Jul 31, 2010

அத்துவான வேளை – தேவதச்சன்

தேவதச்சன் கவிதைகள்

நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்
ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
சட்டையை தொளதொள வென்றோ
இறுக்கமாகவோ போடுகிறாய்
தலைமுடியை நீளமாகவோ
குறுகவோ தரிக்கிறாய்devathachan
உன்னிடமிருந்து பறந்து சென்ற
இருபது வயது என்னும் மயில்
உன்
மகளின் தோள் மீது
தோகை விரித்தாடுவதை
தொலைவிலிருந்து பார்க்கிறாய்
காலியான கிளைகளில்
மெல்ல நிரம்புகின்றன,
அஸ்தமனங்கள்,
சூரியோதயங்கள் மற்றும்
அன்பின் பதட்டம்

*

கைலாசத்தில்
புதரோரம்
ஒட்டாமல் கிடந்த
சிவனின் இடது பாகமும்
பார்வதியின் வலதும்
சரிந்து பூமியில் விழுந்தன
சாமிகளின் உடம்பில்லையா
காலங் காலங் காலமாய்
அழுகிக் கொண்டிருக்கிறது
தம் வீடுகளில்.

*

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன
வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை.

*

பழத்தை சாப்பிட்டு விடு
நாளைக்கென்றால் அழுகிவிடும்
என்றாள் அம்மா
வாங்கி விண்டு
உண்டேன்
இன்றை.

____________________________________

அத்துவான வேளை தொகுப்பிலிருந்து வெளியீடு: முகவரி, சென்னை - 59

Jul 30, 2010

வலி தரும் பரிகாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்

கோபி கிருஷ்ணன்

இலக்கியச் சிந்தனை 1986ம் ஆண்டு சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக கோபி  கிருஷ்ணனைக் கேட்டுக்கொண்டபோது அவர் எனது சிறுகதையான தெருவின் சுபாவத்தைத் தேர்வு செய்திருந்தார். அந்தக் கதையைப் பற்றி தபால் கார்டு ஒன்றில் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எனக்கு எழுதியிருந்தார். அப்படித்தான் கோபி கிருஷ்ணனுக்கும் எனக்குமான உறவு துவங்கியது.

அதன் முன்னதாக கோபியின் கதையொன்றை கணையாழியில் வாசித்திருக்கிறேன். அவரது குறு நாவல் ஒன்றும் என்னுடைய குறுநாவல் ஒன்றோடு தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்வாகியிருந்தது. கோபியின் குறுநாவலை வாசித்தபோது அதன் பரிகாசமான குரலும், அன்றாட வாழ்வை அவர் காணும் விதமும் gopiஎனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் யார் கோபிகிருஷ்ணன், எங்கேயிருக்கிறார் என்று நான் அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

பின்னர் இனி இதழில் புயல் என்றொரு கோபியின் கதை வெளியாகியிருந்தது. அந்தக் கதையைப் பலமுறை படித்திருப்பேன். எதிர்பாராத ஒரு மழை நாளைப் பற்றியது கதை. கதையின் மையமாகபுயல் இருந்தபோதும் கதை மத்தியதர வர்க்கக் குடும்பம் ஒன்றில் நிகழ்கிறது. கதையை கோபி எழுதியுள்ள விதம் அற்புதமானது. குரலை உயர்த்தாமல் கதையின் வேகம் அதிகமாகிக்கொண்டே போகும். கதை முடியும்போது கதையின் மையம் புயல் அல்ல நமது அன்றாட வாழ்வின் நிலைகுலைவு என்பது புரியத்துவங்கும்.

அந்தக் கதையை வாசித்த நாளில் இருந்து கோபி கிருஷ்ணனைச் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். அவர் சென்னையில் வசிக்கிறார் என்ற விபரத்தைத் தவிர வேறு எதையும் அப்போது அறிந்துகொள்ள முடியவில்லை. பிறகு அவரது ஒவ்வாத உணர்வுகள் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதிலிருந்த கதைகளும் எனக்குப் பிடித்திருந்தன.

கோபி கிருஷ்ணனின் கதைகள் நகரவாழ்வின் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மனிதர்களைப் பற்றியவை. குறிப்பாக வாழ்விடத்தில் அவர்கள் கொள்ளும் சிக்கல்கள், பிரச்சினைகள் அதன் ஊடாக வெளிப்படும் அதீத மனவோட்டங்கள் இவை அவரது கதைகளின் அடிநாதம். கோபி கதைகளை மிகச் சிறியதாகவே எழுதக்கூடியவர். நான்கு பக்க அளவிற்குள் பெரும்பான்மைக் கதைகள் முடிந்துவிடுகின்றன. ஆனால் இந்தக் கதைகள் நம்மைச் சுற்றிய சமூகவாழ்வைப் பிரதிபலிக்கக்கூடியவை. சினிமா, அரசியல், அதிகாரம், நகரவாழ்வின் வேகம் என்று பெருநகரின் பிரிக்கமுடியாத அம்சங்கள் அவரது கதைகளில் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுள்ளன.

கோபியின் கதாபாத்திரங்கள் எதிர்பாராத நிலைகுலைவைச் சந்திப்பவர்கள். அல்லது ஏதோவொரு குற்றபோதத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்துக்கொண்டவர்கள். எல்லாப் பிரச்சினைகளுக்குப் பிறகும் உலகின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். மனச்சிதைவு கொண்டவர்கள் என்று அறியப்பட்டு ஒதுக்கப்படுகின்றவர்கள் மீது அவரது பெரும்பான்மை கவனம் குவிகிறது. மனச்சிதைவின் பின்னால் உள்ள காரணங்களும் மனச்சிக்கல்களுக்கு, குடும்பம் என்ற அமைப்பு எவ்வளவு ஆதாரமாக உள்ளது என்பதையும் அவரது கதைகள் விவரிக்கின்றன. 

1990களின் துவக்கத்தில் சென்னையில் சுற்றியலைந்த போது ஒருநாள் மதிய நேரத்தில் தி.நகர்  கிருஷ்ணவேணி திரையரங்கம் அருகில் தற்செயலாக கோபி கிருஷ்ணன் கடந்து போவதைக் கண்டேன். அது கோபி கிருஷ்ணன்தானா என்று நிச்சயமாகத் தெரியாது. ஆனால் அவரது புகைப்படம் ஒன்றைக் கண்டிருக்கிறேன். ஆகவே அது கோபியாகத்தான் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பின்னாடியே சென்றேன். அவர் பேருந்து நிலையத்தின் எதிரிலிருந்த டீக்கடையில் நின்று கொண்டு தேநீர் அருந்தினார்.

அருகில் சென்று நீங்கள் கோபி கிருஷ்ணன்தானே என்று கேட்டேன். ஆமாம் என்று தலையசைத்தார். நான் எஸ். ராமகிருஷ்ணன், கணையாழியில் எனது கதை வெளி வந்திருக்கிறது என்றதும் உடனே என் கைகளைப் பற்றிக் கொண்டு உற்சாகமாக நல்லா எழுதிட்டு வர்றீங்க நான் உங்க சிறுகதையை இலக்கியச் சிந்தனைக்காகத் தேர்ந்தெடுத்தேன். ஞாபகமிருக்கா என்று கேட்டார். பின்னர் இருவருமாகத் தேநீர் குடித்துவிட்டு அங்கேயே பேசிக் கொண்டிருந்தோம். பேருந்தின் இரைச்சல்களை மீறி எங்கள் பேச்சு தொடர்ந்தது.

கோபியின் பார்வை இடையிடையே என் பேச்சைக் கடந்து அருகில் இருந்த கடையின் ஓரமாக உட்கார்ந்திருந்த ஒரு மனிதன் மீது குவிந்து இருந்தது. அந்த மனிதன் கசக்கி எறியப்பட்ட காகிதம் ஒன்றைக் கிழித்து வீசியபடியே உட்கார்ந்திருந்தான். அவன் தலை செம்பட்டை படிந்து பற்கள் காவியேறிப் போயிருந்தன. அழுக்கேறிய பேண்டும் சட்டையும் போட்டிருந்தான். அவனது வலது கையில் பெரிய தழும்பு தெரிந்தது. வயது நாற்பதைக் கடந்திருக்கும். முகத்தில் இறுக்கம் படிந்து போயிருந்தது. தன் கைகளை வேகமாகக் காற்றில் வீசி அவன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

கோபி அவனை கையைக் காட்டி அவன் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறான் பாருங்கள் என்று சொன்னார். இருவருமாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவன் செய்கைகள் ஒருபோதும் ஒன்றாக இருப்பதில்லை, அதில் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒருவிதம் உருவாகிறது. அவன் மிக உற்சாகமாக இருக்கிறான்  என்று சொல்லியபடியே பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் தான் புகை பிடிக்கலாமா என்று என்னிடம் கேட்டார். நடந்து சென்று சிகரெட் வாங்கிக்கொண்டு வந்து பற்றவைத்த படியே திரும்பவும் அந்த மனிதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு என்னிடம் நீங்கள் முன்றிலுக்கு வந்தீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அருகில் ஆத்மன் ஆலோசனை மையம் என்ற ஒன்றை, தானும் நண்பர் சபியும் சேர்ந்து திறந்திருப்பதாகவும் அதற்காகத் தான் மாலை வேளைகளில் அங்கே வந்து போவதாகவும் அந்த மையம் புகை மற்றும் மதுப் பழக்கங்களில் இருந்து மீண்டுவர நினைப்பவர்களுக்கான ஆலோசனையைத் தருகிறது என்றார். நான் தலையசைத்துக்கொண்டேன். பிறகு அவராகவே அந்தப் பழக்கங்கள் என்னிடமே இருக்கிறது. ஆனாலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதை மீறிச் செல்லும்போதுதான் ஆலோசனைகள் தேவை. தன்னால் அதை ஒரு மருத்துவச் சேவையாக  எடுத்துச் சொல்லவும் மாற்றவும் முடியும் என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

கோபி கிருஷ்ணனின் சிரிப்பு மிக அலாதியானது. இயல்பாகவும் அடக்க முடியாததாகவும் சில வேளைகளில் வெளிப்படும். கோபி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடியவர் என்பதை அருகில் இருந்து சில முறைகள் கண்டிருக்கிறேன். முதல் சந்திப்பிலே என்னிடம் கோபி, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். எதற்காகக் கேட்கிறீர்கள் என்று கேட்டேன்.

இல்லை தஸ்தாயெவ்ஸ்கியிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். “My friends, God is necessary to me, because he is the only being that I can love eternally.” என்ற அவரது பதில் குழப்பமாக இருக்கிறது, திடீரென அது நினைவிற்கு வந்தது. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நிறைய நேரங்களில் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது என்றபடியே நீங்கள் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

இருவரும் அந்தத் தேநீர்க்கடையில் இன்னொரு தேநீர் குடித்தபடியே தஸ்தாயெவ்ஸ்கி பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாக  இடியட்  என்னும் நூலைப் பலமுறை வாசித்திருப்பதாகச் சொல்லியபடியே   குற்றமும் தண்டனையும் நாவலில் இடம்பெற்றுள்ளதாக Talking nonsense is man's only privilege that distinguishes him from all other organisms என்ற வரியைச் சொல்லியபடியே இது மிக நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது  என்று அவராகச் சிரித்துக்கொண்டார்.

இருவருமாகப் படியேறி ஆத்மன் ஆலோசனை மையமிருந்த வளாகத்திற்குள் சென்றோம். நான் முன்றில் புத்தகக் கடைக்கும் அவர் ஆலோசனை மையத்திற்குள்ளமாகப் பிரிந்துவிட்டோம். முன்றில் கடையில் இருந்த எழுத்தாளர் மா. அரங்கநாதன் அவர்கள் கோபி உங்க கூட வந்த மாதிரி இருந்தது. இருக்கானா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அவர் தன்னிடம் படிக்கக் கேட்டதாகச் சொல்லி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அது டி.ஹெச்.லாரன்ஸின் யீஷீஜ் என்ற புத்தகம். சில நிமிசங்களுக்குப் பிறகு கோபி வந்து அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றார்.

அரைமணி நேரத்திற்கு ஒருமுறை புகைபிடிப்பதற்காக கோபி முன்றிலைக் கடந்து அருகில் இருந்த வெற்று வெளிக்குச் செல்வார். அப்போது குனிந்த தலையோடு மிக மெதுவாகவே கடந்து செல்வார். தனியே புகைபிடித்துவிட்டு வேகமாகக் கடந்து போய்விடுவார்.

ஆத்மன் ஆலோசனை மையத்திற்கு யார் வருகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நான் ஆவல் கொண்டதில்லை. ஆனால் அங்கே வரும் கோபி கிருஷ்ணனோடு பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன்.

ஒரு முறை அவர் சூளைமேட்டுப் பகுதியில் ஒரு வெள்ளைக்காரருடன் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தப் பக்கமிருந்த பொன்விஜயன் அச்சகத்தில் கல்குதிரை ஓடிக் கொண்டிருந்தது. ஆகவே அதைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது எதிரே வந்தார் கோபி. வெள்ளைக்காரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு மூவருமாகத் தேநீர் அருந்தச் சென்றோம். அவர் பேசிய மிக அழகான ஆங்கிலம் என்னை வியப்பூட்டியது.

அதன் மறுநாள் பேருந்தில் இருவரையும் மறுபடி பார்த்தேன். அந்த வெள்ளைக்காரன் ஒரு அமெரிக்கன் என்று சொல்லி ஆய்வுப் பணிக்காக வந்திருக்கிறான் என்றார். அவருக்கு நிறைய வெளிநாட்டு நண்பர்கள் இருந்தார்கள்.

கோபி அவ்வப்போது சிறுகதைகள் எழுதக்கூடியவர். தனது கதைகளைப் பற்றி அவர் அதிகம் பேசிக் கொண்டதில்லை. கதைகள் நன்றாக உள்ளது என்று பாராட்டும்போது கூட அவர் சிரித்துக்கொள்வார். அதுபோலவே வேறு எந்த எழுத்தாளரையும் பற்றி அவர் கடுமையாகப் பேசியது கிடையாது. கோணங்கியின் ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்’ கதையைப் படித்து விட்டு மிக நன்றாக வந்திருக்கிறது. அதுபோல தானும் ஒரு கதையை எழுதிப் பார்த்ததாகச் சொன்னார். தன்னைப் பற்றியோ தனது மன உளைச்சல்கள் பற்றியோ அவர் அதிகம் சொல்லியதில்லை.

ஒரு முறை அவரைத் தற்செயலாக அம்பத்தூர்ப் பகுதியில் பார்த்தேன். தன் வீடு அருகில்தான் இருக்கிறது என்று சொல்லி அழைத்துச் சென்றார். மிகச் சிறிய குடியிருப்பு. எளிமையான குடும்பம். தன் மனைவியைத் தான் காதலிப்பதாகவும் மனைவியைக் காதலிப்பதில் ஒரு சௌகரியமிருக்கிறது, அதற்கு அதிகம் செலவு செய்யத் தேவையில்லை என்றும் சொல்லிச் சிரித்தார்.

அவரது கதைகளில் அவரது வசிப்பிடமும் அதன் நெருக்கடியும் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன. அப்படிப் பதிவான கதைகளில் ஒன்றில் அண்டை வீட்டுக்காரன் ஒருவனின் காயப்போட்ட ஜட்டி ஒன்று காணாமல் போய்விடுகிறது. உடனே அந்தக் குடித்தனத்தில் இருந்த ஆண்கள் அத்தனை பேரையும் ஜட்டியைக் காட்டச் சொல்லி அந்த நபரின் மனைவி வலம் வருவாள். இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா என்று கோபியிடம் கேட்டேன்.

அவர் சிரித்தபடியே அந்தப் பெண்மணி முரட்டுத்தனமானவள். தன் கணவனின் ஜட்டியை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்காவிட்டால் அப்படி நடந்து கொள்ளப் போவதாக  உரத்துக் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டேன். உள்ளுக்குள் ஒரே நேரத்தில் அப்படி நடந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆவலும், அதே நேரம் அவமதிப்பாகிவிடுமே என்ற உணர்ச்சியும் ஒன்றாகத் தோன்றியது. வீட்டில் இருக்கவே முடியவில்லை. அவளுக்கு பயந்து  வீட்டிற்குப் போகாமல் இரவு வரை வெளியே சுற்றிக் கொண்டிருந்தேன் என்றார்.

கோபி  மதுரையில் பிறந்தவர். தன் பால்ய வயதில் கண்ட மதுரையைப் பற்றிய நினைவுகள் அதிகம் அவருக்குள் இருந்தன. அதை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். கடைசி வரை எழுதவேயில்லை.

உளவியல், சமூக சேவை இரண்டிலும் அவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள பிரபலமான சில உளவியல் மையங்களில் பணிபுரிந்திருக்கிறார். சிகிட்சை மையங்களில் செயல்படும் அதிகாரமும் நோயாளிகளிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறையும் அவரை இணைந்து செயல்படவிடாமல் தடுத்திருக்கிறது.

தான் வேலை செய்த இடம் ஒன்றில் கையூட்டு அதிகம் நடை பெறுகிறது என்று சொல்லி வேலையை விட்டதாகச் சொன்னார். இன்னொரு அலுவலகத்தில் வெளிநாட்டுப் பணத்தை வாங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சொன்னதால் வேலையை விடும்படி ஆனது என்றும் அப்படி  வேலை நீக்க உத்தரவு தந்த போது, தான் அந்த உத்தரவில் நாலைந்து ஆங்கிலச் சொற்கள் தவறாகப் பிரயோகப்படுத்தப்பட்டிருப்பதோடு எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையும் இருப்பதைக் கண்டு பிடித்து உயரதிகாரிக்குத் தெரிவித்தபோது  அவர் மிகுந்த ஆத்திரத்துடன் கோபப்பட்டுத் துரத்தியதாகவும் பரிகாசத்துடன் சொன்னார்.

ஒரு மனிதன் தனக்கு வேலை பறிபோன விஷயத்தைக்கூட இப்படிப் பரிகாசமும் எள்ளலுமாகச் சொல்ல முடியுமா என்று தோணியது. வாழ்க்கை நெருக்கடி அவரை தினசரி படுத்தி எடுத்தபோது அவரிடமிருந்த எள்ளல் மற்றும் இயல்பான நகைச்சுவை உணர்வு குறையவேயில்லை. அவரது மனைவி ஒரு அச்சகத்தில் பணியாற்றுகிறார் என்றும் அங்கே வேலை கடினம் என்றும் அவராகச் சில வேளைகளில் சொல்லியிருக்கிறார். அபூர்வமாகத் தன் மகளைப் பற்றி உணர்ச்சி பூர்வமான நெகிழ்வுடன் பேசுவார்.

கோபியின் கதைகள் மனித அவலங்களை, கீழான செயல்களை, ஒடுக்கப்படும் உணர்வுகளை, மறுக்கப்படும் பாலியலை, அடங்க மறுக்கும் மனச்சிதைவுகளைப் பேசுகின்றவை. அந்த வகையில் அவரது எழுத்திற்கான முன்னோடியாக நகுலனைக் குறிப்பிடலாம். ஆனால் நகுலனிடம் உள்ள தத்துவ சார்பு கோபியிடம் இல்லை. அது போலவே கோபியிடம் உள்ள அன்றாட உலகமும் அதன் மீதான எள்ளலான விமர்சனமும் நகுலனிடம் கிடையாது. இருவருமே தஸ்தாயெவ்ஸ்கியைக் கொண்டாடுபவர்கள்.

தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எந்த வேலையும் செய்வதற்கு அவர் தயராக இருந்தார். சில மாதங்கள் அவர் நக்கீரன் பத்திரிகையில் பிழை திருத்துபவராக வேலை செய்தார். சில மாதங்கள் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் வேலை செய்தார். கொஞ்ச நாட்கள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.

சென்னையில் அம்பலம் என்றொரு அமைப்பின் கலை இலக்கியப் பணிகளை நான் சில மாதங்கள் ஒருங்கிணைப்புச் செய்து கொண்டிருந்தேன். அவர்கள் தங்களது நிகழ்ச்சி குறித்த பதிவுகளைத் தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமாக வெளியிடுவார்கள். இதற்கான மொழிபெயர்ப்பு வேலையை கோபி கிருஷ்ணனிடம் ஒப்படைத்திருந்தேன்.

அடிக்கடி என்னைப் பார்க்க திருவான்மியூர் வருவார். பேருந்தில் பயணம் செய்து வந்து இறங்கி நடந்து சீனிவாசபுரத்திலிருந்த அம்பலம் அலுவலகத்தில் தன் மொழியாக்கத்தைத் தந்துவிட்டு அதற்கான சொற்ப ஊதியத்தை வாங்கிக்கொண்டு போவார். அப்போது சில மணிநேரங்கள் எங்காவது நடந்து சென்று மனதில் பட்டதைப் பேசிக்கொண்டிருப்போம்

திருநெல்வேலியில் உள்ள சேவியர் கல்லூரியில் நடைபெற்ற நாட்டுப்புறவியல் கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்படும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய கோபி கிருஷ்ணன் நெல்லை வந்திருந்தார். அந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அதனால் அவர் அறையும் என்னுடைய அறையும் அருகாமையில் இருந்தன.

ஒரு நாள் இரவு அவர் தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் சில மருந்துகள் தேவைப்படுகின்றன. தன்னோடு பாளையங்கோட்டை வரை வரமுடியுமா என்று கேட்டார். இருவருமாகக் கிளம்பி பாளையங்கோட்டை வரை சென்றோம். அவர் கேட்ட மருந்தை கடைக்காரர் இல்லை என்று சொன்னதால் வேறு ஒரு மருந்தை கோபி கேட்டார்.

மருந்துச் சீட்டு இல்லாமல் அதைத் தன்னால் தர இயலாது என்று கடைக்காரர் சொன்னதும் தனக்கு அந்த மருந்து கிடைக்காவிட்டால் நிச்சயம் உறங்க இயலாது எப்படியாவது கொடுக்கும்படியாகக் கெஞ்சும் குரலில் கேட்டார். கடைக்காரர் மறுத்துவிடவே அங்கிருந்த ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினார். அது தூக்க மாத்திரை என்றும் அதன் அளவு முன்பு தான் சாப்பிடுவதைவிடவும் தற்போது அதிகமாகி உள்ளதாகவும் அதற்கான மருந்துச் சீட்டை, தான் எடுத்துவரவில்லை என்பதால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகத் தடுமாற்றத்துடன் சொன்னார்.

அப்போது நெல்லையில் இருந்த லேனாகுமார் மருத்துவத்துறை தொடர்பானவர் என்பதால் அவரை அழைத்து விபரம் சொன்னதும் அவர் எங்கிருந்தோ அந்த மாத்திரைகளை வாங்கி வந்து தந்து இந்த அளவு தூக்கமாத்திரையா சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டதும், கோபி அது தனக்குப் பழகிப்போய் விட்டது, இதைப் போட்டால் கூட பின்னிரவில் எழுந்துவிடுவேன். பிறகு விடியும் வரை விழித்தபடியே இருக்க வேண்டியதுதான் என்று அதே சிரிப்போடு சொன்னார்.

அப்போது அவரது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அதை மறைக்க அவர் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். பின்னர் அறைக்குத் திரும்பிய சில நிமிசங்களில் அவர் மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு உறக்கம் வரவில்லை பாதித் தூக்கமும் விழிப்புமாக அவர் வராந்தாவில் நடந்து கொண்டிருந்தார். என் அறைக்கு வந்து தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டார். டம்ளரில் தந்தபோது அப்படியே பிளாஸ்டிக் ஜக்கை எடுத்துக் கடகடவெனக் குடித்தார்.

அன்றிரவு அவரால் இயல்பாக உறங்கமுடியவில்லை என்றதும் திரும்பவும் குமாரை அழைத்துச் சொன்னதால் மாற்று மருந்து ஒன்றை வாங்கி வந்து சாப்பிடச் சொன்னார். விடிகாலை வரை இந்த அவஸ்தையில் இருந்த கோபி உறங்கி, காலை ஒன்பது மணி அளவில் கண்விழித்து குளித்துவிட்டு வழக்கம் போலக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தன் மொழியாக்க வேலையைச் செய்யத் துவங்கினார்.

அசதியும் சோர்வும் அவரது முகத்தில் பீடித்திருந்தன. சாப்பாட்டை வெகுவாகக் குறைத்திருந்தார். சிகரெட் மற்றும் தேநீர்தான் அவரது பிரதான உணவாக இருந்தன. அவரது உடல் நலத்திற்கு என்ன பிரச்சினை. ஏன் இப்படி தன்னை வருத்திக்கொண்டு வேலை செய்கிறார் என்று வருத்தமாக இருந்தது. அவர் தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் என்பதும் அப்படியிருந்தும் நோய்மை கட்டுக்குள் அடங்கவில்லை என்பதும் நேரடியாகப் புரிந்தது.

அதன் பிறகு சில மாதங்கள் நான் கோபியைச் சந்திக்கவில்லை. ஒரேயொரு முறை இலக்கியக் கூட்டமொன்றில் சந்தித்துப் பேசிக்கொண்டோம்.  கோபி ரொம்பவும் தளர்ந்து போயிருந்தார். பிறகு அவரது புத்தகம் வெளியான சமயத்தில் தற்செயலாக நண்பர் ராஜன்குறையின் வீட்டில் சந்தித்துக்கொண்டு உரையாடினோம். கோபியின் அன்றாட வாழ்வு மிக நெருக்கடியாக உள்ளது என்று பலமுறை நண்பர் வெளிரங்கராஜன் சொல்லியிருக்கிறார். ஆனால் கோபி இதை எவரிடமும் சொல்லிக்கொண்டது கிடையாது. ஒருமுறை  அவர் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைத்திருந்தார்.

அட்சரம் இதழுக்காக அவரிடமிருந்து பிராய்டு பற்றிய கட்டுரை ஒன்றைக் கேட்டேன். தன்னால் முடிந்தால் எழுதித் தருவதாகச் சொன்னார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதைத் தன்னால் எழுத முடியவில்லை என்பதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வார்.

கோபியின் கதைகள் மனித வலிகளை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றன. குறிப்பாக சகமனித துவேசங்கள் அவமதிப்புகள் அதிகாரத்தின் பெயரால் நடைபெறும் கீழ்மைகள், பாலியல் வேஷங்கள், சமூக வாழ்வில் காணப்படும் இரட்டைத்தன்மை. வெகுமக்களின் ரசனை சார்ந்த வெளிப்பாடுகள் என்று அவர் நகரவாழ்வின் இருண்ட பகுதியைத் தன் படைப்பில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். இன்னொரு பக்கம் மன நலச்சேவைகள். இன்று எந்த அளவு மனிதாபிமானமற்று நடத்தப்படுகின்றன என்பதைப் பற்றியும் கடுமையான எதிர்ப்புக்குரல் கொண்டிருந்தார். இதை வெளிப்படுத்த அவரும் சபியும் இணைந்து சிறிய நூல் ஒன்றை வெளியிட்டார்கள்.

தூயோன், மானுட வாழ்வு தரும் ஆனந்தம் போன்ற அவரது சிறுகதைத் தொகுப்புகளும் உள்ளிருந்து சில குரல்கள் என்ற அவரது நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். டேபிள்டென்னிஸ் என்ற அவரது குறுநாவல் பாலியல் சிக்கல் குறித்த பகடியை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

தன் மகளின் திருமணத்திற்கு கோபி என்னை அழைத்திருந்தார். ஆனால் கலந்து கொள்ளவில்லை. பிறகு தற்செயலாக ரங்கராஜனுடன் சந்தித்தபோது தன் மருமகனைப் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது குடும்பச் சூழல் மிகவும் நெருக்கடியாகிவிட்டிருப்பதை அவரது பேச்சின் ஊடாகப் புரிந்துகொள்ள முடிந்தது. புதிதாகத் தான் எழுத விரும்பும் கதை பற்றிப் பேசிக்கொண்டிருந்தது வியப்பாக இருந்தது.

ஒரு கதையை நிம்மதியாக அமர்ந்து எழுதுமளவுகூட வீட்டின் சூழல் இல்லை என்று அவர் சொன்னவிதம் வலி தருவதாக  இருந்தது. அன்று லதா ராமகிருஷ்ணனைப் பார்க்கச் செல்வதாகச் சொல்லியபடியே நடந்து செல்லத் துவங்கினார்.

2003ல் கோபி மரணமடைந்த நாளில் நான் விருதுநகரில்  இருந்தேன். செய்தி கேள்விப்பட்டவுடன் மனதில் கோபியின் சிரிப்புதான் முதலில் தோன்றியது. கோபியோடு அதிகம் நட்பு கொண்டிருக்கவில்லை என்றபோதும் நான் அறிந்த தமிழ் எழுத்தாளர்களில் கோபி மிகவும் தனித்துவமானவர். அத்தோடு தமிழ்ச் சிறுகதைகளில் அவரது பங்களிப்பு சிறப்பானது. அவரது கதை உலகிற்கு நிகரான பகடியும் ஆழ்ந்த துக்கமும் கொண்ட கதைகள் இன்று வரை வேறு எவராலும் எழுதப்படவில்லை.

தஸ்தாயெவ்ஸ்கியைப் போல வாழ்வின் கருணையற்ற நெருக்கடியை எதிர்கொண்டபடியே திரும்பத் திரும்ப வாழ்வு தரும் ஆனந்தத்தைப் பேசியவர் கோபி கிருஷ்ணன். இன்று வாசிக்கையில் அந்த ஆனந்தமும் பரிகாசமும் தீர்க்க முடியாத வலியை உருவாக்குகிறது என்பதே நிஜம்.

*****

நன்றி: உயிர்மை

Jul 29, 2010

இவ்வாறாக- விக்ரமாதித்யன்

இவ்வாறாக

அன்றைக்குப் போலவே
இன்றைக்கும்
ஆதரவாயிருக்கும் அம்மாவை
ஐயோ பாவம்
தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் nambi29

ஆயிரத்தோரு சண்டைகளுக்கு
அப்புறமும்
அப்பா காட்டும் அக்கறையை
அன்புக்கு நேர்வதெல்லாம்
துன்பம்தானென்று விட்டுவிடலாம்

மார்பில்
முகம்புதைத்து
மனைவி கேட்கும் கேள்விகளுக்கு
மறுமொழியாக
மெளனத்தை விட்டுவிடலாம்

காலைக்கட்டி மயக்கும்
குழந்தைகளை
கடவுளின் அற்புதங்களை நம்பி
சும்மா
விட்டுவிடலாம்

முதுகுக்குப் பின்
புறம்பேசித் திரிகிற
நண்பர்களின் குணத்தை
மன்னித்து
மறந்துவிட்டு விடலாம்

வேண்டியவர்களின் யோசனைகள்
வேண்டாதவர்களின் கேவலப்படுத்தல்கள்
இரண்டுமே
விதியின் முன்புக்கு
வீணென்று
விட்டுவிடலாம்

எனில்
எல்லாவற்றுக்கும் மேலாக
இயல்பிலேயே உறுத்திக்கொண்டிருக்கும்
என் மனசாட்சிக்கு
என்ன பதில் சொல்ல

***

குற்றாலக்கவிதை

போனவருஷம் சாரலுக்கு
குற்றாலம் போய்
கைப்பேனா மறந்து
கால்செருப்பு தொலைந்து
வரும் வழியில் கண்டெடுத்த
கல்வெள்ளிக் கொலுசொன்று
கற்பனையில் வரைந்த
பொற்பாதச் சித்திரத்தை
கலைக்க முடியவில்லையே இன்னும்
***

ஆதி - கவிதைத் தொகுப்பு

**

முக்கோணத்தின் மூன்று முனைகள்

பேசிக்கொள்ள
ஆசைப்படுகின்றன

கண்களில்
கசிகிறது உப்புநீர்

மனசில் கனக்கிறது
மாயச்சுமை

வார்த்தைகள்
நாவின் நுனியிலேயே தங்கிவிடுகின்றன

உதடுகள்
ஒழுங்கற்று நெரிபடுகின்றன

ஒன்றையொன்று
நின்று நினைத்துப்பார்க்க

என்றேனும் ஒருநாள்
எல்லாமும் சொல்லிவிட

முடிவெடுத்திருக்கின்றன முக்கோணத்தின்
மூன்று முனைகள்

***

கிரகயுத்தம் கவிதைத்தொகுப்பிலிருந்து

Jul 28, 2010

நிகழாத அற்புதம்- ராஜ மார்த்தாண்டன்

நிகழாத அற்புதம்

சிவராத்திரி நள்ளிரவு
ஒளிக்கீற்றொன்றுRAJAMARTHANDAN-1
இறங்கிற்று வான்விட்டு
திறந்தவெளியில் 16எம்எம்மில்
திருவிளையாடல் கண்டு
பரவசத்தில் உறைந்திருந்த மக்கள்
ஏவுகணையோ ஏதோவென்றஞ்சி
அலறி ஓடினர்
வெடியோசை கேட்டதும்
சிதறிப் பறக்கும் கொக்குகளாக
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணீறுமாய்ச்
சுற்றிலும் நோக்கினார் சிவனார்
வண்ணத்திரையில் சிவாஜியின் சிம்மகர்ஜனை
நிசப்தத்தை நடுங்கவைத்தது
பக்தர்கள் எங்கே?
துறுதுறுத்த கையை
மார்போடணைத்துக்கொண்டார்
குமிண்சிரிப்பு மறைந்து
ஏமாற்றத்தில் இருண்டது முகம்
மறுகணம்
நிசப்தமான வெடிச்சிரிப்பு
சிவரூபம் ஒளிக்கீற்றாகி மேலெழுந்து மறைந்தது
*

நன்றி: உயிர்மை

Jul 27, 2010

பூமாலை- ஆர். சூடாமணி

அன்புள்ள ரம்யா,

உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக இல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக. 

r-sudamani கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ''எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க முடியாது. அப்புறம் வீட்ல பிரளயம் தான் வரும். எனக்காகப் பொறுத்துக்கோ'' என்று சொல்வாரே தவிர உன்னைச் சித்தியின் கொடுமையிலிருந்து காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. உனக்கு நான்கு வயதாகும்வரை உன் அம்மா உயிரோடு இருந்தாள். ''என் பட்டுச்சுட்டி! என் செல்லக்குட்டி!'' என்றெல்லாம் கொஞ்சி உன் உள்ளங்கையில் அவள் முத்தமிடுவது ஏதோ கனவுபோல் உனக்கு லேசாக நினைவிருக்கிறது. அந்தக் கையில் சித்தி சூடு போட்டாள் என்ற நினைவு தகிக்கிறது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை உன்னைச் சீராட்டிச் செல்லம் கொடுத்து உன் சுருள் முடியைச் சீவிக் கிருஷ்ணன் கொண்டை போட்டு அழகு பார்த்திருந்த அதே சித்தி, தனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு உன்னை வெறுத்துத் துன்புறுத்தலானாள் என்ற நினைவு அதை விட அதிகமாய்த் தகிக்கிறது.

அப்புறம் உன் கணவன்.

கல்லூரிப் பேச்சுப் போட்டிகளில் உன் தர்க்கப் புலமையைக் கண்டு பிரமித்து உன்னை மணக்க விரும்பியவர். அவர் பெற்றோர் உன்னைப் பார்க்க வந்தபோது உன் சித்தி பேசியதையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறாய்.

''ரம்யாவையா பிடிச்சிருக்காம் உங்க பையனுக்கு? நிச்சயமாய் இந்த வீட்டு ரம்யாதானா?''

''ஆமாம்''

''அவ அவ்வளவு சேப்பு கூட இல்லையே? கிட்டத்திலேர்ந்து பார்த்தாரா?''

''அவ மேடைப் பேச்சில் அறிவு ததும் பித்தாம்..''

''குடித்தனம் பண்ணப் போற பெண்ணுக்கு எதுக்கு அறிவும் பேச்சும்? எதிர்த்து வாயாடவா?''

''ஏன் பார்க்கவும்தான் அழகாயிருக்கா!''

''அதுசரி. கழுதைகூட பருவத்தில் அழகாய்த் தானிருக்கும்...''

இது எதுவும் உன் நினைவிலிருந்து இன்றும் அழியவில்லை. இதுபோல் எத்தனையோ குரூரங்களைச் சித்தியிடம் சந்தித்து நீ உணர்ந்த நோவும் அவமானமும் கோபமும் இன்னும் மறக்கவில்லை. ஐம்பது வயதாகிறது உனக்கு!

நான்கு மாதங்கள் முன்பு நீ அரை நூற்றாண்டு முடித்த போது உன் கணவர் உனக்கு மல்லி மொக்கு டிஸைன் தங்க நெக்லஸ் வாங்கிப் பரிசளித்தார்.

''உனக்கும் நாட்டுக்கும் பிறந்தநாள் பொன்விழா. என் ரம்யாதேவிக்கு அன்பான வாழ்த்துக்கள்!''

அவர் முகத்தில் மலர்ச்சி. பல ஆண்டுகள் முன்பு முதல் முதலில் உன்னைக் கண்டு விரித்திருந்த அதே லயிப்பு.

நீ முகம் சுளித்தாய். எனக்கு எழுதியிருக்கிறாய்.

''ஆமாம். தங்க நகை பரிசளித்தால் ஏமாந்துவிடுவேனாக்கும்! பொன்விழா அது இது என்று அலங்காரமாய் பேசிவிட்டால் போதுமா? பேச்சில் இருக்கும் அன்பு மனசில் இருக்க வேணாமா? கண்தான் அலைகிறதே?''

அவர் மனசில் என்ன இருக்கிறதோ என்னமோ, உன் மனசில் ஊட்டி இன்னும் இருக்கிறது.

அப்போது உனக்கு இருபத்தைந்து வயது. நளினி மூன்று வயதுக் குழந்தை. உன் மடியில் நளினி. சுற்றிலும் உதக மண்டலத்தின் குளிர்ச்சி. தொலைவில் வானத்துக்கு அவாவுறும் யூகலிப்ட்ஸ் மரங்கள். பொட்டானிகல் கார்டனில் இருக்கிறாய். பூக்களஞ்சியத்தின் வர்ணக் கோலாகலம். டேலியா, பிட்டூனியா, கிளாடியோலஸ், சாமந்தி, ரோஜா, லார்க்ஸ்பர், பெயர்களை அடுக்குவதால் இன்பம் கூடுமா என்ன? இன்பம் ஒரு பரிபூரணம். கூடுவதோ குறைவதோ அதற்கில்லை. மேடுகளின் உச்சியிலுள்ள மரங்களின் இலைப் பின்னல் வெப்பத்தை வடிக்கட்டித் தணித்துத் தரும் மிருதுவான சூரிய ஒளி, சரிவுகளில் சறுக்கி விளையாடும் பட்டுக் குழந்தைகள். வண்ண வண்ண ஸ்வெட்டர்களுள் ரோஜாக் கன்னங்கள் குலுங்கப் பந்துகளாய் உருண்டு வரும் உற்சாக ஒளிக் குவியல்கள். அவர்களின் கலீர் கலீரென்ற சிரிப்பு.

நீ அழகின் நடுவில் அமர்ந்திருந்தாய்.

பிக்னிக் கூடையை திறந்து ·ப்ளாஸ்கிலிருந்து சூடான, மணமிக்க தேநீரை ஒரு கப்பில் வார்த்து உன்னிடம் புன்னகையோடு நீட்டினார் உன் கணவர்.

''களைப்பாத் தெரியறே ரமி. ஸ்நாக்ஸ் அப்புறம் சாப்பிடலாம். முதல்ல டீயைக் குடி.''

நீ கையை நீட்டினாய். உன்னை நோக்கியிருந்த அவர் விழிகள் கணநேரம் அசைந்தன. எங்கே பார்க்கிறார்? நீயும் தலையை லேசாய்த் திருப்ப, கண்ணைக் கட்டி நிறுத்தும் ஒரு வடிவம். பச்சை நிறச் சேலையில் அழகின் பூர்ண அருள் பெற்ற உருவம். கூந்தல் மல்லிகையைவிட வெள்ளையாய்ப் புன்னகை. உடனிருந்தவர்களிடம் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தாள். இந்தத் தொலைவில் பேச்சு கேட்க வில்லை. ஆனால் இவள் பேசினால், அந்தப் பேச்சும் அழகாய்த்தானிருக்க வேண்டும் என்று எண்ண வைக்கும் தோற்றம்.

உன் முகத்தில் மலர்ச்சி மறைந்து சுருசுருவென்று கோபம் ஏறியது. ''எனக்கு டீயும் வேணாம் ஒரு இழவும் வேணாம்'' குழந்தையைப் பொத்தென்று தரையில் இறக்கிவிட்டு எழுந்து நடந்தாய்.

உன் மனசில் ஊட்டி இன்னும் மறையவில்லை. அதனால்தான் இப்போதுகூட உன் ஐம்பதாம் பிறந்த நாளுக்கு அவர் பரிசளிக்கும் போது ''பேச்சில் இருக்கிற அன்பு மனசில் இருக்க வேணாமா?'' என்று கேட்கத் தோன்றுகிறது உனக்கு.

எப்படி அழுது தள்ளியிருக்கிறாய் இதையெல்லாம் நினைவுகூர்ந்து! ''சுவரோ டாயினும் சொல்லி அழு என்பதற்கிணங்க எழுதுகிறேன்'' என்று பழமொழியை வேறு துணைக்கு அழைத்திருக்கிறாய். நான் சுவர் இல்லை ரம்யா, உன்னுள் இருக்கும் கண்ணாடி. உன்னை நீ என்னில் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த அழுகையெல்லாம் ஒரு பீடிகைதான், உச்ச அழுகைக்கு வருவதற்கு.

சித்தியின் பிள்ளை உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறான். ஒரு புது மனிதன் போல் தன்னை அறிமுகம் செய்து கொண்டபின்:

"அக்கா! சென்ற காலத்தில் ஏதேதோ நடந்திருக்கலாம். அது ஒன்றையும் மனசில் வைத்துக் கொள்ளாதே. என்னை மன்னித்து விடு. நான் உன் சகோதரன் என்ற உரிமையை என்னிடமிருந்து பறித்து விடாதே. அந்த உரிமையின் பேரில் உன் கருணையை எதிர்நோக்கும் தீனனாக, இந்த வேண்டுகோளை உன்முன் வைக்கிறேன்.

''அம்மாவுக்குத் தீவிர இருதய நோய். சில ஆண்டுகளாகச் சிகிச்சை அளித்து வந்தும் பயனில்லை. வால்வ் கோளாறு. இனி அறுவைச் சிகிச்சை செய்வதுதான் ஒரே நம்பிக்கை என்று டாக்டர்கள் ஒன்று போல் சொல்லிவிட்டார்கள்.

''என் பொருளாதார நிலை மோசமென்று சொல்ல மாட்டேன். ஆனால் நான் பணக்காரனுமில்லை. பட்டுப்போர்த்திய வைக்கோல் பொம்மையான மத்திய வர்க்கக் குடும்பஸ்தன். அறுதியிட்ட வருவாயில் செலவு போக சேமிப்பு அதிகமில்லை. நிச்சயமாக, தொடரும் வைத்திய செலவுகளுக்கு ஈடு கொடுக்கும் செழுமை இல்லை. அதற்காக விதவைத் தாயை கைவிட முடியுமா? அங்கே இங்கே கடன் வாங்கி பெரும்பாலும் பணம் புரட்டிவிட்டேன். ஆனால் சுமார் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. தயவு செய்து தந்து உதவுவாயா? தொழிலதிபரான உன் கணவரின் செல்வச் செழிப்புப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தத் தொகை உனக்குப் பெரிசில்லை. கேட்கும் உரிமை எனக்கு இல்லை என்று நீ கருதலாம். ஆயினும் என் தாயின் உயிரைக் காப்பாற்ற - ஒரு மனித உயிரைக் காப்பாற்ற - இந்த நெருக்கடி சமயத்தில் இவ்வுதவியை நீ செய்வாயா அக்கா?''

''என்ன கொழுப்பு!'' என்று நீ வெகுண்டாய், ''அக்காவாவது ஆட்டுக்குட்டியாவது! எத்தனையோ காலமாய்த் தொடர்பு விட்டுப் போன ஒருவன் இப்போது உதவி தேவைப்படுகிறதென்று உறவு கொண்டாடுகிறானா?'' என்று பொங்கினாய். ''என் கணவரிடம் பணம் இருப்பது மாற்றாம் மாமியாருக்கு வைத்தியம் பார்க்கவா?'' என்று நினைத்துப் பொருமினாய்.

உன்னைக் கொடுமை செய்த சித்தி சாகக் கிடக்கிறாள் என்ற எண்ணம் இனிக்கிறது. சாகட்டும் என்று வஞ்சம் தீர்க்கும் எண்ணம் இனிக்கிறது.
பின்னே உனக்கென்ன பிரச்சினை? ''பணம் தர முடியாது'' என்று தம்பிக்கு எழுதிப் போட்டுவிட்டு உன் இனிப்பான எண்ணங்களை ரசித்து கொண்டிருக்க வேண்டியதுதானே? மாறாக, வாழ்க்கையில் உனக்குள்ள குறைகளையெல்லாம் பட்டியலிட்டு, போதாதற்கு உன் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், மெனோபாஸ் தொல்லை போன்ற உடல் உபாதைகளையும் சொல்லி ஒரு பாட்டம் அழுதுவிட்டு ''நான் எத்தனை கஷ்டப்படுகிறேன்! இப்போதும் படுகிறேன். இந்நிலையில் அந்தப் பயல் வேறு பணம் கேட்டு என்னைத் தொந்தரவு செய்கிறானே! இது எனக்கு இழைக்கப்படும் அநீதியில்லையா?'' என்று தன்னிரக்கத்தில் புலம்பி, உன் மனசைக் கொட்டிக் காற்றில் எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறாயே, இது ஏன்? உன் எண்ணத்தை நான் ஆமோதிக்க வேண்டும் என்பதற்காகவா? என் ஆமோதிப்பு உனக்கு அத்தனை முக்கியமா?

ஆனால் எனக்குக் குமட்டுகிறது ரம்யா? வருஷக்கணக்காய் வெறும் குப்பையாகவே மனசில் சேர்த்து வைத்திருக்கிறாயே! எப்படி இதனோடு வாழ்கிறாய்? இந்த மக்கிய நாற்றம் அருவருப்பாயில்லையா?''

கசப்பும் வெறுப்புமாக எண்ணங்கள், வெறும் குப்பைகள், மனசில் எடுத்து வைத்துக் கொள்ள உனக்குப் பூக்களே கிடைக்கவில்லையா ரம்யா? அதாவது, நல்ல விஷயங்களோ இனிய நினைவுகளோ ஏதுமில்லையா?

அம்மா முத்தமிட்ட உள்ளங்கையிலே சித்தி சூடு போட்டாள் என்று ஏழு வயதில் நடந்ததை ஐம்பது வயதிலும் அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு அழுதிருக்கிறாய். வரிசையைக் கொஞ்சம் மாற்றிப் பாரேன்! சித்தி சூடு போட்ட உள்ளங்கையில் அம்மா முத்தமிட்டிருந்தாள். இப்படி நினைத்து அந்த இனிமையில் ஆழ்ந்து போகலாமே! குப்பையைத் தள்ளு, பூவை எடுத்துக் கொள்.

தனக்கொரு மகன் பிறந்த பின் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தலானாள் என்பதை ஏன் நினைக்கிறாய்? தனக்கொரு மகன் பிறக்கும் வரை உன்னிடம் பாசத்தைப் பொழிந்தாள் என்பதை நினைத்துக் கொள்ளேன் இன்னொரு பூ.

சித்தி உன்னை வெறுத்தாள் என்பதை விட்டுவிட்டு, அப்பாவின் அன்பு உனக்கு எப்போதும் இருந்து என்பதை மனசில் பதித்துக் கொள். குழந்தையான உன்னிடம் இரவில் வந்து உன்னைக் கையிலேந்திக் கண்ணைத் துடைத்து, ''உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி?'' என்று நெஞ்சுருகப் பாடிக் கதை சொல்லிப் படுக்க வைத்துத் தட்டித் தூங்கச் செய்வாரே... அந்த நினைவை உன்னுடன் பத்திரப்படுத்திக்கொள். ஆமாம். அப்பா சித்தியின் கொடுமையிலிருந்து உன்னைக் காப்பாற்றவில்லை என்பதை வெகு அக்கறையாய் நினைவு வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறாயே, அப்பாவைப் பற்றிய இந்த நல்ல நினைவை ஏன் குறிப்பிடவில்லை?

உன் சித்தியின் விஷப் பேச்சால் உன் கல்யாணம் ஒன்றும் நின்று போய்விட வில்லையே! பேச்சுப் போட்டியில் உன் அறிவை வியந்தவர் இன்றுவரை உன்னிடம் அன்பு மாறாமல்தான் இருக்கிறார். அவர் கண் அழகிய பெண்ணின் பக்கமாய் அலைந்ததாம், பைத்தியமா உனக்கு? அழகை அதன் எந்த வெளிப்பாட்டிலும் ரசிப்பது என்பது மனித இயல்பு. ஊட்டியின் பசுமையான எழில் சூழலில் பச்சை ஆடையுடுத்து நின்றவள் அந்தக் கணம் அவ்விடத்தின் உயிர்நாடியாக, அதன் அழகுக்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பாகத் தோன்றியிருக்கலாம். ஏன் கூடாது? உன்னிடம் அவர் அன்பின் ஆந்தரிகம் என்றாவது மாறியதுண்டா? விகல்பமில்லாத அந்தப் பார்வையால் முகம் சுளித்த நீ அதற்குப் பதில் அந்த இடத்தின் வண்ண மலர்களும் பட்டுக் குழந்தைகளும் தண்ணென்ற காற்றும் மெத்தென்ற கதிரொளியு மான அழகிய சூழ்நிலையின் இனிமையை மனசில் தேக்கியிருக்கலாமே! உன் மடியில் குழந்தையோடு நீயே அழகின் மடியில் அமர்ந்திருந்த இன்பம் உன் மனசில் புகவில்லை. தேநீர் எடுத்து நீட்டிய அவர் அக்கறை, அந்த இன்பத்தின் ஒரு பாகமாய் உனக்குத் தோன்றவில்லை. அவர் கண் அலைந்தது என்று ஒரு கசப்பைத்தான் உள்வாங்கிக் கொண்டாய்.

வேறு நினைவுகளுக்கு எத்தனை சந்தர்ப்பங்கள் இருக்கின்றன! டை·பாய்ட் ஜுரத்தில் நீ படுத்தபோது இரவு பகல் பாராது அவர் உனக்குப் பணிவிடை செய்ததும், நீ விரும்பிக் கேட்டிருந்த புத்தகத்தைக் கொட்டும் மழையில் ஊரெல்லாம் அலைந்து தேடி எங்கோ நகர்க் கோடியில் ஒரு சிறு சந்துக்கடையில் கண்டுபிடித்து வாங்கி வந்து உன் கையில் வைத்து உன் முகம் மலர்வதைக் கண்டு பூரித்து நின்றதும்... இவை போன்ற எதுவும் உன் நினைவில் தங்கவில்லை. ஊட்டிக் கசப்பு ஒன்றைத்தான் இத்தனை ஆண்டு களும் நெஞ்சில் காப்பாற்றி வைத்திருக்கிறாய். குப்பை சேர்ப்பதில்தான் உனக்கு எத்தனை ஆசை!

உனக்கென்ன குறைச்சல் ரம்யா? வளமான வாழ்க்கை, அன்பான கணவன், எம்.எஸ்ஸி., எம்.சி.ஏ, முடித்து வெளிநாட்டில் கணிப் பொறி உயர்நிலைக் கல்வி பயிலும் அறிவுமிக்க மகள். எத்தனை பூக்கள் உனக்கு!

எனினும் நீ புலம்புகிறாய். இப்போது உன் முக்கியப் புலம்பல், உன்னைக் கொடுமை செய்த சித்தியின் வைத்தியத்துக்காக அவள் பிள்ளை உன்னிடம் பணவுதவி கேட்பது உனக்கு இழைக்கப்படும் அநீதி என்பது. அவள் உயிர் பிழைக்க நீ ஏன் உதவ வேண்டும்? அவள் செத்தால் உனக்கென்ன? சொல்லப்போனால் அது உனக்கு மகிழ்ச்சியல்லவா தரும்?

இருப்பினும், உடனடியாய்த் தம்பிக்கு ஒரு மறுப்புக் கடிதம் எழுதிப் போடாமல் என் ஆமோதிப்புக்காகக் காத்திருந்து காலம் தாழ்த்துகிறாய். அப்படியானால் உன் முடிவைப் பற்றி உனக்கே மூலையில் எங்கோ ஒரு சிறு சந்தேகம் இருக்கிறதென்று அர்த்தமா?

ஆபத்து என்று கேட்கும் போது உதவ மறுத்தால் அது உனக்குள் எங்கேயோ உறுத்தும் போல் தோன்றுகிறது. அதுதானே? அவள் இறந்தால் நீ சந்தோஷப்படுவாய் என்ற நினைப்பைவிட அதிக கனமாயிருக்கிறதா இந்த உறுத்தல்?

'இல்லை!' என்று கூவுகிறாய். 'பணம் அனுப்ப முடியாது என்று இப்போதே அவனுக்கு எழுதிவிடுகிறேன்' காகிதமும் பேனாவுமாய் மேஜையடியில் உட்கார்ந்து விட்டாய்.

ஒரு நிமிஷம் பொறு ரம்யா. நான் சொல்லும் மிச்சத்தையும் கேட்டபிறகு எழுது. ப்ளீஸ். எனக்காக.

''சரி, சொல்லு!''

நமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களுடன் வாழ்வது சுலபமான காரியமா?

''இல்லை, ஒரு போதும் இல்லை...''

கடைசி மூச்சுவரை நாம் நம்மோடு தானே வாழ்ந்தாக வேண்டும் ரம்யா?

'ஆமாம்'.

அப்படியானால் நம்மை நமக்குப் பிடிக்க வேண்டியது எவ்வளவு அவசியம்!

'நீ என்ன சொல்ல வருகிறாய்?'

நீ காப்பாற்றியிருக்கக்கூடிய ஒரு மனித உயிர் உதவி கிடைக்காததால் இறந்து போயிற்று என்றால் அதன் பிறகு உன்னை உனக்குப் பிடிக்குமா? உன்னோடு நீ வாழ சகிப்பாயா?''

சிறிது நேரம் வரை உன்னிடம் பேச்சில்லை. அசைவில்லை. சுவரை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாய். பிறகு பேனாவை மெல்ல மூடி வைக்கிறாய். நெற்றியில் கைபதித்து யோசனையில் ஆழ்கிறாய்.

உன்னை வெறுப்பவளுக்கு இந்த உதவியைச் செய்தாயானால் அதில் உனக்குப் பெரிய லாபம் இருக்கிறது ரம்யா. வெறுப்பு, கசப்பு என்றெல்லாம் மனசில் நீ சேர்த்து வைத்திருக்கும் குப்பை கூளங்கள் அனைத் தையும் இந்த ஒரே செயல் ஒரே வீச்சில் பெருக்கித் தள்ளித் துப்புரவாக்கிவிடும். அப்படிச் சுத்தமாகிய இடத்தில், நீ இதுவரை புறக்கணித்து வந்துள்ள நல்ல நினைவுகளை - அந்தப் பூக்களை எடுத்து வந்து வைத்துக் கொள்ளலாம். அவற்றை அழகான மாலையாய்த் தொடுக்கலாம். சித்திக்கு உதவி செய்வதன் மூலம் கசப்புத் தளை உடைந்து நீ பெறும் விடுதலையுணர்வு அந்தப் பூமாலையில் ஒரு பாரிஜாத மலர்போல் நடு நாயகமாய் விளங்கும். எனக்கும், குப்பையின் மக்கிய நாற்றம் நீங்கிப் பூமணம் கமழும் உன் மனசில் குடியிருப்பது கொஞ்சம் வசதியாய் இருக்கும்.

மீண்டும் பேனாவை எடுத்துத் திறக்கிறாய். மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொள்கிறாய். என்ன எழுதப் போகிறாய்?

உனக்குப் பதில் சொன்னதோடு என் வேலை முடிந்தது. இனி உன் இஷ்டம். வரட்டுமா ரம்யா?

உன் பிரிய
ரம்யா

******
நன்றி : ஒன்பது சகோதரிகள்
(உலகப் பெண் எழுத்தாளர் சிறுகதைகள்),தொகுப்பாசிரியர் : முனைவர் சுபாசு
சிந்தியன் பதிப்பகம், நந்தனம், சென்னை 35.

*******

Jul 25, 2010

எறும்பு தின்னி - ஜெயமோகன் கவிதைகள்

எறும்பு தின்னி *

எறும்பு தின்னியின் நிதானம். jayamohan1
திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன்
கனமாக அசைந்து செல்கிறது.  
அதன் குளிர்ந்த நாக்கு
எறும்புப் புற்றுகளுக்குள்ளே நெளிந்தேறுகிறது.
அதன் குளிர்ந்த மூச்சு
அங்குள்ள கூடுகளைச் சிதறடிக்கிறது.
உள்ளே ஓலங்கள்
உயிரின் குருட்டு வெறி
தினம் அதுகாண்பது அக்காட்சி.
மரணம் ஒரு பெரும் பதற்றம்
என அது அறிந்தது.
எனவே
வாழ்வு ஒரு நிதானமான நடை எனப்
புரிந்து கொண்டது.


இரு பறவைகள் *


வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு.
சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகள் மீது எம்பித்தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிகடல்.

இரு பறவைகள்
இரண்டிலிருமிருந்து வானம்
சமதூரத்தில் இருக்கிறது.

 

-ஜெயமோகனின் 'பின் தொடரும் நிழலின் குரல் ' புதினத்திலிருந்து.

Jul 23, 2010

புலியின் தனிமை-தேவதேவன்

1] விரும்பினேன் என் தந்தையே


பேயோ தெய்வமோ
எந்த ஓர் அச்சம்
ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே
நீ படித்தது போதும்
எல்லாரும் மேற்படிப்பு படித்தேகிவிட்டால்
இருக்கும் பிற வேலைகள் எல்லாம் devadevan2
யார் செய்வார் என்றறைந்தீர்.
கடும் உழைப்பை அஞ்சினேனா ?
கூட்டாகப் புரியும் பணிகளிலே
இருக்க வேண்டிய தாளம்
இல்லாமை கண்டு அஞ்சினேனா ?
விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்து புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதி கொண்டு முடிவின்றி இப்புவியை
பார்த்துக்கொண்டு இருப்பதற்கும்
காலமெல்லாம் திருவிழாவும்
மழலைகளின் கொண்டாட்டமுமாய்
என் வாழ்வை இயற்றிடலாம் என்று எண்ணி
ஊர் ஊராய் சுற்றிவரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்
மொய்க்கும் குழந்தைகளின் நிர்மால்யம் தேடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்து காத்துக் கிடப்பதற்கும்
விரும்பினேன் நான் என் தந்தையே
வியர்வை வழிந்தோட வீதியிலும் வெயிலிலும்
உழைப்ப்போர் நடுவே
அடுப்பு கனலுகிற சுக்கு வெந்நீர் காரனாகிநடமாடவும்
சாதி மதம் இனம் கடந்து அலைகிற
யாத்ரிகப் புன்னகைகள் அருந்தி என் உள்ளம் குளிர
வழிகாட்டி வேடம் தரிக்கவும்
விரும்பினேன் என் தந்தையே
அன்பர் குழுக்கள் நடுவே வாத்தியமிசைக்கவும்
பாடவும் நடமிடவும்
விரும்பினேன்
இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்
இன்று நினைத்துப் பார்க்கிறேன் உம்மை என் தந்தையே
நம்மை ஆட்டிப் படைத்த மறைபொருளின் நோக்கையும்.

2] புலியின் தனிமை

[அ]
மனிதரற்ற வீதியில் நடந்து
வனத்துக்கு திரும்பியது
ஒருமனிதனையும் காணாத
பசி வேதனையால வாடிய புலி
மீண்டும் பெருத்த தினவுடன் ஒரு நாள்
ஒரு நகரத்துக்குள் நுழைந்துவிட
அலறியடித்துக் கொண்டு ஓடி
தம் ஓட்டுக்குள் சுருண்டுகொண்ட மனிதர்
துப்பாக்கி தூக்கி பாய்ந்து வந்த ராணுவம்
கூண்டுக்குள் பிடிக்கத்துடித்த சர்க்கஸ் மனிதர்
பத்திரமாய் பிடித்து காட்டுக்குள் அனுப்ப
தீர்மானம் கொண்ட 'கருணையாளர்கள் '
யாவரையும் எண்ணி எண்ணி
தாளாத துக்கம் கனல
தகித்துக்கொண்டிருந்தது கானகத்தில்
[ஆ]
ஓ கடவுளே!
எத்தனை ஆபத்தானது இந்த அறியாமை!
அதி உக்கிரமான ஓர் அழகையும்
முடிவற்ற விண்ணாழத்தால்
பற்றவைக்கப்பட்ட பார்வையையும்
அதிராது சுமந்து செல்லும் பெரு நடையையும்
இங்கு அறிந்தவர் எவருமில்லையோ
தன்னை அறியாது
உறுமிக்கொண்டிருக்கும் இந்த வலிமை
மிருகச்சிறை
எவ்வளவு ஆபத்தானது!
[இ]
தன்னை அறிகையில் புலி
அறியாத வேளையில் விலங்கு.

[3] பேசாத சொற்கள்


மாடிக்கூளங்களை காற்று பெருக்கிவிடும்
கவலை கொள் வதற்கு இன்று அவசியமில்லை
மரங்களின் அழுக்கினை மழை கழுவிவிடும்
கவலை கொள்வதற்கு இன்று அவசியமில்லை
இந்த மைனாக்களின் குரல்களில்
வேப்பம் பழத்தின் இனிமை
இந்த மெளனத்தின் இதழ்களில்
சொற்கத்தின் இனிமை
எனினும் இங்கேதும் நிரந்தரமல்ல
அமைதியும் அழிந்து அக்கினி வறுக்கும்
காவ் காவ் என்று கரைகின்றன இன்று
கறுப்பு பறவை அலைகள் எங்கும்
நானா எப்படி என்றென் திகைப்பு
அறிந்தது போலும் தோன்றும்
அப்போது
தெய்வத்தின் குரல் போல
உதிக்கும் சில சொற்கள்
' ' நீ பேசும் சொற்களை எவனும் பேசிடுவான்
நீ பேசாத சொற்களைப் பேசு ' '
***
[நன்றி .சொல் புதிது 6]   தேவதேவனின் கவிதைகள் தேர்வு ஜெயமோகன்

Jul 22, 2010

அந்நியமற்ற நதி-கல்யாண்ஜி

கல்யாண்ஜி கவிதைகள்

 

1. நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான் vd
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன் 
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.


2.தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத்
திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
3.அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து.
4.பத்திரத்துக்கு
முந்தின இரவில் போட்டதை
அணைக்க விட்டுப் போயிருக்கலாம்.
திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து
வேலைபார்க்க வெளீயூர் போகிற
அப்பாவை வழி அனுப்பிய மகள்
அடுப்பில் பால் பொங்க
ஓடிப்போயிருக்கலாம்
அயத்துப் போய்.
அதிகாலையில்
வாசல் தெளிக்க ஏற்றி
'கோலம் நல்லா வந்த '
நிறைவில்
குதுகலமாக மறந்து
போயிருக்கலாம்.
புதிதாக புழங்கும்
விருந்தினர் யாரோ
விசிறிக்கு அழுத்திய பொத்தானில்
வெளியே இந்த
விளக்கு எரிவது தெரியாமல்
அறைக்குள் இருக்கலாம்.
உச்சி வெய்யிலில்
தெருவில் போகிற எனக்கு
உறுத்திக் கொண்டிருக்கிறது
ஒரு வெளிச்சத்தில்
இன்னொரு வெளிச்சம் தோற்பது.

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.

Jul 21, 2010

சந்நியாசி கரடு- பெருமாள்முருகன் கவிதைகள்

குவிந்த கை

மூக்கால் ஆனவன் அவன்
வாசனை பிடிக்குமானால்
முகம் மலர்ந்து PERUMALMURUGAN
உள்ளிழுத்து நுகர்ந்து
ஆசையாய்
அவனே சாப்பிட்டுக்கொள்வான்
பிடிக்காதபோது
என் கை தேவைப்படும்

என் விரல்கள் அவ்வுணவில்
கலந்துவிடும் பிரியத்தால்
சுவை மாறிவிடுமா

நினைந்தூட்டும் தாய் முலைபோல
விரல்கள் குவித்துச் 
சோறூட்டி ஊட்டித் திரும்புகிறது கை

எதையாவது
கதைபோலச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும்
அவன் குரலுக்குக்
காதுகளை முழுதாகக் கொடுத்துவிட வேண்டும்

வெளியே கரையும்
காக்கையின் அழைப்புக்குக்கூடக்
கவனம் போகக்கூடாது
உதிர்ந்த பிஞ்சாய்
வதங்கிப்போகும் அவன் முகம்

கடைசிப் பருக்கைகளைத்
தலையாட்டலோடு உண்டுவிட்டு
அவசரமாய்ப் பை தூக்கி
ஓடுகிறான் வெளியே

பெருமூச்சோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அவன் வாய் திறப்புக்காகக் காத்திருக்கின்றன
பிரபஞ்சத்தின் விரல்கள் குவிந்து.

கொல்லியருவி

இந்த முறை போனபோது
அருகே மிக அருகே
தாவிப்போய்
அண்ணாந்து
முகம் காட்ட முடிந்தது
ஒரு கணம்
சாட்டை வீச்சாய் முகத்தில் இறங்கியும்
மறுகணம்
ஏதுமற்றும் அசைகிறது

மேலெல்லாம் பட வேண்டும்
வடுவேறிய குளிர்க் கரங்கள்
வருடித் தர வேண்டும்
உடலைத் திருப்பித் திருப்பிக் காட்டுகிறேன்

குனிந்தும் நிமிர்ந்தும் நனைந்து
வெறியேறுகிறது
நீர்விழுதை இழுத்துப்
பிடித்தேறிச் செல்கிறேன்

மெல்ல இறுக்கிக்கொண்டு
திரும்பிச் சிரித்தபடி
செல்லமாய்த் தலையில் தட்டுகிறது
என் தாத்தாவின் கோவண வாலாய்த்
தொங்கிக்கொண்டிருக்கும் அருவி.

உதவி

சமையல் எரிவாயு உருளையைத் திறந்து
அடுப்பைப் பற்ற வைக்கிறேன்
சில நொடிகள் எரிந்த தீ
நீலக் கை நீட்டி
ஏற்கெனவே திறந்திருந்த
பக்கத்து அடுப்புக்குக் கைகொடுத்து
மூட்டிவிட்டுத் திரும்புகிறது

அதிர்ச்சியும் பதற்றமும்
தீர்ந்து முடிந்த பின்னும்
நீலக்கை லாகவமாய் நீண்டு
உதவித் திரும்பும்
காட்சியே நிலைத்திருக்கிறது மனத்தில்

வண்ண நட்சத்திரங்கள்

தொலைக்காட்சி சேனல் மாற்றும் சண்டையில்
கோபித்தோடிய என் குட்டிப்பையன்
பிறந்த நாள்களுக்கெனப்
பல மாதங்கள் முன்னரே
வரைந்து தயாரித்து
அலமாரியில் வைத்திருந்த
அழகிய வாழ்த்து அட்டைகளைக்
காம்பசால் குத்திக் கிழித்தெறிந்தான்

நாட்குறிப்பை எடுத்துக்
கொல்வேன் கொல்வேன்
குத்திக் கொல்வேன்
என்றெழுதி வைத்தான்

அப்படியும் ஆத்திரம் அடங்காமல்
எறும்பு மருந்துக் கட்டியைக்
கடித்துத் தின்றுவிட்டுச்
'சாகிறேன் அழுங்கள்'
என்று வயிறெரியக் கத்தினான்

வண்ணங்கள் விரிந்து
நட்சத்திரங்களெனச்
சிற்றழகாய் மினுங்கும்படி
நான் காப்பாற்றி வைத்திருக்கும்
பூக்கள்
கருகி உதிர்கின்றன
உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன.

சந்நியாசி கரடு

மலையைக் கடந்து போகிறேன் தினமும்
ஒளிந்து ஒளிந்து போகும்
தார்ச்சாலை மீதான கவனத்தில்
தரையிலிருந்து விரியும் மலைப்பரப்பை
அண்ணாந்து பார்க்க முடிந்ததில்லை

அடிவாரத்தில் உள்ள
என் அலுவலக ஜன்னல் அளவில்
நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

பாறை பற்றியேறும்
பிரண்டைக் கொடியாய்
வெள்ளாட்டுக் குட்டியன்று
அன்றாடம் மேலேறிச் செல்கிறது

வாய் திறந்த பிளவுகளைப்
பாய்ச்சலில் தாண்டுகிறது
பயமில்லை
கருணை நிரம்பிய பாழிகள்
ததும்பிக் கசிகின்றன
தாகமில்லை

சரிவுகளில் வளர்ந்திருக்கும்
பசுந்தழைகள் கையசைத்துக் கூப்பிடும்
பசியுமில்லை

உச்சிக் கூர்விளிம்பில்
போய்ப் படுத்து
அது கண்ணயர்வதை அறிகிறேன்

தூக்கத்தில் புரளும்போது
தவறி விழுந்திடக்கூடுமோ
எனத் தவிக்கிறேன்

கால் வலிக்கிறதா எனக் கேட்க
முடிந்ததில்லை
அது எப்போது இறங்கி வருமோ
பொழுதாகும் கவலையும் அதற்கில்லை.

நன்றி: காலச்சுவடு

Jul 19, 2010

கன்னியாகுமரியில்.... - பசுவய்யா

கன்னியாகுமரியில்.... sura---drawing

இன்று அபூர்வமாய்
மேகமற்ற வானம்
மிகப்பெரிய சூரியன்
ஒரே ரத்தக் கலங்கல் 
எங்கிருந்தோ வந்து
சூரியாஸ்தமனத்தை மறைக்கிறது
இந்த ஆட்டுக்குட்டி
அசடு
அபோதம்
தன்னிலை அறியாதது
இடம்பெயர்வதா நான்
அல்லது
நின்ற நிலையில் நிற்பதா?
மூளையின் தர்க்கம்
அறுபட்டு விழித்ததும்
நகர்ந்தோடியிருந்தது ஆட்டுக்குட்டி
சூரியனைக் காணோம் .

********************

வாழ்க்கை


நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை
இப்படி இருக்கிறது வாழ்க்கை.

********************


கதவை சுண்டாதே


என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியை கட்ட கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவது பற்றி விசனமுடன் பேசுவாய்
அவர் தொலைபேசி எண் ? என்பாய்
கையால் ஆகாதவன் என என்னைச் சொல்லாமல் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம் சரித்துவிட்டும் போவாய்
ஒரே ஒரு கவிதை
போதும் இந்த ஜென்மம் பொருள்பட என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால் என் கதவைச் சுண்டாதே
தயவு செய்து ...


********************

Jul 17, 2010

ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி

ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம்.
IndiraParthasarathi ’வனாந்திரமான இடம். பாம்புப் புற்று போல் ஓங்கி வளர்ந்திருந்த மண்மேடிட்ட பெரிய குகைகள். அவன் தனியாக அந்தப் பிரதேசத்தின் வழியாகப் போய்க் கொண்டிருக்கிறான். அங்கு நிலவிய நிசப்தம் ஒரு பாரமாகச் சூழ்ந்து அவன் நெஞ்சை அழுத்தியது. குகைகளிலிருந்து பாம்புகள் புறப்பட்டுத் தன்னைத் தாக்க வருமோ என்ற பயம் அவனை வேகமாக நடக்கத் தூண்டியது. குகைகளில் பாம்பு இல்லை. திடீரென்று அவற்றிலிருந்து கூட்டம் கூட்டமாக ஜனங்கள் வெளியே வந்தார்கள். அனைவரும் முடவர்கள்! அப்பா, அம்மா குழந்தைகள் என்று குடும்பம் குடும்பமாக முடவர்கள்! அவர்கள் வரிசை வரிசையாக நின்றுகொண்டு அவனைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய பார்வையின் வேகத்தில் அவனுடைய கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கழன்று... ஐயோ! அவனுடைய கைகள்! கீழே விழுந்துவிட்ட அவன் கைகளை எடுத்து வைத்துக்கொண்டு குழந்தைகள் விளையாடுகிறார்கள்! எல்லோரும் அவனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். ‘ஓ’ என்ற அவர்கள் சிரிப்பு, அந்த அகன்ற பிரதேசத்தில் எதிரொலிக்கிறது.’
உடம்பைத் துண்டினால் துடைத்துவிட்ட பிறகு, ராஜப்பா தன் கைகளை உற்றுப் பார்த்தான். அவற்றுக்கு ஓர் ஆபத்தும் ஏற்படவில்லை. பத்திரமாக இருந்தன.
எதற்காக? அதுதான் அவனுக்கும் புரியவில்லை. இந்தக் கைகளினால் உழைத்து அவன் சம்பாதித்தது கிடையாது. வயிறுதான் உழைத்தது. கல்யாணம் எங்கே, கருமாதி எங்கே என்று வீடு தேடிச் சென்று உழைக்கிறது. கடந்த சில நாள்களாக அந்த உத்தியோகத்துக்கும் வழியில்லை. ஊரில் கல்யாணமும் நடக்கவில்லை, ஜனங்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
போன வாரம் மேலத்தெரு பாமா பாட்டிக்குப் பிராயச்சித்தம் நடக்கிறது என்று கேள்விப்பட்டவுடன், அவன் அவசரம் அவசரமாக அங்கு ஓடினான். உதட்டைப் பிதுக்கிக்கொண்டு வெளியே வந்த டாக்டரைப் பார்த்ததும் அவனுக்கு நம்பிக்கையாக இருந்தது. பாட்டிக்குத் தொண்ணூறு வயசு என்றார்கள். மேல் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. கல்யாணச் சாவுதான். கை ஓங்கிய குடும்பம். பதினைந்து நாள் சாப்பாட்டுக்குக் கவலையில்லை. கிடைக்கப் போகிற பணம், அவன் பெண் மைதிலிக்குப் புடவை வாங்கப் போதுமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, பாட்டி கண்களைத் திறந்து மிரள மிரளப் பார்த்தாள். அவ்வளவுதான், வந்த யமன் பயந்துபோய் ஓடி விட்டான். பிராயச்சித்தத்துக்குக் கிடைத்த பணம் வெற்றிலை சீவல் வாங்கத்தான் சரியாக இருந்தது.
ராஜப்பா திண்ணையிலிருந்து கீழே இறங்கினான். திண்ணை ஓரத்தில் படுத்துக்கொண்டிருந்த ஆராமுது எழுந்து கோயில் காரியத்தைக் கவனிக்கப் போய்விட்டான். ஆராமுதைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. பிரம்மச்சாரி. பிரம்மச்சாரியாக இருப்பதற்கு அவன் உடம்பும் ஒரு காரணம். சாய்வு நாற்காலியைப் போல் வளைந்த சரீரம். முதுகும் வயிறும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருந்தன. எந்தப் பெண் இவனைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்ள முன் வருவாள்?
ராஜா மாதிரி இருக்கிறான் என்பதற்காக அவனுக்கு ராஜப்பா என்று பேர் வைத்தார்கள். சின்ன வயசில் ராஜா மாதிரிதான் இருந்தான். சாப்பிடுவதற்குச் சம்பாதிக்கவேண்டுமென்ற விவரமே அவனுக்கு அப்போது தெரியாது. பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் படித்திருந்தால், எமனை நம்பி வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமிருந்திருக்காது. அல்லது, ஆரம்பத்திலிருந்தே ஒழுங்காக அத்தியயமாவது செய்திருக்கலாம். வடக்கே வைதீகர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி என்று தில்லியிலிருந்து வந்த அந்த நாச்சியார்கோயில் பையன் சொன்னான். பிராமணணாய்ப் பிறந்துவிட்டு, மந்திரமும் தெரியாது. வேறு எந்தத் தொழிலுக்கும் லாயக்கில்லை என்றால் தன்னைப் போல் வயிற்றை மூலதனமாகக் கொண்டு வாழ்வதைத் தவிர, வேறு வழி என்ன இருக்கிறது.
அவன் தம்பி படித்துவிட்டு உள்ளூரிலேயே எல்.ஐ.சி.யில் இருக்கிறான். அவனுக்கு நான்கு பெண்கள். இரண்டு வருஷங்கள் முந்திவரை, அம்மா உயிரோடிருந்த காலத்தில், ஒரே குடும்பமாகத்தானிருந்தார்கள். சுபஸ்வீகாரம் முடிந்த மறுநாளே தம்பி சொல்லிவிட்டான்: ‘இதோ பாரு ராஜப்பா, எனக்கும் நாலு பொண்ணாச்சு. நாம சேர்ந்து இருக்கிறது என்கிறது கட்டுப்படியாகாது. இடைக்கட்டு ரூமை நீ வச்சுக்கோ! ஒரு ரூம் போறுமான்னு கணக்குப் பாக்க ஆரம்பிச்சா, உனக்கே தெரியும், ஏதோ அம்மா இருந்தா, உன் சக்கரம் ஓடியாச்சுன்னு. எத்தனை நாளைக்குத்தான் நீ பொறுப்பு இல்லாம இருக்க முடியும்? உன் மூணு பொண்ணையும் ஆம்படையாளையும் நீதான் இனிமே காப்பாத்தியாகணும். சொல்றேன்னு கோவிச்சுக்காதே.’
அன்று முதற்கொண்டு ஒரே வீட்டில் இரண்டு குடித்தனம். அவன் பெண்களும் அவனைப் போலவே, சரஸ்வதியை அடித்து விரட்டிவிட்டார்கள். படிப்புமில்லை, பணமுமில்லை. எப்படி அவர்களுக்குக் கல்யாணம் பண்ணுவது? பிரச்னைதான்.
இது இப்பொழுதையப் பிரச்னையல்ல. இப்பொழுதையப் பிரச்னை அவன் காப்பி குடித்தாக வேண்டும். நேற்றே அவன் மனைவி சொல்லிவிட்டாள்: ‘காப்பிப் பொடி கிடையாது. காசு கொண்டு வந்தா காப்பி. இல்லாட்டா தீர்த்தத்தைக் குடிச்சுட்டு சும்மா கிடங்கோ. நான் வீடு வீடா போய்க் கடன் வாங்கத் தயாரா இல்லே.’
ராஜப்பா வீட்டுக்குள் நுழைந்தான். கூடத்தில் அவன் தம்பி பெஞ்சில் உட்கார்ந்துகொண்டிருந்தான். கையில் தினசரித்தாள். அவன் அருகில் ஆவி பறக்கும் காப்பி. தினசரித் தாளில் லயித்திருந்த பார்வையை விலக்கி, ஒரு விநாடிகாலம் அண்ணனை அவன் உற்றுப் பார்த்தான். காலையில் எழுந்ததும் காப்பி குடிக்காமல் அண்ணன் எவ்வளவு கஷ்டப்படுவான் என்பது அவனுக்குத் தெரியாத விஷயமல்ல. அவன் என்ன நினைத்துக் கொண்டானோ, திடீரென்று எழுந்து உள்ளே சென்றான். ஒரு வேளை மனைவியிடம் இது பற்றி மன்றாடச் சென்றிருக்கலாம். வெகு நேரம் வெளியில் வராமல் இருந்துவிட்டானானால், அவன் சிபாரிசு பலனளிக்காமல் போய்விட்டது என்று அர்த்தம். அவள் தெய்வாதீனமாகக் காப்பி கொடுக்கச் சம்மதித்துவிட்டால் தம்பி என்ன செய்வான் என்பது ஒரு சுவாரசியமான விஷயம். அவன் கூடத்துக்கு வந்து பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு சற்று ஓங்கிய குரலில், ‘டீ, ராஜப்பாவுக்குக் காப்பி கொண்டா!’ என்று சொல்லுவான். அவன் சொல்கிறபடி மனைவி கேட்கிறாளாம்.
ராஜப்பா சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். உள்ளே போன தம்பி, போனவன் போனவன்தான்! தனக்குக் காப்பி கிடைக்காது என்று அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது.
அவன் கொல்லைக்கட்டை நோக்கிச் சென்றான். அவன் மனைவி முள்வேலியருகே நின்றுகொண்டிருந்தாள். அவன் பூணூலைக் காதில் மாட்டிக்கொண்டே கேட்டான்: ‘என்ன?’
‘என்ன? அதான். ருக்கு தளிகை. கூடமாட ஒத்தாசைப் பண்ணப் போங்கோ.’
‘ருக்குவா? ஏன் மைதிலி எங்கே?’
’அபிராமி மாமியாத்திலே ராஜராஜேஸ்வரி பூஜை பண்றாளாம். கன்னிப் பொண்ணுக்குப் புடவை வாங்கித்தரப் போறாளாம். அனுப்பிச்சேன்.’
‘அபிராமி ஆத்திலேயே? ஸ்மார்த்தப் பொண்ணுக்குன்னா கொடுப்பா?’
’நான்தான் அபிராமி மாமி கால்லே விழாத குறையா கெஞ்சிக் கேட்டுண்டேன். பதினெட்டு வயசாச்சு, மைதிலிக்குக் கட்டிக்க ஒரு நல்ல புடவை கிடையாது. எல்லாம் கிழிசல். கல்யாணத்துக்கு இருக்கிற பொண்ணு.’
‘பிராம்மணாளுக்கும் சாப்பாடு உண்டோ?’
‘புடவை கட்டிண்டு போனா உண்டு.’
ராஜப்பா தன் மனைவியை உற்றுப் பார்த்தான். இதழோரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த விஷமப் புன்னகையுடன் அவள் வைக்கோலறையை நோக்கிச் சென்றாள்.
அவன் காதிலிருந்து பூணூலை எடுத்துக்கொண்டே திரும்பி வந்தபோது அவள் வைக்கோலறையில் உட்கார்ந்திருந்தாள். அதற்குப் பேர்தான் வைக்கோல் அறை. ஒரு காலத்தில் அவனுடைய தாத்தா ‘மிராசு’ என்று கொழித்த காலத்தில் வீட்டில் மாடுகள் இருந்தன. வைக்கோலுமிருந்தது. வைக்கோற்போரை அந்த அறையில்தான் அடுக்கி வைப்பது வழக்கம். அவன் தாத்தாவினுடைய விளையாட்டெல்லாம் ஓய்ந்த பிறகு அப்பா காலத்தில் நாலு வேலி ஒரு வேலி ஆனது. அவனுடைய அப்பா சாப்பிட்டே தீர்த்தார். இப்பொழுது இருப்பது கொல்லைப் புறத்திலிருக்கும் முள்வேலிதான். வீடு மிஞ்சியிருக்கிறது.
அவன் வைக்கோலறையைத் தாண்டி உள்ளே செல்ல முற்பட்ட போது, ‘அப்படியே கிணத்தடியிலே குளிச்சிட்டுப் போங்கோ!’ என்ற குரல் கேட்டது. மனைவியின் உத்தரவு.
‘எதுக்காக?’
‘எதுக்காகவா? அதான் சொன்னேனே, ருக்கு ஒண்டிமா...’
‘வைதேகி எங்கே?’
‘குழந்தைதானே, ‘நானும் போறேம்மா’ன்னா. காய்கறி திருத்திக் கொடுத்தா, அபிராமி மாமி சாதம் போட மாட்டாளா?’
கொடியில் உலர்த்தியிருந்த பழுப்பேறிய வேட்டியையும் துவாலையையும் எடுத்துக்கொண்டு கிணற்றங்கரைக்குச் சென்றான் ராஜப்பா. ராட்டினத்தில் கயிறு இல்லை.
‘கயிறு எங்கேடி?’
‘ஏற்கனவே இத்துப் போயிருந்தது. நேத்திக்கி சாயங்காலம் அப்படியே துண்டு துண்டா போயிடுத்து. அதோ பாருங்கோ. மிஞ்சியிருக்கிறது ஒரு சாண்தான். அதுவும் சமயத்துக்கு வேண்டியிருக்குமேன்னு வச்சிருக்கேன்.’
‘யாருக்கு வேண்டியிருக்கும்? எனக்கா?’
‘உங்களுக்கு எதுக்கு வேண்டியிருக்கும்? எனக்குத்தான். இந்த மாதிரி குடும்பம் நடத்தறதை விட...’
‘என்னை என்ன பண்ணச் சொல்றே?’
’பிராம்மணார்த்தத்தை நம்பிக் குடும்பம் நடத்த முடியுமா? ஒரு கடையிலே போய்க் கணக்கு எழுதறது.’
‘எவண்டி வேலை தரேங்கிறான்? நான் கணக்கு எழுதமாட்டேன்னு சொன்னேனா?’
‘அம்பது வயசு வரையிலும் வேலை செய்யாம உட்கார்ந்திட்டு, ‘இப்போ வேலை தா!’ன்னா எவன் தருவான்? நம்ம அதிர்ஷ்டம் யாராத்திலேயும் ஒரு மாசத்துக்கு சிரார்த்தம் கிடையாது.’
‘விசாரிச்சுட்டியா?’
‘ஆமாம். வீடு வீடா போய் ‘உங்காத்திலே எப்போ சிரார்த்தம்’னு விசாரிச்சேன். கேக்கறதைப் பாரு. அன்னிக்குக் குப்பு வாத்தியார் வந்தார், சொன்னார்.’
‘சர். அது கிடக்கட்டும். இப்போ எப்படி ஸ்நானம் பண்றது’
‘தம்பி ஆம்படையாளைக் கேளுங்கோ. தினம் துவைக்கிற கல் மேலே அவ கயத்தை வச்சிருப்பா. இன்னிக்கு நாம எடுத்துடப் போறோமேன்னு மகராசி, உள்ளே கொண்டு போயிட்டா.’
அப்பொழுது அவனுடைய தம்பியின் மனைவி, கயிற்றைத் துவைக்கிற கல்லின் மீது ‘தொப்’பென்று கொண்டு போட்டு விட்டு உள்ளே போனாள்.
‘பார்த்தேளோன்னோ, எப்படி கொண்டு போடுறான்னு? நீங்க இங்கே குளிக்கவேணாம். குளத்துக்கே போய்..’
‘வெக்கம் மானம் பாத்தா நம்மாலே இருக்க முடியுமோடி? எல்லாத்தையும் எப்பவோ துடைச்சு எறிஞ்சாச்சு’ என்று சொல்லிக்கொண்டே கயிற்றை ராட்டினத்தில் மாட்டினான் ராஜப்பா.
நாலு வேலி ‘மிராசு’ ராஜகோபால் அய்யங்கார் தமது பேரன் மற்றவர்களுடைய பிதுர்க்களின் பிரதிநிதியாக இருந்து அவர்களுடைய பசியைத் தீர்த்து வைப்பான் என்று எதிர்பார்த்திருப்பாரா? அல்லது அவனுடைய அப்பாதான் இதை நினைத்துப் பார்த்திருப்பாரா? பார்க்கப் போனால் அவனுடைய இப்பொழுதைய ‘உத்தியோகம்’ அவனுக்கே ஆச்சரியத்தைத் தருகிற விஷயம். அம்மா போனபிறகு வயிற்றுப் பிரச்னை எழுந்தபோது குப்பு வாத்தியார்தான், அவனை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினார். இதற்காக அவன் ‘வேஷம்’ தரிக்க வேண்டியது அவசியமானது. கிராப்பு போய், குடுமி வந்தது. தட்டுச்சுற்று போய்ப் பஞ்சக்கச்சம். நெற்றியில் ‘பளிச்’சென்று நாமம். அவனுடைய தம்பிக்கு ஆரம்பத்தில் இது பிடிக்கவில்லை. ஆனால் ஆட்சேபித்தால் தன்னைப் பாதிக்குமோ என்று பயந்து பேசாமலிருந்துவிட்டான்.
ராஜப்பா ஸ்நானம் செய்துவிட்டு உள்ளே போனபோது, ருக்கு சமைத்துக்கொண்டிருந்தாள்.
‘என்ன தளிகை?’ என்று கேட்டான் ராஜப்பா.
‘சாதம் ஆயிடுத்து. நேத்தி சாத்தமது இருக்கு. அப்பளம் காய்ச்சப் போறேன்.’
‘காப்பிக்கு வழி உண்டா?’
ருக்கு காப்பி டப்பாவைக் கவிழ்த்துக் காட்டினாள்.
‘நான் அப்பளாம் காய்ச்சறேன். நீ போய் குப்பு வாத்தியார் ஆத்திலேர்ந்து...’
‘நான் ஒத்தர் ஆத்துக்கும் போய்க் காப்பிப் பொடி வாங்கிண்டு வரமாட்டேன்.’
‘காப்பி குடிக்காம என்னமோ மாதிரி இருக்குடி.’
‘அப்புறம் இன்னோராத்துக்குப் போய் சர்க்கரை வாங்கிண்டு வரணும். அதுக்கு நீங்களே போய் யாராத்துலயாவது காப்பி குடிச்சுக்குங்கோ. நீங்க அப்பளம் காய்ச்ச வேணாம். நானே காய்ச்சிடறேன்.’
ராஜப்பாவுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. யார் மீது கோபித்துக் கொள்ள முடியும்?
காப்பி குடிக்க வேண்டுமென்ற ஆவேசம் அவனுள் எழுந்தது. வெளியே போனால் யாராவது அகப்பட மாட்டார்களா?
அபிராமி மாமி வீட்டுக்குப் போய், ‘வைதேகி வந்திருக்காளான்னு விசாரிக்க வந்தேன்’ என்று கேட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் அங்கு தயங்கிக்கொண்டே நின்றால், காப்பி கிடைக்கக்கூடும். ரிடையர்டு எஞ்சினியர் ராமதேசிகன் வீட்டுக்குப் போகலாமென்றால், அவர் பெண்ணுடன் சீராட கும்பகோணம் போயிருக்கிறார். காலத்தை அனுசரித்துக் கோயிலில் பெருமாளுக்குக் காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா? ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ரொட்டி தருகிறார்கள். இந்த ஊர்ப் பெருமாளுக்கு காப்பி குடிக்கும் ஒரு நாச்சியார் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? கோயிலில் தினம் காப்பிப் பிரசாதம் கிடைத்திருக்கும்.
‘நீங்க சாப்பிடப் போறேளா இப்போ?’ என்று கேட்டாள் ருக்கு.
‘அதுக்குள்ளேயுமா? நான் கொஞ்சம் வெளியிலே போயிட்டு வரேன்.’
ராஜப்பா வீட்டைவிட்டு வெளியில் வந்து தெருவின் இரு திசைகளிலும் நோக்கினான். காப்பிக்கு வழி உண்டா என்பதுதான் அவனுடைய மகத்தான பிரச்னை.
பஸ் ஸ்டாண்டுக்குப் போனால் யாராவது தென்படக்கூடும்.
பஸ் ஸ்டாண்டில் நல்ல கூட்டம். கல்யாண நாளில்லை. இத்தனை பேர் எங்கு வருகிறார்கள். எங்கு போகிறார்கள் என்று தோன்றியது ராஜப்பாவுக்கு.
மாணிக்கத்தின் பழக்கடையில் கணவன், மனைவியுமாக இரண்டு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். கணவனுக்குத் தன் வயசுதான் இருக்குமென்று ராஜப்பாவுக்குப் பட்டது. தடித்த ஃபிரேம் போட்ட கண்ணாடி. ஜரிகை வேட்டி, அங்கவஸ்திரம், காலில் போட்டிருந்த செருப்பைப் பார்க்கும்போது வடக்கேயிருந்து வந்திருப்பவன் போல் பட்டது. அவன் மனைவிக்கு நாற்பது வயசிருக்கலாம். பட்டுப் புடைவை. ஒடிசலாக இருந்தாள். கையில் பை, அவளும் கண்ணாடி அணிந்திருந்தாள்.
ராஜப்பா அவர்களை நோக்கிச் சென்றான்.
‘ரூபாய்க்கு எட்டுப் பழம் கொடுப்பா!’ என்று கணவன், மாணிக்கத்திடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான்.
‘கட்டுப்படியாகாதுங்க. ஏழு படம்னு எடுத்துக்குங்க.’ என்றான்.
‘என்னடா மணிக்கம், ஊருக்குப் புதுசுன்னு ஏமாத்தப் பாக்கறியா? டஜன் ஒரு ரூபாய்னு சிரிப்பா சிரிக்கறது பழம்’ என்று கடைக்காரனிடம் சொல்லிவிட்டுக் கணவனைப் பார்த்துப் புன்னகை செய்தான் ராஜப்பா.
‘வாய்யா. நீ எப்போய்யா காசு கொடுத்துப் பளம் வாங்கிச் சாப்பிட்டிருக்கே? பெரிய நியாயமில்ல பேச வந்துட்டாரு’ என்றான் மாணிக்கம்.
ஜரிகை வேட்டிக்காரன் ராஜப்பாவை சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். எதற்காக அவன் தன்னை அப்படிப் பார்க்கிறான் என்று ராஜப்பாவுக்குப் புரியவில்லை. கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது.
‘உங்க பேரு?’ என்று கேட்டான் ஜரிகை வேட்டிக்காரன்.
‘ராஜப்பா.’
‘நினைச்சேன். மை காட், இது என்னடா வேஷம்? பஞ்சக்கச்சம் நாமம், குடுமி?’
ராஜப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘தெரியலியாடா என்னை? உத்துப் பார்றா.’
ராஜப்பா நினைவைத் துழாவினான். ஒன்றும் பொறிதட்டவில்லை.
‘ஆச்சாபுரம் அனந்துன்னு சொன்னா போறுமா?’ என்று கேட்டுக் கொண்டே அவன் ராஜப்பாவின் தோளில் கையை வைத்தான்.
‘அனந்துவா? நீங்க, எங்கேயோ வடக்கே...’
‘கரெக்ட். டில்லியிலே இருக்கேன். இவதான் என் ஆம்படையா, சரோஜா. அது கிடக்கட்டும், என்னடா ‘நீங்க’ போட்டுப் பேசறே? வருஷம் போனாலும் சிநேகிதம் போயிடுமா?’
அனந்து! இத்தனை உரிமையுடன், பழைய நட்பை உணர்ச்சிப் பூர்வமாக நினைத்து இவனால் பேச முடிகின்றதே, தன்னால் முடியுமா? அனந்துவின் மாமா சவுக்குத் தோப்பு நாராயண அய்யங்காருக்கு இந்த ஊர்தான். மேலத் தெருவில் இருந்தார். இப்பொழுது அவர் காலம் ஆகி, பிள்ளைகளும் ஆளுக்கொரு திசையாகப் போய்விட்டார்கள். அப்பொழுதெல்லாம் அனந்து, விடுமுறைக்கு இங்கு வந்துவிடுவான். அனந்துவுக்கு சினிமா என்றால் ஒரே பைத்தியம். சினிமாவில் சேர்ந்துவிடப் போவதாகச் சொன்னான். இப்பொழுது என்ன செய்கிறான்?
‘பாத்துக்கோ சரோஜா, இவன்தான் சின்ன வயசிலே என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். ஆத்தங்கரைக்குப் போய் ஒண்ணா சிகரெட் பிடிப்போம். அப்புறம் ராத்திரி ஆட்டம் சினிமா. உடம்பு பூரா பவுடரைக் கொட்டிண்டு மல் ஜிப்பாவுமா அதுவுமா இருந்த இவன், இப்போ பாரு, வேத வித்தா, நெருப்பா நிக்கறான். உலகத்திலே என்னென்ன அதிசயமெல்லாம் நடக்கிறது பாரு!’ என்று அனந்து தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
‘நீ...ங்...க.. நீ என்ன செய்யறே இப்போ?’ என்று கேட்டான் ராஜப்பா.
‘என்ன செய்யறேன், வயத்துப் பொழப்புக்கு ஒரு கம்பெனியிலே இருக்கேன். நாலு காசு சம்பாதிக்க என்னென்ன அக்கிரமமெல்லாம் பண்ணணுமோ, அதெல்லாம் பண்ணிண்டிருக்கேன். உன்னைப் பார்த்தா பொறாமையா இருக்குடா ராஜப்பா. யாரையும் ஏமாத்த வேணாம். ஊரோட வாசம். பெரியவா எழுதி வச்ச மந்திரம், சோறு போடறது. நீ வாத்தியாராத்தானே இருக்கே? நீ சொல்லாட்டாலும் உன் வேஷம் சொல்றதே! மஞ்ச சூர்ணம், முகத்தில் தேஜஸ்..’
‘நன்னாயிருக்கு நீங்க இப்படித் தெருவிலே நின்னுண்டு பேசறது. ரூமுக்குப் போய்ப் பேசிக்கலாம், வாங்கோ!’ என்றாள் சரோஜா.
‘ரூமுக்கா?’ என்று கேட்டான் ராஜப்பா.
‘ஆமாம். அதோ தெரியறது பாரு லாட்ஜ். அங்கேதான் இருக்கேன். நீ இங்கே இருக்கிறது எனக்குத் தெரியாம போச்சேடா. இல்லாட்டா, ‘ஜாம் ஜாம்’னு உங்காத்திலேயே வந்து தங்கியிருப்பேனே. இந்தாய்யா கடைக்காரரே! ரெண்டு டஜன் பழம் எடு. உன்னாலேதான் நம்ம பழைய சிநேகிதனைப் பார்க்கக் கொடுத்து வச்சுது’ என்று பேசிக்கொண்டே போனான் அனந்து.
அறைக்குச் சென்றதும் ராஜப்பா கேட்டான்: ‘நீ எப்படி இந்த ஊர்ப் பக்கம் வந்தே?’
‘சொன்னா நம்பமாட்டே. நான் சவுத்துக்கு வந்து பத்து வருஷமாறது. என் ஆம்படையா டில்லியிலேயே பொறந்து வளர்ந்தவ. வேட்டாமும் டில்லியாயிடுத்து. எனக்கும் இங்கே யாருமில்லே, இந்தப் பக்கம் வர அவசியமே இல்லாமப் போயிடுத்து. அப்படி வந்தாலும், மெட்ராசுக்கு வந்து திரும்பிடுவேன். இப்பத்தான் இந்த ஊரிலே நாம சின்ன வயசிலே இருந்திருக்கோமே, சரோஜாவுக்கும் சுத்திக் காமிக்கலாம்னு வந்தேன். இந்த ஊருக்கு வந்தவுடனே உன் நினைவு வராமலில்லே. ஆனா நீ எங்கே இருக்கேன்னு யாருக்குத் தெரியும்? உன்னை இங்கே பாக்கப் போறோம்னு நான் சத்தியமா நினைச்சுக்கூடப் பார்க்கலேடா. அதுவும் இந்தக் கோலத்திலே... ‘கோலம்’னு தப்பா சொல்லலே. உன்னைப் பார்த்தா பெருமையா இருக்கு. அது கிடக்கட்டும், உனக்குக் கல்யாணம் எங்கே, யாரு பொண்ணு, உனக்கு எத்தனை குழந்தைகள்?’
‘என் ஆம்படையாளுக்கு வடுவூட். குழந்தைகளுக்கு குறைச்சலில்ல்லே. மூணு பொண்ணு. எல்லாம் கல்யாணத்துக்கு நிக்கறது.’
‘மூணு பொண்ணு என்னடா பெரிய குழந்தைகள்? ‘ஜாம் ஜாம்’னு கல்யாணம் ஆயிடறது. பகவத் பிரீதி இருந்தா எதுதான் நடக்காது? எனக்கு ஒரே பிள்ளை. அமெரிக்காவிலே டாக்டரா இருக்கான். ஒரு பொண்ணு இருந்தா நன்னாத்தான் இருந்திருக்கும். ஆனா இந்த விஷயத்திலே பகவான் எனக்கு அனுக்கிரகம் பண்ணலே’
‘என்ன நீங்க பேசிண்டே இருக்கேளே, அவரை ஒண்ணும் சாப்பிடச் சொல்லாம? காப்பி குடிக்கிறேளா?’ என்று கேட்டாள் சரோஜா.
‘அடச் சீ! டில்லிக்காரின்னு காமிச்சுட்டியா.... வேதவித்தா நிக்கறான். கண்ட கண்ட ஓட்டல்லேந்து காப்பி குடிப்பானா? இவ சொல்றதெல்லாம் டில்லியிலே நடக்கும். என் ஊர் வைதீகாளைப் பத்தி எனக்குத் தெரியுண்டி. பாலுக்குத் தோஷமில்லே, குடிக்கிறியா?’
‘வேணாம்.’ - ராஜப்பாவின் குரல் பலகீனமாய் ஒலித்தது.
’பாத்தியாடி? பால்கூடக் குடிக்க மாட்டேங்கிறான். அந்தக் காலத்து ராஜப்பாவான்னு இருக்கு. வேதம் படிச்சா என்ன கட்டுப்பாடு வந்துடறது பாத்தியா? ராஜப்பா, உன் மாதிரி அத்தியயானம் பண்ணவாளைப் பாத்தா, கால்லே விழுந்து சேவிக்கணும் போலிருக்குடா. நிஜமாச் சொல்றேன். சமஸ்கிருத மந்திரத்தைப் படிச்சவா சொல்லிக் கேக்கணும்னு எனக்குக் கொள்ளை ஆசை. டில்லியிலே பள்ளிக்கூடத்திலே ஒரு சமஸ்கிருத வாத்தியார் இருக்கார். நம்மடவர். ஸ்ரீநிவாச வரதன்னு பேரு. மந்திரம் சொன்னார்னா கணீர்னு இருக்கும். அவரை அடிக்கடி ஆத்துக்கு  வரச் சொல்லி, புருஷ சூக்தம் சொல்லச் சொல்வேன். ஒரு தடவைக்குப் பத்து ரூபா தட்சிணை, சாப்பாடு. அவருக்குக் கனகாபிஷேகம் செய்யலாம், நியாயமா பாக்கப் போனா. ஆனா என்னாலே முடிஞ்சது இவ்வளவுதான். தொழிலுக்காக நாம எவ்வளவோ தப்புகாரியம் பண்றோம். அதுவும் நாம எவ்வளவோ தப்புகாரியம் பண்றோம். அதுவும் என் மாதிரி தொழில்லே இருந்தா கேக்க வேணாம். இதுக்கு உன் மாதிரி வேதம் படிச்சவாளைக் கூப்பிட்டு கவுரவம் பண்றது ஒரு வகையான பிராயச்சித்தம்னு வேணுமானலும் வச்சுக்கோ.’
‘வாய் ஓயாம நீங்களே பேசிண்டிருக்கேளே! அவரைக் கொஞ்சம் பேச விடுங்கோ...’ என்றாள் சரோஜா.
‘ஆமாமாம். பேச ஆரம்பிச்சேன்னா ஓய மாட்டேன். என் தொழில் அப்படி. நீ கொஞ்சம் சாம வேதம் சொல்லேன். கேக்கணும்னு ஆசையா இருக்கு.’
‘என்னை டில்லிக்காரின்னு சொல்லிட்டு நீங்க இப்போ இப்படி அவரைப் போய்க் கேக்கறது நன்னாயிருக்கா? வேதம் சொல்ல வேளை, இடமெல்லாம் கிடையாதா?’ என்றாள் சரோஜா.
‘எனக்கிருக்கிற ஆதங்கத்திலே பேத்திண்டே போறேன். நீ சொல்றது சரிதான், சரோஜா. ராஜப்பா, புறப்படு. உங்காத்துக்குப் போவோம். உன் ஆம்படையா, குழந்தை எல்லாரையும் பாக்கணும் போலிருக்கு. எங்களுக்கு இன்னிக்கு உங்காத்திலேதான் சாப்பாடு. இந்தா, பழமாவது சாப்பிடு. காப்பியோ பாலோ வேற எதுவும் தொடமாட்டேங்கிறே.’
’திடுதிப்னு உங்காத்திலே சாப்பிட வரோம்னா என்ன அர்த்தம்? பாவம் அவரோட ஆம்படையா என்ன செய்வா? ஆத்திலே என்ன சௌகரியமோ, ஒண்ணும் தெரியாம இப்படிப் பேசினா...’ என்றாள் சரோஜா.
‘இது டில்லியில்லேடி, தெரிஞ்சுக்கோ! டில்லியிலேதான் ஒத்தருக்கு சாப்பாடுன்னாலும் அரை வயத்துச் சாப்பாடு. இங்கெல்லாம், கூட ரெண்டு பேர் சாப்பிடறதுக்குத் தயாரா சமைச்சி வச்சிருப்பா. என் ஊரைப்பத்தி எனக்குத் தெரியாதா? உன்னை எதுக்காகக் கூட்டிண்டு வந்தேன் தெரியுமா? என் ஊர் பெருமையைக் காட்டத்தான். சின்ன வயசிலே, இவாத்திலே எத்தனை தடவை சாப்பிட்டிருக்கேன் தெரியுமா? இவனோட அம்மா ஒரு ஊறுகா போடுவா, அதுக்குப் பேர் என்னடா ராஜப்பா? எஸ். மாகாளிக்கிழங்கு. மூட்டைப் பூச்சி வாசனையா இருக்குமே. வாயிலே போட்டா என்ன ருசியா இருக்கும் தெரியுமா? உங்கப்பா பெரிய சாப்பாட்டுப் பிரியர். பக்தர்னு சொல்லணும், அப்படித்தானே?’
அப்பா சாப்பாட்டுப் பக்தர்தான். தாத்தா வைத்துவிட்டுப் போன நிலத்தையெல்லாம் சாப்பிட்டே தீர்த்தார். இவன், சாப்பாட்டை நினைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகின்றேன் என்கிறானே, இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது? இந்த ஊரைப் பற்றிய அவனுடைய முப்பத்தைந்து வருடத்திய ஆதாரமான நினைவுக்குப் பங்கம் வரக்கூடாது என்ற பிடிவாதத்துடன், ஆவேசம் வந்தவன் போல் பேசுகிறான். அவனுடைய இளமைப் பருவ உலகத்தைக் காட்டுவதற்காக மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான். தன் வீட்டு நிலைமையைப் பற்றித் தெரிந்தால் இவனுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்! தனக்கு இப்பொழுது காப்பிக்குக்கூட வழியில்லை.
ஊருக்குப் புதியவர்கள் போல் இருந்தார்களே, கோயிலையும் குளத்தையும் சுற்றிக் காண்பித்து காப்பிக்கு வழி பண்ணிக் கொள்ளலாம் என்று தான் போட்ட திட்டம், கிணறு வெட்டப் பூதம் போல் ஆகிவிட்டதே! இவனிடமிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது?
புருஷ சூக்தமாம், சாம வேதமாம். யாருக்குத் தெரியுமாம் இவையெல்லாம்? அது கிடக்கட்டும். படிப்பு எதற்காக? பணமுள்ளவனிடம் விலையாவதற்காகவா? இவன் சம்பாதிப்பதற்காகத் தப்புத்தண்டா செய்வானாம்.
பிராயச்சித்தம் செய்ய ஒரு பிராம்மணன், வேதமந்திரம் எல்லாம்! அநியாயத்துக்கு துணை போக! நான் எவ்வளவோ தேவலை இவனுக்கு! வேஷத்திலே எது ஒசத்தி வேஷம், தாழ்த்தி வேஷம்!
‘என்ன ராசப்பா போகலாமா, உங்காத்துக்கு?’ என்றான் அனந்து.
‘சொல்லாம கொள்ளாம சாப்பிடப் போக வேண்டாம். போய் பாத்துட்டு வருவோம். வேணும்னா, காப்பி குடிச்சிட்டு....’
அனந்து இடைமறித்தான். ‘என்னை கரெக்ட் பண்ணிட்டு என்னடி நீயே சொல்றே, வேதவித்து அவாத்திலே காப்பி குடிப்பாளா?’
ராஜப்பாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உண்மையை அவர்கள் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
‘தோ பாரு, அனந்து! நான் வேதவித்துமில்லே, ஒரு மண்ணாங்கட்டியுமில்லே. வேதவித்து வேணும்னா நீ வேத காலத்துக்குத் தான் போகணும். முதல்லே நான் கேக்கறதை முதல்லே கொடு, அப்புறம் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்.’
அதிர்ச்சி அடைந்த அனந்து பலகீனமான குரலில் கேட்டான். ‘என்ன வேணும்?’
‘ஒரு கப் காப்பி.’

********
தட்டச்சு : சென்ஷி

Jul 16, 2010

தொலைவு-பூமணி

பஸ் விரட்டலில் சிதறுண்ட புறாக்கூட்டம் பஸ்டாண்டைத் தாண்டி ஆற்றங்கரை மர வரிசைக்குள் மறைந்து போயிற்று.

'சேசுவே ஒம் கொழந்தைகளக் காப்பாத்தும். '

poomani2 ரோசம்மா நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டாள். அவள் காலடியில் மேரிக்குட்டி பஸ்டாண்டில் பார்வை விளையாட நின்றிருந்தாள்.

அந்தோணியும் வயலெட்டும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ரெண்டு குழந்தைகளும் இடையில் ஓடி தொந்தரவு செய்தன. ஆனாலும் சட்டை செய்யவில்லை. ஒரு தடவை அந்தோணி அரட்டினான்.

'ஏலே சும்மா இரியேம்லே கையக்கால வச்சிட்டு. '

ரோசம்மா முறுவலித்தாள்.

'என்னதான் பேசி முடிப்பாவளாம். '

கல்யாணம் முடிந்தது நேற்றுப் போலிருக்கிறது. அதற்குள் ரெண்டு பிள்ளைக்காரனாகி விட்டான். மூத்தவள் ஏழெட்டு வருசத்தில் உட்கார்ந்து விடுவாள். பெண்ணுஞ் சரி பீர்க்கங்கொடியுஞ்சரி. சின்னவனைப் பற்றிக் கவலையில்லை. என்றைக்கிருந்தாலும் சம்பாதிப்பவனாயிற்றே.

அந்தோணி திடப்பட்டு விட்டான். மீசை புருவமெல்லாம் அய்யாவைப் போல் திரட்சியாக. ஏன் கன்னங்கூட ஒட்டிப் போய் அதே அச்சுதான். இதெல்லாம் பார்க்க அவர் இருக்கணும் இன்னேரம். வயலெட் கெட்டிக்காரியாக்கும். புருசனை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். நல்ல சம்பந்தம். வசதிக்குக் குறைவில்லை. நிறைய நகை போட்டார்கள். ரொக்கம் வேறு கொடுத்தார்கள். இப்போதும் வருசத்துக்கு வேண்டிய எல்லாப் பண்டங்களையும் அவள் வீட்டிலிருந்து அனுப்பி விடுகிறார்கள். அவளது வீட்டிற்குப் போய் ரொம்ப நாளாயிற்று. கல்யாணத்திற்குப் பிந்தி ஒரு நாள் போனது. சம்பந்தகாரர்களும் வருவதில்லை. அந்தோணி வந்தால்கூட இவன்தான் அங்கு போகணும். அப்படியொரு வழக்கம் ஏற்பட்டுப் போனது.

என்னமோ பிள்ளை குட்டிகளுடன் அவன் நன்றாக இருந்தால் சரி. அவனைப் படிக்க வைக்க கொஞ்சச் செலவா ஆயிற்று. விவசாயத்தில் வந்த வரவையெல்லாம் அவனுக்குத்தான் போட்டது. அவன் அய்யாவுக்கென்றால் ஒரே கிறுக்கு. எப்படியும் படிக்கவைத்து விட வேண்டுமென்று. கடைசியில் அவன் வேலைக்குப் போவதைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. கமலைத் தனத்தில் மாட்டுக்குத் தும்பறுந்து நிறை கூனையுடன் மோக்கால் மோதியதென்று படுத்தார். மனுஷனை அப்படியே அமுக்கிவிட்டது.

கர்த்தருக்கு முன்னால் எல்லாரும் மண்டியிட்டு ஜபித்ததெல்லாம் பலனற்றுப் போனது.

அப்போது மேரிக்குட்டி கைக்குழந்தை. அய்யா முகம் அடையாளந்தெரியாது. ரெம்ப நாளாக அய்யா ஊருக்குப் போயிருப்பதாகச் சொல்லித் திரிந்தாள். இன்றைக்கு நாலாவது வாசிக்கிறாள். மரிய செல்வம் கெட்டிக்காரி. வீட்டு வேலைக்குக் கவலையில்லை. அது சமைந்து ரெண்டு வருசமாகிறது. ஒருத்தனுக்குக் கொடுக்கணும். அது வேறு செலவு.

மேரிக்குட்டியை மேற்கொண்டு படிக்க வைக்கணும். அதுக்கு வீட்டில் ஓட்டமில்லை. மாடு வண்டியெல்லாம் விற்று விவசாயம் கால் குறுக்கத்தில் வந்து நிற்கிறது. கீரையும் காய்கறியும் விற்று எந்த மூலைக்கு அடைபடும். என்னேரமும் கமலை இறவையாடிய கிணற்றில் இன்றைக்கு தெலா முனக்கம் கேட்கிறத். அதற்கும்கூட யாரையாவது பிடித்து வரவேண்டியிருக்கிறது.

எல்லாம் அவரோடு சரி. அவர் கண்ணுக்குப் பின்னால் முற்றந்தெளிக்க சாணிக்குக்கூட அடுத்த வீடு போக வேண்டிய நிலைமை. என்னமோ ஒரு வருசமாக மரிய செல்வம் காளங்கண்ணு வளர்க்கிறாள். அதை விற்றால் அவளுக்கொரு தங்கச் சாமானுக்காயிற்று.

போன பண்டிகைக்கு எல்லாருக்கும் துணிமணியெடுக்க அந்தோணி பணம் அனுப்பினான். மூணு மாசத்திற்கு முந்தியே கடிதம் எழுதித் தூண்டியது. கர்த்தர் கிருபையில் பண்டிகைக்குக் குறையெதுவுமில்லை. இந்தப் பண்டிகைக்குக் அவனை குடும்பத்துடன் வரச் சொல்லணும். நிறையச் செலவாகும். அந்தச் செலவுக்கு இங்கே பண்டிகை கொண்டாடிவிடலாம். முதலில் மருமகள் என்ன சொல்கிறாளோ.

இப்போது வேறு வந்து போகிறான். கொழுந்தியாளுக்குக் கல்யாணமாம். வரவில்லையென்றால் மாமனார் கோவிப்பார். மருமகளுக்குச் சொல்லி முடியாது.

ரோசம்மாவுக்கு பஸ்டாண்டு இரைச்சல் உறுத்தியது. மேரிக்குட்டியின் தலையை வருடினாள். அதற்குப் பதிலாக குட்டி அண்ணாந்து பார்த்தாள்.

'ஏட்டி குட்டி அண்ணனோட பட்ணம் போறயா படிக்க. '

குட்டி தலையை வெட்டினாள்.

'ம்க்கும் அம்மாவும் வரணும். '

எதுக்கெடுத்தாலும் இப்படித்தான். கூடவே அம்மா இருக்கணும். கோயிலுக்குள் மண்டியிடும் போதுகூட முந்தியைப் பிடித்துக் கொண்டு வாயலுங்கப் பேசமாட்டாள். சோறு போட்டுவைத்தால் அம்மா பக்கத்திலிருந்து பிசைந்து கொடுக்கணும். மறுசோறு வேண்டுமா என்று கேட்டால் அமைதியாகச் சொல்வாள்.

'அம்மாவுக்குப் பிரியம் எப்படியோ அப்படி. '

'மகளே நீ பள்ளிக்கூடம் போயி எப்படி இருக்கயோ. '

ரோசம்மா குட்டியை அணைத்துக் கொண்டாள். சிகரெட்டை ஊதியவாறு பெட்டி படுக்கைகளைச் சரி பார்த்த அந்தோணி கேட்டான்.

'குட்டி என்னம்மா சொல்லுது. '

'அண்ணனோட போறயான்னு கேக்கென். அம்மாவும் வரணுமாம். '

அந்தோணி வயலெட்டைப் பார்த்தான். குழந்தைகளைப் பிடித்து வசக்கிக் கொண்டிருந்தாள் அவள்.

'குட்டிக்கு அம்மா கூடவே இருக்கணும். அம்மா வந்தா அக்கா என்னடா செய்வா. '

குட்டி அம்மா மடிக்குள் முகத்தை ஒளித்துக் கொண்டாள்.

'அக்காவ கலியாணம் முடிச்சுக் குடுக்கணும். '

எல்லோரும் சிரித்தார்கள். அந்தோணி பிறகு மெளனப்பட்டுப் போனான்.

ரோசம்மா பந்துத் தலையைச் சொறிந்து கொண்டாள்.

'ஏம்ப்பா கார் வர நேரமாவுமா. '

'இண்ணைக்கென்னமோ லேட்டு. '

'இப்படி சீரெட் ஊதுறயே அதென்ன வாயி நெறையுமா வயிறு நெறையுமா. வீண் செலவு தானப்பா. '

வயலெட் திரும்பிப் பார்த்தாள்.

'நானுந்தான் சொல்றத்தே. அவிய கேட்டாத்தான. ஒடம்பு எதுக்காவும். அவியளுக்கு யாரு சொல்லுவா. '

'ஒடம்பு மட்டுமா. மாசம் செலவென்ன ஆவும். அந்தக் காச எனக்கனுப்பினாக் கூட புள்ளைகளுக்குப் போடுவென். இல்ல ஒம்புள்ளைகளுக்குப் போடு. ஒம் புருசனக் கண்டிசன் பண்ணி வையி. துட்டு கரியாப் போவுதே. '

'அதோ பஸ் வந்தாச்சே. '

அந்தோணி சிகரெட்டை எறிந்து நசுக்கினான். வயலெட் எழுந்து சேலையைத் துடைத்தாள்.

'உள்ள எறிக்கடா. புள்ளைகளக் கூப்பிடு. '

'நீங்க பெட்டியத் தூக்குங்க. நான் சூட்கேஸ எடுத்துக்கிறென். '

'எனக்கிட்ட ஒண்ணு குடும்மா. '

'வேணாம். நானே தூக்கிப் போயி டிக்குல போட்டுட்டு வாறென். '

மேரிக்குட்டியும் ஏறிக்கொண்டாள். முன்சீட்டில் குழந்தைகளுடன் வயலெட் உட்கார்ந்தாள். பின்னால் அந்தோணியின் பக்கத்தில் ரோசம்மா உட்கார்ந்து மேரிக்குட்டியை மடியில் வைத்திருந்தாள்.

'சாமானெல்லாம் பத்தரமா இருக்குமாப்பா. '

அந்தோணி தலையாட்டினான். பிறகு எழுந்து முன்சீட்டைப் பார்த்துவிட்டு உட்கார்ந்தான்.

'போற வழியில ஒறங்கக் கூடாதுப்பா. புள்ளைகளக் கூட்டிப் போறவன் கவனமாப் போவணும். '

அவன் ஜன்னல் வழியே டாக்கடையில் தொங்கிய புஸ்தகங்களைக் கவனித்திருந்தான்.

'அடிக்கடி காயிதம் போடணும். வீட்ட மறந்துறக்கூடாது. ரெண்டு வச்சுகிட்டு நான் கெடக்கேன் இல்ல. குட்டியப் படிக்க வைக்கணும். அவளுக்குக் காலாகாலத்துல ஒரு எடம் பார்க்கணும். பொறுப்பிலாம இருந்துறக்கூடாது. நம்ம ஒண்ணும் வசதியாப் பெழைக்கல. '

முன்சீட்டில் வயலெட் குழந்தைகளின் சேட்டைக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருந்தாள். யாரோ ரோசம்மாவின் இடத்திற்காகக் காத்து நின்றார்கள். அந்தோணி சொன்னான்.

'குட்டியும் நீங்களும் எறங்கிக்கங்க. பஸ் பொறப்புடப் போவுது. '

'ரோசம்மா எழுந்தாள். அவளுக்கு முந்தியே குட்டி முன்சீட்டிற்கு வந்திருந்தாள்.

'கொழந்தைகள நல்லாப் பாத்துக்கிறணும்மா. கழுத்துல சாமாங்களப் போட்டுட்டு அயத்து ஒறங்கீறாத. போனதும் காயிதம் போடணும். அவன் மறந்தாலும் நீ மறக்கக் கூடாது. போயிட்டு வரட்டுமாம்மா. '

ரோசம்மா மூணுபேர் நெற்றியிலும் சிலுவையிட்டு முத்தி விட்டு நிமிர்ந்தாள்.

பின்னாலிருந்து அந்தோணியின் குரல் கேட்டது.

'பர்ஸ்க் குடிடா. குட்டிக்குக் காசு குடுக்கணும். '

வயலெட் பர்ஸைக் கொடுக்கவில்லை. அவளே ஒரு ரூபாய் நோட்டை எடுத்து குட்டியிடம் நீட்டினாள். குட்டி அம்மாவைப் பார்த்துவிட்டு வாங்கிக் கொண்டாள்.

பின் சீட்டிற்கு நகர்ந்த ரோசம்மா அந்தோணியின் நெற்றியிலும் முத்தி விட்டு குனிந்தவாறே காதருகில் சொன்னாள்.

'மாசம் மாசம் பணம் அனுப்பச் சொணங்காதப்பா. நான் வரட்டுமா. '

அந்தோணி தலையசைத்தான். குட்டியின் கையைப் பிடித்து மெல்ல இறக்கி விட்டாள் ரோசம்மா.

புறப்பட்டுபோன பஸ் இரைச்சல் ரெம்ப தூரத்தில் கேட்டது.

'புள்ளைகள இழுத்துட்டு எப்படித்தான் போயிச் சேரப் போறானோ. '

ரவிக்கைக்குள் கிடந்த சிலுவையை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்ட ரோசம்மா ரூபாய் நோட்டை நீட்டி நின்ற குட்டியை இப்போது கவனித்தாள்.

'கர்த்தரே நான் பாவி. '

குட்டியை அழைத்துக் கொண்டு அவள் இன்னொரு பஸ்ஸைத் தேடியபோது புறாக்கூட்டம் மறுபடியும் இறங்கியிருந்தது.

***

Jul 14, 2010

தனுமை - வண்ணதாசன்

இதில்தான் தனு போகிறாள்.
பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயே vdaவீட்டுப்பக்கம் ஏறிக்கொள்வாள், இறங்கிக்கொள்வாள்.
ஒரு வகையில் மகிழ்ச்சி. தன்னுடைய பலகீனமான காலை இழுத்து இழுத்து, ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து வர வேண்டும். முன்புபோல் இவனுடைய காலேஜ் வாசலோடு நின்று போகிற டவுன் பஸ்ஸிற்காக, அவளுடைய குறையின் தாழ்வுடன் எல்லோருடனும் காத்திருக்க வேண்டாம். இனிமேல் நேருக்கு நேர் பார்க்க முடியாது.
இந்த ஆர்பனேஜ் மர நிழல்களுக்குக் கையில் புஸ்தகத்துடன் ஞானப்பன் இனி வர வேண்டிய அவசியமில்லை. பழையபடி தெற்கே தள்ளி, உடைமரக் காடுகளுக்குள்ளே போய் விடலாம். எங்கே பார்த்தாலும் மணல், எங்கே பார்த்தாலும் முள். விசுக் விசுக்கென்று ‘சில்லாட்டான்’ ஓடும். அல்லது பருத்து வளர்ந்து ஓணான் ஆகத் தலையாட்டும். ஆளற்ற தனிமையில் அஸ்தமவானம் கீழிறங்கிச் சிவக்கும். லட்சக்கணக்கான மனிதர்கள் புதையுண்டதுபோல் கைவைத்த இடமெல்லாம் எலும்பு முள்ளும் முண்டுமாக அகப்படும். கருக்கு மட்டையை வேலியாக நட்டு, உள்ளே போட்டிருக்கிற குடிசையிலிருந்து கருப்பட்டி காய்ச்சுகிற வாடை வரும். கோழி மேயும். நத்தைக்கூடுகள் நெல்லிகாய் நெல்லிக்காயாக அப்பி இருக்கிற முள்ளை வெட்டி இழுத்துக்கொண்டு போகிறவளின் உடம்பு, பாடத்தை விட்டு விலக்கும். பலதடவை பேச்சுக் கொடுத்தபிறகு சிரிக்கிறதற்கு மட்டும் தழைந்திருந்த ஒருத்தியின் கருத்த கொலுசுக் கால்கள் மண்ணை அரக்கி அரக்கி நடக்கும்.
நடக்க முடியாமல் நடக்கிற தனுவுக்கு ஆர்பனேஜின் வழியாகக் குறுக்காகச் சென்றால் பஸ் நிற்கிற காலேஜ் வாசலுக்குப் போய்விடலாம் என்பது தாமதமாகத்தான் தெரிந்திருக்கும். அவள் பெயர் தெரிந்தது அன்றுதான். ’தனு! இந்த வழியாப் போயிரலாமாடி?’ என்று எப்போதும் கூடச்செல்கிற பையன் காட்டினான். அவள் தம்பி, யூனிபாரம் அணிந்த அவளின் சின்ன வழித்துணை.
ஞானப்பன் யதேச்சையாக அன்று ஆர்பனேஜிற்குப் படிக்க வந்திருந்தான். படித்து முடித்துவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்புகிற வேளையில் பீடி தேவையாக இருந்தது. கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தான். சின்ன வேப்பங்கன்றுக்குக் கீழே டயர் போட்ட மொட்டைவண்டியின் நோக்காலில் ’உட்கார்ந்து, பள்ளிக்கூடக்கட்டிடத்திற்கு முன்னால் உள்ள கொடிக்கம்பத்தைப் பார்ப்பது போல் பார்வை.
வட்டமாகக் குறுக்குச் செங்கல் பதித்து உள்ள பீநாறிப்பூச்செடி நட்டிருந்தார்கள். அந்த பூவும் செடியும் அவனுடைய ஊருக்கு இறங்க வேண்டிய ரயில்வே ஸ்டேஷனிலும் சிறு வயதிலிருந்து உண்டு. கல் வாழைகள் அப்போது வந்திருக்கவில்லை. ஊர் ஞாபகம், இரவில் இறங்குகையில் நிலா வெளிச்சத்தில் கோடாக மினுங்குகிற குளிர்ந்த தண்டவாளம், லாந்தல் சத்திரம், மினுக்கட்டாம் பூச்சிகள் எல்லாம் ஒவ்வொரு பூவிலும் தெரிந்துகொண்டிருந்த போதுதான் - ‘தனு! இந்த வழியாப் போயிரலாமாடி?’ என்ற சத்தம்.
கைலியை இறக்கிவிட்டுக்கொண்டு, நோக்காலில் இருந்து இறங்கினான். இறுகிக் கட்டின போச்சக்கயிறு கீச்சென்று முனகியது. தொழுவங்களில் மூங்கில் தடியினால் தண்டயம் போட்டிருப்பது போல வண்டி போகவர மட்டுமே புழங்குகிற அந்தத் தடுப்புக்கு அப்புறம் தனுவும் அவள் தம்பியும் நின்று கொண்டிருக்கிறார்கள். தம்பி சடக்கென்று காலைத் தவ்வலாகப் போட்டுக் குனிந்து உட்பக்கம் வந்துவிட, ஒரே ஒரு வினாடி அவள் விசாலமான தனிமையில் நின்றாள். பின்னால் பொருத்தமற்ற பின்னணியாய்ப் பாலையான மணல்விரிப்பும், உடைமரங்களும், உடைமரம் பூத்ததுபோல மெல்லிசான மணமாக இவள், தனு.
ஞானப்பன் ஒரு ராஜவாயிலைத் திறப்பதுபோல மென்மையாக மூங்கிலை உருவி, அவளை வரவிட்டு ஒதுங்கினான். உள் ஒடுங்கின, பரபரப்பில் மூங்கில் தவறி மண்ணில் இறங்கி கரையான்கள் உதிர்ந்தன. தனுவின் தம்பி ‘தாங்ஸ்’ - சொன்னான். தனு ‘உஸ்’ என்று அவனை அடக்கி இழுத்துப்போனாள். ஒரு சிறுமியைப்போல மெலிந்திருந்த தனு தூரம் போகப்போக நேர்கோடாக ஆரம்பிக்கும் ஆர்பனேஜின் முன்பக்கத்து இரண்டு ஓரச்செடிகளின் சினியா மலர்களின் சோகைச் சிவப்புக்கும் கேந்தியின் மஞ்சளுக்கும் முதல் முதலாக உயிர் வந்தன. அழகாகப் பட்டன.
எதிரே டெய்ஸி வாத்திச்சி வந்துகொண்டிருந்தாள். கன்னங்களில் பருவில்லாமல் இருந்ததால் அவளுக்கு இந்த மதமதப்பு இருக்காது. கல்யாணம் ஆகாததால் மீறி நிற்கிற உடம்பு. ஒரு கறுப்புக்குதிரை மாதிரி, நுணுக்கமான வீச்சுடன் அவள் பார்த்துவிட்டுச் செல்லும்போது ஞானப்பனுக்கு உடம்பு அதிரும். இன்று குறைவாக, இவனைப்போல இங்கே படிக்க வருகிற வேறு சிலருக்கும் அவளுடைய திரேகத்தின் முறுக்கம் ரசித்தது.
ஞானப்பனுக்கு தனுவின் நினைவு மாத்திரம் ஒரு நீர்ப்பூவைப் போல அலம்பி அலம்பி அவள் முகம் நிற்க மற்றவையெல்லாம் நீரோட்டத்தோடு விரைந்து ஒதுங்கின. டெய்ஸி வாத்திச்சி நதியில் மிதந்த செம்பருத்திப் பூவாய், அள்ளுகிற குடத்தில் புகுந்துவிட, விரலை முட்டி முட்டி விலகிக் கொண்டிருக்கிறாள். அவளைப் போன வருஷத்தில் இருந்தே அவனுக்குத் தெரியும்.
ஒரு டிசம்பர் மாதம். ஹார்மோனியம் நடைவண்டி நடையாகக் கேட்டது. பத்துப் பதினைந்து பையன்களின் கூச்சலுக்கு மத்தியில் ஒரு பையன் கொஞ்சம் துணிச்சலாக ஒவ்வொரு பல்லாக அழுத்திக் கொண்டிருந்தான். இடம் ஆரம்பித்து வலம். கண்டமத்தியில் ஆரம்பித்த இடம். இதற்குள் துருத்தியை அமுக்குகிற விரல் மறந்திருக்கும்.ங்ர்ர் என்று பெட்டி கம்மும்போது ஒரு சிரிப்பு. ஞானப்பன் போய் நின்றான். பையன்கள் விலகினார்கள்.
ஞானப்பன் சிரித்தான். அவன் கைப்பழக்கமாக வாசிப்பான். சினிமா பாட்டுவரை. ‘படிங்க சார், படிங்க சார்’ என்று குரல்கள். “என்ன பாட்டுடே படிக்க?” என்று கேட்டுக்கொண்டே அவன் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்று தொய்வாக வாசித்து நிறுத்திவிட்டுக் கேட்டான், “என்ன பாட்டு சொல்லுங்க பார்க்கலாம்?”
“எனக்குத் தெரியும்”
“நாஞ் சொல்லுதேன் ஸார்”
“இந்த நல் உணவை’ - பாட்டு ஸார்”
ஞானப்பனுக்கு கடைசிப் பையன் சொன்னதைக் கேட்டதும் திக்கென்றது. “இந்த நல்உணவைத் தந்த நம் இறைவனை வணங்குவோம்” என்று காலையில் அலுமினியத் தட்டும் தம்ளருமாக உட்கார்ந்து கொண்டு, கோதுமை உப்புமாவுக்கும் மக்காச்சோளக் கஞ்சிக்கும் எதிர்பார்த்துப் பாடுகிற ஒரு தாங்க முடியாத காட்சி தெரிந்தது. அனாதைகளை மேலும் மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடலை இவன் வாசிப்பில் உடனடியாக உணர்ந்த பையனின் உயிரும் ஜீவனுமற்ற முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஞானப்பனுக்கு வேறு எந்த கிறிஸ்தவ கீதங்களும் நினைவுக்கு வரவில்லை. எல்லா கிறிஸ்தவ கீதங்களும் ஒரே ராக வடிவுதான் என்ற நினைப்பை அவனுக்கு உண்டாக்கின. “எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே” பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித்தான். பையன்கள் அடுத்த வரிகளைப் பாடினபோது அவனுக்குச் சிலிர்த்தது.
அந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம்பூக்களும் பாடுவதுபோல - வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்ச்சுக்குப்போய் வருகிறவர்களின் புழுதிக்கால்களின் பின்னணிபோல -
பால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்டவேலை செய்கிறவர்கள் பாடுவதுபோல -
வாரத்துக்கு ஒரு நாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுதுகொண்டிருக்கிற பையனின் சோகம்போல -
எந்தச் சத்துக்குறைவாலோ ‘ஒட்டுவாரொட்டி’யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுணிச் சிரங்கிற்கான பிரார்த்தனைபோல -
கிணற்றடியில் உப்புநீரை இறைத்து இறைத்து ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களில் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல்போல -
இரண்டு பைசா ஒன்று பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந்துவிட, அசுரத்தனமாகத் தண்ணீரை இறைத்து இறைத்து ஏமாந்து கொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக்கனவுகள் போல....
ஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது, டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள். பையன்கள் கலைந்து நகர்ந்தார்கள். இவனின் வாசிப்பைப் பாராட்டினாள். வாசலில் கையூன்றிச் சிரித்தாள்.
ஞானப்பனுக்கு ஒரேயடியாக அந்த இடத்தில் அவளை அடித்துத் தள்ளவேண்டும் என்று தோன்றியது.
டெய்ஸி வாத்திச்சியின் பார்வையைப் போலவே, சைக்கிளில் போகிற ஒரு இங்கிலீஷ்காரப் பெண்ணையும் ஞானப்பன் சகித்துக் கொள்ள வேண்டியதிருந்தது. அவளை அநேகமாக லீவு நாட்களில் காலையிலேயே இரண்டு தடவை பார்த்துவிடலாம்.
முதல் ஷிப்டு வேலைக்காகக் கையில் தூக்குச் சட்டியைக் கோத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் போகிற ஜனங்கள். பதநீர் குடிக்கிறவர்கள். முதல் சங்கு ஊதின பிறகு அவசரம் அவசரமாக வடையை ஊறுகாய்த் தடையை வாங்கிக்கொண்டு போகிறவர்கள். இராத்திரி ஷிப்ட் முடிந்து பஞ்சும் தலையுமாக டீக்கடையில் பேப்பர் படிப்பவர்கள்; அவர்களின் சைக்கிளில் தொங்குகிற தூக்குச் சட்டிகள்; இவர்களுக்கு மத்தியில் இந்தப் பெண்ணின் குடும்பமே சைக்கிளில் சர்ச்சுக்குப் போகும். அப்பா, அம்மா எல்லாருமே ஒவ்வொரு சைக்கிளில். ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அமைப்புஅலை மீறின அவளுடைய பாரமான உடம்பும் பெருந்தொடையும் பிதுங்க அவள் செல்லும் போதெல்லாம், அவன் அநாவசியமான ஒரு அருவருப்பையடைய நேர்ந்திருக்கிறது.
கொஞ்ச நேரத்தில் இதையெல்லாம் கழுவி விடுவதுபோல் தனு வருவாள். அந்த தனுவை இனிமேல் ஜாஸ்தி பார்க்க முடியாது. மறுபடியும் சிகரெட்டிலிருந்து பீடிக்கு மாறி கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு அலைய வேண்டியதுதான். ஆர்பனேஜ், தனுவின் ஒரு காலத்துப் பாதையாக இருந்தது என்பதால், இங்கு வராமலும் இனி முடியாது. இதற்கு மத்தியில் எதைப் படிக்க?
ஒரு தகர டின்னில், வரிசையாக நிற்கிற வேப்பமரங்களின் பழம் உதிர உதிரப் பொறுக்குகிற பையன்களைக் கூப்பிட்டால் பேசப்போவதில்லை. அவர்களுக்கு ஃபுட்பால் கோல்போஸ்டின் அடையாளமாக நிறுத்தியிருக்கிற பனங்கட்டையில் இருந்துகொண்டு காகங்கள் இரண்டு மூன்றான கொத்தாக இட்ட வேப்பங்கொட்டை எச்சத்தைச் சேகரிக்கிற சந்தோஷம் இவனுடன் பேசுவதில் இருக்காது.
பக்கத்தில், ஊடுசுவருக்கு அந்தப்புறம் கொட்டகைகளில் எரிகிற பிணங்களுக்கும் மண்டுகிற புகைக்கும் சலனமடையாமல், உப்புப் பொதிந்து சிதிலமாகிக் கிடக்கிற மையவாடிக்கு மத்தியில் காடாக வளர்ந்த எருக்கலஞ்செடிகளில் போய் வண்ணத்துப்பூச்சியின் முட்டையும் புழுவும் எடுத்துக்கொண்டிருக்கிற இவர்களிடையில், தனுவும் விலகினபின், எந்த அமைதியில் படிக்க?
மற்ற பையன்களுடன் சேர்ந்து உட்கார்வதுகூட முடியவில்லை. குப்பைக் குழிகளுக்கும் ‘ஐயா’க்களுக்குமான கக்கூஸ்களை ஒட்டிய பகுதிகளிலேயே க்ரா, க்ரா என்று தொண்டையைக் காட்டித் திரிகிற தாராக் கோழிகளை, போவ், போவ், என்று முன்னைப் போலக் கூப்பிடவும் தோன்றவில்லை. ‘ஐயா’க்களைப் போல எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிவிட்டால் போதும் என ஞானப்பனுக்குத் தோன்றியது. அவன் வகுப்பில், கல்லூரியில் இதேபோல வெள்ளை முழுக்கைச் சட்டை, வேஷ்டியுடன் இங்கேயிருந்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அனாதைகள் தானா? தனுக்குள் எதிர்ப்படாமல் இருந்த பொழுதைவிடத் தான் இப்போது அனாதையா? ஞானப்பனுக்கு மனதுள் குமைந்து வந்தது.
ஊருக்குப் போக வேண்டும் போலத் தோன்றியது. வயலும் வரப்புமாக விழுந்து கிடக்கிற அப்பாவின் வம்சவாடையை உடம்பில் ஏந்தியிருக்கிற தன்னிடம், நெற்றியில் எலுமிச்சங்காய் அளவு புடைத்திருக்கிற ‘கழலை’ அசையச் சில சமயம் சந்தோஷமாகப் படிப்பு பற்றி விசாரிப்பதும், ‘படிச்சுப் பாட்டத் தொலைச்ச’ என்று அலுத்துக் கொள்வதும் முகம் முகமாகத் தெரிந்தது. எல்லா முகத்திலும் மிஞ்சித் தனி முகமாகி.. தனு முகமாகி...
உருண்டு வந்து கால் பக்கம் விழுந்த பந்தை எடுப்பதற்கு வந்த பையனைத் தடுத்து, பந்தோடு மைதான விளிம்புக்கு வந்து உதைத்தபோது, அது தூரமில்லாமல் உயரமாக எவ்வி, நீலத்தை அண்ணாந்து பார்க்க வைத்துக் கீழிறங்கியது. கீழிறங்கின பின்னும் ஞானப்பனுக்குப் பார்வை நீலமாக நின்றது.
நீலப்பூ. புத்தகங்களுக்கிடையில் வைத்துப் பாடம் பண்ணின நீலமான பூ. சிவப்பான இருந்து ஒரு வேளை நீலமாகிப்போன பூ- அல்லது வெளிறல் மழுங்கி நீலம் கறுத்த பூவொன்று வழியில் கிடக்க, ஞானப்பன் எந்தவிதத் தடயமும் இன்றி அது அவள் உதிர்த்த பூ என மனதில் உறுதி செய்து வைத்திருக்கிறான். அவனுக்கே தெரியும், அந்தப் பூ ஆர்பனேஜ் எல்லைக்குள் ஒதுக்கமாய் முன்பு இருந்து இப்போது இடிந்து தகர்ந்துபோன சர்ச்சின் பின்னால் வளர்ந்திருக்கிற கொடியின் பூ. ஆனாலும் தனு உதிர்த்த பூ.
இடிந்த சர்ச்சின் சுவர்கள் ஞானப்பனுக்கு ஞாபகம் வந்தது. இந்த ஆர்பனேஜ் ஆண்களுக்கு மட்டுமானது என்பதன் அடிப்படையில் எழுதப்பட்ட கொச்சைகள், பெயர்கள், கெட்ட வார்த்தைகள் எல்லாம் கருப்பாகச் சுவரில் சிந்தியிருக்கும். இவன் பார்வையில் இவனுடன் படிக்கிறவர்கள்கூட அதில் புதிதாக எழுதிய கரிப்படங்களும் வரிகளும் உண்டு. டெய்ஸி வாத்திச்சிகூட அப்படியொரு வரிகளில் ஒன்றாக, வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப்பிழைகளுடன் சுவரில் அறையப்பட்டிருக்கிறாள்.
புத்தகத்துக்கிடையில் நீலப்பூவைத் தகடாக மலர்த்திப் பார்த்தபடி மூடினான். படிக்க வேண்டும். வேகமாக நிழல் பம்மிக் கொண்டிருந்தது. கிணற்றடியில் முகத்தை அலம்பி, பள்ளிக்கூடத்துப் பின்பக்க வராண்டாச் சுவரில் சாய்ந்துகொண்டு வாய்விட்டுப் படிக்க ஆரம்பித்தான். மற்ற அமைதியிலிருந்து மீள அவனுக்குச் சத்தம் தேவையாக இருந்தது.
பெரிய ஐயாவுடைய தாராக்கோழிகளின் கேவல் விட்டு விட்டு மங்கியது. மைதானத்துப் பிள்ளைகளின் இரைச்சல் தூரத்துக்குப் போனது. ஒட்டுச்சார்ப்பில் எந்தப் பக்கத்தில் இருந்தோ ஒரு புறா குதுகுதுத்துக் கொண்டிருந்தது. காலனியில் புதிதாக வந்திருக்கிற பிள்ளையார் கோவில் மணி அமுங்கிக் கேட்டது. பக்கத்து ஸ்பின்னிங் மில் ஓடுகிற மூச்சு ரொம்பத் தள்ளி இரைந்தது.
மழை வருமா என்ன?
சென்ற மழைக்காலம் அடர்த்தியாக இருந்தது. வானம் நினைத்துக் கொண்டபோதெல்லாம் மழை. அநேகமாக மாலை தோறும், கருக்கலுக்கு முன்னாலேயே ஹாஸ்டலில் விளக்கெரியும். அடைந்து கொண்டிருக்க முடியாமல் ஞானப்பன் வெளியே அப்போதுதான் வந்திருப்பான். மழை விழுந்தது. திரும்ப முடியாமல் வலுத்து அறைந்தது. மண்ணும் சூடுமாக ஒரு நிமிஷம் வாசனை நெஞ்சையடைத்தது. பனைமரங்கள் ஒரு பக்கமாக நனைந்து கன்னங்கருப்பாயின. பன்றிகள் மசமசவென்று அலைந்தன. அவுரிச்செடி சந்தனத்தெளிப்பாகப் பூத்து மினுங்கியது.
ஞானப்பன் ஆர்பனேஜ் வாசலுக்குள் ஓடி, வாசல் பக்கத்து மரத்தடியில் நின்றான். பின்னும் நனைந்தது. முன்கட்டிடத்துக்கு ஓடினான். புறத்தே வகுப்புகள் இருப்பது போல இவைகளிலும் இருந்தன. ஆறு முதல் எட்டு, உள்ளே ஏறின பிறகு தெரிந்தது. டெய்ஸி வாத்திச்சியும் நின்று கொண்டிருந்தாள். புடவைத்தலைப்பை முக்காடாக இழுத்து ஓரத்தைப் பல்லிடுக்கில் கவ்வினபடி, நனைவதற்கு முன்பு வந்திருக்க வேண்டும்.
ஒரு வெள்ளாட்டுக்குட்டி சுவரோரமாக ஒண்டி, ரஸ்தாப் பக்கமாய்த் தலைதிருப்பி நின்றது. கீழே புழுக்கை, காவல்கார வயசாளி குப்பைவாளியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு துவண்டதுபோல் மடங்கிப் புகைத்துக் கொண்டிருந்தான். டெய்ஸி வாத்திச்சி கொஞ்சமும் அசையாமல் நின்றாள். வெளியே காம்பவுண்டுக்கு அப்புறம் பார்வையைத் தொலைத்துவிட்டு வெறுமனே நின்றாள். வெளியே பெய்கிற கனத்த மழை அவளை அவளின் சுபாவங்களிலிருந்து விலக்கிக் கட்டிப் போட்டிருந்தது. டெய்ஸி வாத்திச்சி, மெல்லிய திரைக்கு அப்புறம் தெரிகிறதுபோல துல்லியமான ஒரு புதிய வடிவில் இருந்தாள்.
ரஸ்தாவில் ஓடத்தைப் போல தண்ணீரைச் சுருட்டி எறிந்தபடி பஸ் வந்து நின்றது. சார்ப்புகள் போட்டு மூடின பஸ் டாப்பின் பக்கவாட்டு ஓடைகளிலிருந்து குலுங்கித் தண்ணீர் கொட்டியது. பஸ் திரும்பி நின்றதும் டெய்ஸி வாத்திச்சி அவசரமாக ஓடினாள். ‘தனுவைப் போல் அல்லாமல் முதிர்ந்து முற்றலாக இருக்கிற டெய்ஸி வாத்திச்சி இவ்வளவு புறக்கணிப்பாகக்கூட நின்று செல்ல முடியுமா?’ - ஞானப்பனுக்கு யோசனை. சிறு குரலில் ஆட்டுக் குட்டி கத்திய படி, சுவரில் ஏறி நின்றது.
தனுவின் கல்லூரியில் இருந்து புறப்படுகிற காலேஜ் டூ காலேஜ் பஸ் வர நேரம் உண்டு. மழையினால் பிந்தி வரலாம். காலனியில் இருந்து இரண்டு மூன்று அம்மாக்கள் அலுமினியப் பெட்டி சுமந்து இறங்குகிற குழந்தைகளைக் கூட்டிப் போகக் குடையுடன் நின்று கொண்டிருந்தார்கள். காலேஜ் வாசல் பக்கம் காலையில் பதநீர் விற்ற பனையோலைப்பட்டைகள் மேலும் நனைந்து பச்சையான குவியலாகக் கிடந்தன.
மஞ்சள் ஆட்டோக்கள் ஈரமான ரோட்டைச் சிலுப்பிக் கொண்டு காலனிப் பக்கம் சீறின. உள்ளே இருக்கிற குழந்தைகள் கையை அசைக்க ஞானப்பன் சிரித்துப் பதிலுக்கு அசைத்து, காலேஜின் இரண்டாவது வாசலுக்கு நடந்தான். ஹாஸ்டலின் வாசலில் தையல்காரன் மெஷினோடு நிற்பது தெரிந்தது.
மில் ஓடுகிறது மாத்திரம் நன்றாகக் கேட்டது.
புஸ்தகத்துக்குள் அமிழ்ந்து மௌனமாக வாசிக்கும்போது, மௌனம் இளகி ஓடி அலையலையாகி, மத்தியில் தனு அலம்பி அலம்பி நின்றாள்.
ஒரே வரியில் வழுக்கு மரம் ஏறின வெறும் வாசிப்பை மறுபடியும் ஆரம்பித்தபொழுது, வராண்டாவில் ஏறி டெய்ஸி வாத்திச்சி உள்ளே வந்தாள். ‘படிப்பு நடக்கிறதா’ என்பதாகச் சிரித்தாள். ‘குடையை வச்சுட்டுப் போய்ட்டேஎன்’ - செருப்பைக் கழற்றிப் போட்டபடி சொன்னாள். செருப்பில் விரல்கள் வழுவழுவென ஆழமாகப் பதிந்திருந்தன. பூட்டைத் திறந்து, வாசலுக்கு இடதுபுறம் இருக்கிற ஜன்னலில் கைக்குட்டைக்கு பாரம் வைத்ததுபோல் பூட்டும் சாவியும் இருக்க உட்சென்றாள். கையில் குடையோடு ஞானப்பனை பார்த்துக் கேட்டாள்.
“நாற்காலி வேணுமா?”
“இல்லை வேண்டாம். நேரமாச்சு. போக வேண்டியதுதான்.”
கவனமாகப் பூட்டை இழுத்துப் பார்த்தாள். கைக்குட்டை கீழே விழுந்திருந்தது.
“நேரமாயிட்டுதுண்ணா லைட்டைப் போட்டுக்கிறது” - கைக்குட்டையை எடுத்து மூக்கை ஸ்விட்சைக் காட்டிச் சுளித்தாள். கால் செருப்பைத் தேடி நுழைத்துக் கொண்டிருந்தது.
“இல்லை. வேண்டாம்” - ஞானப்பன் புஸ்தகத்தை நீவினபடி அவளைப் பார்த்தான்.
“தனலெட்சுமிதான் வேணுமாக்கும்” - ஒரு அடி முன்னால் வந்து, சடக்கென்று இழுத்துச் சாத்தியதுபோல் ஞானப்பனை அணைத்து இறுக்கிவிட்டு இறங்கி நடந்தாள்.
இருட்டும் வெளிச்சமுமாகக் கிடந்த ஆர்பனேஜ் ஞானப்பன் எட்டிப் பார்க்கையில் தடதடவென்று அந்த பஸ் இரைந்துகொண்டே போனது.
ஸ்டாப் இல்லாவிட்டால்கூட, டெய்ஸி வாத்திச்சி வழியிலேயே கையைக் காட்டி நிறுத்தி நிச்சயம் ஏறிக்கொள்வாள்.

தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்