எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்
கு.அழகிரிசாமி
எனது நண்பனும், ஆங்கிலத்தில் எழுதும் கவிஞனுமான ரஞ்சன் மகோபாத்ரா வந்திருந்தான். அவன் அமெரிக்காவில் ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு செய்பவன். பல வருடங்களுக்குப் பிறகு சென்னைக்கு வருகிறான். மாநகர வாழ்வும், கடற்கரையும், சாப்பாடும் அவனுக்குத் தன் சொந்த ஊரில் இருப்பது போலவே தோன்றுவதாகச் சொன்னான். நூலகம், சினிமா என இரு வார காலம் கடந்து போன பிறகு, ‘தமிழ்நாட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்று ஏதாவது இருந்தால் சொல்லு, போகலாம்!’ என்றான். உடனே மனதில் ஒரு இடம் தோன்றியது!
மறுநாளின் அதிகாலையில், நானும் அவனும் காரில் பயணம் செய்யத் துவங்கினோம். எங்கே செல்கிறோம் என அவன் கேட்கவே இல்லை. நாங்கள் அந்த ஊருக்குள் போய்ச் சேர்ந்தபோது காலை பத்து மணி. சிறிய கிராமம் போன்ற இடத்துக்கு வந்திருக்கிறோமே என்ற தயக்கத்துடன், ‘இங்கே ஏதாவது சோழர்களின் கற்கோவில் இருக்கிறதா?’ என்று கேட்டான். ‘நான் பார்த்து இன்று வரை வியந்தும் பெருமைப்பட்டும் வரும் ஒரு ஊர் இது. நீயே வந்து பார்!’ என்று அழைத்தேன். அது ராமலிங்க வள்ளலார் வாழ்ந்த வடலூர்!
அறுங்கோண வடிவத்துடன் உள்ள அந்த மண்டபம் சுற்றிலும் கம்பி பாய்ச்சப்பட்டிருந்தது. சத்ய ஞான சபை எனப்படும் அந்த மண்டபம் ‘அன்பே கடவுள்!’ என்ற உயர்ந்த கோட்பாட்டைப் பிரதிபலிப்பது!
1871&ல் வள்ளலாரால் துவங்கப்பட்ட அந்த சபையில் உள்ளே நானும் அவனும் நடந்து சென்றோம். புறாக்களின் விம்மும் குரல் எங்கிருந்தோ கேட்டுக்கொண்டே இருந்தது. மிக வயதான ஒருவர் எங்களைப் பார்த்து, ‘அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை’ என்று கூறியபடி கையெடுத்து வணங்கினார். மண்டபத்தின் உள்ளே அணையாத தீபம் ஒன்று எரிந்துகொண்டு இருந்தது. விளக்கின் முன்னால் ஏழு நிறத் திரைகள் இருந்தன. ஒவ்வொரு திரையும் மனிதனின் அஞ்ஞானத்தை குறிப்பதாக, வயதானவர் விளக்கம் சொன்னார்.
சபையின் உள்ளே சிலர் தியானத்தில் லயித்திருந்தனர். பார்வையற்ற ஒரு பெண் சப்பணமிட்டு அமர்ந்தபடி திரு அருட் பாவை முணுமுணுக்கும் குரலில் பாடிக்கொண்டுஇருந் தார். இருவரும் வெளியே வந்தபோது ரஞ்சன், இது போன்ற தியான மண்டபங் களை கொல்கத்தாவில் பார்த்து இருப்பதாகச் சொன்னான். ‘நீ இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. அமைதியாக என்னுடன் வா’ என்று வெளியே அழைத்து வந்தேன். வெளியே வெயில் உச்சிக்கு வந்திருந்தது. ‘நூற்றாண்டு காலமாக பசித்தவர்களுக்கு உணவு அளிக்கும் அறச் சாலையை பார்’ என்று நான் காட்டிய கட்டிடம் ஒரு கோவிலைப் போல மௌனமாக இருந்தது. உள்ளே, மதிய உணவு தயாராகிக்கொண்டு இருந்தது. இந்த அறச்சாலையில் தினமும் ஆயிரம் பேருக்கு மேல் உணவு அருந்துகிறார்கள். ‘நூறு வருடங்கள் கடந்தும் இன்னும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும் அடுப்பு இது!’ என்று காட்டி னேன். நீளமான அடுப்பு அது. அதில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் சப்தம், ‘உலகில் உள்ள மனிதர்களின் பசியைப் போக்குவது மட்டுமே தனது பெரும்பணி!’ என்று உரத்து சொல்லிக் கொண்டு இருப்பது போலிருந்தது.
ரஞ்சன் அந்த நெருப்பை வியப் போடு பார்த்தான். ‘இரவில்கூட இதை அணைக்க மாட்டார்களா?’ என்று கேட்டான். ‘ஆம், இது எப்போதும் எரிந்துகொண்டே தான் இருக்கும்... பக்கத்தில் வந்து பாருங்கள்’ என்று சொன் னார் சமையல் செய்பவர். ஏதோ ரகசியம் பேசுவது போல நெருப்பின்குரல்கேட் டது. ‘சாதிசமய பேதமின்றி, யாவரும் சமம் என்ற உயர்ந்த எண்ணத்தில் உணவு அளிக்கிறோம். இருந்து நீங்களும் சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள்!’ என்றார் சமையல் செய்பவர்.
வாழை இலை போட்டு வடை பாயசத்துடன் அறுசுவை உணவு படைத் தார்கள். எங்களோடு பந்தி யில் அமர்ந்து சாப்பிட்ட வர்களில் பாதிப்பேர் வயதானவர்கள். ஏதேதோ ஊர்களில் இருந்து வந்து தங்கிவிட்டவர்கள். ஒன்றிரண்டு பண்டாரங்கள், நோயாளிகள், கிராமத்து விவசாயிகள், குழந்தைகள் எனப் பந்தியில் இருநூறு பேருக்கு மேலிருக்கும். அத்தனை சுவையான உணவை வேறு எங்கும் நான் சாப்பிட்டது இல்லை. தைப்பூசம் அன்று அங்கே ஒரு லட்சம் பேருக்கும் மேல் உணவு அளிக்கப்படுமாம். எங்கள் எதிரில் அமர்ந்திருந்த பார்வையற்ற பெண் கைகளைக் குவித்து முதலில் உணவை வணங்கி னாள். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக எடுத்து சுவைத்துச் சாப்பிட்டாள். அவள் முகத்தில் சாந்தியும் அமைதியும் படிந்திருந்தது. சாப்பிட்டு முடித்ததும் சமையல் செய்தவர்களுக்கும், பரிமாறியவர்களுக்கும் கைகூப்பி நன்றி சொல்லியபடி வெளியே வந்து மர நிழலில் உட்கார்ந்தாள். அவளது வாயிலிருந்து அருட்பா திரும்பவும் கசிந்து வரத் துவங்கியது. ரஞ்சனால் இந்த காட்சியை நம்ப முடியவில்லை. அவளிடம் சென்று, ‘வள்ளலாரின் கவிதைகளுக்கு உங்களுக்கு அர்த்தம் புரிகிறதா?’ என்று கேட்டான். அவள் சிரித்த படியே, ‘அன்புதானே பாடலுக்கு ருசியைத் தருகிறது. சொற்கள் நாக்கில் இருந்து பிறப்பதில்லை. இதயத்திலிருந்து வருகிறது!’ என்று கையை மார்புக்கு நேராகக் காட்டினாள். ரஞ்சன் தலையாட்டியபடி நின்றான்.
Ôஉலகம் முழுவதும் வன்முறையும் அழிவும் பெருகிவரும் வேளையில் மௌனமாக ஒரு கிராமம் எப்படி அன்பைச் செயல்படுத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறது! நூற்றாண்டு களாக தொடர்ந்து வரும் இந்த அறம், தமிழ் மக்களை எவ்வளவு மாற்றியுள் ளது?’ என்று ரஞ்சன் கேட்டான். நான் அமைதியாக, ‘இங்கு அளிக்கப்படும் உணவு முழுவதும் வள்ளலாரின் அறக்கோட்பாடுகளின் மீது விசுவாசம் கொண்டவர்கள் அளிக்கும் நிதியிலிருந்துதான் சாத்தியமாகிறது. இங்கு சமைப்பவர்கள்கூட ஒரு சேவை யாகத்தான் இதைச் செய்கிறார்கள். உண்மையில் இவர்கள் யாவர் மனதிலும் அன்பும் கருணையுமே நிரம்பியிருக்கிறது!’ என்றேன்.
ரஞ்சன் என் கைகளைப் பிடித்தபடி, ‘சரியான இடத்துக்குதான் என்னை அழைத்து வந்திருக் கிறாய்’ என்றான் உணர்ச்சிப் பெருக்குடன்.
‘உன்னை மகாபலிபுரத்துக்கோ, தஞ்சை பெரிய கோயிலைப் பார்ப்பதற்கோ அழைத்துப் போவதைவிடவும் இங்கே அழைத்து வர விரும்பியதற்குக் காரணம் புரிந்ததா?’ என்றேன். புன்னகைத்தான் ரஞ்சன்.
‘பசியை வெல்வதுதான் மனிதனின் நெடுநாளைய போராட்டம். அதைத்தானே இலக்கியங்கள் பிரதிபலிக்கின்றன. நமது குழந்தைகளை தீம் பார்க்குகளுக்கும், நவநவீன ஷாப்பிங் சென்டர்களுக்கும், ஏரியில் படகு விடுவதற்கும் அழைத்துப் போவதைவிடவும், அவர்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடம் வடலூர்தான். பள்ளிக்கூடம், கல்வியைக் கற்றுத் தருவதைப் போல, அன்னசாலை அன்பையும் கருணையையும் கற்றுத் தருகிறதில்லையா. அதை நேரில் கண்டால் அவர்களே புரிந்துகொள்வார்கள்!’ என்றேன்.
வீடு திரும்பிய இரவில், ரஞ்சன் என்னிடம் கேட்டான்... ‘தவறாக எடுத்துக்கொள்ளாதே. இப்படி உணவு அளிப்பதன் வழியே இங்கே மதமாற்றம் ஏதாவது செய்ய முயற்சிக்கிறார்களா?’. நான் சிரித்தபடியே சொன்னேன்... ‘இல்லை அவர்கள் மனதை மாற்றுவதற்குத்தான் முயற்சிக்கிறார்கள்!’
ரஞ்சன் அதை ஏற்றுக் கொண்டபடி, ‘கவிஞர்கள் கனவு காணுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கவிஞனின் கனவு இங்கே நிஜமாகியிருக்கிறது. வள்ளலார் ஒரு யூனிவர்சல் பொயட். கிரேட் ஹியூமன்!’ என்றபடி, தனக்கும் ஏதாவது உதவி செய்ய ஆசை இருக்கிறது என்றான்.
பசியை எதிர்கொள்வது மனிதனின் மகத்தான சவால்! பசியின் முன்பு மனிதன் மிருகம் என்ற பேதமில்லை. பசி மட்டுமே மனிதனைத் தொடர்ந்து இயங்க வைத்துக்கொண்டு இருக்கிறது. பசி அவமானத் தைப் பற்றி கவலைப்படாது. எதை நாம் தேவையற்றது என்று தூக்கியெறி கிறோமோ, அதை உணவாக எடுத்து உண்கிறான் மற்ற வன். பசித்த மனிதனுக்கு உணவைத் தவிர, வேறு கடவுள் கிடையாது!
கு. அழகிரிசாமி, தமிழ்ச் சிறுகதைக்கு புதுப்பொலிவு தந்த எழுத்தாளர். இசையும் இலக்கியமும் கற்றுத் தேர்ந்தவர்; மனித உணர்ச்சி களின் அடியாழங்களைத் தனது எழுத்தில் பதிவு செய்தவர்; பாவைகளைப் போல மனிதர்களை உணர்ச்சி தன் விரல் சொடுக்கும் பக்கமெல்லாம் ஆட்டிவைப்பதைஇவரது கதைகள் வெளிப்படுத்து கின்றன. பசி யைப் பற்றிய இவரது சுயரூபம் என்ற கதை தமிழ் இலக்கியத்தில் எப்போதும் பிரகாசிக்கும் அரிய கதைகளில் ஒன்று. சிறந்த இலக்கியங்கள் யாவும் மனித வீழ்ச்சியைத்தான் கருப்பொருளாகக் கொண்டு இருக்கின்றன. இக்கதையும் வீழ்ச்சி அடைந்த ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாட்டினைப் பற்றியதுதான்.
கதை வேப்பங்குளம் என்ற கிராமத்தில் நடக்கிறது. மாடசாமித்தேவர் பழம்பெருமைமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா வீர சாகசங்கள் செய்து காட்டியவர். வைராக்கியத் துக்குப் பெயர்போனவர். அப்பேர்ப்பட்ட மனிதரின் பேரனான மாடசாமித்தேவரை இப்போது வறுமை பீடித்துக்கொண்டுவிட்டது. வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. கடன் கொடுத்தவனுக்குப் பயந்து தலைமறைவாக அலைய வேண்டியுள்ளது. ஒரு நாள் பசியோடு ஊரைவிட்டு விலகிய பாதையில் நடந்து, பேருந்து நிறுத்தத்தின் முன் உள்ள முருகேசம்பிள்ளையின் பலகாரக் கடையின் முன் வந்து நிற்கிறார். முருகேசம்பிள்ளை, அவர் வந்ததைக் கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவே இல்லை. மாடசாமித்தேவர் இரண்டு நாளாகப் பட்டினி. முருகேசம்பிள்ளையின் தயவு இருந்தால் சாப்பாடு கிடைக்கும் என்பது போல அவரை நலம் விசாரிக் கிறார். முருகேசம்பிள்ளைக்கு மாடசாமித்தேவருடன் பேசவே பிடிக்கவில்லை. பிடிகொடுக்காமல் பேசுகிறார். காலையிலிருந்து மாலை வரை தேவரும் முருகேசம்பிள்ளை என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் போடுவதும், மனதுக்குள்ளாக ‘இந்த நாய்க்கெல்லாம் நாம் ‘ஆமா’ போட்டு வாழ வேண்டியதாகி விட்டதே’ என்று கோபம் கொள்வதுமாகக் காத்துக்கிடக்கிறார்.
இரவு கடையை அடைத்து வைத்தபோது கொஞ்சம் வடையும் இட்லியும் மீதமாகிக் கிடப்பதைக் கவனிக்கிறார். அதைக் கேட்கலாமா வேண்டாமா என்று பசியோடு பார்க்கையில் முருகேசம் பிள்ளை இட்லியை ஒரு கூடைக்குள் போட்டு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்படத் தயாராகிறார். இதற்கு மேலும் கேட்காமல் இருந்தால் சரியில்லை என்பது போல, தயக்கத்துடன் மீதமான இட்லியை தனக்குக் கடனாகத் தரும்படி கேட்கிறார் மாடசாமித்தேவர். முருகேசம் பிள்ளை ஆத்திரத்துடன், ‘இதற்குத்தான் காலையிலிருந்து கடையைச் சுற்றி வந்தீரா... உமக்கெல்லாம் கடன் கிடையாது!’ என்றபடி நடக் கிறார். மாடசாமித்தேவரோ, ‘மீதமான இட்லிதானே, தந்தால் என்ன?’ என்று சமாதானம் பேசுகிறார்.
முருகேசம்பிள்ளைக்குக் கோபம் வந்துவிடுகிறது. ‘ஏன்... வீட்டுக்குப் போய் சுடச்சுட தோசை சுட்டுச் சாப்பிடும். உன்னை யாரு வேண்டாம்னு சொன்னது?’ என்று சொல்லவே, மாடசாமித்தேவர் காயமடைகிறார். பேச்சு நீண்டு ஒரு இடத்தில் மாடசாமித்தேவரின் தாத்தாவை முருகேசம்பிள்ளை கேலி செய்ய, அந்த இடத்திலே அவர் மீது பாய்ந்து சண்டை போடுகிறார். இருவரும் கட்டி உருள்கிறார்கள். முருகேசம்பிள்ளை, மாடசாமியை அடித்துப்போட்டு விடுகிறார். பசியால் வலுவிழந்து மாடசாமித் தேவர், ‘இப்படி சண்டைபோட்டுவிட்டோமே, இனி இட்லி கிடைக்காதே’ என்று நினைத்து, ‘ஏதோ பசியில் தெரியாம சண்டை போட்டுட்டேன். மிஞ்சின இட்லியை தந்திருங்க’ என்று கெஞ்சுகிறார். ‘அப்படி உசிரை வளக்கணுமாக்கும். தின்னு தொலை’ என முருகேசம்பிள்ளை கூடையிலிருந்து இட்லியை எடுத்து வீசுகிறார். மாடசாமித்தேவருக்கு திரும்பவும் கோபம் அதிகமாகி, அவர் மீது பாய்ந்து கட்டி உருள்கிறார். இப்போதும் முருகேசம்பிள்ளைக்குத் தான் வெற்றி. அடிபட்டு கீழே விழுந்து கிடந்த மாடசாமித்தேவர் எழுந்துகொள்ளவில்லை. ஆனால், Ôஅடிபட்டாலும் பரவாயில்லை. நாய் எச்சில் பண்டங்களைத் தின்பது போல, அவர் போட்ட மிச்சத்தைத் தின்னாமல் கௌரவமாகத்தானே இருக்கிறோம்’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்கிறார் என்பதில் முடிகிறது கதை.
பிச்சைக்காரர்களே, ‘இன்று அம்மா பசிக்கிறது’ என்று குரல் தராமல் மௌனமாக கைகளை நீட்டி யாசகம் கேட்பதற்குப் பழகிவிட்ட சூழலில், பசியை அடக்கிக்கொள்வதும், மறைத்து வாழ்வதும்தான் நாகரிகம் என்று கருதப்படுகிறது.
உங்கள் பேருந்தில், மின்சார ரயிலில், அலுவலகங்களில், தெருவில் பசியை அடக்கிக்கொண்ட சிலர் எப்போதுமே கூட வருகிறார்கள். அவர்கள் பசி தங்களது சுயமரியாதையைத் தின்று விடக் கூடாது என்று வைராக்கியமுடன் இருக்கிறார்கள். ஆனாலும் பசி, தன் நூறு கைகளால் அவர்கள் உடலைப் பிசைந்துகொண்டே இருக்கிறது. வெகு அரிதாகவே மனிதன் பசியை வெல்கிறான். பெரும்பாலும் பசிதான் மனிதனை வென்றுவிடுகிறது!
சாகித்ய அகாதமி விருது பெற்ற கு. அழகிரிசாமி 1932&ல் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இடைச் செவல் கிராமத்தில் பிறந்தவர். இந்தக் குக்கிராமம் இரண்டு சாகித்ய அகாதமி எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை கொண்டது. கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி என்னும் இக்கிராமத்தின் இரண்டு நண்பர்களும் சாகித்ய அகாதமி விருது பெற்றது பெருமைக்குரியது. பத்திரிகைகளில் பணியாற்றிய கு.அழகிரிசாமி நல்ல மொழிபெயர்ப்பாளரும் கூட. இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் முறையாக இசை கற்றுக் கொண்டவர். ஒன்பது சிறுகதைத் தொகுதிகளும், இலக்கியக் கட்டுரைகள் மூன்றும் வெளியாகியுள்ளன. ராஜா வந்திருக்கிறார். அன்பளிப்பு போன்ற இவரது சிறுகதைத் தொகுதிகள் மிக முக்கியமானவை. மலேஷியாவில் சில காலம் பணியாற்றி உள்ளார் கு.அழகிரிசாமி. இவரது கதைகள் மக்களின் பேச்சு மொழியில் சரளமாகவும் உணர்ச்சிப் பெருக்கோடும் கூடியவை என்பதே அவற்றின் சிறப்பம்சம். எதிர்பாராத நோய்மையின் காரணமாக இளவயதிலேயே மரணமடைந்தபோதும் இன்றும் தமிழ் சிறுகதையுலகுக்கு வழிகாட்டியாகப் பேசப்படும் ஓர் அபூர்வ கலைஞர் கு.அழகிரிசாமி.
*****
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
1 கருத்துகள்:
நல்ல பதிவு. எஸ்.ராவின் அறிமுகப் படலமே ஒரு சிறுகதையைப் போல்தான் இருக்கிறது.
www.jekay2ab.blogspot.com
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.