Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Nov 14, 2013

பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி – சாரு நிவேதிதா

தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை. வீடு என்றால் எதுவும் தனி வீடு அல்ல. ஒண்டுக்குடித்தனம்தான். அநேகமாக எல்லா வீடுகளிலும் வீட்டுச் சொந்தக்காரர்களுடன் தான் குடியிருக்க நேர்ந்தது. ஒரு வீட்டில் வீட்டுக்காரர் தீவிர ராமபக்தர். குளிர்காலத்தில் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து ராமபஜனை. குளிர்காலமாக இருப்பதால் கண்ணாடி ஜன்னல்களெல்லாம் மூடியிருக்கும். வீட்டுக்காரர் தொண்டையைக் கிழித்துக் கொண்டு p5 கத்தும் ‘ஓம் ஜெய ஜெகதீச ஹரி! ஸ்வாமி ஜெய ஜெகதீச ஹரி!’ என்ற சத்தம் வெளியே போக வழியின்றி, வீட்டின் சுவர்களிலும் கண்ணாடி ஜன்னல்களிலும் மோதி மோதி எதிரொலிக்கும். அது போதாதென்று ஜால்ரா சத்தமும் சேர்ந்துகொள்ளும். வீட்டுக்காரரின் மனைவி டோலக்கை திரும்பப் பாடுவாள். நடுக்கும் குளிரில் எழுந்து உட்கார்ந்துகொண்டு ரஜாயை விட்டு வெளியே வர மனசில்லாமல் பஜனை சத்தத்தில் செவிப்பறைகள் கிழிய கண்கள் திகுதிகுவென்று எரிய என்ன செய்வதென்று புரியாமல் உட்கார்ந்திருக்கிறோம். மற்றொரு வீட்டில் கக்கூஸ் பிரச்சினை. அந்த வீட்டில் வீட்டுக்காரரும், அவர் மனைவியும் கக்கூஸ் போய்விட்டு கைகளை நன்றாக சோப்புப் போட்டு கழுவுவார்களே ஒழிய, கக்கூஸில் போதிய அளவு தண்ணீர் விட வேண்டும் என்று தெரியாது. தில்லியிலிருந்து சென்னை போகும் போது காலையில் எழுந்து ஜன்னல் வழியே பார்த்தால், மக்கள் ஒரு சோடா புட்டியில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒதுக்குப்புறமாக போவது தெரியும். அங்கேயாவது தண்ணீர்ப் பிரச்சினை என்று சொல்லலாம். இங்கு அந்தப் பிரச்சினையும் இல்லை. “நாற்றம் தாங்க முடியவில்லை. நிறைய தண்ணீர் விடுங்கள்” என்று வீட்டுக்காரரிடம் சொன்னேன். “கக்கூஸ் நாறத்தானே செய்யும்; இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?” என்று கேட்டுவிட்டு கிராமங்களில் மக்கள் தண்ணீர் இல்லாமல் எப்படி அவதிப்படுகிறார்கள் என்பது பற்றியும், அப்படி இருக்கும்போது இங்கு நகரங்களில் நாம் கக்கூஸுக்கென்றே எத்தனை கேலன் தண்ணீரைக் கொட்டி வீணடிக்கிறோம் என்பது பற்றியும் விரிவாக ஒரு லெக்சர் கொடுத்தார். ஆக, அவரும் அவர் மனைவியும் போய்விட்டு வந்தால், நானேதான் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இப்படி ஒவ்வொரு வீடாக மாற்றிக்கொண்டிருந்தபோதுதான் ஒரு நாள் என் நண்பர் ஒருவர், தான் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், தன் வீட்டில் இரண்டு மூன்று வருடங்கள் வந்து இருந்து கொள்ளலாம் என்றும் சொன்னார். ஆனால் அதில் ஒரே ஒரு பிரச்சினை இருந்தது. நண்பரின் வீடு ‘ஜமுனா பாக்’ என்று சொல்லப் படுகிற கிழக்கு தில்லியில் இருந்தது. கிட்டத்தட்ட தில்லி ஜனத்தொகையில் பாதி அளவு மக்கள் கிழக்கு தில்லியில் இருந்தாலும், இந்த ‘ஜமுனா பாக்’ பகுதி என்பது, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு சராசரி நபருக்கு அச்சுறுத்தல் தரும் ஒரு இடமாகத்தான் இருந்து வருகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நபர்கள் கடத்தப்படுதல், தில்லியின் மிகப்பெரிய மலிவுவிலை சாராயக்கடை போன்ற விஷயங்களே இதற்குக் காரணமாகக் கருதப்பட்டாலும், எனக்கு என்னவோ தில்லியை கிழக்கு தில்லியுடன் இணைக்கும் இரண்டு பாலங்கள்தான் மிகப்பெரிய பிரச்சினை என்று தோன்றியது.

இருக்கின்ற மக்கள் தொகைக்கும், வாகனங்களுக்கும் இதுபோல் ஒரு பத்து பாலமாவது தேவைப்படலாம் என்கிற நிலையில் இந்த இரண்டு பாலங்கள். பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் ஆயுதமேந்திய போலீசார். வாகனங்களை நிறுத்திச் சோதித்துப் பார்ப்பதற்காக தடைகள். ஒவ்வொரு வாகனமும் இந்தத் தடையைத் தாண்டிச் செல்ல வேண்டியிருப்பதால், எப்போதுமே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் டிராஃபிக் ஜாம். ஒரு ஆள் நடந்து செல்லும் வேகத்தைவிட குறைவான வேகத்தில்தான் வாகனங்கள் ஊர்ந்து செல்லும். இதற்கிடையில் ஏதாவது ஒரு வாகனம் முந்திச் செல்ல முயன்று, ஏடாகூடமாக மாட்டிக் கொண்டுவிட்டால், ஒரு வாகனம் கூட நகர முடியாமல் போய், நிலைமை சீராக பல மணி நேரம் ஆகும். பஸ்ஸை விட்டு இறங்கி ஓடச் செய்யும் அளவுக்கு எல்லா வாகனங்களிலிருந்தும் கேட்கும் ஹாரன் சப்தங்கள். பாலத்தை ஒவ்வொரு முறை தாண்டும்போதும் ஜமுனா பாகிற்கு வந்திருக்க வேண்டாம் என்று தோன்றும்.

மீனாவுக்கோ வேறுவிதமான கவலைகள். மயூர் விஹாரின் மூன்றாவது செக்டாரின் பிரதான சாலையில் ஒரு தென்னிந்தியத் தம்பதி நடந்து சென்று கொண்டிருக்கும்போது, அவர்களின் அருகே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று, அந்தப் பெண்ணை ஆட்டோவில் இழுத்துப் போட்டுக்கொண்டு சென்றுவிட்டது. பட்டப்பகலில் நடந்த நிகழ்சி. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டதால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. மறுநாள் தினசரிகளில் வந்திருந்தது. இன்னொரு சம்பவம். இதுவும் எங்கள் மூன்றாவது செக்டாரிலேயே நடந்த நிகழ்ச்சிதான். காலை பதினோரு மணி அளவில் ஒரு கதவைத் திறந்து பார்ப்பது வழக்கமில்லை என்பதால், கதவின் ‘பீப் ஹோல்’ வழியே எட்டிப் பார்த்திருக்கிறார் வீட்டிலிருந்த பெண்மணி. மூன்று வாட்டசாட்டமான ஆட்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து சற்றுத் தயங்கி, “நீங்கள் யார்? என்ன வேண்டும்?” என்று கேட்க, ”நாங்கள் ‘தேஸு’ (1)விலிருந்து வந்திருக்கிறோம்; இந்த வீட்டின் மீட்டர் ரொம்ப வேகமாக ஓடுவதாக புகார் வந்திருக்கிறது; பார்க்க வேண்டும்” என்று சொல்ல, மறுபேச்சு பேசாமல் கதவைத் திறந்துவிட்டிருக்கிறாள் அந்தப் பெண். அவளைக் கற்பழித்து கொலை செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் அந்த நபர்கள்.மறுநாள் தினசரிகளில் வந்திருந்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் மீனாவை ரொம்பவும் கலவரப் படுத்தியிருந்தது.

“நாம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன செய்யமுடியும்?” என்று ஏகப்பட்ட தைரிய வார்த்தைகள் கூறி, இந்த வீட்டினால் கிடைத்திருக்கும் அனுகூலங்களையும் விலாவாரியாக எடுத்து விளக்கினேன்.

கிரௌண்ட் ஃப்ளோர் வீடு. ஒண்டுகுடித்தனப் பிரச்சினை இல்லாதது. விசாலமான ஹால். தனி கிச்சன், படுக்கை அறை, இரண்டு வாசல், ஒரு சின்ன தோட்டம் போடும் அளவுக்கு நிலம், ஏதோ பெயருக்கு ஒரு வாடகை.

”இத்தனை வசதிகளுக்காக இந்தக் கிழக்கு தில்லியைப் பொறுத்துக் கொள்” என்றேன்.

இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே ரேக்கி எனக்குப் பழக்கமானான். சாமான்கள் டெம்போவில் வந்து இறங்கியபோது ஒரு பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சர்தார் பையன், “இஸ் கர் மே ஆப் ஹீ நயா ஆரஹே ஹே(ங்) அங்கிள்? ஆப் கா நாம் க்யா ஹை?” என்று என்னைக் கேட்டான். “பெஹலே ஆப்கா நாம் பதாவோ?” என்றேன். “மேரா நாம் ரேக்கி ஹை... உதர் தேக்கியே.. இஸ் சடக் கே உஸ்தரா.. ஏக் குருத்வாரா திகாயி படுதீ ஹை நா. உஸ் கே நஸ்தீக் கர்” என்றான் சிறுவன்.

மீனாவைப் பார்த்து, “பயல் படுசுட்டியாகத் தெரிகிறார்னே” என்றேன். சொன்னதும் ரேக்கி என்னைப் பார்த்து, “சுட்டின்னா என்ன அங்கிள்?” என்று தெளிவான தமிழில் கேட்டான்.

ஆச்சரியத்துடன், “உனக்கு எப்படித் தமிழ் தெரியும்?” என்று கேட்டேன்.

”நான் தமிழ் ஸ்கூலில்தான் படிக்கிறேன் அங்கிள். என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் கூட தமில்தான். அதனால் தமில் தெரியும் எனக்கு. ஆனால் சுட்டின்னா என்ன அங்கிள்?”

“சுட்டின்னா ‘நாட்டி’. இந்தியில் ‘நட்கட்’. அது சரி, உன் அப்பா எங்கே வேலை பார்க்கிறார்?”

அப்பாவைப் பற்றிக் கேட்டதும் அவன் முகம் மாறுதல் அடைந்தது. இவ்வளவு நேரம் அவன் கண்களில் தெரிந்த ஆர்வமும் ஒளியும் மங்கிப் போனது.

“க்யா ஹுவா ரேக்கி?”

“குச் நஹி அங்கிள். அப்னி கஹானி ஔர் ஏக் தின் போலுங்கா.”

கஹானியா? பன்னிரெண்டு வயதுப் பையனுக்கு ஒரு கஹானி இருக்க முடியுமா? அப்படி இருந்தால் அது மிகவும் சோகமானதாகத்தான் இருக்க முடியும் என்று தோன்றியது.

பிறகு ரேக்கி படிக்கும் பள்ளியைப் பற்றி விசாரித்துக்கொண்டேன். லோதி ரோட்டிலுள்ள தமிழ்ப் பள்ளி. இங்கிருந்து தொலைவுதான் என்றாலும், ஸ்கூல் பஸ்ஸே இருப்பதாகச் சொன்னான் ரேக்கி. என் மகள் ரேஷ்மாவையும் அந்தப் பள்ளியில்தான் சேர்ப்பதாக இருந்ததால், இந்த விபரங்கள் சற்று நிம்மதி அளித்தன.

ரேஷ்மா ரேக்கியோடு ரொம்பவும் ஒட்டிக்கொண்டாள். எப்போதும் எங்கள் வீட்டிலேயே இருந்துவிட்டு, இருட்டிய பிறகுதான் வீட்டுக்குப் போவான் ரேக்கி. சில சமயங்களில் அவனுடைய அம்மா வந்து அழைத்துப் போவாள்.

அவன் குறிப்பிட்ட கஹானி பற்றி அவனிடம் கேட்டு அவனை வருத்தமடையச் செய்ய வேண்டாம் என்று நினைத்து, அவனிடம் அதைப் பற்றிபிறகு நான் கேட்கவில்லை. ஆனால் அடிக்கடி அவனுடைய அம்மாவைத்தான் பார்த்திருக்கிறேனே ஒழிய, அவனுடைய அப்பாவைப் பார்த்ததில்லை என்ற விஷயம் உறுத்திக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் ரேஷ்மா, “வெளியே டாட்டா போய் ரொம்ப நாளாகிறது. எங்கேயாவது அழைத்துப் போ” என்றாள். “வருகிறாயா ரேக்கி? உன் அப்பா ஒத்துக் கொள்வாரா?” என்று கேட்டேன். கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, “ஓகே அங்கிள், அப்னி கஹானி பதாவுங்கா அபி” என்று சொல்ல ஆரம்பித்தான்.

ரேக்கியின் அப்பா - சர்தார் சுச்சா சிங் - ராணுவத்தில் பணியாற்றியவர். சிறந்த ராணுவ வீரருக்கான விருதுகளும் பெற்றவர். மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் பஞ்சாப் தீவிரவாதிகளை அடக்குவதற்கான சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டு பஞ்சாபுக்கு அனுப்பப்பட்டார். லால் கிலாவில் கலிஸ்தான் கொடியை ஏற்றியே தீருவேன் என்று சபதமிட்ட கொடிய தீவிரவாதியான சந்த் பிந்த்ரான்வாலேயை ஒழித்துக் கட்டுவதற்காகச் சென்ற மாதம் நடந்த பயங்கர சண்டையின் போது உயிர்நீத்த ராணுவ வீரர்களுள் சர்தார் சுச்சா சிங்கும் ஒருவர். அவரது வீரச் செயலை மெச்சி நன்றிக்கடனாக அவரது மனைவியான ஜஸ்பீர் கௌருக்கு ஒரு அரசு அலுவலகத்தில் வேலையும் தரப்பட்டது. ஜஸ்பீர் கௌருக்கு படிப்பு கிடையாது என்பதால், சப்ராஸி வேலை தான் கிடைத்தது.

ரேக்கியிடமிருந்து இந்தக் கஹானியைக் கேட்டதும், போன மாதத்து பேப்பர் கட்டை எடுத்துவந்து, ஜூன் 5க்கு மேற்பட்ட பேப்பர்களைப் புரட்டினேன். நீல நட்சத்திர நடவடிக்கை என்பது எங்கோ நடந்த விஷயம் என்பதாக இருந்தது மாறி, இப்போது என்னருகே நெருங்கி வந்து என் வீட்டுக்குள்ளேயே நுழைந்து விட்டதாகத் தோன்றியது. உயிர் நீத்த மொத்த ராணுவ வீரர்கள் 83 பேர் என்றும், காயமுற்ற ராணுவ வீரர்கள் 248 பேர் என்றும், பொது மக்களும் தீவிரவாதிகளும் சேர்ந்து முப்பது பெண்களும் ஐந்து குழந்தைகளும் அடக்கம் என்றும் செய்தித்தாளில் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஹர்மந்திர் சாஹிபைத் தவிர, தர்பார் சாஹிபின் பல பகுதிகலும் டாங்கிகளால் சின்னாபின்னமாக்கப் பட்டிருந்த புகைப்படங்களும் இப்போது வேறுவித அர்த்தத்தைத் தருவனவாகத் தோன்றின.

ஒரு மாதத்திற்கு முன்பு வெறும் எண்களாகத் தெரிந்த விபரங்கள், இப்போது ரத்தமும் சதையுமாக - எத்தனையோ பேரை அனாதைகளாக விட்டுப் போய்விட்ட மனித உயிர்களாகத் தெரிய ஆரம்பித்தன. சர்தார் சுச்சா சிங்கின் தியாகத்திற்காக ஜஸ்பீர் கௌருக்கு மெடல் தரும்போது, இந்த ரேக்கி என்கிற, அப்பாவை இழந்த சிறுவனைப் பற்றி அரசு யோசிக்குமா? வேதனையோ, கவலையோ அடையுமா? எந்த காரணத்திற்காக இவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள்? எடுத்துவிட்டெறிந்து செலவு செய்வதற்கு, இந்த ராணுவ வீரர்களெல்லாம், அரசாங்கத்தின் பாக்கெட்டிலிருக்கும் நயாபைசாக்களா?

மீண்டும் மீண்டும் அந்தச் செய்தித்தாள்களையே புரட்டிக் கொண்டிருந்தேன். தீவிரவாதிகளைப் பற்றியும், அவர்களிடமிருந்த வெடி மருந்து மற்றும் நவீன ரக ஆயுதங்கள் பற்றியும், சுரங்கப் பாதைகள் பற்றியும், நிலவறைகள் பற்றியும், அகால் தக்தை நோக்கி முன்னேறிய ராணுவ வீரர்கள் குருவிகள் சுட்டுக் கொல்லப்படுவது போல் ஒவ்வொருவராக சுடப்பட்டு வீழ்ந்தது பற்றியும், வேறு வழியில்லாமல் டாங்கிகள் அனுப்பப்பட்டு அகால் தக்தின் பெரும் பகுதி அழிந்து விட்டது பற்றியும், நிச்சயமாக ஒரு கார்சேவா மூலம் அழிந்துவிட்ட அகால் தக்தை மீண்டும் நிர்மாணிப்போம் என்று அறிவித்த அரசாங்கத்தின் உறுதிமொழி பற்றியும் பக்கம் பக்கமாகப் பேசியது செய்தித்தாள்...

அகால்தக்த் - காலமற்றவனின் அரியணை - அகாலத்தை காலத்திற்குள் அடக்கும் முயற்சியில் ஒரு அகால் தக்த் - காலத்தை அகாலமாக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள்! கார் சேவா அகாலத்திற்கு ஒரு அரியணை அமைத்துவிடலாம். ஆனால் தங்கள் காலம் பலவந்தமாகப் பறிக்கப்பட்டு அகாலமான அவைகளுக்கான காலத்தை அளிக்க ஏதாவது ஒரு கார் சேவா இருக்கிறதா?

ரேக்கியும் அந்த செய்தித்தாள்களைப் பார்த்தபடியே என்னருகில் உட்கார்ந்திருந்தான்.

ரேக்கியின் கதையைக் கேட்ட பிறகு அவன் மீது எனக்கிருந்த ஈடுபாடு அதிகமாயிற்று.

”எங்கே போகலாம் ரேக்கி? உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வா. வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியே போகலாம். எங்கே போகலாம் என்று நீயும் ரேஷ்மாவும் முடிவுசெய்து கொள்ளுங்கள்” என்றேன்.

ரேஷ்மாவும் ரேக்கியும் கூடிக் கூடிப் பேசினார்கள். பஞ்சாபியிலேயே பெசிக்கொண்டார்கள். ரேக்கியுடன் பேசிப் பேசி பஞ்சாபியை சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டு விட்டாள் ரேஷ்மா.

இருவருமாக பேசி முடித்துக் கடைசியில், “லால் கிலா போகலாம் அங்கிள்” என்றான் ரேக்கி.

”லால் கிலாவா? அங்கே உங்களுக்கு ‘போர்’ அடிக்குமே? அதோடு உள்ளே போய் ரொம்ப அலையவும் வேண்டியிருக்கும். வேறு எங்காவது கனாட் பிளேஸ், பாலிகா பஸார் என்று போனால் ஜாலியாக இருக்கும். ஷாப்பிங்கும் செய்யலாம்” என்றேன்.

“அதற்கில்லை அங்கிள். அந்த பிந்த்ரான்வாலே லால்கிலாவில் கலிஸ்தான் கொடியைப் பறக்க விடுவேன் என்று சொன்னதால்தானே சண்டை வந்து, என் அப்பா செத்துப் போனார். அதனால்தான் அந்த லால் கிலாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது” என்றான்.

தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபொழுது ரேக்கி இதுவரை ஒரு சினிமாகூட சினிமா தியேட்டருக்குச் சென்று பார்த்ததில்லை என்றும் தெரிந்தது. எல்லாம் டி.வி.யில்தான் பார்த்திருக்கிறான்.

மாதம் ஒரு இடம் என்று ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தோம்: லால் கிலா, கனாட் பிளேஸ், பாலிகா பஸார், ஒரு நல்ல இந்தி சினிமா, ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்ட். முதலில் லால் கிலா. மீனா எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டதால் நானும், ரேஷ்மாவும், ரேக்கியும் கிளம்பினோம். ரேஷ்மாவுக்கும், ரேக்கிக்கும் லால் கிலா மிகவும் பிடித்துப் போயிற்று. குதித்துக் குதித்து ஓடினார்கள். திவானி ஆம், திவானி காஸ் என்ற இரண்டு மண்டபங்களிலும் ஓடிப்பிடித்து விளையாடினார்கள். சேஷ் மஹாலின் கண்ணாடி வேலைப்பாடுகளைப் பார்த்து பிரமித்து நின்றார்கள். ‘தங்கத்தால் செய்து வைரத்தால் இழைத்த மயிலாசனம் இங்கேதான் இருந்தது’ என்று எழுதப்பட்டிருந்த இடத்தில் நின்றுகொண்டு, அந்த மயிலாசனத்தை யார் எடுத்துப் போனது என்று கவலைப்பட்டார்கள். ஔரங்கசீப் கட்டிய ‘பேர்ள் மாஸ்க்’ பூட்டியிருந்ததால், அதன் கதவிலிருந்த துளைகளின் வழியே எட்டிப் பார்த்தார்கள்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு வெளியே வரும்போது அங்கேயிருந்த ராணுவ முகாம்களைப் பார்த்தோம். ரேக்கி ஏதாவது கேட்பான் என்று எதிர்பார்த்தேன். அவன் ஒன்றும் கேட்கவில்லை. உற்சாகமாக ரேஷ்மாவுடன் பஞ்சாபியில் பேசிக்கொண்டு வந்தான். ரேஷ்மாவின் பஞ்சாபியையும் அவளுடைய உச்சிக் கொண்டையையும் பார்த்தால் அவளை ஒரு தமிழ்க் குழந்தை என்றே சொல்ல முடியாது போல் தோன்றியது. குழந்தைகள் இருவரும் பஞ்சாபியில் பேசிக் கொண்டு என்னுடன் தமிழில் பேசுவதையும், அவர்களுடன் வந்திருக்கும் ஒரு தென்னிந்தியனான என்னையும் மற்றவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.

வெளியே வந்தபோது மணி ஏழு ஆகியிருந்தது. கோடைக்காலமாதலால் இன்னும் சூரியன் மறையவில்லை. குழந்தைகள் களைத்துப் போயிருந்ததால், இப்படியே பஸ் பிடித்து வீட்டுக்குப் போவதை விட, கனாட் பிளேஸ் போய் சைனீஸ் ரெஸ்டாரெண்டில் சாவகாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. ரேக்கியும், ரேஷ்மாவும் என் யோசனையைக் கேட்டு மீண்டும் உற்சாகமானார்கள்.

ரெஸ்டாரண்டின் உள்ளே நுழைந்ததும் - அதன் அரையிருட்டு - மேலே தொங்கிக் கொண்டிருந்த அலங்கார வண்ண விளக்குகள் - சர்வர்களின் நீண்ட தொப்பி - மேஜையின் மேல் ஒரு அலங்காரமான கிளாஸில் வைக்கப்பட்டிருந்த கை துடைக்கும் பேப்பர் - மிக மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்த பாப் இசை - எல்லாமாகச் சேர்ந்து அந்த சூழலை ஏதோ ஒரு கனவுலகத்தைப் போல் ஆக்கியிருந்தது. ஆச்சரியத்துடன் சுற்றுமுற்றும் பார்த்த ரேஷ்மா, “சினிமாவில் பார்ப்பது போல் இருக்கிறதே!” என்றாள்.

“ஆனால் நான் என் அப்பாவுடன் ஒரு தடவை கூட இது மாதிரி இடங்களுக்குப் போனதில்லை” என்றான் ரேக்கி. கொஞ்சம்கூட தன் வருத்தத்தை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல், வெகு சாதாரணமான தொனியில் சொன்னான். மெனுவைக் கொண்டு வந்து கொடுத்தார் சர்வர். இருட்டில் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் படிக்க வேண்டியிருந்தது. “முதலில் மூன்று சிக்கன் சூப் கொண்டு வாருங்கள். மற்றதை அப்புறம் சொல்கிறேன்” என்றேன்.

சோலே பட்டூரா, பாலக் பனீர், கோஃப்தா, நான், பிரெட் பீஸ் மசாலா, ஆலு ஃப்ரை என்று அயிட்டங்களின் சாதக பாதகங்களையும் பற்றி விவாதித்துவிட்டு, கடைசியில் இரண்டு சிக்கன் நூடுல்ஸ் வாங்கி மூன்றாகப் பங்கிட்டுச் சாப்பிடலாம் என்று முடிவாயிற்று. “இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்து வெறும் நூடுல்ஸ்தானா?” என்று கேட்டேன்.

“அதையே சாப்பிடலாம் அங்கிள். மற்ற அயிட்டமெல்லாம் தான் வீட்டிலேயே கிடைக்கிறதே? அதோடு, சாப்பாடா முக்கியம்? இந்த இடமே போதுமே அங்கிள்?” என்றான் ரேக்கி. சொல்லிவிட்டு உடனே, “இந்த மாதிரி ஒரு இடத்திற்குக் கூட என் டாடியுடன் போனதில்லை அங்கிள்” என்றான். “அவர் இங்கே வேலையில் இருந்தபோது எப்போது பார்த்தாலும் வேலை வேலை என்றுதான் கிடந்தாரே ஒழிய, ஒரு இடத்திற்குக் கூட என்னை அழைத்துப் போனதில்லை. ‘இப்படியே வேலை வேலை என்று இரவு பகலாக அலைந்தால் பைத்தியம்தான் பிடிக்கும்’ என்று சொல்லுவாள் மம்மி. ஆனாலும் அவர் அதை கண்டுகொண்டதே இல்லை. எது கேட்டாலும் அதை வாங்கிக் கொண்டு வந்து தருவார். அல்லது மம்மியிடம் பணம் கொடுத்து வாங்கித் தரச் சொல்லுவார். ஆனால் ஒரு தடவை கூட.. சூப் தோ பஹூத் படியா ஹை அங்கிள்... ஒரு தடவை தாஜ்மஹால் போயிருக்கிறோம். அப்போது கூட டாடி எங்களுடன் வரவில்லை. வீட்டுக்கு வந்திருந்த சாச்சி(2) கூடத்தான் நாங்கள் போனோம். ரொம்ப அன்பாகவும், செல்லமாகவும் பேசித் தட்டிக்கழித்து விடுவார். நானும் விடாப் பிடியாக அவருடன் பேசிப் பேசி ஒரு முறையாவது எங்களுடன் வரவேண்டும் என்று சொல்லி, கடைசியில் தர்பார் சாஹிப் போவது என்று முடிவாயிற்று.

ஆனால், அதே சமயத்தில்தான் தர்பார் சாஹிபில் ஏதோ பிரச்சினை என்று சொல்லி, அவருக்கு அங்கே ஸ்பெஷல் டியூட்டி போட்டார்கள். மம்மியுடனும், என்னுடனும் சேர்ந்து மூவருமாக தர்பார் சாஹிப் போக இருந்த சமயத்தில்தான் அவர் மட்டும் ஸ்பெஷல் டியூட்டியில் போனார். ‘திரும்பி வந்து அழைத்துச் செல்கிறேன்; நிச்சயம் நாம் ஒன்றாகச் சேர்ந்து போகலாம்’ என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால் டாடி திரும்பவே இல்லை அங்கிள். இன்னும் கொஞ்சநாள் கழித்து மம்மியை அழைத்து மெடல் கொடுப்பார்கள். ராணுவ உடுப்பில் கம்பீரமாக இருந்த டாடி, ஒரு சின்ன உலோகமாக மாறிவிடுவார்! உலோகத்துடன் பேச முடியுமா, அங்கிள்....?”

“ஆவியிடம் உங்களுக்கு நம்பிக்கை உண்டா அங்கிள்? ஆவியுடன் நாம் பேச முடியும் என்கிறார்களே, அது உண்மையா? அது உண்மையானால் என் டாடியின் ஆவியுடன் நான் பேச வேண்டும். பேசி என்னை ஏன் ஒருமுறை கூட உங்களுடன் வெளியே அழைத்துப் போனதில்லை என்று கேட்க வேண்டும். அவர் ஒருவேளை ஒரு முரட்டு அப்பாவாக, எதற்கெடுத்தாலும் அடித்துக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருந்திருந்தால் கூடப் பரவாயில்லை அங்கிள். அவர் என்னை ஒரு வார்த்தை கூடத் திட்டியதில்லை. டாடி வீட்டில் இருந்த நேரம் குறைவு. அநேகமாக எல்லா நாட்களிலும் நைட் டியூட்டி. பகலில் நான் ஸ்கூலுக்குக் கிளம்புகிற நேரத்தில்தான் வருவார். வந்தவுடன் என்னை அணைத்து முத்தமிடுவார். கொஞ்சுவார். ஸ்கூலுக்குப் போகாமலேயே இருந்து விடலாம் என்று இருக்கும். ஆனால் மம்மி திட்டுவாள்.போய் விடுவேன். மதியம் மூன்று மணிக்கு ஸ்கூல் முடிந்து வந்து பார்த்தால் அவருடைய பைக் இருக்காது. ‘நைட் டியூட்டிக்கு இப்போதே ஏன் போக வேண்டும் மம்மி?’ என்று கேட்டால், ‘இப்போது சொன்னால் உனக்குப் புரியாது; நீ வளர்ந்து பெரியவனான பிறகு சொல்கிறேன்’ என்பாள் மம்மி. பகல் டியூட்டியாக இருந்தால் தான் டாடியோடு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க முடியும். இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு வருகிறவர் நான் தூங்கும் வரை பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார். டாடியின் ஆவியுடன் பேச முடிந்தால், ‘ஏன் என்னையும், மம்மியையும் ஒரு முறை கூட வெளியே அழைத்துப் போனதில்லை? வேலை வேலை என்று வேலையே கதியாக இருந்து, வேலையிலேயே உயிர் விடவா திருமணம் செய்து கொண்டீர்கள்?’ என்று கேட்க வேண்டும். ஆவியுடன் பேச முடியுமா அங்கிள்?” உணர்ச்சியை குரலிலோ, முகத்திலோ வெளிக்காட்டிக் கொள்ளாமல், அழாமல் வேறு யாருக்கோ நடந்த ஒன்றைப் பற்றி விவரிப்பது போல் சொன்னான் ரேக்கி.

லால் கிலாவுக்குப் போய்வந்த பிறகு ஒருமுறை கனாட் பிளேஸும், பாலிகா பஸாரும், மற்றொரு முறை பிரகதி மைதானமும் போய் வந்தோம். ஆனால் சினிமாவுக்கு மட்டும் போக முடியாமலேயே இருந்தது. ரேஷ்மாவுக்குப் பிடித்த படம் ரேக்கிக்குப் பிடிக்கவில்லை. ரேக்கிக்குப் பிடித்த படம் ரேஷ்மாவுக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த படமோ குழந்தைகளை அழைத்துக்கொண்டு போக முடியாத படமாக இருந்தது. கடைசியில் ஒரு வழியாக அடுத்த ஞாயிற்றுக்கிழமை கனாட் பிளேஸ் போய் எந்தத் தியேட்டரில் டிக்கெட் கிடைக்கிறதோ அந்தப் படத்திற்குப் போய் விடுவது என்று முடிவு செய்தோம். ஞாயிற்றுக் கிழமைக்காக ரேக்கியும், ரேஷ்மாவும் ஆசையுடன் காத்துக் கொண்டிருந்தபோது, அதற்கு முன்னதாக புதன் கிழமை காலை பத்து மணி அளவில் அந்தச் செய்தி காட்டுத்தீயைப் போல் பரவி, எங்கள் மயூர் விஹாரை வந்து அடைந்தது. அன்று எனக்கு லேசான ஜுரமாக இருந்ததால் நான் ஆஃபிஸ் போகவில்லை. நான் போகாததால் மீனாவும் போகவில்லை. அப்போது பூஜா விடுமுறையாக இருந்ததால், ரேஷ்மாவை கிரஷ்ஷில் விட்டு விட்டு வரவேண்டும். ஆனால் நாங்கள் இருவருமே வீட்டில் இருந்ததால், ரேஷ்மாவும் கிரஷ்ஷுக்குப் போகவில்லை. அப்போதுதான் பிரதம மந்திரி சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்தது. முதலில் புரளி என்று நினைத்தோம். பிறகு கொஞ்ச நேரத்திலேயே அந்தச் செய்தி உண்மைதான் என்று தெரிந்துவிட்டது. வெளியே வந்து பார்த்தேன். கூட்டம் கூட்டமாக மக்கள் லாரிகளிலும், வேன்களிலும் கோஷம் எழுப்பிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். விசாரித்ததில் ஏ.ஐ.எம்.எஸ். போவதாகச் சொன்னார்கள். பிரதம மந்திரியின் உடல் அங்கேதான் இருப்பதாகத் தெரிந்தது. செய்தி கிடைத்ததும் உடனடியாக டெப்போவுக்குப் போய்ச் சேர முடியாமல், வழியிலேயே மாட்டிக்கொண்ட DTC பஸ்களை கொளுத்திவிட்டுக் கொண்டிருந்தார்கள் சிலர்.

எரியும் பஸ்களைப் பார்த்ததும் என்னை பயம் தொற்றிக்கொள்ள, நான் நேராக வீட்டுக்குத் திரும்பினேன். அன்று பூராவும் ரேக்கி எங்கள் வீட்டுக்கு வரவில்லை. அவன் வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாமா என்று நினைத்தேன். ஆனால் மிகவும் களைப்பாக இருந்ததால், நாளைக்குப் போகலாம் என்று விட்டுவிட்டேன்.

நிலைமை சகஜமாவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று தெரியவில்லை. பால் கிடைக்காது. காப்பி குடிக்க முடியாது. அரிசி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கோதுமை மாவு இருந்தாலும் போதும். எத்தனை நாட்களுக்குப் பால் இல்லாமல் ரேஷ்மாவைச் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை. எது எப்படியானாலும் தண்ணீரும், மின்சாரமும், கொஞ்சம் அரிசியும் இருந்தால் சில நாட்களை சமாளித்துவிடலாம் என்று தோன்றியது. ஆனால் கலவரம் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் சுட்டது சீக்கியர்கள். அதிலும் பிரதமரின் மெய்க்காப்பாளர்கள். துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு உத்தரவு என்றெல்லாம் வருமா? யாருக்குத் தெரியும். இதுவரை அப்படி எதையும் நேரில் கண்டதில்லை. அனுபவித்ததும் இல்லை.1947 பிரிவினையின்போது நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி புத்தகங்களில் படித்திருக்கிறேன். அதோடு சரி. ஊரடங்கு உத்தரவு என்றால், வெளியில் யாரைக் கண்டாலும் சுடலாம் என்றுதானே அர்த்தம் என்று பலவாறாக யோசித்துக்கொண்டே தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கிடந்தபோது வெளியே வெகு தூரத்தில் பெரும் கூச்சல் கேட்டு எழுந்தேன். வெளியே வந்து பார்த்தபோது, ரோட்டின் மறுபக்கத்தில் திர்லோக்புரி குருத்வாராவின் வெளியே தீப்புகையும், நெருப்புமாகத் தெரிந்தது. சுற்றிலும் நிழலுருவங்களாக ஒரு கூட்டம். என்ன நடக்கிறதென்று சரியாக அனுமானிக்க முடியவில்லை. ஒருவேளை குருத்வாராவைத்தான் எரிக்க முயற்சிக்கிறார்களோ என்று தோன்றியது. மீனாவிடம் கதவைத் தாளிட்டுக் கொள்ளச் சொல்லிவிட்டு குருத்வாராவின் அருகே போனேன்.

நான்கு பேர் உயிரோடு கொளுத்தப்பட்டு எரிந்து கொண்டிருந்தார்கள். தீப்பிடித்த நிலையில் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்த அவர்களை, சுற்றி நின்றிருந்த கும்பல் கற்களால் அடித்துக் கொண்டிருந்தது. வேறு சிலர் தங்கள் கைகளில் வைத்திருந்த கம்புகளால் அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். உடனேயே எனக்கு ரேக்கியின் ஞாபகம் வர அவனுடைய வீட்டை நோக்கி வேகமாக நடந்தேன். வீடு பூட்டியிருந்தது. எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

பொழுது விடியும் வரை தூங்காமலேயே காத்திருந்தேன். நடு இரவில், புதிய பிரதமர் தூர்தர்ஷனில் பேசினார். “மறைந்த பிரதமர் என்னுடைய அன்னை மட்டுமல்ல; இந்தப் பாரதம் முழுமைக்கும் அன்னையாக விளங்கினார்; ‘ அடுத்த மனிதரைக் கொல்லாதீர்கள். அடுத்த மனிதர் மீதான வெறுப்பைக் கொல்லுங்கள்’ என்று சொன்ன அந்த அன்னையின் வாசகங்களை நாம் இந்த சோதனையான தருணத்தில் நினைவுபடுத்திக் கொண்டு அமைதியையும், பொறுமையும் கடைப்பிடித்து உலகிற்கு பாரதத்தின் பண்பை எடுத்துக் காட்டுவோம்” என்று தெளிவான, அமைதியான குரலில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

விடிந்ததும் எழுந்து 27 பிளாக்கை நோக்கிச் சென்றேன். குருத்வாராவைச் சுற்றிலும், எரிந்து கருகிய பிணங்கள் கிடந்தன. உள்ளே நூற்றுக்கணக்கான பேர் அகதிகளைப் போல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லோருமே நீண்ட வாளோ, அல்லது கம்போ வைத்திருந்தார்கள். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் போய், “நீங்கள் திர்லோக்புரியா? இது பாதுகாப்பான இடம் அல்லவே? நேற்று இரவு இங்கு நடந்த விஷயங்களைப் பற்றித் தெரியாதா?” என்று கேட்டேன். தாங்கள் கல்யாண்புரியைச் சேர்ந்தவர்கள் என்றும், திர்லோக்புரியில் சீக்கியர்கள் அதிக அளவில் இருப்பதால், இங்கே வந்தால் பாதுகாப்பு கிடைக்கும் என்று எண்ணி இங்கே வந்து விட்டதாகவும், இங்கே வந்தபிறகுதான் இங்கேதான் எல்லா இடங்களையும் விட அதிக அளவில் கலவர நடந்திருப்பது தெரியவந்தது என்றும் சொன்னார்.

27வது பிளாக்குக்குப் போய்ப் பார்த்தேன். ஒரு வீட்டில் கூட ஆள் நடமாட்டம் இல்லை.கிட்டத்தட்ட எல்லா வீடுகளுமே பூட்டிக்கிடந்தது. திரும்பி குருத்வாராவுக்கே வந்தேன். என்னிடம் சற்று முன்பு பேசிக்கொண்டிருந்தவரிடம் வந்து, “27வது பிளாக்கில் இருந்தவர்களெல்லாம் எங்கே? எல்லா வீடும் பூட்டிக் கிடக்கிறதே?” என்று கேட்டேன். பாதி பேர் வீட்டை வெளியே பூட்டி விட்டு பின்பக்கம் வழியாக உள்ளே போய் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பெரும் பகுதி மக்கள் 28வது பிளாக்குக்குப் போய் விட்டார்கள் என்றும் சொன்னார்கள். எனக்குக் குழப்பமாக இருந்தது. “28வது பிளாக் முழுக்கவும் இந்துக்கள். அங்கே எப்படி அவர்கள் போனார்கள். அது எப்படி முடியும்?” என்று கேட்டேன். “உங்களுக்கு விஷயமே தெரியவில்லை தம்பி... எங்கள் மக்களுக்கு இந்துக்கள்தான் பெரிய அளவில் பாதுகாப்பு அளிக்கிறார்கள். 27வது பிளாக்கிலுள்ள ரொம்பப் பேர் 28வது பிளாக்கிலுள்ள இந்துக்களின் வீடுகளில்தான் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். எங்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் கொலைகாரக் கும்பலெல்லாம் இந்துக்கள் என்றா நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை. இவர்களுக்கெல்லாம் மதம், கடவுள் என்றெல்லாம் எதுவும் கிடையாது. இவர்கள் குண்டர்கள். அவ்வளவுதான். எங்கிருந்து வருகிறார்கள் என்றே தெரியவில்லை. திடீர் திடீரென்று பத்துப் பதினைந்து ஜீப்புகளில் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். ஒவ்வொரு வீடாகப் போய்ப் பார்த்து சீக்கியனாக இருந்தால் வெளியே இழுத்துக்கொண்டு போய் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொளுத்துகிறார்கள். இவர்களில் பலர் எங்களிடம் முன்னால் ஓட்டுக் கேட்க வந்தவர்கள். அவர்களின் முகம் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. எப்போது அவர்களைப் பார்த்தாலும் என்னால் அடையாளம் காட்ட முடியும்” என்றார்.

ரேடியோ செய்தியில் இன்று கலவரம் நடக்கும் இடங்களுக்கு ராணுவம் அனுப்பப்பட்டிருக்கிறது என்றும், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது என்றும், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் செய்தி கேட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ராணுவமோ போலீஸோ எங்கள் பகுதிக்கு வரவில்லை. இரவுச் செய்தியில் கலவரத்தில் ஈடுபடுகிறவர்களைக் கண்டதும் சுட உத்தரவு இடப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் யார் அமல்படுத்துவார்கள் என்றுதான் தெரியாமல் இருந்தது. எல்லா அரசியல் தலைவர்களும் தீன்மூர்த்தி ஹவுஸில் முடங்கிக் கிடந்தார்கள்.

நேற்று பிரதம மந்திரி சுடப்பட்டபோது, ஜனாதிபதி வெளிநாட்டில் இருந்ததால், செய்தி கிடைத்து அன்று மாலை தில்லி திரும்பி விமான நிலையத்திலிருந்து ஏ.ஐ.எம்.எஸ்.ஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரில் கற்கள் வீசப்பட்டன என்றும், அவரது காரைத் தொடர்ந்து மற்ற கார்களும் கூட கல்வீச்சால் பாதிக்கப்பட்டன என்றும் பி.பி.ஸி. வானொலி தெரிவித்திருந்தது. ஜனாதிபதிக்கே இந்த கதி என்கிறபோது, இந்த சாதாரண மக்களைக் காப்பாற்றுவதற்கு யாரு வரப் போகிறார்கள் என்று தோன்றியது.

தீன் மூர்த்தி ஹவுஸிலிருந்த பிரதமரின் உடலையும், அந்த உடலை தரிசிக்க வந்த மக்களையும் காட்டியபோது, ரொம்பவும் அசாதாரணமான கோஷங்களெல்லாம் எழுப்பப்பட்டன. எந்தவிதத் தணிக்கையும் செய்யப்படாமல் தூர்தர்ஷனில் அப்படியே காட்டப்பட்டது. (உதாரணமாக, ‘பாரத் கீ படி பேட்டீ கோ ஜிஸ் நே கூன்கியா, உஸ் வம்ச கோ மிடாயேங்கே!(3))

முந்தின இரவு முழுக்கவும் தூங்காத காரணத்தால் மிகவும் களைப்பாக இருந்தது. ஆனால் தூங்கவும் முடியவில்லை. அரைத் தூக்கமும், அரை விழிப்புமாக டி.வி.க்கு முன்னே உட்கார்ந்திருந்தேன். திடீரென்று எரிந்து கருகிய, இன்னமும் எரிந்து கொண்டிருக்கிற உடல்களின் நாற்றமும், பெட்ரோல், மண்ணெண்ணை, டீசல் போன்றவற்றின் நாற்றமும் தாங்க முடியாமல் மூக்கை வந்து தாக்கியது. குமட்டலெடுத்தது. இந்த நாற்றமே ஆளைக் கொன்றுவிடும் போலிருந்தது. சாலை நெடுகிலும் ஒரே பிணங்களாகக் கிடக்க, ஒரு ஆள் அந்தப் பிணங்களை எண்ணிக்கொண்டிருந்தான். “யார் நீங்க?” என்று கேட்டேன். “ஜர்னலிஸ்ட்” என்றான். மேலும் சொன்னான். “இதுவரை 639 பிணங்களை எண்ணியிருக்கிறேன். நீங்களும் சேர்ந்து எனக்கு உதவி செய்யுங்கள். குறைந்தபட்சம் இந்தப் பிணங்கள் எவ்வளவு என்று எண்ணியாவது உலகுக்குச் சொல்லுவோம்”. அப்போது அந்தப் பிணக்குவியலிலிருந்து ஒரு பிணம் எழுந்து நடந்து வந்தது. அதன் வயிற்றிலிருந்து வெளியே சரிந்திருந்த குடல் தலைப்பாகையால் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்த பிணம் அப்படியே எங்கள் மீது விழ வயிற்றில் கட்டப்பட்டிருந்த தலைப்பாகைத் துணி அவிழ்ந்து குடல் எங்கள் கைகளில் சரிந்தது. அதே சமயத்தில் யாரோ டமடமவென்று எதையோ தட்டும் ஓசை கேட்டது. கைதட்டல் சத்தமா என்று ஒரு கணம் சந்தேகம் எழுந்தது. அப்படியானால் நடந்தது நாடகமா? நாடகம் முடிந்து கைதட்டுகிறார்களா? பத்துப் பதினைந்து பறைகள் சேர்ந்து ஒலிப்பது போன்ற சத்தம். அலறிக்கொண்டு எழுந்தேன். எதிரே மீனா என்னை உலுக்கி எழுப்பிக் கொண்டிருந்தாள். ”என்ன இது எவ்வளவு நேரம் எழுப்புவது? யாரோ கதவைத் தட்டுகிறார்கள். போய்ப் பார்ப்போம் வாருங்கள்” என்றாள்.

எழுந்து வந்து கதவைத் திறந்தேன். ரேக்கியும் அவன் அம்மாவும். அவர்களை உள்ளே அழைத்து கதவைச் சாத்திவிட்டு “என்ன ஆயிற்று? உங்கள் வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியிருந்தது. எங்கே போயிருந்தீர்கள்?” என்று பதட்டத்துடன் கேட்டேன்.

அவர்கள் இருவராலும் ஒன்றும் பேச முடியவில்லை. தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தேன். தண்ணீரைக் குடித்துவிட்டு சற்று ஆசுவாசமாகி ரேக்கியின் அம்மா பேச ஆரம்பித்தாள்.

கலவரம் ஆரம்பித்த உடனேயே எல்லோரும் ஓடிப்போய் 28ஆவது பிளாக்கிலுள்ள இந்துக்களின் வீடுகளில் ஒளிந்து விட்டதாகவும், ஆனால் இன்று அங்கேயும் கும்பல் வந்து தேடுவதாகவும், இன்று பூராவும் இருவரும் அவர்கள் ஒளிந்திருந்த வீட்டின் ரஜாய் பெட்டியிலேயே மறைந்திருந்ததாகவும், இனிமேலும் அங்கே இருப்பது ஆபத்து என்று எண்ணியே ஓடிவந்துவிட்டதாகவும் சொன்னாள். உடனே போய் கத்தரிக்கோலை எடுத்து வந்து ரேக்கியின் நீண்ட முடியை வெட்டி ஒரு சுமாரான் கிராப்பாக மாற்றினேன். அவன் அம்மா பார்த்துக்கொண்டிருந்தாள். ஒன்றும் சொல்லவில்லை. அவளிடமும் ரேக்கியிடமும் இனி உங்கள் பெயர் பிந்தியா, ரேக்கியின் பெயர் ராகேஷ் என்று சொல்லி, இனிமேல் இங்கிருந்து போகும்வரை ஸல்வாருக்கு பதிலாக புடவை கட்டிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டு, மீனாவிடம் அவளுக்குப் புடவை கொடுக்கச் சொன்னேன்.

மறுநாள் காலை ராணுவமும், போலீஸும் வந்தது. ஆனால அவர்கள் வந்த பிறகும் ஜீப்புகளில் வந்த கும்பலை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த முறை ஜீப்புகளில் வந்த கும்பல் வீடுகளை நோக்கிப் போகாமல், நேராக ரேஷன் கடைக்குப் போய் அந்தக் கடைக்காரரை சாவியுடன் அழைத்துவரச் செய்தது. அவர் வந்து சேர்ந்ததும் கடை திறக்கப்பட்டு, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் பெயர்கள் மற்றும் முகவரி அடங்கிய ரெஜிஸ்தர் தேடி எடுக்கப்பட்டது. அதிலிருந்த பெயர்களை வைத்து, எந்தெந்த வீட்டு எண்கள் சீக்கியர்களுடையது என்று குறித்துக் கொள்ளப்பட்டது. அப்போதுதான் கூட்டத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு விஷயம் புரிய ஆரம்பித்தது. வீட்டு எண்களைக் குறித்து கொண்டு அந்தக் கும்பல் பக்கத்திலிருந்த மண்ணெண்ணெய் கடையை நோக்கிச் சென்றது. அதற்குள் அந்தக் கடைக்காரரே கடையைத் திறந்து வைத்திருந்தார். மண்ணெண்ணெய் டிரம்களும், டின்களும் ஜீப்பில் ஏற்றப்பட்டன.

நான் வேகவேகமாய் ஓடிவந்து குருத்வாராவின் அருகே முகாமிட்டிருந்த ராணுவ சிப்பாய்களிடம் விஷயத்தைச் சொன்னேன். அதை அவர்கள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. எங்களால் எதுவும் செய்வதற்கில்லை என்றார்கள். “கலவரம் செய்பவர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவிட்டிருப்பதாக டி.வி.யில் சொன்னார்களே?” என்று கேட்டேன். “அப்படியானால் போய் டி.வி.யில் கேளுங்கள்” என்று சொன்னார் ஒரு சிப்பாய். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான போலீஸ்காரர் என்னைக் கூப்பிட்டு, “தம்பி... பிரதம மந்திரியைச் சுட்ட இரண்டு பேருமே போலீஸ்காரர்கள். அதனால் எங்கள் போலீஸ் துறையே பயந்து போய்க் கிடக்கிறது. இறுதிச் சடங்கு முடிந்த பிறகு யார் யார் தலை உருளப் போகிறதோ என்று எங்கள் பெரிய அதிகாரிகளே பயந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் இந்தக் கும்பலைச் சுட்டால் எங்கள் கதி என்னவாகும்? எங்கள் வேலைக்கு என்ன உத்தரவாதம்? இந்தக் கும்பலில் இருப்பவர்களெல்லாம் யார் என்று நினைக்கிறாய்? எல்லாம் எங்கள் அதிகாரிகளுக்கே உத்தரவு போடுகிற கூட்டம். தெரியுமா உனக்கு? பேசாமல் போய் டி.வி.யைப் பார்த்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இரு” என்றார்.

போலீஸ்காரர் சொன்னது போல் வீட்டுக்குப் போகாமல் குருத்வாராவின் உள்ளே போனேன். முந்தின நாள் சந்தித்த கல்யாண்புரிக்காரர்களிடம் வாள், கம்பு என்று கொஞ்சம் ஆயுதங்கள் இருந்ததால், அவர்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் குருத்வாராவில் ஒரு ஈ, எறும்பு கூட இல்லை. சுத்தமாக அத்தனை பேருமே கொல்லப்பட்டு விட்டார்களா? தப்பியிருந்தால் எங்கே போயிருக்க முடியும்? ஒன்றுமே புரியவில்லை. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த ஜீப் கும்பல் ஒரு பெரிய கூட்டத்தை இழுத்துக் கொண்டு வந்தது. கூட்டத்தில் ஒரு பெண் கூட இல்லை. எல்லோரும் ஆண்கள். நான்கு ஐந்து வயதுக் குழந்தைகள் கூட இருந்தார்கள். அவர்கள் தலையில் டின் டின்னாக பெட்ரோலையும், மண்ணெண்ணெயையும் ஊற்றி நெருப்பு வைத்தார்கள். திமிறிக் கொண்டு ஓடியவர்களை நீண்ட அரிவாளால் வெட்டிச் சாய்த்தார்கள்.

திரிலோக்புரியில் ஒரு சீக்கிய ஆண் கூட மிஞ்சியிருக்க மாட்டான் என்று தோன்றியது. பிறகு ஜீப்புகள் கல்யாண்புரி ரோட்டில் பறந்தன.

மதியம் ராணுவத்தினர் ஒரு கொடி அணிவகுப்பு நடத்தினார்கள். அணிவகுப்பு முடிந்து ஒரு அரை மணி நேரத்திற்குள்ளாகவே ஜீப் கும்பல் எங்கள் மயூர் விஹாருக்குள் நுழைந்தது. கையிலிருந்த முகவரி நோட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்றது. அகப்பட்ட சீக்கியர்களைப் பிடித்து நடுரோட்டில் வைத்துக் கொளுத்தியது. எங்கள் பக்கத்து வீட்டுக்கு வந்தது கும்பல். வீட்டில் இருந்தவர்கள் பஞ்சாபி இந்துக்கள். ஆனால் நம்ப மறுத்தது கும்பல். பூஜை அறையையெல்லாம் காட்டினார்கள். அப்புறமாகத்தான் முகவரி நோட்டை வைத்திருந்தவர் “தர்பாரா சிங் கோன் ஹே?” என்று கத்தினார். உடனே அந்த வீட்டுக்காரர் “வோ இஸ் கர் கா மாலிக் ஹை. வோ திலக் புரி மே(ங்) ரெஹ்தா ஹை”(4). என்றார். “யே தோ பெஹலே போல்னா தா யார்” (5) என்று சொல்லிவிட்டு எங்கள் வீட்டை நோக்கி வந்தது கும்பல்.

அவர்கள் கேட்பதற்கு முன்னாலேயே ரேக்கியையும் ஜஸ்பீரையும் அழைத்து வந்து “இவர்கள் என் பாபி. பெயர் பிந்தியா. என் அண்ணன் ராணுவத்தில் இருக்கிறான். அவன் இவர்களை லவ் மேரேஜ் செய்துகொண்டான். இவன் அவர்களின் பையன் ராகேஷ். என் அண்ணன் இப்போது ஆக்ராவுக்கு ஸ்பெஷல் டியூட்டியில் போயிருப்பதால் இவர்கள் இங்கே எங்களுடன் தங்கியிருக்கிறார்கள்” என்று சொன்னேன். வந்திருந்த கும்பல் சற்று குழப்பத்துடன் பார்த்தது. கும்பலின் தலைவனைப் போலிருந்த ஆள் ரேஷ்மாவைப் பார்த்து “துமாரா நாம் க்யா ஹை?” என்று கேட்டான். அவள் பயத்துடன் என்னைப் பார்த்தாள். நான் “ரேஷ்மா” என்றேன். அந்த ஆள் ரேஷ்மாவின் தலையை வருடி, “க்யோ(ங்) டர்த்தி ஹோ, பேட்டீ? துமே ஹம் குச் நஹி கரோங்கே” (6) என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து “மதறாஸி பாபு... துமாரி கர் மே அப்னி காவ்(ங்)கி லட்கி ஆயி ஹை. உம்மீத் ஹை கி தும் ஜூட் நஹு போலோகே. அகர் ஏ ஜுட் நிகலா, துமே(ங்) நஹி சோடேங்கே” (7) என்று எச்சரித்தான்.

அன்றைய இரவு டி.வி.யில் “இன்று பதினைந்து பேர் அல்லது அநேகமாக இருபது பேர் இறந்திருக்கலாம். ஆனாலும் நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது” என்று தெரிவித்தார் போலீஸ் கமிஷனர். அடுத்து பேசிய கவர்னர் “நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது. இன்று எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது” என்று சொன்னார். ஆனால் பி.பி.சி.யில் கேட்டபோது இன்றைய தினம்தான் இந்த மூன்று நாட்களிலேயே மிகவும் உச்சக்கட்ட கலவரங்கள் நடந்த தினமாகத் தெரிவித்தது. தீஸ் ஹஸாரி போலீஸ் மார்ச்சுவரியில் இருநூறு உடல்கள் கிடந்ததாகவும், கிழக்கு தில்லியில் ஷக்கர்பூர், கல்யாண்புரி, ஷாதரா, கிருஷ்ணா நகர், பட் பட் கஞ்ஜ், ஷிவ்புரி, சந்தர் நகர், காந்தி நகர், கீத்தா காலனி, துர்காபூர், பஜன்புரா, சீமாபுரி போன்ற இடங்களில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் - ஆனால் அதே கிழக்கு தில்லியில் நத்து காலனி மற்றும் திர்லோக்புரி என்ற இரண்டு இடங்களில் மட்டுமே ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், மேற்கு தில்லியில் மங்கோல்புரி, சுல்தான்புரி, புத்விஹார் என்ற இடங்களிலும், வடக்கு தில்லியில் நரேலா, ஜஹாங்கிர்புரி என்ற இடங்களிலும் பல காலனிகளில் ஒரு ஆண் கூட விடப்படாமல் அத்தனை ஆண்களும் கொல்லப்பட்டதாகவும், ரயில்களில் வெறும் பிணங்களே வந்து சேர்ந்ததாகவும், புதுதில்லியைத் தவிர மற்றபடி தில்லி முழுவதிலும் போலீஸே இல்லாதது போன்ற தோற்றத்தைத் தருவதாகவும், எங்காவது ஓரிரண்டு இடங்களில் தென்படும் ராணுவம் கூட எதுவும் செய்ய முடியாமல் வெறும் பார்வையாளர்களாகவே நின்று கொண்டிருப்பதாகவும் பி.பி.சி.யில் சொன்னார்கள்.

காலையில் எழுந்து திர்லோக்புரி சென்றேன். சாலைகளிலும் தெருக்களிலும் கருகிய உடல்களும், அடித்துக் கொல்லப்பட்ட உடல்களும், துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் உறுப்புகளும் இறைந்து கிடந்தன. கிட்டத்தட்ட ஐநூறு உடல்களாவது இருக்கலாம் என்று தோன்றியது. 27 ஆவது பிளாக்கின் எல்லா வீடுகளுமே எரிந்து கரிக்கட்டைகளாக நின்றன. ரேக்கியின் வீடும் தப்பியிருக்கவில்லை. சுற்றிச் சுற்றி வந்து 28 ஆவது பிளாக்குக்கு வந்து சேர்ந்தேன். ராணுவ லாரிகளில் உடல்களை எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். அதை ஒரு குடிசை என்று சொல்ல முடியாது. ஷெட் அல்லது கூடாரம்... அல்லது அதை எப்படிச் சொல்லலாம் என்றே தெரியவில்லை. கையில் கிடைத்ததையெல்லாம் வைத்து அந்தக் கூடாரம் கட்டப் பட்டிருந்தது. சுற்றிலும் மரப்பலகைகள்... மேலே தார்ப்பாலின். பலகை இல்லாத இடங்களில் முள்வேலி, தகரம். நேற்று இரவு எரிக்கப்பட்டிருக்க வேண்டும். பிணங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்த ராணுவ சிப்பாய்கள் முழுக்கவும் எரிந்து போன அந்தக் கூடாரத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நெருங்கிப் போய்ப் பார்த்தேன். மேலே போடப்பட்டிருந்த தார்ப்பாலின் எரிந்து மொட்டையாக இருந்தது. மேலே ஒரு ஓரத்தில் நான்கைந்து பலகைகள் செருகப்பட்டு கீழே அதற்குப் பிடிமானமாக ஒரு கம்பு நடப்பட்டிருந்தது. முழுக்க எரிந்திராத அந்தக் கம்பில் தொங்கி நின்றது பலகை. பலகையின் மேல் முழங்காலை கைகளால் கட்டிக்கொண்டு முழங்கால்களுக்கிடையே முகத்தைப் பதுக்கிக் கொண்டு அமர்ந்த நிலையில் இருந்தன இரண்டு சிறிய உடல்கள். ஒரு குழந்தைக்கு நான்கு வயது இருக்கலாம். மற்றொரு குழந்தைக்கு ஆறு அல்லது ஏழு இருக்கலாம். ஒரு இளம் சிப்பாய் அந்தக் காட்சியைப் பார்த்து முகத்தை மூடி அழுதுகொண்டிருந்தான். எரிந்து நின்ற கதவை உதைத்துத் திறந்த பொழுது உள்ளே - ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்தக் குழந்தைகளை நோக்கி ஒரு கையை உயர்த்தியபடி நின்றுகொண்டிருந்தார் - உடல் கருகிய நிலையில். அந்த பிளாக்கிலிருந்த அத்தனை பேரும் அங்கே கூடி விட்டார்கள். பிணங்களையே பெரும் எண்ணிக்கையில் பார்த்துப் பார்த்து செத்துப் போயிருந்த உணர்வுகள் திடீரென்று உயிர் பெற்று அதிர்ந்தன. நேற்று மாலை ஒரு இந்துவின் வீட்டில் ஒளிந்திருந்த இந்த சீக்கியக் கிழவரும், அவருடைய பேரன்களும் ஜீப்பில் வந்த கும்பலால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் துரத்தத் துரத்த ஓடி வந்து இந்தக் குடிசையில் ஒளிந்ததாகவும், துரத்தி வந்த கும்பல் அதற்கு மேல் குடிசையில் போகாமல் “அச்சா ஹுவா! இன் கோ ஜலாகே இதர் ஹீ லோடி* பனாயேங்கே” (8) என்று சொல்லி அந்தக் குடிசையையே கொளுத்தி விட்டுவிட்டதாகவும் சொன்னார்கள் அந்தக் காலனி வாசிகள்.

பிணங்கள் அப்புறப்படுத்தப்படுவதையும், தொடர்ந்து வந்து கொண்டிருந்த ராணுவ லாரிகளையும் பார்த்த பிறகு அந்த பிளாக்கில் ஒளிந்திருந்து மிஞ்சிய பெண்களும் குழந்தைகளும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியே வந்தார்கள். தங்கள் வீட்டு ஆண்கள் அத்தனை பேரையும் இழந்து அழுதுகொண்டிருந்த அவர்களையும் ராணுவத்தினர் தங்கள் லாரிகளில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள்.

வீட்டுக்கு வந்தேன். 27ஆவது பிளாக் முழுவதும் எரிந்துவிட்ட செய்தியை ரேக்கியிடமோ அவன் அம்மாவிடமோ சொல்லவில்லை. “தீன் மூர்த்தி ஹவுஸில் அடைபட்டிருந்த தலைவர்கள் இன்று கலைந்திருப்பார்கள். நாளை நிலைமை சீரடையலாம் என்று தோன்றுகிறது” என்று மீனாவிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது கதவை யாரோ விரல் நுனியால் தட்டுவதுபோல் சத்தம் கேட்டது. இவ்வளவு நாசுக்காக கதவைத் தட்டுவது யார் என்று யோசித்துக் கொண்டே கதவைத் திறந்தால் - நேற்றைக்கு முன் தினம் வந்து போன அதே கும்பல்.

“அரே.... ஏ...மதறாஸி! தும்னே ஹமே(ங்) தோகா தியா?” (மதறாஸி நீ எங்களை ஏமாற்றிவிட்டாய் அல்லவா?) என்று சொல்லி ஒருவன் என் கன்னத்தில் அறைந்தான். மற்றொருவன் “நஹி பாய்.. இஸ் மதறாஸி கோ சோடோ.. கஹாங் ஹை ஸர்தார்?” (இந்த மதறாஸியை விட்டுவிடு. அந்த சர்தார் எங்கே) என்று சத்தமாகக் கேட்டான். வெளியே நடந்த சச்சரவைக் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் வெளியே வர, கும்பலில் ஒருத்தன் ரேக்கியின் கழுத்தைப் பிடித்து தள்ளிக்கொண்டு போனான். தள்ளிய வேகத்தில் கீழே விழுந்த ரேக்கியின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. கையில் ஒரு டின்னை வைத்திருந்த ஒருவன் “இதர் ஹீ லோடி பனாயேங்கே”(9) என்று சொல்ல மற்றொருவன் ”நஹி பையா... பெட்ரோல் காஃபி நஹீ(ங்) ஹை. சடக் பர் ஔ சார் லோக் ஹை. சப்கோ மிலாகே லோடி பனாயேங்கே. ஏக் ஏக் கர் கே பெட்ரோல் கோ கதம் நஹி கர்னா” (10) என்று சொல்லிக் கொண்டே ரேக்கியை ஜீப்புக்குள் தூக்கிப் போட்டு ஜீப்பைக் கிளப்பினான் ஒருவன். கும்பலும் ஜீப்புக்குல் ஏறிக் கொண்டது.

ஜஸ்பீரும் மீனாவும் ஜீப்பை துரத்திக்கொண்டே ஓட அவர்களின் பின்னால் ஓடிய ரேஷ்மாவைத் தூக்கிக்கொண்டு செயலற்று நின்றேன் நான்.

******

(1) தேஸு – DESU – வெளி - தில்லி மின்சார வாரியம்

(2) சாச்சி – பெரியம்மா

(3) ”பாரதத்தின் புதல்வியைக் கொன்ற கூட்டத்தின் வம்சத்தை அழிப்போம்”

(4) ”அவர் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர். திலக்புரியில் இருக்கிறார்”

(5) ”இதை முன்னாலேயே சொல்லியிருக்க வேண்டாமா, நண்பா?”

(6) ”ஏன் பயப்படுகிறாய் மகளே? உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம்”

(7) “மதறாஸி பாபு, உன் வீட்டுக்கு எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி வந்திருப்பதாக தகவல். அநேகமாக நீ பொய் சொல்ல மாட்டாய் என்று நம்புகிறோம். சொல்லியிருப்பதாகத் தெரிந்தால், உன்னைச் சும்மா விட மாட்டோம்.”

(8) ”நல்லதாகப் போயிற்று. இவர்களை இங்கேயே வைத்து லோடி* கொண்டாடி விடுவோம்.”

* லோடி –போகிப்பண்டிகை அன்று தமிழ் நாட்டில் பழைய பொருட்களையெல்லாம் போட்டுக் கொளுத்தி கொண்டாடுவது போல் வடநாட்டின் போகி லோடி. பஞ்சாப் கிராமங்களில் இந்துக்கள் தங்கள் வீடுகளிலேயே சாராயம் காய்ச்சிக் குடித்துவிட்டு, பழைய பொருட்களைக் கொளுத்தி, அதைச் சுற்றி நின்று நடனமாடி லோடியைக் கொண்டாடுவது வழக்கம்.

(9) ”இங்கேயே லோடி கொண்டாடிவிடலாம்”

(10) ‘வேண்டாம்… நம்மிடம் பெட்ரோல் அதிகம் இல்லை. ரோட்டில் வேறு இன்னும் நான்கு பேர் இருக்கிறார்கள். எல்லோரையும் ஒன்றாகச் சேர்த்து லோடி கொண்டாடுவோம். ஒவ்வொருத்தருக்காக தனித்தனியாக பெட்ரோலை வீணடிக்கக் கூடாது.’

****

-சுபமங்களா - செப்டம்பர், 1993

தட்டச்சு : சென்ஷி

Sep 7, 2011

அவ்வா - சாரு நிவேதிதா

ஒரு ஐப்பசி மாதத்து அடைமழை இரவின் போது தான் அந்த நாயின் தீனமான அழுகைச் சத்தம் கேட்டது.

அந்தத் திரு.வி.க. வீதியில் நாய்கள் அதிகம். அதிலும் விதவிதமான நாய்கள். பல இனத்தைச் சேர்ந்த நாய்கள் நறுக்கி விட்டதைப் போல் குட்டி வாலும் நீண்டு மெலிந்த உடலும் கொண்ட டாபர்மேன் வகை நாய்கள் கூட தெருவில் கேட்பாரற்று அலைந்து கொண்டிருக்கும்.charunivedita

எனக்கானால் நாய்களைக் கண்டால் பிடிக்காது. இரவுகளில் இந்த நாய்கள் தான் பெரும் பிரச்சினை. மரணத்தின் வருகையை அறிவிப்பது போன்ற இதுகளின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு உறக்கம் கலைந்து எழும் அவந்திகா ‘ சூ… சூ…. ‘ என்ற அதுகளை விரட்டிக் கொண்டிருப்பது இன்னொரு பிரச்சினை.

மனிதக் குரல் கேட்டு மிரண்டு ஓடி தெரு மூலையில் நின்று கொண்டு மீண்டும் ஓலமிடும். அல்லது தங்களது தீராச் சண்டையை ஆரம்பிக்கும். அந்தச் சண்டையில் அடுத்த தெரு நாய்களும் கலந்து கொள்ளும். உச்ச ஸ்தாயியில் பல விதமாய்க் குரைத்து மூர்க்கமாகச் சண்டையிடும். நீண்ட நேரம் நீடிக்கும் அச் சண்டை எந்த இலக்கும் இல்லாமல் தானாகவே ஓய்ந்து போகும்.

காலையில் எழுந்து ” இரவெல்லாம் தூக்கமில்லை. கண் எரிகிறது ” என்பாள் அவந்திகா.

பகலில் பரம சாதுவாக எல்லாம் குப்பைத் தொட்டியில் இரை தேடி கொண்டிருக்கும். அப்போது அதுகளைப் பார்த்தால் பாவமாக இருக்கும்.

எங்கள் தெரு குப்பைத் தொட்டி கொஞ்சம் விசேஷமானது. முனிசிபாலிடியில் குப்பைத் தொட்டி என்று நான்கு உயரமான சுவர்களும் , கதவு அளவுக்கு ஒரு திறப்பும் கொண்ட ஒரு ஸ்ட்ரக்சரைக் கட்டிக் கொடுத்துக் ” குப்பைகளைத் தயவு செய்து குப்பைத் தொட்டியில் போடவும். உங்கள் சுற்றுப்புறம் அழகாக இருக்க உதவுங்கள் ” என்று எழுதியும் கொடுத்திருந்தார்கள்.

ஆனாலும் , எங்கள் தெரு ஜனங்கள் அந்தச் சுவர்களுக்கு உள்ளே போடாமல் (மிகச் சரியாக) வெளியில்தான் குப்பையைப் போடுவார்கள். சுவரைச் சுற்றிலும் குப்பை மலையாய்ச் சேர்ந்த பிறகு , குப்பையை உள்ளே போட நினைக்கும் சிலர் கூட சுவரை நெருங்க முடியாமல் வெளியிலேயே போட்டு விட வேண்டியிருக்கும்.

” சிவிக் சென்ஸே இல்லாத ஜனங்கள். இவ்வளவு பெரிய குப்பைத் தொட்டியைக் கட்டிக் கொடுத்தும் எங்கே போடுகிறார்கள் பாருங்கள் ” என்பாள் அவந்திகா.

உண்மை தான். அளவில் பெரியது தான். எப்போதாவது வெளியூர் போகும் போது , ஊருக்கு வெளியே இந்த மாதிரி ஸ்ட்ரக்சர்களைப் பார்த்திருக்கிறேன். மேலே கூரை ஒன்று இருக்கும். அது தான் வித்தியாசம். அந்த ஸ்ட்ரக்சர்களுக்கு வெளியே நரிக்குறவர் குடியிருப்பு , அம்பேத்கர் குடியிருப்பு என்று ஏதாவது எழுதியிருக்கும்.

இந்தக் குப்பைத் தொட்டியைப் பார்க்க எனக்கு வினோதமாக இருக்கும். அதில் என்னென்னவெல்லாம் கிடக்கும் என்று பார்க்க உள்ளுக்குள் ஒரு ஆசை கிளம்பும். இரை தேடும் நாய்களை விரட்டி விட்டு ப்ளாஸ்டிக் டப்பாக்களையும் , பாலிதீன் கவர்களையும் சேகரித்துக் கொண்டிருப்பார்கள் சில பேர்.

ஆனால் எங்கள் தெருவை அடுத்த பாரதியார் தெரு ஜனங்கள் பரவாயில்லை. அங்கே குப்பைத் தொட்டியும் இல்லை. குப்பையும் இல்லை. சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பு மையத்தில் உறுப்பினராகி மையம் அனுப்பி வைக்கும் வண்டிகளில் தங்கள் குப்பைகளைச் சேர்த்து விடுகிறார்கள்.

அவந்திகாவுக்கும் அதில் சேர்வதில் தான் விருப்பம். ஆனால் அதற்கு அவள் வேலைக்கு முழுக்குப் போட வேண்டியிருக்கும். ஏனென்றால் மையத்தின் பையன் காலை பதினோரு மணிக்குத் தான் இந்தப் பக்கம் வருவான்.

பாரதியார் தெரு மக்கள் , சுற்றுப்புறச் சூழல் மீது கொண்ட ஆர்வத்தால் அந்தத் தெரு நாய்களின் பாடு மிகவும் திண்டாட்டமாகப் போய்விட்டது. அன்றைக்குப் பாருங்கள். நான் ஆபிஸ் முடிந்து வந்து கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைக் காண நேர்ந்தது. எலும்பும் தோலுமாய் நறுங்கிப் போயிருந்த நாய் ஒன்று காய்ந்த மனிதப் பீயைத் தின்று கொண்டிருந்தது. எனக்கு ஒரு மாதிரி மனசே சரியில்லாமல் போய்விட்டது.

அவந்திகா ஆபீசிலிருந்து வந்ததும் அவளுக்கு டீ போட்டுக் கொடுத்து விட்டு இதைச் சொன்னேன்.

” பாரேன். முறுக்கு சாப்பிடுவதைப் போல் அந்தப் பீஸை ‘ நறுக் முறுக் ‘ குனு சாப்பிடுது. பாவமா இருந்திச்சும்மா ” அவ்வளவுதான். குடித்துக் கொண்டிருந்த டீயோடு வாந்தியெடுத்து விட்டாள்.

” சரியான முட்டாள்ப்பா நீ. இப்படியா டீ குடிச்சுக்கிட்டு இருக்கும்போது இதைச் சொல்றது ?”

அன்று இரவு அவள் சாப்பிடவில்லை. தொடர்ந்து ஓக்களித்துக் கொண்டே இருந்தாள்.

” குடலே வந்திடும் போலருக்கே. இந்த வாந்தியை நிறுத்த ஏதாவது செய்யேன். ”

காய்ந்த உப்பு நாரத்தங்காயைப் பிய்த்துக் கொடுத்துத் தூங்கச் செய்தேன்.

அவளைப் பார்த்தாலும் பாவமாகத்தான் இருந்தது. ஆனால் ஆச்சரியமாகவும் இருந்தது. பீ என்று சொன்னால் வாந்தி வந்து விடுமா ? உங்களுக்கு வருகிறதா ?

எனக்கு சான்ஸே இல்லை. எங்கள் ஜாதியே பீயெடுக்கும் ஜாதிதான். நான் தான் கொஞ்சம் படித்து கிடித்து வேறு வேலைக்கு வந்து விட்டேன்.

என் தம்பி இன்னமும் பீ தான் எடுத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு என்னைப் போல் படிப்பு வரவில்லை. ஆனால் தைரியசாலி , பட்லர் இங்கிலீஷ் பேசுவான். அதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக வரும். ஒழுங்காகத் தெரிந்தால் பேச வேண்டும். இல்லாவிட்டால் பேசக் கூடாது. ஒழுங்காகத் தெரிந்த எனக்கே இங்கிலீஷ் பேச வராதது இன்னமும் ஒரு குறையாகத்தான் இருக்கிறது. ஆனால் , என் தம்பி அந்த பட்லர் இங்கிலீஷை வைத்தே பெரிய ஆளாகிவிட்டான். ஜெர்மன் எம்பஸியில் வேலை. இங்கிலீஷையே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டும் அந்த நாய் இப்போது ஜெர்மனில் பிளந்து கட்டுகிறது. இப்போது ஜெர்மனியில் இருக்கிறான். டாய்லெட் க்ளீனர் வேலையில் இருந்தாலும் வீடு , கார் எல்லாம் வைத்திருக்கிறான்.

” ஏண்டா இப்படி ஜெர்மனிக்குப் போயும் நம்மோட குலத் தொழிலைத்தான் செய்யணுமாடா ?” என்பேன்.

” அடப் போண்ணே நீ வேற…. அந்த ஊரு டாய்லெட்டெல்லாம் நம்ம சினிமா ஸ்டாருங்க கன்னம் மாதிரி இருக்கும். இன்னோரு விஷயம். அந்த வெள்ளக்காரப் பயலுவளோட பீ கூட நாற மாட்டேங்குது ”.

” அப்படியா ? அப்ப அதையே தின்னுக்கிட்டு அங்கயே இரு ”

” சாப்பிட்டாலும் தப்பில்லே. நம்ம அவ்வா குடுத்த சாப்பாட்டை விட நல்லாத்தான் இருக்கும் ” ( தம்பி சொன்னதைப் பற்றி விளக்க வேண்டுமானால் ஒரு ஆயிரம் பக்கங்களாவது எழுத வேண்டும். ஆனால் இந்தக் கதையோ நாய்களைப் பற்றியது. கதையின் இடையே புகுந்ததும் அல்லாமல் ஒரு முக்கியப் பிரச்சினையை வேறு கிளப்பி விட்டு விட்டான். அதைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிட்டுக் கதையைத் தொடருவோம்)

அவ்வாவுக்கு சித்தூர்தான் சொந்த ஊர். அங்கே பிழைக்க வழியில்லாமல் தஞ்சாவூர் ஜில்லா வந்து எப்படியோ நாகூரில் செட்டிலாகி விட்டது. பணக்கார வீடுகளின் எடுப்புக் கக்கூசில் பீ அள்ளுவது தான் வேலை. அப்பா சின்ன வயதிலேயே செத்துவிட்டார். கக்கூஸ் எடுக்கும் வீடுகளில் அரிசியும் , மிஞ்சிய சோறும் கொடுப்பார்கள். அரிசியை அப்படியே பத்திரப்படுத்திவிட்டு சோற்றை உபயோகித்துக் கொள்ளும். அந்தச் சோற்றை காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது வெந்நீர் விட்டுக் கலக்கிக் கொடுக்கும் அவ்வா. அந்தச் சோறு காயும் போது ஒரு நாற்றம் நாறும் பாருங்கள். பீ நாற்றமெல்லாம் பிச்சையெடுக்க வேண்டும். அரிசி இருந்தால் புயல் மழைக் காலங்களில் பட்டினி கிடக்காமல் வயிறு நிரம்பும். வெட்டாற்று வெள்ளம் ஊருக்குள் பாயும்போது அதன் தலைவாசலில் இருப்பது எங்கள் தொம்பங்குடிசை தான்.

சில வருடங்களுக்கு முன் நாகூர் போயிருந்த போது அந்தப் பெயரை ‘ தொல்காப்பியர் சதுக்கம் ‘ என்று மாற்றியிருந்ததைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. தொல்காப்பியருக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ? அவரும் அவ்வாவைப் போல் பீ அள்ளியிருக்கிறாரா ? அவர் எங்கள் ஜாதியைச் சேர்ந்தவரா ? ஆனால் பெயர் தான் மாறியிருந்ததே ஒழிய மற்றதெல்லாம் அப்படியே தான் இருந்தது. ஊரில் எடுப்புக் கக்கூசுகள் மறைந்து ஃப்ளஷ் அவுட் டாய்லெட் வந்திருந்தது. எங்கள் ஜனமும் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களாக மாறியிருந்தார்கள். ஊரைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலை.

அவ்வா என் தங்கையோடு அவள் வீட்டுக்குப் போய் விட்டது. தங்கை கணவரும் என்னைப் போல் படித்தவர். போலீஸ் இன்ஸ்பெக்டர்.

அவ்வாவுக்கு என் மீது கோபம். நம் ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் அய்யர் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் என்று. அய்யர் இல்லை அய்யங்கார் என்று சொன்னால் அதற்குப் புரியாது.

வாந்தியெடுத்து விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த அவந்திகாவிடம் இதையெல்லாம் சொல்ல நினைத்தேன். ‘ நீ எங்கள் அவ்வா மாதிரி பீ அள்ளியிருந்தால் என்ன ஆகியிருப்பாய் அவந்திகா ?’ அவந்திகா எனக்காக பெங்களூர் போர்க் சமைத்துத் தருகிறாள். மிக ருசியாக , ஐந்து நட்சத்திர ஓட்டலின் செஃப் போல. நன்றி. ஆனால் , நான் இருபது வயது வரை மனிதப்பீயை மட்டுமே உணவாகக் கொண்ட கருப்புப் பன்றிகளையே சாப்பிட்டு வளர்ந்தவன் என்று உனக்குத் தெரியுமா ? அதையெல்லாம் பேச ஆரம்பித்தாலே ‘ வேண்டாம் , பழசை விடு ‘ என்பாள்.

தெருவில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டு மாடியில் உலர்த்தியிருந்த என் சட்டைகளைத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போட்டிருந்தன நாய்கள்.

எனக்கு சட்டைகள் என்றால் மிகவும் விருப்பம். அழகழகான சட்டைகள். மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அடுத்த வீட்டு மாடியின் படிக்கட்டில் நான்கைந்து நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் செய்யாமல் கீழே வந்தேன். எவர்சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நன்றாகக் கொதிக்க விட்டு , வெகு பத்திரமாக என் மீது சிந்தி விடாமல் இரண்டு பக்கமும் துணி கொடுத்து மேலே எடுத்துச் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரில் வைத்து விட்டு ஓசையெழுப்பாமல் கீழே பார்த்தேன். நாய்கள் தூங்கிக் கொண்டிருந்தன. வெந்நீரை அவற்றின் மேல் சாய்த்தேன். செவிச்சவ்வுகளே கிழிந்து கிழிந்து விடுகிறாற் போல் கத்திக் கொண்டு ஓடின நாய்கள்.

காட்டூர் கந்தன் இப்படித்தான் கத்தினான். அவ்வா அவன் முகத்தில் வெந்நீரை ஊற்றியபோது.

அவ்வா நிறைய பன்றிகள் வைத்திருந்தது. ஆனால் , அதற்கு உடம்பு முடியாமல் போனபோது பன்றிகள் ஒவ்வொன்றாய்க் குறைய ஆரம்பித்தன. அதை விற்று வருகிற பணத்தில்தான் என் படிப்பும் , என் தங்கையின் படிப்பும் நடந்து கொண்டிருந்தது. நல்ல வேளை. தம்பிக்குப் படிப்பு வரவில்லை. ஒன்பதாம் கிளாசுக்கு மேல் தாண்டாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். இல்லா விட்டால் அவன் செலவும் சேர்ந்திருக்கும்.

நான் பி.எஸ்ஸி. ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருந்தேன் ஹாஸ்டலில் தங்கி. ஸ்டடி ஹாலிடேஸில் ஊருக்கு வந்திருந்தேன். ஹாஸ்டல் ஃபீஸ் , எக்ஸாம் ஃபீஸ் என்று பணம் கட்ட வேண்டியிருந்தது. வீட்டிலிருந்த கடைசிப் பன்றியையும் விற்று விட வேண்டியதுதான்.

” பொட்டப் பன்னி. குட்டி போட்டா நமக்குத்தான் நல்லது. விக்கணுமா அவ்வா ?” என்று கேட்டபோது , ” அதையெலாம் யோசிக்க முடியாது. நீ வேலைக்குப் போய்ட்டா நூறு பன்னி வாங்கலாம் ” என்று சொல்லி விற்று விட்டது அவ்வா. விற்ற விஷயம் எப்படியோ பன்றிக்குத் தெரிந்து போய் வீட்டை விட்டு ஓடி விட்டது.

பதைபதைப்புடன் கையில் சுளுக்கியோடு எங்கெங்கோ தேடியலைந்தது அவ்வா. எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில்தான் விஷயம் தெரிந்தது. காட்டூர் கந்தன் எங்கள் பன்றியைப் பிடித்து விற்று விட்டான் என்று.

காட்டூர் கந்தன் திருச்சிக்குப் பக்கத்திலுள்ள காட்டூரில் ஒரு கொலை செய்து விட்டு எங்கள் ஊருக்கு வந்து பதுங்கியவன். அதற்குப் பிறகு இங்கேயே தங்கி விட்டான். பக்கத்திலுள்ள மேட்டுத் தெருவில் தான் அவன் குடிசை. எந்த வேலைக்கும் போகாமல் சிறு வியாபாரிகளை மிரட்டிப் பணம் பறித்து வாழ்ந்து கொண்டிருந்தான். அவ்வப்போது திருடுவதும் உண்டு. ஊரில் அவனைக் கண்டால் எல்லோருக்கும் ஒரு பயம் உண்டு.

அவ்வா நேராகக் கந்தனின் குடிசைக்குப் போனது. அப்போது கந்தன் குடிசையில் இல்லை. பக்கத்தில் வந்து விசாரித்தவர்களிடம் , ” அவன் மட்டும் உண்மையிலேயே ஆம்புளையா இருந்தா என் வூட்டுப் பக்கம் வரச் சொல்லுங்க ” என்று சொல்லி விட்டு வந்து விட்டது அவ்வா.

எனக்கு உள்ளுக்குள் திகில். ‘ இன்று ஒரு கொலை தான் விழப் போகிறது ‘ என்று முடிவு கட்டி விட்டேன். என் உயிரைக் கொடுத்தாவது அவ்வாவின் உயிரைக் காப்பாற்றுவது என திட்டம் செய்து கொண்டேன். ‘ நான் செத்தால் கூடப் பரவாயில்லை. அவ்வா செத்து விட்டால் தம்பி தங்கைகளின் கதி ?’ ஆனால் அவ்வாவிடம் இது பற்றி நான் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

அடுப்பைப் பற்ற வைத்து சோற்றுப்பானையை வைத்துவிட்டு அரிசியைக் களைய ஆரம்பித்தது. அப்போது அங்கே புயலைப் போல் வந்தான் கந்தன்.

” ஏய் வாடி வெளியே…. எவடீ என்னெ ஆம்பளயான்னு கேட்டது ?”

” டேய் கந்தா… எம் பன்னியத் திருடி வித்தியா நீ ?”

ஆமான்டீ , வித்தேன். என்னடீ பண்ணுவே ? பீ அள்ளுற தேவுடியா செருக்கிக்கு அவ்வளவு திமிரா ? வாடீ …. நான் ஆம்பளயா இல்லையான்னு காமிக்கிறேன் ” என்று சொல்லியபடி ஒரே தாவாகத் தாவி அவ்வாவின் முடியைப் பற்றியிழுத்தான்.

நான் செய்வதறியாமல் திகைத்து நின்றேன்.

கண்ணிமைப்பதற்குள் ஒருக்கணம் அவன் கையைத் தட்டி விட்டு விட்டு உள்ளே ஓடிய அவ்வா அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து அவன் முகத்தில் ஊற்றியது.

இதைச் சிறிதும் எதிர்பார்க்காத கந்தன் பன்றியைப் போல் அலறினான். மறுபடியும் உள்ளே ஓடிய அவ்வா அடுப்பில் எரிந்து கொண்டிருந்த கொள்ளிக்கட்டையை எடுத்து வந்து அவன் ஆண்மையில் ஓங்கிச் செருகியது.

நல்ல வேளையாக அவ்வா ஜெயிலுக்குப் போகவில்லை. கந்தனை என்ன செய்வதென்று போலீஸே திணறிக் கொண்டிருந்தது போலும். விபத்தில் மரணம் என்று சொல்லி கேஸை முடித்து விட்டது போலீஸ்.

அதற்குப் பிறகு அந்த நாய்கள் மாடிப்பக்கம் வரவில்லை.

——————————————————————————–

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சத்தம் வந்து கொண்டிருந்த திசையில் தேடிப் பார்த்தேன்.

ஒரு சின்னஞ்சிறிய நாய்க்குட்டி. பிறந்து சில தினங்களே ஆகியிருக்கும் போல் தோன்றியது. முட்புதரில் சிக்கிக் கொண்டு குளிரில் நடுங்கியபடி கிடந்தது. அருகில் சென்றபோது குரைத்தது.

கவனமாக முட்களை விலக்கி விட்டுக் குட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தேன். ஆர்வமாக வந்து பார்த்து விட்டுச் சென்ற அவந்திகா கம்பளியைக் கொண்டு வந்து போர்த்தினாள். ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றிக் கொடுத்தேன்.

ஆவலுடன் குடித்து விட்டு , ஓட முடியாமல் விழுந்தும் எழுந்தும் தடுமாறி வந்து என் மடியில் ஏறிக் கொண்டது அந்த நாய்க்குட்டி.

நன்றி: ஆறாம்திணை

Nov 14, 2010

நகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல்-சாரு நிவேதிதா

நகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல்

(கோட்ட விளையில் நடந்த `வானவில் இலக்கிய வட்டம்' கருத்தரங்கில் மார்ச் 28 , 1999 அன்று வாசிக்கப்பட்ட கட்டுரை)

மேலோட்டமான பார்வையில் நகுலனின் கதைகள் மிகவும் எளிமையாகவும், சுய சரிதச் சம்பவங்களாகவும், சுலபத்தில் `இலீடேட்' செய்யக் கூடியனவாகவும் தோற்றம் தந்தாலும் அது ஒரு மாயத் தோற்றம் தான். இந்த எளிமைக்குப் பின்னால் மனித வாதை குறித்த பெரும் துக்கம் `ஹம்பி' இடிபாடுகளாய் விரிந்து கிடக்கிறது. மனிதத் தனிமை குறித்த அவல உணர்வு இருக்கிறது.nAGULANE மனித வாழ்வைக் குறித்த எக்ஸிஷ்டென்சியல் ஆங்கஸ்ட் இருக்கிறது.

இவனைத் தவிர வேறு ஒரு ஆத்மா யாருமில்லை, தெரு நாயைத் தவிர.

பொதுவாக மனிதர்களுடனே அதிகமாக ஒட்டிப் பழக வேண்டுமென்ற நிலையை அவன் உணரவில்லை.

ஆனால் நாய்கள் அவனைச் சூழ்ந்திருந்தன. லிஸ்ஸி, யும்மி, வால்டர், அச்சுதன் என்று நாய்களின் வரலாற்றை அவன் எழுதிக் கொண்டிருந்தான். அவன் அருகே அச்சுதன் படுத்துக் கொண்டிருக்கிறது. அது படுத்துக் கொண்டிருப்பதைப் போல அவன் எழுதிக் கொண்டிருக்கிறான்.

காலம் காலமாக வார்த்தைகள் அர்த்தத்தை வெளியிட முடியாத நிலையில் தத்தளிக்கின்றன.

தெருவில் ஒரு நாய் எலும்பும் தோலுமாக நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு ஓடிப்போய்க் கொண்டிருப்பதை அர்த்தமில்லாமல் பார்த்தான்.

எதையெதையோ தேடிச் சலித்து செத்து மடியும் மனிதக் கூட்டத்திலிருந்து விலகி விட முற்பட்டுத் தனித்து அலையும் நகுலன் பல்வேறு ரூபங்கள் கொள்கிறான்.

எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத வேதனைகளையெல்லாம் புன்முறுவலுடன் சகித்துக் கொள்ளும் பேரன்பின் வடிவமானதாய்.

அவள் கைகளைப் பற்றிய படி மனிதர்களை வேடிக்கை பார்க்கும் சிறுவன், நாய்கள், சிவன், ஹரிஹர சுப்ரமணிய ஐயர், பிராந்தி குடிப்பவன், சுசீலாவின் காதலன், எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பவன், சைக்கிளில் ஊர்சுற்றிக் கொண்டிருப்பவன், தன் அறையில் சுழல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்காகக் கண் எட்டியவரை கொல்லையைப் பார்த்துக் கொண்டிருந்தான். 6 மணி வரை பார்த்துக் கொண்டிருப்பான். பிறகு வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பான்.

மறுபடியும், என் அறைக்குள் நான் புகுந்து விட்டேன். குழந்தை இல்லை, கவிதை இல்லை, நான் என்று சொல்லப்படும் நானும் இல்லை.

அறை மாத்திரம் இருந்தது.

திராவிட எழுச்சியால் பிராமண எழுத்தாளர்களுக்குள் பீதி உணர்வை இலக்கியமாக்கியவர்களுள் நகுலனும் ஒருவர். ஆனால் மற்றவர்களுக்கு இந்த பரோநோயா விலிருந்து தப்பித்துக் கொள்ள ஓரளவேனும் ஆசுவாசம் பெற குடும்பம் இருந்தது. இலக்கியத்தில் ஓரளவு ஐரோப்பியப் பார்வை இருந்தது.

ஆனால் நகுலனுக்கு இத்தகைய பாதுகாப்புகள் இல்லை. பெருவெளியில் தனியாக விடப்பட்ட இவருக்குக் கிடைத்த பற்றுதல்களுள் ஒன்றான எழுத்தும் இவரை பரோநோயா விலிருந்து விடுவிக்கவில்லை.

லிஸ்ஸி தான் அவன் நினைவில் வரும் முதல் நாய், அது அவன் வாழ்க்கையில் புகுந்த சமயம் அவன் இல்லை. அவன் தாயார் மூலம் தான் அவனுக்கு லிஸ்ஸியின் விவரம் தெரியும். இந்தக் காலண்டரும் அவன் தாயார் சுட்டிக் காட்டியதன் மூலம் தான். இன்று அவனெதிரில் அச்சுதன் இருக்கிறது. லிஸ்ஸியும் இல்லை. அவன் தாயாரும் இல்லை.

பாரதி மனதைக் கொல் என்றான். ஆனால் என் கண்முன் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, பணக்காரன் ஏழை என்ற படி ஆயிரம் ஆயிரம் தம்பதிகள் தலைகளைத் தாழ்த்திக் கொண்டு பிரேத ஊர்வலம் போல் நகர்வதைப் பார்த்தேன். வாசகா, என்னை மன்னித்து விடு. நான் வெறும் ஒரு எழுத்தாளன். என்னால் எதையும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. நான் எழுதுவது உனக்குப் புரியவில்லை என்கிறாய். எனக்கு மாத்திரம் புரிகிறது என்று நினைக்கிறாயா? அல்லது புரிந்து விட்டால் தான் என்ன? எது ஒன்று நமக்குப் புரிகிறது என்று நினைக்கிறோமோ அதுவே அடுத்த கணம் புதிராக மாறும் அனுபவம் உனக்கு ஏற்பட்டதே இல்லையா? இல்லை என்றால் நீ பாக்கியசாலி.

அம்மா போன பின் எப்பொழுதுமே என்னுள் ஒரு வெறுமை உணர்ச்சி.

எழுத்து எங்கே எல்லாமோ என்னைக் கொண்டு செல்கிறது.

சாவதற்கு முன் சமாதி அடைய விரும்புகின்றேன்.

என்னவோ எழுதுகிறேன். எதையோ செய்கிறேன் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்.

இவன் நிறந்தது முதல் இறக்கும் வரை தனியாகவே இருந்தான். இருப்பான் என்பது இவனுக்குத் தெரியாததில்லை.

எங்கிருந்தோ வருகிறோம். எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம். நடுவில் பல தடுமாற்றங்கள்.. இவனுக்கு எல்லாமே ஒரே குழப்பமாக இருந்தது.

புறாக்கூடு போன்ற சிற்றறைகளில் லோகாயதம் என்ற பேரேட்டின் தஸ்தாவேஜூக்களைச் சிவப்பு நாடாவில் கட்டி வைத்து விசிறி சுழலும் ஒரு அறையில் ஒரு மனிதன் அமர்ந்திருக்கப் பிணம் போன்ற மனிதர்கள், வரிசை வரிசையாக நிற்கிறார்கள்.

இந்த பரோநோயா இவரை இவரது சமகாலத்தில் எழுத்தாளர்கள் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் இட்டுச் சென்றிருக்கிறது. ஆதி மனிதனின் வியப்புடனும் அதே சமயம் ஒரு துயரம் தோய்ந்த எள்ளலுடனும் லௌகீகத்தை ஒதுக்கி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார் நகுலன். வேடிக்கை அலுக்கும் போது கசப்பு பிராந்தியை அருந்துகிறார்.

சொற்கூட்டங்களிடையே அலைந்து திரிகிறார் தன்னிலிருந்து தானே நிரிந்து நின்று தன்னையே மற்றவனாகப் பார்க்கிறார்.

எழுத்து நெடுகிலும் தன்னைப் பற்றியே சொல்வதான தோற்றம் தந்தாலும், இவர் சிருஷ்டி கர்த்தா என்ற பாத்திரத்திலிருந்தும் கழன்று கொண்டு விடுகிறார்.

காலாதீதமாகத் தொடர்ந்து பேருண்மைகளைத் தேடும் ஆதி மனம் எங்கெங்கோ தனது வேர்களை விட்டுச் சென்றிருக்கிறது. மகா பாரதம், கிரேக்கத் தொல்கதைகள் போல.

charuniveditaஇவற்றில் ஒன்று தான் வேதங்கள், தொல் சமூகங்களின் அறிவுச் சேகரம், அந்த வேத காலத்து ரிஷியைப் போல் போய்க் கொண்டிருக்கிறார் நகுலன்.

எனக்கு எப்பொழுதுமே ஒரு விசித்திர அனுபவம் உண்டு. அதாவது, கண்ணாடி முன் நான் என்னையே பார்த்துக் கொண்டு நின்றால், கண்ணாடியில் காணும், உருவமும் நானும் ஒரே ஆள் தானா என்று என்னையே நான் கேட்டுக் கொள்வதுண்டு.

நான் மீண்டும் ஒரு அத்தியாயத்தைப் புரட்டி விட்டு இன்னொரு அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றேன். அதனால் தான் என் நிழல் எங்கும் என்றும் விழுகின்றது. என் மூலம் வார்த்தைகள் வாக்கியங்கள் ஆகாவிட்டாலும், எழுத்தும் எண்ணமும் என்று முடிகின்றனவோ அன்று தான் என் கடைசி அத்தியாயம் முடியும். அது வரையில் வீட்டு வாசலில் நின்று கொண்டு வருபவரையும் செல்பவரையும் பின் தொடர்ந்து மடங்கி உட்சென்று உய்கின்றேன்.

நகுலன் எழுத்துக்களில் நகுலன் இல்லை,

சொல் இல்லை,

நான் இல்லை,

நீ இல்லை,

அது அவள் நாய் எதுவுமில்லை,

இருப்பது வேத மனத்தின்

சிருஷ்டி லயம்.....

Oct 4, 2010

முள் - சாரு நிவேதிதா

இன்றோடு பதினஞ்சு நாளைக்கு மேல் இருக்கும் தொண்டையில் இந்த முள் சிக்கி. மீன் சாப்பிட்ட போதுதான் சிக்கியிருக்க வேண்டும். இதுக்குத்தான் நான் ருசியா இருக்கிற மீனாயிருந்தாலும் முள் மீனாக இருந்தால் தொடுவதேயில்லை. சில மீன்களில் நடுமுள் மட்டும் இருக்கும். கோழிச் சிறகுcharunivedita மாதிரி. சில மீன்களில் சதைக்கு உள்ளேயெல்லாம் ஒரே முள்ளாயிருக்கும். கார்த்திகை வாளை, முள்ளு வாளை எல்லாம் இந்த வகையறாதான். ஆனால் இந்த இரண்டு ரகத்திலும் சேராத ஒரு மீன்... கோலா மீன். இதுக்கும் நடுமுள் உண்டு. அதோடு பாதி பாகம் சதையோடு முள் கலந்தும், பாதி வெறும் சதையாகவும் இருக்கும். இந்தக் கோலா வருஷம் பூரா கிடைத்துக் கொண்டிருக்காது. வைகாசி, ஆனி மாசங்களில் மட்டும்தான் கோலா.. ஆடி வந்தாலே கோலா குறைய ஆரம்பித்து விடும். இதுக்குக்கூட ஒரு சொல் வழக்கு... ‘ஆடி மாசம் வந்தா கோலா ஆத்தா வூட்டுக்குப் போய்டும்.’
கோலா மீன் பிடிப்பதே ஒரு அலாதி... அதைப் பார்க்க வேண்டுமென்று கட்டு மரத்தில் ஒரு முறை போயிருக்கிறேன்... கோலா பிடிக்க லாஞ்சில் போவது கிடையாது... காரணம், கோலா பிடிக்க குறைந்தபட்சம் இருபது மைலிலிருந்து அறுபது மைல் வரையிலும் கூட போவது உண்டு... லாஞ்ச் என்றால் இத்தனை மைல்கள் போக டீஸல் செலவு...?
ஆறு அல்லது ஏழு பேர் ஒரு கட்டுமரத்தில் காலை மூன்று மணிக்குக் கிளம்பினார்கள் என்றால் வருவதற்கு இரண்டு நாள் கூட ஆகும்! ஒரு தடவைக்கு மூணாயிரத்திலிருந்து இருபதாயிரம் மீன்கள் வரை அகப்படும். கட்டுமரத்திலேயே தாழை, புல் தழை இவற்றையும் எடுத்து வந்து விடுவார்கள்... இதை ஒரு மரச்சதுரத்தில் பிணைத்துக்கட்டி ஒரு சின்ன பசுந்தழைத் தீவு மாதிரி தண்ணீரில் மிதக்க விட்டு விடுவார்கள்... கோலா இந்தப் பச்சையைப் பார்த்ததும் கூட்டம் கூட்டமாகத் துள்ளி வரும், பசுந்தழையில் முட்டையைப் பீச்ச.... சில சமயம் இந்தத் ‘தீவுகளை’ கரைக்கு எடுத்து வந்த பிறகும் கூட அவற்றில் தங்கியுள்ள இந்த முட்டைகளைப் பார்க்க முடியும். இன்னொன்று... கோலாவை வலை ’வீசிப்’ பிடிப்பது இல்லை. இதுதான் கண்ணால் பார்த்துப் பிடிக்கிற மீன்... கோலாவுக்குத் தனி வலை... அந்த ஏந்து வலையை வைத்துக்கொண்டு அப்படியே ஏந்தி ஏந்திப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.. இந்த வலையைத்தான் கச்சா வலையென்று சொல்வது...
சில சமயங்களில் ஒரு கோலா கூடக் கிடைக்காமல் போவதும் உண்டு. இதுக்குக் காரணம் ‘பர்லா’... இந்தப் பர்லா மீன் வந்தாலே அந்த இடத்துக்கு ஒரு கோலா கூட வராது... மற்றபடி அமாவாசை நாளில் கோலா அதிகம் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை. பொதுவாக கோலா சீஸன்தான் இவர்களின் ’அறுவடைக் காலம்’...
கோலாவுக்காக ஒரு தடவை கடலுக்குச் சென்றால் ஒரு ஆளுக்கு முன்னூறு ரூபாய்கூடக் கிடைக்கும். ஆனால் இதைவிட அபாயமான வேலை உலகத்தில் ரொம்பக் குறைச்சல்... முன்னேயெல்லாம் கோலா பிடிக்கப் போகிறவர்களுக்கு ‘வாய்க்கரிசி’ போட்டு அனுப்புவார்களாம். இப்போதெல்லாம் அந்தப் பழக்கம் கிடையாது.
இந்த வைகாசி வந்தாலே போதும்... எல்லார் பேச்சிலும் ரொம்ப அடிபடுவது கோலாதான்... கொஞ்சம் வேகமா காற்று அடித்தால் கூடப் போச்சு... ‘சே... சே.. என்னா காத்து... முகம் வாயெல்லாம் ஒரே மண்ணு.. சனியன் புடிச்ச கோலா காத்து’ என்று அலுத்துக் கொள்வார்கள்.
அத்தையும், மாமாவும் வந்து இன்னையோட பதினஞ்சு நாளா ஆவுது...? பதினஞ்சு நிமிஷமா ஓடிப்போச்சு.. எனக்கு இந்த முள் தொண்டையிலெ சிக்கியதே இவர்கள் வந்த அன்றைக்குத்தான்.. மாமா வந்ததுமே நைனா மார்க்கெட் கிளம்பிட்டாங்க... மீன் இல்லாவிட்டால் சாப்பாட்டையே தொடமாட்டார் மாமா... அதுவும் கோலா மீன் என்றால் அவருக்கு உயிர்...
அவரோடு அன்று சாப்பிட்டபோது சிக்கியதுதான்... அதுக்குப் பிறகு மீனையே தொடவில்லை நான்... இந்த முள்ளை நினைத்தால் மீன் ஆசையே விட்டுப்போய்விடுகிறது... என் அத்தை மீனெல்லாம் சாப்பிடுவதில்லை... எப்பவாவது எங்கள் கட்டாயத்துக்காக சாப்பிடும்போதெல்லாம் சாப்பிட்ட பிறகு ‘வாந்தி’ எடுக்கவும் தவறுவதில்லை... மாமாவுக்கு எதிர் என் அத்தை... படிப்பது என்றால் அத்தைக்குக் கொள்ளை ஆசை... சமையல் முடிந்து விட்டால் கையில் புத்தகம் தான்.... மாமாவோ ஏதாவது படிக்கிறார் என்றால் அது வாரா வாரம் ராசிபலன் மட்டுமாகத்தான் இருக்கும்!
எழுதுவதிலும் அப்படித்தான்... அத்தை எனக்கு எழுதின எல்லா கடிதங்களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். கவித்துவ மிக்க அந்தக் கடிதங்களை எத்தனை முறை படித்திருக்கிறேன் தெரியுமா...! மாமாவோ தன் பேனாவைத் திறப்பது கையெழுத்துப் போட அல்லது தன் அம்மாவுக்குக் கடிதம் எழுத இந்த இரண்டுக்கும் மட்டும்தான். (தேவரீர் அம்மாவுக்கு உங்கள் மகன் எழுதிக்கொள்வது. க்ஷேமம், க்ஷேமத்திற்கு பதில். நான் வரும் பத்தாந்தேதி அங்கு வருகிறேன். வேறு ஒன்றும் விசேஷம் இல்லை. இப்படிக்கு...) ஆரம்பத்தில் தன் அம்மாவுக்குக்கூட அத்தையின் மூலம்தான் எழுதிக்கொண்டிருந்தாராம். ஆனால் அவர் அம்மாவிடமிருந்து “எனக்கு நேரடியாக ஒரு லெட்டர் எழுதக்கூட உனக்கு நேரம் இல்லையா? இனிமேல் உன் பெண்டாட்டியை விட்டு எழுதாதே... இஷ்டமிருந்தால் நீயே உன் கைப்பட எழுது” என்று ‘பாட்டு’ வாங்கிய பிறகுதான் அந்தக் கடிதம் கூட அவர் எழுதுகிறார். இதுக்குப் பிறகு மாமா எழுதச் சொன்னாலும் அத்தை எழுதுவதில்லை. இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.
“டேய் ராஜா... நான் வெளியே போறேன்.. வர்றீயா...?”
மாமாவின் பிசிறான குரல் கேட்டு என் சிந்தனை அறுந்தது. அப்போது அங்கு வந்த என் அத்தை என்னை முந்திக் கொண்டு சொன்னார்கள்.
“ராஜாவுக்கு உடம்பு சரியில்லை... அது வராது”
“சரி சரி... நீயே அவனைப் பூட்டி வச்சுக்க...”
-மாமா கோபத்துடன் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.
மாமாவுக்கு சாயங்காலம் ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை வெளியே போய் ஊர் சுற்றாவிட்டால் தலையே வெடித்துவிடும்... பாவம்... அத்தை... வீட்டில் தனியாவே இருந்திருந்து எப்படித்தான் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறதோ...?
அத்தையின் பேச்சில் இப்போதெல்லாம் ஒன்றைக் கவனித்தேன். கொஞ்ச நாளாக அத்தை என்னிடம் ‘டா’ போட்டுப் பேசுவதில்லை. பத்து வருஷ வித்யாஸம் பெரிசு இல்லையா? ஆனால் இப்படிப் பேசுவதுதான் எனக்குப் பிடிக்குது..
நெற்றியில் ஒரு மென்மையான ஸ்பரிஸத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்க்கிறேன்....
அத்தை...
”ராஜா... நெத்தியெல்லாம் ரொம்ப சுடுதே..” என்று சொல்லிக்கொண்டே படுத்திருந்த என் பக்கத்தில் அமர்ந்து என் கையை எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார்கள். நெற்றி சுடுவதென்ன...? இந்தத் திண்ணை இருட்டில் இப்படிக் கிடைத்த அத்தையின் இந்த அண்மைக்காக அப்படியே நான் எரிந்து போவதற்கும் தயார்....
வெகுநேரம் இருவரும் பேசவே இல்லை.
திடீரென்று அத்தை கேட்டார்கள்.
”தொண்டையிலே முள் சிக்கிட்டுன்னியே..  போய்டுச்சா..?”
“ம்ஹூம்.. இல்லெ...”
“அப்படின்னா நான் சொல்ற மாதிரி செய்... சாப்பிடும்போது சூடான வெறும் சாதத்தை ஒரு பெரிய உருண்டையா உருட்டி வாயில் போட்டு விழுங்கு. போய்டும்...”
இதுக்கு நான் பதில் சொல்லவில்லை... என் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிற அத்தையின் கைகளை அப்படியே எடுத்து ஒரு முத்தம் கொடுத்தால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்... ஆனால்?
இதைச் செய்ய என்னைத் தடுப்பது எது?
‘Love has no taboos' என்று படித்திருக்கிறேன். ஆனால் அத்தையின் மேல் நான் கொண்டுள்ளது காதலா...? காதல்.. சே.. தொடர்கதைகள்ளேயும், சினிமாவிலேயும் இந்த வார்த்தையைப் போட்டு ரொம்ப அசிங்கப்படுத்தி விட்டார்கள்.
Is it sex-love...?
நோ... அப்படி என்னால் நினைக்க முடியவில்லை. இது ஒரு tender devotion.... ஆனா இதன் எல்லை எதுவாக இருக்கும்....?
அனாவசியமாக மனசைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறேன்... அத்தையின் மேல் எனக்குள்ள ப்ரேமை இன்று நேற்று ஏற்பட்டதா என்ன?
அப்போது ஆறு வயசிருக்கும்... அத்தை அடிக்கடி என்னிடம் “ராஜா.. நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற...?” என்று கேட்பார்கள். நான் ஒவ்வொரு முறையும் ‘உங்களைத்தான்... உங்களைத்தான்’ என்று சொல்வேன்.
கொஞ்சங்கூட மறக்கவில்லை.
“அத்தை... உங்களைத்தான் நான் கட்டிக்குவேன். ஆனா நான் உங்களைக் கட்டிக்கிறப்போ உங்க கை தோலெல்லாம் அவ்வாவுக்கு இருக்கிற மாதிரி கொழ கொழன்னு சுருங்கி இருக்கக்கூடாது... இப்ப இருக்கிற மாதிரியே இருக்கணும்” என்று சொல்லி அத்தையின் கைச்சதையைத் தொட்டுக் காண்பிப்பேன்...
உடனே அத்தை சிரித்துக்கொண்டே என் அம்மாவிடம் “பார்த்தீங்களா வதினை... ராஜா சொல்றதெ” என்று ஆரம்பித்து நான் சொன்னதையெல்லாம் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள்.
இப்போது மீண்டும் அதை நினைத்துப் பார்க்கிறேன்.. ஆனால் இப்போதெல்லாம் அத்தை ஏன் அந்தக் கேள்வியைக் கேட்பதே இல்லை...?
’ராஜா நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற...?’
அப்படியே அத்தை கேட்டாலும் முன்பு சொன்னது போல் என்னால் பதில் சொல்ல முடியுமா?
’அத்தை... உங்களைத்தான் நான் கட்டிக்குவேன்... ஏன்னா உங்கள் கை பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி இருந்த மாதிரி இல்லன்னாலும் உங்க மனசு அப்படியேதான் இருக்கு...’
திடீரென்று தெரு நாய்களின் காதைக் கிழிக்கிற சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தது. அட எப்படி இங்கே வந்து படுத்திருக்கிறேன்...? கடைசியில் அத்தையோடு பேசிக் கொண்டிருந்தது நினைவிருக்கு... அப்புறம் தூக்கக் கலக்கத்தில் இங்கே வந்து படுத்தது நினைவு இல்லை. இனிமேல் எப்படித் தூக்கம் வரும்? விடிகிற நேரம்... கொஞ்ச நேரம் ஸ்ரீஸ்ரீளம் புரண்டு கொண்டிருந்து விட்டு எழுந்தேன்...
பாத்ரூமுக்குப் போய் பேஸ்ட்டும், ப்ரஷ்ஷும் எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கம் போனேன். ப்ரஷ் பண்ணிக்கொண்டிருக்கும் போதே முள் நெருடுவது தெரிகிறது... பல்லைத் துலக்கிவிட்டு கட்டை விரலால் நாக்கை வழித்தேன். இதுக்கு நான் tongue cleaner பயன்படுத்துவது இல்லை. Tongue cleaner என்றால் நாக்கில் ஒரு குறிப்பிட்ட ‘ஏரியா’வைத்தான் சுத்தப்படுத்த முடியும். அடி நாக்குக்கெல்லாம் அது போகாது... அதனால் உசிதம், கட்டை விரல். ஆனால் விரல் நகத்தில் ஏதேனும் பிசிறு இருந்தால் நாக்கைக் கீறி விடும்... எச்சிலோடு ரத்தமும் வரும்... அப்புறம்  அது க்ஷயரோக ரத்தமா அல்லது நாக்குக் கீறலின் ரத்தமா என்று சந்தேகப்பட்டு பயப்பட வேண்டியிருக்கும்! அதுக்காக கட்டை விரல் நகத்தை மட்டும் பிசிறு இல்லாமல் வைத்திருக்க வேண்டும். சரி... இன்று எப்படியும் இந்த முள்ளை எடுத்துவிட வேண்டும்... கட்டை விரலையும், சுட்டு விரலையும் மாற்றி மாற்றித் தொண்டைக்குள் விட்டுக் குடைந்தேன்... ஏகமாய் வாந்தி வந்ததுதான் மிச்சம்.
முள் அப்படியேத்தான் இருந்தது....
இதுக்கு முன்னால் கூட மீன் சாப்பிட்டபோது முள் சிக்கியிருக்கிறது... ஆனால் இந்த மாதிரி பதினஞ்சு நாள் இருபது நாளென்று உயிரை வாங்கியதில்லை.
சின்ன வயசில் ஒரு வேடிக்கை நினைவு வருது. அப்போது நான் அவ்வா வீட்டில் இருந்தேன். ஒரு நாள் சாப்பாட்டுக்கு கருணைக்கிழங்கு வறுவல் செய்திருந்தார்கள். அந்த வயதில் அது கருணைக்கிழங்கு என்றெல்லாம் எனக்குத் தெரியாது... ஏதோ ருசியாய் இருக்கவும் நிறைய சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்தது தாமதம்... ‘அய்யோ... அம்மா...’ என்று அலற ஆரம்பித்து விட்டேன். தொண்டையில் பயங்கர அரிப்பு... அதை அரிப்பு என்று சொல்லத் தெரியாமல் ‘தொண்டையிலே முள் குத்திடுச்சி’ என்று ரகளை பண்ணிக்கொண்டிருந்தேன். அப்பறம் மெதுவாக வேலைக்காரி வந்து ‘இது கருணைக்கிழங்கு சமாச்சாரந்தான்’ என்று சொல்லி எல்லார் பயத்தையும் போக்கி என்னைத் தேற்றினாள்.
டிஃபனை முடித்துவிட்டு அத்தையுடன் பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். தம்பி வந்து சொன்னான், யாரோ கூப்பிடுவதாக. வெளியே வந்து பார்த்தால்.... பேபி.
“என்னடா இது அதிசயமா இருக்கு.. பதினொரு மணி வரைக்கும் மார்க்கெட்லெயில்ல சுத்திக்கிட்டு இருப்ப...”
”இன்னைக்கு நான் மார்க்கெட்டுக்குப் போகலெ.. சரி வா... கொஞ்சம் ஈச்சந்தோட்டம் வரைக்கும் போயிட்டு வரலாம்.”
“இதோ வர்றேன்... சித்த இரு” என்று அவனிடம் சொல்லிவிட்டு உள்ளே வந்தேன். அத்தையிடம் போய் “கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்திர்றேன் அத்தை...” என்றேன்.
“சீக்கிரமா வந்திடு ராஜா...”
-நான் இப்போது வெளியில் போவதை அத்தை விரும்பவே இல்லை. இருந்தாலும் பேபியின் முகத்தில் தெரிந்த அந்த சீரியஸ்னஸ்..
கிளம்பிவிட்டேன்.
பேசிக்கொண்டே ஈச்சந்தோட்டம் வந்தோம். பெயர்தான் ஈச்சந்தோட்டம். ஆனால் ஒரு ஈச்ச மரம் கூடக் கிடையாது.. எப்பவோ ஈச்சந்தோட்டமாக இருந்திருக்கலாம்.. இப்போது எஞ்சி நிற்பதென்னவோ பெயர் மட்டுந்தான்... பேசாமல் புளியந்தோப்பு என்று பெயரை மாற்றி விடலாம்... அவ்வளவு புளிய மரங்கள்...
ஒரு புளிய மரத்தடியில் அமர்ந்தோம்... ஒரு பெரிய வேரில் முதுகைச் சாய்த்து திண்டில் அமர்ந்திருக்கும் செட்டியார் மாதிரி உட்கார்ந்து கொண்டான் பேபி....
மெதுவாக விஷயத்தை ஆரம்பித்து பிறகு சரமாரியாகப் பொழிய ஆரம்பித்தான்...
விஷயம் வேறொன்றுமில்லை.. இவன் அப்பாவுக்கு ஏகமான சொத்து இருக்கு... இருந்தாலும் மகன் தன்னை மாதிரி நிலத்தில் இறங்காமல் ஒரு டாக்டராகி விட வேண்டும் என்று தீவிரமான ஆசை. இவனோ பி.யூ.சி.யைத் தாண்டவில்லை. பயாலஜி, ஜூவாலஜி புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருதுங்கிறான். விவசாயத்தில்தான் ஈடுபாடு. இவன் M.B.B.S. போகாததால் ஜன்ம எதிரியாகப் பார்க்கிறார் தந்தை.. அப்புறம் சச்சரவுக்கு கேட்கணுமா... இன்னும் கடிக்கிட்டுப் புரளலை... அவ்வளவுதான்.
உணர்ச்சிவேகத்தில் என்னென்னவோ முடிவுகள் எடுத்துக்கிட்டு இருக்கான்...
“சரி வா, ரொம்ப தாகமா இருக்கு... அந்த வீட்லே போயி கொஞ்சம் தண்ணி குடிப்போம்.”
-பேச்சை மாற்றி அவனைக் கிளப்பினேன்.
தண்ணீரைக் குடித்துவிட்டு அங்கேயே தீப்பெட்டி வாங்கி சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான்... எனக்குத் தண்ணீரைக் குடித்ததும் முள் அதிகமாக நெருட ஆரம்பித்தது...
குமட்டியது.
இவனுக்கும் தெரியும். கோலா மீனைச் சாப்பிட்டு எனக்கு முள் சிக்கிக்கொண்டது. அதுதான் எந்நேரமும் புலம்பிக் கொண்டே இருக்கிறேனே...
“ராஜா.. இந்த முள் இவ்வளவு நாள் போகாம இருக்கிறதப் பாத்தா இது முள்ளு தானான்னே எனக்குச் சந்தேகமா இருக்கு. ஒரு வேளை முடி கிடி சாப்பாட்டில் கிடந்து சிக்கிக்கொண்டிருந்தால்....?”
எனக்கு முடி என்றதும் பயமாகி விட்டது... அதோடு விடாமல், “ஒரு வேளை ஒன்னோட ப்ரமையாவும் இருக்கலாம்” என்றான்.
எனக்கு எரிச்சல் வந்துவிட்டது.
“அப்படின்னா... உன் அப்பாவோட நான் நேத்து ராத்திரி சினிமா பார்த்தேனே.. அவர் எப்படி அந்த நேரத்துலெ உன்னோட சண்டை போட்டிருக்க முடியும்... ஏதாவது கனவு கினவு கண்டிருப்பெ...”
”எனக்குக் கோபம் வரல்லெ...”
என் எரிச்சல் இன்னும் அதிகமாகியது.
“என்ன ராஜா.. இவ்வளவு நேரம்? இனிமே நீ வெளியே போகக் கூடாது நாளைக்கு நாங்க ஊருக்குப் போற வரைக்கும் வீட்லயேதான் இருக்கணும்...”
வீட்டில் நுழைவதற்குள் அத்தையின் ஆர்டர்...
“இப்ப என்ன ஊருக்கு அவசரம்? இன்னும் அஞ்சாறு நாள் கழிச்சுக் கிளம்பறது...”
“நான் என்ன பண்றது ராஜா... உன் மாமாதானே...”
“ஆமா, நீங்களும்தான் ஊருக்குப் போகணும் போகணும்னு பறக்கறீங்க...”
-இதுக்கு அத்தை பதில் சொல்லவில்லை.
நான் போய் கொல்லைக் கிணற்றில் குளித்துவிட்டு, திண்ணைக்கு வந்தேன்... அத்தை இல்லை. அறையில் படுத்திருக்கலாம் என்று அறைக்கு வந்தேன். அங்கே....
டேபிளின்மீது தலையைக் கவிழ்த்துக்கொண்டு சின்னக் குழந்தை மாதிரி குலுங்கிக் குலுங்கி...
“அத்தை... என்ன இது?”
தலையின் மீது கைவைத்து நிமிர்த்தினேன்.
“இப்ப உனக்குத் திருப்திதானே ராஜா... இவ்வளவுதான் நீ என்னத் தெரிஞ்சுக்கிட்டது...”
-எனக்கு என் மேலேயே வெறுப்பு ஏற்பட்டது. எவ்வளவு மென்மையான மனசைப் புண்படுத்தி இருக்கிறேன்.
தலையின் மீது வைத்த கையை நான் எடுக்கவே இல்லை.
இன்னும் சில நிமிஷங்கள்தான்... அப்புறம் வீடே வெறிச்சோடிக் கிடக்கும்...
இதோ புறப்பட்டு விட்டார்கள்... அத்தையும் மாமாவும்.. நானும் கிளம்பினேன், ஸ்டேஷன் வரைக்கும்....
ட்ரெய்ன் எட்டு மணிக்குத்தான் கிளம்பும்... ஒரு மணி நேரம் முன்னாலேயே வந்தாச்சு.. தம்பியும், மாமாவும் ஜன்னலோரத்தில் இடம் பிடித்துவிட்டார்கள்.
அத்தை என்னுடனேயே நின்று கொண்டிருக்கிறார்கள். “அடிக்கடி லெட்டர் எழுதுவியா...” என்று கேட்டுக்கொண்டே என் கைகளைப் பற்றிக் கொள்கிறார்கள்...
கண்ணீர்....
எனக்கு அப்படியே அத்தையைக் கட்டிக்கொண்டு கதற வேண்டும் போல் இருக்கு... ஆனால் கண்களில் ததும்பிய கண்ணீரைக்கூட கீழுதட்டைப் பற்களால் கடித்துக்கொண்டு அடக்கிக் கொள்கிறேன்...
எவ்வளவு நேரம் இப்படிப் போனதோ தெரியவில்லை. திடீரென்று அத்தை கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே போய் தம்பி உட்கார்ந்திருந்த இடத்தில் அமர்ந்தார்கள். தம்பி கீழே இறங்கினான்....
நான் ஜன்னலருகில் போய் அத்தையின் கையைப் பிடித்துக்கொண்டேன்.
‘இந்தக் கைக்கு இப்படியே ஒரு முத்தம் கொடுத்தால் என்ன...?’
ட்ரெய்ன் லேசாக நகர்ந்தது. நான் கைகளை எடுத்துக்கொண்டேன்.... ட்ரெய்ன் கொஞ்சங் கொஞ்சமாக வேகம் பெறுகிறது.
வெளிச்சம் தெரிகிற வரை ஒரு கை மட்டும் அசைந்து கொண்டிருந்தது தெரிந்தது.
வீட்டிற்கு வந்து அறைக்குள் போய் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு நாற்காலியில் அமர்ந்தேன். ஒரு பெண்ணின் குரல். ‘கோலா.... கோலா... ரூபாய்க்கு ஏழு கோலா... கோலா....’ என்று ஒரு ராகத்துடன் ஒலித்தது...
கொல்லைப்பக்கம் போய் சுட்டுவிரலைத் தொண்டைக்குள் விட்டுக் குடைந்தேன்...
குமட்டல்தான் வந்தது...
முள்....?
- கணையாழி, டிசம்பர் 1979
தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்