Showing posts with label வல்லிக்கண்ணன். Show all posts
Showing posts with label வல்லிக்கண்ணன். Show all posts

Aug 7, 2010

வல்லிக்கண்ணன் நினைவில்...-வெங்கட் சாமிநாதன்

வல்லிக்கண்ணன் மறைந்து விட்டார். எந்த இழப்பும் மன வேதனை தருவது தான். நம்மைச் சோகத்தில் ஆழ்த்துவது தான். எந்த இழப்புக்கும் நாம் தயாரில்லை. மனித மனத்தின் இயல்பு அது. 85-86 வருடங்கள் வாழ்ந்த மனிதர், நம்மிடையே தம் இருப்பை, பரிச்சய உலகத்திலும் இலக்கிய உலகத்திலும் உணர்த்திக் கொண்டே vallikannanஇருந்தவர். அதுவும் எவ்வளவு காலம்! மூன்று  தலைமுறைக்கும் மேல் நீண்டது அது. அவ்வளவு நீண்ட காலமும் படிப்பதற்கும் எழுதுவற்கும் தான் என்று ஒரு தீர்மானத்தைத் தனக்குள் தன் வாலிப வயதிலேயே கொண்டு அந்த பிடிவாதத்தையே ஒரு லக்ஷ¢யமாகப் பற்றி வாழ்ந்து காட்டி விட்டவர்.
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் தான். பார்க்கப் போனால் அவருக்கு பெரிய ஆசைகள், கனவுகளோடு வாழ்ந்தவர் இல்லை. வாழ்க்கையில் அவர் கேட்டது, எதிர்பார்த்தது என்று பெரிதாக ஏதும் இருந்ததாகத் தோன்றவில்லை. படிப்பதிலும் எழுதுவதிலுமே அவர் மகிழ்ச்சி இருந்திருக்கிறது. பின் நண்பர்கள். அவர் யாரையும் அவராக விரோதித்துக் கொண்டார் என்று சொல்லமுடியும் என்று தோன்றவில்லை.

திருநெல்வேலிக்காரர். அந்த மண்ணுக்கே உரிய பேச்சும் கிண்டலும், யாரையும் எளிதில் வசப்படுத்திவிடும். அன்னியோன்ய உணர்வைத்தந்து விடும். கிண்டல் சிலரிடம் காலை வாறலாகக் கூடுதல் நிறம் பெறும். வல்லிக்கண்ணன் அப்படியெல்லாம் கிண்டல் செய்ய மாட்டார் என்று தான் நினைக்கிறேன். நான் அவரை ஒரு சில முறைகள், அதிகம் போனால் அரை மணிநேரம் என்று சந்தித்துப் பேசியதுண்டு. அமைதியாக, மிக மெல்லிய குரலில் புன்சிரிப்போடு தான் பேசியதாக என் நினைவு. அதில் கிண்டல் சற்றேனும் கலந்திருக்கவில்லை. திருநெல்வேலிக்காரர் யார் எழுதினாலும், அந்த மண்ணின் மணத்தோடு தன் இயல்பில் பாசாங்கும் வேஷமும் இல்லாமல் எழுதினால் அதில் எனக்கு மிக பிரியமுண்டு. வல்லிக்கண்ணன் கதைகளும், சில திருநெல்வேலி மனிதர்களைப் பற்றிய சொற்சித்திரங்களும் நான் படிக்கும் போது அவை ஜீவனும் உயிர்ப்பும் உள்ள மனிதரை என் முன் திரையோட விடும். அவரது மேடைப்பேச்சுக்கும் கட்டுரைகளுக்கும் நேர் எதிரான சமாசாரம். எப்படி இரு நேர் எதிர் குணங்களை ஒரு மனிதருக்குள் திணித்து வைத்திருக்கிறான் அந்த நெல்லைப்பன் என்று நினைக்கத் தோன்றும். இருமுறை அவர் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். தில்லியில் ஒரு முறை. சென்னை வந்த புதிதில் ஒருமுறை. எல்லாம் சாகித்ய அகாடமி உபயங்கள். எழுந்து நின்று ஏதோ மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல வார்த்தைகள் ஒரு தடங்கல் இல்லாமல், வந்து கொட்டிக்கொண்டிருந்தன. முகத்தில், குரலில் எவ்வித உணர்ச்சியும் இல்லாத தகவல்களின் மழை. விவரங்கள் என்பதற்கு மேல் அந்தப் பேச்சுக்களில் ஏதும் இல்லை. இது திருநெல்வேலி மண் இல்லை.

எழுத்து பிரசுரமாக சி.சு. செல்லப்பா ஆண் சிங்கம் என்ற தலைப்பில் வல்லிக்கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளியிட்டிருந்தார். அறுபதுகளில் இடைப்பட்ட வருடங்கள் ஒன்றில் என்று நினைப்பு. அந்தக் கதைகள் எனக்கு சுவாரசியமாக இருந்தன. அப்போது தில்லியில் வெளிவந்துகொண்டிருந்த Thought பத்திரிகையில் ஆண்சிங்கம் பற்றி எழுதினேன். அதில் தான் படித்தேனோ அல்லது வேறு ஏதும் பத்திர்கையில் படித்தேனோ, சாந்தி, சரஸ்வதி, தாமரை இப்படி ஏதோ ஒன்றில், 'பெரிய மனுஷி' என்று வல்லிக்கண்ணனின் ஒரு கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கதைகள் எப்பவுமே மிக சுவாரஸ்யமானவை. எழுதியவர் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர் என்று ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும். எழுதிகிறவரின் சிரிக்கும் உதடுகளையும் கூட மானசீகமாக அவ்வெழுத்தின் பின் பார்க்கலாம். அவர் நிறைய எழுதியிருக்கலாம். எழுதியும் இருக்கிறார் என்று தான் சொல்கிறார்கள். ஆரம்ப காலமாக அது இருக்க வேண்டும். அதோடு சரஸ்வதி பத்திரிகையில் அவர் புத்தகங்களைப் பற்றி, எழுத்தாளர்களோடு உரையாடியது பற்றியெல்லாம் ஒரிரண்டு பக்கங்கள் எழுதுவார். அதுவும் சுவாரஸ்யமாக இருக்கும். 'நான் ஏன் எழுதுகிறேன்" என்று சரஸ்வதி நடந்த காலத்தில் நிறைய எழுத்தாளர்கள் கட்டுரை வாசித்தார்கள் பின்னர் அது புத்தகமாகக் கூட எழுத்து பிரசுரமாக செல்லப்பா வெளியிட்டிருந்தார். அதில் ஒரு குறிப்பு எனக்கு நினைவிலிருப்பது சுவாரஸ்யமானது: 'புதுமைப்பித்தனின் ஒரு வரியில் கருவேப்பிலை கூட உயிர் பெற்றுவிடும். வல்லிக்கண்ணன் பக்கம் பக்கமாக எழுதினால் கூட அதில் ஒன்றும் இருப்பதில்லை' என்று கிட்டத்தட்ட இப்படித்தான் க.நா.சு வல்லிக்கண்ணன் பற்றி எழுதியிருக்கிறார் என்றும் இருந்தாலும் நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் என்று வல்லிக்கண்ணன் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். எனக்கு வல்லிக்கண்ணன் அப்படி எழுதியிருந்தது பிடித்திருந்தது.

வல்லிக்கண்ணனை வல்லிக்கண்ணனாக நாம் பார்க்க முடிவது அவர் கதைகளில் தான் என்றாலும் அவர் அப்படி ஒன்றும் நிறைய எழுதியிருக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை. கதை எழுதுவது, தன் அனுபவங்களுக்கும் பார்த்துப் பழகிய வாழ்க்கைக்கும் மனிதர்களுக்கும் எழுத்தில் உயிர் தருவது ஒரு மகிழ்ச்சி தரும் காரியம் என்று தான் நினைப்பேன். அதுவும் சம்பாஷணையிலும் வம்பளப்பிலும் கிண்டலிலும் பிரியமுள்ள திருநெல்வேலிக் காரர்களுக்கு. இன்று நாம் நினைத்துப் பார்க்கும்போது அவரை ஒரு விமர்சகராகத்தான் எல்லோர் மனதிலும் பதிந்திருக்கிறார் என்று தான் தோன்றுகிறது. சுமார் நாற்பது ஐம்பது வயதுக்குட்பட்ட தலைமுறை எழுத்தாளர்களின் ஒரு பெரிய கூட்டம் அவரைத் தட்டிக்கொடுத்து உற்சாகப் படுத்திய பெரியவராகத் தான் பார்க்கிறது. அதைத் தான் அவரும் செய்திருக்கிறார். ஆனால் அவருடைய பார்வை, மதிப்பீடு என்று எதுவும் நம் மனதில் எழுவதில்லை. அப்படி ஏதும் பதிவாகவும் இல்லை. சொல்லும்படியாக புத்தக வடிவில் கிடைப்பன அவர் எழுதியுள்ள பெரும்பாலும் தகவல்களை உள்ளடக்கிய வரலாற்று நூல்கள் தாம். புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி வரலாறு, பின் சிறுபத்திரிகைகள் பற்றிய ஒரு வரலாறு எல்லாம் என் நினைவில் இருப்பன. இதற்கு மேல் அவர் எதுவும் எழுதியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. எல்லாவற்றிலும் ஆங்காங்கே சில குறிப்புகள் காணப்பvenkat_swaminathanடுமே தவிர அவை எதுவும் விமர்சன பூர்வமாக அவர் பார்வையில் மதிப்பீடு என்று சொல்லத்தக்கனவாக இல்லை.
இதற்கு அர்த்தம் அவருக்கு மதிப்பீடுகள் கிடையாது, தரம் பற்றிய சிந்தனையே கிடையாது என்பதில்லை. இருந்தது. கு.ப.ரா. புதுமைப்பித்தன், மணிக்கொடி கால மற்ற முன்னோடிகள் எல்லோருடனும் பழகியவர். இளைய சகாவாக இருந்தவர். கிராம ஊழியனில் கு.ப.ரா. வுடன் ஆசிரியப் பொறுப்பில் இருந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் மூன்று தலைமுறையினருடன்  வாழ்ந்தவர். வெற்று ஆளாக இருக்க முடியாது. இருப்பினும் அவர் கறாரான அபிப்ராயங்களைச் சொன்னவரில்லை. தன் உடன்பாட்டையோ மறுப்பையோ கூட தெரியச் செய்தவரில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. வானம்பாடி கவிதைகளைப் பற்றி ஒட்டு மொத்தமாகக் கடைசியில் சொல்லும்போது அவை வெற்று வார்த்தை ஜாலங்கள், அலங்காரங்கள் என்று சொல்லியிருக்கிறார். சிவராமூ கவிதைகளைப் பற்றியும் அவர் ஒரு மாதிரியான கண்டனம் செய்துள்ளார். அவரைச் சிவராமூ சீண்டியதன் விளைவு அது.; அவர் கடைசியாக ஒட்டுமொத்தமாக நிராகரித்தது என்பது என்னையும் சிவராமுவையும் தான். மிகுந்த கசப்பும் கோபமுமாகத்தான் எங்கள் இருவரையும் பற்றி அவர் அபிப்ராயங்கள் கடைசியில் இறுகிப் போயிருந்தன.

எங்கள் இருவர் மீதும் அவருக்குக் கோபம் இருந்ததற்குக் காரணங்கள் இருந்தன. அறுபதுகளில் நான் தில்லியிலிருந்து பலமுறை அவர் உதவியை நாடியிருக்கிறேன். பழைய தகவல்கள் வேண்டி. அவர் உடனுக்குடன் பதில் தந்துள்ளார். அவை எனக்கு உதவியாயிருந்துள்ளன. பத்துப் பதினைந்து பேர் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு பத்திரிகை நடத்தலாம் என்று நினைத்து, அவரைப் பொறுப்பேற்கக் கேட்டேன்.

பத்திரிகை தன் காலில் நிற்கும் வரை இலவசமாக எல்லாப் பொறுப்புக்களையும் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். அவருக்கு அவ்வப்போது உதவும் படி நான் கேட்டுக்கொண்ட ஒரு பெரிய எழுத்தாளர், தனக்கு மாதம் 300 ரூபாய் வேண்டும் என்று சொன்னார். இதுதான் வல்லிக்கண்ணனுக்கும் இந்த பெரிய எழுத்தாளருக்கும் உள்ள வித்தியாசம் என்று தெரிந்தது. அக்காலங்களில் என் மாத வருமானமே 300 ரூபாய்தான். எனவே அது கைவிடப்பட்டு விட்டது. நடக்கவில்லை. சிறு பத்திரிகைகள் பற்றிய வரலாற்றில் நான் பொறுப்பாக இருந்த யாத்ரா பற்றி சிறப்பாகவே எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் சிவராமூவுக்கும் அவர் கண்ட குப்பைகளுக்கும் தராதரம் அற்று தன் பாராட்டுக்களையும் ரசனையையும் வாரிக்கொட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தது எங்கள் இருவருக்கும் அறவே பிடித்ததில்லை. அதன் காரணம் எனக்குப் புரிந்ததே இல்லை. புதிதாக எழுத வந்தவரிடம் ஏதும் சிறு பொறி தட்டினாலும் அதைக் குறிப்பிட்டு உற்சாக மூட்டலாம். தவறில்லை. ஆனால் வல்லிக்கண்ணனிடம் எந்த குப்பை போனாலும் அதற்குப் பாராட்டு வந்துவிடும். இது மூன்று தலைமுறை இலக்கிய வாழ்வு வாழும் முதியவரிடமிருந்து, மணிக்கொடி கால முன்னோடியிடமிருந்து எதிர் பார்க்கக்கூடிய ஒன்றல்ல.

அவருக்கு தராதரம் தெரியாது என்றும் சொல்வதற்கில்லை. அவர் இந்தக் குப்பைக்காரர்களிடமிருந்து எதுவும் எதிர்பார்த்தார் என்றும் சொல்வதற்கில்லை. எதையும் எதிர்பாராதவர். பகட்டும் பீதாம்பரமும் அவர் பலவீங்களல்ல. மிக எளிய மனிதர். அவருக்கான தேவைகளும் மிகக் குறைவு. சாகித்ய அகாடமி பரிசு அவரைத் தேடி வந்தது தான். மற்றவர்களைப் போல அவர் ஆள் பிடிக்கவில்லை. யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை. யாரையும் பார்த்துப் பல்லிளிக்கவில்லை. விதி விலக்குகள் என ஒரிருவர் இருக்கலாம் தான். ஆனால் தமிழ் மரபு இதுதான். தனக்கு மிக நெருங்கி அன்னியோன்யமாக இருந்தவர்களைப் பற்றிக்கூட மிக அபூர்வமாக ஆனால் மீகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். மணிக்கொடிக் காலத்தைத் தாண்டி புதியவர்கள் எவரையும் படிப்பதில்லை. கண்டு கொள்வதில்லை என்று சி.சு. செல்லப்பாவைப் பற்றி எழுதியிருக்கிறார். இது செல்லப்பாவைப் பற்றிய கடைசி பத்து வருஷகாலத்திற்கு மாத்திரமான உண்மை. அந்த உண்மை வல்லிக்கண்ணனுக்கும் பொருந்தும். எழுத்து பத்திரிகை நடத்தியவரை, புதுக்கவிதையைத் தமிழுக்குத் தந்தவரைப்பற்றி அப்படிச் சொல்லக்கூடாது. ஆனால் வல்லிக்கண்ணன் சொல்லியிருக்கிறார். செல்லப்பா அவரைச் சீண்டியவரில்லை, என்னையும் சிவராமுவையும் போல. புதுக்கவிதை வரலாறு புத்தகம் போட்டு உடன் பணம் கொடுக்க முடியாது, தாமதமாக பல வருஷங்கள் கழித்து செல்லப்பா பணம் கொடுக்கும் வரை வல்லிக்கண்ணன் ஏதும் சொன்னவரில்லை. செல்லப்பா எழுத்துப் பிரசுரங்களை விற்க ஒவ்வொரு கல்லூரியாக சைக்கிளில் செல்லப்பாவை இட்டுச் சென்றவர் வல்லிக்கண்ணன். பின் ஏன் அப்படி எழுதினார்?
அதற்காக செல்லப்பா வல்லிக்கண்ணனை விரோதித்துக் கொள்ளவில்லை. இதே வல்லிக்கண்ணன் தான் சாகித்திய அகாடமி பரிசுக்கான் கடைசித் தேர்வுப் பட்டியலில் சுந்தர ராமசாமியும் செல்லப்பாவும், இமையுமும் இருக்கும் போது இவர்களையெல்லாம் உதறி விட்டு தி.க. சிவசங்கரனுக்கு பரிசு சிபாரிசு செய்தவர். மனித மனத்தின் இரகசிய ஆழங்களை அவ்வளவு சுலபமாகவா கண்டறிந்து கொள்ள முடியும்?

தமிழிலேயே தலை சிறந்த படைப்பு என்று நான் நினைக்கும் தி. ஜானகிராமனின் மோகமுள் பக்கம் பக்கமான வம்பளப்பு என்றோ இல்லை கதையளப்பு என்றோ என்னவோ எழுதியிருக்கிறார். திருநெல்வேலிக்காரர் வம்பளப்பையும் கதையளப்பையும் கண்டனம் செய்கிறார் என்றால் அதிசயம் இல்லையா அது?.

வல்லிக்கண்ணனிடமிருந்தே வந்திருக்கக் கூடிய அவரிடமிருந்து வந்துவிட்ட ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் சொல்லவேண்டும். வல்லிக்கண்ணன் தமிழக முற்போக்குகளுடன் மிக நெருங்கி இருந்தவர். வல்லிக்கண்ணையும் தம்மவராக அவர்கள் கருதினார்கள். சரஸ்வதி ஒரு இலக்கியப் பத்திரிகையாக, கட்சி சாராது தன்னை இருத்திக்கொண்டது கட்சிக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவுக்கும் சரஸ்வதி ஆசிரியர் அவர்களோடு சேர்ந்தவர் தான் முற்போக்கு தான். இருப்பினும் சரஸ்வதிக்கு போட்டியாக தாமரை பத்திரிகையை கட்சி துவங்கியது. சரஸ்வதி அச்சானது கட்சியைச் சேர்ந்த அச்சகத்தில். அந்தத் துருப்புச் சீட்டை வைத்துக்கொண்டு சரஸ்வதி அச்சாவதைத் தாமதப்படுத்திக் கடைசியில் அது கடைமூடச் செய்தனர். இந்த உண்மை சரஸ்வதி வரலாற்றில் வல்லிக்கண்ணனால் பதிவு செய்யப்படுகிறது.ம் இந்த உள்கட்சி விவகாரம் வல்லிக்கண்ணன் வெளிக்கொணர்ந்திராவிட்டால் உலகம் அறிந்திராது. சரஸ்வதியை மூடச் செயதவர் நாம் மரியாதை செய்யும் ஜீவா அவர்கள். இதை வெளிக்கொணர்வதில் வல்லிக்கண்ணனுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. வெகு அதிசயமாக இந்தச் செய்கையால் வல்லிக்கண்ணன் யாருடைய கோபத்துக்கும் ஆளாகவில்லை. இது எப்படி நிகழ்ந்தது?

1993-94 இந்தியா டுடே மலரில் அவர் மிக கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். எல்லாம் பொத்தம் பொதுவான விமர்னங்கள். ஆனால் மிகக் கடுமையானவை: ' தமிழ் மொழியில், இலக்கியத்தில் ஒரு மந்த குணம் நிலவுகிறது. அது தான் எண்பதுகளிலும் தொடர்கிறது'; 'புரியாத விதத்தில், புதுமை என்ற பெயரில் எதை எதையோ எழுத வேண்டியது எனும் போக்கும் இப்போது தலையெடுத்துள்ளது. இதை நான் - லீனியர் ரைட்டிங்' என்றும், 'போஸ்ட் மாடர்னிஸம் என்றும் பெருமையாகச் சொல்கிறார்கள்;. 'இது அபத்தப் போக்கு மட்டுமல்ல அராஜகப் போக்கும் கூட;....'இப்படி எழுதுகிறவர்கள் எழுத்துக்களில் அழகும் இல்லை. கலையுமில்லை. அர்த்தமுமில்லை. செய் நேர்த்தியுமில்லை. பைத்தியக்காரனத்தனம், போதைப் பிதற்றல்கள் என்று சொல்லப்படவேண்டிய விதத்தில் தான் இருக்கின்றன இவ்வகையில் எழுதப்படும் எழுத்துக்கள்."சமீப காலமாக, விரும்பத்தகாத வேறு அலைகளும் தமிழ் எழுத்து - பத்திரிகை உலகத்தில் தலை தூக்கி விளையாடுகின்றன;. பிராமண எழுத்தாளர், பிராமணர் அல்லாத எழுத்தாலர், பண்டித மனோபாவம் உள்ளவர், தனித்தமிழ் பற்றாளர், வட்டார வழக்கு மன்ப்பண்பை வளர்ப்பவர், சுத்த இலக்கியப் போக்கினர், சமூகப் பார்வை உடைய முற்போக்கு இலக்கிய வாதிகள், அர்fஅசியல் கட்சி சார்பு உடையவர்...... இப்படி பல அடிப்படையில் எழுத்துக்கள் கவனிக்கப்பட்டு, அபிப்பிராயங்கள் உருவாக்கப்படுவதும் பிரசாரம் செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது". கடுமையான வார்த்தைகள் தான். ஆனால் எந்த ஒரு எழுத்தையும் எழுத்தாளரையும் இது குறிப்பிட்டுச் சொல்லாததால், யாரும் இது தனக்கில்லை என்று மூக்கு உயர்த்தி ராஜ நடை போட முடிகிறது. வல்லிக்கண்ணனுக்கு அன்பளிப்பாக வரும் புத்தகங்களில் இவ்வகை எழுத்தோ, எழுத்தாளரோ இருப்பின் அவர் தன் கருத்தைச் சொல்லியிருக்கவேண்டும் அல்லவா? அப்படி ஏதும் செய்தி நமக்குக் கசியவில்லை. அங்கும் தான் ரசித்து மகிழ்ந்த செய்திக் கார்டு தான் போயிருக்கும். ஏன் இப்படி? நெல்லையப்பனுக்கே இந்த ரகசியம் தெரிந்திருக்காது தான்.

வல்லிக்கண்ணனுக்கு பயம் என்றில்லை. தராதரம் தெரியாது என்றில்லை. வெகு அபூர்வமாக, வேண்டாத இடங்களில் அவர் தன் அபிப்ராயங்களைச் சொல்லியிருக்கிறார். செயலிலும் காட்டியிருக்கிறார். அவருக்கும் கறாரான அபிப்ராயங்கள் உண்டு. ஆனால் சொல்வதில்லை என்று தோன்றுகிறது. அப்படி அவர் சொல்லத் தேர்ந்தெடுக்கும் இடங்கள் ஒரு சீரான பார்வையற்றதாகத் தோன்றும். மோகமுள்ளையும் சிவராமு கவிதைகளையும் உதறித் தள்ளும் வல்லிக்கண்ணன் எப்படி வரும் குப்பைகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் தரமுடிகிறது? ஏன் தன் பலமான திருநெல்வேலி வாழ்க்கைப் புனைவுகளைப் பின்னொதுக்கி தன் உள்ளார்ந்த ரசனைக்கு மாறாக, ரெடி மேட் பாராட்டுக் கார்டுகள் வழங்கும் காரியத்திலேயே, தன் பிற்கால வாழ்க்கையைச் செலவிட்டார்? சிறப்பான ஒரு வல்லிக்கண்ணனை நாம் இழந்து விட்டோம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனும் எந்தத் துறையில் தன் வாழ்க்கையைச் செலவிட்டாலும், தன்னில் சிறந்ததைத் தான், தன் இயல்பான ஒன்றைத்தான் தரவேண்டும். அப்படித்தான் வாழவேண்டும் என்று நான் நினைக்கிறேன். வல்லிக்கண்ணன் தன்னின் சிறந்ததை மறுத்துக்கொண்டு விட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எளிமையே உருவான மனிதர், ஆசைகள் ஏதுமற்றவர், தான் தீர்மானித்துக்கொண்ட லக்ஷ¢யத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டது போல வாழ்ந்தவர், ஏன் தன் இயல்பில் வாழவில்லை? ஏன் தன்னின் சிறப்பானதைக் கொடுக்கவில்லை? தமிழ் நாட்டின் மற்ற பெரிய எந்தத் துறைப் பிரமுகர்களையும் போல பணத்துக்கோ, பிராபல்யத்துக்கோ தானல்லாத வேஷம் தரித்தவரில்லை வல்லிக்கண்ணன். வல்லிக்கண்ணனின் இழப்பு அது. நமது இழப்பும் தான். எத்தனை பெரிய மனுஷிகள் அவர் தந்திருக்கக் கூடும்!

****

Apr 22, 2010

பேரிழப்பு - வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன்

'இந்த வருஷம் எப்படியும் ஊருக்குப் போய் விடவேண்டியது தான்!' இப்படி பூவுலிங்கத்தின் மனம் தீர்மானம் நிறைவேற்றியது.

vallikkannan_d இவ்வாறு அது தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டது இதுதான் முதல் தடவையோ அல்லது மூன்றாவது தடவையோ அல்ல, முப்பதாயிரத்து ஓராவது தடவையாகவே இருக்கலாம்!

பூவுலிங்கம் பட்டணத்துக்கு வந்து முப்பது வருஷங் கள் ஓடிவிட்டன. அவர் வந்த நாளிலிருந்து 'ஊருக்கு ஒரு தரமாவது போயிட்டு வரணும்' என்கிற ஆசையும் அவரது உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டது. அப்படி முப்பது வருஷ காலமாக அது வளர்ந்து வருகிறது.

வெறும் நினைப்பு, சாதாரண எண்ணம் என்ற நிலை மாறி, ஆசை ஏக்கமாகவும் தவிப்பாகவும், தணித் தாகப்பட வேண்டியதாகவும் பேருருவம் பெற்று விட்டது. இன்னும் அது வளர்ந்து வந்தது.

'திருநாளைப்போவார்' என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த நந்தனாருக்காவது 'நாளைக்குப் போகலாம்... தில்லைக்கு நாளை போய்விடலாம்' என்று ஒரு வாயிதா கூறப்பட்டு வந்தது. அவரும் அதில் நிச்சய நம்பிக்கை வைத்திருந்தார்.

பூவுலிங்கத்துக்கு அந்த விதமான நம்பிக்கைக்கே இடம் இருந்ததில்லை. அவரும் முப்பது வருஷ காலமாக, செயல்படுத்தப்படாத - செயல்படுவதற்கு வாய்ப்பு நிச்சயம் கிட்டும் என்ற நம்பிக்கைகூடப் பெறமுடியாத - அந்த எண்ணத்தை ஏக்கமாக வளர்த்து வந்தார். 'இந்த வருஷம் எப்படியாவது ஊருக்குப் போய்விட வேண்டியதுதான். முப்பது வருஷத்துக்கு முந்திப் பார்த்தது. கோயிலும், பிள்ளையார் நந்தவனமும், தெப்பக்குளமும், அரசமரமும், ஆறும் அப்படியே கண்ணுக்குள் நிற்கின்றன. அவற்றை எல்லாம் திரும்பப் பார்க்க வேண்டும். அப்போது சின்னப்பயல்களாகத் திரிந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்!' இந்த விதமாக அவர் எண்ணாத நாள் கிடையாது.

பூவுலிங்கம் வெறும் பூவு ஆக, 'எலேய் பூவு' 'அடேய் பூவுப்பயலே!' என்று அதட்டுவோர் குரலுக்கு அஞ்சி ஒடுங்கிப் பணிவுடன் அருகே வரும் சின்னப் பயலாகத் திரிந்து கொண்டிருந்த காலத்திலேயே, ஒரு பெரிய மனிதர் பெரிய மனசு பண்ணி அவனை பட்டணத்துக்கு அழைத்துவந்து விட்டார். அவர் வீட்டில் எடுபிடி வேலைகள் செய்துகொண்டு, போட்டதைத் தின்று, பிள்ளைகளை எடுத்து வைத்து, 'ஏய்!' என்று கூப்பிடும் குரலுக்கெல்லாம் 'என்ன ஐயா!' எனக் கேட்டு பணிவிடை செய்து, இரவு பகலாக வீட்டில் நாய் மாதிரி காத்துக் கிடப்பதற்காகத் தான் ஊரின் பெரிய வீட்டுப் பெரிய ஐயா அந்தப் பயலைத் தம்முடன் அழைத்து வந்தார்.

பூவுப்பயலின் அப்பன்காரனும் ஆத்தாக்காரியும் 'எசமான், இந்தப் பயல் இங்கே இருந்தால் வீணாக் கெட்டுச் சீரழிஞ்சு போவான். அவனை உங்களோடு கூட்டிக்கிட்டுப் போயி ஆளாக்கி விடுங்க!'' என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டதனாலேதான், சிறுகுளம் முதலாளி மகன் கைலாசம் பிள்ளை அவனை பட்டணத்துக்கு அழைத்து வந்தார். அப்போது அவனுக்குப் பத்து வயது.

சிறுகுளம் என்பது 'சுத்தப் பட்டிக்காடு'. பள்ளிக்கூடம் என்ற பேருக்கு திண்ணையில் ஒரு அண்ணாவி சில பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். அச்சிலரில் ஒருவன் ஆக விளங்கும் பேறு பூவுப் பயலுக்குக் கிடைத்ததில்லை.

அவன் தந்தை பலவேசம் பெரிய வீட்டில் வண்டிக்காரனாக வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான், 'பயல் படிச்சு கலெக்டர் வேலைக்கா போகப் போறான்! இங்கே கிடந்து வயலில் உழைக்கணும், அல்லது ஆடு, மாடு மேய்க்கப் போறான். அவனுக்கு என்னத்துக்கு படிப்பு? என்று ஒரே அடியாக முடிவு செய்தது தான் 'தந்தை மகனுக்கு ஆற்றிய உதவி' ஆகும்!.

பையன் ஆடு மேய்க்கப் போறேன் என்று ஊர் சுற்றுவது, வயல் காடுகளில் திரிவது, மரங்களின் மீது ஏறுவது, கிட்டிப்புள் விளையாடுவது போன்ற அலுவல்களை உற்சாகமாகச் செய்து வந்தான். அங்கேயே இருந்திருந்தால் அவன் உருப்படாமல் போவான் என்று அப்பன் கருதினான்.

'பட்டணத்துக்கு வந்து மட்டும் நான் என்ன உருப்பட்டு விட்டேன்? உருப்படக் கூடியவன் எங்கே இருந்தாலும் உருப்பட்டு விடுவான். உருப்படாமல் போற கழுதை எந்தச் சீமைக்குப் போனாலும் உருப்படாது தான்!' என்று பிற்காலத்தில் பூவுலிங்கம் அநேக தடவைகள் எண்ணியது உண்டு. இந்த அறிவு அவனுக்கு ஆதி நாட்களில் இவ்வாறு வேலை செய்தது இல்லை!

அந்தக் காலத்தில் அவன் அந்த 'தரித்திரம் பிடித்த' பட்டிக்காட்டை விட்டு வெளியேற வசதி கிட்டியதை பெரிய அதிர்ஷ்டம் என்றே கருதினான். 'ஒட்டை உடைசல் நத்தம் புறம்போக்குப் பட்டிக்காடு' என மதிக்கப்பட்ட ஊரை விட்டு நாகரிகத்தின் சிகரமாகத் திகழ்ந்த பட்டணத்துக்கே போக முடிவது கிடைத்தற்கு அரிய பாக்கியம் என்று தான் அவனை அறிந்திருந்த பலரும் எண்ணினார்கள்.

'சுரத்' இல்லாத சூழலிலிருந்து பரபரப்பு மிகுந்த பெருநகரத்துக்குச் செல்வது அந்தப் பையனுக்கு அதிகமான உற்சாகத்தையே தந்தது. பட்டணத்துக்கு வந்து சேர்ந்ததும், சில தினங்கள் வரை அவனுக்கு ஆனந்தம் குறையாமல் தானிருந்தது. புதிய சூழ்நிலை, புதிய முகங்கள், புதிய அலுவல்கள் - எல்லாம் மகிழ்ச்சி அளித்தன.

ஆனால், நாளாக ஆக அந்த வாழ்க்கை முறையும் பூவுலிங்கத்துக்கு அலுப்பு தருவதாகவே தோன்றியது. 'இப்படி வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடந்து, ஒயாது வேலை செய்து கொண்டிருப்பதற்கு பட்டணத்தில் இருப்பானேன்? பட்டிக்காட்டிலாவது இஷ்டம் போல் சுற்றித்திரிய முடிந்தது. நம் ஊருப் பக்கத்தில் டவுனில் பலசரக்குக் கடைகளில் சில பையன்கள் வேலை செய்கிறார்கள். காலை ஏழு மணி முதல் இரவு பத்துமணி முடிய கடையிலேயே அடைபட்டுக் கிடக்கிற அவர்கள் டவுன் பூராவையும் சுற்றிப் பார்த்தது கூடக் கடையாது. நான் பட்டணத்தில் பெரிய வீட்டில் வேலைக்கு இருக்கிறேன் என்று பேர்தான் பெரிசு. வெளியே போய் பட்டணத்தைப் பார்க்கக்கூட நேரமும் இல்லை; வசதியும் இல்லை. இங்கே இப்படி வந்து ஜெயில் வாழ்க்கை அனுபவிப்பதைவிட, நம்ம பக்கத்து டவுனில் பலசரக்குக் கடையில் வேலைக்குச் சேர்ந்திருக் கலாம்' என்று அவன் மனக்கசப்புடன் எண்ணலானான்.

பிறகு நாளடைவில் அவன் சுற்றி திரிந்து வேடிக்கை பார்ப்பதற்கு நேரம் தேடிக்கொண்டான். உண்ப தற்கும் உறங்குவதற்கும் இடவசதி இருந்ததால், வேலை எதுவும் செய்யாமல் சும்மா சுற்றி வேடிக்கை பார்த்துப் பொழுது போக்குவதற்கு மிகவும் வசதியான இடம் இந்தப் பட்டணம் என்று அவனுக்குத் தோன்றியது.

பட்டணத்துக்கு வந்துவிட்ட பையனை அவன் தாயோ தகப்பனோ ஊருக்குக் கூப்பிடவே இல்லை. ஒரு பிள்ளைக்குச் சோறு போட்டு, துணிமணிகள் எடுத்துக் கொடுத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு இல்லாமல் தொலைந்ததே என்றுதான் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். பொருளாதார நிலைமை உணர்வுகளையும் உறவுகளையும்விட வலிமை மிக்கதுதான்!

ஆரம்ப காலத்தில் 'ஊருக்குப் போகணும்' எனும் வெறும் நினைப்பு தீபாவளி சமயத்திலும் பொங்கல் திருநாளின் போதும்தான் பூவுலிங்கத்துக்கு தீவிரமாக வேலை செய்தது. 'இப்போதெல்லாம் ஊரில் இருக்கணும். எவ்வளவு ஜோராக இருக்கும் தெரியுமா!' என்று அவன் தன் நெஞ்சோடு புலம்பிக்கொள்வது வழக்கம்.

கைலாசம் பிள்ளையோ, அவரது குடும்பத்தினரோ அடிக்கடி சொந்த ஊருக்குப் போகும் சுபாவம் பெற்றிருக்கவில்லை. அபூர்வமாக எப்போதாவது, நாலைந்து வருஷங்களுக்கு ஒரு தடவை, போய் வருவது வழக்கம். பிள்ளை அவர்கள் மாத்திரம் ஊர் பக்கம் போகிறபோது, 'நீ இங்கேயே இவர்களோடு இரு. உன்னை ஊரிலே யாரு தேடுறாங்க?' என்று பூவுலிங்கத்தைத் தட்டிக் கழித்துவிடுவார். குடும்பத்தினர் அனைவரும் புறப்படும் சமயத்தில், 'ஏண்டா, நீயும் இவங்களோடு ஊருக்குப் போய்விட்டால் நான் என்னடா செய்வேன்? நீ ஊருக்குப் போயி என்ன பண்ணப்போறே? சும்மா இங்கேயே இரு!' என்று உத்திரவு போடுவார்.

எப்படியோ தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே யிருந்தன அவனுக்கு. பூவுலிங்கத்தின் தந்தை பலவேசம், மகன் பட்டணத்துக்குப் போன மறு வருஷமே மண்டையைப் போட்டுவிட்டான். அவன் காரியம் எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் பட்டணத்தில் இருந்தவர்களுக்கு விஷயம் தெரிந்தது. பூவுப்பயனுக்கு அண்ணன்களும் தம்பிகளும் நிறைய இருந்ததால், அப்பனின் இறுதி யாத்திரைக்கு வழி அனுப்பி வைக்க அவன் வந்தே ஆகவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இரண்டொரு வருஷங்களில் தாயும் சிவபதம் சேர்ந்தாள். இந்த மகனின் துணை அப்பொழுதும் எதிர்பார்க்கப்படவில்லை.

'நான் ஊரைவிட்டு வந்து நாலைந்து வருஷங்கள் ஆச்சுது. அங்கே போகணுமின்னு ஆசையாக இருக்கு. ஒருதடவை போயிட்டு வாறேனே!' என்று அவன் பிள்ளைவாளிடம் கெஞ்சினான்.

'நீ என்னடா சுத்தப் பைத்தியக்காரனா இருக்கிறே? இது ஊரு இல்லாமல் காடா? அந்தப் பாடாவதிப் பய ஊரிலே உனக்கு என்ன வச்சிருக்குது? இங்கே கிடைக்கிற சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு பேசாமல் கிடப்பியா? ஊரு ஊருன்னு தொண தொணக்கிறியே' என்று கைலாசம் பிள்ளை உபதேசித்தார்.

அவன் வருகையை அவனுடைய அண்ணன்மாரும் விரும்பவில்லை. 'பூவு எசமான் கண்காணிப்பில் இருக்கிறப்படியே இருக்கட்டும். இங்கே இப்போது ரொம்பவும் கஷ்டதசை. அவன் நல்லபடியாக வாழ கடவுள் வழிகாட்டிவிட்டதற்கு நாங்கள் சந்தோஷப்படுகிறோம்' என்று பெரிய அண்ணன் எழுதி அறிவித்து விட்டான்.

ஆகவே, பூவுலிங்கம் தனது எண்ணத்தைத் தன் உள்ளத்திலேயே வைத்து, தானாகவே புழுங்கிக் குமைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

அவன் கையில் பணம் சேர வழி ஏது? பிள்ளை வீட்டிலேயே அவன் வளர்ப்புப் பிள்ளை மாதிரி வாழ்ந்தான். சம்பளம் என்று எதுவும் அவன் கையில் தரப்படவில்லை. எனினும், அவன் குறை கூறுவதற்கு வழி இல்லாமல் அவனது தேவைகள் எல்லாம் சரிவர பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.

இந்த விதமாகப் பத்து வருஷங்கள் ஓடிவிட்டன. திடீரென்று கைலாசம் பிள்ளை செத்துப்போனார். அவரும் மனிதப்பிறவிதானே!

கைலாசம் பிள்ளையின் மனைவியும் மகளும் பட்டணத்திலேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். 'பூவு, நீ வேண்டுமானால் ஊருக்குப் போ, செலவுக்குக் கொஞ்சம் பணம் தர்றேன்' என்று பெரிய அம்மாள் சொன்னாள்.

ஒரே அடியாக ஊருக்குப் போய் என்ன செய்வது என்பது பெரும் பிரச்ன¨யாக அவனை மிரட்டியதால், அந்த வாய்ப்பை அவன் பயன்படுத்திக் கொள்ள வில்லை.

பூவுலிங்கம் வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள், திருப்பங்கள, வளர்ச்சிகள், தேக்கங்கள் எல்லாம் ஏற்பட்டன. அவன் வேறொருவர் வீட்டில் வேலையில் சேர்ந்தது. அந்த இடம் பிடிக்காமல் வெளியேறியது, கடை கடையாக வேலைக்கு அமர்ந்து காலம் கழிக்க முயன்றது எல்லாம் அவனுடைய வாழ்க்கைப் பாதையில் குறுக்கிட்ட மேடு பள்ளங்கள்தான். 'திருப்பம்' என்று, அவனது இருபத்தைந்தாவது வயசில் நிகழ்ந்த திருமணத்தைச் சொல்லலாம்.

சிறு அளவில் வியாபாரம் செய்து வந்த ஒரு பெரியவர் தனது மகளை அவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தார். அதுமுதல் பூவுலிங்கம் தனி அந்தஸ்தையும் பெரிய மனிதத் தன்மையையும் அடைய வசதி கிட்டியது. குடும்பத் தலைவர், கடைமுதலாளி என்ற தகுதிகள் தாமாகவே வந்து சேர்ந்தன.

குடும்பமும் பொறுப்புகளும் பெருகப் பெருக, பூவுலிங்கத்தின் தனிப்பட்ட ஆசை - சொந்த ஊரை ஒரு தடவையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்ற நினைப்பு - அடிவானம் மாதிரி எட்டஎட்டப் போய்க் கொண்டே இருந்தது.

மனைவி வீடு 'தெற்கத்திச் சீமையில்' எங்காவது இருந்திருந்தாலாவது அடிக்கடி அங்கே போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். அதற்கும் இடம் இல்லாமல் போய்விட்டது.

மனித மனம் விசித்திரமானதுதான். கிடைக்க வில்லை - சமீபத்தில் கிடைக்கவும் கிடைக்காது - என்ற நிலையில் உள்ள விஷயங்களை வைத்துக் கொண்டே அது சதா தறி அடிக்கிறது. எண்ணப் பின்னல்களையும் கனவு நெசவுகளையும் செய்து, அமைதியைக் கெடுக்கிறது.

பெரிய மனிதனாகிவிட்ட பூவுலிங்கத்துக்கு, தனது சிறுபிராயச் சூழ்நிலை - அந்தக் காலத்தில் வறண்டதாய், அலுப்புத் தருவதாய் தோன்றிக் கொண்டிருந்ததுதான். கனவின் இனிமைகளும் கற்பனைப் பசுமைகளும் நினைவின் மினுமினுப்பும் கலந்த அற்புத உலகமாக நிழலிட்டது. சிறு பிள்ளைகளோடு வி¨ளாயடிக் களித்த இடங்கள் பலவும் திடீர் நினைவுகளாய் குமிழ் தெறிக்கும் அடிக்கடி.

தென்னந் தோப்புகள், பெரிய வீட்டின் வாசலில் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நின்ற மரமல்லிகை விருட்சங்கள் பூத்துக் கொட்டும் மணம் நிறைந்த பூக்கள், மதகுப் பாலம், அங்கு கொட்டுகிற சிறு அருவி நீர் - இப்படி எத்தனை எத்தனையோ சிறுசிறு இனிமைகள் நெஞ்சில் தைக்கும் நினைவுகளாய் தலையெடுத்தன.

பூவுலிங்கத்தின் கண்முன்னே எவ்வளவோ மாறுதல் களும் அழிவுகளும் வளர்ச்சிகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன.

வெள்ளைக்காரன் காலத்துப் பட்டணத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் புது வருஷப் பிறப்பும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. டிசம்பர் ஜனவரி மாதங்களில் இந்நகரம் புதுப்பொலிவும் தனி மிடுக்கும், களி வெறியும் குதூகலமும் கும்மாளியும் பெற்று விளங்கியதை அவர் பார்த்தார்.

யுத்த காலத்தில் நகரமே காலியாகிவிட்டது போல், ரொம்பப்பேர் இங்கிருந்து ஓடிப்போனதையும், பட்டணம் இருள் பிரதேசமாய், பயம்மிகுந்த இடமாய், பட்டாளத்துக்காரர்கள் நடைபோடும் சூழலாய் மாறியதையும் அவர் கண்டார்.

விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளையும், சுதந்திரம் பெற்ற பிறகு தோன்றிய மாறுதல்களையும் அவர் கவனித்தார்.

ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் பளிச்சென்றோ, மறைமுகமாகவோ தனது பாதிப்புகளை இந்நகர்மீது அழுத்திச் சென்றதை அவர் உணர்ந்தார்.

காலம் நிகழ்த்திய மாற்றங்கள்தான் எத்தனை எத்தனை!

முக்கிய ரஸ்தாக்களில் ஙண ஙண ஒலி எழுப்பிய வாறே ஓடிக்கொண்டிருந்த டிராம் வண்டிகள் இல்லாதொழிந்தன. பஸ்கள், மோட்டார்கள், சைக்கிள்களின் போக்குவரத்து அதிகரித்துக் கொண்டே போயின. யுத்த காலத்தில் ஜன நெருக்கடி குறைந்திருந்த நிலை மாறி, ஜனப் பெருக்கமும் நெருக்கடியும் அளவில் அதிகரித்து வந்தது.

அழகான சூழ்நிலைகள் பல சிதைவுற்றன. பெரிது பெரிதாக வளர்ந்து நின்ற மரங்கள் பல வெட்டப்பட்டு, குளுமையோடு இருந்த இடங்கள் வெறிச்சோடி விளங்கின. கட்டிடங்கள் புதுசு புதுசாக எழுந்தன. நாகரிக மோஸ்தரில் கட்டிட உருவங்களும் அமைப்புகளும் மாறி விசித்திரக் காட்சிகளாக மொட்டை மொழுக்கென்று கண்களை உறுத்த லாயின.

எப்படியோ, பல வகைகளிலும் பட்டணத்தின் வெளித்தோற்றம் பெரும் மாற்றங்களைப் பெற்றுக் கொண்டிருந்தது. எங்கெங்கு நோக்கினும் ஏகப்பட்ட கடைகள். பிரகாசம் மிகுந்த வெளிச்சம், ஜனக் கூட்டம், பளபளப்பு, பகட்டு, வர்ணக் கலவைகள்...

இவற்றை எல்லாம் காணக் காண, பூவுலிங்கத்தின் மனம் சிறுகுளம் என்கிற ஊரைப்பற்றியே எண்ணியது. அந்த ஊரும், வேகமாக இல்லாது போயினும், சிறிது சிறிதாகவேணும் மாறுதல்களை ஏற்று, வளர்ந்தி ருக்கும். காலத்தின் கைவண்ணம் அச்சிற்றுருக்கும் அதிகச் சோபை சேர்த்திருக்கும் என்று அவர் நினைத்தார்.

ஊர்கள்தோறும் மின்சார விளக்குகள் பரவியதையும், ரேடியோ புகுந்துவிட்டதையும், பஸ் போக்குவரத்து மூலைக்கு மூலை ஏற்பட்டிருப்பதையும் பத்திரிகைச் செய்திகளாகவும், பிரயாணம் போய் வருவோரின் பேச்சுகள் மூலமும் கேட்டறிந்த போதெல்லாம், 'நம்ம ஊருக்கும் இவை எல்லாம் வந்திருக்கும். நம் ஊர் இப்போது பிரமாதமாக இருக்கும்' என்று எண்ணா திருக்க இயலவில்லை அவரால்.

அவர் வருஷம் தோறும் எவ்வளவோ செலவுகள் செய்தார், குடும்பம் என்றால் செலவுகளும் வளர்ந்து பெருகி எல்லை காண முடியாமல் தானே இருக்கும்? அதிலும் அவர் மனைவி ஓயாத சீக்காளியாக வேறு வந்து வாய்த்தாள். அவர்களுக்குப் பிறந்த குழந்தை களும் செலவு இனங்களைப் பெருக்கக்கூடிய சாதனங்களாகவே அமைந்தன. இதனால் எல்லாம் பூவுலிங்கத்தின் தனிப்பட்ட ஆசை தீராத தவிப்பாகவே வளர்ந்து வந்தது.

தூர தொலைவில் உள்ள ஊர்களில் வசிப்பவர்கள் பலர் திருப்பதிக்குப் போக வேண்டும், காசிக்கு யாத்திரை போக வேணும் என்று தீர்மானித்துவிட்டு, பிறகு 'நேர்த்திக் கடனை' தீர்ப்பதற்குப் போக முடியாமல் வருஷா வருஷம் எண்ணியும் பேசியும் காலத்தை ஏலத்தில் விட்டு ஏங்கியிருப்பது போல, பூவுலிங்கமும் 'சொந்த ஊருக்குப் போய் சும்மா ஒரு தரம் பார்த்துவிட்டு வரலாம்' என்கிற ஏக்கத்தை வளர்த்துப் பொழுது போக்கிவந்தார்.

இப்படியே விட்டுவைத்தால், முப்பது வருஷங்கள் ஓடி மறைந்தது போலவே, பாக்கியுள்ள காலமும் பறந்துவிடும்; தனது அந்தரங்க ஆசையை நிறை வேற்றிக் கொள்ளாமலே செத்துப் போக நேரிடலாம் என்ற அச்சமும் அவருக்கு உண்டாயிற்று. சிறுகுளம் என்ற ஊர் மனமோகன சொர்கபுரியாய் மங்கி நின்று அவரை 'வா வா' என ஆசை காட்டி அழைத்தது. அதுவே பித்தாய், பேயாய் பிடித்து ஆட்டியது.

இனியும் தள்ளிப்போட்டு வந்தால் மனநிம்மதி குலைந்து, பைத்தியமே பிடித்துவிடும் என்று அவருக்குப்பட்டது. அந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்காக, 'சட்டியைத் தூக்கிக் குட்டியில் போட்டு, குட்டியைத் தூக்கி சட்டியில் போட்டு', ஏதேதோ வித்தைகள் செய்து, பொருளாதாரத்தை சரிப்படுத்திக் கொண்டு, ஒருநாள் பிரயாணத்தை மேற்கொண்டார்.

பிராயணம் முழுவதிலும் அவருக்கு இருந்த பரபரப்பும் உணர்வுக் கிளர்ச்சியும் அளவிட முடியாதவை. நாகரிக நகரத்தின் மகத்தான காட்சிகளும், நகரவாசிகளின் கவலையில்லாத தோற்றமும் பகட்டும் அவருக்கு அவருடைய சிற்றூரையும் அங்குள்ள மக்களையும் கிட்டத்தட்ட அதே ரகங்களும் தரங்களும் கொண்ட நிலைகளில் சித்திரம் தீட்டத் தூண்டுகோல்களாய் விளங்கின.

ஒடும் ரயில் அறிமுகம் செய்து காட்டிய நிலையங் களும், பாதை ஓர ஊர்களின் பெருமையும், புதிய கட்டிடங்களின், தொழிற்கூடங்களின் தன்மையும் அவரின் ஊர் பற்றிய கற்பனை நிலைக்கு உரமிட்டன.


பட்டணத்திலிருந்து நானூற்றுமுப்பது மைல்கள் கடந்துதான் அவருடைய ஊர் இருந்தது. முந்நூறு மைல்கள்வரை காடும் செடியும், பசுமையும் பயிருமாக வளத்தின் பொலிவோடு காட்சி தந்த சூழ்நிலை பிறகு வறண்ட பிரதேசமாய் பார்வையில் படலாயிற்று. மழை இல்லவே இல்லை; அதனால் வறட்சி படுமோசமாக இருந்தது. ஆங்காங்கு வந்து சேர்ந்த மக்களும், கண்ணில் தென்பட்டவர்களும், உவகை எழுப்பும் உருவமினுக்கு உடையவர்களாக இல்லை.

நானூறாவது மைலில் உள்ள முக்கிய ஜங்ஷனில் ரயிலைவிட்டு இறங்கிய பூவுலிங்கம் பட்டணத்தின் மிகச் சிறு அளவேயான ஒரு குட்டிப் பகுதியைப் பார்ப்பது போலவே உணர்ந்தார். கும்பலும், வேலையில்லாமல் சுற்றி அலைவோரும், பஸ்களும், போக்குவரத்து நெரிசலும் இந்த விதமான பிரமையைத் தந்தன அவருக்கு.

பஸ் நிற்கும் இடத்திலும், பஸ்களிலும் கட்டத்துக்குக் குறைவு இல்லைதான். எப்படியோ பஸ் பிடித்து, முப்பது மைல் பிரயாணம் செய்து, 'நகரமும் இல்லாத பட்டிக்காடும் அல்லாத' இரண்டும் கெட்டான் ஊர் ஒன்றில் இறங்கி மூன்று மணி நேரம் காத்துக்கிடந்து, வேறொரு பஸ் வந்த பிறகு ஏறி, சிறுகுளம் என்கிற 'லட்சியக் கனவு' ஊரை எட்டிப்பிடித்தார் பூவுலிங்கம்.

பிரயாணம் செய்யச் செய்ய வறட்சியும், வறுமையின் சின்னங்களும், மனித உருவங்களின் விகாரத் தோற்றங்களும், பணக் கஷ்டத்தின் கோரப் பிரதி பலிப்புகளும் பளிச்செனப்பட்டன. இருப்பினும், தனது எண்ணத்திலும் கனவிலும் நிலையாய் கண்டு மகிழ்ந்த சிறுகுளம் இனிமை மிகுந்த குளுகுளு ஊராகவே இருக்கும் என்றுதான் பூவுலிங்கத்தின் மனம் நினைத்தது.

பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கியதுமே, அவர் மனச்சித்திரத்தில் பெரும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டது. அவர் தெருத் தெருவாக நடக்கத் தொடங்கியதும், அவருடைய உள்ளத்திலே நித்திய செளந்தர்யத்தோடு நிலை பெற்றிருந்த இளம் பருவச் சூழ்நிலை பற்றிய ரம்மியமான சித்திரம் தகர்ந்து, உருக்குலைந்து விழுந்து, சிதறிச் சின்னாபின்னமாகிப் பாழ்பட்டு மக்கியது.

பூவுலிங்கத்தின் உள்ளத்தில் சிரஞ்சீவித் தன்மை யோடு இனிமையாய், எழிலாய் பசுமையாய், வளமாய், அருமையாய், ஆனந்த உறைவிடமாய் கொலுவிருந்த சிறுகுளத்துக்கும், கண்முன்னே காட்சி அளித்த ஊருக்கும் எவ்வளவுக்கு எவ்வளவு வித்தியாசம்!

தெருக்கள் குறுகி, புழுதிமயமாய், அழுக்கும் அசிங்கமுமாய் கண்களை உறுத்தின. ஒவ்வொரு தெருவிலும் அநேக வீடுகள் இடிந்து விழுந்து, குட்டிச் சுவரும் கட்டை மண்ணுமாய் காட்சி தந்தன. வீடு என்ற பெயரோடு தலைதூக்கி நின்ற பல குடிசைகள் 'இப்பவோ பின்னையோ இன்னும் சித்தெ நேரத் திலோ' விழுந்துவிடுவோம் என்று எச்சரிக்கை கொடுத்தவாறு உயிரைப் பிடித்துக்கொண்டு நின்றன. அநேக வீடுகளில், ஆட்கள் பிழைப்புக்கு வழிகாண நகரங்களைத் தேடிச் சென்றுவிட்டதால், பூட்டுகள் தொங்கின. கறையான் தன் வேலையை வெகு தீவிரமாகச் செய்து கொண்டிருந்தது.

ஊர் ஓரத்தில் முன்பு பூவரச மரங்களும் நந்த வனமுமாக அழகுடன் காட்சி தந்த தனித் தெரு இப்போது அடர்த்தியான குட்டை முட்செடி இன 'நீர்க் கருவேல்' புதர் புதராக மண்டிக் கிடக்கும் பாழ்பட்ட பகுதியாக விளங்குகியது. கோயில்கள்கூட வசீகரம் குன்றியே காணப்பட்டன. ஊரின் எல்லையில் திடுமென ஓசை எழுச் சிறு அருவிகள் விழும் மதகுகளோடு இருந்த பாலம் இப்போது பலமான சுவரமைப்போடு, இறுக மூடிய பலகைககளோடு, புதுமைத் தோற்றம் பெற்றிருந்தது. மொத்தத்தில் ஊரே பலரகமான பொருள்களும் தாறுமாறாகக் குவிந்து கிடக்கும் குப்பைமேடு மாதிரித் தோற்றம் காட்டியது.

அங்கு வசித்த ஆட்களில் அவருக்குத் தெரிந்த - அவரை இனம் கண்டு கொள்ளக்கூடிய - நபர் யாருமே இல்லை. பலரும் ஏதோ சாயைகள் போலும், அருவங்கள் போலும், எலும்பு உருவங்கள் போலும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். உணர்ச்சித் துடிப்பு, உயிரோட்டம், உவகைத் துள்ளல், திருப்தி முதலியன பெற்ற மனிதர்களாகக் காணப்படவில்லை அவர்கள், வாழ்க்கை எனும் கொடிய இயந்திரம் கசக்கிப் பிழிந்து விட்ட சக்கைகளாய், சாரமற்ற முறையில் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கும் நிழல்களாய் திரிந்தார்கள். வாழ்க்கையே கோரமான தண்டனை ஆகிவிட, மரணம் என்னும் விடுதலையை அடைவதற்காகக் காத்திருக் கும் குற்றவாளிகள் போல், மண்ணைப் பார்த்தபடி தலை குனித்து நடந்த உருவங்களையே அவர் கண்டார்.

இரவு வந்ததும், மின்சார விளக்குகள் எரித்தன. வெறுமையை, வறுமையை, பாழ்பட்ட சூழலை வெளிச்சமிட்டுக் காட்டுவதற்கே அவை உதவின. ஏழரை மணிக்கே ஊர் அடங்கிவிட்டது. எட்டரை மணிக்கெல்லாம் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஊரே சுடுகாட்டு அமைதி பெற்ற இடமாக இருளில் மூழ்கிவிட்டது.

பூவுலிங்கம் பட்டணத்தை, அதன் பரபரப்பை வெளிச்சத்தை, மினுமினுப்பை, பகட்டை, படாடோ பத்தை எல்லாம் எண்ணினார். இந்த வேளையில் நாகரிகப் பெருநகரம் எப்படிக் கோலாகலமாக இருக்கும் என்று நினைத்துப் பெருமூச்சு எறிந்தார்.

பட்டணத்தின் போலித்தனமான வாழ்க்கை அவருக்குப் பிடித்திருக்கவில்லை. அதேபோல், இருண்ட கிராமத்தின் சமாதிநிலை வாழ்வும் அவருக்கு உகந்திருக்கவில்லை.

பட்டணத்தில் - நாகரிக நகரங்களில் - ஆத்மா இல்லாத வாழ்க்கைத்தான் கூத்தடிக்கிறது. ஆத்மா மறக்கப்படுகிறது, அமுக்கி அழுத்தப் பெறுகிறது, சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது என்பது பூவுலிங்கத்தின் அனுபவம்.

அவருடைய நினைவிலும் கனவிலும் மோகனமாகக் கொலுவிருந்த சிறுகுளம் கிராமம் மனிதனுக்கு மாண்பு தரும் ஆத்மாவை கெளரவிப்பதாக - ஆத்ம ஒளி பெற்றதாக - விளங்கும்என எண்ணியிருந்தார். அங்கு ஆத்மா வறண்ட வெறுமையைக் கண்டதும் அவர் நெஞ்சில் வேதனை ஏற்பட்டது. அவருடைய ஏமாற்றம் கொடியதாய், ஈடு செய்ய முடியாததாய், அவரை வருத்தியது. ஏதோ பேரிழப்பை ஏற்க நேர்ந்தது போல் அவர் சோகம் அடைந்தார்.

'இந்த ஊர் இப்படி மாறியிருக்கும் என்று தெரிய வழி இருந்திருக்குமானால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். இந்த ஊருக்கு வந்ததனால், இதன் உண்மை நிலையை அறிய நேர்ந்த துக்கம் வேறு. என் மனசில் பதிந்திருந்த பசுமைச் சித்திரம் சிதைந்து விட்ட நஷ்டம் வேறு!'' என்று அவர் எண்ணினார்.

சிறுகுளத்தின் நிகழ்கால நிலையை நேரில் பார்க் காமல் இருந்தாலாவது, மனம் பழைய அடிப்படையை வைத்து இனிய வேலைப்பாடுகள் செய்து கொண்டி ருக்கும் அல்லவா? தனது கனவை, கற்பனையை தானே கொன்றுவிட்டதாக அவர் வருத்தப்படலானார்.

சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட சிறு பிராய நினைவுகளின் இடிபாடுகள் மத்தியில் அழுகுணிச் சித்தராய் வெகுநேரம் நிற்கவும் திரியவும் அவர் உள்ளம் இடம் தரவில்லை. ஆகவே பூவுலிங்கம் உடனடியாக திரும்பும் பயணத்தைத் தொடங்கி விட்டார். இப்போது அவர் உள்ளத்தில் உவகை இல்லை, உணர்ச்சித் துடிப்பும் தவிப்பும் இல்லை. ஆசைப் படபடப்பு இல்லை, அவசர பரபரப்பும் இல்லை. தனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரை அல்லது ஒன்றை, பறிகொடுத்துவிட்டு, ஆற்ற முடியாத துயரத்தோடு திரும்புகிற ஒரு மனிதனின் வேதனைச் சுமைதான் அவர் உள்ளத்தில் கனத்தது.

******
1965ல் எழுத்தாளன் என்ற இதழில் வந்த இந்த சிறுகதை சமீபத்தில் வெளியான 'வல்லிக்கண்ணன் கதைகள்' என்ற தொகுப்பிலிருந்து பிரசுரிக்கப்படுகிறது. நூல் வெளியீடு: ராஜராஜன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை - 600 017.

Nov 11, 2009

மதிப்பு மிகுந்த மலர்-வல்லிக்கண்ணன்

வல்லிக்கண்ணன்

மாலை உலா வந்த சுந்தரம் அந்த இடத்தில் அப்படி ஒரு காட்சியை எதிர்ப்பார்க்கவில்லை. அதனால் அவர் ஆச்சரியம் அடைந்தார்.

நகரத்தை விட்டு விலகி இருந்தது அந்த இடம். வெறிச்செனக் கிடந்த மேட்டு நிலம். சுத்தமான காற்றை நாடுவோர் மாலை நேரங்களில் அங்கே வருவார்கள். கார்களில், சைக்கிளில், பல ரகமான வேக வாகனங்களில். நடந்தும்கூட. உயர் குடியினர் ஆரோக்கியம் தேடி அந்த வட்டாரத்தில் வசிக்க வருவது உண்டு. அவர்களுக்கு வசதியாக பங்களாக்கள் அங்கும் இங்குமாய் தனித்தனியே கட்டப்பட்டிருந்தன.

அவர்களில் சிலர் பொழுது போக்குவதற்கு என்று 'ரிக்ரியேஷன் கிளப் ' ஒன்று அமைத்திருந்தார்கள். அத்ற்குத் தனிக் கட்டிடம் இருந்தது.

அழகான, சிறு கட்டிடம். அந்த கட்டிடத்தில் மாலை நேரத்திலும் இரவிலும் உயிரோட்டம் இருக்கும். சீட்டாட்டம், கேரம், பேட்மிட்டன் என்று விளையாட்டுக்களில் ஈடுபட்டிருப்பார்கள் பலர். சிலர் ஈசிச்சேரில் வெறுமனே சாய்ந்து ஓய்ந்திருப்பார்கள்.

பொதுவாக மாலை உலா வருகிறவர்களைத் தவிர வேறு யாரையும் வெளியே காண முடியாது. அந்த மேட்டு நிலத்தில், பரந்து கிடக்கும் பெருவெளி அது. எங்கும் காய்ந்து உலர்ந்த புல்லும், கொழிஞ்சி தும்பை போன்ற செடிகளுமே தென்படும். அங்கங்கே ஆவாரம் செடிகளும் பொன் குவியல்களாய் பூத்துச் சிரித்துக் குலுங்குவதும் பார்வையில் படும். ஒன்றிரண்டு மரங்களும் உண்டு.

சுந்தரம் அடிக்கடி அங்கே உலா வருகிறவர். அவரை அறிமுகம் செய்துகொள்ள விரும்பியவர்கள், அல்லது அவராக நெருங்கித் தெரிந்து கொள்வதற்கானவர்கள் அன்றுவரை அங்கே எவரும் குறுக்கிட்டதில்லை.

இப்போது அங்கே, அந்த பெரிய ஆலமரத்தடியில் ஒரு சிறு பெண் தனியாக விளையாடிக் கொண்டிருந்தாள். அது அவருக்கு ஒரு அதிசயமாகவே பட்டது.

அச் சிறுமிக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். நாகரீக ஜவுளிக்கடையில் அலங்காரமாக புது டிசைன் ஆடை அணிவிக்கப்பட்டு காட்சி பொருளாக நிறுத்தப்பட்டிருக்கும் அழகு பொம்மை மாதிரி இருந்தாள் அவள். உணர்ச்சித் துடிப்பும் உயிரியக்கமும் பெற்ற பொம்மை இது. தானாகவே சிரித்துக்கொண்டு, வேறு யாருடனோ பேசுவது போலவும் பாவனைகள் செய்துகொண்டு, அவள் தனக்காக ஒரு தனி உலகம் அமைத்து அதில் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

ஆனந்தமாக திரியும் வண்ணத்துப் பூச்சி. கவலையின்றி ஆடிப் பாடிச் சிறகடிக்கும் சிறுபறவை. அழகான பூங்கொத்து. நல்ல குழந்தை - சுந்தரம் அச்சிறுமியை இப்படி வியந்து நின்றார்.

சும்மா வேடிக்கை பார்த்தார்.

சிறுமி அவரைப் பார்த்தாள். அவளது ஒளி நிறைந்த கண்கள் மேலும் சுடரிட்டன. அவள் சிநேகமாகச் சிரித்தாள். இளம் வெயில்போல் அழகாக இருந்தது. அவள் சிரிப்பு.

இது வித்தியாசமான குழந்தை என்று அவர் மனம் சொன்னது. புதியவர்களைப் பார்த்து கூச்சப்படுகிற குழந்தைகள், வெட்கப்படுகிற குழந்தைகள், அநாவசியமாக பயப்படுகிற குழந்தைகள், அழுகிற குழந்தைகள் - இப்படி குழந்தைகள் பல விதம். பயமோ கூச்சமோ கொள்ளாது சிநேகமாகச் சிரிக்கிற குழந்தைகள் அபூர்வமாகத்தான் தென்படுகின்றன. இவளும் ஒரு அபூர்வப் பிறவி என்று சுந்தரம் எண்ணினார்.

சுற்று முற்றும் பார்த்தார். பெரியவர்கள் யாரையும் காணவில்லை. காரில் அல்லது வேறு ரக வாகனங்களில் மேட்டு நில வட்டாரத்துக்கு 'காற்று வாங்க ' வருகிற பெரியவர்கள் எப்பவாவது தங்களோடு குழந்தைகளையும் கூட்டி வருவது உண்டு. அவர்கள் பிள்ளைகளை தாராளமாக வெளியே விளையாட அனுமதிக்க மாட்டார்கள். இப்படித் தன்னந் தனியாக ரொம்ப நேரம் விளையாட விடுவதில்லை.

இவள் யாருடன் வந்திருப்பாள் என்று சுந்தரம் சந்தேகப்பட்டார். அச்சிறுமியிடம் கேட்டார் -

'உன் கூட யார் வந்திருக்கா ? '

யாரும் வரலே. நானாத்தான் வந்திருக்கேன் என்று தயங்காமல் கூறினாள் அவள்.

'உனக்கு பயமாக இல்லே ? '

'பயம் என்ன பயம் ' ' என்று கூறிய சிறு பெண் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

'நீ தனியாக வந்திருக்கியே, '

அப்பா அம்மா உன்னை தேடமாட்டார்களா ? கோபிக்க மாட்டார்களா ? என்று சுந்தரம் விசாரித்தார்.

அப்பா என்ன பண்ணுவாரோ, எனக்குத் தெரியாது. நான் என் அப்பாவைப் பார்த்தே ரொம்ப வருஷமாச்சு. அம்மா என்னை கோபிக்க மாட்டா. அம்மா தேடுறதுக்கு முந்தி நான் வீட்டுக்குப் போயிடுவேன் என்று அவள் அமைதியாகச் சொன்னாள்.

இது அதிசயமான குழந்தைதான் என்ற எண்ணம் மேலும் வலுப்பட்டது அவருக்கு. 'உன் வீடு எங்கே இருக்கு ? ' என்று கேட்டார்.

'அதோ... அங்கே... என்று குரலை நீட்டி இழுத்து கையையும் ஒரு திசையில் நீட்டினாள் அவள்.

அவள் காட்டிய பக்கம்தான் பெரிய மனிதர்களின் பொழுதுபோக்கு கிளப் இருந்தது. அது அவளுடைய வீடாக இருக்கமுடியாது. அதற்குச் சிறிது தள்ளி ஒரு சிறு வீடு. ஓடு வேய்ந்த சின்ன வீடு. சில அறைகளே கொண்ட கட்டிடம். இச் சிறுவீடு எனது இருப்பிடமாக இருக்கலாம் என்று சுந்தரத்தின் மனம், அதைப் பார்க்கிறபோதெல்லாம் ஆசைப்படுவது வழக்கம். அது சதா பூட்டியே கிடக்கும். அதிலா இந்தச் சிறுமியும் அம்மாவும் குடியிருக்கிறார்கள் ? எத்தனை காலமாக ?

நீ அந்த வீட்டுக்கு வந்து எத்தனை நாளாச்சி ? என்று அவர் கேட்டார்.

'நாலு நாள்தானாச்சு. இன்னமே இங்கேயேதான் இருப்போம் ' என்று அவள் சொன்னாள்.

உடனேயே திடுமென நினைத்துக்கொண்டவள் போல 'நேரமாச்சு நான் போகனும் ' என்று அறிவித்தாள். குதித்துக் குதித்து ஓடிப்போனாள் ; வீட்டை நோக்கி அவள் போவதையே பார்த்து நின்றார் அவர்; சிறுமி அந்தச் சிறிய வீட்டினுள்தான் போனாள்; இந்தப் பிள்ளையோட அம்மாவுக்கு ஏதாவது சீக்காக இருக்கும்; ஆரோக்கியம் தேடி இங்கே வசிக்க வந்திருப்பாள் என்று அவர் எண்ணிக் கொண்டார்.

அதன் பிறகு சுந்தரம் அந்தப் பக்கம் உலா வந்த போதெல்லாம் அச்சிறுமியைத் தவறாது சந்திக்க முடிந்தது: அவள் பெயர் உஷா என்றும் தெரிந்தது.

உஷா அழகான பெயர். உதயம் போல் ஒளியோடு, கலகலப்பாக, ஜீவத்துடிப்போடு தான் இந்தக் குழந்தையும் இருக்கிறது. விடியற்காலத்தின் பொன்னொளி இதன் கண்களில் மின்னுகிறது. இதன் சிரிப்பில் பளீரிடுகிறது; ஒளியின் வைரரேகை மாதிரித்தான் இதன் உருவமும் இருக்கிறது; இப்படிக் கவிதை பேசிக் களித்தது அவர் வனம்.

ஒவ்வொரு சந்திப்பின் போது உஷா அவருடைய ஆச்சர்யத்தை அதிகப்படுத்தி வந்தாள்; எப்பவும் அவள் தனியாகத்தான் காணப்பட்டாள்; சதா சிரித்த முகமாகவே காட்சி தந்தாள்; அவளுடைய சின்ன வாய் எப்போதும் வார்த்தைகளை கலகலப்பாக அள்ளித் தெறிக்கும் ஊற்றாக விளங்கியது.

உஷாவுக்கு பூக்களின் மீது அதிக ஆசை. சுற்றித் திரிந்து ஆவாரஞ் செடிகளின் பொன்னிறப் பூக்களை அதிகம் அதிகமாக சேகரிப்பது அவளுக்கு சந்தோஷம் தரும் காரியமாக இருந்தது. சில பங்களாக்களின் வெளிப்புறச் சுவர்களுக்கு மேலாக வளர்ந்து தொங்கும் செடிகளில் குலுங்கிப் பளிச்சிடும் பிங்க் நிற போகன்வில்லாப் பூக்களும் அவளுக்குப் பிடித்தமானவைதான்; செம்பரத்தம் பூக்கள் அவளது ஆனந்தத்தை அதிகப்படுத்தின. அவற்றை நிறைய நிறையப் பறித்து வைத்து அவள் விளையாடினாள்.

உங்களுக்கு எந்தப் பூ மாமா பிடிச்சிருக்கு ? என்று உஷா ஒரு நாள் சுந்தரத்தைக் கேட்டாள்.

எல்லாப் பூக்களும் எனக்குப் பிடிச்சிருக்கு என்றார் அவர்.

'ஊம்ம், எது ரொம்ப புடிச்சிருக்கு ? '

'ரொம்ப ரொம்ப எனக்குப் பிடிச்ச பூ எது தெரியுமா ? ' என்று அவர் அவள் ஆவலைத் தூண்டும் விதத்தில் கேட்டு நிறுத்தினார்.

'எது மாமா, எந்தப் பூ ? ' என்று அவள் அவசரப் படுத்தினாள்.

'எல்லாப் பூக்களையும் விட அழகாக இருக்கிற உஷா தான் எனக்குப் பிடித்த பூ; உஷா ஒரு பெரிய பூச்செண்டு ' இனிய பூந்தோட்டம்னே சொல்லலாம்; என்று சுந்தரம் கூறினார். சிரித்தார்.

'போங்க மாமா ' கேலி பண்றீங்க ' ' என்று செல்லச் சிணுங்கல் சிணுங்கினாள் உஷா.

'நிஜம்மா நீ ரொம்ப பெரிய பூ தான்; உன் முகம் ஜோரான ரோஜாப்பூ. உன் கைகள்கூட சிறு சிறு ரோஜாக்கள்தான்; கண்கள் கருநீலப்பூ; பாதங்கள் தாமரைப்பூ; உன் மூக்குக்கூட அழகான ஒரு பூதான். அதுக்குப் பேரு தான் எனக்குத் தெரியலே ' என்று சொல்லி, அவர் தன் விரல்கள் இரண்டினால் அவள் குமிழ் மூக்கைப் பிடித்து ஆட்டினார்.

'போங்க மாமா, நீங்க நல்ல மாமா இல்லே ? ' என்றாள் பிறகு ஏதோ சிந்திப்பவள் போல அமைதியில் மூழ்கி நின்றாள்.

'உஷாவுக்கு என்ன திடார் யோசனை ? ' என்று சுந்தரம் கேட்டார்.

'பூக்கள் ஜோராக இருக்கு; அழகு அழகாச் சிரிக்கும் குட்டிக் குட்டி தேவதைகள் போல் தோணுது; அழகாப் பூத்து சந்தோஷம் தருகிற பூக்கள் ஏன் எப்பவும் இப்படியே இருக்கக்கூடாது ? ஏன் வாடிப்போகனும் ? என்று 'சீரியஸ் ' ஆகவே கேட்டாள் அவள்.

'ஊம்ங், அப்புறம் ? ' என்று கிண்டல் தொனியில் அவர் தலையை ஆட்டியபடி வினவினார்.

'அழகானது எல்லாம் சீக்கிரம் அழிஞ்சு போகுது. அல்லது தேய்ஞ்சு மறைஞ்சு போகுது. பூக்கள் அதுக்கு உதாரணம் இல்லையா ? '

'ஆ. டாயர் பிலாசபர் இன் பாவாடை ' அதாவது பாவாடையில் காட்சி தருகிற அருமை தத்துவதரிசியே ' நீ உன் வயசுக்கு மீறி உன் மூளைக்கு வேலை கொடுக்கிறாய். நீ சின்னபிள்ளையாய், சிட்டுக் குருவியாய், வண்ணத்துப் பூச்சியாய், கவலை இல்லாமல் உல்லாசமாகவே விளையாடிக் கொண்டிரு ' என்று உபதேசியார் மாதிரிப் பேசினார் சுந்தரம்.

'வவ்வவ்வே ' ' என்று வாயைக் கோணலாக்கி பழிப்புக் காட்டினாள் சிறுமி. பூக்களைச் சிதறி வீசி விட்டு ஓடிப் போனாள்.

'குரங்கு ' செங்குரங்கு ' ' என்று உரத்துக் கூவினார் சுந்தரம். அழகிய பூக்களை அப்படி அந்தப் பெண் நாசப்படுத்தியது அவருக்கு எரிச்சல் தந்தது.

உஷ திரும்பிப் பார்க்காமலே போய் விட்டாள்.

நாளைக்கு அவளுக்கு அழகான, பூக்கள் கொண்டு வந்து கொடுக்க வேண்டும்; அவள் முகமே பெரிய ரோஜாப் பூவாய் சிரிப்பதைக் காண வேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டார்.

'ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும் ' என்பது வாழ்க்கையில் சகஜமாக நடப்பதுதான். சுந்தரத்தின் விஷயத்திலும் அப்படித்தான் ஆச்சு.

மறுநாள் மேட்டு நிலம் பக்கம் அவர் உலாப் போக முடியவில்லை. அவரைக் கண்டு சில முக்கியமான விஷயங்கள் பேசுவதற்கென்று சிலர் வந்துவிட்டார்கள். அதுக்கு அடுத்த நாளும்.... அப்புறம்..... தொடர்ந்து பத்து நாட்கள் அவர் அங்கே போக முடியாமலே போச்சு. வெளியூர் போக நேரிட்டது.

சுந்தரம் திரும்பி வந்ததும் மாலை உலா கிளம்பினார். வழக்கமான இடத்துக்குத்தான். உஷா விளையாடிக் கொண்டிருப்பாள்; தன்னைப் பார்த்ததும் மூஞ்சியை உம்மென்று வைத்துக் கொண்டு கோபமாக இருப்பாள்; ஏன் இத்தனை நாள் வரலே என்றுக் கேட்பாள்... இப்படி மனம் எண்ணக் காற்றாடியை மேலே மேலே பறக்கவிட, அவர் வேகமாக நடந்தார்.

பெரிய ஆலமரத்தின் கீழே, ஒளிப்பெருக்கின் வைர ஊசிபோல் திகழக்கூடிய சிறுமி இல்லை. அவளது விளையாட்டுப் பொருள்களும் காணப்படவில்லை. அந்தப் பூங்கொத்து வண்ண வண்ணப் பூக்கள் சேகரிப்பதற்காக அலைந்து திரிகிறதோ என்ற சந்தேகத்தில் அவர் கண்கள் அங்குமிங்கும் தாவித் திரிந்தன.

எங்குமே அந்த உயிர்க் கவிதை இல்லை.

இந்த நேரத்தில் உஷா வீட்டுக்குள் அடைந்து கிடக்க மாட்டாளே ? விசேஷ காரணம் ஏதாவது இருக்க வேண்டும் அவர் மனசில் ஓர் பதைப்பு.

சுந்தரம் அந்தச் சிறிய வீட்டை, பெரிய மனிதர்களின் பொழுது போக்கு மன்றம் உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த எடுப்பான கட்டிடத்துக்கு அருகில் இருந்த அழகிய வீட்டை நோக்கி நடந்தார்.

'கிளப் ' ஜீவனோடுதான் தென்பட்டது. பக்கத்துச் சிறிய வீட்டில் ஒளி குன்றிப் போனதாக அவருக்குத் தோன்றியது.

அன்னியமான வீடு. அந்த அம்மாள் அறிமுகமானவளும் இல்லை. சிறு பெண் உஷாவை அவள் விளையாடும் மரத்தடியில் சந்தித்துப் பேசியதுதான். அவளுடன் அவள் வீட்டை எட்டிப் பார்க்க அவர் வந்ததுகூட இல்லையே '

சுந்தரம் வெளி 'கேட் ' மீது கை பதித்தவாறு தயங்கி நின்றார். உஷா என்று அவர் உள்ளம் கூவியது. குரல் கொடுக்கவில்லை அவர்.

உஷாவின் அம்மா வெளியே வந்தாள். எதேச்சையாக வந்தவள், தயங்கி நிற்கும் அவரை பார்த்ததும் அவசரமாக வந்தாள். 'வாங்க, உள்ளே வாங்க ' என்று அழைத்தாள்.

'உஷா உங்களுக்குத் தொல்லை கொடுத்திருப்பாளே; சரியான தொண தொணப்பு இல்லையா ? '

அம்மா அவளாகவே கருத்து தெரிவித்தாள்.

'அப்படி எல்லாம் இல்லை. உஷா அதிசயமான பெண். உற்சாகமான சிறுமி. துள்ளித் திரியும் கவிதை. அவள் செயல்கள், பேச்சு எல்லாம் எனக்கு சந்தோஷமே தரும். அவளை எங்கே காணோம் ? '

சடக்கெனத் தலையைத் தாழ்த்திக் கொண்டு விருட்டென அந்த அம்மாள் ஏன் வீட்டுக்குள் போக வேண்டும் ? அவருக்கு குழப்பம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அவள் திரும்பி வந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு, அவள் கண்கள் கலங்கியிருந்தன.

உஷாவின் கடைசி காலத்தில் அவள் சந்தோஷத்தை அதிகப்படுத்தியவர் நீங்கள். உங்களைப் பற்றி அவள் வாய் ஓயாது பேசுவாள். நீங்கள் தேடி வந்தால், இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னாள் என்று ஒரு கவரை அவள் அவரிடம் தந்தாள்.

அவர் திகைத்தார். 'உஷா...உஷா எங்கே ? ' என்று குழறினார்.

'அந்தப் பூ வாடிவிட்டது ' ' அவள் விம்மினாள்.

மின்னாமல், உறுமாது, பேரிடி ஒன்று விழுந்தது போலிருந்தது சுந்தரத்துக்கு. 'என்னது ? என்ன ? என்று கதறினார்.

'உஷாவுக்கு இருதயக் கோளாறு. எதோ பலவீனம். சிகிச்சைக்காகத்தான் இங்கே வந்து தங்கினோம். அவள் ரொம்ப காலம் வாழ முடியாது என்பது தெரிந்த முடிவுதான். அதனால் இருக்கிற வரை 'அவள் சந்தோஷமாக இருக்கட்டுமே என்று விட்டிருந்தேன். நீங்களும் உங்களாலான உதவி செய்தீங்க. அவ சந்தோஷப்பட்டாள். மூன்று நாட்களுக்கு முன் உஷா போய்விட்டாள். '

அழுகையை அடக்க இயலாதவளாக அவள் உள்ளே போனாள்.

சுந்தரம் தன் கையிலிருந்த கவரைக் பிரித்துப் பார்த்தார். அதில் ஒரு படம் இருந்தது. வெள்ளைத்தாளில், வானவில் வர்ணங்களில் பளிச்சிட்ட ஒரு பூவின் படம். உஷா வரைந்தது. அதன் மேலே மதிப்பு மிக்க மலர் என்று அவள் எழுதியிருந்தாள். கீழே அன்பு நட்பு என்றும் எழுதியிருந்தாள்.

ஆனால் அவ்வார்த்தைகளை அன்பூ - நட்பூ என்று உஷா எழுதியிருந்தாள். வேண்டுமென்றே--தெரிந்தே--செய்யப்பட்ட இலக்கணப் பிழைதான் என்று எண்ணிக்கொண்டார் சுந்தரம்.

அவர் கண்ணிலிருந்து கண்ணீர்ப்பூக்கள் உதிரலாயின.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்