Aug 31, 2012

உத்தியோக ரேகை – சார்வாகன்

செங்கல்பட்டுத் தொழுநோய் மருத்துவமனையில் ஸர்ஜனாக இருக்கும் சார்வாகனின் இயற்பெயர் ஹரி. ஸ்ரீனிவாசன். பிறந்தது வேலூரில்(7-9-1929). இவருடைய கவிதைகளும் சிறுகதைகளும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலேயே வெளிவந்திருப்பினும் பரவலான வாசகர் கவனமும் பாராட்டும் பெற்றவை- சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட "அறுசுவை" என்ற குறுநாவல் தொகுப்பிலும்,திருவனந்தபுரம் நகுலன் தொகுத்த "குருக்ஷேத்திரம்" நூலிலும் இவருடைய படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.'கனவுக்கதை' என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக 'இலக்கியச் சிந்தனை' பரிசு பெற்றது.இவருடைய சிறுகதை சில, ஆங்கில மொழிபெயர்ப்பாகி வெளியாகியிருக்கின்றன.

sarvakan

 

 

 

 

 

 

 

 

"பிச்சுமணி என்ன பண்ணறார் இப்போ?"நான் வீட்டுக்கு வந்ததும் கேட்டேன்.

"அவன் போயி நாலஞ்சு மாசம் ஆகியிருக்குமே"என்றாள் அம்மா.

அவளுக்கு எப்போதுமே பிச்சுமணியைப் பிடிக்காது.ஏனென்று கேட்டால் சரியாகப் பதில் சொல்ல மாட்டாள்."அவனா, பெரிய தகல்பாஜியாச்சே?ஆட்டைத் தூக்கி மாட்டில் போடறதும், மாட்டைத் தூக்கி ஆட்டில் போடறதும்,அவன் காரியம் யாருக் குமே புரியாதே,ஜகப்புரட்டன்"என்றுதான் சொல்வாள்.

இன்றைக்குப் பஸ்ஸிலே கருப்பாகக் கச்சலாக நரைமயிர் விளிம்பு கட்டின வழுக்கைத் தலையுடனும் உள் அதுங்கியிருந்த மேவா யில் பஞ்சு ஒட்டினமாதிரி அரும்பியிருந்த மீசை தாடியுடனும் புகையிலைத் தாம்பூலம் அடக்கி வைக்கப்பட்டுத் துருத்துக்கொண் டிருந்த இடது கன்னம்,முழங்கைக்குக் கீழே தொங்கும் 'ஆஃபாரம்',தட்டுச் சுற்று வேட்டி ஜமக்காளப் பையுடனும் இருந்த ஒருத்தரைப் பார்த்தேன்.அசப்பிலே பிச்சுமணி போலவே இருந்தார்.வாய்விட்டுக் கூப்பிட்டிருப்பேன்.அதுக்குள்ளே இது வேறே ஆள் என்பது புலனாகவே சும்மாஇருந்து விட்டேன்.அந்த‌ ஞாபகத்திலேதான் வீட்டுக்கு வந்ததும் அம்மாவைக் கேட்டேன்.

அவர் காலமாகி விட்டர் என்று அம்மா சொன்னதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

"அட பாவமே"என்றேன்.

"என்ன பாவம் வேண்டிக் கிடக்கு?கட்டின பொண்டாட்டியைத் தள்ளி வெச்சுட்டு அவள் வயிறெரிஞ்சு செத்தா.பெத்துப் போட்ட அம்மா தொண்டுக் கிழம்;அவ‌ளை என்னடான்னா 'வீட்டிலே பொம்மனாட்டி யாரும் இல்லை,நானோ ஊர் ஊராகப் போகணும். இங்கே நீ இருந்தா சரிப்பட்டு வராது,சுலோசனா வீட்டிலே போய் இருந்திடு'ன்னு வெரட்டினான்.அவளுக்குக் கொள்ளி வைக்கிற துக்குக் கூட கிடைக்கலே.அவன் ஒண்ணும் கஷ்டபட்டுச் சாகல்லே.சுகமா வாழ்ந்து சுகமாத்தான் செத்தான்.ஒரு நாள் விழுப்புரமோ உளுந்தூர்ப்பேட்டையோ,அங்கே எங்கேயோ ஒரு ஓட்டல்லே ராத்திரி சாப்பிட்டுட்டுப் படுத்தானாம், கார்த்தாலே எழுந்திருக்கல்லே, அவ்வளவுதான்."

அம்மாவுக்கு ஒரே கோபம்.பிச்சுமணி பேர் எடுத்தாலே அவள் அப்படித்தான்.

"அப்புறம்?"

"அப்புறம் என்ன?ஓட்டல்காரன் வந்து கண்டுபிடிச்சான். பையைக் கிளறி அட்ரஸ் கண்டுபிடிச்சு நாணுக்குத் தந்தியடிச்சு போன் பண்ணினான்.அவனும் சாமாவும் போய்ப் படாத பாடு பட்டு டாக்டருக்கும் போலீசுக்கும் டாக்ஸிக்கும் பணத்தை வாரிக் கொடுத்து ஊருக்கு எடுத்துண்டு போயி கொள்ளி வெச்சா.சாம் பலாகறவரைக்கும் அவனாலே யாருக்கு என்ன சுகம்?"என்று சொன்னாள் அம்மா.

"அவர் எங்கே விழுப்புரத்துக்கும் உளுந்தூர்ப்பேட்டைக்கும் போய்ச் சேர்ந்தார்?"என்று கேட்டேன் நான்.

"அவனுக்கு வேற‌ வேலை என்ன?ஏதாவது பிள்ளை தேடிக் கிண்டு போயிருப்பான்"என்று அம்மா அசுவாரசியமாகச் சொல்லி விட்டாள்.

இதைக் கேட்டதும் பிச்சுமணிக்குக் கல்யாண‌த்துக்காக அரை டஜன் பெண்கள் காத்துக் கிடக்கின்றன என்று நினைத்துவிடப் போகிறீர்கள்,விஷயமே வேற.

எனக்குப் பிச்சுமணியை ரொம்பத் தெரியாது.அவருக்கு அறுபது வயசுக்குக் குறைவிருக்காது.வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டுவிட்டார்,ஓரே ஒரு பையன் இருக்கிறான்,இவ்வளவு தான் தெரியும்.அவர் என்ன வேலை செய்தார் என்றும் எனக்குத் தெரியாது.அம்மாவுக்கும் தெரியாது."என்னமோ கமிஷன் ஏஜன்ட், ஊர் ஊராகச் சுத்தற உத்தியோகம்" என்று துச்சமாகச் சொல்லி விடுவாள்.பிச்சுமணி விஷயத்தில் அவர் ஓய்வுபெற்ற பின்னும் ஊர் ஊராய் அலைவது மாத்திரம் என்ன காரணத்தா‌லோ நிற்க வில்லை.எப்போதும் யாரையாவது யாருக்காவது ஜோடி சேர்த்து விட முயற்சி செய்தபடி இருப்பார் என்று மாத்திரம் கேள்விப் பட்டிருக்கிறேன்.இத்தனைக்கும் நான் அறிந்தவரை அவர் ஒன்றும் இன்பமான இல்லற வாழ்க்கை நடத்தினதில்லை.பத்துப் பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னாலேயே முதல் முதல் நான் அவரைச் சந்தித்த போதே அவருடைய மனைவி உயிருடன் இல்லை.

எப்போதாவது மூணு நாலு வருஷத்துக்கொரு முறை அவரை ஏதாவது கல்யாணத்தில் நான் சந்தித்தாலே அதிகம்.ஒரே ஒரு முறைதான் அம் மனிதரின் உள்ளே இருக்கும் உண்மை மனிதனைச் சில நிமிடங்கள் நேருக்கு நேர் பார்த்து உணர முடிந்தது.அந்தச் சமயம் எனக்கு ரொம்பவும் தருமசங்கடமாகப் போயிற்று. இப்போது நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக‌ இருக்கிறது.

ஆறு வருஷத்துக்கு முன்னால் என் தூரபந்து ஒருவரின் கலியாணத்துக்குப் போயிருந்தேன்.கலியாணம் கோயமுத்தூரில் நடந்தது.அங்கே போன பிறகுதான் மாப்பிள்ளைக்கு என்னவோ முறையில் பிச்சுமணி நெறு*ங்கிய உறவினர் என்ப‌து எனக்குத் தெரியவந்தது.காலையிலே என்னைப் பார்த்ததுமே பிச்சுமணி சந்தோஷத்தோடு என்னை வரவேற்றுக் குசலம் விசாரித்தார்.அதே சமயம் அவர் எனக்காக‌ 'கிளியாட்டம்' ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருந்த‌தாகவும்,ஆனால் நானோ எல்லாரையும் ஏமாற்றிவிட்டு அவருக்கும் வேறு யாருக்கும் சொல்லாமல் என் கலியாணத்தை முடித்துக் கொண்டு விட்டேன் என்றும் குற்றஞ் சாட்டினார்."ரெண்டு லட்சம் ரூபாய் பெறுமான ஆஸ்தி வேறே போச்சே" என்று கூறி, எனக்காக‌ அங்கலாய்த்துக் கொண்டார்.எனக்குச் சிரிப்பு வந்ததே தவிர வேறென்ன செய்வது என்று தெரியவில்லை.எதையோ சொல்லித் தப்பித்துக் கொண்டேன்.முகூர்த்தம், சாப்பாடு எல்லாம் முடிந்ததும் கலியாண மண்டபத்தின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் அறையில் தூங்கப் போய்விட்டேன்.

ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்திருந்தபோது மணி மூணாகி விட்டிருந்தது.தூக்கம் கலைந்து விடவே கீழே என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று இறங்கி வந்தேன்.

கலியாணக்கூடம் வெறிச்சென்றிருந்தது.ஒரு பக்கம் விரித் திருந்த கசங்கி மடிப்பேறின ஜமக்காளத்தில் ஒரு மூலையில் இடுப் பில் ஒரு கயிறு மாத்திரமேஅணிந்து மற்ற‌படி வெறும் மேனி யுடன் இருந்த குழந்தை குப்புறப்படுத்து நீந்துவதுபோல மாறு கை, மாறு காலை நீட்டி மடக்கின நிலையில் தூங்கிக்கொண் டிருந்தது. மண்டபத்தின் வாயிலில் துவார பாலகர்களைப் போல நிறுத்தி வைத்திருந்த வாழை மரங்களின் இலைகளைத் தின்ன ஒரு சிவந்த மாடு எட்டி எட்டி முயற்சி செய்தது. முகூர்த்தத்துக்குப் ' பெரிய மனிதர்கள்' யாராவது வந்தால் உட்காருவதற்காக ஒரு பக்கத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் யாரோ ஒருவர் முதுகைக் காட்டியபடி முழங்காலை மடக்கிக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண் டிருந்தார். இன்னொரு மூலையில் பளிச்சென்று நீலமும் பச்சையும் சிவப்பும் மஞ்சளுமாகப் பட்டுப் சேலையும் தாவணியும் உடுத்தி யிருந்த இளம் பெண்கள் ஆறேழு பேர் கூடிக் குசுகுசுவென்று பேசிச் சிரித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சிலும் சிரிப் பிலும் கலந்துகொள்ளாமலும் அதே சமயம் அவர்களைவிட்டு அகலா மலும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர், சில வாலிபர்கள். எல்லாருமே கொஞ்சம் கர்நாடகமோ அல்லது நிஜமாகவே ஒருத்தருக்கொருத்தர் பரிசயமில்லையோ? ஒட்டு மொத்தத்தில் இருபால் இளைஞர் கூட்டத்தில் இருக்கவேண்டிய கலகலப்பை அங்கே காணவில்லை.

சரி, நாம்தான் கொஞ்சம் கலகலப்பை ஏற்படுத்தலாமே என்ற எண்ணத்தில், பேசிச் சிரித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத் துக்குச் சென்று அவர்களுடன் உட்கார்ந்து கொண்டேன். அவர் கள் எல்லாரும் உடனே மௌனமாயினர். அந்தக் கூட்டத்தில் நளினிதான் எனக்குத் தெரிந்தவள். என் சிற்றப்பாவின் கடைசி மகள். அவள் கையில் புதுமாதிரியாக மருதணையோ அல்லது வேறெதோ புத்தம் புதுவண்ணக் கலவைச் சாயமோ பூசிக்கொண் டிருந்தாள்.

"நளினி, உன் கையைக் காட்டு பார்ப்போம்" என்றேன்.

அவள் கையை நீட்டினாள். நான் பார்த்துக்கொண்டிருந்தபோது மூக்குக் கண்ணாடி அணிந்த இன்னொரு பெண், "ஏன் மாமா, உங் களுக்கு ரேகை பார்க்கத் தெரியுமா?" என்று கேட்டாள்.

"ஓ தெரியுமே" என்று சொன்னபடியே நளினியின் கைரேகை களைப் பார்க்க ஆரம்பித்தேன்.

உண்மையில் எனக்கு ரேகை சாஸ்திரத்தில் நம்பிக்கையே கிடை யாது. பதினாலு பதினைஞ்சு வயசில் சில புத்தகங்களைப் படித்திருந் தேன் என்பது என்னவோ வாஸ்தவந்தான். ஆனால் இப்போது இருபது வருஷத்துக்கு மேலாயிற்றே? இருந்தாலும், ஒரு யுவதி கேட்கும்போது, "எனக்குத் தெரியாது. ரேகையாவது சாஸ்திர மாவது? எல்லாம் வெறும் ஹம்பக்" என்று சொல்ல மனம் வரவில்லை. இதையெல்லாம் யோசிப்பதற்கு முன்னாலேயே வாய் முந்திக் கொண்டு, "ஓ தெரியுமே!" என்று சொல்லி விட்டது.

மூக்குக் கண்ணாடிக்காரி என்னை விடாமல், "அப்போ என் கையைப் பாருங்களேன்" என்று சொன்னபடி தன் இடக் கையை நீட்டினாள். நான் சிரித்துக்கொண்டே அவள் கையைப் பற்றி ரேகை பார்க்க ஆரம்பித்தேன். கைரேகைகளைக் கவனித்துப் பார்ப் பவன் போலவும், பிறகு உச்சிமேட்டைப் பார்த்துக் கணக்குப் போடுவது போலவும் கொஞ்ச நேரம் பாசாங்கு செய்துவிட்டு, "நீ கொஞ்சம் சோம்பேறி, கெட்டிக்காரிதான். ஆனால் உடம்பை வளைச்சு வேலை செய்ய உன்னால் ஆகாது. மூளை இருக்கு. நல்லா படிப்பு வரும்" என்று கூறி அவள் முகத்தையும் மற்றவர்கள் முகத்தையும் பார்த்தேன். கூட இருந்த தோழிகளில் ஒருத்தி 'கொல்' லென்று சிரித்துவிட்டாள்.

"ரொம்ப ரைட் மாமா, நீங்க சொல்றது. வீட்டிலே ஒரு துரும் பைக்கூட அசைக்கமாட்டா. காலேஜிலே எல்லாத்திலேயும் முதல்லே வருவா" என்று சொல்லி என்னை உற்சாகமூட்டினாள். உடனே அந்தப் பெண்கள் கூட்டத்தில் என் மதிப்பு உயர்ந்துவிட்டது. நாணிக் கோணிக் கொண்டிருந்த பெண்களும் தங்கள் கைகளை நீட்டி என்னை ரேகை பார்க்கச் சொல்லவே எனக்கும் குஷி பிறந்து விட்டது. நானும் ஒவ்வொருத்தியின் கையாகப் பார்த்துத் தமாஷாக வும், சமயோசிதமாகவும் எனக்குத் தோன்றியபடியெல்லாம் சொல்லிக்கொண் டிருந்தபோது -

"அடே, உனக்கு ரேகை பார்க்கவும் தெரியுமா?" என்று ஒரு குரல் கேட்டது.

நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பிச்சுமணி நின்றுகொண்டிருந்தார். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கூச்சமாகக்கூட இருந் தது. அத்தனை பெண்களின் நடுவே நான் உட்கார்ந்துகொண்டு அவர்களுடைய கையைத் தொட்டுச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த தைப் பிச்சுமணி பார்த்துவிட்டாரே என்று வெட்கமாயிற்று.

அவசரமாக எழுந்திருந்து, "ஹி... ஹி. அதெல்லாம் ஒண்ணு மில்லை. எனக்குத் தெரியாது" என்று சொன்னபடி வெளியேற யத்த னித்தேன். அவர் என் பின்னாலேயே வந்தார்.

"நோ, நோ, அதெல்லாம் பரவாயில்லை. டேய் நாணு; இங்கே வாடா. நீ கொஞ்சம் நாணுவின் கையைப் பாரேன்" என்று நாணு வுக்கும் எனக்கும் உததரவிட்டார்.

"நாணு யார்?" என்று கேட்டேன்.

"நாணுவை உனக்குத் தெரியாதா? என்னுடைய பிள்ளை. ஒரே பிள்ளை; பிரின்ஸ் ஆப் வேல்ஸ். ஐவேஜுக்கு வாரிசு. ஆனால் நான் தான் ராஜா இல்லை. ஐவேஜும் இல்லை" என்று எனக்குச் சொல்லி விட்டு-

"டேய் நாணு இங்கே வாடா, வெக்கப்படாதே" என்று தம் புத்திரனுக்குத் தைரியமூட்டினார்.

மறுபடியும் என்னைப் பார்த்து, "அவன் கையைக் கொஞ்சம் பார்த்துப் பலன் சொல்லேன்" என்றார்.

எனக்குத் தர்ம்சங்கடமாகிவிட்டது. உண்மையை ஒப்புக்கொள் வது தான் உத்தமம் என்று எனக்குப் பட்டது.

"இதைப் பாருங்கோ, எனக்கு ரேகை சாஸ்திரமும் தெரியாது, ரேகை ஜோசியம், ஆரூடம் இதிலெல்லாம் நம்பிக்கையும் கிடை யாது. என்னவோ கொஞ்ச நேரத்தைக் குஷியாகக் கழிக்கலாமென்று ரேகை பார்க்கிறதாச் சொன்னேனே தவிர, எனக்கு ரேகை பார்க்கவே தெரியாது" என்று சொல்லி அத்துடன் நிறுத்தாமல் விஷமமாகச் சிரிப்பதாகப் பாவனை செய்து, "ரேகை பார்க்கிறதா சொன்னாத்தானே இந்தப் பெண்கள் கையைத் தொட என்னை விடுவாங்க? என்றேன். எதையாவது சொல்லித் தப்பித்துக் கொண்டாக வேணுமே?

அவர் என்னை விடுவதாக இல்லை.

"நோ, நோ, அதெல்லாம் பரவாயில்லை. நான் தான் பார்த்தேனே. நீ ரொம்ப நன்னா ரேகை பார்க்கிறதை. ஏ குட்டிகளா, நீங்களே சொல்லுங்கோ, இவர் நன்னா ரேகை பார்த்தாரோ இல்லியோ?" என்றார். என்னிடமும் அந்தக் குட்டிகளிடமும்.

அந்தப் பைத்தியங்கள் என்னைப் பழிவாங்க வேணுமென்றோ அல்லது உண்மையென்று அவர்கள் நம்பினதாலோ, ஒரே குரலாக, "அவர் நன்னாப் பார்க்கிறார் மாமா. ரகசியத்தையெல்லாம் கூடக் கண்டுபிடிச்சுடறார்" என்று கூவின. எனக்கு எரிச்சலாக வந்தது. அவ்வளவு அழகாகவும் லட்சணமாகவும் படித்தும் இருக்கிற அந்தப் பெண்கள் இவ்வளவு முட்டாள்களாகவும் இருப்பார்கள் என்று நான் துளிக்கூட எதிர்பார்க்கவில்லை. அவர்களைக் கோபத் தோடு முறைத்துப் பார்த்தேன்.

அப்போது பிச்சுமணி, "பார்த்தியா, இதுகள் சொல்றதை? ரொம்பப் பிகு பண்ணிக்கிறயே என் கிட்டே கூட?" என்று செல்ல மாகக் கடிந்துகொண்டார். நானும் விடாப்பிடியாக இருந்தேன்.

"இல்லை, நிஜமாகவே எனக்கு ரேகை பார்க்கவே தெரியாது" என்றேன்.

அந்தப் பெண்களோ கலகலவென்று சிரித்துக்கொண்டு பிச்சு மணியை நோக்கி, "அவர் பொய் சொல்றார் மாமா, நீங்க நம்பா தீங்க. நிஜமாத்தான் சொல்றோம். ரொம்ப நன்னா ரேகை பார்க் கிறார்" என்றார்கள். இதற்குள் நாணுவும் வந்துவிட்டான். சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்துக்கொண் டிருந்த இளவட்டங்களில் அவனும் ஒருவன்.

"டேய் நாணு, சாருக்கு நமஸ்காரம் பண்ணுடா" என்று பிச்சு மணி உத்தரவிட்டதும் உடனே தரையில் விழுந்து ஒரு நமஸ்காரம் செய்தான்.

எனக்கு எரிச்சல் தாங்கவில்லை. யாரையும் யாரும் விழுந்து நமஸ்கரிப்பது என்பது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்காத விஷயம். ரேகை, ஜோசியம், ஆரூடம் முதலான வருங்காலத்தை முன்னதாகக் கண்டுபிடித்துச் சொல்வதாகக் கூறும் 'சாஸ்திரங்கள்' எல்லாம் வெறும் புரட்டு என்பது என் திடமான அபிப்பிராயம். சும்மா விளையாட்டுக்கு என ஆரம்பித்தது இந்த மாதிரி வினை யாகப் போய்க்கொண்டிருக்கிறதே என்கிற ஆத்திரம் வேறே. முட்டாள் பெண்களையும், ரேகை சாஸ்திரத்தையும், தந்தை சொல் தட்டாத தனயர்களையும், பிச்சுமணியையும் மனதாரச் சபித்துக் கொண்டே அவரை ஒதுக்குப்புறமாக, சற்றுத் தள்ளியிருந்த பெரிய தூணருகில் அழைத்துச் சென்றேன்.

தூணை அடைந்ததும் குரலைத் தாழ்த்திக்கொண்டு, "நிஜமாகவே சொல்றேன், எனக்கு ரேகை பார்க்கவும் தெரியாது, அதுலே நம்பிக்கையும் கிடையாது. சும்மா பொழுதுபோக, தமாஷாக ரேகை பார்க்கிற மாதிரி நடிச்சேனே தவிர வெறொண்ணுமில்லை. அவ்வளவு தான்" என்றேன்.

நான் பேசி முடிப்பதற்குள், அதைக் காதில் வாங்காமலே, பிச்சுமணி, "அதெல்லாம் பரவாயில்லேன்னா, நீ பார்க்கிற அளவு மத்தவா பார்த்தாலே போதுமே. அதுவே யதேஷ்டம். நீ நம்ப வேண்டாம். உன்னை யார் நம்பச் சொல்றா? நான் நம்பறேன். அவ்வளவுதானே வேண்டியது" என்றார். மேலும் தொடர்ந்து, "எனக்காக அவன் கையைப் பாரேன், ப்ளீஸ்" என்றார்.

என்னை விட இவ்வளவு பெரியவர் இவ்வளவு தூரம் வற்புறுத்தும் போது இன்னும் மறுத்தால் நன்றாயிராது என்றுதான் எனக்குப் பட்டது. வேறு என்ன செய்வதென்றும் எனக்குத் தெரியவில்லை. "சரி" யென நான் ஒத்துக்கொள்ள அவரும் நாணுவுமாக மீண்டும் கூடத்தின் மத்தியில் வந்தோம்.

"நாணு சார் கிட்டே கையைக் காமி" என்று பிச்சுமணி தன் குமாரனுக்கு உத்தரவிட்டார்.

நான் எரிச்சலோடு நாணுவைப் பார்த்தேன். பலியாடு போலத் தலைகுனிந்து மௌனமாகத் தன் கையை நீட்டினான்.

அவன் சோளக்கொல்லை பொம்மை போல் இருந்தான் என்று சொல்ல வந்தேன். யோசித்துப் பார்த்தால் அது பொருத்தமில்லை என்று படுகிறது. அதுக்கு உருண்டை முகமும், புஸு புஸுவென்று வைக்கோல் திணித்த உடம்புமாகவல்லவா இருக்கும்? நாணு அப்படி இல்லவே இல்லை. கச்சல் வாழைக்காய் போல, இன்னும் சொல்லப் போனால் பழைய பாத்திரக் கடையில் நெடு நாளாக மூலையில் கேட்பாரற்று அழுக்கேறி நசுங்கிக் கிடக்கும் பித்தளைப் பாத்திரம் போல் இருந்தான். ஆனான் குண்டாக இல்லை. அவ்வளவு தான். சட்டை போட்டு மார்புக்கூட்டை மறைத்திருந்தாலும் கண் ணுக்குத் தெரிந்த முழங்கை, முன் கை, மணிக்கட்டு, கழுத்து, முகம் இத்யாதிகளைப் பார்த்தாலே ஆள் ஒன்னும் பயில்வான் இல்லை என்பது தெள்ளத் தெரிந்தது. முகத்தில் கண்களும் கறுத்துப் போயிருந்த உதடுகளும் தான் பெரிசாயிருந்தன. கன்னம் குழிவிழுந் திருந்தது. கைவிரல்கள் சப்பாணிக் கயிற்றைப் போல் இருந்தன.

அவன் கையை வாங்கியபடியே கடைசி முறையாகப் பிச்சு மணியைப் பார்த்து, "நிஜமாகவே எனக்குத் தெரியாது" என்றேன். அவர் மாத்திரம் அன்று ஆசையினால் குருடாக்கப்படாமல் இருந் திருந்தால் என் முகபாவத்திலிருந்தே நான் படும் பாட்டையும் 'சும்மா ஒப்புக்குச் சொல்லவில்லை. உண்மையைத்தான் சொல் கிறேன்' என்பதையும் தெரிந்துகொண் டிருப்பார்.

"பரவாயில்லை. தெரிஞ்சதைச் சொல்லு, அது போதும்" என்றார் அவர்.

வேறு வழியில்லாமல் நான் நாணுவின் கையைப் பார்க்க ஆரம்பித் தேன். நுனியில் மஞ்சள் கரையேறியிருந்த ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும், தறிக்கப்படாமல் அழுக்கைச் சுமந்துகொண்டிருந்த நகங்களையும் தவிர வேறொண்ணையும் காணக் கிடைக்கவில்லை.

"தேக சௌக்கியம் அவ்வளவாக இருக்காது. 'ச்செஸ்ட் வீக்'. ஆனால் உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை" என்று ஆரம்பித்து எனக்குத் தோன்றியதையெல்லாம் சொல்லலுற்றேன். பெரிதா யிருந்தாலும் உயிர்க்களையே இல்லாமல் பாதி மூடினபடி வெள் ளாட்டுத் தலையின் கண்ணைப் போலிருந்த அவன் கண்களும் நான் சொல்வதைக் கேட்டு உயிர்பெறத் தொடங்கின. பிச்சுமணி நின்றபடியே தலையை ஆட்டி ஆட்டி நான் சொல்வதையெல்லாம் ஆமோதித்து என்னை ஊக்குவித்துக் கொண்டிருந்தார். சுற்றி வளைத்து ஜோடனை செய்து என்ன என்னவோ சொன்னேன். அவனது உடல்நிலை, புத்திக்கூர்மை, அழகுக் கலைகளில் அவனுக் கிருந்த அபிமானம், கலைத்திறன், அவன் பிறருடன் பழகும் சுபாவம், ஐம்பத்திரண்டாம் வயசில் அவனுக்காகக் காத்திருக்கும், 'மலை போல் வந்து பனி போல் விலகிப் போகும்' ஆயுள் கண்டம், புத்திர பாக்கியம் என்றெல்லாம் சொன்னேன். கடைசியில் வேறொண்ணும் சொல்வதற்கில்லை என்றானபோது, "இவ்வளவு போதுமே, இதுக்கு மேலே எனக்கு ஒண்ணும் தெரியல்லே" என்றேன்.

பிச்சுமணி தொண்டையைக் கனைத்துக் கொண்டார். நான் தலை நிமிர்ந்து பார்த்தேன். அவர் திருப்தியடையவில்லை என்பது அவர் முகத்திலிருந்தே தெரிந்தது.

"நான் கேக்குறேன்னு கோவிச்சுக்காதே. உத்தியோக பாக்கியம் எப்படி?" என்றார், கொஞ்சம் கம்மின குரலில்.

"ஏன், நல்லாய்த்தானிருக்கு" என்றேன் நான், பட்டும் படா மலும்.

"உத்தியோக ரேகை தீர்க்கமாயிருக்கா, பார்த்துச் சொல்லேன். பீ.ஏ. பாஸ் பண்ணிட்டு நாலு வருஷமாக உட்கார்ந்திண்டிருக் கான். ஊரெல்லாம் சுத்திப் பார்த்துட்டேன். கேக்காத இடமில்லை, பார்க்காத ஆளில்லை. காலைப் பிடிச்சுக் கெஞ்சாத குறைதான். எவனும் இப்போ வா அப்போ வான்னு சொல்லிக் கடைசியிலே கையை விரிச்சுடறானே தவிர, உருப்படியா ஒரு பியூன் வேலை கூடப் போட்டுத் தரமாட்டேங்கறான். இவனுக்கோ சமத்துப் போறாது. டவாலி போடற ஜாதியிலே பொறந்துட்டு எனக்கு இந்த வேலை வேண்டாம்; நான் அங்கே போயி அவனைப் பார்க்க மாட்டேன்னு சொல்ல முடியுமோ? வீட்டிலியே உட்கார்ந்திருந்தா எவன் கூப்பிட்டு இந்தா வேலையின்னு குடுப்பான். நாம நம்மாலே ஆனது அத்தனையும் செய்ய வேண்டாமோ? அது இவனுக்குத் தெரியல்லே; அதான் கேக்கறேன்" என்று சொல்லிவிட்டுத் தோள் துண்டால் கழுத்துப் பிடியைத் துடைத்துவிட்டுக் கொண்டார்.

"ரேகை பார்க்கிறது ஜாதகம் பார்க்கிற மாதிரியில்லை. உத்தி யோகத்துக்குன்னு தனியா வேற ரேகை கிடையாது. இருக்கிற ரேகைகளைக் கொண்டு நாமே ஊகிச்சுத் தெரிஞ்சு கொள்ளணும்" என்று ஆரம்பித்தவன், என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்த வுடன் நிறுத்திக்கொண்டு, மவுனமாக அவனுடைய வற்றிப்போன கையில், ரேகைகளில் ஏதோ பொக்கிஷம் ஒளிந்திருக்கிற மாதிரி தேட ஆரம்பித்தேன், என்ன தேடுகிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே, நாய் வேஷம் போட்ட பிறகு குரைக்க வெட்கப் பட்டு என்ன செய்வது?

சும்மா ஒரு நிமிஷம் இந்தமாதிரி தேடிவிட்டு, பிறகு, "இப்போ வயசு சரியா என்ன ஆகிறது?" என்று கேட்டேன். அது என்னவோ மிக முக்கியமான விஷயம் போலல்.

"இருபத்து நாலு முடிஞ்சி இருபத்தஞ்சு நடக்கிறது. இன்னும் மூணரை மாசத்திலே இருபத்தஞ்சு முடிஞ்சுடும்" என்றான் நாணு.

இந்த ரேகை பார்க்கும் நாடகம் ஆரம்பித்ததிலிருந்து அவன் இப்போதான் முதல் முறையாக வாயைத் திறந்து பேசினான். அவன் குரலைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அசாதரண மான கட்டைக் குரலில் அவன் பேசினான். அவன் வாயைத் திறந்ததும் 'குப்'பென்று வீசிய நாற்றத்தை விட அவனுடைய கட்டைக் குரலிலிருந்த பெரும் ஆர்வமும் பெருந்தாகமும் என்னைச் சங்கடத் தில் ஆழ்த்தித் துக்கங் கொள்ளச் செய்தன.

மேலும் ஒரு நிமிஷத்தை ஏதோ கணக்குப் போடுவது போலக் கழித்து கடைசியாக, "இன்னும் ஆரேழு மாசம் ஆகும் வேலைன்னு கிடைக்க. இருபத்தாறாம் வயசின் முன்பகுதியிலோ அல்லது நடுவிலேயோ தான் வேலையாகும். அதுக்கப்புறம் ஒரு கஷ்டமும் இருக்காது" என்று சொல்லிவிட்டு என்னைக் காத்துக்கொள்ள, "அப்படீன்னுதான் நான் நினைக்கிறேன்" என்றேன்.

அதுக்கும் மேற்கொண்டும் அவர்களை ஏமாற்ற எனக்கு விருப்ப மில்லை. "காபி ரெடியாயிட்டுதான்னு பார்த்துட்டு வரேன்" என்று சொன்னபடி, அவ்விடம் விட்டுக் கிளம்ப ஆயத்தம் செய்தேன். பிச்சுமணி விடவில்லை.

"நோ, நோ, நாணுவைப் பார்த்துண்டு வரச்சொல்றேன்" என்று என்னிடம் சொல்லிவிட்டு, "டேய் நாணு, காபி ஆயிடுத்தான்னு பார்த்துட்டு ஸ்ட்ராங்கா ரெண்டு கப் இங்கே அனுப்பி வை" என்றார் நாணுவிடம். அவனும் 'சரி'யென்று தலையாட்டி விட்டுச் சென்றான்.

ரேகை பார்ப்பது என்பது வெறும் விளையாட்டாக இல்லாமல், 'சீரியஸ்' ஸாகப் போய்விடவே இங்கிருந்த குட்டிகளும் ஒருத்தர் ஒருத்தராக நழுவி விட்டிருந்தனர். குப்புறப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை விட்டால் அந்தப் பரந்த கலியாண மண்டபத்தில் நானும் பிச்சுமணியுந்தான். அவர் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு என் இரு கைகளையும் பிடித்துக்கொண் டார்.

"ஒனக்கு எப்பிடி உபசாரம் சொல்றதுன்னே தெரியலே. நாணுவுக்குச் சமத்துப் போறாது. என் மாதிரி இடிச்சுப் பூந்து வேலையை முடிச்சுக்கிற சாமர்த்தியம் கிடையாது. எனக்கோ ஹார்ட் வீக்காயிட் டிருக்கு. நாளைக்கே 'டப்'புனு நின்னாலும் நின்னுடும். இல்லே, பத்து வருஷம் ஓடினாலும் ஓடும். ஒண்ணும் சொல்றதுக்கில்லேன்னுட்டான் டாக்டர். இவனைப் பத்திதான் எனக்கு எப்பவும் கவலை. நான் இருக்கிறப்பவே ஒரு நல்ல வேலையாப் பார்த்து அமர்த்தலேன்னா நான் போனப்புறம் இவனுக்கு வேலையே கிடைக்காது. இந்த வருஷத்துக்குள்ளே நிச்சயம் நல்ல ஒசத்தி வேலை கிடைக்கும்னு நீ சொன்னது என் வயத்துலே பாலை வார்த்த மாதிரி இருக்கு. நீ தீர்க்காயுசா சுக சௌக்கியத்தோடே நன்னா வாழனும்" என்று தொண்டை தழுதழுக்கச் சொன்னார்.

எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.

"ஒரு நிமிஷம், இதோ வந்துட்டேன்" என்று சொன்னபடி அவசரமாக எழுந்து ஏதோ இவ்வளவு நேரம் மறந்திருந்தது திடீரென்று ஞாபகம் வந்தாற்போல் பாவனை செய்து அவ்விடம் விட்டு வேக மாகப் போய்விட்டேன். அதன் பிறகு அங்கே இருந்த சில மணி நேரங்களை அவர் கண்ணில் படாமல் ஒதுங்கிப் பதுங்கிக் கழித்து விட்டேன்.

இப்போது அவர் கண்காணாத இடத்தில் அநாதை போல ஒரு ஹோட்டல் அறைக்குள் செத்துக் கிடந்தார் என்று கேள்விப்பட்ட போது எனக்கு உண்மையிலேயே பரிதாபமாக இருந்தது.

அவர் எதுக்குப் பிள்ளை தேடிப்போனார்? எனக்குத் தெரிஞ்சவரை அவருக்கு நாணு ஒருத்தன் தானே? "அவருக்குப் பெண் இருக்கா என்ன?" என்று நான் அம்மாவைக் கேட்டேன்.

"அவனுக்கு ஏது பெண்? நாணு ஒருத்தன் தான். இருக்கிற பிள்ளைக்கு நல்ல இடமாப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வெக்க மாட்டானோ? ஆனா என்னிக்குத்தான் அவன் தன் குடும்பத்துக்குனு ஒரு துரும்பை எடுத்து அந்தப் பக்கத்திலேயிருந்து இந்தப் பக்கம் வெச்சிருக்கான்?"

"பின்னே யாருக்காகப் பிள்ளைத் தேடி அலைஞ்சார் இவர்?"

"ஓ, அந்தக் கதை ஒனக்குத் தெரியாதா, சொல்றேன் கேளு" என்று ஆரம்பித்தாள் அம்மா.

பிச்சுமணி ஒரு பெரிய ஆபிஸரிடம் (அவர் என்ன 'ஆபிஸர்' என்று அம்மாவுக்குத் தெரியவில்லை) நாணுவுக்காக வேலை கேட்டுப் போனாராம். வேலை வாங்கிக்கொடுத்தால் தன் பெண்ணை நாணுவுக்குக் கல்யாணம் செய்துவைக்க ஒத்துக்கொள்ள வேணும் என்று அந்த ஆபீஸர் சொன்னாராம். பிச்சுமணியும் ஒப்புக்கொண்டு விட்டார். வேலை கிடைத்த பிறகு நாணுவிடம் விஷயத்தைச் சொல்லியிருக் கிறார். அவன் மறுத்துவிட்டானாம். என்னென்னவோ சொல்லியிருக் கிறான். பெண் அழகாயில்லை. கண் ஒன்றரை. குரல் நன்றாக இல்லை. இப்படியெல்லாம் சொல்லி மாட்டவே மாட்டேன் என்று விட்டான். பிச்சுமணியும் அவனைச் சரி செய்யப் பார்த்தார். அவன் ஒப்புக் கொள்ளவே இல்லை. 'மாறு கண்ணுன்னா அதிர்ஷ்டம். உனக்காகத் தேவலோகத்திலிருந்து ரதி கிடைப்பாளா, நீ என்ன மன்மதன்னு நினைப்போ? நீ சொல்ற மாதிரி பார்த்தா உலகத்திலே பாதிப் பெண்கள் கன்யா ஸ்திரீயாக இருந்துவிடவேண்டியதுதான்' என்றெல்லாம் சொன்னாராம். அவன் கேட்கவில்லை. கடைசியாகத் தன் வாக்கைக் காப்பாற்றுவதற்காகவாவது ஒத்துக்கொள்ளச் சொன்னா ராம். அதற்கு நாணு, "இது என்ன சினிமான்னு நெனைச்சுட்டியா அப்படியெல்லாம் செய்ய? எப்படியாவது சொன்ன வாக்கைக் காப்பாத்தணுமானா நீயே அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்துக்கோ" என்று சொல்லிவிட்டானாம். பிச்சுமணி அந்த ஆபிஸரிடம் போய் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, "ஒங்க பொண்ணுக்கு நல்ல பிள்ளையாகத் தேடிக் கல்யாணம் செய்து வைக்காமே நான் என் வீட்டு வாசற்படி ஏறமாட்டேன்" என்று சபதம் செய்து கொடுத்தாராம். அதன் விளைவாகத்தான் சென்ற ஐந்து வருஷங்களாக அவர் அந்தப் பெண்ணுக்காக வரன் தேடி ஊரூராக அலைந்துகொண் டிருந்திருக்கிறார்.

"அவனை மூணாம் வருஷம் ராமு கல்யாணத்திலே பார்த்தப்போ இதெல்லாம் சொன்னான். அவனுக்கு ஆதிநாளிலேருந்து ஊரூராகச் சுத்திப் பழக்கம். ரிட்டயர் ஆனப்புறமும் அலையறதுக்கு இந்தமாதிரி ஒரு சாக்கு. அவ்வளவுதான். வேலை குடுத்தாப் போதும்னு இவனே ஏதாவது சொல்ல்லிப்பிட்டு பின்னாலே அவஸ்தைப்பட்டிருப்பான். ஏன்னா அவன் சொல்றதை நம்பிட முடியாது. ஒண்ணுன்னா நூறும் பான்" என்று முடித்தாள் அம்மா.

பிச்சுமணியை யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நான் நம்பத் தயார். என்னுடைய ரேகை ஜோசியம் பலித்துவிட்டது பற்றி எனக்குச் சந்தோஷந்தான். நாணுவுக்கு எப்போது கல்யாணம் ஆகும் என்று என்னை அவர் அன்று கேட்காமல் இருந்தது பற்றி எனக்கு அதைவிடச் சந்தோஷம்.

----------

புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984

Aug 30, 2012

சண்டையும் சமாதானமும் - நீல. பத்மநாபன்

தமிழ்நாட்டு எல்லைகளுக்கப்பாலிருந்து தமிழ் இலக்கியம் படைப்பவர்களுள் மிகுந்த கவனமும் பாராட்டும் பெற்றவர் நீல. பத்மநாபன். (பிறந்த தேதி: 26-4-1938) பன்னிரண்டு நாவல்களும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு கவிதைத் தொகுப்பும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் நூல் வடிவில் வெளிவந்துள்ள இவருடைய படைப்புகள். 'தலைமுறைகள்' (நாவல், 1968) ஆங்கிலம், மலை யாளம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. 'பள்ளிகொண்டபுரம்' (நாவல், 1970) நேஷனல் புக் டிரஸ்டின் ஆதான் பிரதான் திட்டத்தின் கீழ் இதுவரை ஹிந்தி, உருது, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது. 'உறவுகள்' (1975) ராஜா சர் அண்ணா மலைச் செட்டியார் ரூ. 10,000 பரிசு பெற்ற நாவல். இவருடைய பல படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதோடு பல்கலைக் கழக அளவில் ஆய்வும் செய்யப்படுகின்றன. மலையாளத்திலும் தமிழிலும் இரு தொகுப்பு நூல்கள் தொகுத்திருக்கிறார். கேரள மாநில மின்சார வாரியத்தில் உதவி எக்ஸிகியூடிவ் இன்சினியராகப் பணியாற்றினார்.



neelapadmanapan

'அம்மா...'

மிகவும் அருகில் தெளிவாகவும் அடக்கமாகவும் கேட்ட அந்தக் குரல் யாருடையது என்று மாரியம்மைக்குப் புரிந்து போய்விட்டது. எனினும் நம்பமுடியவில்லை.

செல்லையா வந்துட்டானா? மாரியம்மையின் விழிகள் கனத்தன.

நாலு நாள் பட்டினியின் அசதியும், ஜுரத்தின் களைப்பும் வயோதி கத்தின் தளர்ச்சியும் கூடச் சேர்ந்திருந்ததால் அவள் பார்வைக்கு நல்ல தெளிவு இருக்கவில்லை. எனினும் மங்கலாகத் தெரிந்த பரந்த முகமும், இருபக்கங்களிலும் முறுக்கிவிடப்பட்டிருந்த பெரிய மீசையும் அவனை இனம் கண்டுகொள்ள வைத்துவிட்டன.

காய்ச்சல் இருக்கிறதா என்று அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்த அவன் கையை, நட்டாற்றில் முழுக இருந்தவளுக்குக் கிடைத்த அடைக்கலமாய் அவள் பற்றிக்கொண்டாள்.

மாரியம்மையின் முகத்தில் மகிழ்ச்சியின் வரிகள் மின்னின. அவள் விழிகள் நிறைந்துவிட்டன. செல்லையா ஒன்றும் பேசவில்லை. தொண்டை கரகரக்க அவளே கேட்டாள்:

"நீ எப்பம்லே வந்தே?" 

"ரண்டுமூணு மனி நேரத்துக்க முந்தியே நா வந்தாச்சு.ஒன்னைக் கூப்பிட்டேன்.நீ களைச்சுப் போய் நல்லா ஒற‌ங்கிட்டிருந்தே.எளுப்பாண்டாமுண்ணு நேரே "தட்டுக்கு"ப் (மாடிக்கு) போயி தம்பி தங்கசாமீட்டே பேசீட்டு இருந்தேன்."

"ஓஹோ!"

மாரியம்மையின் முகத்தில் சற்றுமுன் பளீரென்று பிரகாசித்த நம்பிக்கையின் ஒளி சட‌க்கென்று மறைந்தது.அங்கே மீண்டும் ஏமாற்றத்தின் இருள் சூழ்ந்து கொண்டது.

"அப்பம் நீ நேரத்தையே வந்தாச்சா?"

அவள் பெருமூச்சு விட்டாள்.

நாலைந்து நாட்களாகப் பகல் இரவு நேரங்களின் பேதத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க இயலாமல் கிடந்த அவள் சுற்றுமுற்றும் பரக்கப் பரக்கப் பார்த்தாள்.

மங்கலாக மின்சார விளக்கு அழுது வடிகிறது.எதிரில் தெரிந்த ஜன்னல் கம்பிகள் கருமையான ஆகாயப் பின்ன‌ணியை நெடு நீளத்தில் கோடு கிழித்துக் காட்டுகின்றன.

அப்போ,ராத்திரி ஆயாச்சா?அப்படியென்றால் மருமகள் தமிழ்க் கொடியும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருப்பாள்.

தெருவில் சிறுவர் சிறுமிகள் ஓடிப் பிடித்து விளையாடும் அரவம் கேட்கிறது.தெருநடையில் கைக்குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு நிற்கும் ஒன்றிரண்டு பெண்களின் முகங்கள் நிழலாடுகின்றன.

கீழ்ப் போர்ஷனில் வசிக்கும் வீட்டுச்சொந்தக்காரி சொர்ணம்மா மெல்ல வெளியே வந்து திண்ணை நடையில் நின்றாள்.

"ஆனாலும் உங்கம்மைக்கு இந்த வயசான காலத்திலெ இவ்வளவு பிடிவாதம் கூடாது.இந்த நாலஞ்சு நாளா அறப்பட்டினி.மூத்த மகன் பெங்களூரிலிருந்து வரமுந்தி,செத்துப் போனா போகட்டு முண்ணு,ஒரு சொட்டுத் தண்ணியோ,மருந்தோ கூடக் குடிக்காமே அந்தக் கெடையா கெடக்கா..."

கால் சட்டையும், ஷூஸும் அணிந்திருந்ததால் தரையில் உட்காருவதில் இருக்கும் அசௌகரியத்தைப் பொருட்படுத்தாமல் அம்மா படுத்திருந்த அந்தப் பாயின் ஓர் ஓரத்தில் ஒருவாறு கஷ்டப்பட்டு அவன் உட்கார்ந்தான்.

"உம்...நாலஞ்சு நாளா பட்டினி.ஏதாவது குடிக்காண்டாமா?"

"ஒண்ணும் வேண்டாம்லே. கொஞ்சம் வெஷம் இருந்தா வாங்கிட்டுவா. எனக்கு இவ்வளவு நாளு வாந்தது எல்லாம் போரும்ப்பா போரும்."

'தன்னிடம் வந்து விவரங்களைக் கேட்டு அறியும் முன், தங்க சாமியிடமும் அவன் அருமாந்தப் பெண்டாட்டி தமிழ்க்கொடியிடமும் போய் அவர்கள் வாய் வழி எல்லாவற்றையும் கேட்டறிந்துவிட்டு, சாவகாசமாய்த் தன்னிடம் வந்திருக்கிறானே இவன்?' என்று செல்லையாவின் மீதும் ஒருவித எரிச்சல் வர, தன் தலையில் அடித்தவாறு இப்படிச் சொல்கையில் அவள் அழுதேவிட்டாள்.

செல்லையாவுக்கு அந்தக் காட்சி மிகவும் வேதனையை உண்டு பண்ணியது என்பதை அவன் முகம் காட்டியது.

தங்கசாமியைவிடப் பத்து வயசு மூத்தவன் அவன். செல்லையாவுக்கு இப்போது முப்பத்தஞ்சு வயசு இருக்கும். நாகர்கோயிலில் நாகம்மாள் மில்லில் மேஸ்திரியாக இருக்கிறான். என்னவோ ஒரு புதிய மெஷினின் ஆறு மாதப் பயிற்சிக்காக, மில்லில் இருந்தே அவனைப் பெங்களூருக்கு அனுப்பியிருந்தார்கள். பெங்களூருக்குப் போய் மூணு மாசம் கூட இருக்காது; அதற்குள் அம்மாவின் அவசரக் கடிதம் கண்டு திருவனந்தபுரத்துக்கு வந்திருக்கிறான். அவனுக்கு, சின்னவனைவிட அம்மாவிடம் அதிகப் பாசம். இது மாரியம்மைக்கு நன்றாகத் தெரியும்.

"சரி, தம்பி வீட்டிலிருந்துதானே ஒண்ணும் குடிக்கமாட்டே? நா கடேலிருந்து வாங்கீட்டு வந்து தந்தாலும் குடிக்கமாட்டெயா? உம். நா இன்னா வந்துட்டேன்" என்று எழுந்தான் அவன்.

மாரியம்மையின் சம்மதத்துக்குக் காத்திராமல் வெளிவாசலின் பக்கத்தில் சென்றவன் திரும்பிச் சொர்ணம்மாளிடம், "டீ வாங்கீட்டு வர ஒரு சின்னப் பாத்திரம் இருந்தா தாருங்க" என்று கேட்ட போது அவள் உள்ளே சென்று, திருகு மூடி போட்ட ஒரு ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தான்.

இனி, செல்லையா திரும்பி வந்த பிறகுதான் கேஸ் விஸ்தாரம் நடக்கும் என்பதை அறிந்துகொண்டு அதை ஒரு இடைவேளையாகக் கருதி தத்தம் வீடுகளுக்குச் சென்றார்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற அண்டை வீட்டுப் பெண்கள்.

கனத்த இமைகளைத் திறக்க முடியாமல் அந்தத் திண்ணையின் ஓரத்தில் மாரியம்மை ஒடுங்கிப் போய்த் தனிமையில் அப்படியே கிடந்தாள்.

தூக்கமா மயக்கமா என்று புலப்படவில்லை. மாடியில் குடியிருக்கும் இளைய மகன் வீட்டுச் சந்தடி, அதோடு கீழ்ப்போர்ஷனில் வசிக்கும் சொர்ணம்மா குடும்பத்து இயக்க ஒலிகள், வீட்டின் உள்ளிலும், வெளியில் தெருவிலும் நடப்பவர்களின் காலடியோசைகள்.

சுரம் தொடங்கும் நாள் வரை வயிற்றில் பசி கிள்ளுவதை அவளால் நன்கு உணர முடிந்தது. இப்போது பசியை அவளால் உணர்ந்தறிய முடியவில்லைதான். எனினும், செல்லையாவின் கையி லிருந்து சுடச்சுட ஏதாவது வாங்கிக் குடித்துத் தன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டால் தேவலை என்ற மன உறுத்தலும் இப்போது இல்லாமல் இல்லை.

சற்றுக் கழிந்து சரக்சரக்கென்று ஷூஸ் தெருவில் உராயச் செல்லையா உள்ளே வந்தான். கையில் ஒரு சிறு பொட்டலத்தில் ரொட்டியும் ஆரஞ்சும் இருந்தன. தவிர, பாத்திரத்தில் சுடச்சுட டீயும்.

கால் சட்டை ஜேபிலிருந்து எடுத்த வர்ண வெள்ளித் தாளில் அழகாக ஒட்டியிருந்த ஏழெட்டு மாத்திரைகளில் ஒன்றைக் கிழித் தெடுத்தான். மாரியம்மையைக் கைத்தாங்கலாகத் தாங்கி உட்கார வைத்து அவள் வாயில் மாத்திரையைப் போட்டுவிட்டு, அவள் பிகு செய்வதைப் பாராட்டாமல், டீயைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குடிக்கவைத்தான். ஒரு ஆரஞ்சை உரித்துச் சுளைகளையும், ஒரு ரொட்டித் துண்டையும் கட்டாயப்படுத்தி அவளைத் திங்கவைத்து விட்டுப் படுக்க வைத்தான். பிறகு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு, பக்கத்தில் சுவரில் சாய்ந்தவாறு பாயில் சௌகரியமாக உட்கார்ந்தான் செல்லையா.

இப்போது மாரியம்மைக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது.

"சரி, நீ எனுத்துக்கு அப்படி அவசரம் அவசரமா 'உடனேயே புறப்பட்டு வா' ன்னு எனக்கு எழுத்து (காயிதம்) போட்டே? என்று அவன் மெல்ல ஆரம்பித்தான். "எல்லாத்தையும் ஒனக்கே அருமைத் தம்பியும் தம்பிக்க கொண்டாட்டியும் ஒண்ணுக்குரண்டா ஒங்கிட்டெச் சொல்லியிருப்பாங்களே? இனி நான் வேறெ சொல்லணுமா?" என்ற அவள் குரலில் இருந்த எரிச்சலையும் இளக்காரத்தையும் பாராட்டாமல் அவன் மீண்டும் அவளை வற்புறுத்தினான். "அவ்வொச் சொன்னதெல்லாம் கெடக்கட்டும். நீ சொல்லு" என்று விட்டு, மீண்டும் தெருவாசலில் வந்து இடம் பிடித்துக்கொண்டு விட்ட அண்டை வீட்டுப் பெண்களைத் தலை உயர்த்திப் பார்த்தான்.

அவன் பார்வையின் பொருள் சொர்ணம்மாவுக்கும் புரிந்தது. அந்த வீட்டின் கீழ்ப்போர்ஷனில் சொர்ணம்மாவின் கூட அவள் மகன், மகன் பெண்டாட்டி, மகனுடைய இரண்டு வயசான மகள் இத்தனை பேர்களும் வசிக்கிறார்கள். வீட்டுச் செலவுக்குக் கொஞ்சம் உதவியாக இருக்குமே என்று மேல் மாடியை, கன்யாகுமரி ஜில்லாவிலிருந்து சமீபத்தில், திருவனந்தபுரம் ஐ.ஜி. அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை கிடைத்து வந்திருக்கும் தங்கசாமியின் குடும் பத்துக்கு நாற்பது ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தான். மகன் தங்கச்சாமியிடம் சண்டை பிடித்துக்கொண்டு இதோ மாரியம்மை கிடக்கும் இந்த வெளித் திண்ணை வழியாகத் தான் மேலே வசிக்கிறவர்கள் கீழே பின் பக்கத்திலுள்ள குளியலறைக்கோ, வெளியில் தெருவுக்கோ போய் வரவேண்டும். தங்கசாமி குடும்பத்துக்கு மேல்மாடியை மட்டுமே வாடகைக்குக் கொடுத்திருப்பதால், சரியாகச் சொல்லப் போனால், இந்தத் திண்ணையில், போகவர ஒரு வழி என்பதற்கு மேல் அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

எனினும், மாரியம்மை கடந்த நாலைந்து நாட்களாக அங்கே படுத்திருப்பதையோ, இப்போது அவள் மூத்த மகன் செல்லையா அங்கே உட்கார்ந்திருப்பதையோதான் தடுக்கவில்லையே? ஆனால் தனக்குப் பழக்கமான அண்டைவீட்டுப் பெண்கள் அங்கே வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை 'உங்க வேலையைப் பார்த்துப் போங்கோ'ண்ணு ஒரேயடியாக விரட்டியடிக்க முடியுமா?" என்ற கேள்விக் குறியுடன் சொர்ணம்மா பேசாமல் நின்றுகொண்டிருந்தாள்.

இவையெல்லாம் செல்லையாவுக்கும் தெரிந்திருந்ததால், பிறகு அவன் அதைச் சட்டை செய்யாமல் அவன் அம்மா சொல்வதைக் கேட்பதில் மும்முரமானான்.

"லே, செல்லய... ஒனக்குத்தான் தெரியுமே. தங்கச்சாமிக்கு ஆபீஸுக்குப் போக என்னைக்கும் காலம்பர ஒம்பது மணிக்கு இங்கே வீட்டை விட்டு எறங்கணும். பூந்துறைப் பள்ளிக்கூடத்தில் வாத்தியாரு வேலைப் பாக்கும் தமிழ்க் கொடிக்குக் காலம்பரெ ஏழுமணிக்கு வீட்டிலிருந்து போகணும். கைப்புள்ளெ வேறெ! நா இந்த வயசான காலத்திலெ நேரம் விடிய முன்னே அஞ்சு மணிக்கே எந்திச்சு சாப்பாட்டைத் தயாரிச்சு அவ கையிலெ கொடுத்தனுப்புவேன். தங்கச்சாமி காலம்பரப் போனா பொறவு சாயங்காலம் பாத்தாப் போரும். உச்சைக்கு (மாத்தியானத்துக்கு)ப் பையன் கிட்டெ அவனுக்குச் சோறு கொடுத்தனுப்புவேன். கைப்புள்ளையைப் பாக்கணும். ராத்திரிச் சாப்பாட்டுக்குச் சோறு வைக்கணும். அடுத்த நாள் காபிக்குத் தோசை மாவு அரைக்கணும். இதையெல்லாம் நா ஒத்தேலெ மாடுபோல இந்த வயசான் காலத்திலே செய்தேன்."

மாரியம்மைக்குத் தான் பட்டப் பாட்டையெல்லாம் எண்ணி எண்ணிச் சொல்லச் சொல்லத் துக்கம் தொண்டையை அடைத்தது. "அம்மா, நீ கட்டப்படல்லேனு இப்பம் ஆராவது சொன்னாளா?" என்று செல்லையா கேட்டதும் மாரியம்மைக்கு இன்னும் கோபம் வந்தது.

"சொன்னா அந்தக் கடவுளுக்குப் பொறுக்குமா? ஆனா, என்னை வேலைக்காரீன்னா ரண்டு பேரும் நெனச்சா? இவ ரண்டு பேரும் தொரையும் தொரைசாணியுமா வேலைக்குப் போயிருவா. நா மட்டும் வீட்டிலெக் கெடந்து இந்தப் பாடான பாடெல்லாம் பட்டு இவ்வளுக்கு பண்டுவம் பாத்தேன். அந்தப் பசலையை வளர்த்தேன். கடேசியிலெ அந்தப் புள்ளைக்கப் பொறந்த நாளைக் கொண்டாட தமிழ்க் கொடிக்குத் தள்ளை வீட்டுக்கு (அம்மா வீட்டுக்கு) மூளமூட்டுக்கு ரண்டு பேருமா புள்ளையை எடுத்தூட்டுப் போறப்பம் போயிட்டு வாறேன்னு எங்கிட்டெ ஒரு வாக்குச் சொன்னா என்னா? நானும் கூடெப் போயிரவாப் போறேன்?"

அழுகையால் மேலே பேச்சைத் தொடரமுடியாமல் திணறினாள் மாரியம்மை. சொர்ணம்மாதான் நடந்ததைச் செல்லையாவிடம் விளக்கினாள்.

நாலு மாசத்துக்கு முன் ஒரு நாள். பின் பக்கத்தில் சென்று சேலையெல்லாம் அடித்துத் துவைத்துக் குளித்துவிட்டு மாரியம்மை மாடியில் சென்று பார்த்தபோது, மகனையும் காணவில்லை. மருமகளை யும் காணவில்லை. தொட்டிலில் பேரப்பிள்ளையும் இல்லை. அடுத்த நாள் பிள்ளைக்கு ஒரு வயசு திகையும் நாள் என்பது ஞாபகம் வந்ததும், அவளுக்கு வந்த துக்கமும் கோபமும் இவ்வளவு அவ்வளவு இல்லை. பிள்ளையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாட இருவரும் எங்கே போயிருப்பார்கள் என்பது அவளுக்குத் தெரியாததல்ல. எனினும் அந்த நன்றிக்கேட்டை அவளால் சகிக்க முடியவில்லை. அவசரம் அவசரமாக மூட்டை முடிச்சையெல்லாம் கட்டிக்கொண்டு, மாடிக் கதவைப் பூட்டி, சாவியைக் கொண்டு வந்து சொர்ணம்மா கையில் கொடுத்துவிட்டுச் சொன்னாள்:

"இந்தப் பாடான பாடுபட்டு அந்தப் புள்ளயை நா வளத்தினேன். அவனுக்குப் பொறந்த நாளைக் கொண்டாடுவதை நா அறியப் படாதாம். வேலைக்காரிக்குக் கூட இதைவிட மதிப்பிருக்கும், இங்கே பெற்ற தாய்க்கு அதுகூட இல்லை. மதியாத வீட்டை மிதிக்கமாட்டேன். நா என் மக தாயிக்க வீட்டுக்கு, பணகுடிக்குப் போறேன். இனி பள்ளிக்கூடம் தொறந்தப் பொறவு இவ்வொ ரண்டுபேரும் வேலைக்குப் போனா ஆரு வந்து பொங்கிப் போடப் போறா, பார்ப்போம்" என்றுவிட்டுப் பணகுடியிலிருக்கும் தன் மகள் வீட்டுக்குப் போய்விட்டாள் மாரியம்மை.

அதன் பிறகு நடந்ததையும் சொர்ணம்மாதான் செல்லையாவிடம் சொன்னாள்.

"பொறந்த நாளெல்லாம் களிஞ்சு ரண்டு மூணு நாளுக்குப் பொறவு இங்கே வந்த தங்கசாமி கிட்டேயும், தமிழ்க்கொடி கிட்டேயும், ஒங்க அம்மா வருத்தப்பட்டுக்கிட்டுப் பணகுடிக்குப் போய்விட்டதை நாதான் சொன்னேன். பள்ளிக்கூடம் அடச்சுவிட்டா; அதனாலே ரெண்டு பேரும் அதிகமாக அலட்டிக்கொள்ளல்லே. பள்ளிக்கூடம் தெறக்கப்பட்ட நாள் நெருங்கியதும் தமிழ்க்கொடி முளமூட்டுக்குப்போயி அவ அம்மைக்க ஏற்பாட்டிலே, பத்துப் பந்தரண்டு வயசிருக்கும், ஒரு குட்டியைக் கூட்டிக்கிட்டு வந்தா. பள்ளிக்கூடம் தொறந்த பிறவு, இந்த ரெண்டு மாசமா அதிகாலையிலேயே எந்திச்சி, சோறெல்லாம் வச்சு, மத்தியானத்துக்கும் எடுத்துக் கிட்டு, புள்ளையை அந்தக் குட்டிகிட்டே விட்டுவிட்டுப் பள்ளிக் கூடத்துக்குப் போறா தமிழ்க்கொடி. எனக்குத்தான் மனசு கேக் காமெ, 'அம்மாவை வரச்சொல்லி எளுத்துப் போடப்படாதா பாவம்னு!' ரண்டு மூணு மட்டம் தங்கசாமிகிட்டே நா சொல்லிப் பாத்துட்டேன். 'உம், உம். போனது போலெ வரட்டும். வரச் சொல்ல விருந்துக்காரியா என்ன?' என்று சொல்லிப் பேச்சை முடிச்சுவிடுவான் அவன்."

மாரியம்மை மனத்தைத் தேற்றிக்கொண்டு நடந்ததைச் செல்லையாவிடம் சொன்னாள்.

"பெத்த மனசு தான் பித்து. பள்ளிக்கூடம் தொறந்தப் பொறவாவது தங்கசாமி வருவான் வருவான்னு பாத்துக்கிட்டே நா பணகுடியில் தாயி வீட்டிலெ இருந்தேன். பள்ளிக்கூடம் தொறந்து மாசம் ரண்டான பெறவும் 'வா'ன்னு எனக்கு ஒரு எளுத்துக்கூடப் போடாமெ கல்லுப்போல இருந்திட்டான் இவன். உம்....இவனா வந்து கூப்பிடாமெ வலிய வரப்படாதுன்னுட்டுத்தான் நா இருந்தேன். ஆனா தாயிக்க மாப்பிள்ளைக்கு மதுரைக்கு வேலை மாற்றம் வந்துட்டது. வீடெல்லாம் பார்த்து முடிக்காமெ அவளையும் புள்ளைகளையும் அங்கே கூட்டீட்டுப்போக முடியாதுன்னு, தாயியையும் புள்ளைகளையும் அங்கே தக்கலையிலிருக்கும் அவருக்கு அப்பா அம்மாகிட்டே கொண்டுபோய் விட்டுவிட்டு, மதுரைக்கு அவரு மட்டும் ஒத்தேலே போகப் போறதா அறிஞ்சம் பொறவு நா அங்கே நிக்க முடியுமா? வேறெ போக்கடியில்லாமெ நேரா இங்கையே வந்துட்டேன். நீ இருந்தேன்னா நாகர்கோயிலுக்குத் தான் வந்திருப்பேன். உம், நீயும் பெங்களூருக்குப் போயிட்டே!" என்று ஆதங்கப்பட்டாள் மாரியம்மை.

அவளே பேசட்டுமென்று மௌனமாய் உட்கார்ந்திருந்தான் செல்லையா. "நா இங்கே வரப்போ சமயம் மத்தியானம் இருக்கும். வேலைக்காரக் குட்டி மட்டும் புள்ளையைப் பார்த்துக்கிட்டு இருக்கு.புள்ளயைக் கையிலெ எடுத்தப்பம் என்னால பொறுக்க முடியல்லே. பயல் தேஞ்சுப் போயிருந்தான். தங்கச்சாமி ஆபிஸிலிருந்து வரும் நேரமாவல்லே. அவன் வந்து ரண்டு மணி நேரம் களிஞ்சுதான் தமிழ்க்கொடி பள்ளிக்கூடத்திலிருந்து வருவா. எனக்கானா ஒரே பசி. அடுக்களையில் போயிப் பாத்தா தமிழ்க்கொடிக்குச் சாயங் காலம் வந்து சாப்பிட கொஞ்சம் சோறு மட்டுந்தான் இருந்தது. பரணையில் இருந்த டப்பாவிலிருந்து கொஞ்சம் வறுத்தமாவை எடுத்துக் கரச்சு ஒரு ஒறட்டியும் சுட்டுத் திண்ணு கொஞ்சம் பச்சத் தண்ணியும் குடிச்சேன். இவ துரைசாணி அம்மா பள்ளிக் கூடத்திலிருந்து வந்ததும், 'நா எங்கம்மை வீட்டிலிருந்தாங்கோம்மாவு கொண்டு வச்சிருந்தேன். இவ ராசாத்தி மாதிரி வந்து ஒரு சோலியும் செய்யாமெ திண்ணிட்டா' ன்னு என்னைத் திட்டின திட்டு, அப்பப்பா! அதுக்கம் பொறவு அந்த வீட்டிலே இருந்து பச்சைத் தண்ணி வாங்கி நா குடிக்கல்லே" என்று அழுகையோடு முடித்தாள் மாரியம்மை.

செல்லையா கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுத்தான் கேட்டான்; "தங்கச்சாமி ஒண்ணும் சொல்லலையா?"

"உம்... அவனா?" கிழவி பெருமூச்சு விட்டாள்.

"வாய் தொறந்தா முத்து உதிந்திராதா? கொஞ்சம் நாளா வீட்டிலே இல்லாமெ பெத்த தள்ளையல்லவா வந்திருக்கான்னு தலைநிமிர்ந்து என்னைப் பார்க்கணுமே. ஆரஈயோ திட்டுதான்னு அவனுக்கப் பாட்டுக்கு வெளியே எறங்கி நடந்துட்டான் அவன்."

மேலே மாடிக்குச் செல்லும் வாசலை ஆத்திரத்தோடு பார்த்தான் செல்லையா. தங்கசாமியைக் கூப்பிட்டுக் கேட்பதா வேண்டாமா என்று அவன் திணறுவது போலிருந்தது. சொர்ணம்மா சொன்னாள்:

"மாடிக்கு வாடகை தருவது ஒங்க தம்பி. அதனாலே அவனை நா குத்தம் சொல்லப்படாதுதான். ஆனா நடந்ததைச் சொல்லாமே இருக்கவும் என்னாலே முடிய மாட்டேங்குது. இவ்வோ பெத்தத் தள்ளையா, இல்லை வேறெ ஆருமா? பணகுடியிலிருந்து இங்கே வந்த அண்ணைக்கு அந்த ஒறட்டிச் சுட்டுத் திண்ணதுதான்; அதுக்கம் பொறவு முழுப்பட்டினி. அதுக்கக்கூடக் காய்ச்சல் வேறெ சேந்து ஆளைத் தூக்கித் தூக்கிப் போடுது. இந்தப் பாயில் இதே இடத்திலெ அந்தக் கெடையா கெடக்கா. பெத்த மகனுக்கும் சொந்த மருமகளுக்கும் இல்லாத அக்கறையா நமக்குன்னு என் பாட்டுக்கு இருந்தேன் நான். ஆனா இவளைத் தாண்டி அங்கையும் இங்கையும் போறாளே அல்லாமெ இப்படியொருத்தி இங்கணெ கிடக்காளேன்னு ஆராவது மூண்டு கேக்கணுமே? எனக்கு தீரப் பொறுக்கல்லே. என்ன நெனச்சாலும் சரீன்னு அவனைக் கூப்பிட்டு, 'டேய் தங்கச்சாமி, இது ஒன்னைப் பெத்த அம்மையல்லவாடா? இப்படி பட்டினிக் கெடந்து, காய்ச்சல் பிடிச்சு இந்தக் குளிரிலெ கெடந்து பாடாத படுதா, அவளை அங்கே கூப்பிட்டுப் படுக்கவச்சு, கஞ்சியோ மருந்தோ கொடுத்தா என்ன? இது பெரிய பாவம்டா. ஒனக்கும் ஒரு புள்ளை இருக்கான். மறந்திராதே' ன்னு என்னவெல் லாமோ சொன்னேன். அதுக்குச் தங்கச்சாமி சொல்லுதான்: 'எனுத் துக்கு இவ விருந்தாளி மாதிரி ஒதுங்கி வந்து கெடக்கணும்? அங்கே மேலெ வந்து அதிகாரத்தோடெ படுக்கத்தானே வேணும்? அவசியம் உள்ளதைத் தமிழ்க் கொடிட்டெ இருந்து கேட்டு வாங்கிக் குடிச்சா, மாடியை வயசான காலத்திலே இவ ஈசு கொறஞ்சு போயிருமா? நீங்க மாடியை மட்டுந்தானே எங்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கீங்க? இவளுக்கு இந்தத் திண்ணையில் என்ன அதிகாரம்? ஒண்ணுலே மேலே வரச்சொல்லுங்க. இல்லாட்டே வெளியே போகச் சொல்லுங்க' என்று விட்டு அவன் பாட்டுக்கு ஆபீசுக்கு இறங்கிப் போயிட்டான்."

செல்லையா குபீரென்று எழுந்தான். தங்கசாமியை இங்கே கூப்பிட்டு இத்தனை பேர்களுக்கிடையில் வைத்து விசாரணை செய்து குடும்ப மதிப்பை இன்னும் குறைத்துக் கொள்ள அவன் விரும்பவில்லை போல் தோன்றியது. ஆனால் அவன் முகபாவம் தங்கசாமியிடம் தாங்க முடியாத வெறுப்பையும் கோபத்தையும் காட்டுவது போலிருந்தது. என்னவோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் போல் மரத்தாலான மாடிப்படிகளைப் படபடவென்று உதைத்தவாறு ஏறி மாடிக்குச் சென்றான்.

சிறிது நேரத்துக்கு மாரியம்மைக்குச் செல்லையாவின் சத்தம் மேலே மாடியில் கரகரவென்று கேட்டுக்கொண்டிருந்தது. இடையில், அமர்ந்த குரலில் தமிழ்க்கொடியின் என்னவோ பேச்சொலி.சற்று நேரத்தில் அந்தச் சத்தமும் கேட்கவில்லை.

களைப்பும் தூக்கமும் ஒரு சேர வந்து இமைகளை அழுத்துவது போலிருந்தது மாரியம்மைக்கு. எத்தனை நேரம் தூங்கினாளோ தெரியாது. திடீரென்று மேலே பேரப்பிள்ளை வீல் வீல் என்று அழும் ஓசை கேட்டதும் அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது.

சுற்று முற்றும் பார்த்தபோது யாரையும் காணவில்லை. மேலே அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் ஒரு பெரியச் சண்டையை எதிர்பார்த்து ஏமாந்து போய், தத்தம் வீடுகளுக்குச் சொர்ணம்மாவும், ஏனைய அண்டை வீட்டுப் பெண்களும் போய்விட்டார்கள் போலிருக்கிறது.

குழந்தையைச் சற்று நேரத்துக்கு யாரும் எடுக்கவில்லை. பிறகு தமிழ்க்கொடி என்னவோ எரிந்து விழுந்தவாறு குழந்தையை எடுத்து அதன் அழுகையை அடக்கும் அரவம் கேட்டது.

சற்றுக் கழிந்து, மிகவும் நிதானமாகச் செல்லையா மாடிப்படிகளில் இறங்கித் தன்னருகில் வந்து நிற்பது தெரிந்தது மாரியம்மைக்கு. மேலே செல்லும்போது அவனிடத்தில் இருந்த வேகம் தணிந்திருந்தது.

"வயசான காலத்திலே ஒனக்கு இவ்வளவு ஆங்காரம் கூடாது. அவர் சொல்வதெப் பார்த்தா ஒன் மேலேதான் தப்புன்னு தோணுது. ஒனக்கு இங்கே அதிகாரம் இல்லையா? எனுத்துக்கு இப்படி விருந்துக்கு வந்தவ மாதிரி விலகிப் போய் இருக்கணும்? கூடமாட வேலை செய்யணும். உள்ளதை விட்டுக் குடிக்கணும். அதை விட்டுட்டு எனுத்துக்கு இந்த அவதாளியெல்லாம்? வயசான காலத்திலே நானோ நானல்லவோன்னு பிடிவாதம் பிடிக்காமே அவ்வகூட ஒத்துப்போகப் பாரு. தமிழ்க்கொடிதான் வேற ஆருமா? அவதான் என்னவாவது சொல்லீட்டா அதைப் பெரிசு படுத்தாமே அங்ஙணே அடங்கிக் கெடக்கப் பாரு. உம்.... அதுதான் ஒனக்கு நல்லது. சரி, எனக்கி நிற்க நேரமில்லே. அடுத்த ரயில்லையேப் போகணும். நா போயிட்டு வாரேன்."

செல்லையாவின் குரல் மிகவும் கரகரப்பாகவும் கண்டிப்பாகவும் ஒலித்தது.

அவள் பதிலுக்குக் காத்திராமல் செல்லையா நடந்து தெருவாசல் அருகில் சென்றதும், தெருவிலிருந்து தங்கசாமி உள்ளே ஏறி வந்தான்.

"பெங்களூருக்குத் திரும்பியாச்சா? கொஞ்ச முன்னே மாடியிலிருந்து வெளியே போகும்போது இங்கே பார்த்தேன். உன்னை இங்கே காணவில்லையே? எங்கே போயிட்டே?"

செல்லையாவின் முகத்தில் தங்கசாமியை அப்போது அங்கே எதிர்பாராத ஒரு தடுமாற்றம். எனினும் சமாளித்துக்கொண்டு, "இல்லே, அம்மைக்கு மருந்து வாங்கீட்டுவரப் போயிருந்தேன். அப்பம்தான் நீ மாடியிலிருந்து வெளியில் போயிருக்கே போலிருக்கு. சரி, நா போயிட்டு வாரேன். அடுத்த ரயிலுக்குப் போகணும். எனக்கு லீவில்லே" என்று விட்டுத் தம்பியின் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல் தெருவில் இறங்கிச் சரக் சரக் என்று பூட்ஸ் கதற விறு விறுவென்று நடந்தான் செல்லையா.

----------------------

    புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
    நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984

    Aug 28, 2012

    மிலேச்சன்-அம்பை

    எழுபதுகளில் எழுச்சி பெற்று வரும் பெண்ணினத்தின் முக்கியக் குரல்களில் ஒன்றாக அறியப்பட்ட 'அம்பை'யின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. பிறந்தது கோயம்புத்தூரில் (17-11-1944). இந்தியப் பெண்களின் பிரச்னைகள், அவர்களுடைய சமூக அந்தஸ்து ஆகியவை பற்றிய இவரது கட்டுரைகள் பிரபல ஆங்கில சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. 'அந்தி மாலை'  (நாவல், 1966), 'நந்திமலைச் சாரலிலே' (குழந்தைகள் நாவல், 1961), 'சிறகுகள் முறியும்' (சிறுகதைகள், 1976) - இவை நூல் வடிவில் வெளிவந்துள்ள படைப்பு கள். 'தங்கராஜ் எங்கே?' என்ற குழந்தைகள் திரைப் படத்துக்காக வசனம் எழுதியிருக்கிறார்.

    ambai (3)

    ஊரின் ஒதுக்குப்புறத்தில், பிறரின் தொடல்களுக்கு அருகதையற்ற கீழ்ஜாதி ஆத்மாவாய்த் தன்னை உணர்ந்தான் சாம்பு அந்த இடத்தில்; அந்தச் சமயத்தில்.

    அவனைச் சுற்றிலும் பேச்சு நடந்துகொண்டிருந்தது. அவன் பங்கேற்காததைப் பற்றிக் கவலைப்படாத பேச்சு. அவன் அங்கே யிருந்த நாற்காலிகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஸவிதா, அவளுக்கும் அவள் பெற்றோர்களுக்குமிடையே உள்ள அபிப்பிராய பேதங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள், காலை சிற்றுண்டி யின் போது. "அவர்களுக்கு நான் பெரிய பிசினஸ் எக்ஸிக்யூடிவைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை. எனக்கு அப்படியில்லை. அறிவு பூர்வமாக நான் ஒருவனை விரும்பவேண்டும். அவனுக்கு மற்றவர்களின் துன்பங்களில் பங்கேற்கத் துடிப்பு இருக்க வேண்டும்."

    அவனுக்கு ஏனோ அவன் தங்கை இந்துவின் நினைவு வந்தது. ஸவிதா, உனக்குத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது. உன் அப்பா பெரிய வர்த்தகர். ஓர் அறிவு ஜீவியை நாடக்கூட உன் போன்ற வர்களுக்குத்தான் உரிமை. ஆனால் இந்து? அவள் காலையில் எழுந்து அம்மாவிடம் ஆயிரம் திட்டுகள் கேட்டவாறே இயங்கி, அவளே கஞ்சி போட புடைவை ஒன்றை உடுத்தி, குட்டி டிபன்பாக்ஸில் மத்தியான்னத்துக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடுவாள். பஸ்ஸில் இடம் விடும் முதல் ஆள் அவள் கவனத்தைக் கவர்ந்துவிடுவான். புன்சிரிப்புப் பூக்கும். அவள் மனம் குளிர ஓர் ஆண் முகம் போதும். தர்க்கரீதியாக இயங்குவது இல்லை அவள் மனம். அவள் வெறும் உணர்ச்சிகளின் கலவை. தியாகம், பாசம், தூய்மை, தேசபக்தி, அன்பு, காதல் போன்ற சொற்கள் அவள் மனத்தின் தந்திகளை மீட்டுபவை. அவளிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேசி ஒருவனைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் அவள் மிரண்டுவிடுவாள். காலம் காலமாய் அவள் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத, இருந்து பழக்கமில்லாத உரிமை அது. அவள் காதலித்தாலும் சினிமா கூட்டிப் போக, புடைவைகள் வாங்கித் தர, அடிக்காமல் அன்பு செலுத்த (அப்பாவிடம் வாங்கிய பெல்ட் அடிகளின் எதிரொலி) ஒருவனைத்தான் காதலிப்பாள். கல்யாணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்றுச் சினிமாப் பார்க்கும் திருப்தியிலும் பண்டிகைகள் கொண்டாடும் பக்தியிலும் வாழ்க்கையைச் செலவழித்து விடுவாள். தனக்கு நிராகரிக்கப்பட்டது எது என்பதை அவள் அறியமாட்டாள். அந்த மட்டும் திருப்தி. அவன் அதை உணரும்போதுதான் சிக்கல்கள்.

    "மதராஸி இன்று ரொம்ப யோசிக்கிறார்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டுச் சிரித்தாள் ஸவிதா. புன்னகை செய்தான் சாம்பு.

    "ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவியைப் பற்றி என்ன நினைக்கிறாய் சாம்பு?" என்று கேட்டாள் ஆங்கிலத்தில்.

    "நான் கூட ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவி தான். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்றான் பதிலுக்கு.

    அவள் கடகடவென்று சிரித்தாள்.

    "நல்ல ஜோக்" என்றாள்.

    "ஏன்?" என்றான்.

    "உன் கொள்கை என்ன?" என்றாள் உதடுகளை மடக்கிச் சிரித்தபடி.

    "உன்னைப் போன்ற ஓர் அறிவு ஜீவியை மணப்பதுதான்" என்றான் பட்டென்று.

    அவள் திடுக்கிடவில்லை. ஒரு நாளில் பத்து முறைகளாவது இவளை மணக்க விரும்புவது பற்றித் தெரிவிக்கும் ஆண்கள் அவள் தோழர்கள். சாம்பு சொன்னதுதான் அவளை வியப்பில் ஆழ்த்தியது.

    "குடித்திருக்கிறாயா இத்தனை காலையிலேயே?" என்றாள்.

    சாம்பு மேஜையை விட்டு எழுந்தான்.

    சென்னை வீதிகளில் உலவும் மனிதர்களை வெறுத்து, மூச்சு முட்டும் அதன் கருத்துகளைப் பகிஷ்கரித்து அவன் டில்லியை வந்தடைந்தான். ஒரு நாள் விடிகாலை, எம்.ஏ. பரீட்சை முடிந்த நிம்மதியில் நடக்க அவன் கிளம்பினான் சென்னையில். கோலம் போட்டவாறே அவனை ஊடுருவி நோக்கும் சந்தியா; (காதலை அவள் நம்புகிறாள், மடப்பெண்!) வயதுக்கு வந்துவிட்ட தன் பேத்தியை மனத்தில் இருத்தி அவனை நோக்கும் எதிர் வீட்டுத் தாத்தா; யுகம் யுகமாய்ச் சிகரெட் கடன் தந்த பெட்டிக்கடை நாயர்; தெரு ஓரத்தில் எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட மண்ணில் புரண்டு, சேற்றில் உளைந்து பக்கெட் பக்கெட்டாய் மூத்திரம் கொட்டும் எருமை மாடுகள்; வளைந்து குறுகி, பின் அகன்று மீண்டும் சுருங்கிக்கொண்ட, கோலங்கள் பூண்ட அந்த வீதி - எல்லாமே அந்த விடிகாலை வேளையில் ஓர் அந்நியக் கோலம் பூண்டன. திடீரென்று பெருங்கரம் ஒன்று அவனைத் தூக்கி அங்கே கொண்டுவந்து நிறுத்தியது போலத் தோன்றியது. அவன் சாம்பமூர்த்தி அல்ல. கள்ளிக்கோட்டையில் வந்திறங்கிய வாஸ்கோடகாமா போல், ஒரு மிலேச்சனின் கண்களோடு அந்த வீதியை நோட்டமிட்டான். அவனுக்கு மூச்சு முட்டியது.

    அவனுக்குரிய இடமில்லை அது என்று தோன்றியது.

    பாராகம்பாத் தெரு மரங்களின் நிழலில், இந்தியா கேட்டின் பரந்த புல்லில் பி.எச்டி பட்டத்துக்குப் படிக்கும் அறிவு ஜீவிகளின் சிந்தனையில் தன்னைக் கலந்துகொள்ள அவன் முயன்றான்.

    "ஹலோ சாம்பு! இன்னிக்கு வராய் இல்லையா?" மணி கேட்டான். "எங்கே?"

    "இன்னிக்கு ஸ்டிரைக். காம்பஸுக்குப் போகணும்." "எதுக்காக ஸ்ட்ரைக்?" "விலைவாசி ஒசந்ததுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க."

    "அரிசி என்ன விலை விக்கறதுன்னு தெரியுமா உனக்கு? டேய், பீர் விலை ஒசந்ததுன்னாதானேடா உனக்கு உறைக்கும்?"

    "இதோ பாரு. உன்னோட பேச எனக்கு நேரமில்லை. நான் பிஸியா இருக்கேன். வரயா இல்லையா?"

    "வரேன்."

    "விலைவாசியை இறக்கு."

    "இந்திரா ஒழிக."

    "மாதாஜி முர்தாபாத்."

    "டவுன் வித் ப்ளாக்மார்க்கடியர்ஸ் அண்ட் ஹோர்டர்ஸ்."

    "சாம்புவைப் பாரேன். என்ன ஆக்ரோஷமாய்க் கத்தறான்."

    "இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்லேதான் ஒருத்தனோட அடங்கிக்கிடக்கிற மூர்க்கத்தனம் வெளியே வரது. கூட்டத்திலே அவன் ஒருத்தன் ஆயிட்டான் இல்லையா?"

    சாம்பு பக்கத்தில் வந்தான்.

    "காலையில் என்ன சாப்பிட்டாய்?"

    "என்ன விளையாடறயா?"

    "சொல்லு."

    "முட்டை டோஸ்ட், ஜாம், காஃபி, வாழைப்பழம்."

    "பயத்தம்பருப்புக் கஞ்சின்னு கேள்விப்பட்டிருக்கிறாயா?"

    "ஏன்?"

    "அதுதான் எங்க வீட்டுலே கார்த்தாலே சாப்பிட. மிராண்டா ஹவுசில் படிக்கிறாளே உன் தங்கை, கெரஸின் க்யூன்னா என்ன, அதுலே நிக்கற அநுபவம் எப்படீன்னு தெரியுமா அவளுக்கு?"

    "நீ சொல்றது தப்பு, சாம்பு. ஒரு விஷயத்தைப் பற்றி என் எதிர்ப்பைத் தெரிவிக்கக் கஷ்டப்படறவனை நான் பார்த்து அதைப் புரிஞ்சுண்டாப் போதும். நானே அதை அநுபவிக்க வேண்டிய அவசியமில்லை. கான்ஸரை ஆபரேஷன் செய்யற டாக்டர் அதோட கொடுமையைப் பார்த்துப் புரிஞ்சுண்டாப் போதும் - அவனுக்கே கான்ஸர் வரவேண்டிய அவசியம் இல்லை."

    "இது வியாதி இல்லை."

    "இதுவும் ஒரு வியாதிதான், சமூகத்தைப் பீடிக்கிற வியாதி."

    "அப்படியே வைச்சிப்போம். நான் அதை அநுபவச்சிருக்கேன்."

    "என் சின்னத் தம்பிக்குத் தூங்கறப்போ கதை சொல்லறச்சே, 'அதுதான் ராமராஜ்யம் ஒரே பாலும் தேனும் ஓடும், ரத்னங்கள் வீட்டுலே இறைஞ்சு கிடக்கும்' அப்படி எல்லாம் சொன்னா, ராம ராஜ்யத்துலே கெரோஸின் நிறையக் கிடைக்குமோ அப்படீன்னு அவன் கேள்வி கேக்கறப்போ எந்தப் பின்னணியிலேந்து அது பொறந்ததுன்னு எனக்குப் புரிகிறது. அம்மா கரண்டியைச் சாதத்துலே வெக்கறபோதே ரொம்பச் சமத்தா 'அம்மா, எனக்குப் பசிக்கலே; ஒரே ஒரு கரண்டி போதும்'னு என் கடைசித் தங்கை சொல்லறபோது அரிசி விளைவோட பாரம் என் நெஞ்சிலே ஏறிக்கறது."

    பக்கத்தில் நின்றவாறு சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த ஸவிதா பெரிதாகச் சிரித்தாள்.

    கோஷங்கள் மாலையில் முடிந்தன.

    மீண்டும் ஹாஸ்டலுக்கு வரும் வழியில் ஆரதி பானர்ஜி அவனுடன் நடந்து வந்தாள். மென்குரலில் ஆங்கிலத்தில் கூறினாள்.

    "உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடுதான். ஏனென்றால் நீங்கள் கூறும் அநுபவங்கள் என் வீட்டில் புதிதல்ல" என்றாள்.

    "நீ பி.எச்டி. செய்யாமல் வேலைக்குப் போயிருந்தால் உன் வீட்டிற்கு அது பயன்பட்டிருக்கும் இல்லையா?"

    அவள் புன்னகை செய்தாள்.

    "ஆமாம். ஆனால் என் கனவுகள் என்னை இங்கே அழைத்து வந்தன."

    "எந்த மாதிரிக் கனவுகள்?"

    "மூன்று வருடங்களில் பி.எச்டி. முடித்துவிடலாம். பின்பு பெரிய வேலை. ஒருவேளை என் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைக்க ஒரு பணக்காரக் கணவன் கூடக் கிடைக்கலாம். நிஜத்தில் நடந்தது வேறு. பி.எச்.டி.யின் முடிவில் கூடிய வயதும் மனம் பிடிக்காத வேலையும் நித்தியக் கன்னி பட்டமுந்தான் எஞ்சும் போல் இருக்கின்றன."

    "உன் மனசுக்குப் பிடித்த யாரும் இங்கில்லையா?"

    அவள் அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். பட்டென்று சொன்னாள்: "என்னிடம் உள்ள மொத்த புடைவைகள் ஐந்து."

    "புரியவில்லை."

    "ஓபராய் போய்க் காஃபி குடிக்கவோ, அக்பர் ஹோட்டல் போய்ச் சாப்பிடவோ அணிந்துகொள்ளக் கூடிய புடைவைகள் என்னிடம் இல்லை. பெரிய ஹோட்டல்களில் நுழைந்தவுடனேயே என் கண்கள் விரிந்து நாவடைத்துப் போய் விடுகிறது. என் முந்நூறு ரூபாய் ஸ்காலர்ஷிப்பில் நூறு ரூபாய் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். மரியாதைக்குக் கூட என்னால் எங்காவது வெளியே போனால் 'நான் பில் தருகிறேன்' என்று சொல்ல முடியாது. எனக்கு இந்த மனநிலையில் ஏற்படும் எந்த அன்பும் காதல் என்ற பட்டம் பெற முடியாது. அது சுயநல எண்ணங்களோடு திட்டமிட்டுப் பின் நடைமுறையில் செய்யப்படும் வியாபாரந்தான். காதல் என்ற சொல்லுக்கே நம் வாழ்க்கை முறையில் இடம் இல்லை. இது குறிப்பிட்ட சிலரின் ஏகபோக உரிமை."

    "ம்."

    "ஒரு நிமிஷம்" என்று அப்பால் சென்றாள்.

    "ஏய் சாம்பு, ஆரதியிடம் ஜாக்கிரதை. அவள் ஒரு கணவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். விழுந்து விடாதே."

    பின்னால் கனைத்தாள் ஆரதி.

    "ஆரதி, நான் ஒன்றும்..."

    "பரவாயில்லை கோவிந்த். நீ டெல்லியின் நாற்றச் சந்துகளில், விளக்குக் கம்பம் புடைவை கட்டிக்கொண்டு வந்தால் கூடப் பின்னால் போகிறாய் என்று கேள்விப்பட்டேன். நான் உன்னை விடத் தேவலை இல்லையா?"

    கோவிந்துக்குப் பலமான அடிதான்.

    அதன்பின் மௌனமாகவே நடந்தனர்.

    ஹாஸ்டலில் இந்துவின் கடிதம் வந்திருந்தது.

    ‘வைரத் தோடாம் அண்ணா. அப்பா முடியாது என்று கூறிவிட்டார். அண்ணா நீ பி.எச்டி. முடித்ததும் நமக்கு இந்த மாதிரி தொல்லை இல்லை. நீ புரொபஸராகிவிடுவாய். அண்ணா நீ நன்றாகப் படி. எனக்கு ஆஃபிஸில் வேலை ஜாஸ்தி. புது ஆஃபீஸர் ரொம்ப டிக்டேஷன் தந்துவிடுகிறார். நாங்கள் எல்லாருமாக ‘நேற்று இன்று நாளை’ போனோம். எனக்குப் பிடித்தது.”

    இந்து, இந்து உன் உலகம் எவ்வளவு வித்தியாசமானது. என்னுடையதை விட?

    பி.எச்டி. முடித்தால் புரொபஸராகி விடுவேனா? இந்த பி.எச்டி.யை எப்போதுதான் முடிப்பது? புரொபஸர் கருணையின்றி பி.எச்டி. வாங்க முடியுமா? அவர் ஜீனியஸ்தான். அதுதான் தொல்லை. பத்து வருடங்களுக்கு குறைந்து அவரிடம் பி.எச்டி. வாங்க முடியாது. தீஸிஸ் விஷயமாகப் போனால் மிக அழகாக ரெயில்வே ஸ்டிரைக் பற்றிப் பேசுவார். ஜோன் பேயனின் ஸெக்ஸி குரல் பற்றிப் பேசுவார். நிக்ஸன் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றிச் சொல்வார். ஜெரால்ட் ஃபோர்டு எதற்கும் பயனில்லை என்பார். யாரும் நினைவு வைக்க முடியாத சரித்திர சம்பவங்களை நினைவு கூர்ந்து ஜோக் அடிப்பார். ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்.

    “ஸார், என் சாப்டர்...”

    “என்ன சாப்டர்?”

    “ஒன்றாவது ஸார்.”

    “வீட்டுலே குடுத்தியா ஆஃபிஸிலியா?”

    “வீட்டுலேதான்.”

    “இன்னொரு காப்பி உண்டா?”

    “ம். ஸார்.”

    “நாளைக்குக் கொண்டாயேன். பார்க்கலாம்.”

    “சாரி, ஸார்.”

    இரண்டு வருடங்களாக இதுதான் நடக்கிறது, இந்து. உங்களுக்கு எல்லாம் இது எப்படிப் புரியும்?

    “என்ன சாம்பு, லவ் லெட்டரா?” தேஷ்பாண்டே கேட்டான்.

    “இல்லை தேஷ்பாண்டே.”

    “கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்களா வீட்டில்?”

    சிரித்தான் சாம்பு, “ம்ஹூம்.”

    “சரி, இன்னிக்கு வெச்சுக்கலாமா?”

    “வேண்டாம் தேஷ்பாண்டே.”

    “டேய், நீ ஒரு முட்டாள் மதராஸி, வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத மதராஸி.”

    "இருக்கட்டும்."

    "உனக்குத் தைரியம் இல்லை. ஒரு பெக் சாப்பிட்டா நீ டவுன் தான்."

    "என்னைச் சாலஞ்ச் பண்ணாதே."

    "சும்மா பேச்சுத்தான் நீ. அம்மா திட்டுவாளா?"

    "சரி, இன்னிக்கு வெச்சுக்கலாம்."

    சாயங்காலம் தேஷ்பாண்டேயின் அறையில் ஐந்தாறு நபர்கள் கூடினர். சுடச்சுடத் தொண்டையில் இறங்கிப் பின் சூடு உடம்பில் பரவியது. ஸிக்கிம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    திடீரென்று யானை பலம் வந்தது போலிருந்தது. குறுக்காகத் தொப்பி வைத்துக்கொண்ட நெப்போலியன் தான் எனத் தோன்றியது. பிரஷ் மீசை வைத்த ஹிட்லராக மாறி யூதர்களைக் கூட்டம் கூட்டமாக அழிப்பது போல் தோன்றியது. வேஷ்டி சட்டையுடன் அண்ணாதுரை, ஒரு கூட்டத்தில் பேசுவது போல் தோன்றியது. சிவாஜி கணேசன் முகம் கொண்ட ராஜராஜ சோழன் தான் என்று மார் தட்டிக்கொள்ள அவா எழுந்தது. இழைய முடியாத டில்லி சூழ்நிலை. டைப் அடித்து அடித்து விரல்களைச் சொடுக்கிக் கொள்ளும் இந்து, பாத்திரத்தின் அடியில் இருக்கும் சாதத்தைக் கரண்டியின் சுரண்டல் ஒலி இல்லாமல் எடுக்கும் அம்மா, எல்லாம் மறைந்து அவனே பூதாகாரமாய் ரூபமெடுத்து அத்தனையையும் அடித்துக்கொண்டு மேலெழுந்து வருவது போல் உணர்வு தோன்றியது.

    "ஸிக்கிமை ஆக்ரமிக்க வேண்டும்" என்று உரக்கச் சொன்னான்.

    "ஏய் சாம்பு, என்ன ஏறிடுத்தோ நன்னா?" மணி கேட்டான்.

    "சேச்சே, அதெல்லாம் இல்லை."

    "ஜாக்கிரதை, ஒரேயடியாக் குடிக்காதே. மெள்ள மெள்ள."

    "நான்ஸென்ஸ். நான் சரியாத்தான் இருக்கேன். ஸவிதா வரலியா?"

    "ஸவிதா இங்கே எங்கேடா வருவா?"

    "ஏன் வரக்கூடாது? நான்தான் அவ தேடற துடிப்புள்ள இளைஞன். நான் நடுத்தரக் குடும்பம்னா அவ என்னை லவ் பண்ணக்கூடாதா? நான் ஒரு துடிப்புள்ள இளைஞன்."

    ஸிக்கிம் பற்றிய பேச்சு நின்றது.

    சாம்பு பேசிக்கொண்டே போனான்.

    "ஸவிதாவை எனக்குப் பிடிக்கறது. ஆனா இந்த உலகமே வேற. அரசியல், ஆராய்ச்சி, வெளிநாட்டுத் தொடர்பு பற்றிப் பேசற அக்கறை இல்லாத உலகம் இது. தேஷ்பாண்டே, இங்கே ஓட்டை போட்டுண்டு வந்த எலி நான். இங்கே இருக்கிற யார் மாதிரியும் நான் இல்லே. நான் ஒரு துரத்தப்படும் எலி. பூனைகள் உலகத்துலே அகப்பட்டுண்ட எலி. ஸவிதாவை நெருங்க முடியாத எலி. என் தங்கை இந்து இருக்கிற உலகத்துலேயும் நான் இல்லே. கோலம், கோபுரம், புடைவை, சினிமா, கற்பு, கணவன், அம்மா, அப்பா இவர்கள் எல்லாருக்கும் நான் அந்நியமாப் போய்விட்டேன். ஓ, எங்கே?" என்று எழுந்து கால்களை உதறி அறை முழுவதும் தேடி ஓடினான்.

    "ஹே, எதைத்தான் தேடுகிறாய்?"

    "என் வேர்கள், என் வேர்கள்" என்று ஆங்கிலத்தில் கூறி அழுதான் சாம்பு.

    திடீரென்று எழுந்து, "எனக்கு எங்கேயும் இடம் இல்லை" என்று கூறி ஓட ஆரம்பித்தவன் முறித்துக்கொண்டு கீழே விழுந்தான். அறை முழுவதும் வாந்தி எடுத்த நெடி.

    "தேஷ்பாண்டே, இதெல்லாம் உன் தப்பு. ஹோல் ஈவினிங் கில்... ஸ்பாயில்ட்."

    "ஏய், இவன் முழிக்கமாட்டேன் என்கிறானே?"

    "முகமெல்லாம் வெளுத்துவிட்டது."

    "குட் லார்ட்! டாக்ஸி கொண்டுவா. வெலிங்டன் ஹாஸ்பிடலுக்கு ஓடலாம்."

    கண்ணை விழித்தபோது தேஷ்பாண்டேயின் முகம் தெரிந்தது.

    "ஐ ஆம் சாரி."

    "இட்ஸ் ஓ கே! எத்தனை பெக் குடித்தாய்?"

    "ஒன்பது."

    "ஜீஸஸ்!"

    "எனக்கு அத்தனையும் தேவைப்பட்டது, தேஷ்பாண்டே! தேஷ்பாண்டே நான் இந்த இடத்தில் இருக்க வேண்டியவன் இல்லை. ஏழு வருஷம் பி.எச்டி. பண்ண என்னால் முடியாது. என் தங்கை கல்யாணம் ஆகாமல் தவித்து விடுவாள். என் அம்மா உருக்குலைந்து போய் விடுவாள். அறிவுஜீவியாவது கூட எனக்கு ஓர் ஆடம்பரமான விவகாரந்தான். அங்கேயும் நான் ஓர் அந்நியன் தான். ஆனாலும் அங்கே நான் தேவைப்படறேன்."

    "டேக் ரெஸ்ட், சாம்பு."

    தலை திரும்பியபோது ஆரதி வருவது தெரிந்தது.

    தேஷ்பாண்டே எழுந்தான். ஆரதியைப் பார்த்து மரியாதைக்குப் புன்னகை செய்துவிட்டுப் போனான்.

    "என்ன சாம்பு, இது என்ன இப்படிப் பண்ணிவிட்டீர்கள்?"

    கண்களில் நீர் பெருகியது.

    "ஆரதி, நான் ரொம்பத் தனியனாக இருக்கிறேன்."

    "ம்."

    "என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை."

    "ம்."

    "உனக்கும் இந்த அனுபவம் உண்டா?"

    கையிலிருந்த பையைப் பார்த்தவாறே ஆரதி பேசினாள்.

    "ம், உண்டு. இதை விட உண்டு. உங்களுக்கு வீட்டுக்குத் திரும்பிப் போக முடியும். அங்கே மூத்தபிள்ளை என்ற அந்தஸ்து உண்டு. எனக்குத் திரும்பிப் போக முடியாது. என் குடும்பம் நான் இல்லாமல் இருக்கப் பழகிவிட்டது. நான் அங்கே போகும்போதெல் லாம் வெளியாளாய் உணர்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை பிரச்னைகள் இல்லாத ஒரு பெண். அந்த எண்ணத்தை மாற்ற நான் விரும்பவில்லை. இரண்டு உண்மைகளை நான் உணர்வதால் என் நிலைமையை என்னால் ஏற்க முடிகிறது. ஒன்று, வேலை செய்து தான் வாழவேண்டும் என்ற சமூகப் பிரக்ஞையால் பிறக்கும் உணர்வு. இரண்டு, நாம் எல்லோருமே ஒவ்வொரு வகையில் தனியாள்தான் என்ற உணர்வு."

    "நான் ஸவிதாவை விரும்புகிறேன்."

    ஆரதி புன்னகை செய்தாள். "எனக்குத் தெரியும்."

    "நான் பைத்தியக்காரன் என்று நினைக்கிறாயா?"

    "ம்ஹூம். உண்மைகளைப் பார்க்காதவர்."

    "புரியவில்லை."

    "ஸவிதாவை நீங்கள் விரும்புவது நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவன் என்ற தாழ்மையுணர்ச்சியால்தான். அந்த வர்க்கத்து உணர்வுகளிலிருந்து விடுபட விரும்பும் வேகத்தால்தான். இந்த உணர்வே ஒரு தப்பிக்கும் முயற்சிதான். ஏணி மேல் ஏறி, எந்த வர்க்கத்தை ஏளனம் செய்கிறீர்களோ அதே வர்க்கத்தை நீங்கள் எட்டிப் பார்க்கிறீர்கள். கீழேயும் உங்களுக்கு இடம் இல்லை. மேலே யும் உங்களுக்கு இடம் இருக்காது."

    "கோபிக்காதே. நீ என்னை விரும்புகிறாயா?"

    அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

    "மற்றவர்கள் நினைப்பதுபோல் நான் ஒரு கணவனை நிஜமாகவே தேடி அலையவில்லை. உண்மையான பரிவுணர்வைக் காட்ட என் போன்றவர்களுக்கும் முடியும்."

    "ஐ ஆம் ஸாரி."

    "டோண்ட் பி" என்று கூறிவிட்டு எழுந்தாள்.

    அவள் போனபின் வெகுநேரம் நெஞ்சில் பல உணர்ச்சிகள் குழம்பித் தவிக்க வைத்தன. வேர்களற்ற நான் யார்? என்னை எந்த அநுபவங்களோடு நான் ஒன்றிப் போகவைக்க முடியும்? ஆராய்ச்சி செய்ய நேரமோ, பணமோ அவனிடம் இல்லை. அது ஒரு நீண்டகாலத் திட்டம். அவன் போன்றோர்களிடம் இல்லாத ஒரு போகப் பொருள்; காலத்தை அலட்சியம் செய்யும் மனப் பான்மைதான். அவன் காலத்துடன், ஒன்று, அதனுடன் சண்டை யிட்டு, அதனிடம் மண்டிபோட வேண்டியவன். இல்லாவிட்டால் இந்துவின் வாழ்வு குலைந்துவிடும். தம்பியின் எதிர்காலம் இருளடை யும். எங்கும் புகுந்து எப்படியும் வாழும் எலிகளில் அவன் ஒருவன். புரிந்தது. ஆனால் ஏற்க முடியவில்லை. குப்பைத் தொட்டியின் மேல் மல்லாக்கப் படுத்து இறந்து, காக்கை தன் வயிற்றைக் குத்திச் சதை யைப் பிடுங்கும் எலியாய்த் தன்னை உணர்ந்தான். அவன் வித்தியாச மாக எதையும் செய்ய முடியாது. அவனுக்கு நிராகரிக்கப்பட்ட உரிமை அது. அவன் எதிர்வீட்டு ஸந்தியாவை மணக்கலாம். அவ ளுடன் நல்ல கணவனாகப் படுக்கலாம். அவள்மேல் ஆதிக்கம் செலுத் தலாம். குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். பணம் இல்லாமல் தவிக்கலாம். ரிடையர் ஆகலாம், இறக்கலாம். குப்பைத் தொட்டி மேல் செத்த எலி போல, இதுவே அவனுக்கு விதிக்கப்பட்ட வரம்புகள்.

    வரம்புகள், வரம்புகள், வரம்புகள்!

    ஆஸ்பத்திரியின் கட்டிலில்; அதன்மேல் அவன், கோபாலை யரின் மகன் சாம்பமூர்த்தி. அவனே அவனுக்கு அந்நியமானவனாகப் பட்டான்.

    அவன் திரும்பிப் போவான். கோலங்களின் ஓரமாக எருமைகளைத் தாண்டி அந்தத் தெருவில் நடப்பான்; ஆனால் அதுவல்ல அவன் இடம். அத் தெருவின் மண்; அதன் மீது பஸ் பிடிக்க ஓடும் இந்து; சைக்கிளில் போகும் அப்பா; புத்தகப் பையுடன் போகும் தம்பி; எல்லாரும் எலிகள்; பொந்து போட ஓடும் எலிகள். வரம்புகளைக் கட்டிக்கொண்டு அதனுள் ஓடும் எலிகள்.

    பல்லாயிரக்கணக்கான எலிகள், மாறுபட்ட அவனைக் கோரைப் பற்களால் சுரண்டி வால்களால் அவனைத் தாக்கி அவன் மேல் ஆக்கிரமிப்பது போல் உணர்ந்தான். திடீரென்று கோடிக்கணக்கான பூனைகள் எலிபோல் தோன்றிய அவனை நகங்களால் கீறி வாய்க்குள் அடைத்துக்கொள்வதைப் போல் தோன்றியது.

    சாம்பு வீரிட்டான்.

    --------


      புதிய தமிழ்ச் சிறுகதைகள் ,தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன்
      நேஷனல் புக் டிரஸ்ட் ,இந்தியா. புது டில்லி. ,1984

      Aug 22, 2012

      'பூசனிக்காய்' அம்பி-புதுமைப்பித்தன்

      எந்தப் பெற்றோராவது தன் குழந்தைக்கு இப்பெயரைத் துணிந்து வைத்திருப்பார்கள் என்று நான் கூற வரவில்லை. அது நான் கொஞ்ச காலத்திற்கு முன்பு அறிந்திருந்த சிறு பையனின் பட்டப்பெயர் என்றுதான் எனக்குத் தெரியும். அவனைப் 'பூசனிக்காய் அம்பி' என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள். அவனுக்கு வேறு பெயர் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

           இந்தப் பெயர் எப்படி வந்திருக்கலாம் என்று எங்களூர் ஆராய்ச்சியாளர்கள் ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். அம்பியின் தலை வழுக்கை. அதன் மேல் பொன்னிறமான பூனை மயிர். பூசனிக்காயின் வர்ணத்தைப் பெற்றிருப்பதிலிருந்து அந்தப் பெயரை அவனுக்குக்  pudu5கொடுத்திருப்பார்கள் என்று ஒரு கட்சியினர் வாதாடினார்கள். இதற்கு நேர்மாறாக அம்பிக்குப் பூசனிக்காயின் மீது இருந்த அபாரப் பிரேமையினால் அப்பெயர் வந்திருக்கலாம் என்று உறுதிபடக் கூறியது மற்றொரு கட்சி. இதற்கு இடையில் கொஞ்சம் கவிதைக் கிறுக்குப் பிடித்த ஒரு கோஷ்டி, அவன், பூசனி காய்க்கும் காலத்தில் பிறந்ததினால் அப்பெயர் இடப்பட்டிருக்கலாம் என்று அறைந்தார்கள். இம் முக்கட்சிகளின் வாதப்பிரதிவாதங்கள் ஒரு முடிவிற்கும் வந்து சேராததினால் அதில் நாமும் சிக்கிக்கொள்ளாமல் ஊர்ப்பிள்ளைகள் மாதிரி அவனைப் 'பூசனிக்காய்' அம்பி என்று மட்டும் கூறி மகிழ்வோம்.

           அம்பியின் ராஜ்யம் என் வீட்டுப் பக்கத்திலுள்ள ஒரு வளைவு. திருநெல்வேலிப் பக்கத்தில் வளைவு என்பது பத்துப் பதினைந்து வீடுகள் சூழ்ந்த ஒரு வானவெளி. இப்படிப் பல வளைவுகள் சேர்ந்ததுதான் ஒரு தெரு, அல்லது ஒரு சந்து. மாவடியா பிள்ளை வளைவு என்றால் அழுக்கு, இடிந்த வீடு, குசேல வம்சம் என்பவற்றின் உபமானம். அந்த வளைவில்தான் எனது 'பூசனிக்காய்' அம்பி தனியரசு செலுத்தி வந்தான். மாவடியா பிள்ளை வளைவு கட்டிட வேலைக்குப் பெயர் போனதல்ல. 'பூசனிக்காய்' அம்பியைத் தவிர அந்த வளைவில் ஒரு அபூர்வமும் கிடையாது. வருங்காலத்தில் அதிக நம்பிக்கை வைக்கும் சூதாடிக்குக் கூட அம்பியை விட வேறு ஒன்றைப் புதிதாகப் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை வராது. அந்த வளைவின் நடு மத்தியில் ஒரு கிணறு. அங்கு பகலில் வண்ணானைக் கூடத் தோற்கடிக்கும் வெளுப்பு வேலை நடக்கும். அவற்றையெல்லாம் காயப்போடும் ஒரு கம்பிக்கொடி. இந்தக் கம்பிக்கொடி அம்பியின் முக்கியமான துணைக்கருவியாகையால் அதைப்பற்றி அவசியம் கூற வேண்டியதாகிவிட்டது.

           எனது வீட்டுச் சன்னல் அந்த வளைவை நோக்கியிருந்தது. எனது படிப்பு, படுப்பு, அம்பியின் திருவிளையாடல்களைப் பார்த்தல் எல்லாம் அச்சன்னலின் வழியாகத்தான்.

           அம்பிக்கு ஏழு வயதிருக்கும். ஆனால் முகத்தைப் பார்த்தால் 10 அல்லது 12 வயதிற்கு மதிக்கலாம். அவன் உயரம் இன்னதுதான் என்று திட்டமாகக் கூற முடியாது. ஏனென்றால் அவன்மீது பெரிய மனிதனது கிழிந்த ஷர்ட் ஒன்று அலங்கரித்து நிற்கும். அதற்குள் சிறு துண்டு ஒன்று கட்டியிருப்பான் என்பது பலருடைய உத்தேசம். இம்மாதிரியான 'சாமியார்' அங்கி போன்ற சட்டைக்குள் இருந்து கொண்டே அவன் தனது திருவிளையாடல்களை நடத்திவிடுவான். 'அந்தர்' அடிப்பது முதலிய சிறு வேலைகள் எல்லாவற்றிலும் அவனுக்குத்தான் வெற்றி. அவனது சட்டை எப்பொழுதாவது அவனைத் தடுக்கிவிட்டிருக்கிறதா என்றால் அது சரித்திரத்திற்குத் தெரியாத விஷயம். பகலில் எந்தச் சமயத்திலும் கம்பியில் 'பூசனிக்காய்' தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பது சாதாரணமான காட்சி. அவன் ஏறாத கூரை கிடையாது. அவன் தாண்டாத சுவர் கிடையாது. பூசனிக்காய் அம்பிக்கு பக்கத்திலுள்ள சுவர்களின் உயரம், தொத்தி ஏறும் வசதி முதலிய விஷயங்களில் தண்ணீர் பட்ட பாடு. அந்தச் சந்தில் இருக்கும் முனிசிபல் தகரத்தை அடித்து 'லொடபட' வென்று உருட்டிச் செல்வதுதான் அவனது அமைதியான விளையாட்டு.

           'பூசனிக்காய்' அம்பிக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையா. சில சமயம் அவனது 'சினேகிதர்கள்' அவனைப் பேட்டி காண வருவார்கள். அவர்கள் வரும்பொழுதெல்லாம் கல்லும் மண்ணாங்கட்டியும் ஆகாயமார்க்கமாகப் பறப்பதுதான் அவர்களது 'சினேக' பாவத்தை எடுத்துக் காட்டும். கடைசியாக, பெருத்த கூக்குரலுடன் அவர்கள் வளைவைவிட்டு ஓடுவதுதான் 'பூசனிக்காய்' அம்பியின் வெற்றி. இது எப்பொழுதும் தவறாது நடக்கும் இயற்கை.

      பாரதியார், 'தனிமை கண்டதுண்டு அதிலே சாரமிருக்குதம்மா' என்று பாடிவிட்டுப்போனார். 'பூசனிக்காய்' அம்பியும் அந்தச் சாரத்தை மிகவும் அனுபவித்திருப்பான் போல் தெரிகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷந்தானாமே. அம்பிக்குத் தனிமைச் சாரமும் ஒரு தடவை புளித்துப் போய்விட்டது. அவன் குருட்டுப்பிச்சைக்காரனை வளைவிற்கு உள்ளே இழுத்து வந்துவிட்டான். குருடனும் ஏதோ நீண்ட தெருவில் போவதாக நினைத்து சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். இவ்வளவையும் ஒரு குட்டிச்சுவரின்மீது அமர்ந்து திருப்திகரமாக நோக்கிக் கொண்டிருந்தான் அம்பி. பக்கத்துப் 'பெரியதனக்காரர்' வீடுகளில் எல்லாம் அம்பி 'பொல்லாத' பயல் என்று பெயர் வாங்கிவிட்டான். இதனால் பெரிய வீட்டுக் குழந்தைகளுக்கு எல்லாம் 'பூசனிக்காய்' அம்பி என்றால் அபாரப் பிரேமை. குழந்தை விரல்கள் பலகாரத்தைப் பகிர்ந்து தின்ன அவனை அழைக்கும். 'அப்பா', 'அம்மா' என்ற தொந்தரவுகள் எல்லாம் இல்லாத பெரிய மனிதன் என்பது குழந்தை உலகத்துப் பேச்சு.

           ஒருநாள் மாவடியா பிள்ளை வளைவில் பெருத்த கூச்சல். நான் எட்டிப் பார்த்தபொழுது, 'பூசனிக்காய்' அம்பி வளைவின் கூரையொன்றின் மேல் இருந்துகொண்டு பக்கத்துப் பெரிய வீட்டுக்காரர் குழந்தையொன்றைக் கயிற்றின் உதவியால் உயர இழுத்துக் கொண்டிருந்தான். கீழே கூடியிருந்த கூட்டம் பையனை இறக்கிவிடும்படிக் கெஞ்சின. ஆனால் 'பூசனிக்காய்' அவசர அவசரமாகக் குழந்தையைக் கூரைக்கே கொண்டு போய்விட்டான். குழந்தைப் பயல் உயரச் சென்ற பின் தான் அவனும் 'பூசனிக்காயின்' சதியாலோசனையில் சேர்ந்திருந்தான் என்று தெரியவந்தது. பயலும் தாயாரைப் பார்த்து அழகுக்காட்டிச் சிரித்தானாம். அவன் உதவிக்கு ஏணி வந்து சேர்வதற்குள் அம்பியின் பலத்த நண்பனாகி, அவனுடைய தூண்டுதலில் பெற்றோரையே கேலி செய்ய ஆரம்பித்து விட்டான். ஏணி வந்து குழந்தையைப் பிடிக்குமுன் 'பூசனிக்காய்' கம்பி நீட்டி விட்டான். அதில் இருந்து, இருவருடைய நட்பும், 'ஏ! பூசனிக்காய்', 'ஹி! பட்டு' என்ற சம்பாஷணையுடன் நின்றது.

           இச்சந்தர்ப்பத்தில் நான் அம்பியிடம் அதிகமாகப் பழக நேர்ந்தது. அக்காலத்தில், தமிழ்நாட்டில் இலக்கியத்தின் காலியான பாகங்களை நிரப்புவதற்காக உழைத்துக்கொண்டிருந்தேன். இலக்கியத்தில் இருக்கும் காலி கொஞ்சம் பெரியது என்றும், தமிழ்நாடு அதனால் கண்ணுறங்காமல் வாடிக்கொண்டிருக்கிறது என்றும் கேள்விப்பட்ட நான், ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தில் இந்தக் காலியை நிரப்பும் வேலைக்குத் தத்தம் செய்திருந்தேன். வேலை பெரிய வேலையல்லவா? ரஷ்யர்கள் போடுகிற ஐந்து வருஷ திட்டங்களைப் பற்றி எல்லாம் படித்த நானும் ஒரு திட்டம் போடாமலா இருப்பேன். அந்தத் திட்டத்தின்படி ஆபீஸிலிருந்து நான் வந்தபிறகு, உலகத்தை வெறுத்து, சன்யாசி மாதிரி எனது அறைக்குள் சென்று பூட்டிக்கொள்ளுவேன். முந்திய நாள் என்ன எழுதினேன் என்பதை வாசிப்பேன். இதில் சிறு மாறுதல்கள் செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றும். உடனே அதைத் திரும்ப எழுத ஆரம்பிப்பேன். அப்பொழுது மேற்கோளுக்காக தமிழ்நாட்டில் மேற்கோள் இல்லாத ஆராய்ச்சிப் புஸ்தகமும் பருப்பில்லாத கலியாணமும் உண்டா? என்று புஸ்தகத்தை எடுப்பேன். எப்பொழுதும் அம்மாதிரிப் புஸ்தகங்கள் எழுதுவதைவிட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அது வேறொரு நல்ல வழியில் இக்காலியை நிரப்புவதற்கு வழி கூறும். இந்தப் புதிய திட்டத்தைப் பற்றி ஆலோசிக்க ஆலோசிக்க, இதுவரை எழுதிய முறையைத் தள்ளிவிட வேண்டியதுதான் என்று திட்டமாகப்படும். இச்சமயத்தில்தான் மூளைக்குக் களைப்பு ஏற்பட்டு ஒருதடவை வெற்றிலை - வெற்றிலை என்றால் என் அகராதியில் வெற்றிலை + புகையிலை என்று அர்த்தம் - போட வேண்டி வந்துவிடும். வெற்றிலை போடும்பொழுது நிம்மதியாக ஆலோசிப்பது நல்லது என்று தோன்றும். உடனே ஜன்னலின் பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டு வெளியே பார்ப்பேன். அப்பொழுது மிஸ்டர் 'பூசனிக்காய்' அம்பி தென்படுவான். 'ஸார்' என்பான். 'என்னடா பூசனிக்காய்' என்பேன். இதற்கு மேல் எங்கள் சம்பாஷணை வளர்ந்ததில்லை. ஆனால் இருவர் உள்ளத்திலும் இருக்கும் 'நாடோ டி'த் தன்மை இருவரையும் பிணித்தது. இவ்விதமான ஆத்மீகப் பிணிப்பு 'பூசணிக்காய்கள்' சர்க்கஸ் வேலைகளுக்கிடையே நடந்தேறும். இதற்குள் நேரமாகிவிடுமாகையால் வேறு ஒரு பக்கத்தில் இருக்கும் 'காலி' ஸ்தானத்தை நோக்கிச் சென்றுவிடுவேன்.

      இப்படி இருக்கையில் எனது நண்பர் ஒருவர் ஒரு குலைச் செவ்வாழைப் பழங்களை எனக்கு அனுப்பியிருந்தார். பழங்கள் கொஞ்சம் காய்வாட்டாக இருந்தன. நான் ஆபீஸிற்குப் போகும்முன் அதை ஜன்னலின் பக்கம் தொங்கவிட்டுச் சென்றேன். பழமும் பழுக்கவாரம்பித்தது. அறை முழுவதும் அதன் வாசனை பரிமளித்தது.

           மறுநாள் சாயுங்காலம் ஆபீஸில் இருந்து திரும்பி வரும்பொழுது ஒரு சிறுவன் செவ்வாழைப்பழம் ஒன்று தின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். கொஞ்ச தூரம் சென்றதும் இன்னும் ஒரு சிறு பையனும் ஒரு செவ்வாழைப் பழம் தின்று கொண்டிருந்தான். இதிலிருந்து என்ன நடந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு துப்பறியும் கோவிந்தனும் வேண்டாம். வாசகர்களே இதற்குள் அந்த மகத்தான தொழிலைச் செய்து முடித்திருப்பார்கள். எனது அறைக்குச் சென்று பார்த்தேன். பழக்குலை மாயமாக மறைந்துவிட்டது என்று கண்டுகொண்டேன். 'பூசனிக்காய்' வேலைதான். அவனைப்பற்றி நினைக்கும்பொழுதெல்லாம் என் மனம் கொதித்தது. அவனைப் பார்த்தவுடன் துப்பறியும் நாவலில் கடைசி அத்தியாயத்தில் நடக்கிறபடி 'அடே, பூசனிக்காய், வாழைப்பழக்குலைத் திருட்டிற்காக உன்னைக் கைது செய்கிறேன்' என்று அவன் தோள்மீது கையை வைத்துச் சொல்ல வேண்டும் என்று ஆசையாகிவிட்டது.

           கொலைகாரனும் திருடனும் தாம் குற்றம் செய்த இடத்தைப் பார்க்க வருவது இயற்கையாம். அதுதான் 'பூசனிக்காயை' என் சன்னலின் பக்கம் வரும்படித் தூண்டியிருக்க வேண்டும்.

           அவன் ஜன்னல் முன்பாக இரண்டு மூன்று தரம் நடந்தான். நான் கவனிக்காததுபோல் இருந்தேன்.

           பிறகு பக்கத்திலிருக்கும் குட்டிச்சுவரில் ஏறிக்கொண்டு, "இங்கே சர்கேசு வந்திருக்குதே, அதிலே ஒருத்தன் ஆறு குருதெயிலே சவாரி பண்ணுரான்" என்றான்.

           குதிரயை஢ல் சர்க்கஸ் என்னை இளக்கவில்லை. நான் பேசாமல் இருந்தேன்.

           "சேஷனைத் தெரியுமா?" என்றான்.

           அவனைப் பற்றிச் சிறிது ஞாபகம் வந்தது. 'பூசனிக்காயின்' நண்பன்.

           "துச்சனக்காரப் பயல். போலீஸ்காரனைக்கூடக் கொன்னுட்டான். மடியிலே கத்திகூட வச்சிருக்கான். இன்னிக்கு அவனை சன்னலுக்கிட்டெப் பார்த்தேன்" என்றான்.

           ஒரு சின்னப் பயல் காது குத்துவது என்றால் யாருக்குத்தான் கோபம் வராது.

           "ஏண்டா பூசனிக்காய் பொய் சொல்லுகிறாய். சேஷனைப் பற்றி உனக்கென்ன? நீதான் பழத்தை எடுத்தாய். அதற்குத் திருட்டு என்று பெயர். உன்னை ஜெயிலுக்குப் பிடித்துப் போகப் போகிறேன்" என்றேன்.

           சொல்லி முடிப்பதற்கு முன் ஆசாமி கம்பி நீட்டிவிட்டான். அப்படிச் செய்வான் என்று எனக்குத் தெரியும். இப்பொழுது இந்தப் பக்கமே வருவதில்லை. யாருக்காவது அவன் இருக்குமிடம் தெரிந்தால், அவனிடம் விளையாட்டிற்குச் சொன்னேன் என்று சொல்லுங்கள். இப்பொழுது அவன் இல்லாது மாவடியா பிள்ளை வளைவு வெறிச்சென்று கிடக்கிறது.

      ஊழியன், 01-02-1935 (புனைப்பெயர்: நந்தன்)

      Aug 18, 2012

      கானல் - திலீப்குமார்

      மெல்ல மெல்ல, அந்த அறையின் புழுக்கத்தையும் அங்கு திடீரென்று படிந்து விட்ட நிசப்தத்தையும் அவர்கள் உணரத் துவங்கினார்கள். அறையின் மூலையில் எரிந்து கொண்டிருந்த நீல நிற சிறிய விளக்கின் மங்கிய ஒளியில் அவர்கள் கரிய நிழல்கள் போல் உறைந்து கிடந்தார்கள். அவர்களது நிர்வாணமான சிவந்த உடல்கள் ஒரு வகையில் பிணங்கள் போன்றும் தெரிகின்றன. அதிருப்தியால் வதங்கிய மலர்களுடன் அவர்கள் கிடந்தார்கள். உடல்களிலிருந்து வீசிய வியர்வையின் நெடியும், படுக்கையில் படிந்த லேசான ஈரமும் பொறுக்க முடியாததாக இருந்தது. என்றாலும், அங்கு நிலவிய மௌனம் கலைக்கப்படாமல் இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். ஏமாற்றத்தின் கொந்தளிdileepe ப்பு மிகுந்த வெறுமையை அந்த அறையின் இருளிலும், நிசப்தத்திலும் கரைத்துவிட முயன்றார்கள் போலும். அவள், கால்கள் ஒன்றின் மேல் மற்றது கிடக்க உத்திரத்தை வெறித்தபடி நேராகக் கிடந்தாள். மூச்சு விட அவளது ஸ்தனங்கள் சீராய் மெல்ல அசைந்ததைத் தவிர சலனமற்றுக் கிடந்தாள். இவன் பக்கவாட்டில் சாய்ந்து முகத்தை அவளது தோள்களில் புதைந்தபடி இருந்தான். அந்நிலையிலிருந்தே இவன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் படுத்திருந்த விதமும், அவளது அதிருப்தியுற்ற நிர்வாணமும் இவன் மனதைத் தொட்டது. அவள் கண்கள் பனித்திருந்தன என்றும் இவனுக்குப்பட்டது.

      இந்த இடத்தின் தனிமை அவர்களுக்கு அன்று மதியம் தான் ஊர்ஜிதமாயிற்று. இவன் அவளிடம் அதை தெரிவித்த போது எவ்வித தயக்கமுமின்றி ஒப்புக் கொண்டாள். இருவருக்குமிடைய ஆழ்ந்த கவர்ச்சி என்றும் இருந்ததில்லை. என்றாலும், கிடைத்தால் வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்கிற அளவு சஞ்சலம் இருந்தது இருவருக்கும். எப்படியோ ஒருவர் மனதை மற்றவர் அறிந்து வைத்திருந்தார்கள். சற்றுக் கழித்து, அவள் எதையோ லேசாக தீர்மனித்துக் கொண்டவள் போல் சிறிது நகர்ந்து கொண்டாள். இவனும் மௌனமாக விலகி படுத்தான். இவனுக்கு ஏதாவது பேசலாம் என்று தோன்றியது. ஆனால் பேசவில்லை. பேசுவதா அல்லது பேசாமலிருப்பதா அச்சந்தர்ப்பத்தில் எது உசிதம் என்று இவனால் நிச்சயிக்க முடியவில்லை. அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள் என்று இவன் நினைத்துப் பார்த்தான். குழப்பமாக இருந்தது. இவனுக்கு முன்பாகவே, அவள் இந்த இடத்தை வந்து அடைந்திருந்தாள். இவன் கதவை தட்டியபோது தளர்த்திக்கட்டிய கேசத்துடன், வெளிர் நீல புடவையில் பவுடர் மணக்க இவன் முன் தோன்றினாள். இவன் உள்ளே வந்ததும், கதவை தாழிட்டு விட்டு இவனை பார்த்துக் கண்களில் அர்த்தம் தொனிக்க முகம் மலர சிரித்தாள்.

      அவள் உடல் முழுவதிலுமிருந்து ஒரு வினோத ஆவல் வெளிப்பட்டது போல் தோன்றியது. அவளது விழிகளின் கருமணிகளில் படர்ந்திருந்த பளபளப்பு நிலவின் விரக ஒளிபோல் தாக்கியது. அவர்கள் ஒன்றும் பேசாமல் இறுகத் தழுவிக் கொண்டார்கள். இவன் அவளது தலையை வருடியபடி அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவள் ஒரு அழகிய விலங்கைப் போல் இவனது கைகளில் தகித்து உருகினாள். சிறு குழந்தைகள் போல் அலங்கோலமாக உடைகளைக் களைந்து கொண்டே படுக்கையை அடைந்தார்கள்.

      அவள் ஒரு உலர்ந்த மரத்துண்டைப்போல் கிடந்தாள். இவன் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

      அவளே முதலில் பேசினாள். “நாம் எழுந்து கொள்வோம். நேரமாகி விட்டது என்று நினைக்கிறேன்.” தொடர்ந்து “விளக்கைப் போடலாமா” என்று கேட்டாள். இவன் வேண்டாம் என்று பதில் சொன்னான். பின் மெல்ல இருவரும் எழுந்து கொண்டார்கள். இவன் அவளைப் பார்த்தான். அவளது அழகிய உடல் ஓர் அற்புத சிற்பம் போல் தோன்றியது. இவன், திடீரென்று அவளை அணைக்க விரும்பி தாபத்துடன் அவளது தோள்களைத் தொட்டான். சட்டென்று அவள் இவன் கைகளை விலக்கி விட்டுக் கொண்டே “போதும்” என்று நிராசை மிகுந்த குரலில் சொன்னாள். இவன் பின்வாங்கி, ஒன்றும் பேசாமல் அவளைக் கடந்து முன்னறைக்குச் சென்றான். இவன் உடைகள் அணிந்து, அவளுக்காகக் காத்திருந்தான். முன்னறையில் தனக்கு வீட்டை உபயோகிக்க கொடுத்த, நண்பனின் மனைவியுடன் கூடிய புகைப்படம் முன்னறையில் மாட்டப்பட்டிருந்தது. இருவரும் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள். இவன் தன் நண்பனின் மனைவியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அந்த பெண்முகம் தன் எளிய புன்னகைக்குப் பின்னாலிருந்து இவனைப் பார்த்து ஏளனம் செய்வது போல் இருந்தது. இவன் குழப்பத்துடன் கண்களை இறுக மூடிக் கொண்டான். மூடிய கண்களுக்குள் மீண்டும், சற்றுமுன் அவளது வாளிப்பான உடல் தன் மீது சரிந்திருந்த காட்சி தெரிந்தது. அன்றைய கூடலில் பிசகு ஏதும் ஏற்படாது என்றே இவன் நினைத்திருந்தான். அவளது அழகான சிறிய மார்பகங்களை முத்தமிட துவங்கிய போது அவள் இவனை இறுக அணைத்துக் கொண்டாள். மூச்சுக் காற்றின் மயக்கும் ஆவேசம் ஜ்வாலையாக எங்கும் படர அவர்கள் கரைந்து அழிந்து கொண்டிருந்தார்கள். மெல்ல, மெல்ல, நிறைவேற்றத்தை நோக்கிய மென்மையான பாய்ச்சல்கள் துவங்கியபோது உலகமே சுற்றியது. இதோ இதோ என்று உச்சத்தை நோக்கிய கடைசி துடிப்புகளின் போது தான் எல்லாமே திடீரென்று மாறியது. அலைகள் பின் வாங்க இவன் விழுந்து நொறுங்கினான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவள் அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாதவளாக முகமும் உடலும் பதற பயங்கரமாக அசைந்து புரண்டாள். இவன் குற்ற உணர்வுடனும், வாஞ்சையுடனும் அவளைத் தாங்கிக் கொண்டான். நீரிலிருந்து திடீரென்று வெளியே எடுக்கப்பட்ட மீன் போல சிறு துடிப்புகளுக்குப் பின் அடங்கிப் போனாள் அவள். இவன் அவளை விட்டு மெதுவாக விலகினான். எல்லாமே கணங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது. அவள் திடீரென்று விசும்பல்களுடன் அழத் துவங்கினாள். இவன் பேசாமல் கிடந்தான். அவள் முன்னறைக்கு வந்தவுடன், இவன் கிளம்ப ஆயத்த மானான். அவள் முகம் தெளிவாக இருந்தது. கண்களில் அதிருப்தியின் தீவிரம் குறைந்திருந்தது. அவள் இவனை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.

      வீட்டைப் பூட்டி விட்டு இருவரும் தெருவுக்கு வந்தார்கள். தெரு வெறிச்சோடியிருந்தது. வானத்தில் நிலவு மிதந்து கொண்டிருந்தது. இருவரும் பஸ் நிறுத்தத்தை நோக்கி மெல்ல நடந்தார்கள். சாலை மரங்களின் இலைகள் சலசலக்க காற்று வீசிய போது இவனுக்கு ஒரு அலாதியான விடுதலையுணர்வு ஏற்பட்டது. மனதின் இறுக்கம் குறைந்தது.

      இவன் : என்னை மன்னித்து விடு.
      அவள் : எதற்காக?
      இவன் : ……இல்லை…. என்றுமே இப்படி நடந்ததில்லை. நீ எப்படி உணர்ந்து கொண்டிருப்பாய் என்று எனக்குத் தெரியும்.
      அவள் : பரவாயில்லை. எனக்கு ஒன்றுமே வருத்தமில்லை.
      இவன் :நான் எதையும் நிரூபிக்க விரும்பவில்லை என்றாலும் சொல்கிறேன் இப்படி நடப்பது இது தான் முதல் முறை
      அவள் : பரவாயில்லை.
      இவன் : ஒரு வேளை, இன்று நான் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேனா
      அவள் : சரி பரவாயில்லை விடு.
      இவன் : இல்லை. இந்த வாய்ப்பின் திடீர்தன்மைதான் என்னை தேவைக்கதிகமான பரவசத்திற்குள்ளாக்கி விட்டது.
      அவள் : சரி விடு.
      இவன் : உன் துணிகரத்திற்கு பயனில்லாமல் போய்விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது.
      அவள் : போதும், பேசாதே.
      இவன் : உனக்கு என் மீது ஒரே வெறுப்பாக இருக்கிறது இல்லையா?
      அவள் : இல்லை.
      இவன் : என் உடலின் ஆற்றல் குறித்தும் உனக்கு சந்தேகம் வந்து விட்டிருக்கும்.
      அவள் : இல்லை.
      இவன் : நீ பொய் சொல்கிறாய்.
      அவள் : போதும் நிறுத்து.
      இவன் : தயவு செய்து, நீ என்னை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதே- குறிப்பாக உன் கணவரோடு.
      அவள் :………………
      இவன் : அடுத்த முறை………….
      அவள் : போதும் உன் உளறல்.

      அவர்கள் ஒன்றும் பேசாமல் நடந்தார்கள். பஸ் நிறுத்தம் இருந்த பெரிய சாலையை அடைய இன்னும் சில நிமிடங்கள் நடக்க வேண்டியிருக்கும். இவன் வானத்தை பார்த்தபடி நடந்து வந்தான். அவள், தெருவில் விழுந்த தன் நீண்ட நிழலை கவனித்துக் கொண்டே வந்தாள். திடீரென்று இவன் மீண்டும் பேசினான்.

      இவன் : நாம் இன்று சந்தித்திருக்கவே கூடாது.
      அவள் : நாம் என்றுமே சந்தித்திருக்கவே கூடாது.

      பஸ் நிறுத்தம் காலியாக இருந்தது. அவர்கள் மௌனமாக நின்று கொண்டிருந்தார்கள்.

      ***

      நன்றி : திலீப்குமார் ‘ஆபிதீன் பக்கங்கள்’

      Aug 12, 2012

      நீலம் - பிரமிள்

      அவர் ஒரு ஆர்டிஸ்ட். அதிலும் மெட்ராஸ் ஆர்டிஸ்ட். அவ்வப்போது அவர் தமது படங்களைக் காட்சிக்கு வைப்பார். சில விலை போகும். பிரபல மேனாட்டு மாடர்ன் ஆர்டிஸ்டுகளின் எச்சங்களை இங்கே மோப்பம் பிடித்து வாங்கிக் கொள்கிற சின்னஞ்சிறு ஆர்ட் மார்க்கெட்க்காரர்கள் வந்து பார்ப்பார்கள்.கோழிச் சண்டையில் இறகுகள் பறக்கிற மாதிரி அவரது படங்களைச் சுற்றி விமர்சனங்களும் பறக்கும்.  

      மற்றபடி அவருக்கு ஆர்ட்டுடன் சம்பந்தம் இல்லாத அவரது ஆபீஸ் உண்டு.குடும்பம் உண்டு. ரசிகர்கள், அதுவும் பெரிய இடத்து ரசிகர்கள் வீசும் ரசனைகளைpremale-01 அசை போட்டுப் போட்டு அவருக்குத்  தலை கவிழ்ந்துவிட்டது. அப்படிப் பாரம் ! அவர் பஸ் ஏறப்  பிடிக்கும் குறுக்கு வழிகளின் மனித எச்சமும் நடுவே மானங்காணியாக மலரும் காட்டுச் செடிகளும் அவரது கண்களுக்குப்படுவதில்லை

      ஆபீஸிலிருந்து லேட்டாகத் திரும்பிய ஒரு நாள் மாலை பஸ்ஸில் ஏறிய அவர், தமது பஸ்  ஸ்டாப்பிலிரிந்து இரண்டு ஸ்டேஜுகள் கடந்து போய் இறங்கி விட்டார். இதற்குப் புற உலகக் காரணமாக, பஸ்ஸில் ஏறியவன் இறங்க முடியாத நெரிசல். அக உலகக் காரணமும் ஒன்று உண்டு. சமீபத்தில் டிவியில் அவர் பார்த்த ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம் ஒன்றைப் பக்கத்துக்கு சீட்காரர் வைத்திருந்ததிலிருந்து பிடித்த சர்ச்சை.

      கதை, கவிதை போன்ற எந்த மனித சிருஷ்டியையும் கூட கம்ப்யூட்டர்கள் மனிதனை விடச் சிறப்பாகக் கையாள முடியும் என்ற இடத்தில் சூடு பிடித்த சர்ச்சை அது. "அந்நிலையில் மனிதன் என்கிற நீ என்ன?" என்பது கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி. நமது ஆர்டிஸ்ட்டோ, என்ன இருந்தாலும் கம்ப்யூட்டரினால் பெயிண்டிங் செய்ய முடியும் என்று சொல்லப்படவில்லை எனச் சுற்றி சுற்றி அழுத்தினார்.

      "பெயிண்டிங் சிற்பம், இசை எல்லாமே கம்ப்யூட்டரால் முடியும். ஜப்பானில் கம்ப்யூட்டர் கார்களை மெனுபாக்செர் பண்ணுகிறது" என்று உறுமினார் பக்கத்துக்கு சீட்காரர். முக்குக் கண்ணாடி வட்டத்துக்குள் அவரது கண்கள், போகப் போகப் பெரிதாகிக் கொண்டிருந்தன. அவரது உறுமலுடன் கண்ணாடியில் ஏதோ ஒரு வட்டமான சிறு ஒளி, பஸ் கூட்டத்தின் இடுக்குகளூடே ஊடுருவிப் பிரதிபலித்தது.

      "ஆனால் அதோ அந்த நிலவின் அழகை மௌனமாகத் தனக்குள் உணர மனிதனால் முடியும். கம்ப்யூட்டரால் முடியாது" என்றார் திருவாளர் பக்கத்துக்கு சீட்காரர்       

      "டெர்மினஸ்" என்று சேர்த்துக் கொண்டார்.

      பஸ்சிலிருந்து பொலபொலவென்று கூட்டம் உதிர்ந்தது. ஆர்டிஸ்டும் உதிர்ந்தார். பக்கத்துக்கு சீட்காரரைக் காணோம்.

      எங்கோ இன்னொரு கிரகத்தில் நிற்கும் உணர்வு தீடீரென நமது ஆர்ட்டிஸ்டுக்குத் தோன்றிற்று. எங்கோ, என்றோ, எவனோ, தான் என்ற ஒரு இடைவெட்டு மனதில் ஒரு மௌனக் கீறாக ஓடிற்று.

      கலைந்து கொண்டிருந்த மனிதர்களது முகங்கள் மீது,மின்சார கம்பம் ஒன்றின் ஒளிச்சீற்றம். இருண்டு கருத்த முகங்களில் கண்ணாடிச் சில்லுகள் கட்டமிட்டு மின்னின.

      குடில்களாகவும், சீரற்ற சிமிந்திப் பொந்துகளாகவும் தெரு பின் வாங்க, நடக்க ஆரம்பித்தார். திடீரென எதிரே உலகு வெளித்தது.வானின் பிரம்மாண்டமான முகில்கள் தமக்குள் புதையுண்ட பெரிய மர்மம் ஒன்றினை, வெள்ளியும் பாதரசமுமாக உலகுக்குத் தெரிவித்தபடி நகர்ந்து கொண்டிருந்தன. எட்டோணாத தொலை தூரத்தில் ஒரு கிராமீயக் குரல், இயற்கையின் மொழியற்ற மழலை போன்று வெற்றோலியாய்க் கேட்டு மறைந்தது.

      திடீரென, அந்தக் குரலுக்குப் பதிலாக, அவருக்குப் பின்புறம் முதுகு சில்லிட, "கூ" என்றது இன்னொரு குரல். அதன் அமானுஷ்யத்தில் ஒரு கணம் அர்த்தமற்ற மரண பயம்.அவர் திடுக்கிட்டுத் திரும்பினார். நிலவு வெளிச்சத்தில் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். சுமார் பதினைந்து பதினாறு மதிக்கத்தக்க கிராமத்துப் பையன்.

      அவரை அவன் பேசவிடவில்லை. " இந்நேரம், இந்நேரம் ... இன்னும் கொஞ்சம் தூரம்..." என்றான், அவரை முந்தித் தன்னைப் பின் தொடர அழைத்தபடி நடந்த அவன். அவரது மனதில் ஏதேதோ எல்லாம் எழுமுன், 'தோ" என்று ஒரு இருண்ட பெரிய பள்ளத்தைக் காட்டினான்.  திட்டுத் திட்டாக மின்னிய நிலவொளியில் இருள் மாறி, பாசி படர்ந்த குளமாயிற்று. குளத்தைக் காட்டிய சிறுவன் சரசரவென்று அதற்குள் இறங்கினான். இறங்கியவன் குளத்தினுள்ளேயே மூழ்கி மறைந்தான்.

      நமது ஆர்டிஸ்டுக்கு, அந்த ஒரு கணம், தன் முன் தோன்றி மறைந்தது அமானுஷ்யமான ஏதோ ஒரு உயிர் வடிவம் என்றே சிறுவனின் தோற்றமும் மறைவும் எண்ண வைத்தன.

      அதற்குள் பையன் குளத்திலிருந்து ஈரம் சொட்டச் சொட்டக் கிளம்பிக் கரையேறி, கையில் எதையோ கொண்டு வந்தான்.

      அது ஒரு நீல வண்ண ஜாலம். அப்போது தான் விரிந்து கொண்டு இருந்தது. அந்த நீலோத்பலம். பத்திரமாக நீட்டிய கையிலிருந்து பெற்று கொண்டார் அதை.   

      "நீலோத்பலம், அதுவும் ராவானதும், நீருக்கடியில்தான் பூக்கும்.அதன் அழகை யார் கண்டது?" யாரோ, எங்கோ,என்றோ அவரது ஞாபகங்களின் விளிம்பில் நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். குளத்தின் எதிர்க்கரையில், பையனை ஆர்டிஸ்ட் மீது ஏவி விட்டு நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துக்கு சீட்காரரா?

      ஆர்டிஸ்டின் கண்கள் பையனின் முகத்துக்குத் திரும்பின. ஈரம் பட்ட சிறுவனின் முகத்தில் உக்ரமாக விழுந்த சந்திர தீபத்தின் வெளிச்சம், அவனது பெரிய கண்களுக்கும், நெற்றியிலிரிந்து பள்ளமற்று ஓடிய நாசிக்கும், ஆயிரமாயிரம் வருஷங்களாக இயற்கையினால் அதி கவனத்துடன் செதுக்கப்பட்ட இன்னொரு முகத்தின் சாயலைத் தந்து கொண்டிருந்தன.   

      தம்மை மீறிய மரியாதையுடன், " யார் நீ?" என்றார் ஆர்டிஸ்ட்.

      அவன் பதில் சொல்லவில்லை. தூரத்தே மொழியற்று ஒலித்த குரல், ஒலியலைகளாக உருப்பெற்று, 'கிஸ்ணா"என்று கேட்டது.

      பையன் பதிலுக்குக் 'கூ' என்றபடி, நிலவின் பரந்த வெளியினடே தன்னை அழைத்த குரலை நோக்கி ஓடினான். கையில் நீலோத்பலம் அதற்குள் ஆகாயமாகத் தனது நீலச்சுடர்களை மலர்த்தி விட்டது.     

      ----------------------

      அம்ருதா பதிப்பகம் 2009 

      தட்டச்சு உதவி: மணிகண்டன்

      Aug 8, 2012

      தியாகம் - கு அழகிரிசாமி

      கோவில்பட்டி மளிகைக் கடை கதிரேசன் செட்டியார் காலையில் பலகாரம் சாப்பிடப் பத்து மணி ஆகும். அப்பறம் ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்துச் சாப்பிட்டச் சிரமத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கடையை நோக்கிப் புறப்படுவார். சரியாகப் பதினைந்து நிமிஷ நடை. பத்து இருபத்தைந்துக்குக் கடையில் வந்து உட்காருவார். கையில் கடிகாரம் கட்டாமலே நிமிஷக் கணக்குத் தவறாமல் வருஷம் முன்னூற்றி அறுபத்தைந்து நாளும் ஒரே மாதிரியாக அவர்க் ku-a-scaled-500 கடைக்கு வருவதும் வீடு திரும்புவதும் இந்தக் காலத்து கடை சிப்பந்திகளுக்கு அதிசயமாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. அவர் அந்தக் காலத்து மனுஷர். அவர் பழகிய உலகம் அவரை விட்டாலும் அவர் அதை விடத் தயாராக இல்லை.

      அன்று காலை 10.25 க்கு கடைக்கு வந்தார். கடைக்குள் நுழையும் பொது முகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டுமோ, ஒரு குறிப்பிட்ட முறையில் வைத்து கொள்ள வேண்டும், அப்படி வைத்து கொண்டார். அந்த முகபாவத்தின் பிரதான அம்சம் கடுகடுப்பு; பிரதானம் இல்லாத அம்சம் ஒரு மாதிரியான விறைப்பு . இந்த முகபாவத்தை கடையில் உட்கார்ந்து இருக்கும் வரையில் எக்காரணத்தைக் கொண்டும் மாற்ற மாட்டார். நண்பர்களோ அந்தஸ்து மிக்க வாடிக்கைககாரர்களோ வரும் போது அவர் சிரிக்கவோ, புன்னகை செய்யவோ வேண்டிய அவசியம் ஏற்படும். அதையும் இந்த முகபாவத்தை மாற்றாமலே நிறைவேற்றி விடுவார்.

      கடையில் வந்து உட்கார்ந்த செட்டியார், கணக்கு எழுதும் சோமசுந்தரம் பிள்ளையை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்தார். பிள்ளையும் அவ்வண்ணமே செய்தார். பிறகு செட்டியார் முகத்தை திருப்பி, பெட்டியைத் திறந்து அங்கே கிடக்கும் சில்லறைக் காசுகளை கையால் துழாவ விட்டு கடைச் சிப்பந்திகளை - அந்த நான்குப் பேரையும் மொத்தமாகவும், தனித் தனியாகவும் பார்த்தார். இனி வசை புராணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்! எதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஆரம்பிக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தார். ஒரே கணம் தான் சாக்குக் கிடைத்து விட்டது ....

      "ஏன்டா.தடிப்பயல்களே ! நீங்க என்ன பரதேசிகளா, சன்யாசிகளாடா!  எருமை மாட்டுப் பயல்கள் ! விடிஞ்சதும் நாலு வீட்டுக்கு யாசகத்துக்குப் போறப் பிச்சைக்காரப் பயல் கூட இப்படி சாம்பலை அள்ளி பூச மாட்டானேடா ? தரித்திரம் புடிச்ச பயல்களா! நீங்க வந்து கடையிலே நொளைஞ்சிகளோ இல்லையோ யாவாரம் ஒண்ணுக்கு பாதியாய்ப் படுத்து போச்சு. இன்னும் மிச்சம் மீதியையும் படுக்க வெச்சிட்டு போகவாட இப்படி நெத்தியில அள்ளி பூசிட்டு வந்திருகீங்க, சாம்பலை!...."

      கடையில் புதிதாக சேர்ந்திருந்த ஒரு சிப்பந்தி " நீங்களும் விபூதி பூசி இருக்கீங்களே மொதலாளி ?" என்று கேட்டு விட்டான்.

      "அடி செருப்பாலே ! நாயே ! வாய தொறக்கிரியா நீ? (கணக்கு பிள்ளையப் பார்த்து) ஜோட்டால அடிச்சு வெளிய துரத்தும் இவன ! நமக்கு சரிப்படாது. கஞ்சிக்கிலாம செத்த பயல்களை எரக்கபட்டுக் கடையிலே வெச்சது என் முட்டாள்தனம்,சோமசுந்தரம் பிள்ளை ......." என்று செட்டியார் பொரிந்து கொண்டிருக்கும் போது, கணக்குப் பிள்ளை அந்தப் புதுப் பையனைப் பார்த்து, "வேலையைப் போயி பாரேண்டா. மொதலாளி கிட்ட எப்படிப் பேசணும்கிறது கூடத் தெரியல்லையேடா, ஒனக்கு! உம் போ! போய் வேலையைப் பாரு " என்றார்

      அந்த பையனுக்கு ஆத்திரம் வந்தது. போதாக்குறைக்கு மற்ற மூன்று பையன்களும் திரும்பிக் கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.

      செட்டியார் அதோடு அவனை விட்டு விட்டார். மற்றொரு பையனைப் பார்த்து அஸ்திரத்தைத் தொடுத்தார் ; " ஏய் கழுதே ! உன்னைத் தானே ! பருப்புலே ஒரே கல்லாக் கிடக்கனு சொன்னேனே பொடைச்சு வெச்சியா கழுதை?"

      "பொடைச்சிட்டேன், மொதலாளி. கல்லு ஒண்ணும் இல்லையே?"

      "என்னடா ! இல்லையா? அப்போ நன் பொய்யாச் சொல்றேன்? டேய்! இந்த மாதிரி நீ பேசிகிட்டே இருந்த, செருப்படி வாங்கிகிட்டுத் தான் இந்த கடையை விட்டுப் போகப் போறே. ஆமா. நல்ல யாவகத்துல வெச்சுக்கோ வேலைய ஒழுங்கா செய். சோமசுந்தரம் பிள்ளை, பய பேச்சை பார்த்தீரா? பார்த்து கிட்டீரான்னேன்? கடைக்கு வர்றவனெல்லாம் ஒருத்தன் பாக்கி இல்லாம ,"என்ன செட்டியாரே, இப்படிக் கல்லைப் போட்டீருக்கேரே பருப்புல" ன்னு கேக்கறான். இவன் என்னடான்னா "பொடைசிட்டேன் கல்லில்லேங்கரானே, உம் ஏ கழுத, நீ பொடைச்சது நெசன்தனா? கேட்டதுக்கு பதில் சொல்லு ! இல்ல இப்படியே கடையை விட்டுக் எறங்கு... "

      சோமசுந்தரம் பிள்ள அந்தப் பையனைப் பார்த்து,"பொடைச்சேன் கல்லைச் சுத்தமாப் பொறுக்கிட்டேன் மொதலாளி ன்னு சொன்னா என்னப்பா ? நிசத்தைச் சொல்றதுக்கு என்ன?" என்றார்

      அந்தப் பையன் பதில் சொல்லாமல் நின்றான்.

      செட்டியார் கடைப் பையன்களைப் அத்தனை பேரையும் மொத்தமாகப் பார்த்து "போங்கடா எம் மூஞ்சியில முளிக்காதீங்க. ஒங்கள கட்டீக்கிட்டு மாரடிக்கறதுக்கு ஒரு குத்துக் கல்லை கட்டிக்கிட்டு மாரடிக்கலாம். தொலைஞ்சிப் போங்கடா" என்று விரட்டினார்   

      கடைப் பையன்கள் நால்வரும் உள்ளே போய்விட்டார்கள்.உள்ளே போனதும் பழைய மூவரும் சிரித்தார்கள்.

      மறுநிமிஷமே செட்டியார் அவர்களை அழைத்தார். "ஏன்டா எங்கடா கூண்டோட கைலாசம் போய்டீங்க? உள்ளே சமுக்காளத்தை விரிச்சு படுத்து தூங்குகடா ; நல்லா தூங்குங்க! இங்க வர்றவங்களுக்கு புளியும் கடுகும் நான் நிறுத்துப் போடறேன்."

      புதுப் பையன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு "நீங்க தானே மொதலாளி உள்ளே போகச் சொன்னீங்க? நாங்க எது செஞ்சாலும் குத்தமாச் சொல்றீங்களே ..." என்று இரண்டு வாரங்களாக அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கக்கியே விட்டான்.

      அவன் பேசியதைக் கேட்டு மற்றப் பையன்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரிக்க, செட்டியார் தம் முகத்தை இன்னும் கடுகடுப்பாக வைத்து கொண்டு சோமசுந்தரம் பிள்ளைய ஏறிட்டுப் பார்க்க, பிள்ளையும் அந்தப் பையனைப் பார்த்து." ஏன்டா,'பேசாதே பேசாதே 'ன்னு ஒனக்கு எத்தனை தரம் சொல்றது? என்ன பயலடா  நீ? போய் அந்த ஈராங்காயத்தை மூட்டையிலிருந்து எடுத்துக்கிட்டு வா.. இங்கே பொட்டியிலே ஈரங்காயம் இல்ல" என்றார்

      " அதெல்லாம் எங்கே தெரியுது? எல்லாம் சொல்லித் தான் நடக்க வேண்டியிருக்கு, ஏன்டா, சோறு திங்கறீங்களே, அதையும் சொன்னாதான் திம்பீங்களா? இல்ல கேக்கறேன். இப்படி அறிவு கேட்ட பயல்களா வந்து நமக்குன்னு சேந்திருக்காங்கலே, அதைச் சொல்லும் ... டேய், உன்னைத் தாண்டா ! அந்த முத்தையா பிள்ளை பாக்கியக் கேட்டியா? அதையும் சொன்னா தான் செய்வியா?" 

      "கேட்டேன், முதலாளி "

      "கேட்டியாக்கும்?கெட்டிக்காரன் தான் ! கேட்டு வாங்கனும்னு தோணலியோ?"

      "பாக்கியக் குடுதிட்டாரு" என்று பெருமிதத்தோடு சொன்னான் பையன்.

      "அட என்னமோ இவன் சாமர்த்தியத்தில வாங்கின மாதிரியில்ல பேசுறான் ! கடன் வாங்கினவர் குடுக்காமலா இருப்பாரு? முத்தையா பிள்ளை யோக்கியன்,இவன போல முடிச்சிமாறிப் பயலா இருப்பார்னு நெனைச்சான் போல இருக்கு,அதனாலே தான் குடுத்திட்டாருனு ரொம்பச் சவடாலாச் சொல்றான். ஏய், நீ எப்டிடா போய்க் கேட்ட? கண்டிப்பாக் கேட்டியா?"

      "கண்டிப்பாத்தான் கேட்டேன் மொதலாளி ..."

      "கண்டிப்பாகக் கேட்டியா? உன்ன யாருடா அப்படிக் கேக்கச் சொன்னது? எதம்பதமாப் பேசணும்மன்னு உனக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்? கண்டிப்பாப் பேசினா நாளைக்கு எவண்டா கடைக்கு வருவான்?...."        

      அப்போது சோமசுந்தரம் பிள்ளை குறுக்கிட்டு, சாவதானமாக, "முருகையா, அந்த பெரிய கணக்கு நோட்ட இப்படி எடு" என்றார். செட்டியார் முருகையாவை விட்டுவிட்டார். மற்றொரு பையனை ஏறிட்டுப் பார்த்து கொண்டிருந்த சமயத்தில் சண்முகம் பிள்ளை கடைக்கு வந்து சேர்ந்தார்.

      "அண்ணாச்சி வாங்க!" என்று அவரை வரவேற்றச் செட்டியார், அந்தப் பையனைப் பார்த்து, " ஏய் பரதேசி! நான் உனக்கு என்ன சொன்னேன்? என்னலே சொன்னேன்?..." என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே சண்முகம் பிள்ளை பேச்சுக் கொடுத்தார்."செட்டியாரையா ,நாளைக்கு மதுரைக்குப் போறேன்" என்று தான் சொல்ல வந்த விஷயத்தை ஆரம்பித்தார். செட்டியாரும் கவனத்தை அவரிடம் திருப்பினார். அத்துடன் சாமான்கள் வாங்கவும் இரண்டொருவர்கள் வந்தார்கள். பையன்கள் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டார்கள்.

      கதிரேசன் செட்டியார் எப்போது பார்த்தாலும் கடைச் சிப்பந்திகள் மீது இப்படிச் சீறி விழுவதைப் பல வருஷங்களாகப் பார்த்துக் கொண்டு வந்தவர் சண்முகம் பிள்ளை.ஒரு நாள் கூட செட்டியார் அன்பாக ஒரு பையனைப் பார்த்துப் பேசியதில்லை. மாதத்தில் பத்து நாட்களாவது அவர் செட்டியார் கடைக்கு வந்து சிறிது நேரம் உட்கார்ந்துப் பேசிக் கொண்டிருந்து விட்டு போவார். அவர் வந்து விட்டால் கடைப் பையன்களுக்கு ஒரே கொண்டாட்டம், ஏனென்றால், அவரோடு பேசி கொண்டிருக்கும் போது செட்டியார் சஹ்ஸ்ரநாம அர்ச்சனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விடுவார் என்பது அவர்களுக்குத் தெரியும்.   செட்டியாரும் கூட அர்ச்சனையை நிறுத்துவதற்கு அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதுவார்! சோமசுந்தரம் பிள்ளை குறுக்கிட்டுக் கடைப் பையன்களுக்கு புத்தி சொல்லத் தொடங்கி விட்டாலும், கொஞ்சம் மூச்சு விட்டு ஒய்வெடுத்து கொள்வார். பையன்களைத் தாம் திட்டும் போது தடுத்து நிறுத்துவதற்கு ஒரு ஆள் வேண்டும் என்பதற்க்காகவே சோமசுந்தரம் பிள்ளையை இந்த முப்பது வருஷ காலமும் தம் கடையில் கணக்குப் பிள்ளையாக வைத்து கொண்டிருக்கிறார் என்று சொன்னாலும் தவறில்லை ......

      செட்டியாரின் குணாதிசியங்கள் எல்லாம் கடைப் பையன்களுக்கு மனப்பாடம். இரண்டு வாரங்களுக்கு முன் வந்து சேர்ந்த புதுப் பையன் வெங்கடாச்சலதுக்கு இன்னும் முதற்பாடம் கூட சரி வர புரியவில்லை. அதனால் தான் அவனுக்குச் செட்டியார் திட்டும் போது உள்ளுற மனம் குமுறியது."பிச்சைக்காரன்"."கஞ்சிக்கு இல்லாதவன்","நாயே,பேயே" என்று எத்தனையோ இழி சொற்களைச் சேற்றில் தோய்த்து எடுத்துச் செட்டியார் வீசியிருக்கிறார். அவன் சொல்லாமலே கடையை விட்டு ஓடி விடலாம் என்று நினைத்தாலும், தன் தகப்பனாரின் கண்டிப்புக்குப் பயந்து இன்னும் அங்கேயே இருந்து கொண்டிருந்தான். 

      அவனுடைய ரோஷத்தைக் கண்டும் செட்டியார் தங்களைத் திட்டுவதைக் கண்டும் மற்றப் பையன்கள் சிரித்ததற்குக் காரணம் அவர்களுக்கு மானமோ ரோஷமோ இல்லாதது தான் என்று யாராவது நினைத்தால் அதை விட பெரிய தவறு வேறு ஒன்றும் இருக்க முடியாது. அவர்கள் அங்கே இருந்து பழகியவர்கள். செட்டியாரின் வார்தைகளக்கு பொருள் கிடையாது என்று மனப்பூர்வமாக அவர்கள் நம்பினார்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு; ஒன்று, வேறு எந்தக் கடையிலும் கடைச் சிப்பந்திகளக்குக் கொடுக்கும் சம்பளத்தை விட இங்கே அதிக சம்பளம். தீபாவளிக்குப் புது வேஷ்டி சட்டைகளுடன் ஆளுக்கு பத்து ருபாய் ரொக்கமும் கொடுப்பார் செட்டியார். கடை வேலைய தவிர தம்மை மறந்தும் கூட வீட்டு வேலைய செய்யச் சொல்ல மாட்டார். அவருடைய வீட்டுக்குக் கடை பையன்கள் போனால் ”ஐயா ராசா” என்று அன்போடு பேசுவார்.ஏகதேசமகச் சாப்பிட சொல்வதும் உண்டு. எல்லாவற்றையையும் விட முக்கியமாக, யார் என்ன புகார் சொன்னாலும், எந்த பையனையும் வேலையிலிரிந்து நீக்குவதே கெடையாது. பையன்கள் வாலிபர்களாகிக் கல்யாணம் செய்து கொள்ளும் போது, கல்யாணச் செலவுக்கு ஒரு கணிசமான தொகையும் குடுப்பது வழக்கம். அவர் கடையில் வேலை பார்த்த பையன் பெரியவனாகித் தனிக் கடை தொடங்க நினைத்தால், அதற்கும் உதவி செய்வார். அப்படி அவர் கைத் தூக்கி விட்டு இன்று மூன்று பேர் அதே ஊரில் மளிகைக் கடைகளை லாபகரமாக நடத்தி கொண்டு வருகிறார்கள் - இந்த ரகசியங்கள் எல்லாம் கடைப் பையன்களுக்குத் தெரியும். அதனால் தான் அவருடைய வசை புராணத்தை ஏதோ வழக்கொழிந்த ஒரு அந்நிய பாஷையில் இயற்றப்பட்டக் காவியமாகக் கருதி ஒதுக்கித் தள்ளி விட்டார்கள்.

      2

      காலையில் பையன்கள் விபூதி பூசி வந்ததைக் கண்டுச் சீறி விழுந்ததைப் பார்த்தப் புதுப் பையன், மறு நாள் வெறும் நெற்றியோடு வந்து விட்டான். அவ்வளவு தான்: " நீ என்னடா சைவனா? இல்லை, வேதக்கரானா?(கிறிஸ்துவனா?) என்னலே முழிக்கிற? உன் மூஞ்சியப் பார்த்தா எவண்டா கடைக்கு வருவான்?... நெத்தியை சுடுகாடு மாதிரி வெச்சுகிட்டு ...."

      "போய் விபூதியை எடுத்துப் பூசு" என்று கணக்கு பிள்ளை அவனுக்குப் புத்தி சொன்னார். செட்டியார் திட்டுவதை உடனே நிறுத்தி விட்டார்.

      அன்று செண்பகவல்லி அம்மன் கோவிலில் கடைசி நாள் விழா, பெரிய மேளக் கச்சேரி. வாண வேடிக்கை எல்லாம் ஏற்பாடாகியிருந்தன. வெளியூர் கூட்டம் தெருவெல்லாம் நிரம்பி வழிந்தது. அன்று ஒருமணி நேரம் முன்னதாகவே - அதாவது எட்டு மணிக்கே- கடையை அடைத்து விட்டுத் தாமும் கோவிலுக்கு போகாலாம், மற்றவர்களையும் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று முடிவுக் கட்டியிருந்தார் செட்டியார்.ஏழரை மணிக்கெல்லாம் சண்முகம் பிள்ளை வந்தார்.செட்டியார் தம் ஒய்வு ஒழிச்சலற்ற வசை புராணத்தை நிறுத்தி,"அண்ணாச்சி வாங்க" என்று புன்னகையோடு அவரை வரவேற்று விட்டு, "மதுரைக்கு நேத்து தானே போனீங்க" என்று ஆச்சரியத்தோடு கேட்டார்.

      "அங்கே சோலி? போன காரியம் முடிஞ்சதும் திரும்ப வேண்டியது தானே? இன்னிக்குக் காலையிலே முதல் வண்டிக்கே வந்துட்டேனே ! குளிச்சு சாப்பிட்டேன். கொஞ்சம் அசந்து தூங்கினேன். தூங்கிபிட்டு வர்ரேன்..."

      செட்டியார் கடிகாரத்தைப் பார்த்தார். மணி ஏழே முக்கால். இது தான் சமயம் என்று ஆரம்பித்து விட்டார்.

      "ஏன்டா! தீவட்டித் தடியங்களா?"

      "என்ன மொதலாளி" என்று இரண்டு பையன்கள் ஏக காலத்தில் கேட்டார்கள்.

      "என்ன முதலாளியா? நானும் ஒரு மணி நேரமாப் பார்த்துக்கிட்டு இருக்கேன்,இந்தப் பயக வாயத் தொறந்து கேட்கட்டும்னு. நீங்க எங்க கேப்பீங்க ? உங்களுக்கு சாமி ஏது, சாத்தா ஏதுடா? அப்படி தெய்வ பக்தி இருந்த, உங்க மூஞ்சில கொஞ்சமாச்சும் களை இருக்குமே ! அறிவுகெட்ட பயகளா, இன்னைக்கு திருநாள் ஆச்சே, ஊர் பூராவும் கோயிலுக்குப் போய்ச் சாமி கும்பிடுதே, நாமளும் போகணும்னு ஏன்டா உங்களுக்குத் தோணல்ல?"

      அப்போது சண்முகம் பிள்ளை, "மொதலாளி சொல்லாமே எப்படிக் கடைய போட்டுட்டுச் சாமி பார்க்கப் போவாங்க? நீங்க சொல்றது நியாயம் இல்லையே செட்டியாரையா?" என்றார்.

      "ஆமாம் அண்ணாச்சி, சாமி கும்பிடறது கூட முதலாளியைக் கேட்டுத்தான் கும்பிடணும்! நீங்களும் அவங்க கட்சில சேர்ந்து பேசுங்க!" என்றார் செட்டியார்.

      சோமசுந்தரம் பிள்ளை, பையன்களைப் பார்த்துக் கடையை அடைப்பதற்கு எல்லாவற்றையும் எடுத்து உள்ளே வைக்கச் சொன்னார். அவர்களும் ஜருராக அந்த வேலையில் இறங்கினார்கள்.

      செட்டியார் மிகவும் கவலையோடு,"இந்தப் பயல்களோட கத்திக் கத்தி என் தொண்டை தண்ணி தான் வத்துது,அண்ணாச்சி சேச்சேச்சே!" என்று சலித்து கொண்டார்.சண்முகம் பிள்ளை சிரித்தார்.

      சிறிது நேரத்தில் கடையை எடுத்து வைத்துப் பூட்டி முடிந்ததும் பையன்கள் கோவிலுக்குப் போக உத்தரவுக்குக் காத்திருந்தார்கள்.

      "என்னடா கோவிலுக்கு தானே?" என்றுக் கேட்டார் செட்டியார்.

      "ஆமா, மொதலாளி"

      "கோவிலுக்கு வெறுங்கையை வீசிட்டு தான் போக போறீங்களா?"

      பதில் இல்லை.

      "என்னடா, நான் கேக்கறேன், பேசாம நிக்கிறீங்களே? வாயில என்ன கொளுகட்டாய இருக்கு?"

      அதற்கும் பதில் இல்லை.

      "பாருங்க, அண்ணாச்சி, வாய தொரக்கராங்களானு பாருங்க. கோயிலுக்கு போறதுன்னா தேங்கா, பளம் சூடமெல்லாம் கொண்டு போக வேண்டாமா?"

      "கொண்டு தான் போகணும்" என்றார் சண்முகம்பிள்ளை.

      "அது இந்த பயகளுக்கு தெரியுதா பாருங்க .. கடவுளே! கடவுளே!" என்று தலையில் அடித்து கொண்டு, " டேய்! இந்தாங்கடா ஆளுக்கு ஒத்த ரூவா. போய் தேங்கா, பளம் வாங்கிட்டு போங்க, எங்க தலையில ஏன் களிமண்ண வெச்ச சாமி ? மூளைய வெக்கலேனாலும் வெள்ளை மெளுகயாவது வெச்சிருக்க கூடாதா ? ன்னு சாமியக் கேளுங்கடா" என்று சொல்லி விட்டு நான்கு பேருக்கும் நான்கு ரூபாய்களைக் கொடுத்தார். பையன்கள் போய் விட்டார்கள்.

      செட்டியார் சாவிக் கொத்தோடு வீட்டை நோக்கி நடந்தார்.

      சாப்பிட்டு அம்பாளின் நகர்வலதைப் பார்ப்பதாக உத்தேசம். அம்பாள் கடை தெருவுக்கு வர மணி பதினோன்றாகிவிடும் என்பது அவரக்கு தெரியும். சண்முகம் பிள்ளையும் அவரும் பேசி கொண்டே போனார்கள்.அப்போது சண்முகம் பிள்ளை தாம் வெகு நாட்களாகக் கேட்க நினைத்ததை அன்று அப்பட்டமாக கேட்கத் துணிந்தார்:

      "என்ன அண்ணாச்சி , உங்கள எப்போ நான் கோவிச்சிருக்கேன்? என்ன இப்படிக் கேக்கறீங்க? நமக்குள்ளே என்ன வேத்துமை?"

      "இல்லே, நீங்க ரொம்ப தயாள குணத்தோட இருக்கிறீங்க, ஊரிலேயும் உங்களைப்பத்தி பெருமையா பேசிக்கிறாங்க.கடைப் பையன்களுக்கு உங்கள போல சம்பளம் குடுக்கறவங்க இல்லையன்னும் எனக்கு தெரியும், எல்லாம் நல்லா தான் இருக்கு. ஆனா,ஏன் இப்படி இருபத்து நாலு மணி நேரமும் கடைப் பையன்களை திட்டிகிட்டே இருக்கீங்க? எப்போ வந்து பார்த்தாலும், எவனையாவது நிப்பாட்டி வெச்சுகிட்டு பொரியரீங்களே, எதுக்கு? கொஞ்சம் அன்பா ஆதரவா இருக்கலாமில்ல?"

      "அண்ணாச்சி , அன்பாதரவா இல்லையன நான் திட்டுவனா ? அதைக் கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பாருங்க. பயகளை நெசமா எனக்குப் பிடிக்கலேன்னா, ஒரே சொல்லில கடைய விட்டு வெளியே ஏத்திபுட்டு மறு சோலி பார்க்க மாட்டனா? சொல்லுங்க, இந்த முப்பது வருசத்துல ஒருத்தனை நான் வேலைய விட்டுப் போகச் சொல்லியிருக்கேனா? பயக விருத்திக்கு வரணும்னு தானே தொண்டத் தண்ணி வத்த வெச்சுகிட்டு இருக்கேன்? கத்தி கத்தி என் உசிரும் போகுது "

      "ஏன் கத்தணும் ? நல்லபடியா ஒரு சொல் சொன்னாப் பத்தாதா?"

      "அப்டியா சொல்றீங்க, அண்ணாச்சி? சரி தான் ! நல்லபடியாக சொன்னாப் பயகளுக்கு திமிர் இல்ல ஏறி போகும்? ஒடம்பு வளையுமா? அந்த காலத்திலே நான் கடைப் பையனா இருந்தப்போ எங்க மொதலாளி பேசினதை நீங்க கேட்டிருக்கணும்…. ஹும், அதிலே பத்திலே ஒரு பங்கு கூட நான் பேசியிருக்க மாட்டேன்; பேசவும் தெரியாது."

      "அப்ப்பேர்ப்பட்டமுதலாளியா அவரு!"

      "என்னங்கறீங்க? என்ன பத்தி மட்டுமா? என் தாயி, தகப்பன்,பாட்டன் - அத்தனை பேரையும் சேர்த்து கேவலமா பேசுவாரு.புளுத்த நாய் குறுக்கேப் போகாது. ஒரு நாள் என் மூஞ்சில அஞ்சு பலப் படிய தூக்கி வீசிட்டாரு. தலையக் குனிஞ்சேனோ, தப்பிச்சேனோ ! அப்படியெல்லாம் வசக்கிவிடப் போய்த்தான் நானும் கடைன்னு வெச்சு, யாவரம் பண்ணி, இவ்வவளவு காலமும் ஒருத்தன் பார்த்து ஒரு கொறை சொல்றதுக்கு இடமில்லாம நிர்வாகம் பண்ணிட்டு வரேன்..."

      சண்முகம்பிள்ளை செட்டியாரின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்க நினைத்தார். ஆனாலும் அப்பறம் சிரித்து கொள்ளலாம் என்று அதை அடக்கிக் கொண்டு " செட்டியாரையா உங்க மேல தப்பில்ல ; உங்க முதலாளிய சொல்லணும். உங்களுக்கு நல்லாத்தான் பாடம் சொல்லிக் கொடுத்திருக்காரு"

      செட்டியாருக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. அதனால் " என்ன அண்ணாச்சி? என்ன சொல்றீங்க?" என்று கேட்டார்

      "உங்கள பாக்க எனக்கு உண்மையிலே பாவமா இருக்கு. இப்படி கத்தினா முதல்ல உங்க ஒடம்புக்கு ஆகுமா ?".

      செட்டியாரும் தம் நிலையை எண்ணி தாமே வருந்தினார்; " என்ன செய்யறது? நாம வாங்கின வரம் அப்படி... அந்த சோமசுந்தரம் பிள்ளை நடுவிலே எதாச்சும் செய்வாரு. அது தான் சாக்குன்னு கொஞ்சம் வாய மூடுவேன். அவரு இல்லேனா கத்திக் கத்தி மூச்சே போயிருக்கும்.பயக நல்லா தலை எடுக்கணுமேன்னு தான் பாக்கறேன். அவங்க தாய் தகப்பன்மாரு என்ன நம்பி ஒப்படைசிருக்காங்களே .... என்னமோ அண்ணாச்சி, ராத்திரி ராத்திரி வீட்டிலே வந்து படுத்துகிட்டே நானா நெனைச்சு வருத்தபட்டுகிடுவேன். ஒவ்வொரு சமயம் தொண்டை கட்டிகிடும். பாலிலே பனம்கல்கண்டும் மொளகும் போட்டுக் குடிப்பேன். மொதலாளி ஆயிட்டோம், செய்யறதைச் செய்யத்தானே வேணும்? அந்த சம்புகவல்லி புண்ணியத்தில இது வரையிலும் உடம்புக்கு வந்து படுத்ததில்ல"

      "சரி சரி எவ்ளோ காலம் தான் உடம்புத் தாங்கும்? இனிமே ஒவ்வொண்ணையும் அப்டி இப்டி கொரைச்சிகிட்டு வர வேண்டியது தான். நமக்கு பகவான் தொண்டைய என்ன வெங்கலத்திலயா படைச்சிருக்கான்?"

      ஷண்முகம் பிள்ளை சிரித்து கொண்டே சொன்ன புத்திமதி, நியாயமானதாகவே செட்டியாருக்குப் பட்டது. ஆனாலும் அதை ஒப்புக் கொள்வது சுயநலம் என்றுக் கருதினார்

      "அண்ணாச்சி ! நீங்க என்ன தான் சொல்லுங்க ; பயக நல்லபடியா தலையெடுக்கணும். இவ்ளோ காலமும் இப்படி இருந்திட்டு இனி என்ன எக்கேடு கேட்டா என்னன்னு என்னால இருக்க முடியாது. இனிமே என்ன ? வயசு அறுபதாச்சு. உசுரை வெச்சு இருந்து என்னத்த சாதிச்சிரபோறோம் ?" என்று தியாக உணர்ச்சியோடு பேசினார். பேச்சில் ஒரு உறுதி நிறைந்திருந்தது.

      சண்முகம் பிள்ளை அதைப் பார்த்து, " அப்டின்னா, நித்தியபடி அர்ச்சனை நடக்கும்ன்னு தான் சொல்லுங்க" என்று சொல்லி விட்டு உரக்கச் சிரித்தார்.

      செட்டியார் அவருடைய சிரிப்பைப் பார்த்து மிகவும் மனம் நொந்து கொண்டு, " என்னமோ அண்ணாச்சி, உங்களுக்குச் சிரிப்பா இருக்கு.பாருங்க, இப்போ உங்ககிட்ட சரியாகக் கூடப் பேச முடியல்ல, தொண்டை வலிக்குது, நான் பொறந்த வேளை!" என்று அழமாட்டாதகுறையாகச் சொல்லியபடி நடந்தார்.

      -----------------------

      முத்துக்கள் பத்து - கு அழகிரிசாமி அம்ருதா பதிப்பகம் 2007 தொகுப்பு - திலகவதி

      தட்டச்சு உதவி: மணிகண்டன்

      நன்றி..

      இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

      அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்