Showing posts with label கி ராஜநாராயணன். Show all posts
Showing posts with label கி ராஜநாராயணன். Show all posts

Mar 19, 2017

நிலை நிறுத்தல் - கி. ராஜநாராயணன்

"மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்.” எப்பேர்க் கொத்தி வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய முதலாளிக்கேண்ணு உள்ள கெட்டவார்த்தை வசவுகள் இருக்கு புழுத்தநாய் குறுக்கே போகாது அதைக் கேட்டால். அதோடு எத்தனையோதயா அவரிட்டெ அடியும் வாங்கி இருக்கான் இந்த மாசாணம் பயல்.

ஏசுங்க, எம்புட்டு வேனுமானாலும் ஏசுங்க என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டான் அவன். -

இப்பொ அவன் வாங்கின வசவுக்கு ஒரு காரணமும் கிடையாது. "சுண்ணாம்பு எடுத்துட்டுவாலே மாசாணம்"ண்ணாரு எடுத்துட்டு வந்தான்.

ஒரு பிஞ்சு சுண்டைக்காய் அளவுதான் வெத்திலையில்
வைத்துக் கொண்டாரனும்; மஞ்சாடி கூடீரப்படாது, வசவுதான். 

சம்மந்தகார முதலாளி வந்திருந்தப்பொ, இவுக முதலாளிகிட்டே சொன்னாரு ஒருநா.

"வே மாப்ளே, மாசாணம் இங்கெனதான் நிக்கான் போலுக்கு! செமத்தியா வாங்கலாம் வேலை. சிறுசுலேர்ந்தே நல்.ல பாட்டாளி பாத்துக்கொ. இவங்க சாதியிலேருக்கிற சில்லரைத்தனம் புளுகுணித் தனம் கைநீளுறதெல்லாம் வள்ளிசாக் கிடையாது இவங்கிட்டெ, தப்பிப் பிறந்தவன் பாத்துக்கொ"

மாட்டை வச்சி வேலை வாங்கின சம்சாரி மாட்டைப் பாத்ததும் சொல்லிருவான்; வேலையாட்களை வச்சி வேலை வாங்குறவர்களுக்கு இதுகூடத் தெரியாட்டா எப்படி

பெரிய முதலாளிக்கும் தெரியும்; ஆனாலும், அவரிட்டெ ஒரு குணம் தன்னுட்டுள்ள வேலைக்காரங்களை பிறத்தியார்ட்டெ பாராட்டிச் சொல்லமாட்டாரு. காரணம், எவனும் களுதைப் பெரட்டிக் கூட்டிட்டிப் போயிருவாண்ணுதான்.

மாசாணமும் அவன் குடும்பத்தாரும் இந்த ஊருக்குப் பஞ்சம் பிழைக்க வந்த சமயத்தில், ஊர் மடத்துக்குப் பின்னுள்ள புளிய மரத் தடியில்தான் தங்கி இருந்தார்கள். வெளிக்குப் போக கம்மாக்கரைப் பக்கம் வந்த முதலாளி கண்ணுலெ தட்டுப்பட்டது மாசாணம்தான்.

பயலைக் கூர்ந்து பார்த்தார். அப்பொ, அவனுக்கென்ன பதிமூணு பதினாலு வயசிருக்கும். கருமெழுகு நிறத்தில் நல்ல எலும்புத் தாக்காய் அந்த அத்தப் பட்டினியிலும் ஆயாசம் தெரியாமல் ஈரம் உலராத கருப்பு உதடுகளுடன் திடமான மாட்டுப்பற்களுடன் மினுங்கிக் கொண்டிருந்தான். பெரிய முதலாளியைப் பார்த்ததும் அவனறியாம லேயே ஒரு மரியாதை பிறந்து எழுந்து ஒடுக்கமாய் நின்றான்.

கிட்டே கூப்பிட்டு நன்றாகப் பார்த்தார். பிறந்த மண் நல்ல செவக் காடு என்று கந்தல் உடுக்கை சொன்னது. அந்த ஆரோக்ய உடம்பி லிருந்து ஒரு மனித ஊத்தை நெடி

திரும்பவும் அவனை நன்றாகப் பார்த்தார்; மனசுக்குள் உடனே தேர்ந்தெடுத்துவிட்டார்.

"வாடேய், வா. நம்ம வீட்டுக்கு வந்து ஒருவாய் கஞ்சி சாப்டுட்டுப் போவெ"

விசுவாசமான கருப்பு நாய்க்குட்டிபோல அவருக்குப் பின்னால் மரியாதையோடு நடந்தான்.

சட்டியில் கம்மஞ்சோறு வைத்துக் கொடுத்தார்கள். சாப்பிடு வதையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். மீண்டும் சோறு வைக்க சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். உடனே பெரிய முதலாளிக்குச் சந்தோஷம் வந்துவிட்டது! இவன் வயித்துக்குச் சாப்பிடுகிறவன். நாக்குக்குச் சாப்பிடுகிறவனில்லை.

வேலை செய்து காய்காய்த்துப் போன கை பருப்புக் கறியை சிக்கனமாக சிந்தாமல் சிதறாமல் உணவின் அருமை தெரிந்து எடுக்கிறது சட்டியிலிருந்து. எடுக்கும் கவளத்திலிருந்தே வாய் அடம் தெரிந்தது. ஒரு பலாட்டியனாகப் பின்னால் விளங்குவான் வேலையில். அடடா ஒரு செல்வம் கிடைத்துவிட்டது நமக்கு: Cl

இப்படித்தான். வேலைக்குப் புதுசாக வந்த ஒருவனுக்கு அம்மா வட்டிலில் சோறு வைத்துக் கொடுத்தாள். முதல்த்தரம் சாப்பிட்டு முடித்த உடனேயே போதும் என்று அவன் சொன்னதைப் பார்த்ததும் கோவம் வந்துவிட்டது. "போடா வெளியே, ஒருப்பணிக்கழுதை நீ இப்படித் தின்னு வேலை செய்யவா? நீ வேலைக்கு இருந்தது போதும் போ” என்று விரட்டிவிட்டாள்.

பிடிக்கப் போகும் மாட்டுக்கு முன்னால் ஒரு தளுக்கு நாத்துக் கூளத்தை எடுத்துப் போடுவார்கள். எப்படி அது வாய் நிறைய்ய அள்ளி எடுத்துத் திங்கிறது என்று கவனிப்பார்கள். "சோத்தை அள்றதி லேந்தும் நாத்தை அள்றதிலேந்தும் தெரிஞ்சிரும் பூளாக்கு" என்பார் பெரிய நைனா.

அன்றிலிருந்து பெரியமுதலாளியின் குடும்பத்தில் ஒருவனாக' மாசாணம் ஆனான். வாரத்துக்கு ஒரு தலைமுழுக்கு உண்டு. வருசத் துக்கு ஒரு ஜோடி வேட்டி சாப்பாடு போக மாசம் மூணு ரூபாய் சம்பளம்.

அவன் வந்தது ஐப்பசி வருகிற சித்திரையிலிருந்துதான் கணக்கு. அடுத்த சித்திரை வரையிலும் இருந்தால்தான்; பாதியிலேயே அரைகுறையாக போனால் போனதுதான். சம்பளம் கிடையாது.

மாசாணத்தின் குடும்பத்தாரிடம், அவர்களுடைய பூர்வீகம், தொழில், சொந்தவீடு இருக்கா முதலிய எல்லாம் விசாரித்ததில் பூர்வீக வீடு மட்டும் உண்டு என்றும், அது ஒத்தியில் இருக்கிறது என்றும்,

பரம்பரையாக நல்ல பாட்டாளிகள் என்றும், உடம்புதான் அழுக்கு நாக்குசுத்தம் என்றும் ஆரம்பரை சாமி கொண்டாடிகளாக இருந்தார் களென்றும் கால வித்தியாசம் இப்படித்தங்களை வலசைக்காரர்களாக ஆக்கிவிட்டது என்றும் சொன்னார்கள்.

அக்கம்பக்கத்தில் ஆட்களைவிட்டு விசாரித்துப் பார்த்ததில் இதெல்லாம் நெசந்தான் என்று தெரிந்தது. 

"தினி நல்ல தீனிதான் திறுக்குகதான் பட்டு முடியலை" என்று தனது வீட்டாரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னான் மாசாணம் பல சமயம் அங்கிருந்து ஒடிப் போய்விடுவோமா என்ற நினைப்பு வரும். சித்திரையை விட்டுறப்படாது' என்று பல்லைக் கடித்துக்கொண்டிருப்பான்.

வேலையின் சுமையையாவது தாங்கிக்கிடலாம், வசவுகளையும் சமயத்தில் விழும் அடிகளையும் எப்படித் தாங்கிக்கிடறது என்று திகைத்தான்.

ராத்திரி பதினோரு மணிக்கு வந்து படுக்கையில் விழுந்தால் அதி காலை'நாலுமணிக்குக் காலால் எத்தினால்தான் எழுந்திருக்க முடியும்.

வேலைக்குச் சேர்ந்த வருசத்தில் நடந்த ஊர் சாத்திரைப் பொங்கல் விழாவின்போது பகலில் வேலை செய்துவிட்டு ராத்திரியில் நடக்கும் மந்தை நாடகங்களை முன்னால் போய் உட்கார்ந்துகொண்டு பார்த்தான். இப்படி ஏழாம் நாள் நாடகம் முடிந்து தலைக்கோழி கப்பிட அவன் நடந்து வீட்டுக்கு வரும்போது தன்னுசார் இல்லை! எந்த இடத்தில் போய் விழுந்தால் நிம்மதியாகத் தூங்கலாம் என்று தள்ளாடிக்கொண்டே வந்து, ரெண்டு தானியப் பட்டரைகளுக்கு இடையில் சுவரை ஒட்டியுள்ள தூசி படர்ந்த இடத்தில் துண்டை விரித்ததுதான் அவனுக்குத் தெரியும்.

மாசாணத்துக்கு முழிப்புத்தட்டி எழுந்திருக்கும்போது தொழுக் கரையின் உச்சியிலிருந்த தலைக்கோழி கூப்பிட்டது. ஒண்னுக்கு இருந்துவிட்டு வெள்ளியை வானத்தில் தேடினான். ஒன்றும் நிதான்ப்படவில்லை. கூரை உச்சியில் திரும்பவும் ஒரு "கொக்கரக் கோ.கோ" கேட்டது. இரு இரு எண்ணைக்கு உன்னை வந்து வெருகு வேட்டு வைக்கப் போகுதோ தெரியலை சிரிப்போடு நினைத்துக் கொண்டு ஆட்டுரலில் நனையப்போட்ட பருத்திக்கொட்டையைக் கட கட கட என்று சத்தங் கேட்க வேகமாய் ஆட்ட ஆரம்பித்தான்.

வாசக்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த பெரியமுதலாளி கவனித்துவிட்டார் இது யார் என்று, கோவமான கோவம் அவருக்கு. திண்ணையில்க் கிடந்த சாட்டைக் கம்பை எடுத்து சுளிரென்று ஒரு சுளுப்புச் சுளுப்பினார். "எங்கெலே போயிருந்தெ ஒரு வாரமா" 'என்னது, ஒரு வாரமாவா!'

"நா எங்கேயும் போகலையே முதலாளி: இங்கென தான் பட்டரைகளுக்கு இடுக்கிலெ படுத்துக்கிடந்தேன்"

"சிறுக்கி பிள்ளெ பொய்யி; பொய்யா சொல்லுதெ-" என்று பேவாங்கு வாங்கினார்.

துடித்துப்போனான் மாசாணம். அந்தக் குளிர்ந்த வேளையில்

அவனுடைய அலறல் எல்லோரையும் எழுப்பிக் கூட்டம் கூடிவிட்டது. சாட்டையின் வெடிப்பு நாலு தரத்துக்குத்தான் வலிக்கிறமாதிரி இருந்தது.

இடது முஷ்டியை வானத்தைப் பார்த்து உயர்த்தி சாமி கொண்டாடிகள் தங்கள் உடம்பிலேயே புனித சாட்டையால் அடித்துக் கொள்ளும் பேரோசை அவன் மனக்கண்ணில் மின்னலிட்டது.

உணர்ச்சியால் இரண்டு முஷ்டிகளையும் இறுக்கிக்கொண்டு வானத்தைக் குத்துவதுபோல்த் தூக்கி நிறுத்தி படுமுடிச்சிவிடும் கயிறுபோல் உடம்பை முறுக்கிக்கொண்டு அப்படியே நின்றான்.

சில்லுகளாய் முறிந்த மனஎலும்புகள் உருகி, பின் ஒன்றுகூடி கரடுமுறடான ஒரு எலும்பாய்க் கூடியது அந்த வினாடியில் அவனுள். அவன்மேல் விழுந்துகொண்டிருக்கும் அடிகளை அங்கே வந்து கூடியவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். 

என்ன என்று பார்த்தபிறகுதான் தெரிந்தது! தூசி படிந்த தரையில் அவன் கிடந்த தடமும் விரித்த துண்டும் அங்கே கிடந்தது.

பெரிய முதலாளியின் வீட்டில் இப்படி யாரும் பார்க்காமல் வருஷத்துக்கு ஒருதரம் மட்டும் ஒட்டடை அடிச்சி வெள்ளை ஆத்துகிற இடம் பலது இருக்கும். அதுலெ இதும் ஒண்ணு.

"நல்ல கூத்துதாம்போ அப்பவும் குண்டியிலே போற குசு தெரியாமெ ஒரு ஆம்பளை ஏழுநா ராவா பகலாத் துரங்கியிருக்கானே பாவி மட்டை' அதிசயத்தாள் ஒரு கிழவி.

"ஹிம், நீ ஒண்ணு. ஒரு வாரம் முழிச்சிருக்கான், ஒரு வாரம் துங்கிருக்கான். கணக்கு சரியாப் போச்சி!” என்று கெத்தோடு சொன்னார் ஒரு கிழவனார்.

ஊரெல்லாம் ஒரே கெக்கோல்; சொல்லிப் பேசிச் சிரிக்க விஷயம் கிடைத்துவிட்டதே

அடி வாங்கியதுக்குப் பிறகு ரொம்பநேரம் அழுதுகொண்டிருக்கும் மாசாணம் அழாமல் அன்று கணத்த மெளனமாய் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது பெரிய முதலாளிக்குப் புதிய விஷயம்.

சித்திரையை முடித்த மாசாணம் விடுப்புக் கேட்டான் ஊருக்குப் போக முப்பத்தி ஆறு வெள்ளி ரூபாய்களை எண்ணி அவன் முன் வைத்தார் பெரிய முதலாளி. அவனைப் பார்த்து அவர் ஒரு பாராட்டுச் சிரிப்புச் சிரித்தார். பிறகு, "இண்ணைக்கு விசாளக்கிழமை. நாளைக்கு ஒரு நா தைப்பாறிக்கொ; நாளண்ணைக்கி சனிக்கிளமை எண்ணை தேச்சித் தலைமுளுகி கோழியடிச்சி சாப்ட்டுட்டுப் போ" என்றார்.




ஊருக்குப்போன மாசாணம், அந்த வருசம் வரலை; அடுத்த வருசம் வரலை; அதுக்கடுத்த வருசமும் வரலை.

நாலாவது வருசம் வந்த மாசாணம் நெலைச்சட்டமாக ஒரு வீட்டில் நிற்காமல் ஒவ்வொரு சித்திரைக்கும் ஒரு வீட்டில் நின்றான்.

என்றாலும் கிராமத்தில் அவன்பேரில் சுத்தமான ஆளு' என்ற பெயர் நிலைத்தது.

குமருகளும் இளவட்டங்களும் பால் உணர்ச்சிப் பேச்சுகளால் அவனைச் சாடையாகச் சீண்டுவார்கள்.

"லேய் மாசாணம் மாடு மிதிச்சிட்டதா உனக்கு!” என்றுகூடக் கேட்டிருக்கிறார்கள்.

கேலியைப் பொறுத்துக்கொள்பவனைக் கண்டால் எல்லார்க்குமே குஷிதான். சிறுசுலிருந்து பெருசுவரை அவனோடு வாயாட்டம் ஆடாதார் கிடையாது.

சனிக்கிழமைதோறும் ஊர் பஜனை மடத்தில் நடக்கும் பஜனைக்கு மாசாணம் தவறாமல்ப் போய் உட்காருவான். பாடாவிட்டாலும் கேட்டுக்கொண்டே இருப்பான். தெலுங்குப்பாடல்களின் அர்த்தம் அவனுக்கு விளங்காவிட்டாலும் கேட்பதற்கு ரம்மியமாய் இருந்தது.

சில தமிழ்ப்பாடல்கள் வரும்போது மனசுள் ஒரு பிச்சிப் பூ மலரும். "ராம நாமமே கல்க்கண்டு; வாயிலெ பட்டால் இனிப்புண்டு;" ஒரு நாள், ஸ்ருதிப்பெட்டி போடும் ஆள் வராததாலோ என்னமோ மாசாணத்தைப் போடும்படி சொன்னார்கள். அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான்.

முதலில் கொஞ்சம் முகச்சுளிப்பு இருந்தாலும், பிறகு சரியாய் வந்து கொண்டிருந்தது ஸ்ருதி. அப்போதுதான் கவனித்தான்; தன்னை அது ஒரு அமுததாரையால் கரைக்கிறது என்பதை லயித்துப்போனான் அதன் சொகத்தில்,

அதிலிருந்து சனிக்கிழமை இரவுதோறும் அவனுக்கு அந்தப் பதவி கிடைத்து வந்தது. கண்ணன் பிறப்பு, ஏகாதசி, புரட்டாசியின் கடேசிச் சனி இவைகளில் சப்பரம் எழுந்திருத்தாகி வரும்போது பின்னால் பஜனை கோஷ்டி பாடிக்கொண்டே வரும். அவர்கள் மாரிலே சந்தன மும் பூமாலையும் அணிந்து இருப்பார்கள். அதில் மாசாணமும் இருந்தான். அது அவனுக்கு ஒரு உயர்வாகத் தெரிந்தது. அனைவ ரோடும் தான் சமதையாகத் தோன்றியது. அங்கே தன்னை இளப்பமாகப் பார்ப்பவர்களோ கேலி செய்பவர்களோ இல்லை.

3
மாசாணத்துக்கும் கலியாணம் வந்தது. ஊருக்குப் போனான். கொஞ்சநாட்களுக்கெல்லாம் ஒரு பெண்ணோடு வந்தான். அவர்களை பார்த்ததும் "அட! மாசாணம் பயலுக்கு கிடைச்ச யோகத்தைப் பாத்தியா' என்று பேசிக்கொண்டார்கள். கண்ணால் ஒருவருக் கொருவர் ஜாடை செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இருக்க இடம் கொடுக்க நான் நீ என்று முன்வந்தார்கள்.

மாசாணம் பெண்டாட்டியின் பெயரும் மாசாணம்தான்! இதைக் கேட்டதும் ஊர்க்காரர்களுக்கு ரெட்டைச் சந்தோஷம். கால் கை சுளுக்கிக்கொண்டால் எண்ணெய் இட்டுத் தேய்த்துவிட இனிமேல் ஒரே பெயருடைய தம்பதியர் வீட்டைத்தேடி விசாரிக்கவேண்டாம். தேடிப்போகும் மூலிகை வந்து காலில் சிக்கிக்கொண்டதே

குடும்பஸ்தனாகிவிட்டதால் இனிமேல் எந்த சம்சாரி வீட்டிலும் சம்பளத்துக்கு நிற்கமுடியாது. அத்தக்கொத்து வேலைக்குப் போய் தினமும் மூனுபடி கம்மம்புல் தானியம் கொண்டுவந்தான்.

ஒருநாள் சாய்ந்திரம் ஏகாலிச்சுப்பன் கால்ச்சுளுக்கைத் தடவிவிட சிரட்டையில் கொஞ்சம் விளக்கெண்ணெயுடன் வந்தான். "அப்பச்சி, ஒங்க கையாலெ தடவிவிடுங்க" என்றான். மாசாணத்துக்கு கொஞ்சம் திகைப்புதான்; என்ன செய்ய, பெண்சாதியும் புருஷனும் ஒரே பெயர் உடையவர்கள் தடவிவிட்டால் தேவலையா விடும் என்று இருக்கிறதே கடவுளே என்று தடவிவிட்டான்.

மறுநாள் காலையிலேயே சுப்பனால் கைவீசி நடக்க முடிந்தது. அவனுடைய பெண்சாதி ராக்கி கஞ்சி வாங்கப்போன வீடுகளில், ஊர் பூராவும் மாசாணத்தின் கைராசியைப்பற்றி மெச்சிப் பேசினாள்.

பிடிப்புகளுக்குத் தடவிவிட, திருஷ்டி கோளாறுகளுக்குப் பச்சிலை பூக பார்வை பார்க்க, தண்ணிர் தெளிக்க, விபூதி போட என்று ஆட்கள் ஆட்களைக் கூட்டிக்கொண்டு மாசாணத்தின் வீட்டைத் தேடிவர ஆரம்பித்தார்கள். 

மாசாணத்துக்கு இதெல்லாம் பெருமையாக இருந்தாலும் மாசாணத்திக்கு ஆரம்பத்தில்தான் பெருமையாக இருந்தது. காசு பெறாத இந்த நட்டணை வேலைகள் அவளுக்கு பிடிக்காததோடு புருஷனையும் பிடிக்காமல் போய்விட்டது. இவன் தனக்கு சமதை இல்லை என்ற நினைப்பு அவளுக்கு உள்மனசுக்குள்; அதோடு தான் வந்தபிறகுதானே இவனை இத்தனை பேர் தேடிவர இருந்தது என்கிற நினைப்பும்.

ஆரம்பத்தில், குளிக்கும்போது அவனுக்கு முதுகு தேய்த்து விட்டாள். சாப்பிட்ட வட்டிலைக் கழுவி வைத்தாள். பிறகு அவனே தான் செய்துகொள்ள வேண்டியதாகிவிட்டது. சில நாளைக்குள் அவள் "ஒரு வடியா வருது, ஊத்திச் சாப்பிடு கஞ்சியெ" என்று திரும்பிப் படுத்துக்கொள்வாள், சுடுசொல் ஒன்றும் சொல்லமாட்டான் அவளை, கோவங்கூட வராத அவனுடைய இந்த மதக்கம் அவனிடமிருந்து ரொம்ப விலகிக்கொள்ளச் செய்தது அவளை.

மற்றவர்களிடம் அவள் பேசிக்கொண்டிருக்கும்போது இவன் காதில் படும்படியாகவே "ஆடுண்ணா ஒருசுறுகுப் பால் கொடுக்கனும் கிடாண்ணா ஒரு முட்டாவது முட்டணும்" என்று பொரிவாள். 

சாய்ந்திரம் பெரியமுதலாளியின் வீட்டம்மா மாசாணத்தைத் தேடி வீட்டுக்குப் போனாள். மாசாணத்தி முழுகிய தலையை படலைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு சினுக்குவலியால் சிக்கெடுத்து நீவிவிட்டுக் கொண்டிருந்தாள். முதலாளியம்மாவின் கண்ணில் முதலில் பட்டது மாசாணத்தியின் சிறுத்த இடையும் நீண்ட கூந்தலும்தான். பசப்புக் கார முண்டை ஊர்ப் பிளைகளையெல்லாம் கெடுத்திட்டாளே என்று மனசுக்குள் ஏசிக்கொண்டே "ஏ மாசாணத்தி, மாசாணம் வந்ததும் வீட்டுக்கு வரச்சொல்லு" சின்ன மொதலாளிக்கு திருநாறு போடணும்" என்று சொல்லிவிட்டு நாறச் சிறுக்கி, எடுபட்ட முண்டெ' என்று மனசுக்குள் ஏசிக்கொண்டே போனாள்.

காட்டிலிருந்து மாசாணம் வந்தவுடனே முதலாளியம்மா வந்த
தகவலையும் சொல்லி, வழக்கம்போல் அவனுக்குக் கொடுக்கிற வாழ்த்துமானங்களையும் கொடுத்தாள்.

வென்னீரை அவனே சோமாரி வைத்துக்கொண்டு குளித்தான். போயி விபூதி போட்டுட்டு வந்து சாப்பிட்டுக்கிறலாம் என்று கிளம்பிவிட்டான்.

விபூதிபோட வந்தாலோ, பச்சிலை பூச வந்தாலோ, வருகிறவன் யாருடனும் பேசுவதில்லை. அதனால் "வா" என்றும் அவனை வீட்டார் சொல்லமாட்டார்கள்.

பெரிய முதலாளியின் வீட்டுக்குள் மாசாணம் மெளனமாக நுழைந்ததும் ஒரு சின்ன பரபரப்பு; ஒரு சின்ன மரியாதை

பட்டகசாலையில் கன்னி மூலையில் போய் பேசாமல் சப்பணம் போட்டு உட்கார்ந்துகொண்டான். அவன் முன்னால் தாம்பாளத்தில் விபூதி குவித்து அதன் உச்சியில் சூடக்குவியல்,

முதலாளியம்மா ஒன்பது வயசுள்ள "சின்னமொதலாளி"யைக் கூட்டிக்கொண்டு வந்து மாசாணத்துக்கு முன்னால் உட்கார்த்தி வைத்து தானும் உட்கார்ந்துகொண்டாள். குடும்பத்தார் அனைவரும் மாசாணத்தின் எதிரே பவ்யமாக வந்து உட்கார்ந்துகொண்டார்கள். பெரிய முதலாளியும்கூட எவ்வித அட்டகாசம் இல்லாமல் ஒரு பக்கத்தில் வந்து அமைதியாக உட்கார்ந்துகொண்டார்.

ஆரம்பிப்பதற்கு முன்னால் மாசாணம் அந்த வீட்டையும் அங்குள்ள பொருள்களையும் அந்த மனிதர்களையும் ஒரு பார்வை பார்த்தான், இவ்வளவுதானா நீங்கள்ளாம்! என்று இருந்தது அவன் பார்த்தது.

சூடத்தைக் கொளுத்தினான். அது எரிவதையே அவன் கண்கள் உக்கிரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன. எரிதியின் நாக்குக் குறையக் குறைய பார்வை உக்கிரமும் குறைந்து விழி மெளனம் ஆகி மூடிக் கொண்டது. நிமிர்ந்த மார்புடன் அப்படியே இருந்தவன் மெல்ல விழித்து அந்தப் பாலகனை அருள் சுரந்த கண்களால் பார்த்தான்.

தாம்பாளத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அந்த வெது வெதுப்பான திருநீற்றை சமன்படுத்தி அதில் விரலால் ஏதோ எழுதி னான். கொஞ்சம் தலைதுாக்கி பெரிய முதலாளி அதைக் கவனித்தார். ஒன்றும் விளங்கவில்லை. மாசாணத்துக்கோ எழுதப் படிக்கத் தெரியாது.

மூடிய கண்களுடன், ஒலி எழாமல் அவன் உதடுகள் வேகமாக எதையோ சொல்லிக்கொண்டே உடம்பை சற்றே முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டே இருந்தவன் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் தரையில் ஓங்கி பெருத்த சத்தம் எழ கைபொத்தி அடித்தான். நெஜமாகவே பதறிப்போனார்கள் எல்லோரும்! அவனுடைய விழிகள் வெளியே பிதுங்கும்படியாக ஓங்கிய குரலில் ஒம் ரீம் ஸம் என்று இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டு அவர்களைக் கோபமாகப் பார்த்தான். அது அனைவரையுமே கொஞ்சம் திகில டையச் செய்தது. அடுத்த வினாடியே சாந்தமடைந்து மிருதுவான குரலில் "மொதலாளியம்மா, சின்ன மொதலாளி எங்கையோ பயந்திருக்காக, வேற ஒண்னுமில்லெ இந்தத் திருநீறை காலையிலும் ஒரு தபா பூசுங்க. ராத்திரியே காய்ச்சல் இறங்கி சரியாபோயிரும்" என்று

சொல்லி அந்தச் சிறுவனுக்கு நெற்றியில் இட்டு புஜங்கள் இரண்டிலும் தடவிக்கொண்டே போய் ஒரு சொடக்குடன் முடித்தான். அவன் இப்படிச் செய்தது குழந்தைகள் அனைவருக்குமே பிடித்திருந்தது.

பெரியவர்கள் வந்து திருநீறைக் குனிந்து மரியாதையாக வாங்கிக் கொண்டார்கள். பெரிய முதலாளிக்கு இந்தப் பயலிடம் போய் இப்படிக் குனிந்து வாங்கவேண்டுமா என்றிருந்தது. வீட்டம்மாவின் அழுத்தம் அவரையும் வந்து குனிந்து ரெண்டு கைகளையும் நீட்டி வாங்கும்படி செய்தது.

"சின்ன முதலாளி"யின் காய்ச்சல் இறங்கி மறுநாளே சரியாகி விட்டது. ஒரு பக்கம் ஊராரின் இளப்பம் அவன்பேரில் நீங்கிக் கொண்டு வரும்போது இன்னொரு பக்கம் கேலிபீரங்கிகள் அவன்மீது தரமாரியாய்க் குண்டு மாரி பொழிந்துகொண்டிருந்தன. இவர்களுக்கு ரொம்பச் செளகரியமான விஷயம் அவன் முகத்துக்கு நேரேயே அதைப் பிரயோகிக்கலாம். 

அந்த வருஷம் மழைக்காலம் சீக்கிரமே தொடங்கும்போல் தெரிந்தது. ஆவணி மத்தியில் ஒரு நல்ல மழையும் ஒரு துணை மழையும் பெய்து நிலத்தையும் மனசையும் குளிர்வித்தது, சொல்லி வைத்தது போல உடனே கரிசல்க்காடு அனைத்தும் சுறுசுறுப்படைந்தது.

பருவம் செய்ய ஆரம்பித்தார்கள், முங்க உழறது குப்பை சிதறுகிறது எழுப்படிக்கிறது என்று.

புரட்டாசி முதல் பட்டத்தில் விதைக்க எல்லோருமே தயார். பருவ மழையைத்தான் காணோம்.

சரி போகுது; நடுப்பட்டத்தில் பேயும், அதுதானே நமக்கு உகந்த படடம.

நடுப்பட்டத்திலும் பெய்யவில்லை. சம்சாரிகளின் நெற்றி சுருங்கியது. முகம் கடுக்க ஆரம்பித்தது.

விறுவிறு என்று காரியங்கள் மழையைத் தருவிக்க என்று ஆரம்பமாயின.

மழைக்கஞ்சி எடுத்தார்கள். கொடும்பாவி கட்டி இழுத்து ஒப்பு சொல்லி அழுதார்கள். கிராம தேவதைகளுக்கெல்லாம் கொடை நடத்தி, பலி கொடுத்து அவைகளின் மனசைக் குளிர்வித்தார்கள்.

புரட்டாசியின் கடேசிப்பட்டமும் வெள்ளைவெயிலாகவே கடந்து போனது.

கடவுளே, ஐப்பசி மாசமாவது நீ மழையாக வரமாட்டீயா? பிறாந்துகளே நீங்கள் எங்கே போய்த் தொலைந்தீர்கள்?

வானத்தின் உச்சியில் நூற்றுக்கணக்காய்ப் பறந்து வட்டமிட்டு மழை வரப்போவதைச் சொல்லுவீர்களே.

சிறிய நங்கூர வடிவத்தில் பறக்கும் சலங்கைப் பறவைகளையும் காணோமே.

சாயந்திரங்களில் மேகங்கள் நீர்வாய்க்கால் இடவில்லையே, சந்திரன் எட்டத்தில் கோட்டை கட்டவில்லையே, ட்ொர்க் டொர்ர்க் என்று எங்காவது ஒரு தவளை கூப்பிடாதா.

மோசம் போயிட்டோம்! மோசம் போயிட்டோம் என்று

சம்சாரிகள் ஒருவருக்கொருவர் மாறிமாறி சொல்லிக்கொண்டார்கள்.

வேலைகள் ஸ்தம்பித்துப் போனதால் கூலிகள் பட்டினி கிடந்தார்கள்.

மாசாணத்தின் வீட்டில் ஐப்பசியின் அடைமழைக்காகக் கொஞ்சம் சேமித்து வைத்திருந்த தானியமும் தீர்ந்தது. "இனி மண்ணைத் திங்க வேண்டியதுதான்" என்று சொன்னாள் மாசாணத்தி, கடேசியாகக் கிண்டிய கம்மங்கழை அவன் கும்பாவில் ஊற்றிக்கொண்டே

"மண்ணை என்னத்துக்காகத் திங்கனும் மாசாணன் இருக்கிற வரைக்கும்?” என்றான் அவன் உடனே, "ஆஹ ஹாக" என்று இளப்பமாக அவனை நோக்கி வலிப்புக்காட்டிக் குரல் கொடுத்தாள் மாசாணத்தி.

4
பட்டினி ஊரோடு ஆரம்பமானது. ஒரளவு வசதியான வீடுகளில் மட்டும் அடுப்பு புகைந்தது. கூலிகள் பஞ்சம் பிழைக்கக் கிளம்ப வேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டார்கள். ஆனாலும் பூமாதேவி தனது குழந்தைகளுக்குக் கொடுக்க என்று தன் மடியில் கிழங்கு வகைகளை வைத்துக்கொண்டிருந்தாள்.

மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டு போய் காடுகளில் புதைந் திருக்கும் சட்டிக்கிழங்கு சானைக்கிழங்கு வகைகளைத் தோண்டிக் கொண்டு வந்து பக்குவம் செய்து தின்று கிடைத்த தண்ணிரைக் குடித்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

மழை பெய்யாமல் போகாது; அப்படி இருக்கமுடியுமா; இருந்தால் உலகம் என்னத்துக்காகும் என்று நினைத்தார்கள்.

மாசானம் இரண்டு நாள் பட்டினி இருந்தான். ராத்திரிகளில் துக்கமே வரவில்லை, குத்தப்பட்டவன் துங்கினாலும் குறைவயித்துக்காரன் துரங்கமுடியுமா

மூணாவது நாள் மதியம் ஒரு முடிவோடு படுக்கையிலிருந்து எழுந்து நின்றான். தலைசுற்றும்போல் இருந்தது நிலையைப் பிடித்துக் கொண்டான்.

நேரே பார்வதி அம்மன் கோவில்முன் வந்து நின்றான். வேலை இல்லாததால் ஊர்க்காரர்கள் அங்கே உட்கார்ந்து மழை செய்த வங்கொடுமையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மாசாணம் அவர்கள் முன்னால் வந்து நின்று மே வேட்டியை எடுத்து இறுக்கிக்கொண்டு தரையில் விழுந்து அம்மனை வணங்கினான். நீட்டி கூப்பிய அதே நிலையில் ஒன்றிரண்டு நிமிடங்கள் கிடந்தான். ஊர்க்காரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

எழுந்திருந்த மாசாணம் தரையைக் கிள்ளி நெற்றியில் இட்டு சபதம் போல் உரத்துச் சொன்னான், மழை பெய்கிறவரை இங்கேயே அம்மனுக்கு முன்னால் உட்கார்ந்து வயணம் காக்கப்போவதாகவும் மழை பெய்யாமல் போனால் பட்டினி இருந்து இங்கேயே உயிரை விடப் போவதாகவும் சொல்லி அந்த மைதானத்தில் கிழக்காமல் பாாத்து சப்பனம் போட்டு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டான்.

பலபேருக்கு இது வேடிக்கையாகவும் சிலபேருக்கு இது கோமாளித் தனமாகவும் பட்டது. ஊருக்குள் இதைக் கேள்விப்பட்டவர்களுக்கு அப்படி இல்லை; கேள்விப்பட்டதும் உணர்ச்சிவயப்பட்ட ஒரு பரபரப்புக் கொண்டார்கள்.

பார்க்க பலபேர் அந்த இடத்துக்கு விரைந்து வந்தார்கள். ரொம்ப நேரம் நின்று பார்க்கமுடியாமல் வெயில் வாட்டியது.

உடம்பெல்லாம் வேர்த்து வடிய அதேநிலையில் மாசாணம் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

ராத்திரியில் அவனை அந்த நிலையில் விட்டுவிட்டு வீட்டில் படுக்க ஊராருக்கு மனசு வரவில்லை.

ஒருவர் மாற்றி ஒருவர் முழித்துக்கொண்டு கோவிலின் முன் தாழ்வாரத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு லாந்தர் வெளிச்சத்தில் சத்தம் போட்டு 'விராட பர்வம்" படித்தார்கள், அவர் களுக்குப் பெரிய முதலாளியின் வீட்டிலிருந்து சுடுதண்ணி - கருப் பட்டி போட்ட தேயிலைத் தண்ணி கொடுத்தனுப்பினார்கள்.

மறுநாளும் மாசாணம் அதேநிலையில் இருந்தான். காலையிலி ருந்தே புழுக்கம் தாங்கமுடியாததாய் இருந்தது.

மாசாணத்தின் இந்த முடிவுபற்றிக் கேள்விப்பட்ட தோரி கிருஷ்ணக்கோனார் கிடையிலிருந்து வந்தார்.

குருத்துப்பனை ஒலையைப் பட்டை பிடித்து அதில் ஆட்டுப் பாலைக் கறந்துகொண்டு வந்திருந்தார். அவன் இருப்பு அவருடைய

மனசைத் தொடுவதாய் இருந்தது. மாசாணத்தின் முன்னால் மண்டியிட்டு அவனுடைய வாய்க்குப் பக்கத்தில் பால்ப்பட்டையை ஏந்திப் பிடித்துக்கொண்டு "மாசானம்; மாசாணம்" என்று மெல்லிய குரலில் சத்தங்கொடுத்துக் கூப்பிட்டார். மாசாணம் கண்ணைத் திறந்து பார்க்கவில்லை. பலர் இதை வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டார்கள்.

"மாசாணம், ஐயா மாசாணம், இந்தா கொஞ்சம் பால் கொண்டு வந்திருக்கேன். ஒரு மடக்கு குடியய்யா"

மெதுவாகக் கண்ணைத் திறந்து கீதாரியைப் பார்த்தான். அவர் தனது வாயருகே ஏந்தியிருக்கும் பட்டையில் ததும்பும் பாலைப் பார்த்தான். அதே மெதுவாக கண்களை மூடிக்கொண்டே வேண்டாம் என்று சொல்வதுபோல் தீர்மானமாகத் தலையை அசைத்துவிட்டான். அங்கே கூடியிருந்த முகங்களில் புன்சிரிப்போடு கூடிய வியப்புத் தோன்றி மறைந்தது.

வயசாளியான அந்தக் கீதாரி சொன்னார். "பிள்ளே, எல்லாரும் தமக்காகத்தான் வயணம் காப்பாக உலகத்துக்காகக் காக்கெ ஒன் புண்யத்திலெ மழை பெஞ்சி ஜீவராசிக பொழைக்கட்டும்." என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்து பக்கத்திலுள்ள கங்கையில் கொண்டுபோய் பாலை ஊற்றிவிட்டு பட்டையை நெரித்து அதை ஒரு ஒரமாகப் போட்டுவிட்டு வந்தார்.

எல்லோரும் தோரியைச் சுற்றிக்கொண்டு மழை வரும் அறிகுறி ஏதாவது கிடையில் தெரிகிறதா என்று கேட்டார்கள்.

"நேத்துலேயிருந்து ஆடுக சரியா மேயாமெ கூடிக்கூடி அடையுது மழை வராமப் போகாது" என்றார். பால் கறந்துகொண்டு வர

விடலைப் பனையில் குருத்தோலை வெட்டப் போனபோது துரக்கணாங்குருவிகள் வேகமாய் கூடுகள் கட்டி முடிப்பதைப் பார்த்திருந்தார்.

தரைப் புற்றுகளிலிருந்து தேங்காய்ப்பூப் போன்ற வெண்ணிறத்தில் தங்களின் முட்டைகளை அள்ளிக்கொண்டு மொலோர் என்ற எறும்புக் கூட்டங்கள் கிளம்பிப் போவதையும் அவர் பார்த்திருந்தார்.

மூணாம்நாள் காலையில் மஞ்சள் வெயில் அடித்தது. அலசி விட்டதைப்போல் வானம் சுத்த நீலமாய் இருந்தது.

யாரோ மேற்கே கைகாண்பித்தார்கள். வெகுதுரத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை இன்று ரொம்பக்கிட்டெ வந்து இருப்பது போல்த் தெரிந்தது. எப்பவும் ஒரு நீளமான நீலநிற அம்பாரமாக மட்டுமே தெரியும் மலை இன்று, அதனுள்ளே இருக்கும் மலையின் திருப்பங்கள் மடங்கள்கூடத் தெளிவாகத் தெரிந்ததைப் பார்த்தார்கள். யாரோ அதிலுள்ள பாறைகள் மரங்கள் கூடத் தெரிவதாக சொன்னார்கள். கோவிலின் படிக்கட்டின் அடியிலிருந்து "டொர். டொறக்" என்று ஒரு சொரித்தவளை சத்தம் கொடுத்தது. ஒருவர் முகத்தை ஒருவர் சந்தோஷமாய்ப் பார்த்துக்கொண்டார்கள்.

ஏறுவெயிலின் வெக்கை தாளமுடியாதபோது மாசாணத்தின் மேலே நிழல் படும்படியாக ஒருவர் ஒரு காடிவண்டியை இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தினார்.

துடைத்ததுபோலிருந்த வானத்தில் நேரம் ஆக ஆக மேக கோபுரங் கள் எழுந்து வந்தவண்ணமாக இருந்தன. திடீரென்று காலநிலையில் சொல்ல இயலாத மாறுதல் - பார்த்துக்கொண்டிருக்கும்போதே - நிகழ்ந்துகொண்டிருந்தது.

வேகமாக நகர்ந்துகொண்டிருந்த வெள்ளை மேகங்கள் மதியத்துக்கு மேல் நிறைசூல்கொண்ட யானை மந்தைகளைப்போல் நகரமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது உச்சியில் கட்டுத்தரையிலிருந்து கயிற்றை அறுத்துக்கொண்ட காளையொன்று குதியாளம் போட்டது. இரைக்குச் சென்றிருந்த கரைமரத்துக் காகங்கள் பாதியிலேயே கத்திக் கொண்டு திரும்பி வந்துகொண்டிருந்தன. வடஞ்சுருட்டி - மூலையில் திடீரென்று மின்னல் அந்தப் பகலிலும் கண்ணை வெட்டியது.

இருட்டிக்கொண்டு வருகிறது மழை என்று யாரோ சத்தம் போட்டுச் சொல்லுவது தூரத்தில் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு இரைச்சல் நெருங்கி வருவதை உணர்ந்தார்கள்.

நெல்லிக்காய் அளவுள்ள கனமுள்ள குளிர்ந்த துற்றல் முகத்தில் தலையில் கையில் விழ ஆரம்பித்தது.

அந்த இரைச்சல் இப்போது பெரிதாகக் கேட்டது. அருகேயுள்ள பன்ங்காட்டின்மேல் கொட்டுகிற மழையின் சப்தம் அது.

திடீரென்று தட்டாங்கற்களை வாரி இறைப்பதுபோல ஆலங் கட்டிகள் தரைமேல்க் கொட்டியது. அனைவரும் கோவிலுக்குள் ஒடி நுழைந்துகொண்டார்கள். நிழலுக்காகக் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருந்த காடிவண்டி மாசாணத்துக்குப் பாதுகாப்பாக அமைந்தது.

மாசாணம் கண்ணைத் திறந்து பார்த்தான் "ஈஸ்வரீ," என்று சொல்லிக்கொண்டே தனக்குப் பக்கத்தில் உருண்டு வந்த ஒரு ஆலங்கட்டியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.

ஆகாயத்துக்கும் பூமிக்கும் பாவாற்றியதுபோல் இறங்கிக்கொண்டிருந்த கம்பித்தூதூறல் திடீரென்று வலுத்த மழையாகக் கொட்டியது. மழையின் ஒசை காதுக்கு இனிமையாக இருந்தது. காற்றின் இசைவுக்கு ஏற்ப மரங்கள் முதுகைத் திருப்பித் திருப்பி காட்டிக் குளித்தது மழையில்,

மாசாணம் தெப்பமாக நனைந்துவிட்டான். உட்கார்ந்திருந்த இடத்திலெல்லாம் மழைநீர் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. பிரம்மாண்டமான ஒரு இடி முழக்கத்தை தொடர்ந்து "அர்ஜ்ஜுனன் பேர் பத்து" என்று கூவினார்கள் அங்கிருந்தவர்கள்.

விடாமல் பெய்துகொண்டே இருந்தது மழை. மாசாணத்தை எல்லோரும் கோவிலுக்குள் வந்துவிடும்படி அழைத்தார்கள். அதை மறுத்துவிட்டு அவன் எழுந்திருந்து நின்றான். நிற்கமுடியாமல் தள்ளாடியதால் ஒருவர் ஓடிவந்து அவனைப் பிடித்துக்கொண்டார்.

வானத்தையும் அவர்களையும் அவன் பெருமிதத்தோடு நிமிர்ந்து பார்த்தான். -

ஆனந்தமாக எல்லோரும் நனைந்துகொண்டே கைத்தாங்கலாக நடத்திக்கொண்டு ஊர்வலம்போல் அவன் வீட்டுக்குப் போனார்கள்.

வாசலில் வந்து நின்று பார்த்த மாசாணத்தி தனது புருஷனை ஊர்ப் பெரியாட்கள் அம்பலகாரர். பெரிய முதலாளி முதலானோர் மாலைபோட்டுக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வருவது பார்க்க அவளுக்கும் பெருமையாகவே இருந்தது.

எப்படி அங்கே பூமாலை வந்தது, மாசாணத்துக்கு உடைமாற்றிக் கொள்ள எப்படிப் புதுவேட்டி வந்தது என்று கேட்கவில்லை. அந்த மழைக்கு ஒழுகிக்கொண்டேயிக்கும் அந்தச் சிறிய்ய கூரைவீட்டில் இடம் போதவில்லை அந்த ஜனக்கூட்டத்துக்கு; தெருவிலும் நின்றார்கள்.

சூடான பசும்பாலை சில்வர் டம்ளரில் விட்டு "இந்தா, மாசாணம்; குடி" என்று பிரியத்தோடு நீட்டினார் பெரிய முதலாளி, அதை வாங்கிக்கொண்டான். வாங்கிக்கொண்டு, எல்லோருடைய முகத்தையும் பார்த்தான். மாசாணத்தியின் முகத்தையும்தான்.

பிறகு, அண்ணாந்தே இதுவரை குடித்து வந்த மாசாணம் அன்று அந்த டம்ளரில் சப்பிக் குடித்தான்.

"போதும்" என்று அவன் சொன்னபோதும் "இன்னும் கொஞ்சம்" என்று பெரிய முதலாளி சொன்னதும் எல்லோரும் "இன்னுங் கொஞ்சம், இன்னுங்கொஞ்சம்" என்று அவனை வற்புறுத்தினார்கள்.

********

கணையாழி அக்டோபர் 1981

Jun 12, 2012

நாற்காலி - கி.ராஜநாராயணன்

'நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?' எங்கள் வீட்டில் இப்படித் திடீரென்று எல்லோருக்கும் தோன்றிவிட்டது.அவ்வளவுதான்; குடும்ப 'அஜெண்டா'வில் வைக்கப்பட்டு இந்த விஷயத்தில் விவாதம் தொடங்கியது.

முதல் நாள் எங்கள் வீட்டுக்கு ஒரு குடும்ப நண்பர் விஜயம் செய்தார். அவர் ஒரு சப்ஜட்ஜ். kee.ra.8வந்தவர் நம்மைப் போல்வேட்டி சட்டை போட்டுக்கொண்டு வரப்படாதோ? சூட்டும் பூட்டுமாக வந்து சேர்ந்தார். எங்கள் வீட்டில் முக்காலிதான்உண்டு. அதன் உயரமே முக்கால் அடிதான். எங்கள் பாட்டி தயிர் கடையும்போது அதிலேதான் உட்கார்ந்து கொள்வாள்,அவளுக்கு பாரியான உடம்பு. எங்கள் தாத்தா   தச்சனிடம் சொல்லி அதைக் கொஞ்சம் அகலமாகவே செய்யச்சொல்லியிருந்தார்.

சப்ஜட்ஜுக்கும் கொஞ்சம் பாரியான உடம்புதான். வேறு ஆசனங்கள் எங்கள் வீட்டில் இல்லாததால் அதைத்தான்அவருக்கு கொண்டுவந்து போட்டோம். அவர் அதன் விளிம்பில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு உட்காரப் போனார்.இந்த முக்காலியில் ஒரு சனியன் என்னவென்றhல் அதன் கால்களுக்கு நேராக இல்லாமல் பக்கத்தில் பாரம்அமுங்கினால் தட்டிவிடும்! நாங்கள் எத்தனையோ தரம் உறியில் வைத்திருக்கும் நெய்யைத் திருட்டுத்தனமாகஎடுத்துத் தின்பதற்கு முக்காலி போட்டு ஏறும் போது அஜாக்கிரதையினால் பலதரம் கீழே விழுந்திருக்கிறோம். பாவம்,இந்த சப்ஜட்ஜும் இப்பொழுது கீழே விழப்போகிறாரே என்று நினைத்து, அவரை எச்சரிக்கை செய்ய நாங்கள் வாயைத்திறப்பதற்கும் அவர் தொபுகடீர் என்று கீழே விழுந்து உருளுவதற்கும் சரியாக இருந்தது. நான், என் தம்பி, கடைக்குட்டித்தங்கை மூவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. புழக்கடைத் தோட்டத்தைப் பார்க்க ஓடினோம். சிரிப்புஅமரும்போதெல்லாம் என் தங்கை அந்த சப்ஜட்ஜ் மாதிரியே கையை ஊன்றிக் கீழே உருண்டு விழுந்து காண்பிப்பாள்.பின்னும் கொஞ்சம் எங்கள் சிரிப்பு நீளும்.

எங்கள் சிரிப்புக்கெல்லாம் முக்கிய காரணம் அவர் கீழே விழும் போது பார்த்தும் எங்கள் பெற்றோர்கள், தாங்கள்விருந்தாளிக்கு முன்னாள் சிரித்துவிடக்கூடாதே என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டதை நினைத்துத்தான்!

ஆக, நாங்கள் எல்லாருக்கும் சேர்த்துச் சிரித்துவிட்டு வீட்டுக்குள் பூனைபோல் அடி எடுத்து வைத்து நுழைந்துபார்த்தபோது அந்தப் பாரியான உடம்புள்ள விருந்தாளியை காணவில்லை. அந்த முக்காலியையும் காணவில்லை. 'அதை அவர் கையோடு கொண்டு போயிருப்பாரோ?' என்று என் தங்கை என்னிடம் கேட்டாள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே, எங்கள் வீட்டில் எப்படியாவது ஒரு நாற்காலி செய்துவிடுவது என்ற முடிவுஎடுக்கப்பட்டது. இந்த நாற்காலி செய்வதில் ஒரு நடைமுறைக் கஷ்டம் என்ன என்றால், முதலில் பார்வைக்கு எங்கள்ஊரில் ஒரு நாற்காலி கூடக் கிடையாது; அதோடு நாற்காலி செய்யத் தெரிந்த தச்சனும் இல்லை.

'நகரத்தில் செய்து விற்கும் நாற்காலியை வாங்கிக்கொண்டு வந்துவிட்டால் போச்சு' என்று எங்கள் பெத்தண்ணா ஒருயோசனையை முன் வைத்தான். அது உறுதியாக இராது என்று நிராகரித்துவிட்டார் எங்கள் அப்பா.

பக்கத்தில் ஒரு ஊரில் கெட்டிக்காரத் தச்சன் ஒருவன் இருப்பதாகவும் அவன் செய்யாத நாற்காலிகளே கிடையாதுஎன்றும், கவர்னரே வந்து அவன் செய்த நாற்காலிகளைப் பார்த்து மெச்சி இருக்கிறார் என்றும் எங்கள் அத்தைசொன்னாள்.

அத்தை சொன்னதிலுள்ள இரண்டாவது வாக்கியத்தைக் கேட்டதும் அம்மா அவளை, 'ஆமா, இவ ரொம்பக் கண்டா'என்கிற மாதிரிப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அப்பா வேலையாளைக் கூப்பிட்டு, அந்தத் தச்சனுடைய ஊருக்கு அவனை அனுப்பிவிட்டு எங்களோடு வந்துஉட்கார்ந்தார். இப்போது, நாற்காலியை எந்த மரத்தில் செய்யலாம் என்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது.

"தேக்கு மரத்தில் தான் செய்ய வேண்டும். அதுதான் தூக்க வைக்க லேசாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும்இருக்கும்" என்றாள் பாட்டி, தன்னுடைய நீட்டிய கால்களைத் தடவி விட்டுக் கொண்டே. (பாட்டிக்குத் தன்னுடையகால்களின் மீது மிகுந்த பிரியம். சதா அவற்றைத் தடவிவிட்டுக் கொண்டே இருப்பாள்!)

இந்தச் சமயத்தில் எங்கள் தாய் மாமனார் எங்கள் வீட்டுக்குள் வந்தார். எங்கள் பெத்தண்ணா ஓடிபோய் அந்தமுக்காலியைத் தூக்கிக்கொண்டு வந்தான். சிறிதுநேரம் வீடே கொல்லென்று சிரித்து ஓய்ந்தது.

மாமனார் எங்கள் வீட்டுக்கு வந்தால் அவருக்கென்று உட்காரு வதற்கு அவரே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துவைத்திருக்கிறார். தலை போனாலும் அந்த இடத்தில்தான் அவர் உட்காருவார். பட்டக சாலையின் தெற்குஓரத்திலுள்ள சுவரை ஒட்டியுள்ள ஒரு தூணில் சாய்ந்துதான் உட்காருவார். உட்கார்ந்ததும் முதல் காரியமாகத் தம்குடுமியை அவிழ்த்து ஒருதரம் தட்டித் தலையைச் சொறிந்து கொடுத்துத் திரும்பவும் குடுமியை இறுக்கிக்கட்டிக்கொண்டு விடுவார். இது அவர் தவறாமல் செய்கிற காரியம். இப்படிச் செய்து விட்டு அவர் தம்மையொட்டியுள்ளதரையைச் சுற்றிலும் பார்ப் பார். "தலையிலிருந்து துட்டு ஒன்றும் கிழே விழுந்ததாகத் தெரிய வில்லை" என்று அண்ணாஅவரைப் பார்த்து எக்கண்டமாகச் சொல்லிச் சிரிப்பான்.

அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் இப்படிக் காகித பாணங்களினால் துளைத்தெடுக்கப்படுவார்! 'சம்பந்திக்காரர்கள்; நீங்கள் பார்த்து என்னைக் கேலி செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்' என்கிற மாதிரிதிறக்காமல் கல்லுப்பிள்ளையார் மாதிரி அவர் பாட்டுக்கு உட்கார்ந்து புன்னகையோடு இருப்பார். எங்களுடைய ஏடாகிப்பேச்சுக்களின் காரம் அதிகமாகும்போது மட்டும் அம்மா எங்களைப் பார்த்து ஒரு பொய் அதட்டுப் போடு வாள். அந்தஅதட்டிடு வாக்கியத்தின் கடைசி வார்த்தை "கழுதைகளா" என்று முடியும்.

மாமனார் வந்து உட்கார்ந்ததும், அம்மா எழுந்திருந்து அடுப்படிக்கு அவசரமாய்ப் போனாள். அவளைத் தொடர்ந்துஆட்டுக்குட்டியைப் போல் அப்பாவும் பின்னால் போனார்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஆளோடி வழியாக அம்மா கையில் வெள்ளித் தம்ளரில் காயமிட்ட மோரைஎடுத்துக்கொண்டு நடந்து வர, அம்மாவுக்குப் பின்னால் அப்பா அவளுக்குத் தெரியாமல் எங்களுக்கு மட்டும் தெரியும்படிவலிப்புக் காட்டிக்கொண்டே அவள் நடந்துவருகிற மாதிரியே வெறுங்கையைத் தம்ளர் ஏந்துகிற மாதிரிபிடித்துக்கொண்டு நடந்து வந்தார்! அவர் அப்படி நடந்து வந்தது, 'அவா அண்ணா வந்திருக்கானாம்; ரொம்ப அக்கறையாமோர் கொண்டுபோய்க் கொடுக்கிறதைப் பாரு' என்று சொல்லு கிறது மாதிரி இருந்தது.

மோரும் பெருங்காயத்தின் மணமும், நாங்களும் இப்பொழுதே மோர் சாப்பிடணும் போல் இருந்தது.

மாமனார் பெரும்பாலும் எங்கள் வீட்டுக்கு வருகிறது மோர் சாப்பிடத்தான் என்று நினைப்போம். அந்தப் பசுமாட்டின்மோர் அவ்வளவு திவ்வியமாய் இருக்கும். அதோடு எங்கள் மாமனார் எங்கள் ஊரிலேயே பெரிய கஞ்சாம்பத்தி.அதாவது, ஈயாத லோபி என்று நினைப்பு எங்களுக்கு.

இந்தப் பசுவை அவர் தம்முடைய தங்கைக்காகக் கன்னாவரம் போய்த் தாமே நேராக வாங்கிக்கொண்டு வந்தார். இந்தக்காராம்பசுவின் கன்றுக்குட்டியின் பேரில் என் தம்பிக்கும் குட்டித் தங்கைக்கும் தணியாத ஆசை. வீட்டைவிட்டுப்போகும்போதும் வீட்டுக்குள் வரும்போதும் மாமனார் பசுவை ஒரு சுற்றிச் சுற்றி வந்து அதைத் தடவிக்கொடுத்து (தன்கண்ணே எங்கே பட்டு விடுமோ என்ற பயம்!) இரண்டு வார்த்தை சிக்கனமாகப் புகழ்ந்து விட்டுத்தான் போவார். 'பால்வற்றியதும் பசுவை அவர் தம்மு டைய வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவார். கன்றுக்குட்டியும் பசுவோடு போய்விடும்'என்ற பெரிய பயம் என் சிறிய உடன் பிறப்புகளுக்கு.

பின்னால் ஏற்படப் போகிற இந்தப் பிரிவு அவர்களுக்குக் கன்றுக்குட்டியின் மெல் பிரீதியையும் மாமனாரின் பேரில்அதிகமான கசப்பையும் உண்டுபண்ணி விட்டது. அவர் ருசித்து மோரைச் சாப்பிடும்போது இந்தச் சின்னஞ்சிறுசுகள்தங்களுடைய பார்வை யாலேயே அவரைக் குத்துவார்கள்; கிள்ளுவார்கள்!

நாற்காலி விவாதத்தில் மாமனாரும் அக்கறை காட்டினார். தமக்கும் ஒரு நாற்காலி செய்ய வேண்டுமென்று பிரியம்இருப்பதாகத் தெரிவித்தார். எங்களுக்கும் ஒரு துணை கிடைத்தது மாதிரி ஆயிற்று.

வேப்ப மரத்தில் செய்வது நல்லது என்றும், அதில் உட்கார்ந்தால் உடம்புக்கு குளிர்ச்சி என்றும், மூலவியாதி கிட்டநாடாது என்றும் மாமனார் சொன்னார். வேப்பமரத்தைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் அப்பா மாமனாரை ஆச்சரியத்தோடுகூடிய திருட்டு முழியால் கவனித்தார். எங்கள் மந்தைப் புஞ்சையில் நீண்ட நாள் நின்று வைரம் பாய்ந்த ஒருவேப்பமரத்தை வெட்டி ஆறப்போட வேண்டுமென்று முந்தாநாள் தான் எங்கள் பண்ணைக்காரனிடம் அப்பாசொல்லிக்கொண்டு இருந்தார்.

பெத்தண்ணா சொன்னான், "பூவரசங் கட்டையில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும். அது கண் இறுக்கமுள்ள மரம்.நுண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்; உறுதியுங்கூட" என்றhன்

அக்கா சொன்னாள், "இதுகளெல்லாம் வெளிர் நிறத்திலுள்ள வைகள். பார்க்கவே சகிக்காது. கொஞ்சநாள் போனால்இதுகள் மேல்; நமக்கு ஒரு வெறுப்பே உண்டாகிவிடும். நான் சொல்லு கிறேன், செங்கரும்பு நிறத்திலோ அல்லதுஎள்ளுப் பிண்ணாக்கு மாதிரி கறுப்பு நிறத்திலோ இருக்கிற மரத்தில்தான் செய்வது நல்லது; அப்புறம் உங்கள் இஷடம்."பளிச்சென்று எங்கள் கண்களுக்கு முன்னால் கண்ணாடி போல் மின்னும் பளபளப்பான கறுப்பு நிறத்தில் கடைந்தெடுத்தமுன்னத்தங் கால்களுடனும், சாய்வுக்கு ஏற்றபடி வளைந்த, சோம்பல் முறிப்பது போலுள்ள பின்னத்தங் கால்களுடனும்ஒரு சுகாசனம் தோன்றி மறைந்தது.

எல்லாருக்குமே அவள் சொன்னது சரி என்று பட்டது. ஆக எங்களுக்கு ஒன்றும், எங்கள் மாமனார் வீட்டுக்கு ஒன்றுமாகஇரண்டு நாற்காலிகள் செய்ய உடனே ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டு நாற்காலிகளும் எங்கள் வீட்டில் வந்து இறங்கியபோது அதில் எந்த நாற்காலியை வைத்துக்கொண்டு எந்தநாற்காலியை மாமனார் வீட்டுக்குக் கொடுத்தனுப்புவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒன்றைப் பார்த்தால்மற்றதைப் பார்க்க வேண் டாம். அப்படி ராமர் லெச்சுமணர் மாதிரி இருந்தது. ஒன்றை வைத்துக்கொண்டு மாமனார்வீட்டுக்கு ஒன்றைக் கொடுத்தனுப் பினோம். கொடுத்தனுப்பியதுதான் நல்ல நாற்காலியோ என்று ஒரு சந்தேகம்.

ஒவ்வொருத்தராய் உட்கார்ந்து பார்த்தோம். எழுந்திருக்க மனசே இல்லை. அடுத்தவர்களும் உட்கார்ந்துபார்க்கவேண்டுமே என்பதற் காக எழுந்திருக்க வேண்டியிருந்தது. பெத்தண்ணா உட்கார்ந்து பார்த்தான். ஆ…ஹா என்றுரசித்துச் சொன்னான். இரண்டு கைகளா லும் நாற்காலியின் கைகளைத் தேய்த்தான். சப்பணம் போட்டு உட்கார்ந்துபார்த்தான். "இதுக்கு ஒரு உறை தைத்துப் போட்டு விட வேணும். இல்லையென்றால் அழுக்காகிவிடும்" என்று அக்காசொன்னாள்.

குட்டித் தங்கைக்கும் தம்பிப் பயலுக்கும் அடிக்கடி சண்டை வரும், "நீ அப்போப் பிடிச்சி உட்கார்ந்துகிட்டே இருக்கியே?எழுந்திருடா, நான் உக்காரணும் இப்போ" என்று அவனைப் பார்த்துக் கத்துவாள். "ஐயோ, இப்பத்தானே உட்கார்ந்தேன்;பாரம்மா இவளை" என்று சொல்லுவான், அழ ஆரம்பிக்கப் போகும் முகத்தைப் போல் வைத்துக்கொண்டு.

தீ மாதிரி பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் பெருங்கூட்டமாக வந்து வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் தடவிப் பார்த்தார்கள். சிலர் உட்கார்ந்தே பார்த்தார்கள். ஒருகிழவனார் வந்து நாற்காலியைத் தூக்கிப் பார்த்தார். "நல்ல கனம், உறுதியாகச் செய்திருக்கிறான்" என்று தச்சனைப்பாராட்டினார்.

கொஞ்ச நாள் ஆயிற்று.

ஒரு நாள் ராத்திரி ரெண்டு மணி இருக்கும். யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். உள் திண்ணையில் படுத்திருந்தபெத்தண்ணா போய் கதவைத் திறந்தான். ஊருக்குள் யாரோ ஒரு முக்கியமான பிரமுகர் இப்பொழுதுதான் இறந்துபோய்விட்டாரென்றும் நாற்காலி வேண்டுமென்றும் கேட்டு எடுத்துக்கொண்டு போனார்கள்.

இறந்துபோன ஆசாமி எங்களுக்கும் வேண்டியவர் ஆனதால் நாங்கள் யாவரும் குடும்பத்தோடு போய் துட்டியில்கலந்துகொண் டோம். துட்டி வீட்டில் போய் பார்த்தால்...? எங்கள் வீட்டு நாற்காலியில் தான் இறந்துபோன அந்தப்'பிரமுகரை' உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.

இதற்குமுன் எங்கள் ஊரில் இறந்து போனவர்களைத் தரையில் தான் உட்கார்த்தி வைப்பார்கள். உரலைப் படுக்கவைத்துஅது உருண்டுவிடாமல் அண்டை கொடுத்து, ஒரு கோணிச் சாக்கில் வரகு வைக்கோலைத் திணித்து, அதைப்பாட்டுவசத்தில் உரலின் மேல் சாத்தி, அந்தச் சாய்மான திண்டுவில் இறந்துபோனவரை, சாய்ந்துஉட்கார்ந்திருப்பதுபோல் வைப்பார்கள்.

இந்த நாற்காலியில் உட்காரவைக்கும் புதுமோஸ்தரை எங்கள் ஊர்க்காரர்கள் எந்த ஊரில் போய் பார்த்துவிட்டுவந்தார்களோ? எங்கள் வீட்டு நாற்காலிக்குப் பிடித்தது வினை. (தரை டிக்கெட்டிலிருந்து நாற்காலிக்கு வந்துவிட்டார்கள்)

அந்தவீட்டு 'விசேஷம்' முடிந்து நாற்காலியை எங்கள் வீட்டு முன்தொழுவில் கொண்டுவந்து போட்டுவிட்டுபோனார்கள். அந்த நாற்காலியைப் பார்க்கவே எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயப்பட்டன. வேலைக்காரனை கூப்பிட்டுஅதைக் கிணற்றடிக்குக் கொண்டுபோய் வைக்கோலால் தேய்த்துத் தேய்த்துப் பெரிய வாளிக்கு ஒரு பதினைந்து வாளிதண்ணீர்விட்டுக் கழுவி, திரும்பவும் கொண்டுவந்து முன் தொழுவத்தில் போட்டோம். பலநாள் ஆகியும் அதில் உட்காரஒருவருக்கும் தைரியம் இல்லை. அதை எப்படித் திரும்பவும் பழக்கத்துக்குக் கொண்டு வருவது என்றும் தெரியவில்லை.

ஒரு நாள் நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தார். அந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு வந்துஅவருக்குப் போடச் சொன்னோம். அவரோ, "பரவாயில்லை, நான் சும்மா இப்படி உட்கார்ந்து கொள்கிறேன்" என்றுஜமக்காளத்தைப் பார்த்துப் போனார். எங்களுக்கு ஒரே பயம், அவர் எங்கே கீழே உட்கார்ந்து விடுவாரோ என்று.குடும்பத்தோடு அவரை வற்புறுத்தி நாற்காலி யில் உட்கார வைத்தோம். அவர் உட்கார்ந்த உடனே சின்னத் தம்பியும்குட்டித் தங்கையும் புழக்கடைத் தோட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். மத்தியில் வந்து நாற்காலியில் உட்கார்ந்தவருக்குஎன்ன ஆச்சு என்று எட்டியும் பார்த்துக் கொள்வார்கள்!

மறுநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு உள்ளூர்க் கிழவனார் தற்செயலாகவே வந்து நாற்காலியில் உட்கார்ந்துஎங்களுக்கு மேலும் ஆறுதல் தந்தார். ('இப்போதே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துக் கொள்கிறார்!' என்றுபெத்தண்ணா என் காதில் மட்டும் படும்படியாகச் சொன்னான்.)

இப்படியாக, அந்த நாற்காலியைப் 'பழக்கி'னோம். முதலில் வீட்டிலுள்ள பெரியவர்கள் உட்கார்ந்தோம். குழந்தைகளுக்குஇன்னும் பயம் தெளியவில்லை. "கொஞ்சம் உட்காரேண்டா நீ முதலில்" என்று கெஞ்சுவாள், குட்டித் தங்கை தம்பிப்பயலைப் பார்த்து. "ஏன் நீ உட்காருவதுதானே?" என்பான் அவன் வெடுக்கென்று.

எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பக்கத்துத் தெரு சுகந்தி தன்னுடைய ஒரு வயசுத் தம்பிப் பாப்பாவைக் கொண்டுவந்துஉட்காரவைத்தாள், அந்த நாற்காலியில். அதிலிருந்துதான் எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பயமில்லாமல் உட்காரஆரம்பித்தார்கள்.

திரும்பவும் ஒரு நாள் ராத்திரி, யாரோ இறந்துபோய்விட்டார்கள் என்று நாற்காலியை தூக்கிக்கொண்டுபோய்விட்டார்கள் இப்படி அடிக்கடி நடந்தது.

நாற்காலியை வருத்தத்தோடுதான் கொடுத்தனுப்புவோம். வந்து கேட்கும் இழவு வீட்டுக்காரர்கள் எங்கள் துக்கத்தைவேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். தங்களவர்கள் இறந்து போன செய்தியைக் கேட்டுத்தான் இவர்கள்வருத்தம் அடைகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள்!

தூக்கம் கலைந்த எரிச்சல் வேறு. "செத்துத் தொலைகிறவர்கள் ஏன்தான் இப்படி அகாலத்தில் சாகிறார்களோதெரியவில்லை?" என்று அக்கா ஒருநாள் சொன்னாள்.

"நல்ல நாற்காலி செய்தோமடா நாம்; செத்துப்போன ஊர்க் காரன்கள் உட்காருவதற்காக, சே!" என்றுஅலுத்துக்கொண்டான் அண்ணன்.

"நாற்காலி செய்யக் கொடுத்த நேரப் பலன்" என்றாள் அத்தை.

பெத்தண்ணா ஒரு நாள் ஒரு யோசனை செய்தான். அதை நாங்கள் இருவர் மட்டிலும் தனியாக வைத்துக் கொண்டோம்.

ஒரு நாள் அம்மா என்னை ஏதோ காரியமாக மாமனாரின் வீட்டுக்குப் போய்வரும்படி சொன்னாள்.

நான் அவருடைய வீட்டுக்குள் நுழைந்தபோது மாமனார் நாற் காலியில் அமர்க்களமாய் உட்கார்ந்து வெற்றிலைபோட்டுக் கொண் டிருந்தார். அவர் வெற்றிலை போடுவதைப் பார்த்துக்கொண் டிருப்பதே சுவாராஸ்யமானபொழுதுபோக்கு. தினமும் தேய்த்துத் துடைத்த தங்க நிறத்தில் பளபளவென்றிருக்கும் சாண் அகலம், முழ நீளம், நாலுவிரல் உயரம் கொண்ட வெற்றிலைச் செல்லத்தை, 'நோகுமோ நோகாதோ' என்று அவ்வளவு மெல்லப் பக்குவ மாகத்திறந்து, பூஜைப் பெட்டியிலிருந்து சாமான்களை எடுத்து வைக்கிற பதனத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வெளியில்வைப்பார். வெற்றிலையை நன்றாகத் துடைப்பாரே தவிர, காம்பு களைக் கிள்ளும் வழக்கம் அவரிடம் கிடையாது. (அவ்வளவு சிக்கனம்!) சில சமயம் மொறசல் வெற்றிலை அகப்பட்டுவிட்டால் மட்டும் இலையின் முதுகிலுள்ளநரம்புகளை உரிப்பார். அப்பொழுது நமக்கு, "முத்தப்பனைப் பிடிச்சு முதுகுத்தோலை உறிச்சி பச்சை வெண்ணையைத்தடவி...." என்ற வெற்றிலையைப் பற்றிய அழிப் பாங்கதைப் பாடல் ஞாபகத்துக்கு வரும்.

களிப்பாக்கை எடுத்து முதலில் முகர்ந்து பார்ப்பார். அப்படி முகர்ந்து பார்த்துவிட்டால் 'சொக்கு' ஏற்படாதாம். அடுத்துஅந்தப் பாக்கை ஊதுவார்; அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்குப் புழுக்கள் போகவேண்டாமா அதற்காக,ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் இந்த முகர்ந்து பார்த்தலும் ஊதலும் வரவர வேகமாகி ஒரு நாலைந்து தடவைமூக்குக்கும் வாய்க்குமாக, கை மேலும் கீழும் உம் உஷ், உம் உஷ் என்ற சத்தத்துடன் சுத்தமாகி டபக்கென்று வாய்க்குள்சென்றுவிடும்.

ஒருவர் உபயோகிக்கும் அவருடைய சுண்ணாம்பு டப்பியைப் பார்த்தாலே அவருடைய சுத்தத்தைப் பற்றித்தெரிந்துவிடும். மாமனார் இதிலெல்லாம் மன்னன். விரலில் மிஞ்சிய சுண்ணாம்பைக் கூட வீணாக மற்றப்பொருள்களின் மேல் தடவமாட்டார். அவருடைய சுண்ணாம்பு டப்பியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.பதினைந்து வருஷத்துக்கு முன் வாங்கிய எவரெடி டார்ச் லைட் இன்னும் புத்தம் புதுசாக இப்போதுதான் கடையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்ததோ என்று நினைக்கும்படியாக உபயோகத்தில் இருக்கிறது அவரிடம். அதோடு சேர்த்துவாங்கிய எங்கள் வீட்டு டார்ச் லைட் சொட்டு விழுந்து நெளிசலாகி மஞ்சள் கலரில் பார்க்கப் பரிதாபமாக, சாகப் போகும்நீண்ட நாள் நோயாளி யைப் போல் காட்சியளிக்கிறது.

நாற்காலியை அவர் தவிர அந்த வீட்டில் யாரும் உபயோகிக்கக் கூடாது. காலையில் எழுந்திருந்ததும் முதல் காரியமாகஅதைத் துடைத்து வைப்பார். ஓர் இடத்திலிருந்து அதை இன்னோர் இடத் துக்குத் தாமே மெதுவாக எடுத்துக்கொண்டுபோய்ச் சத்தமில்லாமல் தண்ணீர் நிறைந்த மண்பானையை இறக்கி வைப்பது போல் அவ்வளவு மெதுவாக வைப்பார்.

மாமனார் என்னைக் கண்டதும், "வரவேணும் மாப்பிள்ளைவாள்" என்று கூறி வரவேற்றார். "கொஞ்சம் வெற்றிலைபோடலாமோ?" என்று என்னைக் கேட்டுவிட்டுப் பதிலும் அவரே சொன்னார்: "படிக்கிற பிள்ளை வெற்றிலை போட்டால்கோழி முட்டும்!"

அம்மா சொல்லியனுப்பிய தகவலை அவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

ராத்திரி அகாலத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வீட்டில் எல்லாம் அயர்ந்த தூக்கம். நான் பெத்தண்ணாவைஎழுப்பினேன்.

நாற்காலிக்காக வந்த ஒரு இழவு வீட்டுக்காரர்கள் வெளியில் நின்றுக்கொண்டிருந்தார்கள். பெத்தண்ணா அவர்களைத்தெருப்பக்கம் அழைத்துக்கொண்டு போனான். நானும் போனேன். வந்த விஷ யத்தை அவர்கள் சொல்லி முடித்ததும்பெத்தண்ணா அவர்களிடம் நிதானமாகப் பதில் சொன்னான்.

"நாற்காலிதானே? அது எங்கள் மாமனார் வீட்டில் இருக்கிறது அங்கே போய்க் கேளுங்கள், தருவார். நாங்கள்சொன்னதாகச் சொல்ல வேண்டாம். இப்படிக் காரியங்களுக்கு இல்லை என்று சொல்ல முடியுமா? அங்கேகிடைக்காவிட்டால் நேரே இங்கே வாருங்கள்; அப்புறம் பார்த்துக்கொள்வோம்" என்று பேசி அவர் களை அனுப்பிவிட்டு,வீட்டுக்குள் வந்து இருவரும் சப்தமில்லாமல் சிரித்தோம்.

அப்பா தூக்கச் சடைவோடு படுக்கையில் புரண்டுகொண்டே, " யார் வந்தது?" என்று கேட்டார்.

"வேலை என்ன? பிணையலுக்கு மாடுகள் வேணுமாம்" என்றான் பெத்தண்ணா.

துப்பட்டியை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டார் அப்பா.

இப்பொழுது மாமனார் காட்டில் பெய்து கொண்டிருந்தது மழை!

ரொம்ப நாள் கழித்து, நான் மாமனாரின் வீட்டுக்கு ஒரு நாள் போனபோது அவர் தரையில் உட்கார்ந்து வெற்றிலைபோட்டுக் கொண்டிருந்தார். வழக்கமான சிரிப்புடனும் பேச்சுடனும் என்னை வரவேற்றார்.

"என்ன இப்படிக் கீழே? நாற்காலி எங்கே?" சுற்று முற்றும் கவனித்தேன். வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத்தடவிக் கொண்டே என்னை ஆழ்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். பின்பு அமைதியாக, "அந்தக் காரியத்துக்கே அந்தநாற்காலியை வைத்துக் கொள்ளும்படி நான் கொடுத்துவிட்டேன். அதுக்கும் ஒன்று வேண்டியதுதானே?" என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பி வரும்போது இந்தச் செய்தியைச் சொல்லப்பெத்தண்ணா விடம் வேகமாக விரைந்தேன். ஆனால் வரவர என்னுடைய வேகம் குறைந்து தன் நடையாயிற்று.

*****

நன்றி - மதுரைத்திட்டம்

Feb 18, 2011

கரிசலின் உன்னதக் கதை சொல்லி கி.ரா- எஸ்.ரா

கடவுள் விடுகிற மூச்சைப் போல காற்று வீசும் கரிசல்வெளி
வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம்
கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்
                                                                                                               - தேவதச்சன்

கரிசல் நிலத்தைப் பற்றிய துல்லியமான சித்திரத்தை தேவதச்சனின் இந்தக் கவிதை நமக்குத் தருகிறது.

முள்வேலிக்குள் சிக்கிக் கொண்ட கிழிந்த துணியெனப் படபடத்த படியே ஆகாசத்தின் ஒரே kee.ra.11 இடத்தில் நின்று கொண்டிருக்கும் சூரியனும், ஆட்டுஉரல்களில்கூட நிரம்பி வழியும் வெயிலும், குடிநீருக்காக அலைந்து திரியும் பெண்களும், கசப்பேறிய வேம்பும், கானலைத் துரத்தியலையும் ஆடுகளும், தாகமும் பசியும் அடங்காத காட்டு தெய்வங்களும் கொண்டதுதான் கரிசல் வெளி.

கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும்  தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்.

ஆடுமாடுகளை எப்பாடுபட்டாவது நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற மனஉறுதிகொண்டவர்கள். வெயிலோடு வந்து சேர்பவர்களுக்குக் கருப்பட்டியும் செம்பு நிறைய தண்ணீரும் தந்து தாகசாந்தி செய்பவர்கள். ஆண் பெண் என்று பேதமில்லாத  உழைப்பாளிகள்.  வெள்ளந்தி  மனிதர்கள்.  விடாத நம்பிக்கை கொண்டவர்கள். நடந்து அலைந்து பழகிய கால்களும்,  கஷ்டங்களைக்  கண்டு கலங்கி விடாத நெஞ்சுரமும்  கொண்ட  இந்த  மக்களின் வாழ்க்கை அடுத்த  நூற்றாண்டை  நோக்கி அதி நவீன இந்தியா வளர்ந்து செல்லும் போதுகூட கவனிக்கப்படாமலே தானிருக்கிறது.

இன்று எல்லா கிராமங்களையும் வியாபித்துள்ள டிவியும், மெட்ரிக்குலேசன் பள்ளிகளும், ரியல் எஸ்டேட்டும்தான் இந்த ஊர்களுக்கும் புதிய வருகை. நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமங்கள் யாவும் சாலையைப் பார்த்து திரும்பிக் கொண்டு விட்டன. ஒதுங்கிய கிராமங்களில் உள்ளவர்கள் ஊரை சபித்தபடியே இதில் மனுசன் குடியிருப்பானா என்று அருகாமை நகரங்களை நோக்கி நகரத்துவங்கிவிட்டார்கள்.

இருபது வருசங்களுக்கு முன்பு தீப்பெட்டித் தொழிற்சாலைகள் கரிசல் பூமியின்  தலைவிதியைப் புரட்டிப் போட்டது. இன்று அதுவும் சுவடழிந்து போய்விட்டது. படிப்பு, வேலை, என்று வெளியேறத் துவங்கி விட்ட அடுத்த தலைமுறையோடு நிலங்களை விற்று காசாக்கி வங்கியில் இட்டு அதிலிருந்து வாழ்வது என்ற நடைமுறை மெல்லப் பரவி வருகிறது.

கரிசல் கிராமங்களைக் கடந்து போகும்போது கண்ணில் படும் காட்சிகள் துயரமானவை. இங்கே உழவுமாடுகளைக் காண்பது அரிதாகி விட்டது. ஊரில் விவசாயம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிருக்கிறது. திண்ணை உள்ள வீடுகள் கண்ணில் படவேயில்லை. கிணறுகள் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. அதில் சிறார்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.

மாட்டுவண்டிகள் அச்சாணி முறிந்து கிடக்கின்றன. வண்டி செய்யும் ஆசாரிகள் தொழிலை விட்டே  போய்விட்டார்கள். நகரத்தில் நடைபெறும் கட்டட வேலைகளுக்காக மொத்த மொத்தமாக ஆள் கூட்டிப் போகப்படுகிறார்கள். குடும்பமே கூலிக்காக நகரங்களை நோக்கிக் கிளம்புகிறது. திரும்பி வருவார்களா என்று தெரியாது. ஆனால் இந்தக் கிராமங்களைக் கடந்து செல்லும் சூரியனும் காற்றும் உலர்ந்த மேகங்களும் அப்படியே இருக்கின்றன. வாழ்க்கை மட்டும் புரண்டு கிடக்கிறது

இந்தச் சூழலில் கரிசல் வாழ்வின் நுட்பங்களையும், அதன் கடந்தகாலக் கதைகளையும் இந்தக் கிராமங்களில் வாழ்ந்து மறைந்த மனிதர்களைப் பற்றிய நினைவுகளையும் அறிந்து கொள்வதற்கு இலக்கியப் பதிவுகளே துணை செய்கின்றன.

அப்படி கரிசலைத் தன் எழுத்தின் வழியே ஆவணப்படுத்திய உன்னதக் கதை சொல்லி கி. ராஜநாராயணன். தனி ஒரு ஆளாக அவர் செய்த பங்களிப்பில் இருந்தே கரிசல் எழுத்தாளர்கள் என்று ஒரு மரபு உருவானது.

பூமணி, பா.ஜெயபிரகாசம் கோணங்கி, தமிழ்ச்செல்வன், தேவதச்சன், சோ. தர்மன். முத்தானந்தம், உதயசங்கர், காசிராஜன், கௌரி சங்கர், சாரதி, ஜோதி விநாயகம், மேலாண்மை பொன்னுசாமி, அப்பண்ணசாமி பாரததேவி, என நீளும் கரிசல் எழுத்தாளர்கள் பட்டியல் வளர்ந்து கொண்டேதானிருக்கிறது.

இந்தியாவில் வேறு ஏதாவது ஒரு மொழியில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஒன்றாக எழுத்தாளர்கள் ஆனதும் இரு வருமே குறிப்பிடத்தக்க வகையில்  இலக்கியத்தை வளப்படுத்தி சாகித்ய அகாதமி பெற்றதும் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ் இத்தகைய பெருமைக்குரியது.

தூத்துக்குடி மாவட்டத்தின் இடைசெவல் கிராமத்தில் பிறந்த கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனனும்  தமிழின் இரண்டு முக்கிய படைப்பாளிகள். இருவரும் பால்யகாலம் முதல் நண்பர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். இருவருமே  எழுத்தாளர்களாகி சாகித்ய அகாதமி பெற்றிருக்கிறார்கள்.

முறையான பேருந்து வசதி கூட இல்லாத கிராமம் அது. கோவில்பட்டி - திருநெல்வேலி பிரதான சாலையில் இருந்து கூப்பிடும் தூரத்தில் உள்ளது. நாளைக்கு ஆயிரம்கார்கள்,  பேருந்துகள்  பிரதான  சாலையில் கடந்து போகின்றன. ஆனால் இலக்கியவாதிகள்  பிறந்த ஊர் கவனம் கொள்ளப் படாமலே கிடக்கிறது.

கு. அழகரிசாமி இடைசெவல் மனிதர்களைத் தன் எழுத்தில் பதிவு நுட்பமாகச் செய்திருக்கிறார். ஆனால் அவர்கள் மொழியில் பதிவு செய்யவில்லை. கிராவின் முக்கிய பங்களிப்பு மக்கள் தமிழில் கதைகளை எழுதியதே. அது பேச்சிற்கும் எழுத்திற்குமான இடைவெளியை வெகுவாகக் குறைத்தது.  நம் எதிரில் ஒருவர் அமர்ந்து கதை சொல்வது போன்ற நெருக்கத்தை உருவாக்கியது.

வட்டார வழக்கு என்று இதை நான் சொல்லமாட்டேன். மாறாக இது ஒரு மரபு. இரண்டாயிர வருட தமிழ் இலக்கியத்தில் நிலம் சார்ந்து உருவாக்கப்பட்ட இலக்கிய மரபின் தொடர்ச்சியிது. தமிழின் நீண்ட கதை சொல்லும் மரபில் இது கரிசல் மரபு என்று அடையாளப்படுத்தலாம்.

கரிசல் எழுத்தின் பீஷ்மராக கி.ராவைச் சொல்ல வேண்டும். சொந்த மண்ணையும் மக்களையும் அவர்களின் வேர்மூலங்களையும் பதிவு செய்த கிராவின் எழுத்து தமிழ் நவீன இலக்கியத்தில் புதிய வாசலைத் திறந்துவிட்டது. ஆப்பிரிக்க இலக்கியம் இன்று என்ன காரணங்களுக்காக உலக அரங்கில் பேசப்படுகின்றதோ அதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே கரிசல் எழுத்தின் வழி தமிழில் துவக்கி வைத்தவர் கிரா.

kee.ra.9 வோலே சோயிங்கா, சினுவா அச்சுபே, என்று ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்குக் கிடைத்துள்ள உலக அங்கீகாரம் இன்றுவரை கிராவிற்குக் கிடைக்கவில்லை. அதைச் செய்ய வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் கடமை.

1992இல் கிராவிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது என்ற தகவல் தெரிய வந்தவுடன் நானும் கோணங்கியும் கோவில்பட்டியில் இருந்து அவரைக் காண்பதற்காக பாண்டிச்சேரி புறப்பட்டோம். வழி முழுவதும்  கிராவைப் பற்றியே பேச்சு. குடும்பத்து மனிதர் ஒருவர் கௌரவிக்கப்படுகிறார் என்பது போன்ற கூடுதல் சந்தோஷம்.

கோணங்கியை கிரா மிகச் செல்லமாக அழைப்பார். உரிமையோடு பேசுவார். ஒருமுறை நானும்  கோணங்கியும் அவரைச் சந்திக்க இடை செவல் சென்றபோது கோணங்கி கதையைப் பற்றி வியந்து வியந்து சொல்லிக் கொண்டிருந்தார் கிரா.

அவர் படித்து ரசித்த கதைகளைப் பற்றிச் சொல்வதைக் கேட்பது ரசமான அனுபவம். அப்படி ஒரு எழுத்தாளன் எழுதும் போதுகூட அனுபவித்திருப்பானா  என்று  தெரியவில்லை. அவ்வளவு நேர்த்தியாக  பலாப்பழத்தைச் சுளை சுளையாக எடுத்துக் கையில் தருவது போல விளக்கிச் சொல்வார்.

பாண்டிச்சேரிக்குப் போய் இறங்கி கிரா வீட்டினைத் தேடிச் சென்றோம். இடைசெவலில் இருந்த அவர் புதுவைப் பல்கலைக் கழகத்தின் நாட்டார் வழக்காற்றியல் துறையின் வருகைதரு பேராசிரியராகப் புது அவதாரம் எடுத்திருந்தார். புதுவை வாசம் அவரது தன்னியல் பிறகு மெருகேற்றியிருந்தது. பிரெஞ்சு இலக்கியவாதிகளைப் போல நைனாவும் வாக்கிங் போகிற அழகு பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது என்று கோவில்பட்டியில் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள்

ஊரில் இருந்த நாட்களில் கிராவைப் பார்த்திருக்கிறேன். கோவில்பட்டியிலிருந்து இடைசெவல் போகின்ற டவுன்பஸ்ஸிற்காக கோபாலன் கம்பெனி முன்னால் உள்ள புளிய மரத்தடியில் நின்று கொண்டிருப்பார். அவரோடு காத்திருப்பவர்கள் அத்தனை பேரும் விவசாயிகள். அவரும் ஒரு விவசாயியே. ஒரே சிறப்பு, கதை எழுதத்தெரிந்த விவசாயி.

கோவில்பட்டியின் புழுதியை தாங்கிக் கொண்டு பஸ் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருப் பதைக் கண்டிருக்கிறேன். சில நாட்கள் தேவதச்சன் கடையில் வந்து நின்று அவரோடு பேசிக் கொண்டிருப்பார். கையில் எப்போதும் ஒரு மஞ்சள் பையிருக்கும். தெரிந்த முகத்தைப் பார்த்தவுடன் முகத்தில் சிரிப்பு மலரும். இணக்கமாகப் பேசத் துவங்குவார்.

கிரா விவசாய சங்கத்தில் தீவிரமாக இருந்த நாட்கள் அது. அதைப் பற்றி தேவதச்சனுடன் விவாதம் செய்தபடியே இருப்பார். தொலைவில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருப்பேன்.

அன்றைக்கு பாண்டிச்சேரியில் அவர் வீட்டிற்குப் போன போது இம்புட்டு தொலைவிலிருந்து வந்திருக்கிறார்களே என்று எங்களுக்கு ஒரே உபசாரம். கிரா வீடு உபசரிப்பிற்குப் பெயர் போனது. அதிலும் கணவதி அம்மாவின் அன்பு அளப்பறியது. விருந்தாளிகளைக் கவனிப்பதற்கு என்று தனியே படித்திருப்பார்கள் போலும். அப்படிப் பார்த்துப் பார்த்துக் கவனிப்பார்கள்.

சாகித்ய அகாதமி விருது கிடைத்ததை ஒட்டி நிறைய பேர் வருவதும் பாராட்டுவதுமாக இருந்தார்கள். நாங்கள் அவரைத் தொந்தரவு படுத்த வேண்டாம் என்று கிளம்பி அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பினோம். வழியிலும் கிரா பற்றிய பேச்சு நீண்டது. நைனா அப்படியே இருக்காரு என்று கோணங்கி வியந்தபடியே வந்தார்.

நான் கிராவை முதன்முறையாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் என்ற ஊரில் நடை பெற்ற இலக்கிய முகாமில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன்.

அந்த முகாம் ஒரு டூரிங் தியேட்டரில் நடைபெற்றது. பகலில் காட்சிகள் கிடையாது என்பதால் இலக்கிய முகாம் நடத்த இடம் தந்திருந்தார்கள். முப்பது நாற்பதுபேர் வந்திருப்பார்கள். கிரா கரிசல்கதைகள் பற்றி உரையாற்றினார். கந்தர்வன் முற்போக்கு இலக்கியம் பற்றிப் பேசினார். தோழர் எஸ்.ஏ.பெருமாள் மாக்சிம் கார்க்கி பற்றிப் பேசினார். இப்படி பகல் முழுவதும் நடந்தது. அந்தப் பயிற்சி முகாமிற்குப் போகும் முன்பு என் அண்ணன் அங்கே நடப்பதைக் குறிப்பெடுத்து வர வேண்டும் என்று சொல்லியிருந்தான்.

ஆகவே நான் முதல்வரிசையில் அமர்ந்தபடியே ஒரு நோட்டில் மிகக் கவனமாகக் குறிப்புகளை எழுதிக் கொண்டேயிருந்தேன். கிரா என்னை ஏதோ ஒரு பத்திரிகையின் செய்தியாளர் என்று நினைத்திருக்க  வேண்டும். மதிய உணவின் போது எந்தப் பத்திரிகை என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு அவரே விளக்கிச் சொன்னார். நான் கல்லூரியில் படிக்கின்றவன் என்று சொன்னதும், அப்படியா, நான் தப்பா நினைச்சிட்டேன் என்றபடியே இதை என்ன செய்வீங்க என்று கேட்டார். நான் தெரியலை என்றேன். அவருக்குச் சிரிப்பு வந்தது. பிறகு எதுக்கு இந்த சள்ளை பிடிச்ச வேலை என்று கேட்டார்.

மதியம் நான் குறிப்பு எடுக்கவேயில்லை. அதை அவர் கவனித்து  சிரித்துக் கொண்டார். சில எழுத்தாளர்களைச் சந்திக்கும்போது நாம் விரும்பாமலே வேறு ஒரு பிம்பம் நம்மைப் பற்றி உண்டாகிவிடும். அப்படிப் பலமுறை எனக்கு நடந் திருக்கிறது என்று சொன்னேன். கோணங்கியும் சிரித்துக் கொண்டார்

இதற்கு முன்பாக நான் கிராவைப் படிக்கத் துவங்கிய விதமும் திருகு தாளமாகவே நடந்தேறியது.

ஆல்பெர் காம்யூ, காப்கா, சார்த்தர், ஹெஸ்ஸே என்று தேடி வாசித்துக் கொண்டிருந்த நாட்களில் கிராவின் கதைகள் எனக்கு அறிமுகமானது. அவரைப் படிக்கப் படிக்க யாரோ தெரிந்த மனிதர் தான் சந்தித்த  விஷயங்களை நேரிடையாகச் சொல்கிறாரோ என்று தோன்றியது. இது ஒன்றும் பெரிய s விஷயமில்லையே இதை எதற்குக் கொண்டாடுகிறார்கள் என்றும் மனதில்பட்டது.

சிறுகதைகள் என்றால் வடிவ நேர்த்தியும் கவித்துவமான மொழியும் பன்முகத்தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தேன். அப்படி இல்லாத கதைகளை யார் எழுதியிருந்தாலும் உடனே நிராகரிக்க வேண்டும் என்றும் பழகியிருந்தேன்.

இதனால் கிராவின் சிறுகதைகளைப் படித்தவுடன் ஒரு தபால் அட்டையில் இவை எல்லாம் என்ன கதைகள் என்பது போல கடுமையாக விமர்சனம் செய்து அனுப்பி நீங்கள் காம்யூ, சார்த்தர், ம்யூசில் ஹெஸ்ஸே எல்லாம் படிக்க வேண்டும் என்று நீண்ட பட்டியலை எழுதியிருந்தேன். சில நாட்களில் அவரிடமிருந்து பதில் வந்தது. நீங்கள் நிறைய படிக்கிறீர்கள். இது ஜீரணமாக கொஞ்ச நாள் ஆகும். அப்புறம் என்னைப் படித்துப் பாருங்கள் என்று எளிமையாக எழுதியிருந்தார். அது உண்மை என்று புரிந்தது.

ஆரம்பகால இலக்கியவாசகன் எப்போதுமே பரபரப்பும் எடுத்தெறியும் விமர்சனங்களும் கொண்டிருப்பான். அப்படித்தான் நானும் இருந்தேன். ஆனால் தொடர்ந்த வாசிப்பும் எழுத்தும் பார்வையை விசாலப்படுத்தியது. பல விஷயங்களைப் புரிய வைத்தது.

மண்ணையும் மனிதர்களையும் எழுதுவது அத்தனை எளிதல்ல என்பதைப் புரிந்து கொள்ளத் துவங்கிய பிறகு அவரது கதைகளைப் படிக்கத் துவங்கினேன். கதைகளில் சம்பவங்கள் மட்டுமின்றி பறவைகள், மிருகங்கள், மனித நம்பிக்கைகள், சடங்குகள், வெயில், மழை, காற்று, மண் என்று நுட்பமாக விரிந்து கொண்டே போனதோடு தனித்துவமான கிராமத்துச் சொற்கள், அசலான கேலி, பாலியல் சார்ந்த பதிவுகள் என்று கதையுலகம் வளர்ந்து கொண்டே போனது.

கிரா ஒரு கதைக்களஞ்சியம் போலிருந்தார். முதன்முறையாக என்னைச் சுற்றிய உலகை நான் பார்த்துக் கொள்ளத் துவங்கினேன். மஞ்சனத்திச் செடியும் தும்பையும் நெருஞ்சியும் அவர் கதைகளில் வந்தது போல ஏன் என் எழுத்திற்குள் வரவேயில்லை என்று கேட்டுக் கொண்டேன். தவிட்டுக் குருவிகள், தைலான், செம்போத்து, நாரை, கௌதாரி போன்ற பறவைகள் ஏன் நவீனக் கதைகளை விட்டு விலகிப் பறந்து போகின்றன. கார்க்கியின் கிழவி இஸர்கீலை ரசிக்கத் தெரிந்த எனக்கு ஏன் கிராவின் பப்பு தாத்தா சாதாரணமாகத் தெரிந்தார் என்று குற்றவுணர்ச்சி கொள்ளத் துவங்கினேன்.

தத்துவமும் மெய்யியலும் மட்டுமே வாழ்வின் தரிசனங்களை உருவாக்குபவை என்று நினைத்துக் கொண்டிருந்தது மாறி வாழ்வின் அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து பெறும் அகதரிசனம் தத்துவம் தரும் உன்னத நிலைகளைவிடவும் வலிமையானது என்று புரிந்தது.

கிராவைத் தேடித் தேடி வாசித்தேன்.  அவரது  படைப்புலகில்  எனக்கு மிக  விருப்பமானது கோபல்ல கிராமம் நாவல். அது இலக்கியப்பதிவு மட்டுமில்லை. ஒரு சமூகம் எப்படி நம்மண்ணில் வேர் ஊன்றியது என்ற சரித்திர ஆவணம். நாட்டார் மரபு எப்படி நிலம் கடந்து தொடர்கின்றன என்று ஆய்வதற்கான  சான்றுப் பொருள். நினைவுகள் எவ்வளவு வலிமையானவை என்பதை நிரூ பணம் செய்யும் சாட்சி. மானுடவியல் நோக்கில் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் ஆய்வுப்படைப்பு. இப்படி அது பன்முக நிலைகளில் முக்கியத்துவம் வாய்ந்த நாவலது.

கிராவின் சிறுகதைகள் சொல்மரபிலிருந்து உருவானவை. அவை கதைகளின் வழியே மனித வாழ்வின் துயர்களை, சந்தோஷங்களை, அகச்சிக்கல்களைப் பேசுகின்றன. அவர் அலங்காரமாகக் கதை சொல்வதில்லை. ஆனால் உயிரோட்டமாகக் கதை சொல்கிறார். கடலைச் செடியை மண்ணிலிருந்து பிடுங்கினால் எப்படி வேரில் ஒட்டிய மண்ணோடு சேர்ந்து வருமோ அப்படியான படைப்பது. எளிய கிராமத்து மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை அவர் அளவு உன்னிப்பாக எழுதியவர் வேறு எவருமில்லை.

விஞ்ஞானத்தின் வருகை கிராமத்து வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டது என்பதைப் பற்றிய பதிவுகள் தமிழில் அதிகம் இல்லை. கிரா அதைக் கவனமாகப் பதிவு செய்திருக்கிறார். டீ தயாரிக்கும் கம்பெனிகள் எப்படி இலவசமாக தேயிலைகளை வீடு வீடாகக் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்பதில் துவங்கி, கடிகாரம் வந்தது ரயில் வந்தது என்று நீண்டு விஞ்ஞானம் கிராமத்தில் நுழையும் போது ஏற்படும் அதிர்ச்சிகளை அசலாகப் பதிவு செய்திருக்கிறார். அது போலவே சுதந்திரப் போராட்ட நாட்களில் தமிழ்க் கிராமங்கள் எப்படியிருந்தன என்பதற்கும் அவரது கதைகளே நேர் சாட்சிகள்.

திருடனை எப்படிக் கழுவேற்றினார்கள் என்பதை அவரது கதையில்தான் முதன்முறையாக வாசித்துத் தெரிந்து கொண்டேன். சமணர்களைக் கழுவேற்றிய சரித்திர உண்மைகளைப் படித்து அறிந்திருந்த போதும் கழுமரம் எப்படியிருக்கும் அது என்னவிதமான தண்டனை என்பதை அவரே முதன்முதலில் விரிவாக விளக்கி எழுதியிருந்தார்.

ஒரு முறை நகுலனைச் சந்திக்கச் சென்றபோது அவர் தன்னுடைய அம்மா கிராவின் கதை ஒன்றை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். கரிசல்காட்டில் ஒரு சம்சாரி என்ற கதையது. அந்தத் தலைப்பு அவளை ஏதோ செய்தது. அடிக்கடி தலைப்பை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பாள். பெண்கள் நாம் படிக்கும் அதே கதைகளை வேறு விதமாகப் படிக்கிறார்கள் போலும் என்றபடியே உங்களுக்கு கிராவைப் பிடிக்குமா என்று கேட்டார். ஆமாம் என்றபடியே உங்களுக்கு என்று கேட்டேன். இரண்டு கைகளையும் உயர்த்தியபடியே அசலான எழுத்தாளர் என்று சொல்லிச் சிரித்தார். நகுலனின் எழுத்தில் கிராவின் எழுத்து பற்றிய நுட்பமான பதிவு சில இடங்களில் வெளிப்பட்டுள்ளது.

கதவு என்ற கிராவின் கதை அது எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வாசிக்கபட்டும் கொண்டாடப்பட்டும் வருகிறது. சமீபத்தில் பிரெஞ்சில் இருந்து வந்த ஒரு ஆய்வாளரைச் சந்தித்தேன். அவர் அந்தக் கதையை தான் பிரெஞ்சில் வாசித்திருப்பதாகவும் அது அற்புதமான கதை என்றும் சொல்லி வியந்தார்.

எழுத்தாளர் என்ற முறையில் தன் மண்ணையும் மக்களையும் இலக்கியமாக்கியதோடு கிராவின் பணி முடிந்துவிடவில்லை. நேரடியான அரசியல் ஈடுபாடும் கொண்டவர் கிரா. இடதுசாரி இயக்கங்களுடன் சேர்ந்து பணியாற்றியவர். சிறை சென்றவர். விவசாய சங்கங்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு இரண்டுமுறை சிறை சென்றிருக்கிறார்.

அதுபோலவே நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்துப் பாதுக்காக வேண்டும், அது தனிவகை இலக்கியம் என்று பல ஆண்டுக்காலமாக அவர் மேற்கொண்ட முயற்சி தற்போது ஆயிரம் பக்கத்திற்கும் மேலான பெரிய நூலாக வெளிவந்துள்ளது.

அத்தோடு நாட்டுப்புறக்கதைகள் பற்றி ஆய்வு செய்யவும் கற்றுத் தருவதற்காகவும் புதுவைப் பல்கலைக்கழகம் அவரை பேராசிரியர் ஆக்கி கௌரவப்படுத்தியது. நாட்டுபுறக் கதைகளிலும் பாலியல் சார்ந்த கதைகளைச் சேகரிப்பதில் பலரும் முகச்சுழிப்பு கொண்டபோது பாலியல் மனிதனின் ஆதார இச்சை, அதை எதற்காக விலக்க வேண்டும் என்று பாலியல் கதைகளைச் சேகரித்து, அதைத் தனித்த நூலாகவும் மாற்றியவர் கிரா.

இன்னொரு பக்கம் கரிசல் வட்டாரச் சொற்களைத் தொகுத்து அகராதி உருவாக்கியிருக்கிறார். கடித இலக்கியம் என்ற வகையை மேம்படுத்தியது அவரது கடிதங்கள். அழகிரிசாமிக்கும், நண்பர்களுக்கும் அவர் எழுதிய கடிதங்கள் அபூர்வமான இலக்கியத் தன்மை கொண்டவை.

தாமரை, சாந்தி, தீபம் என்று இலக்கிய இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த கிரா விகடனில் எழுதியதன் வழியே பரவலான பொது வாசகர்களைச் சென்று சேர்ந்தார். அது அவருக்கெனத் தனித்த வாசக பரப்பை உருவாக்கியது. இசையிலும் பழந்தமிழ் இலக்கியங்களில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு அலாதியானது. விளாத்திகுளம் சாமிகளிடம் நேரடியாக இசை பயின்றிருக்கிறார். டிகேசியிடம் கம்பராமாயணம் கேட்டு அறிந்திருக்கிறார். இப்படி ஆயிரம் சிறப்புகள் கிராவிற்கு உண்டு.

சென்றஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிராவைச் சந்தித்தேன். கையைப் பிடித்தபடியே அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அவரோடு அவரது பேரன் நின்றிருந்தார். சென்னையில் கணிப்பொறித் துறையில் வேலை செய்கின்றவர். அவரை அறிமுகம் செய்து வைத்து இவன் உங்களைத்தான் விரும்பிப் படிக்கிறான் என்று சொல்லி சென்னையில்தான் இருக்கான், உங்களைச் சந்திக்கச் சொல்கிறேன் என்று சொன்னார். பத்து நிமிசம்தான் பேசியிருப்போம். ஆனால் மனதில் விளக்கிச் சொல்லமுடியாத சந்தோஷம் உருவானது.

மகாகவி தாந்தேயின் கண்ணில் பட்ட புலி ஒன்று அவரது கவிதையின் வழியே நித்தியத்துவம் அடைந்து விட்டது என்று போர்ஹே ஒரு கதையை எழுதியிருப்பார். ஒரு வகை யில் கிராவின் வழியே கரிசல் கிராமங்கள் தன் வாழ்க்கையை எழுதிப் பாதுகாத்து வைத்துக் கொண்டுவிட்டன என்றே தோன்றுகிறது

*****

நன்றி: உயிர்மை

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்