Mar 31, 2010

பூ உதிரும் - ஜெயகாந்தன்

 ஜெயகாந்தன்

பெரியசாமிப் பிள்ளை வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், அதுவும் அந்த நரைத்துப்போன, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு பேச ஆரம்பித்துவிட்டால்-- நிச்சயம், அவர் பேசுகின்ற விஷயம் இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டு உலக மகா யுத்தங்களிலும் நேச தேச ராணுவத்தினர் புரிந்த வீரதீரச் சாகசங்கள் பற்றியதாகத்தான் இருக்கும்.

அவரது வலது புருவத்துக்கு மேல் இருக்கும் ஒரு நீண்ட தழும்பு; முன் பற்களில் ஒன்றுக்கு தங்கமுலாம் பூசிக்கொண்டது; அதற்குக் காரணமாகயிருந்த ஒரு சீனாக்கார நண்பன் தன் நினைவாய் அவருக்குத் தந்த -- இப்பொழுதும் கையிலிருக்கும் ஒரு பழைய மாடல் கைக் கெடியாரம்; இடுப்பில் சாவிக் கொத்துடன் தொங்கும் நீண்ட jeyakanthan பேனாக்கத்தி; அதன் உதவியால் இரண்டு எதிரிகளைச் சாய்த்தது.... இவ்விதம் அவரோடு சம்பந்தப்பட்ட சகலமும் யுத்தத்தின் முத்திரை பெற்று விட்ட பின் அவரால் வேறு எவ்விதம் பேச இயலும் ?

அரும்பு மீசைப் பிராயத்தில் முதல் மகா யுத்தத்திலும், கரு கருவென முறுக்கு மீசை வளர்ந்த நடுத்தர வயதில் இரண்டாவது மகா யுத்தத்திலும் சமராடி வந்தவர் அவர். சுதந்திரமும் அமைதியும் நிலவும் ஒரு நாட்டின் பிரஜையாய் நரைத்த மீசையுடன் தளர்ந்த உடலுடன் இப்போது வாழ்ந்த போதிலும், அவரது பட்டாளத்துக்கார மனத்துக்கு அடிக்கடி பழைய நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்திக் கொள்வதில் ஒரு போதை இருந்தது. அதில் ஒரு புத்துணர்ச்சியும் பிறந்தது.

அவர், தான் சந்திக்க நேருகின்ற ஒவ்வொரு வாலிபனிடமும் முதல் தடவையாகவும், பின்னால் சந்திக்கும் சமயங்களில் அடிக்கடியும் ஒரு விஷயத்தை வற்புறுத்துவார்: 'இந்த தேசத்திலே பொறந்த ஒவ்வொரு வாலிபப் புள்ளையும், இருபது வயசுக்கு மேலே ஒரு பத்து வருஷம் ---கொறஞ்சது அஞ்சு வருஷமாவது கட்டாயமா பட்டாளத்து அநுபவம் பெத்து வரணும்.....ஆமா ....மாட்டேன்னா---- சட்டம் போடணும் '...... '

தன் மகனை ராணுவ வீரனாக்க வேண்டும் என்ற அவரது ஆசை பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், அவரது பேச்சையும் தீர்மானத்தையும் கண்டு பயந்த அவர் மனைவி மரகதம் உறவினர்கள் மூலம் கிழவரின் முடிவை மாற்ற முயன்றாள்.....

'எதுக்குங்க பட்டாளமும்....கிட்டாளமும் ? பையன் பத்து படிச்சி பாஸ் பண்ணி இருக்கு. ஏதாவது கெவுருமெண்டு உத்தியோகம் ஒண்ணு பாத்து வெச்சி, கலியாணம் காட்சி நடத்தி பேரன் பேத்தியைக் கொஞ்சிக்கிட்டிருக்காம--- பையனைப் பட்டாளத்துக்கு அனுப்பறது சரியில்லீங்க அவ்வளவுதான்...... ' என்று கூறிய அந்த உறவினர்களையும், அவர்கள் அவ்விதம் வந்து யோசனை கூறக் காரணமாயிருந்த மனைவியையும் பார்த்து மீசையை முறுக்கிக் கொண்டு லேசாய்ச் சிரித்தார் பெரியசாமி. பிறகு அவர்கள் சொல்வதை சற்று ஆழ்ந்து சிந்தித்தார். அதில் பொருளிருப்பதாகத் தோன்றவில்லை அவருக்கு. குறுகிய பாசம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை என்றே தோன்றியது.

அவர்களுக்கு அவர் சொன்னார்: 'உங்களுக்குத் தெரியாது....ம்.... நான் வாழ்நாள் பூராவும் வெள்ளைக்காரங்ககிட்டே அடிமைச் சிப்பாயாவே காலங் கழிச்சவன்.... அப்பல்லாம் ஒரு சாதாரண வெள்ளைக்கார சோல்ஜருக்கு இருந்த மதிப்புக்கூட ஒரு கறுப்பு மேஜருக்கு கிடையாது, ஒரு சுதந்திர நாட்டு ராணுவத்திலே ஒரு சாதாரண சிப்பாயாக இருக்க மாட்டோமான்னு ஏங்கினது எனக்கில்லே தெரியும் ? இப்ப எம்மகனுக்கு அந்தச் சான்ஸ் கெடைக்கிறதுன்னா அதெ விடலாமா ? பட்டாளத்துக்குப் போனா, சாகறது தான் தலை விதின்னு நெனச்சிக்காதீங்க. பட்டாளத்துக்குப் போகாதவங்களுக்கும் சாவு உண்டு... வாழ்கையிலே ஒரு பொறுப்பு ' அநுபவம், தேசம்ங்கிற உணர்வு...ம்...ஒரு 'டிஸிப்ளின் ' எல்லாம் உண்டாகும் பட்டாளத்திலே..இதெல்லாமில்லாம சும்மா வெந்ததைத் தின்னுட்டு வேளை வந்தா சாகறதிலே என்னா பிரயோசனம் ?... சொல்லுங்க ' என்று அவர் கேட்கும் போது தந்தையின் அருகே நின்றிருந்த சோமநாதன், தந்தையின் இதயத்தையும் எண்ணத்தையும் சரியாகவும் முழுமையாகவும் புரிந்துகொண்டான். அவர் உடலில் ஒரு துடிப்பும் அவர் கண்களில் 'தனக்கு வயதில்லையே ' என்றொரு ஏக்கமும் பிறந்ததை அவன் மட்டுமே கண்டான்.

'அப்படிச் செத்துப் போனத்தான் என்னப்பா ? பட்டாளத்துக்குப் போறவன் அரசாங்கத்துப் பணத்திலே உடம்பை வளர்த்துக்கிட்டு, ஊருக்கு லீவில் வந்து உடுப்பைக் காமிச்சுப்பிட்டு போனாப் போதுமா ? சண்டைன்னு வந்தா சாகவும் தான் தயாராப் போகணும் ' என்று ஒரு வீரனின் மகனுக்குரிய துணிச்சலுடன் சோமநாதன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, கிழவரின் சுருட்டுக் கறையேறிய கரிய உதடுகள் உணர்ச்சி மிகுந்து துடித்தன.

'சபாஷ் ' 'என்று பெருமிதத்தோடு அவனைப் பாராட்டுகையில் அவர் கண்களில் அதீதமானதோர் ஒளி சுடர்விட்டது. இடது கை ஆள் காட்டி விரலால் முறுக்கேறி உயர்த்தியிருந்த மீசையின் வளைவை லேசாக ஒதுக்கிவிட்டுக் கொண்டே மகனின் தோள் மீது கை வைத்து, அவனுக்கு நேரே நின்று மகனின் கண்களைப் பார்த்துக் கேட்டார் பெரியசாமி.

'டேய் தம்பி... இவங்களுக்கு ஒண்ணும் புரியாது; நீ சொல்லு பார்ப்போம்; இந்தியா மேலே சண்டைக்கி வர்ரவன் இனிமே இந்த உலகத்திலே எவனாவது இருக்கானா ?...ம் தள்ளு ' பட்டாளத்துக்குப் போறதுன்னா, காக்கி உடுப்பை மாட்டிக்கினவுடனே கையிலே துப்பாக்கியைத் தூக்கிக்கிட்டு கண்ட பக்கமெல்லாம் 'படபட 'ன்னு சுட்டுக்கினு நிக்கறதில்லே.... பட்டாளத்து வாழ்க்கையைச் சரியாப் பயன்படுத்திக்கிட்டா அறிவும் அனுபவமும் வளரும். எழுதப் படிக்கத் தெரியாதவனாத்தான் நான் மிலிட்டரிக்குப் போனேன். நானே இவ்வளவு கத்துக்கிட்டு வளர்ந்திருக்கேன்னா யாரு காரணம் ? பட்டாளம் தான். இல்லாட்டி 'எங்கம்மாவை விட்டுப்பிட்டு எப்பிடிப் போவேன் 'னு ஊரிலேயே குந்திக்கினு இருந்தா, வெறவு பொறுக்கிக்கினு மாடுமேய்க்கத்தான் போயிருப்பேன். நீ என்னை மாதிரி தற்குறியில்லை; படிச்சிருக்கே....போனியானா ரொம்ப விசயம் கத்துக்கலாம்; ஆபீசராகூட ஆகலாம். இங்கேயே இருந்தியானா சினிமா பார்க்கலாம்; சீட்டி அடிக்கலாம்; அதான் உங்கம்மாவுக்குத் திருப்தியாயிருக்கும்.... ஊர்க்காரனுவ எப்பவும் ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பானுவ... துப்பாக்கின்னா எது போலீஸஉக்காரனுக்கு மட்டும்தான் சொந்தம்னு நெனைச்சிக்கிட்டிருக்காங்க....ம், இந்த நாட்டிலே பொறந்த ஒவ்வொருத்தனும் துப்பாக்கி பிடிக்கக் கத்துக்க வேணாமா ? அப்பத்தான் இன்னக்கி இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாளு தேசத்துக்கு ஒரு ஆபத்துன்னா நாடே துப்பாக்கி ஏந்தி நிக்கும்..... '

----தந்தை தன் சொல் வலியால், தாயின் ஆசீர்வாதத்துடனும் பத்து வருஷங்களுக்கு முன் பட்டாளத்தில் சேர்ந்தான் சோமநாதன்.

முதன்முறையாக, பட்டாளத்தில் சேர்ந்த அடுத்த ஆண்டில் அவன் லீவில் ஊருக்கு வந்திருந்தபோது... ஒரு வருஷத்தில்.....அவன் அதிகமாய் வளர்ந்திருப்பது கண்டு அவன் தாய் பூரித்துப் போனாள். அவனிடம் வெறும் உடல் வளர்ச்சி மட்டுமல்லாமல் உள வளர்ச்சியும் அறிவு விசாலமும் மிகுந்திருக்கிறதா என்பதையே சிரத்தையுடன் ஆழ்ந்து பரிசீலித்தார் பெரியசாமி. சதா நேரமும் அவனோடு பேசிக்கொண்டிருப்பதிலும் தன் அனுபவங்களைச் சொல்வதை அவன் எவ்விதம் கிரகித்து கொள்கிறான் என்று கவனிப்பதிலும் அவனை அளந்தார் அவர்.

லீவில் வீட்டுக்கு வந்திருக்கும்போதுகூட, காலையில் ஐந்தரை மணிக்கு மேல் அவனால் படுக்கையில் படுத்திருக்க முடியாது. எங்கோ நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் தனது ராணுவ முகாமில் முழங்குகின்ற காலை நேர எக்காளத்தின் ஓசையைக் கேட்டவன் போன்று, அந்தப் பழக்கத்தால்---- படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து விடுவான் சோமநாதன். பின்னர், காலை நேர உலாப் போய்விட்டு, தேகப்பயிற்சி செய்து முடித்தபின் என்ன செய்வதென்று புரியாமல் நாள் முழுதும் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.

இரண்டாவது முறை அவன் லீவில் வந்தபோது அதற்கொரு பரிகாரம் காண்பதுபோல் தோட்ட வேலை செய்ய ஆரம்பித்தான். அதன் விளைவாய் அவர்கள் வீட்டை சுற்றிலும் கட்டாந்தரையாகக் கிடந்த 'தோட்டம் ' சண்பகமும், ரோஜாவும், மல்லிகையும் சொரியும் நந்தவனமாக மாறி அவனது நினைவாய் இன்றும் மலர்களை உதிர்த்துக் கொண்டிருக்கிறது.....

இந்த பத்து வருஷ காலமாய் மகன் நினைவு வரும் போதெல்லாம் பெரியசாமிப் பிள்ளை தோட்டத்தில் போய் நின்று, அந்த மலர்ச் செடிகளை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். மலர்ந்த புஷ்பங்களைக் கண்டு அவர் மனம் மகிழ்ந்துகொண்டிருக்கும். அதே போழ்தில் அங்கு உதிர்ந்த பூக்களைக் கண்டு பெருமூச்செறிந்து கொண்டிருப்பாள் அவர் மனைவி.

'ம்...சும்மாக் கெடந்த தோட்டமெல்லாம் செம்பகமும் ரோஜாவும் வெச்சிப் பூ மண்டிப் போவுது...ஊரிலே இருக்கிற பொண்ணுங்க எல்லாம் வந்து அள்ளிக்கிட்டுப் போவுதுங்க... போறதுங்க சும்மா போவுதா ? 'பூ இருக்கிற வீட்டிலே பொண்ணு இல்லியான்னு ' பரியாசம் பண்றா ஒரு குட்டி... '

'அதாரு அந்த வாயாடி ?... பொண்ணு இல்லே, நீதான் வந்து இருவேன்னு சொல்றதுதானே ?... ' என்று நரைத்த மீசையில் வழக்கம்போல் கை போட்டார் பெரியசாமி.

'அப்பிடித்தான் நானும் நெனச்சிக்கிட்டேன். அதை அவகிட்டே எதுக்குச் சொல்வானேன்... நேத்து கோயில்லே அவ ஆயியைப் பார்த்துச் சொன்னேன்... அவளுக்கு வாயெல்லாம் பல்லாப் போச்சு... நம்ப பயலுக்குப் பொண்ணு கொடுக்கக் கசக்குமோ, பின்னே ?... ' என்று மலர்களின் நடுவே மலர்ந்த முகத்தோடு, பல இரவுகளாய்த் தூங்காமல் கட்டிய மனக் கனவுகளைக் கணவனிடம் உதிர்க்கும் மனைவியின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டார் பெரியசாமி.

'சரி, சரி ' இந்தத் தடவை நம்ப வீட்டிலே கலியாணம் தான்... நீ போயி மசிக்கூடும் காகிதமும் எடுத்து வையி... பையனுக்குக் கடுதாசி எழுதணும் ' என்று உற்சாகமாய்க் கூவினார் பிள்ளை.

வாழ்க்கையில் இளம்பிராயத்தில் பெரியசாமிப் பிள்ளையின் மனைவியாகிப் பல வருஷங்கள் அவரைப் பிரிந்து ஒவ்வொரு நாளும் தாலிச் சரட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டே காலம் கழித்து, ஒருவாறு அந்தக் கவலை தீர்ந்து புருஷன் திரும்பிவந்த பின் தனக்கு ஒரு குழந்தை பிறக்காதா என்று பலகாலம் ஏங்கி, பின்னொரு நாள் சோமநாதனைப் பெற்றபோது என்ன பேருவகை கொண்டாளோ, அந்த அளவு தாங்கொணா இன்ப உணர்ச்சியினால் மெய் சிலிர்த்து ஆனந்தத்தில் கண்களிரண்டும் நீர்க் குளமாக உள்ளே சென்றாள் மரகதம்...

வழக்கமாய், தந்தையின் கடிதம் கண்ட ஓரிரு வாரங்களுக்காகவே ஊருக்கு வந்துவிடும் சோமநாதன் அந்தத் தடவை இரண்டு மாதங்களுக்குப் பிறகே வர முடிந்தது.

ஆம்; போன தடவை அவன் வந்தபோது, கோவாவில் போரிட்டு வெற்றி பெற்ற-யுத்த அனுபவம் பெற்ற--வீரனாய்த் திரும்பி இருந்தான்

அப்பனும் மகனும் பேசிக் கொண்டிருக்கையில் இடையில் வந்து கலந்துகொள்ளத் தைரியம் இல்லாத மரகதம் தூரத்திலோ, அறைவாயிலிலோ நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பாள்.

மகனது வார்த்தைகளைச் செவிகள் கிரகித்தபோதிலும் அவரது பார்வை மரகதம் நிற்கும் திசைக்கு ஓடி அவள் கண்களையும் அடிக்கடி சந்திக்கும்...அந்த ஒவ்வொரு நிமிஷமும், பேசிக் கொண்டிருக்கும் மகனின் வார்த்தைகள் காதில் விழாமல் ஒலியிழந்து போகும்; பேசாது தூரத்தே நிற்கும் மனைவியின் மெளன வார்த்தைகள்--அவளது இதயத் துடிப்பு-- அவர் செவியையும் இதயத்தையும் வந்து மோதும்; 'தோட்டம் பூரா செம்பகமும் ரோசாவும் வெச்சுப் பூ மண்டிப் போவுது... '

--அவன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த நேரம்போக, தான் பேச நேர்ந்தபோதெல்லாம் மகனின் கலியாண விஷயமாகவே பேசினார் பெரியசாமிப் பிள்ளை.

சோமநாதன் தனக்கொரு கலியாணம் என்பது பற்றி அதுவரை யோசித்ததில்லை. ஆனால் தகப்பனார் பேசுகிற தோரணையைப் பார்த்தால் தனக்கு யோசிக்க அவகாசமே தரமாட்டார் போலிருந்தது. இதில் யோசிக்கத்தான் அப்படி என்ன இருக்கிறது ? சமாதானச் சூழ்நிலையில் வாழும் ஒரு தேசத்தின் ராணுவ உத்தியோகஸ்தன் கல்யாணம் செய்து கொள்ளலாம்... அவ்விதம் திருமணம் புரிந்துகொண்டு எத்தனையோ பேர் குடும்பத்தோடு அங்கேயே வந்து வாழ்கிறார்களே...என்பதையெல்லாம் நினைவு கூர்ந்து 'சரி ' என்று ஒப்புக்கொண்டான்.

--அந்தத் தடவை லீவிலேயே அவனுக்கும் அவளுக்கும் கலியாணம் நடந்தது.

பூப்பறிக்க வந்த கெளரி பூந்தோட்டத்தின் சொந்தக் காரியானாள். ஒரு பலனும் கருதாமல் சோமநாதன் தன் கையால் நட்டுத் தண்ணீர் பாய்ச்சியதற்குப் பிரதியாக மலர்களை மட்டுமில்லாமல் அவனுக்கொரு மனைவியையும் கொண்டுவரத் தூதாகியிருக்கும் மகிழ்ச்சியில் சண்பகமும் ரோஜாவும் பூத்துக் குலுங்கிச் சிரித்தன. அந்த மலர்ச் செடிகளின் சிரிப்பால் ஆகர்ஷிக்கப்பட்டோ, தனக்கும் அவனுக்கும் உறவு விளையக் காரணம் இந்தச் செடிகள்தான் என்ற நினைப்பாலோ கெளரி பொழுதையெல்லாம் தோட்டத்திலேயே கழித்தாள். கல்யாணத்திற்குப் பிறகு சரியாக இரண்டு மாதங்களையும் சோமநாதன் அவளுடனேயே--ஒரு மணி நேரம் கூடப் பிரிந்திராமல்--கழித்தான்.

எத்தனை காலைகள் எத்தனை மாலைகள், எத்தனை இரவுகள் இவர்கள் இருவரும் அங்கேயே கழித்து, என்னென்ன பேசி, என்னென்ன கனவுகளை வளர்த்தார்கள் என்று அந்தச் சண்பகத்துக்குத் தெரியும்; அந்த ரோஜாவும் மல்லிகையும் அறியும்.

கடைசியில் ஒரு நாள்......

இரண்டு மாதங்கள் அவள் உடலோடும், இதயத்தோடும் இணைந்திருந்து, கனவோடும் கற்பனையோடும் கலந்து உடலால் மட்டும் விலகும்போது 'அடுத்த தடவை லீவுக்கு வந்து திரும்பும்போது உன்னை என்னோட அழைச்சுக்கிட்டுப் போவேன் ' என்று வாக்குறுதி தந்து அவன் அவளைப் பிரிந்து சென்றான்.

கெளரியை பிரிந்து சென்ற பதினைந்தாம் நாள் அவளுக்கு அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

அவனிடமிருந்து மறு கடிதம் வரும்வரை, தனது தனியறையின் ஏகாந்தத்தில்.... அவனே வந்து எட்டிப் பார்ப்பது போல், ஜன்னலருகே வளைந்திருக்கும் சண்பக மரக் கிளையில் பூத்துச் சிரிக்கும் மலர்களுக்கு அந்தக் கடிதத்தில் இருந்த ரகசியங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள் கெளரி.

சண்பகத்துக்குப் பக்கத்தில், மலர்ச்சியின் ரகசியத்தை மறைத்துக்கொண்டு,....முற்றாக மறைக்க முடியாமல்.... தாங்கொணாத் தவிப்புடன், கனத்துக் கிடக்கும் மொட்டுக்களைத் தாங்கி நிற்கும் ரோஜாவைப் பார்த்து அவள் சிரிக்கும் போது 'உன் கதை இன்னும் ஒரு மாதத்தில் தெரியும் ? என்று 'பளீரென 'ச் சிரித்துச் சிதறிய முல்லைக் கொடியிலிருந்து பூக்கள் உதிர்ந்த ரகசியம் அவளுக்கு அப்போது புரியவில்லை.

இரண்டு மாதங்களுக்குப் பின், சண்பகத்தையும் ரோஜாவையும் மடி கனக்கக் கட்டிக்கொண்டிருக்கும் உணர்வுடன் மனமும் உடலும் கூசிச் சிலிர்க்க அந்த விஷயத்தை அவனுக்கு அவள் எழுதும்போது.....அவனுக்கும் அவளுக்கும் விளைந்த உறவுக்குப் பின் சில இரவுகளே சேர்ந்து கிடந்து சிலிர்த்த அந்தப் படுக்கையின் தலைமாட்டில், சுவரில் தொங்கும் சோமுவின் படம் அவளைப் பார்த்துச் சிரிக்கும்போது அவன் படத்தைக்கூட பார்க்கமுடியாமல் அவள் முகத்தை மூடிக்கொண்டாள். முகத்தை மூடிய கரங்களையும் மீறி வழிந்த நாணம் அவள் காதோரத்தில் சிவந்து விளிம்பு கட்டி நின்றது.

அவள் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு, அந்தப் படத்தைக் கையிலெடுத்தாள். அருகே இருத்திப் பார்க்கப் பார்க்க விகசிப்பதுபோல் வடிவாயமைந்த உதட்டில் ஊர்ந்த அவனது மாயப் புன்னகை, அவள் இதயத்தை ஊடுருவியது.

திடாரென்று அவளுக்கு உடல் சிலிர்த்தது. நெஞ்சில் நிலைத்த அவன் நினைவு வயிற்றில் புரண்டது போலிருந்தது.....

'நீங்க எப்ப வருவீங்க ? ' என்று அந்தப் படத்தை முகத்தோடு அணைத்துக்கொண்டு அமைதியாய், சப்தமில்லாமல் தொண்டை அடைத்துக் கரகரக்க அவள் கேட்டபோது, தன் விழிகளில் சுரந்த கண்ணீரை அவளால் அடக்க முடியவில்லை.

'எப்ப வருவீங்க....எப்ப வருவீங்க ? ' என்று துடித்துக் கொண்டிருந்த அவள் இதயத்திற்கு அவனிடமிருந்து பதில் வந்தது.

இதயம் என்று ஒன்றிருந்தால், துடிப்பு என்ற ஒன்றும் உண்டு. அந்த இதயம் அவனுக்கும் இருந்ததால் அவன் கடிதமே அவனது இதயமாய் அவள் கரத்தில் விரிந்து துடித்தது.....

'........ஏழாம் மாதம் பூச்சூட்டலுக்கு வருவேன். மூன்று மாதம் லீவு கிடைக்கும். உன்னோடயே இருந்து குழந்தை பிறந்த பிறகு, என் மகனின் பூமாதிரி இருக்கிற பாதத்திலே முத்தமிடணும்னு என் உதடுகள் துடிக்கிற துடிப்பு.... ' என்று தன் கணவன் தனக்கெழுதிய கடிதத்தைப் பெரியசாமிப் பிள்ளைக்கும் மரகதத்துக்கும் படித்துக் காட்டிக்கொண்டிருந்த கெளரி 'அவ்வளவுதான் முக்கிய விஷயம் ' என்று கடிதத்தை மடித்துக்கொண்டு தன் அறைக்குள் ஓடி விட்டாள்.

அறைக்கு வந்ததும் அந்தக் கடிதத்தை நெஞ்சோடு அணைத்தவாறு கட்டிலில் கிடந்தும் இருந்தும் அந்தக் கடிதத்தின் வாசகங்களை அவனை அனுபவித்ததே போன்று ரகசியமாகவும் தன்னிச்சையாகவும் அனுபவித்து மகிழ்ந்தாள் கெளரி.

அதில் தான் அவன் என்ன வெல்லாம் எழுதியிருந்தான் '

புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்கள், உணர்ந்து கொள்ளத்தக்க அந்தரங்கமாய் அக்கடிதத்தில் பதிந்திருந்தன. அந்தக் கடிதத்தை எத்தனையோ முறை படித்து, இன்னும் எத்தனையோ முறை படிக்கப்போகும் கெளரி இப்போதும் படித்துக் கொண்டிருக்கிறாள்.......

'.....மகன்தான் என்று அவ்வளவு நிச்சயமாக எப்படித் தெரியும் என்று என்னைக் கேட்கிறாயா ?.....எனக்குத் தெரியாமல் வேறு யாருக்குத் தெரியும் ? நீ கர்ப்பமுற்றிருப்பதாக எழுதியிருந்ததை படித்த பின் , நேற்றுத்தான் நான் வேடிக்கையான கனவு ஒன்று கண்டேன்---அந்தக் கனவில் திடாரென்று எங்கள் 'கேம்ப் 'பில் என்னைக் காணோம். எல்லோரும் என்னைத் தேடுகிறார்கள்.....எனக்கே தெரியவில்லை நான் எங்கிருக்கிறேன் என்று உடம்புக்குச் சுகமான வெதுவெதுப்பும், உள்ளத்திற்கு இதமான குளிர்ச்சியும் உள்ள ஓரிடத்தில் மிருதுவான பூக்கள் குவிந்திருக்க அதன் மத்தியில் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் என்னைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் தேடுவதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 'இதோ இங்கே இருக்கிறேன்.....தெரியலையா ' என்று கத்தினாலும் அவர்களுக்கு என் குரல் கேட்கவில்லை. அப்போ, என் முகத்தின் மேலே..... இல்லை----என்னைச் சுற்றிலும்தான் கண்ணாடிக் கூட்டால் மூடியிருப்பதுபோல் இருக்கே---அதன்மேலே அழகான ஒரு கை பதிந்து தெரியுது..... எனக்குத் தெரிந்த அழகான கை; தங்க வளையல்களும், 'அன்னிக்கி ராத்திரி ' நான் போட்ட மோதிரமும் அணிந்த விரலோடு கூடிய உன் கை தெரியுது---இவ்வளவுதான் அந்தக் கனவிலே எனக்கு நினைவு இருக்கு. என் கூட ஒரு சர்தார் இருக்காரு; வயசானவரு; அவருகிட்டே இந்தக் கனவை சொன்னேன்....... 'ஒனக்கு ஆம்பிளைக் குழந்தை பொறக்கப் போகுது 'ன்னு சொல்லி என்னைத் தூக்கிக்கிட்டுக் குதிச்சாரு அவர்....ஆமா, கெளரி....கெளரி.....ரொம்ப ஆச்சரியமா இல்லே ? நமக்கு ஒரு குழந்தை பொறக்கப் போவுது..... ' இப்பவே உன்கிட்டே ஓடி வரணும்னு மனசு துடிக்குது, கெளரி. வந்து....வந்து---இப்ப நான் எழுதறதை 'அசிங்கம் 'னு நெனச்சிக்காதே.... ஓர் உயிரைத் தரப் போற, ஒரு பிறவியைத் தாங்கி இருக்கிற தாய்மைக் கோயிலான உன் அழகான வயித்தைத் தடவிப் பாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு..... உள்ளே குழந்தை ஓடுமாமே....அதுக்கு நூறு முத்தம் குடுக்கணும்....இது தாய்மைக்கு செய்கிற மரியாதைன்னு நான் நினைக்கிறேன்....சரி, சரி ஏழாம் மாதம் தான் நான் வரப் போறேனே; தாய்மைக் குரிய காணிக்கைகளைத் தராமலா விடுவேன்.... ? '

--ஒவ்வொரு வரியும் இரண்டு உடல்களை, இரண்டு ஹிருதயங்களைச் சிலிர்க்க வைக்கும் சக்தி-- சிலிர்த்ததின் விளைவு அல்லவா ?

ஏழாம் மாதம் வந்துவிட்டது. பெரியசாமிப் பிள்ளை எதிர்பார்த்ததுபோல் அந்தக் கடிதம் வந்தது.

'...எல்லையில் ஏற்பட்டிருக்கும் யுத்தமும் தேசத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியும் பத்திரிகை மூலம் அறிந்திருப்பீர்கள். போர் வீரனுக்குரிய கடமையை ஆற்ற வேண்டிய சந்தர்ப்பத்தில் நான் வரமுடியாது. வர விரும்புவது சரியுமில்லை. அதனாலென்ன ? நம் வீட்டில் தான் கொள்ளை கொள்ளைப் பூ இருக்கின்றது. பூ முடித்துக் கொள்ளப் பெண்ணும் இருக்கிறாள். மகிழ்ச்சியுடன் சுபகாரியங்களைச் சிறப்பாகச் செய்யவும். நான் வராததற்காக வருந்தாதீர்கள். அங்கு நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு மகிழ்ச்சியுடனிருக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு இங்கு நான் உற்சாகமாக இருப்பேன் என்று எண்ணிக் குதூகலமாய் இருக்கவும்... '

தந்தைக்கு எழுதிய கடிதத்தோடு கூட மனைவிக்குத் தனியாய் இன்னொரு கடிதம் எழுதியிருந்தான் அவன். அந்தக் கடிதம் பொய்மைகலந்த குதூகலத்தோடும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் விதத்தில் உற்சாகம் மிகுந்திருப்பது போல் காட்டிக் கொள்ளும் வகையிலும் எழுதப் பட்டிருந்ததால்--சிற்சில இடங்களில் 'விரசம் ' போலும் வெறியுற்றது போலும் அமைந்திருந்தது.

சில மாத பந்தத்திலேயே அவனை நன்கு புரிந்து கொண்டவளாகையால், எந்தச் சூழ்நிலையில், எவ்வித மனோ நிலையில் இக்கடிதம் எழுதப்பட்டிருக்கும் என்பதை கெளரி உணர்ந்தாள். இதன் மூலம் அவள் மனம் ஆறுதலடையும் என்று நம்பி அவனால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு--அவனது சிறுபிள்ளைத் தனமான வார்த்தைப் பிரயோகங்களுக்காகச் சிரிக்க முயன்று, அதில் மறைந்திருக்கும் துயரத்தின் கனத்தைத் தாங்க மாட்டாதவளாய்--மனம் பொருமி அழுதாள் கெளரி..

சில நாட்களுக்குப் பின் அவனுடைய வேண்டுகோளின்படி அவர்கள் குதூகலமாகவே இருக்க முயன்று, அப்படி இருந்தும் வந்தார்கள்.

பெரியசாமிப் பிள்ளை 'யுத்தம் ' என்று தெரிவித்த அன்றிலிருந்தே மிகவும் துடிப்புடன் காணப்பட்டார். பக்கத்திலிருப்போரிடம் காலையிலும் மாலையிலும் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டு ஒரு கையால் மீசையை முறுக்கியவாறே செய்தி விளக்கம் கூற ஆரம்பித்து, இரண்டாவது அல்லது முதல் மகா யுத்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கதையாகச் சொல்லத்தான் அவரால் முடிந்தது.

அவர் கொஞ்சங்கூடக் கவலை இல்லாமல் இப்படி இருப்பது கண்டு முணுமுணுத்துக் கொண்ட மரகதத்தின் குரல் அவர் காதில் விழுந்தது.

அவர் மனைவியைப்பார்த்துச் சிரித்தார்; 'போடி...போ ' போர் வீரனின் சங்கீதமே பீரங்கி முழக்கம் தான் ' உனக்கெங்கே அது தெரியும்...உன்வசமே தொடை நடுங்கிக் கும்பல், உன் பையன் வருவான் சிங்கம் மாதிரி, அவனைக் கேளு, சொல்லுவான்... 'என்று அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தவாறு அங்கு வந்த கெளரி, 'அவங்க மகன் சிங்கமா இருந்தா, அந்தப் பெருமை அவங்களுக்கு இல்லையா ? ' என்றாள்.

'ம்...ம்... பெருமை இல்லேன்னு யாரு சொன்னா ? அந்தப் பெருமைக்குக் காரணம் எங்க வம்சம்னேன்... நீ நாளைக்குப் பெத்துக்கப் போறியே அந்தப் பயலுக்காகவும் தான் சொல்றேன்...வீரன் மகன் வீரனாகத்தான் இருப்பான் 'என்று அவர் சொன்னபோது, அவளுக்கு வயிற்றில் என்னவோ செய்தது... அந்த இன்பக் கிளு கிளுப்பில் தலை குனிந்தவாறு தன் அறைக்குப் போனாள் கெளரி.

நேற்று கெளரிக்குப் பூச்சூட்டல் என்றால் பிள்ளைச் சுமை போதாதென்று பூச்சுமையும் ஏற்றுவதுதானோ ?

அடர்ந்து நீண்ட கூந்தலில் சண்பகத்தை அடுக்கடுக்காக வைத்துத் தைத்து, இடையிடையே மல்லிகையை விரவி ரோஜாவைப் பதித்து -- 'இந்த அலங்காரத்தில் கெளரியைப் பார்க்க அவன் இல்லையே ' என்ற குறை ஒவ்வொருவர் மனத்திலும் ஏதோ ஒரு விநாடியில் நெருடி மறைந்து கொண்டு தானிருந்தது.

பூவுக்கும் வாழ்க்கை ஒரு நாள் தானே ? நேற்று மலர்ந்து குலுங்கி ஜொலித்தவை யெல்லாம்.... இதோ வாடி வதங்கிக் கசங்கி, மணமிழந்து தலைக்குக் கனமாகிவிட்டன.

......தனியறையில் அமர்ந்து, தலையில் கசங்கிப் போன மலர்களைக் களைந்து கொண்டிருக்கிறாள் கெளரி.

அப்பொழுது ஜன்னலுக்கு வெளியே அவனே வந்து எட்டிப் பார்ப்பதுபோல் சண்பகமரக் கிளையின் பூ வடர்ந்த கொப்பொன்று அவளுக்கு எதிரே தெரிந்து கொண்டு தானிருந்தது...

'நேற்று இந்நேரம் இதே போல் செடியிலும் மரத்திலும் மலர்ந்திருந்த பூக்கள் தானே இவையும் ?... ' என்ற எண்ணம் தொடர்பின்றி அவள் மனத்தில் முகிழ்த்தபோதிலும், அந்த எண்ணத்தைத் தொடர்ந்து பிறந்த அடுத்த விநாடியே சில மாதங்களுக்கு முன்பு சோமநாதன் தோட்டத்தில் அவளிடம் சொன்ன வார்த்தைகளின் தொடர்ச்சியே இது என்று அவளுக்கு விளங்கியது.

அன்று...

சோமநாதன் கோவாவில் நடந்த யுத்த நிகழ்ச்சிகளை அவளிடம் வீரரசம் மிகுந்த கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தான். அந்தக் கதைக்குப் பின்னால் உள்ள எத்தனையோ தாய்மார்களின் கண்ணீரும், இளம் பெண்களின் சோகங்களும் அவளுக்குப் புலனாயின.

அவள் கெஞ்சுகின்ற குரலில் அவனிடம் கேட்டாள்: 'இந்தப் பட்டாளத்து உத்தியோகத்தை நீங்க விட்டுட்டா என்ன ? கோரமான சண்டையிலே பொன்னான உயிரையும், இன்பமான வாழ்க்கையையும் எதுக்குப் பலியிடணும் ? ஜெயிக்கறது ஒரு பக்கம் இருந்தாலும், துப்பாக்கிக்குப் பலியாகிச் செத்தவனும் ஒரு மனுசனில்லியா ?... சண்டை போட்டுச் சாகறதுதானா மனுசனுக்கு அழகு ?... '

அவள் சொல்லிக் கொண்டிருந்ததை எல்லாம் மெளனமான யோசனையுடன் அவன் கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு பக்கத்திலிருந்த ரோஜாச் செடியிலிருந்து ஒரு பெரிய பூவைப் பறித்தவாறே அவன் சொன்னான்: 'சண்டை வேண்டாம்கிறதுதான் நம்மோட கொள்கை. ஆனா சண்டைன்னு வந்துட்டா, சண்டை போடாமே உயிருக்குப் பயந்து சமாதானம் பேசறது கோழைத்தனம்.சண்டைக்கு எப்படி ரெண்டு பேரும் காரணமோ...ரெண்டு பேரும் அவசியமோ...அதே மாதிரி சமாதானத்துக்கும் ரெண்டு பேருமே காரணமாகவும், அவசியமாகவும் இருக்கணும். ஆனா, நீ கேக்கறது இந்த சண்டையிலே எதுக்குப் பொன்னான உயிரை இழக்கணும்கறது தானே ?... ' என்று கேட்டுவிட்டுக் கையிலிருந்த ரோஜாவை அவள் கூந்தலில் சூட்டிய பின், ஒரு விநாடி அமைதியாக அவள் முகத்தையும், மலர் சூடிய கூந்தலின் அழகையும்பார்த்தான்; தொடர்ந்துசொன்னான் அவன்; 'இதோ இந்தப்பூ, செடியிலே இருக்கறப்போ நல்லாத்தான் இருந்தது. இது நல்லா இருக்கே பறிக்காம இருப்போம்னு விட்டுட்டா, அது உதிராம இருக்கப் போகுதா ? இப்ப நான் அதைப்பறிச்சு உன் தலையிலே வெச்சிருக்கேன்...நீ அதைப் பறிச்சி உனக்கு இஷ்டமான ஒரு தெய்வத்துக்கு மாலை கட்டிப் போடறே... அதிலேதான் அந்தப் பூவுக்கு... உதிர்ந்து போகிற சாதாரணப் பூவுக்கு ஒரு மகத்தான அர்த்தம் இருக்கு... இல்லியா ?... அது மாதிரிதான், மனுஷன்னுபொறந்தா..பூத்திருக்கிறமலர் உதிர்ந்து போகிறமாதிரி... மனுஷனும் ஒரு நாளைக்கு செத்துத்தான் போவான்... அப்படி விதிமுடிஞ்சி, வியாதி வந்து சாகிற மனுஷன் அந்த உயிரை, தான் நேசிக்கிற தேசத்துக்காக, தான் விரும்பும் ஒரு லட்சியத்துக்காக அர்ப்பணம் பண்ணினா, அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு இல்லியா ? பெண்ணின் கூந்தலை அலங்கரிக்கும் பூவைப்போல, புனிதமான தெய்வத்துக்கு அர்ச்சிக்கப்பட்ட மலரைப் போல... கெளரி, பூ...உதிரும்...மனுஷனும் சாவான்... ' என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்கையில், தானும் தன் எதிரே நிற்கும் கணவனும், தங்களைச் சுற்றிலும் பூத்துச் சிரிக்கும் மலர்களும்... எல்லாமே ஒவ்வொரு சோகமாய் அவள் நெஞ்சில் கனத்தன...

கெளரியின் கண்கள் கலங்குவதையும் உதடுகள் சிவந்து துடிப்பதையும் கண்ட சோமநாதன் 'பூ-உதிரும் ' என்பது மட்டுமல்ல; புதிய புதிய பூக்கள் மலரும் என்பதும் உண்மை என்று கூறிவிட்டுப் பேச்சை வேறு விஷயங்களில் திருப்பினான்.

'ஐயோ இதை ஏன் இப்போது நான் நினைக்கிறேன்... அவர் போர் முனையில் இருக்கும் இந்த நேரத்திலா எனக்கு அந்த நினைவு வரவேண்டும் ' என்று ஒரு விநாடி துணுக்குற்று, கட்டிலின் தலை மாட்டில் தொங்கும் கணவனின் படத்தைப் பார்க்கப் பார்க்க விகஸிக்கும் அந்த மாயப் புன்னகையைப் பார்ப்பதற்காகப் படத்தருகே போய் நின்றாள் கெளரி.

அப்போது அறைக்கு வெளியே...

'சொல்லுங்க, கடுதாசியிலே என்ன சேதி ?.... பேச மாட்டாங்களா ? ஐயோ தெய்வமே '..... கெளரி....ஈ..... ' என்று தாய்மையின் சோகம் வெடித்துக் கிளம்பிய பேரோசை கேட்டுக் கெளரி அறைக் கதவை திறந்தாள்..... அப்படியே விழி பிதுங்கிச் சிலையாய் நின்றாள்.....

வராந்தா ஈஸிசேரில் கையில் பிரித்த கடிதத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டிருக்கும் பெரியசாமிப் பிள்ளையின் காலடியில், தரையில் நெற்றியை 'மடார் மடா 'ரென முட்டிக்கொண்டு கதறுகிறாளே மரகதம்.

செம்பில் வார்த்து விட்ட சிலை மாதிரி உணர்ச்சி மிகுதியால் உப்பிக் கனத்து இறுகிச் சிவந்த அவர் முகத்தில் சருமம் துடித்தது. மூடிய இமைகளின் வழியே கோடாய் வழிந்த கண்ணீர் நரைத்துப்போன மீசையின் மேல் வடிந்து நின்றது.....

'மகனே, சோமு---- ' என்று வானத்தை நோக்கி இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு எழுந்தார். வராந்தாவில் சுவரில் தொங்கும் மகனின் போட்டோவை நோக்கி நடந்தார்.

'ஐயோ, நீ வீரனய்யா '.... ' என்று ஒற்றை மரமாய் மகனின் படத்தின் முன் நிமிர்ந்து நின்று ராணுவ முறையில் 'சல்யூட் ' வைத்தார்.

விறைத்து நின்று வீர வணக்கம் செய்த கரத்தைக் கீழிறக்கிய போது முதுமையின் தளர்ச்சி முழுவதையும் திடாரென அனுபவித்த உணர்வுடன் தளர்ந்து உட்கார்ந்தார் பெரியசாமி.

'எனக்கு வேறொரு மகன் கூட இல்லையே.... ' என்று வாய்விட்டுப் புலம்பினார்....அந்த வார்த்தைகளைக்கேட்டு எரித்து விடுவது போல் பெரியசாமியைப் பார்த்த மரகதம், அவரைச் சபிப்பதுபோல் ஆங்காரத்துடன் இரண்டு கைகளையும் அவரை நோக்கி நீட்டியவாறு விரித்த கூந்தலும் வெறித்த விழிகளுமாய் அலறினாள்: 'பாவி '....வேறே மகன் நமக்கு கிடையாது--வேண்டாம் பட்டாளத்துக்குன்னு அடிச்சிக்கிட்டேனே கேட்டாங்களா ? பட்டாளம் பட்டாளம்ன்னு நின்னு என் அருமைப் புள்ளையெக் கொன்னுட்டாங்களே.... ஐயோ ' உங்க பாவத்துக்கு வேறே ஒரு மகன் வேணுமா ? பட்டாளத்துக்கு அனுப்பி வாரிக் குடுக்கறத்துக்குத் தானே இன்னொரு மகன் இல்லேன்னு அழறீங்க ? ' என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவர் இதயத்தில் குத்துவது போல் கேட்டாள்.

'ஆமாம் ' அதற்குத்தான்.... ' என்று பெரியசாமி, சுருட்டுப் புகையால் பழுப்பேறிய மீசையை முறுக்கிக் கொண்டே மரகதத்தின் கண்களுக்குள் பார்த்தவாறு சொன்னார். அவர் கண்களில் சுரந்த கண்ணீர் இமை விளிம்பில் பாத ரசம்போல் ஜொலித்தது....

அப்போது அறை வாசலில் 'தடா 'லெனச் சப்தம் கேட்கவே திரும்பப் பார்த்து மயங்கி விழுந்த கெளரியைத் தூக்குவதற்காக ஓடினார் பெரியசாமி.

மரகதத்தின் அலறல் தெருவையே திரட்டியது '

பூவின் மேல் ஆசைப்பட்டுப் பூப்பறிக்க வந்த கெளரி, பூவிழந்து விட்டாள்....

ஆனால் சோமுவின் கைகளால் நட்டு வளர்க்கப்பட்ட அந்தச் செடிகளும் மரங்களும் அவன் நினைவாய் இப்போதும் மலர்களைச் சொரிந்து கொண்டு நிற்கின்றன.

அவற்றைப் பறித்து ஆரமாய்த் தொடுக்கவும், சோமுவின் படத்திற்கு அழகாய்ச் சூட்டவும், அவனது நினைவையே வழிபட்டு நிற்கவும் அவளிருக்கிறாள்.....

சோமுவின் படத்துக்கு மாலையிட்டு விளக்கேற்றி வணங்கிக் கொண்டிருந்தாள் கெளரி..... மாலை மாலையாய்க் கண்ணீர் வழிந்து அவள் உடலை நனைக்கிறது.

'நான் வழிபடும் உங்கள் நினைவுக்கு அஞ்சலியாய் சமர்ப்பித்த இந்தப் பூக்களுக்கு ஒரு அர்த்தமிருப்பதுபோல், உங்கள் மரணத்திற்கு ஒரு அர்த்தமிருப்பதுபோல், இரண்டு மாதங்களேயானாலும் வீர புருஷனோடு வாழ்ந்த எனது சாதாரண வாழ்க்கைக்கும் ஒரு மகத்தான அர்த்தம் காண்கிறேன் நான்...... நாளைப் பிறக்கப் போகும் நம் மகன் வாழ்க்கையும் அர்த்தம் நிறைந்திருக்கும்----அவன் ஒரு வீரனின் மகன் ' உங்கள் தகப்பனார் இன்னொரு மகன் இல்லையே என்று வருந்துகிறார். அந்தச் சிங்கம் குகைக்குள் இருந்து இன்னும் வெளியே வரவில்லை...... இந்த நாட்டின் பெண் குலம் உள்ளவரை வீரருக்கா பஞ்சம் '..... உங்கள் அம்மாவின் கண்ணீருக்குத்தான் மாற்றே இல்லை.....அவர்கள் எவ்வளவு பாக்கியசாலி.... ' என்று எவ்வளவு விஷயங்களை அவனோடு அவள் மெளனமாய் பேசுகிறாள்........

திடாரென்று அடிவயிற்றில், விலாப் புறத்தில் சுருக்கெனக் குத்தி வலிக்க கணவனின் படத்தின் முன் கைகூப்பி நின்றிருந்த கெளரிக் கட்டிலின் மீது சாய்ந்து படுத்தாள்......

அவள் கண் முன்னே நூறு வண்ணங்களில் ஆயிரக் கணக்கான பூக்கள் மலர்ந்து ஜொலிக்கின்றன.

----வெளியே திண்ணையிலிருந்து மீசையை முறுக்கியவாறு பெரியசாமிப் பிள்ளை, தன் மகன் யுத்த களத்தில், மறைந்திருந்து குழியிலிருந்து மேலேறி வந்து, முன்னேறி வந்து கொண்டிருக்கும் எதிரிகளில் ஆறுபேரை ஒரே கணத்தில் சுட்டுக் கொன்றதையும், அப்போது தூரத்திலிருந்து வந்த குண்டொன்று அவன் உயிரைப் பறித்துச் சென்றதையும் பத்திரிக்கையில் படித்து யாருக்கோ விளக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆம்; ஒரு வீரனின் மரணத்தில் உள்ள சோகம் பனிப்படலம் போல் மறைந்து போகும். அவன் வாழ்ந்தபோது புரிந்த வீர சாகசமே, காலம் காலமாய்ச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

'பூ-உதிரும் என்பது மட்டுமல்ல; புதிய புதிய பூக்களும் மலரும் என்பதும் உண்மை ' என்ற அந்தக் கம்பீரமான குரல், சங்கீதம் போல் மணிநாதம் போல் இதயத் துடிப்பு போல், கட்டிலில் கிடந்து புரளும் கெளரியை சூழ்ந்து ஒலிக்கிறது.

Mar 30, 2010

வண்ணதாசன் - நேர்காணல்

சந்திப்பு : பவுத்த அய்யனார் 

வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என்று கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.க. சிவசங்கரன் அவர்களின் மகன்.

60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசனுக்கு பத்து சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கவிதைத் தொகுப்புகள் மற்றும் தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு, கல்யாண்ஜி குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. `எல்லோர்க்கும் அன்புடன்' எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளது.

இலக்கியச் சிந்தனை, லில்லி தேவசிகாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசுகள், சிற்பி விருது, இசை அமைப்பாளர் இளையராஷா வழங்கிய `பாவலர் விருது' மற்றும் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி முதலிய விருதுகளும், பரிசுகளும் பெற்றவர்.
மனைவி வள்ளி அவர்கள். பிள்ளைகள் சிவசங்கரி, நடராஷ சுப்ரமணியம். சிவசங்கரிக்குத் திருமணமாகி அர்ச்சனா என்ற மகள் உள்ளார்.

நடராஷசுப்ரமணியத்திற்கு ஜுலை (2009) மாதம் திருமணம். திருமண வேலைகளின் பரபரப்புக்கிடையில், அவரது மாறாத அன்பின் காரணமாகவே இந்த நேர்காணல். கல்யாண்ஜி திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.

தீராநதி : உங்கள் கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் வேலை நிமித்தம் நீங்கள் வாழ்ந்த பல ஊர்களின் வரைபடங்களைக் கொண்டவை. அந்த ஊர்கள்  பற்றிய உங்கள் மனப்பதிவுகளைச் சொல்லுங்கள்.

வண்ணதாசன் : ஆமாம். நாற்காலிக் கால்களுக்கிடையே நசுங்கிக் கிடந்த சோற்றுக்கு அலையும் வாழ்க்கை. நிலக்கோட்டை, அம்பாசமுத்திரம், தூத்துக்குடி, மதுரை, சென்னை, திருநெல்வேலி, செட்டிகுறிச்சி மீண்டும் அம்பாசமுத்திரம் என இருபத்தாறு வருடங்கள். எல்லா ஊர்களிலும் எங்களுக்கு மனிதர்கள் கிடைத்தார்கள். அப்படி மனிதனும், மனுஷியும் கிடைத்ததால் எனக்குக் கதைகளும், கவிதைகளும் கிடைத்தன. எல்லா ஊர் வரைபடத்திலும் ஒரு சுடலைமாடன் கோயில் தெரு உண்டாகிவிடும்படி நாங்களும் நடமாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு ஊரிலும் அதிகபட்சம் நான்கு, குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள். அடுத்த ஊரில் காலை வைக்கையில் முந்தின ஊர் மறக்க முடியாததாகி இருக்கும்.


நிலக்கோட்டை பெரியார் காலனியும், அம்பாசமுத்திரம் திலகர்புரமும், மதுரை பி.பி. சாவடியும், சென்னை ராஜுநாயக்கன் தெருவும் அடுத்தடுத்து இருக்கிற ஒரு ஊரில் நாங்கள் இப்போதும் வசிக்கிறோம். இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னால், எங்களுக்கு மதுரை வீட்டில் கூடமாட ஒத்தசையாக இருந்த சரசு, எங்களைப் பார்க்க ஆட்டோவில் வந்தாள். அப்போது ஏழோ, எட்டோ படித்துக் கொண்டிருந்த சக்திக்குக் கல்யாணமாகி ஒரு ஆம்பிளைப்பிள்ளை இருக்கிறான். நந்தியாவட்டைச் செடியின் கொப்பை அவன் ஒடித்துவிட்டான் என்று அர்ச்சனாவிற்கு ரொம்ப வருத்தம். தாத்தாவின் புகார்ப் புத்தகம் நிரம்பிவிட்டது.

தீராநதி : கல்யாண்ஜி என்ற பெயரைக் கேட்டாலே கலாப்ரியா, வண்ணநிலவன், விக்ரமாதித்தன் பெயர்களும் கூடவே நினைவில் வரும். இம் மூவருக்கும் உங்களுக்குமான உறவு எப்படியானது?
வண்ணதாசன் : கோபால் (கலாப்ரியா), நான் எல்லாம் ஒரே தெருக்காரர்கள். 21-ம் நம்பர் வீடும் 28-ம் நம்பர் வீடும் ரொம்ப தூரமா என்ன? இன்றைக்கு வரைக்கும் அவனுக்கு நான் கல்யாணி அண்ணன்தான். அவனுக்கு மட்டுமல்ல அவன் வீட்டுக்காரி சரஸ்வதி டீச்சருக்கும் நான் கல்யாணி அண்ணன். மகள் தரணிக்குக் கூட அப்படித்தான். எட்டயபுரம் வலைப்பக்கத்தில் அவன் எழுதுகிறதைப் படிக்கிறீர்களா? கதை, கவிதை எல்லாம் சும்மா. அசல் வாழ்வுக்கு முன் அவை ஒன்றுமே இல்லை.
நம்பிதான் (விக்ரமாதித்தன்) என்னைத் தேடிவந்து பார்த்த முதல் வாசகன். சுப்பு அரங்கநாதனும் அவரும் தீபத்தில் என்னுடைய `வேர்' கதையைப் படித்துவிட்டு வந்திருந்தார்கள். ரொம்ப அருமையான மனசு. எவ்வளவோ தாண்டி, எங்கெங்கோ காடா செடியாக அலைந்து, காடாறு மாசம், நாடாறு மாசம் என்று இருந்தாலும் பெண்டாட்டி, பிள்ளைகள் மேல் வைத்திருக்கிற பிரியம் அபாரமானது. புது பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து கொண்டு, சமீபத்தில் ஒரு விடியக்காலம் கூப்பிட்டார். நான் பல்கூடத் தேய்க்கவில்லை. போய்ப் பார்த்தேன். பேசிக்கொண்டு இருந்தார். பேச்ச பூராவும் அவர் பையன் சந்தோஷ் பற்றித்தான். பெருங்குடியின் எச்சமாக மிஞ்சியிருக்கிற அவருடைய முகத்தின் மீது ஒரு பளபளப்பான எண்ணெய்ப்பசை மாதிரி `சந்தோஷ்' என்கிற பெயர் மினுங்கிக் கொண்டேயிருந்ததை, பக்கத்து இரும்பு இருக்கையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
எல்லாத்தையும்விட மிகப் பெரிய கலைஞன் ராமச்சந்திரன்தான் (வண்ணநிலவன்). அவரை அடிக்கடி சந்திக்கிற மாதிரி, அப்பப்போ அவர் வீட்டுக்குப் போகிற மாதிரி, சந்திராவையும் பிள்ளை களையும் பார்த்துப் பேசுகிற மாதிரி, ஒரே ஊரில் குடியிருக்கிற மாதிரி எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. அவரைப் பற்றி நிறையச் சொன்னால் ருசிக் குறைவு. கொஞ்சமா சொல்லணும். அல்லது ஒண்ணுமே சொல்லக் கூடாது. அவ்வளவு பெரிய ஆள் அவருடைய `பாம்பும் பிடாரனும்' தொகுப்பில் ஏழோ எட்டோதான் கதைகள் இருக்கும். அதில் உள்ள வரிகள் மாதிரி ஒரு வரியை நான் எழுதி விட்டால் போதும்.

தீராநதி : இப்போது வரை உற்சாகத்துடன் இயங்கி வரும் உங்கள் தந்தை தி.க.சிவசங்கரன் அவர்களைப் பற்றிய சிறு வயது நினைவுகளைக் கூறுங்கள்.
வண்ணதாசன் : என் சிறு வயது ஞாபகங்களில் அப்பாவின் நடமாட்டம் ரொம்பக் குறைவு. என் சிறு வயதை நிரப்பியவர்கள் எங்களின் அம்மாத் தாத்தாவும், அம்மாச்சியும், அம்மாவும், கணபதி அண்ணனும்தான். ஐந்தாம் கிளாஸ் வரைக்கும் எங்கள் தாத்தா கையைப் பிடித்துக் கொண்டுதான் ஸ்கூலுக்குப் போயிருக்கிறேன். நினைச்சுப் பார்த்தால் இப்போ கஷ்டமாகக் கூட இருக்கு. எங்கள் தெரு வழியாக, எங்கள் அப்பாவின் விரலைப் பிடித்துக் கொண்டு ஒரு தடவை கூட நானோ, எங்க அண்ணனோ நடந்து போனதே இல்லை.
ஒரு தடவை காதில் ஏதோ அழுக்குச் சேர்ந்து வலி வந்தது எனக்கு. அப்பா என்னை டாக்டரிடம் கூட்டிப் போனார். ஒரு பீச்சாங்குழல் மாதிரி ஒன்றை வைத்து, காது ஓட்டையாகப் போகிற மாதிரி, தண்ணீரைப் பீய்ச்சி அழுக்கை எடுத்தார்கள். போகிற பாதையில் ஒரு ஆளுயரத் தபால்பெட்டி சிவப்பாக நின்றது இப்போது ஞாபகம் வருகிறது. இன்னொரு தடவை 7-ம் வகுப்பு படிக்கும்போது போர்டில் ஸார் எழுதுகிறது சரியாகத் தெரியலை என்று சொன்னதும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்ற கண் டாக்டரிடம் கூட்டிப் போனதும் அப்பாதான். அந்த டாக்டர் பாடிக்கிட்டே வைத்தியம் பார்ப்பார். கண்ணுக்குள்ளே பாட்டரி லைட் அடிக்கும்போதும் அவர் பாடினார். அழிக்கம்பி போட்ட ஒரு மாடி அது. அங்கே அடித்த மருந்து வாசனையும், ஜெனித் ஆப்டிகல்ஸில் கண்ணாடி போட்டுக்கொள்ள உட்கார்ந்திருந்தபோது நுகர்ந்த ஒரு வாசனையும் இப்போ கூட மூக்கிலேயே இருக்கு. மூக்குக்கு, நாக்குக்கு எல்லாம் கூட தனித்தனியா ஞாபக சக்தி இருக்கும் போல. அதற்குப் பிறகு கொஞ்சம் வளர்ந்ததும், AFRICAN LION, LIVING DESERT  படத்துக்கு எல்லாம் அப்பா ரத்னா டாக்கீஸிற்குக் கூட்டிப் போனார். சாந்தாராமுடைய `ஜனக் ஜனக் பாபல் பாஜே' படத்துக்கும் அப்பாதான் கூட்டிப் போனார். அதுவும் ரத்னா டாக்கீஸில்தான். அப்பாவுக்கு அந்த ரத்னா டாக்கீஸ் பிடிக்கும் போல.

தீராநதி : தி.க.சி. அவர்களின் எழுத்துக்கள், அரசியல், பத்திரிகைப் பணி பற்றி ஒரு மகனாகவும் ஒரு எழுத்தாளராகவும் எப்படிக் கணிக்கிறீர்கள்?
வண்ணதாசன் : அப்படியெல்லாம் மகனாக, எழுத்தாளனாக எல்லாம் தனித்தனியாக, என்னால் அப்பாவைப் பற்றி மட்டுமல்ல, எதைப் பற்றியும் யோசிக்க முடியாது. நான் அப்படி யோசிக்கிறதுமில்லை. என்னைப் பொருத்தவரை தி.க.சி.ன்னா தாமரைதான். அதில் அப்பா செய்ததுதான். அதை அவரால்தான் செய்ய முடிந்தது. அதற்குப் பின்பு கூட அவரளவுக்கு வேறு யாரும் செய்யலை.

தீராநதி : சமீபத்தில் தி.க.சி. அவர்களைப் பற்றிய ஆவணப் படம் பார்த்தேன். அவரை மரியாதைப்படுத்தும் விதமாக அந்தப் படம் இருந்தது. நீங்களும் அந்தப் படத்தில் பங்கு பெற்றுள்ளீர்கள். அந்த ஆவணப் படம் பற்றிச் சொல்லுங்கள்.
வண்ணதாசன் : ஆமாம். அந்தப் படம் அப்பாவை மரியாதைப் படுத்தவே செய்தது. ஒரு ஆவணப்படம் எடுக்கப்படுவதும், அல்லது ஒரு ஆவணம் ஆவதுமே மரியாதைக்குரியதும் மரியாதை செலுத்துதலும் ஆனதுதானே. இதில் என்ன நல்ல விஷயம் என்றால், அதை எடுத்த ராஜகுமாரன் யார் என்றே முன்னே பின்னே தெரியாது. அவர் தமுஎச அல்லது கலை இலக்கியப் பெருமன்றம் சார்ந்தவரும் அல்ல. அமைப்பு அல்லது அரசியல் சார்ந்த அக்கறை எதுவும் அவருக்குக் கிடையாது. அவருக்குத் தோன்றியதும் ஆவணப்படுத்தியதும்தான், நீங்கள் குறிப்பிடுகிற, மரியாதை உணர்வு ஒன்று மட்டுமே காரணம் என்பதை நிச்சயப்படுத்துகிறது. ராஜகுமாரன் அவருக்குக் கிடைத்த ஆவணங்களின் தகவல்களின் அடிப்படையில், மிகச் சிரத்தையுடனும் அக்கறையுடனும் இதை எடுத்திருப்பதாகவே நினைக்கிறேன்.
இரண்டு நாட்களுக்குக் கேமராவை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வந்து விட்டார். அப்போது அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை. இனிமேல் வெறுமனே திரும்பிப் போகவும் ராஜகுமாரனால் இயலாது. கழனியூரன், கிருஷி, வள்ளிநாயகம் என்று நண்பர்களையும், தம்பி சேது, நான், என் தங்கை ஜெயா என்று குடும்பத்தினரையும் வைத்துக்கொண்டு எந்த அளவிற்கு அப்பாவைப் பதிவு செய்ய முடியுமோ அதைச் செய்துவிட்டார். என்னையெல்லாம் விட, என்னுடைய தங்கச்சியின் பேச்சுதான் ரொம்ப இயல்பாக அப்பாவைப் பற்றிப் பேசுகிறது.
எடுக்கப்பட்டது போலவே, இது அமைப்பு சாராத பலரால் திரையிடப்-பட்டது என்று ராஜகுமாரன் சொன்னார். திருப்பூர் தமிழ்ச்சங்கம் கூட குறும்பட ஆவணப்பட வரிசையில் இதற்கு இம் முறை பரிசளித்திருக்கிறது என்பது அப்பாவை மட்டுமல்ல, இந்த ஆவணப்படத்தையும் மரியாதைப்படுத்துகிற விஷயம்தானே அய்யனார்.

தீராநதி : திருநெல்வேலி என்றாலே பிள்ளைமார் சாதியைத் தவிர்க்கமுடியாது. பல தமிழ் எழுத்தாளர்கள் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சாதிக்கும், எழுத்துக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?
வண்ணதாசன் : பல இசைக் கலைஞர்கள் பிராமணர்களாக இருந்தார்கள். நீங்கள் சொல்வது போல எழுத்தாளர்களாக அவர்களும், பிள்ளைமார்களும் இருந்தார்கள். அதெல்லாம் ஒரு காலம் வரை. அல்லது கல்வியறிவின் ஒரு கட்டம்வரை. மாரார்கள் செண்டை வாசிப்பது மாறி, உவச்சர்கள் மேளம் வாசிக்கிறது மாதிரி, எழுத்தும் சில பேர் கைகளுக்குள் இருந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது அப்படியில்லை. எல்லாக் கலையையும் எல்லோரும் கற்கிறார்கள். அபாரமான வீச்சுடன் நிகழ்த்துகிறார்கள். தாண்டிச் சென்று சிகரங்களைத் தொடுகிறார்கள். வாழ்வுக்கும், எழுத்துக்கும் இடையில்தான் தீராத தொடர்பு. அந்த வாழ்வுக்கும் சாதிக்கும் தொடர்புகளிருக்கிறதென்பதால், எழுத்துக்கும் சாதிக்கும் தொடர்பு இருப்பது போல ஒரு இணையான கோடு விழுகிறது. ஆனால், அந்தக் கோடு சமூகத்தில் அல்லது அரசியலில் விழுந்து விட்டிருப்பவை போன்று, அழுத்தமானவையோ, அழிக்க முடியாதவையோ அல்ல.

தீராநதி : சாதி, மதம் பற்றிய உங்களுடைய நிலைப்பாடு என்ன?
வண்ணதாசன் : இதுபோன்ற கேள்விகள் ஒரு படைப்புலகம் சார்ந்தஒருவனிடம் கேட்கப்படுவதில்கூட, ஏதோ ஒரு வகையில் சாதியைப் பற்றிய மதத்தைப் பற்றிய வலியுறுத்தல் அல்லது தேவையற்ற நினைவூட்டல் இருப்பது போல எனக்குத் தோன்றுகிறது. இயல்பாகவே மற்றெல்லோரையும்விட, அடிப்படை அடையாளங்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறவனாகவே, எழுதுகிறவனும், வரைகிறவனும், இசைக்கிறவனும், செதுக்குகிறவனும், இருப்பான். எது நிலைக்க அவசியமற்றதோ, அதுபற்றிய நிலைப்பாடு குறித்த கேள்விகளுக்கும் அவசியமில்லை. நான் ஒருபோதும் தேர்தலில் நிற்கப்போவதில்லை. தமிழ்நாட்டின் சாதி அரசியலில், எழுத்தாளர்கள் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலே அதிகபட்சம்.

தீராநதி : `தாமிரபரணி' ஆற்றை ஒரு mythஆக மாற்றுவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?
வண்ணதாசன் : தாமிரபரணியை மட்டுமல்ல எதையுமே mythஆக மாற்றுவதில் எனக்குச் சம்மதமில்லை. எதுவுமே myth இல்லை. எல்லாமே நிஜம்.

தீராநதி : தாமிரபரணி ஆற்றை உங்கள் சிறு வயதில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்குமான அனுபவத்தைச் சொல்லுங்கள்.
வண்ணதாசன் : நல்ல வேளை, சிறு வயதிலாவது தாமிரபரணியை ஆறாகப் பார்த்தேன். ஆறு காணாமல் போய்விட்டது. ஆறு திருடப்பட்டுவிட்டது. தாமிரபரணி இப்போது ஆறு அல்ல; வாய்க்கால். குறுக்குத் துறையும், சுலோச்சனா முதலியார் பாலமும் சின்ன வயதில் மணலும் கல்மண்டமுமாய்த் தளதளத்துக் கிடக்கும். நிலவடிக்கிற இரவுகளில் ஆறு அசைந்தசைந்து தளும்பிச் செல்வதைப் பார்ப்பது ஒரு ஆன்மிகம். தேரசைவதும் ஆறு அசைவதும் தனித்தனி தரிசனம்.
மணலைக் கொள்ளையடித்தவர்களே, சீமைக்கருவேல விதைகளை விதைத்துவிட்டும் போயிருப்பார்கள் போல. கடன் கொடுத்தவனுக்குப் பயப்படுவது போல, ஆறு சீமைக்கருவேலுக்கு இடையில் ஒளிந்து ஒளிந்து போய்க் கொண்டிருக்கிறது. சைக்கிளிலிருந்து காலை ஊன்றிக்கொண்டு சுலோச்சனா முதலியார் பாலத்தில் நின்று ஆற்றுக்குள் ஒருத்தர் காறித்  துப்பினார். அவ்வளவு கோபம் இருந்தது துப்பலில்.
கோவில்பட்டிக்கு தமிழ்ச்செல்வன் வீட்டுக் கல்யாணத்திற்குப் போகிற வழியில் தற்செயலாக, புறவழிச்சாலைப் பாலத்தின் கீழ் பார்த்தேன். ஏதோ போக்கு யானை போல இருக்கிறது. போக்கு ஆட்டோ, போக்கு ரிக்ஷா மாதிரி இது போக்கு யானை. சாய்ந்து ஆற்றுக்குள் அமிழ்ந்து படுத்திருந்தது. பாகன் தேய்த்துக் கொடுக்கக் கொடுக்க, அது சொக்கின பாறையாக தும்பிக்கை, தளர்த்திக் கிடந்தது. இது நிஜம் என்றே நினைக்கிறேன். கொஞ்ச நேரம் முன்பு நீங்கள் கேட்ட `myth' ஆக இருந்துவிடக்கூடாது சாமி.

தீராநதி : தாமிரபரணி ஆற்றில் காவல்துறை நடத்திய கொலைச் சம்பவத்தைக் கேட்டவுடன் எப்படி உணர்ந்தீர்கள்?
வண்ணதாசன் : அது காவல்துறை நடத்திய கொலையா? அவர்களை ஏவவும் தூண்டிவிடவும் எப்போதுமிருக்கிற அதிகாரம், அரசாங்கம், அரசியல் அதற்குப் பின் இப்போதும் இருக்கத்தானே செய்கின்றன. பத்திரிகைகளை விடவும் கிருஷி மூலமாகவும், ரஞ்சித் வாய்மொழியாகவும், தமிழ்ச்செல்வன் நேர்ப்பேச்சிலும், காஞ்சனை சீனிவாசன், கதிர் ஆகியோரின் ஆவணப் படங்களிலுமே இதன் தொடர்பான நிறைய உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. மேற்சொன்ன இவர்களுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல என் சோகமும், கோபமும். ஆனால், அவர்கள் அதை வெளிப்படுத்திக் கொண்டது போல என்னால் கூர்மையாகவோ, வெளிப்படையாகவோ முன்வைக்க முடியவில்லை. ரொம்பப் பிந்தி எழுதிய ஒரு கதையின் வரிகளுக்குள் அதை ஒளித்து வைத்திருக்கவே என்னால் முடிந்தது.

தீராநதி : இப்போது புத்தகம் வெளியிடுவது மிக எளிய செயலாகி-விட்டது. உங்கள் முதல் கதைத் தொகுப்பான `கலைக்க முடியாத ஒப்பனைகள்' எப்படி வெளிவந்தது? கணினி இல்லாத அந்தக் காலத்தில் இந்திய அளவிலான சிறந்த நூல் தயாரிப்பிற்கான பரிசு அந்த நூலுக்குக் கிடைத்ததே?
வண்ணதாசன் : அப்போது முன்னூற்றுச் சொச்சம் ரூபாதான் சம்பளம். கையில் பெரிய சேமிப்பு எல்லாம் கிடையாது. ஆனாலும் தொகுப்புப் போட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அஃக் பரந்தாமனிடம் ஒப்படைத்தாயிற்று. அவருடைய கஷ்டம், என்னுடைய சிரமம் எல்லாவற்றையும் மீறி புத்தகம் அருமையாகத் தயாராயிற்று. என் சிநேகிதன் ஆர்.பாலுதான் கடைசித் தவணைக்குப் பணம் கொடுத்துக் காப்பாற்றினான். நானும் கோபாலும்தான் சேலம் போய் எடுத்துக்கிட்டு வந்தோம்.
ஒரு ட்ரெடில் அச்சகத்தை வைத்துக்கொண்டு பரந்தாமனால் மட்டும்தான் இவ்வளவு அழகாக அச்சடிக்க முடியும். புத்தகத்துக்கு இரண்டாம் தேசிய விருது கிடைத்ததுதான் எல்லோருக்கும் தெரியும். `கலைக்க முடியாத ஒப்பனைகள்' நூலுக்காகப் பரந்தாமன் அச்சடித்திருந்த லெட்டர்பேட், தொடர்பு அஞ்சலட்டைகளைப் பார்த்தால் அதற்கு முதற்பரிசே கொடுக்கத் தோன்றும். பரந்தாமன்தான் டில்லி போனார். அவர்தான் விருது வாங்கி வந்தார். அவர்தானே வாங்கவும் வேண்டும்.

தீராநதி : உங்கள் முதல் கவிதைத் தொகுப்பான `புலரி', மறைந்த கவிஞர் மீரா அவர்கள் வெளியிட்ட அன்னம் நவகவிதை வரிசையில் வெளிவந்தது. அதில்தான் வண்ணநிலவன், இந்திரன், கோ.ராஜாராம், விக்ரமாதித்தன் எனப் பலருக்கும் முதல் கவிதை நூல் வெளிவந்தது. கவிஞர் மீரா அவர்களைப் பற்றிய உங்கள் நினைவுகள்.
வண்ணதாசன் : அது எப்படி என்னை முதல் ஆளாக நவ கவிதை வரிசையில் வெளியிட மீரா தேர்வு பண்ணினார் என்று தெரியவில்லை. முன்னே, பின்னே பழக்கமில்லை. அறிமுகமில்லை. நான் திருநெல்வேலியிலிருந்து நிலக்கோட்டை போன புதுசு. பாரதி நூற்றாண்டில் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பை அவர் வெளியிட்டது எவ்வளவு நல்ல விஷயம். தொகுப்புக்குத் தலைப்புக்கூட அவர்தான் தேர்வு பண்ணினார்.
அப்புறம் `முன்பின்', `அந்நியமற்ற நதி', `கனிவு', `நடுகை' எல்லாம் அவர்தான் வெளியிட்டார். எனக்கு மாத்திரமல்ல, இப்படி எத்தனையோ பேருக்குப் பண்ணினார். கி. ராஜநாராயணனை அவரை மாதிரி யார் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள். அருமையான மனுஷன். அன்னம், அகரம் இரண்டையும் பெங்குவின், பெலிகன் பதிப்புகள் மாதிரி நிலைநிறுத்தப் பிரயாசைப்பட்டார். அநியாயத்துக்குச் சீக்கிரமே போயிட்டார். அவருக்கு வெளியிட்ட நினைவு மலரில் உள்ள செழியன் கட்டுரையை உடனே வாசிக்க வேண்டும் போல இருக்கிறது.

தீராநதி : கி. ராஜநாராயணன் மணிவிழா (1983) மதுரையில் நடந்தபோதுதான், உங்களை முதன் முதலாகச் சந்தித்தேன். கி.ரா.விற்கும் உங்களுக்குமான பாசப்பிணைப்பு எப்படியானது?
வண்ணதாசன் : அநேகமாக உங்களுக்குத்தான் நான் முதன்முதல் அன்றுஆட்டோகிராஃப் போட்டேன் என்று நினைக்கிறேன். நான் கூச்சப்பட்டபோது பக்கத்தில் நின்ற மீராதான் `போட்டுக் கொடுங்க கல்யாண்ஜி' என்று தோளில் தட்டிக் கொடுத்தார். அமைச்சர் காளிமுத்து கலந்துகொண்டு வெளியிட வேண்டிய புத்தகம். அவர் வரமுடியாததால் நான் வெளியிட்டுப் பேசினேன். பேசியும் பழக்கம் கிடையாது. பேசத் தெரியாத பேச்சில் ஒரு களங்கமின்மை இருக்குமல்லவா. அப்படி, சோளக்காடு, வண்ணத்துப்பூச்சி, கி.ரா. மாமா என்று ஏதோ பேசினேன். `பிரமாதமா பேசனீங்க' என்று அதற்கும் மீரா பாராட்டினார்.
கி.ரா. எங்க அப்பாவுக்கு நண்பர். நண்பர் மட்டும்தான். எங்களுக்குத்தான் மாமா. அத்தை உறவு. எனக்குக் கல்யாணம் ஆகிறவரை என்னைப் பிடித்திருந்தது. கல்யாணம் ஆனபிறகு வள்ளியை ரொம்பப் பிடித்துப் போனதால் எனக்கு இரண்டாவது ரேங்க்தான். திருநெல்வேலி வீட்டுக்கு மட்டுமில்லை, நாங்கள் குடியிருந்த அம்பாசமுத்திரம், மதுரை வீட்டுக்கு எல்லாம் மாமா வந்திருக்கிறார்கள்.
மாமாவும், அத்தையும் மாதிரி சந்தோஷமான கணவன்-மனைவி அமைவது அபூர்வம். எப்பவும் சிரித்த மாதிரி, முகம் கோணாமல் வாழ அவர்கள் ரெண்டு பேரிடமும் படிக்க வேண்டும். இது படித்தால் எல்லாம் வந்துவிடாது. எனக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைத்தவுடன் பாண்டிச்சேரியில் மாமா வீட்டுக்குப் போய் இரண்டு நாட்கள் இருந்தோம். இன்னும் இரண்டு நாள் இருக்கமாட்டோமா என்று இருந்தது. எல்லோரிடமும் மனது இப்படி ஒட்டாது. `அகம் புறம்' தொடர் முடிந்த பிறகு, மாமா ரொம்பப் பாராட்டி ஒரு நீளக் கடிதம் எழுதியிருந்தாங்க. அப்படியே கட்டிப்பிடித்து உச்சி முகர்கிற மாதிரி வரிகள். அதற்கெல்லாம் ஒரு கனிவு வேண்டும். மாமாவும், அத்தையும் வயசாக வயசாக அழகாகிக்கிட்டே போகிறார்கள் என்றால் அது அந்தக் கனிவினால்தான்.

தீராநதி : உங்களது `தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்' கதைத் தொகுப்பிற்கு சுந்தர ராமசாமி அவர்களிடம் முன்னுரை வாங்கியிருந்தீர்கள். அந்த முன்னுரையை, நூலின் இரண்டாம் பதிப்பில் சேர்க்காததற்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டா?
வண்ணதாசன் : அது என்னுடைய இரண்டாம் தொகுப்பு. சுந்தர ராமசாமியின் மீதிருந்த மரியாதையால் அவரிடம் முன்னுரை கேட்டேன். மறுக்கவில்லை. கேட்டுவிட்டேனே என்று ஒப்பேற்றவும் இல்லை. ஒருபோதும் அவர் அப்படிச் செய்யவும் மாட்டார்.
என்னைப் பற்றி நல்ல வார்த்தைகள் ஒன்றிரண்டு சொல்வார் என்று விரும்பியிருப்பேனில்லையா. அவருக்கு என் கதைகள் அந்தத் தூண்டுதலைத் தரவில்லை போலும். உங்களுக்குத்தான் தெரியுமே. ரொம்பவும் கறாரான அபிப்ராயங்களை அவரால் சிரித்துக்கொண்டே சொல்லமுடியும். இது நகைச்சுவையா, கிண்டலா என்று தீர்மானிப்பதற்குள், கத்தியின் கூர் பாதிப்பழத்திற்கு மேல் இறங்கியிருக்கும். அவருடைய அபிப்ராயம் சரியாக இருக்கலாம். அதை வேறு மாதிரியாகச் சொல்லியிருக்கவும் அவரால் முடியும். யார் தாங்குவார்கள். யார் வலி தாங்கமாட்டார்கள் என்று அவர் தெரியாதவரல்ல.
இந்த வலியைத் தவிர்த்துக்கொள்ளவே அவருடைய முன்னுரையை இரண்டாம் பதிப்பில் தவிர்த்தேன். நான் செய்த தப்பு, இதைத் தொகுப்பு வருவதற்கு முன்பு அவருக்குத் தெரியப்படுத்தாததுதான். அந்தக் குற்றவுணர்வு இப்போதும் எனக்கு உண்டு.

தீராநதி : இப்போது மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தேவதச்சன் அவர்களின் கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வண்ணதாசன் : எனக்குப் பிடித்த மூத்த கவிஞர்களின் குழுவில் சுகுமாரனும் சமயவேலும், தேவதச்சனும் கலையாமல் இருக்கிறார்கள். தர்க்கமும் ஒரு வன மரத்தின் ஒளிமைய நாட்டமிக்க கிளைகள் போலப் பிரிந்து பிரிந்து அடர்ந்தும் கவிந்தும் நிற்கிற தத்துவமுமாக அறியப்படுகிற அவரின் கோவில்பட்டி குரல் வேறு. அவருடைய கவிதைகளின் குரல் வேறு. ஆனால் சாராம்சம் ஒன்றுதான். அவருடைய `கடைசி டினோசார்' தொகுப்பை வாசிக்குமாறு நான் என் நண்பர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படி வாசிக்கக் கொடுத்த அந்தத் தொகுப்பின் பிரதி திரும்ப வராததால் மீண்டும் ஒரு பிரதி வாங்கினேன். அதற்கப்புறம் ஒரு தொகுப்பு `யாருமற்ற நிழல்' என்று வந்துவிட்டதெனினும், என்னைப் பொருத்தவரை `கடைசி டினோசார்தான்' அவருடைய சமீபத்திய தொகுப்புப் போல, என் வாசிப்பின் அண்மையில் இருக்கிறது. அதனுடைய நிழல் அல்லது வெ்யிலில் அவ்வப்போது நிற்கிறதுண்டு. தேவதச்சனை, தொடர்ந்து எடுத்துக்காட்டுகிற எஸ். ராமகிருஷ்ணனைப் போன்று, எனக்கு நானே மேற்கொள்கிற கவிதைகளை, நானும் ஆறுமுகத்திடம் கண்டுகொண்டிருக்கிறேன்.

தீராநதி : இலக்கியம் சார்ந்த உங்கள் மறக்க முடியாத நண்பர்கள் பற்றிச் சொல்லுங்கள்.
வண்ணதாசன் : நட்பு சார்ந்தவர்களே நண்பர்கள். அந்த நண்பர்களில் சிலர் இலக்கியம் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் அப்படி ஒன்றும் பெரியதல்ல. ராமச்சந்திரன், ந. ஜயபாஸ்கரன், பாவண்ணன், லிங்கம், இளையபாரதி, சாம்ராஜ் என்று உடனடியாகச் சிலரைச் சொல்லலாம்.

தீராநதி : உங்களது நூல்களைச் சமர்ப்பணம் செய்துள்ளவர்கள் பற்றி.
வண்ணதாசன் : இருபது, இருபத்தொன்று எல்லாம் போதாது. நூற்றுக்கணக்கில் `இன்னார்க்கு சமர்ப்பணம்' என்று போடுவதற்காகவே புத்தகங்கள் எழுதவும் வெளியிடவும் வேண்டும் என்று தோன்றுகிறது. எழுத்தாளன் தன் மரியாதையை, பிரியத்தை, காதலை எல்லாம் வேறு எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும். கி. ராஜநாராயணமாமா, கணவதி அத்தை, கணபதி அண்ணன், ராமச்சந்திரன், சமயவேல், நம்பிராஜன் இவர்களுக்கெல்லாம், சமர்ப்பணத்தைவிட, அருமையாகக் கட்டின மாலை எந்தப் பூக்கடையில் வாங்கிப் போடமுடியும்.

தீராநதி : இலக்கிய எழுத்தாளர்கள் வெகுஜன இதழ்களில் எழுதுவதைப் பாவமாகக் கருதிய காலம் ஒன்றிருந்தது. `ஆனந்த விகடன்' இதழில் நீங்கள் எழுதிய `அகம்-புறம்' கட்டுரைத் தொடருக்கு எப்படியான வரவேற்பு இருந்தது?
வண்ணதாசன் : இலக்கியப் பத்திரிகையில் எழுதுவது புண்ணியம் என்றோ வெகுஜனப் பத்திரிகையில் எழுதுவது பாவம் என்றோ, எழுதுகிறவன் ஒரு காலத்திலும் கருதியிருக்கமாட்டான். எழுத்தாளனுக்குப் பொதுவாகச் சம்பாதிக்கவே தெரியாது. இதில் எங்கே அவன் பாவத்தையும், புண்ணியத்தையும் சம்பாதிக்க.
என்னைப் பொருத்தவரை மட்டுமல்ல, யாரைப் பொருத்தவரையுமே, இதற்கு ஒன்று, அதற்கு ஒன்று எனத் தனித்தனி பேனா வைத்துக்கொண்டு எழுதியதில்லை. நான் இதுவரை எழுதிய நூற்றுமுப்பது கதைகளில் அதிகபட்சம் இருபதுகூட `குமுதம்', `குங்குமம்', `கல்கி', `விகடனி'ல் வந்திருக்காது. அந்த இருபது கதைகள் என்னைக் கழுவேற்றவுமில்லை. மீதிக் கதைகள் கோபுரத்திலேற்றவுமில்லை. ஆனால் நிறையப்பேரை அவை அடைந்தன.
சிறகுகள் விலாப்புறத்தில் முளைக்கும், நடேசக் கம்பரும் அகிலாண்டத்து அத்தானும், அப்பாவைக் கொன்றவன், பெய்தலும், ஓய்தலும், ரதவீதி போன்ற சிறுகதைகள் அடைந்த வாசகர்களின் எண்ணிக்கை அதிகம். அதிகம் அடைதல் என்பது அதிகம் தொடுதல். அதிகம் பற்றிக்கொள்ளல். நான் அய்யனாரை, ஆனந்த புத்தனை, உங்கள் மேலூர் வீட்டுக்கு அடையாளம் சொன்ன தெருவுக்குப் பலசரக்குக் கடைக்காரரை, அவரது அடையாளத்தின் பின்னிணைப்புப்போல, கையில் வாங்கி வந்த கடைச்சாமானுடன், விலகி வந்து தெருவின் இடப்புறம்வரை நீள்வது போலக் கையசைத்து விவரம் சொன்ன, வெளிர் சிவப்பு சேலைப் பெண்ணை எல்லாம் தொட விரும்புகிறேன். எழுத்து அதற்கான விரல்களைத் தர விரும்புகிறேன்.
விகடனில் வந்த `அகம் புறம்' அதை நிறையவே செய்தது. இதற்கு முன்பு என்னை முந்நூறு பேர் படிப்பார்கள் எனில் இப்போது மூவாயிரம் பேர் படித்தார்கள். நேரில், தொலைபேசியில், கடிதங்களில் பகிர்ந்து கொண்டார்கள். புத்தகக் கண்காட்சியில்கூட, இந்த வருடம் புதிய வாசகர்கள் என்னுடைய பழைய புத்தகங்களைக் கேட்டு வாங்கியதாக, சந்தியா பதிப்பகத்தில் சொன்னார்கள். நேர் எதிராக ஒன்றும் நடந்தது. எப்போதாவது ஒன்றிரண்டு முறை என் சிறுகதையோ கவிதையோ நன்றாக வந்திருக்கிறது என்று சொல்கிற சகாக்கள், இறுக்கமாக வாயை மூடிக் கொண்டார்கள். `களக் களக்' என்று கொத்துக் கொத்தாய்க் குளத்து மீன்கள் புரள்கிறது என்று சந்தோஷப்பட்டால், தெப்பக்குளத்துப் படிக்கட்டுப் பாசிகள் இப்படி ஒரேயடியாக ஆளைவாரி விட்டுவிடுகிறது என்ன செய்ய.

தீராநதி : உங்கள் கவிதை, கதை எந்தப் புள்ளியிலிருந்து மனதில் உருவாகத் தொடங்கும்?
வண்ணதாசன் : இதே கேள்வியை முன்பு ஒருமுறை கேட்டபோதும் எனக்குப் பதில் சொல்லத் தோன்றவில்லை. தெரியவில்லை. கேள்வி எந்தப் புள்ளியிலிருந்து உருவாகியிருக்கிறது என்று புரிந்தால்தானே பதில் சொல்லமுடியும். அநேகமாக அனுபவங்களிலிருந்து, அனுபவங்கள் உண்டாக்குகிற நெகிழ்ச்சியிலிருந்து சில சமயம் காயங்களிலிருந்து இன்னும் சில, `அட... என்ன வெளிச்சம்' என்றும், `எவ்வளவு இருட்டு' என்றும் ஒரு மினுக்கட்டாம்பூச்சி பறக்கிற நிலையிலிருந்து எல்லாம் உருவாகத் துவங்குகிறது என்று சொல்லலாமோ. சமையல்கட்டில் தவறிவிடுகிற டம்ளரின் ஓசையிலிருந்து உங்களுக்குப் பாடத் தோன்றும் எனில், கரண்ட் போய் கரண்ட் வந்தவுடன், தன்னையறியாமல் விளையாட்டுக் குழந்தைகள் `ஹோ' என்று கத்துகிற கத்தலிலிருந்து எனக்கு எழுதத் தோன்றும்.

தீராநதி : உங்கள் கதைகளில் வெளிப்படும் பெண்கள் மீதான அக்கறை மிகவும் முக்கியமானது. எப்படியான சூழலில் பெண்களின் துன்பங்கள் உங்களைப் பாதிக்கிறது?
வண்ணதாசன் : அடிப்படையான உளவியல் காரணம் எனில், பெண்களே அதிகமிருந்த ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் மத்தியில், அம்மாவாலும், அம்மாச்சியாலும் நான் மிகுந்த பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டதே என்று சொல்லவேண்டும். இப்போது அல்லவா பெண்கள் இவ்வளவு உரக்கவும், இவ்வளவு வெளிப்படையாகவும் சிரிக்கிறார்கள். நாற்பது, ஐம்பது வருஷங்களுக்கு முன்பு எல்லாம் பெண்கள் உரக்க அழுவதையும், உரக்கச் சண்டை போடுவதையும்தானே அதிகம் பார்க்கமுடியும்.
அன்பைத் தவிர வேறு எந்தத் தோளுமற்று, சதா ஒரு பூப்பந்தைப் போல அன்பை மட்டுமே தங்களின் ஒவ்வொரு கைக்குள்ளும் இருந்து மற்றவர் கைகளுக்குக் கடத்திக் கொண்டிருக்கிறவர்கள்தானே அவர்கள். அதனால்தானே மார்கழி மாதங்களில் பீர்க்கன் பூவுக்காகவும், பூசணிப் பூவுக்காகவும் பனிக்கூடாக அவர்கள் அலைந்தார்கள். பொருட்காட்சி பார்க்கப்போவது, ராட்சஸ ராட்டினம் பக்கத்தில் நின்று அண்ணாந்து பார்ப்பது அவர்களுக்கு எவ்வளவு பெரிய விடுதலையாக இருந்தது. வாசலில் செருப்புச் சத்தம் கேட்டால், கண்ணைத் துடைத்துக்கொண்டு எழுந்து போகிற, பக்கத்து வீட்டு முத்தக்காக்களுடன் மீதிப் பேச்சை குஞ்சம்மா மதினிகள் என்றைக்குப் பேசி முடித்தார்கள்.
பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதைப்போலவே ஆண்களும் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்லப்போனால், அன்றாட நடப்பில், பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள், அந்தக் கரிசனம் காரணமாகவே அடைகிற துன்பங்கள் ரொம்ப நுட்பமானவை.

தீராநதி : கண்ணதாசன், நடை, தீபம், கணையாழி முதல் மீட்சி, இன்றைய உயிரெழுத்து வரையிலான சிற்றிதழ்களில் எழுதியுள்ளீர்கள். இன்றைக்கு வெளிவரும் இலக்கிய இதழ்கள் பற்றிய வெளிப்படையான உங்கள் அபிப்ராயம் என்ன?
வண்ணதாசன் : அப்போதைய சிற்றிதழ்கள், இப்போதைய நடுநிலை இதழ்கள் இரண்டிலும் நோக்கங்களிலும் செயல்பாட்டிலும் பெரிய வேற்றுமைகளில்லை. முன்பைவிட பொருளாதாரச் சிரமம் இப்போது எதுவுமில்லை. விளம்பரங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். பதிப்பில் வடிவமைப்பில் எல்லாம் கணினியமான துல்லியம். எல்லாம் இருந்தும், பெருமளவில் அவரவர்க்கென்றே இருக்கிற குழுக்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட அவரவர் இதழ் சார்ந்து பதிப்பகங்களும் இருப்பதால், ஒருவர் கோட்டையில் இன்னொருவர் நுழைய முடியவில்லை. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, எவரையும் சந்தேகிக்க முடியாதபடி, எல்லோரும் மிகச் சரியான அக்கறையுடன், மொழியையும், கலை இலக்கியத்தையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தீராநதி : இப்போது வெளிவரும் ஒரு படைப்பாளியின் மொத்தக் கதைகள், மொத்தக் கட்டுரைகள், மொத்த நாவல்கள் பற்றிய உங்கள் எண்ணம் என்ன?
வண்ணதாசன் : பதிப்புத்துறை வளர்ச்சியின் தரமான உடன் விளைவுகளில், இந்த மொத்தத் தொகுப்புக்களும் ஒன்று. ஒரு படைப்பாளியின் தொகுப்பு, அவன் வாழ்கிற காலத்திலேயே மொத்தமாகப் பதிப்பிக்கப்படுவது வரவேற்புக்கு உரியதுதானே. 2000-01-ல் என்னுடைய வண்ணதாசன் கதைகளும், கல்யாண்ஜியின் கவிதைகளும் மொத்தமாகத் தொகுக்கப்பட்டபோது, அதற்கு முன்பையும்விட, நானும் என் எழுத்தின் சாயலும் சரியாகக் காணப்பட்டன என்பது நிஜம். உதிரிகளைவிட மொத்தம் எப்போதுமே பலம்தானே. பலம் மட்டுமல்ல அழகு கூட.

தீராநதி : கடிதம் என்பது ஒவ்வொருவருக்குமான அந்தரங்கம் சார்ந்தது. நீங்கள் பிறருக்கு எழுதிய கடிதங்களை நூலாக்கம் செய்தது சரிதானா?
வண்ணதாசன் : நான் கடிதம் எழுதுகிறவன். அது அந்தரங்கமானது, எனக்கு ஒருபோதும் தோன்றியதில்லை. கடிதம் பெறுகிறவர்களில் சிலருக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். மதுரை ந. ஜயபாஸ்கரனுக்குத் தோன்றியதால் அவர் கடிதங்களை அனுப்ப இயலவில்லை. நீங்களும் அப்படி நினைக்கிறீர்கள் போல. உங்களுக்கு அந்த உரிமை உண்டு. என்னைப் பொருத்தவரை, நஞ்சப்பனின் ரவிசுப்ரமணியனின் முயற்சியில், என் கடிதங்களில் ஒரு சிறு பகுதி நூலாக வெளிவந்ததில் சந்தோஷமே. சந்தோஷம் சரி, தப்பு எல்லாம் பார்த்து வருமா? நீங்கள்தான் சொல்லவேண்டும்.

தீராநதி : எழுத்தாளர் இராகுலதாசனுக்குத்தான் அதிகக் கடிதங்கள் எழுதியுள்ளதாக ஒரு இதழில் சொல்லியிருந்தீர்கள். எப்போதிருந்து அவருக்குக் கடிதங்கள் எழுதினீர்கள்?
வண்ணதாசன் : ராகுலதாசன் என்கிற மு. பழனி இராகுலதாசனைக் கிட்டத்தட்ட 50 வருடங்களாகப் பழக்கம். அப்போது நான் ட்டி.எஸ். கல்யாணசுந்தரம். அவர் மு. பழனி. நான் தினத்தந்தியில் சிரிப்புப் படங்கள் வரைந்து கொண்டிருந்தேன். 1959-60-ல் ஐந்து ரூபாய் மணி ஆர்டரில் வருவது ஒரு பள்ளிக்கூடத்துப் பையனுக்கு எவ்வளவு பெரிய விஷயம். அதைப் பார்த்துவிட்டுத்தான் பழனி கடிதம் எழுத ஆரம்பித்தார். சோழவந்தான் பக்கம் நெடுங்குளத்துக்காரர்.
வாழ்க்கை எந்தப் பக்கம் யாரை இழுத்துக் கொண்டுபோய்விடும் என்று சொல்ல முடியாது. நான் படிப்பில் விழுந்து, எழுந்திருந்து, பாங்க் வேலை பார்த்து ஓய்வு பெற்றிருக்க, அவர் தமிழ் படித்துப் பேராசிரியராகி, சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்று தேவகோட்டையில் இருக்கிறார். அவருடைய பழைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று என்னிடம் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும்போது எடுத்ததாக இருக்கும். மனசு மாதிரி முகம். தூசு தும்பு இல்லாமல் துடைத்து வைத்தது மாதிரி இருக்கும். மீசை கூடக் கிடையாது. அவர் தேவர் என்பதை சமீபத்தில் அறியும்போது, மீண்டும் மீண்டும் ஒரு பெரிய மீசையை அவர் முகத்தில் ஒட்ட வைத்துப் பார்த்தேன். ஒட்டுவேனா என்று மீசை கடைசிவரை மறுத்துவிட்டது.
பொதுவுடைமையிலும் ஈடுபாடு. புத்தரிடமும் ஈடுபாடு. வள்ளுவரும், வள்ளலாரும் அவரைப் பொருத்தவரை வேறு வேறு ஆட்களில்லை. இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் போன மாதம் `ஷ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்' பற்றி எழுதியிருக்கிறார். எதிலுமே ஆழ்ந்த படிப்பில்லாமல் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளத் தவிக்கிற என்னுடைய இந்த அறுபத்து மூன்றாம் வயதில், அவருடைய இந்த இடம் எனக்கு முக்கியமாகப் படுகிறது. எப்போதும் உள்ளே ஒரு நீரோடை பாய்ந்து கொண்டிருக்கும் போல அவருக்கு.
இந்த ஐம்பது வருடங்களிலும், மீராவின் பையன் கதிர் கல்யாணத்தில் மட்டுமே நாங்கள் ஒருவரை ஒருத்தர் பார்த்துப் பேசியிருக்கிறோம். இது எங்களின் ஐம்பது வருடங்களை மேலும் அழகாக, வாடாமல் வைக்கும் ஒரு நிகழ்வாகிவிட்டது. மூச்சை இழுத்தால், ஒரு வாசனை மாதிரி, கதிர் கல்யாணம் இராகுலதாசனுடன் நிரம்புகிறது.

தீராநதி : இப்போது எழுதும் இளைஞர்கள் முதல் தொகுப்பிலேயே தங்களை நிரூபித்து விடுகிறார்கள். மூத்த படைப்பாளியான நீங்கள் இன்றைய இளைஞர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வண்ணதாசன் : முதல் தொகுப்பு என்ன, முதல் கதையிலேயே அருமையாக எழுதுகிறவர்கள் தென்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எடுத்துச் சொல்லத்தான் ஆளில்லை. கீரனூர் ஜாகிர்ராஜாவும், கண்மணி குணசேகரனும், சு. வேணுகோபாலும், லட்சுமணப் பெருமாளும், பவா.செல்லதுரையும், காலபைரவனும், ஷ்ரீராமும், திருச்செந்தாழையும், சந்திராவும் இன்னும் எத்தனையோ பேரும் எல்லாத் திசைகளிலிருந்தும் வந்துகொண்டே இருக்கிறார்கள். கூடுமானவரைப் புதிதாக எழுதுகிறவர்களின் கதை, நாவல் புத்தகங்களை ரொம்ப ஆசையோடு வாங்கிப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரு மனுஷன் எத்தனை ரூபாய்க்குத்தான் புத்தகம் வாங்கிவிட முடியும். நான் நான்கு வாங்க, நீங்கள் நான்கு வாங்க என்று யாராவது பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி யாரும் பக்கத்தில் இல்லை. அல்லது இருக்கிறவர்கள் பக்கத்தில் நான் போகவில்லை. எழுத்தைப் பொருத்தும்கூட ஒன்றிரண்டு புதுப்பையன்கள் பக்கத்தில் நான் போகமுடிவதில்லை. அல்லது அவர்கள் எழுதுகிற விதம் என்னைப் பக்கத்தில் வரவிடுவதில்லை. எங்கள் வீட்டு நடையை விட்டு இறங்கி நாலு எட்டில் போய்ப் பார்த்துவிடும் தூரத்தில் இருக்கிறது புங்கைமரம். அதனுடைய நிழலில் நின்றுகொண்டிருக்கிற ஒரு மனுஷியைப் பார்க்க, நான் தெருக்களைச் சுற்றிக் கூட்டிக்கொண்டு போகிறார்கள் இவர்கள். மழை பெய்ததும் துளைத்துக்கொண்டு மேலே வருகிற மண்புழுக்கள் மாதிரி, இந்த வாழ்வும் மொழியும் மிக எளிதாகத் தன்னை வைத்துக்கொண்டிருக்கிறது. எட்டு எட்டேகால் மணி வெயிலில் அநேகமாக, இவ்வளவு நீளப் பாம்பு ஒன்று, இப்படி இரண்டு கை பாகம் இருக்கும். தெற்கே முள்ளுக்காட்டிலிருந்து கிளம்பி, தார் ரோட்டை க்ராஸ் பண்ணி, வடக்குப் பக்கத்துக் கல்வெட்டாய் குழிப் புதருக்குள், தினசரி போகிறது. ஒரு அவசரமும் அதுக்கு இல்லை. யாருக்கும் இடைஞ்சலும் இல்லை. அதுபாட்டுக்குப் பளபள என்று போகிறது. நான் முன்பு சொன்ன `ஊர்ந்து கொண்டே இருக்கும் உயிரின் அழகு' அதுதான். அப்படி மொழி இருந்தால் போதும். அனாவசியமாகப் படம் எடுத்து ஆட வேண்டியதில்லை.

தீராநதி : 90-களில் சுபமங்களா நேர்காணலில் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றி எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லியிருந்தீர்கள். இன்று எப்படிப் பார்க்கிறீர்கள்?
வண்ணதாசன் : சுபமங்களா பேட்டி வந்த சமயம், `என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' தொகுப்பு மட்டும் வெளிவந்திருந்தது. அப்போது அவருடைய `கால்களின் ஆல்பம்' பற்றி எல்லோரும் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு நல்ல கவிதையாகப் படவில்லை. இப்போதுகூட அப்படித்தான். அதைவிட வரவர அவர் எவ்வளவோ அருமையான கவிதைகளைப் பின்னால் எழுதியிருக்கிறார். அவருடைய பிந்தைய தொகுப்புக்கள் `நீராலானது', `கடவுளிடம் பிரார்த்தித்தல்', இன்னொன்றுகூட உண்டு. மணல் பிரதியா... அதனுடைய அருமையான முகப்புப் படம் ஞாபகம் வருகிறது... கரெக்ட். `மணலின் கதை' அவற்றையெல்லாம் நான் விருப்பத்தோடு வாசிக்கிறேன். சமீபத்திய `உயிர்மை' இதழில் வெளிவந்திருக்கிற `வரலாறு எனும் பைத்தியக்கார விடுதி', `சிநேகிதியின் கணவர்கள்'இரண்டும் அதனதன் அளவில் அருமையானவை. ராமச்சந்திரன் எழுதிய `மனைவியின் நண்பர்' சிறுகதை எவ்வளவு நுட்பமானதோ, அந்த அளவுக்கு நுட்பமானது மனுஷ்யபுத்திரனுடைய `சிநேகிதியின் கணவர்கள்' கவிதையும். எல்லோரும் வாழ்க்கையில் வெகுதூரம் வந்துவிட்டோம். என்றைக்கோ கல் தட்டுகிறது. நகம் பெயர்கிறது. அதனால் என்ன மீண்டும் நகம் வளர்ந்துவிடுகிறதே. அதிலும் இந்தக் கால் பெருவிரல் நகம் கொஞ்சமா அடிபட்டிருக்கும். தன் ரத்தம் கசிந்து உலர்வதையும், ஓடுகிற ஆற்றில் அமிழ்த்தும்போது அது நீரில் புகையாகிப் பரவுவதையும் பார்க்கிற நேரம் முக்கியமானது. ஒரு தியானப் பொழுது அது.

தீராநதி : அர்ப்பணிப்பு உணர்வுடன் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் மதிக்கப்படுவதில்லையே?
வண்ணதாசன் : மொழிபெயர்ப்புக்கள் கொண்டாடப்படுகின்றன. மொழிபெயர்ப்பாளர்கள் கொண்டாடப்படவில்லை. மொழிபெயர்ப்புக்களை அங்கீகரிப்பதையே மொழிபெயர்ப்பாளர்களை அங்கீகரிப்பதாக எடுத்துக்கொள்வதுதான் எல்லா மொழிகளிலும் நிலைமை என்றே தோன்றுகிறது.

தீராநதி : மொழிபெயர்ப்புக்கள் எந்த அளவிற்கு உங்களுக்கு உதவியாய் இருக்கிறது. உங்களுக்குப் பிடித்தமான மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி...
வண்ணதாசன் : மாஸ்கோ அயல்மொழிப் பதிப்பகம், நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாதமி ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட நல்ல மொழிபெயர்ப்புக்களின் பட்டியலை 70-களில் நம்பிராஜன் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவை தவிர, 2009 ஜனவரி வரை வாசிக்கக் கிடைத்த மொழிபெயர்ப்புக்களின் பட்டியல் மிக நீண்டது. அதில் தலையாயதாக, `நீலகண்டப் பறவையைத் தேடி' எப்போதும் இருக்கும்.
மொழிபெயர்ப்பு படைப்பாளிகளுக்குள் புதிது புதிதாக உண்டாக்குகிற மனதின் பூகோளங்களும், அந்தப் பூகோளங்களின் தட்பவெட்பம் சார்ந்து நாம் உடன் வாழத் தலைப்படுகிற மனிதர்களும் வசீகரமானவை. ஜமீலாவாகவும், பீட்டர்ஸ்பர்க் நாயகனாகவும் மாறியபடி வெண்ணிற இரவுகளில் அந்நியனாகவோ மதகுருவாகவோ அடுத்தடுத்துத் தன்னைப் புதுப்பித்துக்கொண்ட மனநிலைகளும் எனக்கு முக்கியமானவை. அந்த வாசிப்புகளுக்குப்பின், என் எழுதுகணங்கள் மட்டுமல்ல வாழ்கணங்களே, முன்பைவிடச் செறிவடைந்திருக்கின்றன. சிக்கலடைந்ததும் இல்லாமல் இல்லை.

தீராநதி : உங்கள் குடும்ப வரைபடம் எப்படி இருக்கும். மூதாதையர்களின் பூர்வீகம் எது?
வண்ணதாசன் : வம்ச விருட்சம். குடும்ப வரைபடம் அப்படியொன்றும் என்னிடமில்லை.சீவலப்பேரியின் பக்கத்து கிராமமான குப்பக்குரிச்சியிலிருந்து பலசரக்குக் கடை வேலை பார்த்தவர் என் பூட்டனார், அதாவது எங்கள் அப்பாவின் அப்பாத்தாத்தா கு. சிவசங்கரன் பிள்ளை. அப்பாவுக்கு அந்தத் தாத்தா பெயர்தான். அப்பாவையும், அம்மாவையும் தன் 5 வயதுக்குள் இழந்து, தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்தவர் அப்பா. ஒரு வசதியான குடும்பத்துப் பேரனான அப்பாவுக்குப் பின்னால் பொதுவுடைமைச் சார்பு ஏற்பட, இப்படிச் சின்ன வயதில் அப்பா-அம்மா இல்லாமல் வளர்ந்ததன் உளவியல் ஏதாவது செலுத்தியிருக்குமோ என்று தோன்றுகிறது. அப்பா, சித்தப்பா, அத்தை. எங்கள் அம்மா தெய்வானை அம்மாள். எங்கள் தெரு மொத்தத்துக்கும் தெய்வக்கா. அப்பாவுக்கு முறைப்பெண்தான். அப்பா கூடப்பிறந்த அக்காளின் மகள். நாங்கள் ஆறு பேர். மூன்று ஆண். மூன்று, பெண். கி.ரா. மாமா அட்வைஸில் அப்பா குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டது, அந்தச் சமயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குடும்பத்துக்குள். படித்து வேலைக்குப் போய், கல்யாணம் ஆகி, ஓரளவுக்கு நன்றாக இருக்கிறோம். உங்களுக்குத்தான் சங்கரியையும், ராஜுவையும் நிலக்கோட்டை நாட்களிலேயே தெரியுமே. சங்கரிக்குக் கல்யாணமாகி பெங்களூரில் இருக்கிறாள். மாப்பிள்ளை ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர். பேத்தி அர்ச்சனாவிற்கு ஏழு வயதாகிறது. மகன் நடராஜும் பெங்களூரில்தான் வேலை பார்க்கிறான். ஜூலை ஒன்பதில் கல்யாணம். பத்திரிகை அனுப்புவேன். வந்திருங்க.

தீராநதி : உங்கள் வாழ்வின் படிப்பு, பணி, ஓய்வு காலங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
வண்ணதாசன் : பத்தாங்கிளாஸ் வரை படிப்பு வந்தது. பிரைஸ் எல்லாம் வாங்குவேன். அப்புறம் ஏதோ கிறுக்குப் பிடித்துவிட்டது. ஒன்றும் சரியாகப் போகவில்லை. பி.யூ.சி.யில் செலக்ஷனே கிடைக்கவில்லை. அப்புறம் பி.காம்., படிப்பில் சேர்த்தார்கள். அக்கவுண்டன்சி வரவே இல்லை. ஹைஸ்கூலில் காம்போஸிட் மேத்ஸ் வராது. அல்ஜீப்ரா, லாக்ரிதம், தியரம் என்றால் தூக்கம் வராது. அதே மாதிரிதான் டிகிரி படிப்பிலும். இரண்டு தடவை எழுதி பாஸ் பண்ணினேன். ஒன்றே முக்கால் வருஷம் கழித்து ஸ்டேட் பாங்க் பரீட்சைக்குத் தேர்வு எழுதினேன். நல்ல மார்க். இண்டர்வியூக்குக் கூப்பிட்டார்கள். அப்படி என்ன பேசினேன் என்று தெரியாது. என் ஆங்கிலம் நன்றாக இருப்பதாகப் பாராட்டி எந்த ஸ்கூலில் படித்தேன் என்று கேட்டார்கள். வேலை கிடைத்தது. இதற்குள் எழுதி எழுதி கவனத்திற்கு வந்துவிட்டேன். `கலைக்க முடியாத ஒப்பனைகள்' வந்துவிட்டது. பாங்க் பரீட்சை சிகிமிமிஙி என்று உண்டு. பாஸ் பண்ணினால் மூன்று இன்க்ரிமென்ட். நான் முதல் பார்ட்டே தேறவில்லை. அதிலும் அக்கவுண்டன்ஸி உண்டே. என்ன பண்ண.
2006-ல் ஆகஸ்ட் மாதத்தோடு ஓய்வு. பெரும்பாலும் படிப்பு.  எப்போதாவது எழுதுவது. நிறைய அயல் திரைப்படங்கள் பார்ப்பது என்று போகிறது. உங்களுடையது மட்டுமில்லை; காஞ்சனை மணி, சாம்ராஜ், ஹரீந்திரன், பாண்டியராஜ் எல்லோருக்கும் திருப்பிக் கொடுக்கவேண்டிய சி.டி.க்கள் என்னிடமே தங்கிவிட்டன. வெட்கமா இருக்கு. திருப்பிக் கொடுத்திரணும்.

தீராநதி : சமீபத்தில் மறைந்த கவிஞர்கள், சி. மணி, அப்பாஸ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டதும் என்ன தோன்றியது?
வண்ணதாசன் : சுந்தர ராமசாமி இறந்த சமயம், அவருடைய கவிதைகளையும், `குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவலில் குழந்தைகள் வருகிற பகுதிகளையும் வாசித்துக் கொண்டேன். சி. மணியின் மறைவு `ஒளிச்சேர்க்கை' தொகுப்பை ஞாபகப்படுத்தியது. ஆனால் உடனடியாக எடுத்து வாசிக்கிற நெருக்கத்தில் இல்லை. அவருடைய முகமும் எனக்குத் தெரியாது. வரிகளும் முகமும் வாசிக்கப்பட முடியாத மனநிலை அது. பக்கத்தில் இதுபோன்ற நேரங்களில் யாருமில்லாது போவது இன்னொரு துயரம்.
அப்பாஸ் தெரிந்த பையன். அதிகம் நெருக்கமில்லை. என்றாலும் தெரியும். கோபாலிடமிருந்து வாங்கிய `வரைபடம் மீறி' தொகுப்பு என்னிடம்தான் இருக்கிறது. இரண்டு, மூன்று வருடங்களுக்கு முந்தைய குற்றால சீசனில் நாங்கள் தங்கியிருந்த அதே விடுதியில் அவரும் தங்கியிருந்த நினைவு வந்தது. முகமும் உடல் மொழியும் முன்னால் கொண்டுவந்து நிறுத்திய அப்பாஸே போதுமானதாக இருந்தது. கவிதைகளை அன்று வாசிக்கவில்லை.

தீராநதி : இந்த வயதுவரை வாழ்க்கை உங்களுக்குச் சொல்வதென்ன?
வண்ணதாசன் : வாழ்க்கைக்கென்ன, அதுபாட்டுக்கு என்னென்னவோ சொல்கிறது. வாழ்க்கை மாதிரி அலுக்காத கதை சொல்லி கிடையவே கிடையாது. சில சமயம் மேகம் மாதிரி, மேக நிழல் மாதிரி, வெயில் மாதிரி கண்ணுக்கு முன்னால் அது நகர்ந்துக்கிட்டே இருக்கு. இலந்தம் புதர் வழியாக அது சரசரவென்று யாரையும் கொத்தாமல் யாரையும் பார்க்காமல் எங்கே போகும் என்று தெரியவில்லை. மீன் வியாபாரியைச் சுற்றிச் சுற்றி வருகிற சாம்பல் பூனை மாதிரி நம்முடைய கால் பக்கமே நின்று மீசை முடிகள் அசையாமல் மியாவுகிறது. குளிக்கவும், மீன் பிடிக்கவும் வந்த பையன்கள் ரெண்டு பேரையும் மிதக்கச் செய்யும் கல்வெட்டாங்குழி மாதிரி பால்கவர் அல்லது செய்தித்தாள் விநியோகிக்கிற நம் கண் முன்னே பள்ளத்தில் கிடக்கிறது. பாபநாசம் ஏகபொதிகை உச்சிக்குள் கற்சிலையாக கருத்த புன்னகையைப் புல்லுக்கும் பனிக்கும் விசிறுகிறது. தலைப்பிள்ளை பேறுகாலம் ஆன அம்மை மாதிரி முலைப்பால் வாசனையுடன் நம்மைப் பக்கத்தில் போட்டுத் தட்டிக் கொடுக்கிறது. லாடங் கட்டுவதற்குக் கயிறு கட்டிச் சாய்த்திருக்கிற காளையின் வெதுவெதுப்பான சாணி மாதிரி வட்டுவட்டாக அடுக்கு விட்டுக் குமிகிறது. தொடர் வண்டிகளின் அரக்குச் சிவப்புக் கூவலுடன் கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பி வந்து சூடான தண்டவாளங்களில் வண்ணத்துப்பூச்சியாக ஆரஞ்சு முத்தமிடுகிறது. நரிக்குறவக் கிழவனைப் போலப் பரிசுத்தமாகச் சிரிக்கிறது. ஒரு கரும்பலகையின் உடல் முழுவதும் என் கேலிச் சித்திரத்தை வரைகிறது.

புகைப்படங்கள் : மேலூர் பிரபாத் சர்புதீன்

Mar 29, 2010

கவிதையின் புதிய உலகங்கள் - விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் நம்பி

நமது தமிழ்மொழி உலகிலுள்ள செவ்வியல் மொழிகளில் ஒன்று. நீண்ட நெடிய  கவிதை மரபு கொண்டது. அகிலத்தின் சிறந்த கவிதைகளுக்கு ஈடு இணையான கவிதை வளம் நிரம்பியது. காலத்தாலும் அழிக்க முடியாத இலக்கியப் பின்புலம் உடையது.

சங்கக்கவிதைகளில் தலைவன் - தலைவியின் நுட்பமான காதல் உணர்வுகளும் அனுபவங்களும் அகப்பாடல்களாய் வடிவு கொண்டிருக்nambi28கையில், அன்றைய வாழ்வின் இயல்பான வீரம் செறிந்த வாழ்வனுபவங்களும் எதார்த்தமான உணர்வலைகளும் புறப்பாடல்களாய் உருக்கொண்டிருப்பதுதான் நம்முடைய கவிதையின் ஆதிஉலகம்.

கதையும் கருத்துமாக விரிவுகொள்கிறது காவியகால உலகம். பக்திக்காலத்தில், சிவனும் விஷ்ணுவும் வழிபாட்டு நாயகர்களாய்ப் போற்றிப் பாடப்படுகிறார்கள். சிற்றிலக்கியம் எல்லாமே இறைவனையோ அரசனையோ கொண்டாடுகின்றன. காலம்தோறும் கவிதையின் உலகம், பாடுபொருள், சொல்லும்விதம், பாவகைகள் (வடிவம்), உத்திமுறைகள் எல்லாமும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. வாழ்வின் கதியும் சுதியும் மாறுவதுக்கு ஏற்ப கவிதையின் முகமும் மாறுகிறது, நதி ஒன்றுதான் என்றாலும் செல்லும் இடத்துக்குத்தக சாயல்மாறுவதுபோல.

இவற்றிற்குப் பிற்பாடு, ஏறத்தாழ, நான்கு நூற்றாண்டுகளில் எழுதப்பட்டுத் தொகுக்கப் பெற்ற தனிப்பாடல்கள். தமிழின் மிகமேலான இன்னொரு செல்வக்களஞ்சியம், தனிப்பாடல் திரட்டு. இதில் பல்வேறு உலகங்கள், வேறு வேறு வாழ்க்கைகள், மானுடத்தின் அநேக ஜாடைகள் எல்லாம் குடிகொண்டிருப்பதுதாம் அந்தத் தொகைநூலை விசேஷமாக்கி வைத்திருக்கிறது. கவிதையின் புதிய உலகங்கள் என்றதுமே தனிப்பாடல் திரட்டுதான் உள்ளத்தில் தோன்றுகிறது. அந்த அளவுக்குப் புது விஷயங்கள் கொண்டிருப்பது அது.

அடுத்து, புதிய திறம்பாட வந்த புலவன் பாரதி. அன்றையதினம், கவிதையின் எல்லைகளை, பரப்பளவை, விரிவுசெய்த மேதை அவன். இன்றைக்கும், 'பிழைத்த தென்னந்தோப்பு ', 'மறவன்பாட்டு ', 'அக்கினிக்குஞ்சு ', 'மழை ', 'புயற்காற்று ', 'சிட்டுக்குருவியைப் போலே ', வண்டிக்காரன் பாட்டு ', 'நிலாவும் வான்மீனும் காற்றும் ' முதலான கவிதைகள் கவிதையின் புதிய உலகங்களைக் காட்டி ஒவ்வொரு கவிஞனுக்கும் பொறுப்புணர்வை நினைவூட்டிக் கொண்டிருப்பன.

நவீன கவிதையில் இதைத் தொடங்கிவைத்த பெருமை ந.பிச்சமூர்த்தியையே சேரும். எடுத்துக்காட்டு, 'பெட்டிக்கடை நாரணன். ' க.நா.சு., கு.ப.ரா., புதுமைப்பித்தன் ஆகியோரைத் தொடர்ந்து, நகுலன், பசுவய்யா, எஸ். வைதீஸ்வரன், தி.சோ. வேணுகோபாலன், சி.மணி, கே.ராஜகோபால் முதலானோரும், எழுபதுகளில், ஞானக்கூத்தன், நாரணோ ஜெயராமன், கலாப்ரியா, தேவதேவன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், பிற்பாடு சுகுமாரன் முதலானோரும் கவிதையில் புதிய உலகங்களைப் படைத்துக் கணிசமான பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.

சமீபகாலமாய், நிறையப் புதியவர்கள், இதுவரை கவிதைக்குள் வராத உலகங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பழைய உலகம் என்றபோதும், புதியபார்வையில் சொல்கிறார்கள் இன்னும் சிலர். நவீன கவிதை மெய்யாலுமே புதுமைபெற்று விளங்குகிறது. விஷயம், வடிவம், சொல்முறை, கவிதைமொழி இப்படி இப்படி புதுக்கோலம் கொண்டு துலங்குகின்றன சமகாலக்கவிதைகள்.

சங்கிலிகளுக்கு மதம்பிடித்தபோது

நண்பனின் அறையின்

படிக்கட்டுகளில் படிந்துறைந்த

இரத்தத்தின்மீது கொஞ்சம் மழைத்துளிகள்பட்டு

சலிக்கும் இரத்தம்

கவிழ்ந்து கிடக்கும்

இடதுகால் செருப்பு

அரசு ஏவல்நாய்கள் சவுட்டிப்பொழிந்த

ஜன்னலும் கதவும் அறையினுள் சிதறிக்கிடக்கும்

ஊசிப்போன கஞ்சியும் பயறும்

தாறுமாறாகக் கலைத்தெறியப்பட்ட

புத்தகங்கள்

பின்புறத்து அசையில்

மழையிலும் வெயிலிலும்

அநாதையாய்க் காயும்

கைலியும் சட்டையும்

மழை பெய்துபெய்து

பச்சைப்பாசி பிடித்த பின்சுவரில்

பற்றிப் பிடித்த விரல்தடம்

சறுக்கிய கால்கள் வழித்தெடுத்த

பாசியழிந்த தடம்

அப்புறம்

என் சுற்றுப்புறம் மொத்தம்

ஒரு மரணத்தின் நிழல்

--டி.வி.பாலசுப்ரமணியம்

( 'குதிரைவீரன்பயணம் ' ஏப்ரல் '94 பக்கம் : 8)

***************

Mar 27, 2010

பாக்கி - அசோகமித்ரன்

அசோகமித்ரன்

போலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி.

நான் சுந்தரியைப் பார்க்காதது போலத் தாண்டிச் சென்றேன். ஆனால் அவள் உரத்த குரலில், 'என்னாங்க என்னாஙக ' ' என்று கூப்பிட்டாள். சந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னை பார்த்தார்கள். நான் நின்றேன்.

சுந்தரி அருகில் வந்து, 'ரெண்டு நிமிஷம் வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போங்க ', என்றாள். நான் அவளைப் பின் தொடர்ந்தேன்.

90akc7 சந்தினுள் சந்தாக மூன்று முறை திரும்பி அவள் வீட்டை அடைந்தோம். அங்கிருந்த வீடுகள் சுவர்கள் கொண்டிருந்தன என்பதைத்தவிர சேரிப் பகுதியிலிருந்து அதிகம் மாறுபட்டவை அல்ல. சுந்தரி இருந்த வாசல் கதவைத் திறந்தவுடனேயே இருந்த ஆளோடியின் நடுவில் பெரிய சாக்கடை. இருபுறங்களிலும் இருந்த அறைகளில் ஏராளமான குடும்பங்கள் அந்த வீட்டிலும் மாடி இருந்தது. அங்கு ஒரே ஒரு தனி அறை. அது சுந்தரியுடையது.

பகல் நேரத்தில் அங்கு வெளிச்சத்துக்குக் குறைவில்லை. 'எங்கே சுவர்க் கடியாரம் ? ' என்று கேட்டேன். அது நான் வாங்கியது.

'மார்வாடிக் கடைக்குப் போயிருக்கு, ' என்றாள்.

'இருபது ரூபா கூடக் கிடைக்காதே ? '

'அதுகூடக் கையிலே இல்லாத போது என்ன செய்யறது ? '

'ஏன், பிரபாகர் இல்லையா ? '

'அவரைப் பத்தி விசாரிக்கத்தான் உங்களைக் கூப்பிட்டேன். '

'ஏன், என்னாச்சு ? '

'தெரியலைங்க. அவரு இங்கே வந்து மூணு மாசம் ஆறது. '

என் மனத்தில் எங்கோ ஓர் மூலையில் 'நல்லா வேணும் உனக்கு, ' என்று சொல்லத் தோன்றியது.

'ஓகோ, ' என்றேன்.

திடாரென்று சுந்தரி விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.

நான் சுந்தரி அழுது பார்த்தது கிடையாது. உண்மையில் பிறரைக் கதறக் கதற அடிப்பதில்தான் அவள் பெயர் பெற்றவள். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டு முன்னால் ஊரைக் கூட்டி எப்படியெல்லாம் மானத்தை வாங்கினாள் ? யாரோ ஒருவர் ஒரு போலீஸ்காரனையும் அழைத்து வந்துவிட அதன் பிறகு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை. தற்கால நாகரீகத்தில் ஆண் ஒருவனுக்குக் கெளரவம் என்று ஒன்று இருப்பதை துளிப் பாக்கி இல்லாமல் சுந்தரி அங்கு குதறிப் போட்டு எடுத்தாள். இவ்வளவு ஆன பிறகு ஒருவன் உடனே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவான். அல்லது தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை விடுவான். நானும் அதெல்லாம் யோசித்தேன். ஆனால் அதெல்லாவற்றையும் விட இன்னும் தீவிரமான முடிவு எடுத்தேன். சுந்தரி கழுத்தில் தாலி கட்டுகிறேன் என்று சொன்னேன். அப்படிச் செய்வதற்கு வசதிப்படவில்லை. மூண்று வருடங்கள் அவளுடன் இருந்தேன். எனக்கு வந்த சம்பாத்தியம் அனைத்தையும் அவளிடம் கொடுத்து அவள் பொங்கி போடும் சாதத்தை விழுங்கினேன். காதலுக்காகவும் ஒரு பெண்ணுக்காகவும் எல்லாவற்றையும் தியாகம் புரிபவன் அல்லது நல்லது கெட்டது சுரணையற்ற அறிவு மதித்தவன் என்றெல்லாம் நான் என்னைப் பற்றி நினைத்துச் சொல்லவில்லை. நடுநடுவில் சந்தோஷமாகக் கூட இருந்தேன். அப்போது பிரபாகர் நுழைந்தான். பெரிய கூச்சல் குழப்பம் இல்லாமல் ஆறு மாத காலத்தில் அவன் சுந்தரியின் அறையில் குடியேற மீண்டும் நான் என் உறவுகாரர்கள் மத்தியில் என்னைப் பொருத்திக் கொண்டேன். எனக்கு இப்போது இரண்டாவது பெண் பிறந்து நான்கு வாரங்கள் ஆகின்றன.

சுந்தரியின் அழுகை தானாக ஓய்ந்தது. நான் எழுந்தேன். அவள் கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டு சற்றுத் திகிலுடன், 'எங்கே போறீங்க ? ' என்று கேட்டாள்.

'ஏன், என்ன ? '

'ஒண்ணுமே சொல்லாமலேயே போறீங்களே ? '

நான் அறையைச் சுற்றிப் பார்த்தேன். முன்பிருந்த பாத்திரங்களில் பாதிதான் பாக்கியிருந்தது. பக்கெட் மாறியிருந்தது. சுருணைத் துணியாகத் தொங்கியது என்னுடைய ஒரு ஜிப்பா. மிகவும் உறுதியான துணியாக இருக்க வேண்டும்.

'டா கொண்டு வரச் சொல்லட்டுமா ? ' என்று கேட்டாள்.

'ஏன், இங்கே கொதிக்க வைக்க முடியாதா ? '

'டாத் தூள், பாலு, சர்க்கரை எல்லாமே கடன் வாங்கணும். அதுக்கு ஒரேயடியா டாயையே கடனா வாங்கிடலாம். '

'இவ்வளவு சாமர்த்தியக்காரியாக இருந்து கோட்டை விட்டுட்டியே ? எனக்கு பிரபாகர் பத்தி ரொம்ப தெரியாது. கிரவுன் டாக்கீஸ் பக்கத்து சந்துன்னு எப்பவோ சொன்னான். நீ போய்ப் பாத்தியா ? '

'போனேன். அங்கே அவன் அம்மாதான் இருக்கா. அவ பெரிய பஜாரி. அவ பையன் பணமெல்லாம் பிடுங்கிட்டேன்னு கத்தி அவர்களம் செய்து போலீசெல்லாம் வரவழைச்சிட்டா. ஆனா அந்தப் படுபாவி எங்கே போனான்னே தெரியலே. '

'நான் மட்டும் என்ன பண்ண முடியும் ? எனக்கு அந்த ஆளை அதிகம் தெரியாது. '

'உங்க சீஃப் மேக்கப்மேனுக்கு உறவுன்னு முன்னே சொன்னீங்களே ? '

'என்ன, என்ன ? '

'நரசிம்மராவ் சாருக்கு உறவுன்னு நீங்கதான் சொன்னீங்க. '

'நானா சொன்னேன் ? '

'ஆமாங்க. '

எனக்கும் அது நிழல் போல நினைவில் தோன்றியது. நரசிம்மராவ் ஒரு முறை அவன் ஊருக்கு போய் ஒரு பெண்ணை அழைத்து வந்தான். சில நாட்களுக்கு பிறகு தான் தெரிந்தது, அவள் ஏற்கேனவே இன்னொருத்தருடைய மனைவி என்று. இருவர் போக்கிலும் உள்ள ஒற்றுமைக்காகத்தான் நரசிம்மராவுடைய தம்பி பிரபாகர் என்று நான் கூறியிருக்க வேண்டும்.

'நாலு வருஷம் அவன்கூட வாழ்ந்திருக்கே, அவன் மனுஷாளுங்க யாரு என்னன்னு தெரிஞ்சு வச்சுக்க கூடாதா ? '

நான் முற்றிலும் தளர்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து அவள்தான் என்னைப் பற்றி எவ்வளவு தகவல்கள் தெரிந்து வைத்திருந்தாள் ' இதெல்லாம் அவள் என் வீட்டு முன்னால் அமர்க்களம் செய்த போதும் பின்னர் போலீஸ் ஸ்டேஷனிலும் விசேஷமாக பயன்பட்டன. நான் எப்படி நாக்கைப் பிடுங்கிச் சாகவில்லை என்று எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பிரபாகர் அவளை வைத்து காப்பாற்றவில்லை என்பதோடு விஷயம் முடியவில்லை. அவளிடமிருந்த ஓரிரண்டு தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரம், பட்டுப் புடவை எல்லாவற்றையும் காசாக்கிக் கொண்டு செலவழித்திருக்கிறான். அவன் குடிக்க மாட்டான். சுந்தரி என்னை அவளுடைய வாழ்க்கையிலிருந்து விலக்கிவிட்டு அவனைத் தேர்ந்தெடுத்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்கச் சுயநினைவுடனேயே அவளைச் சுரண்டியிருக்கிறான்.

நான் மறுபடியும் எழுந்து நின்றேன். சாட்டை போன்ற நாக்கு ஒன்றை நம்பியே இவ்வளவு நாட்கள் இவ்வளவு பெரிய நகரில் காலம் தள்ளியவள் இப்போது வழுவிழந்து துவண்டு போய் நிற்கிறாள். நான் அவளோடு வாழ்க்கை நடத்திய போதும் அவளுடைய குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் என்று யாரும் வந்தது கிடையாது. அவளுடைய ஊர்க்காரர்கள் யாராவது அவளை எப்படி எப்படியோ விசாரித்துக் கொண்டு வந்து சேருவார்கள். ஒருவேளை அல்லது இருவேளைச் சாப்பாட்டோடு சரி, சுந்தரி அவர்களைக் கிளப்பி விடுவாள். பிரபாகரோடு இருந்த போது, ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புவதற்கில்லை. நான் என்னிடம் இருந்ததெல்லாம் கப்பம் போல் அவள் காலடியில் சேர்த்திருக்க, அவன் மட்டும் அவளிடமே சூறையாடியிருக்கிறான். கில்லாடி தான். அவனை அதிகம் பழக்கம் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை.

'சுந்தரி, இப்போ முன்னைப் போல எதுவுமே இல்லை. நானே முன்னைப் போல இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. நான் கட்டியிருக்கிறவள் கிட்டே உன் ஆர்ப்பாட்டம், அட்டகாசம் ஒண்ணும் பலிக்காது. '

'அப்படியெல்லாம் நினைக்கலேங்க. உங்க வீட்டுப் பக்கமே நான் வரவே இல்லியே. அதுலேயிருந்து தெரியலீங்களா என் மனசு ? '

'அவனுக்கு வந்த கடுதாசு ஏதாவது இருக்கா ? அவன் வேலை பார்த்த இடத்திலேர்ந்து கொடுத்த சம்பளக் கவர் பட்டியல் ஏதாவது இருக்குமே ? '

'ஒரு தகரப் பெட்டியிலே மூணு நாலு கிழிஞ்ச துணிதாங்க இருக்கு. ஒரு போட்டோவும், சாமிபடமும் இருக்கு. '

'அது இரண்டையும் கொண்டா. '

அந்தப் புகைப்படத்தைக் கொண்டு எதுவும் ஊகிக்க முடியவில்லை. படத்திலிருப்பது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியாதபடி வெளுத்துப் போயிருந்தது. சாமி படம் நரசிம்மருடையது. அளவுக்கு மீறி வாயைத் திறந்தபடி பிரகலாத ரட்சகன் காட்சியளித்தார். பானக நரசிம்மன் என்று பெயர். குண்டூர் அருகே மங்களகிரி என்ற ஆந்திரப் பிரதேச மலை மீதிருக்கும் அந்த நரசிம்ம விக்கிரகத்தின் வாயில் எந்த அளவுப் பாத்திரத்திலிருந்தும் பானகம் தயாரித்து வாயில் ஊற்றினாலும் பாதிப் பாத்திரம் முடியும் போது வாய் நிரம்பிவிடும். பிரபாகர் விஜயவாடா - குண்டூர் பக்கத்து ஆளாக இருக்க வேண்டும்.

'சரி, விசாரிச்சுப் பார்க்கிறேன், ' என்று சொல்லி விட்டுத் திரும்பினேன்.

'ஒரு நிமிஷங்க, ' என்றாள்.

'நீ ரொம்ப 'ங்க ' போடறது எனக்கு என்னவோ போல் இருக்கு. '

'அது இல்லீங்க... '

'சரி, சீக்கிரம் சொல்லு. '

'நிலைமை ரொம்ப மோசம். சீக்கிரமா அந்த மனுஷனைப் பார்த்து என்ன ஏதுன்னு கேட்க முடியலேன்னா, நான் மறுபடியும் ஸ்டூடியோ பக்கம்தான் போக வேண்டியிருக்கும். '

நான் கொடூரமாக ஏதாவது பேசி விடுவேனோ என்று அவள் கண்களில் தெரிந்த பயம் எனக்கு அளவிட முடியாத வேதனை அளித்தது. திரும்பத் திரும்ப அந்த போலீஸ் ஸ்டேஷன் தோற்றம் கண் முன் வந்தது.

என் சட்டைப் பையிலிருந்து ஒரு பழைய கவரை எடுத்தேன். நான் பணத்தைக் காகிதக் கவர்களில் வைத்துக் கொள்வதுதான் வழக்கம். சுந்தரி அசையாமல் நின்று கொண்டிருந்தாள்.

முப்பது ரூபாய் இருந்தது. அவளிடம் நீட்டினேன். வாங்கிக் கொண்டாள்.

'இதை இப்போ வச்சுக்க. நான் அப்பப்போ வந்து போறேன். '

நான் இதை எந்தப் பொருளில் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை என்று அவள் முகம் காட்டியது.

அன்று மாலை நான் மீண்டும் அவள் அறைக்குப் போனபோது அங்கு பேச்சுக் குரல் கேட்டது. பிரபாகர் திரும்பி வந்துவிட்டான். நான் பாதி மாடிப்படியிலிருந்து இறங்கி வந்து விட்டேன். எனக்கும் சுந்தரிக்கும் உறவு பாக்கி இருந்ததோ இல்லையோ, பிரபாகருக்கு நான் எந்த ஜென்மத்திலோ கடன் பட்டிருக்க வேண்டும். சுந்தரி அறையிலிருந்து சமையல் வாசனை தடபுடலாக வந்து கொண்டிருந்தது.

*****

தரிசனம் - ந. பிச்சமூர்த்தி

ந.பிச்சமூர்த்தி

தரிசனம்

     நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். புஸ்தகம் முடிந்துவிட்டது. வாணி தரிசனம் முடிந்ததும் பிருகிருதி தேவியைக் காண வெளியே சென்றேன். ஆகாயம் ஓர் எல்லையற்ற மைக் கூண்டு. விளையாட்டுத்தனமாய் ஏதோ தெய்வீகக் குழந்தை அதைக் கவிழ்த்து விட்டது போலும்! ஒரே இருள் வெள்ளம்.

pichchamurthy2மரங்களெல்லாம் விண்ணைத் தாங்கும் கறுப்புத் தூண்கள். மின்னும் பொழுதெல்லாம் வானம் மூடிமூடித் திறந்தது. கண் சிமிட்டிற்று. நான் கண்ணாமூச்சி விளையாடினேனோ அல்லது மின்னலா?

      திரும்பி வீட்டிற்குள் வந்து பாயைப் போட்டேன். துயில் திரை கண்களின் மேல் படர்ந்தது, ஆமைக் கால்களைப் போல், என் புலன்கள் சுருங்கி உறங்க ஆரம்பித்தன. மனத்தின் சுடர்விழி மட்டும் முழுதும் மூடவில்லை. வௌவால் முகத்தினருகில் அடித்தது. கண் திறந்தேன். எதிரில் ஆகாயமளாவி நின்றாள் சிவசக்தி. தலைமயிர் வெற்றிக் கொடிபோல் பறந்தது. கண்ணினின்று கொஞ்சும் அழகு. கையில் கொடி மின்னலைப் பழிக்கும் வைரவாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கலகலவென்ற சிரிப்பு உலகெங்கும் பரவியது. உடல் மயிர்க் கூச்செறிந்தது.

     சிறிது நேரம் கழிந்தது. அலையோய்ந்த கடல்போல் சற்று நெஞ்சம் ஆறுதலடைந்தது. போர்வையை எடுத்தேன்; பளீரென்று ஒரு மின்னல் உலகை ஒளிரச் செய்தது. அவ்வொளிர் "சொக்கப்பனையில்" எதிரே கண்ணில் பட்டது. ஒரு மரம் - ஒரு வெறும் நெட்டைத் தென்னை! "என்ன ஆச்சர்யமென நினைத்தேன்.

***

 மழைத் தெய்வம்

     மறுபடியும் இன்றைய தினம் கொடும்பாவி கட்டி இழுத்தார்கள். ஆமாம், கொடும்பாவி என்று என்ன பெயர்? இருக்கட்டும். குடியானவர்கள் ஒரு கையில் ஒரு பிடி நெற்பயிரை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் கொடும்பாவியைத் தெருவழியே இழுத்துச் சென்று, கடைக்குக் கடை நின்று, கொடும்பாவியின் புருஷன் சூரியனைத் திட்டி, மாரில் அடித்துக் கொண்டு வைத்த ஒப்பாரியைக் கேட்டபொழுது (நடிப்பு ஒப்பாரியாக இருந்த பொழுதும் கூட) என் உள்ளம் உருகிப் போய்விட்டது. பாவம்! மண்மீது மழையில்லை என்றால், வயிற்றில் மண்தானே! எனவே "மானம் பார்த்த" சீமையென்று சில இடங்களை ஏளனம் செய்தது தப்பல்லவா? ஆறு, குளங்கள் உள்ள ஊர்க்காரர்களுக்குக் கூடத்தான் பார்க்க வேண்டும். இரண்டு மானத்தையும் தான் - ஒரு 'மான'த்தை வயிற்றுக்காகவும் மற்றொன்றை ஜீவனுடைய தீராத பசியாகிய கௌரவத்திற்காகவும்...

     மழைக்குக் கொடும்பாவி இடத்தில் ஏன் அவ்வளவு பயம்? ஆனால் பயமென்று எப்படிச் சொல்லலாம்? அனுதாபமாயிருக்கலாம்; அல்லது குடியானவர்கள் சொல்வதுபோல் சூரியனுடைய காதல் கட்டழகியாகிய கொடும்பாவியின் மீதுள்ள போட்டிப் பிரேமையாயிருக்கலாம்.

     எப்படி இருந்தாலென்ன? இதோ மழை வந்துவிட்டது. ஜில்லென்று தாமரைத் தண்டுகள் தொடுவதுபோல் மேலே காற்று வீசுகிறது. வானம் மைக்காரியாகி விட்டது. நக்ஷத்திரங்களெல்லாம் வழி தெரியாமல் விழுந்து விட்டன. அடடா! வானில் என்ன கத்தி விளையாட்டு! என்ன இடி முழக்கம்! கொல்லைப் புறத்திலிருந்து தவளைகள் தங்கள் தெய்வத்தை வரவேற்பதற்காக முறை வைத்துப் பாட ஆரம்பித்து விட்டன. எவ்வளவு தினிசுகள்! - வேத பாராயணம், துடுக்குப் பேச்சு, எந்திரம் அறைத்தல், கிஞ்சிரா, மிருதங்கத்தின் ஒலி, ஒற்றைக் குரல், அதிகாரக் குரல், அடடா! வர்ணிக்க வார்த்தை எனக்குத் தெரிந்தாலல்லவா!...

*******

புலியின் வரிகள்

     ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன. புலிக்கு வரிகள் இல்லை. பழம் போன்ற வர்ணம் மட்டும் உடலில் பரவி இருந்தது.

     காட்டு வழியே வரிக்கோடுகள் நடந்து வந்து கொண்டிருந்தன. ஆதி முதற்கொண்டு வரிகள் தனித்து ஓரியாக இருந்தன. தனிமையின் தன்மையில் தம்மையே உணர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. பொருள்கள் மோதினால்தானே, இணைந்தால்தானே உணர்வு பிறக்கும், பொறி பறக்கும்? குகையை விட்டு வரும் அரிமாவைப் போல நான் என்னும் நினைப்பு, பிடரி மயிரைச் சிலிர்த்துப் பெருமிதம் அடைய முடியும்? ஆனால் வரிகள் ஒன்றியாகப் பயனற்றிருந்தன. தவிப்பை முறித்தெறியப் பாதை வழியே அவை நடந்து வந்து கொண்டிருந்தன.

     'என்ன அழகிய மூங்கில் கொத்து! என்ன அழகிய புலி!' என்று, ஒரு நிமிஷம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே விர்ரென்று விஷ அம்பு ஒன்று புலி மேல் பாய்ந்தது. காடு நடுங்க உறுமிக் கொண்டே புலி இறந்தது. புலிதான் போய்விட்டதே என்ற தைரியத்தில், கோடாலிக்காரன் விரைந்து வந்து மூங்கில்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து வீடுகட்ட எடுத்துப் போய்விட்டான். மிஞ்சி இருந்த இரண்டு மூங்கில்கள் உராய்ந்து கொண்டே துயரத்தால் ஓலமிட்டன. புலிக்கு நாம் துணை, நமக்குப் புலி துணை என்று நினைத்தோமே, ஏமாந்து விட்டோ மே என்று புலம்பின.

     பயந்து போய் வரிக்கோடுகள் மேலே நடந்து சென்றன. "ஓரியாக இருந்தால் இன்பம் இல்லை" என்றது ஒரு கோடு.

     "இரண்டாக இருந்தால் மூன்றாவது எதிரி வருகிறான்" என்றது மற்றொரு வரி.

     "பின் என்ன செய்யலாம்?"

     "ஒன்றியாக இல்லாமல் இரண்டாகவும் இல்லாமல் ஒன்றிவிட்டால் இன்பம் உண்டு. பலவாக இருப்பது ஒன்றிவிட்டாலும் பகை தெரியாது. பெருமிதம் மிஞ்சும்."

     "அதுதான் சரி" என்று வரிகள் முடிவு செய்தன.

     கொஞ்ச தூரத்துக்கும் அப்பால் மற்றொரு மூங்கில் புதரும் புலியும் தெரிந்தன. புலியைப் பார்த்த உடனேயே வரிகள் புலியின் தோலுடன் தனித்தனியாக ஒன்றி, கறுப்புப் பட்டுப்போல் மின்னி மகிழ்ந்தன. வெயிலும் நிழலும் கலந்த மூங்கில் கொத்தும் வரிப்புலியும் எல்லாம் ஒன்றாகிவிட்டன. எது எதுவென்றே தெரியவில்லை. 

     கோடாலிக்காரன் வரும் வாசனையை உணர்ந்த புலி பயங்கரமாக உறுமிற்று. உறுமல் அலையலையாகப் பரவி வேடனை எச்சரித்தது. எழுந்து பார்த்தான். புலி இருக்கும் இடம் தெரியவில்லை. வெயிலும் மூங்கில்களின் நிழல்களும் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. 'உருவத்தைப் பார்த்தால் இலக்கு வைக்கலாம். குரலைக் குறித்து எப்படி இலக்கு வைக்க முடியும்?' என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே போனான். கோடாலிக்காரன் புலி உறுமுகிறதென்று போய்விட்டான்.

     கோடாலிக்காரனும் வேடனும் திரும்பிச் சென்றதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மூங்கில்களுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. தங்களுடைய உடல் புலியைப் போன்ற வண்ணம் கொண்டதைக் காண வியப்பாக இருந்தது.

     வரி வேங்கை ஆனந்தமாய்த் தூங்கக் கொட்டாவி விட்டது. என்ன பயங்கரமான குகைவாய், கோரப் பற்கள்!

கலைமகள் - ஜூன் 1960

*****

அடங்குதல் - வண்ணதாசன்

வண்ணதாசன்

'எங்கேயோ கிடக்கிற ஊர்லேருந்து வந்து இங்கே டெண்ட் அடிச்சிருக்கோம். இதுதான் நிரந்தரம்னாகூட சரி. நாம இங்கேயே தானே இருக்கப் போறோம்னா எல்லாத்தையும் இங்கேயே முடிச்சிரலாம். '

'அது சரி '

'ஒரு கல்லறைத் திருநாள் அது இதுண்ணு வந்தால் வெள்ளை அடிச்சு ரெண்டு மெழுகுதிரி கொளுத்தி வச்சி ஜபம் பண்ணனும்னு நினைச்சால் கூட வரதுக்கு ஏலாது. vannadhasan அடுத்த வருஷம் எங்கெங்கே தூக்கி அடிப்பானோ. நம்ம அதிர்ஷ்டம் தெரிஞ்சதுதான். இந்த ஊர் வேணும்னா எதிர்த்த ஊர்தான் கிடைக்கும் '

'அதெல்லாம் இருக்கு '

'அப்பா பக்கத்திலே என்னையும் கொண்டு போய் வச்சிருய்யா வச்சிருய்யாண்ணுதான் வந்ததிலிருந்தே சொல்லிக்கிட்டிருக்கா. சும்மா இருக்கிற மனுஷி திடார்னு இப்படித் திலுப்பிச் சொல்ல மாட்டா இல்ல, என்னமோ மனசில தோணப் போயித்தானே எல்லோரையும் பண்டியலுக்கு வரச்சொல்லி எழுதிப் போட்டிருக்கா '

'சிலபேருக்கு அப்படித் தோணும் ஸார். எங்க ஆச்சி கூட இந்த மாதிரித்தான் ஒரு தட.... '

'பின்னே....அற்புதம் வந்தாச்சு. வடக்கேயிருந்து க்ரிஸ்மசுக்கு பேபி, பேபி மாப்பிள்ளை எல்லாம் வந்துட்டாங்க. உடம்புக்குப் பெலமில்லாதவ, பேசாமல் நீ பாட்டுக்கு ஒரு இடத்துல இருண்ணு எல்லோரும் சொல்லிப் பார்த்தோம். கேட்க மாட்டேண்ணுட்டா. மட்டன் எடுக்கட்டா, கோழி எடுக்கட்டாண்ணு நியூ இயர் வரை ஒரே எடுகிடத்துண்ணு கிடந்தது ஊரில. அப்படியெல்லாம் தைரியமா இருந்தவ, எங்ககூடப் புறப்பட்டு வந்த இடத்திலே இப்படித் திடார்னு கிடையில விழுந்துட்டா நம்ம நேரத்துக்கு '

'நீங்க என்ன ஸார் நேரம் கீரம்ணுட்டு '

'பின்னே பத்துநாள் செல்லுமா 'ங் கிறதே யோசனையா இருக்கு. பத்து நாளோ, இருவது நாளோ, அவ ஆசைப்படி ஊருக்குக் கொண்டு போயிர வேண்டியது தான். இல்லாட்டா நாளையும் பின்னேயும் மனசில அரிச்சிக்கிட்டே இருக்கும். '

'அது சரிதான். '

* * *

'டாக்டர், நான் அவருக்கு கீழே வேலை பார்க்கிறேன் எப்படி இருக்கிறாங்க அந்த அம்மா ? அந்தரங்கமா, உங்க அபிப்பிராயம் என்னன்ணு தெரிஞ்சுக்கலாம்ணுதான் உங்ககிட்டே வந்தேன். '

'நீங்க பாருங்க ஏற்கனவே ஒரு தடவை ஆபரேஷன் பண்ணிய நோயாளி உடம்பு. அதும், நான் சொல்லணும், இந்த ஒன்றரை வருஷம் ஓடியதை நல்ல விஷயம்னு. வலது பக்கத்தில் மறுபடியும் கட்டி வளர்ந்துட்டுது ஒரு சின்ன பந்து போல, சிறியது ஒரு கால் பந்தைவிட, பெரியது ஒரு ஆரஞ்சுப் பழத்தைவிட, இதே நிலையில் நோயாளி ஒரு பத்து நாள் தள்ளலாம். அதிக பட்சம் இரண்டு வாரங்கள். அதற்கு மேல் இல்லை. ஆனால் எப்போது என்றைக்குண்ணு சொல்ல முடியாது, யாராலும் '

'அதுக்கில்லை டாக்டர். ஸாரோட அம்மா, சொந்த ஊர்லதான் அடக்கம் பண்ணப் படணும்னு பிரியப்படுதாங்க. இப்பவே கொண்டு போயிரலாமா. இல்லை. கொஞ்சநாள் வச்சிருக்கலாமா ? '

'நீங்க பாருங்க, நல்லது இப்ப கொண்டு போறதே, இந்த வியாதிக்காரங்க கடைசி வரை பேசிக்கிட்டுதான் இருப்பாங்க. பிரக்ஞை இருக்கலாம் கடைசி வரை கூட, நல்லது இப்போது கொண்டு போறதே '

'நன்றி. டாக்டர் '

'டோக்கன் நம்பர் அறுபத்தி மூன்று. அறுபத்தி மூன்று '

* * *

'செலவு என்னசார் செலவு. நம்ம தரித்திரம் என்னைக்கும் விடியப் போறதில்லை. அதுக்காக அம்மா விருப்பப்பட்டுச் சொல்றதைத் தள்ளி விட முடியுமா ? யார் யாருக்கோ செலவு செய்கிறோம். மச்சினன்மார் எல்லோரும் கால்சட்டை ஜோபிக்குள்ளே கையை பூத்துக் கிட்டு நட்டமா நிண்ணானுங்க. இழுத்துக்கிட்டு கிடந்தது அவனுகளுக்குத்தான் அம்மா, எனக்கு மாமியார்தான். எப்படியும் போகட்டும்னா விட்டுட்டோம் ? செயினை அடகு வச்சாவது செலவழிச்சுத்தான் பார்த்தோம். போய்ச் சேர்ந்து ஒரு வருஷம் ஆச்சு. இந்த நன்னி விசுவாசம் கெட்ட பயலுக செயினுக்குப் பணம் கட்டி திரும்புவானுகண்ணா செய்தோம் இல்லை. அண்ணைக்கு மாமியார்க்காரிக்குச் செய்ததை இன்றைக்கு பெத்த அம்மைக்குச் செய்ய மாட்டானா ? '

'அதுக்கில்லை ஸார். கையில வசதியில்லாத நேரத்தில டாக்ஸிக்கே ஆயிரம் இரண்டாயிரம்னு எதுக்குக் கொடுக்கணும்னுதான் யோசனை. அதுக்குப் பதிலா இப்பவே கொண்டுட்டுப் போயிட்டா என்ன ? டாக்டர் சொன்ன கணக்குக்கும் கிட்டமுட்ட இன்னும் ஒருவார டயம் இருக்கு '

'அதப்படிப்பா முடியும். இப்ப காரைக் கூட்டிக்கிட்டு வந்து, நீ சொல்லுற மாதிரியே, வா, வண்டியிலே ஏறுண்ணு பார வண்டியிலே பனங்கட்டை ஏத்துற மாதிரி நம்ம இஷ்டத்துக்கு ஏத்தியிற முடியுமா ? அது நல்லா இருக்குமா ? அவ என்ன நினைப்பா ? சரி நமக்கு மணியடிச்சுட்டான் போல இருக்கு. அதான் இந்த பய ஊர்ல கொண்டித் தள்ளிரலாம்னு பார்த்தான் 'னு நினைச்சிரப் படாதுல்லா. நம்மால ஏண்ட மட்டுக்கும் கடேசிவரை பாப்பம். நல்லது கெட்டதுண்ணு ஒரு முடிவு ஆனப்புறம் கொண்டு போயிக்கிடலாம். ஆயிரம் ஐநூறுண்ணு கணக்குப் பார்க்கிற விஷயமா இது எனக்குப் படலை. '

* * *

'வீட்டுப் பொம்பிளை கிட்டே என்றைக்கு யோசனை கேட்டாரு, இன்றைக்கு கேட்க. அப்படிக் கேட்டாத்தான் எம்புட்டோ இதுக்குள்ளே குடும்பம் முன்னிலைக்கு வந்திருக்குமே. முன்னே பின்னே யோசிக்காம இப்படிச் சொல்லிக் கிட்டிருக்கிற மனுஷனை என்ன பண்ண, கட்டி கட்டியா கையிலே கழுத்திலே கிடந்தாலாவது வித்துச் செலவழிக்கலாம். ஏற்கனவே கசத்திலே தள்ளுனது மாதிரி மூச்சு முட்டிக்கிட்டு நிக்கேன். உங்களை மாதிரி நாலு ஆபீஸ் ஆளாச் சேர்ந்து ஒரு டாக்ஸியை பிடிச்சு வாசல்ல கொண்டாந்து நிறுத்துங்க. நல்லா இருக்கும்போதே ஊர்ல கொண்டிச் சேர்த்திருவோம். '

'இல்லீங்கம்மா, சாரு அப்படிச் சொல்லும்போது அதுவும் சரியாத்தானே படுது. பெரியம்மா விருப்பம் அப்படியிருக்கும்போது என்ன செய்கிறதுண்ணு எஙளுக்குத் தெரியலை. '

'அம்பாரியிலே போகணும்னு தான் தோணுது. அங்குசத்துக்குக்கூட வழியில்லைண்ணா என்ன செய்யுறது ? எனக்கும் என்ன வல்லா வல்லடியா அவுங்களை ஊர்ல கொண்டித் தள்ளிரனும்ணா ஆசை இல்லையா '

'இங்கேயே வச்சுக்கலாம்னாலும் சங்கடமாப் படுது சாருக்கு '

'அப்ப சங்கடப்பட்டுக்கிட்டு இருக்க வேண்டியது தான். ஒண்ணு முன்னே போகணும். இல்லே பின்னே போகனும். நிண்ண இடத்திலேயே காலைத் தேய்ச்சுக் கிட்டு இருந்தா எப்படி ? பொம்பிளை சொல்றதை சொல்லியாச்சு. இனிமே உங்கபாடு. உங்க ஸார் பாடு ' '

'சாமோட அப்பா வந்து என்னை மூணுதடவை ஒரு பெரிய வீட்டுக்கு வா வாண்ணு கூப்பிட்டாரு. நான் என் பிள்ளைங்களை விட்டுட்டு வரமாட்டேண்ணு சொல்லிட்டேன் '

--இது எல்லாம் கடேசீல பேசுகிற பேச்சுத் தான்.

'அதே சாமியார்தான் எம் பக்கத்தில இருந்து ஜெபம் பண்ணிட்டுப் போறாரு. கோயில்ல எங்க கல்யாணத்துக்கு நின்னாரே அதே சாமியார்தான் '

--இனி மேக்கொண்டு அதிக நேரம் செல்லாது. உள்ளூர் போதகரைக் கூப்பிட்டு ஜெபம் பண்ண வரச்சொல்லி தாக்கல் கொடுத்திரலாம்.

'சேசுவே, உமக்கு எங்கே சித்தமோ அங்கே என்னைக் கொண்டு செல்லும்னு வேண்டிக்குங்க '

'தேவ பிதா எந்தன் மேய்ப்பனல்லோ '

'நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன் '

'மோசே வாத்தியார்கிட்டே தான் பொறுப்பை ஒப்படைச்சிருக்கு. இந்த ஊர் ஆளுங்கிறதாலே. ஒரு ஏற்பாடு செய்ய, கொள்ளத் தோதுவா இருக்கும்லா '

'அதெல்லாம் சரிதான். அவரைக் கங்காணிக்கிறதுக்கு அவரு பொறத்தாலே யேல்லா இன்னோர் ஆள் போகணும் பெட்டி செய்யப் போறேன் சாமிண்ணுட்டு அன்னை சா மில் மரக்கடைக்கு எதுக்க நிக்க இருக்கிற சாராயக் கடையில் இல்லா பட்டரையைப் போட்டிருவாரு. '

'வண்டிக்குச் சொல்லியாச்சா. கோயில் வண்டியா, முனிசிபாலிட்டி வண்டியான்னு பார்த்துக்கிடுங்க. ரெண்டுக்கும் துட்டுதான். முனிசிபாலிட்டிக்காரனையாவது நாம நாலு அதட்டு அதட்டலாம். கோயில்ல வச்சதுதான் சட்டம். '

'எப்படியும் ராத்திரி வரைக்கும் ஆகும். நாலு பெட்ரோமாஸ் லைட்டுக்குச் சொல்லி வைக்கணும். '

'எதுக்கு ராத்திரியும் விடியக்காலமும் ஆகப்போகுது ? வார ஆட்கள் எல்லோரும் வந்தாச்சு, சாருக்கு அக்கா, தங்கச்சி அவங்க ஹஸ்பெண்ட் எல்லோரும், அதிகமாயிருக்குண்ணு தந்தி கொடுத்து, சனிக்கிழமையே வந்தாச்சு, நம்ம ஆபீஸ்காரங்களும் அநேகமா இருக்கோம் பிறகு என்ன ? '

'முதல்ல ஊருக்குக் கொண்டு கிட்டுப் போற மாதிரி லைட்டா ஒரு பேச்சு இருந்ததுல்லா நான் கூட எதுக்கும் இருக்கட்டும்ணு ஒரு டாசல் வேனுக்குச் சொல்லி வச்சேன். டிரைவர் தெரிஞ்ச பையன். ஓனருக்குத் தெரியவேண்டாம்ணு சொல்லி ஒரு பத்து அம்பது கூடுதலா அவன் கையில வச்சிட்டாப் போதும் '

'பாடியைக் கொண்டு போகனும்னாலே ஒட்டிக்கு ரெட்டிதான். இந்தா இந்த எட்டு மைலுக்கிள்ள இங்கன இருக்கிற ஊருக்கு நூத்தம்பது ரூபா கேட்கான். அதிலேயும் இந்தத் தொண்ணுத் தொண்ணு பத்தொம்பது வண்டி இருக்கானே, தாயோழி இதுதான் சமயம்னு கொம்புல ஏறுவான் ' '

'உயிர்த்தெழுதலின் நம்பிக்கைக்காகவே கர்த்தருக்குள் அமைதலாக நித்திரையடைந்திருக்கிற இந்த நல்ல அம்மாளின் மகனையும் மகள் மாரையும் அவர்தம் குடும்பத்தாரையும் தேவரீர் பேர் பேராக ஆசீர்வதித்து உம்முடைய வல்லமையாலும் மகிமையாலும் பேர் பேராக அவர்களுக்கு சகல சந்தோஷமும் சமாதானமும் உண்டாகும்படி கிருபை செய்யும் கர்த்தாவே '

* * *

'அந்தக் காலத்துல அதெல்லாம் சரி. பிறந்ததிலேர்ந்து மண்டையைப் போடுகிற வரை ஒரே ஊர்ல எல்லாம் நடந்தது. இப்பவும் அதே மாதிரிக் கொண்டு செல்லனும்னா முடியுமா. ஒரு பேச்சுக்குப் பார்த்தா, ஒண்ணாங்கிளாஸ் துவக்கம் காலேஜ் வரைக்கிலும் ஒரே இடத்தில நாம படிச்சோம், ஒம் பையன் எல்கேஜி இந்த ஊர்ல, யூகேஜி அடுத்த ஊர்ல படிப்பான். பொழைப்பு அப்படியாயிட்டுது. பொட்டியைத் தூக்குண்ணா தூக்கியிற வேண்டியதுதான். '

'....... '

'என்ன ஒண்ணுஞ் சொல்ல மாட்டேங்கிற. அப்பா பக்கத்துல கொண்டு போய் வையி வையிண்ணுதான் அம்மையுஞ் சொன்னா. சரி சரிண்ணுதான் சொன்னேன். என்ன ஆனாலும் தூக்கிப் போட்டுக் கிட்டு ஊருக்குப் போயிரணும்னுதான் தோணுச்சு...எங்கன கொண்டு போக ? கூட ரெண்டு பத்தி கட்டும் மொழுகு திரியும் வாங்கிக் கொளுத்தலாம்னா அதுக்கே யோசனையாப் போச்சு நேத்திக்கி '

'...... '

'ராப் பகலாக ஆபீஸில் கிடந்து சாகிறதுதான் மிச்சம். அவசரத்துக்கு செலவழிக்க கையில் முக்கால் துட்டு இல்லை. பேரு மாத்திரம் இருக்கு. நாக்கு வழிக்கக்கூட பிரயோசனமில்லாத பேரு '

'........ '

'கடைசியிலே யார்கிட்டேப் பொரட்டினோம்ணு நினைக்கே ? உரக் கடைக்காரர்கிட்டே தான். முன்ன பின்ன தெரியாது. பஜார்ல போகும் போது கடையில ஏறிட்டுப் பார்த்த பழக்கம்தான் வாங்கியாச்சு செலவழிச்சாச்சு. அசலூர் வந்து கடன் வாங்கினா என்ன, அம்மையை அடக்கம் பண்ணினா என்ன, ரெண்டும் ஒண்ணு தானே '

'.......... '

'என்ன ஒண்ணுஞ் சொல்ல மாட்டேங்க ? '

******

Mar 25, 2010

கோயிலுக்கு - விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்

இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஓர் ஒழுங்கமைவுக்குள்ளும் ஒழுங்கமைப்புக்குள்ளும் தான் இருந்து கொண்டிருக்கின்றன என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கின்றது. இயற்கை, சமூகம், வாழ்க்கை இப்படி எல்லாமே ஓர் ஒழுங்கமைவில் (system) அல்லது ஒழுங்கமைப்பில்தான் இருக்கின்றன. தன்னியல்பில் ஓர் ஒழுங்கு கொண்டிருப்பனவற்றை ஒழுங்கமைவு என்றும் ஏற்படுத்திவைத்திருக்கிற ஓர் ஒழுங்கு nambi24 கொண்டிருப்பனவற்றை ஒழுங்கமைப்பு என்றும் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். இரண்டுமே ஒழுங்கின் பிற்பட்டவைதான். அதாவது, சீரானதாகவும் சரியானதாகவும் அமைந்தவை/அமைக்கப்பட்டவை ஆகும். மனிதனும் தவிர்க்கமுடியாதபடிக்கு ஓர் ஒழுங்கமைப்புக்குள்ளேயே இருக்க வேண்டியவனாக இருக்கிறான். இப்படி ஒழுங்கமைவும் ஒழுங்கமைப்பும் கொண்டிருப்பதாலேயே பிரபஞ்சம் அழிந்துவிடாமல் இருக்கிறதென்றும் படுகிறது.

என் வாழ்வனுபவங்களிலிருந்தும் மனவுணர்வுகளிலிருந்தும் தெரிந்து கொண்டதுதான் இது. எப்பொழுதாவது இந்த ஒழுங்கமைவு குலையலாம்; இந்த ஒழுங்கமைப்பு சிதையலாம். மறுபடியும் அது தன்னைப்போல முன் நிலைக்கு வந்துவிடும்; பழையபடி வந்து தானாக வேண்டும். இல்லாதபோது அது அழிவில் கொண்டுபோய்விடும்.

பருவமழை பொய்த்தால் என்ன நடக்கும். கடல் கொந்தளித்தால் என்ன நேரும். தனுஸ்கோடி என்ற ஊரையே நம் காலத்தில்தான் கடல் கொண்டது. வானம் பார்த்த பூமியில் மழை தப்பும் காலம் ஜனங்கள் பஞ்சம் பிழைக்கப் பட்டணக்கரை போகிறார்கள். எப்பொழுதாவது பூகம்பம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிப் போவதைத் தினசரிகளில் பார்க்கையில் ஒரு கணம் துணுக்குறுகிறோம் தானே. ஜப்பான் மாதிரி நாடுகளில் சமயத்தில் எரிமலை வெடித்து அழிவு நேர்கையில் ஒரு கலக்கம் உண்டாகவில்லையா. புயலும் சூறாவளியும் பயமுறுத்தவில்லையா. இயற்கையின் ஒழுங்கமைவு குலைகையில் என்னென்ன இழப்புகள் சம்பவிக்கின்றன.

மனித வாழ்க்கையும் ஒரு ஒழுங்கமைவுக்குள் தான் இருக்கிறது. நேரத்துக்குப் பசிக்கிறது; தூக்கம் வருகிறது; தாகமெடுக்கிறது. குழந்தைகளாக இருக்கிறோம்; வளர்ந்து ஆளாகிறோம்; திருமணம் செய்து கொள்கிறோம்; வேலைக்குப் போகிறோம்; வீடு திரும்புகிறோம். சலிப்பு ஏற்படும் வேளையில் கேளிக்கைகளில் ஈடுபடுகிறோம். பொழுது போக்கென்று திரைப்படம் பார்க்கிறோம்; சீட்டாடுகிறோம்; குடிக்கிறோம்; மீண்டும் தினசரி வாழ்வுக்கே திரும்புகிறோம். இதெல்லாம் என்ன. இதுபோல ஒழுங்கமைப்புக்குள் இருக்கிறவர்கள்தாம் கோடானுகோடி எளியமக்களும். இந்த ஒழுங்கமைப்பை மீறுகிறவர்கள் என்ன ஆகிறார்கள். இயற்கையின் உற்பாதம் போலவே மனிதர்கள் அலைக்கழிவுகளுக்கு உள்ளாகிறார்கள். ஒழுங்கமைப்பை யாரும் தாண்டிப் போவது தாங்கமுடியாத துன்பத்தில்தான் முடிகிறது. காலங்காலமாக, யுகயுகமாக, எல்லா உயிர்களும் இதற்குள்தான் இருந்து வருகிறார்கள்.

system, ஓர் ஒழுங்கமைவுதான் வாழ்வு. வேறே வழியேயில்லை. இந்த ஒழுங்கமைப்புக்குள்தான் இருந்தாக வேண்டும். திருமணம் என்பது ஓர் ஒழுங்கமைப்பு. வேலை என்பது ஓர் ஒழுங்கமைப்பு; கல்வி என்பது ஓர் ஒழுங்கமைப்பு; குடும்பம் என்பது ஓர் ஒழுங்கமைப்பு; எல்லாமே ஓர் ஒழுங்கமைப்புதான்.

எப்படியும் ஜனங்கள் வீடுதான் திரும்புகிறார்கள்; எப்படியும் பிழைப்புக்கு ஒரு வழி செய்து கொள்கிறார்கள்; எப்படியும் நிம்மதியாக/சந்தோஷமாக வாழவே முற்படுகிறார்கள். சமூகத்தோடு பொருத்திக்கொள்கிறார்கள். இந்த மாதிரி ஒரு 'சிஸ்டத் 'துக்குள் இருக்கமுடியாதவர்கள் கதையும் நமக்குத் தெரியும்.

இதையெல்லாம் என் வாழ்விலிருந்தே கண்டுகொண்டேன். எங்கள் அப்பா வழமையான குடும்ப வாழ்க்கையிலிருந்து மீறிப்போய் இன்னொருப்பெண்ணை இணைத்துக் கொண்டு எங்களைக் கவனிக்காதிருந்த பத்து வருஷங்களை இன்று வரை எங்களால் சமனப்படுத்த முடியவில்லை. திரைப்படத்தில் நடிக்க என்று நாற்பது வருஷங்களுக்கு முன்பாக அவர்கள் சென்னைப் போனதில் நாங்கள் எங்கள் சொந்த ஊரான திருநெல்வேலியை முற்றிலுமாக இழந்துப் போனோம். முறையான கல்வி, நல்ல வேலை வாய்ப்பு, இனிய வாழ்க்கை எல்லாமே துண்டிக்கப்பட்டு விட்டன. எங்கள் அம்மாவின் வைராக்கியமும் தைரியமும் முயற்சியும் உழைப்பும் இல்லையென்றால் நாங்கள் உயிர்பிழைத்திருப்போமா என்பதே சந்தேகம் தான். இது எங்கள் அடிமனசில் இன்னும் இருந்துக் கொண்டிருக்கிறது.

எங்கள் பெரியம்மா மகன் அண்ணன் ஒருவர் நாம் தமிழர் இயக்கம், ஆதித்தனார் தொடர்பு என்று அழைந்ததில் அவர் வாழ்க்கை சென்னை பங்களாக்களில் வெள்ளையடிக்கும் தொழிலாளி என்று கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இவ்வளவுக்கும் அவர் நிரம்ப புத்திசாலி. நல்ல ரசனையுள்ளவர். சத்தியன் நடித்த 'நீங்கள் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கினீர்கள் ', மது நடித்த 'நதி ' இதுமாதிரி நல்ல மலையாளப் படங்களெல்லாம் அவருடன் தான் பார்த்தது. வயலார் பாடல்கள் அவர்மூலம் தான் அறிமுகம்.

உயர்நிலைப் பள்ளியில் படித்த என் நண்பர்கள் சிலபேர் இந்த ஒழுங்கமைப்பை கடந்து குடிகாரர்களாகவும் பேட்டை ரவுடிகளாகவும் சீரழிந்துப் போயிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க நேர்கிறது.

இவ்வளவு எதற்கு. என்னையே சொல்லலாம். பேசாமல் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுதி தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாகப் போயிருந்தால், செத்தால் கூட குடும்பத்துக்கு ஒரு லட்சம் கிடைக்கும். தராசு, நக்கிரன் பத்திரிக்கைகளில் பஞ்சம் பிழைப்பதற்காகப் போய் பார்த்து வந்த உதவியாசிரியர் வேலையிலேயே இருந்திருந்தால் சென்னை நகரப் பிரமுகர்களில் ஒருவனாகவே வாழ்ந்திருக்கலாம். முதலமைச்சரிலிருந்து தலைமைச் செயலகம் வரையிலும் செல்வாக்குச் செலுத்த முடியும். தமிழ், கவிதை என்றெல்லாம் எடாத எடுப்பெடுத்து இப்படியெல்லாம் அவஸ்தைப் படும்படி ஆகியிருக்காது.

யாரால் ஜி.நாகராஜன், மணிக்கண்ணன் மாதிரி வாழமுடியும். முடியாது/வேண்டாமென்றுதான் பத்து முதல் ஐந்து வரை ஏதோ ஒரு நிறுவனத்துக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். ஓய்ந்த நேரங்களில் இலக்கியம் செய்கிறார்கள். இது என்னது. 'சிஸ்டம் '. இலக்கியம் சோறு போடாது என்று தெரிந்து இந்த ஒழுங்கமைப்புக்குள் பத்திரமாக இருக்க விரும்பி இருந்துக் கொண்டு இருக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்க விழைவதே மனித இயல்பு. சஞ்சலம் இல்லாமல் வாழ ஆசைப்படுவதே முறையானது. 'சிஸ்டம் ' தான் சவுகரியம் என்றே தெரிவு செய்துக் கொண்டிருக்கிறது மனித மனம்/மனித சமூகம். இதில் யார் விதிவிலக்காக விரும்புவார்கள். விலகி வந்து வில்லங்கப்பட சம்மதிப்பார்கள்.

தமிழைப் பொருத்தவரையில் எல்லோருமே முப்பது வயசுக்குள்ளேயே இந்த ஒழுங்கமைப்பை ஏற்றுக்கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். எந்தக் கவிஞன் குடித்துவிட்டு வீடு திரும்பாமல் இருக்கிறான். எந்தக் கலகக்காரன் அண்டை வீட்டாரோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். ஏன் எல்லாக் கவிஞர்களும் சொந்தத்திலேயே கவிதைத் தொகுதி வெளியிட வேண்டும். எந்தக் கவிஞன் நூலக ஆணைக் குழுவில் கவிதை புஸ்தகங்களை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதிக் கேட்கிறான். எல்லாமே 'சிஸ்டம் 'தான், இல்லையா.

ஒரு வம்புக்குச் சிறுபத்திரிகை இலக்கியக் கூட்டத்தில் கலகம் செய்யலாம்; மூத்த எழுத்தாளர்களை நக்கலடிக்கலாம்; விடிய விடிய எங்கேயாவது செளகரியமாய் இருந்து குடிக்கலாம்; குடித்துவிட்டு நண்பர்களைச் சீண்டலாம். பின்னே, நவீனமாய் எழுதிப் பார்க்கலாம். மறுபடியும் இந்த 'சிஸ்டத் 'துக்குள் தான் வந்துவிட வேண்டும். வந்து இருந்தாக வேண்டும். இப்படித்தான் எல்லாருமே இருக்கிறோம்.

ஞானிகளும் கலைஞர்களும் புரட்சிக்காரர்களும் கலகக் காரர்களும் தவிர மற்ற எல்லோருமே ஏதோ ஓர் ஒழுங்கமைப்புக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த 'சிஸ்டம் ' சரியில்லை என்று சொல்லிக்கொண்டே இதில் இருந்து கொண்டிருக்கிறோம். இதன் வசதிகளையெல்லாம் எடுத்துக் கொள்கிறோம்; இந்த 'சிஸ்டத் 'திலேயே எவ்வளவு செளகரியமாக இருக்கமுடியுமோ அதைவிடவும் அதிகமாகவே செளகரியங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். என்ன ஒரு வினோத முரண் இது.

கொஞ்சம் வசதியுள்ளவர்கள் வேண்டுமானால் வேறொரு 'சிஸ்டத் 'தை ஏற்படுத்திக் கொள்ளலாம். 'சிஸ்டம் ' மாறலாம்/மாறுகிறது. எனில், அது இன்னொரு 'சிஸ்டமா 'கவே. எல்லோரும் ஒழுங்காகத்தான் வேலைக்குப் போகிறோம்; ஒழுங்காகத்தான் சாப்பிடுகிறோம்; ஒழுங்காகத்தான் தூங்குகிறோம்; எல்லாமே கச்சிதமான ஒழுங்கு. வேறென்ன செய்ய. வெகு சில பேர் 'சிஸ்டத் 'தை விட்டு வெளியே வருகிறார்கள்தாம், தன்னியல்பில். வெகுநுட்பமாகப் பார்த்தால் அவர்களும் ஒரு 'சிஸ்டம் ' வைத்திருப்பார்கள். 'சிஸ்டத் 'தில் இல்லாதவர்களுக்காகவே நமது சமூகம் சிறைச்சாலைகளையும் மனநல விடுதிகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. அங்கே போக யாருக்கு இஷ்டம்.

எனக்குத் தெரிந்து 'சிஸ்டத் 'தைவிட்டு வெளியே வந்தவர்கள் மூன்றே பேர்தாம். முதலாமவர், கவிஞர். கம்பதாசன். என்னுடைய பதினைந்து இருபது வயதுகளில், 'தினத்தந்தி 'யில், 'கவிஞர் கம்பதாசன் கைது குடிபோதையில் இருந்ததாக ' என்று அடிக்கடி வரும். தமிழ் சினிமா கவிஞர்களிலேயே முதன்முதலில் கார் வாங்கியவர். கடைசிக் காலத்தில் மயிலாப்பூர் போஸ்ட் ஆபிஸ் திண்டிலேயே வசித்து வந்தார். இரண்டாமவர், ஜி. நாகராஜன், மூன்றாமவர், நண்பர் உதக மண்டலம் மணிக்கண்ணன். ஊட்டி மார்க்கெட்டில் பெரிய புரொவிஷன் ஸ்டோர். ஒரே பையன். சின்ன வயதிலேயே குடித்தே செத்துப் போனான். இந்த மூன்று பேருமே அழிவைக் கட்டித்தழுவிக் கொண்டவர்களாகவே அறியப்படுகிறார்கள். இவர்கள் மூவருமே பின் நாள்களில்தான் அப்படியெல்லாம் தலைப்படுகிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்த 'சிஸ்டம் ', இதற்குள் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டியிருப்பது, இருக்க முடியாமல் போவது, இருப்பதால் கிடைப்பதும் இழப்பதும், இருக்கமுடியாமல் போவதில் நேர்வதும் வருவதும் என்னை விடாது துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த யோசனைகளைச் சொல்லத் தோன்றி எழுதியதென்றுதான் சொல்லவேண்டும், 'கோயிலுக்கு ' கவிதை.

கோயில் என்பதும் கோட்டை என்பதும்தான் தமிழ்வாழ்வில் உச்ச பட்சமான 'சிஸ்டம் '. கோட்டை அதிகாரம் சார்ந்தது என்றால், கோயில் ஆன்மிகம் சார்ந்தது. எனக்குக் கோட்டை தெரியாது, கோயில்தான் தெரியும் என்பதாலேயே கோயிலைக் குறியீடாக வைத்து எழுதியிருக்கிறேன். அதுவும் சின்னவயதில் எங்கள் அம்மாவுடன் நிறைய முறை போய் வந்த ஸ்ரீ நெல்லையப்பர் கோயில் சூழலையே விவரணங்கள் தகவல்களாக அடுக்கி, வழக்கம்போல ஒரு சொடுக்குச் சொடுக்கி முடித்திருப்பதாகச் சொல்லவேண்டும்.

ஒரு முக்கியமான விஷயம். ஒரு திட்டமிட்டு எல்லாம் இந்தக் கவிதையை எழுதவில்லை. என்னுடைய நல்ல கவிதைகள் எல்லாமே தன்போக்கில் வந்தவைதான். இதுவும் அப்படித் தன்னெழுச்சியாகத் தோன்றி வந்ததுதான். என் நல்ல கவிதைகளையெல்லாம் நான் எழுதியது என்று சொல்லத் தயக்கமாகவே இருக்கிறது. ஏதோ ஒரு தேவதை எனக்குள் மாயமாய் வந்து புகுந்து எழுதிவிட்டுப் போய்விடுகிறது என்றுதான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.

பிறகு ஒரு உண்மை. ஒரு நெடுங்கவிதையின் தொடக்கமாக எழுதிப் போட்டிருந்த சில வரிகள், அது எழுதப்பெறாமல் கிடந்ததில், திரும்பப் பார்க்கையில், இதன் முதல் பத்தி ஒரு தூண்டலைத் தந்தது. இதையே தனியே ஒரு கவிதையாக்கலாமே என்று தோன்றி எழுத முற்பட்டதில், திருநெல்வேலிக் கோயிலையே விவரணங்களாக விரித்துக் கொண்டு போனால் சரியாக இருக்குமென்று, அடுத்தடுத்த பத்திகளாக வளர்த்தி எழுதி முடித்ததுதான் இந்தக் கவிதை.

இந்தக் கவிதைக்காக நான் நன்றிசொல்ல வேண்டியது, ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலைக் கட்டிய பிற்காலப் பாண்டியர்களுள் ஒருவரான முழுதும் கண்ட ராம பாண்டியனுக்குத்தான். தமிழ்நாட்டிலேயே இது போல விஸ்தாரமான / முழுமையான கோயில் வேறெங்கும் பார்த்ததில்லை. ஒரு தனி அமைப்பில் கட்டியிருக்கிறான் பாண்டியன். இந்தக் கோயில் கட்டமைப்பின் பூர்ணத்துவம் இன்றும் எனக்குக் கவர்ச்சிகரமானதாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஒரு விழா நாளில் போய் வருகிற யாரும் இதை உணரலாம். கருத்தாக்கமாகவோ/கருத்தாக்கக் கவிதையாகவோ போய்விடாமல் இருப்பதற்குக் கோயில் விவரணங்கள் தகவல்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. விவரணங்கள், தகவல்களாலேயே கவிதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெய்வத்துக்கே ஓர் ஒழுங்கமைப்பு வேண்டியிருக்கிறது என்பதுதான் விஷயமே. அப்பொழுது தான் தேடிவரும் பக்தர்களுக்கு செளகரியம். இந்த ஒழுங்கமைப்புதான் எல்லாவற்றையும் இனிதாய்க் கொண்டு செலுத்துகிறது என்று சுட்டுகிறது கவிதை. என்றால் இந்த விஷயத்தைக் கோயிலை முன் வைத்துத்தான் சொல்லமுடியும் என்று இப்பொழுதும் தோன்றுகிறது. கடைசிவரிகளான 'தெய்வமும்/ஐதிகத்தில் வாழும் ' என்னளவில் முக்கியமான வரிகள். அவைதான் உள்ளபடியே கவிதைவரிகள்; அதுதான் கவிதையே. மற்றவரிகள் எல்லாம் விவரணங்களும் தகவல்களும் தானே. ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்வதற்காகக் கட்டமைத்த வரிகளாகவும் கவிதை வடிவம் சமைப்பதற்காகக் கட்டிய வரிகளாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த வரிகளின் வழியே, இதுபோல ஒழுங்கமைப்பு என்பது இருப்பை இருப்பாக மட்டுமே ஆக்கிவிடும் அபாயம் கொண்டது என்றும் சொல்வதுதான் என் உத்தேசம்.

ஊர்த்துவ தாண்டவம் ஆட இந்தக் கோயில் போதாது. பிக்ஷாடளராகப் புறப்பட்டுப் போக இது காணாது. கால பைரவராகக் கிளம்ப வெளியில்தான் வரவேண்டும். கோயிலுக்குள்ளிருந்து திரிபுரம் எரிக்க ஆகாது. பாகீரதியைத் தலையில் ஏந்திக்கொள்ள முடியாது. சோமனைச் சூடிக்கொள்ள இயலாது. திருவிளையாடல்கள் நிகழ்த்த முடியாது. இவற்றிற்கெல்லாம் வெளியேதான் வந்தாக வேண்டும். சிவனுக்குத் தெரியும், எங்கே எதைச் செய்ய வேண்டும் என்று; எப்பொழுது அதைச் செய்ய வேண்டும் என்பது. இங்கே அவன் இருந்து அருள்பாலிக்கலாம், தேடிவரும் பக்தர்களுக்கு. அதற்கு ஒரு நல்ல இடம் வேண்டும், அவ்வளவுதான். இவ்வளவும் வேண்டும் அருள்பாலிக்க என்பதுதான் கவனம் கொள்ள வேண்டியது. ஐதிகம் என்ற வடசொல் சம்பிரதாயம், நம்பிக்கை, வழிவழி வருவது, நிகழில் இருப்பது என்றெல்லாம் பொருள் குறிப்பதாகும்.

எங்கள் அம்மா வழிக் குலதெய்வமான குற்றாலம் பதினெட்டாம் படி கருப்பசாமிக்குப் பங்குனி உத்ரத்து அன்று கொடை நடக்கும். அன்றைக்குக் கூடுமான வரையில் போய்விடுவேன், ஊரில் இருந்தால். இதே போல என் மனைவி வழியில் கயத்தாற்றுப் பக்கமுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி குலதெய்வம். கொடை வரும்பொழுது கூடப் போவேன். திரும்பும்பொழுது மனசு ஒரு காரியமாய் சங்கடப்படும், இவர்களெல்லாம் முறையான பூஜையில்லாமல் இருக்க வேண்டியதிருக்கிறதே என்று. எப்பொழுதாவதுதான் போய் வழிபடும்படி இருக்கிறதே என்று. பெரிய கோயில்களுக்கு எந்த நாளிலும் போகலாம். இப்படி இருக்கிறது, 'சிஸ்டம் ' நிற்க.

* * *

இந்தக் கவிதை எந்த இலக்கியப் பத்திரிகையிலும் வரவில்லை. எதில் வெளியானது தெரியுமா. 'பருவகாலம் ' என்கிற பாலியல் இதழில். இது மட்டுமல்ல, 'துண்டுப் புலிகள் ' மாதிரி நல்ல கவிதைகளும் கூட. இலக்கியப் பத்திரிகைகளின் குழு மனப்பான்மையைப் பார்த்துப்பார்த்து வெறுத்துப்போன ஒரு மனநிலையில் அந்த 'செக்ஸ் ' பத்திரிகைக்குக் கொடுத்தேன் என்பதுதான் நிஜம்.

பின்னே, இந்தக் கவிதைக்கும் நண்பர் சி.மோகன் அவர்களுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. இந்தக் கவிதை கொண்ட என் மூன்றாவது கவிதைத் தொகுப்பு, 'உள்வாங்கும் உலகம் ' அவருடைய மிதிலா அச்சகத்தில்தான் தயாரானது என்பது ஒன்று. இரண்டு, படைப்பாளியே வெளியிட்டால் நூலக ஆணைக்குழு எடுத்துக்கொள்ளும் என்ற விதியை நம்பி ஆயிரம் பிரதிகள் போட்டு (தமிழில் கவிதையென்றால் ஐநூறே அதிகம்) 4 பக்க அமைப்புக் கருதி விட்டிருந்த வெற்றிடத்தைக் காரணம் காட்டி நூலகத்துறையில் நூலகத் துறையில் எடுக்காது விட்டதில், இவ்வளவு புஸ்தகங்களையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் மோகன் தான் முன் வந்து, 'நம் அச்சகத்திலேயே வையுங்கள் ' என்று ஆதரவு தந்ததோடு தன்னுடைய 'வயல் ' வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் விற்றும் தந்தார். மூன்றாவதுதான் நிரம்ப சுவாரஸ்யமானது. தொகுப்பு முடிந்திருந்த வேளையில், மோகனை ஏதோ ஒரு காரியமாகப் பார்க்க வந்திருந்த மதிப்புக்குரிய கவிஞர் பிரமிள், மேஜைமீது கிடந்த புஸ்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார்; இந்தக் கவிதை கண்ணில் பட, மோகனிடம் சொல்லியிருக்கிறார்: 'இதில் ஒரு பிழை விட்டிருக்கிறார், நம்பி. நான் இதுபோலத் தப்புப் பண்ணியிருந்தால் பெஞ்ச் மேல் ஏறி நிற்பேன். ' பிரமிள் பிழையென்று சொல்லியது, 'பட்டர் சொல்லும் மந்திரம் ' என்ற வரியிலுள்ள 'பட்டர் ' என்ற சொல்.

'சிவன் கோயில் அர்ச்சகர்களைக் 'குருக்கள் ' என்றுதானே சொல்லவேண்டும்; பட்டர் என்பது பெருமாள் கோயில் அர்ச்சகரையல்லவா குறிக்கும் ' என்றும் கேட்டிருக்கிறார். நான் 'மிதிலா 'வுக்குப் போனதும் மோகன் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார்.

நான் பதில் சொன்னேன்: 'திருநெல்வேலி ஊருக்கு மட்டும் இது பொருந்தாது, மோகன்; பிரமிளுக்குத் தெரியாது. திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்களின் உட்பிரிவினரான 'குருக்களையா ' என்பவர்களைக் குறிக்கும் என்பதாலோ என்னவோ அங்கே பட்டர் என்று சொல்கிறார்கள் போல. எங்கள் அப்பா பட்டர் என்றுதான் சொல்வார்கள். '

பயிலரங்கத்துக்கு இந்தக் கவிதையைத் தெரிவு செய்த பிறகு கூட என் மனைவியிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன், அவள் குடும்பம் கோயில் பணி சார்ந்தது என்பதால். கவிதையில் ஒரு சொல் எவ்வளவு முக்கியம் என்பதற்காகவே இதை இங்கே விரிவாகப் பேசியது.

எனில், நான் ஒரு பிழை விட்டிருந்தேன். நூலில், 'ஐந்து கால பூஜை ' என்றே இருக்கும். அது தவறு. 'ஆறு கால பூஜை ' என்பதே சரி. இதை மோகனிடம் எடுத்துக் காட்டியவர் பெரியநாயகி அச்சகம்/டி.கே.புக்ஸ் குமாரசாமி அண்ணாச்சி அவர்கள். பிறகு, என் தவறை உணர்ந்து கொண்டேன். கவிஞனுக்கு எவ்வளவு கவனம் வேண்டியிருக்கிறது.

இப்பொழுது இந்தக் கவிதையை நின்று நிதானமாகப் பார்க்கிறபொழுது ஒன்று புலனாகிறது. என் உத்தேசத்தையெல்லாம் மீறி கவிதை வேறொரு தளத்திலேயே இயங்குகிறது என்று உணர்கிறேன். இவ்வளவும்/எல்லாம் -யாந்திரிகமாக- இருக்கிறது, நடக்கிறது; தெய்வமும் சும்மா இருக்கிறது; அதாவது, இல்லாமல் இருக்கிறாது; இந்த களே பரத்தில் ஒன்றும் செய்யமுடியாததாகப் போய்விட்டது என்று தொனிக்கிறதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இது எப்படி நேர்ந்தது. உள் மனசில் இதைத்தான் சொல்ல நினைத்திருந்தேனா. 'தெய்வமும்/ஐதிகத்தில் வாழும் ' என்ற வரிகள் எப்படி மாற்றி விட்டன,பொருளை, இந்தக் கவிதை என்னதான் சொல்கிறது. 'எல்லாம் ஒழுங்காகவே இருக்கிறது, உயிர்ப்புதான் இல்லை ' என்கிறாற் போல அர்த்தம் வந்தது எப்படி. கவிதை, என் கைமீறிப் போய்விட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். 'இதுபோலக் கவிதைகளுக்கெல்லாம் கவிஞன் ஒருகாலும் பொறுப்பேற்க முடியாது ' என்று தப்பித்துக் கொள்ளலாமா. சற்றே யோசித்துத்தான் சொல்லவேண்டும். தயவு செய்து, பொறுத்துக் கொள்ளுங்கள்.

எனக்கே என் கவிதைகள் சிலவற்றை நிரம்ப நிரம்பப் பிடித்துப் போகும், ஏனென்றே தெரியாமல், அப்படியான கவிதைகளில் இதுவும் ஒன்று. அண்மைக் காலமாகவே பூடகமானதும் இருண்மை கொண்டதும் மாயம் கொண்டிருப்பதுமான கவிதைகளையே வெகுவாக விரும்புகிறேன். எதார்த்தமாகவும் வெளிப்படையாகவும் இருக்கிற கவிதைகள் பெரிதாக மனம் கவருவதில்லை. இந்தத் திசையிலேயே இனி வரும் நாள்களில் எழுத வேண்டும் என்று தோன்றிக் கொண்டிருக்கிறது. எழுதுவேனா முடியுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. அப்படி ஆசை இருக்கிறது. வாய்த்தால் நல்லது.

'கோயிலுக்கு ' கவிதையில் ஒரு நிரந்தரமான விஷயத்தை/நிரந்தரமான உண்மையைக் கருத்தாக்கம் என்றாகாது அநுபவ/உணர்வுத் தளத்திலேயே சொல்லியிருக்கிறேன் என்பதுதான் கவிஞன் என்ற முறையில் சந்தோஷம் தருகிறது. என் வாழ்நாளில் இப்படிப் பத்து நல்ல கவிதைகள் எழுதியிருந்தால், அதுவே என் பிறவிப்பயன் என்று திருப்திப்பட்டுக் கொள்வேன்.

இந்தக் கவிதையும் பெரிதாகக் கவனிக்கப்பட்டதாகச் சொல்லமுடியாதுதான். மதிப்புக்குரிய நகுலன் அவர்கள் 'கனவு ' மதிப்புரையில் குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. 'கோயிலுக்கு ' - இக்கவிதையில் கோயில் எவ்வளவு சிறப்பாக விவகரிக்கப்படுகிறதோ, அதைப்போலவே அதன் சீரழிவும். 'தெய்வமும் ஐதிகத்தில் வாழும் '. உடையவர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள் ' என்று எழுதியிருப்பார். 'மீட்சி ' மதிப்புரையில் என் அன்பு கொண்ட பிரம்மராஜன் அவர்கள் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்: 'கவிதைகளின் வாசிப்புக்கு ஊடாக நமக்கு இரு அமைப்பாக்கங்கள் தெரிய வருகின்றன. முதல் அமைப்பாக்கம், லட்சிய குணங்கள் பொருந்திய, சுய பாதுகாப்பு நிறைந்த கோயில் என்கிற அமைப்பாக்கம். இரண்டாவது வீடு. ' அவரும் கடைசி வரிகளை மேற்கோள் காண்பித்திருப்பார். மற்றபடி, வேறு எவரும் எங்கும் இக்கவிதையைக் கண்டு கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். சற்றே வித்யாசமாக உள்ள கவிதைகள் மதிப்பிடப் பெறுவதும் விமர்சனத்துக்குட்படுத்தப்படுவதும் இலக்கியத்தில் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் என்பது மட்டுமில்லை, கவிதை பற்றிய விழிப்புணர்வையும் உண்டுபண்ணும். குறைந்த பட்சம் சக கவிஞர்களேனும் இதுபோன்ற கவிதைகளைப் பற்றிக் கருத்துச் சொல்வது பொதுவாகக் கவிதை வளர்ச்சிக்கும் தனிப்பட்ட முறையில் கவிஞன் தன்னைச் சீராக வளர்த்துக் கொண்டு செல்வதற்கும் உபயோகமாக இருக்கும்.

கோயிலுக்கு

வாசல்

நான்கு

சந்நிதி

இரண்டு

சுயம்புலிங்கம்

சொல்ல ஒரு விசேஷம்

அம்மன்

அழகு சுமந்தவள்

ஆறுகால

பூஜை நைவேத்யம்

பள்ளியறையில்

பாலும் பழமும்

ஸ்தலவிருஷம் பிரகாரம்

நந்தவனம் பொற்றாமரைக் குளம்

வசந்தோற்சவம் தேரோட்டம்

நவராத்திரி சிவராத்திரி

பட்டர் சொல்லும் மந்திரம்

ஓதுவார் பாடும் தேவார திருவாசகம்

சேர்த்து வைத்த சொத்து

வந்து சேரும் குத்தகை

ஆகமம் ஆசாரம்

தவருத நியமம்

தெய்வமும்

ஐதிகத்தில் வாழும்

( 'உள்வாங்கும் உலகம் '  தொகுப்பு பக்கம்: 10&11.)

**********

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்