மனைவி சொன்னதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக் கொண்டு வந்தது.
“ஏண்டாய்யா, குழந்தையைக் கொடுத்தியே போதாதா? வியாதியை வேற கொடுத்து அனுப்பிச்சுருக்கியே அதை?” என்று மனசிலே சொல்லிக் கொண்டே சுவரில் அசைந்த காலண்டரை ப் பார்த்தார். அதில் பரமசிவன் மீசையும் மாடும் இரண்டு பிள்ளையுமாக உட்கார்ந்திருந்தார். வியாதி வெக்கை இல்லாத பிள்ளைகள்.
கழுவாத சாயங்கால மூஞ்சி மாதிரி எண்ணெய்ப் பாடம் கறுத்து மின்னும் தலையணையில் தலை வைத்துக் குழந்தை மல்லாந்து படுத்திருந்தது. மூன்று நாளாக மூடிய கண் திறக்கவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. சளி ஜுரமா, பிடிவாத ஜுரமா இன்னும் டாக்டருக்குப் பிடிபடவில்லை. நெற்றியில் நெருப்புப் பறக்கிறது. மாசம் பிறந்து இரண்டாவது வாரம் பாதி நடக்கிறது. இல்லின், மைஸின் என்று என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறார் டாக்டர். தம் கையிலே இருக்கிற பெட்டியைப் பிரிக்க யோசனை, ‘ட்யூஷன்’ சொல்லிக் கொடுத்து உளவடைக்க டாக்டருக்கு அவ்வளவு சின்னக் குழந்தைகளும் இல்லை. சந்நிதித் தெரு வன்னியர் வீட்டு ‘ட்யூசன்’ பணம் எட்டு ரூபாய் தீர்ந்துவிட்டது. என்ன செய்யலாம் என்று மனசை நோண்டும்போதுதான் மனைவி அதை ஞாபகமூட்டினாள்.
“இன்னும் ஒரு புஸ்தகம் அச்சுப்போட எழுதிக் கொடுத்தீங்களே, அதைத் திருப்பிக் கேக்கறாப் போலாவது அந்தப் பாவியைப் பார்த்துக்கிட்டு வாங்களேன்” என்றாள் அவள்.
“நீயே பாவிங்கறே. நீயே போகச் சொல்றியே?”
“வேற வழி இல்லேன்னா…” என்னவோ ரோசமாகச் சொல்லி வாக்கியத்தை முடிக்கத்தான் பார்த்தார். ஆனால் குழப்பத்தில் முடிவே மௌனமாகக் கரைந்துவிட்டது.
“இனிமேல் உங்க வீட்டுக் குத்துச் செங்கல் மிதிக்க மாட்டேன்யா” என்று புத்தகம் போடுகிற பஞ்சுவிடம் இரண்டு மாதம் முன்னால் சொல்லிவிட்டு வந்ததுதான்.
சின்னராஜா எம்.ஏ., எல்.டி. எழுதியதாக பஞ்சு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குப் போடுகிற புத்தகங்களெல்லாம் இந்த சரவண வாத்தியார் எழுதிக் கொடுத்ததுதான். நாலு வருஷமாக இது நடந்துவருகிறது. இருபது புத்தகங்கள் ஆகிவிட்டன. பஞ்சு புத்தகத்துக்கு ஐம்பது ரூபாய் வீதம் ஏகபோகமாக உடைமையை எல்லாம் அவரிடம் எழுதி வாங்கி க்ஷேமமாக இருந்து வந்தார். நானூறு ரூபாய் மிச்சம் கொடுக்க வேண்டியிருந்தது.
ஆடி மாசம் பணத்துக்காகப் போய் நின்றார் சரவணவாத்தியார்.
“அடுத்த திங்கட்கிழமை ஒரு செக் வர வேண்டியிருக்கு. வந்தவுடனே, மாத்தி உம்ம வீட்டுக்கு வந்து உமக்குக் கொடுக்க வேண்டிய முந்நூறு ரூபாயையும் கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன். சரிதானா?” என்றார் பஞ்சு.
முந்நூறு என்கிறானே!
“நானூறு ரூபாயில்லே?”
“நானூறா? நல்லா யோசிச்சுப் பாரும். போன வாரம் வந்ததிருந்தப்போ, நானூறு ரூபாய்னு சொன்னீர். இல்லை ஐயா, முந்நூறுன்னு திருத்தினேன். சரீன்னீரேய்யா.”
“இல்லே, நீங்க முந்நூறுன்னீங்க. நானூறுன்னு நான்தான் திருத்தினேன். நீங்கதான் சரின்னிங்க.”
“இல்லே, நல்லா யோசிச்சுப் பாரும்.”
சரவண வாத்தியார் நன்றாக யோசித்துப் பார்த்தார், நானூறு ரூபாய் நிச்சயம்.
“இல்லைங்க, நானூறுதான்.”
“ஏன்யா, எத்தினி நாளாய்யா இநத் வேலையை ஆரம்பிச்சிருக்கீரு? வாத்தியாராச்சேன்னு கொஞ்சம் இரங்கினத்துக்கா இந்தத் தண்டனை எனக்கு? ரங்கசாமி வாத்தியார்தான் போக்கடாப் பயன்னு நெனச்சேன். நீரும் சேந்துப்பிட்டீரா?”
வாத்தியாருக்கு உடம்பெல்லாம் பதறிற்று. அவர் வாத்தியார். யாரும் அவரை இப்படித் தூக்கி எறிந்து பேசுகிறதில்லை. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு மரியாதை உண்டு. அதாவது அவமரியாதை கிடைத்ததில்லை.
முட்டி வந்த ஆத்திரத்தை அமுக்கிக்கொண்டு, பணிந்த குரலில், “நீங்க தெரியாம சொல்றீங்க, நல்லா யோசனை பண்ணிப்பாருங்க” என்றார்.
“தெரியாமச் சொல்றேனா? நானா? நோட்டிலே எழுதி வச்சிருக்கேன்யா?”
“எடுங்க.”
“கடையிலே இருக்கு. இன்னிக்குச் சாயங்காலம் பார்த்தேன். அப்புறம் என்ன?”
“என்ன எழுதியிருக்கீங்க?”
“உமக்குக் கொடுக்க வேண்டியது ஆயிரம். எழுநூறு ரூபா உம்ம பத்துவழி ஆயிருக்கு.”
“அறுநூறில்லே?”
“ஏன்யா, செலவுக்கு வேணும்னு போன மாசம் இரண்டாம் நாள் ராத்திரி வந்து ஐம்பது ஐம்பதுன்னு வாங்கிண்டுப் போனீரய்யா.”
“நான் ரண்டு தடவை வந்தது வாஸ்தவம். ஆனா ஒண்ணும் வாங்கலியே!”
“வாங்கலியா? என்னமாய்யா இப்படித் துணிஞ்சி சொல்ல நாக்கு வரது உமக்கு? பையன்களுக்கெல்லாம் தர்மம் போதிக்கிறீரே. வாண்டாம்யா. இதெல்லாம் விட்டுடும். இப்படி இருந்தா லட்சுமி நீர் இருக்கிற தெருப்பக்கம் கூட வரமாட்டா.”
“பஞ்சு, நெசமாத்தான் சொல்றீங்களா?”
“நெசமாத்தானா? நான் என்ன உமக்குப் புடிச்ச சிஷ்யப் பையனா, உம்மோட உள்ளாக்காட்டி விளையாடறதுக்கு.”
ஒரு வார்த்தைக்குப் பத்து வார்த்தையாகப் பஞ்சுவின் வாயிலிருந்து தெறிக்கின்றன. குரலும் பெரிய குரல். வாத்தியார் கலங்கியேவிட்டார்.
“அப்ப முந்நூறுதான்னு சொல்றீங்க.”
“வேணும்னா நாளைக்கு காலமே வந்து நோட்டைப் பாருமே, எழுதியிருக்கேனா இல்லியான்னு.”
”நீங்க நோட்டிலே எழுதினதுக்கு நானா பொறுப்பு? எனக்கு நேர எழுதலியே.”
வாத்தியாருக்கே ஆச்சரியமாக இருந்தது, எப்படி இதைச் சொன்னோம் என்று.
“அப்படியா? நான்தான்யா அயோக்கியன். நீர் பரம யோக்கியர். அரிச்சந்திரன். ஐயா, இனிமே உம்ம சகவாசம் நமக்கு வாண்டாம்யா. நீர் எழுதிக் கொடுத்த புஸ்தகம் இன்னும் ஒண்ணே ஒண்ணு இருக்கு. அதை எடுத்துக் குடுத்துடறேன். நல்ல யோக்யனா, நல்லவனா, புஸ்தகம் போடற ஆள் யாராவது இருப்பான். அவன்கிட்ட கொண்டு குடுத்துக்கும்.”
சரவண வாத்தியார் வாய் அடைத்து நின்றார். இந்த லட்சணத்தில் வேறு யாரோ இரண்டு பேர் அங்கு வந்திருந்தார்கள்.
பஞ்சு சொன்னார் “ஓய் சரவணம், இப்ப ரொம்ப சங்கடமான நிலையில் மாட்டிவிட்டீரையா என்னை? இந்த உலகத்திலே வாத்தியார்னு சொன்னா அவா கட்சியைத்தான் யாரும் எடுத்துப்பன். இந்த இரண்டு பேரும் இப்ப உமக்குச் சாதகமாகப் பேசினால்கூட நான் ஆச்சரியப்படறதுக்கில்லே. என்னை இந்த மாதிரி இக்கட்டா கொண்டு நிறுத்திப்பிட்டீரே.””
“சாயங்காலம் நோட்டைப் பார்த்தவங்க தப்பாச் சொல்லுவாங்களா?” என்றார் வந்திருந்த இருவரில் ஒருவர்.
ஒரு தடவை அந்த ஆசாமியை அர்த்தம் இல்லாமல் பார்த்துவிட்டுப் பஞ்சுவின் பக்கம் திரும்பினார் வாத்தியார்.
“பஞ்சு, ஒரு கால் கடுதாசி கொடுங்களேன்” என்றார்.
“இதோ!”
வாத்தியார் விறுவிறுவென்று எழுதினார். “இருபது புத்தகங்கள் எழுதிக் கொடுத்ததற்காகப் பஞ்சு பிரசுரம் உரிமையாளர் சோ.பஞ்சாபகேசனிடம் நான் வாங்கிக் கொண்ட ரூபாய் ஆயிரம். இத்தோடு என் கணக்குத் தீர்ந்துவிட்டது” என்று கையெழுத்திட்டு எழுதி நீட்டினார்.
“என்னது?”
“பாருங்க.”
பஞ்சு பார்த்தார். “எல்லா ரூபாயும் வாங்கிக்கொண்டதாக எழுதிக் கொடுத்துவிட்டீரா? எனக்கு என்னத்துக்கையா பிச்சைக்காசு?” என்று அதைக் கிழித்து எறிந்தான் பஞ்சு. “இந்தக் கிண்டல்லாம் வாண்டாம். திங்கட்கிழமை உமக்கு மூந்நூறு ரூபாய் வரும்,”
“உம்ம ரூபாயே எனக்கு வாண்டாம்.”
“என் ரூபாய் என்ன? உம்ம ரூபாய் அது. கொண்டு வந்து கொடுத்துடறேன். வாண்டாம்னா நீர் கிழிச்சுப் போட்டுக்கும். எனக்கு என்னத்துக்கு? இந்த மாதிரி யார்கிட்டியும் எனக்கு ஏற்பட்டதில்லை ஐயா.”
“அப்ப நான் வரட்டுமா?”
“சரி.”
வாத்தியார் திரும்பினார். அவர் மனதில் புயல் அடித்தது. அரிக்குஞ்சட்டியில் குழந்தை தண்ணீரைத் தட்டுகிற கலக்கமாகத்தான் பஞ்சுவுக்கு அது தோன்றிற்று.
கூட வந்தார் பஞ்சு. “ஓய், சும்மா மனசை அலட்டிக்காதீர். நல்ல யோசிச்சுப் பாத்து வந்து சொல்லும். நான் அப்படி எல்லாம் வார்த்தை புரளமாட்டேன்யா. நாளைக்கு வரீரா?”
“இனிமே இந்த வீட்டுக் குத்துச் செங்கல் ஏறுவனா!”
“அப்படியா? அப்படின்னா உம்ம சௌகரியம். சரி, பணத்தை அனுப்பிச்சுடறேன். அதையும் உம்ம வீட்டுக் குத்துச் செங்கல் ஏறவிடாமல் அடிச்சுப்பிடாதீர்.”
வாத்தியார் பதில் சொல்லவில்லை. பேசாமல் தெருவில் இறங்கி நடந்துவிட்டார். மனிதனுக்குப் பொய் சொல்ல எப்படி மனசு வரும்? திருடலாம், கொல்லலாம், கற்பை இழக்கலாம். அவர்களோடு பழகலாம். பொய் சொல்பவர்களோடு எப்படிப் பழகமுடியும்? பொய்! பொய்யா? பொய் எப்படிச் சொல்ல முடியும்? வாத்தியாருக்குப் புரியவில்லை. பதறிற்று. திட்டம் போட்ட கயமையாக இருக்கிறதே இது!
“இருபத்தோராவது புத்தகத்தை இவனிடமா கொடுக்கிறது? சை! எப்பேர்ப்பட்ட புத்தகம்!” ஆனால் புறப்பட்டு வந்த கோபத்தில் அதை வாங்கிக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்தார். பெண்டாட்டியிடம் ஒருமுறை எல்லாவற்றையும் சொல்லி அழுதார். புகைந்தார். மனசாரத் திட்டினார். அப்புறம் அந்தப் பக்கம் தலை காட்டவில்லை. பணமுடை நாலு தடவை கழுத்தைப் பிடித்தபோதும் தைரியமாக இருந்துவிட்டார்.
நேற்றோடு பதினேராவது திங்கட்கிழமை போய்விட்டது. வலிய வருகிறேன் என்று பயமுறுத்திய பணம் வரவில்லை.
மீண்டும் போகலாமா? பொய்யனை எப்படிப் பார்க்கிறது?”
“குததுச் செங்கல் ஏறமாட்டேன்னு சொல்லிவிட்டேன் தெரியுமா?” என்றார்.
“ஏறாம வாசல்லெ நின்ன வாக்கிலே கேளுங்க.”
“நான் போய்ப் பணம்னு கேக்கமாட்டேன்.”
“புதுப் புஸ்தகத்தைத் திருப்பி வாங்கி வராப்பல போங்களேன். அப்ப அவனாப் பேச்சு எடுககமாட்டானா?”
அதுவும் சரிதான் என்று பணமுடை காதோடு சொல்லிற்று. சமாதானம் இல்லை.
குழந்தை இன்னம் கண்ணைத் திறக்கவில்லை. ஹார்லிக்ஸ்தான் கொடுக்க வேண்டுமாம். இல்லாவிட்டால் திராட்சைப் பழத்தை ஜலத்தில் கொதிக்கவைத்துக் கொடுக்கலாமாம்.
பெருங்காயத் தகரத்தைத் திறந்தார். ஒரு ரூபாயும் பத்து நயா பைசாவில் ஆறும் மின்னின. இரண்டு பத்தை விட்டுவிட்டு மீதியை எடுத்துக்கொண்டார். பார்லி, திராட்சை வாங்கி வரலாம். வரும்போது, பஸ்ஸில் ஏறிப் பத்து நயா பைசாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டுபோய், இறங்கிப் பஞ்சுவின் வீட்டை நோக்கி நடந்தார்.
“பஞ்சு இருக்காரா?”
“வாங்க ஸார்” என்றான் ரத்தினமலை. ரத்தினமலை பஞ்சுவின் அந்தரங்க வேலைக்காரன். வாசலில் யார் வந்தாலும், “இருங்க, இருக்காங்களா பாத்திட்டு வரேன்” என்று ஒன்றுமே தெரியாதவன் போல உள்ளே ஓடிப்போய் வந்து, இருக்கிறார் அல்லது இல்லை என்று வந்த ஆளுக்கு ஏற்பத் தகவல் தருகிறவன்.
“இருக்காரா?”
“இருக்காங்க” என்று உள்ளே போகாமலே சொன்னான் அவன்.
“பாக்கலாமா?”
“பார்க்கலாம். அம்மாவுக்கு ரொம்ப உடம்பு ஜாஸ்தியா இருக்கு. ரத்த ரத்தமாச் சாயங்காலமே புடிச்சி வாந்தி எடுக்கறாங்க. அய்யா பக்கத்திலே உட்கார்ந்திருக்காங்க.”
“ரத்த ரத்தமாவா? என்ன உடம்பு?”
“என்னமோ தெரியலீங்க. திடுதிடுப்பினு வந்திடிச்சி.”
“திடுதிடுப்புனா? சாயங்காலாமா?”
“ஆமாங்க. சாயங்காலம் அஞ்சு மணி வரைக்கும் நடமாடிக்கிட்டுத்தான் இருந்தாங்க. அப்புறம் திடீர்னு தலை வலிக்கிதுன்னாங்க. ரத்தமா வாந்தி எடுத்திச்சு. டாக்டர் வந்து ஊசி போட்டுப் போனாரு. கண்ணைத் தொறக்கல. படுத்துக்கிடக்காங்க.”
“போய்ப் பார்ப்பதா வேண்டாமா? வேற்று மனிதரைக் கண்டதும் பஞ்சுவின் மனைவி கூச்சப்பட்டால் என்ன செய்கிறது? உள்ளே போவதா, திரும்பிப் போவதா என்று தெரியாமல் குழம்பிக் குழம்பி நின்றார் அவர்.
ஒரு பையன் தெருவில் ஓடிவந்து வாசல்படி ஏறினான். அவரைக் கண்டு நின்றான்,
“என்ன ஸார்?”
“என்னப்பா கையிலே?”
“ஐஸ் ஸார். அத்தங்காளுக்கு ரொம்ப சீரிஸ்ஸா இருக்கு. உள்ள வறிங்களா?” என்று கேட்டுக்கொண்டே ஓடினான்.
இதற்கிடையில் வேலைக்காரப் பையன் உள்ளே போய் வந்துவிட்டான்.
“நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னேன். ஒண்ணும் சொல்லலை ஸார்” என்றான்.
திரும்பிப் போகலாமா? வந்த சமாசாரம் பஞ்சுவுக்குத் தெரிந்துவிட்டது. உள்ளே போகாமல் திரும்பிவிட்டால் என்ன நினைத்துக் கொள்வார்? அவர் மனைவி கூச்சப்பட்டால்… கூச்சம் என்ன? அப்படி உடம்பாக இருந்தால், கூச்சமா தெரியப்போகிறது? உண்மையில் கவலைக்கிடமாக இருந்தால் கூச்சமும் சங்கோசமுமா வரும்?
செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே போனார். என்ன இது?
அவர் எதிர்பார்த்தவாறு இல்லை. உள்ளே ஏக கூட்டம். பஞ்சுவின் மனைவி படுக்கையில் கிடந்தாள். சுற்றி ஏழெட்டுப் பெண்கள். பஞ்சு, மனைவியின் காலடியில் உட்கார்ந்திருந்தார். பஞ்சுவின் குழந்தை இரண்டு தூங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு குழந்தை விசித்து விசித்து அழுதுகொண்டிருந்தது. அதை ஒரு பாட்டி சமாதானம் செய்துகொண்டிருந்தாள். இரண்டாவது குழந்தை விவரம் தெரிந்த பெண். அது திகில் படர்ந்த முகத்துடன் சுவேரோரமாக அப்பாவைப் பார்த்த வண்ணம் சிலையாக உட்கார்ந்திருந்தது. தலைப்பக்கம் உட்கார்ந்திருந்த அம்மாளின் கண் அழுது கலங்கிக்கிடந்தது.
“என்ன உடம்பு ஸார்?”
“சாயங்காலம் வரையில் ஒண்ணும் இல்லே. திடீர்னு அஞ்சு மணிக்கு ரத்தமா வாந்தி எடுத்தாள். தலை வலிக்கிறதுன்னாள்ளாம். கடைக்குப் பையன் ஓடிவந்து சொன்னான். வந்தேன். இப்படி பிரக்ஞையில்லாமல் கிடக்கா. டாக்டர் வந்து ஊசி போட்டார். பயப்பட வாண்டாம்னார். என்னன்னு கேட்டேன். ஏதே பலஹீனந்தான்னட்டுப் போனார்” என்று பஞ்சு மனைவியின் முகத்தைப் பார்த்தார்.
வாத்தியாரும் பார்த்தார். கண் சொருகியிருந்தது. திடீரென்று பல்லை நறநறவென்று கடித்தாள் நோயாளி. கை விறைத்தது. உடம்பைப் போட்டு முறித்துக்கொண்டாள். பயங்கரமாக இருந்தது. எல்லோரும் அமுக்கி அவளைப் பிடித்துக்கொண்டார்கள். அமுக்க முடியாமல் அமுக்கினார்கள்.
“என்னடீம்மா இது? இப்படி முறிக்கிறதே! ஒண்ணும் புரியலியே. இந்தக் குடும்பத்தை இவ இல்லாட்டா யாருடீ காப்பாத்த முடியும்?” என்று தலைமாட்டு ஸ்திரீ புலம்பினாள். குபுகுபுவென்று அழுகை வந்தது அவளுக்கு.
“மறுபடியும் டாக்டரைக் கூப்பிட்டுப் பார்க்கணும், ஸார்” என்றார் வாத்தியார்.
“வீட்டு டாக்டர் சரியாப் போயிடும்னு சொல்லிட்டுப் போயிட்டார். ஆனா மறுபடியும் அழச்சிண்டு வரச்சொல்லிப் பையனை அனுப்பிச்சிருக்கேன். போயிருக்கான்.”
குழந்தை அழுதது. நினைத்து நினைத்து தலைமாட்டு அம்மாள் அழுதாள். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை உடம்பை முறித்து வளைத்து விறைக்கிற போதெல்லாம் மற்றப் பெண்கள் அணைத்துப் பிடித்துக் கொண்டார்கள்.
“டாக்டர் பன்னிரண்டு மணிக்குத்தான் வருவாராம்” என்றான் பெரிய பையன் வந்து.
“எங்கே போயிருக்காராம்?”
“தெரியலே. எனக்கு சந்தேகமாயிருக்கு.”
“என்ன?”
“அவர் பிள்ளை படுத்துண்டால் ஏந்திருக்க மாட்டார்னு சொன்னான். ஆளே இல்லவே இல்லைங்கறான். எது நெஜம்னு தெரியலே.”
“ராஜு டாக்டர் சேதி தெரிஞ்சதுதானே? படுத்துனுட்டால் என்ன கூப்பிட்டாலும் வரமாட்டாங்களே!” என்றது கும்பலில் ஒரு குரல்.
வாத்தியார் வெளியே ஓடினார். இரண்டு மூன்று டாக்டர்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டினார். “இல்லவே இல்லை. வரமுடியாது” என்ற இரண்டு பதில்களை மூடிய கதவே கொடுத்துவிட்டது. மூன்றாவது டாக்டரிடம் ஒடினார். மாடிப்பால்கனியிலிருந்தே டாக்டர் வியாதியைப் பற்றி விசாரித்தார். வாத்தியார் சொன்னதைக் கேட்டதும், “டாக்டர்தான் ஊசி போட்டிருக்கார்னேளே. காலமே வந்து எப்படி இருக்குன்னு சொல்லுங்கோ” என்று உள்ளே போனார். தாழ்ப்பாள் ஓசை கேட்டது. சட்டென்று பராங்குசத்தின் ஞாபகம் வந்தது வாத்தியாருக்கு. கூடப் படித்தவனாயிற்றே. ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிக்கொண்டார். ஒரு மைல் இருக்கிறது பராங்குசம் வீடு.
“ஸார், பராங்குசம் ஸார்!”
“யாரு?”
“நான்தான் ஸார்.”
நான்தானென்றால் அடையாளம் தெரியுமோ? அவனைப் பார்த்தே ஒரு வருஷமாயிற்று.
“நான்தான் சரவணன் ஸார். வாத்தியார்.”
“ஓகோ, இதோ வந்துட்டேன்.”
அவரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கையோடு அழைத்துக் கொண்டே வந்துவிட்டார் சரவணம். சைக்கிள் ரிக்ஷா லொலொடவென்று சத்தம் செய்தது.
உள்ளே போய்ச் சேர்ந்தார் பராங்குசம். உடம்பு முறியாக முறித்தது. டாக்டர் எழுந்து “இப்படி வாங்க கொஞ்சம்” என்று பஞ்சுவையும் சரவணத்தையும் தனியாக வாசலுக்கு அழைத்துப் போனார்.
“ஸார், இது கிருமித் தொத்து, உடனே ஆஸ்பத்திரிக்குப் போனா ஆனதைச் செஞ்சிப்பிடுவாங்க. இப்படியே இன்னும் நாலு மணிநேரம் விட்டு வச்சா, ‘க்ரிடிக்கலா’ப் போயிடும். அப்புறம் ரொம்ப சிரமம். இப்பவே வாங்க. இப்ப ஆஸ்பத்திரியில் சேத்துட்டா நாளை மத்தியானம் திரும்ப வந்துடலாம். இங்கியே வச்சிருக்கிறது நல்லதில்லை. ஆஸ்பத்திரியிலேதான் இதுக்கு வசதி உண்டு. நானும்கூட வந்து அட்மிட் பண்ணிடறேன். என்ன சொல்றீங்க? அப்புறம் வருத்தப்படப்படாது.”
பஞ்சு உள்ளே வந்தார். பெண்மணிகளைக் கலந்து பேசினார். ஆஸ்பத்திரி என்றதும் தலைமாட்டு அம்மாள் புதிதாக ஒரு பாட்டம் ஆரம்பித்துவிட்டாள். “செவ்வாய்க்கிழமையும் அதுவுமா… இங்கேயே பார்க்க முடியாதா?”
பஞ்சுவும் கலங்கினதைப் பார்த்து, அவருக்கும் எல்லோருக்கும் தைரியம் சொல்லிவிட்டு, ஓடிப்போய் ஒரு டாக்ஸியைப் பிடித்து வந்தார் சரவணம். டாக்ஸி வந்த பிறகு மீண்டும் தகராறு. பிரக்ஞை வந்த மனைவி அடம்பிடித்தாள். சரவணன் அவளுக்கு வேறு நல்ல வார்த்தை சொல்லி சரி சொல்லச் செய்ய அரை மணியாயிற்று.
மெதுவாகக் காரில் ஏற்றினார்கள். சரவணமும் டாக்டரும் முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள்.
ஆஸ்பத்திரியில் பரபரவென்று ஒரு படுக்கையை ஒழித்துத் தயார் செய்தார்கள். டாக்டர் வந்தார். “நல்ல வேளை! இப்பம் கொண்டு வந்தீங்களே. இன்னும் ஒரு மணி ஆயிருந்ததோ சொல்றதுக்கில்லை. இனிமே பயம் இல்லை. கவலைப்படாதீங்க ஸார், காலமே பத்து மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம்” என்று தைரியம் சொன்னார். கவனித்தார்.
வாத்தியாருக்கு உயிர் வந்தது. மருந்து கொடுத்தார்கள். ஊசி போட்டார்கள்.
“அவர் மாத்திரம் இருக்கட்டும். நீங்கள்ளாம் போகலாம். இனிமே கவலையில்லை” என்றார் டாக்டர்.
“அப்ப நீங்க போங்க. நான் இருக்கேன். ரொம்ப தாங்க்ஸ் உங்களுக்கு” என்று நன்றி சொன்னார் பஞ்சு.
பாரங்குசத்தை வீட்டில் இறக்கிவிட்டது டாக்ஸி. வாத்தியாரும் இறங்கினார். பஞ்சு டாக்ஸிக்காகக் கொடுத்த மூன்று ரூபாய் போதவில்லை. காத்திருந்த கூலி ஒரு ரூபாய்க்கு மேல் ஏறியிருந்தது. மூன்று ரூபாய் ஆறணாவுக்குக் கையை விட்டு ஆறணாவை தந்தார் சரவணம். ஒரு ரூபாயைக் கொடுத்து மீதி பத்தணாவை வாங்கிக்கொண்டார்.
டாக்ஸி போனதும் திடீரென்று குழந்தையின் ஞாபகம் வந்தது சரவணத்துக்கு. அவர் சொன்னதைக் கேட்டுவிட்டு “ஒண்ணும் இல்லை. இந்த மாத்திரையைக் கொடுங்க சரியாயிடும்” என்று பராங்குசம் ஒரு மருந்தைக் கொடுத்தார்.
“என்ன கொடுக்கணும்?”
“ஒண்ணே கால் ரூபாய்.”
“ம் அப்புறம்…”
“கொடுங்களேன் நான் அந்தப் பக்கம் வந்தா வந்து பாக்கறேன்.”
“ரொம்ப நன்றி, பராங்குசம்.”
“இங்கேயே படுத்திருங்களேன். மணி ஒண்ணாச்சே. காலமே போயிக்கிறது.”
“குழந்தைக்கு மருந்து கொடுக்கணுமே!”
“அப்ப சரி, டாக்ஸியை விட்டுவிட்டீங்களே. சரி, ரிக்ஷாவாவது வைச்சிக்கிட்டுப் போங்க.”
“சரி, அப்ப வரட்டுமா?”
“ரைட், குட்நைட். ஒண்ணும் கவலைப்படாதீங்க, காலமே அந்தப் பக்கம் வந்தா வர்றேன்.”
“சரி.”
ரிக்ஷா எதற்கு? ஒன்றரை மைல்தான். நடந்தே போய்விடலாம். பையை எடுத்துச் சில்லறையை எண்ணினார். நயா பைசா எல்லாம் போய், ரூபாய், உடைந்து பத்தணா பாக்கி. தாகம் தாங்கவில்லை. சாயங்காலம் ஏழு மணிக்குச் சாப்பிட்டது. வெற்றிலைபாக்குக் கடையில் நாலு மலைப்பழமும் கலரும் சாப்பிட்டார். வெற்றிலை போட்டுக் கொண்டார். நடந்தார்.
ஹிஹிஹிஹி என்று யாரோ இருளில் சிரித்தார்கள்.
பாதி பயத்திலும் பிரமையிலும் உற்றுப் பார்த்தார் அவர். யாரும் இல்லை. ஜட்கா ஸ்டாண்ட்குதிரை! புல் தின்கிற சவடாலில் அது கனைத்தது. சரவணத்திற்கும் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. வீடு போகிற வரையில் சிரித்துக் கொண்டே போனார். நிலவு எழுந்ததைக் கண்டு பொழுது புலர்ந்த திகைப்பில் நாலைந்து நார்த்தங்குருவிகள் வாழைத் தோப்பில் சிரித்துக்கொண்டிருந்தன.
கலைமகள்
அக்டோபர்,1957.
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
1 கருத்துகள்:
தி.ஜானகிராமனின் படைப்புகள் அனைத்தும் அற்புதம்!
வாசிக்க வாசிக்க இன்றும் புதுமை!
தங்கள் பணி பாராட்டுக்குரியது! வாழ்த்துக்கள்!
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.