Showing posts with label பிரமிள். Show all posts
Showing posts with label பிரமிள். Show all posts

Sep 29, 2017

மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்

தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி  போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில்  நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோணத்தில் தம் மனப்போக்கிற்கிசைந்த ஒரு சிலரின் கோஷ்டியில் சேர்ந்து, தெளிவுகாண அநேக விஷயங்களைப்பற்றி விவாதித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை, 1933ல் மகாமகம் வந்தது. அதற்காக ஒரு கண்காட்சி நடந்தபோது, கதர் ஸ்டாலுக்கு வந்திருந்த பி.எஸ்.ராமையாவைச் சந்தித்தார் விவாதத்தில் பிரிதி உள்ள மெளனியிடம், பிஎஸ்ஆர். எதையேனும் கண்டிருக்கலாம்: மெளனியே எதிர்பாராதபடி, "நீங்கள் சிறுகதைகள் நன்றாக எழுத முடியுமென்று நினைக்கிறேன், "மணிக்கொடி" பத்திரிகைக்கு எழுதுங்கள்" என்றார் மெளனி, இதற்கு

அந்த வேளையில் என்ன சொன்னாரோ, எப்படி இதை எடுத்துக்கொண்டாரோ தெரியவில்லை. ஆனால் 1934க்கும் 35க்கும் இடையில், இப்போதும் அவர் வசமுள்ள குறிப்புப்புத்தகங்களில், அவ்வப்போது பளிரெனத் தோன்றியவற்றுடன் சிறுகதைகளுக்கான குறிப்புகளையும் எழுத ஆரம்பித்தார் தொடர்ச்சியாக, 1934ஆம் வருஷ இறுதியில் ஆறேழு சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் ஏதோ வேகத்தில் எழுதினார். இதுதான் ஆரம்பம்
மெளனியைப் புதுமைப்பித்தன், "சிறு கதையின் திருமூலர்" என்று
குறிப்பிட்டது. திருமூலரைப்பற்றி ஐதீகமாகச் சொல்லப்படுவதுபோல், மெளனியும் ஆண்டுக்கு ஒரு கதை எழுதியவர் என்பதற்காக அல்ல என்று, அவ்வொற்றுமை இல்லாததால், இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது. திருமூலர், மிக எளிய பதங்களையும் பதச்சேர்க்கைகளையும் கொண்டு உயர்ந்த தத்துவங்களைச் செய்யுளில் வடித்தாற்போல, மெளனியும், "கனமான விஷயங்களை ஏற்க மறுக்கிற மெலிந்த சொற்களில்", உந்நத அநுபவங்களை எழுப்பியிருக்கிறார் என்ற ஒற்றுமைக்காகவே, பு:பி. அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆனால், தமது எழுத்தின் இந்தத் தரத்தைப் பற்றி, மெளனிக்கே ஆரம்பத்தில் ஒரு நிர்ணயம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. "இலக்கியத்தைச் சாதிக்கும்" நோக்கம், அந்தவரையில் அவருக்குத் தோன்றவும் இல்லை. அவரே சொல்வதுபோல், "பிரசுரிக்கும் நோக்க(மு)ம். இல்லை. எழுத முடிகிறதா என்று பார்க்கும் நோக்கம் போலும்" இலக்கிய ரசனை மிக்க நண்பர் ஒருவர் அக்கதைகள் பற்றிச் சொன்ன உயர்ந்த அபிப்ராயமோ, மெளனி எதிர்பார்த்ததை விடக் "கொஞ்சம் திடுக்கிட இருந்தது" அவர் ஆலோசனைப்படி, பி.எஸ்.ஆரைத் தமக்கு அறிமுகப்படுத்திய வாக்கில் நண்பரிடம் கதைகளை அனுப்பி, சென்னையில் "எந்தப் பத்திரிகை ஆசிரியரிடமாவது காட்டி", போடத் தகுதியுள்ளதாயின் போடும்படி எழுதினார், வக்கீல் நண்பர், மணிக்கொடியுடன் தொடர்புள்ள பிஎஸ்ஆரிடம் கதைகளைத்தந்தார். இதிலிருந்து, மெளனிக்கும் மணிக்கொடிக்கும் இருந்த "தொடர்பை"யும் நாம் நிதானிக்கலாம். 1936 பெப்ரவரி தொடக்கம், மெளனி கதைகள் அவ்வப்போது வெளியாகின. அவரது பெரும்பாலான கதைகளைத் தாங்கிவந்த சிறப்பு மணிக்கொடிக்கு உரியது. மௌனி, இதர கதைகளுடன் அனுப்பிய குறுநாவல் பிரசுரிக்கப்படவில்லை; அதன் பிரதியும் காணாமற் போயிருக்கிறது. மெளனி அது பற்றிச் சொன்னதைக் கொண்டு பார்த்தால், அது அவரது தரமான கதைகளின் வரிசையில் வராதது என்று தெரிகிறது.

சிறுகதைத் துறையில், அதுவும் முதல் சந்திப்பில் பி.எஸ்.ஆர் சொன்னதை மனதில் வைத்துத்தானோ என்னவோ, "எழுதிப்பார்த்து" எழுத்தாளரான மெளனி, தமது ஆரம்ப நாட்கள் தொட்டுச் சங்கீதத்திலும் ரசிகராக ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில், பிடில் வித்வானான ஒரு நண்பரோடு மௌனியின் நெருங்கிய ஈடுபாடும் ரசனையும் சர்ச்சைகளும் தான், அவர் கதைகளில் சங்கீதம் வகிக்கும் இடத்திற்கு ஒரு அந்தரார்த்தம் கொடுப்பதற்கு காரணமானது போலும் அவர் எழுத்து சொல் ஜாலத்தை நிராகரித்துப் பிறந்தது.

பிடில் சங்கீதமும் எழுத்தும் தற்செயலான விளைவுகளுக்கு இடம் தருவன. இதனால், கலைஞனின் உண்மையான மனநிலைகள், உணர்வுகள் போன்றவற்றுக்குக் கட்டுப்படாமல், தற்செயலான தினம்வர வளைவிலோ, படிமங்களிலோ தடுமாறி, பிடில் வாசிப்பும் எழுத்துக்கலையும் செயல்படமுடியும். இந்தத் தற்செயல் விளைவுவேறு, தன்னை மறந்த வேகத்தில் பிறக்கும் படைப்பு வேறு என்பதை பெரும்பாலான கலைஞர்கள் மறந்து விடுகிறார்கள். முதிர்ந்த சில கலைஞர்கூட, இவ்விருதுறைகளிலுமே, தற்செயல்  விளைவுகளை விஸ்தரித்துக்கை தட்டலையும் கைதட்டலையும் வாசகரஸனையையும் பெற்று விடுகிறார்கள்.

இவ்விபத்துக்களையே அதுசரித்துப் பிறக்கும் கலை, கைதட்டலையும் ஆரவாரிப்பையும் தான் பெறமுடியும், ஆனால், "கைதட்ட வைப்பதோ, "பேஷ், பேஷ்" என்று ஆரவாரிக்க வைப்பதோ அல்ல - நீண்ட பெருமூச்சுக்களை உண்டாக்குவதுதான் உயர்ந்த சங்கீதம்" என்று, மெளனி ஒருதடவை சம்பாஷணையில் குறிப்பிட்டிருக்கிறார். பிடில் போன்ற ஒரு வாத்யத்தில், சாஸ்திரக் கட்டுமானங்களின் முடுக்கப்பட்ட ஓட்டத்தில் சில தற்செயல் விளைவுகள், கலைஞனின் உண்மையான உணர்ச்சிகள் போன்றவற்றுக்குக் கட்டுப்படாமல் பிறப்பதுண்டு. இது ஒரளவு எழுத்துத் துறைக்கும் பொருந்தும். இந்த தற்செயல் விளைவு, கலைஞனின் மனநிலையிலிருந்து வேறுபட்டதாக இருக்க, அந்த மனநிலையாலேயே ஆளப்பட்டு, பளீரெனப் பிறக்கும் சங்கீதமும் எழுத்தும் உண்டு. இப்படித் தன்னை மறந்த வேகத்தில் பிறப்பதற்கும் தற்செயல் விளைவுகளுக்கும் இடையே உள்ள வேறு பாட்டை, தமிழில் சில பழம் பெரும் எழுத்தாளர்கள் கூட உணரவில்லை: இன்றும், கைதட்டலையும் ஆரவாரிப்பையும் பெறும் அவர்கள். அந்தத் தற்செயல் விளைவுகளை விஸ்தரித்து எழுதுபவர்கள்தான் என்பதை, அவர்களது எழுத்துக்கள் கைதட்டலையும் ஆரவாரிப்பையும் மட்டுமே பெறுகின்றன என்ற ஒன்றன் மூலமே நிரூபிக்கலாம். மெளனியோ, நீண்ட பெருமூச்சுகளை எழுப்புபவர்.

சாஸ்திரப் பயிற்சி, மனநிலைகளை வெளியிடாமல் தன் போக்கிற்கு விளைவுகளை உண்டாக்கும் என்பதால், அத்தகைய பயிற்சி நிலையிலேயே தேங்குபவரை "விரல் ஞானஸ்தன்" என்பதுண்டு: எழுத்துத்துறையிலும் அத்தகையவர்களை இப்படிக் குறிப்பிடலாம் இவர்கள், தற்செயல் விளைவு நேராத சமயத்தில்தான், ஒரு "விரல் ஞானஸ்தன்” சாஸ்திரீயமாகத் தான்  கற்ற ஸ்வர உருப்படிகளை மட்டுமே வாசிப்பதுபோல், காது புளித்த லட்சியங்களை உண்டாக்குவதும் தத்துவச்சரடு திரிப்பதும்
அடுத்தது, மெளனி நடப்பியல்பு"க்குப் புறம்பான வகையாக எழுதுபவர் என்பது ஆனால் நடப்பியல்புக்கு "இசைய" எழுதுபவர்களில் சிலர் சாதிக்க முடியாத மனநிலைப் போக்குகளை, மெளனிதான் இயல்பானதாகத் தென்படும்படி சாதிக்கிறார் ஆளில்லா வேளையில் வீடு பெருக்குபவளை வரச்சொல்லிவிட்டு, அவள் வந்ததும் அந்த

இக்கட்டான சமயம் பார்த்து "மனம் மாறி" விடுகிறதாக எழுதியுள்ள ஒரு கதையுடன், மெளனியின், 'மனக்கோலத்தை ஒப்பிட வேண்டும். நடப்பியல்பு என்ற அளவில் இயல்பானது, அந்த இக்கட்டான நிலையில் செய்யத் திட்டமிட்ட "கெட்ட” காரியத்தை நிறைவேற்றுவதுதான். மனம் மாறுவது, மனோதத்துவ இயல்பு தென்படும் வகையில் சித்தரிக்கப்படாத அளவில், அம்மனமாற்றம் அக்கதையின் நடப்பியல்பு அல்ல. அந்த இயல்பைச் சித்தரிக்கும் சிரமத்தைத் தவிர்த்து விட்டு, தத்துவச் சரடு திரித்தேபாத்திரத்தின் மனதை மாற்றுவது, வில்லனைக் காரால் அடித்துத் தீர்த்துவிடுவது போன்ற ஒரு சுளுவான காரியம்தான். மெளனி, சுளுவான தத்துவச்சரட்டை அனுமதிப்பதே இல்லை, பாத்திரத்தின் இயற்கையையே கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டி எழுப்புகிறார்,

கேசவன் என்ற ('மனக்கோலம்") அப்பாத்திரம், மனம் மாறுவதற்கான காரணமும் ஏற்கனவே தென்பட ஆரம்பிக்கிறது. அவன் கெளரியை, 'ஒன்றிலும் கட்டுப்படாது, தனியே எட்டி நின்று உற்றுப்பார்க்கும் பெணிமையாகக் காண்கையிலேயே விரும்புகிறான். பெண்மை, அவன் வாழ்வுக்கு லட்சியமாகும். அவளது கருவிழிகள் என்பனவெல்லாம், உடலுறவுக்கும் அப்பாற்றபட்ட அம்சங்கள். (ஆனால், உடலுறவையும் அவன் சரீரத்தின்  தவிர்க்க முடியாத இயல்பால் நாடுகிறான் என்பதுகூட, தன்னறையில் அவளை அவன் தேடுவதில் சூசகமாக காட்டப்படுகிறது) இருந்தும் இன்னொருவரின் மனைவி என்று (உடலளவில்?) கட்டுப்பட்டவளாக, அவள் அருவருப்பையே அளிக்கிறாள். எனவேதான், கெளரி தன்னை, அதுவும் தன் கற்பனையிலேயே பின்னிருந்து அணைத்ததாக உணர்கையில், அவன் அருவருப்படைந்து 'மனமாற்றம்' கொள்கிறான். இங்கு, கெளரியை நேரில் (நடப்பியல் உலகில்?) அவன் அறைக்குக் கொண்டு வந்து அவ்வருவருப்பை உண்டாக்காமல், அவன் கற்பனையில் இதை நிகழ்த்தியதற்காகவும், மெளனியை நடப்பியல்புக்குப் புறம்பானவர் என ஒருவர் வாதிக்கலாம். அவ்விதமானால், அவளைக் கொண்டுவரும் வகையாக நிகழ்ச்சிகளை ஏற்கெனவே எழுப்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் அதனால் அவள் உணர்வுகள் எப்படி ஆகின்றன என்று சித்தரிக்கும் பொறுப்பையும் கொணர்ந்து, சிறுகதைக்கான கூர்மையை அழிக்கநேரும். ஆனால் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி உண்மையில் மனப்போக்குகளால் ஆளப்பட்டு நிகழ்வதால், மனநிலைகளின் இயல்புக்குத் தான் முதலிடம் தரவேண்டும். அதைத் தந்து விட்ட அளவில், புற நிகழ்ச்சிகளின் உதவி அங்கு வேண்டியதில்லை. இதுதான், மெளனியின் கதைகளை மற்றையவர்களினுடைய வற்றிலிருந்து பிரித்துக்காட்டும் அம்சம். அவர் நடப்பியல்புக்குப் புறம்பானவர் அல்ல. மனப்போக்குகளின் நடப்பியல்பையே, அதுவும் பரிபூரணமாகச் சித்தரித்துவிட்டு ஒதுங்குபவர். இது அவர்சாதனை மெளனியின் கருத்தில், நடப்பியல் என்பது புற நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, அப்புறநிகழ்ச்சிகள் மனிதர்களோடு சம்பந்தப்பட்டதால், அவர்களின் மனப்போக்குகளை உரியமுறையில் சித்தரிக்கும் மளவுக்குத்தான், கதைகளும் நடப்பியலானவையாகும். புற நிகழ்ச்சிகள், நிலைமைகன் என்பவற்றைப் பற்றி, மெளனி 'கண்மூடித்தனமாக இருக்கவில்லை நிகழ்ச்சிகளையும் நிலைமைகளையும் சிக்கனப்படுத்தி இருக்கிறார் என்பதே சரி இந்தச் சிக்கனமான எல்லைக்குள்ளேயே, அவர் வாழ்க்கையின் அகண்டத்தை அங்கங்கே சிதறி விழும் வரிகள் மூலம் எழுப்பிவிடுகிறார். இதை அவரது கவித்வம் என்றே கூறவேண்டும் இந்த அம்சத்தை, 'உயிர்வாழ்ந்த ஒவ்வொரு கனமும் ஒரு புரியாத புதிராக அமைகிறது விடை கண்டால், புரிந்த நிகழ்ச்சியும் மறுகணம் இறந்ததாகிறது' என்று சிந்தனைப் பொருளாகவும் 'ஒன்றிலும் கட்டுப்படாது தனியே எட்டி நின்று உற்றுப் பார்ப்பதே, பெண்மையின் பயங்கரக்கருவிழிகள்தான்' என்று கவிப்பொருளாகவும், அவரது சுமாரான கதைகளின் வரிசையிலுள்ள ' மனக்கோலத்திலேயே காணலாம். இவற்றை உணராது, வேலைநிறுத்தம் போன்ற புற நிகழ்ச்சிகளையும் அதற்கான நிலைமைகளையும் சித்தரிக்காததுக்காக, அவர் வாழ்க்கையைப் பற்றிக் 'கண்மூடிக்" கொண்டவர் என்றதுடன், ஃபிராய்டின் வழியில் ஆராயப்படத்தக்கவர் என்றும் அவரது ரசிகர்களே கூற நேர்ந்திருக்கிறது. மேற்சொன்ன வீடுபெருக்குபவளைப்பற்றிய கதையில், கதாநாயகன் மனம்மாறுவதைக்கூடப் 'பிராய்டின் வழியில் ஆராயலாம் என்று நாம் திருப்பிச் சொல்லலாம். சுயநினைவோடு தத்துவமும் லட்சியமும் பேசுபவர்களும், 'பிராய்டிடம் அகப்படுபவர்கள்தாள்.

II
மெளனியின் இலக்கிய முன்னோடிகள் என்று, தமிழில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லி விடமுடியாது. வசன அமைப்புகளிலிருந்து கதையம்சம் வரை, வேறொருவருடனும் அடையாளம் காட்டமுடியாத தனித்தன்மையை அவர்கலை விளக்குகிறது. “மறுமலர்ச்சி" என்ற பிரயோகத்தை (பதினாறாம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் பல கலைத்துறைகளிலும் அறிவுத்துறைகளிலும் புத்துயிர்காட்டி உலகையே பாதித்த 'மறுமலர்ச்சி'யை மனதில் கொண்டு, அச்சொல்லை இங்கும் பிரயோகித்தார்களாயின், அது எவ்வளவுக்கு பரிதாபகரமான தப்பர்த்தங்களைக் காண்பிக்கும்!) 1930க்களின் இறுதியில் சில தமிழ் எழுத்தாளர்கள் உச்சரித்தபடி, அத்தகைய அவர்களது லட்சியம் எதையும் ஏற்றுக்கொண்டு, இலக்கிய மணிக்கொடி பத்திரிகைக்கு மெளனி எழுதியவரல்ல என்பதை, அவருக்கு மணிக்கொடியுடன் ஏற்பட்ட தொடர்பின் விதமே காண்பிக்கிறது. அதோடு, அக்காலத்தில் இயங்கிய இலக்கிய சக்திகள்" என்று குறிப்பிடப்படுபவர்கள் எவராலும்கூட, மெளனி ஆளப்படவில்லை. இந்நிலையில், 'மணிக்கொடி கோஷ்டியுடன் அவரையும் அடையாளம் காட்டுவது எவ்வளவு முரணானது! அவ்வப்போது போய்வந்த தொடர்பைத் தவிர, மெனளிக்குச் சென்னையுடனேயே தொடர்பில்லாது இருக்க, மணிக்கொடியிலேயே நெருங்கிய தொடர்புகொண்ட புதுமைப்பித்தன்கூடத் தம்மை மணிக்கொடி கோஷ்டியினர் என்று குறிப்பிட்டால் சண்டைக்கு வந்து விடுவாராம். அப்பத்திரிகையில் எழுதியவர்களிடையே, மேதாவிலாசம் பொருந்திய எழுத்தாளர்கள் மெளனியும் புதுமைப்பித்தனும் மட்டுமே என்பது என் அபிப்ராயம். அவர்கள் அளவுக்கு மேதைகள் என்று இதுவரை, அவர்களுக்குப் பிறகும் வேறொறுவரையும் குறிப்பிட முடியாது. பாரதி இலக்கியத்தின் 'வாரிசுகள்" என்ற பிரயோகத்துக்குப் புதுமைப்பித்தன் எப்படித்தம்மை ஈடுகட்டிக்கொண்டாரோ தெரியவில்லை. இதரமணிக்கொடி - மறுமலர்ச்சிக் காரர்களோ, இந்த "பாரதி பரம்பரை" என்ற பிரயோகத்தையும் நாணயமாக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால், மெளனி இத்தகைய முத்திரை எதையும் ஏற்கமறுப்பதோடு, பாரதிகலையின் 'வாரிசாக மெளனி கலை பிறக்கவில்லை என்பதையும் நாமாகவே காணமுடிகிறது.

மெளனி ஒரு பெரிய படைப்பாளி என்ற அளவில், பண்டிதத் தனமானவர் அல்ல எனச் சொல்ல வேண்டியதில்லை அவர்சொற்பிரயோகங்கள், இந்த 'பாரதி பரம்பரையில் வராததால் அவரைப் பணடிதத்தனமானவரென்பது அபத்தமானது. போவது' என்றில்லாமல் சென்றது என்று மட்டுமல்ல, நகைத்தல்" என்பது போன்ற பழைய சொற்களைக்கூட அவர் உபயோகிக்கிறார். இதன்காரணம், பாரதியின் கவிதையிலுள்ள தொனியிலிருந்து மாறுபட்ட தொனியில் அவர் சிறுகதைகள் பிறப்பதாலாகும். உதாரணமாக, பின்வரும் மெளனி வசனத்தில் உள்ள நகைத்த' - சென்றது' என்ற சொற்களை நீக்கி, ' சிரித்த, போனது' என்ற சொற்களைப் போட்டுப் படித்துப்பார்த்தால், தொனியில் மாற்றமும் கீழிறக்கமும் தென்படக்காணலாம். "அந்த இருள் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளிகொண்ட ஏதோ ஒன்று உருவாகி எட்டிய வெளியில் மிதந்து சென்றது" (மனக்கோலம்) உயர்ந்த மனவெழுச்சியினர் வசப்பட்ட தொனிக்காகத்தான், இச்சொற்கள் பிரயோகிக்கப் படுகின்றன. ஆனால், மாறாட்டம்' போன்ற கீழ்தளத்து தொனியுள்ள கதைகளில், கொச்சையையும் மெளனி உரியபடி உபயோகிக்கின்றார்  எனக்காணலாம்.

III
மெளனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது சொற்களின் அர்த்தத்தோடு, சிலவேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும்கூட அவர் கவனத்தில் ஏற்கிறார். "எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?" (அழியாச்சுடர்) என்ற வரியில், "எவற்றின்" என்ற சொல் தவறு, "எவைகளின்" என்பதே சரி என ஒருவர் மெளனியிடம் சொன்னாராம் மௌனி, அச்சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுகிறது என்றார் எவற்றின்' என்ற சொல்லின் அழுத்தமான சப்தமே, அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது எனக் காணலாம். தம் கதைகளில் பலவற்றை, பல தடவைகள் வேறு வேறு சொற்பிரயோகங்களுடன் திரும்பத்திரும்ப எழுதி, முக்கியமான இடங்கனைச் சீராக்கும் மெளனியைப்பற்றி, 'சரி - தப்பு' பார்ப்பவர்கள் கொஞ்சம் நிதானித்து தங்கள் அபிப்ராயங்களைச் சொல்வது நல்லது சொற்களைப்பற்றியே இவ்வளவு அக்கறை காட்டும் மெளனி கதைகளுக்கு இடப்பட்ட சில தலைப்புகள், சில கதைகளுக்குப் பொருந்தவில்லை, நினைவுச் சுழல்' என்பது போன்ற படிமங்கள் உவமை உருவகங்கள் செறிந்த ஆடம்பரமான பெயர்களைவிட, மாறுதல்" என்பது போன்ற பெயர்கள்தான் அவர் கதைகளுக்குப் பொருந்தும். ஏனெனில், தானாக இச்சொல் ஒரு மனக்கிளர்ச்சியையும் ஏற்படுத்திவிடாமல், கதையைப் படிக்கும்போதும் படித்து முடித்த பின்னும் ஏற்படும் உணர்வினால் நிரம்புவதற்கென, வெறுமையாகக் காத்து நிற்கிறது. "நினைவுச்சுழல்" என்பது போன்ற தலைப்புகளோ, தாமாகவே ஒரு உணர்வை எழுப்பி விடுவன கதையைப் படிக்கும் முன்பே, இவ்வுணர்வைக் கதையிலும் எதிர்பார்த்து நாம் தயாரகி விடுகிறோம். சில வேளைகளில், இப்படி எதிர்பார்த்தது நிறைவேறாமலும் போகும் மொத்தத்தில், நாம் மெளனி கதைகளில், பெயர்களைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டுத்தான் அவற்றைப் படிக்கவேண்டும் என்று சொல்லித்தோன்றுகிறது.

இதோடு, தமது கதாபாத்திரங்களின் பெயர்கள்கூட - கதையின் முக்கியமான ஓட்டத்தை மீறிச்சப்தம் போட்டு விடக்கூடாதே என்ற அக்கறையுடன்  பாத்திரங்களின் பெயர்களையும் சாமானியமானவையாகவே உபயோகிக்கிறார். சில கதைகளில், அவசியமில்லை என்று கானும்போது, பாத்திரத்துக்குப் பெயரே இராது. பெயர் இருப்பினும் இல்லாவிடினும், பெயர்கொள்ள, பாத்திரம் உருப்பெறுவதே அதிமுக்கியம் என்பதை அவர் உணர்ந்திருப்பது, இவ்விஷயத்திலே தெரியவரும்,

IV
மெளனி, பல விஷயங்களில் பிரச்சனைக் குரியவராகியிருக்கிறார். பொதுவாக, அவர் எழுதுவதே புரியவில்லை என்ற குற்றச்சாட்டு ஒன்று - தமது வசனங்கள் ஏதும் புரியவில்லையா என்று மெளனி கேட்கிறார் அல்ல, புரிய மறுக்கிற சில விஷயங்களை, அங்கங்கே எளிமையான வார்த்தைகளில் மடக்கிக் கொண்டுவரவே அவர் முயல்கிறார். அவ்விடங்களிலும் ஒரிரு வசனங்கள், அதுவும் மெளனியிடத்தே புதுப்பரிச்சயம் கொள்வோருக்குப் புரியாதிருக்கலாம் மற்றப்படி, அப்படி ஒன்றும் மெளனி வசனங்கள் புரியாதவை அல்ல அப்படியானால், தமது கதை எதுவும் புரியவில்லையா என மெளனி கேட்கிறார். அப்படியும் இல்லை. ஒரு அளவுக்கு அவையும்புரிவது போல்தான் தென்படுகின்றன. ஆனால், அதற்கும் மேல் அதில் புரிந்து கொள்வதற்கு ஏதுவும் இருக்கிறதா என்று சந்தேகிக்க அவை இடம் வைக்கின்றன. உதாரணமாக, "அழியாச் சுடர்" கதையில், ஒருவன்
ஒருத்தியிடம் அவளுக்காகத் தன்னால் எதையும் செய்யமுடியும் என்று சொலகிறான். ஒன்பது வருஷங்களின்பிள், பூரண வாலிபப் பருவத்தில் அவளை மீண்டும் சந்தித்தபோது, அவள் அவனை நோக்கி ஏதோ ஆக்ஞையிடுவதாக அவனுக்குத் தோன்றியது. அவள் என்ன செய்யச்சொன்னாள் என்பதே புரியாமல் அவன் மறைகிறான். இவ்வளவும் புரிகிறது. அவ்வளவுதான் அதில் புரிந்துகொள்ள இருப்பது என்கிறார் மெளனி இதற்குமேல், பாத்திரங்கள் ஏன் சாதாரணமானவர்களைப்போல் நடக்கவில்லை என்பது போன்ற கேள்விகளுக்கு மெளனி, பாத்திரங்களின் பைத்தியக்காரத்தனமான இயல்பை ஒத்த நடத்தையாகத்தானே அவர்களின் காரியங்கள் இருக்கும் என்கிறார். இது இடக்கான பதிலே அல்ல. உண்மையில், பாத்திரங்களே சாதாரண மனிதர்களாகவன்றி, மனக்கோளாறு பிடித்தவர்களாகவோ, குடிப்பவர்களாகவோ, உந்நதமானவர்களாகவோதான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.


மெளனியின் கதைகள், படிக்கும்போதே உயர்வகையான மனக் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இக்கிளர்ச்சிக்கான காரணங்களைக் கதைகளில் ஆராயும்போது, அவைகள் இப்படி அசாதாரணமான பாத்திரங்களைச் சுற்றி அமைவதாக காண நேர்கிறது என்பது, மேற்படி கூற்றுக்களுக்குக் காரணமாகலாம் ஆனால் திரும்பத்திரும்பப் படிக்கிறபோது, இந்த வெளிக் காரணங்களைப் பற்றிய சிரமம் பின்தங்கி மங்கிவிடுகிறது. ஒரு உயர்ந்த மனவெழுச்சியை உண்டாக்கிவிட்டுப் பாத்திரங்கள் மங்கி மறைந்துவிடவே தோன்றின என்ற உணர்வினால் இது நேரலாம் அதற்கப்புறம் பாது படித்தாலும் இந்நிலையே நீடிக்கக் காண்கின்றோம் உண்மையில், மெளனி கதைகள் திரும்பத்திரும்பப்படித்து அநுபவிக்கத்தக்கவை.

அசாதாரணமான பாத்திரங்களாகச் சிருஷ்டிக்கப்பட்ட பின், அவர்களது நடத்தையே அவர்களால் நிகழ்த்தப்படும் சம்பவங்களோகூட, அவர்களைப் பொறுத்த அளவில் நடப்பியல்புக்கு ஒத்தவைதான். குருவி 'ஏன் எங்கே" என்று கத்துவதும் கல்யாளி எழுந்து நின்று சுத்தாடுவதும், கதாபாத்திரங்களைப் பொறுத்த அளவில்தான். வேறு ஆசிரியர்கள் ஆடம்பரமான பெயர்கள், வார்த்தைகள், சிக்கலான நிகழ்ச்சிகள், தத்துவச் சுவடு, அரைவேக்காட்டு நனவோடை யுக்தி'களால் சாதிக்க முடியாத ஒரு தரிசனத்தை, மெளனி இந்த வகையாக அசாதாரணமான பாத்திர அமைப்பு என்கிற ஒரே தந்திரத்தின் மூலம், பிரமிக்கத்தக்க விதத்தில் சாதிக்கிறார் என்பதே, அவரது பாத்திரங்களின் அத்தன்மைக்குப்போதிய சமாதானமாகும்.

மெளனி தமது கதைகளில், பெரும்பாலும் நிகழ்ச்சிகளினாலன்றி கவித்துவத்தினாலேயே பாத்திரங்களிடையே உறவு போன்றவற்றைக் கொண்டு வருகிறார் பிரக்ஞை வெளியில்" கதையிலே, கதாநாயகன் காரில் மோதுண்டு வீழ்வதுபோன்ற புற நிகழ்ச்சிகள் வரும்போது, அவை மங்கலாக்கப்பட்டு பின்னொதுக்கப்படுகின்றன. மனக்கோலம்' என்ற கதையில், கேசவனுக்கும் கெளரிக்கும் இடையே உள்ளக் கவர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை மெளனி தேடவில்லை. கவித்துவம் நிரம்பிய மெளனியின் எழுத்தோட்டத்திலேயே இந்தப் பிணைப்பு அற்புதமாக, உதறமுடியாமல் நேர்ந்துவிடுகிறது அவள் கோலம் வரைவது, தன் மனம் சித்திரம் கொள்ள என்று கேசவன் கற்பிப்பதிலும், அவள் 'முகமே விழிகளென' இவனைப்பார்ப்பதிலுமே, மெளனி அவர்களிடையே வேண்டிய பிணைப்பைக் கொண்டுவந்துவிடுகிறார். 'பிரக்ஞை வெளியில்" கதையில், சேகரும் சுசீலாவும் ஒருவரைப்பற்றி மற்றவர் பேசிக்கொண்டிருந்து, கிட்ட நெருங்கியதும் பேச்சை நிறுத்தி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில், தாம் பேசியது மற்றவருக்குக் கேட்டிருக்குமோ என்ற அழுத்தத்தினால் ஏற்படும் பிணைப்பை வைத்தே, அறிமுகமானவர்கள் போன்று பின்னடி ஹோட்டலில் சந்தித்ததும் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த அளவிற்கு மெளனி கதைகளில், நிகழ்ச்சிகளின் இடத்தைக் கவித்துவமும் மனோதத்துவப்போக்குகளுமே நிரப்புகின்றன.

V
இக்கதைகளில் உயர்ந்தவை இவை என்று கட்டவோ, கதைகளை அலசிப்பார்க்கவோ நான் முயலவில்லை. உள்ளர்த்தம் பார்த்து பிச்சுப்பிடுங்குவது பரம்பரையாகத் தமிழ் இலக்கிய ரஷனையில் ஊறிவிட்ட ஒன்று போலும் ஒரு படைப்பு ஏதும் உள்ளர்த்தம் கொண்டிருக்கவேணும் என்றும் அதுதாள் ஆழமான எழுத்தாகும் என்றும் கருதிப் பழகிவிட்டோம். இதனால், மௌனியின் கதைகளைப்போல், படிக்கும் போதே உயர்ந்த அநுபவங்களை பண்பாக்கக்கூடிய படைப்புகளிையிட பிச்சுப் பிடுங்கி உள்ளார்த்தம் தேடி, அதன் பின்பே "ஆழமான" எழுத்து என்று கருதத்தக்கதாக இலக்கியம் பிரமை நம்மிடையே  என்ற  மாறியிருக்கிறது.

இலக்கியம், படிக்கும்போதே அனுபவிக்கத்தான். மௌனி கதைகள் இதற்குத் தகுந்த உதாரணங்கள் என்பதோடு, அவர்கதைகளில் கண் அர்த்தம், தத்துவச் சரடு ஏதும் கிடையாது அங்கங்கே தெளிவுபட்டு, எட்டி உயர்ந்து செல்லும் சிந்தனைப் பொருள்கள், வேகம் கொண்டவசனங்களில் வருகின்றன. இதுதான் அவரைப்பொறுத்த அளவில் ஆழமானது". அவ்விடங்களில் மெளனியின் வசனம் சிக்கலாவதும் உண்டு ஒன்றுக்கு மேற்பட்ட வசனங்களில் சொல்வதால் பொருளின் வேகம் குறைந்து விடும் எனக்கருதி, சொல்லவந்ததை ஒரு தரிசனமாகக் கண்ட கனத்தின் வேகத்தோடு, ஒரே வசனத்தில் சொல்ல முயன்றவைதான் அவை. உதாரணமாக, "இரவின் அந்தகார இருளைக்கான, ஒரு சிறு ஒளிப்பொறி போன்றாக முடியுமா இப்பகல் தீவட்டிகளின் ஒளிகாட்ட முயலுதல்கள்?" என்று 'மனக்கோட்டை'யில் வரும் வசனம். இதுவார்த்தை ஜாலம் அல்ல. வார்த்தை ஜாலம் என்பது பொருட்கிடை இல்லாத அபத்த வசனத்தைத்தான் குறிக்கும். மாறாக, இங்கே இது போன்ற வசனங்கள், பொருட்கிடையோடு தரிசன உணர்வும் செறிந்தவை.

தத்துவம், லட்சியம் போன்ற, கதைக்கு அப்பாற்பட்ட எதன் உதவியும் இன்றியே, மெளனியின் கதை வாசகர் மனதைச் சிறகு பெற்றதுபோல் உயர்வடைய வைக்கிறது. ஒரு காவிய இன்பத்தை அளிக்கிறது. இவ்வதுபவமே, ஆழமானதென்று சொல்லத் தக்க இலக்கிய அநுபவம்
கதையம்சத்தை ஆழமாக்குவதாலோ, அதன் உள்ளர்த்தத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும்" சாமத்தியமும் கண்டு பிடித்தோம்" என்ற கர்வமும்தான் வாசகரிடையே வளரும். இது, பண்டிதர்களிடமிருந்து இன்று சில விமர்சகர்கள் வரை பரவி, தமிழ் ரஸனையைப் பிடித்த ஒரு வியாதியாகி விட்டது. இதை மாற்றியமைத்து, மெளனியின் கதைகள் போன்ற படைப்புகளை உணரத்தக்க விதமாக ரஸனையைப் பணிபடுத்துவதுதான் நாம் செய்ய இருப்பது தமிழில் ஆழமான கதையம்சத்தினர் துணையின்றி, சாதாரணமான கதைகளிலேயே ஒரு காவிய உணர்வை, மௌனி மட்டும்தான் இன்று தருகிறார். அவரது சொற்களால் தீண்டப்பட்டதும், இயற்கைப் பொருள்களிலிருந்து, சங்கீதம், பெண்மை என்பனவரை, தம்மை மீறி வியாபகம் பெறுகின்றன. படிக்கப்படிக்க அலுக்காத உணர்வோட்டமும் இலக்கிய நயமும், இதனாலேயே மெளனிகதையில் பரந்து கிடைக்கின்றன.
இந்த அளவு உந்நதமான காவியத்தன்மை, உலக இலக்கியத்திலும் அபூர்வமாகவே காணப்படுகிறது. தமிழுக்கு, இந்த வரண்ட வேளையில் இந்தப் படைப்புகள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். இருந்தும், இவை தமிழுக்கு மட்டும், அதுவும் இந்த வேளைக்கு மட்டும் உரியனவல்ல; சிலவற்றின் ஜோதி, காலத்தால் குன்றாது, தேச வரம்புகளையும் மீற ஜொலிப்பது என்று தோன்றுகிறது

முன்னுரை, மௌனி கதைகள், மௌனி, சிதம்பரம் 1967. திருக்கோணமலை, மே 1967)

சிறுகதையின் திருமூலர் என அழைக்கப்படும் மௌனியின் சிறுகதைகளுக்கு பிரமிள் தனது 28வது வயதில் எழுதிய முன்னுரை இது.


மகுடம் : பிரமிள் சிறப்பிதழ் 2015
நன்றி :rrn.rrk.rrn@gmail.com

Aug 17, 2013

தமிழின் நவீனத்துவம் - பிரமிள்

1.

படைப்பாளியின் முன் இன்று, கவிதை, உரைநடை இரண்டிலும் இருந்து பிரச்னைகள் பிறந்துநிற்கின்றன.

தமிழ் மொழிப்பிரயோகம் பற்றிய பிரச்னையை எடுத்தால், இதைத் தொடமுயற்சிக்கிற நான், 1957 அளவில் ஒரு சிறிது காலம், “தனித்தமிழில், அதாவது பிறமொழிச் சொற்கள் கலக்காத தமிழில் எழுதுவதே சிறப்பு,” என்ற கொள்கையைச் சார்ந்து இருந்தவன் என்பதை, இங்கே மனம்விட்டுச் சொல்லிவிடவேண்டும். இந்த எனது சார்பைச் சிதறடித்தவை, புதுமைப்பித்தனது இலக்கியமும் சிந்தனைக் கட்டுரைகளும்தான்.

பாஷை, வெறும் சொற்களில் மட்டும் தங்கி நிற்கிற ஒன்றல்ல. சொற்கள் தம்முடைய ஸ்தூல நிலையில், வெறும் சப்தம்தான். அவற்றுக்குக் கிடைக்கும் அர்த்தம், அவற்றை உபயோக்கிற ஒப்புதல்களை இயல்புபடுத்துதல் ஆகும். ஒரே சப்தம், ஒரு மொழியில் பெறும் பொருள் வழக்கை இன்னொரு மொழியில் கொள்வதில்லை. இதனால்தான், இயல்பான ஒப்புதல் என்பது ‘வழங்கப் படுதல்’ என்ற நிலைமைக்கு சார்பாகி, ‘வழக்கொழிந்த சொற்கள்’ என்று ஒரு பகுதியை

பிரித்துவிடுகிறது. இதன் தவிர்க்கமுடியாமையை ஏற்காத உள்ளங்கள், உயிர்த் தன்மையற்றதாகவே இருக்கும். உபயோகம்தான் மொழியின் இயக்கம் – உயிர் – என்று கொள்ளும்போது, வலிந்து ஏற்கும் உபயோகத்தை அல்ல, இயக்கத்தின் இயற்கை ஏந்திவரும் உபயோகத்தையே நாம் ஏற்கவேண்டும். வழக்கொழிந்த சொற்கள், இந்த இயக்கத்தின் இயற்கையினின்றும் பின்தங்கிவிட்டவை. இதனாலேயே, பழந்தமிழ்ச் சொற்களை மீண்டும் உபயோகிப்பதென்ற தனித்தமிழ் இயக்கம், இயற்கைத்தன்மையோ உயிரோ அற்று, நவீன அனுபவங்களையும் சந்திக்க இயலாமல் நின்றுவிடுகிறது.

இயக்கத்தின் இயற்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதால், பிறமொழிச் சொற்கள் இன்றைய தமிழில், நவீனமான விஷயங்களையும் அனுபவங்களையும் சொல்ல உதவுகின்றன. தமிழின் நவீன – அதாவது இன்றைய காலத்திய – படைப்பியக்கம், வழக்கொழிந்த சொற்கள் மூலம் அல்ல, இயங்கும் சொற்களின் மூலமாக மட்டுமே சாத்யமாகி இருக்கிறது.

மொழியின் ஸ்தூலமான சொற்களின் விஷயத்தில் ‘தூய்மை’ பாராட்டியவர்கள், சிந்தனை, அனுபவம் என்பவற்றால் உந்தப்படவில்லை. இவர்களது எழுத்துக்களில், பழம்பெருமை, பொதுப் புத்தியை மீறாத ஒழுக்கவியல், இவற்றை ‘அழகாக’ கூறுவதாக எண்ணிக் கையாளப்பட்ட சொல்ஜோடனை ஆகியவைதாம் இருந்தன; இருக்கின்றன. இவர்களது சமகாலத்திய சிருஷ்டி கர்த்தாக்களிடமோ, வாழ்வின் உண்மைத்தன்மைகளும் சமூகவரம்புகள், ஒழுக்கங்கள், நீதி அநீதிகள் ஆகியவற்றை அனுபவசாத்யத்தின் தளத்தில் நிறுத்திச்செய்கிற விசாரணைகளும், இவற்றை எந்தவிதமான உள்ளம் சந்திக்கிறதோ, அதன் பாத்திய இயல்புக்கு ஏற்ற மொழிப் பிரயோகத்தில் எழுதப்பட்டன. ‘கருத்தைப் பிரதானமாக வைத்து’ப் புதுமைப்பித்தன் எழுதியவை, இந்தவகை இயக்கத்தின் சிகரமாகும். புதுமைப்பித்தனின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களது தமிழ், இதனாலேயே ஜீவத்துடிப்புள்ள தமிழ் என்று ஆகிறது. இன்னொருபுறம், பரவலான வாசகத் தேவைகளையும் வியாபாரத்தையும் இலக்காக்கி, ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எழுதியவை, ஆழமற்ற சில்லரைத்தளம் ஒன்றில் தமிழ் எழுத்தைச் செயல்படவைத்துள்ளன. இதை, பத்திரிகை ஒன்றில் தமிழ் என்ற அதன் உடனடிப் பரிவர்த்தனைக்காக ஏற்றுக்கொள்ளும்போதே, இதன் இயல்பான வெகுஜனத்தன்மையை இலக்கிய இயக்கத்தின் தன்மைகளிலிருந்து பிரித்துக் கண்டுகொள்ள வேண்டும்.

உணர்ச்சிவெளியீட்டைப்  பொறுத்தவரையில்கூட, தனித்தமிழ், சிருஷ்டி, வியாபாரம் என்ற மூன்றுதளங்களும் சுத்தமாகப் பிரிந்துநிற்கின்றன. தனித்தமிழ் இயக்கத்தில் அரசியலின் பாமரத்தன்மையும், சிருஷ்டி இயக்கத்தில் முதிர்ந்து புடமிடப்பட்ட செம்மையும், வியாபார எழுத்தில் கவர்ச்சித்தன்மையும், உணர்ச்சி வெளியீட்டை நிர்ணயித்துள்ளன. ஒருவகையில், உணர்ச்சி வெளியீட்டுத் தளத்திலேயே முதன்மையாக இந்த மூன்று தமிழ்களின் குணங்களும் பிணங்க ஆரம்பித்து, அனுபவம், சிந்தனை ஆகிய துறைகளில் இந்தப் பிணக்கு இவற்றிடையே நீடிக்கிறது என்றும் கூறலாம்.

2

எழுத்து : நிர்.16 (ஏப்ரல் 1960) தாங்கிவந்த, எனது முதலாவது கட்டுரையான ‘சொல்லும் நடையும்’ பெற்றுள்ள புனர்வடிவம்தான் மேலுள்ள பகுதி. மூலத்திலுள்ள எந்த அபிப்ராயத்திலுமிருந்து மாறுபட்டவை, இந்த புனர்வடிவில் இல்லை. ஆனால், பிரயோகங்களின் கூர்மையும் ஓரிரு விளக்கங்களும், முழுமொத்தமான கட்டுரையின் சுருக்கமுமாக இந்த வடிவம் பிறந்துள்ளது.

மேற்படி கட்டுரையின்  பார்வைகள், ஒரு நவீன உணர்விலிருந்து பிறந்தவை. இந்த உணர்வு என்னிடத்தே தோன்றுவதற்கு, புதுமைப்பித்தனது எழுத்துக்கள்தான் மூலகாரணம். ஆங்கிலத்தின் வழி, பழைமை புதுமை என்ற பாகுபாடு அற்று இருந்த எனது வாசக ஈடுபாட்டுக்கு ஒரு விமர்சனநோக்கைத் தருமளவு, புதுமைப்பித்தனது படைப்புகள் எனது இளம் உள்ளத்தைப் பாதித்தன. கல்கியின் ‘பிரமாண்டமான’ சரித்திர நாவல்களினால் சிருஷ்டிக்க இயலா திருந்த ஒரு நிதர்சனத்தை, ‘சில்பியின் நகரம்’ என்ற சிறுகதையில் புதுமைப்பித்தன் சிருஷ்டித்ததை உணர்ந்தபோது ஏற்பட்ட விழிப்பு அது. அதாவது, இந்த விருப்பை எனக்கு விமர்சனம் அல்ல, ஒரு படைப்பு ஏற்படுத்திற்று. அதுவரை வெறும் வாசிப்பாக இருந்த ஈடுபாட்டினூடே, வெறும் சப்தக்குவியலினுள் உந்நத இசையின் குரலை, தனித்து உணரும் சுரணையாக ஏற்பட்ட விழிப்பு அது.

இன்று மேற்படி கட்டுரைக்குப்  பிற்சேர்க்கையாக, தமிழகத்தின் நேரடி அனுபவங்கள் சில ஏற்படுத்திய பார்வைகளைத் தரவேண்டியுள்ளது.

‘தனித்தமிழ் இயக்கம்’ என்பது, தமிழ்ப்பழமையினை வழிபடும் அரசியல்வகைதான்; இது, வெறும் மொழி சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. பகிரங்கத்திலும் எழுத்திலும், மழுப்பலாகச் சுற்றி வளைத்து, ‘தமிழில் என்ன இருக்கிறது?” என்றும் மறைவாகத் தமக்குள்ளே ‘தமிழ் கிமிழ்’ என்றும் பரிகஸிக்கும் சமஸ்கிருத மனோபாவங்களுக்கு எதிரான இயக்கமே, ‘தனித்தமிழ்’ இயக்கம். இந்தப் பழிப்பின் அடியில்கூட, மொழியறிவோ அறிவு வேட்கையோ கிடையாது.

நான் மேலே, ‘சமஸ்கிருத மனோபாவம்’ என்று கூறியுள்ளது, உபசாரப் பிரயோகமே யன்றி வித்வத்தினைக் குறிப்பிட்டல்ல. அதாவது, ‘தமிழைவிட சமஸ்கிருதம் சிறந்தது’ என்ற மனோபாவத்தையே, அவ்விதம் குறிக்கிறேன்.

தமிழ்ப் பழமை வழிபாடு  எவ்வளவுக்குப் பாமரமானதோ, அவ்வளவு பாமரத்தனம்தான் மேலுள்ள வகையான சமஸ்கிருத மனோபாவமும். இரண்டுமே, இந்தியத்தின் சாபக்கேடான ஜாதியத்தில் வேரூன்றிப் பிறந்தவை. எனது உணர்வின் நவீனத்துவம், இத்தகைய விஷ நிலத்திலிருந்து விளைந்த ஒன்றல்ல. இந்த விஷநில விளைச்சல்களுக்கு, நான் ‘தனித்தமிழ்’ இயக்கத்தை விமர்சித்த பார்வை உபயோகமாகிவிட, இதனால் இடமற்றுவிடுகிறது. எனது முன்னோடியான புதுமைப்பித்தனைப் பொறுத்தும், இதையே கண்டுகொள்ள வேண்டும். சமஸ்கிருத சநாதனத்துக்கு ‘உபயோகமாகாத’ ஒரு வெளிப்படையான தீவிர நிலையாக, என் நேர்ப்பேச்சுக்கள் தென்பட்டுள்ளன. விளைவு? என்னைப் போன்றோருடன் இணங்கித் தமிழ்ப் பழைமைவாதிகளை மறுத்த நவீனவாதிகள்,  உண்மையில் நவீனத்தோல்போர்த்த சநாதன நரிகள் என அம்பலமாகியுள்ளமை. இதன் விபரங்களைப் பல கட்டுரைகளில் சர்ச்சித்துள்ளேன். இங்கே நாம் வேறு பரிமாணங்களைக் கவனிப்போம்.

3

ஒரு மொழியின் சிறப்பு, அதன் உபயோகத்தைச் சார்ந்தது. கிரீஸின் பரிபாலான காலத்தைத் தொடர்ந்த ரோம சாம்ராஜ்யத்தில், கிரீஸின் மொழியான கிரேக்கம்தான் உயர்ந்ததாக கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கணிப்பைப் புறம்தள்ளியவர்கள் ரோமின் லத்தீன் கவிஞர்கள், நாடகாசிரியர்கள். தொடர்ந்து ஐரோப்பாவில் பேக்கனின் காலம்வரை, லத்தீன் உயர்ந்த உபயோகங்களைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில், லத்தீனையன்றிச் சுயமொழியையே, சிருஷ்டிகளுக்கும் இதர படைப்புகளுக்கும் உபயோகிக்கிற விழிப்பு ஏற்படலாயிற்று. இதன் அடிப்படை, சுய அனுபவத்தை – தர்சனத்தை – தனது மன இயக்கத்துடன் நெருங்கித் துடிக்கிற ஒரு சுயமொழியில் தரும் இயற்கையாகும். ஆங்கிலத்தை, பிரெஞ்சை, ஜெர்மனை, ரஷ்யனைவிட லத்தீன் உயர்வானது என்றோ, லத்தீனைவிட கிரீக் உயர்ந்தது என்றோ, ஐரோப்பிய நகரங்களின் வாடகை ரூம்களில், லத்தீனியப் பூணூல், கிரேக்கப் பூணூல் அணிந்த சநாதனிகள் பேசிக்கொண்டு காலம்கழிப்பதை நாம் காணமுடியாது. ஆனால், “தமிழைவிடச் சமஸ்கிருதம் உயர்ந்தது. தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று அவங்க பெரியாரே சொல்கிறாரே!” என்று கதை அளக்கும் ‘நவீன சநாதனிகளை’ நான் கண்டிருக்கிறேன் – நமது பாரதத்துச் சென்னை நகர் வாடகை ரூம்களில். இவர்களது குழுக்கள், ‘நவீன’ இலக்கிய இயக்கங்களாகக்கூட முனைப்புப் பெற்றுள்ளன. இத்தகையோருக்கு, நான் சில சமயங்களில் நேரில் தந்த மறுப்பு உட்பட்ட வாதங்கள், இங்கே பதிவு பெறுவது அவசியம்.

ஒரு மொழியைவிட இன்னொரு  மொழி உயர்வானது என்று கூறுவதைவிட மொழிகளின் உபயோக சாத்யத்தைப்  பற்றிப் பேசுவதே பொருந்தும். தமிழ் இன்றைய மொழி. அதாவது, நான் தமிழ் பழமைவாதத்தை நிராகரித்துக் கூறுவது இது. இன்றைய மொழி எனும்போது, அது பழந்தமிழாக அன்றி, சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழியின் சொற்களைக்கூட ஜீரணித்துத் தமிழாக இயங்குகிறது என்பதையே அர்த்தம் கொள்கிறேன். இந்த ஜீரணிப்புக்கு ஏற்றவகையாக, தனது பிரயோகக் கட்டுமானங்களைப் புதுப்பித்து நிற்கிற உரம் தமிழுக்கு இருக்கிறது; சமஸ்கிருதத்துக்கு இல்லை. உதாரணமாக, அது இன்றைய அனுபவங்களைச் சரளமாகப் பரிவர்த்தனை செய்யக்கூடிய இயற்கை வளர்ச்சியை சமஸ்கிருதம் அடையவில்லை. ‘அல்ல, அதை இன்றைய உபயோகத்துக்குக் கொண்டு வரலாம்,’ என்று வாதித்தால், அது தமிழ்ப் பழமைவாதத்திலிருந்து வேறுபட்ட ஒன்றாகாது. அத்தகைய வாதத்தை, மேலுள்ள என் முதல் கட்டுரையே மறுக்கிறது.

தமிழைக்  ‘காட்டுமிராண்டி பாஷை’ என்று கூறிய பெரியார், கடுமையான ஆனால் கூர்மையற்ற ஒரு முரட்டு சுயமறுப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, அவரது கூற்றை ஒரு பொருட்டாக நாம் ஏற்கக்கூடிய ஒரே தளம் அதுதான். இந்த சுயமறுப்பின் விளைவாக, தமிழ் நவீனத்துவம் பெற்று வளரவேண்டும் என்ற வற்புறுத்தலே பிறக்கலாம். ‘தமிழைவிட சமஸ்கிருதம் நவீனமானது,’ என்பதுக்கு அவரது கூற்று ஆதாரமாகாது. மேலும், சமஸ்கிருதத் தைப் பழந்தமிழுடன் ஒப்பிடும்போதுகூட, Primitive -ஆன குணங்களையே அது காட்டுகிறது என்கின்றனர் மொழியியலாளர்கள். ‘பிரிமிடிவ்’ என்பது ‘காட்டுமிராண்டி’ என்றாகாது என, நாம் இங்கே கண்டுகொள்ள வேண்டும். ‘நவீனச் சாயல்பெறாத ஆரம்பநிலை’ என்பதே ‘பிரிமிடிவ்’. ‘தமிழ் அல்ல, சமஸ்கிருதமே காட்டுமிராண்டி பாஷை,’ என நான், பிதற்றலுக்கு எதிர்பிதற்றல் எழுப்புவதாக தொனிக்கக்கூடாது என்று, இந்த விளக்கத்தைத் தருகிறேன்.

‘பிரிமிடிவ்’ மொழிகளுள் சமஸ்கிருதம் மட்டுமல்ல, கிரேக்கமும் அடங்கும். எவ்வளவுக்கு ஒரு மொழி ‘பிரிமிடிவ்’ என்பது, எவ்வளவுக்கு அதன் இலக்கணம் சிக்கலானது என்பதையே பொறுத்தது. இலக்கணம் சிக்கலாக இருப்பது என்பதே ஒரு மொழியின் சிறப்பு என்ற வாதத்தின் அர்த்தமின்மையும், இங்கே குறிப்பிடப்பட வேண்டும். தெளிவுடனும் பரிமாண விஸ்தீரணத் துடனும், உடனடியாக ஒரு நவீன விஷயத்தைக் கூறும் குணம்தான் சிறப்பு. இலக்கணம் சிக்கலாக இருப்பது, இந்நிலைக்கு உதவாது.

பிரிமிடிவ் மொழிகளின்  இலக்கணச் சிக்கலுக்கு, ஒருமை, இருமை பன்மை என்ற அம்சம் ஒருபுறம்; அல்திணையில், நவீனமொழிகள் கொள்ளும் மேஜை நாற்காலிகள்கூட ஆண், பெண் பால்களில் அடங்குவது மறுபுறமுமாக, பல்வேறு பிரச்னைகள் பிறக்கின்றன. இவ்வகையில், தமிழ் நவீனமான மொழியாகவே கணிக்கப்படலாகும்.

சமஸ்கிருதத்தைக் கற்பது மனஆழத்தைத்தரும் என்றுகூட ஒரு வாதம். ஒரு சில மாதங்களின் முன்பு, வாரணாசியில் சமஸ்கிருத வித்வானாகிய ஒரு ஜெயில் அதிகாரி, தனது கண்காணிப்பின் கீழ்வந்த சிறு குற்றவாளிகள் மீது, சட்டத்தையும் மனிதத்தனத்தையும் மீறிய குரூரங்களைக்காட்டி உடல் ஊனம் உண்டாக்கிய செய்தி, மேற்படி வாதத்துக்கு முரணாகவே நிற்கிறது. மன ஆழம், நவீன மான மதிப்பீடுகளையும் அவற்றை ஏற்கக்கூடிய விசாலமான உள்ளத்தையும் பொறுத்ததாகும். கற்கும் மொழியினின்றும் பிறிதான ஒரு பண்பு இது. சமஸ்கிருதமோ ஆங்கிலமோ என்ன, சுயமான தமிழைக்கூடப் படிக்கக்கற்றிராத ‘பாமரமான’ ஒரு கிழவியை நான் நேரில் அறிவேன். அவள், சமஸ்கிருத வித்வா னாகப்பட்ட ஜெயில் வார்டனிலிருந்து ‘நவீன சநாதன தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள்’வரை, எவரும் தீர்வுகாணாத அகப் பிரச்னையைத் தீர்த்துப் பெருநிலையை எய்தியவள். எனவே, மொழியை உள்ளத்தின் பண்புடன் இணைக்கும் வாதங்கள், வக்ரமான அரசியல் மனோபாவங்களையே வெளியிடுவனவாகும்.

இதற்கு அடுத்ததாக, ‘தமிழில் என்ன இருக்கிறது?’ என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளலாம். இது மிகமிக வக்ரமான ஒரு கேள்வி. ஜாதீய இனரீதியான மரபுகளை அநுசரிக்காத, இயல்பான வெளியீட்டியக்கத்தினால் பெற்ற பொக்கிஷங்கள் தமிழில் உள்ளன. சமஸ்கிருதத்தின் பொக்கிஷங்கள் பெருமளவுக்கு, ரகஸ்யக் கல்வி முறைகளினாலேயே பரிபாலிக்கப்பட்டவை. வானவியல், கணிதம் முதலிய அறிவியல் கல்விகள் இவ்வகையில் சமஸ்கிருதத்தின் எல்லையினுள்ளேயே நிகழ்ந்துள்ளன. அன்றைய கல்வி, மரபுகளின் வக்ரமான பட்டிஅடைப்பு முறைகளினால் நிர்ணயிக்கப்பட்டு, பிறமொழி மாணவர்களும் சமஸ்கிருதத்திலேயே இவற்றை கற்றுள்ளார்கள். சுயமொழிகளில் அந்த இயல்களைப் பெயர்த்து அளிக்கும் அளவுக்கு, இந்திய மக்களிடையே, ஐரோப்பாவில் நிகழ்ந்தது போன்ற விழிப்பு ஏற்படவில்லை. இதற்கும் காரணம், சமஸ்கிருத கேந்திரத்தின் சநாதன ஆதிக்கம்தான். இவ்வளவு கீழ்த்தரமான ஒரு சரித்திரப் பின்னணியை மழுப்பியபடி, “தமிழில் என்ன இருக்கிறது?” என்றும் கேட்கிற மனோபாவம், எவ்வளவு வக்ரமானது!

“தமிழ்மூளையினால் மேற்படி இயல்களைத் தமிழிலேயே உருவாக்க முடியவில்லையே?” என்று கேட்பதும், இதே வகையான மழுப்பலின் முனைப்புத்தான். ஏனெனில், எந்த ஒரு விஞ்ஞானத்துறையும் ஒரே மொழியின் விளைவல்ல. சமஸ்கிருதம் கூட, தனது அறிவியலை, பாபிலோன், எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தொடர்புகள் மூலமே பெற்றிருக்கிறது. மேலும், ‘தமிழ் மூளைகள்’ சிருஷ்டித்துள்ள பண்டைத் தமிழ் இலக்கியங்களில், அந்த இலக்கியகர்த்தாக்களது அறிவியல் கல்வி ஞானம் பிரதிபலிக்கவே செய்கிறது. அத்தகையவர்கள், சமஸ்கிருதத்தின் வழி அறிவியல் ஆக்கவேலைகளிலும் இயங்கியிருக்கக்கூடிய ‘தமிழ்மூளை’கள்தாம்.

“தமிழ் வெறும் வழிபாட்டு (Cult) மொழி, கலாச்சார (Culture) மொழியல்ல” என்று, ஒரு நவீன சநாதன இலக்கிய ஜாம்பவான், எனக்குத் தெரிந்த ஒருவரிடம் கூறியதை எடுத்தால், இது என்ன சங்கதி என்றே புரியவில்லை. உண்மையில், சகலவிதமான வழிபாட்டு முறைகளுக்கும் உபயோகமாவது சமஸ்கிருதம்தான் என்பது, மூடர்கள்கூட அறிந்த விஷயம். தமிழில் தேவார பாராயணங்கள் மட்டுமே இருக்கின்றன என்ற ஞானசூன்யத் திலிருந்து வேண்டுமானால், மேற்படி ஜாம்பவானின் கருத்து தோன்றியிருக்கக்கூடும். மற்றபடி, சமஸ்கிருதம், தமிழ் இரண்டுமே கலாச்சாரமொழிகள்தாம். இதற்கு வாதங்கள் ஏதும் வேண்டியதில்லை.

“ஆங்கிலத்தில் Orgasam (உச்சகட்ட காமானுபவம்) என்ற வார்த்தை உண்டு. தமிழில் இல்லை. என் நாடக பாத்திரம் இது விஷயமாகப் பேசுகிறபோது ஆங்கில வார்த்தையையே உபயோகித்துவிட்டேன். தமிழனுக்கு Orgasam வாராதோ?” என்கிறார் ஒரு பெண் எழுத்தாளர். உச்சகட்ட அனுபவம், ‘தமிழன்’ என்பதில் உள்ள ஆண்பால் பிரகாரம், ஆண்களின் பிரச்னை அல்ல பெண்களின் பிரச்னையே என்ற, காமவியல் ஞானம் பற்றிய இந்தச் சங்கதி ஒருபுறம் இருக்கட்டும். தமிழில் Appedix-க்கு வார்த்தை இல்லை; எனவே, தமிழனுக்கு Appedix கிடையாது என்ற முடிவுக்கும் மேற்படி மேதைகள் வரக்கூடும். இத்தகையவர்கள், மருத்துவத்துறைக்குப் போய்விடக்கூடாதே என்பது என் பிரார்த்தனை. மேலும் ஒன்று சொல்லலாம். ஜப்பானியமொழியில், ‘மனிதத்வம்’ என்ற பதம்தான் உண்டு என்றும் ‘மனிதன்’ என்பதுக்கு வார்த்தை கிடை யாது என்றும், எங்கோ படித்திருக்கிறேன். எனவே ஜப்பானில் மனிதர்களே இல்லை! எஸ்கிமோக்கள், தங்களது இனத்தை ‘மனிதர்கள்’ என்று தங்கள் மொழியில் குறிப்பிடுகிறார்கள். எனவே, உலகிலுள் மற்ற மனித இனத்தவர் யாரும் மனிதர்களல்ல! தமிழில் skeep, hang – இரண்டுக்கும் ‘தூங்கு’ என்ற ஒரே வார்த்தை இருக்கிறது. ஆகவே தூக்கம் வந்தால் உத்தரத்தில் கயிற்றைக் கட்டித் தூக்குப்போட்டுக்கொள்வது தமிழர் வழக்கம்!

இந்தத் திசையில் ஓடுகிறது, புரட்சிகரமான நமது நவீன எழுத்தாளர்களின் மூளைகளிலிருந்து கிளம்பும் ஆராய்ச்சிப் பிரவாகம். ஒரு சுப்ரமணிய பாரதியின் அப்பழுக்கற்ற தமிழ் மொழிப்பற்று, அவரை உந்திய மனிதப் பண்பு, சுயஉணர்வும் தன்மதிப்பும் அற்று வாழும் சகஜீவர்கள் மீது அவர் கொண்டிருந்த கருணை – இதில் எதுவுமே இன்றைய மேற்படி ரகமான எழுத்தாளர்களிடம் இல்லை. பாரதி, வெறுமே உணர்ச்சிவசப்பட்டு தமிழ் பற்றி ஏதோ எழுதினார்; இவர்களுக்கு உள்ள பாஷா ஞான சமுத்ரம் அவருக்கு எட்டவில்லை என்றெல்லாம் முடக்குவாதம் பண்ணிவிட முடியாத முதல் தரப் பன்மொழி ஞானம் அவருடையது. இந்த லட்சணத்தில், ‘தமிழில் நாடகம் இல்லை. தத்துவம் இல்லை’ என்றெல்லாம் மூலைக்கு ஒரு கூப்பாடு. மனிதப் பண்போ கருணையோ அற்ற உங்களுக்கு, என்ன இருந்தென்ன என்றே, இவர்களை நோக்கி நாம் கேட்க வேண்டியுள்ளது.

ஒரு துறையில் இல்லாத செழிப்புக்கு ஈடுகட்டுகிற  வேறுவகை உக்கிரங்கள், ஓரொரு சமூகங்களில் இருக்கவே செய்கின்றன. நாடகம், சிற்பம் போன்றவை முஸ்லீம் கலாசாரத்தில் இல்லை. ஜப்பானில் தத்துவச் சிந்தனை கிடையாது. ஆனால், முஸ்லீம்கள் அற்புதமான கட்டடக் கலையையும் ஜப்பானியர்கள் இயற்கையுடன் இணைந்து இன்றும் அற்புத நவீன வடிவில் அமைந்துள்ள ஒரு தியான வாழ்வு முறையையும் சாதித்தவர்கள்.

இறுதியாக ஒரு வார்த்தை. ரமணருடன் சம்பாஷித்த நிகழ்ச்சியை  நினைவு கூர்ந்த புரொபஸர் எஸ்.சுவாமிநாதன் (The Collected Works of Mahatma Gandhi நிறுவனத்தின் எடிட்டராக அவர் இருந்தபோது, 1972-ல்), என்னிடம் கூறியது இது: “ரமணர், தமிழ்மொழியை ஒரு ஆன்மீகமொழி என்று கூறுகிறார். இதற்கு அவர் எடுத்துக்காட்டிய வற்றுள் முக்கியமான உதாரணம், சமஸ்கிருதம் உட்பட அவர் அறிந்த வேறுமொழிகளில் இல்லாத உதாரணம். ‘உள்ளல்’ என்ற வார்த்தை. ‘உள்’ என்றால் இரு. be என்ற வகைப் பொருள் தரும். ‘உண்மை’ என்பதன் தாதுவும் இதுதான். ‘உள்’ என்ற வினைச் சொல்லுக்கு நிகழ்கால வடிவம் மட்டுமே உண்டு; ஏககால வடிவம் மட்டுமே உண்டு. ‘உள்ளினான்’, ‘உள்ளுவான்’ என்ற வடிவங்கள் இல்லை. அதாவது ‘இருப்பு’ being என்பது நிகழ்காலநிலை மட்டுமே. எத்தகைய ஆழ்ந்த மனோபாவங்களிலிருந்து தமிழ் மொழி தழைத்திருக்க வேண்டும் என, ரமணர் வியப்படைந்து இதைக் கூறியிருக்கிறார்.”

‘உள்ளல்’ என்ற வார்த்தையின் பரிமாண விஷேசத்தை, ரமணர் இயற்றிய ‘உள்ளது நாற்பது’ என்ற செய்யுள் வடிவான ஆன்ம விசார நூலிலும் அவர் கொண்டு வந்துள்ளார் என்பது, மேற்படி விபரத்தை உறுதிப்படுத்தும்.                                                                             

(படிமம். 1981)

பதிப்பக அலமாரி – நற்றிணை பதிப்பகம் தொகுப்பாசிரியர்: கால  சுப்ரமணியம்

நன்றி: மலைகள்.காம்

Dec 29, 2012

நான் எழுத்தாளனான கதை-பிரமிள்

திரு.வெங்கட் சாமிநாதன் பிரமிள் எழுதி இதுவரை வெளியாகாதிருந்ததொரு கட்டுரையின் கைப்பிரதியை சொல்வனத்தில் வெளியிடுவதற்காகக் கொடுத்தார். இக்கட்டுரையில் தனக்கு இலக்கியத்தில் ரசனையும், ஆர்வமும் ஏற்பட்டதன் பின்னணியை விவரிக்கிறார் பிரமிள். அவர் எழுத்தாளரான நிகழ்வையும் குறிப்பிட்டிருக்கிறார்.

ன் தகப்பனார், தாயார் இருவருக்குமே சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதைவிட அதீதமான உணர்ச்சி இருந்திருக்கிறது. தகப்பனாரின் நேர்மை, தாயாரின் பெண்மைக்கும் கற்பனைக்கும் உரிய இயற்கையான சாகஸங்களை இது விரூபமாகத்தான் காண அவரைத் தூண்டியிருக்கிறது. இதன் விளைவாக அவர்கள் பெரும்பாலும் சண்டையிட்டே வாழ்ந்திருக்கிறார்கள். இந்தச் சண்டைகளின்போது என் தகப்பானாரின் நேர்மை அவரை எவ்வளவு குருட்டுத்தனமாக்கியது என்பதையும், தாயாரிடம் தற்காப்பு இல்லாது போனாலும் சொல்லாடல் மூலம் தப்பனாருக்கு பதில் பிறக்க இடமில்லாமல் ஆக்குவதையும் விளைprameel2வு தாயாருக்கு சரீரபூர்வமான ஆபத்தாவதையும் இன்று நினைக்க ஒருவகையில் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில், பெரும்பாலும் தமக்குக் கிடைக்கக்கூடிய சரீரார்த்தமான துர்ப்பலன்களினூடேயும், தாயார் தமது புத்தி வன்மைக்கு, புத்திபூர்வமாகத் தகப்பனார் ஈடுகட்ட இயலவில்லை என்ற அளவில் திருப்தியடைவதை உணர இயலும்.

உண்மையில் என் தகப்பாரின் நேர்மை வியாபார உலகில்தான் என்பதையும் தாம்பத்ய வாழ்வில், உறவில், அவர் தாயாரை பயங்கரமாக ஏமாற்றியவர் என்பதையும் பின்னாடி உணர முடிந்தது. பார்க்கப்போனால் வியாபாரத்தில் காட்டிய நேர்மை அவருக்கு ஒரு போர்வையாகத்தான் இருந்திருக்கிறது.

இதற்கும் மேல், தகப்பானாரின் ‘நேர்மை’, அவரைப் பழிவாங்கும் மனோபாவமுள்ளவராக்கிற்று. என் தாயாரின் ‘நேர்மையின்மை’, அவரை தகப்பனார் உட்பட எவர் இழைத்த தீங்கையும் மறக்கக்கூடியவராயிற்று. முக்கியமாக நோய்வாய்ப்பட்டுள்ளவர் எவராயினும் அவருக்கு யாவற்றையும் மறந்து சிசுருஷை செய்ய தாயார் முன்வந்துவிடுவார். ஒரு சமயம் அவரது முதல்தர வைரிகளது பசுமாடு ‘ரப்பர் மர’ இலைகளைத் தின்று தொண்டையில் பால் சிக்கி சாகக்கிடந்தபோது தமது ‘குழந்தைகள்’ என்று அவர் வளர்த்த வாழைமரங்களின் குழாய்வடிவான குருத்துக்களை, மரத்தின் அழிவையும் பொருட்படுத்தாது வெட்டிக்கொண்டு சென்று பசுவின் தொண்டையிலிருந்த பாலை அவற்றின்மூலம் வெளிக்கொண்டுவர அவர் உதவியதும், அதற்காக வைரிகளுக்கு அதுவும் பணக்கார வைரிகளுக்கு, (பிராமணக் குருக்கள் வகுப்பினரான இவர்கள் தாயாருக்கு இருந்த ஒரே நிலபுலத்தில் தமக்கு பாத்தியதை வைத்து வழக்காடியபடி இருந்தனர்.) உதவியதற்காக அயலார் தாயாரைப் பரிகசித்ததும் அவர் பொருட்படுத்தாததும் என் மனதில் ஆழப்பதிந்த விஷயம்.

இது போன்றவற்றால் ஆரம்பத்தில் என் தகப்பனாரின் ‘நேர்மை’யை கெளரவித்த என் மனம் தாயாரின் அன்பைத்தான் நிச்சயமானது என்று கொள்ள ஆரம்பித்திருக்கிறது போகப்போக.

ஆனால், என் தகப்பனாரின் நேர்மையிலிருந்த போலித்தனத்தை, கொடுக்கல் வாங்கல் தனத்தையே இங்கே உணர்ந்து தெளிகிறேன் என்பதையும், ‘நேர்மை’யை கெளரவிப்பதிலிருந்து விலகியவதாகாது இது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பொதுவான வாழ்விலும், ஆழமான மனோதர்மங்களிலும், கருத்துலகிலும் நான் சந்தித்த பிரச்சினைகளிடையில் இந்தப் பின்னணி இயங்கி இருக்கக்கூடும்.

எனது பெற்றோர் கல்வியறிவற்ற ஏழ்மையானவர்களாயினும் தாய்வழி மூதாதைகள் கொழுத்த நிலப்பிரபுக்களாகவும், ‘புலமை’ வாய்ந்தவர்களகாவும் இருந்திருக்கின்றனர். ஒருபுறத்தில் இவர்கள் கண்மூடித்தனமான செலவாளிகளாகவும் கோயில் முதலியவற்றுக்கு தானம் செய்பவர்களாகவும் கூட இருந்திருக்கிறார்கள். ஒரு ராமகிருஷ்ண மிஷன் பள்ளிக்காக (இங்கேதான் என் பூர்த்தியாகாத ஆரம்ப, ஹைஸ்கூல் படிப்பு) தமது நிலத்தை இவர்கள் வழங்கியதைத்தான் கெளரவத்துக்கு உரியதாக நான் கருதினேன்.

ஜாதீயம் வெறுப்பையே ஊட்டிற்று. கோவில் பிராமணக் குருக்கள் சிறுவர்களுடனும், மேளகார (இசை வேளாளர்கள் என்று தங்களை இன்று அழைத்துக்கொள்ளும் வகுப்பு) சிறுவர்களுடனும்தான் விபரம் தெரியும் வயதுகளில் விளையாடியிருக்கிறேன். தாயார் எங்கள் வீட்டுக்காலனியில், அயல் அபிப்ராயங்களைப் பொருட்படுத்தாமல் மேளகாரர்களுக்கு வாடகை அறைகள் தந்திருந்தார். இவர்களை, ‘சேவகத்துக்கு’ அழைத்துப்போக வருகிறவர்கள் இவர்களை நடத்தும் முறையும், அதற்கு இவர்கள் உடன்படும் கீழ்மையும் அதற்கேற்ற வகையான இவர்களது நடைமுறை வாழ்வின் குடிபோதை சச்சரவுகள் முதலியனவும் அருவருப்பாக இருந்தாலும், எனது ரஸனைக்கு ஆரம்பக்கல்வி இவர்களிடமிருந்தே எனக்குக் கிடைத்துள்ளதை உணர்கிறேன்.

இந்த ‘மேளகாரர்கள்’ உண்மையில் சங்கீதத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள். இந்த இசைஞர்கள் மூலம் நான் பயின்ற ஆரம்ப ரஸனைக் கல்வியே முதல்படி ஆயிற்று. சங்கீதத்தில் உயர்ந்த சங்கீதம், மட்டம் என்பவற்றை இவர்களது சகவாசம் எனக்கு இயல்பான சுரணையாக்கிற்று. இதன் வளர்ச்சியாக என் எந்தப் பருவத்திலும் மட்டமான சங்கீத, கலை வகைகள் எதனிடமும் நான் ஈர்க்கப்படவில்லை, இவ்வளவுக்கும் இசை இவர்களுக்கு வெறும் தொழில்.

இவர்களில் பலர் பின்னாடி துறைமுகத் தொழிலாளிகளாகவும் போயிருக்கிறார்கள். இருந்தும் பிழைப்புக்காக தாங்கள் சினிமா பாட்டுகளை வாசிக்க வற்புறுத்தப்படுவதை இவர்கள் வெறுத்தனர். கலைத்திறன் மூலமும், பொருளாதார உயர்வுகளின் மூலமும் ஜாதீயம் போன்றவற்றில் உயர்வான வகுப்பினரை சில இசைஞர்கள் எடுத்தெறிந்து நடந்து கொள்வது சகலவிதத்திலும் கீழ்மையாக இருந்த என் நண்பர்களுக்குத் திருப்தியாக இருக்கும். அப்படி ஏதும் அவர்கள் எடுத்தெறிந்து நடக்காதிருந்தாலும் நடந்தமாதிரி கதைகளை இவர்கள் கட்டி இருக்கலாம். பெரும்பாலும், பணத்தைக் காட்டி பெரிய இசைக்கலைஞர்களை வாங்க முயற்சிப்பவர்களைப் பற்றியும் பணத்தை அலட்சியப்படுத்த இவர்கள் நடந்ததைப் பற்றியுமே பெருமைக்குரிய விஷயமாக இவர்களது கதைகள் கூறும். இக்கதைகளின் அடிப்படைச் செய்தி என் மனசில் ஆழப்பதிந்தது என்று சொல்லலாம்.

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு பெரிய நாதஸ்வர வித்வானை ஒரு கோயில் திருவிழாவுக்கு வரவழைத்திருந்தார்கள். பூசகர் அர்ச்சனையை ஆரம்பிப்பதற்காக நாதஸ்வரத்தை நிறுத்தும்படி சமிக்ஞை கொடுத்தார். நீலாம்பரி அடங்க ஒரு சில நிமிஷங்கள் ஆயிற்று. மற்றபடி ஐயரின் சமிக்ஞையில் யந்திரமாகப் பிறந்து இறக்கும் இசை இந்தக் கலைஞரின் நாதஸ்வரத்தில், தனது இயல்பின் கதியைத்தவிர எதற்கும் இணங்க மறுத்ததாகத் தோன்றிற்று. ஐயரும் ‘ஞானம்’ உள்ளவர். புன்னகையோடு சங்கீதம் வடியும்வரை காந்திருந்தார். ‘பக்தர்’களும் கூட ஒருவகையில் திருக்கிட்டு, இந்த ‘அசம்பாவிதத்தின்’ விளைவாக சங்கீதம் என்ற ஒன்றுக்கு ஒரு இயல்பும்கூட இருக்கிறது என்பதை உணர தாங்கள் படும் சிரமத்துடன் காத்து நின்றனர். இந்த நிகழ்ச்சி சிறுவனாயினும் என்னூடே ஒரு பரம திருப்தியாகச் சென்றடைந்தது.

னது நண்பர்களான இசைஞர்களது ரஸனைத் தெளிவு சங்கீதத்தோடு நின்றுவிட்ட ஒன்றுதான். வாசகர்கள் என்ற வகையில் அவர்கள் கல்கி வகையறாவைத் தாண்டாதவர்கள்.

பழந்தமிழ் இலக்கியம் என்பதே தமிழ் இலக்கியம் என்ற எண்ணம், சத்ய யுகாத்தோடு கடவுளுக்கும் உலகுக்குமிடையே இருந்த உறவு தீர்ந்துவிட்டது என்ற வைதீகத்தனத்தப் போல் பள்ளியில் எனக்குப் புகட்டப்பட்டது. பாரதி கவிதைகளைப் பற்றி நிதானகிக்குமளவு ‘சிந்தனை’ எகிறவுமில்லை. ஆனால் வாராவாரம் கல்கியைப் படித்தேன். சினிமா ரகமான தீரச்செயல் கதை என்ற அளவுக்குமேல் அந்த வாசிப்பைப் பற்றி கணித்துப் பார்க்கும் வில்லங்கம் தோன்றவில்லை. 1950-இல் என்று ஞாபகம். கல்கி, புதுமைப்பித்தன் மறைவை ஒட்டி ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்ற கதையை மறுபிரசுரம் செய்தது. ‘கதை’ இலக்கியமாகுமா என்ற ஸ்மரணையே இல்லாதிருந்த எனக்கு இக்கதையை 1954 வாக்கில் படித்தபோது அது ஒரு புதிரான புதுவித அநுபவமாயிற்று. புதுமைப்பித்தன் என்ற பெயரும் மனசில் ஆழப்பதிருந்தது. சுமார் 1955, 56 வாக்கில்தான் புதுமைப்பித்தன் கதைகள் கையில் கிடைத்தது. ஆனால் அதற்குள் எனது ஆங்கில வாசிப்பு ஆர்.எஸ்.ஸ்டீவன்ஸனின் A Treasure Island, Kidnapped, Rider Haggard எழுதிய King Solomon’s Mines என்று வந்துவிட்டதோடு பழந்தமிழ் இலக்கியம், யாப்புப்பயிற்சி என்றெல்லாம் சிறுசிறு தேற்றங்கள் உண்டாகிவிட்டன. இவற்றின் பின்னணியைத்தான் புதுமைப்பித்தன் கதைகள் சந்தித்தன. விளைவு ‘இது இலக்கியம்’ என்ற தீவிரமான தெளிவு. புதுமைப்பித்தனை இலக்கியாசிரியர் என்று எவ்வித புற உந்துதலுமின்றி நிதானித்த என் நிலை உண்மையில் எனது சின்னஞ்சிறு சமூகவட்டத்தில் என்னை ஒரு புரட்சிக்காரனாகவே ஆக்கிற்று.

துப்பறியும் கதைகளையும் தொடர்கதைகளையும் படித்துவிட்டு அவற்றை நண்பர்களுக்குத் திருப்பிச் சொல்லும் பழக்கமும், சுவரெல்லாம், அகப்பட்ட காகிதங்களெல்லாம் படங்கள் போடும் பழக்கமும் எனக்கு ஏற்கனவே இருந்ததால், எனது குட்டிச் சமுதாயத்தில் எனக்கு ஏற்கனவே ஒரு கெளரவம் ஏற்பட்டிருந்தது. எனவே நான் புரட்சிக்காரனாகியது என்னோடு நின்றுவிடவில்லை. நாங்கள் சிலர் ‘நவீன’ தமிழ் இலக்கியத்தில் இறங்கிவிட்டோம். ஒரு தமிழ் வாத்தியார் ‘சிறுகதையா? சிறு கதைதானே அது,’ என்று சிறுகதைகளின் சிறுமையை விளக்கினார். இதற்குள் 1957 வாக்கில் என் பள்ளிப்படிப்பு நின்றுவிட்டது.

பாரதியை ஒரு இலக்கியாசிரியனாகக் காண உதவியது புதுமைப்பித்தனின் வசன இலக்கியம்தான்.

ஆனால் இலக்கியக் கட்டுரைகளையோ, முன்னுரைகளையோ ருசித்துப் படிக்கும் பழக்கம் ஏற்படாத நிலைதான். புதுமைப்பித்தனுக்கு முன்னுரையாக ரா.ஸ்ரீ.தேசிகன் எழுதியிருந்ததை, முன்னுரைகளுக்கு ஒரு இளம் வாசகன் காட்டும் வெறுப்புடன் படிக்காமலே அப்போது விட்டுவிட்டேன். அதைப் படித்தது வெகு பின்னாடிதான்.

இது என் ஸ்மரணையை சாந்நித்தியமானதாக்க சொல்லப்படுவதல்ல. பாரதி இலக்கியத்தை விட்டு தீவிரமாக புதுமைப்பித்தனது எழுத்தே என்னை இலக்கியபூர்வமாகத் தொற்றியது என்பதைத் தெளிவாக்கவே இது. இது புதுமைப்பித்தனது கலையின், தீவிரமான எழுத்தின் சாந்நித்தியத்தையே காட்டும்.

இதன்பின்பு 1959-இல் ‘சரஸ்வதி’ பத்திரிகை இதழ்களைப் படிக்க ஆரம்பித்தேன். க.நா.சுப்பிரமணியம், அ.தைரியநாதன் என்ற புனைபெயரில் கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன் வகையறாக்களை காரசாரமாகத் தாக்கிய கட்டுரைகள் தென்பட்டன. “ஒழிந்த நேரத்தில் விபச்சாரம் செய்தால் உப்பு புளிக்காச்சுது என்று ஒரு ‘தினுசான’ குடும்பஸ்த்ரீ சொல்வதைப் போல இருக்கிறது” என்று வியாபார எழுத்தாளர்களது ‘இலக்கிய’ வாதத்தை க.நா.சு விபரிக்கும் வரிகளுடன் அக்கட்டுரைகளுள் ஒன்று ஆரம்பிக்கிறது. அந்தச் சமயத்தில் க.நா.சுவின் கட்டுரைகள் சரஸ்வதியில் பெரும்பாலும் இந்தத் தொனியிலேயே இருந்தன என்பதை இன்று பூர்ஷ்வாத்தனமாக ‘கற்புள்ள இலக்கிய சர்ச்சை வேண்டும்’ என்று முன்வைக்கும் நபர்களில் பலர் அறிவார்களா என்பது சந்தேகமே.

அப்போது க.நா.சு நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தபோதே ரஷ்யாவில் போரிஸ் பாஸ்டர்நாக் தாக்குதலுக்கு உள்ளாகி சோவியத் முறை ஒரு நவீன ஜாரிஸம்தான் என உலகுக்குத் தெரியவந்த விபரம் பற்றி க.நா.சு அப்போது ஒரு வரியும் எழுதவில்லை என்பதை வெகு பின்னாடி அத்தகைய பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கும்போதுதான் உணர்ந்தேன். இது பற்றி சில மாதங்களின் முன் ஒரு முக்யமான மலையாள எழுத்தாளர் கூறியது இது:

“பாஸ்டர்நாக் பிரச்சினையின்போது சென்னையில் எழுத்தாளர் சங்கத்திற்குத் தலைவரைத் தெரிவு செய்யும் தேர்தல் சமயம். க.நா.சு வேறொருவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். க.நா.சுவுக்கு கம்யூனிஸ எழுத்தாளர்களின் வோட்டுகள் அவசியமாயிருந்தன என்பதையும், இதற்கேற்ப பாஸ்டர்நாக் பிரச்சினை பற்றி அவர் மூச்சுக்காட்டவில்லை என்பதையும் நேரடியாக அறிந்தேன்.”

சி.சு.செல்லப்பாவும் கூடத்தான் பாஸ்டர்நாக் பிரச்சினை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இது பற்றி சி.சு.செ, “இந்த விவகாரம் ‘சுத்த’ இலக்கியபூர்வமானது அல்ல” என்றே கூறியிருப்பார் என நினைக்கிறேன்.

ஆக, ‘சுத்த இலக்கியத்தன்மை’ எவ்வகையில் கம்யூனிஸ்டுகளுக்கு செளகரியமாக இருந்திருக்கிறது!

எனது சிறு சமூகவட்டத்தில் பாஸ்டர்நாக் ஏற்கனவே தீரபுருஷனாகிவிட்டான். ஒரு குறிப்பிட்ட சலவைத்தொழிலாளியின் முகம் பாஸ்டர்நாக் முகத்தின் சாயலில் இருந்ததைக் கண்டு நாங்கள் ஓரிருவர் அந்த ஆளின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்ற நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருகிறது.

இவ்வளவுக்கும் நானோ, நான் எழுத ஆரம்பித்த பின்பும்கூட இன்றுவரை எனது நெருங்கிய நண்பர்களோ எழுத்தாளர்களாக வேண்டும் என்ற அபிலாஷையுடன் வாசகர்களானவர்கள் அல்ல. மெளனியை எழுத்தாளர்கள் மட்டுமே படிக்கிறார்கள். அல்லது எழுதும் ‘ஆசை உள்ளவர்கள்’ என்கிறார் சுந்தர ராமசாமி. எனது அனுபவம் அத்தகையதல்ல. எனது நண்பர்களுக்கு எழுதும் ஆசை இல்லாதிருந்தும் மெளனி என்ன, டாஸ்டாய்வ்ஸ்கி என்ன, படித்து அநுபவிப்பதே நோக்கமாக இருந்திருக்கிறது. எழுதும் ஆசை மட்டும் இருந்து உயர்ந்த இலக்கியங்களை இனம் காண இலயலாதவர்கள் போலித்தனமாக மெளனி போன்றவர்களை ரசிக்க முடிவதாகக் காட்டுவதைத்தான் சுந்தர ராமசாமியின் சித்தாந்தம் காட்டுகிறது. இந்த ரகத்தினர் எழுத்தாளார்களுமல்ல, தகுதியான வாசகர்களுமல்ல என்பதே என் அபிப்ராயம். இவர்கள் இலக்கியப்பத்திரிகை நடத்தினார்களே, கதை கவிதை கட்டுரைகள் எழுதினார்களே என்பது எதுவும் இவர்களை எழுத்தாளர்களாக்கிவிடும் என நான் கருதவிலை.

மெளனியும் தமது அநுவபத்தில் வேற்றூர் ஒன்றில் தாம் சந்தித்த ஒரு வெற்றிலை பாக்குக்கடைக்காரர் தமது ரசிகர் என்று அறிந்த நிகழ்ச்சி பற்றி எனக்குக் கூறி இருக்கிறார்.

எனது ‘ஆசை’ ஓவியத்துறையையே சார்ந்திருந்தது. ஆனால் ஒரு தமிழ் வாத்தியாரின் தூண்டுதலில் நாங்கள் அழ.வள்ளியப்பாவின் ‘பூந்தோட்டம்’ என்ற கவிதையைப் பின்பற்றி ஒவ்வொருவரும் பாடல்கள் எழுதினோம். நான் ஓரிரு நண்பர்களுக்கும் சேர்த்து ஒன்றுக்கு மேற்பட்டு எழுதவேண்டியவனானேன். இது சுமார் 1956 வாக்கில் என ஞாபகம்.

இதற்குள் நாங்கள் சிலர் ஏற்கனவே கையெழுத்துப் பத்திரிகை நடத்தினோம். அதில் நான் ஓவியனாகவே இருந்தாலும் கதைகளையும் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருக்கிறது.

சரஸ்வதியை அடுத்து இந்த கையெழுத்துப் பத்திரிகையின் ‘ஆசிரியர்’ தாம் வாசிக்காமல் வெறுமே சேர்க்கும் பத்திரிகை, புத்தகங்களின் வரிசையில் ‘எழுத்து’ என்ற பத்திரிகையையும் 1959-இன் பின்பகுதியில் சேர்க்க ஆரம்பித்தார். பத்திரிகையின் அமைப்பு, ‘கவர்ச்சி’த்தன்மையை மேற்கொள்ள மறுத்தத்தால் விளைந்த ஒரு வீர்யம் தெளிவாக என் உணர்வைத் தாக்கிற்று. ஓவியத்தை, படத்தை நீக்கி தமிழ்ப்பத்திரிகை எதையும் காணப்பழகியிராத கண்களுக்கு ‘எழுத்து’ தந்த தோற்றம் ஒரு அறைகூவல். விஷயகனத்தைத்தவிர வேறு எதையும் நம்பாமல் வெளிவருகிறது என்ற அடிப்படை ‘எழுத்து’வின் மீது பெருமதிப்பை ஏற்படுத்திற்று. இந்த மதிப்பின் விளைவாகத்தான் 1959 டிஸம்பர் இதழில் வெளியான நான் என்ற கவிதையை எழுத்துக்கு அனுப்பிவைத்தேன்.

இலக்கியக் கருத்துலகில் நன்கு ஈடுபட்டுப் பழகி அதில் உள்ள அனுபவங்களைக் காணும் வரை எழுத்து ஆசிரியர் சி.சு.செல்லப்பாவுக்கு நான் எழுதிய கடிதங்கள் பவ்யமானவை.

ஏற்கனவே தனித்தமிழ், தூயதமிழ் போன்றவற்றைப் பற்றியும், உரைநடை பற்றியும், அச்சமயத்தில் பரவலாக இருந்த கருத்துகள் பற்றி எனக்கு அபிப்ராயங்கள் உருவாகியிருந்தன. அழ.வள்ளியப்பாவின் ‘பூந்தோட்டத்தை’ப் பின்பற்றி என்னோடு ‘பாட்டு’ எழுத ஆரம்பித்த, விவாதப்பிரியரான ஒரு நண்பரது தூயத்தமிழ்வாதத்திற்கு பிரதிவாதங்கள் பலவற்றைச் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ‘நான்’ வெளியான சமயத்தில் ஏற்பட்டிருந்தது. நண்பர் நான் சொன்னவற்றை இரசித்ததாகவோ, கிரகித்திருந்தால் அதற்கு ‘மசிபவ’ராகவோ தெரியவில்லை. வியர்த்த உணர்வுடன் அவ்வுணர்விலிருந்து விடுதலை வேண்டி அன்று அந்த நண்பரிடம் கூறியவற்றை எழுதி சி.சு.செல்லப்பாவுக்கு அனுப்பிவிட்டேன். அவர் இக்கட்டுரையை இரண்டாகப் பிரித்து முதல் பகுதிக்கு ‘சொல்லும், நடையும்’ என்று தலைப்பிட்டு 1960 ஜனவரி பிரசுரித்தார். இதைப்படித்ததும் வெங்கட் சாமிநாதன் அப்போதே சி.சு.செல்லப்பாவுக்கு என் உரைநடையின் சிந்தனையின் கனத்தைக் குறிப்பிட்டு ‘சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை’ என்று எல்லாம் பெயர் வாங்கியவர்களின் சிந்தனை அம்சமே அற்ற எழுத்துடன் ஒப்பிட்டு தாம் கடிதம் எழுதியதை சமீபத்தில்தான் ஒரு சம்பாஷனையில் குறிப்பிட்டார்.

நான் ‘எழுத்தாளன்’ ஆகிய கதை இதுதான்.

நன்றி: சொல்வனம்

Aug 12, 2012

நீலம் - பிரமிள்

அவர் ஒரு ஆர்டிஸ்ட். அதிலும் மெட்ராஸ் ஆர்டிஸ்ட். அவ்வப்போது அவர் தமது படங்களைக் காட்சிக்கு வைப்பார். சில விலை போகும். பிரபல மேனாட்டு மாடர்ன் ஆர்டிஸ்டுகளின் எச்சங்களை இங்கே மோப்பம் பிடித்து வாங்கிக் கொள்கிற சின்னஞ்சிறு ஆர்ட் மார்க்கெட்க்காரர்கள் வந்து பார்ப்பார்கள்.கோழிச் சண்டையில் இறகுகள் பறக்கிற மாதிரி அவரது படங்களைச் சுற்றி விமர்சனங்களும் பறக்கும்.  

மற்றபடி அவருக்கு ஆர்ட்டுடன் சம்பந்தம் இல்லாத அவரது ஆபீஸ் உண்டு.குடும்பம் உண்டு. ரசிகர்கள், அதுவும் பெரிய இடத்து ரசிகர்கள் வீசும் ரசனைகளைpremale-01 அசை போட்டுப் போட்டு அவருக்குத்  தலை கவிழ்ந்துவிட்டது. அப்படிப் பாரம் ! அவர் பஸ் ஏறப்  பிடிக்கும் குறுக்கு வழிகளின் மனித எச்சமும் நடுவே மானங்காணியாக மலரும் காட்டுச் செடிகளும் அவரது கண்களுக்குப்படுவதில்லை

ஆபீஸிலிருந்து லேட்டாகத் திரும்பிய ஒரு நாள் மாலை பஸ்ஸில் ஏறிய அவர், தமது பஸ்  ஸ்டாப்பிலிரிந்து இரண்டு ஸ்டேஜுகள் கடந்து போய் இறங்கி விட்டார். இதற்குப் புற உலகக் காரணமாக, பஸ்ஸில் ஏறியவன் இறங்க முடியாத நெரிசல். அக உலகக் காரணமும் ஒன்று உண்டு. சமீபத்தில் டிவியில் அவர் பார்த்த ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம் ஒன்றைப் பக்கத்துக்கு சீட்காரர் வைத்திருந்ததிலிருந்து பிடித்த சர்ச்சை.

கதை, கவிதை போன்ற எந்த மனித சிருஷ்டியையும் கூட கம்ப்யூட்டர்கள் மனிதனை விடச் சிறப்பாகக் கையாள முடியும் என்ற இடத்தில் சூடு பிடித்த சர்ச்சை அது. "அந்நிலையில் மனிதன் என்கிற நீ என்ன?" என்பது கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி. நமது ஆர்டிஸ்ட்டோ, என்ன இருந்தாலும் கம்ப்யூட்டரினால் பெயிண்டிங் செய்ய முடியும் என்று சொல்லப்படவில்லை எனச் சுற்றி சுற்றி அழுத்தினார்.

"பெயிண்டிங் சிற்பம், இசை எல்லாமே கம்ப்யூட்டரால் முடியும். ஜப்பானில் கம்ப்யூட்டர் கார்களை மெனுபாக்செர் பண்ணுகிறது" என்று உறுமினார் பக்கத்துக்கு சீட்காரர். முக்குக் கண்ணாடி வட்டத்துக்குள் அவரது கண்கள், போகப் போகப் பெரிதாகிக் கொண்டிருந்தன. அவரது உறுமலுடன் கண்ணாடியில் ஏதோ ஒரு வட்டமான சிறு ஒளி, பஸ் கூட்டத்தின் இடுக்குகளூடே ஊடுருவிப் பிரதிபலித்தது.

"ஆனால் அதோ அந்த நிலவின் அழகை மௌனமாகத் தனக்குள் உணர மனிதனால் முடியும். கம்ப்யூட்டரால் முடியாது" என்றார் திருவாளர் பக்கத்துக்கு சீட்காரர்       

"டெர்மினஸ்" என்று சேர்த்துக் கொண்டார்.

பஸ்சிலிருந்து பொலபொலவென்று கூட்டம் உதிர்ந்தது. ஆர்டிஸ்டும் உதிர்ந்தார். பக்கத்துக்கு சீட்காரரைக் காணோம்.

எங்கோ இன்னொரு கிரகத்தில் நிற்கும் உணர்வு தீடீரென நமது ஆர்ட்டிஸ்டுக்குத் தோன்றிற்று. எங்கோ, என்றோ, எவனோ, தான் என்ற ஒரு இடைவெட்டு மனதில் ஒரு மௌனக் கீறாக ஓடிற்று.

கலைந்து கொண்டிருந்த மனிதர்களது முகங்கள் மீது,மின்சார கம்பம் ஒன்றின் ஒளிச்சீற்றம். இருண்டு கருத்த முகங்களில் கண்ணாடிச் சில்லுகள் கட்டமிட்டு மின்னின.

குடில்களாகவும், சீரற்ற சிமிந்திப் பொந்துகளாகவும் தெரு பின் வாங்க, நடக்க ஆரம்பித்தார். திடீரென எதிரே உலகு வெளித்தது.வானின் பிரம்மாண்டமான முகில்கள் தமக்குள் புதையுண்ட பெரிய மர்மம் ஒன்றினை, வெள்ளியும் பாதரசமுமாக உலகுக்குத் தெரிவித்தபடி நகர்ந்து கொண்டிருந்தன. எட்டோணாத தொலை தூரத்தில் ஒரு கிராமீயக் குரல், இயற்கையின் மொழியற்ற மழலை போன்று வெற்றோலியாய்க் கேட்டு மறைந்தது.

திடீரென, அந்தக் குரலுக்குப் பதிலாக, அவருக்குப் பின்புறம் முதுகு சில்லிட, "கூ" என்றது இன்னொரு குரல். அதன் அமானுஷ்யத்தில் ஒரு கணம் அர்த்தமற்ற மரண பயம்.அவர் திடுக்கிட்டுத் திரும்பினார். நிலவு வெளிச்சத்தில் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். சுமார் பதினைந்து பதினாறு மதிக்கத்தக்க கிராமத்துப் பையன்.

அவரை அவன் பேசவிடவில்லை. " இந்நேரம், இந்நேரம் ... இன்னும் கொஞ்சம் தூரம்..." என்றான், அவரை முந்தித் தன்னைப் பின் தொடர அழைத்தபடி நடந்த அவன். அவரது மனதில் ஏதேதோ எல்லாம் எழுமுன், 'தோ" என்று ஒரு இருண்ட பெரிய பள்ளத்தைக் காட்டினான்.  திட்டுத் திட்டாக மின்னிய நிலவொளியில் இருள் மாறி, பாசி படர்ந்த குளமாயிற்று. குளத்தைக் காட்டிய சிறுவன் சரசரவென்று அதற்குள் இறங்கினான். இறங்கியவன் குளத்தினுள்ளேயே மூழ்கி மறைந்தான்.

நமது ஆர்டிஸ்டுக்கு, அந்த ஒரு கணம், தன் முன் தோன்றி மறைந்தது அமானுஷ்யமான ஏதோ ஒரு உயிர் வடிவம் என்றே சிறுவனின் தோற்றமும் மறைவும் எண்ண வைத்தன.

அதற்குள் பையன் குளத்திலிருந்து ஈரம் சொட்டச் சொட்டக் கிளம்பிக் கரையேறி, கையில் எதையோ கொண்டு வந்தான்.

அது ஒரு நீல வண்ண ஜாலம். அப்போது தான் விரிந்து கொண்டு இருந்தது. அந்த நீலோத்பலம். பத்திரமாக நீட்டிய கையிலிருந்து பெற்று கொண்டார் அதை.   

"நீலோத்பலம், அதுவும் ராவானதும், நீருக்கடியில்தான் பூக்கும்.அதன் அழகை யார் கண்டது?" யாரோ, எங்கோ,என்றோ அவரது ஞாபகங்களின் விளிம்பில் நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். குளத்தின் எதிர்க்கரையில், பையனை ஆர்டிஸ்ட் மீது ஏவி விட்டு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துக்கு சீட்காரரா?

ஆர்டிஸ்டின் கண்கள் பையனின் முகத்துக்குத் திரும்பின. ஈரம் பட்ட சிறுவனின் முகத்தில் உக்ரமாக விழுந்த சந்திர தீபத்தின் வெளிச்சம், அவனது பெரிய கண்களுக்கும், நெற்றியிலிரிந்து பள்ளமற்று ஓடிய நாசிக்கும், ஆயிரமாயிரம் வருஷங்களாக இயற்கையினால் அதி கவனத்துடன் செதுக்கப்பட்ட இன்னொரு முகத்தின் சாயலைத் தந்து கொண்டிருந்தன.   

தம்மை மீறிய மரியாதையுடன், " யார் நீ?" என்றார் ஆர்டிஸ்ட்.

அவன் பதில் சொல்லவில்லை. தூரத்தே மொழியற்று ஒலித்த குரல், ஒலியலைகளாக உருப்பெற்று, 'கிஸ்ணா"என்று கேட்டது.

பையன் பதிலுக்குக் 'கூ' என்றபடி, நிலவின் பரந்த வெளியினடே தன்னை அழைத்த குரலை நோக்கி ஓடினான். கையில் நீலோத்பலம் அதற்குள் ஆகாயமாகத் தனது நீலச்சுடர்களை மலர்த்தி விட்டது.     

----------------------

அம்ருதா பதிப்பகம் 2009 

தட்டச்சு உதவி: மணிகண்டன்

Oct 4, 2011

நினைவோடை : பிரமிள் – சுந்தர ராமசாமி

(தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)

சிவராமூவை (பிரமிள்) நான் நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது எனக்குக் கவர்ச்சியும், கவர்ச்சியினால் ஒரு மானசீக உறவும் ஏற்பட்டிருந்தது. அவர் சாதாரணமானவர் அல்ல என்ற நினைப்பு எப்படியோ மனதிற்குள் வந்திருந்தது. முதலில் படித்த ஒருவருடைய எழுத்து எது என்பதையோ, முதலில் ஒருவரைப் பார்த்தது எப்போது என்றோ சொல்லும்போது என் ஞாபகம் பற்றிச் சிறிது நம்பிக்கையில்லாமல்தான் இருக்கிறது. சிறு பிசகு அதில் இருக்கலாம். பெரிய பிசகு இருக்காது என்று நினைக்கிறேன். சிவராமூ எழுத்துவில் எழுதியிருந்த எஸ். பொ.வின் ‘தீ’ பற்றியSURApramizh கடிதம் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது. அது ஒரு விளாசல் கடிதம். விளாசல்கள் மீது எனக்கும் நம்பிக்கும் அந்த வயசில் ரொம்பக் கவர்ச்சி இருந்தது. எல்லாவற்றையும் நொறுக்கி எறியவேண்டும்! அந்த ஆவேசம்தான் மனதிற்குள். ஆவேசம் ஏற்படும்போது சந்தோஷமாக இருந்தாலும் பின்னால் தனியாக நான் யோசிக்கும்போது குறையாக இருந்தது. ‘தீ’ என்ற நாவலை நான் அப்போது படித்ததில்லை.

‘தீ’ வணிக எழுத்தல்ல. சிவராமூவின் விமர்சனத்திலிருந்தே அதை ஊகிக்க முடிந்தது. எஸ். பொ. தீவிரமாக எதையோ சொல்ல முயன்றிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்று. பழமையான மதிப்பீடுகளைக் குலைத்துப்போடப் பார்த்திருக்கிறார். அதில் அவர் வெற்றிபெறாமல்கூடப் போயிருக்கலாம். சிவராமூ சொல்கிற கருத்துக்கள் எல்லாமே சரி என்று வைத்துக் கொண்டாலும்கூட எதற்கு இவ்வளவு காரமான tone என்று நினைத்தேன். சிவராமூவைச் சந்தித்து, ‘ஓர் உயிரும் ஈருடலும்’ ஆன பின்பு பல சந்தர்ப்பத்திலும் இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசியிருக்கிறேன். நிறைய விவாதித்திருக்கிறோம். அதற்குள் ‘தீ’யைப் படித்திருந்ததால் சிவராமூவின் கடிதத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. எஸ். பொ.வை அவருடைய குறைகளுக்காக விமர்சிக்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பதைத்தான் சம்பாஷணைப் பாங்கில் நான் சிவராமூவிடம் ஒன்றிரண்டு முறை கேட்டேன். சிவராமூ தன்னை நியாயப்படுத்திப் பேசிக்கொண்டே இருந்தார். அவராகச் சில சமயம் தன்னை மறுபரிசீலனை செய்து சில சறுக்கல்களையும் அபூர்வமாக ஒத்துக்கொண்டு இருக்கிறார்.

திருவல்லிக்கேணியில் தமிழ்ப் புத்தகாலயமும் ஸ்டார் பிரசுரமும் ஒன்றாக இருந்த காலத்தில் தினமும் மாலையில் ஐந்தாறு எழுத்தாளர்கள் அங்கு வந்து கூடுவார்கள். க. நா. சு., செல்லப்பா, கு. அழகிரிசாமி மூவருக்கும் நிரந்தர ஆஜர் உண்டு. சில நாட்களில் அழகிரிசாமியுடன் நா. பார்த்தசாரதியும் சேர்ந்து வருவார். நானும் நம்பியும் சென்னையில் இருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தவறாமல் ஆசையுடன் அங்கு போவோம். கிண்டலும், கேலியும், நகைச்சுவையும் வெளிப்படும் அட்டகாசமான பேச்சுக்களாக இருக்கும். சிவராமூ செல்லப்பாவுடன் இருந்த நாட்களில் அவரையும் அங்கு அழைத்துக்கொண்டு போவாராம். அப்போதைய சிவராமூவைப் பற்றி என்னிடம் அதிகம் சொல்லியிருப்பவர் அழகிரிசாமி. பேசாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருப்பார் என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்வார். அவருடைய கலகலப்பான சுபாவத்தால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடிந்திருக்கவில்லை போலிருந்தது. சிவராமூவுக்கு அப்போது வயசு மிகக்குறைவு. சென்னையும் அவருக்கு அன்னியமானது. அவரைச் சுற்றி எப்போதும் இருந்ததும் சீனியர் எழுத்தாளர்கள். இவையெல்லாம் காரணமாக இருந்திருக்கலாம் என்று நான் சொல்வேன். அழகிரிசாமி அவருடைய பேச்சுச் சாமர்த்தியத்திற்கு ஏற்றாற்போல், ‘ஐயா பேச வேண்டாம், ஒரு புன்னகை பூத்தால் தண்டனை உண்டா?’ என்று கேட்பார்.

ஒரு சில வருடங்களுக்குப் பின் சென்னைக்குச் சென்ற போது செல்லப்பாவுக்கு சிவராமூவைப் பற்றி ஒரு மறுபரிசீலனை உருவாகிக் கொண்டிருந்தது. சில சமயம் மனதைச் சங்கடப்படுத்தும் விதமாக நடந்துகொண்டு விடுகிறான், என்ன செய்வது என்றார். சிவராமூவின் மனதை முழுமையாக மௌனி ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததும் செல்லப்பாவுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். சதா தன்னிடம் மௌனியைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். மௌனியைப்பற்றி சிவராமூ எழுதியிருக்கும் கத்தையையும் காண்பித்தார். பெரிய கத்தையாக இருந்தது. அதை அவர் காட்டிய முறையில் அதை வெளியிட வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை என்று தோன்றிற்று. சில விஷயங்களேனும் சிவராமூ முக்கியமாகச் சொல்லியிருப்பார் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. படித்துப் பாருங்களேன் என்று நான் செல்லப்பாவிடம் சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து எழுத்தைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு என்னிடம் காட்டிய கையெழுத்துப் பிரதியிலிருந்து செல்லப்பா அதிகமாகத் தேர்வு செய்யவில்லை என்றுதான் தோன்றிற்று.

ஒரு முறை அவர் சென்னைக்கு வந்தபோது - 1972 ஆக இருக்கலாம் - எனக்கு எழுதிய கடிதங்களில் எல்லாம் நாகர்கோவில் வர விருப்பம் தெரிவிக்கும் வரிகள் இருந்தன. வெளிப்படையாகச் சொல்லாத தினுசில். பத்மநாபன் தன்னை அழைத்திருப்பதாகவும் தனக்குத் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் போகிறார் என்றும் எழுதியிருந்தார். பத்மநாபன் டில்லியிலிருந்து நாகர்கோவில் வந்து ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இங்கிலீஷ் பேராசிரியர். ஒரு ஆசிரியராக அவருக்கு மிகவும் நல்ல பெயர் ஏற்பட்டிருந்தது. அவரும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் சிவராமூவை, தான் அழைத்திருப்பதாகச் சொன்னார். அவரைத் தங்கவைக்க இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். நானும் அவரும் சேர்ந்து சிவராமூவைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பத்மநாபனுக்கு இருக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் நான் அதிகமாகச் சம்பந்தப் பட்டுக் கொள்ளவில்லை. என் நிலை மோசமாக இருந்தது. வீட்டில் பிரச்சினைகள். வியாபாரத்திலும் பிரச்சினைகள். நம்பியைக்கூட அதிகம் பார்க்காமல் இருந்தேன்.

இந்நிலையில் சிவராமூ என் பொறுப்பில் வந்தால் சரிவர அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்று நினைத்தேன். அவர் சில மாதங்களேனும் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்ற யோசனையுடன் வருகிறார் என்பதும் தெரிந்தது. அவர் தங்கும் விஷயமாக நான் நிறைய பொறுப்புக்கள் எடுத்துக் கொள்ளும்படியாகத் தான் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

சிவராமூவுக்கு என் நிலையை மறைமுகமாகத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். அவரைச் சந்திப்பதிலும், பேசுவதிலும் எனக்கும் நம்பிக்கும் இருக்கும் ஆசையைத் தெரிவித்திருந்தேன். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அவருடன் பேச ஆசைப்படும் விஷயங்கள் நிறைய இருந்தன. அவர் மர்மமாக இருந்தார். அவரைச் சுற்றியிருந்த மர்மங்களை எல்லாம் விரட்டிவிட்டு அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவருடைய வாசிப்பு, வேறு பாஷை எழுத்தாளர்களைப் பற்றியும், தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் அவருடைய அபிப்பிராயங்கள், திருகோணமலைப் பின்னணிகள், ஓவியம் பற்றிய ஈடுபாடுகள், ஆத்மீக ஞானம் பற்றிய அனுபவங்கள், ஜே. கிருஷ்ணமூர்த்தி, கவிதை சம்பந்தமாக அவர் தெரிந்து வைத்துக்கெண்டிருக்கும் ரகசியங்கள், இருந்திருந்து சிவானந்த சரஸ்வதியிடம் எப்படி அபிமானம் ஏற்பட்டது . . . இப்படிப் பல விஷயங்கள். சிவராமூவுக்கு எழுதிய கடிதத்தில் என் பிரச்சினைகளைச் சொல்லி, நான் விரும்பும் காரியங்கள் எதையுமே சந்தோஷமாகச் செய்ய முடியாத சோதனை இருப்பதையும் எழுதியிருந்தேன்.
ஒருநாள் சிவராமூ என் வீட்டுக்கு வந்தார். கையில் பெட்டியுடன், வேறு சில பைகளுடன். அறையைக் காலி செய்துவிட்டு வருவது தெரிந்தது. ‘சென்னையிலிருந்து நேராக வருகிறேன்’ என்றார். களைத்துப்போய் பறட்டையான கோலத்தில் இருந்தார். குளித்துவிட்டு வந்தபோது முகம் புதுசாக இருந்தது. அன்று என் வீட்டில் என் நண்பர்களான எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். காசியபன் இருந்தார். அது நல்ல ஞாபகம். கூட இருந்தது யார் என்பது ஞாபகம் இல்லை.

காசியபனுக்கு சிவராமூவை அறிமுகப்படுத்தி வைத்தேன். இவரா சிவராமூ என்று சத்தமாகக் கேட்டார். தன் ஜன்மத்தில் அவரைப் பார்க்க வாய்க்கும் என்று நினைத்திருக்கவில்லை போல் இருந்தது. நாகர்கோவிலில் அவர் இருந்த காலத்தில் நான் அவரை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் போதெல்லாம் ஏறத்தாழ இதே மாதிரி தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனக்கு இது ஒருவிதமான சந்தோஷத்தையும் பெருமையையும் தந்தது. ஒவ்வொரு தடவை இப்படி நடக்கும்போது நான் சிவராமூவின் முகத்தைக் கவனிப்பேன். எதுவுமே நடக்காத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இருப்பார். அவரது சுபாவத்தில் இருந்த விசித்திரங்களையும் தந்திரங்களையும் கண்டு பிடிப்பதில் எனக்கும் நம்பிக்கும் ஒரு போட்டி இருந்தது. ஒவ்வொரு சமயம் நம்பியைச் சந்திக்கும்போதும் நாலைந்து புதிய கண்டுபிடிப்புகளைச் சொன்னேன். ஒரு தடவை நம்பி, ‘நான் உங்ககிட்ட தோத்துப் போயாச்சு, ஆளை விட்டுடுங்கோ’ என்றான். சிவராமூ விடம் மிக நெருக்கமாகிக் கொஞ்சலும் கேலியும் இருந்த காலத்தில் நானும் நம்பியும் மாற்றி மாற்றி ஸ்வரம் வாசிக்கும் நாதஸ்வரக்காரர்கள் மாதிரி சிவராமூ வின் தந்திரங்களை அவரிடமே அவிழ்த்து விடுவோம். அவருக்குச் சந்தோஷம் தாங்காது. நாங்கள் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் பெரிதாகச் சிரிப்பார். ஒரு தடவை, ‘ஓய், சூது வாது இல்லாம உலகத்தில பொழைக்க முடியாது சாமி’ என்றார்.

ஒவ்வொரு தடவை ஆரல்வாய்மொழியிலிருந்து சிவராமூ நாகர்கோவில் வரும்போதும் அவருடைய தங்கல்பற்றி விசாரிப்பேன். ‘போகுது ஓய், எல்லாம் டேர்ற்றி பிஸினஸ்’ என்பார். என்ன சொல்கிறார் என்பது புரியவேயில்லை. ஒரு நாள் இரண்டு நாள் என்னுடன் இருந்துவிட்டு மீண்டும் ஆரல்வாய் மொழிக்குப் போவார். நாகர்கோவிலில் இருக்கும்போது நான் அவருடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பே கிடையாது. அவர் அவருடைய உலகத்துக்குள்ளேயே ஆழ்ந்து கிடப்பார். படுத்துக்கொண்டே தியானம். கொஞ்சம் கொஞ்சம் படிப்பார். அவர் வெரோஷியஸ் ரீடரே அல்ல. தியானத்தில் எந்த வகை என்று கேட்டிருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தி என்பார். அல்லது ஜிட்டு என்பார். ஜே. கே. என்று சொல்வது அவருக்குப் பிடிக்காது. ‘மதராஸிலே ஜெயகாந்தன ஜே. கே. னு சொல்றாங்க ஓய்’ என்பார். நானும் அவரும் தியானத்தைப் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருப்போம். ஓஷோ பற்றி ஒரே பேச்சாக இருந்த காலம். ‘உங்களுக்குப் பிடிக்குமா?’ என்று கேட்டிருக்கிறேன். ‘நமக்கு ஒத்து வராது ஓய்’ என்று சொல்லியிருக்கிறார்.

உணவைப் பற்றியோ, ஆடை பற்றியோ அவருக்குக் கவனமே கிடையாது. உயிர் வாழ உண்ண வேண்டியிருக்கிறது. அம்மணமாக இருந்தால் பார்ப்பவன் உதைப்பான். அதற்கு மேலாக எதுவுமில்லை. என் வீட்டு மொட்டை மாடியின் நடுவிலிருந்த ஒரு கூரையின் நிழல் பன்னிரண்டு மணி வரையிலும் பக்கவாட்டில் இருக்கும். அந்த நிழலுக்குமேல் ஒரு பலாமரத்தின் கிளைகளும் வீச்சாக இருக்கும். அந்த இடத்தில் வெறும் தரையில் படுத்துக்கொண்டிருப்பார். திடீரென்று எழுந்திருந்து வெளியேபோய் சுற்றிவிட்டு வருவார். எங்கு போவார் என்பது தெரியாது. திரும்பி வரும்போது முகத்தைப் பார்த்தால் நாலைந்து மைல்கள் சுற்றியிருப்பதுபோல் தோன்றும். ஒரு காசு வீணாக்கமாட்டார். செலவழிக்கவே யோசிப்பார். பணமும் கையில் மட்டாகத்தான் எப்போதும் இருக்கும்.

ஆரல்வாய்மொழியில் அவர் அறை இருந்தாலும் பெரும்பாலும் அவர் என்னுடன்தான் இருப்பார். அப்படி இருப்பது திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. பேசிக்கொள்ளவும் பரஸ்பரம் கேலிசெய்து கொள்ளவும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. தோசை சாப்பிடுவதில் எனக்கு இருந்த பலவீனத்தை அவர் பலமாகப் பிடித்துக்கொண்டு கேலி செய்வார். எதாவது பிரச்சினைகளுக்கு நான் தரக்கூடிய விளக்கம் அவருக்குப் பிடிக்காமல் போகிறபோது, ‘உமக்குத் தோசை திங்கத்தான் தெரியும்’ என்பார். நம்பி, கூட இருந்தான் என்றால், ‘மாலாடு பிடிக்கும் என்று அவர் அம்மா சொல்லியிருக்கா’ என்று அவரை மேலும் தூண்டி விடுவான். இதுபோல் என்னை இறக்க அவரிடம் பல பிடிகள் இருந்தன. அதை உரிய சந்தர்ப்பத்தில் பயன்படுத்தவும் அவருக்குத் தெரியும்.

திடீரென்று ஒரு நாள் பெட்டி படுக்கையுடன் சிவராமூ என் வீட்டுக்கு வந்தார். அலங்கோலமாக இருந்தார். என்ன என்று கேட்டேன். ‘பெரிய சிக்கல் ஓய்’ என்றார். அதைப்பற்றிப் பின்னால் பேசிக்கொள்ளலாம் என்றேன். சொன்னார். தெளிவாகவே சொல்லவில்லை. அவருடைய வாழ்க்கையில் நடந்த எந்த விஷயத்தைப்பற்றிக் கேட்டாலும் சொற்ப வார்த்தைகளில் மென்று துப்புவார். நான் மீண்டும் மீண்டும் கேட்டு ஒரு மாதிரி விஷயத்தைப் புரிந்துகொண்டேன்.
டி. பி.யைக் கவனித்துக் கொண்டிருந்த கிழவியின் மகளுடன் அவருக்கு ஏதோ தகராறு ஏற்பட்டுவிட்டது. ‘அந்தப் பெண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருக்கிறாள். நான் வந்துவிட்டேன்’ என்றார். அதற்குமேல் அவரிடமிருந்து புரிந்துகொள்ள முடியவில்லை.

எனக்கும் நம்பிக்கும் முப்பது வருடங்களில் ஏற்பட்ட நெருக்கமானது சிவராமூவுடன் நாலைந்து மாதங்களிலேயே எனக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் கொள்ளும் கோபங்கள் எல்லாம் எனக்குள் பெரிய வலியை ஆரம்பத்தில் தோற்றுவித்திருக்கவில்லை. அவர் என்னை நிறைய உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘அஃக்’ பரந்தாமன் பல தடவை சிவராமூவைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். ஒரு முறை பிரம்மராஜன்கூட வந்திருந்தார். அப்போது எனக்கு பிரம்மராஜன் என்று தெரியாது. ஏதோ ஒரு கல்லூரி மாணவர் என்றுதான் பதிவாகியிருந்தது. அவரும்கூட சிவராமூவைப் பார்க்கத் தான் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார் என்று நினைக்கிறேன். அப்படிப் பலரும் அவரைப் பார்க்க வருவதுண்டு. அஃக் பரந்தாமன் சிவராமூவின் கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் போட்டிருந்தார். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு என்று நினைக்கிறேன். அதற்கு சாமிநாதன் தான் முன்னுரை எழுதியிருந்தார்.

எனக்கும் நம்பிக்கும் இடையில் இருந்த அதே அளவுக்கான நெருக்கம் எனக்கு சிவராமூவுடன் நாலைந்து மாதங்களிலேயே ஏற்பட்டிருந்தது என்று சொன்னேன் இல்லையா? அது பற்றி நம்பிக்கு உள்ளூர வருத்தம் இருந்தது. சில சமயங்களில், சிவராமூவுடன் நெருங்கிப் பழகாதீர்கள் என்று சொல்லுவான். ஏன் என்று கேட்பேன். அவரிடம் ஒருவித துர்புத்தி இருக்கிறது என்று சொல்லுவான். தனக்குச் சொந்தமாக இருந்த ராமசாமியை சிவராமூ வந்து எடுத்துக் கொண்டுவிட்டான் என்ற எண்ணம் நம்பி மனதில் இருந்ததாக எனக்குத் தோன்றியது. அந்த ஆற்றாமை காரணமாகத்தான் அவன் என்னை எச்சரிப்பதாக நான் எடுத்துக்கொண்டேன். பொதுவாகவே நான் அவனுடன் எந்த விஷயம் குறித்தும் எதிர்வாதம் செய்ய மாட்டேன். அவனிடம் லேசாகச் சொல்லிப் பார்ப்பேன். அதன் பின் விட்டு விடுவேன். ஏனென்றால் உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தைப்பற்றிப் பேச்சு நகரும்போது அவனால் அதை ஒரு பிரச்சினையாகத்தான் சொல்ல முடியுமே தவிர விவாதமாகக் கொண்டு போக முடியாது.

சிவராமூ யாராவது ஒருவரது வீட்டில் தங்கினார் என்றால் அந்த வீட்டிலிருப்பவர்களிடையே, கணவன் மனைவியிடையேகூட ஒரு பிரச்சினை நிச்சயம் உருவாகி விடும். பெரும்பான்மையான குடும்பங்களில் அப்படி நடந்திருக்கிறது. எங்கள் வீட்டில் அப்படியான பிரச்சினை வரவில்லை. ஆனால் அவர் கமலாவிடம் பேசும் போது என் மீது சந்தேகம் வரும்படியாக ஏதாவது பேசுவார். கிண்டல் மாதிரியும் இருக்கும். ஆனால் ஒருவித விஷ ஊசியை மறைத்துக் கொண்டிருப்பாகவும் தோன்றும். எங்கள் வீட்டில் அவரது முயற்சி ஏனோ வெற்றி பெறவில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால் ஒருவேளை வெற்றி அடைந்திருந்தாலும் அடைந்திருக்கும். நம்பியின் வீட்டில் ஒரு பத்துப் பதினைந்து நாட்கள்தான் தங்கியிருந்தார். அதற்குள் அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையில் ஒருவித மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. கொஞ்ச நாளில் அவர் அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். ‘நம்பியை இனி ஜென்மத்துக்கும் பார்க்க போவதில்லை’ என்று சொன்னார். அதை நம்பியிடம் சொன்னதும், அவர் என்ன அப்படிச் சொல்வது, அதற்கு முன்பே நான் அப்படித் தீர்மானித்து ஆகிவிட்டது என்று சொன்னான். இருவரிடமும் அதன் பின் பல தடவை என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறேன். இருவருமே எதுவுமே சொல்லவில்லை.

அவர் எங்கள் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் நான் என் அப்பாவுக்கு அவரை அறிமுகப்படுத்தி வைக்கவேயில்லை. சிவராமூவும் அதுபற்றிக் கவலைப்படவில்லை. எனக்கு என்ன தோன்றியது என்றால் என் அப்பாவின் மனதில் இரண்டு விதமான பட்டியல்கள் இருந்தன. பார்த்தசாரதி போன்றோரெல்லாம் ஒரு பட்டியலில் வருவார்கள். நாகராஜன் போன்றவர்கள் எல்லாம் இன்னொரு பட்டியலில் வருவார்கள். சிவராமூவையும் என் அப்பா இரண்டாவது பட்டியலில்தான் வைத்திருப்பார். எனவே, சிவராமூவை என் அப்பாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தால் ஏதாவது சண்டை வரும் என்று நினைத்து நான் அதைச் செய்திருக்கவில்லை. என் அப்பாவும் அதுபற்றி எதுவும் கேட்டிருக்கவில்லை.

கடிதம் எழுதினாரென்றால் மிகக் கடுமையாக விமர்சித்துதான் எழுதுவார். வெங்கட் சாமிநாதன் விமர்சித்து எழுதினாலும் மிகவும் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அவர் சொல்லும் விமர்சனங்களில் ஒரு தர்க்கபூர்வமான நியாயம் இருக்கும். சிவராமூ எழுதுவது அப்படி இருக்காது. அதோடு சாமிநாதன் எழுதியதற்கு நாம் விளக்கம் சொன்னால் அவர் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுவார். உறவை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் சிவராமூ விடம் அது சாத்தியமில்லை. வேறு எழுத்தாளர்களுடன் எப்படி உறவு கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த அளவில் இவ்விதமாகத் தான் இருந்து வந்தார். அதோடு சிவராமூவைப் பற்றிப் பேசும்போது வெ.சா. பற்றியும், வெ.சா. பற்றிப் பேசும் போது சிவராமூ பற்றியும் பேச வேண்டி வந்துவிடுகிறது. இரண்டு பேரும் தமிழ்ச் சூழலில் சேர்ந்தே இயங்கி வந்தார்கள் என்பதால் அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் என்னளவில் இரண்டு பேரும் முற்றிலும் வேறான இரு நபர்கள்தான்.

அது மட்டுமல்லாமல் என்னைப் பற்றி மட்டுமல்ல, தமிழ் நாட்டில் இருக்கும் வேறு யாரைப் பற்றியும் எந்த விதமான விமர்சனத்தை வைப்பதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. அவர் சொல்பவற்றில் வெறும் கோணல் மட்டுமல்ல ஒருவித குரூரமும் இருக்கும். தினமணியில் வேலை கிடைத்ததும் கொல்லிப் பாவையை ராஜமார்த்தாண்டன், ராஜகோபாலிடம் ஒப்படைத்துவிட்டு மதுரைக்குப் போய்விட்டிருந்தார். ராஜகோபால் என்னைச் சந்தித்து எட்டு இதழ்கள் தன்னால் கொண்டு வர முடியும் என்றும் நான் கொஞ்சம் ஆதரவு தந்தால் உற்சாகமாக அதைச் செய்ய முடியும் என்றும் சொன்னார். நானும் என்னால் முடிந்த ஆதரவைத் தந்து வந்தேன். இது சிவராமூவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. சிவராமூ ஏதாவது படைப்பை அனுப்பினாலும் ராஜகோபால் அதை வெளியிடத்தான் போகிறார். இத்தனைக்கும் பலருக்கும் என் மீது இருப்பதைவிட அதிக ஈடுபாடு சிவராமூ பேரில் இருந்திருக்கிறது. ராஜகோபால், ராஜமார்த்தாண்டனுக்கும் சிவராமூ பேரில் ஒருவித ஈர்ப்பும் மதிப்பும் இருந்திருக்கிறது. அது மிகவும் இயல்பான மிகவும் சாதாரணமான விஷயம்தான். நுட்பமான வாசகர் ஒருவர் அவர் பேரில் ஈடுபாடு கொள்வது என்பது மிகவும் இயல்பான விஷயம்தான். ராஜகோபாலுக்கு என்னைப் பற்றிக் கெட்டவார்த்தைகள் போட்டு -அவற்றையெல்லாம் வெளியில் சொல்லவே முடியாது -கடிதம் எழுதியிருக்கிறார். அதுபோல் பலருக்கும் எழுதியிருப்பார் என்றுதான் நான் நம்புகிறேன்.

அதன் பின் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ராஜமார்த்தாண்டன் எங்கள் கடைக்கு வந்தார். அவர் சொன்னார், சிவராமூவும் வந்திருக்கிறார் என்று. எங்கே என்று கேட்டேன். வெளியில் நின்றுகொண்டிருக்கிறார் என்றார். இது அவருடைய குணம். நம்மைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதைச் செய்வார். பலவிதங்களில் அதைச் செய்வார்.

‘ஏன் வெளியில் நிற்கிறார்’ என்று கேட்டேன். ‘உள்ளே வரத் தயக்கமாக இருக்கிறது அவருக்கு’ என்று சொன்னார் ராஜமார்த்தாண்டன். ‘இது ஒரு வியாபார நிலையம்தானே. இங்கு யார் வேண்டுமானாலும், வரலாம். போகலாம்’ என்று சொன்னேன். போய் அழைத்து வந்தார். சௌக்கியமாக இருக்கிறீர்களா என்று கேட்டேன். இருக்கிறேன் என்று சொன்னார். கடையில் உள்ளே ஒரு அறை இருந்தது. அங்கு போனேன். அவர்கள் இருவரும் வந்தார்கள். சிவராமூ எதுவுமே பேசவில்லை. நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அதன் பின் இருவரும் போய்விட்டார்கள். அப்போது அவர் ராஜமார்த்தாண்டனுடன் தங்கியிருந்தார்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து சிவராமூ மட்டும் கடைக்கு வந்தார். என்னிடம் இருந்து வாங்கியிருந்த நாற்பது பக்கம் நோட்டையோ எதையோ திருப்பித்தரும் சாக்கில் வந்தார். நீங்கள் எல்லாம் கணக்கு வழக்குகளில் துல்லியமாக இருக்கக் கூடியவர்கள். இந்தப் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை என்று சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தாலும் தொடுத்துவிடுவீர்கள் என்பது போன்ற ஒரு தோரணையில் அதை வந்து கொடுத்தார். அவருக்கே அவையெல்லாம் மிகையான கற்பனைகள் என்பது தெரிந்துதான் இருந்தது. அதன் பின் அப்படியே மெல்ல ஒரு பழக்கம் உருவானது. அதன் பின் ராஜமார்த்தாண்டன் திருமணத்தின்போது ஒரு மாத காலம் எங்கள் வீட்டில் இருந்தார். அடிக்கடி ராஜமார்த்தாண்டனைப் போய்ப் பார்த்துவிட்டு வருவார். அப்போது சாமிநாதனைப் பற்றிக் கடுமையாகத் தாக்கிப் பேசுவார். நீங்கள் அதையெல்லாம் அவருக்குக் கடிதம் எழுதித் தெரியப்படுத்துங்களேன் என்று சொல்லுவேன். நீங்களும் சாமிநாதனும் ஒரு கட்சி என்பது எனக்குத் தெரியும் என்று என்னைத் தாக்குவார். ‘சாமிநாதன் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிறான். என் வசம் நான் நூற்றுக்கணக்கான யானைகளை வைத்திருக்கிறேன். ஒரு நாள் அவற்றை அனுப்பி வைப்பேன். அப்போது அவனுக்குத் தெரிய வரும் யாருடன் மோதுகிறோம் என்பது’ என்று சொல்லுவார்.

ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பில் அனுப்பியிருந்தார். என்ன என்று பார்த்தால் எங்கள் குடும்பத்தில் இருந்த எல்லோருடைய பெயரையும் எண் கணித சாஸ்திரப்படி அவர் மாற்றிக் கொடுத்ததற்கான பில் அது. அவர் மாற்றிக் கொடுத்தது வாஸ்தவம்தான். அதற்கு பில் அனுப்பியிருந்தார். கமலாவுக்கு 900 ரூபாய். எனக்கு ஆயிரம். நான் அவளைவிட வயதில் மூத்தவன். உயரமாகவும் வேறு இருக்கிறேன். அதனால் எனக்கு நூறு ரூபாய் அதிகம். இப்படி வீட்டில் இருந்த எல்லோருக்கும் பெயரை மாற்றிய கணக்கில் ரூபாய் முப்பத்தைந்தாயிரம் நான் தரவேண்டும் என்று ஒரு பில் அனுப்பியிருந்தார். நான் அதற்குப் பதில் போடவேயில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நாங்கள் சொல்லி அவர் பார்க்கவில்லை என்பதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும். இருந்தாலும் அப்படி எழுதினார். அதோடு நிற்காமல் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு கடிதம் எழுதினார். ராமசாமி எனக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய் தரவேண்டியிருக்கிறது. நான் ரொம்பவும் கஷ்டப்படக்கூடியவன் என்பது உங்களுக்குத் தெரியுமே. ராமசாமியிடம் வசதி இருக்கிறது. இந்நிலையில் எனக்குச் சேர வேண்டிய முப்பத்தைந்தாயிரத்தை நீங்கள்தான் கேட்டு வாங்கித்தர வேண்டும் என்று கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் கிடைத்தவர்களில் ஒருவர்கூட, அவருடன் தங்கியிருந்தபோது அவர் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார். அதோடு அவருக்கு இந்த விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அவரிடம் போய் இப்படிக் கேட்பது சரியல்ல என்று -எனக்குத் தெரிந்து ஒருவர்கூட - எழுதியிருக்கவில்லை. ஆனால் பணத்தைக் கொடுத்துவிடும்படி பலர் எனக்குக் கடிதம் போட்டார்கள். தமிழ்ச் சூழல் மோசமாக இருக்கிறது என்பதுதான் எனக்கு உறுதிப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அந்தக் காரியத்தைச் செய்துவந்தார். என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் ராமசாமி பணம் தராததுதான் காரணம் என்று பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் சொன்னார்.

அப்போது மதுரையில் இருந்து வைகை பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. குமாரசாமிதான் அதன் எடிட்டராக இருந்தார். மோகனும் அவருக்கு உதவியாக இருந்தார். ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படத்தைப் பற்றி மூன்று பேருடைய விமர்சனத்தை அந்த இதழில் வெளியிட்டிருந்தார்கள். ஒன்று சிவராமூவினுடையது. இன்னொன்று ஜானகிராமனுடையது. இன்னொன்று என்னுடையது. பொதுவாக வேறு யாராவது இருந்தால் அந்தக் கடிதத்தைப் பிரசுரித்திருக்கமாட்டார்கள். நான் கடுமையாகவே விமர்சித்து எழுதியிருந்தேன். வசனங்களைக் குறைத்து காட்சிபூர்வமாகச் செய்வதற்கு நிறைய ஸ்கோப் அந்தக் கதையில் இருந்தது. இருந்தும் அதை ஒரு மேடை நாடகம் போல் வசனங்களால் நிரப்பிவைத்திருந்தார். இத்தனைக்கும்சாமிநாதனுக்கு நிறைய சினிமாக்கள் பார்த்த அனுபவம் இருந்தது. நிறைய சூட்சுமங்கள் தெரிந்துமிருந்தன. இருந்தும் அந்தத் திரைக்கதையை அவர் அப்படி ஏன் எழுதினார் என்பது புரியவேயில்லை. சிவராமூ பல தடவை சொல்லியிருக்கிறார் - அந்தத் திரைக்கதை நன்றாக இல்லை, க்ரியேட்டிவாக இல்லை என்று பல குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசியிருக்கிறார். ஆனால் நான் அதைப் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஏனென்றால் அவரது விமர்சனங்கள் எல்லாமே அரசியல் நோக்கங்கள் கொண்டவை. இன்று ஒன்று சொல்லுவார். நாளை வேறொன்று சொல்லுவார். என்னிடம் பேசியபோது அதை விமர்சித்த சிவராமூ முன்னுரை எழுதிய அந்த வசனம் புத்தக உருவத்தில் வந்தபோது பாராட்டி எழுதியிருந்தார். அது தெளிவான அரசியல் காரணங்கள் கொண்ட அணுகுமுறைதான். அந்த முன்னுரையைச் சாமிநாதன் பொருட்படுத்தி எடுத்துக்கொண்டாரா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது சிவராமூவின் உண்மையான அபிப்ராயம் அல்ல என்பது எனக்குத் தெரியும்.

அவர் என் வீட்டிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு முழுவதுமாகப் பிரிந்து போனது என்பது ‘ஜே.ஜே : சிலகுறிப்புகள்’ எழுதுவதற்கு முன்பேதான் என்பது நன்கு நினைவிருக்கிறது. அதன் பின் அவரை நான் பார்க்கவேயில்லை. சென்னையிலோ வேறு எங்குமோ தற்செயலாகக்கூட அவரை நான் பார்க்க முடிந்திருக்கவில்லை. முதலில் என்னை விட்டுப் பிரிந்த பிறகு சென்னையில் போய் சில காலம் இருந்தார். சினிமாவில் சேர்ந்துவிட வேண்டும் என்று அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. இவர் என்று இல்லை, இவரைவிட எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் தமிழ்த் திரையுலகத்தினருக்கு அவர்கள் தேவையே இல்லை என்பது இவருக்கும் நன்கு தெரியும். ஒரு சாதாரண ரசிகன்கூடச் சொல்லிவிடுவான், உங்களை அவர்கள் உள்ளே சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று. ஆனால் அவர் விடாமல் முயற்சி செய்து வந்தார்.

அதன் பின் அவர் லயத்தில் என்னைப்பற்றி என்னவெல்லாம் எழுதினாரோ எல்லாவற்றையும் ஒன்றுகூட விடாமல் படித்திருக்கிறேன். அவர் என்ன நினைத்தாரென்றால் தனது வசைகளின் மூலம் என்னை அழித்து விட முடியும் என்று நினைத்தார். அவர் தாக்கி எழுதினால் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ அழிந்துபோய்விடும் என்று நினைத்தார். பல நண்பர்கள்கூடச் சொன்னார்கள். அந்தக் கட்டுரை வந்ததும் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ அழிந்துபோய்விட்டது என்று. நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்படி இந்த ஒரு நாவலை மட்டும் குறிப்பிட்டு ஏன் தாக்கிவந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தமிழில் எத்தனையோ நாவல்கள் வந்திருக்கின்றன. அந்த நாவல் ஏன் அவரை அவ்வளவு சங்கடப்படுத்தவேண்டும். தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அதை விட்டு விட்டுத் தாண்டி ஏன் அவரால் போக முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தில் அந்த நாவலுக்கு இருக்கும் இடத்தைப் பற்றி, அவரது நண்பர்கள் அதைப்பற்றிச் சொல்வதுபற்றி அவர் ஏன் கவலைப்படவேண்டும். அந்த நாவலுக்கு ஏதோ சர்வதேச அளவில் முக்கியத்துவம் கிடைத்தது போல் என் மீதான வெறுப்பை அதன் மூலம் அவர் வெளிப்படுத்திவந்தார்.

நான் ஒரு பேட்டியில், தமிழில் மேஜர் பொயட்டே இல்லை, மைனர் பொயட்ஸ்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அது அவரைக் குறித்துச் சொன்னதாகத்தான் அவர் நினைத்துக்கொண்டார். நான் அப்படிச் சொல்லியிருக்கவில்லை. என்றாலும் அவர் ஒரு மைனர் பொயட்தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இவரை மேஜர் பொயட் என்று சொன்னால் கம்பனை என்னவென்று சொல்லுவீர்கள். பாரதியை என்னவென்று சொல்லுவீர்கள். அவர்களைச் சுட்டுவதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டுமே. சிவராமூ கவிதைகள் அதிகமாக ஒன்றும் எழுதியிருக்கவில்லை. ஒருவேளை அவர் தன் முழுக் கவனத்தையும் கவிதைகளுக்கு மட்டுமே செலவழித்திருந்தாரென்றால் அப்படி ஆகியிருக்கக்கூடும். இன்னொரு வகையில் சொல்வதானால் அவரது சுபாவத்தினால் அதிகமும் நஷ்டமடைந்தது அவர்தான். பாரதியோடு எல்லாம் அவரை ஒப்பிடவே முடியாது. முதலாவதாகப் பாரதி அளவுக்கு இவருக்கு, சமுதாய அக்கறை கிடையாது. எந்தத் தேசத்திலிருந்து வந்தார், அந்தத் தேசத்தின் இன்றைய நிலை என்ன? அதுபற்றி அவருக்கு எந்த அக்கறையும் இருந்தது கிடையாது. மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையிலான உறவு பற்றித்தான் அதிகமும் பேச முற்படுகிறார். ஆனால் அப்படியான ஒருவருக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் இருந்த முரண்பாடு இருக்கிறதே அதுதான் மிகவும் உறுத்தலாக இருந்தது. ஓயாமல் பிறரைக் கொத்திக்கொண்டேயிருக்கும் ஒரு பாம்பு, மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான இணைப்பைப் பற்றித்தான் நான் எப்போதும் சிந்தித்து வருகிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும், அதுபோல்தான் சிவராமூவின் செயல்களும்.

அவரைப் போன்ற ஆட்கள் பிற நாடுகளில் பல உயரிய கலைப் படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள். நமது மரபில் இப்படியான ஒரு நபரை முதன் முதலாகப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கும்கூட ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றுக்கு அப்போதே செவி சாய்த்திருந்தேன் என்றால் விஷயங்கள் வேறுவிதமாக நடந்திருக்கக்கூடும். ஆனால் அப்போது ஏனோ அப்படி நடக்கவில்லை. ஆனால் அவர் மூலமாகக் கிடைத்த அனுபவமானது என் நண்பர்களை நான் வடிகட்டித் தேர்ந்தெடுக்கவோ, எச்சரிக்கையாகப் பழகவோ என்னை மாற்றியிருக்கவில்லை. நண்பர்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்று நான் சொன்னதேயில்லை. ஓரிரு மாற்றங்கள் என்னில் ஏற்பட்டிருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சிவராமூவை, அவருடனான அனுபவத்தை தனியான ஒன்றாகத்தான் நான் பார்த்தேன்.

என்னைத் துன்புறுத்த வேண்டும் என்று பலருக்கு ஆர்வம் இருந்து வருவது எனக்குத் தெரியும். ஆனால் அவரைப் போல் ஒரு தொழிலாக அதைச் செய்பவர்கள் வேறு யாருமே கிடையாது.

*******

நன்றி: http://sundararamaswamy.com

Jul 26, 2011

வண்ணத்துப்பூச்சியும் கடலும்- பிரமிள்

 
 

வண்ணத்துப்பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்piram3
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி...
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

******

(உன்) பெயர்

சீர்குலைந்த சொல்லொன்று
தன் தலையைத்
தானே
விழுங்கத் தேடி
என்னுள் நுழைந்தது.
துடித்துத் திமிறி
தன்மீதிறங்கும் இப்
பெயரின் முத்தங்களை
உதறி உதறி
அழுதது இதயம்.
பெயர் பின் வாங்கிற்று.
“அப்பாடா“ என்று
அண்ணாந்தேன்...
சந்திர கோளத்தில் மோதியது
எதிரொலிக்கிறது.
இன்று, இடையறாத உன்பெயர்
நிலவிலிருந்திறங்கி
என்மீது சொரியும் ஓர்
ரத்தப் பெருக்கு.

****

நன்றி: அரியவை

Nov 20, 2010

ஒளிக்கு ஒரு இரவு-பிரமிள்

ஒளிக்கு ஒரு இரவு-பிரமிள்
காக்கை கரைகிறதே
பொய்ப்புலம்பல் அது.
கடலலைகள் தாவிக் குதித்தல் prameel5
போலிக் கும்மாளம்.
இரும்பு மெஷின் ஒலி
கபாலம் அதிரும்.
பஞ்சாலைக் கரித்தூள் மழை
நுரையீரல் கமறும்.
அலமறும் சங்கு இங்கே
உயிர்ப்புலம்பல்.
தொழிலின் 
வருவாய்தான் கும்மாளம்.
லாப மீன் திரியும்
பட்டணப் பெருங்கடல்.
தாவிக் குதிக்கும்
காரியப் படகுகள்.
இயற்கைக்கு ஓய்வு ஓயாத
மகத் சலித்த அதன்
பேரிரவு.

நிழல்கள்-பிரமிள
பூமியின் நிழலே வானத் திருளா?
பகலின் நிழல்தான் இரவா?
இல்லை,
பூமிப் பந்தின் பின்னே
இருளின் பிழம்பு,
இரவில் குளித்து
உலகம் வீசும்
வெளிச்சச் சாயை பரிதி.
ஆமாம்.
இரவின் நிழலே பகல்;
இருளின் சாயை ஒளி.

Sep 6, 2010

காடன் கண்டது - பிரமிள்

எத? எவன் கண்டதச் சொல்ல? நான் கண்டது கல்லுத்தரைக் காட்டில். தடம் சொல்றன் கேளு.
பஸ்ஸு வந்து நிக்கிற மரத்தடியும் இட்டிலி சோடாக் கடையும் தாண்டினா, ரஸ்தா நேரோட்டம் போட்டு, எருமை புரள்ற சேத்துப் பள்ளத்திலே விளுந்து, அக்கரை ஏறும்போது ரெண்டு தடமாகும். ஒண்ணுக்கு இன்னும் பேர் ரஸ்தா. அதே மாதிரி கல்லிலும் புல்லிலும் prameel11கால்பட்டுத் தேய்ஞ்ச இன்னொண்ணு பேரில்லாத காட்டுத்தடம்.
வெய்யிலில் எருமைப்பள்ளம் தண்ணி வத்தி, களி காறைகட்டிப் பொளந்து கெடக்கும். ஊரெல்லாம்  களிமண்ணு. கூடவே பாறைக் கல்லுத் தரையுமுண்டு. மரமில்லாம வெளிச்ச மாதிரி இருந்தாலும் கல்லுக் காட்டில் தடம் மாறிடும். மேற்கே மலைக் காட்டுக்குப் போற கோணமிருந்தா வழிகேட்டுக்கோ. சுக்கான் பயலைக் கேளு. என்னைக் கேளு.
பஸ்ஸ்டாப்பில் இட்லி சோடாக்கடேல பஸ்ஸுக்காரன் நிப்பான். அக்குளில் தோல் பட்டைப்பையிலே ரூவா சில்லறை இருக்கும். வெத்தலைச் சாறு வாய்க்குள்ளே குதகுதன்னு உப்பிக் கிட்டுக் கிடக்கும். இட்லி சோடாக்கடேல போலீஸூக்காரரும் நிப்பாரு. துண்ணுட்டுக் கணக்கில போடும்பாரு. ஆளோட்டம் பாத்துக்கிட்டு வெத்தலையிலே சுண்ணாம்பைப் போடுவாரு.
யாரோ வர்றான் - வெள்ளை வேட்டி. அவனுக்கு போலீஸுக்காரரு அக்கரபக்கரமா சலாமுகள் வைச்சு, எசமான் புண்ணியமுங்கறாரு. வெள்ளை வேட்டி பாக்காமலே, “சாவடில போயி வந்துட்டேன்னு சொல்லு”ன்னுட்டு வேட்டியை நாசூக்கா மடிச்சுத்தூக்கி, எருமைப்பள்ளத்துலே தடம்புடிச்சு அக்கரை ஏறி, ஊர்க்கோயில் பக்கம் தலையைக் காட்டிட்டுப் போறான். பிஸினஸான ஆளு. கண்ணு குடுக்காமலே ரஸ்தாவிலே போறான்.
ரெண்டுதடம்லே சொன்னேன்? ஊருக்குள் ஓடற ரஸ்தா ஒண்ணாச்சா? அதுக்கு இடத்துக்கையில மலைக்காட்டுக்குப் போற தடம். அந்தத் தடத்தைப் புடிச்சா, வயலுக்குத் தரைகாட்டதெ கல்லுகள் முளைச்ச புத்தும் இருக்கும். ஒரு கல்லுத் தூரத்துக்குள்ளார ஊர்ச் சனங்கள் வெளிக்குப் போற இடம் முடிய முந்தி ஒரு தடம் பெரிய கல்லுத் தரையிலே ஏறி திக்கில்லாமல் போகும். அங்கிட்டு கல்லுத் தெரிஞ்சுதான் தடம் புடிக்கணும். அரையாள் மட்டுக்கு கல்லுகள் முளைச்ச கல்லுத் தரைக்காடு. ஒரு கல்லைப் பார்த்தா இன்னொண்ணாட்டமிராது. ஒரு கல்லை தாண்டி இன்னொண்ணைப் பார்த்தப்ப, அதுக்குக் கிட்டத் தாண்டா கண்டேன். பொணம்டா!
கையிலே இறுக்கிப்புடிச்ச சிலம்புக் கம்பு முறிஞ்சி, காஞ்சு கறுப்பான ரத்தக்கூடு போட்ட தலையைத் திருகி எவனுகளையோ கோரமாப் பாத்த வாக்குக்கு குப்புறக் கெடக்கு பொணம்.
கல்லுதாண்டி கல்லுப்பக்கம் ஏறினப்பவே, ரெண்டு மூணு நிழல்கள் மூங்கில் முறிஞ்சதாட்டம் சடசடன்னு அடிச்சு முகத்துப் பக்கமாகத் தாக்கி ஏறினப்ப, “சீ பேயே”ன்னு கையை அலையாட்டி வீசினேன்ல? பிராந்து? இப்ப அதுகள் ஆகாசத்தில் வட்டம் போடுது. கெண்டைக்கால் இறைச்சியை உரிச்சுத்தின்னுட்ட வேகம்.
அப்போ நல்ல படபடக்கிற வெய்யில். முதநாளும் ராவுமா பழைய பிடாரன் கூட்டத்தோட பக்கத்தூரு போய் பாம்புத்தோலை வித்துக் குடுத்துட்டு, வாங்கித் தின்னுட்டு, என்னடா பிடாரா எல்லாம் கூட்டத்தில் கெளவி யாருக்கு, புள்ளை எப்படிப் பெத்தாளுகள்னு சண்டை போட்டிட்டு, பக்கம் பாத்துட்டு, பஸ்ஸடிலே தூங்கிட்டு நான் கல்லுத் தரைக்காடு பக்கமாப் போனது ஓணாணுக்கு. வெய்யில் பாட்டப் பாக்காமப் போனாத்தான் ஏதும் கிடைக்கும். மலைக்காட்டுப் பக்கம் போனா அணில் உண்டு. ஏன் ஊருக்குள்ளே மச்சு வீட்லே பொறுக்கித் திங்கிற அணில் இல்லையா? மச்சு வீடுகள் உள்ள ஊராப் பாத்துப்போ. கண்ணை மேலே ஓடவிட்டுக்கிட்டு மத்தியானம் மாறி மூணுமணிக்கு தூக்கம் விட்டு அணில் கொரைக்கிற வேளைக்குப் போ. ஊசிக் கம்பை நல்ல உயர ரெடியிலே தொரட்டிலே கட்டி ஸ்டெடியாப் புடிச்சிக் கிட்டுப் போ. அணில் குத்துறன்னுட்டு நீ மச்சில நிக்கிற மாமியாரு புட்டத்தைக் குத்தப் போறாய்.
இந்த ஊரில் மச்சுமில்லை. மச்சில மாமியாருமில்லை. அணில் கொரைக்கிறது கேக்குதுன்னு போனா, ஊரில இருக்கிற நாலு  மரத்துலேயும் கொம்பு கொம்பா மாறுது. எப்படிக் குத்த? மலைக் காட்டிலும் இருந்து சத்தம் காத்தில் ஏறி வருது. நாளைக்கு அணிலக் குத்துவம், இப்ப எனக்காச்சி ஓணானுக்காச்சின்னு இங்க போனா கெடக்குது பொணம்.
அப்பத்தாண்டா நாத்தத்தைக் கண்டேன். மெத்தையால முகத்தில் அடிச்ச மாதிரி கப்புனு பொத்தி அடிச்சுது பாரு பொண வெக்கை. நானும் பாக்க காத்தும் மாறிச்சா, இல்லை, கண்ணால் பாத்த பிறகு நெஞ்சுக்குள்ளே இருந்து வந்திச்சாடா பொண வெக்கை? பொணத்தைப் பார்க்க முந்தி இல்லை. பார்த்த பிறகு வருது. பேப்பரில் பார்த்துச் சொல்லுடா நாகரீகத்தை. எப்படி பாத்த பிறகு மணம் வந்திச்சுதுனு.
ரத்தக்கூடு போட்ட தலையைப்பாத்து பொணத்தைப் பாத்து, கெண்டைக்காலு கிழிஞ்ச இறைச்சியையும் பார்த்ததும் ஒரே அடீல அடிச்சுது பாரு திகில், “வே ஏ ஏ”ன்னு வாயுளறிட்டேன்.
பிறகு பாத்தா எல்லாமா திடுதிடுன்னு ஓடி வருது. கல்லு, மண்ணு, புத்து, புதரு, ஊர்க்கோயிலு எல்லாமா என்னடா எங்கிட்ட ஓடி வருதுன்னு பார்த்தா நாந்தான் ஓடறேன். கண்ட ஓணானுகளையும் விட்டுப் போட்டு ஓடறேன். எங்கே ஓடறேடா காடா, டேய், சாவடிக்கு ஓடுடான்னு சொல்லிக்கிட்டே ஓடறேன். போலீஸு சாவடில போயி சாமி சாமின்னு சொல்றேன். வாய் பேச்சு வரல்லே. டம்ளரிலே தண்ணி குடுத்தாங்க. என்னடா விவகாரம்னாங்க. “பொணம் சாமி”ன்னு சொன்னா, நாற்காலியிலே உக்காந்த ஏட்டு சாஞ்சிக்கிட்டாரு, கேள்வி கேட்கிறாரு. நேத்து எங்கேடா நின்னே, ராத்திரி எங்கே போனே, ஏன் இங்கே வந்தே, ஏண்டா அங்கே போனேன்னு கேள்வி. எனக்கு பொணத்தைப் பாத்ததும் போதும் சாமியைப்பாத்ததும் போதுமின்னு பக்கம் பாத்தா, ஒரு ஆளும் அவன் கூட சாறிக்காரப் பொண்ணும் வந்து நிக்கிறா.
பொணத்தைப் பாத்தியா மாமியாரு மணத்தைப் பாத்தியான்னு கேள்வி. பொணத்தைத்தான் பார்த்தேன் சாமி, அப்புறமாத்தான் மணத்தைப் பார்த்தேன்னேன். அதப் புடிச்சிக்கிட்டாங்கடா!
“என்னடா உடான்ஸ் உடறே? முதல்லே மணந்தாண்டா புடிக்கும். உனக்கு ஆர்றா பொணமிருக்குன்னு சொன்னவன்? ஆர்றா இங்கே வந்து சொல்லுன்னு ஊசி குத்திவிட்டவன்”னு புடிச்சிக்கிட்டாங்கடா. நின்னுகிட்டிருந்த கான்ஸ்டேபிள் சுவத்திலே தொங்கின தடியை எடுத்துக்கிட்டாரு. தோல்வாரிலே நாலு விரலை மாட்டிப் புடிச்சிக் கிட்டாரு.
நான் கும்புட்டேன். “என்னை உடுங்க சாமி”ன்னேன்.
“சொன்னவங்ககிட்டே போய் சொல்லுடா, கபர்தார்னு சொல்லு.”
“சரி சாமி”ன்னேன். அப்புறமா ஆரு சொன்னவன்ங்கறாங்க. ஆருமில்லீங்க, நானு பார்த்தேனுங்கன்னேன். பேச்சை மாத்திட்டாங்க.
“நீங்க ஏண்டா ஓணான், நாயி, பூனையைத் திங்கிறீங்க? ஆடு மாடு இல்லியா?”
“அதுக்கேதுங்க பைசா?”ன்னேன்.
கொஞ்ச நேரம் பேச்சில்லே, அப்புறம் மெதுவா கேள்வி. “நீ எப்படா கடேசி வாட்டி மலைக்காடு பக்கமாய் போனே? யார்றா மலைக்காட்டுக்குப் போறவன் வாறவன்? சுக்கானுக்கு யார்றா மலைக் காட்லேருந்து வந்து கஞ்சா பத்திரம் சப்ளை பண்றவன்?”
சுக்கான், பத்திரம், அது இதுன்னதும் - நல்ல பாம்பைப் புடிக்கறதுக்கு சாரைப் பாம்பு விடறாங்கடா காடான்னு உஷாராயிட்டேன்.
“சுக்கான் நல்லபாம்புத் தோலை வித்து வயத்தைக் களுவுற பாவி சாமி. எங்களுக்கு இப்பல்லாம் பாடேதுங்க? எங்காவது வயலிலே வரப்பிலே பாம்பைப் புடிச்சாதாஞ் சாமி”ன்னு கும்புட்டேன்.
“எலக்சனுக்கு நில்லுடா. ஓட் போடுவான், அப்புறம் நாட்டை எல்லாம் காடா மாத்துடா. போடா! போயி கரப்பான் பூச்சியைத் துண்ணுடா”ங்கறாரு ஏட்டு.
நான் வந்து நின்ன சாறிக்காரியைப் பார்த்தேன். வாசப்பக்கம் எரு வராட்டிக் கூடையை எறக்கிவச்சிட்டு வந்திருக்கா. அவளும் அவளோட வந்த ஆளும் ஏட்டு கிட்ட ஒரே குரலா, “சாமி வராட்டி வந்திருக்கு”ன்னு சொல்லிட்டு பரபரன்னு முழிக்கிறாங்க. சாறிவாரிக்கு மேலாக்கு சாஞ்சு முலை நாய் மூக்கு மாதிரி ‘உர்’னு நிக்குது. அதப்பார்த்தேன். துணியை சரி பண்ணிட்டு, என்னடா நீ என்னைப் பாக்கற காலமாப் போச்சாடான்னு திரும்பி ஒரு முறைப்பு வைச்சா.
“நான் அப்ப போறஞ்சாமி”ன்னேன். “சாயாக்கு ஏதும் பைசா”ன்னு மெல்லிசா இளுத்தேன்.
“திமிராடா?”ன்னு தடிக்கம்புக்காரரு எதுக்க வந்தாரு. பின்னாடி கால் வச்சு, சரேலேனு கதவு வெளியே பாய்ஞ்சு ஒரே வீச்சிலே ரோட்டுக்கு வந்துட்டேன்.
2
என்னடா போலீஸ்காரங்கிட்ட பொணங்கெடக்கு, அரெஸ்ட் பண்ணு, சாட்சிக்கு நான் நிக்கேன், வா ஒரு கை பாத்துப்புடலாம்னு மஸ்த்தா போயிச் சொன்னா, ஊசி குத்திவிட்டவன் யார்றா, இங்கே ஏண்டா வந்தே? நேத்தெங்கேடா போனே? களவாணி, உடான்ஸ்ங்கறாங்க? என்ன இது புதுமாதிரி எலக்‌ஷன் பாடுன்னு மடீல பீடியைப் பார்த்தா, காலி. நேரே சுக்கான்கிட்டே பீடி பாக்கலாமின்னுட்டுப் போனேன்.
ஊர்க் கோயிலுதாண்டி மரத்தடியிலே தனியாக் கிடக்கான். அவன் ஆட்களைக் காணம். வாசத்திலே பார்த்தா பத்திரவாசம். பீடியிலே சுத்தி அடிச்சுக்கிட்டுக் கிடக்கான். கேட்டா வெத்து பீடிதான் கிடைக்கும். பத்திரத்தையா குடுக்கப் போறான்? பொழைப்பாச்சே. இப்போ பொழைப்போட பொழைப்பா இவனும் புகை புகையா விடறான்.
“ரான்சிட்டர் வாங்கிட்டாண்டா சுக்கான் பத்திரத்துலே”ன்னு நேத்து பிடரான் சொல்லிக்கிட்டருந்தானுல்ல? அப்படி பேச்சுதான் ஏறிட்டுது. ஆனால் சுக்கான் ரான்சிட்டரும் வாங்கலை ஒண்ணுமில்லை. இவனே புகையா விட்டா எப்படி வாங்கறது? போலீஸிலே வேறே மாட்டி ஒரு கத்தை பத்திரத்தைப் பறிகுடுத்திருக்கான். எப்படித்தான் உள்ளுக்குப் போகாம தபாய்க்கிறானோ தெரியலை. எல்லாத்துக்கும் விவரம் தெரிஞ்சிருக்கணுமில்ல?
“டேய்”னு போயி குந்தினேன்.
அவனா பேசுவான்? கண்ணுக்குக் கண்ணு குடுக்காம பத்திரத்தைப் புடிச்சிக்கிட்டிருக்கான். ஆளு மாறிட்டான். தாடியா நம்மளுக்கு முளைக்குது? அவன் தாடியைப் பாரு. கறு கறுன்னு வருது. பசிதாகம் இல்லாம பத்திரத்தைக் குடிக்கிறான். ரத்தம் தாடியாவது. கண்ணு மாறி மாறி நிக்குது.
“என்னடா, பீடி இல்லிடா”ன்னேன். அவனிட்ட சட்டு புட்டுனு பேசினா பதில் வராது. பக்கம் போயி பக்கம் வந்து பேசிப் பாரு, பதில் குடுப்பான். “ஏண்டா, ஏண்டா, ஏண்டா”ம்பான். அதுக்குள்ளே பொளுது சாஞ்சி வெள்ளி கிளம்பிடும்.
“உடான்ஸுங்கறாங்கடா, பொணத்தைப் பாத்தியா மணத்தைப் பாத்தியாங்கறாங்கடா. அப்படியும் சொல்றாங்க, இப்படியும் சொல்றாங்கடா”ன்னேன். “பொணம்டா, கல்லுத்தரைக் காட்ல செத்துக் கெடக்குதுடா பொணம்”னேன்.
சரக்குனு கண்ணு குடுத்தான். முழி விடைச்சுக் குத்துது.
“பாத்தியாடா?”ன்னான்.
“கல்லுத்தரைக் காட்லேடா.”
“நோட்டம் சொல்லு”ன்னான்.
“காலத்தாண்டா பார்த்தேன். தலையை அடிச்சுப் பொளந்து போட்டுட்டாங்கடா. பிராந்து கொத்தி கெண்டைக்கால் எலும்பு நிக்குதுடா.”
“சீ, நாயே! மாட்டுப் பொணம்டா”ன்னு ஒரு கண்ணை மூடிக்கிட்டு என்னைப் பார்த்தான்.
“மாடுன்னா அதை இறச்சி போடாம உங்கிட்டயா பீடிக்கு வருவேன்? ஏண்டா, மாடு பச்சை நிறத்திலே லுங்கியைக் கட்டிக்கிட்டாடா செத்துப் போகும்? மாடுன்னா கையும், கையிலே முறிஞ்சிபோன சிலம்புக் கம்புமாடா இருக்கும், ஏண்டா?”ன்னேன்.
“சீ, நாயே.. டேய்... வாடா, காட்டு”ன்னு ஓடினான் பாரு. நான், நீ ஓடமுடியாத ஓட்டம். ரோட்டுச் சந்திலே போய் கோயில் புறத்தாலே மாறி, குறுக்கே புதர்க்காட்டிலே பாஞ்சு, சடால்னு நின்னு என் தலை மயிரைப் புடிச்சுக்கிட்டான். “போலீஸ்கிட்டே போனயாடா? ஏண்டா போனே?”ன்னான்.
“ஏண்டா, டேய், உடுடான்”னேன்.
“பச்சை லுங்கியா சொன்னே?”ன்னான்.
“பச்சை லுங்கிடா, ஏண்டா உடுடா”ன்னேன்.
விட்டுட்டு மடியிலேருந்து பத்திரத்தை எடுத்தான். “மோப்பம் தெரியுதா? மனுச வெக்கை அடிக்குது. ஆரோ வராங்கடா வெள்ளை வேட்டி மனுச வெக்கை”ன்னான்.
“பொண நாத்தம்தானே?”ன்னேன். பொணநாத்தத்துக்கு இன்னும் அரைக்கல்லாவது போகணும். நான் சொன்னது சும்மா ஏட்டிக்குப் போட்டியா.
“ஆரோ ஆளு போறவாற வெக்கைடா”ன்னுட்டு பத்திரம் சுத்தின பீடியை எடுத்து எனக்கே குடுத்தாண்டா, “குடிடா, நாயே! வேட்டி நாத்தம் களியட்டும்”னு
தீப்பெட்டி எடுத்து நெருப்புக்கீறி “இளு”ன்னு பத்திரத்தை கொளுத்தியும் விட்டாண்டா, “இளுத்துட்டுக் கைமாத்து”ன்னு. புகையை கமுக்கம் பண்ணிட்டு சுருளைக் குடுத்தேன். வாங்கி கையாலே பொத்து வைச்சு இளுத்தான். கழுத்து நரம்பு விடைக்குது, கண்ணு மூடிக்கிட்டு கபாலத்துக்குள்ளே ஓடுது. அவ்வளோதான், பீடி முடிஞ்சி போச்சி. கமுக்கம் பண்ணிட்டு புகையை விட்டான் பாரு, ஒரு கூடாரம் புகை.
அப்போ பார்த்து, “தடம்பாத்துப்போ. வராட்டியை நல்லா அடுக்கிட்டு எரிக்கணும் போ”ன்னு யாரோ சொன்ன பேச்சு. அதுக்குப் பதிலா, “எசமான், ஆகட்டுஞ்சாமி”ன்னு ஒரு ஆணும் பொண்ணும் ஏகமாப் பேசின குரல்.
சுத்திப் பார்த்தேன். நாங்க நிக்கிற இடத்துக்குப் பின்னாடி புதர்க்காட்டுக்கு அந்தாண்டை கோயில். “காலடிச்சத்தம் வருது”ன்னான் சுக்கான். “ஆளு, ஆளு”ன்னான். ‘கிர்’ருன்னு பூச்சி, குரல் வெட்டிப் பாடற சத்தம். வெய்யில் சாயுது. மனிசனில்லாத வெளிச்சம்.
சரக்குன்னு பின்னாடி சத்தம். சடார்ன்னு திரும்பினேன். கோயில் பக்கமா இருந்து வந்திருக்கோ என்னமோ அந்த ஆளு, வெள்ளை வேட்டி. அதை மடிச்சுக்கட்டி இருந்தான். முண்டா பனியன். அந்த ஆளு என்னைப் பார்க்கான், சுக்கானைப் பார்க்கான். அந்த ஆளு! எங்கேயோ நல்லாப் பார்த்தமே அந்த ஆளை? எங்கேன்னு நினைப்பு வரல்லே. ஆளைப் பார்த்ததும் சுக்கான், ஒரு தலை உயரம் குனிஞ்சி தோளை ஒடுக்கி தலையை பக்கத்திலே சரிச்சு ஒரு இளிப்பு இளிச்சான் பாரு. நான் நீ இளிக்க முடியாத இளிப்பு. நானும் “எசமான்”ன்னு இளிச்சு வச்சேன்.
ஆளு அங்கே இங்கே சுத்தி பிஸினஸா பார்க்கான். “வேறே ஆளு நிக்காடா?”ன்னான்.
அந்தக் குரலு! அதுகூடப் பளக்கமாத்தான் கேட்டுது. நெனப்பு வரலை.
“இல்லீங்க சாமி”ன்னான் சுக்கான், “நாங்க பாக்கலை சாமி”ன்னான்.
ஈயைப் புறங்கையாலே விரட்டற மாதிரி கையை ரெண்டு அசப்பு ஆட்டி, “சரிடா, போங்கடா ஊருப்பக்கம்”ன்னான் அந்த ஆளு. நானும் சுக்கான் வாலைப் புடிச்சிக்கிட்டுப் போறேன்.
3
கோயிலண்டை போனதும், புதரடியிலே மாறி, திரும்பிப் பார்த்தோம். கல்லுத் தரைத் திக்கிலே புகை காட்டுது. “பொணத்தை எரிக்கிறானுவடா”ன்னான் சுக்கான்.
“ஏண்டா நாறவிட்டாங்க?”
“பாக்கிறவன் பாத்துக்கோ. கபர்தார்னு காட்டத்தாண்டா”ன்னான் சுக்கான்.
“யார்றா செத்துப்போன பச்சை லுங்கி? யார்றா? மோப்பம் தெரிஞ்சிருக்கு உனக்கு, ஏண்டா, டேய்?”ன்னேன்.
நான் குடைச்சல் குடுக்க அவன் பேச்சுக்காட்டாமே கோயிலத்தாண்டிப் போறான். “நேத்திக்கி நீ பிடரான்கிட்டயா போயிருந்தே?”ன்னான். பேச்சு விட்டுப் பேச்சு மாத்தறான். விட்டுப்புடிக்கலாம்னுட்டு விவரம் சொன்னேன். மரத்தடிலே குந்திக் கேட்டான்.
“ஊருக்குள்ளே இன்னிக்குப் போனயா?”ன்னான்.
“ஊருக்குள்ளயா?”
”டீக்கடையைப் போய்ப் பாரு”
“டீக்கடையா?”
ஊருக்குள்ள இருக்கற டீக்கடைப் பயல்கிட்டத்தான் சுக்கான் மொத்தமா பத்திரத்தை வாங்கி அங்கே இங்கே சில்லறையாத் தள்றான்.
“டீக்கடை யானை மிதிச்ச மாதிரி இருக்கும். போய்ப்பாரு. கட்டுக்காவல் போட்டிருக்கான். ஏதும் ஆணி போணி பொறுக்கலாமின்னு போயிடாதே, விவரம் தெரிஞ்சு போ. இப்ப பாத்தமே, அந்த ஆளு? அவனும் இன்னும் நாலஞ்சு பேருமா டீக்கடையை தூள் பண்ணிட்டாங்க. டீக்கடைக்காரப் பயகிட்ட சும்மா, ஏண்டா பச்சை லுங்கி கட்டின ஆளு இங்கே ராவிலே வந்து போறானே எங்கேடா பகல் வேளைக்குப் போறான்னு, சும்மா கேட்டான் இந்த ஆளு. அதுலேர்ந்து அரைமணி நேரமா டீக்கடைக்காரன்கிட்டே கேள்வி. டீக்கடைக்காரன் ஒம்பது பச்சை லுங்கிகாரனுக அட்ரஸு குடுக்கான். இந்தா வா, இந்தா வான்னு பதிலு குடுத்து எருமைக் குட்டைக்கு இட்டுக்குனு போகுது பேச்சு. இந்த ஆளு திடீர்னு டீக்கடைக்காரனை இழுத்து தெருவிலே தள்ளி அறைஞ்சான் பாரு. அதுக்கு அப்புறம் பதிலே வல்லே. பேசுடா பேசுடான்னு டீக்கடையை முடிச்சு, ‘இதுதாடா உனக்கு கடைசி ஓணம்’னு அவனை மிதிபோட்டு மிதிச்சாங்க. சின்னப் பயல், டீக்கடைக்காரன். என்னா அமுத்தல்ங்கறே. ஆளுங்க போனப்புறம் ஆரோ டீக்கடைக்காரனை சைக்கிள்ளே ஏத்திக்கினு போனாங்க. ராத்திரி நான் வேளை கழிச்சுத்தான் மரத்தடிக்கு வந்தேன். ரெண்டு ராவா பக்கத்தூரு போன நம்ப கூட்டமும் இல்லே. கண்ணு சொக்கறப்போ, காலடிலே இருட்டு பிச்சுக்கிட்டு வந்து நின்னு, ஆளுயர தடிக் கம்பாலே என் காலைத் தொட்டு, ‘பத்திரம் எவ்வளோ இருக்கு?’ங்குது.
‘பத்திரத்தைப் போயி ஆபிஸிலே பாரு’ன்னுட்டு புரண்டு படுத்தேன். ‘சட்டுன்னு எல்லாத்தையும் எடு. கரன்ஸியாத் தரேன்’னு குந்திக்கிட்டான். நான் எந்திரிச்சேன். ‘பட்டணம் போறேன்டா. எங்கிட்ட இருந்ததை அல்லாம் போட்டிட்டு ஓடறேன். இருக்கறதைக் குடு. பட்டணத்திலே ஆளிருக்கு விக்க’ன்னான். ’திங்க ஏதுமுண்டா, எடு துட்டு தரேன்’ன்னான். ‘நாயைத் திங்கறவங்கிட்ட திங்கக் கேக்கிறியே தாயே’ன்னேன். பத்திரத்தைப் பங்கு போட்டேன். ‘எனக்கு வாடிக்கைக்காரங்க உண்டு தாயே, பாதியை எடுத்துட்டு கரன்ஸியைத் தள்ளு’ன்னு விலையை ஏத்திச் சொன்னேன். ‘ஏண்டா நாட்டை நாய்க திங்குது நீயேண்டா நாயைத் திங்கப்படாது’ன்னான். சொல்லிக்கிட்டே நான் குடுத்த பீடியைக் கொளுத்த வத்திப் பொட்டிலே நெருப்புக் கிழிச்சான். முணுக்கு வெளிச்சத்திலே பச்சை லுங்கி பளீரடிச்சது. செகண்டு தாண்டி செகண்டு பாய்ஞ்சு திகில் புடிச்சுது எனக்கு. அதுக்குள்ளார அவன் ஏதோ எலக்‌ஷன்பாடா  பேசறான். மலைக் காடுங்கறான். நாட்டைப் பிடிச்சு சேமம் பண்ணலாம்ங்கறான். எனக்கு ஒண்ணுமே மனசுலாகலை.
டீக்கடைக்காரனை மிதிச்சவங்க காலுதான் எனக்கு வவுத்திலே பொதக்குப் பொதக்குங்குது. ‘போ தாயே, போ, மனுச வெக்கை அடிக்குது காணலையா’ன்னு பிஸினஸை முடிச்சு, வாட்டி வச்சிருந்த எறச்சியை துணியிலேயிருந்து அவுத்து ‘ஒரு துண்டு எடுத்துக்க போ’ன்னு குடுத்து அனுப்பவும், ‘ஏண்டா கோழை மாடு’ன்னுட்டு போறான். அவன் போயி திடுக்கினு எட்டி நடக்கவும் வேறே ஆளுங்க காலோட்டம் ஏறுது. கோயில் வெளியைத் தாண்டி மேற்கே அவன் போற நோட்டம் தெரிஞ்சாப்பிலே இருட்டோட இருட்டா மூணு நாலு பேரு. கையிலே ஒவ்வொருத்தனுக்கும் தடிக்கம்பு. அடிச்சு மிதிச்சு நடையேறி, ‘டேய் அந்தா நிக்கிறாண்டா, வளைச்சு அடிங்கடா’ன்னு ஓடவும் நான் இத்தாண்டே ஓடவா - மரம் மாறி நடக்கிறதைப் பார்க்கவான்னு மூட்டையைச் சுத்தித் தூக்கறேன். பச்சை லுங்கிக்காரன் குரல் கெக்கலி போட்ட மாதிரி கேட்டு முதுகு சில்லிடுது. கோயில் வெளியிலேருந்து குபுகுபுன்னு ஊத்துப் பொங்கற மாதிரி கழி சுழல்ற சத்தம். இவனுகளோட ‘டாய் டோய்’ சத்தம். உடைஞ்சு மோதி, கல் வெடிச்ச மாதிரி நாலஞ்சு தடவை கழிகள் அடிச்சு, அப்புறம் ஒரு மினிட்டு ஒண்ணுமில்லே. ஒண்ணூமில்லேயா? நான் மூட்டையை மரம் மாத்தி மரத்துக்குக் கொண்டு போறேன். கண்ணும் காதும் மூட்டைக்குள்ளே பூந்துக்கினு கணக்குப் போடுது. மனசுக்கு அடியிலே வெட்டவெளிச்சம். ‘அடிடா டாய்’னு ஒரே முட்டா குரலுகள் ஏறி விரிஞ்சு தூர ஒடுங்கி குவியுது. கோயில் தாண்டி கல்லுத்தரை காடு பக்கமா திடு திடு சத்தம். ஊரெல்லாம் திடீர்னு நாய்கள் ஊளையிட்டு ஊரு பொளக்கக் குரைக்குது. நாயா மனுசனுகளா? நாய்கள் திடுதிடுனு அடிச்சு நடக்குமா? டாய்ங்குமா? நான் நடமாட்டம் மிதிபடாம மரம் தாண்டி மரம் மாறி சரியறேன். தூர, தூர, கல்லு சிதறுது. வெட்ட வெளிச்சத்திலே குப்புற ஓடற இருட்டு, சரசரன்னு நிழல்கூட்டம் போடுது. காலடிலே பச்சை லுங்கிக்காரன் நிக்கிறான்.
“அவன் லுங்கியிலே வெளிச்சம் விழுகுது. அந்தியோ வெடி காலையோ. சூரியனைப் பார்த்தா தீவட்டி கணக்கா புகை விட்டு எரியுது. தரையிலே கிடக்கிற இலைக் கூட்டத்துக்குள்ளே நிழலாட்டம். பல்லை வலிச்சு ‘ர்ர்’ சத்தம். பச்சை லுங்கி தரையிலே கிடக்கிற இலையைக் கழியாலே குத்தி எடுத்து ‘இந்தாடா கரன்ஸி’ன்னு ஊரெல்லாம் வீசறான். ஊரு கறுகறுன்னு பத்திரம் பத்திரமா விளையுது. தரையோட தரையா நிழல்கள் சரசரக்குது. நாலுகால் கடையிலே தலையைத் தூக்கி ‘ர்ர்ர்’ங்குது. அதப் பார்த்து ‘பல்லைப் பாத்தியா காலிலே இருக்கிற முள்ளைப் பாத்தியா’ன்னு நான் பாடறேன். பாடிக்கிட்டே பத்திரத்தைக் கிள்ளிக் கிள்ளி மடியிலே கட்டறேன். பச்சை லுங்கிக்காரன் கரன்ஸி நோட்டு கரன்ஸி நோட்டா வீசிக்கிட்டே போறான். பத்திரம் காடுகாடா ஆள் கணக்கா வளருது. தரையோட கிடந்த நிழலுகளும் ஏறி வளர்ந்து ‘ர்ர்ர்’ன்னு காடெல்லாம் குரைக்குது. சத்தம் ஏறி உறும நானும் உறுமறேன். உறுமிக்கிட்டே கண்ணை முழிக்கிறேன். சூரியன் ஊசிக் கம்பை நீட்டி மண்டைக்குள்ளே உறுமின நிழலையெல்லாம் குத்தி நிறுத்தறான்... இந்த இளுத்துட்டுக் கை மாத்து.”
நான் சுக்கான் பேச்சைக் கேட்டுக்கிட்டே அவன் கொடுத்த பத்திரச்சுருளை வாங்கி புகையை லேசா இழுத்தேன். கொஞ்ச மினிட்டு பேச்சில்லை. “போலீஸாடா”ன்னேன். ஏன் சொன்னேன்னு கணக்குச் சேர்க்கலே. அப்புறம் புகை ஓடி ஒரு சுத்து கபாலத்தைச் சுத்தி வளைச்சு இறங்கினப்ப கேட்டேன். “அந்த ஆளுதாண்டா, போயிட்டே இருங்கடான்னு வெரட்னானே வெள்ளை வேட்டி? அவன் சொன்னா போலீஸூ கேப்பாங்கடா. நான் கண்டேண்டா அதை, பஸ் ஸ்டாப்பாண்டே. யார்றா அந்த வெள்ளை வேட்டி?”
சுக்கான் ஒரு கண்ணை மூடிக்கிட்டே என்னைப் பார்த்தான். “போலீசு, லுங்கி எல்லாத்துக்கும் கரன்ஸியைத் தள்ளற ஆளுடா. மலைக்காட்டிலே மனுசன் போகாத எடத்துலே ஏக்கர் ஏக்கரா இருக்குடா அவனுக்கு. நீ அதைக் கண்டதுண்டாடா காடா?”ன்னான் சுக்கான். “ஏக்கர் ஏக்கரா என்னடா? பத்திரமாடா?”ன்னேன்.
“பச்சை  லுங்கி, டீக்கடைக்காரப் பயலை எலக் ஷன் பாடாப் பேசி, நாட்டைப் புடிக்கலாம் நாடு கடந்து போயி நாகரீகம் பண்ணலாமின்னு சொல்லி வசக்கி வச்சிருக்கான்டா. பச்சை லுங்கிதாண்டா டீக்கடைப் பயலுக்கு வெள்ளைவேட்டி எஸ்டேட்டிலிருந்து திருடி பத்திரம் சப்ளை பண்றான். நான் அதிலேருந்து அடுத்த சப்ளை. வெள்ளை வேட்டி திருடு போவுது போவுதுன்னு பார்த்து மோப்பம் புடிச்சுட்டான் பச்சை லுங்கியை. அதாண்டா எல்லா நடமாட்டமும். ஏண்டா, சீ, நாயே! இளுத்துட்டுக் கை மாத்துன்னா எரிய விட்டுக்கிட்டேருக்கே”ன்னு சுக்கான் என் கையிலிருந்த சுருளைக் கபக்குனு புடுங்கிக்கிட்டான்.
(1981)  கணையாழி, அக்டோபர் 1982 , அரும்பு, ஏப்ரல் - மே 1985
தட்டச்சு : சென்ஷி

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்