Showing posts with label ஆ. மாதவன். Show all posts
Showing posts with label ஆ. மாதவன். Show all posts

Jan 23, 2011

பாச்சி -ஆ.மாதவன்

பாச்சி செத்துப் போனாள். வாழ்வு அநித்யம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். பாச்சி செத்துப் போவாள் என்று கனவில்கூட நினைத்ததில்லை. மனத்தால் தீண்டிக்கூடப் பார்க்காத ஒரு பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. பாச்சி செத்துப் போனாள்! நாணுவிற்கு எல்லாவற்றின் பேரிலும் வெறுப்பாக வந்தது, ”சே! என்ன வேண்டிக் கிடக்கிறது? போச்சு, எல்லாம் போச்சு.”

கடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவிaa_madhavanல்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் கோலில் டக்டக்கென்று மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது.  சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான், பையன். உள்ளே, சாயரத் தட்டில் கரண்டி மோதுவதும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.

பாச்சி செத்துப் போன விஷயம் யாருக்காவது தெரிந்திருக்குமோ? தெரிந்திருந்தாலும் யாருக்கென்ன? நாணுவிற்கு மனசு இருப்புக் கொள்ளவில்லை. நேற்று இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா விட்டு ஆட்கள் போகும் போதெல்லாம் கூடப் பாச்சி சுறுசுறுப்போடுதான் இருந்தாள். அதற்குப் பிறகு என்ன நடந்துவிட்டது? சந்து பொந்துகளிலிருந்து ஏதாவது விஷப் பூச்சி தீண்டியிருக்குமோ? ராத்திரி - லாரியிலோ மோட்டாரிலோ அடிபட்டிருக்குமோவென்றால் அதுக்கான ஊமைக்காயம் கூடப் பாச்சியின் உடம்பில் இல்லை என்ன மறிமாயமோ! விடியக்காலம் பார்த்தபோது பாச்சி காலைப்பரப்பி, நாக்கையும் துருத்திக்கொண்டு செத்துக் கிடக்கிறது.

நாணுவிற்கு நெஞ்சை வலிப்பது போலிந்தது. இப்படித் திடுதிப்பென்று அவஸ்தையில் விட்டுவிட்டுப் போய்விட்டாளே. இனி என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை. எல்லாரும் போய்விட்டார்கள். இனி யாருமில்லை.

பாச்சி செத்துப் போனாள்!

”என்ன நாணு மேஸ்திரி, உன் பாச்சி செத்துப் போச்சே. அட அநியாயமே! இப்படியுமா? ராத்திரிபாரேன், நான் சினிமா பாத்துக்குட்டு வரச்சே கூட பாச்சியை இங்ஙனே பார்த்தேன். சே, உன் காரியந்தான் இப்போ திண்டாட்டமா போச்சு…”

துக்கம் விசாரித்த சோனியை நிமிர்ந்து பார்த்தான், நாணு, அவன் பரட்டைத் தலையும், காக்கி நிக்கரும், காதருகில் பீடீயின் துண்டு மிச்சமும்! பல் தேச்சால் பல்லு தேஞ்சா போயிடும்? பாச்சிக்கு இவனைக் கொஞ்சமும் பிடிக்காது. நேற்றைக்கு முன்னால்கூட இவனெ கடிச்சு உருட்டாத கொறை. நாணு மட்டும் இல்லாமலிருந்தால் மேலும் விசேஷமெல்லாம் நடந்திருக்க வேண்டியது. நல்ல காலம், அப்படி ஒண்ணும் தலை மிஞ்சவில்லை… ”இந்தா பாச்சி, நம்ம சோனி. அவனை வெரட்டாதே…” இந்தா பாச்சி, நம்ம சோனி. அவனை வெரட்டாதே…” என்று தட்டிக் கொடுத்த பின்னர்தான் அடங்கினாள். கிட்டங்கியில் அரிசி வண்டிகள் வந்து நின்றபோது, இவன், இந்தச் சோனி மறு ஓரம் மாடுகளுக்குப் பின்புறமாக போய்ப் பதமாக நின்று கொண்டு, குத்துக் கம்பால், துவர்த்து மடியில் சாக்கிலிருந்து அரிசியைச் சரித்துக் கொண்டிருந்தான். கிட்டங்கிக்கு வந்த பின்பு படி அரிசி போனாலும், பெட்டிதிராசில் எடை பார்க்கும் சங்கர அண்ணாச்சிக்கு, நாணு தனா பதில் சொல்லணும். அதனாலே ஒரு ஈ, காக்காயைக் கூட நாணுவும், பாச்சியும் சேர்ந்து கொண்டு அண்டவிடுவதில்லை. சோனிப் பய ஆளைவிழுங்கி ஆயிற்றே. எப்படியோ புகுந்து விட்டான் பாச்சிக்குத்தான் திருட்டென்றால் மூக்கில் மணக்குமே. எல்லாமே ஒரு நிமிஷம்தான். காலாற எங்கேயோ போய்விட்டு வந்து கொண்டிருந்த பாச்சி, அப்படியே மாடுகளின் கால் இடுக்கு வழியாக ஒரு பாய்ச்சல், குத்துக் கம்பும், துவர்த்து முண்டுமாகச் சோனி அகப்பட்டுக் கொண்டான்.

”நாணு அண்ணே… நாணு அண்ணே…” என்ற சோனியின் அலறிய குரலைக் கேட்டு, ஒண்ணுக்குப் போயிருந்த நாணு ஆணிப்புற்றுக் காலும் செருப்புமாக ஓடி வந்ததினால், காரியம் மிஞ்சவில்லை.

சும்மா சொல்லக்கூடாது. பாச்சி மிக மிகப் புத்திசாலி!

சோனி, துக்கம் விசாரித்துவிட்டு, அவன் போக்கில் போனான். அவனுக்கென்ன? ஒரு தொல்லை விட்டுது. இந்த நாணுச் சனியனும்கூட ஒழிஞ்சு போனால், சரக்கு வண்டிகளின் மிச்ச அரிசியை வைத்தே ஜீவனம் நடத்திவிடலாம். இப்போ என்னடாவென்றால் நாலணாக் காசுக்கு ஒரு அந்தர் கனம் மூட்டையைச் சாலையிலிருந்து மேட்டுக்கடை வரைக்கும் சுமையா சுமையென்று தூக்க வேண்டியிருக்கிறது.

பொழுது விடிந்துகொண்டேயிருந்தது. கிட்டங்கியின் ஒட்டுமுகப்பில் மாடப் புறாக்கள், வரிசை வரிசையாக வந்து அமர்ந்திருந்தன. தினமும், இந்த அழகான புறாக்களுக்கு நிறைய அரிசி மணி இங்கே கிடைக்கும். என்ன ஜோர் புறாக்கள். கழுத்து வெட்டி நடக்கும் போது பளபளவென்று பஞ்ச வர்ணம் வீசுகிறது. பாச்சிக்கு இந்தப் புறாக்களிடம் வெகு சிநேகம். புறாக்கள் அரிசி பொறுக்கிக் கொண்டிருக்கும்போது, கண்ணாம் பூச்சி விளையாட்டில் தாச்சியைத் தாவிப் பிடிப்பது போலப் பாச்சி லபக்கென்று ஒரு தாவல் தாவுவாள். படபடவென்று அத்தனை புறாக்களும் பறந்து ஓட்டு வளைவில் ஏறிக்கொள்ளும். ஏச்சுப் பிட்டோமே என்கிற பாவனையில் பொட்டுக் கண்களை உருட்டி உருட்டிப் பாச்சியைப் பரிகசிக்கும். கிட்டங்கித் திண்ணையிலேயே அமர்ந்திருந்து பீடிப் புகையின் லயத்தில் நிலை மறந்திருக்கும் நாணுவிற்கு வெகு சந்தோசமாக இருக்கும். பாச்சியும் புறாக்களும் தொட்டுப் பிடித்து விளையாடும் விளையாட்டு நடத்துகிறார்கள்! போனால் போகிறது. அடுத்த தபா ஒரு புறாவையாவது பிடிக்காவிட்டால் பாரேன்’ என்கிற பாவனையில் முகத்தையும் தொங்கப் போட்டுக் கொண்டு, பாச்சி பொடி நடையாக நாணுவின் காலடியில் வந்து, ‘இப்போ என்ன வந்துவிட்டது?” என்பது போலப் படுத்துக்கொள்வாள்.

”புறா பறந்திருச்சா, பாச்சி?” என்று, பாச்சியின் தாடையைத் தூக்கி முகத்தை ஆராய்வான் நாணு. ‘போயேன், ஆமாம்…’ என்கிறது போல முகத்தை அவன் கையிலிருந்து வழுக்கிக் கொண்டு எங்கோ பார்க்கும், பாச்சி.

”படு போக்கிரி நீ. கிட, அங்கே…!” என்றவாறு பீடியைத் தூர எறிந்துவிட்டு, ஆணிப் புற்றுக் காலைச் செருப்புகளுக்குள் நுழைத்து மெல்ல எழுந்து அப்பு, டீக்கடைக்கோ, எங்கோ போவான், நாணு.

அந்தப் பாச்சி செத்துப் போனாள்.

வெயில், சேட்டுவின் கிட்டங்கிக் கட்டடத்தின் முகப்பிற்கும் மேலே வந்துவிட்டது. முக்கு ரோட்டில் பல சரக்குக் கடைகள் திறக்கப் பையன்கள் சாவியுடன் வந்து காத்து நிற்கின்றனர். யாரோ ஒருவன், ராத்திரி கண்ட சினிமாவில் ராகேஷின் தமாஷ் பற்றி உரக்கப் பேசுகிறான். ஒம்பது மணி சங்கு இன்னும் கேட்கவில்லை போல…

நாணுவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாச்சியின் முகத்தில் ஈக்கள் வந்து மொய்த்துக் கொண்டிருந்தன. அதைப் பார்க்க நாணுவிற்கு எப்படியோ இருந்தது. மெல்ல எழுந்து தலைக்கட்டை அவிழ்த்துப் பாச்சியின் முகத்தில் மூடினான். பிறகு பாச்சியின் பின் கால்களைச் சேர்த்துப் பிடித்து மெதுவாக இழுத்து வெயில் படாத இடமாகக் கிடத்தினான். ‘அம்மாடியோ, என்ன கனம் கனக்குது…’

ஓடைக்காரன் கோவிந்தன், தூரத்திலேயே சாக்கடையைத் தள்ளிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். பழக்கடைத் தெருவின் அழுகல் ஆரஞ்சுகளும், எலுமிச்சம் பழங்களும், தக்காளி அழுகலும், முட்டைக்கோசு பழத்த இலைகளும், வைக்கோல் சருகும், சாக்கடைத் தண்ணி நாற்றத்தில் வேகமாக ஒழுகி வந்து கொண்டிருந்தன. இனி ஆக வேண்டியதைப் பற்றிக் கோவிந்தனிடம் தான் யோசனை கேட்கவேண்டும். அவன் உபாயம் சொல்வான். ஆனாலும் அவன் படுபாவி. அவனும், அவன் குள்ள உடம்பும் சாக்கடைத் தூம்பாவையும் பிடித்துக் கொண்டு முண்டு முண்டாகக் கைகளும், ரெண்டு பெரிய பன்ரொட்டியை பதிச்சு வைச்சது போலப் பரந்த நெஞ்சும், மீசையும், எப்பவும் சிவந்த கண்ணும், படுபாவி. எரக்கமே கிடையாது. கருமடம் சேரியில் எந்தச் சாவு நடந்தாலும் கோவிந்தன் வழி சொல்வான். அன்றொரு நாள் ஒரு எருமை மாட்டைக் கை வண்டியில், காலைக் கையைக் கட்டிப் போட்டு லொப லொபவென்று, ரோட்டு வழியாக இழுத்துக் கொண்டே போனான். அதைக் கொண்டு போய் உரித்துத் தோலை விற்பான். எறைச்சியைச் சேரியில் எல்லோருக்கும், எட்டணா பங்கு, ஒரு ரூபா பங்கு என்று விற்று முதல் செய்வான். கொம்புகளைப் பழவங்காடி தந்த வேலைக் கடையில் நல்ல விலைக்கு விற்பான். சே என்ன ஜன்மமோ? சாயந்தரமானால், வாற்றுச் சரக்கு வயிறு முட்ட விட்டுக் கொண்டு, கிள்ளிப் பாலம் மாதவி வீட்டில் விழுந்துகிடப்பான்.

அந்தத் தடிமாடனிடம்தான் போய்ப் பாச்சிக்கும் வழி கேட்க வேண்டும். பாச்சியிடம் என்ன இருக்கிறது. அவன் விற்றுப் பணமாக்க?

”என்ன நாணு மேஸ்திரி, நின்னுக்கிட்டீருக்கீங்க? ஏது உங்க பாச்சி. காலை நீட்டிட்டாப் போல இருக்கு. நல்ல வேளை, என் மண்வெட்டிக் காம்பாலே அது வாயைப் புளக்க வேண்டியது, சில்லறை அக்கிரமமா, இந்தச் சாலைக்கடையிலே அது செய்தது? ஆமா, எப்படிச் செத்தது? யாராவது மருந்து வச்சுக்கொன்னிருப்பாகளோ? லாரியோ வண்டியோ அடிப்பட்டாப்பலே தெரியலியே. செத்தப்பறம் பார்க்கும்போது பாவமாத்தான் இருக்கு…”

”எப்படிச் செத்ததோ! வெடியக் காலம் பார்த்தா என் விரிப்பின் பக்கத்திலே இப்படிக் கெடக்குது. ஓரமா இருக்கட்டும்னுதான் அப்படி இழுத்துப் போட்டிருக்கேன்… இப்போ என்ன செய்யிறது கோவிந்தா? உன்னைப் புடிச்சாத்தான் சங்கதி நடக்கம்…”

”செய்யிறது என்ன? கிடக்கட்டும் இங்கியே, நான் முக்கு வரைக்கும் ஒடையை இழுத்துவிட்டு விட்டு, கை வண்டியையும் கொண்டுக்கிட்டு வாறேன். சங்கதியெல்லாம் சரி கேட்டுக்கிட்டே நம்ம பங்கு மட்டும் குறையாமெ வாங்கித் தந்திரணும். உன் கருமாதிக் காரியம் பாத்துக்கோ. வரட்டா? சாயந்திரம் கொஞ்சோ மினுங்கணும்.”

மினுங்குதல் என்றால் அவன் பாஷையில் வாற்றுச் சரக்கை வயிற்றில் நிரப்பணுமென்று அர்த்தம்.

கோவிந்தன் சாக்கடைத்தண்ணீர்க் குப்பை கூளத்தோடு நீளத் தூம்பாவால் தள்ளிக் கொண்டே போனான், புழுங்கிய ஆரஞ்சு, அழுகல் சரக்குகளின் வாடை மூக்கைத் துளைத்தது.

கீழக்கோடியில் கடைகளைத் திறந்து கொண்டிருந்தார்க்ள. பையன்கள் பலகைக் கம்பிகளை உருவி எடுக்கும் சத்தம் கேட்டது. பெரிய கடைகளின் இரும்பு ஷட்டர்கள் கறகறவென்று ஓசையுடன் மேலே எழும்புகின்றன.

இன்று புதன் கிழமை. வள்ளக்கடவிலிருந்து அரிசி வண்டிகள் வராது, செவ்வாய், வெள்ளியென்றால், இந்நேரத்திற்கு முன்னால், சரக்கு ஏற்றிய வண்டிப் பட்டாளம் சன்னதி முக்கிலிருந்து ஆரியசாலை ஜங்ஷன் வரைக்கும் நீண்டிருக்கும், அந்த அலமலங்களில் பாச்சிக்கு இப்படி வந்திருந்ததென்றால் எக்கசக்கமாக இருந்திருக்கும். நல்லவேளை. இன்று புதன் கிழமை. தினமும் பஜாரில் பெரிய கடையை திறப்பதற்கு முன்னால் கிட்டங்கியை ஒரு முறை பார்க்க வரும் சேட்டு கூட இன்னும் வரவில்லை. பாச்சி இந்த மட்டில் யோகம் செய்தவள்தான். நல்ல நாள் பார்த்துச் செத்திருக்கிறாள்.

‘ஹூம், போய்விட்டாளே!( நாணுவிற்கு, அந்தப் பக்கம் இந்தப்பக்கம் போய் ஒரு சாயா குடிக்க வேண்டுமென்றோ - ஏன், ஒரு பீடி பற்ற வைக்க வேணுமென்றோ, கூடத் தோணவில்லை, என்ன இருந்தாலும் கேவலம் ஒரு…சே, அப்படியா? இந்த மாதிரி வாயில்லாப் பிறவிகளிடம் எங்கே இருக்கிறது? எவ்வளவு காலமாக இது கூடவே வாழ்ந்திருக்கு. ஒரு நேரம் இல்லாவிட்டால் மறு நேரம் விட்டுப் பிரிஞ்சு இருந்ததில்லை. காலுக்கு ஆணிப் புற்றுப் பிடிச்சு இவ்வளவு காலமாச்சு. தெரிஞ்சவங்க, முகும் கண்டவங்க யாரும் ஏன் என்ன என்று கேட்டதில்லை. எல்லாத்துக்கும் இந்தப் பாச்சிதான். அவளால்தான் கிட்டங்கிக் காவல்கார வேலை கிடைச்சது. அன்றாடத்துக்குப் பஞ்சமில்லை, சொந்தமா பந்தமா? யார் இருக்கிறதா? ஒருத்தருமில்லே. அப்படியே நாள் போவுது. இந்த ஜன்மத்துக்கிட்டே ஒரு பிடிப்பு… ராத்திரியெல்லாம் பக்கத்திலேதான் படுத்துக் கிடக்குது, காலை நக்குது, முகத்தை எட்டி எட்டிப் பார்க்கிறது. விசுவாசம், பற்றுதல், மறக்க முடியமாட்டேன் என்குது.

கிட்டங்கி பேட்டைக்குள் சமாசாரம் நடந்ததினால் பஜார் பயகளுக்க இன்னும் விஷயம் எட்டவில்லை. சுமை கூலிக் குட்டப்பனும், வேலாயுதனும், கையில் சாக்கு தூக்கும் கொக்கி ஊக்குடன் எப்படியோ பேட்டைக்குள் வந்துவிட்டார்கள். ”என்ன நாணு அண்ணே, கோவிந்தன் சொன்னான், உன் சரக்கு செத்துப் போச்சாமே? சீக்கிரமா சேட்டுக்கு ஆள் அனுப்பு. முளை, பாயி, வைக்கோல் - எல்லாம் நாங்க ஆச்சு…’ என்று பரிகாசம் செய்துவிட்டு, அப்புவின் சாயக்கடைக்குள் நுழைந்துவிட்டார்கள். அங்கேயும் புட்டு, பயர், பப்படம் சாப்பிட்டுக் கொண்டிருந்த யாரெல்லாமோ - இதைச் சொல்லி உரக்கச் சிரிப்பதாக நாணுவிற்குத் தோன்றியது. சவத்தப் பயலுக!

‘ஆக்கங் கெட்டவனுக. அவனுகளுக்கென்ன? கால் நல்லா இருந்த காலத்திலே, நாணு மேஸ்திரின்னா முக்குக்கு அந்தப் பக்கம்தான் நிற்பான். இப்போ நாணு அண்ணேன்னிட்டு சங்காத்தம் கேக்க வாறானுக, ”டேய்! நாணுவுக்குக் காலுக்குத்தான் ஆணிப்புற்று. கைகளைப் பார்த்தாயா, அதுக அப்படியேதான் இருக்கு. பதனமிருக்கட்டும்…”

பாச்சியின் மேல் ஈக்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. சுவருக்கப்பால் அந்தப் பக்கம் கருப்பட்டிக் கடைத்தெரு, அதனால்தான் இவ்வளவு மொத்த ஈக்கூட்டம்.

”பாச்சி! ஒரு மூணு நாலு வருஷமிருக்குமோ நீ நம்மகிட்டே வந்து…?”

‘…பாச்சி வந்த புதுசில்தான், கால் ஆணிப் புற்றுக்குச் சக்கிலியனிடமிருந்து செருப்பு வாங்கினது. கேட்டு கடை வாசலிலேயே நேரம் முச்சூடும் உக்காந்திருந்தார், ராத்திரிக்கி எட்டணா தருவாரு. சிலப்போ பத்தணா தருவாரா…? நல்லா இருந்த காலத்திலே கிட்டங்கி அட்டிச்சாக்கு அத்தனையும் ஒற்றை ஆளா நின்றுகூட அடுக்கி வச்சதுண்டு. அப்போவெல்லாம் நல்ல ஆங்காரம் இருந்தது. கால் நோக்காடு வந்தாலும் எல்லாம் ஒவ்வொண்ணா அஸ்தமிச்சுப் போச்சு. உடுத்த கைலிதான். மறு துணிக்கு வருஷக் கணக்குகூட ஆகும். சிரங்கு வந்தா குரங்குதான் என்று சொல்லுவாங்களே; அதே போல ஆச்சு. ஒரு வேலையும் செய்ய முடியாது. முக்கி முனகி ஒரு மூட்டையைத் தலையிலெடுத்தால் கால் ஆணியும், செருப்பின் மேல் சவாரியுமாக நடக்கவா முடியும்? நாணுவா சாக்குத் தூக்குகிறான்? முக்குத் தாண்டி வருமுன்னாலே - விடிஞூசு பூசை போட்டாகுமே’ என்று பேச்சு பதிந்து போயிற்று. சேட்டுவுக்கும் தினப்படி ‘சக்கரத்து’ வியாபாரமாக எட்டணா பத்தணா அளக்கிறதுன்னா நாளா வட்டத்திலே கசந்துதான் போவுது, அப்போ பட்டினிதான்…

‘இந்த வாக்கிலேதான் ஒருநாள், தேங்காய் தொண்டு வண்டி ஒன்றின் பின்னால் யாரோ கழுத்தில் கயிற்றைக் கட்டி விரட்டி விட்டிருந்த பாச்சியைக் கண்டது. ‘மொள் மொள்’ என்று அழுது கொண்டு, வண்டியின் வேகத்துக்குக் கால்களைக் கீழ் ரோட்டில் உரசிக் கொண்டு இழைந்து வந்த பாச்சியை நாணு கண்டான். பாச்சிக்குப் பாச்சியென்று யார் பெயர் வச்சது? அப்புவா? வேலாயுதனா? யாரோ? கிள்ளிப் பாலம் மாதவி வீட்டில் ஒரு சண்டி ‘சரக்கு’ வந்திருந்தாள். அவளிடம் வேலாயுதன், குட்டப்பன், அப்பு இவனுகள் பாச்சா ஒண்ணும் பலிக்கவில்லை. அவள் பெயர்தான் பாச்சி. அந்தச் சரக்கு சுலபத்தில் தமக்கு மசியாத ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள அவன்களில் யாரோதான் பாச்சிக்கு அந்தப் பெயரை வைத்தது. யார் வச்சால் என்ன? நாணுவிற்குப் பாச்சியைப் பிடித்துப் போயிற்று. அவளை வண்டியிலிருந்து அவிழ்த்து வந்து அப்பு சாயாக் கடையிலிருந்து ஒரு இணுக்குப் புட்டு வாங்கிக் கொடுத்தான். சிரட்டையில் காப்பி வாங்கிக் கொடுத்தான். பிறகு ஒவ்வொரு நாளும் தனக்குக் கிடைக்கிறதில் பாங்கைப் பாச்சிக்கும் கொடுத்தான், நாணு. இதுதான் சிநேகிதம்ங்கிறது. நாணு கிட்டங்கித் திண்ணையில் விரிப்பை விரித்துப் படுக்கும்போது பாச்சியும் அருகில் வந்து ஒண்டிக் கொள்வாள் விரட்டினாலும் போகாது. அடித்தாலும் நகளாது. பிறகு என்ன செய்ய? போகப் போக எல்லாம் சரியாகப் போய்விட்டது. பாச்சிக்கு நாணுதுணை. நாணுவுக்குப் பாச்சி துணை என்றாயிற்று. பாச்சி இப்போ நன்றாக வளர்ந்துவிட்டாள். எல்லாரையும் சிநேகம் பிடித்துக் கொண்டாள். அப்பு கடைத் தொட்டியிலிருந்து மீன்கறி விருந்து, எலும்புத் துண்டு விருந்து, சாம்பார் தயிர்சாதக் கதம்ப விருந்து,எ ல்லாம் கிடைத்தது. அப்படியாக இருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

ராத்திரி ஒரு மூணு நாலு மணியிருக்கும். தெருவில் கூட லைட் இல்லை. ‘பவர்கட்’ என்று சொல்லி ரோட்டு விளக்கையெல்லாம் அணைத்திருந்தார்கள். கிட்டங்கி வாசலில் நாணுவிற்கு அருகில் படுத்திருந்த பாச்சி திடீரென்று எழுந்து கிட்டங்கியின் பின்புறச் சுவர்ப்பக்கமாக ஓடி விழுந்து போய்க் குலைக்க ஆரம்பித்தது. இந்தப் பக்கம் நின்று குலைத்தது. அந்த ஓரமாக நின்று குலைத்தது. காலைக் கீழே பிறாண்டிப் பிறாண்டிக் குலைத்தது. ‘நாணு படுத்திருக்கிற பக்கமாக வந்து, ‘வாயேன், வந்து பாரேன்…’ என்கிற மாதிரிக் குலைத்தது. விழித்துக் கொண்ட நாணு, ‘எந்திரிக்கணுமா வேண்டாமா’ என்ற சோம்பலின் தர்க்க நினைவில் ஒரு கணம் தயங்கினான். பாச்சி விட்டால்தானே? குலைப்பது அதிகமாயிற்று. ‘என்னமோ காரணமில்லாமல் பாச்சி குலைக்காதே. சட்டென்று எழுந்து செருப்பையும் மாட்டிக் கொண்டு நடந்து வந்து பார்த்தப்போம். கிட்டங்கியின் பின்புறச் சுவரோரமாக நின்றிருந்த ரயினேஜ் கம்பம் வழியாக ஓட்டைப் பிரித்து உள்ளே ஆள் இறங்கியிருப்பது - தெரிந்தது, பிறகென்ன. அப்புவின் கடையிலிருந்து ஆட்களைத் தட்டி எழுப்பி, காலைக்கறவைக்குச் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த அஞ்சாறு பால்காரர்களையும் கூட்டிக் கொண்டு வந்து பார்த்தபோது திருடன் வசமாகச் சிக்கிக் கொண்டான். சேட்டு வீட்டிற்குச் சைக்கிளில் ஆள்போய், அவர் காரைப் போட்டுக் கொண்டு வந்து, போலீசுக்குப் போன் பண்ணி, மகஜர் தயார் பண்ணி, துவர்த்து முண்டு பொட்டணத்தில் கட்டிய அரிசி தொண்டி சாமானுமாகத் திருடனைக் கொண்டு போகும்போது விடிய விடியப் பத்து மணிக்கு மேல் ஆயிற்று, ரோட்டில் சன்னதி முக்கிலிருந்து ஆரியசாலை வரை ஒரே சுட்டம். நாகர்கோவில் பஸ்கள் மெதுவாக நிறுத்திக் கூட்டத்திற்குக் காரணம் கேட்டு விட்டுப் போயிற்று. பஜாரில் திருடன் புகுந்து அதைக் கண்டு பிடிப்பதென்றால் சாதாரணக் காரியமா?

”யார் கண்டுபிடிச்சது?”

”நம்ம நாணுதான். அவன் இங்கே திண்ணையிலேதானே ராவும் பகலும் குடியிருக்கான்…”

”நாணுவா? தமிர் காலும் செருப்புமா அவன் எப்படிக் கள்ளனைக் கண்டுபிடிச்சான்?”

”அது தெரியாதா? அவன் சரக்கு பாச்சிதான் முதல்லே ஆளைப் புடிச்சுக் கொடுத்திருக்கா. பிறகு கேக்கணுமா?”

”ஓகோ, அப்படியா…?”

சேட்டுவிற்கு ரொம்ப சந்தோஷமாகப் போய்விட்டது. சின்னத் திருட்டோ, பெரிய திருட்டோ ஓட்டைப் பிரிச்சு இறங்கிறதானால் சாமான்யமா? லட்சக்கணக்கில் அட்டிச் சரக்கு இருக்கிற இடத்தில் திருடன் என்றால்…? அதிலிருந்துதான் நாணுவிற்கு மாதச் சம்பளக் கணக்காயிற்று.

கிட்டங்கிக் காவல், சம்பள வேலை, எல்லாம் பாச்சியாலேதானே.

கடை கண்ணியெல்லாம் சாத்தி, ஆட்களெல்லாம் போய்விட்ட பின்பு, சந்தடி ஓய்ந்து, பாச்சியும் தெரு விருந்துக்கெல்லாம் போய்க் களைத்து - ஆடி ஆடி, நாணுவின் விரிச்சாக்கில் வந்து ஒண்டும்போது ராத்திரி ஒரு நேரம் இரு நேரம் ஆகிவிடும். நாணுவும் ஒரு சுருள் பீடியைப் புகைத்துக் கொண்டு, அப்படியே ‘கடவுளைத் தரிசித்துக் கொண்டு’ கிடப்பான். பாச்சி வந்து அருகில் ஒண்டியதும், நாணுவிற்கு ஒரு சமாதானம் பிறக்கும். இனிக்கொஞ்சம் தூங்கலாம். பாச்சி இருக்கிறாள்.

”இன்னைக்கு இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தே, பாச்சி?”

பாச்சிக்குப் பேச்சில்லை. நாணுவின் கைகளை உராசிக் கொண்டு, முகத்தைத் தொங்கத் தொங்க விடுவாள். செல்லம் கொஞ்சுவான். முணுமுணுவென்று முளல் வாசிப்பாள்.

”பாச்சி, நீ மட்டும் இல்லேன்னா நான் இதுக்கு முன்னாலே என்னமோ ஆயிருப்பேன். உன் புண்ணியத்திலே சேட்டு சம்பளம் போட்டுக் கொடுத்தாரு. இப்போ பாரு, குட்டப்பன், வேலாயுதன், அப்பு ஒருத்தனாவது சீண்ட வராணுமே? சொகம்… பாச்சி, நீ என்னெ விட்டுப் போயிராதே, தங்கம்!”

பாச்சி மூச்மூச்சென்று என்னதான் சொல்வாளோ? இப்போ ஒரு நாளா ரெண்டு நாளா? நாணுவிற்கு மாசக் கணக்கு, வருஷக்கணக்கு தெரியாது. ஓணத்திற்கு ஓணம் வரும்போது…’ ஒரு வருஷம் போனதே தெரியவில்லை’ என்ற எண்ணம் தோன்றும். எவ்வளவோ காலமாச்சு ரேசன் வந்தது. குட்டப்பன் பட்டாளத்துக்குப் போயிட்டான். அதுக்குப் பொறவு ‘இம்புட்டு பொடியனா வந்த உன்னி, இப்போ பெரிய சுமட்டுக்காரனாயிட்டான். அவன் கையிலும், சாக்கத் தூக்குகிற ஊக்கு வந்துவிட்டது. அப்பு சாயக் கடையில் அவன் மச்சினன், கொஞ்ச நாள் வந்து கல்லாவில் இருந்தான். அப்பு பால்காரி ராஜம்மாவோட சிநேகம் பிடிச்சான், அவள் கர்ப்பமாக வந்து கடை நடையில் நின்று சிலவுக்குக் காசு கேட்டு வழக்கெல்லாம் நடந்தது. எவ்வளவோ சங்கதிகள் நடந்திருக்கு. சாலை ரோடு கொத்திக் கிளறி ரெண்டாவது தடவை தார் போட்டார்கள். வண்டி, பஸ் எல்லாம், அட்டக்குளங்கரை ரோட் வழியாகத் திருப்பிப் போயிற்று.

பாச்சி செத்துப் போனாளே!

நாணுவிற்கு மனம் ரொம்ப வலித்தது. காலை வெயில் உடலைச் சுட்டது. கேட்டு, மஸ்ஸின் முழுக்கை ஜிப்பாவும், பாளைத் தார் வேஷ்டியுமாகக் காரில் வந்திறங்கிக் கிட்டங்கி வாசலைத் திறந்து- டிரைவர்தான் பெரிய பூட்டுக்களைத் திறந்தான். குனிந்து, வாசல் பலகையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு உள் நுழைந்தார். பாச்சி செத்த விபரம் அவருக்குத் தெரிந்திருக்காது, சொல்லணுமே.

கோவிந்தன் வந்துவிட்டான். கை வண்டியைக் கடகடவென்று இழுத்து நடையில் கொண்டு வந்து நிறுத்தியபோது நாணுவிற்கு நெஞ்சு பக்கென்றது. வண்டியில் வெல்ல மூடை கட்டி வந்த பாயொன்று ஈ மொய்க்க விரித்திருந்தது. பாச்சியைக் கொண்டு போகப் போகிறான்.

அப்போதான் சேட்டு கவனித்தார்.

”நாணு, என்ன கோவிந்தன் வண்டியோட வந்திருக்கான்? கிட்டங்கிச் சந்திலே பெருச்சாளிக கண்டா செதுக்கிடக்கா? அதுக்கெதற்கு வண்டியும் பாயும்…?”

”இல்லே எஜமானே… நம்ம பாச்சி நேத்து ராத்திரி செத்துப் போச்சு. நாணு மேஸ்திரி மொகத்தை எஜமான் பார்க்கலெ போல…” கோவிந்தன்தான் செய்தியைச் சொன்னான்.

சேட்டு அப்பொழுதுதான் நாணுவைக் கவனித்தார்.

”அய்யோ! நம்ம பாச்சியா? எப்படிச் செத்தது? அட பாவமே… நல்ல புத்தியுள்ள பிராணியாச்சே… எப்படி?”

”ராத்திரியெல்லாம் கிட்டக்கத்தான் படுத்திருந்தது. விடிஞ்சு பார்த்தா இப்படி! எந்தப் பாவி செய்தானோ?” நாணு அழுதானோ? குரல் எழும்பவே இல்லை.

சேட்டுவிற்கு மேலும் துக்கம் விசாரிக்கப் பிடிக்கவில்லையோ என்னமோ?

”கோவிந்தா, நீதானே கொண்டு போறே? எல்லாத்தையும் போல இதையும் கடப்புற மணலிலே எறிஞ்சிராதே. உங்க சேரி, கருமடத்துப் பக்கமா, ஒரு குழியெடுத்து அதை நல்ல மொறையிலே புதைச்சிரு பாவம். நல்ல புத்தியோட இருந்தது. மனுஷப் பிறவிகளைக் காட்டிலும் நல்லத்தான் திரிஞ்சுது. சும்மா சொல்லக்கூடாது, இந்தா, கடையிலே கணக்கனிடம் இந்தச் சீட்டைக் காட்டி அஞ்சு ரூபா நீ வாங்கிக்கோ. மடிச்சிராதே…”

நாணுவிற்கு அப்பியே அமிழ்ந்து போனது மாதிரி இருந்தது. ஆணிப் புற்றுக்காலின் செருப்பை பறித்துக் கொண்டு, கல்லுத் தரையில் நடக்க விட்டது போல வாதனையாக இருந்தது. இதுதான் கடைசி பாச்சியைக் கோவிந்தன் கொண்டு போகப் போகிறான்.

பாச்சி போகப் போகிறாள்.

இன்னும் யார் இருக்கிறா? சின்னப் பிராயத்திலேயே அம்மா, மேத்தன்கூட ஓடிப்போனது. அப்புறம் அப்பன் எறச்சிக் கடைச்சண்டையிலே வெட்டுப்பட்டுச் செத்தது. பத்துப் பதினெட்டு வயசு வரையில கருமடம் சேரியில் புல் வெட்டி விற்று, எருமைகளைக் குளிப்பாட்டிக் கொடுத்து வாழ்ந்தது… அப்புறம் சாலைக் கடைக்கு வந்து சுமடு தூக்கிப் பிழைத்தது. வருஷங்களாயிற்று கடைசியலெ, கால் ரெண்டிலும் ஆணிப்புற்று வந்ததுக்கப்புறம், நடக்க மாட்டாமெ, கிட்டங்கித் திண்ணையே கதின்னு கிடந்தது… எல்லாம் போச்சு. பாச்சி செத்துப் போனா, பாச்சியோட எல்லாம் போவுது இனி ஒண்ணுமில்லை.

”நாணு மேஸ்திரி, துவர்த்து வேணும்னா எடுத்துக்கோங்க. உங்க சரக்கெ வண்டியிலே ஏத்தப் போறேன்…” கோவிந்தன் பாவி!

நாணுவிற்கு ஒன்றுமே தோன்றவில்லை. பேசாமல் நின்றான்.

”மேஸ்திரிக்கி சங்கடம்தான்… நவருங்க அப்பா, என்ன கனம், எளவு…”

கோவிந்தன் பாச்சியை வண்டியில் எடுத்துப் போட்டான்.

நாணு பாச்சியைக் கடைசியாக ஒரு முறை பார்த்தான். திறந்த வாயில் முந்திரிப் பருப்புச் சிதறல் போல வெள்ளை வெளெரென்று பற்கள் வெளியே தெரிகின்றன. ஈக்கள் விடாமல் மொய்க்கின்றன. கால்கள் நாலும் விரிந்து கிடக்கின்றன. ராத்திரியெல்லாம் தன் விரிப்பில் கிடக்கும் அதே கோலம்…”

வண்டியைக் கோவிந்தன் கடகடவென்று இழுத்துக் கொண்டு போனான், சேட்டு ஒரு முறை வந்து பார்த்தார். கார் டிரைவர் காரினுள் இருந்தவாறே - லேசாக அலட்சியமாகக் கொஞ்சம் பார்த்தான்.

பாச்சி செத்துப் போனாள்

நாணு வெறுமையில் நின்றான். வெயில் ஏறிக் கொண்டிருந்தது.

******

ஆ.மாதவன் சிறுகதைகள் - தமிழினி.

Dec 17, 2010

திலீப்குமார், ஆ.மாதவன் - விருதுகள்

a maathavan1 dilipkumar1

ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’

திலீப்குமார் ‘விளக்கு’

இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் அழியாச்சுடர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. விளக்கு அமைப்பு, விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இரண்டுக்கும் அழியாச்சுடர்கள் சார்பாக தேர்ந்த எழுத்தாளர்களைக் கெளரவிப்பதற்காக நன்றிகளும், வாழ்த்துகளும்.

‘திலீப்குமார்’ குறித்த சுட்டிகள்:

மெளனியுடன் கொஞ்சதூரம் - திலீப்குமார் திறனாய்வுக்கட்டுரை
மாநகரகோடை - திலீப்குமார் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
அக்கிரகாரத்தில் பூனை - திலீப்குமார் சிறுகதை
திலீப்குமாரின் இலக்கிய உலகம் - ச.திருமலைராஜன்

மொழியின் எல்லைகளைக் கடந்து - வெங்கட் சாமிநாதன்
திலீப்குமார் - ஜெயமோகன்
திலீப்குமார் - இணையத்திலிருந்து சில தொகுப்புகள் - பாஸ்டன் பாலா
திலீப்குமார் - அழியாச்சுடர்கள் தொகுப்பு

மூங்கில் குருத்து, கடவு ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், மெளனியுடன் கொஞ்ச தூரம் என்ற இலக்கியத் திறனாய்வு நூலும் வெளியாகியிருக்கின்றன. ‘கடவு’ சிறுகதைத் தொகுதியின் புதிய பதிப்பு விரைவில் க்ரியா பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது.

ஆ.மாதவன் - சுட்டிகள்:

பாச்சி - ஆ.மாதவன் சிறுகதை
ஆ.மாதவன் குறித்து அ.முத்துலிங்கம்

ஆ.மாதவன் - ஜெயமோகன்
ஆ.மாதவன் விக்கி இணையப்பக்கம்
ஆ.மாதவன் - அழியாச்சுடர்கள் தொகுப்பு

ஆ.மாதவன் நூல்களை இணையத்தில் வாங்க:

கிருஷ்ணப்பருந்து - தமிழினி பிரசுரம்
ஆ.மாதவன் கதைகள் - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி பிரசுரம்
புனலும், மணலும் - காலச்சுவடு பிரசுரம்
இனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன் மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு

நன்றி: சொல்வனம்

Aug 25, 2010

நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்


நினைவோடை


இம்மாதம் 18_ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழுத்தாளன். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். 85 வயதில்_இடையே ஏறத்தாழ ஒரு பத்தாண்டு காலம். அவர் இந்த நிஜ உலகில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட நினைவில்லாத தடுமாற்ற உணர்வு நிலை.Nagulan2 ‘‘நீங்கள் தானே மாதவன்? நான் நாஞ்சில் நாடனுடன்தான் பேசிக் கொண்டிருந்ததாக நினைத்தேன்… சுந்தரராமசாமி இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை… பார்த்து நாளாயிற்று…’’ இப்படியாக

கவிதா சண்முக சுப்பையா, நீல.பத்மநாபன், இருவரும் இங்கே அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்திலுள்ளவர்கள். இதில் அவருக்கு நெருக்கமான சுப்பையா காலமாகிவிட்டார். மரணம் பற்றி, திருமணம் பற்றி, இல்லறம் பற்றி, தாயன்பு பற்றி, சகோதர பந்தங்கள் பற்றியெல்லாம், அதீதமான_அழுத்தமான, அற்புதமான தத்துவ தீர்மானங்களை வகுத்திருந்தார், இந்த பிரம்மசாரி!

தமிழில் கவிதைகள் எழுதினார். ஆங்கிலத்திலும் அந்த அளவில் வீச்சோடு தீட்சணமாக கவிதை நூற்கள் படைத்த இவர், கதைகளிலும் நாவல்களிலும்தான் பெரும்பான்மை பெற்றிருந்தார் எனலாம். க.நா.சு., கு.ப.ராஷகோபாலன், ந. முத்துசாமி என்றெல்லாம் பழகிய வட்டமும், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் என்றிவ்வாறு நட்பு தொடர்பும் பெற்றிருந்தாலும் யாரையும் முன் மாதிரியாகவோ, ஏற்றி வைத்து ஒப்புக் காட்டவோ செய்யாத பண்பு நலம் நகுலனுடையது!

‘நினைவுப்பாதை’ தொட்டு ஆறேழு முழு நாவல்களும், ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்’ என்ற வேறு நான்கு கவிதைத் தொகுதிகளுமாக தமிழுக்கு படையல் தந்துள்ள நகுலன், தமிழின் பெரும்பான்மை வாசகர்கள் அறியாத தத்துவமுறுக்கின் பிரம்மஞானி. பெரிய எழுத்துச் சிற்பிகளின் தலைமை பீடக்காரர். தேர்ந்த விமர்சகர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நுட்பமான வாசிப்புச் செறிவு கொண்டவர். நான் எனது ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலை முன்னுரைக்காக அவர் முன் வைத்தபோது_ எழுதிய நானே அறியாத ஒருவித நீரோட்ட உணர்வைச் சுட்டிக் காட்டி எனது பலத்தையும் பலவீனத்தையும் பகுத்துக் காட்டி… ‘அஹ்ஹா…’ என்று, அவருக்கே உரித்தான அந்த ‘மாஸ்டர் பீஸ்’ சிரிப்பைக் காணிக்கை ஆக்கினார்.

கதைகள் வடித்திடும் அவரது விதேக விசித்திரங்களில், சுசீலா, நவீனன், கேசவமாதவன், எஸ்.நாயர் போன்ற ‘கோட்டுப் பாத்திரங்கள்’ அதிகமாக உலவினர். அனேகமாக, அவரது படைப்புகள், சுய சிந்தனைகளின் திரட்சிப் பாதை வழியாகவே பயணம் செய்தன. இந்த வறட்சி, ‘பைங்கிளி’ கதை பழகிய தமிழ் வாசகனுக்கு எட்டாத, புரியாத அறியாமையாகப்பட்டது.

இனி அவரது விசித்திரமான கதைத் தலைப்போடு (ஒரு ராத்தல் இறைச்சி.) ஆரம்பமாகும் ஒரு கதையின் துவக்கம், அவரது உண்மை உலகைக் காட்டுவதாக, தத்ரூபமாக அமைந்திருப்பதைப் பார்ப்போம்: ‘‘என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகிறேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வதுகூட பிசகு. சுமார் 15 கதை, குறுநாவல், கவிதை, பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13_க்கு ஒரு வித சன்மானமும் கிடைக்கவில்லை. 14_ஆவது கதைக்கு வந்த செக்கை கமிஷன் கழித்து கையில் கிடைத்தது 4ரூ.25.பைசா… நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவர் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் என் தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரண நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை… நான் கடந்த ஐந்து வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன். அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை உயரமுமில்லை. நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜி என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டி விட்டது. இருந்தாலும், அது என்னிடம் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்…’’ …நகுலனின் ஒட்டுமொத்தமான _ அவரே குறிப்பிடுவது போல பத்துப் பதினைந்து படைப்புகளின் உள்படிமான உணர்த்தல்களுக்கு எடுத்துக் காட்டு …. இவை. நகுலன், உரக்க மந்திர உச்சாடனம் செய்யாத வால்மீகம் மூடி வளர்ந்த தத்துவஞானி. வாய்வீரம் பேசாத வாள் வீச்சுக்காரன். மணம் உள்பொதிந்த விடிகாலையின் பாதிவிரிந்த மலர். அவரது அந்தரங்கமே அவரது கவிதைகள், கதைகள், நிஜவாழ்வின் ஈரவிறகுகள் போன்ற குமைவுகளை படிமங்களாகக் கொண்டு அவர் இலக்கியம் படைத்தார்.

‘இன்னார் போல் அவர்…’ என்று எடுத்துக் காட்டிட முடியாத அந்தத் தத்துவப் பேழை. இங்கே 85 ஆவது வயதின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்து மலையாள மயானத்தில் அடங்கிப் போய் விட்டது. வருங்கால அறிவு உலகம் நகுலனின் உத்வேக உணர்வுகளை மனதிலேற்றிக் கொண்டால், தமிழ் இலக்கிய உலகம் விழிப்பில் பார்வைத் தெளிவு கொள்ளும் என்பது உண்மை!

குமுதம் தீராநதி

Jun 23, 2010

நாயனம் - ஆ மாதவன்

இறந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதியமல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டையுடன், நீட்டி நிமிர்ந்து  அந்திமத்துயில் கொள்கிறார். கறுப்பு உடம்பு, வயசாளி, மேல்வரிசைப் பல் கொஞ்சம் பெரிசு, உதட்டை மீறி ஏளனச் சிரிப்பாக அது வெளித் தெரிகிறது. தலைமாட்டில் குத்து விளக்கும், நுனி வாழையிலையில் நிறை நாழி பழமும் ஊதுவத்தியும், சிவப்பு அரளிப்பூ மாலையுமாக ஜோடித்திருக்கிறார்கள். சாவு மணம் ஊதுவத்தியிலிருந்து கமழ்கிறது.
aa maadhavan_m ‘யென்னைப் பெத்த யப்போவ்.. யெனக்கினி ஆரிருக்கா?... என்று கால்மாட்டில் பெண்அள் கும்பலிலிருந்து நாற்பது வயசுக்காரி கறுப்பி முட்டி முட்டி அழுகிறாள். அவளுக்கு பச்சைக் கண்டாங்கிதான், பொருந்துகிறது.
சாயங்காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. தென்னந் தோப்புக்கு அப்பால், வாழைப் பண்ணையைத் தாண்டி, பாறைகள் நிறைந்த ஆற்றின் புது வெள்ளத்தின் குளிரைக் காற்று சுமந்து வருகிறது. காக்கைகள் கூட்டுக்குப் பறந்து போகின்றன. தாழைப்புதர் வேலிகளின் நடுவில்- வாய்க்கால் கரையிலிருந்து , முற்றிய கமுகு மரத்தை வெட்டிச் சுமந்து கொண்டுவந்து, முற்றத்தில் பாடை ஏணி தயாரிக்கிறார்கள். பிளந்த கமுகுமரம், வெளீரென்று பொள்ளையாக முற்றத்தில் துண்டாகக் கிடக்கிறது.
வாசலில், இளவுக் கூட்டத்தினரிடையே, செத்தவரின் தடியன்களான ஆண்பிள்ளைகள் இரண்டு அழுக்குத் துண்டை அணிந்து கொண்டு சுறுசுறுவென்று , எண்ணெய்ச் சிலைகள் போலத் தலைகுனிந்து அமர்ந்திருக்கிறர்கள். சின்னவன், கொஞ்சம் அழுகிறான். பெரியவன் முழங்கையைக் கன்னத்துக்கு முட்டுக் கொடுத்துக் கூரையின் துலாக் கட்டையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். உள்ளேயிருந்து வரும் ஒப்பாரி, இப்பொழுது பழக்கமாகிச் சாதாரணமாகி விடுகிறது.
“ இப்படியே இருந்தாப் பொழுதுதான் இருட்டும். இருட்டு வருமுன்னே இதோ அதோன்னு காரியத்தை முடிப்பம்; என்ன தங்கப்பா??”
“ஆமாமாம். நாயனக்காரனைத்தான் இன்னம் காணோம். யாரு போயிருக்காங்க அழைச்சார?”
“வடிவேலும் சின்னண்ணணும் போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே இன்னிக்கு ஆம்புட்றது கஸ்டம் . அல்லாம், முத்துபட்டி திருவிழாவுக்குப் போயிருப்பாங்க.”
“சின்னண்ணன் போயிருக்கிறான்லியா அப்போ நிச்சயம் யாரையாவது இட்டுக்கிட்டு வருவான். வரட்டும். அதுக்குள்ளியும் மத்த வேலைங்களெப் பாக்கறது.”
மழைவரும் போல் இருந்தது. அந்தியிருள் குளிர ஆரம்பித்தது. கியாஸ் விளக்கொன்றைச் சுமந்து கொண்டு , வயல் வரப்பு வழியாக வாய்க்காலைத் தாண்டி ஒருவன் கரையேறி வந்து கொண்டிருக்கிறான். விளக்கின் ஒளியில், வாழை மரமும், பச்சை ஓலைய்ப் பந்தலும் பெரிய பெரிய நிழல்களாக வளர்ந்து திரைக்காட்சி போல மாறி மாறிப் போயிற்று.
விளக்கு சுமந்து வந்தவன், வேர்க்க விறுவிறுக்க முற்றத்தில் ஸ்டாண்டு மேல் விளக்கை இறக்கி வைத்தான். விளக்கின் உஸ்... உஸ்..! உள்ளே அழுகை ஓய்ந்து போயிருந்தது. குசுகுசுத்த குரலில் பெண்கள் வக்கணை பேசுகிறார்கள். ஊதுவத்தி இன்னும் மணமாக மணத்துக்கொண்டு புகை பரத்துகிறது.
விளக்கு வந்துவிட்ட வசதியில் முற்றத்துச் சந்தடி, அங்கிங்காக விலகி நின்றுகொண்டு இருட்டில், தெரியாத வயல் வரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சலிப்பு- எல்லாரது முகத்திலும் அசட்டுக்களையை விரவிவிட்டிருக்கிறது. சும்மாவேனும் எத்தனை தரம் வெற்றிலை போடுகிறது? எத்தனை தரம் பீடி பிடிக்கிறது?
“விடிஞ்ச மொதக்கொண்டு ஒண்ணுமே சாப்பிடலே. எப்போ இந்தக் காரியம் முடியறது, குளிச்சு மாத்திச் சாப்பிடுறதோ? சரியான தொந்தரவு போ.”
யாரோ ஓராள் இருட்டைப் பொத்துக்கொண்டு வெள்ளையாக நடையும் வேகமுமாக ஓடிவந்தான்.
“சின்னண்ணனும், வடிவேலும் தட்றாம்பட்டிக்குச் சைக்கிள்லே போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே யாரும் நாயனக்காரங்க ஆப்டலியாம். சேதி சொல்லச் சொன்னாங்க.” வந்தவன்  பந்தலையும்- கியாஸ் விளக்கையும்- முசுமுசுத்த கும்பலையும் - உள்ளே பெண்களீன் அர்த்தமற்ற அலமலங்களையும் - மாறி மாறி ப் பார்த்துவிட்டுப் பீடிக்கு நெருப்புத் தேடி ஒதுங்கினான். எப்பிடியும் தட்றாம்பட்டி போய் ஆளை இட்டுக் கொண்டுவர இன்னும் ஒரு மணியோ , ஒன்றரை மணியோ நேரமாகலாம், கும்பலின் முகம் சுணங்கியது.
“இந்தக் காலத்திலே, யாருப்பா நாயனமும் , பல்லக்கும் வச்சிக்கிறாங்க? ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்தரவு இல்லாமெ, காரியத்தை முடிக்கிறதெ விட்டுவிட்டு? இப்போ பாரு , எத்தினிஎ பேரு இதுக்கோசரம் காத்துக் கெடக்கிறாங்க ?”
”இல்லே, மூத்த பிள்ளைதான் சொல்லிச்சிது. செத்தவரு முன்னாடியே சொல்லி வச்ச சங்கதியாம். தமக்கு , சுடுகாடு யாத்திரை தவுல் நாயனக் கச்சேரியோட நடத்தணுமினு. அதாம் அந்த பொண்ணும் அழுகையா அழுதிச்சி. செத்தவங்க ஆத்துமா நிம்மதியாப் போகட்டுமேன்னு தான், இப்போ, மேலாத்தூர் போய் அங்கியும் ஆம்புடாமே தட்றாம்பட்டி போயிருக்காங்களாம்.”
“நல்ல ரோதனையாப் போச்சு. செத்தவங்களுக்கென்ன? அவுங்க போயிட்டாங்க. இருக்கிறவங்க களுத்து அறுபடுது “.
மழை வந்தேவிட்டது. ஹோவென்று . கூரை மேலும் பச்சைப் பந்தல் மேலும் இரைச்சலிட்டது. சுற்றிலும் கமுகு, தென்னை , தாழைப்புதூர் மேல் எல்லாம் கொட்டியதால் இரைச்சல் பலமாகக் கேட்டது. கியாஸ் லைட்டைத் திண்ணைமேல் தூக்கி வைத்தார்கள். திண்ணையில் அமர்ந்திருந்தவர்களின் தலை முண்டாசும், தலையும் பெரிய நிழல்களாகச் சுவரில் உருக்குலைந்து தெரிந்தன.
உள்ளே ஏதோ குழந்தை அடம்பிடித்து அழத் துவங்கியது. தாய்க்காரி பூச்சாண்டியைக் கூப்பிடுகிறாள். பிய்த்து எறிவேன் என்கிறாள். ‘சனியனே , உயிரை வாங்காதே’ என்கிறாள். குழந்தை நிறுத்தாமல் அழுகிறது.
எல்லோர் முகத்திலும் ,சலிப்பும், விசாரமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. தலை நரைத்த முக்கியஸ்தர்களுக்கு யாரை, என்ன பேசி, நிலைமையை ஒக்கிட்டு வைப்பது என்று தெரியவில்லை. எல்லாரும், இருட்டாக நிறைந்து கிடக்கும் வயலின் வரப்புப் பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மழை சட்டென்று ஓய்கிறது. இரைச்சல் அடங்குகிறது. கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. முற்றத்தில் தண்ணீர் தேங்கி வழிந்து போகிறது.
இதற்குள்ளியும் பாடை தயாராகி , உடம்பு சிவப்புப் பட்டு மூடிக்கொண்டு , நீட்டி நிமிர்ந்து- பந்தலில் தயாராகி இருந்தது. நீர்மாலைக்குப் போன புத்திரர்கள் இரண்டு பேரும், மழையில் குளித்துத் தலைமேல் வெண்கல ஏனத்தைச் சுமந்து கொண்டு, பிணத்தின் தலைமாட்டில் வந்து, முக்காடிட்ட முண்டச்சி போல நின்றார்கள்.
‘பொம்மனாட்டிங்க குலவை போடுங்க தாயீ. அதுக்கும் சொல்லியா தரவோணும்?’ என்று தலையாரி குரல் கேட்க, தாமதித்து நின்றவர்கள் போல் கிழவிகள். கொலு கொலுவென்று ஒப்பாரி போலவே குலவையிட்டார்கள். இருட்டில் ஒதுங்கி நின்றவர்  ஒன்றிரண்டு பேர் கூடப் பந்தலுக்குள் வந்து  திண்ணையில் நுழைந்தார்கள்.
‘வாய்க்கரிசி போட இன்னும் , உள்ளே பொம்மனாட்டிக இருந்தா வந்து போடலாம். நேரமிருக்குது” என்றார் தலையார்.
” அட அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சே. இன்னும் புதுசாத்தான் ஆரம்பிக்கோணும். புறப்படுறதை விட்டுப்பிட்டு , அடியைப்புடிடா ஆபயாண்டீன்னு முதல்லே இருந்தே ஆரம்பிக்கோணுமா? தம்பி , சின்னத்தம்பு உன் கைக்கடியாரத்தலே மணியென்ன இப்போ?”
“ மணியா? அதெல்லாம் ரொம்ப ஆச்சு. ஒம்போது ஆகப்போவுது. எப்போ நாயனக்காரங்க வந்து எப்போ பொறப்படபோறமோ?’
எல்லோரது கண்களும் வயல் வரப்பையே பார்த்துக் கொண்டிருந்தன . இப்போது - மரண சம்பவத்தை விட , நாயனந்தான் முக்கியப் பிரச்சனையாக அத்தனை பேர் மனத்திலும் பெரிய உருக்கொண்டு நின்றது.
“யாரோ வர்ராப்போல இருக்குதுங்களே” என்று ஒரு குரல் தொலைவில் இருட்டுப்பாதையைப் பார்த்துச் சந்தேகப்பட்டது.
“ஆமாண்ணோவ், வர்ராங்க போல , யாரப்பா அது வெளக்கை சித்தெ தூக்கிக்கொண்டு போங்களென். மழையிலே சகதியும் அதுவுமா கெடக்குது. சின்னண்ணன் தான், தோள் அசைப்பைப் பார்த்தா தெரியுதில்லே”.
எல்லாரது முகங்களும் தெளிவடைந்தன. இடுப்பு வேஷ்டியை முறுக்கிக்கொண்டு, முண்டாசைச் சரி செய்துகொண்டு எல்லாரும் எழுந்து தயாராகி நின்றனர். சில ஆண் பிள்ளைகள் உள்ளே பெண்களிடம் போய் விடை பெற்று வந்தனர். உள்ளே விட்டிருந்த அழுகை ‘யங்கப்போ’ என்று பின்னும் ஈனமாக எழுந்தது.
கியாஸ் விளக்கு வட்டத்தில், சின்னண்ணனும் வடிவேலுவும் வென்றுவந்த வீரர்கள் போல நின்றனர்.
“ அட , மேலாத்தூரிலே போனா அங்கே ஒரு ஈ, காக்கை இல்லெ. படு ஓட்டமா ஓடினோம். வீரண்ணன் சேரியிலே, ஒரு நல்ல வித்வான். மாரியம்மன் கொடையப்போ கூட நம்மூருக்கு வந்து வாசிச்சான். முனிரத்தினம்ன்னு பேரு . எப்படியும் அவரெ இட்டாந்திராலாம்ன்னு போனா. மனுசன், சீக்கா படுத்த படுக்கையா கெடக்கிறான். விடா முடியாதுன்னு, சைக்கிளைப் உடிச்சோம். தட்றாம்பட்டுலே, தோ... இவங்களெத் தான் புடிச்சுக் கொண்ணாந்தோம். சமத்திலே ஆள் ஆம்பிட்டதே தம்பிரான் புண்ணியமாப் போச்சு.”
எல்லோரும் பார்த்தார்கள்.
காய்ந்து போன மூங்கில் குழாய் போல, சாம்பல் பூத்த நாயனத்தை வைத்துக்கொண்டு , மாறு கண்ணும் குட்டைக் கிராப்பும், காவி மேலாப்புமாக, ஒரு குட்டை ஆசாமி, ‘இவனா?’ என்று கருவுவதற்குள் , ‘இவனாவது அந்த நேரத்தில் வந்து தொலைஞ்சானே’ என்ற சமாதானம் , எல்லாருக்கும் வெறுப்பை மிஞ்சி எட்டிப் பார்த்தது. தவுல்காரன், அடுப்படி, தவசிப்பிள்ளை மாதிரி வேர்க்க விறுவிறுக்க , ‘ஐயோ’ என்ற பார்வையில், முன்னால் வரமாட்டேன் என்று பின்னால் நின்றான்.
‘வெட்டியானெக் கூப்பிடுறது. நெருப்பெல்லாம் ரெடி..சங்கை ஊதச்சொல்லு பொறப்படலாமா? உள்ளே கேட்டுக்கோ.’
தாறுடுத்திக் கொண்டு பாடைப்பக்கம் நாலுபேர் தயாரானார்கள். கருமாதிக்கான பிள்ளைகள் இரண்டும், பெரியவன் தீச்சட்டியை வெட்டியான் கையிலிருந்து வாங்கிக் கொண்டான். சின்னவன், ஈர உடையில் , வெட வெடவென்று நடுங்கிக்கொண்டு , பெரியவன் பின்னால் செய்வதறியாமல் நின்றான்.
“பொறப்படுங்கப்பா. தூக்கு” என்ற கட்டளை பிறந்ததும் தாறுடுத்த நால்வரும் பாடையின் பக்கம் வந்தார்கள். உள்ளேயிருந்து பெண்கள், முட்டிக்கொண்டு தலைவிரி கோலமாக ஓடிவந்தார்கள். “யெங்களெ உட்டுட்டுப் போறீங்களே?” என்று கதறல் சகதியும் அதுவமாகக் கிடந்ததினால் விழுந்து அழுவதற்கு எல்லாரும் தயங்கினார்கள். பெண் மட்டும். ‘ங்கப்போ எனக்கினி யாருருக்கா” என்று பாடையின் கால்மாட்டில் வந்து விழுந்தாள்.
”கோவிந்தா!கோவிந்தா!” என்ற கோஷத்துடன் பாடை தோளில் ஏறிற்று. “யாருப்பா அது நாயனம். உம் ... சும்மா உங்களைப் பார்க்கவா கூட்டியாந்தோம் முன்னாடி போங்க. வெளக்குத் தூக்கறவன் கூடவே போங்க. மோளத்தைப் பிடிங்க..”
நாயனக்காரன் முகம் பரிதாபமாக இருந்தது. அழைத்துவந்த வேலண்ணன் அவன் காதருகில் எதோ சொன்னான். நாயனக்காரன் மெல்ல உதட்டில் வைத்து, “பீ ப்பீ.. ‘ என்று சுத்தம் பார்த்தான். ஊர்வலம் , சகதி வழுக்கும் வரப்புப்பாதையில் போய்க்க்கொண்டிருந்தது. கியாஸ் விளக்கின் ஒளியில் எல்லார் நிழலும் தாழைப் புதரின் மேலே கமுகு மர உச்சி வரை தெரிந்தது.
’கூ..ஊஉ..ஊஉ..’ என்றூ, வெட்டியானின் இரட்டைச் சங்கு அழுதது. நாயனக்காரன் வாசிக்க ஆரம்பித்திருந்தான். ‘பீ..பீ’ என்ற அவலம் பரிதாபகரமாக இருந்தது. தவுல்காரன் சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தைபோல-வாத்தியத்தைத் தொப்புத் தொப்பென்று மொத்தினான்.
விவஸ்தை கெட்ட மழை. வருதடி வைத்த அலமங்கலும், கீழே வழுக்கும் வரப்புப் பாதையும், தாழைப்புதரும், கௌமுகின் தோப்பின் உச்சியில் தங்கி நின்ற குளிர்ந்த இருட்டும், மரணமும் , பசியும், அசதியும், வெறுப்பும்,துக்கமும், எரிச்ச்சலும், கோபமும், எல்லாருடைய உள்ளங்களிலும் நாயனத்தின் கர்ண கடூரமான அபஸ்வரமாக வந்து விழுந்து வயிறெரியச் செய்தது.
கியாஸ் விளக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தது.தீச்சட்டியில் குமைந்த வறட்டியின் புகையால் சங்கு ஊதுபவன் செருமினான். அனைவரும் பேச்சற்ற அவல உருவங்களாக நிழல்களை நீளவிட்டு நடந்து கொண்டிருந்தார்கள்.
‘பீப்பீ..பீ..பீ’
எல்லாருக்கும் வயிற்றைப் புரட்டியது. நெஞ்சில் ஏதோ அடைத்துக் கொண்டது போல சிரமமாக வந்தது. தலையைப்பிய்த்தது.
பின்னும் , ‘பீ..ப்பீ..பீ..பீ!
ஊர்வலம், ‘சனியனே’ என்ற பாவனையில் அவனையே பார்த்துக்க் கொண்டு வழி நடந்தது. யாராருக்கெல்லாமோ பாதை வழுக்கியது. பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன், சக்தி தேங்கிய பள்ளத்தில் விழுந்தான். உடன் வந்த ஒருவர் , அவனைத் தூக்கிவிட்டுவிட்டு . ‘நீயெல்லாம் அங்கே எதுக்கோசரம் வரணும் , சனியனே?” என்று எந்த எரிச்சலையோ அவன் மேல் கோபமாக் கொட்டினார்.
ஆற்றங்கரை வரப்பு ஆரம்பமாகியிருந்தது. சிள் வண்டுகளின் இரைச்சல் கேட்டது. அக்கரையில், கடந்து வஞ்சித்துறையிலிருந்து தவளைகள், ‘குறோம் குறோம்’ என்று  எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. குட்டி குட்டிக் கறுப்புப் பன்றிகள் போலப்பாறைகள் நிறைந்த ஆற்றில், புதுவெள்ளம் இரைச்சலோடு ஒழுகும் அரவம் கேட்டது. குளிர் , இன்னும் விறைப்பாக உடல்களைக் குத்திற்று.
சுடுகாட்டுத் தூரம் தீராத் தொலைவெளியாகத் தோன்றியது. இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’
நாயனக்காரன் பக்கமாகத் தலை முண்டாசோடு வந்து கொண்டிருந்த தலையாரி முத்தன் , அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்த்தார். கியாஸ் லைட்டின் மஞ்சள் வெளிச்சத்தில் உப்பென்று மூச்சு நிறைந்த கன்னங்களுடன், நாயனக்காரனின், அந்தப் பொட்டைக்கண் முகம், எரிச்சலை இன்னும் வளர்த்தது.
இன்னும், பீ..ப்பீ..பீ..பீ..’
”படவா ராஸ்கல். நாயனமா வாசிக்கிறே?” தலையாரி முத்தன் ரொம்ப முரடு. அவரது அதட்டலை பாடை தூக்கிக்கொண்டு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்கள் கூடத் தயக்கத்தோடு திரும்பி நின்று செவிமடுத்தனர்.
அவ்வளவுதான்!
தலையாரி, நாயனக்காரன் பிடரியில் இமைக்கும் நேரத்தில் ஒரு மொத்து. ஆற்றில் துணி துவைப்பது மாதிரி ஒரு சத்தம். நாயனத்தை அப்படியே இழுத்துப் பறித்து கால் மூட்டின் மேல் வைத்து , இரண்டு கைகளாஅலும், ‘சடக்’ இரண்டு துண்டு ! புது வெள்ளமாகச் சலசலத்து ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் இருட்டில் நாயனத் துண்டுகள் போய் விழுந்தன.
‘ஒடிக்கோ பயமவனே, நாயனமா வாசிக்க வந்தே? நின்னா உன்னையும் முறிச்சு ஆத்திலெ வீசி யெறிஞ்சுடுவேன்.”
ஊர்வலம் தயங்கக் கொஞ்சம் நின்றது. எல்லார் முகத்திலும், ’முத்தண்ணே நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு தங்கக் காப்பு அடிச்சுப் போட்டாலும் தகும்’ என்ற திருப்தி பளிச்சிட்டது.
“என்ன நின்னுட்டீங்க?- போங்கப்பா தோ மயானம் வந்தாச்சே, நல்ல நாயனக்காரனெ கொண்ணாந்தீங்க”.
இதைக் கேட்க நாயனக்காரனும் தவுல்காரனும் வரப்பு வெளியில் இல்லை. ஆற்றின் இடப்பக்கம் சந்தின் இருட்டில் இறங்கித் தெற்குப் பார்த்த பாதை வழியாக , இரண்டு பேரும் ‘செத்தோம் பிழைச்சோம்’ என்று விழுந்து எழுந்து ஓடிக்கொண்டிருந்தனர்1
விடாப்பிடியாகக் கழுத்தை அழுத்திய சனியன் விட்டுத் தொலைத்த நிம்மதியில் ஊர்வலம் சுடுகாட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
********
தட்டச்சு: முத்துலட்சுமி 

Dec 16, 2009

சாலைத் தெரு-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் –கதாவிலாசம்
ஆ.மாதவன்


பகல் கனவுகள் பலிப்பதில்லை என்பார்கள். அது நிஜமா எனத் தெரியாது. ஆனால், பள்ளிக் கனவுகள் எதுவும் பலிப்பதேயில்லை என்பதை நானே கண்டிருக்கிறேன்.
பள்ளியில் பேசிய ரகசியப் பேச்சுகள் யாவும் கண்  விழித்தபடி கண்ட கனவுகள்தானே! வகுப்பறையில் உடைந்த சாக்பீஸ் துண்டுகளைவிடவும் அதிகமாகக் கனவுகள் சிந்திக்கிடந்திருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் திரைப்பட விழாவுக்குத் திருவனந்தபுரம் madhavan செல்லும்போதும், சாலைத் தெருவுக்குச் செல்ல மறப்பதேயில்லை. பத்மநாபசுவாமி கோயில் எதிரில் உள்ள பரபரப்பான வணிக வீதி அது. இந்த விருப்பத்துக்குக் காரணம், அந்தத் தெருவில்தான் ஆ.மாதவனின் கடை இருக்கிறது.

ஆ.மாதவன், தமிழின் தனித்துவமான எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் வாழ்பவர். சாலைத் தெருவில் ஒரு கடையை நடத்தி வருகிறார்.

அந்தத் தெருவில் நடக்கும் வெவ்வேறு நிகழ்வுகளை, அங்கு வாழும் மனிதர்களை, அவர்களின் விசித்திர நடவடிக்கைகளை விவரிக்கின்றன அவரது சிறுகதைகள்.
அவரது 'வேஷம்' என்ற கதையைப் படித்தவுடனே, அவரைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதற்காகவே ஒருநாள் இரவு ரயிலில் புறப்பட்டு, திருவனந்தபுரம் சென்றேன்.
ஆ.மாதவன் என்ன வணிகம் செய்கிறார், கடை எண் என்ன... எதுவும் தெரியாது. அவரது வீட்டு முகவரியும் என்னிடமில்லை!

சாலைத் தெருவுக்குச் சென்று விசாரித்தபோது, அப்படி ஒரு தமிழ் எழுத்தாளர் இருப்பதே எவருக்கும் தெரியவில்லை! 'பாண்டியா?' என்று மட்டும் ஒரு கடைக்காரர் கேட்டார்.'திருவனந்த புரத்திலே பிறந்த தமிழர்' என்று சொன்னேன். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை! சாலைத் தெருவுக்குள்ளாகவே மாலைவரை அங்குமிங்கு மாகச் சுற்றியலைந்துவிட்டு, இரவே ஊர் திரும்பிவிட்டேன்.
ஆனால், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஆ.மாதவனை தமிழ்ச் சங்கக் கூட்டமொன்றில் சந்திக்க நேர்ந்தது. எளிமையான தோற்றம். முகத்தில் சாந்தம்.
வெளிப்படுத்த முடியாத அன்புடன் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். 'உங்களைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசைப்பட்டிருக்கிறேன்' என்று முகத்துக்கு நேராகச் சொல்லக் கூச்சமாக இருந்தது.
சாலைத் தெருவாசிகளை ஆ.மாதவன் தன் எழுத்தின் மூலம் அழியாத ஓவியங்களைப் போல சாஸ்வதமாக்கிவிட்டார். தமிழ் இலக்கியத்தில் ஒரேயரு தெருவைச் சுற்றியே தன் படைப்புலகை உருவாக்கிய தனியரு எழுத்தாளர் மாதவன்!
சொல்லித் தீராத கதைகள், அந்தத் தெருவில் ஊறிக்கொண்டிருக்கின்றனபோலும்! எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நிகழ்வுகள், மனிதர்களின் சுபாவம் தெருவில் படிகிறதா... அல்லது, தெருவின் சுபாவம் மனிதர்களைப் பற்றிக்கொள்கிறதா எனத் தெரியாதபடி, சாலைத் தெருவும் அதன் மனிதர்களும் விசித்திரமாக இருந்தார்கள்!

மரத்தில் ஆணி அறையப்பட்ட இடத்திலிருந்து பிசின் வழிந்து கொண்டிருப்பதைப்போல, ‘வேஷம்' கதையைப் படித்த நாளிலிருந்து மனதில் அறியாத வலியன்று கசிந்துகொண்டிருந்தது.

சிவதாஸ் என்ற இளைஞனின் கதையே ‘வேஷம்'. அவன் பிழைப்புக்காக தாலூகா அலுவலகத்தில் மனுக்கள் எழுதித்தருவது, வெளிநாட்டுப் பயணிகளுக்கு பட்லர் ஆங்கிலத்தில் பேசி, கோயிலைச் சுற்றிக்காட்டுவது எனச் சின்னஞ்சிறு வேலைகளைச் செய்து பிழைத்துக்கொண்டு இருக்கிறான். நிரந்தர வருமானம் இல்லை, இருப்பிடமும் இல்லை!

சிவதாஸின் ஓர் அதிகாலைப்பொழுதில் கதை துவங்குகிறது. ஒரு கல்யாணத்துக்குச் செல்வதற் காக பத்மநாப சுவாமி கோயில் குளத்தில் விடிகாலையில் குளித்துவிட்டு, துவைத்துத் தயாராக வைத்திருந்த பாலிஸ்டர் வேட்டி, சட்டை அணிந்து முக்கில் இருந்த பண்டாரத்தின் வெற்றிலைப் பாக்குக் கடையில் வந்து உட்கார்ந்து கொள்கிறான்.

அவன் கல்யாணத்துக்குச் செல்வதற்கு ஒரேயரு காரணம் மட்டுமே இருக்கிறது. அது, அங்கே கிடைக்கும் ஓசிச்சாப்பாடு!

வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக, அருகில் உள்ள கல்யாண மண்டபங்களில் எந்தத் திருமணம் நடந்தாலும் பெரிய மனிதனைப் போல நுழைந்து, பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான். அது, அவனது வாடிக்கை.
அன்றும், இதற்காகத்தான் அதிகாலையிலே தயாராக இருந்தான். திருமண வீட்டுக்கு ஆட்கள் வரத் துவங்கினார்கள். திருமண மண்டபத்தை நிர்வகிக்கும் நாயருக்குத் தெரியாமல் உள்ளே போகவேண்டும்!
அவர் கண்டுபிடித்தால் துரத்திவிடுவார் என்பதால், பெரிய மனிதரைப்போல உள்ளே நுழைந்து, வசதியான ஒரு நபரின் அருகில் உட்கார்ந்துகொண்டான். அது, ஒரு மலையாளி வீட்டுத் திருமணம். உள்ளே உணவு தயாரிக்கும் வாசம் கமகமக்கிறது.

'மண்டப நிர்வாகி வருகிறாரா?' என்று கள்ளப் பார்வை பார்த்தபடியே, கல்யாணச் சடங்குகளைக் கவனிக்கிறான். மணப்பெண்ணுக்குப் புதுப்புடவை தருகிறார்கள். அதை வாங்கிக் கொள்ளும்போதுதான் தெரிகிறது, அந்த மணப்பெண் அவனோடு பள்ளியில் படித்த சுபாஷினி. உடனே, 'அவள் தன்னைப் பார்த்து விடக்கூடாதே' என்று கலக்கம் உருவாகிறது.

பால்ய வயதில் சுபாஷினியும் அவனும் ஒரே பள்ளியில் படித்தார்கள். ஒரு நாள் சுபாஷினிமீது காகித அம்பு விடுகிறான் சிவதாஸ். அவளும் பதிலுக்குச் சிவப்பு மையை அவன்மீது ஊற்று கிறாள். இதனால் சண்டை உருவாகி, நாளடைவில் அது சமாதானமடைந்து நேசமா கிறது. ஆனால், பள்ளிப் படிப்பை முடிக்காமலே சிவதாஸ் பாதியில் நின்று விடுகிறான்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு தனது பள்ளித் தோழியைப் பார்த்தவுடன், கல்யாண மண்டபத்தைவிட்டு வெளியே போய்விடலாமா என்று தோன்றுகிறது. ஆனால்,3770584447_d1e7bcd268_m தன்மானத்தைவிடவும் பசி வலுவடையவே, சாப்பிடு வதற்குச் செல்கிறான். விதவிதமான உணவு வகைகள், பாயசம் என விருந்து மணக்கிறது. அவனது இலையில் பொரியலும் அவியலும் பருப்பும் நெய்யும் சுடுசாதமும் போடுகிறார்கள்.
சாப்பிடக் கை வைக்கும்போது, மண்டப நிர்வாகி நாயர் அவனைப் பார்த்துவிடுகிறார். சட்டையைப் பிடித்து இழுத்து, 'ஓசிச் சாப்பாட்டுக்கு வந்தவனுக்கு முதல் பந்தியா?' என மிகக் கேவலமாகத் திட்டுகிறார்.

சிவதாஸ் எழுந்துகொள்ள முற்படும்போது, புதுமணப்பெண்ணாக எதிர்வரிசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுபாஷினி, அவனைத் திரும்பிப் பார்க்கிறாள்.
வெளியே துரத்தப்படும் அவனை, வாசலில் காத்துக்கிடக்கும் பிச்சைக்காரர்கள்கூடக் கேலி செய்து சிரிக்கிறார்கள்.
'கூடப்படித்த பெண்ணின் திருமணத்தில், இப்படி ஒருவேளை சோற்றுக்கு ஆசைப்பட்டுப்போய், கள்ளனைப்போலப் பிடிபட்டு அவமானப்பட்டு விட்டோமே? என்ன வாழ்க்கை இது! குளத்தில் விழுந்து செத்துவிடலாமா?' என்று தோன்றுகிறது.
ஆத்திரத்தில், தான் போட்டிருந்த பாலிஸ்டர் சட்டையைக் கழற்றிச் சுருட்டி, குளத்தில் வீசி எறிகிறான். சிவதாஸின் வேஷம் கலைந்து போயிற்று. ஆனால், நிர்வாணத்தை விடவும், தான் நேசித்த பெண்ணின் முன் அடைந்த அவமானமே, அவன் உடலைக் கூசி நடுங்கச் செய்வதாக இருந்தது.

தோல்வியைவிடவும் அதை ஒப்புக்கொள்ளும் தருணம்தான் அதிக வலியைத் தரக்கூடியது.

அவமானப்படுவது பெரிய விஷயமல்ல. நாம் நேசிக்கும் ஒருவரின் முன்பாக அவமானப்பட்டு நிற்பதுதான் தாங்கமுடியாத வலி, இல்லையா?
அதோடு, இந்தக் கதை பில்லியர்ட்ஸ் மேஜையில் ஒரு பந்து மோதி, மற்ற பந்துகளைத் திசைக் கொன்றாக உருளச்செய்வதுபோல, என்றோ என்னுள் புதையுண்டு போயிருந்த மெகருன்னிசா டீச்சரை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.
கிராமப் பள்ளியன்றில் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, மெகருன்னிசா என்ற புதிய ஆசிரியை வேலைக்கு வந்துசேர்ந்தாள். மெகருன்னிசாவுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். காலில் வெள்ளிக் கொலுசு அணிந்திருந்தாள்.

மற்ற ஆசிரியைகளைப்போல் இல்லாமல், அவள் எப்போதும்சிரித்துக் கொண்டே இருந்தாள். அவள் வருவதற்கு முன்புவரை, பள்ளியில் இருந்த ஆசிரியை களுக்குத் தங்கள் வயது தெரியவே இல்லை!

ஆனால், அவள் வந்த மறுநாளில் அவர்களின் நரைத்த தலையும், பருத்த உருவமும் உரத்த குரலும் அவர்களின் வயதைக் காட்டிக்கொடுத்திருக்க வேண்டும். அவசரமாகத் தங்களை அழகு படுத்திக்கொள்ளத் துவங்கினார்கள். அது, அவர்களது வயதை மேலும் அதிகப்படுத்திக் காட்டியது.
ஆசிரியர்களும் மாணவர்களைப் போலவே, டக்இன் பண்ணிக்கொண்டு வகுப்புக்கு வந்தார்கள். அவர்கள் பாண்ட் பாக்கெட்டில் சீப்பு இருப்பதும் அடிக்கடி அவர்கள் தலைசீவிக்கொள்வதும் தெரிந்தது.

ஆறாம் வகுப்பு மாணவர்கள் யாவரும் ஒன்றுசேர்ந்து ஒருதீர்மானம் போட்டோம். எங்களைத் தவிரவேறு வகுப்பு ஆசிரியர்களோ மாணவர்களோ மெகருன்னிசா டீச்சரைக் காதலிக்கக் கூடாது. ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது எளிதாக இல்லை.

மெகருன்னிசா டீச்சர் எட்டாம் வகுப்புக்கு ஆங்கிலப் பாடம் எடுக்கச் சென்றபோது, ஒரு மனப்பாடப் பாடலைத் தப்பில்லாமல் சொன்னதற்காக, கோபாலைப் பாராட்டி ஒரு சாக்லெட்டைப் பரிசாகத் தந்த நிகழ்ச்சி, எங்களை ஒரு இரவு தூக்கமில்லாமல் செய்ததோடு, கோபாலைப் பள்ளியைவிட்டே விரட்டுவதற்கான சதி ஆலோசனைகளிலும் ஈடுபடச் செய்தது.

அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுப்பு வந்தது. அதன்பிறகு, பள்ளி திறந்த இரண்டு நாட்கள் மெகருன்னிசா டீச்சர் வரவில்லை. மூன்றாம் நாள் வந்தவள், வகுப்பு முழுவதற்கும் சாக்லெட் கொடுத்துவிட்டு, தனக்கு அடுத்த வாரம் திருமணம். எல்லோரும் அவசியம் வரவேண்டும் என்றாள். சாக்லெட்டை மெல்ல முடியவில்லை... கசப்பாக இருந்தது!
அன்று மாலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் திரும்பவும் ஒன்றுகூடி, மறு தீர்மானம் போட்டோம். எங்களை ஏமாற்றிவிட்டு டீச்சர் திருமணம் செய்துகொள்ளப் போகிறாள். ஆகவே, அவளது திருமணத்துக்கு யாரும் போகக்கூடாது! அதை மீறி, திருமலைமுருகன் மட்டும் டீச்சர் திருமணத்துக்குப் போயிருந் தான். அதற்காக அவனை நாங்கள் விளையாட் டில்கூடச் சேர்த்துக்கொள்ளவில்லை!
திருமணம் நடந்து முடிந்த இரண்டாம் நாளே, மெகருன்னிசா டீச்சர் பள்ளிக்கு வந்து சேர்ந்தாள். அவள் முகத்தில் களையே இல்லை. பாடம் நடத்தும்போது, ஏதோ யோசனையாகவே இருந்தாள்.

நாலைந்து நாட்களுக்குப் பிறகு, ஒரு பகலில் புல்லட் ஓட்டிக்கொண்டு ஒரு ஆள், எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தான். தன்னை மெகருன்னிசாவின் கணவன் என்று சொல்லிக்கொண்டு, எங்கள் வகுப்பறைக்கு வந்தான்.
டீச்சர் அவனை வகுப்புக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய், ஏதோ பேசிக்கொண்டு இருந்தாள். அவன் திடீரெனக் கத்தத் துவங்கி, 'என்னடி... பேசிட்டே போறே? சம்பாதிக்கிற திமிரா... நீ வேலை பார்த்தது போதும். இப்பவே என்கூடக் கிளம்பு' எனக் கையைப் பிடித்து இழுத்தான்!

டீச்சர் வர மறுத்து, ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவன் ஆத்திரத்தோடு மெகருன்னிசா டீச்சரின் முகத்தில் ஓங்கியறைந்தான். வலி தாங்காமல் கத்தி அழுதுவிட்டாள் டீச்சர்.

மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்து, டீச்சரின் கணவனை விலக்கித் தனியே அழைத்துக்கொண்டு போனார்கள். சிறுகுழந்தையைப் போல மெகருன்னிசா டீச்சர் அழுதுகொண்டிருந்தாள்.
அடிபட்டதுகூடக் காரண மில்லை... இத்தனை மாணவர்கள் பார்க்க, அடி வாங்கிவிட்டது தான் அவளை வேதனைப்படுத்தியிருக்க வேண்டும். தலை நிமிர்ந்து பார்க்கவேயில்லை. தொலைவில் டீச்சரின் கணவன் உரத்த குரலில் கத்திக்கொண்டிருந்தான்.

வெளிநாட்டில் வேலை செய்வதாகச் சொல்லி அவன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவனுக்கு முன்பே ஒரு திருமணம் நடந்து மணவிலக்கு நடந்திருப்பதாகவும் மெகருன்னிசா டீச்சர், மற்ற ஆசிரியர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் அவளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர். டீச்சர், அதன்பிறகு வகுப்புக்கு வரவேயில்லை. பள்ளியிலிருந்தும் மாற்றல் வாங்கிக்கொண்டு போய் விட்டாள்.

பால்யத்தில் அவள் உருவாக்கிய ஆசைக் கனவுகள், நீர்க்குமிழ்கள் போலக் காற்றில் நிமிஷ நேரம் அழகு காட்டி விட்டுக் கரைந்து போய் விட்டன.

என்னவானது அவள் வாழ்க்கை? எங்கே இருக்கிறாள்? இன்றுவரை எதுவும் தெரியாது. கதையைவிடவும் வாழ்க்கை அதிகப் புதிரானதில்லையா?

'ஒரே படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வேறு வேறு கனவுகள் காண்கிறோம்' என்று ஆங்கிலத்தில் ஒரு வழக்குச் சொல் இருக்கிறது.

கனவுகள் நமக்குக் கிடைத்த வரமா, சாபமா என்றுதான் தெரியவில்லை!

ஆ.மாதவன் 1934-ம் வருடம் திருவனந்தபுரத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். பள்ளி இறுதியுடன் படிப்பை விட்டுவிட்டு கடை வியாபாரத்துக்குச் சென்றுவிட்டார். நாற்பத்தைந்து வருடங்களாகத் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் முக்கிய படைப்பாளி. இவரது சிறுகதைகள் ‘ஆ.மாதவன் கதைகள்' என்ற பெயரில் மொத்தத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. ‘கிருஷ்ணப் பருந்து' இவரது புகழ்பெற்ற நாவலாகும்

Nov 20, 2009

சாத்தான் திருவசனம் ..-ஆ. மாதவன்

ஆ. மாதவன்

தைக்காடு மைதானம் தாண்டி, தாணாமுக்கு அம்மன் கோயில் பக்கம் வந்தபோது, தினசரி பேப்பர் கட்டுகளுடன் சைக்கிளை அள்ளிக் கொண்டு 'சர்' வென்று நடந்து வருகிறான் நாணக்குட்டன். நேரம், பலபலவென்று வெளிச்சம் பூசத் தொடங்கியிருந்தது, மணி ஐந்தரை. எனது 'மார்னிங் வாக்' முடியப் போகும் நேரம்...
nowayback500
''என்ன நாணு நாயரே, இன்னைக்குக் கொஞ்சம் நேரமாயிப் போச்சே... பதிவா, மாடல் ஸ்கூல் பக்கத்தில யல்லவா நம்ம சந்திக்கிறது... புதிசா பேப்பரிலெ ஏதாவது விசேஷம் உண்டுமானா, என் பேப்பரை இங்கெயே தந்திரு.. இல்லாட்டா போற போக்கிலெ வீட்டிலெ போட்டாலும் போரும்...''

சைக்கிளைத் தள்ளிக் கொண்டு, குனிந்து ரோட்டைப் பார்த்தபடியே - யானை மரம் இழுப்பது போல, மெல்ல நடந்து வரும் நாணுக்குட்டன், அப்பொழுதுதான் நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

''சாரு இன்னைக்கு நேரத்தோட எத்தியாச்சு... பேப்பரிலெ இன்னும் ஒரு விசேஷமும் இல்ல சாரே... ஆளுக்கே தெரியாம ஆப்ரேஷன் நடத்தி, கிட்னி தட்டியெடுக்கற ஒருவிதமான பிளாக் மார்க்கெட் நடக்குதாமே, ஹைதராபாத், மெட்ராசெல்லாம். இது போல, இப்போ இங்கேயும் ஒரு பெரிய பிரைவேட் ஆஸ்பத்திரியிலெ நடந்திருக்காம்...

''ஆப்ரேஷன் நடத்தின டாக்டருடைய ·போட்டோவும், அந்த பரப்பிரம்ம பேஷன்டோட படமும் எல்லாம் போட்டு லேகனம் வந்திருக்கு... இதுதான்... விசேஷம். நான், எல்லாம் முழுசா படிக்கல்ல... கொஞ்சம் புரட்டிப் பார்த்திட்டு நின்னிட்டேன். அதுதான், பத்து பதினைஞ்சி மினிட்டு தாமதிச்சு போச்சு... இல்லாட்டா இதுக்கு முன்னே, குற்றாலம் சார் வீட்டை தாண்டி, ஆஸ்பத்திரி முக்கு கடந்திருப்பேன். மணியென்ன ஆச்சு சாரே.. இந்தாங்கோ பேப்பர் கொண்டு போங்க... நான் சொன்ன வார்த்தையெ படிச்சு பாருங்கோ, நல்ல ரசம் உண்டும்...''

''எங்கெ? நடந்துக் கொண்டே படிக்க இப்பவெல்லாம் முடிய மாட்டேங்கிறது. தலை சுற்றுது. இனி, இந்த கண்ணாடியெ மாற்றணும். பிற்பாடுதான, நடந்து படிக்கிறது, ராத்திரியிலெ புஸ்தகம் படிக்கிறது எல்லாம்...''

''சும்மா இப்படி ராவும் பகலும், படிப்பு வாசிப்பும்னா கண்ணும் ஒரு அவயவம் அல்லவா, அதுக்கும் வேணுமே ரெஸ்டு... நீங்க எங்கே விட்டு வக்கறியோ, படிப்பு, எழுத்து, படிப்பு, எழுத்து இப்பிடியே தானே... பேசாமெ ஆரயாவது பிடிக்க வேண்டிய ஆளெப் பிடிச்சு ஒரு அவார்டு தட்டி யெடுக்கப் பாருங்க, ஆயுசு போயிட்டிருக்கு...''

''சரிடேய் நாணுக்குட்டா, அதெல்லாம் போகட்டும், உன் பய்யன் காணாம போனவனைப் பற்றி ஏதாவது துப்புத்துரவு வந்துதா? அதுவும் அப்பிடி, இப்பிடிண்ணு இப்போ ரெண்டு வருஷமிருக்காதா...?"

''சாரே அது ஆச்சுது சாரே, இந்த கர்க்கிடகம் வந்தா நீங்க சொன்னாப்பிலெ இரண்டு வருஷம் தெகையிது. ஞாபகப்படுத்திட்டியோ; நெனச்சாலே ஈரக்கொலை வேவு தீரமாட்டேங்கிறது... பதினெட்டு வயசு... ஆரு கண்டாலும் இரவத்தியஞ்சி மதிக்கிற ஒயரமும், தண்டியும், அந்த கள்ளச்சிரிப்பும்... எங்கெ போய் என்ன பாடுபடுத்தானோ, எப்பிடி இருக்கானோ... என்னதான் இருந்தாலும் எனக்கு நல்ல நிச்சயமிருக்கு சாரே... அவன் சாகல்லெ, உயிரோடதான் இருக்கான். சோதி நக்ஷத்திரக்காரனல்லவா, பெற்றவங்களெ நல்லா சோதனைக்கு மேலெ சோதிப்பான். அதனாலெதானே மறக்க ஒக்கல்ல... அய்யோ, ஜட்ஜி அந்நியம் நடையிலெயே நிக்காரு.. ஒரு அஞ்சு மினிட்டு லேட்டா யிட்டா கூட பொலயாடி மகனேன்னு தான் கூப்பிடுவாறு... சாரு போங்க... நான சொல்லிருக்கேன் அந்த காரியம் மறந்திரக் கூடாது. அதுதான், குற்றிமேடு சாத்தான் சேவை மடம் வரைக்கும் ஒரு தரம் போய் கேட்டு வரணும்.. அற்ற கைக்கு அதையும் கேட்டு அறிஞ்சாச்சானா இந்த புத்திர சோகத்துக்கு ஒரு அறுதி கண்டிரலாம்... சாருக்கு எப்போ சவுரியம்னு ஒரு வாக்கு சொல்லுங்கோ... நமக்கு தெரிஞ்சவன் ஒருத்தன் புதிய டாக்ஸி கார் எடுத்திருக்கான், கூப்பிட்டு போயிட்டு வந்திரலாம்...''

''சரி நாணுநாயரே... நிச்சயமா இந்த வார கடைசியில் சாந்தன் மடத்துக்கு போகலாம். இனி நான் காரணமாக தடை வேண்டாம்...'' என்று, நாணுக்குட்டனுக்கு கை அடித்துக் கொடுக்காத குறையாத வாக்களித்து விட்டு, அந்த காலை நேர தேகாப்பியாச நடையைத் தொடர்ந்தேன்.

பாவம் நாணுநாயர். அவனுக்கொரு நம்பிக்கை நானாகப் பட்டவன், சர்வக்ஞ பீடமேறிய அதிவித்வான் என்று சோழிக்காய் பரப்பி, குத்துவிளக்க சமிக்ஞையில் குறி பார்த்துச் சொல்லும் குட்டிச்சாத்தான் சேவை தேவனிடம், நான் உடனிருந்தால் கேட்க வேண்டியதையெல்லாம் சவிஸ்தாரமாக கேட்டுச் சொல்வேன் என்று அவன் நினைக்கிறான். அப்பாவி ஒருவனின் நம்பிக்கை, அதுவும் புத்திர சோகம், எந்தவிதமான முன் சமிக்ஞையும் இல்லாமல் திடுதிப்பென்று ஒரு நாள், நாணு நாயருக்கு எல்லா வகையிலும் உதவுயும், உந்துதலுமாக இருந்த - அருமைக்கு அருமையான, ஏக புத்திரன் கோபாலன் இருபது வயது கட்டிளம் குமரன் காணாமால் போய் விட்டான்.

சொந்தம், பந்தம், அயல், அன்னியமென்றல்லாம், தேடாத இடமில்லை. போலீஸ் நிலையங்களில் எழுதி வைத்து, விபத்து, தற்கொலை தடயங்களில் எல்லாம் கூட சலித்துப் பார்த்தும், ஊஹ¤ம். நாணுநாயர்தான் பத்திரிகை முகவர் ஆயிற்றே, தெரிந்த எல்லா பத்திரிகைகளிலும் வரிவிளம்பரங்களில் இலவசமாகச் செய்தி பிரசுரித்து உதவினார்கள்.

இதோ இதோவென்று இப்போ ரெண்டு வருடத்தைத் தொடுகிறது. உடலோடு சொர்க்கம் என்பது போல - மாயமந்திரம் என்று ஏதாவது ஆகியிருக்குமோ சபல நிவாரணத்திற்காக உண்டு இல்லை என்று ஏட்டைக் கட்டிவிடவேண்டுமென்ற ஆசை நாயருக்கு. குற்றிமேடு சாத்தான் பிரவசனம் என்றால் கேரளமெங்கும், தெய்வ கற்பிதமாக பிரபலம் கொண்டது. அந்த திவ்யாஸ்திர பிரயோகத்திற்கு துணை போகத்தான், நாணுநாயர் என்னையும் அழைக்கிறான். போய்த் தான் பார்ப்போமே...

நாணுக்குட்டனுடன் குற்றிமேடு சாத்தான் நிலையத்திற்கு வந்தபோது, காலை மணி ஏழரை ஆகியிருந்தது. நாங்கள் வந்தபோது அறுபது கிலோ மீட்டர் தாண்டி, டாக்ஸி காரை சாத்தனார் மடத்து வாசல் பக்கம் கலுங்கு அருகில் நிறுத்தி, டிரைவரை காலை டிபனுக்கு அனுப்பி வைத்தோம். மடத்து வாசலின் பிரம்மாண்ட கேட்டுப் பக்கம் வந்த போது, அங்கே எங்களுக்கு முன்னதாகவே, இரண்டு வயதான பெண்களும், மூன்று ஆண்களுமாக காத்திருந்தார்கள். "நல்ல வேளை ஆறாவது டோக்கன் கிடைத்து விடும்...'' என்று என்னிடம் மெதுவாக சொன்னான் நாணுநாயர்.

"பிரச்சனம் பார்க்கத்தானே? அப்படியென்றால் உங்களுக்கு மூணாவது நம்பர் கிடைக்கும். அந்தப் பெண்கள் ரெண்டும் ஒரு டோக்கன், நாங்கள் மூன்று பேரும் ஒரு டோக்கன், நீங்க மூணாவது ஆள் ரொம்ப தூரத்திலிருந்து வருவது போல இருக்கு. டாக்ஸியிலே வந்து இறங்கினதெப் பார்தோம்...'' காத்திருந்த ஆண்கள்தான் வலிய வந்து பேசினார்கள்.

''நாங்க திருவனந்தபுரத்திலேருந்து வாறோம்... டோக்கன் எப்போ கொடுப்பாங்க?''

''ஹோ.. திருவனந்தபுரமா...? அங்கேயிருந்து டாக்ஸியிலெ சிலவு பண்ணி வந்திருக்கிறதினால, உங்களுக்கு முதல் டோக்கன் கிடைக்கும். தூரத்துக்காரங்களை மொதல்லே கவனிக்க அனுப்பிச்சிருவா... கரக்டா எட்டு மணி அடிச்சு ஒடனே கேற்று திறக்கும். உள்ளபோனதும் - பரிசாரங்கள் போற்றி டோக்கன் கொடுக்க ஆரம்பிப்பாரு...''

பேசிக் கொண்டிருந்த போதே அந்த கிராம்ய சுற்றுப்புறத்தை கொஞ்சம் நோட்டம் விட்டேன். நாணுநாயர் அந்த நாட்டுக்காரர்களின் சம்பாஷணையில் லயித்து விட்டது போல இருந்தது. அவர்களிடமும் தன்னுடைய துரந்தத்தையெல்லாம் விளம்புவார். ''இப்படியாக்கும், தன்னுடைய, அருமைக்கும் அருமையான ஒரே பய்யன் பதினெட்டு வயசு, மன்மதக்குஞ்சு வேறெங்கும் அவனைப் போல காணக்கிடைக்காது...'' காணாமப் போயிட்டான். மனசு முறிஞ்சு போச்சு. தேடாத இடம் பாக்கியில்லெ கடைசியிலெ சாத்தான் சாமி சன்னதியிலெ துப்பு கிடைக்குமான்னு கேக்க வந்திருக்கோம்... அந்த சார்வாளா? அவங்க பெரிய ஒரு வித்வான் ஆக்கும். என் கூட வந்தது. ஒரு ஆஸ்ரிதவாத்சல்யம்...'' என்று என்னைப் பற்றியும் சொல்வது... பரக்கப் பார்க்கும் லயிப்பினிடையேயும் கேட்டது.

அருமையான சுற்றுப்புறம். கொடைக்கானலின் ஒரு மலையடிவார தோட்ட நடுவில் வந்தது போலிருந்தது. ஒரு எட்டடி தார்ரோடு அங்கிருந்து இறக்கமாக சரிந்து எங்கோ மரங்களிடையே போய் மறைகிறது. பக்கவாடு நிறைய உயரமாக பசேலென்று ரப்பர் மரங்கள், பறங்கிமாமரங்கள், பஞ்சணத்திப் பெருமரம், உயர உயர வளர்ந்து நிற்கும் தேக்க மரங்கள், இவ்வளவு பூத்த பொலிவை நான் கண்டதேயில்லை. மேற்கே வானச்சரிவில் பெரிய தொப்பி போல மேகங்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டு மலை உச்சிகள் வடக்காக வளைந்து போய்கிடக்கிறது. பற்றமாக பச்சைக்கிளி வரிசையொன்று பெருமரப் புதரிலிருந்து எழுந்து பறந்து போயிற்று... எவ்வளவு ரம்யமான, ரசசுந்தரமான, ரகவிஸ்தாரமான, விதரணையான, குளிரான, காதடைந்த அமைதியான - முக்காலத்தையும் எட்டித்தொடும் நிர்மல சாயூஜ்யம் இப்படி கிடைத்தால், எவ்வளவு படிக்கலாம், எவ்வளவு எழுதிக் குவிக்கலாம்..

''என்ன சார், இன்னும் பத்திருபது நிமிஷத்திலே வாசல் திறந்திருவா... அதுக்கிடையிலே, அதோ அந்த குடிசை, ஒரு டீ கடையாமே, தோட்டத்திலேயிருந்து அப்பிடியே பறிச்சுக் கொண்டு வந்த தேயிலையிலெ ருசியான டீ கிடைக்குமாம். வாங்க குடிச்சிட்டு வர நேரம் சரியாக இருக்கும்...'' என்றான் நாணுநாயர், என் சுகலயத்தில் கல்லெறிந்தவாறு!

தேநீர் பானத்தின் ருசி, நாக்கில் தோயத் தோய மடத்து வாசலுக்கு வந்தபோது, சாத்தான் சாமியின் முதல் அழைப்பு வெளியூர்க்காரர்களான எங்களுக்கே சித்தமாகியது.

எதிர்பார்த்தது போல் இல்லாமல் சுவாமியடிகள், கிளீன் முகச்சவரம், கிராப்தலை, மெத்த ஆரோக்கியமான ஐம்பது வயது கருகரு கம்பீரம். நெற்றி நிறைய குங்குமத் தீசலிடையே கறுப்பு வட்ட திலகம், வெள்ளி கட்டிய பவழ பாசிமாலை, ஜரிகை வேஷ்டி பூஷணாக பத்மாசன இறுக்கத்தில், உலக்கையை விழுங்கியது போன்ற அட்டென்ஷனில் மூன்றடி உயர அன்ன விளக்கடியில் கண்ணை மூடி அமர்ந்திருக்கிறார்.

''சொல்லட்டும்... வந்த காரியம் சொல் லட்டும்.. சுவாமி திருவடிகளிடம் எல்லா விபரங்களையும் விதமாக, சுருக்கமாக சொல்லணும்...'' என்றார், பரிகாரியான உதவியாள், போற்றி.

''நாணுக்குட்டன் நாயர் என்னுடைய ஒரே சினேகிதன். அவருடைய ஒரே மகன்...'' என்று நான் ஆரம்பிக்கவும் ஸ்வாமி திருவடி சட்டென்று கண் திறந்து - உருட்டி விழித்து, உக்ரமாக கண்களால் கோபம் காட்டினார்...

''அய்யோ, சாரு பேசவேண்டாம், சங்கடக்கார ஆள்தான் காரியம் போதிப்பிக்கணம்.. அது தான் ஸ்வாமி கோபம் காட்டுது...'' உதவியாள் - பரிபாஷை செய்தான்.

நாணுநாயருக்கு சங்கடகாரியம் உரைக்கச் சொல்லியா தர வேண்டும்... கண்ணீர் வராத அழுகையாக 'அடியைப் பிடியடா' என்ற வகையில் மொழியலானான்.

தனக்கு தினசரி பேப்பர்கள் போடும் வேலையென்றும், தனது ஒரே ஒரு வாரிசு - உயிருக்குயிராக நேசித்து, இருபது வயசு வரையில், தூசுபடாத செல்லத்தில் வளர்த்திய கோபாலன் என்ற ஆண் சந்ததி - திடீரென்று காணாமல் போய்விட்டான் எனவும், இனித் தேடுவதற்கு புறாக்கூடு கூட மிச்சமில்லையென்றும் அவன் கதியென்னவென்று சாத்தான் மாகாத்மியம் கொண்டு உணர்த்திட வேண்டுமென்றும், ஆதியோடந்தம் வரை வடித்துக் கொடுத்தான்..

''சொன்னது போதுமானதே...'' என்று ஹஸ்தமுத்திரை போல் வலதுகரம் தூக்கி காட்டிய சுவாமிஜி, நாணுநாயரிடம், எதிரில் தெரியும் குத்துவிளக்கின் சுடரை கண் இமைக்காமல் கூர்ந்து பார்த்திட உறுமலாக உத்தரவிட்டார். "வேறு விசாரம் வேண்டாம். சுடரை நன்றாகத் துறிச்சி பார்க்கட்டும்...'' என்றும் உரைத்தார்.

''என்ன காணுது ஹ¤ம் ..?''

''ஒன்றும் காணலியே சுவாமி தம்புரானே...'' நாணுநாயர் பயந்தே போயிருந்தான்.

''உம்... காணாது... எப்படி காணும்? உண்டென்றால் தானே காட்சி தெரியும்? பாண்டத்தில் இல்லை. அகப்பையால் பிராண்டி என்ன செய்ய? கருவை அறுத்து விற்று விட்டான்கள், ஆளும் சத்துப் போச்சு... சூன்யம்... ஹ¥ம் எழுந்து போகலாம்... பாரியாரீ.. புள்ளியை களத்திற்கு வெளியே கூட்டிப் போய் விஷயம் விளக்கி, தட்சணை அர்ப்பிச்சு போகவிடு...''

வெளி வராந்தாவிற்கு வந்த எங்களுக்கு வெளிச்சப் பிரமையிலிருந்து இருட்டை பூசி வந்தது போலாயிருந்தது. வெளியே அடுத்தாற்போல் காத்திருந்தவர்களிடமிருந்து டோக்கனை வாங்கிக் கொண்டு அவர்களை உள்ளே விட்டு விட்டு, பரிசாரகன் எங்கள் பால் முகமுயர்த்தி பரிபாஷை செய்தான்.

''சாத்தான் சுவாமி திருவசனம், சொன்னதெல்லாம் மனசிலாச்சுதா?''

''இல்லவே இல்லை. ஒரு அட்சரம் மனசிலாகவில்லை...''

''அப்படியென்றால் கேட்டுக் கொள்ளுங் கோ... காணாமல் போய்விட்ட உன் புத்திரனை யாரோ தந்திரமாக கடத்திப் போய் மயக்கி, வசீகரம் செய்து, கருவறுத்து, அதாவது கிட்னியை அபகரித்துக் கொண்டு ஆளை அம்பேல் செய்து விட்டார்கள்.''

''சுவாமீ''

''ஆமாம், பய்யன் இனி இல்லை... தேடவும் கூடவும் வேண்டாம்... இதுதான் சுவாமி சாத்தானின் வசன பாஷ்யம்.. இதோ உண்டியல் சங்கடகரமான பிரச்சனம்தான் என்ன செய்வது? விதி. கூட்டி விட்டு வளர்த்தக் கூடியதல்லவே, மனிதாயிக... இதோ இந்த உண்டியலில் உஜிதம் போல, நூறோ அதற்குக் குறையாமலோ தட்சணை இட்டு விட்டு புறப்படலாம்...''

அந்த கிராமியக் காற்றில், பாதையோடு கொஞ்ச நேரம் மெளனமாக கவிழ்ந்து நடந்து, டாக்ஸி அருகில் வந்தபோது, நாணுநாயர் அர்த்தமாக நிமிர்ந்து பார்த்தான். பத்தையாக மூங்கில் காடு வளர்ந்த ஓரத்தில் போய் உபாதை தீர்த்துவிட்டு எழுந்து வந்தான். ''இனி அவன் இல்லை. அப்படித்தானே சாரே... நான், தீர்மானிச்சது தான்... ஒரு சபலம் இருந்தது.. ரெண்டு வருஷமும் தீயை அள்ளி அள்ளி திண்ணு கடத்தினேன்... இப்போ எல்லாம் சாம்பலாயாச்சுது... கையடிச்சு சத்தியம் செய்து தந்தது போல ஆயாச்சு..''

''நாணுநாயரே மனசெத் தளர விட வேண்டாம்.. என்னதான் சாத்தான் பிரவசனமாக இருந்தாலும், தெய்வ கற்பிதம்னு ஒண்ணு உண்டே...''

''சும்மா விடுங்க சார். தெய்வம் நேரா வரமுடியாததினாலெதானே இந்த மாதிரி தெய்வ தூதர்கள் பூமியில் இருக்கிறார்கள். நான் குளிச்சு கரையேறியாச்சு...''

காரில் ஏறி இருக்கையில் சாயும் போது, நாணுநாயர் அழுத கண்களை தோள்த் துண்டால் அழுத்தித் துடைத்துக் கொண்டிருந்தான். கார் வேகத்தில் மலைகளின் தொடர் மின்னால், போய் மறைந்து கொண்டிருந்தது.

''டிரைவர் தம்பி, வண்டியை எங்கேயாவது நல்ல ஓட்டலா பார்த்து நிறுத்து, வயிறு காந்தல் ஆகுது. சாருக்கும் நல்ல பசி வந்திருக்கும்... செத்தவன் போயாச்சு... இருக்கிற நாம ஏன் அளந்த படியை மிதிச்சு எறியனும்? இல்லியா சாரே?''

நாணுநாயர் சாதாரணமாகி விட்டதாக நடித்துக் காட்டுகிறான் என்பது தெரிந்திருந்தும், அப்போதைக்கு தாம்புக் கயிற்றை விட்டுப் பிடிப்பதே சரியென்று தோன்றியது.

''ஆமாம் எனக்கும் பசியாகத் தான் ஆவுது... இங்கெல்லாம் ஏது நல்ல ஹோட்டல் தேடுறது, சுமாராக இருந்தாலே போதும் பார்த்து நிறுத்தப்பா...'' என்றேன்.

'பாலகோபால விலாஸம் ஹோட்டல் அண்டு டீ ஷாப்' என்று போர்டெல்லாம் தடபுடலாக இருந்தது. படியேறிய போது மேஜை அழிக்கவுண்டர் உள்ளே, கல்லா நாற்காலியில் உட்கார்ந்திருந்தது. அசல் திருவாதிர ஆட்டக்காரியின் நேரியல் முண்டு, இறுக்க ஜாக்கெட் எழிலே போல நடு வயசுக்காரி நாரீசிரோன்மணி ஒருத்தி! ''உள்ளே போய் அமருங்கோ!'' என்று கை ஜாடையோடு வெற்றிலை சிவப்பு உதடுகளால் மொழிகிறாள்...

''டிரைவர் தம்பி இடம் ஒண்ணும் மாறிப் போகலியே. கதைகளிவிதானம் போல இருக்கே வரவேற்பெல்லாம்...'' என்று நான்தான் வியப்பை வெளியிட்டேன்.

''இது நாட்டுப்புறம்... இங்கேயெல்லாம், ஹோட்டல்கள் இப்படித்தான். சார் உக்காருங்கோ...'' என்று நாணுநாயர் தன் வழமையை விளக்குவது போல சொல்லி இடம் பார்த்து அமர்ந்தான். எதிரே சுவரின் பெரிய புகைப்படத்தில், கல்லாவின் அந்த நாரீமணியோடு மணமாலையுடன் நிற்பது யாரைப் போல....
''சாரம்மார் என்ன சாப்பிடுறியோ, சூடு அப்பம், புட்டு, ஆட்டீறச்சியுண்டு...''

புகைப்படத்தை விட்டு எதிரே நின்றவனை பார்த்த போது, அடே! சாத்தான் சாமி வசனத்தையும் மீறிக்கொண்டு, சாட்சாத் - கோ...பா......ல.....ன்!

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்