Jan 23, 2014
கவிஞர் விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது- 2014
Oct 22, 2012
சென்று தேய்ந்து இறுதல்-விக்ரமாதித்யன் நம்பி
சென்று தேய்ந்து இறுதல்
இது
என்ன இது
என்னது
இது
குகை மனிதனொப்ப
வேட்டையாடித் திரிவது
ஆதிவாசிக்கும் நமக்கும்
என்ன பெரிய வித்யாசம்
இரை தேடித் தின்பது
தூங்குவது
புணர்வது
கேளிக்கையும் கொண்டாட்டமுமாய்
காலம்கழிப்பது
பின்னே சலித்துக்கொள்வது
எவ்வளவு
இனிய உலகம் இது
கவிதை சங்கீதம்
நாட்டியம் பாட்டு
பறவைகள் வானம்
காற்று மழை
தொன்மக்கதைகள்
சிறப்பைச் சிந்திக்கொண்டிருக்கும் பெண்கள்
எதிலும்
முழுசாய் லயிக்க முடியாமல்
எப்பொழுதும்
இரைதேடிக் கொண்டும்
இருப்பு பற்றி யோசித்தபடியும்
என்ன இது இது என்னது
இந்தக் கவிதையை
இப்படி முடித்துவிடலாம்
அம்மாவைப் பார்க்கையில்தான்
அர்த்தமிருப்பதாகத் தோன்றுகிறது வாழ்க்கைக்கு
வழமையான முத்தாய்ப்பென்று
விமர்சிப்போர்க்கு இப்படி
இருநூற்றி நாற்பத்தேழு
எழுத்துகள்
கலைத்துப்போட்டால்
கண்டமேனிக்கும் சொற்கள்
விளையாட்டாய்
எனில்
வினையாயும்
வேறொரு முடிப்பு
தேவதைகளின் வசீகரம்
தெய்வத்தின் அனுக்கிரகம்
பிச்சிப்பூ வாசம்
பேரியற்கை ரகசியம்
பிசாசுகளின் பயங்கரம்
பாவத்தின் சம்பளம்
பேய்களின் உதரம்
பிணங்களின் நிணம்
தாயம் விழச்செய்யும்
மாயம் எங்கே பிடித்துக்கொண்டாய் செல்லமே
மொழியெனும் சிவ தனுசு
மொழியை
வெகு குறைவாகவே
பயன்படுத்துகிறேன் வீட்டில்
(அதாவது
சொற்களை
சொல்தானே
மொழியின் மூலம்)
ஒரு கவிஞன்
இப்படித்தான்
இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது
அம்மாவிடம்
அளந்து பேசுவதாகத்தான் சொல்ல வேண்டும்
(அம்மாவுக்குத்
தெரியும்)
மனைவியிடம் மட்டுமென்ன
எண்ணித்தான் பேசுவது என்றாகியிருக்கிறது
(அவளுக்குத்
தெரியாதா என்ன)
பிள்ளைகளிடமும்
பெரிதாகப் பேசுவதாகச் சொல்லமுடியாது
(சரியாகப்
புரிந்து கொண்டிருக்கிறார்கள்)
அவர்களும் என்னிடம்
அப்படியே இருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை
வெளியில்
விருப்பமில்லாவிட்டாலும்
நிறையப் பேசும்படியாகிவிடுகிறது
(அவர்கள்
நிரம்பப் பேசிவிடுவார்களோ
என்று ஒரு பயமும்)
யாராவது
ஒரு இளங்கவிஞன்
கவிதை பற்றிக் கட்டுவிடுகிறான்
யாராவது
ஒரு இளம் நண்பன்
தன் வாழ்க்கைப்பிரச்னையை முன்வைத்து விடுகிறான்
யாராவது
ஒருவர்
ஜாதகத்தைக் கொண்டுவந்து நீட்டிவிடுகிறார்
தப்பிக்கவே முடியாது
பேசித்தான்
திருப்திப்படுத்த வேண்டியதிருக்கிறது
எனில்
எங்கேயுமே
மொழியைத் துஷ்பிரயோகம் செய்வதில்லை
(திராவிட இயக்கப் பாதிப்பிலிருந்து
விடுபட்டு வந்துவிட்டதில்
பெரிதும் சந்தோஷம்)
பேச்சோ எழுத்தோ
பிரயோகம் பண்ணப் பண்ண
அயர்வும் சலிப்பும் தாளமுடியவில்லை
எப்பொழுதாவதுதான்
அமைகிறது ஒரு நல்ல உரையாடல்
எப்பொழுதுதாவதுதான்
வாய்க்கிறது ஒரு நல்ல கவிதை
எப்பொழுதாவதுதான்
எடுக்கவேண்டும் போல
மொழியெனும் சிவதனுசை.
நடுவிலொரு தீவு
வேர்கள்
வளர்த்தும் விழுதுகள்
வெளிச்சம்
தின்ற இருட்டு
நாளையை
நம்பியே இன்று
இன்றென்பது
நேற்றின் எச்சம் போல
உடம்பிலிருந்து
மனசுக்கு
காமத்திலிருந்து
கவிதைக்கு
இங்கே இப்படி
அங்கே எப்படியோ
கடலலைகளுக்கு
ஓய்வுண்டா
****
இவ்வளவுதான் முடிகிறது
நேற்று நண்பகலில்
கோயிலுக்குப் போய்விட்டு
வருகிற வழியில்
கீழே கிடந்த
ஸ்கூட்டர் சாவியை எடுத்து
பக்கத்திலிருந்த டீக்கடையில்
கொடுத்துவிட்டு வந்தேன்
(தேடிக்கொண்டு வந்தால்
கொடுத்துவிடச் சொல்லி)
போன மாசம்
கபால¦ஸ்வரர் கோயில் போயிருந்தபோது
ஸ்தல விருஷத்துக்கு அண்டையில் கிடந்த
முள்கொம்பை எடுத்து
ஒரு ஓரமாய்ப் போட்டுவிட்டு வந்தேன்
கொஞ்ச நாள்கள் முன்பு
தெரு நடுவே இறைந்துகிடந்த
கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கி
தூரப் போட்டுவிட்டு வந்தேன்
இரண்டு மூன்று மாசத்துக்கு முன்னால்
இளங்கவிஞன் ஒருவன் கவிதைகள் பற்றி
விலாவாரியாய்
கட்டுரையெழுதி அனுப்பி வைத்தேன்
இந்தக் கல்வியாண்டில்
தமிழக அரசுத் தயவில்
என் சின்ன மகனுக்கு
திரைப்படக் கல்லூரியில்
இடம் வாங்கிக் கொடுத்தேன்
வேலையில்லாமல்
திண்டாடித் திணறிப்போன பெரியவனை
இயக்குநர் நண்பர் ஒருவரிடம்
உதவியாளராகச் சொல்லிச் சேர்த்து விட்டிருக்கிறேன்
மனைவியிடம்
சண்டை போடாமலிருக்க தீர்மானித்திருக்கிறேன்
இனிமேல் கைநீட்டுவதில்லை
என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்
அம்மாவிடம்
கோபப்படாது இருக்கிறேன்
நண்பர்களை
தொந்தரவுபடுத்தக்கூடாது என்றிருக்கிறேன்
எழுதுவது படிப்பதில்
மும்முரமாய் ஈடுபட்டிருக்கிறேன்
எவ்வளவு நினைத்தாலும்
இவ்வளவுதான் முடிகிறது
இந்த வாழ்க்கையில்.
****
அழைக்கிறவர்கள்
நேற்று
சுடலை கூப்பிட்டிருக்கிறான்
போய்
வந்திருக்கிறேன்
என்ன
நடந்ததோ தெரியாது
இன்று
தைரியமாய் இருக்கிறேன்
போன மாசம் போல
இசக்கி அழைத்திருந்தாள்
போக
முடியாமல் போயிற்று
வருத்தப்பட்டுக் கொண்டிருப்பாளோ
என்னவோ தெரியாது
பதினெட்டாம் படி கருப்பசாமி
எப்பொழுதும் வரச்சொல்லி
ஆளனுப்பிக் கொண்டேயிருக்கிறான்
அவன் முகத்தில் விழிக்கக் கூச்சமாயிருக்கிறது
ஆனால் ஒருநாள் நிச்சயம் போவேன்
அவனே எதிர்பாராதபடிக்கு
புட்டார்த்தி அம்மன்
அடிக்கடி கனவில் வந்து
எவ்வளவு காலம்
இப்படியே இருப்பாய்
என்று கேட்டுக் கொண்டிருக்கிறாள்
ஒருமுறை
வந்து போ என் சந்நிதிக்கு
என்று உத்தரவிட்டிருக்கிறாள்
இன்னும் போக முடியவில்லை
அந்த வழியே கடந்து சென்றாலும்
உஜ்யனி மாகாளி
ஒருநாள் வந்து
பார்த்துவிட்டுப் போ
என்று சொல்லிவிட்டிருக்கிறாள்
போக முடியாமல்
இருந்து கொண்டிருக்கிறது
போகவேண்டும் கட்டாயம்
சிவகாமித்தாயும் நடராஜனும் மட்டும்
அழைக்க
யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் போல
(நன்றி: வண்ணநிலவனுக்கு (தலைப்புக்காக)
****
Jul 9, 2011
தக்ஷ்ணாமூர்த்தியான..-விக்ரமாதித்யன் நம்பி
தக்ஷ்ணாமூர்த்தியான...
மாமிசம் தின்னாமல்
சுருட்டுப் பிடிக்காமல்
பட்டை யடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடைவராதது பொறாமல்
பதினெட்டாம்படி விட்டிறங்கி
ஊர்ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்
வீடு
வீடு பத்திரமான இடம்
“புலிப்பால் கொண்டு வரப்
போனான் ஐயப்பன்“
புத்தி வளர
பேச்சு குறைய
அந்தம் கண்டது மௌனம்
காய்ந்து வெடித்ததும்
அனாதையாக
காற்றில் அலைக்கழியும்
இலவம் பஞ்சு
ஊருக்கு வெளியே
தாமரைக் குளம்
தனியே
பூத்துக் கிடக்கும்
வெறிச்சோடி
*******
Jan 19, 2011
பொருள்வயின் பிரிவு –விக்ரமாதித்யன் நம்பி
பொருள்வயின் பிரிவு
அன்றைக்கு
அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை.
நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது
சாரல் மழைபெய்து
சுகமான குளிர் வியாபித்திருந்தது
அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்
அரவம் கேட்டு விழித்த சின்னவன்
சிரித்து விளையாடிக்கொண்டிருந்தது
சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்
இவள்
வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்
வெளுத்த துணிகளை எடுத்துவைத்தாள்
வாசல்வரை வந்து
வழியனுப்பி வைத்தாள் தாய்போல
முதல் பேருந்து
ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்
பிழைப்புக்காக
பிரிந்து வந்துகொண்டிருந்தேன்
மனசு கிடந்து அடித்துக்கொள்ள.
****
கூண்டுப் புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக்கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்து இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்குத் தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச்சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவிக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்
****
நேற்றிரவு
நரகம்
இன்று இரவு
சொர்க்கம்
நாளை நல்லபடியோ
கெட்டபடியோ
வருநாளெல்லாம்
திருநாளென்ற கனவில்
ஒருநாளுக்காக
ஒவ்வொரு உயிரும்
வெறுநாள்களை
வாங்கிவைத்தபடி.
****
பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை
தீப்பெட்டி படம் சேகரிக்கிறான் மகன்
நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்
****
முழுதாய் வாழ்ந்து முடிக்க
முன்னூறு வார்த்தைகள் போதும்
இவனோ வார்த்தைகளின் ஊர்வலத்தில்
வழிதவறிய குழந்தை
****
அண்ணி மேல் கொண்ட ஆசை
கொழுந்தனைக் குழப்ப
அந்நிய இடமாகும் வீடு
விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்
கைபட
தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்
Dec 19, 2010
இலக்கில்லாத பயணம்-வித்யாஷங்கர்
விக்ரமாதித்யன் (விளக்கு விருது விழாவிற்காக தயாரிக்கப்பட்டு படிக்கப்படாத கட்டுரை) இலக்கில்லாத பயணம்
ஒரு மரத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக பார்க்கிறோம். அதன் உச்சியில் நின்றுபார்ப்பவருக்கு அதன் விஸ்தீரணமும் உயரமும் பெருங்கிளைகளும் பூக்களும், கனிகளும் வியப்பாக இருக்கும். அதன் நிழலிருந்து பார்ப்பவருக்கு வேறாகவும், அதன் கனியை ருசித்தவருக்கு வேறாகவும் மரம் தோற்றமளிக்கும். விக்ரமாதித்யன் என்ற பெருமரத்தின் நிழலை அனுபவித்திருக்கிறேன். பூவை ரசித்திருக்கிறேன். கனியை ருசித்திருக்கிறேன் கோபத்தில் கிளைகளை வெட்டி ஏறிந்து காயப்படுத்தி இருக்கிறேன்
ஆனாலும் அந்த பெருமரத்தை பற்றிப்படர்ந்து வாழும் கொடியாகவே என்னை உணர்கிறேன். அந்தப் பெருமரத்தைப் பற்றிப் படர்ந்து வியந்து தழுவியிருக்கிறேன். அவ்வப்போது பெருங்காற்றில் புயலில் விழுந்து விடாமல் காத்தும், பூக்கள் உதிர்ந்து விடாமல் கனிகள் களவாடப்படாமலும் காத்துமிருக்கிறேன். அதனாலேயே பெருமரத்தை விலகிநின்று பார்க்க முடியாமலும் போயிருக்கிறேன்.
கவிஞனின் கவிதைகள் குறித்து பலரும் பேசினாலும் கவிஞனின் வாழ்வியலின் பின்ணணியை வெகு நெருக்கமாக தெரிந்தவன் என்ற முறையில் உங்களோடு சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னைக்கு 1979ல் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் கொடுத்த அறிமுக கடித்தோடு வந்து சேர்ந்த இடம் உலகின் முதன் முதலாக சமஸ்கிருதத்தில் படமெடுத்த ஜி.வி. ஐயரின் இல்லம். அவரது வீட்டின் அவுட்ஹவுசில் கல்லூரி தோழர் தேவதாசோடு வாசம்.
வந்து சேர்ந்த அன்றே, பூமணி மூலம் சோவியத் கலாசார அரங்கில் போயிருந்தபோது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நூற்றாண்டு விழாவில் வண்ண நிலவனோடு சேர்த்து , நீங்கதானே நம்பியண்ணாச்சி என்று கேட்டு அறிமுகமானேன்.
விக்ரமாதித்யன் குறித்த முன் படிவத்தை கௌரிஷங்கரும், தா. மணியும் ஏற்படுத்தியிருந்தனர். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நெல்லையில் அவர் தொடர முடியாது விட்டுவிட்ட மார்க் கெட்டிங் ரிசர்ச் பணியை தொடர்ந்தபடி நான் சென்னை வந்தேன்.
சில மாதங்களில் பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி நவகவிஞர்கள் வரிசையில் விக்ரமாதித்யன் கவிதை தொகுப்பும் வெளியிட கேட்கப்பட்டது.
தி.நகரில் இருந்த சாரித்தெரு கார்க்கி நூலக மொட்டை மாடியில் சிகரெட் பிடித்தபடி சமயவேல் தான் ஆகாசம் நீலநிறம் என்ற தலைப்பு தான் சரியாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். அப்போது நானும் உடனிருந்தேன்.
நானும் அவருமாக பலபத்திரிகைகளில் ப்ரிலேன்சராக பணிபுரிந்தோம். பல்வேறு நபர்களை பிரமுகர்களை குறிப்பாக தேவநேய பாவணர், பெருஞ்சித்திரனார், மே.வி. வேணு கோபால பிள்ளை, அப்பாதுரையார் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றோம்.
திடீரென ஒருமுறை மூத்த பத்திரிகையாளர் மறைந்த பத்திரிகையாளர் கார்க்கியை அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவர் தான் தராசு என்ற பத்திரிகைக்கு கொண்டுவருவது குறித்து பரிந்துரைத்தார்.
அவர்கள் நடத்திய திரைச்சுவைக்கு விக்ரமாதித்யனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியான கவிதை நூலை மூர்மார்க்கெட்டில் விலைக்கு போட்டு ரூபாய் 75 பெற்று இளையராஜா சிறப்பிதழ் சிறப்பாகச் செய்து கொடுத்தோம். அதில் எங்களுக்கு கிடைத்தது வெறும் 275 கூட இருக்காது. ஆனால் நாங்கள் சந்தித்த சினிமாக்காரர்களிடம் ஆளுக்கு நூறு வாங்கியிருந்தால் கூட எங்களுக்கு ஆயிரம் கூடக் கிடைத்திருக்கும். அந்த சிறப்பிதழை அந்த இசையரசர் வலது கையால் வாங்கி இடது புறம் இருந்த தனது உதவியாளரிடம் புரட்டிக்கூட பார்க்காமல் கொடுத்துவிட்டார் என்பது தான் பெருத்த சோகம். 2 ரூபாயோடு நண்பர் ஒருவரை உதவி கேட்கப் போய் அண்ணாநகரில் அவர் இல்லாததால் நடந்தே தி.நகருக்கு திரும்பினோம்.
ஒரு புது வருடப்பிறப்பன்று ருத்ரய்யாவின் அலுவலகத்திலிருந்து தி.நகருக்கு மழையில் நனைந்தபடி நடந்தே திரும்பியிருக்கிறோம்.
இன்னொரு முறை வண்ணதாசன் சகோதரர் வீட்டிலிருந்து குரோம்பேட்டை அஸ்தினாபுரம் என்று நினைவு திரும்ப நடத்தே வந்திருக்கிறோம்.
இந்த நேரங்களில் காசு இல்லை என்றது ஒருபுறம்மொன்றலும் இந்த நேரங்களில் அதிகமாகப் பேசியது, இலக்கியம் குறித்து தான். நல்ல நூல்களை படிப்பதை வேள்வி போல எனக்குள் ஏற்படுத்தியவர், விக்ரமாதித்யன்.
நேஷனல் புக்ட்ரஸ்ட் புத்தகங்களை (நீலகண்ட பறவையைத் தேடி, அக்னிநதி, சோரட் உனது பெருகும் வெள்ளம், சுந்தரனும் சுந்தரிமார்களும் பாத்துமாவின் ஆட்டுக்குட்டி, காலம், சமகால மலையாள சிறுகதைகள் ஒரு லட்சிய இந்து ஹோட்டல், ஒரு கங்கை பருந்தின் சிறகுகள், கவிஞன்) இப்படி தேடித்தேடி படித்தோம். பலமாநில சூழலையும் அதிலிருந்து உள்வாங்கினோம். கூடுதலாக இந்தியாவில் ஒடும் எல்லா நதியிலும் ஆதிசங்கரா படப்பிடிப்புக்கு சென்ற போது குளித்த அனுபவம் எனக்குண்டு.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது கவிதைகள் இடம் பெற்ற புத்தகத்தை பழைய புத்தக கடையில் போட்டு பணம் பெற்று செய்திசேகரிக்க செலவழித்திருக்கிறோம். பால குமாரனிடம் அவர் டிக்டேச் செய்ய நான் எழுத தினமும் அப்போதே 35 ரூபாய் கொடுப்பார். அதை வாங்கிவந்து இருவரும் சாப்பிட்டிருக்கிறோம். இரண்டு டீயும் இரண்டு சிகரெட்டும் கடன் வாங்கி சிகரெட் அட்டையில் எழுதப்பட்ட ஐடியாக்கள் தான் பின்னால் தராசு பார்மெட்டாக மாறியது.
வாழ்வதற்கான போராட்டத்திலும் வாழ்வை கவிதையாக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர் விக்ரமாதித்யன்! அவர் குடித்த ஒரு சொட்டு மதுபானம் கூட அவருக்கு கவிதை தராமல் வீணாகியதில்லை என்பதை சாட்சியாக இருந்து பார்த்திருக்கிறேன்.
பத்திரிகை அலுவலகங்களின் விவாதங்களில் என்னை முன் நிறுத்துவதை விக்ரமாதித்யன் தொடர்ந்து செய்து வந்தார். இப்படித் தான் நான் நக்கீரன் ஆசிரியர் ஆனதும் கூட. (பத்திரிகையே வேண்டாம் என்று அன்று நான் முடிவெடுத்திருந்த போது நானே ஆசிரியர் ஆனது வேறொரு தனியான கதை).
நாங்கள் பணியாற்றிய பத்திரிகை நிறுவனங்களில் என்னை முன்னிலைப்படுத்துவதை அவர் ஒரு கடமையாகவே எடுத்துக் கொண்டு செய்தார். இதனால் பலர் விமர்சனத்திற்கும் ஆளானார்.
பத்திரிகைகளுக்காக நாங்கள் இருவருமே ரீரைட் செய்ததை அல்லது ரிப்பேர் செய்ததை வைத்து இருவரையும் இறந்த பின் கொளுத்தலாம். அந்த அளவுக்கு எழுதிவிட்டோம் வாழ்க்கையை கவிதையாக்குவதற்காக வாழ்க்கையை தொலைத்துவிட்டு கவிஞனாக நிற்கிறார்! கவிதைகள் அவரது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது.
எனக்குத் தெரிந்து யாரையும் அவர் எதிரியாக கருதியது கூடக் கிடையாது.
கசப்புஇனிப்பு கருப்புவெருப்பென்ற எந்த விதமான தீர்க்கமான முடிவும் எது குறித்தும் அவருக்கு கிடையாது.
எல்லாமே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். சமூகம் அப்படித்தானே இருக்கிறது என்ற மனோபாவமுடையவர்.
என்னளவில் சிறுசிறு பொருளியல் சார்ந்த இலக்குகளை நிர்ணயித்து வெற்றிகண்டு, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று கண்டு கொண்டேயிருக்கிறேன். இலக்குகளோடு பயணித்தாலும் இறுதியில் கிடைப்பது வெறுமையே! இலக்கின்றி பயணித்தாலும் இறுதியில் கிடைப்பது வெறுமையே. பயணம் மட்டுமே பயணிக்கு சந்தோஷம், சாகசம், துக்கம் பதிவேடு. இத்தனைகால இருவரது பயண முடிவும் தலைகீழ் விகிதங்கள் ஆனாலும் இருவருக்குமான விடை பூஜ்யம் தான்!
வண்ண நிலவன் வீட்டிற்கு இருவரும் பல இரவு குடித்து விட்டுச் சென்று சாப்பிட்டுவிட்டு, காசு வாங்கி வந்ததுண்டு. சில நேரம் கவிஞர் நா. காமராசன் வீட்டிற்கும் அவர் அழைத்துச் செல்வதுண்டு.
அப்படி குடித்த நேரங்களில் அவர் சொல்லச் சொல்ல நான் எழுதிய கவிதைகள் பல உண்டு. அப்படி அவர் சொல்லும் போதே சில திராவிடத்தனமான வரிகளை வேண்டாமென்று விலக்கிவிடுவேன். இப்படி பல வரிகளை நீக்கி நீக்கியே அவரது கவிதைகளை எடிட் செய்யும் நுட்பம் பெற்றேன். இப்படித்தான் அவரது பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளை எடிட் செய்தேன். சில நேரங்களில் விமலாதித்த மாமல்லன் உடனிருந்திருந்தான்.
அவரது ஒட்டு மொத்த தொகுப்பை எடிட் செய்ய கிட்டத்தட்ட 3 மாதம் எடுத்துக் கொண்டேன்.
அப்போது நான் எழுதிய பேசாமல் ஒரு நாளும் என்ற தொகுப்பு அச்சு அசலான விக்ரமாதித்யன் பிராண்டாக இருந்தது அதனாலேயே இரண்டு குறு நாவல்கள் எழுதும் பணியில் என்னைத் திணித்துக் கொண்டு முழுமூச்சாக அவரது நடையிலிருந்து விலகினேன்.
இருவரும் பத்திரிகையாளர்களாக பயணத்தாலும் அவர் திடீர் திடீரென அதிலிருந்து விலகி விட்டு விடுதலையாகிவிடுவார். அவர் தொடர்ந்தாற் போல ஒராண்டுக்கு மேல் எந்த நிறுவனத்திலும் பணியாற்றியதாக எனது நினைவில் இல்லை.
இருவரும் போதையில் சண்டையிட்டு கட்டிப்புரண்டாலும் மறுநாள் காலையிலேயே இருவரும் ராசியாகிவிடுவது, பல நண்பர்களிடையே இன்றும் வியப்பாகப் பேசப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள இலக்கிய நண்பர்கள் அவரைப் பார்க்கும் போது என்னை விசாரிப்பதும் என்னைப் பார்த்தால் அவரை விசாரிப்பதும் இன்று வரை தொடர்கிறது.
தஞ்சைக்கு நண்பர் உமாசந்திரன் திருமணத்திற்கு நான் சென்றேன். நக்கீரனில் ஆசிரியராக இருந்த நேரம் அந்த வாரம் உதயம் பத்திரிகையில் ல.சா.ரா. அவரது அம்மா பற்றி எழுதியிருந்தார். மது குடிக்கும் போது நான் அதைப்பற்றி விக்ரமாதித்யனோடு பேசினேன் பாருங்கள்! அவங்கம்மாவ பசு மாதிரி எழுதியிருக்கார். எங்கம்மா வோடதான் நான் குடிக்கவே பழகினேன் என்று சொன்னேன் தம்பி இதைத்தான் நீங்க எழுதனும் கவிதையா நல்லா வரும் என்று பேசியபடி அவரும் என்னோடு உடுத்திய உடையோடு ரயிலேறிவிட்டார். அப்போது தம்பி நக்கீரன் காமராஜீம் உடனிருந்தார்.
டாய்லட் அருகே அமர்ந்து குடித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம். இப்படித்தான் எனது முதல் தொகுதி வரக் காரணமானது. அது தான் சந்நதம்! அவர் சொன்னது போலவே இன்றும் பலரும் எனது அம்மா கவிதையைக் குறிப்பிட்டே என்னிடம் பேசுகிறார்கள்.
எனது கவிதைகளால் அல்லாமல் விக்ரமாதித்யன் அவரது கவிதை நூல்கள், கட்டுரைகளில் அடிக்கடி என் பெயரை குறிப்பிட்டதால் இலக்கிய வட்டாரத்தில் எனக்கு பெரும் பரிச்சயம் ஏற்பட்டது.
விக்ரமாதித்யன் எதுவும் பெரிதாக நடந்துவிடாது என்று இலக்கற்று பயணித்து சில நல்ல கவிதைகளை சேகரித்து தந்திருப்பவர்.
இருவருக்கும் பயணம் மட்டுமே பொது.
அவருக்கு இலக்கில்லாமல்
எனக்கு சிறுசிறு இலக்குகளோடு பயணத்தில் முடிவில் இருவரும் கண்டடைந்தது என்னவோ வெறுமை தான். பயணம் மட்டுமே பயணிக்கு சந்தோஷம், சாகசம், துக்கம் பதிவேடு. இத்தனை கால இருவரது பயண முடிவும் தலைகீழ் விகிதங்கள் ஆனாலும் இருவருக்குமான விடை பூஜ்யம் தான்!
*******
நன்றி: சாமக்கொடை
Nov 28, 2010
விக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம் - ஷங்கர்ராமசுப்ரமணியன்
விக்ரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்டபோது படிக்கப்பட்ட கட்டுரை : ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஓம்
அது குறைந்திருக்கிறது
இது குறைந்திருக்கிறது
குறைவு குறைவினின்று எழுகிறது
குறைவினின்று குறைவு எடுத்து
குறைவே எஞ்சுகிறது
ஓம்
அசாந்தி அசாந்தி அசாந்தி
இந்த உலகில் பிறக்கும் மனிதஉயிர், மரணிக்கும் வரை தன்னை பின்னமாகவும் அபூர்ணமாகவும் கருதிக்கொள்கிறது. இயற்கையிலிருந்தும் இறைமையிலிருந்தும் ஒரு மனிதன் அல்லது மனுஷி தன்னைப் பிரித்துணரும் நாளிலிருந்து அவனது அவளது தனிமையும் மீட்சிக்கான தேடுதலும் ஆரம்பமாகிறது. அப்போதிருந்துதான் முழுமையை நோக்கிய பிரார்த்தனையும் ஏக்கமும் தன் குறையின்பால் புகார்களும் விசாரணைகளாகத் தொடங்கியிருக்க வேண்டும். 20 ஆம் நூற்றாண்டு தமிழ் நவீன கவிதைப்பரப்பில் இந்த மனத்தை வைத்துக்கொண்டு அலைக்கழியும் கவிதை உயிரியாக விக்ரமாதித்யன் என்னும் கவிதை ஆளுமையை நாம் வகுத்துக்கொள்ளலாம். 20 ஆம் நூற்றாண்டு என்னும் காலப்பின்னணியை 1947 இல் பிறந்த நம்பிராஜன் என்னும் உடல் இயங்கும் காலத்தை வைத்து மட்டுமே குறிப்பிடுகிறேன்.
விக்ரமாதித்யனின் கவிதைகளில் இயங்கும் உடலைப் பார்த்தால் அது சிலசமயங்களில் குரங்கின் கள்ளமின்மையைக் கொண்டிருக்கிறது. சிலவேளைகளில் மத்தியகால உடலின் வன்மையுடன் தோற்றம் தருகிறது. இதனால் விக்ரமாதித்யனின் அடியைத் தேடுவது மிகவும் சிரமம். இனக்குழு வாழ்வு மறைந்து முடியரசு ஸ்தாபிக்கப்படும் காலம் அதன் எல்லையாக இருக்கிறது.
ஒரு தோற்றத்தையோ காட்சியையோ படிமமாக்கி அதற்கு காலாதீத அர்த்தத்தையும்,உலகளாவிய பொதுமையையும் படைப்பில் ஏற்றும் நவீனத்துவ கவிதை நம்பிக்கையின் சிறுசாயல் கூட விக்ரமாதித்யனில் படியவேயில்லை. தோற்றத்தை விலக்கி மெய்மையைக் காண விரும்பும் அறிதலின் வேட்டை மூர்க்கமும் அவரிடம் இல்லை. நவீனத்துவக் கலைமனம் தன் அனுபவங்களாலும் தன்னைச்சுற்றிய பொருட்களாலும் ஆன உலகத்தைச் சிருஷ்டித்து ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவர முயல்கிறது.
விக்ரமாதித்யனின் கலை இதற்கு நேரெதிரானது. தோற்றம் அழகாவும் அனுகூலமாகவும் இருக்கும்போது உவகைபூத்து சன்னதமூர்க்கத்தில் ஆராதனை செய்கிறது. தோற்றம் பயங்கரமாகும்போது புரண்டழுது மண்டியிடுகிறது. இருளுக்குப் பிறகு மெல்லிய ஒளிவரும். மென்மையான வெளிச்சம் வெயிலாகி உடலைக் காயும். பின்பு வெயில் கனிந்து உடல்குளிரும். மீண்டும் இருள்வரும் என்ற இயல்பில் பற்றுறுதி கொண்ட லௌகீக உயிரின் விவேக ஞானம் அது. இதைத்தான் விக்ரமாதித்யன் மரபு, மரபு என உரக்கச் சொல்கிறார் என்று நான் கருதுகிறேன்.
ஒரு பின்மதியத்தில் விக்ரமாதித்யனும் நானும் நாகேஸ்ரர ராவ் பூங்காவில் அமர்ந்திருக்கிறோம். அந்தப் பூங்காவில் பவளப்பூச்சிகள் அதிகம். மாலை நடையாளர்கள் அப்போது பயிற்சியைத் தொடங்கியிருந்தனர். நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சில் ஒரு பவளப்பூச்சி ஜோடி ஒன்றின் மேல் ஏறிப் புணர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. நான் விக்ரமாதித்யனுடன் பேசிக்கொண்டே தன்னிச்சையாக அந்த ஜோடியைப் பிரித்துவிட்டேன். இரண்டும் பிரிந்து நின்று சில நொடிகள் சமைந்திருந்ததைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சி தொடங்கியது.
அண்ணாச்சியிடம் பூச்சிகளைப் பிரித்ததைப் பற்றி குற்றவுணர்ச்சியுடன் சொன்னேன்.அவர், 'கவலைப்படாதடா, திரும்ப சேர்ந்துரும்' என்றார். நான் காத்திருந்தேன். நான் பிரித்துவிட்ட பவளப்பூச்சிகள் மீண்டும் தமது காதலின் சவாரியைத் தொடங்கி நகர ஆரம்பித்திருந்தன. இதுதான் மரபின் விவேக ஞானம். நூலறிவு சாராத ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்கள் நடந்த பாதை அது.
கடவுள், பெண், வாழ்வு என்ற பிரமாண்டங்களின் முன்னிலையில் உயிர் நிகழ்த்தும் சூதாட்டத்திற்கான அழகிய சோளிகளைப்போல் விக்ரமாதித்யன் தன் கவிதைகளை மாற்றியுள்ளார். சோளிகள் குலுங்கி தரையில் பரவும் இசைக்கு ஒப்பான தனி இசைமையைத் தமது கவிதைகளுக்குள்ளும் உயிராய் புதுக்கி வைத்துள்ளார். மந்திர உச்சாடனங்கள், வார்த்தை விளையாட்டுகள், பழமொழிகள், வழக்காறுகள், உளறல்கள் என தமிழின் கலாசார ரேகைகள் இச்சோளிகளில் சேகரமாகியுள்ளன. இந்த விளையாட்டில் சிலசமயம் தர்மனாக தோற்கிறார். சகுனியாக ஜெயிக்கிறார்.
ஆக்கமும் அழிவுமான பேரியற்கை, கண்ணுக்குப் புலனாகாமல் தன்னை இயக்கும் சக்தியுடனான உறவையும் அனுசரணையையும் வேண்டி பரிமாற்றத்தைத் தொடங்கும்போதுதான் சமயமனம் பிறக்கிறது.
படைப்பு, வாழ்வு என்ற பிரிக்க முடியாத கணிதத்தில் இயங்கும் விக்ரமாதித்யனின் கவிதை உலகம் பிரத்யேக சமயமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் நம்பிக்கைகளும், சடங்குகளும், கடவுளரும், திருவிழாக்களும், அறங்களும் வேறு.நன்மை தீமை முயங்கி நெருப்பின் சூட்டில் இருக்கிறது அது. அவரது கவிதைகளுக்குள் உங்களுக்குத் தெரிந்த கடவுள்களும் இருப்பதால் அவற்றை ஒரு பெருஞ்சமயத்துக்குள் வகைப்படுத்திவிட முடியாது. மாமிசப்படையலோடு கற்களால் சிவனைப் பூஜிக்க வந்த வேடன் கண்ணப்பனின் சமயமும் நம்பிக்கையும்தான் விக்ரமாதித்யனுடையதும்.
விதியின் கையில் வசமாகச் சிக்கிக்கொண்ட தன்னிலை விக்ரமாதித்யன். முதலில் முரண்டி பின்பு அந்தத் தன்னிலை தன்னை விதியிடம் ஒப்புக்கொடுக்கிறது. அந்தத் தன்னிலை நன்மைக்கும் தீமைக்கும் எப்படி பொறுப்பாக முடியும். தன்னைக் கொண்டு செலுத்தும் நிகழ்ச்சிப்போக்கின் ரயிலில் பயணித்து அழுக்குகளோடும் பசியோடும் குற்றம் மற்றும் தீமையின் பனிக்காற்றில் உடல் நடுங்கிப் பயணிக்கிறது. ஒரு சின்னஞ்சிறிய நிகழ்வால் ஒரு இனக்கூட்டமே துயரத்தை அனுபவிக்கும் நிலவியல் நம்முடையது. நமது பெண்கள் துயரத்தின் எண்ணற்ற அலைகளால் மோதி மோதி கடவுளின் அரூபத்தை அடைவதுபோல விக்ரமாதித்யனும் தனது பாடுகள் கவிதைகள் வழியாக இறைமையை அடைய முயல்கிறார்.
விக்ரமாதித்யனின் கவிதைகளில் உள்ள நான் தத்தளிக்கிறது. விளிம்புக்குத் தள்ளப்படுகிறது. சிதைக்கப்படுகிறது. அவமதிக்கப்படுகிறது. நிராசைக்குள்ளாகிறது.
இயல்பு திரிய நிர்ப்பந்திக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் அது உயிரின் அழகுடன் மீண்டு நிற்கிறது. அவர் கவிதைகளில் மரணம் குறித்த பேச்சோ, அச்சமோ, போதமோ கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம். லோகாதாயமும் நம்பிக்கையும் தொழில்படும் உலகில் உயிர்த்துவமும் காதலும்தானே உற்பத்தி சக்திகளாக இருக்கமுடியும். மரணம் என்னும் தத்துவப்பிரச்னையைத் தீண்டாமல்தான் அது இயங்கவும் முடியும்.
தமிழ் நவீன கவிதைப்பரப்புக்குள் நுழையும் வாசகனை வசீகரித்து நிலைக்கச் செய்யக்கூடியவை விக்ரமாதித்யனின் கவிதைகள். வெகுஜனப் பாடல் வரிகளைப் போல் இவரது கவிதை வரிகளை ஞாபகத்தில் வைத்து தங்கள் வாழ்வின் வேறுவேறு தருணங்களில் அசைபோடும் பொதுவாசகர்களின் எண்ணிக்கை தமிழ் கவிஞர்களிலேயே இவருக்குத்தான் அதிகம் என்பதை என்னால் நிச்சயம் சொல்ல முடியும். பாப்லோ நெரூதாவின் அய்லா நெக்ரா தீவின் குகைச்சுவரில் காதலர்கள், பாப்லோ, உங்கள் கவிதைகளால் நாங்கள் காதலிக்கிறோம் என்று எழுதியிருப்பதைப் படித்திருக்கிறேன்.
இப்படியாக விக்ரமாதித்யன் தமிழ்நினைவின் ஒரு அம்சமாக நிலைகொள்ளும் காலம் இது. விக்ரமாதித்யனின் வரிகளுடன் நான் எதிர்கொள்ளும் பெண்களை, காதலை,வலிகளைக் கடந்திருக்கிறேன்.
வெட்கமும் காமமும் பருவாய்ப் பூத்திருக்கும் பெண்ணை இன்னமும் கடந்து செல்லும்போது ‘பருவைத்த முகம் பார்க்க அழகாகத்தான் இருக்கிறது’ என்ற இவரது கவிதை மனதில் வந்து செல்லும்.
"போன வருஷச்சாரலுக்கு
குற்றாலம் போய்
கைப்பேனா மறந்து
கால்செருப்பு தொலைந்து
வரும்வழியில்
கண்டெடுத்த
கல்வெள்ளிக் கொலுசு ஒண்ணு
கற்பனையில் வரைந்த
பொற்பாத சித்திரத்தை
கலைக்க முடியலியே இன்னும்"
இக்கவிதையை நான் எனது பதினெட்டாம் வயதில் படித்தேன். இதில் இருக்கும் அந்தரங்க தொனியும் ஒன்றை இழந்து ஒன்றை மீட்கும் காதலின் துயரார்ந்த விதியும் படிக்கும்போது இன்றுவரை மாயம் குறையாமல் வசீகரித்துக்கொண்டே இருக்கிறது.எந்த மறைபொருளும் இல்லாமல் பாறை ஈரத்தில் கால் உணரும் சில்லிடலை இவர் இந்தக் கவிதையில் எப்படி கொண்டுவந்தார். இதுபோன்ற அனுபவங்கள்தான் விக்ரமாதித்யன் கவிதைகளின் பயன்பாடும் கூட.
கவிதை என்ற வடிவத்திலேயே தன் முழுவாழ்வையும் வெளிப்படுத்தும் மூர்க்கத்தில் கொள்ளும் தோல்விகளும் அப்பட்டமாகவே வாசகன் முன் இருக்கின்றன. விதியின் போக்கில் தன்னை ஒப்புக்கொடுத்த வாழ்க்கையில் இவர் பயணித்த உலகங்களும் அனுபவங்களும் மிக மிக உக்கிரமானவை. இல்லாமையும், கீழ்மையும் தோய்ந்த அவரது சுய அனுபவங்களை பஷீர் போல உயிர்த்துவத்துடன் எழுதத் தொடங்குவதற்கு இந்த விருது அவருக்கு தூண்டுதலை அளிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
Nov 14, 2010
நான்கு கவிதைகள்-விக்ரமாதித்யன் நம்பி
1
சிறு தெய்வங்களை
சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம்
பெருந் தெய்வம்தான்
பிடிகொடுத்துத் தொலைக்காது
2
முந்தாவிட்டால் ஒன்றும்
மோசமில்லை
பிந்திவிட்டாலோ
பெரும்பாதகம் வந்துவிடும்
3
செடிகள்
வளர்கின்றன
குழந்தைகள்
வளர்கிறார்கள்
எனில்
மரங்களுக்கு
வருவதில்லை மனநோய்
4
பறவைகள்
பறக்கும் ஆகாயத்தில்
புழுக்கள்
வளரும் பூமியில்
மானுடம் மட்டும்
மயங்கும் இடம் தெரியாமல்.
Oct 30, 2010
வண்ணநிலவனின் 'எஸ்தர் ' இலக்கிய அனுபவம் -விக்ரமாதித்யன்
தமிழில் நிறையவே சிறுகதைகள் வருகின்றன. இப்படிச்சொல்வது பத்திரிக்கைக் கதைகளை மனதில் கொண்டு இல்லை. இலக்கிய சிறுகதைகளையே குறிப்பிடுவதாம்.
இவ்வளவு காலத்துக்குப் பிறகு, நமது இலக்கிய சஞ்சிகைகளில் சம்பவக் கதைகள், நடைச் சித்திரக் கதைகள், இந்த இடத்தில் தொடங்கி இந்த இடத்தில் முடிகிற கதைகள், ஓ ஹென்றி முடிவுக் கதைகள், வட்டார இலக்கிய பம்மாத்துக் கதைகள், ஐரோப்பிய இலக்கியப் பாதிப்புக் கதைகள், (இப்போதெல்லாம் லத்தீன் அமெரிக்கப் பாதிப்புக் கதைகளுக்குத் தான் மவுசு) உள்ளூர் பாதிப்புக் கதைகள், போலி முற்போக்குக் கதைகள், ஆண்-பெண் சினேகக் கதைகள், வேலையில்லாத் திண்டாட்டக் கதைகள், வரதட்சிணைக் கொடுமைக் கதைகள், பெண்ணிணக் கதைகள், குடும்பக்கதைகள், கோபம் கொண்ட இளைஞர்களின் அபத்தக் கதைகள், நேர்கோட்டில் இல்லாதக் கதைகள் இப்படி இரண்டாயிரம் வருஷத்துக்கும் போதுமான சிறுகதைகள் தமிழில் வந்து குவிந்து விட்டன.
இவ்வளவு சிறுகதைகளுக்கும் மத்தியில் சுயம்புவான, கலாபூர்வமான ஆழமும் வீச்சும் கொண்ட படைப்புக்களை புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி, சம்பத், நகுலன், அசோகமித்திரன், சார்வாகன், சுந்தர ராமசாமி, ஆர்.ராஜேந்திர சோழன், ந.முத்துசாமி, சா.கந்தசாமி, பிரபஞ்சன், கோணங்கி, ஜெயமோகன், வண்ணநிலவன் முதலானோர் எழுத்துக்களில் காணக்கிடைக்கின்றன. இலக்கிய உன்னதம், மொழி வளர்ச்சியெல்லாம் இத்தகைய எழுத்துக்கலைஞர்களையே சார்ந்திருக்கிறது. இவர்களே உண்மையில் படைப்பிலக்கிய வாதிகளாகவும் புதிது செய்து சாதிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
புதுமைப்பித்தனுக்குப் பிறகு சிறுகதையில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்திருப்பவர் வண்ணநிலவன் என்பதைத் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறியும். எதார்த்தச் சிறுகதையில் தொடக்கம் பெற்று, வாழ்வின் நுட்பமான அம்சங்களைக் காண்பிக்கிறதாக ஆகி, சோதனை ரீதியான எழுத்து என்று தொடர்ந்த வளர்ச்சி கொண்டவை இவர் கதைகள். எஸ்தர் தொகுப்புக்கும் பாம்பும் பிடாரனும் தொகுப்புக்குமிடையே தெரியும் வித்தியாசம் நல்ல படைப்பாளியின் இயல்பான மாற்றம்.
எழுதுவது பெரிதில்லை. அது சிறுகதைக்கு வளம் சேர்ப்பதாக அமைவது முக்கியம். அதைச் சாதித்தவர்களில் முக்கியமான ஒருவர் வண்ணநிலவன். எஸ்தர், அழைக்கிறவர்கள், துக்கம், தருமம், அரெபியா, பிணத்துக்காரர்கள், பாம்பும் பிடாரனும் முதலான இவர் கதைகள் தமிழ்ச்சிறுகதையில் ஒரு தனி இடம் வகிப்பவை. இதுவரையுள்ள கதைபோல இல்லாதிருப்பதே ஒரு கதையின் விசேஷத் தகுதி, உயர்வு. இந்தக் கதையை இன்னொருவர் எழுதியிருக்க முடியாது என்று, நினைக்க வைக்கிற தனித்தன்மையே ஒரு படைப்பாளிக்குப் பெருமை. வண்ணநிலவன் கதைகள் அத்தகையவை.
வண்ணநிலவனின் எஸ்தர் சிறுகதை தமிழ்ச்சிறுகதை இலக்கியத்திலேயே மிக முக்கியமான ஒன்று. கிறித்துவ வாழ்க்கைப் பின்புலத்தில் இலக்கியமாகி நிற்கிற எழுத்து.
'முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று '
-கதையின் முதல்வாக்கியம்
'வெகுகாலம் அந்தக் கண்களை அவள் மறக்காமல் இருந்தாள் ' -கடைசி வாசகம்.
இதற்கு நடுவே கதை. தென்கோடிக் கிராமம் ஒன்றில் மழை பொய்த்துப் போய் வறட்சியுண்டாகும் போது, ஒரு எளிய கிறித்தவக் குடும்பம் எதிர் கொள்ளும் வாழ்க்கைப் பிரச்சினையே கதையின் மையம்.
குறுநாவலாகத் தெரிகிற இதன் கதை வெளிப்படையானது. முடிவு தவிர்த்து. பாத்திரங்களைத் தன் போக்கில் காண்பித்துக் கொண்டு போவதும், அவர்கள் சம்பந்தப்பட்ட விவரங்களை விஸ்தாரமாக விவரிப்பதும், காட்சிகளை அடுத்தடுத்து சித்தரிப்பதுமாக வளர்கிறது கதை.
அந்தக் குடும்பம் இனிமேலும் ஊரில் இருக்க முடியாது என்கிற நிலைக்குள்ளாகும்போது, பஞ்சம் பிழைக்க வெளியேறிப் போக வேண்டியிருக்கிறது. நடமாட முடியாத, காது கேளாத, கண் சரியாகத் தெரியாத பாட்டியை என்ன செய்வது ? இதுதான் பிரச்சினை.
அகஸ்டின், டேவிட், பெரிய அமலம், சின்ன அமலம், ஈசாக், பாட்டி, எஸ்தர் - இவர்கள்தாம் கதை மாந்தர்.
அகஸ்டின் மூத்தவன். எதிலும் இவனை நம்பி எதுவும் செய்யமுடியாது. அமைதியானவன்போல எப்போதும் திண்ணையையே காத்துக் கிடப்பான். ஆனால் உள்ளூர அப்படியல்ல. சதா சஞ்சலப்பட்டவன்.
அடுத்து டேவிட்.
பெரிய அமலம் ஒரு பெரிய குடிம்பத்தின் முதல் பெண்ணாகப் பிறந்தவள். மிகவும் அப்பிராணி. அதிகம் பேசாதவள். தனக்கென எதையும் ஸ்தாபித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையில்லாதவள்.
சின்ன அமலம் இதற்கு எதிரிடையான குணமுடைய பெண்.
ஈசாக் விசுவாசமான ஊழியன். அவனுடைய உலகம் காடு. விளைகளில் விளைகிற பயிர்களுக்காகவும் ஆடு, மாடுகளுக்காகவுமே உலகத்தில் வாழ்கின்றவன்.
எஸ்தர் இவ்வளவு பெரிய குடும்பத்தை நிர்வகித்து வருகிறவள்.
பாட்டி ஒரு காலத்தில் எல்லோரையும் சீராட்டினவள். இப்போது உபயோகம் இல்லாதவள். பிழைக்கப்போகிற இடத்துக்குக் கூட்டிக் கொண்டு போக முடியாது இருப்பவள்.
முன்னெல்லாம் சாப்பாட்டு நேரம் அந்த வீட்டில் ஆனந்தமாக இருந்தது. இப்போது நெல் அரிசிச் சோறு கிடைக்கவில்லை. கம்பையும் கேப்பையும் கொண்டுதான் சமையல்.
பக்கத்து வீடுகளில் எல்லாம் ஊரை விட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள். மேலத்தெருவில் ஆளே கிடையாது. இனிமேல் இந்த ஊரில் என்ன இருக்கிறது ? சாத்தாங்கோயில்விளையிலும் திட்டி விளையிலும் மாட்டைவிட்டு அழித்தாயிற்று. கூழ் காய்ச்சவும் வீட்டுச் செலவுக்கும் வரவரத் தண்ணீர் கிடைப்பது அருகிவிட்டது.
காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும் இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சதங்கை சத்தமும் கண் முன்னாலேயே கொஞ்சகாலமாய் மறைந்துவிட்டன.
'நீயும் உனக்குப் பிரியமானவர்களும் இங்கிருந்து போவதைத் தவிர வேறே வழியென்ன ? இன்னும் மழைக்காகக் காத்திருந்து மடிவீர்களா ? '-எஸ்தர் சித்திக்கு இருட்டு சொன்னது.
யாருக்குமே பற்றாத சாப்பாட்டைத் தட்டுகளில் பறிமாறினாள் எஸ்தர் சித்தி. குழந்தைகளுக்கும் கூடப் போதாத சாப்பாடு.
'நீங்க ரெண்டுபேரும் ஒங்க வீடுகளுக்குப் போய்க்கிங்க. புள்ளையளயுங் கூட்டிட்டுப் போங்க ' - பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் பார்த்துச் சொல்கிறாள் எஸ்தர் சித்தி.
'நீங்க ரெண்டுபேரும் எங்கூட வாங்க. மதுரையில போய்க் கொத்தவேல பார்ப்போம். மழை பெய்யுந்தன்னியும் எங்ஙனயாவது காலத்த ஓட்ட வேண்டியதுதானே! ஈசாக்கும் வரட்டும். '
'பாட்டி இருக்காள ? '
- டேவிட் கேட்கிறான்.
பதிலே சொல்லவில்லை எஸ்தர்.
அன்றைக்கு ராத்திரியில் சுமார் ஒரு மணிக்கும் மேல் வறட்சியான காற்று வீச ஆரம்பித்தது. அப்போது நடுசீட்டில் குழந்தைகளிடத்தில் படுத்திருந்த எஸ்தர் சித்தி எழுந்து போய்ப் பாட்டியின் பக்கத்தில் படுத்துக்கொண்டாள்....
***
பாட்டியைக் கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு போகிறதுக்கு, பக்கத்து ஊரான குரும்பூரிலிருந்து ஒரு பழைய சவப்பெட்டியை மிகவும் சொல்பமான விலைக்கு, ஈசாக்கே தலைச்சுமையாக வாங்கிக் கொண்டு வந்தான்...
யாரும் அழவே இல்லை. மாறாகப் பயந்து போயிருந்ததை அவர்களுடைய கலவரமான முகங்கள் காட்டின...
எஸ்தர் சித்திக்கு மட்டும், பாட்டியின் ஈரம் நிரம்பிய கண்கள் கூரையைப் பார்த்து நிலைகுத்தி நின்றது அடிக்கடி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது..
***
கண்களில் இமைகளைச் சுற்றி ஈரம் கசிந்து கொண்டிருந்தது பாட்டிக்கு. எஸ்தர் சித்தி வீட்டில் எல்லோரும் தூங்கியானபிறகு அடிக்கடி கைவிளக்கைத் தூண்டிக் கொண்டுவந்து பார்ப்பாள். அந்த வெளிச்சத்தில், அவள் கண்களின் ஈரத்துக்குப் பின்னே அழியாத நம்பிக்கை இருக்கும்...
இவ்வளவு தீவிரமாக நம்பிக்கைகொண்டு உறக்கமின்றிக் கூரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறவளை விட்டுவிட்டுப் போவதைத் தவிர வழி என்ன ? ஈசாக் துணையாக இருப்பானா ?
***
பாட்டியை என்ன செய்வதென்ற பிரச்சனையை எஸ்தர் சித்திதான் எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது. எதிர் கொள்கிறாள். தீர்த்து வைக்க வேண்டியதாக இருக்கிறது. தீர்த்து வைக்கிறாள். பாட்டியின் இருப்பு இவர்கள் பஞ்சம் பிழைக்கப் போகிறதற்கு முன் கேள்வியாகிறது. அதற்கு ஒரு விடை காண வேண்டியதிருக்கிறது. அந்தக் குடும்பத்தில் எஸ்தர் சித்தி ஒருத்திதான் இதை எதிர் கொண்டு சமாளிக்கத் திராணி கொண்டவளாக இருக்கிறாள். கடினச் சித்தம் கொண்டு பாட்டியின் இருப்பை முடித்து வைக்கும்படி ஆகிறது அவளுக்கு.
காலில் காயம்பட்டு ஓட முடியாத பந்தயக்குதிரை சுட்டுக் கொல்லப்படுகிறது. அதன் இருத்தல் அர்த்தமற்றதாகப் போகையில் இப்படி முடிவு நேர்கிறது. குணப்படுத்தமுடியாத நோயின் கொடுமைக்கு ஆளாகிற உயிர், போரில் குண்டடிபட்டு பிழைப்பது கஷ்டம் என்கிற அலவுக்குள்ளாகும் சிப்பாய் இவர்களுக்கெல்லாம் Mercy Killing இருக்கிறது. இதே போல பாட்டிக்கும்.
வண்ணநிலவன் அதிகமான அன்பை பிரசாரம் செய்பவர், பொதுவில். இங்கே இப்படியாக இருக்க நேரும் 'அன்பு '. பாட்டியை என்ன செய்வது ? விட்டுவிட்டுப் போகவும் முடியாது. பிறகு என்ன செய்யலாம். 'கருணைக் கொலை 'தான் செய்யத் தோன்றுகிறது எஸ்தர் சித்திக்கு. வேறே வழியில்லை. அவள் பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும் அவர்கள் பிறந்த வீட்டுக்குப் போகச் சொல்லிவிடுகிறாள். அகஸ்டினையும் டேவிட்டையும் ஈசாக்கையும் பஞ்சம் பிழைக்கக் கூட்டிக்கொண்டு போக முடிவு செய்கிறாள். பாட்டியை என்ன செய்வாள் ?
பாட்டியின் முடிவு சூசகமாகத்தான் காண்பிக்கப் படுகிறது. சிலவற்றை பூடகமாகத்தான் பேச வேண்டியிருக்கிறது. அந்த உயிரின் 'விடுதலை ' அப்படியானது.
படிக்காத பெண்ணின் ஜெபம், வாய்க்காலுக்கு அப்பால் வளராத ஊர், இளநீல வர்ணச் சுவர்கள், ஒரு வெள்ளை வெயில், உயிர் பெற்றுவிட்ட இருட்டு, ஆட்டுபிழுக்கை மணம் கலந்த காற்று, ரயில்வே ஸ்டெஷனில் தண்ணீர் பிடிப்பது, தண்டவாளத்தின் மீதேறி மந்தையாக கடந்து போகும் ஆடுகள் - காட்சிச் சித்தரிப்புகளெல்லாமே கதையம்சத்தில் கலந்திருப்பவை.
வழக்கமான கதையைக் காட்டிலும் இதில் விவரணங்கள், தகவல்கள் அதிகப்பங்கு வகிக்கின்றன. இவை கதையை தீவிர கதிக்கு இட்டுச் செல்வதாகவே அமைந்திருக்கின்றன.
நிறைய பாத்திரங்களும் அநேக விஷயங்களும் உள்ள இக்கதையின் உருவொழுங்கு சிதையாது, உருவ அமைதி கெடாது இருப்பது உண்டுபண்ணிக் கொண்டதாக இருக்க முடியாது. தன்னியல்பில் கூடிவந்ததாகவே இருக்கவேண்டும்.
இந்தக் கதையின் நடை 'கடல்புரத்தில் ' போல பைபிள் நடையில்லை யெனினும் பெரிதும் அதன் சாயலினான அமைதியும் எளிமையும் உள்ளது. அவனூர், அண்டை வீட்டார் கதைகளைவிடவும் பைபிள் சாயல் குரைவு.
இல்லாமையில் நேர்கிற நொம்பலங்கள், வறுமை, தரித்திர நிலையில் இருக்கும்படியான வாழ்வு, இவற்றைச் சரியாகச் சொல்கிற படைப்புகள், தமிழில் மிகமிகச் சொற்பம். இவை கலை இலக்கியமாவது கஷ்டம் என்பதோடு, சரியாக எழுதுபர்கள் இல்லை என்பதும் இன்னொரு உண்மை. எஸ்தர் இலக்கியமாகியிருக்கிறது என்றால், இதன் பின்னணியில் இந்தக் கலைஞனுக்கு இருக்கும் இது போன்ற வாழ்பனுபவமே காரணம். அனுபவ வறுமை யுள்ளவன் ஒருநாளும் கலைஞனாக மாட்டான். நிறையச் செய்யலாம். செய்து ?
இலக்கியம் செய்வது இல்லை. படைப்பது. எஸ்தர் - படைப்பு. படைப்பாளிகளாக விரும்பும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டிய படைப்பு.
***
பிரான்ஸிலிருந்து வெளிவரும் மெளனம்- கலை இலக்கிய இதழிலிருந்து. 1994
***
Jul 29, 2010
இவ்வாறாக- விக்ரமாதித்யன்
இவ்வாறாக
அன்றைக்குப் போலவே
இன்றைக்கும்
ஆதரவாயிருக்கும் அம்மாவை
ஐயோ பாவம்
தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம்
ஆயிரத்தோரு சண்டைகளுக்கு
அப்புறமும்
அப்பா காட்டும் அக்கறையை
அன்புக்கு நேர்வதெல்லாம்
துன்பம்தானென்று விட்டுவிடலாம்
மார்பில்
முகம்புதைத்து
மனைவி கேட்கும் கேள்விகளுக்கு
மறுமொழியாக
மெளனத்தை விட்டுவிடலாம்
காலைக்கட்டி மயக்கும்
குழந்தைகளை
கடவுளின் அற்புதங்களை நம்பி
சும்மா
விட்டுவிடலாம்
முதுகுக்குப் பின்
புறம்பேசித் திரிகிற
நண்பர்களின் குணத்தை
மன்னித்து
மறந்துவிட்டு விடலாம்
வேண்டியவர்களின் யோசனைகள்
வேண்டாதவர்களின் கேவலப்படுத்தல்கள்
இரண்டுமே
விதியின் முன்புக்கு
வீணென்று
விட்டுவிடலாம்
எனில்
எல்லாவற்றுக்கும் மேலாக
இயல்பிலேயே உறுத்திக்கொண்டிருக்கும்
என் மனசாட்சிக்கு
என்ன பதில் சொல்ல
***
குற்றாலக்கவிதை
போனவருஷம் சாரலுக்கு
குற்றாலம் போய்
கைப்பேனா மறந்து
கால்செருப்பு தொலைந்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல்வெள்ளிக் கொலுசொன்று
கற்பனையில் வரைந்த
பொற்பாதச் சித்திரத்தை
கலைக்க முடியவில்லையே இன்னும்
***
ஆதி - கவிதைத் தொகுப்பு
**
முக்கோணத்தின் மூன்று முனைகள்
பேசிக்கொள்ள
ஆசைப்படுகின்றன
கண்களில்
கசிகிறது உப்புநீர்
மனசில் கனக்கிறது
மாயச்சுமை
வார்த்தைகள்
நாவின் நுனியிலேயே தங்கிவிடுகின்றன
உதடுகள்
ஒழுங்கற்று நெரிபடுகின்றன
ஒன்றையொன்று
நின்று நினைத்துப்பார்க்க
என்றேனும் ஒருநாள்
எல்லாமும் சொல்லிவிட
முடிவெடுத்திருக்கின்றன முக்கோணத்தின்
மூன்று முனைகள்
***
கிரகயுத்தம் கவிதைத்தொகுப்பிலிருந்து
May 27, 2010
சருகுத் தோட்டம்-விக்ரமாதித்யன்
முன்னொருகாலத்தில் அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் அரண்மனையில் ஒரு பெரிய தோட்டம் போட்டிருந்தான். தோட்டக்காரர்களை அமர்த்திப் பூஞ்செடிகள், மலர்க்கொடிகளெல்லாம் நட்டு வளர்த்திருந்தான். பழமரங்கள் நிறைய வைத்திருந்தான். தனது தோட்டத்தைப்பற்றி அவன் மிகவும் பெருமை கொண்டிருந்தான்.
அரண்மனைக்கு யார்வந்தாலும் முதலில் அவர்கலைத் தோட்டத்துக்குத்தான் கூட்டிக்கொண்டு போய்க் காண்பிப்பான். அது அவனுக்கு சந்தோஷமான காரியம்.
ஒரு நாள் சாது ஒருவர் அரண்மனைக்கு வந்திருந்தார். அரசன் அவரை அன்புடன் வரவேற்று உபசாரம் செய்தான். தோட்டத்தை வந்து பார்க்கும்படி அழைத்தான்.
அந்த சாது தோட்டத்தைப் பார்த்துக்கொண்டே வந்தார். முகம் இறுக்கமானதுபோல இருந்தது. ஒன்றும் சொல்லவில்லை. விறுவிறுவென்று வெளியேறிப் போய்க் கொண்டிருந்த்தார். அரசன் அவர் பின்னாலேயே வந்து கேட்டான்.
'தோட்டம் எப்படியிருக்கிறது சுவாமிகளே ? '.
சாது மெளனமாக இருந்தார்.
'சொல்லுங்கள் சுவாமி ? '.
மறுபடியும் விசாரித்தான் மன்னன்.
அவர் சொன்னார்:
'நன்றாகத்தான் இருக்கிறது உன் தோட்டம். இப்படி ஒரு தோட்டத்தை என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை போ. இது என்ன தோட்டம். இலைகளும் சருகுகளும் குப்பையும் செத்தையும் இல்லாத தோட்டம் ? தோட்டமென்றால் இவை இல்லாமலா ? நீ பாட்டுக்கு வேலையாள்களுக்கு உத்தரவிட்டுக் கூட்டிப் பெருக்கித் துப்புரவாக வைத்திருக்கிறாய். அரங்கு போல அல்லவா இருக்கிறது. தோடாம் மாதிரியே இல்லையே. தோட்டத்தைத் தோட்டமாக வைத்திரு. முதலில் அதைத் தெரிந்துகொள். '
வேகமாக நடந்து வெளியே போயே போய்விட்டார்.
ஒரு வாரம் பத்து நாள் கழிந்தது. அரசன் தோட்டத்தை வந்து பார்த்தான். சாதுவைத் தேடிப்பிடித்துத் தாங்கித் தடுக்கி அழைத்துக்கொண்டு வந்து காட்டினான்.
'நல்லது .... நல்லது. சந்தோஷம். இதுதான் தோட்டம். இப்போதுதான் தோட்டமாக இருக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும். தோட்டமென்ன அரண்மனையா, இல்லை தர்பார் மண்டபமா ? சாதாரணமாக இருக்க வேண்டாம் ? '
'தோட்டமென்றால் அணில்பிள்ளைகள் லாந்தவேண்டும். குயில்கள் பாடிகொண்டிருக்கவேண்டும். நாகணவாய்ப்புள்கள் கத்திக் கொண்டிருக்க வேண்டும். தேனீக்கள் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கவேண்டும். மரங்கொத்திகள் டக்குடக்கென்ற சத்தம் கேட்டுகொண்டிருக்கவேண்டும். சிள்வண்டுகளின் ஓசை இருந்து கொண்டிருக்கவேண்டும். எஙேயாவது ஒரு மூலையில் பாம்புகூட கண்ணில்பட வேண்டும். இவ்வளவுமிருந்தால்தான் தோட்டம். இலைகளும் சருகுகளும் குப்பைகளும் செத்தைகளும் இல்லாது போனால் ஜீவராசிகள் எப்படி வந்து அண்டும் ? இயற்கையாக இருப்பதுதான் தோட்டம். படைகளின் ஒழுங்கும் கச்சிதமும் தோட்டத்துக்கு வேண்டாம். உன் தோட்டம் என்றென்றும் இயற்கையாக இருப்பதாக. இயற்கையோடு இருப்பதாக. இயற்கை வளம் கொழிப்பதாக. உனக்கு என் நல்லாசிகள்.. வருகிறேன் '
மகிழ்ச்சி பொங்க திரும்பிப் போனார் சாது.
**************
நமது தமிழ்க்கவிதை இரண்டாயிரம் ஆண்டு நீண்ட நெடிய மரபு உடையது. இதில் சங்க இலக்கியம்தான் பெரிய சிகரம். அடுத்து காவியங்கள். பிறகு தேவார திருவாசகமும் பாசுரங்களும். அப்புறம் சிற்றிலக்கியம். இவற்றின் தொடர்ச்சியாகத் தனிப்பாடல்கள், பாரதி.
உணர்வுத் தெறிப்புகளும் அனுபவவீச்சுகளுமாகச் சங்கக் கவிதைகள். கதையும் கருத்துமாக காவியங்கள். பண்ணோடு இசைந்த பாடல்களாக பக்தி இலக்கியம். பரணி, தூது, பள்ளு, குறவஞ்சி, உலா, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் என்றெல்லாம் பிரபந்தங்கள். வாழ்வின் சகல விஷ்யங்களையும் எழுதலாம் என்று நம்பிக்கைதரும் தனிப்பாடல்கள். இந்த மரபின் செழுமையை உள்வாங்கிக் கொண்ட பாரதியின் எளிய ஆனால் தனிச்சிறப்பு வாய்ந்த இசைப்பாடல்கள். மொழி தோன்றி ஒரு புலவன் எழுத வந்த இத்தனைகாலத்தில் இவ்வளவும். தமிழனின் எழுத்துவடுவப் பண்பாட்டுக் கொடை.
எனில் தமிழ்க்கவிதை தத்துவம் பேசுவதில்லை. வேதாந்தவிசாரம் செய்வதில்லை. காலம் வெளியென்றெல்லாம் கருத்துக் கொள்வதில்லை. கருத்தாக்கங்கள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. வாழ்வையே பேசுகிறது. வாழ்வின் சாரம்சத்திலேயே திளைக்கிறது. அனுபவங்களையே முன் வைக்கிறது. உணர்வுகளையே வெளிபடுத்துகிறது.
கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் மட்டுமே விதி விலக்காக தத்துவப்பாங்கு கொண்டிருக்கிறது. சைவசித்தாந்தத்தை விளக்கும் திருமந்திரம் அடிப்படையில் அறிவுவழிப்பட்டதாக இருப்பதனாலேயே அத்தகைய இயல்பு கொண்டிருக்கிறது. சித்தர் பாடல்களின் அடிநாதம் சைவசித்தாந்தம் என்பதோடு, அவற்றிலுள்ள வேகமிக்க வரிகள் மிகுந்த உணர்வுச் செறிவுள்ளவை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். திருவாசகத்தில் பெரிதும் அறிவுப்பாங்கான வரிகளோடு பக்திப்பரவசமான கவிதைகளும் உண்டு. திருக்குறள் அறநூல். அது அறிவுவழிப்பட்டது போல் அமைந்திருப்பது இயல்பேயாகும். இவைதவிர, தமிழ்க்கவிதை முற்றமுழுக்க உணர்வு நிலைப்பட்டதே.
முதல் தமிழ்க்கவிஞனிலிருந்து பாரதி வரை கவிதை மனசு சம்பந்தப்பட்டதென்றே எண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அனுபவங்களும் உணர்வுகளும் மட்டுமே கவிதையாகும் என்று ஓர்மை கொண்டிருந்திருக்கிறார்கள். கவிதையென்ற நுட்பமான ஊடகத்தில் வாழ்வைத்தான் சொல்ல முடியும் என்று கண்டுகொண்டிருக்கிறார்கள். வாழ்வைத்தான் சொல்லவேண்டும் என்று மனம் கொண்டிருந்தார்கள். வாழ்வு எனுபவங்களாலானது,உணர்வுகள் நிரம்பியது, கவிதையும் அப்படித்தான் என்று முடிவு கொண்டது தமிழ்மனம், தமிழ்மரபு, தமிழ்மண்.
சங்கப்பாடல்களை விடவா வடிவமேன்மை. யோசிக்கவே முடியாது. திருமந்திரத்தை விடவா கட்டமைப்பு. கிட்டவே போகமுடியாது. சித்தர் பாடல்களை விடவா விசாரம். நினைத்துப் பார்க்கவே முடியாது. பாடுபொருள் நல்ல வடிவத்தில் இசைந்திருப்பதே சங்கக்கவிதையின் உயர்வு, அதன் புற வடிவம் அல்ல. திரு மந்திரத்தின் கட்டமைப்புக்கு அதன் உள்ளீடு ஒரு முக்கிய காரணம்.
....
வேண்டாத அளவுக்கு நெருங்கமுடியாதபடிக்கு தமிழ்க்கவிதை எந்தகாலத்திலும் இறுக்கம் பண்ணிக்கொண்டதேயில்லை. அப்படி இறுக்கம் கொண்டிருக்குமெனில் அது எப்போதோ அழிந்துபட்டிருக்கும். சங்கக்கவிதைகளில் சிலபலவற்றில் தோன்றும் இறுக்கமும் உண்மையான இறுக்கம் அல்ல. கவிதை நுட்பம் அறிந்த மனம் செய்த மாயம் அது.
நன்றி: திண்ணை ( 1999 December 3)
******
May 14, 2010
மாயக்கவிதை-விக்ரமாதித்யன்
கவிதை என்பது மாயம்.
மொழியில் கட்டப்படுகிற மாயம்.
கவிஞன் என்பவன் மாயக்காரன்.
நல்ல கவிஞன் நல்ல மாயக்காரன்.
தமிழின் நல்ல கவிஞர்களாக விளங்குகிற எல்லோருடைய கவிதைகளிலும் இந்த மாயத்தன்மையைக் காணலாம்.
இவர்களின் நல்லகவிதைகளெல்லாம் எப்படி நல்ல கவிதைகளாக இருக்கின்றன என்று கேட்டால் இந்த மாயத்தன்மையைத்தான் சுட்டமுடியும். கவிஞன் எவ்விதம் மாயத்தைக் கட்டுகிறான். அது அவனுக்கே தெரியாத காரியம். கவிதைகளின் இந்த மாயத்தன்மைதான் அவற்றின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் முழுமுதல் காரணமாகிறது.
மாயக்காரனுக்கே மாயம்( கவிதை ) பிடிபடுகிறது.
மற்றவர்கள் மாயத்தில் மயங்கிப் போகிறார்கள். மாயத்தை நினைத்த சமயமெல்லாம் கட்டமுடியுமா. மாயம் தன்னை வெளிப்படுத்தக் கவிஞனை ஒரு கருவியாக்கிக் கொள்கிறது. நினைத்த நேரமெல்லாம் மாயம் இடம்தராது. இதனாலேயே நல்ல கவிஞனுக்குக்கூட எப்பொழுதுதாவதுதான் நல்ல கவிதை வாய்க்கிறது.
சொல் என்பதே மாயம்தான்.
சொல்லில் (வார்த்தைக்கலையில்) தேர்ச்சிபெறுவதே ஒரு மாயம்தான்.
பிறகு எப்படிச் சொற்களால் கட்டப்படுகிற கவிதை மாயமாகாது போகும். மொழி அதாவாக எதார்த்தத் தளத்திலேயே இயங்குகிறது. மொழியால் மொழிகிற கவிதையோ மாயமாகி விடுகிறது. இது எவ்விதம் நிகழ்கிறது. தமிழில் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆண்டாள் பாசுரங்கள்.
ஆண்டாளின் காதல்கனவுகளும் திமிறும் விழைவுகளும் ரகசிய வேட்கைகளும் மொழியில் சொல்லி விளக்கமுடியாத மாயமாகி விடுகின்றன.
இன்னொரு உதாரணம், பாரதியின் கண்ணன் பாட்டு. கண்ணன் பாட்டு ஓர் அசாதாரணமான மாயம்தான். மனமே இதுபோலவெல்லாம் மாயம் நிகழ்த்துகிறது. ஆண்டாளின் மனம் செய்த மாயமே அவள் பாசுரங்கள். பாரதியின் மனம்கொண்ட மாயம்தான் கண்ணன் பாட்டு. கவிதையெனும் மாயம் மனமென்னும் மாயத்தில் மொழியெனும் மாயத்தின் வழியே சம்பவிக்கிறது.
மனமே எதார்த்தமாயிருக்கையில் கவிதையில் மாயம் கூடிவர வழியில்லை.
கோடானுகோடி மக்கள் எதார்த்தமானவர்கள்தாம். எதார்த்தமனம் கொண்டவர்கள்தாம். எனில், மாயத்தை ரசிக்கிறவர்கள். கவிஞன் மாயமனம் படைத்தவன். மனமாயத்தின் அடர்த்தியைப் பொருத்தே கவிதையிலும் மாயம் அடர்த்தி கொள்கிறது. மனமாயத்தை உண்டுபண்ண முடியாது என்பதுதான் மனவிசேஷமே.
நவீன தமிழ்க்கவிதையில் சொல்ல வேண்டுமென்றால், பிரமிளின் பாலியல் கவிதைகள்.
அந்த மாயம்தான் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறது.
நகுலனின் மழை மரம் காற்று.
இதிலுள்ள ஒரு மாயமே ஈர்த்து வைத்துக்கொள்கிறது. கலாப்ரியாவின் தொடக்ககாலக் கவிதைகளில் அநேகமும் இந்த மாதிரி ஒரு மாயத்தன்மை கொண்டிருப்பவை. அதுபோல மாயம்தான் அவர் கவிதைகளுக்கு ஒரு பேரழகையும் ஈர்ப்பையும் வழங்கியிருக்கிறது. தேவதேவனின் மாயக்கவிதைகள்தான் திரும்பத்திரும்ப அவரை நினைவிலிருத்தி வைக்கின்றன. அண்மைக்காலத்தில் யூமா வாஸ்உகி கவிதைகளில் அப்படி ஒரு மாயம் கூடியிருக்கிறது. இப்படியான மாயமே மனசைக் கெளவி இழுத்து வைத்துக் கொள்கிறது. மாயம் செய்யும் கவிஞனே மனசில் இடம்பிடித்துக் கொள்கிறான். மாயக்கவிஞர்களே மகாகவிஞர்கள்.
இந்திய சிந்தனையில் மாயை என்பது முக்கியமானதும் விசேஷமானதும் ஆகும்.
மாயை வடிவினள் பராசக்தி.
ஸ்ரீ அம்பாளின் அம்சமாக விளங்குபவர்
சுக்ராச்சாரியார்.
சுக்ராச்சாரியாரின் இயல்புகளிலும் செயல்களிலும் எல்லையற்ற மாயம் நிறைந்திருக்கிறது. நம்முடைய இந்தியத் தொன்மத்தில் சுக்ராச்சாரியார் வண்ணங்கள் நிரம்பிய முக்கியமான ஒருவர்.
அசுரகுரு.
ஆயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கித் தவமிருந்து உயிர்பிழைக்கவைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை வரமாகப் பெற்று வருபவர்.
குடம்குடமாய் கள்குடித்தவர். எப்பொழுதும் இயக்கமும் சவாலுமாய் வாழ்பவர். ஜோதிஷத்தில் கலைகளின் காரகன். சுக்ரன் வலுப்பெற்றிருப்பவன்தான் நல்ல கலைஞன் / கவிஞனாக வரமுடியும் என்கிறது ஜோதிஷம். நவக்கிரகங்களிலும் அளவற்ற மாயத்தன்மை கொண்டவர் சுக்ரன். சுக்ராச்சாரியார் மாயக்காரர். சுக்ரன் அருள்பெற்ற கவிஞனும் மாயக்காரன்.
'கவிதையில் நான் சுக்ராச்சாரியராக இருக்கிறேன் ' என்கிறான் கிருஷ்ணபரமாத்மா. சுக்ராச்சாரியாரின் மாயங்களை வைத்துப் பார்க்கும்பொழுது மாயக்கண்ணனின் கூற்றையும், 'கவிதையென்பது மாயம் ' என்கிற என் கூற்றையும் புரிந்துகொள்ளமுடியும். கவிதை, கவிதையாய் இருக்க அது மாயம் கொண்டிருக்க வேண்டும். மொழியில் மாயத்தை உண்டுபண்ண முடியாதவன் ஒருபொழுதும் ஆகச்சிறந்த கவிஞனாக மாட்டான். கவிதையில் மாயத்தைத் தொடுவதும் அடைவதும் எல்லோர்க்கும் சாத்தியமானது(ம்) இல்லை.
இதனாலேயே கவிதையென்று ஏகமாய் வெற்று வார்த்தைக்கூட்டம் மறந்துகிடக்க உண்மையான கவிதை அபூர்வமாய்க் காணக்கிடைக்கிறது.
எதார்த்தமாய் எழுதுவது பெரிய காரியமில்லை. சிறிது மொழிப்புலமை போதும், இதற்கு. இதற்கு ஒரு நல்ல உதாரணம் பாரதிதாசன். இனவுணர்வையும் மொழியுணர்வையும் எடுத்துப்பேசியே பாவேந்தர் ஆனார். பாரதிதாசனுக்குத்தான் பரம்பரை தோன்றும். ஒரு இனத்தின் ஆதார உணர்வுகள் என்ற வகையில் பாரதிதாசன் கவிதைகளுக்கு ஒரு தனி இடம் உண்டுதான். எனில், ஒரு இனம் இந்த இரண்டு உணர்வுகளில் மட்டுமே வாழ்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ அடிப்படை உணர்வுகளும் இருக்கின்றனதானே.
ஆண்டாள் எடுத்துப்பேசியது ஆதார உணர்வுகள் இல்லையா.
பிரமிள் பாடியது அடிப்படை உணர்வுகள் அல்லவோ.
நகுலனின் தனிமையுணர்வு நம் எல்லோரின் தனிமையுணர்வும் கூடத்தானே. கலாப்ரியாவும் யூமா வாஸ்உகியும் சொல்வன மானுட உணர்வுகள்தானே. தேவதேவன் மறுபடியும் மறுபடியும் சொல்வது மானுடத்தின் மேலான உணர்வுகளல்லவே. பாரதி பாடியது இன, மொழி எல்லைகள் கடந்து பரந்து விரிந்துபட்ட உணர்வுகள் அன்றோ. பொங்கும் மனவுணர்கள் பொது. உணர்வுகளின் மாயத்தைச் சொற்களில் கொண்டு வருபவனே சிறந்த கவிஞன். தமிழ்மனமே மாயத்தைப் புறக்கணிக்கும் மனமோ என்னவோ தெரியவில்லை. ஆண்டாள் அடியொற்றி இன்று வரையிலும் தமிழில் பெண்கவிஞர் ஒருவர்கூட வராததை எவ்விதம் புரிந்துகொள்ள.
நவீன தமிழில் இனி மாயக்கவிதைகளே வேண்டும். போதும்போதும் என்கிற அளவுக்கு எதார்த்தக்கவிதைகள் குவிந்துகிடக்கின்றன. எதார்த்தக்கவிதைகள் இப்போதைக்கு வேண்டியதில்லை என்றுகூடச் சொல்லலாம். மாயக்கவிதைகளாலேயே மேற்கொண்டு நவீன தமிழ்க்கவிதை வளம்பெற முடியும். ஒரு மொழியில் இல்லாததை உண்டு பண்ணுகிறதே பெரிய விஷயம். ஏற்கனவே இருப்பனவற்றைப்போல எழுத ஒரு கவிஞன் வேண்டியதில்லை.
நிறைய மாயக்கவிதைகள் வேண்டும். முற்போக்காளர்கள், தமிழின உணர்வாளர்கள் இப்படி கவிதைக்கு சம்பந்தமில்லாதவர்களைக் கடந்து மாயக்கவிதைகள் தோன்றிவருகையில்தான் நவீனகவிதை நின்று நிலைக்கும், நீடித்து இருக்கும். மாயக்கவிதைகள் செய்வோர்தம் தமிழுக்கு நல்லது செய்வோர் ஆவார்கள்.
******
May 1, 2010
திருநெல்வேலி-விக்ரமாதித்யன் நம்பி
திருநெல்வேலி ரொம்ப அழகான ஊர். (எங்கள் ஊர் என்பதற்காக சொல்லவில்லை. உண்மையிலேயே அழகான ஊர்). ஊருக்கு மத்தியில் பெரிய கோவில். நெல்லையப்பர் கோவில். நுழைந்ஹ்தவுடன் கண்ணில் படும் பெரிய மாக்கல் நந்தி. (இது வளர்ந்து மேல்கூரையை இடிக்கும்போது உலகம் அழிந்துவிடும் என்று சின்ன வயதில் கதை சொல்லியிருக்கிறார்கள்) சுவாமி சன்னதிமுன் இருக்கும் சப்தஸ்வரதூண்கள் எனப்படும் இசைத்தூண்கள். சுயம்புலிங்கம்.விக்ரமாதித்யன் நம்பி
அம்மன் சன்னதிப் பக்கமாய்ப் பொற்றாமரைக்குளம். தேவார மண்டபம். சன்னதி உள்வந்தால், நின்ற கோலத்தில் காந்திமதியம்மன். தமிழ்நாட்டில் வேறு எங்கும் இவ்வளவு அம்சமான கோவிலை நான் பார்த்ததேயில்லை.
அம்மன் சன்னதியிலிருந்து கொஞ்சம் தள்ளிக் கீழ்ப்புறத்தில் நந்தவனம். மேல்புறத்தில் வசந்தமண்டபம். வசந்தோற்சவத்தில் பிரமாதமான ஒரு பானகம் கொடுப்பார்கள். பிள்ளைகளுக்குப் பிடித்த திருவிழா இது.
என் சிறுவயது நினைவுகளும் அனுபவங்களும் சேர்ந்துதான் மறுபடியும் மறுபடியும் கோவில் சார்ந்த விஷயங்களாகக் கவிதைகளில் வெளிப்பாடு கொள்கின்றன என்று கருதுகிறேன். திருநெல்வேலி இல்லாமல், வேறு ஏதாவது ஊரில் வளர்ந்திருந்தால் கோவில் இந்த அளவுக்கு இடம் பிடித்திருக்குமா கவிதையில்.
தம்ரவருணி ஓர் அருமையான ஆறு. அது ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வோர் அழகோடு விளங்கும். பாபவிநாசம் மலைமேல் திமிறிக் கொண்டு பாய்ந்து வரும். முட்டி மோதிக்கொண்டு சமவெளியில் இறங்கும். கோயிலையொட்டிய படித்துறைப்பக்கம், பாறைகளுக்கு மத்தியில் புகுந்து புறப்படுகையில், சுழித்துக் கொண்டு ஓடும். விக்ரமசிங்கபுரத்தில் பார்த்தால் அமைதியாக இருக்கும். அம்பாசமுத்திரம் ரயில் பாலத்துக்குக் கீழ் வேகமாய் இழுத்துக் கொண்டு போகும். கல்லிடைக்குறிச்சியில் மெதுவாய் நடக்கும். சேரன் மாதேவியில் பார்த்தால் வேறே மாதிரித் தெரியும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரிப் பக்கம் தேர் போலப் போகும்; தாம்ரவருணியின் எல்லாச் சாயல்களும் எனக்குப் பிடிக்கும்.
திருநெல்வேலி டவுனில் அது ஊரை விட்டுத் தள்ளிதான் ஓடுகிறது. (யோசித்துப் பார்த்தால் பாப விநாசத்தை விட்டல். ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி ஜங்ஷன் சிந்துபூந்துறை, சிக்க நரசய்யன் கிராமம் தவிர எல்லா இடங்களிலுமே தாமிரவருணி எட்டித்தான் இருக்கிறது போல.. ஊருக்குள் இருக்கலாமோ ஆறு. அப்படியிருந்தால் அதுக்கு என்ன அழகு இருக்கும் துப்புரவாய்த்தான் இருக்குமா) குறுக்குத்துறை என்று சொல்வோம் பக்கத்து படித்துறையை. தாம்ரவருணி இங்கே இரு தனி அழகில் இருக்கும். கீழ்புறத்தில் சித்திரங்கள் போலப் பனைமர பின்புலத்தில் வயல்வெளிகள். மேற்புறத்தில் 'சிக்கிலிங் ' கிராமத்து வீடுகள், வடபுறம் ரயில்பாலம். படித்துறையையொட்டி முருகன் கோவில். (திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது) ஏகமாய் விரிந்துகிடக்கும் மணல் பரப்பு. சிறிய பாறைகளினூடே செல்லும் நதி.
ஆற்றுக்குப் போகிற பாதையே நன்றாக இருக்கும். இரண்டு பக்கமும் பருத்து வளர்ந்த மருத மரங்கள்(எங்கள் ஜில்லாவில்தான் மருதமரங்கள் நிறையப் பார்க்கமுடியும். திருநெல்வேலியைத் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துவந்த பிற்காலப் பாண்டியர் காலத்தின் மிச்சமோ) லெவல் கிராஸிங் தாண்டியதும் இசக்கியம்மன் கோவில். சூழ வயல்கள். மாந்தோப்பு வழியே புகுந்தால் படித்துறை.
என் கவிதைகளில் நதி நிறைய வரும். பால்யகாலத்தில் படிந்த தாமிரவருணியின் பாதிப்புத்தான் என்று இப்போது தோன்றுகிறது. 'விரும்புவது நதிக்கரை நாகரீகம். விதிக்கப்பட்டது நெரிசல் மிக்க நகரம் ' என்ற என்னுடைய வரிகளை இந்த பின்புலத்தில்தான் பார்க்கவேண்டும்.
தெப்பக்குளமும் நயினார்குளமும் ஊருக்குள்ளேயே இருக்கின்றன. முப்பது வருஷத்துக்குமுன் நயினார்குளம் நன்றாகவே இருந்தது. இப்போது ரொம்ப மாறிவிட்டது. குளத்துக்குப் பக்கத்தில் உள்ள வயல் வெளிகளையெல்லாம் 'நயினார்குளத்துப் பற்று ' என்று சொல்வார்கள். ஒருகாலத்தில் அதில் ஸ்டாம் போட் விட்டிருந்தார்கள். கோடைக்காலத்தில் தண்ணிர் இல்லாத சமயம் வெள்ளரி போடுவார்கள்.
தெப்பக்குளத்தில் வருஷம் பூராவும் தண்ணீர் இருந்து கொண்டிருக்கும். பெரும்பகுதி நான் தெப்பக்குளத்திலோ நயினார் குளத்திலோதான் குளித்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஆனால் ஆறுதான் மனசில் நிற்கிறது. இது எப்படியெண்று தெரியவில்லை.
****
Apr 10, 2010
நேர்ந்தது-விக்ரமாதித்யன் நம்பி
விக்ரமாதித்யன் நம்பி
அப்பா திரும்பத்திரும்பச் சொன்னார்கள். அம்மாவுக்குத் திருநெல்வேலியை விட்டுவர இஷ்டமே இல்லை. ஆனால், அப்பா எப்பொழுதுமே தான் நினைத்ததைச் சாதித்துவிடுவார்கள். இப்பொழுதும் அப்படித்தான் ஆயிற்று. அம்மா மனசை மெல்லமெல்லக் கரைத்து விட்டிருந்தார்கள். கல்லிடைக்குறிச்சியில் வீடு பார்த்து வைத்திருந்தார்கள். அம்மாவை வந்து பார்க்கச் சொன்னார்கள். திருநெல்வேலியில் இனிமேல் இருக்கமுடியாது என்று சின்னப்பிள்ளைக்குச் சொல்வதுபோல எடுத்துச் சொன்னார்கள்.
சைக்கிள்கடையை விற்றாயிற்று. ஏழு மரக்கால் விதைப்பாட்டையும் விலைபேசிக் கொடுத்தாயிற்று. வேறே ஒன்றுமில்லை. அப்பா சிங்கப்பட்டி ஜமீன்தாரிடம் செக்ரட்டரியாகச் சேர்ந்துவிட்டிருந்தார்கள். கமலா சித்தியை விடவில்லை. சிங்கம்பட்டியிலேயே வீடெடுத்து இருந்தார்கள். இவ்வளவுக்குப் பிறகும் அம்மாவை ஏன் கூப்பிடவேண்டும். பிள்ளைகளை ஏன் தேடவேண்டும்.
அம்மா எதற்கும் கலங்கவில்லை. மாமாவை சைக்கிள் கடையிலிருந்து அனுப்பும்போதும் ஒன்றும் சொல்லவில்லை. கூடவே இருந்த அம்மா ஆச்சியை ஊருக்கு அனுப்பிவைக்கும்போதும் கவலைப்படவில்லை. தங்கச்சி காந்தி, வயிற்றில் கட்டிவந்து ஆப்பரேஷன் பண்ணிக் குணமாகாமல், செத்தபோதும் பெரிதாகக் கலவரப்படவில்லை. அவள் பாட்டுக்கு இருந்துகொண்டாள்.
அம்மாவின் பேச்சுதான் குறைந்துவிட்டது. அவள் எப்போதுமே அதிகம் பேசுகிறவள் இல்லைதான். ஆனால், இப்பொழுதெல்லாம் எண்ணித்தான் பேசுகிறாள். உள்ளுக்குள் என்னவோ தீர்க்கமாக முடிவெடுத்திருக்கிறாள் போல. அப்பாவைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை. அக்காவிடமும் இவனிடமும் முன்னைவிடவும் அதிகம் பிரியமாக இருக்கிறாள். தம்பியைக் கீழேயே விடுவதில்லை, தொட்டியில் போட்டிருக்கிற நேரம் தவிர.
சம்சாரி வந்துதான் சொன்னான்: 'தாயி .... ஐயா இப்டி செஞ்சிட்டாகளே. நயினாகுளத்துப் பத்த யாராவது விப்பாகளா... இவுக இந்தமாதிரி பண்ணிட்டாகளே... '
அம்மா எதுவும் சொல்லவில்லை. வீட்டினுள் போய் டிரங்க் பெட்டியில் இருந்து ஒரு வெளுத்த வேஷ்டியும் சட்டையும் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தாள். மாடக்குழியிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை எடுத்துவந்து, 'பிள்ளையளுக்குப் பண்டம் வாங்கிக் குடு ' என்று கொடுத்தாள். 'இரண்டு இட்லி சாப்பிட்டுட்டுப் போ ' என்று இலையில் பொதிந்து கொண்டு வந்தாள்.
பக்கத்துவீட்டு அத்தை வந்து கேட்டாள் : 'என்ன மதினி, சைக்கிள் கடைய வித்தாச்சாம்லா.. இவுக சொன்னாக. '
'ம்... பாக்க ஆளில்லல்லா... கொடுத்திற வேண்டியதுதானே.. ' என்று மட்டும் சொல்லிவிட்டு, ' பெரியவன் மதுரயிலதான இருக்கான்.. வரவே காணோம் ' என்று விசாரித்துவிட்டு வீட்டினுள் வந்துவிட்டாள்.
* * *
கல்யாணியா பிள்ளை வளவு கிழக்கு பார்த்து இருந்தது. காம்பவுண்டில் தெற்கு பார்த்த முதல் வீடு அவரது. தெற்கு வரிசையில் முதலில் இரண்டு சிறு வீடுகள். மூன்றாவதாக கொஞ்சம் பெரியவீடு. தென்மேற்கு மூலையில் இரண்டு குச்சுகள். கல்லிடைக்குறிச்சியில் கல்யாணியா பிள்ளை காம்பவுண்ட் என்றால் யாருக்கும் தெரியும். பரம்பரைப் பணக்காரர். சாப்பாட்டுக்கு வயல் இருந்தது. நெல் வந்துவிடும். வாடகைப்பணம் மேல்செலவுக்குத்தான். பெரியவன் சூரியநாராயணன் அக்கா ஒட்ட. எட்டு படித்துக்கொண்டிருந்தான். சின்னவன் நாலு. இரண்டே பையன்கள். கல்யாணியா பிள்ளை நிரம்ப சாது. கொஞ்சம் காது கேட்காது. அதனாலோ என்னவோ யாரிடமும் தேவையில்லாமல் பேச்சுக் கொடுக்கமாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்துகொள்வார்.
அம்மா ஒரு நல்லநாள் பார்த்து வந்து பால் காய்ச்சிவிட்டுத் திரும்பினாள். அன்றைக்கு அப்பா வீட்டிலேயே இருந்தார்கள். வளவு முழுக்க வந்திருந்தது. எல்லோருக்கும் தம்ளரில் பாலை எடுத்துக் கொடுக்கையில் அம்மா முகத்தில் தனி சந்தோஷம் தெரிந்தது. நிரம்ப காலத்துக்குப் பிறகு இப்பொழுதுதான் தெளிச்சியே வந்திருந்தது.
மத்தியானச் சாப்பாட்டுக்கு அவியல், கோஸ் பொரியல், மாங்காய்ப் பச்சடியெல்லாம் வைத்திருந்தாள். அப்பா வீட்டுக்கு வராததிலிருந்து அனேகமாக ஒரு சோறு, ஒருகுழம்பு, ஒரு கறி என்றாகியிருந்தது. வருஷப்பிறப்பு, கார்த்திகை, பொங்கல், பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதிபூஜை இப்படி விசேஷ நாள்கள் கூட சாதாரணமாகவே கழிந்தன. அன்றைக்குத்தான் பாயாசம் வைக்கத் தோன்றியிருக்கிறது. வளவிலும் சாப்பிட அழைத்திருந்தது.
* * *
அக்காவை திலகர் வித்யாலயாவில் சேர்த்திருந்தது. இவன் கவர்மெண்ட்ஸ்கூல். அந்த வருஷம் அக்கா கட்டுரைப்போட்டியிலும் பேச்சுப் போட்டியிலும் முதல் பரிசு வாங்கினாள். அப்பா வாரத்தில் இரண்டு நாளோ மூன்று நாளோ வந்து கொண்டிருந்தார்கள். சிவா எங்கே, பெரியவன எங்கே என்றுதான் விசாரிப்பார்கள். நெஸ்டில் இருக்கா என்று கேட்பார்கள். அம்மா ஒற்றைவார்த்தையில் பதில் சொல்வாள். தம்பியை மடியில் போட்டுக்கொண்டு கொஞ்சுவார்கள். அவன் தூங்கிக் கொண்டிருந்தால் தொட்டிலில் போய்ப் பார்த்துவிட்டுத்தான் வந்து உட்காருவார்கள்.
வெளியில் அரண்மனை கார் நிற்கும். உடனே புறப்பட்டுவிடுவார்கள். திருநெல்வேலிக்கு ஏதாவது வேலியாகப் போய்விட்டு வரப் பிந்தினால், கடைசி பஸ் பிடித்து வந்து, மணிமுத்தாறு பஸ் இல்லையென்றால், வீட்டுக்கு வருவார்கள். அம்பாசமுத்திரத்தில் எதுவும் ஜோலியாக வருகையில் இறங்கி வந்து பார்த்துவிட்டுப் போவார்கள்.
அம்மா வருவதெல்லாம் வரட்டும் என்கிற மாதிரியே இருந்து கொண்டாள். எல்லாம் நன்றாகவே நடந்துகொண்டிருந்தது. ஒரு குறையும் இல்லை, அப்பா வீட்டில் தங்காத குறையைத் தவிர. அப்பா எப்பொழுது வருவார்கள், எப்பொழுது போவார்கள், எப்பொழுது இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. அம்மா, அக்காவைப் பள்ளிக்கூடம் அனுப்பிவைப்பதிலும், தம்பிக்கு நெஸ்டிக் கரைத்துக் கொடுப்பதிலும், சமையல் செய்வதிலுமாக இருந்தாள். சாயங்காலம் விளக்கு பூஜை செய்வாள். இடையில் சிறிது காலம் விட்டிருந்தாள்.
காலைக்கு வழக்கமாக இட்லிக்குப் போட்டிருக்கும். மத்தியானம் சுடுசோறு. இராத்திரி பழையது. எப்பொழுதும் சுண்டக்கறி இருக்கும். நார்த்தங்காய் ஊறுகாய், மல்லித் துவையல் இருக்கும். இந்தப்பக்கத்தில் பிரண்டை கிடைக்கும். அம்மா கைபாகத்தில் எல்லாமே ருசியாயிருக்கும். சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் முறுக்கோ தட்டையோ கிளாஸ்கோ பிஸ்கெட் டின்னிலிருந்து எடுத்துத் தருவாள். சமயங்கள் சீனிக்கிழங்கு அவித்து வைத்திருப்பாள். அவள் என்ன சாப்பிடுகிறாள், எப்பொழுது சாப்பிடுகிறாள் என்பதுதான் தெரியமாட்டேனென்கிறது.
அப்பா வந்து வாடகை கொடுத்துவிடுவார்கள். சுப்பையா மூப்பனார் கடையிலிருந்து மளிகை சாமான் வந்துவிடும். பாலுக்கும் தயிருக்கும் அம்மா கையில் கொடுத்துவிடுவார்கள். வீட்டரிசி சமையல்தான். மொத்தமாக நெல் வாங்கிப் போட்டிருந்தது. அப்பா சாயங்கால வாக்கில் வீட்டில் இருந்தால் உள்ளூர் டூரிங் டாக்கீஸ் கூட்டிக்கொண்டு போவார்கள். புதுப்படம் போட்டிருந்தால் அம்பை கல்யாணிக்கோ கிருஷ்ணாவுக்கோ புறப்பட்டுவிடுவார்கள். அக்கா முன்னேயே சினிமாப்பாட்டு முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். இப்பொழுதெல்லாம் முழுசாகப் படிக்க ஆரம்பித்திருந்தாள். 'தங்கமலை ரகசியத்தில் வரும், அமுதை பொழியும் நிலவே, நீ அருகில் வராததோடு ' பாட்டை அடிக்கடி பாடுவாள். 'கணவனே கண்கண்ட தெய்வத் 'தில் அஞ்சலிதேவி பாடும் தாலாட்டு, 'அன்பில் மலர்ந்த நல்ரோஜா, கண்வளராய் என் ராஜா ' பாட்டுப் பாடித்தான் தொட்டிலாட்டிவிடுவாள். அக்கா பாடிப்பாடி இவனுக்கும் மனசிலாகி இருந்தது.
அப்பா வரும்பொழுது அரண்மனையிலிருந்து ஆனந்த விகடன், குமுதம், கல்கி படிக்க எடுத்துக்கொண்டு வருவார்கள். இவன், 'மகாவம்சம் ', 'தில்லானா மோகனாம்பாள் ' இப்படி கதை படிக்க ஆரம்பித்திருந்தான். 'பிராட்வே, வெலிங்டன், ராக்ஸி மற்றும் தமிழகமெங்கும் ' என்று வரும் சினிமா விளம்பாரங்களைத் தனியே 'கட் ' பண்ணி எடுத்துச் சேகரிக்கப் பழகியிருந்தான்.
கன்னடியன் கால்வாயில் வருஷம் பூராவும் தண்ணீர் வரும், கோடைக்காலம் தவிர. நல்ல ஓட்டம் இருக்கும் அதில். அம்மாதான் கூட்டிக்கொண்டு போவாள், காலையில். அங்கேதான் இவன் நீச்சல் படித்துக்கொண்டது. அக்காதான் கற்றுக்கொடுத்தது. தோண்டியைக் கவிழ்த்துப்போட்டு, அதைப் பிடித்துக்கொண்டே எப்படியோ அவள் நீச்சல் படித்துக்கொண்டாள்.
திருநெல்வேலி மாதிரியே இங்கேயும் இவர்களையும் அம்மாவையும் பார்த்துவிட்டு, 'இப்டி கட்டிகட்டியா பிள்ளையள வச்சுட்டு, அந்த மலையாளத்தா மாய்கையில அலையுதாகள, அண்ணாச்சி ' என்று தெரிந்தவர்கள் வருத்தப்பட்டுப் பேசுவார்கள். ராஜாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டு விட்டுவிட்டார்கள்.
பெண்குழந்தைக்கு ஒன்றரை வயது நடக்கிறது என்று அம்மைக்குத் தெரியும். ஆனால், அவள் எதுவும் கேட்பது இல்லை. கேட்கக்கூடாது என்கிறமாதிரியே இருந்துகொண்டாள். அவளாக எதையும் பேசுவது இல்லை. அப்பாவும் அம்மாவிடம் பேசுவது குறைந்துவிட்டது. வீட்டுக்கு என்னவும் வேணுமா. எல்லாம் இருக்கா. வரட்டுமா. செலவுக்குப் பணம் வச்சிருக்கியா. இப்படித்தான் இருக்கும் அப்பா பேசுவது.
* * *
வளவுக்கு எதிரே மேற்கே பார்த்து இருந்தது, கல்யாணியா பிள்ளை தம்பி சைலப்பன் வீடு. சாலைக்கு அந்தப்புறம் தனி வீடு. சைலப்பன், அண்ணனுக்கு நேர் எதிரானவர். கொஞ்சம் அடர்துடியான மனுஷன். அண்ணனைவிடக் குள்ளம். கட்டு குட்டென்று இருப்பார். இலட்சணமான முகம். சுருட்டை முடி. சற்று கறுப்புதான். நல்ல சதைவைத்து தொந்தியும் தொப்பையுமாக இருந்ததால் அப்படித் தோன்றாது. மடிப்புக் கலையாத வேஷ்டி -- சட்டையில்தான் வருவார். கையில் மோதிரம், வாட்ச் எல்லாம் கிடக்கும். எப்பொழுதும் தோரணயாகத்தான் தெரிவார்.
சைலப்பன் சரியான வாடாவழி. மனைவியை இவர்தான் பிறந்தவீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டாரா, இல்லை அவர்களாகவே போய் விட்டார்களா தெரியவில்லை. வைப்பாட்டியோடுதான் அந்த வீட்டில் இருந்து கொண்டிருந்தார். இருபத்துநாலு மணி நேரமும் போதையில்தான் இருப்பார். மகன்தான் பிரியாணியோ புரோட்டாவா வாங்கிக்கொண்டு வருவான். ஒரே பையன். சூட்டிகையானவன். இவன் வயதுதான் அவனுக்கும்.
சைலப்பன் வீட்டுக்கதவு எப்போதும் அடைத்தே கிடக்கும் என்ன என்றே புரியவில்லை. பிள்ளைமாரில் இப்படி இருப்பது கிடையாது. எதற்காக இந்த மனுஷன் இரவும் பகலும் குடிக்கிறார். ஏன் பொண்டாட்டியை விட்டுவிட்டு இது மாதிரி வைப்பாட்டியை வீட்டிலேயே கொண்டு வந்து வைத்திருக்கிறார். பெற்ற பிள்ளையை எப்படி வேலைக்காரன் போல நடத்த முடிகிறது. எங்கேயாவது வெளியூருக்கோ சினிமாவுக்கோ போகையில் தவிர அவளை யாரும் பார்க்க முடியாது. வெளியே வரவேமாட்டாள் அவள். வரத் தேவையும் இல்லை.
எவ்வளவு சொத்து. கல்லிடைக்குறிச்சி ஊரிலேயே பெரிய பணக்காரர்கள். கன்னடியன் கால் பாசனம். பூவுக்கு இரு போகம். சைலப்பன் நினைத்தாலும் குடித்து அழிக்க முடியாத சொத்து.
ஏதாவது விஷயம் இருந்தால்தான் அண்ணனைப் பார்க்க வருவார். வெளியில் நின்றே கூப்பிட்டுப் பேசிவிட்டுப் போய்விடுவார். இல்லையென்றால் அண்ணன் மகனிடம் சொல்லிவிடுவார். வீட்டுக்குள் போகமட்டார். எந்த வம்புக்கும் போகிற ஆளுமில்லை. இருக்கிறது, குடிக்கிறார். என்னவோ மனைவியோடு ஆகவில்லை, வைப்பாட்டியோடு வாழ்கிறார். என்ன, இப்படி வெளிப்படையாக யாரும் இருக்கமாட்டார்கள். பையன்தான் பாவம். அவன் ஏன் இந்த அப்பாவோடேயே இருந்துகொண்டான். அம்மாவைத் தேடாதா.
சதாசிவம் சனி, ஞாயிறில் எல்லோருடனும் சேர்ந்து விளையாடுவான். முக்கியமாக, லென்ஸ் வைத்து, வேஷ்டியைத் திரைபோலக்கட்டி எங்கிருந்தோ ஃபிலிம் சுருள் கொண்டு வந்து சினிமா போடுவான். கல்யாணியா பிள்ளை மகன் சூரி என்கிற சூர்யநாராயணன், இவன், அக்கா, வளவில் உள்ள சின்னப்பிள்ளைகள் எல்லோரும் கூடியிருந்து பார்க்கிறது. திடாரென்று சைலப்பன் கூப்பிடும் சத்தம் கேட்டு ஓடியே போவான். பிறகு சூரிதான் ஆப்பரேட்டர். சூரியை எல்லோருக்கும் பிடிக்கும். அவனுக்கு சிங்கப்பல். பார்க்க அழகாக இருக்கும். மிதந்த விழிகள் சுழலச்சுழலச் சிரித்துச் சிரித்துப் பேசுவான். சித்தப்பா மகன் சதாசிவத்திடம் நிரம்பவே ஒட்டுதலாக இருப்பான். எல்லோரிடமும் பிரியமாகப் பழகுவான்.
* * *
அப்பா காலையில் வந்திருந்தார்கள். இராமநாதபுரம் போய்விட்டு வருகிறார்களாம், ராஜாவோடு. மத்தியான வண்டிக்கு மெட்ராஸ் போகிறார்கள். நாலு நாள் ஆகும். சொல்லிவிட்டுப் போகத்தான் இங்கேயே இறங்கிக்கொண்டேன் என்று பொதுவாகச் சொன்னார்கள். இவனுக்கு ஞாபகமாக 'அம்புலிமாமா ' வும் 'கண்ணனும் ' வாங்கிக்கொண்டு வந்திருந்தது சந்தோஷமாக இருந்தது. அக்காவுக்கு அவள் கேட்டமாதிரியே கொலுசு.
பிரயாண அலுப்போ என்ன்வோ குளித்துச் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்து தூங்கினார்கள். அம்பாசமுத்திரம் தாலுகா ஆபீஸில் ஏதோ வேலை இருக்கிறது என்று சிறிது நேரத்திலேயே எழுந்து முகம் கழுவிவிட்டு புறப்பட்டுவிட்டார்கள்.
சாயங்கால வாக்கில் செட்டிபிள்ளைமார் தெருவிலிருந்து செண்பகம் பெரியம்மை வந்திருந்தாள். 'கொழுந்தன் எப்படி இருக்காக, நீ ஏன் இப்டி மெலிஞ்சி போயிட்டே இருக்கே. பிள்ளையளப் பாத்துதான் ஆறுதலடையணும். அவுக எப்டியும் இருந்துட்டுப் போறாக. சும்மா வீட்லயே அடைஞ்சு கிடக்காத. மனசுதான் உளையும். பிள்ளையளுக்கு அரை பரீட்சை லீவு விட்டதும் ஒரு பத்துநாள் சங்கரன் கோயில் அக்கா வீட்டுக்குப் போயி இருந்துட்டு வா.... ' என்று தைரியம் சொன்னாள்.
'போணும் அக்கா. இவளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்காங்க, அதான் பாக்கன்.... ' என்று இயல்பாகச் சொன்னாள்.
* * *
விளக்கு பூஜை முடிந்ததும், 'சாப்பிடுறீங்களா.... ' என்று கேட்ட அம்மை இவனுக்கும் அக்காவுக்கும் பழையது எடுத்துவைத்தாள். மத்தியானம் வைத்த புளிட்ட கறி இருந்தது. வடகமும் சீனியரைக்காய் வற்றலும் வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொண்டு வந்தாள். தம்பி தூங்கி விட்டிருந்தான்.
அம்மா ஏனங்களை ஒழித்து அங்ஙணத்தில் போட்டுக் கழுவிவிட்டு வந்து படுக்கை விரித்துக் கொடுத்தாள். அக்காவும் இவனும் படுத்த சிறிது நேரத்தில் வாசலில் என்னவோ பேச்சு சத்தம் கேட்டது. அக்காவுக்குப் பக்கத்தில் படுத்திருந்த அம்மா எழுந்து உட்கார்ந்து கொண்டாள். இவனுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை. சிம்னி விளக்கு வெளிச்சத்தில் அம்மா முகம் பளிச்சிட்டது. ஏதோ யோசனையில் இருக்கிற மாதிரி இருந்தது.
அக்கா தூங்கி விட்டாள். இவன் விழித்திருப்பதைப் பார்த்த அம்மா, 'நீ தூங்குல.... ஏன் முழிச்சிட்டிருக்க.... ' என்று கேட்டுவிட்டு படுத்துக்கொண்டாள்.
வெளியே சைலப்பன் சத்தம் போட்டுக்க்கொண்டிருந்தார். குரல் ஓங்கி ஒலித்தது. 'இவன் என்ன பெரிய புடுங்கின்னு நினைச்சுக்கிட்டு இருக்கானோ. இவன் பாட்டுக்கு வர்றான், போறான். சூட்டும் கோட்டும் போட்டுக்கிட்டு கார்ல வந்து இறங்கினாப்பில இவனே ஜமீன்தாராயிடுவானா. திருநவேலிக்காரனப் பத்தித் தெரியாதாக்கும் எனக்கு. அன்னிக்கு நா வாரேன், இவன் மதியாமப் போறான். தம்பி, நமஸ்காரம்னு இரண்டு வார்த்த பேசினா என்ன குறைஞ்சு போவான். கார்ல போற பவிசா. எப்ப வருவான் அவன். இன்னிக்கு அவனப் பாத்து இதக் கேட்காம இந்த இடத்தவிட்டுப் போமாட்டேன். அவனுக்கு வச்சுக்கிடுதேன் வரிச.... '
சைலப்பனின் சலம்பல் சப்தம் கேட்டு கல்யாணியா பிள்ளை வந்துவிட்டார், தம்பியிடம் என்னவோ நல்லவார்த்தை சொல்லி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தது கேட்டது. பக்கத்துவீட்டு சித்தியும் எழுந்திருந்து வந்துவிட்டாள். 'நீங்க இப்ப வீட்டுக்குப் போய்த் தூங்குங்க... அவுக வந்தபிறகு கேட்டுக்கிடுவோம். அந்த அக்கா பயப்படப் போகுது. பிள்ளையள் எந்திரிச்சிடக்கூடாதுல்ல... நாளைக்கு விசாரிப்போம். அண்ணாச்சி என்ன இதுன்னு குழம்பிப் போயி நிக்காக பாத்தீகள்ல.. எழுந்திரிங்க முதல்ல... ' என்று பையச் சொல்லிக்கொண்டிருந்ததும் கேட்டது.
'நா எதுக்குப் போணும்... எனக்குக் கேட்டாதான் தீரும். மதினிகிட்ட கேக்கேன்... அவுக சொல்லட்டும் ' என்று வந்து கதவைத் தட்டினார்.
கல்யாணியா பிள்ளை பதறியடித்துக்கொண்டு ஓடி வந்திருப்பார் போல. 'என் குடியக் கெடுத்திராதடா... மானம் மரியாதைக்கு பயந்து வாழ்ந்துட்டுருக்கேன். என்ன இப்படில்லாம் படுத்தாத. வந்துரு. நாளைக்கு அவங்க முகத்தில என்னன்னு முழிப்பேன். பேவரத்து வர்றீயே... நா என்ன செய்யட்டும் ' என்று தழுதழுத்த குரலில் புலம்பிக்கொண்டே வந்து தம்பியை எப்படியோ கூட்டிக்கொண்டு போய்விட்டார்.
அம்மா எழுந்து 'லைட் 'டைப் போட்டு, ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, கதவை மெல்லத் திறந்து ஒருக்களித்தபடியே பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று தெரிந்துகொண்டு வந்து படுத்துக்கொண்டாள். நிரம்பவும் கலவரப்பட்டுவிட்டாள். தூங்கவில்லை. இவனுக்கு எப்பொழுது தூக்கம் வந்தது என்று தெரியவில்லை.
* * * *
அப்பா மெட்ராஸ் போய்விட்டு நேரே இங்கே வீட்டுக்குத்தான் வந்து இறங்கினார்கள். மூன்றுமுறை தட்டுகிற சப்தம் கேட்டு அம்மை போய்க் கதவைத் திறந்தாள். 'என்ன லட்சுமி... ' என்று வழக்கம்போலக் கூப்பிட்டுக்கொண்டே வந்தார்கள்.
'லட்சுமியோ கொட்சுமியோ எல்லாம் இருக்கட்டும்... முதல்ல வேற வீடு பாருங்க. நான் இங்க இருக்கமுடியாது. நீங்க பாட்டுக்குகொண்டாந்து விட்டுட்டுப் போயிருங்க. எவனாவது குடிகாரப்பய வந்து கதவத் தட்டிட்டு நிக்கான். நா அர்த்தராத்திரில இந்தப் பிள்ளைகளையும் வச்சுக்கிட்டு என்ன செய்வேன். துணைக்கு யார் இருக்கா. உடனே வீடு மாறணும். இல்ல, நாங்க திருநவேலிக்கே போயிர்றோம் ' என்று படபடத்தாள்.
'என்ன நடந்தது லட்சுமி... தலையும் இல்லாம வாலும் இல்லாம பேசினா எனக்கு என்ன புரியும்.. சொல்லு, என்ன விஷயம். ' அப்பா கேட்டார்கள். அம்மா கண்கலங்கியபடியே சொன்னாள்.
'சரி.. வேற வீடு பார்த்துப் போயிருவோம்... நீ தைரியமா இரு. நான் திருநவேலி வரைக்கும் போயிட்டு வந்துர்றேன் ' என்று குளித்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார்கள். சாப்பிடக்கூட இல்லை.
* * *
அந்திக் கருக்கல். இருட்டு இறங்கிக் கொண்டிருந்தது. அக்காவுக்கு சடைபின்னிவிட்டு, அம்மா விளக்குப் பொருத்திக் கொண்டிருந்தாள். அப்பாவும் சங்கரன் மாமாவும் வந்தார்கள்.
'எப்படி இருக்க அக்கா... என் மருமகள எங்க ' என்று விசாரித்துக்கொண்டே வீட்டுக்குள் வந்தான் சங்கரன் மாமா.
'நீ எங்க வந்த... பிள்ளையள் நல்லா இருக்காங்களா. கொழுந்தியா எப்டி இருக்கா... '
அம்மா வெள்ளந்தியாகக் கேட்டாள்.
'அத்தான் வந்தாக...கூடவே வந்துட்டேன் ' சாதாரணமாகச் சொன்னான் சங்கரன் மாமா.
அம்மை அப்பாவுக்கும் சங்கரன் மாமாவுக்கும் காபி போட அடுக்களைக்குப் போனாள்.
'சங்கரா, போலாமா... ' என்று அப்பா வெளியே கூட்டிக்கொண்டு போனார்கள்.
* * *
சங்கரன் மாமா, அப்பாவுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் நெல்லையப்பபிள்ளை மச்சினன். லயன் கம்பெனியில் டிரைவர். துடியாய் இருப்பான்.நல்ல கறுப்பு. வளத்தியும் குறைச்சல்தான். முகத் தீர்க்கம். திருநெல்வேலியில் இருக்கும்போது அப்பாவைத் தேடிவருவான். 'அத்தான் இருக்காகளா, அக்கா... ' என்று கேட்டுக்கொண்டே வருவான். அப்பாதான் இரண்டு முறை அவன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அந்த அத்தையும் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு இரண்டு, மூன்று தடவை வந்திருக்கிறார்கள்.
சங்கரன் மாமாவை வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். அம்மைகூட சங்கரா என்று இயல்பாகப் பேசுவாள். கூடப் பிறந்த அக்காவிடம் எவ்வளவு பிரியமாக இருப்பானோ அவ்வளவு பிரியமாக இருப்பான் அவனும்.
நெல்லையப்பபிள்ளை பெரியப்பாவை விடவும் அப்பாவிடம்தான் பற்றுதலாக இருந்தான், சங்கரன் மாமா. அப்பாவுக்கு இருக்கும் செழிப்பு, தோரணை, கை தாராளம் எல்லாம் ஈர்த்திருக்கும் போல.
* * * *
அம்மா காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். இரண்டு சிறுதட்டில் கொஞ்சம் அல்வாவும் மிக்சரும் எடுத்து வைத்திருந்தாள். அக்காவும் டியூஷன் முடிந்து வந்துவிட்டாள். 'அப்பாவும் சங்கரன் மாமாவும் வெளிய நிப்பாங்க... பாத்துக் கூட்டிட்டு வா. காபி ஆறிறப் போகுது ' என்று அம்மை இவனிடம் சொல்லி அனுப்பிவைத்தாள்.
வெளியே கூட்டமாய் இருந்தது ரோட்டில். சைலப்பன் வீட்டுமுன் நிறையபேர் நின்றிருந்தார்கள். இவன் ஏறிட்டு மாடியைப் பார்த்தான். அப்பாவும் சங்கரன் மாமாவும் சைலப்பனை அடித்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். சட்டை கிழிபட்டிருந்தது. திரும்பத் திரும்ப செவிட்டிலேயே அறைந்து கொண்டிருந்தான் சங்கரன் மாமா. அவன் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. சரமாரியாக அடித்துக் கொண்டிருந்தார்கள், அப்பா. சைலப்பன் முகத்திலேயே குத்து விழுந்துகொண்டிருந்தது.
சைலப்பன் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார். 'விட்டிருங்க அண்ணாச்சி.. விட்டிருங்க அண்ணாச்சி ' என்று கேவிக்கேவி அழுதுகொண்டே மன்றாடினார்.
'மன்னிச்சிருங்க அண்ணாச்சி.. மன்னிச்சிருங்க அண்ணாச்சி.. என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பாவின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டபடியே இருந்தார்.
'இறங்குடா நாயே.... ' என்று நெட்டித் தள்ளிய அப்பாவின் குரல் அதிர்ந்தது.
'வாய மூடுறா.... ' என்று பிடரியைப் பிடித்துத் தள்ளினான் சங்கரன் மாமா.
பின்னாடியே ஒரு பெண் தடதடவென்று இறங்கிவந்து அப்பாவின் காலில் விழுந்தாள்.
'அவரக் கொன்னுராதீங்க... நல்லா இருப்பீங்க.. விட்டுருங்க ஐயா.... ' என்று வேண்டிக் கொண்டாள்.
'எழுந்திரிடி... ' என்று முடியைப் பற்றி இழுத்து ஒதுக்கிவிட்டான் சங்கரன் மாமா.
தடுமாறிக் கீழே விழுந்த சைலப்பனை எட்டி மிதித்துக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான்.
கூட்டம் சற்று ஒதுங்கி வழிவிட்டது.
சைலப்பனால் நிற்க முடியவில்லை. துவண்டு சரிந்து விடுவார்போல இருந்தது. சங்கரன் மாமா இடது புறமும் அப்பா வலதுபுறமுமாக ஏந்தி அணைத்து இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
'குடிச்சா என்ன வேணாலும் பேசலாமாடா... எங்க வந்து நின்னு பேசுறோம்னு தெரியாம போயிருமோ... சங்கக் கடிச்சு ரத்தத்தக் குடிச்சுருவன். நான் வீட்ல இல்லேன்னா செத்துப்போனேன்னு அர்த்தமா... தீ வச்சுக் கொளுத்திப் போடுவேன்.. கொளுத்தி... ' அப்பா முகம் சிவக்க ஓங்கிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கல்யாணியா பிள்ளை எதிர் வந்து நின்று அப்பா கையைப் பிடித்துக்கொண்டு, 'எனக்காக விட்ருங்க, தம்பி..என்னமோ குடிச்சுட்டு உளறிட்டான்... அன்னிக்கே பயந்துட்டிருந்தேன்... கெளரவமான குடும்பம் நாங்க... இப்டி ஊர்கூடி வேடிக்க பார்க்கும்படி ஆயிப்போச்சே... நான் மன்னிப்புக் கேட்டுக்கிடுதேன், தம்பி அவனுக்காக. போதும், விட்ருங்க. செல்லமா வளந்தவன்... இப்டி சீரழியுதானே... மனசு தாங்கல ' என்று புலம்பினார்.
' நீங்க போங்க அண்ணாச்சி... அவன ஒண்ணும் செஞ்சுரமாட்டோம்... அனுப்பிச்சிடறோம் ' என்று சொல்லி விட்டார்கள்.
வீட்டுக் கதவு சாத்தியிருந்தது.
'லட்சுமி... லட்சுமி.. கதவத் திற ' என்ற அப்பாவின் சத்தத்தைக் கேட்டுக் கதவை ஒருக்களிக்கத் திறந்தாள்.
'என்ன இதுல்லாம்... ' என்று பதறியபடியே தார்சாவில் காலடியெடுத்து வைத்தாள்.
'மன்னிச்சுருங்க மதினி ' என்று சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்தார் சைலப்பன்.
சடாரென்று கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்ட அம்மை வீட்டுக்குள் போய்விட்டாள்.
'செறுக்கியுள்ள, ஓடுல... ' என்று சங்கரன் மாமா எழுப்பிப் பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.
வேஷ்டியைக் கையில் பிடித்துக்கொண்டே தளர்ந்த நடை நடந்துபோனார், சைலப்பன். கல்யாணியா பிள்ளை ஓடிவந்து கைலாகு கொடுத்துக் கூட்டிக்கொண்டு போனார்.
* * *
Mar 29, 2010
கவிதையின் புதிய உலகங்கள் - விக்ரமாதித்யன்
விக்ரமாதித்யன் நம்பி
நமது தமிழ்மொழி உலகிலுள்ள செவ்வியல் மொழிகளில் ஒன்று. நீண்ட நெடிய கவிதை மரபு கொண்டது. அகிலத்தின் சிறந்த கவிதைகளுக்கு ஈடு இணையான கவிதை வளம் நிரம்பியது. காலத்தாலும் அழிக்க முடியாத இலக்கியப் பின்புலம் உடையது.
சங்கக்கவிதைகளில் தலைவன் - தலைவியின் நுட்பமான காதல் உணர்வுகளும் அனுபவங்களும் அகப்பாடல்களாய் வடிவு கொண்டிருக்கையில், அன்றைய வாழ்வின் இயல்பான வீரம் செறிந்த வாழ்வனுபவங்களும் எதார்த்தமான உணர்வலைகளும் புறப்பாடல்களாய் உருக்கொண்டிருப்பதுதான் நம்முடைய கவிதையின் ஆதிஉலகம்.
கதையும் கருத்துமாக விரிவுகொள்கிறது காவியகால உலகம். பக்திக்காலத்தில், சிவனும் விஷ்ணுவும் வழிபாட்டு நாயகர்களாய்ப் போற்றிப் பாடப்படுகிறார்கள். சிற்றிலக்கியம் எல்லாமே இறைவனையோ அரசனையோ கொண்டாடுகின்றன. காலம்தோறும் கவிதையின் உலகம், பாடுபொருள், சொல்லும்விதம், பாவகைகள் (வடிவம்), உத்திமுறைகள் எல்லாமும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. வாழ்வின் கதியும் சுதியும் மாறுவதுக்கு ஏற்ப கவிதையின் முகமும் மாறுகிறது, நதி ஒன்றுதான் என்றாலும் செல்லும் இடத்துக்குத்தக சாயல்மாறுவதுபோல.
இவற்றிற்குப் பிற்பாடு, ஏறத்தாழ, நான்கு நூற்றாண்டுகளில் எழுதப்பட்டுத் தொகுக்கப் பெற்ற தனிப்பாடல்கள். தமிழின் மிகமேலான இன்னொரு செல்வக்களஞ்சியம், தனிப்பாடல் திரட்டு. இதில் பல்வேறு உலகங்கள், வேறு வேறு வாழ்க்கைகள், மானுடத்தின் அநேக ஜாடைகள் எல்லாம் குடிகொண்டிருப்பதுதாம் அந்தத் தொகைநூலை விசேஷமாக்கி வைத்திருக்கிறது. கவிதையின் புதிய உலகங்கள் என்றதுமே தனிப்பாடல் திரட்டுதான் உள்ளத்தில் தோன்றுகிறது. அந்த அளவுக்குப் புது விஷயங்கள் கொண்டிருப்பது அது.
அடுத்து, புதிய திறம்பாட வந்த புலவன் பாரதி. அன்றையதினம், கவிதையின் எல்லைகளை, பரப்பளவை, விரிவுசெய்த மேதை அவன். இன்றைக்கும், 'பிழைத்த தென்னந்தோப்பு ', 'மறவன்பாட்டு ', 'அக்கினிக்குஞ்சு ', 'மழை ', 'புயற்காற்று ', 'சிட்டுக்குருவியைப் போலே ', வண்டிக்காரன் பாட்டு ', 'நிலாவும் வான்மீனும் காற்றும் ' முதலான கவிதைகள் கவிதையின் புதிய உலகங்களைக் காட்டி ஒவ்வொரு கவிஞனுக்கும் பொறுப்புணர்வை நினைவூட்டிக் கொண்டிருப்பன.
நவீன கவிதையில் இதைத் தொடங்கிவைத்த பெருமை ந.பிச்சமூர்த்தியையே சேரும். எடுத்துக்காட்டு, 'பெட்டிக்கடை நாரணன். ' க.நா.சு., கு.ப.ரா., புதுமைப்பித்தன் ஆகியோரைத் தொடர்ந்து, நகுலன், பசுவய்யா, எஸ். வைதீஸ்வரன், தி.சோ. வேணுகோபாலன், சி.மணி, கே.ராஜகோபால் முதலானோரும், எழுபதுகளில், ஞானக்கூத்தன், நாரணோ ஜெயராமன், கலாப்ரியா, தேவதேவன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், பிற்பாடு சுகுமாரன் முதலானோரும் கவிதையில் புதிய உலகங்களைப் படைத்துக் கணிசமான பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.
சமீபகாலமாய், நிறையப் புதியவர்கள், இதுவரை கவிதைக்குள் வராத உலகங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பழைய உலகம் என்றபோதும், புதியபார்வையில் சொல்கிறார்கள் இன்னும் சிலர். நவீன கவிதை மெய்யாலுமே புதுமைபெற்று விளங்குகிறது. விஷயம், வடிவம், சொல்முறை, கவிதைமொழி இப்படி இப்படி புதுக்கோலம் கொண்டு துலங்குகின்றன சமகாலக்கவிதைகள்.
சங்கிலிகளுக்கு மதம்பிடித்தபோது
நண்பனின் அறையின்
படிக்கட்டுகளில் படிந்துறைந்த
இரத்தத்தின்மீது கொஞ்சம் மழைத்துளிகள்பட்டு
சலிக்கும் இரத்தம்
கவிழ்ந்து கிடக்கும்
இடதுகால் செருப்பு
அரசு ஏவல்நாய்கள் சவுட்டிப்பொழிந்த
ஜன்னலும் கதவும் அறையினுள் சிதறிக்கிடக்கும்
ஊசிப்போன கஞ்சியும் பயறும்
தாறுமாறாகக் கலைத்தெறியப்பட்ட
புத்தகங்கள்
பின்புறத்து அசையில்
மழையிலும் வெயிலிலும்
அநாதையாய்க் காயும்
கைலியும் சட்டையும்
மழை பெய்துபெய்து
பச்சைப்பாசி பிடித்த பின்சுவரில்
பற்றிப் பிடித்த விரல்தடம்
சறுக்கிய கால்கள் வழித்தெடுத்த
பாசியழிந்த தடம்
அப்புறம்
என் சுற்றுப்புறம் மொத்தம்
ஒரு மரணத்தின் நிழல்
--டி.வி.பாலசுப்ரமணியம்
( 'குதிரைவீரன்பயணம் ' ஏப்ரல் '94 பக்கம் : 8)
***************
Mar 25, 2010
கோயிலுக்கு - விக்ரமாதித்யன்
விக்ரமாதித்யன்
இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஓர் ஒழுங்கமைவுக்குள்ளும் ஒழுங்கமைப்புக்குள்ளும் தான் இருந்து கொண்டிருக்கின்றன என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கின்றது. இயற்கை, சமூகம், வாழ்க்கை இப்படி எல்லாமே ஓர் ஒழுங்கமைவில் (system) அல்லது ஒழுங்கமைப்பில்தான் இருக்கின்றன. தன்னியல்பில் ஓர் ஒழுங்கு கொண்டிருப்பனவற்றை ஒழுங்கமைவு என்றும் ஏற்படுத்திவைத்திருக்கிற ஓர் ஒழுங்கு கொண்டிருப்பனவற்றை ஒழுங்கமைப்பு என்றும் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். இரண்டுமே ஒழுங்கின் பிற்பட்டவைதான். அதாவது, சீரானதாகவும் சரியானதாகவும் அமைந்தவை/அமைக்கப்பட்டவை ஆகும். மனிதனும் தவிர்க்கமுடியாதபடிக்கு ஓர் ஒழுங்கமைப்புக்குள்ளேயே இருக்க வேண்டியவனாக இருக்கிறான். இப்படி ஒழுங்கமைவும் ஒழுங்கமைப்பும் கொண்டிருப்பதாலேயே பிரபஞ்சம் அழிந்துவிடாமல் இருக்கிறதென்றும் படுகிறது.
என் வாழ்வனுபவங்களிலிருந்தும் மனவுணர்வுகளிலிருந்தும் தெரிந்து கொண்டதுதான் இது. எப்பொழுதாவது இந்த ஒழுங்கமைவு குலையலாம்; இந்த ஒழுங்கமைப்பு சிதையலாம். மறுபடியும் அது தன்னைப்போல முன் நிலைக்கு வந்துவிடும்; பழையபடி வந்து தானாக வேண்டும். இல்லாதபோது அது அழிவில் கொண்டுபோய்விடும்.
பருவமழை பொய்த்தால் என்ன நடக்கும். கடல் கொந்தளித்தால் என்ன நேரும். தனுஸ்கோடி என்ற ஊரையே நம் காலத்தில்தான் கடல் கொண்டது. வானம் பார்த்த பூமியில் மழை தப்பும் காலம் ஜனங்கள் பஞ்சம் பிழைக்கப் பட்டணக்கரை போகிறார்கள். எப்பொழுதாவது பூகம்பம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிப் போவதைத் தினசரிகளில் பார்க்கையில் ஒரு கணம் துணுக்குறுகிறோம் தானே. ஜப்பான் மாதிரி நாடுகளில் சமயத்தில் எரிமலை வெடித்து அழிவு நேர்கையில் ஒரு கலக்கம் உண்டாகவில்லையா. புயலும் சூறாவளியும் பயமுறுத்தவில்லையா. இயற்கையின் ஒழுங்கமைவு குலைகையில் என்னென்ன இழப்புகள் சம்பவிக்கின்றன.
மனித வாழ்க்கையும் ஒரு ஒழுங்கமைவுக்குள் தான் இருக்கிறது. நேரத்துக்குப் பசிக்கிறது; தூக்கம் வருகிறது; தாகமெடுக்கிறது. குழந்தைகளாக இருக்கிறோம்; வளர்ந்து ஆளாகிறோம்; திருமணம் செய்து கொள்கிறோம்; வேலைக்குப் போகிறோம்; வீடு திரும்புகிறோம். சலிப்பு ஏற்படும் வேளையில் கேளிக்கைகளில் ஈடுபடுகிறோம். பொழுது போக்கென்று திரைப்படம் பார்க்கிறோம்; சீட்டாடுகிறோம்; குடிக்கிறோம்; மீண்டும் தினசரி வாழ்வுக்கே திரும்புகிறோம். இதெல்லாம் என்ன. இதுபோல ஒழுங்கமைப்புக்குள் இருக்கிறவர்கள்தாம் கோடானுகோடி எளியமக்களும். இந்த ஒழுங்கமைப்பை மீறுகிறவர்கள் என்ன ஆகிறார்கள். இயற்கையின் உற்பாதம் போலவே மனிதர்கள் அலைக்கழிவுகளுக்கு உள்ளாகிறார்கள். ஒழுங்கமைப்பை யாரும் தாண்டிப் போவது தாங்கமுடியாத துன்பத்தில்தான் முடிகிறது. காலங்காலமாக, யுகயுகமாக, எல்லா உயிர்களும் இதற்குள்தான் இருந்து வருகிறார்கள்.
system, ஓர் ஒழுங்கமைவுதான் வாழ்வு. வேறே வழியேயில்லை. இந்த ஒழுங்கமைப்புக்குள்தான் இருந்தாக வேண்டும். திருமணம் என்பது ஓர் ஒழுங்கமைப்பு. வேலை என்பது ஓர் ஒழுங்கமைப்பு; கல்வி என்பது ஓர் ஒழுங்கமைப்பு; குடும்பம் என்பது ஓர் ஒழுங்கமைப்பு; எல்லாமே ஓர் ஒழுங்கமைப்புதான்.
எப்படியும் ஜனங்கள் வீடுதான் திரும்புகிறார்கள்; எப்படியும் பிழைப்புக்கு ஒரு வழி செய்து கொள்கிறார்கள்; எப்படியும் நிம்மதியாக/சந்தோஷமாக வாழவே முற்படுகிறார்கள். சமூகத்தோடு பொருத்திக்கொள்கிறார்கள். இந்த மாதிரி ஒரு 'சிஸ்டத் 'துக்குள் இருக்கமுடியாதவர்கள் கதையும் நமக்குத் தெரியும்.
இதையெல்லாம் என் வாழ்விலிருந்தே கண்டுகொண்டேன். எங்கள் அப்பா வழமையான குடும்ப வாழ்க்கையிலிருந்து மீறிப்போய் இன்னொருப்பெண்ணை இணைத்துக் கொண்டு எங்களைக் கவனிக்காதிருந்த பத்து வருஷங்களை இன்று வரை எங்களால் சமனப்படுத்த முடியவில்லை. திரைப்படத்தில் நடிக்க என்று நாற்பது வருஷங்களுக்கு முன்பாக அவர்கள் சென்னைப் போனதில் நாங்கள் எங்கள் சொந்த ஊரான திருநெல்வேலியை முற்றிலுமாக இழந்துப் போனோம். முறையான கல்வி, நல்ல வேலை வாய்ப்பு, இனிய வாழ்க்கை எல்லாமே துண்டிக்கப்பட்டு விட்டன. எங்கள் அம்மாவின் வைராக்கியமும் தைரியமும் முயற்சியும் உழைப்பும் இல்லையென்றால் நாங்கள் உயிர்பிழைத்திருப்போமா என்பதே சந்தேகம் தான். இது எங்கள் அடிமனசில் இன்னும் இருந்துக் கொண்டிருக்கிறது.
எங்கள் பெரியம்மா மகன் அண்ணன் ஒருவர் நாம் தமிழர் இயக்கம், ஆதித்தனார் தொடர்பு என்று அழைந்ததில் அவர் வாழ்க்கை சென்னை பங்களாக்களில் வெள்ளையடிக்கும் தொழிலாளி என்று கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இவ்வளவுக்கும் அவர் நிரம்ப புத்திசாலி. நல்ல ரசனையுள்ளவர். சத்தியன் நடித்த 'நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள் ', மது நடித்த 'நதி ' இதுமாதிரி நல்ல மலையாளப் படங்களெல்லாம் அவருடன் தான் பார்த்தது. வயலார் பாடல்கள் அவர்மூலம் தான் அறிமுகம்.
உயர்நிலைப் பள்ளியில் படித்த என் நண்பர்கள் சிலபேர் இந்த ஒழுங்கமைப்பை கடந்து குடிகாரர்களாகவும் பேட்டை ரவுடிகளாகவும் சீரழிந்துப் போயிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க நேர்கிறது.
இவ்வளவு எதற்கு. என்னையே சொல்லலாம். பேசாமல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாகப் போயிருந்தால், செத்தால் கூட குடும்பத்துக்கு ஒரு லட்சம் கிடைக்கும். தராசு, நக்கிரன் பத்திரிக்கைகளில் பஞ்சம் பிழைப்பதற்காகப் போய் பார்த்து வந்த உதவியாசிரியர் வேலையிலேயே இருந்திருந்தால் சென்னை நகரப் பிரமுகர்களில் ஒருவனாகவே வாழ்ந்திருக்கலாம். முதலமைச்சரிலிருந்து தலைமைச் செயலகம் வரையிலும் செல்வாக்குச் செலுத்த முடியும். தமிழ், கவிதை என்றெல்லாம் எடாத எடுப்பெடுத்து இப்படியெல்லாம் அவஸ்தைப் படும்படி ஆகியிருக்காது.
யாரால் ஜி.நாகராஜன், மணிக்கண்ணன் மாதிரி வாழமுடியும். முடியாது/வேண்டாமென்றுதான் பத்து முதல் ஐந்து வரை ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். ஓய்ந்த நேரங்களில் இலக்கியம் செய்கிறார்கள். இது என்னது. 'சிஸ்டம் '. இலக்கியம் சோறு போடாது என்று தெரிந்து இந்த ஒழுங்கமைப்புக்குள் பத்திரமாக இருக்க விரும்பி இருந்துக் கொண்டு இருக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்க விழைவதே மனித இயல்பு. சஞ்சலம் இல்லாமல் வாழ ஆசைப்படுவதே முறையானது. 'சிஸ்டம் ' தான் சவுகரியம் என்றே தெரிவு செய்துக் கொண்டிருக்கிறது மனித மனம்/மனித சமூகம். இதில் யார் விதிவிலக்காக விரும்புவார்கள். விலகி வந்து வில்லங்கப்பட சம்மதிப்பார்கள்.
தமிழைப் பொருத்தவரையில் எல்லோருமே முப்பது வயசுக்குள்ளேயே இந்த ஒழுங்கமைப்பை ஏற்றுக்கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். எந்தக் கவிஞன் குடித்துவிட்டு வீடு திரும்பாமல் இருக்கிறான். எந்தக் கலகக்காரன் அண்டை வீட்டாரோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். ஏன் எல்லாக் கவிஞர்களும் சொந்தத்திலேயே கவிதைத் தொகுதி வெளியிட வேண்டும். எந்தக் கவிஞன் நூலக ஆணைக் குழுவில் கவிதை புஸ்தகங்களை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதிக் கேட்கிறான். எல்லாமே 'சிஸ்டம் 'தான், இல்லையா.
ஒரு வம்புக்குச் சிறுபத்திரிகை இலக்கியக் கூட்டத்தில் கலகம் செய்யலாம்; மூத்த எழுத்தாளர்களை நக்கலடிக்கலாம்; விடிய விடிய எங்கேயாவது செளகரியமாய் இருந்து குடிக்கலாம்; குடித்துவிட்டு நண்பர்களைச் சீண்டலாம். பின்னே, நவீனமாய் எழுதிப் பார்க்கலாம். மறுபடியும் இந்த 'சிஸ்டத் 'துக்குள் தான் வந்துவிட வேண்டும். வந்து இருந்தாக வேண்டும். இப்படித்தான் எல்லாருமே இருக்கிறோம்.
ஞானிகளும் கலைஞர்களும் புரட்சிக்காரர்களும் கலகக் காரர்களும் தவிர மற்ற எல்லோருமே ஏதோ ஓர் ஒழுங்கமைப்புக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த 'சிஸ்டம் ' சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இதில் இருந்து கொண்டிருக்கிறோம். இதன் வசதிகளையெல்லாம் எடுத்துக் கொள்கிறோம்; இந்த 'சிஸ்டத் 'திலேயே எவ்வளவு செளகரியமாக இருக்கமுடியுமோ அதைவிடவும் அதிகமாகவே செளகரியங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். என்ன ஒரு வினோத முரண் இது.
கொஞ்சம் வசதியுள்ளவர்கள் வேண்டுமானால் வேறொரு 'சிஸ்டத் 'தை ஏற்படுத்திக் கொள்ளலாம். 'சிஸ்டம் ' மாறலாம்/மாறுகிறது. எனில், அது இன்னொரு 'சிஸ்டமா 'கவே. எல்லோரும் ஒழுங்காகத்தான் வேலைக்குப் போகிறோம்; ஒழுங்காகத்தான் சாப்பிடுகிறோம்; ஒழுங்காகத்தான் தூங்குகிறோம்; எல்லாமே கச்சிதமான ஒழுங்கு. வேறென்ன செய்ய. வெகு சில பேர் 'சிஸ்டத் 'தை விட்டு வெளியே வருகிறார்கள்தாம், தன்னியல்பில். வெகுநுட்பமாகப் பார்த்தால் அவர்களும் ஒரு 'சிஸ்டம் ' வைத்திருப்பார்கள். 'சிஸ்டத் 'தில் இல்லாதவர்களுக்காகவே நமது சமூகம் சிறைச்சாலைகளையும் மனநல விடுதிகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அங்கே போக யாருக்கு இஷ்டம்.
எனக்குத் தெரிந்து 'சிஸ்டத் 'தைவிட்டு வெளியே வந்தவர்கள் மூன்றே பேர்தாம். முதலாமவர், கவிஞர். கம்பதாசன். என்னுடைய பதினைந்து இருபது வயதுகளில், 'தினத்தந்தி 'யில், 'கவிஞர் கம்பதாசன் கைது குடிபோதையில் இருந்ததாக ' என்று அடிக்கடி வரும். தமிழ் சினிமா கவிஞர்களிலேயே முதன்முதலில் கார் வாங்கியவர். கடைசிக் காலத்தில் மயிலாப்பூர் போஸ்ட் ஆபிஸ் திண்டிலேயே வசித்து வந்தார். இரண்டாமவர், ஜி. நாகராஜன், மூன்றாமவர், நண்பர் உதக மண்டலம் மணிக்கண்ணன். ஊட்டி மார்க்கெட்டில் பெரிய புரொவிஷன் ஸ்டோர். ஒரே பையன். சின்ன வயதிலேயே குடித்தே செத்துப் போனான். இந்த மூன்று பேருமே அழிவைக் கட்டித்தழுவிக் கொண்டவர்களாகவே அறியப்படுகிறார்கள். இவர்கள் மூவருமே பின் நாள்களில்தான் அப்படியெல்லாம் தலைப்படுகிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்த 'சிஸ்டம் ', இதற்குள் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டியிருப்பது, இருக்க முடியாமல் போவது, இருப்பதால் கிடைப்பதும் இழப்பதும், இருக்கமுடியாமல் போவதில் நேர்வதும் வருவதும் என்னை விடாது துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த யோசனைகளைச் சொல்லத் தோன்றி எழுதியதென்றுதான் சொல்லவேண்டும், 'கோயிலுக்கு ' கவிதை.
கோயில் என்பதும் கோட்டை என்பதும்தான் தமிழ்வாழ்வில் உச்ச பட்சமான 'சிஸ்டம் '. கோட்டை அதிகாரம் சார்ந்தது என்றால், கோயில் ஆன்மிகம் சார்ந்தது. எனக்குக் கோட்டை தெரியாது, கோயில்தான் தெரியும் என்பதாலேயே கோயிலைக் குறியீடாக வைத்து எழுதியிருக்கிறேன். அதுவும் சின்னவயதில் எங்கள் அம்மாவுடன் நிறைய முறை போய் வந்த ஸ்ரீ நெல்லையப்பர் கோயில் சூழலையே விவரணங்கள் தகவல்களாக அடுக்கி, வழக்கம்போல ஒரு சொடுக்குச் சொடுக்கி முடித்திருப்பதாகச் சொல்லவேண்டும்.
ஒரு முக்கியமான விஷயம். ஒரு திட்டமிட்டு எல்லாம் இந்தக் கவிதையை எழுதவில்லை. என்னுடைய நல்ல கவிதைகள் எல்லாமே தன்போக்கில் வந்தவைதான். இதுவும் அப்படித் தன்னெழுச்சியாகத் தோன்றி வந்ததுதான். என் நல்ல கவிதைகளையெல்லாம் நான் எழுதியது என்று சொல்லத் தயக்கமாகவே இருக்கிறது. ஏதோ ஒரு தேவதை எனக்குள் மாயமாய் வந்து புகுந்து எழுதிவிட்டுப் போய்விடுகிறது என்றுதான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.
பிறகு ஒரு உண்மை. ஒரு நெடுங்கவிதையின் தொடக்கமாக எழுதிப் போட்டிருந்த சில வரிகள், அது எழுதப்பெறாமல் கிடந்ததில், திரும்பப் பார்க்கையில், இதன் முதல் பத்தி ஒரு தூண்டலைத் தந்தது. இதையே தனியே ஒரு கவிதையாக்கலாமே என்று தோன்றி எழுத முற்பட்டதில், திருநெல்வேலிக் கோயிலையே விவரணங்களாக விரித்துக் கொண்டு போனால் சரியாக இருக்குமென்று, அடுத்தடுத்த பத்திகளாக வளர்த்தி எழுதி முடித்ததுதான் இந்தக் கவிதை.
இந்தக் கவிதைக்காக நான் நன்றிசொல்ல வேண்டியது, ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலைக் கட்டிய பிற்காலப் பாண்டியர்களுள் ஒருவரான முழுதும் கண்ட ராம பாண்டியனுக்குத்தான். தமிழ்நாட்டிலேயே இது போல விஸ்தாரமான / முழுமையான கோயில் வேறெங்கும் பார்த்ததில்லை. ஒரு தனி அமைப்பில் கட்டியிருக்கிறான் பாண்டியன். இந்தக் கோயில் கட்டமைப்பின் பூர்ணத்துவம் இன்றும் எனக்குக் கவர்ச்சிகரமானதாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஒரு விழா நாளில் போய் வருகிற யாரும் இதை உணரலாம். கருத்தாக்கமாகவோ/கருத்தாக்கக் கவிதையாகவோ போய்விடாமல் இருப்பதற்குக் கோயில் விவரணங்கள் தகவல்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. விவரணங்கள், தகவல்களாலேயே கவிதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெய்வத்துக்கே ஓர் ஒழுங்கமைப்பு வேண்டியிருக்கிறது என்பதுதான் விஷயமே. அப்பொழுது தான் தேடிவரும் பக்தர்களுக்கு செளகரியம். இந்த ஒழுங்கமைப்புதான் எல்லாவற்றையும் இனிதாய்க் கொண்டு செலுத்துகிறது என்று சுட்டுகிறது கவிதை. என்றால் இந்த விஷயத்தைக் கோயிலை முன் வைத்துத்தான் சொல்லமுடியும் என்று இப்பொழுதும் தோன்றுகிறது. கடைசிவரிகளான 'தெய்வமும்/ஐதிகத்தில் வாழும் ' என்னளவில் முக்கியமான வரிகள். அவைதான் உள்ளபடியே கவிதைவரிகள்; அதுதான் கவிதையே. மற்றவரிகள் எல்லாம் விவரணங்களும் தகவல்களும் தானே. ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்வதற்காகக் கட்டமைத்த வரிகளாகவும் கவிதை வடிவம் சமைப்பதற்காகக் கட்டிய வரிகளாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த வரிகளின் வழியே, இதுபோல ஒழுங்கமைப்பு என்பது இருப்பை இருப்பாக மட்டுமே ஆக்கிவிடும் அபாயம் கொண்டது என்றும் சொல்வதுதான் என் உத்தேசம்.
ஊர்த்துவ தாண்டவம் ஆட இந்தக் கோயில் போதாது. பிக்ஷாடளராகப் புறப்பட்டுப் போக இது காணாது. கால பைரவராகக் கிளம்ப வெளியில்தான் வரவேண்டும். கோயிலுக்குள்ளிருந்து திரிபுரம் எரிக்க ஆகாது. பாகீரதியைத் தலையில் ஏந்திக்கொள்ள முடியாது. சோமனைச் சூடிக்கொள்ள இயலாது. திருவிளையாடல்கள் நிகழ்த்த முடியாது. இவற்றிற்கெல்லாம் வெளியேதான் வந்தாக வேண்டும். சிவனுக்குத் தெரியும், எங்கே எதைச் செய்ய வேண்டும் என்று; எப்பொழுது அதைச் செய்ய வேண்டும் என்பது. இங்கே அவன் இருந்து அருள்பாலிக்கலாம், தேடிவரும் பக்தர்களுக்கு. அதற்கு ஒரு நல்ல இடம் வேண்டும், அவ்வளவுதான். இவ்வளவும் வேண்டும் அருள்பாலிக்க என்பதுதான் கவனம் கொள்ள வேண்டியது. ஐதிகம் என்ற வடசொல் சம்பிரதாயம், நம்பிக்கை, வழிவழி வருவது, நிகழில் இருப்பது என்றெல்லாம் பொருள் குறிப்பதாகும்.
எங்கள் அம்மா வழிக் குலதெய்வமான குற்றாலம் பதினெட்டாம் படி கருப்பசாமிக்குப் பங்குனி உத்ரத்து அன்று கொடை நடக்கும். அன்றைக்குக் கூடுமான வரையில் போய்விடுவேன், ஊரில் இருந்தால். இதே போல என் மனைவி வழியில் கயத்தாற்றுப் பக்கமுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி குலதெய்வம். கொடை வரும்பொழுது கூடப் போவேன். திரும்பும்பொழுது மனசு ஒரு காரியமாய் சங்கடப்படும், இவர்களெல்லாம் முறையான பூஜையில்லாமல் இருக்க வேண்டியதிருக்கிறதே என்று. எப்பொழுதாவதுதான் போய் வழிபடும்படி இருக்கிறதே என்று. பெரிய கோயில்களுக்கு எந்த நாளிலும் போகலாம். இப்படி இருக்கிறது, 'சிஸ்டம் ' நிற்க.
* * *
இந்தக் கவிதை எந்த இலக்கியப் பத்திரிகையிலும் வரவில்லை. எதில் வெளியானது தெரியுமா. 'பருவகாலம் ' என்கிற பாலியல் இதழில். இது மட்டுமல்ல, 'துண்டுப் புலிகள் ' மாதிரி நல்ல கவிதைகளும் கூட. இலக்கியப் பத்திரிகைகளின் குழு மனப்பான்மையைப் பார்த்துப்பார்த்து வெறுத்துப்போன ஒரு மனநிலையில் அந்த 'செக்ஸ் ' பத்திரிகைக்குக் கொடுத்தேன் என்பதுதான் நிஜம்.
பின்னே, இந்தக் கவிதைக்கும் நண்பர் சி.மோகன் அவர்களுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இந்தக் கவிதை கொண்ட என் மூன்றாவது கவிதைத் தொகுப்பு, 'உள்வாங்கும் உலகம் ' அவருடைய மிதிலா அச்சகத்தில்தான் தயாரானது என்பது ஒன்று. இரண்டு, படைப்பாளியே வெளியிட்டால் நூலக ஆணைக்குழு எடுத்துக்கொள்ளும் என்ற விதியை நம்பி ஆயிரம் பிரதிகள் போட்டு (தமிழில் கவிதையென்றால் ஐநூறே அதிகம்) 4 பக்க அமைப்புக் கருதி விட்டிருந்த வெற்றிடத்தைக் காரணம் காட்டி நூலகத்துறையில் நூலகத் துறையில் எடுக்காது விட்டதில், இவ்வளவு புஸ்தகங்களையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் மோகன் தான் முன் வந்து, 'நம் அச்சகத்திலேயே வையுங்கள் ' என்று ஆதரவு தந்ததோடு தன்னுடைய 'வயல் ' வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் விற்றும் தந்தார். மூன்றாவதுதான் நிரம்ப சுவாரஸ்யமானது. தொகுப்பு முடிந்திருந்த வேளையில், மோகனை ஏதோ ஒரு காரியமாகப் பார்க்க வந்திருந்த மதிப்புக்குரிய கவிஞர் பிரமிள், மேஜைமீது கிடந்த புஸ்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார்; இந்தக் கவிதை கண்ணில் பட, மோகனிடம் சொல்லியிருக்கிறார்: 'இதில் ஒரு பிழை விட்டிருக்கிறார், நம்பி. நான் இதுபோலத் தப்புப் பண்ணியிருந்தால் பெஞ்ச் மேல் ஏறி நிற்பேன். ' பிரமிள் பிழையென்று சொல்லியது, 'பட்டர் சொல்லும் மந்திரம் ' என்ற வரியிலுள்ள 'பட்டர் ' என்ற சொல்.
'சிவன் கோயில் அர்ச்சகர்களைக் 'குருக்கள் ' என்றுதானே சொல்லவேண்டும்; பட்டர் என்பது பெருமாள் கோயில் அர்ச்சகரையல்லவா குறிக்கும் ' என்றும் கேட்டிருக்கிறார். நான் 'மிதிலா 'வுக்குப் போனதும் மோகன் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார்.
நான் பதில் சொன்னேன்: 'திருநெல்வேலி ஊருக்கு மட்டும் இது பொருந்தாது, மோகன்; பிரமிளுக்குத் தெரியாது. திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்களின் உட்பிரிவினரான 'குருக்களையா ' என்பவர்களைக் குறிக்கும் என்பதாலோ என்னவோ அங்கே பட்டர் என்று சொல்கிறார்கள் போல. எங்கள் அப்பா பட்டர் என்றுதான் சொல்வார்கள். '
பயிலரங்கத்துக்கு இந்தக் கவிதையைத் தெரிவு செய்த பிறகு கூட என் மனைவியிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன், அவள் குடும்பம் கோயில் பணி சார்ந்தது என்பதால். கவிதையில் ஒரு சொல் எவ்வளவு முக்கியம் என்பதற்காகவே இதை இங்கே விரிவாகப் பேசியது.
எனில், நான் ஒரு பிழை விட்டிருந்தேன். நூலில், 'ஐந்து கால பூஜை ' என்றே இருக்கும். அது தவறு. 'ஆறு கால பூஜை ' என்பதே சரி. இதை மோகனிடம் எடுத்துக் காட்டியவர் பெரியநாயகி அச்சகம்/டி.கே.புக்ஸ் குமாரசாமி அண்ணாச்சி அவர்கள். பிறகு, என் தவறை உணர்ந்து கொண்டேன். கவிஞனுக்கு எவ்வளவு கவனம் வேண்டியிருக்கிறது.
இப்பொழுது இந்தக் கவிதையை நின்று நிதானமாகப் பார்க்கிறபொழுது ஒன்று புலனாகிறது. என் உத்தேசத்தையெல்லாம் மீறி கவிதை வேறொரு தளத்திலேயே இயங்குகிறது என்று உணர்கிறேன். இவ்வளவும்/எல்லாம் -யாந்திரிகமாக- இருக்கிறது, நடக்கிறது; தெய்வமும் சும்மா இருக்கிறது; அதாவது, இல்லாமல் இருக்கிறாது; இந்த களே பரத்தில் ஒன்றும் செய்யமுடியாததாகப் போய்விட்டது என்று தொனிக்கிறதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இது எப்படி நேர்ந்தது. உள் மனசில் இதைத்தான் சொல்ல நினைத்திருந்தேனா. 'தெய்வமும்/ஐதிகத்தில் வாழும் ' என்ற வரிகள் எப்படி மாற்றி விட்டன,பொருளை, இந்தக் கவிதை என்னதான் சொல்கிறது. 'எல்லாம் ஒழுங்காகவே இருக்கிறது, உயிர்ப்புதான் இல்லை ' என்கிறாற் போல அர்த்தம் வந்தது எப்படி. கவிதை, என் கைமீறிப் போய்விட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். 'இதுபோலக் கவிதைகளுக்கெல்லாம் கவிஞன் ஒருகாலும் பொறுப்பேற்க முடியாது ' என்று தப்பித்துக் கொள்ளலாமா. சற்றே யோசித்துத்தான் சொல்லவேண்டும். தயவு செய்து, பொறுத்துக் கொள்ளுங்கள்.
எனக்கே என் கவிதைகள் சிலவற்றை நிரம்ப நிரம்பப் பிடித்துப் போகும், ஏனென்றே தெரியாமல், அப்படியான கவிதைகளில் இதுவும் ஒன்று. அண்மைக் காலமாகவே பூடகமானதும் இருண்மை கொண்டதும் மாயம் கொண்டிருப்பதுமான கவிதைகளையே வெகுவாக விரும்புகிறேன். எதார்த்தமாகவும் வெளிப்படையாகவும் இருக்கிற கவிதைகள் பெரிதாக மனம் கவருவதில்லை. இந்தத் திசையிலேயே இனி வரும் நாள்களில் எழுத வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருக்கிறது. எழுதுவேனா முடியுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. அப்படி ஆசை இருக்கிறது. வாய்த்தால் நல்லது.
'கோயிலுக்கு ' கவிதையில் ஒரு நிரந்தரமான விஷயத்தை/நிரந்தரமான உண்மையைக் கருத்தாக்கம் என்றாகாது அநுபவ/உணர்வுத் தளத்திலேயே சொல்லியிருக்கிறேன் என்பதுதான் கவிஞன் என்ற முறையில் சந்தோஷம் தருகிறது. என் வாழ்நாளில் இப்படிப் பத்து நல்ல கவிதைகள் எழுதியிருந்தால், அதுவே என் பிறவிப்பயன் என்று திருப்திப்பட்டுக் கொள்வேன்.
இந்தக் கவிதையும் பெரிதாகக் கவனிக்கப்பட்டதாகச் சொல்லமுடியாதுதான். மதிப்புக்குரிய நகுலன் அவர்கள் 'கனவு ' மதிப்புரையில் குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. 'கோயிலுக்கு ' - இக்கவிதையில் கோயில் எவ்வளவு சிறப்பாக விவகரிக்கப்படுகிறதோ, அதைப்போலவே அதன் சீரழிவும். 'தெய்வமும் ஐதிகத்தில் வாழும் '. உடையவர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள் ' என்று எழுதியிருப்பார். 'மீட்சி ' மதிப்புரையில் என் அன்பு கொண்ட பிரம்மராஜன் அவர்கள் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்: 'கவிதைகளின் வாசிப்புக்கு ஊடாக நமக்கு இரு அமைப்பாக்கங்கள் தெரிய வருகின்றன. முதல் அமைப்பாக்கம், லட்சிய குணங்கள் பொருந்திய, சுய பாதுகாப்பு நிறைந்த கோயில் என்கிற அமைப்பாக்கம். இரண்டாவது வீடு. ' அவரும் கடைசி வரிகளை மேற்கோள் காண்பித்திருப்பார். மற்றபடி, வேறு எவரும் எங்கும் இக்கவிதையைக் கண்டு கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். சற்றே வித்யாசமாக உள்ள கவிதைகள் மதிப்பிடப் பெறுவதும் விமர்சனத்துக்குட்படுத்தப்படுவதும் இலக்கியத்தில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்பது மட்டுமில்லை, கவிதை பற்றிய விழிப்புணர்வையும் உண்டுபண்ணும். குறைந்த பட்சம் சக கவிஞர்களேனும் இதுபோன்ற கவிதைகளைப் பற்றிக் கருத்துச் சொல்வது பொதுவாகக் கவிதை வளர்ச்சிக்கும் தனிப்பட்ட முறையில் கவிஞன் தன்னைச் சீராக வளர்த்துக் கொண்டு செல்வதற்கும் உபயோகமாக இருக்கும்.
கோயிலுக்கு
வாசல்
நான்கு
சந்நிதி
இரண்டு
சுயம்புலிங்கம்
சொல்ல ஒரு விசேஷம்
அம்மன்
அழகு சுமந்தவள்
ஆறுகால
பூஜை நைவேத்யம்
பள்ளியறையில்
பாலும் பழமும்
ஸ்தலவிருஷம் பிரகாரம்
நந்தவனம் பொற்றாமரைக் குளம்
வசந்தோற்சவம் தேரோட்டம்
நவராத்திரி சிவராத்திரி
பட்டர் சொல்லும் மந்திரம்
ஓதுவார் பாடும் தேவார திருவாசகம்
சேர்த்து வைத்த சொத்து
வந்து சேரும் குத்தகை
ஆகமம் ஆசாரம்
தவருத நியமம்
தெய்வமும்
ஐதிகத்தில் வாழும்
( 'உள்வாங்கும் உலகம் ' தொகுப்பு பக்கம்: 10&11.)
**********
நன்றி..
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்
