Showing posts with label சார்வாகன். Show all posts
Showing posts with label சார்வாகன். Show all posts

Aug 31, 2012

உத்தியோக ரேகை – சார்வாகன்

செங்கல்பட்டுத் தொழுநோய் மருத்துவமனையில் ஸர்ஜனாக இருக்கும் சார்வாகனின் இயற்பெயர் ஹரி. ஸ்ரீனிவாசன். பிறந்தது வேலூரில்(7-9-1929). இவருடைய கவிதைகளும் சிறுகதைகளும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலேயே வெளிவந்திருப்பினும் பரவலான வாசகர் கவனமும் பாராட்டும் பெற்றவை- சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட "அறுசுவை" என்ற குறுநாவல் தொகுப்பிலும்,திருவனந்தபுரம் நகுலன் தொகுத்த "குருக்ஷேத்திரம்" நூலிலும் இவருடைய படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.'கனவுக்கதை' என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக 'இலக்கியச் சிந்தனை' பரிசு பெற்றது.இவருடைய சிறுகதை சில, ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.

sarvakan

 

 

 

 

 

 

 

 

"பிச்சுமணி என்ன பண்ணறார் இப்போ?"நான் வீட்டுக்கு வந்ததும் கேட்டேன்.

"அவன் போயி நாலஞ்சு மாசம் ஆகியிருக்குமே"என்றாள் அம்மா.

அவளுக்கு எப்போதுமே பிச்சுமணியைப் பிடிக்காது.ஏனென்று கேட்டால் சரியாகப் பதில் சொல்ல மாட்டாள்."அவனா, பெரிய தகல்பாஜியாச்சே?ஆட்டைத் தூக்கி மாட்டில் போடறதும், மாட்டைத் தூக்கி ஆட்டில் போடறதும்,அவன் காரியம் யாருக் குமே புரியாதே,ஜகப்புரட்டன்"என்றுதான் சொல்வாள்.

இன்றைக்குப் பஸ்ஸிலே கருப்பாகக் கச்சலாக நரைமயிர் விளிம்பு கட்டின வழுக்கைத் தலையுடனும் உள் அதுங்கியிருந்த மேவா யில் பஞ்சு ஒட்டினமாதிரி அரும்பியிருந்த மீசை தாடியுடனும் புகையிலைத் தாம்பூலம் அடக்கி வைக்கப்பட்டுத் துருத்துக்கொண் டிருந்த இடது கன்னம்,முழங்கைக்குக் கீழே தொங்கும் 'ஆஃபாரம்',தட்டுச் சுற்று வேட்டி ஜமக்காளப் பையுடனும் இருந்த ஒருத்தரைப் பார்த்தேன்.அசப்பிலே பிச்சுமணி போலவே இருந்தார்.வாய்விட்டுக் கூப்பிட்டிருப்பேன்.அதுக்குள்ளே இது வேறே ஆள் என்பது புலனாகவே சும்மாஇருந்து விட்டேன்.அந்த‌ ஞாபகத்திலேதான் வீட்டுக்கு வந்ததும் அம்மாவைக் கேட்டேன்.

அவர் காலமாகி விட்டர் என்று அம்மா சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"அட பாவமே"என்றேன்.

"என்ன பாவம் வேண்டிக் கிடக்கு?கட்டின பொண்டாட்டியைத் தள்ளி வெச்சுட்டு அவள் வயிறெரிஞ்சு செத்தா.பெத்துப் போட்ட அம்மா தொண்டுக் கிழம்;அவ‌ளை என்னடான்னா 'வீட்டிலே பொம்மனாட்டி யாரும் இல்லை,நானோ ஊர் ஊராகப் போகணும். இங்கே நீ இருந்தா சரிப்பட்டு வராது,சுலோசனா வீட்டிலே போய் இருந்திடு'ன்னு வெரட்டினான்.அவளுக்குக் கொள்ளி வைக்கிற துக்குக் கூட கிடைக்கலே.அவன் ஒண்ணும் கஷ்டபட்டுச் சாகல்லே.சுகமா வாழ்ந்து சுகமாத்தான் செத்தான்.ஒரு நாள் விழுப்புரமோ உளுந்தூர்ப்பேட்டையோ,அங்கே எங்கேயோ ஒரு ஓட்டல்லே ராத்திரி சாப்பிட்டுட்டுப் படுத்தானாம், கார்த்தாலே எழுந்திருக்கல்லே, அவ்வளவுதான்."

அம்மாவுக்கு ஒரே கோபம்.பிச்சுமணி பேர் எடுத்தாலே அவள் அப்படித்தான்.

"அப்புறம்?"

"அப்புறம் என்ன?ஓட்டல்காரன் வந்து கண்டுபிடிச்சான். பையைக் கிளறி அட்ரஸ் கண்டுபிடிச்சு நாணுக்குத் தந்தியடிச்சு போன் பண்ணினான்.அவனும் சாமாவும் போய்ப் படாத பாடு பட்டு டாக்டருக்கும் போலீசுக்கும் டாக்ஸிக்கும் பணத்தை வாரிக் கொடுத்து ஊருக்கு எடுத்துண்டு போயி கொள்ளி வெச்சா.சாம் பலாகறவரைக்கும் அவனாலே யாருக்கு என்ன சுகம்?"என்று சொன்னாள் அம்மா.

"அவர் எங்கே விழுப்புரத்துக்கும் உளுந்தூர்ப்பேட்டைக்கும் போய்ச் சேர்ந்தார்?"என்று கேட்டேன் நான்.

"அவனுக்கு வேற‌ வேலை என்ன?ஏதாவது பிள்ளை தேடிக் கிண்டு போயிருப்பான்"என்று அம்மா அசுவாரசியமாகச் சொல்லி விட்டாள்.

இதைக் கேட்டதும் பிச்சுமணிக்குக் கல்யாண‌த்துக்காக அரை டஜன் பெண்கள் காத்துக் கிடக்கின்றன என்று நினைத்துவிடப் போகிறீர்கள்,விஷயமே வேற.

எனக்குப் பிச்சுமணியை ரொம்பத் தெரியாது.அவருக்கு அறுபது வயசுக்குக் குறைவிருக்காது.வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டுவிட்டார்,ஓரே ஒரு பையன் இருக்கிறான்,இவ்வளவு தான் தெரியும்.அவர் என்ன வேலை செய்தார் என்றும் எனக்குத் தெரியாது.அம்மாவுக்கும் தெரியாது."என்னமோ கமிஷன் ஏஜன்ட், ஊர் ஊராகச் சுத்தற உத்தியோகம்" என்று துச்சமாகச் சொல்லி விடுவாள்.பிச்சுமணி விஷயத்தில் அவர் ஓய்வுபெற்ற பின்னும் ஊர் ஊராய் அலைவது மாத்திரம் என்ன காரணத்தா‌லோ நிற்க வில்லை.எப்போதும் யாரையாவது யாருக்காவது ஜோடி சேர்த்து விட முயற்சி செய்தபடி இருப்பார் என்று மாத்திரம் கேள்விப் பட்டிருக்கிறேன்.இத்தனைக்கும் நான் அறிந்தவரை அவர் ஒன்றும் இன்பமான இல்லற வாழ்க்கை நடத்தினதில்லை.பத்துப் பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னாலேயே முதல் முதல் நான் அவரைச் சந்தித்த போதே அவருடைய மனைவி உயிருடன் இல்லை.

எப்போதாவது மூணு நாலு வருஷத்துக்கொரு முறை அவரை ஏதாவது கல்யாணத்தில் நான் சந்தித்தாலே அதிகம்.ஒரே ஒரு முறைதான் அம் மனிதரின் உள்ளே இருக்கும் உண்மை மனிதனைச் சில நிமிடங்கள் நேருக்கு நேர் பார்த்து உணர முடிந்தது.அந்தச் சமயம் எனக்கு ரொம்பவும் தருமசங்கடமாகப் போயிற்று. இப்போது நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக‌ இருக்கிறது.

ஆறு வருஷத்துக்கு முன்னால் என் தூரபந்து ஒருவரின் கலியாணத்துக்குப் போயிருந்தேன்.கலியாணம் கோயமுத்தூரில் நடந்தது.அங்கே போன பிறகுதான் மாப்பிள்ளைக்கு என்னவோ முறையில் பிச்சுமணி நெறு*ங்கிய உறவினர் என்ப‌து எனக்குத் தெரியவந்தது.காலையிலே என்னைப் பார்த்ததுமே பிச்சுமணி சந்தோஷத்தோடு என்னை வரவேற்றுக் குசலம் விசாரித்தார்.அதே சமயம் அவர் எனக்காக‌ 'கிளியாட்டம்' ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருந்த‌தாகவும்,ஆனால் நானோ எல்லாரையும் ஏமாற்றிவிட்டு அவருக்கும் வேறு யாருக்கும் சொல்லாமல் என் கலியாணத்தை முடித்துக் கொண்டு விட்டேன் என்றும் குற்றஞ் சாட்டினார்."ரெண்டு லட்சம் ரூபாய் பெறுமான ஆஸ்தி வேறே போச்சே" என்று கூறி, எனக்காக‌ அங்கலாய்த்துக் கொண்டார்.எனக்குச் சிரிப்பு வந்ததே தவிர வேறென்ன செய்வது என்று தெரியவில்லை.எதையோ சொல்லித் தப்பித்துக் கொண்டேன்.முகூர்த்தம், சாப்பாடு எல்லாம் முடிந்ததும் கலியாண மண்டபத்தின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் அறையில் தூங்கப் போய்விட்டேன்.

ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்திருந்தபோது மணி மூணாகி விட்டிருந்தது.தூக்கம் கலைந்து விடவே கீழே என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று இறங்கி வந்தேன்.

கலியாணக்கூடம் வெறிச்சென்றிருந்தது.ஒரு பக்கம் விரித் திருந்த கசங்கி மடிப்பேறின ஜமக்காளத்தில் ஒரு மூலையில் இடுப் பில் ஒரு கயிறு மாத்திரமேஅணிந்து மற்ற‌படி வெறும் மேனி யுடன் இருந்த குழந்தை குப்புறப்படுத்து நீந்துவதுபோல மாறு கை, மாறு காலை நீட்டி மடக்கின நிலையில் தூங்கிக்கொண் டிருந்தது. மண்டபத்தின் வாயிலில் துவார பாலகர்களைப் போல நிறுத்தி வைத்திருந்த வாழை மரங்களின் இலைகளைத் தின்ன ஒரு சிவந்த மாடு எட்டி எட்டி முயற்சி செய்தது. முகூர்த்தத்துக்குப் ' பெரிய மனிதர்கள்' யாராவது வந்தால் உட்காருவதற்காக ஒரு பக்கத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் யாரோ ஒருவர் முதுகைக் காட்டியபடி முழங்காலை மடக்கிக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண் டிருந்தார். இன்னொரு மூலையில் பளிச்சென்று நீலமும் பச்சையும் சிவப்பும் மஞ்சளுமாகப் பட்டுப் சேலையும் தாவணியும் உடுத்தி யிருந்த இளம் பெண்கள் ஆறேழு பேர் கூடிக் குசுகுசுவென்று பேசிச் சிரித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சிலும் சிரிப் பிலும் கலந்துகொள்ளாமலும் அதே சமயம் அவர்களைவிட்டு அகலா மலும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர், சில வாலிபர்கள். எல்லாருமே கொஞ்சம் கர்நாடகமோ அல்லது நிஜமாகவே ஒருத்தருக்கொருத்தர் பரிசயமில்லையோ? ஒட்டு மொத்தத்தில் இருபால் இளைஞர் கூட்டத்தில் இருக்கவேண்டிய கலகலப்பை அங்கே காணவில்லை.

சரி, நாம்தான் கொஞ்சம் கலகலப்பை ஏற்படுத்தலாமே என்ற எண்ணத்தில், பேசிச் சிரித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத் துக்குச் சென்று அவர்களுடன் உட்கார்ந்து கொண்டேன். அவர் கள் எல்லாரும் உடனே மௌனமாயினர். அந்தக் கூட்டத்தில் நளினிதான் எனக்குத் தெரிந்தவள். என் சிற்றப்பாவின் கடைசி மகள். அவள் கையில் புதுமாதிரியாக மருதணையோ அல்லது வேறெதோ புத்தம் புதுவண்ணக் கலவைச் சாயமோ பூசிக்கொண் டிருந்தாள்.

"நளினி, உன் கையைக் காட்டு பார்ப்போம்" என்றேன்.

அவள் கையை நீட்டினாள். நான் பார்த்துக்கொண்டிருந்தபோது மூக்குக் கண்ணாடி அணிந்த இன்னொரு பெண், "ஏன் மாமா, உங் களுக்கு ரேகை பார்க்கத் தெரியுமா?" என்று கேட்டாள்.

"ஓ தெரியுமே" என்று சொன்னபடியே நளினியின் கைரேகை களைப் பார்க்க ஆரம்பித்தேன்.

உண்மையில் எனக்கு ரேகை சாஸ்திரத்தில் நம்பிக்கையே கிடை யாது. பதினாலு பதினைஞ்சு வயசில் சில புத்தகங்களைப் படித்திருந் தேன் என்பது என்னவோ வாஸ்தவந்தான். ஆனால் இப்போது இருபது வருஷத்துக்கு மேலாயிற்றே? இருந்தாலும், ஒரு யுவதி கேட்கும்போது, "எனக்குத் தெரியாது. ரேகையாவது சாஸ்திர மாவது? எல்லாம் வெறும் ஹம்பக்" என்று சொல்ல மனம் வரவில்லை. இதையெல்லாம் யோசிப்பதற்கு முன்னாலேயே வாய் முந்திக் கொண்டு, "ஓ தெரியுமே!" என்று சொல்லி விட்டது.

மூக்குக் கண்ணாடிக்காரி என்னை விடாமல், "அப்போ என் கையைப் பாருங்களேன்" என்று சொன்னபடி தன் இடக் கையை நீட்டினாள். நான் சிரித்துக்கொண்டே அவள் கையைப் பற்றி ரேகை பார்க்க ஆரம்பித்தேன். கைரேகைகளைக் கவனித்துப் பார்ப் பவன் போலவும், பிறகு உச்சிமேட்டைப் பார்த்துக் கணக்குப் போடுவது போலவும் கொஞ்ச நேரம் பாசாங்கு செய்துவிட்டு, "நீ கொஞ்சம் சோம்பேறி, கெட்டிக்காரிதான். ஆனால் உடம்பை வளைச்சு வேலை செய்ய உன்னால் ஆகாது. மூளை இருக்கு. நல்லா படிப்பு வரும்" என்று கூறி அவள் முகத்தையும் மற்றவர்கள் முகத்தையும் பார்த்தேன். கூட இருந்த தோழிகளில் ஒருத்தி 'கொல்' லென்று சிரித்துவிட்டாள்.

"ரொம்ப ரைட் மாமா, நீங்க சொல்றது. வீட்டிலே ஒரு துரும் பைக்கூட அசைக்கமாட்டா. காலேஜிலே எல்லாத்திலேயும் முதல்லே வருவா" என்று சொல்லி என்னை உற்சாகமூட்டினாள். உடனே அந்தப் பெண்கள் கூட்டத்தில் என் மதிப்பு உயர்ந்துவிட்டது. நாணிக் கோணிக் கொண்டிருந்த பெண்களும் தங்கள் கைகளை நீட்டி என்னை ரேகை பார்க்கச் சொல்லவே எனக்கும் குஷி பிறந்து விட்டது. நானும் ஒவ்வொருத்தியின் கையாகப் பார்த்துத் தமாஷாக வும், சமயோசிதமாகவும் எனக்குத் தோன்றியபடியெல்லாம் சொல்லிக்கொண் டிருந்தபோது -

"அடே, உனக்கு ரேகை பார்க்கவும் தெரியுமா?" என்று ஒரு குரல் கேட்டது.

நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பிச்சுமணி நின்றுகொண்டிருந்தார். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கூச்சமாகக்கூட இருந் தது. அத்தனை பெண்களின் நடுவே நான் உட்கார்ந்துகொண்டு அவர்களுடைய கையைத் தொட்டுச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த தைப் பிச்சுமணி பார்த்துவிட்டாரே என்று வெட்கமாயிற்று.

அவசரமாக எழுந்திருந்து, "ஹி... ஹி. அதெல்லாம் ஒண்ணு மில்லை. எனக்குத் தெரியாது" என்று சொன்னபடி வெளியேற யத்த னித்தேன். அவர் என் பின்னாலேயே வந்தார்.

"நோ, நோ, அதெல்லாம் பரவாயில்லை. டேய் நாணு; இங்கே வாடா. நீ கொஞ்சம் நாணுவின் கையைப் பாரேன்" என்று நாணு வுக்கும் எனக்கும் உததரவிட்டார்.

"நாணு யார்?" என்று கேட்டேன்.

"நாணுவை உனக்குத் தெரியாதா? என்னுடைய பிள்ளை. ஒரே பிள்ளை; பிரின்ஸ் ஆப் வேல்ஸ். ஐவேஜுக்கு வாரிசு. ஆனால் நான் தான் ராஜா இல்லை. ஐவேஜும் இல்லை" என்று எனக்குச் சொல்லி விட்டு-

"டேய் நாணு இங்கே வாடா, வெக்கப்படாதே" என்று தம் புத்திரனுக்குத் தைரியமூட்டினார்.

மறுபடியும் என்னைப் பார்த்து, "அவன் கையைக் கொஞ்சம் பார்த்துப் பலன் சொல்லேன்" என்றார்.

எனக்குத் தர்ம்சங்கடமாகிவிட்டது. உண்மையை ஒப்புக்கொள் வது தான் உத்தமம் என்று எனக்குப் பட்டது.

"இதைப் பாருங்கோ, எனக்கு ரேகை சாஸ்திரமும் தெரியாது, ரேகை ஜோசியம், ஆரூடம் இதிலெல்லாம் நம்பிக்கையும் கிடை யாது. என்னவோ கொஞ்ச நேரத்தைக் குஷியாகக் கழிக்கலாமென்று ரேகை பார்க்கிறதாச் சொன்னேனே தவிர, எனக்கு ரேகை பார்க்கவே தெரியாது" என்று சொல்லி அத்துடன் நிறுத்தாமல் விஷமமாகச் சிரிப்பதாகப் பாவனை செய்து, "ரேகை பார்க்கிறதா சொன்னாத்தானே இந்தப் பெண்கள் கையைத் தொட என்னை விடுவாங்க? என்றேன். எதையாவது சொல்லித் தப்பித்துக் கொண்டாக வேணுமே?

அவர் என்னை விடுவதாக இல்லை.

"நோ, நோ, அதெல்லாம் பரவாயில்லை. நான் தான் பார்த்தேனே. நீ ரொம்ப நன்னா ரேகை பார்க்கிறதை. ஏ குட்டிகளா, நீங்களே சொல்லுங்கோ, இவர் நன்னா ரேகை பார்த்தாரோ இல்லியோ?" என்றார். என்னிடமும் அந்தக் குட்டிகளிடமும்.

அந்தப் பைத்தியங்கள் என்னைப் பழிவாங்க வேணுமென்றோ அல்லது உண்மையென்று அவர்கள் நம்பினதாலோ, ஒரே குரலாக, "அவர் நன்னாப் பார்க்கிறார் மாமா. ரகசியத்தையெல்லாம் கூடக் கண்டுபிடிச்சுடறார்" என்று கூவின. எனக்கு எரிச்சலாக வந்தது. அவ்வளவு அழகாகவும் லட்சணமாகவும் படித்தும் இருக்கிற அந்தப் பெண்கள் இவ்வளவு முட்டாள்களாகவும் இருப்பார்கள் என்று நான் துளிக்கூட எதிர்பார்க்கவில்லை. அவர்களைக் கோபத் தோடு முறைத்துப் பார்த்தேன்.

அப்போது பிச்சுமணி, "பார்த்தியா, இதுகள் சொல்றதை? ரொம்பப் பிகு பண்ணிக்கிறயே என் கிட்டே கூட?" என்று செல்ல மாகக் கடிந்துகொண்டார். நானும் விடாப்பிடியாக இருந்தேன்.

"இல்லை, நிஜமாகவே எனக்கு ரேகை பார்க்கவே தெரியாது" என்றேன்.

அந்தப் பெண்களோ கலகலவென்று சிரித்துக்கொண்டு பிச்சு மணியை நோக்கி, "அவர் பொய் சொல்றார் மாமா, நீங்க நம்பா தீங்க. நிஜமாத்தான் சொல்றோம். ரொம்ப நன்னா ரேகை பார்க் கிறார்" என்றார்கள். இதற்குள் நாணுவும் வந்துவிட்டான். சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்துக்கொண் டிருந்த இளவட்டங்களில் அவனும் ஒருவன்.

"டேய் நாணு, சாருக்கு நமஸ்காரம் பண்ணுடா" என்று பிச்சு மணி உத்தரவிட்டதும் உடனே தரையில் விழுந்து ஒரு நமஸ்காரம் செய்தான்.

எனக்கு எரிச்சல் தாங்கவில்லை. யாரையும் யாரும் விழுந்து நமஸ்கரிப்பது என்பது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்காத விஷயம். ரேகை, ஜோசியம், ஆரூடம் முதலான வருங்காலத்தை முன்னதாகக் கண்டுபிடித்துச் சொல்வதாகக் கூறும் 'சாஸ்திரங்கள்' எல்லாம் வெறும் புரட்டு என்பது என் திடமான அபிப்பிராயம். சும்மா விளையாட்டுக்கு என ஆரம்பித்தது இந்த மாதிரி வினை யாகப் போய்க்கொண்டிருக்கிறதே என்கிற ஆத்திரம் வேறே. முட்டாள் பெண்களையும், ரேகை சாஸ்திரத்தையும், தந்தை சொல் தட்டாத தனயர்களையும், பிச்சுமணியையும் மனதாரச் சபித்துக் கொண்டே அவரை ஒதுக்குப்புறமாக, சற்றுத் தள்ளியிருந்த பெரிய தூணருகில் அழைத்துச் சென்றேன்.

தூணை அடைந்ததும் குரலைத் தாழ்த்திக்கொண்டு, "நிஜமாகவே சொல்றேன், எனக்கு ரேகை பார்க்கவும் தெரியாது, அதுலே நம்பிக்கையும் கிடையாது. சும்மா பொழுதுபோக, தமாஷாக ரேகை பார்க்கிற மாதிரி நடிச்சேனே தவிர வெறொண்ணுமில்லை. அவ்வளவு தான்" என்றேன்.

நான் பேசி முடிப்பதற்குள், அதைக் காதில் வாங்காமலே, பிச்சுமணி, "அதெல்லாம் பரவாயில்லேன்னா, நீ பார்க்கிற அளவு மத்தவா பார்த்தாலே போதுமே. அதுவே யதேஷ்டம். நீ நம்ப வேண்டாம். உன்னை யார் நம்பச் சொல்றா? நான் நம்பறேன். அவ்வளவுதானே வேண்டியது" என்றார். மேலும் தொடர்ந்து, "எனக்காக அவன் கையைப் பாரேன், ப்ளீஸ்" என்றார்.

என்னை விட இவ்வளவு பெரியவர் இவ்வளவு தூரம் வற்புறுத்தும் போது இன்னும் மறுத்தால் நன்றாயிராது என்றுதான் எனக்குப் பட்டது. வேறு என்ன செய்வதென்றும் எனக்குத் தெரியவில்லை. "சரி" யென நான் ஒத்துக்கொள்ள அவரும் நாணுவுமாக மீண்டும் கூடத்தின் மத்தியில் வந்தோம்.

"நாணு சார் கிட்டே கையைக் காமி" என்று பிச்சுமணி தன் குமாரனுக்கு உத்தரவிட்டார்.

நான் எரிச்சலோடு நாணுவைப் பார்த்தேன். பலியாடு போலத் தலைகுனிந்து மௌனமாகத் தன் கையை நீட்டினான்.

அவன் சோளக்கொல்லை பொம்மை போல் இருந்தான் என்று சொல்ல வந்தேன். யோசித்துப் பார்த்தால் அது பொருத்தமில்லை என்று படுகிறது. அதுக்கு உருண்டை முகமும், புஸு புஸுவென்று வைக்கோல் திணித்த உடம்புமாகவல்லவா இருக்கும்? நாணு அப்படி இல்லவே இல்லை. கச்சல் வாழைக்காய் போல, இன்னும் சொல்லப் போனால் பழைய பாத்திரக் கடையில் நெடு நாளாக மூலையில் கேட்பாரற்று அழுக்கேறி நசுங்கிக் கிடக்கும் பித்தளைப் பாத்திரம் போல் இருந்தான். ஆனான் குண்டாக இல்லை. அவ்வளவு தான். சட்டை போட்டு மார்புக்கூட்டை மறைத்திருந்தாலும் கண் ணுக்குத் தெரிந்த முழங்கை, முன் கை, மணிக்கட்டு, கழுத்து, முகம் இத்யாதிகளைப் பார்த்தாலே ஆள் ஒன்னும் பயில்வான் இல்லை என்பது தெள்ளத் தெரிந்தது. முகத்தில் கண்களும் கறுத்துப் போயிருந்த உதடுகளும் தான் பெரிசாயிருந்தன. கன்னம் குழிவிழுந் திருந்தது. கைவிரல்கள் சப்பாணிக் கயிற்றைப் போல் இருந்தன.

அவன் கையை வாங்கியபடியே கடைசி முறையாகப் பிச்சு மணியைப் பார்த்து, "நிஜமாகவே எனக்குத் தெரியாது" என்றேன். அவர் மாத்திரம் அன்று ஆசையினால் குருடாக்கப்படாமல் இருந் திருந்தால் என் முகபாவத்திலிருந்தே நான் படும் பாட்டையும் 'சும்மா ஒப்புக்குச் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல் கிறேன்' என்பதையும் தெரிந்துகொண் டிருப்பார்.

"பரவாயில்லை. தெரிஞ்சதைச் சொல்லு, அது போதும்" என்றார் அவர்.

வேறு வழியில்லாமல் நான் நாணுவின் கையைப் பார்க்க ஆரம்பித் தேன். நுனியில் மஞ்சள் கரையேறியிருந்த ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும், தறிக்கப்படாமல் அழுக்கைச் சுமந்துகொண்டிருந்த நகங்களையும் தவிர வேறொண்ணையும் காணக் கிடைக்கவில்லை.

"தேக சௌக்கியம் அவ்வளவாக இருக்காது. 'ச்செஸ்ட் வீக்'. ஆனால் உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை" என்று ஆரம்பித்து எனக்குத் தோன்றியதையெல்லாம் சொல்லலுற்றேன். பெரிதா யிருந்தாலும் உயிர்க்களையே இல்லாமல் பாதி மூடினபடி வெள் ளாட்டுத் தலையின் கண்ணைப் போலிருந்த அவன் கண்களும் நான் சொல்வதைக் கேட்டு உயிர்பெறத் தொடங்கின. பிச்சுமணி நின்றபடியே தலையை ஆட்டி ஆட்டி நான் சொல்வதையெல்லாம் ஆமோதித்து என்னை ஊக்குவித்துக் கொண்டிருந்தார். சுற்றி வளைத்து ஜோடனை செய்து என்ன என்னவோ சொன்னேன். அவனது உடல்நிலை, புத்திக்கூர்மை, அழகுக் கலைகளில் அவனுக் கிருந்த அபிமானம், கலைத்திறன், அவன் பிறருடன் பழகும் சுபாவம், ஐம்பத்திரண்டாம் வயசில் அவனுக்காகக் காத்திருக்கும், 'மலை போல் வந்து பனி போல் விலகிப் போகும்' ஆயுள் கண்டம், புத்திர பாக்கியம் என்றெல்லாம் சொன்னேன். கடைசியில் வேறொண்ணும் சொல்வதற்கில்லை என்றானபோது, "இவ்வளவு போதுமே, இதுக்கு மேலே எனக்கு ஒண்ணும் தெரியல்லே" என்றேன்.

பிச்சுமணி தொண்டையைக் கனைத்துக் கொண்டார். நான் தலை நிமிர்ந்து பார்த்தேன். அவர் திருப்தியடையவில்லை என்பது அவர் முகத்திலிருந்தே தெரிந்தது.

"நான் கேக்குறேன்னு கோவிச்சுக்காதே. உத்தியோக பாக்கியம் எப்படி?" என்றார், கொஞ்சம் கம்மின குரலில்.

"ஏன், நல்லாய்த்தானிருக்கு" என்றேன் நான், பட்டும் படா மலும்.

"உத்தியோக ரேகை தீர்க்கமாயிருக்கா, பார்த்துச் சொல்லேன். பீ.ஏ. பாஸ் பண்ணிட்டு நாலு வருஷமாக உட்கார்ந்திண்டிருக் கான். ஊரெல்லாம் சுத்திப் பார்த்துட்டேன். கேக்காத இடமில்லை, பார்க்காத ஆளில்லை. காலைப் பிடிச்சுக் கெஞ்சாத குறைதான். எவனும் இப்போ வா அப்போ வான்னு சொல்லிக் கடைசியிலே கையை விரிச்சுடறானே தவிர, உருப்படியா ஒரு பியூன் வேலை கூடப் போட்டுத் தரமாட்டேங்கறான். இவனுக்கோ சமத்துப் போறாது. டவாலி போடற ஜாதியிலே பொறந்துட்டு எனக்கு இந்த வேலை வேண்டாம்; நான் அங்கே போயி அவனைப் பார்க்க மாட்டேன்னு சொல்ல முடியுமோ? வீட்டிலியே உட்கார்ந்திருந்தா எவன் கூப்பிட்டு இந்தா வேலையின்னு குடுப்பான். நாம நம்மாலே ஆனது அத்தனையும் செய்ய வேண்டாமோ? அது இவனுக்குத் தெரியல்லே; அதான் கேக்கறேன்" என்று சொல்லிவிட்டுத் தோள் துண்டால் கழுத்துப் பிடியைத் துடைத்துவிட்டுக் கொண்டார்.

"ரேகை பார்க்கிறது ஜாதகம் பார்க்கிற மாதிரியில்லை. உத்தி யோகத்துக்குன்னு தனியா வேற ரேகை கிடையாது. இருக்கிற ரேகைகளைக் கொண்டு நாமே ஊகிச்சுத் தெரிஞ்சு கொள்ளணும்" என்று ஆரம்பித்தவன், என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்த வுடன் நிறுத்திக்கொண்டு, மவுனமாக அவனுடைய வற்றிப்போன கையில், ரேகைகளில் ஏதோ பொக்கிஷம் ஒளிந்திருக்கிற மாதிரி தேட ஆரம்பித்தேன், என்ன தேடுகிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே, நாய் வேஷம் போட்ட பிறகு குரைக்க வெட்கப் பட்டு என்ன செய்வது?

சும்மா ஒரு நிமிஷம் இந்தமாதிரி தேடிவிட்டு, பிறகு, "இப்போ வயசு சரியா என்ன ஆகிறது?" என்று கேட்டேன். அது என்னவோ மிக முக்கியமான விஷயம் போலல்.

"இருபத்து நாலு முடிஞ்சி இருபத்தஞ்சு நடக்கிறது. இன்னும் மூணரை மாசத்திலே இருபத்தஞ்சு முடிஞ்சுடும்" என்றான் நாணு.

இந்த ரேகை பார்க்கும் நாடகம் ஆரம்பித்ததிலிருந்து அவன் இப்போதான் முதல் முறையாக வாயைத் திறந்து பேசினான். அவன் குரலைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அசாதரண மான கட்டைக் குரலில் அவன் பேசினான். அவன் வாயைத் திறந்ததும் 'குப்'பென்று வீசிய நாற்றத்தை விட அவனுடைய கட்டைக் குரலிலிருந்த பெரும் ஆர்வமும் பெருந்தாகமும் என்னைச் சங்கடத் தில் ஆழ்த்தித் துக்கங் கொள்ளச் செய்தன.

மேலும் ஒரு நிமிஷத்தை ஏதோ கணக்குப் போடுவது போலக் கழித்து கடைசியாக, "இன்னும் ஆரேழு மாசம் ஆகும் வேலைன்னு கிடைக்க. இருபத்தாறாம் வயசின் முன்பகுதியிலோ அல்லது நடுவிலேயோ தான் வேலையாகும். அதுக்கப்புறம் ஒரு கஷ்டமும் இருக்காது" என்று சொல்லிவிட்டு என்னைக் காத்துக்கொள்ள, "அப்படீன்னுதான் நான் நினைக்கிறேன்" என்றேன்.

அதுக்கும் மேற்கொண்டும் அவர்களை ஏமாற்ற எனக்கு விருப்ப மில்லை. "காபி ரெடியாயிட்டுதான்னு பார்த்துட்டு வரேன்" என்று சொன்னபடி, அவ்விடம் விட்டுக் கிளம்ப ஆயத்தம் செய்தேன். பிச்சுமணி விடவில்லை.

"நோ, நோ, நாணுவைப் பார்த்துண்டு வரச்சொல்றேன்" என்று என்னிடம் சொல்லிவிட்டு, "டேய் நாணு, காபி ஆயிடுத்தான்னு பார்த்துட்டு ஸ்ட்ராங்கா ரெண்டு கப் இங்கே அனுப்பி வை" என்றார் நாணுவிடம். அவனும் 'சரி'யென்று தலையாட்டி விட்டுச் சென்றான்.

ரேகை பார்ப்பது என்பது வெறும் விளையாட்டாக இல்லாமல், 'சீரியஸ்' ஸாகப் போய்விடவே இங்கிருந்த குட்டிகளும் ஒருத்தர் ஒருத்தராக நழுவி விட்டிருந்தனர். குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை விட்டால் அந்தப் பரந்த கலியாண மண்டபத்தில் நானும் பிச்சுமணியுந்தான். அவர் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு என் இரு கைகளையும் பிடித்துக்கொண் டார்.

"ஒனக்கு எப்பிடி உபசாரம் சொல்றதுன்னே தெரியலே. நாணுவுக்குச் சமத்துப் போறாது. என் மாதிரி இடிச்சுப் பூந்து வேலையை முடிச்சுக்கிற சாமர்த்தியம் கிடையாது. எனக்கோ ஹார்ட் வீக்காயிட் டிருக்கு. நாளைக்கே 'டப்'புனு நின்னாலும் நின்னுடும். இல்லே, பத்து வருஷம் ஓடினாலும் ஓடும். ஒண்ணும் சொல்றதுக்கில்லேன்னுட்டான் டாக்டர். இவனைப் பத்திதான் எனக்கு எப்பவும் கவலை. நான் இருக்கிறப்பவே ஒரு நல்ல வேலையாப் பார்த்து அமர்த்தலேன்னா நான் போனப்புறம் இவனுக்கு வேலையே கிடைக்காது. இந்த வருஷத்துக்குள்ளே நிச்சயம் நல்ல ஒசத்தி வேலை கிடைக்கும்னு நீ சொன்னது என் வயத்துலே பாலை வார்த்த மாதிரி இருக்கு. நீ தீர்க்காயுசா சுக சௌக்கியத்தோடே நன்னா வாழனும்" என்று தொண்டை தழுதழுக்கச் சொன்னார்.

எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.

"ஒரு நிமிஷம், இதோ வந்துட்டேன்" என்று சொன்னபடி அவசரமாக எழுந்து ஏதோ இவ்வளவு நேரம் மறந்திருந்தது திடீரென்று ஞாபகம் வந்தாற்போல் பாவனை செய்து அவ்விடம் விட்டு வேக மாகப் போய்விட்டேன். அதன் பிறகு அங்கே இருந்த சில மணி நேரங்களை அவர் கண்ணில் படாமல் ஒதுங்கிப் பதுங்கிக் கழித்து விட்டேன்.

இப்போது அவர் கண்காணாத இடத்தில் அநாதை போல ஒரு ஹோட்டல் அறைக்குள் செத்துக் கிடந்தார் என்று கேள்விப்பட்ட போது எனக்கு உண்மையிலேயே பரிதாபமாக இருந்தது.

அவர் எதுக்குப் பிள்ளை தேடிப்போனார்? எனக்குத் தெரிஞ்சவரை அவருக்கு நாணு ஒருத்தன் தானே? "அவருக்குப் பெண் இருக்கா என்ன?" என்று நான் அம்மாவைக் கேட்டேன்.

"அவனுக்கு ஏது பெண்? நாணு ஒருத்தன் தான். இருக்கிற பிள்ளைக்கு நல்ல இடமாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வெக்க மாட்டானோ? ஆனா என்னிக்குத்தான் அவன் தன் குடும்பத்துக்குனு ஒரு துரும்பை எடுத்து அந்தப் பக்கத்திலேயிருந்து இந்தப் பக்கம் வெச்சிருக்கான்?"

"பின்னே யாருக்காகப் பிள்ளைத் தேடி அலைஞ்சார் இவர்?"

"ஓ, அந்தக் கதை ஒனக்குத் தெரியாதா, சொல்றேன் கேளு" என்று ஆரம்பித்தாள் அம்மா.

பிச்சுமணி ஒரு பெரிய ஆபிஸரிடம் (அவர் என்ன 'ஆபிஸர்' என்று அம்மாவுக்குத் தெரியவில்லை) நாணுவுக்காக வேலை கேட்டுப் போனாராம். வேலை வாங்கிக்கொடுத்தால் தன் பெண்ணை நாணுவுக்குக் கல்யாணம் செய்துவைக்க ஒத்துக்கொள்ள வேணும் என்று அந்த ஆபீஸர் சொன்னாராம். பிச்சுமணியும் ஒப்புக்கொண்டு விட்டார். வேலை கிடைத்த பிறகு நாணுவிடம் விஷயத்தைச் சொல்லியிருக் கிறார். அவன் மறுத்துவிட்டானாம். என்னென்னவோ சொல்லியிருக் கிறான். பெண் அழகாயில்லை. கண் ஒன்றரை. குரல் நன்றாக இல்லை. இப்படியெல்லாம் சொல்லி மாட்டவே மாட்டேன் என்று விட்டான். பிச்சுமணியும் அவனைச் சரி செய்யப் பார்த்தார். அவன் ஒப்புக் கொள்ளவே இல்லை. 'மாறு கண்ணுன்னா அதிர்ஷ்டம். உனக்காகத் தேவலோகத்திலிருந்து ரதி கிடைப்பாளா, நீ என்ன மன்மதன்னு நினைப்போ? நீ சொல்ற மாதிரி பார்த்தா உலகத்திலே பாதிப் பெண்கள் கன்யா ஸ்திரீயாக இருந்துவிடவேண்டியதுதான்' என்றெல்லாம் சொன்னாராம். அவன் கேட்கவில்லை. கடைசியாகத் தன் வாக்கைக் காப்பாற்றுவதற்காகவாவது ஒத்துக்கொள்ளச் சொன்னா ராம். அதற்கு நாணு, "இது என்ன சினிமான்னு நெனைச்சுட்டியா அப்படியெல்லாம் செய்ய? எப்படியாவது சொன்ன வாக்கைக் காப்பாத்தணுமானா நீயே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துக்கோ" என்று சொல்லிவிட்டானாம். பிச்சுமணி அந்த ஆபிஸரிடம் போய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, "ஒங்க பொண்ணுக்கு நல்ல பிள்ளையாகத் தேடிக் கல்யாணம் செய்து வைக்காமே நான் என் வீட்டு வாசற்படி ஏறமாட்டேன்" என்று சபதம் செய்து கொடுத்தாராம். அதன் விளைவாகத்தான் சென்ற ஐந்து வருஷங்களாக அவர் அந்தப் பெண்ணுக்காக வரன் தேடி ஊரூராக அலைந்துகொண் டிருந்திருக்கிறார்.

"அவனை மூணாம் வருஷம் ராமு கல்யாணத்திலே பார்த்தப்போ இதெல்லாம் சொன்னான். அவனுக்கு ஆதிநாளிலேருந்து ஊரூராகச் சுத்திப் பழக்கம். ரிட்டயர் ஆனப்புறமும் அலையறதுக்கு இந்தமாதிரி ஒரு சாக்கு. அவ்வளவுதான். வேலை குடுத்தாப் போதும்னு இவனே ஏதாவது சொல்ல்லிப்பிட்டு பின்னாலே அவஸ்தைப்பட்டிருப்பான். ஏன்னா அவன் சொல்றதை நம்பிட முடியாது. ஒண்ணுன்னா நூறும் பான்" என்று முடித்தாள் அம்மா.

பிச்சுமணியை யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நான் நம்பத் தயார். என்னுடைய ரேகை ஜோசியம் பலித்துவிட்டது பற்றி எனக்குச் சந்தோஷந்தான். நாணுவுக்கு எப்போது கல்யாணம் ஆகும் என்று என்னை அவர் அன்று கேட்காமல் இருந்தது பற்றி எனக்கு அதைவிடச் சந்தோஷம்.

----------

புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984

Dec 16, 2010

கனவுக்கதை – சார்வாகன்

நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குப் போனபோது அங்கே வாங்குவோர் கூட்டமே இல்லை.

நடேசன் கடையில் அது ஒரு சௌகரியம். அங்கே எப்பவும் கூட்டம் தெரியாது. கறுப்பு பச்சை சிவப்புப் பெப்பர்மிட்டுகள், ரப்பர் பந்துகள், விலை சரசமான பேனாக்கள், வர்ண வர்ண இங்கி புட்டியுடன், (புட்டியில்லாமல் அளந்து) சோப்பு, சீப்பு (நேஷனல் ஸ்டோரில் கண்ணாடி கிடையாது), sarvakan க்ஷவரத்துக்கு முன்னும் பின்னும் முகத்தை அழகு பண்ணிக்கொள்ள, நரை மயிரைக் கறுப்பாக்க, ஒத்தை ஜோடி மூக்கை நந்நாலு என்று விதம்விதமாகக் கோடு போட்ட, கோடே போடாத, குறுக்கும் நெடுக்குமாய்க் கோடு போட்டுக் குவித்த நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள், இன்னும் எத்தனையோ சாமான்கள், எல்லாம் வாங்குவாரை எதிர்பார்த்துக் காத்திருக்கும், சாதாரணமாய் நாங்கள்தான் போய் நிற்போம்.

நடேசன் சிரிச்சபடி ‘வாங்க வாங்க’ என்பான். வெத்திலைக் காவி படிந்த பல்லைக் காண்பிக்கமாட்டான். அவன் பல் வெளேரென்று இருக்கும். அவனுக்கு வெத்திலைப் பழக்கம் கிடையாது. சிகரெட்டுத்தான். அதுவும் கடைக்குள் இல்லை. குடி கூத்தி ரங்காட்டம் ரேஸ் வில்வாதி லேகியம் அரசியல் கலை மொழி மதம் என்று எந்தவிதமான பழக்கமும் கிடையாது. அவனுண்டு அவன் கடையுண்டு. யார் வேணுமானாலும்  அவன் கடையில் என்ன வேணுமானாலும் (மளிகை சாமான்கள் மருந்து சாமான்கள் பால் பவுடர் தவிர) வாங்கிக்கொள்ளலாம். ரொக்கந்தான். ரொம்பத் தெரிஞ்ச ஆளானால் கடனுக்குக்கூடக்கிடைக்கும். நாங்கள் போனால் ‘வாங்க வாங்க’ என்று வரவேற்பானே தவிர எங்களை ‘என்ன வேணும்’ என்று கேட்கமாட்டான். வாங்குவதற்கு எங்களிடம் சாதாரணமாய்க் காசு இருக்காது என்பது அவனுக்குத் தெரியும். ஏதாவது வேணுமானால் நாங்களே கேட்டுக்கொள்வோம் என்பதும் அவனுக்குத் தெரியும். பைபிள் படிக்காத போனாலும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வாசகம் அவனுக்குத் தெரியும்.

அன்றைக்கு நாங்கள் போனபோது நடேசன் கண்களில் குறும்பு தாண்டவமாடிக்கொண்டிருந்தது. முகத்தில் ஒரு விஷமப் புன்னகை. தண்ணீர்மேல் எண்ணெய் சிந்தினால் நிற அலைகள் பரவுகிற மாதிரி. நாங்கள் கடைக்குள்ளே  நுழைந்தோம். சிவப்பிரகாசம் மாத்திரம் எச்சிலைச் சாக்கடையில் துப்பிவிட்டு வந்தான். கடைக்குள்ளே துப்பினால் நடேசனுக்குப் பிடிக்காது. எங்களைப் பார்த்தவுடன் சிரிச்சபடி ‘வாங்க வாங்க’ என்று வழக்கப்படி வரவேற்றுவிட்டு நடேசன் குனிந்து மந்திரவாதிபோல மேசைக்கடியிலிருந்து ஒரு பொருளை எடுத்துக்காட்டி ‘இது என்ன சொல்லுங்க பார்ப்பம்’ என்றான். பெருமிதத்தோடு எங்களைப் பார்த்தான்.

அவனுடைய இந்த அசாதரணமான நடவடிக்கையினால் ஒரு கணம் சிந்தனை தடுமாறிப்போன நான் சமாளித்துக்கொண்டு ‘என்ன அது’ என்று கேட்பதற்குள் ரெங்கன் அப்பொருளைக் கை நீட்டி எடுத்தான்.

முதலில் அதில் ஒன்றும் விசேஷமாகத் தெரியவில்லை. சாதரணக் கடைத் தராசென்றுதான் நினைத்தேன். ரெங்கன் அதை எடுத்துத் தூக்கி ‘நிறுத்துப்’ பார்த்ததுந்தான் அது சாதாரணத் தராசல்ல என்பது தெரிந்தது. அதில் ஒரு பக்கம் ஒரு தட்டும் மறு பக்கம் ஒன்றன் கீழ் ஒன்றாக மூன்று தட்டுகளும் இருந்தன. எனக்கு ஒண்ணும் புரியவில்லை.

‘இது என்னன்னு சொல்லிட்டா ஆளுக்கு ரெண்டு ஸ்வீட் தர்ரேன்’ என்று சொல்லி மீண்டும் ஒரு பெருமிதப் புன்னகையை உதிர்த்தான் நடேசன். நானும் சிவப்பிரகாசமும் தெரியவில்லை என்று சொல்லித் தோல்வியை ஒத்துக்கொண்டு விட்டோம். ரெங்கன் மாத்திரம் சிறிது நேரம் அந்த மூணு தட்டுத் தராசைத் திருப்பித்திருப்பிப் பார்த்தபடி யோசனை செய்தான். வயது நாற்பதானாலும் அவனுக்கு இன்னும் ‘ஸ்வீட்’ என்றால் ஆசையோ என்னமோ, கடைசியில் அவனும் ‘என்னா இது, படா ஆச்சரியாமாயிருக்குதே’ என்று பொதுவாக உலகுக்கு அறிவித்துவிட்டுத் தோற்றதுக்கு அடையாளமாகத் தராசைத் திருப்பித் தந்துவிட்டான்.

நடேசனுக்கு ஒரே சந்தோஷம். ‘பரவாயில்லை, தெரியாவிட்டாலும் பரவாயில்லை, எடுத்துக்குங்க’ என்று சொல்லி அருகிலிருந்த பெப்பர்மிட்டு பாட்டிலுக்குள் கைவிட்டுச் சில மிட்டாய்கள் அள்ளி எங்களிடம் நீட்டினான். ரெங்கன் ரெண்டு எடுத்துக்கொள்ள, நானும் ஒண்ணு எடுத்துக்கொண்டேன், மரியாதைக்காக.

சிவப்பிரகாசம் வேண்டாமென்று மறுத்துவிட்டான். அவனுக்கு டயபிடீஸ். சர்க்கரைவியாதி. ஸ்வீட்டும் சாப்பிட மாட்டான், அரிசிச் சாதமும் சாப்பிடமாட்டான்.

‘சும்மா எடுத்துக்கப்பா, இந்த ஸ்வீட்லேயெல்லாம் சர்க்கரையே கிடையாது’ என்று நடேசன் வற்புறுத்தவே ‘என் பங்கை நீயே எடுத்துக்க’ என்று சிவப்பிரகாசம் பிடிவாதமாய் மறுத்துவிட்டான். நடேசன் தன் பங்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. சிவப்பிரகாசத்தின் பங்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. சர்க்கரை இல்லாத ஸ்வீட் பிடிக்காதோ அல்லது ரெண்டு பைசாவைத்தான் வீணடிப்பானேன் என்று சிக்கன புத்தியோ.

மிட்டாய்களை பாட்டிலுக்குள் போட்டபின் நாங்கள் வேண்டிக் கேட்டதன் பேரில் மூணுதட்டுத் தராசின் மர்மத்தை விளக்கினான் நடேசன். ஒரே சமயத்தில் மூணு பேர் கடைக்கு வந்து ஒரே சாமானைக் கேட்டு நெருக்கினால் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முறையாக நிறுத்துக் கொடுப்பதற்குப் பதிலாக ஒரே முறையில் நிறுத்து நேரச் செலவையும் சக்திச்செலவையும் குறைக்கும் சாதனமாம் அது. ‘எப்படி நம்ம யோசனை’ என்று பெருமிதத்தோடு கேட்டான்.

நடேசன் கடைவைத்த நாள் முதலாகப் பார்த்திருக்கிறேன். ஒரே சமயத்தில் மூணுபேர் கூடிச் சாமான் உடனே வேணுமென்று ரகளை செய்ததை ஒரு நாள்கூடப் பார்த்ததில்லை. இருந்தாலும் அவனுடைய உற்சாகத்தைக் கெடுப்பானேன் என்று சும்மாவிருந்துவிட்டேன். ரெங்கனுக்குத்தான் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ‘நம்ம நடேசனுக்கா, இவ்வளவு முன்யோசனையா’ என்று தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான். அந்தச் சமயத்தில்தான் அந்த ஆள் கடைக்கு வந்தது.

வந்த ஆசாமி சாமியார் போலவுமில்லை. குடும்பி போலவும் இல்லை. நாற்பது வயசிருக்கும். கரளைகரளையாகக் கட்டுமஸ்தான தேகம். தலைமயிர் கருப்பாக நீண்டு வளர்ந்து பிடரிமேல் புரண்டுகொண்டிருந்தது. அடர்த்தியான புருவம். நெற்றி மேல் கம்பளிப் பூச்சுபோல ஒட்டிக் கொண்டிருந்தது. கண்கள் கருப்பு வைரங்கள் போல ஜ்வலித்தன. முகத்தில் ரெண்டு வாரச் சேமிப்பு. வெறும் உடம்பு. இடுப்பில் ஒரு நாலுமுழத் தட்டுச் சுற்று வேட்டி முழங்கால் தெரிய அள்ளிச் சொருக்கி கட்டியிருந்தது. வேட்டி காவியாயிருந்து வர்ணம் போனதோ அல்லது வெள்ளையாயிருந்து பழுப்பாக மாறிக் கொண்டிருந்ததோ ஆண்டவனுக்கே தெரியும். புஜத்தில் தோளிலிருந்து முழங்கை வரை சுண்ணம்புக் கறை. நெற்றியில் அரை ரூபாய் அளவுக்குக் குங்குமப் பொட்டு.

மத்தாப்பு போலப் பொறி பறக்கும் கண்களுடன் வந்த அந்த ஆள் ‘ஒரு கிலோ பெப்பர்மிட்டுக் குடுங்க, சீக்கிரம்’ என்று அதட்டினான். அவன் குரல் கண்டாமணி மாதிரி ஒலித்தது.

நடேசன் நிதானமாக ‘கிலோ அஞ்சு ரூபாய்’ என்று சொல்லி இருந்தவிடம் விட்டு அசையாமல் நின்று, வந்த ஆளை ஏற இறங்கப் பார்த்தான்.

‘சரி சரி குடுங்க, சீக்கிரம்’ என்று சொன்னபடியே அந்த ஆள் இடுப்பைத் தடவி ஒரு முடிச்சை அவிழ்த்து எட்டாக மடித்து வைத்திருந்த அழுக்கேறிய அஞ்சு ரூபாய் நோட்டை எடுத்து மடிப்புக் கலையாமல் நீட்டினான்.

நடேசன் சாவதானமாக நோட்டை வாங்கி மேசை மேல் வைத்துவிட்டு, தராசை எடுத்து மூணுதட்டுகளில் ரெண்டைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு கிலோ படிக்கலைப் போட்டு இன்னொரு தட்டில் பெப்பர்மிட்டுகளை அள்ளிப் போட்டுத் தங்கம் நிறுப்பது மாதிரி நிறுத்துப் பின் பெப்பர்மிட்டுகளைக் காகிதப் பையில்போடப் போகும்போது, ‘பையிலே போடவாணாம், சும்மா அப்படியே காயிதத்துலே வச்சுக் குடுங்க’ என்று சீறினான் அந்த ஆள்.. அவன் கண் பாம்பின் நாக்கு மாதிரி இருந்தது. ஒரு தமிழ்த் தினசரித் துண்டில் அளிக்கப்பட்ட மிட்டாய்களை வாங்கிக்கொண்டு அந்த ஆள் மணிக்கூண்டின் பக்கமாக விடுவிடென்று நடந்தான்.

அவன் என்ன செய்யப் போகிறான் என்ற ஆவலினால் ஈர்க்கப்பட்டு நானும் ரெங்கனும் சிவப்பிரகாசமும் அவனுக்குச் சற்றுப் பின்னால் அவனைத் தொடர்ந்தோம்.

நடேசன் கடையிலிருந்து சுமார் நூற்றைம்பதடி தொலையில் நகராட்சி மணிக்கூண்டு இருக்கிறது. அது வருஷம் தேதி காட்டுவதில்லை. ஆகவே அது நின்று எவ்வளவு நாள் ஆச்சுதென்று தெரியாது. எப்போதும் பனிரெண்டு மணி காட்டிக்கொண்டிருக்கும். விளக்கு வைக்கும் அந்த நேரத்திலும் அது மணி பணிரெண்டு எனக் காட்டிக்கொண்டிருந்தது. எங்கள் ஊர் பஜாரின் நடுநாயகமான மணிக்கூண்டச் சுற்றித்தான் சிறிது வெற்றிடம் இருக்கிறது. சாதாரணமாக நாலுநாலு பேராய்க் கூடிக்கூடிப் பேச வசதியான இடம். சற்றுத் தள்ளிப் போனால் பறவைகளின் எச்ச வீச்சுகளுக்குப் பலியாக நேரும். மணிக்கூடருகே அப்படியில்லை.

மணிக்கூண்டினடியில் இருந்த சிறு மேடையருகில் நின்றுகொண்டு அந்தப் பெப்பர்மிட்டுக்கார ஆள் அருகில் இருந்தவர்கள் கையில் ஓரிரு பெப்பர்மிட்டுகளைத் திணித்தான். அவர்கள் திகைத்தார்கள். ‘சாப்பிடுங்க சாப்பிடுங்க  ஆண்டவன் பிரசாதம்’ என்று சொல்லிக்கொண்டே இன்னும் சில பேர்களுக்கும் நடேசன் கடை மிட்டாய்களை அளித்தான்.

யாரோ ஓர் ஆசாமி மணிக்கூண்டருகே சும்மா ஸ்வீட் விநியோகம் செய்கிறான் என்ற செய்தி எப்படியோ அரை நிமிஷத்துக்குள் பஜார் முழுதும் பரவிவிட்டது. ‘பள்ளத்துட் பாயும் வெள்ளம் போல’ ஜனக்கூட்டம் மணிக்கூண்ட நோக்கிப் பாய்ந்தது. மணிக்கூண்டின் அருகே வந்துவிட்ட நானும் ரெங்கனும் சிவப்பிரகாசமும் முழங்கையாலும், பிருஷ்டத்தாலும் இடித்து உந்தித் தள்ளி நகர்த்தப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டத்தின் வெளிப்புறத்துக்கு வந்துவிட்டோம். சுற்றிலும் மேலே இருந்து கூச்சலிடும் பக்ஷிகளின் சப்தத்தை அமுக்கிக்கொண்டு ‘ஸார் ஸார் மிட்டா ஸார்’ என்ற சப்தந்தான் கேட்டது.

எங்கள் ஊர்வாசிகளுக்கு பெப்பெர்மிட்டு மிட்டாய் என்றால் அவ்வளவு பிரேமை என்று எனக்குத் அது நாள்வரை தெரியவே தெரியாது. கூட்டமே சேராத நடேசன் கடையில்கூடப் பெப்பர்மிட்டு வாங்க ஏதாவது குழந்தைகள்தான் எப்போதாவது வருமேயொழிய இங்கேபோல விழுந்தடித்து ஓடிவந்த பெரியவர்களைக் கண்டதில்லை. வெள்ளைச் சட்டைக்காரர்கள், கம்பிக்கைரை வேட்டிக்காரர்கள், சட்டையேயின்றிச் சாயவேட்டி கட்டினவர்கள், டெரிலின் பனியன்கள், மணிக்கட்டில் கடியாரம் கட்டினவர்கள், கயிறு கட்டினவர்கள், வெள்ளிக் காப்புப் போட்டவர்கள், நரை மீசைகள், வழுக்கைத் தலைகள், முறுக்கு விற்றுக்கொண்டிருத பல்லேயில்லாத கிழவி, அவளது ஏஜண்டான அவள் பேரன், பளபள நைலான் ஜரிகை மினுக்கும் ரவிக்கையுடன் பஜாருக்கு வந்திருந்த கைக்குழந்தைக்காரிகள், குருவிக்காரிகள், பெட்டிகடையில் பீடி சிகரெட் சோடா கலர் வெற்றிலை வாழைப்பழம் புகையிலை வாங்க வந்தவர்கள், இவர்கள் கால்களுக்கிடையே குனிந்து வளைந்து ஓடின நிர்வாணச் சிறுவர் சிறுமியர். கண்ணை மூடித் திறப்பதற்குள் பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது. தேன் கூடுபோல ‘ஞொய்’யென்ற சப்தம்.

பெப்பர்மிட்டுக்காரன் மிட்டாய்கள் தேங்கி நின்ற காகிதத்தை அநுமார்போலத் தலை மட்டத்துக்கு ஏந்திப் பிடித்து மேடைமேல் ஒரே தாவாக ஏறி நின்றான். இவ்வளவு தூரத்திலும் அவன் கண்கள் தணல்போலத் தெரிந்தன. ‘சத்தம் போடக் கூடாது, நான் சொல்றபடி கேட்டால் எல்லாருக்கும் கிடைக்கும்’ என்று உரத்த குரலில் கூவினான். ‘மொல்’லென்று ஒலியெழுப்பிக்கொண்டிருந்த கூட்டம் ஒரு கணத்தில் மௌனமானது. முனிசிபல் விளக்கின் நீல வெளிச்சத்தில் கூட்டத்தின் ஓராயிரம் முகங்களும் மூச்சுவிடுவதைக்கூட நிறுத்தி மோவாயை நிமிர்த்தி அண்ணாந்து அவனை ஆவலுடன் நோகின. அம்முகங்கள் அவ்வொளியில் பச்சையாய் இருந்தன.

‘எல்லாரும் மணிக்கூண்டுப் பெருமாளுக்கு ஒரு பெரிய நமஸ்காரம் போடுங்க’ என்று பெப்பர்மிட்டுச் சாமியாரிடமிருந்து ஆணை பிறந்தது.

ஒரு கணம் உயிரிழந்து பிணமாய் நின்றிருந்த கூட்டம் உலுக்கலுடன் உயிர்பெற்றது. சடசடவெனச் சாய்ந்தது. முன்னாலிருப்பவர்கள் கால் மேல் தலையும் பின்னாலிருப்பவன் முகத்தின் மேலே காலையும் வைத்துக் கூட்டம் சீட்டுக்கட்டு சாய்வது மாதிரி சாய்ந்தது. நான் பன்றி மாடு குதிரைச் சாணத்தின்மீது, எச்சில் மூத்திரக் கறைகளின்மீது, வாழைப்பழத்தோல் காலி சிகரெட் பெட்டி பீடித் துண்டுகள்மீது, தெருப்புழுதிமீது, மல்லாக் கொட்டைத் தோல்மீது, எண்ணற்ற காலடித் தடங்கள்மீது, கண்ணை மூடியபடி, கையைக் கூப்பியபடி, ஆண் பெண் சின்னவன் பெரியவன் காளை கிழவன் பேதமின்றிச் சமதருமமாக, சாஷ்டாங்கமாகத் தன் மீதே ஒருவர் மேல் ஒருவராக விழுந்தது.

‘ஹரிஓம்’ என்று ஒரு கோஷமெழுப்பியபடி அந்தச் சாமியாரல்லாத சாமியார் பெப்பர்மிட்டுக் காகிதத்தைக் கூட்டத்தின் முதுகின்மேல் உதறினான். ஜனக் கூட்டத்தின் மேல் மிட்டாய் மழை.

தரையில் விழுந்து கிடந்த கூட்டம் கலைக்கப்பட்ட தேனடை போலக் கலகலத்துத் தனக்குள்ளேயே பாய்ந்தது. பெருமூச்சும் ஏப்பமும் கலந்த சப்தத்துடன் தன்னை உலுக்கி உதறிக்கொண்டது. சிறுவர்களும் பெரியவர்களும் குமரிகளும் கிழவிகளும் தமிழர்களும் தெலுங்கர்களும் இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் நாஸ்திகர்களும் எல்லாரும் சில்வண்டு போலத் தரையைத் துளைத்தனர். மற்றவர்களை இடித்துத் தள்ளிச் சுரண்டினர். அம்மண்மேல் சிதறிக்கிடந்த மிட்டாய்களை ஆத்திரத்துடன் பொறுக்கினர். பிடுங்கினர் சுவைத்தனர் பிரிந்தனர். மிட்டாய் வீசியவனை நோக்கினர். ஆனால் அவனைக் காணோம். மிட்டாய்க் காகிதத்தை உதறியவுடன் மேடைமீதிருந்து குதித்து மணிக்கூண்டின் பின்னாலாக ஓடிவிட்டிருக்கவேண்டும்.

ஐந்து நிமிஷ நேரத்துக்குள் கூட்டம் சேர்ந்ததுபோலவே கரைந்துவிட்டது. நாங்கள் நேஷனல் ஸ்டோருக்குத் திரும்பினோம். வேடிக்கை பார்க்கக் கடைக்கு வெளியே வந்திருந்த நடேசன் கடைக்குள் நுழைந்து எங்களைப் பார்த்துச் சிரித்தான். ‘பார்த்தீங்களா பைத்தியம் போல இருக்குதில்லே, ஆனாலும் அதாலே ஒருத்தருக்கும் நஷ்டமில்லை’ என்று சொல்லிப் பெப்பர்மிட்டு வாங்கியவன் விட்டுப் போயிருந்த ஐந்து ரூபாய்நோட்டின் மடிப்புகளைப் பத்திரமாகப் பிரித்து அதை ஆள்காட்டி விரலாக் ஒருதரம் சுண்டித் தட்டிவிட்டு மேசைக்குள் போட்டான். நாங்கள் ‘ஆமாம் ஆமாம்’ என்றோம். சிவப்பிரகாசம் எச்சில் துப்ப எழுந்து கடைக்கு வெளியே போனான்.

**

நன்றி:     ‘க்ரியா‘ பதிப்பகம், ஆப்தீன் பக்கங்கள்


Nov 1, 2010

எதுக்குச் சொல்றேன்னா…-சார்வாகன்

அவன் பேசிக்கொண்டே போனான்: ” என்ன செய்கிறது சொல்லுங்கள். நாம் என்ன, கேட்டுக்கொண்டா பிறந்தோம். இல்லை, நம்முடைய அப்பா அம்மாவை நாமே தேடிக்கொண்டோமோ. யாரோ ரெண்டு பேர் என்னமாவோ முடிச்சுப் போட்டுக்கொண்டாங்க, நாம வந்து விழுந்தோம். பாலும் சக்கரையும் கலந்து வெக்கறப்போ ஈ வந்து விழுந்த மாதிரி. இது பொருத்தமில்லையோ? அப்போ சிரங்கிலே புsarvakanழுவந்து தோணின மாதிரின்னு வெச்சுக்குங்களேன். எதுக்குச் சொல்றேன்னா , நாம வந்ததுக்கு நாம பொறுப்பாளியில்லே. ஆனாலும் வந்துட்டோம். வந்த பிறகு போகிறதுக்குள்ளே இருக்க வேண்டிய பொறுப்பு மாத்திரம் நம்மதாயிட்டுது. ஏன், நமக்குக்கூட சில சமயம் தோணுறதில்லையா, எல்லாத்தையும் ஒழிச்சிட்டு ஒரேயடியாப் போயிட்டா என்னன்னு? ஆனா எவ்வளவு பேர் அப்படித்  துணிஞ்சு செய்யறோம். இயற்கையோட விதி நாம் இருக்கிறதுக்காகத்தான் வழி செய்துகொள்ளச் செய்யுதே தவிர இறக்கிறதுக்கு வகை செய்யறதில்லை. ஆனாலும் அதிசயம் பாருங்க, நாம் இருக்கிற ஒவ்வொரு நாளும் சாவை நோக்கியே ஒரு படி. எதுக்குச் சொல்றேன்னா, வாழ்வு என்கிறது பொறுப்பத்த வழியிலே ஆரம்பிச்சு, ஒரு நாள் நிச்சயமாப் பொக்குன்னு போகிற போக்கத்த வியாபாரம். இதிலே எதுக்கய்யா நாம அனாவசியமா நம்மைக் கஷ்டப்பட்டு வறுத்துஎடுக்கனும். என்ன வேதாந்தம் பேசறேன்னு பாக்கறீங்களா, வேதாந்தமும் இல்லை வெண்டைக்காயுமில்லை. அப்பட்டமான உண்மையைத்தான் சொல்றேன். உண்மைக்கும் பொய்க்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க. உண்மை மாதிரி இருக்கும், ஆனால் அது உண்மையில்லை, அதுதானே பொய்? வேதாந்தமும் அந்தமாதிரி பொய். நீங்களே சொல்லுங்க நம்ம வாழ்விலே எது நிஜம்? நேத்து நடந்ததெல்லாம் போயிட்டுது. செத்துப்போனது. நாளைக்கு வரப்போகிறது வந்த பின்னாலேதான் நிச்சயம். அதுவரைக்கிம் அதுவும் நிஜமில்லைதான். நாளைக்கு குத்தப்போகிற முள் இன்னிக்கு வலிக்குதா? இல்லை, முந்தாநாள் தின்ன பாகற்காய் இன்னிக்குக் கசக்குதா? சும்மா பிணத்திலே ஊறுகிற புழு மாதிரி முந்தாநாள் நடந்ததிலேயே மனசை நெளிச்சுக்கிண்டிருந்தா எப்பிடி சுகம் வரும். நாளன்னிக்கி வரப்போகிற ஜிலேபியை நெனைச்சு நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டிருந்தால் இன்னிக்கு வயறு நெறைஞ்சுடுமா?

தொடை மாமிசத்தைக் கடித்து இழுப்பதற்காகச் சில வினாடிகள் பேச்சை நிறுத்தின அவன் மீண்டும் தொடர்ந்தான். “எதுக்குச் சொல்றேன்னா, இப்போ, இந்த நிமிஷம், இந்த க்ஷணம்தான் நெஜம். அதுதான் உண்மை. அதுதான் எனக்குத் தெரியும். அதால்தான் என்னை உறைக்க முடியும். அதைத்தான் என்னால் உணர முடியும். மீதியெல்லாம் செத்ததோ, இல்லை இன்னம் பிறக்காத வெறும் கனவோதானே. ஆனாலும் பாருங்க, விஷயம் சுளுவாயில்லை. ஆழ்ந்து பார்த்தா இந்த நிமிஷம், க்ஷணம்கூட கொஞ்சம் வலுவில்லாததுதான். நிமிஷமோ வினாடியோ நின்னாத்தானே, அதுதான் ஓடிக்கொண்டேயிருக்கே, இதுதான் இந்த வினாடின்னு நான் எதைச் சொல்லுறது? சொல்லுகிறப்பவே ஓடிப் போச்சே, வேறே வினாடி வந்துட்டுதே. இந்த வயத்தெரிச்சலுக்கு என்ன செய்கிறது. அப்போ நிஜம்னு ஒண்ணும் கிடையாதா? எல்லாம் பொய்யின்னா அதிலேயும் ஒரு சங்கடம் இருக்கு.”

பேச்சை நிறுத்தி, எலும்பைக் கடித்து, உள்ளே இருந்த மஜ்ஜையை சத்தத்தோடு உறிஞ்சிக்கொண்டே பேச்சை விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தான்:

“எதுக்குச் சொல்றேன்னா, ‘நான்’ என்று சொல்லிக்கொள்கிற ஒண்ணாவது நிஜமா இருக்கணும். இல்லாதபோனா நானே, என் பேச்சும் எண்ணமும் உள்பட பொய்யாய்ப்போகிறேன். அதேமாதிரி இந்த வினாடி, இருக்கிறவரையில், நிஜமாக இருக்கணும், அது நிகழ்காலமாயிருக்கிறதனாலேயே. ஆனா, ‘நான்’ என்கிறதே கடந்த கால அனுபவமும் எதிர்காலக் கனவுகளும் பிண்டமான ஒண்ணுதானே. எல்லாம் பொய்யால் ஆன ‘நான்’ மட்டும் எப்படி நிஜமாயிருக்க முடியும்? இப்படியெல்லாம் சந்தேகத்திலே கடைக்காலெடுத்து, காலத்தையும் கனவையும் செங்கல்லாக்கி எழுப்பின கட்டிடம் நம்ம வாழ்க்கை. இதுலே நகாசு வேலை – நல்லது கெட்டது, புண்ணியம் பாவம், ஒன்னது என்னது, ஒசந்தது தாழ்ந்தது, நாகரிகம் அநாகரிகம், கவுரம் அகவுரம், வேண்டியது வேண்டாதது, பிடிச்சது பிடிக்காதது – எத்தனை போங்கள், இதெல்லாம் யாரை யார் ஏய்க்கிறதுக்குன்னு எனக்கே வெளங்கலை. எதுக்குச் சொல்றேன்னா, என்னைப் பொறுத்த மட்டிலே இதுலேயெல்லாம் அர்த்தமிருக்கிறதாகப் படவில்லை எனக்கு. நாம நல்லதென்னு நெனைச்சா நல்லது, இல்லையின்னா கெட்டது. நியூகினீக்காரன் நல்லதுன்னா தலையை வெட்டலையா, வெள்ளைக்காரன் நல்லதுன்னா வேண்டாதவங்களைச் சுட்டுப் பொசுக்கலையா, துரோணன்கூட ஏகலைவன் கட்டை விரலைக் கடிச்சுக்கலையா, எல்லாம் மனசுலேதான் இருக்குங்குறேன். எதுக்குச் சொல்றேன்னா, இதோ பாருங்க.. நீங்களும் நானும் இப்போ ரசிச்சுக்கிட்டு சாப்பிடுறோம், கறி எவ்வளவு ருசியாயும் மெதுவாயும் இருக்கு, இந்தக் கறி நடமாடிக்கிட்டிருந்ததைப் பற்றி யோசிக்கிறாமா. ரொம்பப் பேருக்கு யோசிக்கவே பிடிக்கிறதில்லை. ஏன் அப்பிடித் தெரியுமா? நடமாடறப்போ அங்கே இருந்த உண்மை வேறே. அது அப்போ சாப்பிடுற வஸ்துவில்லை. இப்போ அந்த உண்மை இறந்தகாலமாய்ப்போச்சு. இது வேறே உண்மை. சாப்பிடுற உண்மை. இதுதான் இப்போ உண்மை. இதைச் செத்துப்போன பழைய உண்மையோடே எப்படிச் சேர்த்துப்பாக்குறது? எதுக்குச் சொல்றேன்னா, நமக்கு புத்தி இருக்கு. விருப்பு வெறுப்பில்லாமல் கொஞ்சம் யோசனை பண்ணலாம். பண்ணனும். வார்த்தைகளைக் கண்டு மலைச்சுப்போகக் கூடாது. வார்த்தைகளோடே சண்டை போடக்கூடாது, வார்த்தைதான் வாயிலேயிருந்து வந்தா காத்தாப்போச்சே! இதைப் பாருங்க, இந்தக் கறி இன்னைக் காலலயிலேகூட ஓடியாடிக்கிட்டிருந்தது. அப்போ அதுக்குத் தெரியாது, இப்போ நம்ம வயித்துக்குள்ளே போகப்போகிறோம்னு. கொஞ்சிற்று. பாட்டுப் பாடிற்று. ஒரு க்ஷணம் அது இருந்தது. ஒரு வெட்டு. மறு க்ஷணம் அது இல்லை. நமக்குச் சாப்பாடு. இதுதான் உலகம். இது என்ன மிருகம்னு கேட்கிறீங்களா, இதைப் பாருங்கள்.”

அவன் தன் ஜோல்னாப் பையிலிருந்து ஒரு சிறு குழந்தையின் தலையொன்றை எடுத்து வெற்றிப் புன்னகையோடு காண்பித்தான். நான் எச்சில் கையோடு அங்கேயிருந்து ஓடிவிட்டேன்.

நன்றி:     ‘க்ரியா‘ பதிப்பகம், ஆப்தீன் பக்கங்கள்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்