அவன் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’ என்ற பெயராலேயே
சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப்போன கொம்பையாத்தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லத்தம்பிக் கோனார் சார்பிலோ தான் அவன் ஓட்டுப் போட்டிருக்கிறான். ஆனால் இப்போது ஊராட்சித் தலைவர் தேர்தலில் இது சாத்தியமில்லை. ‘உருளை’ சின்னமுடைய உமையொரு பாகன் பிள்ளையும், ‘பூசணிக்காய்’ சின்னம் பெற்ற பூதலிங்கம் பிள்ளையும்
உள்ளூர்க்காரர்கள். எனவே கள்ளவோட்டுப் போட - அதுவும் எல்லோருக்கும் தெரிந்த
அவனைக் கொண்டு - யாரும் துணியவில்லை. தேர்தல் சந்தடிகளில் ஊரே அல்லோலகல்லோலப் படும் வேளையில் தான் ஒரு புறவெட்டாகிப் போனதில் வைத்தியனுக்கு மிகுந்த மன வருத்தம் உண்டு. இது வரையில்லாமல், தன் ஜனநாயக உரிமை புறக்கணிக்கப்படுவதில் ஒரு எரிச்சல்.
ஒரு வாக்கு இப்படி அர்த்தமற்று வீணாவதில் இரண்டு கட்சிக்காரர்களுக்கும்
ஏமாற்றம்தான். அவன் பெயர் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றால், அவன் வயதுடையவர்கள் யாரும் உயிரோடு இல்லை. இப்போது ராஜாங்கம் நடத்தும்
தானமானக்காரர்களுக்குப் பிறந்த முடி எடுத்தவனே வைத்தியன்தான். எனவே
அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அவன் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற விளையாட்டுத்தனமான ஆர்வத்தோடு, அவனிடமே கேட்கலாமென்றாலும், “அதெல்லாம் இப்ப என்னத்துக்கு போத்தி...? என் பேரிலே எடவாடா முடிக்கப் போறியோ?” என்பதுதான் இதுவரை பதிலாக வந்திருக்கிறது. தன்னுடைய பெயரே அவனுக்கு மறந்துவிட்ட நிலையில், அந்த உண்மைப் பெயரில் வாக்காளர் பட்டியலில் ஓட்டு இருக்க வேண்டுமே என்பது அவனுக்குத் தோன்றாமல் போயிற்று!
அவ்வூர் வாக்காளர் பட்டியலில் இன்னாரென்று தெரியாத இரண்டு பெயர்கள்
இருந்தன. பட்டியலைக் குடைந்துகொண்டிருந்த ‘பூசணிக்காய்’ ஆதரவளனான மாணிக்கம் அது யாரென்று தெரியாமல் விழித்தான். வைத்தியனின் முகம் அவன் நினைவில் வந்து வந்து போயிற்று. முதல் பெயர் புகையிலையா பிள்ளை. அது அவனாக இருக்க முடியாது. இன்னொன்று அணஞ்ச பெருமாள். வைத்தியனின் பெயர் இதுவாக இருக்கலாமோ என்ற ஊகத்தில் மாணிக்கம் வயதைப் பார்த்தான். எண்பத்திரண்டு. ஒரு துள்ளுத் துள்ளினான்.
‘கோச்ச நல்லூர்’ என்று வழக்கமாகவும், ‘கோச்சடையநல்லூர்’ என்று இலக்கண
சுத்தமாகவும் அழைக்கப்படும் அந்த ஊரில், உத்தேசமாக நூறு வீடுகள் இருக்கும்.
நூறு வீடுகளில் மக்கள் வழி, மருமக்கள் வழி, சைவர்கள் (இந்த வைப்புமுறை மக்கள்
தொகை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதே அல்லாமல், உயர்வு தாழ்வு என்ற நிலையை உள்ளடக்கியதல்ல என்று தெண்டனிட்டுச் சொல்லிக் கொள்கிறேன்). ‘கிராமம்’ என்றும் ’பிராமணக்குடி’ என்றும் அழைக்கப்படுகிற ‘எவ்வுயிர்க்கும் செந்தண்மை
பூண்டொழுகும்’ வீடுகள் ஏழு. பூணூல் போட்டவர்கள் எல்லோரும் ‘ஐயர்கள்’ என்ற
நினைப்பே வேளாளர்களிடம் ஏகபோகமாக இருப்பதால், அங்கும் என்ன வாழுகிறது என்று தெரியாமல், அவர்கள் ’ஒற்றுமை’யின் மேல் ஏகப் பொறாமை. இது தவிர இந்து சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு போல -நாடார், தேவர், வண்ணார், நாவிதர் என்று பல பகுப்புக்கும் ஆட்பட்ட இந்துக்களும் அங்கே உண்டு.
இவை நீங்கலாக, தான் இந்துவா கிறிஸ்துவனா இல்லை இரண்டுமா அல்லது இரண்டும் இல்லையா என்று நிச்சயமாக அறிந்து கொள்ளாத மக்களும் அங்கே உண்டு. கும்பிடுகிற சாமியை வைத்துக் கணக்கிடலாமென்றால் - சுடலைமாடன், ஈனாப் பேச்சி, இசக்கி அம்மன், தேரடி மாடன், புலை மாடன், முத்துப் பட்டன், கழு மாடன், வண்டி மறிச்சான், முண்டன், முத்தாரம்மன், சூலைப் பிடாரி, சந்தனமாரி, முப்பிடாரி என்ற பட்டியல் நீண்டு போகும். அந்த ஊர் வாக்காளர் பட்டியலை விட இது பெரிது.
மேற்சொன்னவர் அனைவரும் இந்து கடவுளன்களும் கடவுளச்சிகளும்தான் என்று பல அவதார மகிமைகளை எடுத்துக் காட்டி நீங்கள் நிறுவுவீர்களேயானால், அந்த மக்களும் இந்துக்கள்தான். ‘ஏ’யானது ‘பி’க்குச் சமம். ‘பி’ஆனது ‘சி’க்குச் சமம். எனவே ‘ஏ’
= ‘சி’ என்ற கணித விதியை இஞ்கே கையாண்டால், இவர்கள் இன்னின்ன கடவுளன் அல்லது கடவுளச்சியை வழிபடுகிறார்கள்; அந்தக் கடவுளன்களும் கடவுளச்சிகளும் இந்துக்கள்: எனவே இவர்களும் இந்துக்கள் என்று வல்லந்தமாக நிரூபித்து விடலாம். இந்தச் சள்ளையெல்லாம் எதற்கு என்றுதான் பல சாதிகளும் பல தெய்வங்களும் பலதரப்பட்ட மொழி, பண்பாடு ஆகியவையும் உடைய இந்தக் கூட்டத்தை ‘இந்தியா’ என்றும், இந்து என்றும் ஆங்கிலேயன் பெயர் வைத்திருக்க வேண்டும்! இந்த நாட்டில் இத்தனை சதவீதம் இந்துக்கள் என்று பண்டார சந்நிதிகளும், ஜகத்குருக்களும் புள்ளி விபரம் தந்து பீற்றிக்கொள்வதெல்லாம் இந்தக் கணிசமான மக்களையும் உள்ளடக்கித்தான்.
இப்படி ‘ராம ராஜ்ய’ யோக்கியதைகள் பல கோச்சநல்லூருக்கு இருந்தாலும்
ஊராட்சித் தலைவர் தேர்தல் என்றால் சும்மாவா? பொறி பறக்கும் போட்டி. இதில்
ஆசுவாசப்படுத்தும் சங்கதி என்னவென்றால், போட்டியிடும் இருவரும் வேளாளர்கள்.
குறிப்பாக ஒரே வகுப்பைச் சேர்ந்த வேளாளர்கள். அதிலும் குறிப்பாக மைத்துனர்கள்.
எனவே காரசாரமான போட்டி இருந்தாலும், வகுப்புக் கலவரங்களாவது இல்லாமல்
இருந்தது. ஊரு முழுவதும் ஏதாவது ஒரு சைடு எடுத்தாக வேண்டிய நிலை. இந்த நூறு வீடுகளைத் தவிரவும் பச்சைப்பாசி படர்ந்த தெப்பக்குளமும் அதன் கரையில் செயலிழந்த சாத்தாங்கோயிலும் சில சில்லறைப் பீடங்களும் ஒரு பாழடைந்த மண்டபமும் இரவு ஏழு மணிக்குமேல் அதனுள் இயங்கும் சட்ட விரோதமான ‘தண்ணீர்ப் பந்த’லும் சுக்குக்காப்பிக் கடையும் வெற்றிலைபாக்கு முதல் ‘டாம் டாம்’ டானிக் ஈறாக விற்கும் பலசரக்குக் கடையும் ஏழெட்டுத் தென்னந்தோப்புகளும் இருபது களங்களும் சுற்றிலும் நஞ்சை நிலங்களும் அங்கே உண்டு. மனிதனைத் தவிர, பிற தாவர சங்கமச் சொத்துக்களுக்கு ஓட்டுரிமை இல்லாது போனது கூட ஒரு சௌகரியம்தான். இல்லையென்றால், இந்த இரண்டு பேரை அண்டிப் பிழைக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் அவற்றுக்கும் ஏற்பட்டிருக்கும்.
இருக்கின்ற வாக்குகளில், யாருக்கு எத்தனை கிடைக்கும் என்ற ஊகமும் கணக்கும்
எங்கு பார்த்தாலும் நீக்கமற இருந்தது. ‘பூசணிக்காய்’ வேட்பாளரின் தங்கைக்கு
இந்த ஊரில் ஒரு ஓட்டு இருப்பதால், ஒரு வாரத்துக்கு முன்னாலேயே நாங்குநேரியில்
இருந்து அவள் வந்தாயிற்று. இதை அறிந்த ‘உருளை’ வேட்பாளர் சும்மா இருப்பாரா?
புளியங்குடியில் வேலை பார்த்த அவர் தம்பிக்கு தந்தியே போயிற்று. மனைவியை
அழைத்து வர வேண்டாம்; தனியாக வந்தால் போதும் என்று அவனுக்குக் கட்டளை. அவள் பூசணிக்காயின் தங்கை. (வசதி கருதி இங்கு தொட்டு சின்னம் வேட்பாளரைக்
குறிக்கிறது.) என்னதான் கணவன் கார்வார் செய்தாலும் பாசம் காரணமாக அவள்
பூசணிக்காய்க்குப் போட்டு விட்டால்? இங்கு ஒரு ஓட்டுக்கூடி அங்கும் ஒரு ஓட்டுக்
கூடினால் என்ன பயன்? அதைவிட இரண்டு பேரும் வராமலேயே இருந்து விடலாமே!
கூட்டிக் கழித்து, வகுத்துப் பார்க்கையில் யாரு வென்றாலும் பத்து
வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடியும் என்று நோக்கர்கள் கணித்தனர்.
தேர்தல் வேலைக்காக இரண்டு பேரும் திறந்திருந்த செயலகங்கள் எப்போதும் நிரம்பி
வழிந்தன. தேர்தல் நாள் நெருங்க நெருங்க வெற்றிலை, பீடி, சுக்குக்காப்பி, வடை,
சீட்டுக்கட்டுகள் செலவு ஜீயாமெட்ரிக் புரகிரஷனில் வளர்ந்தது. நாளை காலை தேர்தல்
என்ற நிலையில் இந்த வேகம் காய்ச்சலாகி, ஜன்னி கண்டு விடலாம் என்ற அச்சத்தைத் தந்துகொண்டிருந்தது. இந்தச் சரித்திரப் பிரசித்தி பெறப் போகும் விநாடியில்தான் மாணிக்கம் பூசணிக்காய் செயலகத்திலிருந்து குபீரென்று கிளம்பினான்.
இப்போதே வெற்றி கிடைத்துவிட்டதைப் போன்ற ஒளி முகத்தில் துலங்க தான்
கண்டுபிடித்த அணஞ்ச பெருமாள் வைத்தியனேதான் என்ற வரலாற்றுப் பேருண்மையை யாருக்கும் தெரியாமல், ஐயம் திரிபு நீங்க நிரூபித்து விடவேண்டும் என்ற துடிப்பு. இந்த நேரத்தில் வைத்தியன் எங்கே இருப்பான் என்று அவனுக்குத்
தெரியும்.
சாத்தான் கோயிலை நோக்கி மாணிக்கம் நடக்க ஆரம்பிக்கும் போதே ‘சதக்’கென்று
சிந்தனை எதனையோ மிதித்தது. நேர் வழியாகப் போனால், இந்த நேரத்தில் இவன்
இவ்வழியாகப் போவானேன் என்று எதிரிப் பாசறையைச் சேர்ந்தவர்கள் நினைக்க
மாட்டார்களா? அதுவும் நாளை தேர்தலாக இருக்கும்போது, சந்தேகம் வலுக்கத்தானே
செய்யும்? அதுவும் ‘உருளை’ ஒற்றர்கள் கண்ணில் பட்டுவிட்டால், துப்புத்
துலக்கவோ, பின் தொடரவோ ஆரம்பித்தால் குடிமோசம் வந்து சேருமே! தன்மூளையைக் கசக்கி, இந்தப் பாடுபட்டுக் கண்டுபிடித்த வாக்காளரை, மாற்றுக் கட்சிக்காரனும் கரைக்க ஆரம்பித்தால்?
சமயத்தில் தனக்குத் தோன்றிய புத்திசாலித்தனமான யோசனையை மெச்சிக்கொண்டே, சாத்தான் கோயிலுக்கு சுற்று வழியாக நடந்தான் மாணிக்கம். பள்ளிக்கூடம் வழியாகத் தென்னங்குழிமடை வந்து பத்தினுள் இறங்கி, வரப்பில் நடந்து, வழிநடைத் தொண்டில் ஏறி, கோயிலின் பின்பக்கம் வந்தான். வைத்தியன் தனியாக இருக்க வேண்டுமே என்ற கவலை இலேசாக முளைகட்ட ஆரம்பித்தது.
கோயில் முகப்புக்கு வந்தான். பனிமாதம் ஆகையால் அங்கே ஒரு குருவியைக்
காணோம். ஈசானமூலையில், சுவரை அணைத்துக்கொண்டு ஒரு கந்தல் மூட்டை போலச் சுருண்டு படுத்திருப்பது வைத்தியனாகவே இருக்க வேண்டும். கண் மங்கி கை நடுங்க ஆரம்பித்து, காதுகளின் ஓரத்தில் தன்னறியாமல் கத்திக் கீறல்கள் விழ ஆரம்பித்ததும் தொழில் கை விட்டுப் போனபிறகு, நிரந்தரமாக அந்த மூலை வைத்தியனின் இடமாகி விட்டிருந்தது.
மணி ஒன்பதைத் தாண்டி விட்டதால் அவன் உறங்கி இருக்கவும் கூடும். ஆனால் சற்று நேரத்திற்கொரு முறை, நானும் இருக்கிறேன் என்ற காட்டிக் கொண்டிருக்கும் இருமல். மூலையை நெருங்கி நின்றுகொண்டு அங்குமிங்கும் பார்த்தான் மாணிக்கம். ஆள் நடமாட்டம் இல்லை. நாளை தேர்தல் என்ற மும்முரத்தில் ஊர் பரபரத்துக்
கொண்டிருக்கும்போது, இந்த ஒதுங்கிய மூலைக்கு யார் வரப் போகிறார்கள்?
வைத்தியனைப் பார்த்து சன்னமாகக் குரல் கொடுத்தான்.
”வைத்தியா.. ஏ வைத்தியா....!”
பதில் இல்லை. காதோடு அடைத்து மூடிக்கொண்டு படுத்திருப்பதால்
கேட்டிருக்காது. அந்த மனித மூட்டையின் தோளைத் தொட்டு உலுக்கினான். அலறாமலும் புடைக்காமலும் எழுந்து உட்கார்ந்த அவன், நிதானமாக மாணிக்கத்தைப் பார்த்து திருதிருவென்று விழித்தான்.
”ஏம் போத்தி...? வீட்டிலே யாராவது....”
அவன் என்ன கேட்கிறான் என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது. மற்ற சமயமாக
இருந்தால், இந்தக் கேள்விக்குப் பதில் வேறு விதமாக இருக்கும். ஆனால் இன்று அந்த
ஓட்டின் கனம் என்ன என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அமைதியாகச் சொன்னான்.
”அதெல்லாம் ஒண்ணும் இல்ல... உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்...”
வைத்தியனுக்கு நெஞ்சில் திகில் செல்லரித்தது. இந்த அர்த்த ராத்திரியில்
தன்னை எழுப்பி ஒன்று கேட்க வேண்டுமானால்....
”உன் பேரு அணஞ்சபெருமாளா?” வைத்தியன் முகத்தில் ஒருவித பிரமிப்பு.
”அட... இதென்ன விண்ணாணம்...? இதுக்குத்தானா இந்தச் சாமத்திலே வந்து சங்கைப்
புடிக்கேரு...”
”பேரு அதானா சொல்லு...?”
”உமக்கு யாரு சொல்லீட்டா...? நானே அயத்துப் போனதுல்லா.. இப்ப என்ன
வந்திட்டு அதுக்கு..?”
”யார்கிட்டேயும் மூச்சுக்காட்டாதே. உன் பேரு வோட்டர் லிஸ்டிலே இருக்கு..
நாளைக்குக் காலம்பற நான் வந்து உன்னைக் காரிலே கூட்டிட்டுப் போறேன்.. காப்பி
சாப்பாடு எல்லாம் உண்டு... உருளைக்காரப் பயக்கோ வந்து கோட்டா இல்லேண்ணு
சொல்லீரு.. ஆமா...!”
தானும் ஒரு சமயச் சார்பற்ற ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் முடிசூடா
மன்னர்களில் ஒருவன் என்ற எண்ணம் -தனக்கும் ஓட்டுரிமை இருக்கிறது என்ற நினைப்பு வைத்தியனுக்கு புதிய தெம்பைத் தந்தது. அந்த உணர்வு காரணமாகச் சூம்பிய அவன் தோள்கள் சற்றுப் பூரித்தன.
”நான் ஏம் போத்தி சொல்லுகேன்? அண்ணைக்கு அந்த உருளைக்கார ஆளுக சொன்னாளே..
இதுவரை நீ சேத்தவன் ஓட்டையும் ஊரைவிட்டு ஓடினவன் ஓட்டையும் போட்டே... சரி... ஆனா எவனும் சொன்னாண்ணு இந்தத் தடவை அங்கே வந்தே... பொறகு தெரியும் சேதி.... நேரே போலீசிலே புடிச்சுக் குடுத்திருவோம். அப்படீண்ணூல்லா சொன்னா... நானும் அதாலா கம்முண்ணு இருக்கேன். மச்சினனும் மச்சினனும் இண்ணைக்கு அடிச்சுக்கிடுவாங்க.... நாளைக்கு நானும் நீயும் சோடி, கடைக்குப் போலாம் வாடிண்ணூ கழுத்தைக் கெட்டிக்கிட்டு அழுவாங்க... நமக்கு என்னத்துக்கு இந்தப் பொல்லாப்புண்ணுதாலா சலம்பாமல் கிடக்கேன். இப்பம் நம்ம பேரும் லிஸ்டிலே இருக்கா? தெரியாமப் போச்சே இதுநாள் வரை..”
”இது இப்பம்கூட யாருக்கும் தெரியாது பார்த்துக்கோ... நான்தான்
கண்டுபிடிச்சேன்! முன்னாலேயே ஒம் பேரு இருந்திருக்கும்.. ஆனா என்னைப் போல யாரு அக்குசாப் பாக்கா..? அதுகிடக்கட்டும். உனக்குப் புது வேட்டியும் துவர்த்தும்
வாங்கி வச்சிரச் சொல்லுகேன். நீ காலம்பற என்கூட வந்து இட்டிலி திண்ணு போட்டு,
புதுத்துணியும் உடுத்திக்கிட்டு ஓட்டுப் போட்டிரணும். எல்லாம் நான்
சொல்லித்தாறேன்... ஆனா எவன்கிட்டேயும் அனக்கம் காட்டிராதே... என்னா..?”
”இனி நான் சொல்லுவேனா.. நீங்க இம்புட்டு சொன்னதுக்கப்புறமு...”
வைத்தியன் தந்த உறுதியில் மனம் மகிழ்ந்து தன் சாதனையை நினைத்து மார்பு
விம்ம, பூசணிக்காய் வீட்டை நோக்கி நடந்தான் மாணிக்கம்.
அங்கே ஒரு அரசவையின் பொலிவு போன்ற சுற்றுச் சூழல்கள். மங்களாவில்
நடுநாயகமாகப் பூசணிக்காய் கொலு வீற்றிருந்தார். அந்த வீட்டிலுள்ள மொத்தப்
பெஞ்சுகளும், நாற்காலிகளும் அங்கே பரந்து கிடந்தன. வந்து வந்து தன்
விசுவாசத்தைத் தெரிவிக்கும் வாக்காளர்களின் புழக்கம். வெற்றிலைச் செல்லங்கள்
இரண்டு மூன்று ஆங்காங்கே ஊறிக் கொண்டிருக்கும் சுக்குக்காப்பி அண்டா. அந்த நூறு
வீட்டு ஊரின் இரதவீதிகளைச் சுற்றிச் சுற்றிக் கோஷம் போட்டுத் தொண்டை
கட்டியவர்கள் நெரிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். நாலை காலைக்
காப்பிக்கான ஆயத்தங்கள்.
இட்டிலிக் கொப்பரைகள் கிடார அடுப்பில் ஏற்றப்பட்டு விட்டதால் ‘கொர்’ என்ற
சீரான இரைச்சல். சின்னம் பூசணிக்காய் ஆனபடியால், பூசணிக்காய் சாம்பாருக்காக
அரிந்து பனையோலைப் பாய்மீது குவிக்கப்பட்டிருந்தது. இலைக்கட்டுகள் இடத்தை
அடைத்துக்கொண்டு கிடந்தன. பாத்திர பண்ட வகையறாக்களின் முனகல். செயித்தால்
வீட்டுக்கொரு பூசணிக்காய் பரிசாக விளம்புவதற்காக ஐந்து மூட்டைகள் சாய்ப்பில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
பூச்ணிக்காய் தோற்றுப்போகும் என்று கருதி, தோற்ற பிறகு தெருவில் போட்டு
உடைப்பதற்காக உருளையுமிரண்டு மூட்டைகள் வாங்கிப் பத்திரப்படுத்தியிருந்ததாகக்
கேள்வி. ஆகக் கனக மூலம் சந்தையில் பூசணிக்காய்க்கு ஏகக் கிராக்கி. அடுத்த முறை
ஊராட்சித் தேர்தலைக் கணக்காக்கி, அதற்குத் தோதாக மேலாய்ச்சி கோணம் முழுவதும் பூச்ணிக்கொடு போடப்போவதாக அவ்வூர் பண்ணையார் ஒருவர் தீர்மாணித்திருப்பதாகத் தகவல்.
நாளை வாக்குச் சாவடிக்குச் செல்வதற்காக ஏழெட்டு வில் வண்டிகளும் இரண்டு
வாடகைக் கார்களும் தயார். இதே ஏற்பாடுகளை உருளையும் செய்திருப்பார் என்று
சொல்லத் தேவையில்லை. ஒரேயொரு அசௌகரியம்தான். அவர்கள் பூசணிக்காய் சாம்பார் வைப்பதைப் போல, இவர்களால் ரோடு உருளையைச் சாம்பார் வைக்க முடியாது. அதில் ஒரு புத்திசாலி, உருளை என்றால் உருளைக் கிழங்கையும் குறிக்கும் என்பதால், அதையே சாம்பார் வைக்கலாம் என்று சொன்னதன் பேரில் அவ்வாறே தீர்மானமாயிற்று.
இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், அங்கே மொத்த ஓட்டுக்களே இரு நூற்று
எழுபது. நூறு சதமானம் வாக்களிப்பு நடந்தாலும், இருநூற்றெழுபது
வாக்காளர்களுக்கும் மொத்தம் பதினாறு வில் வண்டிகளும் நான்கு வாடகைக் கார்களும். அது மட்டுமல்ல வாக்கெடுப்பு நடக்கப் போகும் அரசினர் ஆரம்பப் பள்ளி, ஊரில் எந்த மூலையில் இருந்து நடந்தாலும் அரை பர்லாங்குதான். ஆனாலும் முடிசூடா மன்னர்களை நடத்தியா கொண்டுசெல்வது?
மறுநாள் பொழுது கலகலப்பாக விடிந்தது. தானாகப் பழுக்காததைத் தல்லிப் பழுக்க
வைப்பது போன்றும் சூரியன் கிழக்கில் எழச் சற்றுத் தாமதித்திருந்தால் கயிறு
கட்டி இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள். அவ்வளவு அவசரமும் பதட்டமும்.
ஆறுமணிக்குப் பூசணிக்காயின் மகனும் மருமகளும் ஊரழைக்க வந்தார்கள்.
அதைத்தொடர்ந்து உருளையின் மகளும் மருமகனும் ஊரழைத்தார்கள். காலைக் காப்பிக்கான சன்னத்தங்கள். அதிகாலையிலேயே வைத்தியனைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டான் மாணிக்கம். அங்கேயே கிணற்றுத் தோட்டத்தில் குளிக்கச் செய்து, புதிய வேட்டியும் துவர்த்தும் உடுத்து வெண்ணீறு பூசி ஒரே அலங்கரிப்பு. அவனுக்கே ஒரே புளகாங்கிதம். ஊராட்சித் தேர்தல் மாதம் ஒரு முறை வந்தால் எப்படி இருக்கும் என்று அவன் எண்ணினான்.
பத்து மணிக்கு மேல் வாக்கெடுப்பு துரிதகதியில் நடைபெறலாயிற்று. டாக்ஸிகள்
எழுப்பும் புழுதிப்படலம். வில் வண்டிக்காளைகள் குடங்குடமாகப் பீய்ச்சித்
தெருக்களை மெழுகின. சைக்கிள்கூட நுழைந்திராத முடுக்குகளிலெல்லாம் கார் நுழைந்து தேடிப்பிடித்து வாக்காளரை இழுத்தது. பெற்றோர்கள் ஓட்டுப் போடப் போகும்போது சிறுவர்களுக்கும் காலைக் காப்பி, பலகாரம், டாக்ஸி சவாரி, சிலர் பிடிவாதமாக வில் வண்டியில் ஏற மறுத்து, காரில்தான் போவேன் என்றார்கள். தேர்தல்கள் இல்லாவிட்டால் இதையெல்லாம் எப்படித்தான் அனுபவிப்பது?
இரண்டு வேட்பாளர்களும் வாக்குச்சாவடியில் பிரசன்னமாயிருந்தார்கள்.
அவர்களின் பிரதிநிதிகள் இரண்டு வரிசைகளில். இது தவிர அரசாங்க அதிகாரிகளான பள்ளி ஆசிரியர்கள். கலவரம் வரலாம் என்று அஞ்சப்பட்டதால், இரண்டு போலீஸ்காரர்கள் கர்மசிரத்தையோடு கண்காணித்துக் கொண்டிருந்தார்கள், லாத்தியுடன். வெள்ளாளனுக்கு லாத்தியே அதிகம் என்று துப்பாக்கி கொண்டுவரவில்லை.
வைத்தியன் என்ற அணஞ்சபெருமாளை பெருமாள் வாக்குச்சாவடி முன் காரில்
கொண்டுவந்து இறக்கிய போது எல்லோர் கண்களும் நெற்றி மேல் ஏறின. வெள்ளையும் சொள்ளையுமாக நீறணிந்த சைவ நாயனாக வந்து நின்ற அவனை அதிசயத்தோடு பார்த்தனர்.
”நாறப்பய புள்ளைக்கு என்ன தைரியம் இருந்தா இண்ணைக்கு உள்ளூர் எலக்ஷன்லே கள்ள ஓட்டுப் போட வரும்...ம்...வரட்டும்.”
கறுவினார் உருளை.
மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதால் கூட்டம் குறைந்து விட்டது. வைத்தியன் வந்து
வரிசையில் நின்றபோது ஏழெட்டுப் பேரே அவன் முன்னால் நின்றார்கள். அவன் பின்னால் ஓரிருவர் வந்து சேரவா, இல்லை சாப்பிட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாமா என்று யோசனையில் தயங்கி நின்றனர்.
இரண்டு நிமிடங்கள் பொறுத்ததும் வரிசையை விட்டு விலகி வேகமாக வெளியே நடக்கத் தொடங்கினான் வைத்தியன். இவனுக்குத் திடீரென என்ன வந்து விட்டது என்று புருவக்கோட்டை உயர்த்தினார் பூசணிக்காய். ‘என் எதிரில, எனக்கு விரோதமாகக் கள்ள ஓட்டுப் போட வந்திருவானாக்கும்...’ என்ற பாவனையில் மீசை மீது கை போட்டு இளக்காரத்துடன் பூசணிக்காயைப் பார்த்தார் உருளை.
வரிசையிலிருந்து விலகிய வைத்தியனைப் பின்தொடர்ந்து ஓடிய மாணிக்கம் இரண்டு எட்டில் அவனைப் பிடித்துவிட்டான்.
”கெழட்டு வாணாலே! என்ன கொள்ளை எளகீட்டு உனக்கு? எங்கே சுடுகாட்டுக்கா
ஓடுகே...?”
”அட சத்தம் போடாதேயும் போத்தி... இன்னா வந்திட்டேன்...” வைத்தியனின்
குரலில் அவசரம்.
”அதான் எங்க எளவெடுத்துப் போறேங்கேன்.. பிரி களந்திட்டோவ்?”
”இரியும் போத்தி... ஒரு நிமிட்லே வந்திருகேன்.”
”ஓட்டுப் போட்டுக்கிட்டு எங்க வேணும்னாலும் ஒழிஞ்சு போயேங்கேன்.”
”அட என்னய்யா பெரிய சீண்டறம் புடிச்ச எடவாடா இருக்கு.... காலம்பற முகத்தைக்
கழுவதுக்குள்ளே கூட்டியாந்தாச்சு. ஏழெட்டு இட்லி வேறே திண்ணேன்... வயசான
காலத்திலே செமிக்கவா செய்யி... சித்த நிண்ணுக்கிடும்.. இன்னா ஒரு எட்டிலே
போயிட்டு வந்திருகேன்...”
வைத்தியன் குளத்தங்கரையோரம் போய் கால்கழுவி வருவதற்குள் உணவு இடைவேளைக்காக வாக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வைத்தியனை அங்கே காத்திருக்கச் சொன்னால் ஆபத்து என்று கருதி, மீண்டும் காரிலேற்றி, வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சாப்பாடு போட்டு முதல் ஆளாகக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். சூரன்பாடு திருவிழாவில், முதலில் வருகின்ற சூரனைப் போல வைத்தியன் வீர விழி விழித்தான். இடைவேளைக்குப் பிறகு, வாக்கெடுப்பு தொடங்கியது கையில் வைத்திருந்த ‘அணஞ்சபெருமாள்’ சீட்டுடன் வாக்கு சாவடியினுள் நுழைந்தான் வைத்தியன். இவனுக்கு ஒரு பாரம் படிப்பித்துத்தான் அனுப்ப வேண்டும் என்று உருளை உஷாராக இருந்தார். முதல் போலிங் ஆபிசரிடம் சீட்டை நீட்டினான் வைத்தியன்.
உருளை ஒரு உறுமல் உறுமினார்.
”ஏ வைத்தியா.. உனக்கு ஓட்டு இருக்கா?”
சந்தேகத்துடன் அவன் அவரைப் பார்த்தான்.
”இருக்கு போத்தியோ.. இன்னா நீரே பாருமே...”
அவன் நீட்டிய சீட்டை வாங்கிப் பார்த்த உருளைக்கு கொஞ்சம் மலைப்பு. அவர்
மலைப்பதைக் கண்ட பூசணிக்காய் முகத்தில் மூரல் முறுவல்.
”அணஞ்ச பெருமாளா உன் பேரு..?”
”ஆமா போத்தி.. நான் பின்ன கள்ள ஓட்டா போட வருவேன்?”
உருளையின் ஐயம் தீரவில்லை. வாக்காளர் பட்டியலை வாங்கிப் பார்த்தார். அவர்
முகத்தில் சிறிய திகைப்பு. சற்று நேரத்தில் ஏளனப் புன்னகையொன்று விரிந்தது.
”இதுவரைக்கும் கள்ள ஓட்டுப் போட்டாலும் நாடுவிட்டுப் போன ஆளுக பேரிலேதான் போட்டிருக்கே. இப்ப செத்துப்போன ஆளு ஓட்டையும் போட வந்திட்டயோவ்?”
”இல்லை போத்தி.. என் பேரு அணஞ்சபெருமாளுதான்... நான் பொய்யா சொல்லுகேன்...”
”அட உன் பேரு அணஞ்சபெருமாளோ, எரிஞ்ச பெருமாளோ என்ன எளவாம்
இருந்திட்டுப்போகு... ஆனா இந்த அணஞ்ச பெருமாளு பொம்பிளையிண்ணுல்லா
போட்டிருக்கு....”
”என்னது? பொம்பிளையா?”
”பின்னே என்ன? நல்லாக் கண்ணை முழிச்சிப்பாரு.. அது நம்ம கொழும்புப் பிள்ளை
பாட்டாக்கு அக்காயில்லா... அவ செத்து வருஷம் பத்தாச்சே.... ஓட்டா போட வந்தே
ஓட்டு... வெறுவாக்கட்ட மூதி.. போ அந்தாலே ஒழிஞ்சு....”
வைத்தியன் செய்வதறியாமல் பூசணிக்காயைப் பார்த்தான். கடித்துத் தின்று
விடுவதைப் போல அவர் அவனைப் பார்த்து விழித்தார்.
*****
நன்றி: கணையாழி, ஜனவரி - 1977
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
2 கருத்துகள்:
nanjil kathaikal nalla veyyil kaalathil sappida kidaikkum thayir saathamum milakai uoorukayum pola oru kavarchikaramana inippu,kulirchiyana nadai-sugam
அருமை! பதிவிற்கு நன்றி!
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.