Showing posts with label சம்பத். Show all posts
Showing posts with label சம்பத். Show all posts

Sep 7, 2010

சாமியார் ஜுவுக்குப் போகிறார்... - சம்பத்

தினகரன் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பார்.

‘அன்னா ஜுக்கு’ என்ற குமாரின் கீச்சுக்குரல் அவரை எழுப்பியது. எழுந்து கொண்டார். முகம் அலம்பிக் கொண்டு உடை அணிந்து கொண்டார்.

மனைவியும் தயாரானாள். குமாருக்கு கௌபாய் ட்ரெஸ்!

வெளியே முதல்நாள் பெய்த மழையில் புல் பாத்திகளில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரைப் பூமிsambath மெள்ள மெள்ள முடிந்தமட்டும் உறிஞசிவிட்டன பிறகும், வேறு வழியில்லாமல் தேங்கிக் கிடந்தது.

இப்போது நல்ல வெயிலில் ஆவியாக மாறிக் கொண்டிருக்கிறது. புல், கலங்கலான மழைத் தண்ணீர் பட்டுச் சாம்பல் பூத்திருந்தது. உலர்த்தப்பட்ட அப்பளம் போல் ஈரம் காய்ந்த சாலையில் ஆங்காங்கே ரவுண்டு ரவுண்டாகத் தண்ணீர் பசை. அலம்பப்பட்ட தார் ரோடில் வெயில் பளீரென்று அடித்தாலும் தார் ரோடு கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தது. ஊசிப் பட்டாசின் மின்னலுடன் வெடித்துக் கண்களைப் பறிக்கவில்லை. அதற்கு ஏதுவான மே, ஜுன் மாதம் பின் தங்கிவிட்டது.

ஸ்கூட்டரில் போகும் போது வீட்டுச் சுவர்களிலும், ஆபீஸ் சுவர்களிலும், முதல் நாள் பெய்த மழையில் கண்ட ஈரப்பசை இப்போது மெல்ல உலர்ந்து கொண்டிருந்தது. உலர்ந்த இடங்களில் சுண்ணாம்பு சாம்பல் பூத்திருந்தது. ஒரு பதினான்கு வயது சிறுமி நடந்து கொண்டிருந்தாள். வெயில் அவள் மேல் பல ஜாலங்கள் புரிந்து கொண்டிருந்தது. தூரத்தே செக்டர் மூன்றில் மேகங்கள் பூமியில் நிழல்களைப் பரப்பிக் கொண்டிருந்தன. செக்டர் நிழல், அதற்கு அப்பால் பாலம் ஏரோடிரோம் வரையில் வெயில் எல்லாவற்றையும் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. வடமேற்காக நிழல் வெயிலைத் துரத்தியது. நல்ல பசுமைக் கதிர்களின் இனம் புரியாத வாசனையை வெயில் கரைத்துக் தன்னில் ஐக்கியப்படுத்திக் கொண்டு மெல்லிய காற்றின் துணை கொண்டு கனத்துப் படர்ந்து கொண்டிருந்தது. ஸ்கூட்டர் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. டிராஃபிக்குக்கு அநுசரித்துக் கொண்டு வேகத்தை எட்டிப் பிடிக்கும் போது எழும் ரீங்காரம் ஒரு கட்டடத்தில் நிரந்தரமாவதைத் தினகரன் கவனித்தார். பலமுறை ஸ்கூட்டரில் குரலைச் சப்தமிட்டு குமாருக்கு நடித்துக் காட்டியிருக்கிறார். அதே போன்று குமார் எப்போதாவது கதை சொல்லு என்றால் காற்று, மலை, நதி, செடி, கொடி என்பார். அப்போதெல்லாம் அழகு என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார்.

இப்போது குமார் ‘அன்னா ஸ்கூட்டர் எவ்வளவு அழகாச் சப்தம் போடறது? என்று உச்சஸ்தாயில் கீச்சுக் குரலில் கத்தினான்.

தினகரன் ஆமாம். ஆமாம். எஸ்.எஸ். என்றார். திரும்பிப் பார்க்காமலேயே. தொடர்ந்து வந்து கொண்டிருந்த நாவல் மரங்களில் சலசலவென்ற சப்தம் தொடர்ந்து உருவங்கள் நீந்திக் கொண்டேயிருந்தன. கீழே நாவற் பழங்களைக் கூடையில் நிரப்பி மழையால் வேர்த்த உப்பை இட்டு இலைகளில் வைத்து விற்க வேண்டும். மெறாஸில் கடலையைக் கூறுபோட்டு விற்க வேண்டும். மிளகாயைக் கூறுபோட்டு விற்க வேண்டும். மாங்காயைப் பத்தையாக்கி விற்க வேண்டும்.

கடலையை வறுத்தே ஏதோ பாத்திரத்தில் ‘டிக்பிக்’ என்று சப்தமெழுப்பிக் கை ஒடிய வறுத்தே வாழ வேண்டும். இங்கு ஒரு சின்ன டின். அதில் கரி. இரண்டு செங்கல்தான் அடுப்பு. செங்கல் அடுப்பு மேல் டின்னில் கரித் தீ. அதில் சோளத்தைச் சுட வேண்டும். மழையில் நனைந்த கரியை விசிற வேண்டும். விசுறுகிறான் மனிதன். வருவோர் போவேரை எல்லாம் பார்க்கிறான். கொஞ்சம் மயிரிழையில் எதை நினைத்துக் தயங்கினாலும் தன்னுடைய சோளத்திற்குத்தான் என்று நம்பி அந்த சந்தேகத்தை ஒரு சோளம் வாங்குதலாக மாற்றும் தினவு கொண்ட வெறிபிடித்த எதிர்பார்ப்பு மிக்க அழைப்பு ‘ஆவ் ஸாஹப்’.

இந்த முறையீடுகளில் இந்த சாப்பாட்டில் அதாவது முதலில் பண்ண வேண்டும். பிறகு அதை ஒரு இடத்தில் வைக்க வேண்டும். பாத்திரங்களில் இட வேண்டும். சாப்பிட வேண்டும். பிறகு பாத்திரங்களைக் கழுவ வேண்டும். இதனுடைய துணியைத் துவைப்பது, ஷேவ் செய்து கொள்வது என்பதான எண்ணாயிரம் செய்கைகளின் எண்பது கோடிச் செய்கைகளின் அர்த்தமென்ன? நாமெல்லோரும் ஒரு நாள் பிணம் என்பதா?

கர்மாவைச் செய். பலனை எதிர்பார்க்காமே என்று சொன்னவன் என்ன நினைத்திருக்கக் கூடும்?

ஜுவில் நல்ல கூட்டம். இருந்தும் எவ்வளவு கூட்டமிருந்தாலும் கூட்டத்தை நாய்க் குடைக் குப்பல்கள் போல் தோற்றமடையச் செய்யும் விதத்தில் விஸ்தாரம் கொண்டதாக இருந்தது ஜு. ஆரம்பம் முடிவு தெரியாத ஒரு பெரிய கோளமாக, முக்கொணங்களாக ஒரு அலை எம்பலின் கனத்துடன் அது நடக்க நடக்கப் பெருகிக் கொண்டேயிருந்தது. தூரத்திலிருந்து பார்த்தால் பிரமிக்கச் செய்யும் ஆறாகவும், கிட்டப் போனால் சாதாரணத் தண்ணீர்த் தேக்கமாகவும் காணப்படும் சிறு சிறு ஓடைகளைப் பெற்றிருந்தது ஜு. ஏனோ – கத்தி போன்ற பெரிய அலகுகள் பெற்ற பெரிய நாரை இனம் போன்ற பறவைகள், சிவப்பாகத் தலையில் ஏதோ பழவக் கிரீடம் போன்ற சதைப் பற்றைத் தாங்கிய பறவைகள் குழிவிழுந்த பெரிய அளவு கிளிஞ்சலின் வெள்ளைப் பாகங்கள் போன்ற இடுப்பு இறக்கைகளைக் கொண்ட பறவைகள் இந்த பொய்க் காட்டு மரங்களில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வாழ்ந்து கொண்டிருப்போமே ஒழிய அந்த தண்ணீர்த் தேக்கத்தைத் தாண்ட மாட்டோம் என்பதுபோல் அவைகள் வளைய வந்ததில் மிளிர்ந்த சோக, அறிவற்ற தன்மை தினகரனைப் பெரிதும் அசதி அடையச் செய்தது.

ஜு முழுவதும் நட்டு வைக்கப்பட்ட மரங்கள் சாதாரண வளர்ச்சி கண்டு ஒரு பொய்க் காடாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்தது. குமாரின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்த தினகரன். அந்த ஓடையைச் சார்ந்த மரத்தைப் பார்த்துக் கொண்டு நின்று விட்டார்.

அப்போது ஒரு பெரிய பறவை மரத்திலிருந்து புறப்பட்டு வானத்தில் நீந்த ஆரம்பித்தது. கீழே ஓடையை ஒட்டிய மர நில பாகத்தில் கும்பல்களாகப் பறவைக் கூட்டம். ஒரு பிளேன் இறங்குவதுபோல் அந்தப் பறவை நீந்தித் தரையில் இறங்கியவிதம் அது ஏற்படுத்திய சிறிய நிழல் கொய்ஞ் என்ற சப்தம் தினகரனை ஈர்த்தது. அந்தப் பறவை இறங்கி வேகமாகத் தத்தித் தத்தி மற்ற பறவைகளுடன் ஒட்டிக் கொண்டது. ஒரு பறவை தன்னுடைய பெரிய அலகு அவ்வளவையும் கழுத்தோடு வளைத்துத் தன் மார்பகத்தில் ஒட்டிய சிறகுகளுக்குள் மறைத்துக் கொண்டு அங்கு அலகால் கொத்தி கொத்தி எதையோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தது.

அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் தினகரன். குமார் என்னென்னவோ சொல்லித் தனக்குப் புரிந்த விதத்தில் கத்தி ஆர்ப்பரித்துத் தன்னுடைய மகிழ்ச்சியை விளம்பரப் படுத்திக் கொண்டே வந்தான். நல்லகாலம். குமார் தினகரனைத் தூக்கிக்கோ என்று அடம் பிடிக்கவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று புறப்படும் முன் தினகரன் குமாரிடம் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

ஜுக்கு அழைச்சுண்டு போவேன். ஆனால் தூக்கிக்கோன்னு அடம் பிடிக்கப் கூடாது என்ன? சுட்டு விரலை நீட்டி அவனை அதிகாரம் பண்ணியிருந்தார்.

அப்போது அவனும் பெரிய மனிதனைப் போல். எல்லாம் புரிந்துவிட்டதுபோல் தலையை ஆட்டினான். அதனாலோ வேறு காரணமோ தினகரனைக் குமார் தூக்கிக்கோ என்று அடம் பிடிக்கவில்லை.

ஜுவில் தினகரன் ஒரு இரண்டு பர்லாங்கு தூரம் நடந்திருப்பார். அந்தத் தூரம் ஜுவை எப்படிப் பார்ப்பது, ஜுவில் எந்த வழியாக நடந்து போவது ஜுவில் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதாக இன்னும் சில அறிக்கைப் பலகைகளாக, விலங்குகளின் பட்சிகளின் விளம்பரப் பலகைகளான ஒரு அரிவாள் வளைவான ரஸ்தாகப் பின் தங்கிவிட்டன.

வெயில் பளீரென்று அடித்துக் கொண்டிருந்தது. ஆனால் வானத்தில் தூரத்தே அதனோடு அந்தரத்தின் விஸ்தாரணம் முடிவடைந்து விட்டதுபோல் கறுத்த மதில்கள் போன்ற மேகங்களின் ‘பேக்டிராப்பில்’ வெள்ளை மேகங்களின் அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது. அதிலெல்லாம் அவ்வப்போது மின்னல்கள் மெல்லிய கிளைகளாக, தாறுமாறாக வீசி எறியப்பட்ட நூல் கோணல்களாகத் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அங்கிருந்து வந்த காற்றில் தேங்கிய குளிர்ச்சியை வெயில், ரொம்பவும் சிரமப்பட்டுக் கரைக்க யத்தனித்துக் கொண்டிருந்தது.

தினகரனின் மனைவி மூச்சை இழுத்துச் சுவாசித்தாள். காலையில் நன்றாகச் சாப்பிட்டது, நல்ல உடை, ஸ்கூட்டர் சவாரி, குளிர்ந்த காற்று வெயிலில் கரைந்து கொண்டிருக்க அதில் நடந்து கொண்டிருந்ததெல்லாம் இவள் தோளுக்குள் எதையோ கரைத்தது. அந்த நிமிடமே அந்தப் புல் தரையில் அவரோடு கட்டிப் புரள வேண்டும் போல் இருந்தது.

காலையிலிருந்தே அவளுக்குத் தாபம். சாப்பிட்டப் பிறகு ஜுக்குப் புறப்படுமுன் கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படுக்கப் போனவரிடம் குமாரைத் தூங்கப் பண்ணிவிட்டுப் போய் அவரிடம் கேட்பதாக இருந்தாள். அப்போதுதான் அவள் கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் குமார் அன்னா ஜுக்கு என்ற கீச்சுக் குரலில் கத்தினான். அந்தக் குரலைக் கேட்டு அவர் வாரிச் சுருட்டி எழுந்து கொள்வதைப் பார்த்ததும், அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். பாத்ரூம் போய் முகத்தில் தண்ணீரை அடித்துக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு டிரெஸ்ஸிங் டேபிளுக்கு வந்தபோது கூடத் தாபத்தால் சுடச்சுட முறுகிச் சிவந்து சிறுத்த முகம் இன்னமும் சமனநிலை அடைந்திருக்கவில்லை. நல்ல ஜார்ஜெட் பிடிக்காது. ஆனால் அவள் ஜார்ஜெட் கட்டிக் கொண்டால் தினகரனுக்குக் கொஞ்சம் மயக்கம் உண்டாவதுண்டு. அன்று முழுவதும் அவரைத் தன் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி அவளை ஆட்கொண்டிருந்தது. அவரை ஒரே வீச்சில் தன் காலில் விழச் செய்ய வேண்டும் என்ற வெறி. அவரும் அவள் எதிர் பார்த்தபடியே நடந்து கொள்ள மனம் சந்தோஷித்துச் சிரித்தாள். உஷ் குமார் பார்க்கிறான் என்று அவரை அதட்டினான்.

குழந்தைகளுக்கு டிரெஸ் செய்யும் பொறுப்பு தினகரன் தலையில் விகுந்தது. அப்போது வராண்டாவில் நின்று கொண்டிருந்த மனைவியைப் பார்த்து இதுகளுக்கு யார் டிரெஸ் பண்ணறது.. இரு. இரு ஜுக்கு போயிட்டு வந்து உன்னோடு பேசிக்கிறேன் என்றார் தினகரன் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே.

இப்போது ஜுவில் அவருடைய மனைவி அவரைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். இவருக்கு இன்னொருத்தி இருந்திருக்கிறாள். அந்த நினைப்பு அடிவயிற்றில் சூடு ஏற்படுத்தியது. உள்ளுக்குள்ளே பந்து பந்தாக ஏதோ சுழன்று எம்பியது. கல்யாணத்துக்கு முன் தனக்கு ஏற்பட்டிருந்த நட்பை அவரே அவளிடம் சொல்லியிருக்கிறார்.

தாம் வந்துவிட்ட தூரத்தை திரும்பிப் பார்த்த தினகரன் தன்னுடைய மனைவியைப் பார்த்து உன் முகம் ஏன் இப்படி வேர்த்து விட்டது? என்றார்.

ஒன்றுமில்லை, என்றாள் அவள்.

தாகமாய் இருக்கா. பஃன்ன்டா கோகோ ஏதாவது சாப்பிடறியா என்றார் அவர்.

அன்னா கோகோ கோலா என்றான் குமார்.

பக்கத்தில் தெரிந்த கோகோ கோலா ஸ்டாண்டை நோக்கி நடந்தார்கள் அவர்கள். மணி இரண்டரை என்ற அந்த ஸ்டாண்டில் இருந்த டிரான்ஸிஸ்டரில் விவிதபாரதி நிகழ்ச்சி அறிவித்தது.

குமாருக்கு கோகோ கோலா கொடுத்ததும் தோள் மேலிருந்த அவருடைய கையிலிருந்த பாட்டிலைப் பற்றி இழுத்தாள். தினகரனுடைய மனைவி பஃன்டாவை உறிஞ்சினாள். அங்கிருந்து அசட்டுக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். பரவாயில்லை. போனால் போகட்டும். இனிமேல் கொஞ்சம் கவனித்துக் கொண்டால் போகிறது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். இருந்தும் அவர் தன்னிடம் சொன்ன விஷயம் காலையில் ஏற்பட்ட தாபம் எல்லாம் சேர்ந்து அவர் தன்னை அணைத்துக் கொண்டு நீதான் எனக்கு எல்லாம் என்று கதறினால்தான் அவள் மனசு சாந்தமடையும் போலிருந்தது.

அந்த கோகோ கோலா ஸ்டாண்டுக்கு இப்போது இன்னொரு குடும்பம் வந்திருந்தது. பாலைக் கெட்டிப்படுத்தி பிறகு நூலாக இழுத்து அதை வேஷ்டியாய்ப் பின்னியதே போன்று அப்படியொரு வெள்ளை வேஷ்டி, குர்த்தா போட்ட கிழவனார். அவருடைய மனைவி வெளிறிய சந்தனக் கலரில் ஓர் புடவை. ரவிக்கை போட்டிருந்தாள். கையில் பெரிய முதலைத் தோல் பர்ஸ். அவர்களுக்குப் பின்னால் அவர்களுடைய பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் வந்து கொண்டிருந்தார்கள். பெரியவருக்கு இந்துக்களுக்கே உரித்தானகர்மாவைச் செய்து விட்டேன் முகம். கிழவிக்குப் பிள்ளையைக் கொத்தி சென்றுவிட்ட பொறாமை தேங்கிய முகம். பிறகு சூட்போட்ட ஓர் ஆசாமி வந்தான். கையில் விலை உயர்ந்த காமிரா அந்த ஆசாமிக்கு சிறிது பின்னால் அக்கா தங்கை போன்ற இரு வளர்ந்த பெண்கள். வந்தவன் மூன்று கோகோ கோலாவிற்கு ஆர்டர் கொடுத்தான்.

அக்லாகானா என்று பேச்சின் தொடர்ச்சி காசு கொடுத்து விட்டு நகர்ந்த தினகரனுடைய குடும்பத்தை மரியாதையாகப் பின் தொடர்ந்தது. அவர்கள் ஜாலி கம்பிகளால் பிணைக்கப்பட்ட ஒரு பெரிய கூண்டை அடைந்தார்கள். பல நாடுகளிலிருந்து வந்த பலவித மயிலினங்கள் அதில் வளைய வந்து கொண்டிருந்தன.

தினகரனுடைய மனைவி ஆண் மயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அதனுடைய தலை நிமிர்ந்த கர்வம் அவளுக்குப் பிடித்திருந்தது. ஏனோ முன்னால் மதறாஸில் ஆனந்தில் ஸ்பார்ட்டகஸ் படம் பார்க்கும்போது அதில் அடிமைகளைச் சாகும் வரையில் சண்டையிடச் சொல்லி வேடிக்கை பார்க்கும் ராஜ விளையாட்டுக் காட்சி ஞாபகத்திற்கு வந்தது. ஒருவித லஜ்ஜையுடன் அந்தக் காட்சிகள் எப்போதும் தனக்குப் பிடித்தமான ஒன்றாகத் திகழுமே ஒழிய ஐயோ பாவம் உணர்ச்சியை எழுப்பாது என்ற தன்மையை இப்போதும் மனதிற்குள் ஒப்புக் கொண்டாள். அன்று அவள் தன் கல்லூரி டீச்சருடன் அந்தக் காட்சிக்குப் போயிருந்தாள்.

என்னடி பத்மா ஆன்பிள்ளை வேண்டியிருக்கு.. ஏதோ பெரிசா சாகசம் செய்யறாப்பல நடந்துக் கறாங்களே ஒழிய அதோ அந்த ஸ்க்ரீனில் நீந்தும் மூஞ்சிகளைப் பாரேன். எல்லாம் பஞ்சு உருவங்கள். அவர்களுடைய உடம்பு பஞ்சாய் இருக்கும். உன்னுடையதும் என்னுடையதும் போல.. அதுகளுடைய மனசைப் பத்தியோ கேட்கவே வேண்டாம். எப்போதோ உளுத்துப் போயிருக்கும். என்று உரக்கவே சொன்னாள்.

அப்போது அவளை அடக்குவதற்காக அவள் கிள்ளினாள். அவள் ஊஊவென்று பாதி நிஜ பாதிப் பொய்க் குரலெழுப்பினாள். என்த ஆம்பிள்ளையைப் பார்த்தாலும் அந்த டீச்சர் யூ லில்லிவர்டு பாஸ்டர்ட் என்று முனகுவாள்.

அப்போதெல்லாம் இது எந்த நாவிலிருந்து என்பாள் பத்மா.

எந்த நாவிலிருந்து இருந்தால் என்ன பாரேன். இதுகள் மூஞ்சியை தொந்தியும் தொப்பையுமாக.. முப்பத்தைந்து வயதிலும் மாஸ்டர்பேடிங் பாஸ்ட்டர்ட்ஸ் யூ நோ பத்மா டோன்ட் மேரி நெவர் இஃப் யூ ஆர்ஃபெட் அப் வித் மீ ஸர்ச் அனதர் பார்ட்னர் லைக் மீ அஃப் கோர்ஸ்பட் டோன்ட் மேரி யூ ஸீ தட்..

ஆனால் அவளுக்குக் கல்யாணம் ஆயிற்று. தினகரன் பேப்பரில் விளம்பரம் செய்திருந்தார். அந்த விளம்பரத் துணுக்கை எடுத்துக் கொண்டு தூக்கத்தில் நடப்பவள் போல்தான் அன்று அவன் பேசினான். நாம் சிறிது மனம் விட்டுப் பேசலாம் என்றார் தினகரன். அன்று சுருக்கமாக நான் நான் நீ நீயாக இருப்போம் நாம் ஒன்றாக வாழ்வோம் என்றார். ஏனோ அவளுக்கு அந்த வார்த்தைகள் பிடித்திருந்தன. நான் நானாக இருப்பேன் என்று அவர் தனக்குச் சொல்லிக் கொண்டது சரி. ஆனால் நான்? அவளுக்கு அழுகை வந்தது. அவர் ஓடிப்போய் அவளைத் தழுவினார். முதலில் அவள் முரண்டு பிடித்தாள். பிறகு இணங்கினாள். அடிக்கடி அவர் ரூமுக்குப் போய்வர ஆரம்பித்தாள். பிறகு கல்யாணம் செய்து கொண்டாள். திருப்பதியில் கல்யாணம். கடைசி நிமிடத்தில் அம்மா வந்தாள். அப்பா அவள் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

அவர் அவரிடம் தன் டீச்சர் நட்பை இதுவரையில் சொன்னதில்லை. லில்லிவிவர்ட் பாஸ்டர்ட்ஸ் என்று டீச்சர் அடிக்கடி ஆண்களை வைத்து எவ்வளவு தவறு என்று அவளுக்குப் புரிந்தது. குண்டு குண்டான இரண்டு குழந்தைகள். அதற்கு ஏதுவான அடிவயிற்றில் அடிக்கடி அவர் குடிகொள்ளச் செய்த நமநமத்த இன்பவலிகள். பசி கலியாணத்திற்குப் பிறகுதானே அவளுக்குச் சாப்பாட்டில் அப்படியொரு ஆசை ஏற்பட்டது? அதற்கும் அவர்தானே காரணம்?

மேலும் டீச்சர் யூ ஆர் ராங். ஒரு ஆண் தன்னை நிர்வாணமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். ஹி ஹாஸ் ஏ பெட்டர் பில்டு. ஹி லுக்ஸ் மச் மோர் ஹோல்சம் மேலும் இந்த மயிலைப்பார். ஆண் மயிலில்தான் அப்படியொரு அப்படியொரு அழகு காம்பீர்யம் தெரிகிறது. பெட்டைக் கோழியைவிடச் சேவலைப் பார். நல்ல வளர்ந்த ஆண் ஆல்சேஷனை நீ பார்த்ததில்லை. கிழட்டு ஆண் சிங்கத்தைப் பார். நீ எப்போதாவது இங்கு வந்தால் தினகரனுடன் ஒரு வாரம் இருந்து பார்.

எனக்கு என்னவாயிற்று? போட்டி பொறாமை, பைத்தியக்கார எண்ணங்களில் நினைத்து என்னை வருத்திக் கொண்கிறேன். நான் இருபது வயதில் ஆண்களுடன் பேச முடியாது அவதியுற்றது காரணமாக இருக்கலாம். என் அம்மா என்னை அப்படிக் கட்டிக் காபாந்து செய்தாள். பிறகு நான் டீச்சரை அழைத்துவந்து ஜாடை மாடையாக வீட்டிலேயே அதை ஆரம்பித்த பிறகும் அம்மாவுக்கு என் நிலை புரியவில்லை.

உங்களுக்குக் கோடி தாங்க்ஸ் என்றாள் அவள் தன் கணவனைப் பார்த்து எதற்கு? என்றார் அவர்.

இரவில் சொல்கிறேன் என்றாள் அவர்.

தினகரன் தோளைக் குலுக்கிக் கொண்டார். சிரித்தார். நான் ராஜாவாக இருந்தால் இப்போது இங்கு இருக்கும் அத்தனைப் பேரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு உன்முன் மண்டியிட்டு இப்போதே சொல் என்பேன் என்றார்.

எவ்வளவு சினிமா பார்த்தால் என்ன? புத்தி வந்தால்தானே? என்றாள் அவள்.

என்ன உளறுகிறாய்? என்றார் அவர்.

இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் கூடாதாம். நியூஸ் ரீலுக்குப் பதிலாக இப்போதெல்லாம் அதைத் தானே போட்டுக் காட்டுகிறார்கள். மேலும் நீங்கள் அவர்கள் சொல்வதைக் கூட உபயோகப்படுத்துவதில்லை. ஜாக்கிரதை.

ஏய் மெல்ல யாராவது கேட்கப் போகிறார்கள். என்றார். அவர். அவள் தன் நாக்கைக் கடித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். அந்த வயதான தம்பதிகள் பின்னால் வந்து கொண்டிருந்தனர். பிள்ளையையும் மாட்டுப் பெண்ணையும் காணவில்லை. ஓர் கூண்டுப் பக்கமாக அந்த சூட்போட்ட ஆசாமியுடன் வந்த இரண்டு பெண்களில் மூத்தவளாகத் தெரிபவள் தனியாக நடந்து கொண்டிருந்தாள். சூட் ஆசாமியும் தங்கையும் புல் தரையில் உட்கார்ந்திருந்தனர். தங்கைக்காரி கைகளைப் பின்னால் ஊன்றிக் கால்களை முழுவதும் நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கழுத்தை அண்ணாந்து சிலிர்ப்பித்து, பாஃப் தலைமயிர் அசைந்தாட உடம்பே சிறு சிறு சிரிப்பு நகைகளாகக் குலுங்க உட்கார்ந்திருந்தாள்.

அந்த மூவரும் அன்று ஜுவில் பல சமயங்களில் தினகரனுடையவும் அவருடைய மனைவி கண்களிலும் பட்டனர். மூத்தவள் எப்போதும் பத்தடி பின்னாலேயே நடந்து கொண்டிருந்தாள். கோட் சூட் ஆசாமியும் வயதில் தங்கை போன்று தோற்றம் கொண்ட பெண்ணும் பேசிச் சிரித்து நடந்து கொண்டேயிருந்தனர். அடிக்கடி புல் தரையில் உட்கார்ந்தனர். கையோடு கொண்டு வந்திருந்த பிளாஸ்கிலிருந்து பிளாஸ்டிக் டம்ளரில் எதையோ கொட்டி அடிக்கடி குடித்துக் கொண்டிருந்தனர். ஜுவில் அவர்கள் எந்தக் கூண்டுப் பக்கத்திலும் ஒரு தடவைகூட நிற்கவில்லை. பொதுவாகப் பார்க்கில் உலாவுவது போன்று நடந்து கொண்டிருந்தனர்.

பையன் குமார் தினகரனை ரொம்பவும் தொளாவிக் கொண்டிருந்தான். அன்னா இது என்ன? அது என்ன? அன்று ஜுவில் கேள்வி சாகரமானான் குமார். தினகரன் அளந்தார். நான் என்ன பயாலஜி ஸ்டூடன்டா என்ன? என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். எங்கிருந்து வந்தது? என்ன இனம்? மாமிச பட்சிணியா? இல்லையா போன்ற தகவல்களை வெள்ளைப் பறவை கறுப்புப் பூனை சிகப்புபறவை என்று சாதாரணமாகச் சுவரைப் பார்த்துச் சொல்வதிலிருந்து வானதது நட்சத்திரம் என்று தன் கற்பனையை அள்ளி வீசுவதிலிருந்து ஏதேதோ ஜாலங்கள் புரிந்து கொண்டிருந்தார் தினகரன். அப்போதைக்குக்போது மனைவியைத் திரும்பிப் பார்த்தார். அவள் சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள். இரு அவ்வளவு சிரிப்பையும் இரவில் வலியாக, முனகலாக வேர்வையின் தெப்பக் கடலாக மாற்றுகிறேன் என்று மனதிற்குள் கருவிக் கொண்டார். தொடர்ந்து மனைவி சொன்னது ஞாபகம் வந்தது. இதுவரையிலும் உபயோகித்ததில்லை. இரண்டு குழந்தைகளாகி விட்டது. வாங்குவதா, வேண்டாமா? கடையில் போய்க் கேட்க முடியுமா? அப்படிக் கேட்டாலும் முதலில் நான் ஒரு கடை வைத்து விற்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். யாராவது வந்து என்னை ஒரு பாக்கெட் கேட்டால் சீ... மேலும் என்னால் அதை உபயோகிக்க முடியுமா? இருந்தும் மனைவியிடம் போகும்போதெல்லாம் பயம் தொற்றாமலிருந்ததில்லை.. எங்கோ வைகறையின் முதல் கீற்று கணக்காக ஒரு சிறு ஜொலிக்கும் பொட்டு ஒன்றே ஒன்று மீண்டும் அவளில் ஒளிர்ந்துவிட்டால்.

தினகரனை ஏதோ இனம் புரியாத அசதி தொற்றியது. மனித வாழ்க்கையே அர்த்த மற்றதாகி விட்டது போலப் பட்டது. பேராசை பிடித்த மனிதன்தான் கடவுளைப் படைத்தான். என்று சொன்ன அவளுடைய அண்ணா. முப்பத்திரெண்டு வயதில் நூற்றுக்கணக்கான துயரங்களுக்குப் பிறகு. எவனுக்கோ மனைவியாகப் போன ஜானா அதோ அந்தப் பெண்ணையும் ஆணையும் நடக்க விட்டுப் பின்னால் தயங்கித் தயங்கிக் கூண்டினருகில் நின்று நின்று நடக்கும் அந்தப் பெண் உள்பட. ஆமாம் அவள் முகத்தில் ஏன் அந்தச் சோகம்? எல்லோரும் என் கண் முன்னால் இப்போது நீந்துகிறார்களே? ஏதோ அவர்கள் இரைந்து கூப்பாடு போட்டு ஏதோ சொல்வது போலிருக்கிறதே? என்ன சொல்கிறார்கள் இவர்கள்? எங்களுடைய சோகத்திற்காக ஒரு பொட்டுக் கண்ணீர் விடுங்கள் என்று கெஞ்சுகிறார்களா? யாருக்காக அழுவது? எதற்கென்று அழுவது? அவரிடமிருந்து பெருமூச்சுக் கிளம்பியது.

இதோ பார்த்தியா குமார்.. இந்தப் புறா.

அது புறா இல்லை, அவள் சிரித்தாள்.

இந்தப் புறா குமார் வந்து,

குமார் அது புறா இல்லை.

இப்ப நீ சும்மா இருக்கிறியா? இல்லையா? தினகரன் தன்னுடைய மனைவியை அதட்டினார்.

அவள் இரண்டு அடி பின்னால் தள்ளி நின்று மீண்டும் சிரித்தாள்.

குமார் அது புறா அது இல்லை. போ போ உன்னை அடிப்பேன் என்றான் குமார்.

அச்சா பாபா அது புறா இல்லை என்றார் தினகரன். அப்படி வாங்க வழிக்கு என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு சிரித்தாள் அவள்.

அப்படித்தான் நீங்களெல்லோரும் அப்படித்தான். ஒரு வைரக்கல், ஒரு பவழம், இல்லை ஒரு பூ கொடுத்து உங்களை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அப்படியும் முரண்டு பிடித்தால் ஒன்றுமேயில்லாத ஒரு கற்பனைத் தோல்வியை ஒப்புக் கொண்டு உங்கள் காலுங்கீழ் விழுந்தால் அந்தப் பருத்த தனங்கள், வளப்பமான கைகள், உதடுகள் எங்களுடையது. உடம்பே பூஞ்சையானாலும் உங்கள் துடைகளில் அப்படியொரு அழுத்தம் எங்கிருந்து வந்தது? அதுவும் எங்களுடையதுதான்..

அன்னா சொல்லு புறா புறா என்று அவரை ஊக்குவித்தான் குமார். தினகரன் தன் மனைவியைப் பார்த்தார்.

அவள் உதட்டைப் பல்லால் அழுத்தி பறவை என்றாள்.

அவரைப் பார்த்துக் கண்களால் சிரித்துக் கொண்டே.

இவளா சில சமயங்களில் அப்படி இவ்வளவு சீரியஸாக ஒன்றுமே நடக்காதது போல் பசுவாட்டம், தன்னை அப்படி ஒரு பெரிய மனுஷி போல் ஆக்கிக் கொள்கிறாள்.

இப்போது ஆண் முறைகள் வகுக்கப்பட்டு விட்டதால் நான் வேண்டும் என்பதை எப்படி பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொள்கிறாள்.

அவருக்கு அவளைக் கண்டிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளுடைய எண்ணத்தில் அவளில் அவள் அழகாக இருந்தாள். பார்க்கும் இடமெல்லாம் அழகை வாரி இறைக்கிறாள். அவள் அன்னை. பெண்ணரசி. பராசக்தி. உலகத்தை உரு ஆக்குபவள். அவருக்கு அவளை அணைத்தால் தேவலை போலிருந்தது. தூரத்தில் தெரிந்த மரங்களுக்குப் பின்னால் அவளை அழைத்துக் கொண்டு போனார்.

குமார் அவரை விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதோ பார் மான் இல்லே.. எவ்வளவு அழகாய் இருக்கு இல்லே? என்று சொல்லி அவன் கவனத்தைத் திருப்பினார். அவன் திரும்பினதும் கையிலிருந்த குழந்தையைக் கீழே உட்காரவைத்து விட்டு அவளை இறுகக் கட்டிக் கொண்டார். இரண்டு. நெற்றியில் ஒன்று. உதட்டில் ஒன்று. தாங்க்ஸ் என்றார்.

குமாரை அழைத்துக் கொண்டு கூண்டுகள் பக்கமாக வேகமாக நடக்கலானார். ஏனோ அந்தரத்தில் காற்றில் அது அப்போது வியாபித்திருப்பதாகப் பட்டது. ஆடும் மரங்களில் அவளுடைய குரல் தேங்கி ஊர்ந்தது. மாலை பரப்பிக் கொண்டிருந்த நீண்ட நிழல்களில் நிழல்கள் எழுப்பிய அருவரு கட்டிடங்களில் அது சலனமடைந்து வியாபித்தது. எங்கோ விரைந்து கொண்டிருந்தது.

ஸ்ட்டரின் ரீங்காரத்தை அது தொடர்ந்தது. உலகத்தில் ஒரு பாட்டு ரூபமாக ஒரு இழை குரலாக இனம் புரியாத ஏதோ ஒன்று சதா எல்லாவற்றையும் அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. என்னைத் தேடினவனே உனக்கு ரொம்ப தேங்க்ஸ் என்ற குரல் எங்கிருந்தோ கேட்பது போலிருந்தது அதுவும் பாட்டு ரூபமாக.

மரங்களுக்குப் பின்னால் தினகரனுடைய மனைவி பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.

அவரை வாட்டுவது எதுவாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய். அவருடைய முகத்தைப் பார்த்தால் விதியே நீ என்ன மாதிரி விளையாடக்கூடும் என்பதைச் சாகரமாக அவர் முகத்தில் தேங்கி உன்னைப் பிரதிபலித்துக் காட்டிக் கொள்வதை நான் அடிக்கடி பார்க்கிறேன்.

நான் உன்னை அவர் முகத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் அனுபவ முத்திரையைப் பார்த்துப் பயப்படுகிறேன். தலைகுனிந்து வணங்குகிறேன். இந்த மாதிரியான பழம் கிடைக்க நான் என்ன செய்தேன். பன்னிரண்டு வருட காலம் என் இனத்தவரோடு கட்டிப் புரளுவதை வெட்டிப் போட்டு பெண் ஆக்கியிருக்கிறாய். அனுபவ முத்திரையே விதியே எப்போதும் உன்னுடைய தேடலின் பிரதிபலிப்புக்கள் மனமொத்து ஒன்று சேருதலாகவே இருந்து போகட்டும். உன்னை நான் நினைத்தபடி நீ என்னில் வந்து குடிகொள்ள இந்த மாலை வேளையில் நீளும் நிழல்களில்கூட நின்றுகொண்டு அழைக்கிறேன். அந்த நிழல்களில் கூட நீ என்றோ அவைகளை உருவமாகக் கற்பனை செய்தது. பாதியாக நின்றுவிட்டது. முழுமை பெற நான் ஆசீர்வதிக்கிறேன். இங்கும் எங்கும் பிரதிபலிக்கும் துன்பங்களை அடித்துப் போடு மறையும் ரத்தச் சிவப்புச் சூரியனே என் வேண்டுதலை உன்னில் ஐக்கியப்படுத்திக் கொண்டு நாளை உதி.

பிறகு அவளுக்கு இரைச்சல் சப்தம் கேட்கவே துணுக்குற்றாள். குமாருக்கு மௌனமாக எதையோ கூண்டுக்குள் சுட்டிக் காட்டி விளக்கிக் கொண்டிருந்த அவர் பக்கம் தன் பெண்ணை வாரிக் கொண்டு ஓடினாள். அவர் பக்கத்தில் போய் அவர் தோளைப் பற்றி இழுத்து அவர் கவனத்தைத் திருப்பினாள்.

தூரத்தில் ஜனங்கள் குண்டு விழப்போகும் பயத்துடன் மூலைக்கு ஒருவராகச் சிதறி ஓடிக் கொண்டிருந்தனர். ஒரு புலி நான்கு கால் பாய்ச்சலில் ஜுவைத் திக்குகளின் முனைகளாக அளந்து கொண்டிருந்தது. தினகரன் கவனித்தார். குமாரைத் தூக்கிக் கொண்டு அவர் மேல் சாய்ந்த அவருடைய மனைவி ஸ்டில் போட்டோகிராபி ஆனாள். புலி கூண்டிலிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டு விட்டது. புலி நீளமாகப் பாய்ந்தது. அந்தரத்தில் முடிந்த மட்டும் எம்பி குதித்தது. கீழே விழுந்து உருண்டு புரண்டது. எழுந்தது. நிதானமாகச் சுற்றுமுற்றும் பார்த்தது. பிறகு ஓடும் ஜனங்களைப் பெரிய வட்டமாக அடித்து ஒன்று சேர்த்து நடுவில் குவித்தது. அலறல்கள் தொடர்ந்தன. புலி கண்மண் தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது. முன்னங் கால்களை அழுத்திக் கொண்டு உடம்பை ஒரு பெருங் கோடாக வளைத்துக் கொண்டது. உறுமிப் பாய்ந்தது. மீண்டும் கூக்குரலுடன் மனித ஓட்டம் தொடர்ந்தது.

தினகரன் புலிக்கு வெகு தூரத்தில் இருந்தார். இருந்தும் புலி ஓரிரு தடவை அவருக்கு ஒரு ஐம்பது கஜ அளவு தூரத்தில் ஓடியது. அது அவர்களைக் காணவில்லை. அவருக்கு அடி வயிறு ஜில்லென்று ஆயிற்று. பிறகு தூரத்தில் ஜுவின் ஆரம்பத்தில் இருக்கும் ஆபீஸில் அலாரம் அலர ஆரம்பித்தது. இரண்டு, மூன்று, ஜீப்புகள் அதில் இரும்புத் தொப்பி அணிந்த போலீஸ். வெள்ளை உடை அணிந்த அதிகாரிகள் தென்பட்டனர். ஜுப்பின் வேகம் அதிகரித்தது. ஜனங்களைப் பயப்படாமல் அங்கங்கே அப்படியே நிற்குமாறு ஒலி பெருக்கியில் உத்தரவு வந்தது. இப்போது ஜீப் புலியைத் துரத்த ஆரம்பித்தது. இப்போது புலி புரானகிலா மதில்களை நோக்கி ஓட ஆரம்பித்தது. ஜீப் பிடாமல் புலியைத் துரத்தியது. புலி பாய்ந்தது. முள் கம்பி அதை ஒரு பந்தாக எதுக்களைத்துத் தள்ளியது. புலி மீண்டும் பாய்ந்தது. முள் கம்பி எவ்வளவோ இறுகக் கட்டப் பட்டிருந்தும் பூகம்பம் கண்டதுபோல் தொய்ந்து ஆடிப் புலியைக் கீழே தள்ளியது. புலி விழுந்த இடத்திலிருந்து எழுந்து தன்னை நக்கிக் கொடுத்துக் கொண்டது. சுற்றுமுற்றும் தரையில் எதையோ முகர்ந்து பார்த்தது. மீண்டும் ஓட ஆரம்பித்தது. இப்போது புலி பாய்ந்த வேகத்தில் கம்பியில் பட்டதும் அது ஒதுக்கப்பட்டு அந்தரத்தில் அப்படியே அரைக் கணத்திற்கு நின்றது. அப்போதுதான் அதன் மேல் முதல் குண்டு பாய்ந்தது. புலி சாகவில்லை. அடிபட்ட ஆத்திரத்தில் புரண்டெழுந்தபோது இரண்டாவது குண்டை நெற்றியில் பெற்றுக் கொண்டது. மூன்றாவது குண்டு பாய்ந்தபோது புலி எழுப்பிய ஓலம் கேட்டவுடன் தினகரனின் உடம்பு ஒரு தரம் குனிந்து எழுந்தது. அவருக்குள் எதையோ சொடுக்கி இழுப்பதுபோல் வலி ஏற்பட்டது.

குமாயுன் ஹில்ஸி லிருந்து பிடிக்கப்பட்ட புலியாம். பிடித்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறதாம். முதல் ஒரு மாதம் புலி எந்த ஆகாரத்தையும் தொடவில்லையாம். உறுமிக் கொண்டிருந்ததாம். லேசான ஒரு கண்டிப்பு மிகுந்த உறுமலோடு சரி. ஆட்டு மாமிசம். அப்போதுதான் கொன்ற மான். ஊஹிம் எதையும் திரும்பிப் பார்க்கவில்லையாம். நாளொன்றுக்கு உயரே ஒரு முப்பது அடிக்கு மூடப்பட்ட ஜாலி கம்பிகளை நோக்கி நூற்றுக்கணக்கான தடவைகள் தாவித் தாவிப் பொதக் பொதக்கென்று விழுந்து களைத்துக் கொண்டிருந்ததாம்.அவ்வாறு களைத்த பிறகு கால்களால் வெகுநேரம் கம்பியைப் பிராண்டிக் கொண்டிருக்குமாம். இன்னமும் எத்தனையோ கதைகள். நிருபர்கள் வந்து படம் பிடித்தார்கள். கையுடன் கொண்டு வந்து நோட்புக்கில் குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். தினகரனைத் தோளில் காமிரா தொங்க ஒருவன் நெருங்கினான். அவன் அவரை ஏதோ கேள்வி கேட்டான்.

தினகரன் லிசன் யூ கோ டு ஹெல் டு யூ அண்டர்ஸ்டாண்ட்? எஸ டு ல், என்றார்.

அன்று அவர் குமாருக்காகத்தான் லகுனாவுக்குப் போனார். புலி செத்துப்போனது மனதை ரொம்பவும் சங்கடப்படுத்தி விட்டது. புலியே நான் இப்போது லகுனாவுக்குப் போய் புரூட் சாலட் சாப்பிட போகிறேன். ஆனால் மேலெழுந்த வாரியாக என்ன செய்தாலும் உன்னுடைய சாவு என்னை ரொம்பவும் உலுக்கி விட்டது. என்பதை உண்மையான மனதுடன் முறையிட்டுக் கொள்கிறேன். என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

கல்யாணத்திற்கு முன் சின்னவளுடன் அடிக்கடி லகுனா வந்து போயிருக்கிறார். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு இதுவே முதல் தடவை. அவரை வரவேற்கத் திரும்பிய சர்வர் ‘ஹே’ என்று ஆச்சரியக் குரலெழுப்பினான்.

அவருடைய மனைவிக்குச் சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவித்தான். பிறகு ஒரு மூலை பக்கமாகக் கண்ணோட்டம் விட்டான். முன்பெல்லாம் தினகரன் வழக்கமாக உட்காருமிடத்தைத்தான் அவன் அப்படிப் பார்த்தான். அங்கு யாரோ உட்கார்ந்திருந்தார்கள். நான்கு வருடம் ஆகியும் சர்வர் தான் வழக்கமாக உட்காருமிடத்தை மறந்திருக்கவில்லை என்பதைத் தினகரன் கவனித்தார்.

தினகரனையும் அவருடைய மனைவி குழந்தைகளையும் ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு கொஞ்ச நேரத்தில் அவர்களுக்குப் பில் சமர்ப்பிக்கப்படும். பிறகு நீங்கள் அங்கு உட்காரலாம். என்று சர்வர் சொன்னான்.

O.K I am ready to wait

என்றார் தினகரன். அவருக்கு முன்பு பழக்கமான இடம் காலியானதும் அவர் தன் மனைவி குழந்தைகளுடன் அங்கு போய் உட்கார்ந்தார். பக்கத்தில் ஏதோ கனைப்புச் சத்தம் கேட்டது. மைக்கில் பாடுபவர் பக்கத்தில் வந்து சிரித்துக் கொண்டு நின்றிருந்தார். தினகரன் ஆச்சரியக் குரலெழுப்பி எழுந்து கொண்டு வந்தவரின் கையைக் குலுக்கினார். போயிட்டுப் போறது. மன்னித்து விட்டேன். என்றார் வந்தவர் சிரித்துக் கொண்டே.

தினகரன் அவருடைய தோளை அழுத்தி உட்கார வைத்தார். நம்மிடையே எதற்கு பார்மாலிடி என்று அசட்டுச் சிரிப்பை உதிர்த்தார் தினகரன்.

அட எங்கோ நடந்த திருப்பதி கல்யாணத்திற்கு அழைப்பு போடவில்லைன்னா நான் உன்னைக் கோபித்துக் கொள்கிறேன்? திரும்பி வந்தியே. இங்கு ஒரு நாளாவது எட்டிப் பார்த்தியா?

ஐ ஆம் ஸாரி. தப்பு என் மேல் தான் என்றார் தினகரன் இயல்பாக. அதுதான் சொன்னேனே, மன்னித்து விட்டேன் என்று. எனக்குத் தெரியாதா உன்னை? நீ எப்போதும் ஒரு விதம். என்று சொல்லிச் சிரித்தார். பிறகு குமார் முகத்தைச் செல்லமாகத் தட்டினார். பையில் கைகைவிட்டு ஒரு காட்பரீஸ் சாக்கலேட்டை எடுத்து அவனிடம் நீட்டினார்.

குமார் தயங்கிக் கொண்டே தன் அன்னாவைப் பார்த்தான். வாங்கிக்கோ என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

ப்ரூட் சாலட் வித் ஐஸ் க்ரீம் மேலே இரண்டு சேரி பழத்துடன் வந்தது.

இன்னொன்று இப்போது வேண்டாம் என்றார் அவர். சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றார் தினகரன்.

இல்லை. தொண்டை கட்டிக் கொண்டுவிடும். அப்புறம் பாட முடியாது. மேலும் ஒரு ப்ரூட் சாலட் கொடுத்து ஏமாற்றிவிட முடியுமா என்று சொல்லிக் கடகடவென்று சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டார்.

நிச்சயமாக உங்களுக்கு லன்ஞ் தரவேண்டியதுதான் என்று சௌகரியப்படும்? என்றார் தினகரன்.

'Any day, Just drop a card,' என்றார் அவர். சிறிது நடந்தவர் மீண்டும் திரும்பி வந்து உங்களுக்குப் பிடித்த பழைய பாட்டேவா? அல்லது என்று இழுத்தார்.

‘லாரா தீம்’ என்று ஒப்புக்குச் சொன்னார் தினகரன் சிரித்துக் கொண்டே.

ஷ்யர் என்று சொல்லி அவர் திரும்பி நடந்தார். மேடையிலிருந்து கை ஆட்டிச் சிரித்தார். லாரா தீம் இனிமையாக ஆரம்பித்தது. தினகரன் தன் மனைவி பக்கம் திரும்பினார். அவர் மனைவி ப்ரூட் சாலட்டை நாசூக்காக அனுபவித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். குமார் வாயில் அடிக்கடி ஊட்டப்பட்டதை அவன் சாப்பிடுவதை மேலெல்லாம் வழிய விட்டுக் கொண்டதுதான் ஜாஸ்தியாக இருந்தது. அவர் மனைவி அடிக்கடி சாப்பிடும் ஸ்பூனைக் கீழே வைத்து விட்டு அவனை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டாள். பெண் குழந்தை இரண்டு கைகளாலும் டேபிளில் தட்டி எப்படியெல்லாமோ கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தன.

தினகரன் கண்களை மூடிக் கொண்டார். தலையைக் குனிந்து கொண்டார். மண்டை வெடித்து விடும்போல் அப்படியொரு வலி. தலையைச் சிரிது உயர்த்திக் கண்ணைத் திறந்தபோது நேரே ப்ரூட் சாலட் கோப்பையில் விழிப்பதை உணர்ந்தார்.

முதலில் அவருடைய பார்வை குப்பென்று வெளிப்புறம் இப்போது நீர் பூத்திருப்பதில் சென்று லயித்தது. பிறகு பார்வை மேலேயிருந்த ஐஸ்க்ரிம் உருகிச் சிறிய ஓடைகளாகிக் கொண்டிருந்ததில் சென்று லயித்தது.

திடீரென்று ஐஸ்க்ரிம் மேலேயிருந்த இரண்டு செரி பழங்களும் இரண்டு கோரை நார் கணக்காகப் பிரிந்து உருகி ஓடும் ஐஸ்க்ரிம் ஓடையும் செத்துப்போன புலியின் இரண்டு கண்களும் இரண்டு மீசையுமாயின. அவர் உடம்பு விதிர்த்துக் கொண்டது.

பிறகு வீடு திரும்பும்வரை அவர் யாருடனும் பேசவில்லை. எதையும் கவனிக்கவில்லை. பரந்த டில்லியில் கூட்டங்களில் மனைவி மக்களிடையே தனித்தவரானார் ரீகல் வரையில் நடந்து சென்று பஸ்சிற்க்காகக் காத்திருக்க நேர்ந்தது. ஸ்வப்பனத்தில் நடந்ததுபோல் ஆயிற்று. உணர்ச்சியே இல்லாமல் பஸ்ஸில் ஏறி, கிடைத்த இடத்தில் உட்கார்ந்தார். பிறகுதான் மனைவி குமாரையும், குழந்தையையும் வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறாள் என்று புலப்பட்டது. எழுந்து கொண்டு அவளை உட்கார வைத்தார். மீண்டும் ஏதோ யோசனை.

வீடு திரும்பும்போது தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்து அரைமணி நேரம் ஆகியிருந்தது. உள்ளே நுழைந்த தினகரன் விளக்கைப் போட்டவர் விளக்கையே பார்த்துக் கொண்டிருந்தார். வெகுநேரங்கழித்துச் சோபாவில் உட்கார்ந்தார். தரைமயிரைக் கைகளால் கோதிக் கொண்டேயிருந்தார். மனைவி பலமுறை சாப்பிடக் கூப்பிட்டாள். குமார், அன்னா சாப்பிட வா என்று பலமுறை கீச்சுக் குரலில் கத்தினான். அவன் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவில்லை.

அவர் இடத்தை விட்டு எழுந்து படுக்கப் போனபோது மணி பதினொன்று. மனைவி அவர் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். அவர் படுத்த சிறிது நேரத்தில் அவருடைய மனைவி தான் பகலில் நினைத்ததைச் செயல்படுத்த யத்தனித்தாள். அவர் தூங்கினார். தூக்கத்தில் ஒரு கனாக் கண்டார். கனவில் ஒரு பெரிய பனி போர்த்திய மலைகள் சமன பூமி ஆகின்றன. திடும் திடும் என பெரிய மலைகள் பெரிய இரைச்சலுடன் தவிடு பாடி ஆகின்றன. அந்த வெடிப்பு உதிர்ந்த பனிப் பூக்கள் தூவான்கள் வெகுநேரம் அந்தரத்தில் ஊசலாடி மீண்டும் தணிந்து சோவென்ற பெரும் மழை வலுக்கின்றது. மழை தணிந்த இடத்தில் அப்படியொரு ஜனத்திரள் முளைத்திருக்கின்றது. நிறையப் புலிகள், மான்கள், தவளைகள், கோடானு கோடி பட்சி இனங்கள் கண் முன்னால் நீந்துகின்றன. மறைகின்றன. மரங்கள், செடிகள், கொடிகள் இன்னும் என்னவெல்லாமோ தோன்றி மறைய மறைய மனித இனம் ஒரு இம்மி அளவு நகர முடியாமல் பூமியில் ஊசிமுனைப் பொட்டளவு இடத்தில் நின்று நகரமுடியாமல் நெரிபட்டு நின்ற இடத்தில் இறக்கிறது. மனித இனத்தின் சாபக்கேடு பூமி தாங்க முடியாத அளவுக்கு அதிகரிக்கிறது.

இந்நிலையில் அவர் விழித்துக் கொண்டார். அவர் உடம்பு வேர்த்து விட்டிருந்தது. தான் கண்டது கனா என்ற தீர்மானத்திற்கு வரமுடியவில்லை. விசுக்கென்று எழுந்து ஜண்ணலண்டை போனார். பானர்ஜி வளர்த்த யூகலிப்டஸ் மரம் பின்பகுதி சந்திரனில் ஏதோ மஞ்சள் சாயம் தீட்டிக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறது. மனம் சிறிது சாந்தமுற்றதுபோல் இருந்தது. வெளியே வராந்தாவுக்கு வந்து செருப்பை மாட்டிக் கொண்டு உலவக் கிளம்பினார்.

பிறகு அவருக்கு அது பட்டது. அவர் ஏழு கோர்ட் ஏறிச் சத்தியம் பண்ணத் தயாராக இருந்தார்.

ஜுவில் அன்று பிற்பகல் ஒரு பாவமும் அறியாத புலியை மனிதன் கொன்று விட்டான். நடந்து சென்று புலியினுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தால் கூட அது யாருக்கும் எத்தீங்கும் செய்திருக்காது என்று அவருக்குப் பட ஆரம்பித்தது. அவருக்கு அந்தப் புலியின் ஓட்டம் அதனுடைய முகம் எல்லாம் கண் முன்னால் நீந்த ஆரம்பித்தது. ஆம் அது யாருக்கும் எத்தீங்கும் செய்திருக்காது. அது வெளியே வந்தபோது தனக்கு விடுதலை கிடைத்து விட்ட சந்தோஷத்துடன் அது வாழ்ந்து கொண்டிருந்தது. சுவாசித்துக் கொண்டிருந்தது. விடுதலை கூண்டிலிருந்து விடுதலை தன்னுடைய நிலையிலிருந்து பிழறிய வடிவத்திலிருந்து விடுதலை.

வெகுநேரங் கழித்து அழித்து வாலைச் சொடுக்கினபோது தான் அதனுடைய தேடல் ஆரம்பித்தது. அதற்குப் பிறகுதான் தன் உடம்பால் தான் விடுதலை அடைந்து வந்த இடம் காடில்லை என்பதை உணர்ந்தது.

பிறகுதான் மனிதனுடைய ஆச்சர்யம் அவன் சுவாசிக்கும் காற்றாகத் தேங்கிக் கிடந்த ஆச்சர்யம். ஆச்சர்யமே என்ன என்று அறியாத அந்தப் புலியையும் தொற்றியது.

வேங்கையைக் கூண்டில் அடைத்து அதற்குச் சாசுவதமான தன்னுடைய புளித்துப் போன மனிதத் தன்மையைத் தர வேண்டும் என்ற வெறி மனிதனை எப்படி எப்போது தொற்றியது?

அவனுடைய கையாலாகாத்தனம். Ah! தினகரன், What a great rediscovery. Slowly proceed with this though.

ஆம், மனிதனுடைய கையாலாகாததனம்தான் அவனைப் புலியைக் கூண்டில் அடைக்கத் தூண்டியது. இரும்பு ஞானம் முதலில் புலியைச் சிறைப்படுத்த அஹ்ஹஹா.. அந்தக் கையாலாகாதனம் அவனுடைய அறிவு பலப்பட அதிகரிக்கச் செய்தது. மனிதன் தன்னுடைய பெரிய இழப்பை நினைத்துப் பார்த்தான். இல்லை அவன் மலை உச்சியில் எங்கோ வானத்தில் கண்களைப் பதித்தவாறு நடந்து கொண்டிருந்தபோது அங்கு ஓர் சிறுத்தை போய்க் கொண்டிருந்தது. அப்போது கனத்த மலைப்பாம்பு மரத்தின் மேலிருந்து நழுவி அந்த மிருகத்தின் மேல் விழுந்தது. கனம் தீவிரமான வேகம் இடும் சண்டையைப் பார்த்த மனிதன் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அதன் கையில் அகப்பட்டால் என்ற நினைப்பு அவனை ஜுவைக் கற்பிதம் செய்ய வைத்தது.

ஆம். அந்தக் தருணமே அறிவை வளர்த்துக் கொண்ட மனிதன். தனக்கு உடனே சாட்சியாக நின்ற எல்லையைத் தன் கற்பனா சக்தி கொண்டு ஒரு விதமாக கனித்துவிட்டுப் புறப்பட்டான். உண்மை. குதிரையை அடக்கச் சென்றபோது அது அவன் பல்லை உடைத்தது. சாதாரண எருமை தன் கொம்பால் அவனைக் கிழித்துத் தள்ளியது. அதற்கு பிறகுதான் நினைத்தபடி சூழ்நிலையைக் கணிக்கும் வரை மனிதனுக்கு அவனுடைய செயலில் ஒரு வெறி. உத்வேகம். குதூகலம் எல்லாம் இருந்தது.

இருந்தும் அவனுக்குத் தன்னிடம் குடிகொண்ட மிருகவெறி தொல்லையாக இருந்தது. விலங்குகளை அடக்கி ஆண்ட பிறகு தன்னில் மிளிர்ந்த விலங்கினத்தைச் சரிசெய்ய நீச்சல் போட்டி வைத்தான். ஓடினான். ஆட்டங்களைக் கற்பித்தான். வெறியை பந்துகளை உருவாக்கி அதன் மேல் செலுத்தினான். ஆம். நெருப்புப் பந்தைப் பிடித்துக் கொண்டு காட்டை அழித்துக் கொண்டே நடந்தான். சில சமயங்களில் அவனுடைய நம்பிக்கை பொய்த்து விஷ விதைகளை தின்று செத்தான். சில விலங்குகளின் பாலைக் குடித்துத் தீரா நோய் கொண்டான். நோய்க்கு ஆறுதல் கொடுக்கப் பலவிதப் பச்சை இலைகளைக் கடித்து உமிழ்ந்தான். பிறகு அவித்துவிட்டால் வேக வைத்துவிட்டால் தீவிரங்கள் குறைந்து ருசி அதிகமாவதைக் கண்டு மிருகங்களை வேகவைத்து அவித்துத் தின்ன ஆரம்பித்தான். சேகரிக்கக் கற்றுக் கொண்டான்.

என்னுடைய பெண்டாட்டி என்றான். என்னுடைய கால்நடை என்றான். வேலி கட்டினான். எண்ணிக்கையை நாடினான். பிறகு அவனுக்கு எல்லாமே சொற்கமாக காட்சி அளித்தது. அல்லது வைத்துக் கொள்வோமே என்ற தளர்ந்த நிலையில் தன்னுடைய சாமர்த்தியத்தைத் தானே வியந்து கொள்ள ஆரம்பித்தான் மனிதன்.

மனிதன் சமரசம் பேசக் கிளம்பினான். காட்டை அழிப்பதில்லை என்றான். பெரிய மரங்களில் குடிசை கட்டிக் கீழே நடமாடும் புலிகளைப் பார்வையிட்டான். இங்கே வேட்டை ஆடக்கூடாது. என்ற போர்டைத் தொங்க விட்டான். நீர் குடிக்க வந்த யானையின் மேல் உயரே குடிசை கட்டி அதில் உட்கார்ந்து அவைகளில் முதுகில் வெள்ளை சாக்குக்கட்டியால் கோடு கிழித்து மகிழ்ந்தான். புலியை ஜுவில் அடைத்த தன் கீழ்மைத்தனம் அவனை நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.

இரண்டு பக்கங்களிலும் பெரிய பாரம் அழுத்தி திராசு முனை வேகமாக ஆடுவது எந்தப் பக்கத்தில் சாயும் என்ற அகோர நிலையில் தன்னைக் கண்டார் தினகரன். சுமையாக ஏதோ அவரை அழுத்த நடந்து கொண்டிருந்தவர் நின்று இரண்டு கைகளையும் மேலே தூக்கி நான் கையாலாகாதவன் என்னை மன்னித்துவிடு. நான் நம்புகிறேன் என்றார். அப்போது காலை மணி மூன்றரை இருக்கும்.

காற்று கிழக்கில் உருவாகும் சாம்பல் ஒளியை ஏந்தி வந்தது.

அன்று அவர் ஆபீஸ் போக நேரமாகிவிட்டது. பாஸ் எரிந்து விழுந்தார். பதிலுக்கு ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்தார் தினகரன். அவ்வளவு வேலைகளையும் பகல் இரண்டு மணிக்குள் முடித்து அவரிடம் சமர்ப்பித்தார்.

You are not a man, You are devil என்றார் அவருடைய பாஸ் சிரித்துக் கொண்டே.

No, we are Angels. We have come here to be blessed என்றார் தினகரன்.

பாஸ் கண்களைப் பிதுக்கித் தோளை குலுக்கினார். சின்னவள் மனைவி வலுக்கட்டாயமாக அவரிடம் பேசிச் சிரித்துச் சினேகிதம் பண்ணிக்கொண்டு லகுனா பாடகரைத் தவிர தினகரன் யாருடனும் அதிகமாகப் பேசாதிருந்த காலங்கள் அது. அன்று ஆபீஸில் வேலை சற்று முன்னதாகவே முடிந்து விட்டதா? மற்றைய டிபார்ட்மெண்டுகளுக்குச் சென்று எல்லோரையும் குசலம் விசாரித்தார். செய்தது. காட்டை அழிப்பதில்லை. தெரிந்த முகங்களையெல்லாம் பார்த்து How do you do? என்று கேட்ட பிறகு பேசவும் செய்தார். பல பேர்களை முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுக்கவும் செய்தார். ஓர் இளைஞன் அவர் முதுகில் தட்டிக் கொடுக்கும் அவருடைய அப்பாத்தனம் பிடிக்காததுபோல் நடந்து கொண்டான். மனப்பூர்வமாக ‘ஐ ஆம் ஸாரி’என்றார். வார்த்தையின் கனத்தை உணர்ந்தார்.

அன்று வெகுநேரம் எதையோ கான்டம்பிளேட் பண்ணிய நிலையில் அவருடைய தசை அசைந்து கொண்டிருந்தது. உள்ளுக்குள் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கிறது. எப்படிச் சொல்வது. இலை அசைவது கூட அவருக்கு அன்று தீவிர நெளிவு சுளிவு எல்லாம் சேர்ந்து தன்னுடைய நிலையை அப்பட்டமாக உணர்த்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.

பூக்கள் சாதாரண நிலைகளை விட நிறம் அதிகமாகத் தெரிந்தது. வானம் என்றும் போல் அல்லாமல் கொஞ்சம் கீழே இறங்கியிருப்பது போல் பட்டது. ஒளிரும் நட்சத்திரங்கள் முழுமை அடைந்து தனித்தனி உருண்ட ஜிகினா தொங்கட்டான் போல் காட்சி அளித்தன. பொதுவாக மனம் ஒப்பிடுதலை ஒதுக்க யத்தனித்தது. இருந்தும் இரண்டு நட்சத்திரங்களின் இடைவெளியைக் கண்கள் ஊர்ஜிதமான கோட்டை மனம் நமஸ்கரித்தது.

அன்று இரவு அவர் மனைவி இப்படி என்ன திடீர்னு பஞ்சுபோல் ஆகிவிட்டீர்கள் என்றாள். பரபரப்பில் அவரில் கனத்தை வரவழைப்பது போன்று இறுக்கினாள். அப்போது அவர் முகத்தின் முன் ஏதேதோ மின்னல்கள் வெட்டின. நா குழறியது. அப்படியே மூர்ச்சித்து விழுந்தார். நல்ல காலம் அவரை ஒருவிதமாகப் புரிந்து கொண்டிருந்த மனைவி பயந்து போய் ஊரைக் கூட்டாமலிருந்தாள். சுமார் இரண்டரை மணிக்கு அவருக்கு நினைவு திரும்பியது. ஓர் ஆப்பிள், இரண்டு வாழைப் பழங்கள், ஒரு மைசூர்ப்பாகுத்துண்டும் எல்லாம் சாப்பிட்டார். அன்புடன் அவளை அணைத்துக் கொண்டார். உடம்பு சாதாரண நிலையில் இருப்பதை அவள் பார்த்தாள். உடம்பை கொஞ்சம் பிடித்து விடு என்றார் அவர். அவள் கைபட்ட இடமெல்லாம் அவர் உடம்பு மடக் மடக்கென்று சொடுக்கிக் கொண்டது. தலைக்குத் தடவும் காஸ்டர் ஆயிலை நினைத்துக் கொண்டவள் போல் எழுந்து சென்று எடுத்துக் கொண்டு வந்து பையப் பையத் தடவி உருவி விட்டாள். உடம்பு சூடு கண்டது. பரக்கப் பரக்கத் தேய்த்தாள். அவளுடைய சூடான கண்ணீர் அவர் உடம்பில் விழுந்தது. பிறகு அவர் அவளைத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டார். எது சொன்னாலும் மிகை ஆகாது. அவரை மாற்றுவது என்னுடைய பொறுப்பு என்று நம்பினாள். இது என்னமோ இந்த ஜென்மத்தில் இந்த ஜென்மத்தில் என்ன எந்த ஜென்மத்திலும் அவருடைய அந்த நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியாது. அது எமக்கு வேண்டவும் வேண்டாம். நான் சதா அன்னையாகப் பிறந்தவள். சாகும் வரையில் கூட அதைத் தேடும் இந்த உருவங்களுக்கு அதைக் கொடுத்தும், அவர்களை அதிலிருந்து மீட்கும் பராசக்தி நான்.

நேற்று மத்தியானம் நடந்த என்னுடைய பிரார்த்தனை தானே. இவருடைய உடம்பை இப்படி லேசாக்கியிருக்கிறது?

ஆகாசமாக இரு தொடைகளையும் விரித்துப் பெரிய பள்ளத்தை உருவாக்கி அவரைத் தன்னுள் அழைத்தாள். இவருடைய கால் குமாரினுடைய டென்னிஸ் பந்ததைத் தடவி உருட்டிவிட்டது. அது ரூம் மூலையில் இருக்கும் மற்றொரு பந்தோடு சென்று அடித்து ஒட்டிக் கொண்டது. மறுநாள் காலையில் இரண்டு பந்துகள் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த தினகரன். Eight is a symbol! என்று முனகிக் கொண்டார். தான் முந்தின இரவு மனைவி மேல் படுத்து வரைந்த எட்டுக்களை நினைவு கூர்ந்தார். பிறகு அவர் வரைய ஆரம்பித்தார். எட்டுக்கள். முதல் எட்டு இரண்டு பந்துகள் இணைந்தது போல் அடுக்கடுக்காக மலர்ந்து இணைந்தது.

அந்த இரவுக்குப் பிறகு எதைக் கொடுத்து மீண்டும் அவரை முழுவதும் அடையலாம் என்று நம்பி ஜுவில் அந்த மரத்திற்குப் பின்னால் நின்று பிரார்த்தித்தாளோ அதே கணக்கு விகிதம் அவரை எங்கோ திருப்ப முடியாத ஓர் இடத்தில் விட்டுவிட்டதை உணர்ந்தாள். அது அவள் சுமக்க வேண்டிய சிலுவை ஆயிற்று. பராசக்தி அழுதாள். இருந்தும் அவள் நம்பினாள். அவரை ஓர் குழந்தையைப் போல் பராமரிக்க ஆரம்பித்தாள். அவரிடம் தங்கிய மற்ற நேரத்திற்காகக் காத்திருந்தாள். விட்டுப் பிடித்தாள். ஒளி நிழல் துரத்துவதை கண்ணாமூச்சி விளையாடுவதைப் பயின்றாள்.

அருவமாகி அண்டங்களில் சிதறிய பூமி என்ற கோளத்தில்கூட நிலங்களில் மனிதன் நினைத்துப் பார்க்க முடியாத பெரிய பள்ளங்களை உருவாக்கி அதில் தாதுக்களின் அமிலங்களின் சக்தி கொண்ட தண்ணீரைப் பசையுடன் சேராகி ஓர் விதைக்காக காத்திருந்தாள். அங்கு யாரும் மனிதர்கள் தென்படவில்லை. அன்னை தபஸ் இருந்தாள். ஏதோ ஓர் பறவை எங்கோ பறந்து கொண்டிருக்கும் போது அதனுடைய அலகிலிருந்த விதை பள்ளத்தில் பொளக்கென்று விழுந்தது. அன்னை வெண்பற்கள் தெரியச் சிரித்தாள். இப்போது இருபது மைல்களுக்கு அப்பால் சமன பூமியில் தெறித்த கிராமங்களில் அந்த மரத்தின் உச்சி தெரிகிறது. கிராமத்து ஜனங்களை வருடத்திற்கு ஒருமுறை அந்த மரத்தைக் கொண்டாட வருகின்றனர். பிறந்த முதல் குழந்தையை அதனுடைய வேர்ப்பொந்துகளில் கிடத்தி எடுக்கின்றனர்.

இந்த இரவுக்குப் பிறகு தினகரனுடைய மனைவி மீண்டும் காலை நேரத்தில் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

அந்த நாட்களில் தினகரனை வாட்டிக் கொண்டிருந்த இன்னொரு பிரச்சனையும் விடுபட்டது. அப்போது அவருடைய மனைவியினுடைய உடம்பு வெளுக்க ஆரம்பித்திருந்தது. மார்பகம் இரண்டு மடங்காகப் பெருத்திருந்தது. சிறிது நேரத்தில் அவளுடைய மடியில் படுத்துத் தூங்கிவிட்டார். அப்போது அவள் சாதாரண நிலையில் இருந்ததால் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. தன்னிடம் ரொம்பவும் எதிர்ப்பார்க்கப் படுவதாக நினைத்தாள். சின்னவள் சொன்னதுபோல் ஆண் பெண் முரண்பாடுகளின் அதிதீவிரமா? அவர் தன்னுடைய பெற்றோர்களைப் பற்றி அதிகமாக இதுவரையில் அதிகமாக ஒன்றும் சொன்னதில்லை. அந்தப் பிடிப்பும் பிணைப்பும் திகட்டும் போலிருந்தது. அகஸ்த்மாத்தாகத் திரும்பிய பார்வை தூங்கிக் கொண்டிருந்த மகன் குமார் மேல் சென்று லயித்தது. எவளுக்கு அதிர்ஷ்டமோ? என்று சொல்லிக் கொண்டாள்.

அன்று இரவு மீண்டும் தினகரனுக்குக் கனவு வந்தது. எங்கே பார் மாமிசப் போர்கள். விழிப்பு நேரங்களில் ஒரே ஒரு தரம். அவர் ஆட்டின் அலறலைக் கேட்டிருக்கிறார். வெட்டப்படப் போகும் கோழியின் சொக்கரிப்பையும்தான். அன்று அந்தக் கனவின் மாமிச மலைபோன்ற பெருத்துப் படர்ந்த மனிதன் அழுதுகொண்டே அது என்ன? ஆம் கசாப்புக்கடை அங்கே அழுதகொண்டே மனிதன் ஆட்டை வெட்டுகிறான். பிறகு செத்துப் போன ஆடுகளெல்லாம் உயிர்த்து எழுந்து மனிதர்களைக் கொன்று தின்ன ஆரம்பிக்கின்றன. மனிதன் சாப்பிட்ட மாமிசம் அவனுடைய வயிற்றிலிருந்து கிழித்து பீறிட்டுக் கொண்டு வெளியே வந்து விழுந்து ஒரு சின்ன மாமிசப் பாகமாக உயிர்த் துடிப்புடன் துள்ளுகிறது. அந்த அளவுக்கு உயிர்த்து மனிதனைத் துரத்துகின்றன. ப வடிவத்தில் பருத்த ஒரு மாமிசப் பத்தை பறந்து சென்று மனிதனின் உடம்பில் பக்கென்று ஒட்டிக் கொள்கிறது. அப்படி ஒட்டிக் கொண்டு அவனுடைய அவ்வளவு ரத்தத்தையும் உறிஞ்சி அவன் கீழே விழுந்த பிறகு அவனிடமிருந்து விடுபட்டு மீண்டும் பொத பொதத்துப் பறக்கிறது.

மனிதன் ஓடப் பார்க்கிறான். ஒளிந்து கொள்ளப் பார்க்கிறான். முடிவதில்லை. எல்லோரையும் பிடித்து ஒருவர் பாக்கி இல்லாமல் விலங்கினம் துவம்சம் செய்கிறது. கடைசியாக மாமிச பர்வதம் போன்ற மனிதனிடம் விலங்குகள் வருகின்றன. அவன் ஓடவில்லை. ஒளியவில்லை. மனமுவந்து தன்னை விலங்குகளிடம் அர்ப்பணிக்கிறான்.I which the meat is good என்று ஆங்கிலத்தில் பேசுகிறான். பிறகு கனவு கலைந்து விட்டது. இதைப் பற்றி ரொம்ப நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தார் தினகரன்.

பிறகு தன் டயரியில் ஒருநாள் இவ்வாறு எழுதினார். நான் அழகைத் தரிசித்தவனானேன். எதுவுமே வேண்டாம் என்றோ – இல்லை எது கொடுத்தாலும் அது எவ்வளவு அல்பமாக இருந்தால்கூட மனப்பூர்வமாக எது கொடுத்தாலும் போதுமென்று எவன் நினைக்கிறானோ அங்கு அவனுக்கு அழகு தபஸ் செய்ய ஆரம்பிக்கிறது. தன்னைச் சதா வருத்திக் கொண்டு ஒரு தேடல் மயமாகி தனக்குப் பிடித்தவனைச் சந்தோஷப்படுத்த ஆசை கொள்கிறது. முயற்சி செய்கிறது.

நன்றி: வனதேவதை தளம்

Jun 30, 2010

பிரிவு- சம்பத்

சரியாக மூன்று பதினேழுக்கு டிக்கட்டுடன் பிளாட்பாரத்தில் நுழைந்தார் தினகரன். எப்போதும் 'ராஜதானி' எக்ஸ்பிரஸ் முதற் ஃபிளாட்பாரத்திலிருந்துதான் புறப்படும். ஆனால் இப்போது, இன்று, மூன்றாவது ஃபிளாட்பாரத்திலிருந்து புறப்படுகிறது. 'இன்னமும் இரண்டே மணி நேரங்களில் அவள் என்னை விட்டுவிட்டு கன வேகத்தில் 'ஹவ்ரா' பக்கம் போய்க்கொண்டிருப்பாள்,' என்று நினைத்தார் தினகரன். தன்னில் ஏதோ செத்துக்கொண்டிருப்பதாக அவருக்குப் பட்டது. பத்மாவைப் பற்றி இவ்வளவு தீவிரமாக எப்போதாவது நினைத்திருப்போமா? என்று பட்டது. "தீவிரங்களெல்லாம் சொல்லிக்கொண்டா வருகிறது?' என்று சொல்லி எதையெல்லாமோ சபித்தார்.

sambath அவரும் நினைத்து நினைத்துப் பார்த்தார். 'எது என்னை கல்பனாவிடம் இவ்வளவு தீவிரமடையச் செய்தது?' அவள் முதன் முதலில் எல்லோருக்கும் நடுவே உட்கார்ந்து, நாலுமணி மாலை இருக்கும், பாட ஆரம்பித்தாள். அவள் உட்கார்ந்த விதம், அவளுடைய சிரிப்பு, அவளுடைய நாசியும், கண்களில் மிளிர்ந்த அகலமும்! இதுதான் அவரை முதன்முதலில் அவளிடம் ஈர்ப்பித்தது. இருந்தும் இதெல்லாம் தப்பு என்று அவர் அவள் பக்கம் கூட போகாமல் தலைதெறிக்க எதிர்புறமாக ஓடத்தான் செய்தார் - மானசீகமாகத்தான் - அவள் யாரோ நான் யாரோ என்று பல தடவைகள் சொல்லிக்கொண்டார் - இருந்தும் பாழும் மனமும் உடம்பும் பரிதவிக்கத்தான் செய்தது.

ஒருநாள் கிட்டத்தட்ட லன்ச் டயத்தில் அவர் லைப்ரரியில், கோதாவரி டெல்டாவில் புகையிலை வளர்ப்பைப் பற்றி விபரம் சேமிக்கச் சென்றபோது அவளைத் தவிர லைப்ரரியில் வேறு யாரும் இல்லை. பொதுவாகவே அவள் ஆண்களைக் கண்டால் பயப்படுவதுபோல் காணப்படுவாள். ஒரு அஸிஸ்டென்ட் லைப்ரேரியனாகவிருந்தும், அவளுக்கு அந்த பொருளாதார புத்தகப் பட்டியல் விபரம் இன்னமும் அத்துப்படி ஆகியிருக்கவில்லை.

"மிஸ் கல்பனா!"

"எஸ். மிஸ்டர் தினகரன்!"

"வேர் கன் ஐ ஃபைன்ட் தீஸ் ஜெர்னல்ஸ்?"

"விச் ஜர்னல்ஸ் ப்ளீஸ்?"

அவர் பட்டியலை எடுத்துக்கொண்டு அவள் பக்கமாக நெருங்கியபோது, அவளுடைய உடம்பின் வாசனையை அவர் நுகர்ந்தார். ஏதோ யுகம் யுகமாகப் பழக்கப்பட்டதுபோல் அவள் அவரைப் பார்த்தாள்.

அவளிடம் அதிகமாக லக்கேஜ் இல்லை. பின் ஏன் இவ்வளவு நேரம்? ஒருக்கால் டாலியை பார்க்கப் போயிருக்கிறாளோ என்னவோ? டாலியும் தான் பாடுகிறாள்; லதா மங்கேஷ்கரும்தான்; கீதா டட்டும்தான்; பர்வீன் சுல்தானாவும் கூடத்தான்! இவ்வளவு பேர்களையும் பாடக் கேட்ட பின்னும் என் பாட்டுத்தான் உனக்குப் பிடித்திருக்கிறது என்றால், "யூ ஆர் எய்தர் ப்ளஃபிங் ஆர் யூ ஆர் இர்ரவோக்கபிலி மாட்," அவளுடைய சிரிப்பு !!!

"கல்பனா, ப்ளீஸ்..."

"அக்ஹான் ....அக்ஹான்..அக்ஹான்.."

"வொய்? யூ லாஃப் லைக் எ கோஸ்ட்..." என்பார் அவர்.

அவருடைய கழுத்தை வளைத்துக்கொண்டு அவரும், அவளும் ஈடுபடுமுன், ஊஞ்சலாடிய விகிதத்தில் அவளுடைய அறையே நிழலாகி மடிக்கப்படுவதுபோல் அவர் உணர்வார்! ஏதோ இனம் புரியாத சோகமும், இதுவும் ஓய்ந்து விடுமோ என்கிற பயமும், பீதியும் அவரைத் தொற்றும். புத்தரைப்போன்று அவரும் வால்யூஸ் டெவலப் செய்யப் பார்த்தவர்தான். புத்தருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இவருக்குத்தான் எதாவது கிடைத்ததா? இரண்டுமில்லை. எந்தக் கோணத்திலிருந்து அணுகினாலும் வாழ்க்கை சோகமயமானது என்பதை இருவருமே துல்லியமாக உணர்ந்தனர். ஆனாலும் அவள், அவளுடைய இனத்துக்குரிய விகிதத்தில், சோகத்தை அடித்துப் போட்டு சந்தோஷமாகவேயிருந்தாள். அவரால்தான் முடியவில்லை.

அவர்கள் இருவரும் சினிமா போகவில்லை. பார்க்குகளுக்குப் போகவில்லை. அவர் அவளை மோட்டார் சைக்கிளில் பின்னால் வைத்து, கனவேகமாக ஓட்டிச் சென்று தன்னை பெரிய ஆம்பிள்ளை என்று பறைசாற்றிக்கொள்ளவில்லை. அவளும் அதை விரும்பவில்லை. இருவருமே அந்த நிலைகளை எல்லாம் எப்போதோ கடந்து விட்டிருந்தனர். இருந்தும் ஒரு பத்து வருடம் அதையெல்லாம் பின்தள்ளி போட்டிருந்தாலும் அவர்கள் அப்படியெல்லாம் நடந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

கல்பனாவின் உடம்பை பிரித்துப் பிரித்து அறிய முடியாது என்பதை அவர் கூடிய சீக்கிரமே இனம் கண்டார். இருந்தும் அவளுடைய மார்பகத்திலிருந்து யோனி வரையிலான பாகத்தில் விரவியிருந்த நல்ல ஹெல்த்தை அவர் கூடிய சீக்கிரமே இனங் கண்டார். அங்கு அவருடைய விரல்கள் விளையாடிய விதத்தில் அவள் டிரான்ஸ÷க்கு உட்படுவாள். 'மை மை திஸ் டிரான்ஸ் நோபடி குட் கிவ் மி..கம் கம்," என்பாள். இருந்தும் இரண்டே மாதங்களில் வைகறை போன்ற அதிலும், அந்த துல்லியம் ஏற்படுமோ என்கிற நிலையிலும், எதிர்பார்ப்பிலும் விரிசல் விழுந்தது. அதை அவர் விரிசல் என்று கணிக்காமலே, கணிக்கக்கூடாது என்று இருந்த விகிதத்தில் இன்னமும் நான்குமாதம் ஓடியது. அதுவும் இப்போது ஸ்டேஷனில் வந்து நிற்கிறது.

அவருடைய லவ் வருவதைப் பார்த்து ஓடிச் சென்று அவளிடமிருந்து ஸூட்கேஸையும், ஃப்ளாஸ்கையும் வாங்கிக் கொண்டார்அவர் உள்ளம் துள்ளியது.

ரிபப்ளிக் டேக்கு இன்னும் பத்து நாட்கள் இருந்தன.

"டிக்கட் கிடைத்ததா?" என்றாள் கல்பனா.

இவர் பதில் சொல்லாமல், அவளுடைய பச்சைப்புடவையிலும், அவர் வாங்கிக்கொடுத்திருந்த பச்சை ஸ்வெட்டரிலும் ஆழ்ந்தே போனார். அவளுடைய தலையில் ஒரு சிவப்பு ரோஜா ரொம்பவும் அழகாக இருந்தது.

"இது ஸ்டேஷன்," என்றாள் கல்பனா.

அவர் விழித்துக்கொண்டார். அவளை நேரே அவளுடைய ஸீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்து, அவளுடைய ஸூட்கேஸை கொடுக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்தார். உள்ளே கதகதப்பாக நன்றாக இருந்தது. "இந்த ரயில் நாம் இருவருமே செத்து விழும் அளவுக்கு போய்க்கொண்டேயிருந்தால் என்ன," என்று நினைத்தார். ஆனால் சொல்லவில்லை.

"கிவ் மி எ லிட்டில் வாட்டர்," என்றாள் கல்பனா.

தொங்கிக்கொண்டிருந்த வாட்டர் பாட்டிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுத்தார். குடித்துவிட்டுப் பிளாஸ்டிக் டம்பளரை கொடுத்துவிட்டு அவள் தன்னிடத்திலிருந்து எழுந்தபோது அவளுடைய வயிறு இடத்தில் பெரிய குழியை தரிசித்து அந்தத் திண்மையில் ஆழ்ந்து ஆழ்ந்துவென இருக்க, மீண்டும் விரவியிருக்க விழைந்தார்.

அவர்கள் இருவருமே கூட்டத்தைக் கொஞ்சம் இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்கள். தினகரன் இறங்கி அவளுக்குகைலாகு கொடுத்தார். எண்ணற்ற டைம்கள் படுக்கையிலிருந்து அவளுக்கு எழ கை கொடுத்தது ஞாபகம் வந்தது. அவர் அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு இப்போதும் குதித்த விகிதத்தில் அவர் அவளை ஒரு கணத்திற்கு நிர்வாணமாகக் கண்டார்! சொரேல்னு அவரில் ஒரு வெட்கம் எழும்பியது. அவளைக் காப்பாற்றுவது போன்று அணைத்துக்கொண்டே நடந்தார்.

அவளுடைய இரண்டு லெட்டர்கள் போஸ்ட் செய்ய வேண்டியிருந்தது. வாங்கிக்கொண்டு போய் ஸ்டாம்ப் ஒட்டிப்போட்டு விட்டு ஒரு ஆறு ஆப்பிள், அவளுக்குப் பிடித்த கொட்டை எடுத்த பேரிச்சம்பழம் மூன்று பாக்கெட், எல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது அவர் கண்களில் கண்ணீர் துளித்தது. அவளிடம் போனபோது 'டிட் யூ வீப்,' என்றாள் அவள். "நோ நாட் எக்ஸ்ôட்லி," என்றார் அவர்.

தயங்கியவாறே, "எப்போது திரும்பி வருவே," என்றார்.

"ஒரு மாதம் லீவு கேட்டிருக்கிறேன்," என்றாள் அவள்.

"எனக்குத் தெரியும்," என்றார் அவர் சிரித்துக்கொண்டே.

"எக்ஸ்டென்ஷன் பண்றதாய் இல்லை,"என்றாள் அவள்.

கொஞ்சநேரம் கழித்து, 'டூ யூ ஃபீல் ஸôட்?" என்றாள் அவள்.

அவர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அடி வயிற்றில் ஒரு gap ஏற்படுவதுபோன்று உணர்ந்தார். பீதியை தாங்க முடியாது போலிருந்தது.

பையிலிருந்து அவர் ஒரு ஸிகாட்டை எடுத்ததும், அவள் எம்பி, அவர் கழுத்தை வளைத்துக்கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள். திடீரென்று ஒரு சலனமும் அற்று அதை அவர் ஏற்றுக்கொண்டார். கணங்கள் ஒழுகிப்போவதை கேவலம் தினகரனாலா நிறுத்த முடியப்போகிறது?

ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது பிரபஞ்ச ரீதியில் தன்னை ஏதோ ஒரு தனிமை சூழ்வதை அவர் உணர்ந்தார். பிளாசா வரையிலும் போகும், அவ்வளவு மரங்களையும் ரயில்வே க்வார்டர்ûஸயும் பட்படிகளையும் எல்லாவற்றையுமே, கடைசிப் பட்சமாக ஓர் தனிமை, நிராதரவாக்கிவிடுவதைப் பார்த்தார். எங்கேயாவது தனியாகப் போய் ஒரு காப்பி சாப்பிட்டால் தேவலை போலிருந்தது. வயது முப்பத்தி இரண்டு. விஷயம் இவ்வளவுதான்.பத்மாவிடம் அவருக்கு ஒரு முழுமை ஏற்படவில்லை. இங்கு இதிலும் கிட்டாது என்கிற பயங்கரத்தை ஜெரிக்க மீண்டும் காஃபியை தனிமையில் நாட வேண்டியிருக்கிறது. அட ஹவ்ரா என்ன ஹவ்ரா!அவள் மூனுக்குத்தான் போகட்டுமே! அவர்களிடையே ஊர்ஜிதமாகின ஒரு உறவு உண்டு என்ற பின்பு எதுதான் முக்கியம்! எது முக்கியமாக இருந்தாலும் இந்த இடைக்கால பிரிவு நிச்சயமாக முக்கியமாக இருந்தது. அதைப் பெரிது படுத்தவும் வேண்டியதில்லை. ஆனால் அந்த உறவுதான் எங்கே சம்பவிக்கிறது? எது எப்படிப் போனாலும் கடைசிப் பட்சமாக இதில் கிட்டும் ஒரு இன்பம், சந்தோஷத்திற்கு, உலக அளவில் ஈடேது?

ரொம்பவும் ஜாக்கிரதையாக ஒரு வாரம் கழித்து அவளுக்கு லெட்டர் எழுதினார். (லெட்டர் என்றாலே அவளுக்குப் பிடிக்காது. லெட்டர் போஸ்ட் பண்ண பிடிக்காது. நிர்பந்தம் ஏற்பட்டால் கூட ஸ்டாம்பு வாங்க மாட்டாள். அதுவும் வாங்கினால், அவளுடைய போஸ்ட்மேன் தான் அவர் இருக்கவே இருக்கிறாரே!)
'மை லவ்'

வெண்ணை திரண்டு வர தாழி உடைந்தது கணக்காக திடீர்னு ஏன் இப்படி ஒதுங்குகிறாய்? உன்னால் என் மீது அன்பு செலுத்த முடியவில்லை. மணமானவன். இரண்டு குழந்தைகள் வேறு; இவனோடு நமக்கென்ன என்றெல்லாம் சாதாரணத்தில் நீ நினைக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரியும். இட்ஸ் ஸம்திங் எல்ஸ்! ஆனால் என்னால் கணிக்க முடியவில்லை. என்னவாக இருக்க முடியும்? ரயில் கிளம்பிய பிறகு நீ நிஜமாகவே என்னை மறந்து விட்டாயா? ஜென்மம் பூராவும் உன்னுடைய அந்த நல்ல ஹெல்த்தில் விழுந்து புரண்டால்கூட நான் இன்னமும் உன்னிடம் அதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பேன். அப்படியிருக்க உன்னால் எப்படி என்னை விட்டு ஹவுரா போய்விட முடிகிறது? தஃபாக்ட் ஆஃப் த மாட்டார் இஸ் யூ டோன்ட் லவ் மி. எங்கோ, வைகறை, போன்று, போனால் போகட்டும், எதுதான் சாசுவதம், போன்ற தத்வங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன். ஆனால் எனக்குத் தெரியாதா? இதெல்லாம், 'அன் அடல்டரேடட் பக்வாஸ்,' என்று. ஷேவ் செய்துகொள்ளும்போது அறுபட்ட துளிகளுக்காக லோஷனை எடுக்க உள்ளே செல்லும்போது, எப்போதும்போல் தேடும்போது ஓரிருதரமே உபயோகித்த உன்னுடைய ஸôக்ஸ் அகப்படுகிறது. அதை வைத்துக்கொண்டு, உன்னுடைய உடம்பின் அவ்வளவு வாசனைகளை யும் என் நாசி எதிரே, என்னுடையவயிற்றில், என்னுடைய உதடுகளில் என்னுடைய காதுகளில் கூட - உன் இழை சங்கீதமாக சம்பவிக்க வைக்க முடிகிறது. டோன்ட்யூ நோ இட் டியர்? இன் யுவர் ஹார்ட், இன் யுவர் ஆர்ம்பிட், இன் யுவர் ஸ்டமக், தட் யூ ஆர் டியூபிங் யுவர் ùஸல்ஃப் பை திஸ் ட்ரிப்..?'

மூன்று வாரம் கழித்து அவருக்கு கல்பனாவிடமிருந்து பதில் லெட்டர் வந்தது.

'மை லவ்,

உன்னை கொஞ்ச நாட்கள் பிரிந்து இருந்தால் தேவலை என்று பட்டது. அது உனக்கும் எனக்கும் நன்மை பயக்கும் என்று நம்பியே நான் இந்த முடிவுக்கு வந்தேன். பட் இப்போதுதான் எனக்குத் திட்டவட்டமாகப் புரிகிறது. நானும் உன்னை நேசிக்கவில்லை. நீயும் என்னை நேசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நீ என் உடம்புள் திடும் திடும்மென்று பிரவேசிப்பது என் மேல் அன்பு செலுத்த என்று என்னால் நம்ப முடியவில்லை. உன்னுடைய தனிமையை விரட்ட பிரபஞ்ச அளவில் உன்னுடைய தேடலின் (அது எதைப் பற்றியோ நான் அறியேன்). தனிமையை மறக்க நீ என்னை ஒரு சாதனை கருவி ஆக்கியிருக்கிறாய். பத்மாவிடமும் நீ இப்படித்தான் நடந்து கொண்டிருக்க வேண்டும். நான் உன்னை இப்படி சொல்லும்போது நீ மிருகம் அது இது என்று திட்ட வரவில்லை. எந்தப் பெண்தான் உள்ளத்துக் கோடியில் ஆண் மிருகத்தை வெறுக்கிறாள்! உன்னுடைய தேடல் மிக்க, என் வயிற்றுள் விரவிய, இடிபாடுகளை நான் நேசிக்கிறேன். எப்போதாவது தூங்கி விழிக்கும்போது, 'அனுபவப்பட்ட அந்த இடங்கள் தனித்து நின்று, என்னை, உனக்காக, கொஞ்சுவதை நான் உணர்கிறேன். இது என் வரையில் மறக்க முடியாத அனுபவங்களே. அதற்காக உனக்கு ரொம்ப தாங்ஸ்..ஆனால் உன்னால் ஓரிரு கதிகளில் நிலைத்து நிற்க முடியுமா? இந்த யோசனையே பிணைப்பில் பிரிவையும் விரிசலையும் தோன்ற வைத்துவிட்டதே?
லவ் கல்பனாô..'

('ஏப்ரல் 1974' - சதங்கை இதழில் வெளிவந்தது)

**********

Dec 11, 2009

ஒற்றை அறை-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்

எஸ்.சம்பத்

எல்லா மேன்ஷன்களி லும் ஐம்பது வயதைத் தொட் டும் திருமணம் செய்துகொள்ளாத ஒரு பிரம்மச்சாரி இருக்கிறார். கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமல் அவர் இப்படி வாழ் கிறார் என்று சொல்ல முடியாது. சரியான வேலையின்மை, குடும்பப் பிரச்னைகள், வெளியில் தெரியாத தோல்விகள் என ஏதேதோ சிக்கல்கள் அவர்களது கால்களில் கொடியாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

Matthew Booth

மற்ற அறைகளைப் போல இன்றி அவர்களது அறையில் தினமும் சரியான பூஜை நடக்கிறது. மாலை நேரம் ஜன்ன லில் ஊதுபத்தி கொளுத்தி வைக்கப் படுகிறது. அறையில் படுக்கை, அலமாரி யாவும் சுத்தமானதாக இருக்கின்றன. சுவரில் உள்ள ஹேங்கரில் ஒழுங்காக உடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

அறையில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் மிகச் சிறியதாக இருக்கிறது. (கண்ணாடி முன் நின்ற படி தன்னைப் பார்த்துக்கொள்வது அவர்களுக்குச் சுளீர் என்று வலிப்பது போலிருக்குமோ!) காலையில் அலுவலகம் புறப்படும்போது வெளுத்த உடையும் திருநீற்றுக் கீற்றுமாக அவர்கள் சந்தோஷத்துடன் புறப்படுகிறார்கள். ஆனால், அவர்களது மனதில் குளத்துத் தண்ணீரில் தெரியும் மேகம் போல, பெண்களின் மீதான ஆசை ஊர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவர்கள் அதை வெளிப்படையாகப் பேசிக்கொள்வது கிடையாது.

திருமணம் செய்துகொள்ளாததால், ஒருவன் குடும்ப வாழ்வில் இருந்து விடுபடக்கூடும். ஆனால், காமத்திலிருந்து விடுபட முடியுமா? கனியில் துளை யிட்ட புழு, வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டு இருப்பது போல, காமம் பிறர் அறியாமல் உடலினுள் நெளிந்துகொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர் கொள்வதும் வெற்றிகொள்வ தும் எளிதானதில்லை. காமத்தைப் பற்றிய நமது அறிதல் மிக ரகசியமானதாக வும், அறியாமை நிரம்பியதாக வுமே இருக்கிறது.

காமம் குறித்த அறிதல் பதின்பருவத்தில் துவங்குகிறது.sambath வேட்டைக்குச் செல்பவன், மிருகங்களின் கால் தடங்களை வைத்து என்ன மிருகம் அது, எப்படி அதன் உருவம் இருக் கும், எந்தத் திசையிலிருந்து எந்தத் திசை நோக்கிப் போகிறது என்று அடையாளம் கண்டுகொள்வது போல கொஞ்சம் கொஞ்சமாக செவி வழிச் செய்திகளாலும், ரகசிய வாசிப்பாலும் காமத்தை அறிந்துகொள்ளத் துவங்கு கிறோம். அதன் பிறகு, நம் மனதில் நிரம்பி வழிவதெல்லாம் அடக்கப்பட்ட காம உணர்ச்சி தரும் எண்ணங்களும், அதன் விசித்திரக் கற்பனைகளுமே!

ஆணோ, பெண்ணோ எவராயினும், காமம் உடலில் தோன்றும்  ஒரு சூறாவளி. அது எப்போது கரையைக் கடந்து செல்லும் என்று எவராலும் சொல்ல முடியாது.
இங்மர் பெர்க்மனின் ‘வர்ஜின் ஸ்பிரிங்’ என்றொரு படத்தில், மிகப் பரந்த பசுமையான புல்வெளி ஒன்று காட்டப்படுகிறது. தொலைவில் நாலைந்து ஆட்டிடையர் ஆடு மேய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவாலயத்துக்குச் செல்கிற ஓர் இளம்பெண் கையில் பூக்கூடையுடன் கடக்கிறாள். ஏகாந்தமான காற்றும், அழகும் அவள் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
கடந்துபோகும் வழியில் உள்ள இடையர்களைக் கண்டு அவள் சிரிக்கிறாள். அவர்களும் கபடமின்றிச் சிரிக்கிறார்கள். ஆனால், நிமிஷ நேரத்தில் அவர்களது முகம் மாறுகிறது. ஒரு மிருகத்தைப் போல காமம் அவர்களது கண்களில் கொப்பளிக்கிறது. அந்தப் பிராந்தியத்தில் யாருமில்லை என்பதைக் கண்டுகொள்கிறார்கள்.

உடனே பாய்ந்து, அந்தப் பெண்ணைத் தங்களது இச்சைக்குப் பலியாக்கிவிடுகிறார்கள். யாருமற்ற அந்தப் பிரதேசத்தில் ஒரு பெண் உருக்குலைந்து, உதிரப் பெருக்கோடு கிடக்கும் காட்சியைப் பெர்க்மன் காட்டுகிறார். அப்போதும் அதே புல்வெளி, பசுமை மாறாமல் காற்றில் அலைந்துகொண்டுதான் இருக்கிறது. காம சுகிப்பை இப்படித் திரையில் காணும்போது முகத்தில் அறைவது போலத்தான் இருக்கிறது.

இது ஏதோ கற்காலத்தில் நடந்த சம்பவம் அல்ல. சம காலத்திலும்கூட காமம் இப்படி ஒரு மூர்க்கத்தையும் வன்முறையையும் கொண்டுள்ளதை நாம் அன்றாடம் காண முடி கிறது. பெண் வீழ்த்தி நுகரப்பட வேண்டிய வள் என்ற எண்ணம் காலங்காலமாகவே மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது.

ஆண், காம உணர்ச்சி களுக்கு எத்தனையோ வடிகால் தேடிக்கொள் கிறான். பெண்களோ காமம் குறித்த தங்களது மனதின் சிறு அசைவுகளைக்கூட வெளிப்படுத்த முடியாதபடி கலாசாரச் சூழல் அவர்களைக் கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. ஆண்டாள், தனது பாடலில் தனக்குக் காமம் ஏற்படுத்தும் வலியை, பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறாள். அது பக்தி என்பதைக் கடந்து, உடலின் தீராத குரல் என்றுதான் தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்தவரையில் விருப்பத்துடன் தன் கணவனை முத்தமிடுவதற்குக்கூட ஒரு பெண் பல முறை யோசிப்பதுதான் குடும்பங் களில் நடக்கிறது. தாக மிகுதியால் வரும் மிருகம் தண்ணீரைக் கண்டதும் குடிப்பதற்குத் தான் முயற்சிக்குமே தவிர, தண்ணீரில் தனது உருவம் தெரிவதை நின்று ரசிக்காது. அப்படித்தான் விளக்கை அணைத்துவிட்ட வுடன் இருள் அறையைக் கவ்விக்கொள்வது போல, காமம் துளிர்த்த உடல் ஓர் ஆக்டோபஸ் போல கிடைப்பதைப் பற்றிக்கொண்டு இச்சையைத் தீர்த்துவிடுகிறது.
காமத்தை அறிவது ஒரு கலை என்று இந்திய சமூகம் நூற்றாண்டுகளாகச் சொல்லி வந்தபோதிலும், அது ஒரு வடிகால் என்று மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. கற்பனைதான் காமத்தை அதிகப்படுத்தும் ஒரே சாதனம். கற்பனையற்றுப் போயிருந்தால் காமம் ஒரு இயந்திர நிகழ்வு போலவே ஆகியிருக்கும்.

உடலை நாம் அறிந்துகொள்ளாததுதான் காமத்தைப் பற்றிய தவறான எண்ணங்களுக்கு முதல் காரணம். உடல் சதா கொந்தளிப்பும் பீறிடலும் கொண்ட ஒரு நீரூற்றைப் போன்றது. அது தனக்கென ஒரு இயக்கத்தை எப்போதும் நடத்திக்கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் உறங்கும்போது நம் கனவில் புலி பாய்வதாக இருந்தால்கூட உடல் தானே திடுக்கிட்டு விழித்துவிடுகிறது. உண்மையில், உடல் ஒரு விசித்திரமான இசைக் கருவி. அதிலிருந்து நாம் விதவிதமான இசையை வாசிக்க முடியும். ஆனால், அதை நம் கட்டுக்குள் வைப்பதும், மீட்டுவதும் எளிதானது இல்லை.
எனக்குத் தெரிந்த மேன்ஷன்வாசி களில் ஒருவரான நித்யானந்தம், நாற்பத்தைந்து வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, பெண் பார்த்து பேசி ஒப்புக் கொண்டார். திருமணம் தூத்துக்குடி அருகில் உள்ள ஏதோ கிராமத்தில் நடந்தது. மேன்ஷன் அறையில் இருந்த நண்பர்கள் பலரும் தனது திருமணத் துக்கு வரவில்லை என்பதால், சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப் பதாகத் தனக்குத் தெரிந்தவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் என நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு போன் பண்ணி சொன்னார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஓட்டலில் நடந்தது. அன்று மாலை லேசான தூறல் விழுந்துகொண்டு இருந்தது. நித்யானந்தம் தலைக்கு டை அடித்து, புது கோட்\சூட் அணிந்து, ஆறு மணிக்கே புதுப் பெண்டாட்டியுடன் வந்து நின்றிருந்தார்.

நானும் இன்னொரு நண்பனும் போய்ச் சேர்ந்தபோது, அங்கே இரண்டு பேர் மட்டுமே வந்திருந் தார்கள். நித்யானந்தத்தின் முகம் இறுக்கமாக இருந்தது. நேரம் கடந்து போய்க்கொண்டே இருந்தது. எவரும் வரவே இல்லை. மணி ஒன்பதாகியபோது, மழை வலுத்திருந்தது. மண்டபத்தில் பதினோரு பேர் மட்டுமே இருந்தோம். இருநூறு பேருக்குத் தேவையான சாப்பாடு தயாராக இருந்தது. புது மனைவி நகத்தைக் கடித்தபடி நின்றுகொண்டு இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாத நித்யானந்தம் கோபத்தில் வெடித்துப் பேசினார்...

‘‘நாப்பத்தஞ்சு வயசில் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ல... அதான், இந்த அவமானப்படுறேன். கூட இருந்தவன், வேலை பாக்கிறவன்னு ஒருத்தன்கூட வரலை, பாருங்க! எத்தனை பேருக்குத் தேடித் தேடிப் போய்ச் செய்தேன்! எல்லாச் சாப்பாட்டையும் அள்ளிக் கொண்டு போய் நாய்க்குப் போடச் சொல்லு!’’ என்றபடி விடுவிடுவென மனைவியை அழைத்துக்கொண்டு மண்டபத்தை விட்டுப் போய்விட் டார்.
அறைக்கு வந்தபோது பலரும் அவர் சொன்னது போலவே, ‘நித்யானந்தத் துக்கு எதுக்குய்யா அம்பது வயசுல கல்யாணம்? பொம்பளை ஆசை லேசில் விடுதா..? இத்தனை நாள் நம்மகிட்டே நடிச்சிருக்கார். அதான் ஒருத்தனும் ரிசப்ஷனுக்கு போகலை’ என்று கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தார்கள். சரியாக நான்கு மாதத்துக்குப் பிறகு, நித்யானந்தம் முன்பு போலவே அதே மேன்ஷனுக்கு திரும்பி வந்து சேர்ந்தார். தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் சரிவரவில்லை என்றதோடு, ‘மனசு ஆசைப்பட்டாலும் உடம்பு ஒப்புக்கலை சார். அதான் காரணம்!’ என்றார். அறைவாசிகள் அதையும் கேலி செய்து சிரித்தார்கள். ஆனால், அதன் பிறகு அவர் சிரித்து எவரும் பார்க்கவே இல்லை.
பால் உணர்ச்சிகள் குறித்த கதைகள் பெரும்பாலும் மலிவான தளத்தில் எழுதப்பட்டு வரும் சூழலில், அதன் நுண்மையான அதிர்வுகளைப் பதிவு செய்த கதை... எஸ்.சம்பத் எழுதிய ‘சாமியார் ஜூவிற்கு போகிறார்’. சம்பத், நவீன தமிழ் இலக்கியத்தின் தனிக் குரல். மிகக் குறைவாக எழுதியவர். குறைவான காலமே வாழ்ந்த வரும்கூட. அவர் எழுதிய சிறுகதைகளில் மறக்க முடியாததும், வெகு நேர்த்தி யானதும் இக்கதையே!

தினகரன் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு டெல்லியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குச் செல்கிறான். அன்று விடுமுறை நாள். அவனது மனைவி பத்மா காலையிலிருந்தே பால் உணர்ச்சிமிக்கவளாகத் தாபத்தில் இருக் கிறாள். கணவனிடம் எப்படி அதை வெளிப்படுத்துவது என்று தெரியாத நிலையில், அவர்கள் மிருகக்காட்சி சாலைக்குப் புறப்பட்டுவிடுகிறார்கள்.
அவளுக்கு எப்படியாவது அன்று முழுவதும், கணவனைத் தனது பிடியிலே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு உருவாகிறது. இதனால் அவனுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ணும் ஜார்ஜெட் புடவையை உடுத்திக்கொள்கிறாள். மிருகக்காட்சி சாலையில் அன்று ஏகக் கூட்டம். அதைப் பயன்படுத்திக்கொண்டு சிறிதுசிறிதாக கணவனுடன் சரசம் செய்கிறாள். அன்று எதிர்பாராதவிதமாகக் கூண்டில் இருந்த ஒரு புலி தப்பி வெளியே வந்துவிடுகிறது. அதைக் கண்டு, பலரும் அலறி ஓடுகிறார்கள். புலி எங்கே பாய்வது என்று தெரியாது தடுமாறி ஓடுகிறது. முடிவில் அது சுடப்பட்டு இறக்கிறது.
இந்தக் காட்சி, வீடு திரும்பிய பிறகும் தினகரனுக்கு மிகுந்த மனவேதனையை உருவாக்குகிறது. மனைவியோ காமத்தால் அதிகம் பீடிக்கப்பட்டவளாகிறாள். மனிதன் தன்னால் அடக்க முடியாத வற்றுக்கு கூண்டுகள் உண்டாக்கி, அடக்கி வைத்திருக்கிறான். சுதந்திரத்துக்கு எதிராக நிறைய கூண்டுகள் இருக்கின்றன என்று யோசிக்கும்போது அவனது மனைவியின் காமமும் அந்தப் புலி தப்பியது போன்றது தான் என்று தினகரன் புரிந்து கொள்கிறான்.
அன்று கூடலில், தினகரன் ஒரு பஞ்சைப் போல எடை அற்றவனாக இருப்பதாகச் சொல்கிறாள் அவன் மனைவி. அவனோ புலி, கூண்டை விட்டு வெளியே வந்ததும், தனது சுதந்திரத்தைத் தேடியே! அதை அடைவதற்குள் புலி கொல்லப்பட்டு விட்டதே என்று ஏதேதோ புலம்பியபடி கனவு காணத் துவங்குகிறான்.

ஒரு விளக்கின் சுடரைப் போல காமம் சதா அசைந்துகொண்டே இருப்பதைப் பற்றி நுட்பமாகச் சித்திரிக்கும் கதை இது. ஒருபுறம் அதிவேக நாகரிகம், காமத்தை மலினப் பொருளாக்கி விற்பனை செய்கிறது. மறுபுறம் கண்களைக் கட்டிக்கொண்டு சித்திரம் வரைவது போல பால் உணர்வுகளின் அறியாமை நம்மைப் பீடித்திருக்கிறது.

காமம் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட வேண்டிய ஒரு ரகசியமல்ல; அதே சமயம், கூட்டம் போட்டு உபதேசிக்கப்பட வேண்டியதுமல்ல. சிரிப்பதும், அழுவதும்போல அது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு! அந்த இயல்பை நாம் புரிந்துகொள்ளாதவரை பெர்க்மனின் ஆட்டு இடையர்களைப் போலவே இருப்போம்! எஸ்.சம்பத் 1941&ல் திருச்சி யில் பிறந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தில் அரிய வகை எழுத்து இவருடை யது. பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற சம்பத், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங் களிலும் சில காலம் பணியாற்றியுள்ளார். விரல்விட்டு எண்ணக்கூடிய சிறுகதை கள் மட்டுமே எழுதியுள்ளார். இவரது ”இடைவெளி” என்ற நாவல், மரணம் குறித்த ஆழ்ந்த கேள்விகளை முன் வைத்து எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகும்.

சம்பத்தின் அப்பா ரயில்வே உயர் அதிகாரியாக வேலை செய்தவர் என்ப தால் வளர்ந்தது, படித்தது யாவும் டெல்லியில்! Ôருஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கியைப் போன்றதொரு எழுத்துலகை உருவாக்க வேண்டும்Õ என்று ஆசை கொண்ட சம்பத், எதிர்பாராத மூளை ரத்தக்கசிவு நோய் காரணமாக, தனது 42-வது வயதில் மரணமடைந்தார்.
இன்றும் தமிழ் இலக்கியத்துக்கு புதிய வழிகாட்டுதலாக இவரது எழுத்துகள் உள்ளன.

Jul 16, 2009

சம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்

சி. மோகன்
(சென்னையில் சென்றவாரம் 11ஆம் தேதி சம்பத் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
1975ஆம் ஆண்டு கவிஞர் உமாபதியின் முயற்சியில் ‘தெறிகள்’ காலாண்டிதழ் வெளிவந்தது. அச்சமயம் அறிவிக்கப்பட்ட நெருக்கடி கால நிலையின் காரணமாக உமாபதிக்கு ‘தெறிகள்’ நடத்தியது தொடர்பாக அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அவ்விதழ் தொடர்ந்து வெளிவராமல் போனது. ஓர் இதழ் மட்டுமே வெளிவந்த தெறிகளில் இரண்டு மிக முக்கியமான படைப்புகள் வெளிவந்திருந்தன. ஒன்று : கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம் ; மற்றொன்று: சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல். கலாப்ரியாவின் சுயம்வரம் பற்றி, நண்பர்கள் சிலருடன் இணைந்து அப்போது நான் நடத்திக் கொண்டிருந்த ‘விழிகள்’ இதழில் கட்டுரை எழுதினேன். அதே சமயம் ‘தெறிகள்’ இதழில் சம்பத்தின் இடைவெளி நாவல் முடிந்திருந்த பக்கத்தின் கீழ் இருந்த சிறு வெற்றிடத்தில் தமிழில் அதுவரை வாசித்த நாவல்களில் அதுவே மிகச் சிறந்தது என்ற என் எண்ணத்தையும் அந்நாவல் வாசிப்பு எனக்குள் ஏற்படுத்திய எக்களிப்பையும் நுணுக்கி நுணுக்கிக் குறித்து வைத்திருந்தேன். இன்றும் அந்த எண்ணத்தையும் எக்களிப்பையும் இடைவெளி தந்து கொண்டிருக்கிறது.

1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் க்ரியாவில் பணியாற்றுவதற்காக சென்னை வந்தேன். ‘க்ரியா’ புத்தக வெளியீட்டைத் தீவிரப்படுத்த யோசித்திருந்த நேரமது. அப்போது க்ரியா ராமகிருஷ்ணனிடம் ‘இடைவெளி’யை வெளியிடலாமென்று மீண்டும் யோசனை தெரிவித்தேன். ராமகிருஷ்ணன் வெளியிடப்படுவதற்கான கையெழுத்துப் பிரதிகளின் அடுக்கிலிருந்து ஒரு டயரியை எடுத்துக் கொடுத்தார். ராமகிருஷ்ணன் ஏற்கெனவே கேட்டுக் கொண்டதற்கிணங்க சம்பத் ‘தெறிகள்’ இதழில் வெளியான பனுவலில் சில திருத்தங்கள் செய்து ஒரு டயரியில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதிலும் ஆங்கிலச் சொற்கள் நிரவிக் கிடந்தன. ‘அவரோடு உட்கார்ந்து எடிட் செய்யலாமென்றால் அவர் அதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள், என்றார் ராமகிருஷ்ணன். இதனையடுத்து சம்பத்துடனான முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் சற்றும் எதிர்பார்த்திராத தோற்றம்; செமத்தியான உடல்வாகு; பருமனும் சரி , உயரமும் சரி. அவரைச் சம்மதிக்க வைப்பது சிரமமாகவே இருக்கும் ; எனினும் பக்குவமாக அவரை இந்த முடிவுக்கு நகர்த்திக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற என் முன்ஜாக்கிரதைகளுக்கு மாறாக, முதல் ஓரிரு பக்கங்களை முன்வைத்து நான் தெரிவித்த ஓரிரு யோசனைகளின் அளவிலேயே அவர் சரி, நாம் சேர்ந்து பார்க்கலாமென்று சம்மதித்துவிட்டார்.

இதனையடுத்து, சம்பத்தும் நானும் ராமகிருஷ்ணனுடைய வீட்டில் பகற்பொழுதில் வரி வரியாகப் பார்த்தோம். ஏªழுட்டு நாட்களில் அப்பணி முடிந்ததாக ஞாபகம். சதா தகிக்கும் உள்ளார்ந்த தீவிர மனநிலையும், நேசிக்கக்கூடிய வகையிலான ஒருவித பேதமையும் ஒன்றையொன்று மேவி அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அப்போது தொடங்கிய நட்பும், சந்திப்பும் அடுத்த ஆறேழு மாதங்கள் _ அதாவது 1984ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி அவர் இறந்ததற்கு சில நாட்கள் முன்பு வரை தொடர்ந்தது.

1983ஆம் ஆண்டு இறுதியில் என் குடும்பமும் சென்னைக்கு வந்து நாங்கள் நண்பர் சச்சிதானந்தம் வீட்டு மாடியில் குடியமர்ந்தோம். அந்த மாடி இரண்டாகத் தடுக்கப்பட்டு ஒரு பகுதி எங்கள் வீடாகவும், மற்றொரு பகுதி ‘க்ரியா’வின் புத்தகக் கிடங்காகவும் அச்சுக் கோப்பகமாகவும் அமைக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஜூன் வாக்கில் இடைவெளி அச்சு வேலை தொடங்கியபோது சம்பத் அநேகமாக ஒவ்வொரு நாளும் மதிய வேளைகளில் வீட்டுக்கு வந்துவிடுவார். சென்னை வெயிலில் அவர் வந்தவுடன் செய்யும் முதல் காரியம் சட்டையைக் கழற்றிப் போடுவதுதான். சட்டை பாக்கெட்டில் எப்போதும் லாட்டரி சீட்டு இருக்கும். இப்படி 10_15 நாட்கள் வந்து கொண்டிருந்தவர் திடீரென்று பல நாட்கள் வரக் காணோம். ‘இடைவெளி’ புத்தகம் அச்சு வேலை முடிந்து பைண்டிங்கில் இருந்தது. இச்சமயத்தில் ஒரு நாள் காலை திலீப்குமார் ‘சம்பத் இறந்துவிட்டதாகத் தகவல்’ என்று தயங்கியபடி கூறினார். அத்தகவல் தெரியவந்தபோதே அவர் இறந்து 15_20 நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அன்றே அத்தகவல் உறுதிபடுத்தப்பட்டது. நான் அன்றே சம்பத் வீடு சென்று அவருடைய துணைவியாரைச் சந்தித்தேன். மறுநாளே அவர் பற்றிய ஒரு குறிப்பை எழுதி அச்சிட்டுப் புத்தகத்தில் சேர்த்தோம். ஒரு படைப்பாளியின் மரணம் பற்றிய தகவல்கூட வெளித்தெரிய சில நாட்கள் எடுக்கும் அவல நிலைதான் நம் சூழலின் யதார்த்தம்.

தெறிகள் இதழில் வாசித்தது தொடங்கி, அப்பிரதியை செம்மைப்படுத்துவதற்கு முன்னும் அப்பணியினூடாகவும், புத்தகமாக வெளிவந்த பின்பு அவ்வப்போதும், நடைவழிக் குறிப்புகளுக்காக சம்பத் பற்றி எழுதும்போதும் என நான் பலமுறை படித்த நாவல் இடைவெளி. நான் அதிக முறை படித்த நாவலும் இதுதான்.

பாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் வில்லியம் ஃபாக்னரிடம் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, ஜேம்ஸ் ஜாய்சை ஒரு மகத்தான படைப்பாளி என்று குறிப்பிட்டுவிட்டு, ‘‘ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதைப் போல நம்பிக்கையோடு ஜாய்சின் யூலிஸஸை நீங்கள் அணுக வேண்டும்’’ என்று கூறியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ‘இடைவெளி’யுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் இருந்து வருகிறது.

2

காலம், வாழ்க்கை, மனித ஸ்திதி, ஆகியவற்றைக் கண்டுணர்ந்தும் கிரஹித்தும் ஒரு நாவல் புனைவாக்கம் பெறுகிறது. இப்புனைவு அதற்கான ஞானத்தை, மெய்யறிவைக் கொண்டிருக்கிறது. இது மனித இருப்புக்குப் புதிய சாத்தியங்களையும் காலத்துக்கான கண்டுபிடிப்புகளையும் அளிக்கிறது. அதனால்தான், ‘‘அறிவியல் சிந்தனைகளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் 19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பே, மனித இருப்பின் விலக்க முடியாத ஒரு பரிமாணமாக, மடத்தனம் இருப்பதை ஃபிளாபெர்ட் தம் நாவல்கள் மூலம் கண்டடைந்ததுதான்’’ என்று மிலன் குந்தரேவால் கூற முடிகிறது. மேலும் ஃபிளாபெர்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பு மார்க்ஸ், ஃபிராய்டு ஆகியோரின் திடுக்குற வைக்கும் கருத்துகளை விடவும் எதிர்கால உலகுக்கு முக்கியமானது என்கிறார்.

ஆக, நாவலாசிரியன் தன்னளவில் ஒரு தத்துவவாதி, சிந்தனையாளன், கண்டுபிடிப்பாளன். இவ்வகையில்தான் சிந்தனையும், புனைவும் கூடி முயங்கி உருக்கொண்ட இடைவெளி, தமிழின் பெறுமதியான ஒரு நாவலாகி இருக்கிறது.

தமிழ் நாவல் பரப்பில் இந்நாவலின் முக்கியத்துவம் பற்றிச் சற்று விரிவாகப் பேசுவதற்கு முன் மிகச் சிறந்த ஆங்கில நாவலாசிரியரான டி. எச். லாரன்ஸ் ‘கீலீஹ் ழிஷீஸ்மீறீ விணீttமீக்ஷீs’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு ஆதங்கத்தை முன்வைக்க விரும்புகிறேன்: ‘பிளாட்டோவின் உரையாடல்கள் விநோதமான சிறிய நாவல்கள். தத்துவமும் புனைகதையும் பிரிந்தது, இவ்வுலகின் மிகப் பெரிய சோகமாக எனக்குப் படுகிறது. இரண்டும் ஒன்றாகத்தான் புராணக் கதைக் காலங்களிலிருந்து உருவாகி வந்திருக்கின்றன. அரிஸ்டாடில், தாமஸ் அகின்னஸ் போன்றவர்களால் இவை ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துத் தொல்லைபடுத்திக் கொண்டே இருக்கிற தம்பதிகளைப் போல் தனித்தனியே பிரிந்து போயின. இதன் காரணமாக நாவல் மேலோட்டமானதாகவும், தத்துவம் அருவமானதாகவும் வறண்டு போயின. நாவலில், இவ்விரண்டும் மீண்டும் இணைந்து வர வேண்டும்.’

இத்தகையதோர் இணைப்பில் புனைவாகியிருக்கும் நாவல்தான் இடைவெளி. இதனாலேயே தமிழின் முதல் முழு முற்றான கருத்துலக நாவலாக இடைவெளி தனித்துவம் பெற்றிருக்கிறது.

சம்பத்துக்கு முன் தமிழ் நாவல் பரப்பில் கருத்துலகச் சாயல் கொண்ட படைப்பாளியாக அறியப்பட்டு அதனாலேயே பிரபல்யமும் அடைந்தவர் ஜெயகாந்தன். ஆனால் அவருடைய படைப்புகளில் புனைவுலகின் மெய்யறிவிலிருந்து கருத்துகளோ, சிந்தனைகளோ உருண்டு திரள்வதில்லை. மாறாக, கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களை ஸ்வீகரித்துக் கொண்டு அவற்றுக்குப் புனைவடிவம் தந்தவர் ஜெயகாந்தன். இவ்விடத்தில் இன்று, கலை, இலக்கியமானவை எந்த ஓர் அமைப்புக்குமோ, கொள்கைக்குமோ, துறைசார் அறிவுக்குமோ சேவகம் செய்வன அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, படைப்பின் மெய்யறிவுப் பயணத்திலிருந்து உருக்கொள்ளும் சிந்தனைகளிலிருந்து பிற அமைப்புகளும், கொள்கைகளும், துறைசார் அறிவுகளும் தங்களை செழுமைப்படுத்திக் கொள்ள முடியும். முடிந்திருக்கிறது. சலித்துப் போன உதாரணம் : ஃப்ராய்டு, தாஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து பெற்ற பெறுமதிகள். கலை_இலக்கியங்களிடம் காலம் எதிர்பார்ப்பது இதுதான். ஜெயகாந்தனிடம் இது நிகழவில்லை. ஆனால், இடைவெளி நாவலில் அடிப்படைகளில் உழன்று தகிக்கும் தினகரனை சாவு பிரச்சனை ஆட்கொள்ளும் போது அவர் மேற்கொண்ட பயணத்தினூடாக படைப்பு ஒரு மகத்தான கண்டுபிடிப்பை வசப்படுத்துகிறது. அதுவே இப்படைப்பை முக்கியத்துவமிக்கதாக்கி இருக்கிறது. சம்பத்தின் ‘இடைவெளி’க்குப் பின் வெளிவந்த சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.’ சில குறிப்புகள்’ தமிழில் சிந்தனைத் தளத்தில் இயங்கிய முதல் நாவலாகப் போற்றப்பட்டுக் கொண்டாடப்பட்டது. பெறப்பட்ட அறிவின் உதிரித் தொகுப்புகளாகவே பெரிதும் அமைந்துவிட்ட இந்நாவல் அதன் வசீகர நடை காரணமாக பெரிதும் சிலாகிக்கப்பட்டது. அடியறியா, ஆழமறியா புனைவுப் பயணத்தினூடாகப் படைப்பு மெய்யறிவு கொள்வதற்கான எவ்விதப் பிரயாசையும் இந்நாவலில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஒரு அடிப்படைப் பிரச்சனைக்குத் தன்னை முழு முற்றாக ஒப்புக் கொடுக்க சம்பத்துக்கு முடிந்திருக்கிறது.

‘இடைவெளி’ 7 அத்தியாயங்கள் கொண்ட சிறிய நாவல். இந்நாவலின் மையப் பாத்திரமான தினகரன் பற்றி நாவலிலிருந்து நாம் அறிவது என்ன என்று பார்க்கலாம்.

பத்தாண்டுகள் முன்னோக்கிப் பார்க்க விரும்பாத இச்சமூக ஓட்டத்திற்கிடையே அடிப்படைப் பிரச்சனைகளில் உழன்று தகிக்கும் ஒருவர் தினகரன். இப்போது அவரை ஆட்கொண்டிருப்பது சாவு பற்றிய ஒரு கேள்வி. பிறப்பால் பிராமணன். அவருக்கு தாஸ்தாயெவ்ஸ்கியை ரொம்பப் பிடிக்கும். காரணம் அவர் Êஏசு கிறிஸ்துவை, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கடைசி பட்சமாக, அசைக்க முடியாத அளவுக்கு ஓர் கண்டன விமர்சனம் பண்ணிப் போயிருக்கிறார். இது தினகரனுக்கு ரொம்ப முக்கியம். ஏசுவை தினகரனுக்குப் பிடிக்கும். ஆனால் எண்ண ரூபமான எதையுமே எதிர்கொள்ளத்தானே வேண்டும் என்பது தினகரனின் நிலைப்பாடு. (இப்படிப் பார்க்கும்போது வேதங்களும் உபநிஷத்துகளும் இந்த மாதிரியான பரிசீலனைக்கு இன்னமும் உட்படவில்லை என்பது அவரது ஆதங்கம்.

கிட்டத்தட்ட 35 வயதான தினகரனின் குடும்பம் இது. மனைவி பத்மா. குழந்தைகள் குமார், ஸ்ரீதர், ஜெÊயஸ்ரீ, (சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களே இவை.) கலவியில் அதீத நாட்டமுடையவர். சாவு பிரச்சனையில் உழலத் தொடங்கிய பிறகு, மனைவியே கேட்டுக் கொண்டும் மறுக்குமளவு பிரச்சனையில் அமிழ்ந்து போனவர். டில்லியில் பணிபுரிந்த போது கல்பனா என்ற பெண்ணுடன் உறவு. மனதில், நினைவுகளில் அவளின் தீவிர இருப்பு.

சாவு பிரச்சனை தினகரனை ஆட்கொள்ளத் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார். பிரச்சனை தீவிர முகம் கொள்ளும்போது, வேலை அதிகமில்லாத, மதிப்பில்லாத பேக்கிங் பிரிவுக்குத் தானே விரும்பிக் கேட்டு மாற்றிக் கொள்கிறார். முன்னர் டில்லியிலும் தற்சமயம் சென்னையிலுமாக ஒருபோதும் ஒரு அலுவலகத்தில் அதிக நாட்கள் அவர் நீடித்திருந்ததில்லை. சாவு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு உழன்று தவிக்கும் போது வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும் அவருடைய நடவடிக்கைகள் பரிகசிக்கப்படுகின்றன.

இவ்வாறாக, லௌகீக வெற்றியை நோக்கி விரையும் பொது ஓட்டத்துக்கு எதிர்திசையில் நிகழ்கிறது இவர் பயணம். மனித ஸ்திதியின் மாறுபட்ட சாத்தியப்பாடு இது. இதிலிருந்துதான் நாவல் புது வெளிச்சம் கொள்கிறது.

சாவு பற்றிய ஒரு அடிப்படைத் தன்மையை சொல்லிவிடப் போகிறோம் என்ற எண்ணம் தினகரனிடம் உருவாவதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. சாவு பல விதங்களில் சம்பவித்தாலும் அதன் அடிப்படைக் கூறு ஒன்றுதான் என்ற யூகத்துடன் முதல் அத்தியாயம் முடிகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில் தினகரன் தான் காணும் கனவில் ‘இடைவெளி’ என்று தன்னையறியாது சொல்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் சாவு உருவம் தலையாட்டுகிறது.

இது குறித்து சதா உலைந்து கொண்டிருக்கும் தினகரன் வாழ்வு என்பது அணுசரணையான இடைவெளி என்றும், சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி என்றும் கடைசியில் கண்டடைவது, ‘எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கே உரித்தான வீர்யத்தோடும், பூ மணப்பின் குணத்தோடும், நாவலில் விகாசம் பெற்றிருக்கிறது.

தகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதின் பரவசத்தையும் தான். இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை. அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மானசீகமாக மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன்.

இடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்

அத்தியாயம் _ 4

தான் ரொம்பவும் பெரிய மனிதனாகி விட்டோம் என்று நினைத்துக் கொண்டார் தினகரன். இப்படித் தோன்றும் போது, இவான்ஸ் மனக்கண் முன் தோற்றம் கொண்டு `உன்னுடைய சாதனை என்ன? அல்லது நீ சாதிக்கப்போவது என்ன?’ என்பான் சிரித்துக்கொண்டே.

clip_image002யாருடைய அங்கீகரிப்பை நான் நாட வேண்டும்? அவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? வாழ்ந்து கொண்டே, அவர்களிலும் யாராவது என்னைப் போன்று சாவோடு சம்பாஷணை செய்து கொண்டிருப்பார்களா? பெரியப்பாவைப் பார்க்கப் போகும்போது, சாரதி வாயிலாக சாவுதான் பேசியது என்பதற்கு என்ன நிரூபணம்? புஹாரியில், சர்வர் வாயிலாக அது பேசியது என்பதற்கும் என்ன நிரூபணம்? இந்தப் பிரச்சினை மூன்று மாதமாக, உன்னைப் பாகுபோல் உருக்கிக் கொண்டிருக்கிறது. என்ன பிரயோஜனம்? வாழ்க்கையில் நீ கண்டதென்ன? சாதாரணமாகவும் இல்லை. பெரிய பெரிய விஷயங்களைப் பற்றியும் ஒன்றும் அறிந்துகொள்ளவும் இல்லை. சுத்த ரெண்டாங்கெட்டான்தான் என்று நினைக்கிறேன்.

இந்த மாதிரியான எண்ணச் சூழலுடன் `பீச்’ சாலையில் நடந்துகொண்டே இருப்பார்! தேடல்தான் முக்கியம்! எப்போதும் பெரிசு பெரிசாக எண்ணத்தை ஓட்டு. உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை பிரபஞ்ச ரீதியில் அதிகப்படி! அப்படித்தானே சார்த்தர்கூடச் சொல்கிறான். அதை ஏன் சாதாரணமாக வாழ்ந்து சின்னாபின்னமாக்க வேண்டும்? `இது நல்ல கேலிக்கூத்து!’ என்று மனத்தில் ஏதோ இசை பாட ஆரம்பித்தது. பார்க்கப்போனால் இப்போதுதான் நீ சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறாய். `அஹ்’ தினகரன்! எதைப் பற்றியும் கவலைப்படாதே. ஒளியை உமிழ்ந்த நட்சத்திரம் அமிழ்ந்தே போய்விட்டது. ஒளி மட்டும் இன்னமும் இருக்கு! அதோ நாயோடு ஒருத்தனும் ஒருத்தியும் போகிறார்களே! அவர்கள் மேலெழுந்த வாரியாக ஏதாவது பேசிக்கொண்டே போகட்டும். `ஆனால், அடிமனத்தில் என்னென்ன அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றனவோ? எதையென்று உலகத்திற்குப் புரியவைக்கிறது? எவ்வளவு அது புரிந்துகொள்ளப் போகிறது? எல்லாமே புரிந்தால்தானா? முடியுமா? தேடல்தான் முக்கியம்.

ஆனால், பெருத்த சங்கடமெல்லாம் ஆட்கள் கிடைக்காமல் போய்விடுவதில்தான்! இவ்வளவு எண்ண ஓட்டங்களையும் தனியாகச் சுமக்க வேண்டியிருக்கிறது. அதுதான் இந்த மாதிரியான விஷயங்களின் சாபக்கேடு. எப்போதும் தனியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது. பத்மாவிடம் ஒரு எக்கச்சக்க ஈடுபாடு இருந்தது. ஆனால், கல்பனா வந்ததும் அதுவும் என்னவெல்லாமோ ஆகிவிட்டது. எங்கோ அவர்கள் வாழ்க்கையும் கீறல் விழுந்த கிராமபோன் ஆகிவிட்டது. குழந்தைகள்! ஆமாம், நிச்சயமாக! ஆனால், அதுகளுக்கும் ரொம்பவும் உபயோகமாக இருக்க முடிவதில்லை. என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்களோ? கல்பனா! அமெரிக்கா போனாள். திரும்பி வந்தாளோ? என்ன பண்ணிக் கொண்டிருக்கிறாளோ? கடிதம் போடலாம் என்றால் முகவரி தெரியாது. அவளுக்கென்ன! கெட்டிக்காரி! பிழைத்துக் கொண்டு விடுவாள். இவரைத்தான் அவள் `உனக்கு உன்னையே காப்பாற்றிக்கொள்ளத் தெரியாது. ஏதாவது விபத்தில் போய் நீயே விழுவாய்’ என்பாள். அது எவ்வளவு நிஜம். பத்மாவுக்குக் கூட, வீட்டுக்காரர் மற்றவர்களைப் போல் சாதாரணமாக இல்லையே என்று கழுத்துமுட்டும் குறை! ஆனால், தினகரன், முகவரி தெரிந்தால்கூட அவளுக்குக் கடிதம் மட்டும் போடாதே. அவள் கடிதங்களை அடிவயிற்றிலிருந்து வெறுத்தாள். உன் மூளைக்குச் சின்னச் சின்ன விஷயங்கள்கூட எட்டுவதில்லை. சின்ன விஷயங்களில் உன்னால் கவனம் செலுத்த முடியாமல்தான் நீ கல்பனாவிடமும் தோற்றாய், பத்மாவிடமும் கால் பங்கிற்குத் தோற்றிருக்கிறாய்! அது என்ன கால் பங்கு என்று கேட்டுக்கொண்டே தனக்குத்தானே சிரித்துக் கொண்டார். இருந்தும் கல்பனாவைப் பார்க்க வேண்டும் என்று மனது ஏங்குகிறது. விளையாட்டாக அதெல்லாம் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த ஐந்து வருடங்களில் அவளை நினைக்காத நாள் உண்டா? மோஹினி என்பது நிஜம்தானோ? கல்பனாவைவிட அழகிகள் உலகில் இல்லையா என்ன? அவளுக்கு அப்போதே இருபத்தி ஏழு வயதுன்னா நடந்து கொண்டிருந்தது? வாஸ்தவம். அவளைவிடப் பெரிய அழகிகள்_அதுதான் முக்கியமென்றால் இந்த அடையாறிலேயே ஒரு பத்துப் பனிரெண்டு தேறுவார்கள். இருந்தும் எங்கோ, அமெரிக்கா போய்விட்ட அவளை மனம் ஏன் பின்னுகிறது? ஒரு நாள், இந்தப் பெசன்ட் நகர் கடற்கரையில், தனிமையில், அவள் அங்கு சர்வகலா சாலையில் படித்து முடித்து, ஒரு அடுக்கு மாடிக் கட்டிட அறையில் தன்னைப் போர்த்திக் கொண்டு பாடங்களைப் புரட்டுவதாக ஒரு காட்சி. இது எப்படி சாத்தியமாகிறது? அவர்களிடையே ஏற்பட்ட முறிவுக்குப் பிறகுதானே அவருக்கு இந்த மாதிரியான ஒரு சாவுப் பிரச்சினை கிடைத்தது? அப்படியிருக்க அவளைப் பார்த்துத்தான் என்ன ஆக வேண்டும்? மேலும் கல்பனா என்பவளைவிட அவளுடைய எண்ணமல்லவா இப்போது இனிக்கிறது. அந்தப் பெயரே ஏற்படுத்தும் ஒருவித மாயாஜாலமா இது?’

இருந்தும் ஆஹ்! இந்த முறிபட்ட ஒற்றையடிப் பாதைப் பிரயாணம்தான் எவ்வளவு சுலபமானதாக எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது. அப்பழுக்கற்ற ஆன்மாவின் ஒருதலைப்பட்சமான காதல் பிரயாணத்தில்தான் இன்பம் இருக்கிறது. அவள் அடிக்கடி பாடும் பாட்டை இங்கு எப்போதாவது கேட்பதில் உள்ள ஆனந்தம், இப்போது அவள் நேரில் பாடினால்கூட ஏற்படுமா என்பது சந்தேகம்தான்!

`எனதன்பே!’ என்றார் தினகரன். `நீ என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எங்கோ என்னிடம் வந்தால் தனிமைபூர்வமான இன்பம் திகட்டக் கிடைத்து அதில் செத்து விடுவோமோ என்று நீ பயந்திருக்கிறாய்! ஆனால் எனதன்பே! நீ அறிந்தோ அறியாமலோ சாவை ஒருமுறை முழு உணர்வோடு எட்டிப்பிடித்த பின்தான் வாழவே தகுதி உடையவளாகிறாய்? நான் சொல்வது தப்பா? மேலும், கடைசியில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட துக்கத்துடன் தானே நாம் இருவருமே பிரிந்தோம். உன் மனத்தைத் தொட்டுப் பார்! உன்னுடைய நாற்காலியில் கிடந்த சோக உரு இப்போதும் என் கண் முன்னால் நீந்துகிறது. நாம் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் குதறிக்கொண்டது ; எங்குமே பிடிபடாமல் ஏங்கி ஏங்கிப் பிரிந்ததில் அந்தப் பெரிய வார்த்தையின்_காதலின்_முழு அர்த்தத்தை உணரத் தான் செய்தோம். என் வரையில், நாம் இருவருமே விடலைத்தனமாக நடந்து கொள்ளவில்லை என்பதில் தான் நம்முடைய சோகம் முழுமையடைகிறது. நீயாவது பெண்! நடைமுறையில் எல்லாவற்றையுமே மறந்து விடுவாய். ஏதோ ஒரு மாலை, அல்லது காலை, நீ எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருந்த ஓரிரு விளம்பர வரிகளின் சங்கீதத்தை, நான் கேலி செய்தது ரேடியோவில் மீண்டும் ஒலிக்கக் கேட்க, நான் உன்னைத் தொற்றலாம். அல்லது உன் வீட்டு மாடியில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டே நின்றதில் நம்மிடையே ஏற்பட்ட முழுமையை நீ மீண்டும் பெறும்போது நான் உன்னைத் தொற்றலாம். ஆனால் என்றுமே நாம் இருவரும் சந்தோஷமாக இருந்திருக்க முடியாது என்றுதானே அப்போதும் நாம் திட்டவட்டமாக நம்பினோம்?’

இந்நிலையில் கல்பனாதான் சாவு உருக்கொண்டு தன்னைத் தொடர்கிறாளோ என்று பட்டது. இருக்காது! மேலும் அவள் ஒரு நாளும் தன்னை அந்நிலைக்குத் துரத்த வேண்டும் என்று நினைக்க மாட்டாள்.

எதிரே வெகு தூரத்தில் நிலைத்து, கட்டுமரங்கள் பாய் விரித்துச் சென்று கொண்டிருந்தன. வண்ணத்திப் பூச்சி போல் அவைகள் கண்களுக்குப் பார்க்க ரொம்ப வேடிக்கையாக இருந்தது. சில இடங்களில் கடல் நீர், அரக்கு வர்ணத்தில் காட்சி அளித்தது. சில இடங்களில் வெளிர் நீலமாக ஆரம்பித்துப் போகப் போக முழு நீலமாக ஆழ ஆரம்பித்துக் கனத்திருந்தது. இப்படியே கடலோடு பம்பாய், பினாங், ஹாங்காங் என்று போனால் தேவலை போலிருந்தது. பகற்கனவு என்று அதை ஏன் சொல்ல வேண்டும்? பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்குச் சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வாராதா என்று ஏங்கினார். ஆனால் அதெல்லாம் எங்கே முடியப் போகிறது? அப்படின்னா அது பகற்கனவுதான்!

கனவோ நனவோ பயணம் மனத்தைச் செம்மையடையச் செய்கிறது என்று நம்பினார் தினகரன். ஆட்டமும் அலைச்சலும் மிகக் கண்ட, ஓய்ந்துபோன ஆன்மாவுக்குப் பயணம் அரிய சஞ்சீவி ஆகும் என்று அவர் நினைத்தார். இந்த எண்ண ஓட்டங்களை எல்லாம் தவிர்த்து, சாதாரணமாக அச்சுப்பிச்சென்று இப்போது நடந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமா போல் கதைகள் எழுதி ஊட்டியிலோ கொடைக்கானலிலோ தங்க ஏற்பாடு செய்து கொண்டால் என்ன என்று தோன்றியது. இதுதான் சத்தியமாக பகற்கனவு. ஏனென்றால், விஷயம் இவ்வளவுதான்_அந்த மாதிரியான அச்சுப்பிச்சுகளை உன்னால் இயற்ற முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்! நம்முடையது இல்லை என்று சொல்லிக் கொண்டு, மாதம் ஐம்பது ரூபாய் வங்கியில் போட்டு, வருடத்திற்கு ஒரு தடவை எங்கேயாவது போய்விட்டு வரலாம். இது சாத்தியம்! ஆனால் அதெல்லாம் எங்கே முடியப் போகிறது. எவ்வளவு வந்தாலும் இப்போதே போதுவதில்லை.

பேசாமல் இரண்டு வேளை நன்றாகச் சாப்பிட்டு, கிருஷ்ணா, ராமான்னு வேலையைப் பார்ப்பதுதான் உத்தமம் என்று சொல்லிக்கொண்டார். பார்த்தசாரதி வாயிலாக சாவு பேசியது, சர்வர் வாயிலாக சாவு பேசியது என்று நினைக்கும் ஒவ்வொரு தரமும் பாதி உயிர்போய் திரும்பி வருகிறது.

அந்தப் பெரிய கடலும், அதில் மிளிர்ந்த வீரியமும் என்னமோ செய்ய பல்லவன் பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு மவுண்ட் ரோடு பக்கம் போனார். மதராஸின் கனாட் பிளேஸ் என்று நினைத்தார் ; சிரிப்பு வந்தது. இதுவும், இதனுடைய மூஞ்சிகளும்! எப்படி வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம். ஆனால் பிறந்தாலும் வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டார். தமிழனாக இருந்து கொண்டு தமிழர்களை ஏன் வெறுக்கிறோம் என்று புரியவில்லை. ஆனால் டில்லியைவிட அவரைப் பொருத்தவரையில், மதராஸில் தியேட்டர்கள் நன்றாகவே அமைந்திருந்தன. என்னதான் பிடிக்காவிட்டாலும் மனிதர்கள்தானே! அவர்களோடு, அவர்களில் ஒருவராக உட்கார்ந்து சாப்பிடுவது மனத்திற்குச் சற்று இதமாக இருந்தது. சிற்றுண்டி சற்று பலமாக அமைந்தது. ரொம்பவும் பெரிதுபடுத்தாத சப்தத்தைக் கொண்ட ‘ஜ்யூக் பாக்ஸி’ல் நாலணாக்களைப் போட ஆரம்பித்தார். ‘விழியே கதை எழுது’ என்ற பாட்டு நன்றாகவே இருந்ததாகப் பட்டது. அவருடைய அதிர்ஷ்டம்தானா? ஆஷாபோன்ஸ்லேயின் ‘ஆவோ ஹஜீர்’ பாட்டு இருந்தது. மற்ற பாட்டுக்களைக் கேட்காமலேயே வெளியே வந்தார். ஏதாவது புஸ்தகக் கடைக்குப் போகலாமா? ‘போர் _ படுபோர்’ என்று சொல்லிக்கொண்டார். ஏதாவது சினிமா போகலாமா? ‘போர்_படுபோர்.’

தாமஸ் ஹார்டியின் _ ‘இந்தப் பைத்தியக்காரக் கூட்டங்களை விட்டுத் தொலை தூரத்தில்’ சத்யத்தில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதை டில்லியிலேயே மூன்று தரம் பார்த்தாகி விட்டது. இனிமேல், ‘போர் _ படுபோர்.’

இதுதானா? இதுதானா? இங்கே ஒவ்வொரு ஆன்மாவிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் இப்படித்தான் போரடிக்கக் கனாட் பிளேஸிலும் மவுண்ட் ரோடிலும் நிற்கிறார்களோ? ஹா! கவலை இல்லை. இத்தனை ஜனங்களையும் ‘போர்’ கூடத் தொற்ற அஞ்சும். . . அவ்வளவு ரசனையற்ற ஜனங்க ; சாவாடி செத்த ஜனங்க? எதையும் ஒப்புக்கொள்ற ஜனங்க, முதுகெலும்பு இல்லாத ஜனங்க . . .

‘நீ என்ன பெரிய புடுங்கியா? என்னமோ ஜெர்மனியிலே பிறந்தாப்பிலே இல்ல பேசறே!’

‘ஆச்சு! சாவு நம்ம பாஷையில பேச ஆரம்பித்துவிட்டது. டோய்! நிறையப் பேர்கள் மத்தியில் போய் நின்று கொண்டார். முன்னால் இருபது பின்னால் இருபது எனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நடப்பவர்களின் மத்தியில் நடந்தார்.

அன்று இரவு ‘கோல்டன் டிரஷரி’ என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பில் சாவைப்பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்கக் கூடும் என்று புரட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று ஷெல்லியிலும், கீட்ஸிலும் ஆழ்ந்தார். ‘யுலிஸஸி’ல் முதல் இரண்டு மூன்று அத்தியாயங்கள் படிக்க வேண்டும் போலிருந்தது. ‘யுலிஸஸ்’ படித்துக் கொண்டிருக்கும்போது இன்னும் ஒரு எண்ணம் எங்கோ தோன்ற ஆரம்பிக்கவே தன்னைக் கெட்டித்துக்கொண்டார். ஆமாம். சாவு தன்னிச்சையில், தன்கதியில் யோசித்து இயங்குகிறது! இந்த எண்ணத்தோடு அதனுடைய அடிப்படைக் கோலங்களில் ஒரு விசேஷத் தன்மை இருக்கும் நினைப்பையும் பின்னிப் பார்த்தார். அவரையும் அறியாது அவருக்கு சதுரங்க வீரர் கபப்பிளாங்காவின் நினைவு வந்தது. யாருமே தன்னை ஜெயிக்க முடியாது என்கிற காலகட்ட நிலையில் அவருக்கு அந்த ஆட்டத்தின் மீதே பிடிப்புவிட ஆரம்பித்து விட்டதாம். கபப்பிளாங்காவின் இந்த அனுபவம் எல்லா நிலைகளுக்கும் பொருந்தும் என்று நினைத்தார். எதிராளி ரொம்பத் தோற்றுப் போனால் சொல்லிக் கொடுக்க வேண்டும் போலிருக்கிறது! ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவில்லை. இதுநாள்வரை தன்னுடையை தன்மையை உணர்த்திக் கொள்ளாமலே இருந்திருக்கிறது. குறைந்தபட்சம் அதற்கு ‘போர்’ அடிக்கவில்லை. எப்போதுமே ஜெயிப்பது என்பது விடலைத்தனமான காரியம் இல்லையா? அவர் எதிரே இருந்த நாற்காலியில் சாவு உட்கார்ந்திருந்தது.

‘இல்லை_எங்களிடம் கொடுக்கப்பட்ட விஷயங்களைக் காப்பாற்றவே நாங்கள் இருக்கிறோம். சாதாரணமாக, அன்போடு வாழ்ந்து, இருந்து, எங்களைத் துதிபாடி, போகவே நீங்கள் சமைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்த விஷயத்தைத்தான் நீங்கள் எப்போதோ மறந்தாயிற்றே?’

‘இனிமேல் என்ன வழி?’

‘வழியா_எல்லாமே இனிமே மெதுவா நிர்மூலம்தான்!’

‘ஆனால் மனித குலத்தில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது . . .’

‘என்னவெல்லாமோ இன்னல்கள் விளைவித்தும் அதை நீ நம்பிய விதத்தில் எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்தான்!’

‘உனக்கு எல்லாமே தெரியுமா?’

‘எல்லாம்தான்!’

‘நான் என்னுடைய பதினோறாவது வயதுப் படலத்தைப் பற்றி அடிக்கடி நினைக்கிறேன். பஸ் ஸ்டாண்டுப் படலம் தான்!’

‘அதிலிருந்து நான் உன்னைக் கண்காணித்து வருகிறேன். சில சமயங்களில் ஓரிரு நாட்டங்கள் கொடுத்துத் திசை திருப்ப முயற்சி செய்து பார்த்தேன். உயிரை எடுத்துண்டாதானா? குழந்தாய்! அவ்வளவு சின்ன வயதிலே அவ்வளவு பெரிசா நினைக்கிறது தப்பு. உன் சாரத்தை எல்லாம் எப்போதோ நான் வாங்கிக்கொண்டு விட்டேன். இல்லாவிட்டால் பூமி தாங்காது!’

‘எப்பேர்ப்பட்ட அயோக்கியன் நீ.’

திட்டாதே! நான் நண்பனாக இருக்கவே விரும்புகிறேன். உன்னைப் பார்த்து நான் பயப்படாத நாள் இல்லே! ஆமாம் சொல்லேன், எப்படி இருக்கிறார்கள் உன் பொம்பளைகள்?’

‘நீ ஏன் என்னைக் கேலி பண்ணறே’?

‘எப்படியிருக்கா சொல்லேன்.’ஸ் ‘இப்ப கேட்டயானா_உனக்கு வெட்கமா இல்லை? மேலும் நீ ஏன் எல்லாத்தையும் இப்படிப் பிரிக்கிறே?’

‘ஏன் என்றால் நான் சாவு. தலைவணங்குடா முட்டாள்!

தினகரன் அதன் முன் மண்டியிட்டார்.

அது எழுந்து நின்று, ரொம்ப நேரம் இவரையே கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

‘பணிவு வேண்டும். அடக்கம் வேண்டும். எது கொடுத்தாலும் போதும் என்கிற மனப்பான்மை வேண்டும். வாழ்வு என்பது அவ்வளவு சுலபம் இல்லை’ என்றது.

அன்றிரவு தினகரனுக்கு மீண்டும் கனவு தொடர்ந்தது. முதலில் அவர் பெரிய பாலைவனத்தில் காலை பத்து மணி வாக்கில் எறியப்படுகிறார். எங்கும் அனல் பறக்கிறது. அவருடைய கைகளும் கால்களும் நன்றாகக் கட்டப்பட்டு, அங்கு இருக்கும் கம்பத்தில் கயிறுகள் சுற்றப்படுகின்றன. அவரால் எழுந்திருக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது. பதினொரு மணி வாக்கில் அவருக்குத் தண்ணீர்த் தாகம் ஏற்படுகிறது. அவர் அடிவயிற்றிலிருந்து கத்தினாலும், எள்ளளவுக்கேனும் ஏன் என்று கேட்க யாரும் இல்லை. அவருடைய தண்ணீர் என்ற குரலை ‘வெளிகள்’ கிரகித்துக்கொள்கின்றன. நெற்றிக்கு அருகில் பட்பட்டென்று சம்மட்டியால் ஓங்கி ஓங்கி அடிப்பது போன்ற பிரமை ; பக்கத்தில் நின்று கொண்டிருந்த சாவு ‘எல்லாம் இடைவெளிகளில் பாய்கிறது என்று சொல்லு. இடைவெளி கிரகித்துக் கொள்கிறது என்று சொல்லு’ என்கிறது.

‘எப்படி?’ என்று இவர் பேயாகக் கூச்சலிடுகிறார். அதைத் தொடர்ந்து அவருடைய உடம்பில் சிவப்பு கனிந்து விம்முகிறது. புழுகூட அப்படித் துள்ளாது ; அவர் துள்ளுகிறார்.

‘கருணைக்கு அழு’ என்கிறது சாவு.

‘நான் உன்னை மன்னிக்கமாட்டேன்’ என்கிறார் இவர்.

‘கருணைக்கு அழு_ஒரே ஒருதரம் நான் கேட்டதைச் சொல்லு. முயற்சி செய்’ என்கிறது ஒரு குரல்.

‘உன்னை நான் விடமாட்டேன்’ என்கிறார் இவர்.

‘உன்னால் ஒன்றும் முடியாது. நான் கேட்டதைச் சொல்லு,’

‘முடியாது’

‘யோசி’

‘முடியாது’

‘யோசி’

‘முடியாது’

‘யோசி’

‘முடியாது’

அங்கு அவர் எதிரில் என்னென்னவோ, பின்னத்திலேயும், முழு எண்களாலும் கணக்குகள் போடப்படுகின்றன. உருவமற்ற வெளியில் அவரைப்பற்றிப் பெரிதாக சர்ச்சை கிளம்புகிறது. அங்கு சர்ச்சை நடந்துகொண்டிருக்கும் போதே அவருடைய ரத்தத்தையும் சதையையும் மணல் உறிஞ்சிக்கொள்ள ஆரம்பிக்கிறது. அவர் அந்த ரத்தத்தை எங்கெல்லாமோ தொடர்ந்து போகிறார். இடம், காலம் ஒன்றுமே ஞாபகமற்றுப் போய், போய், போய் ஒரு துளி மண்ணாக ஆல்ப்ஸா? இமயமா? கிடந்து இறுகுகிறார்.

இன்னொரு துளியில் அவர் கீழே கீழே கீழே என இன்னமும் கீழே போய் ஒரு எண்ணெய் ஊற்றில் மிதக்கிறார். வெளியே வரும்போது லாவகமாகக் குழாயில் புகுந்து கொள்கிறார். பெரிய உருளையில் இன்னும் எதிலெல்லாமோ கடைசியில் அணுவாகவே ஒரு காருக்குள் புகுந்து காரணமே அற்று தன் இச்சையில் வெடித்துச் சிதறுகிறார். குரல்கள் எழும்பி ‘நீ சபிக்கப்பட்டவன்’ என்கிறது. காட்சி மாறுகிறது_பெரிய மலை ஒன்று தெரிகிறது. பஞ்சுபோல், பஞ்சு மிட்டாய்போல் அதன்மேல், ரொம்ப மேலே வெள்ளையாகவும் கீழ்ப்பாகங்களில் ஒருவித மஞ்சளாகவும் பனி வியாபித்திருக்கிறது. அதன் அடியில் ரொம்ப ரொம்ப தூரத்திற்கு, கண்ணுக்கு எட்டிய வரையில் பசும்புல் தெரிகிறது. ஒரே தூவான் போன்ற பனியினாலா? எதனால் அப்படியொரு குளிர்ச்சி அங்கு மண்டிக் கிடக்கிறது. எதனாலோ என்று சொல்லிச் சிரித்துக்கொள்கிறார் தினகரன். திபெத் குழந்தைகளா? கண்கள் இடுங்கி ரொம்பவும் வெள்ளைப் பற்களுடன் மூன்று குண்டு குண்டான குழந்தைகள் ஓடி வருகின்றன. என் குழந்தைகளா! என்கிறார் தினகரன். முதல் குழந்தை வலதுபுறம் இருப்பது நீல ஸ்வட்டரும், பின்னிய கம்பளி நிக்கரும் போட்டிருக்கிறது. அதிகமாக உபயோகித்த ஆனால் நன்கு பாலீஷ் பண்ணிய ஷு போட்டுக் கொண்டிருக்கிறது நடுவில் இருப்பது வெள்ளிக் கம்பளி ஸ்வட்டரும், கப்பி வர்ணத்தில் பின்னப்பட்ட கம்பளி நிக்கரும், அதே நிறத்தில் ஷுவும் போட்டுக் கொண்டிருக்கிறது. ஓரத்தில், இடது ஓரத்தில் வரும் குழந்தை நல்ல கோட்டும், நிக்கரும், கறுப்பு ஷுக்களும் போட்டுக் கொண்டிருக்கிறது. அவை தினகரனை நோக்கி ஓடி வருகின்றன. தினகரன் அந்த மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருக்கிறார். மூன்று குழந்தைகளும் ரொம்பவும் சந்தோஷமாக, உலகமெல்லாம் தம்முடையவை என்பது போல் வருகின்றன. அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இடது பக்கத்தில் ஒரு பெரிய செர்ரித் தோட்டம் முளைக்கிறது. அதற்கும் பின்னால், ஆனால் ஒரு பர்லாங்கு தூரத்தில் லூச்சித் தோட்டம் முளைக்கிறது. எல்லாமே மேகப்படலம் நீங்கி வந்த தங்க மாலைச் சூரியனில் அமிழ்கின்றன. நெருப்புக் குச்சி பற்ற வைத்ததுபோல் தொங்கும் அவ்வளவு பழங்களையும் தீ நாக்கு போலச் சிவந்த சூரியன் பற்றிக்கொண்டு ஓடுகிறான். தன் ரத்தமே செர்ரியாகப் போனதோ என்று தினகரன் பயந்தார். இதற்கெல்லாம் அப்பால் இரண்டு பர்லாங்கு தூரத்தில் ஒரே மல்பரி தெரிகின்றன. அதற்கும் அப்பால் யூகலிப்டஸ் மரங்கள். அங்கிருந்து காற்றுவாக்கில் எப்போதோ பறந்து வந்து விழுந்த அந்த இலைகளில், பச்சை இலைகளில் பாய் விரித்தாற் போன்று செர்ரிப்பழங்கள். குழந்தைகள் வேண்டும் என்கிற அளவுக்குச் செர்ரிப்பழங்களைத் தின்று இவரிடமும் கொண்டு வருகின்றன. ‘தாங்ஸ் தாங்ஸ்’ என்று அவ்வளவு பழங்களையும் பெற்றுக் கொள்கிறார். அதுகளைக் குஷிப்படுத்தும் விதத்தில் ‘ஆஹா எவ்வளவு நல்ல பழங்கள் ; தாங்ஸ், தாங்ஸ்’ என்கிறார். இடதுபக்கம் இருந்த குழந்தை கடைசியாக அவரிடம் வரும்போது அவர் துணுக்குறுகிறார். பிக்னிக் போன காரில் சிதறிய குழந்தை அல்லவா இது!

அது கொடுத்த பழங்களை இவர் பார்வையிடுகிறார்.

‘‘என்ன பாப்பா, பழமெல்லாம் ஒரேடியாய் சுருங்கியிருக்கு’’ என்கிறார் தினகரன். ‘‘சாவு மாமா கொடுக்கச் சொல்லுச்சு’’ என்கிறது குழந்தை.

* * * * *

சம்பத்தும் தஸ்தாவெஸ்கியும்-எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்
(சென்னையில் சென்றவாரம் 11ஆம் தேதி நடைபெற்ற சம்பத் நினைவுகள் குறித்த கூட்டத்தில் பேசியது -- தொகுப்பு : தளவாய் சுந்தரம்)
சம்பத்தினுடைய `இடைவெளி’ நாவலை, நான் என்னுடைய கல்லூரி நாட்களில் படித்தேன். அப்போது எனக்கு அது, ஒரு பெரிய எழுச்சித் தரக்கூடிய நாவலாக இல்லை. ஒருவேளை கல்லூரிப் பருவ வயது அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். அப்புறம் ஒரு நாள், நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியை பார்த்தபோது அவர் கேட்டார் : ``நீங்கள் சம்பத்தை முக்கியமான எழுத்தாளராக நினைக்கிறீங்களா’’. நான் ``எனக்கு அவர் முக்கியமான எழுத்தாளர்னுதான் படுகிறது ஸார்’’ என்று சொன்னேன். ``சுஜாதாவைவிட முக்கியமான எழுத்தாளரா’’ என்றார் அவர். ``எப்படி கேட்கிறீங்கன்னு தெரியலையே’’ என்றேன். ``கல்லூரி மாணவர்களிடையே சுஜாதா மிகவும் பிரபலமாக இருக்கிறார். அப்படி இருக்கும் போது கல்லூரியில் படிக்கிற நீங்க மட்டும் ஏன் சம்பத்தை முக்கியமானவர்னு நினைக்கிறீங்க. அப்படியானால் சுஜாதாவைவிட சம்பத் பெரிய எழுத்தாளரா’’ என்றார். ``எனக்கு தெரியவில்லை ஸார். இரண்டு பேருடைய உலகங்களும் வேறுவேறு. இரண்டு பேரையும் ஒப்பிட முடியுமா?’’, என்றேன். அப்பொழுது அவர், ``நான் சம்பத்தை படித்தேன். அவர் முக்கியமான எழுத்தாளர் என்று நினைக்கிறேன், ஆல்பர்காம்யூ அளவுக்கு முக்கியமான எழுத்தாளர்’’ என்று சொன்னார். ஆல்பர்காம்யூ அளவுக்கு முக்கியமான எழுத்தாளராக தமிழில் ஒருவர் குறிப்பிடப்படுவது எனக்கு சந்தோஷத்தை தந்தது. என்னுடைய வாசிப்பில்தான் எதாவது சிக்கல் இருந்திருக்க வேண்டும். எனவே இடைவெளியை திரும்ப மீண்டும் வாசிக்க வேண்டும் என்று எண்ணினேன்.

நான் இரண்டாவது, மூன்றாவது, முறைகளில் மீண்டும் `இடைவெளி’யை வாசித்தபோது, எனக்கு தோன்றியது, `இந்த நாவல் சாவை மையமாகக் கொண்டிருந்தாலும்கூட, வாழ்வை முதன்மைப்படுத்தின, வாழ்வின் மீது தீவிரமான ஒரு திகைப்பும் பயமும் உள்ளவரோட தேடுதலாகத்தான் `இடைவெளி’ இருக்கிறது. தஸ்தாவெஸ்கியைப் பற்றி, அவருடைய படைப்புகளைப் பற்றி, சம்பத் தொடர்ந்து சொல்கிறார். தஸ்தாவெஸ்கி ஆகனும் என்று விரும்பினேன் என்கிறார். தஸ்தாவெஸ்கி, மரணத்தண்டனை விதிக்கப்பட்டு வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு முந்தின வரிசையிலுள்ளவர்கள் சுடப்பட்டு விழுந்துகொண்டிருக்கிறார்கள். தஸ்தாவெஸ்கி நிற்பது நான்காவது வரிசை மரணத்தை தொடக்கூடிய ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் பார்த்துக்கொண்டேயிருக்கிறார். நான்காவது வரிசை வரும்போது தஸ்தாவெஸ்கியின் மரணத் தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. ``தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது. நீங்கள் சைபீரிய சிறைக்கு அனுப்பப்பட இருக்கிறீர்கள்’’ என்று சொல்லப்பட்டவுடன் காலம் நீண்டு கொண்டே சென்றது. நான் நிறைய காலங்கள் அப்போது வாழ்ந்துவிட்டது போல் உணர்ந்தேன்’, என்று தஸ்தாவெஸ்கி எழுதுகிறார். காலத்தை நீட்டிக்கவைக்கக் கூடிய இந்தத் தன்மை வாழ்வுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய பரிசு. பரிசை கொண்டாடவேண்டும் என்று கத்தி கூப்பாடு போட்டு அவர்கள் எல்லோரும் ஆடுகிறார்கள். தஸ்தாவெஸ்கி சொல்கிறார்: ``மீண்டும் ஒருமுறை எனக்கு வாழ்வு பரிசளிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதை நான் எப்போதும் கொண்டாடிக் கொண்டே இருப்பேன்.’’

இதிலிருந்து திரும்பிய பின்னாடி தஸ்தாவெஸ்கி முழுக்க அவருடைய வாழ்க்கையில் சாவைப் பற்றிய தேடலை முன் வைக்கிறார். வாழ்வை எவ்வளவு தூரம் முதன்மைப்படுத்த வேண்டியிருக்கிறது; நாம் நினைப்பது போல் வாழ்வு அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. வாழ்தல் என்பதற்கு மிகப்பெரிய அர்த்தம் இருக்கிறது என்கிறார் அவர். பிறகுவந்த தஸ்தாவெஸ்கியுடைய நாவல்கள் அனைத்துமே, எதாவது ஒரு வகையில் சாவை முதன்மைப்படுத்துகின்றன. சாவு என்கிற ஒரு விஷயத்திற்கு முன்னாடி வாழ்வின் மகத்துவம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது. மகத்துவத்துக்கு காரணமாக என்ன என்னவெல்லாம் இருக்கிறது என்பது சுட்டப்படுகிறது.

சாவினுடைய திகைப்பு அதிகமாகும் போதெல்லாம், அதனுடைய விரல்கள் தாளம் போடும் போதெல்லாம் நமக்கு நினைவுக்கு வருவது என்னவென்றால் வாழ்விலிருந்து நாம் துண்டிக்கப்பட்டுவிட்டோம் என்பதுதான். வாழ்வு என்பது குறித்து இருக்கும் எண்ணங்கள்தான் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. வாழ்வுக்கு உடல் ஒரு கேந்திரமாக இருக்கிறது. ஆனால், உடலால்தான் வாழ முடியும். உடலுக்கு காலவெளி என்கிற தடை இருக்கிறது. உடலால் ஒரு காலத்தில் அல்லது ஒரு வெளியில்தான் வாழமுடியும். வேறு காலத்திலோ, வேறு வெளியிலேயோ வாழ முடியாத அளவுக்கு நம்முடைய வாழ்வு உடலின் இருப்பு சார்ந்ததாக இருக்கிறது. எனவே உடலின் இருப்பு வழியாகத்தான் நாம் வாழ்வை முன்னெடுத்து போக முடியும். நம்முடைய புலன்கள் வழியாக மட்டும்தான் நாம் இந்த உலகை ருசிக்க முடியும். புலன்களுக்கு அப்பால் நீங்கள் உங்கள் வாழ்வை எப்படி உள்வாங்குவீங்க, வெளிப்படுத்துவீங்க என்பது குறித்த தேடுதல் இந்தியா போன்ற கீழை நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. ஆனால், இந்த முயற்சிகள் ஒரு மெய்யியல் என்கிற ஒரு பாதையை நோக்கி போய்க் கொண்டேயிருக்கிறது. அப்போது சாதல், சாவாமை பற்றின நம்முடைய எண்ணங்கள் உருமாறிவிடுகிறது. ஆனால், தஸ்தாவெஸ்கியினுடைய படைப்புகள் வழியாக, அவர் சாவை முதன்மைப்படுத்தி, சாவைப் பற்றிய பயத்தையோ, திகைப்பையோ உருவாக்குவதற்கு பதிலாக சாவுக்கு முன்பான மனிதனுடைய பகடை விளையாட்டை முதன்மைப்படுத்துகிறார். அப்போது வாழ்வினுடைய ருசி முழுக்க மாறிவிடுகிறது.

சாவு என்பது மனிதனுக்கு மட்டும் நடக்கக்கூடிய ஒரு தனி நிகழ்வு அல்ல. போர்ஹேவுடைய ஒரு கவிதையில், அவர் சொல்கிறார் : ``உலகத்தில் இதுவரைக்கும் ஒரே ஒரு மனிதன்தான் இறந்திருக்கிறான். ஆனால், அந்த மனிதனுடைய பெயரை நெப்போலியன் என்று சொல்கிறாங்க, ஒரு மருத்துவர், ஒரு காயம்பட்ட வீரன் என்று சொல்கிறாங்க’’ என்று ஒரு பெரிய பட்டியல் போடுகிறார். வெவ்வேறு ஆட்களாக, வெவ்வேறு கதாபாத்திரங்களாக மரணம் நிகழ்ந்திருந்தாலும் இந்த உலகத்தில் மரணம் ஒரே ஒருமுறைதான் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அந்த ஒரு நிகழ்ச்சியினுடைய பல்வேறு விதமான வடிவங்கள், ரூபங்கள் நமக்கு தெரிந்து கொண்டே இருக்கிறது.

தஸ்தாவெஸ்கி படைப்புகள் வழியாக உருவாகி வரக்கூடிய மனநிலை, நான் வாசித்த வரைக்கும், வாழ்வைப் பற்றிய ஒரு தேடுதலை முன்வைப்பதுதான். சம்பத்தின் இடைவெளியையும் அந்த வகையான ஒரு நாவலாகத்தான் பார்க்கிறேன். சம்பத், வாழ்வை வெவ்வேறு முனைகளில் மிகத் தீவிரமாக ஈடுபடவேண்டுமென்று நினைக்கிறார். காரியங்கள் அவ்வப்போது நடக்கும், அப்படி நடக்கும்போது அவற்றில் நாம் பங்கேற்போம் என்பதைவிட, தன்னுடைய தீவிரத்திற்கு எவைஎவையெல்லாம் தடையாக இருக்கிறதோ அந்த தடைகளோடு நாம் அதில் ஈடுபட வேண்டும்; இந்தத் தடைகள் நம்முடைய தீவிரத்திற்கு இடையூறாக இருக்கிறது என்பது சம்பத்தின் மனதில் கனிந்து கொண்டேயிருக்கிறது.

`சாமியார் ஜுவுக்குப் போகிறார்,’ கதைதான் தமிழில் முதன்முதலாக ஒரு பெண் தன்னுடைய தாபம் தொடர்பாக, நேரடியாக எந்த மனநிலையுடன் இருந்தாள் என்பதைப் பற்றி எழுதப்பட்ட நல்ல ஒரு கதை. பெண்ணுக்கும் காமத்துக்கும் இருக்கும் தொடர்பில், பெண் தன் காமத்தை வெளிப்படுத்தக் கூடிய தன்னுடைய உடல்சார்ந்த எந்த ஒரு உணர்ச்சிகளையும் இச்சைகளையும் வெளிப்படுத்தக்கூடிய வரிகள் இந்த கதையில் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு தன் கணவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற ஆசை இருந்தாலும்கூட எவ்வளவு தடைகள் எவ்வளவு மனக் கட்டுப்பாடுகள் இருக்கிறது. இப்படியெல்லாம் நாம் நாகரிகமாகிவிட்டோமா என்று இக்கதையில் தினகரன் யோசிக்கிறான். தாபத்திலிருந்து வரும் காமத்திற்கும் மரணத்திற்கும் தொடர்பு இருக்கிறது. ஜப்பானில் இரண்டுபேர் கடலின் அடி ஆழத்திற்குப் போய் ஆழ்கடல் நீச்சல் பண்ணுகிறார்கள். மைக்கல் கிறிஸ்டன், ஸுராஸிக் பார்க் எழுதினவர். அவரும் அவருடைய நண்பரும்தான் இந்த இரண்டு பேர்கள். மிக ஆழத்துக்கு போய்விட்ட நிலையில் அவர்களுடைய காற்றுக் குழாய் துண்டிக்கப்பட்டு விட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கடலின் ஆழத்தில் அடையாளம் தெரியாமல் நாம் சாகப்போகிறோம் என்கிற எண்ணத்துடனேயே அவர்கள் மேலே வர்றாங்க. அதிர்ஷ்டவசமாக தப்பித்த அவர்கள், அறைக்கு வந்து நார்மலாகிவிடுகிறார்கள். மைக்கல் கிறிஸ்டன்ன் எழுதுகிறார்: `அறைக்கு வந்ததும் எனக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி யாருடனாவது உடனே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். கடுமையான தாபம் எனக்கு ஒருமணி நேரம் நீடித்தது.’ அவருடைய நண்பரும் இதேபோன்று அவருக்கும் இருந்ததாக சொல்கிறார்.

காமம் சாவுக்கு முன்னாடி பெருகுகிறது; சாவு ஏதோ ஒரு வகையில் நிச்சயமின்மையையும் பதட்டத்தையும் உண்டாக்கும்போது காமம் ஒரு நிதானத்தையும் உண்டாக்கும்போது காமம் ஒரு நிதானத்தையும் பாதுகாப்பையும் தருகிறது என்பதைத்தான் நான் இந்த வரிகள் வழியாக புரிந்துகொள்கிறேன். இதே நிலைதான் தஸ்தாவெஸ்கியிடமும் தொடர்ந்து இருக்கிறது. தஸ்தாவெஸ்கி பற்றி அவருடைய மனைவி அவரைப் பற்றிய நினைவுக் குறிப்புகளில் எழுதுகிறார் : `தஸ்தாவெஸ்கி இந்த உலகத்திலுள்ள எல்லோரையும், தன்னை உட்பட அவருடைய படைப்புகளில் கதாபாத்திரமாக மாற்றிக்கொண்டேயிருக்கிறார். அந்த கதாபாத்திரங்களில் எவராவது ஒருவருக்கு சிக்கல் வரும்போது, அதை அந்த கதாபாத்திரங்களுடைய சிக்கலாக அல்லாமல் தன்னுடைய சிக்கலாகத்தான் அவர் உணர்கிறார். ஒரு கட்டத்தில் கதாபாத்திரங்களின் எல்லா முடிவுகளும் திகைப்புகளும் இவரைச் சார்ந்த திகைப்புகளாகி இவருக்கு பதட்டத்தை கொடுக்கிறது’. மேலும் அவங்க சொல்கிறாங்க : `என் மீதான காதலை தெரிவிக்கும்போதுகூட ஒரு கதாபாத்திரம் வழியாகத்தான் இதை செய்தார். ஒரு புனைவை உருவாக்கி, ஒரு நாவல் எழுதுவதாக சொல்லி, நாவலில் தன்னை ஒரு கதாபாத்திரமாக்கி, என்னையும் ஒரு கதாபாத்திரமாக்கி, இந்த இரண்டு கதாபாத்திரங்கள் சந்திக்கிற ஒரு சூழலை உருவாக்கி, இப்படியே ஒரு புனைவின் வழியாகத்தான் நாங்கள் காதல் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.’ சம்பத்துடைய வாழ்வைப் பற்றி நினைக்கும்போதும் எனக்கு இவைகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன. சம்பத் தன்னுடைய வாழ்வை ஒரு புனைவின் வாழ்வாக மாற்றி, தன்னுடைய பிரச்சினைகளை அந்த புனைவுக்குள் வைத்து, அதன் வழியாக என்ன என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ள விழைகிற, தஸ்தாவெஸ்கியிடம் செயல்பட்ட மனநிலையைத்தான், `சாமியார் ஜுவுக்குப் போகிறார் கதையில் நான் பார்க்கிறேன். கதையில் ஜுவை இவர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த புலியை ஒருவர் சுட்டுக்கொன்று விடுகிறார். அதற்கு முந்தின வரியில் சம்பத் எழுதுகிறார். `உலகத்தில் மிக முக்கியமானது பசி என்று நினைக்கிறேன்.’ இது அந்த பெண்ணுடைய வாக்கியம். நான் முன்பு பெண்களை விரும்பாதவனாக இருந்தேன். இப்போது இவருடைய மனைவி ஆன பின்னாடி இவர்தான் எனக்கு இந்த மாதிரியான இன்பம் எப்படியிருக்கும் என்று சொன்னார். அப்போதுதான் எனக்கு ரொம்ப பசிக்க ஆரம்பித்தது. நான் எல்லாவற்றையும் சாப்பிடத் தொடங்கினேன். அப்புறம் சாப்பாடு என்பது எனக்கு மிகவும் முக்கியமானதாகிவிட்டது. அப்புறம் இந்த புலியை சுடும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்புறம் தொடர்ந்து சம்பத் எழுதுகிறார். `நம்முடைய மிருகவுணர்ச்சி அடங்கவே மாட்டேன்கிறது. அடங்காத நம் மிருக உணர்ச்சியின் பலிதான் இந்த புலி.’ இது திடீரென்று அவரை சாவை நோக்கித் தள்ளுகிறது. பின்பு வாழ்வை புரிந்துகொள்வதற்கான ஒரு எத்தனிப்பு அவரிடம் தொடங்குகிறது.

`ஆல் தட் ஜாஸ்’ என்ற படத்தில் ஒரு நடன இயக்குநர் சாவை தொடர்ந்து கவனித்துக்கொண்டேயிருக்கிறார். சாவு தேவதைபோன்று மிக அழகாக மணப்பெண் உடை அணிந்து இருக்கிறது. நடன இயக்குநர் சாவின் அருகில் உட்கார்ந்து அதனுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த படம் சொல்கிறது : `சாவு என்பது ஒரு உரையாடல்.’ ஆனால், அந்த உரையாடல் மௌனத்தையும் கூடவே வைத்துக்கொண்டேயிருக்கிறது. சாவு நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல் பயமுறுத்தக்கூடிய ஒன்று இல்லை. அது மிகவும் வசீகரமானது என்கிறது இந்த உரையாடல். நாம் அதனுடைய அருகாமையில் போய், அதன் வாசனையை நுகர்ந்து, மெல்ல மெல்ல அதை நமக்குள் அனுமதிப்பது. இது ஒருவகையில் பார்த்தால் சாவு என்பது ஒரு கலை என்றாகிறது. இந்த கலை வாழ்தலுடைய ஒரு பகுதிதான்.

பொதுவாக இந்திய மரபில் சாவு என்பது பயமுறுத்தக்கூடிய ஒரு விஷயமல்ல. சாவு என்பதன் வடிவம் இங்கு மாறிக்கொண்டேயிருக்கிறது. சாவை நாம் நம்மைச்சுற்றி தினமும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறோம், மழை பெய்கிறது மாதிரி, வெயில் அடிப்பது மாதிரி. நம்முடைய இருப்பு சார்ந்த நம்முடைய அவதானிப்புகள் திடீரென்று துண்டிக்கப்படும் போது என்னவாகிறது. புதுமைப்பித்தனுடைய மகாமசானம் கதையில் ஒரு கிழவர் சாவுக்காக காத்திருக்கிறான். அவர் எழுதுகிறார். அங்கு நல்ல நிழல் இருந்தது. சாவதற்கு நிழல் எவ்வளவு ஒரு மிக அழகான இடம் என்று. தஸ்தாவெஸ்கி கதையில் மழையில் நனைந்த ஒரு குழந்தை பனி நாளென்று இறந்துபோய்விடுகிறது. விடிகாலையில் குடும்பமே உட்கார்ந்து அழுதுகொண்டிருக்காங்க. இறந்த குழந்தையின் அக்காவுக்கு பக்கத்திலிருப்பவங்க ஒரு சாக்லெட்டைக் கொடுக்காங்க. இங்கே தஸ்தாவெஸ்கி எழுதுகிறார். `சாவு சுவையை மாற்றிவிடுகிறது’ என்று.

சம்பத்துடைய மிக முக்கியமான கண்டுபிடிப்பாக `சாவு என்பது ஒரு இடைவெளி’யாக இருக்கிறது. தஸ்தாவெஸ்கி கில்லெட்டின் தண்டனை பற்றி எழுதுகிறார். கில்லட்டினில் தலையை வைத்திருக்கிறான் ஒருவன். தலை துண்டிக்கப்பட இருக்கிறவனுடைய கழுத்தை நோக்கி கில்லட்டினுடைய கத்தி இறங்கி கொண்டேயிருக்கிறது. அந்த சப்தத்தை அவன் கேட்டுக் கொண்டேயிருக்கிறான். கில்லட்டினுடைய பிளேட் நுனி அவனுடைய கழுத்தை தொடுவது வரைக்கும் அந்த சப்தம் அவனுக்குக் கேட்கிறது. அப்புறம் தஸ்தாவெஸ்கி எழுதுகிறார். `அந்த சப்தம் துண்டிக்கப்பட்டது’. தஸ்தாவெஸ்கியினுடைய ஆழ்ந்த வாசகன் ஒருவனால் சப்தம் கேட்டதற்கும் துண்டிக்கப்பட்டதற்கும் இடைப்பட்ட இடைவெளியை புரிந்து கொள்ள முடியும். சம்பத்தும் இதுபோன்ற ஒரு இடைவெளியைத்தான் முன் வைக்கிறார்.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்