Showing posts with label நீல பத்மநாபன். Show all posts
Showing posts with label நீல பத்மநாபன். Show all posts

May 16, 2013

நீல.பத்மநாபன்-நேர்காணல்


சந்திப்பு: கடற்கரய் 

தமிழில் மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபன் தமிழில் ஓர் அசலான படைப்பாளி. இதுவரை ''தலைமுறைகள்’'' ''தேரோடும் வீதி'' ''பள்ளிக் கொண்டபுரம்'' ''உறவுகள்'' உள்ளிட்ட இருபது நாவல்களும், 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். இதில் ஒரு நாடகத்தையும் சேர்த்துக் கொள்வது அவசியம்.

2004-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்ற இவர், தமிழிலிருந்து ஆங்கிலம், மலையாளத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்ப்புகneelapadmanaban11ளிலும் இயங்கி வருகிறார். திருவனந்தபுரத்தில் 1938-ல் பிறந்த நீல.பத்மநாபன் மின்வாரியத்துறையில் இன்ஜினீயராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது துணைவியார் பெயர்: கிருஷ்ணம்மாள். இவரது மகள் வழிப் பேரன் பள்ளி வயதிலேயே ஆங்கிலத்தில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறான். பேரன் ஒரு லண்டன் வாசி. அந்தக் கதைத் தொகுதிக்கு நீல.பத்மநாபன் முன்னுரையும் வழங்கி இருக்கிறார். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பதவிகளில் இயங்கியவர். ராஜராஜன் விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், ருஷ்யன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

இதுவரை நீல.பத்மநாபன் எழுதி அச்சில் வெளி வந்த பக்கங்கள் மொத்தம் 6467. இவரது சமீபத்திய நாவலான ''இலையுதிர் காலம்'' இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. இவரை பற்றிய டாக்குமெண்டரியை சாகித்ய அகாதெமி இயக்கி வெளியிட்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான (2007) சாகித்ய அகாதெமி விருது இவரது ''இலையுதிர் காலம்'' நாவலுக்கு வழங்கப்பட்டிருப்பதை ஒட்டி இச்சந்திப்பு திருவனந்தபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்தது. ''எல்லோரையும் போலவே ஓர் எழுத்தாளனுக்கும் தெரியாத விஷயங்கள் பல இருக்கும். அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதல்ல ஒரு சிறந்த நேர்காணல். அவனுக்குத் தெரிந்த அனுபவங்களை அவனது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் அளவில் அமைவதே ஒரு தேர்ந்த நேர்காணல்'' என்ற அளவீட்டில் இயங்கும் நீல.பத்மநாபன் அந்த வரம்பில் நின்றே பல கருத்துக்களை இந்நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

யாருடைய மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இந்த நேர்காணல் முழுவதும் பத்மநாபன் அதிகமாக உச்சரித்த வார்த்தைகள் ''இதை நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை'' என்பது. இருந்தும் சூசகமாக பல தகவல்களை அவர் இதில் பதிய வைத்திருக்கிறார் என்றேபடுகிறது

தீராநதி: இந்த வருடத்திற்கான சாகித்ய அகாதெமி விருது உங்களின் ''இலையுதிர் காலம்'' நாவலுக்குக் கிடைத்தவுடன் நீங்கள் சில பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணல்களில் ''இது எனக்கு காலம் கடந்து கிடைத்த அங்கீகாரம்'' என்று சொல்லி இருக்கிறீர்கள். இந்த விருது பெறுவதற்கு முன்பாகக் கூட நீங்கள் சமகால தமிழிலக்கியப் பரப்பில் க.நா.சு.போன்ற விமர்சகர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் எழுத்தாளராகவே இருந்திருக்கிறீர்கள். ஆங்கிலம், ருஷ்யன், ஜெர்மன் மொழிகள் உட்பட, பல்வேறு மொழிகளில் உங்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனத்தை உங்களுக்கு உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது. இருந்தும் ஏதோ ஒரு மனநிலையில் நீங்கள் அப்படிக் குறிப்பிட நேர்ந்துள்ளது. விருதுகள் என்பது உண்மையாகவே ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் தருகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நீல.பத்மநாபன்: ஓர் எழுத்தாளனுக்கான அங்கீகாரமாக இந்த விருதுகளை நான் கருதவில்லை. ஏனென்றால், ஓர் எழுத்தாளன் தன் படைப்பை படைக்கும் போது இந்த விருது, பதவி, பட்டம் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதே கிடையாது. ஓர் எழுத்தாளன் தன் உள்ளக்கிடக்கையில் படிந்து கிடப்பதை தன்னுடைய எழுத்துகள் மூலமாக எழுதுகிறான். அப்போது இந்த மாதிரியான லௌகீகமான விஷயங்கள் எல்லாம் அவனது மனதில் வரவே வராது. ஒருவித மனக் கட்டாயத்தின் பேரில்தான் அவனது எழுத்து வடிவம் கலைப்படைப்பாக உருவாகிறது. எந்த ஒரு விஷயத்தையும் எழுத்தாளன் என்பவன் தனக்காக செய்தாலும்கூட அவனது ஆத்ம திருப்திக்காக செய்தாலும் கூட அதை அவன் செய்து முடித்த பிற்பாடு அதிலிருந்து விலகி நின்று ஒரு வாசகனாக பார்க்கின்ற போது அந்தப் படைப்பு எந்த அளவிற்குச் சரியாக வந்திருக்கிறது என அறியத்துடிக்கின்ற மனநிலை எல்லா கலைஞனுக்குள்ளும் இருக்கிறது. அப்படைப்பு பிறத்தியார் பார்வையில் எப்படிப் படுகிறது? அவர்கள் இதை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுத்தாளனுக்குள் இயல்பாக இருக்கவே செய்கிறது. என்னதான் நான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன், விருதுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்று சொன்னாலும் அவரது உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கவே செய்யும். ஒரு படைப்பை படித்துப் பார்த்துவிட்டு ஒரு சாதாரண வாசகனாக இருந்தாலும் அல்லது பரிசளிக்கும் ஒரு ஸ்தாபனமாக இருந்தாலும் ஒரு கருத்தைச் சொல்லும்போது நமக்குள் ஒரு சந்தோஷம். இல்லை, இந்த இடத்தில் இப்படி இல்லாமல் மாற்றிச் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லும் போது, எழுத்தாளன் தன்னை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள அது உதவியாக அமைகிறது. ஆக, அங்கீகாரம் என்பதை விருதுகள் மூலமும் சொல்லலாம். அல்லது சாதாரண வாசக கடிதத்தின் மூலமும் சொல்லலாம்.

ஒருவேளை இளமைப் பருவத்தில் இந்த விருதுகள் கிடைத்திருந்தால் இன்னும் உத்வேகத்தோடு இயங்கக்கூடிய வாய்ப்புகள் எனக்கு இருந்திருக்கலாம். இளமைக் காலகட்டத்தைத் தாண்டி நாம் வந்து விட்டோம் என்பதால் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் இன்றைக்கு நம்மைத் தேடி வருகின்ற போது அதை நாம் நிராகரிக்க வேண்டிய தேவையும் இல்லை.

என்னுடைய ''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்த போது தலைசிறந்த பத்துத் தமிழ்நாவல்களில் ஒன்றாக க.நா.சு. குறிப்பிட்டு எழுதி இருந்தார். இன்னும் சில பத்திரிகைகள் எழுதின. அப்போதே இதற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைக்கப் போகிறதென்று பேசினார்கள். அதற்குப் பிறகு ''பள்ளிக் கொண்டபுரம்'' வெளிவந்த போது இதையே சொன்னார்கள். ஆனால் அதற்கெல்லாம் கிடைக்கவில்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக தொடர்ந்து சொல்லப்பட்ட விஷயம். இப்போது நடந்தேறி இருக்கிறது, அவ்வளவுதான்.

''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்தபோது எனக்கு முப்பது வயது. இன்றைக்கு எனக்கு எழுபது வயது. உண்மையிலேயே சொல்லப் போனால் யார் மீதும் எனக்கு புகார் இல்லை. இந்த விருது மூலம் அந்தப் படைப்பானது பரவலாக வாசிக்கப்படுமானால் அந்த மகிழ்ச்சியே அசலானது. இந்த விருது மூலம். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, என் நண்பர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியின் அளவு அதிகம். ''எப்போதோ கிடைக்க வேண்டியது இப்போதாவது கொடுத்தார்களே'' என்று அவர்கள் என்னிடம் மனம் மகிழச் சொல்லும் போது அதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தீராநதி: நீங்கள் பேசியதிலிருந்து எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. கேள்வி என்பதை விட சந்தேகம் என்று கூடச் சொல்லலாம். வெளி நாடுகளில் ''நோபல்’ மாதிரியான ஒரு பரிசு ஓர் எழுத்தாளனுக்கு வழங்கப்படுகின்ற போது அவனது படைப்பைப் பற்றிய பேச்சு, வாசிப்பு, உரையாடல் என்பது முன்பைக் காட்டிலும் பன்மடங்கு கூடுகிறது. ஆனால் இந்திய அரசால் வழங்கப்படுகின்ற இந்த சாகித்ய அகாதெமி விருதின் மூலம் பரவலான வாசிப்பு என்பது உண்டாகும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அன்றைக்கு ஒரு சிறந்த படைப்பிற்குக் கொடுக்கத் தவறி விட்டோமே என்பதற்காக பிறகான காலத்தில் ஏதாவது ஒன்றிற்குத் தந்து சரி செய்து விடுவோம் என்பதற்காக விருதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விமர்சனக் குரலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்: நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மை. ஆனால் முழுக்க முழுக்க அதை உண்மை என்று என்னால் அங்கீகரிக்க முடியாது. ஏனென்றால், சாகித்ய அகாதெமி என்று நாம் சொல்வது ஏதோ ஒரு கட்டடம் அல்ல. எல்லா இந்திய மொழிகளிலும் அது இயங்குகிறது. தமிழுக்காக இயங்கும் அதன் சட்ட திட்டங்களைப் பார்த்தால் அவ்வப்போது அது புதுப்பிக்கப்படுகிறது. அந்தந்தக் காலத்தில் அதற்கான ''ஜூரி நம்பர்ஸ்'' இருக்கிறார்கள். ''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்த காலத்தில் பதவியில் இருந்த ''ஜூரி நம்பர்ஸ்'' ''இலையுதிர் காலம்'' நாவல் வெளி வந்த காலத்தில் இல்லை. அன்றைக்கு இருந்தவர்கள் வேறு. இன்றைக்கு எனக்கு விருது வழங்கி இருக்கும் ''ஜூரி நம்பர்ஸ்'' வேறு. அதனால் அன்றைக்கு ஒரு படைப்புக்குக் கொடுக்கத் தவறியதனால் இன்றைக்கு இந்தப் படைப்புக்குக் கொடுத்து சரி செய்து விடுகிறார்கள் என்ற கருத்து சும்மா பேச்சுக்காக சொல்லப்படுவது. அதில் உண்மை இல்லை. அன்றைக்கு என்னுடைய ''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்த போது பல்வேறு விதமான விமர்சனங்கள் அதன் மீது சொல்லப்பட்டன. ஆக, அப்படி ஒரு விமர்சனத்தை உருவாக்கிய படைப்புக்கு விருது கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று அகாதெமி நீதிபதிகள் அன்றைக்குத் தயங்கி இருக்கலாம். அதை உறுதியாகச் சொல்ல முடியாது.

வழக்கமான ஒரு ஃபார்முலாவை மீறி ஒரு படைப்பாளன் புதிய சோதனைகளை மேற்கொள்ளும் அந்தப் படைப்பை ஏற்றுக்கொள்ள பலர் தயங்கினார்கள். க.நா.சு.போல, சி.சு. செல்லப்பா போல ஒரு சிலர்தான் அந்தப் பரிசோதனையை அங்கீகரித்தார்கள். இவர்கள் ஒருவேளை சாகித்ய அகாதெமியில் இருந்திருந்தால் எனக்கு அன்றைக்குப் பரிசு கிடைத்திருக்கும். அன்றைக்கு யார் நீதிபதியாக அகாதெமியில் இருந்தார்கள் என்றே எனக்குத் தெரியாது. அல்லது என்னைவிட பிரபலமான ஒரு படைப்பாளி அன்றைக்கு வேறு யாராவது இருந்திருக்கலாம். அவர்கள் அவருக்கு அந்த விருதை கொடுத்திருக்கலாம். இவ்வளவு தூரம் மத்திய சாகித்ய அகாதெமி விருது பற்றி நாம் குறை சொல்கிறோம். ஏனைய மொழிகளில் எல்லாம் சாகித்ய அகாதெமி இருக்கிறது. மலையாள, கன்னட, தெலுங்கு சாகித்ய அகாதெமிகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் ஒழுங்காக தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார்கள் அல்லவா? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அந்த அகாதெமிக்கு இணையான பரிசுகளை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறதா? அல்லது தனிப்பட்ட பரிசுகளை ஏற்படுத்தி இருக்கிறோமா? ஒரே ஒரு ராஜராஜன் பரிசு வைத்திருக்கிறோம். அதையும் தமக்குத் தேவையானவர்களுக்குக் கொடுத்து விட்டு நிறுத்திவிடுகிறோம் அல்லவா? கட்சி, அரசியல் எல்லாவற்றையும் மீறி ஒரு பரிசை உண்டாக்கி இருக்கிறோமா? ஒன்றைச் செய்தபிற்பாடு அதன் பாணியிலே போய் கிடைக்கும் வெற்றியை விட அதை மீறி புதியதாக ஒன்றைச் செய்து வரும் தோல்வியை விரும்புகிறவன் நான்.

தீராநதி: இந்த விருது மூலம் பரவலான வாசிப்பு என்பது நடக்கும் என்று நம்புகிறீர்களா? அதைப் பற்றி கேட்கிறேன்?

நீல.பத்மநாபன்: அது அந்த ஆசிரியரைப் பொறுத்து இருக்கிறது. அந்தப் படைப்பைப் பொறுத்து இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய ''தலைமுறைகள்'' ''உறவுகள்'' ''பள்ளிக்கொண்டபுரம்'' போன்ற நாவல்கள் ஏற்கெனவே ஒரு விவாதத்தை தமிழ்ச் சூழலில் உண்டாக்கி இருப்பதனால் அதை எழுதிய அதே ஆசிரியரின் படைப்புதான் இதுவும் என்று வாசகனுக்குத் தெரிய வருகின்ற போது நிச்சயம் பரவலான ஒரு வாசிப்பை அது பெறும் என்று நம்புகிறேன்.

தீராநதி: உங்களுடைய ''தலைமுறைகள்'' நாவல் ''உத்தியோக காண்டம்'' சிறுகதை வெளி வந்த போது பரவலான எதிர்வினையை அவை சம்பாதித்தன. ''உத்தியோக காண்டம்'' சிறுகதை உங்களின் சக ஊழியர்களான மலையாளிகளிடம் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்தது. இந்த மாதிரியான எதிர்வினைகள் உங்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கின்றன.

நீல.பத்மநாபன்: ஒரு சமூக ஜ“வி என்ற முறையில் ஓர் எழுத்தாளன் என்பவன் சமூகத்தில் வாழ்பவன். அவன் சமூகத்திலிருந்து தப்பித்துச் செல்ல அவன் ஒருபோதும் விரும்புவது கிடையாது. ஆனால் அவன் சமூகத்தில் நிகழும் பிரச்சினையை அப்படியே ஒரு புகைப்படத்தைப் போல நகலெடுப்பதில்லை. பல இடங்களில் சொல்லியும் சொல்லாமலும் அமர்ந்த முறையில் அவனது கதையை அவன் சொல்கிறான். நடப்பு வாழ்வில் ஐடியலிஸத்திற்கும் ரியலிஸத்திற்கும் உள்ள முரண்பாடுகள்தான் அவனை எழுதத் தூண்டுகின்றன. வாழ்க்கை என்பது இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று ஒரு ஐடியலை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நடப்பில் அந்த மாதிரி இல்லை. ரியலிஸம் என்பது முற்றிலும் வேறுமாதிரி இருக்கிறது. சமூக சீர்திருத்தவாதியாக அவன் அதைச் செய்யவில்லை. ஒரு மானுடவியலின் தனிமையில் செய்கிறான். இப்படி சமூகத்தில் இருக்கும் சில உண்மைகளை நாம் இலக்கியத்தில் மறுபடைப்பு செய்கிறோம். அப்படிச் செய்யும் போது, சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய முகங்களைப் பொறுத்திப் பார்க்கும் போது பிரச்சினை வெடிக்கிறது. யாரோ ஒருவரை என்னுடைய படைப்பு தாக்குகிறது என்பதற்காக நான் என்ன செய்ய முடியும்? உலக வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு ஏதாவது ஒன்றைத்தான் நான் எழுத வேண்டும். எனவே, இந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் நான் அஞ்சுவதே கிடையாது. இது உத்தியோக காண்டத்திற்கு மட்டுமல்ல் ‘தலைமுறைகள்’ நாவலுக்கு மட்டுமல்ல் ''தேரோடும் வீதி'' நாவலுக்கும் இதே கதிதான்.

எங்கு சென்றாலும் ஒரு வட்டம் இருக்கும். ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு வட்டம் இருக்கும். அதை மீறி வருவதென்பது இளம் எழுத்தாளருக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை எழுத்தாளனுக்கு மட்டுமான பிரச்னை என்று நான் சொல்லவில்லை. உலகத்திலேயே அதிக இளம் விஞ்ஞானிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு இந்தியா என்று சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினை அவர்களுக்கும் பொருந்தும். ஓர் இளம் விஞ்ஞானி தன்னுடைய ஆராய்ச்சியை ஒப்படைக்கும் போது, அந்த ஆராய்ச்சி அவனது பெயரில் வராமல் வேறு ஒருவரின் பெயரில் வெளிவரும். இந்த மாதிரி ஒரு விஷ வட்டத்தை மீறி, சுதந்திர இந்தியாவில் ஓர் இளம் விஞ்ஞானி வெளியில் வரவேண்டி இருக்கிறது. ஒருமுறை பேராசிரியர் நாச்சிமுத்து சொன்னார் ''இந்தத் தடைகளையெல்லாம் மீறி ஒரு காலகட்டம் போய் வேறு ஒரு காலகட்டத்தில் ஒரு புதிய தலைமுறை வந்தால் இந்த நாவல் பேசப்படும்'' என்று. என்னுடைய ''தலைமுறைகள்'' நாவலை பற்றி அவர் அப்படி குறிப்பிட்டார். பிறர் முகங்களையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்ட எழுத்தாளர்கள் தங்களுடைய சுய முகத்தை (நான் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை) இந்த நாவலில் பார்த்தபோது அதிர்ந்து போனார்கள்.

தீராநதி: மலையாளத்தில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற அய்யப்ப பணிக்கரின் கவிதைத் தொகுப்பை நீங்கள் தமிழில் மொழி பெயர்த்தீர்கள். அதற்காக உங்களுக்கு மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதும் கிடைத்தது. மூல மொழியில் விருது வாங்கிய அதே படைப்பை மொழி பெயர்த்ததற்காகவும் ஒரு விருதைக் கொடுப்பது சரியானதா? ஒரு படைப்புக்கு இரு விருதுகள் என்பது ஆரோக்கியமானதா?

நீல.பத்மநாபன்: ''பள்ளிக் கொண்டபுரம்'' என்ற என்னுடைய நாவலை ஒரிய மொழியில் (அந்த மொழிதானா என்று சரியாக ஞாபகமில்லை) மொழிபெயர்த்தவருக்கு சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்புக்கான விருது கிடைத்தது. ஆனால் அதைத் தமிழில் சுயமாக எழுதிய எனக்குக் கிடைக்கவில்லை. நேஷனல் புக் டிரஸ்ட் அதை ஜெர்மன், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

அய்யப்ப பணிக்கரின் கவிதைத் தொகுதி மலையாளத்தில் சாகித்ய அகாதெமி விருதினை பெற்றவுடன் அவர் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார். அதுவும் நான்தான் அதைச் செய்யப் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அய்யப்ப பணிக்கரின் கவிதைகளை மொழிப் பெயர்ப்பதென்பது கஷ்டமான காரியம். அவர் சமஸ்கிருதம் மாதிரி உயரிய மொழியை பயன்படுத்துவார். அதே போல கொச்சை மொழிகளையும் தன் கவிதைகளில் பயன்படுத்துவார். நல்ல படைப்புகளை நாம் படிக்கும் போது அது நம் மொழியிலும் வர வேண்டும் என்ற என்னுடைய தனிப்பட்ட ஆவலும் அதில் இணைந்ததால்தான் நான் அதைச் செய்தேன். அது நமக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்பித்தான் செய்தேன். அவரும் பல விஷயங்களில் உதவி புரிந்தார். பல்வேறு தளங்களில் எனக்கு தைரியமூட்டினார். அது ஒரு பெரிய சவால். மொத்தம் மூன்று வருடங்கள் அந்தக் கவிதை நூலை நான் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டேன். இந்த விஷயத்தில் நான் க.நா.சு.கட்சி. ஒரு படைப்பை மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும்போது நம்முடைய ''பொது தமிழ்'' தன்மையில் அதைக் கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. க.நா.சு.வும் இதே கருத்துடையவர்தான். மூல மொழியின் நடை அழகு கெடாமல் அதில் கொஞ்சமாவது மொழிபெயர்ப்பில் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும்.

தகழி சிவசங்கரன் பிள்ளையின் ''இரண்டு இடங்கழி'' என்ற நாவலை ராமலிங்கம் பிள்ளை தமிழில் மொழிபெயர்த்தார். ''செம்மீன்'' என்ற நாவலை சுந்தர ராமசாமி மொழிபெயர்த்தார். சுந்தரராமசாமியின் மொழிபெயர்ப்புக்குத்தான் பரவலான அங்கீகாரம் கிடைத்தது. தகழியின் மொழி நடை அழகை கொஞ்சமாவது தமிழில் கொண்டு வர வேண்டும் என்று சுந்தர ராமசாமி சிரத்தை எடுத்துக் கொண்டார். ஆனால் ராமலிங்கம் பிள்ளை பொதுத் தமிழில் அப்படியே மொழிபெயர்த்திருந்தார்.

தீராநதி: என்னுடைய கேள்வி ஒரே படைப்புக்கு இரு விருதுகள் கொடுப்பது ஆரோக்கியமானதா என்று கேட்கிறேன்?

நீல.பத்மநாபன்: அது ஏற்கெனவே மூல மொழியில் விருது கொடுத்திருந்தாலும் அது மலையாளத்தில் தானே கொடுக்கப்பட்டது. தமிழ் வாசகர்கள் அதைப் படிக்க வாய்ப்பு என்பது எப்போது வரும். அது தமிழில் மொழிபெயர்க்கப்படும் போதுதானே வரும். ஆக, சிரத்தையோடு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்புக்கு இன்னொரு விருது கொடுப்பது என்பதில் தவறில்லையே?

தீராநதி: மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் சொந்த படைப்பிற்கான கற்பனைத் திறன் அடிபட்டு விடும் என்ற ஒரு கருத்து தமிழில் நிலவுகிறது. நீங்கள் இருமொழிகளில் (ஆங்கிலம், மலையாளம்) இருந்து மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் ஊடே ஒரு படைப்பாளர் என்ற முறையில் இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்: அந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் சொல்லப் போனால் நேரம்தான் வேண்டும். க.நா.சு. உலகப் படைப்புகளையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வந்ததன் மூலம் அவரது பார்வை இன்னும் விசாலமானது என்றுதான் நினைக்கிறேன். ஒரு வகையில் சொல்லப் போனால், மொழிபெயர்ப்பில் ஈடுபட்டதன் மூலம் அது என் எழுத்து அனுபவத்தையும், கதை அனுபவத்தையும் வளர்த்திருக்கிறது என்று தான் சொல்வேன்.

தீராநதி: தமிழ்மொழி பேசுகின்ற நிலப்பரப்பைத் தாண்டி மலையாள நிலப்பரப்பில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் நீங்கள். இப்படி ஒரு மொழியில் எழுதிக் கொண்டு வேறு மொழி புறச்சூழலில் வசித்துக் கொண்டு உள்ள எழுத்தாளன் என்றளவில் இருக்கும் சாதக பாதகம் என்ன என்று உணருகிறீர்கள்?

நீல.பத்மநாபன்: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆரல்வாய்மொழி பக்கத்தில் இருந்த செக்போஸ்ட்டை தூக்கிக் கொண்டு போய் களியக்காவிளையில் வைத்து விட்டார்கள். அங்கிருந்தவர்களுக்கும் இங்கிருந்தவர்களுக்கும் உள்ள பழைய கொடுக்கல் வாங்கல் முறையெல்லாம் அப்படியேதான் இன்றைக்கும் இருந்து வருகிறது. பிரிவினை சமயத்தில் ஒரு ஊடாட்டம் ஏற்பட்டுவிட்டது. ஒரு திரிசங்கு நிலையில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் என்று சொல்லலாம். தூய தமிழில் இருந்து வழக்கொழிந்து போன பல அறிய சொற்கள் இந்த திருவனந்தபுரம் பகுதிப் புழக்கத்தில் இன்றைக்கும் இருந்து வருகிறது. தமிழ்நாடு என்று சொல்கின்ற தமிழ் நிலப்பரப்பில் வழக்கொழிந்து போய்விட்ட பல தமிழ் வார்த்தைகளை இன்றைக்கும் இங்குள்ளவர்கள் சர்வசாதாரணமாக வீடுகளில் பேசி வருகிறார்கள். ''திரைகடல் ஓடியும் திரவியம் தேடு'' என்ற பழந்தமிழ் பாடல்களிலுள்ள ''திரை'' என்று கடல் அலையைக் குறிக்கும் வார்த்தை இங்கு இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது. இங்குள்ளவர்கள் யாரும் ''அலை'' என்று சொல்லமாட்டார்கள். திரை என்றுதான் சொல்வார்கள். இப்படி பல சாதகமான ஒரு சூழல் உண்டு. எதையும் விலகி நின்று பார்க்கும் ஒரு பார்வை எங்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. ''உறவுகள்'' நாவலுக்கு அண்ணாமலை செட்டியார் விருது கிடைத்த போது சிலர் ''விருது தமிழ்நாட்டை விட்டு வெளியில் போய்விட்டது'' என்று கூடச் சொன்னார்கள். ''நேட்டிவிட்டி'' என்பதுதான் இங்கு பிரச்சினை. தமிழ்நாட்டில் போய் ''நேட்டிவிட்டி'' சான்றிதழ் கேட்டால் ''நீ கேரளத்தில்தானே பிறந்தாய் அங்க போய்க் கேள்'' என்கிறார்கள். இங்குள்ளவர்களிடம் கேட்டால் ''நீங்களெல்லாம் தமிழர்கள்தானே உங்களுக்கு எப்படி இங்கு ''நேட்டிவிட்டி'' சான்றிதழ் கொடுக்க முடியும். நீ போய் தமிழ்நாட்டில் கேளு'' என்கிறார்கள். நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்று சொல்கிறோம். ''எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்று நாம் சொல்கிறோம். ஆனால் இந்த மாதிரி உள்ள கொஞ்ச ஜென்மங்களும் இந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். கேரளத்தில் இந்தப் பிரச்சினையை நான் சொல்கிறேன். இதே மாதிரி ஆந்திராவில் இருக்கிறது. கர்நாடகத்தில் இருக்கிறது. கல்கத்தாவில் கூட தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை விட புலம் பெயர்ந்த தமிழர்கள் விலகி நின்று தமிழைப் பார்க்கிறார்கள். அதிதப் பற்றோடு தமிழை நேசிக்கிறார்கள்.

அப்புறம் இன்னொரு விஷயம். இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா நடந்த போது, மத்திய அரசாங்கத்திலிருந்து எல்லா மாநிலங்களுக்கும் ''இரவீந்திரநாத் ஆடிட்டோரியம்'' கட்ட அத்தனை செலவுக்கான முழுத் தொகையையும் கொடுத்தார்கள். கேரளத்தில் கட்டி இருக்கிறார்கள். கர்நாடகத்திலும் கட்டி இருக்கிறார்கள். இந்தியாவின் எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் அந்த ஆடிட்டோரியம் இருக்கிறது, தமிழ்நாட்டைத் தவிர. தமிழ்நாடு அரசு எங்களுக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டது. நமக்கு மகாகவி பாரதி என்ற மாபெரும் கவிஞர் இருக்கலாம். ஆனால் ஒரு பொது அரங்கமாக நமக்குக் கிடைக்க வேண்டியதை நாம் ஏன் இழக்க வேண்டும்?. இந்த நிதியை பயன்படுத்தாமல் விட்ட ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இதை இங்கு இருப்பதனால்தான் நாங்கள் கேள்விப்பட முடிகிறது. கேரளத்தில் உள்ள இந்த ஆடிட்டோரியத்தில் தினமும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதே மாதிரி பத்திரிகைகள். மலையாளத்தில் வெளிவருகின்ற மலையாள மனோரமா ''பாஷா போஷ’னி'' என்ற பத்திரிகையை இலக்கியத்திற்காகவே நடத்துகிறது. அதை மீறி ''மாத்ருபூமி'' ''கலைகௌமுதி'' என்ற பத்திரிகைகள் விற்பனைக்காக தங்களின் தரத்தை தாழ்த்திக் கொள்ளாமல் செயல்படுகின்றன. சினிமாவைப் பற்றி பல கட்டுரைகள் இதில் வரும். ஆனால் தரமிக்கதாக இக்கட்டுரைகள் இருக்கும். இதே மாதிரியான பத்திரிகைகளை தமிழ்நாட்டு எல்லையை விட்டு வசிப்பதனால் மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகை சினிமாவைப் போட்டு ''பாப்புலர்'' ஆகிவிட்டதென்றால், அதற்கு முன்னால் தரமான பத்திரிகையாக இருந்தவர்களும் கூட விற்பனைக்காக உடனே அதே போல ''இமிடேட்'' செய்து கொள்கிறார்கள். நான் சொல்லும் பத்திரிகையெல்லாம் தூய்மையான இலக்கியத்தை மட்டுமே வெளியிடுகின்ற பத்திரிகைகள் அல்ல; அதிலும் தினசரிக்கான நாட்டு நடப்பு சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் வரவே செய்கின்றன. ஆனால் தமிழில் வருவதைப்போல மட்டமாக அல்ல.

தீராநதி: தமிழில் வெளிவரும் மசாலா பத்திரிகைகள் போலவே மலையாளத்திலும் ''பைங்கிளி சாகித்யம்'' என்ற வகையான எழுத்துகள் வெளிவரும் பத்திரிகைகள் உண்டல்லவா?

நீல.பத்மநாபன்: ஆமாம். மசாலாத்தனமான எழுத்துகளை, ரொமண்டிசைஸ் கதைகளை, கிளுகிளு எழுத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் மலையாளத்தில் - நீங்கள் குறிப்பிடும் பைங்கிளி சாகித்யம் பாணி பத்திரிகைகள் வரவே செய்கின்றன.

தீராநதி: தமிழில் வெளிவரும் வெகுஜன பத்திரிகைகளை விமர்சிக்கும் எழுத்தாளர்கள் மலையாளத்தில் இந்த மாதிரி மரபு கொண்ட ஓர் எழுத்து வகை இருப்பதை சொல்வதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லையே ஏன்?

நீல.பத்மநாபன்: பைங்கிளி சாகித்யம் மாதிரியான பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் யாரும் இலக்கிய அந்தஸ்துக்கான போட்டிகளில் பங்கேற்று தங்களுக்கும் அதே மாதிரியான அங்கீகாரம் தேவை என்று இங்கு சொல்வதில்லை.

தீராநதி: தொன்மைக்காலம், மத்தியக் காலம், மறுமலர்ச்சி யுகம், பரோக், ரொமாண்டிசிஸம், நவீனத்துவம் என்று தத்துவ வரலாற்றை ஆறு பகுதிகளாகப் பிரித்து ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு தத்துவ காலத்திற்கேற்ப கிளாஸ’சிஸம் தொடங்கி பல்வேறு வகையான எழுத்து முறைகள் கையாளப்பட்டு வந்திருக்கிறது. இதில் ''ரியலிஸம்'' என்று சொல்லக் கூடிய எழுத்துபாணி தமிழில் அதிகமாகக் கையாளப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் கூட ''சோஷ’யல் ரியலிஸம்'' என்று சொல்லக் கூடிய எழுத்து வகையை (வட்டார வழக்கு) அதிகமாக கையாண்டிருக்கிறீர்கள். இந்தப் போக்கு 1930-ல் அமெரிக்கக் கலைத்துறையில்தான் முதன்முதலாக வேர்விட்டது. அதற்குப் பிற்பாடு அதையட்டி சோரியலிஸ்ட் ரியலிஸம், மேஜிக் ரியலிஸம், மோதிக்கல் ரியலிஸம் என்று ரியலிஸம் தன் எல்லையை விரிக்கத் தொடங்கியது. ஆக, ரியலிஸ எழுத்துப் பணி என்பதுகூட ஒரு வகையான இஸத்தைச் சேர்ந்ததுதான். ஆனால் தமிழில் இந்த இஸத்தை ஒட்டி எழுதும் எழுத்தாளர்கள் மற்ற எழுத்துக்கள் ஏதோ இஸங்களை முன்வைத்து எழுதுவதாகவும் இவர்களின் யதார்த்த பாணியான எழுத்து எந்த இஸத்தையும் சாராத ''அசல்'' தன்மையான எழுத்தென்றும் பேசுகிறார்கள். நீங்கள் கூட ''இஸங்களைப் பற்றிய awareness என்பது ஓர் எழுத்தாளனுக்கு அவசியம் தேவை'' என்று சொல்லிவிட்டுப் பிறகு இந்த மாதிரியான இஸங்களை ஒட்டிய உத்திகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது என்கிறீர்கள்? அப்போது யதார்த்த வகையான எழுத்தென்பது எந்த இஸத்தையும் சாராதது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நீல.பத்மநாபன்: இலக்கியம் என்பது எந்தக் காலத்துக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது. அது காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டுதான் வரவேண்டும். மாறத்தான் வேண்டும். நேற்றைக்கு இருந்த நிலைப்பாட்டிலிருந்து எவ்வளவோ மாறிதான் இன்றைக்கு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடக்க கால நாவல்களில் ரொமாண்டிசிஸம் என்ற வகை இருந்தது. பிற்பாடு ரியலிஸம் வந்தது. பிறகு நிறைய இஸங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. நம்முடைய தொடக்ககால இலக்கியங்களிலிருந்து தொடர்ந்து வரும் ஒரு விஷயம் காலம்-வெளி என்பது. எந்தப் படைப்பை எடுத்துக் கொண்டாலும் அது எந்தக் காலத்தில் நடந்தது? எந்த இடத்தில் நடந்தது என்பது தேவையான ஒன்று. இது எந்த இஸம் வந்தாலும் நமக்கு இவை தேவையாக இருக்கக் கூடியது. ''பரதமுனி'' நாட்டிய சாஸ்திரத்தை எடுத்துக் கொண்டாலும் ஆனந்தவர்த்தனின் ''தொன்யா லோகம்'' என்ற நாவலை எடுத்துக் கொண்டாலும் இந்தக் காலமும் வெளியும் வந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கப்புறம் நம் தமிழ் மரபோடு ஒட்டிய திணைக்கோட்பாடு. அதையட்டிய நமது மரபார்ந்த தொடர்ச்சியை பேணக்கூடிய எழுத்து. இதைத்தான் நான் முக்கியமாக எடுத்துக் கொண்டு இயங்குகிறேன். இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் நான் எனக்குள் வகுத்துக் கொண்ட முறைமைகள் இவை. இதுதான் நமது வாசக அனுபவத்தினை மீறாத ஓர் எழுத்து முறையாக இருக்கிறது.

முதலில் படைப்புதான் வெளிப்படுகிறது. பிறகுதான் வியாக்கியானங்களும் இலக்கணங்களும் வருகின்றன. ஒருவனின் ''மனவேலை''யை நான் செய்கிறேன். ஸ்டீமோ கான்ஸ’யஸ்ஸை எடுத்துக் கொண்டாலும் சரி, ரியலிஸத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, சோஷ’யல் ரியலிஸத்தை எடுத்துக் கொண்டாலும் எதுவாக இருந்தாலும் அது படைக்கப்பட்ட பிற்பாடுதான் வருகிறது. ஆக, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இந்த இஸங்களுக்கு என்றுமே நான் எதிரியல்ல் நானே இந்த நடப்பியல் பாணியை விட்டுவிட்டு எங்கோ நகர்ந்து நான் வந்துவிட்டேன். முதலிலேயே என்னை ஒரு நடப்பியல் பாணி எழுத்தாளர் என்று முத்திரை குத்திவிட்டார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீங்கள் எந்த இஸத்தை ஒட்டி வேண்டுமென்றாலும் எழுதலாம். ஆனால் அது வாசகனுக்குப் போய்ச் சேரவேண்டும். வாசகனுக்கு ஓர் அனுபவத்தை அது கொடுக்க வேண்டும். அப்படி நிகழாவிட்டால் எழுதி என்ன பயன் சொல்லுங்கள். இப்போது கூட ''முப்பரிமாண வகையிலான நாவல்'' என்று கூட எழுதுகிறார்கள். அது ஒரு புதுமுயற்சி என்பதால் வரவேற்கிறேன். ஆனால் அது வாசகனிடம் போய்ச்சேர்ந்து அவனுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்கிறேன் அவ்வளவுதான்.

தீராநதி: என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் நீங்கள் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடே பதிலளிக்கிறீர்கள். பொதுவான கருத்தாகத்தான் எல்லாவற்றையும் முன்வைக்கிறீர்கள். ஆனால் ஷண்முக சுப்பய்யா பற்றிய ஒரு கலந்துரையாடலில் நீங்களும் நகுலனும் இப்படிப் பேசிக் கொள்கிறீர்கள்: ''இலக்கியம் வாழ்க்கையின் அப்பட்டமான பிரதிபலிப்பு இல்லை. இதனால் இலக்கியம் வேறு. வாழ்க்கை வேறு. தற்கால இலக்கிய விமர்சனம் இப்படித்தான் இயங்குகிறது'' என்கிறார் நகுலன். நீங்களோ ''ஒரு கவிதையைப் படிக்கும்போது அதை எழுதியவனின் வாழ்க்கையையும் அதில் இணைத்துப் பார்ப்பது என்பது ''எக்ஸ்ட்ரா லிட்டரரி'' என்கிறீர்கள். நகுலன் போன்ற ஒரு படைப்பாளியிடமே முற்றிலும் மாறுபட்ட கருத்தை தைரியமாக முன்வைத்த நீங்கள் இன்றைக்கு ஏன் எல்லாவற்றையும் பொதுத் தன்மையோடு கறார்த்தனம் இல்லாமல் பதில் செல்கிறீர்கள். இந்தப் பாதைக்குள் எப்படித் தள்ளப்பட்டீர்கள்?

நீல.பத்மநாபன்: நம்முடைய மன வார்ப்புகள், சொந்த அனுபவங்கள் போன்றவற்றை வைத்து இந்தக் கருத்துதான் சரியென்று நாம் தீர்மானிக்கிறோம். இதற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு கருத்து என்பதும் இங்குண்டு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னைவிட நகுலனுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அவர் எப்போதும் அவருடைய கருத்துகளை மாற்றிக் கொள்வதே கிடையாது. நகுலனைப் பொறுத்தளவில் இலக்கியமும் வாழ்க்கையும் வேறு வேறானதல்ல; இரண்டுமே ஒன்றேதான். முழுக்க முழுக்க ஒரு எழுத்தாளானாக மட்டுமே வாழ்ந்து மறைந்தவர் அவர். எப்போதும் நகுலனின் கருத்துக்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரிடம் பல இடங்களில் சண்டையும் போட்டு இருக்கிறேன். அதையெல்லாம் தாண்டி என் மீது அவருக்கு ஓர் அன்பு உண்டு. என்னைவிட ஷண்முக சுப்பய்யா நகுலனிடம் பல விஷயங்களுக்காக சண்டை போட்டிருக்கிறார்.

நகுலனைப் பொறுத்தளவில் தனிப்பட்ட ஆளை வைத்துக் கொண்டு அவரின் இலக்கியத் தரத்தை எடைபோட மாட்டார். நான் ''எக்ஸ்ட்ரா லிட்டரரி'' என்று குறிப்பிட்டது கூட அதை வைத்துதான்.

தீராநதி: ''எக்ஸ்ட்ரா லிட்டரரி'' என்று நீங்கள் குறிப்பிடும் பதம் இலக்கியத்திற்கு மேலும் கூடுதலான தகவல் என்ற அர்த்தத்தில்தானே?

நீல.பத்மநாபன்: இல்லை. இலக்கியத்திற்குத் தேவையற்ற தகவல் அது என்ற அர்த்தத்தில்தான் நான் அந்தக் கருத்தைச் சொல்லி இருந்தேன். அதற்கு அப்படியும் ஓர் அர்த்தம் வரும் என்பது எனக்குப் புலப்படவில்லை. ஒருவனின் படைப்பை அவனது சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பலசமயங்களில் அது தவறான முடிவை எட்டிவிடும். ஆகவே, கூடாது என்ற அர்த்தத்தில்தான் அதை நான் குறிப்பிட்டேன். அது இலக்கியத்திற்குப் புறம்பானது என்றுதான் சொல்லி இருந்தேன்.

தீராநதி: ஆனால் நீங்கள் இன்னொரு நேர்காணலில் ''படைப்பையும் எழுதியவனின் சொந்த வாழ்க்கையையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமா என்றால், ஆமாம் சேர்த்துப் பார்க்கத்தான் வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்: அப்படியா சொல்லி இருக்கிறேன்? எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. நான் என்ன சொல்கிறேன் என்றால் படைப்பில் ஒரு படைப்பாளியின் சொந்த வாழ்க்கையும் இருக்கிறது. அதை மீறி இருக்கிறது என்கிறேன்.

தீராநதி: திருவனந்தபுரம் என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் எழுத்தாளர், கவிஞர் நகுலன்தான். பிறகு நீங்கள், ஆ. மாதவன். வாழும் போதும் சரி, மறைந்த பிறகும் சரி நகுலன் என்ற படைப்பாளிக்கு ஆகச் சிறந்த ஒரு கவிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது மரணத்திற்குக் கூட ஒரு சில படைப்பாளிகள்தான் வந்திருந்தார்கள் என்ற தகவல் வருத்தத்தை அளிக்கிறது. சக படைப்பாளியாக சக சிநேகிதராக நகுலன் குறித்த இந்தச் சூழலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்: அது ரொம்ப வேதனையான சமாச்சாரம். நானும் பல இடங்களில் இதைச் சொல்லி இருக்கிறேன். இங்குள்ள மலையாள எழுத்தாளர்கள் அவர் மறைவையட்டி நிகழ்ந்த இறுதி மரியாதையில் கலந்து கொண்டு அவருக்கு கௌரவம் செய்தார்கள். அதே போல மலையாளப் பத்திரிகைகளும் அவருக்கு உரிய முறையில் மரியாதை செய்தன. தமிழில் ''தீராநதி’ என்ற ஒரு பத்திரிகை மட்டும்தான் அவருக்கு உரிய மரியாதையை செய்திருந்தது. மற்ற யாரும் சரியான முறையில் கண்டு கொள்ளவே இல்லை. கோணங்கி உள்ளிட்ட ஓரிரண்டு எழுத்தாளர்கள் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தார்கள். நகுலனுக்கு தமிழிலக்கியத்தில் கிடைக்க வேண்டிய உரிய மரியாதையோ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். தமிழில் பத்திரிகைகள் மற்ற விஷயங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை ஏன் எழுத்தாளனுக்குக் கொடுக்க மறுக்கின்றன என்பது குறித்த ஓர் ஆய்வை நாம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இன்றைக்கு இருக்கிறது. அதை நிகழ விடாமல் தடுக்கும் பிரக்ஞை எது என்று நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால், இருக்க இருக்க அந்த அகலம் கூடிக் கொண்டேதான் வருகிறது. மற்ற மொழிகளில் நெருங்கி வந்து கொண்டிருக்கும் காலத்தில் நாம் மட்டும் ஏன் விலகிப் போய்க் கொண்டே இருக்கிறோம் என்று தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

தீராநதி: தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் இந்தக் கேள்விக்கு மறுக்காமல் பதில் சொல்லுங்கள். தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பது நடப்பில் இருக்கின்ற ஒன்று. ஆனால், கேரளத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறையில்லாமல் தவிப்பதாக இங்குள்ள தமிழ் மக்கள் சொல்கிறார்கள். இங்குள்ள திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் மூலம் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

நீல.பத்மநாபன்: எடுத்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகை அன்று தமிழர்கள் ''ரீஜினல் ஆலிடேஸ்'' என்ற சலுகையின் கீழ் விடுப்பு எடுக்கலாம். அதற்கு எந்தவிதத் தடையும் கிடையாது. ஆனால் பொது விடுமுறை என்று விடுவதில்லை.

தீராநதி: திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் மூலமாக நீங்கள் எல்லோரும் கூடி பொது விடுமுறைக்கு ஏன் முயலக் கூடாது?

நீல.பத்மநாபன்: முன்னால் நான் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறேன். இப்போது நான் ஒரு அங்கத்தினர் மட்டும்தான்.

தீராநதி: நீங்கள் ஆலோசனை சொல்லலாம் இல்லையா?

நீல.பத்மநாபன்: கட்டாயம் ஆலோசனை சொல்லலாம். அவர்களும் என்னுடைய ஆலோசனை இல்லாமலே பல நற்காரியங்களைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகளைக் கொண்டுவருவது. மைனாரிட்டி மொழியின் அடிப்படையில் கேரள அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிப்பது என்று பல விஷயங்களை மேற்கொண்டு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகை அன்று முழு விடுப்பு விடுகிறார்களா?

தீராநதி: ஆமாம். தமிழ்நாடு முழுவதும் அன்றைக்கு முழு விடுமுறைதான்.

நீல.பத்மநாபன்: இங்கு அப்படி இல்லை. பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகளின் பண்டிகைதானே. விவசாய மலையாளிகளும் அதைக் கொண்டாடலாமே அதில் தவறிருக்கிறதா என்ன? மேற்சொன்ன பிரச்சினையை அரசின் கவனத்திற்கு திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் மூலம் கட்டாயம் எடுத்துச் செல்வோம்.

நன்றி: தீராநதி 2008

Aug 30, 2012

சண்டையும் சமாதானமும் - நீல. பத்மநாபன்

தமிழ்நாட்டு எல்லைகளுக்கப்பாலிருந்து தமிழ் இலக்கியம் படைப்பவர்களுள் மிகுந்த கவனமும் பாராட்டும் பெற்றவர் நீல. பத்மநாபன். (பிறந்த தேதி: 26-4-1938) பன்னிரண்டு நாவல்களும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு கவிதைத் தொகுப்பும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் நூல் வடிவில் வெளிவந்துள்ள இவருடைய படைப்புகள். 'தலைமுறைகள்' (நாவல், 1968) ஆங்கிலம், மலை யாளம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. 'பள்ளிகொண்டபுரம்' (நாவல், 1970) நேஷனல் புக் டிரஸ்டின் ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் இதுவரை ஹிந்தி, உருது, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது. 'உறவுகள்' (1975) ராஜா சர் அண்ணா மலைச் செட்டியார் ரூ. 10,000 பரிசு பெற்ற நாவல். இவருடைய பல படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதோடு பல்கலைக் கழக அளவில் ஆய்வும் செய்யப்படுகின்றன. மலையாளத்திலும் தமிழிலும் இரு தொகுப்பு நூல்கள் தொகுத்திருக்கிறார். கேரள மாநில மின்சார வாரியத்தில் உதவி எக்ஸிகியூடிவ் இன்சினியராகப் பணியாற்றினார்.



neelapadmanapan

'அம்மா...'

மிகவும் அருகில் தெளிவாகவும் அடக்கமாகவும் கேட்ட அந்தக் குரல் யாருடையது என்று மாரியம்மைக்குப் புரிந்து போய்விட்டது. எனினும் நம்பமுடியவில்லை.

செல்லையா வந்துட்டானா? மாரியம்மையின் விழிகள் கனத்தன.

நாலு நாள் பட்டினியின் அசதியும், ஜுரத்தின் களைப்பும் வயோதி கத்தின் தளர்ச்சியும் கூடச் சேர்ந்திருந்ததால் அவள் பார்வைக்கு நல்ல தெளிவு இருக்கவில்லை. எனினும் மங்கலாகத் தெரிந்த பரந்த முகமும், இருபக்கங்களிலும் முறுக்கிவிடப்பட்டிருந்த பெரிய மீசையும் அவனை இனம் கண்டுகொள்ள வைத்துவிட்டன.

காய்ச்சல் இருக்கிறதா என்று அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்த அவன் கையை, நட்டாற்றில் முழுக இருந்தவளுக்குக் கிடைத்த அடைக்கலமாய் அவள் பற்றிக்கொண்டாள்.

மாரியம்மையின் முகத்தில் மகிழ்ச்சியின் வரிகள் மின்னின. அவள் விழிகள் நிறைந்துவிட்டன. செல்லையா ஒன்றும் பேசவில்லை. தொண்டை கரகரக்க அவளே கேட்டாள்:

"நீ எப்பம்லே வந்தே?" 

"ரண்டுமூணு மனி நேரத்துக்க முந்தியே நா வந்தாச்சு.ஒன்னைக் கூப்பிட்டேன்.நீ களைச்சுப் போய் நல்லா ஒற‌ங்கிட்டிருந்தே.எளுப்பாண்டாமுண்ணு நேரே "தட்டுக்கு"ப் (மாடிக்கு) போயி தம்பி தங்கசாமீட்டே பேசீட்டு இருந்தேன்."

"ஓஹோ!"

மாரியம்மையின் முகத்தில் சற்றுமுன் பளீரென்று பிரகாசித்த நம்பிக்கையின் ஒளி சட‌க்கென்று மறைந்தது.அங்கே மீண்டும் ஏமாற்றத்தின் இருள் சூழ்ந்து கொண்டது.

"அப்பம் நீ நேரத்தையே வந்தாச்சா?"

அவள் பெருமூச்சு விட்டாள்.

நாலைந்து நாட்களாகப் பகல் இரவு நேரங்களின் பேதத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க இயலாமல் கிடந்த அவள் சுற்றுமுற்றும் பரக்கப் பரக்கப் பார்த்தாள்.

மங்கலாக மின்சார விளக்கு அழுது வடிகிறது.எதிரில் தெரிந்த ஜன்னல் கம்பிகள் கருமையான ஆகாயப் பின்ன‌ணியை நெடு நீளத்தில் கோடு கிழித்துக் காட்டுகின்றன.

அப்போ,ராத்திரி ஆயாச்சா?அப்படியென்றால் மருமகள் தமிழ்க் கொடியும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருப்பாள்.

தெருவில் சிறுவர் சிறுமிகள் ஓடிப் பிடித்து விளையாடும் அரவம் கேட்கிறது.தெருநடையில் கைக்குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு நிற்கும் ஒன்றிரண்டு பெண்களின் முகங்கள் நிழலாடுகின்றன.

கீழ்ப் போர்ஷனில் வசிக்கும் வீட்டுச்சொந்தக்காரி சொர்ணம்மா மெல்ல வெளியே வந்து திண்ணை நடையில் நின்றாள்.

"ஆனாலும் உங்கம்மைக்கு இந்த வயசான காலத்திலெ இவ்வளவு பிடிவாதம் கூடாது.இந்த நாலஞ்சு நாளா அறப்பட்டினி.மூத்த மகன் பெங்களூரிலிருந்து வரமுந்தி,செத்துப் போனா போகட்டு முண்ணு,ஒரு சொட்டுத் தண்ணியோ,மருந்தோ கூடக் குடிக்காமே அந்தக் கெடையா கெடக்கா..."

கால் சட்டையும், ஷூஸும் அணிந்திருந்ததால் தரையில் உட்காருவதில் இருக்கும் அசௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் அம்மா படுத்திருந்த அந்தப் பாயின் ஓர் ஓரத்தில் ஒருவாறு கஷ்டப்பட்டு அவன் உட்கார்ந்தான்.

"உம்...நாலஞ்சு நாளா பட்டினி.ஏதாவது குடிக்காண்டாமா?"

"ஒண்ணும் வேண்டாம்லே. கொஞ்சம் வெஷம் இருந்தா வாங்கிட்டுவா. எனக்கு இவ்வளவு நாளு வாந்தது எல்லாம் போரும்ப்பா போரும்."

'தன்னிடம் வந்து விவரங்களைக் கேட்டு அறியும் முன், தங்க சாமியிடமும் அவன் அருமாந்தப் பெண்டாட்டி தமிழ்க்கொடியிடமும் போய் அவர்கள் வாய் வழி எல்லாவற்றையும் கேட்டறிந்துவிட்டு, சாவகாசமாய்த் தன்னிடம் வந்திருக்கிறானே இவன்?' என்று செல்லையாவின் மீதும் ஒருவித எரிச்சல் வர, தன் தலையில் அடித்தவாறு இப்படிச் சொல்கையில் அவள் அழுதேவிட்டாள்.

செல்லையாவுக்கு அந்தக் காட்சி மிகவும் வேதனையை உண்டு பண்ணியது என்பதை அவன் முகம் காட்டியது.

தங்கசாமியைவிடப் பத்து வயசு மூத்தவன் அவன். செல்லையாவுக்கு இப்போது முப்பத்தஞ்சு வயசு இருக்கும். நாகர்கோயிலில் நாகம்மாள் மில்லில் மேஸ்திரியாக இருக்கிறான். என்னவோ ஒரு புதிய மெஷினின் ஆறு மாதப் பயிற்சிக்காக, மில்லில் இருந்தே அவனைப் பெங்களூருக்கு அனுப்பியிருந்தார்கள். பெங்களூருக்குப் போய் மூணு மாசம் கூட இருக்காது; அதற்குள் அம்மாவின் அவசரக் கடிதம் கண்டு திருவனந்தபுரத்துக்கு வந்திருக்கிறான். அவனுக்கு, சின்னவனைவிட அம்மாவிடம் அதிகப் பாசம். இது மாரியம்மைக்கு நன்றாகத் தெரியும்.

"சரி, தம்பி வீட்டிலிருந்துதானே ஒண்ணும் குடிக்கமாட்டே? நா கடேலிருந்து வாங்கீட்டு வந்து தந்தாலும் குடிக்கமாட்டெயா? உம். நா இன்னா வந்துட்டேன்" என்று எழுந்தான் அவன்.

மாரியம்மையின் சம்மதத்துக்குக் காத்திராமல் வெளிவாசலின் பக்கத்தில் சென்றவன் திரும்பிச் சொர்ணம்மாளிடம், "டீ வாங்கீட்டு வர ஒரு சின்னப் பாத்திரம் இருந்தா தாருங்க" என்று கேட்ட போது அவள் உள்ளே சென்று, திருகு மூடி போட்ட ஒரு ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தான்.

இனி, செல்லையா திரும்பி வந்த பிறகுதான் கேஸ் விஸ்தாரம் நடக்கும் என்பதை அறிந்துகொண்டு அதை ஒரு இடைவேளையாகக் கருதி தத்தம் வீடுகளுக்குச் சென்றார்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற அண்டை வீட்டுப் பெண்கள்.

கனத்த இமைகளைத் திறக்க முடியாமல் அந்தத் திண்ணையின் ஓரத்தில் மாரியம்மை ஒடுங்கிப் போய்த் தனிமையில் அப்படியே கிடந்தாள்.

தூக்கமா மயக்கமா என்று புலப்படவில்லை. மாடியில் குடியிருக்கும் இளைய மகன் வீட்டுச் சந்தடி, அதோடு கீழ்ப்போர்ஷனில் வசிக்கும் சொர்ணம்மா குடும்பத்து இயக்க ஒலிகள், வீட்டின் உள்ளிலும், வெளியில் தெருவிலும் நடப்பவர்களின் காலடியோசைகள்.

சுரம் தொடங்கும் நாள் வரை வயிற்றில் பசி கிள்ளுவதை அவளால் நன்கு உணர முடிந்தது. இப்போது பசியை அவளால் உணர்ந்தறிய முடியவில்லைதான். எனினும், செல்லையாவின் கையி லிருந்து சுடச்சுட ஏதாவது வாங்கிக் குடித்துத் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டால் தேவலை என்ற மன உறுத்தலும் இப்போது இல்லாமல் இல்லை.

சற்றுக் கழிந்து சரக்சரக்கென்று ஷூஸ் தெருவில் உராயச் செல்லையா உள்ளே வந்தான். கையில் ஒரு சிறு பொட்டலத்தில் ரொட்டியும் ஆரஞ்சும் இருந்தன. தவிர, பாத்திரத்தில் சுடச்சுட டீயும்.

கால் சட்டை ஜேபிலிருந்து எடுத்த வர்ண வெள்ளித் தாளில் அழகாக ஒட்டியிருந்த ஏழெட்டு மாத்திரைகளில் ஒன்றைக் கிழித் தெடுத்தான். மாரியம்மையைக் கைத்தாங்கலாகத் தாங்கி உட்கார வைத்து அவள் வாயில் மாத்திரையைப் போட்டுவிட்டு, அவள் பிகு செய்வதைப் பாராட்டாமல், டீயைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிக்கவைத்தான். ஒரு ஆரஞ்சை உரித்துச் சுளைகளையும், ஒரு ரொட்டித் துண்டையும் கட்டாயப்படுத்தி அவளைத் திங்கவைத்து விட்டுப் படுக்க வைத்தான். பிறகு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, பக்கத்தில் சுவரில் சாய்ந்தவாறு பாயில் சௌகரியமாக உட்கார்ந்தான் செல்லையா.

இப்போது மாரியம்மைக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது.

"சரி, நீ எனுத்துக்கு அப்படி அவசரம் அவசரமா 'உடனேயே புறப்பட்டு வா' ன்னு எனக்கு எழுத்து (காயிதம்) போட்டே? என்று அவன் மெல்ல ஆரம்பித்தான். "எல்லாத்தையும் ஒனக்கே அருமைத் தம்பியும் தம்பிக்க கொண்டாட்டியும் ஒண்ணுக்குரண்டா ஒங்கிட்டெச் சொல்லியிருப்பாங்களே? இனி நான் வேறெ சொல்லணுமா?" என்ற அவள் குரலில் இருந்த எரிச்சலையும் இளக்காரத்தையும் பாராட்டாமல் அவன் மீண்டும் அவளை வற்புறுத்தினான். "அவ்வொச் சொன்னதெல்லாம் கெடக்கட்டும். நீ சொல்லு" என்று விட்டு, மீண்டும் தெருவாசலில் வந்து இடம் பிடித்துக்கொண்டு விட்ட அண்டை வீட்டுப் பெண்களைத் தலை உயர்த்திப் பார்த்தான்.

அவன் பார்வையின் பொருள் சொர்ணம்மாவுக்கும் புரிந்தது. அந்த வீட்டின் கீழ்ப்போர்ஷனில் சொர்ணம்மாவின் கூட அவள் மகன், மகன் பெண்டாட்டி, மகனுடைய இரண்டு வயசான மகள் இத்தனை பேர்களும் வசிக்கிறார்கள். வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் உதவியாக இருக்குமே என்று மேல் மாடியை, கன்யாகுமரி ஜில்லாவிலிருந்து சமீபத்தில், திருவனந்தபுரம் ஐ.ஜி. அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை கிடைத்து வந்திருக்கும் தங்கசாமியின் குடும் பத்துக்கு நாற்பது ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தான். மகன் தங்கச்சாமியிடம் சண்டை பிடித்துக்கொண்டு இதோ மாரியம்மை கிடக்கும் இந்த வெளித் திண்ணை வழியாகத் தான் மேலே வசிக்கிறவர்கள் கீழே பின் பக்கத்திலுள்ள குளியலறைக்கோ, வெளியில் தெருவுக்கோ போய் வரவேண்டும். தங்கசாமி குடும்பத்துக்கு மேல்மாடியை மட்டுமே வாடகைக்குக் கொடுத்திருப்பதால், சரியாகச் சொல்லப் போனால், இந்தத் திண்ணையில், போகவர ஒரு வழி என்பதற்கு மேல் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

எனினும், மாரியம்மை கடந்த நாலைந்து நாட்களாக அங்கே படுத்திருப்பதையோ, இப்போது அவள் மூத்த மகன் செல்லையா அங்கே உட்கார்ந்திருப்பதையோதான் தடுக்கவில்லையே? ஆனால் தனக்குப் பழக்கமான அண்டைவீட்டுப் பெண்கள் அங்கே வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை 'உங்க வேலையைப் பார்த்துப் போங்கோ'ண்ணு ஒரேயடியாக விரட்டியடிக்க முடியுமா?" என்ற கேள்விக் குறியுடன் சொர்ணம்மா பேசாமல் நின்றுகொண்டிருந்தாள்.

இவையெல்லாம் செல்லையாவுக்கும் தெரிந்திருந்ததால், பிறகு அவன் அதைச் சட்டை செய்யாமல் அவன் அம்மா சொல்வதைக் கேட்பதில் மும்முரமானான்.

"லே, செல்லய... ஒனக்குத்தான் தெரியுமே. தங்கச்சாமிக்கு ஆபீஸுக்குப் போக என்னைக்கும் காலம்பர ஒம்பது மணிக்கு இங்கே வீட்டை விட்டு எறங்கணும். பூந்துறைப் பள்ளிக்கூடத்தில் வாத்தியாரு வேலைப் பாக்கும் தமிழ்க் கொடிக்குக் காலம்பரெ ஏழுமணிக்கு வீட்டிலிருந்து போகணும். கைப்புள்ளெ வேறெ! நா இந்த வயசான காலத்திலெ நேரம் விடிய முன்னே அஞ்சு மணிக்கே எந்திச்சு சாப்பாட்டைத் தயாரிச்சு அவ கையிலெ கொடுத்தனுப்புவேன். தங்கச்சாமி காலம்பரப் போனா பொறவு சாயங்காலம் பாத்தாப் போரும். உச்சைக்கு (மாத்தியானத்துக்கு)ப் பையன் கிட்டெ அவனுக்குச் சோறு கொடுத்தனுப்புவேன். கைப்புள்ளையைப் பாக்கணும். ராத்திரிச் சாப்பாட்டுக்குச் சோறு வைக்கணும். அடுத்த நாள் காபிக்குத் தோசை மாவு அரைக்கணும். இதையெல்லாம் நா ஒத்தேலெ மாடுபோல இந்த வயசான் காலத்திலே செய்தேன்."

மாரியம்மைக்குத் தான் பட்டப் பாட்டையெல்லாம் எண்ணி எண்ணிச் சொல்லச் சொல்லத் துக்கம் தொண்டையை அடைத்தது. "அம்மா, நீ கட்டப்படல்லேனு இப்பம் ஆராவது சொன்னாளா?" என்று செல்லையா கேட்டதும் மாரியம்மைக்கு இன்னும் கோபம் வந்தது.

"சொன்னா அந்தக் கடவுளுக்குப் பொறுக்குமா? ஆனா, என்னை வேலைக்காரீன்னா ரண்டு பேரும் நெனச்சா? இவ ரண்டு பேரும் தொரையும் தொரைசாணியுமா வேலைக்குப் போயிருவா. நா மட்டும் வீட்டிலெக் கெடந்து இந்தப் பாடான பாடெல்லாம் பட்டு இவ்வளுக்கு பண்டுவம் பாத்தேன். அந்தப் பசலையை வளர்த்தேன். கடேசியிலெ அந்தப் புள்ளைக்கப் பொறந்த நாளைக் கொண்டாட தமிழ்க் கொடிக்குத் தள்ளை வீட்டுக்கு (அம்மா வீட்டுக்கு) மூளமூட்டுக்கு ரண்டு பேருமா புள்ளையை எடுத்தூட்டுப் போறப்பம் போயிட்டு வாறேன்னு எங்கிட்டெ ஒரு வாக்குச் சொன்னா என்னா? நானும் கூடெப் போயிரவாப் போறேன்?"

அழுகையால் மேலே பேச்சைத் தொடரமுடியாமல் திணறினாள் மாரியம்மை. சொர்ணம்மாதான் நடந்ததைச் செல்லையாவிடம் விளக்கினாள்.

நாலு மாசத்துக்கு முன் ஒரு நாள். பின் பக்கத்தில் சென்று சேலையெல்லாம் அடித்துத் துவைத்துக் குளித்துவிட்டு மாரியம்மை மாடியில் சென்று பார்த்தபோது, மகனையும் காணவில்லை. மருமகளை யும் காணவில்லை. தொட்டிலில் பேரப்பிள்ளையும் இல்லை. அடுத்த நாள் பிள்ளைக்கு ஒரு வயசு திகையும் நாள் என்பது ஞாபகம் வந்ததும், அவளுக்கு வந்த துக்கமும் கோபமும் இவ்வளவு அவ்வளவு இல்லை. பிள்ளையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட இருவரும் எங்கே போயிருப்பார்கள் என்பது அவளுக்குத் தெரியாததல்ல. எனினும் அந்த நன்றிக்கேட்டை அவளால் சகிக்க முடியவில்லை. அவசரம் அவசரமாக மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக்கொண்டு, மாடிக் கதவைப் பூட்டி, சாவியைக் கொண்டு வந்து சொர்ணம்மா கையில் கொடுத்துவிட்டுச் சொன்னாள்:

"இந்தப் பாடான பாடுபட்டு அந்தப் புள்ளயை நா வளத்தினேன். அவனுக்குப் பொறந்த நாளைக் கொண்டாடுவதை நா அறியப் படாதாம். வேலைக்காரிக்குக் கூட இதைவிட மதிப்பிருக்கும், இங்கே பெற்ற தாய்க்கு அதுகூட இல்லை. மதியாத வீட்டை மிதிக்கமாட்டேன். நா என் மக தாயிக்க வீட்டுக்கு, பணகுடிக்குப் போறேன். இனி பள்ளிக்கூடம் தொறந்தப் பொறவு இவ்வொ ரண்டுபேரும் வேலைக்குப் போனா ஆரு வந்து பொங்கிப் போடப் போறா, பார்ப்போம்" என்றுவிட்டுப் பணகுடியிலிருக்கும் தன் மகள் வீட்டுக்குப் போய்விட்டாள் மாரியம்மை.

அதன் பிறகு நடந்ததையும் சொர்ணம்மாதான் செல்லையாவிடம் சொன்னாள்.

"பொறந்த நாளெல்லாம் களிஞ்சு ரண்டு மூணு நாளுக்குப் பொறவு இங்கே வந்த தங்கசாமி கிட்டேயும், தமிழ்க்கொடி கிட்டேயும், ஒங்க அம்மா வருத்தப்பட்டுக்கிட்டுப் பணகுடிக்குப் போய்விட்டதை நாதான் சொன்னேன். பள்ளிக்கூடம் அடச்சுவிட்டா; அதனாலே ரெண்டு பேரும் அதிகமாக அலட்டிக்கொள்ளல்லே. பள்ளிக்கூடம் தெறக்கப்பட்ட நாள் நெருங்கியதும் தமிழ்க்கொடி முளமூட்டுக்குப்போயி அவ அம்மைக்க ஏற்பாட்டிலே, பத்துப் பந்தரண்டு வயசிருக்கும், ஒரு குட்டியைக் கூட்டிக்கிட்டு வந்தா. பள்ளிக்கூடம் தொறந்த பிறவு, இந்த ரெண்டு மாசமா அதிகாலையிலேயே எந்திச்சி, சோறெல்லாம் வச்சு, மத்தியானத்துக்கும் எடுத்துக் கிட்டு, புள்ளையை அந்தக் குட்டிகிட்டே விட்டுவிட்டுப் பள்ளிக் கூடத்துக்குப் போறா தமிழ்க்கொடி. எனக்குத்தான் மனசு கேக் காமெ, 'அம்மாவை வரச்சொல்லி எளுத்துப் போடப்படாதா பாவம்னு!' ரண்டு மூணு மட்டம் தங்கசாமிகிட்டே நா சொல்லிப் பாத்துட்டேன். 'உம், உம். போனது போலெ வரட்டும். வரச் சொல்ல விருந்துக்காரியா என்ன?' என்று சொல்லிப் பேச்சை முடிச்சுவிடுவான் அவன்."

மாரியம்மை மனத்தைத் தேற்றிக்கொண்டு நடந்ததைச் செல்லையாவிடம் சொன்னாள்.

"பெத்த மனசு தான் பித்து. பள்ளிக்கூடம் தொறந்தப் பொறவாவது தங்கசாமி வருவான் வருவான்னு பாத்துக்கிட்டே நா பணகுடியில் தாயி வீட்டிலெ இருந்தேன். பள்ளிக்கூடம் தொறந்து மாசம் ரண்டான பெறவும் 'வா'ன்னு எனக்கு ஒரு எளுத்துக்கூடப் போடாமெ கல்லுப்போல இருந்திட்டான் இவன். உம்....இவனா வந்து கூப்பிடாமெ வலிய வரப்படாதுன்னுட்டுத்தான் நா இருந்தேன். ஆனா தாயிக்க மாப்பிள்ளைக்கு மதுரைக்கு வேலை மாற்றம் வந்துட்டது. வீடெல்லாம் பார்த்து முடிக்காமெ அவளையும் புள்ளைகளையும் அங்கே கூட்டீட்டுப்போக முடியாதுன்னு, தாயியையும் புள்ளைகளையும் அங்கே தக்கலையிலிருக்கும் அவருக்கு அப்பா அம்மாகிட்டே கொண்டுபோய் விட்டுவிட்டு, மதுரைக்கு அவரு மட்டும் ஒத்தேலே போகப் போறதா அறிஞ்சம் பொறவு நா அங்கே நிக்க முடியுமா? வேறெ போக்கடியில்லாமெ நேரா இங்கையே வந்துட்டேன். நீ இருந்தேன்னா நாகர்கோயிலுக்குத் தான் வந்திருப்பேன். உம், நீயும் பெங்களூருக்குப் போயிட்டே!" என்று ஆதங்கப்பட்டாள் மாரியம்மை.

அவளே பேசட்டுமென்று மௌனமாய் உட்கார்ந்திருந்தான் செல்லையா. "நா இங்கே வரப்போ சமயம் மத்தியானம் இருக்கும். வேலைக்காரக் குட்டி மட்டும் புள்ளையைப் பார்த்துக்கிட்டு இருக்கு.புள்ளயைக் கையிலெ எடுத்தப்பம் என்னால பொறுக்க முடியல்லே. பயல் தேஞ்சுப் போயிருந்தான். தங்கச்சாமி ஆபிஸிலிருந்து வரும் நேரமாவல்லே. அவன் வந்து ரண்டு மணி நேரம் களிஞ்சுதான் தமிழ்க்கொடி பள்ளிக்கூடத்திலிருந்து வருவா. எனக்கானா ஒரே பசி. அடுக்களையில் போயிப் பாத்தா தமிழ்க்கொடிக்குச் சாயங் காலம் வந்து சாப்பிட கொஞ்சம் சோறு மட்டுந்தான் இருந்தது. பரணையில் இருந்த டப்பாவிலிருந்து கொஞ்சம் வறுத்தமாவை எடுத்துக் கரச்சு ஒரு ஒறட்டியும் சுட்டுத் திண்ணு கொஞ்சம் பச்சத் தண்ணியும் குடிச்சேன். இவ துரைசாணி அம்மா பள்ளிக் கூடத்திலிருந்து வந்ததும், 'நா எங்கம்மை வீட்டிலிருந்தாங்கோம்மாவு கொண்டு வச்சிருந்தேன். இவ ராசாத்தி மாதிரி வந்து ஒரு சோலியும் செய்யாமெ திண்ணிட்டா' ன்னு என்னைத் திட்டின திட்டு, அப்பப்பா! அதுக்கம் பொறவு அந்த வீட்டிலே இருந்து பச்சைத் தண்ணி வாங்கி நா குடிக்கல்லே" என்று அழுகையோடு முடித்தாள் மாரியம்மை.

செல்லையா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுத்தான் கேட்டான்; "தங்கச்சாமி ஒண்ணும் சொல்லலையா?"

"உம்... அவனா?" கிழவி பெருமூச்சு விட்டாள்.

"வாய் தொறந்தா முத்து உதிந்திராதா? கொஞ்சம் நாளா வீட்டிலே இல்லாமெ பெத்த தள்ளையல்லவா வந்திருக்கான்னு தலைநிமிர்ந்து என்னைப் பார்க்கணுமே. ஆரஈயோ திட்டுதான்னு அவனுக்கப் பாட்டுக்கு வெளியே எறங்கி நடந்துட்டான் அவன்."

மேலே மாடிக்குச் செல்லும் வாசலை ஆத்திரத்தோடு பார்த்தான் செல்லையா. தங்கசாமியைக் கூப்பிட்டுக் கேட்பதா வேண்டாமா என்று அவன் திணறுவது போலிருந்தது. சொர்ணம்மா சொன்னாள்:

"மாடிக்கு வாடகை தருவது ஒங்க தம்பி. அதனாலே அவனை நா குத்தம் சொல்லப்படாதுதான். ஆனா நடந்ததைச் சொல்லாமே இருக்கவும் என்னாலே முடிய மாட்டேங்குது. இவ்வோ பெத்தத் தள்ளையா, இல்லை வேறெ ஆருமா? பணகுடியிலிருந்து இங்கே வந்த அண்ணைக்கு அந்த ஒறட்டிச் சுட்டுத் திண்ணதுதான்; அதுக்கம் பொறவு முழுப்பட்டினி. அதுக்கக்கூடக் காய்ச்சல் வேறெ சேந்து ஆளைத் தூக்கித் தூக்கிப் போடுது. இந்தப் பாயில் இதே இடத்திலெ அந்தக் கெடையா கெடக்கா. பெத்த மகனுக்கும் சொந்த மருமகளுக்கும் இல்லாத அக்கறையா நமக்குன்னு என் பாட்டுக்கு இருந்தேன் நான். ஆனா இவளைத் தாண்டி அங்கையும் இங்கையும் போறாளே அல்லாமெ இப்படியொருத்தி இங்கணெ கிடக்காளேன்னு ஆராவது மூண்டு கேக்கணுமே? எனக்கு தீரப் பொறுக்கல்லே. என்ன நெனச்சாலும் சரீன்னு அவனைக் கூப்பிட்டு, 'டேய் தங்கச்சாமி, இது ஒன்னைப் பெத்த அம்மையல்லவாடா? இப்படி பட்டினிக் கெடந்து, காய்ச்சல் பிடிச்சு இந்தக் குளிரிலெ கெடந்து பாடாத படுதா, அவளை அங்கே கூப்பிட்டுப் படுக்கவச்சு, கஞ்சியோ மருந்தோ கொடுத்தா என்ன? இது பெரிய பாவம்டா. ஒனக்கும் ஒரு புள்ளை இருக்கான். மறந்திராதே' ன்னு என்னவெல் லாமோ சொன்னேன். அதுக்குச் தங்கச்சாமி சொல்லுதான்: 'எனுத் துக்கு இவ விருந்தாளி மாதிரி ஒதுங்கி வந்து கெடக்கணும்? அங்கே மேலெ வந்து அதிகாரத்தோடெ படுக்கத்தானே வேணும்? அவசியம் உள்ளதைத் தமிழ்க் கொடிட்டெ இருந்து கேட்டு வாங்கிக் குடிச்சா, மாடியை வயசான காலத்திலே இவ ஈசு கொறஞ்சு போயிருமா? நீங்க மாடியை மட்டுந்தானே எங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கீங்க? இவளுக்கு இந்தத் திண்ணையில் என்ன அதிகாரம்? ஒண்ணுலே மேலே வரச்சொல்லுங்க. இல்லாட்டே வெளியே போகச் சொல்லுங்க' என்று விட்டு அவன் பாட்டுக்கு ஆபீசுக்கு இறங்கிப் போயிட்டான்."

செல்லையா குபீரென்று எழுந்தான். தங்கசாமியை இங்கே கூப்பிட்டு இத்தனை பேர்களுக்கிடையில் வைத்து விசாரணை செய்து குடும்ப மதிப்பை இன்னும் குறைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை போல் தோன்றியது. ஆனால் அவன் முகபாவம் தங்கசாமியிடம் தாங்க முடியாத வெறுப்பையும் கோபத்தையும் காட்டுவது போலிருந்தது. என்னவோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் போல் மரத்தாலான மாடிப்படிகளைப் படபடவென்று உதைத்தவாறு ஏறி மாடிக்குச் சென்றான்.

சிறிது நேரத்துக்கு மாரியம்மைக்குச் செல்லையாவின் சத்தம் மேலே மாடியில் கரகரவென்று கேட்டுக்கொண்டிருந்தது. இடையில், அமர்ந்த குரலில் தமிழ்க்கொடியின் என்னவோ பேச்சொலி.சற்று நேரத்தில் அந்தச் சத்தமும் கேட்கவில்லை.

களைப்பும் தூக்கமும் ஒரு சேர வந்து இமைகளை அழுத்துவது போலிருந்தது மாரியம்மைக்கு. எத்தனை நேரம் தூங்கினாளோ தெரியாது. திடீரென்று மேலே பேரப்பிள்ளை வீல் வீல் என்று அழும் ஓசை கேட்டதும் அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது.

சுற்று முற்றும் பார்த்தபோது யாரையும் காணவில்லை. மேலே அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஒரு பெரியச் சண்டையை எதிர்பார்த்து ஏமாந்து போய், தத்தம் வீடுகளுக்குச் சொர்ணம்மாவும், ஏனைய அண்டை வீட்டுப் பெண்களும் போய்விட்டார்கள் போலிருக்கிறது.

குழந்தையைச் சற்று நேரத்துக்கு யாரும் எடுக்கவில்லை. பிறகு தமிழ்க்கொடி என்னவோ எரிந்து விழுந்தவாறு குழந்தையை எடுத்து அதன் அழுகையை அடக்கும் அரவம் கேட்டது.

சற்றுக் கழிந்து, மிகவும் நிதானமாகச் செல்லையா மாடிப்படிகளில் இறங்கித் தன்னருகில் வந்து நிற்பது தெரிந்தது மாரியம்மைக்கு. மேலே செல்லும்போது அவனிடத்தில் இருந்த வேகம் தணிந்திருந்தது.

"வயசான காலத்திலே ஒனக்கு இவ்வளவு ஆங்காரம் கூடாது. அவர் சொல்வதெப் பார்த்தா ஒன் மேலேதான் தப்புன்னு தோணுது. ஒனக்கு இங்கே அதிகாரம் இல்லையா? எனுத்துக்கு இப்படி விருந்துக்கு வந்தவ மாதிரி விலகிப் போய் இருக்கணும்? கூடமாட வேலை செய்யணும். உள்ளதை விட்டுக் குடிக்கணும். அதை விட்டுட்டு எனுத்துக்கு இந்த அவதாளியெல்லாம்? வயசான காலத்திலே நானோ நானல்லவோன்னு பிடிவாதம் பிடிக்காமே அவ்வகூட ஒத்துப்போகப் பாரு. தமிழ்க்கொடிதான் வேற ஆருமா? அவதான் என்னவாவது சொல்லீட்டா அதைப் பெரிசு படுத்தாமே அங்ஙணே அடங்கிக் கெடக்கப் பாரு. உம்.... அதுதான் ஒனக்கு நல்லது. சரி, எனக்கி நிற்க நேரமில்லே. அடுத்த ரயில்லையேப் போகணும். நா போயிட்டு வாரேன்."

செல்லையாவின் குரல் மிகவும் கரகரப்பாகவும் கண்டிப்பாகவும் ஒலித்தது.

அவள் பதிலுக்குக் காத்திராமல் செல்லையா நடந்து தெருவாசல் அருகில் சென்றதும், தெருவிலிருந்து தங்கசாமி உள்ளே ஏறி வந்தான்.

"பெங்களூருக்குத் திரும்பியாச்சா? கொஞ்ச முன்னே மாடியிலிருந்து வெளியே போகும்போது இங்கே பார்த்தேன். உன்னை இங்கே காணவில்லையே? எங்கே போயிட்டே?"

செல்லையாவின் முகத்தில் தங்கசாமியை அப்போது அங்கே எதிர்பாராத ஒரு தடுமாற்றம். எனினும் சமாளித்துக்கொண்டு, "இல்லே, அம்மைக்கு மருந்து வாங்கீட்டுவரப் போயிருந்தேன். அப்பம்தான் நீ மாடியிலிருந்து வெளியில் போயிருக்கே போலிருக்கு. சரி, நா போயிட்டு வாரேன். அடுத்த ரயிலுக்குப் போகணும். எனக்கு லீவில்லே" என்று விட்டுத் தம்பியின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தெருவில் இறங்கிச் சரக் சரக் என்று பூட்ஸ் கதற விறு விறுவென்று நடந்தான் செல்லையா.

----------------------

    புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
    நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984

    Nov 26, 2010

    நைவேத்தியம்-நீல பத்மநாபன்

    கை நீட்டினால் தொட்டுவிட முடியும் அளவுக்குப் பக்கத்தில் வந்துவிட்டதைப் போன்ற விரிந்த வானம்.

    அதிகாலையில் குனிந்து நின்று தெரு மெழுகிவிட்டு நிமிர்ந்தபோது தலையில் இடித்த வானத்தை, எட்டாத உயரத்துக்குப் போய்த் தொலை என்று சபித்து விரட்டிய பொக்கை வாய்neelapadmanaban_2க் கிழவியின் கர்ண பரம்பரக் கதை ஞாபகம் வர, வானததை வெறித்தபடி கோயில் முன் அரசமர மேடையில் மல்லாந்து கிடந்தார் லக்ஷ்மிநாராயணன் போற்றி.

    இந்த வானத்தில் ஏன் இன்று இப்படியொரு இருள். சூன்யம்......விக்கிரகமோ, விளக்கோ இல்லாத  கர்ப்ப கிரகம் போல்... ? பெயருக்குகூட ஒரு நட்சத்திரம் இல்லை. ரத்த சோகைப் பிடித்து முகம் வெளிறிப்போய் மேகங்களின் பின்னால் நின்று எட்டிப் பார்க்கும் சந்திரன்...

    பக்கவாட்டில் வானளாவி நிற்கும் அரச மரம். அடிக்கடி கிளைகளைச் சிலிர்த்து அவரைத் தன்னுணர்வு வரச் செய்து கொண்டிருந்தது.

    தூரத்தில் பாய்ந்து செல்லும் பதினோரு மணி ரயிலின் கூவல் தேய்ந்து மாய்ந்து கேட்டது.

    அடைத்துக் கிடக்கும் கோயில் நடை.....வெளியில் அங்கங்கே தூண்களுடன் ஒதுங்கி நிற்கும் ஓரிரு பாவை விளக்குகளின் காலடியில் மட்டும் சிறைப்பட்டுக் கிடக்கும் வெளிச்சத் துண்டங்கள்...சுவர்களில் பூதாகாரமாய் எழும்பி ஆடிக் களிக்கும் நிழல்கள்... மற்றபடி இருள்...

    அவர் பெருமூச்செறிந்தார்.

    'ஹஉம்...இன்னும் எடுக்கவில்லையாம்......மதுரையிலிருந்து கோமதியின் அண்ணா ராமண்ணா வரணுமாம்...உம்...எப்போ அவர் வந்து, பிரேதத்தை எடுத்துக்கிட்டுப் போன பிறகு, நடையை திறந்து அம்மனுக்குப் புஷ்பாபிஷேகம் செய்யப் போகிறோமோ...இன்னிக்கு சிவராத்திரிதான்... ' தலைமாட்டில், கொட்டுக்காரர் அண்ணாவி கனத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

    போற்றி பதில் எதுவும் பேசவில்லை. மேலே அரசமர உச்சிக் கிளையில் ஒரு நிழலாட்டம்...வெளவாலோ, ஆந்தையோ, அல்லது வேறேதோ பறவை பறப்பது போல்...ஒரு வேளை இதுதான் மரணமெனும் பட்சியோ...

    அவர் விழிக் கதவுகளை மூடிக் கொண்டார். உச்சிப் பொழுதில் ஏற்பட்ட வெட்டுக் காயத்திலிருந்து என்பதைப் போல், துடைக்கத் துடைக்க விடாமல் கசிந்து நினைவுகளின் குருதித் துளிகள்....

    இன்று மாலையில் சாயராட்சை பூஜைக்காகக் கோயில் நடை திறக்க வரும்போதிலிருந்தே உள்ளுக்குள்ளே காரணம் தெரியாது இந்த சோக வெறுமை... நெஞ்சில் கார்மேகப் படலங்கள் புகைமூட்டமாய் உருண்டு திரண்டு கொண்டிருந்தன. ஒரு கணம் தயங்கி நின்றுவிட்டு கர்ப்பகிரக மணிக் கதவைத் தள்ளியபோது சின்னச் சின்ன மணிகளின் கலீர் என்ற நகையொலியில் கூட ஒரு பொருள் பொதிந்த வெறுமை...

    கனத்த இருளில், கட்டுப்பட்டுக் கிடந்த வாயுவில், மோன தபஸில் நின்ற அம்பாள் விழி திறந்து 'இப்போதான் வர்றியா... ? ' என்று கேட்டு ஒரு புன்சிரிப்புப் பொழிவது போல்...நெடுஞ்சான்கிடையாய் கீழே விழுந்து நமஸ்கரிக்கையில் 'ஆமாம் தாயே...எனக்கு நீயில்லாமல் வேறு யார் இருக்கா ? ' என்றுவிட்டு எழுந்து சந்தியா பூஜைக்கான ஆயத்தங்களில் ஈடுபடலானார். காலையில் அம்மனுக்குச் சாத்தியிருந்த வாடிய புஷ்பங்களை அகற்றி விட்டு, அம்மனை நீராட்டி, திருவாபரணங்கள் பூட்டி, அலங்காரங்கள் செய்தார். இடுப்பில் பாய்ச்சியிருந்த தாரை ஒதுக்கி, உலர்ந்த குச்சிபோலாகிவிட்ட துடையில் திரித்த திரியை விளக்கில் போட்டு, எண்ணெய் டின்னை தலைகீழாய்க் கவிழ்த்து கடைசித்துளியையும் விளக்கில் விழச் செய்தார். விளக்கைக் கொளுத்தியபோது, எரிந்து கொண்டிருக்கும் அந்தத் திரிகூட தன்னைப் போலவே...

    அம்மனின் விழிகளில் ஒரு பளபளப்பு...மனதுக்குள் மறுபடியும் அந்தக் கார் மேகங்கள் மழைக்காய்...

    அறியாமல் தன் விழிகளும் பனிப்பது போல்...

    அவர் விழிகள் கர்ப்பகிருக வாசல்படியில் தேடின. மனசுக்குள் முணுக்கென்று ஒரு உறுத்தல்... நான் இந்தக் கோயில் பூஜை கைங்கரியம் செய்யத் தொடங்கிய இந்த ஐம்பது ஆண்டுக் காலமாய் நாள் தவறாமல் சாயராட்சை பூஜைக்கு தெருவாசிகள் யார் மூலமாவது இதற்குள் இங்கே வந்து சேர்ந்துவிடும் கோமு. தன் கையால் கட்டும் துளஸி ஹாரத்தை இன்று ஏன் இன்னும் காணவில்லை என்று தன் மனம் அடித்துக் கொண்டது.

    வெளியில் ஆவலுடன் தன் விழிகள் துழாவின. முதலில் அதை அம்மனுக்குத் தன் கையால் சார்த்தி விட்டுத்தான் மற்ற மலர்களின் பக்கம் திரும்பிப் பார்ப்பதே....

    யாரோ ஓடிவரும் காலடியோசை.

    கிட்டுதான்...கையில் வாழை இலைப் பொட்டலம் இல்லை. தனக்குத் திக்கென்றது.

    'கோமுப் பாட்டி...கோமு பாட்டி... '

    ஓடி வந்த வேகத்தில் அவனுக்கு மூச்சு இரைத்தது. அவனையே பார்த்துக்கொண்டு நிற்கத்தான் தன்னால் முடிந்தது. என்னா என்று கேட்கும் வலுவைக்கூட நாக்கு இழந்து விட்டதைப் போல்...

    'கோமுப் பாட்டி செத்துப் போனாள்... '

    தான் சிலையாகிவிட்டதைப் போல்...

    பிறகு, கோயில் டிரஸ்டிமார்கள் வந்தபின் தான் தனக்கு தன்னுணர்வு வந்தது. ஒரு சுகக்கேடும் இல்லையாம்..சாயராட்சை பூஜைக்காக வழக்கம்போல் வீட்டு முற்றத்தில் துளஸி இலைகளைப் பறித்தெடுத்து வாழை நாரில் மாலைக் கட்டிக் கொண்டிருந்தாளாம், மாலையை வாங்கிக் கோவிலுக்குக் கொண்டுபோய் கொடுக்க அடுத்த்கத்துக் கிட்டு பார்க்கும்போது...

    பேச்சு மூச்சில்லை...

    முதுகில் எறும்போ என்னவோ ஊர்வது போலிருந்தது புதுநெல்லின் மணத்தைச் சுமந்தவாறு வீசிய வாடைக்காற்றில் இடுப்பில் தார் மட்டும் பாய்ச்ச்யிருந்த அவர் வெற்றுடம்பு வேறு வெடவெடவென்று நடுங்கியது. திக்பிரமையிலிருந்து விடுபட்டு, எழுந்து உட்கார்ந்தார். கீழே மணலில் விரித்திருந்த துண்டை உதறி உடம்பில் போர்த்திக் கொண்டார். மனசுக்குள்ளிலும் சொருசொருவென்று எத்தனையோ சிற்றெறும்புக்கள் ஊர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றையும் இப்படி உதறி விலக்கிவிடவா முடிகிறது...

    தலை சுற்றிக் கொண்டே வந்தது. விழிகளை மூடியபோது, அடைத்துக் கிடந்த கோயில் நடையின் மறுபக்கத்தில் வெறிச்சோடிப் போய்க் கிடக்கும் பிரகாரம்--சிற்றம்பலம்...மோன நிஷ்டையில் ஆழ்ந்து கிடக்கும் விக்கிரகங்கள்...

    கோயில் குளத்தில் இந்த அகால வேளையில் பனிக்கட்டிக் குளிரில் யார்தான் குளிக்கிறார்களோ...டொப் டொப்பென்று துணி துவைக்கும் சத்தம்...தூரத்தில் எங்கோ ஒரு ராக்குயிலின் ஒற்றை நெடுங்குரல்...

    கோமு...

    மனசுக்குள் பிடிக்கு அடங்காமல் வழுக்கி வழுக்கி வழுதிப் போய்க் கொண்டிருக்கும் நினைவு சர்ப்பங்கள்...

    இதே அரசமர மேடையில் உதட்டு நுனியில் வெற்றிலைச் சாறு வழிய மணிக்கணக்கில் சிரிக்கச் சிரிக்க பேசிக் கொண்டிருப்பார் கோமுவின் அப்பா நரசிம்மன் போற்றி...குறைந்தது பத்துப் பேர்களாவது அவர் வாயைப் பார்த்துக்கொண்டு கீழே உட்கார்ந்திருப்பார்கள். அப்போதுதான் ஒரு நாள்; அப்போ தனக்கு எட்டு வயசிருக்கும்...கோமுவுக்கும் ஐந்து வயசு, தன்னை ஒரு துடையிலும், மற்ற துடையில் கோமுவையும் உட்கார வைத்து, மேலும் கீழும் ஆட்டிக்கொண்டு, பக்கத்தில் நின்ற தன் அப்பாவுடைய--அப்போ அவர்தானே இந்தக் கோயில் அர்ச்சகர், 'விக்ஷ்ணூ...என்னிக்கு ஆனாலும் சரி...இவுங்க ரெண்டு பேரும்தான் புருஷனும் பெண்டாட்டியும் என்று சொல்லிவிட்டு ஓஹோன்னு சத்தம் போட்டுச் சிரித்தார். பக்கத்தில் கோமுவின் அம்மாவும் அண்ணா ராமண்ணாவும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

    கோயில் நந்தவனத்தில் நிற்கும் பவழ மல்லியின் மணம் நளினமாய் ஓடி வந்தது.

    'உம்.......புஷ்பாபிஷேகம் அதுவுமா இன்னிக்குப் பார்த்து இப்படி ஆயிட்டதே... ' என்று அண்ணாவி முணுமுணுப்பது கேட்கிறது.

    இவர் பதிலேதும் பேசவில்லை.

    அன்றும் இப்படித்தான். ஒரு புஷ்பாபிஷேகத்தின் போது...எத்தனை வருஷங்களுக்கு முன்... ? குறைந்தது ஐம்பது வருஷமிருக்காதா...சரியாக ஞாபகம் இல்லை...அப்போ தனக்கு பத்து வயசிருக்கலாம்...

    கூடை கூடையாய் புஷ்பங்கள்...நந்தியாவட்டை, ஜவந்தி, அரளி, தாமரை எல்லாம் நடுக்கல் மண்டபத்தில் அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் காட்சி...தேங்காய்ப் பழத்தட்டு, பால், எண்ணெய்கிண்ணங்களுடன் நிறைந்து வழியும் பக்தஜனங்கள்...மஞ்சள், சிவப்பு, பச்சை கோலப் பொடிகளால் களம் வரைந்து ஒவ்வொரு மூலையிலும் ஐந்து திரி போட்ட பதிமூன்று குத்துவிளக்குகள் ஜாஜ்வல்யமாய் எரிந்து கொண்டிருந்தன.

    நெற்றியில் விபூதிப் பட்டை, குடுமியில் செவ்வரளிப் பூ, காதில் குத்துவிளக்குகளின் சுடர் பிரதிபலிக்கும் பத்துக் கல் கம்மல்--இந்தக் கோலத்தில் அப்பா ஒவ்வொரு புஷ்பமாய் எடுத்து அர்ச்சனை செய்து கொண்டிருந்தார். கூடமாட ஒத்தாசைக்கு நான் ' நாதஸ்வரமும் தவிலும் சேர்ந்து மங்கல இசை வெள்ளம்...கோமு அருகில் உட்கார்ந்திருக்க, நரசிம்மன் போற்றி தனக்கே உரித்தான விபுடமான குரலில் பஜனை பாடிக் கொண்டிருக்கிறார். அவர் முகத்தில்தான் என்ன பக்திப் பரவசம்...கம்பீரம்...நெற்றியில் நிறைந்த விபூதியில் மின்னும் குங்கும வட்டம்...அவர் பாடி நிறுத்தும் வரிகளை பக்த ஜனங்கள் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்...எங்கெங்கும் பக்தி சைதன்யம் நிறைந்து நெகிழ்ந்து நிற்கும் அமர கணங்கள்.

    திடாரென்று அவர் குரல் நின்றது. அவர் சொல்லி விட்ட கடைசி அடியை எல்லோரும் திரும்பத் திரும்ப உள்ளம் உருகப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    அவர் விழிகள் விழித்தபடி...

    முகத்தில் அதே கம்பீரம்...பக்திப் பரவசம்...

    அப்பா இதைக் கவனித்தார். கோவில் டிரஸ்டி ஆறுமுகம் அப்பாவின் பக்கத்தில் கலவரப்பட்டுக் கொண்டு ஓடிவந்து நரசிம்மன் போற்றியைச் சுட்டிக் காட்டி என்னவோ சொல்ல முயன்றபோது, அப்பா முகத்தில் ஒரு கண்டிப்புடன் ஆள்காட்டி விரலை தன் உதட்டின் பக்கம் கொண்டு சென்று பேசாதிருக்க சைகை மூலம் சொல்லிவிட்டு, இன்னும் அக்ஷர சுத்தமாய் ஒருவித உணர்ச்சிப் பரவசத்தால் நடுங்கும் குரல் வன்மையுடன் ஸ்லோகங்களை உரக்கச் சொல்லி அர்ச்சனையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

    கடைசியில் புஷ்பாபிஷேகம் முடிந்து கற்பூர ஆரத்தி நரசிம்மன் போற்றியின் முகத்தில் நேர் வந்தபோதுதான்...

    எல்லோருக்கும் புரிந்தது...

    'புண்யாத்மா...யாருக்குக் கிடைக்கும் இப்படிப்பட்ட சாவு... ? ' என்று மெய் சிலிர்த்துப் போய்ப் பேசிக் கொண்டார்கள் ஊர்க்காரர்கள்.

    எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறது...நரசிம்மன் போற்றியின் சாவு அப்பாவைப் பெரிசாய்ப் பாதித்துவிட்டது...பிறகு அவரும் அதிக நாட்கள் இருக்கவில்லை.

    இப்படித்தான் கோயில் நித்ய பூஜைப் பொறுப்பு மிக இளமையிலேயே தன்னை வந்து சேர்ந்தது.

    பிராயம் ஆக ஆக, மனவெளியில் நரசிம்மன் போற்றி, அப்பா மறைந்த நினைவுகாட்சிகளில்கூட, கோமுவின் தெளிந்த நீரோடை போன்ற முகமும்...முற்றத்தில் செழித்து வளர்ந்து நிற்கும் துளஸிச் செடிகளின் இடையில் ஒரு புள்ளினமாய் அவளைக் காணும் போதெல்லாம், அன்றொரு நாள் அவள் அப்பா தன்னையும் அவளையும் மடியில் வைத்துக் கொண்டு சொன்ன சொற்களை நினைத்து ஒரு கனவு மிரட்சி...

    என்றும் தன் கையாலேயே கட்டிய துளஸிஹாரத்துடன் கோமு சாயராட்சை தீபாராதனைக்கு ஆலயத்துக்கு வரத் தொடங்கினாள். கர்ப்பகிரக வாசல்படியில் அவள் கொண்டு வந்து வைக்கும் மாலையை அம்மனுக்குச் சார்த்தி ஆராதனை செய்வதற்கிடையில், சில வேளைகளில் கண்கள் மட்டும் சம்மதத்திற்குக் காத்திருக்காமல் மோதிக் கொள்வதுண்டு...அவ்வளவுதான்.

    ஒருநாள் மாலை, மாலையுடன் அவள் கோயிலுக்கு வரவில்லை. பிறகுதான் தெரிந்தது, அவள் பெரியவள் ஆகிவிட்டாள் என்று.

    அதோடு அந்த மெளன காட்சி நாடகத்திலும் திரை விழுந்துவிட்டது...மாசத்தில் நாலைந்து நாட்கள் தவிர, மற்ற நாட்களில் சந்தியா பூஜைக்கு, தெருச் சிறுவர் சிறுமியர்கள் யார் மூலமாவது அவள் துளஸி மாலை அம்மனுக்கு வந்து சேர்ந்துவிடும்.

    அம்மனைச் சேவிப்பதில் நாட்கள் சென்று கொண்டே இருந்தன. இருந்தும் சில கணங்களில் அம்மனை வழிபட்டுக் கொண்டிருக்கையில், பிரக்ஞை வெளியில் ஒரு ஞானோபாசனையாய் அவள் முகம் நிழலாடும். ஊமை கண்ட கனவாய், முடவன் ஆசைப்பட்ட கொம்புத் தேனாய் மனம் ஒரு சோக வெறுமையில் நிழல் கோலங்களைப் போட்டுப் போட்டு அழித்துக் கொண்டே இருக்கும்...அன்று அவள் அப்பா தன் அப்பாவிடம் சொல்லும்போது, பக்கத்தில் கேட்டுக்கொண்டு நின்றிருந்த அவள் அம்மாவும் அண்ணாவும் இருக்கத்தானே செய்கிறார்கள்...தன் அப்பாவும் அவள் அப்பாவும் உயிருடன் இல்லாவிட்டாலும்... அவர்களுக்கு ஞாபகம் இல்லாமலா இருக்கும் என்று அடிமனசில் ஒரு நப்பாசை...

    ஆனால்...

    அவர்கள் அப்படி அதை ஞாபகம் இருப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஒருநாள் திடும்திப்பென்று கோமுவின் கல்யாணம்...மாப்பிள்ளை தெருக்கோடியில் சாப்பாடு கடை நடத்தும் ராமபத்ரன்.

    அரசமர பீடத்தைச் சுற்றிய நாகபிரஷ்டைகள் தன்னையே உற்று நோக்குவது போல்...சரசரவென்று ஒரு சத்தம்...சாயந்திரம் யாரோ கொண்டுவந்து வைத்து விட்டுப் போயிருந்த பால் நிறைந்த பாத்திரம் இப்போ காலியாகத் தென்படுகிறது...

    ஹூம்...அந்த ராமபத்ரனும் இப்படியொரு ராத்திரியில் இந்த நாகபிரஷ்டையின் முன் வந்து விழுந்துதானே தன் கடைசி மூச்சை விட்டான்...

    கோமுவின் கல்யாணம் தன் வாழ்க்கையில் ஒரு பேரிடியாக விழுந்தது. ஆனால் அம்மனின் தலையில் எல்லா மனப்பாரத்தையும் போட்டுவிட்டு அடங்கிப் போய்விட்டோம். யார் யாரெல்லாமோ நிர்ப்பந்தித்தும்--அம்மாவுக்குத் தன் ஒரே பிள்ளை இப்படி ஒற்றை மரமாய் நிற்கிறானே என்று அவள் கடைசி மூச்சுவரைக்கும் ஒரே தாபம். நான் அசைந்து கொடுக்கவில்லை...இன்று வரை--இப்போ தனக்கு அறுபது வயசு, கல்யாணம் முதலிய லெளகீக பந்தங்களை அறவே ஒதுக்கி அம்மனைப் பணிவதிலேயே ஆயுளைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்...

    கல்யாணம் கழிந்த புதிதில், ஒருமுறை கோமு அவள் புருஷன் ராமபத்திரனுடன் கோயிலுக்கு, வழக்கமான அவள் துளஸி மாலையுடன் வந்திருந்தாள். விம்மி வெதும்பிய இதயத்தை அடக்கி ஆண்டு, அம்பாளை நினைத்துக் கொண்டு மாலையைக் குனிந்து எடுத்துக் அம்மனுக்குச் சார்த்தும்போதும், பிரசாதத்தைக் கொடுக்கும் போதும், ராமபத்ரனின் விழிகள் தன்னைத் துகிலுரிக்கப் பார்ப்பதை உணர முடிகிறது...

    அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரர்கள் சொல்லி தன் செவியிலும் விழுந்தது. ராத்திரி அவளை அவன் அடித்து நொறுக்கினான் என்று.

    அதோடு அவள் கோயிலுக்கு வருவது அடியோடு நின்றுவிட்டது. ஆனால் தெருக்குழந்தைகள் மூலமாய், மாலையில் துளஸி மாலை கொடுத்து அனுப்புவது நிற்கவில்லை.

    ஒரு நாள் ராத்திரி...

    வழக்கம்போல், கோயில் நடையை அடைத்துவிட்டுப் படி இறங்கி, தான் இந்த அரச மரத்தின் கீழ் வந்ததும்---

    அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்து இந்த நாக பிரதிஷ்டையின் முன் விழுந்த ராமபத்ரன்...திடுக்கிட்டு அவனைத் தூக்கி மடியில் கிடத்தி, விபூதியை மந்திரித்துப் போடுவதற்கிடையில், தெரு பூரா இங்கே கூடிவிட்டது...காலில் சர்ப்ப தர்சம்...அவன் தலை சரிந்துவிட்டது.

    பக்கத்து அந்திச் சந்தையிலிருந்து காய்கறி வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்த அவன், கோயிலிலிருந்து கொஞ்சம் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் இறங்கி, அதைத் தாண்டி, கரையிலிருந்த தாழம்பூ புதரின் அருகில் வந்ததும் இது சம்பவித்ததாகத் தெரியவந்தது.

    பிறகும்....

    கோமு கோயிலுக்கு வருவதில்லை...துளஸி ஹாரம் மட்டும் தவறாமல் வந்து கொண்டிருந்தது.

    இனி... ?

    தூரத்தில் கூ என்ற ரயிலின் ஓசை மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருக்கிறது...

    'ரெண்டு மணி ரயில் வருதே...ராமண்ணா இந்த ரயிலில் வருவானாக இருக்கும்...போய் பார்த்துவிட்டு வருகிறேன்... ' என்றுகூறி அண்ணாவி எழுந்து சோம்பல் முறித்துவிட்டுப் போகிறார்.

    ஒரு மணி நேரம் கழித்துத் தெருவாசிகள் வந்து பார்க்கும்போது போற்றியின் உடம்பு விறைத்துப் போய்க் கிடந்தது.

    *****

    நன்றி: திண்ணை

    Sep 29, 2010

    ''இன்றைய கவிதையை விளக்க இன்னொருவர் தேவை''-நீல. பத்மநாபன்


    எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1938-ம் ஆண்டு பிறந்தவர். கேரள மாநில மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர். இவரது படைப்புகளில் மண்ணின் தன்மையும், மக்களின் யதார்த்த வாழ்வையும் காணலாம். ''உதயதாரகை'' இவர் எழுதிய முதல் நாவல். ஆனால் இவர் பேசப்பட்டது இவரின் நான்காவது நாவலான 'தலைமுறைகள்' மூலம்தான். அடுத்தது 'தேரோடும் வீதி'. இது அவரின் சுயசரிதை என பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர் இதனை மறுத்து வருகிறார். அண்மையில் தி.ஜானகிராமனின் இலக்கியப் படைப்புகள் பற்றிய விவாதத்திற்காக சென்னை வந்திருந்தபோது, அம்பலம் வாசகர்களுக்காக அவர் அளித்த விசேஷ பேட்டியிலிருந்து...

    neelapadmanaban_2
    இலக்கியம் எப்படி உங்களை வரித்துக் கொண்டது?

    என் சின்ன வயதிலேயே பாட்டி, அப்பா, அம்மா இவர்களிடமிருந்த வாசிப்பு அனுபவம் என்னையும்  தொடர்ந்தது. அதிலிருந்து கையெழுத்துப் பிரதியாக இலக்கியங்களை உருவாக்கினேன். அப்போது எங்கள் வீட்டுப் பக்கத்தில் டி.ஆர்.ராஜமாணிக்கம் கம்பெனி நாடகம் நடந்து வந்தது. அதில் வரும் பாட்டின் ராகங்களுக்கு ஏற்ப நான் பாட்டு எழுதுவேன். இப்படியே என் கவிதை ஆர்வம் வளர்ந்தது. என் 10, 12 வயதிலேயே நிறையப் படித்தேன். பின்னர் college magazine-ல் நிறைய எழுதினேன். இவையெல்லாம்தான் என்னை நிறைய எழுத வைத்தது. இதைத் தொடர்ந்து நான் நேரடியாக எழுத்துத் துறைக்கு வந்துவிட்டேன்.


    உங்கள் நாவலில் இன்றும் பேசப்படுகிற, பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 'தலைமுறை' நாவல் குறித்து...?

    நீங்கள் நேரடியாக தலைமுறைக்கு வந்ததினால் அதற்கு முன்னால் நான் எழுதிய நாவல்கள் பற்றியும் சொல்ல வேண்டியிருக்கிறது. தலைமுறை எனது நாலாவது நாவல். முதலில் 'உதய தாரகை' என்ற நாவல், வாஞ்சிநாடு இதழில் வந்தது. 'தலைமுறை' நாவலின் உண்ணாமலை ஆச்சி, கூனாங்காணி பாட்டா போன்றவர்கள் என் சமூகத்தைச் சார்ந்தவர்கள். என் செட்டியார் சமூகத்தில் பின்பற்றப்பட்ட ஆசார அனுஷ்டானங்கள், என் பக்கத்து வீட்டில் திருமணமாகிச் சென்ற பெண்ணை திரும்பப் கொண்டு வந்துவிட்டது. இவையெல்லாம் என்னை பாதித்ததால்தான் 'தலைமுறைகள்' பிறந்தது. நீங்கள் சொல்வதுபோல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் நாவல் இதுதான் என்பதில் சந்தோஷமடைகிறேன்.

    'யாத்திரை' என்ற கதை மரணத்தைப் பற்றிக் கூறுகிறது. அந்த கதை வந்த காலம் romantic கதைகள் பிரபலமாக இருந்தது. எப்படி இந்த ஐடியா வந்தது?

    திருவனந்தபுரத்தில் எனக்கு திருமணமாகி மனைவியுடன் மாடி வீட்டில் தனியாக இருந்தோம். அந்த வீட்டிலிருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் மாடியில் இருந்ததினால் கீழே நடப்பவைகள் காட்சிகளாகத்தான் தெரியும். அப்படித்தான் ஒரு பிணத்தை எடுத்துச் சென்றார்கள். அது என்னுள் கேள்வி கேட்கச் செய்தது. அதுதான் 'யாத்திரை'. இறந்தவனைப் பற்றி... தூக்கிச் செல்லும் நாலு பேரும் நினைத்துக் கொள்வதுதான் கதை. அதை எழுதி முடித்தபோது எனக்கும் வித்தியாசமாகத் தோன்றியது.

    'தலைமுறை' நாவலிலிருந்து முற்றிலும் மாறானது 'பள்ளி கொண்டபுரம்'. திருவனந்தபுரம் பற்றிய புரிதல் இல்லாமலும்-நாயர் சமுதாயம் பற்றி தெளிவு இல்லாமல் அந்த நாவல் படைக்க முடியாது. அதைப் பற்றி...?

    ஏற்கெனவே சொன்னதுபோல் என் சமூகம் எதுவென்று சொல்லிவிட்டேன். இப்போது திருவனந்தபுரம் என்று சொல்லப்படும் இடம் திருவாங்கூர் என்று சொல்லப்பட்ட காலத்தில் கன்னியாகுமரி, நாகர்கோயில், பத்மநாபபுரம், இவையெல்லாம் அதனுள் வந்தவைதான். ஆனால், நீங்கள் சொன்ன மாதிரி 'பள்ளி கொண்டபுரம்' நாவலை நகரம் சார்ந்து எழுதுவதாகத்தான் தீர்மானித்தேன். அதுவும் நாயர் சமூகத்தில் உள்ள சிக்கல் நானறிந்தது. அதை தமிழர் பார்வையில் பதிவு செய்வதை மட்டுமே நான் செய்தேன். இன்னொன்று நாவலில் கதாபாத்திரங்கள் எதார்த்தமாக இருப்பதை வைத்து எழுத்தாளரை மதிப்பிடக்கூடாது. நான் காட்டியது நகரத்தின் ஒரு பகுதியை மட்டுமே.

    எழுத்தாளனுக்கு சமூகப் பற்று அவசியமா?

    நான் கலந்துகொண்ட தி.ஜானகிராமனின் எழுத்துத் தொடர்பான கூட்டத்தில் அவர் அறியாமலே அவரின் படைப்புகளில் சமூக அக்கறை வந்ததாக சொல்கிறார்கள். அப்படி இல்லை. சமூக அக்கறை இல்லாமல் எந்த எழுத்தாளனும் இலக்கியம் பண்ண முடியாது. ஆனால் அந்த வழி ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். அதனால் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு வழியில் கலகக்காரனாக இருக்கிறான். ஏனென்றால் அந்த எழுத்தாளனும் சமூகத்திலிருந்துதானே வந்தவன். ஆகவே எல்லா எழுத்தாளர்களும் சமூக உணர்வுள்ள கலகக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதே நிஜமானதும், உண்மையானதும்.

    ஒரு மனிதனுக்கு அறிவுசார்ந்த செயல்பாட்டைவிட உணர்ச்சி செறிவுதான் கலைப்படைப்பிற்கு முக்கியமானது என்கிறீர்கள், படைப்பை அறிவு ரீதியாக அணுகுவது தப்பு என்கிறீர்களா?

    எல்லா செயல்பாட்டையும் அறிவுரீதியாகப் பார்த்தால் அது முடிந்த முடிவாகும். அதன் தாக்கமோ, எதிர்ப்போ நமக்கு தெரியாமல் போகும். அறிவு ரீதியாகப் பார்க்கும் பார்வைக்கு அடுநிலை என்று எதுவும் இல்லை. உணர்ச்சி ரீதியாகப் பார்க்கும்போது அதன் அடுத்த கட்டம் நமக்கு கிடைக்கிறது. நடந்த செயற்பாட்டிற்கு புதுவகையான முடிவும் கிடைக்கிறது. அது கற்பனைகளுக்கும், தளங்களை விரிவுபடுத்தவும் ரொம்ப உதவியாக இருக்கிறது. அதன்பின்னர் கலைப்படைப்புக்கு ஏற்றவாறும், கலைத்தன்மையுடனும் உருமாற்றம் பெறும். அதற்கு உணர்ச்சி இருந்தால்தான் அங்கு கலைத்தன்மை வரும். இல்லையென்றால் போட்டோ போல் இருக்கும்.

    எஸ்.குப்தன் நாயர் எழுதிய விமர்சனத்தில் ''நீலபத்மநாபனின் கதைகளில் கதை அம்சம் மிகுதியாக இல்லை என்கிறாரே'' இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

    கதை அம்சம் என்பது, நவீனத்துவச் சிந்தனையில் வந்ததுதான். நிகழ்ச்சிக்கு முக்கியமில்லாத விஷயத்தை கதையாகச் சொல்லி நிரூபிப்பதுதான் எழுத்தாளனின் வேலை என்று நினைக்கிறேன். ஆனால் கதை சொல்வது என்பது சங்க காலம் தொட்டே மாறிவரும் சமாச்சாரமாகும். இப்போது பல இஸங்களும், பல பாணிகளும் வந்தபின்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கதை சொல்கிறார்கள். எதை சொன்னாலும் அங்கு சொல்லப்படும் நிகழ்ச்சிதான் முக்கியம். நவீன கதையில் கதை இல்லாத கதையை சொல்வதுதான் வடிவமாகும். குப்தன் நாயர் அப்படிச் சொன்னதில் எனக்கு சந்தோஷம்தான்.

    சிறு பத்திரிகைகள்-வணிகப் பத்திரிகைகள் இரண்டிலும் எழுதுகிறீர்களே! இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

    தமிழில் சிறு பத்திரிகைகள் ஒரு கௌரமான விஷயமாக இருக்கிறது. சோதனைப்படைப்புகள் முதலில் சிறுவட்டத்தில்தான் வரும். நானே அறிமுகமானது சிறுபத்திரிகை மூலம்தான். ''சாந்தி'', ''இலக்கிய வட்டம்'' போன்ற பத்திரிகைகள்தான் என்னைத் தெரியப்படுத்தியது. நாங்கள் சிறுபத்திரிகை மூலமாக பல இலக்கியம் தொடர்பான விஷயங்களை செய்துவருகிறோம். வணிகப் பத்திரிகைகளும் அவ்வப்போது நல்ல படைப்புகளை வெளியிடுகிறார்கள். நாங்கள் விழா நடத்தி புத்தகம் வெளியிட்டபோது அந்த விழாவில் நடந்த ஒரு நல்ல விஷயம் ''குருஷேத்திரம்'' புத்தகம் வெளியானதுதான் என்று சொன்னவர்கள், இன்று தமிழ் இனி விழா நடத்தியிருக்கிறார்கள். இது சிறு பத்திரிகைகள் ஆரோக்கியமானதாக இருந்ததினால் நடந்ததுதான்.

    உங்கள் நாவல்கள் யதார்த்த வகையைச் சார்ந்தது என்று சொல்லலாமா?

    என் நாவல்களைப் பற்றி நான் சொல்லக் கூடாது. ஆனால் பலர் என் நாவல்களை யதார்த்த வகை என்று சொல்லுகிறார்கள். நானும் பல எழுத்தாளர்களின் படைப்புகள் படித்துவருகிறேன். எனக்கு எழுத்துக்கு வைக்கும் பெயர்கள், இஸங்கள் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை. என் மனதில் தோன்றுவதைதான் நான் எழுதுகிறேன், அதை கற்பனையுடன் இணைத்து எழுதுகிறேன். இது யதார்த்தம் என்றால் இது என் பாணி. அதை விட்டு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையாக பிரிக்கக் கூடாது. சில இடங்களில் யதார்த்தத்தை மீறவும் நான் முயற்சி செய்ததுபோல் தெரியும். ஆனால் அப்படியல்ல. அவையும் யதார்த்த வகை நாவல்கள்தான்.

    உங்கள் கவிதைகள் பாட்டுப் போல் இருக்கும்-இப்போதைய கவிதைகள் குறித்து?

    நீங்கள் என் கவிதையைப் பாட்டுப் போல் என்கிறீர்கள். என் கவிதைகளை அதாவது, பாடல்களை நான் நாடகக் கொட்டகையிலிருந்துதான் எழுதக் கற்றுக் கொண்டேன், அதனால் இருக்கலாம். என் 16 வயதில் எழுதிய கவிதைகளை பிற்பாடு வெளியிடும்போது அவைகள் பாடல்கள் போல் இருக்கின்றன. இப்போது வரும் கவிதைகளை நான் படித்து வருகிறேன். சிலதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கவிதை என்பது மனசில தைக்கிற மாதிரியும், தீயை உண்டாக்குவதாகவும் இருக்கவேண்டும். தமிழில் அப்படி கவிதைகள் இப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்தக் கவிதைகளை விளக்கிச் சொல்வதற்கு இன்னொருவர் தேவைப்படுகிறார்.

    உங்கள் சிறுகதைகளிலிருந்து நாவல் மிகவும் வேறான ஒன்றாக இருக்கிறதே?

    நீங்கள் சொல்லும் சிறுகதை, நாவல் இரண்டும் இருவேறு ஊடகங்கள். அதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சிலர் சொல்வதைப்போல் சிறுகதையின் நீட்சியல்ல நாவல். கதாசிரியன் என்பவன் விரிவான விளக்கம் தர வேண்டியவன். சிறுகதை, கவிதை எல்லாம் தளத்திற்குள்ளேயே நின்று கதை சொல்லவேண்டும். அதனால் என் கதைகளும் அதுபோலவேதான். நான் முதல் சொன்னதுபோல் சம்பவங்களின் தொகுப்புத்தானே நாவல். எனக்கு மட்டுமல்ல, எந்த எழுத்தாளர்களுக்கும் வேறு வேறாகத்தான் இருக்கும்.

    உங்கள் எழுத்துகளில் தத்துவார்த்த தேடல்கள் அதிகமாக இருக்கிறதே?

    தத்துவம் என்பது சாமியார்களுக்கு மட்டுமே கை வருவதல்ல. நல்ல முறையில் குடும்பம் அமைந்துள்ளவர்களுக்கும் கைவருவதுதான். வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொண்டால், அதுவே நம் ஆன்மாவை நாம் உணர்வதற்கான வழிகாட்டியாக இருக்கும். நான் யார் என்பதை எனக்கு உணர்த்துவதற்கும் என்னை 'நான்' யார் என்று கேள்வி கேட்கவும் ஆரம்பித்தபோது உருவான நாவல்தான் 'கூண்டினுள் பட்சி' நாவல்.

    இன்னொரு நாவலான 1215 பக்கங்கள் கொண்ட 'தேரோடும் வீதி'யில் சொல்ல வந்தது என்ன? அது உங்கள் சுயசரிதையா?

    'தேரோடும் வீதி' என் சுயசரிதை என்றால் 'பைல்கள்', 'தலைமுறை', இவையெல்லாம் எந்த வகையில் வரும். எழுத்தாளன் எழுதினால் அதை மட்டுமே பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு சுயசரிதையா என்பதெல்லாம் அபத்தமானது. அந்த நாவலில் எழுத்தாளன் சிவ கதிரேசன் முன்னுக்கு வரத்துடிக்கும் ஆர்வம்தான் கதையாகும். அறிவியல்வாதி தற்கொலை பண்ணிக் கொள்வதில்லை. அடுத்த கட்டம் தன்னை நிலைநாட்டுவதற்குத்தான். எந்த எழுத்தாளனையும் குறிவைத்து அதை எழுதவில்லை. அது எழுத்தாளனைப் பற்றிய கதை அவ்வளவே!

    விமர்சகர் எம்.ஏ. நுஃமான் 'தேரோடும் வீதி' நாவலில் வரும் சிவ.கதிரேசனின் தோல்வி எழுத்தாளர் நீல.பத்மநாபனின் தோல்வி என்று குறிப்பிட்டுள்ளாரே?

    நுஃமான் அவர் சார்ந்திருக்கும் குழுவை சந்தோஷப்படுத்தச் சொன்ன விமர்சனம் அது. அப்படிப் பார்த்தால் ஜே.ஜே. சில குறிப்புகள் எழுதிய சுந்தர ராமசாமியைச் சொல்லவேண்டும். திரவியத்தை எப்படி எடுத்துக் கொண்டார். இதுதான் தமிழர்களிடம் உள்ள குழுச்சண்டை மனப்பான்மை. எழுதுவதற்கு ஒரு பத்திரிகை அனுமதிப்பதால் வேண்டாதவர்களையெல்லாம் திட்டிக்கொண்டேயிருப்பார். இது ஆரோக்கியமான இலக்கியத்தின் வளர்ச்சியாக இருக்க முடியாது.

    கடைசியாக நீங்கள் படித்த எழுத்தாளர்கள் யார்?

    இளம் வயதிலேயே கையில் கிடைத்த எல்லாப் புத்தகங்களையும் படித்து வந்துள்ளேன். புதுமைப்பித்தன் கதைகள், க.நா.சு.வின் 'பொய்த்தேவு' போன்றவைகளும், ஷேக்ஸ்பியரின் படைப்புகள், நகுலன், டால்ஸ்டாய், தாஸ்தவ்யேஸ்க்கி, மலையாளத்தில் என்.வி.கிருஷ்ணவாரியாரின் படைப்புகள் என நான் தேடிப்பிடித்த படைப்புகள் அதிகம். இன்றுவரை வாசகனாக இருக்கிறேன்.

    நன்றி: அம்பலம் இணைய இதழ்

    Aug 12, 2010

    மண்ணின் மகன்-நீலபத்மநாபன்

    வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே பழக்கப்பட்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை...

    nelapadmanaban-vz வேலை மாற்றலாகி, முதல் முறையாய் வந்திருக்கும் இந்த இடம் இதற்கு முன்பே பரிச்சயமானதாய் தோன்றும் இந்த விசித்திர மனமயக்கம்... ?

    பஸ்ஸிலிருந்து இந்தக் கடற்கரையில் இறங்கி, ஆபீஸ்உம், குவார்ட்டர்ஸ்உம் ஒன்றாய் இயங்கும் அதோ தெரியும் சிறு கட்டிடத்தில் போய் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டு இங்கே வந்து இப்படி உட்கார்ந்திருக்கையில்...

    மனதில் வந்து கவியும் இன்னதென்று தெரியாத அந்நியமான உணர்வுகள்.

    நாளை காலையில் எட்டு மணிக்கு வேலையில், 'டியூட்டி ரிப்போர்ட் ' பண்ணிவிட்டால், பிறகு மீண்டும் யந்திர வாழ்க்கை..

    தொலைவில் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் யந்திரங்கள். ஆழத்தில் மணலை வாரி வரிசையாய் நிற்கும் லாரிகளில் நிறைக்கும் க்ரைன்கள்.

    இதோ நான் உட்கார்ந்திருக்கும் இந்த இடம் மட்டுமே இந்தக் கடற்கரையில் கடலின் மட்டத்தில் இப்போது மிஞ்சியிருக்கிறது. மீதி இடத்திலிருந்தெல்லாம் மணல் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது.

    இன்னும் சில நாட்களில் இதுவும்...

    நீர்த்திவலைகளை அள்ளிக்கொண்டு வரும் காற்று. குளிர் உடம்பில் உறைக்கத் தொடங்கிவிட்டது. அறைக்குப் போய் முடங்கிவிடக் கெஞ்சும் உடம்பு.. எழுந்திருக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் வீசியடித்த வாடைக் காற்று.

    கம்மென்று வந்து கமழும் பாலை பூ மணம்.

    இந்தக் கடற்கரையில் இவ்வேளையில் இந்த மணம்....

    யாரோ பின் பக்கம் வந்து நிற்பதைப் போன்ற உணர்வு...

    திடுக்கிட்டு பார்த்தபோது, ஊமை நிலவில் ஓர் இளைஞன். முகம் சரிவரத் தெரியவில்லை.

    சார் ' நீங்கதான் அற்புதராஜ் சாரின் ப்ளேஸில் புதுசா வந்திருக்கும் சயின்டிபிக் ஆபீசரா ?

    ஆமா ' நீ யாரு ?

    இங்கே பக்கத்தில்தான் இருக்கிறேன்.

    சற்று நீங்கி அவன் உட்கார்ந்துகொண்டான் ?

    ஏன் சார் ' இந்தக் கடற்கரை ஊர் மணல் முழுவதையும் இப்படி பத்து பதினஞ்சடி ஆழத்தில் தோண்டியெடுத்து வாரிக்கொண்டு போறீங்களே... இந்த ஜனங்களின் பரிதாப நிலைமையை மட்டும் நீங்க யாரும் நினைச்சுப் பார்க்காமல் இருக்கீங்களே. இது நியாயம்தானா ?

    என்ன தம்பீ.. பக்கத்தில்தான் இருக்கேண்ணு சொல்றே... அப்படியிருந்துமா ஒண்ணும் தெரியாதது போல் இப்படி கேக்கறே ? எத்தனையோ மாசங்களா சர்வே, ஆராய்ச்சி எல்லாம் நடந்து முடிஞ்சு, அப்புறம் இங்கேயிருந்து மணல் வாரத் தொடங்கி இப்ப ரெண்டு வருஷத்துக்கு மேல் ஆயிடுச்சு. ஊருக்கு புதுசான ஆளு போல் நீ இப்படி எங்கிட்டே கேட்டால் ?

    இந்தக் கடற்கரை மணலின் மகிமை சீமையைப் போய்ச் சேர்ந்தது பற்றி கர்ண பரம்பரையாய் கேட்க நேர்ந்த செய்திஞாபகம் வருகிறது...

    செழிப்பாய் வளரும் தென்னை மரங்களுக்கு பெயர் போன இந்த ஊரிலிருந்து முன்பு ஏற்றுமதி செய்யும் வடத்தின் கயிற்றின் எடையைத் தட்டிக்காட்ட உள்ளூர் வியாபாரிகள் இந்த மணலில் புரட்டியெடுத்து அனுப்ப, யதேச்சையாய் சீமையில் கப்பலிருந்து இறக்குகையில் நடத்திய பரிசோதனையில் கதிரியக்க உலோகம் அடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு இந்த மண்ணுக்கு வந்தயோகம்...

    சார், நீங்க சொல்றாப்போல் இந்த ஊருக்கு யார் யாரல்லாம்மோ புதுசு புதுசா ஆளுங்க வந்து மணலை அள்ளிகிட்டுப் போனாங்க. ஆழமா தோண்டிப் பாத்தாங்க. அதையெல்லாம் இந்த ஊர்வாசிக, ஏழைக் குடியானவங்க, செம்படவங்க நாங்க பாத்துகிட்டுத்தான் இருந்தோம். இல்லேண்ணு சொல்லலே. ஆனா, யாருமே விஷயம் என்னாண்ணு நெஜத்தை எங்ககிட்டெ வாயைத் தொறந்து சொல்லவே இல்லையே... வேறென்னவோ சாக்குப் போக்குச் சொல்லி சமாளிச்சாங்க. கடைசியில க்ரைன், மெஷீன், லாரி வந்து மணலை வாரத் தொடங்கின. அப்புறம்தான் உள்ளதைப் புரிஞ்சுகிட்டோம்.

    அதன்பின் நெடுநாள் இங்கே நடந்த ரகளை இலாகாவில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே ' இந்த ஊர்ஜனங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மறியல் செய்தார்கள். ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கடைசியில், இலாகா அதிகாரிகள், அரசியல்வாதிகள், உள்ளூர் மக்கள் பிரதி நிதிகள் இவர்களின் இடையில் பல நாட்கள் நடந்த பேச்சு வார்த்தையின் படி எல்லாம் 'சுபமாய் ' முடிவு பெற்றது. அதன் படி, இந்த மணல் வாரலால் இடம் இழந்தவர்களுக்கு பதிலுக்கு வேறு இடம் கொடுப்பது, தொழிலும் வேறு வருமான மார்க்கங்களும் இழந்து போனவர்களுக்கு இங்கே இது சம்பந்தமான வேலைகளில் முதலிடம் கொடுப்பது போன்ற விதிகள் இரு தரப்பாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதே..

    இப்போது பக்கத்து மாதா கோயில் மணியோசை திடாரென்று கேட்ட ஒலிவீச்சினாலா இல்லை வெடவெடக்கும் குளிர் காரணமாகவா இந்த இளைஞனின் நடுக்கம்... ?

    சற்று தொலைவில் நிழல் கோலமாய் ஒண்டியாய் தலை தூக்கி நிற்கும் மாதா கோயிலின் மங்கிய தோற்றம் ஊமை நிலவில்...

    நான் அறிஞ்ச வரையில் இந்த சர்ச்சைக்கூட அப்படியே விட்டு வைக்கவும் அப்படாண்ணு நீங்க போட்ட கண்டிஷனைக் கூட சம்மதிச்சிருக்கோமே அப்புறம் என்ன ?

    அவன் சிரிப்போசை...

    வீடும் குடியுமெல்லாம் குளம் தோண்டப்பட்டு இழந்த செனங்க குடிபெயர்ந்து போன பிறகு இங்கே மிஞ்சியிருக்கும் சாமிக்கு பாதிரியார் மட்டும் தொணை.

    ஏன்... ? ரொம்ப பேருங்களுக்கு இங்கேயே வேலை கொடுக்கப்பட்டிருக்குதே. அவுங்களுக்குப் பிரார்த்தனை செய்ய வசதியா இருக்காதா ?

    இப்போது பிரமாண்டமான ஒரு கறுத்த விலங்காய் நீண்டு நிமிர்ந்து கிடக்கும் சமுத்திரத்தின் மறுமுனையில் தொடுவான விளிம்பில் மின்னல் வெளிச்சம், கூட ஓடிவரும் இடியோசை...ஜ்

    மழை பெய்யப் போகுது போலிருக்குது. அதுதான் இத்தனை குளிர்.

    நான் எழுந்தேன்.

    அவனும் எழுந்தான்.

    இப்போது முகம் இருளில் தெரியவில்லை. ஆனால் நல்ல ஆஜானுபாகு என்பது மட்டும் தெரிகிறது.

    மெல்ல நடந்துகொண்டிருந்த என் பின்னால், சற்று நீங்கி கூடவே வந்து கொண்டிருக்கும் அவன் குரல்.

    கடற்கரை மணலையெல்லாம் இப்படி பத்து பதினைஞ்சடிக்கு தோண்டி லாரியில் அள்ளிகிட்டுப் போனா கடல் ஊருக்குள்ளேயே ஏறி வருவதை உங்க இலாகா ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குது ? குறிப்பா, மழை காலத்தில் இந்த ஊரே கடலுக்குள்ளே போய்விடுதே...

    அவன் குரல் கோஷமாய் உயர்ந்ததுபோல்.....

    தம்பீ.. இந்த மண்ணின் மகன் உன் கோபத்தையும் தாபத்தையும் புரிஞ்சுக்க என்னால் முடியுது. ஆனா.. இந்த ஊரைச்சேர்ந்த உங்களுக்கு இந்த கஷ்ட நஷ்டங்களிலும் நாட்டுக்கு சில நன்மைகள் விளைந்திருப்பதை நீ ஏன் எண்ணிப் பார்க்கவில்லை ?

    மீண்டும் இருளில் அவன் சிரிப்பு.

    நீங்க எதைச் சொல்லுறீங்கண்ணு எனக்குத் தெரியும். உங்களுக்கு முந்தி இங்கே இருந்த அற்புதராஜ்உம் அவன் கூட்டாளிகளும் அதைச் சொல்லித்தான் எங்களை வஞ்சித்தாங்க....

    அவுங்க என்ன சொன்னாங்க ?

    அணுசக்தி நம் நாட்டில் தொழில் கூடங்களை உருவாக்கும், வெளிச்சம் தரும். நோய் சிகிச்சைக்குப் பயன்படுமென்று....

    அதெல்லாம் மொத்தத்தில் நம் நாட்டுக்கு.... ' ஆனா, குறிப்பா இந்த ஊருக்கு கிடைக்கும் பெரிய ஒரு நன்மைஇருக்கு ' இங்கே இருக்கும் இந்த மணலில் கதிரியக்க உலோகம் கலந்திருந்தால் இந்த ஊர் குழந்தைங்க - பெரியவங்களில் பரவலாய் தென்பட்ட ஊனம், புற்றுநோய் போன்றவை இனி நாளாவட்டத்தில் குறைந்துவிடும். காரணம், இப்ப நாங்க இங்கிருந்து அள்ளிக்கொண்டு போகும் மணலில் இருந்து அந்தக் கதிரியக்க உலோகம் மோனஸைட்டை அப்புறப்படுத்தி விட்டு மறுபடியும் இதே மணலை இதே இடத்தில் கொண்டு போட்டு விடுவோம். அப்புறம் இந்தப் பள்ளங்கள் நிரம்பிவிடும். கதிரியக்க அபாயமும் நீங்கிவிடும்.

    சார்.. நீங்க சொல்ற இந்த நன்மையெல்லாம் எத்தனை வருசங்களுக்கு அப்புறம் நடக்கப் போகும் காரியங்க ' அதுவரை ஏழை சனங்க இந்தக் கொடுமையெல்லாம் தாக்குப்பிடிச்சு உயிரோட இங்கே இருக்கணுமே.. அதை என்னான்னு கேட்டா அப்படி கேட்டவனையும் விட்டு வைக்கமாட்டாங்க...

    சர்ச்சின் முன் ஒரு கணம் நின்று உள்ளுக்குள் இறைவா என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.

    மீண்டும் நடந்தேன். இப்போது மெளனம். அவன் குரல் கேட்கவில்லை. திரும்பிப் பார்த்தபோது புதைக்குழிக் கல்லறைகள் மட்டும் மங்கிய நிலவில்...

    அவனைக் காணோம்...

    சற்றுக்கூட நடந்தபோது எதிரில் வாச்மேன் சாமுவேல் வந்து கொண்டிருந்தான்.

    அதுக்குள்ளே எங்கே சார் போயிட்டாங்க... பக்கத்து ஊரில் போய் டிபன் வாங்கிட்டு வந்திருக்கேன். மழை வேறு பெய்யப் போகுது. சீக்கிரம் வாங்க...

    அறைக்கு வந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சாமுவேல் சொன்னான்.

    சார் நீங்க டியூட்டில் சேர வந்த உடனேயே சொல்ல வேணாமுண்ணுதான் இருந்தேன். ஆனா கடற்கரையில் நீங்க ஒண்டியா ஒக்காந்திருந்த எடத்தை நான் இங்கேருந்து பார்த்தேன். அதுதான் அங்கே ஓடியாந்து கொண்டிருந்தேன்.

    ஒண்டியாகவா ? கூட இருந்த ஆளை நீ பார்க்கலயா ?

    அவன் முகத்தில் ஒரு மிரட்சி.

    சார்.. எதுக்கும் இனி இப்படி ஒண்டியா அங்கே போய் உக்கார வேணாம் ?

    என் முகத்தில் த்வனித்த கேள்விக்குறியைப் பார்த்துவிட்டு அவனே குரலைத் தாழ்த்திச் சொன்னான்.

    இந்த ஊரில் மணல் வாருவதை எதிர்த்து ரகளை நடந்துகிட்டிருந்தது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். அதில் முக்கியபங்கு வகிச்சவன் அந்தோணி. இந்த கிராமத்திலேயே நாலு எழுத்து படிச்ச அவன் மீது எல்லோருக்குமே ரொம்ப மதிப்பு, மரியாதை, அன்பு... ரகளை முடிஞ்ச பிறகு அவனுக்கு இங்கேயே வேலை கொடுத்தாங்க... ஆனா.. அதன் பிறகும், இங்கே அப்படி வேலை பார்க்கும் மத்தவங்களையும் சேத்துகிட்டு அடிக்கடி மோதல்கள்...அப்போதுதான், ஒருநாள் ராத்திரி ஷிப்டில், மணல் ஏத்திக்கிட்டிருந்த லாரி ஏறி, இப்ப நீங்க ஒக்கார்ந்திருந்தீங்க இல்லையா, அந்த இடத்தில் வச்சு அவன் மரணம்...அதில் அற்புதராஜ் சாரின் கை உண்டுண்ணு சொல்லிக்குறாங்க. அந்தோணியை அந்த சர்ச்சின் பக்கத்தில் தான் சார் ஊர் ஜனங்க எல்லோரும் கண்ணீர் விட்டபடி பொதைச்சாங்க... சரிங்க சார்... ரொம்ப நேரமாச்சு.. படுத்துக்கங்க.

    Jul 7, 2010

    பயம்-நீல. பத்மநாபன்

    அவன் நெஞ்சுக்குள் பிரேத மூட்டையாய் பயம் கனத்தது. உள்ளே எப்படியோ புகுந்து கொண்டு வெளியேறத் தெரியாத கரப்பான் பூச்சியைப் போல் பயம் அகத்தை குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது.

    Neela-Padmanaban---kc98கன்னங்கரிய இருளில் நிர்வாணமாய் நிற்கும் இயற்கைக் கன்னியை விழிகளால் துழாவியபடி சிட் அவுட்டில் அவன் உட்கார்ந்திருந்தான். அவள் தடித்த காமபீடத்தின் உள்நுனியாய் வெகுதொலைவில் செந்தீ அடிக்கடி தெரிந்து மறைந்து கொண்டிருந்தது.

    காற்றில் லேசாய் அவனுக்குப் பழக்கமான அந்த மனிதசதை, மயிர் கரியும் நெடி...

    புது வீடு கட்ட மனசுக்குள் கட்டிக்காத்து வைத்திருந்த சங்கற்பங்கள் அனைத்துக்கும் சாட்சாத்காரமான ஒரு இடம் தேடி அலைந்த அவன் கடைசியில் இந்தக் குன்றின் மீது இந்த இடத்தை தேர்ந்தெடுத்தபோது எல்லோரும் கேலி பண்ணினார்கள்.

    'இந்த அழகான ஊரில் புது வீடு கட்ட உனக்கு வேறு மனையே கிடைக்கல்லையா... ' சுடுகாட்டைப் பார்த்திருக்கும் இந்த பித்தன்குன்றின் மீதா வீடு கட்டப் போகிறாயடா பாவி... ? '

    ஆனால்...யாரிடமும் எதையும் பேசிபுரிய வைக்க மெனக்கெடுவதில்லை என்ற தன் சுபாவத்திலேயே அவன் நிலைத்து நின்றான்.

    இங்கே நின்றுகொண்டு கீழே எங்கெங்கே திரும்பிப் பார்த்தாலும் மரங்களின் உச்சி முனைகள் ஒன்று சேர்ந்து பச்சைபசேலென்று ஒரு போர்வையாய் தெரியும்...அந்த போர்வைக்குள் முடங்கிப் போய்விட்ட ஊரின் காங்கிரீட் கட்டிடங்கள், கன்னங்கரிய தார் ரோடுகள்.... ' வெகு தொலைவில் கோயில் கோபுரத்தின் தங்கக் கலசங்கள்... அதை மீறி, நீலக்கடலில் சங்கமித்து நிற்கும் தொடுவான விளிம்பின் மங்கியக் காட்சி...பிறகு எங்கெங்கே பார்த்தாலும் விரிந்த வானம். வானம் ஜிலுஜிலுவென்ற வென்ற காற்று...பெயர் தெரியாத பறவைகளின் சமீபத்தை உணர்த்தும் ஒலி அதிசயங்கள்...தன்னிச்சையாய் வளர்ந்து செழித்த பசும் தழைகளின் ஒளடத வீரிய மிக்க நெடி...

    இத்தனை மகிமைகளின் இடையில், கீழே வெகு தொலைவில் சிலநாட்களில், சிலபொழுதுகளில் புகை நடுவில் தெரியும் செந்தீயும், காற்றில் லேசாய் தெரிந்தும் தெரியாமலும் வரும் மனிதசதை, மயிர் கரியும் வாடையும் அவனுக்கு ஒரு பெரிய குறையாய்த் தெரியவில்லை.

    அவன் மனைவிக்கும் இந்த இடம் வெகுவாய்ப் பிடித்துப் போய்விட்டது. ஊரில் சந்தடிமிக்க குடியிருப்பு காலனிகளில் ஐந்து செண்டுக்கு ஆகும் விலையில் இங்கே இருபது சென்ட் வாங்க முடிந்தது. சுற்றிலும் ஏராளாம் இடம்போட்டு கட்டப்பட்ட சகல வசதிகளும் மிக்க இந்த நவீன வீடு தன்னைப்போல் எல்லாவிதத்திலும் அவளையும் கிறுகிறுக்க வைத்ததைக் காண அவனுக்கு ஒரே சந்தோஷம். வீட்டைவிட்டு கடை, நண்பரின் வீடு, கிளப் இப்படி வெளியே எங்குமே செல்லத் தோன்றாத ஒரு அபூர்வ பிடிப்பு. எந்த நேரமும் இந்த சிட் அவுட்டில் உட்கார்ந்து கொண்டு இந்த ஊரைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதில் ஒரு பரவசம். இந்த மோனத்தின் ராகத்தை செவிமடுப்பதில் ஒரு லயம்.

    குபீரென்று காற்று வீசியது. பனியில் குளிர்ந்த காற்றில் ஒரு வாசனை. முல்லைப்பூவின் சுகந்தம். கீழே எங்கோ ஒரு நாயின் நீட்டி ஆலாபனை செய்யும் ஊளை. வெளியில் சருகுகளில் கால் சுவடுகள் பதிவதைப் போன்ற சலசலப்பு மெல்ல மெல்ல கிட்டெ கிட்டெ வருவது போல்....

    அவனுக்கு மயிர் கூச்செறிந்தது.

    சடக்கென்று எழுந்து வீட்டினுள் புகுந்து கொண்டு கதவை அடைத்துத் தாழிட்டான்.

    அறைக்குள் மின் வெளிச்சம் நிறைந்து நின்றும்கூட, திறந்துகிடந்த ஜன்னலில் தெரியும் வெளியுலகின் இருள் அவனைப் பயப்படுத்தியது. கையைக் கம்பிகளின் இடைவழி வெளியே நீட்டி ஜன்னல் கதவுகளை அடைப்பதற்கிடையில், வெளியில் நிற்கும் ஏதோ தன் கையைப் பிடித்திழுக்கப் போவதாய் ஒரு கிலி. வீட்டின் உள்ளையும் வெளியையும் தொடர்பு படுத்தும் ஜன்னல்கள், வாசல்கள் கதவுகள் அனைத்தையும் சாத்தி தாழிட்ட பிறகும் நெஞ்சுக்குள் பயம் முழுசாய் மறைந்ததாய்த் தெரியவில்லை.

    சுவர் கடிகாரம் அடிக்கத் தொடங்கிய சத்தம். பனிரெண்டு தடவை அது அடித்துவிட்டு ஓய்ந்தபோது ஒரு பீதி நிரம்பிய நிசப்தம். அவன் பெருமூச்செறிந்தான். பொழுது புலர குறைந்தது இன்னும் ஐந்து மணி நேரமாவது வேண்டும் ' அவ்வளவு நேரத்தையும் எப்படி இங்கே தனிமையில் செலவிடுவது.

    அன்றைய பத்திரிகையையும் எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்கு வந்தான். சாளரங்கள் அடைத்துக் கிடந்ததால் ஒரே புழுக்கம்...மின் விசிறியைப் போட்டுக் கொண்டு கட்டிலில் சாய்ந்தான்.

    மெத்தையிலிருந்து அந்த மணம் இன்னும் விலகிப் போய்விடவில்லை. இன்னதென்று விளக்கிச் சொல்லத் தெரியாத இந்த வாசனை அவளுக்கு மட்டுமே சொந்தம்.

    அறைக்குள் இந்த வாசனை தவிர, கொடியில் மேஜை மீது எல்லாம் அவள் விட்டுச் சென்ற அடையாளங்கள் அப்படி அப்படியே இருக்கின்றன....

    ஆனால்....

    அவள்... ?

    கல்யாணமாகி நான்காமாண்டு இந்த புது வீட்டில் குடித்தனம் ஆரம்பமானது. இப்போ மூன்று ஆண்டு கூட ஆகியிராது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒருநாள்.

    கடையைப் பூட்டிவிட்டு இவன் வரும்போது, தூரத்திலிருந்தே கவனித்தான். வழக்கம் போல் சிட் அவுட் சோபாவில் அவள் இல்லை என்பதை '

    செம்மண் பாதை வழி மேலேமேலே ஏறிக்கொண்டிருக்கையில், மனசுக்குள் ஏனோ சொல்லத்தெரியாத ஒரு கிலேசம். எதையோ எங்கோ வைத்துவிட்டு, எடுக்க மறந்து விட்டதைப் போன்று உள்ளுக்குள் ஒரு அரிப்பு.

    படிகள் ஏறி சிட் அவுட்டில் நுழைந்ததும், வழக்கத்தை மீறி அவனுக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. சாத்தியிருந்த பிளஷ்டோரைத் தள்ளித் திறந்து அவன் ஹாலில் பிரவேசித்ததும் கமகமவென்று சற்றுமுன் அனுபவமானதைப் போன்ற முல்லைப்பூவின் கனமான வாசனை.

    ஒரு கணம் விக்கித்துப் போய் நின்றான். சாதாரணமாக வீட்டினுள்ளே பூஜை அறையில் நூலிழையாய்ப் புகைந்து கொண்டிருக்கும் ஊதுவத்தியின் ஒரு லேசான மணம்தான் கமழும்; இன்று ஏன் இப்படி.

    சமையலறையில் அவளைக் காணவில்லை. படுக்கை அறையில் அவன் வந்து பார்த்தபோது, முதலில் அறையில் படித்திருந்த மூவந்திநேர மங்கலில் ஒன்றுமே தெரியவில்லை. ஸ்விட்சைத் தட்டியதும், கீழே விழுந்து நொறுங்கும் புட்டிப் பாலாய் அறையில் மின்வெளிச்சம் சிதறியது.

    அந்த ஒளியில்,

    இதோ, தான் இப்போது படுத்திருக்கும் கட்டிலில் அவள் மல்லாந்து படுத்திருக்கிறாள்.

    இவன் திடுக்கிட்டான்.

    நாபிக்குழியிலிருந்து காரணம் தெரியாத ஒரு பீதி சரசரவென்று மேலே மேலே ஏறி ஈயக்குண்டாய் நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொண்டது.

    மெல்ல அவள் அருகில் வந்தான் இவன். அவள் விழிகள் திறந்திருந்தன. தன்னையே வெறித்துப் பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை.

    'பிரேமா... '

    தன் குரல் நடுங்குவது அவனுக்குத் தெரிந்தது.

    அவள் அசையவில்லை.

    இவன் கூர்ந்து பார்த்தான்.

    அவள் உடம்பிலிருந்து ரத்தம் முழுதும் வடிந்துப் போய்விட்டது போல் விளறிப்போய்க் கிடந்தாள்.

    அவள் உடம்பைத் தொட்டான்.

    ஜில்லிட்டுப் போயிருந்தது.

    த்ச்...த்ச்....த்ச்

    அறைக்குள் ஒரு பல்லி ஓலமிட்டது. இவன் தன்னுணர்வு அடைந்தான்.

    சடங்குகள் யாவும் முடிவடைந்து இன்றுதான் உறவுக்காரங்க எல்லோரும் தத்தம் வீடுகளுக்கு போனார்கள்.

    இப்போது...

    நான்--

    நான் மட்டும்...

    சடக்கென்று மின் விளக்குகள் அனைத்தும் அணைந்தன....கும்மிருட்டு...

    இவன் திடுக்கிட்டான்.

    கணநேரத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. படுக்கையிலிருந்து

    கீழே குதித்தான்.

    அந்த நாயின் ஊளைச்சத்தம் மறுபடியும் கேட்கிறது.

    உலர்ந்த சருகுகளில் கால்படும் ஓசை...

    இப்போது அறைக்குள் குப்பென்று முல்லைப் பூவின் மணம். அதனுடன் சதை மயிர் கரியும் வாடையும்...

    பயத்தில் தலைக்குள் ரத்தம் குபுகுபுவென்று பீறிட்டுப் பாய்வது தெரிகிறது.

    உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ஒரு நடுக்கம்...

    பீரோவிலிருந்து டார்சைப் போய் எடுக்க மனம் கூக்குரலிடுகிறதேயானாலும் கால்கள் ஒத்துழைக்க மறுக்கின்றன.

    திடாரென்று அறைக்குள் கும்மிருட்டில் என்னவோ ஒரு நிழலாட்டம்.

    படுக்கையில் அன்று கண்டதுபோல் அவள் சயனித்திருப்பதைப் போல் ஒரு

    தோற்றம்.

    துணுக்குற்று இவன் திரும்பியபோது யார் மீதோ மோதிக் கொண்டதைப் போல்...

    பயம் இப்போது முழுமூச்சாய் எலும்புக்கள், சந்தி பந்தங்கள் யாவும் மொடமொட வென்று நொறுங்க இவனை ஆரத்தழுவியபோது, இவனுக்கு மூச்சடைத்தது..

    இன்னும் சற்று நேரத்தில் நிற்கப் போவதற்கு முன் என்பதைப் போல் இதயம் அவசரம் அவசரமாய் அடித்துக் கொள்வது கேட்கிறது. நாடி நரம்புகளில் செங்குருதி நுரை ததும்ப பொங்கி பிரவகித்து, ஓட துடித்தெழுந்து முழு வடிவில் விகசித்து, விமுக்தி மார்க்கம் தேடி அடியாடையை முட்டி மோதிச் சீறிக்கொண்டு நின்றது குறி....

    திடாரென்று அவனிடத்தில் ஒரு வெறி...யாருடைய ராட்சஸப் பிடியிலிருந்தோ தன்னை விடுவித்துக் கொள்ள என்பதைப் போல், வெள்ளத்திலிருந்து கரையேறிய சடை நாயாய் உடம்பை உதறிக் கொண்டான். ஒரு கணம் அடங்கி ஒடுங்கியபோது தன் வெளியாடை, உள்ளாடை எல்லாவற்றையும் அறையின் ஒரு மூலையில் வீசியெறிந்தான்.

    ஜிவ்வென்று அவன் பெளருஷம் மேலெழும்பி எதையும் யாரையும் நேருக்கு நேர் எதிரிட்டு கீழ்ப்படுத்த விசுவரூபம் தரித்து, வா....வா...நீ ஆண் பிசாசா, இல்லை பெண் பிசாசா, யாரானாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்று உக்கிரமான ஒரு ரத்த ரக்ஷஸாய் தலையாட்டி நின்றது.

    இப்போது இத்தனை நேரமாய் அவன் நெஞ்சில் கனத்துக் கொண்டிருந்த பயமெல்லாம் வடிந்துபோய், அங்கே எதையும் எதிரிட்டு நிற்கத் தகுந்த ஒரு ஆணவம் பாற்கடலாய் அலை மோதுவதை அவனால் நன்கு உணர முடிகிறது.

    *******

    May 22, 2010

    கூறாமல்-நீல. பத்மநாபன்

     

    இனியும் தாமதிக்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக உணர்ந்தார். சென்ற சில மாதங்களாய், ஆண்டுகளாய் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளில் உறைந்த சங்கதிதான். இருந்தும், தவிர்த்து தவிர்த்து, உள்ளத்தையும் ஐம்புலன்களையும் சிறுகச் சிறுக பக்குவப்படுத்திக் கொண்டிருந்ததெல்லாம் இனி முழு மூச்சாய் செயலுக்குக் கொண்டு வந்து விடவேண்டியதுதான்.

    neela சோவென்று தகர்த்துப் பெய்யும் அடைமழை... இந்த மத்தியானப் பொழுதை மூவந்திக் கருக்கலாய்க் காட்டும் மழை மேகங்கள்.

    மாடியில் இங்கே தன்னுடைய இந்த சின்னஞ்சிறிய தனி அறையில் உட்கார்ந்து கொண்டு பார்க்கையில், இக்கணமே இங்கே தன் வீட்டின் மீது வேரற்றுச் சாய்ந்து விடப்போவதாய் பயங்காட்டி பேயாட்டம் போடும் பக்கத்துத் தோப்பு வானளாவிய தென்னைகள்...

    தென்னந்தோப்பை மீறிய பாதையில் செந்நீரின் சிற்றோடைகளாய்ப் பாயும் சேற்றில் நனையாதிருக்க சாரியை சற்று கையால் உயர்த்தியவாறு, குடையும் கையுமாய் காலூன்றி, சற்று முன் நடந்து சென்ற தன் இல்லாள்.

    குத்துக்கல் போல் மேலே மாடியில் இப்படியொருவன் இருக்கிறானே என்ற உணர்வு பாவி மகளுக்கு இருக்கவேணுமே ?

    உம் ஹ்உம்... பேசப்படாது.. பெண்விமோசனப் போராளிகள் யார் காதிலாவது விழுந்துவிடப் போகுது. அவர் சட்டென்று தன் அகக் குரலைக்கூட குரல்வளையைப் பிடித்து அமுக்கி அடக்கிக் கொண்டார்...

    பிள்ளைகள்...

    சின்னக் குழந்தைகளாய் இருந்தபொழுது அப்பா டாட்டா என்று சொல்லி விடைபெற்றதெல்லாம் இன்று பழங்கனவாகி விட்டன...

    இப்போது சிறகுகள் முளைத்து விட்டன.

    மேலும் அத்தகைய விடை வாங்கல்கள் எல்லாம் கூட இன்று பத்தாம்பசலித்தனமல்லவா ?

    அப்படியென்றால் ?

    என்ன, சாப்பிட நேரமாகலியா ?மணி ரெண்டாச்சு.

    ஓ. வெளியில போனவள் அதுக்குள் வந்துட்டாளா ? தாறுமாறான நினைவுகளில் ஆட்பட்டிருந்தால்தானா, நடந்து சென்ற சேற்றுப்பாதை வழியாகவே திரும்பி நடந்து வந்திருக்கும் இவள், அந்த பாதையிலேயே கண் நட்டிருக்கும் தன் கண்ணில் விழவே இல்லையா ?

    மழையில் நனைந்துபோன ஊதாநிறப் புடவைக்குப் பதில் வீட்டு வேலையில் ஈடுபட்டிருக்கையில் சாதாரணமாய் கட்டும் கசங்கிய நூல் புடவை.

    இதென்ன சத்திரமா சாவடியா ? இங்கே ஒருத்தன் இருக்கான், சொல்லிட்டுப் போகணுமேண்ணு இல்லாமல் ஒன்பாட்டுக்கு இறங்கிப் போற, வாறே '

    தன் உடம்பின் கிடுகிடுவென்ற இந்த நடுக்கமும், சொற்களின் தந்தியடிப்பும் மழையின் குளிரினாலா, இல்லை நரம்புகளில் கொதித்து சிரசுக்கு ஓடும் ரத்தத்தினாலா ?

    இன்னிக்குக் காலம்பரேயே உங்ககிட்டெ சொன்னேனே டாக்டர்கிட்டே போகணுமுண்ணு ' உங்களுக்கு எப்பவும் ஏதாவது குத்தம் கண்டுபிடிச்சுகிட்டு இருக்கணும். சரி...சரி. சாப்பிடணுமுண்ணா இறங்கி வாங்க.

    நீ இப்ப பரிமாறித்தான் நான் சாப்பிடணுமுண்ணு கட்டாயமா ? நா வந்து எடுத்துப் போட்டுக் கொட்டிக்கிறேன் என் வாய்க்கரிசியை '

    இவர் கத்தலுக்குப் பதிலாய் சூடாய் என்னவோ கத்தியவாறு - காதில விழவில்லை - அவள் கீழிறங்கிச் சென்று, இப்போது ஒரு மணி நேரம் இருக்காதா ?

    பசிக் கொடுமையா ? இல்லை, இந்த ஐம்பத்தைந்தான பிராயத்தில் எதிர்கொள்ளமுடியாத அவமதிப்பின் உபாதையா ?

    மழை லேசாய்விட்டது போலிருக்கிறது.

    எதற்கும் இன்று இந்த வீட்டுச் சோறு தொண்டையை விட்டு இறங்குமென்று தோன்றவில்லை. சட்டையை மாட்டிக்கொண்டு, குடைகூட எடுக்காது வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தெருவில் இறங்கி விடுவிடுவென்று நடந்தார்.

    சூடாகியிருந்த தலையில் பன்னீராய் விழும் தூறல். வெறிச்சோடிப் போய்க்கிடந்த தெருவைத் தாண்டிச் சற்று நடந்திருக்க மாட்டார், மீண்டும் துளிக்கொரு குடமாய் வலுத்துவிட்ட பெருமழை.

    ரோட்டோர சொளைமாடன் கோயில் நடையில் ஏறி நின்றார். மாடன் நனையாதிருக்க மேலே வேய்ந்திருந்த ஓலைக்கீற்றுக் கூரையைப் பங்கிட தன்னைத்தவிர இன்னொரு ஜீவன் '

    கீழே குந்தி முடங்கியிருக்கும் கந்தலாகிப் போன காவியுடை கிழப்பண்டாரம்.

    யாரும் யார்கிட்டையும் சொல்லிகிட்டு வரலை, சொல்லிகிட்டுப் போகமாட்டோம்.

    இவர் திடுக்கிட்டார்...

    பண்டாரம் தன்னைப் பார்த்துச் சொல்லவில்லை, தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் இந்த வார்த்தைகள்.

    புதியவை அல்ல.

    பழகித் தோய்ந்த சொற்கள்தான்.

    இருந்தும் இப்பக் கேட்கையில்....

    இந்தப் பண்டாரமும் கூறாமல் இக்கோலம் பூண்டவரோ..

    மேலே அவர் ஒன்றும் யோசிக்கவில்லை, ரோட்டில் இறங்கி விறுவிறுவென்று நடந்தார்.

    சோவென்று மேலே பெய்யும் அடைமழையும் முழங்கால்வரை கீழே புதையும் சேறும் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை அவருக்கு.

    ********

    நன்றி..

    இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

    அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்