Mar 31, 2012

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை-சுந்தர ராமசாமி

நாகர்கோவில் தெ. தி. இந்துக் கல்லூரி முதுகலை வணிக இயல் துறை பேரவைத் தொடக்க விழாவில் பேசியது - 28.10.1988

'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை ' என்ற தலைப்பில் என்னை இளைஞர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒரு படைப்பாளி என்று கூறுகிற போது என்னை நான் சிறிது வரையறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் மொழி சார்ந்த ஒரு படைப்பாளி என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஓவியம் சார்ந்தோ, சிற்பம் சார்ந்தோ, இசை சார்ந்தோ படைப்புத் தொழிலில் ஈடுபட்டவனல்லன் நான். படைப்பாளி என்ற வார்த்தையை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். இலக்கியமே வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறது. வாழ்க்கையைப் படைப்பு முறையி  ல் அணுக விரும்புகிற ஒரு படைப்பாளி என்று நான் என்னைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் sundara-ramaswamyஇலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.

பெரும்பாலும் இலக்கியப் படைப்பாளிகள் எல்லோருமே அவர்கள் தீவிரமான படைப்பாளிகள் என்றால், படைப்பாளி என்ற சொல்லுக்கு அருகதை உள்ளவர்கள் என்றால், அவர்கள் தீவிரமான வாசகர்களாகவும் தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன். இளவயதில் ஒருவனுக்கு இந்த வாசிப்பு ஏற்பட்டு மிகச் சிறந்த படைப்புக்களோடு மோதல்கள் நிகழ்ந்து, படைப்பின் ஊற்றுக்கண் திறந்து அவனும் ஒரு படைப்பாளியாக மாறிக் கொள்கிறான் என்று நினைக்கிறேன். படைப்புக்கு முன்னும், படைக்கும் காலங்களிலும், படைக்க முடியாத காலங்களிலும் அனுபவ வறட்சியாலோ அல்லது வயோதிகத்தாலோ அல்லது பொறிகள் சுருங்கிப் போவதாலோ படைக்க முடியாத காலங்களில் கூட படைப்பாளிகள் வாசகர்களாக இருக்கிறார்கள். இப்போது முன்புபோல் எழுத முடியவில்லை; படிக்கத்தான் முடிகிறது என்று சொல்கிறார்கள். ஆக எந்த நிலையிலும் தொடரக்கூடிய ஓர் நிகழ்வாக இந்த வாசிப்பு இருந்துகொண்டிருக்கிறது.

வாசிப்பு என்று நாம் சொல்லக்கூடிய வார்த்தையின் உண்மையான பொருள் என்ன ? வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் இந்த வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறபோது இது மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக எனக்குப்படுகிறது.

மாணவர்களாகிய நீங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறீர்கள். நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை - மிக மேலான பகுதியை - அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள். அந்த அர்த்தத்தில் இன்று நாம் வள்ளுவனுடன் பேச முடியும்; கம்பனுடன் உறவாட முடியும்; ஷேக்ஸ்பியரின் மிகச் சாராம்சமான பகுதிகள் என்ன என்பதைத் தெளிளத் தெளிவாக, துல்லியமாக நாம் தெரிந்து கொள்ள முடியும். இந்தக் காலத்தில் வாழ்கின்ற எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.

ஆக, மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் மிகுந்த பரவசத்தோடு பெற்றிருக்கும் இந்த வாய்ப்பை, சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் விசேஷமான வசதியுடன் வாழ்ந்திருந்தாலும் கூட, இந்த அளவிற்கு விரிவாகப் பெற்றிருக்க முடியாது. புத்தகங்கள் அச்சேறத் தொடங்கிய பின் ஒரு மிகப் பெரிய அறிவுப் புரட்சி, கலைப்புரட்சி, கலாச்சாரப் புரட்சி நிகழ்ந்து வருகிறது. இதைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்து கொள்கிற வாய்ப்பை இந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பெற்றிருக்கிறோம். இப்படி யோசிக்கும்பொழுது இன்று வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய ஒருவன் ஏதோ ஒரு துறையைச் சார்ந்து பணியாற்றக் கூடியவன், குடும்பம் சார்ந்து இயங்கக் கூடியவன், உறவினர்களிடம் நட்புப் பாராட்டக் கூடியவன் அதாவது பிரத்யட்சமான வாழ்க்கையை, எதார்த்தமான வாழ்க்கையை எதிர்கொள்ளக் கூடியவன் எதற்காகப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற கேள்வியையும் நாம் எழுப்பிக் கொள்ளலாம்.

இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுதான் கூர்மையான பொறிகளை நாம் பெற்றிருந்தாலும் கூட, நம்முடைய கவன வட்டங்கள், நம்முடைய அறிவு வட்டங்கள், நம்முடைய அனுபவ வட்டங்கள் மிகக் குறுகிய எல்லைகளிலேயே இயங்குகின்றன. தொலைதூரம் என்னால் பார்க்க முடியாது. தொலை தூரத்தில் இருக்கக்கூடிய வாசனையை என்னால் நுகர முடியாது. என்னுடைய அனுபவங்கள் எனக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அந்த அளவு அவை என்னிடம் மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்குக் கூட எனக்குப் பிறருடைய அனுபவங்கள் தெரியாது. ஆகவே இந்த வாழ்க்கையின் அகண்டகாரமான தன்மையையும், இந்த வாழ்க்கையில் பூமிப் பந்தில் ஒரு எறும்பு ஒட்டிக் கொண்டு இருப்பது போல் இருக்கக்கூடிய என்னுடைய நிலையையும் நினைத்துப் பார்க்கும்பொழுது பிறருடைய வாழ்க்கை சார்ந்த உண்மைகளையும் பிறருடைய வாழ்க்கை சார்ந்த சாராம்சங்களையும் சத்தான பகுதிகளையும் தெரிந்துகொண்டு அதன் மூலம் இந்த முழு வாழ்க்கையைப் பற்றி, இந்த வாழ்க்கையின் பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இதுதான் வாசிப்பின் தேவையை வற்புறுத்தக் கூடிய காரணமாக அமைகிறது.

இந்தக் காலத்தை எதிர்கொள்ளக்கூடிய மாணவர்கள், இளைஞர்கள் ஏதோ ஒரு விதத்தில் முழு வாழ்க்கையின் கோலங்களைத் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இவர்கள் காலத்தால் பின்தங்கிப் போய்விடாமல் உருவாகி வரும் மிக மோசமான காலத்தை - மிக மோசமான காலம் ஒன்று உருவாகி வருகிறது; நாம் அதைப்பற்றி அறிந்திருக்கலாம்; அறியாமல் இருக்கலாம். ஆனால் காலத்தினுடைய மோசமான விளைவுகளை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் - எதிர்கொள்வதற்கு வாழ்க்கையின் முழுக் கோலங்களைப் பற்றிய உணர்வுகளை, அனுபவங்களை, அறிவுகளை மாணவர்கள் முடிந்த மட்டும் தேடிக் கொள்வது நல்லது என்று படுகிறது.

மாணவர்கள் இயன்ற வரையிலும் தீவிரமான வாசகர்களாக இருக்கக்கூடிய பெரும் வாய்ப்பை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நாம் வற்புறுத்திக் கூற விரும்பும் கருத்து. இது மிகவும் முக்கியமானது. மற்றொன்று உங்கள் துறை சார்ந்த விஷயங்கள். மாணவர்கள் கல்லூரிகளில் பல்வேறுபட்ட துறைகளைக் கற்றிருக்கலாம். அந்தத் தேர்வுகள் சுத்தமாக நிகழ்கின்றனவா என்பதைப் பற்றி எனக்குச் சந்தேகங்கள் இருக்கின்றன. அநேக சந்தர்ப்பங்களில் முதிர்ச்சி அடையாத மனநிலையில், அல்லது ஒரு பதட்டத்தில், அவசரத்தில் தனக்கு வழிகாட்ட போதிய விவேகம் கொண்ட தந்தையோ, தாயோ அல்லது குடும்ப உறவினர்களோ இல்லாத நிலையில், மாணவர்கள் பல்வேறுபட்ட துறைகளை எடுத்துப் படிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆக தங்களுடைய கண்ணோட்டத்தைச் சேர்ந்த, தங்களுடைய ஆளுமையைச் சேர்ந்த, தங்களுடைய ருசிகளுக்கு ஏற்ற துறையைத்தான் எப்போதும் அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இளமைக் காலத்தில் 18 - 20 வயது வரும்போது தமக்கு அதிக வயதாகிவிட்டது; நாம் விரைவில் கல்வியை முடித்துக் கொண்டு ஏதாவது ஒரு தொழிலுக்கு அல்லது ஒரு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற அவசர உணர்வும் இளைஞர்களுக்கு ஏற்படுவது இயற்கை என்று எனக்குத் தோன்றுகிறது.

என்னைப் பொறுத்த வரையில் ஒருசில இழப்புகளுக்கு நீங்கள் உங்களை ஆளாக்கிக் கொண்டாலும் கூட, ஒரு சில சிரமங்களுக்கு உங்களை நீங்கள் ஆளாக்கிக் கொண்டாலும்கூட அல்லது உங்களுடைய ஆசைகளிலிருந்தோ அல்லது உங்களுடைய குடும்பத்திலிருந்தோ சில விமர்சனங்களுக்கு நீங்கள் ஆட்பட்டார்கள் என்றாலுங்கூட, சரியான துறையை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்லுவேன். இந்தத் துறைகளை மாற்றிக் கொள்ளக்கூடிய விஷயம் இங்கு முக்கியமாக இந்தியாவில் அல்லது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையை தரக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால், மேல்நாட்டில் பலரும் தவறான துறையை விட்டு சரியான துறையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள். 50, 55 வயதிலும் கூட ஒருவர் இப்போதுதான் என்னுடைய துறை, என்னுடைய ருசி, என்னுடைய அணுகுமுறை அல்லது என்னுடைய ஆளுமை எனக்குத் தெரிந்தது; ஆகவே, நான் என்னுடைய துறையை மாற்றிக் கொண்டு விட்டேன் என்று சொல்லக்கூடிய சோதனைகள், இந்த சோதனையில் அடையக்கூடிய வெற்றிகள், இவை நிரந்தரமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்குப் பல்வேறு உதாரணங்களை என்னால் சொல்ல முடியும்.

ஆக, மாணவர்கள் அல்லது மாணவிகள் கல்லூரியில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயமல்ல. ஒருசமயம் அவர்கள் சரியான துறையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஒருக்கால் அவ்வாறு தேர்ந்தெடுக்கவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு இருக்குமேயானால் அவர்கள் விரும்பக்கூடிய துறையைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்றைய உலகில் அதிக அளவு உள்ளன. அந்தத் துறையை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் அதைச் சார்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் போது - இந்தியாவிலும் சரி, குறிப்பாகத் தமிழகத்திலும் சரி - நான் சந்திக்கக்கூடிய பலரும் அந்த துறையைச் சார்ந்த ஒரு வல்லமையைத் தேடிக் கொண்டவர்களை விட, அதிகமாக அந்தத் துறையைச் சார்ந்து நின்று தங்கள் வாழ்க்கைக் கோலத்திற்கு ஏற்றவாறு அதைச் சமாளிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் - அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் - அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம் - அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.

இளைஞர்களாகிய நீங்கள் இந்தச் சுலபமான வழியில் விழுந்துவிடக் கூடாது என்று ஆத்மார்த்தமாக விரும்புகிறேன். ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்வது என்பது அவ்வளவு கடினமான விஷயமல்ல. அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து நாம் அதில் தேர்ச்சி பெறும் போது மிகுந்த தன்னம்பிக்கை பெறுகிறோம். அந்தத் துறையைச் சார்ந்த மரபுரீதியான விஷயங்கள் மட்டுமல்ல, பாடபுத்தகங்களைச் சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல, இன்று அந்தத் துறை அடைந்திருக்கும் வளர்ச்சியைப் பற்றியும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அதையும் கற்றுத் தேர்ந்தால்தான் இன்றைய காலத்தை எதிர்கொள்ள முடியும். ஆக, துறையை நன்றாகக் கற்றுக் கொள்ளும் போது வாழ்க்கையில் அணுகு முறையிலேயே ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. நீங்கள் உள்ளூர மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாக மாறுகிறீர்கள். உங்களைப் பற்றியே உங்களுக்கு உயர்வான எண்ணம் ஒன்று ஏற்படுவதற்கு இது அடிப்படையான காரணமாக அமைகிறது. இதற்கு மாறாக துறை சார்ந்து சமாளித்துக் கொண்டிருப்பவர்கள் அந்தச் சமாளிப்பினால் பிற்காலத்தில் அந்தத் துறையைக் கற்றுக் கொள்வதற்கான ஆற்றலையே இழந்து விடுகிறார்கள். இவ்வளவு நாட்கள் இந்தத் துறையைச் சமாளித்துக் கொண்டிருந்துவிட்டோம், குறை நாட்களையும் சமாளித்துத் தீர்த்து விடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இவர்கள் கடைசி வரையிலும் தன்பலம் என்பதை உணராமல் - ஆத்ம வீரியத்தை உணராமல் - உள்ளூர பலகீனமான சமூகத்தை எதிர்கொள்கிற கோலத்தை நாம் பார்க்கிறோம். இதை ஒரு எச்சரிக்கையாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மாணவ மாணவிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றொரு விஷயம் தாழ்வு மனப்பான்மை சம்பந்தப்பட்டது. பொதுவாகத் தமிழ் மக்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பது என் எண்ணம். நான் அவர்களுடைய புத்தகங்களைப் படித்ததன் மூலம் அறிந்து கொண்ட சில விஷயங்கள், சமூக வாழ்க்கையில் நான் அவர்களுடன் பழகும் போது எனக்குக் கிடைக்கக்கூடிய செய்திகள் ஆகியன பெரும்பாலும் தமிழ் மக்கள் தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இது மிகக் கொடுமையான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் நான் இதை எடுத்துக் கூறும்போது தங்களுக்குத் தாழ்வு மனப்பான்மை எதுவும் இல்லை என்ற தோரணையில் அவர்கள் பல வாதங்களை முன் வைப்பதை நான் கண்டிருக்கிறேன். அந்த வாதங்களின் சாராசம்களை நான் ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தாழ்வு மனப்பான்மை நோய் கொண்டவர்கள் மட்டுமல்ல, தாழ்வுமனப்பான்மையை மறுக்கக்கூடிய நோயும் கொண்டவர்கள்; ஆக இரண்டு நோய்கள் கொண்டவர்கள் என்ற முடிவுக்கு நான் வர முடிந்தது.

ஒரு இனம் ஏதோ ஒரு காலகட்டத்தில் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறது என்பது மிக மோசமான, அருவருக்கத் தகுந்த, அல்லது வெட்கப்பட தகுந்த ஒரு விஷயமல்ல. ஆனால் ஸ்தியைப் பற்றி - நாம் இருக்கும் நிலையைப்பற்றி - உணராமல் இருப்பது, தன்போதம் இல்லாமல் இருப்பது, சுயபோதம், சுய அறிவு இல்லாமல் இருப்பது, சுய கணிப்பு இல்லாமல் இருப்பது என்பது மிக மோசமான விஷயம். இதற்கான காரணங்கள் இந்த இனத்திற்கு - மிக செழுமையான பாரம்பரியம் கொண்ட இந்த இனத்திற்கு, தொல்காப்பியத்தைத் தோற்றுவித்த இந்த இனத்திற்கு அல்லது வள்ளுவர், கம்பன், பாரதி போன்ற மிகப் பெரிய கவிஞர்கள் வாழ்ந்த இந்த இனத்திற்கு, சிற்பக் கலையில் மிகுந்த வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு, கட்டிடக் கலையில் மிக வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு ஒரு காலத்தில் கடல்மீது மிகுந்த ஆட்சி கொண்ட இந்த இனத்திற்கு - ஒரு மொழியை இரண்டாயிரம் வருடங்களாக செம்மையாகத் தக்க வைத்துக் கொண்டு, இன்று தோன்றும் கருத்துக்களைக்கூடத் தெளிளத் தெளிவாக சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு மொழியைக் காப்பாற்றி வரும் ஒரு இனத்திற்கு - ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை ஏன் 200 வருடங்களாக ஏற்பட்டது என்பதை எனக்குச் சொல்ல தெரியவில்லை. அதைப்பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

இந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுகள் எவை என நாம் எடுத்துக் கொண்டோமென்றால் பல்வேறுபட்ட குணங்கள் மூலம் அந்த நோயின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள முடியும். மிகத் தெளிவான ஒரு நோய்க்கூறு - எல்லோருக்கும் புரியக்கூடிய நோய்க்கூறு - என்னவென்றால் தமிழனுக்கும் ஆங்கிலத்துக்கும் இருக்கக்கூடிய உறவு. அந்த உறவில் தமிழனிடம் இருக்கக்கூடிய மயக்கம் - உறவல்ல, அதில் இருக்கக்கூடிய மயக்கம் - ஆங்கிலத்தின்பால் அவன் கொண்டிருக்கக்கூடிய மயக்கம் மிகச் சிறந்த ஒரு மொழியைத் தன்னளவில் கொண்டிருந்தும் கூட - மிகப் பெரிய பாரம்பரியத்தைத் தன்னளவில் கொண்டிருந்தும் கூட - ஆங்கில மொழியின் மீது தமிழன் கொண்டுள்ள மயக்கம், அதனுடைய கோலங்கள் மிக விரசமானவை. அதை நாம் பரஸ்பரம் பேசிக்கொள்வதைவிட அதை நினைத்துப் பார்ப்பதே நாகரிகமான காரியமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழனுடைய தாழ்வு மனப்பான்மை எப்போதும் தெளிளத் தெளிவாகக் காட்டக்கூடிய அறிகுறிகளில் ஒன்று, மற்றொரு வகையில் சிந்தித்தால், கடந்தகாலத்தில் நமக்கு இருந்த அளவுக்குச் சாதனைகள் இன்று இல்லாமல் போனது. முக்கியமாக ஒரு 50 ஆண்டுகள் நமக்குச் சாதனைகள் இல்லாமல் போனது. இவை நம்முடைய தாழ்வு மனப்பான்மை வளர்வதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ என்று நான் சந்தேகப்படுகிறேன். தமிழினம் மிகப் பெரிய ஒரு நிகழ்வை நினைத்துப் பரவசம் கொள்ளக்கூடிய எந்த சந்தர்ப்பத்தையும் கடந்த 50 வருடங்களில் உருவாக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

பிளாரன்ஸ் என்ற ஒரு கறுப்பு நிறப் பெண் ஒலிம்பிக்ஸ் ஓட்டப் பந்தயத்தில் முன்னே வந்து மற்ற இனத்தைச் சேர்ந்த பெண்களைத் தாண்டி - மற்ற தேசத்தைச் சேர்ந்த பெண்களைத் தாண்டி - முன்னால் வந்து நிற்பது என்பது ஓட்டப்பந்தயம் சம்பந்தமான விஷயம் மட்டுமல்ல; ஒரு இனம் தன்னுடைய பெருமையை வற்புறுத்தக்கூடிய காரியமும் கூட என்று தோன்றுகிறது. அந்த நிகழ்வைப் பார்க்கக்கூடிய கோடிக்கணக்கான கறுப்பர் இனம் ?காலங்காலமாக தங்களை வெளிளை இனம் தாழ்த்திக் கொண்டு வந்திருக்கிறது; அவர்களுக்கு இருக்கக்கூடிய குணாதிசயங்கள் நமக்கில்லை; அந்தச் குணாதிசயங்களை நம்மால் பெற முடியாது என்று நம்மை மட்டம் தட்டி வைத்திருப்பது உண்மை அல்ல ? என்று அந்நேரம் உணர்ந்து பரவசம் கொள்கிறது.

கடந்த 50 வருடங்களில் தமிழனும் இது போன்ற ஒரு பரவசத்தை - கூட்டுப் பரவசத்தை - அடையவில்லை. தனிப்பட்ட முறையில் சில பரவசங்களை அடைந்திருக்கலாம். தனிப்பட்ட முறையில் நம்பிக்கை பெற்றிருக்கலாம். ஆனால் இந்த இனம் மொத்தமாக நம்பிக்கை பெறுவதற்கான காரணம் கடந்த 50 வருடங்களில் உருவாகவில்லை என்று படுகிறது.

கடந்த காலங்களில் நம்முடைய கலாச்சாரத் தலைமை - நம்முடைய அரசியல் தலைமை - நம்முடைய கலைத் தலைமைகள் ஆகியவற்றால் நமக்குப் பெருமை வரவில்லை. மட்டுமல்ல நாம் வெட்கி அவமானப் படக்கூடிய அளவுக்குப் பல சிறுமைகளுக்கும் நாம் ஆளாகியிருக்கிறோம் என்பதையும் கூற வேண்டியிருக்கிறது. எவ்வளவுதான் நாம் உண்மையாகப் பேசிக் கொண்டிருந்தாலும் நம்முடைய அரசியல் தலைவர்களின் தரத்தைப் பற்றி நீங்கள் ஆத்மார்த்தமாக யோசித்துப் பார்ப்பீர்களேயானால் அவர்களுடைய தரத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய திறமைகள், அவர்களுடைய சவடால்கள் அல்லது சாமர்த்தியங்கள் உள்ளூர் சந்தையில் விலை போகலாம். ஆனால் உலகம் அவர்களை மதிக்காது என்று உள்ளூர நமக்குத் தெரியும்.

நம்முடைய மிகச் சிறந்த எழுத்தாளர்களைத்தான் கலாச்சார தலைவர்கள் என்று நாம் சொல்ல வேண்டும். லட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படிக்கும் நம்முடைய எழுத்தாளர்களின் தரத்தை நீங்கள் ஆராய்ந்தால் அவர்களில் பெரும்பான்மையரின் தரத்தை உலகம் ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். நுட்பமான வாசனை கொண்ட வாசகர்களுக்கு இது நன்றாகவே தெரியும். நம்முடைய திரைப்பட இயக்குநர்கள் எவரையும் உலகத் திரைப்படம் ஏற்றுக் கொள்ளாது என்பது நமக்குத் தெரியும். வங்காளத்தில் ரவீந்தரநாத தாகூர் தோன்றினார். அவர் மறைவுக்கு சில வருடங்களுக்கு உள்ளாகவே சத்யஜித் ரே என்ற திரைப்பட இயக்குநர் தோன்றி உலகப் படங்களுக்கு நிகரான திரைப்படங்களை எடுத்து வங்காள இனம் தன்னுடைய வல்லமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். இது போன்ற ஒரு நிகழ்வு இன்று வரையிலும் இந்த நூற்றாண்டில் நம்மிடம் நிகழவில்லை. பக்கத்தில் இருக்கக்கூடிய கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள் அரசியல் சார்ந்து ஈ. எம். எஸ். நம்பூதிரிபாடு - இலக்கியம் சார்ந்து சிலர்.

மேற்கத்திய நாகரிகம் என்று சொல்லும் போது ஆடை, அணிகலன்கள் சம்பந்தமான விஷயங்களை நான் சொல்லவில்லை. அவை மேம்போக்கான விஷயங்கள். அடிப்படையாக வாழ்வோடு கொள்ளவேண்டிய உறவுமுறை சம்பந்தமான விஷயங்களில் மேற்கத்திய நாகரிகம் செலுத்தக்கூடிய பாதிப்புகள் நம்மிடம் மிக விரைவாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்தக் குறுக்கீடு நம்மைக் கண்டு கொள்வதற்கு - நம்மை நாமே கண்டு கொள்வதற்கு - பெரும் தடையாக இருக்கிறது. நம்மைச் சார்ந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் நமக்கு ஒரு அலட்சியமும், மேல் நாட்டிலிருந்து வரக்கூடிய எல்லா விஷயங்களைப் பற்றி மிகுந்த மோகமும் கொண்டவர்களாக நாம் பொதுவாக இருந்து வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல முடியும். இப்போது உலகெங்கும் அலோபதி வைத்தியத்திற்கு எதிரான ஒரு மனோபாவம் உருவாகி வருகிறது. இந்த வைத்தியத்தை உருவாக்கியவர்கள் உண்மையில் வைத்தியத்தை முதன்மைப்படுத்தியவர்கள் அல்லர் என்றும், அவர்கள் மருந்து வியாபாரிகள் என்றும், மருந்து வியாபாரிகளுடைய சுயநலங்களுக்கு ஆட்பட்ட மருத்துவர்கள் என்றும் சொல்லலாம் என்கிறார்கள். நோயிலிருந்து நிவாரணம் தரக்கூடிய மார்க்கங்களையே இந்தத் துறை சிந்தித்திருக்கிறது. ஆனால் வைத்தியத் துறையின் அடிப்படையான நோக்கம் மனிதன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பது. அந்த அடிப்படை இந்தத் துறைக்கு இல்லை என்பதை எண்ணற்ற மேல்நாட்டுச் சிந்தனையாளர்கள் இப்போது பரப்பி வருகிறார்கள். ஆக உலகத்திற்குப் பொதுவான வைத்தியம் ஒன்று இருக்க முடியாது என்றும், ஒவ்வொரு நாட்டிலும் தொன்றுதொட்டு எந்த வைத்தியமுறைகள் உருவாகி வந்திருக்கிறதோ அந்த வைத்தியமுறைகள் தான் அந்த மக்களுக்கு உகந்ததாக இருக்கமுடியும் என்றும், அந்த வைத்தியத் துறைகளை வளர்த்து எடுப்பது தான் அந்த மக்களுடைய இலட்சியமாக இருக்கவேண்டுமே ஒழிய பிற நாட்டிலிருந்து வைத்தியத்தை இறக்குமதி செய்வது அவர்கள் நோக்கமாக இருக்க கூடாது என்றும் சிறந்த வைத்தியர்கள் கூறி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் இவான் இலியா எலிவிச் என்கிற ரஷ்ய மருத்துவர். அவர் தன்னுடைய ஒரு புத்தகத்தில் தான் ஆரம்ப நாட்களில் காந்தியினுடைய சிந்தனைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகின்றார். இந்தச் சிந்தனையைக் காந்தி கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னாலேயே ?ஹிந்து சுயராஜ் ? என்ற புத்தகத்தில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

நாம் மேல் நாட்டு சிகிச்சைக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நமக்கு உகந்த சிகிச்சை முறைகள் நம்முடைய முன்னோர்கள் நமக்கு உருவாக்கி வைத்திருக்கிறார்கள், அதை நாம் வளர்த்துக் கொண்டு போக வேண்டும் என்ற கருத்தை இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே காந்தி கூறியிருக்கிறார். ஆனால் அந்தக் கருத்துக்களை இங்கிருக்கும் அறிவாளி வர்க்கம் போதிய அளவுக்கு முக்கியம் தந்து எடுத்துக் கொள்ளவில்லை. இதே கருத்துக்கள் மேல் நாட்டிற்குச் சென்று, அந்தக் கருத்துக்கள் அவர்களுடைய சூழ்நிலைக்கேற்ப சிறிது மாற்றப்பட்டு புத்தகங்கள் மூலம் சொல்லப்படும் பொழுது, அவை மிகப்பெரிய கருத்துக்களாக நமக்குத் தோன்றி அதைப் பின்பற்றத் தொடங்குகிறோம். இதே மனோபாவத்தில் தான் மோகம் - வாழ்க்கையைப் பற்றிய ஒரு மோகம் - சார்ந்து வாழ்ந்து வருகிறோம்.

இனிமேல் தனித்து நின்று நமது சிந்தனையை வளர்ப்பது என்பது நடைமுறையில் சாத்தியமான விஷயமல்ல. உலகத்தில் தோன்றியுள்ள எல்லா சிந்தனைகளையும் நம்முடைய சிந்தனைகளைச் சார்ந்த தெளிவுகளுக்கு உரமாக எடுத்துக் கொள்ளும் பயிற்சியை நாம் பெறலாம். ஆனால் நம்முடைய சிந்தனைகளை விட்டுவிட்டு - நமக்குச் சுயமான விஷயங்களை நாம் முற்றாக விட்டுவிட்டு - வேறு சூழ்நிலையில் வேறு காரணங்களுக்காக உருவான கருத்துக்களை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையின் நிதானத்தை மிகுந்த அளவுக்குக் குறைத்துக் கொண்டு வருகிறோம் என்று நான் நினைக்கிறேன்.

முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.

தமிழனுக்குத் தாழ்வு மனப்பான்மை இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். எந்தக் காரணத்தைக் கருத்தில் கொண்டு இதைக் கூறினீர்கள். விளக்க முடியுமா ?

தன்னால் எவற்றைச் செய்ய முடியுமோ, அவற்றைக் கூடத் தொடர்ந்து செய்யாமல் இருப்பது; இது தன்னைப் பற்றிய ஒரு தாழ்வான எண்ணத்தை உருவாக்கக்கூடும். ஆசிரியர்களுக்கும், உங்களுக்கும் புரியக்கூடிய இரண்டு உதாரணங்களை நான் முன் வைக்க முடியும். சமூகம் சார்ந்து எண்ணற்ற கருத்துக்களை நான் சொல்ல முடியும். அல்லது திரைப்படம் சார்ந்து பல கருத்துக்களைச் சொல்ல முடியும். அந்தப் படங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லது பார்க்காமல் இருக்கலாம். ஆனால் மாணவர்களும், ஆசிரியர்களும் படிப்பதற்கான வாய்ப்பு மிகுதி என்பதால் புத்தகம் சார்ந்த உதாரணத்தை எடுத்துக் கொள்கிறேன்.

டாக்டர் மு. வரதராசன் ?இலக்கியத் திறன் ? என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். முக்கியமாக, தமிழ் துறையைச் சேர்ந்தவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கக்கூடும். என்னுடைய பெரும் மதிப்பிற்குட்பட்டவர் அவர். தமிழ்ப் புலமையாளர்களில் மு.வ.வை நான் மிகவும் மதிக்கிறேன். அவரை நான் ஒரு சிறந்த படைப்பாளி என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை ஒரு படைப்பாளி என்றே எற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தன் புலமையை மிக நேர்மையாக, மிகத் தெளிவாக முன் வைத்தவர் அவர் என்ற மதிப்பு எனக்கு உண்டு. ?இலக்கியத் திறன் ? என்ற புத்தகம் தமிழ்க் கவிதையைப் பற்றி ஆராயக்கூடிய புத்தகம். இரண்டாயிரம் வருடங்களில் நம்முடைய பாவினங்கள் எப்படி ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன என்பதைப் பற்றி அந்தப் புத்தகத்தில் மிக நேர்மையாக, சுத்தமாக, தெளிவாக, இன்றைய இலக்கியம் சார்ந்த விஞ்ஞானக் கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு முன் வைக்கிறார் டாக்டர் மு. வ. இந்நூலின் கடைசிப் பக்கங்கள் தமிழில் இன்று வந்து கொண்டிருக்கும் புதுக்கவிதை என்ற இயக்கத்தை மனமார வரவேற்கிறது. தமிழ்ப் புலவர்கள் புதுக் கவிதைக்கு எதிராக ஒரு தார்மீகமான கோபம் கொண்டிருந்த காலத்தில், இது தவிர்க்க முடியாத காலத்தின் நியதி என்று உணர்ந்து மு. வ. ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த புத்தகத்தை நீங்கள் படிப்பீர்கள் என்றால் ஒரு விஷயம் உங்களுக்குத் தெரியவரும். மு.வ. அப்புத்தகத்தில் கவிதை சார்ந்த ஒரு கோட்பாட்டை உருவாக்கவில்லை.

கவிதை சார்ந்து மிக எளிமையான கருத்துக்கள் இருக்கின்றன. ஒன்று, கவிதை தெளிளத் தெளிவாகப் புரிய வேண்டும் என்ற கருத்து. மற்றொன்று கவிஞன் ஒரு குழந்தை உள்ளம் கொண்டவன் என்பது. இவை போன்ற மிக எளிய கருத்துக்களைக் கூட விளக்க மேல்நாட்டு அறிஞர்களான கவிதை விமர்சகர்களான மாத்யூ அர்னால்டு, ஹட்சன், டி.எஸ்.எலியட், டபிள்யூ. ஹெச். ஆடன், ஷெல்லி போன்றோர்களின் பெயர்களைப் பக்கத்துக்குப் பக்கம் மேற்கோள் காட்டி எழுதிக்கொண்டு போகிறார். பிரிட்டிஷ் இனம் எந்த அளவுக்குக் கவிதைகளுக்குச் சொந்தமான இனமோ, எந்த அளவுக்கு கவிதை சார்ந்த நெடிய நீண்ட பாரம்பரியம் பிரிட்டிஷ் மக்களுக்கு உண்டோ, அந்த அளவுக்குக் கவிதை சார்ந்து தொன்மையான நீண்ட பாரம்பரியம் கொண்ட இனம் தமிழினம். கவிதை பற்றிய கோட்பாட்டைத் தன்னைச் சார்ந்து உருவாக்க முடியாமல் கவிதை சம்பந்தப்பட்ட எளிய கருத்துக்கஆளைக் கூட மற்ற இலக்கிய விமர்சகர்களிடமிருந்து கையேந்தி வாங்கக்கூடிய ஒரு மனோபாவம் தாழ்வு மனப்பான்மை என்று நான் நினைக்கிறேன். இது மிக முக்கியமான ஒரு உதாரணம்.

நான் குறிப்பிட்ட இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்து அதில் இக்கருத்துக்கள் சரியாக இருக்கின்றனவா அல்லது என்னுடைய வாதத்திற்கு ஏற்ப நான் கருத்துக்களை முன் வைக்கிறேனா என்பதை ஆசிரிய நண்பர்கள் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்று தமிழகத்தில் எந்தத் துறையைச் சேர்ந்த விஷயங்களையும் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, நாட்டுப் பாடல்கள், புராதனக் கலைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வோம். சமீப காலங்களில் நாம் அதிக அளவுக்குக் கவனம் செலுத்தி வருகின்ற ஒரு துறை இது. இந்தத் துறை சார்ந்து அதிக அளவுப் பேச்சுக்களும் அத்துடன் சில உண்மையான காரியங்களும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்கின்ற வில்லிசைக் கலை, கணியான் ஆட்டம் போன்ற கலைகளைப் பற்றி அமெரிக்க ஆராய்ச்சி மாணவரான Stuart Blackburn என்பவர் மிகச் சிறந்த ஒரு புத்தகத்தை உருவாக்கி உள்ளார். இவர் தமிழ் நாட்டில் ஐந்தாறு ஆண்டுகள் தங்கி தமிழைக் கற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பல மாதங்கள் தங்கியிருக்கிறார். நாங்கள் நண்பர்கள் நடத்திய கூட்டத்தில் வந்து கலந்துகொண்டிருக்கிறார். நம் மாவட்டத்திலுள்ள பல கிராமத்திற்கும் பயணம் செய்தவர். நம்முடைய பழக்க வழக்கங்களை முற்றாகத் தெரிந்து கொண்டவர். எந்த ஜாதியில் எந்தப் பெண் ருதுவானாலும் அதற்காக அந்த வீட்டில் என்னென்ன செய்வார்கள் எப்படிக் கொண்டாடுவார்கள் என்றால் அவருக்கு அது அத்துப்படியாகத் தெரியும். நம் மக்களுடைய சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் விருப்பு வெறுப்புகள் ஆகியவை அவருக்குத் தெரியும். ஒரு வீட்டில் கோலம் போட்டிருந்தால் அதற்கு என்ன அர்த்தம் ? எந்தெந்த விசேஷங்களுக்கு என்னென்ன கோலங்கள் போடுவார்கள் என்பதைப் பற்றி எல்லாம் அவர் அறிந்திருக்கிறார். நம்மைப் பற்றி நமக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அதைவிட பலமடங்கு அவர் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் பின்னால் உருவாக்கிய புத்தகத்தைப் போன்ற ஒன்றை நம்மாலும் உருவாக்கியிருக்க முடியும். நமக்கு உருவாக்குவதற்கான வசதிகள் அதிகம். நமக்கு இந்த மக்கள் பேசக்கூடிய மொழி தெரியும். நம்முடைய ஊர் என்பதால் நமக்கு அதிக அளவுக்குப் பழக்க வழக்கங்கள் தெரியும். நமக்குத் தொடர்புகள் மிகுதி. இருந்தாலும் அந்தப் பணியை நாம் செய்யவில்லை. அது போன்ற ஒரு புத்தகத்தைச் சார்ந்து இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் குறைந்த பட்சம் பத்து தமிழ்ப் புத்தகங்களேனும் வரும். அத்தனை புத்தகங்களிலும் அவருடைய பெயரை மேற்கோள் காட்டி, அவரை மிக உயர்வாகப் போற்றிச் சொல்லுவார்கள். இதுபோன்ற எண்ணற்ற காரணங்களை முன் வைத்து நாம் நம்பிக்கை பெறாமல் இருப்பதால்தான் இதற்கு ஈடான சாதனைகளைச் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன்.

மாணவ நண்பர்களுக்கு இதற்கு மாறான கருத்துக்கள் இருக்குமென்றால் அது மிக நல்ல விஷயம். மிக உயர்வான விஷயம். ஏதோ ஒரு காரணத்தினால் என்னுடைய வாதங்கள் தவறு என்று ஏற்படுவதை நான் விரும்புகிறேன். நம் இனம் நம்பிக்கை கொண்ட இனம் என்பது உண்மையென்றால் நாம் பல சாதனைகள் செய்து நம்முடைய கண்ணோட்டத்தையும் சாதனையையும் உலகம் பொருட்படுத்தும் அளவுக்குச் செய்ய வேண்டும்.

மு.வ. ஒரு படைப்பாளி இல்லை என்றீர்கள் ? அதற்குக் காரணம் கூற முடியுமா ? அப்படியென்றால் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய தகுதிகளை மதிப்பீடு செய்யுங்களேன் . . . ?

இதற்கு முன்னால் இல்லாமல் இருக்கக்கூடிய ஒன்றைச் செய்து காட்டக் கூடியது தான் படைப்பு. அது தான் அதன் அடிப்படையான பொருள். இவர் ஒரு நாவல் எழுதி இருக்கிறார். நாவல் என்றால் அது முற்றிலும் புதுமையானதாக இருக்க வேண்டும். நம் மொழியில் இருக்கக்கூடிய ஒன்றையோ பிற மொழிகளில் இருக்கக்கூடிய ஒன்றையோ நகல் செய்ததாக இருக்கக்கூடாது. இந்த படைப்பு ஒருவன் வாழ்க்கையை சுயமாக எதிர் கொள்ளுவதன் மூலம் - அந்த எதிர்கொள்ளுதலிருந்து பெறக்கூடிய அனுபவங்களைச் சார்ந்து - அந்த அனுபவங்களின் சாராம்சம் என்ன என்ற agonyியிலிருந்து, வேதனையிலிருந்து - படைப்பு தோன்றுகிறது.

மு.வ. அவருடைய நாவல்களில் தமிழ்ச் சமுதாயம் அவருக்கு முன் அறிந்திராத எந்த அனுபவத்தையோ அல்லது கருத்துக்களையோ முன் வைக்கவில்லை என்று கருதுகிறேன். அவர் கூறிய கருத்துக்கள் காலம் காலமாக தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர்கள் கூறிய - அதிகமும் வள்ளுவர் கூறிய - கருத்துக்களே ஆகும். இந்தக் கருத்துக்களின் கூட்டுத் தொகுப்பு ஒரு படைப்பாகாது. படைப்பும் சமூக இயல் சார்ந்த நூல்களும் அடிப்படையில் வேறானவை. திருக்குறள் ஒரு நாவல் அல்ல. காரணம் அது வாழ்க்கையைப் பற்றி ஒரு கவிஞர் கண்டடைந்த முடிவான கருத்துக்களைக் கூறுகிறது. வாழ்க்கையின் அனுபவங்களைப் பற்றியோ அந்த அனுபவங்களி லிருந்து இந்தக் கருத்து நிலைக்கு வந்து சேர்ந்த பயணங்களைப் பற்றியோ அந்த நூலில் எந்தத் தடயமும் இல்லை.

ஆக, இரண்டு விதமான நூல்கள் இருக்கின்றன. ஒன்று படைப்பு சார்ந்த நூல்கள். மற்றொன்று ஒரு துறை சார்ந்த - விஞ்ஞானம் அல்லது சட்டம் அல்லது மதம் அல்லது அறவியல் போன்ற துறை சார்ந்த - நூல்கள். இவற்றிற்கு அடிப்படையான வேற்றுமை: ஒன்று அனுபவம் சார்ந்து இயங்குகிறது. அதில் முற்றான முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படவில்லை. வாழ்க்கையைப் பற்றிய கவனங்கள் கொண்டு வரப்படுகின்றன. வாழ்க்கை சார்ந்த மிக மேலான அனுபவங்கள் தேக்கப்படுகின்றன. மற்றொன்றில் முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படுகின்றன. இந்த முடிவான கருத்துக்களை வற்புறுத்திய ஆசிரியராகத்தான் மு.வ.வை எடுத்துக் கொள்கிறேன். மாறாக வாழ்க்கையைச் சார்ந்த அனுபவங்களை அவர் முன் வைத்தார் என்று என்னால் கூறமுடியவில்லை. அதனால் ஒரு படைப்பாளியாக அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நோய்களைக் கண்டுபிடிக்கிற, உயிர் காக்கும் மருந்துகளையும் கருவிகளையும் கொண்ட அலோபதி வைத்தியத்தின் மீது நாம் ஏன் மோகம் கொள்ளக்கூடாது ?

இது வைத்திய சாஸ்திரம் சம்பந்தப்பட்ட கேள்வி. நான் சொல்ல வந்தது அலோபதி வைத்தியத்தைப் பற்றி இன்று உலகத்தில் வாழும், சமூக அக்கறைகள் கொண்ட வைத்தியர்கள் என்ன கூறி வருகிறார்கள் என்பதைத்தான். அலோபதி என்ற சிகிச்சை முறை, மொத்த நலங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு விவாதிக்கப்பட்டதல்ல. நோயாளிகளின் பிறப்பு, வளர்ப்பு அவர்களுடைய பழக்க வழக்கங்கள், அவர்களுக்கும் அவர்கள் எதிர் கொள்கிற சமூகத்திற்கும் உள்ள உறவுகள், அவர்களுக்கும் அவர்கள் ஆற்றக்கூடிய காரியங்களுக்கும் உள்ள உறவுகள், அவர்களுக்கு இருக்கக்கூடிய வசதிகள் இவற்றைத் கருத்தில் நிறுத்திக் கொண்டு உருவான ஒரு சிகிச்சை முறை அல்ல. மாறாக ஒரு நோய்க்கு உடனடியாக நிவாரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மருந்து விற்பனையானர்களின் லாபத்தை அடிப்படையாகக் கொண்ட துறை என்று மருத்துவத்தைச் சார்ந்த சிலரே முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இதே கருத்துக்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் காந்தியால் முன்வைக்கப்பட்டன. அப்போது அந்தக் கருத்துக்களை முதன்மையாக எடுத்துக் கொள்ளாத இந்தியாவிலுள்ள அறிவு வர்க்கம் இன்று இந்தக் கருத்துக்களுக்கு முதன்மையான இடம் தந்து பேசுகிறது. மேல் நாட்டில் தான் சிறந்த கருத்துக்கள் வர முடியும் என்கிற ஒரு மனோபாவத்தை இது காட்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக இதைச் சொன்னேன். நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய வைத்திய முறைகள் அலோபதியா, ஆயுர்வேதமா, ஹோமியோபதியா என்பதைப் பற்றிச் சொல்வதற்கான அடிப்படைத் தகுதிகள் எவையும் எனக்குக் கிடையாது.

நான் கூற வந்த விஷயம் நாம் கொண்டிருக்கும் மோகம். நம் முன்னோர்கள் கூறிய விஷயங்களை உதாசீனம் செய்துவிட்டு, அதே விஷயங்கள் மேல் நாட்டிலிருந்து வரும்போது அவற்றை மிகப் பெரிய விஷயங்களாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை நான் சொல்லுகிறேன். இதே மனோபாவத்தை நீங்கள் பல்வேறு விஷயங்களில் பார்க்கலாம். ?சுற்றுப் புறச்சூழல் இயக்கம் ? என்று ஒன்று இன்று மேல் நாட்டில் உருவாகி வருகிறது. உங்களுடைய சுற்றுப்புறங்களை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிதன் அவசியத்தை இப்போது மிகப் பெரும் அளவுக்கு வற்புறுத்தி வருகிறார்கள். மரங்களை வெட்டக்கூடாது; நெடுஞ்சாலை ஓரங்களில் குடியிருப்பு பகுதிகள் அமைக்கக்கூடாது; நதிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்; எந்த ஜீவராசிகளையும் முற்றாக அழித்துவிடக் கூடாது என்று ஒரு இயக்கத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதே காரியங்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வற்புறுத்தியுள்ளார்கள். காந்தி இதைப் பல தடவை வற்புறுத்தியிருக்கிறார். சுற்றுப்புற சூழ்நிலைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை அவருடைய எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகின்றன. ஆனால், இது இன்று இயக்கமாக மேல்நாட்டிலிருந்து வரும்போது அதை அப்படியே நாம் ஏற்றுக் கொள்கிறோம். அங்கு ஏற்பட்ட பல பிரச்சனைகள் காரணமாக அந்த இயக்கம் சார்ந்து பல்வேறுவகைப்பட்ட அழுத்தங்கள் அங்கு இருக்கின்றன. நம்முடைய சூழ்நிலைக்கு ஏற்ப அந்த இயக்கத்தை மாற்ற வேண்டும் என்று எண்ணாமல் அவர்களுடைய சோகங்களை - அவர்களுடைய மனோபாவத்தை - அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

ஆங்கில மொழியினால் நமக்குச் சில வசதிகள் கிடைக்கின்றன. அந்த மொழியினால் சில அவசியத் தேவைகள் நிறைவேறுகிறது. அப்படியானால் அந்த மொழியின் மீது ஏன் மோகம் கொள்ளக்கூடாது ?

ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவி இருக்கக்கூடிய ஒரு மொழி என்பது உண்மையான விஷயமல்ல. உலகத்தில் மிகச் சிறுபான்மையான மக்கள் அறிந்த ஒரு மொழிதான் ஆங்கிலம். ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு உங்களுக்கு பிரிட்டிஷ் தீவுகளில் அல்லது அமெரிக்காவில் நீங்கள் சில காரியங்களைச் செய்ய முடியும். நீங்கள் ஐரோப்பாவிற்குச் சென்றிருந்தால், சீனாவுக்குச் சென்றிருந்தால் அல்லது ருஷ்யாவுக்குச் சென்றிருந்தால் இந்த ஆங்கிலத்தை நீங்கள் காலணாவுக்குக் கூட அங்கெல்லாம் விற்க முடியாது. அங்கு செல்லுபடியாகாது. நீங்கள் ஆங்கிலம் அறிந்தவர்களா இல்லையா என்பது அங்கெல்லாம் பிரச்சனையே அல்ல. ஆங்கில மொழி சம்பந்தமாக இந்தியர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு மயக்கம், அதைத்தான் தவறு என்று கூறுகிறேன்.

ஆங்கில மொழியை மோசமான மொழி என்று நான் சொல்ல வில்லை. ஆங்கில மொழியைக் கற்பதால் நாம் அதிகமான பயன்களை அடைய முடியாது என்றும் நான் சொல்லவில்லை. ஆங்கில மக்களுடன் இருநூறு ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்ட உறவினால் அவர்களிடமிருந்து நமக்கு வந்த கலாச்சாரப் பழக்க வழக்கங்களை நாம் முற்றாக நீக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இரண்டு இனங்கள் ஒன்றுக்கொன்று கூடி வாழும் போது ஒரு இனம் மற்றொரு இனத்திலிருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ளும். வசதியைக் கருதி கற்றுக் கொள்ளும். அதைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பது ஒரு சாதாரண விதி. சிலவற்றை வெளிளையரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம். அவற்றை நாம் தக்க வைத்துக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை.

அறிவு என்பதை ஆங்கிலத்தின் மூலம்தான் பெற முடியும் என்பது உண்மையான விஷயமல்ல. ஒருக்கால் உங்களுக்கு ஆங்கிலம் தெரியாமல் ஜெர்மன் மொழி தெரிந்திருப்பின் அதன் மூலம் பெற முடியும். இன்று முக்கியமாக ஜெர்மன் மொழியும் பிரஞ்சு மொழியும் ஆங்கிலத்துக்கு இணையாக, ஒரு சமயம் ஆங்கிலத்தைத் தாண்டியும் வளர்ந்துவிட்டன. ஆங்கிலத்துக்கும் நமக்கும் இருக்கக்கூடிய உறவுகளில் நாம் கொண்டிருக்கக்கூடிய ஆரோக்கியத்தைப் பற்றி, நேர்மைகளைப் பற்றி நான் சொல்லவில்லை. நாம் அந்த மொழியைச் சார்ந்து நிற்கும் மயக்கங்களைப் பற்றிச் சொல்கிறேன். ஒரு அறிவாளியை அளப்பதற்கு முதன் முதலாக acid test என்று அவருக்கு ஆங்கிலம் தெரியுமா என்றுதான் இன்று பார்க்கப்படுகிறது. இங்கு ஒரு மனிதன் பிழையாக ஆங்கிலம் பேசும்போது அவன் மிகுந்த வெட்கமடைகிறான். ஆனால் அவன் பிழையாக தமிழ் பேசும்போது எந்தவிதமான வெட்கத்தையும் அடைவதில்லை. பேசும்போது மட்டுமல்ல எழுதும்போதும் அவன் அடைவதில்லை. இன்று நீங்கள் ஒரு தமிழ் அறிஞரை மதிக்கும்போது அவர் தமிழ் அறிஞர் என்பதற்காக மதிக்கிறீர்களா அல்லது அவர் ஆங்கிலமும் அறிந்த தமிழ் அறிஞர் என்பதற்காக மதிக்கிறீர்களா என்று பார்த்தால் அவர் தமிழ் அறிஞர் என்பதற்கு மேலாக ஆங்கிலமும் அறிந்தவர் என்பதற்காகவே அதிகப்படியான மதிப்பை அவர் பெற முடிகிறது. இப்படி நீங்கள் சிந்தித்துக் கொண்டு போனால் இந்த மொழி சார்ந்து ஒரு பலகீனம், மயக்கம் நமக்கு இருக்கிறது. சாதாரண மக்களிடம் இந்தப் பலகீனம் இன்னும் அதிகமாக இருக்கிறது.

இன்றைய திரைப்படங்களை எடுத்துக் கொள்ளுவோம். ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத ஒரு கதாநாயகன், ஒன்றுக்கும் உதவாதவன் என்று பெண் வீட்டாரால் கருதக் கூடிய ஒரு கதாநாயகன், அவன் கூலி வேலை செய்யக்கூடியவனாகவோ, டாக்சி ஓட்டக்கூடியவனாகவோ இருக்கலாம். அவன் அந்தத் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆங்கிலத்தில் சில வசனங்கள் பேசும் போது எண்ணற்ற பார்வையாளர்கள் கரகோஷம் செய்வார்கள். அந்தக் கரகோஷத்திற்கு அர்த்தம் ?அவன் அறிவாளி என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது ? என்பதுதான். இவை நாம் மனரீதியாக எவ்வளவு பெரிய நோயாளியாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளங்கள். இந்த நோயை நாம் தெரிந்து கொண்டால்தான் விமோசனம் பெற முடியும். இந்த நோய்க்கு நாம் ஆளாகியிருப்பது ஒன்று. இந்த நோய் நமக்கு இருக்கும்போதே இருப்பதை மறுப்பது மற்றொன்று. ஆக இரண்டு நோய்களுக்கு நாம் ஆட்படுகிறோம். இது போன்று பல்வேறு உதாரணங்களைச் சொல்லி நம்மிடம் இருக்கும் மோகத்தை நிரூபிக்க முடியும்.

ஆங்கிலம் தெரியாதவர்கள் மிகப்பெரிய அறிஞர்களாக இருந்தும் கூட ஆங்கிலம் தெரியவில்லை என்ற காரணத்தால் உள்ளூர அவர்கள் மிகுந்த வெட்கம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் வெட்கம் அடைவதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். உ.வே.சாமிநாத ஐயரின் பெரிய கவலை தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதாம். அவருக்கு நிகரான பதிப்பாசிரியர்கள் உலக சரித்திரத்தில் இல்லை என்று கூடக் கருதுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர் தமிழ் மீது மிகுந்த காதல் கொண்டவர். மட்டுமல்ல உலக சரித்திரத்தில் மற்றவர்கள் எப்படிப் புத்தகங்ளைப் பதிப்பித்திருக்கிறார்களோ, வளர்ந்த நாடுகளில் புத்தகங்கள் எப்படிப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றனவோ அவற்றிற்கு இணையான பதிப்புக்களை உருவாக்கியவர் அவர். பிறரிடம் ஒவ்வொரு விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு பதிப்பித்தவர் அவர். தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை திரும்பத் திரும்ப தன் நண்பர்களிடம் அவர் சொல்லியிருக்கிறாராம். இந்த அவமானத்தை அவருக்கு நாம் ஏற்படுத்தும் போது அதை எண்ணி அவமானப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இதுதான் அந்த மொழி சார்ந்த மோகம். இது ஒரு Symptom. இன்னும் எண்ணற்ற Symptoms. நம்மிடம் இருக்கின்றன. அதை நாம் இன்னும் கூராகப் பார்த்தோமானால் தாழ்வு மனப்பான்மைக்கான காரணங்களாக அவை இருப்பதை அறிய முடியும். இது ஒரு இயற்கையான விஷயம். அபூர்வமான நோயல்ல. உலகத்தில் பல இனங்களுக்கும் இருக்கக்கூடிய தாழ்வு இது. இதைத் தாண்டி வருவதற்கான விஷயங்களைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன்.

கவிமணி, பாரதி, நாமக்கல்லார் போன்ற கவிஞர்கள் சமுதாயம் சீர்கெட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் இன்றைய எழுத்தாளர்களோ தன்னலத்தோடு செயல்படுகின்றனர். இவர்கள் பெரிய சிக்கலைக் கருவாக எடுத்துக் கொண்டாலும் அதை ஆபாசமாக்கி விடுகின்றனரே. காரணம் சொல்ல முடியுமா ?

நண்பருடைய பேச்சில் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் எனக்கு இல்லை. அவர் இந்தக் கால எழுத்தாளர்களை இன்னும் காரமாகத் தாக்கியிருக்கலாம் என்பதைத் தவிர. மற்றபடி எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்த எழுத்தாளர்கள் ஏன் இந்த மாதிரியான காரியங்களைச் செய்கிறார்கள் என்பதை நீங்களே சொல்லிவிட்டார்கள். அவர்கள் சுயநலம் சார்ந்து ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு இரண்டு விதமான குறிக்கோள்கள் இருக்கின்றன. ஒன்று சமூக அந்தஸ்து. சமூக அந்தஸ்து என்றால் புகழ். மற்றொன்று பணம். இந்த இரண்டு வெற்றிகளைச் சார்ந்து - இந்த வெற்றிகளை எவை ஈட்டித் தருமோ, எந்தவிதமான இயக்கம் உருவாக்கித் தருமோ, அவற்றைச் சார்ந்து - அவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் படைக்கிறார்கள் என்பதைவிட அவர்கள் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இந்த வெற்றிக்கு அவர்கள் பல்வேறு வகைப்பட்ட துறைகளால் அங்கீகரிக்கப்படுகிறார்கள். உண்மையில் தரமற்ற எழுத்தாளர்கள் அல்லது தரமற்ற கவிஞர்கள் அங்கீகரிக்கப்படும் போது ஒரு தயக்கம் ஏற்படுகிறது. மிகத் தரமற்ற ஒரு நாவலாசிரியர் மிகப் பெரிய பரிசைப் பெறும்போது அவரைத் தரமற்றவர் என்று நிரூபிப்பதில் கஷ்டம் இருக்கிறது.

பெரிய நிகழ்ச்சிகள் நிகழும்போது ஒரு இனம் தனக்குரிய அவநம்பிக்கைகளை அல்லது தாழ்வு மனப்பான்மையை உதறிக் கொண்டு சிலிர்த்து எழுகிறது. அப்படி மற்ற இனங்களுக்குச் சில சாதனைகள் நடந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளருக்கு நோபல் பரிசு கிடைக்கிறபோது அந்த இனம் வாழ்க்கைமீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்கிறது. உலகம் பார்த்து மெச்சக்கூடிய எந்தக் காரியத்தையும் நாம் இலக்கியத்திலோ சினிமாவிலோ செய்யவில்லை. அரசியல் சார்ந்த கருத்துக்களையோ சமூக ஆராய்ச்சி சார்ந்த கருத்துக்களையோ குறைந்த பட்சம் நமக்கு இரண்டாயிரம் வருடம் பழக்கம் உள்ள கவிதை சார்ந்த துறையிலோ உலகத்துக்கு இன்று வரையிலும் நாம் எவற்றையும் அளிக்கவில்லை. ஆகவே தான் நாம் தாழ்வு மனப்பான்மை கொண்டுவிட்டோம் என்று நான் சந்தேகப்படுகிறேன்.

துறையைத் தேர்ந்தெடுப்பதில் பிறரது அறிவுறைகளையோ தாக்குதலையோ பொருட்படுத்த வேண்டாமா ?

ஒரு துறையைத் தேர்ந்தெடுத்த பின் அதில் இயங்குவது விரும்பத்தக்க விஷயம்தான். ஆனால் நம் சமூகப் பின்னணி சார்ந்த ஏதோ ஒரு காரணத்திற்காக சரியான வழிகாட்டல் நமக்குக் கிடைக்காமல் போகலாம். அது குடும்பம் சார்ந்தோ அல்லது உறவினர்கள் சார்ந்தோ அல்லது நண்பர்கள் சார்ந்தோ அல்லது ஆசிரியர்கள் சார்ந்தோ நமக்குக் கிடைக்காமல் போகலாம். அதனால் சில சந்தர்ப்பங்களில் நாம் தவறான துறையைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பினால் நாம் சில பட்டங்களைப் பெற்ற பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் இருபது, இருபத்திரண்டு வயதில் அதிக வயதை நாம் அடைந்துவிட்டோம் என்றும் இந்தத் துறையை மாற்றிக் கொண்டு மற்றொரு துறையை நாம் தேர்ந்தெடுத்து அதில் திறமை பெறுவது அசாத்தியமான காரியம் என்ற எண்ணம் மாணவர்களுக்கு ஏற்படுவது இயற்கை. இது போன்ற ஒரு எண்ணம் நமக்கு ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. கல்லூரியில் நாம் தவறான ஒரு துறையைத் தேர்ந்தெடுத்தாலும் கூட வாழ்க்கையில் நம்முடைய ருசிகளுக்கு ஏற்ற துறைகளைத் தேர்ந்தெடுத்து அதில் பயிலக்கூடிய வாய்ப்பு இன்று இருக்கிறது. அந்த வாய்ப்பு மாணவர்களுக்கு அவசியம் என்றால், விமர்சனங்களுக்கு ஆட்பட்டாலும் கூட - அவர் தனது ருசிக்கு ஏற்ப துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள பின் வாங்கக்கூடாது என்று நினைக்கிறேன். உங்களைப் பொறுத்த வரையில் நீங்கள் சரியான துறைகளைத்தான் தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்றால் நீங்கள் அந்தத் துறையைத் தொடரலாம். ஏதோ ஒரு காரணத்திற்காக நமக்குத் துறைகள் சரியாக அமையவில்லை என்று வாழ்நாள் முழுவதும் விசனப்பட்டுக் கொண்டிருப்பதைவிட நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்த நேரத்தில் நம்முடைய துறைகளை மாற்றிக் கொள்வது மிக முக்கியமான விஷயமாக எனக்குப்படுகிறது.

இன்று புதுக்கவிதை வளர்ந்த நிலையில்தான் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் தமிழிற்கு ஒரு சரியான இடம் இல்லாமல் போகவில்லையே ?

நான் புதுக்கவிதையைப் பற்றி சாதகமாகவோ பாதகமாகவோ எந்தக் கருத்தையும் என்னுடைய பேச்சில் கூறவில்லை. மு.வ. ?இலக்கியத் திறன் ? என்ற தனது புத்தகத்தில் புதுக்கவிதையை வரவேற்று எழுதக்கூடிய அளவுக்கு இன்றைய நவீன இலக்கியப் போக்குகளை அறிந்து வைத்திருக்கிறார் என்று பாராட்டினேன்.

பொதுவாக ஒரு மொழி இரண்டாம் பட்சமான படைப்புக்களால், அவை நாவல்களாக இருந்தாலும் சரி, சிறுகதையாக இருந்தாலும் சரி, கவிதையாக இருந்தாலும் சரி, ஒரு மொழி தன்னுடைய வலிமைகளை இழந்து கொண்டிருக்கும். முதன்மையான படைப்புக்களால் மிகத் தரமான படைப்புக்களால் மொழி வளர்ச்சி அடையும். நம்முடைய மொழி நம்முடைய சிறந்த கவிஞர்களால், சிறந்த நாவலாசிரியர்களால், சிறந்த சிறுகதை ஆசிரியர்களால், சிறந்த கட்டுரை ஆசிரியர்களால் நன்றாக வளர்க்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் நம்மிடமோ இரண்டாம் பட்சமான அல்லது மூன்றாம் பட்சமான கவிஞர்களும், நாவலாசிரியர்களும், சிறுகதை ஆசிரியர்களும் எண்ணிக்கையில் அதிக அளவு இருக்கின்றனர். அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் நிறுவனங்களின் ஆதரவும் கிடைக்கிறது. அவர்கள் மொழியை மலினப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதுதான் தமிழ் மொழி சம்பந்தமாக நாம் எதிர் கொள்ளக் கூடிய நிலையாக இருக்கிறது.

நமக்கு இருக்கின்ற ஆங்கில மோகத்தால் தான் நாம் தமிழை உண்மையில் மதிக்காமல் இருக்கின்றோமா ?

ஆங்கில மோகம் ஏற்படுவதற்கு மாணவர்களை நான் குறை சொல்லவில்லை. மாணவர்கள் இந்த குறைகளுக்கு ஆட்பட்டுவிடக்கூடாது என்ற கவலையினால்தான் உங்களை provoke செய்யக்கூடிய, அல்லது உங்களை தொந்தரவு பண்ணக்கூடிய, நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுக்கக்கூடிய பல கருத்துக்களை முன் வைத்தேன். மாணவர் சமுதாயம் இன்று இருக்கக்கூடிய பல்வேறு குறைகளுக்குப் பலியாகி விடக்கூடாது என்று நினைக்கிறேன். இன்று ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பள்ளிகள், ஆங்கிலத்தின் மீது நாம் கொண்ட மோகத்தையே காட்டுகின்றன. வெளியே தமிழின் பெருமை பேசுதல், அதே சமயம் ஆங்கிலத்தை உள்ளூர மதித்தல் இதுதான் நம்முடைய கலாச்சார தலைமையின் இரட்டைக் குணம். நம்முடைய அரசியல் தலைமையின் இரட்டைக் குணம். இந்த குணத்தைக் கொண்டவர்கள் தான் இந்தச் சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலக் கல்விக்கு அளிக்கக்கூடிய முக்கியத்துவத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் தெரியும். இவர்களுடைய மரியாதை தமிழ் சார்ந்து இல்லை என்பதற்கும் ஆங்கிலம் சார்ந்து தான் இருக்கிறது என்பதற்கும் எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். நாம் கடந்த ஐம்பது வருடங்களில் தமிழைப் பற்றி உயர்வாகப் பேசியது உண்மையென்றால் நாம் பல்வேறுபட்ட காரியங்களைச் சாதித்திருக்க வேண்டும். ஆனால் சொல்லும்படியான மிகப்பெரிய காரியங்கள் எவற்றையும் நாம் சாதிக்கவில்லை. தமிழன் பெருமை பேசுவதே சில அரசியல் காரணங்களுக்காக, சில சமூகக் காரணங்களுக்காக. இதை ஒரு தந்திரமாகக் கொண்டிருக்கிறோம். இந்த இனம் தன்னுடைய தாழ்மையைப் பற்றி உள்ளூர வருந்தவில்லை என்பதற்கான தடயங்கள் தான் எனக்கு அதிகமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைய கலாச்சார வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக எதைச் சொல்ல முடியும் ?

முக்கியமான காரணம் தமிழ் நாட்டில் போலிகளுக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரம் என்று சொல்லலாம். ஒரு சமுதாயத்தில் எல்லா தரத்தைச் சார்ந்த மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்த மக்கள் மட்டும் வாழக்கூடிய சமுதாயம் என்று எதுவுமே இல்லை. செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு தரத்தைச் சார்ந்த செயல்பாடுகள் ஒவ்வொரு சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும். மிக உயர்வானதும் இருக்கும்; நடுத்தரமானதும் இருக்கும். மிகக் கீழானதும் இருக்கும். ஆனால் ஒரு விவேகமான சமூகம் உயர்வான செயல்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. அதைப் போற்றுகிறது. பாராட்டுகிறது. இரண்டாம் பட்சமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மூன்றாம் பட்சமான அல்லது முப்பதாம் பட்சமான செயல்பாடுகளைக் கண்டிக்கிறது. இதன் மூலம் மதிப்பீடுகளை ஒரு விவேகமான சமூகம் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. எனவே இந்தச் செயல்பாடுகள் இருப்பது வீழ்ச்சிக்கு காரணம் அல்ல. தரக்குறைவான செயல்பாடுகள் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. தரக்குறைவான காரியத்துக்கு நாம் கொடுக்கக் கூடிய சமூக அங்கீகாரம் சமூக மதிப்பு வீழ்ச்சியினுடைய அறிகுறி என்று நான் கருதுகிறேன்.

மூன்றாம்தர எழுத்தாளரை முதல் தரமான எழுத்தாளராக ஒரு சமூகம் கருதுமென்றால், பல்கலைக்கழகம் கருதுமென்றால், அறிவாளி வர்க்கங்கள் கருதுமென்றால், அரசாங்கம் கருதுமென்றால், அரசியல்வாதிகள் கருதுவார்கள் என்றால் அந்த சமூகம் விவேகமான மதிப்பீடுகளை, அளவுகோல்களை இழந்து விட்டது என்றுதான் அர்த்தம். மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கக்கூடிய ஒரு சமூகத்தில் மிக மோசமான நடிகர்களை மிகச் சிறந்த நடிகர்களாக ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்றால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த அறிவாளிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்றால், நடிப்பைச் சார்ந்த அளவுகோல் முறிந்து போகிறது என்று அர்த்தம். இதுபோன்ற ஒரு வீழ்ச்சி தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் பிற துறைகள் சார்ந்தும் மூன்றாம் தரமானவற்றை முதல் பட்சமாக முன் வைக்கும் காரியம், முதல் பட்சமானவற்றை முற்றாக நிராகரித்து விடும். இந்த இரண்டு காரியத்தையும் இந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருகிறது. ஆகவே இது ஒரு பெரிய வீழ்ச்சி என்று நம்புகிறேன்.

இன்றைய தரமான எழுத்துக்கள் படிப்பதற்கு எளிமையாக இல்லையே. உங்கள் காலச்சுவடு கூடத்தான். . .

மிகச் சிறப்பான எழுத்து சற்றுக் கடினமாக இருக்கலாம். மிகச் சிறப்பான எழுத்து எளிமையாகக் கூட இருக்கலாம். கடினம் என்பது இலக்கிய அளவுகோல் அல்ல. இது கடினமாக இருக்கிறது; ஆகவே உயர்வானது என்று சொல்ல முடியாது. இது எளிமையாக இருக்கிறது; ஆகவே இது தள்ளுபடியானது என்று சொல்ல முடியாது. இரண்டு விதமாகவும் படைப்புக்கள் இருக்கலாம். எளிமையாக இருக்கிறதா ? அல்லது கடினமாக இருக்கிறதா ? என்பதைப் பற்றி முன்கூட்டியே எண்ணங்களைக் கொண்டு அந்த எண்ணங்களின் அடிப்படையில் நான் இலக்கியப் புத்தகங்களை மதிப்பிடுவதில்லை. நம்முடைய இதிகாசங்களான மகாபாரதமும், இராமாயணமும் மிக எளிமையானவை. James Joyce இன் Ulysses மிகக் கடினமான புத்தகம். Franz Kafkaவும் சுலபமான ஆசிரியர் அல்ல. இவை எல்லாமே இலக்கியத் தரமானவை என்றே நான் கருதுகிறேன். இதில் ஒன்று போதும். மிக எளிமையானது மட்டும் போதும்; கடினமானவை வேண்டாம், வேண்டவே வேண்டாம் என்கிற மனோபாவத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நாவலாசிரியர்கள் அல்லது கவிஞர்களின் படைப்புக்களை கடினம் என்று வாசகர்களாகிய நாம் கூறுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. இதற்கு முன் எந்தக் காரியங்கள் சொல்லப்பட்டனவோ அதே விஷயங்கள் இந்த நாவலிலோ கவிதைகளிலோ சொல்லப்படவில்லை. இதுகாறும் சொல்லாத மிகச் சிக்கலான விஷயங்களை அவர்கள் சொல்ல முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சிகளில் வெற்றிகள் அடைகிறார்கள். இதன் மூலம் உங்கள் மொழி மிக நுட்பமான ஆற்றல்களை அடைகிறது. இன்று பல நுட்பமான கருத்துக்களை நம் மொழியில் நாம் சொல்கிறோம் என்றால் நம் மொழியை மிகக் கூர்மையாக படைப்பாளிகள் வளர்த்திக்கொண்டு வருவதால்தான் நம் மொழியை நாம் பல்வேறு வகைப்பட்ட வளர்ந்துவரும் துறைகளுக்குப் பயன்படுத்த முடிகிறது. மகாபாரத மொழி மட்டுமே நமக்கு இருக்குமென்றால் இன்று உலகத்தில் தோன்றக்கூடிய பல கருத்தாக்கங்களை நாம் சென்றடைய முடியாது.

காலத்தின் கோலத்திற்கு ஏற்ப, விரிந்து வரக்கூடிய அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப, புதிய துறைகளின் அறிமுகத்திற்கு ஏற்ப, நம்முடைய புத்தகங்கள் நம்மளவில் கடினமாகிக் கொண்டு போகக்கூடிய வாய்ப்புகள் மிகுதியாக இருக்கின்றன. இதையும் ஒரு தவிர்க்க முடியாத விதியாகக் கொள்ள வேண்டும். அந்தப் புத்தகங்களிடம் நமக்கு உள்ள உறவை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த உறவுகளை நல்ல முறையில் நாம் பேண வேண்டும். கடினமான புத்தகங்களை நாம் படித்து அதிலுள்ள சாராம்சங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்றால் இதற்கு முன்னால் நமக்கு இலக்கியத்திலிருந்து கிடைக்காத ஒருவகை அனுபவம், ஒரு பேரனுபவம், அனுபவத்தின் ஒரு புதிய பரிணாமம் அந்தப் புத்தகங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும். அந்த வாய்ப்பைக் கடினம் என்று சொல்லி நாம் இழந்து விடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய இதழான காலச்சுவடு உங்களால் போதிய அளவுக்குப் படிக்க முடியாமல் இருக்கிறது என்றால் இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அதை எழுதக்கூடியவர்கள் போதிய அளவுக்கு எளிமையாகச் சொல்லத் தெரியாதவர்களாக இருக்கலாம். அல்லது அவர்கள் சொல்லுகிற விஷயங்களைச் சார்ந்து உங்களுக்கு முன் பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம். இந்த காரணங்களைச் சார்ந்து அது கடினமாக அமையும். ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்கள் சார்ந்து உங்களுக்கு பழக்கம் இருக்குமேயென்றால் அதில் வரக்கூடிய கட்டுரைகளை நீங்கள் புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு இருக்கும். அப்படி உங்களுக்கு பழக்கம் இருந்தும் அந்த கட்டுரைகளோ அல்லது கவிதைகளோ உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது அநேகமாக சொல்லியவர்களுடைய குறையாகக் கருதலாம். இரண்டு வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஒருவன் படிப்பினால்தான் நிறைவான வாழ்க்கையை அடைய முடியுமா ? இன்றைய காலகட்டத்தில் படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது என்பது முடியாத செயலாக இருக்கிறதே.

வாசிப்பு என்பது முக்கியமான ஒன்று என்று சொன்னேன். ஆனால் அதை ஒரு கட்டாயமான விதியாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. அது முக்கியமாக ஒரு தவிர்க்க முடியாத விதி அல்ல. நீங்கள் படிக்கலாம். படிக்காமல் கூட இருக்கலாம். படிக்காமலேயே நிறைவான வாழ்க்கை வாழ்ந்த பல்வேறு நபர்களை எனக்குத் தெரியும். எந்த ஒரு புத்தகத்தையும் படிக்காமல் - ஒரு தினசரியைக் கூடப் படிக்காமல் - சந்தோஷமான நிறைவான வாழ்க்கையை தங்களவில் வாழ்ந்தவர்களை எனக்குத் தெரியும். ஆனால், இன்றைய வாழ்க்கையை வாழ்க்கையின் வேறு பரிமாணங்களைப் புத்தகங்களின்றி நாம் எதிர்கொள்ள முடியாதோ என்ற சந்தேகம் எனக்குப் பலமாக இருக்கின்றது.

நேரம் ஒதுக்குவது என்பது உங்கள் ஆர்வங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். நாம் பல்வேறு துறைகளைப் பற்றிப் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால் நமக்கு நேரம் இல்லாமல் போகலாம். ஆனால் அதைவிட மிக முக்கியத்துவம் குறைந்த பல்வேறுபட்ட விஷயங்களுக்கு நேரம் செலவிட வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது அரசாங்கத்துக்கும் உங்களுக்குமான உறவுகள் சார்ந்த காரியங்கள், நீங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் உறவைச் சார்ந்த காரியங்கள், உங்கள் உறவுகளைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள், உங்கள் குடும்பத்தைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள், உங்கள் நண்பர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் - இப்படி எண்ணற்ற காரியங்களில் நீங்கள் பொழுதைச் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள். இவற்றில் ஒரு பொழுதை மிச்சப்படுத்தி நீங்கள் விரும்பக்கூடிய மிக உன்னதமான புத்தகங்களைப் படிக்க முடிந்தால் அந்த அளவுக்கு வாழ்க்கைப் பார்வை விரிவடையும் என்று நம்புகிறேன்.

இந்த நூற்றாண்டில் தமிழில் மிகச்சிறந்த கலைஞர்கள் யாவர் ?

இந்த நூற்றாண்டில் மிகச் சிறந்த கலைஞர்களாக நான் இருவரை மதிக்கிறேன். ஒருவர் பாரதி. மற்றொருவர் புதுமைப்பித்தன். இவர்களின் புத்தகங்களையேனும் மாணவர்கள் முழுமையாகப் படிக்க வேண்டும். இந்த அனுபவங்களுக்கு அவர்கள் ஆளானால் அதுவே பெரிய விஷயம். ஒரு முக்கியமான விஷயம். இதை ஆரம்பமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டுள்ள முக்கியமான மற்ற புத்தகங்களைப் படிக்கலாம். சிறந்த புத்தகங்கள் ஏராளமாகத் தமிழில் இருக்கின்றன. அவற்றை நீங்கள் படித்துப் பார்ப்பது அவசியமென்று நம்புகிறேன். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நூறு புத்தகங்களையேனும் குறைந்தபட்சம் படிக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகங்களை நீங்கள் சுலபமாகப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பான்மையான புத்தகங்கள் உங்கள் நூல் நிலையங்களில் இருக்கக் கூடியவைதான். எந்தவிதமான கஷ்டத்துக்கும் நம்மை ஆட்படுத்தாமல் மிகப் பெரிய செல்வங்கள் நம்மை வந்தடையக்கூடிய ஒரு வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். அந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

படைப்பாளிகளில் இரண்டாந்தர படைப்பாளியை எந்த அளவுகோலை வைத்து மதிப்பிடுகிறீர்கள் ?

இப்போது பல்வேறு வகைப்பட்ட அளவுகோல்கள் இருக்கின்றன. முக்கியமாக ஒரு அளவுகோல் ஒரு படைப்புக்கும் காலத்துக்குமான உறவு. ஒரு எழுத்தாளன் அவனுடைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நவீன மனிதனாக இருக்க வேண்டும். அவனது உடல் இன்று வாழ்கிறது என்ற காரணத்திற்காக அவனை இந்த நூற்றாண்டு மனிதனாகக் கருதி, கருத்துலகம் சார்ந்து, அனுபவ உலகம் சார்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

இன்று வந்து கொண்டிருக்கிற பெரும்பான்மையான புத்தகங்களும் படைப்புக்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவை. ஆக ஒரு படைப்பாளிக்கும் இந்த காலத்திற்கும் இருக்கக்கூடிய உறவு நிலை காலத்தால் அவன் பெற்ற பாதிப்புகள், அந்தப் பாதிப்புகள் மூலம் தன்னை நவீன மனிதனாக அவன் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிறைவு, இவைதான் படைப்புக்கு அடிப்படையான கூறுகள் என்று நினைக்கிறேன். இதைச் சார்ந்து பல்வேறுபட்ட கூறுகள் இருக்கின்றன. மொழியை அவன் எப்படிப் பயன்படுத்துகிறான் ? சிக்கனமாகப் பயன்படுத்துகிறானா ? மொழியை விரயம் செய்கிறானா ? மிகப்பெரிய அனுபவங்களை அவனால் அறிய முடிகிறதா ? பல்வேறுபட்ட அர்த்தப் பரிமாணங்களை அந்த படைப்புக்களால் தர முடிகிறதா ? உண்மையென்று முற்றாக நம்பக்கூடிய, நம்பச் செய்துவிடக்கூடிய ஒரு கற்பனை வளத்தை அவன் கொண்டிருக்கிறானா ? மீண்டும் மீண்டும் அந்தப் படைப்பை அணுக வேண்டும் என்ற வற்புறுத்தல் அந்த படைப்பு நமக்குத் தருகிறதா ? நம்முடைய கவனத்தை முழுமையாக அந்தப் படைப்புக் கேட்டு நிற்கிறதா ? அல்லது அரைத் தூக்கத்திலேயே அந்தப் படைப்பைப் படிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறதா ? என்பது போன்ற பல்வேறுபட்ட அளவுகளை வைத்து உயர்ந்த படைப்புக்கும் இரண்டாம் பட்சப் படைப்புக்குமான வேற்றுமைகளைக் கண்டு கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

^^^^

Mar 29, 2012

ஜப்பானியக் கவிதை-மகாகவி பாரதியார்

18 அக்டோபர் 1916  நள ஐப்பசி 5

ஸமீபத்தில் “மார்டன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில்உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒருலிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால்:- இங்கிலாந்து அமெரிக்காஎன்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன?

மேற்குக் கவிதையில் சொல்மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல்சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும்,சோம்bhar56 பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும், பல சொற்களைச் சேர்த்து வெறுமே, பாட்டை அதுபோகிற வழியெல்லாம் வளர்த்துக்கொண்டே போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்அதிகமிருக்கிறது. தம்முடைய மனத்திலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர்கதைகளெழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.

ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பதுகிடையாது. கூடை கூடையாகpப பாட்டெழுதி அச்சிடவேண்டும் என்ற ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக்கொண்டிருப்பவன் புலவனாகமாட்டான். கவி்தை யெழுதுபவன் கவியன்று; கவிதையே வாழ்க்கையாகஉடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று.வானத்து மீன், தனி்மை, மோனம், பலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட்டுப் போய், இயற்கையுடனேஒன்றாகி வாழ்பவனே கவி.

~

ஜப்பானிய பாஷையில் பதினேழசை கொண்ட ‘ஹொக்கு’ என்ற பாட்டு ஒருதனிக் காவியமாக நி்ற்கும். முப்பத்தோரசையுள்ள ‘உத்தா’ (உக்தம்) என்பதும் அங்ஙனமே. அயோநேநோகுச்சி தமது கருத்தை விளக்கும் பொருட்டுச் சில திருஷ்டாந்தங்கள் காட்டியிருக்கிறார். அமெரிக்காவில்மிஸ் ரீஸ் (Miss Lizette Woolworth Reese) என்பதோர் கவிராணி யிருக்கிறார். வேண்டாதவற்றைத்தள்ளிவிடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற பெண் புலவர் பெயர் வாங்கியிருக்கிறார். அநாவசியமான பதச் சேர்க்கை, அநாவசியமான கருத்து –விளக்கம் என்ற இரண்டுமில்லாமல் முத்துப்போலே பதங்கள் கோக்கும் நல்ல தொழிலாகிய, அக்கவிராணிஇங்கிலீ்ஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள் சிலவற்றை நோகுச்சி எடுத்துக் காட்டுகிறார்.

மழை

(மிஸ் ரீஸ் எழுதியதன் மொழிபெயர்ப்பு மாதிரியடிகள்)

ஓ! வெண்மையுடையது; மழை இளையது. கூரை மேலே சொட்டுச் சொட்டென்றுவிழுகிறது; வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் ஓடி வருகின்றன. பூண்டுகளின் மணம். பழமையின்நினைவு. இவை யெல்லாம் புல்லாந்தரையிலே குணந் தெரிகிறது. உடைந்த கண்ணாடித் துண்டு போலே.(1)

சிறிய வெளிக்கதவுகள் புடைக்கிறது பார். அதுவரை செவந்த கொடிப்பூண்டுகள் நேரே ஓடிச் செல்லுகின்றன. (2(

ஓ! வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் வந்து நுழைகின்றன. கற்பூரச்செடியின் மணம். பழைய மகிழ்ச்சி பழைய துன்பம்; இளைய வெண்மழையிலே கிடைத்தன. (3)

மேற்கூரிய பாட்டை எடுத்துக்காட்டிவிட்ட பிறகு நோகுச்சி சொல்லுகிறார்:-

“வெண்மையுடையது; மழை இளையது” என்ற முதலடியில் வியப்பில்லை. அதிஸாமான்யமானவார்த்தை. கடைசி விருத்தம் வயிரமபோலிருக்கிறது. அதை மாத்திரம் தனிக் கவிதையாக வைத்துக்கொண்டுமற்றதையெல்லாம் தள்ளிவிடலாம். ஜப்பானியப் புலவன் அப்படியே செய்திருப்பான். சிறிய பாட்டுப்போதும்.சொற்கள், சொற்கள், சொற்கள் – வெறும் சொற்களைவளர்த்துக் கொண்டு போய் என்ன பயன்?

ஜப்பானிலே பதினெட்டாம் நூற்றாண்டில் “பூஸோன் யோஸாஹோ” என்ற ஜப்பானியக்கவிராயர் ஒரு ‘ஹொக்கு’ (பதினெழசைப்பாட்டு) பாடியிருக்கிறார். அதன் மொழிப்பெயர்ப்பு:-

“பருவமழையின் புழையொலி கேட்பீர், இங்கென் கிழச் செவிகளே.” இந்தஒரு வசனம் ஒரு தனிக் காவியம். பாட்டே இவ்வளவு தான்.

மேற்படி ஹொக்க்ப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்பமனனம் செய்யவேண்டும். படிப்பவனுடைய அனுபவத்திற்கு தக்கபடி அதிலிருந்து நூறு வகையானமறைபொருள் தோன்றும். பல பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்ந கவிதையன்று.கேட்பவனுள்ளத்திலே கவிதை யுணர்வை எழுப்பி விடுவது சிறந்த கவிதை.

~

மற்றுமொரு நேர்த்தியான “ஹொக்குப்” பாட்டு. வாஷோ ம்த்ஸுவோ(Basho Matsuso) என்றொரு ஜப்பானியக் கவியிருந்தார். இவர் வறுமையே விரதமாகப் பூண்டிருந்தாராம்.ஒரு சீடன் இவரிடம் கல்வி கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே இவரிடம் மூன்றுரியே (அதாவது ஏறக்குறைய முப்பது வராகன்) காணிக்கையாகக் கொடுத்தான். இவர் ஒருநாளுமில்லாதபடிபுதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தமக்குத் தொல்லையாதலால் வேண்டியதில்லைஎன்று திரும்பக் கொடுத்துவிட்டாராம்.

இவருக்கு காகா (Kaga) என்ற ஊரில் ஹொகூஷி என்றொரு மாணாக்கர் இருந்தார்.இந்த ஹொகூஷியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது.அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர் தமது குருவாகிய “வாஷோ-மத்ஸுவோ” என்பவருக்குப் பின்வரும்பாட்டில் எழுதியனுப்பினார்.

“தீப்பட்டெரிந்தது: வீழு மலரின் – அமைதியென்னே!”

மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும்போது எத்தனை அமைதியுடனிருக்கிறதோஅத்தனை அமைதியுடன் மனிதனுக்கு வருந்துன்பங்களை நோக்குகிறான். .‘வீடு தீப்பட்டெரிந்தது.ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லை’ என்ற விஷயத்தை ஹொகூஷி இந்தப் பாட்டின் வழியாகத் தெரிவித்தார்.

~

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” ஜப்பானியக் கவிதையின் விஷேசத்தன்மையென்று நோகுச்சிப் புலவர் சொல்வதுடன், ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும்சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்.” கிழக்குத் திசையின் கவிதையிலேயே இவ்வி்தமான ரஸம் அதிகந்தான்.தமிழ் நாட்டிலே முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும், ஒரேயடியாய்கவிதை சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் “ஹொக்குப்”பாட்டன்று. நோகுச்சி சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள்காண்பதறிவு.”

நன்றி: http://bhaarathi.blogspot.in

Mar 28, 2012

குழந்தைக்கு ஜுரம்-தி.ஜானகிராமன்

னைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது.

“ஏண்டாய்யா, குழந்தையைக் கொடுத்தியே போதாதா? வியாதியை வேற கொடுத்து அனுப்பிச்சுருக்கியே அதை?” என்று மனசிலே சொல்லிக் கொண்டே சுவரில் அசைந்த காலண்டரைThi.jaa ப் பார்த்தார். அதில் பரமசிவன் மீசையும் மாடும் இரண்டு பிள்ளையுமாக உட்கார்ந்திருந்தார். வியாதி வெக்கை இல்லாத பிள்ளைகள்.

கழுவாத சாயங்கால மூஞ்சி மாதிரி எண்ணெய்ப் பாடம் கறுத்து மின்னும் தலையணையில் தலை வைத்துக் குழந்தை மல்லாந்து படுத்திருந்தது. மூன்று நாளாக மூடிய கண் திறக்கவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. சளி ஜுரமா, பிடிவாத ஜுரமா இன்னும் டாக்டருக்குப் பிடிபடவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. மாசம் பிறந்து இரண்டாவது வாரம் பாதி நடக்கிறது. இல்லின், மைஸின் என்று என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறார் டாக்டர். தம் கையிலே இருக்கிற பெட்டியைப் பிரிக்க யோசனை, ‘ட்யூஷன்’ சொல்லிக் கொடுத்து உளவடைக்க டாக்டருக்கு அவ்வளவு சின்னக் குழந்தைகளும் இல்லை. சந்நிதித் தெரு வன்னியர் வீட்டு ‘ட்யூசன்’ பணம் எட்டு ரூபாய் தீர்ந்துவிட்டது. என்ன செய்யலாம் என்று மனசை நோண்டும்போதுதான் மனைவி அதை ஞாபகமூட்டினாள்.

“இன்னும் ஒரு புஸ்தகம் அச்சுப்போட எழுதிக் கொடுத்தீங்களே, அதைத் திருப்பிக் கேக்கறாப் போலாவது அந்தப் பாவியைப் பார்த்துக்கிட்டு வாங்களேன்” என்றாள் அவள்.

“நீயே பாவிங்கறே. நீயே போகச் சொல்றியே?”

“வேற வழி இல்லேன்னா…” என்னவோ ரோசமாகச் சொல்லி வாக்கியத்தை முடிக்கத்தான் பார்த்தார். ஆனால் குழப்பத்தில் முடிவே மௌனமாகக் கரைந்துவிட்டது.

“இனிமேல் உங்க வீட்டுக் குத்துச் செங்கல் மிதிக்க மாட்டேன்யா” என்று புத்தகம் போடுகிற பஞ்சுவிடம் இரண்டு மாதம் முன்னால் சொல்லிவிட்டு வந்ததுதான்.

சின்னராஜா எம்.ஏ., எல்.டி. எழுதியதாக பஞ்சு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குப் போடுகிற புத்தகங்களெல்லாம் இந்த சரவண வாத்தியார் எழுதிக் கொடுத்ததுதான். நாலு வருஷமாக இது நடந்துவருகிறது. இருபது புத்தகங்கள் ஆகிவிட்டன. பஞ்சு புத்தகத்துக்கு ஐம்பது ரூபாய் வீதம் ஏகபோகமாக உடைமையை எல்லாம் அவரிடம் எழுதி வாங்கி க்ஷேமமாக இருந்து வந்தார். நானூறு ரூபாய் மிச்சம் கொடுக்க வேண்டியிருந்தது.

ஆடி மாசம் பணத்துக்காகப் போய் நின்றார் சரவணவாத்தியார்.

“அடுத்த திங்கட்கிழமை ஒரு செக் வர வேண்டியிருக்கு. வந்தவுடனே, மாத்தி உம்ம வீட்டுக்கு வந்து உமக்குக் கொடுக்க வேண்டிய முந்நூறு ரூபாயையும் கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன். சரிதானா?” என்றார் பஞ்சு.

முந்நூறு என்கிறானே!

“நானூறு ரூபாயில்லே?”

“நானூறா? நல்லா யோசிச்சுப் பாரும். போன வாரம் வந்ததிருந்தப்போ, நானூறு ரூபாய்னு சொன்னீர். இல்லை ஐயா, முந்நூறுன்னு திருத்தினேன். சரீன்னீரேய்யா.”

“இல்லே, நீங்க முந்நூறுன்னீங்க. நானூறுன்னு நான்தான் திருத்தினேன். நீங்கதான் சரின்னிங்க.”

“இல்லே, நல்லா யோசிச்சுப் பாரும்.”

சரவண வாத்தியார் நன்றாக யோசித்துப் பார்த்தார், நானூறு ரூபாய் நிச்சயம்.

“இல்லைங்க, நானூறுதான்.”

“ஏன்யா, எத்தினி நாளாய்யா இநத் வேலையை ஆரம்பிச்சிருக்கீரு? வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்தத் தண்டனை எனக்கு? ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா?”

வாத்தியாருக்கு உடம்பெல்லாம் பதறிற்று. அவர் வாத்தியார். யாரும் அவரை இப்படித் தூக்கி எறிந்து பேசுகிறதில்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு மரியாதை உண்டு. அதாவது அவமரியாதை கிடைத்ததில்லை.

முட்டி வந்த ஆத்திரத்தை அமுக்கிக்கொண்டு, பணிந்த குரலில், “நீங்க தெரியாம சொல்றீங்க, நல்லா யோசனை பண்ணிப்பாருங்க” என்றார்.

“தெரியாமச் சொல்றேனா? நானா? நோட்டிலே எழுதி வச்சிருக்கேன்யா?”

“எடுங்க.”

“கடையிலே இருக்கு. இன்னிக்குச் சாயங்காலம் பார்த்தேன். அப்புறம் என்ன?”

“என்ன எழுதியிருக்கீங்க?”

“உமக்குக் கொடுக்க வேண்டியது ஆயிரம். எழுநூறு ரூபா உம்ம பத்துவழி ஆயிருக்கு.”

“அறுநூறில்லே?”

“ஏன்யா, செலவுக்கு வேணும்னு போன மாசம் இரண்டாம் நாள் ராத்திரி வந்து ஐம்பது ஐம்பதுன்னு வாங்கிண்டுப் போனீரய்யா.”

“நான் ரண்டு தடவை வந்தது வாஸ்தவம். ஆனா ஒண்ணும் வாங்கலியே!”

“வாங்கலியா? என்னமாய்யா இப்படித் துணிஞ்சி சொல்ல நாக்கு வரது உமக்கு? பையன்களுக்கெல்லாம் தர்மம் போதிக்கிறீரே. வாண்டாம்யா. இதெல்லாம் விட்டுடும். இப்படி இருந்தா லட்சுமி நீர் இருக்கிற தெருப்பக்கம் கூட வரமாட்டா.”

“பஞ்சு, நெசமாத்தான் சொல்றீங்களா?”

“நெசமாத்தானா? நான் என்ன உமக்குப் புடிச்ச சிஷ்யப் பையனா, உம்மோட உள்ளாக்காட்டி விளையாடறதுக்கு.”

ஒரு வார்த்தைக்குப் பத்து வார்த்தையாகப் பஞ்சுவின் வாயிலிருந்து தெறிக்கின்றன. குரலும் பெரிய குரல். வாத்தியார் கலங்கியேவிட்டார்.

“அப்ப முந்நூறுதான்னு சொல்றீங்க.”

“வேணும்னா நாளைக்கு காலமே வந்து நோட்டைப் பாருமே, எழுதியிருக்கேனா இல்லியான்னு.”

”நீங்க நோட்டிலே எழுதினதுக்கு நானா பொறுப்பு? எனக்கு நேர எழுதலியே.”

வாத்தியாருக்கே ஆச்சரியமாக இருந்தது, எப்படி இதைச் சொன்னோம் என்று.

“அப்படியா? நான்தான்யா அயோக்கியன். நீர் பரம யோக்கியர். அரிச்சந்திரன். ஐயா, இனிமே உம்ம சகவாசம் நமக்கு வாண்டாம்யா. நீர் எழுதிக் கொடுத்த புஸ்தகம் இன்னும் ஒண்ணே ஒண்ணு இருக்கு. அதை எடுத்துக் குடுத்துடறேன். நல்ல யோக்யனா, நல்லவனா, புஸ்தகம் போடற ஆள் யாராவது இருப்பான். அவன்கிட்ட கொண்டு குடுத்துக்கும்.”

சரவண வாத்தியார் வாய் அடைத்து நின்றார். இந்த லட்சணத்தில் வேறு யாரோ இரண்டு பேர் அங்கு வந்திருந்தார்கள்.

பஞ்சு சொன்னார் “ஓய் சரவணம், இப்ப ரொம்ப சங்கடமான நிலையில் மாட்டிவிட்டீரையா என்னை? இந்த உலகத்திலே வாத்தியார்னு சொன்னா அவா கட்சியைத்தான் யாரும் எடுத்துப்பன். இந்த இரண்டு பேரும் இப்ப உமக்குச் சாதகமாகப் பேசினால்கூட நான் ஆச்சரியப்படறதுக்கில்லே. என்னை இந்த மாதிரி இக்கட்டா கொண்டு நிறுத்திப்பிட்டீரே.””

“சாயங்காலம் நோட்டைப் பார்த்தவங்க தப்பாச் சொல்லுவாங்களா?” என்றார் வந்திருந்த இருவரில் ஒருவர்.

ஒரு தடவை அந்த ஆசாமியை அர்த்தம் இல்லாமல் பார்த்துவிட்டுப் பஞ்சுவின் பக்கம் திரும்பினார் வாத்தியார்.

“பஞ்சு, ஒரு கால் கடுதாசி கொடுங்களேன்” என்றார்.

“இதோ!”

வாத்தியார் விறுவிறுவென்று எழுதினார். “இருபது புத்தகங்கள் எழுதிக் கொடுத்ததற்காகப் பஞ்சு பிரசுரம் உரிமையாளர் சோ.பஞ்சாபகேசனிடம் நான் வாங்கிக் கொண்ட ரூபாய் ஆயிரம். இத்தோடு என் கணக்குத் தீர்ந்துவிட்டது” என்று கையெழுத்திட்டு எழுதி நீட்டினார்.

“என்னது?”

“பாருங்க.”

பஞ்சு பார்த்தார். “எல்லா ரூபாயும் வாங்கிக்கொண்டதாக எழுதிக் கொடுத்துவிட்டீரா? எனக்கு என்னத்துக்கையா பிச்சைக்காசு?” என்று அதைக் கிழித்து எறிந்தான் பஞ்சு. “இந்தக் கிண்டல்லாம் வாண்டாம். திங்கட்கிழமை உமக்கு மூந்நூறு ரூபாய் வரும்,”

“உம்ம ரூபாயே எனக்கு வாண்டாம்.”

“என் ரூபாய் என்ன? உம்ம ரூபாய் அது. கொண்டு வந்து கொடுத்துடறேன். வாண்டாம்னா நீர் கிழிச்சுப் போட்டுக்கும். எனக்கு என்னத்துக்கு? இந்த மாதிரி யார்கிட்டியும் எனக்கு ஏற்பட்டதில்லை ஐயா.”

“அப்ப நான் வரட்டுமா?”

“சரி.”

வாத்தியார் திரும்பினார். அவர் மனதில் புயல் அடித்தது. அரிக்குஞ்சட்டியில் குழந்தை தண்ணீரைத் தட்டுகிற கலக்கமாகத்தான் பஞ்சுவுக்கு அது தோன்றிற்று.

கூட வந்தார் பஞ்சு. “ஓய், சும்மா மனசை அலட்டிக்காதீர். நல்ல யோசிச்சுப் பாத்து வந்து சொல்லும். நான் அப்படி எல்லாம் வார்த்தை புரளமாட்டேன்யா. நாளைக்கு வரீரா?”

“இனிமே இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவனா!”

“அப்படியா? அப்படின்னா உம்ம சௌகரியம். சரி, பணத்தை அனுப்பிச்சுடறேன். அதையும் உம்ம வீட்டுக் குத்துச் செங்கல் ஏறவிடாமல் அடிச்சுப்பிடாதீர்.”

வாத்தியார் பதில் சொல்லவில்லை. பேசாமல் தெருவில் இறங்கி நடந்துவிட்டார். மனிதனுக்குப் பொய் சொல்ல எப்படி மனசு வரும்? திருடலாம், கொல்லலாம், கற்பை இழக்கலாம். அவர்களோடு பழகலாம். பொய் சொல்பவர்களோடு எப்படிப் பழகமுடியும்? பொய்! பொய்யா? பொய் எப்படிச் சொல்ல முடியும்? வாத்தியாருக்குப் புரியவில்லை. பதறிற்று. திட்டம் போட்ட கயமையாக இருக்கிறதே இது!

“இருபத்தோராவது புத்தகத்தை இவனிடமா கொடுக்கிறது? சை! எப்பேர்ப்பட்ட புத்தகம்!” ஆனால் புறப்பட்டு வந்த கோபத்தில் அதை வாங்கிக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்தார். பெண்டாட்டியிடம் ஒருமுறை எல்லாவற்றையும் சொல்லி அழுதார். புகைந்தார். மனசாரத் திட்டினார். அப்புறம் அந்தப் பக்கம் தலை காட்டவில்லை. பணமுடை நாலு தடவை கழுத்தைப் பிடித்தபோதும் தைரியமாக இருந்துவிட்டார்.

நேற்றோடு பதினேராவது திங்கட்கிழமை போய்விட்டது. வலிய வருகிறேன் என்று பயமுறுத்திய பணம் வரவில்லை.

மீண்டும் போகலாமா? பொய்யனை எப்படிப் பார்க்கிறது?”

“குததுச் செங்கல் ஏறமாட்டேன்னு சொல்லிவிட்டேன் தெரியுமா?” என்றார்.

“ஏறாம வாசல்லெ நின்ன வாக்கிலே கேளுங்க.”

“நான் போய்ப் பணம்னு கேக்கமாட்டேன்.”

“புதுப் புஸ்தகத்தைத் திருப்பி வாங்கி வராப்பல போங்களேன். அப்ப அவனாப் பேச்சு எடுககமாட்டானா?”

அதுவும் சரிதான் என்று பணமுடை காதோடு சொல்லிற்று. சமாதானம் இல்லை.

குழந்தை இன்னம் கண்ணைத் திறக்கவில்லை. ஹார்லிக்ஸ்தான் கொடுக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் திராட்சைப் பழத்தை ஜலத்தில் கொதிக்கவைத்துக் கொடுக்கலாமாம்.

பெருங்காயத் தகரத்தைத் திறந்தார். ஒரு ரூபாயும் பத்து நயா பைசாவில் ஆறும் மின்னின. இரண்டு பத்தை விட்டுவிட்டு மீதியை எடுத்துக்கொண்டார். பார்லி, திராட்சை வாங்கி வரலாம். வரும்போது, பஸ்ஸில் ஏறிப் பத்து நயா பைசாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டுபோய், இறங்கிப் பஞ்சுவின் வீட்டை நோக்கி நடந்தார்.

“பஞ்சு இருக்காரா?”

“வாங்க ஸார்” என்றான் ரத்தினமலை. ரத்தினமலை பஞ்சுவின் அந்தரங்க வேலைக்காரன். வாசலில் யார் வந்தாலும், “இருங்க, இருக்காங்களா பாத்திட்டு வரேன்” என்று ஒன்றுமே தெரியாதவன் போல உள்ளே ஓடிப்போய் வந்து, இருக்கிறார் அல்லது இல்லை என்று வந்த ஆளுக்கு ஏற்பத் தகவல் தருகிறவன்.

“இருக்காரா?”

“இருக்காங்க” என்று உள்ளே போகாமலே சொன்னான் அவன்.

“பாக்கலாமா?”

“பார்க்கலாம். அம்மாவுக்கு ரொம்ப உடம்பு ஜாஸ்தியா இருக்கு. ரத்த ரத்தமாச் சாயங்காலமே புடிச்சி வாந்தி எடுக்கறாங்க. அய்யா பக்கத்திலே உட்கார்ந்திருக்காங்க.”

“ரத்த ரத்தமாவா? என்ன உடம்பு?”

“என்னமோ தெரியலீங்க. திடுதிடுப்பினு வந்திடிச்சி.”

“திடுதிடுப்புனா? சாயங்காலாமா?”

“ஆமாங்க. சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் நடமாடிக்கிட்டுத்தான் இருந்தாங்க. அப்புறம் திடீர்னு தலை வலிக்கிதுன்னாங்க. ரத்தமா வாந்தி எடுத்திச்சு. டாக்டர் வந்து ஊசி போட்டுப் போனாரு. கண்ணைத் தொறக்கல. படுத்துக்கிடக்காங்க.”

“போய்ப் பார்ப்பதா வேண்டாமா? வேற்று மனிதரைக் கண்டதும் பஞ்சுவின் மனைவி கூச்சப்பட்டால் என்ன செய்கிறது? உள்ளே போவதா, திரும்பிப் போவதா என்று தெரியாமல் குழம்பிக் குழம்பி நின்றார் அவர்.

ஒரு பையன் தெருவில் ஓடிவந்து வாசல்படி ஏறினான். அவரைக் கண்டு நின்றான்,

“என்ன ஸார்?”

“என்னப்பா கையிலே?”

“ஐஸ் ஸார். அத்தங்காளுக்கு ரொம்ப சீரிஸ்ஸா இருக்கு. உள்ள வறிங்களா?” என்று கேட்டுக்கொண்டே ஓடினான்.

இதற்கிடையில் வேலைக்காரப் பையன் உள்ளே போய் வந்துவிட்டான்.

“நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னேன். ஒண்ணும் சொல்லலை ஸார்” என்றான்.

திரும்பிப் போகலாமா? வந்த சமாசாரம் பஞ்சுவுக்குத் தெரிந்துவிட்டது. உள்ளே போகாமல் திரும்பிவிட்டால் என்ன நினைத்துக் கொள்வார்? அவர் மனைவி கூச்சப்பட்டால்… கூச்சம் என்ன? அப்படி உடம்பாக இருந்தால், கூச்சமா தெரியப்போகிறது? உண்மையில் கவலைக்கிடமாக இருந்தால் கூச்சமும் சங்கோசமுமா வரும்?

செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே போனார். என்ன இது?

அவர் எதிர்பார்த்தவாறு இல்லை. உள்ளே ஏக கூட்டம். பஞ்சுவின் மனைவி படுக்கையில் கிடந்தாள். சுற்றி ஏழெட்டுப் பெண்கள். பஞ்சு, மனைவியின் காலடியில் உட்கார்ந்திருந்தார். பஞ்சுவின் குழந்தை இரண்டு தூங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு குழந்தை விசித்து விசித்து அழுதுகொண்டிருந்தது. அதை ஒரு பாட்டி சமாதானம் செய்துகொண்டிருந்தாள். இரண்டாவது குழந்தை விவரம் தெரிந்த பெண். அது திகில் படர்ந்த முகத்துடன் சுவேரோரமாக அப்பாவைப் பார்த்த வண்ணம் சிலையாக உட்கார்ந்திருந்தது. தலைப்பக்கம் உட்கார்ந்திருந்த அம்மாளின் கண் அழுது கலங்கிக்கிடந்தது.

“என்ன உடம்பு ஸார்?”

“சாயங்காலம் வரையில் ஒண்ணும் இல்லே. திடீர்னு அஞ்சு மணிக்கு ரத்தமா வாந்தி எடுத்தாள். தலை வலிக்கிறதுன்னாள்ளாம். கடைக்குப் பையன் ஓடிவந்து சொன்னான். வந்தேன். இப்படி பிரக்ஞையில்லாமல் கிடக்கா. டாக்டர் வந்து ஊசி போட்டார். பயப்பட வாண்டாம்னார். என்னன்னு கேட்டேன். ஏதே பலஹீனந்தான்னட்டுப் போனார்” என்று பஞ்சு மனைவியின் முகத்தைப் பார்த்தார்.

வாத்தியாரும் பார்த்தார். கண் சொருகியிருந்தது. திடீரென்று பல்லை நறநறவென்று கடித்தாள் நோயாளி. கை விறைத்தது. உடம்பைப் போட்டு முறித்துக்கொண்டாள். பயங்கரமாக இருந்தது. எல்லோரும் அமுக்கி அவளைப் பிடித்துக்கொண்டார்கள். அமுக்க முடியாமல் அமுக்கினார்கள்.

“என்னடீம்மா இது? இப்படி முறிக்கிறதே! ஒண்ணும் புரியலியே. இந்தக் குடும்பத்தை இவ இல்லாட்டா யாருடீ காப்பாத்த முடியும்?” என்று தலைமாட்டு ஸ்திரீ புலம்பினாள். குபுகுபுவென்று அழுகை வந்தது அவளுக்கு.

“மறுபடியும் டாக்டரைக் கூப்பிட்டுப் பார்க்கணும், ஸார்” என்றார் வாத்தியார்.

“வீட்டு டாக்டர் சரியாப் போயிடும்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஆனா மறுபடியும் அழச்சிண்டு வரச்சொல்லிப் பையனை அனுப்பிச்சிருக்கேன். போயிருக்கான்.”

குழந்தை அழுதது. நினைத்து நினைத்து தலைமாட்டு அம்மாள் அழுதாள். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை உடம்பை முறித்து வளைத்து விறைக்கிற போதெல்லாம் மற்றப் பெண்கள் அணைத்துப் பிடித்துக் கொண்டார்கள்.

“டாக்டர் பன்னிரண்டு மணிக்குத்தான் வருவாராம்” என்றான் பெரிய பையன் வந்து.

“எங்கே போயிருக்காராம்?”

“தெரியலே. எனக்கு சந்தேகமாயிருக்கு.”

“என்ன?”

“அவர் பிள்ளை படுத்துண்டால் ஏந்திருக்க மாட்டார்னு சொன்னான். ஆளே இல்லவே இல்லைங்கறான். எது நெஜம்னு தெரியலே.”

“ராஜு டாக்டர் சேதி தெரிஞ்சதுதானே? படுத்துனுட்டால் என்ன கூப்பிட்டாலும் வரமாட்டாங்களே!” என்றது கும்பலில் ஒரு குரல்.

வாத்தியார் வெளியே ஓடினார். இரண்டு மூன்று டாக்டர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டினார். “இல்லவே இல்லை. வரமுடியாது” என்ற இரண்டு பதில்களை மூடிய கதவே கொடுத்துவிட்டது. மூன்றாவது டாக்டரிடம் ஒடினார். மாடிப்பால்கனியிலிருந்தே டாக்டர் வியாதியைப் பற்றி விசாரித்தார். வாத்தியார் சொன்னதைக் கேட்டதும், “டாக்டர்தான் ஊசி போட்டிருக்கார்னேளே. காலமே வந்து எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ” என்று உள்ளே போனார். தாழ்ப்பாள் ஓசை கேட்டது. சட்டென்று பராங்குசத்தின் ஞாபகம் வந்தது வாத்தியாருக்கு. கூடப் படித்தவனாயிற்றே. ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார். ஒரு மைல் இருக்கிறது பராங்குசம் வீடு.

“ஸார், பராங்குசம் ஸார்!”

“யாரு?”

“நான்தான் ஸார்.”

நான்தானென்றால் அடையாளம் தெரியுமோ? அவனைப் பார்த்தே ஒரு வருஷமாயிற்று.

“நான்தான் சரவணன் ஸார். வாத்தியார்.”

“ஓகோ, இதோ வந்துட்டேன்.”

அவரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கையோடு அழைத்துக் கொண்டே வந்துவிட்டார் சரவணம். சைக்கிள் ரிக்ஷா லொலொடவென்று சத்தம் செய்தது.

உள்ளே போய்ச் சேர்ந்தார் பராங்குசம். உடம்பு முறியாக முறித்தது. டாக்டர் எழுந்து “இப்படி வாங்க கொஞ்சம்” என்று பஞ்சுவையும் சரவணத்தையும் தனியாக வாசலுக்கு அழைத்துப் போனார்.

“ஸார், இது கிருமித் தொத்து, உடனே ஆஸ்பத்திரிக்குப் போனா ஆனதைச் செஞ்சிப்பிடுவாங்க. இப்படியே இன்னும் நாலு மணிநேரம் விட்டு வச்சா, ‘க்ரிடிக்கலா’ப் போயிடும். அப்புறம் ரொம்ப சிரமம். இப்பவே வாங்க. இப்ப ஆஸ்பத்திரியில் சேத்துட்டா நாளை மத்தியானம் திரும்ப வந்துடலாம். இங்கியே வச்சிருக்கிறது நல்லதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் இதுக்கு வசதி உண்டு. நானும்கூட வந்து அட்மிட் பண்ணிடறேன். என்ன சொல்றீங்க? அப்புறம் வருத்தப்படப்படாது.”

பஞ்சு உள்ளே வந்தார். பெண்மணிகளைக் கலந்து பேசினார். ஆஸ்பத்திரி என்றதும் தலைமாட்டு அம்மாள் புதிதாக ஒரு பாட்டம் ஆரம்பித்துவிட்டாள். “செவ்வாய்க்கிழமையும் அதுவுமா… இங்கேயே பார்க்க முடியாதா?”

பஞ்சுவும் கலங்கினதைப் பார்த்து, அவருக்கும் எல்லோருக்கும் தைரியம் சொல்லிவிட்டு, ஓடிப்போய் ஒரு டாக்ஸியைப் பிடித்து வந்தார் சரவணம். டாக்ஸி வந்த பிறகு மீண்டும் தகராறு. பிரக்ஞை வந்த மனைவி அடம்பிடித்தாள். சரவணன் அவளுக்கு வேறு நல்ல வார்த்தை சொல்லி சரி சொல்லச் செய்ய அரை மணியாயிற்று.

மெதுவாகக் காரில் ஏற்றினார்கள். சரவணமும் டாக்டரும் முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள்.

ஆஸ்பத்திரியில் பரபரவென்று ஒரு படுக்கையை ஒழித்துத் தயார் செய்தார்கள். டாக்டர் வந்தார். “நல்ல வேளை! இப்பம் கொண்டு வந்தீங்களே. இன்னும் ஒரு மணி ஆயிருந்ததோ சொல்றதுக்கில்லை. இனிமே பயம் இல்லை. கவலைப்படாதீங்க ஸார், காலமே பத்து மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம்” என்று தைரியம் சொன்னார். கவனித்தார்.

வாத்தியாருக்கு உயிர் வந்தது. மருந்து கொடுத்தார்கள். ஊசி போட்டார்கள்.

“அவர் மாத்திரம் இருக்கட்டும். நீங்கள்ளாம் போகலாம். இனிமே கவலையில்லை” என்றார் டாக்டர்.

“அப்ப நீங்க போங்க. நான் இருக்கேன். ரொம்ப தாங்க்ஸ் உங்களுக்கு” என்று நன்றி சொன்னார் பஞ்சு.

பாரங்குசத்தை வீட்டில் இறக்கிவிட்டது டாக்ஸி. வாத்தியாரும் இறங்கினார். பஞ்சு டாக்ஸிக்காகக் கொடுத்த மூன்று ரூபாய் போதவில்லை. காத்திருந்த கூலி ஒரு ரூபாய்க்கு மேல் ஏறியிருந்தது. மூன்று ரூபாய் ஆறணாவுக்குக் கையை விட்டு ஆறணாவை தந்தார் சரவணம். ஒரு ரூபாயைக் கொடுத்து மீதி பத்தணாவை வாங்கிக்கொண்டார்.

டாக்ஸி போனதும் திடீரென்று குழந்தையின் ஞாபகம் வந்தது சரவணத்துக்கு. அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு “ஒண்ணும் இல்லை. இந்த மாத்திரையைக் கொடுங்க சரியாயிடும்” என்று பராங்குசம் ஒரு மருந்தைக் கொடுத்தார்.

“என்ன கொடுக்கணும்?”

“ஒண்ணே கால் ரூபாய்.”

“ம் அப்புறம்…”

“கொடுங்களேன் நான் அந்தப் பக்கம் வந்தா வந்து பாக்கறேன்.”

“ரொம்ப நன்றி, பராங்குசம்.”

“இங்கேயே படுத்திருங்களேன். மணி ஒண்ணாச்சே. காலமே போயிக்கிறது.”

“குழந்தைக்கு மருந்து கொடுக்கணுமே!”

“அப்ப சரி, டாக்ஸியை விட்டுவிட்டீங்களே. சரி, ரிக்‌ஷாவாவது வைச்சிக்கிட்டுப் போங்க.”

“சரி, அப்ப வரட்டுமா?”

“ரைட், குட்நைட். ஒண்ணும் கவலைப்படாதீங்க, காலமே அந்தப் பக்கம் வந்தா வர்றேன்.”

“சரி.”

ரிக்‌ஷா எதற்கு? ஒன்றரை மைல்தான். நடந்தே போய்விடலாம். பையை எடுத்துச் சில்லறையை எண்ணினார். நயா பைசா எல்லாம் போய், ரூபாய், உடைந்து பத்தணா பாக்கி. தாகம் தாங்கவில்லை. சாயங்காலம் ஏழு மணிக்குச் சாப்பிட்டது. வெற்றிலைபாக்குக் கடையில் நாலு மலைப்பழமும் கலரும் சாப்பிட்டார். வெற்றிலை போட்டுக் கொண்டார். நடந்தார்.

ஹிஹிஹிஹி என்று யாரோ இருளில் சிரித்தார்கள்.

பாதி பயத்திலும் பிரமையிலும் உற்றுப் பார்த்தார் அவர். யாரும் இல்லை. ஜட்கா ஸ்டாண்ட்குதிரை! புல் தின்கிற சவடாலில் அது கனைத்தது. சரவணத்திற்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. வீடு போகிற வரையில் சிரித்துக் கொண்டே போனார். நிலவு எழுந்ததைக் கண்டு பொழுது புலர்ந்த திகைப்பில் நாலைந்து நார்த்தங்குருவிகள் வாழைத் தோப்பில் சிரித்துக்கொண்டிருந்தன.

கலைமகள்
அக்டோபர்,1957.

Mar 25, 2012

உலகம் ஆரம்பிக்கும்-தேவதச்சன்

.
 
காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன devathatchan34
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

 

உலகம் ஆரம்பிக்கும்

உலகம் ஆரம்பிக்கும் ஓசைகள் கேட்கின்றன
சிலபல
குரல்கள் மோதி
பாறை சிலையாகி
சிலபல
குரல்கள் மோதி
சிலை
பாறையாகி
தெருவில்
ரெண்டு பிள்ளைகளை
சிறகுகள் என கோர்த்தபடி
செல்லும் பெண்
பள்ளிக்கூடத்தில்
தெருவில்
நடுவீட்டில்
யாரைப் பார்த்தாலும், நல்ல செய்தி
எதுவும்
காதில் விழவில்லை

*****

நன்றி: அரியவை

Mar 20, 2012

முதலில் இரவு வரும்-ஆதவன்

பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது. அதே பூங்கா… மனம் ஒரு துள்ளுத் துள்ளியது…

அவன் இன்னும் இளைஞனாக இதே பூங்காவில் தான் அன்றொரு நாள் அமர்ந்து கோதையிடம் aathavan தன் குடும்ப பிரச்சினைகளைச் சொல்லி அழுதான். “எங்கள் அப்பா-அவர் தான் பெரிய பிரச்சினை. வீட்டில் அமைதியைக் குலைக்கும் ராட்சஸன்” என்றான்.

கோதை சிரித்தாள். கன்னத்தில் குழி விழ, நேர்த்தியான பல் வரிசை பளிச்சிட, சிரித்தாள். இந்த நேர்த்தி அவளுடைய டிரேட் மார்க். நேர்த்தி கச்சிதம். அவனுடைய அம்மாவைப் போல அவள் ‘வழ வழா கொழ கொழா’வாக இல்லாமலிருந்ததே அவனை அவள்பால் ஈர்த்திருக்கலாம்.

“ஏன் சிரிக்கிறாய்?” என்றான்.

“ரவி, ராமு, பாஸ்கர், யாரைக் கேட்டாலும் இதைத்தான் சொல்கிறார்கள். அவரவர் வீட்டில் அவரவர் அப்பாக்கள்தான் பிரச்சினைகளென்று.”

கொழுப்பு! இவள் இவ்வளவு பையன்களுடன் சிநேகிதமாக இருப்பதாக அவன் மிரள வேண்டுமாம். சீண்டல் தளுக்கு. ஆனால் இந்தச் சீண்டல்தான் அவனுக்கு இப்போதெல்லாம் வேண்டியிருந்தது.

“அவர்களுடைய அப்பாக்கள் குடியர்களா?” என்று கேட்டான்.

“இந்தக் காலத்தில் குடிக்காதவர்கள் யார்?”

“அவர்களுடைய அப்பாக்கள் அவர்களுடைய அம்மாக்களை அடிப்பார்களாமா?”

“லுக், அவர்களும் என் நண்பர்கள். அவர்கள் என்னுடன் சகஜமாக உணர்ந்த வேளைகளில் என்னிடம் கொட்டியதை யெல்லாம் எல்லாரிடமும் நான் திருப்பிச் சொல்லுவது நாகரிகம் இல்லை”.

“சகஜமாக உணர்ந்த வேளைகளில் என்றால் புரியவில்லையே?”

“சந்தேகப் பிராணி!” என்று அவள் அவன் கை மீது பட்டென்று ஒரு அடி கொடுத்தாள்.
“எல்லாருடனுமே சில சமயங்களிலாவது நாம் சகஜமாக உணருகிறோமல்லவா-நம் அப்பாக்களுடன் கூட?”

அப்பா! குப்பென்று அவனுக்குள் கோபம் பொங்கியது.

“என் அப்பாவுடன் நான் எப்போதுமே சகஜமாக உணர்ந்ததில்லை” என்றான். “அதை அவர் ஊக்குவிப்பதுமில்லை… தன்னை யாராவது நேசிப்பதோ அல்லது தன்னிடம் நேசத்தை எதிர்பார்ப்பதோ அதிகப்பிரசிங்கத்தனம் என்று அவர் நினைப்பது போல் தோன்றுகிறது, அதாவது நேசம் வீழ்ச்சி போல… எனக்கு எப்படி விளக்குவதென்று தெரிய வில்லை”.

“அவ்வகை மனிதர்கள் சிலருடன் எனக்கும் பரிச்சயமுண்டு” என்று அவள் அனுதாபத்துடன் தலையை ஆட்டினாள்.

“அப்படியா? எனக்கென்னவோ என் அப்பா மாதிரி ஒரு மிருகம் வேறு எங்குமே இருக்க முடியாதென்றுதான் தோன்றும்…மிருகம்! மிருகம்! ஓ, எப்படி என் அம்மாவை அடித்து நொறுக்குவார் தெரியுமா? ஆனால்… ஃபன்னி… அம்மா அவருடைய வசவுகளையும், முரட்டுப் பாணியையும் உள்ளூர ரசிக்கத்தான் செய்கிறாளோ என்றும் எனக்குச் சில சமயங்களில் தோன்றும்…”.

“அப்படி ரசிக்கிற சில பெண்கள் உண்டுதான்”

“உனக்கு இந்தப் பதினெட்டு வயதில் நிறையவே தெரிந்திருக்கிறது”.

“ஒன்று மட்டும் தெரியாது”.

“என்ன?”

“உன்னைப் பற்றி” என்று அவள் மறுபடி தன் கன்னங்களில் அவனுக்காகக் குழி பறித்தாள்.

“ஸாரி-உங்களைப் பற்றி என்று சொல்ல வேண்டும், இல்லை?”

“சீச்சீ!வேண்டவே வேண்டாம்…நீங்கள், உங்கள், இதெல்லாம் மறுபடியும் என் அப்பாவின் கனிவில்லாத தன்மையையும், என் அம்மாவின் சலிப்பூட்டும் பொறுமையை யும் நினைவூட்டுகிறது…நீ நான் என்றே நமக்குள் பேசிக் கொள்ளலாம். அதுதான் நம்மிடையே நெருக்கத்தைப் பலப் படுத்தும்”.

“நீ நீ நீ நீ நீ” என்று அவள் அவனுடைய ஒவ்வொரு விரலாகப் பிடித்து நசுக்கினாள். அவன் விளையாட்டாக அலறினான்…

ஆம். நேற்றைக்கு நடந்தது போல அந்த மாலை நேரம். அந்தப் பூங்கா, அவள் முகத்தில் குமிழியிட்ட உல்லாச வெறி எல்லாம் பசுமையாக நினைவு வருகின்றன. கூடவே ஒரு வெறுமையுணர்வு. “ஆடும்கூத்தை நாடச் செய்தாயென்னை” என்று முணுமுணுக்கிறான்.

“கையைக் கொஞ்சித் தொடுவாய்
ஆனந்தக் கூத்திடுவாய்
அன்னை அன்னை
ஆடுங்கூத்தை நாடச் செய்தாயென்னை…”
கூத்து, இயக்கம்.
வாழ்வென்னும் இயக்கம்.
அவனைச் சீராக இயங்கச் செய்யும் – முழுமையை நோக்கி அழைத்துச் செல்லும் -ஒரு அழகிய உந்து சக்தியாக அவளை அன்று கண்டான். அவன் யாசித்த புத்தம் புதிய ஒரு ஆண் பிம்பத்துக்கு உரைகல்லாக. ஆனால் அவள் மூலம் அவன் பெற்றது புதுமையின் விளக்கமல்ல, பழமையின் விளக்கம் தான்.

அதாவது அன்பின் விளக்கமல்ல, வெறுப்பின் விளக்கம். அன்புதான் வெறுப்பைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

வேடிக்கைதான்.

“காப்பி இந்தா” என்று அம்மா காப்பி டம்ளரை நீட்ட, அவன் கை நீட்டி வாங்கிக்கொண்டான். திடீரென்று நூறு அல்லது நூற்றைம்பது வருடங்கள் பின்னோக்கிச் சென்று விட்டது போலிருந்தது. அவனுடைய தாத்தா அல்லது கொள்ளுத் தாத்தா கூடத்தில் ஈஸிச் சேரில் அமர்ந்திருக்க, அவர்களுக்காக காப்பி எடுத்து வரும் பாட்டி அல்லது கொள்ளுப்பாட்டி; பித்தளை டம்ளரில்தான் எடுத்து வந்திருப்பார்கள். அப்போது எவர்சில்வர் கிடையாது. பித்தளைப் பாத்திரங்களுக்கு-தம்ளர்-கூஜா-குடம்-ஒரு பிரத்தியேக வாசனை உண்டு; கண்ணாடி டம்ளருக்கு வாசனை கிடையாது. அதிக விஸ்கியை ஊற்றுகிற வரையில் அப்பாவும் ஒரு கண்ணாடி டம்ளர் போலத்தான். “அப்பா வாசனை, அப்பா வாசனை என்று சின்ன வயதில் கூறிக்கொண்டிருப்பான். அதாவது அப்பா அவனை முத்தமிடும்போது அடிக்கும் வாசனை. ரொம்ப நாள் கழித்துத்தான் அது விஸ்கி வாசனை என்று புரிந்தது.

அந்த வாசனையை அம்மாவால் சுமுகமாக ஏற்றுக் கொள்ள முடியாததே அவர்களிடையே விரிசல் ஏற்படக் காரணமாயிருந்திருக்கலாம். அல்லது அம்மாவின் வாசனை அப்பாவுக்குச் சலிப்புத் தட்டத் தொடங்கியதுதான் பிரச்சினையா?

மல்லிகை பூ வாசனை.

அந்த வாசனையை அணியும் உரிமையை அம்மா இழந்து ஐந்து வருடங்களாகின்றன. அந்த வாசனைக்கு இன்னமும் உரிமை பெற்றவளான கோதைக்கோ அதில் சிரத்தையில்லை.
அவளுக்கு அந்த வாசனை ஒத்து கொள்ளாது என்பதும் ஒரு காரணம்: அலெர்ஜி.

கோதை என்ற பெயருள்ளவளுக்கு பூ மணம் அலர்ஜியாக இருப்பது நல்ல வேடிக்கைதான்.

“அப்பாஜி!” என்று உ ஷா ஓடி வந்து அவன் காலைக் கட்டிக் கொண்டாள்.

“அப்பா! இன்னிக்கு எனக்கு இங்கிலீஷ் டிக்டே ஷன் எல்லாமே ரைட்டுப்பா!”

“அப்படியா? எங்கே காட்டு?”

உ ஷா தனது அன்றைய ஸ்கூல் சாதனைகளை ஒவ்வொன்றாக அரங்கேற்ற, ராஜாராமன் வெரிகுட், வெரிகுட் என்று ஒவ்வொன்றையும் பாராட்டினான். அவளை அணைத்துக் கொஞ்சினாள். அப்பா நல்ல மூடில் இருக்கிறார். இப்போது எது கேட்டாலும் கிடைத்துவிடுமென்று அவளுக்குப் புரிந்தது.

“அப்பா, எனக்கு ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து ரொம்ப நாளாச்சுப்பா” என்றாள்.

“நிஜமாவா?” “இத்தனை நாளாச்சு” என்று உ ஷா இரு கரங்களையும் பெரிதாக விரித்துக் காட்டினாள்.

“அடேயப்பா! அவ்வளவு நாளாச்சா? சரி, வா”.

“பாட்டி, நீயும் ஐஸ் கிரீம் தின்ன வரயா பாட்டி?” “எனக்கு வேண்டாண்டி கண்ணு. நீ போய் சாப்பிடு”.

“ஐஸ் கிரீம் ரொம்ப ஜோராயிருக்கும் பாட்டி”.

அம்மா சிரிக்க முயன்றாள். ஆனால் புதிதாக குதிரையேற முயன்றது போலிருந்தது. படுதோல்வி. “நீ போய்ச் சாபிட்டுக்கோ. நீ சாப்பிட்டா நான் சாப்பிட்ட மாதிரி” என்றாள்.

ராஜாராமன் சோர்வுடன் தன அம்மாவைப் பார்த்தான். குழந்தை ஆசையாகக் கூப்பிடுகிறது. பாவம் இவள் வந்தாலென்ன? ஐஸ் கிரீம் சாப்பிட்டாலென்ன?

ஆனால் மாட்டாள். வாழ்கை முழுவதும் வேண்டாம் வேண்டாமென்று சொல்லியே பழகி விட்டது. விலகி விலகி, தனக்குள் சுருங்கிச் சுருங்கியே பழகி விட்டது. பூஜை, மடி, விரதம். அப்பா அம்மாவை மூர்க்கமாக அடித்த அந்த இரவுகள்… அன்பையும் கொடூரத்தையும் பிரிக்கும் கோடு எத்தனை மெலிதானது! அவருடைய அன்புக்கு அதே அலைவரிசையில் அவளிடம் எதிரொலி கிடைக்காமல் போனதே அவர்களிடையே பிரச்சினையாக இருந்திருக்கலாம். அப்பா ‘வேண்டும். வேண்டும்’ என்ற போது அம்மா ‘வேண்டாம், வேண்டாம் என்றிருப்பாள்.

“ஆடும் கூத்தை நாடச் செய்தாயென்னை…”

ஐஸ்கிரீம் பார்லரில் டிஸ்கோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. உ ஷா தன்னிச்சையாக, அவளையுமறியாமல், அந்த இசைக்கேற்ப குதிக்கத் தொடங்கினாள். குழந்தைகளின் பரிசுத்தம், அந்தந்த நேரத்து ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிற எளிய லாவகம்.

பெரியவர்களான பிறகு நம்முடைய ஆசைகளைப் புரிந்து கொள்வதே கடினமாகி விடுகிறது.

சுற்றிலும் சோபாக்கள் போடப்பட்டிருந்தன. ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு உஷாவுடன் சோபாவில் அமர்ந்தான். பக்கத்து சோபாவில் இரு இளம் ஜோடி ஒரே டம்ளரில் இருந்து இருவரும் மில்க் ஷேக் உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். பாவம், அப்பா! அம்மாவுடன் இப்படி ஒரே தம்ளரிலிருந்து உறிஞ்ச வேண்டுமென்று அவர் ரொம்ப ஆசைப்பட்டிருக்கலாம். இத்தகைய சின்ன சின்ன ஆசைகள் மறுக்கப்பட்டதே அவருடைய உள்ளத்தைக் கடைந்து கடைந்து வெறுப்பு வெண்ணெயைத் திரளச் செய்திருக்கலாம்.

சீப்பிக் குடிக்காத அம்மா.

கடித்துத் தின்னாத அம்மா.

தனக்குத் தானே எப்போதும் பூட்டுப் பூட்டிக் கொள்கிறவள். நெருக்கத்துக்கு அஞ்சுகிறவள்.

அன்பு செலுத்தப் பயம்.

அன்பின் குழந்தைதான் வெறுப்பு.

விஸ்கியும் ரம்மும் அப்பாவுடைய அவமதிக்கப்பட்ட அன்பின் தற்காப்பு நடவடிக்கைகள். “சரிதான் போ சனியனே. உன் தூய்மை எனக்கு வேண்டியதில்லை. நான் என்னை மேலும் மேலும் அழுக்காக்கிக் கொள்கிறேன் என்னிடம் வரவே வராதே” என்று சண்டி செய்வது போல.

அப்பா அழுக்கான, கசங்கின சட்டைகளுடன் ஆபீஸ் போன நாட்கள் உண்டு. மடிப்புக் கலையாத சட்டை, பாண்டுடன் படுத்துத் தூங்கின நாட்கள் உண்டு.

எதிர்ப்பு, எதிர்ப்பு, எதிர்ப்பு.

அம்மாவின் தூய்மைப் பித்துக்கு எதிர்ப்பு.

ஐஸ்கிரீம் பார்லரிலிருந்து வெளிப்பட்டபோது வெளியே இருட்டி விட்டது. “அப்பா, நாளைக்கு ஆயிடுத்தா?” என்று உஷா கேட்டாள். ஐந்து வயது. ஒன்றாம் வகுப்பு. நேற்று, இன்று, நாளை எல்லாம் அவளுக்கு இன்னமும் குழப்பம்தான்.

“இப்ப நாளைக்கு இல்லை… இப்ப ராத்திரி… ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடி சூரியன் வரும். வெளிச்சமா ஆயிடும் – அது தான் நாளைக்கு”

“அப்போ அம்மா வந்துடுவா”

“ஆமாம்”

“அப்பா, அம்மா இப்படி சும்மாச் சும்மா என்னை விட்டுட்டு ஊருக்குப் போனா, எனக்கு பிடிக்கவேயில்லைப்பா”.

ஆஃபீஸ் வேலை, என்று அவன் குழந்தைக்குப் புரிய வைக்க முயன்றான். கோதையின் ஆஃபீஸ் முதியோர் கல்வி இலாகா. கருத்தரங்குகள், கிராமங்களில் தகவல் சேகரிப்பு, என்று அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வருகிறது.

வீட்டுக்குத் திரும்பினால் குழந்தைக்கு அம்மாவின் நினைவு மேலும் அதிகமாகுமென்று தோன்றியதால், குழந்தையின் கையைப் பிடித்தவாறு சற்று நேரம் கடைத் தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். குழந்தையின் முகத்தில் – ஆர்வம் மின்னும் கண்களில் தன் சிறு வயது தோற்றம் தெரிவது போலிருந்தது. சின்னப் பையனாக அவன் அம்மாவுடன் கடைத் தெருவுக்குச் சென்ற அந்த மாலை நேரங்கள்-

அப்பா எப்போதும் லேட்டாகத்தான் வருவார். அம்மாதான் கடைகண்ணிக்குச் சென்று வரவேண்டும். இவன் தான் அவளுக்குத் துணை. அவனுக்குப் பெருமையாக இருக்கும். “அம்மாவின் முகத்தில் ஒரு நாள் சிரிப்பை வரவழைப்பேன்” என்று அவன் அப்போது நினைத்துக் கொள்வான். ஒரு குழந்தையின் அசட்டு நம்பிக்கை ஆர்வம்.

ஆனால் அம்மா இன்னமும் சிரிக்கத் தொடங்கவில்லை. முதியோர்களுக்குக் கல்வி கற்பிக்க முடிகிறது. ஆனால் யார், எப்படி, அவர்களுக்குச் சிரிக்கக் கற்றுக் கொடுப்பது? துன்பங்களின் சுமைக்கடியில் நசுங்கிப் போனவர்களின் நசுங்கல்களை நேராக்குவது எப்படி?

திடீரென்று கோதையின் கடுகடுத்துக் கொள்ளும் முகம் அவன் நினைவில் எழுந்தது. அவனுடைய அம்மாவின் அசட்டு ஆதாரங்கள், நம்பிக்கைகள், ஆகியவற்றின் உரசலினால் கோதையின் முகத்தில் ஏறும் வெறுப்பின் கோடுகள்… மாலையில் பஸ்ஸில் திரும்புகையில் அவன் பார்த்த கோதையின் சிரித்த முகம் இப்போது மறந்து போயிற்று.

கோதையின் முகமும் அம்மாவின் முகம் போல ‘வேண்டாம். வேண்டாம்’ என்று சொல்லுகிற முகமாகிவிடாதே?

இந்த ‘வேண்டாம்’ இந்த வீட்டின் சுவர்களுக்கிடையில் இறுக்கத்தின் தாயாக, இன்பத்தின் எதிரியாக, என்றென்றும் உலவியவாறிருக்கிறது-

இரவுச் சாப்பாடு, உஷா, ராஜாராமன், அவன் அம்மா.

இன்று கடைசித் தடவையாக மூன்று குழந்தைகள் உட்கார்ந்து சாப்பிடுவதாய் ராஜாராமன் நினைத்துக் கொண்டான். உஷா நிஜக் குழந்தை; அவன் தன் அம்மாவின் குழந்தை; அவனுடைய அம்மா தாவணி அணிவதற்கு முன்பே தாலியில் சிறையான குழந்தை. அந்தக் குழந்தையைப் பெரியவளாக்க அப்பா முயல்வதும், அந்த முயற்சியை அம்மா எதிர்ப்பதுமாகவே அவர்களுடைய வாழ்நாள் கழிந்துவிட்டது.

இப்போது தாலி இல்லை. சிறை இல்லை. விடுதலை! கிழவியின் முகம். ஆனால் மனத்தளவில் வெறும் குழந்தை.

ராஜாராமனுக்கு அவளைப் பார்க்கப் பார்க்க மனதில் இரக்கம் சுரந்தது. பூங்கா, ஐஸ்கிரீம் பார்லர், இந்தக் கிழவி.

நாளைக்கும் தன் மனதில் இந்த இரக்கம் நிலைத்திருக்குமென்று சொல்வதற்கில்லை. நாளைக்குக் கோதை வந்துவிடுவாள்.

உஷா தூங்குவது வரையில் ராஜாராமன் காத்திருந்தான். பிறகு அம்மாவிடம் சென்றான். “அம்மா!” என்று கூப்பிட்டான்.

சமையலறைக்குள்ளிருந்த அம்மா அவனைத் திரும்பிப் பார்த்தாள். கண்களில் அதே சோகம். அந்தச் சோகம் பரிசுத்தமானதாகத் தோன்றியது. உலகம் தொடங்கிய நாள் முதல் நிலவி வந்துள்ளதும் என்றென்றும் நிலைத்திருக்கப் போவதுமான ஒரு சோகமாகத் தோன்றியது.

“அம்மா!” என்று தேம்பியவாறு ராஜாராமன் அம்மாவை அணைத்துக் கொண்டான். அவனுடைய அம்மா எந்த வித எதிர்ப்புமின்றி அவனுடைய அணைப்பினுள் புதைந்து கிடந்தாள். அப்பா, நீயும் அழுதிருக்க வேண்டும். இளகியிருக்க வேண்டும். குழந்தையாக மாறியிருக்க வேண்டும்.

ஒரு நாளாவது.

“இப்போது ராத்திரி” என்று குழந்தைக்குச் சொல்லுவது போல ராஜாராமன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். “ராத்திரி முடிஞ்சப்புறம் மறுபடி சூரியன் வரும் வெளிச்சமா ஆயிடும் அதுதான் நாளைக்கு…”

******

Mar 17, 2012

ஒரு புளியமரத்தின் கதை-முன்னுரை- சுந்தர ராமசாமி

முதல் பதிப்பின் முன்னுரை

இது என்னுடைய முதல் நாவல்.

நண்பர் ஸ்ரீ விஜயபாஸ்கரன் சரஸ்வதிக்கு ஒரு தொடர்கதை வேண்டு மென்று கேட்டார். 1959இல் நாவலாக எழுதிவிடலாம் என்று நான் நம்பிய கரு ஒன்று அப்போது என் மனசில் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஒப்புக்கொண்டேன். நாலைந்து அத்தியாயங்கள் வெளிவந்ததும் சரஸ்வதி தளர்ந்துவிட்டது. கையோடு அப்போதே இந்த நாவலை எழுதி முடித்திருக்கலாம்.sura20 எழுதியிருந்தால் அன்றே புத்தக உருவம் பெற்றிருக்கவும் கூடும். இதற்குள் - ஏழு வருடங்களில் - முதல் பதிப்பு ஆயிரம் பிரதிகள் விற்று முடிந்திருந்தால்கூட ஆச்சரியப்படுவதிற் கில்லை. எத்தனையோ  வாசகர்கள் என் எழுத்தை விரும்பிப் படித்துத் தான் வருகிறார்கள். ஏனோ அப்போது எழுதி முடிக்கவில்லை. அதனால் விசேஷ நஷ்டம் ஒன்றுமில்லையென்று இப்போது சமாதானப் பட்டுக் கொள்கிறேன். 1959இல் எனக்கு வயது 28. இப்போது 35. ராஜம் அய்யர், கமலாம்பாள் சரித்திரத்தைச் சிறுவயதில்தான் எழுதினார். அந்நாவலின் குறைகள் இன்று விமர்சகர்களால் எடுத்துக் காட்டப்பட்டு வருகின்றன. வயோதிகத்தில் எழுதப்பட்ட தரமற்ற படைப்புகளுக்கு நம் மொழியில் மட்டுமல்ல, உலக மொழிகளிலும் உதாரணங்கள் சொல்லலாம்..

தமிழ் இலக்கியத்தின் நாவல் மரபைத் திசைதிருப்பிவிட வேண்டு மென்றோ, உரு, உத்தி இத்யாதிகளில் மேல்நாட்டுக் களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் கொள்ளையடித்துத்தான் தீருவது என்று ஆசைப்பட்டோ, திட்டம் வகுத்தோ எழுதிய நாவல் அல்ல இது. தமிழ் அன்னைக்கு இதோ ஒரு புதிய ஆபரணம் என்று எண்ணியும் இதை எழுதவில்லை. எந்தக் கலைஞனும் தன் மொழியில் இல்லாததைத் தேடி அளிக்கவோ, இடைவெளிகளை நிரப்பவோ, இலக்கிய வளர்ச்சிக்குத் தோள் கொடுக்கவோ, மொழிக்குச் செழுமை யூட்டவோ எழுதுவதில்லை. நவநவமாய் ஆபரணங்களைச் செய்து அன்னையின் கழுத்தில் சூட்டுவது அல்ல, தன் கழுத்திலேயே மாட்டிக்கொண்டு அழகு பார்க்கவே அவனுக்கு ஆசை. கலைஞனின் சமூகப் பொறுப்புகளும் பொதுநல உணர்ச்சிகளும் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டுவிட்ட காலம் இது. அவன் எந்த அளவுக்குச் சுயநலக்காரன், திமிர்பிடித்தவன், அரசாங்க அமைப்பின் எதிரி, அனைவரையும் திரணமென மதிக்கும் அகங்காரி, சகோதரத் தொழிலாளிகள்மீது தீராத பொறாமை உணர்ச்சியை அடைகாத்து வருபவன், சிலவேளைகளில் எப்படி மனிதனிலும் கடைமனிதன் அவன் - இவை எல்லாம் மறந்துவிட்ட பாவனை காட்டும் காலம் இது. வெகுளிகளில் அவன் அக்கிரகண்ணியன். அவனால் சொந்தம் பாராட்ட முடியாத அர்ச்சனைகள் சொரியப்படுகிறபோது அதையும் அவன் கேட்டுக்கொண்டுதான் இருப்பான். ஆமோதிக்க, உண்மை உணர்ச்சி அவனை உறுத்தும். மறுக்க, அவனுடைய புகழாசை விடாது. விமர்சகர்களுக்கு வேட்டைதான். காண ஆசைப் படுவதையெல்லாம் கண்டுவிட்டதாகவே சொல்லிவிடலாம். ஆட்சேபணை இல்லை.

எழுத்தாளனும் ஒரு கலைஞன். தன் எழுத்து எவ்வாறு பிறர் படித்து ரசிக்கும்படியாக அமைந்துவிடுகிறது என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தத்தளிக்கும் அப்பாவி அவன். அவன் வாழ்கிற காலத்தின் ஜீவரசம் அவனுள் ஓடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய பொறி களுக்கு வசப்பட்ட வாழ்க்கையின் கோலத்தை எழுதுவதிலும், எழுதாமல் விடுவதிலும், அதன் அடுக்கிலும், தேர்விலும், அழுத்தத்திலும், முடிப்பிலும் அவனுடைய ரத்த நம்பிக்கைகள் துளிர்க்கின்றன. வைஷ்ணவன் நெற்றியில் நாமம் போல் டைட்டில் பக்கத்தில் அவை பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது இல்லை. பிரமாணமாக உருவாகாத சிந்தனைகளும், தீர்ப்புகளுமே படைப்பில் கசிகின்றன. விஞ்ஞான பத்ததிக்கும் தருக்க சாஸ்திர முறைக்கும் இலக்காகாத அவ்வுணர்வுகளின் தீர்ப்புகளில் முரண்பாடுகள் சகஜம்; தவிர்க்க முடியாதவை. இதற்கு நேர்மாறாக, கலையுலகில் அங்கீகரிக்கப்பட்ட தத்துவங்களுக்குத் தலையணை உறை தைப்பவன் கலைஞனே அல்ல. தெருக்கோடி கிருஸ்துவ பஜனையில் தொண்டையைக் கிழித்துக் கொள்பவனுக்கும் அவனுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. கலைஞனின் படைப்பின் விளைவால் புதிய மாற்றங்கள் நிகழலாம்; மொழி செழுமை அடையலாம்; இடைவெளிகள் அடைக்கப்படலாம். இவை விளைவுகள். தலைகீழாகச் சொல்லிப் பழகிவிட்டார்கள் சமூக சாஸ்திரிகளான விமர்சகர்கள். கலைஞனின் வெகுளித்தனம் மறுக்காமல் பழகிவிட்டது.

puliayamaram

சரஸ்வதியில் புளியமரம் தொடர்கதைக்கு 15.7.59-ல் வந்த விளம்பரம்

1956 - 57 ஆண்டுகளில், சாயங்கால வேளைகளில் பள்ளி மணி அடித்துச் சில நிமிஷங்களுக்கெல்லாம் பஜாரில் தெற்கேயிருந்து ஒரு வாத்தியாரம்மா தோன்றி வடக்கே போவதை எண்ணற்ற நாட்கள் பார்த்திருக்கிறேன். அவளுடைய நடையழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது. தேவதூதர்கள் இருமருங்கும் நின்று அவள் பாதம்படப் பூக்கள் தூவிச் செல்வது என் கண்களுக்குத்தான் தெரிய வில்லை என்று எண்ணிக்கொள்வேன். மனசில் பதிந்துவிட்ட அவளுடைய உருவமே இந்நாவலில் செல்லத்தாயின் உருவாக அந்தர்முகமாய் நின்று தொழில்பட்டிருக்கிறது என்ற உண்மை சமீபத்தில் ஒருநாள் ஏதோ ஒரு நிமிஷத்தில் என் மனசில் பளிச் சிட்டது. அவளுக்கும் செல்லத்தாயிக்கும் ஒட்டும் உறவும் இல்லை தான். இருந்தாலும் விஷயம் உண்மை.

இந்நாவலின் கதாபாத்திரங்களில் பெண்கள் மிகக் குறைவு. நம் தேச ஜனத்தொகையில் பெண்களுக்குரிய வீதாசாரமான பிரதிநிதித் துவம் ஏகதேசமாய்க்கூட இந்நாவலில் அளிக்கப்படவில்லை. ஏதோ அவ்வாறு நிகழ்ந்துவிட்டது. உண்மையில் ஒரு பெண் கதாபாத்தி ரத்திற்கு நிறையப் பங்கு அளிக்கவே உத்தேசித்திருந்தேன். 1958இல் எங்கள் ஊரில் நான் விரும்பும் நாவலாசிரியர் ஒருவர் வந்து தங்கியிருந்தார். நானும் என் இலக்கிய நண்பரும் வெகு நேரம் ஆசை யோடு அவருடன் பேசிக்கொண்டிருப்போம். பேச்சு அலுப்புற்ற வேளைகளில் அந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் நின்று பஜார் இயக்கங்களை வேடிக்கை பார்த்தபடி இருப்போம். அங்கிருந்து நேராகக் கீழே பார்த்தால் சினிமா தியேட்டரை ஒட்டிப் பொரி கடலைக்காரி ஒருத்தி உட்கார்ந்துகொண்டிருப்பது தெரியும். மேலே இருந்து பார்க்கையில் முறத்தில் பொரிகடலைக் குவியல்மீது அவளுடைய சிரம் வெட்டி வைக்கப்பட்டிருப்பது போல் தெரியும். இந்தக் கோணத்தில் பார்க்க நேர்ந்ததால் அவள் என் மனசில் இடம் பெற்றாள். கொழகொழவென்று வெற்றிலைச் சாறு தளும்பும் வாயுடன், தலையில் கனகாம்பர மூட்டையுடன், பெரிய பொட்டு டன், மலிவான அலங்காரங்களுடன், செயற்கைக் கவர்ச்சிகளுடன், ‘இது என் தொழில் அல்ல; உப தொழில்’ எனப் போடாமல் போடும் கோஷத்துடன், சிரிப்பும் வசையுமாக, கண்களால் ஆண்மையை அவ்வப்போது சீண்டியபடி இருப்பாள். அவளுக்கு இந்நாவலில் முக்கிய பங்கு அளிக்கவேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஒரு அத்தியாயத்தில் அவளை அறிமுகப்படுத்தியும் வைத் தேன். கூலி ஐயப்பனின் காதலியாகவோ, சகோதரியாகவோ, மாமியாராகவோ பின்னால் வளர்த்திக்கொண்டு வரவேண்டு மென்று யோசித்திருந்தேன். அடித்துத் திருத்திக் கிழித்துப்போட்டுத் திரும்ப எழுதிய பக்கங்களின் அவஸ்தையில் அவள் எப்போது நழுவி வெளியே விழுந்தாள் என்பதே தெரியவில்லை.

இது என்னுடைய முதல் நாவல்.

நாவல் துறைக்கு இந்நாவல்வழி நான் அறிமுகமாக நேர்ந்தது எனக்கு ஏதேதோ வகைகளில் திருப்தியைத் தருகிறது.

படித்துப் பாருங்கள். இந்த நாவல் உங்களுக்குப் பிடிக்கலாம். பிடிக்காமலும் இருக்கலாம். சில நாவல்கள் நன்றாக இருக்கும். சில நாவல்கள் நன்றாய் இராது.

நான் இதைவிடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக் கூடுமென்று தோன்றுகிறது.

நாகர்கோயில் சுந்தர ராமசாமி

23 ஜூன் 1966

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்