May 1, 2010

தேவதச்சனின் கவியுலகம்-எஸ். ராமகிருஷ்ணன்

எஸ். ராமகிருஷ்ணன்

கவிதை சொற்களால் உருவாக்கபட்டிருந்த போதும் சொல்லைக் கடந்து செல்வதே அதன் முக்கியப் பணியாக இருக்கிறது. சொற்களை அது முடிந்த ஒன்றாக கருதுவதேயில்லை. மாறாக சொல்லை அதன் நேரடி அர்த்தம் சார்ந்து மட்டும் பிரயோகம் செய்யாமல் சொல்லுக்கும் பொருளுக்குமான இடைவெளியை, devathachanசாத்தியப்பாடுகளையும் எதிர்நிலைகளையும் உருவாக்க விளைகிறது.

கவிஞன் கவிதையின் வழியாக உலகை ஒன்றிணைக்கவும் சிதறடிக்கவே ஒரே நேரத்தில் விரும்புகிறான். காட்சிகளையும் சப்தத்தையும் படிமங்களையும் கொண்டு உலகின் மீதான தனது வேட்டையை நிகழ்த்துகிறான். கதையாசிரியனைப் போல அவன் சம்பவங்களின் மீதும், சம்பவங்களை உருவாக்கும் காரணிகளின் மீதும் இயங்குவதில்லை. மாறாக தண்ணீரின் மீது கல்வீசுகையில் தத்தித்தத்தி மறையும் தாவுதல் போல மொழியின் வழியே மொழி கடந்த அனுபவங்களை உருவாக்கிக் காட்டுகிறான்.

நான் கவிதைகளை மிகவும் தேர்வு செய்தே வாசிக்கிறேன். கவிதைக்கும் எனக்குமான உறவு காரணங்களால் விளக்க முடியாதது. கவிதையின் வழியே நான் கண்டு உணரும் நிலைகளும் அப்படியே.

தேவதச்சனின் கவிதைகளைக் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். என் மனதிற்கு மிக நெருக்கமான கவிதைகள் அவருடையது. நேர்பேச்சிலும் கவிதையிலும் அவரது கவித்துவமான, தனித்தன்மைமிக்க பார்வைகளை அறிந்திருக்கிறேன்.

தேவதச்சனின் கவிதைகள் தமிழ்வாழ்வியலின் நுட்பமான பதிவுகளை கொண்டிருக்கின்றன. மிக அபூர்வமான கவித்துவப் படிமங்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகின்றன. தத்துவச் சார்பு கொண்டது போன்ற தோற்றம் கொண்டிருந்த போதும் இக்கவிதைகள் வாழ்வைக் கொண்டாடுகின்றன.

தினசரி வாழ்வின் மீது இத்தனை ருசி கொண்ட கவிஞன் வேறு எவருமிருக்கிறார்களா என்று தெரியவில்லை. தேவதச்சனின் கவிதைகள் தினசரி வாழ்வின் விசித்திரங்கயும் அற்புதங்களையும் மிக அண்மையில் சென்று ரசிக்கின்றன. கவிதையின் வழியாக அவர் தமிழ்வாழ்வின் நினைவுகளை மீள்பரிசீலனை செய்கிறார். இயேசுநாதரும் கண்ணகியும் ஆண்டாளும் அவரது கவிதைக்குள் இதுவரை அறியப்பட்டிருந்த கருத்துவருங்களை கலைந்து பிரவேசிக்கிறார்கள்.

சில ஆண்டுகாலம் சங்கக் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்த போது நான் அடைந்த மகிழ்வும் அகவெழுச்சியும் அளப்பறியது. தனிமை உணர்வை சங்கக் கவிதைகளைப் போல மிக நுட்பமாக வேறு கவிதைகள் எதிலும் உணர்ந்ததில்லை. காத்திருத்தல் என்ற ஒற்றை உணர்வினை இசையைப் போல பல்வேறு உயர்தளங்களில் சஞ்சாரம் செய்ய வைக்கின்றன சங்கக் கவிதைகள்.

சங்க கவிதையின் குரல் வெகு அந்தரங்கமானது. அது பால் பேதமற்றது. கவிதையில் ஒலிக்கும் நான் நாம் அறிந்த பெண்ணோ, ஆணோ அல்ல. மாறாக எப்போதுமிருக்கும் உணர்வெழுச்சியின் குரல் என்று கொள்ளலாம்.

சங்கக் கவிதைகளின் நுட்பம் அவை கவிதையின் வழியே அடையாளம் காட்டும் நிலவெளி காட்சிகள், உணர்வு ஒப்புமைகள். ஒவ்வொரு கவிஞனும் தனக்கென தனியான கவி உவமைகளையும் மொழி நுட்பத்தையும் அகப்பார்வையும் கொண்டிருக்கிறான் என்பதை உணர முடிகிறது.

எனக்கு விருப்பமான தேவதச்சனின் சில கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு வண்ணத்துபூச்சி

நான்
உயர்நிலைப் பள்ளியில் நுழைந்த போது கூடவே
ஒரு வண்ணத்துப்பூச்சி நுழைந்தது
அது மஞ்சள் நிறத்தில் இருந்தது
அப்போது என் வயது பத்து
பொறுமையற்ற வருடங்கள் கழித்து
நான் வெளியேறியபோது
என் இடது தோளின் மேலாகப் பறந்து
வெளியேறியது . அப்போதும்
அது மஞ்சளாகவே இருந்தது
நரைக்கூடிக் கிழப்பருவம் எய்தி
கடவுள் தன் ரகசியங்களை மாட்டி வைத்திருக்கும்
ஆலமரத்தின் அருகில் நிற்கும்போது என்
முகத்தின் குறுக்காக விரைந்து சென்றது
அப்போதும் அது மஞ்சளாகவும் சிறியதாகவும்
இருந்தது.
தன் இரண்டு ஜன்னல்களைத்
திறந்து அலைபாயும் மஞ்சள் கடலைக் காட்டும்
வண்ணத்துப்பூச்சி
என்னைப்பற்றி
என்ன கதையடிக்கும்.
**

மழை

மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது
**

அன்பின் சிப்பி
என் அன்பின் சிப்பியை
யாரும் திறக்க
வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஒட்டமும் நடையுமாய்.
**

குருட்டு ஈ

ஆஸ்பத்திரியில்
வெண்தொட்டிலில்
சுற்றுகிறது
இறந்து கொண்டிருக்கின்ற குழந்தையின்
மூச்சொலி
பார்க்கப்
பயமாக இருக்கிறது
சுவரில்
தெரியும் பல்லி
சீக்கிரம் கவ்விக் கொண்டு
போய்விடாதா
என் இதயத்தில்
சுற்றும் குருட்டு ஈயை
**

பரிசு

என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்
**

அன்பின் எழுத்துகள்
எங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை
யாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று
வேண்டும் எனக்கு. சின்ன
குருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு
உன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்
எங்கு இருக்கிறது அது
எங்கும் இல்லை
என் நினைவுகளில் அது வளரட்டும் என்று
கடந்து செல்லும் அந்திக் காற்றில்
விட்டுவிடச் செல்கிறேன்
என் உடலிலிருந்து நீண்டு செல்கிறது
உன் நிழல்
வெளியே வெளியே தெரிந்தாலும்
நிழல்கள்
ஒளிந்திருப்பதற்கு
உடலைத் தவிர வேறு இடம்
ஏது
**
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி வரும் தேவதச்சன். தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டியில் வசிக்கிறார்.

இவரது கவிதைகள் கடைசி டினோஸர் , யாருமற்ற நிழல் என்று இரண்டு தொகுதிகளாக உயிர்மை பதிப்பகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது
**

நன்றி : http://www.sramakrishnan.com/

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

0 கருத்துகள்:

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்