May 21, 2013

மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள் - அ.முத்துலிங்கம்

பச்சை, மஞ்சள், வெள்ளை பரிசாரகி உடையணிந்து நிற்பவள் ஓர் அகதிப் பெண்; இலங்கை அல்லது இந்தியப் பெண்ணாக இருக்கும். கயானாவாகக்கூட இருக்கலாம். கறுப்பு சருமம், கறுப்பு தலைமயிர், கறுப்பு கண்கள். அவள் உதட்டுச் சாயம், நகப்பூச்சுக்கூட கறுப்பாகவே இருந்தது. அவள் பெயர் நீளமாகவும் அதிக மெய்யெழுத்துக்கள் நிரம்பியதாகவும் இருந்திருக்கக்கூடும். அதைச் சுருக்கி 'ரத்ன' என்று தன் உடையின் ஒரு பக்கத்தில் குத்தி வைத்திருந்தாள். amuttu

பரிசாரகப் பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுத்ததுபோல அவள் மேசைக்கு சற்று தூரத்தில் நின்றாள். கண் பார்க்கக்கூடிய தூரம், காது கேட்கக்கூடாத தூரம். அதுவே விதி.

இன்னும் பல விதிகள் அவளுக்கு தெரியும்.

உணவை மேசையின் மேல் வைக்கும்போது அதை விருந்தினரின் இடது பக்கத்தில் நின்று வைக்கவேண்டும். விதி 12.

மீதமான உணவை மேசையில் இருந்து எடுக்கும்போது அதை விருந்தினரின் வலது பக்கத்தில் நின்று எடுக்கவேண்டும். விதி 11.

விருந்தினரின் நாற்காலியை இழுத்து வசதிசெய்து கொடுக்கும்போது இடது பக்கமாக நிற்கவேண்டும். விதி 26.

நாப்கினை மடித்து பிளேட்டின் இடது பக்கத்தில் வைத்தால் விருந்தினர் முடித்துவிட்டார் என்று அர்த்தம். விதி 7.

நாப்கினை மடித்து பிளேட்டின் நாற்காலியின் மேல் வைத்தால் விருந்தினர் இன்னும் முடிக்கவில்லை என்று அர்த்தம். விதி 9.

சாப்பிட பயன்படுத்தும் உபகரணங்கள் வெளியில் இருந்து உள்ளுக்கு குறைந்துகொண்டே வரவேண்டும். விதி 19.

இன்னும் இருக்கின்றன. அவளுக்கு எல்லாமே மனப்பாடம்.

அவளுக்கு தொல்லை கொடுப்பது விதிகள் அல்ல. ஆங்கில வகுப்பு. பெயர் சொற்களையே அவளுடைய ஆசிரியர் படிப்பிக்கிறார்; அவையே முக்கியம் என்றும் சொல்கிறார். சாலட், நாப்கின், சீஸ், கூகம்பர், கிளாம் சூப், ஒலிவ், லெட்டுஸ். வினைச்சொற்கள் இப்போது தேவை இல்லை, அவை தானாகவே வந்து இணைந்துகொள்ளும் என்கிறார். எப்போது, எந்தத் தேதியில் வந்து சேரும் என்பதை அவர் சொல்லவில்லை. ஸ்தோத்திரம்போல அவள் ஓர் ஒற்றை ரூல் கொப்பி நிறைய பெயர்ச் சொற்களையே எழுதி வைத்து பாடமாக்குகிறாள். வினைச்சொற்கள் இல்லாமல் அவற்றை எப்படி பயன்படுத்துவது? ஆனால் அவள் ஆசிரியர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்.

அவளுடைய அறைச் சிநேகிதி அவள் படிக்கும் முறையை பரிகாசம் செய்கிறாள். இதனிலும் உத்தமமான ஒரு வழி அவளுக்கு தெரிந்திருக்கும். ஒரு காதலன் கிடைத்தபிறகு அவள் காலண்டரில் புள்ளடி போட்டு வைக்கத் தொடங்கியிருந்தாள். அந்த தினங்களில் அகதிப் பெண் பதினொரு மணிக்கு முன்னர் அறைக்கு திரும்பமுடியாது. காதலர்கள் சந்திக்கும் புனித கணத்துக்கு அவளால் கெடுதல் வரக்கூடாது என்கிறாள். தகரக் குழாய் சத்தத்தில் அவள் காதலன் பேசுகிறான். அவன் கையை நீட்டும்போது அது திராட்சைக் குலைபோல தொங்கும். அவள்தான் அதைப் பிடித்துக் குலுக்கவேண்டும். அவன் கண்களும் அவள் முகத்தை நேரே பார்க்காமல் அவனுடைய வலது தோளுக்கு மேலால் பார்க்கின்றன.

அன்றைய விருந்தை கனடாவின் அதி செல்வந்தர்களில் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். அவர் வீட்டிலே நாளுக்கு ஒரு தடவை திரைச் சீலைகளையும், இரண்டு தடவை படுக்கை விரிப்புகளையும், எட்டு தடவை பல்புகளையும் மாற்றுவார்களாம். அவ்வளவு பெரிய பணக்காரர். மணி பதினொன்றைக் கடந்து வெகு நேரமாகிவிட்டது. அவளுக்கு மணித்தியாலத்துக்கு இவ்வளவு என்று சம்பளம். திருமண விருந்து, பிறந்ததின விருந்து போன்ற கொண்டாட்டங்களின்போது அவள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பாள். அவளுடைய மேலாளர் தவறுகளை அனுமதிப்பதில்லை. கறுப்பு ஸ்டொக்கிங்க்ஸ் அணிந்து, கைகளை ஒரு பறவை பறக்க ஆயத்தம் செய்வதுபோல விரித்து, தட்டு தட்டென்று அறையினுள் நிழையும்போது அவள் அளவு கன அடி காற்று வெளியேறிவிடும். இதைக் கண்டுபிடிப்பதற்கு ஆர்க்கிமெடிஸ் தேவையில்லை. அகதிப் பெண்ணே அதைச் செய்துவிடுவாள்.

திடீர் திடீரென்று மேலாளர் பரீட்சை வேறு வைப்பார்.

'இதற்கு என்ன பெயர்?'

'புட்டிங்.'

கரண்டியால் ஒரு துண்டை வெட்டி வாயிலே வைத்து சுவைப்பார்.

'இப்போது இதற்கு என்ன பெயர்?'

'எச்சில் உணவு.'

'இதை என்ன செய்யவேண்டும்?'

'குப்பையில் வீச வேண்டும்.'

அவள் பரீட்சையில் பாஸ்.

புத்தகத்தில் சொல்லப்பட்ட ரூல்கள் தவிர தனிப்பட்ட முறையில் அவளுக்கும் சில விதிகளை மேலாளர் உண்டாக்கியிருந்தார்.

விருந்தினர்களுடன் இன்முகமாய் இருக்கவேண்டும். அது அவளுக்கு தெரியும்.

விருந்தினர்கள் குறிப்பறிந்து அவர்களை திருப்திப் படுத்தவேண்டும். அது அவளுக்கு தெரியும்.

விருந்தினர்களுக்கு எரிச்சலூட்டும் காரியத்தை செய்யக்கூடாது. அது அவளுக்கு தெரியும்.

அகதிப் பெண்ணின் ஆங்கிலம் குறைபாடுள்ளது. ஆகவே விருந்தினர்களுடன் அவள் பேசுவதை தவிர்க்கவேண்டும். அவர்கள் ஏதாவது கேட்டால் புன்னகையை தாராளமாக செலவு செய்யலாம். இந்தக் கடைசி விதி அவசியமில்லாதது என்றே அவள் நினைத்தாள். வினைச்சொற்கள் இல்லாத வசனங்களை அவள் பேசும்போது அவை யாருக்குமே புரிவதில்லை.

பிரதம மேசைக்கு எதிர் மேசையில் இருந்த குடும்பம் வினோதமாக இருந்தது. தாய்போல தோற்றமளித்தவளுக்கு வயது 30 இருக்கலாம். தகப்பனுக்கு 50. மகனுக்கு 18, மகளுக்கு 8 என்று அவள் கணக்கு போட்டாள். அப்படியானால் அந்த மனைவி இரண்டாம் தாரமாக இருக்கலாம். மகன் முதல் தாரத்துக்கு பிறந்திருக்கவேண்டும். எல்லாம் ஒரு ஊகம்தான். ஊகிப்பதில் அவள் மிகவும் கெட்டிக்காரி.

அவர்களுடைய மேசை அவள் பொறுப்பில் இருந்தது. அது மிகவும் கலகலப்பனது. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை ஏதோ பேசி சிரித்து சத்தம்போட்டு மகிழ்ந்தார்கள். அவர்கள் பேசியது போலந்து மொழியாக இருக்கலாம். அதில் நிறைய மெய்யெழுத்துக்கள் கலந்து கிடந்தன, ஆனால் அவை பெயர்ச்சொற்களா, வினைச்சொற்களா என்பது தெரியவில்லை. ஒரு ஐம்பது வயது தகப்பனுக்கும், முப்பது வயது மனைவிக்கும், 18 வயது மகனுக்கும், 8 வயது மகளுக்கும் இடையில் பொதுவாக என்ன இருக்கும். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் பரிசாரகிக்கும் சிரிப்பு தொற்றியது.

அப்பொழுதுதான் அவன் அவளைப் பார்த்தான். அவளை ஒருவருமே பார்ப்பதில்லை. இந்த பதினெட்டு வயது, சிவப்பு தலைமுடிக்காரன் அவளைப் பார்க்கிறான். அவன் கண்கள் துளைத்துவிடும்போல இருக்கின்றன. அந்த விருந்தில் கலந்துகொண்ட எத்தனையோ இளம் பெண்கள் அங்கே இருந்தார்கள். ஆனால் இவளையே அவன் பார்த்தான். விதிகள் என்ன சொல்கின்றன. மேலாளர் இதைப்பற்றி என்ன நினைப்பார். அவள் அந்தப் பார்வையை திருப்பித்தர முடியுமா? அவளுக்கு தெரியவில்லை. தன் வேலையை அவள் இன்னும் சிரத்தையுடன் கவனித்தாள்.

இதற்கு முன் என்றும் ஏற்பட்டிராத வகையில் அவள் மனதில் ஏதோ குறுகுறுவென்று ஒடியது. தன் தங்கையுடன் முகத்தை திருப்பி பேசிப் பேசி சிரித்தான் சிவப்பு முடிக்காரன். அந்த சிரிப்பின் மிச்சத்தை அவள் பக்கம் திரும்பி முடித்துக்கொண்டான். அவள் அவர்களுக்கு ஏதாவது பரிமாறப் போகும்போதெல்லாம் அவன் கண்கள் அவளைத் தொட்டு வாசல்வரை கொண்டுவந்து விடுவது வழக்கமானது.

அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவன் மடியிலிருந்த நாப்கின் மெதுவாக நழுவி கீழே விழுந்தது. அப்படி விழுவதற்கு அவன் விரல்கள் உதவிசெய்தன என்றே நினைக்கிறாள். அதற்கும் ஒரு விதி இருக்கிறது. அவள் நாப்கினை குனிந்து எடுத்து அவன் கையில் கொடுத்தாள். அவன் நன்றி என்று வாங்கிக்கொண்டான். அப்படிச் சொன்ன அதே நேரம் அவன் கைவிரல்கள் அவள் உள்ளங்கையை ஒருவித சந்தேகத்துக்கும் இடமில்லாமல் அழுத்தின. நடுக்கம் வழக்கம்போல அடிக்காலில் இருந்து தொடங்கியது. ஒன்றுமே நடக்காததுபோல அவள் மறுபடியும் தன்னிடத்துக்கு நகர்ந்தாள். அவளைச் சுற்றியிருக்கும் காற்றைக் கலைத்துவிடக்கூடாது என்பதுபோல நின்றாள். மேசையில் பேசுவது கேட்கக்கூடாத தூரமாகவும், அவர்கள் பார்க்கக்கூடிய தூரமாகவும் அது இருந்தது. அது ரூல் 17.

இப்பொழுது நடனம் ஆரம்பமாகிவிட்டது. அவனுடைய தாயும் தகப்பனும் எழுந்து மேடைக்கு போய்விட்டார்கள். தாய் சுழன்று சுழன்று ஆடினாள். ஆடலறை முழுக்க அவள் நிறைந்து இருந்தாள். தகப்பன் ஆகக் குறைந்த அங்க அசைவுகளை வெளிப்படுத்தி தன் பங்கு நடனத்தை கச்சிதமாக நிறைவேற்றினார். அவன் தங்கை நாற்காலியை நகர்த்தி வைத்து நடனத்தையே கண் கொட்டாமல் பார்க்கத் தொடங்கினாள்.

திடீரென்று அவன் முகத்தில் புன்னகை தோன்றியது. கையை உயர்த்தி அவளை அழைத்தான். ரூல் 16. அவள் விரைந்து சென்று பணிவுடன் ஒரு குளவியின் இடைபோன்ற தன் இடையை கண் மதிக்கமுடியாத அளவுக்கு வளைத்து எஸ் என்றாள். அந்த வார்த்தை பேசுவதற்கு அவளுக்கு அனுமதி இருந்தது.

அவன் 'கொஃபி, டீ காஃப், டூ சுகர்' என்றான். அவன் அந்த வார்த்தைகளை சொன்னது, அவளுடைய பெயரை யாரோ கனிவுடன் உச்சரித்ததுபோல இனிமையாக இருந்தது. 'கொஃபி, டீகாஃப், டூ சுகர்' அவன் நாக்கில் தொடாமல் அந்த வார்த்தைகள் உருண்டு வந்து விழுந்தன.

அன்று விருந்து முடிவதற்கிடையில் அவன் மூன்றுதரம் கொஃபி ஓடர் பண்ணிவிட்டான். அவளுடைய கடமை அவன் கேட்டதை பரிமாறுவது. ரூல் 22. அவன் இன்னும் 20 தடவை கேட்டாலும் அவள் பரிமாறத் தயாராக இருந்தாள்.

விருந்தினர்கள் ஒவ்வொருவராக புறப்பட்டுப் போயினர். இவர்களும் விரைவில் போய்விடுவார்கள். அவனுடைய தாயார் கைப்பையை திறந்து ஏதோ சரிசெய்தபடி அதை தோள்மூட்டிலே மாட்டி தயாரானாள். இவன் தன் நாப்கினை எடுத்து நாலாக மடித்து தன் பிளேட்டின் மேல் அவளைப் பார்த்தபடியே வைத்தான். பிறகு கண்களால் சைகை காட்டினான்.

இவள் ஒரு விதியையும் மீறவில்லை. நிதானமாக எல்லா கோப்பைகளையும் ஒவ்வொன்றாக அகற்றினாள். அவன் முறை வந்தது. அவன் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனுடைய பிளேட்டை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள். நாப்கினை அகற்றியபோது கீழே ஐந்து டொலர் நோட்டு இருந்தது. பேனையால் நாப்கினில் ஒரு டெலிபோன் நம்பர் வேறு எழுதியிருந்தது. அவள் அந்த நம்பரை தன் உள்ளங்கையில் உடனேயே எழுதி வைத்தாள். அன்று இரண்டாம் முறையாக அவளுடைய உள்ளங்கை அவளுக்கு பயன்பட்டது.

அறைச் சிநேகைதியை காணவில்லை. கையை திருப்பி நம்பரைப் பார்த்தாள். அது இன்னும் அழியவில்லை. உரத்து அந்த இலக்கத்தை சொன்னாள். அந்த இலக்கம்கூட இனிமையாக ஒலித்தது. அவள் மனம் என்றும் இல்லாதவிதமாக அந்தரத்தில் உலாவியது. சிவப்பு முடிக்காரன் இப்பொழுது என்ன செய்வான். அவளை நினைப்பானா? அறை அமைதியாக இருந்தது. ஒருமுறை அவனை அழைத்தால் என்னவென்று தோன்றியது. அந்த நடுநிசியில் யாரும் பேச மாட்டார்கள் என்றே நினைத்தாள். ஆகவே ஒவ்வொரு தானமாக மெதுவாக டயல் பண்ணினாள்.

மறுமுனையில் இருந்து ஒரு குரல் உடனேயே ஒலித்தபோது இவளுக்கு புரிந்துவிட்டது அவன்தான் என்று. 'கொஃபி, டீ காஃப், டூ சுகர்' என்று உச்சரித்த அதே உருண்டையான குரல். ஆனால் அவளுடைய கைகள் நடுங்கின, வாய் நடுங்கியது. தொடைகள் நடுங்கின. உடனே அவள் டெலிபோனை திருப்பி வைத்துவிட்டாள். ஆனால் சரியாக ஒரு நிமிடத்தில் தொலைபேசி திரும்பவும் ஒலித்தது. கடைசியாக வந்த நம்பர் பட்டனை அவன் அமுக்கியிருக்கிறான். அவள் தொலைபேசியை எடுக்கவில்லை. சுருண்டுபோய் இருக்கும் ஒரு பாம்பை பார்ப்பதுபோல எட்டத்தில் நின்று அதைப் பார்த்தாள். அது அடித்துக்கொண்டே போனது. இறுதியில் அவனிடம் இருந்து வந்த ஒரு தகவலை டெலிபோன் சேமித்து வைத்துக்கொண்டது.

அவள் அந்த தகவலை ஓடவிட்டுக் கேட்டபோது பாதிதான் புரிந்தது. அவன் குரலில் தகவலை சரியான இடத்தில் விடுகிறோமோ என்ற தயக்கம் தெரிந்தது. யார் அழைத்தது என்ற ஊகமும் இருந்தது. அவளை திருப்பி அழைக்கும்படி மன்றாட்டமாகக் கேட்டிருந்தான்.

அவள் அவனை அழைக்கவில்லை. ஆனால் வேண்டியபோது அவனுடைய குரலை ஓடவிட்டுக் கேட்டாள். தினம் ஒரு சடங்குபோல அதைச் செய்து வந்தாள். அது எப்படியோ அவளுடைய அறைவாசிக்கு தெரிந்துவிட்டது. அவளுக்கு எரிச்சலைக்கூட உண்டாக்கியிருக்கலாம். ஒரு நாள் அவள் இல்லாத நேரம் பார்த்து அந்த அற்புதமான குரலை அறைவாசி அழித்துவிட்டாள். அகதிப் பெண் அன்று துடியாய் துடித்துப் போனாள்.

அவர்கள் வசித்த அறை ஒரு கூரை, ஒரு கதவு, ஒரு யன்னல் கொண்டது. அவளுடைய கட்டிலுக்கு பக்கத்தில் அவள் சிநேகிதியின் கட்டில் இருந்தது. கையை நீட்டினால் சிநேகிதி முகத்தில் அது இடிக்கும். ஆகவே அகதிப் பெண் சுவருடன் முட்டிக்கொண்டு படுப்பாள். இன்னும் பல இன்னல்கள் இருந்தன. தகரக் குழாய் குரல்காரன் அவளைப் பார்க்கும் விதம் அவளுக்கு பிடிக்கவில்லை. அவள் சிநேகிதி இல்லாத சமயங்களில் டெலிபோனில் கூப்பிட்டு சிநேகிதியைப் பற்றி விசாரிப்பான். அவள் இல்லையென்ற பிறகு தொலைபேசியை கீழே வைக்கவேண்டியதுதானே. அவன் செய்வதில்லை, ஒரு சம்பாசணையை உண்டாக்கப் பார்ப்பான்.

தோள்மூட்டுக்கு மேல் சூரியன் உயர எழும்பாத ஒரு பனிக்காலத்து பகல் வேளை. அவளுடைய அறைத் தோழியும், காதலனும் அவளுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அவள் எப்படி மறுத்தும் அவர்கள் கேட்கவில்லை. அவளை அன்றுடன் ஒரு வழி பார்த்துவிடவேண்டும் என்பதுபோல வருந்தி அழைத்தார்கள். சரி என்று அவளும் போனாள். அவளை இம்சிப்பதுதான் அந்த விருந்தின் முழு நோக்கமும் என்பது பின்னாலேதான் அவளுக்கு தெரிந்தது. மதிப்புக்காக கறுப்புக்கண்ணாடிகளை தங்கள் தங்கள் தலைகளில் குத்தி வைத்துக்கொண்டு காதலர்கள் இருவரும் அடிக்கடி கண் ஜாடையில் பேசினார்கள். திடீரென்று பெருங்குரலில் சிரித்தார்கள். அவளுக்கு புரியவில்லை. சிரிப்புக்கு காரணம் பல சமயங்களில் அவள்தானோ என்றும் தோன்றியது.

அவளுக்கு அது பிடிக்கவில்லை. தினம் ஒரு விருந்து என்று வெட்டி முறிகிறாள். அவளுக்கே ஒரு விருந்தா? ஆவு ஆவென்று அலுவலக மண்டபத்துக்கு அன்று வந்து சேர்ந்தபோது இன்னும் சில நிமிடங்களே இருந்தன. வழக்கத்தில் வேலை தொடங்க ஐந்து நிமிடம் முன்பாகவே வந்து சீருடை அணிந்து தயாராகிவிடுவாள். ரூல் 16. எந்த மண்டபத்துக்கு வேண்டுமானாலும் அவளை அவர்கள் அனுப்புவார்கள். ரூல் 18. அவளைப்போல பரிசாரகி வேலைகேட்டு வந்த சிலர் அங்கே காத்திருந்தார்கள். யாரையோ பழிவாங்கத் துடிப்பதுபோல அன்று பத்து மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாள். ஒரு நிமிடம்கூட உட்காரவில்லை. கால்கள் கெஞ்சின. கைகள் பாரமான தட்டங்களை தூக்கியபடி அலைந்து சோர்ந்தன. அது அவளுக்கு பழக்கமாகிப் போயிருந்தது.

நடுநிசி தாண்டியும் விருந்து முடிந்தபாடில்லை. அப்படியான வேளைகளில் மேலாளருக்கு கருணை பிரவாகம் எடுக்கும். ஐந்து நிமிடம் ஓய்வு தருவார். சாப்பாட்டுக் கூடத்துக்கும், விருந்து மண்டபத்துக்கும் இடையில் ஒரு சின்ன ஒடுக்கமான அறை. அங்கே சுழட்டி டயல் பண்ணும் கறுப்பு டெலிபோன் ஒன்று இருந்தது. அதைக் கடந்து போகும் போதெல்லாம் அவள் மனம் அலைபாய்ந்தது; திக்திக்கென்று அடித்தது. என்றும் இல்லாதவாறு அன்று அவளுக்கு அவன் நினவு வந்துகொண்டே இருந்தது.

பல வாரங்களுக்கு முன் முதல் தடவையாக அவனை அழைத்த பிறகு மேலும் மூன்று முறை அழைத்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் ஒரு முரட்டு ஆண்குரல் பேசியது. அவனுடைய தகப்பனாக இருக்கலாம். அவள் உடனே தொலைபேசியை வைத்துவிடுவாள். அன்று என்னவோ அவன் குரலை ஒரு முறையாவது கேட்கவேண்டும் என்று பட்டது. கையிலே இருந்த தட்டத்தை கீழே வைத்துவிட்டு டெலிபோனை சுழட்டி டயல் பண்ணினாள். விரல்கள் நடுங்கின. நெஞ்சு, இன்னும் சில கணங்களில் நின்றுவிடப்போகும் ஒரு குருவியின் இருதயம்போல, படபடவென்று அடித்தது.

அதிசயமாக அவன் குரல் கேட்டது. அவன்தான். அவளுக்கு சந்தேகமே இல்லை. உடனேயே உலகம் வரண்டுவிட்டது. வாயிலே சத்தம் வருவது நின்றுவிட்டது. அவன் ஹலோ ஹலோ என்று விடாமல் ஒலித்தான். என்ன பேசுவது? என்ன பேசுவது? எந்த வார்த்தையை சொல்வது, என்ன சுருதியில் ஆரம்பிப்பது, ஒன்றையுமே அவள் சிந்திக்கவில்லை. அவனுடைய குரலைக் கேட்டாலே போதும் என்று நினைத்திருந்தாள். அவன் மீண்டும் ஹலோ என்றான்.

'மொஸரல்லா சாலட்'

'லெட்டூஸ்'

'ப்ரூஸெட்'

'சுப்படீ வங்கோல'

'லாசன்யா'

அவளிடம் வினைச் சொற்கள் இல்லை. சில வாரங்களுக்கு முன்பு அவன் சாப்பிட்ட அத்தனை உணவு வகைகளையும் ஒப்பித்தாள். மறுபக்கத்தில் இருந்து சிரிப்புக்கு நடுவில் ஒரு சத்தம் கேட்டது. அத்துடன் பரிசாரகி டெலிபோனை துண்டித்து விட்டாள்.

இது நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அவள் படுக்கையில் கால்களை நீட்டி, ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, சிவப்பு முடிக்காரனின் முகத்தை ஞாபகத்துக்கு கொண்டுவர முயன்றாள். திடீரென்று அவளுடைய சிநேகிதி கதவைத் திறந்து பிரவேசித்தாள். அவள் கதவை அடித்துச் சாத்தும் சத்தத்திலும் பார்க்க திறக்கும் சத்தம் கூடுதலாக இருக்கும். இதை எப்படிச் சாதிக்கிறாள் என்பது தெரியவில்லை. நின்ற கோலத்தில் கால்களை உதறி சப்பாத்துகளை கழற்றினாள். கைப்பையை வீசி எறிந்தாள். அவள் உதடுகள் மேலும் கீழும் இமைகள் துடிப்பதுபோல அடித்தன, ஆனால் சத்தம் வரவில்லை.

அகதிப் பெண் வாயே திறக்கவில்லை. அப்போதுதான் விழித்ததுபோல மறுபக்கம் சுழன்று கழுத்தை இரண்டு பக்கமும் திருப்பி பார்த்தாள். மிக மட்டமான அறை; மட்டமான சிநேகிதி; மட்டமான போர்வை; மட்டமான மணம். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரு சுவரைக் காணக்கூடிய அந்த அறையில் அவள் கண்களை மூடிக்கொண்டு மீண்டும் அவனுடைய முகத்தை நினைவில் மீட்டாள். அவனுடைய சொண்டுகள் உருண்டு வார்த்தைகள் வழுக்கி விழுந்ததை எண்ணிப் பார்த்தாள்.

'கொஃபி, டீகாஃப், டூ சுகர்'

'கொஃபி, டீகாஃப், டூ சுகர்'

அப்படியே அவள் தூங்கிப்போனாள்.

டெலிபோன் சம்பாசணை வெட்டுப்பட்ட பிறகு அவன் சும்மா இருக்கவில்லை. விருந்தில் அவன் சாப்பிட்ட அத்தனை உணவு அயிட்டங்களையும் சொன்னது பரிசாரகி என்பதை ஊகிக்க அவனுக்கு சில நிமிடங்களே எடுத்தன. ஆனால் அவள் வேலை செய்யும் கம்பனியை கண்டு பிடிக்க கொஞ்ச அவகாசம் தேவைப்பட்டது. அந்தக் கம்பனி, தன் ஊழியர்களை எந்த விருந்து மண்டபத்துக்கு, எப்போது அனுப்புகிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது. ஆனாலும் அவன் முயற்சியைக் குறைக்கவில்லை. அடுக்கடுக்காக பல விருந்து மண்டபங்களுக்கு போய் அவளைத் தேடினான். அது ஒன்றும் அகதிப் பெண்ணுக்கு தெரியாது.

படிக்கட்டுகள் முடிவுக்கு வந்த உச்சிப் படியில் அவன் நின்றான். அகதிப் பெண் கீழே நின்றாள். அவன் இவளைப் பார்க்குமுன் இவள் அவனைப் பார்த்தாள். அவனும் இப்போது பார்த்துவிட்டான். அவனுடைய பார்வையில் போலந்திலிருந்து அவன் கொண்டுவந்திருந்த அத்தனை வார்த்தைகளும் இருந்தன. அவளுடைய பார்வையில் பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், இன்னும் இலக்கணத்தில் சொல்லப்பட்ட அத்தனை வகையான சொற்களும் இருந்தன. அவனுக்கு அவை எல்லாம் தேவைப்பட்டன.

அவள் தன் கையிலே வைத்திருந்த தட்டத்தை பச்சை, மஞ்சள், வெள்ளை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். சீருடையில் அவள் தேவதைபோல காட்சியளித்தாள். இரண்டு இரண்டு படியாக அவன் பாய்ந்து நெருங்கியபோது அவர்களுக்கிடையில் அந்த தட்டம் இடைஞ்சலாக இருந்ததைக் கண்டான். அவள் அதை இறுக்கிப் பிடித்திருந்தாள். அவன் கீழே பார்த்தான். அவள் இரண்டு கைகளாலும் காவிய தட்டத்தில் இன்னும் சில நிமிடங்களில் யாரோ சாப்பிட்டு முடிக்கப் போகும் உணவு வகை இருந்தது.

அவள் விதி 27 ஐயும், 32 ஐயும், 13 ஐயும் ஒரே சமயத்தில் முறித்தாள்.

********

நன்றி: அ.முத்துலிங்கம் தளம்

May 18, 2013

ஞானக்கூத்தன்-நேர்காணல்

“ஒரு மொழிக்கு 50 வருஷம் என்பது மிகக் குறைந்த காலம்”
- சந்திப்பு : குவளைக்கண்ணன்

புதுக்கவிதைன்னு பேர் வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இது ஏன் கொண்டாடப்படணும்னு நினைக்கிறீங்க?

தமிழ் இலக்கியத்துல பெரிய இயக்கங்கள் நடந்திருக்கு. சங்க இலக்கியம்னு சொல்றோமே அதெல்லாம் இயக்கமாத்தான் ஆரம்பிச்சிருக்கு, ஆனா யாரு அதை ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. குறிப்பு உள்ளடக்கமெல்லாம் வெண்பாவுலதான் எழுதத் தொடங்கியிருக்காங்க. அப்புறம் ஆசிரியப்பாவுல எழுதறாங்க, அத ஏன் செஞ்சாங்கன்னு தெரியாது. அப்புறம் சங்க இலக்கியம் Gnanakoothan Drawing by jk  (jayakumar)நலிவடைஞ்சு பக்தி இலக்கியம் தோன்றுது. அதை யார் தொடங்குனாங்கன்னும் உறுதியாச் சொல்ல முடியாது. அதுக்கப்புறம் நவீன காலத்துல தாயுமானவர்கிட்ட உள்ளடக்க மாறுதல் வருது. அது ஒரு இயக்கமா மாறல. அதுவும் பக்தி இலக்கியத்தோட சேர்ந்திருது. அப்புறம் 1800களில் ஆங்கிலேயர்கள் வந்து ஒரு காரியம் பண்ணாங்க. அவங்களோட நோக்கம் நம்மோட இலக்கியங்களை அவமானப்படுத்தறது. நம்மோட இலக்கிய மதிப்பை இழக்கச் செய்வது அவங்களுக்கு முக்கியமான நோக்கமா இருந்தது. அவங்க அத வெற்றிகரமா செஞ்சாங்க. தேசிய இயக்கம் வந்தபோது நம்ம இலக்கியத்துக்கு மறுபடியும் மதிப்பு வந்தது. தேசிய அரசியல் இயக்கமா கலை இலக்கியம் மாறி நம்பிக்கை தரக்கூடிய மறுமலர்ச்சி இயக்கமா ஆவதைப் பாரதியார் கிட்ட நாம பாக்குறோம். ஆனா அதுவும் ஒரு கட்டத்தோட நின்னு போச்சு. பாரதியார் ஒரு கவிஞரா இந்தப் புதிய கருத்துகளச் சொல்ல முடிஞ்சுதே தவிர, ஒரு இயக்கமா மற்ற மொழி இலக்கியங்களுக்கு நிகரான இலக்கிய முயற்சிகளத் தூண்டக்கூடியதா அந்தப் போக்கு வரல. தன்மானத்த மீட்டுக்கொடுத்ததோட புதிய இலக்கியத்தைப் படைக்க என்னென்ன செய்யணுமோ அதைச் செய்யுறதுதான் தமிழ் நவீன இலக்கியத்தோட தொடக்கம். அது சிறுகதையானாலும் நாடகமானாலும் கவிதையானாலும்.

கவிதைன்னு வரும்போது அப்போ திராவிட இயக்கம் உதிக்குது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள் கிட்டத்தட்ட பிரிட்டீஷ் கொள்கையை ஒட்டி இருந்தன. நம்ம கலை இலக்கியங்கள் மேல நமக்கு மதிப்பு குன்றச் செய்யறது, அவற்றால நமக்குப் பிரயோஜனம் இல்லை, நமக்கு அவமானமே தவிர வேறொண்ணுமில்ல அப்படிங்கற கருத்த அறிமுகம் செய்தது. அப்ப அதிலிருந்து மீள வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டது. படைப்பிலக்கியம்னு ஒண்ணு கவிதையில் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, அதற்குத் தடையா இருந்த விஷயம் இலக்கணம். யாப்பிலக்கணம். அது பாரதியார் காலத்திலேயே நவீனத்துவம் ஆகிட்டுது. நமக்கு வால்ட் வில்ட்மன் தெரிஞ்சுட்டுது. ஃப்ரெஞ்ச் இலக்கியம் தெரிஞ்சுது. கவிதைங்கிறது யாப்பில்லாமயும் படைக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுது. எலியட்டோட கருத்துகள் நமக்கு வந்தன. இதை உணர்ந்தது முதல்ல பாரதியார் பிறகு பிச்சமூர்த்தி, ராஜகோபாலன். அந்தக் கட்டத்துல வசன கவிதைன்னு ஒண்ணு இந்தியா முழுவதும் வர ஆரம்பிச்சிட்டுது. அந்த வசன கவிதையைப் பிச்சமூர்த்தியும் கு. ப. ராவும் 1939ல எழுத ஆரம்பிச்சாங்க. இப்போ எழுபது வருஷம் ஆயிருச்சு. இடையில அவங்க வசன கவிதை எழுதுறத விட்டுட்டாங்க. அப்புறம் மேற்கத்திய இலக்கியத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு இயக்கம் நம்மிடையே இல்லாமல் போயிருச்சு. புதுக்கவிதைங்கிற பேர்ல நம்முடைய கவிதைகள் இனிமே இப்படி இப்படி இருக்கணும் அப்படிங்கிற ஒரு அறிக்கையைத் தயாரிச்சாங்க. முதல் தடவையா தமிழிலக்கியத்துல ஒரு அறிக்கையை வெளியிட்ட இயக்கம் தோன்றியது அதிசயமான ஒரு நிகழ்வு. 1958இல் க.நா.சு அதைச் செஞ்சாரு. புதுக்கவிதைங்கிற பேரே உலக இலக்கியம் தொடர்பானது. புதுசுங்குற சொல் டபிள்யூ.ஹெச். ஆர்வெல் கொண்டு வந்தது. நியூ சிக்னேச்சர். இடதுசாரி தொடர்பான நியூங்கிறது அதையொட்டிப் புதுக்கவிதைன்னு க.நா.சு செஞ்சாரு. வசனம் வேற கவிதை வேற என்ற விமர்சனங்களை அது ஏற்படுத்தியது.

1958ல புதுக்கவிதை அறிக்கையோட இடதுசாரி சார்புடைய சரஸ்வதில க. நா. சு அந்த இயக்கத்த ஆரம்பிச்சு வச்சாரு. 59ல எழுத்து மூலமா அது பரவ ஆரம்பிச்சுது. தமிழிலக்கிய வரலாற்றில் மிகப் பெரிய இயக்கத்தைப் புதுக்கவிதை செய்ததால் அதை நாம் கொண்டாட வேண்டிய கடமை இருக்குது. பெருமைப்பட வேண்டிய அவசியம் இருக்குது. அதுக்குக் காரணம் சிற்றிதழ்கள்தான் புதுக்கவிதையைக் கண்டு பிடிச்சது, உருவாக்கியது. அரசியல் சார்பற்ற மத, சமய சார்பற்ற ஒரு இலக்கியத்தை, வெளியை உருவாக்கி கலை இலக்கியக் கருத்துகளைப் புதுமைப்படுத்தியது. அந்த மாறுதலோட சின்னம்தான் புதுக்கவிதை.

தமிழுக்குப் புதுக்கவிதை என்ன பண்ணியிருக்கு?

புதுக்கவிதை சம காலத்த அப்படியே பிரதிபலிச்சிருக்கு. இன்றைய வரை புது விஷயம் உள்ள வர்றதுக்குப் புதுக்கவிதை திறந்துவைத்த கதவுகள் அப்படியே இருக்கு. அரசியல் கட்சிகள்லகூடப் புதுக்கவிதை எழுதுற குழுவும் மரபுக்கவிதை எழுதுற குழுவுமா இருக்கு. ஒரு புதிய உணர்வைப் புதுக்கவிதை உருவாக்கியிருக்கு. நாடகம், சிறுகதை எல்லாத்துக்கும் சேர்த்ததான ஒரு பொது அடையாளம் புதுக்கவிதை. அந்தந்தக் காலத்துல எது புதுசோ அது புதுக்கவிதைன்னு க.நா.சு. சொல்லியிருக்காரு.

புதுக்கவிதை வந்தப்புறம் மொழி என்ன ஆகியிருக்கு? மொழிக்குப் புதுக்கவிதை இயக்கம் என்ன செய்திருக்கிறது?

புதிய புரட்சியை உண்டுபண்ணியிருக்கு. புதிய சொல்லாக்கங்கள் உருவாகியிருக்கு. புதிய சொல்லாக்கங்கள் புதிய பொருளைக் குறிக்கிறது. அந்தப் புதுப் பொருள் காலத்தின் அடையாளம். இப்போ குறுஞ்செய்தி கைபேசியெல்லாம் கவிதைல வருது. இது மரபுல சாத்தியமே இல்லை. புதுக்கவிதைல சந்தம் இல்லாததுனால எந்தச் சொல்லையும் நீங்க கவிதைக்குள்ள கையாள முடியும். சந்தம் இருந்தபோது சொற்களப் பயன்படுத்தறதுல நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. அதுல இருந்து விடுபட்ட புதுக்கவிதை ஒரு புதிய கலாச்சாரத்தைக் கொண்டுவந்திருக்குன்னும் சொல்லலாம். ஒரு பொது தளத்தில் சந்திக்க முடியணும். உங்க மத நம்பிக்கை வேறயா இருக்கலாம். அரசியல் ஈடுபாடு வேறயா இருக்கலாம். உங்க சினிமா வேறயா இருக்கலாம். ஆனா புதுக்கவிதைன்னு வரும்போது நாம சந்தித்துப் பேச முடியுது. நமக்கு ஒரு பொது வெளி கிடைக்குது.

அதாவது எழுதுறவங்களுக்கு, வாசிக்கிறவங்களுக்கு, ஆர்வம் உள்ளவங்களுக்கு மட்டுமான பொது வெளி.

ஆமா இலக்கியத்துக்கு ஒரு சமுதாயம் இருக்கு இல்லையா?

இதுக்கு அப்பாற்பட்டு, திக இருந்தது. திமுகன்னு ஒரு கட்சி வருது. தமிழ் காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்னதெல்லாம் அவங்கதான். அப்புறம் திமுகன்னு அரசியல் கட்சியா வரும்போது தமிழக் கொண்டாடுறாங்க. அப்படித்தான் அரசியலுக்கே வர்றாங்க. அங்க மாற்றம் வருது இல்லியா? இந்த மாதிரி என்ன மாற்றம் இங்க வந்தது?

நவீனமாக ஆக மறுத்ததால காட்டுமிராண்டி பாஷைன்னு பெரியார் சொன்னார். அவர் பாஷைல அவர் தீவிரமாப் பேசுவாரு. இது பழசா இருக்கு புதுசா ஆக மாட்டேங்குதுங்கிறதுதான் அவரோட கோபம். அவருடைய பாஷையேகூட மேடையில் சாதாரணமா பேசுற பாஷைதான். எழுதுகிற பாஷை பழங்கால பாஷை. அதை நவீனமாக்க அவரால முடியல. அதனால அந்த பாஷை காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்னார். பிற்பாடு திமுக வருது. அதுக்கு தமிழ்லயெல்லாம் ஆர்வம் கிடையாது. திமுக தமிழப் பத்தி பேசுச்சே தவிர தமிழுக்கு உருப்படியான காரியம் எதுவும் செய்தது கிடையாது. புதுமைப்பித்தனை எடுத்துக்கங்க, இப்ப நான் படிச்சேன். அனாதையாய்க் கிடந்த தமிழ் எழுத்தாளர்ன்னு சுந்தர ராமசாமி எழுதியிருக்கார். அப்ப திமுக இருந்தது. அதுக்கு ஏதாவது அக்கறை இருந்திருந்தா புதுமைப்பித்தனைப் பற்றிப் பேசியிருக்கனும், ஏதாவது செஞ்சிருக்கனும் இல்லையா? பாரதியார் மகாகவியாய் இல்லையான்னு அடிச்சிக்கிட்டாங்க. அப்ப திமுகவுல இருந்த யாராவது ஏதாவது கருத்து சொன்னாங்களா? திமுகவுக்குப் பாரதி மேல் ஏதாவது அக்கறை இருந்ததா? தgnanakoothanமிழ்க்குடிமகன்னு ஒரு அமைச்சர் இருந்தாரு. சுந்தர ராமசாமிக்கு ஏன் விருது கொடுக்கப்படலைன்னு கேள்வி எழுப்பியபோது அவர் சொல்றாரு, சில பேருக்கு சுந்தர ராமசாமி பெரிய எழுத்தாளரா இருக்கலாம், தமிழக அரசு பார்வைல அப்படி இல்லாமல் இருக்கலாம் அப்படின்னு சொல்லியிருக்காரு. ஆனால் இதை உடைக்கிற ஒரு சமுதாயத்தைப் பார்வையைப் புதுக்கவிதை அந்தக் கட்சிக்குள்ளயும் உருவாக்குச்சு. திமுகவின் பழைய தமிழ்க் கொள்கை பிரச்சாரத்துக்குப் பயன்பட்டதே தவிர நவீன இலக்கி யம் உருவாகப் பயன்படல. புதுக் கவிதை உருவான பிறகுதான் புதிய தலைமுறையும் உருவானது. கட்சியின் கோட்பாட்டை அடுத்த தலைமுறை உணரத் தொடங்கியது.

க.நா.சு அறிக்கையோட வெளிப்பட்ட அன்றைய புதுக்கவிதைக்கும் இப்போ உள்ள புதுக்கவிதைக்கும் என்ன மாற்றத்தை உணர்றீங்க?

க.நா.சு புதுக்கவிதைன்னு பேர் வச்சதும் 59ல பிச்சமூர்த்தியோட ‘பெட்டிக்கடைக்காரன்’ கவிதை மறுபிரசுரம் ஆச்சு. புதுசா எழுதல. 58ல புதுக்கவிதைன்னு வச்சு க.நா.சு சரஸ்வதியில விவாதத்தத் தொடங்குன உடனே தற்செயலா தோன்றிய எழுத்து பத்திரிகை அதை சுவீகரித்தது. புதுக்கவிதை பற்றிய க.நா.சுவின் கருத்து புரட்சிகரமானது. அவர் அறிக்கையில் சொன்னதவிட எழுதிக்காட்டியது அதிகம். அவரோட கவிதைகளைப் படிச்சீங்கன்னா அது இன்னும் புரட்சிகரமானதுங்கறது தெரியும். க.நா.சு பிச்சமூர்த்திக்குக் கொஞ்சம் பிந்தியவர். அவர் புரட்சி பண்ணனும்னு விருப்பப்பட்டவரல்ல. இதை எழுத்து பத்திரிகை மற்றும் எல்லோரோடயும் தொடர்புள்ள கனகசபாபதியும் அவரோட கட்டுரையில் குறிப்பிட்டிருக்காரு. உதாரணத்துக்குப் பிச்சமூர்த்திக்கு சிகரெட் பிடிக்காது. அது நவீன காலத்து அடையாளம். சிகரெட் பிடிக்கிறது. மீசை வச்சுக்கிறது எல்லாம் 50, 60களில் புதுமையான விஷயம். பல சமூகங்களில் மீசை வச்சுக்கிறது, பேண்ட் போடுறது கணுக்காலுக்குக் கீழே வேட்டி கட்டுறது எல்லாம் அனுமதிக்கப்பட்டதில்லை. அப்படி ஒரு சமூகம் இருந்தது. பிச்சமூர்த்தியோட கவிதை இதை அங்கீகரிக்கல. ஆனா க.நா.சு எல்லாவிதமான புரட்சிகளையும் புதுமைகளையும் அங்கீகரித்தவர்.

தமிழ்க் கவிதையோட போக்குல க.நா.சு காலத்துக்கும் இப்போ உள்ள போக்குக்கும் என்ன மாற்றமிருக்கு?

க.நா.சு கவிதைகளில் தென்பட்ட புரட்சிகரமான கூறுகளோட விரிவடஞ்ச போக்குதான் இப்போ உள்ள கவிதைகள்னு சொல்லலாம். பிச்சமூர்த்தி நவீனத்துவத்தை ஏத்துக்க விரும்பாத ஒரு கவிதையை விரும்புறாரு. பாலியல்ரீதியிலான சுதந்திரம், சுய பாலின ஈர்ப்பு போன்ற விஷயங்களப் பேசற கவிதைகளை அவங்க விரும்பல. புதுக்கவிதையிலயும் ஒரு வைதீகக் குழுவும் அதற்கு எதிரானஅவைதீகக் குழுவும் இருக்கு. இன்னிக்குக் கவிதையில் இந்த அவைதீகக் குழுதான் இருக்கு. பழமைய மறுதலிச்சு உருவாகறது தான் புதுக்கவிதையோட சித்தாந்தமே. பொலிடிக்கலா பார்த்தா அவைதீகம் அதாவது மரபை மீறுதல்தான் க.நா.சுக்குப் பிடிச்சது. நீங்க பழமைய மறுக்கறவரா மீறுகிறவரா இருக்கும்போதுதான் உங்க படைப்புச் செயல் பாட்டுல ஜீவன் இருக்கும்.

ஆரம்பம்னு பிச்சமூர்த்தியை எடுத்துக்கிட்டா எட்டு பத்துப் பேரு முக்கியமானவங்க. ஏன்னா அந்த மாதிரி கவிதைகள் தமிழ்ல அதுக்கு முன்னாடி இல்ல. சி.மணி, நீங்க, பிரமிள், நகுலன், சுந்தர ராமசாமி, தேவதச்சன், ஆனந்த், ஆத்மாநாம், பிரம்மராஜன், கலாப்ரியா இவங்க வரைக்கும் நாம் வச்சுக்கலாம். இதுக்கு அப்புறம் ஒரு தலைமுறை வருது. இவங்க என்னவெல்லாம் முயற்சி பண்றாங்க? புதுக்கவிதையில இன்னும் சொல்லப்படாத விஷயங்கள் என்ன?

தொட்ட பிற்பாடுதான் இது தொடக் கூடாத விஷயம் தொட்டுட்டாங்கன்னு தெரியுது. அதுவரைக்கும் நமக்குத் தெரியாது. ஒரு பெண் தன் பாகத்தைத் தொட்டுப் பார்க்குறது கவிதைல ஒரு ஆச்சரியமான விஷயம். இப்ப சல்மா கவிதைல ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு முடி முகவாயில் வளருது. இதெல்லாம் தொடக் கூடாத இடங்கள். பெண்ணுன்னா சந்திரவதனம் நமக்கு. அவங்களுக்கு ஒரு முடி வளரும் அவஸ்தை சொல்லப்பட்டிருக்கு. ஆனா புதுக்கவிதைல இது எல்லாத்துக்கும் திறந்துவிட்டாச்சு. இந்தியக் கவிதைகள்ல சில வெளிநாட்டுக் கவிஞர்களின் தாக்கம் இருப்பதை அவதானிப்புச் செய்யலாம். பாப்லோ நெருதாவோட பாதிப்பு, லிரிக்ல வெஸ்டர்ன் பாதிப்பு இருக்கு. இயலுக்கும் இசைக்கும் நடுவில் கவிதைக்கும் பாட்டுக்கும் நடுவில் பாரதியார் கவிதைகள் போல. அதைக் கண்டுபிடிச்சது பாரதியார்னு சொல்லலாம். ரெண்டுக்கும் பொதுவா இருக்கும். கம்பன் பண்ணியிருக்காரு. இப்போ உள்ள கவிதைகள் பாடலாகிருச்சு. ஒரு பிரச்சினை என்னன்னா கவிதைகளின் தீவிரத் தன்மை குறையுது. தனித்தன்மை கொண்ட ஒரு குழு உருவாக வாய்ப்பிருக்கு. காலச்சுவடுல வர்ற கவிதையும் தினமலரில் வர்ற கவிதையும் ஒண்ணான்னு கேட்டா இல்லன்னு சொல்லலாம். ஆனா இன்னொருவிதத்தில அப்படியெல்லாம் சொல்ல முடியாது. காலச்சுவடு, உயிர்மைல வர்றதுதான் கவிதை தினமலரில் வர்றது கவிதையில்லன்னு சொல்ல ஒரு விமர்சகன் உருவாகணும். இப்ப நிறையப் பேர் இருக்காங்கன்னு சொல்லலாம். கவிதை இயக்கம் வரும்போது பல வெளிநாடுகளில் பல்கலைக்கழகத்திலதான் நடக்கும். அவங்களே மாணவர்களுக்குப் பணம் கொடுத்துப் பத்திரிகையெல்லாம் நடத்தச் சொல்லுவாங்க. நாம அடிமைப்பட்ட நாடா இருந்ததால படிக்கறவங்க எண்ணிக்கை ஆரம்ப காலத்துல ஐம்பதுக்கு அதிகமா இல்லாததால இயக்கம் பல்கலைக் கழகத்துக்கும் தமிழ்த் துறைக்கும் வெளிய நடந்தது. பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களும் இதில் ஈடுபாடு காட்டும்போது வேறொரு பிரிவு உருவாகும்.

பெரிய பேராசிரியர்கள் தமிழ்க் கவிதைக்குப் பங்களிப்பு செய்தார்களா?

இல்ல. பங்களிப்புன்னு இல்ல. அவங்க புகுந்து மாணவர்களுக்கு வேற ஒண்ணக் காமிப்பாங்க. இதுதான் நவீன இலக்கியம்னு சொல்வாங்க.

இன்னிய வரைக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் புதுக்கவிதைகள் அநேகமா இல்ல. அவங்களுக்கு எளிமையாத் தெரியும் அப்துல் ரகுமான் வகையைத்தான் வச்சிருக்காங்க, ஆசிரியர்கள் சுலபமா குறிப்புரை கொடுத்துருவாங்க. ஆங்கிலத்தில் டி. எஸ். எலியட்டெல்லாம் பாடமா வச்சிருக்காங்களே? இங்கே என்ன தடையிருக்கு?

பண்பாட்ட பத்தி அவங்களுக்கு ஒரு கருத்து இருக்கு.

இங்கே தமிழ்ல இருக்கா?

ஆமா. மேல்மட்டத்துல இருக்குறவங்களுக்கு ஒரு கருத்து இருக்கு. அதுக்கு எதிரா மக்கள்ட்ட இருக்குற கருத்த இலக்கியத்துல பிரதிபலிக்க விடமாட்டாங்க.

தமிழ்த் துறையாளர்கள் பெரும் பான்மையானவர்கள் கலாச்சாரத்தைப் பாதிப்பில்லாம பாத்துக்கிடணும்னு நெனைக்கிறாங்க. தமிழ் இலக்கியத்துலகூடக் கைக்கிளைத் திணை, பெருந்திணை அதாவது வயதில் குறைந்த ஆண்மீது ஆசைகொள்வது, மறுமணம் போன்றவற்றைத் தேட வேண்டியிருக்கு. பெண் ஆசைப்பட்டாங்கிறத ரொம்ப மறைமுகமாத்தான் சொல்லுவாங்க. அவையெல்லாம் இலக்கியத்தில் ஏற்புடையதல்ல. புதுக்கவிதையில் அதெல்லாம் ஏற்புடையது. ‘மதுரை மீனாட்சி அம்மன் கன்னிமை கழியும்போது’ அப்படின்னு க.நா.சு எழுதினாரு. பயங்கரமான எதிர்ப்பு. கண்டிப்பு. நாம் கண்டுகொள்வதில்லை. நம்ம சமூக அமைப்பு சில உதவிகள் செய்து தப்பிச்சுப்போக வைத்தது. அதனால இந்த வகை கவிதைகள உள்ள வர விடாமத்தான் வச்சிருக்காங்க. புதுக்கவிதைல நவீன இலக்கிய தாக்கம் வராம பாத்துக்கு வாங்க. இத ஆதரிக்கிற பேராசிரியர்கள் யாராவது இருந்தா அவங்களச் சேர்க்கமாட்டாங்க. சங்க இலக்கியத்துல பச்சையா மாமிசம் சாப்பிடுற ஒரு சம்பவம் இருக்கு. இன்னிக்கும் அந்தச் சமூகம் இருக்கு, ஆனா அத பத்தி நம்ம இலக்கியம் பேசல. கவிதைல சொல்லல.

இன்னிக்கு எழுதப்படுற கவிதைகளை, எல்லாச் சிறுபத்திரிகைகளிலும் வர்ற கவிதைகளை நீங்க எப்படிப் பாக்குறீங்க?

ஆழம் அதிகமா இருக்கு. எடுத்துரைப்புச் செய்து சொல்லக்கூடிய துறை வளரல. சின்னச் சின்ன மதிப்புரைகள்தான் வருதே தவிர அதையும் கவிஞர்களே பண்ணிக்கிடறாங்க. அது பெரிய துரதிர்ஷ்டம். மற்றபடி கவிதைகள் ரொம்ப ஆழமுள்ள கவிதைகள்தாம் வந்துட்டிருக்கு.

இந்த ஐம்பது வருஷத்த வளர்ச்சின்னு சொல்ல முடியுமா?

அசுர வளர்ச்சி. அது தமிழ் மொழியின் சக்தின்னு சொல்லணும். தமிழ் மொழியோட ஆத்மா இருக்கே அது எப்போதும் ‘தளதளதள’ன்னு இருக்கும். ரொம்பத் துடிப்பு உள்ள சின்னக் குழந்தை மாதிரி. அதக் கண்டுபிடிச்சு அதன் அழகைப் பிரதிபலிக்கிறதுதான் அந்தந்தக் காலத்துக் கவிஞனோட கடமை. திருநாவுக்கினியர் சொன்ன மாதிரி அந்தந்தக் காலத்துச் சொற்கள் தான் கவிதைக்குக் கொடுக்குற சத் துணவு. பெரிய ஆன்மீக மொழியா இருக்க அது முயன்றதே கிடையாது. 1500 வருஷ ஆன்மீகப் பாரம்பரியம் இருந்தும் இராமானுஜர், சங்கரர் போன்ற தமிழ் பேசிய சிந்தனையாளர்கள் இருந்தும் ஆன்மிக எல்லைக்குள் போகாம பூமியிலேயே இருக்கும் மொழி தமிழ்.

சமஸ்கிருதக் கவிதையியலுக்கும் தமிழ்க் கவிதையியலுக்கும் என்ன வித்தியாசத்தைப் பாக்குறீங்க?

பெரிய வித்தியாசம் ஒண்ணும் கிடையாது. தமிழ் செய்யுள் மாதிரி தொழில்நுட்பத்தப் பேசிட்டு விட்டுருது. சமஸ்கிருதம் நவீன ஐரோப்பிய மொழி மாதிரி ஆராயுது.

தமிழ் கவிதையியல் இலக்கணத்த மட்டும் பேசிட்டு விட்டுடுது, சமஸ்கிருதம் இலக்கணத்தப் பத்தியும் அதத் தாண்டியும் பேசுதா?

ஆமா. அதன் உள்ளடக்கம் எப்படிச் சொல்லப்படுது. சொல்லுக்குக் குறிப்புச் சக்தி எங்கிருந்து கிடைக்கிறது. அதுதான் தொனி. இன்னியவரைக்கும் தீர்க்கக்கூடிய விஷயமாவே இல்ல. சொல்லப்படற வார்த்தைகளில் இல்லாத அர்த்தம் கேட்பவனுக்கு எப்படிக் கிடைக்கிறது? அது பெரும் ரகசியம். சொல்லுக்கு அது குறித்த பொருளத்தான் குறிக்கிற சக்தி இருக்குதுங்கிறது இலக் கணம். அது உண்மையானால் சொல்லால் குறிக்கப்படாத பொருள் கேட்பவனுக்கு எங்கிருந்து வருது? அது சொல்லிலேயே இருக்கிறதுங்கிறதுதான் சமஸ்கிருதத்தோட வாதம்.

உங்க கவிதைகளில் பொது மனத்தை, அரசியல் காரணங்களால் கட்டமைக்கப்பட்ட பொது மனத்தைக் கிண்டல் பண்றீங்க. கேள்வி கேக்குறீங்க, அது உணர்வுபூர்வமாப் பண்ணியதா?

ஆமா. நான் காப்பியங்களில் நம்பிக்கைகொண்ட கவிஞன். பெரிய காவியங்களைத் தவிரச் சின்னச் கவிதைகளை எழுத முயன்றதே கிடையாது. 1500, 2000 வரிக்குக் குறைஞ்சு நான் எழுதியதே கிடையாது. அப்புறம்தான் இந்த மாதிரி சின்ன கவிதைகள் எழுதுறாங்க அப்படின்னு என்னோட பள்ளிப் பருவத்துலதான் எனக்குத் தெரிஞ்சுது. வோட்ஸ்வொர்த் கோல்ட்ஸ்மித்தெல்லாம் பார்த்துட்டு இனிமேல் இப்படித்தான் எழுதணும்னு மறுபடியும் எழுத ஆரம்பிச்சேன். கம்பன் காப்பியங்களை இயற்றியவன். அரசியலால் மிகவும் துன்புறுத்தப்பட்டவன். அவ்வளவு பெரிய கவிஞனைத் தஞ்சாவூர்ல ஒரு தாசிட்ட போயி ஒரு பாயிரம் வாங்கிட்டு வாம்பாங்க, அவட்ட போயி வாங் கிட்டு வருவான். கூலி வேலைக்குப் போவான். நில்லா நெடுஞ்சுவரேன்னு ஒரு கவிதை வரும். ஒரு அரசியல் சார்ந்த தொனி ஒண்ணு கம்பன்கிட்ட ஊடுருவியிருக்கும்.

எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் அடுத்தவர் மேல் அதை விட மாட்டேன்...’ ‘எல்லா மொழியும் நன்று தமிழும் அதிலே ஒன்று.’ 67ல தமிழ் பேசினவங்க ஆட்சிக்கு வராங்க. இந்த மாதிரி கவிதைகளுக்கு இடம் கிடையாது. ஆனா நீங்க எழுதறீங்க. இதை காரணமாத்தான் எழுதனீங்களா?

சமஸ்கிருதம் படிச்சேன். தமிழ் படிக்கணும்கிறதுக்காகத் தமிழ் படிச்சேன். வித்வான் படிக்க ஆசைப்பட்டேன். முடியல. வித்வான் வகுப்புக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் படிச்சேன். தொல்காப்பியம் 17,18 வயசுலயே படிச்சிட்டேன். ராமாயணத்தல்லாம் முழுசா படிச்சிட்டேன். சங்க இலக்கியம் முழுவதும் முழுசா படிச்சிருக்கேன். இப்போகூட நற்றிணை படிச்சேன். எங்க அப்பா Gnanakoothan 1சமஸ்கிருதம் படிக்கிறவர். அதனால சமஸ்கிருதம் படிச்சேன். கம்பன, சங்கப் புலவன, ஆண்டாள, நவீன காலத்து சுந்தர ராமசாமிய, மௌனிய, ஆனந்த, உங்க கவிதைய, கனிமொழிய எப்படிப் படிக்கிறனோ அப்படி ராமாயணத்த அதனோட மொழியில, பகவத்கீதைய, சாகுந்தலத்த அதனோட மொழியில படிச்சேன். கன்னடத்தையும் நான் படிச்சேன். எல்லா மொழிகளும் சந்தோஷமாத்தான் இருந்தது, ஏற்றதாழ்வுகள் ஒண்ணும் கிடையாது. இந்த சந்தோஷத்த நாம கெடுத்துக்கக் கூடாது.

உங்கள் பென்சில் படங்கள் பூரா உங்க பிள்ளைப்பருவ வாழ்க்கை தானா?

வெளிப்படையாகச் சொல்லப் போனால் நான் இருபத்தோரு வயசுக்கு மேல வளரல. எனக்கும் என் கவிதைக்கும் ஒண் ணும் நடக்கல, அதுதான் என் பிரச்சினை. அத ஒரு இடத்துல சொல்லிருக்கேன். இருபத்தோரு வயசோட எல்லாம் முடிஞ்சுபோச்சு. அப்புறம் எப்படி வாழ்றது? ஓட்டு போடுறதுக்கு முன்னாடியே வாழ்க்கை முடிஞ்சுபோச்சுன்னா பாக்கி வாழ்க்கையை என்ன செய்றது? இப்ப 72 வயசாகுது. அம்பது வருஷம் ஓட்டியிருக்கேன். அப்படி ஒரு சிக்கல் வாழ்க்கைல. நாலு வயசுலயிருந்து 21 வயசு வரைக்கும்தான் எடுக்குறேன்.

மொத்தத்துல தமிழ்ல நேர்மறையான விஷயங்கள் நடந்திருக்கா?

நேர்மறையான விஷயங்கள் நடந்திருக்கு. தனிப்பட்ட சில கஷ்ட நஷ்டங்கள் இருக்கு. அது இருக்கத்தான் செய்யும். மொழின்னு பார்க்கும்போது அற்புதமா இருக்கு, புதுக்கவிதை வந்ததுக்கப்புறம் ஒரு உலகத் தரம் வந்திருக்கு. ஒரு பக்கம் செம்மொழின்னு சொன்னாலும் சிரமப்பட்ட மொழியா இருந்தது. இலக்கியம்னு வரும்போது தமிழ் ஒரு முதிராத மொழி. புதிய விஷயங்கள் அதுல சொல்ல முடியாது. புதுக்கவிதை அதை நவீனப்படுத்தியிருக்கு. அதனால அது உலகத் தரம் கொண்டதா ஆகியிருக்கு. ஒரு மேடை இருந்தா அதுல நாமளும் இருக்கணும். இல்லாட்டி இருக்குறதுல என்ன அர்த்தம் இருக்கு? நவீன இலக்கியத்தால தமிழுக்கு உலகக் கவனம் கெடச்சுருக்கு. தமிழ் அதுக்குத் தகுதியானதுங்கறதை நாம பண்ணியிருக்கோம். அதுவும் குறுகிய காலத்தில். அம்பது வருஷம்ங்கிறது மொழிக்கு ரொம்பக் குறைந்த காலம்.

******

நன்றி: காலச்சுவடு நவம்பர் 2009

May 16, 2013

நீல.பத்மநாபன்-நேர்காணல்


சந்திப்பு: கடற்கரய் 

தமிழில் மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபன் தமிழில் ஓர் அசலான படைப்பாளி. இதுவரை ''தலைமுறைகள்’'' ''தேரோடும் வீதி'' ''பள்ளிக் கொண்டபுரம்'' ''உறவுகள்'' உள்ளிட்ட இருபது நாவல்களும், 150-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். இதில் ஒரு நாடகத்தையும் சேர்த்துக் கொள்வது அவசியம்.

2004-ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதினைப் பெற்ற இவர், தமிழிலிருந்து ஆங்கிலம், மலையாளத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்ப்புகneelapadmanaban11ளிலும் இயங்கி வருகிறார். திருவனந்தபுரத்தில் 1938-ல் பிறந்த நீல.பத்மநாபன் மின்வாரியத்துறையில் இன்ஜினீயராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது துணைவியார் பெயர்: கிருஷ்ணம்மாள். இவரது மகள் வழிப் பேரன் பள்ளி வயதிலேயே ஆங்கிலத்தில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறான். பேரன் ஒரு லண்டன் வாசி. அந்தக் கதைத் தொகுதிக்கு நீல.பத்மநாபன் முன்னுரையும் வழங்கி இருக்கிறார். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பதவிகளில் இயங்கியவர். ராஜராஜன் விருது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், ருஷ்யன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

இதுவரை நீல.பத்மநாபன் எழுதி அச்சில் வெளி வந்த பக்கங்கள் மொத்தம் 6467. இவரது சமீபத்திய நாவலான ''இலையுதிர் காலம்'' இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. இவரை பற்றிய டாக்குமெண்டரியை சாகித்ய அகாதெமி இயக்கி வெளியிட்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான (2007) சாகித்ய அகாதெமி விருது இவரது ''இலையுதிர் காலம்'' நாவலுக்கு வழங்கப்பட்டிருப்பதை ஒட்டி இச்சந்திப்பு திருவனந்தபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நிகழ்ந்தது. ''எல்லோரையும் போலவே ஓர் எழுத்தாளனுக்கும் தெரியாத விஷயங்கள் பல இருக்கும். அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதல்ல ஒரு சிறந்த நேர்காணல். அவனுக்குத் தெரிந்த அனுபவங்களை அவனது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் அளவில் அமைவதே ஒரு தேர்ந்த நேர்காணல்'' என்ற அளவீட்டில் இயங்கும் நீல.பத்மநாபன் அந்த வரம்பில் நின்றே பல கருத்துக்களை இந்நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

யாருடைய மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இந்த நேர்காணல் முழுவதும் பத்மநாபன் அதிகமாக உச்சரித்த வார்த்தைகள் ''இதை நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை'' என்பது. இருந்தும் சூசகமாக பல தகவல்களை அவர் இதில் பதிய வைத்திருக்கிறார் என்றேபடுகிறது

தீராநதி: இந்த வருடத்திற்கான சாகித்ய அகாதெமி விருது உங்களின் ''இலையுதிர் காலம்'' நாவலுக்குக் கிடைத்தவுடன் நீங்கள் சில பத்திரிகைகளுக்கு அளித்த நேர்காணல்களில் ''இது எனக்கு காலம் கடந்து கிடைத்த அங்கீகாரம்'' என்று சொல்லி இருக்கிறீர்கள். இந்த விருது பெறுவதற்கு முன்பாகக் கூட நீங்கள் சமகால தமிழிலக்கியப் பரப்பில் க.நா.சு.போன்ற விமர்சகர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் எழுத்தாளராகவே இருந்திருக்கிறீர்கள். ஆங்கிலம், ருஷ்யன், ஜெர்மன் மொழிகள் உட்பட, பல்வேறு மொழிகளில் உங்களின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு பரவலான கவனத்தை உங்களுக்கு உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது. இருந்தும் ஏதோ ஒரு மனநிலையில் நீங்கள் அப்படிக் குறிப்பிட நேர்ந்துள்ளது. விருதுகள் என்பது உண்மையாகவே ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் தருகிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நீல.பத்மநாபன்: ஓர் எழுத்தாளனுக்கான அங்கீகாரமாக இந்த விருதுகளை நான் கருதவில்லை. ஏனென்றால், ஓர் எழுத்தாளன் தன் படைப்பை படைக்கும் போது இந்த விருது, பதவி, பட்டம் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதே கிடையாது. ஓர் எழுத்தாளன் தன் உள்ளக்கிடக்கையில் படிந்து கிடப்பதை தன்னுடைய எழுத்துகள் மூலமாக எழுதுகிறான். அப்போது இந்த மாதிரியான லௌகீகமான விஷயங்கள் எல்லாம் அவனது மனதில் வரவே வராது. ஒருவித மனக் கட்டாயத்தின் பேரில்தான் அவனது எழுத்து வடிவம் கலைப்படைப்பாக உருவாகிறது. எந்த ஒரு விஷயத்தையும் எழுத்தாளன் என்பவன் தனக்காக செய்தாலும்கூட அவனது ஆத்ம திருப்திக்காக செய்தாலும் கூட அதை அவன் செய்து முடித்த பிற்பாடு அதிலிருந்து விலகி நின்று ஒரு வாசகனாக பார்க்கின்ற போது அந்தப் படைப்பு எந்த அளவிற்குச் சரியாக வந்திருக்கிறது என அறியத்துடிக்கின்ற மனநிலை எல்லா கலைஞனுக்குள்ளும் இருக்கிறது. அப்படைப்பு பிறத்தியார் பார்வையில் எப்படிப் படுகிறது? அவர்கள் இதை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுத்தாளனுக்குள் இயல்பாக இருக்கவே செய்கிறது. என்னதான் நான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன், விருதுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்று சொன்னாலும் அவரது உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கவே செய்யும். ஒரு படைப்பை படித்துப் பார்த்துவிட்டு ஒரு சாதாரண வாசகனாக இருந்தாலும் அல்லது பரிசளிக்கும் ஒரு ஸ்தாபனமாக இருந்தாலும் ஒரு கருத்தைச் சொல்லும்போது நமக்குள் ஒரு சந்தோஷம். இல்லை, இந்த இடத்தில் இப்படி இல்லாமல் மாற்றிச் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லும் போது, எழுத்தாளன் தன்னை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள அது உதவியாக அமைகிறது. ஆக, அங்கீகாரம் என்பதை விருதுகள் மூலமும் சொல்லலாம். அல்லது சாதாரண வாசக கடிதத்தின் மூலமும் சொல்லலாம்.

ஒருவேளை இளமைப் பருவத்தில் இந்த விருதுகள் கிடைத்திருந்தால் இன்னும் உத்வேகத்தோடு இயங்கக்கூடிய வாய்ப்புகள் எனக்கு இருந்திருக்கலாம். இளமைக் காலகட்டத்தைத் தாண்டி நாம் வந்து விட்டோம் என்பதால் கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் இன்றைக்கு நம்மைத் தேடி வருகின்ற போது அதை நாம் நிராகரிக்க வேண்டிய தேவையும் இல்லை.

என்னுடைய ''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்த போது தலைசிறந்த பத்துத் தமிழ்நாவல்களில் ஒன்றாக க.நா.சு. குறிப்பிட்டு எழுதி இருந்தார். இன்னும் சில பத்திரிகைகள் எழுதின. அப்போதே இதற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைக்கப் போகிறதென்று பேசினார்கள். அதற்குப் பிறகு ''பள்ளிக் கொண்டபுரம்'' வெளிவந்த போது இதையே சொன்னார்கள். ஆனால் அதற்கெல்லாம் கிடைக்கவில்லை. அதற்காக நான் வருந்தவும் இல்லை. கடந்த ஐம்பது ஆண்டு காலமாக தொடர்ந்து சொல்லப்பட்ட விஷயம். இப்போது நடந்தேறி இருக்கிறது, அவ்வளவுதான்.

''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்தபோது எனக்கு முப்பது வயது. இன்றைக்கு எனக்கு எழுபது வயது. உண்மையிலேயே சொல்லப் போனால் யார் மீதும் எனக்கு புகார் இல்லை. இந்த விருது மூலம் அந்தப் படைப்பானது பரவலாக வாசிக்கப்படுமானால் அந்த மகிழ்ச்சியே அசலானது. இந்த விருது மூலம். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட, என் நண்பர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியின் அளவு அதிகம். ''எப்போதோ கிடைக்க வேண்டியது இப்போதாவது கொடுத்தார்களே'' என்று அவர்கள் என்னிடம் மனம் மகிழச் சொல்லும் போது அதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தீராநதி: நீங்கள் பேசியதிலிருந்து எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. கேள்வி என்பதை விட சந்தேகம் என்று கூடச் சொல்லலாம். வெளி நாடுகளில் ''நோபல்’ மாதிரியான ஒரு பரிசு ஓர் எழுத்தாளனுக்கு வழங்கப்படுகின்ற போது அவனது படைப்பைப் பற்றிய பேச்சு, வாசிப்பு, உரையாடல் என்பது முன்பைக் காட்டிலும் பன்மடங்கு கூடுகிறது. ஆனால் இந்திய அரசால் வழங்கப்படுகின்ற இந்த சாகித்ய அகாதெமி விருதின் மூலம் பரவலான வாசிப்பு என்பது உண்டாகும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அன்றைக்கு ஒரு சிறந்த படைப்பிற்குக் கொடுக்கத் தவறி விட்டோமே என்பதற்காக பிறகான காலத்தில் ஏதாவது ஒன்றிற்குத் தந்து சரி செய்து விடுவோம் என்பதற்காக விருதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விமர்சனக் குரலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்: நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மை. ஆனால் முழுக்க முழுக்க அதை உண்மை என்று என்னால் அங்கீகரிக்க முடியாது. ஏனென்றால், சாகித்ய அகாதெமி என்று நாம் சொல்வது ஏதோ ஒரு கட்டடம் அல்ல. எல்லா இந்திய மொழிகளிலும் அது இயங்குகிறது. தமிழுக்காக இயங்கும் அதன் சட்ட திட்டங்களைப் பார்த்தால் அவ்வப்போது அது புதுப்பிக்கப்படுகிறது. அந்தந்தக் காலத்தில் அதற்கான ''ஜூரி நம்பர்ஸ்'' இருக்கிறார்கள். ''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்த காலத்தில் பதவியில் இருந்த ''ஜூரி நம்பர்ஸ்'' ''இலையுதிர் காலம்'' நாவல் வெளி வந்த காலத்தில் இல்லை. அன்றைக்கு இருந்தவர்கள் வேறு. இன்றைக்கு எனக்கு விருது வழங்கி இருக்கும் ''ஜூரி நம்பர்ஸ்'' வேறு. அதனால் அன்றைக்கு ஒரு படைப்புக்குக் கொடுக்கத் தவறியதனால் இன்றைக்கு இந்தப் படைப்புக்குக் கொடுத்து சரி செய்து விடுகிறார்கள் என்ற கருத்து சும்மா பேச்சுக்காக சொல்லப்படுவது. அதில் உண்மை இல்லை. அன்றைக்கு என்னுடைய ''தலைமுறைகள்'' நாவல் வெளிவந்த போது பல்வேறு விதமான விமர்சனங்கள் அதன் மீது சொல்லப்பட்டன. ஆக, அப்படி ஒரு விமர்சனத்தை உருவாக்கிய படைப்புக்கு விருது கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று அகாதெமி நீதிபதிகள் அன்றைக்குத் தயங்கி இருக்கலாம். அதை உறுதியாகச் சொல்ல முடியாது.

வழக்கமான ஒரு ஃபார்முலாவை மீறி ஒரு படைப்பாளன் புதிய சோதனைகளை மேற்கொள்ளும் அந்தப் படைப்பை ஏற்றுக்கொள்ள பலர் தயங்கினார்கள். க.நா.சு.போல, சி.சு. செல்லப்பா போல ஒரு சிலர்தான் அந்தப் பரிசோதனையை அங்கீகரித்தார்கள். இவர்கள் ஒருவேளை சாகித்ய அகாதெமியில் இருந்திருந்தால் எனக்கு அன்றைக்குப் பரிசு கிடைத்திருக்கும். அன்றைக்கு யார் நீதிபதியாக அகாதெமியில் இருந்தார்கள் என்றே எனக்குத் தெரியாது. அல்லது என்னைவிட பிரபலமான ஒரு படைப்பாளி அன்றைக்கு வேறு யாராவது இருந்திருக்கலாம். அவர்கள் அவருக்கு அந்த விருதை கொடுத்திருக்கலாம். இவ்வளவு தூரம் மத்திய சாகித்ய அகாதெமி விருது பற்றி நாம் குறை சொல்கிறோம். ஏனைய மொழிகளில் எல்லாம் சாகித்ய அகாதெமி இருக்கிறது. மலையாள, கன்னட, தெலுங்கு சாகித்ய அகாதெமிகள் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் ஒழுங்காக தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார்கள் அல்லவா? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அந்த அகாதெமிக்கு இணையான பரிசுகளை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறதா? அல்லது தனிப்பட்ட பரிசுகளை ஏற்படுத்தி இருக்கிறோமா? ஒரே ஒரு ராஜராஜன் பரிசு வைத்திருக்கிறோம். அதையும் தமக்குத் தேவையானவர்களுக்குக் கொடுத்து விட்டு நிறுத்திவிடுகிறோம் அல்லவா? கட்சி, அரசியல் எல்லாவற்றையும் மீறி ஒரு பரிசை உண்டாக்கி இருக்கிறோமா? ஒன்றைச் செய்தபிற்பாடு அதன் பாணியிலே போய் கிடைக்கும் வெற்றியை விட அதை மீறி புதியதாக ஒன்றைச் செய்து வரும் தோல்வியை விரும்புகிறவன் நான்.

தீராநதி: இந்த விருது மூலம் பரவலான வாசிப்பு என்பது நடக்கும் என்று நம்புகிறீர்களா? அதைப் பற்றி கேட்கிறேன்?

நீல.பத்மநாபன்: அது அந்த ஆசிரியரைப் பொறுத்து இருக்கிறது. அந்தப் படைப்பைப் பொறுத்து இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடைய ''தலைமுறைகள்'' ''உறவுகள்'' ''பள்ளிக்கொண்டபுரம்'' போன்ற நாவல்கள் ஏற்கெனவே ஒரு விவாதத்தை தமிழ்ச் சூழலில் உண்டாக்கி இருப்பதனால் அதை எழுதிய அதே ஆசிரியரின் படைப்புதான் இதுவும் என்று வாசகனுக்குத் தெரிய வருகின்ற போது நிச்சயம் பரவலான ஒரு வாசிப்பை அது பெறும் என்று நம்புகிறேன்.

தீராநதி: உங்களுடைய ''தலைமுறைகள்'' நாவல் ''உத்தியோக காண்டம்'' சிறுகதை வெளி வந்த போது பரவலான எதிர்வினையை அவை சம்பாதித்தன. ''உத்தியோக காண்டம்'' சிறுகதை உங்களின் சக ஊழியர்களான மலையாளிகளிடம் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்தது. இந்த மாதிரியான எதிர்வினைகள் உங்களை எந்த அளவுக்கு பாதித்திருக்கின்றன.

நீல.பத்மநாபன்: ஒரு சமூக ஜ“வி என்ற முறையில் ஓர் எழுத்தாளன் என்பவன் சமூகத்தில் வாழ்பவன். அவன் சமூகத்திலிருந்து தப்பித்துச் செல்ல அவன் ஒருபோதும் விரும்புவது கிடையாது. ஆனால் அவன் சமூகத்தில் நிகழும் பிரச்சினையை அப்படியே ஒரு புகைப்படத்தைப் போல நகலெடுப்பதில்லை. பல இடங்களில் சொல்லியும் சொல்லாமலும் அமர்ந்த முறையில் அவனது கதையை அவன் சொல்கிறான். நடப்பு வாழ்வில் ஐடியலிஸத்திற்கும் ரியலிஸத்திற்கும் உள்ள முரண்பாடுகள்தான் அவனை எழுதத் தூண்டுகின்றன. வாழ்க்கை என்பது இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று ஒரு ஐடியலை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நடப்பில் அந்த மாதிரி இல்லை. ரியலிஸம் என்பது முற்றிலும் வேறுமாதிரி இருக்கிறது. சமூக சீர்திருத்தவாதியாக அவன் அதைச் செய்யவில்லை. ஒரு மானுடவியலின் தனிமையில் செய்கிறான். இப்படி சமூகத்தில் இருக்கும் சில உண்மைகளை நாம் இலக்கியத்தில் மறுபடைப்பு செய்கிறோம். அப்படிச் செய்யும் போது, சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய முகங்களைப் பொறுத்திப் பார்க்கும் போது பிரச்சினை வெடிக்கிறது. யாரோ ஒருவரை என்னுடைய படைப்பு தாக்குகிறது என்பதற்காக நான் என்ன செய்ய முடியும்? உலக வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு ஏதாவது ஒன்றைத்தான் நான் எழுத வேண்டும். எனவே, இந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் நான் அஞ்சுவதே கிடையாது. இது உத்தியோக காண்டத்திற்கு மட்டுமல்ல் ‘தலைமுறைகள்’ நாவலுக்கு மட்டுமல்ல் ''தேரோடும் வீதி'' நாவலுக்கும் இதே கதிதான்.

எங்கு சென்றாலும் ஒரு வட்டம் இருக்கும். ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு வட்டம் இருக்கும். அதை மீறி வருவதென்பது இளம் எழுத்தாளருக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதை எழுத்தாளனுக்கு மட்டுமான பிரச்னை என்று நான் சொல்லவில்லை. உலகத்திலேயே அதிக இளம் விஞ்ஞானிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு இந்தியா என்று சொல்கிறார்கள். இந்தப் பிரச்சினை அவர்களுக்கும் பொருந்தும். ஓர் இளம் விஞ்ஞானி தன்னுடைய ஆராய்ச்சியை ஒப்படைக்கும் போது, அந்த ஆராய்ச்சி அவனது பெயரில் வராமல் வேறு ஒருவரின் பெயரில் வெளிவரும். இந்த மாதிரி ஒரு விஷ வட்டத்தை மீறி, சுதந்திர இந்தியாவில் ஓர் இளம் விஞ்ஞானி வெளியில் வரவேண்டி இருக்கிறது. ஒருமுறை பேராசிரியர் நாச்சிமுத்து சொன்னார் ''இந்தத் தடைகளையெல்லாம் மீறி ஒரு காலகட்டம் போய் வேறு ஒரு காலகட்டத்தில் ஒரு புதிய தலைமுறை வந்தால் இந்த நாவல் பேசப்படும்'' என்று. என்னுடைய ''தலைமுறைகள்'' நாவலை பற்றி அவர் அப்படி குறிப்பிட்டார். பிறர் முகங்களையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்ட எழுத்தாளர்கள் தங்களுடைய சுய முகத்தை (நான் யாரையும் குறிப்பிட்டு எழுதவில்லை) இந்த நாவலில் பார்த்தபோது அதிர்ந்து போனார்கள்.

தீராநதி: மலையாளத்தில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற அய்யப்ப பணிக்கரின் கவிதைத் தொகுப்பை நீங்கள் தமிழில் மொழி பெயர்த்தீர்கள். அதற்காக உங்களுக்கு மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதும் கிடைத்தது. மூல மொழியில் விருது வாங்கிய அதே படைப்பை மொழி பெயர்த்ததற்காகவும் ஒரு விருதைக் கொடுப்பது சரியானதா? ஒரு படைப்புக்கு இரு விருதுகள் என்பது ஆரோக்கியமானதா?

நீல.பத்மநாபன்: ''பள்ளிக் கொண்டபுரம்'' என்ற என்னுடைய நாவலை ஒரிய மொழியில் (அந்த மொழிதானா என்று சரியாக ஞாபகமில்லை) மொழிபெயர்த்தவருக்கு சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்புக்கான விருது கிடைத்தது. ஆனால் அதைத் தமிழில் சுயமாக எழுதிய எனக்குக் கிடைக்கவில்லை. நேஷனல் புக் டிரஸ்ட் அதை ஜெர்மன், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

அய்யப்ப பணிக்கரின் கவிதைத் தொகுதி மலையாளத்தில் சாகித்ய அகாதெமி விருதினை பெற்றவுடன் அவர் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார். அதுவும் நான்தான் அதைச் செய்யப் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அய்யப்ப பணிக்கரின் கவிதைகளை மொழிப் பெயர்ப்பதென்பது கஷ்டமான காரியம். அவர் சமஸ்கிருதம் மாதிரி உயரிய மொழியை பயன்படுத்துவார். அதே போல கொச்சை மொழிகளையும் தன் கவிதைகளில் பயன்படுத்துவார். நல்ல படைப்புகளை நாம் படிக்கும் போது அது நம் மொழியிலும் வர வேண்டும் என்ற என்னுடைய தனிப்பட்ட ஆவலும் அதில் இணைந்ததால்தான் நான் அதைச் செய்தேன். அது நமக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்பித்தான் செய்தேன். அவரும் பல விஷயங்களில் உதவி புரிந்தார். பல்வேறு தளங்களில் எனக்கு தைரியமூட்டினார். அது ஒரு பெரிய சவால். மொத்தம் மூன்று வருடங்கள் அந்தக் கவிதை நூலை நான் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டேன். இந்த விஷயத்தில் நான் க.நா.சு.கட்சி. ஒரு படைப்பை மூல மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும்போது நம்முடைய ''பொது தமிழ்'' தன்மையில் அதைக் கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. க.நா.சு.வும் இதே கருத்துடையவர்தான். மூல மொழியின் நடை அழகு கெடாமல் அதில் கொஞ்சமாவது மொழிபெயர்ப்பில் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும்.

தகழி சிவசங்கரன் பிள்ளையின் ''இரண்டு இடங்கழி'' என்ற நாவலை ராமலிங்கம் பிள்ளை தமிழில் மொழிபெயர்த்தார். ''செம்மீன்'' என்ற நாவலை சுந்தர ராமசாமி மொழிபெயர்த்தார். சுந்தரராமசாமியின் மொழிபெயர்ப்புக்குத்தான் பரவலான அங்கீகாரம் கிடைத்தது. தகழியின் மொழி நடை அழகை கொஞ்சமாவது தமிழில் கொண்டு வர வேண்டும் என்று சுந்தர ராமசாமி சிரத்தை எடுத்துக் கொண்டார். ஆனால் ராமலிங்கம் பிள்ளை பொதுத் தமிழில் அப்படியே மொழிபெயர்த்திருந்தார்.

தீராநதி: என்னுடைய கேள்வி ஒரே படைப்புக்கு இரு விருதுகள் கொடுப்பது ஆரோக்கியமானதா என்று கேட்கிறேன்?

நீல.பத்மநாபன்: அது ஏற்கெனவே மூல மொழியில் விருது கொடுத்திருந்தாலும் அது மலையாளத்தில் தானே கொடுக்கப்பட்டது. தமிழ் வாசகர்கள் அதைப் படிக்க வாய்ப்பு என்பது எப்போது வரும். அது தமிழில் மொழிபெயர்க்கப்படும் போதுதானே வரும். ஆக, சிரத்தையோடு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்புக்கு இன்னொரு விருது கொடுப்பது என்பதில் தவறில்லையே?

தீராநதி: மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் சொந்த படைப்பிற்கான கற்பனைத் திறன் அடிபட்டு விடும் என்ற ஒரு கருத்து தமிழில் நிலவுகிறது. நீங்கள் இருமொழிகளில் (ஆங்கிலம், மலையாளம்) இருந்து மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் ஊடே ஒரு படைப்பாளர் என்ற முறையில் இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்: அந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையில் சொல்லப் போனால் நேரம்தான் வேண்டும். க.நா.சு. உலகப் படைப்புகளையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வந்ததன் மூலம் அவரது பார்வை இன்னும் விசாலமானது என்றுதான் நினைக்கிறேன். ஒரு வகையில் சொல்லப் போனால், மொழிபெயர்ப்பில் ஈடுபட்டதன் மூலம் அது என் எழுத்து அனுபவத்தையும், கதை அனுபவத்தையும் வளர்த்திருக்கிறது என்று தான் சொல்வேன்.

தீராநதி: தமிழ்மொழி பேசுகின்ற நிலப்பரப்பைத் தாண்டி மலையாள நிலப்பரப்பில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் நீங்கள். இப்படி ஒரு மொழியில் எழுதிக் கொண்டு வேறு மொழி புறச்சூழலில் வசித்துக் கொண்டு உள்ள எழுத்தாளன் என்றளவில் இருக்கும் சாதக பாதகம் என்ன என்று உணருகிறீர்கள்?

நீல.பத்மநாபன்: மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஆரல்வாய்மொழி பக்கத்தில் இருந்த செக்போஸ்ட்டை தூக்கிக் கொண்டு போய் களியக்காவிளையில் வைத்து விட்டார்கள். அங்கிருந்தவர்களுக்கும் இங்கிருந்தவர்களுக்கும் உள்ள பழைய கொடுக்கல் வாங்கல் முறையெல்லாம் அப்படியேதான் இன்றைக்கும் இருந்து வருகிறது. பிரிவினை சமயத்தில் ஒரு ஊடாட்டம் ஏற்பட்டுவிட்டது. ஒரு திரிசங்கு நிலையில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் என்று சொல்லலாம். தூய தமிழில் இருந்து வழக்கொழிந்து போன பல அறிய சொற்கள் இந்த திருவனந்தபுரம் பகுதிப் புழக்கத்தில் இன்றைக்கும் இருந்து வருகிறது. தமிழ்நாடு என்று சொல்கின்ற தமிழ் நிலப்பரப்பில் வழக்கொழிந்து போய்விட்ட பல தமிழ் வார்த்தைகளை இன்றைக்கும் இங்குள்ளவர்கள் சர்வசாதாரணமாக வீடுகளில் பேசி வருகிறார்கள். ''திரைகடல் ஓடியும் திரவியம் தேடு'' என்ற பழந்தமிழ் பாடல்களிலுள்ள ''திரை'' என்று கடல் அலையைக் குறிக்கும் வார்த்தை இங்கு இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது. இங்குள்ளவர்கள் யாரும் ''அலை'' என்று சொல்லமாட்டார்கள். திரை என்றுதான் சொல்வார்கள். இப்படி பல சாதகமான ஒரு சூழல் உண்டு. எதையும் விலகி நின்று பார்க்கும் ஒரு பார்வை எங்களுக்கு மட்டுமே வாய்க்கிறது. ''உறவுகள்'' நாவலுக்கு அண்ணாமலை செட்டியார் விருது கிடைத்த போது சிலர் ''விருது தமிழ்நாட்டை விட்டு வெளியில் போய்விட்டது'' என்று கூடச் சொன்னார்கள். ''நேட்டிவிட்டி'' என்பதுதான் இங்கு பிரச்சினை. தமிழ்நாட்டில் போய் ''நேட்டிவிட்டி'' சான்றிதழ் கேட்டால் ''நீ கேரளத்தில்தானே பிறந்தாய் அங்க போய்க் கேள்'' என்கிறார்கள். இங்குள்ளவர்களிடம் கேட்டால் ''நீங்களெல்லாம் தமிழர்கள்தானே உங்களுக்கு எப்படி இங்கு ''நேட்டிவிட்டி'' சான்றிதழ் கொடுக்க முடியும். நீ போய் தமிழ்நாட்டில் கேளு'' என்கிறார்கள். நாம் இந்தியாவில் இருக்கிறோம் என்று சொல்கிறோம். ''எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்று நாம் சொல்கிறோம். ஆனால் இந்த மாதிரி உள்ள கொஞ்ச ஜென்மங்களும் இந்த நாட்டில்தான் இருக்கிறார்கள். கேரளத்தில் இந்தப் பிரச்சினையை நான் சொல்கிறேன். இதே மாதிரி ஆந்திராவில் இருக்கிறது. கர்நாடகத்தில் இருக்கிறது. கல்கத்தாவில் கூட தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களை விட புலம் பெயர்ந்த தமிழர்கள் விலகி நின்று தமிழைப் பார்க்கிறார்கள். அதிதப் பற்றோடு தமிழை நேசிக்கிறார்கள்.

அப்புறம் இன்னொரு விஷயம். இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா நடந்த போது, மத்திய அரசாங்கத்திலிருந்து எல்லா மாநிலங்களுக்கும் ''இரவீந்திரநாத் ஆடிட்டோரியம்'' கட்ட அத்தனை செலவுக்கான முழுத் தொகையையும் கொடுத்தார்கள். கேரளத்தில் கட்டி இருக்கிறார்கள். கர்நாடகத்திலும் கட்டி இருக்கிறார்கள். இந்தியாவின் எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் அந்த ஆடிட்டோரியம் இருக்கிறது, தமிழ்நாட்டைத் தவிர. தமிழ்நாடு அரசு எங்களுக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டது. நமக்கு மகாகவி பாரதி என்ற மாபெரும் கவிஞர் இருக்கலாம். ஆனால் ஒரு பொது அரங்கமாக நமக்குக் கிடைக்க வேண்டியதை நாம் ஏன் இழக்க வேண்டும்?. இந்த நிதியை பயன்படுத்தாமல் விட்ட ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இதை இங்கு இருப்பதனால்தான் நாங்கள் கேள்விப்பட முடிகிறது. கேரளத்தில் உள்ள இந்த ஆடிட்டோரியத்தில் தினமும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதே மாதிரி பத்திரிகைகள். மலையாளத்தில் வெளிவருகின்ற மலையாள மனோரமா ''பாஷா போஷ’னி'' என்ற பத்திரிகையை இலக்கியத்திற்காகவே நடத்துகிறது. அதை மீறி ''மாத்ருபூமி'' ''கலைகௌமுதி'' என்ற பத்திரிகைகள் விற்பனைக்காக தங்களின் தரத்தை தாழ்த்திக் கொள்ளாமல் செயல்படுகின்றன. சினிமாவைப் பற்றி பல கட்டுரைகள் இதில் வரும். ஆனால் தரமிக்கதாக இக்கட்டுரைகள் இருக்கும். இதே மாதிரியான பத்திரிகைகளை தமிழ்நாட்டு எல்லையை விட்டு வசிப்பதனால் மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் ஒரு பத்திரிகை சினிமாவைப் போட்டு ''பாப்புலர்'' ஆகிவிட்டதென்றால், அதற்கு முன்னால் தரமான பத்திரிகையாக இருந்தவர்களும் கூட விற்பனைக்காக உடனே அதே போல ''இமிடேட்'' செய்து கொள்கிறார்கள். நான் சொல்லும் பத்திரிகையெல்லாம் தூய்மையான இலக்கியத்தை மட்டுமே வெளியிடுகின்ற பத்திரிகைகள் அல்ல; அதிலும் தினசரிக்கான நாட்டு நடப்பு சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் வரவே செய்கின்றன. ஆனால் தமிழில் வருவதைப்போல மட்டமாக அல்ல.

தீராநதி: தமிழில் வெளிவரும் மசாலா பத்திரிகைகள் போலவே மலையாளத்திலும் ''பைங்கிளி சாகித்யம்'' என்ற வகையான எழுத்துகள் வெளிவரும் பத்திரிகைகள் உண்டல்லவா?

நீல.பத்மநாபன்: ஆமாம். மசாலாத்தனமான எழுத்துகளை, ரொமண்டிசைஸ் கதைகளை, கிளுகிளு எழுத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் மலையாளத்தில் - நீங்கள் குறிப்பிடும் பைங்கிளி சாகித்யம் பாணி பத்திரிகைகள் வரவே செய்கின்றன.

தீராநதி: தமிழில் வெளிவரும் வெகுஜன பத்திரிகைகளை விமர்சிக்கும் எழுத்தாளர்கள் மலையாளத்தில் இந்த மாதிரி மரபு கொண்ட ஓர் எழுத்து வகை இருப்பதை சொல்வதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லையே ஏன்?

நீல.பத்மநாபன்: பைங்கிளி சாகித்யம் மாதிரியான பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் யாரும் இலக்கிய அந்தஸ்துக்கான போட்டிகளில் பங்கேற்று தங்களுக்கும் அதே மாதிரியான அங்கீகாரம் தேவை என்று இங்கு சொல்வதில்லை.

தீராநதி: தொன்மைக்காலம், மத்தியக் காலம், மறுமலர்ச்சி யுகம், பரோக், ரொமாண்டிசிஸம், நவீனத்துவம் என்று தத்துவ வரலாற்றை ஆறு பகுதிகளாகப் பிரித்து ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு தத்துவ காலத்திற்கேற்ப கிளாஸ’சிஸம் தொடங்கி பல்வேறு வகையான எழுத்து முறைகள் கையாளப்பட்டு வந்திருக்கிறது. இதில் ''ரியலிஸம்'' என்று சொல்லக் கூடிய எழுத்துபாணி தமிழில் அதிகமாகக் கையாளப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் கூட ''சோஷ’யல் ரியலிஸம்'' என்று சொல்லக் கூடிய எழுத்து வகையை (வட்டார வழக்கு) அதிகமாக கையாண்டிருக்கிறீர்கள். இந்தப் போக்கு 1930-ல் அமெரிக்கக் கலைத்துறையில்தான் முதன்முதலாக வேர்விட்டது. அதற்குப் பிற்பாடு அதையட்டி சோரியலிஸ்ட் ரியலிஸம், மேஜிக் ரியலிஸம், மோதிக்கல் ரியலிஸம் என்று ரியலிஸம் தன் எல்லையை விரிக்கத் தொடங்கியது. ஆக, ரியலிஸ எழுத்துப் பணி என்பதுகூட ஒரு வகையான இஸத்தைச் சேர்ந்ததுதான். ஆனால் தமிழில் இந்த இஸத்தை ஒட்டி எழுதும் எழுத்தாளர்கள் மற்ற எழுத்துக்கள் ஏதோ இஸங்களை முன்வைத்து எழுதுவதாகவும் இவர்களின் யதார்த்த பாணியான எழுத்து எந்த இஸத்தையும் சாராத ''அசல்'' தன்மையான எழுத்தென்றும் பேசுகிறார்கள். நீங்கள் கூட ''இஸங்களைப் பற்றிய awareness என்பது ஓர் எழுத்தாளனுக்கு அவசியம் தேவை'' என்று சொல்லிவிட்டுப் பிறகு இந்த மாதிரியான இஸங்களை ஒட்டிய உத்திகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது என்கிறீர்கள்? அப்போது யதார்த்த வகையான எழுத்தென்பது எந்த இஸத்தையும் சாராதது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நீல.பத்மநாபன்: இலக்கியம் என்பது எந்தக் காலத்துக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது. அது காலத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டுதான் வரவேண்டும். மாறத்தான் வேண்டும். நேற்றைக்கு இருந்த நிலைப்பாட்டிலிருந்து எவ்வளவோ மாறிதான் இன்றைக்கு நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடக்க கால நாவல்களில் ரொமாண்டிசிஸம் என்ற வகை இருந்தது. பிற்பாடு ரியலிஸம் வந்தது. பிறகு நிறைய இஸங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. நம்முடைய தொடக்ககால இலக்கியங்களிலிருந்து தொடர்ந்து வரும் ஒரு விஷயம் காலம்-வெளி என்பது. எந்தப் படைப்பை எடுத்துக் கொண்டாலும் அது எந்தக் காலத்தில் நடந்தது? எந்த இடத்தில் நடந்தது என்பது தேவையான ஒன்று. இது எந்த இஸம் வந்தாலும் நமக்கு இவை தேவையாக இருக்கக் கூடியது. ''பரதமுனி'' நாட்டிய சாஸ்திரத்தை எடுத்துக் கொண்டாலும் ஆனந்தவர்த்தனின் ''தொன்யா லோகம்'' என்ற நாவலை எடுத்துக் கொண்டாலும் இந்தக் காலமும் வெளியும் வந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கப்புறம் நம் தமிழ் மரபோடு ஒட்டிய திணைக்கோட்பாடு. அதையட்டிய நமது மரபார்ந்த தொடர்ச்சியை பேணக்கூடிய எழுத்து. இதைத்தான் நான் முக்கியமாக எடுத்துக் கொண்டு இயங்குகிறேன். இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் நான் எனக்குள் வகுத்துக் கொண்ட முறைமைகள் இவை. இதுதான் நமது வாசக அனுபவத்தினை மீறாத ஓர் எழுத்து முறையாக இருக்கிறது.

முதலில் படைப்புதான் வெளிப்படுகிறது. பிறகுதான் வியாக்கியானங்களும் இலக்கணங்களும் வருகின்றன. ஒருவனின் ''மனவேலை''யை நான் செய்கிறேன். ஸ்டீமோ கான்ஸ’யஸ்ஸை எடுத்துக் கொண்டாலும் சரி, ரியலிஸத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, சோஷ’யல் ரியலிஸத்தை எடுத்துக் கொண்டாலும் எதுவாக இருந்தாலும் அது படைக்கப்பட்ட பிற்பாடுதான் வருகிறது. ஆக, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இந்த இஸங்களுக்கு என்றுமே நான் எதிரியல்ல் நானே இந்த நடப்பியல் பாணியை விட்டுவிட்டு எங்கோ நகர்ந்து நான் வந்துவிட்டேன். முதலிலேயே என்னை ஒரு நடப்பியல் பாணி எழுத்தாளர் என்று முத்திரை குத்திவிட்டார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீங்கள் எந்த இஸத்தை ஒட்டி வேண்டுமென்றாலும் எழுதலாம். ஆனால் அது வாசகனுக்குப் போய்ச் சேரவேண்டும். வாசகனுக்கு ஓர் அனுபவத்தை அது கொடுக்க வேண்டும். அப்படி நிகழாவிட்டால் எழுதி என்ன பயன் சொல்லுங்கள். இப்போது கூட ''முப்பரிமாண வகையிலான நாவல்'' என்று கூட எழுதுகிறார்கள். அது ஒரு புதுமுயற்சி என்பதால் வரவேற்கிறேன். ஆனால் அது வாசகனிடம் போய்ச்சேர்ந்து அவனுக்கு ஓர் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்கிறேன் அவ்வளவுதான்.

தீராநதி: என்னுடைய எல்லாக் கேள்விகளுக்கும் நீங்கள் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடே பதிலளிக்கிறீர்கள். பொதுவான கருத்தாகத்தான் எல்லாவற்றையும் முன்வைக்கிறீர்கள். ஆனால் ஷண்முக சுப்பய்யா பற்றிய ஒரு கலந்துரையாடலில் நீங்களும் நகுலனும் இப்படிப் பேசிக் கொள்கிறீர்கள்: ''இலக்கியம் வாழ்க்கையின் அப்பட்டமான பிரதிபலிப்பு இல்லை. இதனால் இலக்கியம் வேறு. வாழ்க்கை வேறு. தற்கால இலக்கிய விமர்சனம் இப்படித்தான் இயங்குகிறது'' என்கிறார் நகுலன். நீங்களோ ''ஒரு கவிதையைப் படிக்கும்போது அதை எழுதியவனின் வாழ்க்கையையும் அதில் இணைத்துப் பார்ப்பது என்பது ''எக்ஸ்ட்ரா லிட்டரரி'' என்கிறீர்கள். நகுலன் போன்ற ஒரு படைப்பாளியிடமே முற்றிலும் மாறுபட்ட கருத்தை தைரியமாக முன்வைத்த நீங்கள் இன்றைக்கு ஏன் எல்லாவற்றையும் பொதுத் தன்மையோடு கறார்த்தனம் இல்லாமல் பதில் செல்கிறீர்கள். இந்தப் பாதைக்குள் எப்படித் தள்ளப்பட்டீர்கள்?

நீல.பத்மநாபன்: நம்முடைய மன வார்ப்புகள், சொந்த அனுபவங்கள் போன்றவற்றை வைத்து இந்தக் கருத்துதான் சரியென்று நாம் தீர்மானிக்கிறோம். இதற்கு முற்றிலும் மாறுபாடான ஒரு கருத்து என்பதும் இங்குண்டு என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னைவிட நகுலனுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அவர் எப்போதும் அவருடைய கருத்துகளை மாற்றிக் கொள்வதே கிடையாது. நகுலனைப் பொறுத்தளவில் இலக்கியமும் வாழ்க்கையும் வேறு வேறானதல்ல; இரண்டுமே ஒன்றேதான். முழுக்க முழுக்க ஒரு எழுத்தாளானாக மட்டுமே வாழ்ந்து மறைந்தவர் அவர். எப்போதும் நகுலனின் கருத்துக்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. அவரிடம் பல இடங்களில் சண்டையும் போட்டு இருக்கிறேன். அதையெல்லாம் தாண்டி என் மீது அவருக்கு ஓர் அன்பு உண்டு. என்னைவிட ஷண்முக சுப்பய்யா நகுலனிடம் பல விஷயங்களுக்காக சண்டை போட்டிருக்கிறார்.

நகுலனைப் பொறுத்தளவில் தனிப்பட்ட ஆளை வைத்துக் கொண்டு அவரின் இலக்கியத் தரத்தை எடைபோட மாட்டார். நான் ''எக்ஸ்ட்ரா லிட்டரரி'' என்று குறிப்பிட்டது கூட அதை வைத்துதான்.

தீராநதி: ''எக்ஸ்ட்ரா லிட்டரரி'' என்று நீங்கள் குறிப்பிடும் பதம் இலக்கியத்திற்கு மேலும் கூடுதலான தகவல் என்ற அர்த்தத்தில்தானே?

நீல.பத்மநாபன்: இல்லை. இலக்கியத்திற்குத் தேவையற்ற தகவல் அது என்ற அர்த்தத்தில்தான் நான் அந்தக் கருத்தைச் சொல்லி இருந்தேன். அதற்கு அப்படியும் ஓர் அர்த்தம் வரும் என்பது எனக்குப் புலப்படவில்லை. ஒருவனின் படைப்பை அவனது சொந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பலசமயங்களில் அது தவறான முடிவை எட்டிவிடும். ஆகவே, கூடாது என்ற அர்த்தத்தில்தான் அதை நான் குறிப்பிட்டேன். அது இலக்கியத்திற்குப் புறம்பானது என்றுதான் சொல்லி இருந்தேன்.

தீராநதி: ஆனால் நீங்கள் இன்னொரு நேர்காணலில் ''படைப்பையும் எழுதியவனின் சொந்த வாழ்க்கையையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமா என்றால், ஆமாம் சேர்த்துப் பார்க்கத்தான் வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்: அப்படியா சொல்லி இருக்கிறேன்? எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. நான் என்ன சொல்கிறேன் என்றால் படைப்பில் ஒரு படைப்பாளியின் சொந்த வாழ்க்கையும் இருக்கிறது. அதை மீறி இருக்கிறது என்கிறேன்.

தீராநதி: திருவனந்தபுரம் என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் எழுத்தாளர், கவிஞர் நகுலன்தான். பிறகு நீங்கள், ஆ. மாதவன். வாழும் போதும் சரி, மறைந்த பிறகும் சரி நகுலன் என்ற படைப்பாளிக்கு ஆகச் சிறந்த ஒரு கவிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது மரணத்திற்குக் கூட ஒரு சில படைப்பாளிகள்தான் வந்திருந்தார்கள் என்ற தகவல் வருத்தத்தை அளிக்கிறது. சக படைப்பாளியாக சக சிநேகிதராக நகுலன் குறித்த இந்தச் சூழலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீல.பத்மநாபன்: அது ரொம்ப வேதனையான சமாச்சாரம். நானும் பல இடங்களில் இதைச் சொல்லி இருக்கிறேன். இங்குள்ள மலையாள எழுத்தாளர்கள் அவர் மறைவையட்டி நிகழ்ந்த இறுதி மரியாதையில் கலந்து கொண்டு அவருக்கு கௌரவம் செய்தார்கள். அதே போல மலையாளப் பத்திரிகைகளும் அவருக்கு உரிய முறையில் மரியாதை செய்தன. தமிழில் ''தீராநதி’ என்ற ஒரு பத்திரிகை மட்டும்தான் அவருக்கு உரிய மரியாதையை செய்திருந்தது. மற்ற யாரும் சரியான முறையில் கண்டு கொள்ளவே இல்லை. கோணங்கி உள்ளிட்ட ஓரிரண்டு எழுத்தாளர்கள் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்தார்கள். நகுலனுக்கு தமிழிலக்கியத்தில் கிடைக்க வேண்டிய உரிய மரியாதையோ அங்கீகாரமோ கிடைக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். தமிழில் பத்திரிகைகள் மற்ற விஷயங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை ஏன் எழுத்தாளனுக்குக் கொடுக்க மறுக்கின்றன என்பது குறித்த ஓர் ஆய்வை நாம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இன்றைக்கு இருக்கிறது. அதை நிகழ விடாமல் தடுக்கும் பிரக்ஞை எது என்று நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால், இருக்க இருக்க அந்த அகலம் கூடிக் கொண்டேதான் வருகிறது. மற்ற மொழிகளில் நெருங்கி வந்து கொண்டிருக்கும் காலத்தில் நாம் மட்டும் ஏன் விலகிப் போய்க் கொண்டே இருக்கிறோம் என்று தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.

தீராநதி: தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் இந்தக் கேள்விக்கு மறுக்காமல் பதில் சொல்லுங்கள். தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை என்பது நடப்பில் இருக்கின்ற ஒன்று. ஆனால், கேரளத்தில் பொங்கல் பண்டிகைக்கு அரசு விடுமுறையில்லாமல் தவிப்பதாக இங்குள்ள தமிழ் மக்கள் சொல்கிறார்கள். இங்குள்ள திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் மூலம் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா?

நீல.பத்மநாபன்: எடுத்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகை அன்று தமிழர்கள் ''ரீஜினல் ஆலிடேஸ்'' என்ற சலுகையின் கீழ் விடுப்பு எடுக்கலாம். அதற்கு எந்தவிதத் தடையும் கிடையாது. ஆனால் பொது விடுமுறை என்று விடுவதில்லை.

தீராநதி: திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் மூலமாக நீங்கள் எல்லோரும் கூடி பொது விடுமுறைக்கு ஏன் முயலக் கூடாது?

நீல.பத்மநாபன்: முன்னால் நான் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்திருக்கிறேன். இப்போது நான் ஒரு அங்கத்தினர் மட்டும்தான்.

தீராநதி: நீங்கள் ஆலோசனை சொல்லலாம் இல்லையா?

நீல.பத்மநாபன்: கட்டாயம் ஆலோசனை சொல்லலாம். அவர்களும் என்னுடைய ஆலோசனை இல்லாமலே பல நற்காரியங்களைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்ப்பள்ளிகளைக் கொண்டுவருவது. மைனாரிட்டி மொழியின் அடிப்படையில் கேரள அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிப்பது என்று பல விஷயங்களை மேற்கொண்டு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகை அன்று முழு விடுப்பு விடுகிறார்களா?

தீராநதி: ஆமாம். தமிழ்நாடு முழுவதும் அன்றைக்கு முழு விடுமுறைதான்.

நீல.பத்மநாபன்: இங்கு அப்படி இல்லை. பொங்கல் பண்டிகை என்பது விவசாயிகளின் பண்டிகைதானே. விவசாய மலையாளிகளும் அதைக் கொண்டாடலாமே அதில் தவறிருக்கிறதா என்ன? மேற்சொன்ன பிரச்சினையை அரசின் கவனத்திற்கு திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் மூலம் கட்டாயம் எடுத்துச் செல்வோம்.

நன்றி: தீராநதி 2008

May 14, 2013

தேவதேவன் - நேர்காணல்

'சிற்பி இலக்கிய விருது' பெற்றுள்ள தேவதேவனின் இயற்பெயர் பிச்சுமணி கைவல்யம்.வயது 51.ஆசிரியராக பணிபுரிகின்றார்.அம்ருதா , அரவிந்தன் என்று இரண்டு குழந்தைகள். பள்ளியிறுதிவரை படித்தபின் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார்.வேலை கிடைக்காத்தினால் தன் வீட்டின் ஒரு பகுதியிலே அச்சகம் வைத்து நடத்தினார்.அதிகமான அறிமுகம் இல்லாத நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் வீட்டை பிணையாக்கினார். கடன் வாங்கிய நண்பர் ஒடிப்போனபின் வங்கி அதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டு , நீதி மன்றத்திற்கு அலைந்து இறுதியாக பெருந்தொகை கொடுத்து தன் வீட்டை பிணையிலிருந்து மீட்டார். இது போன்ற சம்பவ அடுக்குகளால் பின்னப்பட்டது தேவதேவனின் வாழ்க்கை.

கலை, இலக்கியம் , சமூகம் , வாழ்க்கை என்று பேசும்போது தன்னை ஒரு பெரும் கலாச்சாIMG_4443ர சக்தியாக , அசாதாரண மனிதனாக உணர்பவராகவும் , உணர்த்துபவராகவும் காணப்படும் தேவதேவன் , தன் இளமைக் காலத்தில் அரசியல் மற்றும் புரட்சி பேசும் தன்னையொத்த இளைஞர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுவரும் , ஆகர்ஸிக்கப்படுபவருமான ஆளுமையை உடையவர். 70களில் தூத்துக்குடியில் உள்ள சில ஆர்வமுள்ள இளைஞர்களால் நிறுவப்பட்ட 'தர்சனா' திரைப்படக் கழகத்தின் பிதாமகர்.மிகப் பிரம்மாண்டமான அளவில் நடந்த புத்தகத் திருவிழா நிகழ்வின் மிக முக்கிய சக்தியாக இருந்தவர்.கலாச்சாரம் குறித்த பல கனவுகளை உடைய இவர் ஒரு கவிஞனாக எஞ்சியது ஒர் இயற்கை நிகழ்வு என்றுதான் கூறவேண்டும்.

இன்று கவிதையை மூச்சுக்காற்றாய் கொண்டிருக்கும் தேவதேவன் இதுவரை பத்து கவிதை தொகுதிகள் வெளியிட்டிருக்கின்றார்.

1.குளித்துக்கரையேறாத கோபியர்கள்(1976)

2.மின்ன்ற்பொழுதே தூரம் (1981)
3.மாற்றப்படாத வீடு (1984)
4.பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)
5.நுழைவாயிலிலே நின்றுவிட்ட கோலம் (1991)
6.சின்னஞ்சிறிய சோகம் (1992)
7.நக்ஷ்த்திர மீன் (1994)
8.அந்தரத்திலே ஒர் இருக்கை (1995)
9.நார்சிசஸ் வனம் (1996)
10.புல்வெளியின் ஒரு கல் (1998)

'கவிதை பற்றி' என்னும் (உரையாடல்) தொகுப்பு வெளியிட்டிருக்கிறார்.

கவிதைகள் தவிர சிறுகதைகள் , நாடகம் , திறனாய்வு கட்டுரைகள் , மற்றும் மொழிபெயர்களும் செய்திருக்கிறார்.

கவிதைகள் மீது கொண்ட தாகத்திற்கு சற்றும் தணியாத தாகத்துடன் தன் வீட்டைச் சுற்றிலும் , பள்ளி வளாகம் முழுவதிலும் மரம் வளர்த்து வருகிறார்.

உணவு மற்றும் உடை விஷயங்களில் எளிமையாகவே வாழ்கிறார்.ஆர்வத்துடன் உரையாடலில் ஈடுபடுகிறார். தன் கருத்துகளை வற்புறுத்திச் சொல்லி தயங்கிவதில்லை.மழுப்பலற்ற நேரடியான பதில்களையே தருகிறார்.

வேர்கள் சார்பாக தேவதேவனை பேட்டி கண்டவர் எழுத்தாளர் மோகனன். அப்பேட்டியினை ஒட்டி சில துணைக்கேள்விகள் : பா. சத்தியமோகன்.

'கவிஞனாக' உருவெடுத்த இளமைக் காலம் பற்றி....

வறுமையும் அறியாமையும் நிறைந்த ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தேன். என்னுடைய இளமைக்காலம் ரொம்பத் துக்கம் நிறைஞ்சதா இருந்தது. பிறந்த்திலிருந்தே நான் அப்படித்தான் இருந்திருக்கேன். காரணம் புரியாத ஒரு துக்கம். பிறகு பொருளாதார ரீதியில் உள்ள கஷ்டங்கள். படிப்பைத் தொடரமுடியாத நிலை.இந்த நிலைமையிலேயே கலைகள் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வமும் மோக பங்கமும்... இதுதான் சுருக்கமான எனது இளமைக்காலம்.

'காரணம் புரியாத துக்கம்' என்கீறிர்கள், உங்கள் பெரும்பாலான கவிதைகளில் அதை உணர முடியாது.அந்த இனம் புரியாத துக்கத்தின் தொடர்பாகவோ, வேறு வடிவமாகவோ உங்கள் கவிதைப் படைப்புகளைக் கருத இடம் இருக்கிறதா?

எனது துக்கத்தை அவதானிக்கும் விதமாகவும் அதிலிருந்து விடுதலை பெறுமவிதமாகவும் அந்தக் கவிதைகள் உருவாகியுள்ளன. விடுதலையடைந்த மனிதனின் உற்சாகமும் பரவசமும் என்னுடைய கவிதைகளில் உண்டு . வில்லியம் பிளேக் தன்னுடைய கவிதைகளை வகைப்படுத்தும் போது கண்டைந்த ஆனந்தமும் துக்கமும்("Songs of Innocence & Songs of Experience) என்னுடைய கவிதைகளில் உள்ளன.

தமிழின் நீண்ட கவிதை மரபு, சங்கக் கவிதை, மரபுக் கவிதை பற்றி...

தமிழுக்கு நீண்டதும் தனித்துவமானதுமான ஒரு கவிதை மரபு இருக்கிறது. இயற்கையோடு நெருங்கி வாழ்ந்த காலத்தைக் காட்டுகின்ற சங்க காலப் பாடல்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தவை. தாங்கள் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களுக்கு அவர்கள் இயற்கையப் பயன்படுத்திய விதம் இன்றைய நவீன , பின் நவீனத்துவக் காலத்திலும் மறுக்க முடியாத சில கூறுகளைக் கொண்டுதான் இருக்கிறது. திருக்குறள் தோன்றுகிற சமயத்தில் உலகத்தின் எந்த மூலையிலும் இவ்வளவு உயர்வான - கவிதைச் செறிவிலும் கூட - இவ்வளவு உயர்வான ஒரு நீதி நூல் தோன்றியதில்லை என்று அறிகிறோம். கவித்துவ உத்தேசமில்லாமலேயே எழுதப்பட்ட நீதிநூலில் கவிதையின் முக்கிய கூறான மனவெழுச்சி எவ்வளவு தூரம் வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் நாம் வியந்து கவனிக்க வேண்டிய விஷயம். நீதியுணர்வுக்கு அடிப்படையானது இந்த மனவெழுச்சி என்பதுதான் காரணம் என்று தோன்றுகிறது . அடிப்படைகளைத் தொட்டுள்ள படைப்பு திருக்குறள்.

தானாடுகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்தம் மாலும் என்நெஞ்சு....

இது மாதிரி நிறைய குறள்களில் காணப்படுகிற உணர்வெழுச்சிகளை "ரொமாண்டிக்" தனமானது என்று தள்ளிவிடக் கூடியது நவீனக் கவிதைக் கோட்பாடு. ஆனால் அது வள்ளுவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிஞ்சது அவரது ஆர்வமும் மனவெழுச்சியும் மட்டுத்தானே. இன்றைக்கு இதுபோன்ற ஒரு "ரொமான்டிக்" கான மனவெழுச்சியில்தான் மிக உயர்ந்த ஒரு யதார்த்த நிலையை நாம் அறியமுடியும் என்று நான் என்னுடைய உரையாடல்களிலும் , கவிதைகளிலும் எழுதி உணர்த்தி உள்ளேன். இன்றைக்கு பின் நவீனத்துவம் கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும், இருக்கமுடியும் என்கிறது. மறைந்த "குரு" நித்ய சைதன்ய யதி போன்றோர்கள் பேட்டி (காலச்சுவடு) மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது . ஜெயமோகன் தனது ஆழ்ந்த படிப்பு மற்றும் அவதானங்கள் மூலமாக இதை ஒரு நூலாக எழுதியுள்ளதையும் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது முக்கியமான ஒரு பாய்ச்சல்.

உணர்ச்சி மிகையைத் தவிர்க்க வேண்டும் என்பது நவீனத்துவக் கோட்பாடு. அதை (உணர்ச்சியை) அறிவுத்தளத்தில் நாம் யோசிக்கவேண்டும் அல்லவா?

எழுத்தில் உணர்ச்சி மிகையைத் தவிர்க்க வேண்டும்தான். நாம் தர்க்கத்திற்கு அடிப்படையாய் உள்ள "உணர்ச்சி மிகை" யை இப்பொழுது வற்புறுத்துகிறோம். சொற்களிலும் அது ஒரு இசையாக வெளிப்பட்டால் நல்லது என நினைக்கிறோம்.

ஒரு நுண்பொருள் உருவத்தை உருப்பெருக்கிக் காட்டுற மைக்ராஸ் கோப்பாலத்தான் காணுதல் , புரிதல் சாத்தியமாகிறது மாதிரி .காவிய இலட்சனங்கள்ல ஒன்றுதானே அதீதக் கற்பனை. அதற்கு எத்தகைய மனவெழுச்சி வேனும்னு நாம் யோசித்துப் பார்க்கணும்.நாம கவிதை மூலமா கவிஞன் மூலமா அடைய வேண்டியது அந்த மனவெழுச்சிதான்.அதை வடிகட்டி நாம கண்டமைகிற அறிவு எல்லாம் கவிதையில் இரண்டாவது விஷயம்தான் .அந்த அறிவிலும் அழகும் அற்புதமும் உண்டுங்கிறதையும் மறுக்க முடியாது .

இன்றைய கவிஞன் பிரஞ்சு மற்றும் ஐரோப்பியக் கவிதை மரபுகளை அறிந்தவன். நமது சங்க இலக்கியம் , பக்தி இலக்கியம் , காவியங்களை அறியும் போது ஆச்சிரியப்பட பல விஷயங்கள் இருக்கின்றன, என்றாலும் கவிதையில் உலக இலக்கிய வாரிசாகத்தான் அவன் வெளிப்பட வேண்டும்.அப்படி வெளிப்படும் போதுதான் அவன் இன்றைய கவிஞனாக இருக்க முடியும். இதையும் மீறி அவன் கவிதையில் ஒரு கலாச்சாரம் , மரபு , இனத் தனிமை , தவிர்க்கப்பட முடியாமல் இடம்பெற்றிருக்குமானால் - அப்போதுதான் அதை யாரும் குறை சொல்ல முடியாது.

கவிதையில் உலக இலக்கியத்தின் வாரிசாகத்தான் இன்றைய கவிஞன் வெளிப்பட வேண்டுமென நீங்கள் கூறுவது எதன் பொருட்டு? பரந்துபட்ட வாசிப்பு மற்றும் உள்வாங்குதல் , உணர்தலின் அடிப்படையிலா?

கவிதை அத்தகைய ஒரு கலை என்று நான் கருதுவதால்.

புதுக்கவிதைக்கு , 60 களில் இருந்த உத்வேகம் இப்போதும் உள்ளதா?

பாரதியும் , பாரதிதாசனும் இலகுவான யாப்புகளைப் பயன்படுத்தினார்களே ஒழிய யாப்பைத் துறக்கவில்லை. புதிய விஷயங்களுக்கு வந்தாங்க.ஆனாலும் முற்றிலும் புதிய விஷயங்களை யாப்பிலே சொல்ல முடியுமாங்கிற சந்தேகம் இருந்தது. இவர்களால நவீனக்காலக் கவிஞர்களா ஆக முடியாம இருந்தது. இந்தச் சமயத்துல நவீனக் கவிதையை ஒரு இயக்கமா சி.சு.செல்லப்பா ஆரம்பிக்கவும் தமிழ்க் கவிதையுலகில ஒரு எழுச்சி , சுறுசுறுப்பு பிறந்தது. எல்லா எழுத்தாளர்களும் ஒரு திருவிழாக் கொண்டாட்டம் மாதிரி புதுக்கவிதைகள் எழுத ஆரம்பிச்சாங்க, அதேதான் இன்னைக்கும் தொடருது. அதில எந்த மாற்றமுமில்ல.60கள்ல இருந்த அதே மாதிரி உத்வேகம் இன்னமும் இருக்கவே செய்யுது.

ஒரு கவிதை உங்களுக்குள் எவ்வாறு உருவெடுக்கிறது?

ஒளி வீசுகிற ஒரு காட்சி என்னை வசீகரிச்சு ஒரு படிமமா எழுதத் தூண்டியிருக்கு.

நெஞ்சு கனத்து கண்ணீரை வர வைக்கிற தனிமையில் அப்போ காணுற காட்சி, என்னை மொழி பெயர்க்க உதவுற படிமமா உதிவியிருக்கு.

துக்கம் நிறைந்துவிட்ட மனநிலையோட அந்த் வேதனையின் துக்க காரணத்தை ஆராய்கிற விதமா நான் உட்கார்ந்திருவேன்

அப்போ ஒரு தாளம் இசையோடு கூடிய ஒரு வாக்கியம் , எனக்கு நானே பேசிக்கொள்ள உதவுவது போல வரும். அந்தச் சொல்லே அதற்கான அடுத்த அடுத்த சொல், படிமம் எல்லாவற்றையும் இழுத்துக் கொண்டு வந்து , எப்படி எழுதி முடித்தேன் என்று பின்னால் வியக்கும்படியான , என்னை மீறிய ஒன்றாக அது எழுதப்பட்டிருக்கும்.

என் மனதில் திரும்பத் திரும்ப வந்து மோதும் தீவிரமான படிமங்களை நான் தியானித்துக் கோர்த்தும் எழுதுவதுண்டு.நெடுங்கவிதை முயற்சிகளுக்கு இந்த்த் தியானம் அவசியம்.

உங்களது கவிதை அனுபவம் மிகவும் சிகரத்தில் இருக்கிறதா தோணுது. அதாவது எழுத உட்காருதல் என்கிற ஒரு புறச்செயலைத் தவிர , துக்கம் நிறைந்த அந்த மனோவேளை vergalஉங்களை எழுத வைப்பது உன்னதம்தான். அப்படியெனில் அந்தப் பொழுதிற்காகக் காத்திருப்பதும் நிகழ்கிறதா? நீங்கள் விரும்பி எழுத முற்படுவது என்ற நிலையை நீங்கள் மறுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா? இந்தக் கேள்வியைக் கவிதை மனோபாவ ஆளுமை குறித்த கேள்வியாகக் கூடக் கருதலாம்.

'அந்த இடத்தை' - அதுதான் எனது 'மூட்' , எனது 'யதாஸ்தானம்' என்று கருதுகிறேன். எல்லா வேலைகளையும் மளமளவென்று முடித்துவிட்டு அந்த இடத்திற்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் போய் இருக்கவே விரும்புகிறேன். மற்றப் பொழுதுகளில் குழந்தைகளுடனும் , நண்பர்களுடனும் , ஆர்வத்துடன் ஈடுபடமுடிகிற பிற தொழில்களிலும் இருக்க விரும்புகிறேன். நான் காத்திருக்கலை. ஆனா நான் எப்போதும் என்னுடைய இருப்பிடத்திற்கும் போக விரும்புகிறேன். அங்கிருந்துதான் நான் கவிதை எழுதறேன். அங்கிருப்பது தண்ணீரில் இருப்பது மாதிரி.கவிதை எழுதுவது நீர்ப்பூவைப் பறிப்பது மாதிரி.

நீங்கள் எழுத ஒன்றுமில்லாத வெறுமையை உணரும் போது என்ன செய்கிறீர்கள்?

பெரும் படைப்புகளைத் திட்டமிட்டிருப்பவர்களிடம் நீங்கள் இக்கேள்வியைக் கேட்க முடியாது. நான் கவிஞன் என்பதால் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். எழுத ஒன்றுமில்லாமல் இருக்கும் வெறுமையை நான் துக்கமாக ஆக்கிக் கொள்வதில்லை."கதே" யைப் போல , வாசிப்பிலும் , மானுடப் பிரச்சனைகளை அன்றாட நிகழ்வுகளில் சிந்திப்பதிலும் செலவிடுவேன்.

பாரதி பாரதிதாசனுக்குப் பின் அவர்கள் அளவுக்குச் சொல்லக்கூடிய கவிஞர்கள் உருவாகாதது ஏன்?

இருவருமே தங்களது தார்மீக ஆவேசத்தை சமகாலத்தோடு பிணையும்படி விட்டார்கள்.இன்றைய கவிஞர்களுக்கு அத்தகைய ஆவேசமோ சமர்ப்பணமோ இல்லை. ஆனாலும் ஒன்று சொல்வேன்: முதல்ல கவிதையோட தளம் என்ன? எல்லாக் கலைகளோட உச்சத்தைத்தான் கவிதைன்னு சொல்றோம்கையில கவிதைங்கிற கலை தன்னியல்பாகவே எதற்காகத் தோன்றியிருக்குன்னு நாம யோசிக்கணும். பாரதி, பாரதிதாசன் இரண்டுபேருமே தங்களுடைய தார்மீக ஆவேசத்தை முறையே தேசீயத்திலும் , தமிழ்த் தேசியம் மற்றும் சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றிலும் பெரும்பாலும் செலவிட்டார்கள்.பாரதிதாசன் அழகின் ரகசியம் , குடும்பம் என்று நுணுகிச் சென்றது போலவே , பாரதியும் ஆன்மிகத்திற்குள் நுழைந்தார் , அவை நமது வேதங்கள் , உபநிஷத்துக்கள் ஆகியவற்றின் எதிரொலியாக அமைந்ததே அன்றி, ஜீரணித்தமையால் ஏற்பட்ட வாழ்வனுபவங்களாக வரவில்லை. தாகூருக்கு அவரது ஆளுமையின் வெளிப்பாடாகவே அவை வெளிவந்தன. பாரதி , பாரதிதாசன் இருவருமே குறிப்படத்தக்க நம் கவிஞர்கள் என்பதோடு அவர்களது தார்மீக ஆவேசத்தை நாம் சந்தேகப்படுவதன் மூலமே , அதாவது துருவுவதன் மூலமே நம்மிலும் வளர்ச்சி சாத்தியமாகும் . இன்று பின் நவீனத்துக் கவிதை பிரமளில் தொடக்கம் கொள்கிறது என ஜெயமோகன் நிறுவுகிறார் . பிரமளின் மொத்தப் படைப்புகளையும் கொண்டு பார்த்தால் தமிழுக்குக் கிடைத்த அடுத்த கவிஞர் அவர் என்று நாம் காண முடியும் முந்தைய கவிஞர்களை நாம் சந்தேகப்படுவது- துருவுவது போலவே நாம் பிரமிளையும் ஆராய வேண்டும். புறங்காரணங்களான அரசியல் மற்றும் பண்பாட்டு நெருக்கடிகள் ஒருவனை வெகுதூரம் வழி நடத்துவதில்லை.மழைக்காக அண்ணாந்தவன் எல்லையற்ற வானத்தைக் கண்டடைவதற்கு அவனுக்குள் ஏற்கனவே தார்மீக எழுச்சி பதுங்கியிருந்திருக்க வேண்டும் அதுவும் போதிய வீரியத்துடன்.

கவிதைகளில் நீங்கள் குறிப்பிடும் தார்மீக எழுச்சி ஒரு கவிஞனுக்கு இயற்கையிலேயே இருக்க வேண்டுமென்கிறீர்கள்?அதை ஒரு முக்கியமான கூறுபாடாகக் கருதுகீறிர்களா?

ஆமாம்.இல்லாவிட்டால் அவன் யார்? அவன் எதற்காக எழுதனும்? அவன் தன் கட்சிக்காகவும் , சாதிக்காகவும் கூச்சலிடுவது எழுத்தாகிவிடுமா?

கவிதை என்பதற்கு அடிப்படையான அழகியல் , உள்ளடக்கக் கோட்பாடு வடிவம், உத்தி பற்றி.

அழகியல் அடிப்படை.ஏதாவது ஒரு உணர்வுதான் உள்ளடக்கம். அந்த அழகும் உணர்வும் ஒவ்வொரு கவிதையிலும் தனக்கே ஆன ஒரு முழுமையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.அதுதான் அந்தக் கவிதையோட வடிவமாயிடுது.ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். உணர்வு என்பதே தன்னளவில் மிகத் தீவிரமான ஒன்றுதான்.அந்தத் தீவிரத்தின் மூலமே எதையாவது ஒன்னை வெளிபடுத்துகிறோம். அல்லது கண்டடைகிறோம்.அதைக் கவிதை என்கிறோம். கவிஞனோட போதமும் தீவிரமும் தாங்கள் வெளிப்படத் தோதான உத்திகளைத் தாங்களே தேடி எடுத்துக் கொள்கின்றன.


உங்களது 'நக்ஷ்த்ரமீன்' தொகுப்பில் 'உள்ளும் புறமுமாய்ச் சில படிமங்கள்' கவிதையில்

நிலா ஒளிபோல அகண்டது என் இதயச்சதை

சின்னஞ் சிறு இடையூறுக்கும் சிலந்தி வலைப்போல அது துடிக்கிறது.

சின்னஞ் சிறு தூண்டலுக்கும் நிலாவினைப் போல் அது பாடுகிறது

எப்போதும் எனக்கு ஒரே வேலை

இந்த இதயத்தை பழுதுபார்க்கும் வேலை

என்கிறீர்கள். கவிதையில் நீங்கள் குறிக்கும் 'நான்' 'எனது' அனுபவங்கள் வாசிக்கும் போது வாசகனுக்காகிறது. சமூகத்தைச் சென்றடைய உங்களது உத்திமுறையாக இதுபோன்ற கவிதைகளை எடுத்துக்கலாம்னு நினைக்கிறேன்.

ஏனேனில் அறியப்பட வேண்டிய கவிஞர்கள் மத்தியில் நீங்கள் உணரப்பட வேண்டிய கவிஞரா இருக்கிறதால இப்படி கேட்கிறேன்?

அது உத்திமுறை என்பதல்ல. நான்தான் நீ என்பது ஒரு உண்மை.ஆகவே நாம் நாம அனுபவத்தைச் துணிந்து சொல்லலாம்.அது ஆழமான அனுபவமாக இருப்பின் எல்லோரது அனுபவமாகவும் விரிவுகொள்வது இயற்கை.

தமிழ்க் கவிதையின் எதிர்காலம் பற்றி...

நான் யோசிக்கலை. நடந்துகிட்டிருக்கிறது பற்றி யோசிச்சிருக்கேன்.

கவிஞனோட சக்தி காலத்தை அழிச்சு புதுப்பிக்குது சொற்கள்ல புதுப்படிமங்களை உருவாக்குது. நம்ம கவிஞர்கள் தங்கள் கவிதை மீதே நம்பிக்கையில்லாதவர்கள் தாங்கள் கவிஞர்கள் என்பதன் மீதும் நம்பிக்கை கிடையாது. திராணி இல்லாதவர்கள் "கவிதை என்பது காகிதத்தில் எழுதப்படும் எழுத்துக்களே " என்று ஒரு அமைப்பியல்வாதி சொல்லிவிட்டால் உதறலெடுக்கக் கூடியவர்கள்.

சுற்றுச் சுழல் அக்கறை பற்றிய உங்கள் பின்ணணி என்ன?

சுற்றுச் சூழல் அக்கறைங்கிற மாதிரியான எந்த ஒரு பிரக்ஞையோடயும் நான் எதையும் எழுதியதில்லை. மனம் பெரியதாய் வேதனை கொண்ட ஒரு நிலையில், கையறுநிலை போன்ற ஒரு நிலையில் நெஞ்சப் பொருமலாய் வெளிவந்த ஒரு வரிதான் "ஒரு மரத்தை கூடக் காணமுடியவில்லை" என்ற வரி.அதைத் தலைப்பாக வைத்து அந்த மனநிலையோட நான் எழுதிமுடித்த அந்தக் கவிதையில இருக்கிறது, என் மனசோட ஒரு நிலச்சித்திரம்தான்.அதே மாதிரிதான் "அகழி" நெடுங்கவிதையும்."அகழி" யோட படிமங்கள் என் மனதில் உதித்திருந்த போது உலகில் ஓசோன் பிரச்சனை எழுந்திருக்கவில்லை.மேலும் இயற்கையின் முன்பு என் மனம் கொள்கிற பரவசத்திலிருந்து என்னோட பல கவிதைகள் பிறந்திருக்கு."அகழி" ஒரு துஷ்டலோகம்(Dystopia)

திராவட இயக்கம் இடதுசாரி இயக்கம் தமிழ் நவீன இலக்கிய வளர்ச்சியில் போதுமான தாக்கம் செலுத்தி உள்ளதா?

நாம பரிசீலித்தாக வேண்டிய நிலையில மறைமுகமான அதனோட தாக்கம் தமிழ் நவீன இலக்கியத்தை நன்றாக பாதிச்சிருக்கவே செய்யுது. அழகியலோடு முற்போக்கான அம்சம் மற்றும் அறச் சீற்றத்திற்கு முதன்மை கொடுத்து ஒரு தேர்வுடன் இலக்கியம் அதாவது முற்போக்கு இலக்கியம் தன் பங்கை அளித்திருக்கவே செய்யுது. அதே போலதான் திராவிட இயக்கத்தின் உள்ளார்ந்த பலத்தை அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களாலும் கூடச் சீரழிக்க முடியாததற்கு அதன் அறம் தான் காரணம்.

ஓரளவுக்கு படிக்கும் போக்குடைய வாசகர்களைத் தன்வயப்படுத்தி இதற்குமேல் போகாதே என அணைகட்டுவது போல் சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் "போக்குகள்" பற்றி...

காலத்தை யாராலும் அணைபோட முடியாது. உள்ளேயிருந்து கொண்டே அவர்களைக் கேள்வி கேட்கிற இளைஞர்கள் அங்கேயும் தோன்றுவார்கள். ஒரு அமைப்பில் இருந்து கொண்டு , 'தலைவர்கள்' பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிற இளைஞர்கள் மிகவும் பலவீனமானவர்கள்தான். ஒருவன் பொதுவான ஒரு சமூகச் செயல்பாட்டுக்காகவே ஒரு குழுவை நாட வேண்டும்.கருத்துலக மனப் பாதுக்காப்புக்காக நாடுவது பெரிய அவலம். அத்தகைய சுகந்திரமற்ற இளைஞர்கள் சுயவாசிப்பு மூலம் நல்ல இலக்கியங்களை அடையாளங்காணமுடியாத ஊனத்தை அடைந்துவிடுகிறார்கள்.அவர்கள் விடுதலை பெற வேண்டும். அதற்கு படைப்புகள் பற்றிய ஆழ்ந்த விரிவான விமிர்சனங்களும், ஆய்வுகளும் நமக்குத் தேவை.

திராவிட இயக்கப் போக்கினால்தான் தமிழின் நவீன இலக்கியத்திற்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை`என்பது பற்றி...

அப்படியா? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அமைப்பியல் , பின் அமைப்பியல் நோக்கிலான விமர்சனங்கள் பற்றி.

அது எழுப்பிய பரபரப்பு இப்போது ஓய்ந்துவிட்டதென நினைக்கிறேன். உண்மையைக் கண்டடைவதற்கான வழிகளை வித்தியாசப்படுத்தவது அந்த்த் தத்துவங்களோடு உள்ள கலைச் கலைச் சொற்கள்தான்.இந்தக் கலைச் சொற்களை ஒருவன் ஜீரணித்த பிறகு உண்மையைக் கண்டடையும் முறையில் ஒரு சுலபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.அந்தக் கலைச் சொற்களை உபயோகிக்காமலேயே வேகமாகத் தன் தொழிலில் இறங்க வேண்டும்.முடிவைத் தவறின்றிக் காண முடிய வேண்டும். தவறுகள் நேர வாய்ப்புகள் வைத்திருக்க கூடாது அந்தத் தத்துவம். ஆனால் பின் அமைப்பியல் இன்றும் வளர்ந்து கொண்டு வருவது தெரிகிறது.

அமைப்பியல் , பின் அமைப்பியல் பூர்வமா உங்களது ஒரு நல்ல கவிதை தீவிரமா விமர்சிக்கப்பட்டு நிராகரிக்கப்படும்போது உங்களது எதிர்வினை என்னவாக இருக்கும்?

சிரிப்பேன்.

எழுத்தாளன் பணி எழுதுவதோடு நின்றுவிடுகிறதா? உங்கள் எழுத்து மூலம் நீங்க தெரிவிக்க விரும்புவது?

எழுத்தாளன் , அவன் எழுதும் எழுத்தோடு தொடர்புடையதாகத்தான் அவன் செயல்பாடும் இருக்கும். பெரிய போராட்டங்களிலோ, தீவிரமான ஒரு இயக்கத்திலோ அவன் இல்லாம இருக்கலாம். " பாவனை" தான் பொல்லாதது. Fancy ஆக ஒன்றைச் செய்யாமலிருப்பது நல்லது.என் எழுத்து இன்றைக்கு வாழ்ற ஒரு மனுஷனோட ஜீவனை வெளிப்படுத்துற நோக்கங் கொண்டதாக நினைக்கிறேன்.

தமிழ் இலக்கியச் சூழல் அதன் குழு மனோபாவம் பற்றி...

"கெட்டதைப் பார்க்காதே, கெட்டதைப் பேசாதே , கெட்டதைக் கேளாதே " ங்கிற அறிவுரைக்குச் செவிசாய்த்தவர்கள் மாதிரி இருக்கிறோம்.தமிழ் இலக்கியச் சூழல்ல குழு மனோபாவம் இருக்கிறதுங்கிறதுக்கான சான்றாக உங்க கேள்வியை எடுத்துக்கிடறேன். அடுத்தது நீங்க இந்தச் குழு மனோபாவத்தை ஒரு எதிர்மறை அம்சமா அதாவது ஒரு அவலமாக் கண்டுதான் கேக்கிறீங்க இல்லையா? சரி . அப்புறம் இந்த குழு மனோபாவம் எங்ககிட்ட இருக்குங்கிறதை யாராவது ஒத்துக்கிடாறாங்களா? இல்லை. அப்படின்னா நீங்க நெனைக்கிற குழுமனோபாவம் உங்கள் மனப் பிராந்தி தானா? இல்லை. அப்படீன்னா அந்தக் குழு மனப்பான்மையினால நிலவுற தீமைகள் என்னன்னும் உங்களுக்குத் தெரியும் . அதனாலதான் கேக்கறீங்க ? இந்தக் குழுமனப்பான்மைக்கு யார் காரணம்? எது காரணம் ? எத்தனை மனிதர்களுக்கு இது பற்றி அக்கறை இருக்கு? எந்த , யாருடைய சவுகரியத்தின் பொருட்டு இந்தக் குழுமனோபாவம்? இந்தக் கேள்விகளுக்குப் பின்னணியில் இருப்பது மிகவும் அருவருப்பான மனிதர்களாலான ஒரு சூழலின்றி வேறு என்ன? ஆனால் இதைப் பற்றிப் "பேசக் கூடாது, கேட்கக் கூடாது, பார்க்கக் கூடாது" ஆகவே திருட்டுத் தனமாக அவைகள் பேசப்படுகின்றன.அறியாத மனிதர்கள் ஒருத்தரும் இல்லை.

மலையாளத்தில் , கன்னடத்தில் உள்ளது போல தமிழில் வெகு ஜன இதழ்கள் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் போனது ஏன்?

நம்ம வெகுஜன இதழ்கள் தரத்தில் பின் தங்கியிருப்பதுதானே காரணம்.நம்முடைய கலாச்சாரச் சக்திகள் சிதறுண்டு கிடக்கு. அவற்றை ஒன்று சேர்க்கிறது பற்றியும் வாசகத்தரத்தை உயர்த்துகிறது பற்றியும் நாம் சிந்திக்கணும்.

நல்ல படைப்புகள் கண்டுகொள்ளப் படாமல்போவது , தமிழில் இலக்கிய உணர்வு போதிய அளவு இல்லாமல் போனது குறித்து...

திரும்பவும் நம்ம சூழல் குறித்தே கவலை தெரிவிக்கிறீங்க. நானும் உங்களோட இந்தக் கவலையைக் பகிர்ந்துகிடறேன்.

கவிஞனாக இருப்பதற்காக வருத்தப்பட்டது உண்டா?

இல்லை. இது மகத்தான பேறு. கலைஞர்களிலேயே பெரிதும் கவுரவிக்கப்படத் தகுந்தவன் கவிஞனே என்னும் பெருமிதமும் உண்டு.

குடும்பச் சூழல் எழுதுவதற்கு ஊக்கம் அளிக்கிறதா?

"குடும்பச் சூழல் தவிர்க்க முடியாதது. நான் எழுதுவதும் தவிர்க்க முடியாதது" என்ற நிலை மாறி இன்று எனது நண்பர்களும் குடும்பமும் மிகவும் ஊக்கமளிப்பதான சூழல் நிலவுகிறது. நான் தான் எழுதிக் குவிக்கவில்லை.

படைப்பாளியே பதிப்பாளராகவும் இருந்ததால் ஏற்பட்ட நன்மைகள் - பாதங்கள்.

என்னைப் பற்றிதானே கேட்கிறீங்க. என்னோட இரண்டு புத்தகங்கள் தவிர மற்ற ஒன்பதையும் நானே வெளியிட்டிருக்கிறேன். காரணம் பதிப்பாளர் கிடைக்காததாலதான்.

உரிய நேரத்தில் புத்தகம் வெளிவருகிறதுங்கறதுதான் நன்மை.ரொம்ப நட்டத்திற்குப் பிறகாவது இன்றைக்கு எனக்கு நல்ல விற்பனையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். இந்தத் தொழில் எனக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கு.

நிதிச் சுமையை மீறி இத்தனை தொகுப்புகள் வெளியாக உதவியது லெளகீக நெருக்கடியைப் புறக்கணிப்பதில் வெற்றிபெற்றதாலா? அதாவது.... நிதிச்சுமைக்கு எதிர்த்தட்டுல இருக்கிற குடும்பம் இரண்டையும் சமமா பிடிக்கிற தராசு மனோநிலை பற்றி.......

எனது முதல் இரண்டு தொகுப்புகளும் எனது குடும்பம் ஆரம்பிப்பதற்கு முன்னே வெளிவந்துவிட்டன. அவை வெளிவர ஒரு நண்பரின் உதவி இருந்தது. அந்த முதலீட்டைத் தொடர்ந்து வருகிறோம். ஒவ்வொரு புத்தக வெளியீட்டின் போதும் கணிசமான தொகை போட்டுத் தொடர வேண்டியுள்ள அவலமே இன்னும் உள்ளது.புத்தக வெளியீடு - குடும்பம் இரண்டும் ஒன்றையொன்று எந்தவிதத்திலும் பாதிக்காத ஓர் ஒழுங்கை நான் கடைப்பிடித்துவருவதுதான் நான் செய்யும் மிகப்பெரிய ஒரு தீரச் செயல்.

சமகால எழுத்தாளர்களில் நம்பிக்கையூட்டுபவர்கள் யார் யார்?

பெரிய சாதனைகளை நிகழ்த்தக்கூடியவராக இப்போதைக்கு ஜெயமோகன் தெரிகிறார்.மற்றவர்கள் இவ்வளவு திடமாகக் கூறமுடியாததால் பெயர்களைத் தவிர்க்கிறேன். "விஷ்ணுபுரம்" நாவலைப் பற்றி பேர் பெற்ற எழுத்தாளர்கள் பலர் கூறிய அபிப்பிராயங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழ்ப் படைப்பாளிகளின் வாசிப்புத்தரம் மிக மட்டமாக உள்ளது என்பதைத்தான் அறிய முடிந்தது. இப்படி இருக்கையில் சிறந்த இலக்கிய படைப்புகள் இவர்களிடமிருந்து வருவதும் இவர்களால் தமிழர்களின் வாசிப்புத்தரம் உயர்வதும் எவ்வாறு ஆகும்? திடீரென்று இந்த விஷயம் இப்போதுதான் உறைப்பது போல் இருக்கிறது. தமிழில் பிரஞ்கையுள்ள படைப்பாளிகள் ரொம்பக் குறைவாகவே இருக்கிறார்கள். தங்கள் 'சுய அனுபவத்திலிருந்து திராணியான கலையைப் படைத்தலை' சு.ராவும் கூட தவறவிட்டுள்ளார்.தன்னோட புதிய நாவலில் Text ஐ மட்டும் முன்வைத்தல் போதும் என்கிற நவநாகரிக மோஸ்தர் வலையில் சிக்கி, Text ஒரு மெட்டபெர் அல்லது படிமம் ஆகையில்தான் கலையாகிறது என்பதையே தவறவிட்டிருக்கிறார். அது பத்தாம்பசலித்தனமான கருத்தாகிவிட்டிருக்கிறது அவருக்கு. நமது படைப்பாளிகளிடம் அவர்களையும் மீறி சிறந்த படைப்புகள் தானாக வந்தால்தான் உண்டு என்கிற நிலைதான் உள்ளது. சிறுகதைகளில் , கவிதைகளில் கூட அது சாத்தியமாகலாமேயன்றி நாவல், காவியம் போன்ற செவ்வியல்கலைகளில் இதுவரை சாத்தியப்படவில்லை. கலைபற்றிய ஞானமும் பிரஞ்கையும் ரொம்ப அவசியம் .இன்று நம்ம நிலைமையைப் பார்த்தால், இது கோட்பாடுகளின் காலம்னு சொல்லும்படியா இருக்கு. கோட்பாடுகளோட ஆதிக்கத்திற்கு அகப்படாத வீர்யத்துடன் ஒருவனுக்குச் சிந்திக்க தெரியணும்.

உங்களது கவனத்தில் சிறப்பாக எழுதும் தமிழ்க் கவிஞர்கள் எவரும் இல்லையா?

பெயர் உதிர்ப்பைத் தவிர்க்க விரும்புகிறேன். காரணம் நம்முடைய தமிழ்ச் சுழல். கவிஞனாக இருப்பவனின் மனவெழுச்சியும் ஊக்கமும் விசேஷமானது. அவனுக்கே அது தெரியும். நல்ல படைப்புகளின் மூலம் அவன் தனக்குத் தானே உத்வேக மூட்டிக் கொள்ள வல்லவன். அவனுக்குத்தான் காத்துக்கொள்ள வேண்டிய உணர்வுகள் எவை என்பதும் தெரியும்.

தமிழனின் வாழ்வும் பண்பாடும் தமிழ்ப் புதுக் கவிதையில் போதுமான அளவு பதிவாகி உள்ளதா?

நான் இப்படிச் சிந்திக்கிறதே இல்லை.தமிழனின் தனிவாழ்வு , தனிப் பண்பாடு குறித்து எனக்கு அக்கறையே இல்லைன்னுதான்படுது. மனித வாழ்வு மனிதப் பண்பாட்டுக்கான துடிப்பு , தவிப்பு நமது கவிதைகள்ல பதிவாகியிருக்கான்னுதான் நாம பார்க்கணும். அந்த மாதிரி இனவரைவுகளுக்கு முக்கியம் கொடுத்து எழுதற கவிஞர்கள் இருக்கிறார்கள். ஒரு கோட்பாடு அளிக்கிற சலுகை அவங்களுக்கு கிடைக்குது. சாதி, மதம், இனம், நாடு ஆகியவற்றால் பிளவுண்ட ஒரு மனம் கூட அத்தகைய கவிதைகளை எழுதிவிட முடியும்.

மனித வாழ்வு , மனிதப் பண்பாடுன்னு கவிதையைப் பொதுமைப் படுத்துவது பரந்த மனோபாவம். இருந்தாலும் இயற்கைச் சூழலையும் , பண்பாடு வாழ்வியல் முறைகள் இவற்றிலிருந்து விடுபட்டுப் படைக்கப்படுகிற தமிழ்க் கவிதைகள் - எதிர்கால தமிழ்ச் சமூகம் வாசிக்கிறபோது - எந்த அடையாளத்தை அந்தக் கவிதையில் தேடி அடைய முடியும்? அப்படி ஒரு சிக்கல் இருக்கே? இப்போ புறநானூற்றுக் காலச் சூழல் எப்பேர்ப்பட்ட தொன்மையை நாம் பெற்றிருந்தோம்னு சொல்லுதோ........அதுபோல.........

நம்மீது சுமத்தப்பட்டிருக்கும் அடையாளங்களை உதறுவது தான் முக்கியமானது . அடையாளங்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறோம்? அடையாளங்கள் - இயற்கையானவை - இருக்கவே செய்யும், மனிதன் புற அடையாளம் கூட அழிந்து அமானுஷ்யத்தைக் தரிசிக்கிற வேளை கூட உண்டல்லவா? தாம் அடையாளங்களைக் குறித்து சிந்திக்கிறது ஏன்?..... இப்படி நாம் சிந்திக்கிறது அடையாள அழிப்பு, கலாச்சார அழிவு ஆகியவற்றை ஆதிரிக்கிறதும் , கண்டுகொள்ளாமலிருக்கிறதுமான செயலாப்படுது போலிருக்கு, அழிய வேண்டியவைகளை அழிப்பதும் , காக்க வேண்டியவைகளை காப்பதுமாய் நடக்கிற ஒரு சுதந்திர இயக்கத் தோடதான் கவிஞன் இருக்கிறான். சுதந்திரப் போர் அது. 'நாம்' கிறதை மையமாகக் கொண்டது அது.

பள்ளி ஆசிரியப்பணி நிறைவு தருகிறதா?

எழுத்தாளனுக்கு இதைவிட உகந்த வசதியான தொழில் வேறு என்ன இருக்க முடியும்?

சிறுபத்திரிக்கைச் சூழல் , செயல்பாடுகள் பற்றி.......

நிறைய புத்தகங்கள் வருகின்றன. பத்திரிக்கைகள் வருகின்றன. வாசகர்கள்தான் யாருன்னு தெரியல.ஒரு வேளை எத்தனை எழுத்தாளர்களோ அத்தனை பேருந்தான் வாசகர்களோன்னு தோனுது. எழுத்தாளனல்லாத சில வாசகர்களைப் பார்க்க முடிஞ்சபோது அவங்கமட்டும்தான் ஆரோக்கியமான வாசகர்களாக இருக்கிறதும் தெரியுது. அவங்களைக் கண்டு பிடிச்சு பரிசு கொடுத்து கவுரவிக்கலாம்.

இனிவரும் கணிணி யுகத்தில் இலக்கியத்தின் தேவை கரைந்து போய்விடுமா?

இலக்கியத்தின் தேவை அதிகரிக்கும். குறிப்பாக கவிதையின் தேவை.மானுடச் செயல்பாடுகளை வேகப்படுத்துவதுதானே கணிணி.

எதன் முன்னும் சளைக்காத மூளை, கவிதையின் முன் மட்டும் வியந்து நிற்கும். புத்துணர்வு கொள்ளும். கணிணிகளால் மூளையைக் களைப்படையச் செய்யவே முடியும்.

கணினியுகம் வந்தால்கூட கவிதைச் சிகரம் எட்டப்பட முடியாமலே இருக்கும்னு அழகாச் சொன்னீங்க. கவிதையின் முழுப்பொருளும் பரிமாறப்பட்ட ஒரு வாசனையேனும் இப்போதெல்லாம் காணமுடிகிறதா? இந்த இடைவெளிபற்றி உங்கள் கருத்து என்னவாக இருக்கிறது.

நிச்சயமாக நல்லகவிதைகள் அதன் வாசகர்களைச் சென்றடையவே செய்யும். செய்கிறது. இடைவெளிகளைப் பற்றி நாம் கவலைகொள்ளாமல் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் புரிந்து கொண்டு கொண்டாட வேண்டும் என்ற எண்ணமும் , கவலையும் வெகுஜனப் புகழ் மீது கொண்ட ஆர்வமாக இருப்பின் அது சரியாகதல்லவா? அதே சமயம் சமூகத்தில் கவிதா உணர்வு இல்லாமையை உணர்கிற துக்கம் - தனிமை - கவிஞனுக்கு உண்டு என்பது வேறு விஷயம். நம்முடைய கஷ்டம் எந்த மாதிரியானது என்பதை நாமேதான் அறிந்து கொள்ள வேண்டும்.

காட்சி ஊடகம் அச்சு ஊடகத்தை வெற்றி கொள்ளுமா?

காட்சி ஊடகம் அச்சு ஊடகத்திலுள்ள வெறுங் காட்சிகளை அகற்றும். வெறும் நிகழ்வுகளை அகற்றும். தத்ரூபமாகக் காட்சிப்படுத்த முயலும் வெறும் விவரணை வர்ண்ணை வரிகளை அகற்றும். மொழியால் மட்டுமே இயலக்கூடியவற்றில் சிந்தனையைச் செலுத்தி உயரிய இலக்கியத்தை மட்டுமே ஊக்குவிக்கும்.

"தேவதேவன்" - பெயர்க்காரணம் ஏதும் உண்டா?

எனது புனைப் பெயரே நான் எழுதிய எனது முதல் கவிதை என்று சொல்லலாம். வேறு காரணம் ஏதுமில்லை.

இசை மற்றும் பிற துறைகளில் ஈடுபாடு உண்டா?

இசை , நடனம் இரண்டும் என்னை ரொம்பக் கவர்ந்திருக்கு. என்னோட இளமைக் காலம் முழுக்க அதிலேயே தோய்ந்துதுன்னு கூடச் சொல்லலாம். அதுக்கான சூழல் இருந்தது. ஆனால் நான் ஒவியனாகனும்னுதான் ரொம்ப ஆசைப்பட்டேன். அது நிறைவேறல்ல.

கி.ரா. வை நான் முதல்ல அவரோட இடைசெவல்ல வைத்து சந்திக்கிறேன். அவருக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு தெரியும்.கர்னாடக இசையின் ராகங்களை எப்படி

சுலபமாகக் கண்டுபிடிக்கிறதுன்னு சொல்லிக்கிட்டிருந்தார். எங்களோட பேச்சு நெருக்கமான முறையில் போய்க்கிட்டிருந்தது. அப்போ, "இசை ஒரு போகப் பொருள் மாதிரி தெரியுது" ன்னு நான் சொல்லிட்டேன்."அடடா , இசையில மனிதன் தன் ஆத்மாவே அப்படியே கரைஞ்சு போயிடறதைத்தான் பார்க்கிறான். நீங்க எப்படி இப்படி சொல்லப் போச்சு. யாருமே இப்படி சொல்றதில்ல " ன்னார்.தியானம் என்னை ரொம்பக் கவர்ந்தது. அதுக்கும் பிறகு இசையை எப்பவாவது ஒரு சமயத்தில மாத்திரமே கேட்க விரும்பினேன். சிலர் தங்களோட அன்றாட வாழ்க்கையில இசையை ஒரு பின்னணி மாதிரி கொள்றது எனக்குச் சம்பதமில்லாதது மாதிரி தோணுது.

பின்னால கர்நாடக இசையை விட இந்துஸ்தானி இசை என்னை ரொம்பக் கவர்ந்தது; இந்திய இசைகள்ல கர்நாடக இசைதான் சுத்தமானது. இந்திய இசையும் பெர்சியனும் கலந்த இந்துஸ்தானியில கர்நாடக இசையைக் காட்டிலும் ஸ்பிரிட்சுவலான தொனி கூடுதலாக இருக்கிற மாதிரிபட்டது.

குழந்தைகளை வைத்தும் இதைப் பரிசீலித்தேன். அவங்களுக்கும் கூட சுபாவமா இந்துஸ்தானி இசை ரொம்பப் பிடிக்குது.

நண்பர் ராஜ சுந்தர ராஜன் , திருமறைப்பணிநிலையம் சவுண்ட் என்ஜினியர் பங்காரு , டேவிட் சந்திரசேகர் , பிரமிள் போன்றவர்கள் தொடர்பினால் எனக்கு மேற்கத்திய இசையில் ஏற்பட்ட அபிரிமிதமான அனுபவம் முக்கியமானது. பிரமிள் நம்முடைய இசையைவிட மேலை இசை எவ்வளவு தூரம் உயர்ந்த தரத்தில் உள்ளதுங்கிறதுக்கு எடுத்துச் சொன்ன முறையும் உதாரணமும் , ஒரு உரையாடலின் போது குரு நித்ய சைதன்ய யதி சொன்னதும் ஒன்றாக இருந்ததைப் பார்க்கும் போது உலகளாவிய இசை விமர்சன உலகில் பரவலாக நிறுவப்பட்ட ஒரு கருத்தாகத்தான் இது இருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றியது. இதையெல்லாம் நான் இப்போ ஞாபகம் கொள்றதுக்கு ஒரு உள்நோக்கமும் இருக்கலாம். நம்ம கலைஞர்களுக்கு , எழுத்தாளர்களுக்கு இது மாதிரி உண்மைகள் அதிர்ச்சி தர்றதா இருக்கும். "நாம்" , "நமது" ன்னே நாம வளர்ந்திட்டோம்...திறந்த மனதுக்கான ஒரு கலாச்சாரச் சூழலுக்குத்தான் நாம இனி உழைக்கணும்.

பிற மொழிகளிலிருந்து ஆங்கிலம்வழி தமிழுக்கு நிறையக் கவிதைகள் வந்துள்ளன. தமிழ்க் கவிதைகள் எவ்வளவு தூரம் பிறமொழிக்குச் சென்றிருக்கு ? இதுபற்றி என்ன நீனைக்கிறீர்கள்?

தமிழ்க் கவிதைகள் இந்திய , ஆங்கில மொழிப் பத்திரிக்கைகளில் மொழிபெயர்ப்புகளில் வந்துள்ளதைப் பார்த்திருக்கிறேன். "இண்டியன் லிட்டரேச்சர்" மற்றும் "கல்கத்தா எழுத்தாளர் பட்டறை" தமிழுக்கெனவே தனித் தொகுப்புகள் போட்டிருக்கின்றன . மலையாளத்தில் "சமகாலின கவிதை" இதழ் தமிழ்க் கவிதைகளை நன்கு புரிந்து கொள்ளப்படும் அளவுக்கு முக்கியமான எல்லோருடைய கவிதைகளையும் நிறைய மொழிபெயர்த்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பிற இந்திய மொழிகள் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் சச்சிதானந்தன் கவிதைகள் ஆங்கிலத்திலும் அநேக இந்திய மொழிகளிலும் தொகுப்பாக மொழிபெயர்க்கப்பட்டது மாதிரி எந்தத் தமிழ்க் கவிஞனுக்கும் வாய்க்கவில்லை. அத்தகைய ஒரு கவிஞன் தமிழில் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

ஒரு படைப்பாளியோட இயக்கம் அவன் புழங்குகிற மொழியுடன் நின்றுவிடுகிறதா? சமூகத்துடன் கலக்காத தன்மை தமிழ்ப் படைப்பாளிகளிடம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே. கன்னடத்தில் சிவராமகரந்த் மாதிரியோ, அல்லது நர்மதா அணைத்திட்டம் பிரச்சனையில் ஈடுபடுகிற அருந்ததிராய் போன்றவர்கள் மாதிரியோ இங்கே யாரும் இல்லையா. ஏன் இந்த ஒதுங்கும் தன்மை?

உள்ளூரமிக்க ஆளுமை உள்ள எந்தக் கலைஞனுமே தன்னை ஒரு பெரிய கலாச்சார சக்தியாகத்தான் உணர்கிறான். சூழல் , சந்தர்ப்பமின்மைகள்தான் காரணம். தமிழ்நாட்டில் ஊழல் மிகுந்து அரசியல்வாதிகளும் , மூன்றாந்தரப் படைப்பாளிகளும் சினிமாகாரர்களும்தான் மக்களின் நாயகர்கள். அதுதான் காரணம் என நினைக்கிறேன்.

தங்களது படைப்புகளில் உச்சநிலையை அடைந்தபிறகே டால்ஸ்டாய் போன்ற படைப்பாளிகள் குழந்தைகளுக்காக எழுத ஆரம்பித்தாக சொல்லப்படுது. அதுபோல உங்களுக்கான அடுத்த கட்டம்பற்றிய திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா? உங்களது முழுக்கவனமும் பாசமும் கவிதைச் செயல்பாட்டில் மட்டுமே அமைதி பெறுகிறதா? அது போதுமானதா இருக்கா? வேறு வேறு வடிவம் பற்றி யோசிக்கதுண்டா? உதாரணத்துக்கு 'உள்முகம்' இதழில் உங்கள் கட்டுரை மிகச் சிறப்பாய் இருந்தது.

குழந்தைகளுக்கு எழுத வேண்டுமென்ற ஆசை இருந்தது. இப்போது அதுபற்றி யோசிக்கவில்லை. என்னால் சிறப்பாக எழுதி முடிக்கக்கூடிய காவியங்கள் , நாடகங்கள் மீது கவனத்தைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். வேறு தீர்மானங்கள் ஏதுமில்லை. நான் செய்வதெல்லாம் திடீர் திடீரென்று தோன்றி எழுதிமுடிக்கப் படக்கூடியதாகவே இருக்கும். இப்போது ஒரு நாடகம் முடிந்து வெளிவரும் நிலையில் உள்ளது. இதன் பிறகு இனி எழுத்தையே துறந்துவிடலாமென்று நினைத்தேன். என்னிடம் திட்டங்கள் பற்றிக் கேட்கிறீர்கள். கவிதை ததும்பும் ஒர் மனோநிலையில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருப்பதே இஷ்டமானதாக இருக்கிறது.

கவிதையின் வெளிப்பாட்டுச் சாத்தியத்தில் அடுத்த தலைமுறை எந்தவிதமாக இயங்குமெனக் கருதுவீர்கள்?

வெளிப்பாட்டுச் சாத்தியம். அவனது வாழ்க்கை , சமூகச் செயல்பாடு, அவனது அனுபவ உலகம் சார்ந்து உருவம் கொள்ளும்.இன்று வெளிப்பாட்டுச் சாதனங்கள் மலிந்து கிடக்கிற சூழலில் இனி கவிதை அந்தஸ்தை அடைந்த ஒன்றே இலக்கிய அந்தஸ்தைப் பெறும். மற்றவைகள் மிக எளிதில் தயாரிக்கப்பட்டுவிடக்கூடிய நவீன உலகில் இருக்கிறோம். சற்று தேர்ந்துவிடக் கூடிய ஒரு தொழில் நுட்பத்தை தாண்டிய ஒன்றுக்காக நாம் அவாவிக் கொண்டிருப்போம்.

புதிதாக எழுதத் தொடங்கும் இளம் கவிஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இளம் கவிஞர்களுக்கு...இந்த உலகில் உங்கள் பிரச்சனை என்ன?

குழப்பம், தேடல் மற்றும் நீங்கள் வெளிப்படுத்த என உங்களுக்குள் ஏதேதோ கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அப்படித்தானா? அது ஒருநாளும் அடங்கிவிடக் கூடியதில்லையா? அப்படியென்றால் மட்டுமே நீங்கள் கவிஞர்களாக வாழ்வைத் தொடங்குகிறீர்கள்.

இளம் கவிஞன் தன்னை ஒரு மாணவனாகக் கருதியபடி தமிழ் , இந்திய ஆங்கில மற்றும் உலகின் பல மரபு இலக்கியங்களையும் படிக்க வேண்டும். எல்லா மொழிகளிலுமுள்ள பெருங் கவி ஆளுமைகளை ரசித்துப் படித்து தன் கவி ஆளுமையைக் கண்டடைய வேண்டும். சம காலத்தில் பேர்பேற்ற கவிஞர்களின் கவிதைகளையும் அதே கண்ணோட்டத்தில் படித்துப் பார்த்துக் கொண்டால் தன்னோட இடம் ஒன்று அவனுக்குள் உருவாகலாம்.ஒரு சுயமான குரல் அதுவே உண்மையான ஒரு குரல். நீங்கள் குறிப்பாகச் சில புத்தகங்கள் , சில கவிஞர்கள் , சில இயக்கங்கள் என்று தேடாதீர்கள். அது குறுக்கு வழியைத் தேடுவதற்குச் சமமாகும். அது சுயமான குரலை ஒலிப்பவர்களாக இன்றி எதிரொலிப்பவர்களாக உங்களை ஆக்கிவிடவும் கூடும். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு இயக்கத்திடமிருந்தும் நாம் கிரகித்துக் கொண்டவை எவை எவை என்பதுதான் முக்கியம். வெளிப்படுதலுக்கான போதம் உள்ளவனுக்கு மேலான பிற படைப்புகள் வெளிப்படுத்தலுக்குத் தேவையான எழுச்சியையும் வழிமுறைகளையும் அளிக்கும். அப்படைப்புகள் இன்னவை என்று கூறமுடியாது. தொன்மங்கள் கண்டிப்பாய் அறிந்திருப்பது அவசியம்.வாய்மொழி இலக்கியம் அவன் அகத்திற்குச் செழுமை சேர்க்கும். இதெல்லாமே மரபை அறிதல் என்பதில் அடக்கம் என்பதால் விரித்துச் சொல்லவேண்டியதுமில்லைதான்.

இந்தப் பேட்டியை நிறைவுசெய்யுமுன் உங்கள் நெஞ்சை ஒரு கணமும் விடாமல் வதைக்கும் ஒரு கவிதையைக் கூறுவீர்களா? படித்த்தாகவோ அல்லது நீங்களே எழுதியதாகவே இருக்கலாம்.

எங்கும் நிறைந்துள்ள ஒளியை

அள்ளி வழங்க நீண்ட கைகள்

கவினிப்பாரற்ற தனிமையில் முழ்கியும்

தன் புறங்கைகள் வழியால் வழங்கிக் கொண்டிருக்கிறது

எல்லோரும் விரும்பும் நிழலை.

(புல்வெளியில் ஒரு கல்- தொகுப்பிலிருந்து)

*********

நன்றி: வேர்கள் சிற்றிதழ் 1999 , தட்டச்சு: சர்வோத்தமன்

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்