Showing posts with label நாஞ்சில் நாடன். Show all posts
Showing posts with label நாஞ்சில் நாடன். Show all posts

Feb 23, 2013

வந்தான்,வருவான்,வாராநின்றான் - நாஞ்சில்நாடன்

ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை வெயிலில் அலைவதென்பது அன்றாடம். தலையில் இருந்து மயிர்க்காடுகள் வழியாக நீரூற்றுக்கள் வழிந்தன. அன்று வெயில் மேலும் காட்டமாக இருந்தது. தூசுகள் மினுங்கிய சந்துகள் nanவழியாக நிறைய அலைய வேண்டியது இருந்தது.

மொரார்ஜி மில்லின் இரண்டாவது யூனிட் பக்கமுள்ள சந்து வழியாக பிரகாஷ் மில்லுக்கு நடந்து  போய்வருவது என்பது செளகரியமான காரியம் அல்ல.அந்த பாதையில் பஸ்கள் போவதில்லை.நகரின் அந்தப் பகுதியில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அனுமதிக்கப்படுவதில்லை.டாக்ஸியில் போனால் கட்டுப்படி ஆகாது.அந்த வெயிலிலும் இறுக்கமான சாட்டின் பாவடையும் ரவிக்கையும் போட்டுக்கொண்டு குடிசை வாசல்களில் புணர்ச்சிக்கூலிக்கு ஆள் தேடிக்கொண்டு நிற்கும் பருவம் தாண்டிய தெலுங்குக்காரிகள்.

நாக்கை வறட்டியது தாகம்.எலுமிச்சம் பழமும் இஞ்சியும் சேர்த்துச் சதைத்த கரும்புச்சாறு ஐஸ் போட்டு இரண்டு தம்ளர்கள் இறங்கியும் நாவறட்சி தணியவில்லை.

மாலையில் மூக்கு ‘ஙொணஙொண’ என்றது.தொண்டையில் இளஞ்செருமல்.அடுத்த நாள் காலையில் மூக்கு அவ்வளவாய் ஒழுக வில்லை என்றாலும் நாசித்திமிர்கள் ‘கணகண’வென்று தணிந்து எரியும் அடுப்பாய் காந்தின.அன்று மேலும் அலைச்சல்,வெயில்,தூசி,ஐஸ் போட்ட கரும்புச் சாறு.

மூன்றாம் நாள் எழுந்திருக்கும்போது மேல் எல்லாம் வலிப்பது போலிருந்தது.வறண்ட இருமல்.சுவாசிக்கச் சற்று சிரமமாக இருந்தது.ஒருநாள் ஓய்வெடுத்தால் சரியாகிப் போகும் என்று வேலைக்குப் போகவில்லை.இரவில் மூச்சுவிடும்போது விரல்களால் இருபக்க செவித்துவாரங்களை அடைத்துவிட்டுக் கேட்டால் விசில் அடிப்பது போல் சன்னமான ஒலி.மறுநாள் காலையில் பாத்ரூம் போய்விட்டு வந்தாலே மூச்சு வாங்கியது. தொடர்ந்து பேசினாலும் இருமல் வந்தது.நெற்றியில் வியர்வை துளிர்த்தது.விக்ஸ்,அமிர்தாஞ்சன்,கோல்ட்ரின் பிளஸ்,ஆக்‌ஷன் நானூற்றுத் தொண்ணூற்று எட்டு எதுவும் எடுபட வில்லை. சுக்கும் மிளகும் தட்டிப்போட்ட கருப்பட்டிக் காப்பி சற்று இதமாக இருந்ததே தவிர நிவாரணம் இல்லை.

சாயங்காலம் மெதுவாக நடந்து கடைத்தெருப்பக்கம் வந்தான்.வழக்கமாய் இது போன்ற சில்லறை உபாதைகளுக்காய் பார்க்கும் வாமன்ராவ் பாட்டீல் அன்று வார விடுமுறை.நல்ல டாக்டராய் பார்த்துக் காட்டலாம் என்று பாலிகிளினிக் வாசல்களில் பெயர்ப்பலகைகளை படித்துக்கொண்டு நடந்தான்.மனதுக்கு பிடித்த மாதிரி ஒரு பெயரும் அமையவில்லை.ஜரிவாலா,லோகன்ட் வாலா,பாட்லி வாலா என்று தொழிலுகு சம்பந்தமில்லாமல்...சூரத் மிட்டாய் வாலா கடைக்கு அடுத்த வாசலில் டாக்டர் விஜய் நெகலூர் என்று கண்டிருந்தது.இவரே ஆகலாம் என்று முதல் மாடி ஏறி போனான்.மாடிப்படி ஏறுகையில் இளைத்தது.மூச்சு வாங்கும் சத்தம் சன்னமான சோகரசம் பிழியும் ஷெனாய் வாத்தியம் போல பொதுமக்களுக்குக் கேட்குமோ என்று அச்சமாக இருந்தது.

டாக்டர் இருந்தார்.கூட்டம் அதிகமில்லை.’இந்த நோயினால் நீங்கள் செத்து போகத்தான் வேண்டுமென்றால் கவலைப்பட்டு பயனில்லை. சாகப்போவதில்லை என்றால் எதற்காக கவலைபட வேண்டும்’ என்ற ரீதியில் ஆங்கில வாசகம் கொண்ட அட்டை சுவராசியம் தருவதாக இருந்தது.

தன்முறை வந்ததும் உள்ளே போனான்.சுருக்கமாகச் சொன்னான்.குழல் வைத்து பரிசோதித்து,நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் பார்த்தார்.கண் இமைகளைத் தாழ்த்திப் பார்த்தார். பலமாக மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்தச் சொன்னார்.மிகச்சிரமமாக இருந்த்தது.நெற்றியில் வியர்வை துளிர்த்தது. குறுஞ்சுவாசம் பறிந்தது.

“கடுமையான பிராங்கைடிக் அட்டாக்.எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால்தான் நுரையீரலுக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தை அனுமானிக்க முடியும்.ஆனால், எக்ஸ்ரே எடுக்கும்போது, இந்த நிலையில் மூச்சை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொள்வது முடியாத காரியம். கூட யார் வந்திருக்கிறார்கள்?”

“ஒருத்தரும் இல்லை.தனியாகத்தான் வந்தேன்.”

“உடனே அட்மிட் ஆவது நல்லது.குளுகோசுடன் நரம்பு மூலமாகத் தொடர்ந்து ஒருநாள் மருந்து செலுத்த வேண்டும்.”

“மாத்திரையிலே சரியாகாதா டாக்டர்?”

“சரியாகும்.ஆனால்,நாளாகும்.நான் சொல்வது உடனே கண்ட்ரோல் ஆகும்.”

“வீட்டுக்கு தகவல் சொல்லணும்.”

“அதுக்கு வேணும்னா ஏற்பாடு செய்யலாம்.”

“இல்லை.பயந்திருவாங்க. நாளை காலையிலே வந்து அட்மிட் ஆயிருவேன்.”

“சரி.அப்படியே செய்வோம்.இப்போ இண்ட்ரா வெயின்ல ஒரு இன்ஜக்சன் தர்றேன்.கொஞ்சம் ரிலீஃப் இருக்கும்.”

காலரா தடுப்பு ஊசியும் அம்மை குத்தும் மாத்திரம் மற்றும் ஏற்றுக்கொண்ட உடம்பு.நரம்புக்கு அலைந்து தேடிப்பிடித்து ஊசி மூலம் மருந்து செலுத்தும்போது உடல் முழுவதும் ஒரு கணப்புப் பரவியது.சூடாகச் சற்றுப் பருகத் தந்தனர்.

“எப்படி வந்தீங்க?”

“நடந்துதான்.”

“போகும்போது ஆட்டோல போங்க.தூசு வந்தா கர்சீப்பால மூக்கைப் பொத்திக் கொள்ளணும்.”

வீடு வந்து சேர்ந்து,நயமாக சொன்னான்.இரா முழுக்க காலையில் போய் அட்மிட் ஆகிக்கொள்வதா,இல்லை வேறு டாக்டரைப் பார்க்கவா என்று சர்ச்சை.எரிகிற கொள்ளியில் எதுவானால் என்ன என்றொரு தேறுதல்.காட்சிகளைத் தாறுமாறாகப் பிரித்துப் போட்டது பொல் கனவுகள்.

ஊரில் விறகுக்கம்பு தறிக்கையில் வெட்டுக்கத்தி காலில் பாய்ந்து நெல் நீளத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து கொப்பளித்த ரத்தம் பார்த்து மயக்கம் வந்து விட்டது ஒருமுறை.

கல்யாணம் ஆகுமுன் அறையில் உடன் தங்கியவன் குடல்வால் அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் கிடந்தபோது பார்க்கப் போனதில் அவன் மயக்கம் தெளியாமல் கிடந்தது காண தலைச்சுற்று வந்தது.

காலையில் வெந்நீர் போட்டுக் குளித்து அரைகுறையாய் ஆகாரம் செய்து,ஆட்டோ பிடித்து நர்சிங் ஹோம் போய்ச் சேர்ந்தபோது டாக்டர் வந்திருந்தார்.

படுக்கை எதுவும் காலியாக இல்லை.தற்காலிகமாய் இண்டன்ஸிவ் கேர் யூனிட் காலியாக இருந்ததால் அதில் படுக்கப் போட்டார்கள்.இரும்புக் கட்டில் உயரம் சரிசெய்து குளுக்கோஸ் பாட்டில் ஸ்டாண்ட் போட்டு, பாட்டில் தொங்கவிட்டு, இடது புறங்கையில் நரம்பு பிடித்து,ஊசி ரப்பர் குழல் எல்லாம் பொருத்தி குளுகோஸ் சொட்டுச் சொட்டாக இறங்க ஆரம்பித்தபின் மருந்தொன்றை அதில் மஞ்சளாய் கலந்துவிட்டுப் போனாள் செவிலி.பார்க்க நன்னாரி சர்பத் போல இருந்தது. நிமிடத்துக்கு ஆறு சொட்டுகள் வீதம் இறங்கி கொண்டிருந்தது.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு, சொட்டுகளைச் சற்று துரிதப்படுத்தி விட்டுப் போனார். மனைவியிடம் வீட்டுக்குப் போய்விட்டு மத்தியானம் சாப்பிடச் சூடாக ஏதும் கொண்டு வரச் சொன்னார்.கையை அதிகம் அசைக்க வேண்டாம் என்றும் பாத்ரூம் போக வேண்டுமானால் நர்சிடம் சொல்லி குளுக்கோஸை நிறுத்திவிட்டு சட்டென்று போய்வரும்படியும் சொன்னார்.

ஏ.சி ரூம் குளிர்ச்சியாக இருந்தாலும் நேரம் நகராமல் புழுக்கமாக இருந்தது.ஏதாவது படிக்கக் கொண்டுவந்திருக்கலாம்.

நிமிடத்துக்கு பதினேழு சொட்டுகள் என இறங்கிக் கொண்டிருந்தன. அவ்வளவு அழகும் சதைப்பிடிப்பும் நிறப்பொலிவும் இல்லாத மலையாளத்து நர்ஸ் ஒருத்தி வந்து மிகவும் வேகமாகப் போகிறது என்று கூறி குறைத்துவிட்டுப் போனாள்.

தீவிரமான பசியாக இல்லை.ஐந்து விரல்களில் பிசைந்து தின்னும் ஈடுபாடு ஸ்பூனில் கிளறிச் சாப்பிடுவதில் இல்லை.கீரைத் தண்டு புளிக் கறியும் சோற்றுப் பருக்கைகளும் சம்மந்தமில்லாமல் கிடந்தன. பாத்ரூம் போய்விட்டு வந்தபின் மறுபடியும் ஊசியில் மடித்து வைத்திருந்த ட்யூபைச் செருகிய நர்ஸ் சொட்டுக்களின் வேகத்தை அதிகரித்துவிட்டுப் போனாள். நிமிடத்துக்கு இருபத்தி மூன்று சொட்டுக்கள் வீதம் இறங்கிக் கொண்டிருந்தது. சனியன் சாயங்காலத்துக்குள் தீர்ந்தால் சரி என்று தோன்றியது.

சரியாக உறக்கம் வரவில்லை. இடது கையை அசையாமல் வைத்துக் கொண்டு மல்லாந்து படுத்துப் பிணம்போல் எவ்வாறு தூங்க முடியும்? கையை மட்டும் கட்டில் தள நிரப்பில் வைத்துக்கொண்டு சற்றுநேரம் உட்கார்ந்திருந்தான். நெடுநேரம் அவ்வாறு உட்காரலாகாது என்று வேறு ஒரு நர்ஸ் அதட்டிவிட்டுப் போனாள். பூமி இருசில் சுழல்வதற்கான அரவங்கள் அற்றுப்போனது போல் இருந்தது.

ஏழு மணிக்கு டாக்டர் வந்தார்.மருந்து தீரும் தறுவாயில் இருந்தது.மூச்சுவிடுவதில் சற்று ஆசுவாசம் கிடைத்திருப்பது போலத் தோன்றியது.ஆனால் ஒரு விதமான வாந்தி வரும் உணர்வும் லேசான தலை சுற்றலும் புலப்பட்டுக் கொண்டிருந்தது.டாக்டரிடம் சொன்னான்.இவ்வளவு வேகமாக மருந்தை அட்ஜஸ்ட் செய்தது யார் என்று நர்ஸை சத்தம் போட்டார்.

“ஐ யாம் சாரி..இருபத்தி நாலு மணி நேரம் மருந்து போயிருக்கணும்.வேகமாக ஓடி விட்டது. பீப்பில் ஆர் ஸோ கேர்லெஸ் யூ ஸீ…எனிவே நத்திங் டு வொரி.. நீங்க ரெஸ்ட் எடுத்துக்குங்க.காலையில் பார்க்கிறேன்.”

எட்டு மணி வாக்கில் குளுக்கோஸ் ஸ்டாண்ட்,கையில் செருகி இருந்த ஊசி, ரப்பர் குழல் எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு,காயம் இருந்த இடத்தில் சதுரப் பொட்டு ஒன்றை ஒட்டிவிட்டுப் போனாள்.

இரவு மெல்ல இறங்கிக்கொண்டிருந்தது. நர்சிங் ஹோம் காற்றில் மிதந்த அரசிலைச் சருகு போல் அலைந்து அலைந்து அடங்கிக் கொண்டிருந்தது. நல்ல உறக்கத்தில் இருந்த போது ‘தடதட’ வென்று சத்தம் கேட்டது. அவசர அவசரமாக ஒருவரைக் கொண்டு வந்து காலியாக இருந்த மற்ற கட்டிலில் கிடத்தினார்கள். குள்ளமாக உருட்டுக் கட்டை போல இருந்தார். ஐம்பது வயது இருக்கும். சூழல்,பதட்டம் நிறைந்ததாக மாறியது.

இரவு ட்யூட்டியில் இருந்த பயிற்சி டாக்டரைச் சுற்றி இரண்டு மூன்று நர்சுகள். இ.சி.ஜி. இயந்திரம் பொருத்திய உடன் உணர்ச்சிமயமான தமிழ் திரைக்காவியம் போலப் படம் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. கனமான ஊசி ஒன்றைப் போட்டுவிட்டுப் போனார்கள். சற்று நேரத்தில் டாக்டர் நெகலூர் வரும்போது சுரேஷ் பிரதான் ஆழ்ந்த சுக நித்திரையில் இருந்தார். மாஸ்ஸிவ் அட்டாக், பிழைக்கும் வாய்ப்பு ஐம்பதுக்கு ஐம்பது என்று சொன்னார்கள்.

இரவு பதினொன்றரை மணி இருக்கும்.உறவுகள்,தெரிந்தவர்கள் ஒவ்வொருவராய் வந்து பார்த்து போனவாறு இருந்தனர். கவலை தோய்ந்த முகங்கள். சேலைத்தலைப்பை வாயில் புதைத்தபடி மனைவி,உடன் பிறந்தவள்…

யாராவது ஒருவர் இரவு அருகில் தங்கலாம் என்று மற்றவரைத் துரத்தியவாறு இருந்தனர். ஆரிய நிறம் மாசற்று இறங்கியிருந்த, மீன் மாமிசம் உண்கிற காயஸ்த பிராம்மணர் என்று தெரிந்தது.

தூக்கம் முற்றிலுமாக பறந்து விட்டது. சாவின் மூச்சுக்காற்று நரை படர ஆரம்பித்திருந்த காதோர முடிகளைக் கலைத்துக்கொண்டிருப்பது காணக்கிடைத்தது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உயிருக்கு மனிதன் என்ன நாற்பத்தெட்டு மணி நெரக் கெடு வைப்பது என்று இலேசான நகைப்பொலி.

என்ன வேலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.பெண்கள் கல்யாணத்துக்கு நிற்பார்களோ என்னவோ? அல்லது தங்கைகளுக்கு கல்யாணம் செய்து களைத்துப் போனவராகக்கூட இருக்கலாம். குடியிருக்கும் ஃபிளாட்டுக்கு இன்னும் பத்தாண்டுகளுக்கு தவணை பாக்கி இருக்கலாம்.

காலதூதர்கள் சற்று கருணை காட்டலாம் என்று தோன்றியது.கருணை காரணமாக ஆள் மாறித் தன்னைக் கொண்டு போய்விடவும் வாய்ப்பு உண்டு என்று எண்ணியபோது கிலி சூழ்ந்தது. கருணை என்பது கூடத் தன்னலம் தாண்டித்தான் போலிருக்கிறது.

உறங்க வேண்டும் போலவும் உறக்கம் வராமலும் களைப்பாக இருந்தது. சற்று கண்ணயர்ந்தபோது தடாலென ஒரு சத்தம். அடித்துப் பிடித்து எழுந்து பார்த்தபோது ப்ரதான் கட்டிலில் இருந்து உருண்டு கீழே கிடந்தார். காவலுக்கு இருந்தவரும் கண்ணயர்ந்தார் போலும். இரண்டு பேருமாய்த் தூக்கி கிடத்தும் கனத்தில் இல்லை அவர். சத்தம் கேட்டு ஓடிவந்த நர்சுகளும் பயிற்சி டாக்டருமாய் சேர்த்துப் பிடித்து கட்டிலில் கிடத்தி, மறுபடியும் உபகரணங்கள் பொருத்தி, காவலுக்கு இருந்தவரை எச்சரித்து…

மணி ஒன்றே முக்காலாகி இருந்தது. மேலும் அரைமணி ஆகியும் உறக்கம் வரவில்லை. காலதூதர்கள் போய் விட்டார்களோ என்னவோ! ஒருவேளை சிரமபரிகாரம் செய்துவிட்டு மறுபடியும் வரலா. அவர்கள் மீண்டும் வரும் வேளையில் இங்கு இருக்க வேண்டாம் என்று தோன்றியது. வேறெங்காவது போய்ப் படுத்தால் இனிமேலும் நான்கு மணி நேரமாவது தூங்கலாம். வீட்டிலிருந்து மூடுவதற்குக் கொண்டு வந்திருந்த பெட்ஷீட்டையும் நர்சிங்ஹோம் தலையணையயும் எடுத்துக்கொண்டு நடந்தான். பயிற்சி டாக்டர் மேஜை மீது தலைகவிழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். நர்சுகள் யாரும் தென்படவில்லை. வெளியே வந்து சற்று எட்டிப் பார்த்தான். நள்ளிரவு தாண்டிய காற்றின் சலங்கையொலி.வராந்தாவில் வாட்ச்மேன் படுத்திருந்தான். டாக்டரைக் காண வருபவர் உட்காரும் பெஞ்சு ஒன்று காலியாகக் கிடந்தது. தலையோடு போர்த்திக் கொண்டு கிடந்ததுதான் தெரியும். கொசுக்களின் ராகமாலிகைகூட அவ்வளவாகத் துன்புறுத்தவில்லை.உறக்கச் சுழல் இழுத்துக்கொண்டு போயிற்று.

தோளைப் பிடித்து யாரோ உலுக்குவது போலிருந்தது. பரபரத்து விழித்தவனுக்கு இடம் பொருள் ஏவல் ஒன்றும் புலனாகவில்லை. மலையாளத்தில் நர்ஸ் ஒருத்தி அதட்டிக்கொண்டிருந்தாள்.

“நிங்கள் எந்தாணு இது காட்டிக் கூட்டியது? ஞான் பேஷண்டைக் காணாத எவிடயொக்க அன்யேஷிச்சு!ம்…ஆளு தரக்கேடில்லல்லோ..போயின்…பெட்டில போய் கிடக்கான்…”

சுவர்க்கடிகாரம் நாலேகால் காட்டியது. சற்று நேரம் உறங்கக் கிடைத்ததே பாக்கியம். ப்ரதான் உடலில் மாட்டியிருந்த ஈ.சி.ஜி திரை சற்று பதட்டம் குறைந்ததுப்போல் இருந்தது.

பாத்ரூம் போய், பல் துலக்கிவிட்டு வந்தபோது சூடாக ‘சாய்’ தந்தார்கள். மூச்சிரைப்பு சற்று அடங்கி நிதான கதிக்கு வந்தது போலத் தோன்றியது. எட்டரை மணிக்கு டாக்டர் வந்து ப்ரதானை நெடுநேரம் பரிசோதித்தார். அவர் கால்மாட்டில் தொங்கிய அட்டவணையில் சில வரைந்தார். பிறகு இவனிடம் வந்து, “ஆர் யூ ஃப்லீங் பெட்டர்?”என்று கேட்டார்.அட்டவணையை பார்த்தார்.”பல்ஸீம் பி.பியும் அதிகமாக இருக்கு..சாயங்காலம் பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்கிறேன்” என்றார்.இரவில் தூங்காததையும் பதட்டமான சூழலையும் சொன்னான். “அதற்கென்ன, படுக்கையை மாற்றி விடுகிறேன்” என்றார். இறைஞ்சுவது போல் மறுபடியும், “சார்” என்றான். “பயப்படாதீங்க…ஒரு டாக்டருக்கு எப்ப டிஸ்சார்ஜ் செய்யக்கூடாது என்பது தெரியும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ப்ரதானுக்கு இந்த அவஸ்தை எல்லாம் இல்லை.ஒன்றும் அறியாத உயிர் ஒடுங்கும் நிலையில் கிடந்தார்.

நர்ஸ் வந்து, “ஹோ..நிங்கள் ஒரு சல்லியமாணல்லோ! ஏ.சி.ரூமில் சுகமாயிட்டு கிடந்தா மதி. பெட் ஒழியண்டே…” என்று சொல்லிப் போனாள்.

ப்ரதானுக்கு பகல் பூராவும் விசிட்டர்கள். “துமாலா காய் ஜாலா ஹோ?” என்று அவனைப் பற்றியும் இரண்டொரு உசாவல்கள். மறுபடியும் மாலைவரை ஒரு வேலையும் இல்லாத காத்திருப்பு. இப்படி டென்ஷன் ஆகிக்கொண்டிருந்தால் மாலையும் பி.பி குறையாது என்று தோன்றியது. ப்ரதானுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லை. கடுமையான செடேட்டிவ் கொடுத்திருப்பார்கள்.

மாலையில் பில்லுக்கு பணம் செலுத்தி, நிறைய அறிவுரைகள் வாங்கி, தொடர்ந்து சாப்பிடும் மாத்திரைகள் எழுதி வாங்கி, ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்து படுத்தபோது விச்ராந்தியாக இருந்தது.

காதுகளை இரண்டு விரல்களாலும் பொத்திக்கொண்டு மூச்சுச் சத்தத்தை கவனித்தான்.எலிக்குஞ்சுகள் பொந்துக்குள் இல்லை.ஆவி பறக்கும் சோறும் வழுதுணங்காய் மொளவச்சமும் முகத்தில் மோதியது.படுத்ததும் தூக்கம் அள்ளிக்கொண்டோடிற்று.

இரண்டு நாட்கள் பொறுத்து அலுவலகம் புறப்படும்போது, மாலை திரும்புகையில் நர்சிங் ஹோம் போய் ப்ரதானைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை இறந்து விட்டிருந்தாலோ என்ற அச்சம் தினமும் தடை செய்துகொண்டிருந்தது. பிறகு மறந்து போய்விட்டது.

சதங்கை ஏப்ரல்-ஜூன் 1996

தட்டச்சு : ராகின்

Dec 16, 2012

நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது 2012

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது.

இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது.

சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரைNanjil Nadan , எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன், பம்பாய் தமிழ் சங்கம் வெளியிட்டு வந்த ‘ஏடு’ இதழில் தன் இலக்கியப்பணியைத் தொடங்கினார். 1975-ம் ஆண்டு வெளிவந்த ‘விரதம்’ சிறுகதையில் தொடங்கி, முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். இருபத்தைந்து வயதிலேயே வேலை நிமித்தமாக சொந்த ஊரை விட்டுச் சென்றிருந்தாலும் இவரது படைப்புகளில் நாஞ்சில் நாட்டு மக்களும், மொழியுமே பிரதானமாக வெளிப்படுகின்றன. இவர் சங்க இலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் கொண்டவர்.

இதுவரை 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள் என வெளியிட்டுள்ளார்.

சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காக 2010-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார்.

இவரது நாவல்களும், சிறுகதைகளும் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லியிலுள்ள பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 14 பேர் இவரது படைப்புகளை முன்வைத்து முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. தவிர, இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ திரைப்படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார்.

‘அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே’ என்று சொல்லும் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு, 2012ம் வருடத்து இயல் விருது எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் வழங்கப்படும்.

Feb 6, 2011

பிராந்து - நாஞ்சில் நாடன்

ஒற்றை வேட்டியும் தலைமுண்டும்தான் அங்கு சீலம். வேலை நடக்கும்போது வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டியிருந்தால் மற்ற சமயங்களில் மடித்துக் கட்டுவதுண்டு. வேலை செய்யும்போது தலையில் கட்டப்பட்டிருக்கும் துவர்த்து பிற சமயங்களில் தோள்மீது கிடக்கும் ஒரு பக்கமாகவோ இரண்டு பக்கங்களிலும் கண்டமாலை போலவோ. கல்யாணம், சடங்கு, பால்காய்ச்சு, சீமந்தம் எnanji4 ன்று போகும்போது வேட்டியும் துவர்த்தும் வெளுத்து மடித்ததாக இருக்குமே தவிர வேறு விசேடமான ஆடை அணிகலன்கள் கிடையாது. கேடயம் போன்ற மோதிரங்கள், தவில் வித்வான் அணிவது போன்ற நீண்ட சங்கலிகள், கடயங்கள், காப்புகள், ஆனைமுடி வளையல்கள் எதுவும் புகுந்திருக்கவில்லை. புகுந்திருந்தாலும் கூட சம்சாரி அதெற்கெல்லாம் எங்கே போவான்? காதில் சிவப்புக்கல் அல்லது வெள்ளைக்கல் கடுக்கன்களை முதியோர் அணிந்திருந்தனர். பேனாக்கத்தி, வெற்றிலை பாக்குமடக்கு, பொடித்தடை என்று அவரவர் உபயோகம் கருதியவை வேட்டியில் முந்தியில் இருந்தன. அவை அந்தப் பிரதேசத்தின் ஆடவர் அணிகலங்கள் என்று சொல்லலாம். தொள தொளத்த சட்டைகளை ஒரு சிலர் மட்டுமே தயங்கித் தயங்கி அணிந்தனர். உத்தியோகம் பார்ப்பவர்க்கு வேறு வழியில்லை.

ஆனால் எந்தக் கூட்டத்திலும் தனியனாய்த் தென்படுவார் மந்திரமூர்த்தி. ஒரு குஜராத்தி பனியா போல உடையலங்காரம். அரையில் பஞ்சகச்சம் வைத்து உடுத்த பத்து முழ வேட்டி. முழுக்கைச் சட்டை. கழுத்தில் மணிக்கட்டில் பளபளத்த பொத்தான்கள். அதன்மேல் மூடிய கழுத்துக் கறுப்புக் கோட்டு. தலையில் முன்ஷி தொப்பி. கோட்டுப் பாக்கெட்டில் செருகிய நீல, சிவப்பு நிற ஊற்றுப் பேனாக்கள். பார்வத்தியக்காரருக்கோ, தகசீல்தாருக்கோ, ஜில்லா கலக்டருக்கோ சமர்ப்பித்த மனுக்களின் நகல்கள். எப்போதும் மகஜர் எழுதத் தேவையான வெள்ளைக் காகிதம், கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப், மூக்குக் கண்ணாடி…

இதனாலெல்லாம் ஒரு மனிதரைப் பிராந்து என்று அழைத்து விட முடியுமா? அது ‘அம்மணங்குண்டு ராச்சியத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்’ என்பது போலல்லவா? உள்ளூர்க்காரன் மட்டுமல்லாமல் அந்தப் பக்கமுள்ள பிடாகையில் அவரைப் பிராந்து எனப் பெயர் சூட்டி வழங்கியதற்கு வேறு காரணங்களும் உண்டு.

மந்திரமூர்த்தி 1930-ம் ஆண்டில் திருவிதாங்கூர் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.(ஆனர்ஸ்) கணிதம். அப்பாவுக்கு ஒரே பிள்ளை. ஐந்தாறு ஏக்கர் நெல்வயலும் குடியிருக்க தட்டட்டி போட்ட வீடும் சுகுகாட்டுப் பக்கம் தென்னந்தோப்பும் செண்பகராமன் புதூரில் கடலை விளையும். சொந்தப் பயிர்தான் என்றாலும் வயலில் இறங்கி உழும் நிர்ப்பந்தம் கிடையாது. வரப்பில் குடையைப் பிடித்துக்கொண்டு நிற்பார். அப்போதும் உடையலங்காரத்தில் மாறுதல் கிடையாது.

சமஸ்தானத்தில் பொறுப்பில் இருந்த சுதீந்திரம் தாணுமாலைய சுவாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீகாரியம் வேலை கிடைத்தது. பிறகு தெரிசனங் கோப்பு மங்களா வீட்டில் கல்யாணமும் ஆயிற்று. வில்வண்டு கட்டிக்கொண்டு அவர் வேலைக்குப் போகும் கம்பீரம் காளைகளின் கழுத்துமணியில் தெரியும்.

மார்கழி மாதம் தாணுமலையன் சாமி தேரில் காங்கிரஸ் கொடி கட்ட வேண்டும் என்று எழுந்த போராட்டம் வசக்கேடாகத் திரும்பி, தேர்நிலைக்கு நின்றபின் கேட்கும் கம்பக்கட்டு ஓசைபோல, துப்பாக்கிகள் சரமாரியாகச் சுட்டன. அவிழ்ந்த புன்னைக்காய் மூட்டையாய்ச் சிதறிய சனம். மிரண்டு ஓடிய வண்டிக்காளைகள். மிதிபட்டுச் செத்தவர். திகைத்து அலைந்த சிறுவர். தோளுயரக் கட்டை மண்ணை நிசாரமாகத் தாண்டிய கிழடு கட்டைகள். கலிங்கப் போர்க்களம் போல் எங்கும் அவலம் நிறைந்த காற்று.

அன்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்தவர்தான் மந்திரமூர்த்தி. பிறகு அந்த கோயிலினுள் அவர் நுழைந்ததே இல்லை. வேலையைத் துறந்தாரே தவிர வேலைக்குப் போகும்போது அணிந்த உடையைத் துறந்தாரில்லை.

அப்பாவிடம் யார் யாரோ கேட்டார்கள் -

“மந்திரம் ஏன் வேலையை விட்டுட்டான்?”

அவர் சொன்ன ஒரே பதில் -

“அவனுக்கு பிராந்து புடிச்சிற்று”

மந்திரமூர்த்தியின் நடவடிக்கைகளும் அதற்குத் தகுந்தாற் போலத்தான் இருந்தன.

ஊரில் காசிலிங்கனுக்குக் கோயில் ஒன்று உண்டு. சுற்றுப்பிரகாரமும் கோபுரமும் விமானமும் கொடிமரமும் தெப்பக்குளமும் தேரும் வாகனங்களும் கொண்ட கோயில். பிரகாரமெங்கும் பூச்சிமுள்ளும் மஞ்சணத்திப் புதர்களும் பேய்த்துளசியுமாகக் காடடைந்து கிடந்தது. திருவிழாவுக்கு கொடி ஏறுவதற்கு முன்னால் நான்கு ஆட்களை சொந்தக்காசில் சம்பளத்துக்கு விட்டு புதர்களை வெட்டி மாற்றித் துப்புரவு செய்தது பிராந்து.

திருக்கல்யாணத்துக்கு கம்பராமாயணம் வாசிக்க வந்த கள்ளியங்காட்டுக்காரருக்கு கம்பளி சால்வை வாங்கிப் போர்த்தினார்.

காசிலிங்கன் சன்னிதித் தெருவில், தெரு வடக்கே திரும்ப யோசிக்கும் இடத்தில், தெருவின் மண் மட்டத்துக்கு மேலே, பெரிய பிரம்புத் தட்டுக் கூடையைக் கவிழ்த்தாற் போல, ஒரு பாறை. நீண்ட காலமாகத் கிடந்தது. ஒருவேளை காசிலிங்கனுக்கும் மூத்ததாக இருக்கலாம். பூமியினுள் புதைந்து போயிருந்த பெரும்பாறையின் முகடாக இருக்கலாம்.

வெயிலுக்கும் மழைக்கும் காற்றுக்கும் அலைக்கழிந்து, செம்பழுப்பு நிறத்தில், யாருக்கும் தொல்லை தராத துருத்தலாக. மக்களுக்குப் பழகிப் போயிருந்தது அதன் கிடப்பு. வண்டிகள், சைக்கிள்கள், கால்நடைகள் எல்லாம் ஒதுங்கிப் போயின. வாகனம் சுமப்பவருக்கும் பாடை சுமப்பவருக்கும் கூட கால்களில் அதன் இருப்பு பதிவாகி இருந்தது.

ஒருநாள் காலையில் கோயிலுக்குப் போய்விட்டு பிராந்து திரும்பிக் கொண்டிருக்கையில், மேய்ந்துவிட்டுத் திரும்பிய எருமைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கியபோது, பாறை அவர் காலில் தட்டியது. அவர் மீது அதற்கு ஒரு பகையும் இல்லை. பிராந்து சற்று நேரம் நின்று பாறையை ஒரு விமர்சனக் கூர்மையுடன் அவதானித்தது. இப்படி எத்தனை பேர் கால்களில் அது தட்டியிருக்கும் என்று தோன்றியது போலும், அரைமணிக்கூறில் திரும்பிய அவர் பின்னால் தோளில் கூடம் சுமந்து கல்லாசாரி ஒருத்தர் வந்தார்.

உச்சிக்காலம் கழிந்து சாத்திய கோயில் கதவு சாயரட்சைக்குத் திறந்தபோது, காசிலிங்கனுக்குப் பாறையைக் காணாமல் திகைப்பார் இருந்தது.

ஊர்ப் பொதுக் காரியங்களுக்கு பெரிய குடவண்டிக்கார மூத்தபிள்ளைகள் ஐந்தும் பத்தும் எழுதும் போது நன்கொடை என்று நூற்றியோரு ரூபாய் எழுதும் பிராந்து.

அவர் கடைத்தெருவில் நடந்து போகும்போது எவனும் பசி என்று சொல்ல எதிரே வந்தால் ராமையாபிள்ளை காப்பிக்கடையில் தன் பெயரைச் சொல்லி சாப்பிடச் சொல்லிவிட்டுச் போயிற்று.

எப்போதும் ஒரு சிரித்த முகம். யாரிடமும் சினந்து பேசியது இல்லை. நெற்றியில் சந்தன வரையும் குங்குமப்பொட்டும் பொங்கும் சிரித்த பல்வரிசையும். பேச்சில் முரண்கள் குளறுபடிகள் கிடையாது.

ஒரு திருப்பு டவுன் பஸ் ஊருக்குள் வராவிட்டால் அதற்கு ஒரு மகஜர். புறம்போக்கு மரத்தை எவனும் வெட்டினால் அதற்கு ஒன்று. தெப்பக்குளத்தில் மீன் பிடித்தால் ஒன்று. உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் வாத்தியார் வட்டிக்கு கடன் கொடுத்தால் ஒன்று என. எந்த மகஜரும் அவர் கையொப்பமும் விலாசமும் கொண்டுதான் போகும். மொட்டைப் பெட்டிஷன் ஆசாமி அல்ல அவர். ஆனால் நேற்றுப் பிறந்து, சரியாக கையில் பிடித்த மோளத் தெரியாத பயல்கள் கூட அவரைப் பிராந்து என்றுதான் அழைத்தனர்.

அப்போது நாடெங்கும், தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் தாசர்கள் திருவிழாக்களில் இசைத்தட்டு நடனம் அறிமுகம் செய்தனர். ஓரியன்டல் டான்ஸ் என்ற பெயரில். முப்பிடாரி அம்மன் கோயில் கொடைக்கு கும்பாட்டம் வேண்டாம் என்று சொல்லி, இசைத்தட்டு நடனம் நூலகத் திடலில் ஏற்பாடாகி இருந்தது. திடல் நிறைய இருசனக் கூட்டம். பாட்டும் ஆட்டமும் நெரிபிரியாகப் போய்க் கொண்டிருந்தது. கன்னித்தமிழ் போன்றவளே என்பது போல் ஒரு பாட்டு. தொடையை இறுக்கிய காலாடையும் முலைகளைத் துருத்திய மேலாடையும் அணிந்த ஒருத்தி விரகத்தில் நெளிந்தாள். கண்ணைத் துன்புறுத்தும் நிறங்களில் உடையணிந்து, தொப்பிவைத்து, இரவிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவன் இடுப்பை புணர்ச்சி விதிகளில் ஒன்றின்படி அசைத்துக் கொண்டிருந்தான்.

பிராந்து தற்செயலாகத்தான் அந்தப் பக்கம் வந்தது. சற்று நேரம் நின்று நிதானித்துப் பார்த்தது. கிழட்டுக் கண்களில் கோபம் புகை பறக்க வெறித்துப் பார்த்தது. ஆண்கள் வரிசையும் பெண்கள் வரிசையும் பிரியும் நடைபாதையோரம் அவர் மனைவி பக்கத்து வீட்டுக்காரியுடன் உட்கார்ந்து ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்தாள். வெடுவெடென நடந்து போனது பிராந்து. பெண்டாட்டியின் தோளைத் தட்டியது. கோபம் குரலில் தெறித்தது.

“எந்திரிச்சு வாட்டி… வெக்கங்கெட்டுப் போயி பாத்துக்கிட்டு இருக்கா… மானங்கெட்டதுகோ ஆடுக ஆட்டத்தை… எந்திரிச்சு வா…”

பிராந்துக்கு நல்ல வெண்கல மணியின் நாதமுள்ள குரல். கூட்டம் சற்று சலசலத்துத் திரும்பியது. கர்ஜித்துக் கொண்டே பெண்டாட்டியின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தது.

“நல்ல மானமுள்ள சம்சாரிகளாடா நீங்க? ஆட்டம் நடத்துகான் ஆட்டம்”

கூட்டம் லேசாகக் கலைந்த்து. நிறையப் பெண்டுகள் எழுந்து வீட்டுக்கு நடந்தனர். இனிமேல் நின்றால் குறைச்சல் என்று கொஞ்சும் ஆண்பிள்ளைகளும் தொடர்ந்தனர். பின்வரிசையில் இருந்து விசில்களும் தொடர்ந்து ஊளைகளும். கூட்டத்தில் பாம்பு நுழைந்தது போல் ஆயிற்று, பின்பு அன்று இசைத்தட்டு நடனம் நின்று போயிற்று.

என்றாலும் மந்திரமூர்த்தியின் பெயர் ‘பிராந்து’ என்பதில் இருந்தது மாறியதாகத் தெரியவில்லை.

*******

நன்றி: சொல்வனம்

Jan 21, 2011

இடலாக்குடி ராசா - நாஞ்சில் நாடன்

‘இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு முறை இடம் பெயர்கையிலும் முன்னங்கால்களைத் தூக்கித் தூக்கித் தத்தித் தாண்டும் பெட்டைக் கழுதையைக் கண்ட பரிதாபம்.  NANJIL-NADAN-1

ராசாவின் தோற்றம் வாட்டசாட்டமாக, தாள் தொடு தடக்கையொடு ராஜா போல்தான் இருக்கும்.  ஐந்தே முக்காலடி உயரம். காலில் செருப்பு இல்லாமல் கருமருதுப் பலகை போல் விரிந்த மார்பும் முதுகும். ‘இன்று போல் இருத்தி’ என்று எந்தச் சீதை வாழ்த்தினாளோ? என்றைக்குப் பார்த்தாலும் நாற்பது சொல்லும் உடல். ஆனால் கண்கள்? வெண்டிலேஷனுக்குப் போடும் நிறமில்லாத ஒளி ஊடுருவாத கண்ணாடி போல் ஒரு மங்கல். அல்லது வெளிறல். கண்களையே பேசும் மனம். பேச்சில் ஒரு வெடுக்கு.

பெயரில் இடலாக்குடி இருந்தாலும் அங்குதான் தங்குகிறானா? வீடுகளுண்டா? பெண்டு பிள்ளைகள் உற்றார் உறவு உண்டா? யாரும் கண்டுபிடிக்க முனைந்ததில்லை.

எப்போதாவது திடீரென அவன் பிரசன்னமாவான். அரையில் கிழிசல் இல்லாத பட்டைக் கரை ஒற்றை வேட்டி.  தோளில் சுட்டிப்போட்ட ஈரிழை துவர்த்து. இடது கையில் நரைத்துப்போன காசிக்கயிறு. குளித்து கோயிலுக்குப் போன அடையாளமாக காதில் பொன்னரளி அல்லது செவ்வரளி. அல்லது திருநீற்றுப் பட்டை அல்லது மஞ்சள் காப்புக் கீற்று. எப்போது பார்த்தாலும் களைந்து போன ஒரு சாமானை எடுக்கப் போவதுபோல் “விறீர்” என்று ஒரு நடை.

முற்பகல் பதினோரு மணிக்கு, பிற்பகல் மூன்று மணிக்கு, இரவு எட்டுமணிக்கு என்று அட்டவணைப்படியும் இல்லாமல் கிழமையில் இரண்டு மூன்று முறை அந்த ஊருக்கு வருவான். மனதில் தோன்றிய - அப்படி ஏதாவது தோன்றுமோ என்னவோ - யாரு வீட்டுத் தெருப்படிப் புரையிலாவது ஏறி வட்டச்சம்மணம் போட்டு உட்காருவான். துண்டால் முகத்தை ஒரு முறை துடைத்துக் கொள்வான். ஒரு வளையத்தின் நெளிவு இல்லாமல், நேர்க்கோட்டுக் கோணங்களில் வெடுக்வெடுக்கென்று காக்கையைப்போல் தலையைத் திருப்பிச் சுற்றும் முற்றும் பார்ப்பான்.

யார் கவனத்திலாவது பட்டால் சரி. படாவிட்டால் “எக்கா... ஏ எக்கா... ராசா வந்திருக்கேன்” என்று இரண்டு விளி. அல்லது “பெரீம்மா. பெரீம்மோவ்... என்னா அனக்கத்தைக் காணேம். ஏ பெரீம்மா...” என்றொரு கூப்பாடு. இன்னாருக்கு இன்ன முறைதான் என்று ஒரு வரைமுறை கிடையாது. எல்லோரும் தன்னைவிட வயதில் பெரியவர்கள் என்ற அனுமான முறைகள். ஆனால் எந்த வீட்டிலும் ஆண்களைக் கூப்பிடுவது இல்லை.

சத்தம் கேட்டு வீட்டினுள்ளிருந்து ‘அக்காவோ’ ‘பெரியம்மா’வோ எட்டிப் பார்ப்பார்கள். “என்னா ராசா? இந்த வேனா வெயில்லே எங்கயாக்கும் போய்ட்டு வாறே?”

“யாரு? ராசாவையே கேக்கே? காலம்பற நாவக்காடு... நம்ம அத்தானுக்க எளைய குட்டியைக் கெட்டிக் குடுத்திருக்கில்லா.. ஆவுடையம்மை. எட்டிப்பார்த்து ரெம்ப நாளாச்சு... பிள்ளை என்ன நெனைச்சுக்கிடும்? நம்மளைத் தேடாதா? ஒரு நடை.... இன்னா இரி காப்பி குடிச்சுக்கிட்டுப் போலாம்ணா.... ராசாக்கு கொறைச்சலுல்லா... கொண்டாங் கொடுத்தான் வீட்லயா காப்பிக்குடி... கொள்ளாமே! அவ அடுக்களைக்குப் போனா. வண்டியை விட்டுட்டேன். அக்காளைப் பாத்து நாளாச்சுல்லா....”

“ஆகாங்...”

“என்ன ஆகாங்... பேசிக்கிட்டே நிக்கே? விடிஞ்சாப்பிலே இருந்து ஒண்ணும் குடிக்காம அலைஞ்சு வந்திருக்கேன்.... பசிக்காதா!”

”அட காலறுவான்.... இன்னா இரி... எல்லாம் ஒன் அதியாரந்தான்....”

மஞ்சளாகப் பழுத்த ஒரு வாழையிலைத் துண்டு. அதன் சுருளை நீக்கி ராசா விரித்துப் பிடிக்க, அந்த ’அக்கா’ கற்சட்டியில் பிழிந்து கொண்டு வந்திருந்த பழைய சோற்றைக் கையால் அள்ளியள்ளி வைப்பாள். ஒரு முழு வேலைக்காரன் திருப்தியாகச் சாப்பிடும் அளவுக்கு. அதன்மேல் கொடியடுப்பில், மண்பானையில், எப்போதும் அனந்து நுரைத்துக் கொண்டிருக்கும் பழங்கறியில் இரண்டு மூன்று சிரட்டை அகப்பை. ‘பழஞ்சித் தண்ணி’யும் கொண்டு வைப்பாள்.

எதையோ நினைத்துக்கொண்டு “எக்கா.... ஏ எக்கா....?’

“என்னா? ஏன் போட்டு தொண்டையைத் தீட்டுகே?”

“ரெண்டு உப்புப் பரல் தரப்பிடாதா? வீட்டிலே எளவு உப்புக்கும் பஞ்சமா?”

“கரி முடிஞ்சு போவான்.... மறந்து போச்சுப்பா... மொளகா வேணுமா?”

“கொண்டா.”

விரல்களை விரித்து, முழு உருண்டையாக உருட்டி ராசா பழையது சாப்பிடுவதைப் பார்த்தால் இரண்டு கவளம் நமக்கும் தரமாட்டானா என்று இருக்கும். ‘நறுக்நறுக்’கென்று பச்சை மிளகாயைக் கடிக்கையில் நாவூறும். வள்ளிசாக ஒரு பருக்கை மீதமில்லாமல் சாப்பிட்டு முடிப்பான்.

“என்னா போருமா?”

“போரும்.. ராசாவுக்கு வயறு நெறஞ்சாச்சு...” தண்ணீர் விட்டுக் கையைக் கழுவுவான். சாப்பிட்ட இடத்தைத் துடைப்பான்.  “அப்பம் ராசா வரட்டா?”

“என்னா அதுக்குள்ளே பொறப்பிட்டாச்சா?”

“அப்பம் ராசா வண்டியை விட்டிரட்டா. எக்கா, ராசா வண்டியை விட்டிருக்கேன்.... பிள்ளைகளையெல்லாம் பாத்துக்கோ என்னா? வண்டியை விட்டிருகேன்....” விறீர் என்று நடை தொடரும். எங்கே வந்தான்? எங்கே போகிறான்? யாருக்குத் தெரியும்?

அந்த ஊரில் தெருப்படிப்புரை உள்ள எல்லா வீடுகளிலும் இந்த அதிகாரம்தான். அந்த வீட்டில் பழையது இல்லாவிட்டால் அடுத்த வீட்டுக்காரியோ எதிர்த்த வீட்டுக்காரியோ அவன் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு கொண்டுவந்து அமுது படைப்பாள்.

பெரும்பாலும் ராசா சாப்பிடவரும் நேரங்களில் ஆண்கள் வீட்டில் இருப்பதில்லை. இருந்தாலும் அவன் அதிகாரங்களைக் கண்டுகொள்வதில்லை. ஒரு அலட்சியம் அல்லது இளப்பம். குறுஞ்சிரிப்போடு விட்டு விடுவார்கள். சிலருக்கும் மட்டும் அவனுடன் விளையாடத் தோன்றும். “என்ன ராசா! அதியாரம் தூள் பறக்கு? இஞ்ச என்னா அறுத்தடிச்சுக் கொண்டு போட்டிருக்கையா?”

“யாரு சித்தப்பாவா? ராசாக்கு பசிக்கில்லா?”

“பசிச்சா...? அது கொள்ளாண்டே...!”

”அப்பம் ராசாக்கு சாப்பாடு இல்லையா? ராசா வண்டியை விட்டிரட்டா... வண்டியை விட்டிருகேன்....” வேறு நிறங்கள் ஏதும் இல்லாத அந்தக் குரலில் ஒலிக்கும் ஒரு ஏமாற்றம் குடலைச் சுண்டி இழுக்கும். தொண்டையில் ஏதோ அடைக்கும்.

“அட இருப்பா.... சொணையிலே கூடுனவன்தான், ஏவுள்ளா.. ராசாவுக்கு என்னமாங் குடு....”

“ஆமா உங்களுக்கு அவன்கிட்ட என்ன பரியாசம். சவம் இப்படி ஒரு பொறவி.. கடவுளு படைச்சு விட்டுட்டான்...” சொல்லும்போதே அந்த ‘சித்தி’க்குக் கண்ணீர் முட்டும்.

ராசாவின் வரத்தும் போக்கும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நிகழும். தொடர்ந்தாற்போல் சில வாரம் கண் மறைவாகப் போய் விடுவான். “ராசாவை எங்க கொஞ்ச நாளாக் காணவே இல்லை” என்று சில தாய் வயிறுகள் முனகும். நாள் கிழமைகளில் அவன் நினைவு வரும். “மூதி வரச்சிலே எல்லாம் புளிச்ச பழையது குடிச்சிட்டு போகு... ஒரு விசேச நாளுண்ணு வரப்பிடாது? சவன் எங்கின சுத்தீட்டுத் திரியோ?” என்று அங்கலாய்க்கும். இதெல்லாம் அவனுக்கு எட்டுமோ எட்டாதோ? இரண்டு மூன்று நாட்களில் திடீரென காட்சி கிடைக்கும்.

ராசா ஒரு கிறுக்கன் அல்ல. எந்த வயதில் அவன் மன வளர்ச்சி நின்று போனதோ தெரியாது. யாருக்கும் எந்த விதத்திலும் இம்சை செய்ததாகத் தகவல் கிடையாது. எதையும் யாரையும் கவனிக்காத ஒரு நிமிர்ந்த நடை. எதுவும் குறுக்கிட முடியாத வேகம். குறுக்கிட்டாலும் அவன் பொருட்படுத்துவதில்லை. சில சமயங்களில் அவன் சாப்பிடும்போது சிறு குழந்தைகள் தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும். ஒன்றை மற்றது அவன் முன்னால் தள்ளிவிடும். மற்றது “கே” என்று கத்தும். அவன் நடக்கையில் பின்னாலிருந்து “ஏ இடலாக்குடி ராசா” என்று கூச்சலிட்டுப் பின் தொடரும். யாராவது வயதானவர்கள் அதட்டினால்தான் உண்டு. ராசாவின் கண்கள் இதனைக் காணவே செய்யும். ஆனால் உதடுகள் பிரிவதில்லை.

*****

வடக்குத் தெரு, மூலைவீட்டு வன்னியப்பெருமாள் வீட்டில் அன்று திருமணம். மூத்த மகளுக்கு. மாப்பிள்ளை செண்பகராமன்புதூர். திருமணம் முடிந்து பந்தி நடந்துகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமையாதலின் அவ்வூர் இளம் பிராயப் பிள்ளைகள் அனைவரும் நின்று விளம்பிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பகல் பன்னிரண்டு மணி சாய்ந்தது. காலை எட்டரை மணி முகூர்த்தம். முகூர்த்தம் முடிந்ததும் இலை போட்டாயிற்று. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள், கல்யாணத்துக்கு வந்திருந்த பெண் வீட்டு வெளியூர்க்காரர்கள், உள்ளூர் ஆண்கள், பெண்கள், அடியந்தரக்காரர்கள் அனைவரும் சாப்பிட்டாயிற்று. கடைசியாக விளம்பிக் கொடுத்துவிட்டு நின்ற பையன்களுக்கான தனிப்பந்தி. ஏற்கனவே சாப்பிட்டு விட்டிருந்த ஐந்து பையன்கள் மட்டும் விளம்புவதற்காக நின்றனர்.

எப்போதுமே இந்தப் பந்தி ஏகக் கூச்சலும் கும்மாளியுமாக இருக்கும். உடல் வருத்தம் பாராமல் முன்தின இரவுதொட்டு வேலை செய்தவர்கள், சீமான் வீட்டுச் சீராளன் முதல் கூரை வீட்டுக் குமரன் வரை. படித்துக் கொண்டிருக்கும் அல்லது படிப்பை நிறுத்திய பையன்கள். வேறுபாடுகளற்றுப் புரண்டு மறியும் வயது. எனவே இந்தப் பந்தியில் என்ன நடந்தாலும் கல்யாண அடியந்திரக்காரர்கள் கண்டு முகம் சுளிப்பதில்லை. மாறாக ஒரு மன நிறைவுடன் பார்த்துச் சிரித்துவிட்டுப் போவார்கள்.

இடலாக்குடி ராசா எங்கோ போய்விட்டு ‘விறீர்’ என்று சப்பாத்துக்கலுங்கைத் தாண்டி வடக்குத் தெரு மூலையில் ஏறினான். இனிமேல் யாராவது சாப்பிட பாக்கி இருக்கிறார்களா என்று பார்க்க பந்தலைவிட்டு தெருவுக்கு வந்த பெண்ணின் தம்பி பார்வையில் பட்டான்.

கையோடு கொண்டுபோய், ஆக்குப் புரையில் நிறுத்தினான். கை கழுவி சாப்பிட உட்காரப்போகும் இளைஞர் கூட்டம் ராசாவை உற்சாகமாக வரவேற்றது.

பந்திப்பாய் விரித்து, எதிர் எதிராக இரண்டு வரிசையில் உட்கார்ந்தனர். தென் வடலான அந்தப் பந்தலில், கிழக்கு வரிசையில், தென்னை ஓலை நிரை ஒட்டிய வரிசையின் நடுவில் இடலாக்குடி ராசா. அவன் முகத்தில் பரவசக் கொந்தளம்.

நீள நீளமான தலைவாழை இலைகள். ஏந்திய கைகளில் எவர் சில்வர் மூக்கனில் இருந்து தண்ணீர். தண்ணீர் தெளித்து, இலையைத் துடைத்து - விளம்ப நின்ற பையன்களின் முகத்தில் குறும்பின் தெறிப்பு. உப்புப் பரல் வந்தது. துவட்டல் வந்தது. தயிர்க் கிச்சடி வந்தது. அவியல் வந்தது. எரிசேரி வந்தது. வந்தவன் எல்லாம் ராசாவின் இலையை மட்டும் விட்டுவிட்டு விளம்பிச் சென்றான். பரப்பிரம்மாக ராசா இடமும் வலமும் பார்த்தான்.

நடப்பதைக் கவனித்த யாவரின் முகத்திலும் பிதுங்கி நின்ற சிரிப்பு எப்போது வெடிக்குமோ என்ற தெறிப்பு. கறி வகைகள் வைத்து முடித்து பப்படம் போட்டு, ஏத்தங்காய் உப்பேரி வைத்து...

காது வைத்த செம்பு நிலவாயில் சாதம் எடுத்து, பித்தளைக் கோருவையால் பறித்து, இலையிலையாக வைத்துக்கொண்டு  போனான் ஒருவன். தன் இலை தாண்டிப் போனதும் இடலாக்குடி ராசா விளித்தான். “எண்ணேன்... ஏ எண்ணேன்... ராசாக்குப் போடாமப் போறியே...”

சிரிப்பை அடக்கிக்கொண்டு பருப்பு ஊற்றுபவன் வந்தான்.

“எண்ணேன்... ராசாக்கு வயிறு பசிக்கில்லா...”

பருப்புக்கு பின்னால் நெய் வந்தது.

ராசாவின் முகத்தில் ஒரு பதைப்பு அடர்ந்தது. “எண்ணேன்... எனக்கில்லையா? அப்பம் நான் வண்டியை விட்டிரட்டா....”

இதற்காகவே காத்துக் கொண்டிருந்ததைப் போல - ‘சோ’வென்று ஒரு சிரிப்பு. ஒரே சமயத்தில் பொட்டித் தெறித்த அலைகள். பந்தலின் கூரையைக் கிளப்பும் எக்காள ஓசை.

ராசாவின் கண்களில்....

அவன் இலைக்கு ஒருவன் சாதநிலவாயை எடுத்து வரு முன்னால்-

“அப்பம் நான் வண்டியை விட்டிருகேன்...” சொற்கள் நனைந்து வந்தன.

திடீரென்று சிரிப்பு நின்றது..

‘விறீர்’ என்று எழுந்து நடந்தான் ராசா.

யாருக்குமே சாப்பிடப் பிடிக்கவில்லை.

********

(தீபம், ஏப்ரல் - 1978)

Dec 20, 2010

நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்காக எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாஞ்சில் நாடனின் ”சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதை தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அழியாச்சுடர்கள் வாசகர்கள் சார்பாக மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

165642_1687402338564_1042855542_31811794_948534_nsudiya-poo

நாஞ்சில் நாடன் படைப்புகள்

நாஞ்சில் நாடன் இணையத் தளம்

சூடிய பூ சூடற்க

கிடைக்குமிடம்;
தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயாப்பேட்டை, சென்னை..6000014
தொலைபேசி: +91-9884196552

இணையத்தில் வாங்க  : உடுமலை.காம்

Sep 23, 2010

நடுகற்களும் நடைகற்களும்-நாஞ்சில் நாடன் கவிதைகள்

நாஞ்சில் நாடன் கவிதைகள் (தேர்வு ஜெயமோகன்)

இந்தியரும் எம்மக்களும்

உச்சரிக்கவியலாத ஊர்திகள்
இராத்தங்க இருபதினாயிரம் வாடகை
வான்வழிப்பயணம்2221093496_1600148651
கைக்கடிகாரம் காற்சட்டை மேற்சட்டை
காலணிகள் கண்ணாடி எண்பதினாயிரம்
அக்குள் நாற்றம் மறைக்க 'தெளிப்பான் '
கணிப்பொறி முன்வலை கம்பியில்லாபேசி
பிறந்தநாள் மணநாள் காதலர் தினம்
புத்தாண்டு ஆயிரத்தாண்டு விழக்கள்
காதல்காட்சிக்கும்கனவுக்காட்சிக்கும்
மூன்றேகால் கோடி
கிரிக்கெட் போரில் கார்கில் போட்டியில்
தேசப்பற்று அவிழ்த்துப்போட்டு ஆடும்
இந்தியர்
கட்டைவண்டியிலும் கால்நடையாகவும்
வரப்போ தலைக்காணி வாய்க்காலே பஞ்சுமெத்தை
குடிநீர் சுமந்து குடிசைசேர சூரியன் சாட்சி
எட்டு ரூபய் செருப்பை தைத்து தைத்து
திருப்பியும் தைப்பர்
பல்லுக்கு பொடிமணல் மேலுக்கு வைக்கோல்
கொரகொரக்கு ம்வானொலிக்கும் தட்டழிவு
தகரக்கொட்டகை மணல் விரிப்பு
எட்டணாசீட்டு
பிறந்தது தெரியும் இறக்கபொவதும் தெரியும்
தேசம் என்று ஒன்று
உள்ளதென்றும் தெரிவர்
எம்மக்கள்

நடுகற்களும் நடைகற்களும்

கொம்பன் பன்றி விரை வறித்த கடா
கொண்டை சிலிர்த்த சேவல்
சுட்ட அயிலை கருவாடு
எள்ளுப் பிண்ணாக்கு கருப்பட்டி
போதைக்கு வாற்றுச்சாராயம்
புகைக்க சுருட்டு
நடுகற்களுக்கு

கிருத்தைகை அமாவாசி பெளர்ணமி
ஆடிவெள்ளி ஆவணி ஞாயிறு
புரட்டாசி சனி
வரி வைத்து நோன்புகள்

முடுக்கில் பாரி
மூலையில் பிள்ளையார்
தெருவுக்கு இரண்டாய் தென்படும்

வெளுக்கும் முன் தொடங்கி
சாமம் வரைக்கும்
அரக்கக் கருவிகள் பெருக்கும் ஓசை
புலன்கள் பொசுங்க
நடக்கும் கற்கள்

மொழி

மாற்றுத்தெரு இல்லை
அந்தத்தெருவழிதான்
எப்படியும் போதல் வெண்டும்
முனை திரும்புகையில்
பீது பூத்த முகம் பொருத்தி வளர்ந்தது
எங்கிருந்து வெளிப்பட்டு எதைக்கவ்வும்
ஆடுசதையை அடித்தொடையை
ஓரம் பார்த்து ஒதுங்கிப்போகும் நான்
அதற்கு உணவல்ல
காதலில்போட்டியுமல்ல
வீரத்தில் சவாலுமல்ல
எனினும் எரிச்சலூட்டும் ஏதோ ஒன்று
அல்லது அதற்கு பிடிக்காத வேறெதையோ
நினைவூட்டும் ஒன்று
என்னிடம்.
எங்கு முறையிட ?
சென்று பேசிப்பார்க்கலாம்
நேருக்கு நேராய்
வேறு வட்டார வழக்கில்

 மானுடக்கனவு

குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள்
கிழிபட
நானோர்
விருந்திருக்க உண்ணாத
வேளாளன்
பாரம்பரியச் சுமையுள்ள இந்து
கல்லுக்கும் மூத்தகுடி
இடர்வரும் வேளையில் இந்தியன்
தகப்பன்
அலுவலகச் சகபாடி
அழித்தழித்து எழுதும் படைப்பாளி
ஒன்றுக்கொன்று உடன்படும் வேளையில்
பல்லும் நகமுமாய் முரண்படும்
ஒன்றாய் இருக்கையில் இன்னொன்று
ஒன்று பிறிதின் எல்லையை நெருக்கும்
சற்றே விரிக்கும்
இடையில் தவிக்கும் மானுடக்கனவு

 புத்தாண்டு

முடித்தலை நெரிய
தமிழ் சுமந்து
திரும்பும்
மூத்த குடியின்
பொங்கும் விந்து
வண்ணச் சுவரொட்டொயில் வடியும்

எச்சில் வழங்கி
புண்ணியம் பெருக்கும்
திசைகாவல் தெய்வம்
தூரதர்ஷனில் முகம் தேடும்

பொங்கலுக்கு வெளியாகும்
முப்பத்தெட்டு காவியங்கள்
பிரம்மாண்ட குசுப்போல

பனிபோல கொலையுதிரும்
மறுபடியும் தேர்தல்வரும்
ஊழல்போய் ஊழல்வரும்

சபரிமலை அக்னிகுண்டம்
தன்னையே உண்டு
எரியும் ஓங்கி

நன்றி: திண்ணை.

May 23, 2010

இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்

 

    அவன் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’  என்ற பெயராலேயே
சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை வாக்காளர் 2.nanjil nadanபட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப்போன கொம்பையாத்தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லத்தம்பிக் கோனார் சார்பிலோ தான் அவன் ஓட்டுப்  போட்டிருக்கிறான். ஆனால் இப்போது ஊராட்சித் தலைவர் தேர்தலில் இது சாத்தியமில்லை. ‘உருளை’ சின்னமுடைய உமையொரு பாகன் பிள்ளையும்,  ‘பூசணிக்காய்’ சின்னம் பெற்ற பூதலிங்கம் பிள்ளையும்
உள்ளூர்க்காரர்கள். எனவே கள்ளவோட்டுப் போட - அதுவும் எல்லோருக்கும் தெரிந்த
அவனைக் கொண்டு - யாரும் துணியவில்லை. தேர்தல் சந்தடிகளில் ஊரே அல்லோலகல்லோலப் படும் வேளையில் தான் ஒரு புறவெட்டாகிப் போனதில் வைத்தியனுக்கு மிகுந்த மன வருத்தம் உண்டு. இது வரையில்லாமல், தன் ஜனநாயக உரிமை புறக்கணிக்கப்படுவதில் ஒரு எரிச்சல்.

    ஒரு வாக்கு இப்படி அர்த்தமற்று வீணாவதில் இரண்டு கட்சிக்காரர்களுக்கும்
ஏமாற்றம்தான். அவன் பெயர் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றால், அவன் வயதுடையவர்கள் யாரும் உயிரோடு இல்லை. இப்போது ராஜாங்கம் நடத்தும்
தானமானக்காரர்களுக்குப் பிறந்த முடி எடுத்தவனே வைத்தியன்தான். எனவே
அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    அவன் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற விளையாட்டுத்தனமான ஆர்வத்தோடு, அவனிடமே கேட்கலாமென்றாலும், “அதெல்லாம் இப்ப என்னத்துக்கு போத்தி...? என் பேரிலே எடவாடா முடிக்கப் போறியோ?” என்பதுதான் இதுவரை பதிலாக வந்திருக்கிறது. தன்னுடைய பெயரே அவனுக்கு மறந்துவிட்ட நிலையில், அந்த உண்மைப் பெயரில் வாக்காளர் பட்டியலில் ஓட்டு இருக்க வேண்டுமே என்பது அவனுக்குத் தோன்றாமல் போயிற்று!

    அவ்வூர் வாக்காளர் பட்டியலில் இன்னாரென்று தெரியாத இரண்டு பெயர்கள்
இருந்தன. பட்டியலைக் குடைந்துகொண்டிருந்த ‘பூசணிக்காய்’ ஆதரவளனான மாணிக்கம் அது யாரென்று தெரியாமல் விழித்தான். வைத்தியனின் முகம் அவன் நினைவில் வந்து வந்து போயிற்று. முதல் பெயர் புகையிலையா பிள்ளை. அது அவனாக இருக்க முடியாது. இன்னொன்று அணஞ்ச பெருமாள். வைத்தியனின் பெயர் இதுவாக இருக்கலாமோ என்ற ஊகத்தில் மாணிக்கம் வயதைப் பார்த்தான். எண்பத்திரண்டு. ஒரு துள்ளுத் துள்ளினான்.

    ‘கோச்ச நல்லூர்’ என்று வழக்கமாகவும், ‘கோச்சடையநல்லூர்’ என்று இலக்கண
சுத்தமாகவும் அழைக்கப்படும் அந்த ஊரில், உத்தேசமாக நூறு வீடுகள் இருக்கும்.
நூறு வீடுகளில் மக்கள் வழி, மருமக்கள் வழி, சைவர்கள் (இந்த வைப்புமுறை மக்கள்
தொகை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதே அல்லாமல், உயர்வு தாழ்வு என்ற நிலையை உள்ளடக்கியதல்ல என்று தெண்டனிட்டுச் சொல்லிக் கொள்கிறேன்). ‘கிராமம்’ என்றும் ’பிராமணக்குடி’ என்றும் அழைக்கப்படுகிற ‘எவ்வுயிர்க்கும் செந்தண்மை
பூண்டொழுகும்’ வீடுகள் ஏழு. பூணூல் போட்டவர்கள் எல்லோரும் ‘ஐயர்கள்’ என்ற
நினைப்பே வேளாளர்களிடம் ஏகபோகமாக இருப்பதால், அங்கும் என்ன வாழுகிறது என்று தெரியாமல், அவர்கள் ’ஒற்றுமை’யின் மேல் ஏகப் பொறாமை. இது தவிர இந்து சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு போல -நாடார், தேவர், வண்ணார், நாவிதர் என்று பல பகுப்புக்கும் ஆட்பட்ட இந்துக்களும் அங்கே உண்டு.

    இவை நீங்கலாக, தான் இந்துவா கிறிஸ்துவனா இல்லை இரண்டுமா அல்லது இரண்டும் இல்லையா என்று நிச்சயமாக அறிந்து கொள்ளாத மக்களும் அங்கே உண்டு. கும்பிடுகிற சாமியை வைத்துக் கணக்கிடலாமென்றால் - சுடலைமாடன், ஈனாப் பேச்சி, இசக்கி அம்மன், தேரடி மாடன், புலை மாடன், முத்துப் பட்டன், கழு மாடன், வண்டி மறிச்சான், முண்டன், முத்தாரம்மன், சூலைப் பிடாரி, சந்தனமாரி, முப்பிடாரி என்ற பட்டியல் நீண்டு போகும். அந்த ஊர் வாக்காளர் பட்டியலை விட இது பெரிது.

    மேற்சொன்னவர் அனைவரும் இந்து கடவுளன்களும் கடவுளச்சிகளும்தான் என்று பல அவதார மகிமைகளை எடுத்துக் காட்டி நீங்கள் நிறுவுவீர்களேயானால், அந்த மக்களும் இந்துக்கள்தான். ‘ஏ’யானது ‘பி’க்குச் சமம். ‘பி’ஆனது ‘சி’க்குச் சமம். எனவே ‘ஏ’
= ‘சி’ என்ற கணித விதியை இஞ்கே கையாண்டால், இவர்கள் இன்னின்ன கடவுளன் அல்லது கடவுளச்சியை வழிபடுகிறார்கள்; அந்தக் கடவுளன்களும் கடவுளச்சிகளும் இந்துக்கள்: எனவே இவர்களும் இந்துக்கள் என்று வல்லந்தமாக நிரூபித்து விடலாம். இந்தச் சள்ளையெல்லாம் எதற்கு என்றுதான் பல சாதிகளும் பல தெய்வங்களும் பலதரப்பட்ட மொழி, பண்பாடு ஆகியவையும் உடைய இந்தக் கூட்டத்தை ‘இந்தியா’ என்றும், இந்து என்றும் ஆங்கிலேயன் பெயர் வைத்திருக்க வேண்டும்! இந்த நாட்டில் இத்தனை சதவீதம் இந்துக்கள் என்று பண்டார சந்நிதிகளும், ஜகத்குருக்களும் புள்ளி விபரம் தந்து பீற்றிக்கொள்வதெல்லாம் இந்தக் கணிசமான மக்களையும் உள்ளடக்கித்தான்.

    இப்படி ‘ராம ராஜ்ய’ யோக்கியதைகள் பல கோச்சநல்லூருக்கு இருந்தாலும்
ஊராட்சித் தலைவர் தேர்தல் என்றால் சும்மாவா? பொறி பறக்கும் போட்டி. இதில்
ஆசுவாசப்படுத்தும் சங்கதி என்னவென்றால், போட்டியிடும் இருவரும் வேளாளர்கள்.
குறிப்பாக ஒரே வகுப்பைச் சேர்ந்த வேளாளர்கள். அதிலும் குறிப்பாக மைத்துனர்கள்.
எனவே காரசாரமான போட்டி இருந்தாலும், வகுப்புக் கலவரங்களாவது  இல்லாமல்
இருந்தது. ஊரு முழுவதும் ஏதாவது ஒரு சைடு எடுத்தாக வேண்டிய நிலை. இந்த நூறு வீடுகளைத் தவிரவும் பச்சைப்பாசி படர்ந்த தெப்பக்குளமும் அதன் கரையில் செயலிழந்த சாத்தாங்கோயிலும் சில சில்லறைப் பீடங்களும் ஒரு பாழடைந்த மண்டபமும் இரவு ஏழு மணிக்குமேல் அதனுள் இயங்கும் சட்ட விரோதமான ‘தண்ணீர்ப் பந்த’லும் சுக்குக்காப்பிக் கடையும் வெற்றிலைபாக்கு முதல் ‘டாம் டாம்’ டானிக் ஈறாக விற்கும் பலசரக்குக் கடையும் ஏழெட்டுத் தென்னந்தோப்புகளும் இருபது களங்களும் சுற்றிலும் நஞ்சை நிலங்களும் அங்கே உண்டு. மனிதனைத் தவிர, பிற தாவர சங்கமச் சொத்துக்களுக்கு ஓட்டுரிமை இல்லாது போனது கூட ஒரு சௌகரியம்தான். இல்லையென்றால், இந்த இரண்டு பேரை அண்டிப் பிழைக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் அவற்றுக்கும் ஏற்பட்டிருக்கும்.

    இருக்கின்ற வாக்குகளில், யாருக்கு எத்தனை கிடைக்கும் என்ற ஊகமும் கணக்கும்
எங்கு பார்த்தாலும் நீக்கமற இருந்தது. ‘பூசணிக்காய்’ வேட்பாளரின் தங்கைக்கு
இந்த ஊரில் ஒரு ஓட்டு இருப்பதால், ஒரு வாரத்துக்கு முன்னாலேயே நாங்குநேரியில்
இருந்து அவள் வந்தாயிற்று. இதை அறிந்த ‘உருளை’ வேட்பாளர் சும்மா இருப்பாரா?
புளியங்குடியில் வேலை பார்த்த அவர் தம்பிக்கு தந்தியே போயிற்று. மனைவியை
அழைத்து வர வேண்டாம்; தனியாக வந்தால் போதும் என்று அவனுக்குக் கட்டளை. அவள் பூசணிக்காயின் தங்கை. (வசதி கருதி இங்கு தொட்டு சின்னம் வேட்பாளரைக்
குறிக்கிறது.) என்னதான் கணவன் கார்வார் செய்தாலும் பாசம் காரணமாக அவள்
பூசணிக்காய்க்குப் போட்டு விட்டால்? இங்கு ஒரு ஓட்டுக்கூடி அங்கும் ஒரு ஓட்டுக்
கூடினால் என்ன பயன்? அதைவிட இரண்டு பேரும் வராமலேயே இருந்து விடலாமே!

    கூட்டிக் கழித்து, வகுத்துப்     பார்க்கையில் யாரு வென்றாலும் பத்து
வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடியும் என்று நோக்கர்கள் கணித்தனர்.
தேர்தல் வேலைக்காக இரண்டு பேரும் திறந்திருந்த செயலகங்கள் எப்போதும் நிரம்பி
வழிந்தன. தேர்தல் நாள் நெருங்க நெருங்க வெற்றிலை, பீடி, சுக்குக்காப்பி, வடை,
சீட்டுக்கட்டுகள் செலவு ஜீயாமெட்ரிக் புரகிரஷனில் வளர்ந்தது. நாளை காலை தேர்தல்
என்ற நிலையில் இந்த வேகம் காய்ச்சலாகி, ஜன்னி கண்டு    விடலாம் என்ற அச்சத்தைத் தந்துகொண்டிருந்தது. இந்தச் சரித்திரப் பிரசித்தி பெறப் போகும் விநாடியில்தான் மாணிக்கம் பூசணிக்காய் செயலகத்திலிருந்து குபீரென்று கிளம்பினான்.

    இப்போதே வெற்றி கிடைத்துவிட்டதைப் போன்ற ஒளி முகத்தில் துலங்க தான்
கண்டுபிடித்த அணஞ்ச பெருமாள் வைத்தியனேதான் என்ற வரலாற்றுப் பேருண்மையை யாருக்கும் தெரியாமல், ஐயம் திரிபு நீங்க நிரூபித்து விடவேண்டும் என்ற துடிப்பு. இந்த நேரத்தில் வைத்தியன் எங்கே இருப்பான் என்று அவனுக்குத்
தெரியும்.

    சாத்தான் கோயிலை நோக்கி மாணிக்கம் நடக்க ஆரம்பிக்கும் போதே ‘சதக்’கென்று
சிந்தனை எதனையோ மிதித்தது. நேர் வழியாகப் போனால், இந்த நேரத்தில் இவன்
இவ்வழியாகப் போவானேன் என்று எதிரிப் பாசறையைச் சேர்ந்தவர்கள் நினைக்க
மாட்டார்களா? அதுவும் நாளை தேர்தலாக இருக்கும்போது, சந்தேகம் வலுக்கத்தானே
செய்யும்? அதுவும் ‘உருளை’ ஒற்றர்கள் கண்ணில் பட்டுவிட்டால், துப்புத்
துலக்கவோ, பின் தொடரவோ ஆரம்பித்தால் குடிமோசம் வந்து சேருமே! தன்மூளையைக் கசக்கி, இந்தப் பாடுபட்டுக் கண்டுபிடித்த வாக்காளரை, மாற்றுக் கட்சிக்காரனும் கரைக்க ஆரம்பித்தால்?

    சமயத்தில் தனக்குத் தோன்றிய புத்திசாலித்தனமான யோசனையை மெச்சிக்கொண்டே, சாத்தான் கோயிலுக்கு சுற்று வழியாக நடந்தான் மாணிக்கம். பள்ளிக்கூடம் வழியாகத் தென்னங்குழிமடை வந்து பத்தினுள் இறங்கி, வரப்பில் நடந்து, வழிநடைத் தொண்டில் ஏறி, கோயிலின் பின்பக்கம் வந்தான். வைத்தியன் தனியாக இருக்க வேண்டுமே என்ற கவலை இலேசாக முளைகட்ட ஆரம்பித்தது.

    கோயில் முகப்புக்கு வந்தான். பனிமாதம் ஆகையால் அங்கே ஒரு குருவியைக்
காணோம். ஈசானமூலையில், சுவரை அணைத்துக்கொண்டு ஒரு கந்தல் மூட்டை போலச் சுருண்டு படுத்திருப்பது வைத்தியனாகவே இருக்க வேண்டும். கண் மங்கி கை நடுங்க ஆரம்பித்து, காதுகளின் ஓரத்தில் தன்னறியாமல் கத்திக் கீறல்கள் விழ ஆரம்பித்ததும் தொழில் கை விட்டுப் போனபிறகு, நிரந்தரமாக அந்த மூலை வைத்தியனின் இடமாகி விட்டிருந்தது.

    மணி ஒன்பதைத் தாண்டி விட்டதால் அவன் உறங்கி இருக்கவும் கூடும். ஆனால் சற்று நேரத்திற்கொரு முறை, நானும் இருக்கிறேன் என்ற காட்டிக் கொண்டிருக்கும் இருமல். மூலையை நெருங்கி நின்றுகொண்டு அங்குமிங்கும் பார்த்தான் மாணிக்கம். ஆள் நடமாட்டம் இல்லை. நாளை தேர்தல் என்ற மும்முரத்தில் ஊர் பரபரத்துக்
கொண்டிருக்கும்போது, இந்த ஒதுங்கிய மூலைக்கு யார் வரப் போகிறார்கள்?

    வைத்தியனைப் பார்த்து சன்னமாகக் குரல் கொடுத்தான்.

    ”வைத்தியா.. ஏ வைத்தியா....!”

    பதில் இல்லை. காதோடு அடைத்து மூடிக்கொண்டு படுத்திருப்பதால்
கேட்டிருக்காது. அந்த மனித மூட்டையின் தோளைத் தொட்டு உலுக்கினான். அலறாமலும் புடைக்காமலும் எழுந்து உட்கார்ந்த அவன், நிதானமாக மாணிக்கத்தைப் பார்த்து திருதிருவென்று விழித்தான்.

    ”ஏம் போத்தி...? வீட்டிலே யாராவது....”

    அவன் என்ன கேட்கிறான் என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது. மற்ற சமயமாக
இருந்தால், இந்தக் கேள்விக்குப் பதில் வேறு விதமாக இருக்கும். ஆனால் இன்று அந்த
ஓட்டின் கனம் என்ன என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அமைதியாகச் சொன்னான்.

    ”அதெல்லாம் ஒண்ணும் இல்ல... உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்...”

    வைத்தியனுக்கு நெஞ்சில் திகில் செல்லரித்தது. இந்த அர்த்த ராத்திரியில்
தன்னை எழுப்பி ஒன்று கேட்க வேண்டுமானால்....

    ”உன் பேரு அணஞ்சபெருமாளா?” வைத்தியன் முகத்தில் ஒருவித பிரமிப்பு.

    ”அட... இதென்ன விண்ணாணம்...? இதுக்குத்தானா இந்தச் சாமத்திலே வந்து சங்கைப்
புடிக்கேரு...”

    ”பேரு அதானா சொல்லு...?”

    ”உமக்கு யாரு சொல்லீட்டா...? நானே அயத்துப் போனதுல்லா.. இப்ப என்ன
வந்திட்டு அதுக்கு..?”

    ”யார்கிட்டேயும் மூச்சுக்காட்டாதே. உன் பேரு வோட்டர் லிஸ்டிலே இருக்கு..
நாளைக்குக் காலம்பற நான் வந்து உன்னைக் காரிலே கூட்டிட்டுப் போறேன்.. காப்பி
சாப்பாடு எல்லாம் உண்டு... உருளைக்காரப் பயக்கோ வந்து கோட்டா இல்லேண்ணு
சொல்லீரு.. ஆமா...!”

    தானும் ஒரு சமயச் சார்பற்ற ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் முடிசூடா
மன்னர்களில் ஒருவன் என்ற எண்ணம் -தனக்கும் ஓட்டுரிமை இருக்கிறது என்ற நினைப்பு வைத்தியனுக்கு புதிய தெம்பைத் தந்தது. அந்த உணர்வு காரணமாகச் சூம்பிய அவன் தோள்கள் சற்றுப் பூரித்தன.

    ”நான் ஏம் போத்தி சொல்லுகேன்? அண்ணைக்கு அந்த உருளைக்கார ஆளுக சொன்னாளே..

இதுவரை நீ சேத்தவன் ஓட்டையும் ஊரைவிட்டு ஓடினவன் ஓட்டையும் போட்டே... சரி... ஆனா எவனும் சொன்னாண்ணு இந்தத் தடவை அங்கே வந்தே... பொறகு தெரியும் சேதி.... நேரே போலீசிலே புடிச்சுக் குடுத்திருவோம். அப்படீண்ணூல்லா சொன்னா... நானும் அதாலா கம்முண்ணு இருக்கேன். மச்சினனும் மச்சினனும் இண்ணைக்கு அடிச்சுக்கிடுவாங்க.... நாளைக்கு நானும் நீயும் சோடி, கடைக்குப் போலாம் வாடிண்ணூ கழுத்தைக் கெட்டிக்கிட்டு அழுவாங்க... நமக்கு என்னத்துக்கு இந்தப் பொல்லாப்புண்ணுதாலா சலம்பாமல் கிடக்கேன். இப்பம் நம்ம பேரும் லிஸ்டிலே இருக்கா? தெரியாமப் போச்சே இதுநாள் வரை..”

    ”இது இப்பம்கூட யாருக்கும் தெரியாது பார்த்துக்கோ... நான்தான்
கண்டுபிடிச்சேன்! முன்னாலேயே ஒம் பேரு இருந்திருக்கும்.. ஆனா என்னைப் போல யாரு அக்குசாப் பாக்கா..? அதுகிடக்கட்டும். உனக்குப் புது வேட்டியும் துவர்த்தும்
வாங்கி வச்சிரச் சொல்லுகேன். நீ காலம்பற என்கூட வந்து இட்டிலி திண்ணு போட்டு,
புதுத்துணியும் உடுத்திக்கிட்டு ஓட்டுப் போட்டிரணும். எல்லாம் நான்
சொல்லித்தாறேன்... ஆனா எவன்கிட்டேயும் அனக்கம் காட்டிராதே... என்னா..?”

    ”இனி நான் சொல்லுவேனா.. நீங்க இம்புட்டு சொன்னதுக்கப்புறமு...”

    வைத்தியன் தந்த உறுதியில் மனம் மகிழ்ந்து தன் சாதனையை நினைத்து மார்பு
விம்ம, பூசணிக்காய் வீட்டை நோக்கி நடந்தான் மாணிக்கம்.

    அங்கே ஒரு அரசவையின் பொலிவு போன்ற சுற்றுச் சூழல்கள். மங்களாவில்
நடுநாயகமாகப் பூசணிக்காய் கொலு வீற்றிருந்தார். அந்த வீட்டிலுள்ள மொத்தப்
பெஞ்சுகளும், நாற்காலிகளும் அங்கே பரந்து கிடந்தன. வந்து வந்து தன்
விசுவாசத்தைத் தெரிவிக்கும் வாக்காளர்களின் புழக்கம். வெற்றிலைச் செல்லங்கள்
இரண்டு மூன்று ஆங்காங்கே ஊறிக் கொண்டிருக்கும் சுக்குக்காப்பி அண்டா. அந்த நூறு
வீட்டு ஊரின் இரதவீதிகளைச் சுற்றிச் சுற்றிக் கோஷம் போட்டுத் தொண்டை
கட்டியவர்கள் நெரிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். நாலை காலைக்
காப்பிக்கான ஆயத்தங்கள்.

    இட்டிலிக் கொப்பரைகள் கிடார அடுப்பில் ஏற்றப்பட்டு விட்டதால் ‘கொர்’ என்ற
சீரான இரைச்சல். சின்னம் பூசணிக்காய் ஆனபடியால், பூசணிக்காய் சாம்பாருக்காக
அரிந்து பனையோலைப் பாய்மீது குவிக்கப்பட்டிருந்தது. இலைக்கட்டுகள் இடத்தை
அடைத்துக்கொண்டு கிடந்தன. பாத்திர பண்ட வகையறாக்களின் முனகல். செயித்தால்
வீட்டுக்கொரு பூசணிக்காய் பரிசாக விளம்புவதற்காக ஐந்து மூட்டைகள் சாய்ப்பில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    பூச்ணிக்காய் தோற்றுப்போகும் என்று கருதி, தோற்ற பிறகு தெருவில் போட்டு
உடைப்பதற்காக உருளையுமிரண்டு மூட்டைகள் வாங்கிப் பத்திரப்படுத்தியிருந்ததாகக்
கேள்வி. ஆகக் கனக மூலம் சந்தையில் பூசணிக்காய்க்கு ஏகக் கிராக்கி. அடுத்த முறை
ஊராட்சித் தேர்தலைக் கணக்காக்கி, அதற்குத் தோதாக மேலாய்ச்சி கோணம் முழுவதும் பூச்ணிக்கொடு போடப்போவதாக அவ்வூர் பண்ணையார் ஒருவர் தீர்மாணித்திருப்பதாகத் தகவல்.

    நாளை வாக்குச் சாவடிக்குச் செல்வதற்காக ஏழெட்டு வில் வண்டிகளும் இரண்டு
வாடகைக் கார்களும் தயார். இதே ஏற்பாடுகளை உருளையும் செய்திருப்பார் என்று
சொல்லத் தேவையில்லை. ஒரேயொரு அசௌகரியம்தான். அவர்கள் பூசணிக்காய் சாம்பார் வைப்பதைப் போல, இவர்களால் ரோடு உருளையைச் சாம்பார் வைக்க முடியாது. அதில் ஒரு புத்திசாலி, உருளை என்றால் உருளைக் கிழங்கையும் குறிக்கும் என்பதால், அதையே சாம்பார் வைக்கலாம் என்று சொன்னதன் பேரில் அவ்வாறே தீர்மானமாயிற்று.

    இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், அங்கே மொத்த ஓட்டுக்களே இரு நூற்று
எழுபது. நூறு சதமானம் வாக்களிப்பு நடந்தாலும், இருநூற்றெழுபது
வாக்காளர்களுக்கும் மொத்தம் பதினாறு வில் வண்டிகளும் நான்கு வாடகைக் கார்களும். அது மட்டுமல்ல வாக்கெடுப்பு நடக்கப் போகும் அரசினர் ஆரம்பப் பள்ளி, ஊரில் எந்த மூலையில் இருந்து நடந்தாலும் அரை பர்லாங்குதான். ஆனாலும் முடிசூடா மன்னர்களை நடத்தியா கொண்டுசெல்வது?

    மறுநாள் பொழுது கலகலப்பாக விடிந்தது. தானாகப் பழுக்காததைத் தல்லிப் பழுக்க
வைப்பது போன்றும் சூரியன் கிழக்கில் எழச் சற்றுத் தாமதித்திருந்தால் கயிறு
கட்டி இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள். அவ்வளவு அவசரமும் பதட்டமும்.

    ஆறுமணிக்குப் பூசணிக்காயின் மகனும் மருமகளும் ஊரழைக்க வந்தார்கள்.
அதைத்தொடர்ந்து உருளையின் மகளும் மருமகனும் ஊரழைத்தார்கள். காலைக் காப்பிக்கான சன்னத்தங்கள். அதிகாலையிலேயே வைத்தியனைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டான் மாணிக்கம். அங்கேயே கிணற்றுத் தோட்டத்தில் குளிக்கச் செய்து, புதிய வேட்டியும் துவர்த்தும் உடுத்து வெண்ணீறு பூசி ஒரே அலங்கரிப்பு. அவனுக்கே ஒரே புளகாங்கிதம். ஊராட்சித் தேர்தல் மாதம் ஒரு முறை வந்தால் எப்படி இருக்கும் என்று அவன் எண்ணினான்.

    பத்து மணிக்கு மேல் வாக்கெடுப்பு துரிதகதியில் நடைபெறலாயிற்று. டாக்ஸிகள்
எழுப்பும் புழுதிப்படலம். வில் வண்டிக்காளைகள் குடங்குடமாகப் பீய்ச்சித்
தெருக்களை மெழுகின. சைக்கிள்கூட நுழைந்திராத முடுக்குகளிலெல்லாம் கார் நுழைந்து தேடிப்பிடித்து வாக்காளரை இழுத்தது. பெற்றோர்கள் ஓட்டுப் போடப் போகும்போது சிறுவர்களுக்கும் காலைக் காப்பி, பலகாரம், டாக்ஸி சவாரி, சிலர் பிடிவாதமாக வில் வண்டியில் ஏற மறுத்து, காரில்தான் போவேன் என்றார்கள். தேர்தல்கள் இல்லாவிட்டால் இதையெல்லாம் எப்படித்தான் அனுபவிப்பது?

    இரண்டு வேட்பாளர்களும் வாக்குச்சாவடியில் பிரசன்னமாயிருந்தார்கள்.
அவர்களின் பிரதிநிதிகள் இரண்டு வரிசைகளில். இது தவிர அரசாங்க அதிகாரிகளான பள்ளி ஆசிரியர்கள். கலவரம் வரலாம் என்று அஞ்சப்பட்டதால், இரண்டு போலீஸ்காரர்கள் கர்மசிரத்தையோடு கண்காணித்துக் கொண்டிருந்தார்கள், லாத்தியுடன். வெள்ளாளனுக்கு லாத்தியே அதிகம் என்று துப்பாக்கி கொண்டுவரவில்லை.

    வைத்தியன் என்ற அணஞ்சபெருமாளை பெருமாள் வாக்குச்சாவடி முன் காரில்
கொண்டுவந்து இறக்கிய போது எல்லோர் கண்களும் நெற்றி மேல் ஏறின. வெள்ளையும் சொள்ளையுமாக நீறணிந்த சைவ நாயனாக வந்து நின்ற அவனை அதிசயத்தோடு பார்த்தனர்.

    ”நாறப்பய புள்ளைக்கு என்ன தைரியம் இருந்தா இண்ணைக்கு உள்ளூர் எலக்‌ஷன்லே கள்ள ஓட்டுப் போட வரும்...ம்...வரட்டும்.”

    கறுவினார் உருளை.

    மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதால் கூட்டம் குறைந்து விட்டது. வைத்தியன் வந்து
வரிசையில் நின்றபோது ஏழெட்டுப் பேரே அவன் முன்னால் நின்றார்கள். அவன் பின்னால் ஓரிருவர் வந்து சேரவா, இல்லை சாப்பிட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாமா என்று யோசனையில் தயங்கி நின்றனர்.

    இரண்டு நிமிடங்கள் பொறுத்ததும் வரிசையை விட்டு விலகி வேகமாக வெளியே நடக்கத் தொடங்கினான் வைத்தியன். இவனுக்குத் திடீரென என்ன வந்து விட்டது என்று புருவக்கோட்டை உயர்த்தினார் பூசணிக்காய். ‘என் எதிரில, எனக்கு விரோதமாகக் கள்ள ஓட்டுப் போட வந்திருவானாக்கும்...’ என்ற பாவனையில் மீசை மீது கை போட்டு இளக்காரத்துடன் பூசணிக்காயைப் பார்த்தார் உருளை.

    வரிசையிலிருந்து விலகிய வைத்தியனைப் பின்தொடர்ந்து ஓடிய மாணிக்கம் இரண்டு எட்டில் அவனைப் பிடித்துவிட்டான்.

    ”கெழட்டு வாணாலே! என்ன கொள்ளை எளகீட்டு உனக்கு? எங்கே சுடுகாட்டுக்கா
ஓடுகே...?”

    ”அட சத்தம் போடாதேயும் போத்தி... இன்னா வந்திட்டேன்...” வைத்தியனின்
குரலில் அவசரம்.

    ”அதான் எங்க எளவெடுத்துப் போறேங்கேன்.. பிரி களந்திட்டோவ்?”

    ”இரியும் போத்தி... ஒரு நிமிட்லே வந்திருகேன்.”

    ”ஓட்டுப் போட்டுக்கிட்டு எங்க வேணும்னாலும் ஒழிஞ்சு போயேங்கேன்.”

    ”அட என்னய்யா பெரிய சீண்டறம் புடிச்ச எடவாடா இருக்கு.... காலம்பற முகத்தைக்
கழுவதுக்குள்ளே கூட்டியாந்தாச்சு. ஏழெட்டு இட்லி வேறே திண்ணேன்... வயசான
காலத்திலே செமிக்கவா செய்யி... சித்த நிண்ணுக்கிடும்.. இன்னா ஒரு எட்டிலே
போயிட்டு வந்திருகேன்...”

    வைத்தியன் குளத்தங்கரையோரம் போய் கால்கழுவி வருவதற்குள் உணவு இடைவேளைக்காக வாக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வைத்தியனை அங்கே காத்திருக்கச் சொன்னால் ஆபத்து என்று கருதி, மீண்டும் காரிலேற்றி, வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சாப்பாடு போட்டு முதல் ஆளாகக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். சூரன்பாடு திருவிழாவில், முதலில் வருகின்ற சூரனைப் போல வைத்தியன் வீர விழி விழித்தான். இடைவேளைக்குப் பிறகு, வாக்கெடுப்பு தொடங்கியது கையில் வைத்திருந்த ‘அணஞ்சபெருமாள்’ சீட்டுடன் வாக்கு சாவடியினுள் நுழைந்தான் வைத்தியன். இவனுக்கு ஒரு பாரம் படிப்பித்துத்தான் அனுப்ப வேண்டும் என்று உருளை உஷாராக இருந்தார். முதல் போலிங் ஆபிசரிடம் சீட்டை நீட்டினான் வைத்தியன்.

    உருளை ஒரு உறுமல் உறுமினார்.

    ”ஏ வைத்தியா.. உனக்கு ஓட்டு இருக்கா?”

    சந்தேகத்துடன் அவன் அவரைப் பார்த்தான்.

    ”இருக்கு போத்தியோ.. இன்னா நீரே பாருமே...”

    அவன் நீட்டிய சீட்டை வாங்கிப் பார்த்த உருளைக்கு கொஞ்சம் மலைப்பு. அவர்
மலைப்பதைக் கண்ட பூசணிக்காய் முகத்தில் மூரல் முறுவல்.

    ”அணஞ்ச பெருமாளா உன் பேரு..?”

    ”ஆமா போத்தி.. நான் பின்ன கள்ள ஓட்டா போட வருவேன்?”

    உருளையின் ஐயம் தீரவில்லை. வாக்காளர் பட்டியலை வாங்கிப் பார்த்தார். அவர்
முகத்தில் சிறிய திகைப்பு. சற்று நேரத்தில் ஏளனப் புன்னகையொன்று விரிந்தது.

    ”இதுவரைக்கும் கள்ள ஓட்டுப் போட்டாலும் நாடுவிட்டுப் போன ஆளுக பேரிலேதான் போட்டிருக்கே. இப்ப செத்துப்போன ஆளு ஓட்டையும் போட வந்திட்டயோவ்?”

    ”இல்லை போத்தி.. என் பேரு அணஞ்சபெருமாளுதான்... நான் பொய்யா சொல்லுகேன்...”

    ”அட உன் பேரு அணஞ்சபெருமாளோ, எரிஞ்ச பெருமாளோ என்ன எளவாம்
இருந்திட்டுப்போகு... ஆனா இந்த அணஞ்ச பெருமாளு பொம்பிளையிண்ணுல்லா
போட்டிருக்கு....”

    ”என்னது? பொம்பிளையா?”

    ”பின்னே என்ன? நல்லாக் கண்ணை முழிச்சிப்பாரு.. அது நம்ம கொழும்புப் பிள்ளை
பாட்டாக்கு அக்காயில்லா... அவ செத்து வருஷம் பத்தாச்சே.... ஓட்டா போட வந்தே
ஓட்டு... வெறுவாக்கட்ட மூதி.. போ அந்தாலே ஒழிஞ்சு....”

    வைத்தியன் செய்வதறியாமல் பூசணிக்காயைப் பார்த்தான். கடித்துத் தின்று
விடுவதைப் போல அவர் அவனைப் பார்த்து விழித்தார்.

*****

நன்றி: கணையாழி, ஜனவரி - 1977

Mar 24, 2010

எலும்பில்லாத நாக்கு - எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்

நாஞ்சில் நாடன்

மதுரை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த நாட்களில், ரயில்வே நிலையத்தின் வெளியே உள்ள பிளாட்பாரத்தில் உள்ள இட்லிக் கடைகள் தான் எங்களது பசியாற்றுமிடங்கள். நான்கு நட்சத்திர ஓட்டல், ஐந்து நட்சத்திர ஓட்டல் என்பதெல்லாம் இவற்றின் முன் தூசி. (அங்கே இரவில் மர பெஞ்சில் உட்கார்ந்தபடி, கையில் இட்லித் தட்டை வாங்கிக்கொண்டு அண்ணாந்து பார்த்தால், வானில் நூறு நட்சத்திரங்கள் தெரியும்.)

9ve4b8 மதுரை, ருசி மிக்க உணவுக்குப் பெயர் பெற்ற ஊர். இரவில் இரண்டு மணிக்குக்கூட ஆவி பறக்கும் இட்லியும் கெட்டி சட்னியும் பொடியுமாக உணவு பரிமளித்துக்கொண்டு இருக்கும். சாப்பிட்டது போதும் என எழும்போது கூட, ‘என்னப்பூ சாப்பிடுறீக... நல்லாச் சாப்பிடுங்கÕ என்று மனதாரக் கேட்டுப் பரிமாறும் அக்காக் கடைகள் தெருவுக்கு இரண்டிருக்கின்றன.

ஓர் இரவு, ரயில் நிலையத் தின் முன்பாக ஏதாவொரு அரசியல் கூட்டம் நடக்க இருக்கிறதென்று, அங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லிக்கொண்டு இருந்தார் கள். அக்காக் கடைகளில் ஒன்றில் சாப்பிடுவதற்காக உட்கார்ந்திருந்த நான், என்ன நடக்கப் போகிறது என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். இட்லிக்கார அக்கா அதெல் லாம் காலி செய்ய முடியாது என்று மறுத்து விவாதம் செய்துகொண்டு இருந்தாள். உள்ளூர் அரசியல் தலைவர்களில் ஒருவர், ‘எதுக்குடா பேசிக்கிட்டு இருக்கிறே! இட்லி, தோசைக்கு என்ன உண்டோ, அதைக் கொடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணச் சொல்லுவியா?’ என்று திட்டினார். உடனே கரை வேட்டி ஒருவர், ஐந்து நூறு ரூபாய்த் தாள்களை அவளிடம் நீட்டிய படி, ‘கடையை எடுத்துக் கட்டுக்கா!’ என்றார்.

அவளுக்கு வந்த ரௌத்திரத்தில் கத்தினாள்.

‘பன்னிரண்டு மணி வரைக்கும் அக்கா கடை இருக் கும்னு நினைச்சு சாப்பிட வர்றாங்க பாரு... அவிங்களுக்கு தான் இங்ஙன கடை போட்டிருக்கேன். உன்னை மாதிரி மொள்ளமாறி பயக பேச்சைக் கேட்டுக் கடையை மூடுனா, பசியோட வந்த பிள்ளைக திரும்பிப் போற பாவமில்லே வந்து சேந்துரும். நமக்கு வேண்டாம்டா அந்தப் பணம். கிடைக்கிறது எட்டணா காசா இருந்தாலும், பத்து பேரு பசியாத்தின திருப்தியிருக்கு பாரு, அதுக்குதான் யாவாரம் பண்றேன். உன் காசைப் பொறுக்கி எடுத்துட்டு போய்ச் சேரு. இல்லே... இட்லி அடுப்பிலே வெச்சு உன்னையும் வேக வெச்சிருவேன், பாத்துக்க..!’
எத்தனை சத்தியமான வார்த்தைகள். இட்லி விற்று வாழ்கிறோம் என்பதை விடவும், பத்து பேரின் பசியாற்ற முடிகிறதே என்ற அவளது சந்தோஷம் தான் அவளது உணவுக்கு ருசியைத் தருகிறது என்று அப்போதுதான் புரிந்தது.

உணவுக்கு ருசி சேர்ப்பது உப்பிலோ புளியிலோ இல்லை. சமைப்பவரின் மனதில்தான் இருக்கிறது. சந்தோஷமோ, கவலையோ எதுவாக இருந்தாலும் அது சமையலில் தெரிந்து விடுகிறது. சாப்பாட்டில் உப்பு குறைந்தால் பிரச்னை சாப்பாட்டில் இல்லை. சமையல் செய்யும் மனைவியை, தாயை சரியாகக் கவனிக்கவில்லை என்பதுதான் அப்படி வெளிப்படுகிறது. பேச்சலர் சமையல்களுக்கென்று ஒரு தனி ருசி இருக்கிறது. அது ஒரு முழுமையடையாத உணவு. குழம்பு சிறப்பாக வந்திருந்தால் சாதம் குழைந்திருக்கும். இரண்டும் சரியாக வந்திருந்தால் போதுமான அளவு இல்லாமல் போயிருக்கும். பசியைக் கடந்து செல்வது தான் அதன் முக்கிய நோக்கம்.

எப்போதாவது அபூர்வமான ஞாயிற்றுக்கிழமை களில், நண்பர்கள் பலரும் ஒன்று கூடி வெங்காயம் நறுக்கியபடியோ, வெள்ளை பூண்டு உரித்தபடியோ இலக்கியம், சினிமா, உலக விவகாரம் பேசிக்கொண்டு சமைக்கத் துவங்கி, வியர்த்து வழிய, சூடு பறக்க, தினசரி பேப்பர்களைத் தரையில் விரித்து, சமைத்த உணவை நடுவில் வைக்கும்போது வீடெங்கும் பரவும் மணம் இருக்கிறதே, அது பிரம்மசாரிகளின் அறைகளுக்கு மட்டுமே உரித்தான நறுமணம்.

எத்தனையோ முறை எவரெவர் வீடுகளிலோ திடீர் விருந்தாளியாகச் சென்ற இரவுகளில், உடனடி உப்புமாவைச் சாப்பிட்டிருக்கிறேன். சிலரது வீட்டில் தட்டில் உப்புமா பரிமாறப்பட்ட மறு நிமிடமே, அது எத்தனை தூரம் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது என்று அதன் ருசியிலேயே தெரிந்துவிடும். சிலரது வீடுகளில், இப்படி உப்புமா சாப்பிடுவதற்காகவே நள்ளிரவில் வந்து நிற்கக் கூடாதா என்று தோன்ற வைக்கும். இரண்டுக்கும் காரணம் உணவில்லை. செய்பவரின் மனதும் விருப்பமும்தான்.

குற்றால சீசன் நாளில், ஒரு முறை தென்காசியில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றில் சாப்பிடப் போயிருந்தபோது, அந்த ஓட்டலின் உரிமையாளர் குழந்தைகள் சாப்பிடுவதற்கு காசு வாங்க மறுப்பதைக் கண்டேன். Ôசின்ன பிள்ளை என்ன சாப்பிட்டுறப் போகுது. அரை தோசை சாப்பிடுமா... நல்லா சாப்பிடட்டும்! அதுக்குப் போயி பில் போடுறதுக்கு மனசில்லை’ என அதற்கு அவர் சொன்ன காரணம்தான், அந்தக் கடையைத் தேடி யாவரும் போவதற்கான காரணமாக இருந்தது.
பசியை நேர்கொண்டு பழகுவதும், அதன் முணுமுணுப்பை சட்டை செய்யாமல் புகையும் வயிற்றோடு விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருப்பதும் இருபது வயதில் மட்டுமே சாத்திய மானது போலும்! அவமானங்களும் வடுக்களும் அறிமுகமாகத் துவங்கும் வயது அது.

கல்லூரி நாட்களில் எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன், தன் அத்தையின் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டு இருந்தான். அவர்கள் வீட்டில்தான் சாப்பாடு. அந்த வீட்டில் சாப்பிடுவதற்கே கூச்சமாகத்தான் இருக் கிறது என்பான். காரணம் கேட்டால், ‘பாதிச் சாப்பாட்டில் மறுசோறு வேண்டும் என்று கேட்டால், காது கேட்கா தது போலவே நின்று கொண்டு இருப்பார்கள். ஒவ்வொன்றையும் நாலைந்து முறை கேட்க வேண்டும். நாக்கை வெட்டி எறிந்து விடலாமா என்று அவமானமாக இருக்கும்.
அதை விடவும் கொடுமை, பசித்த நேரங்களில் நாமாகத் தட்டில் எடுத்துப் போட்டுச் சாப்பிட முடியாது. அவர்களாகச் சாப்பிடச் சொல்லும் வரை காத்துக்கொண்டே இருக்க வேண்டும். பல நாட்கள் இரவு நேரங்களில் தட்டில் சோற்றைப் போட்டு ஓரமாக வைத்துவிட்டு உறங்கிவிடுவார்கள். தனியே அந்தச் சோற்றைச் சாப்பிடும்போது இழவு வீட்டில் சாப்பிடுவது போல இருக்கும். இதற்காகவே நான் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறேன்’ என்பான்.

எல்லோரது உடலிலும் பசியில் பட்ட அவமானங்கள் ஆறாத வடுக்களாக கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கின்றன போலும்! யாரோ சப்பிப் போட்ட மாங்கொட்டையை மண்ணிலிருந்து ஆசையாக எடுத்து மண்ணை ஊதிவிட்டு சுவைக்கும் குழந்தையின் கண்களில் ஒளிந்திருப்பது பசியைத் தவிர, வேறென்ன?
பசியின் கால்தடம் பதியாத இடமே உலகில் இல்லை. பசியின் முன்பாக தலை குனியாத மனிதனும் எவனும் இல்லை. இதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது ‘நாஞ்சில் நாட’னின் ஒரு கதை.

நாஞ்சில் நாடன் தமிழ்ச் சிறுகதையுலகில் மிகச் சிறப்பான எழுத்தாளர். இவரது எழுத்துலகம் குமரி மாவட்டத்து நாஞ்சில் பிரதேச மக்களும், அதன் மண்ணும் கலந்து உருவானது. தமிழ் எழுத்தாளர்களிடம் அபூர்வமாகவே காணப்படும் நகைச்சுவையும், பகடியும் இவருக்குச் சரளமாகக் கை வரக்கூடியது.

திருவிழா நாள் ஒன்றில் கச்சேரி கேட்பதற்காக மாணிக்கம் என்ற சிறுவனின் அப்பா புறப்படுகிறார். மாணிக்கம் தானும் வருவதாக அவரோடு சேர்ந்துகொள்கிறான். சுசீந்திரம் கோயில் பிரசித்தி பெற்றது என்பதால் அங்கே கே.பி.சுந்தராம்பாள், பாலமுரளி கிருஷ்ணா, ராஜரத்தினம் பிள்ளை எனப் பலரும் வந்து கச்சேரி செய்திருக்கிறார்கள். இதனால் அருகாமை கிராமத்து மக்களுக்கு கொஞ்சம் சங்கீத ரசனை உருவாகியிருந்தது.

மாணிக்கத்தின் அப்பா ஒன்றும் பெரிய இசை ரசிகர் இல்லை. ஆனாலும், கச்சேரி கேட்பதற்காக திருவிழாவுக்குக் கிளம்பி வந்திருந்தார். கச்சேரி கேட்க, ஊரிலிருந்து நடந்தே வந்திருந்தார்கள். கச்சேரி முடிய நள்ளிரவாகிவிட்டது.
அப்பாவும் பிள்ளையும் எதையாவது சாப்பிடுவதற்காக, ஒரு காபிக் கடைக்குள் நுழைந்து ஆளுக்கு நாலு தோசை, ரசவடை, டீ எனச் சாப்பிட்டுவிட்டு வெளியே வருகிறார்கள். அன்று கடையில் நல்ல கூட்டம். யாருக்கு எவ்வளவு பில் என்று கடைப் பையன் கத்திச் சொல்லிக் கொண்டு இருக்கிறான். முதலாளி பில்லை வாங்கிப் போட முடியாதபடி கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது.
மாணிக்கத்தின் அப்பா கல்லாவை நெருங்கி வந்து இரண்டு டீ மட்டும் குடித்ததாக காசை எண்ணி வைத்துவிட்டு, எதுவும் நடக்காததுபோலப் பையனை கூட்டிக்கொண்டு வெளியே வந்துவிடுகிறார். ‘அப்பா ஏன் இப்படி ஏமாற்றினார்’ என்று மாணிக்கத்துக்குப் புரியவேயில்லை. ஒருவேளை, அப்பா இதற்காகத்தான் வருடம் தோறும் திருவிழாவுக்குத் தவறாமல் வந்துவிடுகிறாரோ என்றுகூடத் தோன்றியது. ஆனால், இனி இவரோடு திருவிழாவுக்கு வரக்கூடாது என்று மாணிக்கம் முடிவு செய்வதோடு கதை முடிகிறது.
பசியின் பெரும் போராட்டம் தான் வாழ்வை ஏதேதோ திசைகளில் கொண்டு செலுத்திக்கொண்டு இருக்கிறது நாவின் சுவை வேண்டுமானால் ஆறாக இருக்கலாம். ஆனால், வாழ்வின் சுவை எத்தனை விதமானது என்று அறுதியிட்டுக் கூற முடியுமா என்ன?


நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன் 1947&ல் பிறந்தவர். இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல வருடங்கள் மும்பையில் வசித்தவர். இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கது. இதை இயக்குநர் தங்கர்பச்சான் ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் படமாக்கியுள்ளார். மிதவை, தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள், பேய்க் கொட்டு, சதுரங்கக் குதிரைகள் போன்றவை இவரது முக்கியப் படைப்புகள். நாஞ்சில் நாடன், தற்போது கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்.

***********

Mar 13, 2010

நாஞ்சில் நாடன் - நேர்காணல்

‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்.
அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது. நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர்கள் நாம், நடிகையைக் கோயில் கட்டி கும்பிட்டவர்கள் நாம், கவர்ச்சி நடிகை குடித்து மிஞ்சம் வைத்த எச்சில் சோடாவை அண்டாவில் விட்டு நீர் சேர்த்துக் கலக்கி அரை கிளாஸ் பத்து ரூபாய் எனப் பிரசாதம் விநியோகித்தவர் நாம், பச்சைக்குத்திக் கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர்கள் நாம், நடிகைகக்குத் தீண்டல் தாண்டிப் போனால் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்கள் நாம். மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின் பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம் _ நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது? ஏமாளி என்றா, மூடன் என்றா? மூர்க்கன் என்றா? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன் என்றோ?’’ என்று அங்கதம் பொங்க பேசும் நாஞ்சில் நாடன் தமிழன் செவ்வியல் படைப்பாளி.

‘தலைகீழ் விகிதங்கள்,’ ‘என்பிலதனை வெயில் காயும்,’ மாமிசப் படைப்பு, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை, என்ற ஆறு நாவல்களும் ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’ ‘வாக்குப் பொறுக்கிகள்’ ‘உப்பு’ ‘பிராந்து’ ‘சூடிய பூ சுடற்க என்னும் ஐந்து சிறுகதை தொகுப்புகளும் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்னும் மூன்று கட்டுரை தொகுப்புகளும் ‘மண்ணுள்ளிப் பாம்பு’ என்ற ஒரு கவிதை தொகுப்பையும் எழுதி இருக்கிறார்.

இவரது மொத்தக் கதைகளையும் முழுத் தொகுப்பாக நாஞ்சில் நாடன் கதைகள் என்ற தலைப்பில் ‘தமிழினி’ பதிப்பம் வெளியிட்டிருக்கிறது. கூடவே இரு கட்டுரை தொகுப்பையும் மற்றவையெல்லாம் ‘விஷயா’ பதிப்பகம் வெளியிட்டவை. இனவரையில் நூலை காலச்சுவடு’ வெளியிட்டிருக்கிறது.

தன் வீட்டில் நேர்ந்த இரண்டு துக்க காரியங்களில் இரண்டு மாதங்கள் தள்ளிப்பான இந்த நேர் காணல் இந்த மாதம் சாத்தியமானது. கோவை சிங்காநல்லூர் ஐயர்லேஅவுட் பகுதியில் வசிக்கும் அவரை ஒரு மாலை பொழுதில் தீராநதிக்காக சந்தித்தோம்.

naanjil

தீராநதி : உங்களுடைய முதல் சிறுகதையான ‘விரதம்’ 1975 ஜூலை மாதம் ‘தீபம்’ இதழில் வெளிவந்திருக்கிறது. உடனே அந்தக் கதைக்கு ‘இலக்கிய சிந்தனை’ பரிசும் கிடைத்திருக்கிறது. அப்போது உங்களுக்கு உத்தேசமாக 28 வயதிருக்கும். அன்றிலிருந்து தொடர்ந்து இடைவிடாமல் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமகால இலக்கியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆண்டோடு அறுபது வயதை எட்டி இருக்கிறீர்கள். அன்றைக்கு உங்களுக்கு எழுத்தின் மீதாக உண்டான ஆர்வம், வாசிப்பிலிருந்து இன்றைக்கு நீங்கள் அடைந்திருக்கும் ‘இடம்’ வரைக்குமான விஷயங்களை வாசகப் பதிவிற்காக ஞாபகப்படுத்தி பேசுங்களேன்?

நாஞ்சில் நாடன் : ஆரம்பத்தில் என்னுடைய தனிமையைக் கொல்வதற்காகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். பிறமாநிலத்தில் சென்று பணி செய்யவேண்டிய கட்டாயம். பேச்சுத் துணைக்கோ, சுக, துக்கங்களைப் பகிர்ந்துக்கொள்வதற்கோ ஒரு தமிழனோ, மலையாளியோகூட இல்லாத சமயத்தில் தன்னந்தனியனாக உணர்ந்தேன். ஒருபுறம் பிறந்து வளர்ந்த ஊரின் ஞாபகங்கள் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு வடிகாலாக எழுத ஆரம்பித்தேன். ‘விரதம்’ மாதிரியான சிறுகதைகள் எழுத வந்ததன் மூலம் நான் இழந்த அல்லது தொலைத்த ஒரு உலகத்தை எனக்குள்ளாகவே மறு வெளிப்பாடு செய்து பார்த்துக்கொண்டேன். அதிலொரு சுகம் இருந்தது எனக்கு. அப்படி எழுதியபோது தொடர்ந்து இதே வழியில் போகலாம் என்று ஒரு தைரியம் கிடைத்தது.

ஆரம்பத்தில் ழிஷீstணீறீரீவீணீ வாக உருவான என் எழுத்து நாள் போகப்போக ழிஷீstணீறீரீவீணீ என்ற இடத்தோடு மட்டும் நின்று விடவில்லை. பிறந்த வளர்ந்த இடம் பற்றி, என்னுடைய சூழல் பற்றி, சமூகம் பற்றி, எனக்குத் தெரிந்த விஷயங்கள் பற்றி, என்னுடைய நேரடியான அனுபவங்கள் பற்றி எனக்கு நிறைய சொல்வதற்கு இருந்தது. இதை ஒரு பகிர்தல் என்று வேண்டுமென்றால் வைத்துக்கொள்ளலாம். இந்தப் பகிர்தலுக்கு என்னுடைய சிறுகதைகளையும், நாவல்களையும் பயன்படுத்திக்கொண்டேன். இப்படித்தான் தொடங்கினேன். பின்னால் எனக்கென்று ஒரு பார்வை ஏற்பட்டது. இது சிறு வயதிலேயேகூட இருந்திருக்கலாம். ஆனால் அது துலக்கம் பெறாமல் இருந்தது. பிறகு ஒரு துலக்கம் கிடைத்த பிற்பாடு மேலும் தீவிரமாக என்னால் எழுத முடிந்தது. இப்படித்தான் முப்பத்துநான்கு வருஷமாக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இந்த வடிவங்கள், யுக்திகள் பற்றி விஷயங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்துகொண்டு நான் எழுத வரவில்லை. எனக்கெது எளிதாக வாய்த்ததோ, எனக்கெது எளிதாக எழுத வந்ததோ அதில்தான் நான் தொடர்ந்து சென்றேன். இந்த வடிவச் சிக்கல்களுக்குள்ளாக நான் எப்போதும் திகைத்து நின்றதில்லை.

தீராநதி : உங்களின் ழிஷீstணீறீரீவீணீவைக் கொல்வதற்காகவே எழுத ஆரம்பித்தீர்கள் என்பது சரி, அப்படி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னவே உங்களுக்கு கதை, நாவல்கள் வாசித்த அனுபவம் இருந்ததா?

நாஞ்சில் நாடன் : என்னுடைய பதிநான்கு பதினைந்து வயதிலேயே வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். _ எனக்கெது புரிந்ததோ அதை. தொடக்கத்தில் எல்லா இளைஞர்களுக்குமே அந்தக் காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சரித்திரக் கதைகள் மீது பெரிய ஆர்வம் இருந்தது. பிறகு வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்களின் துப்பறியும் மர்மக் கதைகள் மீதும் பெரிய ஆர்வம் இருந்தது.

இவர்கள்தான் முதலில் என்னை வாசிப்பை நோக்கி நகர்த்தினார்கள். எங்கள் ஊர் வீரநாராயணமங்கலத்தில் நூலகமொன்று இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாஞ்சில் நாடு என்ற பகுதியில், பழையாற்றங் கரையிலுள்ள ஒரு சின்ன, ரொம்ப அழகான விவசாய கிராமம் அது. சுற்றிலும் நெல் வயல், வாழை, தென்னை இந்த மூன்றுதான் முக்கிய பயிர்கள். அப்புறம் கன்றுகாலிகள் என்று, இவ்வாறான சூழலோடுதான் என்னுடைய வாசிப்பும் சேர்ந்து நகர்ந்தது.

எங்கள் ஊர் நூலகத்தில் கல்கி, சாண்டில்யன், நா. பார்த்தசாரதி பின்னால் தொடர்ந்து அகிலன். அதன்பிறகு அநுத்தம்மா, மு. வரதராஜன் இப்படி தொடர்ந்து போ. ஒரு காலத்திற்குப் பிறகு மர்மக்கதைகள் வாசிப்பதற்கான ஈடுபாடு குறைய ஆரம்பித்தது. மர்மக்கதை எழுத்தாளர்கள் எண்ணிக்கையில் பெரிய அளவில் நம்மிடம் இல்லை. நான்கு ஐந்து பொருட்படுத்தக் கூடிய எழுத்தாளர்களைத் தவிர்த்து சரித்திரக் கதைகள் என்பது சொல்லும்படியாக இல்லை. இப்படிப் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதாவது, என்னுடைய 26, 27 வயதில் நான் பாம்பேக்கு குடிபெயர்கிறேன். அங்கு பம்பாய் தமிழ்ச்சங்கத்தில் ஒரு நூலகம் இருந்தது. அங்கு உறுப்பினராக நான் சேர்ந்தேன். அந்த நூலகத்திலிருந்து வீட்டிற்கு தினமும் இரண்டு புத்தகங்கள் வாசிக்க எடுத்துக்கொண்டு போகலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் தினமும் இரண்டு புத்தகங்கள் படித்தேன். ஏறக்குறைய 400, 500 பக்கங்கள் தினமும் படித்தேன். அதற்கான நேரமும் சாவகாசமும் எனக்கிருந்தது. அப்போது அந்த நூலகத்தில் வே. நாகராஜன் என்ற ஒருவர் இருந்தார். ‘வேனா’ என்ற பெயரில் அந்தக் காலத்தில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தொகுப்பாக எதுவும் வரவில்லை. அவருக்கு பூர்வீகம் கும்பகோணம். தி. ஜானகிராமனின் தெருவாசி. நண்பர். அவர், ‘கிருஷ்ணன் நம்பியைப் படிச்சிருக்கியா?’ ‘நீல. பத்மநாபனைப் படிச்சிருக்கியா?’ என்று கேட்டு நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்தார். சுந்தரராமசாமியை அவர்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லச் சொல்ல அந்தப் புத்தகங்களைத் தேடி பிடிக்க ஆரம்பித்தேன். ஏற்கெனவே நான் படித்துக்கொண்டிருந்த அகிலன், பார்த்தசாரதி, கல்கி, சாண்டில்யன் அநுத்தம்மா, லக்ஷ்மி இவர்களைத் தாண்டின ஒரு விஷயம் எனக்குக் கிடைத்தது. கிருஷ்ணன் நம்பி அப்போது மொத்தமே இரண்டு புத்தகங்கள்தான் எழுதி இருந்தார். அப்போதுதான் நீல.பதம்நாபன் ‘தலைமுறைகள்’ நாவலை எழுதி முடித்திருந்தார். பிறகுதான் ‘பள்ளிகொண்டபுரம்’ வந்தது. இப்படி அன்று தொடர்ந்து இன்றைக்கு வரைக்கு ஒரு தரமான வாசிப்பிற்கு என்னை நான் ஆட்படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன். இன்றைக்கு சமகாலத்தில் வெளிவந்திருக்கும் எல்லா இளைய எழுத்தாளர்களின் புத்தகங்களையும் நான் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.


தீராநதி : அன்றைக்கு ஆரம்பித்து இன்றைக்கு நீங்கள் வந்து நிற்கும் இடம் வரைக்கும் மன நிறைவைத் தரக் கூடிய ஓர் எல்லையை எட்டி இருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா?

நாஞ்சில் நாடன் : இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று _ என்னால் செய்ய முடிந்ததை நான் செய்திருக்கிறேன். அப்படிப் பார்க்கும் போது ஒரு நிறைவெனக்கிருக்கிறது. இரண்டு நான் செய்தது போதுமா என்று பார்த்தால் எனக்கு இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது. அதைச் செய்துவிட்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணமும் எனக்கிருக்கிறது. இதை நான் அகம்பாவமாகச் சொல்வதாகக் கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

சில விஷயங்களை நான்தான் சொல்லியாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. இதை தான் சொல்லவில்லையென்றால், இது தமிழ் மக்களுக்கு சொல்லப்படாமலேயே கூட போய்விடக் கூடிய ஓர் அபாயம் இருக்கிறது என்பது எனக்குத் தெரிகிறது. இதை நீங்கள் கர்வமாக எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு எப்படி எடுத்துக் கொண்டாலும் எனக்கு சரிதான். சாதாரணமாக ஒரு ‘விரதம்’ என்று சிறுகதையை எழுத ஆரம்பித்து நேற்றைக்கு ‘டைம்ஸ் இன்று’ வில் வெளியான ‘கோம்பை’ வரைக்கும் எடுத்துக் கொண்டு பார்த்தால், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அந்த தீப் பந்தத்தைத் தூக்கிக் கொண்டு நான் நடந்திருக்கிறேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இது என்னால் சாத்தியமாகி இருக்கிறது. தமிழிலக்கிய உலகில் சிறுகதை என்ற பிரிவிலேயோ அல்லது நாவல் என்ற பிரிவிலேயோ இருக்கின்ற மொத்த தூரத்தையும் நான் கடந்து விட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால் என்னால் முடிந்த தூரத்தை நான் கடந்திருக்கிறேன்.

தீராநதி : உங்களுடைய சிறுகதையிலோ கட்டுரையிலோ அல்லது நாவல்களிலோ பழந்தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக கையாளப்பட்டிருக்கின்றன. அப்படிப் பயன்படுத்தும் போது அது துருத்திக் கொண்டு நிற்காமல் தன்னியல்பாக அவற்றை எடுத்துப் பிரயோகிக்கிறீர்கள். திருமந்தரம், சைவத் திருமுறைகள், திருக்குறள், சங்கப்பாடல்கள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என்று உங்களின் பழந்தமிழ் பற்று ஒரு கல்வியாகவே உங்கள் படைப்பிலக்கியத்தில் போதிக்க, வாசிப்பிற்கான சுவைக் கூட்ட வந்து வந்து விழுகிறது. வெள்ளாள பிள்ளைமார்கள் மரபில் பாரம்பரிய தொடர்ச்சியாகவே ஒரு பழந்தமிழ் பாண்டித்யம் சர்வசாதாரணமாகவே புழங்கும். அந்த அறிமுக அளவீட்டிற்கான அறிவு கூட உங்களின் படைப்புகளுக்கு உதவி இருக்கலாம். ஆனால் நீங்கள் முதலில் கதை சொல்லத் தொடங்கி பிற்பகுதியில் ஒரு சங்கப் புலவனைப்போல உரைநடையில் கதைபாட ஆரம்பித்திருக்கிறீர்கள். நவீன செவ்வியல் மரபைச் சேர்ந்த ஒரு படைப்பாளியாகவே உங்களை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். உங்களுக்குக் கிடைத்த பழந்தமிழ் இலக்கிய பரிட்சயம் விருப்பத்தின் பால் அமைந்ததா? அல்லது கல்விப் புலம் சார்ந்ததா? ஏனென்றால் நீங்களரு கணிதவியல் வகுப்பைச் சார்ந்த மாணவனென்பதால் கேட்கிறேன்?

நாஞ்சில் நாடன் : பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி என்பது என்னுடைய குடும்பத்தின் மூலமாக எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய குடும்பம் ரொம்ப சாதாரணமான அன்றாடங் காய்ச்சும் விவசாயக் குடும்பம். வெள்ளாளர் மரபில் குறிப்பிட்ட சில குடும்பங்கள் மட்டுமே தேவாரம், திருவாசகம், மற்ற சமய திருமுறைகள் பற்றிய அறிமுகத்துடனிருக்கும். இது எல்லா குடும்பத்திற்குள்ளும் இருக்குமென்று சொல்ல முடியாது. நூறு குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குடும்பத்திற்குத்தான் அந்த வாய்ப்பு அதிகம். என் குடும்பம் அதற்கு தொடர்பில்லாத விவசாய குடும்பம்.
நானெப்படி பழந்தமிழ் இலக்கியத்திற்குள் வந்தேனென்றால், ஆரம்ப பள்ளியைத் தாண்டி உயர்நிலை பள்ளிக்கு வருகின்ற போதே பள்ளியில் நடக்கின்ற பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டிகளிலெல்லாம் நான் கலந்து கொள்வேன். அப்படி கலந்து கொள்கிறபோது எங்கள் ஊரில் படித்தவர்களிடம், விஷயம் தெரிந்தவர்களிடம் ‘நான் இந்தத் தலைப்பில் பேசப் போறேன் அல்லது எழுதப் போறேன். எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்று கேட்டு எழுதி வாங்கிக் கொள்வேன். ஒரு மூன்று அல்லது நான்கு பக்கங்கள் எழுதிக் கொடுப்பார்கள். நான் மனப்பாடம் செய்வேன். அவர்கள் எழுதிக் கொடுக்கும் போது அந்தக் கட்டுரையை அல்லது பேச்சை செறிவாக்குவதற்காக அங்கங்கே பழந்தமிழ் பாடல் வரிகளை செருகுவார்கள். பொங்கலின் சுவையைக் கூட்ட முந்தரி பருப்புகளை சேர்ந்து நாம் சுவையேற்றுவதைப் போல பழந்தமிழ் பாடல்களை சேர்த்து எழுதி தருவார்கள். அச்சுவைக்கு பழக்கப்பட்ட நான் பிறகு எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் போது தனியாகவே அந்த ‘முந்திரிப் பருப்புகளை’ தேடத் தொடங்கினேன். பள்ளி படிப்பு முடிந்த பிற்பாடு நானே என்னுடைய பேச்சுகளுக்கு, கட்டுரைகளுக்கான புத்தகங்களைத் தேடி எழுதுவதற்கான பயிற்சி எனக்கு வந்து விட்டது. திருக்குறள், கவிமணி, நாமக்கல் கவிஞர், பாரதியார் பாரதிதாசன் பிறகு பாடப்புத்தகத்தில் இருக்கின்ற செய்யுள்கள் என்று ஊன்றிப் படிக்க ஆரம்பித்தேன். பாடத் திட்டத்தில் மனப்பாட பாடல்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தப் பாடல்கள் எனக்கு மனப்பாடமானதாகி விடும். செய்யுள்களில் அப்படி ஒரு ருசி எனக்குத் தெரிய ஆரம்பித்தது.

நான் எட்டாம் வகுப்பு படிக்கின்ற போது சீவகசிந்தாமணியிலிருக்கின்ற பாடல்கள் என்னுடைய பாடபுத்தகத்தில் இருந்தது. வசந்த சேனை பந்தாடுகின்ற இரண்டு பாடல்கள். ரொம்ப சுவாரஸ்யமான சந்தமுள்ள பாடல். ரொம்ப சுவையாக இருக்கும். எனக்கென்ன அப்போது தோன்றியதென்றால் அந்த சீவகசிந்தாமணி முழுக்க இப்படித்தான் பாடல்கள் இருக்கும் போல என்று. எங்கள் ஊர் நூலகத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டுப் போனேன். தெருவில் அதை எடுத்துக் கொண்டு போகும் போது ஊர் மக்கள் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். ‘‘எதுக்குடா இத்த தண்டி புத்தகத்தை தூக்கிட்டுப் போற தலையில வெச்சு தூங்கறதுக்கா?’’ என்று கேலி பேசினார்கள். நான் ஒரு கௌரவத்திற்காக புத்தகத்தை மூன்று நாட்கள் வீட்டில் வைத்திருந்து விட்டு திரும்ப கொண்டு வந்து கொடுத்துவிட்டேன். என்னால் அதை படிக்க முடியவில்லை. எப்படி ஒரு எட்டாம் வகுப்பு மாணவனால் அதை படிக்க முடியும்? ஆக, இப்படி எந்தப் புத்தகம் கையில் கிடைத்தாலும் நான் படிக்க ஆரம்பித்தேன். செய்யுள், உரைநடை, கதை, கவிதை என்று பலவிதமாக படிக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் பத்தாம் வகுப்பிலேயே பாடத்திட்டத்தில்‘குகப்படலம்’ இருந்தது. சிலப்பதிகாரத்தினுடைய ‘வழக்குரைகாதை’ இருந்தது. வாசிப்பில் தேர்ச்சி வருகின்றபோது அந்த மொழி உங்களை வசீகரிக்கின்றது. 1964_ல் நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது எனக்கு தமிழ் சொல்லி தந்த ஆசிரியர்கள் எல்லாம் ஈடுபாட்டோடு சொல்லித் தந்தார்கள்.

கூலிக்கு மாரடிக்கவில்லை அன்றைக்கு இருந்த தமிழாசிரியர்கள் உரைநடையை வாசிப்பதைப் போல செய்யுளை வாசிக்க மாட்டார்கள். அசை பிரித்து சொற்கள் தெளிவாக, அர்த்தம் தெளிவாக புரிகின்ற விதத்தில் பாட்டை சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி இரு முறை, மூன்று முறை அவர்கள் பாட்டை சொல்லும் போது அந்தப் பாட்டெனக்கு மனப்பாடமாகி விடும். இன்றைக்குள்ள சமகால கல்வி மாணவர்கள் அந்தக் கல்வி முறையை இழந்து விட்டார்கள். இன்றைய தமிழாசிரியர் பலரும் தமிழ் சொல்லித் தரும் முறை அறியாதவர்கள்.

இன்னொன்றையும் இங்கு நான் சொல்ல வேண்டும். ஆரம்பக்காலத்தில் எனக்கு கொஞ்சம் அரசியல் ஈடுபாடு இருந்தது. ஏ.கே. கோபாலன் காலத்தில் அதாவது 1962_ம் ஆண்டு வாக்கில் இந்தோ_சீனா யுத்தம் வந்ததில்லையா அப்போது ஒரு பொதுவுடமைவாதி எங்க ஊரில் வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிரியாத காலம் அது. அவர் ஒரு மலையாளி. அவருடைய மனைவிக்கு எங்கள் ஊர்தான் சொந்த ஊர். மலையாள நாளிதழ்களைதான் அவர் படிப்பார். அவர் எங்களுடன் கோட்பாடுகள் சம்மந்தமாக உரையாடுவார். அவர் மூலமாக பொதுவுடமை கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதே போல எங்கள் வீட்டிற்கு ‘திராவிட நாடு’ பத்திரிகை வரும். என் சித்தப்பா அப்பத்திரிகையை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தோன்றிய முதல் இரண்டு தி.மு.க. கிளைகளில் எங்கள் ஊரும் ஒன்று. முத்தாரம், முரசொலி, தென்றல் இப்படி தி.மு.க. சார்புடைய பத்திரிகைகள் தொடர்ந்து ஊருக்கு வந்துக் கொண்டிருந்தன.

அப்புறம் அரசியல் சொற்பொழிவுக் கூட்டங்கள் கேட்க ஆரம்பித்தேன். அநேகமாக அன்றைய காலத்திய எல்லாத் தலைவர்களின் சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். ஈ.வெ.ரா. பெரியார், ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சி.பி. சிற்றரசு பி.ராமமூர்த்தி, எஸ்.ஏ. முருகானந்தம், கே.டி.கே. தங்கமணி, ம.பொ.சி. இப்படி எல்லா சொற்பொழிவுகளையும் கேட்டிருக்கிறேன். இந்தத் தலைவர்கள் சொற்பொழிவுகளின் நடுவில் சில கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். திருக்குறளை பாரதியை மேற்கோள் காட்டுவார்கள். பாரதிதாசனை கண்டிப்பாக மேற்கோள் காட்டுவார்கள். மு. வரதராசனின் வரிகளை மேற்கோள் காட்டுவார்கள். இப்படி அரசியல் கூட்டங்களுக்கு போவதால் என்னுடைய சிந்தனை வளத்தை பெருக்கிக் கொள்ள வாய்ப்பாக அது அமைந்தது. பின்னால் தான் இலக்கிய மதிப்பீட்டின் படி, அளவீட்டின்படி எது சிறந்தது? எது அதை விட சிறந்தது? எது அதை விட அதை விட சிறந்தது என்று ஒப்பிடுகின்ற தன்மை எனக்கு மிக பிற்பாடுதான் வந்தது. அதனால் நான் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் படித்தேன். இதன் மூலம்தான் எனக்கு சமூகம் சார்ந்த ஒரு பார்வை கிடைத்தது. அரசியல் சார்ந்த பார்வை கிடைத்தது. இலக்கியம் சார்ந்த பார்வை கிடைத்தது.

1964_ல் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து விட்டு பி.எஸ்.சி. படிக்க வருகிறேன். 1967 தேர்தலில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டில் முதல் முறையாக பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி கொள்கிறது. 1962 தேர்தலிலேயே ஒன்பதாவது படிக்கும்போது நான் வாடகைக்காரில் உட்கார்ந்து ‘மைக்’ பிடித்துக் கொண்டு, வாக்காள ‘பெருமக்களே...’ என்று பேசி தி.மு.க.விற்காக ஓட்டு சேகரித்திருக்கிறேன். காலையிலிருந்து மாலைவரைக்கும் கிராமம் கிராமமாக போய் பிரச்சாரம் செய்திருக்கிறேன். பிறகு இந்த அரசியல் கட்சிகள் பற்றிய அபிப்ராயம் தலைகீழாக மாறியது. ஆகவே அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து வாசிப்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

தீராநதி: என்னுடைய கேள்வி பழந்தமிழ் இலக்கியங்களை தனிப்பாடமாக கற்றீர்களா?

நாஞ்சில் நாடன்: தனியாகப் பாடமாக எடுத்து நான் படிக்கவில்லை. பழந்தமிழ் இலக்கிய அறிமுகம் என்பது நானே தேடிக் கொண்டது. அதற்கு என்னுடைய ஆசிரியர்களும் உதவி இருக்கிறார்கள். நான் பி.எஸ்.ஸி. படிக்கும் போது, வகுப்பு இல்லாதபோது நூலகத்தின் மாடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பேன். அப்போது கீழே எம்.ஏ. பாடம் நடந்து கொண்டிருக்கும். நான் மேல் இருந்தே அந்தப் பாடத்தை கவனிப்பேன். ஒரு நாள் ஆசிரியர் ‘என்ன பார்க்குற?’ என்றார். ‘பாடம் கவனிக்கிறேன்’ என்றேன். ‘பாடம் கவனிப்பதாக இருந்தால் பின் பெஞ்ச்சில் வந்து உட்கார்ந்து கவனி’ என்றார். உடனே போய் உட்கார்ந்துவிட்டேன். தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் எம்.ஏ. மட்டும் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு எந்தக் கல்லூரியிலேயும் ‘றிநி கோர்ஸ்’ கிடையாது.

டாக்டர் எஸ்.எஸ்.சுப்ரமணியன், டாக்டர். இ.வி.மணி, டாக்டர் அரசு ஆறுமுகம், புலவர் கே.சி.தானு தெ.ந. மகாலிங்கம் என்று எங்கள் கல்லூரியில் தமிழில் திறமை வாய்ந்த நிறைய ஆசிரியர்கள் இருந்தார்கள். பின்னால் நான் பம்பாய்க்கு போய் வாசிப்பை தொடர்ந்த காலத்தில் காரைக்குடி அழகப்பா இன்ஜினியரிங் கல்லூரியில் மேனேஜராக இருந்த ரா. பத்மநாபன் என்பவர் பம்பாய் தமிழ்ச்சங்கத்தில் கம்பன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். இவர் தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கத்தின் மாணவர். அதில் பதினேழு மாணவர்கள் சேர்ந்தோம். வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்பு. தொழிற்சாலையில் வேலை முடிந்தவுடன் நான் ஒழுங்காக வகுப்பிற்கு போய்விடுவேன்.

உரையே இல்லாமல் மர்ரே ராஜம் அய்யர் போட்டிருந்த கம்பராமாயணம் புத்தகத்தை எங்கள் கையில் கொடுத்து விட்டு, வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரையை கையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்துவார். இந்த பதினேழு மாணவர்கள் என்பது நாட்பட நாட்பட பதினொன்றாகி, ஒன்பதாகி, ஏழாகி, மூன்றாகி, இரண்டாகி கடைசியில் ஒன்றாக ஆனது. அந்த ஒரே மாணவன் நான்தான். கடைசியில் அவர் என்ன சொன்னார். இந்த ஒரு மாணவனுக்காக ஏன் நான் வகுப்பிற்கு வரவேண்டும். ‘நீ வேண்டுமானால் என் வீட்டிற்கு வா’ என்றார். நான் போனேன். முகம், கை கால் அலம்பிவிட்டு வீட்டிற்கு சென்றால் அந்த அம்மா, ஆசிரியர் மனைவி, (எனக்கு மாமி தெரியாது. அம்மா தான் தெரியும்) எனக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுப்பார்.

என்ன வாழ்நாளில் ஙிமீst சிஷீயீயீமீமீயை அங்குதான் முதன் முதலில் குடித்தேன். என்னுடைய ஆசிரியர் தீவிர பக்தர். சைவ நெறி, கம்பன் மீது பெரிய ஈடுபாடு. அவர் ராமர் பட்டாபிஷேக படத்திற்கு முன்னால் உட்கார்ந்து தான் பாடம் நடத்துவார். நான் அந்த வயதில் தீவிர நாஸ்திகன். ஆனால் எங்களுக்குள் ஒரு பரஸ்பரம் மரியாதை இருந்தது. அப்படி மூன்று வருடம் பாடம் கேட்டேன். அவருடைய சிறப்பென்னவென்றால் வெறும் கம்பனோடு மட்டும் பாடத்தை நிறுத்திக் கொள்ள மாட்டார். மார்கழி மாதம் என்றால் திருப்பாவை திருவெம்பாவை படிப்போம் என்று அதை சொல்லிக் கொடுப்பார். இப்படி தினமும் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை பாடலை சொல்லிக் கொடுப்பார். கிட்டதட்ட திருப்பாவை திருவெம்பாவை முழுக்க எனக்கு மனப்பாடம். அதேபோல தேவாரம், திருவாசகம் சொல்லிக் கொடுப்பார்.

கம்பனில் 13 ஆயிரத்துச் சொச்சம் பாடல்களில் ரசிகமணி டி.கே. சிதம்பர நாத முதலியார் இடைச் செருகல் என்று தள்ளிய பாடல்கள் உட்பட சேர்த்து அவரிடம் பாடம் கேட்டிருக்கிறேன். பாடம் எடுக்க உடல் நலம் இல்லை என்றால் அபிராமி அந்தாதி கோளாறு பதிகம், ஜெயதேவர் அஷ்டபதி பாடல் காசட்டுகளை போட்டு கேட்கச் சொல்லுவார். அவருக்கு திருக்குறளில் நல்ல புலமை இருந்தது. சமய இலக்கியம் மீது எனக்கு ஓரளவுக்கு பரிச்சயம் கிடைத்ததற்கு முக்கிய காரணம் ரா. பத்மநாபன்தான். அவர்தான் ‘நாராயணீய’த்தை தமிழ் செய்தார் பின்பு.


தீராநதி : அந்தக் காலத்தில் தி.மு.க. சார்புள்ளவனாக அரசியலில் தீவிரமாக இயங்கி இருக்கிறேன் என்று நீங்கள் சொன்னீர்கள். மிகப் பெரிய பொருளாதார மேதையான டாக்டர் ப. நடராஜன் அவர்களை எதிர்த்து தி.மு.க. சார்பில் பிரச்சாரம் செய்தீர்கள். அன்றைக்கு விடலைத் தனமாக அரசியல் களத்தில் நீங்கள் எதிர்த்தவர் மிகப் பெரிய ஆளுமையானவர். இன்றைக்கு அதை யோசிக்கும் போது நெருடலாக உணருகிறீர்களா? தவறு இழைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி மேலெழுகிறதா?

நாஞ்சில் நாடன்: அதாவது 1962_வருட தேர்தல் என்று நினைக்கிறேன். டாக்டர் பா. நடராஜன் என்பவர் எகிப்திய அரசுக்கு பொருளாதார ஆலோசகராக இருந்தார். திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் அவர். உண்மையிலேயே மேதைதான் அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு மாணவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் சிறுவர்கள் தேர்தல் பிரச்சார வண்டிகளின் பின்னால் ஓடுவது, சுவரொட்டிகளை ஒட்டுவது என்று இருந்தபோது, நான் பிரச்சார வண்டியில் மைக் பிடித்திருந்தேன். அந்தத் தேர்தலில் நடராஜன்தான் ஜெயித்தார்.

ஜெயித்த பிற்பாடு அவருக்கு எங்கள் ஊரிலேயே ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். ஊரைச் சார்ந்தவன் என்ற முறையில் நான் வரவேற்பு உரை ஆற்றினேன். ரொம்ப சின்ன பையன்தான் நான். அன்று பேச எனக்கு சிலர் எழுதியும் தந்தார்கள். கொஞ்சம் நானாவும் பேசினேன். நான் பேசியதை பார்த்துவிட்டு ‘பையன் நன்றாகப் பேசுகிறான்! ஆனால் கொஞ்சம் வழி தப்பி நிற்பதை போல தெரிகிறது?’ என்று ஒரு கருத்தைச் சொன்னார். அதை இப்போது யோசித்து பார்க்கும் போது ரொம்ப அவமானமாகத்தான் கருதுகிறேன். எவ்வளவு பெரிய மேதை? திருமந்திரத்தை தமிழில் படித்து புரிந்து கொள்வதே எவ்வளவு சிரமமான காரியம். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு அரசாங்கத்திற்கு பொருளாதார ஆலோசகராக இருந்தவர். தமிழ் நாட்டிற்கு ‘பிலானிங் திட்டக் கமிஷன் சேர்மேனாக’ வந்தவரை நாம் இப்படி எதிர்த்து செய்திருக்கிறோமே என்று பின்னால் யோசித்து பார்க்கின்றபோது வருத்தமாகத்தான் இருக்கிறது.

தீராநதி : ஒரு காலத்தில் தி.மு.க. கலாச்சாரம் கொண்டு வந்த மேடை நாகரீகம் என்பதற்கு மக்களிடம் ஒரு ஈர்ப்பும், அவசியமும் இருந்தது. அதில் நீங்கள் குறிப்பிட்ட ஈ.வெ.கி. சம்பத் என்பவர் ஒரு முக்கியமான பேச்சாளர். அவரை மறுத்து வரும் பேச்சுகளை கூட நாகரிகமாக மறுப்பவர் அவர் பொய் சொல்கிறார் என்று சொல்லமாட்டார். ‘உண்மைக்கு மாறாக பேசுகிறார்’ என்றுதான் குறிப்பிடுவார். தன் பேசில் கூட ‘பொய்’ என்ற வார்த்தை கலக்க கூடாது என வாழ்ந்தவர். அப்படியான தி.மு.க.வின் மேடை மரபு பிற்காலத்தில் நழுவி கொச்சையாகிவிட்டதே?

நாஞ்சில் நாடன் : அதாவது 1967 காலகட்டத்தில் மேடைத் தமிழ், எழுத்துத் தமிழ் என்று தமிழை ஓரளவிற்கு சமூக பயன்பாட்டிற்கு முன்னெடுத்து சென்றதில் திராவிட இயக்கத்தினுடைய சேவையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அன்றைக்கு சினிமா தியேட்டருக்கு போகின்ற ஒரு கல்லூரி மாணவனின் கையில் கூட ஒரு புத்தகம் இருக்கும். புத்தகம் கையில் எடுத்துச் செல்வதை ஒரு பெருமையாக கருத செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள். மேடைகளில் அவர்கள் தான் புத்தகத்தை பரிசளிக்கச் சொன்னார்கள். புத்தகத்தின் பக்கங்களை மேற்கோளிட்டார்கள்.

நெடுஞ்செழியன் போன்றவர்கள் இலக்கியம் பேசுகின்ற போது ஒன்றரை மணிநேரம் ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்து கேட்க முடியும். அந்த ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் நடமாடும் பல்கலைக்கழகங்களாக இல்லாவிட்டாலும் படிப்பாளிகளாக இருந்தார்கள். மேடைக் தமிழை மட்டுமல்ல எழுத்து தமிழையும் அவர்கள் தம்பங்குக்கு முன்னெடுத்துச் சென்றார்கள். ஆனால் என்ன நடந்த தென்றால் அவர்கள் அதை தாண்டி வளரவில்லை. பிறகு இது அலங்காரமாக மாறியது. ‘ஷீஸ்மீக்ஷீளீவீறீறீ’ என்று சொல்லுவோமில்லையா அப்படி மொழியை பயன்படுத்திப் பயன்படுத்தி நொந்து போகச் செய்து விட்டார்கள். அருவருக்க தக்க ஒரு மொழி நடையாக பிற்காலத்தில் அது மாறியது. தமிழ் சினிமாக்களிலேயே திராவிட கலாச்சாரத்தின் மேடை மொழி நடையை கொச்சைப்படுத்துகிற மாதிரியான காட்சிகள் இன்றைக்கு வருகின்றன.

அதன் மூலம் அந்த நடையை கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அன்றைக்கு திராவிட இயக்கத்தினர் குறைந்த பட்சம் பாரதிதாசனையாவது அறிமுகம் செய்தார்கள். மு.வ.வை அறிமுகப்படுத்தினார்கள். திருக்குறளைச் சொன்னார்கள். புறநானூற்றிலிருந்து பாடல்கள் சொன்னார்கள். அகநாநூற்றிலிருந்து பாடல்கள் சொன்னார்கள். குறுந்தொகையிலிருந்து சொன்னார்கள். இப்படி குறைந்த பட்ச தமிழறிவையாவது மேடைகளில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த மரபு நின்று போய்விட்டது. இன்றைக்கு எந்தத் தலைவனுக்கும் ‘இரண்டு வரி’ சொல்ல முடியும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியவில்லை.

தீராநதி : தொடர்ந்து உங்களின் படைப்புகளில் உணவு வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். அதுவும் போகிறப் போக்கில் சொல்லாமல் உணவு முறைகளில் புதைந்திருக்கும் செய்முறை, செய்நேர்த்தி, பண்பாட்டுக் கூறுகள், அது சமூகத்திற்குள் எவ்வாறு கையாளப்படுகிறது என்ற கலாச்சார தகவல்களையெல்லாம் பிரக்ஞை பூர்வமாக பதியவைத்திருக்கிறீர்கள். அண்மையில் நீங்கள் எழுதி இருக்கும் ‘யாம் உண்டோம்’ சிறுகதை வரை இது தொடர்ந்து வந்திருக்கிறது. சுந்தரராமசாமி வீட்டில் எதேட்சையாக ஒரு சந்திப்பில் ஜெயமோகனை பார்த்த போது ‘‘நீங்க குலசேகரம் பக்கம் தானே? அந்தப் பக்கமெல்லாம் அவியலிலே மாங்கா போடும் வழக்கம் கிடையாதே’’ என்று பேச்சை சாப்பாட்டின் பொருட்டே தொடங்குகிறீர்கள். ‘அன்னம்’ எதன் பொருட்டு உங்களின் படைப்புகளில் ‘வேள்வி’ பெறுகிறது?

நாஞ்சில் நாடன்: இது ஒரு நினைவிலின்று மனநிலையிலிருந்துதான் உருவாகிறதெ நினைக்கிறேன். அல்லது ஆழ்மனநிலை என்று கூட வைத்துக் கொள்ளலாம். எது பொருத்தமானதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்வது உங்களின் சௌகர்யம். இதற்கு காரணம் என்னை என்று யோசிக்கும் போது நான் இளம் பருவத்தில் தாங்கொணா வறுமையை அனுபவத்திருக்கிறேன். இதையெல்லாம் ஃபேஷனுக்காக இன்று சொல்லிக் காட்ட விரும்பவில்லை. அறுவடை காலத்தில் மூன்று வேளைக்கும் சோறு இருக்கும். மாதத்தில் ஓரிரு நாட்கள் தோசைக்கு போடுவார்கள். எங்கள் ஊரில் நெல்லைத் தவிர வேறு பயிர் கிடையாது. கம்மங்கூழ் எங்களுக்குத் தெரியாது. சோளம் தெரியாது. கேழ்வரகு தெரியாது. நாங்கள் அரிசியை நம்பி வாழ்கிறவர்கள். அறுவடையான நாலுமாதத்தில் நெல் காலியாகி விடும். கடனுக்கு நெல் வாங்க வேண்டும்.

இந்த வறுமை என்னை தொடர்ந்து கல்லூரி படிப்பு முடிக்கின்ற வரை தாக்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறது. ஆகவே சோற்றினுடைய அருமை என்பது எனக்குத் தெரியும். ஒருவரின் வீட்டுவாசலில் போய் நின்று குடிக்க சுடு கஞ்சி கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகின்ற ஒரு எளிய மாணவனின் மனநிலை என்ன என்பது எனக்குத் தெரியும். நல்ல சாப்பாடு என்பதே கல்யாண வீட்டில்தான் கிடைக்கும். 21 கூட்டான் என்று எங்கள் ஊர்பக்கம் சொல்வார்கள். அத்தனை வகை வகையான சாப்பாடுகள் பரிமாறப்படும். கிடைக்குமோ கிடைக்காதோ என்பதற்காக முதல் பந்தியில் சாப்பிட உட்கார்ந்து பாதியிலேயே நான் எழுப்பிவிட பட்டிருக்கிறேன். பல சமயங்களில் இப்படி நடந்திருக்கிறது. ஆக, தொடர்ந்து வறுமை என்பது என்னை தாக்கிக் கொண்டிருக்கிறது. இதுவெல்லாம் சேர்ந்து உணவு மீது ஒரு அபரிமிதமான காதலை, வெறியை, ஒரு விருப்பத்தை _ எந்தச் சொல்வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்_ எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது நான் சம்பாதிக்கிறேன். ஓரளவுக்கு சோத்துக்கவலை இன்றிதான் இருக்கிறேன். நினைப்பதை இன்று என்னால் வாங்கிச் சாப்பிட முடியும். ஆனாலும் உணவை என்னால் வீண் செய்ய முடியாது.

அதேபோல பம்பாய் மாதிரியான வெளி மாநிலத்திற்கு சென்ற பிற்பாடு நம் கலாச்சாரம் சார்ந்த உணவுகளின் நெருக்கடி ஏற்படுகிறது. சாதாரணமாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் கொத்தவரங்காயை விரும்பிச் சாப்பிடமாட்டார்கள். ஆனால் பம்பாய் சென்றால் சாப்பிட்டுதான் ஆக வேண்டும். இங்கு கத்திரிக்காய் சாப்பிடாதவர்கள் கூட பம்பாய்க்கு சென்றால் சாப்பிட்டே தீரவேண்டும். ஆக, இப்படியான நெருக்கடி எந்த வகையான உணவின் மீதும் ஒரு காதலை ஏற்படுத்துகிறது. எந்த வீட்டிற்குச் சென்றாலும் சாப்பிடுகின்ற சாப்பாடு நன்றாக இருந்தால் இன்னும் கொஞ்சம் போடுங்கள் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடக் கூடியவன் நான். என்றைக்குமே சாப்பாட்டின் முன்னால் நான் கூச்சப்படமாட்டேன். நான் விரும்பி உண்கின்றவன்.

கொஞ்சம் கொச்சையாக சொன்னால் நானொரு நல்ல சாப்பாட்டு ராமன். சாப்பாட்டு ராமன் என்ற அந்த நிலையிலேயே நின்று விடாமல் மேற்கொண்டு அதை பற்றி கேள்விகளை எழுப்பிக் கொண்டு தொடர்ந்து போய் கொண்டிருக்கிறேன். ஒரு பெங்காலி வீட்டில் எப்படி ‘தால்’ தயாரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். வங்காளத்தில் தோலுடன் கூடிய உளுந்தை வேக வைத்து அதில் ‘தால்’ செய்து பொரித்த அயிலை மீனை போட்டுக் கொடுப்பார்கள். இதற்கெல்லாம் ஒரு ரசனையை நீங்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் அதை அனுபவிக்க முடியாது. வேண்டாம் என்று நீங்கள் அதை தவிர்த்தால் அந்த அனுபவத்தினை நீங்கள் தவற விடுகிறீர்கள். நான் அந்த அனுபவத்திற்கு என்னை தயார்படுத்திக் கொள்கிறேன். அதைத்தான் என் எழுத்தில் பதிவு செய்கிறேன். வெறுமனே சாப்பிட்டேன் என்று சொல்லாமல் அந்த அனுபவத்தை வாசகனுக்கு ஏற்படுத்துகின்ற விதத்தில் சொல்லவேண்டும். அப்படித்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

அப்புறம் பயிர் வகைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். காய்கறிகளை பசுமையாக பார்ப்பது எனக்கு பிடிக்கும். காய்கறிகளை வாங்குகிறேனோ இல்லையோ உழவர் சந்தைக்கு போய் காய்கறிகளை தினமும் பார்த்துவிட்டுத் திரும்புவேன். மலர்களை பார்ப்பதை போல கத்தரிக்காய் குவியலாக இருப்பதையும், வெண்டைக் காய் குவியலாக இருப்பதையும் பார்ப்பதென்பது எனக்கு ஒரு கிளர்ச்சி ஊட்டக் கூடிய விஷயமாக இருக்கிறது. நீங்கள் ரோஜாவையும், முல்லையையும், மல்லிகையையும் பார்த்து தான் கிளர்ச்சி அடைய வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்கு ஒரு வாசனை உண்டென்றால் இதற்கும் ஒரு வாசனை இருக்கிறது. பறித்த உடன் வெண்டைக் காயை முகர்ந்து பார்த்தால் அதற்கு ஒரு வாசனை இருக்கும். பறித்தவுடன் பால் வடிகின்ற புடலங்காய்க்கு ஒரு வாசனை இருக்கிறது. கத்தரிக்காய்களிலேயே எத்தனை ரகம் நம்மிடம் இருந்திருக்கிறது தெரியுமா?

மண்ணை நேசிக்கின்றவனுக்கு, மண்ணினுடைய மக்களை நேசிக்கின்றவனுக்குத்தான் இப்படியான பார்வைகள் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.


தீராநதி : நீங்கள் குறிப்பிடுவதைப் போல ஒவ்வொரு காய்கறியிலேயும் பல்வேறு வகைகள் இருந்திருக்கின்றன. இன்றைக்கு ஒரு கை விரலில் அடக்கி விடுகின்ற எண்ணிக்கைகளுக்கு சுருங்கி போய்விட்டன. சிலி நாட்டிலிருந்து பச்சை மிளகாய் வந்த பிற்பாடுதான் ‘அல்சர்’ என்ற புதுவகை நோய் நம் சந்ததிகளுக்கு அறிமுகமாகிறது. பச்சைமிளகாய்க்கு முன்னால் ‘மிளகு’க்கு பழக்கப்பட்டவர்கள் நாம். இப்படி பல்வேறு வகைகளிலிருந்து சுருங்கி ஒன்றை நோக்கி மட்டுமே விதைப்பு, உற்பத்தி, விற்பனை என்பதை நினைத்தால் உங்கள் மனசு கொதிக்கவில்லையா?

நாஞ்சில் நாடன் : இதை பெரிய சமூக இழப்பென்று தான் நான் நினைக்கிறேன் என்றாலும் நமது அல்சருக்குக் காரணம் பச்சை மிளகாய் அல்ல. ஒவ்வொரு மண்ணிற்கும் தோதான காய்கறிகள் நம்மூர்களில் விளைகின்றது. ஆம்பூர் அல்லது ஆற்காட்டில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. தஞ்சாவூரில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. நாகர்கோவிலில் விளைகின்ற கத்திரிக்காயின் ருசி வேறு. இப்படி ருசியில் சின்ன வித்தியாசங்கள் இருக்கின்றன. அதன் நிறத்தில் வித்தியாசம் இருக்கிறது. வடிவத்தில் வித்தியாசம் இருக்கிறது. பின்னால் விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் எல்லாம் வருகின்றபோது மகசூல் மாத்திரத்தையே மனசில் வைத்துக் கொண்டு வீர்ய விதை, வீர்ய பயிர், வீர்ய சாகுபடி என்று தரப்படுத்திவிட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 67 வகையான நெல்கள் பயிரிடப்பட்டதாக ஆய்வாளர் அ.கா. பெருமாள் சொல்கிறார்.

எனக்கே இருபது முப்பது நெல்களின் பெயர்கள் தெரியும். கட்டிச் சம்பா என்று ஒரு ரகம். சுத்தமான சம்பா அரிசி. அது கேரளாவில் பயன்பாட்டில் இருக்கின்ற மட்டை அரிசி இல்லை. நம்முடைய மண்ணுக்கே உரிய வகையை சேர்ந்தது. நம்முடைய சீதோஷ்ணத்திற்கு, நம்முடைய காற்றிற்கு, மழைக்கு தாக்குப்பிடிக்கின்ற ஒரு பயிர் இது. இவர்கள் வேறு பயிர்களை அறிமுகம் செய்து கட்டிச் சம்பாவை அழித்து விட்டார்கள். வல்லரக்கன் என்ற ஒரு நெல் வகை. அரிசி மாவில் செய்கின்ற பலகாரங்களுக்கு பெண்கள் விரும்பி பயன்படுத்தும் அரிசி வகை. தொன்ணூ று நாட்களில் அறுவடை செய்கின்ற ‘அறுவங் கொறுவா’ என்று ஒரு பயிர். இவை எல்லாம் இன்று எங்கே?

இப்படி மண் சார்ந்த பல விஷயங்களை நாம் இன்றைக்கு இழந்தாயிற்று. ‘அரிக்கிதராதி’ என்ற நெல் இன்றைக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ‘அறுவங்குறுவா’ கிடைக்குமா தெரியவில்லை. ‘கல்மணல்வாரி’ என்று ஒரு நெல் வகை. ‘தட்டாரை வெள்ளை’ என்ற நெல்லை எங்கள் ஊர் வடமதியில் விதைப்பார்கள். கார், பசானம் என்று சொல்வார்கள். ஒன்று பொடியில் விதைப்பது. மற்றது தொழியில் விதைப்பது. ‘வாசறுமிண்டான்’ என்ற நெல்லை ஊரில் நடுவார்கள். அந்த அரிசியை சோறு பொங்கி இலையில் போட்டால் பிச்சு வெள்ளைப் பூ மாதிரி வெள்ளை வெளேர் என்று இருக்கும். அதே போல ‘காணம்’ என்ற பயிறு வகை இருந்தது. கொள்ளு என்று இதை சொல்வார்கள். இதை மலையாளத்தில் ‘முதிரை’ என்பார்கள். சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சுத்தமான தமிழ்ச்சொல்லிது. இதில் கருப்பு, வெள்ளை என்ற நிறத்தில் தனித்தனியாகவும் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்த நிறத்திலும் இருக்கும். இப்போது வீரிய விதை உற்பத்தி மூலம் தவிட்டு நிறத்திலானது மட்டுமே கிடைக்கிறது. சுவையும் கெட்டுப் போயிற்று.

அதேபோல் தட்டை பயிறு. இதை நாங்கள் பெரும் பயிறு என்போம். இது சிகப்பு, கருப்பு, வெள்ளை என்று மூன்று நிறங்களில் கிடைத்தது. இன்றைக்கு தவிட்டு நிறம் மட்டும்தான். அப்புறம் மொச்சை, கருத்த மொச்சை தென்மாவட்டங்களில் கிடைக்கிறது. கருத்த எள்ளிற்கும் வெள்ளை எள்ளிற்கும் குணங்களில் வேறு பாடு உண்டு. பாகற்காயில் மிதிபாகற்காய் என்று ஒன்று உண்டு. தரையில் படரும். சின்ன குமிழ் மாதிரிதான் இருக்கும். அதை இன்று காண்பதற்கில்லை. இப்படி பல விஷயங்களை நம்முடைய சந்ததிகள் இழந்து கொண்டிருக்கின்றன. நம்மால் இதற்கு என்ன செய்ய முடியும்? புலம்பத்தான் முடியும். நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகளிடம் கேட்டால் கண்ணீர் விட்டு கதறுகின்ற மாதிரி கதை கதையாகச் சொல்வார்.

தீராநதி : நமது நாடு அடிப்படையில் விவசாய நாடு. விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நமது அரசியல்வாதிகள் அணுஆயுத ஒப்பந்தத்தை தலையில் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். சமீபத்தில் விமிஞிஷி ஐ சேர்ந்த நாகராஜன் என்பவர் விவசாயத் தற்கொலைச் சாவுகள் குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவில் 89362 பேர் தற்கொலை கொண்டிருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். 2002க்கு பிறகு 30 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விபரம் தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஒரு விவசாய படைப்பாளியாக எப்படி சஞ்சலப்படுகிறீர்கள்? எப்படி வெளிப்படுத்துகிறீர்கள்?

நாஞ்சில் நாடன் : என்னுடைய படைப்புகள் மூலமாகத்தான் இந்த ஆதங்கத்தையெல்லாம் நான் வெளிப்படுத்துகிறேன். சமீபத்தில் ‘யாம் உண்பேம்’ சிறுகதையில் ஒரு விவசாயின் சோகத்தைதான் நான் சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயிகளுடன் பீகாரில் இருக்கின்ற ஒரு விவசாயின் நிலைமையை ஒப்பிட்டு பார்த்தால் அவனுடைய நிலைமை அதலபாதாளத்தில் இருக்கிறது. இன்றைக்கும் குடிநீருக்காக மூன்று நான்கு கிலோ மீட்டர் நடக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு சுக்கா ரொட்டி கிடைக்காமல் பட்டினி கிடைக்கின்றவர்கள் அங்கு இருக்கிறார்கள். அவனால் எப்படி தன்னுடைய பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க முடியும்? நான் இருபது வருடத்திற்கு முன்னால் சந்தித்த கை வண்டி இழுக்கின்ற ஒரு உ.பி.த் தொழிலாளியிடம் வறுமை குறித்து பேசியபோது ‘‘சாப்பிடுவதற்கான ரொட்டியின் மாவு அளவுக் குறைவாக இருந்தால் ‘சப்ஜி’ யில் காரத்தை ஏற்றிவிடுவோம்’’ என்றார். காரம் அதிகமாக இருந்தால் குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடித்து விடுமாம். இப்படித்தான் இருக்கின்றது தொழிலாளிகளின் நிலைமை, விவசாயிகளின் நிலைமை.

பத்து வருடத்திற்கு முன்னால் விற்பனையான சோப்பின் விலை இன்றைக்கு எவ்வளவு கூடி இருக்கிறது? அன்றைக்கு அதே விவசாய பொருளின் விலை இன்றைக்கு எத்தனை மடங்கு கூடி இருக்கிறது என்று ஒப்பிட்டு பார்த்தால் சோப்பின் விலை நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. விவசாய பொருளின் விலை ஒன்னரை மடங்கு உயர்ந்திருக்கிறது. ஒரு பருவத்தில் தக்காளியின் விலை கூடுதலாக இருக்கிறது என்று தக்காளி போட்டால் விலை கிலோ எட்டு அணாவிற்கு இறங்கிவிடுகிறது. அதே போல் வெங்காயளம். முப்பத்திரண்டு ரூபாய் உயர்கிறது என்று பார்த்தால் உடனே இரண்டு ரூபாய்க்கு இறங்கி விடுகிறது. வெங்காயம், உருளைக் கிழங்கும் வட மாநிலங்களில் ஆட்சியையே தீர்மானிக்க கூடியதாகக் கூட இருக்கிறது. ஆக, இங்கே விவசாயத்தை புறக்கணிக்கின்ற ஒரு அரசியல் அமைப்பு தான் நம் நாட்டில் இருக்கிறதென்று எனக்குத் தோன்றுகிறது.

தீராநதி : யதார்த்த வகை எழுத்து என்பது இன்றும் பலருக்கு உபப்பளிக்கக்கூடிய எழுத்தாகவே இருக்கிறது. ரியலிஸம் என்ற சொல்லே ஜெர்மானிய மொழிச் சொல்லான ‘ஸிமீணீறீ றிஷீறீவீtவீளீ’ என்ற பதத்திலிருந்து பெறப்பட்டது. ‘ஸிமீணீறீ’ என்பது யதார்த்தம். ‘றிஷீறீவீtவீளீ’ என்பது ஆங்கில சொல் குறிக்கும் அரசியல் என்ற பொருளிலிருந்து பெறப்பட்டது. இச் சொல்லை முதன் முதலாக ‘பிஸ்மார்க்’ என்பவர்தான் உச்சரித்தார். ஐரோப்பிய அதிகாரம் சமநிலையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்தச் சொல்லை உபயோகித்தார். பிரெஞ்சு நாவலாசிரியரான ‘பால்ஸாக்’ ரியலிஸத்தின் தந்தையென்று அறியப்பட்டவர். அவர் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த மிகப் பெரிய மேட்டுக் குடிகளிலிருந்து திருடன், தாசி, என்று விளிம்பு நிலை மனிதர்கள் வரைக்கும் மிகத் துல்லியமாக சித்தரித்தவர். அதே போல க்யுஸ்தாவ் ஃளோபெரின் ‘மாதாம் வொவாரி’ (னீணீபீணீனீமீ ஙிஷீuணீக்ஷீஹ்) ஒரு மகத்தான ரியலிஸ நாவலாகும். தமிழில் ஜெயகாந்தன் இதையட்டி எழுதிய எழுத்தாளராக நம்மால் எடுத்துக் கொள்ள முடியும். அதே போல மலையாளத்தில் தகழி சிவசங்கரப் பிள்ளையைச் சுட்டலாம். இப்படி உயரிய அரசியல் தத்துவார்த்த பார்வையுடன் விழிப்புற்ற இந்த இஸத்தையட்டி தமிழில் எழுதும் பல சமகால எழுத்தாளர்களுக்கு (விதிவிலக்கும் உண்டு) கொஞ்சம் கூட அரசியல் பார்வையே அற்று வெறும் உரையாடலை மட்டுமே எழுதுவது யதார்த்தமான எழுத்தாக இங்க போதிக்கப்படுகிறது. ஒரு சமூகம் ஏன் கல்வி கற்கும் சமூகமாக தொடர்ந்து இருந்து வருகிறது? ஒரு சமூகம் ஏன் தொடர்ந்து வறுமையின் பிடியிலேயே சிக்சிச் சீரழிகிறது? ஒருவன் எப்படி பணக்காரனாக இருக்கிறான்? ஒருவன் ஏன் ஏழையாகவே இருக்கிறான்? பாரதி கூட கஞ்சி ‘குடிப்பதற்கு இதன் காரணம் இதுவென்ற அறியுமிலார்’ என்கிறார். அரசியல் புரிதலோடு கூடிய பார்வையும் எழுத்தில் சேர்ந்து பதியப்பட பட வேண்டாமா?

நாஞ்சில் நாடன் : நீங்கள் குறிப்பிடுவதை போல எல்லாவற்றிற்குள்ளும் அரசியல் என்பது இருக்கிறது. ஒரு முருங்கை மரத்தை பற்றி பேசினாலும் அதற்குள் ஒரு அரசியல் இருக்கிறது. சமகால எழுத்தாளர்களுக்கு ஒரு அரசியல் பார்வை இருக்கிறதா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. அல்லது இருந்தே எழுதுவதற்கு தயக்கம் காட்டுகிறார்களா என்ற கேள்வியும் இருக்கிறது. அரசியல்வாதிகளை, நிர்வாகத்தை எதற்கு பகைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது.

எழுத்தாளனுக்கு தினமும் நல்ல செய்தித்தாள் படிக்கிற பழக்கமாவது இருக்கிறதா என்ற ஐயம் வருகிறது எனக்கு. இதை பொதுமைப்படுத்திச் சொல்லவில்லை. ஈழத்தில் இருக்கின்ற மாதிரி ஒரு பிரச்னை இங்கில்லை. ஒரு ஜீவ மரண போராட்டத்தின் நெருக்கடிக்குள் தமிழ் நாட்டு எழுத்தாளன் இல்லை. இவர்களுக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். சூழ்நிலை மாசுப்பட்டிருக்கிறது என்று. சுற்றுச்சூழல் மோசமாக இருக்கிறது என்று. நதிகள் மாசு பட்டிருக்கிறது என்று. தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று. தகுதியானவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கவில்லை என்று. இந்த அரசியலை நேருக்கு நேர் சந்திப்பதில் சமகால எழுத்தாளனுக்கு ஒரு பயம் இருக்கிறது. போன தலைமுறை எழுத்தாளனுக்கு இருந்த பயத்தை விட சமகால எழுத்தாளனுக்கு இந்தப் பயம் கூடுதலாக இருக்கிறது.

இலக்கியம் என்பது ஒரு பார்வையில் பொழுது போக்கு என்றிருந்தாலும் கூட அதை தாண்டிய ஒரு பயன் நிலை அதற்கு இருக்கிறது. ஆகவே அடிப்படையான சில கேள்விகளை ஒரு கவிதை, ஒரு சிறுகதை, ஒரு கட்டுரை எழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. அகவய பயணியான எழுத்தாளனுக்கு இந்தச் சிக்கல்கள் இல்லை. சட்டம் அவனுக்கு ஒரு அச்சமல்ல. ஆனால் யதார்த்தை எழுத வருகின்றவனுக்கு பிரச்னை இருக்கிறது. ஏனென்றால் யதார்த்தம் மூர்க்கமாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தை நேரடியாக சொல்லியாக வேண்டும். நெத்தியடியாக சொல்ல வேண்டியதாக இருக்கிறது. அப்படி நெத்தியடியாக சொல்வதெல்லாம் யதார்த்தமா என்ற உப கேள்விகளும் பின்னால் வரும். யதார்த்தமும் நமக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்கி இருக்கிறது. இந்தச் சுதந்திரத்தை தமிழ் எழுத்தாளன் பரிபூர்ணமாக பயன்படுத்திக் கொள்கிறானா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய தேவையும் எழுகிறது. நொய்டாவில் 52 உடல்களை தோண்டி எடுத்தார்கள். அவர்களின் கை எலும்பு கிடைக்கிறது. கால் எலும்பு கிடைக்கிறது. tஷீக்ஷீsஷீ கிடைக்கவில்லை என்றால் அதனுடைய காரணங்கள் என்ன? பத்திரிகை செய்திகள் கூறுகின்றன இதில் சிறுநீரகங்கள் கலவாடப்பட்டிருக்கின்றன என்று. அப்போது 52 நபர்களின் சிறுநீரகங்களும் 104 நபர்களுக்கு போய் சேர்ந்திருக்கின்றன.

அப்போது அதை வாங்கியவர்கள் யார்? இதை நடத்தி வைக்கின்ற மருத்துவமனைகள் எவை? அதன் நிர்வாகிகள் யார்? அறுவை செய்த மருத்துவர்கள் யார்? உதவி செய்த செவிலியர்கள் யார்? இவர்களுக்கு எல்லாம் மயக்க மருந்து கொடுத்தவர்கள் யார்? இப்படி விரிந்துக் கொண்டே போக வேண்டும் ஒரு எழுத்தாளனின் சிந்தனை. இது குறித்தெல்லாம் விசாரணை இருக்கிறது. வழக்கு இருக்கிறது. தீர்ப்புகள் வரும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனாலும் இது குறித்து எழுத்தாளனின் எதிர்ப்பு என்ன? உங்களின் வாசகனுக்கு நீங்கள் சொல்லப்போவதென்ன? இந்தப் பொறுப்பு எழுத்தாளனுக்கு இல்லையா? ஆக, இதன் மூலம் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் கோழைகளாக இருக்கிறார்கள் என்று நாம் சொல்ல வேண்டியது இருக்கிறது. சமீபகால என்னுடைய கதாப்பாத்திர படைப்பான ‘கும்பமுனி’ மூலம் சமூகத்தில் இருக்கின்ற சிக்கல்கள் சம்மந்தமான என்னுடைய எதிர்வினைகளை நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய எல்லா கட்டுரைகளிலும் நான் வெளிப்படையாகவேதான் பேசுகிறேன். சாடுகிறேன்.

தீராநதி : ‘குடி’ என்ற பழக்கம் நம் சமகால சூழலில் ஒரு அவச் சொல்லாக மாற்றப்பட்டிருப்பதைக் குறித்து தொடர்ந்து மூன்று கட்டுரைகள் எழுதி இருக்கிறீர்கள். ‘உண்ணற்க கள்ளை’ கட்டுரையே இறுதி கட்டுரை என்று நீங்கள் குறிப்பிட்டாலும் இன்னும் நீளுமென்று நான் நினைக்கிறேன். ‘கள்’ உண்பது என்பது வெப்பம் தகிக்கும் பூமத்திய ரேகை அருகாமையில் வாழ்கின்ற நமது குடிகளுக்கு பண்பாடு சம்மந்தப்பட்டது என்பதை தாண்டி உடல் நலம் சம்மந்தப்பட்டதாகிறது. கள் ஒரு அருமருந்து ‘பனை மரம்’ தான் நமது தமிழகத்தின் தேசியச் சின்னம். ஆனால் இன்று ‘கள்’ அந்நியமாக்கப்பட்டு கூடவே குற்றமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் மதுபான வகைகள் அரசு அங்கிகரிக்கும் ஒன்றாக இன்றைக்கு இருக்கிறது. ‘தரமான’ குடிகாரர்களின் பட்டியலை வெளியிடும்போது ஜெய மோகன் உங்களுக்கு முதலிடம் வழங்கி இருந்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாக நிதானமான குடிகாரனாக நீங்கள் இருப்பது குறித்தும் எழுதியும் இருக்கிறீர்கள். ஆண் பெண் இருபாலரையும் சேர்ந்து ஆறரை கோடிக்கு சற்று அதிகமுள்ள தமிழக மக்கள் தொகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் (பத்திரிகை தகவலின்படி) 60 கோடிக்கு மது விற்பனையாகி இருப்பதாக தெரிய வருகிறது. அரசு இதன் மூலம் தனது வருவாயை அதிக அளவில் குவித்திருக்கிறது. நான் என்ன கேட்க வருகிறேன் என்றால் உங்களைப் போல ‘தரமான’ குடிகாரர்கள் என்பது சொற்ப எண்ணிக்கையை ஒட்டியது. பெரும்பாலான குடித்தனங்களில் ‘குடி’ கலாச்சாரம் என்பது குடும்பத்தைச் சிதைப்பதாக இருக்கிறது. இதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள். மெத்தப் படித்த குடிகாரர்களின் அளவீடுகளை வைத்து விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலுக்கும் சேர்த்து நியாயம் உரைப்பது சரியா?

நாஞ்சில் நாடன் : இதில் இரண்டு அடிப்படையான வேறுபாடுகள் இருக்கிறது. ஒன்று குடிப்பவன். இன்னொன்று குடிகாரன். இதில் நான் முதல் வகையைச் சேர்ந்தவன். இன்னும் சொல்லப் போனால் குடித்தவன். குடிகாரன் என்பனை ‘அடிக்ட்’ என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். குடிப்பவன் என்பவனை குடிக்கின்ற பழக்கமுள்ளவன் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். இதில் குடிக்கின்றவன் மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு? குடிகாரன் என்பவன் எத்தனை சதவீதம் என்று நாம் பிரித்து பார்க்கிறோம். ரோட்டில் விழுந்து கிடப்பவன், பொண்டாட்டியை அடிப்பவன், வாங்குகின்ற சம்பளத்தையெல்லாம் குடித்துவிட்டு வீட்டுக்குப் போகிறவன் என்பவர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டும்தான்.

இவர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு குடிப்பவனை எல்லாம் குடிகாரன் என்று முடிவுக்கு வந்து தீர்பெழுதலாகாது. இந்தச் சிக்கல் எல்லாவிதமான நுகர் கலாச்சாரத்திலும் இருக்கின்ற ஒன்று. குடிப்பழக்கமே இல்லாத ஒருவன் தினமும் எழுபது ரூபாய் எண்பது ரூபாய் செலவு செய்து ஹோட்டலில் பரோட்டாவும் சிக்கனும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு போகவும் செய்கிறான். இவனும் ஒரு வகையில் குடும்பத்திற்கு எதிராக செயல்படுபவன்தான். திரும்பத் திரும்ப என்னுடைய மூன்று கட்டுரைகளிலும் நான் சொல்ல வருகின்ற விஷயம்: இதை அறம் சார்ந்த விஷயமாக பார்க்கவில்லை என்பதும் ஒரு ஒழுக்கம் சார்ந்த விஷயமாக பார்க்கிறேன் என்பதும். இங்கு நீங்கள் குடிப்பதை தோந்தெடுக்கவில்லை என்றால் ரொம்ப நல்லது. குடிப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றாலும் ரொம்ப நல்லதே.

‘குடி’ என்ற ஒன்றை பெரிய அளவில் நாம் நம் சமூகத்திற்குள் அறிமுகப்படுத்தி விட்டோம். இது கடந்த 50 ஆண்டுகளில் நம்முடைய நாட்டில் ஏற்படுத்தப்பட்ட விஷயம். இனி திரும்பி போவது முடியாத காரியம். நீங்கள் விரும்பினாலும் திருப்பிப் போக முடியாது. சினிமா பார்த்து கெட்டு போனவர்கள் எத்தனை பேர் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்? எங்கள் ஊரில் அல்வா வாங்கி தின்னே கெட்டு போனவர்கள் என்று ஒரு பட்டியல் சொல்கிறார்கள்? ஆக, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒருவனுடைய குடிப்பழக்கத்தை வைத்து அவன் நல்லவனா? கெட்டவனா என்ற நற்பத்திரத்தை வழங்காதீர்கள் என்று தான். நம்முடைய சமண நூல்களும் அதற்கு பிற்பாடு வந்த நீதி நூல்களும் சொல்வதில் ஒரு உண்மை உள்ளது. ‘நஞ்சுண்பான் கள் உண்பானே’ என்கிறது குறள். ‘சான்றோரால் எண்ணப்பட வேண்டாதவர்’ என்றும் வள்ளுவர் பேசுகிறார். அதை நான் மறுக்கவில்லை. இதையெல்லாம் குடியை அதீதமாக கையாண்டு கெட்டுப் போய்விடாதே என்பதற்கான எச்சரிக்கைச் சொல்லாகத் தான் நாம் கொள்ள வேண்டும்.

தீராநதி : ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ என்ற கட்டுரை நூலை எழுதி இருக்கிறீர்கள். அது ஒரு இனவரைவியல் ஆவண நூல். அவலா, தோசையா என்ற சொற்பிரயோகத்தை வைத்தே அவர்கள் மருக்கள் தாயவழியை சார்ந்தவரா மக்கள் வழி தாயத்தை சார்ந்தவரா என்பதையெல்லாம் குறிப்பில் உணர்த்தி அம்மக்கள் வாழும் பண்பாட்டினை தெளிவுற பதிவு செய்வதோடு திருமணத்திற்கு முன் மணமகனுக்கு ‘சர்வாங்க சவரம்’ செய்யப்படுவது, சோரம் போன பெண்களை வீட்டு மூலையிலேயே கொன்று புதைப்பது என்ற அதிர்ச்சியுறும் தகவல்களைக் கூட பட்டவர்த்தனமாக பேசுகிறீர்கள். இப்படி நாஞ்சில் நாட்டிற்கென்று தனி கலாச்சாரம் இருப்பதை எழுத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்ற இனவரைவியல் நூல் எழுதி இருக்கிறார். என்னுடைய கேள்வி: ஒரு சமூகத்தை பற்றி எழுதப்படும் இனவரைவியல் நூலென்பது அச்சமூகத்தின் உள் பார்வையாளனாக இருப்பவரால் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலும், அப்படி உள் பார்வையாளனாக இருந்து பதியப்படும் தகவல்களில் உயர்வு நவிற்சி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது ஆகவே வெளி பார்வையாளன் எழுதுவதன் மூலமே இவைரைவியலின் மெய்மையை அடைய முடியும் என்ற விவாதமும் இன்றைக்கு உலக முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அதே வேளையில் வெளிபார்வையாளன் என்பவன் பல பண்பாட்டுத் தகவல்களை பகுத்தறிவு என்ற கண்கொண்டு மட்டுமே அணுகி கலாச்சார அணுகுமுறைகளை கேலிக்குரியதாக மாற்றி தவறாக புரிந்துகொள்ள வழி ஏற்படுத்தி விடுவதும் உண்டு. உள் பார்வையாளனாக நீங்கள் எழுதி அப்புத்தகத்தில் ‘எங்களுக்கே இதெல்லாம் சாத்தியம்’ என்ற உயர்வு நவிற்சி குரல் தென்படவே செய்கிறது. இந்த உள் பார்வை? வெளிப்பார்வை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நாஞ்சில் நாடன் : இந்தத் தன்மைகள் நான் பிறந்து வளர்ந்த இனத்திற்கு மட்டும்தான் இருக்கிறதென்று ஆணித்தரமாக நான் சொல்ல வரவில்லை. இந்த இனத்திற்கு இந்தத் தன்மை இருக்கிறது. இந்த சிக்கல் இருக்கிறது என்றுதான் சொல்ல வருகிறேன். இதன் மூலம் பிற இனங்களுக்கும் இந்த மாதிரி சிக்கல்கள், தன்மைகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும். எதையும் மிகைப்படுத்தி நான் பேசவில்லை. ஒருவேளை புதியதாக நீங்கள் கேள்வி படுவதால் இந்தச் சந்தேகங்கள் வரலாம். மரபுகளில் இருக்கின்ற விஷயங்கள் எப்படி மாறிப்போய் இருக்கிறது. எப்படி திரிந்து போய் இருக்கிறது என்று சொல்வதுதான் என்னுடைய வேலை. மிகைப்படுத்துவதல்ல; இந்தச் சமூகத்தில் நான் பிறந்து வளர்ந்ததினால் உள் பார்வையாளன். ஆனால் நானொரு எழுத்தாளனாக இருப்பதினால் நானொரு வெளிப்பார்வையாளன். இரண்டும் ஒரே ஆள் தான். ஆகையால் அதனுடைய பலமும் எனக்கிருக்கும். பலவீனங்களும் எனக்கிருக்கும். என்னுடைய சமூகத்தில் எனக்கொரு நாற்காலி வேண்டும் என்று எதிர்பார்த்து நான் இந்தக் காரியத்தை செய்யவில்லை.

தீராநதி : ‘ஊதுபத்தி’ என்ற உங்களின் சிறுகதை பெருத்த எதிர்வினையை சந்தித்தது. ‘‘தனது வெள்ளாளச் சாதி வெறியை மீண்டும் நிருபிக்கிறார்’’ என்று குற்றஞ்சுமத்தப்பட்டு அதை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கக் கூடாது என்று துணை வேந்தருக்கும் அமைச்சருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இந்தச் சாதி திமிர் குற்றச்சாட்டை இடித்துரைத்து ‘ஷிலீஷீuறீபீ ஜிலீமீ கிutஷீக்ஷீ ஙிமீ ரிவீறீறீமீபீ’ என்ற கட்டுரையைக் கூட எழுதி இருக்கிறீர்கள். அதில் புதுமைப்பித்தன், சுஜாதா, சுந்தரராமசாமி, ஜெயமோகன் எல்லோருக்கும் இதுதான் நடந்தது என்று வருந்துகிறீர்கள். ஒரு படைப்பு சாதிய பின்புலத்தோடு வாசிக்கப்படுவதென்பது ஒரு சரியான முறையா? ஆரோக்கியமான போக்கா?

நாஞ்சில் நாடன் : இதை ஆரோக்கியமான போக்கில்லை என்பதுதான் என்னுடைய கருத்தும். உண்மையாக நேர்மையாக எழுத வருகின்ற எவனும் முதலில் தன்னுடைய சாதியை கடந்தாக வேண்டும். சாதியை கடந்ததாக வேண்டுமென்று சொல்கிற போது அவன் தனிமனிதனாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவனொரு குடும்ப மனிதனாக இருக்கின்ற போது அவனால் எல்லா சந்தர்ப்பத்திலும் சாதியை கடந்தவனாக தன்னை பீற்றிக் கொள்ள முடியாது. அதில் நெருக்கடிகள் உண்டு. என்னை பொறுத்த அளவில் ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னுடைய எழுத்துக்கள் மூலமாகவோ அல்லது தன்னுடைய செயல்பாடுகள் மூலமாகவோ பிற ஜாதியை இழிவுபடுத்துகிறானா? தன் ஜாதிக்கு மட்டும் வக்காலத்து வாங்கி பேசுகிறானா? தன் ஜாதியே உயர்வானதென்று நினைக்கிறானா? அதன் மூலமாக வன்முறையில் ஈடுபடுகிறானா? அதன் பொருட்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறானா என்று ஒரு கணக்கெடுத்துப் பார்த்தால் தான் அது நேர்மையானக் கணிப்பாக இருக்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ நான் வெள்ளாள சாதியில் பிறந்திருக்கிறேன். வேளாண்மை என்பது விவசாய சம்பந்தப்பட்ட சாதி. இது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான பெயர்களில் வழங்கப்படும். ஆய்வாளர் அ.கா. பெருமாள் தன் ஆய்வின்படி தமிழ்நாட்டில் 66 வகையான வெள்ளாளர்கள் இருக்கிறார்கள் என்கிறார். அதில் ஒரு வகை வெள்ளாளர் குடும்பத்தில் நான் பிறந்திருக்கிறேன். நான் பிறந்த வகுப்பு சிறுபான்மை வகுப்பை சார்ந்த சாதி. எங்கள் சாதியில் ஒரு எம்.எல்.ஏ. வருவது கூட சிரமம்.

ஒரு காலத்தில் நிலவுடைமையாளர்களாக இவர்களில் சிலர் இருந்திருக்கிறார்கள். எல்லா வெள்ளாளர்களும் நிலவுடைமையாளர்கள்அல்ல. 10 சதவீதமானவர்கள் நிலவுடமையாளர்கள் என்றால் 90 சதவீதம் விவசாய கூலிகளாக இருந்திருக்கிறார்கள். ‘சேட்’ களிலும் பிச்சைக்காரர்கள் உண்டு என்பது போல. என் மீது ‘இவன் வெள்ளாளர் சாதிக்கு எதிராக எழுதுபவன்’ என்ற குற்றச்சாட்டும் என் சாதியை சேர்ந்தவர்கள் வைக்கிறார்கள். வெளியில் இருப்பவர்கள் இவன் வெள்ளாளர் சாதிக்கு ஆதரவாக எழுதுகிறான் என்கிறார்கள். ஆனால் ஏதோ இதற்குள் ஒரு அரசியல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு நோக்கத் தோடு என் மீது சுமத்தப்படுகின்ற குற்றச் சாட்டுகளுக்கு நான் பதில் சொல்வதாக இல்லை.


தீராநதி : ‘நேர்காணல்’ என்ற உங்கள் சிறுகதையில் எழுத்தாளர் ‘கும்பமுனி’க்கு சாகித்ய அக்தெமி விருது கிடைக்கிறது. உடன் அவ்விருதை கும்பமுனிய மறுத்து விடுகிறார். அது பரபரப்பில் செய்தியாகி விடுகிறது. ‘எள்ளல்’ தொனிக்கு விதத்தில் கதை நீளுகிறது. ‘நேர்காணல்’ கதை வெளியானது 1998_ம் வருடம். ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் நாகர்கோவிலில் அமைச்சர் முன்னிலையில் உங்களுக்கு விருது வழங்க முன் வந்தபோது நிஜத்தில் நீங்கள் மறுத்தீர்கள். ஆக, உங்களின் உள்மன சித்திரம்தான் கும்பமுனி மூலம் கதையாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ‘இயல் விருதின் மரணம்’ என்று ஜெயமோகன் ‘தமிழினி’யில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இலக்கிய வெளிக்குள் விருதுகளின் இருப்பென்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?


நாஞ்சில் நாடன் : தமிழ்நாட்டில் பதினொன்றோ பனிரெண்டோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லா முதலமைச்சர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்குகின்றனர். எனக்கு தெரிந்து நடிகர் விஜய் என்பவருக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு இரண்டு பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. நாற்பது வருடங்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிற ஓர் எழுத்தாளனுக்கு ஏதாவது ஒரு பல்கலைக் கழகம் ஏதாவது ஒரு டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறதா? ஒரு பல்கலைக் கழக ‘செனட்’டிற்கு அல்லது துணைவேந்தருக்கு நேற்றைய சமூகத்தையும், இன்றைய சமூகத்தையும், நாளைய சமூகத்தையும் பற்றி சிந்திக்கின்ற சமூக அளவில் செயல்படுகின்ற படைப்பிலக்கியவாதிகள் குறித்து ஏதாவது அக்கறை இருக்கிறதா? இப்படி ஒரு படைப்பாளி இருக்கிறான் என்ற நினைப்பாவது அவர்களுக்கு இருக்குமா? இதே சூழல்தான் பரிசு தருகின்ற நிறுவனங்களிலும் இருக்கிறது.

சிறந்த எழுத்தாளர்களுக்கு இந்த மொழியில் எந்த விருதும் கொடுக்கப்படவில்லை. ஆ. மாதவனுக்கு கொடுக்கப்படவில்லை. சுந்தரராமசாமிக்கு கொடுக்கப்படவில்லை. நகுலனுக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு மொழியின் உச்ச நிலையில் செயல்படுகின்றவர்களுக்கு வழங்கப்படாமல் அதே மொழியில் தரம் குறைந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படுகின்றது. விருதுகள் இன்று கொடுக்கப்படுவன அல்ல. வாங்கப்படுவன. அதற்கு சாதிப்பலம், பணபலம், அதிகாரபலம் அதிகமாக வேண்டும்.

தீராநதி : மிதவையில் ‘சண்முகம். சதுரங்க குதிரையில் ‘நாராயணன்’. எட்டுத்திக்கும் மதயானையில் ‘பூலிங்கம்’. தலைகீழ் விகிதங்களில் ‘சிவதாணு’. மாமிசப்படைபில் ‘கந்தையா’. என்பிலதனை வெயில் காயும் ‘சுடலையாண்டி’. அப்புறம் ‘கும்பமுனி’. இப்படி ஆண் மையப்படுத்தப்பட்ட படைப்பாகவே உங்களின் ஒட்டுமொத்த படைப்புலகமும் இருக்கிறதே?


நாஞ்சில் நாடன் : நீங்கள் சொல்ல வருவது எனக்குப் புரிகிறது. ஜெயமோகன் தனது விமர்சனத்தில் இதை முக்கியப்படுத்திச் சொல்கிறார். யோசித்து பார்க்கும் போது அது சரிதான் என்று எனக்கு தோன்றுகிறது. அப்படித்தான் அது அமைந்திருக்கிறது. இதை திட்டமிட்டு செய்தேன் என்று எனக்கு சொல்லமாட்டேன் ஒருவேளை என் குண அமைப்பு அதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

தீராநதி : உங்களுடைய உரைநடை இலக்கியங்களை படித்து விட்டு கவிதையை படித்தால் அதில் கவிதைக்கான அம்சம் குறைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். அது சரியா?

நாஞ்சில் நாடன் : சரிதான் என்று நினைக்கிறேன். நான் கொஞ்சம் கவிதைகள் எழுத முயற்சி செய்தேன். என்னுடைய முதல் காதல் கவிதையின் மீதுதான். ஆனால் எந்தக் காலத்திலும் என்னை நான் கவிஞனாக உணர்ந்ததில்லை. நான் கவிதை எழுத முயற்சித்தாலும் அது கிட்டதட்ட ஒரு செய்யுள் வடிவத்தில்தான் வெளி வருகிறது. ஆகவேதான் தொடர்ந்து கவிதை முயற்சியில் நான் ஈடுபடவில்லை.

தீராநதி : எழுத்தைப் போலவே இசையின் மீதும் காதல் கொண்டவர் நீங்கள். நமது இலக்கிய மரபென்பது இயல் இசை நாடகம் என்று மூன்று வகைபடுத்தப்பட்டிருந்தாலும் ஒன்றிலிருந்து ஒன்றை தனித்து நோக்குவென்பது கடினம். சிலப்பதிகாரம் என்ற காப்பியமே ‘இசைக் குறிப்புகளால் உண்டாக்கப்பட பேரிலக்கிய இசை குறிப்பு’ என்று வீ.க.பா. சுந்தரம் குறிப்பிடுகிறார். படைப்பிலக்கியத்திற்கும் இசைக்குமான உள்ள தொடர்பு தி.ஜானகிராமன் காலம் வரைக்கும் வந்திருக்கிறது. நவீன இலக்கிய காலத்திற்கு பிறகு படைப்பிலக்கியத்திற்கும் இசைக்குமான உறவு அறுந்து விட்டதைப் போல் தெரிகிறதே?

நாஞ்சில் நாடன் : எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. பெரும்பாலானய நவீன இலக்கிய வாதிகள் இசைக்குத் தொடர்பற்றுப் போய் விட்டார்கள் என்றுதான் தெரிகிறது. இதில் திராவிட அரசியலும் குறுக்கிட்டிருக்கிறது. தமிழிசை என்பது கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கப்பட்டாலும் கூட அது தமிழின் இசைதான். ஆனால் ஒரு காலகட்ட அரசியல் நமக்கு இதை பார்ப்பனர்களின் இசை என்று சொல்லித் தந்திருக்கிறது. இதனால் வெகு ஜனத்தை இந்த இசையிலிருந்து விலக்கி நிறுத்தி விட்டோம். தாளம் என்பது மனிதனின் அடிப்படையான ஒரு விஷயம். சுருதி என்பதும் அப்படிதான். இவையெல்லாம் மொழி மீறிய, பிரதேசங்களை மீறிய, ஜாதியை மீறிய ஒரு தன்மை. பிஸ்மில்லாகானின் ஷெனாய் இசைக்கு நீங்கள் என்ன மொழி சொல்ல முடியும்.

திருஞானசம்பந்தரின் தேவாரத்தை எடுத்துக் கொண்டால் எல்லா பாடல்களும் பண் அடிப்படையில்தான் இருக்கிறது. எந்தப் பண் எந்தக் கர்நாடக இசையாக மாறியது என்பதெல்லாம் இசை அறிஞர் ஆய்வாளர் மம்மது போன்றவர்கள் சொல்கிறார்கள். பெரிய அறிஞர்கள் விரிவாக பேசுகிறார்கள். நாம் ஒரு காலகட்டத்தில் அரசியல் காரணத்திற்காக மரபிசையை புறக்கணித்தோம். ஆனால் சினிமா இசையை புறக்கணிக்கவில்லை. மரபிசையை புறக்கணித்ததால் சினிமா இசை பெரிய அளவுக்கு ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆக, நவீன இலக்கியவாதிகள் பலர் இந்த அரசியல், குடும்பச் சூழல் காரணமாக மரபிசைக்கு வந்து சேரவில்லை.

நன்றி: தீராநதி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்