Showing posts with label அ.முத்துலிங்கம். Show all posts
Showing posts with label அ.முத்துலிங்கம். Show all posts

Aug 15, 2013

பவித்ரா - அ.முத்துலிங்கம்

நாளுக்கு நாள் சூரியனின் உயரம் குறைந்து வந்தது. இரவின் நீளம் அதிகரித்தது. முந்திய இரவில் மெல்லிய பனித்தூறல் இருந்தது. ரொறொன்ரோவின் புகழ்பெற்ற மனநல மருத்துவர் ஒருவரைத் தேடி கணவனும் மனைவியும் வந்தார்கள். அதுவே முதல் தடவை அவர்கள் அங்கே வந்தது. வரவேற்புப் பெண்ணுக்கு தம்பதியரைப் பார்த்ததும் ஏதோ விசித்திரமாக பட்டது. ஆனால் அது என்னவென்று அவளால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை. மனநல மருத்துவரைப் பார்க்க பலதரப்பட்ட மனிதர்கள் வந்துபோவதை அவள் அவதானித்திருக்கிறாள். இதுவும் அதுபோல என்று நினைத்து பேசாமலிருந்தாள். அவர்கள் முறை வந்தபோது மருத்துவர், சூடு வெளியே போகாமல் இருக்க கதவை கீறலாக திறந்து, ’அடுத்தது’ என்றார். வரவேற்பாளினி தம்பதியரை உள்ளே அனுப்பினாள்.

மருத்துவர் இவர்கள் நடந்து வருவதைக் கவனித்தார். அவருடைய தொழிலில் அ220px-Muttuது முக்கியமானது. சமயங்களில் வந்திருப்பவருக்கு என்ன பிரச்சினை என்பது புரிந்துபோய்விடும். கணவனுக்கு நாற்பது வயது இருக்கும். மனைவியின் வயதை ஐந்து வயது குறைத்து மதிக்கலாம். இருவரும் தாங்கள் அணிந்திருந்த ஓவர்கோட்டுகளை களையவில்லை. அவர்கள் மேலங்கிகளில் பனித்துகள்கள் அழியாமல் கிடந்தன. அந்தப் பெண் கோட்டின் மேல் பொத்தானை பூட்டாமல் இரண்டு கைகளாலும் அதை இழுத்து மூடியபடி தயங்கித் தயங்கி நடந்து வந்தார். அவர் ஓவர்கோட்டுக்குள் என்ன அணிந்திருந்தார் என்பது தெரியவில்லை. அது இரவு ஆடையாக இருக்கலாம் என்று மருத்துவர் ஊகித்தார்.

மருத்துவருக்கு முன் மூன்று வெறுமையான ஆசனங்கள் இருந்தன. அதிலே அவர்கள் எப்படி உட்காருகிறார்கள் என்பதும் முக்கியம். மருத்துவர் உன்னிப்பாக அவர்களை கவனித்துக்கொண்டிருந்தார். வலது பக்கத்தில் ஓரமாக இருந்த முதல் ஆசனத்தில் மனைவி உட்கார்ந்தார். கணவர் மனைவியை தாண்டி வந்து நடுவிலே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். மூன்றாவது இருக்கை வெறுமையாக இருந்தது. மருத்துவர் கணவரையும் மனைவியையும் மாறி மாறிப் பார்த்தார். மனைவி பல்தெரியாமல் ஏதோ பெரும் மகிழ்ச்சியில் உள்ளுக்குள் சிரித்தபடி உட்கார்ந்திருந்தார்.

’சரி, சொல்லுங்கள்’ என்றார் மருத்துவர்.

’பவித்ராவுக்குத்தான் பிரச்சினை’ என்றார் கணவர்.

’அப்படியா, என்ன பிரச்சினை?’

கணவர் பேசுவதாக இல்லை. ’தயக்கமாக இருக்கிறது. எப்படி ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை’ என்றார்.

’ஒரு டொக்டரிடம் வந்த பிறகு யோசிக்கவே கூடாது. எப்படிப்பட்ட உளச்சிக்கலாக இருந்தாலும் மனதைத் திறந்து பேசினாலே பாதி குறைந்துவிடும். எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. ஆனால் அதற்கு முதலில் நீங்கள் என்னிடம் வந்த காரணத்தை கூறினால்தான் முடியும்.’

கணவர் நெளிந்தார். மனைவிக்கு எதிர் திசையில் திரும்பி வெறும் ஆசனத்தை உற்றுப்பார்த்தார். பின்னர் முகத்தை திருப்பாமலே ‘கூச்சமாக இருக்கிறது’ என்றார்.

’நான் எப்படி வைத்தியம் பார்ப்பது? என்னவென்று சொன்னால்தான் எனக்கு தெரியவரும். நீங்கள் ஒருவித தயக்கமும் இல்லாமல் பேசலாம்.’

’பவித்ரா படுக்கையில் மூத்திரம் போகிறார்.’

’இவ்வளவுதானா? இதற்குத்தானா இத்தனை தயக்கம்? இது மிகச் சாதாரணமான வியாதி. நிறையப் பேரை நான் குணப்படுத்தியிருக்கிறேன். ஆனால் சிகிச்சை தொடங்குவதற்கு முன்னர் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தாலே போதும். இதை நிறுத்திவிடலாம்.’

’டொக்ரர், நீங்கள் நினைப்பதுபோல இது சாதாரணமான விசயமல்ல. நீங்கள்தான் இப்படியான வருத்தத்துக்கு ரொறொன்ரோவிலேயே ஆகத்திறமான டொக்ரர் என்று எல்லா தமிழ் ஆட்களும் சொல்கிறார்கள். அதனால் உங்களை தேடி வந்திருக்கிறோம். ஏற்கனவே இரண்டு டொக்ரர்களைப் பார்த்துவிட்டோம்.’

’எப்ப?’

’இன்றுதான்.’

’இரண்டுபேரையுமா?’

’இரண்டு டொக்ரர்மாரையும் ஒருவர் பின் ஒருவராக பார்த்துவிட்டு இப்பொழுதுதான் உங்களிடம் வருகிறோம்.’

கைவிரலை வைத்து யாரோ கதவைச் சாத்தியதுபோல மருத்துவர் கொஞ்சம் திடுக்கிட்டது தெரிந்தது. சுழலும் நாற்காலியில் பின்னால் நகர்ந்து லேசாகச் சாய்ந்து அவர் மனைவியைப் பார்த்தார். அந்தப் பெண் ஒன்றுமே நடக்காததுபோல சிரிப்புமாறாமல் மருத்துவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

’அவர்கள் என்ன சொன்னார்கள்?’

‘இந்த நோயின் பெயர் nocturnal enusesis. இதற்கு ஹார்மோன் சிகிச்சை எல்லாம் உண்டு. முக்கியமாக நோயாளிக்கு இந்த நோயினால் தன்னைப்பற்றிய தாழ்வுணர்ச்சி, வெறுப்பு, மன உளைச்சல் ஆகியவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னார்கள்.’

‘சரி, நீங்கள் என்னிடம் எதற்காக வந்தீர்கள்?’

’இதை எப்படியாவது நிறுத்திவிடுங்கள் டொக்ரர். வாழ்க்கை நரகமாகிவிட்டது.’

‘எவ்வளவு காலமாக இது நடக்கிறது?

‘மூன்று மாதமாக.’

’ஒரு வழி இருக்கிறது. இலகுவான சிகிச்சை. முதலில் இரவு எட்டு மணிக்கு பின்னர் தண்ணீர் குடிப்பதை அவர் நிறுத்தவேண்டும்.’

‘ஏன்?’

‘நீங்கள்தான் சொன்னீர்களே இரவு படுக்கையில் சிறுநீர் கழிப்பதாக.’

‘நான் எங்கே இரவு என்று சொன்னேன்? படுக்கையில் சிறுநீர் கழிப்பதாக அல்லவா சொன்னேன்.’

‘அப்படியானால் பகல் நேரத்தில் தூங்குகிறாரா?’

‘தூங்குவதாக யார் சொன்னது?’

‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஒன்றுமே புரியவில்லை.’

‘பட்டப் பகலில் எல்லோர் முன்னிலையிலும் பவித்ரா நடுப்படுக்கையில் உட்கார்ந்து மூத்திரம் பெய்கிறார்.’

மருத்துவர் இப்பொழுது உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துவிட்டார். இப்படியான ஓர் அனுபவம் அவருக்கு புதிது. மனைவியை பார்த்தார். சுவரிலே ஒட்டிய போஸ்டர் போல அதே சிரிப்புடன் ஒருவித கூச்சமும் இல்லாமல் அந்தப் பெண் அவரையே உற்றுப் பார்த்தார்.’

மருத்துவருக்கு அடுத்து என்ன கேட்பதென்று தெரியவில்லை.

‘இந்த மூன்று மாத காலத்தில் மற்ற டொக்ரர்களால் உங்கள் மனைவியை குணப்படுத்த முடியவில்லையா?’

‘மனைவியா? மனைவியென்று யார் சொன்னது? நான் பவித்ராவைச் சொன்னேன்.’

’அது யார் பவித்ரா?’

‘எங்கள் மகள், டொக்ரர்.’

‘அவர் எங்கே?’

‘இங்கே இருக்கிறாரே!’

வெறும் நாற்காலியை சுட்டிக்காட்டினார்.

*****

May 21, 2013

மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள் - அ.முத்துலிங்கம்

பச்சை, மஞ்சள், வெள்ளை பரிசாரகி உடையணிந்து நிற்பவள் ஓர் அகதிப் பெண்; இலங்கை அல்லது இந்தியப் பெண்ணாக இருக்கும். கயானாவாகக்கூட இருக்கலாம். கறுப்பு சருமம், கறுப்பு தலைமயிர், கறுப்பு கண்கள். அவள் உதட்டுச் சாயம், நகப்பூச்சுக்கூட கறுப்பாகவே இருந்தது. அவள் பெயர் நீளமாகவும் அதிக மெய்யெழுத்துக்கள் நிரம்பியதாகவும் இருந்திருக்கக்கூடும். அதைச் சுருக்கி 'ரத்ன' என்று தன் உடையின் ஒரு பக்கத்தில் குத்தி வைத்திருந்தாள். amuttu

பரிசாரகப் பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுத்ததுபோல அவள் மேசைக்கு சற்று தூரத்தில் நின்றாள். கண் பார்க்கக்கூடிய தூரம், காது கேட்கக்கூடாத தூரம். அதுவே விதி.

இன்னும் பல விதிகள் அவளுக்கு தெரியும்.

உணவை மேசையின் மேல் வைக்கும்போது அதை விருந்தினரின் இடது பக்கத்தில் நின்று வைக்கவேண்டும். விதி 12.

மீதமான உணவை மேசையில் இருந்து எடுக்கும்போது அதை விருந்தினரின் வலது பக்கத்தில் நின்று எடுக்கவேண்டும். விதி 11.

விருந்தினரின் நாற்காலியை இழுத்து வசதிசெய்து கொடுக்கும்போது இடது பக்கமாக நிற்கவேண்டும். விதி 26.

நாப்கினை மடித்து பிளேட்டின் இடது பக்கத்தில் வைத்தால் விருந்தினர் முடித்துவிட்டார் என்று அர்த்தம். விதி 7.

நாப்கினை மடித்து பிளேட்டின் நாற்காலியின் மேல் வைத்தால் விருந்தினர் இன்னும் முடிக்கவில்லை என்று அர்த்தம். விதி 9.

சாப்பிட பயன்படுத்தும் உபகரணங்கள் வெளியில் இருந்து உள்ளுக்கு குறைந்துகொண்டே வரவேண்டும். விதி 19.

இன்னும் இருக்கின்றன. அவளுக்கு எல்லாமே மனப்பாடம்.

அவளுக்கு தொல்லை கொடுப்பது விதிகள் அல்ல. ஆங்கில வகுப்பு. பெயர் சொற்களையே அவளுடைய ஆசிரியர் படிப்பிக்கிறார்; அவையே முக்கியம் என்றும் சொல்கிறார். சாலட், நாப்கின், சீஸ், கூகம்பர், கிளாம் சூப், ஒலிவ், லெட்டுஸ். வினைச்சொற்கள் இப்போது தேவை இல்லை, அவை தானாகவே வந்து இணைந்துகொள்ளும் என்கிறார். எப்போது, எந்தத் தேதியில் வந்து சேரும் என்பதை அவர் சொல்லவில்லை. ஸ்தோத்திரம்போல அவள் ஓர் ஒற்றை ரூல் கொப்பி நிறைய பெயர்ச் சொற்களையே எழுதி வைத்து பாடமாக்குகிறாள். வினைச்சொற்கள் இல்லாமல் அவற்றை எப்படி பயன்படுத்துவது? ஆனால் அவள் ஆசிரியர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்.

அவளுடைய அறைச் சிநேகிதி அவள் படிக்கும் முறையை பரிகாசம் செய்கிறாள். இதனிலும் உத்தமமான ஒரு வழி அவளுக்கு தெரிந்திருக்கும். ஒரு காதலன் கிடைத்தபிறகு அவள் காலண்டரில் புள்ளடி போட்டு வைக்கத் தொடங்கியிருந்தாள். அந்த தினங்களில் அகதிப் பெண் பதினொரு மணிக்கு முன்னர் அறைக்கு திரும்பமுடியாது. காதலர்கள் சந்திக்கும் புனித கணத்துக்கு அவளால் கெடுதல் வரக்கூடாது என்கிறாள். தகரக் குழாய் சத்தத்தில் அவள் காதலன் பேசுகிறான். அவன் கையை நீட்டும்போது அது திராட்சைக் குலைபோல தொங்கும். அவள்தான் அதைப் பிடித்துக் குலுக்கவேண்டும். அவன் கண்களும் அவள் முகத்தை நேரே பார்க்காமல் அவனுடைய வலது தோளுக்கு மேலால் பார்க்கின்றன.

அன்றைய விருந்தை கனடாவின் அதி செல்வந்தர்களில் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். அவர் வீட்டிலே நாளுக்கு ஒரு தடவை திரைச் சீலைகளையும், இரண்டு தடவை படுக்கை விரிப்புகளையும், எட்டு தடவை பல்புகளையும் மாற்றுவார்களாம். அவ்வளவு பெரிய பணக்காரர். மணி பதினொன்றைக் கடந்து வெகு நேரமாகிவிட்டது. அவளுக்கு மணித்தியாலத்துக்கு இவ்வளவு என்று சம்பளம். திருமண விருந்து, பிறந்ததின விருந்து போன்ற கொண்டாட்டங்களின்போது அவள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பாள். அவளுடைய மேலாளர் தவறுகளை அனுமதிப்பதில்லை. கறுப்பு ஸ்டொக்கிங்க்ஸ் அணிந்து, கைகளை ஒரு பறவை பறக்க ஆயத்தம் செய்வதுபோல விரித்து, தட்டு தட்டென்று அறையினுள் நிழையும்போது அவள் அளவு கன அடி காற்று வெளியேறிவிடும். இதைக் கண்டுபிடிப்பதற்கு ஆர்க்கிமெடிஸ் தேவையில்லை. அகதிப் பெண்ணே அதைச் செய்துவிடுவாள்.

திடீர் திடீரென்று மேலாளர் பரீட்சை வேறு வைப்பார்.

'இதற்கு என்ன பெயர்?'

'புட்டிங்.'

கரண்டியால் ஒரு துண்டை வெட்டி வாயிலே வைத்து சுவைப்பார்.

'இப்போது இதற்கு என்ன பெயர்?'

'எச்சில் உணவு.'

'இதை என்ன செய்யவேண்டும்?'

'குப்பையில் வீச வேண்டும்.'

அவள் பரீட்சையில் பாஸ்.

புத்தகத்தில் சொல்லப்பட்ட ரூல்கள் தவிர தனிப்பட்ட முறையில் அவளுக்கும் சில விதிகளை மேலாளர் உண்டாக்கியிருந்தார்.

விருந்தினர்களுடன் இன்முகமாய் இருக்கவேண்டும். அது அவளுக்கு தெரியும்.

விருந்தினர்கள் குறிப்பறிந்து அவர்களை திருப்திப் படுத்தவேண்டும். அது அவளுக்கு தெரியும்.

விருந்தினர்களுக்கு எரிச்சலூட்டும் காரியத்தை செய்யக்கூடாது. அது அவளுக்கு தெரியும்.

அகதிப் பெண்ணின் ஆங்கிலம் குறைபாடுள்ளது. ஆகவே விருந்தினர்களுடன் அவள் பேசுவதை தவிர்க்கவேண்டும். அவர்கள் ஏதாவது கேட்டால் புன்னகையை தாராளமாக செலவு செய்யலாம். இந்தக் கடைசி விதி அவசியமில்லாதது என்றே அவள் நினைத்தாள். வினைச்சொற்கள் இல்லாத வசனங்களை அவள் பேசும்போது அவை யாருக்குமே புரிவதில்லை.

பிரதம மேசைக்கு எதிர் மேசையில் இருந்த குடும்பம் வினோதமாக இருந்தது. தாய்போல தோற்றமளித்தவளுக்கு வயது 30 இருக்கலாம். தகப்பனுக்கு 50. மகனுக்கு 18, மகளுக்கு 8 என்று அவள் கணக்கு போட்டாள். அப்படியானால் அந்த மனைவி இரண்டாம் தாரமாக இருக்கலாம். மகன் முதல் தாரத்துக்கு பிறந்திருக்கவேண்டும். எல்லாம் ஒரு ஊகம்தான். ஊகிப்பதில் அவள் மிகவும் கெட்டிக்காரி.

அவர்களுடைய மேசை அவள் பொறுப்பில் இருந்தது. அது மிகவும் கலகலப்பனது. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஏதோ பேசி சிரித்து சத்தம்போட்டு மகிழ்ந்தார்கள். அவர்கள் பேசியது போலந்து மொழியாக இருக்கலாம். அதில் நிறைய மெய்யெழுத்துக்கள் கலந்து கிடந்தன, ஆனால் அவை பெயர்ச்சொற்களா, வினைச்சொற்களா என்பது தெரியவில்லை. ஒரு ஐம்பது வயது தகப்பனுக்கும், முப்பது வயது மனைவிக்கும், 18 வயது மகனுக்கும், 8 வயது மகளுக்கும் இடையில் பொதுவாக என்ன இருக்கும். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பரிசாரகிக்கும் சிரிப்பு தொற்றியது.

அப்பொழுதுதான் அவன் அவளைப் பார்த்தான். அவளை ஒருவருமே பார்ப்பதில்லை. இந்த பதினெட்டு வயது, சிவப்பு தலைமுடிக்காரன் அவளைப் பார்க்கிறான். அவன் கண்கள் துளைத்துவிடும்போல இருக்கின்றன. அந்த விருந்தில் கலந்துகொண்ட எத்தனையோ இளம் பெண்கள் அங்கே இருந்தார்கள். ஆனால் இவளையே அவன் பார்த்தான். விதிகள் என்ன சொல்கின்றன. மேலாளர் இதைப்பற்றி என்ன நினைப்பார். அவள் அந்தப் பார்வையை திருப்பித்தர முடியுமா? அவளுக்கு தெரியவில்லை. தன் வேலையை அவள் இன்னும் சிரத்தையுடன் கவனித்தாள்.

இதற்கு முன் என்றும் ஏற்பட்டிராத வகையில் அவள் மனதில் ஏதோ குறுகுறுவென்று ஒடியது. தன் தங்கையுடன் முகத்தை திருப்பி பேசிப் பேசி சிரித்தான் சிவப்பு முடிக்காரன். அந்த சிரிப்பின் மிச்சத்தை அவள் பக்கம் திரும்பி முடித்துக்கொண்டான். அவள் அவர்களுக்கு ஏதாவது பரிமாறப் போகும்போதெல்லாம் அவன் கண்கள் அவளைத் தொட்டு வாசல்வரை கொண்டுவந்து விடுவது வழக்கமானது.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவன் மடியிலிருந்த நாப்கின் மெதுவாக நழுவி கீழே விழுந்தது. அப்படி விழுவதற்கு அவன் விரல்கள் உதவிசெய்தன என்றே நினைக்கிறாள். அதற்கும் ஒரு விதி இருக்கிறது. அவள் நாப்கினை குனிந்து எடுத்து அவன் கையில் கொடுத்தாள். அவன் நன்றி என்று வாங்கிக்கொண்டான். அப்படிச் சொன்ன அதே நேரம் அவன் கைவிரல்கள் அவள் உள்ளங்கையை ஒருவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் அழுத்தின. நடுக்கம் வழக்கம்போல அடிக்காலில் இருந்து தொடங்கியது. ஒன்றுமே நடக்காததுபோல அவள் மறுபடியும் தன்னிடத்துக்கு நகர்ந்தாள். அவளைச் சுற்றியிருக்கும் காற்றைக் கலைத்துவிடக்கூடாது என்பதுபோல நின்றாள். மேசையில் பேசுவது கேட்கக்கூடாத தூரமாகவும், அவர்கள் பார்க்கக்கூடிய தூரமாகவும் அது இருந்தது. அது ரூல் 17.

இப்பொழுது நடனம் ஆரம்பமாகிவிட்டது. அவனுடைய தாயும் தகப்பனும் எழுந்து மேடைக்கு போய்விட்டார்கள். தாய் சுழன்று சுழன்று ஆடினாள். ஆடலறை முழுக்க அவள் நிறைந்து இருந்தாள். தகப்பன் ஆகக் குறைந்த அங்க அசைவுகளை வெளிப்படுத்தி தன் பங்கு நடனத்தை கச்சிதமாக நிறைவேற்றினார். அவன் தங்கை நாற்காலியை நகர்த்தி வைத்து நடனத்தையே கண் கொட்டாமல் பார்க்கத் தொடங்கினாள்.

திடீரென்று அவன் முகத்தில் புன்னகை தோன்றியது. கையை உயர்த்தி அவளை அழைத்தான். ரூல் 16. அவள் விரைந்து சென்று பணிவுடன் ஒரு குளவியின் இடைபோன்ற தன் இடையை கண் மதிக்கமுடியாத அளவுக்கு வளைத்து எஸ் என்றாள். அந்த வார்த்தை பேசுவதற்கு அவளுக்கு அனுமதி இருந்தது.

அவன் 'கொஃபி, டீ காஃப், டூ சுகர்' என்றான். அவன் அந்த வார்த்தைகளை சொன்னது, அவளுடைய பெயரை யாரோ கனிவுடன் உச்சரித்ததுபோல இனிமையாக இருந்தது. 'கொஃபி, டீகாஃப், டூ சுகர்' அவன் நாக்கில் தொடாமல் அந்த வார்த்தைகள் உருண்டு வந்து விழுந்தன.

அன்று விருந்து முடிவதற்கிடையில் அவன் மூன்றுதரம் கொஃபி ஓடர் பண்ணிவிட்டான். அவளுடைய கடமை அவன் கேட்டதை பரிமாறுவது. ரூல் 22. அவன் இன்னும் 20 தடவை கேட்டாலும் அவள் பரிமாறத் தயாராக இருந்தாள்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராக புறப்பட்டுப் போயினர். இவர்களும் விரைவில் போய்விடுவார்கள். அவனுடைய தாயார் கைப்பையை திறந்து ஏதோ சரிசெய்தபடி அதை தோள்மூட்டிலே மாட்டி தயாரானாள். இவன் தன் நாப்கினை எடுத்து நாலாக மடித்து தன் பிளேட்டின் மேல் அவளைப் பார்த்தபடியே வைத்தான். பிறகு கண்களால் சைகை காட்டினான்.

இவள் ஒரு விதியையும் மீறவில்லை. நிதானமாக எல்லா கோப்பைகளையும் ஒவ்வொன்றாக அகற்றினாள். அவன் முறை வந்தது. அவன் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுடைய பிளேட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள். நாப்கினை அகற்றியபோது கீழே ஐந்து டொலர் நோட்டு இருந்தது. பேனையால் நாப்கினில் ஒரு டெலிபோன் நம்பர் வேறு எழுதியிருந்தது. அவள் அந்த நம்பரை தன் உள்ளங்கையில் உடனேயே எழுதி வைத்தாள். அன்று இரண்டாம் முறையாக அவளுடைய உள்ளங்கை அவளுக்கு பயன்பட்டது.

அறைச் சிநேகைதியை காணவில்லை. கையை திருப்பி நம்பரைப் பார்த்தாள். அது இன்னும் அழியவில்லை. உரத்து அந்த இலக்கத்தை சொன்னாள். அந்த இலக்கம்கூட இனிமையாக ஒலித்தது. அவள் மனம் என்றும் இல்லாதவிதமாக அந்தரத்தில் உலாவியது. சிவப்பு முடிக்காரன் இப்பொழுது என்ன செய்வான். அவளை நினைப்பானா? அறை அமைதியாக இருந்தது. ஒருமுறை அவனை அழைத்தால் என்னவென்று தோன்றியது. அந்த நடுநிசியில் யாரும் பேச மாட்டார்கள் என்றே நினைத்தாள். ஆகவே ஒவ்வொரு தானமாக மெதுவாக டயல் பண்ணினாள்.

மறுமுனையில் இருந்து ஒரு குரல் உடனேயே ஒலித்தபோது இவளுக்கு புரிந்துவிட்டது அவன்தான் என்று. 'கொஃபி, டீ காஃப், டூ சுகர்' என்று உச்சரித்த அதே உருண்டையான குரல். ஆனால் அவளுடைய கைகள் நடுங்கின, வாய் நடுங்கியது. தொடைகள் நடுங்கின. உடனே அவள் டெலிபோனை திருப்பி வைத்துவிட்டாள். ஆனால் சரியாக ஒரு நிமிடத்தில் தொலைபேசி திரும்பவும் ஒலித்தது. கடைசியாக வந்த நம்பர் பட்டனை அவன் அமுக்கியிருக்கிறான். அவள் தொலைபேசியை எடுக்கவில்லை. சுருண்டுபோய் இருக்கும் ஒரு பாம்பை பார்ப்பதுபோல எட்டத்தில் நின்று அதைப் பார்த்தாள். அது அடித்துக்கொண்டே போனது. இறுதியில் அவனிடம் இருந்து வந்த ஒரு தகவலை டெலிபோன் சேமித்து வைத்துக்கொண்டது.

அவள் அந்த தகவலை ஓடவிட்டுக் கேட்டபோது பாதிதான் புரிந்தது. அவன் குரலில் தகவலை சரியான இடத்தில் விடுகிறோமோ என்ற தயக்கம் தெரிந்தது. யார் அழைத்தது என்ற ஊகமும் இருந்தது. அவளை திருப்பி அழைக்கும்படி மன்றாட்டமாகக் கேட்டிருந்தான்.

அவள் அவனை அழைக்கவில்லை. ஆனால் வேண்டியபோது அவனுடைய குரலை ஓடவிட்டுக் கேட்டாள். தினம் ஒரு சடங்குபோல அதைச் செய்து வந்தாள். அது எப்படியோ அவளுடைய அறைவாசிக்கு தெரிந்துவிட்டது. அவளுக்கு எரிச்சலைக்கூட உண்டாக்கியிருக்கலாம். ஒரு நாள் அவள் இல்லாத நேரம் பார்த்து அந்த அற்புதமான குரலை அறைவாசி அழித்துவிட்டாள். அகதிப் பெண் அன்று துடியாய் துடித்துப் போனாள்.

அவர்கள் வசித்த அறை ஒரு கூரை, ஒரு கதவு, ஒரு யன்னல் கொண்டது. அவளுடைய கட்டிலுக்கு பக்கத்தில் அவள் சிநேகிதியின் கட்டில் இருந்தது. கையை நீட்டினால் சிநேகிதி முகத்தில் அது இடிக்கும். ஆகவே அகதிப் பெண் சுவருடன் முட்டிக்கொண்டு படுப்பாள். இன்னும் பல இன்னல்கள் இருந்தன. தகரக் குழாய் குரல்காரன் அவளைப் பார்க்கும் விதம் அவளுக்கு பிடிக்கவில்லை. அவள் சிநேகிதி இல்லாத சமயங்களில் டெலிபோனில் கூப்பிட்டு சிநேகிதியைப் பற்றி விசாரிப்பான். அவள் இல்லையென்ற பிறகு தொலைபேசியை கீழே வைக்கவேண்டியதுதானே. அவன் செய்வதில்லை, ஒரு சம்பாசணையை உண்டாக்கப் பார்ப்பான்.

தோள்மூட்டுக்கு மேல் சூரியன் உயர எழும்பாத ஒரு பனிக்காலத்து பகல் வேளை. அவளுடைய அறைத் தோழியும், காதலனும் அவளுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அவள் எப்படி மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை. அவளை அன்றுடன் ஒரு வழி பார்த்துவிடவேண்டும் என்பதுபோல வருந்தி அழைத்தார்கள். சரி என்று அவளும் போனாள். அவளை இம்சிப்பதுதான் அந்த விருந்தின் முழு நோக்கமும் என்பது பின்னாலேதான் அவளுக்கு தெரிந்தது. மதிப்புக்காக கறுப்புக்கண்ணாடிகளை தங்கள் தங்கள் தலைகளில் குத்தி வைத்துக்கொண்டு காதலர்கள் இருவரும் அடிக்கடி கண் ஜாடையில் பேசினார்கள். திடீரென்று பெருங்குரலில் சிரித்தார்கள். அவளுக்கு புரியவில்லை. சிரிப்புக்கு காரணம் பல சமயங்களில் அவள்தானோ என்றும் தோன்றியது.

அவளுக்கு அது பிடிக்கவில்லை. தினம் ஒரு விருந்து என்று வெட்டி முறிகிறாள். அவளுக்கே ஒரு விருந்தா? ஆவு ஆவென்று அலுவலக மண்டபத்துக்கு அன்று வந்து சேர்ந்தபோது இன்னும் சில நிமிடங்களே இருந்தன. வழக்கத்தில் வேலை தொடங்க ஐந்து நிமிடம் முன்பாகவே வந்து சீருடை அணிந்து தயாராகிவிடுவாள். ரூல் 16. எந்த மண்டபத்துக்கு வேண்டுமானாலும் அவளை அவர்கள் அனுப்புவார்கள். ரூல் 18. அவளைப்போல பரிசாரகி வேலைகேட்டு வந்த சிலர் அங்கே காத்திருந்தார்கள். யாரையோ பழிவாங்கத் துடிப்பதுபோல அன்று பத்து மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாள். ஒரு நிமிடம்கூட உட்காரவில்லை. கால்கள் கெஞ்சின. கைகள் பாரமான தட்டங்களை தூக்கியபடி அலைந்து சோர்ந்தன. அது அவளுக்கு பழக்கமாகிப் போயிருந்தது.

நடுநிசி தாண்டியும் விருந்து முடிந்தபாடில்லை. அப்படியான வேளைகளில் மேலாளருக்கு கருணை பிரவாகம் எடுக்கும். ஐந்து நிமிடம் ஓய்வு தருவார். சாப்பாட்டுக் கூடத்துக்கும், விருந்து மண்டபத்துக்கும் இடையில் ஒரு சின்ன ஒடுக்கமான அறை. அங்கே சுழட்டி டயல் பண்ணும் கறுப்பு டெலிபோன் ஒன்று இருந்தது. அதைக் கடந்து போகும் போதெல்லாம் அவள் மனம் அலைபாய்ந்தது; திக்திக்கென்று அடித்தது. என்றும் இல்லாதவாறு அன்று அவளுக்கு அவன் நினவு வந்துகொண்டே இருந்தது.

பல வாரங்களுக்கு முன் முதல் தடவையாக அவனை அழைத்த பிறகு மேலும் மூன்று முறை அழைத்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் ஒரு முரட்டு ஆண்குரல் பேசியது. அவனுடைய தகப்பனாக இருக்கலாம். அவள் உடனே தொலைபேசியை வைத்துவிடுவாள். அன்று என்னவோ அவன் குரலை ஒரு முறையாவது கேட்கவேண்டும் என்று பட்டது. கையிலே இருந்த தட்டத்தை கீழே வைத்துவிட்டு டெலிபோனை சுழட்டி டயல் பண்ணினாள். விரல்கள் நடுங்கின. நெஞ்சு, இன்னும் சில கணங்களில் நின்றுவிடப்போகும் ஒரு குருவியின் இருதயம்போல, படபடவென்று அடித்தது.

அதிசயமாக அவன் குரல் கேட்டது. அவன்தான். அவளுக்கு சந்தேகமே இல்லை. உடனேயே உலகம் வரண்டுவிட்டது. வாயிலே சத்தம் வருவது நின்றுவிட்டது. அவன் ஹலோ ஹலோ என்று விடாமல் ஒலித்தான். என்ன பேசுவது? என்ன பேசுவது? எந்த வார்த்தையை சொல்வது, என்ன சுருதியில் ஆரம்பிப்பது, ஒன்றையுமே அவள் சிந்திக்கவில்லை. அவனுடைய குரலைக் கேட்டாலே போதும் என்று நினைத்திருந்தாள். அவன் மீண்டும் ஹலோ என்றான்.

'மொஸரல்லா சாலட்'

'லெட்டூஸ்'

'ப்ரூஸெட்'

'சுப்படீ வங்கோல'

'லாசன்யா'

அவளிடம் வினைச் சொற்கள் இல்லை. சில வாரங்களுக்கு முன்பு அவன் சாப்பிட்ட அத்தனை உணவு வகைகளையும் ஒப்பித்தாள். மறுபக்கத்தில் இருந்து சிரிப்புக்கு நடுவில் ஒரு சத்தம் கேட்டது. அத்துடன் பரிசாரகி டெலிபோனை துண்டித்து விட்டாள்.

இது நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அவள் படுக்கையில் கால்களை நீட்டி, ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, சிவப்பு முடிக்காரனின் முகத்தை ஞாபகத்துக்கு கொண்டுவர முயன்றாள். திடீரென்று அவளுடைய சிநேகிதி கதவைத் திறந்து பிரவேசித்தாள். அவள் கதவை அடித்துச் சாத்தும் சத்தத்திலும் பார்க்க திறக்கும் சத்தம் கூடுதலாக இருக்கும். இதை எப்படிச் சாதிக்கிறாள் என்பது தெரியவில்லை. நின்ற கோலத்தில் கால்களை உதறி சப்பாத்துகளை கழற்றினாள். கைப்பையை வீசி எறிந்தாள். அவள் உதடுகள் மேலும் கீழும் இமைகள் துடிப்பதுபோல அடித்தன, ஆனால் சத்தம் வரவில்லை.

அகதிப் பெண் வாயே திறக்கவில்லை. அப்போதுதான் விழித்ததுபோல மறுபக்கம் சுழன்று கழுத்தை இரண்டு பக்கமும் திருப்பி பார்த்தாள். மிக மட்டமான அறை; மட்டமான சிநேகிதி; மட்டமான போர்வை; மட்டமான மணம். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரு சுவரைக் காணக்கூடிய அந்த அறையில் அவள் கண்களை மூடிக்கொண்டு மீண்டும் அவனுடைய முகத்தை நினைவில் மீட்டாள். அவனுடைய சொண்டுகள் உருண்டு வார்த்தைகள் வழுக்கி விழுந்ததை எண்ணிப் பார்த்தாள்.

'கொஃபி, டீகாஃப், டூ சுகர்'

'கொஃபி, டீகாஃப், டூ சுகர்'

அப்படியே அவள் தூங்கிப்போனாள்.

டெலிபோன் சம்பாசணை வெட்டுப்பட்ட பிறகு அவன் சும்மா இருக்கவில்லை. விருந்தில் அவன் சாப்பிட்ட அத்தனை உணவு அயிட்டங்களையும் சொன்னது பரிசாரகி என்பதை ஊகிக்க அவனுக்கு சில நிமிடங்களே எடுத்தன. ஆனால் அவள் வேலை செய்யும் கம்பனியை கண்டு பிடிக்க கொஞ்ச அவகாசம் தேவைப்பட்டது. அந்தக் கம்பனி, தன் ஊழியர்களை எந்த விருந்து மண்டபத்துக்கு, எப்போது அனுப்புகிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது. ஆனாலும் அவன் முயற்சியைக் குறைக்கவில்லை. அடுக்கடுக்காக பல விருந்து மண்டபங்களுக்கு போய் அவளைத் தேடினான். அது ஒன்றும் அகதிப் பெண்ணுக்கு தெரியாது.

படிக்கட்டுகள் முடிவுக்கு வந்த உச்சிப் படியில் அவன் நின்றான். அகதிப் பெண் கீழே நின்றாள். அவன் இவளைப் பார்க்குமுன் இவள் அவனைப் பார்த்தாள். அவனும் இப்போது பார்த்துவிட்டான். அவனுடைய பார்வையில் போலந்திலிருந்து அவன் கொண்டுவந்திருந்த அத்தனை வார்த்தைகளும் இருந்தன. அவளுடைய பார்வையில் பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், இன்னும் இலக்கணத்தில் சொல்லப்பட்ட அத்தனை வகையான சொற்களும் இருந்தன. அவனுக்கு அவை எல்லாம் தேவைப்பட்டன.

அவள் தன் கையிலே வைத்திருந்த தட்டத்தை பச்சை, மஞ்சள், வெள்ளை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். சீருடையில் அவள் தேவதைபோல காட்சியளித்தாள். இரண்டு இரண்டு படியாக அவன் பாய்ந்து நெருங்கியபோது அவர்களுக்கிடையில் அந்த தட்டம் இடைஞ்சலாக இருந்ததைக் கண்டான். அவள் அதை இறுக்கிப் பிடித்திருந்தாள். அவன் கீழே பார்த்தான். அவள் இரண்டு கைகளாலும் காவிய தட்டத்தில் இன்னும் சில நிமிடங்களில் யாரோ சாப்பிட்டு முடிக்கப் போகும் உணவு வகை இருந்தது.

அவள் விதி 27 ஐயும், 32 ஐயும், 13 ஐயும் ஒரே சமயத்தில் முறித்தாள்.

********

நன்றி: அ.முத்துலிங்கம் தளம்

Apr 8, 2013

அமெரிக்கக்காரி - அ.முத்துலிங்கம்

ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணை தேடிப்போய்விட்டான். இது அவளுடைய மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்து தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.

பார்ப்பதற்கு அவள் அழகாகவே இருந்தாள். விசேஷமான அலங்காரங்A.Muthulingamகளோ, முக ஒப்பனைகளோ அவள் செய்வதில்லை. செய்வதற்கு நேரமும் இருக்காது. மற்ற மாணவிகளைப் போலத்தான் அவளும் உடுத்துகிறாள்; நடக்கிறாள். ஆனால் அவர்களைப்போல பேசுகிறாள் என்று சொல்லமுடியாது. இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்க பல்கலைக் கழக உதவிப் பணம்  பெற்று நேராகப் படிக்க வந்தவள். ஆகவே, அவளுடைய உச்சரிப்பில் மூக்கால் உண்டாக்கும் ஒலிகள் குறைவாகவே இருக்கும். அமெரிக்க மாணவர்களுக்கு புரியாத பல புதிய வார்த்தைகளும் இருந்தன. அவள் sweet என்பாள் அவர்கள் candy என்பார்கள்; அவள் lift என்பாள் அவர்கள் elevator என்பார்கள்; அவள் torch என்பாள் அவர்கள் flashlight என்பார்கள். அதுவெல்லாம் ஆரம்பத்திலேதான், ஆனால் வெகுவிரைவிலேயே அவள் தன்னை திருத்திக் கொண்டாள். அவளுடைய நுட்பமான அறிவை அவள் வேதியியல், கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களுக்கு மட்டும் பயன்படுத்துவதில்லை.

கறுப்பு எறும்புகள் நிரையாக வருவதுபோல பையன்கள் அவளை நோக்கி வந்தார்கள். அவளுடைய கரிய கூந்தலும், கறுத்து சுழலும் விழிகளும் அவர்களை இழுத்தன. ஆனால் வந்த வேகத்திலேயே அவர்கள் திரும்பினார்கள், அல்லது அவளை விட்டுவிட்டு வேறு பெண்களிடம் ஓடினார்கள். முதலில் வந்தவன் கேட்ட முதல் கேள்வியை நினைத்து அவள் இன்றைக்கும் ஆச்சரியப்படுவாள். 'யாரோ தேசியகீதம் இசைப்பதுபோல நீ எதற்காக எப்போதும் தலைகுனிந்து நிற்கிறாய்?' அவள் எப்படி பதில் சொல்வாள்? 17 வருடங்கள் அவள் அப்படித்தான் நிலத்தைப் பார்த்தபடி பள்ளிக்கூடத்துக்கு போனாள், வந்தாள். அதை திடீரென்று அவளால் மாற்ற முடியவில்லை. ஆனால் கேள்வி கேட்டவனை அவளுக்கு பிடித்துக்கொண்டது. அவளுடைய வகுப்பில் அவனும் சில பாடங்களை எடுத்தான். நடக்கும்போது அவனுக்கு அவளுடன் ஒட்டிக்கொண்டு நடந்துதான் பழக்கம்.

அன்று நடந்த கூடைப்பந்து போட்டியை பார்க்க அவளை அழைத்தான். அவளுக்கு அந்த விளையாட்டைப் பற்றிய ஞானம் இல்லை, கூடைக்குள் பந்தைப் போடவேண்டும் என்பது மட்டுமே தெரியும். தொடை தெரியும் கட்டையான பாவாடைகளும், நீளமான சிவப்பு காலுறைகளும் அணிந்த பெண்கள் உற்சாகமாக துள்ளி குதித்து ஆரவாரித்தார்கள்; சிலவேளைகளில் பந்தை கூடையில் போடாதபோதும்கூட கைதட்டினார்கள். இவளும் தட்டினாள். திரும்பும் வழியில் அவன் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தான். ஒரு துளி அவள் உதட்டிலே சிந்தியபோது அதை ஒரு விரலால் துடைத்துவிட்டான். மூன்றாவது நாள் அவளுடன் சேர்ந்து படிக்கவேண்டும் என்று அழைத்தான். அவனுடைய அறிவுக்கூர்மை அவளை திகைப்படைய வைத்தது. அவளைப்போல அவன் ஒன்றுமே மனப்பாடம் செய்யவில்லை. தர்க்கமுறையில் சிந்தித்து மிகச் சிக்கலான வேதியியல் சாமாந்திரங்களை உடனுக்குடன் எழுதினான். மூன்றாவது நாள் அவன் அறை நண்பன் இல்லையென்றும் அவளை அந்த இரவு தன் அறையில் வந்து தங்கும்படியும் கேட்டான். அவள் மறுத்த பிறகு அவனைக் காணவில்லை.

இரண்டாவதாக அவளைத் தேடி வந்தவன் துணிச்சல்காரன்; குறும்புகள் கூடியவன். அவளுக்கு பென்ஸீன் அணு அமைப்பு தெரியும், அவனுக்கு தெரியாது. அப்படித்தான் அவர்கள் நட்பு உண்டானது. ஒருநாள் அவள் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று உண்டாகி அவள் முன்னால் நின்றான். அவனுடைய நிழல் அவள்மேல் பட்டு அவள் நிமிர்ந்து பார்த்தபோது அவள் உட்கார்ந்திருந்த சுழல் கதிரையை சுழலவிட்டான். அது மூன்றுதரம் சுற்றிவிட்டு அவன் முன்னால் வந்து நின்றது. 'பார், எனக்கு பிரைஸ் விழுந்திருக்கிறது. நீ என்னுடன் கோப்பி குடிக்க வரவேண்டும்' என்றான். அவளுக்கு சிரிப்பு வந்தது, சம்மதித்தாள். கோப்பி குடிக்கும்போது 'நீ உங்கள் நாட்டு இளவரசியா?' என்றான். 'இல்லை. அங்கேயிருந்து துரத்தப்பட்டவள். இனிமேல்தான் நான் ஒரு நாட்டை தேடவேண்டும்' என்றாள். 'நீ அரசகுமாரி மாதிரி அழகாக இருக்கிறாய்' என்று சொன்னான் அந்த அவசரக்காரன். அன்றிரவே அவள் அறையில் தங்கமுடியுமா என்று கேட்டான். அதற்கு பிறகு அவனும் மறைந்துபோனான்.

இவர்கள் அவளிடம் எதையோ தேடினார்கள். அவள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் இன்னும் இலங்கைக்காரியாகவே இருந்தாள். அவள் அமெரிக்காவுக்கு வரமுன்னரே அவளுடைய கிராமத்தில் அவர்கள் அவளை 'அமெரிக்கக்காரி' என்று அழைத்தது இங்கே யாருக்கும் தெரியாது. அவளுடைய பெயரே அவளுக்கு மறந்துவிட்டது. வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும், வீதியிலும் அவளை 'அமெரிக்கக்காரி' என்றே அழைத்தார்கள். அவளுடைய இரு அண்ணன்மார்களிலும் பார்க்க அவள் புத்திசாலி என்று அம்மா சொல்வாள். அவளுக்கு நாலு வயது நடக்கும்போதே ஆங்கிலம் வாசிக்கக் கற்றுக்கொண்டாள். அவளுடைய அண்ணன்மார் கொண்டுவரும் அமெரிக்க கொமிக் புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டு அந்தக் கதைகளை தன் வகுப்பு தோழிகளுக்கு சொல்வாள். ஆர்க்கி, சுப்பர்மான் பாத்திரங்களாக மாறி தான் அமெரிக்காவில் வாழ்வதாகவே அவள் கற்பனை செய்வாள்.

சின்ன வயதிலேயே தாயாரிடம் கேட்பாள், 'நான் அமெரிக்கக்காரியா?' தாய் சொல்வார், 'இல்லை, நீ இலங்கைக்காரி.' 'அப்ப நான் எப்படி அமெரிக்கக்காரியாக முடியும்?' 'அது முடியாது.' 'நான் அமெரிக்காவுக்கு போனால் ஆகமுடியுமா?' 'இல்லை, அப்பவும் நீ இலங்கைக்காரிதான்.' 'நான் ஒரு அமெரிக்கனை மணமுடித்தால் என்னவாகும்?' 'நீ அமெரிக்கனை மணமுடித்த இலங்கைக்காரியாவாய். நீ என்ன செய்தாலும் அமெரிக்கக்காரியாக முடியாது.' அப்போது அவளுக்கு வயது பத்து. அவளுக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விடும்.

மூன்றாவதாக அவளைக் காதலித்தவன் கொஞ்சம் வசதி படைத்தவன். அவள் அப்போது இரண்டாவது வருட மாணவி. ஒரு வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது அவன் வந்து தானாகவே தன்னை அறிமுகம் செய்துகொண்டான். உடனேயே பல பெண்களின் கண்கள் அவளை பொறாமையோடு பார்த்தன. அவன் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னான். அவனுடைய பெற்றோர் போர்ட்லண்டில் வசித்தனர். அவனிடம் கார் இருந்தபடியால் ஒவ்வொரு வார முடிவிலும் அவர்களிடம் அவன் போய்வருவான்.

அவன் காரில் இருந்து இறங்குவது விசித்திரமாக இருக்கும். காரை நிறுத்திவிட்டு இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் தரையில் ஊன்றி எழுந்து நடந்துவருவான். நேற்று வகுப்பில் என்ன பாடம் நடந்தது, இன்று என்ன நடக்கிறது, நாளை என்ன நடக்கும் என்ற கவலையே அவனிடம் கிடையாது. பல்கலைக்கழகம் ஒரு விளையாட்டு மைதானம் என்பது அவன் எண்ணம். அவள் பின்னாலேயே அவன் திரிந்தான். ஒருநாள் அவளை கண்ணை மூடச்சொன்னான். அவன் ஏதாவது பரிசுப் பொருள் தரும்போது அப்படித்தான் செய்வான். அவள் மூடினாள். வாயை திற என்றான். ஏதோ சொக்லட்டோ இனிப்போ தரப்போகிறான் என்று நினைத்து வாயை திறந்தாள். அவளுடைய அம்மா மருந்து தரும்போதும் அப்படித்தான் திறப்பாள். அவன் குனிந்து அப்படியே திறந்த வாயில் முத்தம் கொடுத்துவிட்டான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. 'இது என்ன பெரிய விசயம். நான் உன் கையிலே முத்தம் கொடுத்திருக்கிறேன். உன் நெற்றியிலே முத்தம் தந்திருக்கிறேன். நெற்றியில் இருந்து இரண்டு அங்குலம் கீழே உன் வாய் இருக்கிறது. இது இரண்டு அங்குலத் தவறுதான்' என்றான்.

நன்றிகூறல் நாள் விருந்துக்கு தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தான். கடந்த வருடம் அவள் தன் சிநேகிதி வீட்டுக்கு போயிருந்தாள். நன்றிகூறல் நாளன்று விடுதியில் ஒருவருமே இருக்கமாட்டார்கள் என்பதால் அவள் சம்மதித்து, இரண்டு மணிநேரம் அவனுடன் காரில் பிரயாணம் செய்தாள். இதுதான் அமெரிக்காவில் அவளுடைய ஆக நீண்ட கார் பயணம்.

அவனுடைய பெற்றோர்கள் கண்ணியமானவர்கள். தகப்பன் நடுவயதாகத் தோன்றினாலும் தாயார் வயதுகூடித் தெரிந்தாள். மீன் வெட்டும் பலகைபோல அவள் முகத்தில் தாறுமாறாகக் கோடுகள். மகனின் சிநேகிதி இலங்கைக்காரி என்பதை எப்படியோ தெரிந்து வைத்துக்கொண்டு சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான இலங்கை செய்தி துணுக்குளை அவளுக்காக வெட்டி வைத்து அவளிடம் தந்தது அவள் மனதை தொட்டது. விருந்து மேசையிலே இலங்கைப் போரை பற்றியே பேச்சு நடந்தது. இந்திய ராணுவம் இலங்கையை ஆக்கிரமித்து இரண்டு வருடங்கள் அப்போது ஓடியிருந்தன. அவள் தன்னுடைய அம்மா மூன்று இடங்கள் மாறிவிட்டதால் அடிக்கடி கடிதம் எழுதும் விலாசத்தை தான் மாற்றவேண்டியிருக்கிறது என்று கூறினாள். தன்னுடைய அண்ணன்மார் இருவரும் ஒருவருடம் முன்பாக போரில் இறந்துபோனதை அவள் சொல்லவில்லை.

இரவானதும் சோபாவை இழுத்து கட்டிலாக்கி அதில் அவளை படுக்கச் சொல்லிவிட்டு அவன் மேலே போனான். அவள் அயர்ந்து தூங்கினாள். நடுச்சாமம் போல ஒரு மிருதுவான கை அவள் வாயை மெல்ல மூடியது. பார்த்தால் இவன் நிற்கிறான். அவளுக்கு பயம் பிடித்தது. உடல் வெடவெடவென்று நடுங்கி இரவு உள்ளாடை வேர்வையில் நனைந்துவிட்டது. அவனை துரத்திவிட்டாலும் மீதி இரவு அவள் தூங்கவில்லை. மறுநாள் அவனுடன் காரில் பிரயாணம் செய்தபோது இரண்டு மணி நேரத்தில் அவள் அவனுடன் இரண்டு வசனம் மட்டுமே பேசினாள்.

அவளுடைய பல்கலைக்கழக வாழ்வில் பெரும் மாற்றம் மூன்றாவது வருட முடிவில்தான் நிகழ்ந்தது. பல்கலாச்சார கலை நிகழ்வில் அவள் கலந்து கொள்ளாமல் இரண்டு வருடங்கள் கடத்திவிட்டாள். இம்முறை தப்ப முடியவில்லை. இலங்கையிலிருந்து வந்து படிக்கும் மாணவி அவள் ஒருத்திதான். 'பாரம்பரிய நடனம்' என்று தன் பெயரைக் கொடுத்தாள். அவளிடம் ஒரு சேலை இல்லை, நல்ல நடன ஆடைகூடக் கிடையாது. ஒரு பஞ்சாபிப் பெண்ணின் உடையை கடன் வாங்கி இயன்றளவு ஒப்பனை செய்து தயாரானாள். அவள் பள்ளிக்கூடத்தில் ஆடிய 'என்ன தவம் செய்தனை' பாடலுக்கு அபிநயம் பிடிப்பது என்று தீர்மானித்தாள். பாடலை முதலில் பாடி நாடாவில் பதிவு செய்து வைத்துக்கொண்டாள். மேடையிலே நின்றதும் திரை இரண்டு பாதியாக பிளந்து நகர்ந்தது. மெல்லிய நடுக்கம் பிடித்தாலும் துணிச்சலுடன் பாடலை விளக்கி இரண்டு வரிகள் பேசிவிட்டு ஆடினாள். மாணவர்கள் எதிர்பாராத விதத்தில் கைதட்டி வரவேற்றார்கள்.

அவளுடைய நாட்டியத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒரு வியட்நாமிய மாணவன் கம்பி வாத்தியத்தை இசைத்தபடி பாடினான். இவள் ஒப்பனையை கலைத்துவிட்டு வெளியே வந்தபோது அந்த வியட்நாமிய மாணவன் இவளுடைய நடனத்தை வெகுவாகப் பாராட்டினான். இவளும் பேச்சுக்கு அவனுடைய வாத்தியம் அபூர்வமானதாக இருந்தது என்றாள். அவன் 16 கம்பிகள் கொண்ட அந்த பெண்கள் வாத்தியத்தை தன்னுடைய இறந்துபோன வியட்நாமிய அம்மாவிடம் கற்றுக்கொண்டதாகக் கூறினான். எப்போதாவது அவள் ஞாபகமாக தான் அதை வாசிப்பதாகச் சொன்னான். ஆயிரம் கண்ணாடிகள் வைத்து இழைத்த நீண்ட உடை தரித்து, தலையிலே வட்டமான தொப்பி அணிந்த அவனை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. பேசும்போது அவளுடைய ஆயிரம் பிம்பங்கள் அவனில் தெரிந்தன. இறுதி ஆண்டில் ஆங்கில இலக்கியம் படிக்கும் அவனுடைய பெயர் லான்ஹங் என்றான்.

அடுத்தநாள் காலை லான்ஹங் 27,000 மாணவர்கள் படிக்கும் அந்த பல்கலைக் கழகத்தில் அவளை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிட்டான். 'உங்கள் பெயரை நீங்கள் நேற்று சொல்லவே இல்லை?' என்றான். அவள் மதி என்றாள். அவளுடைய குடும்பப் பெயர் என்னவென்று கேட்டான். இந்த மூன்று வருடங்களில் ஒருவர்கூட அவளிடம் குடும்பப் பெயர் கேட்டதில்லை. அவளுக்கு சிரிப்பு வந்தது. 'என்னுடைய குடும்பப் பெயர் மிகவும் நீண்டது. அதை நீ மனனம் செய்வதற்கு அரை நாள் எடுக்கும்' என்றாள். 'அப்படியா, மதி என்றால் உங்கள் மொழியில் என்ன பொருள்?' அவள் 'புத்தி' 'சந்திரன்' என இரண்டு பொருள் இருப்பதாகச் சொன்னாள். 'வியட்நாமியருக்கு சந்திரன் பவித்திரமானது. அவர்கள் விழாக்களில் சந்திரனுக்கு முக்கிய பங்கு உண்டு' என்றவன் தொடர்ந்து 'நேற்று உங்கள் நடனம் மிக அழகாக இருந்தது. வியட்நாமிய நடன அசைவுகளுடன் ஒத்துப்போனது' என்றான். 'அப்படியா? நன்றி' என்றாள். 'தவழ்வதுபோல அபிநயம் பிடித்தீர்களே, அது என்ன?' இவன் பேசும் சந்தர்ப்பத்தை நீட்டுவதற்காக கேட்கிறானா அல்லது உண்மையான கேள்வியா என்பதில் அவளுக்கு சந்தேகம் இருந்தது.

'கண்ணனை உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாயே' என்ற வரிகளை விளக்கிக் கூறினாள். அவன் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவன். இவள் அர்த்தம் சொன்னதும் அப்படியா என்று கேட்டுவிட்டு 'அந்த தாய் உண்மையில் அமெரிக்காவில் பிறக்காததால் அதிர்ஷ்டம் செய்தவள்தான். மூன்று வயது பாலகனை உரலில் கட்டி வைத்தால் அந்த தாயை சிசுவதை சட்டத்தின் கீழ் அமெரிக்காவில் கைதுசெய்து சிறையில் அடைத்து விடுவார்கள்' என்று சொல்லிவிட்டு பெரிய பற்களைக் காட்டி சிரித்தான். அவளும் நிறுத்தாமல் சிரித்தாள். அவள் கண்களை அவன் அதிசயமாக முதன்முறை பார்ப்பதுபோல பார்த்தான். அவள் வாய் சிரிக்க ஆரம்பிக்க முன்னரே அவள் கண் இமைகள் சிரித்ததை அன்று முழுவதும் அவனால் மறக்க முடியாமல் இருந்தது.

இப்படி அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். மூன்றாவது, நாலாவது சந்திப்புக்கு பின்னரும் அவன் அவளுடைய அறையில் வந்து இரவு தங்கவேண்டும் என்று கேட்காதது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளுக்கு அது பிடித்துக்கொண்டது. அவனுடன் இருக்கும்போது அவள் இயல்பாக உணர்ந்தது ஏனென்று தெரியவில்லை. அவனுடன் சேர்ந்து வெளியே நடக்கும்போதோ, உட்காரும்போதோ, பேசும்போதோ முயற்சி எடுக்கத் தேவையில்லை. அவனை மகிழ்ச்சிப் படுத்த அவள் வேறு எதுவித முயற்சியும் செய்யத் தேவையில்லை. ஏனோ அவள் இருதயம் அவன் அண்மையில் வித்தியாசமாகத் துடித்தது.

ஒவ்வொரு மாதமும் அவள் தாயாருக்கு கடிதம் எழுதுவாள். தாயார் இருக்கும் இடத்தில் டெலிபோன் வசதி கிடையாது என்றபடியால் அவள் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வெளிக்கிட்டு பட்டணத்துக்கு போய் அங்கிருந்து அழைத்து மூன்று நிமிடம் மகளுடன் பேசுவாள். சரியாக மாலை ஆறு மணிக்கு அந்த அழைப்பு வரும். தாயார் எழுதும் நீல நிற வான்கடிதங்களும் தவறாமல் வந்தன. ஒரு கடிதத்திலாவது அவள் தன் கஷ்டங்களை சொன்னதில்லை. அந்த மாதம் ராணுவம் கொக்கட்டி சோலையில் நிறையப் பேரைக் கொன்று குவித்திருந்தது. அவள் அதுபற்றி மூச்சுவிடவில்லை. மாதக்கடைசியில் தன் பதில் கடிதத்தை எழுதி மதி இப்படி முடித்திருந்தாள். 'அம்மா நான் உன் மகளாய்ப் பிறந்து உனக்கு ஒன்றுமே செய்யவில்லை. உனக்கு பிடித்த ஒன்றைக்கூட வாங்கித் தரவில்லை. நேற்று குளிருக்கு ஒரு சப்பாத்து வாங்கினேன். அதன் விலை நாப்பது டொலர். அந்தக் காசை உனக்கு அனுப்பினால் அது உனக்கு மூன்று மாத குடும்பச் செலவுக்கு போதுமானதாக இருக்கும். நான் அங்கேதான் அமெரிக்கக்காரி, இங்கே வெறும் இலங்கைக்காரிதான். எனக்கு விநோதமான பெயர் கொண்ட நண்பன் ஒருவன் கிடைத்திருக்கிறான். லான்ஹங். டெலிபோன் புத்தகத்தில் அவன் பெயர் ஒன்றேயொன்றுதான் உண்டு. மிக நல்லவன். நான் உன்னை திரும்பவும் பார்க்கவேண்டும். அதற்கிடையில் செத்துப்போகாதே.'

லான்ஹங் அடிக்கடி சொல்லும் வார்த்தை 'என்னை ஆச்சரியப் படுத்து.' இரவு நேரத்தில் இருவரும் உணவருந்த சேர்ந்து போவார்கள். இவள் என்ன ஓடர் கொடுக்கலாம் என்று கேட்பாள். அவன் 'என்னை ஆச்சரியப்படுத்து' என்பான். சினிமாவுக்கு போவார்கள். 'என்ன படம் பார்க்கலாம்?' என்பாள் இவள். அவன் 'என்னை ஆச்சரியப்படுத்து' என்பான்.

ஒருமுறை லான்ஹங் அவளைத் தேடி வந்தபோது அவள் பார்க்காததுபோல கம்புயூட்டரில் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள். அவன் அவள் தட்டச்சு செய்வதையே வெகு நேரம் உற்றுப் பார்த்தான். அவளுடைய விரல்கள் மெலிந்த சிறிய விரல்கள். அவை வேகவேகமாக விசைப்பலகையில் விளையாடுவதை பார்த்தான். அவளுடைய விரல் ஒரு விசையை தொடும்போது அந்த விசையில் மீதி இடம் நிறைய இருப்பதாகச் சொன்னான். அப்படிச் சொல்லியபடி ஒரு விரலை எடுத்து கையில் வைத்து தடவினான். இவளுக்கு என்ன தோன்றியதோ எழுந்து நின்று பற்கள் நிறைந்த அவன் வாயில் முத்தமிட்டாள்.

மழை பெய்து ஓய்ந்த மாலை நேரம் ஒரு பேர்ச் மரத்து நிழலில் அமர்ந்து அவள் தாயாரை நினைத்துக்கொண்டாள். தாயார் காலையில் பள்ளிக்கூடத்துக்கு படிப்பிக்கச் செல்லும்போது சேலையை வரிந்து உடுத்தி, கொண்டைபோட்டு, அதற்குமேல் மயிர் வலை மாட்டி, குடையை எடுத்துக்கொண்டு போகும் காட்சி மனதில் வந்தது. இப்போது அங்கேயும் மழை பெய்திருக்குமா என்று எண்ணிக் கொண்டிருந்த சமயம் லான்ஹங் ஈரமான மண்ணில் சப்பாத்து உறிஞ்சி சப்தமெழுப்ப நடந்துவந்தான். குட்டையில் தேங்கிய தண்ணீரை கண்டதும் ஒரு பழங்காலத்து போர்வீரன் போல துள்ளிப்பாய்ந்து அவள் முன் வந்து குதித்தான். 'இந்தச் சின்னக் குட்டைக்கு இவ்வளவு பெரிய பாய்ச்சலா?' என்றாள் மதி. அவள், உடலை ஒட்டிப்பிடிக்கும் கண்ணாடித்தன்மையான ஆடையில் வசீகரமாக காட்சியளித்தாள். அவன் அவளை குனிந்து ஸ்பரிசித்துவிட்டு 'இன்றைக்கு உன் சருமம் இறகு போன்ற உன் ஆடையிலும் பார்க்க மிருதுவாக இருக்கிறது' என்றான். 'அது இருக்கட்டும். என்னால் இன்று உன்னை ஆச்சரியப்படுத்த முடியாது. ஒரு மாற்றத்துக்கு நீ என்னை ஆச்சரியப்படுத்து' என்றாள்.

'இன்று ஆங்கில இலக்கியத்தில் என்ன படித்தேன் தெரியுமா?'
'எனக்கு தெரியாது, நீ சொல்' என்றாள் அவள். 'ரஸ்ய எழுத்தாளர் ரோல்ஸ்ரோயுக்கு பதின்மூன்று பிள்ளைகள். அது உனக்கு தெரியுமா?'
'இல்லை. இப்பொழுதுதான் தெரியும். மேலே சொல்.'
'பதின்மூன்றாவது பிள்ளை ஒரு பையன். அந்தச் சிறுவன் இறந்தபோது ரோல்ஸ்ரோய் என்ன செய்தார் தெரியுமா? சைக்கிள் விடப் பழகிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு வயது அறுபது.'
'இதை ஏன் எனக்கு சொல்கிறாய்?'
'நீ ஆச்சரியப்படுத்து என்று சொன்னாயே, அதுதான்.'
அவள் மெதுவாக முறுவலிக்க ஆயத்தமானாள்.
'பார், பார் உன் இமைகள் சிரிக்கத் தொடங்குகின்றன.'

அவள் முனைவர் படிப்பை தொடங்கியபோது அவன் பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஆசிரிய வேலையை ஏற்றுக்கொண்டான். அவன் ஓர் அறை கொண்ட சின்ன வீட்டை வாடகைக்கு பிடித்தபோது அதிலே இருவரும் சேர்ந்து வாழ்வதென்று தீர்மானித்தார்கள். அவள் தன்னிடம் இருந்த கட்டிலையும் மேசையையும் மற்றும் உடமைகளையும் எடுத்துக்கொண்டு அவனுடைய வீட்டுக்கு மாறினாள். அவளுடைய கட்டிலை அவனுடைய கட்டிலுக்கு பக்கத்தில் போட்டபோது அது உயரம் குறைவாக இருந்தது. 'ஆணின் இடம் எப்பவும் உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்' என்றான் அவன். முதலில் பதிவுத் திருமணம் செய்து, அதற்குப் பிறகு அவளுடைய அம்மா அனுப்பிய தாலியை சங்கிலியில் கோத்து அவளுடைய கழுத்தில் அவன் கட்டினான். 'வியட்நாமிய சடங்கு இல்லையா?' என்றாள் அவள். முழுச்சந்திரன் வெளிப்பட்ட ஓர் இரவில் சந்திரனில் தோன்றிய கிழவனை சாட்சியாக வைத்துக்கொண்டு அவன் இஞ்சியை உப்பிலே தோய்த்து கடித்து சாப்பிட்டான். மீதியை அவள் கடித்து சாப்பிட்டாள். அத்துடன் அவர்களுடைய திருமண வாழ்க்கை சந்திரக் கிழவனின் ஆசியுடன் சிறப்பாகத் தொடங்கியது.

மணமுடித்த நாளிலிருந்து அவள் தலையணை பாவிப்பதில்லை, சற்று உயரத்தில் படுத்திருக்கும் அவனுடைய ஒரு புஜத்தில் தலையை வைத்து படுக்க பழகிக்கொண்டாள். லான்ஹங் ஆசிரியத் தொழிலுடன் வீட்டு வேலைகளையும் கவனித்தான். அவன் ஓர் அருமையான கணவன். ஆனால் வீட்டைச் சுத்தமாக வைக்கத்தான் அவனால் எப்படி முயன்றும் முடியவில்லை. இப்படியும் ஒரு பெண் படிப்பாளா என்று ஆச்சரியப்படுவான். அவளுடைய ஆராய்ச்சி நூல்களும், நோட்டுப் புத்தகங்களும், குறிப்பெழுதும் காகிதங்களும் படுக்கையில் கிடக்கும், சமையலறையில் கிடக்கும், பாத்ரூமில் கிடக்கும், படிப்பு மேசையில் கிடக்கும். எப்படித்தான் இவளால் படிக்கமுடிகிறதென்று ஓயாமல் வியப்பான். இரண்டு மணி நேரமாக வீட்டை துப்புரவு செய்து, சாமான்களை ஒழுங்குபடுத்தி அவன் நிமிர்ந்த இரண்டு நிமிடத்திற்கிடையில் அவள் வீட்டை மறுபடியும் நிறைத்துவிடுவாள்.

முனைவர் படிப்புக்கு அவள் நீண்ட நேரம் பரிசோதனைக்கூடத்தில் கழிக்கவேண்டியிருந்தது. சிலநாட்களில் இருபது மணிநேரம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தாள். ஆனாலும் தாயாருக்கு மாதம் தவறாமல் கடிதம் எழுதுவாள். 'அம்மா உனக்கு ஒரு விசயம் தெரியுமா? நான் உன் வயிற்றில் கருவாக உதித்தபோது என் வயிற்றில் ஏற்கனவே கருக்கள் இருந்தன. அப்படி எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அது உனக்குள்ளே இருந்து வந்ததுதான்.'

ஒரு சனிக்கிழமை மதியம் பரிசோதனைக்கூடத்துக்கு அவள் போகவில்லை. அவள் ஆராய்ச்சியை முடித்து ஆய்வுக்கட்டுரையை பூர்த்திசெய்யும் தறுவாயில் இருந்தாள். படுக்கையறைக்கு வந்த லான்ஹங் அப்படியே அசைவற்று நின்றான். படுக்கையில் நாலு பக்கமும் நூல்கள் இறைந்து கிடந்தன. காலை உணவு எச்சில் பிளேட் அகற்றப்படவில்லை. பாதி குடித்த கோப்பி குவளையை மடியில் வைத்துக்கொண்டு அவள் குறிப்பேட்டில் குனிந்து எழுதிக்கொண்டிருந்தாள். லான்ஹங் புத்தகங்களை தள்ளி படுக்கையில் இடம் உண்டாக்கி அதிலே அமர்ந்து அவள் கைகளைப் பிடித்தான். 'இந்த உலகத்தில் ஆகச்சிறந்த மாணவி நீதான். அதில் சந்தேகமில்லை. எங்களுக்கு மணமாகி நாலு வருடங்களாகியும் பிள்ளை இல்லை. அதையும் நீ யோசிக்கவேண்டும். நாங்கள் ஒரு மருத்துவரை பார்க்கலாம்' என்றான். அவள் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். இதற்குமுன் அவள் பார்த்திராத அவனுடைய இரண்டு கன்ன எலும்புகளும் இப்பொழுது துல்லியமாகத் தள்ளிக்கொண்டு தெரிந்தன.

மருத்துவர் இருவரையும் நீண்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவர் கண்டடைந்த முடிவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 'என்னை ஆச்சரியப்படுத்து, என்னை ஆச்சரியப்படுத்து' என்று அடிக்கடி கூறும் அவள் கணவன் உச்சமான ஆச்சரியத்தை பரிசோதனை முடிவுகள் வெளியான அன்று அடைந்தான். மருத்துவர் பரிசோதனை முடிவுகளை எடுத்துவர உள்ளேபோனார். அவருடைய சப்பாத்து ஓசை குறையக் குறைய இவர்களுடைய இருதயம் அடிக்கும் ஒலி கூடிக்கொண்டுபோனது. குழந்தை உண்டாக வேண்டுமென்றால் ஓர் ஆணுக்கு மில்லிலிட்டர் ஒன்றுக்கு இரண்டு கோடி உயிரணுக்கள் உற்பத்தியாக்கும் தகுதி இருக்கவேண்டும். அவனுக்கு அதில் பாதிகூட இல்லை. அவளுக்கு அவன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்.

அவ்வளவு நாளும் ஒரு குழந்தை இருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைத்திருந்த இருவருக்கும் எப்படியும் ஒரு குழந்தையை பெற்றெடுக்கவேண்டும் என்ற வெறி உண்டானது. மதியின் தயாருடைய கடிதங்கள் 'நீ கர்ப்பமாகிவிட்டாயா' என்று கேட்டு வரத் தொடங்கியிருந்தன. வழக்கம்போல அவனுக்கு வலது பக்கத்தில் படுத்திருந்த அவளிடம், 'ஏ, இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணமுடித்தாய்?' என்றான். 'பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.' அவள் வாய் சிரித்தாலும் முகத்தில் துக்கம் தாளமுடியாமல் இருந்தது. 'இங்கே என்னைப் பார். அஞ்சல் நிலையத்து சங்கிலியில் பேனாவை கட்டிவைப்பதுபோல நான் உன்னை கட்டி வைக்கவில்லை. நான் வேண்டுமானால் விலகிக்கொள்கிறேன். நீ யாரையாவது மணமுடித்து பிள்ளை பெற்றுக்கொள்' என்றான். அவள் ஒன்றுமே பேசாமல் அவனுடைய கட்டிலில் துள்ளி ஏறி அவனுடைய புஜத்தை இழுத்துவைத்து அதன்மேல் இன்னும்கூட தலையை அழுத்தி படுத்துக்கொண்டாள்.

அன்று காலையிலிருந்து தொலைக்காட்சியின் எந்த சானலைத் திருப்பினாலும் அதில் கிளிண்டன் - மோனிகா விவகாரமே விவாதிக்கப்பட்டது. ரேடியோவிலும் அதையே சொன்னார்கள். பத்திரிகைகளும் பக்கம் பக்கமாகப் புலம்பின. ஒன்றிலுமே அவளுக்கு மனது லயிக்கவில்லை. மாலையானதும் அவள் தன்னறையில் உட்கார்ந்து யன்னல் வழியாக ரோட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆய்வுக்கட்டுரையை மூன்றுநாள் முன்னர் சமர்ப்பித்துவிட்டதால், கொடிக்கயிற்றில் மறந்துபோய் விட்ட கடைசி உடுப்புபோல அவள் மனம் ஆடிக்கொண்டிருந்தது. ஒரு பொலீஸ் கார் சைரன் சத்தம்போட வேகமாக கடந்து சென்றது. ஒரு நாளில் அவ்வளவு நேரத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை. திடீரென்று ரோட்டிலே காலடி ஓசைகள் கேட்கத்தொடங்கின. பாஸ்கட்போல் போட்டி முடிந்து மாணவர்களும், மாணவிகளும் கூட்டம் கூட்டமாக நகர்ந்தனர். ஒரு பெண்ணை ஒருவன் தோளின்மேல் தூக்கிவைத்து நடந்தான். எல்லோருமே மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். அதிலே யார் தோற்றவர், யார் வென்றவர் என்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளே சமையலறையில் லான்ஹங் பாத்திரங்கள் சத்தம் எழுப்ப அவளுக்காக வியட்நாமிய சூப் தயாரித்துக்கொண்டிருந்தான். அதன் மணம் சமையலறையைக் கடந்து, இருக்கும் அறையைக் கடந்து அவளிடம் வந்தது. நீண்ட ஆடையின் நுனியில் சூப் கோப்பையை வைத்து தூக்கிக்கொண்டு லான்ஹங் வந்தபோது அவள் நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிவிட்டாள்.

அடுத்த நாள் காலை இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவர்கள் வீடு வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த அத்தனை பணத்தையும் கொடுத்து IVF கருத் தரிக்கும் முறையை பரிசோதிப்பது என தீர்மானித்தார்கள். அவனுடைய பள்ளிக்கூடத்தில் படிப்பித்த ஓர் ஆப்பிரிக்க ஆசிரியர் தன்னுடைய உயிரணுக்களை தானம் செய்ய முன்வந்தார். மருத்துவர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டார்கள். நிறைய சட்டதிட்டங்கள் இருந்ததால் மூவரும் பலவிதமான பாரங்களில் கையொப்பமிட வேண்டியிருந்தது. ஆறு மாதகாலமாக அவளை தயார் செய்தார்கள். 28 ஹோர்மோன் ஊசிகள் நாளுக்கு ஒன்று என்ற முறையில் செலுத்தி, அவளுடைய மாத விலக்கு முடிந்த மூன்றாம் நாள் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கிய கருவை அவள் உள்ளே செலுத்தினார்கள். பத்து நாள் கழித்து மருத்துவ மனையில் போய் சோதித்துப் பார்த்தபோது அவள் கர்ப்பமாகியிருப்பது உறுதியானது. அன்றே தாயாருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டாள். 'நான் கர்ப்பமாயிருக்கிறேன். உனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பிறந்த செய்தி விரைவில் வரும். காத்திரு.'

அவளுக்கு பல சந்தேகங்கள் இருந்தன. மருத்துவ பரிசோதனைகள் நடத்திய பெண்ணிடம் தன் பிரச்சினைகளை சொன்னாள். ஒருநாள் கேட்டாள், 'ஓர் இலங்கைப் பெண்ணுக்கும், வியட்நாமிய ஆணுக்குமிடையில் ஆப்பிரிக்க கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாக பிறக்கும்?' அதற்கு அந்தப் பெண் ஒரு வினாடிகூட தாமதிக்காமல் 'அமெரிக்கனாக இருக்கும்' என்றாள். சரியாக 280 நாட்களில் அவளுக்கு அழகான குழந்தை பிறந்தது. சுகமான மகப்பேறு. அவள் தன்னுடன் கொண்டுவந்திருந்த கைப்பையில் தயாராக வைத்திருந்த பேப்பரையும் பேனாவையும் எடுத்து தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினாள். 'எனக்கு ஒரு அமெரிக்க பிள்ளை பிறந்திருக்கு.' ஒரேயொரு வசனம்தான். அந்தக் கடிதத்தை உடனேயே அனுப்பிவிடும்படி கணவனிடம் கொடுத்தாள். வடகிழக்கு மூலையில் தபால்தலை ஒட்டிய அந்தக் கடிதம், வீதி பெயரில்லாத, வீட்டு நம்பர் இல்லாத அவளுடைய தாயாரிடம் எப்படியோ போய்ச் சேரும். அவள் தாயார் அந்தக் கடிதத்தை அமெரிக்க தபால்தலை தெரியக்கூடியதாக மற்றவர்கள் காணத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அன்று முழுக்க கிராமத்தில் அலைவாள்.

இருபது நாள் கழித்து மாலை சரியாக ஆறு மணிக்கு அவள் தாயாரிடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. அது அவள் எதிர்பார்த்ததுதான். அந்த டெலிபோன் செய்வதற்காக அவளுடைய அம்மா அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பியிருப்பாள். ஆறுமணிக்கு முதல் பஸ்சை பிடித்து பட்டணத்துக்கு போய் டெலிபோன் நிலையத்துக்கு முன் காத்திருந்து, கதவு திறந்தபோது முதல் ஆளாக உள்ளே நுழைந்திருப்பாள். அங்கே அப்போது காலை ஏழு மணியாக இருக்கும்.

இருபது நாள் வயதான குழந்தை அவள் மடியிலே கிடந்தது. அம்மாவின் குரல் கேட்டது. 'மகளே, என்ன குழந்தை, நீ அதை எழுதவில்லையே?'
'பொம்பிளைப் பிள்ளை, அம்மா, பொம்பிளைப் பிள்ளை.'
'அம்மா, அவள் அழுகிறாள், சத்தம் கேட்குதா?' குழந்தையை தூக்கி டெலிபோனுக்கு கிட்டப் பிடித்தாள். 'மகளே, குழந்தைக்கு என்ன பேர் வைத்தாய்?' அவளுக்கு அம்மாவின் குரல் கேட்கவில்லை, அவளுடைய சுவாசப்பை சத்தம்தான் கேட்டது.
'அம்மா, அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி. நீ அவளை பார்க்கவேணும். அதற்கிடையில் செத்துப்போகாதே.'

இருவரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். அவர்கள் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன. அவள் மடியிலே கிடந்த குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள்.

'என் அறையில் வந்து தூங்கு' என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் 'என்ன தவம் செய்தனை' பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல் இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.

*********

Feb 6, 2013

புவியீர்ப்புக் கட்டணம் - அ.முத்துலிங்கம்

கடிதத்தை உடைக்கும்போதே அவனுக்கு கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்பு கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே கட்டவேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்த தொல்லை. அதற்கு முன் இப்படி விபரீதமான ஒரு துறை - புவியீர்ப்பு துறை - உண்டாகியிருக்கவில்லை. amuthu

'அம்மையே!'

'சொல்லுங்கள், நான் உங்களுக்கு இன்று எப்படி உதவலாம்?' 

'புவியீர்ப்பு கட்டணத்தை கட்டும்படி மீண்டும் நினைவூட்டல் கடிதம் வந்திருக்கிறது.'

'நீங்கள் யார் பேசுவது?'

'நான் 14 லோரன்ஸ் வீதியிலிருந்து பேசுகிறேன்.'

'சரி, உங்களுக்கு என்ன பிரச்சினை?'

'இந்தக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. இன்னொருமுறை பரிசீலிக்கமுடியுமா?'

'இதோ கணினியில் உங்கள் கணக்கை திறந்திருக்கிறேன். சென்றமாதமும் உங்களோடு பேசியிருக்கிறேனே. அதற்கு முதல் மாதமும் இதே கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக பணம் கட்டி வந்த உங்களுக்கு திடீரென்று என்ன நடந்தது?'

'என்னுடைய நிதிநிலைமை மோசமாகிவிட்டது.'

'அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும்? எங்கள் துறையின் விதிமுறைகள் அடங்கிய கையேட்டை உங்களுக்கு அனுப்பியிருந்தோமே. அதன் பிரகாரம்தான் கட்டணம் அமைத்திருக்கிறோம்.'

'அம்மையே, உங்கள் கையேடு மிகவும் பாரமாக உள்ளது. எழுத்துக்கள் எறும்புருவில் படித்து முடிப்பதற்கிடையில் ஓடிவிடுகின்றன. உங்கள் கட்டண அமைப்பும் ஒன்றுமே புரியவில்லை. மிக அநியாயமாக இருக்கிறது.'

'புரியாதது எப்படி அநியாயமாகும்? நீங்கள் தண்ணீருக்கு கட்டணம் செலுத்துகிறீர்கள். மின்சாரக் கட்டணம், சமையல்வாயு கட்டணம், சூரியஒளி வரி, காற்றுத்தூய்மை வரி என்று சகலதும் கட்டுகிறீர்கள். தொலைக்காட்சி, தொலைபேசி, செல்பேசி எல்லாம் பட்டுபட்டென்று தீர்த்துவிடுகிறீர்கள். இதிலே மாத்திரம் என்ன குறை கண்டீர்கள்?'

'அம்மையே, புவியீர்ப்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஆதியிலிருந்து அது இருந்துகொண்டுதானே இருக்கிறது. நியூட்டன் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர்கூட இருந்திருக்கிறது என்று சொல்கிறார்களே. இவ்வளவு நாளும் அதற்கு வரி விதிக்கவில்லை. இப்பொழுது இரண்டு வருடங்களாக அதற்கும் வரி கட்டவேண்டுமென்றால், எப்படி?'

'ஐயா, நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கேள்வியை இரண்டு வருடத்திற்கு முன்னரே கேட்க உங்களுக்கு தோன்றவில்லை? தண்ணீரை உங்கள் வீட்டுக்கு கொண்டுவருகிறோம். காற்றை தூய்மையாக்கி சுவாசிக்க வழங்குகிறோம். கூரையிலே விழும் சூரிய ஒளியில் உங்கள் சாதனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கிறோம். சமையலுக்கு வாயு தருகிறோம், மின்சாரம் தருகிறோம். எல்லாவித கட்டணமும் கட்டிவிடுகிறீர்கள். ஆனால் புவியீர்ப்புக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். யோசித்து பாருங்கள், புவியீர்ப்பு இல்லாமல் உங்களால் ஒரு நிமிடம்கூட வாழ முடியுமா? கார் ஓட்ட முடியுமா? நடக்க முடியுமா? உங்கள் பிள்ளைகள் ஓடியாடி விளையாடமுடியுமா? ஒன்றுக்குப் போவதுபோல ஒரு சின்னக் காரியம்கூட உங்களால் செய்யமுடியாதே?'

'அம்மையே, என்னுடைய சுண்டெலி மூளையில் இவையெல்லாம் புரிய தாமதமாகிறது. ஆனால் உங்கள் துறை என்ன செய்கிறது? புவியீர்ப்பை சுத்தம் செய்கிறதா அல்லது வீடு வீடாய் கொண்டுபோய் அதை இறக்குகிறதா? இது மிகப் பெரிய அநியாயமாகப் படவில்லையா?'

'அமெரிக்காவில் உள்ள அத்தனை பேரும் புவியீர்ப்பு கட்டணம் கட்டுகிறார்கள். ஐரோப்பா கட்டுகிறது. சில ஆப்பிரிக்க நாடுகளும் கட்டத் தொடங்கிவிட்டன. உலகம் படுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு தேசப்பற்றாளராக நடக்கவில்லை. புவியீர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், அதனை முற்றிலும் பயன்படுத்தியும், அதற்கான கட்டணத்தை நீங்கள் கட்டத் தயங்குவது விசனத்துக்குரியது. இதைப் பற்றி நான் மேலிடத்துக்கு முறைப்பாடு செய்யவேண்டியிருக்கும்.'

'அம்மையே, உங்கள் இனிமையான குரலும் 'முறைப்பாடு' என்ற வார்த்தையும் ஒரே வாசகத்தில் வரலாமா? இந்த துறை துவங்கிய காலத்திலிருந்து நான் கட்டணத்தை சரியாகக் கட்டி வந்தேன். எனக்கு தேசப்பற்றும், பூமிப்பற்றும், புவியீர்ப்பு பற்றும் அதிகம் உண்டு. புவியீர்ப்பு கவிதை ஒன்றாவது படிக்காமல் நான் தூங்கப் போவதில்லை. அம்மையே, எப்படியும் கட்டிவிடுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும். வணக்கம்.'

'வணக்கம்.'

'ஹலோ.'

'ஹலோ.'

'அது யார்? 14 லோரன்ஸ் வீதிதானே? வீட்டுச் சொந்தக்காரரா பேசுவது?'

'நான்தான், சொல்லுங்கள்?'

'ஐயா, நான் புவியீர்ப்பு துறையிலிருந்து பேசுகிறேன். நீங்கள் கடந்த நாலு மாதம் கட்டணம் கட்டாமல் எங்கள் சேவையை பயன்படுத்தி வருகிறீர்கள். உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டம் நெருங்கி வருகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.'

'அம்மையே, இது என்ன அநியாயம். நான் பணக் கஷ்டத்திலிருக்கிறேன், கொஞ்சம் கருணை காட்டுங்கள். நான் கட்டமுடியாது என்று சொல்லவில்லையே, எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள். புவியீர்ப்பு முடிவதற்கிடையில் எப்படியும் கட்டிவிடுவேன்.'

'நீங்கள் இடக்காகப் பேசுவதாக நினைக்கிறீர்கள். உங்களுக்கு இத்துடன் எட்டு அவகாசம் கொடுத்தாகிவிட்டது. எங்கள் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் நீங்கள் ஏமாற்றும் பேர்வழி என்று தெரிகிறது. நீங்கள் உடனடியாக முழுப்பணத்தையும் கட்டாவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.'

'அம்மையே, பெரிய வார்த்தை சொல்லலாமா? ஏமாற்றுவது என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டக்கூட எனக்கு வல்லமை போதாது. நான் அப்படியான ஆளும் அல்ல. சின்ன வயதில் அம்மாவின் கோழிக்குஞ்சு ஒன்றை அவருக்கு தெரியாமல் திருடி விற்றது பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். தேவ சங்கீதம் போல ஒலிக்கும் உங்கள் குரலில் இந்த வார்த்தைகள் வரலாமா? நான் இந்த மாதம் முழுக்காசையும் கட்டிவிடுகிறேன்.'

சரி, அப்படியே செய்யுங்கள். அடுத்த மாதம் எங்கள் துறையிலிருந்து ஒருவர் உங்களை அழைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

'மெத்தச் சரி. அம்மையே, ஒரு விளக்கம் கூறவேண்டும்.'

'சொல்லுங்கள்.'

'ஒவ்வொரு மாதமும் இந்தக் கட்டணம் ஏறிக்கொண்டே வருகிறதே, அது ஏன்?'

'நாங்கள் அனுப்பிய சுற்றறிக்கை 148.8 ஐ நீங்கள் படிக்கவில்லையா?'

'இல்லை, அம்மையே.'

'அதில் 48வது பக்கத்தை படிக்கவேண்டும். புவியீர்ப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் மனைவி பயன்படுத்துகிறார். உங்கள் இரண்டு பிள்ளைகளும் பயன்படுத்துகிறார்கள். உங்கள் எடை மாதாமாதம் கூடுகிறதல்லவா, அதுதான் காரணம். உங்கள் எட்டு வயது மகனைக் கேட்டிருந்தால் அவன் பதில் சொல்லியிருப்பானே.'

'உங்களுக்கு எப்படி என் மகனின் வயது எட்டு என்று தெரியும், இது பெரிய அநியாயமாக இருக்கிறதே.'

'ஐயா, எங்களுக்கு எல்லாம் தெரியும். உங்கள் மகன் பிறந்தது அல்பெர்ட் மார்ட்டின் மருத்துவமனையில், அவனுடைய எடை பிறக்கும்போது 7 றாத்தல் 8 அவுன்ஸ் என்பதும் பதிவாகியிருக்கிறது. உங்கள் மனைவியின் சுற்றளவு அதிகமாகி வருகிறதே, அதைக் கவனித்தீர்களா?'

'நீங்கள் எல்லைமீறிப் பேசுகிறீர்கள்?'

'ஏன் கட்டணம் கூடுகிறது என்று கேட்டீர்கள், அதற்கு காரணம் கூறினேன். இந்த திட்டத்தால் பயன் பெற்றவர்கள் அதிகம். சிலர் தங்கள் எடையை கணிசமாகக் குறைத்துவிட்டார்களே.'

'அம்மையே, எங்கள் எடை எப்படி உங்களுக்கு தெரியும்?'

'நீங்கள் சுற்றறிக்கை 133.6 ஐ படித்திருக்கவேண்டும். உங்களுடைய இன்றைய எடை 174, கடந்த மாதம் அது 172 ஆக இருந்தது. உங்கள் வீட்டு மூலைகளில் பொருத்தியிருக்கும் மந்திரக் கண்கள் இந்த தகவல்களை எமக்கு அனுப்புகின்றன.'

'அம்மையே, நாங்கள் இரண்டு வாரகாலம் இந்த நாட்டில் இல்லை. வெளிநாட்டுக்கு பயணம் போயிருந்தோம். அதற்கு கழிவு ஒன்றும் இல்லையா? நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பயன்படுத்தவில்லையே?'

'ஐயா, இதையெல்லாம் எங்கள் துறை முன்கூட்டியே ஆழமாக சிந்தித்திருக்கிறது. உங்கள் சட்டத்தரணிமூலம் ஒரு சத்தியக்கடதாசி தயாரித்து அனுப்பிவிடுங்கள். இந்தத் தேதியிலிருந்து இந்த தேதிவரை நாங்கள் இந்த நாட்டு புவியீர்ப்பை பாவிக்கவில்லை. நாங்கள் பயணம் சென்ற தேசத்தில் அவர்களுக்கு சேரவேண்டிய புவியீர்ப்பு கட்டணத்தை செலுத்திவிட்டோம். இப்படி எழுதி அனுப்புங்கள். நாங்கள் அதற்கான கழிவை உங்கள் கணக்கில் சேர்த்துவிடுவோம்.'

'நன்றி அம்மையே, நன்றி. உங்கள் அறிவுக்கூர்மை என் நெஞ்சைத் துளைத்தாலும் உங்கள் குரல் இனிமை என்னை திக்குமுக்காடவைக்கிறது. இன்னும் ஒரேயொரு கேள்வி கேட்க அனுமதிப்பீர்களா?'

'சரி, கேளுங்கள்.'

'என்னுடைய மாமியார் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் ஒரு கட்டிலில் தூங்குகிறார். அவருக்கு பக்கத்தில் ஒரு கிளாசில் அவர் பல் தூங்குகிறது. அவர் புவியீர்ப்பை பாவிப்பதே இல்லை. அதற்கு ஏதாவது சலுகை உண்டா?'

'இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்களே. நான் வெட்கப்படுகிறேன். உங்கள் மாமிக்கு புவியீர்ப்பு இல்லையென்று வையுங்கள். அவரால் கட்டிலில் படுத்திருக்கமுடியுமா? இப்பொழுது செவ்வாய் கிரகத்தை தாண்டியல்லவோ பறந்து போய்க்கொண்டிருப்பார்.'

'மன்னியுங்கள். என்னுடைய மூளையை பிரகாசிக்க வைத்துவிட்டீர்கள். இன்றே புவியீர்ப்பு கட்டணத்தை கட்டிவிடுவதாக வாக்குறுதியளிக்கிறேன்.'

'முதலில் செய்யுங்கள்.'

'ஹலோ'

'ஹலோ'

'ஐயா, உங்கள் வாக்குறுதியும் செவ்வாய் கிரகத்தை தாண்டி பறந்து கொண்டிருக்கிறது. இறுதி எச்சரிக்கை தருவதற்காக வருந்துகிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்கள் நிலுவைக் கட்டணம் முழுவதையும் கட்டிவிடவேண்டும்.'

'அம்மையே, இது என்ன இப்படி வெருட்டுகிறீர்கள். நான் என்ன வைத்துக்கொண்டு இல்லையென்கிறேனா? காற்று வரி கட்டினேன், வாயு கட்டணம் கட்டினேன், தண்ணீர் கட்டணம் கட்டினேன், மின்சாரக் கட்டணம் கட்டினேன்.'

'அதைத்தான் நானும் கேட்கிறேன். எல்லாத் துறைகளுக்கும் கட்டுகிறீர்கள், புவியீர்ப்புக் கட்டணத்தை கட்டுவதற்கு மட்டும் தயக்கம் காட்டுகிறீர்கள்.'

'அதன் காரணம் உங்களுக்கு தெரியும்தானே.'

'இல்லை, தெரியாது. தயவுசெய்து என் அறிவைக் கூட்டுங்கள்.'

'மின்சாரக் கட்டணம் கட்டாவிட்டால் இணைப்பை துண்டித்துவிடுவார்கள். தண்ணீர் கட்டணம் கட்டாவிட்டால் தண்ணீரை வெட்டிவிடுவார்கள். காற்று, தொலைபேசி, வாயு எல்லாத்தையும் வெட்டிவிடுவார்கள். புவியீர்ப்பு கட்டணம் கட்டாவிட்டால் அதை துண்டிப்பீர்களா? நியூட்டன் திரும்ப பிறந்து வந்தால்கூட அதைச் செய்யமுடியாதே.'

'ஐயா, சுற்றறிக்கை வாசிக்கத் தெரியாத நீங்கள் இவ்வளவு சிந்திப்பீர்கள் என்றால் இந்த துறையை நடத்தும் விஞ்ஞானிகள் எவ்வளவு சிந்திப்பார்கள். சென்றவாரம் செய்தித்தாள் படித்தீர்களா?'

'நீங்கள் என்னுடைய நாலாம் வகுப்பு உபாத்தினிபோல கேள்விக்கு மேல் கேள்வி கேட்கிறீர்கள்.'

'ஐயா, நீங்கள் சுற்றறிக்கைதான் படிப்பதில்லை, பேப்பர் என்ன பாவம் செய்தது, அதைப் படிக்கலாம் அல்லவா?'

'அம்மையே, என் கனவில் துர்தேவதைகள் வந்து என்னை ஆட்டிப்படைக்கின்றன. நான் என்ன செய்ய?'

'சரி, துர்தேவதைகள் போனபிறகு பேப்பரை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.'

'அம்மையே, என் ஆவலைப் பெருக்கவேண்டாம். தாங்கமுடியவில்லை. பேப்பரில் என்ன செய்தி வந்தது, தயைகூர்ந்து செப்புங்கள்.'

'செப்புகிறேன். ஒருவர் எட்டுமாதத்துக்கு புவியீர்ப்பு கட்டணம் கட்டாமல் உங்களைப்போல ஏமாற்றிக்கொண்டே வந்தார்.'

'அப்படியா?'

'அவருக்கு தண்டம் விதித்தோம், அவர் அதையும் கட்டவில்லை. ஆகவே புவியீர்ப்பை அவர் இனிமேல் பாவிக்கக்கூடாது என்று தீர்மானித்தோம்.

'பிறகு என்ன நடந்தது?'

'அவரை விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்று புவியீர்ப்பு இல்லாத இடத்தில் இறக்கிவிட்டோம். அவர் ஒரு தடவை பூமியை சுற்றி வந்தார். அதற்கிடையில் மனது மாறி சம்மதித்துவிட்டார். திரும்பவும் அவரை பூமியில் கொண்டுவந்து இறக்கிவிட நேர்ந்தது.'

'உண்மையாகவா!'

'மனிதர் முழுக்காசையும் கட்டினார்; தண்டத்தையும் கட்டினார்; வட்டியையும் கட்டினார். ஆனால் ஒரு பிரச்சினை?'

'அது என்ன?'

'விண்வெளிக்கலத்தில் ஏற்றிச்சென்ற பயணச் செலவு, விண்வெளி உடையின் விலை இன்ன பிற செலவுகளை மாதாமாதம் கட்டுகிறார். 2196 மாதங்களில் கட்டிமுடித்துவிடுவார்.'

'2196 மாதங்களா?'

'ஓமோம், கட்டிமுடிக்க 183 வருடங்கள் ஆகும்.'

'அவ்வளவு வருடம் வாழ்வாரா?'

'அது தெரியாது. அவருடைய பிள்ளைகள் நிலுவைக் கணக்குக்கு உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.'

'அம்மையே, நான் இன்றே உங்கள் கட்டணத்தை ஒருசதம் மிச்சம் வைக்காமல் கட்டிவிடுகிறேன்.'

'ஹலோ.'

'ஹலோ.'

'உங்களைப் பற்றி புவியீர்ப்புத்துறையினர் சிலாகித்து சொன்னார்கள். நீங்கள் கட்டணத்தை உடனுக்குடன் கட்டிவிடுவதாக புகழ்கிறார்கள்.'

'நன்றி. நீங்கள் யார் பேசுவது? தொண்டை அடைத்த வாத்தின் குரல்போல இருக்கிறதே!'

'நான்தான் பூமிப்பயணத்துறையில் இருந்து பேசுகிறேன்.'

'இது என்ன புதுத்துறையா?'

'என்ன ஐயா எங்களுடைய கடிதம், சுற்றறிக்கை ஒன்றும் கிடைக்கவில்லையா? மூன்று மாதக் கட்டணம் நிலுவையில் இருக்கிறதே.'

'என்ன கட்டணம்?'

'பூமிப் பயணக் கட்டணம். அதாவது பூமி சூரியனைச் சுற்றி வருவது உங்களுக்கு தெரியும். ஒரு முறை பூமி சூரியனைச் சுற்றும்போது நீங்கள் 149,600,000 மைல்களைக் கடக்கிறீர்கள். நினைத்துப் பாருங்கள், இத்தனை மைல்கள் நீங்கள் இலவசமாகப் பயணம் செய்கிறீர்கள். ஒரு சதம் செலவு இல்லாமல். இனிமேல் இது இலவசம் கிடையாது. பயணத்துக்கு கட்டணம் கட்டவேண்டும்.'

'அப்படியா. அருமையான விசயம். இனிமேல் நாள் நாளாக எண்ணாமல் மைல் மைலாக எண்ணலாம். நினைத்துப் பார்க்கும்போதே புல்லரிக்கிறது.'

'முதலில் மூன்று மாதக் கட்டணத்தை அனுப்பிவிடுங்கள். பிறகு புல்லரியுங்கள். நீங்கள் பயணம் செய்த தூரம் 37,400,000 மைல்கள்.'

'அதற்கென்ன. பாட்டுப் பாடிக்கொண்டு ஒரு காசோலை எழுதி ஒப்பம் வைத்து அனுப்பிவிடுகிறேன். ஒரு கேள்வி அம்மையே. இதிலே, விமானத்தில் இருப்பதுபோல முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என்று இருக்கிறதா?'

'இல்லை. இல்லவே இல்லை. எல்லோரும் சரிசமம்தான்.'

'மிச்சம் நல்லது. சமத்துவம் என்றால் எனக்கு பிடிக்கும். என்னுடைய அம்மாவுக்கும் பிடிக்கும்.'

'உங்களுக்கு ஒரு சலுகையும் இருக்கிறது.'

'அப்படியா, சொல்லுங்கள்.'

'லீப் வருடத்தில் ஒரு நாள் அதிகம் அல்லவா? ஆனால் நாங்கள் கட்டணத்தை கூட்டப்போவதில்லை. லீப் வருடத்திலும் அதே கட்டணம்தான்.'

'நம்பவே முடியவில்லை. இந்த நற்செய்தி கொடுத்த உங்களுக்கு ஒரு முத்துமாலை பரிசளித்தாலும் தகும். அல்லாவிடில் புள்ளி விழாத சிவந்த அப்பிள் கொடுத்தாலும் தகும். கேட்கும்போதே மனம் புளகிக்கிறது. அம்மையே, பணக்காரர்களுக்கு நல்ல வசதியிருக்கிறது. அவர்கள் அதிக கட்டணம் கட்டலாம் அல்லவா?'

'பாருங்கள், உங்கள் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. உங்களைப்போல ஆட்கள்தான் பூமிக்கு தேவை. நீங்கள் விமானத்தில் போகும்போது அளவுக்கு அதிகமான பொதி கொண்டுபோனால் மிகை கட்டணம் கட்டவேண்டும். அப்படித்தான் இங்கேயும்.'

'உதாரணமாக?'

'ஒரு பணக்காரரிடம் நாலு வீடுகள், ஐந்து கார்கள், அப்படி ஏராளமான பொருள்கள் இருந்தால் அவர் மிகை கட்டணம் கட்டவேண்டும். சாதாரண குடும்பத்தவர்கள் மிகை கட்டணம் கட்டத் தேவையில்லை. உங்களுக்கு அந்த அபாயம் கிடையாது.'

'அம்மையே, உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. இன்றே என் பயணக் கட்டணத்தை அனுப்பிவிடுவேன்.'

'நல்லது. அது என்ன சத்தம்?'

'ஒன்றுமில்லை. பூமி பிரண்டு மறுபக்கம் திரும்பும் சத்தம்.'

'சரி, நீங்கள் என்னிடம் பத்து நிமிடம் பேசியபோது 11000 மைல்கள் பிரயாணம் செய்துவிட்டீர்கள். அதற்கும் சேர்த்து பணத்தை கட்டிவிடுங்கள்.'

'உடனே, உடனே செய்வேன். இதனிலும் பார்க்க மகிழ்ச்சி தரும் விசயம் எனக்கு வேறு என்ன இருக்கிறது? இன்னொன்று.'

'என்ன?'

'நான் ஒரு சுற்றுலா போவதற்கு திட்டமிட்டிருந்தேன். இந்தப் பெரிய பிரபஞ்ச பயணம் போகும்போது சின்னஞ்சிறு சுற்றுலா என்ன கேடு என்று அதை நிறுத்திவிட்டேன். அந்தக் காசை மிச்சம் பிடித்து பூமிப் பயணக் கட்டணத்தை உடனேயே கட்டிவிடுகிறேன்.'

'பூமிப் பற்றாளர் என்றால் நீங்கள்தான்.'

'அம்மையே, ஓர் ஆலோசனை. நட்சத்திரங்கள் சும்மா சும்மா மினுங்கிக்கொண்டு கிடக்கின்றன. அதற்கு ஒருவரும் வரி கட்டுவதில்லை. சந்திரன் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கிறான். அவனையும் வளைத்துப் போடவேண்டும். ஒருவருமே கவனிப்பதில்லை.'

'அருமையான யோசனை. கவனிக்கிறோம். கவனிக்கிறோம்.'

நன்றி: அ.முத்துலிங்கம்

Feb 26, 2012

கொழுத்தாடு பிடிப்பேன் – அ.முத்துலிங்கம்

ஓம் கணபதி துணை

The Immigration Officer 94/11/ 22

200, St Catherene Street

Ottawa, Ont

K2P2K9

( Please translet Sri Lankan Tamil Language )A.Muthulingam

[ இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர் வசனங்களின் ஓடரை மாற்றாமலும், எனது கருத்துக்கள் சரியாக வரும்படியும் தெட்டத்தெளிவாக எங்கள் கலாச்சார வித்தியாசங்களை விளங்கப்படுத்தியும் மொழிபெயர்க்கும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.]

கனம் ஐயா அவர்களுக்கு,

சண்முகலிங்கம் கணேசரட்னம் ஆகிய நான் 90 /03 / 18 அன்று மாலை ரொறொன்ரோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கினேன். எனக்கு சொல்லித் தந்தபடி அங்கே இருந்த உத்தியோகத்தரிடம் நான் தஞ்சம் கேட்டு விண்ணப்பம் செய்தேன். என்னுடைய மனைவியின் தங்கச்சி விஜயலட்சுமியும், அவளுடைய புருசன் பாலச்சந்திரனும் என்னை ஏர்போர்ட்டில் வந்து சந்தித்தார்கள். விஜயாவை இதுவே முதல் முறை நான் நேருக்கு நேர் சந்திப்பது. அவவுடைய முகவெட்டு கிட்டத்தட்ட என்னுடைய மனைவினுடையதைப்போலவே இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் எனக்கு ஒருவித குழப்பமும் இல்லை.

என்னை அழைத்துக் கொண்டுபோய் தங்களுடன் இருக்க வைத்தனர். அந்த சிறிய வீட்டில் எனக்காக ஒரு முழு அறையை ஒதுக்கி தந்தார்கள். நான் என் வாழ்க்கையில் இதற்குமுன் இப்படி ஒரு தனி அறையை அனுபவித்தவன் அல்ல. ஆகவே எனக்கு என் சகலனில் மரியாதை அதிகமாகியது.

என் சகலனாகட்டும், விஜயாவாகட்டும் என்னை வடிவாகவே பார்த்தார்கள். இங்கே எனக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. தபால்காரன் தபால்களை வீட்டிலேயே கொண்டுவந்து கொடுத்தான். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பைப்பில் இடது பக்கம் சுடு நீரும், வலது பக்கம் குளிர் நீரும் வந்தது. பஸ்ஸிலே எப்படி றான்ஸ்பர் எடுப்பது, டெலிபோன் கார்ட்கள் எப்படி பாவிப்பது எல்லாம் எனக்கு சொல்லித் தந்தார்கள். நான் வந்த நாலாவது கிழமையே ஒரு ரெஸ்ரோறன்டில் எனக்கு கைக்காசுக்கு டிஸ் வாசிங் வேலையும் கிடைத்தது.

வாழ்க்கை இப்படியே இருக்கும் என்று ஆரம்பத்தில் மகிழ்ந்துபோனேன். விடியோ படங்கள் புதுசு புதுசாக வாடைக்கு எடுக்கலாம். ஊரிலே சாப்பிட முடியாத உணவு வகைகள் எல்லாம் இங்கே கிடைத்தன. என் சம்பளத்தில் மாசா மாசம் சீட்டுப் போடச் சொன்னார்கள். அவர்களுக்கு று–ம் வாடகை கட்டி, மாசச்சீட்டு 250 டொலர் போக மிச்சக் காசில் ஊருக்கும் அனுப்பினேன்.

என்னுடைய சகலனுக்கு இரண்டு வேலை. இரவு பதினொரு மணிக்குத்தான் வருவார். விஜயா கால்சட்டையும் கோட்டும் அணிந்து, கைப்பையை தூக்கிக்கொண்டு டேகேர் வேலைக்கு காலையிலேயே போய்விடுவா. அரை நாளுடன் அவவுடைய வேலை முடிந்துவிடும். என்னுடையது முதலாவது ஷிப்ட். மூன்று மணியுடன் வீட்டுக்கு வந்து கொஞ்சம் அயர்வேன். பிறகு ஏதாவது வீட்டு வேலைகள் செய்து கொடுப்பேன். அநேகமாக மார்க்கட்டுக்குபோய் சாமான் வாங்கி வருவது என் பொறுப்பில்தான் இருக்கும்.

இரவு சகலன் வந்ததும் சேர்ந்து இருந்து சாப்பிடுவோம். விஜயா அழகாகச் சமைப்பா. அவவுடைய றால் குழம்பின் ரேஸ்ட் மறக்க முடியாதது. நான் றால் சாப்பிட்டது கடைசியாக அன்றுதான். என்னைப் பொலீஸில் பிடித்த நாள். அதற்கு பிறகு இரண்டு வருடங்கள் இந்த மறியலில் நான் அனுபவிக்காத சித்திரவதை இல்லை.

இங்கு தரும் சாப்பாடு வித்தியாசமானது. ஐந்து நேரங்களுக்கு இரண்டு முட்டை வீதம் பத்து முட்டை, நாலு நேரம் மீன் துண்டு, மூன்று நேரம் ஒவ்வொரு கோழிக்கால், நாலு நேரம் சாலட் என்று சொல்லும் வேகவைக்காத கீரை வகை தருவார்கள். எனக்கு ஹை பிறசரும், சலரோக வியாதியும் உண்டு. நான் இப்போ நோயாலும் மன வேதனையாலும் மிகவும் கஸ்ரப்படுகிறேன்.

நான் கனடாவுக்கு உல்லாசப் பயணியாக வரவில்லை. என்னுடைய விண்ணப்பத்திலும், விசாரணைகளிலும், திருப்பி திருப்பி சொன்னதுபோல எஙகள் நாட்டில் நடக்கும் யுத்தத்திலிருந்து தப்புவதற்காக சொந்த மனைவியையும், தேவதைகள் போன்ற பிள்ளைகளையும் விட்டு தப்பி ஓடி வந்தவன். என்னுடைய குடும்பத்தை ஒரு வழியாக ஒப்பேற்றிவிடலாம் என்ற ஆசையிலே மூன்று மாத காலம் பிரயாணம் செய்தேன். நேராக பிளேனில் ஏறி நேராக நான் வந்து இங்கே இறங்கவில்லை. வள்ளத்திலும், ரயிலிலும், மேலே விழவிழ தள்ளி உட்கார்ந்து இரவு முழுக்க கண்விழித்த பலாப்பழ லொறியிலும், கொன்ரெய்னரிலும், பிளேனிலுமாக எண்பத்து ஒன்பது நாட்கள் பயணம் செய்து வந்தவன். கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வந்துசேர எடுத்தது 71 நாட்கள்தான். நான் என் கனவு மூட்டைகளை தவிர வேறு ஒரு மூட்டையும் கொண்டு வராதவன்.

என்ரை குஞ்சுகளை நான் ஊரிலே விட்டுவிட்டு வந்து இங்கே உத்தரிக்கிறேன். என்னை அவர்கள் மறந்துவிடுவார்கள். என் முகம் இன்னும் ஞாபகம் இருக்கோ தெரியாது. நான் ஊரை விடும்போது பெரியவனுக்கு 7 வயது, இரண்டாமவனுக்கு 5, பஞ்சலோகத்தில் செய்த என்ரை மகளுக்கு 4 வயது, கைக்குழந்தைக்கு 6 மாதம்தான்.

பெரியவன் வகுப்பில் வலு கெட்டிக்காரன். ஆமெணக்கெண்ணய் குடிக்க வைத்தால் நேரே ஓடலாம் என்ற அறிவுகூட இன்றி என்னையே சுத்தி சுத்தி ஓடுவான். சின்னவன் நான் கிணற்றில் தண்ணி அள்ளிக் குளிக்கும்போது எனக்கு கீழே நின்று அந்த தண்ணியிலேயே குளிப்பான். வெள்ளை லேஸ் வைத்து அலங்காரம் செய்த சட்டையை போட்டுக்கொண்டு என் சின்ன மகள் தத்தக்க புத்தக்க என்று ஓடி வருவாள். பாயிலே படுக்கும் என்னை தொட்டுக்கொண்டு படுப்பதற்கு சண்டை போடுவார்கள். இந்த தெய்வங்களை இனி எப்ப பார்க்கப் போறேனோ தெரியாது.

எங்கள் நாட்டில் தங்க நிறமான பூரண சந்திரன் வருவான். இங்கே நீல நிறத்தில் சந்திரன் தெரியும்போதே எனக்கு ஏதோ தீமை நடக்கப்போகுது என்று தெரிந்துவிட்டது. பக்கத்து அறையில் இருந்தவன் நேற்றிரவு என்ன காரணமோ திடாரென்று செத்துவிட்டான். அவனுக்கு நான் ஒரு முட்டை கடன் தர வேண்டும். அவனுடைய பெயர் தெரியாது. ஆனால் அவன் சாவதற்கு சம்மதிக்கவில்லை. திறந்த கண்களால் இன்னும் இந்த உலகத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவன் ஒரு பெயர் உச்சரிக்கமுடியாத ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்தவன். அங்கே சிவப்பு மாட்டுக்கு ஒரு சொல்லும், கறுப்பு மாட்டுக்கு இன்னொரு சொல்லும் இருக்கிறதாம். இடது கால் செருப்புக்கு ஒரு வார்த்தை என்றால், வலது கால் செருப்புக்கு இன்னொரு வார்த்தை என்று சொன்னான். ஒரு முட்டை கடன்தர வேணும் என்றால் ஒரு வார்த்தையும், இரண்டு முட்டை கொடுக்க வேணும் என்றால் அதற்கு இன்னொரு வார்த்தையும் அந்த நாட்டில் இருக்கலாம்.

இங்கே சில வசதிகள் உண்டு. இப்படி வசதிகளுக்கு முன்பே பழக்கபட்டிருக்காததால் நான் ஆரம்பத்தில் கஷ்ரப்பட்டுவிட்டேன். திறப்புகளைத் தொலைக்காமல் வைப்பதற்கு பழகியிருந்தேன். கனடாவில் எல்லாம் தானாகவே பூட்டிவிடும் கதவுகள். இவை ஆபத்தானவை. நிறைய ஞாபக சக்தியை அவை உபயோகித்துவிடும். இங்கே தலையில் தொப்பி அணிந்து, இடையில் குண்டாந்தடி செருகிய கார்டுமார் பெரும் சத்தம்போடும் இரும்புக் கதவுகளை எங்களுக்காக திறந்துவிடுவார்கள்; பின்பு பூட்டுவார்கள். நாங்கள் ஒன்றுமே செய்யத் தேவையில்லை. கதவுகள் தானாகவே பூட்டிக்கொள்ளுமோ என்று அஞ்சி நடுங்க வேண்டாம். கைகளை ஆட்டிக்கொண்டு உள்ளே போவதும் வருவதுமே எங்கள் வேலை.

என்னுடைய சகலன் வீட்டில் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தேன். அங்கே தானாகவே பூட்டிக்கொள்ளும் கதவு. திறப்புகளை கையிலே காவியபடியே இருக்கவேணும். திறப்புகளை தூக்கிக்கொண்டு நாங்கள் எல்லோரும் எங்கள் எங்களுக்கு விதிக்கப்பட்ட நேரங்களில் வேலைகளுக்கு போவோம் வருவோம்.

ஐயா, என் வாழ்க்கையில் இதுவே சறுக்லான காலம். போகப்போக அவர்கள் பணம் பணம் என்று பறப்பது எனக்கு தெரிய வந்தது. குடும்பச் சூழ்நிலையும் நல்லாக இல்லை. என்னுடன் விஜயா பழகுவது கொஞ்சம் பயத்தை கொடுத்தது. எப்படியும் என்னுடைய தஞ்சக் கோரிக்கை கேஸ் முடிந்தவுடன் வேறு வீடு மாறவேண்டும் என்று முடிவு செய்தேன். இவ்வளவு உதவி செய்த சனங்களை பகைக்காமல் கழரவேண்டும் என்று மனசுக்குள் தீர்மானித்து சமயம் பார்த்திருந்தேன். ஆனால் அது கடவுளுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.

எங்களுக்குள் பிரச்சினை பின்னேரங்களில் டிவி பார்ப்பதில்தான் தொடங்கியது. விஜயாவின் கதைகளும் போக்கும் ஒரு மாதிரியாக இருக்க ஆரம்பித்தன. என்னுடன் கதைக்கும்போது தேவைக்கு அதிகமான நளினம் காட்டினா. அவவுடைய விரல்களும் அதன் மிச்சப் பகுதியும் என் மனைவியை ஞாபகமூட்டின.

ஒரு நாள் நான் வேலையிலிருந்து அலுப்போடு வந்து நேரத்துக்கு படுத்துவிட்டேன். எனக்கு விஜயா சிவப்பு முட்டை பொரித்து சாப்பாடு போட்டா. புருசன் வந்தபோது அவருக்கு வெறும் மரக்கறி சாப்பாடுதான். நான் படுத்திருந்தபோது அவர்கள் சண்டை போட்டது எனக்கு கிளியராக கேட்டது.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இவர்களுக்கு ஒரே மகள். அவளுடைய பேர் பத்மலோசனி. முதலில் அவளை பத்மா என்று அழைத்து அது ஸ்ரைல் இல்லாதபடியால் லோசனி என்று மாற்றினார்கள். பிறகு அதுவும் சுருக்கப்பட்டு லோ என்றாகிவிட்டது. இது ஒரு மொத்தமான பிள்ளை. இவளை விஜயா அடிக்கடி கலைத்தபடியே இருப்பா. பெரியப்பாவை சும்மாவிடு அவர் களைப்பாக இருக்கிறார் என்றோ போய்ப்படி என்றோ கீழ் வீட்டிலே போய் புத்தகம் வாங்கி வா என்றோ விரட்டுவதுதான் வேலை.

இவள் சிறு பெண் என்றாலும் விவேகமானவள். படிப்பு கெட்டித்தனம் அல்ல, அவளுடைய மூளை கள்ளத்தனம் கொண்டது. நேராக ஒரு காரியத்தை செய்வாள் என்றில்லை. எப்பவும் விஷமமும், சூழ்ச்சியும், தந்திரமும்தான்.

அவளுடைய காதுகள் கூர்மையானவை. படிகளில் ஏறிவரும் சத்தத்தை வைத்தே வீட்டுக்கு யார் வருகிறார்கள் என்று ஊகித்து விடுவாள். இது அந்த அங்கிள் மேல் வீட்டுக்கு போறார். இது கீழ் வீட்டு அன்ரி வீடியோ எடுக்க வாறா என்று சரியாகச் சொல்வாள். வீட்டிலே தமிழ் வீடியோப் படங்களை பார்க்கும் நேரங்களில் ஆ, சரி இனி கட்டிப்பிடிச்சு பாடப் போகினம் என்று அவள் சொன்னால் அப்படியே நடக்கும்.

பின்னேரங்களில் ஹோலுக்குள் இருந்து ஹோம்வோர்க் செய்யுறன் எண்டு சொல்லி முழுசிமுழுசிப் பார்த்துவிட்டு பெரியவர்களுக்கான டிவி சானலை ஓன் செய்துவிடும். அதில் வரும் மோசமான காட்சிகளை மியூட் பட்டனை அமத்திவிட்டு சத்தம் கேட்காமல் பார்க்கும். இப்படி பழகிப் பழகி இந்த விஷயங்களில் இதுக்கு ஒரு நாட்டம் வந்துவிட்டது.

பெரியவர்களின் மூளையைக் காட்டிலும் இதுக்கு பத்து மடங்கு மூளை. ஒரு நாள் தாய் வீடியோக் கடைக்கு போறதாய் சொல்லிப்போட்டு இறங்கிப் போய்விட்டா. இந்தப் பிள்ளை டெலிபோனில் றீடயல் பட்டனை அமுக்கி நம்பரைப் பார்த்துவிட்டு இந்த அம்மா பொய் சொல்லி இருக்கிறா. இவ சீட்டு அன்ரியிட்டை சாறி பாக்க போனவ என்று சொல்லி பிடிச்சுக் குடுத்துப்போட்டுது. இதை வைச்சுக்கொண்டு ஒரு கள்ளமும் செய்ய ஏலாது.

தானாகவே பட்டுபட்டென்று பூட்டிக் கொள்ளும் கதவுகள் கொண்ட இந்த வீட்டில் பாத்ரூம் கதவு மட்டும் ஒழுங்காக வேலை செய்யாது. ஒருநாள் தெரியாமல் நான் கதவை திறந்தபோது விஜயா குளித்துக் கொண்டிருந்தா. நீண்டு தெரிந்த முலைகளில் தண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. எண்டாலும் நல்ல ஷேப்பாக உரித்த வெங்காயம்போல தகதகவென்று மின்னியது. நான் பதகளித்துப் போனேன். இவ ஒன்றுமே நடக்காதமாதிரி மெல்லிசாய் சிரித்தபடி நின்றா. பக்கத்தில் கொழுவி இருந்த டவலை இழுத்து மூடலாம் என்ற எண்ணம்கூட இல்லாமல். நான் சொறி என்றுவிட்டு திரும்பிவிட்டன்.

இதை இந்தக் குண்டுப் பிள்ளை பார்த்துவிட்டது. அம்மாவை பெரியப்பா நேக்கட்டாய் பார்த்திட்டார் என்று கத்தத் தொடங்கிவிட்டது. அவளுடைய வாயை அடக்க பெரிய லஞ்சம் தேவைப்பட்டிருக்கும். எப்படியோ அன்று சகலன் வேலையில் இருந்து திரும்பியபோது இந்தப் பிள்ளை வாயை திறக்கவில்லை

இது தெரியாமல் நான் செய்த தவறு. ஆனால் தெரிந்து ஒரு நாள் தவறு செய்ய நேர்ந்தது. அதற்கு பிறகு அப்படி செய்வதில்லை என்று கடுமையான தீர்மானமும் செய்தேன். அந்த தீர்மானத்தை எவ்வளவுக்கு வெற்றியாக செய்து முடித்தேன் என்று சொல்லமுடியாது. காரணம் அது நடந்து சில நாட்களுக்குள்ளேயே நான் பொலீஸில் மாட்டிவிட்டேன்.

விஜயா பின்னேரங்களில் காலுக்கு மேல் கால்போட்டு இருந்து ஓய்வெடுப்பா. இரண்டு பெசென்ற் பால் கலந்த கடும் சாயம் கொண்ட தேநீரை சிறு சிறு மிடறுகளாக உறிஞ்சிக் குடிப்பா. என் மனைவியும் அப்படியே. இது இன்பமான நேரம். சிரிக்கக்கூடிய சமயங்களை இவ வீணாக்குவதில்லை. சின்ன ஜோக்குக்கும் கிக்கிக் என்று குலுங்கி குலுங்கி சிரிப்பா.

இப்படி என் மனம் அடங்காத ஒரு நாளில் இவ உள்ளுக்கு போய் உடுப்பு மாத்தினா. கதவு நீக்கலாக இருந்தது அவவுக்கு தெரியும் என்றே நினைக்கிறேன். ஒடுக்கமான ஜீன்ஸ் கால் சட்டையை ஒரு காலுக்குள் விட்டா; பிறகு மற்றக் காலையும் விட்டா. அது வேகமாக வந்து அவவுடைய அகலமான உட்காரும் பகுதியில் தடைபட்டு நின்றது. இவ குண்டியை அற்புதமான ஒரு ஆட்டு ஆட்டி மேலே இழுத்துக்கொண்டா. அந்த தொடைகள் ஜீன்ஸை ஒரு சுருக்கமில்லாமல் நிறைத்தன. என் மனம் அன்று பட்ட பாட்டை சொல்ல முடியாது. ஒரு பெண்ணைத் தொட்டு எவ்வளவு காலமாகிவிட்டது. அப்பொழுது ஒரு பழக்கமான வாசனை அள்ளி வீசி என் தேகத்தை சுட்டது.

ஐயா, அந்த நேரம் பார்த்துத்தான் இது நடந்தது. இதைச் சொன்னால் உங்களுக்கு நம்புவது கஷ்டமாக இருக்கும். கடவுள் வந்து சொன்னால் ஒழிய யார் நம்புவார்கள். இந்த தொக்கைப் பிள்ளை என்னை ஓய்வெடுக்க விடாது. கதவைச் சாத்தி வைத்தாலும் உள்ளே திறந்துகொண்டு வந்துவிடும். வந்தால் பாஃனைப் போடும்; ரேடியோவை போடும். ஜன்னலை திறக்கும் பூட்டும். இருக்கிற சாமான்களை இடம் மாத்தி வைக்கும். ஆராயாமல் போகாது.

என்னுடைய கட்டில் கனடாவில் ஒரு கடையிலும் வாங்கமுடியாதது. ஒரு தச்சனைக் கொண்டு செய்வித்த ஒடுக்கமான கட்டில். இந்தப் பிள்ளை அதில் ஏறி துள்ளி விளையாடும். என்னுடைய நித்திரையை எத்தனை வழிவகைகள் இருக்கோ அத்தனை வழிவகைகளையும் பாவித்து குழப்பிவிடும்.

அன்றைக்கும் அப்படித்தான். ஒரு துணிப்பொம்மையின் காலைப் பிடித்து இழுத்தபடி வந்து ஏதெண்டாலும் விளையாடுவம் என்று கரைச்சல் படுத்தியது. குழப்படி செய்யாதே, போ. அம்மாவிட்டை சொல்லுவன் என்று வெருட்டினேன். அம்மா இல்லை, அவ கீழ்வீட்டு அன்ரியிடம் கதைக்க போட்டா என்றது. பிறகு கொழுத்தாடு பிடிப்பேன் விளையாட்டை ஆரம்பித்தது.( இது எங்கள் ஊர் விளையாட்டு. இதை மொழிபெயர்ப்பாளர் விளக்கவேண்டும்.)

நான் கொழுத்தாடு பிடிப்பேன் என்று சொன்னால் அது கொள்ளியாலே சுடுவேன் என்று கத்தியபடியே கட்டிலை சுற்றி சுற்றி வெருண்டபடி ஓடும். இப்படி மாறி மாறி விளையாடினோம். இந்த விளையாட்டு மும்முரத்தில் சாரம் நழுவியதை நான் கவனிக்கவில்லை.

முந்தி நான் சொல்லியிருக்கிறன் இந்தப் பிள்ளைக்கு காது சரியான கூர்மை என்று. அன்று எப்படி தவறவிட்டதோ எனக்குத் தெரியாது.

திடாரென்று கதவை உடைப்பதுபோல யாரோ திறந்தார்கள். பார்த்தால் என்னுடைய சகலன் குழம்பிய தலையோடும், பொத்தான் போடாத சேர்ட்டோடும் வேகமாக வந்தார். எனக்கு தெரிந்ததெல்லாம் அவருடைய மயிர் முளைத்த கறுப்பு கைகளும், கட்டையான விரல்களும்தான்.

அவருடைய குத்து என் கழுத்திலேதான் வந்து விழுந்தது. நான் அள்ளுப்பட்டுபோய் சுவரிலே தலையை இடித்துக்கொண்டு ரத்தம் ஒழுக கிடந்தேன். இந்தப் பிள்ளை குழறி அழத்தொடங்கிவிட்டது. நான் ஒண்டும் செய்யவில்லை. எல்லாம் பெரியப்பாதான் செய்தவர் என்று திருப்பி திருப்பி சொன்னது.

அவர் 911 க்கு எப்ப அடிச்சாரோ தெரியாது. நான் நிமிர பொலீஸ் நிக்குது. கட்டிலிலே பிள்ளையின் நிக்கர் கிடந்தது. அவங்கள் அதைத்தான் முதலில் தூக்கி பார்த்தார்கள்.

என்ரை மண்டையிலே காயம் எப்படி வந்ததென்று அவர்கள் விசாரிக்கவில்லை. ரத்தம் ஒழுகி சேர்ட் எல்லாம் நெஞ்சோடு ஒட்டி காய்ந்த பிறகுதான் கட்டுப்போட்டார்கள். என்னை திரும்பிப் பார்க்க ஒரு நாய்கூட இந்த நாட்டில் வரவில்லை. என்ரை மனைவிக்கு என்ன எழுதி மனதைக் கெடுத்தார்களோ நான் அறியேன். நகை சுற்றி வரும் மெல்லிய தாள் போல ஒன்றில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அவள் எழுதும் கடிதம் பிறகு எனக்கு வரவே இல்லை.

இந்த நரகத்திலிருந்து எனக்கு விமோசனமே இல்லை. அந்தப் பிள்ளையின் விவேகத்தை கணக்கு வைக்க முடியாது. அதனுடைய உடலும் பெரியது; புத்தியும் பெரியது. அநியாயமாய் பிளான் பண்ணி என்னை மாட்டிவிட்டினம். என்னிடம் கையாடிய ஆறாயிரம் டொலர் சீட்டுக் காசை இனி நான் பார்க்க மாட்டேன். என்னை மறியலுக்கு அனுப்பி போட்டு வசதியாய் இருக்கினம். அங்கே நடந்த வண்டவாளங்களை நான் ஒருத்தருக்கும் மூச்சு விடவில்லை. விட்டால் ஒரு குடும்பமே நாசமாகிவிடும்.

என்ரை அறையில் இருக்கும் மற்றவன் ஒரு கேய் என்று சொல்லுகினம். மிகவும் துக்கமானவன். எந்த நேரம் பார்த்தாலும் எட்டாக மடித்து வைத்த ஒரு கடிதத்தை படித்தபடியே இருப்பான். அந்த கடிதம் மடிப்புகளில் கிழிந்து தொங்கியது. 27ம் செல் டானியலை வச்சிருக்கிறான் என்று பேசிக்கொண்டார்கள். இவனிடம் உள்ள ஒரே குறை நான் எப்ப எங்கடை செல்லில் மூத்திரம் பெய்ய வெளிக்கிட்டாலும் அதே நேரத்தில் இவனும் பக்கத்தில் நின்றுகொண்டு செய்வான். இவன் நித்திரை செய்து நான் பார்த்ததில்லை. வெகு நேரம் தூங்காமல் அடிக்கடி சிலுவைக்குறி இட்டபடி எனக்கு மேல் இருக்கும் அவனுடைய படுக்கையில் கால்களை தொங்கப்போட்டபடி இருப்பான். நடு இரவுகளில் நான் விழித்துப் பார்த்தால் நீண்ட ஸ்ரொக்கிங்ஸ்சை தோச்சு காயப் போட்டதுபோல அவன் கால்கள் கட்டிலின் மேல் தொங்கும்.

இரவு வந்தவுடன் நிழல்களும் வந்துவிடும். எங்களுடன் ஒரு கரப்பான் பூச்சியும் வசித்தது. அது இடது கைப்பழக்கம் கொண்டது. ஒரு நாள் இதைக் காணாவிட்டாலும் எங்கள் மனம் பதைபதைத்துவிடும். நாள் முழுக்க தேடுவோம். ஒல்லியான சுண்ணாம்புக் கலர் பேர்ச் மரம்தான் முதலில் இலைகளைக் கொட்டும். பிறகு மற்ற மரங்களும் இலைகளை உதிர்க்கும். சிறைக்கூடத்தின் முகப்புக் கோபுரத்தில் பறக்கும் கொடியின் நடுவில் உள்ள மேப்பிள் இலை மட்டும் எந்தக் காலமும் கொட்டுவதில்லை.

என்ரை தேவதைகளை என்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள். புத்த பிக்குகள் அணியும் அங்கிக் கலரில் கால்சட்டையையும் மேல் சட்டையையும் சேர்த்து தைத்த ஒரு நீளமான உடுப்பை 24 மணி நேரமும் அணிந்தபடி நான் அவர்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். 160 வருடங்களுக்கு முன்பு அடைத்து வைத்த முதல் ஐந்து கைதிகளின் பேர்களை இங்கே பொறித்து வைத்திருக்கிறார்கள். நான் படுக்கும் படுக்கையில் இதற்குமுன் ஆயிரம் பேர்களாவது படுத்து எழும்பியிருப்பார்கள். படுத்த சிலர் எழும்பாமல் கூட விட்டிருப்பார்கள். கொலக்ட் கோல்கள் வாய்க்காத, கடிதங்கள் கிடைக்காத, விசிட்டர்கள் ஒருவருமே அனுமதிக்கப்படாத அந்நிய நாட்டு கைதி ஒருவன் இங்கே இருந்தான். அவன் பெயர் இது என்று பின்னால் பொறித்து வைப்பார்களோ தெரியவில்லை.

ஜூலை 1, 1867 ல் சில மாகாணங்கள் ஐக்கியமாகி கனடா என்ற புதிய நாட்டை ஏற்படுத்தின. இது தற்பொழுது 10 மாகாணங்களையும், 2 பிரதேசங்களையும் கொண்டுள்ளது. கனடாவின் முதல் பிரதமர் சேர் ஜோன் ஏ. மக்டோனல்ட்.

கனடாவின் ராணியாகிய மேன்மை தங்கிய இரண்டாவது எலிஸபெத்துக்கும், அவரின் வாரிசுகளுக்கும், அவரின் பின் பதவிக்கு வருபவர்களுக்கும் நான் சட்டத்திற்கு அடக்கமானவனாகவும், விசுவாசமானவனாகவும், தேசபக்தி கொண்டவனாகவும் இருப்பேன் என்று சத்தியப் பிரமாணம் செய்கின்றேன்.

மேன்மை தங்கிய ஐயா, எப்போதாவது எனக்கு குடியுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவற்றை நான் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். என்ரை றிவியூ அப்பீலை தள்ளுபடிசெய்து என்னை திருப்பி அனுப்புமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நான் இங்கு கள்ளமாக வந்து சேர்ந்தமாதிரியே என்னை கொன்ரெய்னரில் போட்டு அனுப்பினாலும் சம்மதமே.

என்ரை மனைவிக்கு ஐந்தாவது குழந்தை பிறந்திருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. என்னுடைய உதவியில்லாமல் இது நடக்க வழியில்லை. இது சுத்தப் பொய்.

இங்கிருந்து 10000 மைல் தொலைவில் இலுப்பைப்பூ கொட்டுகிற, லாம்பெண்ணையை மிச்சம் பிடிப்பதற்காக திரியைக் குறைத்து வைத்து ஏழு மணிக்கே படுக்கப்போகும் சனங்கள் கொண்ட ஒரு சிறு கிராமம் இருக்கிறது. விரித்தவுடன் சுருண்டுவிடும் ஒரு பாயை விரித்து, ஒரு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள், மறு பக்கத்தில் இரண்டு பிள்ளைகள் என்று சரி சமமாக தன்னை பிரித்துக் கொடுத்து, ஹெலிகொப்ரர்கள் பறக்காத ஓர் இரவிலே, வெள்ளிகளுக்கு நடுவாகத் தோன்றும் ஒரு சிவப்புக் கிரகத்தை பார்த்தபடி படுத்திருக்கும் என் மனைவியைக் கொண்ட இந்த அற்புதமான நாட்டுக்கு நான் திரும்பி போகவேண்டும்.

அங்கே ரோட்டு போடுபவர்களுக்கு கல் சுமந்து கொடுத்து என்ரை வாழ்க்கையை ஓட்டிவிடுவேன். மீண்டும் உத்திரவாதம் தருகிறேன். இந்தக் கொழுத்த பிள்ளையின் வயது பத்து என்பது எனக்கு தெரியவே தெரியாது.

நிச்சயமாகச் சொல்கிறேன். நான் குடியுரிமை கிடைக்கும் ஆசையில் கஷ்ரப்பட்டு மனப்பாடம் செய்த எல்லாவற்றையும் விரைவில் மறந்துவிடுவேன் என்று உறுதி கூறுகிறேன். என்னை எப்படியும் திருப்பி அனுப்பிவிடுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் கீழ்ப்படிவான

சண்முகலிங்கம் கணேசரட்டினம்

சிறைக்கூடம் எண் 37

Kingston Penetentiary

555, King Street W

Po Box 22

Kingston, Ontario

K7L4V7

 

*****

நன்றி: திண்ணை

Sep 15, 2011

எதிரி – அ. முத்துலிங்கம்

கனகாலமாக தனக்கு ஓர் எதிரி இருப்பது அவருக்குத் தெரியாது. இவ்வளவு கால முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் ஒரு நம்பகமான எதிரி வாய்த்திருந்தது. அந்த எதிரியும் ஒரு பாம்பாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஆறுமாத காலமாக இது நடந்து வந்திருக்கிறது. அவருக்குத் தெரியாமல். ஒருamuthu நாள் மாலை கோழிகளை எல்லாம் அடைத்து மூடும் சமயத்தில் தற்செயலாகப் பார்த்தார். இரண்டு முட்டைகள் கேட்பாரற்றுக்கிடந்தன. நாளை காலை பார்க்கலாம் என்று கூட்டை அடைத்து மூடிவிட்டார் ம்வாங்கி.

மறுநாள் பார்த்தால் முட்டைகளைக் காணவில்லை. எமிலியிடம் கேட்டுப்பார்த்தார். அவள் அந்தப் பக்கமே போகவில்லை என்று சொல்லிவிட்டாள். பக்கத்து குடிசைகளில் விசாரித்தார். அவர்களுக்கும் தெரியவில்லை.

நாலு சந்தைநாட்களுக்குப் பிறகு இன்னொருமுறை இது நடந்தது. அப்போது சாடையாக மழைபெய்து தரை ஈரமாகியிருந்தது. பாம்பு தரையில் ஊர்ந்துபோன தடம் அப்படியே தெரிந்தது. அந்தக் கணமே இது பாம்பின் வேலையென ம்வாங்கி கண்டுகொண்டார். அதை எப்பிடியாவது கொன்றுவிடவேண்டும் என்று தீர்மானித்தார்.

பாம்பைப் பிடிப்பதோ அடிப்பதோ அவருக்கு உகந்த காரியமல்ல. கோழி வளர்ப்பதுகூட அவர் தொழில் அல்ல. எல்லாம் தற்செயலாக நடந்ததுதான்.

அவர் மெத்தப் படித்த படிப்பாளி. நைரோபியிலிருந்து முப்பது மைல் தூரத்தில் இருக்கும் ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தவர். அந்த கர்வம் அவருக்கு இருந்தது. சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷன். அவருடைய படிப்புக்கும் அறிவுக்கும் இது ஏற்ற தொழில் அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

அந்த சேர்டிபிக்கட்டைத் தூக்கிக்கொண்டு அவர் எத்தனையோ கம்பனிகள் ஏறி இறங்கினார். தன் தகுதிகளை கொஞ்சம் மிகைப்படவே கூறினார். இருந்தாலும் குதிரை பாயவில்லை. அவருடைய பெருமையை யாரும் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. கடைசியில் அவருக்குக் கிடைத்தது என்னவோ பால் டிப்போவில் படியளக்கும் வேலைதான்.

சிலகாலம் இந்த வேலை சிரமமில்லாமல் போய்க்கொண்டிருந்தது. அதிகாலையிலிருந்தே வேலை தொடங்கிவிடும். ஒரு திறப்பு திருப்பும் நேரம்கூட உட்காரமுடியாது. நின்றுகொண்டே வேலை செய்யவேண்டும்.

ஆறுமணியிலிருந்து வருகின்ற பாலையெல்லாம் நிறுத்து நிறுத்து பெரும் அண்டாக்களில் ஊற்றுவார். கிழவர்கள், குமரிகள், சிறுவர்கள் என்று வரிசை நீண்டுபோய் இருக்கும். அதுபோதாதென்று மறுபக்கத்தில் பால் வாங்குவதற்காக இன்னொரு வரிசை நிற்கும். இரண்டு வரிசைகளையும் ஒரே சமயத்தில் சமாளிக்க வேண்டும்.

இந்த சமயத்தில்தான் சீனியர் சேர்டிபிக்கர் செகண்ட் டிவிஷன் மூளையைப் பாவிக்கும் சந்தர்ப்பம் ம்வாங்கிக்குக் கிடைத்தது.

அதற்கு காரணம் எமிலி ஒகினாவாதான். அதிகாலையில் அவள் வந்துவிடுவாள். பால் வாங்குவதற்காக கையிலே ஒரு கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு, உயரமாகவும் அடர்த்தியாகவும் இருப்பாள். அவள் அசைந்துவரும் காட்சி இவர் மனசை என்னவோ செய்யும்.

அவள் தலைமயிரை எப்பிடிப் போட்டாலும் ஒரு கவர்ச்சிதான். கலைத்துவிட்டாலும், விரித்துவிட்டாலும், பின்னிவிட்டாலும், முன்னேவிட்டாலும், கோபுரம் செய்தாலும், கோத்துக்கட்டினாலும் எல்லாவற்றிலும் ஓர் அழகு இருக்கும்.

களவு செய்யத் தூண்டியதும் அந்த அழகுதான்.

ம்வாங்கியை நேர்மையானவர் என்று யாரும் புகழ முடியாது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே கால்பந்து விளையாடி உடம்பை வாட்டசாட்டமாக வைத்திருந்தார். கோல் போடுவதில் மன்னர். கால்களால் போட்ட கோலுக்கு சமமாக கைகளாலும் போட்டிருக்கிறார்.

எமிலி வந்த நேரங்களில் ஒரு லிட்டருக்கு இரண்டு லிட்டர் பால் தாராளமாக வழங்கினார். ஊரார் வீட்டுப் பாலை இப்படி வாரிவாரி வழங்கி ஒருநாள் பிடிபட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார். அப்போதுதான் அவருக்குக் கோழிப்பண்ணை வைக்கும் எண்ணம் உதித்தது.

கோழிகளைப் பற்றி அவருக்கு முந்திபிந்தித் தெரியாது. கோழிகளும் அவர் பெருமையில் மெய்சிலிர்த்துப்போய் இருக்கவில்லை. சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷனுக்கு ஏற்ற தொழில் இல்லை என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. பிறரிடம் கைகட்டி நிற்காமல் சுதந்திரமாக இருக்கலாம். சொந்த சம்பாத்தியத்தில் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதெல்லாம் காரணங்கள்.

ஆனால் உண்மையான காரணம் வேறு. இவர் கோழிப்பண்ணை வைத்து கிராமத்திலேயே தங்கிவிட்டால் எமிலியும் கூடவே வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தாள். அந்த உற்சாகத்தில் அவர் கண்கள் கொஞ்சம் மூடிவிட்டது என்னவோ உண்மைதான்.

அவரிடம் வேலை பார்த்த கிழவன் இஞ்சரேகோவுக்கு கோழி வளர்ப்புப் பற்றி கொஞ்சம் தெரியும். இவரும் கூடமாட வேலை செய்தார். தீனி வைத்தார். தண்ணி காட்டினார். மரத்தூளை சுமந்து வந்து பரப்பினார். பெருக்கினார். உடல் முறியப் பாடுபட்டார். ஆற்றுக்கு அந்தக்கரை கள்ளத் தொடர்பு வைத்தவன் நீச்சல் பழகித்தானே ஆகவேண்டும்.

கடந்த ஆறு மாத காலமாக எல்லாம் சுமூகமாகவே போய்க்கொண்டிருந்தது, அந்தப் பாம்பு வரும்வரை.

அது மிகவும் தந்திரம் வாய்ந்த பாம்பு. எவ்வளவுதான் கம்பிவலை ஓட்டைகளைச் சரிபண்ணி வைத்தாலும் சுலபமாக உள்ளே புகுந்துவிடுகிறது. எப்படி வருகிறது எப்படிப் போகிறது என்பது மர்மமாகவே இருந்தது.

ம்வாங்கியும் கிழவனும் விழுந்துவிழுந்து உழைத்தார்கள். பாம்புக்குத் தீனி போடுவதற்காக. அந்தப் பாம்பும் மினுமினுவென்று ஒருவர் பொறாமைப்படும் வழவழப்போடு வளர்ந்துகொண்டு வந்தது. அடிக்கடி முட்டைகளையும், அவ்வப்போது உடம்பில் புரதச் சத்து குறைவது போன்று தோன்றும் சமயங்களில், பதமான கோழிக்குஞ்சுகளையும் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொண்டிருந்தது.

தண்ணீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பீவர் (Fever) மரம் மஞ்சளாக, வழவழப்பாக, பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும். அதன் வலுவான கொம்புகளில் ஒன்றை ம்வாங்கி வெட்டி வைத்துக்கொண்டார். அது கெட்டியாகவும், கைக்கு லாகவமாகவும், வீசுவதற்கு ஏதுவாகவும், வளைந்துகொடுக்கும் தன்மையுடையதாகவும் இருந்தது. பாம்பை வெல்லுவதற்கு இதைவிடத் தகுந்த ஆயுதம் இல்லையென்பது அவருக்குத் தெரியும்.

இந்த ஆயுதம் எப்பவும் அவர் படுக்கையின் அருகிலேயே இருந்தது. அடிக்கடி அதை எடுத்து, காற்றிலே வீசிப் பயிற்சி பண்ணிக் கொள்வார். அதைத் தடவுவார். அதற்கு ஆறுதல் சொல்வார். இப்படியாகச் சமர் புரிவதற்கு எப்பவும் ஒரு தயார் நிலையில் இருந்தார்.

அந்த வழவழப்பான தடியை அவர் இப்படி வெறும் ஆராதனை செய்ததில் எமிலிக்கு உடன்பாடு இருந்ததாகச் சொல்லமுடியாது. அவளுடைய இரண்டு வயசுக் குழந்தை அடிக்கடி அவள் கண்ணிலே படாமல் வெளியே போய் விளையாடத் தொடங்கியிருந்தது. எங்கே அந்தப் பாம்பு கடித்துவிடுமோ என்று பயந்தபடியே இருந்தாள்.

ஆனால் நடுஇரவு நேரம்ங்களில் ம்வாங்கி ஒரு கையில் ரோர்ச்சுடனும், மறுகையில் பீவர் மரத்துக் கம்புடனும் மூங்கில் கட்டிலைவிட்டு மெதுவாக இறங்கிக் கள்ளன்போல் அடிமேல் அடிவைத்துப் போய் பாம்பை யுத்தத்திற்கு அழைப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. இருட்டிலே தவறிப்போய் பாம்பின் மேல் காலை வைத்துவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் அவளைப் பிடித்து வதைத்தது.

ம்வாங்கி அவள் சொல்லைக் கேட்கப்போவதில்லை. இப்பவெல்லாம் அவருக்கு கோழியில் மேல் உள்ள கவனம் போய்விட்டது. பாம்பைப் பற்றிய நினைப்பாகவே இருந்தார். அதை எப்படியும் கொன்றுவிட வேண்டும் என்ற ஆவேசன் அவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இவ்வளவுக்கும் அவர் தன் பரம விரோதியான பாம்பை ஒருமுறை கூடப் பார்த்ததில்லை. அந்தப் பாம்புக்குக்கூட தன் புரவலரை ஒருநாளாவது பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதில்லை. ம்வாங்கிக்குத் தெரிந்ததெல்லாம் அது வந்துபோகும் தடங்கள் தான். அத்துடன் முட்டைகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துகொண்டே வந்தது.

ஒருநாள் இந்த எதிரிகள் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டார்கள். எதிர்பாராமல்தான் இது நடந்தது.

முதலில் கண்டது பக்கத்து வீட்டு யோசப்தான். அவன் தான் ம்வாங்கியைச் சத்தம்போட்டு அழைத்தான். இப்படி ஒரு வேலையும் செய்யாமல், அன்றாடம் வேட்டைக்குப் போகாமல், தினம்தினம் கிடைக்கும் முட்டை வருவாயில் அந்தப் பாம்புக்கு அலுப்பு ஏற்பட்டிருக்கலாம். மெதுவாக வெளியில் வந்து அந்த இளம் வெயிலில் ஆறிக்கொண்டிருந்தது. இலவசமென்றாலும் உண்ட களைப்பு அதற்கும் இருக்கத்தானே செய்யும்.

அதைக் கண்டதும் ம்வாங்கி சிறிது நேரம் மெய்சிலிர்த்துப்போய் நின்றார். என்ன அழகான காட்சி. என்ன அலட்சியமான பார்வை. நாளைக்குப் பேசிக்கொள்ளலாம் என்பது போல. விர்ரென்று வீட்டினுள்ளே புகுந்து பீவர் மரத்துக் கம்பைத் தூக்கி மஸாய் வீரன்போல் தலைக்குமேல் பிடித்தபடி பாய்ந்து வந்தார்.

பாம்பு பார்த்துவிட்டது. இவருடைய எண்ணம் ஆரோக்கியமானதல்ல என்பது அதற்கு எப்படியோ தெரிந்துவிட்டது.

உஸ்ஸென்று நிமிர்ந்தது. அதனுடைய மணிக் கண்கள் பளபளத்தன. சிறிய தலையில் அவை பெரிதாகத் தெரிந்தன. செக்கச் சிவந்த பிளவு நாக்கை வெளியே விட்டு காற்றைச் சோதித்தது. படத்தை விரித்து தன் சுயரூபத்தைக் காட்டியது. பிறகு என்ன நினைத்ததோ, உடலைச் சுருக்கி செங்கல் குவியலுக்குள் புகுந்துகொண்டது. ஒரு சமமான எதிரிக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை அது செய்யத் தவறியது.

ம்வாங்கியும் பெரிய தவறு செய்தார். அந்தப் பாம்பிடம் மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டார். அது நிராயுதபாணியாக நின்றது. இவர் தடியை சுழற்றியபடி வெறிகொண்டவரைப்போல் செங்கல் குவியலைச் சுற்றி நாலுதரம் ஓடினார். பாம்பு அவசரமில்லாமல் ஒரு பக்கத்தால் வழிந்து கத்தாளைப் புதர்களுக்குள் போய் மறுகணம் மறைந்துவிட்டது.

ம்வாங்கி இப்படி ஓடியதற்குக் காரணம் அந்தப் பிராந்தியத்தில் மலிந்திருக்கும் துப்பும் பாம்பாக அது இருக்குமோ என்று நினைத்தது தான். துப்பும் பாம்பை அடிப்பதற்கு சாமர்த்தியம் வேண்டும். அது பத்தடி தூரம் வரைக்கும் கண்ணைக் குறிவைத்துத் துப்பும். விஷம் பட்டால் கண்பார்வை போய்விடும். அதுதான் வால்பக்கம் இருந்து அடிப்பதற்காக வசதி பார்த்தார். ஆனால் பிறகுதான் இது துப்பும் பாம்பு அல்ல என்று அவருக்குத் தெரிந்தது.

இப்படியாக முதல்நாள் போர் ம்வாங்கிக்கு முற்றிலும் தோல்வியில் முடிந்தது.

பாம்புக்கு இந்தச்சம்பவம் பிடிக்கவில்லை. அது தானும் தன்பாடுமாக இருந்த பாம்பு. தனக்கும் கோழிகளுக்கும் இடையில் இருக்கும் ஒப்பந்தத்தில் இன்னொருவர் அத்துமீறிப் புகுந்துவிட்டதாக அது நினைத்தது. அதைச்செய்கையில் காட்டுவதற்குத் தருணம் பார்த்திருந்தது.

அடுத்த நாள் காலையில் ம்வாங்கி வெளியே வந்து பார்த்தபோது முட்டையைக் குடித்துவிட்டு சக்கையை வாசலிலே உமிழ்ந்து விட்டிருந்தது. எத்தனை முட்டை களவு போனது என்று அவர் இனிமேல் தன்னுடைய சுருட்டை மயிரைப் பிடித்து இழுத்து குழம்பத் தேவையில்லை. அவ்வப்போது அதிகாலையில் வந்து attendance கொடுப்பது போல முட்டைக் கோதைத் துப்பி கணக்குக் கொடுத்துவிட்டுப் போனது.

ம்வாங்கி தன் முயற்சியில் இன்னும் தீவிரமானார்.

அன்று அவருக்கு வெகு நேரமாகத் தூக்கம் வரவில்லை. பாம்பைப் பற்றிய சிந்தனையாகவே இருந்தது. காற்றுப் புக முடியாத அந்தச் சிறு அறையில் மாட்டுத் தோல் போர்த்திய கட்டிலில் அவர் படுத்துக்கிடந்தார்.

பக்கத்திலே எமிலி. அந்த இருட்டிலும் அவள் மார்புகள் சீராக ஏறி இறங்குவது தெரிந்தது. அவள் பக்கமிருந்து மெல்லியதாக வெப்பவாடை வீசியது.

ஒரு நாளைப்போல ‘சுக்குமாவிக்கி’ சாப்பிடுவோரிடம் வெளிப்படும் அந்த வாசனை வீச்சம் அவளிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அது அவரை என்னவோ செய்தது. இருட்டிலே துளாவினார். அவளுடைய லாஸாவின் நுனியை கைகளினால் தடவிக் கண்டுபிடித்து சுருக்கை இழுப்பதற்கு கொஞ்ச நேரம் ஆனது.

‘வாச்சா, வாச்சா’ என்று முனகியபடி திரும்பி அவருக்கு வசதியான நிலையில் படுத்துக்கொண்டாள். அவளுடைய கை யதேச்சையாக அவர் தொடையின் மேல் வந்து விழுந்தது.

அவருக்குப் பிடித்தது இதுதான். மறுப்பு சொல்லமாட்டாள். அடிக்கடி ’தாராள மனசுப் பொம்பிளை எப்பவும் பிள்ளத்தாய்ச்சி’ என்று சொல்லிச் செல்லமாக அவரைக் கடிந்துகொள்வாள். ஆனால் மறுக்கமாட்டாள்.

எமிலியின் மகனுக்கு இப்போது இரண்டு வயதாகிறது. அவனுக்கு நாலு வயதாகும்போது தங்கள் திருமணத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். எமிலிக்கு ஆடம்பரமாக மணச்சடங்கு நடத்த வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. தேவதைபோல வெள்ளை ஆடை உடுத்தி, முகத்திரையிட்டு, நீண்ட சில்க் கையுறை அணிந்து இசைக்கேற்ப நடந்துவர வேண்டுமென்பது அவள் ஆசை. அவளுடைய மகன் மலர்ச்செண்டு ஏந்தி ஊர்வலத்தின் முன் நடப்பதை அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பாள்.

ஒரு கணிசமான அளவு சேமிப்பு எமிலியிடம் இருந்தது. ம்வாங்கியும் கொஞ்சம் சேமித்தால் விரைவில் திருமணத்தை நடத்திவிடலாம். ஆனால் இந்தப் பாம்பு அதற்குத் துணை புரிவதாகத் தெரியவில்லை.

அப்பொழுதுதான் ம்வாங்கியின் மூளையில் ஒரு மின்னலடித்தது. அந்தப் பாம்பு பதினாலு அடி நீளம் இருந்தது. என்ன வேகமாக மறைந்தது. கண்மணிகள் எவ்வளவு பெரிது. வழவழப்பான கறுப்பு. ஆப்பிரிக்காவின் கறுப்பு மம்பா அல்லவா அது?

இந்தப் பாம்பு மரம் ஏறக்கூடியது. மரத்தின் வழியாக ஏறி கூரை வழியாக அல்லவா இது உள்ளே வருகிறது. கதவு ஓட்டைகளையும், வலைப் பின்னல்களையும் மாய்ந்து மாய்ந்து அடைத்து என்ன பிரயோசனம்!

மறுபடியும் ரோர்ச்சை எடுத்துக்கொண்டு போர் ஆயுதங்களோடு நடு இரவில் புறப்பட்டார். அந்தப் பாம்பு அவருக்குப் பெரும் சவாலாகத்தான் இருந்தது.

தனக்குத் தெரிந்த பலவித சிகிச்சைகளையும் அவர் செய்து பார்த்துவிட்டார். வளைந்த மரக் கிளைகளையெல்லாம் வெட்டிச் சாய்த்தார். சுற்றிவர மண்ணெண்ணெய் ஊற்றி வைத்தார். தார் பூசினார். தகரத்தை அடித்தார். இரவிரவாக விளக்குகளை எரியவிட்டார். அவருடைய சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் டிவிஷன் மூளைக்கு எட்டிய அற்புதமான யோசனைகள் எல்லாவற்றையும் செயல்படுத்தினார்.

பாம்பு மசியவில்லை. எல்லாவிதத் தந்திரோபாயங்களையும் அது கற்றுத் தேர்ந்திருந்தது. குதிரையைத் தொலைத்தவன் குட்டையிலும் தேடுவான், கூரை முகட்டிலும் தேடுவான். அவனுக்குத் தெரியும் அவன் கஷ்டம். ம்வாங்கி எல்லா வித்தைகளையும் செய்து களைத்துவிட்டார்.

முள்ளம்பன்றியை மடியிலே கட்டிக்கொண்டு முதுகு சொறியப் பயணம் போன கதையாக யோசப்பை மறந்துவிட்டார் ம்வாங்கி. பக்கத்து வீட்டுக்காரர். பாம்புகளின் பூர்வீகம் அறிந்தவர். கடைசி முயற்சியாக யோசப் சொன்ன யோசனையை செய்துபார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.

எமிலியிடம் அவருக்கு ஒரு வருடத்திற்குப் போதிய காதல் இருந்தது. ஆனால் அவருக்குப் பிடிக்காதது அவளுடைய பிடிவாதம்தான். சிறு குழந்தையைப்போல எவ்வளவு முரண்டு பிடிக்கிறாள்!

வீட்டிலே பிறந்த மேனியாகத் திரியக்கூடாது என்று வந்த நாளிலிருந்தே ஒரு சட்டம் போட்டுவிட்டாள். அதிலே அவருக்கு பெரிய சங்கடம்தான். ஆனாலும் அவள் வீட்டிலே இருக்கும் நேரங்களில் எவ்வளவு கஷ்டத்திலும் அதைக் கடைபிடித்து வந்தார்.

மற்றது இன்னும் கொடூரமானது. அவர்கள் சமையலறையில் ஒரு சிறுமேடை இருக்கும். வசதியானது. இவர்களுக்காகவே கட்டியது போலிருந்தது. எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும் அவளை அந்த மேடையிலே கூப்பிட்டால் வரவே மாட்டாள். அப்படி ஒரு பிடிவாதம். போகிறது.

திடீரென்று அவள் அந்த வீட்டிலிருக்கப் பயந்தாள். அவள் மிகவும் பயப்படுவது மகனைப் பற்றித்தான். கறுப்பு மம்பாவின் விஷம் பொல்லாதது. கடித்த சில வினாடிகளில் உயிர் பிரிந்துவிடும். ம்வாங்கி இந்தப் பாம்பு விஷயத்தில் மிகவும் மெத்தனமாக நடப்பதுபோல் அவளுக்குப் பட்டது.

எமிலியின் அவசரத்திற்கு ஏற்றபடி ம்வாங்கி வேகமாகச் செயல்படவில்லை. அதுதான் அவளுக்குக் கோபம். சமையலறையில் நிலம் அதிர்ந்தது. துக்கம் அனுட்டிக்கும் அரைக் கம்பத்து கொடிபோல அவள் கண்கள் பாதி மூடியிருந்தன. உதடுகள் துடித்தன. கால்களைக் கத்தரிக்கோல் போல விரித்துப் போட்டிருந்தாள். அவள் கைகள் மரெண்டாக் கீரையை மளமளவென்று நறுக்கியபடி இருந்தன.

ம்வாங்கி அவசரத்தில் அவளுடைய மரிந்தா அங்கியை அணிந்திருந்தார். அதிலே பெரிய பூக்கள் போட்டிருந்தன. நுனிக்காலில் நடந்துவந்து மெதுவாக அவள் பக்கத்தில் உட்கார்ந்தார். அவள் கையைப் பற்றினார். அவள் திமிறினாள்.

”விலைபோகாத பெண்ணே! என் வாசனைத் திரவியமே! உன் கண்களை என்மேல் திருப்பு. சூடாய் இருக்கும் தண்ணீர் ஆறித்தானே ஆகவேண்டும். ஒருநாள் இந்தப் பாம்பை நான் கொன்று விடுவேன். கொஞ்சம் பொறுமையாக இரு” என்றார் ம்வாங்கி, மன்றாடும் குரலில்.

”என் மகன் தங்கவேண்டும் என்று விரும்புகிறேன். அவன் இரவு படுக்கப்போகும்போது நான் பார்க்கிறேன். அடுத்தநாள் காலை அவன் கண் விழிப்பதை நான் காணவேண்டுமே என்று என் மனம் பயந்து நடுங்குகிறது. வெள்ளம் கணுக்கால்வரை வந்ததும் வாரி இறைக்க வேண்டாமா? ஒரு பாம்பை அடிக்க இவ்வளவு நாடகமா? உலகத்து உடைமைக்காரரிடம் என் மகனை ஒப்படைத்துவிட்டேன். என் சொற்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. கபிஸா. என் வந்தனங்கள்.”

அவளுடைய வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தன. நீதிபதியின் சுத்தியலைப்போல. ம்வாங்கி அவள் காதுகளை வருடினார். அவள் முனகும் சமயமாகப் பார்த்து பலவந்தமாக இழுத்து அணைத்தார். அவள் தோள்கள் விறைப்புடன் அடிபணிய மறுத்தன. அவள் மேல் உதடு தடிமனாகவும், யாமசோமா இறைச்சி போல சுவையாகவும் இருந்தது.

தலையை ஒரு பக்கம் சாய்த்து அவரைப் பார்த்தாள். மூக்கைச் சுருக்கி பிகு செய்தாள். திரும்பமுடியாத ஒரு எல்லைக்கு தான் தள்ளப்பட்டதை உணர்ந்தாள். சாப்பாட்டின் கடைசி வாய்போல ம்வாங்கி அவளை ருசித்தார்.

யோசப் சொன்ன யோசனை சிக்கனமானது. இலகுவானது. நாலு ’பிங்பாங்’ பந்துகள் வாங்கி முட்டைகளுடன் கலந்து வைத்து விடுவது. பிளாஸ்டிக்கில் செய்த அந்த பந்துகள் முட்டை போலவே இருக்கும். பாம்பு பந்தை விழுங்கிவிடும். இது உத்திரவாதமானது. கிராமங்களில் இதுதான் பாம்பு பிடிக்கும் முறை என்றெல்லாம் யோசப் அளந்தான். பாம்பு ஏமாந்துவிடும் என்று அடித்துக் கூறினான்.

அன்று இரவு ம்வாங்கி மூன்று தடவை எழும்பி பாம்பு வேட்டைக்குப் போய் வந்திருந்தார். அதனால் நேரம் போனது அவருக்குத் தெரியவில்லை. பலபலவென்று விடிந்த பிறகே எழும்பினார். எமிலி மகனையும் தூக்கிக்கொண்டு வேலைக்குப் போயிருந்தாள்.

கூதல் காற்று அடித்தது. ஜகரண்டா மரம் நிலம் தெரியாமல் பூக்களைச் சொரிந்திருந்தது. எங்கும் ஊதா மயம். வழக்கம்போல கோழிப்பண்ணயைச் சுற்றி வந்தார். ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தது. உள்ளே போய்ப் பார்த்தார். இரண்டு பந்துகள் குறைந்துபோய் காணப்பட்டன. அவருடைய நெஞ்சு வேகமாக அடிக்கத் தொடங்கியது.

பரபரப்புடன் வெளியே வந்து மண்ணிலே தேடினார். பாம்பின் தடம் என்று தான் ஊகித்த இடமெல்லாம் தொடர்ந்துபோய்ப் பார்த்தார். அந்த பாம்பு அவ்வளவு சுலபமாக ஏமாந்திருக்கும் என்று அவருக்குத் தோன்றவில்லை.

பீவர் மரத்தைத் தாண்டி யானைப்புற்கள் தொடங்கும் இடத்தில் அதைக் கண்டார். அந்தப் பாம்பு செத்துப்போய் கிடந்தது. மிகவும் செத்துப்போனது. கறுப்பாக நீண்டுபோய் மினுமினுத்தது. அதன் மிகச்சிறிய வாய் பிரிந்துபோய் கிடந்தது. தலையை நிலத்தில் அடித்து அடித்து ரத்தம் கசிந்திருந்தது. எறும்புகள் மொய்த்திருந்தன. அதனுடைய தொண்டைக்குக் கீழ் இரண்டு பந்துகள் மாட்டிப்போய் பம்மிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

எவ்வளவு நீளம்! உடம்பில் ஒரு காயமும் இல்லை. தலை மாத்திரம் சிதைந்துபோய் கிடந்தது. வால் கொஞ்சமாக அசைந்து கொடுத்தது.

பாம்பைப் பார்க்க பக்கத்து குடிசைகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்துவிட்டார்கள். பாம்பின் வால் அசைந்ததைப் பார்த்து ஆளுக்கொரு போடு போட்டார்கள்.

சிறுவர்கள் பாடு கொண்டாட்டம் தான். ம்வாங்கியை மலரமலரப் பார்த்தார்கள். பிறகு பாடத்தொடங்கினார்கள்.

ம்வாங்கி அனயூவா நியோகா

சீயோ சீயோ முவாகா

ம்வாங்கி பெரிய வீரர்தான்

பாம்பை அடித்த சூரர்தான்

இதற்கிடையில் ஒக்கிலா எங்கிருந்தோ ஓடிவந்து சேர்ந்தான். மரண ஊர்வலங்கள் அவன் இல்லாமல் நடைபெறுவதில்லை. பாம்பைத் தூக்கி மாலையாகக் கழுத்திலே போட்டுக்கொண்டான். அப்படிப் போட்டும் பாம்பினுடைய தலையும் வாலும் நிலத்திலே அரைபட்டது. ஒக்கிலா கைகளை விரித்து முழங்கால்களை மடித்து மரண நடனம் ஆடியபடியே புறப்பட்டான். சிறுவர்கள் பின்தொடர்ந்தார்கள். பழைய பெட்டிகளிலும் டின்களிலும் மேளம் அடித்தபடியே அந்த ஊர்வலம் குடிசைகளை சுற்றிச்சுற்றி வந்தது.

பெரியவர்கள் ம்வாங்கியைப் பாராட்டிவிட்டு சென்றார்கள். சிலர் அவருடைய சாமர்த்தியத்தை அளவுக்கு மீறி மெச்சினார்கள். தன் இயல்புப்படி முட்டை குடிக்கவந்த பாம்பு சூழ்ச்சியில் அகப்பட்டு ஒக்கிலாவின் கழுத்தில் அப்படியும் இப்படியும் அசைந்து நிலத்தில் அசிங்கமாக இழுபட்டுக்கொண்டு போனது.

அந்தப் பாம்பின் நீள உடம்பு திரும்பத்திரும்ப நினைவில் வந்தது. இரு சமமான எதிரிகளுக்கிடையில் நடந்த இந்த தர்மயுத்தத்தில் கபடமும் நயவஞ்சகமும் எப்படியோ புகுந்துவிட்டது. இந்த வெற்றியில் என்ன பெருமிதம்? தோல்வியில் கிடைக்கும் அமைதிகூட இல்லையே என்று பட்டது.

ம்வாங்கி வெளிவாசலில் அப்படியே குந்திப்போய் இருந்தார். வெகுநேரம் இருந்தார். எமிலியும் மகனும் திரும்பியபோதுகூட அப்படியேதான் இருந்தார். எமிலி தன் மகனை தொப்பென்று கீழே போட்டுவிட்டு வேகமாக அவரிடம் வந்தாள். சம வயதுடைய இரண்டு பப்பாளிப் பழங்கள் போல அவள் மார்புகள் குலுங்கின.

அவளுடைய முகத்தை அவரால் நேராகப் பார்க்க முடியவில்லை. அவசரமாக எழுந்து நின்றார். வலுவானதும் வளைந்து கொடுக்கக் கூடியதுமான பீவர் மரத்துக் கம்பைத் தூக்கி தூர வீசி எறிந்தார். எறிந்துவிட்டு வீட்டுக்குள் போவதற்குத் தலையைக் குனிந்தார் ம்வாங்கி, சீனியர் சேர்டிபிக்கட் செகண்ட் கிளாஸ்.

*****

மகாராஜாவில் ரயில்வண்டி - (சிறுகதைகள் தொகுப்பு)  - காலச்சுவடு பதிப்பகம்

தட்டச்சு : செ. சரவணகுமார்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்