Showing posts with label சி. மோகன். Show all posts
Showing posts with label சி. மோகன். Show all posts

Oct 26, 2010

ஜி. நாகராஜன் – கடைசி தினம்!-சி.மோகன்

* ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது. பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

அனைவருக்கும் வணக்கம்.

என் நெடுநாள் ஆசைகளில் ஒன்று நிறைவேறியிருக்கும் நாள் இது.

எஸ் சம்பத்தின் ‘இடைவெளி”, ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ஜி. நாகராஜனின் ”நாளை gnagarajan மற்றுமொரு நாளே’ ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்குமென்ற என் நம்பிக்கையை எழுத்திலும் உரையாடல்களிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்.

இன்று ஜி.நாகராஜனின் பிரதான படைப்பான ‘நாளை மற்றுமொரு நாளே’, அபிசிப்ராமனின் மொழிபெயர்ப்பில் பெங்குவின் வெளியீடாக வந்திருப்பது ஒரு விசேஷமான நிகழ்வு. மொழி மற்றும் கலை இலக்கிய கலாச்சர தளங்களில் தீவிரப் பற்றுதலோடு ஆழ்ந்த அறிவோடும் தீரா தாகத்தோடும் செயலாற்றிவரும் கல்மனும் க்ரியா ராமகிருஷ்ணனும் இணைந்து  இம்மொழிபெயர்ப்பை ‘எடிட்’ செய்து இந்நூல் வெளிவந்திருப்பது நம்முடைய பெருமிதங்களில் ஒன்றாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

க்ரியா ராமகிருஷ்ணனின் கைமந்திரம் இதில் சேர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகிறது. ஒருசெயல் அதன் நிகழ்த்தும் மாயம் ஓர் அபூர்வவிந்தை. நவீனதமிழ் இலக்கிய முகத்தில் பொலிவு கூடியிருக்கும் இந்நாளில் அதை சாத்தியமாக்கிய அபிக்கும், டேவிட்கல்மனுக்கும், ‘க்ரியா’ ராமகிருஷ்ணனுக்கும், பெங்குவின் நிறுவனத்தாருக்கும் நம் அனைவர் சார்பாகவும்  என்  நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி. நாகராஜனைப் பற்றிப் பேசுவதும் அவருடைய எழுத்தைப் பற்றிப் பேசுவதும் வேறு வேறானவை அல்ல. நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித் தவர் ஜி. நாகராஜன். அதுவரையான தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும்  தங்கள் வாழ்வுக்கும்  இருப்புக்குமான  சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது.

தனிமனித இயல்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் வாழ்வின் அழகு பூரணமாக விரிவடைவதைக் கொண்டாடும்  முதல் தீர்க்கமான குரல் ஜி. நாகராஜனுடையது. சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிராதய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கின்றன. இந்நிலையில், வாழ்வின் மீதான சகல பூச்சுகளையும் வழித்துக் துடைத்து,  வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி  அதன் இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக அறங்களைப் படைத்திருக்கும் கலை மனம் ஜி. நாகராஜனுடையது.

பூக்களில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தில் உயிர்ப்பின் அழகையும் கண்ட படைப்பு மனம் இவருடையது. விளிம்புநிலை மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகை அற்புதமாகப் படைப்பித்ததும்தான் ஜி. நாகராஜனின் தனித்துவம். இதன் அம்சமாகவே விலைப்பெண்கள்,  அத்தான்கள், உதிரிகள் இவருடைய படைப்புலகை  வடிவமைத்தனர்.

நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஜி. நாகராஜனின் வருகை துணிச்சலான எழுத்து என்பதிலேயே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துணிச்சல் மனிதன் குறித்தும் சமூகம் குறித்தும் காலம் குறித்துமான அவருடைய அவதானங்களிலிருந்தும் பார்வையிலிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. அதிர்ச்சிக்காகவோ கிளர்ச்சிக்காகவோ பரபரப்புக்காகவோ எழுத்தில்காட்டிய துணிச்சல் இல்லை இது. வாழ்வையும் எழுத்தையும் வெகு சுபாவமாக, மனத்தடைகளோ, இறுக்கங்களோ, ஒழுக்க நியதிகள் சார்ந்த பதற்றங்களோ இன்றி  அணுகியிருப்பதில் விளைந்திருக்கும் கலைத் துணிச்சல்.

ஒவ்வொரு காலமும் வாழும் நெறிகளை விதிகளாக வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. அதேசமயம் மீறல்களும் முரண்டுகளும் போராட்டங்களும் அவ்விதிகளுக்கெதிராக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த மோதல்களின் தொடர்ச்சியாகத்தான் பழையதை மேவிப் புதிய காலமும் புதிய விதிகளும் உருக்கொள்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்தி திரைக்காவியமான ‘மொஹல் ஏ ஆஸம்’ படத்திலிருந்து ஒரு காட்சி:

அனார்கலி மீது கொண்ட எல்லையற்ற காதலுக்காக அவளை மீட்கும் பொருட்டும் அடையும் பொருட்டும் அரச பதவியை உதறிவிட்டு, தன் தந்தை அக்பருக்கு எதிராக யுத்தம் மேற்கொள்கிறான் சலீம். அக்பரின் தூதுவராக சலீமிடம் வருகிறார் ஓர் அமைச்சர். அவர் சலீமிடம் ‘அரச பதவியைத் துறந்துவிட்டு எனக்கும் நாட்டுக்கும் எதிராக யுத்தம் தொடங்குமளவுக்கு சலீமை ஆட்டுவிக்கும் அனார்கலி அப்படியொன்றும் அழகாகவும் இல்லையே’ என்று அக்பர் வருத்தப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அதற்கு சலீம் சொல்கிறான்; ‘சலீமின் கண்களால் பார்க்கச் சொல்.’

ஜி.நாகராஜனின் அருமையை உணர சமூக மதிப்பீடுகளின் கண்கள் கொஞ்சமும் உதவாது. அவை சமூக நெறிகளைக் காக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அதிகாரத்தின் கண்கள். அதாவது, அக்பரின் கண்கள். இயல்புணர்ச்சிகளை நேசிக்கும் கண்களுக்கு மட்டுமே ஜி. நாகராஜனுடைய வாழ்வும் எழுத்தும், வசீகரமும் அழகும் கொண்டதாக வெளிப்படும்.

cmohan ன் 17ஆவது வயதில் ஜி. நாகராஜனை ஓர் லட்சிய ஆண்மகன் தோற்றத்தில் நான் அறிந்திருக்கிறேன். உடற்கட்டும் வனப்பும் மிடுக்கும் கூடிய பேரழகன். அப்போது நான் மாணவன். அவர் கணித ஆசிரியர். தூய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நடுவிரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட், சில வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அவருடைய கடைசி சில ஆண்டுகளில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. உடல் நலிந்து, கசங்கிய அழுக்கு வேட்டி ஜிப்பாவோடும், கடைசி நாட்களில் கைகளில் சொறியோடும் அவர் அலைந்து திரிந்த காலம் பொழுதை கஞ்சா போதையில் கடத்திய காலம். இக்காலத்தில் அவரை ஓர் எழுத்தாளராக அறிந்து அவர்மீது மதிப்பு கொண்டிருந்தத நானும் எழுதத் தொடங்கியிருந்தேன். அவருடைய வாழ்வின் கடைசி நாள் பற்றி மட்டும் சில விஷயங்களைக் குறிப்பிட்டு இப்பேச்சை முடிக்கிறேன்.

ஒருமுறை ‘சாவும், அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போதே வரும்’ என்றார் ஜி. நாகராஜன். சாவை எதிர்கொள்ள அவர், தன்னைத் தயார்படுத்திக் கொண்ட தருணமும் வந்தது. எவ்வளவோ முறை மருத்துவமனையில் சேரும்படி வற்புறுத்திய போதெல்லாம் மறுத்த அவர், மரணத்திற்கு இரண்டு நாள் முன்பு, அவராகவே முன்வந்து தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

1981 பிப்ரவரி-18ம் தேதி காலை அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்லா பரிசோதனைகளும் முடித்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணிபோல் பிரிந்தபோது, ‘கஞ்சா ஏதும் உபயோகிக்க வேண்டாம். வெளியில் கறுப்புப்படியும்படி ஆகிவிடக் கூடாது’ என்று கேட்டுக்கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும் டாய்லெட்டில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். ‘சாயந்தரம் வரும்போது போட்டுக்கொண்டு வந்து தருகிறேன் இரவு டாய்லெட்டில் உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்றதும் என்னிடம் அதைக் கொடுத்துவிட்டார்.

மீண்டும் சாயந்தரம் 5 மணி போல் நண்பர் சிவராமகிருஷ்ணனும் நாணும் அவரைப் போய்ப் பார்த்தோம். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக்கொண்டு போயிருக்கவில்லை. ‘போடத் தெரியவில்லை’ என்று சிகரெட் பாக்கெட்டையும் கஞ்சா பொட்டலத்தையும் அவரிடம் கொடுத்தேன். பேசிக் கொண்டேயிருந்தார். மனித இனம் போரில் மாண்டுகொண்டிருப்பது பற்றிப் பெரும் துக்கத்துடன் பேசினார். இடையில் டாய்லெட் போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். டாய்லெட்டில் அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாளமுடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, ‘கடவுளே, என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்’ என்று வாய் விட்டுக் கதறி அழுதார். திரும்ப வந்து படுக்கையில் படுத்துக் கொண்டதும் குளிர் அவரை மிகவும் உலுக்கியது. “குளிருது, ரொம்பக் குளிருது” என்றவர் “சிதையில் போய் படுத்துக் கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்” என்றார்.

மறுநாள் காலை , பிளாஸ்கில் காப்பியோடு போனபோது அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். ஆனால் அவர் இறந்து விட்டிருந்தார். அவர் ஜிப்பா பாக்கெட்டில் சிகரெட் பாக்கெட்டும் சிறு பொட்டலமும் உபயோகிக்கப்படாமல் அப்படியே இருந்தன. என் குற்றவுணர்வுகளில் ஒன்றாக அந்தப் பொட்டலம் இன்னமும் நினைவில் இருந்துகொண்டிருக்கிறது.

***

நன்றி: குமுதம் தீராநதி

Jul 19, 2009

ஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்

சி. மோகன்

நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளை அபாரமாக விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அது வரையான தமிழ்எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம். வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான சகல நியாயங்களோடும் கெளரவத்தோடும் வாழும் உலகமது. ஜெயகாந்தனின் படைப்புலகில் இவர்கள் இடம் பெறுகிற போதிலும் அவருடைய மொண்ணையான மதிப்பீடுகளினால் அந்த உலகம் சிதைவுறுவதைப் போலல்லாமல் இயல்பான மலர்ச்சியைக் கொண்டிருக்கும் உலகம் ஜி. நாகராஜனுடையது. அவருடைய இரு நாவல்களுக்கும் தொடக்கமாக முன்வைத்திருக்கும் சிறு குறிப்புகள் அவருடைய படைப்புலகின் தன்மையையும் தனித்துவத்தையும் அறிய உதவும்.

'நாளை மற்றுமொரு நாளே'யில் இடம் பெற்றிருக்கும் தொடக்கக் குறிப்பு:

''இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை.

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக் கூடிய சின்னத்தனங்கள்.

நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல்.

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக் கூடிய நோய்கள்.

பட்டுக் கொண்டிருந்தால் அடைந்திருக்கக் கூடிய அவமானம்.

இவையே அவன் வாழ்க்கை.

அவனது அடுத்த நாளைப் பற்றி

நாம் தெரிந்து கொள்ள வேண்டாம்.

ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலருக்குப் போலவே

நாளை மற்றுமொரு நாளே!''

1929ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி, தாயாரின் ஊரான மதுரையில் 7ஆவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை கணேச அய்யர், வக்கீல். சிறு வயதில் தாயை இழந்த நாகராஜன் ஆரம்ப வருடங்களில் மதுரையில் தாய் வழிப்பாட்டி வீட்டிலும் பின்னர் திருமங்கலத்தில் தாய்மாமன் வீட்டிலும் வளர்ந்தார். இடையில் தந்தையார் அவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு பாடங்களைத் தாமே சொல்லிக் கொடுத்தார். 8,9 ஆம் வகுப்புகளை திருமங்கலம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் மாமா வீட்டில் தங்கிப் படித்தார். மறுபடியும் பழனி சென்று 10,11 ஆம் வகுப்புகளை எம்.ஹெச். பள்ளியில் படித்தார். படிப்பில் படு சூட்டிகையான இவர் வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே இருந்திருக்கிறார். கல்லூரிப் படிப்பை மதுரையில் மதுரைக் கல்லூரியில் மேற்கொண்டார். அப்போது கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சி.வி. ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

பட்டப் படிப்பு முடிந்ததும் காரைக்குடி கல்லூரியில் ஒரு வருடம் வேலை பார்த்தார். பின் சென்னையில் ஏ.ஜி. அலுவலகத்தில் ஓராண்டு பணி புரிந்தார். கல்விப் பணியில் அவருக்கிருந்த இயல்பான நாட்டம் காரணமாக, அவ்வேலையை உதறிவிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில்தான் கம்யூனிச இயக்கத்தில் தன்னைத் தீவிரமாக இவர் வெளிப்படுத்திக் கொண்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் இவரை வேலையிலிருந்து நீக்கியது.

இதன்பிறகு, திருநெல்வேலி வந்து பேராசிரியர் நா. வானமாமலை நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். கட்சிப் பண்களிலும் தீவிர முனைப்பு காட்டினார். இக்காலத்தில்தான் படைப்பாக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். நெல்லையில் நான்கு ஆண்டுகள் அவர் பணி தொடர்ந்தது. போதையும் விலைமாதர் நட்பும் அவரிடம் உறவு கொள்ளத் தொடங்கியதும் இக்காலத்தில்தான். அவருடைய நடத்தைகள் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியபோது அவர் கட்சி அமைப்பிலிருந்து தாமாகவே ஒதுங்கிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்தார்.

கம்யூனிச கட்சி ஈடுபாடுகள் கொண்டவரும் நண்பருமான பேராசிரியர் சங்கர நாராணனன் மதுரையில் நடத்தி வந்த 'மாணவர் தனிப் பயிற்சி கல்லூரி' (எஸ்.டி.சி) ஆசிரியரானார். இக்காலத்தில சிறந்த ஆசிரியராக அவர் மதிப்பு உயர்ந்திருந்தது. இச்சமயத்தில்தான் உடன் பணியாற்றிய நண்பரொருவரின் ஏற்பாட்டின்படி ஆனந்தி என்ற பெண்ணை 1959ல் மணம் புரிந்தார். மணமான நான்காவது மாதம் ஆனந்தி இறந்து போனார். 1962 ஆம் ஆண்டு நாகலட்சுமி என்ற பள்ளி ஆசிரியையை மணமுடித்தார். இத்திருமண உறவில் கண்ணன், ஆனந்தி என்ற 2 குழந்தைகள் அவருக்கு இருக்கிறார்கள். இத்திருமணம் முடிந்த சில மாதங்களில் ராணுவத்தில் சேர்ந்தார். இவருடைய கம்யூனிச கட்சி உறவு வெளிப்படவே ராணுவத்திலிருந்து திரும்பினார்.

மதுரை வந்து கல்லூரியில் வகுப்பெடுக்கத் தொடங்கினார். அவருடைய பிரபல்யம் சொந்தமாக தனிப்பயிற்சி கல்லூரி ஒன்றைத் தொடங்க வைத்தது. அது வெற்றி பெறவில்லை. மீண்டும் எஸ்.டி.சி., வி.டி.சி., போன்ற தனிப்பயிற்சிக் கல்லூரிகளில் வகுப்பெடுத்தார். எந்த ஒன்றிலும் நின்று நிலைக்க முடியாமல் மாறி மாறி முயற்சிகள் மேற்கொண்டார். 70களின் ஆரம்பம் வரை இது தொடர்ந்தது. சென்னையில் யுனெஸ்கோ திட்டத்தின் கீழ் சில மாதங்களும், மதுரை காந்தி மியூசியத்தில் சில மாதங்களும் பணிபுரிந்தார்.

70களின் ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு, இவர் எந்த வேலையும் பார்க்கவில்லை. நாடோடி வாழ்க்கை தேர்வாகவோ, நிர்பந்தமாகவோ, சுபாவமாகவோ, ஆழ்மன விழைவாகவோ இவரை வந்தடைந்தது.

1981ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி மதுரை அரசு பொது மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தீவிரமான செயல்பாடுகள் கொண்டிருந்த காலத்தில் 'பித்தன் பட்டறை' என்ற பெயரில் பதிப்பகமொன்றை தொடங்கி தன்னுடைய புத்தகங்களை வெளியிட்டார். 'நாளை மற்றுமொரு நாளே', 'குறத்தி முடுக்கு' என்று இரு நாவல்களையும், 'கண்டதும் கேட்டதும்' சிறுகதைத் தொகுதியும் இவ்வகையில் வெளிவந்தவை. கடைசி ஏழெட்டு ஆண்டு கால நாடோடி வாழ்க்கையில் ஒரே ஒரு சிறுகதை மட்டுமே எழுதியிருக்கிறார்.

1969ல் என் 17ஆவது வயதில் ஜி. நாகராஜனிடம் நான் மாணவனாக இருந்தேன். பி.யூ.சி.யில் மூன்றாம் பாடத்தில் தவறி, மதுரையில் பிரசித்தி பெற்ற மாணவர் தனிப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது கணிதப் பாடமெடுத்த ஆசிரியர் நாகராஜன். அப்போது ஒரு லட்சிய மனிதனாக என் மனதில் அவர் இடம்பிடித்திருந்தார். கம்பீரமும் பொலிவும் கூட முயங்கிய வசீகரத் தோற்றம். உடல் பயிற்சிகளினால் தின்மும் பெற்ற உடல்வாகு. தன்னம்பிக்கை மிளிரும் முகம். ஒவ்வொரு அசைவிலும் அணுகுமுறையிலும் பாந்தமாக வெளிப்படும் லயம். அவரைப்போல் ஆக வேண்டும் என்றுஎன் லட்சிய மனிதனாக அவரை ஸ்வீகரித்திருந்தேன். நாலு முழ அகலக் கரை வேட்டியிலும் வெள்ளை ஜிப்பாவிலும் படு சுத்தமாக எப்போதும் தோற்றமளிப்பார். நடக்கும்போது வலது கை நடு விரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட். இடது கை நடுவிரலும் சுட்டு விரலும் சிறு கத்திரி போல் அமைந்திருக்க, அவற்றின் இடுக்கில் வேட்டியின் பின்புற நடுமுனையை உயர்த்திப் பிடித்தபடி நடக்கும் லாவகத்தை அதிசயித்துப் பார்த்தபடி இருந்திருக்கிறேன். பின்னாளில் நான் வேட்டி கட்டத் தொடங்கியபோது அதே பாணியில் நடந்து பெருமிதம் கொண்டிருந்தேன்.

அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து - 1975 வாக்கில் - அவரைப் பார்த்தபோது தோற்றம் குலைந்து, நலம் குன்றியவரைப் போலிருந்தார். இப்போது நானும் கொஞ்சம் எழுதத் தொடங்கிவிட்டிருந்தேன். சிறு பத்திரிகைகளோடும், பிடித்த எழுத்தாளர்களோடும் நட்பு ஏற்படத் தொடங்கியிருந்தது. தருமு சிவராமுவோடு எனக்கு ஏற்பட்டிருந்த கடிதத் தொடர்பின் தொடர்ச்சியாக அவர் மதுரை வந்திருந்த சமயமது. நண்பர் குமாரசாமியின் பெரிய நாயகி அச்சக மாடி அறையில் சிவராமு தங்கியிருந்த நாட்களில் ஒருமுறை நாகராஜன் அங்கு வந்தார். என் லட்சிய ஆண்மகன் பிம்பமாக இருந்த அவரை சில ஆண்டு இடைவெளிக்குப் பின் பார்த்தபோதிருந்த தோற்றம் வேதனையானது. உடல் தளர்ந்து-விட்டிருந்தது. தயக்கம் சூடியிருந்தது முகம். அசைவிலும் அணுகுமுறையிலும் நிச்சயமற்ற தன்மை படர்ந்திருந்தது. அவருடைய அபாரமான நினைவாற்றல் மட்டும் எப்போதுமே கடைசி நாள் வரை பிரமிப்பூட்டுவதாகத்தான் இருந்திருக்கிறது. அந்த சந்திப்பில் 'நீ என் மாணவன் தானே' என்று கேட்டதிலிருந்து எண்ணற்ற உதாரணங்கள்.

இதற்குப் பின்னர் ஓரிரு தற்செயலான சந்திப்புகள் நிகழ்ந்த போதிலும், அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பின்னர், 1980ல்தான் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. அவருடைய மரண நாள் வரை இது நீடித்தது. ஒரு வங்கிக்கிளை நண்பர்களைப் பார்க்க அவர் அவ்வப்போது வந்து கொண்டிருந்த சமயமது. நானும் அங்கு அடிக்கடி போய்க்கொண்டிருந்தேன். இச்சமயத்தில் அவர் உடல் ஒடுங்கிப் போய்விட்டிருந்தது. மருத்துவமனையில் சேர்ந்து கொள்கிறீர்களா? என்று நண்பர்கள் வற்புறுத்திய போதெல்லாம் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அவர்மீது மதிப்பு கொண்டிருந்த 'வெற்றி தனிப்பயிற்சி கல்லூரி' முதல்வர் அவர் தங்க கல்லூரி விடுதியில் சிறு அறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இச்சமயத்தில் ஒருநாள் வங்கிக்கு வந்த நாகராஜன் தன்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி நண்பர் சிவராமகிருஷ்ணனிடமும் என்னிடமும் கூறினார். சிவராமகிருஷ்ணன் தனக்குத் தெரிந்த மருத்துவர் மூலம் அரசு பொது மருத்துவமனையில் அவரைச் சேர்க்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். மறுநாள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போகவிருப்பதைத் தெரிவிப்பதற்காக அதற்கு முதல் நாள் இரவு வி.சி.டி.யில் அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று நானும் சிவராமகிருஷ்ணனும் வெகுநேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

மறுநாள் காலை, 1981 பிப்ரவரி 18ஆம் தேதி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, எல்லாப் பரிசோதனைகளும் முடிந்து வார்டில் சேர்த்துவிட்டு மதியம் 2 மணி போல் பிரிந்தபோது, கஞ்சா ஏதும் மருத்துவமனையில் உபயோகிக்க வேண்டாம். வெளியில் அனுப்பும்படி ஆகிவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன். தன்னிடம் சிறு பொட்டலம் இருப்பதாகவும், கழிவறையில் வைத்து ரகசியமாக உபயோகித்துக் கொள்வதாகவும் கூறினார். 'சாயந்திரம் வரும்போது போட்டுக் கொண்டு வந்து தருகிறேன் இரவில் கழிவறையில் உபயோகித்துக் கொள்ளுங்கள்' என்றதும் என்னிடம் அதைக் கொடுத்து விட்டார்.

மீண்டும் சாயந்திரம் 5 மணி போல் சிவராமகிருஷ்ணனும் நானும் அவரைப் போய்ப் பார்த்தோம். அன்று அவர் பேசிய பேச்சுக்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்யக் கூடுமென நம்புகிறேன். நான் சிகரெட்டில் கஞ்சாவைப் போட்டுக்கொண்டு போயிருக்கவில்லை. 'போடத் தெரியவில்லை. இரவில் கழிவறை போய் போட்டுக் கொள்ளுங்கள்' என்று கொடுத்தேன். பேசிக் கொண்டிருந்தபோது கழிவறை போக வேண்டுமென்றார். எழுந்து நடக்க வெகுவாக சிரமப்பட்டார். சிவராமகிருஷ்ணனும் நானும் கைத்தாங்கலாக அழைத்துப் போனோம். அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாள முடியாத அவஸ்தை. கழிவிரக்க வசப்பட்டவராக, 'கடவுளே, உன்னிடம் என்னைச் சீக்கிரம் அழைத்துக்கொள்' என்று வாய் விட்டு கதறி அழுதார். அன்று இரவு அவரைத் தொடர்ந்து பராமரிப்பது குறித்து பல வழிமுறைகளை யோசித்தோம்.

மறுநாள் காலை ஃப்ளாஸ்க்கில் காபியோடு போனபோது, அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்தோம். ஆனார் அவர் இறந்துவிட்டிருந்தார். உபயோகிக்கப்படாமலேயே அந்தப் பொட்டலம் ஜிப்பாவில் இருந்தது. என் குற்ற உணர்வுகளில் ஒன்றாக பயன்படுத்தப்படாத அந்தப் பொட்டலம் நிலைத்துவிட்டிருந்தது.

ஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்

சி. மோகன்    (ஜி. நாகராஜன் படைப்புகள் _ புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் முன்னுறையின் சுருக்கம்.)


நவீன தமிழ்ப் புனைகதை இலக்கியப் பரப்பில் ஜி. நாகராஜனின் எழுத்து தனிப் பிராந்தியம். தன் கால வாழ்வோடு கொண்ட தீர்க்கமான, இயல்புணர்வோடு திளைத்த உறவில் அவருடைய படைப்பு மனம் உருவாக்கிய பிராந்தியம். மனிதனின் இயல்புணர்வு களைக் கொண்டாடிய மனத்திலிருந்து விரிந்த பிராந்தியம். சமூகக் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் அதன் சம்பிரதாய ஒழுக்க நியதிகளும் பாலியல் கட்டுப்பாடுகளும் வாழ்வின் சிறகுகளைக் கத்தரித்து யந்திரரீதியான இயக்கத்தைக் கட்டமைத்திருக்கும் நிலையில் படைப்பு மனத்தின் அடிப்படையான சுதந்திர வேட்கையிலிருந்து உருவாகியிருக்கும் கலைப் பிராந்தியம். சமூகத்தின் நெறிப்படுத்திய இலக்குகளைப் பூர்த்தி செய்வதல்ல படைப்பாளியின் பணி. மாறாக, வாழ்வின் இயல்பான பூரண மலர்ச்சிக்கான கனவை வசப்படுத்துபவன் அவன். நிலவும் மதிப்பீடுகளை உதாசீனப்படுத்துவதிலிருந்தும் நிர்மூலமாக்குவதிலிருந்துமே வாழ்வின் இயல்பான மலர்ச்சிக்கான ஆக்கப் பாதை விரிகிறது. வாழ்வின் மீதான சகல பூச்சுகளையும் வழித்துத் துடைத்து வாழ்வை நிர்வாணமாக நிறுத்தி அதன் இயல்பான அழகுகளிலிருந்து தனதான தார்மீக நெறிகளைப் படைப்பிக்கும் மனமே கலை மனம். பூச்சுகளில் சவ விகாரங்களையும் நிர்வாணத்தில் உயிர்ப்பின் அழகுகளையும் கண்ட படைப்பு மனம் ஜி. நாகராஜனுடையது.

சமூகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த தீர்மானங்களும் கட்டுப்பாடுகளும் அழுத்தங்களும் தனிமனித வாழ்வின் எழுச்சியையும் வீர்யத்தையும் காயடிக்கும் வன்முறையாகிவிட்ட நிலையில் தனிமனிதனின் முழுமையான பூரணத்துவ வாழ்வைக் கோஷிக்கும் குரல் நீட்ஷேயிடமிருந்து எழுந்தது. பாலியல் கட்டுப்பாடுகள் மனித மனத்தில் அரும்பும் மொக்குகளைக் கருக்கும் நிலையில் ஏற்படும் விபரீதங்களை ஃப்ராய்டின் குரல் மொழிந்தது. இலட்சியவாதத்தின் பெயரால் தன்னியல்பான, படைப்புரீதியான தனிமனித வாழ்வின் குரல்வளை திருகப்பட்டிருப்பது அறியப்பட்டது. தனிமனிதனின் மெய்யான உணர்வுகளை வசப்படுத்து வதன்மூலம் வாழ்வின் உண்மையை அகப்படுத்தும் முனைப்போடு மேலை கலை, இலக்கியப் படைப்பாளிகள் விந்தையான கனவுப் பிரதேசத்துக்குள் பிரவேசிக்கத் தலைப்பட்டனர். காரண _ காரிய ரீதியான தர்க்கங்களின் தளைகளிலிருந்து விடுபட்ட சுதந்திரமான கனவுலகு குறித்தும், மாயப்புதிர் அனுபவ உலகம் குறித்துமான வேட்கை படைப்பு மனங்களிடம் உருப்பெற்றது. தமிழில் இலட்சியவாதத்துக்கு எதிரானதும், தனிமனித இயல்புணர்ச்சிகள் சுயமாக வெளிப்படுவதன்மூலம் வாழ்வின் அழகு பூரணமாக விரிவதைக் கொண்டாடுவதுமான முதல் தீர்க்கமான குரல் ஜி. நாகராஜனுடையது. இதில் சிறப்பு என்னவென்றால், கனவுலகின் சுதந்திரத்தில் மலரும் தனிமனித இயல்புணர்வுகளை அகப்படுத்துவதன் மூலமே மெய்மையை அறிய முடியுமென்று உணர்ந்து மேலைக் கலைஞர்கள் பிரயாசைப்பட்டபோது, ஜி. நாகராஜன் வாழ்வின் விளிம்பு நிலையில் மனிதர்களிடம் சுபாவமாக இயல்புணர்வுகள் மொக்கவிழ்வதைக் கண்டதும் அவ்வுலகைப் படைப்பித்ததும்தான். விலைப் பெண்கள், `அத்தான்’கள், உதிரிகள் இவருடைய படைப்புலகை வடிவமைத்தனர்.

`நாளை மற்றுமொரு நாளே’ நாவல் ஜி. நாகராஜனுடைய பிரதானமான படைப்பு. திருவாளத்தான் வேலைகள் செய்து வாழும். கந்தனின் ஒரு நாளைய வாழ்க்கையை அகப்படுத்தும் நாவல். கார்கோட்டை நகரில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அது. தன் குடிசையில் காலைக் கனவிலிருந்து விழித்தெழும் கந்தன், மறுநாள் காலை லாக்கப்பில் மீண்டுமொரு அதிகாலைக் கனவிலிருந்து விழுத்தெழுவது வரையான ஒரு நாளின் நிகழ் சம்பவங்களும், நினைவிலிருந்து கிளர்ந்தெழும் கடந்த காலச் சம்பவங்களும், கிளைக் கதைகளுமாக நெய்யப்பட்டு கந்தனின் 12 ஆண்டு கால வாழ்க்கையை வடிவமைத்திருக்கும் நாவல்.

காலையில் எழுந்தவுடன் உடல் தெம்படைவதற்கும் இயங்குவதற்கும் கந்தனுக்குச் சாராயம் தேவைப்படுகிறது. அந்த ஒரு நாளில் அவன் பலமுறை அங்கங்கே தெம்பேற்றிக் கொள்கிறான். எழுந்தவுடன் குடிசையில் உருட்டிப் புரட்டி சாராயம், பின் விறகுக் கடைக்குப் போய் ஜிஞ்சர், சலூன் சென்று சவரம், வீட்டுக்குத் திரும்பி மீனாவுடன் காலைப் புணர்ச்சி, பின் குளித்துவிட்டு சலவை செய்த எட்டு முழ வேட்டியும் சில்க் சட்டையும் அணிந்துகொண்டு உறையோடு கூடிய ஸ்பிரிங் கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு கந்தன் குடிசையை விட்டுக் கிளம்பும்போது மணி கிட்டத்தட்ட ஒன்பதரை.

பின்னர் வெளியே அந்த நாளில் அவன் மேற்கொள்ளும் காரியங்களில் வெளிப்படுபவை அவனுடைய வாழ்க்கை முறையும், எதிர்ப்படும் நிலைமைகளைச் சாதுர்யமாகக் கைக்கொள்ளும் திறனும். ``நீங்க வாழ்க்கைலே எதைச் சாதிக்கணும்னு திட்டம் போட்டிருக்கீங்க?’’ என்று கேட்கும் முத்துச்சாமியிடம், ``எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துல வந்து பொறந்தேன்’’ என்று சிரித்தபடிக் கூறும் கந்தன், ``எல்லார் பிழைப்பும் அப்படியோ இப்படியோ பிடுங்கித் தின்னறதுதான்’’ என்று கருதும் கந்தன், தூங்கிக்கொண்டிருந்த தன்மீது பானையை வீசியெறிந்து உடைத்து நொறுக்கிவிட்டு சிறு வயதிலேயே வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்ட மகன் சந்திரனைப் பற்றி நினைக்கும்போது, ``அவன் சுயநலத்தில்தான் எத்தனை அழகு? சுயநலத்தை மறைக்க முயன்றால்தான் அது அசட்டுத்தனமாகவோ விகார மாகவோ தோன்றுகிறது’’ என்று சிலாகித்துக்கொள்ளும் கந்தன், தன் கனவொன்றில் சந்திரனைத் தற்செயலாகத் தெருவில் பார்க்கும்போதுகூட அவனிடம் பேசவோ, வீட்டுக்கு அழைத்து வரவோ எண்ணம் கொள்ளாத கந்தன் அந்த நாளில் தன் யோசனையாகவும் அதை நிறைவேற்றவுமான ஒரு காரியம் மேற்கொள்கிறான். அது படைப்பையும் கந்தனையும் விகாசம் பெற வைக்கிறது.

12 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நல்ல ஏற்பாடாக இருக்குமென்று எண்ணி விலைப் பெண்ணாக வாழ்ந்த மீனாவைத் தற்செயலாகக் கோவிலில் சந்தித்த மாத்திரத்திலேயே மணக்க எண்ணி மணந்து கொண்டு பின்னர் தன் திருவாளத்தான்தனங்களோடும், மீனாவை விலைப் பெண்ணாகத் தொழில் புரிய வைத்தும், இவ்வளவு கால வாழ்க்கையை வாழ்ந்த கந்தன் அன்று காலை தன் உடல்நலம் மோசமாகிக்கொண்டு வருவதை உணர்ந்து மீனா குறித்து, ``இதுக்கு ஏதாவது ஏற்பாடு செய்யறதுதான் நல்லது’’ என்று யோசனை கொள்கிறான். அன்று மாலையே அவன் தரகர் அந்தோணியை அவர் வீடு சென்று சந்திக்கிறான். அவர்களுக்கிடையே நடக்கும் உடையாடலின் ஒரு பகுதி:

``. . . சரி இப்ப என்ன விஷயம்?’’ என்றார் அந்தோணி.

``அதான் சொன்னேனே, மீனா விஷயமா.’’

``மீனாவுக்கு இப்ப என்ன?’’

``நல்லாத்தான் இருக்கு. எனக்குத்தான் ஒடம்புக்கு முன்னே மாதிரி இல்லே. மீனாவை ஒரு நல்ல இடமாப் பாத்து ஒரு ஏற்பாடைப் பண்ணிட்டா எனக்குக் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்’’ என்றான் கந்தன்.

``போடா, பைத்தியக்காரா, மீனா தங்கமான பொண்ணு: அது இல்லாட்டி நீ இன்னும் குட்டிச் சுவராப் போவே.’’

``நான் எப்படியும் போறேன். அது எங்காச்சிம் நல்லா இருந்தாப் போதும்.’’

கந்தன் தான் வாழும் வாழ்விலிருந்து தனக்கான தார்மீக நியதி கொண்டிருக்கிறான். சம்பிரதாய ஒழுக்க நெறிகள் அண்டாமல் தன் போக்கில் ஒரு வாழ்வை அமைத்துக்கொண்டு வாழும் கந்தனுக்கு அவன் இச்சமூகத்தில் வாழ்வதனாலேயே தன் வாழ்முறை குறித்த மனச் சங்கடங்களுக்கு ஆளாவதும் நிகழவே செய்கிறது. அநேகமாக சம்பிரதாய ஒழுக்க நியதிகளைச் சார்ந்தியங்கும் பிற மனிதர்களோடு வாழ வேண்டியிருக்கும்வரை இந்நியதிகளின் பிடியிலிருந்து முழு முற்றாக விடுதலை பெறுவதென்பது சாத்தியமுமில்லை. அதில் ஒருவன் எவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்கிறான் என்பது முக்கியமான விஷயமுமில்லை. அவற்றிலிருந்து விடுபட்ட வாழ்வை மேற்கொண்டிருப்பதும் அவ்வாழ்வினூடாகத் தன்னிலிருந்து தனதான தார்மீக நியதிகளை உருவாக்கும் முனைப்பும்தான் முக்கியமான விஷயம். கந்தனுக்கு அது கூடிவந்திருக்கிறது. ஜி. நாகராஜனின் படைப்பு மனம் மேலானதாகவும், இவ்வாழ்வோடு அது கொண்டிருக்கும் உறவு அக்கறையும் உண்மையும் தீர்க்கமும் அர்த்தமும் கூடியதாகவும் செழித்திருப்பதை உணர்த்தும் அம்சமிது.

இந்த அம்சம் அவருடைய முதல் படைப்பான குறத்தி முடுக்கு குறுநாவலிலும் வலுவாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் மையப் பாத்திரமான ஆண் மத்தியதர வர்க்க வாழ்நிலை கொண்டது என்பதாலேயே அப்பாத்திரம் எதிர்கொள்ளும் மன நெருக்கடிகளும் சிடுக்குகளும் அதிகம். ஒழுக்க நியதிகளை உதறி தன் இயல்பூக்கம் சார்ந்து தன் வாழ்வைக் கொண்டாடுகிறபோதிலும் அப்பாத்திரம் விலைப்பெண்ணான தங்கத்திடம் கொள்ளும் உறவு வலுப்பெறும்போது தன் வார்ப்புசார்ந்த உடமைப்படுத்திக் கொள்ளும் மனநிலைக்கும், உலைச்சல்களுக்கும் ஆளாகிறது. அவள் வாழ்நிலையைச் சீண்டிக் குதறும் கோபமும் பதற்றமும் அவனிடம் சீற்றம் கொள்கின்றன. அச்சீற்றங்களிலிருந்து மீண்டு சகஜம் கொள்ளவும் அவனுக்கு முடிகிறது. அதே சமயம் தங்கத்துக்குப் பொறுப்பேற்று நீதிமன்றத்தில் சாட்சி சொல்வதிலும் அவளை மணம் புரிந்துகொள்ள இயல்பாக விழைவதிலும் அவனுடைய மேலான தார்மீகங்கள் வெளிப்படுகின்றன. படைப்பாளிக்கும் காலத்துக்குமான உறவில் ஜி. நாகராஜன் பதித்திருக்கும் பிரத்தியேக அடையாளமிது. இது கருத்தின்மீது கொண்ட கரிசனத்திலிருந்து உருவாகாமல் புனைவின் இயல்பான மலர்ச்சியில் அது தானதாகக் கொண்டிருக்கும் மகரந்தமாக உள்ளுறைந்திருக்கிறது.

குறத்தி முடுக்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட இரு தளங்களில் ஒன்று மாற்றி ஒன்றாக நகர்கிறது. ஒன்று மைய ஆண் பாத்திரம் தங்கத்திடம் கொள்ளும் முதல் தொடர்பிலிருந்து விரிந்து செழிக்கும் உறவு சார்ந்தது. மற்றொன்று, குறத்தி முடுக்கில் தொழில் புரியும் பெண்களின் நிலை பற்றிய ஒரு வரைமுகம். இப்பகுதி மெல்லிய ஆனால் அதிர்வூட்டும் கோட்டுச் சித்திரங் களாக உருப்பெற்றிருக்கிறது. இது, படைப்புக்கு வலுவூட்டும் வண்ணச் சாயைகளோ, அடர்த்தியோ பெறாததால் இப்படைப்பு எழுச்சி பெறவில்லை.

இப்படைப்பில் தங்கம் அபூர்வமான பெண். கதையின் நிகழ்காலத்தில், காலத்தால் கனிந்து, தான் ஈடுபடும் எந்த ஒன்றிலும் முழுமையான அர்ப்பண உணர்வோடு தன்னை ஒப்படைக்கிறாள். மறுபுறம் குறத்தி முடுக்கில் வாழும் பெண்களின் நிலை பரிதாபமாய் இருக்கிறது. ஒருத்திக்கு மனநிலை பிறழ்கிறது. இன்னொருத்தி ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளப் பிரயாசைப்பட்டு அதன் காரணமாக வேதனை கொள்கிறாள். வேறொருத்திக்கு வாய்த்ததோ அவள் காதலைச் சுரண்டும் எத்தனாக ஒரு காதலன். மற்றொருத்தி தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். இவர்கள் மீது மெல்லிய பச்சாதாப உணர்வு படரும் விதத்திலான வெளிப்பாடு இப்படைப்பின் பலவீனம். மத்தியதர வர்க்கப் பார்வையின் லேசான நிழல் படிந்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் பலவீனம்.

ஜி. நாகராஜனின் சிறுகதைகள் இருவேறு கால கட்டத்தைச் சேர்ந்தவை. 1. அவருடைய ஆரம்ப காலச் சிறுகதைகள். இவை கண்டதும் கேட்டதும் தொகுப்பு வரையானவை. 2. அவருடைய படைப்பூக்கம் செழிப்படைந்திருந்த 72_74 வரையான மூன்று ஆண்டுகளில் எழுதிய கதைகள். பொதுவாக, ஜி. நாகராஜன் தன் சிறுகதைகளில் பல்வேறு வாழ்நிலைக் களன்களைக் கையாண்டிருக்கிறார். தமிழ்ச் சிறுகதையின் வளமான மரபில் ஜி. நாகராஜனின் வருகை துணிச்சலான எழுத்து என்பதிலேயே முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் துணிச்சல், மனிதன் குறித்தும் சமூகம் குறித்துமான அவருடைய அவதானங்களிலிருந்தும், பார்வையிலிருந்தும் வெளிப்பட்டிருப்பது. அதிர்ச்சிக் காகவோ, கிளர்ச்சிக்காகவோ, பரபரப்புக்காகவோ எழுத்தில் காட்டிய துணிச்சல் இல்லை இது. வாழ்வையும், எழுத்தையும் வெகு சுபாவமாக, மனத் தடைகளோ, இறுக்கங்களோ, ஒழுக்க நியதிகள் சார்ந்த பதற்றங்களோ இன்றி அணுகியிருப்பதில் விளைந்திருக்கும் துணிச்சல்.

கிழவனின் வருகையிலிருந்து தொடங்கும் இரண்டாம் கட்டச் சிறு கதைகளில் நுட்பமான படைப்பு மொழியும், செய்நேர்த்தியும், பன்முகத் தன்மையும், நவீன வெளியீட்டுக் கூறுகளும் கொண்ட சிறுகதைகளாக கிழவனின் வருகை, மனிதன், இலட்சியம், எட்டு முழ வேட்டியும் டெர்லின் சட்டையும் அணிந்த மனிதர் ஆகிய நான்கும் குறிப்பிடப்பட வேண்டியவை. கிழவனின் வருகை குறியீட்டுத் தன்மையில் தளமாற்றம் கொள்ளும் கதை. கிழவனைக் காந்தி எனக்கொண்டதொரு வாசிப்புக்கு இடமளிப்பது. அரசியல் _ சமூக _ கலாச்சார நிலைமைகளில் நேர்ந்துள்ள அவலத்தைப் படைப்பு மொழியில் இக்கதை விரித்திருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்நிலை தலைகீழ் மாற்றத்துக்கு ஆளாவதை அபத்தப் பாங்கிலும் குறியீட்டுத் தன்மையோடும் அகப்படுத்தி யிருக்கும் மற்றொரு நவீனச் சிறுகதை மனிதன். படைப்பாளியின் சுய வாழ்க்கை அம்சங்கள் சார்ந்த வாசிப்புக்கும் இடமளிக்கக்கூடிய சிறுகதை. இலட்சியம் மதுரையில் அரங்கேறிய உலகத் தமிழ் மாநாட்டுத் திருவிழா பற்றிய பின்புலம் கொண்டது என்று கருத இடமளிப்பது. இத்தகைய அரசியல் கலாச்சாரக் கூத்து எதற்குமே பொருத்தப்பாடு உடையதாகக் தள மாற்றம் பெறுவதாகவும் குறியீட்டுப் பொதுமை பெற்றிருப்பது. இவருடைய சிறந்த கதைகளில் ஒன்றாக எட்டு முழ வேட்டியும் டெர்லின் சட்டையும் அணிந்த மனிதர் மாயப் புதிர்த் தன்மையில் விகாசம் பெற்றிருப்பது. குறத்தி முடுக்கு குறு நாவலில் தேவயானை என்ற பெண் பற்றிய கோட்டுச் சித்திரமாக இடம் பெற்றிருக்கும் பகுதியை மீள் படைப்பாக்கம் செய்து இக்கதையைப் படைத்திருக்கிறார். பத்தாண்டு கால இடைவெளியில் அவருடைய படைப்பு மனம் பிரக்ஞை வெளியில் விகாசம் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.

ஜி. நாகராஜனின் எழுத்துக்கள் அவை எழுதப்பட்ட காலத்தை விடவும் கால் நூற்றாண்டு கடந்த நிலையில் மேலும் துலக்கம் பெற்று முக்கியமானவையாகவும், அவசியமானவையாகவும் ஒளிரத் தொடங்கியிருக் கின்றன. காலத்தின் பார்வை மேலும் நீடித்து இன்னும் நெருக்கமாக அவற்றின் மீது படியுமென்பதில் சந்தேகமில்லை. அப்போது கலை குறித்த வாழ்வு குறித்த நம் பார்வையில் தீட்சண்யம் கூடியிருக்கும். நம் வாழ்வும் புதிதாக மலர எத்தனிக்கும்.

Jul 16, 2009

க.நா.சுப்ரமணியம்-சி. மோகன்

சி. மோகன், நன்றி : நடைவழிக் குறிப்புகள் .
அகரம் வெளியீடு.

   தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளமான பரப்பை வடிவமைத்த உழைப்பு க. நா. சுப்ரமணியத்தினுடையது. இவருடைய தார்மீக உந்துதலும் சலிimageக்காத செயல் வேகமும் தற்காலத் தமிழ் இலக்கியச் சூழலின் 20 ஆண்டுகளை (1945_65) நிர்மாணித்தன. நாவல், சிறுகதை, கவிதை ஆகிய சாதனங்களில் இவர் தம் படைப்புகளை உருவாக்கியிருக்கிற போதிலும் படைபெழுச்சிமிக்க சிறந்த படைப்பாளி என்று இவரைக் கருத முடியாது. எனினும் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட, தீவிர அக்கறையுடன் கூடிய இவருடைய எழுத்துப் பயணத்தில் தமிழ் இலக்கியச் சூழல் பெரிதும் வளம் பெற்றிருக்கிறது. நாவல் சாதனத்தில் இவருடைய பங்களிப்பு சிறந்தது மட்டுமல்லாமல் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், இவருடைய அருமை, படைப்பாளி என்ற எல்லையில் இல்லை. மாறாக, உலக இலக்கியத்தின் செழுமையைக் கணிசமான மொழி பெயர்ப்புகள் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்ததிலும், வாசகத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் சூழலில் ஒரு எழுச்சியைத் தோற்றுவிக்க படைப்புகள் பற்றியும் படைப்பாளிகள் பற்றியும் சதா அறிமுகப்படுத்துவதில் காட்டிய முனைப்பிலும் அக்கறையிலுமே மேலோங்கியிருக்கிறது.

க.நா.சு. 1912ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை அஞ்சல் துறை அதிகாரி. தாயைச் சிறு வயதிலேயே இழந்த இவர், தந்தையின் பராமரிப்பில் ஒரே மகனாக வளர்ந்தவர். இளம் வயதிலேயே ஆங்கில இலக்கிய வாசிப்பில் திளைத்தவர். 1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மறைந்த நாள் வரை முழு நேர எழுத்தாளராகவே செயல்பட்ட இவருடைய இலக்கிய வாழ்வு நான்கு தளங்களில் அமைந்திருக்கிறது.

1. படைப்பாக்கம்
2. விமர்சனம்; அறிமுகம்
3. மொழிபெயர்ப்பு
4. ஆங்கிலப் பத்திரிகைகளில் எண்ணற்ற கட்டுரைகள்.

படைப்பிலக்கியவாதியாக க.நா.சு.வின் பங்களிப்பு நாவல் தளத்தில் மட்டுமே குறிப்பிடத்தகுந்தது. 1946இல் வெளிவந்த `பொய்த் தேவு’ தமிழ் நாவலின் உயரிய மரபில் முதல் நாவலாகக் கருதப்படக்கூடிய அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்தது `அசுர கணம்’ நாவல். சோதனை முயற்சிகளாகவும், பல்வேறு வகையினவாகவும் அவர் எழுதிய பிற நாவல்கள்: சர்மாவின் உயில், பசி, ஏழு பேர், ஒரு நாள், வாழ்ந்தவர் கெட்டால், ஆட்கொல்லி, பெரிய மனிதன், அவரவர் பாடு, மாதவி, கோதை சிரித்தாள், பித்தப்பூ, தாமஸ் வந்தார், அவதூதர்.

தமிழ் நாவல் பரப்பில் நிலவிய வறட்சி, அச்சாதனத்தில் சில முன்னோடி முயற்சிகளை முன்வைக்க க.நா.சு.வின் படைப்பாளுமைக்கு உதவி இருக்கிறது. ஆனால் தமிழின் வளமான சிறுகதை மரபின் முன் க.நா.சு.வின் சிறுகதைகள் சாதாரணமாகி விடுகின்றன. `மயன்’ என்ற பெயரில் அவர் மேற்கொண்ட கவிதை முயற்சிகளும் பலவீனப்பட்டே இருக்கின்றன. கோட்பாட்டளவில் அலங்காரத்தையும் படிமத்தையும் உதறி, கவிதையை எளிமைப்படுத்த அவர் முயற்சித்த போதிலும் கவித்துவ உக்கிரத்துக்கான மொழியோ, வெளியோ அவருக்கு வசப்படவில்லை.

விமர்சனம் என்பதைக் காலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு அத்தியாவசியமான செயல்பாடாக அடையாளம் கண்டு அதில் தீவிரமாகச் செயல்பட்டவர் க.நா.சு. தமிழ்ப் படைப்புலகம் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., கு. அழகிரிசாமி போன்ற ஆளுமைகளால் பொலிவுற்றிருந்த படைப்பெழுச்சிமிக்க காலத்தில் வணிகப் பத்திரிகைகளின் ஆதிக்கத்தாலும் எழுச்சியாலும் இலக்கிய ரசனையும் வாசகத் தரமும் வீழ்ச்சி அடைவதைக் காணச் சகிக்காது விமர்சனத்தை மேற்கொண்டவர். அதனாலேயே ரசனை வழி தர நிர்ணய விமர்சனமாக அவருடைய விமர்சன முறை அமைந்தது என்று கருதலாம். வாசகனைத் திருப்திப்படுத்த படைப்பாளி இறங்கி வருவதான பாவனை மூலம் இலக்கியமும் பயனடைவதில்லை, வாசகனும் பயனடைவதில்லை. அதனாலேயே வாசகனின் வாசிப்புப் பயணத்தை வற்புறுத்தியவர் க.நா.சு.

``இலக்கியாசிரியனின் கடமை வாசகனை எட்டுவதில்லை. அதற்கு எதிர்மாறாக, வாசகனின் கடமைதான் ஆசிரியனை எட்டிப்பிடிப்பது என்பதை வற்புறுத்த இன்று இலக்கிய விமர்சனம் உபயோகப்பட வேண்டும். இலக்கியாசிரியன் வாசகர்களையோ, ஒரு லக்ஷிய வாசகனையோ எண்ணிக் கொண்டு எழுதுவதில்லை. வாசகன்தான் தன் இலக்கியத் தாகத்தில், `நமக்கேற்ற ஆசிரியன் இவன்’ என்று தேடிக் கொண்டு இடைவிடாமல் ஓட வேண்டும் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலக்கிய விமர்சனம் வாசகர்களுக்கு அடித்துச் சொல்ல வேண்டும்’’ என்று `விமர்சனக் கலை’யில் குறிப்பிடுகிறார்.

விருப்பமில்லாமலேயே விமர்சனத்தை மேற்கொண்டதாகக் க.நா.சு. அவ்வப்போது கூறியிருக்கிறார். எனினும், ரசனை அடிப்படையிலான தர நிர்ணயத்தின் மூலம் தற்கால இலக்கியம் குறித்த விமர்சனப் போக்கை உருவாக்கிய முதல் விமர்சகர் இவர்தான். 1965 வரை தமிழ்ச் சூழலில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வந்தார். அதுவரை அவர் முன்வைத்த பட்டியல்களில் வெளிப்பட்ட அவருடைய கூரிய அவதானிப்பையும் துல்லியத்தையும், அவையே தற்காலத் தமிழிலக்கிய வரலாற்றின் வரி வடிவாக நிலை பெற்று விட்டிருப்பதிலிருந்து உணர முடியும்.

விமர்சனக் கலை, இலக்கிய விசாரம், படித்திருக்கிறீர்களா? (2 தொகுதிகள்) முதல் ஐந்து தமிழ் நாவல்கள், இலக்கிய வளர்ச்சி, நாவல் கலை, கலை நுட்பங்கள் என இவர் எழுதிய விமர்சன நூல்கள் அநேகம்.

க.நா.சு.வின் மற்றுமொரு உயரிய பங்களிப்பு ஐரோப்பிய மொழிகளின் சிறந்த படைப்புகளை உத்வேகத்துடன் மொழி பெயர்த்தது. சிறந்த இலக்கியப் படைப்புனுடனான என் முதல் உறவு `நிலவளம்’ நாவலுடன் கொண்ட அறிமுகத்திலிருந்துதான் தொடங்குகிறது. மொழிபெயர்ப்புப் படைப்புகளை வாசிக்கும் தீராத வேட்கையை அது எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. அன்று நூலக அடுக்குகளில் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் கணிசமாக இருந்தன. வாசிப்பில் தன்னை ஆகர்சித்த சிறந்த நாவல்களையும் சிறுகதைகளையும் தாமாகவே முன்வந்து, எந்த ஒரு நிறுவனத்தின் வேண்டுகோளுக்காகவும் அல்லாமல் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். நாம் போற்றிப் பெருமிதம் கொள்ள வேண்டிய மகத்தான உழைப்பு. எத்தகையதோர் ஈடுபாடும் அக்கறையும் உத்வேகமும் இருந்திருந்தால் இத்தகைய பணிகளை நிறைவேற்றியிருக்க முடியும்.

நட் ஹாம்ஸனின் நிலவளம், செல்மா லாகர்லெவ்வின் மதகுரு, பெர் லாகர் க்விஸ்ட்டின் அன்பு வழி (பாரபாஸ்), ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை மற்றும் 1984 போன்றவை அவருடைய மொழி பெயர்ப்பில் வந்த முக்கிய நாவல்களென சட்டென்று நினைவுக்கு வருபவை. ஐரோப்பியச் சிறுகதைகள், கடல்முத்து என்ற மொழி பெயர்ப்புச் சிறுகதைத் தொகுதிகளும் வந்திருக்கின்றன. ஐரோப்பிய மொழிகளின் செவ்வியப் படைப்புகளை மட்டுமல்லாது, நவீன படைப்புலகின் சிகரங்களான போர்ஹே (பாபிலோனில் லாட்டரி) காம்யூ (விருந்தாளி) போன்றோரைத் தமிழில் முதல் அறிமுகம் செய்தவரும் அவர்தான். சீரிய இலக்கியத்தைப் பொறுத்தவரை அதன் எல்லா வாசல்களினூடாகவும் இவரால் இயல்பாகவும் இணக்கமாகவும் போய்வர முடிந்திருக்கிறது. இது அபூர்வம்.

எழுத்தாளராகவே தன் வாழ்வைத் தொடர இளம் வயதிலேயே தீர்மானித்துவிட்ட இவர், கடைசி வரை முழு நேர எழுத்தாளராகப் படிப்பதிலும் எழுதுவதிலுமே நிறைவடைந்தவர். 1928_34 வரை (16 வயதிலிருந்து _ 22 வயது வரை) எதற்காக எழுதுகிறேன் என்ற சிந்தனை இல்லாமல் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதியதாகக் க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பின்னாளில் மனைவி, ஒரே மகள் என்ற தன் சிறு குடும்பத்தின் வாழ்க்கைப் பாட்டிற்கான வருமானத்தை ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதன் மூலமே அடைந்திருக்கிறார். `தமிழில் நான் எழுத்தாளன்; ஆங்கிலத்தில் பத்திரிகையாளன்’ என்று ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு இவர் எழுதிய கட்டுரைகள் 15,000 என்று ஒரு தகவல். ஒரு நாளைக்கு 7 பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் என்று க.நா.சு. ஓரிடத்தில் கூறியிருப்பதை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாகத்தானிருக்கிறது. அவருள்ளிருந்து அவரை இயக்கிய சக்தி மகத்தானது.

ஆரம்ப காலத்தில் சூறாவளி, சந்திரோதயம் என்ற இதழ்களை நடத்திய போதிலும் `எழுத்து’ இதழின் எழுத்து முறையில் அதிருப்தியடைந்து அவர் தொடங்கிய `இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மரபில் ஒரு புத்தெழுச்சியாக அமைந்தது.

1965இல் க.நா.சு. தன்னுடைய 53ஆவது வயதில் தன் குடியிருப்பை டில்லிக்கு மாற்றினார். கடுந்தவமென முனைப்புடன் செயலாற்றியும் வணிகச் சூழலின் செல்வாக்கு தமிழில் செழித்தோங்கியதில் விரக்தியடைந்து, இந்த மாற்றத்தை அவர் மேற்கொண்டதாகத் தெரிகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் 1985இல் அவர் குடியிருப்பை சென்னைக்கு மீண்டும் மாற்றியபோது, முதுபெரும் எழுத்தாளருக்கான அங்கீகாரமும் கௌரவமும் அவரை வந்தடைந்தன. பிற்கால 3 ஆண்டு சென்னை வாழ்க்கையில் பெரும் பத்திரிகைகள் அவர் எழுத்துகளைக் கேட்டு வாங்கி வெளியிட்டன.

குங்குமம், முத்தாரம், தினமணிக்கதிர், துக்ளக் போன்ற பெரும் பத்திரிகைகளில் அவருடைய கட்டுரைத் தொடர்கள் வெளிவந்தன.

சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியர் பதவி கிடைத்தது. அச்சமயத்தில் அவரைப் பார்த்தபோது, 75ஆவது வயதில் முதல் முதலாக மாதச் சம்பளம் வாங்கப் போவது பற்றி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

1988இன் மத்தியில் மீண்டும் டில்லி சென்ற க.நா.சு. அவ்வாண்டின் இறுதியில் மறைந்து விட்டார். க.நா.சு. ஓர் இலக்கிய இயக்கம்.

சம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்

சி. மோகன்
(சென்னையில் சென்றவாரம் 11ஆம் தேதி சம்பத் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
1975ஆம் ஆண்டு கவிஞர் உமாபதியின் முயற்சியில் ‘தெறிகள்’ காலாண்டிதழ் வெளிவந்தது. அச்சமயம் அறிவிக்கப்பட்ட நெருக்கடி கால நிலையின் காரணமாக உமாபதிக்கு ‘தெறிகள்’ நடத்தியது தொடர்பாக அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அவ்விதழ் தொடர்ந்து வெளிவராமல் போனது. ஓர் இதழ் மட்டுமே வெளிவந்த தெறிகளில் இரண்டு மிக முக்கியமான படைப்புகள் வெளிவந்திருந்தன. ஒன்று : கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம் ; மற்றொன்று: சம்பத்தின் ‘இடைவெளி’ நாவல். கலாப்ரியாவின் சுயம்வரம் பற்றி, நண்பர்கள் சிலருடன் இணைந்து அப்போது நான் நடத்திக் கொண்டிருந்த ‘விழிகள்’ இதழில் கட்டுரை எழுதினேன். அதே சமயம் ‘தெறிகள்’ இதழில் சம்பத்தின் இடைவெளி நாவல் முடிந்திருந்த பக்கத்தின் கீழ் இருந்த சிறு வெற்றிடத்தில் தமிழில் அதுவரை வாசித்த நாவல்களில் அதுவே மிகச் சிறந்தது என்ற என் எண்ணத்தையும் அந்நாவல் வாசிப்பு எனக்குள் ஏற்படுத்திய எக்களிப்பையும் நுணுக்கி நுணுக்கிக் குறித்து வைத்திருந்தேன். இன்றும் அந்த எண்ணத்தையும் எக்களிப்பையும் இடைவெளி தந்து கொண்டிருக்கிறது.

1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான் க்ரியாவில் பணியாற்றுவதற்காக சென்னை வந்தேன். ‘க்ரியா’ புத்தக வெளியீட்டைத் தீவிரப்படுத்த யோசித்திருந்த நேரமது. அப்போது க்ரியா ராமகிருஷ்ணனிடம் ‘இடைவெளி’யை வெளியிடலாமென்று மீண்டும் யோசனை தெரிவித்தேன். ராமகிருஷ்ணன் வெளியிடப்படுவதற்கான கையெழுத்துப் பிரதிகளின் அடுக்கிலிருந்து ஒரு டயரியை எடுத்துக் கொடுத்தார். ராமகிருஷ்ணன் ஏற்கெனவே கேட்டுக் கொண்டதற்கிணங்க சம்பத் ‘தெறிகள்’ இதழில் வெளியான பனுவலில் சில திருத்தங்கள் செய்து ஒரு டயரியில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அதிலும் ஆங்கிலச் சொற்கள் நிரவிக் கிடந்தன. ‘அவரோடு உட்கார்ந்து எடிட் செய்யலாமென்றால் அவர் அதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள், என்றார் ராமகிருஷ்ணன். இதனையடுத்து சம்பத்துடனான முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் சற்றும் எதிர்பார்த்திராத தோற்றம்; செமத்தியான உடல்வாகு; பருமனும் சரி , உயரமும் சரி. அவரைச் சம்மதிக்க வைப்பது சிரமமாகவே இருக்கும் ; எனினும் பக்குவமாக அவரை இந்த முடிவுக்கு நகர்த்திக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற என் முன்ஜாக்கிரதைகளுக்கு மாறாக, முதல் ஓரிரு பக்கங்களை முன்வைத்து நான் தெரிவித்த ஓரிரு யோசனைகளின் அளவிலேயே அவர் சரி, நாம் சேர்ந்து பார்க்கலாமென்று சம்மதித்துவிட்டார்.

இதனையடுத்து, சம்பத்தும் நானும் ராமகிருஷ்ணனுடைய வீட்டில் பகற்பொழுதில் வரி வரியாகப் பார்த்தோம். ஏªழுட்டு நாட்களில் அப்பணி முடிந்ததாக ஞாபகம். சதா தகிக்கும் உள்ளார்ந்த தீவிர மனநிலையும், நேசிக்கக்கூடிய வகையிலான ஒருவித பேதமையும் ஒன்றையொன்று மேவி அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அப்போது தொடங்கிய நட்பும், சந்திப்பும் அடுத்த ஆறேழு மாதங்கள் _ அதாவது 1984ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி அவர் இறந்ததற்கு சில நாட்கள் முன்பு வரை தொடர்ந்தது.

1983ஆம் ஆண்டு இறுதியில் என் குடும்பமும் சென்னைக்கு வந்து நாங்கள் நண்பர் சச்சிதானந்தம் வீட்டு மாடியில் குடியமர்ந்தோம். அந்த மாடி இரண்டாகத் தடுக்கப்பட்டு ஒரு பகுதி எங்கள் வீடாகவும், மற்றொரு பகுதி ‘க்ரியா’வின் புத்தகக் கிடங்காகவும் அச்சுக் கோப்பகமாகவும் அமைக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஜூன் வாக்கில் இடைவெளி அச்சு வேலை தொடங்கியபோது சம்பத் அநேகமாக ஒவ்வொரு நாளும் மதிய வேளைகளில் வீட்டுக்கு வந்துவிடுவார். சென்னை வெயிலில் அவர் வந்தவுடன் செய்யும் முதல் காரியம் சட்டையைக் கழற்றிப் போடுவதுதான். சட்டை பாக்கெட்டில் எப்போதும் லாட்டரி சீட்டு இருக்கும். இப்படி 10_15 நாட்கள் வந்து கொண்டிருந்தவர் திடீரென்று பல நாட்கள் வரக் காணோம். ‘இடைவெளி’ புத்தகம் அச்சு வேலை முடிந்து பைண்டிங்கில் இருந்தது. இச்சமயத்தில் ஒரு நாள் காலை திலீப்குமார் ‘சம்பத் இறந்துவிட்டதாகத் தகவல்’ என்று தயங்கியபடி கூறினார். அத்தகவல் தெரியவந்தபோதே அவர் இறந்து 15_20 நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அன்றே அத்தகவல் உறுதிபடுத்தப்பட்டது. நான் அன்றே சம்பத் வீடு சென்று அவருடைய துணைவியாரைச் சந்தித்தேன். மறுநாளே அவர் பற்றிய ஒரு குறிப்பை எழுதி அச்சிட்டுப் புத்தகத்தில் சேர்த்தோம். ஒரு படைப்பாளியின் மரணம் பற்றிய தகவல்கூட வெளித்தெரிய சில நாட்கள் எடுக்கும் அவல நிலைதான் நம் சூழலின் யதார்த்தம்.

தெறிகள் இதழில் வாசித்தது தொடங்கி, அப்பிரதியை செம்மைப்படுத்துவதற்கு முன்னும் அப்பணியினூடாகவும், புத்தகமாக வெளிவந்த பின்பு அவ்வப்போதும், நடைவழிக் குறிப்புகளுக்காக சம்பத் பற்றி எழுதும்போதும் என நான் பலமுறை படித்த நாவல் இடைவெளி. நான் அதிக முறை படித்த நாவலும் இதுதான்.

பாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் வில்லியம் ஃபாக்னரிடம் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, ஜேம்ஸ் ஜாய்சை ஒரு மகத்தான படைப்பாளி என்று குறிப்பிட்டுவிட்டு, ‘‘ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதைப் போல நம்பிக்கையோடு ஜாய்சின் யூலிஸஸை நீங்கள் அணுக வேண்டும்’’ என்று கூறியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ‘இடைவெளி’யுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் இருந்து வருகிறது.

2

காலம், வாழ்க்கை, மனித ஸ்திதி, ஆகியவற்றைக் கண்டுணர்ந்தும் கிரஹித்தும் ஒரு நாவல் புனைவாக்கம் பெறுகிறது. இப்புனைவு அதற்கான ஞானத்தை, மெய்யறிவைக் கொண்டிருக்கிறது. இது மனித இருப்புக்குப் புதிய சாத்தியங்களையும் காலத்துக்கான கண்டுபிடிப்புகளையும் அளிக்கிறது. அதனால்தான், ‘‘அறிவியல் சிந்தனைகளுக்காகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் 19ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பே, மனித இருப்பின் விலக்க முடியாத ஒரு பரிமாணமாக, மடத்தனம் இருப்பதை ஃபிளாபெர்ட் தம் நாவல்கள் மூலம் கண்டடைந்ததுதான்’’ என்று மிலன் குந்தரேவால் கூற முடிகிறது. மேலும் ஃபிளாபெர்ட்டின் இந்தக் கண்டுபிடிப்பு மார்க்ஸ், ஃபிராய்டு ஆகியோரின் திடுக்குற வைக்கும் கருத்துகளை விடவும் எதிர்கால உலகுக்கு முக்கியமானது என்கிறார்.

ஆக, நாவலாசிரியன் தன்னளவில் ஒரு தத்துவவாதி, சிந்தனையாளன், கண்டுபிடிப்பாளன். இவ்வகையில்தான் சிந்தனையும், புனைவும் கூடி முயங்கி உருக்கொண்ட இடைவெளி, தமிழின் பெறுமதியான ஒரு நாவலாகி இருக்கிறது.

தமிழ் நாவல் பரப்பில் இந்நாவலின் முக்கியத்துவம் பற்றிச் சற்று விரிவாகப் பேசுவதற்கு முன் மிகச் சிறந்த ஆங்கில நாவலாசிரியரான டி. எச். லாரன்ஸ் ‘கீலீஹ் ழிஷீஸ்மீறீ விணீttமீக்ஷீs’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு ஆதங்கத்தை முன்வைக்க விரும்புகிறேன்: ‘பிளாட்டோவின் உரையாடல்கள் விநோதமான சிறிய நாவல்கள். தத்துவமும் புனைகதையும் பிரிந்தது, இவ்வுலகின் மிகப் பெரிய சோகமாக எனக்குப் படுகிறது. இரண்டும் ஒன்றாகத்தான் புராணக் கதைக் காலங்களிலிருந்து உருவாகி வந்திருக்கின்றன. அரிஸ்டாடில், தாமஸ் அகின்னஸ் போன்றவர்களால் இவை ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துத் தொல்லைபடுத்திக் கொண்டே இருக்கிற தம்பதிகளைப் போல் தனித்தனியே பிரிந்து போயின. இதன் காரணமாக நாவல் மேலோட்டமானதாகவும், தத்துவம் அருவமானதாகவும் வறண்டு போயின. நாவலில், இவ்விரண்டும் மீண்டும் இணைந்து வர வேண்டும்.’

இத்தகையதோர் இணைப்பில் புனைவாகியிருக்கும் நாவல்தான் இடைவெளி. இதனாலேயே தமிழின் முதல் முழு முற்றான கருத்துலக நாவலாக இடைவெளி தனித்துவம் பெற்றிருக்கிறது.

சம்பத்துக்கு முன் தமிழ் நாவல் பரப்பில் கருத்துலகச் சாயல் கொண்ட படைப்பாளியாக அறியப்பட்டு அதனாலேயே பிரபல்யமும் அடைந்தவர் ஜெயகாந்தன். ஆனால் அவருடைய படைப்புகளில் புனைவுலகின் மெய்யறிவிலிருந்து கருத்துகளோ, சிந்தனைகளோ உருண்டு திரள்வதில்லை. மாறாக, கருத்துலகம் சமூகத்துக்கு அளித்த சாரங்களின் சில அம்சங்களை ஸ்வீகரித்துக் கொண்டு அவற்றுக்குப் புனைவடிவம் தந்தவர் ஜெயகாந்தன். இவ்விடத்தில் இன்று, கலை, இலக்கியமானவை எந்த ஓர் அமைப்புக்குமோ, கொள்கைக்குமோ, துறைசார் அறிவுக்குமோ சேவகம் செய்வன அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, படைப்பின் மெய்யறிவுப் பயணத்திலிருந்து உருக்கொள்ளும் சிந்தனைகளிலிருந்து பிற அமைப்புகளும், கொள்கைகளும், துறைசார் அறிவுகளும் தங்களை செழுமைப்படுத்திக் கொள்ள முடியும். முடிந்திருக்கிறது. சலித்துப் போன உதாரணம் : ஃப்ராய்டு, தாஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து பெற்ற பெறுமதிகள். கலை_இலக்கியங்களிடம் காலம் எதிர்பார்ப்பது இதுதான். ஜெயகாந்தனிடம் இது நிகழவில்லை. ஆனால், இடைவெளி நாவலில் அடிப்படைகளில் உழன்று தகிக்கும் தினகரனை சாவு பிரச்சனை ஆட்கொள்ளும் போது அவர் மேற்கொண்ட பயணத்தினூடாக படைப்பு ஒரு மகத்தான கண்டுபிடிப்பை வசப்படுத்துகிறது. அதுவே இப்படைப்பை முக்கியத்துவமிக்கதாக்கி இருக்கிறது. சம்பத்தின் ‘இடைவெளி’க்குப் பின் வெளிவந்த சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.’ சில குறிப்புகள்’ தமிழில் சிந்தனைத் தளத்தில் இயங்கிய முதல் நாவலாகப் போற்றப்பட்டுக் கொண்டாடப்பட்டது. பெறப்பட்ட அறிவின் உதிரித் தொகுப்புகளாகவே பெரிதும் அமைந்துவிட்ட இந்நாவல் அதன் வசீகர நடை காரணமாக பெரிதும் சிலாகிக்கப்பட்டது. அடியறியா, ஆழமறியா புனைவுப் பயணத்தினூடாகப் படைப்பு மெய்யறிவு கொள்வதற்கான எவ்விதப் பிரயாசையும் இந்நாவலில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஒரு அடிப்படைப் பிரச்சனைக்குத் தன்னை முழு முற்றாக ஒப்புக் கொடுக்க சம்பத்துக்கு முடிந்திருக்கிறது.

‘இடைவெளி’ 7 அத்தியாயங்கள் கொண்ட சிறிய நாவல். இந்நாவலின் மையப் பாத்திரமான தினகரன் பற்றி நாவலிலிருந்து நாம் அறிவது என்ன என்று பார்க்கலாம்.

பத்தாண்டுகள் முன்னோக்கிப் பார்க்க விரும்பாத இச்சமூக ஓட்டத்திற்கிடையே அடிப்படைப் பிரச்சனைகளில் உழன்று தகிக்கும் ஒருவர் தினகரன். இப்போது அவரை ஆட்கொண்டிருப்பது சாவு பற்றிய ஒரு கேள்வி. பிறப்பால் பிராமணன். அவருக்கு தாஸ்தாயெவ்ஸ்கியை ரொம்பப் பிடிக்கும். காரணம் அவர் Êஏசு கிறிஸ்துவை, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது கடைசி பட்சமாக, அசைக்க முடியாத அளவுக்கு ஓர் கண்டன விமர்சனம் பண்ணிப் போயிருக்கிறார். இது தினகரனுக்கு ரொம்ப முக்கியம். ஏசுவை தினகரனுக்குப் பிடிக்கும். ஆனால் எண்ண ரூபமான எதையுமே எதிர்கொள்ளத்தானே வேண்டும் என்பது தினகரனின் நிலைப்பாடு. (இப்படிப் பார்க்கும்போது வேதங்களும் உபநிஷத்துகளும் இந்த மாதிரியான பரிசீலனைக்கு இன்னமும் உட்படவில்லை என்பது அவரது ஆதங்கம்.

கிட்டத்தட்ட 35 வயதான தினகரனின் குடும்பம் இது. மனைவி பத்மா. குழந்தைகள் குமார், ஸ்ரீதர், ஜெÊயஸ்ரீ, (சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களே இவை.) கலவியில் அதீத நாட்டமுடையவர். சாவு பிரச்சனையில் உழலத் தொடங்கிய பிறகு, மனைவியே கேட்டுக் கொண்டும் மறுக்குமளவு பிரச்சனையில் அமிழ்ந்து போனவர். டில்லியில் பணிபுரிந்த போது கல்பனா என்ற பெண்ணுடன் உறவு. மனதில், நினைவுகளில் அவளின் தீவிர இருப்பு.

சாவு பிரச்சனை தினகரனை ஆட்கொள்ளத் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் தோல் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றில் முக்கிய பதவியில் இருக்கிறார். பிரச்சனை தீவிர முகம் கொள்ளும்போது, வேலை அதிகமில்லாத, மதிப்பில்லாத பேக்கிங் பிரிவுக்குத் தானே விரும்பிக் கேட்டு மாற்றிக் கொள்கிறார். முன்னர் டில்லியிலும் தற்சமயம் சென்னையிலுமாக ஒருபோதும் ஒரு அலுவலகத்தில் அதிக நாட்கள் அவர் நீடித்திருந்ததில்லை. சாவு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு உழன்று தவிக்கும் போது வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும் அவருடைய நடவடிக்கைகள் பரிகசிக்கப்படுகின்றன.

இவ்வாறாக, லௌகீக வெற்றியை நோக்கி விரையும் பொது ஓட்டத்துக்கு எதிர்திசையில் நிகழ்கிறது இவர் பயணம். மனித ஸ்திதியின் மாறுபட்ட சாத்தியப்பாடு இது. இதிலிருந்துதான் நாவல் புது வெளிச்சம் கொள்கிறது.

சாவு பற்றிய ஒரு அடிப்படைத் தன்மையை சொல்லிவிடப் போகிறோம் என்ற எண்ணம் தினகரனிடம் உருவாவதிலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. சாவு பல விதங்களில் சம்பவித்தாலும் அதன் அடிப்படைக் கூறு ஒன்றுதான் என்ற யூகத்துடன் முதல் அத்தியாயம் முடிகிறது.

இரண்டாவது அத்தியாயத்தில் தினகரன் தான் காணும் கனவில் ‘இடைவெளி’ என்று தன்னையறியாது சொல்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் சாவு உருவம் தலையாட்டுகிறது.

இது குறித்து சதா உலைந்து கொண்டிருக்கும் தினகரன் வாழ்வு என்பது அணுசரணையான இடைவெளி என்றும், சாவு என்பது முரண்பாடுடைய இடைவெளி என்றும் கடைசியில் கண்டடைவது, ‘எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கே உரித்தான வீர்யத்தோடும், பூ மணப்பின் குணத்தோடும், நாவலில் விகாசம் பெற்றிருக்கிறது.

தகிக்கும் மனதின் வெதுவெதுப்பை இந்நாவலின் பக்கங்களில் நாம் உணர முடியும். கண்டடைவதின் பரவசத்தையும் தான். இந்த வெதுவெதுப்பும் பரவசமும் நம் வாழ்வுக்கு அவசியமானவை. அதனால்தான் நாவலின் கடைசியில் தினகரன் சாவுக்கு முன் மானசீகமாக மண்டியிடுவதைப் போல ஒவ்வொரு வாசிப்பின் போதும் நான் மண்டியிடுகிறேன்.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்