தது.
அந்த இடத்திலிருந்து ஏழு எட்டுப் பஞ்சாயத்தார்களிடம் கணேசன் விசயத்தைச் சொன்ன மறு நொடியே, "கொல வியிந்துபோச்சா?" என்று கத்திக்கொண்டே ஓடினார்கள். இரண்டு பேர் மட்டும் கணேசனைப் பிடித்துக்கொண்டு "பஞ்சாயத்தில இது ஒங்க காலமில்லென்னு நீ சொல்"? இப்ப எதுக்கு வந்த?" என்று கேட்டுச் சத்தம் போட ஆரம்பித்தனர்.
"சாமி தெருவுல நிக்குது, பெரிய சண்ட நடந்துக்கிட்ருக்கு."
"சாமி எங்க கெடந்தா என்ன? பெரியவங்க சின்னவங்கின்னு இல்லியா?"
"சாமி தெருவுல கெடக்குதுங்கிறான். எந்த நேரத்திலே என்னா பேசுற" என்று மூக்கன் பெரியசாமியை முறைத்தான். பெரியசாமி லேசாக அடங்கியது தெரிந்ததும் கணேசனும் அவனுடைய கூட்டாளிகளும் மூக்கனையும் பெரியசாமியையும் கெஞ்ச ஆரம்பித்தனர். மூக்கனின் காதில் கணேசன் ரகசியமாக ஏதோ சொன்னான். பலமாகத் தலையை ஆட்டிய மூக்கன், "பாட்டுலுதான் வேணும்" என்று சொன்னவன், "நீ போயி கந்தசாமி வாத்தியக் கொண்டா. நாங்க முன்னால போறம்" என்று சொல்லவிட்டு மூக்கன் பெரிய சாமியை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
கணேசனுக்குப் பாதி உயிர் வந்தது மாதிரி இருந்தது. கந்தசாமி ஆசிரியரை எங்கே போய்த் தேடுவது என்று குழம்பிக்கொண்டு நின்றபோது, ஆசிரியரே சாராயக் கடைக்கு வருவது தெரிந்ததும் அவரை நோக்கிக் கணேசனும் அவனுடைய கூட்டாளிகளும் ஓடினார்கள். விசயத்தைக் கேட்டதுமே ஆசிரியர் பதறிப்போனார். "எதுவா இருந்தாலும் காலயிலெ பேசிக்கலாமின்னு பேசி முடிங்க. நான் ஒங்கள வந்து தனியா பாக்குறன்" என்று கணேசனோடு சேர்ந்துகொண்டு மற்ற பையன்களும் சொன்னார்கள். சரி என்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு ஆசிரியர் சாமி இருக்கும் இடத்திற்கு ஓட ஆரம்பித்தார். அவரோடு கணேசனும் அவனுடைய கூட்டாளிகளும் ஓடினார்கள். என்ன நடக்குமோ என்ற கவலையில் அவர்களோடு சேர்ந்துகொண்டு முருகனும் பாண்டியனும் ஓடினார்கள்.
"வெளியூர்க்காரங்க வந்திருக்கிற நேரத்தில சாமியத் தெருவுல போட்டுவச்சி வேடிக்கை காட்டுனா நம்பள எவன் மதிப்பான்" என்று சொல்லிப் பஞ்சாயத்தார்கள் சண்டையைக் கட்டுப்படுத்த முயன்றனர். கூட்டம் இரண்டு பிரிவாகப் பிரிந்து கத்திக்கொண்டிருந்தது. கந்தசாமி ஆசிரியரும் தன்னால் முடிந்தவரை சண்டையை நிறுத்த முயன்றார். சண்டையை மறிக்கப்போன பெண்ணுக்கு மண்டை உடைந்துவிட்டது என்று சொல்லித் தூக்கிக்கொண்டு மூன்று நான்கு பேர் ஓடினார்கள். திருவிழாவுக்கு வந்திருந்த வெளியூர்க்காரர்கள் பலபேர் வந்து சமாதானம் செய்த பிறகுதான் இரைச்சல் லேசாக மட்டுப்பட ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் பஞ்சாயத்துக்காரர்களின் பேச்சு எடுபட ஆரம்பித்தது. முருகனும் பாண்டியனும் பஞ்சாயத்தார்களின் முகத் தோற்றத்தையும் வாய் அசைவுகளையும் கண்கொட்டாமல் பார்த்தவாறு இருந்தனர்.
"சாமி நெலக்கி வந்த பெறவுதான் வீடியோப் படம் போட முடியும்" எனறு கூட்டத்தில் யாரோ ஒரு ஆள் சொன்னான். அவன் சொன்னதைக் கொஞ்சம் பேர் பிடித்துக்கொண்டு, சண்டைபோட்டுக்கொண்டிருந்த இரண்டு பிரிவு ஆட்களையும் ஏளனமாகப் பேச ஆரம்பித்தனர். இப்போது அந்த அடத்தில் மூன்று பிரிவாகிவிட்டது. ஒவ்வொரு பிரிவு ஆட்களும் மற்ற பிரிவினரைத் திட்டிக்கொண்டிருந்தனர். நேரமாக நேரமாக மூன்றாவது பிரிவுக்குப் பலம் சேர்ந்துகொண்டிருந்தது. அதனால் சண்டைபோட்டுக்கொண்டிருந்த இரண்டு பிரிவினரும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தனர். வேகம் குறைந்தாலும் வீம்பை விடவில்லை. "பஞ்சாயத்தக் கூட்டி இதுக்கு முடிவு பண்ணாம வுட முடியாது" என்று இரண்டு பிரிவும் கொஞ்சம் இறங்கிவந்ததால், அந்த இடத்திலேயே பஞ்சாயத்து ஆரம்பித்தது. பெருமாளும் கதிரேசனும் நடந்த விசயத்தைச் சொல்ல ஆரம்பித்தனர்.
"மத்த பஞ்சாயத்து மாரி இதெ விடிய விடியப் பேச முடியாது" என்று மூக்கன் சொன்னான்.
"வராத வெள்ளம் வந்தாலும் சாமிய நடுத்தெருவுல எறக்கி வச்சது மகா குத்தம். சாமி குத்தமாயிட்டா ஊருக்குல்ல கெடும வரும். அதனால் சாமிய எறக்கி வச்ச குத்ததுக்காகக் குத்தப் பணம் கட்டணும்" என்று கந்தசாமி ஆசிரியர் சொன்னார். மறு நொடியே எகிறிக் குதித்த கதிரேசன், "குத்தப் பணம் கட்டுனா மட்டும் சாமியோட கோவம் தீந்துடுமா? தனித்தனி ஊட்டுக்கு வல்லன்னு ஏன் மறிச்சாங்க? ஒரு ஆள்கூட நடக்க முடியாத சந்துக்கெல்லாம் சாமி எப்பிடிப் போவும்?" என்று சொல்லிக் கத்தினான். அவன் சொல்வதில் நியாயம் இருந்தாலும் கூட்டத்தில் வாயைத் திறந்து ஒரு ஆள்கூடப் பேசவில்லை. "சத்தம் போடாதீங்க" என்று கூட்டத்தைப் பார்த்துப் பஞ்சாயத்தார்கள் கத்த மட்டுமே செய்தனர்.
"ஒரு ரூவாவா இருந்தாலும் குத்தப் பணம் கட்டித்தான் ஆவணும்" என்றான் பெரிசாமி.
"அப்படின்னா மறிச்சவன் மொதல்ல கட்டட்டும். அப்புறமா நான் கட்டுறன்" என்று வீம்பாகச் சொன்னான் கதிரேசன்.
"என்னா மசுருக்கு நாங்க கட்டணும்? சாமியத் தூக்கிக்கிட்டு வந்திருந்தா நாங்க ஏன் மறிக்கப்போறம்?" என்று காட்டுக் கத்தலாகக் கத்தினான் பெருமாள். அவனோடு சேர்ந்துகொண்டு மூன்று நான்கு பேரும் கத்தினார்கள்.
"நீங்க கட்ட முடியாதின்னா நாங்களும் கட்ட முடியாது. யாரு என்னாப் பண்றாங்கின்னு பார்த்துப்புடலாம்" என்றான் கதிரேசன்.
"மறிச்சதும் தப்பு; எறக்கி வச்சதும் தப்பு" என்றார் கந்தசாமி ஆசிரியர்.
"ரெண்டும் எப்பிடி தப்பாவும்?" பெருமாள் கேட்டான். வாக்குவாதம் முட்டிற்று. பஞ்சாயத்தார்கள் செய்வதறியாது திகைத்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த வீடியோக்காரன் கணேசனைத் தனியாகக் கூப்பிட்டு, "நேரமாவுது தெரியலியா? மூணு படத்தெ எப்பிடி ஓட்டுறது? நேரமானா நான் பொறுப்பில்ல" என்று சொன்னான். அவன் சொன்னதைக் கணேசன் பஞ்சாயத்தார்களிடம் சொன்னான். "படம் என்னப்பா பெரிய படம்? ஊரே ரெண்டுபட்டுக் கெடக்குது. இந்த நேரத்திலெ படம் கிடம்ன்னுகிட்டு" என்று பஞ்சாயத்தார்கள் கணேசனை முறைத்தனர். அவனுடைய முகம் வாடிப்போனதைப் பார்த்த முருகனுக்கு வருத்தமாக இருந்தது. பஞ்சாயத்துக்காரர்கள் பஞ்சாயத்தை எப்போதுதான் முடிப்பார்களோ என்று எரிச்சல்பட்டான்.
வீடியோக்காரன் கணேசனிடம் சொன்ன விசயத்தைப் பலரிடமும் சொல்ல ஆரம்பித்தான். அவன் சலித்துக்கொண்டதைப் பார்த்த பல பேர் "இந்த ஊரு பஞ்சாயத்தே வயவய கொயகொயதான். கோயி கூப்பிட்டாத்தான் வாயவே தொறப்பானுவோ" என்று பஞ்சாயத்தார்களைத் திட்டினர். நேரமாக நேரமாக, பஞ்சாயத்தை முடிக்கச் சொல்லி முனகுபவர்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்தது. வீடியோக்காரனைச் சுற்றிக் கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. அந்தக் கூட்டத்தில் முருகனும் பாண்டியனும் நின்றுகொண்டிருந்தனர்.
வீடியோ படம் போடுவதற்கு நேரமாகிறது என்று சொல்லிக் கூட்டத்தில் சலசலப்பு உண்டாயிற்று. அதனால் எரிச்சலடைந்த பஞ்சாயத்தார்கள் எகிறிக் குதிக்க ஆரம்பித்தனர். பெருமாளையும் கதிரேசனையும் அவர்களோட ஈடு சேர்ந்தவர்களையும் கண்டிக்கிற விதமாகப் பேச ஆரம்பித்தனர். கூட்டத்திலிருந்தவர்களும் பஞ்சாயத்தார்கள் சொல்வதுதான் சரி என்று பேச ஆரம்பித்தனர். அதனால் "மொதல்லியே ஏன் சாமி வல்லெ" என்று கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்போது கொஞ்சம் இறங்கி வந்து, "சாமி இன்னிக்கும் வரணும். அதோட தெனுமும் வரணும். முடியாதின்னா காலயிலெ பஞ்சாயத்த கூட்டி முடுவு சொல்லணும். இல்லன்னா போலீஸ் ஸ்டேசனில் பிராது மனுதான் எங்க ஆளுவோ கொடுப்போம்" என்று சாமியை மறித்தவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னதேபோதும் என்று கணேசன் பஞ்சாயத்தை முடிக்கச் சொன்னான். "சாமியெ நடுத்தெருவுல போட்டு வச்சியிருக்கிறது தெய்வக் குத்தமாயிடும். அதனால இப்ப சாமியத் தூக்குவம். காலயிலெ பஞ்சாயத்தக் கூட்டி முடிவு பண்ணிக்கலாம்" என்று சொல்லிக் கந்தசாமி ஆசிரியர் பெருமாளோடு சேர்ந்தவர்களையும் கதிரேசனோடு சேர்ந்தவர்களையும் சமாதானம் செய்ய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் இதுதான் சமயம் என்று கணேசனும் அவனோடு சேர்ந்து மைனர் பையன்களும் பட்டென்று சாமியைத் தூக்கினார்கள். அதற்காகவே காத்திருந்தவர்கள் மாதிரி முருகனும் பாண்டியனும் "அரோகரா" என்று சொல்லி உற்சாகமாகக் கத்தினார்கள்.
கணேசன் சாமியைத் தூக்கிக்கொண்டு மூன்று வீடுவரைதான் வந்தான். அதற்குள் வீடியோக்காரன் அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடவே வேறு ஒரு பையனிடம் சாமியைத் தோள் மாற்றிவிட்டு, வீடியோக்காரனுடன் போனான். வீடியோக்காரனைக் கண்டதும் சாமி மிரமனையில் வந்துகொண்டிருந்த சிறு பையன்கள் வீடியோக்காரனுடன் ஓடினார்கள். பையன்களின் கூட்டத்தில் முதலில் முருகனும் பாண்டியனும்தான் இருந்தனர்.
"கரண்ட் நிக்காம இருக்கணும். கரண்ட் போயிடுச் சின்னா நான் பொறுப்பில்லெ" என்று வீடியோக்காரன் சொன்னதும் கணேசனுக்குக் கல்லைத் தூக்கித் தலையில் போட்டதுபோல இருந்தது. மின்சாரம் நின்று படம் போடமுடியாமல் போய்விட்டால் ஊர்க்காரர்கள் அடித்தே கொன்றுவிடுவார்களே என்று அரண்டுபோய் எதிர் ரசிகர் மன்றத்துக்காரர்கள் ஏதாவது செய்வார்களோ என்று சந்தேகப்பட்டான். மின்சாரம் நிற்காமல் பார்த்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு என்று முருகேசன் என்பவனை அனுப்பிய பிறகுதான் ஓரளவு அவனால் மூச்சுவிட முடிந்தது. முருகனும் பாண்டியனும் மின்சாரம் நின்றுவிட்டால் படம் பார்க்க முடியாதே என்று கவலைப்பட ஆரம்பித்தனர்.
கோவிலுக்கு முன் வந்த கந்தசாமி ஆசிரியர் கணேசனைத் தனியாக அழைத்துக்கொண்டுபோய் "பாட்டுலு என்னாச்சு?" என்று கேட்டார். "நீங்க ஊட்டுக்குப் போங்க. பின்னாலியே பாட்டுலோட வரன்" என்று கணேசன் சொன்னான். அவன் சொன்னதை அவர் காதில் போட்டுக்கொள்ளவில்லை. நச்சரிக்க ஆரம்பித்தார். ஏற்கெனவே நல்ல போதையில்தான் அவர் இருந்தார். போதையில் இருந்ததால் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார். கணேசன் தன் சட்டைப் பையைப் பார்த்தான். வெறும் ஐந்து ரூபாய்தான் இருந்தது. அவனோடு இருந்த மற்ற பையன்களிடம் கேட்டுப் பார்த்தான். எல்லாரும் வெறும் ஆட்களாகவே இருந்தனர். பணம் கிடைக்காததால் மீண்டும் ஆசிரியரைச் சரிகட்ட முயன்றான். அவர் ஓயாமல் "நேரமாவுது" என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பஞ்சாயத்துக்காரர்கள் மூக்கனும் பெரியசாமியும் வந்து சேர்ந்தனர். வந்த வேகத்திலேயே 'கோட்டரு என்னாச்சு?' என்று கேட்டனர். பதில் சொல்ல முடியாமல் தவித்த கணேசனின் பார்வையில் முருகன் பட்டதும் "இருங்க வரன்" என்று சொல்லிவிட்டு முருகனை அழைத்துக் கொண்டு போய் "ராணி ஊட்டுல இருந்தா நான் வரச் சொன்னேன்னு சொல்லுடா" என்று சொன்னான். "எங்க?" என்று முருகன் கேட்டான். "கோவுலுக்கு" என்று சொல்லி விட்டு மீண்டும் கந்தசாமி ஆசிரியரிடம் போனான் கணேசன்.
முருகனுக்கு சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. தன் அக்காவைக் கணேசன் அழைத்துவரச் சொன்னதே அவனுக்குப் பெருமை தருவதாக இருந்தது. பூரிப்பில் சிட்டாகப் பறந்து ஓடினான் வீட்டுக்கு. வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ராணியைப் பார்த்ததும் அவனுடைய சந்தோசம் கூடிற்று. ஓடி வந்த வேகத்திலேயே ராணியிடம் விசயத்தைச் சொன்னான். மறு நொடியே "சீக்கிரம் வா" என்று சொல்லி அவளுடைய கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தான். அதுவரை சாதாரணமாக இருந்த ராணி திருடி மாதிரி சுற்றுமுற்றும் பார்த்தாள். வீட்டுப் பக்கம் பார்த்தாள், ரகசியமான குரலில் "எங்கடா?" என்று கேட்டாள். "கோவுலுக்குத்தான் வா" என்று அலுத்துக்கொண்டான் முருகன். அவனுடைய அவசரத்தைப் புரிந்துகொள்ளாதவள் மாதிரி, "போடா வரன்" என்று சொன்னாள். முருகனுக்குக் கோபமும் எரிச்சலும் உண்டாயிற்று. "இப்பியே வா" என்று சொல்லிக் கட்டாயப்படுத்த ஆரம்பித்தான். "நீ முன்னால போ. நான் பின்னால வரன்" என்று குசுகுசுத்தவள் சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக தட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போனாள். ராணியினுடைய செய்கை முருகனுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. ஆத்திரத்தில் தரையில் எட்டி உதைத்தான். அந்த நேரத்தில் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த கம்சலை, "சோறுகூடத் திங்காம எங்கடா பயல சுத்திட்டு வர? போயி சோத்தத் தின்னு" என்று சொன்னதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாகக் கோவிலுக்கு நடந்தான்.
"விடியுறதுக்குள்ளார மூணு படத்தெயும் எப்பிடியாச்சும் ஓட்டிப்புடு" என்று வீடியோக்காரனிடம் கணேசன் சொல்லிக்கொண்டிருந்தான். கோவிலுக்கு வந்த முருகன், விசயத்தை எப்படிக் கணேசனிடம் சொல்வது என்று தயங்கினான். ராணியின் மீது வெறுப்பு உண்டாயிற்று. ஏதேச்சையாகத் திரும்பிய கணேசன் முருகனிடம் வந்து, "என்னடா ஆச்சி?" என்று குசுகுசுவென்று கேட்டான். "வரன்னுச்சு" என்று மொட்டையாகச் சொன்னான். "இருங்க வரன்" என்று சொல்லிவிட்டுக் கணேசன் கோவிலுக்குப் பின்புறமாக வேகமாகப் போனான்.
ராணிக்குக் காலை ஊன்றி நடக்க முடியவில்லை. ஊரே கூடியிருக்கும் நேரத்தில் அதுவும் கோவிலுக்கு வரச்சொல்லி இருக்கிறானே என்று கணேசன்மீது எரிச்சல்பட்டாலும் வேறு வழியில்லாமல் என்ன பிரச்சினையோ என்ற எண்ணத்தில் கோவிலுக்குப் பின்புறம் வந்து நின்றாள். ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் பார்ப்பவர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்தவள் யாரையோ தேடிக்கொண்டு வந்ததுபோலச் சாலாக்குக் காட்டினாள். கோவிலுக்கு முன் பக்கம் நான்கு ஐந்து ஆட்களோடு கணேசன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவனுடைய கண்ணில் படும்படியாக இரண்டு முறை கோவிலுக்கு முன்பக்கமாகப் போய்விட்டு வந்தாள். வரும்போது கணேசன் வருகிறானா என்று பார்த்தாள். அவன் வருவது தெரிந்ததும் ஒரே இடத்தில் நிற்காமல் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். பின்னாலேயே வந்த கணேசன் சன்னமான குரலில் "பணம் ஏதாச்சும் வச்சியிருக்கியா?" என்று கேட்டான்.
"எனக்கு எப்பிடிப் வரும் பணம்?"
"எப்பிடியாச்சும் நூறு ரூவா கொண்டா. காலயில தந்துடலாம். பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டன்."
"ராத்திரியில போயி யாருகிட்டெ கேக்க முடியும்?"
"என்ன செய்வியோ தெரியாது, பணம் வந்தாவணும். இல்லன்னா என் தலை தப்பாது. எதயாவது அடவு வை. உன்னத்தான் நம்பி இருக்கன். யாருகிட்டெயாவது கொடுத்துவுடு" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே "டே கணேசா" என்று கூப்பிட்டவாறு மூக்கன் வந்துக்கொண்டிருப்பது தெரிந்ததும் சட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்தான் கணேசன். திரும்பிக் கூடப் பார்க்காமல் நேரே வேகமாக நடக்க ஆரம்பித்தாள் ராணி.
பாண்டியனைத் தேட ஆரம்பித்தான் முருகன். எங்கு தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் செல்வம் வந்து விளையாடக் கூப்பிட்டான். எடுத்த எடுப்பிலேயே வரவில்லை என்று முருகன் சொன்னான். அதற்குக் காரணம் செல்வம் பாய் வைத்திருந்ததுதான். எவ்வளவு கெஞ்சியும் அவனோடு சேராமல் பாண்டியனை மீண்டும் தேட ஆரம்பித்தான். அவன் கிடைக்காத வெறுப்பில் கோபத்துடன் வந்து கோவில் திண்ணையில் உட்கார்ந்தான் முருகன்.
"என்னா படம் காட்டப்போறானுவளாம்?"
"அந்தக் கருமத்தை யாரு கண்டா?"
"இந்த வருச திருநாவுல ஒரு நாளு கூத்துக்கூட இல்லியா?"
"இல்லியாட்டம் இருக்கு."
"கயிதூரு செடலு செட்டப் போட்டிருக்கலாம். அவளோட ஆட்டம் பகரா இருந்திருக்கும்."
"கோவேறி கொண்டாப்ல இப்ப எல்லா ஊருலயும் வீடியோ படம்தான் காட்டுறானுவோ."
"தடி ஊன ஆரம்பிச்சதிலிருந்து ஊரு நாட்டுல என்னா நடக்குதின்னு தெரிய மாட்டங்குது."
"தெரிஞ்சு என்னா பண்ணப்போற? பீ பேளவே சூத்தால நவுந்து போற காலத்திலெ."
"இப்ப ஏன் சொல்ல மாட்ட? எங்காலத்தில் எங்க வகயிறாவுக்கு நாந்தான் கொத்துக்காரன். திருநா போட்டா, காப்பு கட்டுறதிலிருந்து கூத்தாடிக்குப் பாக்குவைக்கிறது, சாமி செலவு வாங்குறது வரைக்கும் நாந்தான் தலகர்த்தனா இருந்து செய்வன். நம்ப வட்டாரத்துக்கே மொதல்ல செடலு செட்டெ கொண்டாந்து நம்ம ஊருல ஆட வச்சதே நாந்தான். அவ பாடுனா எப்பிடி இருக்கும் தெரியுமா? அடடா, எப்பேர்ப்பட்ட ஆட்டக்காரி. அவளோட ஆட்டத்தப் பாக்க ரெண்டு கண்ணு பத்தாது. மொகவாட்டமான பொம்பள, அவளப் பாத்தா பசி எடுக்காது. அவ வந்து நம்ப ஊருல ஆடி ரெண்டு மூணு வருசம் இருக்காது?"
"போன வருசம்கூட அவதான் வந்து ஆடுனா. ஒனக்குத்தான் கண்ணு தெரியாதே. நீ எதுக்கு வந்து குந்தியிருக்கிற? படம் பாக்கவா?"
"கண்ணு இல்லன்னா மத்தது இல்லியா?"
முருகனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இரண்டு கிழவர்கள் எதையெதையோ பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் பாதிகூட அவனுக்குப் புரியவில்லை. அவனுடைய கவனம் எல்லாம் பாண்டியன் தென்படுகிறானா என்பதில்தான் இருந்தது. சாமி மிரமனை முடிந்து கோவிலுக்கு அருகில் வருவது தெரிந்ததும் பட்டென்று இறங்கி ஓடினான்.
காலம்காலமாகச் சாமியை இறக்கிவைக்கிற இடத்தில் இப்போது தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துவிட்டதால், சாமியைத் தூக்கிக்கொண்டு போய்க் கோவிலுக்குப் பின்புறம் வைத்தார்கள். சாமி நிலைக்கு வந்துவிட்டது தெரிந்ததும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் இடம் பிடிக்க நிறைய சனங்களும் பிள்ளைகளும் ஓடினார்கள். அந்தக் கூட்டத்தில் முதல் ஆளாக ஓடியவன் முருகன்தான்.
சாமி நிலைக்கு வந்த சற்றைக்கெல்லாம் வீடியோக்காரன் படத்தைப் போட்டுவிட்டான். தொலைக்காட்சிப் பெட்டியில் படம் தெரிய ஆரம்பித்ததும் கூட்டத்தில் பலத்த கைதட்டல் எழுந்தது. பிள்ளைகள்தான் அதிகமாகக் கை தட்டினார்கள். முருகன் உற்சாகம் பொங்கக் கை தட்டியதோடு சீழ்க்கையும் அடித்தான். சிறிது நேரம் வரைதான் அவனால் உற்சாகமாகப் படத்தைப் பார்க்க முடிந்தது. திடீரென்று உயரமான ஆள் ஒருவன் வந்து அவனுக்கு முன்னால் உட்கார்ந்துகொண்டதால் படம் சுத்தமாகத் தெரியவில்லை. எக்கி எக்கிப் பார்த்தான். ஆட்கள் நெருங்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தால் நகர்ந்து உட்காரவும் முடியவில்லை. இதற்கே தொலைக்காட்சிப் பெட்டிக்குச் சற்றுத் தள்ளிதான் உட்கார்ந்திருந்தான். நேரமாக நேரமாகக் கூட்டம் கூடிக்கொண்டிருந்தது. புதிதாக வந்தவர்கள் தொலைக்காட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில் உட்கார முயன்றதால் உட்கார்ந்திருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்கு நகர வேண்டியிருந்தது. முருகன் ரொம்பவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டான். அவனுடைய சாக்கில் யார் யாரோ உட்கார்ந்திருந்தார்கள். எல்லாவற்றையும்விடப் படம் சுத்தமாகத் தெரியவில்லை என்பதைத்தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
"யாண்டா அயிதுகிட்டு இருக்கிற?" என்று கேட்டுக்கொண்டே வந்து, மற்றவர்களை லேசாக நகர்ந்து உட்காரச் சொல்லிவிட்டு முருகனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள் ராணி. படம் தெரியவில்லை என்றான். அவனைத் தூக்கி மடியில் உட்காரவைத்துக் கொண்டாள். படம் கொஞ்சம் தெரிந்தது. திடீரென்று சாக்கு ஞாபகம் வந்தது "சாக்கு புடுங்கு" என்றான். சாக்கில் உட்கார்ந்திருந்தவர்களை நகரச் சொல்லிவிட்டுச் சாக்கை எடுப்பதற்குள் ராணிக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. தொலைக்காட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில் பாண்டியன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் "முன்னாடி போவணும்" என்று சொன்னான். "முன்னால போவ முடியாது. எடம் எங்க இருக்கு ஒக்கார? மீறிப்போனா சனங்கதான் வுடுவாங்களா? மின்னால போயிட்டா ஒண்ணுக்கு வந்தா போவ முடியாது" என்று சொன்ன ராணியின் பேச்சு முருகனுக்கு ருசிக்கவில்லை.
ராணியின் மடியில் உட்கார்ந்து பார்க்கும்போது படம் ஓரளவு தெரிந்தது. கொஞ்சம் நேரம்தான் படம் பார்த்திருப்பான் முருகன். திடீரென்று அவன்மீது சிறு கல் ஒன்று வந்து விழுந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் கல் வந்து விழுந்தது. படம் பார்க்கிற உற்சாகத்தில் ஏழு எட்டுக் கற்கள் வந்து விழுந்தவரை கவனமில்லாது இருந்த முருகன் சற்றுப் பெரிய கல் விழுந்தபோதுதான் பார்த்தான். மீண்டும் அவனுடைய கவனம் படம் பார்ப்பதில் குவிந்தது. மீண்டும் மீண்டும் கற்கள் வந்து விழவே சந்தேகப்பட்ட முருகன் ராணியைப் பார்த்தான். பிறகு சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லாரும் தொலைக்காட்சி பெட்டியையே பைத்தியம் மாதிரி பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. மீண்டும் படம் பார்க்க ஆரம்பித்தான். திரும்பவும் கல் வந்து விழுந்தது. எரிச்சலைடைந்த முருகன் "எந்த ஒக்கால ஒழியோ எம்மேல கல்லைப் போடுறான்" என்று சொல்லித் திட்டினான். அவனோடு படிக்கிற பையன்கள்தான் யாரோ வேண்டும் என்றே அவன்மீது கல்லை விட்டெறிந்ததாக நினைத்தான். கல் விழும் போது ராணி ஏன் நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.
முருகன் ஒரு பத்து நிமிடம்தான் நிம்மதியாகப் படம் பார்த்திருப்பான். மீண்டும் பாக்குத் தடிமன் உள்ள கற்கள் வந்து விழ ஆரம்பித்ததும் திரும்பிப் பார்த்தான். உட்கார்ந்திருந்த ஆட்களுக்குப் பின்னால் நிறைய மைனர் பையன்கள் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அந்தக் கூட்டத்தில் கணேசனும் நின்று கொண்டிருந்தான். அவன் கல்லைப் போட்டிருப்பானோ என்று முதலில் சந்தேகப்பட்டான். அவன் அவ்வாறு செய்யக்கூடிய ஆளில்லை என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டான். நின்றுகொண்டிருந்தவர்களில் யாரோ ஒரு ஆள்தான் கல்லைப் போட்டான் என்பது முருகனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
நன்றாகப் படம் பார்த்துக்கொண்டிருந்த ராணி திடீரென்று, "ஐயோ என் தோட்டக் காணுமே" என்று சொல்லி, தோடுகளைத் தேட ஆரம்பித்தாள். "ரெண்டு தோட்டயுமா காணும்?" அதிசயமாக இருக்கே" என்று சொல்லி ராணிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஏழு எட்டுப் பேர் தரையில் தோடுகள் கிடக்கின்றனவா என்று பார்த்தார்கள். தோடுகள் காணாமல்போன செய்தி கூட்டத்தில் பரவ ஆரம்பித்தது.
"இன்னிக்கித்தான் ஆசயா எடுத்துக் காதுல போட்டன். அதுக்குள்ளார காணாம போயிடிச்சே எங்கம்மாக்காரிக்கி நான் என்னா சொல்லுவன்" என்று சொல்லி அழுது புலம்ப ஆரம்பித்தாள் ராணி. பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆண்களும் பெண்களும் "ஒரே நேரத்திலெ எப்படி ரெண்டு தோடும் கயிண்டு விழுந்துடும்" என்று கேட்டனர். ராணி காது கேட்காதவள் மாதிரி மண்ணைக் கிண்டித் தோடுகள் கிடக்கிறதா என்று பார்ப்பதில்தான் மும்முரமாக இருந்தாள். படம் பார்க்கத் தொந்தரவு செய்யாதே என்று ஒன்றிரண்டு பேர் முறைத்தனர். ராணிக்குத் தோடுகளைத் தேடவும் முடியவில்லை. படம் பார்க்கவும் முடியவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் கல் வந்து முருகன்மீது விழுந்தது. நின்றுகொண்டு படம் பார்த்தவர்களின் பக்கம் அவன் திரும்பிப் பார்த்தான். பல பேருக்குக் கேட்கிற மாதிரி, "இங்கியே இருடா தம்பி, ஊட்டுல போயித் தேடிப் பார்த்துட்டு வரன்" என்று சொல்லிவிட்டு ராணி எழுந்து கூட்டத்தை விட்டு வெளியே போனாள்.
ராணி போன பிறகு முருகன்மீது ஒரு கல்கூட வந்து விழவில்லை. நின்றுகொண்டு படம் பார்த்த கூட்டத்தில் கணேசனையும் காணவில்லை.
n n n
கூட்டத்தை விட்டு வெளியே வந்த ராணி ஆட்கள் யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே நடந்தாள். பின்னாலேயே வந்த கணேசன், "சீக்கிரம் வா" என்று சொல்லிவிட்டு வேகமாக முன்னால் போனான். ராணி தயங்கித் தயங்கி நடந்து கொண்டிருந்தாள்.
தெருவைத் தாண்டிப் பீக்கருவை அடர்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்துகொண்டிருந்த ராணிக்குப் பயத்தில் உயிரே போய்விடும் போலிருந்தது. ஒவ்வொரு அடியையும் நெருஞ்சி முள்ளின் மீது வைப்பது மாதிரி வைத்து நடந்தாள். கணேசன் வரச் சொன்னதற்குத் தலையை ஆட்டியது தவறு என்று இப்போது நினைத்தாள். திரும்பி வீடியோ படம் காட்டுகிற இடத்திற்குப் போய்விடலாமா என்று யோசித்தாள். ஆனாலும் அவளுடைய கால்கள் கணேசன் சொன்ன இடத்தை நோக்கி நடந்தவாறு இருந்தன.
தன்னைப் பின்தொடர்ந்து யாராவது வருகிறார்களா என்று பார்த்தாள் ராணி. சந்தேகத்தைப் போக்குவதற்காகச் சிறுநீர் கழிப்பது மாதிரி உட்கார்ந்து எல்லாப் பக்கமும் பார்த்தாள். ஆள் அரவம் இருப்பது மாதிரி தெரியவில்லை. எழுந்து மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். கணேசனையும் தன்னையும் ஒன்றாக யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று நினைக்கும்போதே அவளுக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது.
கணேசன் இருந்த இடத்திற்கு ராணி வந்து சேர்ந்த கொஞ்ச நேரம்வரை இருவருமே ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்குமே உடம்பு லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. வாய் உலர்ந்துபோய்விட்டிருந்தது. புதிதாகப் பார்த்துக்கொள்வதுபோல ஒன்றும் பேசிக்கொள்ளாமல் நின்றுகொண்டிருந்தபோது, பாம்பு மாதிரி புதருக்குள்ளிருந்து வெளியே வந்த பூபாலனும் வான்மதியும் ராணியையும் கணேசனையும் பார்த்து ஒரு நிமிடம் திகைத்துப்போய் நின்றுவிட்டனர். மறு நொடியில் வான்மதி ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள். சிறிது நேரம் பேசாமல் நின்ற இடத்திலேயே நின்றிருந்த பூபாலன் ராணியிடம் வந்து, "ஊட்டுக்கு வா ஒன்னெ பேசிக்கிறன்" என்று சொல்லிவிட்டு வேகமாகப் போனான். ஒன்றும் பேசாமல் மரம் மாதிரி நின்றுகொண்டிருந்த கணேசன் விருட்டென்று வேறு ஒரு வழியாக ஊர்ப்பக்கம் ஓட ஆரம்பித்தான். மூச்சுவாங்க ஓடிவந்தவன் தெருவுக்குள் வந்ததும் மெல்ல நடக்க ஆரம்பித்தான். பட்டென்று தெரு விளக்குகள் அணைந்ததும் அவனுக்கு உயிரே நின்றுவிட்டதுபோல இருந்தது. கொலை விழுந்துவிட்ட மாதிரி ராணி, பூபாலன், வான்மதி எல்லாரையும் மறந்துவிட்டுக் கோவிலை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
"அவ்வளவுதான். இனிமே ஒண்ணுமில்லெ" என்று முணுமுணுத்த ராணி மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு கிழக்கில் நடக்க ஆரம்பித்தாள்.
******
நன்றி: காலச்சுவடு – இதழ் 87, மார்ச் 2007